இது ஒரு கற்கோயில். நான்கு சதுரம் கொண்ட கர்ப்பக்கிரகம், அந்தராளம். மூடப்பட்ட மண்டபம், தெற்கு முகமாக நுழைவு வாசல் உள்ளது. கர்ப்பக்கிரகத்தில் விமானம் இருந்ததற்கான அறிகுறி இருக்கிறது. தட்சிணாமூர்த்தி, பிரம்மா சிலைகளும் உள்ளன. இவ்வூரில் பிடாரியம்மன், சுப்பிரமணியசுவாமி கோயில்கள் உள்ளன.
பிரார்த்தனை
சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
தலபெருமை:
உருனி ஆழ்வார்: இந்த சிவனுக்கு ஊருணி ஆழ்வார் என்ற பெயர் இருக்கிறது. அது தற்போது பேச்சுவழக்கில் உருனி ஆழ்வார் என மாறிவிட்டது. ஊருணி என்றால் சிறு குளம். இந்தப் பெயரை நிரூபிக்கும் வகையில் கோயில் அருகில் புத்தேரி என்னும் குளம் இருக்கிறது. இதன் புராணப்பெயர் சந்திரமேகத் தடாகம். சிவன் அக்னி வடிவானவர் என்பதால், அவரைக் குளிர் விக்கும் வகையில் இந்த ஊருணி தோண்டப்பட்டிருக்கிறது.
தல வரலாறு:
ஒரு முறை வாயு, வருணன், அக்னி ஆகிய மூவருக்கும் இடையே தர்க்கம் ஏற்பட்டதில் அக்னி பகவான் மறைந்து விட்டார். இதனால் உலகில் யாகம் முதலியன நடத்த முடியவில்லை. நைவேத்யம் உள்ளிட்ட அனைத்தும் நின்று போயின. மிகுந்த துன்பத்திற்குள்ளான முனிவர்களும், தேவர்களும் இதிலிருந்து விடுபட லிங்க பூஜை செய்தனர். சிவன் அவர்கள் முன்தோன்றி அக்னி பகவானை அங்கே அழைத்தார். அவர் இரண்டு முகம், மூன்று பாதம், நான்கு கொம்பு, ஏழு கை, ஏழு ஜூவாலையுடன் வெளிப்பட்டார். சிவதரிசனம் பெறவே, வாயு, வருணனுடன் தர்க்கம் செய்வது போல் நாடகமாடியதாக தெரிவித்த அக்னி, தனக்கு சிவன் காட்சியளித்த இடத்தில் ஒரு லிங்கத்தை வடித்து பூஜித்தார். அக்னிக்கு காட்சியளித்த அவருக்கு அக்னீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இங்குள்ள அர்த்தநாரீஸ்வரர் ரிஷபத்தின் மீது உள்ளது சிறப்பு.