கோயில் நுழைவு வாயிலிலுள்ள இலுப்பை மரத்தின் அடியில் நவகன்னியர் சந்நிதியும், அதன்முன் தெப்பக்குளமும் உள்ளன. ராஜகோபுரத்தைக் கடந்ததும் காவல்தெய்வமான அண்ணமார் சந்நிதியும்,பாம்புப் புற்றும் உள்ளது. மூலவருக்கு முன்பகுதியில் புத்தருக்கு இரு சிலைகளும், அதற்கு நடுவில் வேதாளம் சிலையும் உள்ளது. அம்பிகைக்கு வேதம் உபதேசித்த சிவன் வேதபுரீஸ்வரராக தனி சந்நிதியில் இருக்கிறார். விநாயகர், முருகன், துர்க்கை சந்நிதிகளும் உள்ளன.
பிரார்த்தனை
நாகதோஷ நிவர்த்தி பெற இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
இங்குள்ள புற்றுக்கு பாலூற்றி வழிபடுகின்றனர், அம்மனுக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
தலபெருமை:
பெயர்க்காரணம்: பனைமரத்திற்கு கருக்கு என்றொரு பெயருண்டு. நடு இரவு நேரத்தையும் கருக்கு என்றே குறிப்பிடுவர். ஒரு இரவு வேளையில், இங்குள்ள பனைமரத்தின் கீழ் அமர்ந்து மகிஷனை அம்பிகை சம்ஹாரம் செய்தாள். அதனால், கருக்கினில் அமர்ந்தவள் என்ற பெயர் அவளுக்கு ஏற்பட்டது. வடக்கு நோக்கி அமர்ந்த இவள், வலதுபாதத்தை அசுரனின் தலைமீதும், இடதுபாதத்தை அவன் கால்மீதும் வைத்திருக்கிறாள். தலையை இடதுபுறம் சாய்த்த இவளது கையில் திரிசூலம் உள்ளது. வெள்ளியன்று இவளை தரிசித்தால் எண்ணிய எண்ணம் ஈடேறும். தடைபட்ட திருமணம் நடந்தேறும். நோய்நொடி விலகி ஆரோக்கியம் சீராகும். வடக்கு நோக்கி அமர்ந்த சக்திகள், காவல் தெய்வங்களாகக் கருதப்படும். அவ்வகையில், மாங்கல்யம், உத்தியோகம், தொழில் ஆகியவற்றிற்கு பாதுகாப்பு அளிப்பவளாக விளங்குகிறாள்.
தல வரலாறு:
ரம்பன் என்னும் அசுரன் ஒரு எருமை மாட்டின் மூலமாக பெற்ற பிள்ளை மகிஷன். எருமை முகம் கொண்டவன் என்பதால் மகிஷன் என பெயர் பெற்றான். மகாபலசாலியான இவன், தேவர்களையும், முனிவர்களையும் யாகம் செய்ய விடாமல் துன்புறுத்தி வந்தான். ரம்பனிடமிருந்து தங்களைக் காக்கும்படி தேவர்கள் அம்பிகையிடம் முறையிட்டனர். உடனே கலைமகள், திருமகள், மலைமகள் ஆகிய முப்பெரும் சக்திகளும் ஒன்றிணைந்து ஒரே வடிவில் நின்றனர். துர்க்கை என்ற பெயர் கொண்டு திரிசூலம் ஏந்தி துர்க்கையாக சிங்க வாகனத்தின் மீதேறிச் சென்று, அசுரனைச் சூலத்தால் அழித்தாள். மகிஷனைக் கொன்றதால் மகிஷாசுரமர்த்தினி என்றும் பெயர் பெற்றாள். அந்த மகிஷாசுரமர்த்தினியே, காஞ்சிபுரம் தெற்கு பட்டடை கிராமத்தில் கருக்கினில் அமர்ந்தவள் என்ற திருநாமத்தோடு கோயில் கொண்டிருக்கிறாள்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:பல்லவர் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டது.