இங்கு நடைபெறும் நவராத்திரி விழாவின் இறுதி நாளான விஜயதசமியன்று இரவு மகர் நோன்புத் திடலில் நடைபெறும் அம்பு போடும் திருவிழாவில் முதல் முதலாக செல்வதும், முதலில் அம்பு போடுவதும் கோட்டை வாசல் விநாயகர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
தல சிறப்பு:
ராமநாதபுரம் மன்னரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் கோட்டை வாசல் விநாயகர்.
திறக்கும் நேரம்:
காலை 5.50 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு கோட்டைவாசல் விநாயகர் திருக்கோயில்,
அரண்மனை வாசல்,
ராமநாதபுரம்.
போன்:
+91 99949 48363
பொது தகவல்:
கிழக்கு நோக்கிய கோயில். முன்மண்டபம், மகாமண்டபத்தைத் தொடர்ந்து கருவறையில் வல்லபையை மடியில் இருத்திக் கொண்டு தரிசனம் தருகிறார், மூலவர் கோட்டை வாசல் விநாயகர். வெளியே அவரது உற்சவ மூர்த்தம் உள்ளது.
பிரார்த்தனை
இவரை வழிபடுவோருக்கு சகல கோரிக்கைகளும் விரைவில் நிறைவேறுவதால் அதிகமான பக்தர்கள் வருகின்றனர்.
நேர்த்திக்கடன்:
பக்தர்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன் சிதறு தேங்காய் போடுவதும், விநாயகருக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
தல வரலாறு:
அரண்மனையைச் சுற்றியிருந்த கோட்டைக்கு வெளியே இருந்து அருள்பாலித்து
வந்ததால் கோட்டை வாசல் விநாயகர் ஆனார். சேது மன்னர்கள், எந்த
விஷயத்திற்கும் பிள்ளையார் சுழி போடுவது போல, இந்தப் பிள்ளையாருக்கு
பூஜைகள் செய்தார்கள். அதனால் அனைத்திலும் அவர்களுக்கு வெற்றியே கிட்டியது.
இவரது சிறப்பு குறித்து பல சம்பவங்கள் சொல்லப்படுகின்றன. ஆங்கிலேயர்
ஆட்சிக்காலத்தில், இவருக்கு ஏராளமான பக்தர்கள் இருப்பதைக் கண்டு
எரிச்சலடைந்த ஆங்கிலேய அதிகாரி ஒருவர், கோயிலில் இருந்து அபிஷேக தீர்த்தம்
வெளியேறும் கோமுகம் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக பொய்யாக குற்றம்
சாட்டி, அதை விரைவில் இடித்துவிட வேண்டும் என உத்தரவிட்டார். அன்றிரவு அவர்
கனவில் கோட்டை வாசல் விநாயகர் வரவே, கோமுகத்தை இடிக்கும் உத்தரவை வாபஸ்
வாங்கச் சொல்கிறார் என உணர்ந்த அந்த அதிகாரி, தன் தவறை உணர்ந்து மறுநாள்
உத்தரவை வாபஸ் பெற்றதோடு, கோயிலுக்கு வந்து கோட்டை வாசல் விநாயகரை வணங்கி,
மன்னிப்பும் கேட்டுச் சென்றார்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:ராமநாதபுரம் மன்னரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் கோட்டை வாசல் விநாயகர்.
இருப்பிடம் : ராமநாதபுரம் பேருந்து மற்றும் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அரண்மனை பேருந்து நிறுத்தம் அருகே கோட்டைவாசல் விநாயகர் கோயில் அமைந்துள்ளது.