துர்கை மேற்கு பார்த்து அருள்பாலிக்கிறாள். எமதர்மன் திருக்கடையூரில் ஏற்பட்ட பயத்தை போக்க இந்த துர்கையை வழிபாடு செய்துள்ளான். ஒரே மூலஸ்தானத்தில் 6 விநாயகர் அமர்ந்து விநாயகர் சபையாக அருள்பாலிக்கிறார்கள். நந்தி பகவான் இங்கு வழிபாடு செய்ததாக புராணம் கூறுகிறது. எனவே பிரதோஷ காலத்தில் இங்கு வழிபாடு செய்தால் ஒன்றுக்கு பல மடங்கு பலன் கிடைக்கும் என கூறப்படுகிறது.
அஷ்டதிக் பாலகர்கள் இங்கு வழிபாடு செய்ததன் நினைவாக கோயில் விமானத்தின் மேல் அஷ்டதிக் பாலகர்கள் வீற்றிருக்கிறார்கள்.
16 சித்தர்கள் இங்கு வழிபாடு செய்துள்ளனர்.மூன்று சண்டிகேஸ்வரர் உள்ளனர். பெருமாள் தாரை வார்த்து கொடுக்க சிவபார்வதி திருமணக்காட்சியை அகத்தியர் இங்கு தரிசனம் செய்துள்ளார். பூமாதேவி இங்கு வழிபாடு செய்திருக்கிறாள். எனவே இத்தல இறைவனுக்கு பூமிநாதர் என்ற பெயரும் உண்டு.
பிரமாண்டமான நடராஜர்: வரகுணபாண்டியன் என்ற மன்னனுக்காக சிவனும் பார்வதியும் பஞ்சலோகத்தால் ஆன குழம்பை குடித்து, சுயம்பு மூர்த்தியாக நடராஜர் சிவகாமி அம்மனாக காட்சி கொடுத்துள்ளனர். மதுரை, உத்திரகோசமங்கை, கோனேரிராஜபுரம் ஆகிய இம்மூன்று தலங்களிலும் நடராஜருக்கு திருவீதிவுலா கிடையாது. பிரமாண்டமாக நடமாடும் இத்தல நடராஜருக்கு மனிதருக்கு இருப்பது போலவே ரோமம், மச்சம், ரேகை, நகம் ஆகிய அனைத்து அம்சங்களும் இருப்பது சிறப்பம்சமாகும். இப்பகுதி மக்களுக்கு நடராஜர் ஆலயம் என்றால் தான் தெரிகிறது.
நலம் தரும் சனிபகவான்: இங்குள்ள சனிபகவான் மேற்கு பார்த்த நிலையில் உள்ளார். நளனும் அவனது மனைவி தமயந்தியும் திருநள்ளாறு செல்லும் முன் இத்தலத்தில் வழிபாடு செய்து அனுக்கிரகம் பெற்றுள்ளனர். எனவே மற்ற தலங்களில் கருப்பு ஆடை அணிந்திருக்கும் சனி, இங்கு மட்டும் வெள்ளை ஆடை அணிந்து அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இவருக்கு வெள்ளை எள்ளால் ஆன எண்ணையில் தீபம் போட வேண்டும்.
சனி தோஷத்தில் பாதிக்கபட்டவர்கள் இவரை வழிபடுவது சிறப்பு. அகத்தியர் வழிபட்ட தலம்.
|