பதிவு செய்த நாள்
27
ஏப்
2012
03:04
தன் தந்தை சிவன் நடத்திய திருவிளையாடல் போல் குமரன் தானுமொரு திருவிளையாடல் நடத்த முடிவுசெய்தான். அதற்கு அவன், அருணகிரியின் தமக்கை ஆதியையே மையமாக்கி ஒரு திட்டம் வகுத்தான்.. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அருணகிரியின் வாலிப லீலைகள் தொடர்ந்தன. அருணகிரி வாழ்ந்த திருவண்ணாமலையில் அவன் அறியாத கணிகை என்று யாரும் இருக்கவில்லை. பொன்னையும் பொருளையும் லட்சியமே இல்லாமல் வாரி இறைக்கும் அவனது வருகைக்காக கணிகையர் காத்துக் கிடந்தனர். காசில்லாதவன் யாராயிருந்தாலும் கதவைச் சாத்துபவர்கள் அல்லவா தாசிகுலப் பெண்கள்? எனவே, இரவு தொடங்கிவிட்டால் காசு காசு என்று பரபரத்தது அருணகிரியின் மனம். என்ன செய்வது? அக்காவுக்குத் தெரியாமல் சொந்த வீட்டிலேயே திருடலானான். அவன் தாய் முத்தமை சேர்த்து வைத்திருந்த வைர அட்டிகைகளும் தங்க வளையல்களும் முத்து மோதிரங்களும் நவரத்தின ஆபரணங்களும், வீட்டிலிருந்து திடீர் திடீரென மாயமாய் மறையைத் தொடங்கின.
யாரும் அறியாமல் எந்தப் பறவை இவற்றையெல்லாம் வீட்டுக்குள்ளே புகுந்து தூக்கிச் செல்கிறது என்று ஆதி தொடக்கத்தில் அதிசயித்தாள். இரும்பு அலமாரியை இறுகப்பூட்டி, சாவியை ரகசிய இடங்களில் ஒளித்து வைக்கலானாள். தன் தம்பியிடம் எவ்வளவோ கெட்ட பழக்கம் இருந்தாலும் திருடும் அளவுக்கு அவன் மோசமானவன் அல்லன் என்று அவள் பெரிதும் நம்பியிருந்தாள். அவளது நம்பிக்கையின் தலையில் ஏற்கெனவே இடி விழுந்துவிட்ட செய்தியை அவள் நெடுநாட்கள் அறியவில்லை. அருணகிரி அந்த வீட்டின் மூலை முடுக்குகள் அனைத்தையும் அறிந்தவன் அல்லவா? அந்த வீட்டிலேயே வளர்ந்தவனாயிற்றே அவன்? அவன் கண்ணிலிருந்து சாவி எப்படித் தப்ப முடியும்? அக்கா வீட்டில் இல்லாத நேரமாகப் பார்த்து, தன் வீட்டுப் பொருளைத் தானே கொள்ளையடிக்கத் தொடங்கினான் அருணகிரி. தமக்கை ஆதி விழித்துக் கொள்வதற்குள் மொத்த சொத்தும் காலியாகியிருந்தது. உழைக்காமல் உட்கார்ந்து சாப்பிட்டால் மலையளவு செல்வம் இருந்தாலும் மளமளவெனக் கரையுமே? தீய வழியில் செலவு செய்யவும் தொடங்கினால் வறுமை உரிமையோடு வீட்டுக்குள் நுழைந்து சம்மணமிட்டு உட்கார்வதைத் தடுக்க இயலுமா?
அக்கா ஆதியம்மை ஒருவேளைச் சோற்றுக்கும் வழியின்றி அல்லல் படத்தொடங்கினாள். தம்பியின் ஒழுக்கக் கேட்டால் விளைந்த கோபம் ஒருபுறம். என்றாலும் தானே தாயாய் இருந்து வளர்த்த தம்பிமேல் கொண்ட பாசம் ஒருபுறம். இருதலைக் கொள்ளி எறும்பாக அவள் மனம் செய்வதறியாது தத்தளித்தது. அக்கம்பக்கமெல்லாம் கடன் வாங்கித் தீர்த்தாகி விட்டது. இனிக் கடன் கேட்க யாருமில்லை. சமைத்துப் பல நாட்கள் ஆகிவிட்டன. அடுப்பில் பூனை உறங்கிக் கொண்டிருந்தது. பட்டினி வயிற்றைப் பசி நமநமவெனக் கிள்ளியது. ஆனால் தம்பி அருணகிரிக்கு எதைப் பற்றியும் எந்த அக்கறையும் இல்லை. தன் அக்காவிடம் பணத்தை எப்படியாவது கறந்து அதை தாசி வீட்டில் கொண்டுபோய்க் கொடுத்து சுகபோகங்களை அனுபவிப்பதில் மட்டுமே அவனுக்கு நாட்டம். அவனுக்குத் தேவையான பணத்தைக் கொடுக்க முடியவில்லை என்றால் அது அக்காவின் தவறு! உடன்பிறந்த தம்பிக்குப் பணம் கொடுக்காமல் அக்கா இருப்பதாவது? அதர்மமல்லவா அது?! இப்படித்தான் அவன் எண்ணப்போக்கு இருந்தது! இயற்கையில் சில விதிகள் உண்டே? அவற்றை யாரும் மீற இயலாது அல்லவா? அளவு கடந்து ஆட்டம் போட்டால் அதன் விளைவை உடல் காட்டத்தானே செய்யும்? உடல் தாங்கும் அளவையும் மீறி சுகபோகங்களில் ஆழ்ந்திருந்த அவனைப் பெருநோய் வந்து பற்றிக்கொண்டது. தன் அன்புத் தம்பியைத் தீராநோய் பீடித்திருப்பதைப் பார்த்து தமக்கை ஆதி அடைந்த துயரத்திற்கு அளவே இல்லை. வீட்டில் கொடும் வறுமை.
சம்பாதிக்காத தம்பி. அவன் இப்போது நோயாளி வேறு. என்ன செய்வேன் முருகா? என அவள் ஆழ்மனத்தில் கதறிக் கொண்டிருந்தாள். தொழுநோய் தொற்றிய பின்னும் பெண்ணாசை அருணகிரியை விட்டகலவில்லை. காசு கொண்டுவராத அருணகிரியை எந்தக் கணிகையும் தன் வீட்டில் சேர்க்கத் தயாராய் இல்லை. அதுவும் அவன் பிணியாளன் என்பதால் அதிகக்காசை எதிர்பார்த்தார்கள் அவர்கள். எனவே, நாள்தோறும் எனக்குப் பணம் கொடு! என்று அருணகிரி அக்காவை ஓயாமல் நச்சரிக்கலானான். இப்போது அருணகிரியின் குரல் ஓங்கத் தொடங்கியிருந்தது. வளர்ந்த தன் தம்பிக்கு அக்கா பயப்படலானாள். சோற்றுக்கே வழியில்லையே? இருந்த செல்வமெல்லாம் தான் கரைந்துவிட்டதே? அக்கம்பக்கங்களில் கடன் கேட்டல்லவா ஆதி வாழ்க்கை நடத்தி வருகிறாள்? அருணகிரியின் பழக்க வழக்கங்கள் வேறு அக்கம்பக்க வீடுகளில் பிரசித்தமாகி இருந்தன. ஒருநாள் இரவு அருணகிரி உடனடியாகத் தனக்குப் பணம் வேண்டும் என அக்காவிடம் அதட்டிக் கேட்டான். அவன் அடிப்பதற்குக் கை ஓங்கியதைப் பார்த்த அக்கா, அச்சத்தோடும் அழுகையோடும் வீட்டை விட்டு வெளியேறினாள். கொஞ்ச தூரம் நடந்து சென்று ஏதோ ஒரு வீட்டு வாசலில் நின்று கையேந்தினாள்.
ஏற்கெனவே அந்த வீட்டில் கடன் வாங்கியிருந்தாள் அவள். கொடுத்த கடனை இன்னும் அடைக்கவில்லை. அப்படியிருக்க மறுபடியும் அவள் கடன் கேட்டு வந்ததை அவர்கள் ரசிக்கவில்லை. என்றாலும் இரக்கம் அந்த வீட்டின் மாதரசியை உந்தித் தள்ளியது. கையில் கிடைத்த கொஞ்சம் அரிசியை எடுத்து ஆதியின் கரத்தில் இட்டாள் அவள். பிறகு சற்றே சலிப்படைந்த தொனியில், தம்பியின் வயிற்றுப் பசிக்குக் கடன் கேள் அம்மா. தருகிறேன். ஆனால் அவன் உடற்பசி தணியப் பணம் கேட்டு என் வயிற்றெரிச்சலைக் கிளறாதே! என்றாள். ஆதி அவமானம் தாளாதவளாய் கிடைத்த கொஞ்சம் அரிசியோடு மவுனமாக வீட்டுக்கு வந்துசேர்ந்தாள். தம்பியைத் தேடினாள். வீட்டில் தம்பியைக் காணோம். சாப்பிடாமல் எங்கே போனான்? கொஞ்சமாவது சாப்பிட்டு விட்டுப் போகக் கூடாதோ? கிடைத்த கொஞ்ச அரிசியைச் சமைக்கப் பாத்திரத்தைத் தேடினாள் ஆதியம்மை. வீட்டில் இருந்த பாத்திரங்கள் அனைத்தும் திடீரென மறைந்துவிட்டிருந்தன. மருந்துக்குக் கூட ஒரு பாத்திரத்தைக் காணோம்.
எல்லாப் பாத்திரங்களையும் ஒரு சாக்கில் போட்டு எடுத்துக் கொண்டுபோய் விற்றுவிட்டான் அருணகிரி. கிடைத்த பணத்தை எடுத்துக் கொண்டு ஏதோ ஒரு கணிகை வீடு தேடிப் போயிருந்தான். இதை அடுத்த வீட்டினர் சொல்லி அறிந்தபோது சோர்வோடு திண்ணையிலேயே காலோய்ந்து உட்கார்ந்தாள் ஆதி. நினைக்க நினைக்க அழுகை வந்தது. பசி வயிற்றைக் கிள்ளியது. கிடைத்த அரிசியை எப்படிச் சமைப்பது? அதற்குக் கூடப் பாத்திரமில்லையே? தன் அன்புக்குப் பாத்திரமான தம்பி இப்படி ஒரு பாத்திரம் கூட வீட்டில் இல்லாமல் துடைத்து எடுத்துக்கொண்டு போய்விட்டானே? அவள் நெஞ்சம் கழிவிரக்கத்திலும் பரிதவிப்பிலும் விம்மியது. தம்பி என்னதான் ஒழுக்கம் கெட்டவனாக இருந்தாலும் அவன் உடன் பிறந்த தம்பியல்லவா? தானாடா விட்டாலும் சதை ஆடுமே? அவனும் இன்னும் சாப்பிடவில்லையே என்றும் பரிதவித்தது அவளின் பாழும் மனம். வீட்டில் விளக்கேற்ற ஒரு சொட்டு எண்ணெய் கூட இல்லாததால் அவள் தீபம் ஏற்றாமல் தன் விதியை நொந்தவாறு வாயிலில் வீற்றிருந்தாள். பசியாலும் பட்டினியாலும் அவள் உடல் கடுமையாகச் சோர்ந்திருந்தது. அவள் வீட்டுக் கூடத்தில் படமாக மாட்டப்பட்டிருந்த முருகன் தன் திட்டத்தை எண்ணி உள்ளுக்குள் நகைத்துக் கொண்டான். கண்ணாடிச் சட்டமிட்டிருந்ததால் முருகனின் நகைப்புச் சத்தம் சட்டத்தைத் தாண்டி வெளியே கேட்கவில்லை. ஆதியின் விழிகளில் வற்றாத அருவியாகக் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. தொலைவில் யாரோ வருவதை உற்றுப் பார்த்தாள். அது அருணகிரியேதான். அவன் தடதடவென்று கடும் கோபத்தோடு வந்தான். வீட்டிலிருந்த பாத்திரங்களை எடுத்துக் கொண்டுபோய் விற்கலாமா? சமைக்கக் கூடப் பாத்திரமில்லாமல் செய்து விட்டாயே? விம்மியவாறே கேட்டாள் ஆதி.
ஆமாம். பொல்லாத பாத்திரம். பாத்திரங்களை விற்ற பணத்தைக் கொண்டுபோய்க் கொடுத்தேன். போதாது, இந்த இரவு என்னுடன் தங்கவேண்டுமானால் இன்னும் கொஞ்சம் பணம் கொண்டுவா! என்கிறாள், அந்தக் கணிகை. நீ ரகசியமாக எங்காவது பணம் வைத்திருப்பாயே? அதைக் கேட்டு வாங்கிப் போகத்தான் வந்தேன். எடு பணத்தை! உறுமினான் அருணகிரி. தன் அன்புத் தம்பியின் பேச்சைக் கேட்டு நொந்துபோன ஆதி, தீராப்பிணி வந்த பின்னும் அவன் திருந்தவில்லை என்பதை உணர்ந்து கொண்டாள். தன் வீட்டுக் கூடத்தில் மாட்டப்பட்டிருந்த முருகப் பெருமானின் படத்தையே சற்று நேரம் வெறித்துப் பார்த்தாள். இவன் உன் பக்தனாக வேண்டும் என்றல்லவா என் தாய் ஆசைப்பட்டாள்? பிறகு இவன் ஏன் இப்படி ஆனான்? முருகப்பெருமானிடம் ஆதியின் கண்கள் கேட்டன. முருகனின் அருட்பார்வை அவள் மேல் விழுந்தது. அருணகிரியைத் திருத்த வேண்டுமானால் சொல்லத் தகாத அந்த வாக்கியத்தை அவள் சொல்லத்தான் வேண்டும் என முருகக் கடவுள் அவள் மனத்திலிருந்து தூண்டினான். ஆதி ஒரு முடிவு செய்தாள். படத்தை விட்டுக் கண்ணைத் திருப்பிய ஆதி, தன் தம்பியை ஒரு கணம் உற்றுப் பார்த்தாள். பின் தன் பார்வையை எடுக்காமல் நிறுத்தி நிதானமாக முற்றிலும் அதிர்ச்சி தரத்தக்க அந்த வாக்கியத்தைச் சொன்னாள். அக்கா ஆதியைப் நோக்கி, இன்னும் கொஞ்சம் பணம் கேட்கிறாள் அந்தக் கணிகை. நீ ரகசியமாக எங்காவது பணம் வைத்திருப்பாயே? எடு பணத்தை! என்று உறுமினான் அருணகிரி. ஆதி, கூடத்தில் மாட்டப்பட்டிருந்த முருகன் படத்தையே வெறித்துப் பார்த்தாள். அருணகிரியைத் திருத்த வேண்டுமானால் சொல்லத் தகாத அந்த வாக்கியத்தை அவள் சொல்லித்தான் ஆக வேண்டும் என முருகன் அவள் மனத்திலிருந்து தூண்டினான். தம்பியை உற்றுப் பார்த்த ஆதி, அந்த முற்றிலும் அதிர்ச்சி தரத்தக்க வாக்கியத்தைச் சொன்னாள்.
என்னிடம் பணம் இல்லையப்பா! வேண்டுமானால் நான்தான் இருக்கிறேன்! என்றாள் விரக்தியுடன்! அதைக் கேட்ட அருணகிரியின் தலை கிறுகிறுவெனச் சுற்றியது. அவன் விக்கித்துப் போய் திண்ணையில் செயலோய்ந்து உட்கார்ந்தான். என்ன கொடுமை இது! இப்படியொரு வாக்கியத்தைக் கேட்கவா பிறப்பெடுத்தேன்? தாய் முத்தம்மை இறந்த பிறகு, தன்னைத் தாய்க்கும் மேலாகக் காத்த ஆதியம்மை அல்லவா இவள்? இவள் என் அக்கா மட்டுமல்ல; வளர்த்த தாய் மட்டுமல்ல; என் தெய்வமே அல்லவா? தன் சின்னஞ்சிறு வயதிலேயே என்னைத் தன் மகனாக ஏற்று எத்தனை சிரமப்பட்டு என்னை வளர்த்தாள்! நான் புத்திகெட்டுப் போனேனே! சேர்வார் சேர்க்கையால் மிருகங்களை விடக் கேவலமாக மாறினேனே? என்னைவிடக் கெட்டழிந்தவர்கள் புவியில் வேறு யார் இருக்கக் கூடும்? முருகன் அதற்குத் தண்டனையாகத் தொழுநோயைத் தந்த பிறகும் முருகக் கடவுளைத் தொழவேண்டும் என்று ஏன் எனக்குப் புத்தி வரவில்லை? இப்படியொரு வாக்கியத்தை என் அக்கா சொல்லுமளவு எந்தப் பிசாசு உடலின்பத்தில் வேட்கை ஏற்படுத்தி என்னைப் பிடரியைப் பிடித்து உந்தியது? கணிகை காசு! இந்த இரண்டு வார்த்தைகளைத் தவிர வாழ்வில் வேறென்ன தெரியும் எனக்கு?
முற்பிறவியில் இவர் ஆற்றிய தவத்தின் பயனாக ஒரு பெரியவர் இவரை நல்வழியில் திருப்பிவிடக்கருதி அன்பனே ! மங்கையரின் மோக வலையிலிருந்து விடுபட்டு, குமரப் பெருமானை போற்றிப் பணிந்து, பேரின்பப் பெருவாழ்வை அடையும் மார்க்கத்தைப் பார் என்று உபதேசித்தார். இப்பெரியவர் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரே என்றும் கூறுகிறார்கள். அவர் செய்த புண்ணியம் கைகூடும் வேளை வந்தது. பல பிறவிகளில் இவர் முருக பக்தனாக, முருகனடிமையாக விளங்கியதினால் இவரது மனநிலையில் மாறுதல் ஏற்பட்டது. தமது தவறுகளை எண்ணி வருந்தினார். முருகனை நினைத்து வணங்கினார்.
என் தாய் முத்தம்மை காலமாகி இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அவளது அபரிமிதமான முருக பக்தியைப் பற்றி ஊரெல்லாம் பேசுகிறது. என் தாயின் முருக பக்தியில் ஆயிரத்தில் ஒரு பங்காவது எனக்கு இருக்கவேண்டாமா? முருகா! உன்மேல் பக்தி வந்திருந்தால் இந்த ஒழுக்கக் கேடான வாழ்க்கையை நான் வாழ்ந்திருப்பேனா? என்மேல் பாசம் வைத்த என் அக்காவுக்கு என்னால் எத்தனை துன்பங்கள்! நான் என் அக்காவை விட்டு விலகிச் செல்வதே நல்லது. இனியேனும் அவள் நிம்மதியாக வாழட்டும். அருணகிரியின் கண்களில் கண்ணீர் வழிந்தது. அவன் வீட்டை விட்டு நிரந்தரமாக இறங்கி வெளியில் நடந்தான். ஒரு கசந்த சிரிப்போடு அவனையே விரக்தியுடன் பார்த்துக்கொண்டிருந்தாள் ஆதி. வீட்டை விட்டு வந்த அருணகிரிக்கு எங்கு செல்வதெனத் தெரியவில்லை. காசில்லாத அவனுக்கு எந்தக் கணிகை வீட்டிலும் நிரந்தரமாக இடம்கிடைக்கப் போவதில்லை. திக்குத் திசை புரியாமல் கால்போன போக்கில் நடந்தான்.