பதிவு செய்த நாள்
03
மே
2012
03:05
எப்படியாவது ராமனுடன் வனத்திற்கு சென்றுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் சீதை, சற்று கடுமையாகவே வார்த்தைகளை பிரயோகம் செய்தாள். அவரை கடுமையாக நிந்தித்தாள். பெண்களுக்குரிய பொதுவான குணமான பிடிவாதத்துடன், இங்கே சீதையை ஒப்பிடக்கூடாது. இக்காலத்தில் என் அப்பா என் சிற்றன்னையின் பேச்சைக் கேட்டு, வெளியூரில் பத்துமாதம் இருக்கச் சொல்லியிருக்கிறார். நீயும் வருகிறாயா? என்று கேட்டாலும் கூட, உங்களுக்கு வேறு வேலை இல்லையா? வேணுமினா அந்த கிழத்தை போய் அங்கே இருக்கச் சொல்லுங்க, என்று சொல்லி விடுவாள் மனைவி.
சீதை அந்த வார்த்தையில் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. உமது தந்தை சொன்னால் நீர் காட்டுக்கு போய் விட வேண்டுமா? நீர் தானே மூத்தவர். உமக்கு தானே பட்டம் கிடைக்க வேண்டும். வாரும் என்னோடு. என் மாமனாரையும், சின்ன மாமியாரையும் ஒரு பிடி பிடித்து விடுகிறேன், என்ற சராசரி மருமகளாக சீதை மாறவே இல்லை. நீங்கள் இருக்கும் இடம் எனக்கு சொர்க்கம், என்று தான் சீதை வாதாடுகிறாள். கணவனுடன் சென்று விட வேண்டும். அவரையும் அங்கே முட்கள் குத்தும்.
அப்போது நமது தழுவலால், ரணத்தின் கடுமை தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த மனுஷன் வீட்டில் தூங்கும் போது என்றாவது தலையணை வைத்து படுத்துக் கொண்டிருக்கிறாரா? என் மடி மீது தானே தலை வைத்து தூங்குவார். நான் அவரது தலையை வருடிக் கொடுப்பேனே. இதை அங்கே அவருக்கு யார் செய்வார்? அவர் கட்டாந்தரையில் அல்லவா படுத்துக் கிடப்பார். நான் உடன் போனால் தர்ப்பை புற்களை சேகரித்து வந்து அதன் மேல் என் முந்தானையை விரித்து படுக்க வைப்பேனே, என்று தான் சிந்திக்கிறாள். இதற்காக வார்த்தைகளை நெருப்பாக்கினாள். நீங்கள் மட்டும் வனத்திற்கு தனித்து போகிறீர்கள் என என் தந்தைக்கு தெரிந்தால் அவர் உங்கள் வீரத்தின் மீது கடுமையாக சந்தேகப்படுவார். அவர் மட்டுமல்ல, பாமர ஜனங்கள்கூட உங்கள்மீது சந்தேகம் கொள்வார்கள். ஒருவன் தன் மனைவியைவிட்டு ஒரு நிமிடம்கூட பிரியக்கூடாது என்ற கொள்கையைக் கொண்டவர் என் தந்தை. அவர் பலகோடி மக்களை காப்பாற்றுகிறார். பல தேசங்களை ஆள்கிறார். உங்களைப்போல ராஜாங்க காரியங்களில் அனுபவமற்றவர் அல்ல அவர். அது தெரிந்ததால், மற்றவர்களுடைய கஷ்டத்தை தனது கஷ்டமாக பாவிப்பார்.
இந்த விஷயம் அவருக்கு தெரிந்தால் போயும் போயும் மனைவியைக் காப்பாற்ற தெரியாத ஒருவனுக்கா, என் மகளை திருமணம் செய்துகொடுத்தேன் என வருந்துவார். இவன் உண்மையிலேயே ஆண்மகன்தானா அல்லது பெண்ணா என தூஷிப்பார். நீங்கள் இப்படிப்பட்டவர் என அவருக்கு தெரிந்திருந்தால் என்னை உங்களுக்கு திருமணம் செய்து கொடுக்க சம்மதித்திருக்கவே மாட்டார். மனிதனாகப் பிறந்த ஒருவன் பல பாவங்களை செய்தாவது தன் குடும்பத்தைக் காப்பாற்றியாக வேண்டுமென மனு சாஸ்திரம் சொல்கிறது. ஆனால், நீங்கள் எனக்காக அப்படி என்ன செய்துவிட்டீர்கள்? என்னை நாதியற்றவளாக்க ஏன் துடிக்கிறீர்கள்? என்னை கூட்டிச்செல்வதால் உங்களுக்கு இடைஞ்சல் வருமென பயப்படுகிறீர்களா? உங்கள் கோபம் பிரளய காலத்தில் ஏற்படும் அக்னிக்கு சமமானது என்பதை நான் அறிவேன். உங்களை அச்சப்படுத்த இவ்வுலகில் யாராலும் இயலாது. அப்படி இருந்தும் என்னை அழைத்துச் செல்வதில் உங்களுக்கு என்ன தயக்கம்? சத்தியவானின் பின்னால் சாவித்திரி எப்படி தொடர்ந்தாளோ அதுபோல நான் உங்களைத் தொடர்வேன். உங்களைத்தவிர என் மனதில் வேறு எதுவுமே இல்லை. நான் உங்கள் குலத்தை காக்க வந்தவளே தவிர கெடுக்க வந்தவள் அல்ல. அப்படியிருந்தும் உங்கள் தம்பி பரதனிடம் நான் எப்படியெல்லாம் நடக்க வேண்டுமென எனக்கு பாடம் கற்றுத்தருகிறீர்கள். நீங்கள் என்னை பரதனுக்கு தானமாகக் கொடுத்து விட்டு, என்னை ஜீவனம் செய்யச் சொல்வது போல உங்களது வார்த்தைகள் தோன்றுகிறது.
நீங்கள் வேண்டுமானால் உங்கள் தம்பிக்கு வேண்டியவராக நடந்து கொள்ளுங்கள். என்னை கட்டாயப்படுத்த முடியாது. நீங்கள் காட்டிற்கு சென்றாலும், முனிவராக மாறினாலும், சொர்க்கத்திற்கே போனாலும் நான் உங்களோடு தான் நிச்சயமாய் வருவேன். இவ்வளவு சொன்ன பிறகும் என்னைக் காட்டிற்கு அழைத்துச் செல்ல மறுத்தால் ஏற்கனவே சொன்னதுபோல விஷம் குடித்து இறப்பேன். நீங்கள் செல்வதற்கு முன்பே அந்த காரியத்தை செய்துவிடுவேன். 14 வருடம் என்ற காலகட்டத்தை என்னால் தாங்கவே முடியாது, என்று ராமபிரானை இறுகத்தழுவிக்கொண்டு கண்ணீர் வடித்தாள் சீதாதேவி. அந்த கண்ணீர்த்துளிகள் செந்தாமரையிலிருந்து கொட்டும் நீர்த்துளிகளாக ஸ்படிக மணிகள் போல் தெறித்து விழுந்தன. அவளது கண்ணீரின் வெப்பத்தால் முகமாகிய தாமரை கருகிப்போனதுபோல் காட்சி தந்தது. இதன்பிறகு, ராமன் தன் மனைவியை ஆறுதலாகத் தடவிக்கொடுத்து, சீதா! நீ இங்கிருந்து துக்கத்தை மட்டுமே அனுபவிப்பாயானால் உன்னை விட்டுச்செல்ல மாட்டேன். உண்மையிலேயே உன் மனதில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளவே இவ்வாறெல்லாம் பேசினேன். என் கண்ணே! நீ என்னோடு காட்டில் இருக்க வேண்டும் என்பதற்காகவே படைக்கப்பட்டவள் என்பதை நான் அறிவேன்.
உன் கணவன் எந்த ஆபத்தைக் கண்டும் அஞ்சமாட்டான் என்பதை நீ அறிவாய். அப்படிப்பட்ட நான் க்ஷண நேரம் கூட உன்னைப் பிரியமாட்டேன். ஏற்கனவே எனது முன்னோர்களான ராஜரிஷிகள் பலர், காடுகளில் தங்கள் மனைவியருடன் வசித்திருக்கிறார்கள். அவர்களை பின்பற்றி நானும் உன்னை அழைத்துச்செல்வேன். இங்கேயே ஒரு இடத்தில் இருந்து தவ வாழ்க்கையை தொடர்ந்தால் என்ன என நீ நினைக்கலாம். ஆனால், என்னைப் பெற்றவர் தர்மம் தவறாத உத்தமர். அவர் என்னை காட்டிற்கு செல்லும்படி பணித்துவிட்டார். பெற்றவர்களை மனம் மகிழச் செய்வதே பிள்ளைகளின் கடமையாகும். அதுவே தர்மமும், நியாயமும் ஆகும். என்னைப் பெற்றவரை மீறி ஒரு நிமிடம் கூட இந்த அரண்மனையில் தங்கமாட்டேன். அப்படி இருந்தால் எனக்கு நல்ல கதி கிடைக்காது. தெய்வத்தின்மீது பாரத்தை போட்டுவிட்டு இங்கேயே தங்கினால் என்ன? என்றும் நீ கருதலாம். ஒன்றை மட்டும் புரிந்துகொள். தெய்வம் நமது வேலைக்காரன் அல்ல. நாம் சொன்னதை எல்லாம் செய்துகொடுக்க வேண்டும் என்ற அவசியம் தெய்வத்திற்கு கிடையாது. தன்னை வணங்குபவர்களுக்கு எல்லாம் தெய்வம் வசப்படாது. அது சுதந்திரமானது. உலகில் பிறந்த ஒவ்வொருவனும் தாயையும், தந்தையையும், குருவையும் வணங்க வேண்டும். ஏனெனில் அவர்கள் மூவரும் நம் கண் முன்னால் இருக்கும் தெய்வங்கள். உண்மை பேசுவது, தான தர்மங்களை செய்வது, பிறர் மனம் கோணாமல் உபசரிப்பது ஆகியவற்றைவிடவும், ஏராளமான பொருட்செலவில் யாகங்களை நடத்துவதை விடவும் மேன்மையானது பெற்றோரின் சொல்லைக் கேட்டலே ஆகும். பெற்றோரையும், குருவையும் பூஜிப்பவர்களுக்கு செல்வம், தானியங்கள், கல்வி, மக்கட்பேறு, சுகபோகம், சொர்க்கவாசம் அனைத்துமே கிடைக்கும். அது மட்டுமின்றி நாம் விரும்பக்கூடிய எது வேண்டுமானாலும் கிட்டும். நம்மிடம் இருக்கும் நவரத்தினங்களை பிராமணர்களுக்கு தானமாக கொடுத்து விடு. உணவு பொருட்களை ஏழை மக்களுக்கு கொடு. நமது ஆபரணங்களை வேலைக்காரர்களுக்கு கொடுத்துவிடு, என்றார்.