Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

அகிலத்திரட்டு அம்மானை பகுதி-12 அகிலத்திரட்டு அம்மானை பகுதி-14
முதல் பக்கம் » அகிலத்திரட்டு அம்மானை!
அகிலத்திரட்டு அம்மானை பகுதி-13
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2012
05:06

கலி சோதனை

இருந்தனர் விஞ்சை பெற்று இருபுற முனிவர் சூழப்
பொருந்திடும் கமல மாது பூரண மதுவாய் நிற்கக்
கரிந்திடும் நீசப் பாவி கயிறுவாள் வெடிகள் சூலம்
புரிந்தவன் கோட்டி செய்து பிடிக்கவே வந்தா னங்கே

வருமுன்னே யருகில் நின்ற மக்களை வைந்த ராசர்
கருதின மாக நோக்கிக் கடக்கவே நில்லும் நீங்கள்
பொருதிட நீசன் வாறான் பொறுத்துநாம் வந்த போது
அருகிலே உங்கள் தம்மை அழைத்துநாம் கொள்வோ மென்றார்
முப்படியே யுள்ள முறைநூற் படியாலே
இப்போது நீசன் இங்கோடி வாறான்காண்
மெய்ப்பான மக்களெல்லாம் விலகிநின்று வந்திடுங்கோ
செய்கிறதைப் பார்த்துத் திரும்பியிங்கே வந்தவுடன்
கையருகி லுங்களையும் கட்டாய் வரவழைப்போம்
என்று மக்களுக்கு இயம்ப அவர்விலக
முன்குறோணி விந்திலுள்ள மூடக் கௌடனவன்
கூட்டப் படையோடு கொக்கரித் தேதுடிப்பாய்ச்
சாட்டை வெறிபோலே சாடிவந் தான்கௌடன்
சூழப் படையைச் சூதான மாய்நிறுத்தி
வேழம் பலரேவி வெடியா யுதத்துடனே
வந்து வளைந்தான் வைகுண்டர் வாழ்பதியில் 20

சிந்துக் குயிரான ஸ்ரீபல்ப நாபருமே
கவிழ்ந்துபதி வாசலிலே கட்டிலின் மேலிருக்க
அவிழ்ந்த துணியோடே அவரிருக்கு முபாயமதை
அறியாமல் நீசன் அணிவகுத்துத் தன்படையைக்
குறியாய்ப் பிடிக்கக் கூட்ட மதில்நுழைந்து
சாணா ரினங்கள் சதாகோடி கண்டுளைந்து
வாணாள் வதைப்பானோ என்று மனதுளைந்து
குதிரை மேலேறிக் கொடுஞ்சாட்டை யால்வீசி
சதிரு சதிராய்ச் சாணாரைத் தானடித்து
அடிபட்ட போது அவர்கள்மிகக் கொக்கரித்து
முடிபடவே யிந்த முழுநீச வங்கிசத்தை
இப்போ தொருநொடியில் இவரையெல் லாமடித்து
மெய்ப்பாகக் கொன்று விடுமோ மெனச்சினத்தார்
ஆளுக் கொருவன் ஆவானோ நீசனெல்லாம்
தூளுபோ லாக்கவென்று துடியா யெழுந்திருந்தார்
சான்றோர் சினத்துத் தாறு மிகப்பாய்த்து
ஆன்றோரை நெஞ்சில்வைத்து ஆடை மிகஇறுக்கி
உடையிறுக்கிக் கட்டி உல்லாசத் தொங்கலிட்டுப்
படைத்திரளாய்ச் சான்றோர் பண்பா யொருமுகமாய்
எதிர்த்துநிற்கும் போது எம்பெருமாள் தானறிந்து 40
பொதுக்கென்ற கோபமதைப் புந்திதனி லடக்கிப்

சுவாமி பொறுமையுரைத்தல்

பொறுத்து இருந்தவரே பெரியோரே யாகுமக்கா
அறுத்திட வென்றால் அபுருவமோ என்றனக்கு
வம்புசெய்வதைப் பார்த்து வதைக்கவந்தே னக்குலத்தை
அன்புக் குடிகொண்ட அதிகமக்கா நீங்களெல்லாம்
பொறுத்து இருங்கோ பூலோகம் ஆளவைப்பேன்
மறுத்துரை யாடாமல் மக்களென்ற சான்றோர்கள்
என்னசெய்வோ மென்று இவர்களையைத் தாங்கடித்து
பின்னே விலகிப் பெரியவனே யென்றுநின்றார்

நீசன் கொடுமை

நீசன் மகிழ்ந்து எதிர்ப்பாரைக் காணோமென்று
பாசக் கயிறுகொண்டு பரமவை குண்டரையும்
கட்டி யிறுக்கிக் கைவெடியா லிடித்துக்
கெட்டி யிறுக்கிக் கீழேபோட் டுமிதித்துத்
தலைமுடியைத் தான்பிடித்து தாறுமா றாயிழுத்துக்
குலையக் குலைத்ததுபோல் குண்டரைத் தானலைத்துக்
குண்டியிலே குத்திக் குனியவிடு வானொருத்தன்
நொண்டியோ வென்று நெளியிலே குத்திடுவான்
வெடிப்புடங் கால்சுவாமி மேலெல்லாந் தானிடித்து
அடிப்புடங்கு கொண்டு அடித்தடித்துத் தானிழுப்பான்
சாணாருக் காகச் சமைந்தாயோ சுவாமியென்று 60

வாணாளை வைப்போமோ மண்டிப் பதனிக்காரா
பனையேறி சுபாவம் பட்டுதில்லை யென்றுசொல்லி
அனைவோரை யும்வருத்தி ஆபரணந் தேடவென்றோ
சமைத்தாய் நீசுவாமியென்று சாணாப் பனையேறி
பனைச்சிரங் கின்னம் பற்றித் தெளியலையே
உனைச்சுவாமி யென்றால் ஒருவருக்கு மேராதே
ஆளான ஆளோநீ ஆளில் சிறந்தவனோ
தாழாய்க் கிடந்து சாமியென்று வந்தாய்நீ
நாரண சுவாமி நானென்ற தும்நீயோ
வாரணத்தின் காலில்கட்டி வாட்டுவோம் பாருஎன்பான்
உன்னோடு நின்றவர்கள் உன்னை யடிக்கையிலே
என்னோடு வந்து என்னவென்று கேட்கலையே
நீசுவா மியென்றால் நெகிழுவ ரோஇவர்கள்
பாசக் கயிறு பற்றுமோ வுன்கையிலே
வகைதேட வென்று மனுச்சுவாமி யென்றாயே
புகையோடு புகையாய்ப் போறாய்நீ வம்பாலே
நருளை வருத்திவிட்ட நல்லமந்தி ரத்தாலே
மருளச்செய் தெங்களையும் மண்ணில்விழ வைபார்ப்போம்
அல்லாம லுன்கைக் கட்டு மறுவதற்கு
வல்லாமை யுண்டானால் மந்திரத்தைப் பார்நீயும் 80

கூனைப் போலிருந்து குறுமுழி முழிப்பதென்ன
நானன்னா வென்று நகைப்பா ரொருகோடி
ஏசுவார் கோடி எறிவா ரொருகோடி
பேசுவார் கோடி பேயன்வெறும் பேயனெனச்
சொல்லி நகைப்பார் சுத்தமுள்ள நாரணரை
பல்லுயி ரும்படைத்த பரமன்வாய் பேசாமல்
கவிழ்ந்து கண்மூடிக் களிகூர்ந் தேமகிழ்ந்து
சவந்தரிய நாதன் தானே நடக்கலுற்றார்
வெடிகொண் டிடிப்பார் வெட்டவா ளோங்கிடுவார்
அடித்தடித்துத் தள்ளி அங்குமிங் குமிழுத்து
வேதனைகள் செய்வார் வேதநா ராயணரை
சாதனைக ளுள்ள சர்வபர நாரணரும்
எவ்வுகத் துக்கும் இப்பாடு என்பாடு
இவ்வுகத் துக்கும் இப்பாடு என்பாடு
அவ்வுகத்தி லுள்ள அநியாயப் பாவிகளை
இவ்வுகத்தைப் போலே எரியாமல் விடடேனோ
என்று மனதில் இதமாய் மிகவடக்கி
ஒன்று முரையாமல் ஊமைபோ லேநடந்தார்
நடக்கவே மாயன் நல்லன்பு சான்றோர்கள்
கடக்கவந்து நின்று கண்ணீர் மிகத்தூவி 100

ஏழைக்கா யிரங்கி எங்கள்குல மீதில்வந்தீர்
கோழைக் குலநீசன் கொண்டடிக்க வந்தானே
பாவிநீ சனாலே பட்ட துயரறிந்து
ஆவுமேய்த் தநாதன் ஆளவந்தார் நம்மையுமே
அய்யோஇனி நாமள் அலைந்துமிகப் போவோமென
மெய்யோடே குத்தி விழுந்தழுவார் சான்றோர்கள்
தாய்தகப்ப னில்லையென்று தானடித்த நீசனெல்லாம்
வாயயர்ந் திருந்தானே இவர்வந்த நாள்முதலாய்
இனியாரு நம்மை ஏற்றுக்கை தாறதுதான்
தனியானோம் நாமளினித் தலையெடுப்ப தெக்காலம்
என்று சான்றோர்கள் சொல்லி யழுதசத்தம்
கன்றுக் கிரங்கும் கண்ணர் மிகக்கேட்டு

அய்யா சான்றோர்க்கு அருளல்

மலையாதுங் கோநீங்கள் மாமுனிவன் புத்திரரே
அலையாதுங்கோ மக்காள் அய்யா திருவாணை
இப்பூமி தன்னில்வந்து இத்தனை நாள்வரைக்கும்
கைப்பொருளுக் கிச்சை கருத்தில் மிகநினைத்துக்
கைக்கூலி வேண்டிக் கருமஞ்செய்தே னானாக்கால்
இக்குவ லயத்தில் இனிவரேன் கண்டிருங்கோ
தன்மமது நிச்சத்துத் தாரணியில் வந்துண்டால்
நன்மைக் கடைப்பிடித்து நான்வருவேன் நானிலத்தில் 120
ஒன்றுக்கு மலைய வேண்டாங்கா ணுத்தமரே
என்றைக்கும் நானிருப்பேன் என்மக்கள் தங்களிடம்
ஆளுவே னோர்குடைக்குள் ஆனவை குண்டமனாய்
ஆளுவோம் மக்கா வையகத்தை நாமாக

ஒன்றுக்கு மலைய வேண்டாம் உகபர நாத னாணை
என்றுக்கு மலையின் மீதில் ஏற்றின தீபம் போலே
கன்றுக்குப் பாலு போலும் கண்ணுக்குப் புருவம் போலும்
என்றுக்கு மக்கா வுங்கள் இடமிருந் தரசு ஆள்வேன்

முன்முறை விதியா லிந்த முழுநீசப் பாவி கையால்
என்விதிப் படவே வுண்டு இறப்பொன் றனக் கென்றதாலே
பின்விதி யெனக்கு நன்றாம் பெரும்புவி யாள்வோ மக்கா
உன்விதி நல்ல தாகும் ஒளிவறா வாழ்வீர் தாமே

சுவாமி கைது

என்று மகிழ்ந்து எம்பெருமா ளுள்ளடக்கி
மன்று தனையளந்த மாலோன் நடக்கலுற்றார்
கெட்டினக் கெட்டைக் கிறுக்க முடனிறுக்கிக்
கட்டினக் கட்டோடே கடுநீசன் தானடத்தி
ஏசுவார் மாயவரை எறிவார்காண் மாயவரைப்
பேசுவார் மாயவரைப் பேயனென்பார் மாயவரை
இப்படியே நீசக் குலங்களெல்லா மாயவரை
அப்படியே பேசி அடித்து மிகநடத்தி 140

நீசக் குலமிருக்கும் நெடுந்தெருக்க ளூர்வழியே
பாசக் கயிறோடு பகற்கள்ள னைப்போலே
தெருவுக்குத் தெருவு சிறுகுழந்தை நீசர்குலம்
வருகின்ற மாயவரை மண்கட்டி பேர்த்தெறிவார்
தலையைப் பிடித்திழுப்பார் சடைப்பேயன் பேயனென்பார்
இலைசருகு போலே எரியுகின்ற சாதியெல்லாம்
குண்டியிலே யொருவன் கோல்கொண்டு குத்திடுவான்
நொண்டியோ வென்று நெளியிலே குத்திடுவான்
நம்மள் குலத்தை நாணங் கெடுக்கவந்த
பம்பக் குறும்பேயன் பம்பைதனைப் பின்னுமென்பார்
அதிலுஞ் சிலபேர் அடடாபோ என்றிடுவார்
மதிலேறி வந்து மாமட வார்சிலர்கள்
இவன்தா னடியோ என்னையுமே ஆடவைத்துச்
சவந்தனையே சுட்டதுபோல் தான்சுட்டப் பேயனிவன்
தலைமயிரைப் பனையில் தான்பங்கு வைத்திறுக்கிக்
குலையக் குலையக் கொன்னகொடும் பாவியிவன்
என்று எறிவாள் இவள்சிலர்க ளம்மானை
அன்றுதுகள் கண்டு அதிலுஞ் சிலமடவார்
ஆமடியோவுங்களையும் அழைத்தானோ வீட்டில்வந்து
ஓமடியோ இந்த இறுமாப்புப் பேசாதுங்கோ 160

அன்றைக் கவனை அடிபணிந்து நின்றுகொண்டு
இன்றைக் கவனை எறியத் தொடர்ந்தாயோ
என்று சிலபேர் எறியாதே யென்றுரைப்பார்
நன்று நன்றென்று நாரணரு முள்ளடக்கி
ஒருதிக் கொருதி உரைத்திடுகோவெனவே
கருதிமுகம் பாராமல் கண்ணர் மிகநடந்தார்
பாவிக் குலங்கள் பச்சைமால் நாரணரை
தாவிச் சுசீந்திரத் தலம்நோக்கிக் கொண்டுசென்றார்

சுசீந்திரத்தில் அய்யா

கொண்டுபோ கும்வேளை கொடும்பாவி நெட்டூரன்
விண்டுரைக்கக் கூடாத வேதனைகள் செய்யலுற்றான்
அய்யய்யோ மாயவரை அன்னீத மாபாவி
செய்த வினையெல்லாம் சொல்ல முடியாதே
கொண்டுவிட்டு மாயவரைக் கூண்டகலி ராசன்முன்னே
கண்டு கலிராசன் கருத்தில் மிகத்தேர்ந்து
பார்ப்போம் பரிட்சை பயித்தியக்கா ரனுடனே
தாற்பரிய மாகத் தன்விரலின் மோதிரத்தைக்
கழற்றி யொருவர் காணாமல் கையடக்கிச்
சழத்தி வருவது தானறியா நீசன்வன்
ஏதடா என்றன் கைக்குள் ளிருப்பதையும்
ஓதடா வுன்றன் உற்ற வலுவாலே  180

அப்போது மாயன் அடக்க மிக அறிந்து
இப்போ துரைத்தால் இந்தநீ சக்குலங்கள்
கண்டு பிடித்துக் கட்டுவார் நம்மையுமே
தொண்டுசெய்யுஞ் சான்றோர் துயரமது மாறாது
நாம்நினைத்தக் காரியமும் நடந்திடா தானதினால்
ஏனிதைத்தான் சொல்லப் போறோ மெனஅடக்கி
எல்லாம் படைத்த ஏகன் கிருபையென
அல்லா நினைத்தபடி ஆகு மெனவுரைத்தார்
அப்போது நீசன் அவன்வெகுளி யாயுரைப்பான்
இப்போ தொருமருட்டாய் இவன்சமைந்தான் சுவாமியென்று
மருளிதுதா னென்று மாநீசன் தான்மருண்டு
கொண்டுபோங் கோசறடன் கூண்டவன் முன்பதிலே
என்றுரைத்த போது ஏவல்சீவா யிகளும்
நடத்தி யிழுத்து நாரா யணரையுமோ
கடத்திச் சறடன் கண்டிருக்கக் கொண்டுவிட்டார்
உடனே சறடன் உபாயமதைப் பார்ப்போமென்று
தடதடென எழுந்து சாராய மானதிலே
அஞ்சுவகை நஞ்சு அதில்கலந்தான் மாபாவி
நஞ்சில்லை யென்று நல்லபா லென்றீந்தான்
பாலென்ற போது பச்சைநா தன்மகிழ்ந்து 200

காலனைக்கா லாலுதைத்தக் கடவுளார் தாமகிழ்ந்து
வேண்டி யகமேற்றார் வேதநா ராயணரும்
ஆண்டி யதனால் அஞ்சா திருப்பதையும்
பார்த்துச் சறடன் பண்நா யகமகிழ்ந்து
வேற்றொரு சூட்சம் வேறேயுண் டாகுமென
என்னமோ என்று இவனுணர்ந்துப் பாராமல்
பொன்னர் மயக்கம் பெரிய மயக்கமதால்
கொடுபோங் கோவென்று கூறினான் சேவகநாடு
வெடுவாகக் கொண்டு வெறுநீசன் டாணாவில்
அடைத்துவைத் தானங்கே அன்னீத மாபாவி
திடத்தமுடன் நாரணரும் சிந்தைமிக மகிழ்ந்து
இருந்தா ரேயங்கே ஏழைக்கிரங்கி யவர்
தருந்தார ருக்காகத் தடியிரும்பி லுமிருந்தார்
மாண்டோ ரையுமெழுப்பும் மாய வலுவாண்டி
அய்யோ அவரை அடைத்துவைத் தேயிருந்த
பொய்யோ புரைக்குள் பொறுக்குமோ கண்ணுகண்டால்
மோளுக் குழியும் மொய்த்தத்தெள் ளினங்களுமாய்த்
தோளு வழியே சொரியுதே தெள்ளினங்கள்
அட்டை மித்க அரியத்தேள் ஈமிதிக்க 220

விட்ட நரகு மிகுவாய்ப் புழுமிதக்க
நாற்றத் துறைகள் நரகத் துறைபோலே
பார்த்த இடமெல்லாம் பலபுழுக்க ளுஞ்சரிய
ஐயோ அய்யாவை அடைத்தப் புரையதிலே
கையாடி நிற்கக் காரணமோ மாயவர்க்கு
சான்றோ ருக்காகத் தர்மக் குருநாதன்
மீன்று முழியாமல் முகமலர்ந் தங்கிருந்தார்
ஏழை களுக்காக ஈரொன்றொரு நாளாய்
மீளாச் சிலுவையிலே முள்ளா லடிகள்பட்டு
மரித்துப் பிறந்ததுபோல் மாயக் குருநாதன்
இதுவுகத்துக் கிப்புரையில் இருந்து அழுந்தவென்று
இருந்தாரே மாயவனார் ஏழைகளுக் காயிரங்கிக்
கருந்தார மார்பன் கருத்தில் மிக அடக்கி

அய்யாவை அனந்தபுரம் கொண்டு செல்லல்

எல்லா மடக்கி இவரிருக்கும் நாளையிலே
பொல்லாக் கலியன் புறப்பட்டான் மேற்கெனவே
இப்பே யனையும் இங்கேகொடு வாருமென்று
அப்போது சொல்லி அவனடந்தான் மேற்கெனவே
உடனே சிவாயி உற்றநா ராயணரைத்
திடமாகக் கூட்டிச் சிணமே நடக்கலுற்றான்
கொண்டு போனாரே கோட்டாற்று ஊரோடே 240

கண்டுபெரும் பாவியெல்லாம் கட்டிகொண்டு தானெறிய
எறிவார் சிலபேர் ஏசுவா ரேசிலபேர்
வெறிப்பேய னென்று விரட்டி மிகஎறியார்
எல்லாம் பொறுதியுடன் எம்பெருமா ளுமடக்கிக்
கல்லாரை யெல்லாம் கமக்கியறுப் பேனென்று
மனதி லடக்கி மாய நெடுமாலும்
கனகத் திருமேனி கண்கவிழ்ந் தேநடந்தார்
நடந்தாரே கோட்டாறு நல்ல பிடாகைவிட்டுக்
கடந்தாரே சுங்கான் கடையெல்கைத் தானும்விட்டுப்
பத்மனா புரத்தெல்கைப் பார்த்துத் தெருவோடே
உற்பனமாய் மாயன் உள்தெருவோ டேநடக்க
ஆகாத பாவியெல்லாம் அவரைக்கண் டேநடக்க
ஆகாத பாவியெல்லாம் அவரைக்கண் டேபழித்து
வாயாராப் பேசி வைதாரே நீசரெல்லாம்
அதிலு மன்போர்கள் அவரைக்கண் டேபணிந்து
இதுநாள் வரையும் இவர்நடந்த சட்டமதில்
பொல்லாங்கு செய்தாரெனப் பேருநாம் கேட்டதில்லை
எல்லாங் கடைதலைக்கு இட்டதர்ம மேகாக்கும்
என்றன்போர் சொல்லி இவரழுது நின்றராம்
அன்றந்த நாதன் அதுகடந்துப் போயினரே
போனாரே தக்கலையின் புரைக்குள்ளே யுமிருந்து 260

மானான பொன்மேனி வாலரா மங்கடந்து
வாரிக் கரையும் வாய்த்த நதிக்கரையும்
சீரிய நாதன் சென்றகண் டேநடந்தார்
நடந்துத் திருவனந்தம் நல்லபுரத் தெல்கைகண்டு
அடர்ந்த மரச்சோலை அடவி வனங்கள் கண்டு
கண்டுகொண் டெம்பெருமாள் கண்கொள்ளாக் காட்சியுடன்
பண்டுநாம் சீரங்கத்தைப் பார்த்தகன் றேநடந்து
இவ்வூரைக் கண்டு எத்தனைநா ளாச்சுதென்று
செவ்வுமகா விட்டிணுவும் சிந்தைக்குள் ளேயடக்கி

சிங்காரத் தோப்பில் சுவாமி சிறை

அவ்வூரைப் பாராமல் அந்த வனமானதுக்குள்
எவ்வுயிர்க்குந் தானாய் ஈயுகின்ற பெம்மானும்
நாட்டுக் கலியனுக்காய் நற்சோத னையெனவே
நீட்டின காலில் நீசனிட்ட விலங்கோடே
ஏழைகளுக் காக இருந்தார்பா ராவதிலே
கோழைக் குடும்பக் குறும்பர் தமைவதைக்க
மனுப்பா ராவதிலே மாயாண்டி தானிருந்தார்
தனுப்பா ரமடக்கித் தாழ்மையுட னேயிருக்க
ஆகாத நீசன் அழியும் நினைவதினால்
போகாத படிக்குப் பேயன் தனைவிலங்கில்
போட்டு வையென்றும் புள்ளி பதனமென்றும் 280

கோட்டுக்கா ரர்தமக்குக் கொடுத்தானே வுத்தரவு
அந்தக் கலிராசன் அவனுரைத்த வுத்தரம்போல்
சந்தமுனி மாயனையும் தான்விலங்கி லிட்டுவைத்தான்
அப்போது மாயன் அதிகசான் றோர்களுக்காய்
இப்போ பொறுதிகொண்டு இருக்கே னெனஇருந்தார்
நாட்டுச் சோதனைக்காய் நாராயணர் விலங்கில்
நீட்டின காலோடே நிலம்பார்த் தேயிருந்தார்
சாணான் பால்வைத்துச் சந்தோசப் பாலேற்று
நாணாம லெம்பெருமாள் நற்சோலையி லிருந்தார்
சோலையில் வாழ்பறவை சாமிவந்தா ரென்றுசொல்லி
ஏலேல முங்கூறி எந்நேர முந்தொழுது
நன்றான மாமுனியும் நற்பறவை யானதுவும்
கொண்டாடிக் கொண்டாடிக் கொஞ்சிவிளை யாடிருக்கும்
இந்தவனச் சோலையிலே எம்பெருமாள் தானிருக்க
சந்த முடனருட்கள் சதாகோடி யாகவந்து
தொழுது நமஸ்கரித்துத் தூயோன் பதம்பூண்டு
முழுது முன்பாதமென மொய்குழ லார்சிலர்கள்
நாற்பது வயசாய் நான்சேயில் லாதிருந்தேன்
காப்பதுன் பாதமெனக் கண்டு தொழுதபின்பு
தந்தாரே யெங்களுக்குச் சந்ததி தழைத்தோங்க 300

வந்தாரே நாயடியார் வாழு மனையிடத்தில்
என்ன உபகாரம் இவர்க்குநாம் செய்வோமென்று
கன்னல் கதலிக் கனிகள் கொடுப்போமோ
தர்ம மால்தீர்த்தச் சஞ்சலங்க ளானதையும்
அம்மம்மா சொல்ல ஆராலு முடியுமோடி
குட்டம் பதினெட்டும் குடித்தபத மொன்றாலே
கட்டம் முதலாய்க் காணாப் பறந்ததுவே
இப்புதுமை செய்தவர்க்கு இப்போ தொருபுதுமை
கொப்பளிக்கு முன்னே கூடா தோஇவரால்
ஏதோ வொருதொழிலாய் இவர்பம்ம லாயிருக்கார்
சூதால் கொடுமைவந்து சுற்றுங்காண் நீசனுக்கு
என்று சிலபெண்கள் ஏழைபங் கோனருளை
கண்டு தொழுது கருத்தகலா நின்றுடுவார்
அப்படியே நருட்கள் ஆதிநா ராயணரை
செப்படிபோ லவர்க்குச் செய்தநன்றி சொல்லியவர்
கூரைக்குப் போகக் கூறநினை வில்லாமல்
நாரணரைச் சூழ்ந்து நமஸ்காரஞ் செய்துநிற்பார்
சூழ்ந்து நருட்கள் தொழுதுமிக நிற்கையிலே
தாழ்ந்துசா குங்கலியன் சறடன் தனைநோக்கிப்
பேயனொரு சாணானைப் பிடித்துக்கொடு வந்தோமே 320
தூய இரும்பு விலங்கதிலே போட்டுவைத்தோம்

கடுவாய் சோதனை

சாமியென்று பாவித்தச் சாணான்தனை நாமும்
காமியத் தால்பெருத்தக் கடுவாய் தனைவருத்தி
ஏவிவிட்டுப் பார்த்து இருவகையுந் தானறிந்து
போவெனவே சொல்லிப் பேயன் தனையனுப்ப
வேணுமே யிப்போ விவரமென்ன என்றுரைத்தான்
ஆணுவ மூர்க்க அரச னிதுவுரைக்க
நல்லதுதா னென்று நாட்டமுற் றுச்சறடன்
வல்லபெலச் சேவுகரை வாவென் றருகழைத்து
இப்போ தொருநொடியில் ஏழுமலை யுந்தேடி
வெற்போடு வெற்பெல்லாம் வேக முடன்தேடி
வேகம் பெரிய வேங்கைகடு வாய்பார்த்து
நாகமதிலுங் கடிய நல்லகடு வாய்பார்த்து
நாழிகை ஏழதுக்குள் நம்மிடத்தில் கொண்டுவரத்
தூளி யதுபறக்கும் சூறா வளியதுபோல்
கொண்டு வாவெனக் கூறிச் சறடனுமே
விண்டுரைப்பான் பின்னும் வீரியமாய்ச் சேவுகர்க்கு
நன்று மொழிகேளும் நல்வீரச் சேவுகரே
இன்றேழு மணிக்கு இங்கேகொண்டு வராட்டால்
தூக்கியே வுங்களையும் தூண்டலில் போட்டிடுவேன்340

ஆக்கினைகள் செய்துவுங்கள் ஆமிசத்தை வாங்கிடுவோம்
என்று சொல்லிச் சேவுகரை இறுக்கமுட னிறுக்கி
இன்றுபோ மெனவே ஏற்றவரி சைகொடுத்து
அனுப்பினாள் சேவுகரை அந்தவே ளைதனிலே
பனிப்பிசினும் வெயிலைக் கண்டு பதறினாற்போல்
பதறியே சேவகர்கள் பண்பாகச் சட்டையிட்டுக்
குதறியே வந்து கூண்டுரைப்பார் மாயவேனாடு
நாரா யணரே நாங்கள்போ குங்கருமம்
பேராய் நடக்கவேணும் பெரிய திருமாலே
உம்மைச்சோ தனைபார்க்க குங்கருமம்
ஆனதினால்
செம்மையுள்ள ராசன் சிணமே யனுப்பினர்காண்
ஆனதினால் கடுவாய் அடியேங்கள் கையதிலே
போனவுடன் சிக்கிடவும் புண்ணியரே வந்தாரும்
என்றுரைக்கச் சேவுகர்கள் எம்பெருமா ளுள்ளமதில்
நன்று நன்றென்று நாரா யணர்சிரித்து
விடைகொடுத் தார்கடுவாய் வேகமதில் சிக்கிடவும்
படைச் சேவுக்கத்தார் பாரமலை தானேறி
கடுவாய் கிடக்கும் கனமலைகள் தான்தேடி
முடுகித் தலையாரி முடிச்சு வலைவளைந்து
காடு கலைத்துக் கடுநாய்கள் விட்டேவி 360

வேடுவர்க ளெல்லாம் விரைந்து கலைத்தனரே
கலைக்க வொருகடுவாய்க் கடுங்கோபங் கொண்டெழுந்து
வலைக்குள் நுழைந்ததுகாண் மாயவனார் தன்செயலால்
உடனேதான் சேவுகர்கள் ஓடிமிக வளைந்து
அடவுடனே வலையை அமர்த்தி மிகப்போட்டு
உபாயத்தாற் சென்று ஒருகூட்டுக் குள்ளடைத்துக்
கபாடத்தால் கட்டிக் கனகூடு தானெடுத்துத்
தாமரை குளத்துச் சன்னாசி பாதமதால்
நாமளு மன்னனுக்கு நாடிப் பிழைத்தோமென்றார்
நல்லவென்னி யுண்டு நற்சாணாச் சுவாமியிடம்
வல்லவர் தானென்று மாதவாய்க் கொண்டாடித்

தேடித் திரியாமல் திக்கெங்கும் வாடாமல்
ஓடித் திரியாமல் உயர்சாணாச் சாமியினால்
நாமும் பிழைத்தோம் நற்கடுவாய்க் கொண்டுவந்தோம்
சீமையாளு மரசன் செப்பும் வாக்குப்படியே
கடுவாயைக் கொண்டு காலமே போவோமென
வெடுவாகக் கூடதுக்குள் வேங்கை தனையமர்த்திச்
சுமந்துகொடு வந்தார் துடியான சேவுகர்கள்
அமர்ந்த கடுவாய் அதறுகின்ற வோசையினால்
நருட்கள் மிகப்பதறி நாற்கரைக்கு மாட்கள்விட்டு 380

வருகின்ற வேளை மாகோடி யாய்ச்சனங்கள்
சாமியென்ற சாணானைச் சோதிக்க வேணுமென்று
ஆமியமாய்க் கடுவாய் அதோகொண்டு வாறாரெனப்
பார்க்க வருஞ்சனங்கள் பலசாதி யுங்கோடி
போர்க்குத் திரள்போல் போற வகைபோலே
எண்ணிறந்த நருட்கள் இதிற்கூடி வந்தனரே
மண்ணளந்த நாதன் மனமகிழ்ந் தேயிருந்து
சாமி யருகில் சூழ்ந்திருந்த சான்றோர்கள்
நாமினித்தான் செய்வதென்ன நாதனே யென்றுசொல்லி
கேட்டுநா ராயணரும் கீழ்ச்சுண்டுக் குள்மகிழ்ந்து
நாட்டுக் கரிவிரிநாள் நாரா யணனும்நான்
படசி பறவை பலசீவ செந்துக்களை
நிச்சயமாய்ப் படைத்த நீலவண்ண நாதனும்நான்
மண்ணே ழளந்த மாயப் பெருமாள்நான்
விண்ணே ழளந்த விஷ்ணு திருவுளம்நான்
ஏகம் படைத்தவன்நான் எங்கும் நிறைந்தவன்நான்
ஆகப்பொருள் மூன்றும் அடக்கமொன் றானதினால்
நாதக் கடல்துயின்ற நாகமணி நானல்லவோ
சீவசெந்துக் கெல்லாம் சீவனும் நானல்லவோ
இந்நீச னெல்லாம் என்னையறி யாதிருந்தால் 400

மின்னிலத்தில் நான்படைத்த மிருக மறியாதோ
என்றே யடக்கி ஏகந் தனைநினைத்து
ஒன்றுக்கு மஞ்சாதே உற்றமக்கள் சான்றோரே
பதறாதே யென்றனுடப் பாலகரே யென்றுசொல்லி
இதறாத மாயவனார் இருந்தார்கா ணம்மானை
அப்போ தவரிருக்க அம்மிருக மானதையும்
வைப்போடு நெஞ்ச மாநீச ராசனிடம்
கொண்டுவைத்தா ரந்தக் கோபக்கடு வாய்தனையும்
கண்டு கலிராசன் கனகசந் தோசமுடன்
அன்று சிப்பாயிகட்கு ஆனவரி சைகொடுத்து
இன்றுகடு வாய்தனையும் இப்போது கொண்டுசென்று
கூட்டி லடைத்துவைத்துக் கோப மதுவருத்த
ஈட்டிமை யாயதற்கு இரையொன்றும் போடாமல்
இன்றைக்கு வைத்து இதுநாள் கழிந்ததன்பின்
சென்றந்தப் பேயனிடம் செல்லவிட லாமெனவே
அடைத்துவை போவெனவே அரசன் விடை கொடுக்கத்
திடத்தமுடன் சேவுகர்கள் சென்றடைத்தார் கூடதிலே
அன்றிரச் சென்று அடுத்தநாள் சென்றதற்பின்
இன்றுகடு வாய்திறந்து இகழ்ச்சியது பார்பபோமென்று
வந்தானே யந்த மாநீசப் பாதகனும் 420

தந்தாய்ச் சறடன் சௌனி கௌடனுமே
கவுடன் வெகுடன் கீர்த்திதுரை சானிகளும்
மகுடவர்த்தனர் முதலாய் மந்திரி மார்களுமே
துலுப்பர் சலுப்பருடன் சிப்பாயி மார்களுமாய்
அலுப்பர் பட்டாணிகளும் ஆனகரி காலாளும்
காலாளும் வீராளும் கருமறவர் சேகரமும்
சூலாளும் தோலாளும் சூழ்ந்தபடை யாளர்களும்
ஒக்கத் திரண்டு ஒருமித்தாங் காரமுடன்
மிக்கத் திரண்டு வெடியாயு தத்துடனே
ஆனைக்கா ரர்கோடி திரண்டுவந்தா ரம்மானை
சேனைக்கா ரர்கோடி திரண்டுவந்தா ரம்மானை
இந்தப் படையோடும் எச்சாதி தன்னோடும்
வந்து வளைந்தார் மாகடுவாய்க் கூட்டையுமே
அப்போது ராசன் அருகில்தலை யாடகளை
இப்போது இந்த ஏற்றகாடு வாய்தனையும்
குண்டியிலே கம்புகொண்டு குத்துவது கோபம்வரக்
கண்டுகடு வாயதுவும் கம்பதுக் கேபதறி
அதறி மிகமுழங்கி அதுகவிழ்ந்து தான்படுத்துப்
பதறி யதுகிடந்து படுக்கை யிளகாமல்
நீச னவன்குத்த நெடுஞ்சற டன்காமல் 440

வாசப் பொடிவருத்தி வன்னப் பொடிநிறைத்து
மட்டாய்க் கடுவாய் மாறி யிளகாமல்
கிடந்ததுகா øணாய கிருபை யதினாலே
தடந்தெரியா வண்ணம் சனங்கள் மிகப்பார்க்க
ஈட்டி யெடுத்து இனிக்குத்த வேணுமென்று
மேட்டி யொருவன் விசையாகக் குத்திடவே
எட்டிக் கடுவாய் ஈட்டி தனைப்பிடித்து
விட்டிடவே யருகில் நின்றதொரு வேதியனைக்
குத்திச்சே யீட்டி குடல்பீற அம்மானை
கத்தியும் பட்டுக் கதறியொரு வன்சாகப்
பார்த்திருந்த நீசப் பாதக னேதுரைப்பான்
நாற்றிசைக்கு மேராதே நல்மறையோன் பட்டதுதான்
ஆயிரம் பசுவை அடித்துமிகக் கொன்றாலும்
தோச மீதல்லவொரு வேதியனைக் கொன்றதுதான்
என்னபோ லாச்சு யாம்நினைத்த காரியங்கள்
மன்னன் கலிராசன் மாசறட னுமயர்ந்து
ஞாயமீ தல்லவென்று நடந்தா னரண்மனைக்கு
தோசமொன் றேற்றோமெனச் சொல்லி மிகப்போனான்
அப்போது சனங்கள் அல்லோரு மேதுரைப்பார் 460

இப்போதிப் பேயனுக்கு இதுவுமொரு நல்லதுதான்
என்றுசொல்லி நீசன் ஏற்ற சறடனுமே
ஒன்றுமுரை யாடாமல் உள்ளபடை யத்தனையும்
கூட்டிக்கொண்டு போனான் கோட்டையதுள் ளம்மானை
வேட்டைப் பலித்துதில்லை வெற்றிதான் பேயனுக்கு
பார்க்கவந் தசனங்கள் பலதிசைக்கு மிவ்விசளம்
ஆர்க்கு மிகவே அறிவித் தகன்றனரே
அப்போ சுவாமி அருகில் மிகவாழும்
மெய்ப்பான சனங்கள் மெத்தசந் தோசமதாய்
இண்ணத் தறுவாய் ஈசுரன் காத்ததுதான்
அண்ணல் காயாம்பு அச்சுதனார் காத்ததுதான்
என்று மனமகிழ்ந்து எம்பெருமாள் நாரணர்க்கு
அன்று விவரம் அறிவித்தா ரன்போர்கள்
கேட்டுநா ராயணரும் கீழ்ச்சுண்டுக் குள்மகிழ்ந்து
ஆட்டுவோ மாட்டுவோங்காண் அல்லாமல் வேறுளதோ
இப்படியே சொல்லி இருக்குமந்த நாளையிலே
முப்படித்தான் ஈசர் மொழிந்தநா ளதுவரைக்கும்
இருப்போ மெனச்சொல்லி இருந்தார்கா ணம்மானை
அருப்பான நீசன் அவன்சிலநாள் சென்றதற்பின்
என்ன விசாரம் இப்பேய னுக்குகெனவே

தன்னே யிருந்து தானினைக்கும் வேளையிலே
முன்னே யொருயுகத்தில் மூவரிய நாரணர்க்கு
அன்னமொடு பாலும் அருந்த மிகக்கொடுத்த
ஆயர் குடியில் அவதரித்தக் கோமானில்
தூய வொருகோனும் துணிந்தங் கெழுந்திருந்து
பத்தியுள்ள நாரணரைப் பாரா வதுஇளக்க
உத்தரித்துக் கோனும் உலகமதை யாளுகின்ற
மன்னவன் முன்பில்வந்து நின்றங்கு ஏதுரைப்பான்
தன்னதிய மானத் தலைவனே கேட்டருளும்
நம்முடைய ராச்சியத்தில் ஞங்ஙளிட தன்னினத்தில்
எம்முடைய ஆளாய் இருக்கின்ற இச்சாணான்
சாணானில் நல்ல தன்மைவெகு மானமுள்ளோன்
கோணா மனதுடையோன் குணமுடைய நல்லவன்காண்
நேர்மை யொழுங்கோன் நேர்சொல் லொருவாக்கன்
ஓர்மை யுடையோன் உபகாரக் காரனிவன்
ஆனதா லெங்களுக்காய் அரசேநீர் தாமுருகி
ஈனமிலா தெமக்காய் இரங்கு மெனத்தொழுதான்

வைகுண்டர் விடுதலை

அப்போ தரசன் அவன்மனது தானிளகி
இப்போ திவனை யாமனுப்பி விட்டிடுவோம்
விட்டா லவனும் மேலு மிருக்குமுறை 500
கட்டாகச் சொல்லிக் கைச்சீட் டெழுதிவைத்துப்
போகச்சொல் லென்று போகண்ட னார்க்குரைக்க
ஆகம் மகிழ்ந்து ஆயன்மறுத் தேதுசொல்வான்
என்ன விதமாய் எழுதிவைக்கும் வாசகங்கள்
மன்னவனே சொல்லுமென மாறி யவன்தொழுதான்
அப்போ தரசன் எல்லோரு மேகேட்க
இப்போ திவனினத்தில் எத்தனைபேர்க் கானாலும்
ஒப்போ டுறவாய் ஒத்திருந்து வாழ்வதல்லால்
சற்பம்போ லொத்த சகலசா திதனக்கும்
உத்தரவு சொல்லாமல் உபாயமாய்த் தானிருந்து
மற்றுமொரு சாதிகளை வாவென்று ரையாமல்
தன்னொரு சாதி தன்னோ டிருப்பதல்லால்
பின்னொரு சாதி பிதனம்வைத்தப் பாராமல்
இனத்துடனே சேர்ந்து இருப்போம் நாமென்றுசொல்லிக்
கனத்தோ டவனும் கைச்சீட் டெழுதிவைத்துப்
பின்னவன் எல்லையிலே போகச்சொல் லென்றுரைத்தான்
மன்னன் கலியுரைத்த வாக்கின் படியெழுதி
ஒப்பமிடச் சொன்னார் உலகளிந்த பெம்மானை
செப்பமுடன் நாரணரும் சிரித்து மனமகிழ்ந்து
நம்மாலே சொல்லி நகட்டப் படாதெனவே 520

சும்மா அவன்வாயால் சொல்லிச் சுமைசுமந்தான்
இதல்லோ நல்ல இயல்கா ரியமெனவே
அதல்லோ வென்று அரிமா லகமகிழ்ந்து
கைச்சீட்டை சுவாமி கைகொண்டு தான்கீறி
வச்சுக்கோ வென்று மண்ணில் மிகப்போட்டார்
கீறிவிட்ட ஓலைதனைக் கெடுநீசன் தானெடுத்து
மாறிக் கொருத்து வைத்தான்கா ணம்மானை
உன்னில் லிடத்தில் உடனேநீ போவெனவே
குன்னுடைய நீசன் கூறினா னம்மானை
அப்போது மாயவனார் அகட்டென வுறுக்கி
இப்போது நீநினைத்த இலக்கதிலே போவேனோ
தேவ னினைத்தத் தேதியுண் டவ்வேளைப்
போவே னெனச்சொல்லிப் பெரியோ னகமகிழ்ந்து
நல்லவரே மக்காள் நாம்நினைத்தத் தேதியது
வல்லவரே வருகு மாசிபத் தொன்பதிலே
கிழக்குநாம் போவோம் கிரணமாய் நீங்களெல்லாம்
விளக்கொளி போலே வீரம தாயிருங்கோ
என்றுரைக்க நாதன் இசைந்தமக்க ளெல்லோரும்
நன்று நன்றென்று நாதன் பதந்தொழுது
தொழுது அவரிருக்கத் தூயத் திருமாலும் 540

முழுது மனந்த மூதூரை விட்டுஇன்று
பழுதில்லாத் தெச்சணத்தில் பரமனமக் கேயருளித்
தந்தயச் சிருந்த தாமரையூர் நற்பதியில்
சிந்தை மகிழ்நாதன் சீக்கிரம் போகவென
நினைத்துத் திருமால் நிண்ணயமாய் உள்ளடக்கிக்
கனத்த புகழ்சான்றோர் கைக்குள்ளே நிற்பவரைப்
பய்யவே யின்று பயண மெனவுரைக்க
உய்யமிகக் கொண்டோர் உல்லாச மேயடைந்து
சந்தோசங் கொண்டு சங்கடங்கள் தீர்ந்துதென்று
வந்தோர்க ளெல்லாம் மாயவரைத் தொட்டில்வைத்து
ஏந்தி யெடுத்து இயல்வா கனம்போலே
ஓர்ந்து வருக உற்ற அனந்தம்விட்டுக்
கண்டுநீ சப்பாவிக் கர்த்தாவைத் தானிகழ்ப்பாய்க்
கொண்டுபோஞ் சாணாரைக் கூடிமிகச் சிரிப்பார்
சாமியென்றோன் பட்ட சளங்களெல்லாம் பார்த்திருந்தும்
வாய்மதத்தால் பின்னும் வழுங்கல் சுமப்பதுபார்
பிழைப்பில்லை யென்றோ புத்திகெட்டச் சாணார்கள்
உழைக்க மதியற்று உளத்துகிறான் சுமந்து
பேயனைச் சுமந்து புலம்பித் திரிவதற்கு
நாயன் முன்னாளில் நாட்டில் படைத்ததுபார் 560

என்று தூசணிப்பார் இசைந்தபுகழ்ச் சான்றோரை
அன்றதிலே சிலபேர் அல்லகா ணென்றுசொல்லி
நம்மளுக் கென்ன நட்டம்வந்து போச்சுதெனச்
சும்மா அவனினத்தோர் சுமந்துகொண்டு போவதல்லால்
ஏனிந்தப் பேச்சு யாம்சொல்லப் போறோமெனத்
தானிந்த வார்த்தை சனங்கள்சிலர் சொல்லவே
சொல்லன்பு வன்பு சுவாமி மிகப்பார்த்து
நல்ல அனந்தம்விட்டு நாடும்வால ராமம்விட்டுச்
செல்ல அரியும் சிறப்பா யகமகிழ்ந்து
வல்ல வழியில் வாழுகின்ற ஊரும்விட்டுப்
பள்ளிவா சல்விட்டுப் பார்வதி யகரம்விட்டுப்
துள்ளிக் கோட்டாறு சுசீந்திரத் தலமும்விட்டு
வேக மடக்கி விளியிட்டு வண்டுறுக்கி
ஆகமத்தின் தேதி அடுத்தாலா கட்டெனவே
சொல்லுவேன் வெள்ளித் தோன்றி வருகையிலே
வெல்லுவே னென்று விசையடக்கி எம்பெருமாள்
தொட்டிலி லிருந்து சுவாமி விளியுமிட்டு
மட்டி லிருந்த வளர்தா மரைப்பதியில்
வந்து பதிகண்டு வட்டமிட்டுத் தானாடி
விந்து வழிகளுக்கு மேற்கெதிக ளாகுதென்று 580
இன்றுமே லெனக்கு ஏற்றவெகு சந்தோசம்
பண்டு எனக்குப் பகர்ந்த மொழிபோலே

துவையல் பந்தி-வாகைப்பதி தவசு

சான்றோரை நல்ல தவத்துக் கனுப்பிடவும்
பண்டோர் நமக்குப் பகர்ந்தபடி மாதர்களை
நாடு மணங்கள் நல்லகலி யாணமுதல்
வீடுவகை சொத்து விருதுவே டிக்கையுடன்
தேரு திருநாள் திருக்கல்யாணக் கொலுவும்
பாரு புகழப் பாவாணர் கீதமுடன்
நாட்டில் மனுக்கள் நல்லோர்கள் வாழ்வதிலும்
மேட்டிமைக ளாக மிகுவாழ்வு சேர்கையுடன்
வேண்டும் பவிசு மிகுவாய்ப் பவிசுகளும்
தாண்டும் பெரிய சனங்கள் மிகக்குழைவும்
கொடியுமிகக் கட்டிக் கொக்கரித் திகனையுடன்
வெடியெக் காளமுடன் வெற்றியி டம்மானமிட்டு
நாட்டில் சிறப்பதிகம் நாமினிமேல் செய்யவென்று
தாட்டிமையாய் நாதன் சான்றோர் தமக்குப்போ
அறிவில் வினோதம் அதிகநே ருத்தமமாய்க்
குறியாய் மனதில் குறிக்கும் படியருள
அருளான விஞ்சை அருள்கொடுக்கு மாலோனும்
மருளாமல் சாணார் மனதி லுருவாக 600

மூணுநேரத் துவைத்து உச்சி யொருநேரமதாய்
வேணும் பச்சரிசி வெற்றிச் சிறுமணியும்
வேகவைத்து நன்றாய் விரைவாய் மணலிலிட்டுத்
தாக மில்லாமல் தவசிருக்க வேணுமென்று
பெண்ணுடனே ஆணும் பிறந்தபிள்ளை தன்னோடும்
கண்ணான கட்டில் கலருங் கிழவிவரை
சூலி யிளம்பிள்ளை திரண்ட மடமாதும்
மாலி னருளால் வஸ்துவகை தான்மறந்து
வீடு மனைமறந்து விற்று விலைகள்செய்து
ஒண்ணிலரைப் பாதியென ஒக்கவிற்றார் சொத்ததனை
மண்ணு மறந்து மாடாடு தான்மறந்து
ஆண்டபண்ட மெல்லாம் அகல மிகமறந்து
கூண்டபண்ட மெல்லாம் கூசாம லேமறந்து
அனுபோக மற்று ஆண்பெண் ணிகழாமல்
இனிபோக மற்று இருந்தார் தவசெனவே
எல்லோரு மிக்க இருக்கத் தலம்பார்த்து
அல்லோரு மேக அவர்கள் மனதிலுற்று
நாத னரிநாதன் நாரா யணநாதன்
சீதக்குரு நாதனிடம் சென்றா ரவர்பதத்தல்
சென்றே யவருடைய சீர்பாதந் தெண்டனிட்டு 620

இன்றேக எங்களுக்கு இப்போ விடையருள்வீர்
என்றே சனங்கள் எல்லோரும் போற்றிநிற்க
அன்று பெருமாள் அகமகிழ்ந்து கொண்டாடி
நாம்நினைத் ததுபோலே நடந்து காரியந்தான்
தாம்நினைத் ததுபோலே தாநடந்து வீரெனவே
உத்தரவு சொல்ல உடைய வழிச்சான்றோர்
சித்தருட அருளால் சென்றார் தவமதுக்கே

தவமது செய்ய வென்று சடுதியிற் சான்றோ ரெல்லாம்
உகமது அளந்தோன் பாதம் உண்டென மனதி லாக்கி
வகைபொரு ளாசை யற்று மனைவிகள் மக்கள் கூட
திகையது நோக்கி வாரி துவரயம் பதியிற் சேர்ந்தார்

மண்ணுடன் மனைக ளாசை மாடுடன் வீடு மாசை
பெண்ணுடன் பொருளி னாசை பூதலப் பொன்னி னாசை
எண்ணுடன் எழுத்தி னாசை இடறுபொல் லாசை வேசை
ஒண்ணுடன் ஆசை நீக்கி உடையவ னாசை கொண்டார்

கொண்டுநல் மனதிற் பூண்டு குருபரா தஞ்ச மென்று
பண்டுநல் துவார கையின் பதிவாட வாசல் தன்னில்
தெண்டிரை வாவை சூழ்ந்த செகற்கரை தனிலே வந்து
கண்டுநற் பதியில் புக்கி கருத்துடன் இருந்தா ரன்றே

இருந்தவர் தலமும் பார்த்து ஏகநல் வெளியுங் கண்டு 640
பொருந்திடும் ஞான வான்கள் புண்ணிய மனதி லெண்ணி
வருந்திடக் கனிவே காணும் வாவைநற் பதியி தாகும்
தெரிந்திடக் கடலில் மூழ்கிச் சிவகலை யணிந்தார் தாமே

அணிந்தவர் பெண்ணு மாணும் அன்புடன் மகிழ்ச்சை கூர்ந்து
துணிந்தவர் தங்கள் தங்கள் துயரங்க ளறவே நீக்கப்
பணிந்தவர் நாதன் தன்னைப் பரிவுடன் மனதுள் ளாக்கித்
தணிந்தவர் கோப வேகத் தகுளியைத் தள்ளி வாழ்ந்தார்

வாழ்ந்தே தவசு வாகைப் பதியதிலே
தாழ்ந்தே சனங்கள் சந்தோச மாயிருக்க
அந்திசந்தி யுச்சி ஆகமூ ணுநேரம்
நந்தி யருளால் நல்ல துணிதுவைத்து
உவரிநீ ரில்துவைத்து உவரிநீ ரைக்குடித்து
உவரிநீர் தன்னில் உற்றன்ன மேசமைத்து
உச்சி யொருநேரம் உணவு மிகஅருந்தி
மெச்சிப் புகழ்ந்த விடிய வொருசாமம்
உகப்பாட்டு மோதி உற்ற அபயமிட்டு
வகையாய் விடிய வரும்நா ழிகையேழில்
துணிகள் துவைத்துத் தோய மதிலிறங்கிக்
கெணியாய்க் குளித்துக் கிருஷ்ணர் பதம்போற்றி
இப்படியே நித்தம் இவர்மறவா வண்ணமேதான் 660

அப்படியே வாரி அலைவாய்க் கரையிருக்க
வாரிப் புறமாய் வளர்காற்று வாடைமிக
நீரிறைத்தாற் போலே நித்தமந் தத்தவத்தோர்
பேரி லிறைத்துப் பெருவாடை யாய்வீசச்
சீருகந்த நாதன் செயலா மெனஇருந்தார்
இருந்தார் தவசு ஏற்றரிய சான்றோர்கள்
அருந்தாமல் மற்றொன்றும் அன்னமொரு நேரமுமாய்
வாரிநீ ரல்லால் மறுநீ ரறியாமல்
சீரியல்பாய்ச் சான்றோர் செய்தார் தவமதுவே
பவமா னதுநீக்கும் பச்சைநா ராயணரும்
முன்னாறு வருசம் உவந்திருந்த நற்றவத்தைப்
பின்னொரு வருசம் பேணி நடத்துமுன்னே
நீச னிடையில் நிறடுசெய் தானதினால்
தோச மவன்பேரில் சுமக்கச்சா பம்புரிந்து
ஆறு வருசம் அதிற்குறைவு வராமல்
வாறு தவசு வகுத்து முடிக்கவென்று
புரிந்தார் தவசு இலக்குத் திகைவதுமுன்
சான்றோர் தவத்தைத் தான்பார்க்க வேணுமென்று
ஆன்றோர் மனதில் அன்புமிகக் கொண்டாடி 680

அலைவாய்க் கரையில் அமர்ந்திருந்த சான்றோரை
நிலைபார்க்க வேணுமென்று நிச்சயித் தெம்பெருமாள்
உகத்துக்குத் தக்க உபாயமினிச் செய்யவென்று
மகத்துவ நாதன் மனதில்மிக வுத்தரித்துத்
தெள்ளு தனக்குச் சிணமே விடைகொடுத்தார்
விள்ளுறவே செய்து விடுநீ சிணமெனவே
ஆதி விடையருள அதுவெல்லா மேசமைந்து
மோதி யொருமித்து உற்றஅந்தத் தெள்ளினங்கள்
வந்து வளைந்துதல்லோ வாய்த்ததவத் தோரருகில்
பொந்து பொந்துள்ளும் போடுந் துணியதுள்ளும்
வைத்தக் குடிலுள்ளும் வளைந்ததுகாண் தெள்ளினங்கள்
மெய்த்தபுகழ்ச் சான்றோர் மெலிவாய் மிகச்சடைத்து
மாடா டுகோழி வளர்ப்பில்லா நம்மிடத்தில்
ஏடா விடமல்லோ இதுசெய்யு மாய்மாலம்
இருக்கு மிடத்தில் எண்ணக்கூ டாதபடிப்
பொருக்குப் பொருக்கெனவே பொன்றக் கடிக்குதென்ன
மூணுநேரந் துவைக்கும் உற்றகலை யானதிலே
கோணியலில் பற்றும் குறுந்தெள்ளு வந்ததென்ன
படுக்க இருக்கப் பண்புசற்று மில்லாமல்
முடுக்கமாய்த் தெள்ளு முடுக்கிமுடுக்கிக் கடிக்க 700

இதல்லால் சான்றோர்க்கு இன்னம்விட்டுப் பார்ப்போமென
சதமில்லா மூட்டை தன்னினங்க ளைவருத்தித்
தவத்தைக் குலைத்துச் சான்றோரைத் தான்விரட்டிப்
பவத்துமாய் நீங்கள் பாவிப்பீ ரென்றுசொல்லி
மூட்டைக் குரைகள் மொழிந்தார் முகுந்தனுமே
சேட்டைசெய் வோமெனவே திரண்டு மிகச்சூழ்ந்து
வந்து வளைந்தார் வாழரியச் சான்றோரை
முந்து பரிந்த மூண்டதெள் ளினங்ளோடு
கூடிக் குலாவிக் கூட்டமிட் டேதிரளாய்த்
தேடிச் சான்றோரைச் செகலதுக்குள் ளேவிரட்ட
வேணு மெனவே விசும்புகொண் டவ்வினங்கள்
பூணு முடைமை போர்த்துந்துணி யிலிருந்து
நடையிற் கடிக்கும் கிடக்கவிடா தேயரிக்கும்
குடிக்கின்ற வெள்ளமதில் கும்பல்கும்ப லாய்க்கிடக்கும்
முடிக்குந் தலையில் முச்சிறங்கை போல்கிடக்கும்
அன்னத்தி லேமிதக்கும் அண்டைக்கல்லி லேவாழும்
முன்னெற்றி மயிரில் மிதந்துமிக முன்னுதிரும்
இடைக்குள் ளிருந்து இடைவிடா தேயரிக்கும்
உடையி லிருந்து ஓயாம லேயரிக்கும் 720

மேலெல்லா மிதந்து மிகச்சரியும் கீழ்வழியாய்க்
காலெல்லாந் தெள்ளு கனமாய் மிகஅரிக்கும்
மாறி யிவரெடுக்க மனதுசற்று மில்லாமல்
ஆறிப் பதறி அசையாமல் தாமிருப்பார்
வாரிக் கரையில் வளர்நண்டு சேகரமாய்
மாரித் துளிபோல் வந்து வளைந்துமிகப்
பாண்டத்துக் குள்ளே பதிந்திருந் தேவாழும்
காண்டமாய்க் கண்டு கைநீட்ட லாகாதெனத்
தடவி யெடுத்துத் தன்னாலே போநீயென
வடவிப் போகாமல் வளர்ப்பார்கள் போலிருப்பார்
இப்படியே தெள்ளு ஈமூட்டை நண்டினங்கள்
அப்படியே கூடி அவரலைச்சல் செய்திடவே
அல்லாமல் சான்றோர் அவரவர்க்குத் தேகமதில்
பொல்லாத வங்குப் பெரிய சிரங்குடனே
வெகுவாய்ப் பெருத்து மேலிலிடை காணாமல்
தகுவாய்ச் சடைத்துச் சனங்கள்மிக எல்லோரும்
எங்கே யினிப்போவோம் எல்லோரு மென்றுசொல்லி
சங்கை யுடன்கூடிச் சமுத்திரக் கரையருகில்
போயிருக்கும் வேளை பொங்குகடல் கோபமதாய்
வாயிதமாய்த் திரைதான் வந்துகோபித் தடித்து 740

பாலதியப் பெண்கள் பண்பா யுடுத்திருந்த
சீலைரண்டு தன்னைச் செகற்கொண்டு போயினதே
அய்யோ கடல்தான் அங்குசெல்லக் கூடுதில்லை
செய்ய விலகவென்றால் தெள்ளுநம்மை விட்டுதில்லை
வீட்டுக்குள் செல்ல விட்டுதில்லை மூட்டையது
ஊட்டுகின்ற அன்னமதில் உயரவந்து நண்டிருக்கும்
தேகமதிற் சிரங்கு சொறிச்சல் பொறுக்குதில்லை
தாகத்துக் கேற்ற தண்ணீர் கிடைக்குதில்லை
பாகமுட னுண்ணப் பற்றுதில்லை தீனதுவும்
இனியெங்கே போவோம் எல்லோரு மென்றுசொல்லி
மனுப்புகழுஞ் சான்றோர் மாதமொரு ஆறாய்
இருந்தா ரதிலே ஈசன் செயலெனவே
திருந்தார மார்பன் திரும்ப வொருதலத்தில்
கொண்டுபோய்ப் பார்ப்போம் குலதெய்வச் சான்றோரை
பண்டு வொருசணான் படுத்திருக்கு மவ்வேளை
சொர்ப்பனம்போல் உற்பனமாய் சுவாமி மிகவுரைத்தார்

முட்டப்பதி தவசு

இதின்நேர் தெற்கு இருக்கு மொருபதிதான்
அதின்நோக்குஞ் சொல்ல ஆராலு மேலாது
துட்டர் தமைவென்று சுற்றுமதில் கோட்டையிட்டு 760

அலங்கார நற்பதியின் அழகுசொல்லக் கூடாது
வலங்கார மான வாய்த்த கடலதினுள்
தேரு பொன்பதிகள் சிங்கார மேடைகளும்
நீருக்குள் ளேயிருக்கும் நிறங்கள்சொல்லக் கூடாது
கன்னிமா ராடும் கரியநல்லப் பூஞ்சுனைகள்
பொன்னினா லேபடிகள் பூஞ்சப்பிரக் கொலுவும்
மாணிக்கக் கல்லால் வளர்ந்தமணி மண்டபமும்
ஆணிப்பொன் தன்னால் அழகுபூம் பந்தல்களும்
வகையின்ன தென்று வகுக்க முடியாது
தொகையின் தென்று தொகுக்க முடியாது
இப்பதியில் நீங்கள் இந்தநே ரம்போனால்
அப்பதியி லுங்களுக்கு அதிகப்பலன் கிட்டுமென்று
தூக்கமதில் சொர்ப்பனம்போல் சொன்னாரே வுத்தரவு
ஆக்க முடனே அவனெழுந்து சொல்லிடவே
கேட்டு எல்லோரும் கெட்டிதா னென்றுசொல்லி
ஆட்டு மெனவே எல்லோருஞ் சம்மதித்த
நடக்கத் துணிந்தார் நாரண ருண்டெனவே
அடக்க முடனிதிலே ஆறுமா சம்வரைக்கும்
இருந்தோமே நன்றாய் இனிநடப்போ மப்பதியில் 780

வருந்தாமற் போவோம் மகாபரனா ருண்டெனவே
போவோ மெனவே பெண்ணா ணுடனெழுந்து
தாவமுள்ள முட்டப் பதிதலத்தில் வந்தனரே

வந்தனர் பதியின் கூறும் வாரியின் செயலுங் கண்டு
சந்தன வாரி போலும் தலமிது நன்ற தாகும்
இந்தநற் பதியில் நாமள் இருந்துதான் தவசு செய்தால்
செந்தமி ழாயன் பாதம் செயல்பெற வாழ்வோ மென்றார்

வாழ்வ திற்குறை வராது மக்களுங் கிளைக ளோடு
தாழ்வ தில்லை வண்ணம் தவமது வளர்வ தாகும்
நாள்வழிப் பலனுண் டாகும் நாரண ரருளி னாலே
ஆள்வது திடனா மென்று அதிலவ ரிருந்தா ரன்றே

என்றே மிகமகிழ்ந்து எல்லோரு மோர்முகமாய்
அன்றே மிகமகிழ்ந்து அதிலிருந்தா ரம்மானை
சூழ அணியாய்ச் சுற்று மதில்போலே
நீள அரங்குவைத்து நெருங்கப் புரைகள்வைத்து
வைத்தோர் திசையில் வாசலொன் றாகவிட்டு
மெய்த்தே தினமும் மிகவே துணிதுவைத்து
அன்ன மதற்கு அவித்தநெல் லேயுடைத்து
வன்னமுள்ள காய்கனிகள் வகைவகையாய்த் தான்வகுத்து
நல்லநீர் தன்னில் நாடி மிகத்துவைத்து 800

எல்லா வகைக்கும் இசைந்தநீ ரேயிருந்தி
அந்திசந்தி உச்சி ஆதிதனைத் துதித்துத்
தந்திரம தாகத் தவசு மிகப்புரிந்தார்
கண்டிருந்த மற்ற கலிநீசச் சாதியெல்லாம்
பண்டி லமைத்ததுவோ பனையேறுஞ் சாணார்க்கு
மூணுநே ரந்துவைத்து உச்சியொரு நேரமதாய்
வேணும் பகுத்தாய் வெகுவா யலங்கரிக்க
வேத னவர்க்கு விதித்த விதிப்படியோ
நாதனவர் பங்கில் நாடிமிக வந்ததுவோ
எப்போமீ னுண்டு என்றே மிகப்பார்த்து
அப்போ ததைவேண்டி அரக்குரக் காயவித்து
வாயிலெடுத் திட்டு வயிறுவளர்க்குஞ் சாணார்கள்
புகையிலையு மறந்து பெண்ணாணு மோர்மனதாய்
இந்தப் படியாய் இருக்க இவர்களுக்கு
முந்தை விதித்த விதிவந் தொத்ததுவோ
அவர்க ளுடுக்கும் ஆடையழுக் கில்லாமல்
இவருடுக்கச் சற்றும் எண்ணமொன் றில்லாதார்
மூணுநே ரந்துவைக்கும் உற்றதுணி பொன்னிறம்போல்
தோணுதலா யவர்கள் தேகம் பழபழென
இந்த விதமாய் இவர்கள்பா வித்திடவே 820

சொந்தத் திருமால் சேர்ந்தா ரவரிடமே
ஆதி மகாமால் அவர்பங்கி லில்லாட்டால்
ஓதி யுணவருந்த ஒன்றுந்தெரி யாதிவர்க்கு
பேற்றி நம்பூரி பிராமணர்கள் தஞ்சீலை
மாற்றித் துவைப்பு மங்கலாய்க் காணுதுகாண்
இந்தசா ணார்சீலை எரிசூரி யன்போலே
பந்த வொளிபோலே பழபழெனத் தோணுதுகாண்
பிராமணர் சூத்திரர்கள் பேணி யிவர்தமக்கு
நிராதனமாய்க் காய்கனிகள் நித்தஞ் சுமக்கிறார்கள்
பாக்கியங்கள் வந்துதென்று பனையேறுஞ் சாணார்க்கு
நோக்கமது வந்துதென்று நீணலத் துள்ளோர்கள்
எச்சாதியும் புகழ்ந்து இருந்தார்கா ணம்மானை
அச்சாதி யெல்லாம் அப்படியே சொல்லிமிகச்
சாதிமற்றோ ரெல்லாம் தலைகவிழ்ந் திருக்கையிலே
நாதித் திருமால் நாடுகின்ற சான்றோரை
இவர்க்கருளு மாண்டு இலக்குத் திகைந்துதல்லோ
அவரவர்கள் வீட்டில் அனுப்பிவிட வேணுமென்று
தோணித்தா ரவர்மனதில் சொர்ப்பனம்போ லெம்பெருமாள்
மாணிக்கச் சான்றோர் மனமறியத் தாம்பார்த்து
இனிநாம ளிப்போ இருந்த தலமும்விட்டுத் 840

தனியானோம் நாமளங்கே சார்ந்தோமெ யானாக்கால்
நம்முடைய சாதி நகைத்திழிவு பேசுமல்லோ
எம்முடைய தவமும் இல்லையென்று போயிடுங்காண்
முன்னிருந்த வீடும் மூண்டிருந்த பண்டமுதல்
தன்னிருந்த சொத்தும் தலத்தை யிழந்தவந்தோம்
இனியங்கே போனால் இருக்க இடமுமில்லை
இனியங்கே போவதைக்கால் இந்தக் கடலதிலே
விழுந்தோமே யானால் மேலும் பதவியுண்டு
அழுந்த லுடன்நினைத்து எல்லோரு மேயிருந்தார்
அப்போ அரிநாதன் ஆகட்டென வுறுக்கி
இப்போநீர் போவும் என்றே விடைகொடுத்தும்
இன்னமிவர் போகலையே என்றே மனதிலுற்று
அன்ன மøக்குறைத்து ஆழாக் கரிசியிட்டார்
ஆழாக் கரிசி அலர்மலர்ந்த கோவையுடன்
தாழாமல் சனங்கள் சடையாம லேற்றனரே
துவையல் முடங்கவில்லை தொழுதுநிதஞ் சேவிப்பதுவும்
உகப்பாட் டோதுவதும் ஓயாமல் செய்தனரே
இன்னம்போ னாரில்லையே இப்படியே செய்திடினும்
இன்ன மொருவசனம் இப்போது செய்யவென்று
உன்னித் திருமால் உற்றவை சூரியைத்தான் 860

ஏவினார் சான்றோர் ஏந்திழைக்கும் பிள்ளைகட்கும்
மேவியே சான்றோர் மிகமெலிந்து தான்வாடிப்
பற்றி யிருந்தப் படுசிரங்கு மாறலையே
முற்றுங் கண்ணொளிவு முழுதுந் திறக்கலையே
கும்பிக் குளிரக் குடிக்கக் கிடைக்கலையே
வெம்பு மிலைகனிகள் மிகப்பறிக்கக் காணலையே
ஐயோநா மெல்லாம் அலைந்து மலைந்திருக்க
வையமதி லில்லாத வைசூரி வளைந்துதல்லோ
என்று சனங்கள் எண்ணம் பெரிதாகிச்
சென்ற சனத்தில் சிலபேர் மடிந்திடவே
பதறி நடுங்கி பரனேநீ தஞ்சமென்று
குதறி யுலகில் கூச்ச மிகவடைந்து
எங்கே யிருந்தாலும் ஈசன் செயலெனவே
சங்கை வழுகாமல் தாமோ தரனுடைய
நினைவு மயராமல் நிலைதவறிப் போகாமல்
தன்னுடைய வீட்டில் தான்போவோம் நாமளென்று
போகு முன்னாகப் பெரியோன் பதமணுகிப்
பாகுரைத்து நாமள் பட்டசள முரைத்து
உத்தரவு வேண்டி உற்றிடத்தில் போவோமெனப்
புத்தி யுடனே பெரியோ னடிசேர்ந்தார் 880

சேர்ந்துவா கைப்பதியின் செய்தியெல்லா முரைத்துப்
பேர்ந்துவந்து முட்டப் பதியின் பெருமைசொல்லி
ஊணுகிடை யாததுவும் உயிரழிவு வந்ததுவும்
கோணுத லெல்லாங் கூறி விடைகேட்டார்
அப்போது நாதன் எல்லோரை யும்பார்த்து
இப்போது உங்கள் இல்லிடத்தி லேபோனால்
நாரா யணக்குருவை நாளு மறவாமல்
பேராக வேயிருந்தால் பேறுங்களுக் கேகிடைக்கும்
அன்ன மளக்கும் ஆதித் திருநெடுமால்
முன்னவன் தன்பேரால் முத்திரிக ளிட்டதினால்
சென்ற இடமெல்லாம் சிறப்பதிக முங்களுக்கு
என்றைக்கும் நல்ல இயல்பே யருள்வோமென
நல்ல விடைகொடுத்து நாரா யணரனுப்ப
வல்ல வளர்சான்றோர் வாழ்த்தி யவர்போனார்
அவரவர்கள் வீட்டில் அன்பாகப் போனவுடன்
இவரிவர்க்கு நல்ல இயல்புசெய்ய வேணுமென்று
ஏகபர நாதன் எம்பெருமா ளானவரும்
லோகமதி லெம்பெருமாள் ஒருசொரூபங் கொள்ளலுற்றார்
இரப்ப வடிவாய் எடுத்தா ரொருவேசம்
பரப்ப வடிவைப் பாருள்ளோர் கண்டுகண்டு 900

கோட்டைக் கணக்காய்க் குளிர்ந்தநெல் லேயெடுத்துச்
சாட்டமுடன் காய்கனிகள் சகல வகையுடனே
பழங்கள் முதலாய்ப் பப்படமும் பாயசமும்
வளங்க இலையிட்டு வற்றல்வகை சீனியுடன்
அன்ன முதல்தானம் ஆடையொடு பொன்தானம்
சொர்ணத் தானமுதலாய்த் துவையல்கா ரர்ககெனவே
சான்றோ ரினத்தில் சார்ந்தன்பு கொண்டோர்கள்
ஆண்டோ னருளால் அன்னவஸ்த்திரங் கொடுத்தார்
நித்தம்நித்த மன்னம் நீங்களுண்ணு மென்றுசொல்லிச்
சித்த மிரக்கமதால் துவையற்கா ரர்க்கெனவே
இடைவிடா தபடியே ஈந்தாரே அன்னமது
வடவெல்லாந் தீர்ந்து மகிழ்ந்திருந்தார் துவைத்திருந்தோர்
நாலு திசையதிலும் நடந்துபிச்சை தான்குடித்துப்
பாலு பவிசுடனே பாவித்தி ருந்தனராம்
இப்படியே சான்றோர் இனமா யிருந்தவர்கள்
அப்படியே பிச்சையிட்டு அன்பாய் மகிழ்ந்திருந்தார்
பாங்கா னதுவையல் பண்டா ரங்களெல்லாம்
பூங்கார மாகப் பிச்சையமு துண்டிருந்தார் 918

 
மேலும் அகிலத்திரட்டு அம்மானை! »
temple news
அய்யா துணை காப்பு ஏரணியும் மாயோன் இவ்வுலகில் தவசுபண்ணிகாரணம்போல் செய்தகதை கட்டுரைக்க - ... மேலும்
 
temple news
அந்தூர்ப் பதியில் அலங்கரித்த நாட்கழித்துஆதி கயிலை அரனா ரிடத்தில்வந்துவேதியரும் நன்றாய் விளம்புவா ... மேலும்
 
temple news
கஞ்சனையு மற்றுமுள்ள காலவுணர் தங்களையும்வஞ்சகமா யுள்ள வாணநர பாலனையும்இம்முதலா யுள்ள ஏற்ற ... மேலும்
 
temple news
தண்டமிழுங் கன்னி சான்றோர்க ளானோர்க்குக்கோட்டையு மிட்டுக் குமாரரையும் பெண்ணதையும்தாட்டிமையாய்ச் ... மேலும்
 
temple news
பூலோக மெல்லாம் பொய்யான மாகலியன்மாலோ சனையிழந்து மாறியே மானிடவர்சாதி யினம்பிரித்துத் தடுமாறி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar