Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news அகிலத்திரட்டு அம்மானை பகுதி-3 அகிலத்திரட்டு அம்மானை பகுதி-5 அகிலத்திரட்டு அம்மானை பகுதி-5
முதல் பக்கம் » அகிலத்திரட்டு அம்மானை!
அகிலத்திரட்டு அம்மானை பகுதி-4
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2012
05:06

தண்டமிழுங் கன்னி சான்றோர்க ளானோர்க்குக்
கோட்டையு மிட்டுக் குமாரரையும் பெண்ணதையும்
தாட்டிமையாய்ச் சான்றோர்க்குத் தரந்தரமே மாளிகையும்
வைத்துக் கொடுத்தாள் வாழ்ந்திருந்தார் சான்றோர்கள்
மெய்த்துப்புவி கொண்டாட மெல்லியர்கள் தங்களுக்கு
வயிற்றில் கெற்பமாகி மதலைபெற்றா ரம்மானை
நெய்த்தெளிய கன்னி நேரிழைமா ரெல்லோரும்
இப்படியே கன்னி எல்லோரும் நன்றாக
அப்படியே மதலைபெற்று அகமகிழ்ந்தா ரம்மானை
பாலருக்குப் பாலர் பரிவாய் மிகவளர
சீலமுள்ள வித்தை சிறக்க அவர்வருத்தி
எமத்திறைவ ராக எங்கும் புகழ்ந்திடவே
சமர்த்த ரெனஅவர்கள் தலையெடுத்தா ரம்மானை
முத்து வியாபாரம் முதல்வியா பாரமுதல்
பத்தரை மாற்றுப் பசும்பொன்வியா பாரமுடன்
மாணிக்க வியாபாரம் வியிரப்பொன் வியாபாரம்
ஆணிப்பொன் வியாபாரம் அழகுகச்சை வியாபாரம்
கப்பல் வியாபாரம் கறிமிளகு வியாபாரம்
ஒப்பமுள்ள வியாபாரம் ஒக்கமிகச் செய்தனராம்
தாலம தேறித் தைரியப் பால்வாங்கி  20

மேலுள்ள சான்றோர் மிகுதியா யாண்டிருந்தார்
நெய்த்தொழிலும் வில்தொழிலும் நெறடுவிதத் தொழிலும்
மெய்த்தொழில்கள் கற்று மேலோ ரெனவளர்ந்தார்
சோழ னதையறிந்து தெய்வச்சான் றோர்களுக்கு
வேழம்பல கொடுத்து மிகுகற்பமுங் கொடுத்து
நல்லமன்ன ரென்று நாடி மகிழ்ந்திருந்தார்
செல்லமன்ன ரான தெய்வச்சான் றோர்களுக்கு
அடிக்கல் லெழுதி ஆயிரம் பொன்கொடுத்து
முடிக்கு முடிச்சோழன் முத்துமுடியுங் கொடுத்து
வீர விருதுகளும் வேழம் பரிகொடுத்து
பாரமுள்ள சீமைதனில் பங்கு மிகக்கொடுத்து
சோழன் முடியும் துலங்க மிகக்கொடுத்து
ஆழமுள்ள சான்றோர் அரசாண்டா ரம்மானை
சோழனுட னெதிர்த்துச் சோரவந்த மாற்றானை
வேழமுடி மன்னர் வெற்றிகொண் டாண்டிருந்தார்
வெட்டாத படையை வெட்டி விருதுபெற்று
அட்டாளத் தேசம் அடக்கியர சாண்டிருந்தார்
இப்படியே சான்றோர் இராச்சியத்தை யாண்டிருக்க
அப்படியே சீமை அவர்க்குள்ளே யாக்கிவைத்துத்
தர்மமுடன் பூமி தானாண் டிருக்கையிலே 40
வர்மம் வந்தஞாயம் வகுக்கக்கே ளொண்ணுதலே

கலியன் பிறப்பு

சீரங்க மானதிலே சீரங்க நாதருந்தான்
பாரெங்கு மெய்க்கப் பள்ளிகொண் டிருக்கையிலே
நாட்டுக்குக் கேடு நாட்பிடித்த செய்திதன்னை
கூட்டுக் கிளியே கூர்மையுடனே கேளு
முன்னே குறோணி முடிந்ததுண்ட மாறதிலே
அன்னேகே ளஞ்சுதுண்டம் அவனி தனிலேபிறந்து
ஆதி தனைநினைத்து ஆளாம லவ்வுயிர்கள்
நீதிகெட்ட மோச நீசனைப்போல் தானாகி
முப்பிறவி யோடாறும் முதலோனைப் போற்றாமல்
அப்பிறவி யாறும் அழித்ததின்மே லாயிழையே
குருமுனிவ னான கூர்மையுள்ள மாமுனிவன்
அருமுனிவ னான ஆதிமுனி யைநோக்கி
சிவனெனவே போற்றிச் சொல்லுவான் மாமுனிவன்
தவமே தவப்பொருளே தாண்டவசங் காரவனே

முன்னே பிறந்த குறோணிதனை மூவிரண் டாக வுடல்பிளந்து
தன்னே வுயிரோ டஞ்சுசெய்து சுவாமி யுனைநினை யாத்ததினால்
வன்னத் திருமால் கொலையடக்கி வந்தார் சடல மிழந்துகுண்டம்
இன்னம் பிறப்பொன் றுண்டல்லவோ இறந்த குறோணி யவன்தனக்கே
வாசமுள்ள நேசா மற்றொப்பில் லாதவனே 60

ஈசனே நானுமொன்று இயம்புகிறேன் கேளுமையா
குறோணி யவனுடலைக் கூர்மையுட னேபிளந்து
சுறோணித மாயன் தொல்புவியில் விட்டெறிய
அஞ்சுதர முயிரு அவனிதனி லேபிறந்து
பிஞ்சுமதி சூடும் பிஞ்ஞகனைப் போற்றாமல்
மாயனையு மெண்ணாமல் மதமா யிருந்ததினால்
ஆயனந்தச் சூரரையும் அழித்தார்கா ணீசுரரே
முச்சூர னோடாறு யுகமு முயிரழித்து
அச்சூரக் குடும்பம் அறுத்தந்த மாயவரும்
கொண்டிருந்த பொய்ச்சடலக் கூட்டை மிகக்களைந்து
ஆண்டிருந்த குண்டம் அவரடைந்தா ரம்மானை
முச்சூரன் துண்டம் ஒன்றுண்டு ஈசுரரே
அச்சூரன் பிறவி ஆறொன் றீரரையாய்
ஆறாம் யுகத்தில் அமையுமென்று மாமுனியும்
வீறாக ஈசுரரை விண்ணப்பஞ் செய்துநின்றான்
நல்லதுதா னென்று நாட்டமுற்று ஈசுரரும்
வல்லவனே மாமுனியே மாயன்வர வேண்டாமோ
என்றுநல்ல ஈசர் இயம்பமுனி யேதுசொல்வான்
நன்றுகாண் மாயவர்க்கு நாலுரண்டோ ராம்பிறவி 
பிறக்கத் தவசு புரியப்போய்க் கீழுலகில் 80

உறக்க மெய்ஞ்ஞான ஒளியிருக்கி றாரெனவே
தேவமுனி சொல்ல சிவனா ரகமகிழ்ந்து
கோவுகத்தி லுள்ள குருவசிஷ்டர் தங்களையும்
தெய்வலோ கத்திலுள்ள தேவரை யும்வருத்தி
வைந்தலோ கத்திலுள்ள வாய்த்ததர்மி தங்களையும்
கிணநாதர் கிம்புருடர் கிங்கிலியரை யும்வருத்தி
இணையாக மேலோகத்(து) எல்லோரை யும்வருத்தி
சத்தி மறையும் சாஸ்திரத்தை யும்வருத்தி
அத்தி முகவனையும் ஆனவ கும்பனையும்
சங்கமறையை வருத்தித் தான்கேட்பா ரீசுரரும்
இங்குண்டோ மாலும் எங்கிருப்ப துண்டனவே
எல்லோ ருங்கூடி இதமித்துச் சொல்லுமென்றார்
அல்லோ ருங்கேட்க அரன்சொன்னா ரம்மானை
வேழமொத்த தேவரெல்லாம் மேகவண்ண ரிங்கேயில்லை
கீழுலகில் மாண்டு கிடக்கிறா ரென்றுசொல்லி
ஒன்பதாம் பிறவி ஒடுங்கி யவர்பிறக்க
இன்பமறக் கீழுலகில் இறந்துகிடக்கி றாரெனவே
எல்லோருஞ் சொல்ல ஈசுரரும் நல்லதென்று
அல்லோருங் கேட்க அவரேது பின்சொல்லுவார்
முன்னே பிறந்த முண்டசுரன் தன்னுயிரைத் 100

தன்னோ டாறுபிறவி தான்செய்தோ மசுரரென
ஆறு பிறவியிலும் அசுரரென வேபிறந்து
வீறுடனே நம்மை விரும்பவும்நாம் கண்டிலமே
இப்போ தவன்தனக்கு ஏழாம் பிறவியிது
அப்போதும் நம்மை அவன்நினை யாதிருந்தால்
இல்லை மேற்பிறவி இறப்புமுடி வாகுமல்லோ
நல்ல பிறவியதாய் நமைத்துதிக்கப் புத்தியதும்
அழகு சவுந்தரியம் அலங்கார மெய்யறிவும்
குழவு மிகப்புத்தி கூர்மையலங் காரமுடன்
மேலு மாலாறு முடத்த யுகங்களுக்கு
நாலுமுழ மொன்றுதலை நல்லோ ரசுரர்களை
கொன்றுதா னவ்வசுரர் கூறுதற்குச் சொல்லுமுண்டே
இன்னமிந்த மாயன் எடுத்த வுருப்போலே
படைத்துநாம் வைத்தால் பகருமொழி வேறில்லையே
நடத்துவ தேதெனவே நவிலுமென்றார் தேவர்களை
அப்போது தேவர்களும் ஆனமறை வேதியரும்
எப்போது மிறவா(து) இருக்கும் முனிவர்களும்
நல்லதுதா னென்று நாடி யகமகிழ்ந்து
வல்லப் பிறவி வகுக்கத் துணிந்தனராம்
பிறவி வகுக்கவென்று பெரியோ னகமகிழ்ந்து 120

திறவி முதலோன் தெளிந்துநிற்கும் வேளையிலே
துண்டமது பிண்டமதைத் துளைத்துக்கால் மேல்நீட்டி
மண்டைகீழ் கால்மேலாய் வந்துதித்தா னம்மானை
எல்லோருங் கண்டு இதுகண் மாயமெனவே
அல்லோரும் வந்து ஆதியோ டேவுரைத்தார்
உடனே சிவமும் உள்ள மிகக்களித்து
இடமே தான்பேர்ந்து எழுந்தருளி ஈசுரரும்
அதிசயத்தைப் பார்ப்போமென்று அவரேகும் வேளையிலே
எதிராக நின்றுநந்தி ஏதுரைப்பா ரம்மானை
மூவர்களுந் தேவர்களும் மூர்த்திகளுங் காணாத
தேவரீ ரெழுந்தருளி திசைநோக்கி வந்ததென்ன
அப்போது நந்தியுடன் ஆதி மிகவுரைப்பார்
இப்போ தோரற்புதமாய் இருக்குதென்றா ரெல்லோரும்
வானோக்கிக் காலும் மலர்நோக்கிச் சிரசும்
தானமது மாறி தலைகீழாய் நிற்பதுவும்
பார்த்துவர லாமெனவே பையநடை கொண்டேனென்றார்
சாற்றுமொழி கேட்டுநந்தி தானுரைப்பா ரம்மானை
அங்கல்லத் தானம் அழிந்ததுகா ணீசுரரே
இங்கு நான்கண்டேன் எழுந்தருளி வந்ததினால்
தலந்தா னிளகி தான்வந்த தாலேதான் 140

குலந்தா னழியும் குசல்பிறக்கும் ராச்சியத்தில்
வரம்பழியு மாரி மனுநீதங் குன்றுமையா
பரம்பெரிய வேதம் பழுதுவருங் கண்டீரே
என்றந்த மாமுனியும் ஈசுரரை யுங்கூட்டி
குன்றுபொன் னான கிரிமேவித் தானிருந்தார்
நடந்த புதுமையென்ன நாம்வருத்திப் பார்க்கவென்று
திடந்தெளிந்த மாமுனிவன் செப்பவே ஈசுரரும்
சாத்திர வேதச் சதுர்மறையைத் தான்வருத்தி
சித்திர புத்திரரைச் சீக்கிரத்தி லேயழைத்து
வந்த புதுமை வகையென்ன நம்கணக்கா
இந்தக் கணக்கை எடுத்துரைநீ யென்றனராம்
அப்போது ஈசுரரை அன்போ டுறவணங்கி
செப்போடு வொத்த சித்திரருஞ் செப்பலுற்றார்
சாத்திரத்தி லுற்ற தன்மை மிகக்கேளும்
சீத்துவ மாகச் சித்திரரும் செப்பலுற்றார்
முன்பிறந்த குறோணி உடலாறு துண்டதிலே
தன்பிறவி யோடாறு தான்பிறந்தான் சூத்திரமாய்
மண்தா னுடம்பு வந்துதித் தோன்றனக்கு
விண்தா னுடம்பு விலாசக் குருவோடு 
சலந்தா னுடம்புக்(கு) உறுதி தைரியங்கள் 160

வலந்தா னிளகி வன்னியோ டுங்கூடி
கலந்து திரண்ட கட்டைமுண்ட மானதுக்குப்
பிலந்தூக்கும் வாயு பிராணன்கா ணீசுரரே
முப்பழியோ டாறு உயிரழித்த மாயனுக்கு
இப்போது வந்த இவன்தான் கொடிதுவையா
மாயனாலு முழமாய் மனுச்சிங் கமுகமாய்
வாயமாய் நம்மை வதைத்தானே யென்றுசொல்லி
அன்றா யனெடுத்த அளவா யுருவெடுத்துச்
சென்றா லவனுடைய திறத்தைநாம் பார்ப்போமென்று
வேகத்தால் துண்டம் வெடித்ததுகா ணிப்புதுமை
ஏகந்தா னாளும் ஈசனே யென்றுசொல்லி
இப்படியே சித்திரரும் எடுத்துரைக்கவே ஈசர்
அப்படியே வந்தவனுக்(கு) ஆயுசு மவன்பலமும்
கரணமுதல் நடப்பும் கட்டாக நீதேர்ந்து
மரணமுதல் நடப்பும் வகுத்துரைநீ நம்கணக்கா
அப்போது சித்திரரும் ஆதியருள் நெஞ்சில்வைத்துப்
பொற்பாத முண்டெனவே புகல்வா ரியல்கணக்கர்
அப்பனு மம்மை அடங்கிமிகப் பெறாமல்
கொப்பளித்துத் தானாய்க் குறுத்துவந்த நீசனுக்குத்
தத்துவந் தொண்ணூற்(று) ஆறுந் தடிக்குணந்தான் 180

புத்தி புலனைந்தும் பொய்ப்பூண்ட பூதமுமாய்
சத்துருக்கன் கண்கால் தலையும் வெறும்நீசம்
உற்றுணர்ந்து பாராத உடலு மவன்காலும்
மாயக் காயமதுக்கு வருசமொரு நூறிருப்பு
தோயநாதத் துளிர் தொகைபத்துநூ றாயிரந்தான்
வாழ்வுவந்து சேர்க்கை வருசம் பதினாலு
தாழ்வு தசைநரம்பு சனித்தமுப்பத் தோராண்டில்
ஆர்க்கை எலும்பு அடைக்கும் நரம்புடனே
மூர்க்கத் தசையும் உதிரப் புனலுடம்பும்
மண்தண்ணீ ரோடே வகைக்காகாப் பாண்டமிது
விண்பரந்த வீடு வெளிவாயில் ஓட்டலுமாய்
ஓட்டை மடத்துக்கு ஒன்பது கொந்துடனே
வீட்டைப் பிரித்தால் விறகுக்கு மாகாது
விசையிட்டு ஆட்டும் வித்தாரப் பாவையிலும்
பசையில்லாப் பாவையிது பட்சியொன் றாடிவரும்
பட்சிக்குக் காயம் பகைத்துக்கிட்ட முட்டுகையில்
குச்சியைக் கீழ்ப்போட்டு குதித்தோடு மக்குருவி
இக்குருவிக் கூடு இவன்மணிய மீசுரரே
அக்குருவி யேகும் அவ்வளவு மிந்நீசன்
பண்ணுகிற நீசம் பரமனுக்கு மேராது 200

கண்ணிமைக்கு முன்னே கனவுருட்டுச் செய்திடுவான்
இப்படியே வுள்ள இயல்பு மிவன்நினைவும்
அப்படியே நீசம் அடைந்த மனவீடும்
உள்ளவனாய் வந்து உருவெடுத்தா னாகையினால்
எள்ளளவும் நன்றி இருக்காது ஈசுரரே
என்று கணக்கர் எடுத்துரைக்க ஈசுரரும்
அன்று அவன்தனக்கு ஆளனுப்பித் தான்வருத்தி
ஆரைவிடு வோமென்று ஆராய்ந்து ஈசுரரும்
சூரமுள்ள காலன் தூத னெமன்தனையும்
துட்டமுள்ள பூதக் கிங்கிலியர் துர்க்கையையும்
மொட்டைக்குற ளிகளையும் முக்கோடிக் கூளியையும்
விட்டழைத்து வாருமென்று விடைகொடுத்தா ரீசுரரும்
துட்டக் குணத்தோர் துடியாய் மிகநடந்து
கொட்டங் கீழாகக் குருத்துநின்ற பாதகனை
தட்டு மிகமாறி தலைகீழாய் நின்றவனை
ஈச ரழைத்தார் எழுந்திருந்து வாவெனவே
நீசன் தனையழைக்க நெளிந்தே வுருண்டவனும்
பிரண்டுருளப் பிண்டம் பிசைபிசைந்து தான்மலங்க
மருண்ட விழியால் மாகம துகலங்கி
மண்ணை விட்டுயர மண்டைவர மாட்டாமல் 220

விண்ணெல்லா மெத்த வெம்மருண்ட தம்மானை
கயிலைக் கிடுகிடெங்கும் கண்டபேர் தாம்பதற
அகிலங் கிடுகிடெங்கும் அழைக்கவந்தோர் தாம்பதற
அரனா ரிடத்தில் அவர்கள்சில ரோடி
சிரமா னதுவெளியில் செல்லவர மாட்டாமல்
பூமி கலங்கிப் பொறுக்கமிகக் கூடாமல்
சாமியந்த நீசன் தான்வரவே மாச்சலுண்டு
என்றந்தத் தூதர் இப்படியே சொல்லிடவே
அன்று சிவனார் அதற்கென்ன செய்வோமென்று
தம்மாலே யாகும் தந்து தெளிந்தெடுத்துக்
கம்மாளன் வேலையினால் கவ்வையொன் றுண்டாக்கி
குத்திப் புறத்தே கோதிவையு மென்றுசொல்லி
எத்திசையும் நந்தி ஈசுவரனார் கைக்கொடுத்து
வேண்டியந்த நந்தி விரைவா யவர்நடந்து
ஊண்டிநின்ற நீசனையும் ஒருகவ்வை யால்கோதி
வெளியிலே வைக்க வெப்பெடுத்த பாதாளம்
பளிரெனவே வந்து பொருந்தியதே யம்மானை
பூமிதனில் வெடித்த பொல்லாத நீசனையும்
சுவாமிமுன் பானதிலே சுரண்டியத னாலிழுத்து
கொண்டுவந்து விட்டார் குருநாதர் முன்பதிலே 240

கண்டுஅந்த ஈசர் கனமாய் விசேசமுற்று
உன்றனக்கு வேணுமென்று உகந்ததெல்லா மிப்போது
என்றனிடங் கேளென்று ஈசுரனார் தானுரைக்க
உடனே யவனும் உள்ள மிகக்களித்து
விடமேதான் பூண்டு விரிகந்தைத் தானுடுத்து
மேலெல்லாங் குப்பை மிகப்பூசி யானையுடத்
தோலி லிருப்பவனோ சொன்னதெல்லாந் தாறதுதான்
என்று களிப்பாய் ஈசுரரை யந்நீசன்
அன்று மொழிய அமர ரதையறிந்து
பொல்லாத நீசா பொருளறிய மாட்டாமல்
எல்லாரைப் போலே ஏசாதே ஈசுரரை
லோகம் படைத்தவர்காண் உறுபொருளாய் நிற்பவர்காண்
ஏகம் நிறைந்தவர்காண் இறவா திருப்பவர்காண்
பட்சிப் பறவை பலசீவ செந்துகட்கும்
நிச்சயமாய்ப் பொசிப்பு நிதமு மளிப்பவர்காண்
மாயவனும் நான்முகனும் மறையு மிகக்காணாமல்
தேயவா றுங்காணாத் திட்டிக்க வல்லவர்காண்
இத்தனையும் நீசனுக்கு இயம்ப அமரர்களும்
புத்திக்கு நட்புப் போதாமல் பின்சொல்லுவான்

கலிச்சி தோற்றம்

ஆனால்தான் தேவர்களே அப்படிநீ ரொப்பினீரே 260
தானா யிருந்து சர்வமதுமுண் டாக்கிவைத்த
ஆனா லெனதுடைய அளவி லளவாக
மானா ரொருகுழலை வகுக்கச்சொல் பார்ப்போங்காண்
என்றந்த நீசன் இழிவாகச் சொல்லிடவே
அன்றந்த ஈசர் அவரறிந்து ஏதுரைப்பார்
நல்லதுநீ கேட்டதுதான் நாம்படைத்துத் தாறோமென்று
வல்லபர மேசுரனார் வகையே தெனப்பார்த்து
உந்தனக்கு நேரே ஒத்த பலம்போலே
அந்தமுடன் பிறந்தால் ஆகுமோ வென்றுரைத்தார்
அப்போது நீசன் அரனார் தனைநோக்கி
ஒப்பமாகா தென்பலத்தில் ஒன்றி லரைப்பலமாய்
அழகி லதிகமுமாய் ஆங்காரம் பாதியுமாய்
குழகிய வாயழகாய்க் குரும்பத் தனத்தழகாய்
மேனி யழகாய் விழியழகாய் வீச்சழகாய்
யோனி யழகாய் ஒடுங்கு மிடையழகாய்
கரமழகாய்க் காலழகாய்க் கண்ணழகாய்ப் பல்லழகாய்
சரக்கூடு முன்னழகாய்த் தலைகண்டம் பின்னழகாய்
தொடையழகாய் விரலழகாய்ச் சொல்லழகாய்ப் பல்லழகாய்
நடையழகாய் வீச்சழகாய் நல்ல குழலழகாய்
இடையழகாய் மேனி இறுக்கத் துடனழகாய் 280

உடையழகாய்த் தேகம் ஓங்காரத் தொங்கலுமாய்
அழகுக்கு ஏற்ற அஸ்தர் மணத்தோடு
கழப கஸ்தூரி கம்மென்ற வாசனைபோல்
மூவர்தே வர்களையும் மோக மாய்மயக்கச்
சீவ னதுகொடுத்துத் திட்டித்துத் தாருமென்றான்
அப்போது ஈசுரனார் அகமகிழ்ந்து கொண்டாடி
இப்போது கேட்டதற்கு என்செய்வோ மென்றுசொல்லி
அருகில் சிவனார் அகமதிலே வீற்றிருக்கும்
திருவுக்கு நன்றாய்த் தெரிவித்தா ரம்மானை
கேட்டமா நீசனுக்குக் கீர்த்தியென்ன மாமயிலே
தேட்டமுட னிப்போ செப்பென் றெனவுரைத்தார்
அப்போது சத்தி ஆதி யடிவணங்கி
ஒப்பொன் றில்லாத உடைய பெருமானே
பாதியாய் நீசனையும் பகுந்தே யவனுடம்பில்
விதியாயிடது விலாவி லொருயெலும்பைத்
தட்டிக் கழற்றி சச்சுவருந் தானாக்கி
திட்டித்து நீசனுக்குச் சிணங்கொடுவு மீசுரரே
என்று உமையாள் இப்படியே சொன்னவுடன்
அன்றுஅந்த நீசனுட அரையிலோ ராக்கையிட்டு
இருக்கக் கீழ்கட்டி எழுந்திருநீ யென்றவுடன் 300

பொருக்கென வேயிடது புறத்தி லொருயெலும்பைத்
தெறிக்க அதையும் சிவனார் மிகப்பார்த்து
வெறிகொண்ட நீசன் விலாவி லொடித்ததினால்
நீசன் பலத்தில் நேர்பாதி யாகுமென்று
வாசமட வாய்வரவே மதனன் தனைநினைத்தார்
மதனை யரன்நினைக்க மாநீசன் தன்னெலும்பு
வதன மடமாதாய் வந்ததுவே யம்மானை
நீசன் நினைத்த நினவுபோ லம்மடவை
பாசக்கலை தூவி பகட்டிவிழித் தாள்மருட்டி
மும்மடங்காய் மோகம் முருகுக் குழல்சரிய
கம்மடங்காத் தோசம் கரைபுரளத் தான்பிறந்தாள்
கண்டானே மாநீசன் கண்கொள்ளாக் காட்சியுடன்
அண்டாளைச் சென்று ஆவிமுகத் தோடணைத்து
நன்றாகத் தர்மம் நாள்தோறுஞ் செய்துகுண்டம்
கண்டாரைப் போலே கட்டினான் மங்கையரை
மங்கையரை நீசன் வாயாரா முத்தமிட்டுக்
கொங்கைதனைக் கண்டு கொண்டாடி ஆசையுற்று
எடுப்பா னவளை இடுப்பிலே வைத்திடுவான்
படுப்பமோ வென்று பாய்விரிக்க நின்றிடுவான்
பெண்ணோ டுறவாடிப் பேதலித்து அந்நீசன் 320

மண்ணோடு மண்ணும் மருவுவது போல்மருவி
ஆசை யவள்பேரில் அங்கமெல்லாந் தானுருகி
நீச னவள்பேரில் நினைவாக நின்றதல்லால்
படைத்தருளி வைத்த பரமனையு மெண்ணாமல்
தடதடெனப் பெண்ணைத் தானெடுத்து முத்திடுவான்
அப்போது தேவர் அமரர்களும் பார்த்தவனை
இப்போது உன்விழிக்கு ஏற்கும் படியாகப்
பெண்படைத்துத் தந்த பெரியோனைத் தான்வணங்கி
மண்பரந்த மன்னா வரங்கேளு என்றனராம்
என்ற பொழுது இயல்புகெட்ட மாநீசன்
அன்றந்த ஈசர் அடிவணங்கி யேதுசொல்வான்
என்றனக்கு ஏற்ற இளமயிலை யுண்டாக்கித்
தந்தருளுங் கோவே சர்வ தயாபரனே
இனியெனக்கு ஏற்ற இயல்வரங்க ளானதெல்லாம்
கனியிதழும் வாயானே கையில்தர வேணுமென்றான்

கலியன் கேட்ட வரங்கள்

அப்படியே ஈசர் அவனை முகம்நோக்கி
இப்படியே உன்றனக்கு ஏதுவரம் வேணுமென்றார்
என்ற பொழுது இயல்புகெட்ட மாநீசன்
தெண்டனிட்டு ஈசர் திருவடியைத் தான்பூண்டு
கேட்பான் வரங்கள் கீழுமேலும் நடுங்க 340

வீழ்ப்பாரங் கெட்ட விசைகெட்ட மாநீசன்
மாயவனார் தன்னுடைய வாய்த்த முடிதனையும்
தூயவனார் சக்கரமும் சூதமுடன் தாருமென்றான்
அரனுடைய வெண்ணீறும் அந்தணரின் தன்பிறப்பும்
வரமுடைய சத்தி வலக்கூறுந் தாருமென்றான்
சிவமூலஞ் சத்தித் திருமூல மானதுவும்
தவமூலம் வேதாவின் தன்னுடைய மூலமதும்
மாலுடைய மூலம் வாய்த்தலட்ச மிமூலம்
மேலுடைய தெய்வ விதமூலமுந் தாரும்
காலனின் மூலம் காமாட்சி தன்மூலம்
வாலைச் சரசோதி மாகாளி தன்மூலம்
கணபதி யின்மூலம் கிங்கிலியர் மூலம்
துணையதிப னான சுப்பிரமணியர் மூலமதும்
ஆயிரத் தெட்டு அண்டம்நிறை மூலமெல்லாம்
வாயிதக் கண்ணே வரமாகத் தாருமென்றான்
அல்லாமற் பின்னும் அந்நீசன் கேட்டவரம்
பொல்லாத வித்தை புகலக்கே ளொண்ணுதலே
கூடுவிட்டுக் கூடு குதிக்கக் கருவதுவும்
நாடு பாழாக்கி நகரிகொள்ளை யாக்கிடவும்
துயில்வோர் போலுலகம் துஞ்சவைத்துக் கொள்ளைகொண்டு  360

அயதிமோ கினிக்கருவும் அரனேநீர் தாருமென்றான்
ஆவடக்கு மோகினியும் அழைக்கவெகு மோகினியும்
நாவடக்கு மோகினியும் நருளழைக்கும் மோகினியும்
ஆண்பெண் பிரிக்க அதிகவெகு மாரணமும்
கோண்பிரித்துக் கட்டிக் குடிகெடுக்கும் மாரணமும்
கொல்ல உச்சாடனமும் குடிகெடுக்க மாரணமும்
தொல்லை வருத்தி சோலிசெய் யுச்சாடனமும்
லோகமது வாழாமல் உள்ளமுங்கித் தாழ்ந்திடவும்
ஏகமாய்த் தம்பனமும் இதின்கரு வுந்தாரும்
கொட்டிக் கலைக்க கூறுகெட்டச் சல்லியமும்
ஒட்டியமுந் தாரும் உள்ளகரு வுந்தாரும்
பூசை முறையும் புவனச்சக்க ரமுடனே
தீட்சை விதிமுறையும் சிவவிதியுந் தாருமையா
சலமேல் கனல்மேல் தானிருக்கு மோடிகளும்
கலைமேல் குடைபிடிக்கக் கருவது வுந்தாரும்
மிருக மதைவருத்தி வேலையது கொண்டிடவும்
இறுக்கமுள்ள வாதை எனக்குவிட்டுத் தாருமையா
அட்டகர்ம மெட்டும் அடக்கிவரந் தாருமையா
மொட்டக் குறள்களையும் முன்னேவலாய்த் தாரும்
மந்திர சாலம் மாய்மாலத் தந்திரமும் 380

இந்திர சாலம் எனக்கருளு மென்றுரைத்தான்
நோவுக் கிரகம் நுழையாம லென்றனக்குத்
தாவுகெவுனக் குளிகை தாருமென்றான் மாநீசன்
வந்த பிணிதீர்க்க வைத்திய வாகடமும்
தந்துதந் தாகப்பல சாஸ்திர முந்தாரும்
மூவருட வடிவும் உதித்துவந்த முற்பிறப்பும்
தேவருட பிறப்பும் தெளிந்தெழுதித் தாருமென்றான்
பறக்குங் குளிகை பரனையழைக் குங்குளிகை
மறைக்குங் குளிகை மாலைவருத் துங்குளிகை
சாலக் குளிகை சத்திவருத் துங்குளிகை
வாலைக் குளிகை மறையைவருத் துங்குளிகை
காளிதனை வருத்திக் கைக்குள் விடுங்குளிகை
கூளிகணத் தைவருத்திக் கொண்டுவரும் நற்குளிகை
தேவரையும் வானவரைச் சென்றழைக் குங்குளிகை
மூவரை யுமழைத்து மோடிசெய்யுங் நற்குளிகை
பழிசெய்தால் வெல்லப் பாரத் தொழில்கள்முதல்
சுழிவரைகள் தானறிய சூதானமாய்த் தாரும்
மருட்டு விதமும் மாஞாலக் குண்டணியும்
உருட்டுங் கொடிய உரம்பேசிய மதமும்
வாள்வெடிக ளாயுதங்கள் வாய்தடுக்கத் தந்திரமும்
வேழ்வருத்தி வேலைகொள்ள விசையடக்குந் தந்திரமும்    400

துட்ட மிருகம் தூறுவிசங் கொண்டதெல்லாம்
கட்டுக்குள் கட்டிக் கீழ்ப்படியத் தந்திரமும்
கட்டுச் சுருக்கும் கடியபல வித்தைகளும்
நட்டு முட்டுள்ள நவநிதிய வஸ்துக்களும்
தந்திந்தப் பெண்ணுடனே சார்ந்துவிளை யாடிருந்து
விந்து சனங்கள் மிகுவாகத் தானுதித்துக்
கிளையோடே வாழ்வு கெறுவித மாயாண்டு
வளையான மாதை மறவாம லெப்போதும்
புத்திக் கருத்தும் பெண்பேரி லென்றனக்குச்
சற்றும் நெகிழாமல் தாரும்வர மென்றுரைத்தான்
அப்படியே வுள்ளவரம் அந்நீச னுக்கருள
எப்படித்தா னென்று எண்ணினா ரீசுரரும்
எண்ணியே ஈசர் ஏந்திழையாள் சத்தியுடன்
புண்ணிய நாதன் புகலலுற்றா ரம்மானை
முப்பத்தி ரண்டறமும் முகித்திருந்த வொண்ணுதலே
செப்புத் தனத்தழகு செவ்வே கருங்குயிலே
வின்னோத நீசன் விபரீதமாய்க் கேட்டதற்கு
இன்ன விதமென்று இயம்புநீ பெண்மயிலே
அப்போது சத்தி ஆதி யடிவணங்கி          420

நற்போது மறவா நல்லகன்னி யேதுரைப்பாள்
சாத்திரமும் வித்தைகளும் தந்திரமுங் கேட்டதினால்
சூத்திரச் சித்தனொன்று சுறுக்காயுண் டாக்குமென்றாள்

அகத்தீசர் பிறப்பு

உடனேதான் ஈசர் உள்ளங்களி கூர்ந்து
திடமாய்த்தான் ஈசர் சிந்தைதனி லுத்தரித்து
அகத்தீச னென்று ஆதிமன துள்ளிருந்து
செகத்தோர்கள் காண சித்தாதி தானாகி
சாத்திரமும் வித்தை சமூலக் கருவுடனே
சூத்திரச் சித்தாதி தோன்றினன்கா ணம்மானை
எல்லோருங் கண்டு இவராகு மென்றுசொல்லி
அல்லோரு மெச்சி அகமகிழ்ந்து கொண்டாடி
நல்லதென்று ஈசர் நன்முனியைத் தானோக்கி
வல்ல கவியோடு வந்துதித்த சாஸ்திரியே
என்னென்ன சாஸ்திரங்கள் ஏதேதுக் கானாலும்
இன்னாநிற்கும் நீசனுக்கு ஈந்து கொடுவுமென்றார்
அப்போ தகத்தீசர் ஆதிமறை முதலாய்
மைப்போடும் வித்தை மாஞால அச்சரமும்
கொடுத்தோ மெனவே கூறினார் மாமுனியும்
கடுத்தமுள்ள நீசன் கையதிலே தான்வேண்டி
நிற்கவே பின்னும் நிகழ்த்துவார் மாமுனியும் 440

அக்கறுகு சூடும் ஆதிமுத லந்தம்வரை
வசமாகும் வித்தை மரணம்வரா வித்தைகளும்
நிசமாகும் வித்தையெல்லாம் நீசனுக் கேகொடுத்தோம்
கொல்லவே மெத்தக் கோபத்தால் நீசனையும்
வெல்லவகை யில்லையல்லோ விடையேறு மீசுரரே
இந்நீசன் லோகமதில் இருந்தாளும் நாளையிலே
அன்னீத மல்லால் அறமறிய மாட்டானே
அல்லாமற் பின்னும் அச்சுதனார் சக்கரமும்
பொல்லாதான் கொண்டு போறான்மால் கிரீடமும்
இவ்வரிசை ரண்டும் இவனிடத்தி லேயிருந்தால்
எவ்வொருவ ரால்வதைக்க ஏலாது நீசனையும்

கலியரசன் சத்தியம்

என்று அகத்தீசர் இப்படியே தான்கூற
அன்றுஸ்ரீ ரங்கர் ஆண்டியுரு தானாகித்
தலைவிரித்துக் கந்தை சற்றே கலைபூண்டு
சிலையில்லா வெங்கையால் சென்றாரே நீசனிடம்
நீச னிடத்தில் நெடுமால்தான் முன்னேகி
வாசமுடன் வார்த்தை வழுத்தினா ரம்மானை
ஈச னிடத்தில் இறைஞ்சிவரம் பெற்றதிலே
தேச இரப்பனுக்குச் சிறுகா யென்றுரைத்தார்
தாரா தேபோனால் சாபமிடு வேனுனக்குப் 460

பாராய்நீ யென்று பகட்டினா ரெம்பெருமாள்
அப்போது நீசன் ஆண்டி தனைப்பார்த்து
இப்போது போடா இரப்பனோ டேதுசண்டை
மாயன் வரவேணும் வலுப்பார்த்து விட்டிடுவேன்
பேய னுடனெனக்குப் பேச்சென்ன நீபோடா
என்று அந்தநீசன் இவ்வளமை கூறிடவே
அன்று பரதேசி அவனோடங் கேதுரைப்பார்
பிச்சைக் காரன்தனக்குப் பெலமில்லை யென்றோநீ
அச்சம தில்லாமல் அடமா யிதுவுரைத்தாய்
பண்டாரந் தன்பலமும் பழிநீசா வுன்பலமும்
சண்டையிட்டுப் பார்த்தால் தான்தெரியும் மாநீசா
என்று பண்டாரம் இதுவுரைக்க அந்நீசன்
குன்று கரத்தெடுத்த கோபால ரோடுரைப்பான்
ஆள்படை களில்லாமல் ஆயுதங்க ளில்லாமல்
வேழ்படை களில்லை வெட்டவா ளிங்குமில்லை
தடியில்லை சக்கரமும் தானில்லை உன்கையிலே
முடிவிரித்துக் கந்தை உடுத்தவனோ டுயுத்தமிட்டால்
ஆண்மையில்லை யென்றனக்கு ஆயிழைமா ரேசுவரே
தாண்மைமொழி பேசாதே தலைவிரித்துப் பேயாநீ
மூவர் முதலாய் முப்பத்து முக்கோடித் 480

தேவரையும் வேலைகொள்ள சிவமூலம் பெற்றிருக்க
ஒன்றில்லாப் பேயனோடு யுத்தமிட்டா லென்றனையும்
நன்றினியப் பெண்கள் நகைப்பார்நீ யப்புறம்போ
என்று அந்தநீசன் இயம்பத் திருமாலும்
நன்றுநன்று நீசா நானுரைக்க நீகேளு
பண்டாரத் தோடே படையெடுத்தா லாண்மையில்லை
என்றேதா னிப்போ(து) இயம்பினையே மாநீசா
பண்டார மென்றும் பயித்தியக் காரனென்றும்
ஒண்டியாய் வந்தவனொ(டு) யுத்தமிட மாட்டேனென்றும்
பிச்சைக் காரனெனவும் பெரிய இரப்பனென்றும்
கச்சையில்லா னென்றும் கணைகம்பில் லாதானென்றும்
இப்படியே பண்டாரம் என்றிருக்கும் பேர்களுக்கு
எப்படியும் வம்புசெய்வ(து) இல்லையென் றுண்மையுடன்
சத்திய மாகத் தானுரைநீ பார்ப்போமென்றார்
புத்தியில்லா நீசன் புகலுவான் பின்னாலே
பண்டார மென்றும் பரதேசி யானவரைத்
தண்டரளக் கந்தைத் தலைவிரித்த ஆண்டிகளை
அட்டியது செய்யேன் அவரோடு சண்டையிடேன்
ஒட்டியே வம்பு ஒருநாளுஞ் செய்வதில்லை
என்றான்காண் நீசன் எம்பெருமாள் தானுரைப்பார் 500

நன்றாக இப்படியே நட்டிசெய்ய மாட்டேனென்று
ஆணையிட்டுத் தாவென்று அருளினா ரெம்பெருமாள்
வீணமட நீசன் விளம்புவா னப்போது
ஆரார்கள் பேரில் ஆணையிட வேணுமென்று
பேராகச் சொல்லு பிச்சையெடுப் போனேயென்றான்
அப்போது பண்டாரம் அகமகிழ்ந்து கொண்டாடி
இப்போது நீதான் ஈசன்தனை வணங்கி
வேண்டியே போற வெகுவரங்கள் பேரதிலும்
பெண்டிவள் பேரதிலும் பெலமாக இப்போது
ஆண்டி பரதேசி ஆகிவந்த பேர்களையும்
வீண்டிடறு செய்யேன் எனவேநீ யாணையிட்டால்
ஆணைக் கிடறுசெய்து ஆண்டிகளைச் சில்லமிட்டால்
வீணேபோ மென்வரங்கள் வீட்டுப்பெண் ணார்கள்முதல்
பெண்தோற்று நானும் பெற்றவர முந்தோற்று
மண்தோற்று வாழ்வும் மக்கள்கிளை தோற்றுச்
சேனைத் தளந்தோற்று சீமையரசுந் தோற்று
ஆனைப் படைதோற்று அரசுமே டைதோற்று
என்னுயிருந் தோற்று என்கிளையோ டேநானும்
வன்னரகில் போவேன் என்றேவாக் குரைத்திடுநீ
அப்போது நீசன் ஆண்டி யுரைத்தபடி 520
எப்போதும் மறவேன் இதைமறந்து வம்புசெய்தால்
சொன்னபடி யெல்லாம் தோற்றிறந் தென்னுயிரும்
வன்னரகில் போவேனென்று ஆணையிட்டான் மாநீசன்

சக்கராயுதம் பணமாதல்

நல்லதுதா னென்று நாட்டமுற்றுச் சன்னாசி
வல்ல பெலமுள்ள மாநீசா நீகேளு
மந்திரங்க ளாலே மகாகோடி ஆயுதங்கள்
தந்திரங்க ளாலே தான்வருத்த லாகிடுமே
அப்படியே யொத்த அச்சரங்கள் தானிருக்க
இப்படியே ஆயுதத்தை எடுத்துச் சுமப்பதென்ன
நீகேட்ட சக்கரத்தை நிமலனவர் தாராமல்
தொனிகெட்ட வெற்றிரும்பைச் சுமவென்று தந்தார்காண்
இரும்பைச் சுமந்தால் இல்லைகா ணொன்றுபயன்
தரும்பொருள்போ லுள்ள சம்பாத்தியந் தாறேன்
மண்டலங்கள் தேசம் வாழ்வுக ளுண்டாவதற்கும்
கண்டார்கள் மெய்க்கக் கனக திரவியம்போல்
தருகிறே னுன்றனக்குத் தான்வேண்டு நீயெனவே
பருமுறுக் காயாண்டி பகர்ந்தாரே நீசனுக்கு
அப்போது நீசன் அகமகிழ்ந்து கொண்டாடி
இப்படியே தாருமென்று ஈந்தானே சக்கரத்தை
சக்கரத்தை வேண்டி சங்குசரத் தாமன் 540

மிக்கப் பணமாக்கி மிகுத்தசக்க ராயுதத்தைச்
சபிக்கவே மாயன் சக்கரா யுதங்கேட்கும்
நீச னிடத்தில் என்னைப் பணமாக்கி
ஈயுறீரே சுவாமி இப்போது சாபமிட்டு
இப்போ திடுஞ்சாபம் எப்போது தீருமென்று
அப்போது சக்கரமும் ஆண்டியடி போற்றிடவே
கலிமா றும்போது கடருமென்றா ருன்சாபம்
வலியான சக்கரமும் வாய்த்தபண மாகியதே
பணமாகிக் கீழே பறந்து குதித்திடவே
இணமான நீசன் எட்டி யவன்பிடித்துக்
கண்ணில்மிக வொற்றிக் காரிகையாள் கைகொடுப்பான்
பெண்ணே நமக்குப் பெலங்கள்வந்து வாய்த்துதடி
என்று பிரியமுற்று ஈசுரரைத் தான்வணங்கி
மன்று தனில்போக வரந்தாரு மென்றுரைத்தான்
அப்போது தன்னில் ஆண்டியவ ரங்குசென்று
இப்போது இங்கேவைத்து இவன்தான் மொழிந்ததெல்லாம்
தப்பாம லாகமத்தில் தானெழுதி வையுமென்றார்
முப்போது வுள்ள முறைபோலே மாயவரும்
ஆகமத்திற் பதித்து ஆண்டார் துரிதமுடன்
நாகரீக நாதன் நடந்தார்ஸ்ரீ ரங்கமதில் 560

கலியுகம்

நீசனையு மூரேபோ என்று நிமலனுந்தான்
ஈயுகிற போது ஏதுரைப்பாள் சத்தியுமே
வன்னச் சிவனாரே மாபாவி கேட்டவரம்
என்னென்ன வாயமதாய் இருக்குதுகா ணுத்தமரே
வலியான மாதே மாநீசன் கேட்டதுதான்
கலியுகம் போலிருக்கு கண்ணமுதே யென்றுரைத்தார்
சிவம்வாய் திறந்து செப்பக் கலியுகமாய்
இதமான தேவர் எழுதினா ரகமத்தில்

கலியுக மெனச்சிவம் கருதிடத் தேவர்கள்
பொலிவுடன் சேர்த்தனர் புராண மீதினில்
சலிவுடன் நீசனும் தரணியில் போந்திட
வலியுள்ள மாயன் ஸ்ரீரங்க மேவினார்

மாயனுக்கு ஆணை மாநீச னிட்டதெல்லாம்
தூய பெருங்கணக்கில் தொகுத்தெகுதி வைத்தனராம்
நீசக் கலியன் நிறைவோன் பதம்போற்றித்
தேச மதில்வரவே சென்றான்கா ணம்மானை
கலியன் கலிச்சி கட்டாய் வருகையிலே
சிலிரெனவே லோகம் திணுக்கிடவே யம்மானை

நல்லவை மறைதல்

தர்மமாய்ப் பூமி தானிருக்கும் நாளையிலே
வர்மமாய் நீசன் வரவேகண் டம்புவியில் 580
நல்ல பறவை நல்மிருக ஊர்வனமும்
வல்ல வகைநீதம் மாற்றங்கே ளன்போரே
வெள்ளானை வெள்ளை வேங்கையொடு வெண்கடுவாய்
தள்ளாத சற்பம் தலையைந்து கொண்டதுவும்
வெள்ளன்னம் வெண்குயில்கள் வெண்புறா வெள்ளைமயில்
கள்ளமில்லா வெண்சாரை கடியபெல வெண்கருடன்
நல்ல அனுமன் நாடுங்காண் டாமிருகம்
வல்லவெண் நரிகள் வளர்ந்துவரும்வெண் காகம்
ஆளியொடு சிங்கம் ஆனையி றாஞ்சிப்புள்ளும்
வேளிசை வெண்கலைமான் வெண்புள்ளு வெண்ணணில்கள்
மிருகமதில் வெள்ளைகொண்ட மேல்மிருக மானதெல்லாம்
அறியவே குண்டம் அதுநோக்கிப் போயிடவே
பால்நிற மான பட்சிப் பறவைகளும்
மேல்பரனார் குண்டம் மிகநோக்கி நாடிடவே
வெண்சாரை யைந்துதலை விசஅரவ மானதெல்லாம்
துஞ்சாத நாதன் துணைதேடி நாடிடுமாம்
முன்னிருந்த சாஸ்திரமும் முறையும்பஞ் சாங்கமதும்
பின்வந்த நீசனினால் போகவழி தேடிடுமாம்
நீசனுக்கு முன்னிருந்த நீதநெறி மானுபமும்
போயகல்வோ மென்று புத்திதனி லெண்ணிடுமாம் 600

முன்னிருந்த ரத்தினங்கள் முத்துவை டூரியங்கள்
பன்னுமறை சாஸ்திரமும் பாதையது கொண்டிடுமாம்
சங்கு சமூலம் சலக்கண் சலத்தில்விழ
பொங்குநவ ரத்தினமும் போகவழி தேடிடுமாம்
கடல் விளைவெல்லாம் கண்காணா தோடிடுமாம்
தடவரையி லுள்ள தங்கமது மண்கோர்க்க
சிலைகள் பதிகள் தெய்வத்திருச் சமூலம்
அலையுள்ளும் பூமி அதனுள்ளும் போய்மறைய
மாரி மறைய மலர்க்கண் மிகமறைய
ஏரி பாழாக எண்ணினதே யம்மானை
கர்மக் கலியதனால் கடல்கோபித் தேயடிக்க
தர்மந் தலைகவிழ்ந்து தானிருந்து தம்மானை
தருமமெய் நீதமதும் தாரணியில் உர்வனமும்
பொறுமை யுடைய பெரிய மிருகமதும்
நாகமணி தங்கமணி நவரத்தின மாமணியும்
தாகமுள்ள முத்து சாஸ்திர மாமறையும்
நீதத்தோ ரெல்லாம் நீலவண்ணர் சங்குடனே
பாதத்திருக் குண்டம் பாதைவழி தேடிடுமாம்
நடந்தோர்க ளெல்லாம் நாடி வழிவரவே
கடந்தார்கள் வல்ல கலியைவிட்டுக் காடதிலே 620

காடதிலே செல்ல கனத்தபஞ்ச பாண்டவர்கள்
வாட லுடவாய் வைகுண்டந் தானேக
கண்டாரே தர்மர் கடந்துநின்ற நீதமதைப்
பண்டாரத் தர்மர் பகர்ந்தா ரதினோடு
நாட்டிலுள்ள நீதமெல்லாம் நடந்துகா ணாதேசென்றால்
வீட்டி லுறுதியுள்ள மேல்வீடு காண்பதற்குப்
போவேனோ தர்மம் போனதினால் நாயடியேன்
சேர்வேனோ குண்டம் செய்தர்ம மில்லையென்றால்
என்றுரைக்கப் பாண்டவர்கள் இயல்தர்ம மேதுரைக்கும்
பொன்றுவந்து லோகம் பொய்ப்பூண்ட தானதினால்
எங்களுக் கங்கே இருந்தா லாகாதெனவே
செங்கண்மா லாயனையும் தேடியே போறோமென்றார்
அப்போது பாண்டவர்கள் அன்பாய்ப் பதம்பணிந்து
இப்போது உங்களையும் இழந்துவிட் டிங்கிருந்தால்
கர்மக் கலிமூழ்கிக் காண்பதில்லை குண்டமது
தர்மத் தோடங்கே தான்வருவோம் கண்டீரே
தர்மமும் நீதமதும் தாட்டீகப் பாண்டவரும்
வர்மமில்லாக் குண்டம் வழிநோக்கிச் செல்லுகையில்
மேலான மாமிருகம் வேதக் காராவுகளும்
நாலா மொருதலையும் நல்ல அரவமதும் 640ந

வெண்பட்சி யான மேலான பட்சிகளும்
இன்பட்சி யெல்லாம் எங்கினிப் போவோமென்று
கதறி யழுது கனைத்துநின்றார் காடதிலே
பதறி யழுது பறவை மிருகமொடு
நிற்கு மளவில் நீலவண்ணர் தானறிந்து
பக்குவப் பிராயப் பண்டார மாகிவந்து
ஏதுகா ணீங்கள் இந்தவன வாசமதில்
ஓதிக் கரைய உங்கள்விதி யானதென்ன
செப்போடு ஒத்த திருமால் தனைப்பார்த்து
அப்போது எல்லாம் அழுதழு தேதுசொல்லும்
நீசக் கலியன் நீணிலத்தில் வந்ததினால்
தேசமதி லெங்களுக்குச் செல்லவிருப் பில்லையையா
என்றுரைக்கச் சன்னாசி ஏதுரைப்பா ரன்போரே
நன்றுநன்று கேளும் நான்சொல்ல நீங்களுந்தான்
பாண்டவரைத் தர்மமதைப் பாரநீ தமதையும்
ஆண்ட வைகுண்டம் அடையப்போ மென்றுரைத்தார்
தெய்வக் காராவைச் சிறந்தவெள் ளானைகளை
மெய்வரம்பு கொண்ட மிகுத்த மிருகமெல்லாம்
கும்பக் குருமலையில் கூடியே நீங்களெல்லாம்
சம்பு சதாசிவத்தைத் தான்போற்றி யுள்ளிருத்தி 660

நீசன் தனையறுத்து நீதயுகந் தானாள
வாசமுட னேவரவே வரம்வேண்ட நில்லுமென்று
ஐந்தலை நாகமதை அந்தமுனி தானழைத்து
உன்றனக்குச் செய்தி உரைக்கிறேன் கேளெனவே
அலைமுகத்தில் நூற்றொன்று ஆழம் வரைக்கீழே
நிலைதனிலே நின்று நெடியோனை உள்ளிருத்தி
கலியை யழித்துக் கடியதர்ம மாகவேதான்
வலியயுக மாளுதற்கு வைகுண்டா வாவெனவே
நிற்பாய்த் தவசு நீபோவென அனுப்பி
நற்பாக நீங்கள் நற்றவசு செய்யுமென்று
சற்பமதுக் கரசு சங்குவெள்ளைச் சாரைதன்னை
பற்பக் கிரிதனிலே பைம்பொன்னிறப் பொய்கையிலே
வம்பை யழித்து வாய்த்ததர்ம ராச்சியத்தில்
அன்பரோ டேயரசு ஆளத்திரு மால்வரவே
வேணுமென்று நிட்டை விரும்பிச்செய் யென்றேதான்
ஆணுவ நாதன் அதற்கு விடைகொடுத்தார்
அன்னப்பட்சி யான அதிகப் பறவைகளும்
பொன்னம்பல கிரியில் போய்த்தவசு பண்ணுமென்றார்
சாத்திர மாமறையைத் தானெடுத்து மாமுனியும்
சூத்திர நெஞ்சத்து உள்ளிருத்தி வைத்தனராம் 680

கலைமுனி ஞானமுனி தவசு

இருத்திஸ்ரீ ரங்கம் ஏகவென் றெம்பெருமாள்
கருத்தி லுறயிருத்திக் கட்டாய் வருகையிலே
ஞான முனியினொடு நல்ல கலைமுனிவன்
தானமுள்ள மாமுனிவர் தலைகவிழ்ந் தேதவசு
சடைத்து முகம்வாடித் தானிருக்கு மப்போது
திடத்தமுடன் நல்ல திருமா லருகேகி
நன்றியுள்ள மாமுனியே நல்லகயி லாசமதில்
கண்டதுண் டுங்களையும் காட்டில்வந்த வாறேது
அப்போது மாமுனிவர் ஆதி பதம்பணிந்து
செப்போடு வொத்தத் திருமாலே நாங்களுந்தான்
கயிலாச மீதில் கறைக்கண்டர் பாதமதை
ஒயிலாகப் போற்றி ஒழுங்கா யிருந்தவர்காண்
இருக்குமந்த நாளையிலே எங்களிரு பேர்களையும்
தருக்குகந்த ஈசர் தன்னையவர் வருத்தி
மாயன் மேல்பிறக்க மண்ணுலோ கந்தனிலே
காய மிழந்து காணா துருவெடுத்து
மறைந்திருக் கிறாரெனவே வானோர்கள் சொல்வதினால்
சிறந்தபுகழ் மாயவனுக்குத் தேருஞ் சிங்காசனமும்
மண்டபங்கள் மேடை வாய்த்தநீ ராவிகளும்
பண்டையுள்ள நல்ல பைம்பொன்னிறப் பொற்பதியும்     700

உண்டுகாண் துவாரகா யுகத்திலே யென்றுசொல்லி
கண்டுகொண்டா னானால் கலியனதை யாண்டுகொள்வான்
முன்போய்த் தானீங்கள் உவரிதனை வருத்தி
இன்பமுள் ளவகைகள் எல்லாமதி னுள்ளேவைத்து
வைகுண்ட ரங்கே வந்தா லிதைக்காட்டி
மெய்கொண்ட வுங்கள் இடத்திலே போவுமென்று
அல்லாதே போனால் அக்கினியா லுங்களையும்
இல்லாதே செய்வார் என்றுசொல்லி வாருமென்று
அனுப்பினா ரெங்களையும் அதற்காக இங்குவந்தோம்
துனுப்பாக வாரிதனைச் சொல்லியே சட்டம்வைத்து
ஏகினோங் கயிலை இடைவழியில் மாநீசன்
தாவி வரக்கண்டு தவலோக மேமறைந்து
கர்ம விதிப்பயனால் கலக்க மிகவடைந்து
தர்மச்சிறப் பில்லாது தலைகவிழ்ந் திருந்தோமென்றார்
அப்போது அச்சுதரும் அந்தமுனி தங்களையும்
இப்போது கூட்டி ஏகின்ற அப்பொழுது
கருங்குரங்கு காரானை கரியகடு வாய்புலியும்
இருங்கருட னூர்வனமும் எறும்புஈ மூட்டைகளும்
கள்ளக் கசடுள்ள கரிய மிருகமதும்
கொள்ளைகொண்ட ஊர்வனமும் குசலான பட்சிகளும்   720

தரந்தரமாய்க் கூடித் தாமே திரளாக
வரவேகண் டெம்பெருமாள் மாமுனியைத் தான்பார்த்து
ஏதேது மாமுனியே இந்த வழிதனிலே
ஈதே தெனவே எனக்கேட்க மாமுனிவர்
நீச னுதிரம் நீதிகெட்ட இம்மிருகம்
வாசமுள்ள பட்சிகளும் மானிலத்தி லூர்வனமும்
பிறந்துதித்து வந்து பேருலகி லம்மானை
சிறந்தறிந்து எம்பெருமாள் செவியிலே கையறைந்து
விலகியே போக வேணுமென் றெம்பெருமாள்
மலகிய மாமுனிவர் மாயனடி போற்றி
எங்களுக் கெங்கே இருக்கவே சொல்வீரென்று
அங்கந்த மாயவரின் அடிதொழுதா ரம்மானை
அப்பொழு தெம்பெருமாள் அந்தமுனிக் கேதுரைப்பார்
இப்பொழுது நீங்கள் ஏகுங்கோ செந்தூரில்
செந்தூர்ப் பதியில் சிறந்தவா ரிக்கரையில்
நந்த கோபால நாராய ணாவெனவே
மாயநீ சக்கலியை வதைசெய்து தர்மமதாய்
ஞாயமுடன் வைந்தர் நாட்டையொரு சொல்லதுக்குள்
ஆளவர வேணுமென்று அருந்தவசு பண்ணுமென
வேழமொத்த மாமுனிக்கு விடைகொடுத்தார் மாயவரும்    740

விடைவேண்டி மாமுனிவர் வேல னுறைந்திருக்கும்
கடலான தற்கரையில் கடுந்தவசு பண்ணினரே
அப்படியே மாமுனிவர் அங்கே தவசிருக்க
இப்படியே மாயன் இசைந்தஸ்ரீ ரங்கமதில்

போகமுனி தவசு

போகின்ற வேளையிலே போகனென்ற மாமுனிவன்
தாவு மொருமலையில் தலைசிதறிச் சாகவென்று
வேகித்து மாமுனிவன் விசையாக முட்டுகையில்
ஆகமுற்று எம்பெருமாள் அவனோடங் கேதுரைப்பார்
மலைதனிலே முட்டி மாளவென்று மாமுனிநீ
குலைகுலைந்து நின்றவிதம் கூறுநீ யென்றனராம்
அப்போது மாயவனார் அடிபோற்றி யேதுரைப்பான்
செப்பமுள்ள மாயவரே சீமைதனை யளந்த
மாயவரேநானுமினி மாள்வதல்லா லிங்கிருக்க
ஞாயமில்லை அய்யா நாரா யணப்பொருளே
என்றுரைக்க மாமுனியும் ஏதுரைப்பா ரெம்பெருமாள்
உன்று வசனம் உரையென்றார் மாமுனியை
என்றெம் பெருமாள் இவையுரைக்க மாமுனியும்
அன்று முனிசொன்ன வசனங்கே ளன்போரே
தர்மநீ தமதுவும் தரணிதனில் மானுபமும்
கர்மக் கலியால் கட்டழிந்து போச்சுதையா 760

நன்மையெல்லாம் நாடுவிட்டு நடந்து மறைந்ததினால்
வன்மம்வந்து வையகத்தில் வளர்ந்த படியாலும்
நானிருந்த நிட்டை நாலிரண் டாகையிலே
மானிபங்கள் தர்மம் மறையத்தான் போனதினால்
என்தவந்தான் வம்பில் இழந்தேனே யென்றுசொல்லித்
தன்தலையைத் தான்சிதறிச் சாகவே ணுமெனவே
மலைதனிலே முட்டி மாண்டுவிட வேணுமென்று
அலைமேல் துயின்ற ஆண்டியோ டேயுரைத்தான்
நல்லதென்று யுன்றனக்கு மாளவென்றால் வேறில்லையோ
கல்லிலே முட்டிக் கண்தவர்ந்து சாவதென்ன
சொல்லுநீ யென்று திருமா லிதுவுரைக்க

மலைப் புதுமை

அப்போது மாமுனியும் அந்தமலைப் புதுமை
இப்போது சொல்லுகிறேன் என்றே வுரைக்கலுற்றான்
வேதா விதித்த மேலான ஆகமம்போல்
நாதாந்த வேதம் நாலுண்டு கண்டீரே
கலியன் பிறந்தபின்பு கட்டான வேதமொன்று
சலிவாகி வேதம் தான்விளங்கா வண்ணமுந்தான்
இளகாமல் கற்போல் இருந்ததுகாண் வேதமது
குழைவான வேதா குறியா யதையறிந்து 780

கல்வி யிளகாமல் கற்போ லிருந்ததினால்
பல்லுயிர்கள் வாழும் பாரிலொரு பங்காக
மலையாய் வளர்ந்து வைந்தர் வருகையிலே
அலைபோலிளகி அவனிதனில் பாயவென்று
சபித்தார் காண்வேதா தானறிந்து வேதமது
குபிந்தான மான குன்றுபோலே வளர்ந்து
அன்றந்த வேதம் ஆனதினால் நானடியேன்
இன்றென் சிரசை இதிலிடறி மாண்டதுண்டால்
வைகுண்டங் கிட்டுமென்று மாளவந்தே னிம்மலையில்
கைகண்ட வேதக் கருணாகரக் கடலே
என்றுரைக்க மாமுனிவன் எம்பெருமாள் நல்லதென்று
அன்று முனியை அவரோ டுடன்கூட்டிப்
போகின்ற வேளையிலே போகனென்ற மாமுனிவன்
ஏகின்ற வேளை எம்பெருமா ளேதுசொல்வார்
மாமுனியே நீகேளு மாச்சலா யென்னுடம்பு
தாமுனியே யென்றனக்குச் சடைவா யிருக்குதுகாண்
ஆனதால் கங்கைபார்த்(து) அதிலே குளித்துமிகப்
போனால் சுகமெனவே போகனோ டேயுரைத்தார்

சலந்தவசு

அப்போது நல்ல அருள்கொண்ட மாமுனிவன்
இப்போது மாயவரே இதோ தெரியுகின்ற 800
அருணகிரி மலையில் அருவியொன் றுண்டுமையா
கருணை யிரங்கினதால் காட்டியே தாறேனென்றான்
நல்லதுதா னென்று நல்ல முனியோடே
வல்ல திருமேனி வாவிதனைக் கண்டார்காண்
கண்டு திருமேனி கனத்தநீ ராவிதனில்
சென்றிறங்கி மேனிதனில் செலங்கோரி விட்டிடவே
ஆவி தனிலிறங்கி அச்சுதனார் நின்றிடவே
தேவி யொருபெண் செலமெழுந்து மாயனையும்
வந்து பணிந்திடவே மாயனதைப் பார்த்துச்
சந்துபயில் மாமுனியே தண்ணீரைக் காணாமல்
பெண்ணாக வந்த புதுமையென்ன மாமுனியே
கண்ணான மாமுனியும் கட்டுரைப்பா னம்மானை
எண்ணாத தெண்ணி ஏதுரைப்பான் மாமுனியும்
பெண்ணோடு கேட்டால் புதுமை யதுதெரியும்
என்றுரைக்க மாமுனியும் ஏந்திழையோ டேதுரைப்பான்
நன்றுநன்று பெண்ணேநீ நதியா யிருந்ததுவும்
பெண்ணாக வந்ததுவும் பேசுநீ ஒண்ணுதலே
தண்ணீராய் நின்ற தார்குழலா ளேதுரைப்பாள்
அய்யாவே நானும் அதிகயி லாசமதில்
மெய்யாக ஈசுரர்க்கு வேலையது செய்திருந்து 820

வருகின்ற வேளையிலே மனங்குழறி நானடியாள்
அரையில் கலைபூணா(து) ஆவியிலே சென்றிறங்கிக்
குளித்தே னதையும் கொன்றையணி வோனறிந்து
அழித்தே யெனையும் ஆவிபோலே படைத்தார்
படைக்கும் பொழுதில் பரமனோ டிச்சாபம்
கடருவதெப் போதெனவே கறைக்கண்ட ரோடுரைத்தேன்
ஆவியாய் நீகிடந்தால் அச்சுதனா ரங்குவந்து
தாவிக் குளிக்க சாபமது மாறுமென்றார்
என்றுரைக்கப் பெண்ணாள் எம்பெருமா ளேதுரைப்பார்
அன்றந்தப் பெண்ணதையும் ஆகமப் போகனையும்
நானாண் டிருந்த நல்லதுவா பரத்தில்
தானாக ஆண்டு தானிருக்கு மப்பொழுதில்
சூரிய வொளிகாந்தம் துலங்கும்வை டூரியத்தில்
வீரிய மான வெற்றிவிரு துக்குடையும்
தங்கப்பொன் னாயுதமும் தளிருநிறச் சக்கரமும்
பங்கமில்லா முத்துப் பவள நிறக்குடையும்
கட்டான வைரக் கற்கோட்டை வாவிகளும்
மட்டான செம்பவள வைரக்கால் மண்டபமும்
உண்டுகா ணத்தனையும் உடனேபோய் நீங்களுந்தான்
என்றுநான் வருவேன் இதுவரைக்குங் காத்திருங்கோ           840

நான்வந்த போது நல்லகதி யுங்களுக்குத்
தான்தருவேன் போகுமெனத் தங்களிரு பேர்களுக்கும்
விடைகொடுத்து ஸ்ரீரங்கம் மேவி யவரிருக்கத்
திடமுடனே போகமுனி தேவி சலமடவும்
வந்தந்த மாயவரின் வாழ்வெல்லாங் காத்திருந்தார்
சென்றந்த மாயவனார் ஸ்ரீரங்கமே யிருந்தார்
மாயன் ஸ்ரீரங்கம் வாழ்ந்திருக்கு மப்போது
மாயக்கலி செய்த மாயங்கே ளன்போரே
சாத்திரத்தை யாறாய்த் தான்வகுத்து வேதமதை
மாத்திரமே நாலாய் வகுத்தனன்கா ணம்மானை
நட்சேத் திரத்தை நல்லிருபத் தேழாகப்
பொய்ச்சேத் திரமாய்ப் பிரித்தான்கா ணம்மானை
கோளொன் பதுக்குக் கூடுபன்னி ரண்டாக
நாளேழு வாரம் நாட்டிவைத்தா னம்மானை
பக்கமது பத்தஞ்சு ஆகப் பவம்பிரித்து
தக்கமது லோகம் தானாண் டிருக்கையிலே
மாந்திரத்தால் செய்த வறுமைகே ளன்போரே
பாந்தள்வாய்க் கட்டி பரிசுகெட ஆட்டிடுவான்
சந்திரனை மங்கவைப்பான் சமுத்திரத்தைப் பொங்கவைப்பான்
மந்திரத்தால் தெய்வமதை மாடுபோல் வேலைகொள்வான்     860

கற்பைக் கலக்கிடுவான் கன்னி யழித்திடுவான்
வெற்பைத் தகர்த்திடுவான் வெடியைத் தடுத்திடுவான்
ஆண்பெண்கள் தம்மை அலைச்சலது செய்திடுவான்
கோண்பிரித்துக் கட்டிக் குடிகெடுப்பான் மானிடரை
பசுவை யடைத்துப் பட்டினிகள் போட்டிடுவான்
கசுவை மறைத்திடுவான் கண்ணைக் கெடுத்திடுவான்
மிருகமதைக் கட்டி இரையிடாக் கொன்றிடுவான்
கருவை யுருவழிப்பான் கன்னி சிறைவைப்பான்
மானிடர்க்குக் குட்டம் வருத்தியே கொன்றிடுவான்
வீணிலே மானிடரை விசமடக்கிக் கொன்றிடுவான்
மாரிதனை மறைப்பான் வருத்தவென் றாலழைப்பான்
ஏரிதனை வெட்டி இயலழியச் செய்திடுவான்
அடப்பமிடத் தாயை ஆளாக்கி வைத்திடுவான்
குடைப்பிடிக்கப் பிதாவைக் கொண்டிடுவான் வேலையது
பேயை வருத்திப் பூசை மிகக்கொடுத்து
தேயமதில் மானிடரைச் செத்திறக்க வைத்திடுவான்
கடலதுக்கும் மாமலைக்கும் கற்கோட்டை தாண்டவிட்டுத்
தடவரைக ளெல்லாம் தகர்த்துப் பொடிப்படுத்திப்
பூலோகத் தேசம் புவனமெல் லாம்பரந்து
மேலோக மெல்லாம் மிகப்பரந்தா னம்மானை 880

கயிலை யெமலோகம் கரியதெய்வ லோகமெல்லாம்
அகிலமே ழும்புரண்ட அதிசயங்கே ளன்போரே
சிவந்தா னினைத்தால் செல்லார்கள் தேவர்களும்
தலந்தா னிளகித் தான்வந்த தாலேதான்
மூவர்க ளூரும் முறைமை மிகத்தவறி
தேவர்க ளூரும் தியங்கிமிகத் தான்புரள

நந்திவரவு

தெய்வலோ கமுறைமை திசைமயங்கித் தான்புரள
மெய்கொண்ட லோகமெல்லாம் மிகமயக்க மானதினால்
ஈசுரனா ரப்போ ஏதெனவே தான்வெகுண்டு
வீசுபுகழ் நந்திதனை விரைவாய் வரவழைத்து
மாமுனி யேகயிலை வரம்பழியக் காரணமேன்
ஓமுனியே நீயும் உள்ளதெல்லாஞ் சொல்லெனவே
என்றந்த நந்தியோடு ஈசுரனார் தான்கேட்க
அன்றந்த மாமுனியும் அரனா ரடிதொழுது
நல்லதுகா ணீசுரரே நம்மள்தனக் கிங்கேதான்
செல்லாது இங்கிருந்தால் சிவனே யெனத்தொழுது
பூலோக மேழும் பொன்னுலோக மேழும்
தாலோக முதலாய்த் தவலோ கம்வரையும்
ஈரேழு லோகம் இருபுத்தி யானதெல்லாம்
பாரெல்லா மிப்படியே பரந்து இருப்பதெல்லாம் 900

சொல்லவே ணுமென்றால் சிவகயிலை விட்டேநாம்
நல்லபர லோகமதில் நாம்போவோ மீசுரரே
என்றந்த ஈசுரரை இறைஞ்சி முனிதான்கூட்டி
அன்றந்த மாமுனியும் அரனாருந் தானேகி
சென்றார் பரலோகச் சீமையிலே வந்திருந்து
வண்டாடுஞ் சோலை வைடூரியக் கோயில்
கோவிலவர் புக்கிக் குருவை மிகப்போற்றி
ஆவலுடன் மாமுனியும் அருளுவா ரம்மானை
நல்லபர மேசுரரே நாடுதடு மாறினதை
எல்லாம் நீர்கேட்க எடுத்துரைப்பே னென்றுமுனி
மாமுனியு மீசுரரை வணங்கிப் பதங்குவித்து
ஓமுனியும் நன்றாய் உரைப்பார்கா ணம்மானை
கேட்டீரோ ஈசுரரே கேடுவந்த செய்தியெல்லாம்
தீட்டுகிறே னென்று செப்புவா ரன்போரே
மாயன் வைகுண்டம் மறையவென்று பொய்ச்சடலக்
காய மிழந்து காணா துருவெடுத்து
ஏகி வரும்வழியில் ஏந்திழையாள் தெய்வகன்னி
தாவிச் சுனையாடித் தாங்கள்நிற்கும் வேளையிலே
கண்டந்த மாயன் கன்னியர்மே லிச்சைகொண்டு
பண்டந்த யோகமுனி பச்சைமால் தன்றனக்கு 920

மேலோகத் தார்களெல்லாம் விஷ்ணுவின் நாதமதில்
பூலோகந் தன்னில் பிதிராகு வாரெனவும்
பிதிரில் தவமிருந்து பிறந்தவழி தன்னையெல்லாம்
சதிராக வந்தெடுத்துத் தர்மயுக மாள்வாரென்று
யோகமுனி யிட்ட உறுசாப மத்தனையும்
போகமதில் மேலோகப் பிறப்பெல்லாந் தோணவைத்துக்
கன்னி வயிற்றிலுறக் காட்டில் மிகப்பிறந்து
தன்னிக ரில்லாத சான்ரோ ரெனவளர்ந்தார்
வளர்ந்தவர்கள் ராச்சியத்தை வகையாக ஆண்டிருக்க
இழந்த கலிதோன்றி இவன்சென்றா னவ்வுகத்தில்
கலிய னவன்செல்லக் கைமறந் தவ்வுலகில்
பொலிவுள்ள தர்மம் பொன்றிச்சே நீதமதும்
முன்னிருந்த சாஸ்திரமும் முறையும் மிகத்தவறி
பின்னுதித்த நீசன் பிரித்தான்காண் வெவ்வேறாய்
ஆனதால் பூலோகம் அழிந்து மிகத்தவறி
ஊன மடைந்தார் உலகிலுள்ள சான்றோர்கள்
தந்திர மந்திரத்தால் சான்றோரைத் தான்மயக்கிப்
பந்தி யழித்ததினால் பத்தினியாள் பெற்றமக்கள்
ஒண்ணுக்கொண் ணெதிர்த்து ஒத்துமிக வாழாமல்
பெண்ணுக்கு ஆணும் பிரிவு முறிவாகித் 940

தாய்க்குத்தான் பிள்ளை தாழாம லேபேசும்
வாய்க்குவாய்ச் சொன்னாலும் மங்கைநல்லா ளென்றிடுவான்
பிதாவை மிகநம்பார் புண்ணியமென் றேபாரார்
இதாகவெல்லாம் நீசன் இடறுவரச் செய்ததினால்
ஆனதா லிந்த வழிவழியே யங்குளது
போனதால் நீசம் பொன்னுலோ கம்வரையும்
ஏகிச்சு தையா இடறுநீ சக்கலியும்
கோவிச்சு தையா கொடுங்கலியு மங்கேகி
ஈதல்லால் பின்னும் இன்னுஞ் சிலநாளில்
ஏதெல்லா மாகுதென்று ஈசுரரே பார்த்திருவும்
மாயனை யும்வருத்தி வார்த்தைகே ளாதிருந்தால்
தேய மிருள்மூடிச் சென்றிடுங்கா ணீசுரரே
அப்போது ஈசுரரும் அதற்கேது செய்வோமென்று
செப்பேடு வொத்த சிவனாரும் நொந்திருந்தார்
மாமுனியே மாயவனை வருத்தவென்ன செய்திடுவோம்
ஓமுனியே நீயும் உரையென்றா ரன்போரே

பேய்ப்பிறப்பு

அப்போது மாமுனியும் அரனா ரடிவணங்கி
இப்போது தானதவம் இல்லையே லோகமதில்
தவஞ்செய்து மாயவரைத் தான்வருத்த வென்றாலும்
பவஞ்செய்த காலம் படுமோ தவமிருக்க 960

என்றுரைத்து மாமுனியும் இன்னமொன்று சொல்லிடுவான்
நன்றுநன்று ஈசுரரே நானுரைக்கக் கேட்டருளும்
இருள்கொண்ட காலமதால் ஏற்றதர்மஞ் செல்லாது
மருள்கொண்ட காலமதால் வம்புக்கேநே ராகுமையா
ஆணுவஞ்சேர் பேய்க்கணங்க ரம்பைக்கோர் மாலைதன்னைப்
பூணும்நீர் தவசு புரிந்தா லரிவருவார்
என்று முனிசொல்ல ஈசுரனார் சம்மதித்து
அன்று பேய்க்கணங்க அசுமாலை யையணிந்து
இருந்தா ரரிதான் இப்போவர வேணுமென்று
தருந்தார மார்பன் தானறிந் தேதெனவே
இருக்க வகையில்லாது எழுந்திருந்தா காயமதில்
சுறுக்கா யுதித்துத் தோன்றினார் ஈசர்முன்னே
அப்போது மாயவரை ஆதி யாவிப்பிடித்து
இப்போ திதுவரையும் எங்கேநீர் போனீர்காண்
என்றுதான் ஈசர் எய்த்திளைத்துச் சொல்லிடவே
அன்றுதான் ஈசுரரை அரியாவித் தான்சேர்த்து
பாண்டவர்க் குபகாரம் பண்ணி யிருந்ததுவும்
வீண்டதுரி யோதனனை வெற்றிகொண்ட செய்தியதும்
பொருப்பேறிப் பொய்ச்சடலம் போட்டுஸ்ரீ ரங்கமதில்
இருப்பதுவுஞ் சொல்லி எனைவருத்துவா னேனென்றார்         980

அப்போ தரனார் ஆதிமா லோடுரைப்பார்
இப்போது கலியன் இராச்சியத்தி லேபிறந்து
பதிநாலு லோகமதும் பாரஇருள் மூடினதால்
இதுநாள் வரையும் யானுமும்மைக் காணாமல்
மனங்கலங்கிப் பேய்க்கணங்க மாலையிட்டு நானிருந்தேன்
கனங்கொண்ட மாயவரே கயிலையிருள் மாற்றுமென்றார்
நல்லா யிருக்குதுகாண் நவின்றதெல்லாங் கேட்பதற்கு
எல்லா மிருக்கட்டென்(று) ஈசுரரே உம்முடைய
கழுத்தில் தரித்ததையும் கழற்றி யெறியுமென்றார்
வழுத்திடவே ஈசர் மாலை தனைக்கழற்றி
கோபத்தா லக்கினியில் குறியா யெறிந்தனரே
வேகத்தால் மாலை வெடித்ததுகாண் பேய்க்கணம்போல்
கொள்ளைகொண்ட பேய்கள் கோடாமுக் கோடியுமாய்த்
துள்ளிக் குதித்துச் சுற்றிக் குதித்தாடும்
அப்போது பேய்கள் அரனா ரடிவணங்கி
இப்போது ஈசுரரே எங்கள்பசி தீர்த்து
மந்திர சாலம் மாய்மால மாரணமும்
தந்திர சாலம் சர்வதுமே தாருமையா
கொல்லச்சாவு சங்கிலியும் கொன்றவரைத் தானெழுப்ப
வெல்லப்பிழை சங்கிலியும் வெடிப்பாக வேதாரும் 1000

ஈசுரரும் தேவர்களும் எங்கபடத் துள்ளாக
வீசுபல வரங்கள் விடையாகத் தாருமையா
அப்போது பேய்கள் அதுகேட்ட தத்தனையும்
இப்போது கொடுக்க ஈசுரருஞ் சம்மதித்து
மாலோடும் வேதா மறையவனோடுங் கேட்பார்
கேட்டிருந்த நாரணரும் கிருபையுட னீசுரரைத்
தேட்டமுடன் பார்த்துச் செப்புவா ரம்மானை
ஈசுரரே பேய்களுக்கு இவ்வரங்க ளீந்தாக்கால்
வீசுங்காண் லோகமதை விழுங்குங்கா ணிப்பேய்கள்
தூயவரே பேய்கேட்ட சுத்தவர மத்தனையும்
ஞாயமில்லை யென்று நானுரைக்கப் போகாது
ஆனாலும் பேய்களுக்கு அருள்வீரா லிவ்வரங்கள்
ஞானாந்திர மான நாரத மாமுனியை
வருத்தியே பேய்களுக்கு வரங்கொடுத் தவன்கையிலே
இருத்தி யணைவைத்து ஏழ்ப்பியும் பேய்களைத்தான்
பேய்களுட பேரில் பிழைத்ததுதான் குற்றமென்றால்
தேயக்கலி மாளுகையில் சிவவடகை லாசமதில்
முனிசிறையும் பேய்களுக்கு உயிரழிவு மென்றுசொல்லித்
துனிவான முனியுடனே சொல்லி யனுப்புமென்றார்
அப்போது ஈசுரரும் அந்தமுனியை வருத்தி 1020

இப்படியே சொல்லி ஏழ்ப்பித் தனுப்பிடவே
மாமுனியுஞ் சம்மதித்து வரம்வேண்டிப் பேய்களுந்தான்
தாமுனிந்து பூலோகம் தன்னிலே வந்திடுமாம்
பேய்ப்பூ லோகமதில் போயிடவே ஈசுரரும்
ஆயனா ரோடே அருளுவா ரன்போரே
கயிலை யிருளைக் கடத்திவைக் காதிருந்தால்
அகில மதிலிருப்பு அல்லவே அச்சுதரே
அப்போது மாயவனார் ஆதி தனைநோக்கி
இப்போது நீங்கள் எல்லோரு மிக்கவேதாம்
நன்றான ஆண்டிகள்போல் நற்றா வடங்களிட்டுப்
பண்டார வேசமதாய்ப் பதிந்திருங்கோ வென்றுசொல்லி
நடந்தார் சீரங்க நகரிதனி லெம்பெருமாள்
மாயனுரை மாறாமல் வாய்த்தமே லோகமுள்ளோர்
ஈசர்முத லாண்டியென இருந்தார்கா ணம்மானை
ஆனதால் கலியன் அங்கே யனுவிலகி
மான மனுப்போலே வாழ்ந்திருந்தா ரம்மானை 1036

 
மேலும் அகிலத்திரட்டு அம்மானை! »
temple news
அய்யா துணை காப்பு ஏரணியும் மாயோன் இவ்வுலகில் தவசுபண்ணிகாரணம்போல் செய்தகதை கட்டுரைக்க - ... மேலும்
 
temple news
அந்தூர்ப் பதியில் அலங்கரித்த நாட்கழித்துஆதி கயிலை அரனா ரிடத்தில்வந்துவேதியரும் நன்றாய் விளம்புவா ... மேலும்
 
temple news
கஞ்சனையு மற்றுமுள்ள காலவுணர் தங்களையும்வஞ்சகமா யுள்ள வாணநர பாலனையும்இம்முதலா யுள்ள ஏற்ற ... மேலும்
 
temple news
பூலோக மெல்லாம் பொய்யான மாகலியன்மாலோ சனையிழந்து மாறியே மானிடவர்சாதி யினம்பிரித்துத் தடுமாறி ... மேலும்
 
temple news
திருச்செந்தூர் தன்னில் திருமா லங்கேயிருக்கவிருச்சமுள்ள நீசன் வேசைநசு ராணியவன்வையங்க ளெல்லாம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar