பதிவு செய்த நாள்
29
ஜூன்
2012
12:06
காசி நகரம் தான் அவரை முதலில் ஈர்த்தது. அங்கு, துவாரகாதாஸ் என்பவரின் ஆஸ்ரமத்தில் தங்கினார். அங்கே வங்காளமொழி எழுத்தாளர் முகோபாத்தியாயா என்பவரைச் சந்திக்க நேர்ந்தது. அவர், விவேகானந்தருடன் நீண்டநேரம் பேசிக் கொண்டிருந்தார். சுவாமிஜியின் பேச்சில் இருந்த ஆழம் அவரை மிகவும் கவரவே, இவருக்கு இந்த சிறிய வயதிலேயே இவ்வளவு துடிப்பா? என ஆச்சரியப்பட்டு போனார். ஒருமுறை காசியிலுள்ள துர்க்கா மந்திரம் என்ற இடத்தை பார்வையிட்டு திரும்பிய போது, சுவாமிஜியை பல குரங்குகள் கூட்டமாக சேர்ந்து விரட்டின. விவேகானந்தர் தன் வாழ்க்கையில் ஒரே ஒரு கட்டத்தில் தான் பயந்திருக்கிறார் என்றால் அது இங்கு மட்டும் தான். எதற்கும் அஞ்சாத வீர நெஞ்சினரான அவரே கலங்கி விட்டார். ஆனால், இந்த நிகழ்ச்சிதான் அவரிடமிருந்த சிறிதளவு கலக்கமும் மறைய காரணமாயிற்று. அந்த குரங்களிடம் இருந்து தப்பிக்க ஓட ஆரம்பித்தார்.
குரங்குகளும் வேகத்தை அதிகரித்து அவரை ஓடஓட விரட்டின. அப்போது எங்கிருந்தோ ஒரு குரல் நில்! இவற்றைக் கண்டு அஞ்சுவதா? அந்தக் குரங்குகளை திரும்பிப்பார். அவற்றிற்கு முகம் கொடுத்து நில், என்றது. சுவாமிஜியும் நின்றார். குரங்குகளை தன் தீர்க்கமான பார்வையால் பார்த்தார். அவ்வளவு தான்! குரங்கு கள் திரும்பி ஓட ஆரம்பித்தன. இந்த நிகழ்ச்சி பற்றி சுவாமிஜி சிகாகோவில் தனது சொற்பொழிவின் போது எடுத்துச் சொன்னார். மக்களே! இயற்கையின் வேகம் கடுமையாகவே இருக்கும். ஆனால், அவற்றை எதிர்த்து நில்லுங்கள். அவற்றை முகம் கொடுத்து வெல்லுங்கள். அதுபோல, அறியாமைக்கு எதிராகவும் போராடுங்கள். õழ்க்கை நிரந்தரமானது என்ற மாயை விலங்கில் இருந்து விடுபடுங்கள். எதைக் கண்டும் பயந்து ஓடாதீர்கள், என்று முழக்கமிட்டார். பின்னர் ஜோதிர்லிங்கத்தலமான வைத்தியநாதம் சென்றார் சுவாமி. இதையடுத்து ஆக்ராவுக்கு அவர் புறப்பட்டார். மொகலாய சாம்ராஜ்ய மன்னர்கள் எழுப்பிய கட்டடங்களை பார்த்தார். அவர்களின் கலையார்வத்தை மட்டுமல்ல... முஸ்லிம் மக்களையும் அவர் பாராட்டினார். நான் இந்துக்களிடம் வேண்டுவது இதுதான்.
முஸ்லிம்கள் தாங்கள் அனைவரும் சமம் என்ற கொள்கையைக் கடைபிடிக்கின்றனர். இந்து மதத்தில் அது இல்லை என்பதற்காக வருந்துகிறேன். அவர்கள் தங்கள் உடலை பலமாக வைத்துக் கொண்டுள்ளனர். இந்துக்கள் வேதாந்த விஷயங்களில் அறிவாற்றல் பெற்றால் மட்டும் போதாது. முஸ்லிம்களிடம் உள்ளது போல் உடல்பலமும் இருந்தால் தான் ஆன்மிகத்தில் சாதனைகளை படைக்க முடியும். உடல்பலமும், ஆன்மிகபலமும் ஒன்றுபட்டால் இந்தியாவை யாராலும் அசைக்க முடியாது, என்று குருபாயிக்கள் எனப்படும் தனது சீடர்களிடம் சொன்னார். இதன்பிறகு, கண்ணன் கோபியருடனும், முக்கியமாக தன் காதலி ராதாவுடனும் சுற்றித்திரிந்த பிருந்தாவனத்தை அடைந்தார் சுவாமிஜி. அங்கே ஒரு பேரதிசயம் நிகழ்ந்தது. பிருந்தாவனத்தில் தான் கண்ணன் தூக்கிய கோவர்த்தனகிரி என்ற மலை இருக்கிறது. அதை வலம் வர எண்ணினார் சுவாமிஜி. மனதிற்குள் ஒரு சங்கல்பம் (உறுதியேற்றல்), மலையைச் சுற்றும் போது யாராவது சாப்பாடு கொண்டு வந்து தந்தால் ஒழிய, வலத்தை முடிக்கும் வரை சாப்பிடக்கூடாது என்று! மலையைச் சுற்ற ஆரம்பித்து விட்டார். சுற்றினார்... சுற்றினார்... சுற்றிக்கொண்டே இருந்தார்.
கிரிவலம் முடிந்தபாடில்லை. சாப்பிடக்கூடாது என எடுத்த சத்தியத்திற்கு பங்கம் வந்துவிடுமோ என்ற அளவுக்கு பசி குடலைப் புரட்டியது. உஹும்... சுவாமியின் கால்கள் நிற்கவில்லை. சாப்பிடுவதாவது... வலம் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் கால்கள் பின்னத்தொடங்கி விட்டன. மயக்கநிலைக்கு வந்துவிடும் சமயம். ஆனாலும், நெஞ்சுரம் தளராமல் நடந்து கொண்டிருந்தார். அப்போது தன் பின்னால் யாரோ வருவது போன்ற உணர்ச்சி! நில்லு! சாப்பிட்டு விட்டு போஎன்று. பசியில் ஏற்பட்ட பிரமை என்று சுவாமிஜி நினைத்தார். சுற்றுமுற்றும் பார்த்தார். யாரும் இல்லை. நடையைத் தொடர்ந்தார். அப்போதும் அதே குரல். சுவாமிஜி நடையின் வேகத்தை கூட்டினார். பின்னால் வந்த குரலுக்குரியவரும் வேகமாக தன்னைப் பின்தொடரும் சப்தம் கேட்டது. ஒரு கட்டத்தில் அந்தக் குரலுக்குரியவர் சுவாமிஜியை நடையில் ஜெயித்து விட்டார். யாரோ ஒரு இளைஞன். சுவாமிஜி இதற்கு முன் அவனைப் பார்த்ததில்லை. அவரை அமரச்சொன்னான். தானே பரிமாறினான். சுவாமி சாப்பிட்டார். அவரிடம் வேறு ஏதும் பேசவில்லை. அப்படியே சென்றுவிட்டான். சுவாமிஜிக்கும் அவனிடம் ஏதும் கேள்வி கேட்கத் தோன்றவில்லை. அவனைப் பற்றி தெரியவும் இல்லை. அந்த மாயக்கண்ணன் தான், தனக்கு உணவு கொண்டு வந்திருக்க வேண்டும்? மற்றபடி அங்கு யாரால் வந்திருக்க முடியும்? என்றே அவர் நினைத்தார்.
பக்தர்களின் வேண்டுகோளை ஏற்கும் அந்த பரந்தாமனுக்கு நன்றி சொன்னார். இன்னொரு நாள் இன்னொரு சோதனை காத்திருந்தது. விவேகானந்தரிடம் அப்போது இருந்த உடை ஒரு கவுபீனம் (கோவணம்) மட்டும் தான். இதைத்தான் குளிக்கும் போது, கசக்கி கட்டிக் கொள்வார். அவர் பிருந்தாவனத்தில் ராதா வசித்த ராதாகுண்டம் என்ற பகுதியில் தங்கினார். தனது கவுபீனத்தை நனைத்து காயப் போட்டிருந்தார். அப்போது, ஒரு குரங்கு அதைத் தூக்கிக் கொண்டு மரத்தின் மீது ஏறிவிட்டது. சுவாமிஜி குரங்கிடம் வைத்த வித்தைகள் ஏதும் பலிக்கவில்லை. இப்போது அவர் நிர்வாணமாக நின்று கொண்டிருந்தார். அவருக்கு கோபம். குரங்கின் மீதல்ல. ராதாவின் மீது. அம்மா ராதா! நான் உன் இடத்தில் தங்கியிருக்கிறேன். நீயோ, என்னை அவமானப்படுத்தும் வகையில் இப்படி ஒரு சோதனையைத் தந்துவிட்டாயே! என்னிடம் ஒரு கோவணம் இருப்பது கூடவா உனக்கு பிடிக்கவில்லை. இனி நான் எப்படி ஊருக்குள் செல்வேன்? ஒன்று நீ...எனக்கு அதை திருப்பிக் கிடைக்கச் செய். இல்லை... மானமிழந்து ஊருக்குள் செல்வதை விட, உயிரை விடுவது மேல் என நினைத்து, இந்த வனத்திலேயே பட்டினி கிடந்து மடிவேன், என்று சபதம் செய்தார். காட்டுக்குள் வேகமாக நடந்தார்.