பதிவு செய்த நாள்
29
ஜூன்
2012
03:06
ஆன்மிகத்தில் எத்தனை தான் ஆழமாக கால் ஊன்றியிருந்தாலும், மகான்களைக் கூட சில சமயங்களில் மென்மையான இயல்புகள் துன்புறுத்தி விடுகின்றன. இல்லறத்தில் உள்ளவர்கள், தங்கள் குழந்தைகளை நினைத்து வருந்துவது போல, மகான்கள் தங்கள் சீடர்களை நினைத்து வருந்துகிறார்கள். தங்களுக்கு பிறகு சீடர்கள் தான் தங்கள் போதனைகளை எடுத்துச் சொல்லவேண்டும் என்று கவலைப்படுகிறார்கள். விவேகானந்தரின் நிலையும் அப்படியே இருந்தது. ஆனாலும், இதில் ஒரு படிப்பினை நமக்கு தெரிய வருகிறது. மனிதர்கள் தங்கள் நலத்துக்காக சிந்திக்கக்கூடாது. பிறரது நன்மையை சிந்திக்க வேண்டும். இதை உலகுக்கு கற்றுக்கொடுக்கவே, மகான்கள் பிறரது துன்பத்தை எண்ணி வருந்துவது போல் நடிக்கிறார்கள் என்றும் கொள்ளலாம். இந்த சமயத்தில் ராமகிருஷ்ணரின் திருக்காட்சி விவேகானந்தருக்கு கிடைத்தது. என்னை குருவாக ஏற்றபிறகு, இப்போது பவஹாரியை குருவாக ஏற்க அலைகிறாயே என கேட்பது போல் இருந்தது அவரது தரிசனம்.
விவேகானந்தர் உண்மையிலேயே வெட்கிப்போனார். அந்த சமயத்தில் அவரது நிலைமை எப்படி இருந்தது தெரியுமா? அவரே சொல்கிறார். தன் மனைவி இன்னொருவனை மனதில் நினைத் திருக்கிறாள் என்பதை உணர்ந்த கணவன் அவளை ஏறிட்டு பார்த்தானாம். அவனது பார்வையின் பொருளை உணர்ந்து கொண்ட அந்தபெண், அதை சகிக்க முடியாமல் தலை குனிந்தாளாம்,. ஒருவரை குருவாக ஏற்றபிறகு, அவர் இப்போது உயிருடன் இல்லை என்ற கராணத்துக்காக, இன்னொருவரை குருவாக ஏற்கக் கூடாது என்பது இதன் தாத்பர்யம். இருப்பினும், பவஹாரியை குறைத்து மதிப்பிடாத சுவாமிஜி, அவரை ராஜயோகப்பயிற்சி கற்றுத்தருவதற்குரிய ஒரு ஆசானாக மட்டும் ஏற்றுக் கொள்ள முடிவெடுத்தார். இந்த பயிற்சி கடுமையானது. வங்காளத்தில் இந்தப் பயிற்சி பற்றி யாருக்குமே தெரியாது. ராஜயோகப்பயிற்சி இறைவனை அடைவதற்குரிய மனப்பக்குவத்தை தரக்கூடியது. எனவே, அந்தப் பயிற்சியை மட்டும் பவஹாரியிடம் பெற்றார் விவேகானந்தர். பின்னர் அவர் கல்கத்தா சென்று மடத்துப்பணிகளை கவனித்தார்.
குருபாயிக்களுக்கு உதவி செய்துவந்த சுரேஷ்பாபு என்பவர் இறந்துவிட்ட நிலையில், மடத்துப்பணிகள் பாதிக்கப்பட்டன. துறவிகளுக்கு சாப்பாட்டுக்கே வழியில்லை. இதை ஓரளவுக்கு சீரமைத்தார் சுவாமிஜி. ராமகிருஷ்ணருக்கு மடம் ஒன்றை வங்காளத்தில் அமைக்கவும் முயற்சி மேற்கொண்டார். பின்னர், கல்கத்தாவில் இருந்து இமயமலைக்கு ஆன்மிகசாதனை பெற புறப்பட்டார். கங்கைக்கரையிலுள்ள குஸுரி என்ற கிராமத்தில் வசித்து வந்த ராமகிருஷ்ணரின் துணைவியார் சாரதாதேவியாரிடம் ஆசிபெற்று புறப்பட்டார். சுவாமிஜியுடன் அகண்டானந்தர் என்ற சீடரும் சென்றார். அவர்கள் பகல்பூரை அடைந்தனர். அங்கே பிரம்மசமாஜ உறுப்பினரான மன்மதநாதர் என்பவர் வீட்டில் தங்கினர். மன்மதநாதருக்கு சுவாமிஜியைப் பற்றி அதிகமாகத் தெரியாது. ஏதோ, இரண்டு சன்னியாசிகள் வந்துள்ளன், இடம் தருவோம் என்ற அளவில் அவர்கள் தங்குவதற்கு உதவி செய்தார். அன்றிரவில், அவர் சுவாமிஜியுடன் புத்தமத கருத்துக்களைப் பற்றி பேசினார். ஆங்கிலத்தில் வெளியாகியிருந்த புத்தமத தத்துவம் அடங்கிய புத்தகம் பற்றி இருவரும் விவாதித்தனர். அப்போது, அதிலுள்ள கருத்துக்களை சுவாமிஜி ஆங்கிலத்தில் விளக்கியதைப் பார்த்து அசந்து போனார் மன்மதநாதர்.
போதாக்குறைக்கு சுவாமிஜி சிறந்த ஒரு பாடகர் என்பதையும் தெரிந்து கொண்டார். தன் இல்லத்திற்கு, பகல்பூரில் வசித்த சிறந்த இசை வித்வான்களையெல்லாம் வரவழைத்தார். அவர்களிடம் இரவு 10 மணிக்குள் கச்சேரி முடிந்து விடும் என சொல்லி வைத்திருந்தார். விவேகானந்தர் சங்கீதத்தை கரைத்துக் குடித்தவர் போல் பாடல்களைத் தெளிவாகப் பாடினார். வித்வான்கள் எழவேயில்லை. நள்ளிரவையும் தாண்டி அதிகாலைப்பொழுது நெருங்கிய பின் தான் சுவாமிஜி பாட்டை முடித்தார். அதுவரை இசையில் லயித்துப் போன கலைஞர்கள் முதல்நாள் இரவு சாப்பாட்டைக் கூட மறந்துவிட்டனர் என்றால், அவரது இசையின் தன்மையை புகழ்ந்து தள்ள வார்த்தைகளைத் தேடித்தான் பிடிக்க வேண்டும்! இதையடுத்து மன்மதநாதர் சுவாமிஜியின் தீவிர சீடராகி விட்டார். சுவாமிஜி அவருக்கு தெரியாமல் பகல்பூரை விட்டு கிளம்ப வேண்டியதாயிற்று. ஏனெனில், பகல்பூரிலேயே தங்கிவிடும்படி அவர் சுவாமிஜியை வற்புறுத்தினார். இன்னும் ஒரு யோசனையையும் சொன்னார். நாம் இருவரும் ஆளுக்கு 300 ரூபாய் பிருந்தாவனம் கோவிந்தன் கோயிலில் செலுத்திவிட்டால் போதும். ஆயுள்முழுவதும் அங்கே துறவிளுக்கு சாப்பாடு தந்து விடுவார்கள். அங்கேயே நம் ஆன்மிக சாதனைகளைத் தொடர்வோம், என்றார். இந்தியா முழுவதும் தன் கருத்துக்கள் சென்றடைய வேண்டும் என்பதில் தீராத வேட்கை கொண்டிருந்த விவேகானந்தர், அகண்டானந்தருடன் பத்ரிகாமசிரத்திற்கு நடந்தே சென்றுவிட்டார்.
இவர்களின் நோக்கம், யார் பணம் தந்தாலும் வாங்கக் கூடாது என்பது. அதன்படி, பிச்சை எடுத்து ஆங்காங்கு கிடைத்ததை சாப்பிட்டு பத்ரியை அடைந்தனர். இச்சமயத்தில், சுவாமிஜியின் சகோதரி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட தகவலறிந்து வருத்தப்பட்டார். வரதட்சணை கொடுமை அதற்கு காரணமாக அமைந்ததாக கேள்வி. சுவாமிஜி தன் சகோதரியின் முடிவை எண்ணி கவலைப்பட்ட அதே சமயம், எண்ணற்ற இந்திய சகோதரிகள் இதே போன்று வன்முறைக்கு ஆளாவதையும் எண்ணி வருந்தினார். ஒரு வழியாக இவர்கள் ஸ்ரீநகரை அடைந்தனர். அங்கே சிலகாலம் தியானம் புரிந்தனர். பின்னர் டேராடூன், ராஜ்பூர் என்ற இடங்களில் தங்கினர். இச்சமயத்தில் அகண்டானந்தருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்படவே, அவரை அலகாபாத்திலுள்ள ஆனந்த நாராயணர் என்பவர் வீட்டில் தங்க வைத்து விட்டு, சுவாமி ரிஷிகேசம் கிளம்பினார். அங்கிருந்த கடும்பனி சுவாமிஜியை கடுமையாக வாட்டியது. காய்ச்சல் கடுமையானது. எதையும் சட்டை செய்யாத சுவாமிஜி உடலையும் பொருட்படுத்தாமல், மனதைக் கட்டுப்படுத்தும் தீவிர ஆன்மிக சாதனைகளில் ஆழ்ந்தார். இப்போது சுவாமிஜியுடன் வேறு சில சீடர்கள் சென்றிருந்தனர். அவர்கள் சுவாமியின் உடல்நிலை பற்றி கவலைப்பட்டனர். அப்போது ரிஷிகேச மலைவாசி ஒருவன் அங்கு வந்தான்.