பதிவு செய்த நாள்
29
ஆக
2022
11:08
நன்றி மறவேல்
மனிதனுக்கு சில அடிப்படைக் குணங்கள் அவசியம். அன்பு, இரக்கம், உதவும் மனப்பாங்கு, பிறரைப் பற்றிப் பேசாதிருத்தல் போன்று நன்றி உணர்வும் அவசியம். நன்றி உணர்வோடு இருப்பவர்களை கடவுள் மேன்மேலும் உயர்த்திக் கொண்டே போகிறார் என்பது கண்கூடு. நன்றி கெட்ட உலகம் எனப் பொதுப்படையாகக் கூறினாலும் நன்றியுடன் இருப்பவர்களை இவ்வுலகம் பாராட்டி அங்கீகாரம் செய்கிறது.
பேருந்து, ரயில் பயணங்களில் உட்கார இடம் கொடுத்தவுடன் புன்னகையுடன் நன்றி சொல்லும் போது, இடம் விட்டவரின் மனம் மகிழ்ந்து ஒரு புன்னகையை உதிர்க்கிறது. பொது இடங்களில் உணவு உண்ட பின் நாம் கை கழுவிய பின் நீரை முகந்து அடுத்தவரிடம் நீட்டும் போது அவர் மகிழ்வதுடன் அல்லாமல் அவரும் பின்னால் நிற்பவருக்கு இதே உதவியைச் செய்கிறார். ஒரு விளக்கினால் நுாறு விளக்குகள் ஏற்றப்படுவது போல நம்முடைய ஒரு நல்ல செயலைத் தொடராகப் பலரும் பின்பற்றும் போது நாம் விதையாகிறோம் என்பதில் மகிழ்வு.
நன்றி என்றவுடன் எல்லோரும் நமக்கு ஏதாவது உதவியவர்களுக்கு ஒரு வகையில் காலமெல்லாம் அடிமையாகக் கிடக்க வேண்டுமா என கோபப்படுகிறார்கள். அதனால் தான் அதை கடவுளிடம் இருந்து தொடங்க வேண்டும் எனப் பெரியோர்கள் சொன்னார்கள். இந்த மண், காற்று, நெருப்பு, நீர், ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களை நமக்களித்து மகிழ்ச்சியுடன் வாழ உதவுவது கடவுள் தானே! எனவே தான் தினமும் காலை, மதியம், மாலை என மூன்று நேரமும் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றார்கள்.
இதைத் தமிழில் கடன் என்பார்கள். காலைக்கடன், மதியக்கடன், மாலைக்கடன் என்றார்கள். கடன் என்றால் கடமை என பொருள். கடமையே கடவுளுக்கு நன்றி சொல்வது தான். ஆனால் இப்போது காலைக்கடன் என்றால் பல் துலக்குவது, குளிப்பது என்றாகிவிட்டது. உணவை முழுமையாகப் பரிமாறியதும் கடவுளுக்கு நன்றி சொன்ன பின்னரே சாப்பிடுவது நம் முன்னோர் வகுத்தவழி. இப்போது போலத் தட்டில் போடப் போட உள்ளே தள்ளுவது கிடையாது.
கோயில்களில் கடவுளுக்குப் படைப்பதை நிவேதனம் செய்வது என்றே கூறுகிறோம். நிவேதனம் செய்வது என்றால் சாப்பிட வைப்பது என்பது பொருளல்ல. ‘கடவுளுக்கு அறிவிக்கிறேன்’ என்பது பொருள். கடவுளே நீ தந்த உணவை நன்றியுடன் உனக்குக் காட்டி விட்டு நாங்கள் உண்கிறோம் என்பது பொருள்.
ஒவ்வொரு மூச்சும் கடவுள் அளித்த நன்கொடை. எனவே பேச்சிருக்கும் போதே, மூச்சிருக்கும் போதே நன்றி சொல்லப் பழக வேண்டும். கடவுளுக்கே நன்றி சொல்லத் தெரியாதவர்கள் எப்படி சக மனிதனுக்கு நன்றி சொல்ல இயலும். கந்தபுராணம் தொடங்கும் போதே சூரபதுமன் அழிந்த காரணம் நன்றி கொன்றதால் தானே தவிர வேறு இல்லை என்கிறார் கச்சியப்ப சிவாச்சாரியார். எல்லாம் அளித்த கடவுளின் புதல்வன் நேரில் வரும் போது தங்கள் தந்தையார் தந்தது என்ற நன்றியோடு அவன் வணங்கி இருக்க வேண்டாமா? மறுத்தான். எதிர்த்தான். எனவே தான் நன்றி கொன்ற பாவமே அவனுக்கு எமனாயிற்று. ‘கொன்ற நன்றியே அல்லால் கூற்றும் வேண்டுமோ...’ என்பது கந்தபுராணம்.
கடவுளே... ஒவ்வொரு கணமும் நீ செய்த உதவிக்கு நான் எப்படி நன்றி கூற இயலும். நீயே என் உடலில் குடியிருக்கிறாய். இதற்கு என்ன கைம்மாறு செய்ய இயலும் என மாணிக்கவாசகர் உருகுவார். நமது அடுத்த தலைமுறையினரிடமும் இவர்கள் எல்லாம் நாம் மிக கஷ்டப்பட்ட காலத்தில் உதவியவர்கள் என்று சூழலைச் சொல்லி வளர்க்க வேண்டும்.
உணவு இல்லாத போது உணவு தந்தவர்கள், வேலை இன்றித் தவித்த போது வேலை தந்தவர்கள் எனக் கூற வேண்டும். வாழ்வின் விளிம்பில் இருந்த போது கடவுளாகத் தெரிந்தவர் அப்போது மட்டுமல்ல வாழ்நாள் முழுவதும் கடவுளாகத் தெரிய வேண்டும். அதுவே நன்றியாகும். தன்னை வளர்த்துவிட்டவர்கள் தாழ்ந்த நிலையில் இருக்கும் போது வெளியே தெரியாமல் அவர்களுக்கு உதவி செய்து நன்றி காட்ட வேண்டும். பெற்ற உதவியை ஒருவருக்கு திரும்பச் செய்யும் அவசியமோ, சூழலோ இல்லை எனில் யாரோ ஒருவருக்குச் சத்தமின்றி செய்துவிட்டு அமைதியாக நகர்ந்து விட வேண்டும். கடவுளின் ஏட்டில் அது குறித்துக் கொள்ளப்படும்.
எனவே தான் நன்றி மறப்பது நன்றன்று என்றார் தெய்வப்புலவர். நன்றி மறந்தால் உய்வே இல்லை என்று ஒருபடி மேலேயும் சொன்னார். தென்னை மரம் தனக்குப் பாய்ச்சிய நீரைச் சேமித்து பிறகு நமக்கே சுவைமிக்க இளநீராகத் திருப்பித் தரும் போது மனிதர்களாகிய நாம் அந்தப் பாடத்தை எடுத்துக் கொள்ளக் கூடாதா என மூதுரை கேட்கிறது.
காட்டில் ஒரு வேடன் மானைப் பிடிக்க விஷ அம்பைக் குறி வைத்து எறிகிறான். ஆனால் கண் இமைக்கும் நேரத்தில் மான் தப்பி விடுகிறது. விஷ அம்பு பசுமையான ஒரு மரத்தின் மீது பாய்கிறது. விஷத்தன்மையால் அம்மரம் கொஞ்சம் கொஞ்சமாக பட்டுப் போகத் தொடங்குகிறது. அம்மரப் பொந்தில் ஒரு மைனா வசித்து வருகிறது. மரம் பட்டுப் போகத் தொடங்கியவுடன் அது இருப்பிடத்தை மாற்றிக் கொள்ள எண்ணவில்லை. காரணம் நிழல் தந்து, இருப்பிடம் தந்து, உண்ணக் கனி தந்து, மழை, வெயில் எனக் காப்பாற்றிய மரத்தை உயிராய் நேசித்தது. மரமும் சொன்னது. தயவு செய்து நீ உன் இருப்பிடத்தை மாற்றிக் கொள் என்றது. ஆனால் மைனா மறுத்து அங்கேயே இருந்து பிரார்த்தனை செய்தது. தேவலோக அதிபதி இந்திரன் வந்தான். மைனாவே என்ன வேண்டும். தேவலோகம் வருகிறாயா? அங்கே நினைத்தவுடன் யாவையும் தந்திடும் கற்பக மரத்தில் உனக்கு இடம் தருகிறேன் என்றார். ஆனால் மைனாவோ மறுத்து தன்னை வாழ்வித்த மரத்தைக் காப்பாற்றுங்கள் என வேண்டியது. இந்திரன் அதன் நன்றியுணர்வைப் பாராட்டி மரத்தின் மீது அமுதம் பொழிய மரமும் மீண்டது. மைனாவும் மகிழ்ந்தது. ஒரு மைனாவின் நன்றி நமக்கு நாளும் பாடமாகட்டும்.
ராமாயணத்தில் ஸ்ரீராம பட்டாபிஷேகம் நிறைவு பெற்றதும் அனைவருக்கும் நன்றி கூறி பரிசுகள் வழங்கினார். அங்கு ஒரு ஓரமாய்க் கண்ணீருடன் நிற்கும் அனுமனை கடைக்கண்ணால் பார்த்து அனுமனே! நீ செய்த செயலுக்கு என்னால் எவ்விதத்திலும் நன்றி பாராட்ட இயலாது. எனவே என்னைத் தழுவிக் கொள். சீதையைத் தவிர வேறு யாரும் தீண்டாத என் மேனியைத் தழுவுக என்றார் ராமர். ஆனால் அனுமன் வாய் புதைத்து வணங்கி நாணுவார். உடனே ஒரே இலையில் உணவு பரிமாறி நடுவில் ஒரு கோடிட்டு ஒருபுறம் ராமனும், மறுபுறம் அனுமனையும் அமரச் சொல்லி உண்டார்கள் என்பது மரபுவழிச் செய்தி. கடவுளே ஆனாலும் நன்றி செய்வதில் முந்திக் கொண்டார் என்ற ஸ்ரீராமரின் பண்புதானே என்றும் உலகில் பேசப் பெறுகிறது.
நண்பர்கள் இருவர் பாலைவனத்தில் பயணமாயினர். பேசும் போது ஏதோ தகராறு வர நண்பன் ஓங்கி அடித்துவிட்டான். அடி வாங்கியவன் கன்னத்தைக் தடவிக் கொண்டு மணற்பரப்பில் நண்பன் அடித்துவிட்டான் என எழுதினான். கொஞ்சநேரம் சென்றவுடன் மணற்பரப்பில் தண்ணீர் ஊற்று இருந்தது. இருவரும் தண்ணீர் குடிக்கும் போது அடிவாங்கிய நண்பன் கொஞ்சம் கொஞ்சமாக மணலில் புதைய ஆரம்பித்தான். உடனே நண்பன் பதறிப் போய் கைகளை கெட்டியாகப் பிடித்து கஷ்டப்பட்டு வெளியே இழுத்துக் காப்பாற்றினான். மூச்சை மெதுவாக விட்டு நன்றிப் பெருக்கால் கண்ணீருடன் கைகூப்பினான். நண்பனும் சே... இதற்கெல்லாம் ஏன் நன்றி சொல்கிறாய்? நமக்குள் எதற்கு நன்றி என தோளைத் தட்டி அழைத்துக் கொண்டு போனான். கொஞ்ச நேரத்தில் ஒரு பாறை தெரிந்தது. அதன் மீது கஷ்டப்பட்டு மற்றொரு கல்லைக் கொண்டு நண்பன் காப்பாற்றினான் என்று செதுக்கினான். காப்பாற்றிய நண்பன் ஆச்சரியமுடன் பார்த்தான். நண்பன் சொன்னான் அடித்ததை மணலில் எழுதினேன். காலமெனும் காற்று அடித்ததில் அது கரைந்து போய்விடும். கலந்து போய்விடும். ஆனால் கல்லிலே செதுக்கிய செய்தி நீ செய்த பேருதவி உயிர் காத்த உதவி, எனவே காலத்திற்கு அழியாமல் கல்லில் செதுக்கி வைத்தேன் என்றான். நண்பர்கள் உயிரிலும், உடலிலும் ஒன்றுபட்டவர்கள் என்று சொல்லவும் வேண்டுமா என்ன?
நன்றி என்னும் பண்பு சின்னச் சின்ன விஷயங்களிலேயே தொடங்க வேண்டும். குளிர், மழையை பொருட்படுத்தாமல் பேப்பர் போடும் சிறுவனின் முகம் நமக்குத் தெரியுமா? தாமதமானால் கோபப்படுகிறோமே! நல்ல நாளில் பரிசு தர வேண்டாம். நன்றி என்ற ஒற்றைச் சொல்லைச் சொல்லி அவன் முகத்தில் புன்னகை பூக்க வைக்கலாமே. அதுபோல நம் தெருவைச் சுத்தப்படுத்தும் துாய்மைப் பணியாளர்கள், பூ விற்கும் பாட்டியோ, சிறுமியோ, நீண்ட துாரப் பயணத்தில் நம்மை பத்திரமாகக் கொண்டு வந்து சேர்த்த ஓட்டுனர்கள் என நம் வாழ்வை இனிமையாய் நகர்த்தும் இவர்களுக்கு வாய்மொழியால் நன்றியைத் தெரிவிக்க தொடங்குவோம். பிறகு பார்க்கலாம். நம் வாழ்வில் எப்போதும் மகிழ்ச்சி பரவுவதை,
ஒரு அலுவலகத்தில் அதிகாரம் மிக்க பதவி வகித்த பண்பாளர் ஒருவர் இருந்தார். அங்கு முழுமையாக ஏசி ரூம்கள். தானாக, மூடித் திறந்து கொள்ளும் தன்மை கொண்டவை. அங்கே ஒரு காவலாளி. அவரை யாரும் மனிதனாகக் கூட மதிப்பதில்லை. ஒவ்வொரு காரும் உள்ளே நுழையும் முன்பும், வெளியேறும் போதும் விறைப்பாய் நின்று வணக்கம் சொல்லுவான். ஆனால் யாரும் திரும்ப வணக்கம் சொல்வதில்லை. பண்பாளர் மட்டும் தினசரி போகும் போதும் வரும் போதும் வணக்கம் திரும்பச் சொல்லுவார். அவனுக்குத் தாங்க இயலாத மகிழ்வு ஏற்படும். ஒருநாள் மாலையில் அதிகாரி அறைகளைப் பார்வையிட்டு திரும்பும் போது ஓர் அறைக்கதவு தானாக மூடிக் கொண்டது. ஏதும் செய்ய இயலவில்லை. சிறிது நேரத்தில் பனியில் உறைந்து போய், போய்ச் சேர வேண்டியது தான். கடவுளை நினைத்தபடி கடைசி நேரத்தில் நின்றார். திடீரெனக் கதவு திறந்தது. ஆச்சரியத்தில் உறைந்தார் வாட்ச்மேன் கடவுளாய்த் திறந்தான். மாலை திரும்பும் போது தங்களின் வணக்கம் பெறவில்லையே எனத் தேடி வந்து திறந்து பார்த்தேன் என்றான்.
எப்படியோ அன்பான வணக்கம் உயிரைக் காப்பாற்றியது. நன்றி என்பது உயர்ந்த பண்பு. நாம் நன்றி உடையவர்களாக இருப்போம். உலகம் இன்பமயமாக இருக்கும்.