பதிவு செய்த நாள்
20
அக்
2022
10:10
படிக்க வேண்டும் என்று சொன்னவுடனே நாம் பள்ளிப்படிப்பு, கல்லுாரிப் படிப்பு என்ற சிந்தனைக்கு வந்து விடுகிறோம். அதுவும் இணையதளம் வந்த பிறகு புத்தகம் படிப்பது என்பது குதிரைக் கொம்பாகவே மாறிவிட்டது. எனினும் புத்தகங்கள் எழுதுவது, வெளியிடுவது, வாங்குவது என்பது தொடர்ந்து கடவுள் அருளால் நடந்து கொண்டே தான் இருக்கிறது. வெறும் பள்ளிக்கூடத்து படிப்பை மட்டுமே படிப்பு என்று சிந்தனை அளவில் நிறுத்திக் கொண்ட சமுதாயம், கல்வியை கல்லுாரிகளில் முடித்த பிறகு இனிமேல் புத்தகங்கள் எதற்கு, வேலைக்குப் போயாச்சே... என்ற சிந்தனையுள்ள சமுதாயம் என நாம் பார்த்துக் கொண்டே இருக்கிறோம்.
எனினும் யாராவது உங்கள் ஹாபி (பொழுது போக்கு) என்ன என்று கேட்டால் புக் ரீடிங்... (புத்தகம் வாசித்தல்) என்கிறோம். ஆனால் என்ன புத்தகம் கடைசியாக வாசித்தீர்கள் என்றால் வாரபத்திரிகை என சிரித்தபடி செல்கிறார்கள்.
பெற்றோர் வாசிப்பாளர்களாக இருந்தாலோ (அ) ஆசிரியர்கள் வாசிப்பாளர்களாக இருந்தாலோ அந்தப் பழக்கம் தானாக வந்திட வாய்ப்பு அதிகம். இரண்டு பேரும் வேலைக்குச் சென்று வந்த பிறகு வாட்ஸ் ஆப், பேஸ் புக், டிவிட்டர் என மூழ்கிப் போகும் யுகத்தில் புத்தக படிப்பு ஒரு சுகம், ஒரு வரம், ஒரு நம்பிக்கை, ஒரு பலம் என்று உரக்கச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
புத்தகம் படிப்பது என்பது ஒரு வரம். சென்ற தலைமுறைப் பெரியவர்கள் அதை ஒரு தவமாகவே செய்தார்கள். புத்தகங்களுக்கு முறையாக அட்டையிட்டு, வாங்கிய தேதி, ஊர் அல்லது அதைக் கொடுத்த நண்பர் / பெரியவர் பெயர் ஆகியவற்றைக் குறித்து வைப்பார்கள். இன்றைக்கு வன்முறை அன்றாடம் பார்த்துப் பழகிய ஒன்றாகி விட்டது. ஆனால் அப்போது புத்தகத்தின் ஏதேனும் ஒரு பக்கத்தை மூலையில் மடித்தாலே வன்முறை என்று சொன்ன காலம் உண்டு. நீ படிச்சவனா? புத்தகத்தின் பக்க மூலையை மடிக்கலாமா? எனக் கேட்டு அதனை மீண்டும் சரி செய்தால் தான் அவர்களுக்கு உயிரே வரும். அப்படியும் மீண்டும் அந்தப் பக்கத்தை எடுத்து தடவிக் கொடுப்பார்கள் என்றால் எத்தனை துாரம் அதை நேசித்தார்கள் என்பது புரியும். புத்தகங்களுக்கும் உயிர் உண்டு என நம்புபவர்கள் அவர்கள். ஆம் அது உண்மை.
ஒருமுறை அரவிந்தர் அன்னை ஒரு அறைக்குள் சென்றார்கள். உடன் வந்தவர்களிடம் இங்கு யாரோ சிரமப்படுவது போல இருக்கிறதே என்றார்கள். உடன் வந்தவர்களுக்கோ ஒன்றும் புரியவில்லை. இல்லையே அம்மா! என்றார்கள். ஒரு குறிப்பிட்ட பீரோவைத் திறக்கச் சொன்னார்கள். அதில் புத்தகங்களை இறுக்கமாக அடைத்து வைத்திருந்தனர். அன்னையார் அவற்றை எடுத்து, மூச்சு விடும்படி அழகாக வையுங்கள். அவற்றின் குரல் தான் கேட்டது என்றார். உடன் வந்தவர்கள் ஆச்சர்யப்பட்டனர்.
மனிதர்கள், விலங்குகள், பறவைகள், செடி, கொடிகள் மட்டுமல்ல, ஒவ்வொரு பொருளுக்கும் உயிர் உண்டு என்பதை அன்னையார் உணர்த்தினார்கள். எனவே நுால் என்பது ஜடப்பொருள் அல்ல. அது உயிர்ப் பொருள். எனவே தான் நாம் ஒவ்வொரு நுாலையும் கலைமகள் வடிவாகக் காண்கிறோம்.
காலை எழுந்தவுடன் படிப்பு என்றான் நம் முண்டாசுக் கவிஞன். சென்னைக்குச் சென்று திரும்பும் மகாகவி பாரதியைச் செல்லம்மாள் வழிமேல் விழிவைத்து வரவேற்கக் காத்திருந்தாள். பெரிய வண்டியோடு வந்து இறங்கினார் பாரதி. செல்லம்மாளுக்கு ஒரே சந்தோஷம். பொறுப்பு வந்து பொருட்களோடு கணவர் வருகிறாரே என்று மகிழ்வுடன் ஓடோடி வந்து வரவேற்றாள். மூட்டைகளை இறக்கிப் பிரித்தால் அத்தனையும் புத்தகங்கள்.
பாரதி பெருமிதத்தோடு கூவினார், ஞான சரஸ்வதியைப் பார் என்று. ஒவ்வொரு புத்தகமாகப் பிரித்து அதன் பெருமைகளைச் சொல்ல ஆரம்பித்தார் பாரதி. செல்லம்மாவின் நிலையைச் சொல்ல வேண்டுமா என்ன? ஆயினும் அவளும் ஒரு சித்தனின் மனைவி அல்லவா? நடமாடும் புத்தகமான பாரதியைக் கண்களால் அள்ளி அணைத்தாள்.
மகாகவிக்கு பதிமூன்று மொழிகள் தெரியும். அதனால் தான் உணர்ந்து சொன்னார். “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று, ஆனால் கடந்த அரை நுாற்றாண்டாக தமிழகத்தில் மொழி வெறுப்புக் கொள்கை விதைக்கப்பட்டு, இன்று தமிழையே தங்லீஸாக மாற்றிய அவலம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அண்டை மாநிலங்களுக்குப் பயணப்படும் போது ஊமைகளாகத் திரியும் அவலம் தொடர்கிறது.
குறிப்பிட்ட மொழி அல்ல.... ஏதேனும் ஒரு இந்திய மொழியைப் பயில்தல் என்பதும் பலம் தானே. மேதை ராகுல் சாகிருத்யான் அவர்களுக்கு முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகள் தெரியும் என்று கூறுவார்கள்.
கல்விக்காக நுால்களைக் கடந்து சிறு வயது முதலே அறிவு வளர்க்கும் நுால்களைப் படிக்கும் பழக்கத்தை விதைக்க வேண்டும். அது ஒரு சுகம் என்பதை உணர்த்திவிட்டால் போதும். எழுத்தாளன் நம் கையைப் பிடித்துக் கொண்டு அறிவு சார்ந்த உலகத்திற்குப் பயணப்பட்டு விடுவான். படிக்கப் படிக்க அறிவு விரிவடையும். மணற்கேணி தோண்டத் தோண்ட ஊறுவது போல, படிக்கப் படிக்க அறிவு பெருகும் என்கிறார் திருவள்ளுவர். எத்தனை வயது வரை படிக்க வேண்டும் எனக் கேட்டால் இறுதி மூச்சு உள்ளவரை (சாந்துணையும்) படித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பார் திருவள்ளுவர். அப்படிக் கற்பவனுக்கு எல்லா ஊரும் அவன் ஊரே! எல்லா நாடும் அவன் நாடே என்கிறார். இன்றைக்கும் நம் பிள்ளைகள் கல்வியினால் தானே உலகை ஆண்டு கொண்டிருக்கிறார்கள்.
சாதி, மதம், இனம், மொழி இவற்றை எல்லாம் கல்வி என்னும் பெருந்தீபம் புறந்தள்ளி மன்னருக்கு இணையாக ஒருவனை அமர வைக்கும் எனப் பாடும் நமது தமிழ். அரியாசனத்து அரசரோடு என்னைச் சரியாசனம் வைத்த தாய் என்பது பாடல். அத்தகைய கல்வியை வெறும் வயிற்றுப் பிழைப்பிற்காக மட்டும் கற்காமல் வாழ்வையே ஆனந்தமாக மாற்றிடக் கற்க வேண்டும்.
குழந்தைப் பருவத்தில் படக் கதைகளில் தொடங்கி, யாருக்கு எந்தத் துறையில் விருப்பம் இருக்கிறதோ அந்தத் துறை சார்ந்த நுால்களைப் படிக்கச் செய்யலாம். அறிவியல், கலை, ஆன்மிகம், சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள், வரலாறு எனப் பல்வேறு துறைக்குள் யாருக்கு எதில் விருப்பமோ அதில் பயணப்படலாம்.
தற்போது கணினி மூலம் நுால்கள் உலகை வலம் வருகின்றன. டிஜிட்டல் லைப்ரரி என உலகாள்கிறது. அதில் நிறைய எழுத்தாளர்கள், வாசகர்கள் என அது தனி உலகாகத் திகழ்கிறது. ஆயினும் புத்தகத்தைக் கையில் எடுத்து, அதை வாசிப்பதில் உள்ள சுகம் வருமா தெரியாது. பழமைவாதிகள் தான் இப்படிச் சொல்வார்கள் என்பார்கள். ஆயினும் கணினியில் கற்பதில் உள்ள சிக்கல் நேரம் ஆக, ஆக வெளிச்சத்தை கூர்ந்து கவனிப்பதால் கண்கள் சோர்வடைகின்றன. ஆனால் புத்தகத்தில் அந்த சிக்கல் கிடையாது என்பதே உண்மை.
சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே! என்பது நமது இலக்கியம். இன்று தலைகுனிந்து படித்தால் நாளை தலைநிமிர்ந்து வாழலாம் என்பது புதுமொழி. எனவே கல்விக்கான நுால்களைக் கடந்து பிற நுால்களையும் அறிமுகம் செய்தல். ஒவ்வொரு பெற்றோர், ஆசிரியர்களின் கடமை ஆகும். அதோடு மட்டுமன்றி வள்ளுவம் கூறுவது போன்று கசடறக் கற்பதோடு மட்டுமன்றி, கற்ற வழியே நடக்கவும் வேண்டும். அதற்குத் தானே கற்கிறோம்.
இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் தலைவர்கள், திரைப்பட நடிகர்கள் பெயரில் தெருக்கள் தோறும் படிப்பகங்கள் இருந்தன. அவற்றில் தினசரிகள் மற்றும் நுால்களை வாங்கி வைத்து படிக்க வசதி செய்திருப்பார்கள். பாய்கள் விரிக்கப்பட்டு, தண்ணீர் கூட பானைகளில் வைக்கப்பட்டிருக்கும். அதில் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டோரும் உண்டு. சிறிய கிராமங்கள் தொடங்கி, ஊர்கள் தோறும் நுாலகங்கள் அரசால் நிறுவப்பெற்று பராமரிக்கப்படுகின்றன. மாவட்டத் தலைநகர்களில் மாவட்ட நுாலகம் பெரிய அளவில் உள்ளது. ஆனாலும் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நம்மை கவலைக்குள்ளாக்குகிறது.
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தற்போது நுாலகத்தில் வாசித்தலுக்கு தனிப் பாடவேளை ஏற்படுத்தப்பட்டிருப்பது மகிழ்விற்குரியது. வரவேற்கத்தக்கது. ஆனால் மதிப்பெண் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு மாணவர்களை மனநோயாளிகளாக ஆக்கும் பள்ளிகளில் நுாலகப் பயன்பாடு எந்த அளவில் உள்ளது என்பது அலுவலர்களுக்கே தெரியும்.
நுால்களைப் படித்தல் பற்றி பல்வேறு பெரியவர்களின் கருத்து உற்சாகம் வர வேண்டிப் பார்ப்போமா!
ஒரு கோடி கிடைத்தால் என்ன செய்வீர்கள் எனக் கேட்ட போது ஒரு நுாலகம் கட்டுவேன் என்றாராம் மகாத்மா. தனிமைத் தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவேன் என்றாராம் நேரு.
ஒரு புத்தகப் புழு உறங்குகிறது என, என் கல்லறையில் எழுதுங்கள் என்றாராம் பெட்ரண்ட்ரஸல்.
தயவுசெய்து கதவைப்பூட்ட வேண்டும் நாளை வாருங்கள் எனச் சொல்லும் வரை வாசிப்பாராம் டாக்டர் அம்பேத்கர். மனிதனின் மிகப்பெரிய கண்டுபிடிப்பே புத்தகம் தான் என்று சொன்னவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
சிறையில் புத்தகம் வாசிக்க மட்டும் அனுமதியுங்கள் என்றார் நெல்சன் மண்டேலா. துாக்கிலிடுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசிப்பைக் கைவிடவில்லை பகத்சிங். இப்படி அடுக்கிக் கொண்டே செல்லலாம். நிறைய பெரியவர்கள் தங்களின் ஓய்வூதியப் பலன்கள் முழுவதையும் நுாலகம் அமைத்து வழிகாட்டி வாழ்கிறார்கள் புதுக்கோட்டை ஞானாலயா போல,
உடலுக்கு உடற்பயிற்சி எப்படி அவசியமோ அப்படி மனதிற்கான பயிற்சி புத்தக வாசிப்பு. எனவே தான் அவ்வை சொன்னாள் ‘நுால் பல கல்’.