பதிவு செய்த நாள்
04
மே
2023
11:05
ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த ராமானுஜரைக் காண, மூலஸ்தானத்திலிருந்து ஆண்டாளே வெளியில் வந்து வாரும் அண்ணரே என்று அழைத்தார். பின் ராமானுஜர் அவரிடம், அழகரின் விருப்பத்தை தெரிவித்தார். இதையடுத்து ஆண்டாள், தான் சூடிய மாலை, பரிவட்டம், கிளி, ஸ்நான பவுடர் போன்றவைகளை, வடபெரும் கோவிலுடையான் சடகோபன் நம்பி பரம்பரையினர் மூலம், அழகருக்கு கொண்டு போய் சேர்ப்பர் என தெரிவித்தார். அன்று முதல் அந்த பரம்பரையை சேர்ந்தவர்கள், ஆண்டுதோறும் அழகர் ஆற்றில் இறங்கும் போது, ஆண்டாள் சூடிய மாலையை, மதுரைக்கு கொண்டு போய் சேர்க்கின்றனர். அந்தமாலையை அணிந்து அழகர் ஆற்றில் இறங்குகிறார். இம்மாலை செவ்வந்தி, இருவாச்சி,சம்பங்கி, மரிக்கொழுந்து, மருதுபச்சை பூக்களால் கட்டப்படுகிறது. பின் ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டு , அதை மாடவீதி,கந்தாடை வீதிகள் வழியாக ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மதுரைக்கு கொண்டு வரப்படுகிறது. ஆண்டாளுக்கு திருஷ்டி ஏற்படாமலிருக்க, பித்தளை செம்பில் சர்க்கரை, சுக்கு, ஏலம் கலந்த தண்ணீரில் சூடம் ஏற்றி ஆரத்தி எடுக்கின்றனர். பின் கூடலழகர் கோயிலில்,மாலைக்கு பூஜை செய்யப்பட்டு, அங்கிருந்து மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடா சலபதிகோயில் ஆஞ்சநேயர் சன்னதியில் இறக்கி வைக்கப்படும். அப்போது அக்கோயிலில் தங்கி இருக்கும் அழகர், அபிஷேகத்திற்கு பின் மேளம், குடை, தீப்பந்தம் போன்றவைகளுடன் ஆஞ்சநேயர் சன்னதிக்கு, அழகரின் பரிவாரங்கள் சென்று, ஆண்டாள் சூடிய மாலை, பரிவட்டம், ஸ்நானப்பவுடர், கிளி போன்றவைகளை அழகருக்கு அணிவிப்பர். பத்தாண்டுகளுக்கு முன் வரை ஸ்ரீவி.,யிலிருந்து மதுரைக்கு நடந்தே இம்மாலை கொண்டு வரப்பட்டது. தற்போது காரில் கொண்டு வரப்படுகிறது.