பதிவு செய்த நாள்
11
மே
2023
04:05
சிவவடிவங்களில் போகத்திற்கு அம்மனையும், யோகத்திற்கு தட்சிணாமூர்த்தியையும் கோபத்திற்கு துர்கையையும் சிறப்பாக குறிப்பிடும் சாஸ்திரம். துர்கை என்ற சொல்லிற்கு துர் என்றால் தீமை. தனது கையால் தீமையை அழிப்பவள் என்றும், யாராலும் வெல்லமுடியாதவள், வெற்றிக்குரியவள் என்றும் பொருள். பெங்களூரு நீயு பாகலுார் லேஅவுட் சாலையில் அமைந்துள்ள நவதுர்கை கோயிலுக்கு சென்றால் வெற்றி மீது வெற்றி வந்து சேரும் தெரியுமா உங்களுக்கு.
ஹெண்ணுார் பிரதான சாலையில் அமைந்திருக்கும் இக்கோயில் ஒரு காலத்தில் முட்புதர் நிறைந்த காடாக இருந்துள்ளது. அங்கு வாழ்ந்த அன்பர்கள் பலரும் ஒன்றிணைந்து அங்கிருந்த புற்றினை ஆடிமாதம் மட்டும் வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டனர். வழிபாட்டிற்கு வந்த சிறுமி மீது அருள் வந்து இங்கேயே குடி கொள்ள விரும்புகிறேன் என அம்மன் வாக்கு சொன்னாள். அன்றிலிருந்து சிறுசிறு திருப்பணிகள் நடைபெற்று இன்று பெரிய கோயிலாக காட்சி தருகின்றது.
கோயிலின் கருவறையில் நவதுர்கை என்ற திருநாமத்தில் அம்மன் அபய வரத கரங்களுடன் உடுக்கை, தாமரை மலர் ஏந்தி சாந்தசொரூபிணியாக அருள் செய்கிறாள். அவளை தரிசனம் செய்தாலே போதும் மனதில் ஒரு பவித்ரமான நிம்மதியும், எந்த ஒரு நற்செயலை செய்தாலும் வெற்றி கிட்டும் என்கிற எண்ணம் மனதில் ஏற்படும். துாவரசக்திகள், வைஷ்ணவி, தட்சிணாமூர்த்தி, பிரம்மா, சண்டிகேஸ்வரர், ஐயப்பன், மனைவியருடன் நவக்கிரகங்கள், விநாயகர், முருகன் வள்ளி தெய்வானை சன்னதிகளும் உள்ளன. இங்கு விசித்திரமான வழிபாடு ஒன்று கடைப்பிடிக்கப்படுகின்றன. பூட்டு வாங்கி கருவறைக்கு பின்புறம் உள்ள கம்பிகளில் மாட்டி விட்டோம் என்றால் வரும் பிரச்னை வந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடும். நவராத்திரி நாட்களில் ஒவ்வொரு நாளும் அம்பாள் நவ வடிவத்தில் காட்சி தருவாள். கோயிலுக்கு எதிரேயுள்ள அரசமர விநாயகர், நாகர்களுக்கு கிரகதோஷம், பித்ருதோஷம் உள்ளவர்கள் பாலபிேஷகம் செய்து வழிபடுவதற்கு பரிகார தலமாகவும் விளங்குகின்றது இக்கோயில்.
எப்படி செல்வது
பெங்களூரு கே.கே. மார்கெட்டில் இருந்து 10 கி.மீ.,
விசேஷ நாள்
செவ்வாய், வெள்ளி கிழமை, பிரதோஷம்