பதிவு செய்த நாள்
27
செப்
2012
03:09
கதைச் சுருக்கம்: சீவகன் முதலியோர் இராசமாபுரத்தின்கண் இவ்வாறு இனிது உறைந்தனராக; அந்நகரத்து வாழ்பவனாகிய சீதத்தன் என்னும் வணிகன் தன் பழவினைப் பயத்தால் தான் ஈட்டிய பொருளெல்லாம் கெட்டமையால், மனமுடைந்தான். தன்பால் எஞ்சியிருந்த ஒரே மரக்கலத்தைத் திரைகடலிலே ஓட்டி மீண்டும் பொருளீட்டத் துணிந்தனன். அம் மரக்கலங்கொண்ட பண்டங்களை ஏற்றிப் பணிமக்களொடு அதனை அலைகடலில் ஊர்ந்து ஓர் அழகிய தீவகம் அடைந்தனன். அந் நாட்டு மன்னனொடும் மாந்தரொடும் கேண்மை கொண்டு தன் பண்டங்களைப் பொன்னுக்கு மாற்றிப் பெரும் பொருளீட்டினன். திங்கள் சில கழிந்தபின் அம் மன்னன் முதலியோரிடத்து விடை பெற்றுக் கொண்டு பொன்னிரம்பிய தன் மரக்கலத்திற் பணி மக்களொடு ஏறி மீண்டனன். இவ்வாறு சீதத்தன் மீண்டு வருங்கால் அவன் மரக்கலம் ஐந்நூறு காவதம் இனிதாக இயங்கியது. இனி, வெள்ளிமலையிலுள்ள வித்தியாதர வேந்தனாகிய கலுழவேகன் என்பவன் தன் மகள் காந்தருவ தத்தைக்கு இராசமாபுரத்திலே தான் திருமணம் நிகழும் என்பதனை நிமித்திகரால் அறிந்திருந்தான். அக்கலுழவேகன் முன் கூறப்பட்ட சீதத்தன் வாயிலாய் அத் திருமணத்தை நிகழ்த்தக் கருதி அவனைத் தன்பாற் கொணரும் பொருட்டுத் தரன் என்னும் வித்தைவல்ல விச்சாதரனை ஏவினான். அத் தரன் தனது வித்தை வன்மையால் கடலிடையே ஓடிவந்த சீதத்தன் மரக்கலம் காற்றாலும் மழையாலும் கலக்குற்றுக் கடலிலே மூழ்கிவிட்டதுபோல அவனுக்குத் தோன்றும்படி செய்தான். இந் நிகழ்ச்சியால் மரக்கலம் பணிமாந்தர் பொருள் முதலியவற்றை இழந்த சீதத்தன், அம் மரக்கலத்தினின்றும் முரிந்து வீழ்ந்து மிதப்பதாகத் தனக்குத் தோன்றியதொரு மரத்துண்டத்தைப் பற்றிக்கொண்டு அண்மையிலிருந்ததொரு தீவின் கரையை அடைந்து பெரிதும் வருந்தியிருந்தான்.
அப்பொழுது, தரன் அவனைக் கண்டு ஐய! யான் மந்திரம் வல்லேன்; நீயிர் இழந்த மரக்கல முதலியவற்றை மீட்டுத்தர வல்லேன். ஆதலால் என்னொடு வருக! என்று ஆறுதல் கூறி ஒரு யாட்டின் மேலேற்றி வான்வழிப் பறந்து சீதத்தனைக் கலுழவேகன்பாற் கொணர்ந்து சேர்த்தனன். அக் கலுழவேகனும் சீதத்தனுக்கு முகமன் பல மொழிந்து தன் முன்னோர்க்கும் அவன் முன்னோர்க்குமிருந்த கேண்மையை எடுத்துக்காட்டி நட்புக் கொண்டான். பின்னர்க் காந்தருவ தத்தையின் வரலாறு கூறி, அவளை வீணாபதி என்னும் தோழியோடு சீதத்தன் பால் ஓம்படை செய்தனன். பின்னரும் பொருள் பல அளித்து நண்பனே! இவள் இன்றுதொட்டு நின் மகளேயாவாள். இவளை நீ நின் ஊர்க்கு அழைத்துச் செல்க! ஆண்டு, இவளை யாழ்ப் போரில் வெல்வானொரு காளைக்குக் கடிமணம் செய்விப்பாயாக! என்று கூறி விடுத்தனன். சீதத்தன் அவளோடும், பரிசனங்களொடும் வானவூர்தியிற் புறப்பட்டு வரும்பொழுது தரன் முன்னர்த் தன் வித்தையால் மறைத்திருந்த மரக்கலம் முதலியவற்றை ஊறின்றிக் காட்டக் கண்டு, உவகை மிக்கு அவற்றோடு இராசமாபுரமெய்திக் காந்தருவ தத்தையைத் தன் மனையோள் பதுமைக்குக் காட்டி நிகழ்ந்தனவும் உணர்த்தினன். காந்தருவ தத்தையைக் கன்னிமாடத்திற் சேர்த்தினன். கட்டியங்காரன் உடன்பாடு பெற்றுக் காந்தருவ தத்தையை யாழில் வென்றோன் அவட்குக் கணவனாதற்குரியன் என்னும் செய்தியையும், யாழ்ப் போர்க்கு உரிய நன்னாளையும் நகரமெங்கும் முரசறைவித்துணர்த்தினன்.
பின்னர்ச் சீதத்தன் காந்தருவ தத்தையுடன் யாழ்ப் போர் செய்தற்கு வேண்டுவன வெல்லாமியற்றினன். பல நாட்டு மன்னரும் அவ்விடத்தே வந்து குழுமினர். நன்னாளிலே காந்தருவ தத்தை யாழரங்கமேறித் தனது தெய்வ யாழின் சிறப்புத் தோன்ற வாசித்தாள். மன்னரும் பிறரும் அவ் விசைகேட்டு மெய்ம்மறந்தனர். பின்னர், மன்னர் முதலியோர் தனித்தனியே தத்தையொடு யாழியக்கித் தோற்றனர். ஆறு நாட்கள் யாழ்ப்போர் நிகழ்ந்தது; காந்தருவ தத்தையை வெல்வார் யாருமிலராயினர். இச் செய்தியறிந்த சீவகன். காந்தருவ தத்தையொடு யாழ்ப்போர் செய்தற்கெண்ணினன். அக் கருத்தைத் தந்தை கந்துக்கடனுக் குணர்த்தி விடைவேண்டி நின்றனன். அது கேட்ட கந்துக்கடன் அநங்கமாலை என்னும் பரத்தையின் பொருட்டுக் கட்டியங்காரன் சீவகன்பால் உட்பகை கொண்டுள்ளான் என்பதனை நாகமாலை என்பவளால் அறிந்திருந்தமையால், நன்று மைந்த நீ அங்குச் செல்லுங்கால் படையமைத்து விழிப்புடன் செல்க! என்று கூறினன். சீவகன் அவ்வாறே சென்று காந்தருவ தத்தையோடு யாழ்ப்போர் செய்து அவளை வென்றனன். காந்தருவ தத்தையும் உள மகிழ்ந்து சீவகன் திண்டோளில் மாலையிட்டனள். இந்நிகழ்ச்சியால் கட்டியங்காரன் நெஞ்சம் புழுங்கினான். முன்னரே தத்தைக்குத் தோற்றிருந்த மன்னர் மக்கள் பொறாமைத் தீயைத் தன் சொல்லாகிய நெய்யாலே பெரிதும் வளர்த்தான். சீவகனைப் படைக்கலப் போரில் வென்றோனே தத்தைக்குக் கணவன் ஆகும் உரிமையுடையோன்! எழுக! போரிடுக! என்று தூண்டினன். அவன் சொற்கேட்ட மன்னரெல்லாம் ஒருங்கே திரண்டு சீவகனுடன் போராற்றினர். ஒருங்கே தோற்றொழிந்தனர். பின்னர்ச் சீவகன் காந்தருவ தத்தையைத் தன் மனைக்கு அழைத்துக் கொணர்ந்து நன்னாளிலே திருமணம் புரிந்து கொண்டு அந்நங்கையொடு கூடிப் பெரிதும் இன்புற்றிருந்தனன்.
493. இங்கிவர்க ளிவ்வா றிருந்தினிது வாழச்
சங்குதரு நீணிதியஞ் சாலவுடை நாய்கன்
பொங்குதிரை மீதுபொரு மால்களிறு போன்றோர்
வங்கமொடு போகிநிதி வந்துதர லுற்றான்
பொருள் : இவர்கள் இங்கு இவ்வாறு இருந்து இனிது வாழ - சீவகன் முதலானோர் இராசமாபுரத்தில் இங்ஙனம் இருந்து இனிதாக வாழ்கையில்; (இனி வேறொரு நிகழ்ச்சி கூறுவேன்) சங்குதரு நீள் நிதியம் சால உடை நாய்கன் - சங்கு என்னும் எண்ணிக்கை பொருந்திய மிகுந்த செல்வத்தை அறவே இழந்த சீதத்தன் என்னும் வணிகன்; பொங்குதிரை மீது பொரும் மால் களிறு போன்று - பொங்கும் அலைகடலிலே கடலொடு பொருகின்ற பெரிய களிறுபோல; ஓர் வங்கமொடு போகி வந்து - ஒரு கப்பலுடன் சென்று திரும்பும் தொழிலிலே; நிதி தரல் உற்றான் - செல்வம் ஈட்டத் தொடங்கினான்.
விளக்கம் : வாழ: நிகழ்கால வினையெச்சம். நிதிதரல் உற்றான் என்பது சீதத்தனுடைய வாழ்க்கை நடைபெறும் முறை கூறியவாறு. இங்ஙன மின்றிப் பதுமுகன் திருமண நிகழ்ச்சிக்குப் பிறகு, சீதத்தன் வணிகத்திற்குச் சென்றான் எனில், சென்ற தீவிலே அவன், அணங்கனாரோ டறுமதி கழிந்தபின்னர்; காந்தருவ தத்தையை இராசமாபுரத்திற்கு அழைத்து வரற்கும் சீவகன் அவளை மணந்து, பின்னர் ஏழு திங்கள் கழித்துத் தன், பகைமுடித்தற்கும் காலமின்றாம். இது பற்றியே நச்சினார்க்கினியர், வாழ என்பதை, மட்டவிழ் கோதையோடே மனையகம் புகுந்தான் என்பதனொடு கட்டழல் (583) என்னுஞ் செய்யுளிற் கொண்டு முடிப்பர்.
அவர் கூறுவது :
இவ்விடத்தே பிள்ளையாரும் சுற்றமும் இருந்து இனிதாக வாழா நிற்க, நாய்கன் பரிவு தீர்ந்து மட்டவிழ் கோதையோடே மனையிலே மகிழ்ந்து புக்கான் எனக் கூட்டி, கட்டழல் (சீவக.583) என்னுங் கவியளவும் ஒரு தொடராக்குக. இதற்குக் காரணம் என்னையோவெனின், ஆசிரியன், ஆண்டு நேரெல்லை (சீவக. 393) என்று கூறிய பின்பு, சுதஞ்சணனும், பன்னிரு மதியின் (சீவக. 1220) என்றும், ஆறிரு மதியின் (சீவக. 1221) என்றும் கூறினமையால், ஆசிரியன் முந்நூற்றறுபத்தைந்து நாள் ஓரியாண்டான சௌரமான பட்சம் பற்றிக் கூறினானென்றும், தேவன், மதியின் என்று மதியைக் கூறினமையின், சாந்திரமான பட்சம் பற்றிக் கூறினானென்று முணர்க. எனவே, ஆசிரியன், யாண்டு என்றது முந்நூற்றுபத்தைந்து நாளாதலானும், தேவன், பன்னிருமதியின் என்றது, மாசித் திங்களிற் றோன்றிய பங்குனிப் பிறை முதலாக மேல்வருகின்ற மாசியிற் பங்குனிப் பிறையளவும் பன்னிரு மதியாமாதலானும், இருவரும் இரண்டு திங்களிற் கூறினாரேனும் ஓரியாண் டென்பது பெற்றாம். சௌரமான பட்சத்தாலே ஐந்து நாள் ஏறுகின்றதாதலின், ஆசிரியன் கூறியது அம் மாசியில் உவாவின் முன் கழிந்த தசமியிலெனக் கொள்க. இது, நானக் கிடங்கு என்னும் (சீவக. 590) கவியானும் உணர்க. மாசித் திங்களின் ஆறாந்தேதி அமாவாசை முதல், பங்குனித் திங்களில் ஐந்தாந் தேதிவரை சாந்திரமான பட்சத்தாற் பங்குனியாகையாலே, மண்டபம் எடுத்தலும் விவாகங்களும் உரியவாயின. இவ்விடத்திற் சவுரமான பட்சத்தால் மாசித் திங்கள் கொள்ளார், சாந்திரமான பட்சம் சிறந்ததாகலின், இங்ஙனம் இருவரும் ஆண்டுக் கூறுகின்ற நாளிடையில் நடந்த சரிதமாகிய நிரை மீட்டலும், தத்தையையும் குணமாலையையும் வரைதலும், சிறைவிடுத்தலும் நிகழ்ந்தன மாசியிலும் பங்குனியிலே சிறிது நாளிலும் என்பது உணர்தற்கு மேலே, பங்குனிப் பருவஞ் செய்தான் (சீவக. 851) என்றார். மேலே தோழர், பிள்ளையார்க்குத் தத்தையது ஓலை கொடுத்ததிலே, ஐந்து மதி யெல்லையினை யாண்டுடைய னாகி. (சீவக. 1875) எனவே, இவ்வோலை எழுதுவதற்கு முன்னே ஏழுதிங்கள் சென்றனவென்றாராதலின். இராசமாபுரத்தே முப்பத்தைந்து நாளும், இங்ஙன மிரண்டு திங்களேகலும் (சீவக.1359) என்றும், கழிந்தன இரண்டு திங்கள் (சீவக. 1496) என்றும் கூறுதலால், பதுமையாரிடத்தும் கேமசரியாரிடத்தும் பங்குனி முதலாக நான்கு திங்களும், இவ்வோலை எழுதுவதற்கு முன்னே கனகமாலையாரிடத்து இரண்டு திங்களும் ஆக ஏழு திங்களும் சென்றனவென்று தேவர் திங்களைப் பகுத்துக் கூறுதலின், ஈண்டு சீதத்தனுக்கு, அணங்கனாரோ டறுமதி கழிந்த பின்றை (சீவக.505) என்றல் பொருந்தா தென்பது பற்றி, முன் நிகழ்ந்ததொரு கதை தேவர் கூறுகின்றாரென்றே பொருளுரைத்தல் வேண்டிற்றென்று கொள்க.
உடை நாய்கன்: வினைத்தொகை. கலத்தினுங் காலினுந் தருவன ரீட்டக் - குலத்திற் குன்றாக் கொழுங்குடிச் செல்வர் என்று (சிலப்.2:7-8) என்று இளங்கோவடிகளுங் கூறினமையின், பொருளுடையவன் தான் இருந்து பொருள் தேடுதலும் பொருளில்லாதவன் கலத்திற் சென்று பொருள் தேடுதலும் வேண்டுதலின், இவனையும், ஓர்வங்கமொடு என்றும், ஊனமெனுமின்றி யினிதோடுக விதென்றான் (சீவக.500) என்றும் தேவர் கூறினமையின், பொருளின்றித்தான் செல்கின்றானென்றுணர்க. இதுமுதல் ஆறு செய்யுட்கள் ஒரு தொடர். இவர்கள் என்றது சீவகன் பதுமுகன் முதலியோரை. சங்கு - ஒரு பேரெண். சங்கமென்னும் இலக்கத்தை மேன்மேலே தருகின்ற பெரிய பொருள் மிகவும் கெட்ட நாய்கன் என்பர் நச்சினார்க்கினியர். நீணிதியம்: வினைத்தொகை.
494. மின்னொழுகு சாயன்மிகு பூட்பதுமை கேள்வன்
கொன்னொழுகு வேலியவ தத்தன்குளிர் தூங்குந்
தன்வழிய காளைச் தத்தனவன் றன்போற்
பொன்னொழுகு குன்றிலுறை போர்ப்புலியோ டொப்பான்.
பொருள் : கொன் ஒழுகு வேல் யவதத்தன் குளிர் தூங்கும் தன் வழிய காளை சீதத்தன் - அச்சம் பரவிய வேலேந்திய யவதத்தன் என இப்பொழுது மனையிடத்தே தங்கியிருக்கின்ற அவன் மரபில் தோன்றிய காளை போன்ற சீதத்தன் எனும்; மின் ஒழுகு சாயல் மிகு பூண் பதுமை கேள்வன் - ஒளி பரவிய மென்மையுடைய மிகுதியான அணியணிந்த பதுமையின் கணவன்; தன் போல் பொன் ஒழுகு குன்றில் உறை போர்ப்புலியொடு ஒப்பான் - தந்தைக்கு ஒப்பான், பொன் பரவிய குன்றிலே போருக்கெழும் புலி போன்றவன்.
விளக்கம் : குளிர் - திசைச்சொல். குளிருமென்னும் வினைச்சொல் குளிரெனத் தொழில்மேல் நின்றது. எனவே அந் நாய்கன் பெயர் சீதத்தன், அவன் மனைவி பதுமை என்பவள், சீதத்தன் யவதத்தன் மகன், சீதத்தன் தன் தந்தையையே ஒப்பானவன், புலி போன்ற போர் வலிமை படைத்தவன் என்பன பெற்றாம்.
495. இம்மியன நுண்பொருள்க ளீட்டிநிதி யாக்கிக்
கம்மியரு மூர்வர்களி றோடைநுதல் சூட்டி
யம்மிமிதந் தாழ்ந்துசுரை வீழ்ந்ததறஞ் சால்கென்
றும்மைவினை நொந்துபுலந் தூடலுணர் வன்றே.
பொருள் : இம்மி அன நுண் பொருள்கள் ஈட்டி நிதி ஆக்கிக் கம்மியரும் களிறு நுதல் ஓடை சூட்டி ஊர்வர் - இம்மியவ்வளவு நுண்ணிய பொருள்களை ஈட்டிச் செல்வத்தை வளர்த்துப் பிறருக்குத் தொழில் செய்கின்றவரும் யானையின் நெற்றியிலே முகபடாம் அணிந்து ஏறிச் செல்வர்; (ஆகையால்); அம்மி மிதந்து சுரை ஆழ்ந்து அறம் வீழ்ந்தது - நீரிலே அம்மி மிதக்கவும் சுரை ஆழவுமாக அறங் கெட்டது; சால்க என்று - (எனவே) அமைதி பெறுக என்று; உம்மை வினை நொந்து புலந்து ஊடல் உணர்வு அன்று - பழவினையை எண்ணி வருந்தி அறத்துடன் மாறுபட்டுப் பிணங்குதல் உணர்வுடைமை ஆகாது.
விளக்கம் : இம்மியென ஈட்டிப் பெருநிதியாக்குதல் : நீண்டகால முயற்சியின் பொறுமையையும் பொருளீட்டலின் சிறப்பையும் விளக்குகின்றன. கம்மியர் - பிறருக்குத் தொழில் செய்வோர். கம்மியரும்: உம்: இழிவு சிறப்பு. அம்மி மிதத்தலும் சுரை ஆழலும் உயர்ந்தோர் தாழ்வதையும் உயர்வதையுங் குறிக்கும். சுரை ஆழ அம்மி மிதப்ப (பழ.125) என்றார் பிறரும். இம்மி - மத்தங்காய்ப் புல்லரிசி; குறைந்ததோர் எண்ணுமாம் என்பர் நச்சினார்க்கினியர். இச் செய்யுட் கருத்தோடு,
ஆடுகோ டாகி அதரிடை நின்றதூஉங்
காழ்கொண்ட கண்ணே களிறணைக்குங் கந்தாகும்
வாழ்தலு மன்ன தகைத்தே யொருவன்றான்
தாழ்வின்றித் தன்னைச் செயின்
எனவரும் நாலடியையும் நினைக.
496. உள்ளமுடை யான்முயற்சி செய்யவொரு நாளே
வெள்ளநிதி வீழும்விளை யாததனி னில்லை
தொள்ளையுணர் வின்னவர்கள் சொல்லின்மடி கிற்பி
னெள்ளுநர்கட் கேக்கழுத்தம் போல வினிதன்றே.
பொருள் : உள்ளம் உடையான் முயற்சி செய்ய ஒரு நாளே வெள்ளம் நிதி வீழும் - முயலும் உள்ளம் உடையவன் முயற்சி செய்தால், ஒரு நாளிலே வெள்ளம் என்னும் எண்ணையுடைய செல்வம் திரளும்; அதனின் விளையாது இல்லை - முயற்சியினால் விளையாதது எதுவும் இல்லை; தொள்ளை உணர்வினவர்கள் சொல்லின் மடிகிற்பின் - அறிவு கெட்டவர்கள் சொல்லை எண்ணிச் சோம்பியிருப்பின்; எள்ளுநர்கட்கு ஏக்கழுத்தம் போல இனிது - நம்மை யிகழ்பவர்க்கு ஒருதலை நிமிர்வையுண்டாக்கினாற் போல இனியதாயிருக்கும்.
விளக்கம் : உள்ளம் - ஊக்கம். செய்ய : எதிர்கால வினையெச்சம். வெள்ளம் : ஒரு பேரெண். தொள்ளை யுணர்வு - ஓட்டையறிவு; அறிவின்மை. அவர்கள் சொல்வது : வருவது தானே வரும் கொடுக்கும் தெய்வம் கூரையைப் பிரித்துக் கொட்டும் என்பன போன்ற சோம்பல் வளர்க்கும் மொழி. ஏ பெற்றாகும் (தொல்.உரி.7) என்றதனால் ஏக்கழுத்தம் - தலையெடுப்பு. இது முயற்சியின் சிறப்பைக் கூறுவதால் நல்வினையால் ஒரு நாளிலே வெள்ள நிதி வீழும் என்பது பொருந்தாது. அன்று, ஏ : அசைகள்.
497. செய்க பொருள் யாருஞ்செறு வாரைச்செறு கிற்கு
மெஃகுபிறி தில்லையிருந் தேயுயிரு முண்ணு
மையமிலை யின்பமற னோடெவையு மாக்கும்
பொய்யில்பொரு ளெபொருண்மற் றல்லபிற பொருளே.
பொருள் : யாரும் பொருள் செய்க - எத்தகையோரும் செல்வத்தைத் தேடுக, செறுவாரைச் செறுகிற்கும் எஃகு பிறிது இல்லை - பகைவரை வெல்லும் வேல் அதனிற் பிறிதொன்று இல்லை; இருந்தே உயிரும் உண்ணும் - பகைவரிடமே இருப்பினும் பகைவருயிரை உண்ணத் துணைபுரியும்; இன்பம் அறனோடு எவையும் ஆக்கும் - பொருளானது முற்கூறியவற்றை ஆக்குவதுடன் இன்பத்தையும் அறத்தையும் வளர்க்கும்; ஐயம் இலை - இங்குக் கூறியதிற் சிறிதும் ஐயம் இராது. பொய்யில் பொருளே பொருள் - முயற்சியாற் கிடைக்கும் அவ்வுண்மைப் பொருளே பொருளாகும்; பிற பொருள் அல்ல - வேறு வழியில் வரும் பொருள்கள் பொருளாகா.
விளக்கம் : மற்று : அசைநிலை. எஃகு: பொதுவாகப் படைகளைக் குறிப்பினும் வேலை சிறந்த படையாதலால் வேலெனப்பட்டது. யாரும் பொருள் செய்க என மாறுக. இச் செய்யுட் கருத்தோடு,
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில் (குறள். 759)
எனவும்,
ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க் கெண்பொருள்
ஏனை யிரண்டு மொருக்கு.(குறள் 760)
எனவும்,
பொருளல் லவரைப் பெருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள். (குறள். 751)
எனவும், எழுந்த திருக்குறள்களை ஒப்பிடுக.
இனி இருந்தே உயிரும் உண்ணும் என்பதற்குப் பொருள் தன்னையுடையோன் தன்னிடத்தே இருக்கவே சேய்மையிலுள்ள அவன் பகைவருயிரையும் தான் அவர்பாற் சென்றுண்ணும் எனக் கோடலுமாம்.
498. தூங்குசிறை வாவலுறை தொன்மரங்க ளென்ன
வோங்குகுல நையவத னுட்பிறந்த வீரர்
தாங்கல்கட னாகுந்தலை சாய்க்கவரு தீச்சொ
னீங்கல்மட வார்கள்கட னென்றெழுந்து போந்தான்
பொருள் : தூங்கு சிறை வாவல் உறை தொல்மரங்கள் என்ன - தொங்குகின்ற, சிறகினையுடைய வெளவால்கள் வாழும் ஆலமரங்கள் (தாம் நையினும் அவற்றின் விழுதுகள் அவற்றைத் தாங்கினாற்) போல; ஓங்கு குலம் நைய - மேம்பட்ட மரபு வருந்தியபோது; அதனுள் பிறந்த வீரர் தலைசாய்க்கவரு தீச்சொல் தாங்கல் கடன் ஆகும் - அம்மரபிலே பிறந்த வீரர்கள் தாந் தலைகுனிதற்குக் காரணமான பழிச்சொல் தோன்றுதற்கு முன்னே அதனைத் தளராமல் காப்பாற்றுவது கடனாகும்;
நீங்கல் மடவார்கள் கடன் - அங்ஙனம் தாங்காது நீங்கிப் போதல் அறிவிலாதவரின் கடமையாகும்; என்று எழுந்து போந்தான் - என்று கூறி எழுந்து பொருளீட்டப் புறப்பட்டான்.
தலைசாய்க்க வருதீச்சொல் தாங்கல் கடனாகும் என மாறுக. பிறத்தற்கு முன்னர் என வருவித்துரைக்க. இச் செய்யுளோடு,
சிதலை தினப்பட்ட ஆல மரத்தை
மதலையாய் மற்றதன் வீமூன்றி யாங்குக்
குதலைமை தந்தைகட் டோன்றிற்றான் பெற்ற
புதல்வன் மறைப்பக் கெடும். (நாலடி. 197)
என வரும் நாலடி வெண்பாவை ஒப்பு நோக்குக.
இற்பிறந்தார் கண்ணேயு மின்மை இளிவந்த
சொற்பிறக்குஞ் சோர்வு தரும். (குறள். 1044)
என்பதுபற்றி தலைசாய்க்க வருதீச்சொல் (பிறவாமுன்) என்றான் என்க. ( 6 )
499. மோதுபடு பண்டமுனி யாதுபெரி தேற்றி
மாதுபடு நோக்கினவர் வாட்கண்வடு வுற்ற
தாதுபடு தார்கெழிய தங்குவரை மார்பன்
கோதுபட லில்லகுறிக் கொண்டெழுந்து போந்தான்.
பொருள் : மாது படு நோக்கினவர் வாட்கண் வடு உற்ற-பெருமை பொருந்திய நோக்கினையுடைய மங்கையரின் ஒளி தவழுங் கண்கள் தாக்கிய வடுவினைக் கொண்ட; தாடு படு தார் கெழிய தங்கு வரை மார்பன் - தாது பொருந்திய மாலை பொருந்திய நிலைபெற்ற மலைபோலும் மார்பன்; மோதுபடு பண்டம் பெரிது முனியாது ஏற்றி - நிறைந்த பொருள்களை வெறுப்பின்றி மிகுதியாகக் (கலத்தில்) ஏற்றி; கோது படல் இல்ல குறிக்கொண்டு எழுந்து போந்தான் - குற்றம் அற்ற நல்ல பொழுதை அறிந்து கடற்கரைக்கு வந்தான்.
விளக்கம் : வாட்கண் வடு ஒளி பொருந்திய கண்களாகியமா வடுக்கள் என்றுமாம். நச்சினார்க்கினியர், இவன் மார்பைப் பார்த்தலால் ஒளி மிகுங் கண்கள் மழுங்குமாறு என்றும், வடுஉற்ற கண் தங்கும் மார்பு என்று ஆக்கி மாவடு போன்ற கண் தங்கும் மார்பு என்றும் பொருள் கூறுவர். மோதுபடு பண்டம் என்றது பண்டகசாலையின் உச்சியில் மோதுதல் உண்டாக மிக்க பண்டத்தை என்க. மாதுபடு நோக்கு என்றற்குக் காதல் தோன்றுதற்கிடமான நோக்கம் எனினுமாம். கெழிய - கெழுவிய; பொருந்திய. கோதுபடலில்லகுறி என்றது, நன்முழுத்தத்தை.
500. வானமுற நீண்டபுகழ் மாரிமழை வள்ள
றானமென வேண்டுநர்கள் வேண்டுவன நல்கி
நானமிக நாறுகமழ் குஞ்சியவ னேறி
யூனமெனு மின்றியினி தோடுகவி தென்றான்.
பொருள் : வானம் உற நீண்ட புகழ் மாரி மழை வள்ளல்-வானுலகினும் பொருந்தப் பரவிய புகழையும் மாரிக்கால மழையனைய வண்மையையும் உடையவனாகிய; நானம் மிக நாறுகமழ் குஞ்சியவன் - புழுகு சாலவும் மணக்கும் சிகையினையுடைய சீதத்தன்; தானம் என வேண்டுநர்கள் வேண்டுவன நல்கி ஏறி - தானம் என்ற பெயருடன் விரும்பினோர் விரும்பிய பொருள்களை அளித்துக் கலத்தில் ஏறி; ஊனம் எனும் இன்றி இது இனிது ஓடுக என்றான் - குறை சிறிதும் இல்லாமல் இக்கலம் இனிமையாகச் செல்க என்று வாழ்த்தினான்.
விளக்கம் : கமழ்குஞ்சி என்பதற்கு இயல்பான மணங்கமழுங் குஞ்சி என்பர் நச்சினார்க்கினியர். இக்கலம் ஊனம் எனும் இன்றி ஓடுக எனவே முன்னர்ப் பல கலங்கள் தீங்குற்றன என்பது பெற்றாம். அடுக்கிய மூவுலகும் கேட்குமே சான்றோர் கொடுத்தார் எனப் படுஞ்சொல் (நாலடி. 100) என்ப வாகலின் வானமுற நீண்டபுகழ் என்றார். யாத்திராதானம் என்னும் ஒரு பெயரையிட்டு வரையாது வேண்டுவன வேண்டுநர்க்கு நல்கினான் என்பார், தானம் என என்றார். தானம் சிறந்தோரைத் தேர்ந்து வழங்குவதாகலின் இங்ஙனம் கூறினார். ( 8 )
501. ஆடுகொடி யுச்சியணி கூம்பினுயர் பாய்மூன்
றீடுபடச் செய்திளைய ரேத்தவிமிழ் முந்நீர்க்
கோடுபறை யார்ப்பக்கொழுந் தாட்பவழங் கொல்லா
வோடுகளி றொப்பவினி தோடியதை யன்றே.
பொருள் : ஆடு கொடி உச்சி அணி கூம்பின் - ஆடும் கொடிகளை உச்சியில் அணிந்த கூம்பிலே; உயர் பாய் மூன்று ஈடுபடச் செய்து - உயர்ந்த பாய்கள் மூன்றைக் காற்று முகக்குமாறு குழையக் கட்டியதனால்; இளையர் ஏத்த - தொழில் புரிவோர் புகழ; இமிழ் முந்நீர்க் கோடு பறை ஆர்ப்ப - ஒலிக்குங் கடலிலே பிறந்த சங்கும் பறையும் முழங்கா நிற்ப; கொழுந்தாள் பவழம் கொல்லா - வளமிகும் பவளங்களின் கொடிகளை அறுத்துக் கொண்டு; ஓடு களிறு ஒப்ப - ஓடுங் களிறுபோல; இனிது ஓடியது - நன்றாக ஓடியது.
விளக்கம் : ஓடியதை : ஐ : சாரியை. அன்று ஏ : அசைகள்.
ஆடுகொடி : வினைத்தொகை. கூம்பு - பாய்மரம். இளையோர் என்றது தொழிலாளரை. இதனால் மரக்கலங்களில் இசைக்கருவிகள் முழக்கும் பண்டைக்கால வழக்கம் உணரப்படும். பவளக்கொடி கடலின் கண்ணுளதாகலின் அதனை அறுத்துக்கொண்டோடிற்று என்க. ( 9 )
502. திரைகடருஞ் சங்குகலந் தாக்கித் திரண்முத்தம்
கரைகடலுட் காலக்கணை பின்னொழிய முந்நீர்
வரைகிடந்து கீண்டதெனக் கீறிவளர் தீவி
னிரையிடறிப் பாய்ந்திரிய வேகியது மாதோ.
பொருள் : திரைகள் தரும் சங்கு கலம் தாக்கி - அலைகள் தரும் சங்குகள் கலத்தைத் தாக்குதலால்; திரள் முத்தம் கரை கடலுள் கால - திரண்ட முத்துக்களை ஒலிக்குங் கடலிலே அச்சங்குகள் சொரிய; முந்நீர் வரை கிடந்து கீண்டது எனக்கீறி - கடலினை ஒரு மலை நில்லாமற் கிடந்து கிழித்தது என்னுமாறு கிழித்து; வளர் தீவின் நிரை இடறி - மிகுந்த தீவுகளின் ஒழுங்கைக் கெடுத்து; பாய்ந்து கணை பின் ஒழிய இரிய-குதித்துத் தன் மேலிருந்து எய்த அம்பு பிற்பட்டுக்கெட; ஏகியது - சென்றது.
விளக்கம் : மாது ஓ : அசைகள். முந்நீர் வரை கிடந்து கீண்டது இல்பொருளுவமம். ( 10 )
503. மின்னுமிளிர் பூங்கொடியு மென்மலரு மொப்பார்
அன்னமொடுந் தோகைநடை சாயலமிர் தன்னார்
துன்னியினி தாகவுறை துப்புரவின் மிக்க
நன்மையுடை நன்பொன்விளை தீவமடைந் தஃதே.
பொருள் : மின்னும் - விளக்கத்தால் மின்னையும்; பூங்கொடியும் - அசைவினாற் பூங்கொடியையும்; மென்மலரும் - மென்மையால் மலரையும்; ஒப்பார் - ஒப்பானவர்களும்; நடை சாயல் அன்னம் தோகை அமிர்து அன்னார் - நடை அன்னத்தொடும் மென்மை மயிலொடும் உவமை கொண்டவர்களும் ஆகிய மகளிர்; துன்னி இனிது ஆக உறை - மிகுந்து இனிமையாக வாழும்; துப்புரவின் மிக்க - நுகர் பெருள்களாற் சிறந்த; நன்மையுடை நன்பொன் விளை தீவம் அடைந்தஃது - நன்மையுற்ற நல்ல பொன் விளையும் தீவினை அடைந்தது அக்கலம்.
விளக்கம் : அடைந்தஃது : ஆய்தம் விரித்தல் விகாரம். எண் ஒடுவை இறுதியிற் சேர்க்க. மின் விளக்கமுடைமைக்கும் கொடி அசைவிற்கும் மலர் - மென்மைக்கும் அன்னம் நடைக்கும் தோகை சாயற்கும் உவமைகள் அமிர்தன்னார் என்பது வாளா மகளிர் என்னும் மாத்திரை. துப்புரவு - நுகர் பொருள்.
504. தீவினுள் இழிந்து தேந்தார்ச் செம்மலுந் திருமுத்தாரங்
கோவினைக் குறிப்பிற் கண்டு கொடுத்தருள் சுமந்து செம்பொற்
பூவினுள் ளவளை யன்ன பொங்கிள முலையினார்த
நாவினு ளமிர்தங் கேட்டு நாடக நயந்து சின்னாள்
பொருள் : தீவினுள் இழிந்து - தீவை அடைந்து; தேன்தார்ச் செம்மலும் - தேன் பொருந்திய மாலையணிந்த சீதத்தனும் ; கோவினைக் குறிப்பின் கண்டு - அத்தீவக வேந்தனை அவன் குறிப்பறிந்து கண்டு; திரு முத்து ஆரம் கொடுத்து - அழகிய முத்து வடத்தைக் காணிக்கையாக நல்கி; அருள் சுமந்து - அவனருளையேற்று; செம்பொன் பூவின் உள்ளவளை அன்ன பொங்கு இளமுலையினார் தம் - சிவந்த பொற்றாமரை மலரில் வாழும் திருமகளைப் போன்ற பூரிக்கும் இளமுலை மகளிருடைய; நாவினுள் அமிர்தம் கேட்டு நாடகம் நயந்து - நாவில் விளையும் அமிர்தமனைய இசையைக் கேட்டும் நாடகத்தை விரும்பிக் கண்டும்; சின்னாள் - சில நாட்கள் கழித்து,
விளக்கம் : திருமுத்து ஆரம் என்பதற்குத், திருமகள் சேரும் ஆரம் என்றும், திருவினையும் முத்தாரத்தையும் எனவும் பொருள் கூறலாம் என்பர் நச்சினார்க்கினியர். இப் பாட்டுக் குளகம். இது முதல் ஆடகம் (560) வரை ஒரு தொடர். பூவினுள்ளவள் - திருமகள். நாவினுள் அமிர்தம் என்றது இன்னிசையை. இசையென்பது தோன்ற கேட்டும் என்றார். நாடகத்தை நயந்து கண்டு என்க. ( 12 )
505. புணர்ந்தவர் பிரித லாற்றாப்
போகமீன் றளிக்குஞ் சாய
லணங்கினுக் கணங்க னாரோ
டறுமதி கழிந்த பின்றைக்
கொணர்ந்தன பண்டம் விற்ற
கொழுநிதிக் குப்பை யெல்லா
முணர்ந்துதன் மதலை யேற்றி
யொருப்படுத் தூர்க்கு மீள்வான்
பொருள் : புணர்ந்தவர் பிரிதல் ஆற்றா - கூடியவர் பிரியவியலாமல்; போகம் ஈன்று அளிக்கும் சாயல் - இன்பத்தைக் கொடுத்து ஆதரவு செய்யும் மென்மையினையுடைய; அணங்கினுக்கு அணங்கனாரோடு - தெய்வங்கட்குத் தெய்வம் போன்ற வரோடு; அறுமதி கழிந்த பின்றை - ஆறு திங்கள் கழித்த பிறகு; கொணர்ந்தன பண்டம் விற்ற கொழுநிதிக் குப்பையெல்லாம் - கொண்டுவந்த பொருள்களை விற்ற வளமிகு செல்வக்குவியலை யெல்லாம்; உணர்ந்து தன் மதலை ஏற்றி - அறிந்து தன் கலத்தில் ஏற்றி; ஒருப்படுத்து ஊர்க்கு மீள்வான் - ஒருவழிப்படுத்தித் தன் ஊருக்குத் திரும்புவானாகி,
விளக்கம் : கொணர்ந்தன; வினைமுற்றுப் பெயரெச்சமாகியது, எல்லாம் உணர்ந்து என்றார், சரக்கின் பெருமையால் உணரவறிதாகலின். ஆற்றா : ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம். இப் பாட்டுங்குளகம். ( 13 )
506. அரசனைக் கண்டு கண்ணுற்
றவர்களை விடுத்து நன்னா
ளிரைவதி வியாழ வோரை
யிருஞ்சிலை முளைப்ப வேறிக்
கரைகட லழுவ நீந்திக்
காற்றினுங் கடுகி யைஞ்ஞா
றுரையுடைக் காத மோடி
யோசனை யெல்லை சார்ந்தே,
பொருள் : அரசனைக் கண்டு - (மீண்டு) அரசனைப் பார்த்து (விடைபெற்று); கண்ணுற்றவர்களை விடுத்து - மிக நெருங்கிப் பழகியவர்களை (அரிதின்) நீங்கி; நல்நாள் இரைவதி வியாழ ஓரை இருஞ் சிலை முளைப்ப ஏறி - நல்ல நாளாகிய இரேவதி நாளில் வியாழ ஓரையில் தனு தோன்றும்போது மரக்கலம் ஏற; கரைகடல் அழுவம் நீந்திக் காற்றினும் கடுகி - அம்மரக்கலம் ஒலிங்குங் கடலின் பரப்பிலே நீந்திக் காற்றினும் விரைந்து; ஐஞ்ஞாறு உரையுடைக் காதம் ஓடி - ஐஞ்ஞாறெனக் கூறப்படுங் காத எல்லையைக் கடந்து ஓடி; ஓசனை எல்லை சார்ந்து - தான் செல்லுங் கரை ஓர் ஓசனை யளவிலே இருக்குமாறு நெருங்க,
விளக்கம் : இதுவுங் குளகம். ஏறி - ஏற: வினையெச்சத்திரிபு. சார்ந்து - சார: இதுவும் வினையெச்சத்திரிபு. இனி இரண்டெச்சத்தையுந் திரிக்காமல் மரக்கலத்தின் மீது வருபவரின் தொழிலாக்கினும் பொருந்தும், மரக்கலம் ஓடினான் என்றாற்போல. அரசன் - அத் தீவினுக்கு மன்னன். கண்ணுற்றவர்-பழகியவர்; நண்பர் என்க. நன்னாளாகிய இரேவதி என்க. இரேவதி எதுகை நோக்கி இரைவதி என்றாயிற்று. சிலை- தநுராசி. வியாழக்கோளையுடையதாய்த் தனுவோரை தோன்ற என்க. அழுவம் - பரப்பு. கரை கடல்: வினைத்தொகை.
507. களித்தலை மயங்கி யிப்பா
லிருத்தலுங் கலந்தோர் காற்றிற்
றுளித்தலை முகில்க ளீண்டித்
தூங்கிருண் மயங்கி மான்று
விளிப்பது போல மின்னி
வெடிபட முழங்கிக் கூற்று
மொளித்துலைந் தொழிய வெம்பி
யுரறிநின் றிடிப்ப நாய்கன்.
பொருள் : இப்பால் களித்தலை மயங்கி இருத்தலும் - இங்கு இவர்கள் களிப்பிலே தம்மை மறந்து இருக்கும்போது; ஓர் காற்றில் துளித்தலை முகில்கள் கலந்து ஈண்டி - ஒரு காற்றிலே நீர்த் துளியை யுடைய கரிய முகில்கள் பரவிச் செறிந்து: தூங்கு இருள் மயங்கி மான்று - பேரிருள் போன்று எத்திசையினுங் கலந்து மயங்கி; விளிப்பது போல மின்னி - கெடுப்பது போல மின்னி; வெடிபட முழங்கி - வெடிப்பது போலச் சிறிது இடித்து; கூற்றும் ஒளித்து உலைந்து ஒழிய வெம்பி உரறி நின்று இடிப்ப - (பிறகு) கூற்றுவனும் மறைந்து வருந்தி ஒழியுமாறு வெதும்பி முழங்கி நிலையாக இடிக்க; நாய்கன் - (இந்நிலை கண்ட) நாய்கன்,
விளக்கம் : முதலிற் சிறிதே இடித்தது; பிறகு பேரிடி யிடித்தது. இதுவுங் குளகம். களித்தலை என்புழி தலை ஏழனுருபு. துளித்து அலையும் முகில் எனினுமாம். மயங்கி - கலந்து. மான்று - மயங்கி. விளித்தல் - கெடுத்தல். கூற்றும், உம்மை உயர்வு சிறப்பு. உரறி - முழங்கி; யுரறி இடிப்ப என்றது முழங்கி இடிப்ப என்றவாறு. ( 15 )
508. எண்டிசை வளியு மீண்டி
யெதிரெதிர் கலாவிப் பவ்வங்
கொண்டுமே லெழுவ தொப்பக்
குளிறிநின் றதிர்ந்து மேகந்
தண்டுளி பளிக்குக் கோல்போற்
றாரையாய்ச் சொரிந்து தெய்வங்
கொண்டதோர் செற்றம் போலுங்
குலுங்கன்மி னென்று கூறும்.
பொருள் : எண் திசை வளியும் ஈண்டி - எட்டுத்திசையிற் காற்றும் ஒருங்கே கூடி; எதிர் எதிர் கலாவி - எதிரெதிராகக் கலந்து; பவ்வம் கொண்டு மேல் எழுவது ஒப்ப - கடலைக்கொண்டு மேலே யெழும் ஊழி யிறுதியை ஒவ்வி நிற்க; மேகம் குளிறி நின்று அதிர்ந்து - முகில் குமுறி நின்று முழங்கி; தண்துளி பளிக்குக் கோல்போல் தாரையாய்ச். சொரிந்து - குளிர்ந்த நீர்த் துளியைப் பளிங்கின் கோலைப் போலத் தாரையாய்ச் சொரிய; தெய்வம் கொண்டதோர் செற்றம் போலும் - தெய்வம் கொண்டதொரு சினம் போலும்; குலுங்கன்மின் என்று கூறும் - இதற்கு நீங்கள் நடுங்காதீர்கள் என்று மேலும் கூறுவான்.
விளக்கம் : சொரிந்து - சொரிய : வினையெச்சத்திரிபு. போலும்: உரையசை. வளி - காற்று. கலாவி - கலந்து. பவ்வம் - கடல். குளிறி - குமுறி. பளிக்குக்கோல் வேற்றுமையில் மென்றொடர் வன்றொடராயிற்று. சொரிந்தென்னும் எச்சத்தைச் செயவெனெச்சமாகக் கொள்க. குலுங்குதல் - அச்சத்தால் உடல் நடுங்குதல். ( 16 )
509. இடுக்கண்வந் துற்ற காலை
யெரிகின்ற விளக்குப் போல
நடுக்கமொன் றானு மின்றி
நகுகதா நக்க போழ்தவ்
விடுக்கணை யரியு மெஃகா
மிருந்தழு தியாவ ருய்ந்தார்
வடுப்படுத் தென்னை யாண்மை
வருபவந் துறங்க ளன்றே.
பொருள் : இடுக்கண் வந்து உற்ற காலை - துன்பம் வந்து கூடியபோது; எரிகின்ற விளக்கு போல நடுக்கம் ஒன்றானும் இன்றித் தாம் நகுக - எரியும் விளக்குக் காற்றால் நடுங்குவது போல நடுங்கும் நடுக்கம் எவ்வாற்றானும் இல்லாமல் துன்புற்றார் மகிழ்க; நக்க போழ்து அவ் இடுக்கணை அரியும் எஃகாம் - மகிழ்ந்தால் அஃது அத் துன்பத்தைப் பிளக்கும் படையாகும்; இருந்து அழுது யாவர் உயர்ந்தார் - அத் துன்பத்தை யெண்ணி அமர்ந்து துக்கமுற்று எவர்தாம் அத்துக்கத்தினின்றும் நீங்கினார்?; ஆண்மை வடுப்படுத்து என்னை? - வீரத்தை வடுப்படுத்தி வரம் பயன் என்னை? வருபவந்து உறும் - வரத்தக்கவை வந்து சேரும்.
விளக்கம் : உறுங்கள்: கள் : அசை. அன்று, ஏ : அசைகள். வடுப்படுத்து என்னை ஆண்மை என்பதனை அடுத்த செய்யுளின் இறுதியிற் கொண்டு சேர்ப்பர் நச்சினார்க்கினியர்.
இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வ தஃதொப்ப தில். (குறள். 621)
என்பர் வள்ளுவர்.
அந் நகுதல் எஃகாம் என்க. துன்பத்தைக் கண்டஞ்சி அழுதல் மறத்தன்மை யன்றென்பான் ஆண்மை வடுப்படுத்தென்னை? என்றான். வருப வந்துறும் என்றது, நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற்படுவதெவன் என்னும் ஊழ்வலி காட்டித் தேற்றியபடியாம். வேண்டினும் வேண்டாவிடினும் உறற்பால தீண்டாவிடுதல் அரிது (நாலடி. 109) என்றார் பிறரும். ( 17 )
510. ஆடகச் செம்பொற் கிண்ணத்
தேந்திய வலங்கற் றெண்ணீர்
கூடகங் கொண்ட வாழ்நா
ளுலந்ததேற் கொல்லும் பவ்வத்
தூடகம் புக்கு முந்நீ
ரழுந்தினு முய்வர் நல்லார்
பாடகம் போலச் சூழ்ந்த
பழவினைப் பயத்தி னென்றான்.
பொருள் : கூடு அகம் கொண்ட வாழ்நாள் உலந்ததேல் - மெய்யிலே கொண்ட வாழ்நாள் வற்றியதேல்; ஆடகச் செம்பொற் கிண்ணத்து ஏந்திய அலங்கல் தெண்ணீர் கொல்லும் - நல்ல ஆடகப் பொற் கிண்ணத்திற் கொண்ட அசைவுற்ற தெளிந்த நீரும் கொல்லும்; பாடகம் போலச் சூழ்ந்த பழவினைப் பயத்தின் - பாடகம் என்னுங் காலணிபோல விடாது சூழ்ந்து வரும் பழமையான நல்வினைப் பயனால்; பவ்வத்தூடு அகம் புக்கு முந்நீர் அழுந்தினும் நல்லார் உய்வர் என்றான் - கடலினூடு நடுவே சென்று அக் கடலிலே அழுந்தினாலும் நல்லார் பிழைத்துக் கொள்வர் என்று கூறினான்.
விளக்கம் : நல்லார் பாடகம் என இயைத்துப் பெண்களின் பாடகம் எனினும், பாடு என்பதைப் பக்கமாக்கிப் பெண்களின் பக்கல் வைத்த நெஞ்சம் எனினும் பொருந்தும். பாடகம் ஒரு கம்பியாய்ப் பல முடக்காலே போக்கும் வரவும் உண்டானாற்போலத் தோன்றிக் காலைவிடாதே கிடந்தாற்போலப் பழவினையென ஒன்றேயாயது நல்வினை தீவினையென இரண்டுபோல் தோன்றி இவனைச் சூழ்ந்து கிடக்கும் என வாழ்வுக்குஞ் சாவுக்கும் பொதுவாக்கி ஒப்புமை கூறுவர் நச்சினார்க்கினியர். போகூழுற்றுழி நல்லவை எல்லாம் தீயவாம் என்பது தோன்றப் பொற்கிண்ணத்துத் தெண்ணீரும் கொல்லும் என்றான். தெண்ணீரும் எனற்பாலதாகிய சிறப்பும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. கூடு - உடலிற்கு உவமவாகுபெயர். முந்நீர் என்றது சுட்டு மாத்திரையாய் நின்றது. ஊழினது நன்மையை உடையார் மேலேற்றி நல்லார் உய்வர் என்றான்.
511. வினையது விளைவின் வந்த வீவருந் துன்ப முன்னீர்க்
கனைகட லழுவ நீந்திக் கண்கனிந் திரங்கல் வேண்டா
நனைமலர்ப் பிண்டி நாத னாண்மலர்ப் பாத மூலம்
நினையுமி னீவி ரெல்லா நீங்குமி னச்ச மென்றான்.
பொருள் : வினையது விளைவின் வந்த வீவு அருந்துன்பம் முன்நீர்க் கனைகடல் அழுவம் நீந்தி - தீவினையின் பயனாகி வந்த துன்பமாகிய பழைய நீரையுடைய ஒலிக்குங்கடற்பரப்பை நீந்தி; கண் கனிந்து இரங்கல் வேண்டா - கண்ணைக் குழைத்து வருந்தல் வேண்டா; நனை மலர்ப் பிண்டி நாதன் நாள் மலர்ப் பாத மூலம் - குளிர்ந்த மலரையுடைய அசோகின் நீழலில் எழுந்தருளிய அருகப் பெருமானின் புதிய மலரனைய திருவடியாதரவை; நீவிர் எல்லாம் நினையுமின் - நீவிர் எல்லீரும் நினையுங்கள்; அச்சம் நீங்குமின் என்றான் - அச்சத்தை விடுவீர்களாக என்று கூறினான்.
விளக்கம் : பாத மூலம்: திருவடியாகிய, துன்பம் நீங்குதற்குக் காரணமானது. கலம் படுதலும் அவர் வருத்தமுமாக இவனுக்குத் தோன்றினவே அன்றி அவர்க்கு இவையில்லை. இதனைப் பின்னர் நாடகம் நாங்களுற்து (சீவக. 582) என்றதனாலும் பிறவற்றாலும் உணர்க. இடுக்கண் என்பதுமுதல் இச்செய்யுளீறாகச் சீதத்தன் கூறும் அறிவுரைகள் ஆற்றவும் இனியன ஆதல் உணர்க.
தனக்குவமை யில்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லான்
மனக்கவலை மாற்றல் அரிது. (குறள். - 7)
பழவினை பற்றிப் பேசிய சீதத்தன் நாதன் பாதமூலம் நினைமின் என்று செவியறிவுறுத்தது ஆழ்ந்த கருத்துடையதாம். ( 19 )
512. பருமித்த களிற னானும் பையெனக் கவிழ்ந்து நிற்பக்
குருமித்து மதலை பொங்கிக் கூம்பிறப் பாய்ந்து வல்லே
நிருமித்த வகையி னோடி நீர்நிறைந் தாழ்ந்த போதி
லுருமிடித் திட்ட தொப்ப வுள்ளவ ரொருங்கு மாய்ந்தார்.
பொருள் : பருமித்த களிறு அனானும் - அணி செய்யப்பட்ட களிற்றியானையை ஒத்த சீதத்தன்; பையெனக் கவிழ்ந்து நிற்ப - (தான் ஏனையோர்க் கறிவுறுத்தியபடி நாதன் நலங்கிளர் பாதமூலத்தை நினைவானாய்) மெல்லெனத் தலைவணங்கி நின்றானாக அப்பொழுது; மதலை குருமித்துப் பொங்கி கூம்பு இற - மரக்கலம் முழங்கிப் பொங்கி பாய்மரம் முறியும்படி; நிருமித்த வகையின் வல்லே ஓடி - தான் நினைத்த வழியிலே விரைந்து பாய்ந்து; நீர்நிறைந்து உரும் இடித்திட்டது ஒப்ப ஆழ்ந்த போதில் - நீர் நிறைந்து இடி இடித்த தன்மையைப்போல் கடலினுள் அழுந்தியது, அங்ஙனம் அழுந்தியபொழுது; உள்ளார் ஒருங்கு மாய்ந்தார் - அதன்கண் உள்ளவரெல்லாம் ஒருசேர மறைந்தொழிந்தார்.
விளக்கம் : பருமித்தல் - அணிசெய்தல். பையென: குறிப்புமொழி. கவிழ்ந்து நிற்ப என்றது இறைவனைத் தலைவணங்கி நினைந்து நின்றான் என்றவாறு. குருமித்தல் - முழங்குதல். நிருமித்தல் - நினைத்தல். ( 20 )
வேறு
513. ஓம்பிப் படைத்த பொருளும்முறு காதலாரும்
வேம்புற்ற முந்நீர் விழுங்கவ்விரை யாது நின்றான்
கூம்பிற்ற துண்டந் தழுவிக்கிடந் தான்கொ ழித்துத்
தேம்பெற்ற பைந்தா ரவனைத்திரை யுய்த்த தன்றே.
பொருள் : ஓம்பிப் படைத்த பொருளும் உறு காதலாரும் - பாவத்தை நீக்கித் திரட்டிய செல்வத்தையும் உற்ற அன்புடையாரையும்; வேம்பு உற்ற முந்நீர் விழுங்க - உவர்ப்பினையுடைய கடல்நீர் விழுங்கவும்; விரையாது நின்றான் - கலங்காமல் நின்றவன்; கூம்பு இற்ற துண்டம் தழுவிக் கிடந்தான் - கூம்பு ஒடிந்த துண்டம் ஒன்றைப் பற்றிக் கிடந்தான்; தேன் பெற்ற பைந்தார் அவனைத் திரை கொழித்து உய்த்தது - தேன் பொருந்திய புதிய மாலையினனாகிய அவனை அலை கொழித்துக் கரையிலே சேர்த்தது.
விளக்கம் : அன்று, ஏ: அசைகள். தீவினை செய்யாமல் அறத்தாற்றின் ஈட்டிய பொருள் என்பார் ஓம்பிப் படைத்த பொருள் என்றார். ஓம்புதலாவது,
வடுவஞ்சி வாய்மொழிந்து
தமவும் பிறவும் ஒப்பநாடிக்
கொள்வதூஉ மிகைகொளாது
கொடுப்பதூஉம் குறைகொடாது (பட். 208 - 211)
வாணிகஞ் செய்தல் என்க. சீதத்தன் தான் கூறியதற்கிணங்கவே இடுக்கணழியாது நின்றான் என்பார் விரையாது நின்றான் என்றார். ( 21 )
514. நாவா யிழந்து நடுவாருமி
லியாம நீந்திப்
போவாய் தமியே பொருளைப் பொரு
ளென்று கொண்டாய்
வீவா யெனமுன் படையாய்படைத்
தாய்வி னையென்
பாவா யெனப்போய்ப் படுவெண்மணற்
றிட்டை சேர்ந்தான்.
பொருள் : வினை என் பாவாய் - வினையென்னும் பாவையே!; பொருளைப் பொருள் என்று கொண்டாய் வீவாய் என முன் படையாய் - பொருளீட்டலையே பொருளாகக் கொண்ட நீ இறந்து போவாய் என்று முன்னரே படையாமல் விட்டாய்; நாவாய் இழந்து யாரும்இல் நடு யாமம் நீந்தித் தமியே போவாய் எனப் படைத்தாய் - மரக்கலத்தை இழந்து யாரும் இல்லாத நள்ளிரவிலே கடலை நீந்தித் தனியே போவாய் என்று படைத்தனையே; எனப் போய்ப் படு வெண்மணல் திட்டை சேர்ந்தான் - என்று கூறியவாறே சென்று கூடிய வெண்மணல் மேட்டை அடைந்தான்.
விளக்கம் : என என்பதனை இரண்டிடத்துங் கூட்டுக. இதனானும் ஆசிரியர் சீதத்தனின் மெய்யுணர்ச்சியையே வெளிப்படுத்துதல் அறிக. என்னை? ஊழான் வருவனவற்றை ஏற்று நுகர்ந்த இஃது ஊழ்வினைப்பயன் என்று கோடலே மெய்யுணர்வோர் செயலாதலான் என்க. ஆசிரியர் இச் சீதத்தன் சொற்செயல்களானே வெளிப்படுத்தும் பொருள் மிக இனியன. ( 22 )
வேறு
515. பொரியரை ஞாழலும் புன்னையும் பூத்து
வரிதரு வண்டொடு தேனின மார்க்குந்
திருவிரி பூம்பொழிற் செவ்வனஞ் சேர்ந்தாங்
கருவரை மார்ப னவலித் திருந்தான்.
பொருள் : பொரிஅரை ஞாழலும் புன்னையும் பூத்து - பொரிந்த அடிமரத்தையுடைய புலிநகக் கொன்றையும் புன்னையும் மலர்ந்து; வரிதரு வண்டொடு தேனினம் ஆர்க்கும்- இசையைத் தரும் வண்டின் திரளும் தேனின் திரளும் முரல்கின்ற; திரு விரி பூம்பொழில் - அழகு மலர்ந்த மலர்ப் பொழிலிலே; அருவரை மார்பன் செவ்வனம் சேர்ந்து - அரிய மலையனைய மார்பன் நேரே சென்று; ஆங்கு அவலித் திருந்தான் - அங்கே வருத்தத்துடன் இருந்தான்.
விளக்கம் : செவ்வனம் : அம் : அசை. பொரியரை : வினைத்தொகை. ஞாழல் - புலிநகக் கொன்றை. வண்டு, தேன் என்பன வண்டின் வகை. திரு - அழகு
516. ஓடுந் திரைக ளுதைப்ப வுருண்டுருண்
டாடு மலவனை யன்ன மருள்செய
நீடிய நெய்தலங் கான னெடுந்தகை
வாடி யிருந்தான் வருங்கல நோக்கா.
பொருள் : நீடிய நெய்தல் அம் கானல் - பரவிய நெய்தல் நிலத்திற் கடற்கரையிலே; ஓடும் திரைகள் உதைப்ப உருண்டு உருண்டு ஆடும் அலவனை - ஓடுகின்ற அலைகள் தள்ள உருண்டு உருண்டு அலையும் நண்டினை; அன்னம் அருள் செய - அன்னம் ஆதரிக்க; நெடுந்தகை வருங்கலம் நோக்கா வாடி இருந்தனன் - நெடுந்தகையான சீதத்தன் அதனை நன்னிமித்தமாக நினைந்து, தனக்கு ஆதரவாக ஏதாயினும் கலம் வருமென்று நோக்கியவாறு வாடியிருந்தான்.
விளக்கம் : அன்னம் கொல்லாதிருந்த தன்மை, தான் பற்றுக் கோடாக வாழ்வாரைக் காலான் உதைத்துக் கடல் நம்முன்னே தள்ளவும் போக்கற்றுப் பின்னும் அதனிடத்தே செல்லாநின்ற தென்று நோக்கி அதற்கு அருளினாற் போலேயிருந்தது. அலைகள் பழவினையாகவும் அலவன் தானுமாய் அதனை அருள் செய்த அன்னத்தை இனித் தனக்குண்டாகும் ஆகூழாகவும் மதித்து அவ்வன்னம் போலத் தன்னைக் காப்பாற்ற ஒரோவழி மரக்கலம் ஏதேனும் வருவதோ என்று எதிர்பார்த்திருந்தான் என்பது கருந்து. ( 24 )
517. ஆளிய மொய்ம்ப னிருந்தவப் பூம்பொழிற்
றாள்வலி யானொர் மகனைத் தலைப்பட்டுக்
கேளி ரெனக்குற்ற கேண்மின் னீரெனத்
தோள்வலி மிக்கான் றொடர்ந்துரைக் கின்றான்.
பொருள் : ஆளிஅ மொய்ம்பன் தோள்வலி மிக்கான் - ஆளி போன்ற வலிமையாளனாகிய தோளாற்றல்மிக்க சீதத்தன்; இருந்த அப் பூம்பொழில் - இருந்த அந்தப் பூங்காவிலே; தாள் வலியான் ஓர் மகனைத் தலைப்பட்டு - முயற்சியுடையானாகிய ஒருவனைக் கண்டு; கேளிர்! எனக்கு உற்ற நீர் கேண்மின் என - கேளிரே! எனக்கு நேர்ந்த துன்பங்களை நீர் கேட்பீராக என்று; தொடர்ந்து உரைக்கின்றான் - இடைவிடாமற் கூறுகிறான்.
விளக்கம் : தாள்வலியான் : தரன் என்னுங் கந்தருவன். அவனே இவனை நாடிவந்தான். ஆய : அ : அசைநிலை. சுட்டும் ஆம் இடுக்கணழியாமை கருதி ஆளி மொய்ம்பன் என்றும் தோள்வலிமிக்கான் என்றும் கூறினார். தாள் - முயற்சி. ஓர் மகனைத் தலைப்பட்டு என்பது அவன் நினைத்தவாறே தன் ஆகூழ் கொணர ஆண்டுவந்த ஒருவனைத் தலைப்பட்டென்பதுபட நின்றது. கேளிர் : விளி. நண்பீர் என்று விளித்தபடியாம்.
518. கருங்கடற் போயிற்றுங் காற்றிற் கவிழ்ந்து
திருந்திய தன்பொருள் தீதுற்ற வாறும்
அரும்புணை சார்வா அவண் உய்ந்த வாறும்
இருந்தவற் கெல்லாம் எடுத்து மொழிந்தான்.
பொருள் : கருங் கடல் போயிற்றும் - கரிய கடலிலே பொருள் தேடப் போனதையும்; காற்றில் கவிழ்ந்து திருந்திய தன் பொருள் தீது உற்ற ஆறும் - கலம் காற்றிலே கவிழ்ந்து நல்வழியில் ஈட்டிய தன் பொருள் கெட்டதையும்; அரும்புணை சார்வா அவண் உய்ந்த ஆறும் - அரிய கூம்புத் துண்டமாகிய தெப்பம் ஆதரவாக அங்கே வந்ததையும்; எல்லாம் - யாவற்றையும்; இருந்தவற்கு - அங்கேயிருந்த தரனுக்கு; எடுத்து மொழிந்தான் - தெளிவாக விளம்பினான்.
விளக்கம் : தீதுறத் தகாத பொருள் என்பார் திருந்திய பொருள் என்றார். கவிழ்ந்து என்னும் செய்தெனெச்சத்தைக் கவிழ எனச் செயவெனெச்சமாக்குக. எதிர்பாராமற் கிடைத்த புணை ஆகலின் அரும்புணை எனப்பட்டது. இருந்தவன் - தரன்: வினையாலணையும் பெயர். ( 26 )
519. மானும் மரனும் இரங்க மதவலி
தானுற்ற துன்பந் தரனுக் குரைத்தபின்
றேனு மமிழ்துந் திளைத்தாங் கினியன
வூனமில் கட்டுரைக் குள்ளங் குளிர்ந்தான்.
பொருள் : மதவலி மானும் மரனும் இரங்க - சீதத்தன், விலங்கும் மரமும் இரக்கமுறுமாறு; தரனுக்குத் தான் உற்ற துன்பம் உரைத்தபின் - தரனுக்குத் தான் அடைந்த துன்பத்தை உரைத்த பிறகு; தேனும் அமிழ்தும் திளைத்த ஆங்கு இனியன - தேனும் அமிழ்தமும் நீங்காற் பெறாற்போல இனியவாகிய; ஊனம் இல் கட்டுரைக்கு உள்ளம் குளிர்ந்தான் - குற்றமற்ற (தரனுடைய) உறுதி மொழிக்கு அகம் குளிர்ந்தான்.
விளக்கம் : அக் கட்டுரை அடுத்த செய்யுளிற் கூறப்படுவது. ஊனமில் கட்டுரை என்பதனை, அத் துன்பத்திற்கெல்லாம் கழுவாயாக நின்னைப் பெற்றேனே என்று சீதத்தனே கூறுவதாக ஆக்குவர் நச்சினார்க்கினியர். உரைத்தலின் என்ற பாடத்திற்குத் தரன் கூறியதற்குச் சீதத்தன் மகிழ்ந்தான் என்று கொள்வதால் அவருக்கும் இவ்வாறு கூறுதல் உடன்பாடாமாறு காண்க. மதவலி : அன்மொழித்
தொகை; ஈண்டுச் சீதத்தன் என்க.
520. விஞ்சைகள் வல்லேன் விளிந்தநின் றோழரொ
டெஞ்சிய வான்பொரு ளெல்லா மிமைப்பினுள்
வஞ்சமொன் றின்றி மறித்தே தருகுவன்
னெஞ்சிற் குழைந்து நினையன்மி னென்றான்.
பொருள் : விஞ்சைகள் வல்லேன் - யான் பலவிஞ்சையினும் வன்மையுடையேன்; விளிந்த நின் தோழரொடு எஞ்சிய வான் பொருள் எல்லாம் - மடிந்த நின் நண்பருடன் கெட்டுப்போன சிறந்த பொருள்கள் எல்லாவற்றையும்: வஞ்சம் ஒன்று இன்றி இமைப்பினுள் மறித்தே தருகுவன் - வஞ்சனை சிறிதும் இல்லாமல் ஒரு நொடியிலே திரும்பக் கிடைக்குமாறு தருவேன்; நெஞ்சில் குழைந்து நினையன்மின் என்றான் - உள்ளத்திற் கலங்கி நினையாதீர் என்று தரன் கட்டுரை கூறினான்.
விளக்கம் : நின் தோழரோடு என ஒருமையாகவும், நினையன்மின் எனப் பன்மையாகவும் கூறியதால் இஃது ஒருமை பன்மை மயக்கம். நினையன்மின் என்றது ஒருவரைக் கூறும் பன்மை. விஞ்சை - வித்தை. எஞ்சிய - கழிந்த. வான்பொருள்- அறத்தாற்றின் ஈட்டிய பொருள் ( 28 )
521. உரையகங் கொள்ள வுணர்த்தின னாகி
வரையக மேற வலிமின மென்னா
விரைசெலல் வெம்பரி மேழக மேற்றிக்
குரைகழன் மைந்தனைக் கொண்டு பறந்தான்.
பொருள் : உரை அகம் கொள்ள உணர்த்தினன் ஆகி - (தருகுவன் என்ற) உரையைச் சீதத்தன் மனம் ஒப்புமாறு உணர்த்தியவனாய்; வரையகம் ஏற வலிமின் என்னா - இம்மலைமீது செல்ல மனத் துணிவு கொள்வீராக என்றுகூறி; விரைசெலல் வெம்பரி மேழகம் ஏற்றி - விரைந்த செலவையுடைய விரும்பத்தக்க பரியைப்போன்ற ஆட்டுக் கடாவின்மேல் ஏற்றி; குரைகழல் மைந்தனைக் கொண்டு பறந்தான் - ஒலிக்குங் கழலணிந்த சீதத்தனைக் கைக்கொண்டு வான்வழியே பறந்தான்.
விளக்கம் : வலிமினம், அம் : அசை. வெம்பரி விரைசெலல்மேழகம் என மாறிக் குதிரைபோன்ற விரைந்த செலவையுடை மேழகம் எனினுமாம். மேழகம் - ஆட்டுக்கடா ( 29 )
522. விசும்பிவர் மேகம் விரைவினர் போழ்ந்து
பகும்புயற் றண்டுளி பக்க நனைப்ப
நயந்தனர் போகி நறுமலர்ச் சோலை
யசும்பிவர் சார லருவரை சார்ந்தார்.
பொருள் : பசும்புயல் தண்துளி பக்கம் நனைப்ப - கரிய முகிலின் தண்ணிய நீர்த்துளி தம் மருங்கை நனைக்குமாறு; விசும்பு இவர் மேகம் விரைவினர் போழ்ந்து - வானில் ஏறும் முகிலினூடே விரைந்து அதனைப் பிளந்துகொண்டு; நயந்தனர் போகி - விருப்பத்துடன் சென்று; நறுமலர்ச் சோலை அசும்பு இவர் சாரல் அருவரை சார்ந்தார் - நறிய மலர்க்காவினையும் நீர்ப் பொசிவுடைய சாரலையும் உடைய மலையை அடைந்தனர்.
விளக்கம் : விரைவினர், நயந்தனர்: முற்றெச்சங்கள். அசும்பு - நீர்க்கசிவு. ( 30 )
523. கண்டா லினியன காண்டற் கரியன
தண்டா மரையவ டாழுந் தகையன
கொண்டான் கொழுங்கனி கோட்டிடைத் தூங்குவ
வுண்டா னமிழ்தொத் துடம்பு குளிர்ந்தான்.
பொருள் : கண்டால் இனியன - கண்டால் இனிமை தருவனவாயும்; காண்டற்கு அரியன - (ஆனாற்) காண்பதற்கு அரியனவாயும்; தண்டாமரையவள் தாழும் தகையன - குளிர்ந்த தாமரையில் வாழ்பவளான திருமகளும் விரும்பும் பெருமையுடையனவாயும்; கோட்டிடைத் தூங்குவ கொழுங்களி - மரக்கொம்புகளிலே தொங்குவனவாகிய வளமிகுங் கனிகளை; கொண்டான் உண்டான் - சீதத்தன் பறித்துத் தின்றான்; அமிழ்து ஒத்து உடம்பு குளிர்ந்தான் - அமிழ்தம் உண்டவன்போல மெய்குளிர்ந்தான்.
விளக்கம் : கண்டால் இனியன என்றது காட்சி மாத்திரையானே இன்பந்தரும் எழிலுடையனவாகவும் என்றவாறு. காண்டற்கரியன - இவ்விச்சாதரர் நாட்டிலன்றி இவ்வுலகிற் காண்டற் கியலாதனவாகவும் என்றவாறு. அருமை ஈண்டு இன்மை மேற்று. தாழும் - விரும்பும். தூங்குவ - பலவறிசொல்; தூங்குவ கொண்டான் என மாறுக. ( 31 )
524. மழை தவழ் சோலை மலைமிசை நீண்ட
குழைதவழ் குங்குமங் கோழரை நாகந்
தழைதவழ் சந்தனச் சோலையி னோக்கி
யிழைதவழ் மார்ப னினிதி னுவந்தான்.
பொருள் : இழை தவழ் மார்பன்- அணிகலன் பரவிய மார்பனான சீதத்தன்; மழைதவழ் சோலை மலைமிசை - முகில் பரவும் சோலைகளையுடைய அம் மலையின்மேல்; நீண்ட குழை தவழ் குங்குமம் - நீண்ட தளிர் பரவிய குங்கும மரங்களையும்; கோழ் அரை நாகம் - வளமிகும் அடிமரத்தையுடைய சுரபுன்னை மரங்களையும்; தழைதவழ் சந்தனச் சோலையின் நோக்கி - தழை
கள் பரவிய சந்தனச் சோலையுடன் பார்த்து; இனி தின் உவந்தான் - இனிமையாலே மனம் மகிழ்ந்தான்.
விளக்கம் : இதனால், சீதத்தன் கலையுணர்ச்சி உடையனாதல் கூறப்பட்டது. ( 32 )
525. கோதை யருவிக் குளிர்வரை மேனின்று
காதங் கடந்தபின் கன்னிக் கொடிமதி
னாத னுறைவதோர் நன்னக ருண்டங்குப்
போது மெழுகெனப் போயினர் சார்ந்தார்.
பொருள் : கோதை அருவிக் குளிர்வரைமேல் நின்று - மலர்மாலைபோல ஒழுகும் அருவியையுடைய குளிர்ந்த மலைமேலிருந்து; காதம் கடந்தபின் - காதவழி சென்றால்; கன்னிக் கொடிமதில் நாதன் உறைவது ஓர் நலநகர் உண்டு - அழிவற்ற கொடியையுடைய மதில் சூழ்ந்த இறைவன் வாழும் ஓர் அழகிய கோயில் உண்டு; அங்குப் போதும் எழுக என - அங்கே செல்வோம் எழுக என்று கூற; போயினர் சார்ந்தார் - அங்கே சென்று அடைந்தார்.
விளக்கம் : முன் வரையளவு என்றான். ஆதலால், இப்போது நன்னகரைக் காணப்போதும் என மேலுங் கூறினான். நகர் எனவே அருகன் கோயில் என்று சீதத்தன் கருதியதாக நச்சினார்க்கினியர் உரைப்பர். கோதை யருவி - கோதை போன்ற அருவி, குளிர்வரை: வினைத்தொகை. அவன் விரும்பி வருதற்பொருட்டு அரசன் என்னாது நாதன் கோயில் என்றான். நாதன் கோயில் என்றது இறைவன் திருக்கோயிலையும் குறிக்குமாகலின் என்க. போதும்: தன்மைப் பன்மை. கன்னிமதில் கொடிமதில் எனத் தனித்தனிக் கூட்டுக ( 33 )
வேறு
526. மேகமே மிடைந்து தாழ
விருள்கொண்ட வெள்ளிக் குன்ற
மாகத்து விளங்கித் தோன்றும்
வனப்புநாம் வகுக்க லுற்றா
னாகந்தான் கரிய தொன்று
கீழ்நின்று நடுங்கக் கவ்விப்
பாகமே விழுங்கப் பட்ட
பான்மதி போன்ற தன்றே.
பொருள் : தாழ மேகமே மிடைந்து இருள்கொண்ட வெள்ளிக் குன்றம் - தாழ்வரை யெல்லாம் மேகமே நெருங்கி இருண்ட அவ்வெள்ளிமலை; மாகத்து விளங்கித் தோன்றும் வனப்பு நாம் வகுக்கல் உற்றால் - வானத்திலே விளக்கமாகத் தோன்றும் அழகை நாம் விளக்கிக் கூறத் தொடங்கினால்; தான் கரியது ஒன்று நாகம் கீழ்நின்று நடுங்கக் கல்வி - தான் நிறம் கரியதாகிய ஒரு பாம்பு கீழே நின்று நடுங்குமாறு பற்றி; பாகமே விழுங்கப்பட்ட பால்மதி போன்றதே - பாதியே விழுங்கப்பெற்ற வெண்மதியைப் போன்றது என்று கூறலாம்.
விளக்கம் : அன்று : அசை. ஏ : தேற்றம். அடிப்பகுதி முகிலாற் சூழப்பட்டுள்ள வெள்ளி மலைக்குத் தேவர் கூறும் உவமை மிகவும் இனிதாதலுணர்க. மாகம் - விசும்பு. கரியதொன்று என்றது இராகுக்கோளினை. அம்மலை மேக மண்டலத்தையும் கடந்து உயர்ந்து நிற்றலால், பாகமே விழுங்கப்பட்ட மதி என்றார். பாகம் - பாதி கூறலாம் வேறு அரிது என்பது எச்சப்பொருள். ( 34 )
527 துளங்குபொன் னகரின் றன்மை
சொல்லலாஞ் சிறிதோர் தேவன்
விளங்குபொன் னுலகத் துள்ள
துப்புர விடங்க ளெல்லா
மளந்துகொண் டின்பம் பூரித்
தணிநக ராக்கி மேலா
லிளங்கதிர்ப் பருதி சூட்டி
யியற்றிய தென்ன லாமே.
பொருள் : துளங்கு பொன் நகரின் தன்மை சிறிது சொல்லலாம் - ஒளிவிடும் பொன் நகரின் இயல்பை நாம் சிறிதே கூற முடியும்; விளங்கு பொன் உலகத்து உள்ள துப்புரவு இடங்கள் எல்லாம் - விளக்கமான பொன் உலகிலே உள்ள நுகர் பொருள் நிறைந்த இடங்களையெல்லாம்; அளந்து கொண்டு இன்பம் பூரித்து அணிநகர் ஆக்கி - அளந்துகொண்டு வந்து இன்பத்தை நிறைவித்து அழகிய நகரம் ஆக்கி; மேலால் இளங்கதிர்ப் பருதிசூட்டி - மதியனைய அம்மலையின் தலையிலே இளமையான கதிரையுடைய ஞாயிற்றை மதிலாக அமைத்து; ஓர் தேவன் இயற்றியது என்னலாம் - ஒரு வானவன் நிறுவியது என்று கூறலாம்.
விளக்கம் : பருதி - வட்டம் : மதிலுக்கானமையின் பண்பாகுபெயர். இங்குக் கூறியது பொன்மதில் - அத்தேர்ப் பருதி சுமந்து எழுந்த யானை (களவழி - 4) என்றார் பிறரும். மானிடராகிய நம்மனோர் அந்நகரின் தன்மையை முற்றக் கூறுதல் இயலாது ஆயினும் எம்மறிவிற் கொடியவாறு கூறுவேம் என்பார். நகரின் தன்மை சிறிது சொல்லலாம் என்றார். துப்புரவு - நுகர்பொருள்.
பூரித்து - நிரப்பி. ஒரு தேவன் என்றது தான் கருதியதனைக் கருதியபடியே இயற்றவல்ல ஒரு தேவன் என்பதுபட நின்றது. ( 35 )
வேறு
528. பொங்கி யாயிரந் தாமரை பூத்தபோற்
செங்க ணாயிரஞ் சேர்ந்தவன் பொன்னகர்
கொங்கு தோய்குழ லாரொடுங் குன்றின்மேற்
றங்கு கின்றது போற்றகை சான்றதே.
பொருள் : தாமரை பொங்கி ஆயிரம் பூத்த போல் - தாமரை மிக்கு ஆயிரம் தாமரைப் பூக்களைப் பூத்தன போல; ஆயிரம் செங்கண் சேர்ந்தவன் பொன் நகர் - ஆயிரம் அழகிய கண்கள் பொருந்திய இந்திரனுடைய அமராவதி; கொங்குதோய்குழலாரொடும் - மணங் கமழுங் கூந்தலையுடைய அரம்பையரோடும்; குன்றின்மேல் தங்குகின்றது போல் - இவ்வெள்ளிக் குன்றின் மேல் தங்கியிருப்பது போன்ற; தகை சான்றது - அழகு பொருந்தியது.
விளக்கம் : தாமரை பொங்கி ஆயிரம் பூத்தபோல் என மாறுக. கண் ஆயிரஞ்சேர்ந்தவன் - தேவேந்திரன். நகர் என்றது - அமராவதியினை. குழலார் - ஈண்டுத் தேவமகளிர். ( 36 )
529. கிடங்கு சூழ்மதிற் கேழ்கிளர் பூங்கொடி
மடங்க னோக்கியர் வாண்முகம் போலுமென்
றுடங்கு வெண்மதி யுள்குளி ரத்தங்
குடங்கை யாற்கொம்மை கொட்டுவ போன்றவே.
பொருள் : கிடங்கு சூழ்மதில் கேழ்கிளர் பூங்கொடி - அகழிசூழ்ந்த மதிலில் இருக்கும் நிறம் விளங்கிய அழகிய கொடிகள்; வெண்மதி - வெண்மதியைத் (தடவுதல்); மடங்கல் நோக்கியர் வாள் முகம்போலும் என்று - (அம்மதி) சிங்கப் பார்வையையுடைய மங்கையரின் ஒளிரும் முகம்போலும் என்று கருதி; உடங்கு உள்குளிர - முற்றும் உள்ளங் குளிர; தம் குடங்கையால் கொம்மை கொட்டுவ போன்ற - தம்முடைய உள்ளங்கையினாலே அம்மதியின் புறத்தை (நீ மங்கையர் முகம் ஒப்பை! நல்லை! நல்லை!! என்று கூறி) தட்டுவன போன்றிருந்தன.
விளக்கம் : பூங்கொடி - அழகிய கொடி. மடங்கல் - அரிமா. அரிமா நோக்குமாறு முன்னும் பின்னும் நோக்கும் இயல்புடைய மகளிர் என்றவாறு. தம - அகரம். ஆறாவதன் பன்மையுருபு. கொம்மை - புறம் மதிலில் உயர்த்திய கொடிகள் வானுற உயர்ந்துநின்று ஆடின என்பது கருத்து.
530. திருவ மேகலை தெள்ளரிக் கிண்கிணி
பரவை யாழ்குழல் பண்ணமை மென்முழா
வுருவம் யாருடை யாரென் றொளிர் நக
ரரவ வாய்திறந் தார்ப்பது போன்றதே.
பொருள் : ஒளிர் நகர் - விளக்கமிகும் அந் நகரில்; திருமேகலை தெள் அரிக் கிண்கிணி பரவை யாழ் பண்அமை குழல் மென் முழா அரவம் - பெண்களின் அழகிய மேகலை, தெளிந்த ஓசையுறும் பரல்களையுடைய கிண்கிணி, பேரியாழ், இசை பொருந்திய குழல், முழவு ஆகியவற்றின் ஒலி; உருவம் உடையார் யார் யார் என்று - என்னைப்போன்ற அழகுடையார் யார் என்று; வாய்திறந்து ஆர்ப்பது போன்றது - (அந்நகர்) வாய்திறந்து ஆரவாரிப்பதைப் போன்றது.
விளக்கம் : திருவ : அ : அசை. மகளிர்க்கு ஆகுபெயர். அழகிய மேகலை எனினுமாம். தெள் அரி - ஆராய்ந்திட்ட பரலுமாம். பரவை யாழ் - பேரியாழ். என்னைப் போன்ற என்பது இசையெச்சம். ( 38 )
531 செம்பொன் மாடங்கள் சென்னி யழுத்திய
வம்பொற் றிண்ணிலை யாய்மணித் தூவிகள்
வெம்பு நீள்சுடர் வீழ்ந்து சுடுதலிற்
பைம்பொற் கொப்புள் பரந்தன போன்றவே.
பொருள் : செம்பொன் மாடங்கள் சென்னி அழுத்திய - செம்பொன் மாடங்களின் முடியிலே அழுத்தப் பெற்ற; அம்பொன் திண் நிலை ஆய் மணித் தூவிகள் - அழகிய பொன்னால் திண்மையான நிலைபெறக் கட்டப்பெற்ற, ஆராய்ந்த மணித்தூவிகள்; வெம்பும் நீள்சுடர் வீழ்ந்து சுடுதலின் - ஞாயிற்றின் வெம்மையுடைய நீண்ட கதிர்கள் தங்கிச் சுடுதலினாலே; பைம்பொன் கொப்புள் பரந்தன போன்ற - புதிய பொன் உருகிக்கொப்புளம் பரவின போன்றன.
விளக்கம் : தூவி: மாட வீடுகளின் உச்சியிலே அமைப்பது. தூவிகள் கொப்புள் பரந்தன போன்றன. ஞாயிறு தாழ்ந்து சுடுதலால் என்பர் நச்சினார்க்கினியர், தற்குறிப்பேற்ற வுவமை. ( 39 )
532. உருளி மாமதி யோட்டொழித் தோங்கிய
வெருளி மாடங்கண் மேற்றுயி லெய்தலின்
மருளி மான்பிணை நோக்கினல் லார்முகத்
தருளி னாலழ லாற்றுவ போன்றவே.
பொருள் : உருளிமா மதி ஓட்டு ஒழித்து ஓங்கிய வெருளி மாடங்கள்மேல் துயில் எய்தலின் - ஞாயிற்றின் தேரிற் பூண்ட குதிரைகள் திங்களின் செலவைத் தடுத்து உயர்ந்த வெருட்சியையுடைய மாடங்களின் மேல் தூங்குதலினாலே; மருளி மான்பிணை நோக்கின் நல்லார் முகத்து அருளினால் - மருண்ட மான்பிணையின் பார்வையையுடைய மங்கையரின் முகத்தில் தோன்றிய அருளினால்; அழல் ஆற்றுவ போன்ற - தம் வெம்மையைத் தணித்துக்கொள்வன போன்றன.
விளக்கம் : உருளி, மருளி, வெருளி : இ : பகுதிப் பொருள் விகுதிகள். உருள் மா : ஒற்றையாழித் தேரை இழுக்கும் குதிரைகள். உருள் - ஆழி : தேரை யுணர்த்தலின் சினையாகு பெயர். திங்கள் மண்டலத்தைக் கடந்து ஞாயிற்றின் மண்டலம் வரை மாடங்கள் உயர்ந்தன என்று கூறினார். மிகை உயர்வு நவிற்சியணி. திங்கள் மண்டலம் ஞாயிற்று மண்டலத்திற்குக் கீழேயுள தென்பது சோதிட நூலார் கொள்கையாம். ( 40 )
533. அசும்பு பொன்வரை யாய்மணிப் பூண்களும்
பசும்பொன் மாலையும் பட்டுழிப் பட்டவை
நயந்து கொள்பவ ரின்மையி னன்னகர்
விசும்பு பூத்தது போன்றன வீதியே.
பொருள் : பொன் அசும்பு வரை ஆய்மணிப் பூண்களும் - பொன் இடையறாது ஒழுகும் மலைகளிலுண்டான ஆராய்ந்த மணியாற் செய்த அணிகலன்களும்; பசும்பொன் மாலையும் - புதிய பொன் மாலையும்; பட்டுழிப் பட்டவை நயந்து கொள்பவர் இன்மையின் - விழுந்த இடத்தே கிடக்கின்றவற்றை விரும்பி எடுப்பாரின்மையின்; நன்நகர் வீதி விசும்பு பூத்தது போன்றன - அந்த நன்னகரின் தெருக்கள் வானம் மீன்களைப் பூத்த தன்மையை ஒத்தன.
விளக்கம் : நயந்து கொள்பவர் இன்மையின் என்றது அந்நகரத்தில் நல்குரவாளர் இல்லை என்றதற்குக் குறிப்பேதுவாய் நின்றது. (41)
534. தேக்க ணின்னகிற் றேனொடு கூட்டமைத்
தாக்கப் பட்ட வளவில் கொழும்புகை
வீக்கி மாடந் திறந்திட மெல்லவே
வூக்கி வாய்விட் டுயிர்ப்பன போன்றவே.
பொருள் : தேம் கண் இன் அகில் தேனொடு கூட்டு அமைத்து - நெய்யைத் தன்னிடத்தே உடைய மணமினிய அகிலையும் மற்றைய கூட்டுக்களையும் தேனொடு கலந்திட்டு; ஆக்கப்பட்ட அளவு இல் கொழும் புகை - உண்டாக்கப்பட்ட அளவற் புகையை; வீக்கி மாடம் திறந்திட - மாடங்களிற் சாளரங்களை அடைத்து நிறைத்து அவற்றைத் திறக்க; ஊக்கி வாய்விட்டு மெல்ல உயிர்ப்பன போன்ற - அம்மாடங்கள் புகையைப் பொறுக்க மாட்டாது வலிய வாயைத் திறந்து மெல்லென உமிழ்வன போன்றன.
விளக்கம் : கூட்டாவன : நேர்கட்டி செந்தேன் நிரியாசம் கர்ப்பூரம் - ஆரம்... ஐந்து நிரியாசம் - பிசின். அது குங்குலியம் முதலியன - என்பர் நச்சினார்க்கினியர். நேர்கட்டி செந்தேன் நிரியாசம் பச்சிலை - ஆரம் அகிலுறுப்போராறு என்பர் அடியார்க்கு நல்லார் (சிலப். 5-14) தேம்கண் : தேக்கண் என வலித்து நின்றது. தேம்-தேன்; நெய். திறந்திட என்றதனால் முன்னர் அப்புகையை அடைத்து வைத்துத் தேக்கினர் என்பதுணரலாம் : வீக்குதல் - தேக்குதல். இது மாடம் மண முடையதாதற்பொருட்டு. இதன் கண் கூறப்படும் உவமை இனிது. ( 42 )
535. தப்பில் வாய்மொழித் தானவர் வைகிய
வொப்பின் மாநக ரொண்மைமற் றியாதெனிற்
கப்பத் திந்திரன் காமுறு மாமணிச்
செப்பு வாய்திறந் தன்னதொர் செம்மற்றே.
பொருள் : தப்பு இல் வாய்மொழித் தானவர் வைகிய ஒப்பு இல் மாநகர் ஒண்மை மற்று யாது எனில் - குற்றமற்ற வாய்மொழியை உடைய வித்தியாதரர் வாழ்கின்ற உவமையில்லாத அப் பெருநகரின் விளக்கம் மற்றும் எங்ஙன மிருந்ததெனில்; கப்பத்து இந்திரன் காமுறும் மாமணிச் செப்பு - இவ்வூழிக்குரிய இந்திரன் விரும்பிய பூண்தங்கும் மாமணிச் செப்பு; வாய்திறந்து அன்னது ஓர் செம்மற்று - வாய்திறந்தாற் போலுந் தலைமையினை உடையது எனலாம்.
விளக்கம் : கற்பம் : கப்பம் எனத் திரிந்தது : தற்பவம். தானவர் - வித்தியாதரர். ஒண்மை - விளக்கம். செம்மற்று - தலைமையினையுடையது. என்னலாம் என்பது இசையெச்சம். ( 43 )
வேறு
536. நன்னகர் நோக்கி நாய்கன்
நாகங்கொல் புகுந்த தென்னப்
பொன்னகர் பொலியப் புக்குப்
பொங்குமா மழைக டங்கு
மின்னவிர் செம்பொன் மாடத்
திருவரு மிழிந்து புக்குப்
பின்னவன் விருந்து பேணிப்
பேசினன் பிறங்கு தாரான்.
பொருள் : நாய்கன் நல்நகர் நோக்கி - சீதத்தன் அந்த அழகிய நகரைப் பார்த்து; நாகம் கொல் புகுந்தது! என்ன - நாகர் நகரோ நாம் நெருங்கியது என்று கருதி; பொன் நகர் பொலியப் புக்கு - அப் பொன் னகர் விளங்கப் புகுந்து; பொங்கும் மா மழைகள் தங்கும் மின் அவிர் செம் பொன் மாடத்து - கிளரும் பெருமுகில்கள் தங்கும் ஒளிவிடும் தரனுடைய பொன்மாடத்திலே; இருவரும் இழிந்து புக்கு - தரனும் சீதத்தனும் (வானிலிருந்து) இறங்கிப் புகுந்தபோது: பிறங்குதாரான் அவன் விருந்து பேணிப் பின் பேசினன் - விளங்கும் மாலையணிந்த தரன் சீதத்தனுக்கு விருந்தளித்து ஓம்பிப் பிறகு ஒரு மொழி உரைத்தான்.
விளக்கம் : வித்தியாதர நகரிலே உள்ள மாடமாகையால் தரன் மனையென்றும், அவன் நகராகையால் விருந்து பேணினன் தரனென்றுங் கொள்ளப்பட்டன. மழைதங்கும் இருவர் என இயைத்துத், தரன் கதியால் மழையில் தங்கினான் என்றும், சீதத்தன் கொடையால் தங்கினான் என்றும் விளக்கங் கூறுவர் நச்சினார்க்கினியர். மற்றும், இனி வெள்ளி மலை மேகபதத்திற்கு மேலென்றாரேனும் மேகம் எங்கும் உளதென்று வைத்து, மழைகள் தங்கும் மாடம் என்றுமாம் எனவும் பொருள் கூறுவர். அவர், அண்மையிலே உள்ள சொல்லுடன் பொருந்தா வழியன்றே சேய்மைச் சொல்லுடன் இசைத்தல் வேண்டும்; எனவே, மழைகள் தங்கும் மாடம் என இசைப்பதே பொருத்தம். ( 44 )
537. மாடியந் தானை மன்னர் மாமணி நாக மாகக்
கேடில்சீர்க் கலுழனாய கலுழவே கற்குத் தேவி
தோடலர் கோதைத் தொல்சீர்த் தாரணி சுரும்புண் கண்ணி
யாடவ ரறிவு போழு மணிமுலை யணங்கி னன்னாள்.
பொருள் : மாடியம் தானை மன்னர் மா மணி நாகம் ஆக - மாடியம் என்னும் கவசத்தை அணிந்த படை வேந்தர் பெருமணியை உடைய நாகங்களாகவும்; கேடு இல் சீர் கழலுன் ஆயகலுழ வேகற்குத் தேவி-கெடுதல் அற்ற புகழையுடைய கருடன் தானாக அமைந்த கலுழ வேகனுக்கு மனைவி; தோடு அலர் கோதை தொல்சீர் தாரணி-இதழ் விரிந்த பூமாலை யுடைய பழம் புகழையுடைய தாரணி என்பவள்; சுரும்பு உண் கண்ணி - வண்டுகள் தேனைப்பருகும் கண்ணியையும்; ஆடவர் அறிவு போழும் அணி முலை - ஆடவரின் அறிவைப் பிளக்கும் அழகிய முலையையும் உடைய; அணங்கு அன்னாள் - தெய்வம் போன்றவளாகிய.
விளக்கம் : இப்பாட்டுக் குளகம். அணங்கின் : இன் : சாரியை. மாடியம் - கவசம். கலுழவேகன் - அந்நகரத்து மன்னன். தாரணி என்பவள் என்க. ( 45 )
538. விண்ணகம் வணங்க வெண்கோட்
டிளம்பிறை முளைத்த தேபோற்
பண்ணகத் தினிய சொல்லாள்
பாவையைப் பயந்த ஞான்றே
யெண்ணிட மின்றி மன்ன
ரிம்மலை யிறைகொண் டீண்டி
யண்ணலங் களிற்றி னுச்சி
யருங்கல வெறுக்கை யீந்தார்.
பொருள் : பண் அகத்து இனிய சொல்லாள் பாவையை - பண்ணிலே பொருந்திய இனிய சொல்லா ளாகிய பாவை போன்றவளை; விண்அகம் வணங்க வெண்கோட்டு இளம்பிறை முளைத்ததேபோல் - வானுலகு வணங்குமாறு வெண்மையான கோடுகளையுடைய பிறை தோன்றினாற்போல; பயந்த ஞான்றே - பெற்ற அந்நாளிலேயே; எண் இடம் இன்றி மன்னர் இம் மலை ஈண்டி இறைகொண்டு - எள்ளிடவும் இடமின்றி மன்னரெல்லோரும் இம்மலையிலே கூடித் தங்குதல் கொண்டு; அண்ணல்அம் களிற்றின் உச்சி அருங்கல வெறுக்கை ஈந்தார் - பெருமை மிக்க களிற்றின் மீதிருந்து அரிய கலன்களையும் செல்வத்தையும் ஏற்போர்க் களித்தனர்.
விளக்கம் : மன்னர் வெறுக்கை ஈந்தது அப்பெண் தத்தமக்கே வேண்டும் என்று அதற்கறிகுறியாக என்க. ( 46 )
539. மந்திரத் தரசன் வல்லே நிமித்திகன் வருக என்றாற்
கந்தரத் தோடு கோளின் சாதக மவனுஞ் செய்தா
னிந்திர திருவி லேய்ப்பக் குலவிய புருவத் தாட்கு
வந்தடை பான்மை மண்மேல் இராசமா புரத்த தென்றான்.
பொருள் : மந்திரத்து அரசன் நிமித்தன் வல்லே வருக என்றாற்கு - வித்தியாதர உலகத்து மன்னனாகிய கலுழவேகன் கணியை விரைவில் கொணர்க என்றவனுக்கு; அவனும் அந்தரத்து ஓடு கோளின் சாதகம் செய்தான் - வந்த கணியும்; வானில் ஓடும் கோள்களாலே ஆராய்ந்து சாதகம் எழுதினான்; இந்திர திருவில் ஏய்ப்பக் குலவிய புருவத்தாட்கு - வானவில் போல வளைந்த புருவத்தினாளுக்கு; மண்மேல் இராசமா புரத்து வந்து அடை பான்மை என்றான் - மண்ணுலகில் இராசமா புரத்திலேயே வரவேண்டிய நல்வினைப் பயன் உளது என்றான்.
விளக்கம் : மந்திரம்: ஆகுபெயரால் மந்திரம் வல்ல உலகாகிய வித்தியாதர உலகை உணர்த்தியது. வல்லே - விரைவாக, அந்தரம் - வானம். இந்திரதிருவில் - வானவில். பான்மை - ஈண்டு நல்வினை. புரத்தது - புரத்தின்கண்ணது. எனவே, அந் நல்வினை இவட்கு இராசமாபுரத்தில் இவள் உள்ளாய பொழுது வருவதாம் என்றவாறாயிற்று. ( 47 )
540. அவனுரை தெளிந்து வேந்த
னாசையு ளரசர் நிற்பக்
கவனங்கொள் புரவிக் கொட்பிற்
காதலுங் கரந்து வைத்தா
னவனதே கருதிற் றாங்கொ
லன்றுகொ லறிய லாகா
திவணது மறிது மென்று
கோயிலுக் கேகி னானே.
பொருள் : வேந்தன் அவன் உரை தெளிந்து- கலுழவேகன் கணியின் மொழியை உணர்ந்து; அரசர் ஆசையுள் நிற்ப - அரசர்கள் எமக்குக் கன்னியைத் தருவான் என்ற ஆசையிலே நிற்ப; கவனம் கொள் புரவிக் கொட்பின் காதலும் கரந்து வைத்தான் - கவனச் செலவையுடைய குதிரையின் மனச்சுழற்சி போலத் தன் விருப்பத்தை வெளியிடாது வைத்தான்; அவன் அதே கருதிற்று ஆம் கொல்? அன்று கொல்? அறியலாகாது - அவன் கருதியது கணி கூறியதேயா யிருக்கின்றதோ? அன்றி, அரசர் கருதியதோ? அறிய வியலாது; இவண் அதுவும் அறிதும் என்று - இப்போது அதனையும் அறிவோம் என்று கூறி; கோயிலுக்கு ஏகினானே - (சீதத்தனையும் அழைத்துக்கொண்டு) கலுழ வேகனுடைய அரண்மனைக்குச் சென்றான்.
விளக்கம் : அஃது என்பது அதும் என விகாரப்பட்டது. குதிரையின் கவனமாவது இடமும் வலமும் பாய்தலாகும். முன்னிரண்டடிகளையும் ஒக்கவைத்துப் பாய்ச்சல் என்பர் தக்கயாகப் பரணி உரைகாரர் (தக்க. 103. உரை) இவண் அறிதும் என்றான் இராசமாபுரத்தேயிருந்து சீதத்தன் வந்திருப்பதால். அரசனது கருத்துத் தெள்ளிதின் உணரலாகாமையின் இவனுக்கு உண்மை கூறாது பின்னர் உணர வைத்தான். வேந்தர் என்றது, பிறந்த பொழுதே அவளை விரும்பி வெறுக்கையீந்த அவ் வேந்தர் என்பதுபட நின்றது. அவன் - கணி.
அவனஃதே எனற்பால சுட்டு அவனதே என்று நின்றது. அஃதே - அக் கணி கூறியதனையே. ( 48 )
541. பால்பரந் தன்ன பட்டார் பூவணை பசும்பொற் கட்டிற்
கால்பரந் திருந்த வெங்கட் கதிர்முலை கச்சின் வீக்கி
வேல்பரந் தனைய கண்ணார் வெண்மதிக் கதிர்பெய் கற்றை
போலிவர் கவரி வீச மன்னவ னிருந்த போழ்தின்.
பொருள் : கால் பரந்து இருந்த வெங்கண் கதிர்முலை கச்சின் வீக்கி - அடி பரவியிருந்த விருப்பமூட்டும் கண்களையுடைய ஒளியுறும் முலைகளைக் கச்சினாலே இறுகக் கட்டி; வேல் பரந்த அனைய கண்ணார் - வேல் கொலைத் தன்மையிற் பரவினாற் போன்ற கண்ணினார்; வெண்மதிக் கதிர் பெய்கற்றைபோல் இவர் கவரி வீச - வெண் திங்களின் கதிர்களைச் சொரிந்தாற் போன்று அசையா நின்ற கவரியை வீச; பால் பரந்த அன்னபட்டு ஆர் பூ அணை பசும் பொன் கட்டில் - பாலாவி பரவினாற் போன்ற பட்டுப் போர்த்த மலரணை யுடைய பசும் பொன் கட்டிலிலே; மன்னவன் இருந்த போழ்தில் - கலுழவேகன் அமர்ந்திருந்தபோது,
விளக்கம் : இப் பாட்டுக் குளகம். ( 49 )
542. என்வர விசைக்க வென்ன
வாயிலோ னிசைப்ப வேகி
மன்னர்தம் முடிகள் வேய்ந்த
வயிரம்போழ்ந் துழுது சேந்த
பொன்னவிர் கழல்கொள் பாதம்
பொழிமழைத் தடக்கை கூப்ப
வின்னுரை முகமன் கூறித்
தானத்தி லிருக்க வென்றான்.
பொருள் : என் வரவு இசைக்க என்ன - சீதத்தனுடன் வந்த என் வருகையைக் கூறுக என்று தரன் கூற; வாயிலோன் இசைப்ப - வாயிற் காவலன் அரசனிடம் ஆணை பெற்று வந்து கூற; ஏகி - தரன் சென்று; மன்னர் தம் முடிகள் வேய்ந்த வயிரம் போழ்ந்து உழுது சேந்த - அரசர்கள் தங்கள் முடிகளிலே அணிந்த வயிரங்கள் கீறி உழுதலிலே சிவந்த; பொன் அவிர் கழல் கொள் பாதம் - பொன் விளங்கும் கழலணிந்த அடிகளிலே; பொழி மழைத் தடக்கை கூப்ப - பெய்யும் முகிலனைய பெரிய கைகளைக் குவிக்க; இன் உரை முகமன் கூறி - (மன்னவன்) இனிய உரையாலே முகமன் மொழிந்து; தானத்தில் இருக்க என்றான் - அரசர்க்குரிய இடத்திலே இருக்க என்று (இருவரையும்) கூறினான். ( 50 )
543. முதிர்பெயன் மூரி வான முழங்கிவாய் விட்ட தொப்ப
வதிர்குரன் முரச நாண வமிர்துபெய்ம் மாரி யேய்ப்பக்
கதிர்விரி பூணி னாற்குத் தந்தைதாய் தாரங் காதன்
மதுரமா மக்கள் சுற்றம் வினவிமற் றிதுவுஞ் சொன்னான்.
பொருள் : முதிர் பெயல் மூரி வானம் முழங்கி வாய்விட்டது ஒப்ப - முற்றிய பெயலையுடைய பெருமையான முகில் அதிர்ந்து வாய் திறந்தாற் போலவும்; அதிர்குரல் முரசம் நாண - அதிர்ந்த குரலையுடைய முரசு வெள்கவும்; அமிர்து பெய்ம்மாரி ஏய்ப்ப - அமிர்தத்தைப் பெய்யும் முகிலைப் போலவும், கதிர்விரி பூணினாற்கு - ஒளி வீசும் அணியுடைய சீதத்தனுக்கு; தந்தை தாய் தாரம் காதல் மதுரமா மக்கள் சுற்றம் வினவி - தந்தையையும் தாயையும் மனைவியையும் அன்புடைய இனிய மக்களையும் உறவையும் கேட்டறிந்து; மற்று இதுவும் சொன்னான் - மேலும் இதனையுங் கூறினான்.
விளக்கம் : வான் சத்தத்திற்கும், முரசு முழக்கத்திற்கும், மாரி கேட்டற்கும் இனிமைக்கும் உவமை - என்பர் நச்சினார்க்கினியர். (51)
544. இன்றைய தன்று கேண்மை
யெமர்நும ரெழுவர் காறு
நின்றது கிழமை நீங்கா
வச்சிர யாப்பின் னூழா
லன்றியு மறனு மொன்றே
யரசன்யான் வணிக னீயே
யென்றிரண் டில்லை கண்டாய்
யிதுநின தில்ல மென்றான்.
பொருள் : கேண்மை இன்றையது அன்று - நம் நட்பு இன்றைக்குத் தோன்றியதன்று; வச்சிர யாப்பின் நீங்கா ஊழால் - வச்சிரத்தால் இட்ட எழுத்தைப்போல நீங்காத நல்வினையாலே; எமர் நுமர் எழுவர் காறும் நின்றது கிழமை - எமரெழுவர் நுமரெழுவர் அளவும் (ஏழு கிழமையும் போல) ஏற்றிழிவின்றி நின்றது நங்கேண்மை; அன்றியும் அறனும் ஒன்றே - மேலும் நம் கொள்கையும் ஒன்றே; அரசன் யான் வணிகன் நீ என்று இரண்டு இல்லை - (ஆதலால்) நான் அரசன் நீ வணிகன் என்று இரண்டு சாதியில்லை; இது நினது இல்லம் என்றான் - இது நின் வீடு என்றான்.
விளக்கம் : கிழமை - உரிமையுமாம்: நீயே; ஏ: அசை. கண்டாய். முன்னிலையசை. வச்சிரயாப்பு - வச்சிரத்தால் தலையிலிட்ட எழுத்து. வச்சிர நுதியி னிட்ட எழுத்தனான் (சீவக. 1534) எழுவர் என்பதனை எமர் என்பதனோடும் கூட்டுக. அறனும் ஒன்றே என்றது நாமிருவரும் ஒரே சமயத்தி னிற்போரே என்றவாறு. இது மதவேற்றுமையின்றென்றபடியாம், இனிச் சாதிவேற்றுமையின்றென்பான் யான் அரசன் நீ வணிகன் என்றான். வணிகரும் அரசரோடொப்பர் என்பதுபற்றி இங்ஙனம் கூறினன். ( 52 )
545. மந்திர மன்னன் சொன்னீர் மாரியால் வற்றி நின்ற
சந்தனந் தளிர்த்த தேபோல் சீதத்தன் றளிர்த்து நோக்கி
யெந்தைக்குத் தந்தை சொன்னா னின்ணை மென்று கேட்ப
முந்தைத் தான் கேட்ட வாறே முழுதெடுத் தியம்புகின்றான்.
பொருள் : வற்றி நின்ற சந்தனம் மாரியால் தளிர்த்ததே போல் - மழையின்மையின் காய்ந்து நின்ற சந்தனம் மழையினால் தளிர்த்தது போல்; மந்திர மன்னன் சொல் நீர் சீதத்தன் தளிர்த்து நோக்கி - வித்தியாதர மன்னனின் சொல்லாகிய நீரினால் சீதத்தன் குளிர்ந்து மன்னனை நோக்கி; இன்னணம் எந்தைக்குத் தந்தை சொன்னான் என்று - இவ்வாறே என் பாட்டன் இயம்பினான் என்று; முந்தைத் தான் கேட்ட ஆறே முழுது எடுத்துக் கேட்ப இயம்புகின்றான் - முன்னர்த் தான் கேட்டவண்ணமே முழுதும் எடுத்து அரசன் கேட்குமாறு கூறுகிறான்.
விளக்கம் : சொல்நீர் - சொல்லினது நீர்மையாலே என்க. எந்தைக்குத் தந்தை என்புழி என் தந்தைக்கு அவன் தந்தையாகிய என்பாட்டன் என்க. இன்னணம் - இவ்வாறு. ( 53 )
546. வெள்ளிவே தண்டத் தங்கண்
வீவில்தென் சேடிப் பாலிற்
கள்ளவிழ் கைதை வேலிக்
காசில்காந் தார நாட்டுப்
புள்ளணி கிடங்கின் விச்சா
லோகமா நகரிற் போகா
வெள்ளிவேற் கலுழ வேகன்
வேதண்ட வேந்தர் வேந்தன்.
பொருள் : வெள்ளி வேதண்டத்து அம்கண் வீவு இல்தென் சேடிப் பாலில் - வெள்ளிமலையிலே அழகிய இடத்தையுடைய கெடுதியில்லாத தென் சேடியின் பக்கத்தில்; கள் அவிழ் கைதை வேலி காசு இல் காந்தார நாட்டு - தேன் சொரியும் தாழை வேலியையுடைய குற்றமற்ற காந்தாரம் என்னும் நாட்டிலே; புள் அணி கிடங்கின் விச்சா லோக மாநகரின் போகா - பறவைகள் தங்கிய அகழியையுடைய வித்தியாதர உலகப் பெருநகரிலே நீங்காமலிருக்கின்ற; வெள்ளிவேல் கலுழ வேகன் வேதண்ட வேந்தர் வேந்தன் - வெண்மையான வேலேந்திய கலுழ வேகன் என்பான் மலையரசர்கட் கெல்லாம் அரசன் ஆவான்.
விளக்கம் : வேதண்டம் - மலை. வீவில் - அழிவில்லாத. தென் சேடி வெள்ளி வேதண்டம் என்பது தொடங்கி அடுத்த செய்யுளில் அறிமின் என்பதீறாகச் சீதத்தன் தன் பாட்டன் கூற்றைக் கொண்டு கூறுகின்றான். கைதை - தாழை. விச்சாலோகம் - வித்தியாதர வுலகம். வேதண்டவேந்தர் - மலையரசர். ( 54 )
547. சங்குடைந் தனைய வெண்டா
மரைமலர்த் தடங்கள் போலும்
நங்குடித் தெய்வங் கண்டீர்
நமரங்கா ளறிமி னென்னக்
கொங்குடை முல்லைப் பைம்போ
திருவடங் கிடந்த மார்ப,
விங்கடி பிழைப்ப தன்றா
லெங்குல மென்று சொன்னான்.
பொருள் : நமரங்காள்! - சுற்றத்தவர்களே!; சங்கு உடைந்த அனைய வெண்தாமரை மலர்த் தடங்கள் போலும் - சங்கு விரிந்தாலனைய வெண்தாமரை மலர்கள் நிறைந்த குளங்கள் போன்ற; நம் குடித் தெய்வம் அறிமின் என்ன - நம் குடிக்கு (அக்கலுழ வேகன்) தெய்வம் என அறியுங்கோள் என்று கூறியதால்; கொங்கு உடை முல்லைப் பைம்போது இரு வடம் கிடந்த மார்ப - மணமுடைய புதிய முல்லைமலரால் ஆகிய இரண்டு மாலைகள் தங்கிய மார்பனே!; எம்குலம் இங்கு அடி பிழைப்பது அன்று என்று சொன்னான் - எம் மரபு இவ்விடத்து நின் திருவடிக்குத் தவறு செய்யாது என்று (சீதத்தன் ) கூறினான்.
விளக்கம் : சங்குடைந்தனைய வெண்டாமரை மலர்த் தடங்கள் போலும் நங்குடி என்பதற்குத், தடங்களிலே உடைந்த தன்மையவாகிய மலரும் சங்கும் போலும் நம் குடி. இது தூய்மைக்கு உவமை. இனி, சங்கு சுட்டாலும் நிறங் கெடாததுபோலக் கெட்டாலும் தன் தன்மை கெடாத குடியுமாம். நத்தம்போற் கேடும் (குறள் - 235) என்ப என்று விளக்கங் கூறுவர் நச்சினார்க்கினியர். சங்கு உடைந்தனைய வெண்டாமரை மலர் என்பதற்கு வலிந்து கூறும் அப்பொருள், இன்றி அமையாததன்று, வெண்டாமரை மலர்த்தடமே குலத்தூய்மைக்குக் கொள்வதால் உவமைக்கு உவமையன்று. அரச முல்லையும் காவல் முல்லையுங் கருதி இருவடம் என்றார். சீதத்தன் கலுழ வேகனை நோக்கி, எம் பாட்டன் இங்ஙனம் நின்னைத் தெய்வம் என்று கொள்ளுமாறு கூறியுள்ளான். ஆதலால், எங்குடி நின் அடிக்குப் பிழைப்பதன்று என்றான்.
கண்டீர் : முன்னிலையசை. நச்சினார்க்கினியர், காணுங்கோள் எனப் பொருள் கூறுவர். அறிமின் என மேலே வருவதால் அது அத்துணைச் சிறப்பன்று. நமரங்காள்: நமர் அம் காள் : அம் : அசை. சங்குடைந்தனைய வெண்டாமரை மலர்த்தடம் என்புழி, வெண்டாமரை தடத்திற்கு அடைமாத்திரையாய் வந்ததாகலின் சங்குடைந்தனைய என்னும் உவமை உவமைக்குவமையன்று; ஈண்டு ஆசிரியர் உவமையாக எடுத்த பொருள் தடம் மட்டுமே என்க. தடம் சிறப்புப் பற்றி வந்த உவமை. ( 55 )
548. பெருந்தகைக் குருசி றோழன்
பெருவிலைக் கடக முன்கை
திருந்துபு வணங்கப் பற்றிச்
சென்றுதன் னுரிமை காட்டப்
பொருந்துபு பொற்ப வோம்பிப்
பொன்னிழை சுடர நின்ற
கருங்கண்ணி திறத்து வேறாக்
கட்டுரை பயிற்று கின்றான்.
பொருள் : பெருந்தகைக் குருசில் தோழன் பெருவிலைக் கடகம் முன்கை திருந்துபு வணங்கப் பற்றி சென்று-பெருமை தங்கிய அம்மன்னன் (சீதத்தன் கூறியவற்றைக் கேட்டு) அந்தச் சீதத்தனின் விலைமிகுங் கடகம் அணிந்த முன்கையைச் செவ்வையாகப் பற்றி அழைத்துச் சென்று; தன் உரிமை காட்ட - தன் மனைவிக்கு இவனைக் காட்டினானாக; பொருந்துபு பொற்ப ஓம்பி - அவளும் இவனுக்குத் தகவாக அழகுற உபசரித்தாளாக; பொன் இழை சுடர நின்ற கருங்கண்ணி திறத்து - அங்குப் பொன்னணி ஒளிர நின்ற கரிய கண்களையுடைய தத்தையின் சார்பாக; வேறாக் கட்டுரை பயிற்றுகின்றான் - வேறாகக்கொண்டு உறுதியுரையைக் கலுழ வேகன் கூறத்தொடங்கினான்.
விளக்கம் : ஓம்பி - ஓம்ப : வினையெச்சத் திரிபு. உரிமைகாட்ட என்றது சீதத்தனுக்குத் தன் மனைவியைக் காட்ட என்றவாறு. இங்ஙனம் காட்டுதல் நட்புக்கிழமைக்கு அறிகுறி என்க.
இதனை,
யாமாயின் எம்மில்லங் காட்டுதும் தாமாயின்
காணவே கற்பழியும் என்பார்போல் - நாணிப்
புறங்கடை வைத்தீவர் சோறும் அதனால்
மறந்திடுக செல்வர் தொடர்பு (நாலடி. 293)
என வரும் நாலடியானும் உணர்க. (நச்சினார்க்கினியர் கருத்தும் இதுவே.) இது காறும் முகமன் மொழிந்த கலுழவேகன் கண்ணிதிறத்து இப்போது காரியம் பேசினான் என்பார் வேறாகக் கட்டுரை பயிற்றுகின்றான் என்றார். வேறா - வேறாக ( 56 )
549. எரிமணிப் பளிக்கு மாடத்
தெழுந்ததோர் காம வல்லி
யருமணிக் கொடிகொன் மின்கொ
லமரர்கோ னெழுதி வைத்த
வொருமணி குயின்ற பாவை
யொன்று கொலென்று நாய்கன்
றிருமணிக் கொடியை யோரான்
றெருமர மன்னன் சொன்னான்.
பொருள் : எரிமணிப் பளிக்கு மாடத்து எழுந்தது ஓர் காம வல்லி அருமணிக் கொடிகொல்! - ஒளிவிடும் மணிகள் இழைத்த இப் பளிங்கு மாடத்திலே தோன்றியதான ஒப்பற்ற காம வல்லியாகிய அரிய மாணிக்கக் கொடியோ!; மின்கொல்! - மின் கொடியோ! அமரர்கோன் எழுதி வைத்த ஒரு மணி குயின்ற பாவை ஒன்றுகொல்! - வானவர் தலைவன் தன் உள்ளத்தில் எழுதி வைத்த ஒப்பில்லாத மணியினால் இயற்றப் பெற்ற ஒரு பாவையோ!; என்று - என; திருமணிக் கொடியை ஓரான் நாய்கன் தெருமர - அழகிய மணிக்கொடி போன்ற தத்தையை மகளென்று அறியானாகி வணிகன் கலக்கமுற; மன்னன் சொன்னான் - அரசன் கூறினான்.
விளக்கம் : கலுழவேகன் தன் மனைவியிடம் அழைத்துச் சென்று சீதத்தனை அறிமுகஞ் செய்து வைத்தான். அவளும் சீதத்தனுக்கு முகமன் செய்தாள். அப்போது அங்கே நின்ற தன் மகளைப் பற்றிக் கலுழவேகன் சீதத்தனுக்குக் கூறத் தொடங்கியபோது அவளைப் பார்த்த சீதத்தன் தெருமரலுற்றான். அவனைத் தேற்ற அரசன் கூறுகின்றான் என்று முற்செய்யுளுக்கும் இச் செய்யுளுக்குந் தொடர்பு கொள்க. நாய்கன் சுழலாநிற்ப அவனுக்கு மன்னன் சொன்னான் என்க.
550. தூசுலாய்க் கிடந்த வல்கு
றுப்புறழ் தொண்டைச் செவ்வாய்
வாசவான் குழலின் மின்போல்
யருமணிக் கொடிகொன் மின்கொ
யூசல்பாய்ந் தாடிக் காதிற்
குண்டல மிலங்க நின்றாள்
காசில்யாழ்க் கணங்கொள் தெய்வக்
காந்தர்வ தத்தை யென்பாள்.
பொருள் : தூசு உலாய்க் கிடந்த அல்குல் - ஆடை சூழ்ந்து கிடந்த அல்குலையும்; துப்பு தொண்டை உறழ் செவ்வாய் - பவளத்தையும் கொவ்வைக் கனியையும் மாறு கொண்ட செவ்வாயினையும் (உடையளாய்): வாசம் வான் குழலின் மின்போல் - மணம் பொருந்திய குழலையுடைய மின் கொடிபோல்; வருமுலைச் சாந்து நக்கி ஊசல் பாய்ந்து ஆடிக் காதில் குண்டலம் இலங்க நின்றாள் - வளரும் முலையிற் பூசிய சாந்தைத் தொட்டுப் பாய்ந்து ஊசலாடிக் காதிலே குண்டலம் விளங்க நின்றவள்; காசுஇல் யாழ்க்கணம் கொள் தெய்வக் காந்தருவதத்தை என்பாள் - குற்றமற்ற யாழ்க்கலைத் தொகுதியைக் கொண்ட தெய்வமாகிய மாதங்கியைப் போன்ற காந்தருவதத்தை எனப்படுவாள்.
விளக்கம் : நாணால் இறைஞ்சி நிற்றலிற் குண்டலம் சாந்தைத் தீண்டிப் போக்குவரவுடைத்தாய் அசைந்து இலங்க நின்றாள் என்பர் நச்சினார்க்கினியர். மேலும் யாழ்விச்சைத் தொகுதி கொண்ட தெய்வம் - மாதங்கி என்றுங் கூறுவர். ( 58 )
551. விளங்கினா ளுலக மெல்லாம்
வீணையின் வனப்பி னாலே
யளந்துணர் வரிய நங்கைக்
கருமணி முகிழ்த்த வேபோ
லிளங்கதிர் முலையு மாகத்
திடங்கொண்டு பரந்த மின்னிற்
றுளங்குநுண் ணுசுப்புந் தோன்றா
துரவரு வென்ன வுண்டே.
பொருள் : வீணையின் வனப்பினாலே உலகம் எல்லாம் விளங்கினாள் - இவள் வீணையினாலும் அழகினாலும் உலகெங்கும் விளக்க முற்றாள்; அளந்து உணர்வு அரிய நங்கைக்கு - பண்பினை அளந்து அறியவியலாத இப் பெண்ணுக்கு; அரு மணி முகிழ்த்தவேபோல் இளங்கதிர் முலையும் ஆகத்து இடம் கொண்டு பரந்த -முன்னர் அரிய மணிகள் தோன்றினபோல விளங்கிய இளமை பொருந்திய கதிர்த்த முலைகள் இப்போது மார்பெலாம் இடமாகக் கொண்டு பரவின; மின்னின் துளங்கும் நுண் நுசுப்பும் தோன்றாது உரு அரு என்ன உண்டு - முன்னர் மின்கொடி போல அசையும் நுண்ணிய இடையும் இப்போது காணப்படாமல் உண்டு இல்லை என ஐயம் நிகழுமாறு உள்ளது.
552. நின்மக ளிவளை நீயே நின்பதிக் கொண்டு போகி
யின்னிசை பொருது வெல்வா னியாவனே யானு மாக
வன்னவற் குரிய ளென்ன வடிப்பணி செய்வ லென்றான்
றன்னமர் தேவி கேட்டுத் தத்தைக்கே தக்கதென்றாள்.
பொருள் : நின் மகள் இவளை நீயே நின்பதிக் கொண்டு போகி - இவள் நின் மகளாவாள் இவளை நீ நின் நகர்க்குக் கொண்டு சென்று: இன் இசை பொருது வெல்வான் யாவனே யானும் ஆக - இனிய இசையாற் பொருது வெல்பவன் எவனேயெனினும் ஆக; அன்னவற்கு உரியள் என்ன - அவனுக்கு இவள் உரியவள் என்று கொடுப்பாய் எனக் கலுழவேகன் கூற; அடிப்பணி செய்வல் என்றான் - நின் திருவடித் தொண்டு செய்வேன் என்று சீதத்தன் கூறினான்; தன் அமர்தேவி கேட்டு - கலுழவேகனின் விருப்பத்துக்குரிய மனையாள் அதைக் கேட்டு; தத்தைக்கே தக்கது என்றாள் - இவ்விழிதகவு இவளுக்கே உரியது என்று வருந்திக் கூறினாள்.
விளக்கம் : போகி - போக என வியங்கோளுமாம். யாவன் என்பது எக்குலத்தினோனுமாக என்பது குறித்து நின்றது. உரியள் எனவே கொடைப் பொருளாயது. அடிமைப் பணி என்பது விகாரப்பட்டது அடிப்பணி செய்வல் என்றது அங்ஙனமே செய்வேன் என்றவாறு. தத்தைக்கே தக்கது என்புழித் தக்கது என்றது குறிப்பு மொழி; அவட்கிது தகுதியாகாது என்று வருந்தியபடியாம். ( 60 )
553. முனிவரும் போக பூமிப் போகம்முட் டாது பெற்றுந்
தனியவ ராகி வாழ்தல் சாதுய ரதனி னில்லை
கனிபடு கிளவி யார்தங் காதலர் கவானிற் றுஞ்சிற்
பனியிரு விசும்பிற் றேவர் பான்மையிற் றென்று சொன்னான்.
பொருள் : (அதுகேட்ட மன்னன்); கனிபடு கிளவியார் - கனியனைய மொழியுடைய மகளிர்; முனிவு அரும் போக பூமிப் போகம் முட்டாது பெற்றும் - வெறுப்பற்ற இன்பவுலகிலே இன்பத்தைத் தடையின்றிப் பெற்றாலும்; தனியவர் ஆகி வாழ்தல் அதனின் சாதுயர் இல்லை - தனித்தவராகி வாழ்வதினும் இறந்துபடும் வருத்தம் பிறிதின் இல்லை; தம் காதலர் கவானில் துஞ்சின் - அவர்தம் கணவரின் துடையிலே துயிலப் பெறின்; பனி இரு விசும்பின் தேவர் பான்மையிற்று - குளிர்ந்த பெரிய வானுலகிலே வானவரின்பத்தின் பான்மையுடையது; என்று சொன்னான் - என்று கூறினான்.
விளக்கம் : இச்செய்யுளும் (554) அடுத்து வருவதும் தத்தைக்கே என்று வருந்திய தன்மனைவி தாரணிக்குக் கூறியன. பெற்றும் - பெற்றவிடத்தும். சாதுயர் - இறத்தலால் வரும் துன்பம். அதனில் - அத்தனித்த வாழ்வினுங் காட்டில். ( 61 )
554. நூற்படு புலவன் சொன்ன
நுண்பொரு ணுழைந்தி யானும்
வேற்கடற் றானை வேந்தர்
வீழ்ந்திரந் தாலு நேரேன்
சேற்கடை மதர்வை நோக்கிற்
சில்லரித் தடங்க ணங்கை
பாற்படு காலம் வந்தாற்
பான்மையார் விலக்கு கிற்பார்.
பொருள் : நூல்படு புலவன் சொன்ன நுண்பொருள்யானும் நுழைந்து - நூலுணர்ந்த கணி கூறிய நுண்ணிய பொருளை யானும் நுணுகி ஆராய்ந்ததனால்; வேல் கடல் தானை வேந்தர் வீழ்ந்து இரந்தாலும் நேரேன் - வேலேந்திய கடலனைய படையுடைய வேந்தர் விரும்பி இரந்தாலும் ஒவ்வேனாயினேன்; சேல்கடை மதர்வை நோக்கின் சில் அரித் தடங்கண் நங்கை - சேலின் கடை போன்ற கடையினையும் நோக்கினையும் சிலவாகிய செவ்வரியினையும் உடைய பெரிய கண்ணினள் ஆன இவளுக்கு; பால்படு காலம் வந்தால் - ஒருவன்பால் அடையும் காலம் வந்ததாயின்; பான்மை யார் விலக்குகிற்பார் - அவ்வூழை எவர் தாம் விலக்க வல்லவர்? (ஆதலின் நேர்ந்தேன்).
விளக்கம் : நூற்படுபுலவன் என்றது கணியை. மதர்வை நோக்கு - மயக்கந்தரும் பார்வை. பால் - (ஒருவன்) பக்கலிலே. பான்மை - ஊழ்வினை. ஆதலின் அதற்கு நேர்ந்தேன் என்பது எச்சப் பொருள். ( 62 )
555. படைப்பருங் கற்பி னாடன்
பாவையைப் பரிவு நீக்கிக்
கொடைக்குரிப் பால வெல்லாங்
கொடுத்தபின் கூற்று முட்கும்
விடைப்பருந் தானை வேந்தன்
வேண்டுவ வெறுப்ப நல்கித்
தொடுத்தலர் கோதை வீணா
பதிக்கிது சொல்லி னானே.
பொருள் : படைப்பு அருங்கற்பினாள் - (அது கேட்ட) (பிறராற்) படைத்தற்கரிய கற்புடைய தாரணி: தன் பாவையைப் பரிவு நீக்கி-தன் மகளின் வருத்தத்தை நீக்கி; கொடைக்கு உரிப்பால எல்லாம் கொடுத்தபின் - கொடுத்தற்குரியன வெல்லாம் கொடுத்த பிறகு; கூற்றும் உட்கும் விடைப்பு அருந்தானை வேந்தன் - கூற்றுவனும் அஞ்சும் (பிறரால்) வேறுபடுத்தற்கரிய படையினையுடைய வேந்தன்; வேண்டுவ வெறுப்ப நல்கி - (தத்தைக்கு) வேண்டுமவற்றை மிகுதியும் நல்கி; தொடுத்து அலர்கோதை வீணாபதிக்கு இது சொல்லினான் - தொடுத்து மலர்ந்த மாலையையுடைய வீணாபதியை நோக்கி இதனைக் கூறினான்.
விளக்கம் : கணவன் கருத்தே தன் கருத்தாதலின், பிறர் படைத்தற்கரிய கற்பாயிற்று. கற்பினாள் - தாரணி. பாவை : உவமவாகுபெயர்; காந்தருவதத்தை. விடைப்பு - வேறுபடுத்தல். வெறுப்ப - மிக : உரிச்சொல். வீணாபதி - ஒருபேடி. ( 63 )
556. உடம்பினொ டுயிரிற் பின்னி
யொருவயி னீங்கல் செல்லா
நெடுங்கணுந் தோளும் போலு
நேரிழை அரிவை நீநின்
றடங்கணி தனிமை நீங்கத்
தந்தையுந் தாயு மாகி
யடங்கல ரட்ட வேலா
னாணையி ராமி னென்றான்.
பொருள் : உடம்பினோடு உயிரின் பின்னி - உடம்பும் உயிரும் போல ஒன்றி; ஒருவயின் நீங்கல் செல்லா நெடுங்கணும் தோளும் போலும் நேரிழை அரிவை - ஓரிடத்தும் நீங்காமல் நீண்ட கண்கள் போலவும் தோள்கள் போலவும் உறுதுணைபுரியும் அழகிய அணியுடைய அரிவையே!; நீ நின் தடங்கணி தனிமை நீங்க - நீ உன்னுடைய பெருங்கண்ணியின் தனிமை விலக; தந்தையும் தாயும் ஆகி - தந்தையும் தாயுமாகுக! அடங்கலர் அட்ட வேலான் ஆணையிர் ஆமின் என்றாள் - பின்னர், நீவிர் இருவரும் பகைவரை வென்ற வேலானான சீதத்தனின் ஆணைப்படி நடப்பீராக என்றான்.
விளக்கம் : ஆகி என்பதற்கு ஆய் என எச்சப்பொருள் கொள்வதும் ஒன்று. இது கலுழவேகன் காந்தருவதத்தையை வீணாபதியிடம் ஓம்படை செய்தது. உரிமை தோன்ற நின் தடங்கண்ணி என்றான். வேலான் - சீதத்தன். ஆணையிர் - ஆணையையுடையீர்.(64)
557. அருமணி வயிரம் வேய்ந்த
வருங்கலப் பேழை யைஞ்ஞா
றெரிமணி செம்பொ னார்ந்த
விராயிரம் யவனப் பேழை
திருமணிப் பூணி னாற்குச்
சினந்தலை மழுங்க லின்றிக்
குருமணி முடியிற் றேய்த்த
தரன்றமர் கொள்க வென்றான்.
பொருள் : அருமணி வயிரம் வேய்ந்த அருங்கலம் பேழை ஐஞ்ஞாறு - அரிய மணிகளும் வயிரமும் இழைத்த அரிய அணிகலப் பெட்டி ஐந்நூறும்; எரி மணி செம்பொன் ஆர்ந்த யவனப் பேழை இராயிரம் - ஒளிவிடும் மணியும் செம்பொன்னும் நிறைந்த யவன நாட்டுப் பெட்டி இரண்டாயிரமும் (கொடுத்து) திருமணிப் பூணினாற்குச் சினம் தலைமழுங்கல் இன்றிக் குருமணி முடியின் தேய்த்த - அழகிய மணிக்கலன்களையுடைய கலுழவேகற்குப் பகைவர்மேற் சினம் கெடுதல் இல்லாமையால், அவர்களுடைய நிறமிகும் மணிமுடியை அவன் அடியிலே தேய்ப்பித்த; தரன் தமர் கொள்க என்றான் - தரன் சுற்றத்தையும் கொள்க என்று கொடுத்தான்.
விளக்கம் : யவனப் பேழை - யவன நாட்டிற் செய்த பேழை. பூணினான் - கலுழவேகன். முடியிற் குருமணி என மாறி அவன் அடியில் என வருவித்து முடிக்க. ( 65 )
558. பல்வினைப் பவளப் பாய்காற்
பசுமணி யிழிகை வம்பார்
நல்லகில் விம்மு கட்டி
றவிசொடு நிலைக்கண் ணாடி
மெல்லிய தூப முட்டி
மேதகு நானச் செப்போ
டல்லவுங் கொள்க வென்றா
னணங்குடை நிணங்கொள் வேலான்.
பொருள் : பல்வினைப் பவளப் பாய்கால் பசுமணி யிழிகை வம்பு ஆர் நல் அகில் விம்மு கட்டில் - பல தொழிற்கூறுகளையுடைய பவளத்தாற் பரந்த கால்களையும் புதிய மணியிழைத்த கைச் சுரிகையையும் உடைய மணங்கமழ் நல்ல அகிற்புகை பொங்கும் கட்டிலும்; தவி சொடு நிலைக்கண்ணாடி மெல்லிய தூப மேதகு நானச் செப்போடு - தவிசும் நிலைக்கண்ணாடியும் மென்மையான இந்தளமும் பெருமையுற்ற புழுகுச் செப்பும்; அல்லவும் - பிறவும்: அணங்கு உடை நிணம் கொள் வேலான் கொள்க என்றான் - துன்பந்தரும் ஊன்தங்கிய வேலையுடைய மன்னன் கொள்க என்றுரைத்தான்.
விளக்கம் : இந்தளம் - நெருப்பிடுங்கலம். ஒடு, ஓடு : எண்ணுப் பொருளன. தூபமுட்டி - இதனை இந்தளம் என்பர் நச்சினார்க்கினியர். இதனை இக் காலத்தார் தூபக்கால் என்று வழங்கினர். இது தூபவகல் என்பதன் மரூஉப் போலும். ( 66 )
559. விளக்கழ லுறுத்த போலும்
விசியுறு போர்வைத் தீந்தேன்
றுளக்கற வொழுகி யன்ன
துய்யறத் திரண்ட திண்கோல்
கொளத்தகு திவவுத் திங்கட்
கோணிரைத் தனைய வாணி
யளப்பருஞ் சுவைகொ ணல்யா
ழாயிர மமைக வென்றான்.
பொருள் : விளக்கு அழல் உறுத்த போலும் விசி உறுபோர்வை - விளக்கை அழலைச் சேர்த்தினாற் போலும் நிறத்தனவாய்த் தெரியாமற் போர்த்த போர்வையினையும்; தீ தேன் துளக்கு அற ஒழுகி அன்ன துய் அறத் திரண்ட திண்கோல் - இனிய தேன் அ¬வின்றி ஒழுகினாற் போன்ற தும்பு இன்றித் திரண்ட நரம்பு; கொளத்தகு திவவு - கொள்ளத் தக்க வார்க்கட்டினையும் உடையவாய்; திங்கள் கோள் நிரைத்தனைய ஆணி - கோள்களை நிரைத்தனைய எண்ணாள் திங்களைப் போலுமாறு ஆணிகளையுடைய; அளப்ப அருஞ் சுவை கொள் நல்யாழ் ஆயிரம் அமைக என்றான் - மதிப்பிடற் கியலாத இனிமை கொண்ட குற்றமற்ற யாழ்கள் ஆயிரம் கொண்டு வருக என்றான்.
விளக்கம் : கோள் நிரைத்த திங்கள் பத்தரில் தோலைச் சூழ முடுக்கின ஆணிக்கு உவமம். விளக்கழலுருவின் விசியுறுபச்சை (பொருந-5) உருக்கினன்ன பொருத்துறு போர்வை (பெரும்பாண்-9) தொடித்திரிவன்ன தொண்டுபடு திவவிற்-கடிப்பகை யனைத்துங் கேள்வி போகாக் குரலோர்த்துத் தொடுத்த சுகிர்புரி நரம்பின் (மலைபடுகடாம். 21 - 3) துளைவாய் தூர்ந்த துரப்பமை ஆணி - எண்ணாள் திங்கள் வடிவிற்றாகி (பொருந. - 10 -11) என்றார் பிறரும். ( 67 )
560. அரக்கெறி குவளை வாட்க
ணவ்வளைத் தோளி னாளைப்
பரப்பமை காதற் றாயர்
பற்பல்காற் புல்லிக்கொண்டு
திருப்புறக் கொடுத்த செம்பொற்
றாமரை போன்று கோயில்
புரிக்குழன் மடந்தை போகப்
புலம்பொடு மடிந்த தன்றே
பொருள் : அரக்கு எறி குவளை வாள் கண் அவ் வளைத் தோளினாளை - (உறவைப் பிரிதற்கு அழுது சிவத்தலின்) இங்குலிகம் ஊட்டின குவளை மலர் போன்று ஒளிருங் கண்களையும் அழகிய வளையணிந்த தோளையும் உடைய தத்தையை - பரப்பு அமை காதல் தாயர் பற்பல் கால் புல்லிக் கொண்டு - பரவிய அன்பையுடைய அன்னையர் பற்பல முறையாகத் தழுவிக்கொள்ள; திரு புறக்கொடுத்த செம் பொன் தாமரை போன்று - திருமகளைப் போகவிட்ட சிவந்த பொற்றாமரை மலர் போல; புரிகுழல் மடந்தை போகக் கோயில் புலம்பொடு மடிந்தது - கட்டப்பட்ட குழலினாளாகிய தத்தை செல்வதால் அரண்மனை வருத்தத்துடன் சோர்ந்தது.
விளக்கம் : புல்லிக்கொண்டு - தழுவிக்கொள்ள : வினையெச்சத்திரிபு. தொடரல் இறுதி தம்முன் தாம்வரின், லகரம் றகர வொற்றாகலும் உரித்தே (தொல்-உயிர் மயங். -12 ) என்பதனாற் பற்பல்கால் என்று கொள்க.
ஒழியாது (தொல் - தொகை - 15) என்பதனால், இரண்டாவது விரித்துத் தாரணியையும் அல்லாத தாயரையும் புல்லிக்கொண்டு போக என்றும் ஆம். இவ்வாறு விரிப்பின், கொண்டு என்னும் எச்சத்தைக் கொள்ள எனத் திரிக்க வேண்டா. தத்தை நீங்கிய அரண்மனை பொலிவிழந்தமைக்குத் தேவர் திருப்புறக்கொடுத்த செம்பொற்றாமரை போன்று என உவமை எடுத்துக் கூறியது நினைந்து நினைந்தின்புறற் பாலதாம். ( 68 )
561. காம்புபொன் செய்த பிச்சங்
கதிர்மணி குடையொ டேந்தித்
தாம்பலர் கவரி வீசக்
கிண்கிணி ததும்ப நாகப்
பாம்புபைத் தனைய வல்குற்
பல்கலை மிழற்ற வேகி
யாம்பனா றமுதச் செவ்வா
யரசனைத் தொழுது நின்றாள்.
பொருள் : பொன் செய்த காம்பு பிச்சம் - பொன்னாற் செய்த காம்பையுடைய பிச்சத்தையும்; கதிர்மணிக் குடையொடு ஏந்தி - ஒளிரும் மணியிழைத்த குடையையும் ஏந்தி; பலர் கவரி வீச - பல மகளிர் கவரி வீச; கிண்கிணி ததும்ப - கிண்கிணி ஒலிக்க; நாகப் பாம்பு பைத்த அனைய அல்குல் பல்கலை மிழற்ற - நாகப் பாம்பு படம் விரித்தாற்போன்ற அல்குலின் மேற் பல்மணிகளையுடைய மேகலை ஒலிக்க; ஆம்பல் நாறு அமுதச் செவ்வாய் ஏகி - ஆம்பல்போல மணக்கும் அமுத மனைய செவ்வாயினையுடையாள் சென்று; அரசனைத் தொழுது நின்றாள் - அரசனை வணங்கி நின்றாள்.
விளக்கம் : பல மகளிர் பிச்சத்தையும் குடையையும் ஏந்திக் கவரியையும் வீசிவர என்க. நாறுதல் - தோற்றுதலுமாம். பிச்சம் - பீலிக்குடை. பைத்தல் - படம் விரித்தல். ஆம்பல் நாறு அமுதச் செவ்வாய் என்னும் பன்மொழித்தொடர் காந்தருவதத்தை என்னும் பொருட்டாய் நின்றது. அரசன் - கலுழவேகன். ( 69 )
562. அடிக்கல மரற்ற வேகி
யரும்பெறற் றாதை பாத
முடிக்கலஞ் சொரியச் சென்னி
யிறைஞ்சலு முரிந்து மின்னுக்
கொடிப்பல நுடங்கி யாங்குத்
தோழியர் குழாத்து ணிற்ப
வடுத்தனன் புல்லி வேந்தன்
னாற்றுகி லாது சொன்னான்.
பொருள் : அடிக்கலம் அரற்ற ஏகி - அடியில் அணிந்த சிலம்பும் கிண்கிணியும் ஒலிப்பச் சென்று; அரும்பெறல் தாதை பாதம் முடிக்கலம் சென்னி சொரிய முரிந்து இறைஞ்சலும் - அருமையாகக் கிடைத்த தந்தையின் அடிகளை முடியில் அணிந்த கலன்கள் சிந்தத் தலையால் குனிந்து வணங்கி; மின்னுக் கொடிப் பல நுடங்கி ஆங்குத் தோழியர் குழாத்துள் நிற்ப - மின்னற் கொடிகள் பல அசைவனபோன்று நின்ற தோழியர் குழுவிலே நிற்ப; வேந்தன் அடுத்தனன் புல்லி ஆற்றுகிலாது சொன்னான் - மன்னன் அவளை நெருங்கித் தழுவிப் பிரிதலாற்றாமல் இதனைக் கூறினான்.
(விளக்கம்.) மின்னுக் கொடி எனப் பொருட்பெயர்க்கும் உகரமும் வல்லெழுத்துப் பேறும் (தொல். புள்ளி மயங். 50) இலேசாற்கொள்க. புல்லி - புல்ல எனத் திரித்து; இறைஞ்சலும் அடுத்தனன் புல்ல. (அவள் சென்று) தோழியர் குழாத்துள் நிற்ப, ஆற்றுகிலாது சொன்னான் என மாற்றிக் கூட்டுவர் நச்சினார்க்கினியர். ( 70 )
563. வலம்புரி யீன்ற முத்தம்
மண்மிசை யவர்கட் கல்லால்
வலம்புரி பயத்தை எய்தா
தனையரே மகளி ரென்ன
நலம்புரிந் தனைய காதற்
றேவிதன் னவையை நீங்கக்
குலம்புரிந் தனைய குன்றிற்
கதிபதி கூறி னானே.
பொருள் : வலம்புரி ஈன்ற முத்தம் மண்மிசையவர்கட்டு அல்லால் - வலம்புரிச் சங்கு தந்த முத்து நிலமிசை வாழ்வார்க்கேயன்றி; வலம்புரி பயத்தை எய்தாது - வலம்புரி அம்முத்தின் பயனை அடையாது; மகளிர் அனையரே என்ன - பெண்களும் தங்கள் தாயருக்கு அத்தன்மையரே என்று; நலம்புரிந்த அனைய காதல் தேவிதன் நவையை நீங்க - நன்மையே ஒரு வடிவு கொண்டாற் போன்ற காதலையுடைய தன் மனைவி தன் வருத்தத்தைவிட; குலம் புரிந்த அனைய குன்றிற்கு அதிபதி கூறினான் - நற்குலமே ஒரு வடிவு கொண்டாற் போன்ற வெள்ளிமலைத் தலைவன் கூறினான்.
விளக்கம் : இச் செய்யுளின்கண் தேவர்,
சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க் கல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்கவைதாம் என்செய்யும்
தேருங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே.
என வரும் பாலைக்கலிக் (9-15-17) கருத்தினைச் சிறிது மாற்றி அமைத்துக் கொண்டிருத் தலறிக. ( 71 )
564. இன்சுவை யாழொ டன்ன மிளங்கிளி மழலை மஞ்ஞை
பொன்புனை யூக மந்தி பொறிமயிர்ப் புறவம் பொன்னார்
மென்புன மருளி னோக்கின் மானின மாதி யாகத்
தன்புறஞ் சூழப் போகித் தளிரியல் விமானஞ் சேர்ந்தாள்.
பொருள் : இன்சுவை யாழொடு - இனிய சுவை தரும் யாழுடன்; அன்னம் மழலை இளங்கிளி மஞ்ஞை - அன்னமும் இளமை பொருந்திய மழலையுடைய கிளியும் மயிலும்; பொன்புனை யூகம் மந்தி - பொன் அணி அணிந்த கருங்குரங்கும் பெண் குரங்கும்; பொறி மயிர்ப் புறவம் - புள்ளிகளாக மயிர் பொருந்திய புறாவும்; மென்புனம் மருளின் நோக்கின் பொன் ஆர் மானினம் - மென்மையான புனத்துக்குரிய மருண்ட இனிய நோக்குக் கொண்ட, பொன்னிறம் பொருந்திய மான்திரள்; ஆதி ஆக - முதலாக; தன் புறம் சூழப் போகி - தன் பக்கலிலே சூழச் சென்று; விமானம் தளிரியல் சேர்ந்தாள் - விமானத்தைத் தளிரனைய மெல்லியளாம் தத்தை அடைந்தாள்.
விளக்கம் : மந்தி: பெண்பெயர்; குரங்கு முசுவும் ஊகமும் மந்தி (தொல்-மரபு. 67) என்றார். புறவம் - சித்திரப் புறா. இதிற் கூறப்பட்டவற்றுள் அன்னம் கிளி மஞ்ஞை என்னும் மூன்றும் தத்தையால் வளர்க்கப்பட்ட பறவைகள், யூகம் மந்தி புறவம் மானினம் முதலியன பொன்னாற் செய்யப்பட்டவை எனக் கொள்க. இவ்வேற்றுமை தோன்றவே ஆசிரியர் பொன்புனை யூகம். மந்தி புறவம் என்றும், பொன்னார் மானினம் என்றும் அடைபுணர்த்தோதினர் என்க. சிற்பத்திறன் தெரித்தோதுவார், பொறி மயிர்ப்புறவம், மருள் இன்னோக்கின் மானினம் என்றுங் கூறினர். ( 72 )
வேறு
565. வெற்றிவேன் மணிமுடிக், கொற்றவ னொருமக
ளற்றமில் பெரும்படைச், சுற்றமோ டியங்கினாள்.
பொருள் : வெற்றிவேல் மணிமுடிக் கொற்றவன் ஒரு மகள் - வென்றி வேலையும் மணிமுடியையும் உடைய வேந்தனின் தனி மகள்; அற்றம் இல் பெரும்படை - நீங்குதல் இல்லாத பெரும் படையாகிய; சுற்றமோடு இயங்கினாள் - சுற்றத்துடன் சென்றாள்.
566. கண்ணயற் களிப்பன, வண்ணல்யானை யாயிரம்
விண்ணகத் தியங்குதே, ரெண்ணவற் றிரட்டியே.
பொருள் : கண் அயல் களிப்பன - கண் ணருகே மதமுடையனவாகிய; அண்ணல் யானை ஆயிரம் - பெருமை தங்கிய யானைகள் ஆயிரம்; விண் அகத்து இயங்கு தேர் எண் - வானிற் செல்லும் தேர்களின் எண்ணிக்கை; அவற்று இரட்டி - யானைகளினும் இருமடங்கு.
விளக்கம் : இரட்டி என்றது இரண்டாயிரம் என்றவாறு.( 74 )
567. விற்படை விலக்குவ, பொற்படைப் புரவியு
முற்படக் கிளந்தவற்றி, னற்புடைய நாற்றியே
பொருள் : விற்படை விலக்குவ - அம்பைத் தம் விரைவினால் விலக்குவனவாகிய; பொன் படைப் புரவியும் - பொன்னாற் செய்த கலணை முதலியவற்றையுடைய குதிரைகளும்; முன்படக் கிளந்தவற்றின் - முற்கூறிய யானைகளினும்; நாற்றி நல்புடைய - நான்கு மடங்குற்ற நல்ல பக்கத்தன.
விளக்கம் : விற்படை - வில்லால் எய்யும் அம்பு. பொற்படை - பொன்னாற் செய்த கலணை முதலியன. பொலம்படை பொலிந்த...... புரவி என்றார், மலைபடுகடாத்தினும் (573). நாற்றி - நான்கு மடங்கு. ( 75 )
568. பாறுடைப் பருதிவேல், வீறுடை யிளையரு
மாறிரட்டி யாயிரர், கூறுதற் கரியரே.
பொருள் : பாறு உடைப் பருதி வேல் - பருந்துகள் சூழும் ஒளிமிகு வேல் ஏந்திய; வீறு உடை இளையரும் - சிறப்புற்ற வீரர்களும்: ஆறு இரட்டி ஆயிரர் - பன்னீராயிரவர்; கூறுதற்கு அரியர் - அவர் செப்புதற்கு அரிய திறலுடையர்.
விளக்கம் : கூறுதற்கு அரியர் என்பதற்குப், பகைவர் வஞ்சினம் கூறுதற்கு அரியர் என்பர் நச்சினார்க்கினியர். ( 76 )
569. மாகநீள் விசும்பிடை, மேகநின் றிடித்தலி
னாகநின் றதிர்ந்தவர்க், கேகலாவ தில்லையே.
பொருள் : மாகம் நீள் விசும்பிடை - திக்குகளில் நீண்ட வானத்திலே; மேகம் நின்று இடித்தலின் - முகில் மழை பெய்தற்கு இடித்ததால்; நாகம் நின்று அதிர்ந்து - யானைகள் (தம் இனத்தின் பிளிறுதல் என்று எண்ணி) நின்று தாமும் பிளிறுதலால்; அவர்க்கு ஏகல் ஆவது இல்லை - அவர்கட்குச் செல்ல முடிவதில்லை.
விளக்கம் : தம் படைகளில் யானைகள் நிற்பதனால் இவர்கள் செல்ல முடியவில்லை. மாகம் - முகிலுமாம்; வானுக்கும் நிலத்துக்கும் இடையில் உள்ள இடம் என்பர் (பரி-1.47) பரிமேலழகர். நாகம் - யானை. அதிர்ந்து என்னும் எச்சத்தை அதிர எனச் செயவெனெச்சமாக்குக. அவர் - முற்கூறப்பட்ட வீறுடைய இளைஞர். ( 77 )
570. வெஞ்சின வெகுளியிற், குஞ்சர முழங்கலி
மஞ்சுதம் வயிறழிந், தஞ்சிநீ ருகுத்தவே.
பொருள் : குஞ்சரம் வெஞ்சினம் வெகுளியின் முழங்கலின் - யானை கொடிய சினமாகிய வெகுளியோடு முழங்குவதால்; மஞ்சு அஞ்சித் தம் வயிறு அழிந்து நீர் உகுத்த - முகில்கள் அச்ச முற்று வயிறு கலங்கி நீரைச் சொரிந்தன.
(விளக்கம்.) முகில் முதலில் இடித்தது, பிறகு மழை பெய்தது என்பதாம். ( 78 )
571. வேழமும் மதத்தொடு, தாழ்புயல் கலந்துட
னாழ்கட லகம்புறம், வீழ்தர விரைந்ததே.
பொருள் : ஆழ்கடல் அகம் புறம் வீழ்தர - ஆழ்கடலின் நடுவு கரைக்குப் புறத்தே விழுமாறு; வேழம் மும்மதத்தொடு தாழ்புயல் கலந்து - யானைகளின் மும்மதத்துடன் தாழ்ந்த முகில் பெய்த நீருங் கலத்தலால்; விரைந்தது - முகிலாலும் களிறுகளாலும் தடையின்றி நாற்படையும் சென்றது.
572. மல்லன்மாக் கடலிடைக், கல்லெனக் கலங்கவிழ்த்
தல்லலுற் றழுங்கிய, செல்வனுற்ற செப்புவாம்.
பொருள் : மல்லல் மாகடலிடை - வளமிகுந்த பெரிய கடலினிடையே; கல் என கலம் கவிழ்த்து - கல் எனும் வருத்த ஒலி எழக் கலத்தைக் கவிழ்த்து விட்டு; அல்லல் உற்று அழுங்கிய - துன்பம் உற்று வருந்திய; செல்வன் உற்ற செப்புவாம் - சீதத்தன் அடைந்தவற்றை இனி இயம்புவோம்.
விளக்கம் : இது நூலாசிரியர் கூற்று - நுதலிப் புகுதல். ( 80 )
573. பானிறப் பனிவரை, மேனிற மிகுத்தன
நீனிற நிழன்மணி, தானிரைத் தகமெலாம்.
பொருள் : பால் நிறப் பனிவரைமேல் - பால்போன்ற நிறமுடைய பனிமலையின் மேல்; நிறம் மிகுத்தன - நிறஞ் சிறந்த மணிகளையும்; நீல்நிற நிழல் மணி - நீல நிற ஒளி மணிகளையும்; அகமெலாம் நிரைத்து - கப்பலின் உட்புறம் எல்லாம் நிறைவித்து.
விளக்கம் : சீதத்தன் அறியாமலே அவன் மரக்கலத்தே நிறைத்தான் தரன். இப் பாட்டுக் குளகம். ( 81 )
574. வஞ்சமின் மனத்தினா, னெஞ்சகம் புகன்றுக
விஞ்சையம் பெருமகன், வஞ்சமென் றுணர்த்தினான்.
பொருள் : வஞ்சம் இல் மனத்தினான் நெஞ்சகம் - வெள்ளையுள்ளத்தவனாகிய சீதத்தனின் உள்ளம்; புகன்று உக - உவந்து உவகை ஒழுக; விஞ்சைஅம் பெருமகன் வஞ்சம் என்று - வித்தியாதரப் பெருமகனான தரன்; வஞ்சம் என்று உணர்த்தினான் - மாயை என்பதை விளக்கினான்.
விளக்கம் : விளக்கினது மேல்வருஞ் செய்யுட்களிற் காண்க.
வஞ்சமின் மனத்தினான் என்றது சீதத்தனை. தான் பிறருக்கு நலமே செய்யும் தன்மையன் என்பது தோன்றப் பெருமகன் என்றார்.
( 82 )
575. நங்கைதன் னலத்தினான், மங்குல்வெள்ளி மால்வரை
யெங்குமன்ன ரீண்டினார், சங்குவிம்மு தானையார்.
பொருள் : மங்குல் வெள்ளி மால்வரை எங்கும் - முகில் தழுவும் பெரிய வெள்ளிமலை முழுவதும்; நங்கை தன் நலத்தினால் - தத்தையின் அழகை விரும்பி; சங்கு விம்மு தானையார் மன்னர் ஈண்டினார் - சங்குகள் முழங்கும் படையினையுடைய வேந்தர்கள் வந்து குழுமினர்.
576. ஈரலங்க லேந்துவே, லாரலங்கன் மார்பினான்
கார்கலந்த கைக்கணி, சீர்கலந்து செப்பினான்.
பொருள் : அலங்கல் ஏந்து ஈர் வேல் அலங்கல் ஆர் மார்பினான் - மாலையணிந்த, பகைவர் மார்பைப் பிளக்கும் வேலையும், மாலை பொருந்திய மார்பையும் உடைய அரசனுக்கு; கார் கலந்த கைக்கணி - முகில் அனைய கையுடைய கணியானவன்; சீர்கலந்து செப்பினான் - தத்தையின் சிறப்பை உளத்திற் கலந்து கூறினான்.
577. மாதர்வாழ்வு மண்ணதே! யாதலா லலங்கலந்
தாதவிழ்ந்த மார்ப! நின், காதலான் கடலுளான்.
பொருள் : அலங்கல் அம் தாது அவிழ்ந்த மார்ப - மாலைகளின் அழகிய தாது அவிழ்தற்குரிய மார்பனே!; மாதர் வாழ்வு மண்ணதே ஆதலால் - தத்தையின் வாழ்வு நிலவுலகிலே ஆகையால்; நின் காதலான் கடலுளான் - நின் நண்பன் கடலிடைச் செல்கிறான்.
578. என்றுகூற வென்னையே, துன்றுகாதற் றோழனைச்
சென்றுநீ கொணர்கென, வன்றுவந்த வண்ணமே.
பொருள் : என்று கூற - என்ற கணி கூறியதால்; என்னை நீ துன்று காதல் தோழனைச் சென்று கொணர்க என - என்னை (அரசன் நோக்கி) நீ என் அன்புறு நண்பனைப் போய்க் கொண்டு வருக என்று சொல்ல; அன்று வந்த வண்ணம் - நான் அன்று வந்த வண்ணமாகும்.
579. துன்பமுற்ற வர்க்கலா, லின்பமில்லை யாதலி
னன்பமற்றி யானினைத், துன்பத்தாற் றொடக்கினேன்.
பொருள் : துன்பம் உற்றவர்க்கு அலால் - துன்பம் அடைந்தவர்களுக்கே அல்லாமல்; இன்பம் இல்லை, ஆதலின் - (மற்றவர்கட்கு) இன்பம் கிடைப்பதில்லை ஆகையால்; அன்ப! யான் நினைத் துன்பத்தால் தொடக்கினேன் - அன்பனே நான் உன்னைத் துன்பத்தினாற் பிணித்தேன்.
விளக்கம் : இக் கருத்தினைக் கம்பநாடர் தங் காவியத்தே பொன்போற் போற்றிப் பொதிந்துள்ளார். துன்புளதெனின் அன்றோ சுகமுளது என்பது இராமாவதாரம் (கங்கைப். 69). அன்ப : விளி. தொடக்குதல்-பிணித்தல். நின்னுடைய இன்பத்தை மிகுதிப்படுத்தவே யான் இதனைச் செய்தேன் என்பது கருத்து. ( 87 )
580. பீழைசெய்து பெற்றனன், வாழியென்று மாக்கட
லாழ்வித் திட்ட வம்பினைத், தோழர்ச்சுட்டிக் காட்டினான்.
பொருள் : பீழை செய்து பெற்றனன் - உனக்கு வருத்தமுண்டாக்கி நின்னைத் தோழமை கொண்டேன்; வாழி என்று - (இனி நினக்குத் துன்பமின்றி) வாழ்க என்றுரைத்து; மாக்கடல் ஆழ்வித்திட்ட அம்பியைத் தோழர்ச் சுட்டிக் காட்டினான் - பெருங்கடலில் சீதத்தன் கண்ணுக்கு மட்டும் ஆழ்த்திய கலத்தையும் அவன் தோழரையும் (தீமையின்றியிருப்பதை) உணர்த்திக் காட்டினான்.
விளக்கம் : சீதத்தனுடைய மரக்கலத்திலே மணிகளை நிறைவித்த தரன் பின்னர்த் தான் அவனை மாயத்தினாற் கொண்டு சென்றதைக் கூறிக் கலமும் தோழரும் தீதின்றியிருப்பதை உணர்த்தினான் என்க. காரியமும் முற்றியதால் ஈண்டு உண்மையுரைத்தான் தரன். 565 முதல் 580 வரை உள்ள செய்யுட்கள் குறளடி நான்காய் வந்த கொச்சக ஒருபோகு என்பர் நச்சினார்க்கினியர். நெய்யொடு தீயொக்க - செய்யானைச் சேர்வார்க்குப் - பொய்யாத வுள்ளமே - மெய்யாதல் வேண்டுமே (தொல். செய்.149 மேற்) என்பதனை ஆதாரமாகக்காட்டுவர் அவர். பிற்காலத்திய பாவினத்தில் இது வஞ்சித்துறையாக அமையும். ( 88 )
வேறு
581. தேன்றரு மாரி போன்று திவ்விய கிளவி தம்மா
லூன்றரு குருதி வேலா னுள்ளகங் குளிர்ந்து விஞ்சைக்
கோன்றரு துன்பம் மற்றென் குலத்தொடு முடிக வென்றான்
கான்றுவில் வயிரம் வீசும் கனமணிக் குழையி னானே.
பொருள் : ஊன் தரு குருதி வேலான் - ஊன் சொரியும் குருதி தோய்ந்த வேலானாகிய; வயிரம் வில் கான்று வீசும் கனமணிக் குழையினான் - வயிரம் ஒளியை உமிழ்ந்து வீசும் பருத்த மணியையுடைய குழையணிந்த சீதத்தன்; தேன் தரும் மாரி முகில் போன்று திவ்விய கிளவி தம்மால் உள் அகம் குளிர்ந்து - தேனைச் சொரியும் முகில் போன்று பெய்த இனிய மொழிகள் உள்ளத்திற் குளிர்ச்சியடைந்து; விஞ்சைக்கோன் தருதுன்பம் என் குலத்தோடு முடிக என்றான் - வித்தியாதர வேந்தன் தந்த இத்தன்மையான துன்பம் என் குலம் உள்ள அளவும் நடப்பதாக என்றான்.
விளக்கம் : முன்னர்ச் சீதத்தனை நோக்கி (580) பீழை செய்து பெற்றனன் என்ற தரன் கூறிய மொழியும் அதற்கு இத் துன்பம் மற்றென் குலத்தொடும் முடிக என்று சீதத்தன் மறுமொழி கூறியதும் கற்றோர் நெஞ்சத்தை நெகிழ்க்கும் பேரின்பமுடையனவாதல் உணர்க. ( 89 )
582. தோடலர் தெரிய லான்றன் றோழரைக் கண்டு காத
லூடலர்ந் தெழுந்து பொங்க வுருவத்தார் குழையப் புல்லிப்
பாடிரும் பௌவ முந்நீர்ப் பட்டது பகர்த லோடு
நாடக நாங்க ளுற்ற தென்றுகை யெறிந்து நக்கார்.
பொருள் : தோடு அலர் தெரியலான் தன் தோழரைக் கண்டு - இதழ் விரிந்த மலர்மாலையானாகிய சீதத்தன் (பிறகு) தன் நண்பர்களைக் கண்டு; காதல் ஊடு அலர்ந்து எழுந்து பொங்க - காதலானது நெஞ்சிலே மலர்ந்து எழுந்து பொங்குதலால்; உருவத்தார் குழையப் புல்லி - அழகிய மாலை குழையுமாறு தழுவிக்கொண்டு; பாடு இரும் முந்நீர் பௌவம் பட்டது பகர்தலோடும் - ஒலி பொருந்திய பெரிய முத்தன்மையுறு கடலில் நேர்ந்ததை உரைத்தவுடன்; கையெறிந்து நக்கு நாடகம் நாங்கள் உற்றது என்றார் - கைகொட்டிச் சிரித்து நாங்கள் இங்ஙனம் ஒரு நாடகங் கண்டதுண்டு என்றனர்.
விளக்கம் : நாடகம்போலக் காட்டியவன் தரன். உற்றதென்று கையெறிந்து நக்கார் என்பதனை ஆர்விகுதி பிரித்துக் கூட்டி உற்றதென்றார் என முடிக்க. நாடகம் நாங்கள் உற்றது என்றது யாங்கள் இந் நிகழ்ச்சியினைச் சிறிதும் கண்டிலேம் என்பதுபட நின்றது. இப்பகுதியில் நூலாசிரியர் காட்டிய இம் முந்நீர்க் கலங்கவிழ் நிகழ்ச்சிக்கொப்பாக இனிமையுடைய பகுதி பிற இலக்கியங்களிலே காண்டற் கரிது. ( 90 )
583. கட்டழற் கதிய புண்ணிற் கருவரை யருவி யாரம்
பட்டது போன்று நாய்கன் பரிவுதீர்ந் தினியர் சூழ
மட்டவிழ் கோதை யோடு மண்கனை முழவ மூதூர்க்
கட்டவிழ் தாரி னான்றன் கடிமனை மகிழ்ந்து புக்கான்.
பொருள் : கட்டு அவிழ் தாரினான் நாய்கன் - முறுக்குடைந்த மாலையுடைய வணிகன்; கட்டழல் கதிய புண்ணில் கருவரை அருவி ஆரம் பட்டது போன்று - பெருநெருப்புப் பட்ட புண்ணிற் கரிய மலையிலுள்ள அருவியும் சந்தனச் சாந்தும் பட்டாற்போன்று; பரிவு தீர்ந்து - துன்பம் நீங்கி; மட்டு அவிழ் கோதையோடு - தேன் சொரியும் மாலையாள் தத்தையுடன்; இனியர் சூழ - நண்பர்கள் சூழ்ந்துவர; மண்கனை முழவம் மூதூர் - மண்ணுதல் அமைந்த முழவின் ஒலிமிகும் இராசமாபுரத்தே; தன் கடிமனை மகிழ்ந்து புக்கான் - தன்னுடைய காவல் மனையை அடைந்து மகிழ்ந்து புகுந்தான்.
விளக்கம் : கதுவிய என்பது, கதிய என விகாரமுற்றது. ஆரம்-சந்தனம். கருவரை என்றது பொதியமலையினை. மண்கனை முழவம்-மார்ச்சனை அமைந்த திரண்ட மத்தளம். மூதூர் - ஈண்டு இராசமாபுரம். ( 91 )
584. பெருமனை குறுக லோடும்
பிறையென விலங்கித் தோன்றுந்
திருநுதன் மனைவி செம்பொற்
கொடியென விறைஞ்சி நிற்ப
வருமுலை பொதிர்ப்ப வாங்கி
வண்டின மிரியப் புல்லிக்
கதிர்நகை முறுவன் மாதர்
கண்ணுறு கவலை தீர்த்தான்.
பொருள் : பெருமனை குறுகலோடும் - தன் பெருமை பெற்ற மனைவியிருக்கும் இடத்தை அடைந்தவுடன்; பிற என இலங்கித் தோன்றும் திருநுதல் மனைவி-பிறை போல விளங்கித் தோன்றும் அழகிய நெற்றியையுடைய அவள்; செம்பொன் கொடி என இறைஞ்சி நிற்ப - செவ்விய பொற்கொடி போல வணங்கி நிற்க; வண்டு இனம் இரிய புல்லி - வண்டுக் கூட்டம் ஓடுமாறு அணைத்து; வருமுலை பொதிர்ப்ப வாங்கி - வளர்முலை புடைகொளத் தழுவி; கதிர் நகை முறுவல் மாதர் - ஒளிரும் பற்களையுடைய பதுமையின்; கண் உறு கவலை தீர்த்தான் - கண்கள் அடைந்திருந்த கவலையைப் போக்கினான்.
விளக்கம் : கண்களின் ஏக்கமே முதலில் நீங்கும். ஆகையாற் கண்ணுறு கவலை என்றார் மாதர்கண் என்பதற்கு மாதரிடம் என்றும் பொருள் கூறலாம்.
585. சந்திர காந்த மென்னுந்
தண்மணி நிலத்தி னங்கண்
வெந்தெரி பிசும்பொன் வெள்ளி
பளிங்கொடு பவளம் பாய்த்திக்
கந்தெரி மணியிற் செய்த
கன்னியா மாட மெய்திப்
பைந்தொடிப் பாவை யொன்றும்
பரிவிலள் வைகி னாளே.
பொருள் : சந்திர காந்தம் என்னும் தண்மணி நிலத்தின் அங்கண் - சந்திர காந்தம் என்னும் குளிர்ந்த மணியாலே செய்த நிலத்தினிடத்தில்; வெந்து எரி பசும்பொன் வெள்ளி பளிங்கொடு பவளம் பாய்த்தி - ஓட வைத்து விளங்கும் புதிய பொன்னாற் சுவர் அமைத்து வெள்ளியும் பளிங்கும் பவளமுங்கொண்டு பாய்ச்சி; எரி மணியில் கந்து செய்த - விளங்கும் மணியால் தூண் அமைத்த; கன்னியா மாடம் எய்தி - கன்னி மாடத்தை அடைந்து; பைந்தொடிப் பாவை ஒன்றும் பரிவு இலள் வைகினாள் - புதிய வளையல் அணிந்த தத்தை சிறிதும் வருத்தம் இல்லாதவளாக இருந்தாள்.
விளக்கம் : பொன்னாற் சுவரும், மணியால் தூணும், பளிங்கினாற் கையலகும், பவளத்தாற் பூட்டும், வெள்ளியால் கூரையும் கொள்க. சந்திரகாந்தம் - நிலவொளி பட்டவுடன் நீர் உமிழ்வதொரு மணி. கந்து - தூண். பாவை: காந்தருவதத்தை. பரிவிலள்: முற்றெச்சம். ( 93 )
586. பாசிழைப் பரவை யல்குற்
பசுங்கதிர்க் கலாபம் வீங்கக்
காசுகண் பரிய வைகிக்
கடன்றலைக் கழிந்த பின்னாத்
தூசணி பரவை யல்குற்
றுளங்குநுண் ணுசுப்பிற் பாவை
யாசறு வரவும் தந்தை
வலித்தது மறியச் சொன்னான்.
பொருள் : பாசிழை பரவை அல்குல் பசுங்கதிர்க் கலாபம் வீங்க - பதுமையின் புத்தணி யணிந்த பரப்புடைய அல்குலிலே புத்தொளி வீசும் கலாபம் விம்முதலால்; காசு கண்பரிய வைகி - அதில் மணிகள் அற்று வீழுமாறு கூடியிருந்து; கடன்தலை கழிந்த பின்னா - அவளிடத்து நிகழ்த்து முறையெல்லாம் அங்கே கழிந்த பிறகு; தூசு அணி பரவை அல்குல் துளங்கும் நுண் நுசுப்பின் பாவை - ஆடையணிந்த பரப்புடைய அல்குலையும் அசையும் நுண்ணிய இடையையும் உடைய தத்தையின்; ஆசு அறு வரவும் தத்தை வலித்ததும் அறியச் சொன்னான் - குற்றம் அற்ற வரவையும் அவள் தந்தை விரும்பியதையும் விளங்கக் கூறினான்.
விளக்கம் : கலாபம் - ஓரணிகலன். தந்தை வலித்தது - அவள் தந்தை இவளை யாழ் வென்றானுக்குக் கொடுக்க என்று துணிந்தது. அவட்குச் சொன்னான் என்க. ( 94 )
587. வண்டுண மலர்ந்த கோதை
வாயொருப் பட்டு நேரத்
தெண்கட லமிர்தம் பெய்த
செப்பெனச் செறிந்து வீங்கிப்
பெண்டிரு மாண்மை வெஃகிப்
பேதுறு முலையி னாளைக்
கண்டவர் மருள நாளைக்
கடிவினை முடித்து மென்றான்.
பொருள் : வண்டுண மலர்ந்த கோதை வாய் ஒருப்பட்டு நேர - வண்டுகள் தேனைப் பருகுமாறு மலர்ந்த மாலையினாள் ஆகிய பதுமை அவன் விருப்பத்துக்கு உடன்பட்ட அளவில்; தெண் கடல் அமிர்தம் பெய்த செப்பு எனச் செறிந்தது வீங்கி - தெளிந்த கடலின் அமிர்தத்தைப் பெய்த செப்புப்போல நெருங்கிப் பருத்து; பெண்டிரும் ஆண்மை வெஃகிப் பேது உறும் முலையினாளை - பெண்களும் ஆண்மையை விரும்பி மயங்குதற்குக் காரணமான முலையுடைய தத்தையை; கண்டவர் மருள - பார்த்தவர் மயங்குமாறு; நாளை கடிவினை முடித்தும் என்றான் - நாளைக்குத் திருமணம் புரிந்திடுவோம் என்ற சீதத்தன் செப்பினான்.
விளக்கம் : கட்டியங்காரன் உடன்பட்ட பிறகே கடிவினை முடியுமாதலின், அவனை நாளை உடன்படுவிப்பேன் என்னுந் துணிவினால் இங்ஙனங் கூறினான். வாய் - ஈண்டு நெஞ்சிற்கு ஆகுபெயர். 165-ஆம் செய்யுட்குறிப்பைக் காண்க கடிவினை - திருமணம். பதுமையை உளப்படுத்தி முடித்தும் என்றான் என்க. ( 95 )
588. மால்வரை வயிறு போழ்ந்து
வல்லவர் மதியிற் றந்த
பால்வரை மணியும் பொன்னும்
பற்பல கொண்டு புக்குக்
கால்பொரு கழலி னானுங்
காவலற் கண்டு சொன்னான்
வேல்பொரு தானை யானும்
வேண்டுவ விதியி னேர்ந்தான்.
பொருள் : மால் வரை வயிறு போழ்ந்து வல்லவர் மதியின் தந்த பால்வரை மணியும் பொன்னும் - பெரிய மலைகளின் வயிற்றைப் பிளந்து நூல்வல்லார் தமது அறிவினாலே தந்த பகுதிப்பட்ட மணியும் பொன்னுமாக; பற்பல கொண்டு புக்கு- பலவற்றையும் கையுறையாகக்கொண்டு சென்று; காவலன கண்டு - அரசனைக் கண்டு; கால்பொரு கழலினானும் - காலிற் கட்டப்பட்ட கழலையுடையவனும்; சொன்னான் - (தன் விருப்பத்தைக்) கூறினான்; வேல் பொருதானை யானும் வேண்டுவ விதியின் நேர்ந்தான் - வேலினாற் பொரவல்ல படையினானும் அவன் விரும்பியவற்றை முறைப்படி ஒப்புக்கொண்டான்.
விளக்கம் : விருப்பம்; மண்டபஞ் சமைத்தலும், யாவரும் வர முர சறைவித்தலும் முதலியன. சுயம்வரத்திற்கு அரசன் உடன்படவே வேண்டுதலின் விதியின் என்றார். கழலினான் என்றது சீதத்தனை. தானையான் என்றது கட்டியங்காரனை. ( 96 )
வேறு
589. மையன்மத யானைநிரை மன்னன்மகிழ்ந் தானாப்
பொய்யில்புகழ் நாய்கன்மத வொளியினொடு போகி
நொய்தின்மனை யெய்தியிது செய்கென நொடித்தான்
மொய்கொண்முலை பாயமுகை விண்டலர்ந்த தாரான்.
பொருள் : மையல் மதயானை நிரை மன்னன் மகிழ்ந்து - செல்வச் செருக்குற்ற, மதயானை நிரைகளையுடைய வேந்தன் மகிழ்ந்ததனால்; ஆனாப் பொய்இல் புகழ் நாய்கன் மத ஒளியினொடு போகி - நிறைந்த உண்மையான புகழையுடைய வணிகன் மிகுதியான ஒளியுடன் சென்று; நொய்தின் மனை எய்தி - விரைவில் வீட்டை அடைந்து; மொய்கொண் முலைபாய முகைவிண்டு அலர்ந்த தாரான் - நெருங்கிய முலைகள் பாய்தலினாலே அரும்புகள் விரிந்து மலர்ந்த மாலையினான் ஆகிய அவன்; இது செய்க என நொடித்தான் - இதனைச் செய்க என்று கூறினான்.
விளக்கம் : மையல் - செல்வச் செருக்கு. ஆனாப்புகழ்; பொய்யில் புகழ் எனத் தனித்தனி கூட்டுக. நொடித்தல் - சொல்லுதல். நாய்கனாகிய தாரான் என்க. மத - மிகுதிப் பொருள் குறித்ததோர் உரிச்சொல்.
மதவே மடனும் வலியு மாகும்.
மிகுதியும் வனப்பும் ஆகலும் உரித்தே. (உரி. 79-80)
என்பது தொல்காப்பியம். ( 97 )
590. நானக்கிடங் காடைநகர் நாகத்திடை நன்பொன்
வானக்கிடு மாட்சியதோர் மண்டபங்செய் கென்ன
மீனத்திடை நாள்கிழமை வெள்ளிசயை பக்கம்
கானத்திடை வேங்கையெழக் கண்ணினர்கள் அன்றே.
பொருள் : நானக் கிடங்கு ஆடை நகர் நாகத்திடை - நானக்கிடங்கை ஆடையாகவுடைய நகராகிய துறக்கத்தின் நடுவே; நன்பொன் வான் நக்கிடும் மாட்சியது - நல்ல பொன்னையுடைய வானை நகைத்திடும் அழகினையுடைய தாகிய; ஓர் மண்டபம் செய்க என்ன - ஒரு மண்டபத்தைச் செய்க என்று கூறினான் ஆக; வெள்ளிக்கிழமை சயை பக்கம் மீனத்து இடைநாள் கானத்திடை வேங்கை யெழ - வெள்ளிக்கிழமையும், திருதியையும் பெற்ற உத்திரட்டாதிநாள் சிங்கம் உதயமாகக் கணிகள் முழுத்தம் குறித்தனர்.
விளக்கம் : நானம் - புழுகு; குளித்தலாற் புழுகுடைத்தாயிற்று. வான் நக்கிடும் என்பதற்கு வானைத் தீண்டும் என்றும் பொருள் கொள்க. பூரட்டாதியின் நாலாங்காலும் உத்திரட்டாதியும் இரேவதியும் மீன ராசியாதலால், உத்திரட்டாதி நடுநாளாதலால், மீனத்திடைநாள் என்றார். திருதியை, அட்டமி, திரயோதசி என்பவற்றில் திருதியை சிறத்தலின், சயை பக்கம் என்றார். மேடத்தின் முற்கூறு மேடராசியின் கூறு; இரண்டாங் கூறு சிங்கராசியின் கூறு; மூன்றாங் கூறு தனுராசியின் கூறு. ஆதலால், மேடத்தின் நடுக்கூற்றைச் சிங்கத்தின் உதயமாக விதித்தார். இது கூறிற்று, சிங்கத்தே பிரகஸ்பதியாதலின். வெள்ளி முதல் வியாழ மீறாகக் கிழமை ஏழாயவாறும், உத்திரட்டாதி முதல் உரோகிணி யீறாக நாள் ஆறாயவாறும் கூடுமாறு என்னையெனின், இத் திங்களிற் சதயம் முதல் ஆயிலியத்தளவும் சந்திரன் வர்த்தித்து வருதலின், வியாக்கிழமைக்கு உரோகிணி கூடிற்று. இதனானே, மேல், ஒண்ணிற வுரோணியூர்ந்த ஒளிமதி ஒண்பொன் ஆட்சி (சீவக. 620) என்று வியாழக்கிழமையிலும் சிறிது நாழிகை உரோகிணியாகக் கூறினார். சயை, திருதியை, அட்டமி திரயோதசி என்பன. இவற்றுள் ஈண்டுச் சிறப்புப்பற்றித் திருதியை மட்டுமே உணர்த்தி நின்றது ( 98 )
591. நட்புப்பகை யுட்கினொடு நன்பொன்விளை கழனி
பட்டினொடு பஞ்சுதுகில் பைம்பொனொடு கான
மட்டசுவை வல்சியினொ டியாதுமொழி யாம
லொட்டிப்பதி னாயிரவ ருற்றுமுயல் கின்றார்.
பொருள் : நன்பொன் விளைகழனி பட்டினொடு பஞ்சு துகில் பைம்பொனொடு காணம் அட்ட சுவை வல்சியினொடு - நல்ல பொன் விளையுங் கழனியும் பட்டும் பஞ்சும் பொன்னும் பழங்காசும் சமைத்த பகற்சோறும் என இவற்றில்; யாதும் ஒழியாமல் ஒட்டி - யாதும் குறையில்லாமல் அறுதியிட்டு; நட்பு பகை உட்கினொடு - தம்மிற் கூடியும் மாறுபட்டும் இவனுக்கு அஞ்சுதலுடனே; உற்றுப் பதினாயிரவர் முயல்கின்றார் - இவ்வேலையிலே கருத்தூன்றிப் பதினாயிரவர் முயல்கின்றனர்.
விளக்கம் : பொன் இட்டாற் பொன் விளையுங் கழனி. பொன் உண்டாதற்குக் காரணமான கழனியுமாம். பஞ்சு - துணி. ஒடுயாவும் எண்ணுப் பொருளன. வல்சி - சமணராதலிற் பகலுணவு. ( 99 )
592. வண்டுபடு தேறனற வாய்விடொடு பருகிக்
கண்டதொழிற் கணிச்சிகளிற் கயம்படநன் கிடித்தாங்
கெண்டிசையு மேற்பப்படுத் தேற்றியதன் மேலாற்
கண்டுருகு பொன்னினிலங் காமுறுவ புனைந்தார்.
பொருள் : வண்டுபடு தேறல் நறவு வாய்விடொடு பருகி - வண்டுகள் தேடிய தேனையும் மலர்த் தேனையும் ஆரவாரத்துடன் பருகி; தொழில் கண்ட கணிச்சிகளின் கயம்பட நன்கு இடித்து - தொழிலுக் கெனக் கண்ட குந்தாலிகளாலே ஆழமுண்டாக நன்றாக வெட்டி; ஆங்கு எண் திசையும் ஏற்பப் படுத்து ஏற்றி - அவ்விடத்தே எட்டுத்திசையினும் பொருந்தும்படி தலம் இசைத்து உயர்த்தி; அதன் மேலால் கண்டு காமுறுவ உருகு பொன்னின் நிலம் புனைந்தார் - அதன்மேலே இஃது உயரத்திற்கு அளவென்று அறிந்து விரும்புவனவாகிய உருகும் பொன்னாலே நிலத்தை அணிசெய்தார்.
விளக்கம் : வாய்விடுதல் - வஞ்சினமும் ஆம். ஒடு: உடனிகழ்ச்சி. கணிச்சி - ஈண்டு மண் அகழும் குந்தாலி. காமுறுவ பொன்னின் என மாறுக ( 100 )
593. பொன்செய்குடங் கோத்தனைய
வெருத்திற்பொலி பொற்றூண்
மின்செய் பசும் பொன்னிலத்து
வீறுபெற நாட்டி
மன்பவள மேனவின்று
பளிக்கலகு பரப்பி
நன்செய்வெளி வேய்ந்துசுவர்
தமனியத்தின் அமைத்தார்.
பொருள் : பொன் நிலத்து எருத்தில் பொன்செய் குடம் கோத்த அனைய பொன் தூண் வீறுபெற நாட்டி - அப் பொன்னிலத்திலே தம் கழுத்தில் குடதாடியாலே பொற்குடத்தைக் கோத்தால் ஒத்த பொன் தூணைப் பெருமை பெற நாட்டி; மேல் மண்பவளம் நவின்று - மேலே பெருமை பொருந்திய பவளமாகிய உத்தரம் முதலியன பயில; பளிக்கு அலகு பரப்பி - அவற்றின் மேலே பளிக்குக் கையலகாலே கைபரப்பி; நன்செய் வெளி வேய்ந்து - நன்றாகச் செய்யப்பட்ட வெள்ளியாலே வேய்ந்து; தமனியத்தின் சுவர் அமைத்தார் - பொன்னாலே சுவரை அமைத்தனர்.
விளக்கம் : மன் - பெருமை. நவின்று - நவில : எச்சத்திரிபு. வெளி : வெள்ளி என்பதன் விகாரம். குடதாடி தூணுக்கும் உத்தரத்துக்கும் நடுவே அமைக்கப்பட்டது. ( 101 )
594. பாவையவ ளிருக்குமிடம் பளிக்குச்சுவ ரியற்றிக்
கோவைகுளிர் முத்தினியல் கோதையொடு கொழும்பன்
மாலையொடு மாலைதலை மணந்துவர நாற்றி
ஆலையமி தோவியர்கட் கென்னவணி யமைத்தார்.
பொருள் : பாவை அவள் இருக்கும் இடம் பளிக்குச் சுவர் இயற்றி - பாவையாகிய அவள் இருக்கும் இடத்தைப் பளிங்கினாலே சுவர் செய்து; குளிர்முத்தின் இயல்கோவை கோதையொடு - குளிர்ந்த முத்தினாலே இயன்ற மாலையும் பூமாலையும்; கொழும் பொன் மாலையொடு மாலை - வளமுறு பொன்மாலையும் மாணிக்க மாலை முதலியனவும்; தலை மணந்து வர நாற்றி - தம்மில் தலையொத்துவரத் தூக்கி; இது ஓவியர்கட்கு ஆலயம் என்ன - இவ்விடம் ஓவியர்களுக்குக் கோயில் என்னுமாறு; அணி அமைத்தார் - ஓவியர் தீட்டினர்.
விளக்கம் : முத்துமாலை முதலியன - ஓவியங்கட்கு மாலை. ஓவியங்கட்கு எனவும் பாடம். ( 102 )
595. ஆயிதழ பொன்னலங்கல் காலசைப்ப வொல்கி
வாயருகு வந்தொசிந்து மறியமழை மின்போற்
சேயவர்க்குந் தோன்றியதோர் திலகமெனுந் தகைத்தாய்ப்
பாயதிரை முத்தமணல் பரந்துபயின் றுளதே
பொருள் : ஆய் இதழ பொன் அலங்கல் கால் அசைப்ப ஒல்கி - அழகிய இதழையுடைய பொன் தூக்கு மாலைகள் காற்று அசைத்தலாலே ஒதுங்கி; வாய் அருகு வந்து ஒசிந்து மறிய - விளிம்பின் பக்கலில் வந்து சாய்ந்து மீளுதலாலே; மழை மின் போல் சேயவர்க்கும் தோன்றியது ஓர் திலகம் எனும் தகைத்தாய் மேகத்து மின்போலத் தொலைவில் உள்ளவர்க்குங் காணப்பட்ட இம்மண்டபம் மண்டபங்கட்கெல்லாம் திலகம் என்னுந் தகைமையுடையதாய்; பாய திரை முத்தம் மணல் பரந்து பயின்றுள்ளது - பரவிய அலைகள் தந்த முத்துக்களாகிய மணல் எங்கும் நெருங்கிப் பரவியுள்ளது. ஆய் - அழகு. கால் - காற்று. வாய் - விளிம்பு. சேயவர் - தொலைவிலிருப்போர். பாய - பரவிய. பயின்று - நெருங்கி. ( 103 )
596. காமர்களி றும்பிடியும் கன்றுங்கலை மானுந்
தாமரைய வாவிகளும் புள்ளுந்தகை நலத்தி
னேமுறுவ பாவையினொ டியக்கிநிலை யெழுதி
யாமொரையம் காண்பவர்க்கி தகம்புறமி தெனவே.
பொருள் : காமர் களிறும் பிடியும் கன்றும் கலை மானும் தாமரைய வாவிகளும் புள்ளும் - அழகிய களிறும் பெண்யானையும் யானைக் கன்றும் கலையும் பிணையும் தாமரைக் குளங்களும் பறவைகளுமாக; தகை நலத்தின் ஏமுறுவ பாவையினொடு இயக்கி நிலை எழுதி - தக்க அழகினாலே கண்டார் மயங்குதல் உறுவனவாகிய பாவைகளையும் தலைமைத் தெய்வமாகிய இயக்கியின் நிலையையும் பளிக்குச் சுவரிலே எழுதியதால்; காண்பவர்க்கு இது அகம் இது புறம் என ஓர் ஐயம் ஆம் - பார்ப்பவர்க்கு அதன் ஒளியால் இதுதான் உட்புறம் இதுதான் வெளிப்புறம் என உணரமுடியாமல் ஓர் ஐயத்தை உண்டாக்கும்
விளக்கம் : எழுதி - எழுத: வினையெச்சத்திரிபு. பளிக்குச் சுவராகையால் அவ்வோவியங்கள் உள்ளும் புறமுந் தோன்றின. ( 104 )
597. உழந்தவரு நோக்கி மகிழ் தூங்கவொளி வாய்ந்து
விழுங்குமெனப் பறவைகளும் பிறவிலங்கும் அடையா
முழங்குதிரை வேலியினி னில்லையென மொய்கொண்
டெழுந்துகொடி யாடுமிதவ் வெழில்நகரி னியல்பே.
பொருள் : உழந்தவரும் நோக்கி மகிழ்தூங்க - பலநாட்பழகிய ஓவியரும் பார்த்து வியந்து மகிழ்ச்சிமிக; ஒளி வாய்ந்து - ஒரு விளக்கம் பொருந்தி; விழுங்கும் எனப் பிற பறவைகளும் விலங்கும் அடையா - (இவ்வோவிய விலங்கும் பறவையும் நம்மை) விழுங்கிவிடும் என (அவற்றைப் பகையாய்க்கொண்ட) பறவைகளும் விலங்குகளும் அடையாவாக; முழங்கு திரை வேலியினின் இல்லை என மொய்கொண்டு எழுந்து கொடி ஆடும் - முழங்கும் கடலை எல்லையாகக் கொண்ட உலகிலே தனக்குவமையில்லையென்பது போலக் கொடிகள் எழுந்து ஆடும்; இது அவ்எழில் நகரின் இயல்பு - இது அவ்வழகிய மண்டபத்தின் தன்மையாகும்.
விளக்கம் : உழந்தவர் - ஓவியத் தொழில் பயின்றவர். பிற பறவைகளும் எனவும் கூட்டுக. முழங்குதிரை வேலி - உலகம். ( 105 )
598. ஓடுமுகில் கீறியொளிர் திங்கள்சிகை வைத்தே
மாடமது வார்சடைய வள்ளலையு மொக்கும்
நாடிமுக நான்கதனி னான்முகனை யொக்கும்
நேடிநிமிர் தன்மையினி னேமியையு மொக்கும்.
பொருள் : மாடம் அது - மாடமாகிய அது; ஓடும் முகில் கீறி ஒளிர் திங்கள் சிகை வைத்து - ஓடும் மேகத்தைக் கிழித்து விளங்கும் பிறை மதியைத் தலையிலே வைத்தலின்; வார்சடைய வள்ளலையும் ஒக்கும் - நீண்ட சடையினையுடைய சிவபிரானையும் போலும்; முகம் நான்கு அதனின் நாடி நான்முகனை ஒக்கும் - முகம் நான்காகிய அதனாலே எங்கும் நாடு தலால் நான்முகனையும் பொருவும்; நேடி நிமிர் தன்மையினின் நேமியையும் ஒக்கும் - மேலெல்லையைத் தேடி நிமிர் தலாலே திருமாலையும் ஒக்கும்.
விளக்கம் : நாடி - நாசியென்பாரும் உளர்; இது வீட்டின் ஓருறுப்பு. தன்மையினின் : இன் : அசை. வார்சடைவள்ளல் - சிவபெருமான். நான்முகன் - பிரமா. நேமி - திருமால். ( 106 )
599. கண்டவர்கள் காமுறலிற் காமனையு மொக்குங்
கொண்டுலக மேத்தலினக் கொற்றவனை யொக்கும்
வண்டெரிய லாரமுலை மாதர்மகி ழமுதம்
உண்டவர்க ளெவ்வகைய ரவ்வகைய தொன்றே.
பொருள் : கண்டவர்கள் காமுறலின் காமனையும் ஒக்கும் - பார்த்தவர்கள் விரும்புவதாற் காமனையும் ஒக்கும்; உலகம் கொண்டு ஏத்தலின் அக் கொற்றவனை ஒக்கும் - உலகம் மனங்கொண்டு போற்றுதலால் அந்தச் சச்சந்த மன்னனையும் ஒக்கும்; வண் தெரியல் ஆரம் முலை மாதர் மகிழ் அமுதம் உண்டவர்கள் - செழுவிய மலர்மாலையும் முத்து மாலையும் அணிந்த மங்கையராகிய மகிழூட்டும் அமுதத்தை உண்டவர்கள்; எவ்வகையர் அவ்வகையது ஒன்று - எத்தன்மையரோ அத்தன்மையதாகிய ஒன்றாகும்.
விளக்கம் : நீங்கலாகாமை கூறினார். அக்கொற்றவன் என்புழிச் சுட்டுப் பண்டறி சுட்டு. கொற்றவன் - சச்சந்தன். புணர்ந்தவர் பிரிதலாற்றாமையின் மாதரமிழ்தம் உண்ட வர்கள் எவ்வகையர் அவ்வகையது என்றார். மாதர் அமிழ்தம் உண்டவர் பிரியமாட்டாதார் ஆவது போலத் தன்னைக் கண்டோரும் பிரிதற்கியலாத பண்புடையது என்றவாறு. ( 107 )
600. முகிற்றலை மதிய மன்ன முழுமணி மாடத் திட்ட
வகிற்புகை தவழ்ந்து வானத் தருவிசும் பறுத்து நீண்டு
பகற்கதிர்ப் பரப்பிற் றாகிப் பஞ்சவர் விமான முட்டிப்
புகற்கரு மமரர் கற்பம் புக்கயா வுயிர்த்த தன்றே.
பொருள் : மதியம் அன்ன முழுமணி முகில்தலை மாடத்து - திங்கள் அனைய நிறைமணிகளையுடைய, முகிலைத் தலைக்கொண்ட அம் மாடத்திலே; இட்ட அகில் புகை தவழ்ந்து வானத்து அருவிசும்பு அறுத்து - இட்ட அகிற்புகை தவழ்ந்து சென்று வானத்திலே அரிய முகிலை ஊடுருவி; நீண்டு - நீண்டு; பகல் கதிர் பரப்பிற்று ஆகி - பகலைச் செய்யும் கதிரினிடத்தே பரத்தலையுடையதாய்; பஞ்சவர் விமான முட்டி - சோதிட்கரது விமானத்தைத் தொட்டு; புகற்கரும் அமரர் கற்பம் புக்கு - புகுதற்கரியவானவர் இருக்கையினும் புகுந்து; அயாவுயிர்த்தது - இளைப்பாறியது.
விளக்கம் : கற்பம் - இருத்தற்குக் கற்பித்த இடம். விசும்பு - இடவாகுபெயர். பஞ்சவர் : ஞாயிறு, திங்கள், மற்றைக் கோள்கள், நாண் மீன்கள், மற்றைத் தாரகைகள் என ஐவகையினர். இவர்கள் சோதிடர் எனவும் சோதிட்கர் என்றுங் கூறப்படுவர். ( 108 )
601. அரைசன தருளினொ டகன்மனை யவனெய்தி
யுரைசெலல் வகையினொ டுலகமு மறிவுற
முரைசதி ரிமிழிசை முதுநக ரறைகென
விரைசெல லிளையரை வியவரின் விடவே.
பொருள் : அவன் அரைசன் அது அருளினொடு அகல்மனை எய்தி - சீதத்தன் அரசன் அருள்பெற்றுத் தன் பரந்த மனையை அடைந்து; உலகமும் அறிவு உற உரைசெலல் வகையினொடு - உலகமெங்கும் அறியுமாறு இவ் விழா செல்லும் வகையாலே; முதுநகர் அதிர் இமிழ் இசை முரசு அறைக என - இப் பழம் பதியிலே கண் நடுங்குதலால் ஒலிக்கும் இசையுடைய முரசினை அறைக என்று; விரைசெலல் இளையரை வியவரின் விட - கடிது செல்லும் தன் ஏவலிளையரை முரசறைவாரிடம் விடுத்தலால்.
விளக்கம் : வியவர் - ஏவல் செய்வார். வியங்கோள் போல. என்றது முரசறைவிப்பாரை. அரைசன், முரைசு : போலி. அதிர் - கண் அதிர்தலால் (கண் : முரசில் அடிபடும் இடம்.) இது முதல் மூன்று பாட்டுகள் குளகம்.
602. விடுகணை விசையொடு வெருவரு தகையவர்
படுபணை யவருறை பதியது குறுகி
நெடுமதி யகடுற நிழறவழ் கொடியுயர்
கடிநக ரிடிமுர சறைமின மெனவே.
பொருள் : வெரு வரு தகையவர் விடுகணை விசையொடு - அச்சுறுந் தோற்றத்தினராகிய அவ்வியவர், செலுத்திய அம்பு போன்ற விரைவுடன்; படு பணையவர் உறை பதியது குறுகி - முரசறைவார் உறையும் பதியை அடைந்து; நெடுமதி அகடு உற நிழல்தவழ் கொடி உயர் கடிநகர் - பெரிய திங்களின் வயிற்றிற் பொருந்த ஒளிவிடும் கொடிகள் உயர்ந்த, காவலையுடைய நகரிலே; இடிமுரசு அறைமின் என - இடிபோன்ற முரசினை அறையுங்கள் என்று கூற,
விளக்கம் : அறைமினம் : அம் : அசை. பதியது : அது : பகுதிப் பொருள் விகுதி. பணையவர் - முரசறைவோர். (பணை - முரசு)
( 110 )
603. மங்கல வணியினர் மலர்க்கதிர் மதியன
புங்கவ னறநெறி பொலிவொடு மலிகென
வங்கதிர் மணிநகை யலமரு முலைவளர்
கொங்கணி குழலவள் கோடணை அறைவாம்.
பொருள் : மங்கல அணியினர் - அம் முரசறைவார் மங்கலமாகிய வெள்ளிய அணியணிந்தவராய்; மலர்கதிர் மதி அன புங்கவன் அறநெறி பொலிவொடு மலிக என - மலர்கின்ற ஞாயிறும் திங்களும் போன்ற அருகப்பெருமானுடைய அறநெறி அழகுற உலகெங்கும் நிறைவதாக என்று முதலிற் கூறி; அம் கதிர்மணி நகை அலமரும் வளர் முலை கொங்கு அணி குழலவள் கோடணை அறைவாம் - அழகிய ஒளி மணியும் முத்தும் ஊசலாடும் வளரும் முலைகளையும் மணம் பொருந்திய கூந்தலையும் உடைய தத்தையின் சுயம்வரத்தை அறைந்த முழக்கத்தைக் கூறுவோம்.
விளக்கம் : நன்மையை அறிவிக்கும் அணி வெள்ளணி. மங்கல அணி அணிந்தே மண முரசறைதல் வழக்கு. (சீவக. 2888) முதலில் அருகனருளை வாழ்த்திப் பிறகு முரசறைகின்றனர். மலிகென அகரம் தொகுத்தல் விகாரம். கோடணை அறைவாம் என இத்தொடரை முரசறைவார் கூற்றாக்கி, இதன் பின்னர், புங்கவன் அறநெறி பொலிவொடு மலிக! என நிறுத்தி மேல் வரும் முரசறை கூற்றுக்களோடு கூட்டுவர் நச்சினார்க்கினியர். இதற்கு மலிகென என்பதிலுள்ள என என்னும் எச்சத்தை, அறைவாம் என இசைத்துக் கூறும் இம்மொழி மாற்று அத்துணைச் சிறப்பாகு மேற்கொள்க.
604. வான்றரு வளத்த தாகி வையகம் பிணியிற் றீர்க
தேன்றரு கிளவி யாருங் கற்பினிற் றிரித லின்றி
யூன்றுக வூழி தோறு முலகினுண் மாந்த ரெல்லா
மீன்றவர் வயத்த ராகி யில்லறம் புணர்க நாளும்.
பொருள் : வையகம் ஊழிதோறும் வான்தரு வளத்தது ஆகிப் பிணியின் தீர்க - உலகம் ஊழிதோறும் முகிலளிக்கும் மழை வளம்பெற்று நோயினின்றும் நீங்குக!; தேன்தரு கிளவியாரும் கற்பினின் திரிதல் இன்றி ஊன்றுக - தேனனைய மொழியினராகிய மகளிரும் கற்பிலிருந்து வழுவாமல் நிலைபெறுக!; உலகினுள் மாந்தர் எல்லாம் - உலகிலுள்ள மக்கள் யாவரும்; ஈன்றவர் வயத்தர் ஆகி இல்லறம் நாளும் புணர்க - பெற்றோர்க் கடங்கினவராகி இல்லறத்தினை நாடொறும் புரிக!
விளக்கம் : வான் - மழை : ஆகுபெயர். மழைதரும் வளம் உலகின் கண் அறம்பொருள் இன்பங்கள் நடத்தற்கேது வாதல்பற்றி வான்தரு வளத்ததாகி வையகம் பிணியிற்றீர்க என்றார். எனவே வீழ்க தண் புனல் என்றவாறாயிற்று. பிணி பசித்துன்ப முதலியன அம்மழைக்கும் ஏதுவாதல்பற்றி கற்பினிற் றிரிதலின்றி ஊன்றுக என்றார். அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை என்பதுபற்றி இல்லறம் புணர்க நாளும் என்றார். இதனால் தேவர் கருத்து வள்ளுவனார் கருத்தையே பெரிதும் தழுவிநிற்றல் உணரலாம். பிற்காலத்துச் சமணர் இந்நெறி கடந்து துறவினையே வற்புறுத்தி வந்தனர். ( 112 )
605. தவம்புரிந் தடங்கி நோற்குந்
தத்துவர்த் தலைப்பட் டோம்பிப்
பவம்பரி கெமக்கு மென்று
பணிந்தவ ருவப்ப வீமி
னவம்புரிந் துடம்பு நீங்கா
தருந்தவ முயன்மின் யாருஞ்
சிவம்புரி நெறியைச் சேரச்
செப்புமிப் பொருளுங் கேண்மின்.
பொருள் : தவம் புரிந்து அடக்கி நோற்கும் தத்துவர்த் தலைப்பட்டு ஓம்பி - தவத்தைச் செய்து புலன் அடக்கி நோற்கும் உண்மையறிவினரைச் சென்று கண்டு வழிபட்டு; எமக்கும் பவம் பரிக என்று பணிந்து - எமக்கும் பவவினையைப் போக்குக என்று கும்பிட்டு; அவர் உவப்ப ஈமின் - அவர்கள் மகிழ்வனவற்றைக் கொடுமின்!; யாரும் அவம் புரிந்து உடம்பு நீங்காது சிவம்புரி நெறியைச் சேர அருந்தவம் முயல்மின் - யாவரும் வீண் செயல் செய்து உடலை விடாமல் நன்மை புரிந்த வீட்டை அடைய அவ்வுடம்பைக் கொண்டு அரிய தவத்திலே முயற்சி செய்மின்!; செப்பும் இப் பொருளும் கேண்மின்! - (மற்றும்) கூறும் இப் பொருளையும் கேண்மின்!
விளக்கம் : இல்லற நெறிநின்று முதிர்ந்த உணர்வுடையோர் எல்லாம் வீடுபெற முயலுதலே முறைமையாதல் பற்றியும் வீடுபேறே பிறவிப்பயன் ஆதல் பற்றியும் அவம்புரிந்து உடம்பு நீங்காது அருந்தவம் முயன்மின் என்றார். இவ்விரண்டு செய்யுளும் திருக்குறளின் அறத்துப்பாற் கருத்தையெல்லாம் தம்முளடக்கித் திகழ்தல் ஆராய்ந்துணர்க. சிவம் - மெய்ந்நெறி நன்மை. ( 113 )
606. அம்மல ரனிச்சத் தம்போ தல்லியோ டணியி னொந்து
விம்முறு நுசுப்பு நைய வீற்றிருந் தணங்கு சேர்ந்த
வெம்முலைப் பரவை யல்குன் மிடைமணிக் கலாபம் வேய்த்தோட்
செம்மலர்த் திருவின் சாயற் றேமொழி தத்தை யென்பாள்.
பொருள் : அனிச்சத்து அம்போது அம்மலர் அல்லியோடணியின் - அனிச்சத்தின் அழகிய மலரை அழகிய மலர்களின் அகவிதழுடன் அணியினும்; நொந்து விம்முறு நுசுப்பு நைய - நொந்து வருந்தும் இடை மேலும் வருந்துமாறு; வீற்றிருந்து அணங்கு சேர்ந்த வெம்முலை - வீற்றிருந்து அழகுத் தெய்வம் சேர்ந்த விருப்பம் உறுதற்குக் காரணமான முலைகளையும்; பரவை அல்குல் மிடைமணிக் கலாபம் வேய்த்தோள் - பரவிய அல்குலையும் அதன்மேற் செறிந்த மணிக் கலாபத்தையும் மூங்கிலனைய தோள்களையும்; செம்மலர்த் திருவின் சாயல் - செந்தாமரை மலரில் இருக்கும் இலக்குமியின் மென்மையினையும் உடைய; தேமொழி தத்தை என்பாள் - தேனனைய மொழியினாள் தத்தை எனும் பெயரினாள்.
விளக்கம் : அல்லி - அகவிதழ். முலைகளில் அழகுத் தெய்வம் உறைதல் ஆம் அணங்கு குடியிருந்து (சீவக. 171) என முன்னரும் வந்தது. ( 114 )
607. மற்றவ டந்தை நாய்கன் வண்கைச்சீ தத்தன் என்பான்
கொற்றவன் குலத்தின் வந்தான் கூறிய பொருளி தாகும்
முற்றவம் உடையளாகி மூரிநூற் கலைக ளெல்லாங்
கற்றவள் கணங்கொள் நல்யா ழனங்கனைக் கனிக்கும் நீராள்.
பொருள் : அவள் தந்தை நாய்கன் வண்கைச் சீதத்தன் என்பான் - அவள் வளர்ப்புத் தந்தையாகிய வணிகனும் வள்ளலுமாகிய சீதத்தனென்பவன்; கொற்றவன் குலத்தின் வந்தான் - அரசனாகிய கலுழவேகனின் குலத்துடனே வந்தவன்; கூறிய பொருள் இது ஆகும் - அவன் சொன்ன பொருள் இதுவாகும்; முன் தவம் உடையள் ஆகி - முந்தைய நல்வினை உடையவளாய்; மூரி நூல் கலைகள் எல்லாம் கற்றவள் - பெருமை மிகும் இசை நூலிற் கூறிய கலைகள் முற்றும் அறிந்தவள்; கணம்கொள் நல்யாழ் அனங்கனைக் கனிக்கும் நீராள் - இசைத் தொகுதியுற்ற யாழினாலே காமனையும் உருக்கும் இயல்பினாள்.
விளக்கம் : அனங்கன் இசையறிவிற் சிறந்தவன். இதனைக், காமனுங் கனிய வைத்த புலம் (சீவக. 370) என்ன முன்னரும், பின்னரும் சீவக. 729, 2637-ஆஞ் செய்யுட்களிலும் காண்க. ( 115 )
608. தீந்தொடை மகர வீணைத் தெள்விளி யெடுப்பித் தேற்றிப்
பூந்தொடி யரிவை தன்னிற் புலமிகுத் துடைய நம்பிக்
கீந்திடு மிறைவ ராதி மூவகைக் குலத்து ளார்க்கும்
வேந்தடு குருதி வேற்கண் விளங்கிழை தாதை யென்றான்.
பொருள் : இறைவர் ஆதி மூவகைக் குலத்துளார்க்கும் - அரசர் முதலாக மூவகைக் குலத்தில் உள்ளவர் யாவரிலும்; தீ தொடை மகர வீணை - இனிய இசையை எழுப்பும் நரம்புகளையுடைய மகர யாழிலே; தெள்விளி எடுப்பி தேற்றி - தெளிந்த இசையை எழுப்பித் தெளிவித்தலில்; பூ தொடி அரிவை தன்னின் புலம் மிகுத்து உடைய நம்பிக்கு - பூ வளையல் அணிந்த தத்தையினும் அறிவிற் சிறந்துள்ள ஒரு நம்பிக்கு; வேந்து அடு குருதி வேற்கண் விளங்கு இழை தாதை - அரசர்களை வருத்தும் இரத்தம் தோய்ந்த வேலனைய கண்ணாளும் விளக்கமான அணியுடையாளும் ஆகிய தத்தையின் தந்தை; ஈந்திடும் என்றான் - அளிப்பான் என்று முரசறைந்தான்.
விளக்கம் : பேரியாழ், மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ் என்னும் நான்கினும் பத்தொன்பது நரம்புகளையுடைய மகரயாழே தத்தை பயில்வது என்பது தோன்ற, மகரவீணை என்றார். ஒன்றும் இருபதும் ஒன்பதும் பத்துடனே, நின்ற பதினான்கும் பின்னேழும் - குன்றாத, நால்வகை யாழிற்கு நன்னரம்பு சொன்முறையே - மேல் வகைய நூலோர் விதி என்பதனால் முறையே 21, 19, 14, 7 - என நரம்பு கொள்க. ங்அரசர், அந்தணர் வணிகர் என்னும் மூவகைக் குலத்துளாரினும் என்பார் நச்சினார்க்கினியர். அரசர் ஆதி என்பதனால் அவள் அரசகுலமாகையால் அரசரை முற்கூறினார் என்றாலும் அங்ஙனங்கொள்வது சாலுமா என்பது சிந்திக்கத் தக்கதுசி. குலத்துளார்க்கு - குலத்துளாரில், (உருபு மயக்கம்), ( 116 )
609. மண்ணக மடந்தை யாக மார்புற முயங்கி நின்ற
வண்ணலை யாதி யாக வருங்கடி நகரை வாழ்த்தி
விண்ணக முழக்கி னேய்ப்ப வீதிதொ றெருக்கி யெங்குங்
கண்ணொளிர் கடிப்பி னோச்சிக் கடிமுர சறைந்த காலை,
பொருள் : மண் அகம் மடந்தை ஆகம் மார்புஉற முயங்கி நின்ற - நிலமகள் மார்பைத் தன் மார்புறத் தழுவி நின்ற; அண்ணலை ஆதி ஆக அருங்கடி நகரை வாழ்த்தி - கட்டியங்காரனை முதலாக வைத்து அரிய காவலையுடைய நகரத்தை வாழ்த்தி; விண் அகம் முழக்கின் ஏய்ப்ப வீதிதொறும் எருக்கி - முகிலின் முழக்கைப்போலத் தெருத்தொறும் (மேற் கூறியவாறு கூறி) தாக்கி; எங்கும் கண் ஒளிர் கடிப்பின் ஓச்சிக் கடிமுரசு அறைந்த காலை - எங்கும் (முரசின்) கண்ணுற ஒளிசெயும் குறுந்தடியாலே வீசி மணமுரசை அடித்தபோது.
விளக்கம் : முரசறைவோன் முதலில் அருகன் அருளை வாழ்த்திப் பிறகு கட்டியங்காரனையும் நகரையும் வாழ்த்தி முற்கூறியவாறு முரசறைந்தான் என்று கொள்க.1. அண்ணல் : கட்டியங்காரன். அண்ணல் மண்ணக மடந்தை தன் மார்பைப் பொருந்தாளாகவும் வஞ்சனையாலே அவள் தன் மார்பைப் பொருந்துமாறு முயங்கி நின்ற அண்ணல் எனவும் ஒரு பொருள் தோற்றுதல் காண்க. அரசனை வாழ்த்துதல் முரசறைவோர் வழக்கம். இதனைப் பெருங் கதையில் வாசவதத்தையின் திருமணம் அறிவிக்கும் வள்ளுவன்,
பொலிக வேல்வலம் புணர்க பூமகள்
மலிக மண்மகள் மன்னுக மன்னவன்
எனத் தொடங்கி முரசறைதலானும் உணர்க. எருக்கி - தாக்கி. கண் - முரசின் கண். கடிப்பு - குறுந்தடி., ( 117 )
610. வணக்கருந் தானை மன்னர்
மத்தகம் பிளந்து வாய்த்த
நிணக்கொழுங் குருதி வாட்கை
நிலம்புடை பெயர்க்கு மாற்ற
லணைப்பருங் களிகொள் வேழத்
தத்தின புரத்து வேந்தன்
கணைக்கவி னழித்த வுண்கட்
கன்னியைக் கருதி வந்தான்.
பொருள் : வணக்க அருந்தானை மன்னர் மத்தகம் பிளந்து - வணங்காத வேந்தரின் யானை மத்தகத்தைப் பிளந்து; வாய்த்த
நிணம் கொழுங்குருதி வாள்கை - தப்பாத நிணம் பொருந்திய குருதியையுடைய வாளேந்திய கையையும்; நிலம்புடை பெயர்க்கும் ஆற்றல் - நிலத்தைப் புடைபெயர்க்கும் ஆற்றலையும்; அணைப்பருங் களிகொள் வேழத்து - தடுத்தற்கரிய மதமுடைய வேழத்தினையும் உடைய; அத்தினபுரத்து வேந்தன் - அத்தினபுரியின் மன்னன்; கணைகவின் அழித்த உண்கண் கன்னியைக் கருதி வந்தான் - அம்பின் அழகை அழித்த மைதீட்டிய கண்களையுடைய தத்தையை மணக்க நினைத்து வந்தான். ( 118 )
611. சிதைப்பருஞ் சீற்றத் துப்பின்
செய்கழ னரல வீக்கி
மதக்களி றடர்த்துக் குன்ற
மணிவட்டி னுருட்டு மாற்றற்
கதக்களி யொளிறு வைவேற்
காம்பிலிக் காவல் மன்னன்
பதைப்பரும் பரும யானைப்
பாலமா குமரன் வந்தான்.
பொருள் : சிதைப்ப அருஞ் சீற்றத் துப்பின் - பகைவரால் மாற்றற்கரிய வலிமையாலே; செய்கழல் நரல வீக்கி - புனைகழலை ஒலிக்கக் கட்டி; மதக் களிறு அடர்த்து - மதயானையை அடக்கி; குன்றம் மணிவட்டின் உருட்டும் ஆற்றல் - குன்றை அழகிய வட்டினைப்போல உருட்டும் மெய் வலியையும்; ஒளிறு வைவேல் - விளங்கும் கூரிய வேலினையும்; கதக் களி பதைப்பு அரும் பருமயானை - சினக் களியாற் பகைக்கு அஞ்சிப் பதைத்து ஓடுதல் இல்லாத யானையினையும் உடைய; காம்பிலிக் காவல் மன்னன் பாலகுமரன் வந்தான் - காம்பிலி நாட்டைக் காவல்செய்யும் வேந்தனாகிய பாலகுமரன் வந்தான்.
விளக்கம் : பால மா குமரன் : மா : இசை நிறைத்தது. கதக் களி என்பதைப் பதைப்பரும் பரும யானை என்பதன் முன் இயைக்க. (119 )
612. இலைபொர வெழுதி யன்ன
வெரிமணிக் கடக முன்கைச்
சிலைபொரத் திரண்ட திண்டோட்
சில்லரிச் சிலம்பி னார்த
முலைபொர வுடைந்த தண்டார்
மொய்ம்மதுத் துளிப்ப வந்தான்
மலைபொர வரிய மார்பின்
வாரண வாசி மன்னன்.
பொருள் : எரிமணிக் கடகம் முன்கை - ஒளிசெயும் மணிக்கடகம் அணிந்த முன்கையினையும்; சிலை பொரத் திரண்ட திண்தோள் - வில் தழும்புறத் திரண்ட திண்ணிய தோளினையும்; மலைபொர அரிய மார்பின் - மலை பொருதற்கரிய மார்பினையும்; சில் அரிச் சிலம்பினார் தம் இலை பொர எழுதி அன்ன முலை பொர உடைந்த தண்டார் - சில அரிகளையுடைய சிலம்பு மகளிரின் இட்ட இலைத்தொழில் நெருங்க எழுதினாற் போன்ற முலைகள் தாக்குதலால் மலர்ந்த குளிர்ந்த தாரினில்; மொய்ம்மதுத் துளிப்ப - மிகுந்த தேன் துளிசெய்ய; வாரணவாசி மன்னன் வந்தான் -வாரணவாசி வேந்தன் வந்தான்.
613. கதிர்முடி மன்னர் சூழ்ந்து
கைதொழு திறைஞ்சி மாலைத்
திருமுடி வயிர வில்லாற்
சேவடி திளைப்ப வேத்தி
யருமுடி யணிந்த கொற்றத்
தவந்தியன் முரச மார்ப்ப
வொருபிடி நுசுப்பி னாளை
யுள்ளுபு வந்து விட்டான்.
பொருள் : கதிர்முடி மன்னர் சூழ்ந்து கைதொழுது - ஒளிவிடும் முடிவேந்தர்கள் சூழ இருந்து கையால் தொழுது; மாலைத் திருமுடி வயிர வில்லால் சேவடி திளைப்ப இறைஞ்சி ஏத்தி - தம்முடைய மாலையணிந்த திருமுடியில் உள்ள வயிர ஒளியாலே அவன் சேவடி ஒளியிடையறாது இருக்குமாறு வணங்கி வாழ்த்த; அருமுடி அணிந்த கொற்றத்து அவந்தியன் - அரிய முடிபுனைந்த வெற்றிபெற்ற அவந்தி மன்னன்; முரசம் ஆர்ப்ப - முரசு ஒலிக்க; ஒருபிடி நுசுப்பினாளை உள்ளுபு வந்து விட்டான் - ஒரு பிடியின்கண் அடங்கும் இடையினாளை நினைத்து வந்திட்டான்.
விளக்கம் : ஏத்தி - ஏத்த : வினையெச்சத் திரிபு. ( 121 )
614. வெள்ளணி யணிந்த ஞான்றே
வேந்தர்தம் முடியிற் கொண்ட
கள்ளணி மாலை மோந்து
கனைகழ லிலங்கும் நோன்றாட்
புள்ளணி கொடியி னானிற்
போர்பல தொலைத்த வாற்ற
லள்ளிலை யணிந்த வைவே
லயோத்திய ரிறையும் வந்தான்.
பொருள் : வெள் அணி அணிந்த ஞான்றே - பிறந்த நாளின் அணியை அணிந்த போதே; வேந்தர் தம் முடியில் கொண்ட கள் அணி மாலை மோந்து - அரசர்கள் தங்கள் முடியிலே அணிந்த தேனணிந்த மாலையை மோந்து; கனைகழல் இலங்கும் நோன்தாள் - ஒலிக்குங் கழல் விளங்கும் வலிய தாளினையும்; புள் அணி கொடியினானின் - கருடக் கொடியனான திருமாலைப்போல; போர் பல தொலைத்த ஆற்றல் - பல போர்களை வென்ற ஆற்றலையும்; அள் இலை அணிந்த வைவேல் - கூரிய இலை வடிவாக அணிந்த கூரிய வேலையும் உடைய; அயோத்தியர்க்கு இறையும் வந்தான் - அயோத்தி மன்னனும் வந்தான்.
615. நீணிதி வணிக ரீறா
நிலமிசை யவர்க ளெல்லாம்
வீணையிற் பொருது வெல்வான்
விரைவினர் துவன்றி மூதூர்க்
கோணமு மறுகு மெல்லாங்
குச்சென நிரைத்தம் மாந்தர்
மாண்மது நசையின் மொய்த்த
மதுகர வீட்ட மொத்தார்.
பொருள் : நீள் நிதி வணிகர் ஈறா நிலமிசையவர்கள் எல்லாம் - பெருநிதி பெற்ற செல்வரிறுதியாக நிலமிசை யுள்ளவர்கள் யாவரும்; வீணையின் பொருது வெல்வான் விரைவினர் துவன்றி - தத்தையை வீணையினாலே பொருது வெல்வதற்கு விரைந்து நெருங்கி; மூதூர்க் கோணமும் மறுகும் எல்லாம் குச்சு என நிரைத்து - அப் பழம்பதியின் குறுந்தெருவினும் நெடுந்தெருவினும் பிற இடங்களினும் பரவாற்றியென நிரைத்தலாலே; அம்மாந்தர் மாண் மதுநசையின் மொய்த்த மதுகர ஈட்டம் ஒத்தார் - அம்மக்கள், சிறந்த தேன் விருப்பினாலே மொய்த்த தேனீக்களின் திரளை ஒத்தார்.
விளக்கம் : இவ்வுவமை, மதுகரம் வருந்தத் தேனை ஒருவன் கொண்டுபோவது போல இவர் வருந்தச் சீவகன் கொண்டுபோதல் கருதிற்று. ( 123 )
616. உருக்கமைந் தெரியுஞ் செம்பொ
னோரைவில் லகல மாகத்
திருக்குழன் மடந்தை செல்லத்
திருநிலந் திருத்திப்
விரைத்தகு நான நீரால்
வெண்ணிறப் பொடியை மாற்றிப்
பரப்பினர் படுவண் டார்ப்பப்
பன்மலர் பக்கம் எல்லாம்.
பொருள் : திருக்குழல் மடந்தை செல்ல - அழகிய குழலையுடைய தத்தை செல்வதற்கு; உருக்கு அமைந்து எரியும் செம்பொன் ஓர் ஐவில் அகலம் எங்கும் - உருகுதல் பொருந்தி எரியும் பொன்னால் ஐந்துவிற்கிடை அகலமாக எங்கும்; திருநிலம் திருத்தி - நிலத்தைத் திருத்தஞ்செய்து; பின்னர் விரைத்தகு நானம் நீரால் - பிறகு, மணமிகு புழுகாலும் பனிநீராலும்; வெண்ணிறப் பொடியை மாற்றி - வெண்ணிறமான துகளை மாற்றிவிட்டு; பக்கம் எல்லாம் படுவண்டு ஆர்ப்பப் பன்மலர் பரப்பினர் - பக்கம் முழுவதும் வண்டுகள் முரலுமாறு பல மலர்களையும் பரப்பினர்.
விளக்கம் : எட்டுச் சாண் கொண்டது ஒரு வில் அளவு. அகலமாக என்ற பாடத்தினும் அகலமெங்கும் என்னும் பாடமே பொருத்தமாயுள்ளது. ( 124 )
617. விலைவரம் பறித லில்லா
வெண்டுகி லடுத்து வீதி
அலர்தலை யனிச்சத் தம்போ
தைம்முழ வகல மாகப்
பலபடப் பரப்பிப் பாவை
மெல்லடிப் பரிவு தீர
நிலவரைத் தன்ன னாரை
நிதியினால் வறுமை செய்தான்.
பொருள் : வீதி விலை வரம்பு அறிதல் இல்லா வெண் துகில் அடுத்து - (அப்) பொன்னிலத்தே விலையின் அளவை அறியவியலாத வெண்மையான ஆடையை விரித்து; பாவை மெல் அடிப் பரிவுதீர - பாவையின் மெல்லடியின் துன்பம் நீங்குமாறு; அலர்தலை அனிச்சத்து அம்போது ஐம்முழ அகலம் ஆகப் பலபடப் பரப்பி - பரந்த அவ்விடத்தே அனிச்சத்தின் அழகிய மலரை ஐந்துமுழ அகலமாகப் பலபடப் பரப்பியதால்; நிலவரை தன்னனாரை நிதியினால் வறுமை செய்தான் - நிலவுலகிலே தன்னை யொப்பாரைச் செல்வத்தினால் வறியவர் ஆக்கினான்.
விளக்கம் : சீதத்தன் செய்யுஞ் செலவைக் கண்டு தங்கள் செல்வத்தால் இவ்வாறு செய்யமுடியா தென்று கருதியதால் வறுமை செய்தான் என்றார்.
618. மண்டல நிறைந்த மாசின்
மதிப்புடை வியாழம் போன்றோர்
குண்டல மிலங்க நின்ற
கொடியினைக் குறுகித் தோழி
விண்டலர் கோதை விம்மும்
விரைகுழ றொழுது நீவிப்
பண்டியல் மணங்க ளெல்லாம்
பரிவறப் பணிந்து சொன்னாள்.
பொருள் : மண்டலம் நிறைந்த மாசுஇல் மதி புடை வியாழம் போன்று - வட்டம் நிறைந்த குற்றம் அற்ற திங்களின் அருகே வியாழனைப் போன்று; ஓர் குண்டலம் இலங்க நின்ற கொடியினைக் குறுகித்தொழுது (தன் முகத்தருகே) ஒப்பில்லாத குண்டலம் விளங்க நின்ற தத்தையைக் குறுகிநின்று வணங்கி; விண்டு அலர் கோதை விம்மும் விரை குழல் நீவி - விரிந்து மலர்ந்த மாலையின் பொங்கும் மணமுடைய கூந்தலைக் கோதி; பண்டு இயல் மணங்கள் எல்லாம் பரிவு அறப் பணிந்து தோழி சொன்னாள் - பண்டைக் காலத்தே உலகில் நடைபெற்றுவரும் எண்வகை மணங்களையும் வருத்தமின்றி யுணர வணக்கத்துடன் வீணாபதி கூறினாள்.
விளக்கம் : விரைக்குழல் விரைகுழலென்றாயது விகாரம் : பண்டியல் மணங்களாவன : - பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்தருவம், ஆசுரம், இராக்கதம். பைசாசம் என்பன. இங்ஙனம் கூறுதல் ஒரு மரபு எனக் கொள்க. ( 126 )
619. எரிமணி நெற்றி வேய்ந்த
விளம்பிறை யிதுகொ லென்னப்
புரிமணி சுமந்த பொற்பூண்
பொறுக்கலா நுசுப்பிற் பாவை
திருமணி வீணைக் குன்றத்
திழிந்ததீம் பாலை நீத்தத்
தருமுடி யரச ராழ்வ
ரம்மனை யறிவ லென்றாள்.
பொருள் : எரிமணி நெற்றி வேய்ந்த இளம்பிறை இது கொல் என்னப் புரிமணி சுமந்த பொன்பூண் - ஒளிவிடும் மணியை இருதலையினும் அழுத்தியதொரு பிறையோ இது? என்னுமாறு முத்து வடங்கள் இருதலையினு மணியைச் சுமந்த பொற்பூணினை; பொறுக்கலா நுசுப்பின் பாவை - பொறுக்க வியலாத இடையினையுடைய பாவையே!; அம்மனை! - அன்னையே!; திருமணி வீணைக் குன்றத்து இழிந்த தீ பாலை நீத்தத்து - அழகிய மணியழுத்திய மகரயாழாகிய குன்றில் இருந்து பெருகிய இனி பாலைப் பண்ணாகிய வெள்ளத்திலே; அருமுடி அரசர் ஆழ்வர் - அரிய முடிமன்னர் அமிழ்வர்; அறிவல் என்றாள் - யான் அறிவேன் என்று வீணாபதி விளம்பினாள்.
விளக்கம் : புரி - முத்துவடம். பாலையாவன : செம்பாலை, படுமலைப் பாலை, செவ்வழிப்பாலை, அரும்பாலை, கோடிப்பாலை, மேற்செம்பாலை, விளரிப்பாலை என ஏழு. அம்மனை - தாய்; அன்னை என்னை என்றலும் உளவே, தொன்னெறி முறைமை சொல்லினும் எழுத்தினும், தோன்றா மரபின என்மனார் புலவர் (தொல்-பொருளியல்-52) என்பது விதி. ( 127 )
620. மண்ணிட மலிர வெங்கு
மாந்தரும் வந்து தொக்கா
ரொண்ணிற வுரோணி யூர்ந்த
வொளிமதி யொண்பொ னாட்சித்
தெண்ணிற விசும்பி னின்ற
தெளிமதி முகத்து நங்கை
கண்ணிய வீணை வாட்போர்க்
கலாமின்று காண்டு மென்றே.
பொருள் : மண் இடம் மலிர எங்கும் மாந்தரும் வந்து தொக்கார் - நிலமெங்கும் நிறைய மக்களெல்லோரும் வந்து குழுமினர்; ஒள் நிற உரோணி ஊர்ந்த ஒளிமதி ஒண் பொன் ஆட்சி - ஒளியும் நிறமும் உடைய உரோகிணி கூடிய திங்களையுடைய வியாழக் கிழமையிலே; தெள்நிற விசும்பில் நின்ற தெளி மதி முகத்து நங்கை - தெளிந்த நிறமுடைய வானில் உலவும் தெளிந்த மதிபோலும் முகமுடைய தத்தையின்; கண்ணிய வீணை வாள் போர்க்கலாம் இன்று காண்டும் என்று - உலகம் மதித்த யாழாகிய வாட்போரின் மாறுபாட்டை இன்று காண்போம் என்று,
விளக்கம் : ஈண்டி என்பது (ஈண்டித் தொக்கார் என) பாடமாயின் தம்மில் திரண்டு என்க. இச் செய்யுள் குளகம். மலிர - நிறைய. உரோணி - உரோகிணி. பொன் - வியாழன். ஆட்சி - கிழமை. கலாம் - கலகம். ( 128 )
621. பசுங்கதிர்க் கடவுள் யோகம்
பழிப்பற நுனித்து வல்லான்
விசும்பிவர் கடவு ளொப்பான்
விரிச்சிக னறிந்து கூற
வசும்புதே னலங்க லைம்பா
லரிவையொ டாய்ந்து நாய்கன்
விசும்புபோன் மாந்த ரார
விழுநிதி சிதறி னானே.
பொருள் : பசுங் கதிர்க் கடவுள் யோகம் பழிப்பு அற நுனித்து வல்லான் - சந்திராபரணம் என்னும் நூலிற் குற்றமறக் கூர்ந்தறிந்து வல்லவன், விசும்பு இவர் கடவுள் ஒப்பான் விரிச்சிகன் அறிந்துகூற - வானத்தில் இயங்கும் வியாழனைப் போன்றவனாகிய கணி அறிந்து சொல்ல; அசும்பு தேன் அலங்கல் ஐம்பால் அரிவையொடு நாய்கன் ஆய்ந்து - இடையறாது துளிக்குந்தேன்பொருந்திய மாலையணிந்த கூந்தலையுடைய பதுமையுடன் நாய்கன் ஆராய்ந்து; விசும்பு போல் மாந்தர் ஆர விழுநிதி சிதறினான் - முகிலைப்போல, மக்கள் மனமார, நன்னிதியை வழங்கினான்.
விளக்கம் : விரிச்சிகன் - கணி : காரணப் பெயர். பசுங்கதிர்க் கடவுள் யோகம் என்றது சந்திராபரணம் என்னும் பெயரையுடையதொரு கணித நூலை. நுனித்தல் - கூரிதாகக் கற்றல். விசும்பிவர் கடவுள் என்றது ஈண்டு வியாழனை. ( 129 )
622. வாசநெய் வண்டு மூச
மாந்தளிர் விரல்கள் சேப்பப்
பூசிவெள் ளிலோத்தி ரத்தின்
பூம்பொருக் கரைத்த சாந்தின்
காசறு குவளைக் காம
ரகவிதழ் பயில மட்டித்
தாசறத் திமிர்ந்து மாத
ரணிநலந் திகழ்வித் தாரே.
பொருள் : வண்டு மூச மாந்தளிர் விரல்கள் சேப்ப வாச நெய்பூசி - மெய்யில் வண்டுகள் மொய்க்க, மாந்தளிரனைய விரல்கள் சிவக்க, மணமுற்ற நெய்யைப் பூசி; வெள்ளிலோத்திரத்தின் பூம் பொருக்கு அரைத்த சாந்தின் - வெள்ளிலோத்திரத்தினது பூவுலர்தலை அரைத்த குழம்பினாலே; காசு அறு குவளைக் காமர் அகவிதழ் பயில மட்டித்து - குற்றமற்ற குவளையின் அழகிய அகவிதழ்த் தடிப்பைப் போலப் பூசி; ஆசு அறத் திமிர்ந்து - குற்றமறத் திமிர்ந்து;மாதர் அணிநலம் திகழ்வித்தார் - மாதர்கள் தத்தையின் அழகு நலம் விளக்கினர்.
விளக்கம் : வெள்ளி லோத்திரம் - ஒருவகை மணமலர். தேறு வெள்ளி லோத்திரப் பூம் பொருக் கரைத்த கரைத்த சாந்தும் என்றார்.
(விநாயக. திருமண. 121.) பிறரும். பூம்பொருக்காவது - உலர்ந்த பூ. மட்டித்தல் - பூசுதல். ( 130 )
623. கங்கையின் களிற்றி னுச்சிக்
கதிர்மணிக் குடத்திற் றந்த
மங்கல வாச நன்னீர்
மணிநிறங் கழீஇய தொப்ப
நங்கையை நயப்ப வெல்லாம்
விரையொடு துவருஞ் சேர்த்தி
யங்கர வல்கு லாளை
யாட்டினா ரரம்பை யன்னார்.
பொருள் : அரம்பை அன்னார் - வான மங்கையரனையார்; மணிநிறம் கழீஇயது ஒப்ப - மணியை நிறம்பெறச் சாணை பிடித்தாற் போல; நங்கையை நயப்ப எல்லாம் - நங்கையை விருப்பூட்டுவனவாகிய ஓமாலிகைகள் எல்லாவற்றையும்; விரையொடு துவரும் சேர்த்தி - விரையையும் துவரையும் கூட்டி; களிற்றின் உச்சிக் கதிர் மணிக்குடத்தில் கங்கையின் தந்த - களிற்றின் உச்சியிலே ஒளிவிடும் மணிக்குடத்தில் கங்கையினின்றுங் கொண்டுவந்த; மங்கல வாச நன்னீர் - மங்கலம் பொருந்திய மணநீரைக் கொண்டு; அங்கு அரவு அல்குலாளை ஆட்டினார் - அங்கே தத்தையைக் குளிப்பாட்டினர்.
விளக்கம் : ஓமாலிகைகள் : இலவங்கம் பச்சிலைகச் சோலமிருவேரி - மலையிரு வேரி வகுளம் சுரபுன்னை - ஏலந்தக் கோல மதாவரிசி சாதிக்காய் - நாகணமஞ் சட்டி நறும்பிசின் குக்குலு - மாஞ்சிகண்டில் வெண்ணெய் தீம்புநன் னாரி - அடவிக்கச் சோலம் அரத்தை சரளம் - புழுகாரி யக் கொட்டங் கொட்டந் தகரம் - அதிமதுர முத்தக்கா சாய்ந்த விலா மிச்சம் - சயிலேக நாகப்பூச் சண்பக மொட்டென்று - முழுதுணர்ந்ததோரோதிய முப்பத் திரண்டே - விதிவகை ஓமாலிகை. விரை: சந்தனம் அகிலொடு கருப்பூரங் கத்தூரி - குங்குமம் என்றிவை ஐந்தும் விரையே. துவர்: நாற்பால் மரமா நாவல் திரிபலை - வன்கருங் காலி பத்துந்துவரே. இம்மேற்கோள் முற்றும் வேறுபாட்டுடன் அடியார்க்கு நல்லாரால் எடுத்துக் காட்டப்படுகிறது; (சிலப்-6 : 76-9 : உரை.) ( 131 )
624. வெண்ணிற மழையின் மின்போல்
வெண்டுகிற் கலாபம் வீக்கிக்
கண்ணிற முலையுந் தோளுஞ்
சந்தனத் தேய்வை கொட்டித்
தெண்ணிறச் சிலம்பு செம்பொற்
கிண்கிணி பாதஞ் சேர்த்திப்
பண்ணிறச் சுரும்பு சூழும்
பனிமுல்லைச் சூட்டு வேய்ந்தார்.
பொருள் : வெண்ணிற மழையின் மின்போல் - வெண்முகிலிடை மின்னுப்போல; வெண்துகில் கலாபம் வீக்கி - வெண்ணிற ஆடையினுள்ளே கலாபத்தை இறுக்கி; கண் நிறம் முலையும் தோளும் சந்தனத் தேய்வை கொட்டி - கண்ணையும் நிறத்தையும் உடைய முலையினும் தோளினும் சந்தனக் குழம்பைப் பூசி; தெள் நிறச் சிலம்பு செம்பொன் கிண்கிணி பாதஞ் சேர்த்தி - தெளிந்த நிறமுடைய சிலம்பையும் பொன்னாலான கிண்கிணியையும் அடியில் அணிந்து; பண் நிறச் சுரும்பு சூழும் பனிமுல்லைச் சூட்டு வேய்ந்தார் - பண்ணையும் நிறத்தையும் உடைய வண்டுகள் சூழும் முல்லைச் சூட்டினைக் கற்பிற்குச் சான்றாகத் தலையிலே சூட்டினார்.
விளக்கம் : குலமகளிர் தங் கற்பொழுக்கத்திற் கறிகுறியாக முல்லை மலர் சூடுதல் ஒரு தமிழ் மரபு. இதனை, முல்லைசான்ற கற்பின் (சிறுபாண். 30) என்றும், வாணுதலரிவை முல்லைமலைய (ஐங். 408) என்றும், முடிசூட்டுமுல்லையோ முதற்கற்பு முல்லையோ (தக்கயா. 119) என்றும், முல்லையந்தொடை அருந்ததி (பிரபுலிங் - கைலாய. 27) என்றும், வண்முல்லை சூடுவ தேநலங் காண்குல மாதருக்கே (குலோத்துங்க சோழன் கோவை. 168) என்றும் பிற சான்றோர் கூறுமாற்றானும் உணர்க. இனித் தேவரே, முல்லைச்சூட்டு மிலைச்சி (2438) என மேலுங் கூறுவர். ( 132 )
625. எரிமணிச் சுண்ண மின்னு
மிருஞ்சிலை முத்தஞ் சேர்த்தித்
திருமணி முலையி னெற்றிச்
சிறுபுறஞ் செறியத் தீட்டிப்
புரிமணி யாகத் தைதா
விரனுதி கொண்டு பூசி
விரிமணி வியப்ப மேனி
யொளிவிட்டு விளங்கிற் றன்றே.
பொருள் : மின்னும் இருஞ்சிலை முத்தம் திருமணி முலையின் நெற்றிச் சேர்த்தி - ஒளிவிடும் பெரிய வானவிற்போலும் முத்துவடத்தை அழகிய மணியணிந்த முலையின் நெற்றியிலே பூட்டி; எரிமணிச் சுண்ணம் சிறு புறம் செறியத் தீட்டி - ஒளிரும் மணிச் சுண்ணத்தை முதுகிலே பொருந்தத் தீட்டி; புரிமணி ஆகத்து ஐதா விரல்நுதி கொண்டு பூசி - அதனையே முத்துவடமும் மணிவடமும் அணிந்த மார்பினும் மென்மையாக விரல் நுனியைக் கொண்டு பூச; விரிமணி வியப்ப மேனி ஒளிவிட்டு விளங்கிற்று - விரிந்த ஒளியுறு மாணிக்க மணியும் வியக்குமாறு மேனி ஒளி வீசி விளங்கியது.
விளக்கம் : பூசி - பூச : வினையெச்சத் திரிபு. இருஞ்சிலை என்றது வானவில்லை. இது முத்துவடத்திற்குவமை. சிறுபுறம் - முதுகு. ஐதா - மென்மையாக. ஐதாக எனல் ணேடியது ஈற்றுக் ககரம் கெட்டு நின்றது. விரிமணி வியப்ப என்புழி மணி - மாணிக்கமணி. வியப்ப : உவமவுருபு.
இதுமெயென் றின்றுந் தேறார் இருநிலத் துறையு மாந்தர்
புதுமையைப் பொருளி தென்னார் பழமையைப் பொருளிதென்பர்
மதுமய மாலைத்தோழி பழமையைப் பழித்து மாதோ
புதுமையே பொருளிதாதல் பூங்கண்ணி னுணர்த்தி னாளே
என ஒரு செய்யுள் சில கையெழுத்துப் பிரதிகளில் காணப்படுகின்றது. ( 133 )
626. அருங்கயம் விசும்பிற் பார்க்கு
மணிச்சிறு சிரலை யஞ்சி
இருங்கயந் துறந்து திங்க
ளிடங்கொண்டு கிடந்த நீலம்
நெருங்கிய மணிவிற் காப்ப
நீண்டுலாய்ப் பிறழ்வ செங்கேழ்க்
கருங்கய லல்ல கண்ணே
எனக்கரி போக்கி னாரே.
பொருள் : நீண்டு உலாய் பிறழ்வ - நீண்டு உலவிப் பிறழ்கின்ற இவை; அருங்கயம் விசும்பின் பார்க்கும் - அரிய குளத்தில் விசும்பிலிருந்து (தம்மை) நோக்கும்; அணிச் சிறு சிரலை அஞ்சி - அழகிய சிறிய சிச்சிலிக்கு அஞ்சி ; இருங் கயம் துறந்து - அந்தப் பெரிய குளத்தை நீங்கி; திங்கள் இ டம் கொண்டு - திங்களை இடமாகக் கொண்டு; நீலம் மணி நெருங்கிய வில்காப்ப - நீலமணியாகிய நெருங்கிய வில்காப்ப; கிடந்த - கிடக்கின்ற; கருங்கயல் அல்ல - கரிய கயல்மீன்கள் அல்ல; கண்ணே எனக் கரி போக்கினார் - கண்ணேயென்று கண்டோர் கருதுமாறு மையை எழுதினார்.
விளக்கம் : கரி என்றார் சான்று போலவும் தோன்ற. கிடந்து என்றும் பாடம். விசும்பினின்று பார்க்கும் என்க. சிரல் - மீன் கொத்திப் பறவை. இருங்கயம் என்பது சுட்டுமாத்திரையாய் நின்றது. சிரலை அஞ்சி என்றதற்கேற்ப வில் காப்ப என்றார். ( 134 )
627. பொருந்துபொற் றூண்கள் நான்கிற்
பொலிந்துநூற் புலவர் செந்நா
வருந்தியும் புகழ்த லாகா
மரகத மணிசெய் கூடத்
திருந்திளை யார்கள் கோல
மிந்திர னிருமித் தாற்போற்
திருந்தச்செய் ததற்பி னங்கை
திருவிற்கோர் திலக மொத்தாள்.
பொருள் : பொருந்து பொன் தூண்கள் நான்கின் பொலிந்து - பொருந்திய பொன் தூண்கள் நான்கினாற் பொலிவுற்று; நூற்புலவர் செந்நா வருந்தியும் புகழ்தல் ஆகா - நூலறிபுலவர் தம் செவ்விய நாவினால் வருந்தியும் புகழ இயலாத; மரகத மணிசெய் கூடத்து - மரகத மணியாற் செய்த ஒப்பனைக்குரிய கூடத்தே; இளையார்கள் இருந்து - ஒப்பனை மகளிர் இருந்து; இந்திரன் நிருமித்தாற்போற் கோலம் திருந்தச் செய்ததன் பின் - இந்திரன் அமைத்ததுபோல் ஒப்பனையை அழகுறச் செய்த பிறகு; நங்கை திருவிற்கு ஓர் திலகம் ஒத்தாள் - தத்தை திருமகளுக்கு இட்டதொரு திலகத்தைப் போன்றாள்.
விளக்கம் : நான்கில் - நான்கினால். இளையார்கள் - ஈண்டு ஒப்பனை மகளிர். நிருமித்தல் - படைத்தல். திரு - திருமகள். நங்கை - காந்தருவ தத்தை. ( 135 )
628. மண்கனை முழவம் விம்ம
வரிவளை துவைப்ப வள்வார்க்
கண்கனைந் திடியின் வெம்பிக்
கடலென முரச மார்ப்ப
விண்கனிந் துருகு நீர்மை
வெள்வளைத் தோளி போந்தாள்
பண்கனிந் துருகு நல்யாழ்ப்
படைபொரு துடைக்க லுற்றே.
பொருள் : மண் கனை முழவம் விம்ம - மார்ச்சனையிட்ட முரசு ஒலிக்கவும்; வரிவளை துவைப்ப - சங்குகள் முழங்கவும்; வள்வார் முரசம் கண் கனைந்து இடியின் வெம்பிக் கடல் என ஆர்ப்ப - சிறிய வார்கொண்ட முரசம் கண் ஒலித்து இடியின் வெம்பிக் கடல்போல ஆரவாரிக்க; விண் கனிந்து உருகும் நீர்மை வெள் வளைத் தோளி - வானவரும் நெஞ்சுருகுந் தன்மையுடைய வெள்ளை வளையணிந்த தோளினாள்; பண் கனிந்து உருகும் நல் யாழ்ப் படை பொருது உடைக்கல் உற்றுப் போந்தாள் - பண்முற்றுப் பெறுதலிற் கேட்டோர் நெஞ்சுருகுதற்குக் காரணமான நல் யாழினையுடைய படையையும் பொருது உடைத்தற்கு வந்தாள்.
விளக்கம் : மண் - மார்ச்சனை. விண் : ஆகுபெயர், விண்ணும் எனற்பால சிறப்பும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. ( 136 )
629. பரந்தொளி யுமிழும் பைம்பொற்
கண்ணடி பதாகை தோட்டி
விரிந்திருண் மேயுஞ் செம்பொன்
விளக்குவெண் முரசு கும்பஞ்
சுரந்தவெண் மதியைச் சூன்று
கதிர்கொண்டு தொகுத்த போலும்
பொருந்துபொற் கதிர்பெய் கற்றை
புணர்கயல் போந்த வன்றே.
பொருள் : பரந்து ஒளி உமிழும் பைம்பொன் கண்ணடி - பரவி ஒளியை வீசும் பொற்கண்ணாடியும்; பதாகை தோட்டி - கொடியும் அங்குசமும்; விரிந்து இருள் மேயும் செம்பொன் விளக்கு - ஒளி பரந்து இருளைக் கெடுக்கும் பொன் விளக்கும்; வெண் முரசு கும்பம் - முரசும் நிறைகுடமும்; சுரந்த வெண்மதியைச் சூன்று கதிர் கொண்டு தொகுத்த போலும் பொருந்து பொன்கதிர் பெய்கற்றை - அமுதைச் சுரந்த வெள்ளிய திங்களைத் தோண்டிக் கதிர்களை எடுத்துக் கொண்டு சேர்த்த போலும் பொருந்தும் பொற்கதிர்களைப் பெய்கின்ற தொகுதியான கவரியும்; புணர்கயல் - இரட்டைக் கயல்களும்; போந்த - வந்தன.
விளக்கம் : இவை அட்டமங்கலங்கள். அட்டமங்கலங்கள் இன்ன வென்பதை 472 - ஆம் செய்யுளின் விளக்கத்தினும் காண்க. கண்ணாடி - கண்ணடி என நின்றது. பதாகை - பெருங்கொடி. மேயும் என்றது, கெடுக்கும் என்பதுபட நின்றது. கும்பம் - குடம்; ஈண்டு நிறைகுடம் என்பதுபட நின்றது. ( 137 )
630. வென்றவ னகலம் பூட்ட
விளங்கொளி மணிசெய் செப்பி
னின்றெரி பசும்பொன் மாலை
போந்தது நெறியிற் பின்ன
ரொன்றிய மணிசெய் நல்யாழ்
போந்தன வுருவ மாலை
தின்றுதே னிசைகள் பாடத்
திருநகர் சுடர வன்றே.
பொருள் : வென்றவன் அகலம் பூட்ட - வென்றவன் மார்பில் அணிய : விளங்கு ஒளி மணிசெய் செப்பின் நின்று எரி பசும்பொன் மாலை நெறியின் போந்தது - விளங்கும் ஒளியை உடைய மாணிக்கச் செப்பிலே நின்று ஒளிதரும் பைம்பொன் மாலை வழக்கப்படி வந்தது; பின்னர், ஒன்றிய மணிசெய் நல்யாழ் - பிறகு, ஒன்றிய மாணிக்கங்கள் இழைத்த அழகிய யாழ்கள்; உருவம் மாலைதின்று - தம் உருவத்தை மாலைகள் உள்ளடக்கி; தேன் இசைகள் பாட - அம் மாலைகளில் உள்ள வண்டுகள் இசைபாட; திருநகர் சுடர - நகரம் விளக்கம்உற; போந்தன - வந்தன.
விளக்கம் : தின்று என்பதற்குத் தேன் மாலையைத் தின்று இசைகள் பாட என மிகுதியாற் கூறுவாருமுளர். தின்று தேன்றிசைகள் பாட என்றும் பாடம். வென்றவன், யாழ்ப்போரில் தன்னை வென்றவன் என்க. தின்று - தின்னப்பட்டு; மறைக்கப்பட்டு என்றவாறு.
( 138 )
வேறு
631. ஆரந் துயல்வர வந்துகில் சோர்தர
வீரம் படக்கையை மெய்வழி வீசித்
தேரை நடப்பன போற்குறள் சிந்தினொ
டோரு நடந்தன வொண்டொடி முன்னே.
பொருள் : ஆரம் துயல்வர அம்துகில் சோர்தர - ஆரம் அசையத் துகில் நெகிழா நிற்க; வீரம்பட - வீரம் உண்டாக; கையை மெய்வழி வீசி - கையை விலாப்புடைக்குள்ளே வீசி; தேரை நடப்பனபோல் - தேரைகள் நடப்பனபோல; குறள் சிந்தினொடு - குறளும் சிந்தும்; ஒண்தொடி முன்னே நடந்தன - தத்தைக்கு முன்னே நடந்தன.
விளக்கம் : ஓரும் : அசைச் சொல். இரண்டடி உயரம் உள்ளவர்கள் குறளர் : மூன்றடி உயரமுள்ளவர்கள் சிந்தர். தோளிரண்டும் வீசி யாம் வேண்டேமென்று விலக்கவும் எம் வீழும் காமர் நடக்கும் நடைகாண் (94 - 31 - 3.) என்றார் மருதக்கலியினும். ( 139 )
632. வட்டச் சூறையர் வார்முலைக் கச்சினர்
பட்டு வீக்கிய வல்குலர் பல்கணை
விட்ட தூணியர் வில்லினர் வாளின
ரொட்டி யாயிரத் தோரெண்மர் முன்னினார்.
பொருள் : வட்டச் சூறையர் - வட்டமான பனிச்சையர்; வார்முலைக் கச்சினர் - வாராற் கட்டிய முலைக் கச்சினர்; பட்டு வீக்கிய அல்குலர் - வெண்பட்டணிந்த அல்குலினர்; பல்கணைவிட்ட தூணியர் வில்லினர் வாளினர் - பல அம்புகள் நிறைந்த தூணியும் வில்லும் வாளும் உடையராய்; ஆயிரத்துஓர் எண்மர் - ஆயிரத்தெட்டு மகளிர்; ஒட்டி முன்னினார் - வஞ்சினங் கூறித்தத்தைக்கு முன் போந்தனர்.
விளக்கம் : சூறை - சல்லடமும் ஆம். இவர்கள் காவன்மகளிர். ஒட்டி - வஞ்சினங் கூறி. ஆயிரத்தோ ரெண்மர் என்புழி - ஓர்: அசைச்சொல். முன்னுதல் - முற்படச் செல்லுதல். ( 140 )
633. வம்பு வீக்கி வருமுலை யுட்கரந்
தம்பி னொய்யவ ராணுடைத் தானையர்
பைம்பொற் கேடகம் வாளொடு பற்றுபு
செம்பொற் பாவையைச் சேவித்து முன்னினார்.
பொருள் : அம்பின் நொய்யவர் - (ஓடுங்கால்) அம்பினுங் கடிதோடுவர்; வரும்முலை உள் கரந்து வம்பு வீக்கி - வளரும் முலையை உள்ளடக்கிக் கச்சினால் இறுக்கி; ஆண் உடைத் தானையர் - ஆணுடையாக உடுத்த ஆடையினராய்; பைம்பொன் கேடகம் வாளொடு பற்றுபு - புதிய பொற்கேடகத்தையும் வாளையும் பற்றியவராய்; செம்பொற் பாவையைச் சேவித்து முந்தினார் - தத்தையைச் சேவித்து முற்படச் சென்றனர்.
விளக்கம் : இங்ஙனஞ் சேவித்தல் மகளிரினியல்பு. வம்பு - கச்சு. வருமுலை : வினைத்தொகை. நொய்யவா என்புழி - நொய்மைப் பண்பு விரைவு குறித்து நின்றது. செம்பொற்பாவை என்றது, காந்தருவதத்தையை ( 141 )
634. ஆணை யாணை யகலுமி னீரென
வேணுக் கோலின் மிடைந்தவ ரொற்றலி
னாணை யின்றெம தேயென் றணிநகர்
காணுங் காதலிற் கண்ணெருக் குற்றவே.
பொருள் : ஆணை ஆணை நீர் அகலுமின் என - அரசன் ஆணை! ஆணை!! நீவிர் விலகிச் செல்லுமின் என்று; மிடைந்தவர் வேணுக் கோலின் ஒற்றலின் - நெருங்கியவரை மூங்கிற்கோலினாற் காவலர் தள்ளும்போது; ஆணை இன்று எமதே என்று - ஆணை இன்றைக்கு எங்களுடையதே என்று; அணிநகர் காணும் காதலின் - அழகிய நகரிலுள்ளார் காணவரும் காதலினால்; கண் நெருக்குற்றவே - கண்கள் நெருங்கியுற்றன.
விளக்கம் : நகர் - நகரத்து மக்கள்: ஆகு பெயர். வேணு - மூங்கில்.
635. கண்ணி னோடு பிறந்தது காரிகை
வண்ணங் காண்டற்கன் றோவென்று வைதவர்
விண்ணு மண்ணும் விருந்துசெய் தாலொப்ப
வெண்ணி னெண்ணிட மின்றி நெருங்கினார்.
பொருள் : அவர் - அந் நகர மக்கள்; கண்ணினோடு பிறந்தது காரிகை வண்ணம் காண்டற்கு அன்றோ என்ற வைது - யாங்கள் கண்ணுடன் பிறந்தது தத்தையின் அழகைக் காண்பதற்கு அன்றோ என்று வைது; விண்ணும் மண்ணும் விருந்து செய்தால் ஒப்ப - வானும் நிலனும் விருந்து செய்தாற்போல; எண்ணின் எண் இடம் இன்றி நெருங்கினார் - ஆராயின் எள் இடவும் இடம் இன்றி நெருங்கினார்.
விளக்கம் : (நச்சினார்க்கினியர் 634 -635 ஆகிய இரண்டு செய்யுளையும் ஒரு தொடராக்கி மொழிமாற்றிக் கூறும் பொருள்: காவற் குரியவர்கள் மிடைந்தவரை முற்படவைது, அவர் நீங்காமையின், ஆணை ஆணை அகலுமின் எனக் கூறி ஒற்றுதலால், அவர், விண்ணில் விச்சாதரரும் மண்ணிலுள்ளாரும் எள்ளிட இடம் இன்றி நெருங்கினார், காரிகை வண்ணம் காண்டற் கன்றோ? ஆதலால் விசாரித்துப் பார்க்கின், யாமும் கண்ணினொடு பிறந்தது வண்ணங் காண்டற் காயிருக்குமெனக் கூறிப், பின்னும் எங்கட்கு நீர் விருந்து செய்தாற்போல இன்று எம்முடைய ஆணையே ஆணையாகக் கொண்மின் எனவுங் கூறி நகரிலுள்ளார் காதலாற் காணுங் கண்கள் நெருக்குற்ற வென்க. காவற்குரியவர்களென்றும் முற்படவென்றும் நீங்காமையின் என்றும் யாமும் என்றும் வண்ணம் காண்டற்காயிருக்கும் என்றும் பின்னும் என்றும் எங்கட்கென்றும் ஆகக் கொண்மின் என்றும் வருவித்துரைக்க.) ( 143 )
வேறு
636. இனஞ்சேரா வாகி விளையோ
ருயிரின்மே லெண்ணங் கொள்வான்
புனஞ்சேர் கொடிமுல்லை பூம்பவளத்
துட்புக்குப் பூத்த போலும்
வனஞ்சேர் துவர்ச்செவ்வாய் வாளெயிறுங்
கண்மலரும் வனைய லாகாக்
கனஞ்சேர் கதிர்முலையுங் கண்டார்கள்
வீட்டுலகங் காணார் போலும்!
பொருள் : இனம் சேரா - தம் இனத்துடன் சேராமல்; இளையார் உயிரின்மேல் எண்ணம் கொள்வான் - இளைஞரின் உயிரின்மேற் கருத்துக் கொள்ள விரும்பி; புனம்சேர் கொடி முல்லை - காட்டிலிருக்கும் கொடிமுல்லைகள்; பூம்பவளத்துள் புக்குப் பூத்தபோலும் - அழகிய பவளத்தினுள்ளே புகுந்து பூத்தனபோல; வனம்சேர் துவர்ச் செவ்வாய் வாள் எயிறும் - அழகுடைய பவளச் செவ்வாயில் ஒளிமிகு முறுவலையும்; கண் மலரும் - கண்களாகிய மலர்களையும்; வனையல் ஆகாக் கனம்சேர் கதிர்முலையும் - செய்ய முடியாத பருத்த ஒளிவிடும் முலைகளையும்; கண்டார்கள் வீட்டு உலகம் காணார்போலும் - பார்த்தவர்கள் வீட்டுலகைக் காண விரும்பார் போலும்!
விளக்கம் : காணார் வீட்டுலகங் கண்டார் என இயைப்பர் நச்சினார்க்கினியர். இனம் என்றது தம்மினத்து மகளிரை என்றவாறு. இளையார் என்றது ஆடவரை. வனம் - அழகு. துவர் - பவளம். வீட்டுலகத்தினும் இவை இன்பமிக்குடையன என்று இவற்றையே விரும்புவர் என்பதுகருத்து ( 144 )
637. மீன்சேர் குழாமனைய மேகலையும்
வெம்முலையுங் கூற்றங் கூற்ற
மூன்சே ருயிருய்யக் கொண்டோடிப்
போமின்க ளுரைத்தே மென்று
கான்சேர் கமழ்கோதை காறொடர்ந்து
கைவிடா தரற்று கின்ற
தேன்சேர் திருவடிமேற் கிண்கிணிபொன்
னாவதற்கே தக்க தென்பார்.
பொருள் : மீன்சேர் குழாம் அனைய மேகலையும் வெம்முலையும் கூற்றம்! கூற்றம்!! - விண்மீன்கள் சேர்ந்த திரள் போன்ற மணிகள் கொண்ட மேகலையும் விருப்பூட்டும் முலையும் கூற்றம்! கூற்றம்!!; ஊன்சேர் உயிர் உய்யக் கொண்டு ஓடிப்போமின்கள் - ஊனைச் சேர்ந்த உயிர் பிழைக்கக் கொண்டு ஓடிப்போமின்கள்; உரைத்தேம் என்று - கூறினோம் என்று, கான்சேர் கமழ்கோதை - மணங்கலந்து கமழ்கின்ற மாலைபோல்வாளின்; கால் தொடர்ந்து கைவிடாது அரற்றுகின்ற - காலைப் பற்றி நீங்காமல் அரற்றுதல் செய்கின்ற; தேன் சேர் திருவடிமேல் கிண்கிணி - தேனினம் மலரென்று கருதிச் சேரும் அழகிய அடிகளின்மேல் அணிந்த கிண்கிணி: பொன் ஆவதற்குத் தக்கதே என்பார் - பொன்னாவதற்குத் தகுதியானதே என்பார்கள்.
விளக்கம் : எச்சரிக்கை செய்வதனாற் பொன்னெனப் புகழ்ந்தனர். நச்சினார்க்கினியர் மேகலையும் கிண்கிணியும் எனக் கூட்டிப் பொன்னாவதற்குத் தக்கன என்ற பொருள் கூறுவர். கூற்றம் கூற்றம் என்று வெம்முலையையே கூறுவர். மற்றும் பொன்னாவதற்கோ தக்க என ஏகாரத்தை எதிர்மறையாக்குவர். மேகலை அல்குலின் மேலணிவதால் மேகலையும் கண்டார் மனத்தைக் கவர்தலின் அதனையுங் கூற்றம் என்றார் எனவே கொள்ளுதல் வேண்டும். மேகலை : இடக்கரடக்கல். கூற்றம் கூற்றம் என்னும் அடுக்கு தெளிவு பற்றி வந்தது. எதிர்ந்தோர் உயிருண்ணும் கூற்றம் கூற்றம் என்றவாறு. உரைத்தேம் என்றது எமக்கஃதறமாகலின் உரைத்தேம் என்பதுபட நின்றது. கால் தொடர்ந்து கைவிடாது அரற்றும் என்புழி முரண்தோன்றியழிந்து செய்யுளின்ப மிகுதல் உணர்க. தேன்சேர் திருவடி என்றது, மலர் என்று கருதி வண்டுகள் வீழ்தற்குக் காரணமான அழகிய அடி என்றவாறு. ( 145 )
638. கள்வாய்ப் பெயப்பட்ட மாலைக்
கருங்குழல்கள் கண்டார் நைய
வுள்வாய்ப் பெயப்பட்ட வெம்மதுச்செப்
போரிணைமெல் லாக மீன்ற
புள்வாய் மணிமழலைப் பொற்சிலம்பி
னிக்கொடியை யீன்றாள் போலுங்
கொள்வா னுலகுக்கோர் கூற்றீன்றா
ளம்மவோ கொடிய வாறே.
பொருள் : கள்வாய்ப் பெயப்பட்ட மாலைக் கருங்குழல்கள் - தேன் பெய்யப் பெற்ற மாலையணிந்த கருங்குழல்களையும், கண்டார் நைய மெல் ஆகம் ஈன்ற உள்வாய் வெம்மதுப் பெயப்பட்ட ஓர் இணைச் செப்பு - பார்த்தோர் மெலியுமாறு மெல்லிய மார்பு ஈன்ற, உள்ளே விருப்பமூட்டும் மது பெய்யப்பெற்ற, இரண்டு செப்புகளையும்; புள்வாய் மணி மழலைப் பொற்சிலம்பின் - அன்னத்தின் வாய்போல வாயின்கண் இடப்பட்ட மணியாகிய நாவால் மழலை மொழியும் பொற்சிலம்பையும் உடைய; இக் கொடியை ஈன்றாள் - இக் கொடியைப் பெற்றவள்; உலகுக்குக் கொள்வான் ஓர் கூற்று ஈன்றாள் போலும் - உலகுக்கு அவ்வுலகின் உயிரைக் கொள்ளுவதற்கு ஒரு கூற்றுவனை ஈன்றவள் போலும்; அம்மவோ! கொடிய ஆறே - அம்மவோ! இவள் மிகக் கொடியளானபடி என்! (என்பார்).
விளக்கம் : இக் கொடியை யீன்றவளே முன்னர்க் கூற்றுவனை ஈன்றவளாயிருப்பாள் என்றனர். ( 146 )
639. செய்ய தாமரை மேற்றிரு வேகொலோ
வெய்ய நோக்கின்விச் சாதரி யேகொலோ
மையில் வானவர் தம்மக ளேகொலென்
றைய முற்றலர் தார்மன்னர் கூறினார்.
பொருள் : செய்ய தாமரைமேல் திருவே கொலோ - செந்தாமரை மலரின்மேல் உள்ள திருமகளோ?; வெய்ய நோக்கின் விச்சாதரியே கொலோ - கொடிய பார்வையினையுடைய வித்தியாதர மகளேயோ?; மையில் வானவர்தம் மகளே கொல் - குற்றம் அற்ற வானவரின் மகளேயோ?; என்று ஐயம் உற்று - என்று ஐயம் கொண்டு; அலர்தார் மன்னர் கூறினார் - மலர்மாலை வேந்தர்கள் கூறினர்.
விளக்கம் : 636 முதல் இதுவரை உள்ளவை வேந்தர் தத்தையைக் கண்டு மயங்கிக் கூறியவை. கொல் : ஐயவிடைச்சொல் ஓ : அசை : வினாவுமாம். ( 147 )
640. வீணை வென்றிவள் வெம்முலைப் பூந்தட
மாணை தோய்வதல் லாற்பிறன் வெளவுமேற்
கோணைப் போரிற் குளிக்குவ மன்றெனின்
மாண நற்றவஞ் செய்குவ மென்மரும்,
பொருள் : வீணை வென்று - யாழினால் வென்று; இவள் வெம்முலைப் பூந்தடம் தோய்வது அல்லால் - இவள் விருப்பமூட்டும் முலைகளாகிய அழகிய தடாகத்திலே படிதல், அல்லது; பிறன் வெளவுமேல் - மற்றவன் கைப்பற்றுவானெனில்; ஆணை - ஆணையாக; கோணைப் போரில் குளிக்குவம் - மாறுபட்ட போரிலே குளிப்போம்; அன்று எனின் - அல்லாவிட்டால்; மாண நல்தவம் செய்குவம் என்மரும் - இவளைப்பெற்று மாட்சிமையுறுதற்குத் தவத்தைச் செய்வோம் என்பாரும்.
விளக்கம் : ஆணை - வஞ்சினம். இது முதல் மூன்று பாட்டுகள் குளகம். பிறன் வெளவுமேல் என்பதற்கு, பிறன் ஒருவன் யாழ்வென்றன்று தன் வலிமையினாலே இவளைக் கைப்பற்றுவா னாயின் என்பது பின்னர்ப் போரிற்குளிக்குவம் என்றதற்குப் பொருந்துவதாம். இதனால் பெரும்பாலும் வித்தைகல்லாத வேந்தர் இவளைத் தாம் யாழ் வென்று கொள்ளவியலாது என்று தம்முட் கருதிக்கொண்டு மேலும் இவளை யாரும் வென்று கொள்ளவும் முடியாது எனவே ஆற்றலாலே கைப்பற்றவே முயல்வர்; அங்ஙனம் வந்தவிடத்து நாமே எல்லோரையும் வென்று இவளைப் பெறுதல் கூடும் எனத் தம்முள் ஒரு முடிவு செய்து கொள்கின்றனர் என்பதனை ஆசிரியர் மிக நுண்ணிதின் விளக்குகின்றார். இஃதோர் மனவியல்பு ( 148 )
641. குலிகச் செப்பன கொம்மை வரிமுலை
நலியு மெம்மையென் பார்நல்ல கண்களால்
வலிய வாங்கியெய் தாளெம்மை வாழ்கலே
மெலிய வாலி விடுக்குமற் றென்மரும்,
பொருள் : குலிகச் செப்பு அன கொம்மை வரிமுலை - இங்குலிகச் செப்பே போலப் பருத்த வரிகளையுடைய முலைகள்; நலியும் எம்மை என்பார் - எம்மை வருத்தும் என்பாரும்; நல்ல கண்களால் வலிய வாங்கி எம்மை எய்தாள் - அழகிய கண்களாகிய அம்புகளால் நன்றாக இழுத்து எம்மை எய்தாள்; வாழ்கலேம் - இனி வாழமாட்டேம்; மற்று மெலிய ஆவி விடுக்கும் என்மரும் - இனி மெலிந்து உயிரை விடுவோம் என்பாரும்,
விளக்கம் : நலியும் : பிறவினையாக (நலிக்கும் என) வந்தது. மெலிய மெலிந்து : எச்சத்திரிபு. மெலி அ ஆவி விடுக்கும் எனக் கண்ணழித்து இவ்வாற்றால் இளைத்த எம் உயிரும் இனி எம்மைக் கைவிட்டுப்போம் எனக் கூறினுமாம். ( 149 )
642. ஊட்டி யன்ன வுருக்கரக் காரடி
நீட்டி மென்மலர் மேல்வந்து நின்னலங்
காட்டி யெம்மைக்கொன் றாயெனக் கைதொழு
தோட்டை நெஞ்சின ராயுழல் வார்களும்.
பொருள் : உருக்கு அரக்கு ஊட்டி அன்ன ஆர் அடி - (இயல்பான சிவப்பால்) உருக்கிய அரக்கை ஊட்டினாற் போன்ற நிறத்தோடு பொருந்திய அடிகளை; நீட்டி மென்மலர்மேல் வந்து - எடுத்து வைத்து மெல்லிய மலர்களின்மேல் வந்து; நின் நலம் காட்டி - நின் அழகைக் காட்டி; எம்மைக் கொன்றாய் என - எம்மை வருத்தினாய் என்றுகூறி; கைதொழுது - கை கூப்பி; ஓட்டை நெஞ்சினராய் உழல்வார்களும் - அறைபோன உள்ளத்தினராக உழல்கின்றவர்களும் (ஆயினர்).
விளக்கம் : நீட்டி என்றது நீட்டப்படாத மெல்லியல்புடைய அடியை நீட்டி என்பதுபட நின்றது. கொன்றாய் என்றது துன்பத்தின் கொடுமையை உணர்த்தியபடி. ஓட்டை நெஞ்சினர் - அறிவு ஒழுகிப்போன நெஞ்சுடையோர். ( 150 )
வேறு
643. திங்கண் மதிமுகத்த சேலும்
பவளமுஞ் சிலையு முத்துங்
கொங்குண் குழலாண்மெல் லாகத்த
கோங்கரும்புங் கொழிப்பில் பொன்னு
மங்கை குழியா வரக்கீத்த
செந்தளிர்நெய் தோய்த்த போலு
மங்கை மலரடியுந் தாமரையே
யாமறியே மணங்கே யென்பார்.
பொருள் : திங்கள் மதிமுகத்த - பிறைத் திங்களையுடைய மதிபோலும் முகத்திலுள்ளன (கண்களும் வாயும் புருவமும் பற்களும்); சேலும் பவளமும் சிலையும் முத்தும் - சேற்கெண்டை மீனும் பவளமும் வில்லும் முத்தும் ஒக்கும்; கொங்கு உண்குழலாள் மெல் ஆகத்த - மணம்கமழும் கூந்தலை யுடையாளின் மெல்லிய மார்பிலுள்ள முலைகளும் சுணங்கும்; கோங்கு அரும்பும் கொழிப்பு இல் பொன்னும் - கோங்கரும்புகளும் ஓட்டற்ற பொன்னும் ஒக்கும்; அங்கை குழியா அரக்கு ஈத்த செந்தளிர் நெய் தோய்த்த போலும் - அகங்கைகள் குழிவிலவாய்ச் செந்நிறம் ஊட்டப்பெற்ற தளிரில் நெய் தோய்த்தவற்றை ஒக்கும்; மங்கை மலர் அடியும் தாமரையே - மங்கையின் மலரனைய அடியும் தாமரையே போலும்; அணங்கே யாம் அறியேம் என்பார் - இவை வருத்தும் வருத்தம் ஒன்றுமே இத்தன்மைத்தென யாம் அறிகின்றிலேம் என்பார்கள்.
விளக்கம் : இவற்றில் நம்மை வருத்துவது இஃதென்று யாம் அறியேம் என்றுமாம். அணங்கே : ஏ : தேற்றம். ( 151 )
644. பொன்மகரம் வாய்போழ்ந்த முத்தநூ
றோள்யாப்பிற் பொலிந்த வாறு
மின்மகரங் கூத்தாடி வில்லிட்
டிருங்குழைக்கீ ழிலங்கு மாறு
மன்மகர வெல்கொடியான் மால்கொள்ளக்
கால்கொண்ட முலையி னாளை
யென்னரம்பை யென்னாவா றென்பா
ரிமைக்குங்கண் ணிவையோ வென்பார்.
பொருள் : மன் மகர வெல்கொடியான் மால்கொள்ளக் கால்கொண்ட முலையினாளை - பெருமை பொருந்திய மகரமாகிய வெற்றிக் கொடியினானும் மயங்குமாறு அடிபரந்த முலையினாளை; அரம்பை என்னாவாறு - தெய்வமகள் என்னாதபடி; பொன்மகரம் வாய் போழ்ந்த முத்தநூல் தோள் யாப்பின் பொலிந்த ஆறும் - பொன்னாலான மகரம் தன் வாய் அங்காத்தலின் தோன்றிய முத்துவடம் தோள்கட்டில் அமைந்த படியும்; மின் மகரம் கூத்தாடி வில்இட்டு இருங்குழைக் கீழ் இலங்கும் ஆறும் - மின்னும் மகரம் அசைதலால் ஒளியை வீசிப் பெருங்குழை காதின்கீழ் விளங்குமாறும்; என் என்பார் - என்னே என்பார்; இமைக்கும் கண் இவையோ என்பார் - (கண் இமைக்கும் என்பார்க்கு) இமைக்குங் கண்கள் இவைளோ என்பார்.
விளக்கம் : ஓகாரம் எதிர்மறை. இப்பூண்கள் கந்தருவர் செய்தனவாகலின், இவள் தெய்வம் அன்றென்று தெளிவித்தன என்றும், கண் இமையா நிற்கவும் மானிடரிற் சிறப்புண்டென்றுங் கூறினார். (இமையாக் கண்கள் வானவர்க்குண்டு.) இது, வண்டே யிழையே வள்ளி பூவே (தொல் - களவு. 4 ) என்னும் சூத்திர விதி. மன் - பெருமை. ( 152 )
645. கோள்வயிர நீளருவிக் குன்றிவர்ந்த
செஞ்சுடர்போற் கொலைவேன் மன்னர்
நீள்வயிர வெண்மருப்பி னீலக்
களிற்றின்மே னிரைத்தார் பொங்கத்
தோள்வயிரந் தோன்றத் தொழுவா
ரழுதுநைவார் தொக்கோர் கோடி
வாள்வயிரம் விற்கு மடநோக்கி
யார்கொலோ பெறுவ ரென்பார்.
பொருள் : கொலை வேல் மன்னர் - கொலை வேலேந்திய வேந்தர்கள்; கோள் வயிரம்நீள் அருவிக் குன்று இவர்ந்த செஞ்சுடர்போல் - கோளகையாகிய வயிரமணியையுடைய அருவியைக் கொண்ட குன்றின்மேல் ஏறிய செஞ்ஞாயிறு போல; நீள்வயிர வெண் மருப்பின் நீலக்களிற்றின்மேல் - நீண்ட வயிரப்பூண் இட்ட வெள்ளிய தந்தத்தையுடைய கரிய யானையின் மேல்; நிரைத் தார் பொங்க - நிரையான மாலை பொங்கவும்; தோள்வயிரம் தோன்ற - தோளில் அணிந்த வயிரம் தோன்றவும்; தொழுவார் அழுது நைவார் - (கந்தருவதத்தையைத்) தொழுவாரும் அழுது வருந்துவாருமாய்; தொக்கோர் கோடி - இங்குக் கூடிய மன்னர்கள் கோடியாயிருந்தார்; வாள் வயிரம் விற்கும் மடநோக்கி - வாளின் செற்றத்தை மாற்றும் மடநோக்கியாகிய இவளை; பெறுவார் யார் கொலோ என்பார் - பெறும் நல்வினையுடையோர் யாவரோ என்பார்.
விளக்கம் : நச்சினார்க்கினியர் நிரைத்தார் என்பதற்கு வாகைத்தார் எனவும், தோள்வயிரம் என்பதற்குத் தோள் வலிமையாலுண்டான புகழ் எனவும் பொருள் கொண்டு, மன்னர் குன்றிலே தொழுவார்க்கு இவர்ந்த சுடர்போலே இருந்து அழுது நைவாராய்த் தொக்கு ஒரு கோடியாயிருந்தவர்களில் இம்மட நோக்கியைத் தார்பொங்கத் தோள்வயிரந் தோன்றப் பெறவிருக்கின்ற நல்வினையுடையார் யார் என்பார் என்று மொழி மாற்றிப் பொருளுரைப்பர். கோள்வயிரம் - கோட்பாட்டையுடைய வயிரம். ஆகுபெயராற் கோளகை. பொங்க - மிகுத்துக்காட்ட, அரசர்க்கு : மாலை கூறுதல் இயல்பே. அழுது நைவார் என்றது அவலம்; இளிவே யிழவே (தொல். மெய்ப். 5) என்னுஞ் சூத்திரத்தில், அசைவாவது பழைய தன்மை கெட்டு வேறொருவாறாய் வருந்துதல் ஆதலின், இவரும் அத்தன்மையெய்தி அவலம் உற்றார் என்க. இது தம் அசைவில் தோன்றிய அவலம். ஒருவனென்று துணியலாகாமையிற் பன்மையாற், பெறுவார் என்றார்.
646. பைம்பொன் நிமிர்கொடி பாவை
வனப்பென்னுந் தளிரை ஈன்று
செம்பொன் மலர்ந்திளையார் கண்ணென்னுஞ்
சீர்மணிவண் டுழலச் சில்லென்
றம்பொற் சிலம்பரற்ற அன்னம்போல்
மெல்லவே ஒதுங்கி அம்பூஞ்
செம்பொற் புரிசை அடைந்தாள்செந்
தாமரைமேற் றிருவோ டொப்பாள்.
பொருள் : வனப்பு என்னும் தளிரை ஈன்று - அழகென்னும் தளிரை யீன்று; செம்பொன் மலர்ந்து - பொன்னைப் பூத்து; இளையார்கண் என்னும் சீர்மணி வண்டு உழல - இளைஞரின் கண்களாகிய அழகிய கரிய வண்டுகள் உழலும்படி; பைம்பொன் நிமிர்கொடி - புதிய பொன்னாக வளர்ந்ததொரு கொடியையும்; பாவை - பாவையையும்; செந்தாமரைமேல் திருவோடு ஒப்பாள் - செந்தாமரையின்மேல் திருவையும் போன்றவள்; சில் என்று அம்பொன் சிலம்பு அரற்ற - சில்லென அழகிய பொற்சிலம்பு ஒலிக்க; அன்னம்போல் மெல்லவே ஒதுங்கி - அன்னம்போல மெல்லென்று நடந்து; அம்பூ செம்பொன் புரிசை அடைந்தாள் - அழகிய பொலிவுடைய பொன்மதிலை அடைந்தாள்.
விளக்கம் : ஒடு : எண்ணொடு. செம்பொன் : சுணங்கு. புரிசை : மண்டபத்தின் மதில். கொடியையும் பாவையையும் திருமகளையும் ஒப்பவளாகிய காந்தருவ தத்தை ஈன்று மலர்ந்து உழல அரற்ற ஒதுங்கிப் புரிசை அடைந்தாள் என்க. வனப்பு - பல உறுப்புந் திரண்டவழிப் பெறுவதோர் அழகு. ஒதுங்குதல் - நடந்தல். ( 154 )
647. பட்டியன்ற கண்டத் திரைவளைத்துப்
பன்மலர்நன் மாலை நாற்றி
விட்டகலாச் சாந்தி னிலமெழுகி
மென்மலர்கள் சிதறித் தூம
மிட்டிளைய ரேத்த விமையார்
மடமகள்போ லிருந்து நல்யாழ்
தொட்டெழீஇப் பண்ணெறிந்தாள் கின்னரரு
மெய்ம்மறந்து சோர்ந்தா ரன்றே.
பொருள் : பட்டு இயன்ற கண்டம் திரை வளைத்து - பட்டினாற் செய்யப்பட்ட பல நிறத் திரையை வளைத்து; பன்மலர் நன்மாலை நாற்றி - பல மலர்களால் ஆன அழகிய மாலையைத் தூக்கி; விட்டு அகலாச் சாந்தின் நிலம் மெழுகி - மணம் விட்டு நீங்காத சாந்தினாலே நிலத்தை மெழுகி; மென்மலர்கள் சிதறி - மெல்லிய பூக்களைத் தூவி: தூமம் இட்டு - அகிற் புகையிட்டு; இளையர் ஏத்த - இளமகளிர் புகழ; இமையார் மடமகள்போல் இருந்து - வானவரின் இளநங்கைபோல் அமர்ந்து; நல்யாழ் தொட்டுப் பண் எழீஇ - நல்ல யாழை யெடுத்துப் பண்ணை யெழுப்பி; எறிந்தாள் - நரம்பைத் தெறித்தாள்; கின்னரரும் மெய்ம்மறந்து சோர்ந்தார் - (அப்போழுது) கின்னரரும் தம்மை மறந்து சோர்ந்தனர்.
விளக்கம் : தூமம் : அகிலுக்கு ஆயினதால் காரிய வாகுபெயர். கண்டத்திரை - கண்டமாகிய திரை. யாழ் மண்டபத்தே யிருந்து அவை வணக்கமாகப் பாடுகின்றாள். இஃது அவைப் பரிசாரம் எனவும்படும். பட்டியன்ற - பட்டினாலியற்றப்பட்ட. கண்டத்திரை - பல நிறத்தால் கூறுபட்டதிரை (முல்லைப். 44 - நச்.) நாற்றுதல் - தூங்கவிடுதல். விட்டகலா என்புழித் தகுதியால் மணம் என வருவித்து ஒட்டுக. கின்னரர் - தேவருள் ஒருவகையினர். ( 155 )
வேறு
648. புன்காஞ்சித் தாதுதன் புறம்புதையக் கிளியெனக்கண்
டன்புகொண் மடப்பெடை யலமந்தாங் ககல்வதனை
யென்புருகு குரலழைஇ யிருஞ்சிறகர் குலைத்துகுத்துத்
தன்பெடையைக் குயிறழுவத் தலைவந்த திளவேனில்.
பொருள் : புன் காஞ்சித் தாது தன் புறம் புதைய - புல்லிய காஞ்சித் தாதினில் தன் முதுகு மறைதலாலே; கண்டு கிளி என - பார்த்து அதனைக் கிளியென் றெண்ணி; அன்புகொள் மடப்பெடை ஆங்கு அலமந்து அகல்வதனை - காதல் கொண்ட இளம்பெடை அங்கிருந்து மனஞ்சுழலச் செல்வதை; என்பு உருகு குரல் அழைஇ - என்பும் உருகும் தன் குரலாலே அழைத்து; இருஞ் சிறகர் குலைத்து உகுத்து - கரிய சிறகை அசைத்துத்தாதை உதிர்த்து; தன் பெடையைக் குயில் தழுவ - தன் பெட்டையைக் குயில் தழுவுமாறு; இளவேனில் தலைவந்தது - இளவேனில் அவ்விடத்து வந்தது. ( 156 )
649. தண்காஞ்சித் தாதாடித் தன்னிறங் கரந்ததனைக்
கண்டானா மடப்பெடை கிளியெனப்போய்க் கையகல
நுண்டூவி யிளஞ்சேவ னோக்கோடு விளிபயிற்றித்
தன்சிறகாற் பெடைதழுவத் தலைவந்த திளவேனில்.
பொருள் : தண் காஞ்சித் தாது ஆடி - குளிர்ந்த காஞ்சித் தாதினைப் பூசியதால் ; தன் நிறம் கரந்ததனை - தன் கரிய நிறம் மறைந்ததை ; கண்டு ஆனா மடப்பெடை - பார்த்துத் தெளி வடையாத இளம்பெடை ; கிளியெனப் போய்க் கைஅகல - கிளியெனச் சென்று கைவிட்டுப் போக ; நுண்தூவி இளஞ்சேவல் - நுண்ணிய தூவியையுடைய இளஞ்சேவல் ; நோக்கோடு விளி பயிற்றி - குறிப்பான நோக்குடன் பலகால் அழைத்து : தன் சிறகால் பெடை தழுவ - தன் சிறகினாற் பெடையைத் தழுவ; இளவேனில் தலைவந்தது - இளவேனில் அங்கே வந்தது.
விளக்கம் : கரிய நிறமுடைய குயிற்சேவல் காஞ்சித் தாதாடியதனால் அதன் பெடைக்குயில் கிளி என்று நினைத்து அகல அச் சேவல் தன் இனிய குரலாலே அதனை அழைத்துத் தழுவிற்று என்க. விளிபயிற்றி - பலகாலும் அழைத்து. தலை - இடம். ( 157 )
650. குறுத்தாட் குயிற்சேவல் கொழுங்காஞ்சித் தாதாடி
வெறுத்தாங்கே மடப்பெடை விழைவகன்று நடப்பதனை
மறுத்தாங்கே சிறகுளர்ந்து மகிழ்வானாக் கொளத்தேற்றி
யுறுப்பினா லடிபணியத் தலைவந்த திளவேனில்.
பொருள் : குறுத்தாள் குயில் சேவல் கொழுங் காஞ்சித் தாது ஆடி - குறுகிய கால்களையுடைய ஆண் குயில் கொழுவிய காஞ்சித் தாதிலே முழுகியதால்; மடப்பெடை ஆங்கே வெறுத்து விழைவு அகன்று நடப்பதனை - இளம்பெடை (கிளியென்று) அப்பொழுதே வெறுத்து வேட்கை நீங்கிச் செல்வதை; ஆங்கே மறுத்துச் சிறகு உளர்ந்து - அவ்வாறு செல்வதைத் தவிர்த்துச் சிறகினை உளர்ந்து; மகிழ்வு ஆனாக் கொளத் தேற்றி - மகிழ்ச்சி அமையாமற் கொள்ளுமாறு தெளிவித்து; உறுப்பினால் அடி பணிய - தலையினால் வணங்கும்படி; இளவேனில் தலைவந்தது - இளவேனில் அங்கே வந்தது.
விளக்கம் : பங்குனியிலும் சிறிது இளவேனில் தோன்றுதலின் இது கூறினார். வேட்கை விளையும் பருவத்தாளாகலின் இது கூறினார். இம் மூன்றும் (648 - 50) ஒருபொருண்மேல் மூன்றடுக்கித் தாழம்பட்ட ஓசை பெற்று வந்த கொச்சக வொருபோகு. ஒருபோகென்பது பண்புத் தொகைப் புறத்தன்மொழி. இது, தரவின்றாகி (தொல். செய். 149) என்னுஞ் சூத்திர விதி. இசை நூலோர் முகம், நிலை, முரி என்பனவற்றில் நிலை யென்பர் இதனை. ங்இனி இசை நூலாரும் இத்தரவு முதலாயினவற்றை முகம், நிலை, கொச்சகம், முரி என வேண்டுப. கூத்த நூலார் கொச்சகம் உள்வழி அதனை நிலைபெற அடக்கி முகம், நிலை, முரி யென மூன்றாக வேண்டுப. (தொல். செய். 132. பேர்)சி; இனி, இசைத் தமிழில் வருங்கால் முகநிலை, கொச்சகம், முரி என்ப ஒருசாராசிரியர் (சிலப். 6 : 35. அடியார்.)
648 - முதல் இச் செய்யுள் முடியவுள்ள மூன்று செய்யுளுள்ளும், காந்தருவதத்தையின் கணவன் தனக்குரிய விச்சாதர வடிவத்தில் தோன்றாமல் மானிட வடிவத்தில் இம் மண்ணுலகத்தே தோன்றினானாக அவனை அறியாது இராசமாபுரத்தே நாடியபொழுது மானிட வடிவின் மறைந்த அக் காதலன் தன் மிடற்றுப் பாடலை யாழோடு பாடித் தன்னை உணர்த்தி அவளைத் தழுவினான் என்னும் ஒரு பொருள் தோன்ற அமைந்திருத்தலை நுண்ணுணர்வாற் கண்டு கொள்க. ( 158 )
வேறு
651. தளையவிழ் கோதை பாடித்
தானமர்ந் திருப்பத் தோழி
விளைமதுக் கண்ணி வீணா
பதியெனும் பேடி வேற்க
ணிளையவள் பாட வீர
ரெழால்வகை தொடங்க லன்றேல்
வளையவ ளெழாலின் மைந்தர்
பாடுக வல்லை யென்றாள்.
பொருள் : தளை அவிழ் கோதை பாடி - முறுக்கலர்ந்த பூங்கோதையாள் அவை வணக்கம் பாடி; தான் அமர்ந்து இருப்ப - யாழ் வாசிக்கத் தான் அமைந்திருக்கும்போது; தோழி விளை மதுக்கண்ணி வீணாபதி எனும் பேடி - அவள் தோழியாகிய விளையுந் தேனையுடைய கண்ணியாள் வீணாபதி என்னும் பேடி; வேல்கண் இளையவள் பாட வீரர் எழால் வகை தொடங்கல் - வேற்கண்ணாள் தத்தை பாடும்போது, அதற்கேற்ப வீரர்கள் யாழின் கூறுபாட்டை வாசிக்கத் தொடங்குக; அன்றேல் வயைவள் எழாலின் மைந்தர் வல்லை பாடுக என்றாள் - அதுவேயன்றி, வளையணிந்த தத்தையின் யாழ் வாசினைபோல மைந்தர் விரைந்து பாடுக என்றுரைத்தாள்.
விளக்கம் : தொடங்கல் : அல்லீற்று உடன்பாட்டு வியங்கோள். இற்றெனக் கிளத்தல் (தொல் கிளவி. 19) போல, இதற்கு விடை கூறஇயலாத வேந்தர் வீணாபதியின் தோற்றத்தைக் கண்டு அவளுடனே நகையாடுதலை அடுத்த செய்யுள் காட்டும். கோதை : தத்தை. இளையவள் : தத்தை. வளையவள் : தத்தை. எழால் வகை - யாழின் கூறுபாடு. இதற்கு உத்தரங் கூறலாற்றாது அவளுடனே நகையாடுகின்றார் எனவரும் நச்சினார்க்கினியர் நுண்ணுரை இன்பம் பெரிதும் உடைத்து.
652. வேயே திரண்மென்றோள் வில்லை கொடும்புருவம்
வாயே வளர்பவளம் மாந்தளிரே மாமேனி
நோயே முலைசுமப்ப தென்றார்க் கருகிருந்தா
ரேயே யிவளொருத்தி பேடியோ வென்றா
ரெரிமணிப்பூண் மேகலையாள் பேடியோ வேன்றார்.
பொருள் : திரள் மென்தோள் வேயே! - திரண்ட மெல்லிய தோள் மூங்கிலே!; கொடும் புருவம் வில்லே! - வளைந்த புருவம் வில்லே!; வாய்வளர் பவளமே! - வாய் வளரும் பவளமே!; மாமேனி மாந்தளிரே! - மாமை நிறமுடைய மேனி மாந்தளிரே!; (எனினும், இவட்கு முலை கண்டிலேம்) முலை சுமப்பது நோயே? - (இவளுக்கு) முலை சுமத்தல் நோயோ?; என்றார்க்கு - என்று ஐயமுற்று வினவியவர்க்கு; அருகிருந்தார் - அருகிலிருந்தோர் (சிந்தனை செய்து) ஏ! ஏ!! இவள் ஒருத்தி பேடியோ? என்றார் - என்னே! என்னே!! இவள் ஒருத்தி பேடியோ என்று ஐயமுற்றார்; எரிமணிப் பூண் மேகலையாள் பேடியோ? என்றார் - (அது கேட்டுச் சிலர்) ஒளிரும் மணிப்பூண் அணிந்த, மேகலையினாள் ஆகிய தத்தையுடன் வந்த பேடியோ? என்றனர்.
விளக்கம் : ஏஏ : இசை நிறையுமாம். ( 160 )
653. பலிகொண்டு பேராத பாச மிவள்கண்
ணொலிகொண் டுயிருண்ணுங் கூற்றமென் றெல்லே
கலிகொண்டு தேவர் முலைகரந்து வைத்தா
ரிலைகொண்ட பூணினீ ரென்றெழினி சேர்ந்தா
ளிலங்குபொற் கிண்கிணியா ணக்கெழினி சேர்ந்தாள்.
பொருள் : இலைகொண்ட பூணினீர் - இலைவடிவங் கொண்ட அணிகலனுடையீர்!; இவள்கண் பலிகொண்டு பேராத பாசம் - இவள் கண்கள் உயிர்ப்பலி கொள்வதால் தன் கொலைத் தொழிலினின்றும் மீளாத காலபாசம்; எல்லே ஒலிகொண்டு உயிர் உண்ணும் கூற்றம் - (இவளோ) வெளியே தழைத்துச் சென்று உயிரைப் பருகும் கூற்றம்; என்று கலிகொண்டு தேவர் முலை கரந்து வைத்தார் - என்ற ஆரவாரத்தை உட்கொண்டு பிரமனார் எனக்கு முலையை மறைத்து வைத்தார்; என்று எழினி சேர்ந்தாள் - என்று வீணாபதி அவர்கட்கு விடைகூறித் திரையிலே மறைந்தாள்; இலங்கு பொன் கிண்கிணியாள் நக்கு எழினி சேர்ந்தாள் - (அது கேட்ட) விளங்கும் பொற்கிணகிணியுடைய தத்தை நகைத்துத் தான் இருந்த இடத்தைவிட்டுத் திரை மறைவிலே அடைந்தாள்.
விளக்கம் : நச்சினார்க்கினியர் கலிகொண்டு என்பதனை, இலங்கு பொற் கிண்கிணியாள் என்பதன் முன்கூட்டிப் பொருளுரைப்பர். கொண்டு - கொள்ள : எச்சத்திரிபு, ஒலி - தழைத்தல். ஒலிதெங்கு (பதிற், 18) போல. எல்லே - வெளியே, கலி - ஆரவாரம். கடாமுங் குருதியுங் கால்வீழ்ந்த பச்சைப் - படாமும் புலித்தோலும் சாத்தும் பரமன் - இடாமுண்ட நெற்றியான் எஞ்ஞான்றுங் கங்கை - விடாமுண்ட நீர்ச்சடையான் வெண்ணீறணிந்தோன் - மெய்யுறுநோயில்லைவேறோர் பிறப்பில்லை - ஐயுறு நெஞ்சில்லை ஆகாத தொன்றில்லை - என நான்கடிச் செய்யுள் முடியவும் ஈற்றடி இரண்டு மிக்கு வேறுபட வந்த கொச்சகம் என்று கூறி, ஒழிந்தனவும் பிற வேறுபாட்டான் வந்தனவுங் காண்க ங்தொல் - செய் - 149, நச் - பேர். மேற்சி என்றமையின் இச்செய்யுள் (652 -3) இரண்டும் ஒரோவோரடி மிக்கு வேறுபட வந்த கொச்சக யொருபோகாம். ( 161 )
வேறு
654. நுண்டுகி லகலல்கு னொசித்த வெம்முலை
உண்டிவ ணுசுப்பென வுரைப்பி னல்லது
கண்டறி கிலாவிடைக் காம வல்லியாழ்
கொண்டவர் குழாத்திடைக் கொடியி னொல்கினாள்.
பொருள் : நுண்துகில் அகல் அல்குல் - நுண்ணிய துகிலணிந்த அகன்ற அல்குலும்; நொசித்த வெம் முலை - (பிறரை) வருத்திய வெம்முலைகளும்; இவள் நுசுப்பு என உரைப்பின் அல்லது - இவட்கு இடையுண்டெனக் கூறுமதுவல்லது; கண்டு அறிகிலா இடைக் காமவல்லி - கண்ணாற் கண்டறிய முடியாத இடையையுடைய தத்தை; யாழ் கொண்டு அவர் குழாத்திடைக் கொடியின் ஒல்கினாள் - யாழை எடுத்துக்கொண்டு தோழியர் குழுவினிடையே கொடியைப் போல ஒதுங்கிச் சென்றாள்.
விளக்கம் : இதனால், திரையருகில் நின்றும் யாழ்வாசிக்கும் இடத்திற்குச் செல்கின்றாளென்றார். இவள் இடை கருதலளவையால் உண்டென உணரப்படுவதல்லது காட்சியளவையாற் காணப்படுவதன்றென்பது கருத்து. ( 162 )
655. பளிக்கொளி மணிச்சுவ ரெழினி பையவே
கிளிச்சொலி னிளையவர் நீக்கக் கிண்கிணி
யொளிக்குமின் றாடவ ருயிர்க ளென்னநொந்
தளித்தவை யிரங்கச்சென் றணையி லேறினாள்.
பொருள் : பளிக்கு ஒளி மணிச்சுவர் எழினி - பளிங்காகிய ஒளிமணியாற் செய்த சுவரை மறைய வீழ்த்த திரையை; கிளிச்சொலின் இளையவர் பையவே நீக்க - கிளி மொழியினாராகிய மங்கையர் மெல்லெனவே நீக்காநிற்க; இன்று ஆடவர் உயிர்கள் ஒளிக்கும் என்ன நொந்து - இன்று ஆடவர்களின் உயிர்கள் மறையும் என்ன வருந்தி; கிண்கிணி அவை அளித்து இரங்கச் சென்று - கிண்கிணிகளாகிய அவை அருள் செய்து இரங்கப் போய்; அணையில் ஏறினாள் - அணையிலே அமர்ந்தாள்.
விளக்கம் : பளிங்குமணி ஒளிமணி எனத் தனித்தனிக் கூட்டுக. பளிங்கு மணி என்னும் அல்வழிப் புணர்ச்சியின் மென்றொடர் வன்றொடராயது இலேசானே கொள்க; குரக்குமனம் எற்புடம்பு என்பனபோல. எழினி - திரை. ( 163 )
656. உறைகழித் திலகுவா ளுடற்றுங் கண்ணினாண்
மறையொளி மணிச்சுவ ரிடையிட் டித்தலை
யிறைவளை யாழ்தழீஇ யிருப்ப வத்தலைக்
கறைகெழு வேலினார் கண்ணி தீந்தவே..
பொருள் : உறைகழித்து இலகு வாள் உடற்றும் கண்ணினாள் - உறையிலிருந்து நீக்கி விளங்கும் வாளை வருத்தும் கண்ணினள்; மறை ஒளி மணிச் சுவர் இடையிட்டு - தன்னை மறைக்கச் சமைத்த ஒளியுறும் பளிக்குச் சுவரை நடுவேயிட்டு; இத்தலை இறைவளை யாழ் தழீஇ இருப்ப - உட்பக்கத்தே வளைந்த யாழைக் கையினால் தழுவியிருக்கும்போது; அத்தலைக் கறைகெழு வேலினார் கண்ணி தீந்தவே - புறத்தே யிருந்த குருதிக்கறை பொருந்திய வேல் மன்னரின் கண்ணிகள் காமத்தாலே கருகின.
விளக்கம் : பளிங்கிற்கு இரண்டு புறத்தோரும் தோன்றுவர். இறை - இரேகை, ஆகுபெயர். பதுமம் வீரம் சிங்கம் பிரமரம் - பாத விலக்கண மஞ்சானு மண்டிதம் - விதியுறு பங்கோற் பவஞ்சுக மண்டிலம் - மேலோர் விரும்பும் மெய்யாசனமே. இவ்வொன்பதினும் இவள் பதுமா சனத்தேயிருந்தாள்; நேரிருந்து காலடிகள் மாற்றிக் குதிமேலாப் - பாரிருத்தல் பத்மாசனம் ஒன்பான் விருத்தியுள் தலைக்கண் விருத்தி - நண்பால் அமைந்த இருக்கையள் (சிலப். 8 : 25-6) என்றார் பிறரும். இருப்பவே இந்நிலையர் ஆயினர்; இனி அவள் பாடுங்கால் என்னாவர் என்றிரங்கியபடியாம். ( 164 )
657. சிலைத்தொழிற் சிறுநுதற் றெய்வப் பாவைபோற்
கலைத்தொழிற் படவெழீஇப் பாடி னாள்கனிந்
திலைப்பொழிற் குரங்கின வீன்ற தூண்டளிர்
நிலத்திடைப் பறவைமெய்ம் மறந்து வீழ்ந்தவே.
பொருள் : சிலைத்தொழில் சிறுநுதல் - ஏறிட்ட வில்போலும் சிறுநுதலாள்; தெய்வப் பாவைபோல் - தெய்வப் பாவைபோல் இருந்து; கலைத் தொழில்பட எழீஇப் பாடினாள் - இசைக் கலைத் தொழில் பொருந்த யாழை வாசித்துக் கொண்டு அதற்குத்தகப் பாடினாள்; இலைப்பொழில் கனிந்து குரங்கின - இலையுறு பொழில்கள் உருகி வளைந்தன; தூண் தளிர் ஈன்ற - தூண்கள் தளிரை யீன்றன; பறவை மெய்ம்மறந்து நிலத்திடை வீழ்ந்த - கின்னர மிதுனம் என்னும் பறவைகள் தம்மை மறந்து நிலத்திடை வீழ்ந்தன.
விளக்கம் : கின்னர மிதுனங்கள் - ஒன்றையொன்று பிரியாத இசையறிவிற் சிறந்த ஆணும் பெண்ணுமான இரட்டைப் பறவைகள்.
தெய்வப் பாவை : தெய்வத்தாற் செய்த கொல்லிப்பாவை. பூதம் புணர்த்த புதிதியல் பாவை (நற். 192) என்றார் பிறரும். கலைத் தொழிலாவன : பண்ணல் பரிவட்டணை ஆராய்தல் தைவரல் - கண்ணிய செலவு விளையாட்டுக் கையூழ் - நண்ணிய குறும்போக்கு (சிலப். 7 : 1) என்ற எட்டும். பண்ணல் : பாட நினைத்த பண்ணுக்கு இணை கிளை பகை நட்பான நரம்புகள் பெயருந்தன்மை மாத்திரை யறிந்து வீக்குதல். பரிவட்டனை : அவ் வீக்கின நரம்பை அகவிரலாலும் புறவிரலாலும் கரணஞ் செய்து தடவிப் பார்த்தல். ஆராய்தல் : ஆரோகண அவரோகண வகையால் இசையைத் தெரிவது. தைவரல் : அநுசுருதி யேற்றுதல். செலவு : ஆளத்தியிலே நிரம்பப்பாடுதல். விளையாட்டு : பாட நினைந்த வண்ணத்திற் சந்தத்தை விடுதல். கையூழ் : வண்ணத்திற் செய்த பாடல் எல்லாம் இன்பமாகப் பாடுதல். குறும்போக்கு : குடகச் செலவும் துள்ளற் செலவும் பாடுதல். ( 165 )
வேறு
658. கருங்கொடிப் புருவ மேறா
கயனொடுங் கண்ணு மாடா
வருங்கடி மிடறும் விம்மா
தணிமணி யெயிறுந் தோன்றா
விருங்கடற் பவளச் செவ்வாய்
திறந்திவள் பாடி னாளோ
நரம்பொடு வீணை நாவி
னடந்ததோ வென்று நைந்தார்.
பொருள் : கருங்கொடிப் புருவம் ஏறா - கரிய ஒழுங்கான புருவங்கள் நெற்றியில் ஏறா; கயல்நெடுங் கண்ணும் ஆடா - கயலனைய நெடிய கண்களும் ஆடா; அருங்கடி மிடறும் விம்மாது - அரிய விளக்கம் பொருந்திய மிடறும் வீங்காது; அணிமணி எயிறும் தோன்றா - அழகிய முத்தனைய பற்களும் தெரியா; இவள் இருங்கடல் பவளச் செவ்வாய் திறந்து பாடினாளோ? - இவள் பெரிய கடலில் உள்ள பவளம் அனைய தன் செவ்வாயைத் திறந்து பாடினாளோ?; நரம்பொடு வீணை நாவின் நவின்றதோ? - அன்றி, யாழ்தான் தனக்குரிய நரம்புடன் சாரீர வீணைக்குரிய நாவாலும் பாடிற்றோ?; என்று நைந்தார் - என்று கூறி அரசர் முதலானோர் வருந்தினார்.
விளக்கம் : இது பதினொரு வகையிலும் உள்ளாளப் பாட்டுப் பாடுங்கால் இடைபிங்கலையை இயக்கம் அறுத்து, மூலாதாரம் முதல் பிரமரந்திரம் அளவும் இயக்கம் ஆக்கி, நடுவு தொழில்வரப் பாடுதல் என்றறிக;
உள்ளாளம் விந்துவுடன் நாதம் ஒலியுருட்டுத்
தள்ளாத தூக்கெடுத்தல் தான்படுத்தல் - மெள்ளக்
கருதி நலிதல்கம் பித்தல் குடிலம்
ஒருபதின் மேலென் றுரை.
கண்ணிமையா கண்டம் துடியா கொடிறசையா
பண்ணளவு வாய்தோன்றா பல்தெரியா - எண்ணிலிவை
கள்ளார் நறுந்தெரியற் கைதவனே? கந்தருவர்
உள்ளாளப் பாடல் உணர்.
இசை மரபு ( 166 )
வேறு
659. இசைத்திறத் தனங்கனே யனைய நீரினார்
வசைத்திற மிலாதவர் வான்பொன் யாழெழீஇ
விசைத்தவர் பாடலின் வெருவிப் புள்ளெலா
மசிப்பபோன் றிருவிசும் படைந்த வென்பவே.
பொருள் : இசைத் திறத்து அனங்கனே அனைய நீரினார் - இசையின் நெறியிலே காமனே யனைய தன்மையராகிய; வசைத்திறம் இலாதவர் - வசை வகையறியாதவர்; வான் பொன் யாழ் எழீஇ - உயர்ந்த பொன் யாழை வாசித்து; அவர் விசைத்துப் பாடலின் - அவரும் உச்சத்தே பாடுதலின்; புள் எலாம் வெருவி - (முன் மெய்ம்மறந்து வீழ்ந்த) பறவைகள் எல்லாம் வெருவி; அசிப்ப போன்று இருவிசும்பு அடைந்த - அவரை நகைப்பன போலப் பெரிய வானை அடைந்தன.
விளக்கம் : என்ப, ஏ : அசைகள். அசிப்ப : ஹஸிப்ப என்னும் வடசொல் திரிபு. அனங்கனேயனைய நீரினார் என்றது அரசர் மக்களை. குலமொத்தலின் அரசரை முற்கூறினார். இன்பம் கெழுமப் பாடுதலறியாது தாம் அவளை வெல்லுதற் பொருட்டு விசைத்துப் பாடினர் என அவர்தம் மாட்டாமையையும் நோக்கத்தினையும் ஒருங்கே உணர்த்துவார் விசைத்தவர் பாட என்றார். அசித்தல் - பரிகசித்தல். ( 167 )
660. மாதர்யாழ் தடவர வந்த மைந்தர்கைக்
கீதத்தான் மீண்டன கேள்விக் கின்னரம்
போதரப் பாடினாள் புகுந்த போயின
தாதலர் தாரினார் தாங்கள் பாடவே.
பொருள் : மாதர் யாழ் தடவர வந்த கேள்விக் கின்னரம் - தத்தை யாழை வாசித்தல் கேட்டு வந்தனவாகிய அறிவுடைய கின்னர மிதுனங்கள்; மைந்தர் கைக்கீதத்தான் மீண்டன - ஆடவரின் யாழிசையாலே திரும்பிப் போயின; போதரப் பாடினாள் புகுந்த - அவை உள்ளே வருமாறு பாடினாள், அவையும் புகுந்தன; தாது அலர் தாரினார் தாங்கள் பாட போயின - தாது மலருந் தாரினார் தம் குரலாற் பாடலால் மீண்டும் போயின.
விளக்கம் : தேவர் தத்தை வென்றமைக்கும் அரசர் தோற்றமைக்கும் இசையுணர்வு சான்ற கின்னரங்களையே சான்றாகக் கொண்டுணர்த்துதல் மிகவும் இனிமை பயக்கின்றது. மாதர் : தத்தை. தடவர - தடவ; வருட என்றவாறு, யாழ்வாசினை என்பது தோன்ற கைக்கீதம் என்றார். கின்னரம் இசையுணர்வு மிக்கன என்பதுணர்த்துவார் கேள்விக் கின்னரம் என்றார். கேள்வி - இசையுணர்ச்சிக்கு ஆகுபெயர். ( 168 )
661. சுரும்பெழுந் திருத்துணுந் தொங்கல் வார்குழ
லரும்பெற லவட்கிசை யரசர் தோற்றபின்
னரம்பொடு தெள்விளி நவின்ற நான்மறை
வரம்பெறு நெறியவர் மலைதன் மேயினார்.
பொருள் : சுரும்பு எழுந்திருந்து உணும் தொங்கல் வார் குழல் - வண்டுகள் எழுந்திருந்து தேனைப் பருகும் மாலையையுடைய நீண்ட கூந்தலையுடைய; அரும்பெறலவட்கு - பெறுதற்கரிய தத்தைக்கு; அரசர் இசை தோற்றபின் - அரசர்கள் இசையைத் தோற்ற பின்னர்; நரம்பொடு தெள்விளி நவின்ற - நரம்பொடு சேர்ந்த தெளிந்த இசையிலே பழகிய; நான்மறை வரம்பெறு நெறியவர் மலைதல் மேயினார் - நான்மறை யோதுதலாகிய மேன்மையைப் பெற்ற அந்தணர் பொருதலைத் தொடங்கினார்.
விளக்கம் : வண்டுகள் தேனை எழுந்திருந்துண்ணுதல், நறுந்தாதூதும் தும்பி - கையாடு வட்டிற் றோன்றும் (அகநா. 108) என்னுமிடத்துங் காண்க. சுரும்பெறிந் திருந்து என்றும் பாடம். ( 169 )
வேறு
662. திருமலர்க் கமலத் தங்கட்
டேனின முரல்வ தொப்ப
விரிமலர்க் கோதை பாட
வெழால்வகை வீரர் தோற்றார்
எரிமலர்ப் பவளச் செவ்வா
யின்னரம் புளர மைந்தர்
புரிநரம் பிசைகொள் பாட
லுடைந்தனர் பொன்ன னாட்கே.
பொருள் : திருமலர்க் கமலத்து அங்கண் தேனினம் முரல்வது ஒப்ப - அழகிய தாமரை மலரிலே தேனினம் பாடுந்தன்மைபோல; விரிமலர்க் கோதை பாட - மலர்ந்த பூங்கோதையாள் பாட; எழால் வகை வீரர் தோற்றார் - யாழ் வாசித்தலில் அந்தணர் தோற்றனர்; எரிமலர்ப் பவளச் செவ்வாய் இன்நரம்பு உளர - முருக்கிதழையும் பவளத்தையும் போன்ற செவ்வாயினாள் இனிய யாழ் நரம்பைத் தடவ; புரிநரம்பு இசைகொள் பாடல் மைந்தர் பொன்னனாட்கு உடைந்தனர் - அந் நரம்பின் இசையைக் கொண்ட கண்டப் பாடலில் அந்தணர் திருவனாளுக்குத் தோற்றனர்.
விளக்கம் : அந்தணாளர்க் கரசு வரைவின்றே (தொல், மரபு. 82) என்றதனால், வீரர்என்றார். வீரர் என்றது இகழ்ச்சி. பாடல் - மிடற்றுப் பாடல். பொன்னனாள் - தத்தை. அரசர் குலத்தினும் உயர்ந்தோராதல் பற்றி ஒத்த குலத்தரசருள் ஒருவரேனும் வெல்லாமை கண்டபின் அந்தணரைப் பாட விடுத்தனர் என்று கருதுக. ( 170 )
663. வாலரக் கெறிந்த காந்தண்
மணியரும் பனைய வாகிக்
கோல்பொரச் சிவந்த கோலக்
குவிவிரன் மடந்தை வீணை
நூல்பொரப் புகுந்த நுண்ணூல்
வணிகருந் தொலைந்து மாதோ
கால்பொரக் கரிந்த காமர்
பங்கயப் பழன மொத்தார்.
பொருள் : வால் அரக்கு எறிந்த காந்தள் மணி அரும்பு அனைய ஆகி - தூய அரக்கை ஊட்டின, காந்தளின் அழகிய அரும்பைப் போன்றனவாகி; கோல் பொரச் சிவந்த - (மேலும்) நரம்பைத் தடவுதலாலே சிவந்த; கோலக் குவிவிரல் மடந்தை வீணை - அழகிய குவிந்த விரலையுடைய தத்தையின் வீணைப் போருக்கு; நூல் பொரப் புகுந்தநுண் நூல் வணிகரும் தொலைந்து - இசை நூலோடே வாசிக்கத் தொடங்கிய நுண்ணிய பூணு நூலையுடைய வணிகரும் தோற்று; கால் பொரக் கரிந்த காமர் பங்கயப் பழனம் ஒத்தார் - வாடைக் காற்றுப் பொருதலாலே கருகிய அழகிய தாமரைப் பழனத்தைப் போன்றார்.
விளக்கம் : வாலரக்கு என்றது சாதிலிங்கத்தை. நூல் - இசை நூல். நுண்ணூல் என்றது பூணூலை. பூணூல் பூண்பதில் இவர் வல்லுநரே ஆயினும் இசை நூலில் இவர் தத்தையை வெல்வதெங்ஙனம் என்பார் நுண்ணூல் வணிகரும் தொலைந்துபோனார் என்றார். ( 171 )
664. தேனுயர் மகர வீணைத் தீஞ்சுவை யிவளைவெல்வான்
வானுயர் மதுகை வாட்டும் வார்சிலைக் காமனாகு
மூனுயர் நுதிகொள் வேலீ ரொழிகவீங் கில்லை யென்றான்
கானுய ரலங்கன்மாலைக் கட்டியங் கார னன்றே.
பொருள் : கான் உயர் அலங்கல் மாலைக் கட்டியங்காரன் - மணம் மிகுந்த அலங்கலாகிய மாலையை உடைய கட்டியங்காரன் என்பவன்; தேன்உயர் மகர வீணைத் தீஞ்சுவை இவளை வெல்வான் - இனிமையிலே மேம்பட்ட மகர வீணையின் இன்சுவையாலே இவளை வெல்கிறவன்; வான் உயர் மதுகை வாட்டும் வார்சிலைக் காமன் ஆகும் - வானவரின் உயர்ந்த அறிவைக் கெடுக்கின்ற நீண்ட வில்லையுடைய காமன் ஆவான்; ஈங்கு இல்லை - இங்கே யில்லை; (ஆகையால்) ஊன் உயர் நுதிகொள் வேலீர் - ஊனைக் கொண்டுயர்ந்த நுனியையுடைய வேலினீர்!; ஒழிக என்றான் - (இவளொடு பொருவதை) விடுக என்றுரைத்தான்.
விளக்கம் : தேனுயர் வார்சிலை எனக் கூட்டுவர் நச்சினார்க்கினியர். இதன்கண் கட்டியங்காரன் தத்தையை அரசருள் எவரேனும் வென்று கைக்கொள்ளுவரோ என்று அஞ்சிக் கிடந்து ஒருவரும் வெல்லாமையுணர்ந்த பின் தன்னுள்ளே மகிழ்ந்து கூறும் அவன் மனநிலைதெற்றெனப் புலப்படும்படி தேவர் புலப்படுத்தியிருந்தல் நுண்ணிதின் உணர்க. எல்லோருஞ் செத்தால் வாழ்ந்தது போலே என்பதொரு பழமொழி ( 172 )
665. மறுமுயற் கிவர்ந்த வேக
மாசுண மடையப் பட்ட
நிறைமதி போன்று மன்னர்
ஒளிகுறைந் துருகி நைய
வறுபகல் கழிந்த பின்றை
யந்நகர்க் காதி நாய்கன்
சிறுவனோர் சிங்க வேற்றை
சீவக சாமி யென்பான்,
பொருள் : முயற்கு மறு இவர்ந்த - முயலுக்காகத் தன்னிடத்தே மறுப்பரந்த; வேகம் மாசுணம் அடையப்பட்ட நிறைமதி போன்று - நஞ்சின் வேகத்தை இராகுவினால் அடைந்து ஒளி குன்றிய முழுமதிபோல; மன்னர் ஒளி குறைந்து உருகி நைய - அரசர்கள் ஒளிகுன்றி உளமுருகி வருந்த; அறுபகல் கழிந்த பின்றை - ஆறு நாட்கள் சென்ற பிறகு; அந் நகர்க்கு ஆதி நாய்கன் சிறுவன் - அந் நகரிலே முதன்மை பெற்ற வணிகன் மகன்; ஓர் சிங்க ஏற்றை சீவகசாமி யென்பான் - ஒப்பற்ற ஆண் சிங்கம் போன்ற சீவகசாமி என்பவன்.
விளக்கம் : ஆறுநாள் : ஒர மரபு. இதுவும் அடுத்த செய்யுளும் குளகம். இதன்கண் இக் காப்பியத்தலைவனாகிய சீவகசாமியை ஏதிலான் போல வைத்துத் தேவர் அந்நகர்க்கு ஆதிநாய்கன் சிறுவன் ஓர் சிங்க வேற்றை சீவகசாமி என்பான் எனக் கூறியது இதுகாறும் காந்தருவதத்தையின்பாற் சென்றிருந்த நம் நெஞ்சத்தை அச் சீவகன் பாலிழுத்து வந்து அவனுடைய வரலாற்றினையும் பெருமையையும் நம்மை மீண்டும் ஒருமுறை நினைக்கும்படியும் அவனுக்கு இரங்கும்படியும் செய்துவிடுகின்றது. இத்தகைய செய்கைத் திறம் இவரனைய தெய்வப்புலவர்பால் மட்டுமே காணப்படும். ( 173 )
666. தம்பியுந் தோழன் மாருந் தானுமற் றெண்ணிச் சூழ்ந்து
வெம்பிய வீணைப் போருட் செல்குவம் யாமு முன்னே
தும்பறப் புத்தி சேன சொல்லிது குரவற் கென்ன
கந்துகற் கவனுஞ் சொன்னா னவனிது விளம்பி னானே.
பொருள் : தம்பியும் தோழன்மாரும் தானும் எண்ணி - தன் தம்பியும் தோழர்களும் தானுமாக இருந்து ஆராய்ந்து; சூழ்ந்து வெம்பிய வீணைப் போருள் யாமும் முன்னே செல்குவம் - அரசர்கள் ஆராய்ந்து மாறுபட்ட யாழ்ப் போரிலே அத் திரள் குலைவதற்கு முன்னே நாமும் செல்வோம் என்று; புத்திசேன தும்பு அற இது குரவற்கு சொல் என்ன - புத்திசேனனே! சிக்கற, சீவகன்வேட்கையாற் செல்கிறான் அல்லன்; கல்வி தோற்றுவித்தற்குச் செல்கின்றான் என்று கொள்ளுமாறு இதனைத் தந்தைக்குக் கூறுக என்ன; கந்துகற்கு அவனும் சொன்னான் - கந்துகனுக்குப் புத்திசேனனும் கூறினான்; அவன் இது விளம்பினான் - அவனும் இதனைக் கூறினான்.
விளக்கம் : கூறுவது மேற்கூறுகின்றனர். தும்பு, சிக்கு. தும்பறச் சொல்லியது என்றது சீவகன் காமவேட்கையாலே இங்ஙனம் செல்லத் துணிந்தான் என்று அவன் மாறுபட உணரும் அன்றே அம் மாறுபாடுண்டாகாத முறையில் சொல்லுக என்றவாறு, இதனால் சீவகசாமியின் பெருந்தன்மை தெற்றெனப் புலப்படுதல் உணர்க. ( 174 )
667. ஐயனுக் கமைந்த நீரா
ரறுபத்து நால்வ ரம்பொன்
வையகத் தமிர்த மன்னார்
வாக்கமை பாவை யொப்பா
ரெய்திய விளமை மிக்கா
ரியைந்தன ரென்று பின்னுங்
கையமை சிலையி னாற்குக்
கந்துக னிதுவுங் கூறும்.
பொருள் : அம்பொன் வையகத்து அமிர்தம் அன்னார் - (இன்பத்தால) பொன்னுலகத்து அமிர்தம் போன்றவராய்; எய்திய இளமை மிக்கார் - பொருந்திய இளமை நீங்காதவராய்; வாக்கு அமை பாவை ஒப்பார் - திருத்தமாக அமைந்த கொல்லிப்பாவை போன்றாராய்; அமைந்த நீரார் அறுபத்து நால்வர் - தக்க இயல்பினார் அறுபத்து நால்வர்; ஐயனுக்கு இயைந்தனர் என்று - நம் ஐயனுக்கு முன்னரே இயைந்தனர் (ஆதலால் யாழ் வாசிக்கச் செல்லக் குறைவில்லை) என்றுரைத்து; பின்னும் கந்துகன் கையமை சிலையினாற்கு - மற்றும் கந்துகன், கையிற் பொருந்திய வில்லினானுக்கு; இதுவும் கூறும் - (மிகுதிப்பாடாக உலகங்கூறும் இதனாற் சிறிது குறையுண்டு என்று) இதனையும் புத்திசேனனிடம் கூறுவான்.
விளக்கம் : சிலையினான் : சீவகன். அறுபத்து நால்வர் என்றது கலைகளை என்றும், இதுவும் கூறும் - இவன் மிகுதிப்பாடு கூறும்; உம்மை, சிறப்பு, மிகுதியாவது உலகம் ஏந்துதலானும், கல்லேந்தி நீக்குதலானும் (690) நீரைமீட்டலானும் உளதாய மிகுதி.இதற்குக் கட்டியங்காரன் பொறாததே குறையென்றான். இது மேலே விலங்கல் (689) என்னும் கவி முதலியவற்றாற் காண்க. என்றும் நச்சினார்க்கினியர் வரைந்துள்ளார். ( 175 )
668. மறைவல்லாற் குரைக்கும் போழ்திற்
கோயிலு ணின்று மாலைப்
பிறைவெல்லும் நுதலி னாளோர்
பெண்கொடி வந்து கூந்த
லுறைசெல நீக்கிப் பைந்தா
ளொண்மணிக் குவளை நீட்ட
நறைவெல்லும் நாக மாலை
நோக்கொடு பூக்கொண் டானே.
பொருள் : மறைவல்லாற்கு உரைக்கும் போழ்தில் - (மிகுதிப் பாடாகிய அதனை) புத்திசேனனுக்குக் கூறத்தொடங்கும் பொழுது; மாலைப் பிறைவெல்லும் நுதலினாள் ஓர் பெண்கொடி கோயிலுள் நன்று வந்து - மாலைப் பிறையை வெல்லும் நெற்றியினாளாகிய கொடி போன்ற ஒரு பெண் அரண்மனையினிற்றும் வந்து; கூந்தல் உறைசெல நீக்கி - கூந்தலாகிய உறையினை அகல நீக்கி; பைந்தாள் ஒண்மணிக் குவளை நீட்ட - பசுமையான தாளையுடைய ஒளி பொருந்திய மணிபோலும் குவளையை நீட்ட; நறை வெல்லும் நாகமாலை நேர்க்கோடு பூக்கொண்டான் - மணத்தின் வெல்லு மியல்புடைய நாகமாலையின் குறிப்பாலே (ஒரு காரியம் உண்டென உணர்ந்து) அக் குவளையைக் கையிலே கொண்டான்.
விளக்கம் : மாலை யென்பதற்கேற்ப நறை கூறினார். இஃது இயற்கையடை. ( 176 )
669. நல்லவ ணோக்க நாய்கன்
றேர்ந்துபூங் குவளைப் போதி
னல்லியுட் கிடந்த வோலை
தாளது சலாகை யாதல்
சொல்லுமென் றாய்ந்து கொண்டு
துகிலிகைக் கணக்கு நோக்கி
வல்லிதிற் சலாகை சுற்றி
யோலையை வாசிக் கின்றான்.
பொருள் : நாய்கள் நல்லவள் நோக்கம் தேர்ந்து - (பூவை வாங்கின) வணிகன் நாகமாலையின் குறிப்பை ஆராய்ந்து தெளிந்து கொண்டு; பூங்குவளைப் போதின் தாளது அல்லியுள் கிடந்த ஓலை சலாகையாதல் சொல்லும் என்று - அழகிய குவளைமலரின் தாளே தன் அகவிதழிற் கிடந்த ஓலையைச் சுற்றிப் படிக்கச் சலாகையாதலைக் கூறுகின்றதென்று; ஆய்ந்து கொண்டு - ஆராய்ந்து கொண்டு; துகிலிகைக் கணக்கு நோக்கி - துகிலிகைக் கணக்கால் எழுதின எழுத்தைப் பார்த்து; சலாகை வல்லிதின் சுற்றி - (தாளாகிய) சலாகையிலே வரி ஏற்றிழிவு படாதவாறு சுற்றி; ஓலையை வாசிக்கின்றான் - ஓலையை வாசிக்கத் தொடங்கினான்.
விளக்கம் : சலாகை - இரும்புக் கம்பி. நல்லவள் - ஈண்டு நாகமாலை. அல்லி - அகவிதழ். துகிலிகை - எழுதுகோல். ( 177 )
670. நம்பனை நகரி னீக்கிச்
சேமத்தால் வைக்க தீயுட்
செம்பொன்போற் பெரிதுஞ் சேந்து
செகுத்திட லுற்று நின்றான்
வெம்பினான் காரி யுண்டிக்
கடவுளிற் கனன்று வேந்தன்
இம்பரின் றெனக்குச் சொன்னா
னிதுபட்ட தடிகள் என்றாள்.
பொருள் : வேந்தன் செம்பொன்போல் பெரிதும் சேந்து செகுத்திடல் உற்று நின்றான் - அரசன் சிவந்த பொன்னைப் போல மிகுதியும் வெம்பி நம்பனை அழித்திடலை மேற்கொண்டு நின்றான்; காரி உண்டிக் கடவுளின் கனன்று வெம்பினான் - நஞ்சுண்ட சிவன்போலச் சீற்றங் கொண்டு புழுங்கினான்; இம்பர் இன்று எனக்குச் சொன்னான் - இங்கே இப்போது எனக்கு அதனைக் கூறவுஞ் செய்தான்; அடிகள் இதுபட்டது - அடிகளே! இது நிகழ்ந்ததாகும்; நம்பனை நகரின் நீக்கிச் சேமத்தால் வைக்க என்றாள் - (ஆகையால்) சீவகனை நகரினின்றும் நீக்கி ஒரு காவலான இடத்தே வைக்க என்றெழுதியிருந்தாள்.
விளக்கம் : காரி - நஞ்சு. நம்பன் : சீவகன்; சேமத்தால் : உருபு மயக்கம். நம்பனை - சீவகனை. சேமம் - காவலையுடைய இடம், காரியுண்டிக் கடவுள் - சிவபெருமான். காரி - நஞ்சு. இம்பர் - இப்பொழுது. அடிகள் என்றது நாய்கனை முன்னிலைப்படுத்தி வரைந்தபடியாம். ( 178 )
671. ஓலையை யவட்கு நீட்டி
யொண்மணிக் குழையு முத்தும்
மாலையும் படுசொ லொற்றி
வம்மென மறைய நல்கி
வேலைநெய் பெய்த திங்கள்
விரவிய பெயரி னாற்கு
மேலைநாட் பட்ட தொன்று
விளம்புவல் கேளி தென்றான்.
பொருள் : அவட்கு ஓலையை நீட்டி - அவளிடம் ஓலையைக் கொடுத்துப் பிறகு; மாலையும் படுசொல் ஒற்றி வம்என - மாலைப் பொழுதினும் கிடைக்குஞ் செய்தியை ஒற்றியறிந்து வருக என்று; ஒண்மணிக் குழையும் முத்தும் மறைய நல்கி - சிறந்த மணியழுத்தின குழையையும் முத்தையும் மறைவாக அளித்து; வேலைநெய் பெய்த - கடலென நெய்யைத் தீயிலே பெய்து வேள்வி ஆற்றிய; திங்கள் விரவிய பெயரினாற்கு - புத்திசேனனுக்கு; மேலைநாள் பட்டது ஒன்று - முந்தை நாளிற் பட்டதாகிய ஒன்று; விளம்புவல் இது கேள் என்றான் - கூறுவேன்; இதனைக் கேள் என்றான்.
விளக்கம் : திங்கள் - மதி: மதி - புத்தி. எனவே, திங்கள் விரவிய பெயரினான்; புத்திசேனன்; தீத்தீண்டு கையார் (திணைமாலை : 5) என்பது வேங்கையை உணர்த்தினாற்போல. நச்சினார்க்கினியர் 669 - முதல் மூன்று செய்யுட்களையும் ஒரு தொடராக்கிக் கொண்டு கூட்டும் முறை :
(வாசிக்கின்றான், பெயர். இக் கவியில் (670) இது பட்டது அடிகள் என்றாள் என்னுமிடத்து, அடிகள் என்றாள் என்பதனை, மேலேநாட் பட்டதொன்று விளம்புவல் அடிகள் என்றாள் என அதனோடு கூட்டி, ஓலை கொண்டு வந்தவள வார்த்தை ஆக்குக. கேளிதென்றான் என்பதனை, அது கேட்ட கந்துகன் திங்கள் விரவிய பெயரினாற்கு, இவள் கூறுகின்ற இதனை நீ கேளென்றான் என்க. இன்னன் (சீவக. 663) என்னுங் கவியில் சூழ்ச்சி தன்னுள்ளான் என்பதன் பின்னே, இது பட்டது என்றாள் என ஓலை கொண்டு வந்தவள் கந்துகன் சிறைப்புறமாகப் புத்திசேனனுக்குச் செய்தி கூறினாளாக்கி முடித்து, ஓலையை என்னுங் கவியில், மறைய நல்கி என்பதளவாக அதன் பின்னே கூட்டிப், படையமைத் தெழுமின் என்பதனை அதன் பின்னே கூட்டுக. என்றாள் இரண்டிடத்துங் கூட்டுக. இங்ஙனங் கூறாது, இதுபட்ட தடிகள் என்று கந்துகனுக்கு அவள் கூற, அவன் புத்திசேனனுக்குக் கூறினானென்று கூறின், புதல்வன் செய்தியைத் தந்தை கூறும் முறையாற் கூறாது இடக்கர் முதலிய கூற்றாற் கூறினானாகத் தேவர் கூறாரென்றுணர்க.)
கந்துகனுக்குப் புத்திசேனன் மகனுமல்லன் : மகன் முறையனே. அவனிடம் தன் வளர்ப்பு மகனாகிய சீவகன் செய்தியை இடக்கர் முதலியவற்றாற் கூறானென்பதற்காகவே மேற்கூறியவாறு பல செய்யுட்களினின்றும் வேண்டியபடி எங்கும் எடுத்துக் கூட்டுமாறு மாட்டேற்று முறையால் தேவர் செய்தார் என்பது பொருத்தமாகத் தெரியவில்லை. மற்றும், இதனை இடக்கர் என்று கூறத் தகாதெனக் கருதினாரேல்,
தூசுலாய்க் கிடந்த வல்கு றுப்புறழ் தொண்டைச் செவ்வாய்
வாசவான் குழலின் மின்போல் வருமுலைச் சாந்து நக்கி
யூசல்பாய்ந் தாடிக் காதிற் குண்டல மிலங்க நின்றாள்
காசில்யாழ்க் கணங்கொ டெய்வக் காந்தர்வ தத்தையென் பாள்(சீவக. 550)
எனவும்,
அளந்துணர் வரிய நங்கைக் கருமணி முகிழ்த்த வேபோ
லிளங்கதிர் முலையும் ஆகத் திடங் கொண்டு பரந்த.....(சீவக. 551)
எனவும், தத்தையாகிய தன் மகளின் வனப்பைத் தந்தை சுலுழவேகன் கூறுவது போலவும்,
கற்சிறை யழித்து வெள்ளம் கடற்கவா யாங்குக் கற்றோர்
சொற்சிறை யழித்து வேந்தன் றுணைமுலை துறத்தல் செல்லான்
விற்சிறை கொண்ட போலும் புருவத்து விளங்கு வேற்க
ணற்சிறைப் பட்டு நாடும் நகரமுங் காவல் விட்டான்
எனத், தன்னிடம் தன் கணவன் நடந்து கொண்ட, காமமே கன்றி நின்ற நிலையை விசயையாகிய தாய் சீவகனாகிய தன் மகனிடங் கூறுவது போலவும் தேவர் எழுதுவது முறையாகுமா? நிகழ்ந்த நிகழ்ச்சியைப் புத்தி சேனனிடம் கந்துகன் கூறுமாறுபோல நமக்குத் தேவர் கதை கூறுகிறார் என்று கொண்டு, செய்யுட்கள் கிடந்தவாங்கே பொருள் கூறுதலே சிறப்புடைத் தென்க. ( 179 )
672. கடியரங் கணிந்து மூதூர்க்
கடல்கிளர்ந் தனைய தொப்ப
நடையறி புலவ ரீண்டி
நாடக நயந்து காண்பான்
குடையுடை யவனொ டெண்ணிச்
சீவகற் கொணர்மி னென்னத்
தொடையல்சூழ் வேலி னானுந்
தோழருங் காணச் சென்றார்..
பொருள் : மூதூர்க் கடல் கிளர்ந்தனையது ஒப்ப நடை அறி புலவர் ஈண்டி - இப் பெருநகரில் கடல் ஆரவாரித் தெழுந்தாற் போல நாடக நெறியறிந்த புலவர்கள் குழுமி; நாடகம் நயந்து காண்பான் - நாடக மொன்றை விரும்பிக் காணற்கு; கடி அரங்கு அணிந்து - விளக்கமுற்ற அரங்கினை அமைத்து; குடை உடையவனொடு எண்ணி - அரசனுடன் ஆராய்ந்து; சீவகன் கொணர்மின் என்ன - சீவகனைக் கொண்டுவருக என்றுரைக்க; தொடையல் சூழ் வேலி னானும் தோழரும் காணச் சென்றார் - மாலை சூழ்ந்த வேலினானும் தோழர்களும் காண்பதற்குச் சென்றனர்,
விளக்கம் : இதுமுதல் ஓலை கொண்டு வந்தவள் கூற்றென்பர் நச்சினார்க்கினியர். செலவினும் (தொல் - கிளவி - 28) என்னும் பொது விதியாற், சென்றார் என்றார். கடி - விளக்கம்; விளக்கமாவது எழுகோல் அகலத்தினையும் எண்கோல் நீளத்தினையும் ஒரு கோல் குறட்டுயரத்தினையும் வாய்தல் இரண்டினையும் உடைத்தாதல். அணிந்து - பார்ப்பனப் பூத முதலிய நால்வகைப் பூதங்களையும் ஒழிந்தவற்றையும் இயற்றி; 1. கூறிய வுறுப்பிற் குறியொடு புணர்ந்தாங் - காடுநகர்க் கியற்றும் அரங்கின நெற்றிமிசை - வழுவில் பூதம் நான்கும் முறைப்பட - எழுதினரியற்றல் இயல்புணர்ந்தோரே. நடையறி புலவராவார்: இயலாசிரியனும், யாழாசிரியனும், இசையாசிரியனும். குழலோனும், தண்ணுமை முதல்வனும் முதலாயினோர். ஈண்டு இவர் தன்மை உரைப்பிற் பெருகும். 1.கூத்தின் வகையுங்குறைழற நோக்கின் - ஏத்தும் வகையான் இருவகைப் படுமே 2.அவைதாம், சாந்திக் கூத்தே விநோதக் கூத்தென் றாய்ந்துற வகுத்தனன் அகத்தியன் தானே சாந்திக் கூத்தே தலைவன் இன்பம் - ஏந்திநின்றாடிய ஈரிரு நடமிவை - சொக்கம் மெய்யே அவிநயம் நாடகம் - என்றிப்பாற்படூஉம் என்மனார் புலவர் 3.சொக்கமாவது : சுத்த நிருத்தம்; அது நூற்றெட்டுக் கரணமுடைத்து. மெய்க் கூத்தாவது : தேசி, வடுகு, சிங்களம்; இவை மெய்த் தொழிற் கூத்தாதலிற் காரணப் பெயர். சாத்துவிகம், இராசதம், தாமதம் என்னும் அகச் சுவைபற்றி ஆடுதலின் அகமார்க்கம் எனப்படும். அகத்தெழு சுவையான் அகமெனப் படுமே (சயந்தம்). அவிநயமாவது : கதை தழுவாதே பாட்டுக்களின் பொருள் தோன்றக் கைகாட்டி அவிநயிப்பது. நாடகமாவது - கதை தழுவி வருங்கூத்து. இங்குக் காண்பது நாடகம். ( 180 )
673. நிலமறிந் தணிக வையன் சீவகன் நெறியி னென்ன
நலநுதற் பட்டங் கட்டி நகைமுடிக் கோதை சூட்டி
யலர்முலைக் குருதிச் சாந்து மாரமும் பூணுஞ் சேர்த்திக்
குலவிய குருதிப்பட்டிற் கலைநலங்கொளுத்தி யிட்டான்.
பொருள் : ஐயன் சீவகன் நிலம் அறிந்து நெறியின் அணிக என்ன - ஐயனாகிய சீவகன் அரங்கை யறிந்து நூல் நெறியால் அணிக என்று நடையறி புலவர் கூற, (அவனும்); நலம் நுதற்பட்டம் கட்டி - அழகிய நெற்றியிலே படடத்தைக் கட்டி; நகைமுடிக் கோதை சூட்டி - ஒளிவிடும் முடிமீது கோதையைச் சூட்டி; அலர்முலைக் குருதிச் சாந்தும் ஆரமும் பூணும் சேர்த்தி - வளரும் முலைகளின் மீது செஞ்சாந்தையும் முத்துமாலையையும் பிற அணிகலன்களையும் அணிவித்து; குலவிய குருதிப் பட்டின் கலைநலம் கொளுத்தியிட்டான் - விளங்கிய செம்பட்டினாலே கலையின் நலத்தைப் பொருத்திவிட்டான்.
விளக்கம் : வளர்கின்ற முலையெனவே பன்னிரண்டாமாண்டாயிற்று. வட்டணையுந் தூசியும் மண்டலமும் பண்ணமைய - எட்டுடனீரிரண்டாண் டெய்தியபின் - கட்டளைய - கீதக் குறிப்பும் அலங்கார முங்கிளரச் - சோதித் தரங்கேறச் சூழ் (பரத சேனாபதீயம்) குருதிச் சாந்து - குங்குமச் சாந்து. ( 181 )
674. திருவிலே சொரிந்து மின்னுங்
குண்டலஞ் செம்பொ னோலை
யுருவுகொண் மதிய மன்ன
வொளிமுகஞ் சுடர வாக்கிப்
பரியகஞ் சிலம்பு செம்பொற்
கிண்கிணி பாதஞ் சேர்த்தி
யரிவையை யரம்பை நாண
வணிந்தன னனங்கன ன்னான்.
பொருள் : திருவிலே சொரிந்து மின்னும் - வானவில்லென ஒளியுமிழ்ந்து விளங்குகிற; குண்டலம் செம்பொன் ஓலை - குண்டலத்தையும் பொன்னோலையையும்; உருவுகொள் மதியம் அன்ன - நிறைந்த திங்களைப் போன்ற; ஒளிமுகம் சுடர ஆக்கி - ஒளியுறு முகம் விளங்க அமைத்து; பரியகம் சிலம்பு செம்பொன் கிண்கிணி பாதம் சேர்ததி - காற்சரி சிலம்பு கிண்கிணி ஆகியவற்றை அடியிலே பூட்டி; அரம்பை நாண அரிவையை அனங்கன் அன்னான் அணிந்தனன் - அரம்பையும் வெள்க அந்த அரிவையைச் சீவகன் புனைந்தான்.
விளக்கம் : இவளைத் தீண்டவும் வேட்கை நிகழாமையின் அனங்கனன்னான் என்றார்; சிலைவில்லான் போலும் செறிவினான் (கலி. 143) என்றார் பிறரும். அவன் தீண்டுதலின் தனக்கு வேட்கை நிகழவும், அவற்கு நிகழாமை கண்டு, இனிக் கூத்தினால் இவனைப் பிணிப்பேனென்று அவள் ஆடுகின்றாளாம். இவட்கு ஈண்டு வேட்கையின்றேல் மேல் ஆடவர் மனங்கள் (சீவக. 683) என்னுங் கவியில் தோழியை விட்டாளென்றல் பொருந்தாதாம். இதனானே, இவள் நடிக்கின்ற நாடகம் ஒருவன் மேலே ஒருத்தி வேட்கையுற்றதொரு கதையேயாம் என்பர் நச்சினார்க்கினியர். ( 182 )
675. தோற்பொலி முழவும் யாழும்
துளைபயில் குழலு மேங்கக்
காற்கொசி கொம்பு போலப்
போந்துகைத் தலங்கள் காட்டி
மேற்பட வெருவி நோக்கித்
தானைய விட்டிட் டொல்கித்
தோற்றினாள் முகஞ்செய் கோலந்
துளக்கினாண் மனத்தை யெல்லாம்.
பொருள் : தோ பொலி முழவும் யாழும் துளைபயில் குழலும் ஏங்க - தோலாற் பொலிவுற்ற முழவும் யாழும் துளை பயின்ற குழலும் ஒலிக்க; காற்கு ஒசி கொம்பு போலப் போந்து - காற்றுக்கு நுடங்கும் பூங்கொடி போலப் போந்து; தானையை விட்டிட்டு - திரைச்சீலையை விட்டிட்டு; கைத்தலங்கள் காட்டி - கைகளைக் காட்டி; மேற்பட வெருவி நோக்கி ஒல்கி - மேலே வெருவிப் பார்த்து ஒல்கி; முகம் செய்கோலம் தோற்றினாள் கூத்திற்கு முகமாகிய தோற்றத்தே தோன்றினாள்; மனத்தை எல்லாம் துளக்கினாள் - உள்ளத்தை யெல்லாம் வருத்தினாள்.
விளக்கம் : மார்ச்சனை முதலியவு முளதாய், இடக்கண் இளியாய் வலக்கண் குரலாய், நடப்பது தோலியற் கருவியாகும் என்ற ஓசையும் உடைத்தாய், வெண்கலத்தாற் செய்ததென்பது தோன்றப் பொலிதல் கூறினார். கருங்காலி செங்காலி வேம்பு பலாக் கஞ்சம் - நெருங்கிய சீர்க்குரா மண்ணாம் - பொருந்தவே - ஊன மிலவாய் உயர்நிலத்தில் தோன்றிலாம் - மானின் விழிமடவாய் வைப்பு துளைபயில் குழல் - துளையிடத்தே வாச்சியமும் யாழ்ப் பாடலும் கண்டப் பாடலும் பயிலப்பட்ட முதல் வங்கியமும் வழிவங்கியமும். ஓங்கிய மூங்கில் உயர்சந்து வெண்கலமே - பாங்குறுசெங்காலி கருங்காலி - பூங்குழலாய் - கண்ணன் உவந்த கழைக்கிவைக ளாமென்றார் - பண்ணமைந்த நூல்வல்லோர் பார்த்து ஏங்க - இவை மூன்றும் கூடி யிசைப்ப. இவை ஆமந்திரிகையாம் : குழல்விழி யாழெழீஇத் தண்ணுமைப் பின்னர் - முழவியம்பலாமந்திரிகை. போந்து - வலக்கால் முன்மிதித்தேறி வலத்தூணைச் சேர்ந்து. கைத்தலங்காட்டுதல் கமல வர்த்தனை, (இது கமல வட்டணையெனவும் வழங்கும்.) மேற்பட வெருவி நோக்கி - தெய்வத்தை நோக்குதலின் மேலேயெழ வெருவிப் பார்த்து. தானை - கரந்து வரல் எழினி. வழுவில் கேள்வி நன்னூ லுணர்ந்தோர் - எழினி தானே மூன்றென மொழிப. அவைதாம், ஒருமுக எழினியும் பொருமுக எழினியும் - கரந்து வரல் எழினியும் எனமூ வகையே; இராசதானியிலும் அரங்கிலும் கோலம் மறைத்துவரும் இடத்திலும் இட்ட திரைகள். ( 183 )
676. தெண்மட்டுத் துவலை மாலை தேனொடு துளிப்பத் திங்க
ளுண்ணட்ட குவளை போலு முருவக்கண் வெருவி யாட
விண்விட்டுக் கடவுள் வீழ நுடங்கின புருவ நெஞ்சம்
பண்விட்ட திருந்து காணும் பன்மணிக் கழலி னார்க்கே.
பொருள் : தெள்மட்டுத் துவலை மாலை தேனொடு துளிப்ப - (ஆடும விரைவால்) தெளிந்த தேன் துளியை வண்டுடன் மாலைகள் துளிப்ப; திங்களுள் நட்ட குவளை போலும் உருவக்கண் வெருவி ஆட - திங்களுடன் நட்புக் கொண்ட குவளையைப் போல அழகிய கண்கள் பிறழ்ந்து ஆட; விண் விட்டுக் கடவுள் வீழ - வானிலிருந்து தெய்வங்கள் விழ; புருவம் நுடங்கின - புருவங்கள் அசைந்தன; இருந்து காணும் பன்மணிக் கழலினார்க்கு நெஞ்சம் பண்விட்டது - (அப்போது) அங்கிருந்து பார்க்கின்ற பல மணிக்கழலையுடையார்க்கும் நெஞ்சம் நிலை குலைந்தது. ( 184 )
677. செங்கதிர்ச் சிலம்பு செம்பொற்
கிண்கிணி சிலம்பக் கோதை
பொங்கப்பொன் னோலை வட்டம்
பொழிந்துமின் னுகுப்பப் போர்த்த
குங்குமச் சாந்து வேய்ந்து
குண்டலந் திருவில் வீச
வங்கதி ரார மின்ன
வரிவைகூத் தாடு கின்றாள்.
பொருள் :செங்கதிர்ச் சிலம்பு செம்பொன் கிண்கிணி சிலம்ப - செவ்வொளிச் சிலம்பும் சிவந்த பொன்னாற் செய்த கிண்கிணியும் ஒலிப்ப; கோதை பொங்க - மாலை ததும்ப; பொன் ஓலை வட்டம் பொழிந்த மின் உகுப்ப - பொன் ஓலை ஒளியை வட்டமாகச் சொரிந்து சிந்த; போர்த்த குங்குமச் சாந்து வேய்ந்து குண்டலம் திருவில் வீச - குண்டலம் மேனியை மறைத்த சந்தனத்தைத் தீண்டி அழகிய ஒளியை வீச; அம் கதிர் ஆரம் மின்ன - அழகிய ஒளியையுடைய முத்துவட மின்ன; அரிவை கூத்தாடுகின்றாள் - அவள் கூத்தாடுகிறாள். ( 185 )
678. மருங்குலு மொன்று தாய்க்கு மொருமக ளாத லோர்ந்து
மிரும்பினா லியன்ற நெஞ்சத் திவர்களோ விருந்து காண்க
வரங்கின்மே லிவளைத் தந்த தாய் கொலோ கயத்தி யன்றேற்
சுரும்புசூழ் கண்ணி சூட்டி யவர்கொலோ கயவர் செல்லீர்.
பொருள் : மருங்குலும் ஒன்று - இடையும் ஒன்றே (இது முரிந்தால் வேறு சேம இடையும் இல்லை); தாய்க்கும் ஒரு மகள் ஆதல் ஓர்ந்தும் - இவளும் தாய்க்கு ஒரு மகளே ஆதலை அறிந்தும்; இரும்பினால் இயன்ற நெஞ்சத்து இவர்களோ இருந்து காண்க - (அருளின்றாக) இரும்பினால் ஆகிய உள்ளத்தையுடைய இக்கொடியோர் இருந்து காண்க!; அரங்கின் மேல் இவளைத் தந்த தாய் கொலோ கயத்தி? - (இவர்கள் அருளிலராய்க் கூத்து முடியும் வரை காண்பார்களென் றறிந்தும்) இக் கூத்தரங்கிலே இவளை விட்ட தாய் கொடியளோ?; அன்றேல் - அன்றாயின்; சுரும்புசூழ் கண்ணி சூட்டியவர்கொலோ கயவர்? - வண்டுகள் சூழும் கண்ணியைக் குழலிற் சூட்டிவிட்டவர் கொடியரோ? சொல்லீர் - எவர் கொடியரெனக் கண்டு சொல்வீராக!
விளக்கம் : இவர்களோ : ஓ : இரக்கக் குறிப்பு. இச் செய்யுள்,
ஒசிவது போலுநின் ஒசிநுசுப் புணரா
தினக்கிடை யிப்புனல் குடைகுவை யாயின்
நினக்கிடை மற்றொன் றுடையை யோவெனக்
காதற் செவிலி சுழறுபு விலக்கவும்
என வரும் பெருங்கதைப் பகுதியை நினைப்பிக்கின்றது. ( 186 )
வேறு
679. அகிலார் புகையலாற் சாந்தணியாள்
பூச்சாரச் செல்லாள் செல்லிற்
பகலே பகைவளர்த்த பாவை
சிறுநுசுப் பொன் றுண்டே பாவம்
இகலேந் திளமுலைமேற் சாந்தெழுதி
முத்தணிந்து பூவுஞ் சூட்ட
முகிலேந்து மின்மருங்குல் மொய்குழற்றா
யிதுகண்டு முளளே பாவம்.
பொருள் : அகிலார் புகை அலால் சாந்தணியாள் - (இவள்) அகிற்புகை அன்றிச் சந்தனமும் பூசாள்; பூச்சாரச் செல்லாள் - பூவின் அருகேயும் செல்லாள்; செல்லின் பகலே பகைவளர்த்த பாவை சிறு நுசுப்பு ஒன்று உண்டே - செல்வாளெனின் (அம்மாலையும் சாந்தும் தாங்குதற்குத் தக்கதாக) வெளியாகவே முலைகளாகிய பகையை வளர்த்த சிறிய இடையதொன்று பாவைக்கு இருக்கின்றதோ? (இல்லையே); பாவம்! - ஈதொரு பாவம் இருந்தபடி!; இகல் ஏந்து இளமுலைமேல் சாந்து எழுதி - (இத் தன்மை யறிந்தும்) மாறுபடுதலை மேற்கொண்ட இளமுலைகளின்மேற் சாந்தால் எழுதி; முத்து அணிந்து - முத்தையும் அணிந்து ; பூவும் சூட்ட - மலரையும் அணிய; மின் மருங்குல் முகில் ஏந்தும் மொய்குழல் - மின்னிடையின் மேல் முகிலையேந்திய மொய்குழலையுடையாளின்; தாய் இது கண்டும் உளளே - அன்னை இக் கொடுமையைக் கண்டும் உயிருடன் இருக்கின்றனளே!; பாவம்! - ஈதொரு பாவம் இருந்தபடி என்னே!.
விளக்கம் : இப் பாவைக்கு நுசுப்பில்லை; இத்தன்மை யறிந்து வைத்தும் இவள் முலைமேலே எழுதவும் சூட்டவும் கண்டு இவள் தாய் எங்ஙனம் பொறுத்தாள்; இஃதொரு பாவம், என்று இரங்கினர் என்றவாறு. ( 187 )
வேறு
680. தேந்தாமஞ் செம்பவளத் தாமஞ் செம்பொன்
னெரிதாம மின்னுத் திரடா மங்க
டாந்தாந் தாமெனத் தாழ்ந்தபொன் மேகலைத்
தாம வரங்கின்மேற் றாதார் முல்லைப்
பூந்தாமக் கொம்பாடக் கண்டா ரெல்லாம்
புனமயிலே யன்னமே பொன்னங் கொம்பே
யாந்தா மரைமகளே யல்ல ளாயி
னமரர்மக ளென்பாரு மாயி னாரே.
பொருள் : தேன் தாமம் செம்பவளத் தாமம் செம்பொன் எரிதாமம் மின்னுத் திரள் தாமங்கள் தாம் தாம் தாம் என - தேனையுடைய பூமாலைதாம், செம்பவள மாலைதாம், விளக்கமுற்ற செம்பொன் மாலைதாம், ஒளிவிடும் மணிமாலை தாம் என்று கண்டோர் கூறும்படி; தாழ்ந்த பொன் மேகலைத்தாம அரங்கின்மேல் - அங்கே பொருந்திய பொன்மேகலையையுடைய தாமம் போன்ற தோரிய மடந்தையர்களுடைய அரங்கின்மேலே; தாதுஆர் முல்லைப் பூந்தாமக் கொம்பு ஆடக் கண்டார் எல்லாம் - தாது பொருந்திய முல்லை மலர்மாலை அணிந்த கொம்பு போன்றவள் ஆடுவதைப் பார்ததவர்கள் எல்லோரும்; புனமயிலே அன்னமே பொன்னங்கொம்பே ஆம் தாமரை மகளே - (இவள்) புனத்திலுள்ள மயிலேயாம், அன்னமேயாம், பொற்கொம்பேயாம், திருமகளேயாம்; அல்லள் ஆயின் அமரர் மகள் என்பாரும் ஆயினார் - அல்லளென்றால் வானவர் மகளேயாம் என்று தனித்தனியே கூறுவாராயினார்.
விளக்கம் : தோரிய மடந்தையர்; ஆடி முதிர்ந்தவராய் பற்றுப் பாடுவோர். முல்லை கற்பிற்குச் சூட்டப்பட்டது. தானுடை முல்லையெல்லாம் (சீவக. 686) என்பர் மேலும். இனி இவையே மாலையென்று கண்டார் வியக்கும்படி பூமாலை முதலியன தாழ்ந்த தாம அரங்கின் மேலே மேகலையையும் முல்லைத் தாமத்தையுமுடைய கொம்புபோல் வாள் ஆட என்றுமாம். ஆயினார் என்பதனை நெய் பருகி (சீவக. 682) என்னுஞ் செய்யுளின் பின்னே கூட்டுவர் நச்சினார்க்கினியர். தேந்தாமம் - பூமாலை. செம்பொன் எரிதாமம் - பொன்மாலை. மின்னுத் திரள்தாமம் - மணிமாலை. பூந்தாமக் கொம்பு - அனங்கமாலை. ( 188 )
681. கொடியார் குளிர்முத்தஞ் சூட்டி வைத்தார்
கொல்வானே குங்குமச்சே றாட்டி னார்க
ளடிசார்ந்து வாழ்வாரை யம்முலைக டாமே
யழித்திடு மேற்றாமே யழித்தி டுகவென்
றொடியாத மாத்திரை யாலுண் டேநுசுப்
பிருந்து காண்பாரு முளரே செங்க
ணெடியான் மகன்சிலையு மம்பும் வைத்த
நிழன்மதியோ வாண்முகமோ நோக்கிக் காணீர்.
பொருள் : கொடியார் கொல்வானே குளிர்முத்தம் சூட்டி வைத்தார் - கொடியார்கள் கொல்வதற்கே குளிர்ந்த முத்துக்களைச் சூட்டிவிட்டனர்; குங்குமச் சேறு ஆட்டினார்கள் - குங்குமக் குழம்பாலே ஆட்டிவிட்டனர்; அடிசார்ந்து வாழ்வாரை அம்முலைகள் தாமே அழிந்திடுமேல் தாமும் அழித்திடுக - தம் அடிக்கீழ்ப் பொருந்தி வாழ்வாரை (உலகம் அழிப்பதுண்டாயின்) அம் முலைகளும் நம்மை அழிக்க அமையும்; என்று ஒடியாத மாத்திரையால் நுசுப்பு உண்டே - என்று கருதித் தான் முறியாத அளவிலே இடையும் இருந்தது; காண்பாரும் உளரே - இப்பாவத்தைக் கண்ணாற் காண்பாரும் இருந்தனரே!; செங்கண் நெடியான் மகன் சிலையும் அம்பும் வைத்த - சிவந்த கண்களையுடைய திருமாலின் மகனாகிய காமன் தன் வில்லையும் அம்பையும் வைத்த; நிழல் மதியோ வாள்முகமோ நோக்கிக் காணீர் - ஒளிவிடும் திங்களோ? முகமோ? கூர்ந்து நோக்குவீர்!
விளக்கம் : பிறர்க்கின்னா செய்வார் என்பது தோன்றக் கொடியா என்றார். அழித்திடுமேல் என்பதற்கு உலகம் என்னும் எழுவாய் வருவித்துக் கொள்க. இருந்து காண்பாரும் என்பது இக் கொடுமையை நேரிலிருந்து கண்ணாரக் காண்பவரும் என்பதுபட நின்றது.
நெடியான் மகன்சிலை - கரும்புவில். இது புருவத்திற்குவமை. அம்பு - மலரம்பு. இது கண் வாய் இரண்டிற்கும் உவமை என்க.
( 189 )
682. நெய்பருகி நீண்டஇருட் கற்றை போலுங்
குழற்கற்றை கண்டு நிறைக லங்குவார்
மைபருகி நீண்டு மதர்த்த வுண்கண்
வாளேறு பெற்று நைவா மாநா கத்தின்
பைபருகு மல்கு லிலயம் பற்றிப்
பதனமைத்த பாவை நிருத்த நோக்கி
மெய்யுருகிக் கண்ணுருகி நெஞ்சுருகிக் காம
வெயில்வெண்ணெய்ப் பாவைபோன் மெலிகின் றாரே.
பொருள் : நெய்பருகி நீண்ட இருள் கற்றை போலும் குழல் கற்றை கண்டு நிறைகலங்குவார் - நெய் பூசப்பெற்று, நீண்ட இருளின் கொத்தே போலும் குழற் கொத்தைப் பார்த்து நிறைகெடுவார்; மை பருகி நீண்டு மதர்த்த - மைதீட்டப்பெற்று நீண்டு களிப்புற்ற; உண்கண் வாளேறு பெற்று நைவார் - கண்களாகயி வாளால் தாக்குதல் பெற்று வருந்துவார்; மா நாகத்தின் பை பருகும் அல்குல் பாவை - பெரிய பாம்பின் படத்தின் தன்மையைக் கொள்ளும் அல்குலையுடைய பாவையின்; இலயம் பற்றிப் பதன் அமைத்த நிருத்தம் நோக்கி - தாள அறுதியைப்பற்றிக் கால் அமைத்த கூத்தினைப் பார்த்து; மெய்உருகிக் கண் உருகி நெஞ்சு உருகி - மெய்யும் கண்ணும் உளமும் உருகி; காமவெயில் வெண்ணெய்ப் பாவைபோல் மெலிகின்றார் - காமமாகிய வெயிலிலே யுள்ள வெண்ணெய்ப் பாவைபோல மெலிகின்றனர்.
விளக்கம் : நெய்பருகி நீண்ட குழல், இருட்கற்றை போலும் குழல் எனத் தனித்தனிக் கூட்டுக. உண்கண் - மையுண்ட கண். இலயம் - தாளவறுதி. பதன் - பதம்; அடி, பாவை - அநங்கமாலை. நிருத்தம் - கூத்து. கண்ணுருகுதல் - நீர்வார்தல். ( 190 )
683. ஆடவர் மனங்க ளென்னு மரங்கின்மே லனங்க மாலை
யாடினாண் முறுவ லென்னுந் தோழியை யையன் காண
வோடரி நெடுங்க ணென்னு மோலையை யெழுதி விட்டாள்
வாடிய வாறு நோயு முரைத்துவார் கொடிய னாளே.
பொருள் : ஆடவர் மனங்கள் என்னும் அரங்கின்மேல் அனங்கமாலை ஆடினாள் - ஆடவரின் உள்ளங்கள் என்னும் அரங்கில் அனங்கமாலை ஆடினாள்; வார்கொடி அனாள் - நீண்ட கொடி போன்ற அவள்; வாடிய ஆறும் நோயும் உரைத்து - தான் வாட்டமுற்றதையும் அதற்குக் காரணமான நோயையும் உரைத்து; ஓடு அரி நெடுங்கண் என்னும் ஓலையை எழுதி - நீண்ட செவ்வரி பரவிய நெடுங்கண்களாகிய ஓலையை எழுதி; முறுவல் என்னும் தோழியை - (அதனை) முறுவல் என்னும் தோழியினிடம் கொடுத்து அவளை; ஐயன் காண விட்டாள் - சீவகன் காணுமாறு விடுத்தனள்.
விளக்கம் : தன் கூத்தினால் அவற்கு வேட்கை நிகழ்ந்ததோ என்று நோக்குகின்றவள் தான் குறித்தன கொள்வானாக நோக்கினமையை உருவகமாகக் கூறினார், அதனை அவன் கொள்ளாமை கண்டு நாடக மகளாதலின், தன் நெஞ்சு வருந்தாதபடி அதனைத் தேற்றுகின்றாளாக மேற் செய்யுளிற் கூறுகின்றார்; மாதவி, மாலை வாராராயினும் மாணிழை - காலை காண்குவம் (சிலப்-8: 115-6) என்றாற் போல. ஆடவர் மனங்கள் என்னும் அரங்கின்மேல் என்பது அக் கூத்தாடரங்கின்கண் ஆடுதலே அன்றியும் என்பதுபட நின்றது. முறுவலாலே அவனைத் தன்னை நோக்குமாறு செய்தலின் அதனைத் தோழி என்றார். தன் கண்ணாற் றன் கருத்தை அவனுக்குணர்த்தலின அதனை ஓலை என்றார். ( 191 )
684. வளமல ரணியப் பெற்றேன் வால்வளை திருத்தப் பெற்றேன்
களனெனக் கரையு மல்குல் கையினாற் றீண்டப் பெற்றே
னிளமுலை சுமந்து பெற்ற வருத்தமு மின்று தீர்ந்தே
னுளமெலி மகளி ரெய்து மின்பமு மின்று பெற்றேன்.
பொருள் : வளமலர் அணியப் பெற்றேன் - செழுவிய மலர்களை அணியப் பெற்றேன்; வாள்வளை திருத்தப் பெற்றேன் - வெள்ளிய வயல்களைத் திருத்தவும் பெற்றேன்; களன் எனக் கரையும் அல்குல் கையினால் தீண்டப் பெற்றேன் - களன் என்று மேகலை ஒலிக்கும் அல்குலை (மேகலை ஆடை முதலானவற்றை அணியும்போது) கையால் தொடவும் பெற்றேன்; இளமுலை சுமந்து பெற்ற வருத்தமும் இன்று தீர்ந்தேன் - (சந்தனம் மாலை முதலியன அணிந்து கச்சிறுக்கி விட்டதனால்) இளமுலைகளைச் சுமந்துகொண்ட துன்பமும் இன்று நீங்கினேன்; உளம்மெலி மகளிர் எய்தும் இன்பமும் இன்று பெற்றேன் - (ஊடலால்) உள்ளம் மெலிகின்ற மகளிர் (ஊடல் தீர்ந்தபின்) அடையும் இன்பமும் இன்றே அடைந்தேன்.
விளக்கம் : முன்னர் முறுவலாகிய தோழியின் வாயிலாகக் கண்களாகிய ஓலையை விடுத்தாள். அவள் நோக்கிற்கும் முறுவலுக்கும் எதிர் நோக்கும் முறுவலும் பெறாமையின் தன்னை அவன் விரும்பாமை உணர்ந்த அவள் தன் உளத்தைத் தேற்றுவதற்கு இங்ஙனங் கூறிக் கொண்டாள். களனென - ஒலிக்குறிப்புச் சொல்; கலீரென என்று பிற்காலத்தே இதனை வழங்குவர். கரையும் - ஒலிக்கும். குருதிச் சாந்து முதலியன அவன் அணிந்தபொழுது இவை அவனாற் றீண்டப் பெற்றுப் பயனுடையன ஆயின என்பாள் இளமுலை சுமந்து பெற்ற வருத்தமும் இன்று தீர்ந்தேன் என்றாள். ( 192 )
685. என்றவ ளரசன் றன்னை
நோக்கல ளிவன்க ணார்வஞ்
சென்றமை குறிப்பிற் றேறிக்
கூத்தெலா மிறந்த பின்றை
நின்றது மனத்திற் செற்ற
நீங்கித்தன் கோயில் புக்கான்
மன்றல் மடந்தை தன்னை
வலிதிற்கொண் டொலிகொ டாரான்.
பொருள் : என்றவள் அரசன் தன்னை நோக்கலன் - என்று நினைத்தவள் அரசனை நோக்காளாயினள்; ஒலிகொள் தாரான் - வண்டுகளின் ஒலி பெற்ற மாலையானாகிய கட்டியங்காரன்; இவன்கண் ஆர்வ சென்றமை குறிப்பில் தேறி - சீவகனிடம் அவளுடைய விருப்பம் சென்றதைக் குறிப்பினால் உணர்ந்து; கூத்தெலாம் இறந்தபின்றை - கூத்தெலாம் முடிந்த பின்பு; மனத்தில் செற்றம் நின்றது - உள்ளத்திலே சீவகனிடம் செற்றம் நிலைபெற்றதாக; மன்றல் மடந்தை தன்னை வலிதிற் கொண்டு - மணத்திற்குரிய அனங்கமாலையை அவள் விருப்பமின்றியே கைப்படுத்திக் கொண்டு; நீங்கித் தன் கோயில் புக்கான் - அரங்கை விடுத்துத் தன் அரண்மனை சென்றான்.
விளக்கம் : செற்றம் - நீங்காச் சினம். அது சீவகனைக் கொல்ல வேண்டுமென்பது. மன்றல்: அ: அசை. ( 193 )
686. தேனுடைந் தொழுகுஞ் செவ்வித்
தாமரைப் போது புல்லி
யூனுடை யுருவக் காக்கை
யிதழுகக் குடைந்திட் டாங்குக்
கானுடை மாலை தன்னைக்
கட்டியங் காரன் சூழ்ந்து
தானுடை முல்லை யெல்லாந்
தாதுகப் பறித்திட் டானே.
பொருள் : உடைந்த தேன் ஒழுகும் செவ்வித் தாமரைப் போது புல்லி - அரும்பலர்ந்து தேன் பெருகும் செவ்வியிலுள்ள தாமரை மலரைத் தழுவி ; ஊன் உடை உருவக் காக்கை இதழ் உகக் குடைந்திட்டாங்கு - ஊன் வற்றிய உருவமுள்ள காக்கை அதன் இதழ்கள் விழுமாறு குடைந்திட்டாற் போல; கான் உடைமாலை தன்னைக் கட்டியங்காரன் சூழந்து - மணமிகும் அனங்கமாலையைக் கட்டியங்காரன் முற்றுகை செய்து; தான் உடை முல்லை யெல்லாம் தாது உகப் பறித்திட்டானே - அவளுடைய முல்லையை யெல்லாம் தாதுகள் சிதறப் பறித்து விட்டான்.
விளக்கம் : ஊன் வற்றிய உருவக் காக்கை - வயது முற்றிய வலியற்ற காக்கை; கட்டியங்காரனின் முதுமையைக் குறிக்கிறது. அல்லது ஊனை உடைக்கும் உருவக் காக்கை என்றும் கூறலாம். முல்லை - கற்பு. இதனாற் புணரும் நெறியறியாமை கூறினார்.(194)
687. கலையினிற் கன்னி நீக்கித்
தாமரைக் கண்க டம்மான்
முலையினி லெழுதிச் செவ்வாய்
பயந்ததேன் பருகி முள்கும்
சிலைவலாய் புல்லு நம்பி
சீவக சாமியோ என்
றலைகடற் புலம்பி னோவா
தரற்றுமா லணங்கி னன்னாள்.
பொருள் : கலையினில் கன்னி நீக்கி - மேகலையிடத்து அழிவின்மையை நீக்கி; தாமரைக் கண்கள் தம்மால் - தாமரை மலரனைய கண்களால்; முலையினில் எழுதி - முலைகளில் எழுதி; செவ்வாய் பயந்த தேன் பருகி - செவ்வாய் ஈந்த தேனைப் பருகி; முள்கும் சிலைவலாய்! - முயங்கும் சிலைவல்லானே; சீவகசாமியோ! - சீவகசாமியோ!; நம்பி! - நம்பியே!; புல்லு என்று - தழுவிக்கொள் என்றுரைத்து; அணங்கின் அன்னாள் - தெய்வப் பெண் போன்றவள்; அலைகடல் புலம்பின் ஓவாது அரற்றும் - அலைகடலொலி போல இடைவிடாமல் அரற்றுவாளாயினள்.
விளக்கம் : சிலைவலாய்! எனவே இத் துன்பம் நீக்குதற்குரியாய் என்றாள். உருவு வெளிப்படுதலிற் புல்லென்றாள். சீவகசாமியோ : சேய்மை விளி. ஓ: இரக்கக் குறிப்பும் ஆம்.1. கண்களால் முலையினில் எழுதுதலாவது - அவையிற்றின் எழிலைக் கண்ணாலே நெடிது கூர்ந்து நோக்கி இன்புறுதல். முள்கும் - தழுவும். ( 195 )
688. பிறனல மரற்றக் கேட்டும்
பீடினாற் கனிந்த காம
நறுமல ரணிந்த மாலை
நாற்றக்கோர் நான்கு காதம்
உறநடந் தறித லில்லா
னொண்டொடிக் குருகிப் பின்னுந்
திறனல தமர்க்குச் செப்புந்
தீயுமிழ்ந் திலங்கும் வேலான்.
பொருள் : தீ உமிழ்ந்து இலங்கும் வேலான் - அனல் சொரிந்து விளங்கும் வேலானும்; பீடினால் கனிந்த காம நறுமலர் அணிந்த மாலை நாற்றக்கு - பெருமையாற் பழுத்த காமமாகிய நறுமலராலே புனையப் பெற்ற மாலையினது மணத்திற்கு; ஓர் நான்கு காதம்உற நடந்து அறிதல் இல்லான் - ஒரு நான்கு காத வழியளவும் பொருந்த நடந்தறியாதவனும் ஆகிய கட்டியங்காரன்; பிறன் நலம் அரற்றக் கேட்டும் - வேறொருவன் அழகை எடுத்துக்கூறிப் புலம்புவது கேட்டும்; பின்னும் ஒண்தொடிக்கு உருகி - மேலும் அவ்வொள்ளிய தொடியாளை நினைந்து உருகி; தமர்க்குத் திறன் அலசெப்பும் - தன் அமைச்சரிடம் தகவற்ற மொழிகளைசக் கூறுகிறான்.
விளக்கம் : காமநெறியறியாதவன் என்பது கருத்து. மாலை: காமமென் மாலை. அன்றி, அனங்கமாலையும் ஆம். ( 196 )
வேறு
689. விலங்க லன்ன வேக வேழ
நான்கும் வெல்லு மாற்றலன்
கலங்க லந்தி லங்கு மார்பிற்
கந்து கன்ம கன்னென
நலங்க லந்து ரைக்கு மாலிந்
நன்ன கர்க்கு மன்னனோ
வுலங்க லந்த தோளினீரு
ரைமி னீவி ரென்னவே.
பொருள் : உலம் கலந்த தோளினீர் - கற்றூணின் திண்மை கலந்த தோளையுடையீர்!; கலம் கலந்து இலங்கும் மார்பின் கந்துகன் மகன் - பூண் கலந்து விளங்கும் மார்பையுடைய கந்துகன் சிறுவன்; விலங்கல் அன்ன வேக வேழம் நான்கும் வெல்லும் ஆற்றலன் என - மலையனைய விரையும் திசைக்களிறுகள் நான்கையும் வெல்லும் வலிமையுடையான் என்று; நலம் கலந்து உரைக்கும் - உலகம் அவனுடைய தகவைக் கூறும்; இந் நல் நகர்க்கு மன்னனோ - இந்த அழகிய நகருக்கு அவன் அரசனோ?; நீவிர் உரைமின் என்ன - நீங்கள் உரைப்பீராக என்று வினவ,
விளக்கம் : இப் பாட்டுக் குளகம். உரைக்கும் என்னும் பயனிலைக்கு உலகம் என்னும் எழுவாய் வருவித்தோதுக; மார்பின் மகன் கந்துகன் மகன் எனத் தனித் தனிக் கூட்டுக. ( 197 )
690. மட்ட விழ்ந்த தாரி னானிம் மாந கர்க்கு ளாயிரர்
தொட்டெ டுக்க லாவு லம்மொர் தோளி னேந்தி யாடினா
னொட்டி நாக மோரி ரண்டெ டுக்க லாத கல்லினை
விட்ட லர்ந்த போது போல வேந்த லேந்தி நீக்கினான்.
பொருள் : மட்டு அவிழ்ந்த தாரினான் - தேன் விரிந்த மாலையினான்; இம் மா நகர்க்குள் ஆயிரர்தொட்டு எடுக்கலா உலம் - இப் பெரு நகரிலே ஆயிரவர் தீண்டியெடுக்க இயலாத கல்லுருண்டையை; ஓர் தோளின் ஏந்தி ஆடினான் - ஒரு தோளிலே ஏந்தி ஆடினான்; ஓர் இரண்டு நாகம் எடுக்கலாத கல்லினை - இரண்டு களிறுகள் எடுக்க முடியாத கல்லை; ஒட்டி விட்டு அலர்ந்த போதுபோல - சூளுரைத்து முறுக்கலர்ந்த மலர் போல (எளிதாக), ஏந்தல் ஏந்தி நீக்கினான் - அச் சிறப்புடையான் எடுத்து எறிந்தான்.
விளக்கம் : நாகம் ஓரிரண்டு எடுக்கலாத கல் என்பதற்கு நாகம் எடுக்கலாத ஓரிரண்டு கல் என மொழிமாற்றியுரைப்பர் நச்சினார்க்கினியர். இதுமுதல் மூன்று பாடல் அமைச்சர் கூற்றைக் கொண்டு கூறியவாறு. ( 198 )
691. வெஞ்சி லையின் வேடர் வெள்ள மப்பு மாரி தூவலி
னெஞ்ச லின்றி நம் படையி ரும்மு றையு டைந்தபின்
மஞ்சு சூழ்க ணைம்ம ழைபொ ழிந்து மாநி ரைபெயர்த்
தஞ்சி லோதி யார் புனைந்த செஞ்சொன் மாலை சூடினான்.
பொருள் : வெஞ்சிலையின் வெள்ளம் அம்பு மாரி வேடர் எஞ்சலின்றித் தூவலின் - கொடிய வில்லிலிருந்து வெள்ளம் போன்ற அம்பு மழையை வேடர் இடைவிடாமல் தூவியதனால்; நம் படை இருமுறை உடைந்த பின் - நம்முடைய படை இரண்டு முறை தோற்ற பிறகு; மஞ்சுசூழ் மழைக் கணை பொழிந்து மாநிரை பெயர்த்து - முகில் சூழ்ந்து பெய்யும் மழைபோல அம்புகளைப் பொழிந்து பெருநிரைகளைத் திருப்பிக் கொணர்ந்து; அம்சில் ஓதியார் புனைந்த செம்சொல் மாலை சூடினான் - அழகிய சிலவாகிய கூந்தலார் அணிந்த நல்ல சொல் மாலைகளைப் புனைந்தான்.
விளக்கம் : ஒற்றுமை நயங்கருதி ஆயர்படை உடைந்தமையையுங்கூட்டி நம்படை இருமுறை உடைந்தது என்றார் என்க. ( 199 )
692. தீம்பயறி யன்ற சோறு செப்பி னாயி ரம்மிடா
நீங்க லாந றுந்நெய் வெள்ளங் கன்ன லாயி ரங்குட
மேந்துவித்து நாமி சைய வந்து தமந்து நீக்கினா
னாங்குநாம்ப சித்தசைந்த காலை யன்ற வண்ணலே.
பொருள் : செப்பின் அன்று ஆங்கு நாம் பசித்து அசைந்த காலை - கூறுமிடத்து அன்று அவ்விடத்தே நாம் பசித்துச் சோர்ந்த பொழுது; அ அண்ணல் - அத் தலைவனாகிய சீவகன ; தீம் பயறு இயன்ற சோறு ஆயிரம் மிடா - இனிய பருப்புச் சோறு ஆயிரம் மிடாவும்; நீங்கலா நறுநெய் வெள்ளம் கன்னல் ஆயிரம் குடம் - நீங்காத மணமுடைய நெய் வெள்ளமும் கருப்பஞ்சாறும் ஆயிரமாயிரங் குடமும்; ஏந்து வித்து வந்து நாம் மிசையத் தந்து நீக்கினான் - சுமந்துவரச் செய்து வந்து நாம் உண்ணக் கொடுத்துப் பசியைப் போக்கினான்.
விளக்கம் : இதனால்,
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டா முய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு (குறள்.110)
என்னும் அறத்தினை அமைச்சர் கட்டியங்காரனுக்குக் குறிப்பாற் கூற முயறலை உணரலாம். மேலும் அமைச்சர் முதலியோர் அவனை உள்ளத்தே வெறுத்துப் புறமே நட்டொழுகுதலையும் உணரலாம். ( 200 )
693. இன்ன னென்ன வின்பு றானிழந்த னன்ன ரசென
வென்னை வெளவு வாயில்தா னென்னுஞ் சூழ்ச்சி தன்னுளா
னன்ன தால ரிறப வறிந்து கூத்தி கூறினா
ளின்ன தாற்ப டையமைத் தெழுமி னென்றி யம்பினான்.
பொருள் : இன்னன் என்ன இன்பு உறான் - இத் தன்மையன் என்று அமைச்சர் கூறவும் மகிழா தவனாய்; அரசு இழந்தனன் என - இனி நான் அரசிழந்தேன் என்று உட்கொண்டு; வெளவும் வாயில்தான் என்னை என்னும் - சீவகனை அகப்படுக்கும் வழிதான் என்னையோ என்கிற; சூழ்ச்சி தன்னுளான் - சூழ்ச்சியிலே இருக்கிறான்; அன்னது ஆதல் - அவன் கருத்து அவ்வாறு இருத்தலை; அரில்தப அறிந்து கூத்தி கூறினாள் - குற்றமின்றி அறிந்து நாகமாலை கூறினாள்; இன்ன தால் - இப்படியிருப்ப தால்; படை அமைத்து நீவிர் எழுமின் என்று இயம்பினான் - நீங்கள் படை திரட்டி எழுவீர்களாக என்று கந்துகன் கூறினான்.
விளக்கம் : ங்நச்சினார்க்கினியர், சூழ்ச்சி தன்னுளான் என்பதன் பின் இதுபட்டது என்றாள் என்று, 670-71-ஆம் செய்யுளில் உள்ள சொற்களைக் கொணர்ந்து கூட்டி இச் செய்தியை ஓலை கொண்டு வந்தவள் கூற்றாக்குவர். அதற்காக 667 முதல் 693 வரை ஒரு தொடராக்கிக் கொண்டு கூட்டுவர். அது பொருத்தமன் றென்பதை முன்னர் 671 ஆம் செய்யுளில் உரைத்தாம். ( 201 )
வேறு
694. தாதைதா னுரைத்த வெல்லாந்
தன்னுயிர்த் தோழன் கூறக்
கோதைமுத் தணிந்த மார்பன்
கூரெயி றிலங்க நக்காங்
கேதமொன் றில்லை சேறு
மென்றலு மிலங்கு வாட்கைப்
போதுலாங் கண்ணி மைந்தர்
போர்ப்புலிக் குழாத்திற் சூழ்ந்தார்.
பொருள் : தாதைதான் உரைத்த எல்லாம் - கந்துகன் கூறிய எல்லாவற்றையும்; தன் உயிர்த் தோழன் கூற - அவன் உயிர் நண்பன் உரைக்க; கோதை முத்து அணிந்த மார்பன் - பூமாலையும் முத்துமாலையும் அணிந்த மார்பனான சீவகன்; கூர்எயிறு இலங்க நக்கு - கூரிய பற்கள் தோன்ற நகைத்து; ஆங்கு ஏதம் ஒன்று இல்லை, சேறும் என்றலும் - ஆங்குத் தீமையேதும் இராது; செல்வோம் என்ற அளவிலே; இலங்கு வாள் கைப்போது உலாம் கண்ணி மைந்தர் - விளங்கும் வாளேந்திய கையினரான, மலர் பொருந்திய கண்ணிகளையுடைய வீரர்கள்; போர்ப்புலிக் குழாத்தின் சூழ்ந்தார் - போர்க்குரிய புலித்திரள் போலச் சூழ்ந்தனர்.
விளக்கம் : கட்டியங்காரனால் ஏதம் வருமென்றற்கு நகைத்தானெனினும் தந்தை மொழியைக் கடவாமற் சேறும் என்றான். ங்சேடி கூற்றிற்கு நக்கான்; கந்துகன் ஏதமின்றென்றான் என்று நச்சினார்க்கினியர் கூறினார். ( 202 )
695. கண்ணுதற் கடவுள் சீறக் கனலெரி குளித்த காமன்
மண்மிசைத் தோன்றி யன்ன வகைநல முடைய காளை
தெண்மணி யார மார்பன் றிருநுதன் மகளிர் நெஞ்சத்
துண்ணிறை பருகும் வண்டா ருருவமை திருவின் மிக்கான்.
பொருள் : கண்ணுதல் கடவுள் சீற - நெற்றிக் கண்ணையுடைய கடவுள் சீறுதலின்; கனல் எரி குளித்த காமன் - கனலும் தீயிலே முழுகிய காமன்; மண்மிசைத் தோன்றி அன்ன - மீண்டும் நிலத்தின்மேல் தோன்றினாற் போன்ற; வகை நலம் உடைய காளை - உறுப்பழகுடைய சீவகன்; தெள்மணி ஆரம் மார்பன் - தெளிந்த மணியும் ஆரமும் உடைய மார்பன்; திரு நுதல் மகளிர் நெஞ்சத்து - அழகிய நெற்றியை உடைய மகளிரின் உள்ளத்தின்; உள்நிறை பருகும் - உள்ளே பொருந்திய நிறையைப் பருகும்; வண்தார் உரு அமை திருவின் மிக்கான் - வளவிய தாரணிந்த அழகு பொருந்திய செல்வம் உடையவன் ஆனான்.
விளக்கம் : திருவின் மிக்கான்: பெயருமாம். இதுமுதல் நான்கு செய்யுட்கள் சீவகன் அணிசெய்து கொண்டதைக் கூறும்.
கண்ணுதற் கடவுள் - சிவபெருமான். கனலெரி : வினைத்தொகை. அதனால் சீவகன் இயற்கை அழகு தெரித்துக் கூறி மேலே செயற்கை அழகோதுகின்றார். ( 203 )
696. கருநெறி பயின்ற குஞ்சிக் காழகில் கமழ வூட்டி
வரிநிற வண்ண மாலை வலம்பல மிலைச்சி வாளார்
திருநிற முகத்திற் கேற்பச் செம்பொனோ ரோலை சேர்த்தி
யெரிநிறக் குழையோர் காதிற் கிருளறச் சுடர வைத்தான்.
பொருள் : கருநெறி பயின்ற குஞ்சி காழ் அகில் கமழ ஊட்டி - கரிய நெறி பழகிய குஞ்சியிலே கரிய அகிற் புகைமணம் பெற ஊட்டி; வரிநிற வண்ணமாலை வலம்பட மிலைச்சி - வண்டின் பாட்டு நிறமுடைய அழகிய மாலையை அக் குஞ்சியிலே பொருந்த அணிந்து; வாள் ஆர் திருநிற முகத்திற்கு ஏற்ப - ஒளி பொருந்திய அழகிய நிறமுற்ற முகத்திற்குத் தக; ஓர் செம்பொன் ஓலை சேர்த்தி - (ஒரு காதில்) ஒரு நல்ல பொன்னோலையை அணிந்து; ஓர் காதிற்கு எரிநிறக் குழை இருள் அறச் சுடர வைத்தான் - ஒரு காதிலே தீநிறக் குழையை இருள் நீங்க ஒளிருமாறு அணிந்தான்.
விளக்கம் : வரிநிற வண்ணமாலை என்பதற்கு, வண்டின் நிறம் போன்ற நிறமுடைய மணிமாலை எனினுமாம். வண்டினது பாட்டின் நிறத்தையுடைய மாலை என்பர் நஞ்சினார்க்கினியர். ( 204 )
697. தென்வரைப் பொதியிற் றந்த
சந்தனத் தேய்வை தேங்கொண்
மன்வரை யகலத் தம்பி
வலம்புரி யாரந் தாங்கி
மின்விரித் தனைய தொத்து
விலைவரம் பறிய லாகா
வின்னுரைக் கலிங்க மேற்ப
மருங்குலுக் கெழுதி வைத்தான்.
பொருள் : தென் வரைப் பொதியில் தந்த சந்தனத் தேய்வை - தெற்கில் எல்லையாகிய பொதியமலை தந்த சந்தனக் குழம்பை; தேன்கொள் மன் வரை அகலத்து அப்பி - (கண்ணுக்கு) இனிமை கொண்ட பெருமையுற்ற மலைபோலும் மார்பிலே பூசிக்கொண்டு; வலம்புரி ஆரம் தாங்கி - வலம்புரி யீன்ற முத்துமாலை அணிந்து; மின்விரித்த அனையது ஒத்து - மின்னை அகலமாக விரித்தாற் போன்று; விலை வரம்பு அறியல் ஆகா - விலையளவு அறிய இயலாத; இன்நுரைக் கலிங்கம் மருங்குலுக்கு ஏற்ப - இனிய நுரையைப் போன்ற ஆடையை இடைக்குத் தக; எழுதி வைத்தான் - எழுதினாற் போல உடுத்தான்.
விளக்கம் : எழுதிவைத்தான் - எழுதினாற்போல உடுத்தான் என்க. தென்வரைப் பொதியில் - தென்றிசைக்கண் உள்ள மலையாகிய பொதியில். ( 205 )
698. இரும்பறக் கழுவி யெஃகி னிருளற வடிக்கப் பட்ட
வரும்பெறற் சுரிகை யம்பூங் கச்சிடைக் கோத்து வாங்கிப்
பெருந்தகைக் குருசில் கொண்டு பெருவலஞ் சுடர வீக்கித்
திருந்திழை மகளிர் வெஃகுந் தேவிளங் குமர னொத்தான்.
பொருள் : இரும்பு அறக் கழுவி எஃகின் இருள் அற வடிக்கப்பட்ட - இரும்பை முற்றும் உருக்கிய எஃகினால் ஒளியுற வடித்துச் செய்யப்பட்ட; அரும்பெறல் சுரிகை - அருமையாகக் கிடைக்கும் சுரிகையை; பெருந்தகைக் குருசில் - பெருந்தகையாகிய குருசில்; கொண்டு கச்சு இடைக் கோத்து வாங்கி - கையிற் கொண்டு கச்சை இடையிலே கோத்து வாங்கி; பெருவலம் சுடர வீக்கி - பெரிய வெற்றி தோன்ற இறுக்கிக் கட்டி; திருந்து இழை மகளிர் வெஃகும் தேஇளங்குமரன் ஒத்தான் - விளங்கும் இழையணிந்த பெண்கள் விரும்பும் தெய்வமாகிய முருகனைப் போன்று காணப்பட்டான்.
விளக்கம் : சுரிகை நுழைந்த சுற்று வீங்கு செறிவுடை (பெரும்பாண். 73) என்றார் பிறரும். உருக்குதலானே இரும்பின் மாசு தீர்தலால் உருக்குதலைக் கழுவி என்றார். சுரிகை - உடைவாள். பெருந்தகைக் குருசில் - பெரியதகுதிப் பாட்டினையும் தலைமைத் தன்மையையும் உடைய சீவகன். தேவிளங்குமரன் என்றது முருகக் கடவுளை. ( 206 )
699. வரைவிழித் திமைப்ப தொக்கும்
வாளொளி யார மார்பின்
விரைவழித் திளைய ரெல்லாம்
விழுமணிக் கலங்க டாங்கி
நுரைகிழித் தனைய நொய்ம்மை
நுண்டுகின் மருங்குல் சேர்த்தி
புரைகிழித் துணரு மொப்பி
னோவியப் பாவை யொத்தார்.
பொருள் : இளையர் எல்லாம் - மற்ற இளைஞர் யாவரும்; வரைவிழித்து இமைப்பது ஒக்கும் - மலை விழித்து ஒளிர்வதைப் போன்ற; வாள் ஒளி ஆரம் மார்பின் - ஒளிவிடும் முத்தணிந்த மார்பிலே; விரைவழித்து - மணந்தருங் கலவையைப் பூசி; விழுமணிக் கலங்கள் தாங்கி - சிறந்த மணிப்பூண்களை அணிந்து; நுரைகிழித்த அனைய நொய்ம்மை நுண் துகில் மருங்குல் சேர்த்தி - நுரையைக் கிழித்தாற் போன்ற மெல்லிய நுண்ணிய ஆடையை இடையிலே அணிந்து; உரை கிழித்து உணரும் ஒப்பின் ஓவியப் பாவை ஒத்தார் - சொல்லால் உரைத்தற்கரிய உள்ளத்தால் உணரும் ஓவியப் பாவையைப் போன்றார்.
விளக்கம் : பாவை இருபாற்கும் பொது. கைபுனை பாவை யெல்லாம் கதிர்முலை ஆக்கினான் (607) என்றதனானுங் கொள்க. இமைத்து விழிப்ப தென்றார் அசைவின்கட் பாடஞ் செய்தலின். இமைத்து விழிப்பதென்றார் ஆரமசையுந்தோறும் விட்டுவிட்டொளிர் தலான். விரை - நறுமணப் பொருள். நுரையை ஆடையாக்கிக் கிழித்தாற் போன்ற நொய்ம்மையுடைய நுண்துகில் என்க. உரை கிழித்து என்றது சொல்லை அகற்றி என்றவாறு. சொல்லாற் சொலப்படாமல் மனத்தான் மட்டும் உணர்வதாகிய ஒப்பு என்க. ( 207 )
700. அரக்குநீ ரெறியப் பட்ட வஞ்சனக் குன்ற மன்ன
திருக்கிள ரோடை சூழ்ந்த செம்புகர் நெற்றித் தாகி
யுருக்கியூ னுண்ணும் வேகத் துறுபுலி யனைய நாக
மருக்கனோர் குன்றஞ் சேர்ந்தாங் கண்ணறா னேனி னானே.
பொருள் : திருகிளர் ஓடை சூழ்ந்த செம்புகர் நெற்றித்து ஆகி - அழகு பொருந்திய முகபடாம் அணிந்த சிவந்த புள்ளிகளையுடைய நெற்றியதாதலின்; அரக்கு நீர் எறியப்பட்ட அஞ்சனக் குன்றம் அன்ன நாகம் - செவ்வரக்கு நீரைச் சிதறிய கருமலை போன்ற யானைமேல்; ஊன் உருக்கி உண்ணும் வேகத்து உறுபுலி அனைய அண்ணல் - ஊனை உருக்கித் தின்னும் விரைவினையுடைய வலிமிகு புலியைப் போன்ற சீவகன்; அருக்கன் ஓர் குன்றம் சேர்ந்தாங்கு ஏனினான் - ஞாயிறு ஒரு மலையை அடைந்தாற்போல ஏறினான்.
விளக்கம் : அரக்குநீர் - சாதிலிங்கக் குழம்பு. அஞ்சனக்குன்று - கரிய மலை. செம்புகர் - செம்புள்ளிகள். உறுபுலியனைய அண்ணல் அருக்கன் குன்றம் சேர்ந்தாங்கு நாகம் ஏறினான் என இயைத்துக்கொள்க. ( 208 )
701. விடுகணை விசையின் வெய்ய விளங்கொளி யிவுளித் திண்டேர்
கடுநடைக் கவரி நெற்றிக் காலியற் புரவி காய்ந்து
வடிநுனை யொளிறு மாலை வாட்படை மறவர் சூழ
வடுதிரைச் சங்க மார்ப்ப வணிநகர் முன்னி னானே.
பொருள் : விடுகணை விசையின் வெய்ய விளங்கு ஒளி இவுளித் திண் தேர் - விடும் அம்பின் வேகம் போன்ற விரைவினையுடைய விரும்பத்தக்க விளக்கமான ஒளியையுடைய புரவிகள் பூட்டிய தேரும்; கடுநடைக் கவரி நெற்றிக் கால் இயல் புரவி - விரைந்த செலவையும் கவரியுடைய நெற்றியையும் உடைய காற்றைப் போன்ற இயல்புடைய புரவியும்; காய்ந்து வடிநுனை ஒளிரும் மாலை வாள்படை மறவர் - காய்ந்து வடித்த முனை விளங்கும், மாலையணிந்த வாட்படை யேந்திய வீரரும்; சூழ - சூழ்ந்துவர; அடுதிரைச் சங்கம் ஆர்ப்ப - கரையைத் தாக்கும் அலைகளையுடைய கடல்தந்த சங்குகள் முழங்க; அணிநகர் முன்னினார் - சென்று அழகிய யாழ் மண்டபத்தை அடைந்தனர்.
விளக்கம் : மங்கலத்திற்குச் சங்கு கூறினார். விடுகணை: வினைத்தொகை. இவுளி - குதிரை. காலியல்புரவி - காற்றை ஒத்த குதிரை. அடுதிரை - கரையை மோதும் அலையையுடைய கடல்: அன்மொழி. நகர் - மண்டபம். ( 209 )
702. தோற்றனண் மடந்தை நல்யாழ்
தோன்றலுக் கென்று நிற்பார்
நோற்றன ணங்கை மைந்த
னிளநல னுகர்தற் கென்பார்
கோற்றொடி மகளிர் செம்பொற்
கோதையுங் குழையு மின்ன
வேற்றன சொல்லி நிற்பா
ரெங்கணு மாயி னாரே.
பொருள் : கோல் தொடி மகளிர் செம்பொன் கோதையும் குழையும் மின்ன - திரண்ட வளையல்களையுடைய மங்கையர் பொன் மாலையும் குழையும் மின்னுமாறு (வந்து); தொன்றலுக்கு மடந்தை நல்யாழ் தோற்றனள் என்று நிற்பார் - சீவகனுக்குத் தத்தை நல்ல யாழிலே தோற்றாள் என்று நிற்பாரும்; மைந்தன் இளநலம் நுகர்தற்கு நங்கை நோற்றனள் என்பார் - சீவகனுடைய இளமையின்பத்தை நுகரத் தத்தை நோற்றாள் என்பாரும்; ஏற்றன சொல்லி நிற்பார் - (இவைபோல மேலும்) பொருந்துவன புகன்று நிற்பாருமாக; எங்கணும் ஆயினார் - எவ்விடத்தும் நிறைந்தனர்.
விளக்கம் : இவன் கல்வி உணர்தலின் தெளிவு பற்றித், தோற்றனள் என்று இறந்த காலத்தாற் கூறினர். ( 210 )
வேறு
703. சுறாநி றக்கொ டுங்குழை சுழன்றெ ருத்த லைத்தர
வறாம லர்ததே ரியலா னழன்று நோக்கி யையெனப்
பொறாம னப்பொ லிவெனு மணிக்கை மத்தி கையினா
லறாவி வந்து தோன்றினா னனங்க னன்ன வண்ணலே.
பொருள் : சுறாநிறக் கொடுங்குழை சுழன்று எருத்து அலைத்தர - மகர வடிவமான, நிறமுடைய, வளைந்த குழை சுழன்று பிடரிலே அலைக்க; அறா மலர்த் தெரியலான் - மணம் நீங்காத மலர்மாலையானான கட்டியங்காரன்; அழன்று நோக்கி ஐ என - எரிவுடன் பார்த்து வியப்புற; பொறாமனம் பொலிவு எனும் மணிக்கை மத்திகையினால் - பொறாத வுள்ளத்தைத் தன் பொலிவு எனும் மணிக்கை மத்திகையினால் - பொறாத வுள்ளத்தைத் தன் பொலிவு என்னும் மணிக்கைப் பிடியுடைய குதிரைச் சவுக்காலே; அறாவி - அடித்து; அனங்கன் அன்ன அண்ணல் வந்து தோன்றினான் - காமனையனைய காளை வந்து தோன்றினான்.
விளக்கம் : மனம் பொலிவு: மனப் பொலிவு: விகாரம். சீவகன் பொலிவு கட்டியங்காரன் மனத்தைக் கெடுத்ததென்க. மத்திகை யென்றலின் கைப்பிடி கூறினார்; கையில் இருக்கும் என அடை கூறினார் எனலுமாம். தெரியலான் - ஈண்டுக் கட்டியங்காரன். அழுக்காறுடையயோர்க்கு மாற்றார் செல்வம் காண்டலே பெருந்துன்பமாதலின், அவன்மனத்தைத் தன் பொலிவாலே அறாவினான் என்றார். அறாவுதல் - ஈண்டு அடித்தல் என்னும் பொருட்டாய் நின்றது. ( 211 )
704. குனிகொள் பாக வெண்மதிக் கூரி ரும்பு தானுறீ இப்
பனிகொண் மால்வ ரையெனப் படும தக்களிறீஇ
இனிதி ழிந்தி ளைய ரேத்த வின்ன கிற்கொ ழும்புகை
முனிய வுண்ட குஞ்சியான் முரண்கொண் மாட முன்னினான்.
பொருள் :இன் அகில் கொழும்புகை முனிய உண்ட குஞ்சியான் - இனிய மணமுறும் அகிலின் நல்ல புகை வெறுக்கப் பயின்ற சிகையினான்; குனி கொள் பாகம் வெண்மதிக் கூர் இரும்பு உறீஇ - வளைவு கொண்ட, வெண்மதியின் பாகமே போன்ற கூரிய தோட்டியை அழுத்தி; பனிகொள் மால்வரையென மதம்படு களிறு இரீஇ - நீர் துளிக்கும் பெரமலை போன்ற மதஞ் சொரியும் யானையை இருத்தி; இளையர் ஏத்த இனிது இழிந்து - இளைஞர்கள் வாழ்த்த இனிதாக இறங்கி; முரண்கொள்மாடம் முன்னினான் - யாழினால் மாறுபட்ட மண்டபத்தை அடைந்தான்.
விளக்கம் : குனிவு என்பது விகாரமுற்றுக் குனி என வந்தது.குனிகொள் பாக வெண்மதிக் கூரிரும்பு என்றது யானைத்தோட்டியை. தோட்டியைச் செருகி என்றவாறு. தோட்டியை யானையின் செவியிலே செருகி வைத்தல் வழக்கம். இரீஇ - இருத்தி; நிறுத்தி. யாழ்ப்போர் நிகழ்தல் பற்றி முரண்கொள் மாடம் என்றார். ( 212 )
705. புதிதி னிட்ட பூந்தவிசி னுச்சி மேல்ந டந்தவண்
புதிதி னிட்ட மெல்லணைப் பொலிந்த வண்ணம் போகுயர்
மதிய தேறி வெஞ்சுடர் வெம்மை நீங்க மன்னிய
வுதய மென்னு மால்வரை யுவந்தி ருந்த தொத்ததே.
பொருள் : புதிதின் இட்ட பூந்தவிசின் உச்சிமேல் நடந்து - புதிதாக இட்ட பூந்தவிசின் மேலே நடந்து சென்று; அவண் புதிதின் இட்ட மெல்அணைப் பொலிந்த வண்ணம் - ஆங்குப் புதிதாக இட்ட மெல்லிய அணையின் மேல் பொலிவுடன் இருந்த தன்மை; போகுஉயர் மதியது ஏறி - மிகவுயர்ந்த மதியத்தின் மேல் ஏறி; வெஞ்சுடர் வெம்மை நீங்க மன்னிய - ஞாயிறு தன் வெம்மை நீங்குதற்குப் பொருந்திய; உதயம் என்னும் மால்வரை உவந்து இருந்தது ஒத்தது - உதயம் என்னும் பெரிய மலைமீது மகிழ்ந்து இருந்தது போன்றது.
விளக்கம் : புதிதின்; இன் : அசை. போகு உயர்மதி - உயர்ந்த மதி. மலையும் மதியமும் சுடரும், மண்டபத்திற்கும் அணைக்கும் சீவகனுக்கும் உவமை. ( 213 )
706. முருகு விம்மு கோதையார் மொய்ய லங்கல் வண்டுபோற்
பருகு வானி வண்ணலம் பாரித் திட்ட விந்நக
ருருகு மைங்க ணையொழித் துருவி னைய காமனார்
கருதி வந்த தென்றுதங் கண்கள் கொண்டு நோக்கினார்.
பொருள் : மொய் அலங்கல் வண்டுபோல் - நெருங்கிய அலங்கலில் வண்டு தேன் பருகுதல் போல; இவள் நலம் பருகுவான் கருதி - இவள் அழகைப் பருக நினைத்து; பாரித்திட்ட இந் நகர் - இவள் அழகு பரவிய இந் நகரிலே; உருவின் ஐய காமனார் உருகும் ஐங்கணை ஒழித்து - உருவினால் வியப்பூட்டுங் காமனார், உளமுருகும் ஐங்கணைகளை நீக்கி; வந்தது என்று - வந்ததாகிய தன்மையென்று எண்ணி; முருகு விம்மு கோதையார் - மணம் விரியும் மாலை மங்கையர்; தம் கண்கள் கொண்டு நோக்கினார் - தம் கண்களைக் கொண்டு அவனைப் பார்த்தனர்.
விளக்கம் : ஐங்கணை இரண்டு வகை.
அந்தண் அரவிந்தம் மாம்பூ அசோகப்பூ
பைந்தளிர் முல்லை பனிநீலம் - ஐந்துமே
வீரவேல் மைந்தரையும் வேனெடுங்கண் மாதரையும்
மாரவேள் எய்யும் மலர்.
இவை திரவிய பாணம்; இங்கிதம், மதனம், வசீகரணம் மோகனம். சந்தாபம் - இவை பாவபாணம். ( 214 )
707. முனைத்தி றத்து மிக்கசீர் முனைவர் தம்மு னைவனார்
வனப்பு மிக்க வர்களின் வனப்பு மிக்கி னியனா
நினைத்தி ருந்தி யற்றிய நிருமி தம்ம கனிவன்
கனைத்து வண்டு ளர்ந்ததார்க் காளை சீவ கன்னரோ.
பொருள் :முனைத் திறத்து மிக்கசீர் முனைவர் தம் முனைவனார் - தவம்செய் திறத்தால் மேம்பட்ட சிறப்புடைய தவத்தினரின் மேம்பட்ட அயனார்; வனப்பு மிக்கவர்களின் வனப்பு மிக்க இனியன்ஆ - அழகு மிகுந்தவர்களினும் அழகின் மேம்பட்ட இனியவனாக; நினைத்திருந்து - (படைக்க) எண்ணியிருந்து; இயற்றிய நிருமித மகன் இவன் - படைத்த படைப்பு மகனாகிய இவன்; கனைத்து வண்டு உளர்ந்ததார்க் காளை சீவகன் - முரன்று வண்டுகள் கிண்டிய மாலை யணிந்த காளையாகிய சீவகனாவான்.
விளக்கம் : நிருமிதம் - படைப்பு. இவன் என்பதை அடுத்த செய்யுளில் உள்ள மார்பம் என்பதன்முன் சேர்ப்பர் நச்சினார்க்கினியர். நிருமிதம் மகன் - மகரம் விரித்தல் விகாரம். ( 215 )
708. பொன்னை விட்ட சாயலாள் புணர்மு லைத்த டத்தினான்
மின்னை விட்டி லங்குபூண் விரைசெய் மார்ப மோலையா
வென்னை பட்ட வாறரோ வெழுதி நங்கை யாட்கொள்வான்
மன்னும் வந்து பட்டனன் மணிசெய் வீணை வாரியே.
பொருள் :மின்னை விட்டு இலங்கு பூண் விரைசெய் மார்பம் ஓலைஆ - ஒளிவிட்டு விளங்கும் பூண்களையுடைய இவனுடைய மணமிகும் மார்பை ஓலையாகக் கொண்டு; பொன்னை விட்ட சாயலாள் நங்கை புணர்முலைத் தடத்தினால் - திருவையும் வென்ற மென்மையாளாகிய தத்தை தன் இரு முலைகளினாலே; எழுதி ஆட்கொள்வான் - எழுதி அடிமை கொள்ளுமாறு; மணி செய் வீணை வாரியே மன்னும் வந்து பட்டனன் - மணிகள் அழுத்திச் செய்யப்பட்ட யாழினால் ஆக்கிய வாரியிலே தப்பாமல் வந்து அகப்பட்டான்; பட்டஆறு என்னை? - நல்வினை உண்டான வகை தான் என்னே?
விளக்கம் : நல்வினை என வருவிக்க. வாரி - யானையைப் பிடிக்கும் இடம். மன்னும் - தப்பாமல் என்றுமாம். ( 216 )
709. இனைய கூறி மற்றவ டோழி மாரு மின்புற
வனைய லாம்ப டித்தலா வடிவிற் கெல்லை யாகிய
கனைவண் டோதி கைதொழுஉங் கடவுள் கண்ணிற் கண்டவ
ரெனைய தெனைய தெய்தினார் அனைய தனைய தாயினார்.
பொருள் :இனைய கூறி அவள் தோழிமாரும் இன்புஉற - இத்தன்மைய ஆகிய மொழிகளைக் கூறி அவள் தோழியரும் இன்பம் உற்றிருக்க; வனையலாம் படித்து அலா வடிவிற்கு எல்லை ஆகிய - எழுதலாம் தன்மையுடையது அல்லாத அழகிற்குச் சான்றாகிய; கனை வண்டு ஓதி - ஒலிக்கும் வண்டுகள் நிறைந்த கூந்தலாளாகிய தத்தை; கை தொழுஉம் கடவுள் - கைகூப்பி வணங்கும் காமனை; கண்ணின் கண்டவர் எனையது எனையது எய்தினார் - கண்ணாற் பார்த்தவர் எவ்வளவு எவ்வளவு இன்பம் அடைந்தனரோ; அனையது அனையது ஆயினார் - அவ்வளவு அவ்வளவாகிய இன்ப நிலையை மற்றோரும் அடைந்தனர்.
விளக்கம் : மற்றோரும் என வருவிக்க. வனையலாம் படித்தலாவடிவு - இயற்றுதற்கியலாத தன்மையையுடைய அழகு என்றவாறு கனைவண்டு - இசைபாடும் வண்டு. எனையது - எவ்வளவு; அனையது - அவ்வளவு.
வேறு
710. குட்டநீர்க் குவளை யெல்லாங்
கூடிமுன் னிற்க லாற்றாக்
கட்டழ கமைந்த கண்ணா
ணிறையெனுஞ் சிறையைக் கைபோ
யிட்டநாண் வேலி யுந்திக்
கடலென வெழுந்த வேட்கை
விட்டெரி கொளுவ நின்றா
ளெரியுறு மெழுகி னின்றாள்.
பொருள் :குட்டம்நீர்க் குவளை எல்லாம் கூடி முன் நிற்கல் ஆற்றாக் கட்டழகு அமைந்த கண்ணாள் - அழமான நீரிலுள்ள குவளை மலர்கள் எல்லாம் கூடினாலும் முன் நிற்க இயலாத பேரழகுடைய கண்ணினாளாகிய தத்தை; நிறை எனும் சிறையைக் கைபோய் - நிறை என்னும் காவலைக் கடந்து; இட்ட நாண்வேலி உந்தி - இடப்பட்டிருந்த நாணாகிய வேலியை நீக்கி; கடல் என எழுந்த வேட்கை - கடல்போல எழுந்த வேட்கையாகிய; எரிவிட்டு கொளுவ நின்றாள் - எரி கொழுந்துவிட்டுப் பற்றிக் கொள்ள நின்றவள்; எரியுறும் மெழுகின் நின்றாள்- தீயில் உற்ற மெழுகைப் போல நின்றாள்.
விளக்கம் : அவள் உள்ளம் சோர்ந்ததற்கு எரியுறும் மெழுகு உவமம். இது கைம்மிகல்-ஒழுக்கக் கேடு. அது சாதித் தருமத்தை நீங்கினமை தன் உள்ள நிகழ்ச்சியானே பிறர் அறியுமாற்றால் ஒழுகுதல் (தொல்.மெய்ப் 12.பேர்.) இங்கு வரும் மெய்ப்பாடெல்லாம் தொல் மெய்ப்.இல் என்னும் மெய்ப்பாடு. கண்ணாள் வேட்கைஎரி கொளுவ அவ்வெரியுறு மெழுகின் நின்றாள் என்க. ( 218 )
711. நலத்தைமத் தாக நாட்டி நல்வலி யிளமை வாராக்
குலப்பிறப் பொன்னுங் கையாற் கோலப்பா சங்கொ ளுத்திக்
கலக்கியின் காமம் பொங்கக் கடைந்திடு கின்ற காளை
யிலைப்பொலி யலங்கன் மார்ப மியைவதென் றாகுங் கொல்லோ.
பொருள் : நலத்தை மத்தாக நாட்டி - இயற்கை அழகைமத்தாக நிறுத்தி; நல்வலி இளமை வார்ஆ - நல்ல வலிமையும் இளமையும் அம் மத்தின் இருபக்கமும் பூட்டும் கயிறுகளாகக் கொண்டு; குலப்பிறப்பு என்னும் கையால் - தாய்மரபு தந்தைமரபு ஆகிய இரு கைகளினால்; கோலப் பாசம் கொளுத்தி - செயற்கை அழகாகிய கடைகயிற்றை அம் மத்திலே பூட்டி; இன்காமம் பொங்கக் கலக்கி - இனிய காமம் என்னும் கடல் பொங்குமாறு கலக்கி; கடைந்திடுகின்ற காளை - கடைகின்ற இக்காளையினது; இலைப் பொலி அலங்கல் மார்பம் - இலைகாளற் பொலிவுற்ற மாலையணிந்த மார்பினை; இயைவது என்று ஆகும் கொல்லோ - அடைவதாகிய நல்வினை எந்நாளிலே உண்டாவதோ?
விளக்கம் : என்றாகும் என்பது விரைவு: இயற்கை வகையான் அன்றி ஒரு பொருட்கண் விரைவுத் தொழில்பட உள்ளம் நிகழும் கருத்து என்னும் மெய்ப்பாடு. நலம் மத்து, வலிமையும் இளமையும் இருபக்கத்தும் பூட்டும் கயிறு, தாய் மரபு, தந்தை மரபு என்னும் இருகுலப்பிறப்பும் கைகள், செயற்கை அழகு கடைகயிறு, காமம் கடல் என்க. ( 219 )
712. தீங்கரும் பெருத்திற் றூங்கி யீயின்றி யிருந்த தீந்தே
னாங்கணாற் பருகி யிட்டு நலனுணப் பட்ட நம்பி
பூங்குழன் மகளிர் முன்னர்ப் புலம்பனீ நெஞ்சே என்றாள்
வீங்கிய காமம் வென்றார் விளைத்தவின் பத்தோ டொப்பாள்.
பொருள் : தீ கரும்பு எருத்தில் தூங்கி ஈ இன்றி இருந்த தீ தேன் - இனிய கரும்பின் பிடரிலே தூங்கி (இதுவரை) ஈ தொடாமல் இருந்த இனிய தேனாவான்; நாம் கண்ணால் பருகியிட்டு நலன் உணப்பட்ட நம்பி - நாம் கண்ணினால் நலத்தை உள்ளடக்கி நுகரப்பட்ட இந்நம்பி; பூங்குழல் மகளிர் முன்னர் - பூவணிந்த குழலையுடைய மகளிரின் முன்னால்; நெஞ்சே! நீ புலம்பல் என்றாள் - உள்ளமே! நீ வருந்தாதே என்றாள்; வீங்கிய காமம் வென்றார் விளைத்த இன்பத்தோடு ஒப்பாள் - மிகுந்த காமத்தை வென்ற பெரியயோர்கள் கண்ட துறக்க இன்பத்துக்கு ஒப்பாவாளான தத்தை.
விளக்கம் : ஒப்பாள், நெஞ்சே! நம்பி ஈ யின்றி யிருந்த தீந்தேன் நீ புலம்பல் என்றாள் - என வினை முடிவு செய்க. கரும்பெருத்தில் தூங்கி என எளிமை கூறினாள். ஈயின்றி யிருந்த தீந்தேன் என்றாள், இதுவரை இவனைப் பிற மங்கையர் நுகராதிருந்த பிரமசரியம் கருதி. புலம்பல் என்பது சிதைவு பிறர்க்கின்மை : நகுநயம் மறைந்த வழியும் உள்ளம் சிதைந்து நிறையழியும் ஆகலின், அச்சிதைவு பிறர்க்குப் புலனாகாமை நெஞ்சினை நிறுத்தல் என்னும் மெய்ப்பாடு. ( 220 )
713. கண்ணெனும் வலையி னுள்ளான்
கையகப் பட்டி ருந்தான்
பெண்ணெனு முழலை பாயும்
பெருவனப் புடைய நம்பி
எண்ணின்மற் றியாவ னாங்கொ
லென்னி திற் படுத்த வேந்த
லொண்ணிற வுருவச் செந்தீ
யுருவுகொண் டனைய வேலான்
பொருள் :கண் எனும் வலையின் உள்ளான் - (என் மனமாகிய) கண் என்னும் வலையினுள் இருக்கின்றான்; கை அகப்பட்டிருந்தான் - (அதனால் அவன்) என் கையில் அகப்பட்டுள்ளான் (ஆகிய); பெண் எனும் உழலை பாயும் பெருவனப்புடைய நம்பி - பெண்மை என்னும் தடையை மீறும் பேரழகுடைய இந்த நம்பி; என் இதில் படுத்த ஏந்தல் - என்னை இந் நிலையிற் பிணித்த ஏந்தல்; ஒள் நிற வுருவச் செந்தீ உருவு கொண்டனைய வேலான் - ஒளியும் நிறமும் உருவும் உடைய செந்தீயே ஒரு வடிவங்கொண்டாற் போன்ற வேலினான்; எண்ணின் யாவன் ஆம் கொல்? - ஆராயின வானவனோ? மகனோ? யாவனோ?
விளக்கம் : இவள் விஞ்சையர் மகளாதலின் தன் மனக்கண்ணால் இவனை அறிந்தாள். எனவே, கண் வலையினும் கையினும் அகப்பட்டான் என்றாள். தன் மேல் அவனுக்கு வேட்கை நிகழாததால், பெண்ணெனும் உழலை பாயும் என்றாள். யாவனாங்கொல் - இது ஐயம்: ஒரு பொருட்கண் இருபொருட் டன்மை கருதி வரும் மனத்தடுமாற்றம். சிறந்துழி ஐயம் சிறந்த தென்ப - இழிந்தழியிழிபே சுட்ட லான (தொல். களவு -3) என்பதனால், தலைவிக்கு ஐயம் நிகழாதேனும், ஈண்டுக் களவன்மையானும் தன் மனக்கண்ணால் ஐயந்தீர்தல் வன்மையானும் ஐயம் நிகழ்ந்தது. மக்களால் தன்னை வருத்தலாகாமை முன்னே காண்டலின், என்னை இவ் வருத்தத்திலே அகப்படுத்தின ஏந்தல் என்றாள். ( 221 )
714. யாவனே யானு மாக வருநிறைக் கதவ நீக்கிக்
காவலென் னெஞ்ச மென்னுங் கன்னிமா டம்பு குந்து
நோவவென் னுள்ளம் யாத்தாய் நின்னையு மாலை யாலே
தேவரிற் செறிய யாப்பன் சிறிதிடைப் படுக வென்றாள்.
பொருள் : யாவனே யானும் ஆக - நீ தேவனெனினும் மகனெனினும் ஆகுக; அருநிறைக் கதவம் நீக்கி - என் அரிய நிறையாகிய கதவைத் திறந்து; காவல் என் நெஞ்சம் என்னும் கன்னிமாடம் புகுந்து - காவலையுடைய என் உள்ளம் ஆகிய கன்னிமாடத்திலே நுழைந்து; என் உள்ளம் நோவ யாத்தாய் - என் உள்ளம் வருந்தப் பிணித்தாய்; மாலையாலே நின்னையும் தேவரின் செறிய யாப்பன் - என் இயல்பினாலே நின்னையும் வானவரைப்போல இமையா நாட்டமுறும்படி இறுகப் பிணிப்பேன்; சிறிது இடைப்படுக என்றாள் - சிறிது பொழுது கழிக என்றாள்.
விளக்கம் : யாவனேயானுமாக - இஃது ஆராய்ச்சி ஒரு பொருளை நன்று தீது என்று ஆராய்தல். என்னும் மெய்ப்பாடு. யாத்தாய் - இஃது 2.எதிர்பெய்து பரிதல் உருவ வெளிப்பாடு: தலைமகனையும் அவன் தேர் முதலாயினவற்றையும் தன் எதிர் பெய்து கொண்டு பரிந்து கையறுதல். என்னும் மெய்ப்பாடு. மேல் மாலையாலே பிணிப்பதுந் தோன்ற மாலையாலே யாப்பன் என்றாள். ( 222 )
715. கழித்தவே லேறு பெற்ற
கடத்திடைப் பிணையின் மாழ்கி
விழித்துவெய் துயிர்த்து மெல்ல
நடுங்கித் தன் றோழி கூந்த
லிழுக்கிவண் டிரியச் சேர்ந்தோர்
கொடிப்புல்லுங் கொடியிற் புல்லி
யெழிற்றகை மார்பற் கின்யா
ழிதுவுய்த்துக் கொடுமோ வென்றாள்.
பொருள் : கழித்த வேலேறு பெற்ற - உறை கழித்த வேலால் தன் மார்பிலே எறியப்பட்ட; கடத்திடைப் பிணையின் மாழ்கி - காட்டில் உள்ள பெண்மானே போல வருந்தி; விழித்து வெய்து உயிர்த்து - திகைத்துப் பெருமூச்செறிந்து; மெல்ல நடுங்கி - மெல்லென நடுங்கி; தன் தோழி கூந்தல் வண்டு இழுக்கி இரியச் சேர்ந்து - தன் தோழி வீணாபதியின் கூந்தலில் உள்ள வண்டு தப்பி ஓடுமாறு நெருங்கி: ஓர் கொடிப் புல்லும் கொடியின் புல்லி - ஒரு கொடியைத் தழுவும் மற்றொரு கொடியைப் போலத் தழுவி; எழில்தகை மார்பதற்கு இன்யாழ் இது உய்த்துக் கொடு என்றாள் - அழகிய தகுதிவாய்ந்த மார்பனாகிய இவனுக்கு இனிய யாழாகிய இதனை உய்த்தறியுமாறு கொடு என்றாள்.
விளக்கம் : கொடுமோ - மோ : முன்னிலையசைச்சொல். உய்த்துக் கொடுத்தலாவது பல யாழ்களையும் கொடுத்து யாழறியும் அவனறிவை உய்த்தறிந்து பிறகு இனிய யாழைத் தருதல். மாழ்கி விழித்து உயிர்த்து என்பதை இடுக்கண் -மலர்ந்த என்னும் மெய்ப்பாடு. நடுங்கி - இது நடுக்கம் - அன்பும் அச்சமும் முதலாயின உடம்பிற் புலப்படு மாற்றான் உள்ளம் நடுங்குதல். அச்சம் என்னும் சுவைபிறந்த பின்னர் அதன் வழித் தோன்றிய நடுக்கம் அச்சத்தால் தோன்றிய நடுக்கம் என்னும் மெய்ப்பாடு. கொடிப் புல்லுங் கொடியிற் புல்லி இது கையாறு : உயிர்ப்பும் இன்றி வினையொழிந்தயர்தல் என்னும் மெய்ப்பாடு. மெல்ல வழுக்கி என்பது பாடமாயின், அவ்விடத்து நீங்கி என்க. நச்சினார்க்கினியர் 710 - முதல், 715 - வரை உள்ள ஆறு செய்யுட்களையும் ஒரு தொடராக்கிச் சொற்களைக் கொண்டு கூட்டிக் கூறும் முடிபு : -மிக்க அழகுடைய கண்ணாள், இன்பத்தோடு ஒப்பாள், அவள், வேலான், வனப்புடைய நம்பி, என்னிதிற் படுத்த ஏந்தல், இவன் ஆராய்ந்தால் யாவனாங் கொல் என ஐயுற்று, யாவனே யானும் ஆக; நமது ஞானக்கண்ணிடத்தான் : அதனால், யான் நோக்கினவிடத்துக் கையகப்பட்டேயிருந்தான்; அங்ஙனமிருந்து கடைந்திடுகின்ற காளையது மார்பு இயைவது என்றாவது கொல்லோ. என்று ஐயுற்று நோக்கி, அக்காலம் சிறிது நீட்டித்தலின், அதற்கு ஆற்றாது, சிறையைக் கைபோய், நாண் வேலியைப் பாய்ந்து காமத் தீ எரிய நின்றாள்; அப்போது எரியுறு மெழுகின் நின்றாள், அங்ஙனம் நின்று மாழ்கி விழித்து உயிர்த்து நடுங்கிமெல்லத் தோழி மேலே விழுந்து அவளைப்புல்லி, அங்ஙனம் கையாறுற்ற விடத்துத் தன் மனத்து நின்ற தலைவனை நோக்கி, நீக்கி, மாடம் புகுந்து, யான் நோம்படி என்னுள்ளத்தைப் பிணித்தாய்; நின்னையும் பிணிப்பேன்; சிறிது பொழுது கழிக என்றாள்; பின்பு தன் நெஞ்சினை நோக்கி, நெஞ்சே! நலன் உண்ணப்பட்ட நம்பி ஈயின்றி யிருந்த தீந்தேனாதலால், மகளிர் முன்னே புலம்பா தொழிக என்று ஆற்றுவித்துத் தேற்றிப் பின்பு தோழியை நோக்கி, இனிய யாழிது உய்த்துக்கொடுமோ என்றாள். ( 223 )
வேறு
716. தடங்க ணாள்ப ணியினாற்
றானவ் வீணை யொன்றினை
நெடுங்க ணாளெ ழினியை
நீக்கி யுய்த்து நீட்டினாள்
மடங்க லன்ன மொய்ம்பினான்
வருக வென்று கொண்டுதன்
கிடந்த ஞானத் தெல்லையைக்
கிளக்க லுற்று நோக்கினான்.
பொருள் :தடங்கணாள் பணியினால் அவ்வீணை ஒன்றினை உய்த்து - தத்தையின் ஆணைப்படி அவ்வீணைகளில் ஒன்றை ஆராய்ந்து; எழினியை நீக்கி - உறையை விலக்கி; நெடுங்கணாள் தான் நீட்டினாள் - வீணாபதி கொடுத்தாள்; மடங்கல் அன்ன மொய்ம்பினான் - சிங்கமனைய ஆற்றலான்; மடங்கல் அன்ன மொய்ம்பினான் - சிங்கமனைய ஆற்றலான்; வருக என்று கொண்டு - கொணர்க என்று வாங்கி; தன் கிடந்த ஞானத்து எல்லையை - தன் பரவிய அறிவின் எல்லையினால்; கிளக்கல் உற்று நோக்கினான் - அறிவிக்க வேண்டி ஆராய்ந்தான்.
வேறு
717. சுரந்து வானஞ் சூன்முதிர்ந்து
மெய்ந்நொந் தீன்ற துளியேபோற்
பரந்த கேள்வித் துறைபோய
பைந்தார் மார்பன் பசும்பொன்யாழ்
நரம்பு தேனார்த் தெனத்தீண்டி
நல்லாள் வீணை பொல்லாமை
யிருந்த முலையா ணின்றாளை
நோக்கி யிசையி னிதுசொன்னான்.
பொருள் : வானம் சூல்முற்றி மெய்ந்நொந்து சுரந்து ஈன்ற துளியேபோல் - முகில் சூல் முதிர்ந்து உடல் வருந்திச் சுரந்து பெய்த மழை எங்குஞ் சென்று பயன்பட்டாற் போல; பரந்த கேள்வித்துறை போய பைந்தார் மார்பன் - பரவிய எல்லாக் கேள்வித்துறையினுஞ் சென்று முற்றக் கற்றுப் பயன்படும் புதிய மாலை மார்பன்; பசும்பொன் யாழ் நரம்பு - பைம் பொன்னாலான யாழின் நரம்பை; தேன் ஆர்த்து எனத் தீண்டி - வண்டுமுரல்வது போலத் தெறித்து; நல்லாள் வீணை பொல்லாமை - தத்தையின் யாழிலே குற்றமுடைமையை; இருந்த முலையாள் நின்றாளை நோக்கி - உள்ளடங்கிய முலையுடன் நின்ற வீணைபதியைப் பார்த்து; இசையின் இது சொன்னான் - இசைபோல இது என்று கூறினான்.
விளக்கம் : பொல்லாங்கு பலவற்றையும் சாதி யொருமையால் இது என்றான். நரம்பின் இசையாற் பிறந்த பொல்லாமையாவன : அடியார்க்கு நல்லாருரையிற் காண்க. (சிலப். அ : 29-30) செம்பகை ஆர்ப்புக் கூடம் அதிர்வு செம்பகை என்பது பண்ணோ டுளரா - இன்பமில் ஓசை என்மனார் புலவர் ஆர்ப்பெனப்படுவது அளவிறந் திசைக்கும் கூடம் என்பது குறியுற விளம்பின் - வாய்வதின் வாராது மழுங்கி இசைப் பதுவே அதிர்வு எனப்படுவது இழுமெனல் இன்றிச் சிதறி யுரைக்குநர் உச்சரிப் பிசையே என்பன. இவை மரக்குற்றத்தாற் பிறக்கும்; நீரிலே நிற்றல் அழுகுதல் வேதல் நிலமயக்குப் - பாரிலே நிற்றல் இடிவீழ்தல் நோய்மரப் பாற்படல்கோள் - நேரிலே செம்பகை ஆர்ப்பொடு கூடம் அதிர்வுநிற்றல் - சேரினேர் பண்கள் நிறமயக் கப்படும் சிற்றிடையே. இதனால் மரக்குற்றங்கள் இவை எனவும் அவையே பண்கள் மயங்குவதற்குக் காரணங்கள் எனவும் அறிக. ( 225 )
718. நீர்நின் றிளகிற் றிதுவேண்டா
நீரின் வந்த திதுபோக
வார்நின் றிளகு முலையினாய்
வாட்புண் ணுற்ற திதுநடக்க
வோரு முருமே றிதுவுண்ட
தொழிக வொண்பொன் னுகுகொடியே
சீர்சால் கணிகை சிறுவன்போற்
சிறப்பின் றம்ம விதுவென்றான
பொருள் : வார்நின்று இளகும் முலையினாய் - வார் இளகுறு முலையினாய்!; ஒண்பொன் உகு கொடியே; - சிறந்த ஒளியைச் சிந்தும் பொற்கொடியே!; இது நீர் நின்று இளகிற்று, வேண்டா - இது நீரில் நின்று மெலிந்ததாகையால் வேண்டா; நீரின் வந்தது இது போக - நீரிலே அழுகியதாகிய இது செல்க; வாள் புண் உற்றது இது நடக்க - வாளால் வெட்டுற்றதாகும் இதுபோக; உருமேறு உண்டது இது ஒழிக - இடியினால் தாக்கப்பட்ட இது நீங்குக; இது சீர்சால் கணிகை சிறுவன்போல் சிறப்பின்று - இது புகழ் பொருந்திய கணிகை மகன் போலச் சிறப்பில்லாதது; என்றான் - என்று சீவகன் கூறினான்.
விளக்கம் : கட்ட ஆதார மின்மையின் வார் இளகியது. வேண்டா, நடக்க, போக, ஒழிக என்றன இகழ்ச்சி. ( 226 )
719. கல்சேர் பூண்கொள் கதிர்முலையாய்
காமத் தீயால் வெந்தவர்போற்
கொல்லை யுழவர் சுடப்பட்டுக்
குரங்கி வெந்த திதுகளிறு
புல்ல முரிந்த தெனப்போக்கித்
தூம மார்ந்த துகிலுறையும்
நல்யாழ் நீட்ட வதுகொண்டு
நங்கை நலத்த திதுவென்றான்.
பொருள் : கல்சேர் பூண்கொள் கதிர்முலையாய் - கல்போல் இறுகிய அணிகலன் கொண்ட கதிர்த்த முலையினாய்!; காமத்தீயால் வெந்தவர்போல் - காமத் தீயினால் வெந்தவர்களைப் போல; கொல்லை உழவர் சுடப்பட்டுக் குரங்கி வெந்தது இது - முல்லை நிலத்திலே உழவராற் சுடப்பட்டுத் தாழ்ந்து வெந்தது இது; களிறு புல்ல முரிந்தது இது - களிறு தழுவ முரிவுற்றது இது; எனப் போக்கி - என்று போக்கிவிட்டு; தூமம் ஆர்ந்த துகில் உறையும் நல்யாழ் நீடட - அகிற்புகை யூட்டப் பெற்ற, துகிலினால் மூடப் பெற்றிருந்த அழகிய யாழை நீட்ட; அது கொண்டு நங்கை நலத்தது இது என்றான் - அதனை ஏற்றுத் தத்தை போலவே குல முதலியன சிறப்புற்றது இது என்றுரைத்தான்.
விளக்கம் : நலமாவன : சொல்லிய கொன்றை கருங்காலி மென்முருக்கு - நல்ல குமிழும் தணக்குடனே - மெல்லியலாய் - உத்தம மான மரங்க ளிவையென்றார் - வித்தக யாழோர் விதி தளமாய்ச் சம நிலத்துத் தண்காற்று நான்கும் - உளதாய் ஒருங்கூனம் இன்றி - அளவு - முதிரா திளகாது மூன்றாங்கூ றாய - அதுவாகில் வீணைத்தண் டாம். கோடே பத்தர் ஆணி நரம்பே - மாடக மெனவரும் வகையின வாகும் பதுமம் கழல்குடந் தாடியொ டுள்ளிபண் பூண்டுநின்ற - விதியமர் தண்டு குடையே குடுமிமெய்க் கோட் டுறுப்பு - மதியமர் போதிகை புட்டில் முகஞ்சுவர் மன்னெருத்தம் - விதியமர் பத்தர்க் குறுப்பென் றுரைத்தனர் மின்னிடையே என இவையும் பிறவும். ( 227 )
வேறு
720. இருநில மடந்தை யீன்ற
திருவிசும் பென்னுங் கைத்தாய்
திருநல மின்னுப் பொன்ஞாண்
முகில்முலை மாரித் தீம்பா
லொருநலங் கவினி யூட்ட
வுண்டுநோய் நான்கு நீங்கி
யருநலங் கவினி வாள்வா
யரிந்திது வந்த தென்றான்.
பொருள் : இருநில மடந்தை ஈன்றது - மண்மகள் பெற்றது இம்மரம்; இரு விசும்பு என்னும் கைத்தாய் - பெருவான் என்னும் செவிலித்தாய்; திருநலம் மின்னுப் பொன் ஞாண் முகில் முலை மாரித் தீம்பால் - அழகிய நலமாகிய மின்னாகிய பொன் நாணினையுடைய முகிலாகிய முலையின் மழையாகிய இனிய பாலை; ஒரு நலம் கவினி ஊட்ட - முழுவலன்போடே அழகுற ஊட்ட; உண்டு நோய் நான்கும் நீங்கி - பருகி நான்கு நோயையும் நீங்கி; அருநலம் கவினி - அழகிய நலன் கவினுற்று வளர்ந்து; வாள்வாய் அரிந்து வந்தது இது என்றான் - வாளாலே அரிந்து கொண்டுவரப் பெற்றது இவ்யாழ் என்று சீவகன் செப்பினான்.
விளக்கம் : ஈன்றது : சினைவினை முதலொடு முடிந்தது. நற்றாய் அன்பு செவிலிக்குப் பிறந்து வளர்த்தமை தோன்ற ஒரு நலம் என்றார். நான்காவன : வெயில், காற்று, நீர், நிழல் மிகுதல். ( 228 )
721. தீந்தொடை நரம்பின் றீமை
சிறிதலாப் பொழுது மோதிப்
பூந்தொடை யரிவை காணப்
புரிஞெகிழ்த் துரோமங் காட்டத்
தேங்கம ழோதி தோற்றாள்
செல்வனுக் கென்ன மைந்தன்
வாங்குபு நபுலன் கையுள்
வார்புரி நரம்பு கொண்டான்.
பொருள் : தீந்தொடை நரம்பின் தீமை சிறிது அலாப் பொழுதும் ஓதி - இனிய நரம்பின் தீமையைச் சிறிதன்றிப் பெரும்போது ஆராய்ந்து கூறி; பூந் தொடை அரிவை காணப்புரி நெகிழ்த்து உரோமம் காட்ட - (அதற்குத்தக) பூமாலை அணிந்த தத்தை காணுமாறு நரம்பின் முறுக்கைத் தளர்த்தி அதிற்கிடந்த மயிரைக் காட்ட; தேன் கமழ் ஓதி செல்வனுக்குத் தோற்றாள் என்ன - அவையிலுள்ளோர் தேன் மணக்குங் கூந்தலாள் சீவகனுக்குத் தோற்றாள் என்றுரைக்க; மைந்தன் வார்புரி நரம்பு நபுலன் கையுள் வாங்குபு கொண்டான் - சீவகன் நீண்ட முறுக்குற்ற நரம்பொன்றை நபுலன் கையிலிருந்து பெற்று யாழில் அமைத்துக் கொண்டான்.
விளக்கம் : யாழ் நன்றாதலின் தனக்குச் சேமமாக வந்தவற்றில் நரம்பை மட்டும் கொண்டான். கந்துகன் படை அமைத்தெழுமின் என்றதனாற் பதுமுகனும் நந்தட்டனும் மற்றோரும் போர்க்கோலத்தொடு புறத்தே நின்றனர் என்பது தோன்ற, நபுலன் கையில் நரம்பிருந்தது என்றார். மேல், பண்ணியல் யானைமேலான் பதுமுகன் என வருவதனால் உணர்க. கொடும்புரி மயிர்தும்பு முறுக்கிவை நான்கும் - நடுங்கா மரபிற் பகையென மொழிப என்றார். ( 229 )
722. பணிவரும் பைம்பொற் பத்தர்
பல்வினைப் பவள வாணி
மணிகடை மருப்பின் வாளார்
மாடக வயிரத் தீந்தே
னணிபெற வொழுகி யன்ன
வமிழ்துறழ் நரம்பி னல்யாழ்
கணிபுகழ் காளை கொண்டு
கடலகம் வளைக்க லுற்றான்.
பொருள் : பணி வரும் பைம் பொன் பத்தர் - வாசிப்புத் தொழிலிலே வரும் புதிய பொன்னாலான பத்தரையும்; பல்வினைப் பவள ஆணி - பல தொழிற்பாடுற்ற பவளத்தாலாகிய ஆணியையும்; மணி மருப்பின் கடை வாளார் வயிர மாடகம் - முத்தையுடைய யானைத் தந்தத்தாலே கடையப்பெற்ற ஒளிமிகும் வயிர மாடகத்தையும்; தீ தேன் அணி பெற ஒழுகி அன்ன அமிழ்து உறழ் நரம்பின் - இனிய தேன் அழகுற ஒழுகினாற் போன்ற அமுதத்தை வென்ற நரம்பையும் உடைய; நல்யாழ் - அழகிய யாழை; கணி புகழ் காளை கொண்டு - நூல்வலான் புகழுங் காளையாகிய சீவகன் ஏந்தி; கடலகம் வளைக்கல் உற்றான் - கடல் சூழ்ந்த உலகினைத் தன் இசையாலே வசப்படுத்தத் தொடங்கினான்.
விளக்கம் : பத்தர் - யாழின் ஓருறுப்பு. வயிர மாடகம் : நால்விரலளவான பாலிகை வடிவாய் நரம்பை வலித்தல் மெலித்தல் செய்யும் கருவி. இடக்கை நல்விரல் மாடகம் தழீஇ (சிலப். 8 - 28) என்றார் பிறரும். பொன் முதலியன அழகிற்கு இட்டன. ( 230 )
723. குரல்குர லாகப் பண்ணிக்
கோதைதாழ் குஞ்சி யான்றன்
விரல்கவர்ந் தெடுத்த கீத
மிடறெனத் தெரித றேற்றார்
சுரரொடு மக்கள் வீழ்ந்தார்
சோர்ந்தன புள்ளு மாவு
முருகின மரமுங் கல்லு
மோர்த்தெழீஇப் பாடு கின்றான்.
பொருள் : கோதைதாழ் குஞ்சியான் - பூமாலை தங்கிய சிகையினான்; குரல் குரலாகப் பண்ணி - செம்பாலையைப் பண்ணி; தன் விரல் கவர்ந்து எடுத்த கீதம் - தன் விரலாலே தடவியெழுப்பிய இசையை; மிடறு என - மிடற்றுப் பாடல் என்று கருதி; தெரிதல் தேற்றார் - கருவிப் பாடலெனத் தெளியாதவராய்; சுரரொடு மக்கள் வீழ்ந்தார் - வானவரும் மக்களும் தம்முள் வேறுபாடின்றி நிலத்தே மயங்கி வீழ்ந்தனர்; புள்ளும் மாவும் சோர்ந்தன - கின்னரப் பறவைகளும் அசுண விலங்குகளும் சோர்வுற்றன; மரமும் கல்லும் உருகின - மரங்களும் கற்களும் உருகின; ஓர்த்து எழீஇப் பாடுகின்றான் - அங்ஙனம் யாழிசைத்த நிலையைக் கருத்திற் கொண்டு, அதற்கேற்ப ஆலாபனஞ் செய்து பாடுகின்றான்.
விளக்கம் : ஆழியும் ஆரும் போற்கீறி அதனருகே - ஊழி ஒரோவொன் றுடன் கீறி - வாழி - எருதாதி கீழ்த்திசைகொண் டீராறும் எண்ணிக் - கருதாய் நிலக்கயிற்றைக் கண்டு (சினேந்திர. காண்ட, ஆருடச் சக்கரம் - 1. இப் பாலைத்திரிவிலே பத்தொன்பது நரம்பையுடைய மகர யாழ் குரல் குரலாமாறு காண்க. ( 231 )
724. கன்னி நாகங் கலங்க மலங்கி
மின்னு மிரங்கு மழையென் கோயான்
மின்னு மழையின் மெலியு மரிவை
பொன்னாண் பொருத முலையென் கோயான்.
பொருள் : கன்னி நாகம் மலங்கிக் கலங்க மழை மின்னும் இரங்கும் என்கோ யான் - கன்னியாகிய நாகம் நிலைகெட்டுக் கலங்க முகில் மின்னும் இடிக்கும் என்று நான் கூறுவேனோ?; மின்னும் மழையின் பொன்நாண் பொருத முலை அரிவை மெலியும் என்கோ யான் - மின்னுகின்ற அம் மழையினால் பொன்னாண் தாக்கும் முலையினையுடைய இவள் மெலிவாள் என்பேனோ நான்?
விளக்கம் : இது முதல் மூன்று செய்யுட்களும் கூதிர்ப் பருவங்குறித்துப் பிரியக் கருதிய தலைவற்குத் தோழி, அதற்கு முன் நிகழ்கின்ற காரின் தன்மையும் அது தலைவியை வருத்துந் தன்மையும் யான் கூற வேண்டுமோ? நீயே அறிதியன்றோ? எனக் கூறிச் செலவழுங்குவித்தன வாக்குக. இளவேனில் நிகழ்ச்சிக் கண்ணே கார் கூற வேண்டியதாயிற்று, யாழ்வென்ற பின் அல்லது தன் மனத்தில் வேட்கை தோன்றாதாதலின். அதனைக் கூறவே, வேட்கை தோன்றிற்றாகப் புலப்படுமென்பது கருதி ( 232 )
725. கருவி வானங் கான்ற புயலி
னருவி யரற்று மலையென் கோயா
னருவி யரற்று மலைகண் டழுங்கு
மருவார் சாயன் மனமென் கோயான்.
பொருள் : கருவி வானம் கான்ற புயலின் - மின் முதலிய தொகுதியுடைய முகில் பெய்த மழைநீரினால்; மலை அருவி அரற்றும் என்கோ யான் - மலை அருவிகளால் ஒலிக்கும் என்பேனோ நான்?; அருவி அரற்றும் மலைகண்டு மருஆர் சாயல் மனம் அழுங்கும் என்கோ யான் - அருவியால் அரற்றும் மலையைக் கண்டு மருவுதல் பொருந்தி மென்மையாளின் உள்ளம் வருந்தும் என்று சொல்வேனோ நான்? ( 233 )
726. வான மீனி னரும்பி மலர்ந்து
கானம் பூத்த காரென் கோயான்
கானம் பூத்த கார்கண் டழுங்குந்
தேனார் கோதை பரிந்தென் கோயான்.
பொருள் :வானம் மீனின் அரும்பி மலர்ந்து - வானத்து மீன்களைப்போல அரும்பி விரிந்து; கார் கானம் பூத்த என்கோயான் - காரால் காடுகள் மலர்ந்தன என்று கூறுவேனோ நான்?; கானம் பூத்த கார் கண்டு - காடு மலர்ந்த கார்காலங் கண்டு; தேனார் கோதை பரிந்து அழுங்கும் என்கோ யான் - தேன் பொருந்திய மாலையாள் வருந்தி அழுவாள் என்பேனோ நான்?
விளக்கம் : இத் தாழிசைக் கொச்சக ஒருபோகுகள் கந்தருவ மார்க்கத்தால் இடை மடங்கின. மேல் வருவனவற்றிற்கும் இஃதொக்கும். ( 234 )
வேறு
727. அண்ணல்யாழ் நரம்பை யாய்ந்து
மணிவிர றவழ்ந்த வாறும்
பண்ணிய விலயம் பற்றிப்
பாடிய வனப்பு நோக்கி
விண்ணவர் வீணை வீழ்த்தார்
விஞ்சையர் கனிந்து சோர்ந்தார்
மண்ணவர் மருளின் மாய்ந்தார்
சித்தரு மனத்துள் வைத்தார்.
பொருள் : அண்ணல் மணிவிரல் யாழ் நரம்பை ஆய்ந்து தவழ்ந்த ஆறும் - தலைவனின் அழகிய விரல் யாழ் நரம்பை ஆராய்ந்து வாசித்த வகையும்; பண்ணிய இலயம் பற்றிப் பாடியவனப்பும் நோக்கி - அதில் தான் இசைத்த செலவைக் குறிக்கொண்டு மிடற்றாற் பாடிய வனப்பையும் உணர்ந்து; விண்ணவர் வீணை வீழ்த்தார் - கின்னரர் வீணையைக் கைவிட்டார்; விஞ்சையர் கனிந்து சோர்ந்தார் - வித்தியாதரர் நெஞ்சுருகி மெய்ம்மறந்தனர்; மண்ணவர் மருளின் மாய்ந்தார் - மக்கள் தாம் அறியாத இசையைக் கேட்டதாலே மயங்கி அறிவிழந்தனர்; சித்தரும் மனத்துள் வைத்தார் - இருடிகளும் இதுவும் பேரின்பமே யென வுளத்தமைத்தனர்.
விளக்கம் : இதனாற் சீவகனுடைய யாழ் வாசிப்பும் மிடற்றுப் பாடலும் சிறந்தன ஆமாறு காட்டப்பட்டது. ( 235 )
728. வீழ்மணி வண்டு பாய்ந்து
மிதித்திடக் கிழிந்த மாலை
சூழ்மணிக் கோட்டு வீணைச்
சுகிர்புரி நரம்பு நம்பி
யூழ்மணி மிடறு மொன்றாய்ப்
பணிசெய்த வாறு நோக்கித்
தாழ்மணித் தாம மார்பிற்
கின்னரர் சாம்பி னாரே.
பொருள் : வீழ் மணி வண்டு பாய்ந்து மிதித்திடக் கிழிந்த மாலை - மதுவை விரும்பிய கரிய வண்டு குதித்து மிதித்தலால் அலர்ந்த மாலையினையும்; சூழ்மணிக் கோட்டு - சூழ் மணிகள் பதித்த கோட்டினையும் உடைய; வீணை - யாழிலே; சுகிர் புரி நரம்பும் நம்பி ஊழ்மணி மிடறும் - சீவி முறுக்கின நரம்பும் நம்பியின் ஒழுங்காகிய அழகிய மிடறும்; ஒன்றாய்ப் பணிசெய்த ஆறு நோக்கி - ஒன்றாக ஏவல் புரிந்த வகையினைப் பார்த்து; தாழ் மணித்தாமம் மார்பின் கின்னரர் சாம்பினார் - நீண்ட மாணிக்க மாலையணிந்த மார்பினையுடைய கின்னரர் மெய்சோர்ந்தனர்.
விளக்கம் : இச் செய்யுளால் யாழும் மிடறும் ஒன்றாய் இசைத்தமை கூறப்பட்டது. ( 236 )
729. விண்ணவர் வியப்ப விஞ்சை
வீரர்கள் விரும்பி யேத்த
மண்ணவர் மகிழ வான்கட்
பறவைமெய்ம் மறந்து சோர
வண்ணறா னனங்க னாணப்
பாடினா னரச ரெல்லாம்
பண்ணமைத் தெழுதப் பட்ட
பாவைபோ லாயி னாரே.
பொருள் : விண்ணவர் வியப்ப - வானவர் வியப்புற; விஞ்சை வீரர்கள் விரும்பி ஏத்த - வித்தியாதர வீரர் விருப்பத்துடன் வாழ்த்த; மண்ணவர் மகிழ - மக்கள் களிக்க; வான்கண் பறவை மெய்ம்மறந்து சோர - வானிலியங்கும் பறவைகள் தம்மை மறந்து சோர; அனங்கன் நாண - காமன் வெள்க; அண்ணல்தான் பாடினான் - சீவகன் பாடினான்; அரசர் எல்லாம் - வேந்தர்கள் யாவரும்; பண் அமைத்து எழுதப்பட்ட பாவைபோல் ஆயினார் - பண்ணுதற்கு அமைத்து எழுதப்பெற்ற பாவைபோல் ஆனார்கள்.
விளக்கம் : இச் செய்யுளால் மிடற்றுப் பாடலின் சிறப்புத் தெரிவிக்கப்பட்டது. ( 237 )
வேறு
730. பருந்து நிழலும்போற் பாட்டு மெழாலுந்
திருந்துதார்ச் சீவகற்கே சேர்ந்தனவென் றெண்ணி
விருந்தாக யாழ்பண்ணி வீணைதான் தோற்பா
னிருந்தா ளிளமயில்போ லேந்திலைவேற் கண்ணாள்.
பொருள் : பருந்தும் நிழலும் போல் பாட்டும் எழாலும் - பருந்தும் அதன் நிழலும்போற் பாட்டும் அதற்கமைந்த யாழ் வாசினையும்; திருந்துதார்ச் சீவகற்கே - அழகிய தாரணிந்த சீவகனுக்கே; வீணைதான் தோற்பான் - வீணையிலே தான் தோற்பதற்கே; சேர்ந்தன என்று எண்ணி - அமைந்தன என்று நினைத்து; ஏந்து இலை வேல் கண்ணாள் - ஏந்திய இலைமுக வேலனைய கண்ணாளாகிய தத்தை; இளமயில்போல் - இளமையான மயிலைப் போல; விருந்தாக யாழ் பண்ணி இருந்தாள் - (தான் இதுவரை செய்யாத) புதுமையாக யாழைப் பண்ணிப் பாட அமர்ந்தாள்.
விளக்கம் : இளமயில்போல் இருந்தாளாகிய வேற்கண்ணாள் எனக் கூட்டி யாழ் பண்ணி எனக் குளகமாக்கி வரும் பாட்டுடன் முடிப்பர் நச்சினார்க்கினியர். மற்றும், விருந்தாக என்பதனை, விருந்தாகச் சீவகற்கே சேர்ந்தன என்று கொண்டு கூட்டுவர். சீவகன்மேற்கொண்ட காதலால் தன் பண்ணும் பாடலும் வேறுபட்டு நின்றாளென்பதைக் குறித்தே விருந்தாக யாழ் பண்ணி என்றார். பருந்து பறக்குமிடத்து முறையே உயர்ந்து அந் நிலத்தின்கண் நின்று ஆய்ந்து பின்னும் அம் முறையே மேன்மேல் உயர்கின்றாற்போலப் பாட வேண்டுதலின் அஃது உவமையாயிற்று; சிச்சிலி பூனை குடமுழக்கம் செம்மைத்தாம் - உச்சிமலை நீர்விழுக்கா டொண்பருந்து - பச்சை நிற - வேயினிலை வீழ்ச்சியுடன் வெங்கான் நிழற்பாவை - ஏயுங்கால் ஓசை இயல்பு என்றார். வீணை என்றது யாழையும் பாட்டையும். மயில் காரினைக் கருதி யிருந்தாற் போல இவளும் அவனைக் கூடும் நாளைக் கருதி யிருத்தலின் மயில்போல் என்றார். இளமயில் : இளமை - குணம். ( 238 )
731. கோதை புறந்தாழக் குண்டலமும் பொற்றோடுங்
காதி னொளிர்ந் திலங்கக் காமர் நுதல்வியர்ப்ப
மாத ரெருத்த மிடங்கோட்டி மாமதுர
கீதம் கிடையிலாள் பாடத் தொடங்கினாள்.
பொருள் : கிடையிலாள் - உவமையிலாளாகிய தத்தை; கோதை புறம் தாழ - கூந்தல் முதுகிலே சரிய; குண்டலமும் பொன் தோடும் காதின் ஒளிர்ந்து இலங்க - குண்டலமும் பொன் தோடும் காதிலே ஒளிவீசி விளங்க; காமர்நுதல் வியர்ப்ப - அழகிய நெற்றி வியர்க்க; மாதர் எருத்தம் இடம் கோட்டி - அழகிய கழுத்தை இடப்புறம் சாய்த்துக் கொண்டு; மாமதுரகீதம் பாடத் தொடங்கினாள் - மிகவும் இனிய இசையைப் பாடத் தொடங்கினாள்.
விளக்கம் : உட்கும் நாணும் ஒருங்கு வருதலின், நுதல் வியர்ப்ப என்றார். அது தன்னை அவன் நோக்கிய வழிப் பிறந்த மெய்ப்பாடு. அது, புகுமுகம் புரிதல் பொறிநுதல் வியர்த்தல் (தொல். மெய்ப். 13) என்னுஞ் சூத்திரத்தான் உணர்க. மாதர் எருத்தம் என்பதற்குக் காதலையுடைய எருத்தம் என்றும், கிடையிலாள் என்பதற்குத் தான் சீவகனை ஒத்திலளாய் என்றும் கூறுவர் நச்சினார்க்கினியர். ( 239 )
வேறு
732. இலையா ரெரிமணிப்பூ ணேந்து முலையுஞ்
சிலையார் திருநுதலுஞ் செம்பசலை மூழ்க
மலையா ரிலங்கருவி வாள்போல மின்னுங்
கலையார்தீஞ் சொல்லினாய் காணார்கொல் கேள்வர்.
பொருள் :கலைஆர் தீ சொல்லினாய்! - இசைக்கலை நிறைந்த இனிய மொழியாய்!; இலை ஆர் எரி மணிப்பூண் ஏந்தும் முலையும் - இலை வடிவமாக அமைந்த விளக்கமான மணிக்கலன்களைத் தாங்கிய முலைகளும்; சிலை ஆர் திருநுதலும் செம்பசலை மூழ்க - வில்லைப் போன்ற அழகிய புருவமும் சிவந்த பசலையிலே அழுந்த; மலைஆர் இலங்கு அருவி வாள்போல் மின்னும் - மலையிற் பொருந்தி விளங்கும் அருவி வாள்போல ஒளிரும்; கேள்வர் காணார் கெல்! - இதனை நம் காதலர் காணாரோ?
விளக்கம் : இது முதல் மூன்று செய்யுட்களும் தாழிசைக் கொச்சகங்கள்; ஒரு பொருண்மேல் மூன்றடுக்கி வந்தன. இளவேனில் வருகின்றமை கண்டு ஆற்றாளாகிய தலைவி தோழிக்குரைத் தனவாகக் கூறினாள், வேட்கையும் தத்தைக்குச் சிறிது புலப்பட்டு நிற்றலின். ( 240 )
733. பிறையார் திருநுதலும் பேரமருண் கண்ணும்
பொறையார் வனமுலையும் பூம்பசலை மூழ்க
நிறைவா ளிலங்கருவி நீள்வரைமேன் மின்னுங்
கறைவேலுண் கண்ணினாய் காணார்கொல் கேள்வர்.
பொருள் :கறைவேல் உண் கண்ணினாய் - குருதிக்கறையுடைய வேலனைய மையுண்ட கண்ணினாய்!; பிறை ஆர் திருநுதலும் - பிறை அனைய அழகிய நெற்றியும்; பேர் அமர் உண் கண்ணும் - பெரிய மதர்த்த கண்களும்; பொறை ஆர் வனமுலையும் - சுமையாகப் பொருந்திய அழகிய முலைகளும்; பசலை மூழக - அழகிய பசலையிலே முழுகுமாறு; நிறைவாள் இலங்கு அருவி நீள் வரைமேல் மின்னும் - ஒளி நிறைந்த வாள்போல விளங்கும் அருவி பெரிய மலைமேல் ஒளிரும்; கேள்வர் காணார் கொல் - காதலர் இதனை அறியாரோ?
734. அரும்பேர் வனமுலையு மாடமைமென் றோளுந்
திருந்தேர் பிறைநுதலுஞ் செம்பசலை மூழ்க
நெருங்கார் மணியருவி நீள்வரைமேன் மின்னுங்
கரும்பார்தீஞ் சொல்லினாய் காணார்கொல் கேள்வர்.
பொருள் : கரும்பு ஆர் தீஞ் சொல்லினாய் - கரும்பனைய இனிய மொழியாய்!; அரும்பு ஏர் வனம் முலையும் - அரும்பனைய அழகிய முலைகளும்; ஆடு அமைமென் தோளும் - அசையும் மூங்கிலைப் போன்ற மெல்லிய தோளும்; திருந்து ஏர் பிறை நுதலும் - திருத்தமுற்ற பிறையனைய அழகிய நெற்றியும்; செம்பசலை மூழ்க - சிவந்த பசலையிலே அழுந்துமாறு; நெருங்கு ஆர்மணி அருவி - நெருங்கிப் பெருகும் மணி போன்ற நீரையுடைய அருவி; நீள்வரை மேல் மின்னும் - நீண்ட மலையின் மேலே ஒளிரும்; கேள்வர் காணார் கொல் - இதனை அன்பர் அறியாரோ?
விளக்கம் : மணி அருவி தெளிந்ததெனவே காலம் வேனிலாயிற்று. ( 242 )
வேறு
735. பண்ணொன்று பாட லதுவொன்று பல்வளைக்கை
மண்ணொன்று மெல்விரலும் வாள்நரம்பின் மேல்நடவா
விண்ணின் றியங்கி மிடறு நடுநடுங்கி
எண்ணின்றி மாதர் இசைதோற் றிருந்தனளே.
பொருள் :பண் ஒன்று பாடலது ஒன்று - பாடின பாட்டும் அதற்கு ஏற்ற யாழும் ஒருதிறமாய் இருந்தன; பல் வளைக்கை மண் ஒன்று மெல் விரலும் வாள் நரம்பின்மேல் நடவா - பல வளையல்கள் அணிந்த கையாளின் கழுவப் பெற்ற மெல்லிய விரலும் ஒள்ளிய நரம்பின்மேல் நடவா; வீணை நின்று இயங்கிய மிடறும் நடுநடுங்கி - கருவியொழிந்த பாட்டும் வானிலே நின்று இயங்கி அக்காலத்தே நடுங்குவதனாலே; மாதர் எண் இன்றி இசைதோற்று இருந்தனளே! - தத்தை நினைவிழந்து இசைக்குத் தோற்று இருந்துவிட்டாள்.
விளக்கம் : பண் ஒன்று பாடல் அது ஒன்று; இவள் பாடின பாட்டும் யாழிசையும் ஒரு திறமாயிருந்தன; அவன் பாடின பாட்டும் யாழிசையும் மற்றொரு திறமாயிருந்தன என்றுமாம். அவன் பாடும்போது இவள் யாழ் நரம்பு ஒழுங்காக இசைக்கவில்லை; அவன் யாழிசைக்கும் போதும் இவள் ஒழுங்காகப் பாடவில்லை. மண்ணுதல் - பண்ணுதல் (தூய்தாக்குதல்); ஆவுதி மண்ணி (மதுரைக். 494) என்றார் பிறரும். விண்ணென்றது முற்கூறிய உள்ளாளப் பாட்டிற்குரிய மூலாதாரந் தொடங்கிப் பிரமரந்திரத்தளவு நின்ற வெளி. நடுநடுங்கி என்பது கம்பிதப் பட்டு.
எடுத்தல்பாட் டுச்சமாம்; எண்படுத்தல் மந்தம்;
தடுத்து நலிதல் சமமாம்; - தொடுத்தியன்ற
தள்ளாத கம்பிதம் தான்நடுக்கல்; நற்குடிலம்
உள்ளாளப் பாடல் உணர்.
எனவே உள்ளாளத்திலே கம்பிதங் கலித்தலிற் குறையாயிற்று. (சிலைத் தொழில் கருங்கொடி என்னும் (சீவக. 657 - 8) பாடல்களால் தெய்வத் தன்மை பொருந்திய பாட்டுடையள் என்று கூறி வைத்து, ஈண்டுக் கற்றடிப் படுத்தாதாரைக் கூறுமாறு போல, விருந்தாக யாழ் பண்ணி (730) என்றற்கு, யாழ் பண்ணும் முறைமையன்றி யென்றும், பண்ணொன்று பாடலது ஒன்று என்றதற்கு யாழும்மிடறும் வேறுபட்டதென்றும், விண்ணின்றியங்கி என்பதற்கு அந்தர ஓசையென்றும் கூறுதல் தேவர் கருத்தன்மை யுணர்க. காமத்தாற் கலங்கி இவள் தோற்றாள் என்னிற் சீவகற்கு இசை வென்றி யின்மையும் உணர்க. - என்பர் நச்சினார்க்கினியர். இவர் கூற்றுத் தேவர் கருத்தாக இருக்குமேல் அக் கருத்துப் புலப்படவே செய்யுள் கூறுவர். அவ்வாறு கூறாமையாலும், தன்னினுஞ் சிறந்தான் சீவகனென்றறிந்தவுடன் தன் திறமையிலே நடுக்கங் காணுதல் தத்தைக்கு இயல்பாகையால், அதனானே சீவகன் வென்றிக்குக் குறைபாடின்மையாகவே கொள்ள வேண்டும். ஆகையாலும் தேவரின் செய்யுட்கட்குச் சொற்கிடந்தாங்குப் பொருள் கோடலே பொருத்தம்.) மற்றும் உள்ளாளத்திலே கம்பிதங்கலத்தற்கும் அவளுடைய காம நினைவே காரணமாகும்.( 243 ) சீவகனும் தத்தையும் யாழிசையிலே சிறந்தவர்களாக வைத்துத் தத்தை தன் காதலுள்ளத்தாலே கலக்கமுற்றுத் தோற்றாளென்று கூறுதலே தேவர் கருத்தாக இருக்கவேண்டும் என்பது செய்யுட்கிடக்கை நன்கு புலப்படுகின்றது.
736. மையார் நெடுங்கண்ணாண் மாமணியாழ் தானுடைந்து
நையா நடுநடுங்கா நனிநாண மீதூராப்
பொய்யாதோர் குன்றெடுப்பாள் போன்மெலிந்து பொன்மாலை
பெய்பூங் கழலாற்குப் பெண்ணரசி யேந்தினளே.
பொருள் :மை ஆர் நெடுங்கண்ணாள் பெண் அரசி - மையுண்ட பெருங்கண்ணாளாகிய பெண்ணரசி; மாமணியாழ் தான் உடைந்து - சிறந்த யாழிசை யிலே தான் தோற்றலால்; நையா நடுநடுங்கா நனிநாணம் மீதூரா - நைந்து நடுநடுங்கி (அவையிற் செல்ல வேண்டுதலின்) சாலவும் நாணம் மிகுந்து (அதனால்); பொய்யாது ஓர் குன்று எடுப்பாள்போல் மெலிந்து - உண்மையாகவே ஒரு மலையை யெடுப்பாள் போன்ற மெலிவுடன்; பொன் மாலை பெய்பூங்கழலாற்கு ஏந்தினள் - பொன்மாலையைப் பூங்கழலணிந்த சீவகனுக்கு ஏந்தினாள்.
விளக்கம் : நைந்து நடுங்குதல் இழவு தந்தைதாய் முதலிய சுற்றத்தாரையும் இன்பம் பயக்கும் நுகர்ச்சி முதலியவற்றையும் இழத்தல் என்னும் மெய்ப்பாடு, வெற்றியை இழத்தலின், நாணுள்ளம் பிறர்க்கு வெளிப்பட நிகழ்தலின் நாண்: நாணுள்ளம் பிறர்க்கு வெளிப்பட நிகழும் நிகழ்ச்சி என்னும் மெய்ப்பாடு. தோல்வி தோன்ற மாலையிடுதலின் மேல் இளிவரல்: இழிவு; தானிழந்து பிறிதோரு பொருளை வியப்பது. (தொல்.மெய்ப் 5,12, 3.பேர்.)
737. மெல்லென் சிலம்பரற்ற மேகலைகண் மின்னுமிழ
நல்ல பெடையன்ன நாண வடியொதுங்கி
யொல்லெ னுயர்தவமே செய்ம்மி னுலகத்தீ
ரெல்லீரு மென்பாள்போ லேந்தன்மேல் வீழ்த்தனளே.
பொருள் :மெல் என் சிலம்பு அரற்ற மேகலைகள் மின் உமிழ - சிலம்புகள் மெல்லென ஒலிக்கவும், மேகலைகள் ஒளி வீசவும்; நல்ல பெடை அன்னம் நாண - அழகிய பெண்ணன்னம் வெள்க; அடி ஒதுங்கி - அடியால் நடந்து சென்று; உலகத்தீர்! எல்லீரும் ஒல் என உயர் தவமே செய்மின்! - உலகத்தவர்களே! நீவிர் யாவரும் ஒல்லென்னும் ஆரவாரப் புகழ்ச்சியுடைய உயர்ந்த தவத்தையே செய்யுங்கள்; என்பாள்போல் - என்று கூறுவாளைப் போல; ஏந்தல் மேல் வீழ்த்தனள் - சீவகன்மேல் அம் மாலையை விழுத்தினள்.
விளக்கம் : முற்செய்யுளிற் குன்று என்றதற்கேற்ப வீழ்த்தனள் என்றார். இங்ஙனம் எய்துதற்குத் தவஞ் செய்யுங் கருத்து எல்லோருக்கும் இவள் பிறப்பித்தலின், என்பாள் போல என்றார். ஒல்லென - வெளியாக என்றுமாம். ( 245 )
வேறு
738. நாகத்துப் படங்கொ ளல்கு
னலங்கிளர் செம்பொன் மாலை
மேகத்துப் பிறந்தோர் மின்னு
மணிவரை வீழ்ந்த தேபோ
லாகத்துப் பூட்டி மைந்த
னடிதொழு திறைஞ்சி நின்றாள்
போகத்து நெறியைக் காட்டும்
பூமகள் புணர்ந்த தொப்பாள்.
பொருள் : போகத்து நெறியைக் காட்டும் பூமகள் புணர்ந்தது ஒப்பாள் - இன்ப நெறியைக் காட்டுந் திருமகள் வந்து கூடியது போன்றாள்; நாகத்துப் படம்கொள் அல்குல் - நாகத்தின் படம் போன்ற அல்குலாள்; மேகத்துப் பிறந்த ஓர் மின்னு மணிவரை வீழந்ததே போல் - மேகத்திடையே பிறந்த ஒரு மின்னுக்கொடி மணிவரையிலே வீழ்ந்ததுபோல; செம்பொன் மாலை மைந்தன் ஆகத்துப் பூட்டி - செம்பொன் மாலையைக் சீவகன் மார்பிலே அணிந்து, அடி தொழுது இறைஞ்சி நின்றாள் - அவன் அடியிலே தாழ்ந்து வணங்கி நின்றாள். மாலை அவனது முடிகூடாத கருநெறி பயின்ற குஞ்சி கழுத்தின் மேல் அலைந்து கிடக்க, அதன்மேல் முதலில் வீழ்ந்து, பின்பு, கழுத்திலே விழுந்தமை தோன்ற மேகம் உவமை கூறினார். வீழ்வது பாடமாயின் காலமயக்கம்
739. செம்மல ரடியு நோக்கித்
திருமணி யல்கு னோக்கி
வெம்முலைத் தடமு நோக்கி
விரிமதி முகமு நோக்கி
விம்மிதப் பட்டு மாதோ
விழுங்குவான் போல வாகி
மைம்மலர்த் தடங்க ணங்கை
மரைமலர்த் தேவி என்றான்.
பொருள் :செம்மலர் அடியும் நோக்கி - சிவந்த மலரனைய அடிகளையும் பார்த்து; அல்குல் திருமணி நோக்கி - அல்குலின் மேல் அழகிய மேகலை மணியையும் பார்த்து; வெம்முலைத் தடமும் நோக்கி - விருப்பமூட்டும் முலைகளையும் பார்த்து; விரிமதி முகமும் நோக்கி - முழுமதியனைய முகத்தையும் பார்த்து; விம்மிதப்பட்டு, விழுங்குவான் போல ஆகி - வியப்புற்று அவளை விழுங்குவான்போலப் பார்த்தவனாகி; மைம்மலர்த் தடங்கண் நங்கை - மையுண்ட மலரனைய பெருங்கண்களையுடைய இவள்; மரை மலர்த் தேவி என்றான் - தாமரை மலரில் திருவே என்று கருதினான்.
விளக்கம் : அடி நிலந் தீண்டியும், ஆடை மாசேறியும், மாலை வாடியும், கண் இமைத்தும் இருக்கக் கண்டு ஐயம் நீங்கினான். விம்மிதம் - வியப்பு; அஃதாவது பிறர்கண் தோன்றிய புதுமையாற் பிறந்த மருட்கை யென்னும் மெய்ப்பாடு. இது தனக்கே பான்மையாயினமையின் தன் கண் மறைந்து நின்ற வேட்கை புலப்பட்டு மனத்தினையும் கண்ணினையும் அடிதொட்டு முடிகாறுஞ் செலுத்தினமை கூறிற்று. இவன் இவ்வாறு கருதி வீணை யொழிந்து அயர்தலாகிய கையாறுற்றிருந்தமை, மேலே, தார்ப்பொலி மார்பன் ஓர்த்து (சீவக. 758) என்றதனானுணர்க. ( 247 )
740. கோதையுந் தோடு மின்னக் குண்டலந் திருவில் வீச
மாதரம் பாவை நாணி மழைமினி னொசிந்து நிற்பக்
காதலந் தோழி மார்கள் கருங்கயற் கண்ணி னாளை
யேதமொன் றின்றிப் பூம்பட் டெந்திர வெழினி வீழ்த்தார்.
பொருள் :கோதையும் தோடும் மின்ன - மலர் மாலையும் தோடும் ஒளிரவும்; குண்டலம் திருவில் வீச - குண்டலம் வானவில் லொளியைப் பொழியவும்; மாதர் அம் பாவை நாணி - காதலூட்டும் அழகிய பாவை போல்வாள் நாணமுற்று; மழை மினின் ஒசிந்து நிற்ப - முகிலிடை மின்போல நுடங்கி நிற்பக் (கண்டு); ஏதம் ஒன்று இன்றி - நாணத்தால் வருங் குற்ற மெதுவும் இல்லாமல், காதல் அம் தோழிமார்கள் - அன்புறுதோழியர்; பூம்பட்டு எந்திர எழினி வீழ்த்தார் - பூம்பட்டாலாகிய பொறித்திரையை விடுத்தனர்.
விளக்கம் : தோட்டின் ஒளி கோதையிலே எறிப்ப நிற்றலின், கோதையும் தோடும் மின்ன என்றார். கண்ணினாளை: உருபு மயக்கம்.
( 248 )
741. வெள்ளிலை வேற்க ணாளைச்
சீவகன் வீணை வென்றா
னொள்ளிய னென்று மாந்த
ருவாக்கடல் மெலிய வார்ப்பக்
கள்ளராற் புலியை யேறு
காணிய காவன் மன்ன
னுள்ளகம் புழுங்கி மாதோ
வுரைத்தனன் மன்னர்க் கெல்லாம்.
பொருள் : வெள் இலை வேல்கண்ணாளைச் சீவகன் வீணை வென்றான் - வெற்றிலை போலும் முக வேலனைய கண்ணாளைச் சீவகன் வீணையாலே வென்றான்; ஒள்ளியன் என்று - சிறப்புடையன் என்றுரைத்து; உவாக்கடல் மெலிய மாந்தர் ஆர்ப்ப - நிறை உவா நாளிற் கடலும் தோல்வியுற மக்களெல்லாரும் ஆரவாரிக்க; காவல் மன்னன் உள்ளகம் புழுங்கி - உலகங் காக்குங்கட்டியங்காரன் மனம் புழுங்கி; கள்ளரால் புலியை ஏறு காணிய - கள்ளர்களாற் புலியை எறிதல் காண வேண்டி; மன்னர்க்கெல்லாம் உரைத்தனன் - வேந்தர்க ளெல்லோரையும் பார்த்து விளம்பினன்.
விளக்கம் : ஒள்ளியன்: திசைச்சொல். காவல் மன்னன்: இகழ்ச்சி. கள்ளர வா புலியைக் குத்து என்பது பழமொழி. தன்னால் வெல்ல வியலாத சீவகனைத் தன் பழம்பகையான மன்னர்களைக் கொண்டு வெல்லக் கருதினான் என்பது கருத்து. வேறு காணிய என்றும் பாடம். ( 249 )
742. வடதிசைக் குன்ற மன்ன
வான்குல மாசு செய்தீர்
விடுகதிர்ப் பருதி முன்னர்
மின்மினி விளக்க மொத்தீர்
வடுவுரை யென்று மாயும்
வாளமர் அஞ்சி னீரேன்
முடிதுறந் தளியிர் போகி
முனிவனம் புகுமி னென்றான்.
பொருள் : வடதிசைக் குன்றம் அன்ன வான் குலம் மாசு செய்தீர் - இமயமலை அனைய சிறப்புற்ற அரச மரபுக்குக் குற்ற முண்டாக்கினீர்; விடுகதிர்ப் பருதி முன்னர் மின்மினி விளக்கம் ஒத்தீர் - ஞாயிற்றின் ஒளிக்கு முன்னர் மின்மினி ஒளி போன்றீர்; வாள் அமர் அஞ்சினீரேல் - வாட்போருக்கு அஞ்சினீரெனின்; வடுஉரை என்று மாயும் - பழிச்சொல் எப்போது மறையும்; அளியிர் முடிதுறந்து போகி முனிவனம் புகுமின் என்றான் - இரங்கத் தகுந்த நீவிர் அரசை விடுத்துச் சென்று முனிவர் தவவனத்தை யடைந்து தவம புரிவீராக என்றான்.
விளக்கம் : வணிகன் மகளை அரசன் மணம் புரிவது தகும்; அரசன் மகளை வணிகன் புரிதல் மாசுடைத்து என்னும் வழக்குப்பற்றி மாசு செய்தீர் என்றான். எவற்றினும் உயர்ந்து திகழுவது நம்மரசகுலம் என்பான் வடதிசைக்குன்றம் அன்ன வான்குலம் என்றான்.
இனி, இச்சீவகன் ஒளியே உலகெலாம் பரவ நும்மொளி மழுங்கும் என்பான், விடுகதிர்ப் பருதி முன்னர் மின்மினி விளக்கம் ஒத்தீர் என்றான். இனி இப்பழிப்பட்ட நுமக்கிவ்வுலகில் இன்பமும் இல்லை என்பான் முனிவனம் புகுமின் என்றான். ( 250 )
743. முல்லைப்பூம் பந்து தன்னை
மும்மதக் களிற்று வேலிக்
கொல்லைப்பூங் குன்றஞ் செய்தீர்
குங்குமக் குழங்கன் மாலை
மல்லுப்பூத் தகன்ற மார்பீர்
புகழெனும் போர்வை போர்த்துச்
செல்வப்பூ மகளு நாளை
அவனுழைச் செல்லு மென்றான்.
பொருள் : மல்லுப் பூத்து அகன்ற குங்குமக் குழங்கல் மாலை மார்பீர்! - மற்போரில் மலர்ந்தகன்ற, குங்குமமுடைய மணமுறுமாலை யணிந்த மார்பீர்!; முல்லைப் பூம்பந்து தன்னை மும்மதக் களிற்று வேலிக் கொல்லைப் பூங்குன்றம் செய்தீர்! - முல்லை மலர்ப் பந்தை (கையாற் கசக்கி யெறியாமல்) மும்மதக்களிற்றை வேலியாகவுடைய காட்டிலே அழகிய மலையாக ஆக்கிவிட்டீர்; செல்வப் பூமகளும் புகழெனும் போர்வை போர்த்து - செல்வத் திருமகளும் புகழாகிய போர்வையைப் போர்த்து; நாளை அவனுழைச் செல்லும் என்றான் - நாளைக்கு அவனிடம் செல்வாள் என்றான்.
விளக்கம் : நீர் போருக் கஞ்சிக் கலுழ வேகன் மகளைக் கொடுத்தலின், யான் நினைத்த அளவாய் என்கீழ் வாழ்வானை எனக்கு நிலை குலைத்தல் அரிதாக்கினீர் என்றான். முல்லைப் பூப்பந்தென்றான் இப்பொழுதே அவனை வெல்லுதல் எளிது என்பது தோன்ற. மல்லுப்பூத்தகன்ற மார்பீர் என்றான், நும் வலிமையையும் நீயிர் இப்போது நினைந்து கொண்மின் என்பது தோன்ற. இதனால் அரசருடைய சினத்தைத் தூண்டுகின்றான். ( 251 )
744. திருமக ளிவளைச் சேர்ந்தான் றெண்டிரை யாடை வேலி
யிருநில மகட்குஞ் செம்பொ னேமிக்கு மிறைவ னாகுஞ்
செருநிலத் திவனை வென்றீர் திருவினுக் குரியீ ரென்றான்
கருமன நச்சு வெஞ்சொற் கட்டியங் கார னன்றே.
பொருள் : கருமனம் நஞ்சு வெஞ்சொல் கட்டியங்காரன் - கொடிய மனத்தினையும் நஞ்சு கலந்த கொடிய சொல்லையும் உடைய கட்டியங்காரன்; திருமகள் இவளைச் சேர்ந்தான் - திருமகளாகிய இவளை அடைந்தவன்; தெண் திரை ஆடை வேலி இருநில மகட்கும் செம்பொன் நேமிக்கும் - தெள்ளிய அலைகடலை ஆடையாகவும் வேலியாகவும் உடைய பெருநில மகளுக்கும் செம்பொன் கொண்ட சக்கரவாளகிரிக்கும்; இறைவன் ஆகும் - அரசன் ஆவான்; செருநிலத்து இவனை வென்றீர் - (ஆகையால்) போர்க்களத்தே இவனை வென்றீரெனின்; திருவினுக்கு உரியீர் என்றான் - (முதற்கூறிய) செல்வத்துக்கு உரியீராவீர் என்றான்.
விளக்கம் : நல்லிலக்கணமுழுதும் அமைந்த இவளை எய்தினோர் எல்லாச் செல்வமும் எய்துதல் ஒருதலை என்பான், திருமகள் இவளைச் சேர்ந்தான் நிலமகட்கும் நேமிக்கும் இறைவன் ஆகும் என்றான். நேமி. சக்கரவாளகிரி; என்றது தேவருலகிற்கும் என்றவாறு. இதனால் அரசருடைய ஆசையைத் தூண்டுகின்றான். ( 252 )
745. அனிச்சப்பூங் கோதை சூட்டி
னம்மனை யோவென் றஞ்சிப்
பனிக்குநுண் ணுசுப்பிற் பாவை
யொருத்திநாம் பலரென் றெண்ணித்
துனித்துநீர் துளங்கல் வேண்டா
தூமணிச் சிவிறி நீர்தூய்த்
தனிக்கயத் துழக்கி வென்றீர்
தையலைச் சார்மின் என்றான்.
பொருள் : அனிச்சப் பூங்கோதை சூட்டின் - அனிச்ச மலர்மாலையைச் சூட்டினும்; அம்மனையோ! என்று அஞ்சிப் பனிக்கும் - அம்மாவோ! என்று அச்சமுற்று நடுங்கும்; நுண் நுசுப்பின் பாவை ஒருத்தி - நுண்ணிடைப் பாவையாள் ஒருத்தியே; நாம் பலர் என்று எண்ணி - நாமோ பலருளோம் (எனவே நம்மிற் போர் செய்ய வேண்டுமோ) என்று நினைத்து; நீர் துனித்துத் துளங்கல் வேண்டா - நீர் வெறுத்து மனங்கலங்க வேண்டா; தூமணிச் சிவிறி நீர் தூய் - தூய மணித்துருத்தியினாலே நீரைத் தூவி; தனிக் கயத்து உழக்கி வென்றீர் - தனியே குளத்திலே பொருது வென்றீர்கள்; தையலைச் சார்மின் என்றான் - தத்தையை அடைவீர் என்றான்.
விளக்கம் : துணியலாகாமையிற் பன்மையாற் கூறினான். இதன்கண் தத்தையின் எழிலை விதந்தோதி அரசர்தம் காமக்குணத்தைத் தூண்டுதல் உணர்க. ( 253 )
746. வெந்திற லாளன் கூற
வேகமோ டுரறி மன்னர்
பந்தணி விரலி னாடன்
படாமுலைப் போகம் வேண்டிக்
கந்தெனத் திரண்ட திண்டோட்
கந்துகன் சிறுவன் காயு
மைந்தலை யரவின் சீற்றத்
தாரழல் குளிக்க லுற்றார்.
பொருள் :வெந்திற லாளன் கூற - கொடியவன் இவ்வாறு கூற; பந்து அணி விரலினாள் தன் படாமுலைப் போகம் வேண்டி - பந்து பயிலும் விரலினாளின் சாயாத முலைகளின் இன்பத்தை விரும்பி; மன்னர் வேகமொடு உரறி - அரசர்கள் சினங்கொண்டு முழங்கி; கந்து எனத் திரண்ட திண்தோள் - தூணெனத் திரண்ட திண்ணிய தோள்களையுடைய; கந்துகன் சிறுவன் - சீவகன் ஆகிய; காயும் - சினந்த; ஐந்தலை அரவின் சீற்றத்து ஆரழல் குளிக்கல் உற்றார் - ஐந்தலைப் பாம்பின் சீற்றமாகிய பெரு நஞ்சிலே முழுகத் தொடங்கினர்.
விளக்கம் : தானும் நந்தட்டனும் ஒரு தலையும், பதுமுகன் ஒழிந்த தோழர்கள் மூவரும் மூன்று தலையும், நபுலனும் விபுலனும் ஒருதலையுமாகப் படைவகுத்தெழுதலின், ஐந்தலையரவு என்றார். அது, சதுமுகமாகச் சேனை நமர்தலைப் பெய்க (சீவக. 766) என்பதனானுணர்க. ( 254 )
747. பண்ணியல் யானை மேலான்
பதுமுகன் பரவைத் தானே
கண்ணிய துணர்ந்து கல்லாக்
கட்டியங் கார னெஞ்சி
லெண்ணிய தெண்ணி மன்ன
ரிகன்மலைந் தெழுந்த போழ்திற்
றண்ணிய சிறிய வெய்ய
தழற்சொலால் சாற்று கின்றான்.
பொருள் : பண்இயல் யானை மேலான் பதுமுகன் - புனைதல் பொருந்திய யானைமேல் அமர்ந்த பதுமுகன்; பரவைத் தானை கண்ணியது உணர்ந்து - பரவிய அரசர் படை போரில்இறங்க நினைத்ததையும் அறிந்து; கல்லாக் கடடியங்காரன் நெஞ்சில் எண்ணியது எண்ணி - மேலும் கல்வியிலாத கட்டியங்காரன், கள்ளராற் புலியை ஏறு காணிய உள்ளத்திற் கருதியதையும் ஆராய்ந்து; மன்னர் இகல் மலைந்து எழுந்த போழ்தில் - அரசர்கள் போரிலே மாறுபட்டு எழுந்த அளவிலே; தண்ணிய சிறிய வெய்ய தழற் சொலால் சாற்றுகின்றான் - சாம பேத தான தண்டங் குறித்த சொற்களால் உகைகின்றான்.
விளக்கம் : சாமம் : இனிதாகக் கூறுவதால் தண்ணிய சொல், தண்ணிய - குளிர்ந்த. பேதம்: மென்மையாலும் வன்மையாலும் உள்ளத்தைப் பேதித்தல். அது பொய்யும் மெய்யும் கூறிப் பேதித்தலிற், சிறிய என்றார். தானம் : பகைவர் மனம் மகிழக் கொடுத்தல். அஃது அவர் விரும்பப்படுதலின், வெய்ய என்றார். வெய்ய - விரும்பிய. நின் வெய்ய னாயின் (கலி. 107) என்றாற்போல. தண்டம் : பின்பு அவர் ஆகாமல் அழித்தே விடுதலின், தழல் என்றார். ( 255 )
748. இசையினி லிவட்குத் தோற்றாம்
யானையால் வேறு மென்னி
னிசைவதொன் றன்று கண்டீ
ரிதனையா னிரந்து சொன்னேன்
வசையுடைத் தரசர்க் கெல்லாம்
வழிமுறை வந்த வாறே
திசைமுகம் படர்க வல்லே
தீத்தொட்டாற் சுடுவ தன்றே.
பொருள் : இவட்கு இசையினில் தோற்றாம் - இவளுக்கு இசையினால் தோற்ற நாம்; யானையால் வேறும் என்னின் இசைவது ஒன்று அன்று - யானையால் வெல்வோம் என்று கருதின் அது பொருந்தக் கூடிய தொன்றன்று; வசை உடைத்துக் கண்டீர் - மற்றும் அது பழியுடைய தென்றறிவீர்களாக; தீத்தொட்டால் மட்டும் சுடுவதன்றோ? (ஆனால், பிறர்மனை நயக்கும் தீ நினைப்பினும் சுடுவதாகும்) இதனை யான் இரந்து சொன்னேன் - இச் செயலை (நீரே பாவமும் பழியு மென்றறிவீராயினும் நுமக்கு மாறாய யான் நும் நலங்கருதி) வேண்டிக் கூறினேன்; வழிமுறை வந்த ஆறே திசைமுகம் வல்லே படர்க - (இனி) அடைவே வந்த வழியே திக்கிடங்களிலே விரையச் செல்வீராக.
விளக்கம் : (யானையாகிய) விலங்கறியும் நுமக்கின் றென்றான். யானை நாதத்தில் தோன்றுதலின் அதற்கு வணங்குதல் இயல்பு.
யானையால் வேறும் என்றது போர் செய்து அதனால் வெல்வேம் என்றவாறு. இதற்கு நச்சினார்க்கினியர் இசைக்கு வணங்கும் யானை என வேண்டாது விரிக்கின்றார். தீண்டினாற் சுடுவதன்றே தீ யென்பது; இப் பிறர்மனை நயக்கின்ற தீவினையாகிய தீ நினைப்பினும் சுடுவது ஒன்று கண்டீர். எனவரும் நச்சினார்க்கினியர் உரை மிகவும் நுண்ணிதாம். ( 256 )
749. தோளினான் மிடைந்து புல்லுந்
தொண்டைவா யமிர்தம் வேட்டோர்
வாளினான் மலைந்து கொள்ளின்
வாழ்கநுங் கலையு மாதோ
கோளுலாஞ் சிங்க மன்னான்
கொடியினை யெய்தப் பெற்றீர்
தாளினால் நொய்யீ ராகித்
தரணிதா விடுமி னென்றான்.
பொருள் : வேட்டோர் தோளினால் மிடைந்து புல்லும் தொண்டை வாய் அமிர்தம் - இன்பத்தை விரும்பினோர் தோளினால் நெருங்கித் தழுவிப் பெறுகின்ற அமிர்தத்தை; வாளினால் மலைந்து கொள்ளின் வாழ்க நும் கலையும் - வாளாற் பொருது வலிதிற் பெறின் நுங்கள் கலையும் நூறுபெற்று வாழ்வதாக! ; கோள் உலாம் சிங்கம் அன்னான் கொடியினை எய்த - கொலையில் வல்ல சிங்கம் போன்ற சீவகன் தத்தையினை அடைய; தரணி பெற்றீர் - நீர் உலகினைப் பெற்று நின்றீர்; தாளினால் நொய்யீர் ஆகி-இனி முடியா முயற்சியில் மெலிவீராகி; தா விடுமின் என்றான் - (அதனால் உண்டாகும்) வருத்தத்தைக் கைவிடுவீராக என்றான்.
விளக்கம் : தா - வருத்தம். இவை இரண்டு செய்யுளும் சாமம். விலிந்து கொள்கின்ற இராக்கதம், முன்னைய மூன்றும் கைக்கிளைக் குறிப்பே (தொல் - களவு 14) என்பதனால், ஒருதலைக் காமமாகியகைக்கிளையாய் அது புணர்ச்சிக்குச் சிறப்பின்மை யுணர்ந்திலீராதலின் நீர் கற்ற இயலும் கெடுக என்றான். வாழ்க! என்பது இகழ்ச்சி. ( 257 )
750. நாறுமும் மதத்தி னாலே
நாகத்தை யிரிக்கும் நாக
மாறிய சினத்த தன்றி
யதிங்கத்தின் கவளங் கொண்டால்
வேறுநீர் நினைந்து காணீர்
யாவர்க்கும் விடுக்க லாகா
நாறித்தே னொழுகுங் கோதை
நம்பிக்கும் அன்ன ளென்றான்.
பொருள் : நாறும் மும்மதத்தி னாலே நாகத்தை இரிக்கும் நாகம் - மணங் கமழும் தன் மும் மதத்தாலே மற்றை யானைகளை ஓட்டும் ஒரு களிறு; ஆறிய சினத்தது அன்றி அதிங்கத்தின் கவளம் கொண்டால் - மிக்க சினத்துடன் அதிமதுரத் தழையைக் கவளமாகக் கையிலே கொண்டால்; யாவர்க்கும் விடுக்கல் ஆகா - அக்குளகை எவராலும் கொள்ளுதல் அரிது; நாறித்தேன் ஒழுகும் கோதை நம்பிக்கும் அன்னள் - மணங் கமழ்ந்து தேன் பெருகும் கோதையாள் நம்பிக்கும் அத் தகையள்; வேறு நீர் நினைந்து காணீர் என்றான் - நீவிர் தனியே ஆராய்ந்து காண் மின் என்றான்.
விளக்கம் : குளகுபோல் மதத்தை விளை விப்பவள் இவளும் ஆதலின், விடுத்தல் அரிது என்றான். நாகம் - யானை. அதிங்கம் - அதிமதுரத்தழை. வேறு நீர் நினைந்து காணீர் என்றது நீயிர் எண்ணாது துணிகின்றீர் என்று இகழ்ந்த படியாம். ( 258 )
751. இளவள நாகு புல்லி யினத்திடை யேறு நின்றா
லுளவளங் கருதி யூக்க லுழப்பெரு துடைய தாமே
தளவள முகைகொள் பல்லாட் சீவகற் றழுவி நின்றாற்
கொளவுளைந் தெழுவ தல்லாற் கூடுத னுங்கட் காமோ.
பொருள் :வள இள நாகு புல்லி ஏறு இனத்திடை நின்றால் - அழகிய இளநாகைத் தழுவி ஒரு காளை தன் திரளிலே நின்றால்; உள வளம் கருதி ஊக்கல் உழப்பு எருதினுக்கும் ஆமோ? - அதற்குரிய அழகை நுகரக் கருதி முயறல் உழுது களைத்த எருதுக்கும் இயலுமோ?; வளத் தள முகை கொள் பல்லாள் சீவகன் தழுவி நின்றால் - அழகிய முல்லையரும்பினைக் கொண்ட முறுவலாளைச் சீவகன் தழுவி நின்றால்; கொள உளைந்து எழுவது அல்லால் கூடுதல் நுங்கட்கு ஆமோ? - கொள்வதற்கு வருந்திப் போவதை யன்றித் தழுவுதல் உங்களுக்கு இயலுமோ?
விளக்கம் : ஏறுபோல் எருது நுகராமையின், அதனோடு அரசரை உவமித்தான். இனம் என்றது பதுமுகன் முதலியோரை. உழப்பெருது - உழுதிளைத்த காளை. ( 259 )
752. எழுந்துவிண் படருஞ் சிங்கம்
பெட்டைமே லிவர்ந்து நின்றான்
மழுங்கமேற் சென்று பாய்தன்
மறப்புலி தனக்கு மாமோ
கொழுங்கயற் கண்ணி னாளைச்
சீவக குமரன் சூழ்ந்தா
லழுங்கச்சென் றணைதல் பேய்காள்
அனங்கற்கு மாவ துண்டே.
பொருள் : எழுந்து விண்படரும் சிங்கம் பெட்டைமேல் இவர்ந்து நின்றால் - எழுந்து விண்ணிற் படரும் சிங்கம் பெட்டையை விரும்பி நின்றால்; மேற்சென்று மழுங்கப் பாய்தல் மறப்புலி தனக்கும் ஆமோ?- மேலே சென்று அது கெடுமாறு பாய்தல் வீரப்புலிக்கும் இயலுமோ?; கொழுங்கயல் கண்ணினாளைச் சீவக குமரன் சூழ்ந்தால் - வளமுறுங் கயற் கண்ணாளைச் சீவகன் தழுவி நின்றால்; பேய்காள்! அழுங்கச் சென்று அணைதல் அனங்கற்கும் ஆவது உண்டே? - பேய்களே! சீவகன் வருந்தச் சென்று தழுவுதல் காமனுக்கும் ஆவதொரு காரியம் இல்லை.
விளக்கம் : உழப் பெருது என வெறுக்கக் கூறியவன் புலி என உயர்த்துக் கூறி அவ்விதமேனும் விடுவித்தல் அரிது என்றான். ஒட்டகம் குதிரை கழுதை மரை யிவை - பெட்டை யென்னும் பெயர்க்கொடைக் குரிய (தொல் - மரபு - 52) என்பதனுள், கொடை என்றதனாற் சிங்கத்திற்கும் பெட்டை கொள்க. தண்டித்து விடுக்க வேண்டுதலின், பேய்காள் என்றான். ( 260 )
753. மத்திரிப் புடைய நாகம்
வாய்வழி கடாத்த தாகி
யுத்தமப் பிடிக்க ணின்றா
லுடற்றுதல் களபக் காமே
பத்தினிப் பாவை நம்பி
சீவகன் பால ளானா
லத்திறங் கருதி யூக்க
லரசிர்கா ணுங்கட் காமோ.
பொருள் :மத்திரிப்பு உடைய நாகம் வாய்வழி கடாத்தது ஆகி உத்தமப் பிடிக்கண் நின்றால் - செற்றமுடைய களிறு மிகுந்து பொழியும் மதமுடையதாகி நல்லிலக்கணப் பிடியினிடம் நின்றால்; களபக்கு உடற்றுதல் ஆமே? - யானைக் கன்றிற்கு அதனைக் கெடுத்தல் இயலுமோ?; பத்தினிப் பாவை நம்பி சீவகன் பாலள் ஆனால் - கற்புறு நங்கை தத்தை நம்பியாகிய சீவகனுக்குரியள், எனின்; அரசிர்காள்! அத்திறம் கருதி ஊக்கல் நுங்கட்கு ஆமோ? - அரசர்களே! அவளைப் பெறுந் திறத்தை நீர் கருதி முயறல் நுமக்குக் கூடுமோ?
விளக்கம் : அரசராயினும் கலைகளாலும் ஆண்மை முதலியவற்றாலுங் குறைபாடு உடைமையிற் பெறுதல் அரிது என்றான். மத்திரிப்பு - சினம். நாகம் - யானை. களபக்கு - யானைக்கன்றிற்கு; களபத்திற்கு எனற்பாலது சாரியை பெறாது உருபு புணர்ந்து இங்ஙனம் நின்றது. ( 261 )
754. தூமத்தாற் கெழீஇய கோதை
தோட்டுணை பிரித்தல் விண்மேற்
றாமத்தாற் கெழீஇய மார்ப
னிந்திரன் றனக்கும் ஆகா
தேமுற்றீ ரின்னும் கேண்மி
னிரதியைப் புணர்து மென்று
காமத்தாற் கெழுமி னார்க்குக்
காமனிற் பிரிக்க லாமே.
பொருள் : தூமத்தால் கெழீஇய கோதை தோள்துணை பிரித்தல் - அகிற்புகை கழுமிய கோதையாளின் தோளின் துணையாகிய சீவகனைப் பிரித்தல்; விண்மேல் தாமத்தால் கெழீஇய மார்பன் இந்திரன் தனக்கும் ஆகாது - வானுலகிற் கற்பக மலர் பொருந்திய மார்பன் இந்திரனுக்கும் இயலாது; ஏம் உற்றீர்! இன்னும் கேண்மின்! - மயக்கமுற்றவர்களே! இன்னும் கேளுங்கள்!; இரதியைப் புணர்தும் என்று காமத்தால் கெழுமினார்க்கு - இரதியைக் கூடுவோம் என்று காமத்தினாற் பொருந்தினவர்கட்டு; காமனின் பிரிக்கல் ஆமே - காமனிடமிருந்து அவளைப் பிரித்தல் கூடுமோ?
விளக்கம் : வானவனாலும் சீவகனைப் பிரித்தல் அரிதென்று கூறிப் பின் இவளைப் பிரித்தலும் அரிது என்றான். இவை ஐந்து செய்யுளும் பேதம்.ஏமுற்றீர் - மயக்கங்கொண்டீர். ( 262 )
755. எம்மைநீர் வெல்லப் பெற்றீர்
வென்றபி னிருந்த வேந்த
னும்மையும் வேறு செய்து
நும்முளே பொருது வீந்தால்
வெம்மைசெய் துலக மெல்லா
மாண்டிட விளைக்கும் நீதி
யம்மமற் றதனை யோரீ
ரவன்கருத் தன்ன தென்றான்.
பொருள் : எம்மை நீர் வெல்லப் பெற்றீர் - எம்மை நீர் ஒருவாற்றான் வென்றீரெனின்; வென்றபின் இருந்த வேந்தன் நும்மையும் வேறு செய்து - வென்ற பிறகு இங்கிருந்த கட்டியங்காரன் உங்களையும் வேறு படுத்தி; நும் முளே பொருது வீந்தால் - உங்களிடையே பொருது வீழ்ந்தீராயின்; உலகம் எல்லாம் வெம்மை செய்து ஆண்டிட நீதி விளைக்கும் - உலகத்தை எல்லாம் கொடுமை செய்து ஆள ஒரு முறைமையை உண்டாககுவான்; அதனை ஓரீர் - அந்த எண்ணத்தை நீவிர் அறியீர்!; அவன் கருத்து அன்னது என்றான் - கட்டியங்காரன் கருத்து எப்போதும் அத்தகையதே என்றான்.
விளக்கம் : அம்ம, மற்று: அசைநிலைகள். அரசர் உலகினைக் கட்டியங்காரன் கொள்ளாமல் அவரே பெறுமாறு கூறினதால் இச்செய்யுள் தானம். ( 263 )
756. சொற்றிற லன்றி மன்னீர்
தொக்குநீர் காண்மி னெங்கள்
விற்றிற லென்று வில்வாய்
வெங்கணை தொடுத்து வாங்கிக்
கற்றிரள் கழிந்து மண்ணுட்
கரந்தது குளிப்ப வெய்திட்
டிற்றெமர் கல்வி யென்றா
னிடியுரு மேற்றொ டொப்பான்.
பொருள் : மன்னீர்!; - அரசர்களே!; எங்கள் சொல் திறல் அன்றி - எங்கள் சொல் வன்மையன்றி; வில்திறல் நீர் தொக்குக் காண்மின் என்று - வில்வன்மையையும் நீவிர் திரண்டிருந்து காண்பீராக என்றுரைத்து; இடி உரும் ஏற்றொடு ஒப்பான் - இடிக்கும் இடியேறு போன்ற பதுமுகன்; வில்வாய் வெங்கணை தொடுத்து வாங்கி - வில்லிலே கொடுங்கணை ஒன்றைப் பூட்டி இழுத்து; அது கல் திரள் கழிந்து மண்ணுள் கரந்து குளிப்ப எய்திட்டு - அது கல் திரளைக் கழிந்து மண்ணிலே மறைய எய்து காட்டி; எமர் கல்வி இற்று என்றான் - எங்கள் கல்வியெல்லாம் இத்தகையது என்றான்.
விளக்கம் : அச்சமே கீழ்களது ஆசாரம் என்பதுபற்றி எம்மாற்றல் இற்று என்று கண் கூடாக் காட்டினன் என்பது கருத்து. ( 264 )
757. ஆழியங் கழனி தன்னு
ளம்பொடு கணையம் வித்திச்
சூழ்குடர் பிணங்கண் மல்க
விளைத்தபின றொழுதிப் பல்பேய்க்
கூழ்படு குருதி நெய்யி
னிறைச்சிச்சோ றூட்டி வென்றி
வீழ்தர வேட்டு நின்றா
ரெய்துப வெகுளல் வேண்டா.
பொருள் : ஆழி அம் கழனி தன்னுள் - சக்கர வியூகமாக வகுத்த படையாகிய விளைநிலத்தே; அம்பொடு கணையம் வித்தி - அம்பையுந் தண்டாயுதத்தையும் விதைத்து; சூழ்குடர்ப் பிணங்கள் மல்க விளைத்தபின் - குடர்கள் சூழ்ந்த பிணங்களாகிய நெல்லை நிறைய விளைவித்தபிறகு; ஊழ்படு குருதி நெய்யின் இறைச்சிச் சோறு பல் பேய்க்கு ஊட்டி - முறைமைப்படியுள்ள, குருதி நெய்யுடன் ஊன் சோற்றைப் பல பேய்களுக்கும் உண்பித்து; வென்றி வீழ்தர வேட்டு நின்றார் எய்துப - வென்றிமகள் விரும்பக் களம் கொண்டு நின்றவர்கள் இவளை அடைவர்; வெகுளல் வேண்டா - நீவிர் வீணே சினவுதல் வேண்டா.
விளக்கம் : இவை இரண்டும் தண்டம். ( 265 )
758. போர்ப்பறை முழங்கி யெங்கும்
பொருவளி புடைக்கப் பட்ட
கார்க்கடல் போன்று சேனை
கலக்கமோ டூரறி யார்ப்பத்
தார்ப்பொலி மார்ப னோர்த்துத்
தன்கையில் வீணை நீக்கி
வார்ப்பொலி முலையி னாட்கு
வாய்திறந் திதனைச் சொன்னான்.
பொருள் :பொருவளி புடைக்கப்பட்ட கார்க்கடல் போன்று - மோதுகின்ற காற்றினால் தாக்கப் பெற்ற கரிய கடலைப் போல; எங்கும் போர்ப் பறை முழங்கி - எங்கும் போர் முரசு அதிர்ந்து; சேனை கலக்கமோடு உரறி ஆர்ப்ப - படையிலுள்ளோர் கலக்கத்துடன் முழங்கி ஆரவாரிக்க; தார்ப்பொலி மார்பன் ஓர்த்து - (அதனை) மாலையாற் பொலிவுற்ற மார்பனான சீவகன் உணர்ந்து; தன் கையில் வீணை நீக்கி - தன்கையில் இருந்த யாழை வைத்துவிட்டு; வார்ப்பொலி முலையினாட்கு வாய்திறந்து இதனைச் சொன்னான் - வாராற் பொலிவு கொண்ட முலையையுடைய தத்தைக்கு வாய்திறந்து இதனைக் கூறினான்.
விளக்கம் : கலக்கம் - முன் நின்ற நிலைகுலைதல். தத்தையின் கவினைக் கண்டு கையாறுற்றிருந்தவன் (சீவக - 739) ஆரவாரம் உண்டானதைச் செவி கொடுத்து உணர்ந்தான். ஓர்ந்து என்பது ஓர்த்து என விகாரப்பட்டது. வீரத்தாற் காமங் கெட்டதென இரண்டன் சிறப்புங் கூறினார். ( 266 )
வேறு
759. தேய்ந்து நுண்ணிடை நைந்துகச் செப்பினைக்
காய்ந்த வெம்முலை யாய்நின கண்கள்போ
லாய்ந்த வம்பினுக் காரிரை யாகிய
வேந்தர் வேண்டிநின் றார்விம்ம னீயென்றான்.
பொருள் : நுண் இடை தேய்ந்து நைந்து உக - நுட்பமான இடை தேய்ந்து வருந்திக் கெட; செப்பினைக் காய்ந்த வெம்முலையாய்! - செப்பைக் காய்ந்த விருப்பமூட்டும் முலைகளையுடையாய்!; நின கண்கள்போல் ஆய்ந்த அம்பினுக்கு - உன்னுடைய கண்கள் போலத் தப்பாதவாறு ஆராய்ந்தெடுத்த அம்புகட்கு; ஆர் இரை ஆகிய - நல்லிரை யாவதற்கு; வேந்தர் வேண்டி நின்றார் - அரசர்கள் விரும்பி நின்றனர்; நீ விம்மல் என்றான் - நீ வருந்தாதே என்றுரைத்தான்.
விளக்கம் : சீவகன் கூற்றாலேயே இந்நிகழ்ச்சி கண்டு கலங்கித் தத்தை அழத்தொடங்கினள் என்பதனை இனிதின் தேவர் உணர்த்துதல் உணர்க. ( 267 )
760. அண்ணல் கூறலு மம்மனை யோவெனாத்
துண்ணெ னெஞ்சின ளாய்த்துடித் தாயிழை
கண்ணி னீர்முலை பாயக் கலங்கினாள்
வண்ண மாக்கவின் சொல்லொடு மாய்ந்ததே.
பொருள் : அண்ணல் கூறலும் - சீவகன் அதனைக் கூறினவுடன்; ஆயிழை அம்மனையோ எனாத் துண்என் நெஞ்சினளாய்த் துடித்து - தத்தை அம்மாவோ என்று திடுக்குற்ற உள்ளத்தளாகித் துடித்து; கண்ணின் நீர் முலைபாயக் கலங்கினாள் - கண்ணீர் பெருகி முலைகளிற் பாய அழுது கலங்கினாள்; சொல்லொடு வண்ண மாக்கவின் மாய்ந்தது - அப்போது சொல்லுடன் அவளது அழகு அறுதியாகக் கெட்டது.
761. மேவி நம்பிக்கு வெம்பகை யாக்கிய
பாவி யேனுயிர் பாழுடல் பற்றுவிட்
டாவி யோநட வாயென் றழுதுதன்
காவி வாட்கண் கலங்க வதுக்கினாள்.
பொருள் : நம்பிக்கு மேவி வெம்பகை ஆக்கிய பாவியேன் - நம்பிக்கு உறவாக வந்து கடிய பகையை விளைவித்த பாவியேனுடைய; உயிர் பாழுடல் பற்றுவிட்டு நடவாய் - உயிரே! நீ பாழுடலைக் கைவிட்டுப் போகாய்; ஆவியோ என்று அழுது - நீயும் ஓர் ஆவியோ என்று அழுது; தன் காவி வாள் கண் கலங்க அதுக்கினாள் - தன்னுடைய காவியனைய ஒளிமிகுங் கண்கள் கலங்குமாறு அடித்துக்கொண்டாள்.
விளக்கம் : பாவியேனது பாழுடல் என்றும் பாடம். இப் பாடமே சிறப்புடைத்து. ( 269 )
762. பாழி நம்படை மேலதிப் பாரெலா
நூழி லாட்டி நுடக்கிக் குடித்திடும்
வாழி நங்கைகண் டாயென்று வாட்கணீர்
தோழி தூத்துகிற் றோகையி னீக்கினாள்.
பொருள் :நங்கை! வாழி! - நங்கையே! வாழ்க!; பாழி நம்படை மேலது - வலிமிகும் நம்முடைய படை மேம்பட்டு நின்றது; இப் பாரெலாம் நூழில் ஆட்டி நுடக்கிக் குடித்திடும் - இஃது இவர்களையே அன்றி இவ்வுலகில் உள்ளோரை யெல்லாம் கொன்று குவித்து ஒன்றாக்கிக் கரைத்துக் குடித்திடும்; கண்டாய் என்று - இதனை நீ அறிவாயாக என்றுரைத்து; தோகையின் வாள்கண் நீர் தூத்துகில் தோழி நீக்கினாள் - தத்தையின் வாட்கண் நீரைத் தூய ஆடையினால் தோழி துடைத்தாள்.
விளக்கம் : தோகை - முன்றானையுமாம். ( 270 )
763. எங்கள் பெண்மையு மீர்மலர்த் தார்மன்னர்
தங்க ளாண்மையுஞ் சால்வது காண்டுமென்
றிங்கு வார்முர லுங்கலை யேந்தல்கு
னங்கை வாட்படை நங்கையைச் குழ்ந்ததே.
பொருள் :எங்கள் பெண்மையும் ஈர் மலர்த்தார் மன்னர் தங்கள் ஆண்மையும் - எங்கள் பெண் தன்மையினும் குளிர்ந்த மலர்த்தார் வேந்தர்களின் ஆண் தன்மையினும்; சால்வது காண்டும் என்று - சிறப்புடையது அறிவோம் என்று; இங்கு வார் முரலும் கலை - இவ்விடத்தில், நீண்ட, ஒலிக்கும் மேகலையை; ஏந்து அல்குல் - ஏந்திய அல்குலையுடைய; நங்கை வாள்படை - தத்தையின் வாளேந்திய பெண்படை; நங்கையைச் சூழ்ந்தது - தத்தையைச் சூழ்ந்து நின்றது.
விளக்கம் : இங்கு என்பது தத்தை யிருக்கும் இடம். ( 271 )
வேறு
764. கூன்களுங் குறளு மஞ்சிக்
குடர்வெந்து கொழும்பொற் பேழை
தான்கொளப் பாய வோடிச்
சாந்துக்கோய் புகிய செல்வ
தேன்கொள்பூ மாலை சூடித்
தாமமாய்த் திரண்டு நிற்ப
வான்பளிங் குருவத் தூணே
மறைபவு மாய வன்றே.
பொருள் : கூன்களும் குறளும் அஞ்சிக் குடர் வெந்து - (படையெழுச்சி கண்ட) கூனும் குறளும் நடுங்கிக் குடல் தீய்ந்து; கொழும் பொன் பேழை தான் கொளப் பாய ஓடி - வளமிகும் பொன் பெட்டி தங்களை உள்ளடக்கிக் கொள்ளுமென்று கருதி அதனுள்ளே பாய்கைக்கு ஓடியும்; சாந்துக் கோய் புகிய செல்வ - சாந்திருந்த பரண்களிலே புகுதற்குச் செல்வனவும்; தேன் கொள் பூமாலை சூடித் தாமமாய்த் திரண்டு நிற்ப - தேனுற்ற மலர் மாலைகளை அணிந்து மாலை வடிவமாகத் திரண்டு நிற்பனவும்; வான்பளிங்கு உருவத்தூணே மறைபவும் ஆய - சிறந்த பளிங்கினாலாகிய அழகிய தூணிலே மறைவனவும் ஆயின.
விளக்கம் : இச்செய்யுள் இனிய நகைச்சுவைக்கு இடனாதலுணர்க. இந்நிகழ்ச்சியைக் கண்ட சீவகன் முறுவலித்தலை அடுத்த செய்யுளிற் காண்க. ( 272 )
765. இங்கித நிலைமை நோக்கி
முறுவலித் தெரிபொன் மார்ப
னங்கையைக் காக்கும் வண்ண
நகாநின்று மொழிந்து பேழ்வாய்ச்
சிங்கந்தான் கடிய தாங்கோர்
செழுஞ்சிங்க முழுக்கிற் சீறிப்
பொங்கிமேற் செல்வ தேபோற்
பொலங்கழ னரலச் சென்றான்.
பொருள் : எரி பொன் மார்பன் - விளங்கும் பொன் மார்பன்; இங்கித நிலைமை நோக்கி - (படையெழுச்சியும் கூனுங் குறளும் அஞ்சியதும்) ஆகிய குறிப்பின் தன்மையைக் கண்டு; முறுவலித்து - நகைத்து; நங்கையைக் காக்கும் வண்ணம் நகாநின்று மொழிந்து - தத்தையைக் காக்கும் இயல்பை நகைமுகத்துடன் அவளுக்குக் கூறி; கடியது பேழ்வாய்ச் சிங்கந் தான் - கடிய தாகிய, பெருவாய்ச் சிங்கம் ஒன்று; ஆங்கு ஓர் செழுஞ் சிங்க முழக்கின் சீறி - ஆங்குத் தன்னால் அறியப்பட்ட கொழுத்த சிங்கங்களின் முழக்கைக் கேட்டு முழங்கி; பொங்கி மேல் செல்வதே போல் - கிளர்ந்து அவற்றின்மேற் போவது போல; பொலங் கழல் நரலச் சென்றான் - பொற்கழல் ஒலிக்கப் போனான்.
விளக்கம் : இங்கிதம் - குறிப்பு. கடியது ஆங்கோர் சிங்கந்தான் என மாறுக. இனி ஓர் - அசைச்சொல் எனினுமாம். நரல- ஒலிப்ப.
( 273 )
766. பதுமுக குமரன் மற்றிப் பாவையைக் காவ லோம்பி
மதுமுக மாலை நெற்றி மதகளி றுந்தி நிற்ப
நுதிமுக வாளும் வில்லு நுண்ணிலை வேலு மேந்திச்
சதுமுக மாகச் சேனை நமர்தலைப் பெய்க வென்றான்.
பொருள் : பதுமுக குமரன் மற்றுஇப் பாவையைக் காவல் ஓம்பி - பதுமுகன் வேறேயிருந்து இந் நங்கையைக் காத்தலைப் பேணி; மதுமுகம் மாலை நெற்றி மதகளிறு உந்தி நிற்ப - தேன் பொருந்திய மாலை அணிந்த நெற்றியை யுடைய மதயானையை (மண்டபத்தின் வாயில்வரை) செலுத்தி அதிலே நிற்க; நமர் நுதிமுக வாளும் வல்லும் நுண் இலை வேலும் ஏந்தி - நம்முடைய சுற்றத்தார், கூரிய வாளையும் வில்லையும் நுண்ணிய இலைமுக வேலையும் கைக்கொண்டு; சேனை சதுமுக மாகத் தலைப்பெய்க என்றான் - நம் சேனையை நான்கு வகையாக அவர் வகுத்த இடத்தே நிறுத்துக என்றான்
விளக்கம் : பதுமுனை ஒழிந்த தோழர் மூவர் மூன்று கை நபுல விபுலர் ஒருகை நான்கு (சீவக. 746. ஐந்தலை அரவு நோக்குக.)(274)
767. வட்டுடை மருங்குல் சேர்த்தி
வாளிரு புடையும் வீக்கித்
தட்டுடைப் பொலிந்த திண்டேர்த்
தனஞ்செயன் போல வேறிக்
கட்டளைப் புரவி சூழ்ந்து
கால்புடை காப்ப வேவி
யட்டுயிர் பருகுங் கூற்றங்
கோளெழுந் தனைய தொத்தான்.
பொருள் : வட்டு உடை மருங்குல் சேர்த்தி - வட்டுடையை இடையிற் கொண்டு; வாள் இருபுடையும் வீக்கி - உடைவாள்களை இருமருங்கினும் கட்டி; தட்டு உடைப் பொலிந்த திண்தோத் தனஞ்செயன் போல ஏறி - தட்டினையுடைய பொலிவுற்ற திண்ணிய தேரிலே அருச்சுனன்போல அமர்ந்து; கட்டளைப்புரவி சூழ்ந்து கால் புடை காப்ப ஏவி - பண்ணுறு புரவிகளின் மேல் அமர்ந்து, சூழவந்து, தேரின் ஆழியைக் காக்குமாறு பணித்து; உயிர் அட்டுப் பருகும் கூற்றம் - உயிரைக் கொன்று தின்னும் கூற்றுவன்; கோள் எழுந்தனையது ஒத்தான் - கொல்லு தலைக் கருதி எழுந்தாற் போன்றது போன்றான்.
விளக்கம் : வட்டுடை - போர்மறவர்க்குரிய ஒருவகை ஆடை; முழந்தாளளவாகச் செறிய உடுத்தும் உடை என்க. ( 275 )
768. புள்ளிரைப் பன்ன பொற்றார்ப்
புரவித்தே ரிரவி போலா
வுள்ளுருத் தெழுந்து பொங்கி
யுடல்சினங் கடவ நோக்கி
முள்ளெயி றிலங்க நக்கு
முடிக்குழா மன்னர் கேட்பக்
கள்ளவி ழங்கன் மார்பன்
கார்மழை முழக்கிற் சொன்னான்.
பொருள் : புள் இரைப்பு அன்ன பொன் தார்ப் புரவித் தேர் - பறவைகளின் குரல்போன் றொலிக்கும் பொற்கிண்கிணியணிந்த குதிரைகள் பூட்டிய தேரின்மேல்; இரவி போலா - ஞாயிறு போலமர்ந்து; உடல் சினம் உள் உருத்து எழுந்து பொங்கிக் கடவ நோக்கி- பொருகின்ற சீற்றம் உள்ளத்தில் வெம்மையுடன் எழுந்து பொங்கிச் செலுத்தப் பார்த்து; முள் எயிறு இலங்க நக்கு - கூரிய பற்கள் விளங்க நகைத்து; மன்னர் குழாம் கேட்ப - முடியணிந்த வேந்தர் திரள் கேட்கும்படி; கார் மழை முழக்கின் - கரிய முகிலின் முழக்கைப்போல; கள் அவிழ் அலங்கல் மார்பன் - தேன் விரியும் மாலை மார்பனான சீவகன்; சொன்னான் - கூறினான்.
விளக்கம் : சினம் உடல் கடவ என்று மாற்றிச், சினம்தன் மெய்யைச் செலுத்த என்று பொருளுரைப்பர் நச்சினார்க்கினியர். ( 276 )
769. முருகுலா முல்லை மாலை
மூப்பிலா முலையி னார்நும்
மருகுலாம் புலவி நோக்கத்
தமிர்தமின் றுகுப்ப கொல்லோ
கருதலாம் படிய தன்றிக்
கலதியம் பிவையுங் காய்ந்த
பொருதுலாம் புகழை வேட்டிவ்
வெஃகமும் புகைந்த வென்றான்.
பொருள் : பொருது உலாம் புகழை வேட்டு - போர் செய்தலால் உண்டாகும் புகழை விரும்பி; கருதலாம் படியது அன்றி - நினைக்கலாம் படியது அன்றாக; கலதி அம்பு இவையும் காய்ந்த - கேட்டினைச் செய்யும் அம்புகளாகிய இவையும் காய்ந்தன; இவ் எஃகமும் புகைந்த - இந்த வேல்களும் புகைந்தன; (ஆதலால்); முருகு உலாம் முல்லை மாலை மூப்பு இலா முலையினார் - மணங்கமழும் முல்லை மாலை அணிந்த இளமுலையினையுடைய நும் மனைவியர்; நும் அருகு உலாம் புலவி நோக்கத்து - (நீர் யாழ் வாசிக்க வந்ததனால்) நும்மிடத்தே பிறந்த புலவி நோக்கத்தால்; அமிர்தம் இன்று உகுப்ப கொல்லோ - (பின்பு) தாம் பெறும் புணர்ச்சியின்பம் ஆகிய அமிர்தத்தைப் பாழே சிந்துவர் போலும்!
விளக்கம் : அமிர்த மென்றுகுப்ப என்றும் பாடம். ( 277 )
770. வாணிக மொன்றுந் தேற்றாய்
முதலொடுங் கேடு வந்தா
லூணிகந் தீட்டப் பட்ட
வூதிய வொழுக்கி னெஞ்சத்
தேணிகந் திலேசு நோக்கி
யிருமுதல் கெடாமை கொள்வார்
சேணிகந் துய்யப் போநின்
செறிதொடி யொழிய வென்றார்.
பொருள் : ஊண் இகந்து ஈட்டப்பட்ட - உணவையும் கைவிட்டுத் திரட்டப்பட்ட; முதலொடும் கேடு வந்தால் - முதலுடன் ஊதியத்திற்கும் ஒரு கேடு வந்தால்; ஊதிய ஒழுக்கின் நெஞ்சகத்து ஏண் இகந்து - ஊதியமாகிய நடப்பின் மேலே நெஞ்சத்தில் நடக்கின்ற திண்மையைக் கைவிட்டு; இலேசு நோக்கி - (இரண்டையும் இழப்பதில் முதல் பெறுகையும்) ஊதியம் என்று பார்த்து; இருமுதல் கெடாமை கொள்வார் - பெரிய முதல் கெடாதபடி அதனைக் கொள்வார் (நின் குலத்துள்ளோர்); வாணிகம் ஒன்றும் தேற்றாய் - நீயும் அது செய்யாமற் போர்குறித் தெழுதலின் வாணிக முறையொன்றும் அறிகிலாய்; நின் செறிதொடி ஒழிய - (இனி) ஊதியமாகிய நின் செறிந்த தொடியினாளை இங்கே விட்டு; சேண் அகந்து உய்யப் போஎன்றார் - உன் உடம்பாகிய முதலைக் கொண்டு பிழைக்கப் போ என்றனர்.
விளக்கம் : தேற்றாய் : எதிர்மறை; தேற்றாய் பெரும! பொய்யே (புறநா - 59) என்றதுபோல் நின்றது. இலேசு : சிறுமையாகிய ஊதியம். இது, சீவகனை வணிகன் என்று கருதிய அரசர் அவனை அசதியாடியது. பொதுவாகப் பொருளீட்டுவாரியல்பினை வாணிகர்க் கேற்றி ஊணிகந்து ஈட்டப்பட்ட ஊதியம், என்றார் உடா அதும் உண்ணாதும் தம்முடம்பு செற்றும்........ஈட்டினார் (நாலடி. 10) என்றார் பிறரும். ( 278 )
771. தம்முடைப் பண்டந் தன்னைக்
கொடுத்தவ ருடைமை கோட
லெம்முடை யவர்கள் வாழ்க்கை
யெமக்குமஃ தொக்கு மன்றே
யம்முடி யரசிர்க் கெல்லா
மென்கையி லம்பு தந்து
நும்முடைத் திருவுந் தேசு
நோக்குமுன் கொள்வ லென்றான்.
பொருள் : தம்முடைப் பண்டந் தன்னைக் கொடுத்து அவர் உடைமை கோடல் - தம்முடைய பொருளைப் பிறர்க்குக் கொடுத்து, அவர்களின் செல்வத்தை வாங்கிக்கொள்ளுதல்; எம்முடையவர்கள் வாழ்க்கை - எம் குலத்தவரின் வாழ்க்கை; எமக்கும் அஃது ஒக்கும் அன்றே? - எமக்கும் அவ்வணிகம் பொருந்தும் அல்லவோ?; அம் முடி அரசிர்க்கு எல்லாம் என் கையில் அம்பு தந்து - (இனி) யான் அழகிய முடியுடைய அரசர்களாகிய நுங்களுக்கெல்லாம் என் கையில் உள்ள அம்பைக் கொடுத்து; நும்முடையத் திருவும் தேசும் கொள்வல் - உங்களுடைய வெற்றித் திருவையும் புகழையும் கொள்வேன்; நோக்குமின் என்றான் - வல்லராயின் அவற்றைக் காக்கப் பாருங்கள் என்று சீவகன் செப்பினான்.
விளக்கம் : எம்முடையவர்கள் என்றது வணிகரை. கொடுத்து வாங்குதல் எங்குலத் தொழில், அங்ஙனமே யானும் அம்பு முதலியவற்றைக் கொடுத்துத் திரு முதலியவற்றை வாங்குவல் என்றான். ( 279 )
772. மட்டுலாந் தாரி னாய்நின்
வனப்பினோ டிளமை கல்வி
கெட்டுலாய்ச் சிலம்பு செம்பொற்
கிண்கிணி மகளிர் கோங்க
மொட்டுலா முலைகள் பாய்ந்த
வகலத்துச் சரங்கண் மூழ்கப்
பட்டுலாய்க் கிடக்க லுற்றா
யென்சொலாய் பாவி யென்றார்.
பொருள் : மட்டு உலாம் தாரினாய்! - தேன் உலவும் மாலையினாய்!; சிலம்பு செம்பொன் கிண்கிணி மகளிர் - சிலம்பும் பொற்கிண்கிணியும் உடைய மகளிரின்; கோங்கம் மொட்டு உலாம் முலைகள் பாய்ந்த அகலத்துள் - கோங்கரும்பனைய முலைகள் தாக்கிய மார்பிலே; சரங்கள் உலாய் மூழ்கப் பட்டு - அம்புகள் உலாவி மூழ்குவதனாலே இறந்து; நின் வனப்பினோடு இளமை கல்வி கெட்டு - நின் வனப்பும் இளமையும் கல்வியும் அழிந்து; கிடக்கலுற்றாய் பாவி! - கிடக்க நேர்ந்த பாவியே!; என் சொலாய் என்றார் - நீ ஏது சொல்லாய் என்று மன்னர்கள் கூறினர்.
விளக்கம் : இவை, மன்னர் இவன் அழகில் தத்தை ஈடுபட்டாள் என்பது பற்றி யுண்டான பொறாமை மொழிகள் ஆதல் உணர்க.
( 280 )
773. எரிசுடர்ப் பருதி முன்ன
ரிருளென வுடைந்து நீங்கப்
பொருபடை மன்னர் நுங்கள்
புறக்கொடை கண்டு மற்றிம்
முருகுடைக் குழலி னாடன்
முகிழ்முலை கலப்ப லன்றே
லிருசுடர் வழங்கும் வையத்
தென்பெயர் கெடுக வென்றான்.
பொருள் : எரி சுடர்ப் பருதி முன்னர் இருள் என- விளங்கும் ஒளியை யுடைய ஞாயிற்றின் முன்னர் இருள் உடைந்து நீங்குமாறு போல; பொரு படை மன்னர் உடைந்து நீங்க - பொருகின்ற படை ஏந்திய மன்னராகிய நீங்கள் என் தோற்றங் கண்டு உடைந்து நீங்குதலினாலே; நுங்கள் புறக்கொடை கண்டு - உங்கள் புறங் கண்டு; மற்று இம் முருகுடைக் குழலினாள் தன் முகிழ்முலை கலப்பல் - பிறகு, இந்த மணங்கமழ் கூந்தலாளின் இளமுலையைத் தழுவுவேன்; அன்றேல் - அல்லவாயின்; இருசுடர் வழங்கும் வையத்து என் பெயர் கெடுக என்றான் - ஞாயிறு திங்கள் உலவும் உலகிலே என் பெயர் நடவாது அழிக என்றான் சீவகன்.
விளக்கம் : இது வஞ்சினம். முன், இளமை முதலியவற்றை அவ்வரசர்கள் கொன்று கூறலின், அக் கொலை பொருளாகப் பிறந்த வெகுளி யென்னும் மெய்ப்பாடு. இது, நகுதக்கனரே என்னும் (72) புறப்பாட்டினும் கண்டு கொள்க. ( 281 )
வேறு
774. ஆண்மர வாணிலத் தப்பு வேல்செய்முட்
காண்வரு காட்டினக் களிற்று நீள்வரை
நீணில வேந்தெனும் வேழப் பேரினம்
பூண்முலைப் பிடிக்கவாய்ப் போர்செய் குற்றவே.
பொருள் : ஆள்மர வாள் நிலத்து - ஆளாகிய மரத்தையுடைய வாளாகிய நிலத்திலே; அம்பு வேல் செய் முள் - அம்புவேலாற் செய்த இடு முள்ளையுடைய; காண் வரு காட்டு - எல்லாரும் காண்டலுடைய காட்டில்; இன களிற்று நீள்வரை - இனக் களிறாகிய நீண்ட மலையின்மேல்; நீள் நில வேந்து எனும் வேழப் பேரினம் - பெருநில மன்னர்களாகிய வேழப் பெருந்திரள்; பூண்முலைப் பிடிக்கு அவாய் - பூண்முலை யுடைய தத்தையென்னும் பிடிக்கு ஆசைகொண்டு; போர் செய்குற்றவே - போர் செய்தலுற்றன.
விளக்கம் : ஆள் - போர்மறவர். வாணிலம் : பண்புத்தொகை. செய்முள் - இடுமுள். அவாய் - அவாவி. ( 282 )
775. தாழிருந் தடக்கையு மருப்புந் தம்பியர்
தோழர்தன் றாள்களாச் சொரியு மும்மத
மாழ்கடற் சுற்றமா வழன்று சீவக
வேழுயர் போதக மினத்தொ டேற்றதே.
பொருள் : தாழ் இருந் தடக்கையும் மருப்பும் தம்பியர் - நீண்ட பெரிய கை நந்தட்டனாகவும் மருப்புக்கள் நபுல விபுலராகவும்; தன் தாள்கள் தோழர் ஆ - கால்கள் தோழர் நால்வரும் ஆகவும்; ஆழ்கடல் சுற்றம் சொரியும் மும்மதம் ஆ - ஆழ்ந்த கடல் போன்ற தேரும் குதிரையும் காலாளும் ஆகிய படை, தான் பெய்யும் மும்மதமாகவும்; சீவக ஏழுயர் போதகம் - இசையேழினாலும் உயர்ந்த சீவகனாகிய ஏழு முழம் உயர்ந்த களிறு; இனத்தொடு ஏற்றது - அரசராகிய வேழத்திரளுடனே போர் செயத் தொடங்கியது.
விளக்கம் : தன்னை யானையாக உருவகங் கூறலிற் கடற் சுற்றம் அதனை ஒழிந்த மூன்று படையும் ஆம். யானைக்கு உத்தம விலக்கணம் ஏழு முழ உயரம். துதிக்கையும் வாலும் கோசமும் நான்கு கால்களும் நீண்டிருத்தல் என்பாரும் உளர். ( 283 )
776. குடையுடை வேந்தெனுங் குழாங்கொ ணாகமுங்
கொடியெனும் பிடியுடைக் குமர வேழமும்
வெடிபடு போர்த்தொழில் காண விஞ்சைய
ரிடியுடை யினமழை நெற்றி யேறினார்.
பொருள் : குடை உடை வேந்து எனும் குழாம்கொள் நாகமும் - குடைகளையுடைய மன்னர்கள் எனும் கூட்டமாகிய யானைகளும்; கொடி யெனும் பிடி உடைக் குமர வேழமும் - தத்தையாகிய பிடியையுடைய சீவககுமரனாகிய களிறும்; வெடிபடு போர்த்தொழில் காண - தம்மின் பகைத்தலுண்டாகிய போர்த் தொழிலைக் காண்டற்கு; விஞ்சையர் இடியுடை இனமழை நெற்றி ஏறினார் - வித்தியாதரர்கள் இடியுடைய முகில் திரளின் மேல் ஏறினர்.
விளக்கம் : வெடி - முழக்குமாம். நாகமும் - யானைகளும். கொடி : தத்தை. குமரவேழம் : சீவகனாகிய யானை. வெடிபடுதல் - பகைத்தல்; பிளவுபடுதல். விஞ்சையர் - வித்தியாதரர். ( 284 )
777. கரைபொரு கடலொடு கார்க ணுற்றென
முரைசொடு வரிவளை முழங்கி யார்த்தன
வரைசரு மமர்மலைந் தரணம் வீசினார்
குரைகடற் றானைபோர்க் கோலஞ் செய்தவே.
பொருள் : கரைபொரு கடலொடு கார்கண் உற்றென - கரையுடன் பொருங் கடலொலியுடன் வான் முழக்கம் சேர்ந்தாற்போல; முரைசொடு வரிவளை முழங்கி ஆர்த்தன - முரசும் சங்கும் முழங்கி ஆரவாரித்தன; அரைசரும் அமர் மலைந்து அரணம் வீசினார் - மன்னரும் போரை மேற்கொண்டு கவசத்தை அணிந்தனர்; குரை கடல் தானை போர்க் கோலம் செய்தவே - ஒலி கடலனைய அவர் படைகளும் போர்க் கோலம் மேற்கொண்டன.
விளக்கம் : கார் - முகில். முரைசு, அரைசு, என்பன எதுகை நோக்கி அகரம் ஐகாரமாய்த் திரிந்து நின்றன. வரிவளை - வரியையுடைய சங்கு. அரணம் - கவசம். வீசுதல் - ஈண்டு வீக்கினார் என்னும் பொருள்பட நின்றது. வீக்குதல் - கட்டுதல். ( 285 )
778. தெய்வதம் வணங்குபு செம்பொன் வாயுளிட்
டெய்கணைப் படுமழை சிதறி யெங்கணு
மொய்யமர் மலைந்தனர் முருகு விம்முதார்ச்
செய்கழற் சீவகன் வாழ்க வென்னவே.
பொருள் : முருகு விம்மு தார்ச் செய்கழல் சீவகன் வாழ்க என்ன - மணம் மிகு மாலையும் கழலும் அணிந்த சீவகன் வாழ்க என்று; தெய்வதம் வணங்குபு - தெய்வத்தை வணங்கி; செம்பொன் வாயுள் இட்டு - பாடுகுறித்துப் பொற் றகட்டை வாயிலிட்டுக்கொண்டு; எங்கணும் எய்கணைப் படுமழை சிதறி - எங்கும் பெய்கின்ற மழைபோலக் கணையைச் சிதற; மொய் அமர் மலைந்தனர் - செறிந்த போரை மேற்கொண்டனர்.
விளக்கம் : சிதறி - சிதற : எச்சத்திரிபு. வென்றன்றி மீள்தலில்லை என்பதற்கறிகுறியாகப் போர்மறவர் பொற்றகட்டை வாயிலிட்டுப் போர் தொடங்குதல் ஒரு மரபு போலும். இவ்வாசிரியர் மேலும் காஞ்சனத் தளிவம் வாய்க்கிட்டு அச்சுற முழங்கி (2303) என்றார். முருகு -மணம். ( 286 )
779. கலந்தது பெரும்படை கணைபெய்ம் மாரிதூ
யிலங்கின வாட்குழா மிவுளி யேற்றன
விலங்கின தேர்த்தொகை வேழங் காய்ந்தன
சிலம்பின வியமரந் தெழித்த சங்கமே.
பொருள் : பெரும்படை கணை பெய்ம் மாரி தூய் கலந்தது - அரசர் பெரும்படை அம்புகளைப் பெய்யும் முகில்போலத் தூவிச் சீவகன் படையொடு கலந்தது; வாள் குழாம் இலங்கின - (இருபடையினும்) வாட்படைகள் இலங்கின; இவுளி ஏற்றன - குதிரைகளும் ஒன்றையொன்று எதிர்ந்தன; தேர்த்தொகை விலங்கின - தேர்த்திரளும் ஒன்றையொன்று தடுத்தன; வேழம் காய்ந்தன - யானைகளும் அவ்வாறே காய்ந்தன; இயமரம் சிலம்பின - ஊது கொம்புகள் ஒலித்தன; சங்கம் தெழித்த - சங்குகளும் ஒலித்தன.
விளக்கம் : இரண்டு படையும் கலந்து போர் தொடுத்தபடி கூறினார். மாரி போலத் தூவி என்க. இவுளி - குதிரை. விலங்கின - தடுத்தன. சிலம்பின - ஒலித்தன. இயமரம் - ஊதுகொம்பு. தெழித்த - ஒலித்தன. ( 287 )
780. சுற்றணி கொடுஞ்சிலை மேகந் தூவிய
முற்றணி பிறையெயிற் றம்பு மூழ்கலி
னற்றுவீழ் குழைமுக மலர்ந்த தாமரை
மற்றவை சொரிவதோர் மாரி யொத்தவே.
பொருள் : சுற்று அணி கொடுஞ்சிலை மேகம் தூவிய - சுற்றினும் அணியப்பட்ட வளைந்த சிலையாகிய முகில் தூவிய; முற்ற அணி பிறை எயிற்று அம்பு மூழ்கலின் - முற்றினும் அணியாகப் பிறைபோலும் முனையுடைய அலகு அம்புகள் மூழ்கியதால்; அற்று வீழ் குழைமுகம் அவை அலர்ந்த தாமரை சொரிவது - அற்று வீழ்கின்ற குழையுடைய முகமாகிய அவை மலர்ந்த தாமரைப் பூவைச் சொரிவதாகிய; ஓர் மாரி ஒத்த - ஒரு முகிலை ஒத்தன.
விளக்கம் : மற்று : அசை. பிறை எயிற்றம்பு - அலகம்பு. குழைமுகம் - குண்டலத்தையுடைய முகம். ( 288 )
781. மறப்படை பசித்தன வயிறின் றார்கெனக்
குறைத்தனர் குஞ்சரம் கூந்தன் மாத்துணித்
திறக்கின ரோடுதேர் மைந்த ரின்னுயிர்
துறக்கம்போய்ப் புகுகெனத் துணிய நூறினார்.
பொருள் : மறப்படை பசித்தன இன்று வயிறு ஆர்க என - போர்ப்படைகள் முன்பு பசித்திருந்தன யாவும் இப்பொழுது வயிறு நிறைக என்று கூறி; குஞ்சரம் குறைத்தனர் - யானைகளை வீழ்த்தினர்; கூந்தல் மாத்துணித்து ஓடுந் தேர் இறக்கினர் - பிடரி மயிரையுடைய குதிரைகளை வெட்டி, ஓடுந்தேரைத் தாழ்த்தினர்; மைந்தர் இன்னுயிர் துறக்கம் போய்ப் புகுக எனத் துணிய நூறினார் - வீரரின் இனிய உயிர்கள் துறக்கத்திற்சென்று புகுதுக என்று அவர்களைத் துண்டமாக வெட்டினர்.
விளக்கம் : மறப்படை பசித்தன வயிறு இன்று ஆர்க என்றது மறவர் கூற்று. குஞ்சரம் - யானை. கூந்தன் மா - குதிரை. ஓடுதேர் இறக்கினர் என மாறுக. ( 289 )
வேறு
782. ஆற்றுவீர் வம்மி னெம்மோ
டாண்மைமேம் படீஇய வென்பா
ரேற்றவர் மார்பத் தல்லா
லிரும்புமேல் விடாது நிற்பார்
கூற்றம்போற் கொடிய யானைக்
கோடுழு தகன்ற மார்பங்
கீற்றுப்பட் டழகி தாகக்
கிடக்கெனக் கொடுத்து நிற்பார்.
பொருள் : எம்மோடு ஆண்மை மேம்படீஇய ஆற்றுவீர் வம்மின் என்பார் - எம்முடன் நும் வீரம் மேம்படுத்தற் பொருட்டுப் பொருதல் வல்லீர் வருவீர் என்பார்; ஏற்றவர் மார்பத்து அல்லால் இரும்பு மேல் விடாது நிற்பார் - எதிர்ந்தவர் மார்பிலன்றி எதிராதார் மார்பிற் படைர்யெறியாமல் நிற்பார்; கூற்றம் போல் கொடிய யானைக் கோடு உழுது - கூற்றுவனைப் போலக் கொடிய களிற்றின் கொம்புகள் உழுது; அகன்ற மார்பம் கீற்றுப்படடு அழகிதாகக் கிடக்க எனக் கொடுத்து நிற்பார் - பரந்த மார்பு கீற்றுப்பட்டு அழகாகக் கிடக்க என்று (மார்பை யானையினிடம்) கொடுத்து நிற்பார்.
விளக்கம் : இது முதல் நான்கு செய்யுட்கள் சீவகன் தோழர் செயல் கூறுகின்றன. ( 290 )
783. கழித்துவா ளமலை யாடிக்
காட்டுவார் கண்கள் செந்தீ
விழித்துமேற் சென்ற வேழம்
வேலினால் விலக்கி நிற்பார்
தெழித்துத் தேர்க் கயிறு வாளா
லரிந்திட்டுப் புரவி போக்கிப்
பழிப்பில கொணர்ந்து பூட்டு
பாகந் யென்று நிற்பார்.
பொருள் : கழித்து வாள் அமலை ஆடிக் காட்டுவார் - (உறையினின்றும்) கழித்து வாட்கூத்தாடிக் காட்டுவார்; செந்தீ விழித்து மேல் சென்ற வேழம் - நெருப்பெழ விழித்து எதிர் நோக்கி வந்த வேழத்தை; வேலினால் விலக்கி நிற்பார் - வேலால் தடுத்து நிற்பார்; தெழித்துத் தேர்க் கயிறு வாளால் அரிந்திட்டுப் புரவி போக்கி - (பாகனைச்) சீறித் தேர்க் கயிற்றை வாளால் அறுத்துக் குதிரையை ஓட்டிவிட்டு; பாக! பழிப்பில் கொணர்ந்து பூட்டு என்று நிற்பார் - பாகனே! குற்றம் அற்ற புரவிகளைக் கொண்டுவந்து பூட்டுக என்று நிற்பார்.
விளக்கம் : வாளமலை - போர்க்களத்து மறவர் வாளை விதிர்த்தாடும் ஒருவகைக் கூத்து. இதனை, களிற்றொடு பட்ட வேந்தனை அட்டவாளோர் ஆடு ஒள்வா ளமலை என வரும் தொல்காப்பியத்தானும், வேந்தன் வலிகெழுதோள் வாள்வயவர் ஒளிகழலான் உடனாடின்று எனவரும் புறப்பொருள் வெண்பாமாலையானும்(147) உணர்க. ( 291 )
784. ஐங்கதிக் கலினப் பாய்மாச்
சிறிதுபோர் களையீ தென்பார்
வெங்கதிர் வேலிற் சுட்டி
வேந்தெதிர் கொண்டு நிற்பார்
நங்கைகல் யாணம் நன்றே
நமக்கென நக்கு நிற்பார்
சிங்கமும் புலியும் போன்றார்
சீவகன் றோழன் மாரே
பொருள் : ஐங்கதிக் கலினப் பாய்மரப் போர் சிறிது - ஐங்கதியையும் கடிவாளத்தையு முடைய புரவிப் போர் சிறிது; ஈது களை என்பார் - இதனை நீங்கு என்பார்; வெங்கதிர் வேலின் வேந்து சுட்டி எதிர்கொண்டு நிற்பார் - ஞாயிறு போன்ற வேலினாலே வேந்தனொருவனைச் சுட்டிக் காட்டி இவன் எனக்கு எதிர் என்று எதிர்த்து நிற்பார்; நங்கை கல்யாணம் நமக்கு நன்றே என்று நக்கு நிற்பார் - தத்தையின் திருமணம் (போரைத் தந்ததால்) நமக்கு நன்மையே செய்தது என்று நகைத்து நிற்பார்; சிங்கமும் புலியும் போன்றார் சீவகன் தோழன்மார் - (இங்ஙனம்) சிங்கமும் புலியும் போல இயங்கினார் சீவகனுடைய தோழர்கள்.
விளக்கம் : வெங்கதிர் வேலின் வேந்து சுட்டி (அவனை) எதிர் கொண்டு நிற்பார் என மாறுக. நங்கை - தத்தை. நன்றே என்பது நமக்கிப் போரினைத் தந்தமையால் நன்று என்பதுபட நின்றது. ஐங்கதி: விக்கிதம் வற்கிதம் வெல்லும் உபகண்டம் - மத்திமஞ்சாரியோ டைந்து. ( 292 )
785. ஒருங்கவன் பிறந்த ஞான்றே
பிறந்தவ ருதயத் துச்சி
யிரும்பினாற் பின்னி யன்ன
யெறுழ்வலி முழவுத் தோளார்
விரும்புவார் வேழ வேற்போர்
நூற்றுவர் நூறு கோடிக்
கிருந்தனம் வருக வென்பா
ரின்னண மாயி னாரே.
பொருள் : அவன் பிறந்த ஞான்றே ஒருங்கு பிறந்தவர் - சீவகன் பிறந்த அன்றே கூடப் பிறந்தவர்; உதயத்து உச்சி இரும்பினால் பின்னி அன்ன எறுழ்வலி முழவுத் தோளார் - உதய மலையின் முடியை இரும்பாற் கட்டினாற் போன்ற பெருவலி படைத்த முழவனைய தோளினர்; வேழ வேல் போர் விரும்புவார் - யானையை வேலால் எறியும் போரை விரும்புகின்றவர்; நூற்றுவர் நூறு கோடிக்கு இருந்தனம், வருக என்பார் - நூற்றுவர் நூறு கோடி படைக்கு எதிராக இருந்தோம்; வருக என்று எதிர்ப் படைஞரைப் போருக்கு ஏற்பார்; இன்னணம் ஆயினார் - இங்ஙனம் போரிலே யீடுபட்டனர்.
விளக்கம் : கூடப் பிறந்தவர் எனினும் ஒரு தாய் வயிற்றிற் பிறந்தவரல்லர்; தோழராய்ப் பிறந்தவர். நச்சினார்க்கினியர் 782 முதல் 785 வரை ஒரு தொடராக்கிக் கூறும் முடிபு : சீவகன் தோழன்மார், அவன் பிறந்த அன்றே கூடப் பிறந்தவர், தோளார், விரும்புவார், வருக என்பார், அவர்கள்தாம் இப் போரில் இன்னணமாயினார். அஃது எங்ஙனே யெனின், என்பார் விடாது நிற்பார், கொடுத்து நிற்பார், காட்டுவார், விலக்கி நிற்பார், பூட்டென்று நிற்பார், களையென்பார், எதிர்கொண்டு நிற்பார், நக்கு நிற்பாராய்ச் சிங்கத்தையும் புலியையும் ஒத்தார் என்க. இவை நான்கு கையிலும் நின்ற படைத் தலைவரல்லாத் தோழர் பொருதபடி கூறின. ( 293 )
786. கூட்டுற முறுக்கி விட்ட
குயமகன் றிகிரி போல
வாட்டிறற் றேவ தத்தன்
கலினமா மாலை வெள்வே
லீட்டம்போழ்ந் தியானை நெற்றி
யிருங்குளம் பழுத்தி மன்னர்
சூட்டொடு கண்ணி சூளா
மணிசிந்தித் திரியு மன்றே.
பொருள் : கூட்டு உற முறுக்கி விட்ட குயமகன் திகிரி போல - மண்ணுருண்டையுடன் திரித்துவிட்ட குயவனுடைய சக்கரம்போல; வாள் திறல் தேவதத்தன் கலின மா - வாள் வலி படைத்த தேவதத்தனுடைய புரவி; மாலை வெள்வேல் ஈட்டம போழ்ந்து - மாலை யணிந்த வெள்ளிய வேற்படையின் திரளைப் பிளந்து; யானை நெற்றி இருங் குளம்பு அழுத்தி - யானையின் நெற்றியிலே குளம்புகளை அழுத்தி; மன்னர் சூட்டொடு கண்ணி சூளாமணி சிந்தி - மன்னர் அணிந்த போர்ப்பூ முடிமாலை முடிமணி ஆகியவற்றைச் சிதறி; திரியும் - திரியும்.
விளக்கம் : இதுமுதல் நான்கு செய்யுட்கள் தோழர் மூவரும் நபுல விபுலரும் பொருதபடி கூறுகின்றார். கூட்டு - மண்கூட்டு. பசுமட்குரூஉத்திரள் என்றார் புறத்தினும் (32). கலினமா - குதிரை. சூட்டு - போர்ப்பூ, சூளாமணி - முடியின் மணி. ( 294 )
787. பாய்ந்தது கலின மாவோ
பறவையோ வென்ன வுட்கி
வேந்தர்தம் வயிறு வேவ
நபுலமா விபுல ரென்பார்
காய்ந்துதம் புரவிக் காமர்
குளம்பினால் களிற்றி னோடை
தேய்ந்துகச் சேர்த்தி மாலைத்
திருமுடித் திலகங் கொண்டார்.
பொருள் : கலினமாவோ பறவையோ பாய்ந்தது என்ன உட்கி - புரவியோ பறவையோ பாய்ந்தது என்று அஞ்சி; வேந்தர் தம் வயிறு வேவ - மன்னருடைய வயிறு எரிய; நபுல விபுலர் என்பார் காய்ந்து - நபுல விபுலர்கள் சினந்து; தம் புரவிக் காமர் குளம்பினால் - தம் குதிரைகளின் அழகிய குளம்பினால்; களிற்றின் ஓடை தேய்ந்து உகச் சேர்த்தி - களிற்றின் முகப்பட்டம் தேய்ந்து விழச் செலுத்தி; மாலைத் திருமுடித் திலகம் கொண்டார் - மாலையையுடைய திருமுடியிலிருந்து சூளாமணியைக் கவர்ந்தனர்.
விளக்கம் : உட்குதல் - அஞ்சுதல். நபுல விபுலர் - சீவகன் தம்பிமார். காமர் குளம்பு - அழகிய குளம்பு, ஓடை - முகபடாம், திருமுடித் திலகம் என்றது சூளாமணியினை. ( 295 )
788. காயத்தின் குழம்பு தீற்றிக்
காரிரும் பெறிய மேகந்
தோயுமுள் ளிலவின் கூன்காய்
சினைதொறு முதிர்வ வேபோன்
மாயங்கொன் மறவர் மாலைப்
பைந்தலை யுதிர்ந்த செங்கட்
சேயனான் றிருவின் பேரான்
செழுஞ்சிலைப் பகழி யாலே.
பொருள் : காயத்தின் குழம்பு தீற்றிக் கார் இரும்பு எறிய - பெருங் காயத்தின் குழம்பைப் பூசிக் கரிய வாளினால் வெட்ட; மேகம் தோயும் முள் இலவின் கூன்காய சினைதொறும் உதிர்வவேபோல் - வான் அளாவிய முள் இலவமரத்தின் வளைந்த காய் கிளைதோறும் சிந்துவன போல; செங்கண் சேய் அனான் திருவின் பேரான் செழுஞ்சிலைப் பகழியால் - அழகிய கண்களையுடைய முருகனைப் போன்றவனான சீதத்தனுடைய சிறந்த வில்லிலிருந்து செல்லும் கணைகளால்; மாலை மறவர் பைந்தலை உதிர்ந்த - மாலையணிந்த மறவரின் பசிய தலைகள் விழுந்தன; மாயம்கொல் - இது மாயமோ?
விளக்கம் : காயம் - பெருங்காயம். இரும்பு - ஈண்டுக் கோடரி; ஈர்வாளுமாம். செங்கட்சேய் என்றது முருகனை. திருவின் பேரான் : சீதத்தன். ( 296 )
789. நீனிறப் பௌவ மேய்ந்து
சூன்முற்றி நீல மேகம்
வானிற விசும்பி னின்ற
மாரியின் மறைவ லாளன்
போனிறப் புத்தி சேனன்
பொன்னணி பகழி சிந்தி
வேனிற மன்னர் சேனை
கூற்றிற்கு லிருந்து செய்தான்.
பொருள் : நீல்நிறப் பௌவம் மேய்ந்து சூல் முற்றி - நீல நிறக் கடலிற் படிந்து நீரைப் பருகிச் சூல் முதிர்தலாலே; நீல மேகம் வால்நிற விசும்பில் நின்ற மாரியின் - கருமுகில் தூயநிற வானிலே மாறாது நின்ற காலமழை போல; மறைவலாளன் பொன் நிறப் புத்திசேனன் - மறைவல்லவனாகிய பொன் வண்ண முற்ற புத்திசேனன்; பொன் அணி பகழி சிந்தி - பொன்னாலான அம்புகளை விடுத்து; வேல்நிற மன்னர் சேனை - வேலேந்திய நிறமுடைய வேந்தரின் படையை; கூற்றிற்கு விருந்து செய்தான் - கூற்றுவனுக்கு விருந்தாக்கினான்.
விளக்கம் : பொன்னிறம், போனிறம் என விகாரம். போர்நிறம் பாடமாயிற் போரொளியாம். நீலநிறம் - நீனிறம் என்று நின்றது. பௌவம் - கடல். வானிறம் - தூய நிறம். புத்திசேனன் அந்தணன் என்பது தோன்ற மறைவலாளன் என்றார். ( 297 )
வேறு
790. வீரவே லுடம்பெலாஞ் சூழ வெம்புலால்
சோருஞ்செங் குருதியுண் மைந்தர் தோன்றுவார்
ஓருமே லொண்மணிச் சூட்டு வைக்கிய
வாரமே யமைந்ததேர்க் குழிசி யாயினார்.
பொருள் : வெம்புலால் சோரும் செங்குருதியுள் மைந்தர் - கொடிய புலாலுடையதாய்ச் சொரியும் சிவந்த குருதியிடையே நிற்கின்ற வீரர்கள்; வீரவேல் உடம்பு எலாம சூழத் தோன்றுவார் - வீரமிகும் வேல்கள் மெய்ம்முழுதும் சூழ்ந்திருக்கக் காணப்படுவார்; ஒண்மணிச் சூட்டுமேல் வைக்கிய - ஒள்ளிய மணிச்சூட்டை மேலே வைத்தற்கு; ஆரமே அமைந்த தேர்க் குழிசி ஆயினார் - பல ஆரும் தைத்து நிறைந்த தேர்க் குறடு ஆயினார்.
விளக்கம் : குறடு - குடம். ஓரும் : அசை. வேற்படைகளா லேறுண்ட மறவர்க்கு ஆரக்கால் தைத்த தேர்க் குடத்தை உவமை கூறுதலை. நோன் குறட்டன்ன ஊன்சாய் மார்பின் என வரும் மதுரைக் காஞ்சியினும் (742) காண்க. வைக்கிய : செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.
791. பொன்னானாள் புணர்முலைப் போகம் வேண்டிய
மன்னரோ டிளையவர் மறலி வாளம
ரின்னண மித்தலை மயங்க வத்தலைக்
கொன்னவில் வேலினா னிலைமை கூறுவாம்.
(இதன்பொருள்) பொன் அனாள் புணர்முலைப் போகம் வேண்டிய மன்னரோடு - திருவனைய தத்தையின் முலைகளின் இன்பம் விரும்பிய அரசரோடு; இளையவர் மறலி - தோழர்கள் மாறுபடுதலாலே; வாள் அமர் இத்தலை இன்னணம் மயங்க- வாட்போர் இங்கே இவ்வாறு மயங்குற; அத்தலைக் கொல்நவில் வேலினான் நிலைமை கூறுவாம் - ஆண்டு நின்ற, கொலையிற் பழகிய வேலினானாகிய சீவகன் நிலையை விரும்புவோம்.
விளக்கம் : பொன் - திருமகள். இளையவர் என்றது சீவகன் தோழரை. மறலி - மறல. கொல்நவில் வேலினான் - கொலைத்தொழிலிற் பயின்ற வேலை ஏந்திய சீவகன். (299)
792. தம்பியைச் சீவக னோக்கிச் சாமரை
வெம்பரி மான்செவி வீர மந்திர
மிம்பர்நம் மிடர்கெட விரண்டும் வல்லையாய்
நம்பிநீ மொழிகென நயந்து கூறினான்.
பொருள் : சீவகன் தம்பியை நோக்கி - சீவகன் நந்தட்டனைப் பார்த்து; இம்பர் நம் இடர்கெட இரண்டும் வல்லையாய் - இவ்விடத்தில் நமது துன்பம் கெட வீரமந்திரம் இரண்டையும் நீ கற்று; சாமரை வெம்பரி மான் செவி - சாமரையையும் விரை வினையுமுடைய புரவியின் செவிகளிலே; நீ மொழிக என நயந்து கூறினான் - நீ உரைப்பாயாக என்று விரும்பிக் கூறினான்.
விளக்கம் : இரண்டும் - பறப்பிக்கு மதுவும் வேண்டுமிடத்தே நிறுத்துவிப்பதுவும். மந்திரம் : குதிரைகளை விரைவிற் செலுத்தும் காண்ட மந்திரம். மந்திரம் இரண்டையும் அவனுக்கு ஓதி இவற்றைக் கற்று வல்லையாய் நீ மொழிக என்றான் என்க. தம்பி : நந்தட்டன். ( 300 )
வேறு
793. மந்திரங் கேட்டு நான்கும்
வானெட்டிப் புகுவ வேபோ
லந்தரத் திவர்ந்த வாழிக்
கானிலம் விட்ட மாலைச்
சுந்தரக் கண்ண மேனி
மகளிர்தங் கண்ணுள் ளிட்ட
மைந்தரு மிரும்பு மொவ்வா
வான்புலங் காவல் கொண்டார்.
பொருள் : மந்திரம் கேட்டு - அம் மந்திரத்தை நந்தட்டன் கூறக் கேட்டு; வான் எட்டிப் புகுவவேபோல் அந்தரத்து இவர்ந்த - வானிலே தாவிச் செல்வனபோல அந்தரத்தே பாய்ந்தன; ஆழிக் கால்நிலம் விட்ட - வட்டமான உருள் நிலத்தை விட்டன; மாலைச் சுந்தரச் சுண்ண மேனி மகளிர் தம் கண்ணுள் இட்ட மைந்தரும் - மாலை அணிந்த. அழகிய மணப்பொடியுடைய மெய்யினரான மகளிர்தங் கண்களில் (அழகினால்)வைத்துக்கொண்டிருக்கும் சீவகனும் நந்தட்டனும்; வான்புலம் இரும்பும் ஒவ்வாக் காவல் கொண்டார் - உண்மை அறிவை இரும்பும் ஒவ்வாத கவசமாகக் கொண்டனர்.
விளக்கம் : வான்புலம் - உண்மை அறிவு. அதுவே எல்லா வெற்றியும் தருவதென நினைத்து அதனைக் காவலாகக் கொண்டனர். நான்கும்: ஆகுபெயர். ஆழிக்கால் - வட்டமான உருள். உண்மையறிவே எல்லா வெற்றியுந் தருவதாதல் பற்றி வான்புலம் காவல் கொண்டார். இது,
வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின் (குறள். 546)
என்னும் அருமைத் திருக்குறளை நினைப்பிக்கின்றது. மேலும்,
அறிவற்றங் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண் (குறள்.421)
என்னும் திருக்குறளையும் நினைக. ( 301 )
794. வடிகயி றாய்ந்து முட்கோல்
வலக்கையாற் றாங்கி வென்றி
முடிகெனப் புரவி முள்ளா
லுறுத்தினான் மொழித றேற்றேன்
கடுகிய வண்ண மாவின்
றாரொலி காமர் பொற்றேன்
படையது செவியுங் கண்ணும்
பற்றிநின் றிட்ட வன்றே.
பொருள் : வடி கயிறு ஆய்ந்து - (குதிரையைத் தொழிலிற் பயிற்றும்) வாய்க் கயிற்றைத் தெரிந்து; முள்கோல் வலக்கையால் தாங்கி - தாற்றுக்கோலை வலக்கையில் எடுத்து; வென்றி முடிக என - நமக்கு வெற்றி வருக என்று; புரவி முள்ளால் உறுத்தினான் - புரவியை அம் முள்ளாலே உறுத்திச் செலுத்தினான்; கடுகிய வண்ணம் மொழிதல் தேற்றேன் - அவை அப்போது விரைந்த இயல்பை உரைத்தல் அறியேன்; மாவின் தார் ஒலி - புரவிகளின் கிண்கிணி மாலை ஒலி; படையது செவியும் - படையின் காதிலும்; காமர் பொன்றேர் கண்ணும் - அழகிய தேர் (படையின்) கண்களினும்; பற்றி நின்றிட்ட - அமைந்து, விடாமல் நின்றன.
விளக்கம் : அன்று, ஏ : அசைகள். முட்கோல் - தாற்றுக்கோல். கடுகிய வண்ணம் மொழிதல் தேற்றேன் என்றது தேவர் வியந்தது. (302)
795. அண்ணறேர் பறவை என்பா
ரருவமே யுருவம் என்பார்
மண்ணதே வான தென்பார்
மனத்ததே முகத்த தென்பார்
கண்ணதே செவிய தென்பார்
கலங்கநூல் கழிய நோக்கிப்
பண்ணிய வீதி பற்றி
மண்டலம் பயிற்றி னானே.
பொருள் : அண்ணல் தேர் - சீவகன் தேரை; பறவை என்பார் - பறவை என்றுரைப்பார்; உருவம் அருவமே என்பார் - இஃது உருவம் உடையது என்பார்; (எங்கும் கலத்தலின்) அருவமோ என்றும் உரைப்பர்; மண்ணதே வானது என்பார் - தேர் மண்ணிலுள்ளது என்பர்; வானில் உள்ளது என்பர்; முகத்திலுள்ளது என்பர்; கண்ணதே செவியது என்பார் - கண்களில் உள்ளது என்பர்; செவிகளில் உள்ளது என்பர்; கலங்க - இவ்வாறு பலரும் பலவகையாகக் கூறிக் கலங்கா நிற்க; நூல் கழிய நோக்கி - புரவியியல் கூறும் நூலை முற்றும் ஆய்ந்து; பண்ணிய வீதி பற்றி - அதிற் பண்ணின வீதியைத் தொடங்கி; மண்டலம் பயின்றினான் - மண்டலம் என்னும் கதியைப் பயிற்றினான்.
விளக்கம் : வியத்தற்குரிய இதனைக் கம்பர் தமது காப்பியத்துள்,
முன்னேயுளன் பின்னேயுளன் முகத்தேயுளன் அகத்தின்
தன்னேயுளன் மருங்கேயுளன் தலைமேலுளன் மலைமேல்
கொன்னேயுளன் நிலத்தேயுளன் விசும்பேயுளன் கொடியோர்
என்னேயொரு கடுப்பென்றிட இருஞ்சாரிகை திரிந்தான்
என அமைத்துக் கொண்டார்.
796. அகில்கொண்ட கொள்ளி வட்ட
மாருயிர் மேயு நேமி
முகில்கொண்ட மின்னுத் தோற்ப
முறுகிய விசையிற் றாகி
மிகல்கொண்ட விகலைத் தானே
விழுங்கிய சிறகர்த் தோற்றிப்
பகல்கொண்டு பறக்குந் தேராற்
காளைதன் பைம்பொற் றேரே.
பொருள் : அகில் கொண்ட கொள்ளி வட்டம் - அகில் தன்னிடத்தே கொண்ட கொள்ளி வட்டமும்; ஆர் உயிர் மேயும் நேமி - நிறைந்த உயிர்களை அரியும் கால நேமியும்; முகில் கொண்ட மின் - முகிலிடம் உள்ள மின்னும்; தோற்ப - தோற்குமாறு; முறுகிய விசையிற்று ஆகி - கடுகிய விசையுடையதாகி; மிகல் கொண்ட இகலைத் தானே விழுங்கிய - றபாடு கொண்ட ; போரைத் தானே விழுங்குதற்கு; பகல் கொண்டு - ஞாயிற்றைக் கொண்டு; பறக்கும் தேர் காளை தன் பைம்பொன் தேர் - பறக்குந்தேராகும் சீவகனுடைய புதிய பொற்றேர்.
விளக்கம் : நெய்யால் ஒளிமிகுதலின் அகில் கொண்ட கொள்ளி கூறினார். மின் வீதிக்கும் ஒழிந்த இரண்டும் வட்டத்திற்கும் உவமை. ( 304 )
797. காலற்ற வயிர மாலை வெண்குடை கவிழ்ந்த பிச்ச
மேலற்ற கவசம் வீழ்ந்த சாமரை யற்ற வின்ஞாண்
மாலுற்ற மன்னர் தங்கண் மனங்கையற் றொழிந்த வள்ளல்
கோலொற்றக் குனிந்த வாறே சிலைகுனிந் தொழிந்த தன்றே.
பொருள் : வள்ளல் கோல் ஒற்றக் குனிந்த ஆறே சிலை குனிந்து ஒழிந்தது - சீவகன் அம்பு தொடுத்தற்கு ஒருமுறை வளைந்தபடியே முழுக்க வளைந்தே நின்றது; (அப்பொழுது) வயிரமாலை வெண்குடை கால் அற் - வயிரமாலை அணிந்த வெண்குடைகள் காம்பற்றன; பிச்சம் கவிழ்ந்த - பிச்சங்கள் கவிழ்ந்தன; மேல் கவசம் அற் - மேலணிந்த கவசங்கள் அற்றன; சாமரை வீழ்ந்த - சாமரைகள் வீழ்ந்தன; வில் நாண் அற்ற - வில்லின் நாண்கள் அறுந்தன; மால் உற்ற மன்னர் தங்கள் மனம் கையற்று ஒழிந்த - மயங்கிய மன்னரின் மனம் செயலற்றுக் குறைந்தன.
விளக்கம் : வள்ளல் என்றார் கடுகக் கொல்லாமல் அவரை அச்சுறுத்தலின். குனிந்தவாறே சிலை குனிந்ததொழிந்தது என்றது அதன் கடுப்பால் அதன் நிமிர்ச்சியும் வளைதலும் காணப்படவில்லை என்றவாறு. ( 305 )
798. நுங்களை வீணை வென்ற
நூபுர வடியி னாடன்
வெங்களித் தடங்கண் கண்டீர்
விருந்தெதிர் கொண்மி னென்னா
வங்களி யரசர்க் கெல்லா
மோரொன்று மிரண்டு மாகச்
செங்களிப் பகழி யொப்பித்
துள்ளவா றூட்டி னானே.
பொருள் : நுங்களை வீணை வென்ற நூபுர அடியினாள் தன் வெம் களித் தடம் கண் கண்டீர் - (இவை கணைகள் அல்ல) உங்களை வீணையிலே வென்ற சிலம்பு ஒலிக்கும் அடியினாளின் வெவ்விய பெரிய கண்களென் றறியுங்கள்; விருந்து எதிர் கொண்மின் என்னா - (இவற்றை) விருந்தாக வந்து ஏற்றுக் கொள்வீர்களாக என்றுரைத்து; அம் களி அரசர்க்கு எல்லாம் - செருக்கினையுடைய வேந்தர்கட்கு எல்லாம்; ஓர் ஒன்றும் இரண்டும ஆக - ஒன்றும் இரண்டுமாக; செம்களிப் பகழி ஒப்பித்து - செவ்விய களிப்புறுங் கணைகளை விடுத்து; உள்ள ஆறு ஊட்டினானே - அவர்களுடைய தகுதிக்கேற்றவாறு ஊட்டினான்.
விளக்கம் : விருந்து என்பதற் கேற்ப ஊட்டினான் என்றார். இதனால், மணங் குறைந்தும் போகாது நின்றவர்க்கு அவள் கண்ணைப் பெறுமாறு இங்ஙன மல்லதில்லை யென்று கூறி, அவரை நோவித்தபடி கூறினார். ( 306 )
799. நன்மன வேந்தர் தங்க
ணகைமணி மார்ப நக்கிப்
புன்மன வேந்தர் தங்கள்
பொன்னணி கவசங் கீறி
யின்னுயிர் கவர்ந்து தீமை
யினிக்கொள்ளு முடம்பி னுலுந்
துன்னன்மி னென்ப வேபோற்
சுடுசரம் பரந்த வன்றே.
பொருள் : நல்மன வேந்தர் தங்கள் நகைமணி மார்பம் நக்கி - நல்ல மனமுடைய மன்னரின் ஒளிவிடும் மணிமார்பைத் தீண்டி வருத்தியும்; இனிக்கொள்ளும் உடம்பினானும் தீமை துன்னன்மின் என்பவே போல் - இனி நீங்கள் எடுக்கும் உடம்பினும் பிறர்மனை நயக்கும் தீமையை நெருங்காதீர் என்பன போல; புன்மன வேந்தர் தங்கள் பொன் அணி கவசம் கீறி - இழிமனமுடைய மன்னரின் பொற்கவசத்தைப் பிளந்து; இன் உயிர் கவர்ந்து சுடுசரம் பரந்த - இனிய உயிரைக் கைக் கொண்டு சுடுகணைகள் பரவின.
விளக்கம் : நன்மன வேந்தர் ஒற்றுமைக்காகப் போருக்கு வந்திருப்பர். அவர்கள் சிறிது நொந்ததும் உணர்ந்து விலகினர். மற்றையரோ உயிரை யிழந்தனர். நச்சினார்க்கினியரும், நன்மன வேந்தர் தம் நகையாகிய பிறர்மனை நயத்தலை இனிக் கொள்ளுமுடம்பினும் துன்னன்மின் என்பன போலச் சுடுசரங்கள் இப் புன்மன வேந்தர்களுடைய கவசத்தைக் கீறி மணிமார்பைத் தீண்டி இன்னுயிரைக் கவர்ந்து பரந்தன என்று கொண்டு கூட்டிப் பொருள் கூறினாரெனினும், இதனால், நொந்தும் போகதவர்களிலே சில ருயிரைப் போக்கினமை கூறினார் என்பது நோக்கத்தக்கது. முற் செய்யுளில், உள்ளவா றூட்டின தன்மை இங்கு விளக்கப்பட்டது. ( 307 )
800. மீனெறி தூண்டில் போன்று வெஞ்சிலை நாண்க ளற்ற
தேனெறி குன்ற மொத்த திண்கச்சை துணிந்த வேழ
மானெறி காட்டுந் திண்டேர் கயிறற்று மறிய வேந்த
ரூனெறி யாழி யேந்தி யொய்யென வுலம்பி யார்த்தார்.
பொருள் : மீன் எறி தூண்டில் போன்று வெஞ்சிலை நாண்கள் அற்ற - மீன் பிடிக்குந் தூண்டில்கள்போல அரசர்களின் கொடிய விற்களின் நாண்கள் அறுந்தன; திண் கச்சை துணிந்த வேழம் தேன் எறி குன்றம் ஒத்த - அவர்கள் ஏறிய, திண்ணிய கச்சை அறுபட்ட களிறுகள் வண்டுகள் மூசும் குன்றங்கள் போன்றன; திண்தேர் மான் நெறி காட்டும் கயிறு அற்று மறிய - திண்ணிய தேர்களிற் குதிரைகட்கு வழிகாட்டும் கயிறுகள் அற்று மறிபடிலால்; வேந்தர் ஊன் எறி ஆழி ஏந்தி ஒய்யென உலம்பி ஆர்த்தார் - மன்னர்கள் மெய்யைப் பிளக்குஞ் சக்கரம் எடுத்துக்கொண்டு விரைய முழங்கி ஆர்த்தனர்.
விளக்கம் : ஊன் : ஆகுபெயர். இதனால் படாது நின்றவரை அஞ்சுவித்தமையும், அவர் அஞ்சாமற் போர்குறித் தெழுந்தமையும் கூறினார். ( 308 )
801. ஆர்ப்பெதிர் மாரி பெய்யு
மணிநெடுங் குன்றம் போலப்
போர்க்கெதிர்ந் தவரு மார்த்தா
ரார்த்தலும் பூண்ட வல்வில்
கார்க்கெதிர் மேகம் போலக்
கணைமழை கான்ற திப்பா
லீர்த்தது குருதி வெள்ள
மிறைச்சிக்குன் றாக்கி னானே.
பொருள் : மாரி பெய்யும் அணி நெடுங் குன்றம் எதிர் ஆர்ப்புப் போல - மழை பெய்யும் அழகிய பெருங்குன்று எதிரொலி செய்தல் போல; அவரும் போர்க்க எதிர்ந்து ஆர்த்தார் - அரசர் ஆரவாரத்திற்கு எதிரே சீவகன் வீரரும் எதி ராரவாரம் புரிந்தனர்; ஆர்த்தலும் - அங்ஙனம் இருபக்கமும் ஆரவாரித்தவுடன்; பூண்ட வல்வில் கார்க்கு எதிர்மேகம் போலக் கணைமழை கான்றது - சீவகனது கொலைத்தொழிலை ஏற்ற வலிய வில் கார் காலத்திலே எதிர்ந்த முகில்போல அம்பு மாரி பெய்தது; குருதி வெள்ளம் இப்பால் ஈர்த்தது - (அதனாற் பிறந்த) குருதி வெள்ளம் முன்பு அற்று வீழ்ந்தவற்றைக் களத்திற்குப் புறம்பே இழுத்தது; இறைச்சிக் குன்று ஆக்கினான் - முடிவில் அவரை ஊன்மலையாக்கினான்.
802. மன்னர்கள் வெகுண்டு விட்ட
மறப்படை யழுவ மாரி
கொன்னுனை யெஃகி னீக்கிக்
குனிந்துவிற் பகழி கான்ற
மின்னவி ரிலங்கு மொள்வாள்
விழித்துயிர் விழுங்க வின்ன
தன்மையாற் றானை நீந்தித்
தான்விளை யாடு கின்றான்.
பொருள் : மன்னர்கள் வெகுண்டு விட்ட மறப்படை அழுவ மாரி - வேந்தர்கள் சினந்து விடுத்த போர்ப்படையாகிய பெருமழையை; கொல் நுனை எஃகின் நீக்கி - கொல்லும் முனையுடைய வேலால் நீக்கியும்; வில்குனிந்து கான்ற பகழி - வில் வளைந்து உமிழ்ந்த அம்புகளும்; மின் அவிர் இலங்கும் ஒள்வாள் - மின்னென ஒளிவிட்டு விளங்கும் சிறந்த வாளும்; விழித்து உயிர் வாங்க - வேந்தரை நோக்கி உயிரைக் கொண்டும்; இன்ன தன்மையால் தானை நீந்தி - இதுபோன்ற தன்மைகளினாற் படைக்கடைலை நீந்தி; தான் விளையாடுகின்றான் - சீவகன் விளையாடத் தொடங்கினான்.
விளக்கம் : ஏனையார் அஞ்சும் இப் பெரும்போர் சீவக மன்னர்க்கு விளையாட்டுப் போன்று எளிதாகவிருந்தது. ( 310 )
803. வேழவெண் கோட்டு மெல்கோ
றின்றுகூன் குருதி வாளா
லாழநா வழித்து நெய்த்தோர்
கொப்புளித் தழிந்த மாவின்
சூழ்குடர்க் கண்ணி சூடி
நிணத்துகி லுடுத்து வெள்ளென்
பூழ்பெற வணிந்து சூற்பே
யாடக்கண் டுவந்து நக்கான்.
பொருள் : வேழ வெண் கோட்டு மெல்கோல் தின்று - களிறுகளின் வெண் கொம்பாகிய மெல்கோலைத் தின்று; கூன் குருதி வாளால் நா ஆழ வழித்து - வளைந்த குருதி வாளினால் நாவை அழுத்தி வழித்து; நெய்த்தோர் கொப்புளித்து - குருதியினால் வாய் கொப்புளித்து; அழிந்த மாவின் சூழ்குடர்க் கண்ணி சூடி - இறந்த குதிரைகளின் சூழ்ந்த குடர்களாகிய கண்ணியை அணிந்து; நிணத்துகில் உடுத்து - ஊன் ஆடை உடுத்து; ஊழ்பெற வெள் என்பு அணிந்து - முறையாக வெண்மையான என்புகளை மாலையாகத் தரித்து; சூல் பேய் ஆடக்கண்டு - சூல்கொண்ட பேய் ஆடுவதைப் பார்த்து; உவந்து நக்கான் - மகிழ்ந்து நகைத்தான் சீவகன்.
விளக்கம் : மெல் கோல் : வினைத்தொகை. இச் செய்யுளும் அடுத்து வருஞ் செய்யுளும் மறக்கள வேள்வி என்னும் வாகைத் திணைத் துறையின் பாற்படும். அஃதாவது, அடுதிறல் அணங்கார விடுதிறலான் களம் வேட்டன்று.
எனவும்,
பிடித்தாடி அன்ன பிறழ்பற்பேய் ஆரக்
கொடித்தானை மன்னன் கொடுத்தான் முடித்தலைத்
தோளோடு வீழ்ந்த தொடிக்கை துடுப்பாக
மூளையஞ் சோற்றை முகந்து (புறப். வெண். 760)
எனவும் வரும் புறப்பொருள் வெண்பாமாலையானும் உணர்க. ( 311 )
804. வெளிற்றுடற் குருதி வெள்ள நிலையிது வென்ப வேபோற்
களிற்றுகிர்ப் பிறழ்பற் பேய்கள் கைகளை யுச்சிக் கூப்பி
யளித்தவை பாடி யாடக் குறுநரி நக்கு வேழம்
விளித்தன கழுகும் பாறும் விலாவிற்றுக் கிடந்த வன்றே.
பொருள் : வெளிற்று உடல் குருதி வெள்ளம் நிலை இது என்ப போல் - குருதி நீங்கிய பிணத்தையுடைய குருதிப் பொருக்கின் நிலை இவ்வளவு என்று காட்டுவனபோல; களிற்று உகிர் பிறழ்பல் பேய்கள் கைகளை உச்சிக் கூப்பி - களற்றின் நகங்கள்போல முறை குலைந்து பிறழ்ந்த பற்களையுடைய பேய்கள் உச்சியிலே கைகளைக் கூப்பி; அளித்தவை பாடி ஆட - சீவகன் அளித்த சிறப்புக்களைப் பாடி ஆட; வேழம் குறு நரி நக்கு விளித்தன - வேழத்தின் அருகே யிருந்த குள்ளநரிகள் அப் போயாடலைக் கண்டு நகைத்தன போலக் கூவின; கழுகும் பாறும் விலா இற்றுக் கிடந்த - அவ் வேழத்தைத் தின்று செருக்கிக் கிடந்த கழுகும் பருந்தும் பேயாடற்கு நகைத்து விலா முறிந்து கிடந்தன போன்றன.
விளக்கம் : வேழத்தின் அருகே வேழத்தைத் தின்று நின்றன நரிகள். ( 312 )
805. கடல்விளை யமுதங் கண்ட
பொழுதினெய் கனிந்த தீஞ்சொற்
றடிசிலஞ் சுவைமிக் காங்கு
மண்ணலங் குமர னொன்னா
ருடலின்மேற் றிரியுந் திண்டேர்
காண்டலு மைந்தர் நெஞ்சத்
திடல்பிளந் திட்ட வெஃகஞ்
சுமந்தமர்த் திறத்தின் மிக்கார்.
பொருள் : கடல்விளை அமுதம் கண்ட பொழுதின் - கடலில் விளையும் உப்பினைக் கண்ட காலத்தே; நெய்கனிந்த தீஞ் சோறு அடிசில் அம் சுவை மிக்காங்கு - நெய்யொடு கலந்த இனிய சோறாகிய அடிசில் ஒழிந்த சுவைகள் மிகுந்தாற்போல; அண்ணல் அம் குமரன் ஒன்னார் உடலின்மேல் திரியும் திண்தேர் காண்டலும் - பெருமை மிக்க சீவகனுடைய, பகைவருடலின்மேற் செல்லும் திண்ணிய தேரைக் கண்டவுடன்; மைந்தர் - சீவகன் தோழர்கள்; நெஞ்சத் திடல் பிளந்திட்ட எஃகம் சுமந்து - பகைவரின் நெங்சமாகிய திடரைப் பிளந்த வேலை யேந்தி; அமர்த்திறத்தின் மிக்கார் - போர்த் திறத்திலே மிகுந்தனர்.
விளக்கம் : மிக்காங்கும் : உம் : இசை நிறை. சீவகனைக் கண்ட தோழர் களித்திதை இச் செய்யுளிற் கூறினர். இதன்கண் சீவகன் தேரைக் கண்டு ஊக்கமிக்கவராகிய தோழர்க்கு உப்போடளாவியவுடன் தத்தஞ் சுவை மிகுத்து விளங்கும் அடிசிலை உவமையாகக் கூறியது மிகமிக நுணுக்கமாகிப் பெரிதும் இன்பஞ் செய்தல் உணர்க.
806. கடாந்திறந் திட்டு வானிற்
களகள முழங்கும் வேழம்
படாந்திறந் தூழித் தீயிற்
பதுமுகன் காட்டி யிட்டான்
தடாம்பிறை மருப்புத் திண்கை
யபரகாத் திரங்க டம்மாற்
கொடாம்பிற குமரிப் போருட்
பிறர்க்கெனக் கொன்ற தன்றே.
பொருள் : வானின் கடாம் திறந்திட்டுக் களகள முழங்கும் வேழம் - முகில்போல மதத்தைப் பெருக்கிக் களகள என்று முழங்குகின்ற வேழத்தை; படாம் திறந்து ஊழித் தீயின் பதுமுகன் காட்டியிட்டான் - முகப்பட்டத்தை நீக்கி ஊழித் தீப்போலக் கொணர்ந்து பதுமுகன் போர்க்களத்தைக் காட்டினான்; தடாம் பிறை மருப்பு திண்கை அபர காத்திரங்கள் தம்மால் - வளைந்த பிறை போன்ற மருப்பும் திண்ணிய கையம் கால்களும் ஆகியவற்றால்; குமரிப் போருள் பிறர்க்குக் கொடாம் எனக் கொன்றது - தத்தை காரணத்தாற் பிறந்த போரில் பிறர்க்குக் கொலைத் தொழிலைக் கொடோம் என்று கொன்றது.
விளக்கம் : வரகாத்திரம் என்பதனைத் தலை யென்றும் அவரகாத்திரம் என்பதனைக் காலென்றும் வடநூலார் கூறுவராதலின், தேவர் அதனைச் சிதைத்து, அபரகாத்திரம் என்றார்; ஐராவதம் ஐராபதம் என்றாற்போல; எனவே, அவரகாத்திர மென்றது கால்களை; இனி, பின்கால் முன்கால் என்பாருமுளர். பிற : அசைச்சொல். குமரிப்போர் - கன்னிப் போருமாம். இக்கவி முதலாகத் தத்தையைக் காத்து நின்ற பதுமுகன் பகைவர் தலைசாய்ந்தமை கண்டு பொருதல் கூறுகிறார். ( 314 )
807. மருப்பினால் வேழம் வீழா
மன்னரை வாலிற் சீறா
முருக்கித்தேர்தடக்கை தன்னான்
முழங்கிப்பாய் மாக்கள் காலி
னெரித்திடாக் கண்ணுட் டீயாற்
சுட்டுநீ றாக்கி நெய்த்தோ
ரொருக்கிப்பேய் பாடி யாட
வுறுசிலை யுடன்று கொண்டான்.
பொருள் : மருப்பினால் வேழம் வீழா - (பதுமுகன் வேழம்) கொம்பினாலே யானைகளை வீழ்ததி; வாலின் மன்னரைச் சீறா -வாலால் வேந்தரைச் சீறி; தடக்கை தன்னால் தேர் முருக்கி - துதிக்கையினால் தேரை முறித்து; முழங்கிக் காலின் பாய் மாக்கள் நெரித்திடா - பிளிறிச் சென்று கால்களாற் புரவிகளை நெரித்து; கண்ணுள் தீயால் சுட்டு நெய்த்தேர் நீறாக்கி - கண்ணில் எழும் நெருப்பினாற் சுட்டுக் குருதியைத் துகளாக்கிக்கொல்ல; ஒருக்கி - (பதுமுகனும்) கொல்லக் கருதி; பேய் பாடி ஆட - பேய் பாடி ஆடும்படி; உறுசிலை உடன்று கொண்டான் - தக்க தொரு வில்லைச் சினந்து ஏந்தினான்.
விளக்கம் : ஒருக்கி - ஒரு சேர ஆக்கி; எனவே, தானும் கொலை கருதி. ( 315 )
வேறு
808. கொண்டான் பகழி தொடுத்தான் சிலை கால்கு னிந்த
தொண்டேர் மிசையு முருவக்களிற் றுச்சி மேலும்
வண்டார்ப் புரவி நிறத்தும்மற மன்னர் மேலுங்
கண்டான் சொரிந்தான் கணைமாரி கலந்த தன்றே.
பொருள் : கொண்டான் பகழி தொடுத்தான் - வில்லைக் கையிலேந்தியவன் கணைகளைத் தொடுத்தான்; சிலை கால் குனிந்தது - வில்லின் கால் வளைந்தே யிருந்தது; ஒண்தேர் மிசையும் உருவக் களி உச்சி மேலும் - தேரின் மேலும் அழகிய களிற்றின் நெற்றியிலும்; வண்தார்ப் புரவி நிறத்தும் - வளமிகு கிண்கிணி மாலை அணிந்த குதிரைகளின் மார்பிலும்; மற மன்னர் மேலும - வீரமுறு வேந்தர் மீதும்; கண்டான் தொடுத்தான் - அழுந்துமாறு நோக்கிச் சொரிந்தான்; கணை மாரி கலந்தது - சீவகன் வேறொருபுறம் நின்று பெய்த அம்பு மழையுடன் பதுமுகன் சொரிந்த கணைமாரியும் கலந்தது.
விளக்கம் : கண்டான் என்பதைச் சீவகன் கணையுடன் தன் கணை கலப்பதைப் பதுமுகன் கண்டான் என மாற்றுவர் நச்சினார்க்னியர். கணைமாரி, மன்னர்கள் வெகுண்டு என்னுஞ் செய்யுளிற் கூறிய கணைமாரி. ( 316 )
809. பைம்பொற் புளகப் பருமக்களி யானை யீட்டஞ்
செம்பொ னெடுந்தேர்த் தொகைமாக் கடற்சேனை வெள்ள
நம்பன் சிலைவாய் நடக்குங்கணை மிச்சி லல்லா
லம்பொன் மணிப்பூ ணரசும் மிலையென்று நக்கான்.
பொருள் : பைம் பொன் புளகப் பருமக் களியானை ஈட்டம் - பசும் பொன்னால் ஆகிய, கண்ணாடியைக் கொண்ட பருமத்தையுடைய மதயானைத் திரளிலும்; செம்பொன் நெடுந்தேர்த் தொகை - செம்பொன்னாலான நீண்ட தேர்க் கூட்டத்திலும்; மாக்டல் - புரவிக் கடலிலும்; சேனை வெள்ளம் - படைவீரர் குழுவிலும்; அம் பொன் மணிப் பூண் அரசும் - அழகிய பொன்னும் மணியுமான பூணணிந்த மன்னர் திரளிலும்; நம்பன் சிலைவாய் நடக்கும் கணை மிச்சில் அல்லால் இலை - சீவகன் வில்லில் இருந்து வெளிவரும் அம்பின் எச்சிலே அல்லாமல் வேறு இல்லை; என்று நக்கான் - என்றறிந்த பதுமுகன் இனி எங்ஙனம் பொருவதென வியந்து நகைத்தான்.
விளக்கம் : இனி நான்கு படையினும் தான் சொரிந்தான்; சொரிந்தபின், அவன் கணைமாரி முன்பே கலந்ததனைக் கண்டான் என்றுமாம். இதற்கு முன்பே அம்பாற் குறைந்த படைமேல் தைத்த அம்பினைக் கையுணர்ந்து தென்க - நச்சினார்க்கினியர் முற்செய்யுளுடன் இதனையும் ஒரு தொடராக்கிக் கூறும் கருத்து இது. ( 317 )
வேறு
810. ஒருவனே சிலையு மொன்றே
யுடையதோர் களிற்றின் மேலா
னருவரை மார்பிற் சென்ற
தறிந்தில னெஃக மின்னும்
பொருவரோ மன்ன ரென்றான்
பொருசிலை மடக்கி யிட்டார்
வருகளி யானை மீட்டார்
வாட்படை வாங்கிக் கொண்டார்.
பொருள் : ஒருவனே - (இவ்வாறு நகைத்த) பதுமுகன் துணையில்லாதவனே; சிலையும் ஒன்றே உடையது - (சேம வில்லும் இல்லை) ஒரு வில்லே உளது; ஓர் களிற்றின் மேலான் - ஒரே யானை யூர்ந்து வந்துளான்; எஃகம் அருவரை மார்பில் சென்றது இன்னும் அறிந்திலன் - வேலொன்று அரிய வரையனைய தன்மார்பிலே தைத்துள்ளதை இன்னும் அறியான்; பொருவரோ மன்னர் என்றான் - (மேலும்) போர்செய்வாரோ இவ் வேந்தர்கள் என்றுரைத்தான்; (அது கேட்ட மன்னர் அஞ்சி) பொருசிலை மடக்கியிட்டார் - பொருவதற்குரிய வில்லை மடக்கிக்கொண்டனர்; வருகளியானை மீட்டார் - மதயானையைத் திருப்பிக் கொண்டனர்; வாள்படை வாங்கிக்கொண்டார் - வாட்படையை (போர் நினைவில் இருந்து திருப்பி) உறையிற் கொண்டனர்.
விளக்கம் : நச்சினார்க்கினியர், பதுமுகன் நொந்தானென்று வாளை உறையிலிருந்து அவனொடு பொர வாங்கிய மன்னர்களெல்லோரும் அஞ்சி யானைகளைத் திருப்பினர் என்றும், சீவகன் தோழர்கள் வில்லை மடக்கிக் கொண்டனர் என்றும் கூறுவர். இன்னும் மன்னர் பொருவரோ? என்று கூட்டி நம்பன் கணைக்க மிச்சிலாய பின்னும் என்றும் விளக்கங் கூறுவர் அவர். ( 318 )
811. செங்கண்மா றெழிக்ப் பட்ட
வலம்புரித் துருவங் கொண்ட
சங்குவாய் வைத்து நம்பன்
றெழித்தலுந் தறுக ணாளி
பொங்கிய முழக்கின் வேழப்
பேரினம் புலம்பி னாற்போற்
றங்குதார் மன்ன ரெல்லாந்
தளர்ந்துகண் சாம்பி னாரே.
பொருள் : செங்கண்மால் தெழிக்கப்பட்ட வலம்புரித் துருவம் கொண்ட - கண்ணனாற் பாரதப் போர்ரில் முழக்கப்பெற்ற வலம்புரியை ஒப்பாகக் கொண்ட; சங்கு வாய் வைத்து நம்பன் தெழித்தலும் - சங்கை வாயில் வைத்துச் சீவகன் முழக்கினவுடன்; தறுகண் ஆளி பொங்கிய முழக்கில் - அஞ்சாத ஆளியின் பெரு முழக்கினாலே; வேழப் பேரினம் புலம்பினாற்போல் - களிற்றுப் பெருந்திரள் கலங்கினாற் போல; தங்குதார் மன்னர் எல்லாம் தளர்ந்து கண் சாம்பினார் - மார்பில் தங்கிய தாரணிந்த வேந்தர்கள் எல்லோரும் தளர்ச்சியடைந்து கண்ணொளி மழுங்கினர்.
விளக்கம் : அவர் அஞ்சினமை கண்டு வெற்றிச் சங்கு முழக்கினான். துருவம் - ஒப்பு. ( 319 )
812. அருவரை நாகஞ் சுற்றி
யாழியான் கடைய வன்று
கருவரை குடையப் பட்ட
கடலெனக் கலங்கி வேந்தர்
திருவரை மார்பன் றிண்டேர்
மஞ்ஞையே முருகன் தானென்
றொருவரோ டொருவர் கூடா
வண்ணமே யுடைய லுற்றார்.
பொருள் : ஆழியான் அருவரை நாகம் சுற்றி அன்று கடைய - திருமால் அரிய மந்தர மலையை நாகத்தாற் பிணித்து முற்காலத்திற் கடைந்தபோது; கருவரை குடையப்பட்ட கடல் என வேந்தர் கலங்கி - கரிய அம் மலையினாலே கலக்கப்பெற்ற கடலென்னுமாறு மன்னர் கலக்குற்று; திருவரை மார்பன் திண்தேர் மஞ்ஞையே - அழகிய மலையனைய மார்பனின் திண்ணிய தேர் மயிலே; தான் முருகன் என்று - சீவகன் முருகனே என்று; ஒருவரோடு ஒருவர் கூடா வண்ணமே உடையல் உற்றார் - ஒருவருடன் ஒருவர் சேராதவாறே புறங்கொடுத் தோடலுற்றார்.
விளக்கம் : கருவரை - பெருமலையுமாம். அவன் பல கைகளாற்படை வழங்கினாற்போல இவனும் படை வழங்குதலாலும் வடிவாலும் முருகனே என்பர் நச்சினார்க்கினியர். ( 320 )
813. முளிமரக் காடு மேய்ந்த
முழங்கழல் போன்று மைந்தன்
றெளிநலக் குமரர் கூற்றிற்
றெழித்தனர் பகழி சிந்தி
யொளிநல வுப்புக் குன்ற
மூர்புனற் குடைந்த தேபோற்
களிநல மன்னர் தங்கள்
கடற்படை யுடைந்த தன்றே.
பொருள் : முளி மரக் காடு மேய்ந்த முழங்கு அழல் போன்று - காய்ந்த மரமுடைய காட்டைப் பற்றிய ஆரவாரமிகும் அழலைப் போல; மைந்தன் தெளிநலம் குமரர் கூற்றின் தெழித்தனர் - சீவகனும் தெளிநலமுடைய அவன் தோழரும் தம்பியரும் கூற்றுவனைப் போல முழங்கினர்; ஒளிநலம் உப்புக் குன்றம் ஊர் புனற்கு உடைந்ததே போல் - (அம் முழக்கினைக் கேட்டு) ஒளியும் அழகும் உடைய உப்புமலை ஊரும் வெள்ளத்திலே கரைந்தாற்போல; களிநல மன்னர் தங்கள் கடல் படை பகழி சிந்தி உடைந்தது - களிப்பும் அழகுமுடைய அரசரின் கடல் போன்ற படை கையிலுள்ள அம்புகளையும் எறிந்துவிட்டு ஓடியது.
814. உறுபடை மன்னர் தம்மை
யுடற்றியொன் றானு மின்றிச்
சிறுபடை யவர்கள் வென்று
செகுப்பவோ வென்ன வேண்டா
செறியெயிற் றாளி வேழப்
பேரினஞ் செகுத்த தன்றே
வுறுபுலி யொன்று தானே
கலையின முடற்றிற் றன்றே.
பொருள் : சிறு படையவர்கள் உறுபடை மன்னர் தம்மை - சிறிய படையினர் பெரும்படையுடைய வேந்தர்களை; உடற்றி ஒன்றானும் இன்றி - வருத்தித் தமககோர் கெடுதியும் இல்லாமல்; வென்று செகுப்பவோ என்ன வேண்டா - வென்று போக்குவாரோ? என்று ஐயுற வேண்டா; செறி எயிற்று ஆனி வேழப் பேரினம் செகுத்தது அன்றே? - நெருங்கிய பற்களையுடைய ஆளி ஒன்றே களிற்றுப் பெருங் கூட்டத்தைக் கெடுத்ததன்றோ?; உறுபுலி ஒன்றுதானே கலையினம் உடற்றிற்று அன்றே? - வலிமை மிகும் புலி ஒன்றே மான் கூட்டத்தைக் கெடுத்தது அன்றே? இவற்றைக் கண்டு தெளிக.
விளக்கம் : பின்னிரண்டடியும் எடுக்துக் காட்டுவமை. (322)
815. நல்லவை புரியு மாந்தர்
நாந்தகம் பிழைத்து வீழா
வல்லவை புரியு மாந்தர்க்
கத்திர மொன்றும் வாயா
வெல்வதோ குணத்தின் மிக்கார்
வெற்றிலை விடினும் வேலா
மில்லையே வென்றி தீமை
யிடங்கொண்ட மனத்தி னார்க்கே.
பொருள் : நல்லவை புரியும் மாந்தர் நாந்தகம் பிழைத்து வீழா - நன்மை செய்யும் மனமுடையார்க்கு வாட்கள் தவறிக் கெடமாட்டா; வெல்வதோ - வெற்றியைப் பற்றிக் கூறுவதாயின; குணத்தின் மிக்கார் வெற்றிலை விடினும் வேலாம் - பண்பிற் சிறந்தார் வெற்றிலையை எதிரிகள்மேல் விடினும் வேல்போல வென்றி தரும்; அல்லவை புரியும் மாந்தர்க்கு அத்திரம் ஒன்றும் வாயா - தீமை செய்யும் மனமுடையார்க்குப் படைகளில் ஏதும் வாய்க்காது; தீமை இடங்கொண்ட மனத்தினார்க்கு வென்றி இல்லை - தீமை குடிகொண்ட வுள்ளத்தார் எப்போதும் வெற்றியில்லை.
விளக்கம் : அல்லவை புரியும் மாந்தர்க்கு நல்லவை புரியும் மாந்தர் எனக் கூட்டித் தத்தையை வலிதிற் கோடற்கு ஒருப்பட்டவர்க்குப் பதுமுகன் கூறிய கட்டியங்காரன் சூழ்ச்சியைத் தீமை செய்வார்க்கு நன்மை புரிந்ததாக்கிக் கூறுவர். சிறப்பினதேற் கொள்க. குணத்தின் மிக்கார், தீமையிடங் கொண்ட மனத்தினார் என்பவை சுட்டு. தீமை - பிறர்மனை நயத்தலாகிய தத்தையை விரும்பியது. இனி வேறும் பொருள்தருமேனும் அதற்கு இயைபின்று என்னும் நச்சினார்க்கினியர் கூற்றினை நோக்கின் வேறு பொருளும் பிறர் கூறினர் என்று தெரிகிறது. இதனால் தேவர் அறம் வெல்லும் பாவந் தோற்கும் என்னும் பழமொழியை வற்புறுத்தோதினர் என்க. நாந்தகம் - வாள். அத்திரம் - அம்பு. குணத்தின் மிக்கார் வெற்றிலை விடினும் என்றதற்கேற்பத் தீமையிடங் கொண்ட மனத்தினார் வேல் விடினும் வெற்றிலையாம்; அவர்க்கு வென்றி இல்லை எனவும் கொள்க. ( 323 )
816. குழையுடை முகத்தி னாள்கண்
கோணைப்போர் செய்த மன்னர்
மழையிடை மின்னி னொய்தா
மறைந்தனர் விஞ்சை வேந்தர்
முழையிடை சிங்க மன்னான்
மொய்யம ரேத்தி யார்த்தார்
விழவுடை வீதி மூதூர்
விருப்பொடு மலிந்த தன்றே.
பொருள் : குழை உடை முகத்தினாள்கண் கோணைப் போர் செய்த மன்னர் - குழையுடைய முகத்தாள் தத்தை காரணமாக மாறுபட்ட போரைச் செய்த வேந்தர்கள்; மழையிடை மின்னின் நொய்தா மறைந்தனர் - முகிலிடை மின்போலப் போன இடந் தெரியாமல் விரைந்து கரந்தனர்; விஞ்சை வேந்தர் முழையிடைச் சிங்கம் அன்னான் மொய் அமர் ஏத்தி ஆர்த்தார் - (முகிலிலே நின்று போரைக் கண்டிருந்த) வித்தியாதர வேந்தர்கள் முழையிலே நின்ற சிங்கம் போன்ற சீவகனின் செறிந்த போரைப் புகழ்ந்து முழங்கினர்; விழவு உடை வீதி மூதூர் விருப்பொடு மலிந்தது - விழா நடைபெறும் தெருக்களையுடைய பழம்பதி (சீவகனைக் காண) விருப்பத்தினால் மிக்கது.
விளக்கம் : முழை, இல்லறம் பூண்டற்குக் கூறிற்று. கோணைப்போர் - அறங்கோடிச் செய்யும் போர். விஞ்சை வேந்தர் - இவர் முன்னரே தம்மரசிளங் குமரியாகிய தத்தையின் பொருட்டு நிகழும் இப் போரினை முகின்மிசையிருந்து கண்டிருந்த வித்தியாதரர். சிங்க மன்னான் : சீவகன், விருப்பொடு என்பது சீவகனைக் காணும் விருப்பத்தோடே என்பதுபட நின்றது. ( 324 )
817. பார்மிசை யுலக மேத்தும்
படுகளங் கண்டு பற்றார்
போர்முகக் களிற்று வெண்கோ
டுழதசெஞ் சால்கொண் மார்பின்
சீர்முகத் தோழர் சூழச்
சீவகன் திருவின் சாயல்
வார்முக முலையி னாளை
மனைவயிற் கொண்டு புக்கான்.
பொருள் : சீவகன் பற்றார் போர் முகக் களிற்று வெண்கோடு உழுத செஞ்சால் கொள் மார்பின் சீர்முகத் தோழர் சூழ - சீவகன், பகைவருடைய போர்க்களத்திலே யானையின் வெண்கோடு கீறிய சிவந்த சாலைக் கொண்ட மார்பினரான சிறப்பு மிக்க தோழர்கள் சூழ; பார் மிசை உலகம் ஏத்தும் படுகளம் கண்டு - உலகிலே உயர்ந்தவர் புகழும் போர்க்களத்தைக் கண்டு களவேள்வி முடித்து; திருவின் சாயல் வார்முக முலையினாளை - திருமகளின் மென்மையைக் கொண்ட வாரிறுக்கிய முலையாளாகிய தத்தையை; மனைவயின் கொண்டுபுக்கான் - தன் மனைக்கு அழைத்துச் சென்றான். ( 325 )
818. நெய்க்கழி வைக்கப் பட்டார்
நெய்ப்பத்தல் கிடத்தப் பட்டார்
புக்குழி யெஃக நாடி
யிரும்பினாற் போழப் பட்டார்
மைக்கிழிந் தொழுகுங் கண்ணீர்
மாநிலத் துகுக்கப் பட்டார்
கைக்கிழி கொடுக்கப் பட்டார்
கலம்பல நல்கப் பட்டார்.
பொருள் : நெய்க்கிழி வைக்கப்பட்டார் - (படை கிழித்த புண்களில்) நெய் தோய்த்த துணி வைக்கப்பட்டார்; நெய்ப்பத்தல் கிடத்தப்பட்டார் - நெய் நிறைந்த சாலிலே கிடத்தப் பட்டனர்; எஃகம் புக்குழி நாடி இருப்பினாற் போழப்பட்டார் - படைகள் புகுந்த இடத்தை ஆராய்ந்து வாளினாற் பிளந்து வாங்கப்பட்டனர்; கலம்பல நல்கப்பட்டார் - (இவ்வாறு போரில் விழுப்புண் பட்டோர் எல்லோரும்) அணிகலன் பலவும் கொடுக்கப்பட்டனர்; மைக்கு இழிந்து ஒழுகும் கண்ணீர் மாநிலத்து உகுக்கப்பட்டார் - மையில் தோய்ந்து வடியும் கண்ணீர் கொண்டு சுற்றம் அழுமாறு போரில் இறந்தவர் எல்லோரும்; கைக் கிழி கொடுக்கப்பட்டார் - கை நிறைந்த பொன் முடிப்பைக் கொடுக்கப்பட்டனர்.
விளக்கம் : பட்டவர் சுற்றத்தார்க்குக் கிழி கொடுக்கப்பட்டது. நெய்க்கிழி - நெய்யில் தோய்த்த துணி. நெய்ப்பத்தல் - நெய்யிட்டு வைத்த சால் கைக்கிழி - கையோலை. அஃதாவது : இன்னார் இன்னவை பெறுக என்று ஓலையில் எழுதிக் கொடுத்து மானியம் விடுதல். ( 326 )
819. முதுமரப் பொந்து போல
முழுமெயும் புண்க ளுற்றார்க்
கிதுமருந் தென்ன நல்லா
ரிழுதுசேர் கவளம் வைத்துப்
பதுமுகன் பாவை மார்பி
னெய்க்கிழி பயிலச் சேர்த்தி
நுதிமயிர்த் துகிற்குப் பாயம்
புகுகென நூக்கி னானே.
பொருள் : முதுமரப் பொந்து போல முழுமெயும் புண்கள் உற்றார்க்கு - முதிய மரங்களிடையே பொந்து போல மெய்யெலாம் புண்களைக் கொண்டவர்க்கு; இது மருந்து என்ன நல்லார் இழுது சேர் கவளம் வைத்து - இது தக்க மருந்து என்று மருத்துவ மகளிர் நெய்கலந்த கவளத்தை வைப்ப; பதுமுகன் பாவை மார்பின் - பதுமுகனுடைய அகன்ற மார்பிலே; நெய்க்கிழி பயிலச் சேர்த்தி - நெய்த்துணியைப் பொருந்த அடைத்து; நுதிமயிர்த் துகில் குப்பாயம் புகுக என நூக்கினான் - எலிமயிராற் செய்த உள்ளே துணி பொருத்திய சட்டையிலே புகுக என்று சீவகன் காத்தனன்.
விளக்கம் : குப்பாயம் - சட்டை. நூக்கினான் - காத்தான். வைத்து - வைப்ப. இவை யிரண்டு செய்யுளானும் போரிற் புண்ணுற்றார்க்குச் செய்யும் மருத்துவம் கூறப்பட்டது. புண்ணினது பெருமைக்கு முதுமரப்பொந்து உவமை : முழைபடு முதுமரம்போல் எவ்வாயும் படைநுழைந் தறுத்த இடனுடை விழுப்புண் என்றார் பிறரும் (தகடூர்). மெய் முழுதும் என்க. இழுது - நெய். மயிர்க்குப்பாயம் - கம்பளிச் சட்டை. இதனை எலி மயிராற் செய்த சட்டை என்பர் நச்சினார்க்கினியர். ( 327 )
820. பார்கெழு பைம்பொன் றன்னாற்
பண்ணவ னுருவ மாக்கி
யூர்கெழு விழவு செய்தாங்
குறுபொரு ளுவப்ப நல்கித்
தார்கெழு மின்னு வீசித்
தனிவடந் திளைக்கு மார்பன்
போர்கெழு களத்துப் பாவம்
புலம்பொடு போக்கி னானே.
பொருள் : தார் கெழு மின்னு வீசித் தனி வடம் திளைக்கும் மார்பன் - தாரும் ஒளி வீசிய ஒப்பற்ற முத்து வடமும் பயிலும் மார்பனான் சீவகன்; பார்கெழு பைம்பொன் தன்னால் பண்ணவன் உருவம் ஆக்கி - பாறையிற் பொருந்திய பசிய பொன் கொண்டு அருகன் உருவம் சமைத்து; ஊர் கெழு விழவு செய்து - நகரிற் பொருந்திய திருவிழா நடத்தி; ஆங்கு உறு பொருள் உவப்ப நல்கி - அங்கேயே மிகுபொருளை வறியவர் மகிழ அளித்து; போர் கெழு களத்துப் பாவம் புலம்பொடு போக்கினான் - போர்க் களத்திலே நேர்ந்த பாவத்தையும் வெறுப்பையும் நீக்கினான்.
விளக்கம் : செற்றவரைச் செகுத்தல் அறமே ஆயினும் இவர் ஆதியான பகைவர் அல்லாமையின், பாவம் என்றார். புலம்பு - என்ன செய்துவிட்டோம் என்ற வெறுப்பு. பண்ணவன் உருவம் - அருகக் கடவுள் திருவுருவம். உறுபொருள் - மிக்க பொருள். ( 328 )
821. செய்தவப் பாவ மெல்லாந்
தீர்த்திடுந் தீர்த்தன் பாத
மெய்திய சேடங் கூலித்
திறைஞ்சுபு தொழுது வாழ்த்தி
மையறு மணியிற் செய்த
வலம்புரி யதனீர் கொண்டான்
வையக மளிக்க நீண்ட
வலம்புரித் தடக்கை யானே.
பொருள் : வையகம் அளிக்க நீண்ட வலம்புரித் தடக்கையான் - உலகைக் காப்பதற்கு நீண்ட, வலம்புரி யிமீகையுடைய பெரிய கையினான்; செய்த அப் பாவம் எல்லாம் தீர்த்திடும் தீர்த்தன் பாதம் எய்திய சேடம் - பல பிறப்பினும் புரிந்த அப்பாவம் முழுதும் நீக்கும் அருகனின் திருவடிகளிலே பொருந்திய நிர்மாலியத்தையும்; மை அறும் மணியின் செய்த வலம்புரிய தன் நீர் - குற்றமற்ற இழைத்துச் செய்யப்பட்ட வலம்புரியில் உள்ள நீரையும்; கூவித்து இறைஞ்சுபு தொழுது வாழ்த்திக் கொண்டான் - கூவுவித்து வணங்கித் தொழுது வாழ்த்தி ஏற்றுக் கொண்டார்.
விளக்கம் : கூவித்து - விகாரம். கூவுவித்து - கூப்பிட்டு. வலம்புரி வடிவாக மணிகள் இழைத்து உலோகத்தாற் செய்யப்படுவது. வலம்புரி கையிற் கிடத்தல் சிறந்த இலக்கணம். சேடம் - பலியிடப்பட்ட பொருள். தீர்த்தன் - அருகன். வலம்புரி - சங்கு வடிவமாகச் செய்யப்பட்டதொரு பூசைப் பாத்திரம். வலம்புரித் தடக்கை - சங்கரேகை கிடந்த பெரிய கை. ( 329 )
வேறு
822. கருமணி யழுத்திய காமர் செங்கதிர்த்
திருமணிச் செப்பெனச் செறிந்த வெம்முலை
யருமணி யலம்வரு மம்பொற் கொம்பனாள்
பெருமணக் கிழமையாம் பேசு கின்றதே
பொருள் : கருமணி அழுத்திய காமர் செங்கதிர்த் திருமணிச் செப்புஎன - கரிய மணியை அழுத்திய அழகிய சிவந்த கதிரையுடைய மணிச் செப்பென்னுமாறு; செறிந்த வெம்முலை - நெருங்கிய விருப்பூட்டு முலைகளிலே; அருமணி அலம்வரும் அம் பொன் கொம்பு அனாள் - அரிய மணிகள் அசையும் அழகய பொற்கொடி போன்ற தத்தையின்; பெருமணக் கிழமை யாம் பேசுகின்றது - பெரிய மணத்தின் இயல்பு இனி எம்மால் விளக்கப்படுவது.
விளக்கம் : பெருமணமாம் கிழமையென மாற்றுவர் நச்சினார்க்கினியர். கருமணி - நீலமணி; இது முலைக்கண்ணுக்குவமை. செங்கதிர்த் திருமணி என்றது, செவ்வொளியுடைய மாணிக்க மணியை. மணிச் செப்பு முலைக்குவமை. மணக்கிழமை என்றது திருமணத்திற் செய்யும் கரணங்களை. இதனைச் சமாவர்த்தனம் என்ப. ( 330 )
823. நான்குநூ றாயிரங் குடத்து நல்லன
வான்றயிர் பானெயோ டழகி தாநிறைத்
தூன்றிகழ் வேலினான் வேள்விக் கூர்மருள்
கோன்றொறுக் காவலன் கொண்டு முன்னினான்.
பொருள் : ஊன் திகழ் வேலினான் வேள்விக்கு - ஊன் பொருந்திய வேலேந்திய சீவகன் திருமண வேள்விக்கு; ஊர் மருள் கோன் தொறுக்காவலன் - ஊரார் வியக்கும் அரசனுடைய ஆநிரை காவலன் (நந்தகோன்); நான்று நூறாயிரம் குடத்து - நான்கு நூறாயிரம் குடங்களிலே; நல்லன ஆன் தயிர் பால் நெயோடு அழகிது ஆநிறைத்து - நல்லனவாகிய பசுந் தயிரையும் பாலையும் நெய்யையும் அழகுற நிறைத்து; கொண்டு முன்னினான் - (எடுத்துக்) கொண்டு முதலில் வந்தான்.
விளக்கம் : இழந்தேம் என்று ஊரார் மருளும் சச்சந்த மன்னனுடைய தொறுக் காவலனும் ஆம். அரசனுக்குரிய ஆநிரையின் தலைவன் என்பதே எவ்வாறாயினும் பொருந்தும் பொருள் மன்னிரை பெயர்த்து (சீவக, 440) மன்னவன் னிரை (415) என முன்னரும் வந்தன காண்க. இதுமுதல் சமாவர்த்தனம் நடவா நிற்கப் பச்சை புகுந்தபடி கூறுகின்றார். (சமாவர்த்தனம் - பிரமசரியம் முடித்தற்குச் செய்யுங்கிரியை. பச்சை புகுதல் - வரிசை வருதல்). ( 331 )
824. வளைநிற வார்செநெ லரிசிப் பண்டியோ
டளவறு சருக்கரைப் பண்டி யார்ந்தன
பிளவியல் பயறுபெய் பண்டி யுப்புநீர்
விளைவமை பண்டியின் வெறுத்த தாங்கொர்பால
பொருள் : வளை நிற வார் செநெல் அரிசிப் பண்டியோடு - சங்கு நிறமுடைய நீண்ட செந்நெல் லரிசிப் பண்டியும்; அளவு அறு சருக்கரைப் பண்டி ஆர்ந்தன - அளவற்ற சருக்கரைப் பண்டியும் நிறைந்தன; பிளவு இயல் பயறு பெய் பண்டி - உடைக்கப்பட்ட பயறு பெய்த பண்டியுடன், நீர் விளைவு அமை உப்புப் பண்டியின் - நீரில் விளையும் உப்புப் பண்டியும்; ஆங்கு ஓர் பால் வெறுத்தது - அந்த மனையிலே ஒரு பக்கத்தில் செறிந்தது.
விளக்கம் : வளைநிற அரிசி, வார்செநெல் அரிசி எனத் தனித்தனிக் கூட்டுக. பண்டி - வண்டி. பிளவு இயல் பயறு - பருப்பாக உடைத்த பயறு. நீர்விளைவு அமைஉப்பு என மாறுக. ( 332 )
825. சினைத்துணர் முழவன பலவின் றீங்கனி
கனைத்துவண் டுழல்வன வாழை மாங்கனி
யெனைத்துள கிழங்குகாய் குருகொ டேந்திய
சனத்தினாற் றகைத்திடம் பெறாது தானொர்பால்.
பொருள் : பலவின் சினைத் துணர் முழவு அன தீங்கனி - பலவின் கிளைகளில் உள்ள கொத்தினை யுடைய முழவு போன்ற இனிய கனியும்; வண்டு கனைத்து உழல்வன வாழை மாங்கனி - வண்டுகள் முரன்று உழலும் வாழைக் கனியும் மாங் கனியும்; கிழங்கு காய் குருகு எனைத்து உள - கிழங்குங் காயும் குருத்தும் எவ்வளவு உள்ளனவோ; ஏந்திய சனத்தினால் - அவ்வளவெல்லாம் ஏந்திய மக்களால்; தகைத்து தான் ஒர்பால் இடம்பெறாது - நெருங்கி ஒரு பக்கந்தான் இடம் பெறாது.
விளக்கம் : துணர்த் தீங்கனி, முழவன தீங்கனி எனத் தனித்தனிக் கூட்டுக. கானப்பலவின் முழவு மருள் தீங்கனி என்றார் மலைபடுகடாத்தினும் (511). கனைத்து - செறிந்து எனினுமாம். குருகு - குருத்து. சனம் - மாந்தர். ( 333 )
826. மரகத மணிப் பசுங் காய்கொள் வான்குலை
கவர்பழுக் காய்க்குலை கனியக் காவுறீஇ
யிவர்தரும் மெல்லிலைக் காவு மேந்திய
வுவரியாய்ச் சொரிந்திடம் பெறாது தானொர்பால்.
பொருள் : மரகத மணிப் பசுங்காய் கொள் வான் குலை - மரகத மணிபோலும் பசுங் காயக்ளைக் கொண்ட குலையும்; கவர் பழுக்காய்க் குலை - விரும்பத்தக்க பழுக்காய்க் குலையும்; கனியக் கா வுறீஇ இவர் தரும் மெல்லிலைக் காவும் முற்றிலும் காவடியிலே கொண்டு வந்து, பரப்பி வைத்திருக்கும் வெற்றிலைப் படலிகையும்; சொரிந்து ஏந்திய உவரியாய் - (சுமந்து வந்து) சொரிந்திடுதலால் உயர்ந்த வெள்ளமாகி; ஒர்பால்தான் இடம் பெறாது - ஒரு பக்கந்தான் இடம் பெறாது.
விளக்கம் : பசுங்காயும் பழுக்காயும் பாக்குவகை. ஏந்திய - உயர்ந்த. வேண்டிய என்பதூஉம் பாடம். படலிகை - பெட்டி. கவர்பழுக்காய் : வினைத்தொகை; கண்டோர் நெஞ்சைக் கவரும் பழுக்காய் என்க. பழுக்காய் என்றது பாக்கினை. கா-காவுதடி. இதனை இக் காலத்தார் காவடி என்பர். மெல்லிலை, வெற்றிலை : வினைத்தொகை. உவரி - வெள்ளம். ( 334 )
827. சண்பகந் தமநகந் தமால மல்லிகை
தண்கழு நீரொடு குவளை தாமரை
வண்டின மிசைகொள வாசப் பூச்சுமை
கொண்டவர் குழாம்பொலி வுற்ற தாங்கொர்பால்.
பொருள் : சண்பகம் தமநகம் தமாலம் மல்லிகை தண் கழுநீரொடு குவளை தாமரை - சண்பகமும் தமநகக் கொழுந்தும் பச்சிலையும் மல்லிகையும் தண்ணிய கழுநீரும் குவளையும் தாமரையும் ஆகிய; வாசப் பூச்சுமை வண்டினம் மிசைகொள - மணமுறும் மலர்ச் சுமையை வண்டுகள் மொய்க்க; கொண்டவர் குழாம் ஆங்கு ஒர்பால் பொலிவு உற்றது - கொண்டுவந்தவர் திரள் மற்றொரு பக்கத்திலே அழகுற்றது.
விளக்கம் : தமநகம் - மருக்கொழுந்து. தமாலம் - பச்சிலை என்னுமொரு நறுமணமுடைய கொழுந்து. ( 335 )
828. ஆர்கெழு குறடுசூட் டாழி போன்றவன்
சீர்கெழு வளமனை திளைத்து மாசனங்
கார்கெழு கடலெனக் கலந்த வல்லதூஉம்
பார்கெழு பழுமரப் பறவை யொத்தவே.
பொருள் : ஆர் கெழு குறடு சூட்டு ஆழி போன்ற அவன் சீர்கெழு வளமனை - ஆர் பொருந்திய குறடும் சூட்டுமுடைய சக்கரம் போன்ற கந்துகனுடைய சிறப்புப் பொருந்திய வளமனையிலே; மாசனம் திளைத்துக் கார் கெழு கடல் எனக் கலந்த - மக்களின் திரள் நெருங்கி (ஒலியினாற்) கருமை பொருந்திய கடல்போலக் கலந்தன; அல்லதூஉம் பார்கெழு பழுமரப் பறவை ஒத்தவே - அஃதன்றி அம் மக்கள் தொகுதி (பயன்கொள்ளும் முறையால்) நிலமிசை பொருந்திய பழுத்த மரத்திற் பறவைகளையும் போன்றன.
விளக்கம் : அச்சுக் கோக்குங் குறடு மாளிகைக்கு, நடுவு போக்கும் ஆர் தெருவுகளுக்கும், விளிம்பிற் சூட்டு மதிலுக்கும் உவமை. மற்றும், மனையைச் சூழ வரிசைப் பொருள்கள் நிறைத்தலின் கடல் போன்றென்றுமாம். ஆர் - ஆரக்கால். குறடு - தேர்க்குடம். மாசனம் - மிக்க மாந்தர்; மக்கட்கூட்டம். ஆழி - தேருருள். இது சீதத்தனுக்கு (அல்லது சீவகனுக்கு) குடும்ப பாரம் சுமத்தற்கு உவமையாக வந்தது எனக் கொள்ளினுமாம். ( 336 )
829. கையுறை யெழுதினர் கைந்நொந் தேடறுத்
தையென விருப்பமற் றன்ன தாதலான்
வையக மருங்கினின் வாழ்நர் மற்றிவன்
செய்தவ நமக்கிசை கென்னச் சென்றதே.
பொருள் : கை உறை எழுதினர் கை நொந்து ஏடு அறுத்து ஐ என இருப்ப - வந்த வரிசைகளின் கணக்கை எழுதியவர்கள் கை வருந்திப் பட்டோலைகளைக் கிழித்து வியந்திளைப்பாறி இருப்பார்கள்; அன்னது ஆதலான் - வரிசை அங்ஙனம் மிகுதலால்; வையகம் மருங்கினின் வாழ்நர் - உலகிடை வாழ்கின்றவர்கள்; இவன் செய்தவம் நமக்கு இசைக என்னச் சென்றது - இவன் செய்யும் தவம் நமக்குப் பொருந்துவதாக என்று நினைக்குமாறு சமாவர்த்தனம் நடைபெற்றது.
விளக்கம் : தவம்: சமாவர்த்தனம். மற்று : அசை. கையுறை - வரிசைப் பொருள். ஐயென : குறிப்புச் சொல். சென்றது - நிகழ்ந்தது.
( 337 )
830. வாலரி கழுவிய வண்ணச் செம்புனல்
காலிய லிவுளியும் களிறு மாழ்ந்தவண்
கோலநீர்க் குவளையும் மரையும் பூத்துவண்
டாலிவண் குருகுபாய் தடங்க ளானவே.
பொருள் : வால் அரி கழுவிய வண்ணம் செம்புனல் - வெள்ளிய அரிசியைக் கழுவிய அழகிய சிவந்த கழுநீர்; கால் இயல் இவுளியும் களிறும் ஆழ்ந்து - காற்றெனச் செல்லும் குதிரையும் களிறும் அமிழ; அவண் கோல நீர்க் குவளையும் மரையும் பூத்து - அங்கே அழகிய நீர்ப் பூக்களாகிய குவளையும் தாமரையும் மலர்ந்து; வண்டு ஆலி - வண்டுகள் முரன்று; வண் குருகு பாய் தடங்கள் ஆன - மிகுதியாகப் பறவைகள் பாயும் நீர் நிலைகளாயின.
விளக்கம் : வாலரி - வெள்ளிய அரிசி. காலியல் இவுளி - காற்றென விரையும் குதிரை. ஆலுதல் - ஒலித்தல். குருகு - நாரை. (338 )
831. உடுப்பன துகில்களு முரைக்கு நானமுந்
தொடுத்தன மாலையுங் குழையுஞ் சாந்தமுங்
கொடுப்பவர் கொள்பவர் வீழ்த்த பல்கல
மடுத்துவிண் பூத்ததோ ரழகின் மிக்கதே.
பொருள் : உடுப்பன துகில்களும் - உடுப்பனவாகிய ஆடைகளும்; உரைக்கும் நானமும் - பூசிக்கொள்ளும் புழுகும; தொடுத்தன மாலையும் - கட்டப்பட்ட மாலைகளும்; குழையும் சாந்தமும் - குழைகளும் சந்தனமும்; கொடுப்பவர் கொள்பவர் வீழ்த்த பல்கலம் - எடுத்துக் கொடுப்பவராலும் வாங்குவோராலும் வீழ்த்தப்பட்ட பலகலங்கள்; அடுத்து விண் பூத்ததோர் அழகின் மிக்கது - நெருங்கி வானிலே மலர்ந்த மீன்களைப் போன்றதாகிய அழகிலே மேம்பட்டது.
விளக்கம் : கலன்கள் வீழ்த்தப்பட்ட அவ்விடம் விண்பூத்த அழகை ஒத்தது என்பதாம். உடுப்பன, தொடுத்தன: முற்றெச்சங்கள்.(339 )
832. கலங்கழு மரவமுங் கருனை யாக்குவார்
சிலம்பொலி யரவமு மிச்சில் சீப்பவ
ரிலங்குபொற் கிண்கிணி யிரங்கு மோசையு
முலம்புமா லுவர்க்கட லொலியின் மிக்கவே.
பொருள் : கருனை ஆக்குவார் சிலம்பு ஒலி அரவமும் - பொரிக் கறிகள் சமைப்பவரின் சிலம்பொலிக்கும் ஒலியும்; கலம் கழும் அரவமும் - உண்கலம் கழுவும் ஒலியும்; மிச்சில் சீப்பவர் இலங்கு பொற் கிண்கிணி இரங்கும் ஓசையும் - எச்சில் மாற்றுவோரின் விளங்கும் கிண்கிணிகள் ஒலிக்கும் ஒலியும்; உலம்பும் மால் உவர்க் கடல் ஒலியின் மிக்கவே - முழங்கும் பெரிய உப்புக் கடல் ஒலியினும் மிகுந்தன.
விளக்கம் : நச்சினார்க்கினியர் 829 முதல் 832 வரை ஒரு தொடர் ஆக்கி, அவற்றை 829, 832, 830, 831 ஆக முறைப்படுத்தி, வையகம் மருங்கினின் வாழ்நர் மற்றிவன் - செய்தவம் நமக்கிசை கென்னச் சென்றதே என்னும் 829-ஆஞ் செய்யுளின் பின்னிரண்டடிகளைக் கொணர்ந்து 832 ஆம் செய்யுட்குப் பின்சேர்த்துப் பொருளுரைப்பர். உலம்பும் - முழங்கும். கழும் : கழுவும் என்பதன் இடைக்குறை. இந் நான்கு செய்யுட்களும் உயர்வு நவிற்சி. கழுவும் என்னும் செய்யுமெனெச்சத்து ஈற்றுயிரும் மெய்யும் கெட்டுக் கழும் என நின்றது. கருனை - பொரிக்கறி. மிச்சில் - துரால். சீத்தல் - கூட்டுதல். இரங்கும் - ஒலிக்கும. உலம்பும் - முழங்காநின்ற. ( 340 )
வேறு
833. மூழிவாய் முல்லை மாலை
முருகுலாங் குழலி னாளு
மூழிவாய்த் தீயொ டொக்கு
மொளிறுவாட் டடக்கை யானு
மாழிவாய் விரலிற் காம
னம்பொடு சிலைகை யேந்தத்
தாழிவாய்க் குவளை வாட்கட்
டையலார் பரவச் சார்ந்தார்.
பொருள் : மூழிவாய் முல்லை மாலை முருகு உலாம் குழலினாளும் - மலர்ப் பெட்டியில் இருந்த முல்லை மாலை யணிந்து மணங்கமழுங் கூத்தலையுடைய தத்தையும்; ஊழிவாய்த் தீயொடு ஒக்கும் ஒளிறுவாள் தடக்கையானும் - ஊழிக்காலத் தீயைப் போன்று விளங்கும் வாளேந்திய தடக்கைச் சீவகனும்; காமன் அம்பொடு சிலை ஆழிவாய் விரலின் கையேந்த - காமன் அம்பையும் வில்லையும் விரற்சரடணிந்த விரலையுடைய கையில் ஏந்த; தாழிவாய்க் குவளை வாள்கண் தையலார் பரவச் சார்ந்தார் - தாழியில் மலர்ந்த குவளையனைய வாட்கண் மங்கையர் பரவி நிற்க ஓரிருக்கையிலே சேர இருந்தனர்.
விளக்கம் : முருகு - மணம். குழலினாள்: தத்தை. ஊழிவாய்த் தீ - ஊழி முடிவில் உலகை அழிக்கும் நெருப்பும்; இது சீவகன் பேராற்றலுக்கு உவமை. தடக்கையான் - சீவகன். ஆழி - மோதிரம்; விரற்சரடுமாம். மூழிவாய் - பூப்பெட்டி. ( 341 )
834. இன்னிய முழங்கி யார்ப்ப
வீண்டெரி திகழ வேதந்
துன்னினர் பலாசிற் செய்த
துடுப்பினெய் சொரிந்து வேட்ப
சொரிந்தனன் வீர னேற்றான்
வலம்புரி யதனீர் கொண்டான்
முன்னுபு விளங்கு வெள்ளி
முளைத்தெழ முருக னன்னான்.
பொருள் : இன்னியம் முழங்கி ஆர்ப்ப - இனிய இசைக் கருவிகள் முழங்கிக்கொண்டிருக்க; ஈண்டு எரி திகழ - மிகுதியான தீ விளங்குமாறு : வேதம் துன்னினர் - மறையுணர்ந்த சீவகனுக்கு நெருங்கிய அந்தணர்; பலாசின் செய்த துப்பின் - புரசமரத்தாற் செய்த துடுப்பினால்; நெய் சொரிந்து வேட்ப - நெய்யை வார்த்து வளர்க்க; வெள்ளி முளைத்து எழ - வெள்ளி முளைத்த அளவிலே; வீரன் மின் இயல் கலசம் நன்னீர் சொரிந்தனன் - சீதத்தன் ஒளி பொருந்திய கலசத்திலே நன்னீரை வார்த்தனன்; முருகன் அன்னான் முன்னுபு ஏற்றான் - முருகனைப் போன்ற சீவகனும் கருதி ஏற்றான்.
விளக்கம் : அரசர்க்கும் வணிகருக்கும் மந்திரத்திலும் தந்திரத்திலும் சிறிது வேறுபாடு உளதேனும், தான் இரண்டு குலத்திற்கும் உரிய சடங்கு நிகழ்த்துதற்குரியனாதலின், பிறர்க்குத் தெரியாமல், தன் குலத்திற்கேற்ற சடங்குதானே நிகழ்த்தினானென்பதும், பிறர்க்குத் தெரியுமவற்றிற்குக் கழுவாய் கருதினானென்பதும் தோன்ற, முன்னுபு என்றார். முன்னுதல் - கருதுதல். ( 342 )
835. இட்டவுத் தரிய மின்னு
மெரிமணிப் பருமுத் தார
மட்டவிழ் கோதை வெய்ய
வருமுலை தாங்க லாற்றா
நெட்டிருங் கூந்த லாட
னேர்வளை முன்கை பற்றிக்
கட்டழல் வலங்கொண் டாய்பொற்
கட்டிறா னேறி னானே.
பொருள் : இட்ட உத்தரியம் மின்னும் எரி மணிப் பருமுத்தாரம் மட்டு அவிழ் கோதை வெய்ய வருமுலை - அணிந்த மேலாடையும் ஒளிவிடும் மணிமாலையும், முத்து மாலையும், மணம் விரியும் மலர்மாலையும் வெய்யனவாகி வளரும் முலைகளும் ஆகியவற்றை; தாங்கல் அற்றா நெட்டிருங் கூந்தலாள் தன் - தாங்க இயலாத நீண்ட கரிய கூந்தலையுடைய தத்தையின்; நேர்வளை முன்னகை பற்றி - ஒத்த வளையணிந்த முன்கையைப் பற்றி; கட்டழல் வலம் கொண்டு - கட்டழலை வலமாக வந்து; ஆய்பொன் கட்டில் ஏறினான் - ஆராய்ந்து செய்த பொற்கட்டிலை அடைந்தான்.
விளக்கம் : கட்டிலேறுதல் என்பதும் ஒரு திருமணச் சடங்கு. இது பற்றிப் பெருங்கதை இலாவாண காண்டத்தில் கட்டிலேற்றியதென்னும் காதையில் விளக்கமாகக் கூறப்பட்டிருக்கின்றது. ( 343 )
836. மந்திரத் தரசன் காதன் மாதரம் பாவை தன்னைக்
கந்துகன் சிறுவன் வேட்ட கடிவினை நொடியின் மற்றோ
ரந்தர விசும்பிற் றேவர்க் கதிபதி யாய கோமா
னிந்திரன் றனக்கு மாகா தென்பது நடந்த தன்றே.
பொருள் : மந்திரத்தரசன் காதல் மாதர் அம் பாவை தன்னை - விஞ்சை மன்னன் அன்புக்குரிய மகளாகிய பாவை தத்தையை; கந்துகன் சிறுவன் வேட்ட கடிவினை நொடியின் - கந்துகன் மகனான சீவகன் மணந்த மணவினையைக் கூறின்; மற்று ஓர் அந்தர விசும்பின் தேவர்க்கு அதிபதி ஆய கோமான் இந்திரன் தனக்கும் - வேறோரு நடுவாகிய வானத்திலே வானவர்க்குத் தலைமை பெற்ற கோமானாகிய இந்திரனுக்கும்; ஆகாது என்பது நடந்தது - இயலாது என்னுமாறு அது நிகழ்ந்தது.
விளக்கம் : அந்தர விசும்பு - விசும்பாகிய அந்தரம் என்பர் நச்சினார்க்கினியர். மந்தித்தரசன் என்றது கலுழவேகனை பாவை : தத்தை. கடிவினை - திருமணவினை. நொடிதல் - கூறுதல். மற்று ஓர்; இரண்டு அசைச் சொற்கள். அந்தர விசும்பு : இருபெயரொட்டுமாம் இனி, மாக விசும்பு என்றாற போன்று அந்தரம் என்றது பூமிக்கும் வானுலகிற்கும் இடையிலுள்ள வெளியை எனலுமாம். கோமான் - வாளா இந்திரன் என்னும் பெயர் மாத்திரையாய் நின்றது. ( 344 )
837. அடிமனை பவள மாக வரும்பொனா லலகு சேர்த்தி
முடிமணி யழுத்திச் செய்த மூரிக்காழ் நெற்றி மூழ்கக்
கடிமலர் மாலை நாற்றிக் கம்பல விதானங் கோலி
யிடுபுகை மஞ்சிற் சூழ மணவறை யியற்றி னாரே.
பொருள் : அடிமனை பவளம் ஆக - சுற்றுச் சுவர் பவளப் பலகையால் நிறைத்து; அரும்பொனால் அலகு சேர்த்தி - அரிய பொன்னால் கையலகு சேர்த்து; முடிமணி அழுத்திச் செய்த மூரிக்காழ் நெற்றி மூழ்க - முடியிலே மணியை அழுத்தி நாட்டிய பெரிய தூண்களின் நெற்றி மறையுமாறு; கம்பல விதானம் கோலி - கம்பலமாகிய மேற்கட்டியைக் கட்டி; கடிமலர் மாலை நாற்றி - மணமிகும் மலர்மாலைகளைத் தூக்கி, இடுபுகை மஞ்சின சூழ - இடுகின்ற அகிற் புகை முகிலெனச் சூழுமாறு; மண அறை இயற்றினார் - திருமண அறையை அமைத்திருந்தனர்.
விளக்கம் : அலகு - சலாகை. முடிமணி - சூளாமணி. மூரிக்காழ் - பரிய தூண். கம்பலவிதானம் - துகிலாலாய மேற்கட்டி. மஞ்சு - முகில். ( 345 )
838. ஐந்துமூன் றடுத்த செல்வத்
தமளிமூன் றியற்றிப் பூம்பட்
டெந்திர வெழினி வாங்கி
யின்முக வாசச் செப்புஞ்
சந்தனச் சாந்தச் செப்புந்
தண்மலர் மாலை பெய்த
விந்திர நீலச் செப்பு
மிளையவ ரேந்தி னாரே.
பொருள் : ஐந்து மூன்று அடுத்த செல்வத்து அமளி மூன்று இயற்றி - ஐந்தாகிய ஒன்று மும்மூன்றாகப் படுத்த செல்வம் உறும் படுக்கை மூன்று அமைத்து; பூமபட்டு எந்திர எழினி வாங்கி - அழகிய பட்டினால் ஆகிய பொறித் திரையை வளைத்து; இன்முக வாசச் செப்பும் - இனிய முகவாசப் பொருள்கள் அடங்கிய செப்பினையும்; சந்தனச் சாந்தச் செப்பும் - சந்தன மரத்தால் அமைத்த சாந்து பெய்த செப்பினையும் ; தண்மலர் மாலை பெய்த இந்திர நீலச் செப்பும் - குளிர்ந்த மலர்மாலை அமைத்த இந்திர நீலச் செப்பினையும்; இளையவர் ஏந்தினார் - இளமங்கையர் ஏந்தி நின்றனர்.
விளக்கம் : ஐந்தாவன: சிறுபூளை செம்பஞ்சு வெண்பஞ்சு சேணம் - உறுதூவி சேக்கை ஓரைந்து. இருவரும் துயில் இரண்டும் இன்பந்துய்க்க ஒன்றும் வேண்டுதலின் அமளி மூன்றாயின. இனிய முகவாசமாவன : தக்கோலம் தீம்பூத் தகைசால் இலவங்கம் - கப்பூரம் சாதியோடைந்து. இவற்றோடு சருக்கரையும் தேனுங் கூட்டுப. இது முதலிற் கவுளிற் கொண்டு, பின்பு பாகு கவுள் கொள்ள வேண்டுதலின் வாசச் செப்பென்ற பெயர் சிறப்பினாற் பெற்ற பெயர் ( 346 )
839. கடைந்துபெய் மணிக்கைச் செம்பொற்
காசறு தட்டிற் சூழ்ந்து
மிடைந்துபெய் மணிக்கட் பீலி
மின்னுசாந் தாற்றி பொன்னா
ரடைந்துவீ சால வட்ட
மரிவைய ரேந்தி யாற்றத்
தடங்கண்கள் குவளை பூப்பத்
தையலோ டாடு மன்றே.
பொருள் : கடைந்து பெய் மணிக்கைச் செம்பொன் காசு அறு தட்டின் - கடைந்து செய்த மணிக்கையினையும், செம்பொன்னாலாகிய குற்றம் அற்ற தட்டினையும்; சூழ்ந்து மிடைந்து பெய் மணிக்கண் பீலி - தன்னைச் சூழ்ந்து நெருங்கப் பெய்த, நீலநிறக் கண்களையுடைய பீலியையும் உடைய; மின்னு சாந்தாற்றி - மின்னுகின்ற சிற்றாலவட்டத்தையும்; அடைந்து வீசுபொன் ஆர் ஆலவட்டம் - அடைந்து விசிறும் பொன்னாலவட்டத்தையும்; அரிவையர் ஏந்தி ஆற்ற - மகளிர் ஏந்தி வந்து வீசிக் களைப்பைப் போக்க; தடம் கண்கள் குவளை பூப்ப - பெரிய கண்கள் செங்குவளை போலச் சிவக்க; தையலோடு ஆடும் - தத்தையோடு இன்பம் நுகர்வான்.
விளக்கம் : மணிக்கை - மணியிழைத்த கைப்பிடி. ஆசு - குற்றம். மணிக்கண் - நீலமணி போன்ற நிறமுடைய புள்ளி. சாந்தாற்றி - சிற்றாலவட்டம் என்னும் ஒருவகை விசிறி. ஆடும் : இடக்கரடக்கல். ( 347 )
840. பஞ்சுசூழ் பரவை யல்குற்
பசுங்கதிர்க் கலாபம் வீங்கச்
செந்தளிர்க் கோதை சோரக்
கிண்கிணி சிலம்பொ டேங்க
மைந்தருட் காம னன்னான்
மகளிருட் டிருவ னாளை
யந்தரத் தமரர் பெற்ற
வமிர்தெனப் பருகி னானே.
பொருள் : பஞ்சுசூழ் பரவை அல்குல் பசுங்கதிர்க் கலாபம் வீங்க - ஆடை யணிந்த பரந்த அல்குலிலே புத்தொளிக் கலாபம் இறுக; செந்தளிர்க் கோதை சோர - சிவந்த தளிர் மிடைந்த மலர்மாலை அவிழ; கிண்கிணி சிலம்பொடு ஏங்க - கிண்கிணியுஞ் சிலம்பும் ஒலிக்க; மைந்தருள் காமன் அன்னன் - ஆடவர்களிற் காமனைப் போன்ற சீவகன்; மகளிருள் திருவனாளை - பெண்களில் கண்டார் விரும்பும் தன்மையைப் போன்றவளை; அந்தரத்தமரர் பெற்ற - வானுலகிலே அமரர்கள் பெற்ற; அமிர்து எனப் பருகினான் - அமிர்தம் போல நுகர்ந்தான்.
விளக்கம் : திரு - கண்டார் விரும்புந் தன்மை; திருவளர் தாமரை (திருச்சிற்.1) போல. பஞ்சு: கருவியாகுபெயர். பஞ்சு, ஆடைக்கு ஆகுபெயர். கலாபம் - ஒருவகை மேகலையணி, காமனன்னான்: சீவகன்; திருவனாள் - தத்தை. பருகுதல் ஈண்டு அதரபானமும் அல்குற் பானமும் என்பர் நச்சினார்க்கினியர். ( 348 )
841. இளமுலை மணிக்கண் சேப்ப
வெழுதுவிற் புருவ மேறக்
கிளைநரம் பனைய தீஞ்சொற்
பவளவாய் திகழத் தேன்சோர்
வளமலர்க் கோதை தன்னை
வாய்விடான் குழையப் புல்லி
யளமர லிலாத வின்பக்
கடலகத் தழுந்தி னானே.
பொருள் : தேன் சோர் வளமலர்க் கோதை தன்னை - தேன்பிலிற்றும் வளமிகும் மலர்க்கோதை போல்வாளை; இளமுலை மணிக்கண் சேப்ப - இளமுலைகளின் கரிய மணி போன்ற கண்கள் சிவப்பவும்; எழுது வில் புருவம் ஏற - எழுதிவைத்த வில்போன்ற புருவங்கள் நெற்றியில் ஏறவும்; குழையப் புல்லி - குழையுமாறு தழுவி; கிளை நரம்பு அனைய தீ சொல் பவளவாய் திகழ -கிளை என்னும் நரம்பின் இசையனைய இனிய மொழி கூறும் பவளவாய் விளங்க; வாய்விடான் - வாய்விடாமல்; அளமரல் இலாத இன்பக் கடலகத்து அழுந்தினான் - மனச் சுழல் இல்லாத இன்பக் கடலிலே அழுந்தினான்.
விளக்கம் : புணர்ச்சி யிறுதிக்கண் மெய்ம்மறந்து முலைக்கண் துயிலும் துயிலை இன்பக் கடல் என்றார். நச்சினார்க்கினியர் 839 முதல் 841 வரை மூன்று செய்யுட்களையும் ஒரு தொடராக்கி ஒரு செட்யுட் சொல்லை மற்றொருசெய்யுளிலே கொண்டு கூட்டிப் பொருள் கூறினார். கூறியபின் இறுதியில், இனிக்கரணவிசேடமாக்கிச் செவ்வனே பொருளுரைப்பாரும் உளர். அது பொருந்துமேனும் உணர்க என்றனர்.
அவர் கூறும் பொருள்:
அங்ஙனம் இளையவரேந்திய துப்புரவுகளை நுகர்ந்து, காமன் அன்னான், திருவன்னாளை இளமுலை மணிக்கண் சிவப்பக் குழையப்புல்லி, அக் கோதை தன்னைப் பவளவாய் திகழ அல்குலிற் கலாபம் வீங்க அவ்விரண்டனையும் வாய்விடானாய் அமிர்தெனப் பருகினான். அங்ஙனம் பருகி, அத் தையலோடே கோதை சோர ஏங்கப் புருவம் ஏறக் கண்கள் குவளைபூப்ப ஆடும். அங்ஙனம் ஆடுதலிற் பிறந்த வியர்வை நீங்கும்படி சாந்தாற்றியையும் பொன்னாராலவட்டத்தையும் அரிவையர் ஏந்தித் தம்மை யடைந்து ஆற்றும்படி இன்பக் கடலகத்தே அழுந்தினான் என்க. சேப்ப - சிவக்கும்படியும். கிளை - ஒருபண். தேன் சோர் கோதை என்றது காமச் செவ்வி கூறியபடியாம். அளமரல் - அலமரல்; சுழற்சி. ( 349 )
842. இன்னண மொழுகு நாளு
ளிளமரக் காவு காண்பான்
பொன்னணி மார்பன் சென்று
புகுதலு மொருவன் றோன்றித்
துன்னியோ ரோலை நீட்டித்
தொழுதனன் பெயர்ந்து நிற்ப
மன்னிய குருசில் கொண்டு
மரபினால் நோக்கு கின்றான்.
பொருள் : இன்னணம் ஒழுகும் நாளுள் - இவ்வாறு இன்பந்துய்க்கும் நாட்களில்; இளமரக் காவு காண்பான் - இளமரச் சோலை பார்ப்பதற்கு; பொன் அணி மார்பன் சென்ற புகுதலும் - பொன்னணி புனைந்த மார்பன் சென்று நுழைதலும்; ஒருவன் தோன்றித் துன்னி ஓர் ஓலை நீட்டி - ஒருவன் வந்து அருகில் வந்து ஓலையொன்றைக் கொடுத்து; தொழுதனன் பெயர்ந்து நிற்ப - வணங்கி மீண்டு சென்று நிற்க; மன்னிய குருசில் கொண்டு -பொருந்திய சீவகன் அதைக் கைக்கொண்டு; மரபினால் நோக்குகின்றான் - முறையாக வாசிக்கின்றான்.
விளக்கம் : மரபினால் என்பதற்கு வழிபாட்டுடன் என்று பொருள் கூறுவர் நச்சினார்க்னியர். இன்னணம் - இவ்வாறு. காவு காண்டலாவது. பூம்பொழிலிற் சென்று ஆடுதல் மார்பன் : சீவகன். ஒருவன் என்றது தரன் என்னும் விஞ்சையனை. தொழுதனன் : முற்றெச்சம். மரபு - வாசிக்குமுறைமை. நோக்குதல் - ஈண்டு ஓதுதல் என்பதுபட நின்றது. ( 350 )
வேறு
843. உருமுக்கதிர் வேற்கலுழ னோலையுல கென்னும்
பருமைக்குருப் பளிங்கிற்புகழ்ப் பஞ்சிமுழு தடுத்த
திருமிக்குடைச் செல்வன்றிறற் சாமிநனி காண்க
அருமையற னின்பம்பொரு ளாகென விடுத்தேன்.
பொருள் : உருமுக் கதிர்வேல் கலுழன் ஓலை - இடி போன்ற, கதிர் வேலையுடைய கலுழன் விடுத்த ஓலை; உலகு என்னும் பருமைக்குருப் பளிங்கின் - உலகம் என்னும் பெரிய நிறமிகுந்த பளிங்கில்; புகழ்ப் பஞ்சி முழுது அடுத்த - புகழாகிய பஞ்சி சிறிதிடமும ஒழியாமல் பரவிய; திருமிக்குடைச் செல்வன் திறல் சாமி நனி காண்க - இச் செல்வத்தினை முற்பிறப்பின் தவ மிகுதியாலே கொண்ட செல்வனான வலிமையுற்ற சீவகசாமி நன்றாக அறிக; அருமை அறன் இன்பம் பொருள் ஆக என விடுத்தேன் - தனக்கு இன்னும் மேம்பட்ட அறமும் இன்பமும் பொருளும் வளர்க என வாழ்த்தி இது வரவிடுத்தேன்.
விளக்கம் : தேவனாதலின் கூறினான். விடுத்தேன் : விகாரம் (விட்டேன் என இருத்தல் வேண்டும்) கலுழன் - கலுழவேகன். அறம் பொருள் இன்பம் எனற்பாலன செய்யுளாகலின் முறை பிறழ்ந்து வந்தன. சாமி என்றது சீவகசாமி என்றவாறு; விளி. ( 351 )
844. தத்தையொடு வீணைமனர் தாம்பொருது தோற்ப
மொய்த்தகலை நம்பிமுகிழ் முலையையிசை வெல்ல
வைத்தகதிர் வேலின்வலி யார்க்குரிய ளென்னச்
சித்தங்கரிந் தாங்குக்கொடி யான்செரு விளைத்தான்.
பொருள் : மனர்தாம் தத்தையொடு வீணை பொருது தோற்ப - மன்னர்கள் தாம் தத்தையுடன் வீணையால் பொருது தோற்றபின்; மொய்த்த கலை நம்பி முகிழ்முலையை இசை வெல்ல - செறிந்த கலைச் செல்வனாகிய சீவகன் தத்தையை இசையாலே வெல்ல; ஆங்குக் கொடியான் சித்தம் கரிந்து - அப்போது கொடியவனான கட்டியங்காரன் உள்ளம் வெந்து; வைத்த கதிர் வேலின் வலியார்க்கு உரியள் என்ன - கூரிய ஒளிமிகு வேற்போரிலே வல்லவர்க்கு இவள் உரியவள் என்றுரைத்து, செரு விளைத்தாள் - போரை உண்டாக்கினான்.
விளக்கம் : வை எனக் குறிப்புணர நின்ற உரிச்சொல் வைத்த என வினைமேல் தன் மெய் தடுமாறிற்று (தொல். உரி. 1. நச்.); முள்முனை போலக் கூர்த்த வேல் என்க. மனர் : மன்னர் என்பதன் விகாரம். நம்பி : முன்னிலைப் புறமொழி. சித்தம் - அறிவு. கொடியான் : கட்டியங்காரன். ( 352 )
845. தேன்முழங்கு தார்க்குருசில் செம்பொனெடுந் தேர்மேல்
வான்முழங்கு வெஞ்சிலையின் வாளிமழை தூவி
யூன்முழங்கு வெங்குருதி வேழமுடன் மூழ்க
வேன்முழங்கு தானைவிளை யாடியதுங் கேட்டேன்.
பொருள் : தேன் முழங்கு தார்க் குருசில் செம்பொன் நெடுந்தேர் மேல் - வண்டுகள் முரலுந் தாரணிந்த சீவகன் நெடிய செம்பொற் றேர்மீது அமர்ந்து; வான் முழங்கு வெம்சிலையின் வாளி மழை தூவி - முகிலிடிபோல முழங்கும் கொடிய வில்லாலே கணை மாரி பெய்தலால்; ஊன் முழங்கு வெம்குருதி - மெய்யில் உண்டாகிப் பெருகிய குருதியிலே; வேழம் உடன் முழ்க - களிறு முற்றும் மூழ்குமாறு; வேல் முழங்கு தானை - வேலேந்தி ஆர்ப்பரித்த படைஞருடன்; விளையாடியதும் கேட்டேன் - விளையாடியதையும் தரன் கூறக் கேட்டேன்.
விளக்கம் : தூவி - தூவுதலால்; எச்சத்திரிபு சிலையென் வாளி என்பதூஉம் பாடம். தேன் - வண்டு. குருசில் : முன்னிலைப் புறமொழி. வான் : ஆகுபெயர்; இடி என்க. ( 353 )
846. வந்துதரன் கூறியவிவ் வாய்மொழியு மன்றி
முந்துவரன் மொழிந்தபொருண் முற்றும்வகை நாடிப்
பந்துபுடை பாணியெனப் பாயுங்கலி மான்றே
ரெந்தைதிற முன்னமுணர்ந்த தின்னணம் விடுத்தேன்.
பொருள் : பந்து புடை பாணியெனப் பாயும் கலிமான் தேர் எந்தை திறம் - பந்தடியும் தாளவொற்றும் போலப் பாய்ந்து செல்லும், ஒலிக்குங் குதிரை பூட்டிய தேரையுடைய எந்தையாகிய சீவகன் திறத்தில்; வந்து தரன் கூறிய இவ் வாய்மொழியும் - தரன் கூறிய இம் மொழியும்; அன்றி முந்து வரன் மொழிந்த பொருள் முற்றும் வகை முன்னம் உணர்ந்து நாடி - முன்னர் அச்சணந்தி அடிகள் மொழிந்த காரியமும் முடியுங் கூறுபாட்டையும் முன்பே குறிப்பாலே நாடி உணர்ந்து; இன்னணம் விடுத்தேன் - இனி யாம் சேறல் கருமம் அன்று என்று கருதித் தத்தையைச் சீதத்தனுடனே வரவிட்டேன்.
விளக்கம் : கலுழவேகன் வரின் சீவகன் வரலாறு மாறுறும். வாய் மொழி என்றார், நிமித்திகன் கூறக் கேட்டிருந்தது இப்பொழுது முற்றின செய்தியைத் தரன் கூறுதலின். வரன் - மேலானவன்; ஈண்டு அச்சணந்தி முனிவன். எந்தை என்றது உணர்வு குறித்துக் கூறியது; முறைப் பெயரன்று. பாணி - தாளம். ( 354 )
847. எள்ளுநர்கள் சாயவென தோளிரண்டு நோக்கி
வெள்ளிமலை முழுதுங்கொடி யெடுத்ததிக லேத்திக்
கள்செய்மலர் மார்பனுறு காப்பிகழ்த லின்றி
யுள்ளுபொரு ளெம்முணர்த்தி யன்றியுள வேண்டா.
பொருள் : என தோள் இரண்டும் நோக்கி - என்தோளிரண்டையும் பார்த்து; எள்ளுநர்கள் சாய - இகழ்ந்திருக்கும் பகைவர்கள் சாயுமாறு; இகல் ஏத்தி - சீவகன் எந்தை செய்த போரை ஏத்தி; வெள்ளிமலை முழுதும் கொடி எடுத்தது - வெள்ளிமலை யெங்கும் வெற்றிக்கொடி பிடிக்கப்பட்டது; (இனி மேல் எந்தை வெற்றியும் தோல்வியும் என்னுடையனவே ஆகையால்) கள்செய் மலர்மார்பன் - தேன் பொருந்திய மலர் மார்பன்; உறு காப்பு இகழ்தல் இன்றி - மிக்க காவலை இகழாமல்; உள்ளு பொருள் எம் உணர்த்தி அன்றி - தாம் நினைத்திருக்கும் பொருள்களும் எமக்கு அறிவித்தல்லது; உள வேண்டா - மேல் நினைத்தலும் வேண்டா.
விளக்கம் : உளவும் என்னும் இழிவு சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. எள்ளுநர் - இகழ்பவர்; பகைவர். மார்பன் : முன்னிலைப் புறமொழி. ( 355 )
848. ஆம்பொருள்க ளாகுமது யார்க்குமழிக் கொண்ணாப்
போம்பொருள்கள் போகுமவை பொறியின்வகை வண்ணந்
தேம்புனலை நீர்க்கடலுஞ் சென்றுதர லின்றே
வீங்குபுனல் யாறுமழை வேண்டியறி யாதே.
பொருள் : ஆம் பொருள்கள் ஆகும் அது யார்க்கும் அழிக்க ஒண்ணா - நலமுற வேண்டியவை நலம்பெறும் அந்நலத்தை எவராலும் அழிக்கவியலாது; போம் பொருள் போகும் - அழியும் பொருள் அழியும்; (அழிவைத் தடுக்கவும் யாராலும் முடியாது); அவை பொறியின் வகை வண்ணம் - அவை இருவினைப் பயனாகிய ஊழின் கூறுபாட்டுத் திறம்; தேம் புனலை நீர்க்கடலும் சென்று தரல் இன்று - இனிய நீரை உப்புநீர்க் கடலும் உலகிடைச் சென்று தருதல் எப்போதும் இன்று; மழை யாறு வீங்கு புனல் வேண்டி அறியாது - முகில் யாற்றுக்கு மிக்க நீரைக் கொடுக்க விரும்பி அறியாது.
விளக்கம் : அது என்று ஒருமையாற் சுட்டினார், அழிக்க ஒண்ணாத் தன்மையைக் கூறலின். கட்டியங்காரன் ஆக்கத்திற்கும் சச்சந்தன் அழிவிற்கும் வருந்தாதொழிக என்று சீவகனுக்குத் தேறுதல் கூறினான். தேம் புனலை உவர் நீர்க்டல் தராது என்பது தீய பண்புடையோர் பிறர்க்கு நன்மை செய்ய அறியார்; கட்டியங்காரனும் எப்போதும் நமக்குத் தீங்கிழைப்பான். அதனால், தீமையும் அடைவான் என்றுணர்த்தியது. யார்கண்ணும் இகந்துசெய் திசைகெட்டான் இறுதி போல் - வேரொடு மரம் வெம்ப விரிகதிர் தெறுதலின் (கலி.10) என்றார் பிறரும். முகில் யாற்றுக்கு நீரை அது விரும்பாதேயுங் கொடுத்தல் போல நல்லோரும் பிறர்க்கும் எப்போதும் நலமே செய்வாராதலின், சீவகனும் நலம்புரிக என்றான். இதுவரை ஓலைப்பாசுரச் செய்தி. இனி, எள்ளுநர்கள் (சீவக. 847) என்னுஞ் செய்யுளளவும் ஓலைப் பாசுரமாக்கி அது கேட்ட சீவகன் கூறுகின்றானென ஆக்குவாரும் உளர். அதற்கு, இகல் ஏத்திக் கொடியெடுத்த தென்று, அவன் வியந்ததற்குத் தான் வென்றானாகக் கூறாது, ஆக்கமுங் கேடும் பொறியின் வகை என்றான் ஆக்குக; ஆக்கத்திற்கும் அழிவிற்கும் ஆற்றிலே உவமை கொள்க. கடல் வேண்டாதிருக்கப் புனல்தானே போனது போம்பொருட்கும், யாறு மேகத்தை வேண்டாதிருக்கப் புனல்தானே நிறைகை ஆம் பொருட்கும் உவமை. சென்றுதரல் - போய்க்கொண்டு வருதல்.
இச்செய்யுள் :
பரியினும் ஆகாவாம் பாலல்ல வுய்த்துச்
சொரியினும் போகா தம (குறள் - 376)
என வரும் திருக்குறளையும்,
உறற்பால நீக்கல் உறவர்க்கும் ஆகா
பெறற்பா லனையவு மன்னவாம் - மாரி
வறப்பிற் றருவாரு மில்லை அதனைச்
சிறப்பிற் றணிப்பாரும் இல் (நாலடி. 104)
எனவரும் நாலடியையும் நினைப்பிக்கின்றது. ( 356 )
849. மன்பெரிய மாமனடி மகிழ்ந்துதிசை வணங்கி
அன்பினக லாதவனை விடுத்தலார்ந்த கோதைக்
கின்பநிலத் தியன்றபொரு ளிவையிவைநுங் கோமான்
றந்தவெனச் சொல்லிநனி சாமிகொடுத் தானே.
பொருள் : மன் பெரிய மாமன் அடி மகிழ்ந்து திசை வணங்கி - மிகப் பெரிய மாமன் அடியைத் திசை நோக்கி மகிழ்ந்து வணங்கி; அன்பின் அகலாதவனை விடுத்து -அன்பினால் நீங்காது நின்ற தரனை விடுத்து; அலர் கோதைக்கு - தத்தைக்கு; இன்ப நிலத்து நனி இயன்ற பொருள் நும் கோமான் தந்த இவையிவை எனச் சொல்லி - இன்ப நிலத்திற்கு நன்றாகப் பொருந்திய பொருள்களாக நின் தந்தை கொடுத்தவை இவையிவை என்று கூறி; சாமிகொடுத்தான் - சீவகன் கொடுத்தான்.
விளக்கம் : மன்பெரிய மாமன் - மிகப் பெரிய மாமனாகிய கலுழவேகன். அன்பினகலாதவன் - தரன். இன்பநிலம் - நுகரும் துறைகள். கோமான், ஈண்டுத் தந்தை என்னும் முறைப்பெயர்ப் பொருட்டாய் நின்றது. சாமி - சீவகசாமி. ( 357 )
850. குங்குமமுஞ் சந்தனமுங் கூட்டியிடு கொடியா
வெங்கணிள முலையின்மிசை யெழுதிவிளை யாடிக்
கொங்குண்மலர்க் கோதையொடு குரிசில்செலும் வழிநா
ளங்கணகர்ப் பட்டபொரு ளாகியது மொழிவாம்.
பொருள் : குங்குமமும் சந்தனமும் கூட்டி யிடுகொடியா - குங்குமத்தையும் சந்தனத்தையுங் கலந்து தொய்யில் கொடியாக; வெம்கண் இளமுலையின் மிசை எழுதி - விருப்பூட்டும் இளமுலையின் மேல் எழுதி; கொங்கு உண்மலர்க் கோதையொடு குருசில் விளையாடி - தேன் பொருந்திய கோதையாளுடன் சீவகன் விளையாடி; செலும்வழி நாள் - செல்லும் காலத்தே; நகர் அங்கண்பட்ட பொருள் ஆகியது மொழிவாம் - நகரிலே நிகழ்ந்த நிகழ்ச்சிகளையும் சீவகன் அடைந்ததையும் கூறுவோம்.
விளக்கம் : பொருளாகியது ஒரு சொல்லுமாம். கூட்டி - கலந்து. இடு கொடி - எழுதுந் தொய்யிற் கொடி. கொடியா என்புழி ஆக்கச் சொல் ஈறு தொக்கது. குருசில் : சீவகன். வழிநாள். பின்னாள்கள். பட்டது - நிகழ்ந்தது. என்றது, இக்காரணத்தால் சீவகன்பால் நிகழ்ந்த செய்திகளை. பொருளாகியது : ஒரு சொன்னீர்மைத்து. ( 358 )
காந்தருவ தத்தையார் இலம்பகம் முற்றிற்று.