பதிவு செய்த நாள்
14
நவ
2011
05:11
சித்தர் வணக்கம்
1. மூவா முதலா உலகம் ஒரு மூன்றும் ஏத்தத்
தாவாத இன்பம் தலை ஆயது தன்னின் எய்தி
ஓவாது நின்ற குணத்து ஒள் நிதிச் செல்வன் என்ப
தேவாதி தேவன் அவன் சேவடி சேர்தும் அன்றே.
பொருள் : தேவாதி தேவன் - வானவர்கட்கு முதலான வானவன் என்பான்; மூவா முதலா உலகம் ஒரு மூன்றும் ஏத்த - முடிவும் தோற்றமும் இல்லாத மூன்றுலகமும் போற்ற; தாவாத இன்பம் தலையாயது - கெடாத இன்பம் தனக்கு ஒப்பற்றதனை, தன்னின் எய்தி ஓவாதுநின்ற - தன்னாற் பெறுவதனால் தன்னைவிட்டு நீங்காது நின்ற; குணத்து ஒள்நிதிச் செல்வன் என்ப - பண்புகளை உடையவனாகிய சிறந்த நிதியை உடைய செல்வன் என்று பெரியோர் கூறுவர்; (ஆகையால்) அவன் சேஅடி சேர்தும் - (யாமும் இவ்விலக்கியம் இனிது முடிய) அவன் செவ்விய திருவடிகளை வணங்குவோம்.
விளக்கம் : ஒண்ணிதிச் செல்வன் - வீடாகிய விளங்கிய நிதியை உடைய செல்வன். குணம்: எண் குணங்கள். அவை: தாவாத இன்பம் என்பதனாற் பெறப்பட்ட வரம்பிலா இன்பம் நீங்கலாக உள்ள வரம் பிலாஅறிவு, வரம்பிலா ஆற்றல், வரம்பிலாக் காட்சி, பெயரின்மை, மரபின்மை, ஆயுவின்மை, அழியா இயல்பு என்பனவாம். இஃது அருகசரணம் சித்தசரணம் சாதுசரணம் தன்மசரணம் என்னும் நான்கனுட் சித்தசரணம். சித்த சரணம்-சித்தனை வணங்கும் வணக்கம். சித்தன்: காதி அகாதி என்னும் இருவகைக் கருமங்களையும் வென்று, அக்கினி யிந்திரனால் உடம்பைத் துறந்து, பரிநிர்வாணம் பெற்று மூவுலகத்து உச்சியில் இருப்பவன். இத் தொடர்நிலைச் செய்யுள் தேவர் செய்கின்ற காலத்து நூல் அகத்தியமும் தொல்காப்பியமும் ஆதலானும், முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணி (தொல்-சிறப்பு) என்றதனால், அகத்தியத்தின் வழி நூல் தொல்காப்பிய மாதலானும், பிறர் கூறிய நூல்கள் நிரம்பிய இலக்கணத்தன அன்மையானும், அந்நூலிற் கூறிய இலக்கணமே இதற்கிலக்கண மென்றுணர்க.
அவ்விலக்கணத்திற் செய்யுளியலின் கண்ணே ஆசிரியர் பா நான் கென்றும், அவற்றை அறம் பொருளின்பத்தாற் கூறுக என்றும் கூறிப் பின்பு அம்மை முதலிய எட்டும் தொடர்நிலைச் செய்யுட்கு இலக்கணம் என்று கூறுகின்றுழி, இழுமென் மொழியால் விழுமியது நுவலினும் (தொல்.செய்.238) என்பதனால், மெல்லென்ற சொல்லான் அறம் பொருளின்பம் வீடென்னும் விழுமிய பொருள் பயப்பப் பழையதொரு கதைமேற் கொச்சகத்தாற் கூறின், அதுதோல் என்று கூறினமையின், இச் செய்யுள் அங்ஙனங் கூறிய தோலா மென்றுணர்க. இச் செய்யுள் முன்னோர் கூறிய குறிப்பின்கண் வந்த செந்துறைப் பாடாண் பகுதியாம்; (தொல்-புறத்-27). இதனானே, யாப்பினும் பொருளினும் வேற்றுமையுடையது (தொல்-செய்.641) என்பதற்குத் தேவபாணியும் காமமுமே யன்றி வீடும் பொருளாமென்பது ஆசிரியர் கருத்தாயிற்று.
முந்து நூல்களிற் காப்பியம் என்னும் வடமொழியால் தொடர்நிலைக்குச் செய்யுட்குப் பெயரின்மையும் இதற்குப் பிறகு கூறிய நூல்கள் இதற்கு விதியன்மையும் உணர்க. இனி, இத் தொடர்நிலைச் செய்யுளை இனம் என்ப. அந் நூல்கள் இனம் என்று சுட்டிய உதாரணங்கள்தாம் அவர் சேர்த்த அவ்வப் பாக்கட்கே இனமாகாது, ஒழிந்த பாக்கட்கும் இனமாதற்கு ஏற்றலானும், துறையை விருத்தமாகவும் தாழிசையை விருத்தமாகவும் ஓதுதற்கு அவை ஏற்றமையானும், மூவா முதலா என்னும் கவி முதலியன தாழம்பட்ட (தாழ்தல் பொருந்திய) ஓசையான் விருத்தமாயும் சீர்வரை யறையானும் மிகத்துள்ளிய ஓசையானும் துறையாயும் கிடத்தலின், இதனை விருத்தக் கலித்துறை யெனல் வேண்டும்; அது கூறவே, துறையும் விருத்தமும் எனப் பகுத்தோதிய இலக்கணம் நிரம்பாதாம் ஆகலானும் இன மென்றல் பொருத்தமின்று. இச் செய்யுட்களின் ஓசை வேற்றுமையும் மிக்கும் குறைந்தும் வருவனவும் கலிக்கே ஏற்றலிற் கொச்சகமென்றடங்கின.
யாப்பினும் பொருளினும் வேற்றுமையுடையது என்பதனால், இக்கவியும் மேலிற் கவியும் முன்னிலையன்றியும் தேவர்ப் பராயினவாம். இனி அளவியற் சந்தம், அளவழிச் சந்தம், அளவியற்றாண்டகம், அளவழித் தாண்டகம், சமசந்தத் தாண்டகம், சந்தத் தாண்டகம், தாண்டகச் சந்தமென அடக்குவார்க்கு அவற்றுள்ளும் சிலவன்றி முழுதும் அடங்காமை உணர்க. மூவா முதலா என்பது, மூத்த முதலிய என்னும் பெயரெச்சங்களின் எதிர்மறை அடுக்கு; எதிர்மறுத்து மொழியினும் பொருணிலை திரியா (தொல்-வினை.39) என்பதனால், உலகம் என்னும் வினைமுதற் பொருளோடு முடிந்தது; முதலா ஏன தம் பெயர் முதலும், (தொல்-மொழி-33) என்பதனான், முதலும் என்பதொரு வினை உடன்பாட்டிற்கு உளதாம். ஆசிரியர், காலம் உலகம் (தொல்-கிளவி-58) என்றும் பிறாண்டும் சூத்திரம் செய்தலின் அது வடமொழி அன்று. ஈண்டு உலகம் என்றது உயிர்க்கிழவனை, உலகம் உவப்ப (முருக-1) என்பது போல. ஒன்று+மூன்றும்: ஒரு முன்றும். ஒன்று என்பதில் உள்ள குற்றியலுகரம் மெய்யொடுங்கெட்டு, முதலீ ரெண்ணின் ஒற்று ரகரம் ஆகும், உகரம் வருதல் ஆவயினான (தொல் - குற்றியலுகரப்-33) என்னும் விதியும் பெற்று, அளந்தறி கிளவியும் (தொல் - குற்றியலுகரப்-41 என்னும் சூத்திரத்துத், தோன்றுங்காலை என்ற இலேசான் முடிந்தது. ஒரு மூன்றும் ஏத்த எய்தி என்க. உம்மை, இனைத்தென அறிந்த சினை முதற் கிளவிக்கு வினைப்படு தொகுதியின் (தொல்-கிளவி-33) வந்தது, உலகம் என்னும் பெயர் மூன்றென்னும் பெயர்ப் பயனிலை கொண்டு, அதுதான் ஏத்த என்னும் வினைப் பயனிலை கொண்டது.
வருத்தமாகிய குறிப்புணர்த்திய தா என்னும் உரிச்சொல் வினைக்கு முதனிலையாய்த், தாவாத எனப் பெயரெச்ச மறையாய் இன்பம் என்னும் பெயரொடு முடிந்தது. ஏத்தத் தாவாத என்பது, வினையெஞ்சு கிளவியும்... வல்லெழுத்து மிகுமே (தொல். உயிர்மயங்கு-2) என்பதனால் ஒற்று மிக்கது. தாவாத வின்பம் என்பது உடம்படுமெய்யாயிற்று; இன்பம் என்னும்பெயர் தலையாய தென்னும் குறிப்புப் பெயரைக் கொண்டது; இன்பந்தலையாயது என்புழி அல்வழி யெல்லாம் மெல்லெழுத் தாகும் (தொல்-புள்ளி-19) என்பதனான் மகரம் நகரம் ஆயிற்று. தன்னின் எய்தி என்ற இன் காரக ஏதுப் பொருட்கண் ஐந்தாம் உருபு. தன்னில் எய்தி என்று பாடமாயின், மணியினது ஒளியும் மலரினது நாற்றமும் போலத் தன்னுள்ளே பெற்று என்க. எய்தி என நின்ற செய்தெனெச்சம் காரணகாரியப் பொருட்டாய், நின்ற என்னும் பெயரெச்ச வினையொடு முடிந்து, அது குணம் என்னும் பொருட்பெயரோடு முடிந்தது.
ஓவாது என்னும் எதிர்மறை யெச்சமும் நின்ற என்பதனோடு முடியும். குணத்து: அத்து: இரண்டா முருபின்கண் வந்த சாரியை. அத்தே வற்றே ஆயிருமொழி மேல் - ஒற்றுமெய் கெடுதல் தெற்றென்றற்றே (தொல்-புணரியல்-31) என்பதனால் மகரங்கெட்டு, அத்தின் அகரம் அகர முனையில்லை (þ-þ-23) என்பதனால் அகரம் கெட்டு முடிந்தது. குணத்தொண்ணிதி என்பதில், குற்றியலுகரமும் அற்று (þ-þ-3) என்பதனால் வருமொழியின் ஒகரம் ஏறிற்று. ஒண்ணிதி: பண்புத்தொகை. ஒண்ணிதிச் செல்வன்: இகர வீற்று வேற்றுமைச் சொல்லாதலின் வல்லெழுத்து மிக்கது. செல்வன் என்றார், அழியாத இன்பத்தை நுகர்தலின். என்ப என்னும் முற்றுச் சொல் பெரியார் என்னும் தோன்றா எழுவாய்க்குப் பயனிலையாயிற்று. தேவும் தெய்வத்துக்கு ஒரு பெயர். தேவுக்கு ஆதிதேவன் என நான்கன் உருபு விரிக்க. ஆதியாகிய தேவன் என்க. செம்மை+அடி: சேவடி, பண்பு மாத்திரையாய்க் குறைந்த சொல்லாதலின் மருவின் பாத்தியதாய் (தொல் குற்றியலுகரப்-77) நின்றது. சேவடி சேர்தும் ஒற்று இரட்டாது நின்றது இரண்டாவதற் கோதிய திரிபில் அன்னபிறவரல் (தொல்-தொகை-15). சேர்தும்: தும் ஈற்றுப் பன்மைத் தன்மை; ஈண்டு ஒருவரைக் கூறும் பன்மை. அன்று: அசை. ஏகாரம்:ஈற்றசை.
இனி, தான் மூவா முதலாக வேண்டி யென்றும், நாம் மூவா முதலாக வேண்டி யென்றும் வினையெச்சமாக்குவாருமுளர்: அதற்கு எய்தி என்பதனோடு முடிக்க. மேல்வரும் செய்யுட்களுக்கும் இவ்வாறுரைப்பின் உரை பெருகும் ஆதலின், இனி நல்லறிவுடையோர் உய்த்துணருமாறு சுருங்கவுரைப்பாம். செம்பொன் (சீவக-2) என்னுங் கவியாற் குருக்கள் அருகனை வணங்குதலின் தாம் சித்தனை வணங்கினார். குருக்கள் கூறுதலானும் அருகனை வணங்குதலானும் அதனை முன்வைக்க எனின், குருக்களே, இது நன்று; இதனை முன்னே வைக்க என்றலின் முன் வைத்தார். குருக்கள்; திருத்தக்க தேவரின் ஆசிரியர். யாமும் அவன் சேவடி சேரின் ஓவாது நின்ற குணத் தொண்ணிதிச் செல்வராய்த் தாவாத இன்பந் தலைப்படுவம் ஆதலானும், அவன் சேவடி சேர்தும் என்றார் என்றும் கொள்க. கல்விப்பயனும் அவ் வாலறிவன் நற்றாள் தொழுதலே ஆகலின் இவ்விலக்கியத்தினை ஓதுவோர்க்கு இந்நூற்பயனைக் குறிப்பாகக் கூறியவாறுமாயிற்று. இறைவர் பற்பலர் உளர் என்பாரேனும் அவ்விறைவர்க்கெல்லாம் இறைவனாயுள்ள கடவுள் ஒருவனே என்பார் தேவாதிதேவன் என்றார். அவன் திருவடி நினைத்தற்குஞ் சேர்தற்கும் இனிதாயிருக்கும் என்பார். தாவாத இன்பந்தன்னின் எய்தி ஓவாது நின்ற செல்வன் சேவடி என்றார். இச் செய்யுளில் உலகம், தலையாய இன்பம், குணத்தொண்ணிதி, செல்வன், தேவாதிதேவன், என்னும் மங்கலச் சொற்கள் வந்துள்ளன.
அருகர் வணக்கம்
2. செம்பொன் வரை மேல் பசும் பொன் எழுத்து இட்டதே போல்
அம் பொன் பிதிர்வின் மறு ஆயிரத்து எட்டு அணிந்து
வெம்பும் சுடரின் சுடரும் திருமூர்த்தி விண்ணோர்
அம் பொன் முடி மேல் அடித்தாமரை சென்னி வைப்பாம்.
பொருள் : செம்பொன் வரைமேல்-சிறந்த பொன்மலையின் மேல்; பசும்பொன் எழுத்து இட்டதேபோல் - புதிய பொன் எழுத்தை எழுதியதே போலும்; அம்பொன் பிதிர்வின்-அழகிய பொற் பிதிரைப் போலும்; ஆயிரத்தெட்டு மறு அணிந்து-ஆயிரத்தெட்டு மறுவை அணிந்து; வெம்பும் சுடரின் சுடரும் திருமூர்த்தி - வெப்பந்தரும் இளஞாயிற்றின் ஒளியினும் மேம்பட்டு விளங்கும் உருவினையுடைய அருகப்பெருமானின்; விண்ணோர் அம்பொன்முடிமேல் - வானவரின் அழகிய பொன்முடியின்மேல் (வைத்த); அடித்தாமரை சென்னி வைப்பாம் - திருவடித் தாமரைமலர்களை யாமும் நம் முடிமேல் அணிவோம்.
விளக்கம் : பிதிர்வின், இன்: ஐந்தன் உருபு; உவமப்பொரு. உவமப்பொரு -ஒப்புமையுறக் கூறுதல். எழுத்திட்ட தென்றது ஒற்றுமையாகக் கிடந்தற்கும் பிதிர்வென்றது சிறியவும் பெரியவுமாகிய வடிவிற்கும் உவமை. அருகனுக்கு இரேகை நூற்றெட்டும், அடையாளங்கள் ஆயிரமும் உண்டென வடநூல்கள் கூறும். காலை யிளஞாயிறு வெப்பந் தராதேனும் நண்பகலில் வெப்பந்தரும் ஆகையால், வெம்புஞ்சுடர் என்றார். யாவரும் விரும்பும் சுடரென்று கொண்டு இளஞாயிறு என்றலுமாம். சுடரின், இன்: உறழ் பொரு-ஒன்றனால் ஒன்றை மிகுத்துக் கூறுதல். முடிமேல் என்பதன்பின் வைத்த என வருவித்து முடிமேல் வைத்த என்க.
செம் பொன்-பசும் பொன்: தொடைமுரண்: வண்ண வேறுபாடு இன்று. இஃது அருகசரணம்: திருத்தக்க தேவரின் ஆசிரியர் அளித்தது.
மாண்பமைந்த குழுவினருக்கு வணக்கம்
3. பல் மாண் குணங்கட்கு இடனாய்ப் பகை நண்பொடு இல்லான்
தொல் மாண்பு அமைந்த புனை நல்லறம் துன்னி நின்ற
சொல் மாண்பு அமைந்த குழுவின் சரண் சென்று தொக்க
நல் மாண்பு பெற்றேன் இது நாட்டுதல் மாண்பு பெற்றேன்.
பொருள் : பல்மாண் குணங்கட்கு இடன்ஆய்-பலவகையானும் சிறப்புற்ற நற்பண்புகளுக்கு இடம் ஆக; பகை நண்பொடு இல்லான் - பகையும் நட்பும் இல்லாத இறைவன் (கூறிய); தொல்மாண்பு அமைந்த புனை நல்லறம்-பழைய மாட்சிமை பெற்ற அறத்தினையும்; சொல்மாண்பு அமைந்த குழுவின்- (அதனைப் பொருந்தி நின்ற) புகழ் சிறந்த சாதுக்களின் குழு வினையும்; சரண்சென்று தொக்க நல்மாண்பு பெற்றேன் - புகலாகச் சென்று சேர்ந்த நல்வினையுடையேன் (ஆதலின்;) இது நாட்டுதல் மாண்பு பெற்றேன் - இக் கதையை உலகில் நிலை பெறுத்துதற்குரிய நல்வினையுடையேனானேன்.
விளக்கம் : புனை நல்லறத்தையும் குழுவினையும் சரண் சென்று தொக்கநல்வினை உடையேன் என்றலின் சாதுசரணமும் தன்மசரணமும் கூறியதாகும் இச் செய்யுள். சாதுக்கள்: திருத்தக்க தேவரின் ஆசிரியர்களாகிய சாதுக்கள். இவர்கள் பஞ்ச பரமேட்டிகளைச் சார்ந்தவர்கள். சொல்-புகழ். ஆய்-ஆக: வினையெச்சத்திரிபு. பன்மாண்குணங்கட் கிடனாகப் புனைநல்லறம் என்று கூட்டுக. பகை நண்பொ டில்லான் (கூறிய) பன்மாண் குணங்கட்கிடனாய் என மொழிமாற்றிப் பொருள் கொள்வர் நச்சினார்க்கினியர். இல்லா என்பது பாடமாயின், இல்லா அறம் எனக் கூட்டுக. இறைவன் நண்பிலனாயினும் அருஞ்சுரத்தின்கண் மரம்போல அடைந்தார்க்களித்தல் அவற்கியல்பு.
அவை அடக்கம்
4. கற்பால் உமிழ்ந்த மணியும் கழுவாது விட்டால்
நற்பால் அழியும் நகை வெண்மதி போல் நிறைந்த
சொற்பால் உமிழ்ந்த மறுவும் மதியால் கழூஉவிப்
பொற்பா இழைத்துக் கொளல்பாலர் புலமை மிக்கார்.
பொருள் : கற்பால் உமிழ்ந்த மணியும் - கல்லின் பகுதியீன்ற மணியும்; கழுவாது விட்டால் நற்பால் அழியும் - கழுவாமல் விட்டால் நன்மை கெடும்; (அதுபோல); நகை வெண்மதி போல் நிறைந்த - ஒளிவிடும் வெள்ளிய முழு மதிபோல் கலை நிறைந்த; சொற்பால் உமிழ்ந்த மறுவும் - சொல்லின் பகுதி ஈன்ற வழுக்களும் (கழுவாது விட்டாற் சொல் நலம் கெடும். ஆதலின்); புலமை மிக்கார் - அறிவால் நிறைந்த சான்றோர்; மதியால் கழுவி - தம் அறிவினாலே களைந்து; பொற்புஆ இழைத்துக் கொளற்பாலர் - அழகாக அமைத்துக் கொள்ளத் தக்காராயினர்.
விளக்கம் : எனவே, யான் அத் தன்மையன் அல்லன் என்பது சொல்லெச்சம்: சொல்லொடுங் குறிப்பொடும் முடிவுகொள் இயற்கை, புல்லிய கிளவி எச்சமாகும் (தொல் -செய்-206) என்றாராதலின். மறு இல்லாத மதிக்கு மறு அடுத்தாற்போலக் கலை நிறைந்த சொற்கு அடுத்த மறுவாவது வழுவமைக்குஞ் சொல். அதனைச் சங்கத்தார் ஆராய்ந்தமை கூறவே, அவை அடக்கம் உணர்த்தியதாயிற்று. மதி போல் நிறைந்தமதி யெனவும் ஆம்.
மணியும்: உம், உயர்வு சிறப்பும்மை. கழூஉவி: இன்னிசை யளபெடை.
5. முந்நீர்ப் பிறந்த பவழத்தொடு சங்கும் முத்தும்
அந் நீர் உவர்க்கும் எனின் யார் அவை நீக்குகிற்பார்
இந் நீர என் சொல் பழுது ஆயினும் கொள்ப அன்றே
பொய்ந் நீர அல்லாப் பொருளால் விண் புகுதும் என்பார்.
பொருள் : பவளத்தொடு சங்கும் முத்தும் முந்நீர்ப் பிறந்த பவளமும் சங்கும் முத்தும் கடலிலே பிறந்தன. அந்நீர் உவர்க்கும் எனின் - (அவை பிறந்த) அக் கடல் நீர் உவர்ப்பாக இருக்கும் என்றாலும்; அவை நீக்குகிற்பார் யார்? - அப் பொருள்களைக் கை விடுவார் எவர்? (ஒருவருமிலர்), (அதுபோல்); பொய்ந்நீர அல்லாப் பொருளால் - மெய்யான பழம் பொருளாலே; விண் புகுதும் என்பார் - வீடு பெறுவோம் என்று நினைப்பவர்; இந்நீர என்சொல் பழுது ஆயினும் கொள்ப -உவர்க்கும் என்னுடைய இம் மொழிகள் தீய ஆயினும் (அச் சொற்களிற் பொதிந்த பொருள்களின் பயன் நோக்கி) இச் சொற்களைக் கொள்வார்கள்.
விளக்கம் : முந்நீர்: பண்பாகு பெயராய்க் கடலை உணர்த்தியது. நீர்-தன்மை. முந்நீர்: ஆக்கல்,காத்தல்,அழித்தல் என்னும் முத்தன்மையும் உடையது. ஆற்றுநீர், ஊற்றுநீர், வேற்றுநீர் என்னும் மூவகை நீர்க் கலப்புடையது என்றுங் கூறுவர்.
பிறந்த: பலவின்பால் வினைமுற்று. எனினும் என உம்மை விரிக்க. கொள்ப : பலர்பால் வினைமுற்று. அன்று, ஏ: அசைகள்.
பதிகம்
6. மீன் ஏறு உயர்த்த கொடி வேந்தனை வென்ற பொற்பில்
ஆனேறு அனையான் உளன் சீவகசாமி என்பான்
வான் ஏற நீண்ட புகழான் சரிதம் தன்னைத்
தேன் ஊற நின்று தெருண்டார் அவை செப்பல் உற்றேன்.
பொருள் : மீன் ஏறு உயர்த்த கொடி வேந்தனை வென்ற பொற்பின் - மீன் ஏற்றை மேம்படுத்தின கொடியை உடைய காமனை வென்ற அழகையுடைய; ஏறு அனையான் தான் உளன்-ஆண் சிங்கம் போன்றவன்தான் ஒருவன் உளன்; சீவக சாமி என்பான் - (அவன் யாரெனின்) சீவகசாமி யெனப்படுவான்; வான் ஏற நீண்ட புகழான் சரிதம் - வானிலே எழப் பரவிய புகழையுடைய அவன் ஒழுக்கம்; நின்று தேன் ஊற - கேட்டோர் நெஞ்சிலே நின்று இனிமை மிகும்படி; தெருண்டார் அவை இதனைச் செப்பல் உற்றேன் - தெளிந்தோர் அவையிலே இத்தொடர்நிலைச் செய்யுளைக் கூறலுற்றேன்.
விளக்கம் : மீன் ஏறு; சுறவு. கடல் வாழ் சுறவும் ஏறெனப் படுமே (தொல்-மரபு-40) உயர்த்த - மேம்படுத்தின. சாமி : பாகதம் (வடமொழிச் சிதைவு).
புகழான் என்னும் பெயர் சொல்லுவான் குறிப்பான் அவன் என்னுஞ் சுட்டுப் பெயர் மாத்திரையாக வந்தது. நாணி நின்றோள் அணங்கருங் கடவுளன்னோள் (அகநா-16) என்று அகத்திற் கூறினாற் போல. இது, பொருளோடு புணராச் சுட்டுப் பெயராயினும் (தொல்-கிளவி-37) என்னுஞ் சூத்திர விதி. மேல் இங்ஙனம் வருவனவற்றிற்கெல்லாம் ஒக்கும். கதைக்கு நாயகன் ஆதலிற் சீவகனை முற்கூறினார். (இவ்வாறே சிலப்பதிகார ஆசிரியரும் கோவலனை முற்கூறாமற் கண்ணகியை முற்கூறினார்.) இதன்னை : இதனை: விரித்தல் என்னும் செய்யுள் விகாரம்.
இச் செய்யுளின்கண் இப் பெருங்காப்பியத் தலைவனுடைய அழகு மெய்வலிமை கொடை என்னும் மூன்று பண்புகளும் குறிப்பாற் பெற வைத்துள்ளமை காண்க. மீனேறுயர்த்த கொடி வேந்தனை வென்ற பொற்பினையுடையான் என்றது ஒப்பற்ற அவன் அழகுடைமையை உணர்த்தியவாறு. இந்நூலின்கண் சீவகனுடைய திருமணங்கள் சிறப்புறுதற்கும் இப்பண்பு காரணமாதலுணர்க. இனி ஏறனையான் என்றது அவனது பேராற்றலுடைமையை உணர்த்தியவாறு. இஃது அவன் கட்டியங்காரன் முதலிய பகைவரை வென்றுயர்தற்குக் காரணமாதல் உணர்க. வானேற நீண்டபுகழான் என்றது அவன் வள்ளன்மையை உணர்த்தியவாறு. என்னை? புகழ் என்பது கொடையானே உண்டாவதொன்றாகலான் என்க. இதனைச் சொல்லும்போது சொல்லும் எனக்கே இஃது இனிதாயிருக்கின்றது; எனவே இதனை இவ்வுலகமும் எய்துக என்னும் கருத்தால் இதனை ஓதாநின்றேன் என்பார், இதனைத் தேனூற நின்று செப்பலுற்றேன் என்றும், உணர்வ துடையார்முற் சொல்லல் வளர்வதன் பாத்தியுள் நீர்சொரிந் தற்று என்பது பற்றித் தெருண்டாரவை செப்பலுற்றேன் என்றும் ஓதினர்.
7. கோடாத செங்கோல் குளிர் வெண்குடைக் கோதை வெள்வேல்
ஓடாத தானை உருமுக் குரல் ஓடை யானை
வாடாத வென்றி மிகு சச்சந்தன் என்ப மன்னன்
வீடாத கற்பின் அவன் தேவி விசயை என்பாள்.
பொருள் : கோடாத செங் கோல் - மாறுபடாத செங்கோலையும்; குளிர் வெண்குடை - தண்ணிய வெண்குடையையும்; கோதை வெள்வேல்-மாலையணிந்த வெள்ளிய வேலையும்; ஓடாத தானை - புறங்கொடாத நால்வகைப் படைகளையும்; உருமுக்குரல் - இடிபோலப் பிளிறும், ஓடை யானை-முகபடாம் அணிந்த யானையையும் (உடைய); மன்னன் - அரசன்; வாடாத வென்றி மிகு சச்சந்தன் என்ப-குறையாத வெற்றியினால் மேம்பட்ட சச்சந்தன் என்றுரைப்பர், அவன் தேவி வீடாத கற்பின் விசயை என்பாள் - அவனுக்குத் தேவி நீங்காத கற்பினையுடைய விசயை என்று பெயர் கூறப்படுவாள்.
விளக்கம் : செங்கோல் பிறிதின் இயைபு நீக்கிய விசேடணம் (அடைமொழி) ஆயினும் கோடாத என்று அடை அடுத்தலிற் கோல் என்னும் அளவில் நின்றது. வெண்குடை : இயைபின்மை மாத்திரை நீக்கிய விசேடணம், உருமுக்குரல் போலுங் குரலையுடைய யானை. வீடாத விகாரம் (விடாத என்பது வீடாத என விகாரப்பட்டது) (2)
8. சேந்து ஒத்து அலர்ந்த செழுந்தாமரை அன்ன வாள் கண்
பூந்தொத்து அலர்ந்த பசும் பொன் கொடி அன்ன பொற்பின்
ஏந்து ஒத்து அலர்ந்த முலையின் அமிர்து அன்ன சாயல்
வேந்தற்கு அமுதாய் விளையாடுதற்கு ஏது வாமே.
பொருள் : சேந்து ஒத்து அலர்ந்த - சிவந்து தம்மில் இணையொத்து மலர்ந்த; செழுந்தாமரை அன்ன வாட்கண் - வளமிகு தாமரை மலர்போன்ற ஒளியுடைய கண்களையும்; பூந்தொத்து அலர்ந்த பசும் பொற்கொடி அன்ன பொற்பின் மலர்க் கொத்துத் தன்னிடத்தே மலர்ந்த புதிய பொற்கொடி அனைய அழகினையும்; ஒத்து அலர்ந்த ஏந்து முலையின் - தம்மில் ஒத்து அடிபரந்த ஏந்தும் முலைகளையும் உடைய; அமிர்து அன்ன சாயல் - அமுதம் போன்ற மென்மையும் உடையாள்; வேந்தற்கு அமுதாய் - அரசனுக்கு அமுதமாகி, விளையாடுதற்கு ஏது ஆம் - கூட்டத்திற்குக் காரணம் ஆவாள்.
விளக்கம் : அமிர்தம் கண்ணுக்கினிதாகிய மென்மையும் தன்னை நுகர்ந்தார் பிறிது நுகராமல் தடுக்கும் மென்மையும் உடைமையின் அமிர்தன்ன சாயல் என்றார். சாயல் மென்மை (தொல்-உரி-27) எனப் பொதுப்படச் சூத்திரஞ் செய்தது ஐம்பொறியானும் நுகரும் மென்மையெல்லாம் அடங்குதற்கு. மயில் அன்ன சாயல் (ஏலாதி-17), சாயல் மார்பு (கலி - 65) என ஒளிக்கும் ஊற்றிற்கும் (பரிசத்திற்கும்) வந்தன. பிறவும் காண்க. சாயல்: (பண்பு) ஆகுபெயர். மறுமையிற் சென்றுபெறும் அமுதமும் இவளெனக் கொண்டு மயங்கினமை தோன்ற மீட்டும் அமுதாய் என்றார். வாட்கண் என்புழி வாள் கண் என்பதற்கு வாளா அடைமொழியாக வந்தது எனவுங் கூறலாம்.
9. கல்லார் மணிப் பூண் அவன் காமம் கனைந்து கன்றிச்
சொல்லாறு கேளான் நனி சூழ்ச்சியில் தோற்ற வாறும்
புல்லார் புகலப் பொறி மஞ்ஞையில் தேவி போகிச்
செல் ஆறு இழுக்கிச் சுடுகாடு அவள் சேர்ந்த வாறும்,
பொருள் : மணிக்கல் ஆர் பூணவன் காமம் கனைந்து கன்றி- மாணிக்கக் கற்கள் பொருந்திய அணிகலனுடைய சச்சந்தன் வேட்கை செறிந்து அதிலே அடிபட்டு; சொல் ஆறு கேளான் - அமைச்சர் சொல்வழியைக் கேளாதவனாய்; புல்லார் புகழச் சூழ்ச்சியில் நனிதோற்ற ஆறும் - பகைவர் மனம் மகிழ எண்ணத்திலே மிகவும் தோற்றபடியும், தேவி மஞ்ஞைப் பொறியில் போகி-விசயை மயிற் பொறியிலே சென்று; செல் ஆறு இழுக்கி அவன் சுடுகாடு சேர்ந்த ஆறும் - (வெற்றி முரசு கேட்டு) செல்லும் வழியிலே கலங்கி அவள் சுடுகாட்டினைச் சேர்ந்த படியும்.
விளக்கம் : நனி: விசேடித்து வரும் உரிச்சொல். செல் ஆறு இழுக்குதல்: வெற்றி முரசு கேட்டுக் கலங்குதல். தேவி போகி இழுக்கிச் சேர்ந்தாள் என முடிவுழி அவள் என்று கூறவேண்டாமையின், அது தேவியைச் சுட்டாமல், அங்ஙனம் அமுதாயவள் இங்ஙனம் ஆயினாள் எனத் தேவர் இரங்குதலின், முன்னைய கவியை நோக்கித் தகுதிபற்றி வந்தது. இனி, சாத்தியவள் வந்தாள் என்றாற்போலத், தேவியவள் என வினைக்கு ஒருங்கு இயன்றது என்பாரும் உளர். அது வழக்கிலது என்று மறுக்க.
10. நாள் உற்று நம்பி பிறந்தான் திசை பத்தும் நந்தத்
தோள் உற்று ஓர் தெய்வம் துணையாய்த் துயர் தீர்த்த வாறும்
கோள் உற்ற கோன் போல் அவன் கொண்டு வளர்த்த வாறும்
வாள் உற்ற கண்ணாள் மகன் வாழ்க என நோற்ற வாறும்,
பொருள் : நம்பி நாள் உற்றுத் திசை பத்தும் நந்தப் பிறந்தான் - சீவகன் ஒன்பது திங்களும் நிறைந்து, பத்துத் திக்கினும் உள்ள வல்லுயிர்களும் வளர்தற்காகப் பிறந்தானாக; ஓர் தெய்வம் தோள் உற்றுத் துணையாய்த்துயர் தீர்த்த ஆறும் - ஒரு தெய்வம் கூனியின் உருவாய்த் தன்கை தனக்கு உதவுதல் போலத் தேவிக்கு உதவித்துயர் தீர்த்தபடியும்; கோள் உற்ற கோன்போல் அவன் கொண்டு வளர்த்த ஆறும் -கொலையுண்ட சச்சந்தன் வளர்த்தல்போலக் கந்துக்கடன் உளம்கொண்டு வளர்த்தபடியும்; வாள்உற்ற கண்ணாள் மகன் வாழ்க என நோற்ற ஆறும் - வாளனைய கண்ணாளாம் விசயை தன் மகன் வாழ்க என்று நோற்றபடியும்;
விளக்கம் : நாள் உற்று என்பதற்கு நல்ல நாள் உற்று என்றும் பொருள் கொள்ளலாம். தோள் - கை. உற்று: உவம வாசகம் (உவம உருபு). செப்புற்ற கொங்கை (சிற் -354) என்றார் பிறரும். ஒழியாது (தொல்-தொகை-15) என்னும் இலேசால் கோனை என்னும்(இரண்டன்) உருபு தொக்கது. கதையை உட்கொண்டு அவன் என்பது கந்துக்கடனைச் சுட்டியது. அரசன் இறத்தற்கு ஏதுவாகலின் ஈண்டும் வாளுற்ற கண் என்றார். வாழ்க: வியங்கோள்: இறுதி அகரம் செய்யுள் விகாரத்தால் தொக்கது. கூனி: விசயையின் தோழியான சண்பகமாலை. நோன்பு : வேட்கையுள்ளது.
11. நெஞ்சம் புணையாக் கலை மாக் கடல் நீந்தி ஆங்கே
வஞ்சம் மறவர் நிரை வள்ளல் விடுத்த வாறும்
விஞ்சைக்கு இறைவன் மகள் வீணையில் தோற்ற வாறும்
நஞ்சு உற்ற காம நனி நாகரில் துய்த்த வாறும்,
பொருள் : வள்ளல் நெஞ்சம் புணையாக் கலை மாக்கடல் நீந்தி - சீவகன் தன் நெஞ்சு தெப்பமாகக் கலைகளாகிய கடலைக் கடந்தும்; ஆங்கே வஞ்சம் மறவர் நிரை விடுத்த ஆறும் - அப்பொழுதே வஞ்சமுடைய வேடர்கொண்ட ஆனிரையை மீட்டபடியும்; விஞ்சைக்கு இறைவன் மகள் வீணையில் தோற்ற ஆறும் - கலுழவேகன் மகளாகிய தத்தை யாழ்ப்பாடலிலே தோற்ற படியும்; நஞ்சு உற்ற காமம் நாகரின் நனிதுய்த்த ஆறும் - உளம் நைந்து இருதலையும் ஒத்த காமத்தை நாகைரப் போலச் சாலவும் நுகர்ந்த படியும்;
விளக்கம் : கற்றபொழுதே பயன் கொள்ளுதல் அருமையாதலின் ஆங்கே என்றார், மறவரைக் கொல்லாது உயிர்வழங்குதலின் வள்ளல் என்றார். விஞ்சை: குணப்பண்பு. அது பண்பாகு பெயராக விஞ்சையரை உணர்த்தியது. விஞ்சையர்க்கு இறைவன் கலுழவேகன், ஒரு மகளை வென்றான் என்பது இவன் தலைமைக்கு இழிவென உன்னி அவள் செயலாகக் கூறினார். நாகர் : யவணதேவர் என அருக நூல்கள் கூறும். ஓருடம்பாதலும் நீங்கல் வன்மையும்பற்றி உவமையாயினர். நஞ்சு-நைந்து : போலி.
12. முந்நீர்ப் படு சங்கு அலற முரசு ஆர்ப்ப மூதூர்ச்
செந்நீர்க் கடியின் விழவாட்டினுள் தேங்கொள் சுண்ணம்
மைந்நீர் நெடுங்கண் இரு மங்கையர் தம்முள் மாறாய்
இந்நீர்ப் படியேம் இவை தோற்றனம் என்ற வாறும்,
பொருள் : முந்நீர்ப்படு சங்கு அலற முரசு ஆர்ப்ப - கடலில் தோன்றிய சங்கு ஒலிக்கவும் முரசு முழங்கவும்; மூதூர்ச் செந்நீர்க் கடியின் விழவு ஆட்டினுள் - இராசமாபுரத்திற் புது நீர் மிகுதியால் உண்டான விழாவின்கண் ஆடும் விளையாட்டினில்; மைந்நீர் நெடுங்கண் இரு மங்கையர் - மைதீட்டிய தன்மையுள்ள நெடுங்கணார் இரு மங்கையர்கள்; தம்முள் மாறாய் இவை தோற்றனம் இந்நீர்ப் படியேம் என்ற ஆறும் - சுண்ணத்தாலே தமக்குள் மாறுபட்டு இவற்றில் தோற்றால் இப்புதுநீரில் ஆடோம் என்ற படியும்;
விளக்கம் : அலற ஆர்ப்ப விளையாடும் விளையாட்டென்க. கடி - மிகுதி (உரிச்சொல்). தேன் கொள் சுண்ணம்: ஒளியாலும் நாற்றத்தாலும் ஊற்றாலும் இனிமைகொண்ட சுண்ணம் (வாசனைப்பொடி.) தோற்றனம் மோயினள் உயிர்த்த காலை (அகநா-5) என்றாற்போல வினையெச்சம் முற்றாய்த் திரிந்தது. செந்நீர் : சிவப்பாகிய நீர்: புதுநீர். இருமங்கையர்: குணமாலை, சுரமஞ்சரி.
13. சுண்ணம் உடைந்து சுரமஞ்சரி சோர்ந்து தோழி
வண்ணம் நெடுங் கண் குண மாலையை வைது மாறிப்
புண் மேல் புடையில் புகைந்து ஆண் உரு யாதும் நோக்காள்
கண் நோக்கு உடைந்து கடிமாடம் அடைந்த வாறும்,
பொருள் : சுரமஞ்சரி சுண்ணம் உடைந்து சோர்ந்து - சுரமஞ்சரி யென்பவள் சுண்ணம் தோற்றலாலே சோர்வுற்று; வண்ணம் நெடுங்கண் தோழி குணமாலையை மாறி வைது-அழகிய நெடுங்கண்ணாளாகிய தோழி குணமாலையைக் கண்ணற்றுச் சீவகனை மழை வள்ளல் என்று வைது; புண்மேல் புடையில் புகைந்து கண்நோக்கு உடைந்து - புண்ணின் மேல் புடையுண்டானாற்போல நெஞ்சம் அழன்று அழகுகெட்டு; ஆண் உருயாதும் நோக்காள் கடிமாடம் அடைந்த ஆறும் - ஆண்மக்கள் வடிவை ஓவியத்தும் பாராமற் கன்னியாமாடத்தை அடைந்த படியும்;
விளக்கம் : மாறி வைது என மாறிற்று. திங்களங்கதிர் (சீவக-868) மாற்றம் ஒன்று (சீவக-866) என்னுஞ் செய்யுட்களை நோக்கி புடை-துவாரம். கண்நோக்கு : அழகு. மழை வள்ளல்: மழை இடமறிந்து பெய்யாதது போலச் சீவகனும் குணமாலையின்பாற் காதல் கொண்டான் என்று சுரமஞ்சரி கருதினாள். யாதும் என்பதனால் ஓவியமும் எனப்பட்டது. கடி - காவல்.
14. பொன் துஞ்சு மார்பன் புனல் ஆட்டிடைப் புன்கண் எய்தி
நின்று எஞ்சுகின்ற ஞமலிக்கு அமிர்து ஈந்த வாறும்
அன்றைப் பகலே குண மாலையை அச்சுறுத்த
வென்றிக் களிற்றை விரிதார் அவன் வென்ற வாறும்,
பொருள் : பொன் துஞ்சும் மார்பன் - திருமகள் தங்கும் மார்பன; புனல் ஆட்டிடை எஞ்சுகின்ற ஞமலிக்குப் புன்கண் எய்தி நின்று அமிர்து ஈந்த ஆறும் - நீர்விளையாட்டிலே உயிர் போகின்ற நாய்க்குத் தானும் வருத்தமுற்று நின்று பஞ்ச நமஸ்காரமாகிய மந்திரத்தைக் கொடுத்தபடியும்; அன்றைப் பகலே குணமாலையை அச்சுறுத்த வென்றிக் களிற்றை - அறம் புரிந்த அப் பகலே குணமாலையை அச்சம் ஊட்டிய (முன்பு) வென்றியுடைய களிற்றை; விரிதாரவன் வென்ற ஆறும் - (மார்பின் சிறப்பால் உலகு) புகழ்ந்த தாரணிந்த சீவகன் வென்ற படியும்;
விளக்கம் : அச்சம் உறுத்த : அச்சுறுத்த: விகாரம். சீவகன் மார்பிலே தங்கிய சிறப்பினாலே அத்தார் உலகாற் புகழ்ப் பெற்றது. வென்றி-வெற்றி.
15. தேன் ஊறு தீம் சொல் குண மாலையைச் சேர்ந்த வாறும்
கோன் ஊறு செய்வான் கருதிச் சிறை கொண்ட வாறும்
வான் ஆறு இழிந்து மழை மின் என வந்த ஓர் தேவன்
ஊன் நாறு ஒளத வேல் உரவோன் கொண்டு எழுந்த வாறும்,
பொருள் : தேன் ஊறு தீ சொல் குணமாலையைச் சேர்ந்த ஆறும் - தேனின் இனிமை நீங்காத இனிய சொல்லையுடைய குணமாலையைச் சேர்ந்தபடியும்; கோன் ஊறு செய்வான் கருதி - கட்டியங்காரன் கொல்வதற்குக் கருதி எனவே கொண்டு சிறை கொண்டதைக் கட்டியங்காரனுக்கு ஆக்கலே அடுத்த செய்யுளுக்கும் ஏற்புடைத்தாக இருக்கிறது. சிறை கொண்ட ஆறும் - முற்பிறப்பின் தீவினையாகிய சிறை வந்து சீவகனைக் கைக்கொண்ட படியும்; ஒர் தேவன் மழைமின் என வான் ஆறு வந்து இழிந்து - ஒரு தேவன் மழைமீது ஏறி மின்போல வான வழியாக வந்து; ஊன் நாறு ஒளிவேல் உரவோன் கொண்டு எழுந்த ஆறும் - ஊன் கமழும் ஒளி தரு வேலேந்திய சீவகனைக் கைக்கொண்டு போனபடியும்;
விளக்கம் : செய்வான் : எதிர்கால வினையெச்சம். கருதி யென்பது கருத என நின்றது. உரற்கால்யானை ஒடித்துண்டு (குறுந்-282) என்னுஞ் செய்தென் எச்சம் பிறவினை கொண்டாற் போல. சிறை-அன்னப் பார்ப்பை (இவன் முற்பிறப்பிற்) சிறை செய்தது. ஒரு தேவன் என்பது ஓர் தேவன் என விகாரப்பட்டது; இவன் சுதஞ்சணன். மழை: சுதஞ்சணன் ஊர்தி. ஆசிரியன் மொழியை உட்கொண்டு நடத்தலின் உரவோன் என்பது அறிவுடையோன் என்னும் பொருளது.
16. தேங்காத மள்ளர் திரள் தோள் இணை சிக்க யாத்த
பூங் கச்சு நீக்கிப் பொறி மாண்கலம் நல்ல சேர்த்தி
நீங்காத காதல் உடையாய் நினைக்க என்று பின்னும்
பாங்கு ஆய விஞ்சை பணித்து ஆங்கு விடுத்த வாறும்,
பொருள் : பூங்கச்சு யாத்த தேங்காத திரள் தோளிணை மள்ளர் - பூவேலை செய்த கச்சினை உடையின்மேல் இறுகக் கட்டிய கெடாத, திரண்ட இரு தோள்களை உடைய வீரர்; சிக்க-(சீவகனை) அகப்பட வளைக்க; நீக்கி - (அச்சிறையை) நீக்கி; பொறிமாண் நல்ல கலம் சேர்த்தி - வேலைப்பாடமைந்த சிறந்த அழகிய அணிகலன் பூட்டி; நீங்காத காதல் உடையாய்! பின்னும் நினைக்க என்று - இடையறாத அன்புடையாய்! இனியும் என்னை நினைத்திடுக என்று கூறி; பாங்கு ஆய விஞ்சை பணித்து ஆங்கு விடுத்த ஆறும் - தனக்குரிய மறைகளை அவனுக்கு நிலையாக்கி அங்கிருந்து விடுத்தபடியும்;
விளக்கம் : பூங்கச்சு யாத்த கெடாத வீரர், தோளிணையையுடைய வீரர்; இவை இகழ்ச்சி (வீரர் அல்லாதவரை வீரர் என்றதனால் இகழ்ச்சி) கச்சு - சேலையின்மேற் கட்டினது. சிக்க - அகப்படக் கோல; திசைச்சொல் (குடநாட்டுச் சொல்). நீக்கி - அச்சிறையை நீக்கி. பின்னும் நினைக்க என்றது இடர்வரின் என்றதன்றி இன்ப முறுங்காலும் நினைக்க என்றவாறு. இது முற்கூறிய கவியிற் சிறைப்பாவத்தைத் தொடர்புபடுத்து எடுத்து விரியக் கூறிப் பின்பு அவற்குச் செய்த சிறப்புக்களும் கூறிற்று தேங்காத மள்ளர் திரள் தோள் இணை சிக்க யாத்த பூங்கச்சு நீக்கி - கெடாத வீரர் (சீவகனுடைய) திரண்ட இரு தோள்களையும் அகப்படக் கட்டிய பூவேலை மிக்கதான கச்சினை நீக்கி பின்னே உணர்க.
17. பைந் நாகப் பள்ளி மணி வண்ணனின் பாயல் கொண்டு
கைந் நாகம் துஞ்சும் கமழ் காந்தள் அம் சாரல் போகி
மைந் நாக வேலி மணி பல்லவ தேயம் நண்ணிக்
கொய்ந் நாகச் சோலைக் கொடி அந் நகர் புக்க வாறும்,
பொருள் : பை நாகப்பள்ளி மணிவண்ணனின் - படமுடைய அரவணையிலே நீல நிறமுடைய திருமால் துயிலுமாறு போல; கைநாகம் கமழ் காந்தள் பாயல்கொண்டு துஞ்சும் அம்சாரல் போகி - யானைகள் மணமிகு காந்தள் மலரைப் படுக்கையாகக் கொண்டு துயிலும் அழகிய சாரலைக் கடந்து; மை நாகவேலி மணிபல்லவ தேயம் நண்ணி - முகில் உறங்கும் மலையை வேலியாக உடைய வளமிகு பல்லவ நாட்டை அடைந்து; கொய் நாகச்சோலை கொடி அந்நகர் புக்க ஆறும் - மலர்களைக் கொய்யும் புன்னைமரச் சோலையையும் கொடியையுமுடைய அதன் தலை நகராகிய சந்திராபம் என்னும் நகரிலே புகுந்தபடியும்;
விளக்கம் : மை-முகில். கொய்ந்நாகம் - புன்னை. கொடிமாநகரும் பாடம். காந்தள் வடிவிற்கும் நிறத்திற்கும் உவமம்.
18. அத்தம் அனைய களிற்று அந் நகர் மன்னன் மங்கை
முத்தம் உரிஞ்சும் முகிழ் மென் முலை மின் அனாளைப்
பைத்து அங்கு ஓர் நாகம் பனி மா மதி என்று தீண்டச்
சித்தம் குழையற்க எனத் தீர்த்து அவள் சேர்ந்த வாறும்,
பொருள் : அத்தம் அனைய களிற்று அந் நகர் மன்னன் மங்கை - அத்தகிரி போன்ற யானையையுடைய, அந்த நகர் மன்னனின் மகளாகிய; முத்தம் உரிஞ்சும் முகிழ் மென்முலை மின் அன்னாளை - முத்துமாலை அசையும் அரும்பனைய மெல்லிய முலையையுடைய மின்னுக்கொடி போன்ற பதுமையை; அங்கு ஓர் நாகம் பைத்து பனி மா மதி என்று தீண்ட - அப் பொழிலிடத்தே ஓர் அரவு படம் விரித்துக் குளிர்ந்த பெரிய திங்களென்று (அவள் முகத்தைக் கருதி, அது மறுவுடைய திங்களன்மையின் கையிலே) தீண்டுதலால்; சித்தம் குழையற்க எனத் தீர்த்து அவள் சேர்ந்த ஆறும் - உளம் (வருந்திய உலோக பாலனை) வருந்தற்க என்று கூறி, (அவளுக்குறற் நஞ்சினை) நீக்கி, அவளை மணந்தபடியும்;
விளக்கம் : அத்தகிரி என்னும் வடமொழிச் சிதைவு விகாரமாயிற்று. அத்த மென்னும் பொன்னஞ் சிலம்பு (பாண்டிக்கோவை) என்றார் பிறரும். அங்கு (பைத்து அங்கு ஓர் நாகம்) எனக் கதையை உட் கொண்டு சுட்டினார். குழையற்க: விகாரம் (குழையற்க என: குழையற் கென: அகரம் ; தொகுத்தல் விகாரம்).
19. பொன் பூண் சுமந்த புணர் மெல் முலைக் கோடு போழ
நல் பூங் கழலான் இரு திங்கள் நயந்த வாறும்
கல் பாடு அழித்த கன மா மணித் தூண் செய் தோளான்
வெற்பு ஊடு அறுத்து விரைவின் நெறிக் கொண்ட வாறும்.
பொருள் : நல்பூங் கழலான் - அழகிய பூவேலை செய்த வீரக்கழல் அணிந்த சீவகன்; பொன்பூண் சுமந்த புணர் மென் முலைக்கோடு போழ - பொற்கலன் ஆகிய கிம்புரியைச் சுமந்த முலையாகிய இரு கொம்புகளும் உழ; இரு திங்கள் நயந்த ஆறும் - இரண்டு திங்கள் விரும்பி இருந்தபடியும்; கல்பாடு அழித்த கனம் மாமணித் தூண்செய் தோளான் - உலக்கல்லின் பெருமையைக் கெடுத்த கனத்த மணித்தூணைப் போன்ற தோளையுடைய அவன்; விரைவின் வெற்பு ஊடு அறுத்து நெறிக் கொண்ட ஆறும்-காரியத்தின் விரைவாலே மலையின் இடையிலே புகுந்து வழிக்கொண்டபடியும்;
விளக்கம் : உலகத்தின் பெருமையைக் கெடுத்த கனத்த மணித் தூணைப் போன்ற தோளான்.
20. தள்ளாத சும்மை மிகு தக்க நல் நாடு நண்ணி
விள்ளா விழுச்சீர் வணிகன் மகள் வேல் கண் நோக்கம்
உள் ஆவி வாட்ட உயிர் ஒன்று ஒத்து உறைந்த வாறும்
கள் ஆவி நாறும் கமழ் கோதையின் போய வாறும்,
பொருள் : தள்ளாத சும்மைமிகு நல்தக்க நாடு நண்ணி-இன்ன ஒலியென்று நீக்கமுடியாத ஆரவாரம் மிகுந்த அழகிய தக்க நாட்டை அணைந்து; விள்ளா விழுச்சீர் வணிகன் மகள் வேல் கண் நோக்கம் உள் ஆவி வாட்ட - நீங்காத சிறந்த புகழையுடைய ஒரு வணிகன் மகளின் வேலனைய கண்களின் பார்வை உயிரை மனத்துள்ளே நின்று வருத்தலால்; உயிர் ஒன்று ஒத்து உறைந்த ஆறும் -(இருவர்) உயிரும் ஓருயிரைப்போல வாழ்ந்த படியும்; கள் ஆவி நாறும் கமழ் கோதையின் போய ஆறும் - தேன் மணம் கமழும் அவளைப் பிரிந்து போனபடியும்;
விளக்கம் : விள்ளா - நீங்காத: உள் - மனம். ஆவி - மணம். (கள் ஆவி) இன் : நீக்கம், (கோதை: சினையாகு பெயர்) கோதையின்: இன்: நீக்கம். தக்கநாடு: வடமொழிச் சிதைவு.
21. இன்னீர் அமிர்து அன்னவள் கண் இணை மாரி கற்பப்
பொன் ஊர் கழலான் பொழி மா மழைக் காடு போகி
மின்னீர் வெள் வேலவன் மத்திம தேய மன்னன்
கொன்னூர் கொடு வெம் சிலை கண்டு எதிர் கொண்ட வாறும்,
பொருள் : இன்நீர் அமிர்து அன்னவள் கண்இணை மாரி கற்ப - இனிய பண்புறும் அமுதம்போன்ற கேமசரியின் இரு கண்களும் மாறாது நீர்சொரியப் பழகும்படி; பொன் ஊர் கழலான் மாமழை பொழி காடு போகி-பொன் நெகிழும் வீரக் கழலான் பெருமழை பெய்யுங் காட்டிடைப் போதலாலே; மின் நீர வெள் வேலவன் மத்திய தேய மன்னன் - மின்னின் தன்மையையுடைய தூய வேலேந்திய மத்திம நாட்டரசன் தடமித்த னென்பான்; கொன் ஊர் கொடு வெஞ்சிலை கண்டு எதிர்கொண்ட ஆறும் - அச்சம் பரந்த வளைந்த வில்லின் றழும்பைக் கண்டு எதிர்கொண்டபடியும்;
விளக்கம் : கண்ணினையும் என்னும் உம்மை (செய்யுள்) விகாரத்தால் தொக்கது. உருக்கிய பொன் காலின்மேற் கிடக்கும்போது நெகிழுமாதலின் ஊரும் என்றார். (கேமசரியின்) கண்ணும் (தான் செல்லும்) காடும் மழை பொழியப் போனான் என்றதனாற் காலம் கார் ஆயிற்று. மன் நீர வெள்வேல் எனவும் பாடம். சிலை: (கருவி) ஆகுபெயர், (சிலைத் தழும்பை உணர்த்தியது).
22. திண் தேர் அரசர் திறல் சிங்கங்கள் வில்லும் வாளும்
கண்டு ஆங்கு உவந்து கடி பெய்து இவண் காத்தும் என்று
கொண்டார் குடங்கை அளவே உள கண்ணினாளைப்
புண் தாங்கு எரிவேல் இளையோற்குப் புணர்த்த வாறும்,
பொருள் : திண்தேர் அரசர் திறல் சிங்கங்கள் வில்லும் வாளும் கண்டு ஆங்கு உவந்து - (தடமித்தன்) வலிய தேரையுடைய அரசர்களாகிய யானைகட்குச் சிங்கங்கள் போன்ற தன் மக்களின் விற்பயிற்சியையும் வாட்பயிற்சியையும் (சீவகன் கற்பித்து அரங்கேற்றியபோது) பார்த்து அப்பொழுதே மகிழ்ந்து; இவண் கடிபெய்து காத்தும் என்று - இவ்விடத்தே சீவகனைக் காவலிட்டுக் காப்போம் என்று; கொண்டார் குடங்கை அளவேயுள கண்ணினாளை - இரப்போரின் குவிந்த கை அளவே உள்ள கண்ணையுடைய கனகமாலையை: புண்தாங்கு எரிவேல் இளையோற்குப் புணர்த்த ஆறும் - (பகைவருடைய) புண்ணைச் சுமந்த ஒளி வீசும் வேலேந்திய சீவகனுக்கு மணம்புரிவித்தபடியும்;
விளக்கம் : கொண்டார் - ஏற்றார் (இரப்பவர்.) பகைவர் புண்ணைத் தாங்குதற்குக் காரணமான வேல். (தாங்கு வேல்): வினைத்தொகை; ஏதுப்பொருள் கருவிக்கண் அடங்கும்; மற்றிந்நோய் தீரும் மருந்து (கலித்தொகை: 60) என்றாற்போல. அரசன் திறலும் என்றும் பாடம்.
அரசர் திறற் சிங்கங்கள் : ஏகதேச உருவக அணி. சீவகன் தடமித்தன் புதல்வர் ஐவருக்கும் வில்லும் வாளும் கற்பித்தான். குடங்கை அளவு கண். பெரிய கண்கள் என்பதைக் குறிக்கின்றன.
23. மதியம் கெடுத்த வய மீன் எனத் தம்பி மாழாந்து
உதிதற்கு உரியாள் பணியால் உடன் ஆய வாறும்
நிதியின் நெறியின் அவன் தோழர் நிரந்த வாறும்
பதியின் அகன்று பயந்தாளைப் பணிந்த வாறும்,
பொருள் : தம்பி மதியம் கெடுத்த வயமீன் என மாழாந்து-சீவகன் தம்பியான நந்தட்டன் திங்களைப் பிரிந்த உரோகிணி போல மயங்கி; உதிதற்கு உரியாள் பணியாள் உடன் ஆயஆறும் (உலகு விளங்கத்) தோன்றினவனுக்குரிய தத்தையின் ஏவலால் அவனைக் கண்டபடியும்; நிதியின் நெறியின் அவன் தோழர் நிரந்த ஆறும் - பொருள் தேடவேண்டும் என்னும் வழியாலே அவன் தோழர் அவனைத் தேடினபடியும்; பதியின் அகன்று பயந்தாளைப் பணிந்த ஆறும் - தன் கணவனைப் பிரிந்து சென்று, தன்னைப் பெற்ற அன்னையாகிய விசயையைச் (சீவகன் கண்டு) வணங்கினபடியும்;
விளக்கம் : வயமீன்களெனத் தோழர் நிரந்த படியும் என்றும் ஆம். பதியினின்றும் நீங்கிப் பிள்ளையைப் பெற்றாளெனவே விசயையாம். பதி-இராசமாபுரமும் ஆம்; ஏமமாபுரமும் ஆம். பதி: ஏமமாபுரம் எனக்கொண்டு சீவகன் தன் தோழருடன் ஏமமாபுரத்தை விட்டுச் சென்று அன்னையை வணங்கினான் என்பதே சிறப்புடையது, தொடர்ச்சியாக வருவதால், பதி : இராசமாபுரம் என்றும் கணவன் என்றும் பொருள் கொண்டால் அகன்றவள் விசயை ஆவாள். உதிதன் : தோன்றியவன். உரோகிணி என்னும் விண்மீன் திங்களை விட்டு நீங்காமல் இருக்கும். நந்தட்டனும் தோழர்களும் பிரியாமல் இருந்தவர்கள். நந்தட்டன்: கந்துக்கடன் மகன்.
24. கண் வாள் அறுக்கும் கமழ்தார் அவன் தாயொடு எண்ணி
விண் வாள் அறுக்கும் நகர் வீதி புகுந்த வாறும்
மண் மேல் விளக்காய் வரத்தில் பிறந்தாள் ஒர் கன்னிப்
பெண் ஆர் அமிர்தின் பெரு வாரியுள் பட்ட வாறும்,
பொருள் : கண்வாள் அறுக்கும் கமழ்தாரவன் தாயொடு எண்ணி-கண்ணின் ஒளியைத் தடுக்கும் மணமிகு மாலையான் தன் அன்னையொடும் ஆராய்ந்து; விண் வாள் அறுக்கும் நகர்வீதி புகுந்த ஆறும் - விண்ணிடத்தை வாள்போலப் பிரிக்கும் இராசமாபுரத்தின் தெருவிலே சென்றபடியும்; மண்மேல் விளக்காய் வரத்தில் பிறந்தாள் - மண்ணுலகுக்கு விளக்கென வரத்தினாற் பிறந்தவளாகிய; ஓர் கன்னிப்பெண் ஆர் அமிர்தின் - ஒரு கன்னிப் பெண்ணாகிய சிறந்த அமுதத்தின்; பெருவாரியுள்பட்ட ஆறும் - பெரிய இன்பக்கடலிலே அகப்பட்டபடியும்;
விளக்கம் : மாலையைக் கண்ட கண் பிறிதொன்றிற் செல்லாமையின் கண்வாள் அறுக்கும் என்றார். விண் - தேவருலகு. மண்மேல் : (மண்ணுக்கு என நான்காம் வேற்றுமைப் பொருளில் வந்ததால்) உருபு மயக்கம். கன்னிப் பெண்ணாரமிர்தின் கன்னிப் பெண்ணாரமிர்து என்னுந் தொடர் ஒரு சொல்லாகவும் பெருவாரி என்னுந் தொடர் ஒரு சொல்லாகவும் கொண்டு இரு சொல் தொகை யென்றார். கற்சுனை ஒரு சொல் போலவும், குவளையிதழ் ஒரு சொல்லாகவும் நின்றன. பல சொற்றொகையாயினும், கற்சுனைக் குவளையிதழ் போல (தொல்-எச்ச.24. இளம் பூரணர், நச்சினார்க்கினியர் மேற்கோள்) இருசொல் தொகையாய் நின்றது.
கன்னிப்பெண் : விமலை. கண்வாள்: கண்ணொளி.
25. துஞ்சா மணிப் பூண் சுரமஞ்சரி என்னும் நாமத்து
அம் சாயல் பூத்த அகிலார் துகிலாய் பொன் அல்குல்
எஞ்சாத இன்பக் கொடி தாழ்த்ததும் பன்றி எய்து
நஞ்சு ஊறும் வேலான் பகை நாம் அறக் கொன்ற வாறும்,
பொருள் : துஞ்சா மணிப்பூண் சுரமஞ்சரி என்னும் நாமத்து - ஒளிமாறாத மாணிக்கப் பூணினையும் சுரமஞ்சரி என்னும் பெயரினையும், அம் சாயல் அகில்ஆர் துகில் ஆய்பொன் அல்குல்-அழகிய சாயலையும் அகில்மணம் நிறைந்த ஆடையும் பொன்னணிகலனும் உடைய அல்குலையும்; பூத்த எஞ்சாத இன்பக்கொடி தாழ்த்ததும் - மலர்ந்த, குறையாத இன்பந்தருங் கொடியை வளைத்தபடியும்; நஞ்சூறு வேலான் பன்றி எய்து பகை நாம் அறக் கொன்ற ஆறும் - நஞ்சு தோயும் வேலணிந்த சீவகன் பன்றியை வீழ்த்திப் பகைவனை அச்சம் நீங்கிக் கொன்றபடியும்.
விளக்கம் : துகிலையும் மேகலையையும் உடைத்தாகிய அல்குலையுடைய கொடி; இன்பமாகிய கொடி. பொன் : (கருவி) ஆகுபெயர். கொடி யென்றலானும் (ஆடவரை நோக்காமை மேற்கொண்ட) விரதத்தை நீக்குதலானும் தாழ்த்தது என்றார். நாம் - அச்சம்: உரிச்சொல். நாமம் ஆயின் விகாரமாம்.
26. புண் தோய்த்து எடுத்த பொரு வேல் எனச் சேந்து நீண்ட
கண் போன்ற மாமன் மகள் கண் மணிப் பாவை அன்ன
பெண் பால் அமிர்தின் நலம் பெற்றதும், பொற்பச் செங்கோல்
தண் பால் மதி தோய் குடை தண் நிழல் பாய வாறும்,
பொருள் : மாமன் கண்போன்ற மகள் - தன் மாமன் கோவிந்தனுக்குக் கண்போன்ற மனைவி புதவியின், புண்தோய்த்து எடுத்த பொருவேல் எனச் சேர்துநீண்ட - புண்ணில் தோய்த்து எடுத்த, போருக்குரிய வேல்போலச் சிவந்த நீண்ட; கண்மணிப் பாவை அன்ன பெண்பால் அமிர்து இன்நலம் பெற்றதும் - கண் மணியிற் பாவைபோன்ற பெண்ணாகிய இலக்கணையிடத்து அமிர்தத்தைப் போன்ற இனிய நலத்தைப் பெற்றபடியும்; செங்கோல் பொற்பத் தண்பால் மதிதோய் குடை தண்நிழல் பாய ஆறும்-செங்கோல் பொலிவு பெற்றிருப்பக் குளிர்ந்த பாலனைய திங்களைப் போன்ற குடை குளிர்ந்த நிழலைப் பரப்பினபடியும்;
விளக்கம் : தன் மாமனுடைய மகள், அவன் கண்போன்ற மகள் அவன் தேவி புதவியுடைய வேலெனச் சேந்து நீண்ட கண்மணியிற் பாவை அன்ன பெண்; உண்கண், மணிவாழ் பாவை (நற்றிணை-184) என்றார் பிறரும். வேல்படும்பொழுதே புண்ணும் உடனே நிகழ்தலின் புண்தோய்த் தென்றார். (மதி தோய்) தோய்: உவம உருபு. குடை: எழுவாய். குடைத் தண்ணிழலும் பாடம். மாமன் மகள் என்பதற்கு மாமன் மனைவி யென்று பொருள் கொள்ளுதலே சிறப்பாகுமென்று தோன்றுகிறது. இன்றேல் அவன் தேவி என்ற சொற்களை வருவித்து அவளுக்குப் பெண் என முடித்தல் வேண்டும். மகள் என்பதற்கு மனைவியெனச் சங்க நூல்களில் வருவதுண்டு. மனக் கினியாற்கு நீ மகளாயதூஉம் (மணி-பதி-21) என வருதல் காண்க. புதவி என்பது பிரிதிவி சுந்தரி என்பதன் சிதைவு என்பர்.
27. திறை மன்னர் உய்ப்பத் திரு நிற்பச் செங்கோல் நடப்பக்
குறைவு இன்றிக் கொற்றம் உயரத் தெவ்வர் தேர் பணிய
உறைகின்ற காலத்து அறம் கேட்டு உரும் உற்ற பாம்பின்
அறிவன் அடிக் கீழ் அரசு அஞ்சித் துறந்த வாறும்,
பொருள் : குறைவு இன்றி மன்னர் திறை உய்ப்ப - குறைவு இல்லாமல் அரசர்கள் கப்பம் செலுத்தவும்; திருநிற்ப - செல்வம் நிலைபெற்றிருக்கவும்; செங்கோல் நடப்ப - நல்லாட்சி நடைபெறவும்; கொற்றம் உயர-வெற்றி மேம்படுமாறு; தெவ்வர் தேர் பணிய - பகைவருடைய தேர் வணங்க; உறைகின்ற காலத்து - வீற்றிருக்குங் காலத்திலே, அறம் கேட்டு உரும் உற்ற பாம்பின் அரசு அஞ்சி - அறத்தைக் கேட்டு இடியேற்றின் ஒலிகேட்ட பாம்பைப்போல அரசாட்சியினிடம் அச்சங்கொண்டு; அறிவன் அடிக்கீழ் துறந்த ஆறும் - அறிவன் திருவடியிலே துறவு மேற்கொண்டபடியும்;
விளக்கம் : உய்ப்ப - செலுத்த. நிற்ப-கெடாது நிற்ப. குறைவின்றி: மத்திம தீபம் (இடையிலிருந்த இச்சொல் முன்னுள்ள சொற்களுக்கும் விளக்கமாக இருந்தது. எனவே, குறைவு இன்றி என்பதை யாவற்றிற்குங் கூட்டுக. மத்திமதீபம் என்பது இடைநிலை விளக்கு என்னும் அணி.) இவனது துறவு கூறவே எல்லார் துறவும் உணர்த்தியதாயிற்று. எல்லோரும் என்பது சீவகனுடைய தம்பியருந் தோழரும் தேவியரும் ஆகிய எல்லோரையுங் குறிக்கின்றது. அறிவன் - அருகப் பெருமான்.
28. கோணைக் களிற்றுக் கொடித் தேர் இவுளிக் கடல் சூழ்
வாள் மொய்த்த தானை அவன் தம்பியும் தோழன் மாரும்
பூண் மொய்த்த பொம்மல் முலையாரும் புலம் துறப்ப
வீணைக் கிழவன் விருந்து ஆர் கதிச் சென்ற வாறும்,
பொருள் : கோணைக் களிற்றுக் கொடித்தேர் இவுளிக் கடல்சூழ் வாள் மொய்த்த தானையவன் - மாறுபாடுடைய களிற்றையும் கொடித் தேரையும் குதிரைக் கடலையும் சூழ்ந்த வாளேந்திய காலாட் படையையுமுடைய சீவகனின்; தம்பியும் தோழன்மாரும் பூண்மொய்த்த பொம்மல் முலையாரும் புலம்துறப்ப -தம்பியும் தோழர் நால்வரும் பூண் அணிந்த விம்மிய முலைகளையுடைய தேவியர் எண்மரும் இந்நிலத்தை விட்டுத் துறக்கத்தை அடைய; வீணைக் கிழவன் விருந்து ஆர்கதிச் சென்ற ஆறும்-சீவகன் புதுமை பொருந்திய வீட்டினை அடைந்தபடியும்.
விளக்கம் : கோணை : ஐ : அசை.
இவனை ஒழிந்தோர்க்கு வீடுபெற நல்வினையின்று. தென்புல மருங்கின் விண்டுநிறைய (மதுரைக்.202) என்றாற்போலப் புலம்நிலம் ஆம்; ஏசு பெண்ணொழித் திந்திரர்களாய்த் - தூய ஞானமாய்த் துறக்கம் எய்தினார். (சீவக. 3121) என்று தேவியரை முற்கூறி, ஐவருந், திருவின் தோற்றம்போல் தேவராயினார் (சீவக. 3134) என்று பிற்கூறுவாராகலின், முலையாருந் தம்பியுந் தோழன்மாரும் எனல்வேண்டும். ஆயினும், ஆண்பாற்சிறப்புடைமையின் முற்கூறினார். பாட்டுக் காமத்தை விளைத்தலின் அதிற் பற்றற்று விரைய வீடு பெற்றமை தோன்ற வீணைக் கிழவன் விருந்தார்கதிச் சென்றவாறும் என்றார்.
29. தேன் வாய் உமிழ்ந்த அமிர்து உண்டவன் போன்று செல்வன்
வான் வாய் வணக்கும் நலத்தார் முலை போகம் வேண்டான்
ஏனோரும் ஏத்த அவன் எய்திய இன்ப வெள்ளம்
ஈனோர்க்கு உரைப்பாம் பதிகத்துள் இயன்ற வாறே,
பொருள் : செல்வன் தேன்வாய் உமிழ்ந்த அமிர்து உண்டவன் போன்று - அழியாத செல்வத்தை உடையவன் தேனை உமிழ்தற்குக் காரணமான அமிர்தத்தை உண்டவனைப்போல; வான்வாய் வணக்கும் நலத்தார் முலைப்போகம் வேண்டான்-வானிடத்து மகளிரை அழகால் வணக்கும் நலமுடைய நில மகளிரின் இன்பத்தை வேண்டாதவனாய்; ஏனோரும் ஏத்த அவன் எய்திய இன்ப வெள்ளம் - எல்லோரும் போற்ற அவன் அவ்வீட்டிலே கேவல மடந்தையை நுகர்ந்த பேரின்பத்தையும்; பதிகத்துள் இயன்ற ஆறே ஈனோர்க்கு உரைப்பாம் - பதிகத்தில் அமைத்த வழியிலே இவ்வுலகில் உள்ளோர்க்கு உரைப்பாம்.
விளக்கம் : உமிழ்ந்த அமிர்து, நிலம் பூத்த மரம் (கலி.27) போல நின்றது. இன்ப வெள்ளத்தையும் என்று உம்மையும் உருபும் விரித்து, கல்லார் மணி (சீவக-9) என்னும் கவி முதலியவற்றின் உம்மைகளுக்கும் இரண்டாவது (வேற்றுமை உருபு) விரித்து, உரைப்பாம் என்பதனோடு முடிக்க. முற்கூறிய வீட்டை (விருந்தார் கதி, சீவக.28) உட்கொண்டு கூறி, அதிற் பயனும் கொண்டு கூறினார். வான் : இடவாகு பெயர். நலத்தார்சீவகன் மனைவியர். கேவல மடந்தை: பேரின்பமாகிய மடந்தை. ஏனோரும்-எல்லோரும். ஈனோர் - இங்குள்ளோர்.