வடவெள்ளாற்றின் தென்கரையிலே அமைந்துள்ள இருக்குவேளூர் என்னும் தலத்திலே வாழ்ந்து வந்த பெருங்குடி மக்களுக்கெல்லாம் ஒப்பற்ற தலைவராய் வாழ்ந்தவர் கணம்புல்ல நாயனார் என்னும் சிவனருட் செல்வர். இத்தவசீலர் திருசடைநாதர் எழுந்தருளியிருக்கும் கோயில்களுக்கு நெய்விளக்கு ஏற்றும் நற்பணியை நாள்தோறும் தவறாமல் செய்து வந்தார்.கோயில்களுக்கு ஒளி ஏற்றுவதால் இருளடைந்த மானிடப்பிறவி என்னும் அஞ்ஞான இருள்நீங்கி அருளுடைய ஞான இன்ப வீட்டை அடைய வழி பிறக்கும் என்பதனை உணர்ந்தார்.இவ்வாறு நற்பணி செய்து வந்த நாயனாருக்குச் செல்வம் குறைந்து வறுமை வளரத் தொடங்கியது. அந்த நிலையிலும் திருவிளக்கு ஏற்றும் பணியைத் தவறாமல் செய்து வந்தார்.இந்த நிலையில் நாயனார் இருக்குவேளூரில் வறியராய் இருக்க விரும்பவில்லை. தம்மிடமுள்ள நிலபுலன்களை விற்று ஓரளவு பணத்தோடு சிவ யாத்திரையை மேற்கொள்ளுவான் வேண்டி ஊரை விட்டே புறப்பட்டார். ஊர் ஊராகச் சென்று கோயில் தோறும் நெய் விளக்கேற்றியவாறு தில்லையை வந்தடைந்தார்.எம்பெருமானைப் பணிந்து பேரின்பம் பூண்டார். தில்லைப்பதியை விட்டுச் செல்ல மனமில்லாத அடிகளார் அவ்வூரில் தனியாக வீடு எடுத்து வசிக்கலானார்.
அடியார் அவ்வூரில் தங்கியிருந்து பெருமானை உளம் குழைந்து உருகிப் போற்றி விளக்கேற்றும் திருப்பணியை மேற்கொள்ளலானர். தில்லைத் திருவிடத்தில் அமைந்துள்ள திருப்புலீச்சரம் என்னும் சிவன் கோயிலுக்கு விளக்கேற்றும் பணியை மேற்கொண்ட அடியார் வறுமையால் மனம் வாடினார். விற்பதற்குக் கூட மேற்கொண்டு மனையில் பொருள் இல்லையே என்ற நிலை ஏற்பட்டதும் நாயனார் ஊராரிடம் இரப்பதற்கு அஞ்சிய நிலையில் உடல் உழைப்பினால் செல்வம் சேர்க்கக் கருதினார். அதற்கான கணம்புல்லை அரிந்து வந்து அவற்றை விற்று பணமாக்கி நெய் வாங்கி விளக்கேற்றி வந்தார். எம்பெருமான் சோதனையால் கணம்புல்லும் விற்பனையாக வில்லை. இதனால் இடர்பட்ட நாயனார், கணம்புல்லையே திரித்து அழகிய விளக்காக எரித்தார். ஆலயங்களில் விளக்குகள் பெரும்பாலும் ஜாமம் வரைக்கும் எரிவது வழக்கம். கணம்புல் யாமம் வரைக்கும் எரியாமல் சீக்கிரமே அணைந்துவிட்டது. கணம்புல் நாயனார் அன்புருகும் சிந்தனையுடன் என்புருக அத்திரு விளக்கில் தமது திருமுடியினை வைத்து இன்பம் பெருக நமச்சிவாய நாமம் என்று சொல்லி விளக்காக எரிக்கத் தொடங்கினார்.திருப்புலீச்சரத்து மணிகண்டப் பெருமான் அதற்கு மேல் பக்தரைச் சோதிக்க விரும்பவில்லை. பெருமான் பக்தருக்கு சக்தி சமேதராய் ரிஷப வாகனத்தில் பேரின்ப காட்சி கொடுத்தார். அடியார் நிலம் கிடந்து சேவித்து, பெருமானைப் போற்றினார். எம்பெருமான் தமது அன்பு தொண்டர் கணம்புல்ல நாயனாருக்குச் சிவலோகப் பதவியை அளித்து அருளினார்.
குருபூஜை
: கணம்புல்லர் நாயனாரின் குருபூஜை கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.