தொண்டைவள நாட்டிலுள்ள சிறப்புமிக்கப் பழம் பெரும் பதியாகிய மயிலாபுரி கடல் வளத்தோடு கடவுள் வளத்தையும் பெற்றுச் செல்வச் சிறப்போடு ஓங்கி உயர்ந்து பொலிவு பெற்றிருந்தது. இத்திருநகரில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுக்கு கபாலீசுவரர் என்றும், உமையம்மைக்குக் கற்பகவல்லி என்னும் திருநாமம் உண்டு. இந்நகரிலே கபாலீசுவரர் கமல மலர் பாதம் போற்றும் அருந்தவத்தினராய் வேளாளர் மரபிலே அவதரித்தவர் தான் வாயிலார் நாயனார் என்பவர்.இவர் எம்பெருமானின் திருநாமத்தை உள்ளத்தால் பூஜை புரிந்து வந்தார். இறைவனை எப்போதும் நினைக்கக்கூடிய தமது மனக்கோயிலில் இருத்தினார். உணர்வு என்னும் தூய விளக்கேற்றினார். ஒப்பில்லா அரும்பெரும் இன்பம் என்னும் திருவமுதத்தால் வழிபட்டு வந்த வாயிலார் நாயனார் சிவபெருமானுடைய சேவடி நீழலை எய்தும் பேரின்ப வாழ்வு பெற்றார்.
குருபூஜை
: வாயிலார் நாயனாரின் குருபூஜை மார்கழி மாதம் ரேவதி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.