பதிவு செய்த நாள்
27
அக்
2023
12:10
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் காளஹஸ்தி சிவன் கோயிலில் வரும் சனிக்கிழமை அன்று சந்திர கிரகணத்தையொட்டி சிவன் கோயிலில் மூலவருக்கு சந்திர கிரகண சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற உள்ளன. ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து கோயில்களில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் நடைபெறும் பூஜை முறைகளுக்குச் தனிச்சிறப்பு உள்ளன. இந்நிலையில் சனிக்கிழமை அன்று நிகழ உள்ள சந்திர கிரகணத்தை ஒட்டி மாநிலத்தில் உள்ள அனைத்து கோயில்களின் நடைச் சாத்தப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப் படமாட்டார்கள். இந்த நிலையில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் மூலவர் சுயம்பு என்பதால் கிரகணச் சமயத்தில் கிரகணச் சாந்தி அபிஷேகங்கள் நடத்தப்படுவது வழக்கம். அதே போல் ( சனிக்கிழமை)நாளை சந்திரக் கிரகண சாந்தி அபிஷேகங்கள் மூலவருக்கு நடத்த உள்ளதாக கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர். இம்மாதம் 28ஆம் தேதி சனிக்கிழமை இரவு முழு சந்திர கிரகணம் ஏற்படும் என வானியலாளர்கள் அறிவித்துள்ளனர். பௌர்ணமி நாளில் வரும் இந்த கிரகணம் நள்ளிரவுக்குப் பிறகு ஏற்படும் என்று சிவன் கோயில் அர்ச்சகர் அர்த்தகிரி சுவாமி விளக்கம் அளித்தார். அன்றைய தினம் நள்ளிரவுக்குப் பிறகு கோயில் நடை திறக்கப்பட்டு மூவுலகிற்கும் அதிபதியான (முக்கண்டீஸ்வர்) ஸ்ரீ காளஹஸ்தீஷ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு இது குறித்து கூறுகையில்; நள்ளிரவு (சனிக்கிழமை) 12.30 மணிக்கு கிரகணம் தொடங்கும் என்றும், இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படும். தொடர்ந்து (ஞாயிற்றுக்கிழமை அதிகாலை )2.30 மணி வரை கிரகணச் சமயத்தில் சாந்தி அபிஷேகங்கள் நடத்தப்படும் என்றார். பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய வழக்கம் போல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. பொதுவாக கிரகணத்தின் போது அனைத்து கோவில்களையும் மூடி, துாய்மை செய்து, கிரகணம் முடிந்த பின் சிறப்பு பூஜைகள் செய்வது வழக்கம். ஆனால் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் பல்வேறு வித்தியாசமான சடங்குகள் உள்ளன. இந்த ஆண்டின் கடைசி கிரகணம் சந்திரகிரகணம் என்பதால், சனிக்கிழமை இரவு ஏகாந்த சேவை வரை அனைத்து சேவைகள் வழக்கம் போல் நடைபெறும். சுவாமி அம்மையாருக்கு அபிஷேகம் முடிந்து இரவு 1.30 மணிக்கு கோயில் நடை மூடப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை அதி காலை கோயிலைச் சுத்தம் செய்து பக்தர்கள் வழக்கம்போல் வழிபாடுகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.