பதிவு செய்த நாள்
02
பிப்
2011
12:02
பாம்பாட்டிச் சித்தரும் பிறக்கும் போது சித்தராகப் பிறக்கவில்லை. பிறக்கும்போது எல்லோரும் சாதாரணம்தான். வளர்ப்பும் வழிகாட்டுதலுமே ஒருவரை உயர்ந்த இடத்துக்கோ, தாழ்ந்த இடத்துக்கோ கொண்டு செல்கின்றன. இந்த பாதிப்பின் காரணமாகத்தான் சிறு வயதில் நல்ல விஷயங்கள் போதிக்கப்படுகின்றன. பாம்பாட்டியும் அப்படிதான். திருக்கோகர்ணம் திருத்தலத்தில் ஒரு கார்த்திகை மாதம் மிருகசீரிஷ நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் மிதுன ராசியில் பிறந்தவர் பாம்பாட்டிச் சித்தர் என்று கூறப்படுகிறது. இவரின் தந்தை, பார்வை இல்லாதவர் என்கிற குறிப்பும் சொல்லப்படுகிறது. பிறக்கும்போதே கழுத்தில் மாலை சுற்றிப் பிறந்தார். ஜோகி எனப்படும் இருளர் இனத்தைச் சேர்ந்தவர் பிழைப்புக்காக பாம்புகளை உயிருடன் பிடித்தோ அல்லது கொன்றோ , இதை வாங்குவதற்கென்றே இருக்கும் வைத்தியர்களிடம் விற்று வந்தார். பாம்புகளின் பாஷை அறிந்தவர். இப்படிப் பாம்புகளைத் தேடி பாண்டிய நாட்டு காடுகளிலும் மருதமலைக் காடுகளிலும் (இன்றைய மருதமலை அமைந்திருக்கும் பகுதி) நேரம் காலம் பார்க்காமல் சுற்றி திரிவது இவரது வழக்கம்.
பாம்புகளின் விஷத்தை அசாதாரணமாக அருந்தியவர் பாம்பாட்டி என்பதை போகர் பெருமான் தனது பாடலில் சொல்லி இருக்கிறார். அதோடு, இவரது பிறப்பைப் பற்றிச் சொல்லும் போகர்.
தாயான பாம்பாட்டி சித்தரப்பா
தரணியில் நெடுங்கால மிருந்தசித்து
காயான முப்பழமும்பாலுங் கொண்ட
கலியுகத்தில் நெடுநாளா யிருந்தசித்து
என்கிறார். அதாவது கிடைத்தற்கரிய விசேஷமான கனிகளை உண்டும் ஞானப் பால் அருந்தியும் தன் சித்துத் திறமையால் பல காலம் தரணியில் வாழ்ந்தவர் என்று சொல்கிறார் போகர். ஆரம்பத்தில், மிகவும் மூர்க்கனாக இருந்தார் பாம்பாட்டி, கொடிய வகை பாம்புகளை-பயம் அறியாமல்-மிகுந்த லாகவமாகப் பிடித்து அவற்றைக் கொன்றார். இவரது இயற்பெயர் தெரியவில்லை. செடிகளும் கொடிகளும் மண்டி வளர்ந்த அடர்ந்த வனத்துக்குள் அநாயாசமாக நுழைவார். பாம்புகளைத் தேடி அலைவார். இவரை நம்பியே பல வைத்தியர்கள் அப்போது இருந்தனர். இன்ன வைத்தியத்துக்காக இந்த வகை பாம்பின் விஷம் தேவைப்படுகிறது. என்கிற கோரிக்கை அவர்களிடம் இருந்து வந்ததும் அதற்கான தேடல் துவங்கிவிடும். கொடிய நச்சு கொண்ட பாம்புகளின் விஷம். எந்தெந்த வியாதியை முறியடிக்கும் தன்மை கொண்டது என்பதையும் இவர் அறிந்து வைத்திருந்தார். இதனால், சில நேரங்களில் பாம்பாட்டிச் சித்தரே ஒரு வைத்தியராகச் செயல்பட்டதும் உண்டு. இவரிடம் சிகிச்சைக்காக வந்தவர்களும் ஏராளம்.
ஒரு முறை சில வைத்தியர்கள் பாம்பாட்டிச் சித்தரை அவரது இருப்பிடம் தேடி வந்து சந்தித்தார்கள். சரி.... தனக்குப் புதிதாக ஒரு வேலை வரப் போகிறது... அதன் மூலம் நிறைய பணம் கிடைக்கும். என்கிற சந்தோஷத்தில், வாருங்கள் வைத்தியர்களே... உங்களுக்கு ஏதாவது பாம்பு வேண்டுமா? எந்த வகை பாம்பு வேண்டும் என்று சொல்லுங்கள். உங்கள் விருப்பத்துக்கேற்றபடி அதை உயிருடனோ, அல்லது சாகடித்தோ கொண்டு வருகிறேன். என்றார் உற்சாகமாக. ஐயா பாம்பின் பாஷை அறிந்தவரே.... நவரத்தினம் போல் ஜொலிக்கக்கூடிய பாம்பு ஒன்று இருக்கிறது. கொஞ்சம் குறைவான உயரத்தில் இருக்கும் அந்தப் பாம்பின் தலையில் ஒரு மாணிக்கக் கல் காணப்படும். அந்தப் பாம்பின் விஷம் எங்களுக்கு அவசரமாகத் தேவைப்படுகிறது. உயிர் காக்கும் பல நோய்களைத் தீர்க்கக்கூடிய வலிமை அந்த விஷத்துக்கு உண்டு. அதனால்தான் உன்னைத் தேடி வந்தோம் என்றனர்.
அந்தப் பாம்பின் விஷம் மட்டும் போதுமா? ஏதோ, மாணிக்கக் கல் என்று சொன்னீர்களே.... அதையும் எடுத்து வரவேண்டுமா? என்று சவாலாகக் கேட்டார் பாம்பாட்டிச் சித்தர். விஷம்தான் எங்களுக்கு முக்கியம். முடிந்தால், அந்த மாணிக்கக் கல்லையும் கொண்டு வா. அதற்கும் ஒரு நல்ல விலை போட்டுக் கொடுத்துவிடுகிறோம் என்றனர் பேராசைக்காரர்களான அந்த வைத்தியர்கள். நீங்கள் கேட்ட அனைத்தும் நாளை காலை உங்களிடம் இருக்கும் சந்தோஷமாகப் போய் வாருங்கள் என்று அவர்களை அனுப்பி வைத்தார் சித்தர். இரவு வேளையில்தான் இத்தகைய பாம்புநடமாடும் என்பதை அறிந்த பாம்பாட்டிச் சித்தர். அன்று இரவில் வீட்டில் உணவு சாப்பிட்டுவிட்டு, நவரத்தினப் பாம்பை வேட்டை யாடுவதற்காகப் புறப்பட்டார்.
இறைவன், பாம்பாட்டிச் சித்தரை ஆட்கொள்ளத் தீர்மானித்தது இந்தத் தினம்தான். சோதனைகளை முதலில் தந்தான் இறைவன். எத்தனையோ பாம்புப் புற்றுகளைத் தரைமட்டம் ஆக்கியும், குறிப்பிட்ட அந்தப் பாம்பு சிக்கவே இல்லை. முதலில் சலித்துப் போன பாம்பாட்டிச் சித்தர், தன் முயற்சியில் இருந்து கொஞ்சமும் துவளாமல், அடுத்தடுத்து காட்டில் பயணிக்கலானார். அப்போது வித்தியாசமான ஒரு புற்று அவரது கண்களில் பட்டது. ஒருவேளை நவரத்தினப் பாம்பு ஓய்வெடுக்கும் புற்று இதுவாக இருக்குமோ என்ற எண்ணத்தில், தன் கையில் இருந்த ஆயுதத்தால், இடிக்க முற்பட்டபோது அந்த விநோதம் நிகழ்ந்தது.
திடீரென யாரோ ஒருவர் வனமே அதிரும்படி சிரிக்கும் பேரோசை கேட்டது. பாம்புப் புற்றை இடிக்கும் தன் முயற்சியைச் சட்டென நிறுத்திவிட்டு சுற்றும்முற்றும் பார்த்தார் பாம்பாட்டிச் சித்தர். உருவம் எதுவும் புலப்படவில்லை. ஆனால் கண்களைக் கூச வைக்கும் பேரொளி ஒன்று அவர் முன் தோன்றியது. கண்களைக் கசக்கிக்கொண்டு பார்த்தார். பாம்பாட்டிச் சித்தரின் முன்னே-தேஜஸான உடல்வாகுடன்-பிரகாசிக்கும் கண்களுடன்-ஜடாமுடிதாரியாக சித்த புருஷர் ஒருவர் பிரசன்னமானார். பாம்பாட்டிச் சித்தர் திகைத்துப் போனார். யார் நீங்கள்? எதற்குமே பயப்படாத என்னை உங்களது சிரிப்பு நடுங்க வைக்கிறது. என் பணியின்போது ஏன் குறுக்கிடுகிறீர்கள்? உங்களுக்கு என்ன வேண்டும்? என்று அடுக்கடுக்காகக் கேள்விகளைக் கேட்டார். எனக்கு நீதானப்பா வேண்டும் என்று ஆரம்பித்த அந்த சித்த புருஷர், பாம்புகளை இப்படிப் பிடித்து வதைக்கிறாயே... உனக்கு அதில் என்னப்பா சந்தோஷம்? என்று கேட்டார். என்ன அப்படி கேட்கிறீர்கள்? இந்தத் தொழில்தான் எனக்கு சோறு போடுகிறது. சந்தோஷம் தருகிறது. விதம் விதமான பாம்புகளைத்தேடித் தேடிப் பிடிக்கும்போது எனக்குள் ஒரு உற்சாகம் தோன்றுகிறது என்று எதிரில் நிற்பவர் யார் என்றே அறியாமல், அப்பாவியாகப் பேசிக் கொண்டிருந்தார் பாம்பாட்டிச் சித்தர்.
இருக்கப்பா..... இதை விட உயர்ந்த தொழில் இருக்கிறது. வீரம் மட்டுமே வாழ்க்கை அல்ல. விவேகமும் உன்னிடம் இருக்க வேண்டும். ஒன்றும் அறியாத இந்தப் பாம்புகளை வேட்டை ஆடுகிறாயே... உனக்குள்ளும் பாம்பு இருக்கிறது. அதை என்றாவது உணர்ந்தாயா நீ? என்று கேட்டார் சித்தர் புருஷர். என்னது.... எனக்குள்ளும் ஒரு பாம்பா? என்னய்யா தாடிக்காரரே ... கதை விடுகிறீர்? மனிதனுக்குள் எப்படிப் பாம்பு வசிக்க முடியும் ? - பாம்பாட்டிச் சித்தர். இருக்கிறது பிடாரனே... அதை நீ தேட முயற்சிக்க வேண்டும், அதற்கு தியானம் கைகூட வேண்டும்.
ஐயா..... உங்களைப் பார்த்த மாத்திரத்திலேயே எனக்குள் எதோ மாற்றம் தெரிவதாக உணர்கிறேன். இதுவரை நான் செய்து வந்த தொழிலே எனக்கு அருவருப்பாகத் தோன்றுவது போல் இருக்கிறது. எனக்குள் இருக்கும் பாம்பு என்ன என்பதை சற்று விளங்கச் சொன்னால் மகிழ்வேன். உனக்குள் மட்டும் இல்லையப்பா. இந்த உலகத்தில் வாழும் ஒவ்வொருவரின் உடலுக்குள்ளும் அந்தப் பாம்பு இருக்கிறது. உன்னை யார் என்று உணரும் வேளை வந்துவிட்டது. சதையும் திரவமும் நிறைந்த இந்த மனித உடம்பு, இறைவனின்அற்புதமான படைப்பு. இதற்குள் ஒரு பாம்பு தலைகீழாகத் தொங்கிக் கிடக்கிறது. அடங்கிக் கிடக்கிறது. அதன் பெயர் குண்டலினி. உடலின் சுவாசத்தைக் கட்டுப்படுத்து. இறைவனை நினைத்து தவம் செய்தால், உன் சுவாசம் உன் கட்டுக்குள் வரும். சுவாசம் ஒடுங்கும் வேளையில் குண்டலினி என்கிற அந்தப் பாம்பு புத்துயிர் பெறும். நீ நினைத்தபடி எல்லாம் அதை ஆட்டி வைக்கலாம். இதில் கிடைக்கிற பரமானந்தத்தை ஒரு முறை உணர்ந்து பாரேன். உலகம் எவ்வளவு விந்தையானது.... அதி அற்புதமானது என்பதை நீயே உணர்வாய். இதில் கிடைக்கிற ஆனந்தத்தை இது வரை நீ அனுபவத்திருக்க மாட்டாய் என்று ஒரு சீடனுக்குச் சொல்வதைப் போல் அந்த சித்த புருஷர் சொல்ல... உடல் லேசாகிப் போனார் பாம்பாட்டிச் சித்தர்.
அடுத்த கணமே படாரென அவரது கால்களில் வீழ்ந்தார் பாம்பாட்டிச் சித்தர். மகா புருஷரே... எனக்குத் தெளிவை ஏற்படத்திவீட்டீர்கள். உங்கள் வார்த்தைகளின் மகத்துவம் இப்போதே என்னைப் பரவசம் கொள்ள வைக்கிறது. தாங்கள் காட்டிய வழியில் என் பயணம் தொடரும் என்று கம்பீரமாகச் சொன்ன பாம்பாட்டிச் சித்தர். பாம்புப் புற்றுகளை இடிப்பதறகாகத் தான் வைத்திருந்த ஆயுதங்களையும் பாம்புகளைச் சேகரிக்கத் தான் வைத்திருந்த கூடைகளையும் தூக்கி எறிந்தர். சபாஷ் இளைஞனே.... இனி. நீ காணப் போகும் உலகமே அலாதியானது. உன்னைத் தேடிப் பலரும் கூடுவர். நல்லவர்களுக்கு நன்மை செய். அல்லாதவர்களை உன்னிடம் அண்ட விடாதே என்று சொல்லி மறைந்தார் சித்த புருஷர். சட்டை முனி தனக்குச் சொல்லி அருளியபடி. குண்டலினியை உணரும் தவம் துவங்கினார் பாம்பாட்டிச் சித்தர். அடுத்து வந்த நாட்களில் அவரது தேகம் மெள்ள மெள்ள பொலிவு பெறத் துவங்கியது. குண்டலினியின் சக்தியை அறிந்தர். மாபெரும் சித்திகள் அவரிடம் கூடின. மண்ணை அள்ளினார்; பொன் துகள் ஆனது. கற்களை எடுத்தார்; நவரத்தினமாக ஜொலித்தது. இரும்பைத் தொட்டார்; தங்கமாக மின்னியது. ஆசை, அறவே ஒழிந்து போனது. தங்கத்தையும் நவரத்தினங்களையும் அல்லல் படும் மாந்தர்களிடம் அளந்து கொடுத்தார். சோம்பேறிகளுக்கு உபதேசம் செய்தார். பேராசையோடு தன்னிடம் வந்தவர்களை, சட்டைமுனியின் சொற்படி துரத்தி அனுப்பினர்.
காசுக்காக பாம்புகளைப் பிடித்து வந்த இளைஞன் சித்தராக-பாம்பாட்டிச் சித்தராக ஆன கதை இதுதான். எண்ணற்ற சித்து விளையாட்டுகள் மூலம், அகிலத்தையே தன் பக்கம் திருப்பிய பாம்பாட்டிச் சித்தர் ஒரு முறை ஆகாய மார்க்கமாகப் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென ஓர் அழுகுரல் அவரைத் திசை திருப்பியது. ஒரு தேசத்து மகாராணியின் ஓலம் அது. தரை இறங்கியபோது அந்த நாட்டின் மகாராஜா இறந்து விட்டதை அறிந்தார். மகாராணி உட்பட தேசத்து பிரஜைகள் அனைவரும் அங்கே கூடி ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தனர். அங்கே ஒரு சித்து விளையாடல் நிகழ்த்த விரும்பினார் பாம்பாட்டிச் சித்தர். இறந்து கிடந்த மகாராஜாவின் உடலில் தன் உயிரைச் செலுத்தினர். அதாவது கூடு விட்டுக் கூடு பாய்ந்தார். பிறகென்ன... செத்துப் போன மகாராஜா, சிரித்தபடியே எழுந்து உட்கார்ந்தார். ராணி உட்பட பிரஜைகள் அனைவரும் அதிர்ந்தனர்.
இந்த வேளையில் அவர் பாடிய பாடல்கள் ஏராளம். வாழ்வின் தத்துவத்தையும் வாழ்க்கை நெறியையும் பலருக்கும் உணர்த்தும் விதமான ஆடு பாம்பே.....ஆடு பாம்பே என்கிற முடிவு வரிகளைக் கொண்ட பாடல்கள் அப்போது பிறந்தன. சாதாரணமாக இருந்த - தன் கணவரான மகாராஜா - திடீரென எப்படிக் கவிதை மழையாகப் பொழிகிறார் என்று சந்தேகப்பட்ட மகாராணிக்கும் உண்மையை உணர்த்தி. அவர்கள் அனைவரும் தெளிவுறும்போது. நிழல் நிஜமானது அரசர் சரிந்து விழுந்தார். அரசனுக்குள் அதுவரை இருந்த பாம்பாட்டி, மகாராணிக்கு உபதேசம் செய்து வைத்து அங்கிருந்து அகன்றார்.
மிகவும் பிரபலமான
நாதர்முடி மேலிருக்கும் நாகப்பாம்பே
நச்சுப்பை வைத்திருக்கும் நல்லபாம்பே
பாதாளத்தில் குடிபுகும் பைகொள் பாம்பே
பாடிப் பாடி நின்று விளையாடு பாம்பே
என்ற பாடல் பாம்பின் சிறப்பு என்ற தலைப்பில் இவர் எழுதியதுதான்.
தவிர கடவுள் வணக்கம். குரு வணக்கம், சித்தர் வல்லபங் கூறல், சித்தர் சம்வாதம், பொருளாசை விலக்கல், பெண்ணாசை விலக்கல், சரீரத்தின் குணம் அகப்பற்று நீக்கல் போன்ற தலைப்புகளில் எல்லாம் பாம்பைச் சம்பந்தப்படுத்தி இவர் எழுதிய பாடல்கள் பிரபலம். சித்தர் ஆரூடம், வைத்திய சாத்திரம் உட்பட பல நூல்களையும் இவர் எழுதி உள்ளார். பல அற்புதக் கலைகளையும் சித்த ரகசியங்களையும் அறிந்து வைத்திருந்த பாம்பாட்டிச் சித்தர் தனது 163 ஆவது வயதில் சமாதி அடைந்ததாகக் கூறப்படுகிறது. இவர் சமாதி கொண்ட இடம் விருத்தாசலம் என்றும் துவாரகை என்றும் மருதமலை என்றும் பல தகவல்கள் இருந்தாலும் சங்கரன்கோயிலில் புளியங்குடி சாலையில் இவர் சமாதி ஆனார் என்கிற தகவலே பலராலும் ஊர்ஜிதமாகச் சொல்லப்படுகிறது, மருதமலை கோயிலில் பாம்பாட்டிச் சித்தரின் சன்னிதியிலும் இதே தகவல் காணப்படுகிறது.
பாம்பாட்டிச் சித்தரோடு மருதமலை அதிக அளவில் சம்பந்தப்பட்டிருப்பதற்கு ஒரு காரணம் உண்டு. என்னவென்றால், மருதமலையில் இவர் வாழ்ந்த காலம் அதிகம். இதை உறுதி செய்வது போல் பாம்பாட்டிச் சித்தர் மருதமலையில் தவம் செய்த குகை, குகைக்குள் இருந்து ஆதி மூலஸ்தானம் சென்று முருகப் பெருமானை வழிபடுவதற்கு இவர் ஏற்படுத்திய சுரங்கம். இவர் உருவாக்கிய சுனை போன்றவையும் இன்றளவும் இருக்கின்றன. பாம்பாட்டிச் சித்தர் இன்றும் கூட அரூபமாக (உருவமற்ற நிலையில்) இந்தச் சுரங்கம் வாயிலாக முருகப் பெருமானின் கருவறை சென்று அவரை பூஜித்து வருவதாகச் சொல்லப்படுகிறது. உள்ளிருக்கும் குண்டலினி என்கிற பாம்பை மேலெழுப்பு என்று இவருக்கு சட்டைமுனி அறிவுரை கூறியதை நினைவுபடுத்தும் விதமாக படமெடுத்து ஆடும் ஒரு பாம்பின் வடிவில், இயற்கையாக அமைந்த ஒரு கற்பாறையும் (சுயம்பு) இவரது சன்னதியில் இருக்கிறது. மருதமலை முருகனைத் தரிசித்து விட்டு, பிராகார வலம் வரும்போது இடப்பக்கம் செல்லும் படிகளில் கீழிறங்கிச் சென்றால், பாம்பாட்டிச் சித்தரின் சன்னதியை நாம் தரிசிக்கலாம்.
இந்த சன்னிதியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் யோகியார் ஒருவர் வரைந்த பாம்பாட்டிச் சித்தரின் படம் இருக்கிறது. தவிர நந்திகேஸ்வரருடன் கூடிய சிவலிங்கம். பாம்பாட்டின் கல் விக்கிரகம், நாகராஜாக்கள் சூழ சன்னிதி நன்றாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு வைக்கப்படும் முட்டை மற்றும் பால் போன்றவற்றை ஒரு சர்ப்பம் பலர் கண்களிலும் படாமல் வந்து சாப்பிட்டுவிட்டுப் போகிறதது. சில நேரங்களில் சிலரின் கண்களுக்கு இது தட்டுப்படும். ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் இங்கே சிறப்பான வழிபாடுகள் நடக்கின்றன. பாம்பாட்டிச் சித்தருக்கு வழிபாடுகள் செய்ய விரும்புவோர் மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலைத் தொடர்புகொள்ளலாம். பாம்பாட்டிச் சித்தர் சன்னிதியின் முன் பலரும் அமர்ந்து தியானம் செய்கிறார்கள். இங்கே செய்யக்கூடிய முறையான தியானம், நம் பித்ரு தோஷத்தையும் அகற்றக்கூடியது என்கிறார் இங்கு பூஜை செய்யும் சிவாச்சார்யர். அவர் நம்மிடம், பெற்ற தாய் தகப்பனாரையும் நம் முன்னோர்களையும் நினைத்து இங்கே தவம் செய்வது விசேஷம். தவிர குழந்தை பேறு இல்லாமை, திருமண தோஷம், நாக தோஷம் போன்றவற்றுக்கும் இங்கே வழிபட்டால் நல்ல பலன் உண்டு. இதற்காக பல வெளியூர்களில் இருந்து பக்தர்கள் இங்கே வருகிறார்கள் என்றார்.
மருதமலைக்குச் செல்லுங்கள். மேற்கு தொடர்ச்சி மலையின் தரை மட்டத்தில் இருந்து சுமார் 500 அடி உயரத்தில் இருக்கிறது கோயில். மலைக்கு மேல் பயணிக்க திருக்கோயில் சார்பாகப் பேருந்து வசதி உண்டு. நடந்து செல்லும் பாதையும் உண்டு. இதர வாகனங்களிலும் பயணித்துச் செல்லலாம். முருகப் பெருமானின் ஏழாவது படைவீடு என்கிற பெருமைக்கு உரியது மருதமலை. மலை மேல் குடிகொண்டிருக்கும் அந்த மால்முருகனை வணங்குங்கள் முருகனின் ஆசி பெற்ற பாம்பாட்டிச் சித்தர் சன்னிதி சென்று அவரைத் தரிசித்து, ஆசி பெறுங்கள்.
சித்தர்களின் ஆசியும் அருளும்தான். கலியுக வாழ்க்கைக்கு அவசியம்.
தகவல் பலகை
தலம் : மருதமலை.
சிறப்பு : பாம்பாட்டிச் சித்தர் சன்னிதி.
எங்கே இருக்கிறது: கோவை மாநகருக்கு வடமேற்குத் திசையில் சுமார் 15 கீ.மீ. தொலைவில் இருக்கிறது.
எப்படிச் செல்வது?: நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தும் கோவையை அடைவது எளிது. கோவை நகரப் பேருந்து நிலையத்தில் இருந்து மருதமலை அடிவாரம் வரை பேருந்து வசதி இருக்கிறது. தவிர, கோவையின் ஆவாரம்பாளையம். ஒண்டிப்புதூர், நஞ்சுண்டா புரம், போத்தனூர், காந்திபுரம் போன்ற நகரத்தில் பல இடங்களில் இருந்தும் மருதமலைக்குப் பேருந்து வசதி தாராளமாகவே உண்டு.
தொடர்புக்கு:
துணை ஆணையர்/செயல் அலுவலர்,
அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில்,
மருதமலை, கோயம்புத்தூர் மாவட்டம்-641046,
போன்: 0422-242 2490.