பதிவு செய்த நாள்
08
பிப்
2011
05:02
இசைக்கலையில் உச்சநிலையாக கர்நாடக சங்கீதம் விளங்குகிறது. கர்நாடக சங்கீதத்தின் மூலம் இறைவழிபாட்டில் சிறப்புத் தன்மையை ஆழ்வார்கள், நாயன்மார்கள், அருணகிரிநாதர், புரந்தரதாசர், மீராபாய், கபீர்தாஸ், குருநானக் போன்ற மகான்கள் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இவர்களை நாதயோகிகள் என்பார்கள். இவர்களுள் முதன்மையானவர் என போற்றப்படுபவர் சங்கீத ஜோதி, சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள். 1759 முதல் 1847 வரை உள்ள 88 ஆண்டுகளை தியாகராஜ சாகாப்தம் என்று அழைப்பது பொருத்தமானதாக இருக்கும். திருவாரூரில் ராமபிரும்மம் என்பவருக்கும், சாந்தாதேவியாருக்கும் மூன்றாவது குழந்தையாக பிறந்தார் தியாகராஜர். இவர்கள் மூலகநாடு திரைலிங்க தெலுங்கு பிராமணர் வகுப்பை சேர்ந்தவர்கள். இவருக்கு ஜப்யேசன், ராமநாதன் என்ற சகோதரர்கள் இருந்தனர். இவரது தந்தை சிவ, விஷ்ணு பக்தியில் ஈடுபட்டு, திவ்யநாத பஜனை செய்துவந்தார். திருவாரூரில் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் தியாகராஜர் தனது ஆரம்பக்கல்வியை பயின்றார். பிறகு பெற்றோருடன் திருவையாறு சென்றுவிட்டார். 8ம் வயதில் உபநயனம் செய்வித்தபோது, காயத்ரியுடன், ராமதாரக மந்திரத்தையும் தன் தந்தையிடம் உபதேசம் பெற்றார். தன் தந்தை வைத்திருந்த ராமவிக்ரகத்திற்கு அன்றுமுதல் பூஜை செய்ய ஆரம்பித்தார். ராமகிருஷ்ணானந்தரிடம் உபதேசம் பெற்ற ராம சடாட்சரி மந்திரத்தை லட்சக்கணக்கில் ஜபம் செய்தார். இவரது தந்தையார் பரமபாகவதர். சங்கீதம் அவரது ரத்தத்தில் ஊறி இருந்தது. சிறு வயதிலேயே தியாகராஜரும் இசைத்திறமை கொண்டவராக விளங்கினார். இனிமையான குரலும் கைகொடுத்தது. தன் தாயாரிடம் ராமதாசர் மற்றும் புரந்தரதாசரின் கீர்த்தனைகளை கற்றார். திருவையாற்றில் உள்ள சமஸ்கிருத கல்லூரியில் சேர்ந்து நான்கு ஆண்டுகள் ராமாயணம் படித்தார். வால்மீகி ராமாயணத்தை படிக்கப்படிக்க, ராமபக்தியில் மூழ்கி, ராம சைதன்யர் ஆனார். ஜோதிடமும் கற்றார்.
தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் சரபோஜி சங்கீதத்தில் ஈடுபாடு உள்ளவர். அவரது அரசசபை வித்வானான ஸொண்டி வெங்கட ரமணய்யாவிடம் தியாகராஜர் சங்கீதம் கற்றார். அரசசபையில் பல பாட்டுக்களை பாடி பாராட்டு பெற்றார். அவர் பாடிய முதல் பாட்டு நமோ நமோ ராகவாய அதிசம் என்பதாகும். தியாகராஜர் தினமும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ராம நாமம் சொல்லி 38ம் வயதிற்குள் 96 கோடி ராம ஜபம் உருவேற்றினார். தனது 38ம் வயதின் கடைசி நாளில் உள்ளம் உருகி ஸ்ரீ ராமனை பாடும்போது கதவு தட்டிய சப்தம் கேட்டது. திறந்து பார்த்தபோது ராம லட்சுமணர்கள் விஸ்வாமித்திரர் நடத்திய யாகத்திற்கு செல்வது போன்ற காட்சியை கண்டார். அப்போது பாடியதுதான் ஏல நீ தயராது என்று புகழ் பெற்ற பாடல். தியாகராஜர் முதலில் பார்வதி அம்மையாரை மணந்தார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இறந்துவிட்டதால் அவரது தங்கையான கமலாம்பாள் என்ற உத்தமியை மணந்தார். இவர்களுக்கு சீதாலட்சுமி என்ற பெண் பிறந்தார். தியாகராஜரின் தந்தை இறக்கும் தருவாயில் மகனை அருகில் அழைத்து, ஸ்ரீ ராமமூத்தியை எப்போதும் பாடு என்று கட்டளையிட்டார். தந்தை இறந்தபிறகு தியாகராஜரின் சகோதரர்களுக்கு தம்பியின் பாட்டும் பக்தியும் பைத்தியக்காதரத்தனமாக தோன்றவே, அவரை ஊர் கோடியில் இருந்த கூரை வீட்டிற்கு அனுப்பிவிட்டனர் சொத்துக்களை அவர்களே எடுத்துக் கொண்டனர். தியாகராஜர் தனது தந்தை பூஜை செய்த ராம விக்ரகத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, அந்த சிறிய வீட்டில் ராமனை கொலுவிருக்கச் செய்தார். சதா ராம நாமமும், ராம கானமுமாகவே வாழ்ந்து வந்தார். தினமும் உஞ்சவிருத்தி (பிøக்ஷ) செய்து, அதில் வரும் வருமானத்தைக்கொண்டு ஜீவித்து வந்தார். பல சீடர்கள் அவரிடம் சங்கீதம் கற்றுக் கொண்டனர். யாரிடமும் எதுவும் அவர் பெற்றுக்கொண்டதில்லை. தனது சீடர்களுடன் ராமநவமி, கிருஷ்ண ஜெயந்தி ஆகிய நாட்களைக் கொண்டாடுவார். ஒரு சமயம் ஒரு சிஷ்யன் தவறு செய்த போது, அவனை கோபித்துக்கொண்டார். ஆனால் அவரது மனைவியோ கோபத்தினால் ஏற்படும் தீமையை எடுத்துக்கூறி சாந்தப்படுத்தினார். அப்போது தன் தவறை உணர்ந்து அவர் பாடிய பாட்டு தான் சாந்தமுலேக சவுக்கியமுலேது (சாந்தம் இல்லாமல் சவுக்கியம் இல்லை).
முதலில் ராமனை மட்டுமே பாடி வந்த தியாகராஜர், சிவபக்தையான அவரது மனைவியின் அறிவுரையை ஏற்று, மற்ற தெய்வங்களைப்பற்றியும் பாடலானார். சம்போ மஹாதேவ, சிவேபாஹிமாம் என்ற பாடல்கள் அதற்கு <<உதாரணமாகும். தியாகராஜரின் மகிமையும், கானச்சிறப்பும் நாடெங்கும் பரவியது. பலர் அவரை புகழ்ந்தாலும், பொறாமைக்காரர்களான அவரது சகோதரர்களுக்கு, அவர் புகழும், பெருமையும் பெறுவது சங்கடத்தைக் கொடுத்தது. மூத்த சகோதரர் ஜப்சேயன் அவர் எழுதிய பாட்டு புத்தகங்களை தீயிட்டு கொளுத்தி விட்டார். ஏராளமான கீர்த்தனைகள் அதனால் மறைந்துவிட்டன. அவரது வீட்டிற்குள் புகுந்து ராம விக்ரகத்தை திருடிக்கொண்டு போய் காவிரியில் போட்டுவிட்டார். ராம விக்ரகத்தை காணாமல் தியாகராஜர் திகைத்து உள்ளம் உருகி அற்புதமான கீர்த்தனங்களால், ஸ்ரீ ராமனிடமே தன் வருத்தத்தை முறையிட்டார். அநியாய முஸேயகுரா ரானிது ராது என்ற பாடல் அப்போது பாடப்பட்டது. அன்ன பானம் இல்லாமல் உறங்காமல் துடித்தார். ஒருநாள் கனவில் ஸ்ரீராமன் தோன்றி ஆற்று மணலில் தான் புதைந்திருக்கும் இடத்தை சொல்லி மறைந்தார். விக்ரகம் கிடைத்த ஆனந்தத்தில், தொரிகிதிவோ (நீ எப்படித்தான் மீண்டும் கிடைத்தாயோ) ரகுவீர, ரணதீர என்ற பாடல்களால் ராமனை ஆராதித்தார். சரபோஜி மன்னர் தன்னை புகழ்ந்து பாட வேண்டும் என நிறைய பணத்துடன் ஒரு அதிகாரியை அனுப்பினார். அரசரின் அழைப்பை நிராகரித்து இறைவனைத் தவிர வேறு யாரையும் பாடமாட்டேன் என சொல்லி அவர்பாடிய சிறப்பான பாடல்தான் நிதிசால சுகமா ? ராமுனி சந்நிதி ஸேவசுகமா? என்பதாகும். பிறகு சரபோஜி மன்னர் மாறுவேடத்தில் வந்து மற்றவர்களுடன் அமர்ந்து அவரது பாட்டைக் கேட்டு மகிழ்ந்தார். திருவிதாங்கூர் மன்னரான சுவாதி திருநாள் மகாராஜா தியாகராஜரை அழைத்ததும் செல்ல மறுத்து விட்டார். பின்பு தியாகராஜர் திருப்பதி, காஞ்சி, மதுரை ஆகிய ÷க்ஷத்திரங்களுக்கு சென்று பாடினார். திருப்பதியில் திரை போட்டு மறைந்திருந்த பெருமாளைப்பற்றி ஒரு பெண்ணின் கணவனை கீர்த்தனை பாடி உயிர்பெறச் செய்தார். மனைவி இறந்தவுடன் பற்றற்ற துறவியாக வாழ்ந்த தியாகராஜர் பகுளபஞ்சமி தினத்தன்று பஜனை பாட்டுகளை கேட்டுக்கொண்டே நாதஜோதியாக மாறி இறைவனுடன் கலந்தார். அவர் சொல்லியபடி 60 ஆண்டுகள் கழித்து அவரது கீர்த்தனைகள் புகழ்பெற்றன. 1925ம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த நாகம்மாள் என்பவர் தியாகராஜருக்காக திருவையாற்றில் கட்டிய சமாதியில் இன்றும் தியாகராஜ ஆராதனை ஒரு தூய கலைவிழாவாக சிறப்புடன் நடக்கிறது. இசையின் நோக்கம் பக்தியை வளர்க்கவே என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டியவர் சத்குரு தியாகராஜ சுவாமிகள்.
தியாகராஜ ஸ்வாமிகள்
பிரமாண்டமான இரண்டு திருவிழாக்களுக்குப் பெயர்போன திருத்தலம் திருவையாறு. ஒன்று சப்த ஸ்தான உத்ஸவம். நந்திதேவரின் திருக்கல்யாணத்தைக் கொண்டாடும் வைபவம் இது. அப்போது அருகில் உள்ள ஆறு திருத்தலங்களில் இருந்து உத்ஸவ விக்கிரகங்கள் திருவையாறுக்கு ஊர்வலமாக வந்து சேரும். ஊரே திமிலோகப்படும். இந்த விழா ஏப்ரல் மாதத் திருவிழா. அடுத்தது ஜனவரி மாதத் திருவிழா. சத்குரு ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகளின் ஆராதனை உத்ஸவம். அவர் மகா சமாதி அடைந்தது 6.1.1847 அன்று. தேய்பிறை பஞ்சமி. வருடந்தோறும் இந்த தினத்தன்று சங்கீத வித்வான்கள் அத்தனை பேரும் அங்கே கூடி, இசை அஞ்சலி செலுத்தவர். பின்னே தனக்கென்று வாழாமல் இசையையே உயிர் மூச்சாகக் கொண்டு கீர்த்தனகைள் பல இயற்றி ராம பக்தியிலேயே திளைத்த மகான் அல்லவா ஸ்ரீதியாகராஜ ஸ்வாமிகள்.
மனிதன் முடிவில் எனத எடுத்துச் செல்கிறான்? பொன்னையும் பொருளையுமா? அவன் செய்த பாவ புண்ணியங்களே அவனைப் பின்தொடர்கின்றன. வாழ்நாளில் நாம ஜபத்தில் மூழ்கி இன்புறம் பெரும்போது எத்தனை பேருக்குக் கிடைக்கும்? அப்படி ஒரு பாக்கியம் வாய்த்தது ஸ்ரீதியாகராஜர் என்கிற ஒரு புண்ணிய ஆத்மாவுக்கு. தியாகராஜரின் தந்தையான ராம பிரம்மம். ஆந்திர தேசத்தவர். பஞ்சம் காரணமாகத் தமிழகம் வந்து திருவாரூரில் குடியேறினார். அவர் ராம பக்தர். ஸ்ரீராம விக்கிரகங்களுக்குத் தினமும் ஆராதனை செய்தவர். தியாகராஜருக்கு எட்டாவது வயதில் உபநயனம் செய்து வைத்ததும் அவனுக்கு ஸ்ரீராம உபதேசமும் செய்து வைத்தார். அத்துடன் தான் பூஜித்த ஸ்ரீராம விக்கிரங்களை மகனிடமே கொடுத்து அனுதினமும் பூஜைகள் செய்யச் சொன்னார். எனவே ராமபிரானின் மேல் பக்தி கொண்டார் தியாகராஜர். மும்மூர்த்திகளில் (தியாகராஜர், ஸ்யாமா சாஸ்திரி. முத்துஸ்வாமி தீட்சிதர்) அவர் முதலாவதாகப் போற்றப்படுகிறார். பாடகர்கள் புதிது புதிதாக உருவாகலாம். ஆனால் அவர்கள் பாடும் கீர்த்தனைகள் பழையனதான்.
ஃப்ளாஸ்க்கை அருகில் வைத்துக் கொண்டு இன்றைய பாடகர்கள் ஆலாபனை செய்யும் ஸ்ரீதியாகராஜரின் கீர்த்தனைகள் எல்லாம் அவர் பசியுடன் இருந்த வேளையில் பக்தி ரசம் மனதில் ததும்ப ஆத்மார்த்தமான பாவத்தில் பாடியவையே.
தியாகராஜர் எப்படி இருப்பார்?
மெலிந்த தேகம். சிவந்த நிறம். சற்றே நீண்ட கழுத்து, சுமாரான உயரம். தலையில் குடுமி, கழுத்தில் துளசி மாலை. நெற்றியில் கோபிச்சந்தனம் என்று எளிமையே உருவானவர் அவர். அதிர்ந்து பேச் தெரியாதவர். எவருக்கேனும் ஏதேனும் உதவ வேண்டும் என்கிற மனோபவம் கொண்டவர். தினமும் காலை அனுஷ்டானங்கள் முடிந்ததும் உஞ்சவிருத்திக்காக கையில் ஒரு செம்புடன் வெளியே கிளம்புவார். வீடு தோறும் வாசலில் நின்று ராமநாத்தை ஜபிப்பார். சிறிது நேரத்திலேயே செம்பு நிரம்பிவிடும். இதுபோதும் என்கிற மனதுடன் இல்லம் திரும்புவார் தியாகராஜர். உஞ்சவிருத்தியில் சேகரித்த அரிசியை அன்னமாக்கி இறைவனுக்கு நைவேத்தியம் செய்தபிறகு வீட்டில் உள்ளவர்கள் உண்பார்கள். அப்போது எவரேனும் வந்தால் அவர்களுக்கும் உணவளிப்பார். அடுத்த வேளைக்குத் தேவைப்படுமே என்று எதையும் சேர்த்து வைக்கும் பழக்கமே தியாகராஜருக்கு இல்லை.
சங்கீதம் கற்பதற்காகப் பலரும் தங்கள் குழந்தைகளை தியாகராஜரிடம் சேர்த்தனர். அதற்கு சன்மானமாக உணவுபொருட்களையும் தருவார்கள். அவை முறையாக சமைக்கப்பட்டு இறைவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்டபின் கொடுத்தவர்களுக்கே திரும்ப வழங்கப்படும் இப்படித் தனக்கென்று எந்தப் பொருளையும் வீட்டில் சேர்த்து வைக்கப்பட்டார் அவர். தவிர, எந்த ஒரு சிஷ்யரிடம் இருந்து பணம் வாங்கும் பழக்கம் அவருக்கு இல்லை.
ஒருநாள் காலை துறவி ஒருவர் தியாகராஜரின் இல்லம் (திருவையாறு) தேடி வந்தார்.
உங்களுடைய சங்கீத்தைக் கேட்க வேண்டும் என்று ஆவலாக உள்ளேன் என்றார் துறவி. உடனே சில கீர்த்தனைகளைப் பாடினார் தியாகராஜர் இதைக் கேட்டுத் துறவி இன்புற்றார். உணவருந்திவிட்டுச் செல்லலாமே என்றார் தியாகராஜர். சரி காவிரிக்குச் சென்று நீராடிவிட்டு வருகிறேன் பிறகு சாப்பிடுவோம். முதலில் இதை வாங்கித் கொள்ளுங்கள் என்று சுவடிகள் சிலவற்றைக் கொடுத்துச் சென்றார். போனவர் திரும்பவே இல்லை. பல இடங்களிலும் தேடிப் பார்த்தார் தியாகராஜர். துறவியைக் காணோம். அன்று இரவு அதே நினைவுடன் உறங்கிப்போனார். அவரது கனவில் தோன்றிய துறவி தியாகராஜர், உனது வீட்டுக்கு வந்த உன் கானத்தைக் கேட்டு மகிழ்ந்து நாரதனாகிய நானே. உன்னிடம் தந்த சுவடிகளில் ஸ்வரார்ணவம் மற்றும் நாரதீயம் என்னும் நூல்கள் இருக்கின்றன. சங்கீதம் சம்பந்தமான இலக்கணங்களைச் சொல்லும் இந்த நூல்கள் உனக்கு உதவும் என்று அருளி மறைந்தார். இப்படி நாரத பகவானை திரிசிக்கும் பேறு தியாகராஜருக்கு வாய்த்தது.
காஞ்சிபுரம், திருப்பதி, ராமேஸ்வரம் தனுஷ்கோடி ஸ்ரீரங்கம், திருவாரூர் உட்பட எண்ணற்ற சைவ வைணவ க்ஷேத்திரங்களையும் அங்கெல்லாம் உள்ள இறை மூர்த்தங்களையும் தரிசித்துப் பாடியுள்ளார் தியாகராஜர். ரமனைத் தவிர வேறு பல தெய்வங்களைப் பற்றி தியாகராஜர் பாடி இருக்கிறார் என்றாலும் எண்ணிக்கையில் பார்த்தாலும் அவை சொற்பம்தான்.
தனது வாழ்நாளில் மொத்தம் 96 கோடி ராம நாமத்தை இருபத்தோரு வருடங்களில் ஜபம் செய்து முடித்திருக்கிறார் தியாகராஜர் ஸ்வாமிகள். அதாவது சராசரியாக தினமும் ஒண்ணேகால் லட்சம் முறை ராமநாமத்தை ஜபித்துள்ளளார். இதுபோல் வேறு எவரும் செய்தில்லை. இதன் பலனால் ஸ்ரீராமபிரானை பலமுறை தரிசிக்கும் பாக்கியம் பெற்றார். ஸ்ரீராம் தரிசன மகிமைøயுயம் கீர்த்தனைகளாக வெளிப்படுத்தினார்.
தியாகராஜரை, வால்மீகியின் அவதாரம் என்பர். வால்மீகி முனிவர் 24,000 ஸ்லோகங்களால் ராமரைத் துதித்தக் காவியம் எழுதினார். அதுபோல் 24,000 கீர்த்தனைகளால் ராமபிரானைப் போற்றிப் பாடினார். தியாகராஜர், என்று சொல்வதுண்டு. ஆனால், அற்றுள்ள இன்று நம்மிடையே கிடைத்திருப்பது வெறும் 700 மட்டுமே என்கிறார்கள். இவை கூட அவரது சீடர்கள் சிலரின் முயற்சியால் சேகரிக்கப்பட்டவை யாம்.
சித்திரைத் திருவிழாவின் போது ஸ்ரீரங்கம் சென்றிருந்தார் தியாகராஜர். அங்கு தெற்குச் சித்திரை வீதியும் மேற்குச் சித்திரை வீதியும் சந்திக்கும் பகுதியில் ஆன்மிக அன்பர் ஒருவரது வீட்டில் தங்கினார். சற்றுத் தொலைவிலே பொன்னால் ஆன குதிரை வாகனத்தில் ஸ்ரீரங்கநாதர் கம்பீரமாக உலா வந்தார். அவரை மனம் குளிர தரிசிக்க விரும்பிய தியாகராஜர் வாசலில் நின்று வணங்கி கீர்த்தனைகள் பாடிக் கொண்டிருந்தார். இந்தநிலையில் ஸ்வாமியின் குதிரை வாகனம் அடுத்த தெருவுக்குள் திரும்பி விட்டது. எக்கச்சக்கமான கூட்டம். தியாகராஜர் அப்படியும் இப்படியும் திரும்பி ஸ்ரீரங்கநாதரின் முழுக்கோலத்தையும் தரிசிக்க முயன்றார். ஆனால், முடியாமல் போனது. இதையடுத்து நடந்ததுதான் ஆச்சரியம். அடுத்த தெருவுக்குள் நுழைந்த ஸ்ரீரங்கனின் வாகனம் அதற்கு மேல் ஓர் அடிகூட நகரவில்லை. ஸ்வாமியை சுமந்து வந்தவர்கள். திடீரென தங்களின் உடல் மரத்து விட்டதாகவும் இனியும் ஸ்வாமியை சுமக்க இயலாது என்றும் கூறி அங்கேயே வாகனத்தை இறக்கி வைத்து விட்டார்கள். அன்பர்கள் திருஷ்டி சுற்றினார்கள். தேவதாசிகளை நடனம் ஆடச் சொன்னார்கள். எதுவும் பலன் தரவில்லை.
உடனே ஆலய அதிகாரிகள் தியாகராஜர் குறித்து விசாரித்து மிக்க மரியாதையுடன் அவரை அழைத்து வந்தனர். ஸ்ரீரங்கனை பூரணமாக தரிசித்த மகிழ்ச்சியில் கீர்த்தனை ஒன்று பாடி வழிபட்டார் தியாகராஜர். ஸ்ரீராமபிரான், சீதாதேவி மற்றும் அனுமனுடன் தியாகராஜரின் இல்லத்துக்கு நேரில் வந்த அற்புதமும் ஒருமுறை நிகழ்ந்தது.
ஒருநாள் உஞ்சவிருத்தியில் போதுமான தானியம் கிடைக்கவில்லை. எனவே அன்று முழுதும் உண்ணாமலேயே உறங்கிபோனார் தியாகராஜர். திடீரென வாசல் கதவு தட்டப்படும் சத்தம். தியாகராஜர் சென்று கதவைத் திறந்தார். வெளியில் கிழவர் ஒருவர் தன் மனைவியுடன் நின்றிருந்தார். அவருக்கு பின்னால் மூட்டை முடிச்சுகளுடன் பணியாள் ஒருவன். அவர்களை அன்புடன் வரவேற்றார் தியாகராஜர்.
சற்று இளைப்பாறுங்கள். விரைவில் போஜனம் தயராகிவிடும் என்றார். புன்னகைத்த கிழவர். தியாகராஜரே பொறும். சமைப்பதற்கான பொருட்கள் எங்களிடமே உள்ளன. மேலும் இதோ இவனே சமைப்பான் என்றார்.
அவரது பார்வையைப் புரிந்து கொண்ட பணியாள் அடுப்படிக்குச் சென்றான். பத்தே நிமிஷத்தில் தயாரானது உணவு. அனைவரும் பசியாறினர். அதன்பிறகு இறை மகிமைகள் குறித்து அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார் தியாக ராஜர், விடிந்தே விட்டது.
உங்களது புகழ் எல்லா திசைகளிலும் பரவட்டும் என்று தியாகராஜரை ஆசிர்வதித்து விட்டுப் புறப்பட்டனர். அவர்களை வழியனுப்ப வாசலுக்கு வந்த தியாகராஜர் திடுக்கிட்டார். அங்கு அவர்களைக் காணோம். தன் இல்லத்துக்கு வந்தவர்கள். ஸ்ரீராமபிரான், சீதாதேவி மற்றும் அனுமன் என்பதை அதன் பிறகே உணர்ந்தார் தியாகராஜர் கீர்த்தனை ஒன்றையும் பாடிப் பரவசமானார்.
தன் சிஷ்யர் ஒருவரது அழைப்பை ஏற்று சென்னை பட்டணத்துக்கு பயணித்தார் தியாகராஜர். அப்போது, சுந்தரமுதலியார் என்பவர் தனது சொந்த ஊரான கோவூர் திருத்தலத்துக்கு தியாகராஜரை அழைத்துச் சென்றார். அங்குள்ள இறைவனைக் கண்டு மெய்சிலிர்த்த தியாகராஜர் அங்கேயே கீர்த்தனைகள் பாடி வழிபட்டார்.
தனது வீட்டுக்கு வருமாறு தியாகராஜரை அழைத்தார் முதலியார். தியாகராஜரும் தன் சிஷ்யர்களுடன் சென்றார். அவரது வருகை ஊர் முழுக்க பரவியது. ஏராளமானோர் முதலியாரின் வீட்டில் கூடி அவரை தரிசித்தனர். பின்னர், தியாகராஜருக்கு உயர்ந்த வஸ்திரங்கள் மற்றும் பொன், பொருளை காணிக்கையாக அளித்தார் முதலியார். தியாகராஜரோ அவற்றை ஏற்க மறுத்துவிட்டார், ஆனாலும் தியாகராஜரது பல்லக்கில் பொற்காசுகளை மறைந்து வைத்தார் முதலியார். இந்த விஷயத்தை சீடர்கள் சிலரிடம் தெரிவித்தவர் காணிக்கையை ஏற்க ஸ்வாமிகள் மறுத்துவிட்டார். இருந்தாலும் ஸ்ரீராமநவமி, கிருஷ்ண ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி முதலான உத்ஸசவங்களை சிறப்புடன் நடத்த இந்தப் பொற்காசுகள் அவருக்குப் பயன்படும் என்றார்.
அதிகாலையில் அங்கிருந்து புறப்பட்டனர். அவர்கள் காட்டு வழியே பயணித்தபோது திடீரென தியாகராஜரது பல்லக்கின் மீது கற்கள் வந்து விழுந்தன. இது திருடர்களது வேலையே என்பதை அறிந்த சீடர்கள் கூக்குரலிட்டனர். பல்லக்கில் முதலியார் பொற்காசுகள் மறைத்து வைத்ததை தெரிந்து கொண்ட எவரோ, நம்மைப் பின்தொடர்கின்றனர் போல என்று உளறிக் கொட்டினர் சீடர்கள். தியாகராஜருக்கு வந்ததே கோபம்.
இதைத்தான் வேண்டாம் என்று நான் அங்கேயே சொல்லிவிட்டேனே. பொன்னும் பொருளும் நம்மிடம் இருக்கக் கூடாதப்பா. உண்மையான ராம பக்தர்களான நாம், இதன் மீது ஆசை வைக்கக்கூடாது. போகட்டும். முதலியார் மறைத்து வைத்த பொற்காசுகளை எடுத்து அந்தத் திருடர்களைக் கூப்பிட்டு அவர்களிடம் கொடுங்கள் என்றார்.
அதற்கு ஒரு சிஷ்யர், முதலியார் இதைத் தங்களுக்காகத் தரவில்லை. உத்ஸவங்கள் நடத்தப் பயன்படுத்திக் கொள்ளுமாறு சொல்லி இருக்கிறார் என்றார். அப்படியெனில் இது நமது பொருளன்று ஸ்ரீராமனின் சொத்து. அவன் பொருளை அவனே காத்துக்கொள்வான் என்றார் தியாகராஜர். பயணம் தொடர்ந்தது. கல் விழுவதும் நின்றது. பொழுது மெள்ள விடிந்தது. வழியில் ஒரு சத்திரத்தில் தங்கினர். பல்லக்கின் மீது கல்லெறிந்த கள்வர்கள் அப்போது அங்கு வந்து தியாகராஜரின் காலில் விழுந்தனர்.
ஐயா, கொள்ளை அடிக்கும் எண்ணத்துடன் நாஙகள் பல்லக்கை நெருங்கிய வேளையில். பல்லக்கின் முன்னும் பின்னுமாக வீரர்கள் இருவர் வில் ஏந்தி காவல் காத்துச் சென்றனர். எங்களை தாக்கவும் செய்தனர். அவர்களின் வீரம் சிலிர்க்க வைத்தது என்றனர்.
தியாகராஜர் புன்னகை பூத்தார். அப்படியா. புண்ணியும் செய்தவர்கள் நீங்கள் தகாத எண்ணத்துடன் வந்த உங்களுக்கு ராமபிரானும் இளையவர லட்சுமணனும் காட்சி தந்திருக்கிறார்கள் என்றார். பெறற்கரிய பாக்கியம் தங்களுக்குக் கிடைத்ததை எண்ணி நெகிழ்ந்த திருடர்கள் தங்களது செயலுக்கு தியாகராஜரிடம் மன்னிப்புக் கேட்டனர். அவர்களை ஆசிர்வதித்து ஸ்ரீராம நாமத்தையும் உபதேசித்தார் தியாகராஜர். இப்படி தியாகராஜரின் வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்கள் ஏராளம். அனைத்தையும் இங்கே சொல்வது சாத்தியமில்லை.
தியாகராஜர், சமாதி ஆவது குறித்து பத்து நாட்களுக்கு முன்பே அவருடைய கனவில் வந்து கூறினாராம் ஸ்ரீராமன். இதையடுத்த தன் சிஷ்யர்களிடம் தான் சமாதியாகும் தினத்தை தெரிவித்த தியாகராஜர், அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய சொன்னார். அதன்படியே குறித்த தினத்தில் சமாதி ஆனார்.
இனி, தியாகராஜர் ஸ்வாமிகளின் சமாதியைத் தரிசிப்போம்.
சலசலக்கும் காவிரி நதிக்கரையோரத்தில் அமைதியான சூழலில் அமைந்துள்ளது தியாகராஜ ஸ்வாமிகளின் சமாதி.
தெற்குப் பகுதியிலேயே நுழைவாயில் (ஆனாலும் ஜனவரி மாத ஆராதனை உத்ஸவத்தின்போது கிழக்குப் பகுதியில் உள்ள நுழைவாயில் திறக்கப்படுமாம்) உள்ளே நுழைந்தால் ஸ்ரீ வால்மீகி மண்டபம் அளவில் பெரியது. பக்தர்களது நன்கொடைகள் மூலமாக கட்டப்பட்டுள்ளது. இங்கு ராமாயண சம்பங்கள் கதைச் சிற்பமாக காட்சி தருகின்றன. ஸ்ரீதியாகராஜரது கீர்த்தனைகள் ராகம் தாளம் முதலான விவரங்கள் குறிப்பிடப்பட்டு, இந்த மண்டபத்தில் கல்வெட்டு வடிவில் காணப்படுகின்றன.
தியாகராஜரின் சமாதியில் அவருடைய சிலா திருமேனி தவிர, ஸ்ரீ ராமன், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர் ஆகியோரின் ஐம்பொன் விக்கிரங்களும், உள் பிராகாரத்தில் விநாயகர், ஆஞ்சநேயர் ஆகியோரது சந்நிதிகளும் உள்ளன. தியாகராஜரின் சீடர்கள் நால்வர். இங்கு சமாதியாகி உள்ளனர்.அந்த இடத்தில் நான்கு தூண்கள் எழுப்பப்பட்டுள்ளன. கிழக்கு நோக்கிய தியாகராஜரின் சிலா திருமேனி. பின்னால் ஒரு மாடமும் அதில் துளசிச் செடியும் இருந்து வந்ததாம், 1925 ஆம் ஆண்டு வரை இந்த நிலைதான். அப்போது பெங்களூரில் வசித்த நாகரத்தினம்மாள் என்பவரின் கனவில் தியாகராஜர் எழுந்தருளி தனக்கு கோயில் கட்டி, கும்பாபிஷேகம் செய்யும்படி பணித்தாராம். திருவையாறு வருகை தந்தார் நாகரத்தினம்மாள். கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பதால் பிருந்தாவனமாக இருந்து வந்த சமாதியைக் கோயிலாக மாற்ற காஞ்சி மகா பெரியவர், ஸ்வாமி ஹரிதாஸ்கிரி ஆகியோரும் ஆலோசனை சொன்னார்கள்.
அதன்படி, துளசிச்செடி போனது. மாடத்தின் மேல் தியாகராஜர் பூஜித்த ஸ்படிக லிங்கமும். ஸ்படிக மாலையும் இடம்பெற்றது, இப்போது இதற்கும் ஆராதனை உண்டு. கோயில் கட்டியதுடன் இங்கேயே தங்கியும் இருந்தார். நாகரத்தினமாள். பின்னாளில் அவர் இறைவனடி சேர்ந்த பிறகு. தியாகராஜரின் எதிரிலேயே காவிரியின் ஓரத்தில் சமாதி கொண்டார். தினமும் அதிகாலை ஐந்தரை மணிக்கு தியாகராஜருக்கு சுப்ரபாத சேவை நடைபெறும். தியாகராஜர் எப்படி அதிகாலையில் சுப்ரபாதம் பாடி ராமபிரானை எழுப்பினாரோ, அதேபோல் அதே பாடல்களைப் பாடியே திருப்பள்ளி எழுச்சி நடைபெறுகிறது.
அப்போது விளக்கேற்றி வைத்த நைவேத்தியம் காண்பிக்கப்படும். அதன்பின் காலை எட்டு மணிக்கு அபிஷேகம் பால் தேன் போன்ற திரவியங்களைக் கொண்டு தியாகராஜரின் சிலா திருமேனிக்கு அபிஷேகம் நடக்கும். இது முடிந்தும் அன்னத்தால் ஆன ஒரு மகா நைவேத்தியம் (பொங்கல், தயிர்சாதம், சர்க்கரைப் பொங்கல் போன்ற ஒரு பிரசாதம்) செய்யப்படும். வியாழக்கிழமை அன்று ஏராளமான திரவியங்கள் தியாகராஜரின் அபிஷேகத்துக்குப் பயன்படுத்தப்படும் அன்றைய தினங்களில் அபிஷேகம் நைவேத்தியம், தீபாராதனை எல்லாம் முடிவதற்கு நண்பகல், பதினோரு மணி வரை கூட ஆகிவிடுமாம். மூலவருக்கு அபிஷேகம் முடிந்ததும் விநாயகர். ஆஞ்சநேயர் போன்ற சிலா விக்கிரகங்களுக்கு அபிஷேகம் நடக்கும்.
மாலை வேளைகளில் சம்பிரதாயப்படி பஜனை பாடல்கள் பாடி வழிபடுவர். விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், டோலோறசவம், ஊஞ்சல் சேவை போன்றவை நடக்கும் நைவேத்தியத்துக்கு பால், பழம், கல்கண்டு போன்றவை பயன்படுத்தப்படும். மகா நைவேத்திய வேளையின்போது மட்டும்தான் அன்னம். பிற வேளைகளில் அன்ன நைவேத்தியம் இல்லை. தியாகராஜ ஸ்வாமிகள் சமாதி ஆனது தை பஞ்சமி தினம். எனவே ஒவ்வொரு வருடமும் அன்றைய தினத்தில் ஸ்வாமிகளுக்கு ஆராதனை உத்ஸவம் விமரிசையாக நடைபெறும். ஸ்வாமிகள் வசித்த இல்லத்தில் இருந்த உஞ்சவிருத்தி புறப்படும். நாடெங்கிலும் உள்ள ஸ்வாமிகளின் பக்தர்கள் அன்று திருவையாறில் குவிகிறார்கள். இசையால் வாழ்ந்த மகானின் சந்நிதியில், அவரது கீர்த்தனைகளை இசைத்து அவருக்குத் தங்கள் அஞ்சலியைத் தெரிவிக்கின்றனர்.
அன்றைய தினத்தில் மூலவர் ஸ்ரீதியாகராஜருக்கும் உற்சவர் ஸ்ரீ தியாகராஜருக்கும் சமாதிக்கும் ஒரே நேரத்தில் வெவ்வேறு அர்ச்சகர்கள் அபிஷேகங்கள் செய்வார்கள். இங்கே அபிஷேகம் துவங்கும் அதே வேளையில், வால்மீகி மண்டபத்தை ஒட்டியுள்ள முன்பகுதியில் வித்வான்கள் அமர்ந்து பஞ்சரத்ன கீர்த்தனைகளை இசைப்பர். இவர்கள் கீர்த்தனைகளைப் பாடி முடிப்பதற்கு சுமார் ஒரு மணி நேரமாகும். அதற்குள் அபிஷேகமும் பூர்த்தி ஆகிவிடும். பின்னர், மகா கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்படும். இதைத் தொடர்ந்து. அன்னதானம் நடைபெறும். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை பஞ்சமி தினத்தன்று ஸ்வாமிகளின் உத்ஸவம் விக்கிரகம். நான்கு வீதிகளில் புறப்பாடாக எழுந்தருளும். ஸ்ரீராமநவாமி, தியாகராஜரின் ஜயந்தி தினமான சித்திரை மாத பூசம் போன்ற தினங்கள் விசேஷமாக அனுஷ்டிக்கப்படும். தியாகராஜர் ஸ்வாமிகள் தனது கீர்த்தனைகளால் இன்றும் நம்முடன் வாழ்கிறார். தன் சந்நிதிக்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு நல்லாசிகளை வழங்கி வருகிறார். மகான்களுக்கு மரணம் ஏது? இதை மெய்ப்பிப்பது போன்ற ஒரு சம்பவம் கூட சில ஆண்டுகளுக்கு முன் நடந்தததாகச் சொல்வார்கள்.
மறைந்த சூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் ஒருமுறை திருவையாறு சமாதிக்கு வந்து தியாகராஜரைத் தரிசித்தார். மனம் உருகி, கீர்த்தனைகள் பாடித் தன் அஞ்சலியை செலுத்தினார். பிறகு மாலை வேளை என்பதால் அருகே காவிரிக்கரைக்குச் சென்று சந்தியாவந்தனம் செய்து கொண்டிருந்தார். அப்போது ராம.... ராம என்கிற ஜபம் எங்கிருந்தோ ஒலித்தது. சுற்றிலும் பார்த்தார். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒருவரும் இல்லை. எனவே, நாம ஜபம் வரும் திசையை கூர்ந்து செவிமடுத்தார். அந்த ஒலி, சத்குரு தியாகராஜர் சமாதியில் இருந்தே வருகிறது என்பதை அறிந்து மெய் சிலிர்த்தார். இதுபோல் உண்மையான ராமபக்தியுடன் தியாகராஜரின் சமாதியை தரிசிக்கும் ஒவ்வொருவரும் அந்த நாம ஜபம் ஒலிப்பதை கேட்கலாம். சத்குரு ஸ்ரீ தியாகராஜரின் திருவடியைத் தொழுது அவருடைய அருளாசிக்காக இறைஞ்சுவோம்.