பதிவு செய்த நாள்
05
ஏப்
2013
05:04
சீதாதேவி வருத்தத்துடன் தன் மாமியாருடன் பேச ஆரம்பித்தாள். அம்மா! தங்கள் உத்தரவுப்படியே நான் நடந்துகொள்கிறேன். இருப்பினும் நீங்கள் எனக்கு இந்த அளவுக்கு அறிவுரை சொல்லியிருக்க வேண்டாம். ஏனென்றால் என்னை பெற்றவர்கள் சிறு வயதிலிருந்தே கணவனிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். அதை நான் தவறாமல் கடைபிடிக்கிறேன். என்னை மற்ற பெண்களோடு ஒப்பிட்டு பேசுவது மனவருத்தத்தை தருகிறது. நான் பதிவிரதைகளின் பாதையை விட்டு விலகாதவள். ராமன் இல்லாத வாழ்க்கை தந்தி இல்லாத வீணையைப் போன்றது. சக்கரங்களே இல்லாத தேரைப்போன்றது. ஒரு பெண்ணுக்கு ஆயிரம் புத்திரர்கள் இருந்தாலும் கணவனுக்கு நிகரானவர் யாரும் இல்லை. எனது தாய் தந்தையாக இருந்தாலும், நான் பெற்ற குழந்தைகளாக இருந்தாலும் எனக்கு பல வகையிலும் சுகத்தை தேடித்தரலாம். அது பெரிய விஷயமல்ல. அது அவர்களின் கடமையாகும். ஆனால் ஒரு பெண்ணுக்கு ÷க்ஷமத்தை தரக்கூடியவன் கணவன் மட்டுமே. என் தாய் எனக்கு பல பதிவிரதைகளின் கதைகளை சொல்லியிருக்கிறாள். அவர்களைப் போலவே வாழ நான் ஆசைப்படுகிறேன். கனவில் கூட என் கணவரை நான் அவமதித்தது கிடையாது. எனக்கு அவரே தெய்வம், என்றாள்.
கவுசல்யா சீதையை அப்படியே அணைத்துக்கொண்டாள். தன் மருமகளைப் பற்றி பெருமை கொண்டாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது. ராமபிரான் அன்னையின் அருகில் சென்றார். அவளை பிரதட்சணம் செய்தார். காலில் விழுந்து வணங்கி, தாங்கள் எக்காரணம் கொண்டும் வருத்தப்படக்கூடாது. தந்தையைப் பாதுகாக்க வேண்டியது உங்கள் கடமை. அவர் என் உயிரினும் மேலானவர். இந்த 14 ஆண்டுகளும் 14 நொடிகள் போல் கரைந்துபோகும். நீங்கள் கைகேயியிடம் கருத்துவேறுபாடு கொள்ளக்கூடாது. அவள் என்ன சொல்கிறாளோ அதை அப்படியே நிறைவேற்றி வையுங்கள், என்றார். கொடுமைக்கார கைகேயிக்கும் பரிந்துரைத்து பேசும் ராமனைப் பார்த்து, தசரதரின் 350 பத்தினிகளும் கலங்கி அழுதனர். அவர்களின் அருகில் சென்ற ராமன், தக்க மரியாதையுடன் வணக்கம் தெரிவித்தார். கைகூப்பிய நிலையில், அன்னையரே! கலக்கம் எதற்கு? நான் இங்கிருந்த காலத்தில் உங்களிடம் ஏதேனும் காரணத்தால் தவறுதலாக நடந்திருக்கலாம். உங்களுக்கு பிடிக்காத காரியத்தை செய்திருக்கலாம். அதையெல்லாம் மனதில் கொள்ளாதீர்கள். அப்படி ஏதேனும் நான் செய்திருந்தால் என்னை மன்னித்து வழி அனுப்புங்கள். அவ்வாறு செய்யாத பட்சத்தில் என் மனம் சமாதானமடையாது. அனைத்து தாய்மார்களும் என்னை மன்னித்தருள வேண்டும், என்றார்.
இதைக்கேட்டு 350 தாய்மார்களும் அழுதார்கள். ராமா! எங்களால்தான் உனக்கு ஏதேனும் இடர் வந்திருக்கலாம். நீ எவ்வளவு நல்லவன் என்பது எங்களுக்கு தெரியும். உன்னால் நாங்கள் எந்த இடையூறையும் இதுவரை சந்தித்ததில்லை. அப்படியிருக்க மன்னிப்பு என்ற சொல்லுக்கே இடமில்லை, என்றாள் ஒரு தாய். இதைக்கேட்டு எல்லா தேவியரும் வாய்விட்டு கதறினார்கள். இதுவரையில் அந்த அந்தப்புரத்தில் தேவியரின் சிரிப்பொலியும், வீணை ஒலியும், அரம்பை போன்ற பெண்களின் நடனமும், இனிய கானமும், மிருதங்க ஒலியும்தான் கேட்டிருக்கிறது. அயோத்தியின் வரலாற்றிலேயே இன்றுதான் முதன் முதலாக அழுகை சத்தம் கேட்கிறது. இதன்பிறகு ராம, லட்சுமணரும், சீதாதேவியும் தசரதர் அருகே சென்று, அவரை சுற்றி வந்து வணங்கினர். அவரிடம் உத்தரவு பெற்றனர். தசரதர் உணர்வற்று தலையாட்டினார். அவரது ஜீவன் பாதி கரைந்து போயிருந்தது. லட்சுமணன் கவுசல்யாதேவியின் காலில் விழுந்து ஆசி பெற்றான். அவள் அருகில் நின்ற தன் பெற்ற அன்னையான சுமித்ராவின் காலில் தலையை வைத்து பணிவோடு வணங்கி விடைகேட்டான். சுமித்ராதேவி கண்ணீர் வடித்தபடியே தன் மகனை மார்போடு அணைத்து, இந்த உலகத்தை காப்பதற்கு கவுசல்யாதேவி ராமனை பெற்றெடுத்தாள். அந்த ராமனுக்கு சேவை செய்ய நான் உன்னை பெற்றெடுத்தேன்.
நீ காட்டுக்குள் செல்லும்போது பலவித வித்தியாசமான ஒலிகளைக் கேட்பாய். உன் சகோதரனின் அழகை ரசிப்பாய். அவனுடைய நடையைக் கண்டு வியந்துபோவாய். அவர் உன்னோடு பேசிக்கொண்டிருக்கும்போது வார்த்தைகளின் லயத்தில் மயங்கி, சில நேரங்களில் கண்மூடிவிடுவாய். அப்படியெல்லாம் இருக்கக்கூடாது. ஏனெனில் நீ உன்னை மறந்திருக்கும் வேளையில் மிருகங்களோ, காட்டு மனிதர்களோ உன் அண்ணனை தாக்கக்கூடும். அது மட்டுமின்றி, உனக்கு தாய் போன்றவளான அண்ணி சீதாதேவியையும் பாதுகாக்கும் பொறுப்பில் இருக்கிறாய். இன்றுமுதல் உனக்கு ஊண் இல்லை, உறக்கம் இல்லை. அவர்கள் இருவரையும் பாதுகாத்து அழைத்துச்சென்று, மீண்டும் என்னிடம் ஒப்படைக்க வேண்டியது உன்னுடைய பணி, என்றாள். அந்நேரத்தில் லட்சுமணன் தன் தாயிடம் அண்ணி சீதாதேவி மீது தான் வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் எடுத்துக்கூறினான். அன்புத்தாயே! என் அண்ணியாரை உங்களைவிட உயர்வான இடத்தில் வைத்திருக்கிறேன். அவரது முகத்தை இன்றுவரை நான் பார்த்தது இல்லை. எனக்கு தெரிந்ததெல்லாம் அவரது திருவடிகள்தான். திருமணத்தன்று ராமபிரானுக்கு மாலையிட சீதாதேவி வெட்கத்துடன் நின்றார்கள்.
நம் அண்ணன் உயரமானவர். தலை நிமிர்ந்து மாலை போட அண்ணிக்கு தயக்கமாக இருந்தது. அவர்கள் அப்படி கஷ்டப்படக்கூடாது என்பதற்காக, அந்நேரத்தில் நான் அண்ணனின் காலில் போய் விழுந்தேன். அண்ணன் குனிந்து என்னை ஆசீர்வதித்தார். அந்நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு சீதாதேவி அண்ணனின் கழுத்தில் மாலையிட்டுவிட்டார்கள். அந்த அளவுக்கு நான் அவர்மீது மரியாதை வைத்திருக்கிறேன். அவரையும், என் உடன்பிறந்த சகோதரனையும் காப்பதைத்தவிர எனக்கு எந்தப்பணியும் இல்லை. தாங்கள் கவலைப்படாமல் இருங்கள். அவர்களுக்கு ஏதேனும் ஆபத்து வந்தால் என் உயிரைக் கொடுத்தாவது காப்பேன், என்றான். சுமித்ராதேவி பெருமை பொங்க நின்றாள். இதற்குள் அமைச்சர் சுமந்திரர் தேருடன் வந்து நின்றார். ராமபிரானே! ரதம் தயாராகிவிட்டது. தாங்கள் எங்கு போகச் சொல்கிறீர்களோ அங்கே விரைவில் கொண்டு சேர்ப்பேன். உங்கள் வனவாசத்தின் முதல்நாள் இன்றுதான் துவங்குகிறது, என்றார். இதற்குள் சீதாபிராட்டி தன்னை ஆபரணங்களால் அலங்கரித்துக் கொண்டாள். சூரியனைப்போல மின்னல் அடித்த தேரில் அவளது மெல்லடிகள் தான் முதன்முதலாக ஏறின. தசரதரால் அவளுக்கு கொடுக்கப்பட்ட அனைத்து நகைகளும் உடைகளும் தேரில் ஏற்றப்பட்டன. மண்வெட்டிகளும், கூடைகளும் ரதத்தில் வைக்கப்பட்டன. ராம, லட்சுமணரும் தேரில் ஏறினர். அயோத்தி நகரமே அழுதது. யானைகள் மதம் பிடித்து பிளிறின. தங்கள் சங்கிலிக்கட்டை உருவ முயன்றன. குதிரைகள் லாயத்திற்குள் அங்குமிங்குமாக பாய்ந்தன. தேர் புறப்பட்டது. அயோத்தி மக்கள் அனைவரும் சின்னஞ்சிறுவர்களும் கூட தேரின் பின்னால் ஓடினர்.