பதிவு செய்த நாள்
08
ஜூன்
2013
03:06
துரியோதனனின் வார்த்தையால் மகிழ்ச்சியடைந்த கர்ணன், அன்பு நண்பனே! நான் இருக்கும்போது உன்னை அர்ஜுனன் எதிர்த்துவிட முடியுமா? இந்த கண்ணன் அர்ஜுனனுக்கு சாரதியாக இருந்தாலும்கூட எனது வில்லாற்றலின் முன் அவனால் எதுவும் செய்யமுடியாது. நீ கவலைப்படாதே. மனிதர்கள் மட்டுமல்ல; தேவர்களே என்னோடு போரிட வந்தாலும் அவர்களை என்னுடைய ஒரே பாணத்தால் அழித்துவிடுவேன். அது மட்டுமின்றி எனது நாகாஸ்திரத்தின் முன்னால் யாராலும் தப்ப முடியாது. அதற்கு அர்ஜுனனும் விதிவிலக்கல்ல, என மிகுந்த ஆணவத்துடன் சொன்னான். இதுகேட்ட பீஷ்மருக்கு கடும் கோபம் உண்டாயிற்று.அவர் கர்ணனிடம், கர்ணா! அர்ஜுனனைப் பற்றி மிகவும் குறைத்து மதிப்பிடுகிறாய். அவன் தேவலோகத்திற்கே சென்று இந்திரனின் அரசாட்சியை காப்பாற்றியவன். அர்ஜுனனின் முன்னால் நீ எந்த அஸ்திரத்தை வீசினாலும் அதனால் பயன் ஏதும் இருக்காது என்பதை புரிந்துகொள், என்றார்.
தாத்தா பீஷ்மருக்கு எப்போதுமே பாண்டவர்கள் மீதுதான் கரிசனை. நீங்கள் துரியோதனனின் அன்னத்தை சாப்பிடுகிறீர்கள் என்பதை மறந்துவிட்டீர்கள். பகைவர்களின் வீரத்தைப் பற்றியே புகழ்ந்து பேசுகிறீர்கள். இவ்வுலகம் மட்டுமல்ல, எல்லா உலகத்தவர்களும் ஒருசேர திரண்டு வந்தாலும் சரி. செஞ்சோற்றுக் கடன் தீர்க்க நான் என் நண்பனுக்காக போரிடுவேன். அந்த சிவபெருமானே எனது அம்புக்கு பயப்படுவான், என கர்ண கொடூரமான வார்த்தைகளை பேசினான். பெரியவர்கள் புத்திமதி சொன்னால் சிறியவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு சிறியவர்கள் ஏற்க மறுத்தால் பெரியவர்கள் ஒதுங்கிக் கொள்ள வேண்டும். பட்டால்தான் சிலருக்கு புத்தி வரும். இந்த தத்துவத்தின் அடிப்படையில் பீஷ்மர் மேற்கொண்டு பேசாமல் சபையை விட்டு எழுந்துசென்றுவிட்டார். இந்த சமயத்தில் சபையிலிருந்து புறப்பட்டு சென்ற கிருஷ்ணர் விதுரரின் மாளிகையிலேயே தங்கினார். அவர் விதுரரிடம், விதுரரே! இந்த உலகத்திலேயே இரண்டு சிறந்த வில்கள் உள்ளன. அதில் ஒன்று உமது கையில் இருந்தது. அதை நீர் முறித்துப் போடும்படியான நிலைமை உண்டாகிவிட்டது. அந்த அளவுக்கு உங்களுக்கு கோபம் ஏற் படுவதற் கான காரணத்தை உங்களால் கூறமுடியுமா? என கேட்டார்.
விதுரர் அதற்கு, எம்பெருமானே! ஒருவனுக்கு அழிவு வருமானால் அவன் யார் நல்லதைச் சொன்னாலும் கேட்கமாட்டான். தனக்கும் பிறருக்கும் நன்மை விளையும் காரியங்களை சிந்திக்காதவனும், அமைச்சர்களின் வார்த்தையை கேட்காதவனும், நாக்கை அடக்கி வைக்காதவனும் நிச்சயமாக அழிந்து போவார்கள். மனிதர்களுக்கு பொருள் வந்துவிட்டால் அந்தப் பொருள் இறைவனால் தரப்பட்டது என்பதை மறந்துபோகிறார்கள். தாங்களே முயற்சி எடுத்து சம்பாதித்தது என மார்தட்டிக் கொள்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் உறவினர்களையும் நண்பர்களையும் மதிக்கமாட்டார்கள். துரியோதனனும் இப்போது பணக்காரர். பணம் அவன் கண்களை மறைக்கிறது. இப்படிப்பட்ட சூழ் நிலையில் கடவுளான தாங்களே நேரில் வந்து அவனுக்கு நல்ல உபதேசம் செய்தீர்கள். பணக் காரன் கடவுளையும் மதிக்கமாட்டான். அதுதான் இப்போது நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் உங்கள் முன்னிலையிலேயே என்னை நிந்தித்தும் பேசினான். குறிப்பாக எனது தாயைப்பழித்துப் பேசினான். எனது பிறப்பின்மீது குறை கண்டான், இந்த சூழ்நிலையில் அவனுக்கு உதவ இருந்த வில்லை முறித்துவிட்டேன். இதில் தவறில்லை என்றே நினைக்கிறேன். நீங்கள்தான் எனக்கு தக்கவழி காட்ட வேண்டும், எனச்சொல்லி அவரது பாதங்களில் பணிந்தான்.
கிருஷ்ணர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். விதுரரே! கவலைப்பட வேண்டாம். கவுரவர்களிடம் இப்போது நிறைய செல்வம் இருக்கிறது. படைபலம் இருக்கிறது. ஆயுதங்கள் இருக்கின்றன. ஒரு யாகசாலையில் ஏராளமான விறகுகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கலாம். நெய்யும் குடம் குடமாக இருக்கிறது. நெருப்பும் பற்ற வைத்தாயிற்று. ஆனால் காற்று வீசினால்தான் நெருப்பு தொடர்ந்து எரியும். துரியோதனனிடம் எல்லாம் இருக்கிறது. ஆனால் அவனுக்கு கடவுளின் அருள் இல்லை. அவன் அழியப்போவது நிச்சயமாகிவிட்டது. அவன் சொன்ன வார்த்தைகளை நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டாம். அமைதியாக இருங்கள், என சொல்லிவிட்டு குந்திதேவியின் அரண்மனைக்கு புறப்பட்டார். தனது மருமகனின் வருகை கண்டு குந்திதேவி மகிழ்ச்சியடைந்தாள். கண்ணபரமாத்மா அவளது சொந்த அண்ணன் மகன். கிருஷ்ணரின் தந்தை வசுதேவரின் உடன்பிறந்த தங்கையே குந்திதேவி. அந்த வகையில் தனது பக்தர்களான மைத்துனர்களுக்கு உதவிசெய்யவே அவரது அவதாரமே ஏற்பட்டது. தர்மத்தைக் காக்கவே கிருஷ்ணர் இந்த உலகிற்கு வந்தார்.
குந்திதேவி கண்ணிடம், கண்ணா! நீ என் வீட்டுக்கு வந்தது நான் செய்த தவத்தின் பயனால் என உணருகிறேன். உன்னை அடிக்கடி பார்க்க வேண்டுமென விரும்புகிறேன். நீ இன்று வந்ததுபோல் என்றும் என் இல்லத்திற்கு வரவேண்டும் என மகிழ்ச்சி ததும்ப கூறினாள். அந்த மாயக்கண்ணன் தனது இல்லத்திற்கு வந்திருக்கிறான் என்றால், காரணம் இல்லாமல் இருக்காது என்பது குந்திதேவிக்கு தெரியும். அவன் வந்த காரணத்தையும் கேட்டாள். மாயக்கண்ணன் அவளிடம், அத்தை! துரியோதனனின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை அறிவதற்காகவே நான் அஸ்தினாபுரம் வந்தேன். நான் எவ்வளவோ புத்திமதி சொல்லியும் துரியோதனன் ஏற்க மறுத்துவிட்டான். எனவே பாண்டவர்களும் கவுரவர்களும் போர் செய்வது என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது, என்றார். குந்திதேவி மனம் வருந்தி, கண்ணா, இந்த யுத்தத்தில் யார் ஜெயிப்பார்களோ, யார் இறப்பார் களோ என கவலையாக இருக்கிறது. வினையை நிர்ணயிப்பவன் நீ. நீதான் இதற்குரிய விடையை எனக்குச் சொல்லவேண்டும், என்றாள். கிருஷ்ணர் சிரித்தார். அத்தை! இப்போது உனது பிள்ளைகளின் விதியை நிர்ணயிப்பது உனது கையில்தான் இருக்கிறது. நான் சொன்னதை நீ செய்வாயா? என கேட்டார். குந்திதேவி ஏதும் புரியாமல் அவரது முகத்தை நோக்கினாள்.