பதிவு செய்த நாள்
14
மார்
2011
03:03
மதுரை மன்னன் குலபூஷணனின் காலத்தில் மேலும் ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார் சொக்கநாதர்.பூஷணன் மதுரையில் மன்னனாக இருந்த வேளையில், காடுவெட்டி சோழன் என்பவன் சோழநாட்டின் மன்னனாக இருந்தான். அப்போது சோழநாடு காஞ்சிபுரம் வரை விரிவடைந்து இருந்தது. தலைநகரமும் காஞ்சியாகவே இருந்தது. காடுகளை வெட்டி மக்கள் வாழ சீர்திருத்தம் செய்து கொடுத்தவன் என்பதால், இந்த மன்னன் காடுவெட்டி என மக்களால் சிறப்பு பெயரிட்டு அழைக்கப்பட்டான். இவன் சிறந்த சிவபக்தன். காஞ்சிபுரம் வரும் சிவனடியார்களை நேரில் சென்று கவுரவிப்பான். நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை எந்நேரமும் இவனது வாய் ஓதியபடியே இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோயிலிலுள்ள இறைவன் மீது ஈர்ப்பு இருக்கும். வாழ்க்கையில் ஒருமுறையாவது காசிக்குப் போய் விஸ்வநாதரை வணங்கி வந்து விடமுடியாதா என ஒருவர் நினைப்பார். இன்னொருவருக்கு காளஹஸ்தி சென்று காளத்தி நாதரை வணங்கி வந்து விடமுடியாதா என்ற எண்ணமிருக்கும். சிதம்பரத்துக்குப் போய் நடராஜரைத் தரிசித்து விட முடியாதா என்று ஒருவர் நினைப்பார். இவர்களைப் போல, மன்னன் காடுவெட்டிக்கு மதுரைக்குச் சென்று சுந்தரேஸ்வரரை வழிபட ஆசை. ஆனால், அவன் மதுரைக்குள் கால் வைத்தால் என்னாகும் என்பது அவனுக்கே தெரியும். அக்காலத்தில், பிறநாட்டவர் மற்ற நாடுகளுக்குள் நட்பு ரீதியாக அன்றி எக்காரணம் கொண்டும் உள்ளே வர முடியாது.
பாண்டியநாட்டுக்கும், சோழநாட்டுக்கும் அப்போது பகையாக இருந்ததால், காடுவெட்டிக்கு மதுரை வர அனுமதி கிடைக்காது. எனவே, சுந்தரேஸ்வரரைத் தரிசிப்பது குதிரைக் கொம்பே என நினைத்தான் காடுவெட்டி.தன் மனக்குறையை அவன் சுந்தரேஸ்வரரை மனதால் நினைத்து தினமும் சொல்லி பிரார்த்தித்தான்.எம்பெருமானே! எந்தப் பிரச்னையும் வராமல், இருநாட்டும் உறவும் கெடாமல் நீயே என்னை மதுரைக்கு அழைத்துச் சென்று மீண்டும் காஞ்சிபுரம் கொண்டு சேர்க்க வேண்டும், என்று கண்ணீருடன் வேண்டிக் கொண்டான். நாட்கள் பல ஓடின. ஒருநாள் இரவில் அவன் கண்ணயர்ந்த வேளையில், கனவொன்று வந்தது. கனவில் சிவபெருமான் தோன்றினார். மன்னா! கவலைப்படாதே. நானே உன் மதுரை தரிசனத்துக்கு ஏற்பாடு செய்கிறேன். என் சன்னதிக்கு வந்து வணங்கும் காலம் வந்துவிட்டது. நீ மாறுவேடம் அணிந்து மதுரை நோக்கிச்செல், மற்றது தானாக நடக்கும், என்றார். காடுவெட்டி திடுக்கிட்டு எழுந்தான். அவன் மனம் மகிழ்ச்சியால் துள்ளியது. தலைமை அமைச்சரிடம் மட்டும் கனவு விபரத்தைத் தெரிவித்து விட்டு, சிவனடியார் போல வேடமணிந்தான். உடலைத் திருநீறும், ருத்ராட்சங்களும் அலங்கரித்தன. காஞ்சிபுரத்தில் இருந்து நடந்தே மதுரை நோக்கிச் சென்றான். அவனது கால்களில் பாதுகை கூட இல்லை. சுட்டெரிக்கும் வெயில் கால்களை பதம் பார்த்தாலும், சிவாயநம என்னும் மந்திரம் மனதைக் குளிரச் செய்ய வேகமாக நடந்தான். சில நாட்களில் மதுரை நகரை அடைந்துவிட்டான். மதுரையின் வடபகுதிக்கு வந்தவன், அங்கே குறுக்கிட்ட வைகையைக் கண்டான். ஆற்றில் பெருவெள்ளம் ஓடிக்கொண்டிருந்தது.
மரங்களையும், செடிகொடிகளையும் அடித்துக்கொண்டு வெள்ளம் பாய்ந்தது. எவ்வளவு பெரிய பலசாலியும் அதில் நீந்த முடியாதென்ற நிலை. சுந்தரேசா! இதென்ன சோதனை! ஊரின் எல்லைக்குள் வந்துவிட்டவன், மறுகரைக்கு வந்துவிட்டால் உன்னைத் தரிசித்து விடுவேன். இவ்வளவு தூரம் வந்தும் உன் தரிசனம் கிடைக்காது போலிருக்கிறதே! என் பிரார்த்தனை பலனின்றி போய் விடுமோ, என்று புலம்பினான். வைகையின் வெள்ளத்தைப் போல், அவனது கண்களில் தாரை தாரையாய் நீர் பெருகியது. அப்போது ஒரு குரல் கேட்டது. அடியவரே! ஏன் இங்கே நின்று கொண் டிருக்கிறீர்கள். ஆற்றைக் கடக்கும் வழி தேடுகிறீர்களோ? என்றது அக்குரல். குரல் வந்த திசையைப் பார்த்தான் காடுவெட்டி. அங்கே, ஒரு சித்தர் சிவப்பழமாக நின்று கொண்டிருந்தார். அவரது பாதங்களில் விழுந்த காடுவெட்டி, தனக்கு வெளியூர் என்றும், சுந்தரேஸ்வரரைத் தரிசிக்க வந்ததாகவும் சொல்லி, அந்த சொக்கநாதன் இப்படி என்னை சோதித்து விட்டானே, என்றான். சித்தர் அவனுக்கு ஆறுதல் சொன்னார். மகனே! கவலை வேண்டாம். இந்த ஆற்றுநீரை வற்றச் செய்வது என் பணி, என்று சொல்லி, வைகையை நோக்கி கையை ஆட்டினார். என்ன ஆச்சரியம்! ஆற்றில் தண்ணீர் வற்றிவிட்டது. சாதாரணமாக எல்லாரும் இறங்கி நடக்கலாம் என்ற நிலை ஏற்பட்டது. காடுவெட்டி சித்தருடன் முட்டளவு தண்ணீரில் இறங்கி, வைகையின் புனித நீரை தலையில் தெளித்துக் கொண்டு நடந்தான். ஒருவழியாக அவர்கள் தென்கரை வந்து சேர்ந்தனர். அப்போது இரவாகி விட்டிருந்தது. அவர்கள் கோயிலுக்கு வந்து சேர்ந்தனர். நடையை அடைத்திருந்தார்கள். காலை வரை காத்திருந்தால் யார் கண்ணிலும் பட்டுவிடக்கூடாதே என்று காடுவெட்டிக்குப் பயம்.
சித்தர் அவனது மனநிலையைப் புரிந்துகொண்டார். கவலைப்படாதே! நான் எப்படியும் அடைத்த கோயிலுக்குள் உன்னைக் கூட்டிச் சென்று விடுவேன், என்றவர், கோயிலின் வடக்கு வாசலுக்கு அவனை அழைத்துச் சென்றார். அவர்கள் கதவை நெருங்கவும், கதவை மூடி பொருத்தியிருந்த மீன் முத்திரை தானாகக் கழன்று விழுந்தது. கதவுகளும் தானாகத் திறந்து மூடிக் கொண்டன. கோயிலுக்குள் சென்ற காடுவெட்டியை சித்தராக வந்த சுந்தரேஸ்வரர், தனது சன்னதிக்குள் அழைத்துச் சென்றார். சன்னதி கதவுகளும் தானாகத் திறந்தன. இரவில் ஏற்றிய ஒளிவெள்ளத்தில், எம்பெருமான் ஜோதியாய் ஜொலித்தார். மன்னன் அடைந்த பரவசத்துக்கு அளவே இல்லை. பலவாறாக ஸ்தோத்திரங்கள் சொல்லி வணங்கினான். பாடல்களைப் பாடி மகிழ்ந்தான். சொக்கநாதரைப் பிரிய மனமின்றி, கருவறை வாசலி லேயே அமர்ந்து விட்டான். சித்தர் அவனை அழைத்தார்.மகனே! சீக்கிரம் கிளம்பு. காவலர்கள் கண்ணில்படும் முன்னால் சென்றுவிடுவோம், என்றார். காடுவெட்டியோ சுந்தரேஸ்வரரைப் பிரிய மனமின்றி தன்னிலை மறந்து அவரது பேரருள் வெள்ளத்தைப் பருகிக் கொண்டிருந்தான். ஒரு வழியாக அவனை இழுத்துக்கொண்டு வாசலுக்கு வந்த சித்தரான சிவன், ஆலயக்கதவில் கழன்று விழுந்த மீன் சின்னத்துக்குப் பதிலாக ரிஷப சின்னத்தை வைத்து மூடச் செய்தார். மன்னனுடன் வைகை வடகரை வரை வந்து வழியனுப்பி விட்டார். மன்னன் நன்றி சொல்லி கிளம்பினான். மறுநாள் கோயிலில் ஒரே களேபரமாக இருந்தது.
மீன் சின்னத்துக்குப் பதிலாக ரிஷப சின்னம் வந்தது எப்படி என்று ஒரே குழப்பம். தகவலறிந்த மன்னன் குலபூஷணன் வேகமாக வந்து கதவில் ரிஷப முத்திரை பதித்திருப்பதைக் கண்டான். சுந்தரேசா! அங்கயற்கண் எம்பிராட்டி அருளும் இந்நகருக்கு மீன் முத்திரை தானே பொருத்தமானது! இதை ரிஷபமாக்கியது யார்? ரிஷப முத்திரை உனக்குரியதே ஆயினும், இவ்வாறு நடந்திருப்பது நன்மைக்கா, கெடுதலுக்கா? இதற்குரிய விடையை நீ தான் சொல்ல வேண்டும், என்று கலக்கத்துடன் வேண்டினான். பின்னர் அரண்மனை திரும்பி விட்டான். அன்றிரவில் கனவில் தோன்றிய சிவன்,குலபூஷணா! காஞ்சி மன்னன் காடுவெட்டி சோழன் என்னிடம் மிகுந்த பக்தி கொண்டவன். உனது பக்திக்கு அவனது பக்தி எவ்வகையிலும் குறைந்ததல்ல. அவன் என்னை தரிசிக்க ஆசை கொண்டான். ஆனால், மன்னன் என்ற ரீதியில் இங்கே வந்தால் அவனுக்கு மதுரைக்குள் நுழைய அனுமதி கிடைக்காதே! போரல்லவா மூண்டுவிடும். எனவே சிவனடியார் போல் வேடமிட்டு இங்கு வந்தான். அவன் வைகையின் வடக்குகரையில் நின்று வெள்ளத்தில் இறங்கி கோயிலுக்கு வர முடியாமல் தவித்தான். நானே ஆற்றுநீரை வற்றச்செய்து இங்கே அழைத்து வந்தேன். அவன் என்னைத் தரிசித்து திரும்பும்போது, ரிஷப முத்திரையை நானே பதித்தேன், என்றார். குலபூஷணன் திடுக்கிட்டு விழித்தான். இறைவன் எல்லோருக்கும் பொதுவானவன் என்ற உண்மையை உணர்ந்தான். நடந்ததை அனைவரிடமும் எடுத்துரைத்தான். இதன்பிறகு ஆட்சியை தன் மகன் ராஜேந்திர பாண்டியனிடம் ஒப்படைத்துவிட்டு, சிவசிந்தனையிலேயே முழுவதுமாக ஈடுபட்டான். சிறிது காலம் சிவத் தொண்டு செய்து சிவனடி எய்தினான்.