பதிவு செய்த நாள்
09
நவ
2013
04:11
சாயி ஸத் சரித்திர பாராயணம் என்றால் சாயிநாதரை ஆராதனை செய்வதாகும். சாயி நாதரின் மறு நாமமாக ஸத் சரித்திரத்தை நினைத்து, சாயி பாபாவும் அவரது சரித்திரமும் (இரண்டும்) வேறு வேறு அல்ல என்பதை தெளிவாக அறிய வேண்டும். எங்கெல்லாம் சாயி ஸத் சரித்திர பாராயணம் நடைபெறுகிறதோ, அங்கெல்லாம் சீரடி சாயிநாதர், பவித்ரமான கோதாவரி, துவாரகமாயி, குருவிருக்குமிடம், துனி ஆகியவை அகண்டமான கீர்த்தி அளிக்கும் நோக்கில் நமக்கு பிரத்யட்சமாக தோன்றும்.
நாஹம் வஸாமி வைகுண்டே ந யோகி ஹ்ருதயே ரவெள
மத்பக்தா யத்ர காயந்தி தத்ர திஷ்டாமி நாரத
எங்கெல்லாம் பக்தியோடு தன் நாமஸ்மரனை, பஜனை, பாராயணம் நடைபெறுகிறதோ, அங்கு பக்தர்களை ஆசீர்வதித்து, அவர்களுக்கு மேலும் நன்மை தருவதற்கு பகவான் அங்கு கட்டாயம் இருப்பார். அதனால், வியாழக்கிழமைகளில் விரத பூஜையும் தொடர்ந்து 67 நாட்கள் (9 வாரங்கள்) தினமும் ஒரு அத்தியாயம் என்ற கணக்கில் - சாயி ஸத் சரித்திரத்தை பக்தி விசுவாசத்துடன் பாராயணம் செய்து சாயிநாதரின் ஆசீர்வாதத்தையும் அனுக்கிரஹத்தையும் பெறலாம்.
1910 ஆம் ஆண்டு, முதன் முதலில் ஹேமந்த்பந்த் சீரடியில் காலடி வைத்தபோது, ஊர் எல்லையில் கோதுமை மாவை தூவிக் கொண்டிருந்த பாபாவை கண்டார். காரணம் கேட்டபோது, காலரா வியாதி ஊருக்குள் பரவியுள்ளது. அதனால் மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் அவர் அவ்வாறு செய்வதாகக் கூறப்பட்டது. அந்தக் காட்சியைக் கண்ணார கண்ட அவருக்கு, அவரைப் பற்றிய சரித்திரத்தை எழுத ஆர்வம் வந்தது. இதைப் படிப்பதால், வரும் சந்ததியர்கள் பயன்பெறுவார்கள் என்பதே அவரது எண்ணமாக இருந்தது. இதற்கு, பாபாவிடம் அனுமதி பெறுவதற்காக சியாமா என்ற பக்தரை அணுகினார். அவர் இதை பாபாவிடம் தெரிவித்தபோது பாபா, ஹேமந்த்பந்த் தனது அஹங்காரத்தைக் களைந்து என் பாதங்களில் சரணடையட்டும். அப்போது நானே அவருள் புகுந்து என் வாழ்க்கை நிகழ்ச்சிகளை எழுதுகிறேன். வாழ்க்கையில் இவ்வாறு அஹங்காரத்தை விட்டவனுக்கே நாம் மிகவும் உதவி புரிகிறேன். அவனுக்கு என்னுடைய வாழ்க்கை நிகழ்ச்சியை சொல்வது மட்டுமல்ல. நான் அவருடைய வீட்டில் ஒல்லும் வகையெல்லாம் ஓவாதே பணிபுரிகிறேன் என்று சுயமாகவே வாக்களித்தார். பாபா சொன்னதைப் போலவே ஹேமந்த்பந்த் ஸத்சரித்திரத்தை எழுதி முடித்தார். பாபாவின் வாக்கிலிருந்து வந்த அப்படிப்பட்ட இந்த ஸத்சரித்திரத்தைப் பாராயணம் செய்ய கிடைத்தால், அது நாம் செய்த பாக்கியமே. அப்போதும், இப்போதும் சாயி சத் சரித்திர பாராயணம், பூஜை, பஜனை செய்ததன் மூலம் லட்சக்கணக்கானோர் அடைந்த பலன்கள் கணக்கிலடங்கா.
அஜ்ஞச் சாச் ரத்ததாநச் ச ஸம்ச யாத்மா விநச் யதி
நாயம் லோகோ(அ)ஸ்தி ந பரோ ந ஸுகம் ஸம்ச் யாத் மந:
என்கிறது பகவத்கீதை 4ஆவது அத்தியாயம். 40 ஆவது ஸ்லோகம். அதாவது ஞானத்தின் மீது அன்பு, ஆர்வம் இல்லாமல் சந்தேகத்துடன் இருப்பவர்களுக்கு இவ்வுலகத்திலோ, பரலோகத்திலோ சுகம் இருக்காது.
ஆகவே, எவ்வித சந்தேகமும் இல்லாமல் கீழ் குறிப்பிட்டுள்ளவற்றை படித்து சாயிநாதனின் மஹிமையை தெரிந்து கொண்டு நம்பிக்கையோடும், விசுவாசத்தோடும் பூஜையில் கலந்து கொண்டு, சாயிநாதரின் அனுக்கிரகத்தையும் ஆசீர்வாதத்தையும் பெறலாம்.
ஓம் சாயி ராம்
1. பாபாவின் எங்கும் நிறை தன்மையும், கருணையும்
1910ம் ஆண்டு நிகழ்ந்த சம்பவம் இது. அன்றைய தினம் தீபாவளித் திருநாள். துனிக்கருகில் அமர்ந்திருந்த பாபா, திடீரென்று தன் கரத்தை துனியில் நுழைத்தார்.
கரம் உடனே கருகி வெந்துவிட்டது. அப்போது அருகில் இருந்த வேலையாட்கள் மாதவ் மற்றும் சியாமா பாபாவின், கரங்களை வேகமாக துனியிலிருந்து இழுத்து தேவா எதற்காக இங்ஙனம் செய்தீர் என்று கேட்டனர். அதற்கு பாபா, தொலை தூரத்தில் உள்ள ஓர் இடத்தில் ஒரு பெண் தன் குழந்தை ஊது உலைகளத்தில் விழுந்ததை பார்த்தவுடன் பாபா என்று என்னை நோக்கி கதறினாள். அந்த கதறலைக் கேட்டு, என் கரத்தை நீட்டி குழந்தையைக் காப்பாற்றினேன். என் கரம் வெந்தாலும், ஒரு குழந்தை காக்கப்பட்டதை எண்ணி மகிழ்வடைகிறேன் என்றார். சில நாட்களுக்குப் பிறகு, அத்தம்பதியினர் சீரடி வந்து பாபாவிற்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். இதன் மூலம் பாபாவின் எங்கும் நிறை தன்மையையும் கருணையையும் உணரலாம்.
2. பீமாஜி பாட்டீல் க்ஷய ரோகம்
அந்த நாட்களில் (1909ம் ஆண்டில்) க்ஷயரோகம், பிளேக் போன்ற வியாதிகள் ஆபத்தானவை. அந்நாட்களில் இவைகளுக்கு எந்த வைத்தியமும் கிடையாது.
நாராயணகாவ்ங் என்னுமிடத்தைச் சேர்ந்த பீமாஜி பாட்டீல் தீவிரமான க்ஷயரோகத்தால் துன்பப்பட்டார். எந்த சிகிச்சையும் பலனளிக்கவில்லை. மரணம் நெருங்கிய நாட்களில் நானாஸாஹேப் பீமாஜிபாட்டீலுடன் சீரடி சென்று பாபாவை தரிசித்தார். அவருக்குள்ள தீவிரமான க்ஷய ரோகம் குறித்து பாபாவிடம் விவரித்து அவரை ரட்சிக்குமாறு பிரார்த்தித்தார். முந்தைய தீய கருமங்களாலேயே இவ்வியாதி என்று பாபா சுட்டிக் காண்பித்து, முதலில் இதில் தலையிட தீர்மானம் இல்லாதவராய் இருந்தார். இருந்தும் பீமாஜி பாட்டீலின் பிரார்த்தனையைக் கேட்டு பாபாவின் உள்ளம் உருகியது. இம்மசூதியில் கால் வைத்த உடனே அவன் மகிழ்ச்சியின் பாதையில் செல்கிறான். இங்கே உள்ள பக்கிரி மிகவும் அன்பானவர். அவர் இவ்வியாதியைக் குணப்படுத்துவார் என்று கூறினார்.
அன்று இரவு, பீமாஜி பாட்டீலுக்கு பயங்கரமான கனவு தோன்றியது. இக்கனவின் மூலம் அவரின் பூர்வஜென்ம பாவங்களுக்கு பரிகாரங்கள் செய்தார் பாபா. கனவில் அவர் பட்ட கஷ்டத்துடன் அவரின் சிகிச்சை முடிவடைந்தது. அதற்கு நன்றி தெரிவிக்குமாறு பாட்டீல் பிரதி ஆண்டும் தனது கிராமத்தில் சாயி ஸத்ய விரதம் மேற்கொண்டு பாபாவிற்கு நன்றி செலுத்தி வந்தார். நாமும் சாயிநாதரின் கருணையை நினைவு கூர்ந்து, இச்சரித்திர பாராயணமும், ஸப்த ஸப்தாஹா விரதத்தையும் மேற்கொண்டு, சாயிநாதரின் ஆசீர்வாதத்தையும் அனுக்கிரஹத்தையும் பெறுவோம்.
3. உதியின் மகிமை
பாபாவின் உதியை நாமஸ்மரணை செய்து கொண்டு தன் நெற்றியிலிட்டுக் கொண்டவர்களுக்கு ஆரோக்கியமும், ஐஸ்வர்யமும், கவலைகளிலிருந்து விடுதலையும் கிடைக்கும். உதாரணம், நாசிக்கை சேர்ந்த நாராயண் மோதிரம் ஜானியின் நண்பருக்கு தேள் கடித்ததால் தீவிரமான வலி ஏற்பட்டது. பாபாவின் உதியை வைக்க அவர் தேடிய போது உதி கிடைக்கவில்லை. அப்போது பாபாவை பிரார்த்தனை செய்து அவர் முன் புகைந்து கொண்டிருக்கும் ஊதுபத்தியின் சாம்பலிலிருந்து ஒரு சிட்டிகை எடுத்து, அதை உதியாக நினைத்து பாபாவை மனதில் தியானித்து அதை தேள் கடித்த இடத்தில் தடவினார். விரைவில் வலி மறைந்தது.
4. பிளேக் வியாதி, உதி வைத்தியம்
ஒரு முறை மும்பையிலுள்ள தானே ரயில் நிலையத்தில் தனது மனைவியுடன் ரயில் வண்டியை எதிர்பார்த்து காத்திருந்தார் சாயி பக்தரான நானா சாஹேப். அப்போது, அவரை அடையாளம் தெரிந்து கொண்ட மற்றொரு பக்தர் அவரிடம் வந்து, நல்ல வேளையாக நான் உங்களைச் சந்தித்தேன். என் நண்பரின் மகள் பிளேக் வியாதியினால் அவதிப்படுகிறாள். பாபாவின் உதி கிடைத்தால் சிறப்பாயிருக்கும். சிறிது உதி கிடைத்தால் அந்த குழந்தைக்கு இட்டு விடுவேன் தருகிறீர்களா என்று கேட்டார். அந்தோ பரிதாபம். அந்த சமயம் பார்த்து அவரிடம் உதி இல்லை. ஒரு கணம் பாபாவை நினைத்தார். தரையிலிருந்த மண்ணை எடுத்து பாபாவை தியானம் செய்து, அவரது மனைவியின் நெற்றியிலிட்டார். போ. குழந்தைக்கு உடம்பு சரியாகியிருக்கும் என்று அவரை வழியனுப்பி வைத்தார்.
நம்பிக்கையுடன் அவர் தனது நண்பனின் வீட்டுக்குச் சென்றபோது, அந்த குழந்தைக்கு உடம்பு பரிபூரண குணமாகியிருந்தது. என்னே பாபாவின் கருணை!
நாமும் சாயி நாதரின் பாதம் பணிந்து, அவரது அனுக்ரஹத்தை பெற்று நல்வழி அடைய முயலுவோமாக. அனுதினமும் சாயி நாமம் ஜெபித்து சரணடைவதுடன் சாயி சன்னதி சென்று நம்மால் இயன்ற பணிகளை (உதவிகளை) செய்வோமாக.
சாயி சன்னதியில் கிடைக்கும் உதி என்ற விபூதி மருத்துவ குணமுடையது. ஒரு சிறிய பாக்கெட்டை எப்போதும் உங்களுடன் வைத்துக் கொள்ளவும். வெளியில் செல்லும்போது இந்த மகிமை வாய்ந்த சக்தி மிகுந்த உதியை நெற்றியில் இட்டு கொள்ளவும். நம்பிக்கையுடன் சிறிது தண்ணீரில் கலந்து உட்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.
5. மலேரியா வியாதி நிவாரணம், கருப்பு நாய்க்கு தயிர்சாதம் இடுதல்
பால கணபதி என்கிற அடியவர் மலேரியா வியாதியினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். சாயியின் மஹிமை அறிந்து, அங்கு சென்று, அவரின் பாதத்தில் வீழ்ந்து மலேரியா காய்ச்சலை குணப்படுத்துமாறு பிரார்த்தித்தார். சாயிபாபா, லட்சுமி கோயிலுக்கு முன்னால் கருப்பு நாய்க்கு தயிர் சாதம் கொடுக்குமாறு கூறினார். பாபாவின் ஆசீர்வாதத்தினாலும், விசேஷத்தினாலும் லட்சுமி கோயிலுக்கு சென்று பார்த்தபோது ஒரு கருப்பு நாய் இருந்தது. அந்த தயிர் சாதத்தை கொண்டுவந்து கருப்பு நாய்க்கு கொடுத்தவுடன் பால கணபதி மலேரியா நோயிலிருந்து விடுபட்டார்.
இது போன்ற சாயி மகிமைகளும், விசேஷங்களும் சாயி சரித்திரத்தில் அநேகமாக இருக்கும். அவை அனைத்தும் எழுதுவதற்கு இடமில்லாததால் சில உதாரணங்களை மட்டும் அளித்துள்ளோம். சாயி ஸத்சரித்திரத்தை பாராயணம் செய்தும், பூஜை விரதங்களை முறையாக கடைப்பிடித்தும் சாயி நாதரின் ஆசீர்வாதத்தையும், அனுக்கிரஹத்தையும் பெறலாம்.
ஸச்சிதானந்த ஸமர்த்த ஸத்குரு ஸாயிநாத் மஹாராஜ்கீ ஜய்!