பதிவு செய்த நாள்
26
மார்
2011
11:03
ஆங்கிரஸ் மகரிஷியின் வம்சத்தில் தோன்றிய மகரிஷிகளில் கவுதமர் மிக முக்கியமானவர். இவர் சப்தரிஷிகளில் ஒருவராகவும் இடம்பெற்றிருக்கிறார். தீர்க்கதமஸ் என்னும் மகரிஷிக்கும், ப்ரத்வேஷீ என்னும் பெண்மணிக்கும் பிறந்தவர் இவர். தீர்க்கதமஸ் பிறவியிலேயே பார்வையற்றவர். பிருகஸ்பதியின் சாபத்தால் கருவிலேயே இவருடைய கண்கள் குருடாயின. மேதையான இவருக்கு சகலவேதங்களிலும் நல்ல ஞானம் இருந்தது. பார்வையற்றவராக இருந்ததால், தீர்க்கதமஸை திருமணம் செய்து கொள்ள யாரும் முன்வரவில்லை. நீண்டகாலமாக பிரம்மசரியாகவே இருந்தார். ப்ரத்வேஷீ தான் அவருடைய வேதஅறிவைக் கண்டு அவரைத் திருமணம் செய்ய சம்மதித்தாள். இவ்விருவருக்கும் பிறந்த முதல் குழந்தை தான் கவுதமர். தொடர்ந்து பல குழந்தைகளைப் பெற்றாள் ப்ரத்வேஷீ. எப்போதும் வயிற்றில் பிள்ளையைச் சுமந்து இருப்பதை எண்ணி ப்ரத்வேஷீக்கு வெறுப்பு உண்டானது. இதனால், கணவனுக்கும் மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எலியும் பூனையும் போல குடும்பத்தில் சண்டை சச்சரவிற்கு பஞ்சமே இல்லாமல் போனது.
ப்ரத்வேஷீ, தன் கணவன் தீர்க்கதமஸை திட்டத் துவங்கிவிட்டாள். கவுதமர் அம்மா பிள்ளையாக வளர்ந்திருந்தால் ப்ரத்வேஷீயின் பக்கம் துணைநின்றார். ஒருநாள் ப்ரத்வேஷீ கவுதமரிடம், இந்த கிழத்திற்கு சோற்றை தின்பதும், வருஷம் தவறாமல் என்னைப் பிள்ளைத்தாய்ச்சியாக்குவதும் தான் ஒரே வேலை. அவர் உயிரோடு இருந்தால் இனியும் எனக்கு சங்கடம்! பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு! இனி கங்கையாற்றில் அவரை தூக்கி போட்டு விடுவது ஒன்றுதான் சரியான தீர்வு! என்றாள் அடங்காத கோபத்துடன். மனைவியை பிள்ளை பெறும் இயந்திரமாக பார்க்கும் கணவன் மீது எந்தப் பெண்ணும் வெறுப்பு கொள்ளத்தான் செய்வாள். அதைத் தான் ப்ரத்வேஷீயும் செய்தாள். அதனால் தான் அவள் பெயரிலேயே துவேஷத்தையும் சேர்த்து வைத்து விட்டார்கள் போலும். வெறுப்பு அளவுகடந்துவிட்டதால், பிரம்மஹத்தி தோஷத்தையே (கொலை பாவம்) தரும் பாவத்தையும் செய்ய முனைந்துவிட்டாள். மரக்கட்டைகளால் ஆன தெப்பம் ஒன்றைச் செய்து அதில் தீர்க்கதமஸை ஏற்றச் செய்தாள். அம்மாவின் பேச்சைக் கேட்ட கவுதமரும் பலாத்காரமாக தந்தையை தெப்பத்தில் அமர்த்தி கங்கையாற்றில் விட்டுவிட்டார். ஆற்றில் இருக்கும் திமிங்கலம், முதலைகளுக்கு இரையாகிவிடுவர்.கவுதம மகரிஷியின் தர்மபத்தினி அகல்யா உலகப் பிரசித்தமானவள். ராமாயணம் படித்த அனைவருக்கும் நன்கு அறிமுகமான பாத்திரம். பாலகாண்டத்திலேயே விஸ்வாமித்திரரோடு ராமலட்சுமணர்கள் செல்லும்போது கவுதம மகரிஷியின் ஆஸ்ரமம் வழியாகத் தான் சென்றார்கள். ராமன் விஸ்வாமித்திர ரிஷியிடம் கவுதமரின் ஆஸ்ரமம் ஏன் இப்படி பாழடைந்து கிடக்கிறது என்று கேட்க நடந்த கதையை அவர் ராமனுக்கு எடுத்துச்சொன்னார்.
ராமா! கவுதமரும் அகல்யாவும் தம்பதிகளாக வாழ்ந்த ஆஸ்ரமம் இது! அகல்யா அழகுள்ள பெண். அவளது அழகில் மயங்கிய இந்திரன் ஆசைகொண்டு பூலோகம் வந்தான். கவுதமர் அனுஷ்டானம் செய்ய அதிகாலையில் கிளம்பிய வேளையில் ஆயத்தமானான் இந்திரன். கவுதமரைப் போலவே வேடம் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான். அகல்யாவும் விபரீதம் அறியாது கணவனைப் போல இருந்த இந்திரனுடன் மகிழ்ந்திருந் தாள். தன் மனைவி அகல்யாவும், இந்திரனும் செய்த செயலை நொடிப்பொழுதில் உணர்ந்தார் கவுதமர். வெகுண்டு இந்திரன் மீது கடும்சாபம் இட்டார். இந்திரனின் உடம்பு அருவருக்கத்தக்க நிலைக்கு ஆளாகும்படி சபித்தார். பின்னரும் சினம் அடங்கவில்லை. தன் மனைவி மீதும் மின்னலாய் பாய்ந்தது அவரின் கோபம். கணவனின் ஸ்பரிசத்துக்கும், பிறரது ஸ்பரிசத்துக்கும் வேறுபாடு காணமுடியாத அவளை, நீண்டகாலம் பசி தாகத்தால் மானிடதன்மை இழந்து பேயுருக்கொண்டு அலையும்படியும் சபித்தார். அத்தோடு விட்டாரா என்ன? இறுதியில் கல்லாய் சமைந்து கேட்பாரற்றுக் கிடக்கும் படியும் செய்தார். சாபவிமோசனமாக பரம்பொருளாகிய உனது பாதத்தூளிகள் (தூசு) பட்டு பெண்ணாக சுயவுருவம் பெறும்படி அருள்செய்தார், என்றார் விஸ்வாமித்திரர். தங்கள் தவ வலிமையினால் முக்காலத்தையும் உணர்ந்தவர்கள் ஞானிகள். ராமாவதாரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த சரபங்கர், சபரீ போல, கவுதமரும் காத்திருந்தார். மிதிலாபுரியில் ஜனகமன்னனிடம் அரண்மனை புரோகிதராக இருந்த சதானந்தர், கவுதமருககும் அகல்யாவுக்கும் பிறந்த புத்திரர் ஆவார். ராமாயணம் மட்டுமில்லாமல் அகல்யை சாபம் மகாபாரதம், வேதம் ஆகிய எல்லாவற்றிலும் இடம் பெற்றுள்ளது. ஞானம் மிக்க கவுதமர், அகல்யை மீண்டு வந்தபின் பலகாலம் மகிழ்ச்சியாக வாழ்ந்து பின்னர் தேவலோகம் சென்றார். சப்தரிஷிகளில் ஒருவரான இவரைப் பற்றிய குறிப்புகள் நான்கு வேதங்களிலும் காணப்படுகிறது.