பதிவு செய்த நாள்
05
மார்
2014
12:03
சென்ற அந்தப் பிரமுகர் ஆழ்ந்த பெருமூச்சு விட்டுத் தன் நடுக்கத்தைச் சற்றுக் குறைத்துக் கொள்ள முயன்றார். ஒரு குவளை குளிர்ந்த நீரைக் குடித்தார். மெல்லத் தம்மை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் மசூதி நோக்கி நடந்தார். எப்படியும் நடந்த விஷயத்தை ஊரில் உள்ள அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் தெரிவிக்க வேண்டும் அல்லவா? அல்லது அதற்குள் விஷயம் தெரிந்து ஊரே மசூதியில் கூடியிருக்கிறதோ என்னவோ? ஆனால், அவர் மீண்டும் தயங்கித் தயங்கி மசூதிக்குச் சென்றபோது அங்கே எந்தக் கூட்டமும் இல்லை. மசூதி வழக்கம்போல் அமைதியாகத் தான் இருந்தது. எச்சரிக்கையோடு உள்ளே சென்று பார்த்தார் அவர். என்ன ஆச்சரியம்! பாபா வழக்கம்போல் சலனமே இல்லாமல் தியானத்தில் ஆழ்ந்திருந்தார்! அப்படியானால் தாம் கண்ட காட்சி பொய்யா? கனவா? தன் கண்ணே தன்னை ஏமாற்றுமா? முன்னர் பாபாவின் அங்கங்கள் சிதறிக் கிடந்ததாகத் தாம் கண்ட காட்சி தான் பிரமையா? இல்லை... இப்போது தாம் கண்டுகொண்டிருக்கும் இது பிரமையா? அவருக்கு எதுவும் புரியவில்லை. ஆனால், பாபாவை மீண்டும் முழுமையாக தரிசிக்க முடிந்ததில், அவர் அடைந்த பரவசத்திற்கு அளவே இல்லை. பாபா! நீங்கள் இருக்கிறீர்கள்! நீங்கள் இருக்கிறீர்கள்! என்று நாக்குழறச் சொல்லியவாறே பாபாவை நமஸ்கரித்தார்.
விழிகளிலிருந்து பரவசத்தில் பொலபொலவெனக் கண்ணீர் கொட்டியது. அவரைப் பரிவோடு பார்த்தார் பாபா. ஆம்... நான் என்றும் இருக்கிறேன்! என்றும் இருப்பேன்! என்று கம்பீரமாக அறிவித்தார். என்றும் இருப்பவர் கடவுள் ஒருவர் தானே! உடலைத் தனித்தனியாகக் கழற்றி ஓய்வெடுப்பது என்பது யோக சாதனைகளில் ஒன்று. பாபா பல்வேறு யோகங்களில் தேர்ந்தவர். ஓர் இடத்தில் இருந்துகொண்டே இன்னோர் இடத்திலும் தோன்றுவது, தன் உடலை மிக மெலிதாக்கிக் கொண்டு ஆகாயத்தில் பறந்து விருப்பமான இடத்திற்குச் செல்வது, உடலை மாபெரும் உடலாக மலைபோல் ஆக்கிக் கொண்டு பார்ப்பவர்களை பிரமிக்க வைப்பது என யோகத்தால் ஒருவர் அடையும் திறன்கள் பலப் பல. அணிமா, மகிமா, லகிமா என அஷ்டமா ஸித்திகள் அடையப் பெற்றவர்கள் யோகிகள். அணிமா, மகிமா போன்ற ஸித்திகளில் அனுமன் தேர்ந்தவன். சீதாதேவி முன் உலகளந்த பெருமாள் போல், சூரியனும் சந்திரனும் தன் செவிகளில் இரு குண்டலங்கள் மாதிரித் தோன்றும் வகையில் பேருருவம் எடுத்தான் அவன். அவனே மிகச் சிறிய உருவையும் எடுக்கும் வல்லமை பெற்றிருந்தான்.
சோவெனப் பெய்யும் பெருமழையின் இடையே, மழைநீர் தன்மேல் படாதவாறு மிக மெல்லிய உருவெடுத்து இடைநடக்கும் ஆற்றல் உடையவன் அனுமன், என்று புகழ்ந்து எழுதுகிறார் கம்ப ராமாயணத்திற்கு உரை எழுதிய வை.மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார். யோகிகளால் முடியாதது எதுவுமில்லை. திருவண்ணாமலையில் சேஷாத்திரி பரப்பிரும்மம் இத்தகைய யோக சாதனையில் ஈடுபட்டபோது, அங்கங்கள் தனித்தனியாகக் கிடந்ததைச் சில அன்பர்கள் பார்த்ததாகத் தெரிவித்திருக்கிறார்கள். ஆதிசங்கரருக்கு எரிந்த வலக்கரம் வளர்ந்ததும், சதாசிவப் பிரம்மேந்திரர் தன் வலக்கரத்தை வெட்டிய மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் அதைத் தன் உடலில் ஒட்ட வைத்துக் கொண்டதும் எல்லாம் இத்தகைய யோக ஸித்திகளின் விளைவே. எல்லோரையும் படைத்துக் காக்கும் பகவான் பாபாவுக்கு, தம் அங்கங்களைப் பிரித்துச் சேர்ப்பது ஒரு பொருட்டா என்ன! பிரிந்த மனங்களை ஒன்று சேர்ப்பதும், பிரிந்த வாழ்க்கையை ஒன்றாக்குவதும் பாபாவின் அருளால் முடியும் என்கிறபோது, தன் பிரிந்த அங்கங்களை ஒன்றுசேர்த்துக் கொள்வது பாபாவால் இயலாதா? பாபா மசூதியிலிருந்து நெடுந்தொலைவில் உள்ள ஓர் ஆலமரத்தின் அருகே இருந்த கிணற்று நீரில் தான் குளிப்பது வழக்கம். ஆனால், அவர் குளிக்கும் விதம் விந்தையானது.
உடலின் புற உறுப்புகளைத் தண்ணீரால் கழுவிச் சுத்தம் செய்வதுபோலவே, அக உறுப்புகளையும் தண்ணீரால் சுத்தம் செய்வார் பாபா. தம் குடலை, வாய் வழியாக வெளியே எடுத்து நீரால் நன்கு கழுவி, அருகே இருந்த நாவல் மரத்தின் கிளையில் தொங்கவிட்டு உலர்த்துவார்! பின் அந்தக் குடலை மறுபடி தன் உடலுக்குள் பொருத்திக் கொண்டுவிடுவார். இதைப் பார்த்த அடியவர்கள் ஷிர்டியில் இருந்தார்கள். அவர்கள் மூலம் பாபாவின் இத்தகைய செயல்கள் வெளியுலகிற்குத் தெரியவந்தன. பாபாவின் மகிமை பரவலாயிற்று. ஆனால், பாபா தனக்கு கிடைத்த புகழை ஒருபோதும் லட்சியம் செய்ததே இல்லை. எப்போதும் எளிய வாழ்க்கையே வாழ்ந்து வந்தார். உடல் வேதனையால் தவிக்கும் அடியவர்கள் அவரைச் சரணடைவது உண்டு. பாபாவுக்குத் தம் அடியவர்கள் படும் உடல் வேதனையைப் பொறுத்துக் கொள்ள இயலாது. அந்த வேதனை அவர்களின் முன்வினைகளால் அவர்களுக்கு நேர்ந்திருக்கிறது என்பதை அவர் அறிவார். அந்த முன்வினைப் பயன்களைத் தாம் ஏற்றுக் கொண்டு அவர்களின் உடல்வேதனை யைத் தீர்த்து வைத்துவிடுவார். அந்த வேதனையை அடியவர்களின் பொருட்டாகத் தாங்கும் கருணையும், அதைத் தாங்கிக் கொள்ளும் தவ வலிமையும் பாபாவுக்கிருந்தது. ஆண்டு 1910.... தீபாவளி விடுமுறைக் காலம்.
பாபா மசூதியில் எப்போதும் நெருப்பு மூட்டிக் குளிர் காய்ந்து கொண்டிருப்பார். அந்த நெருப்பை துனி என்று சொல்வர். அன்றும் நெருப்பில் குளிர் காய்ந்து கொண்டிருந்தார் அவர். சடசடவென ஜ்வாலையுடன் பிரகாசமாக எரிந்துகொண்டிருந்தது துனி நெருப்பு. விறகுகளை ஒவ்வொன்றாக நெருப்பில் வைத்துத் தீயை வளர்த்துக் கொண்டிருந்தார். மசூதியின் வேலையாட்களான மாதவாலும், மாதவ்ராவ் தேஷ்பாண்டேயாலும் தொலைவில் தங்கள் பணிகளைச் செய்தவாறே பாபாவையும் பார்த்துக் கொண்டிருந்தனர். திடீரென விறகை எடுத்துத் துனியில் வைப்பதற்கு பதிலாகத் தம் கரத்தையே துனியின் உள்ளே வைத்தார் பாபா. மாதவாலும், மாதவ்ராவ் தேஷ் பாண்டேயும் பாபாவின் செயலைப் பார்த்துப் பதறினார்கள். அவர் அருகே ஓடோடிச் சென்றார்கள். அதற்குள் பாபாவின் திருக்கரம் முழுவதுமாகக் கருகிவிட்டது.... நெருப்பில் இருந்த அவரது கரத்தை இழுத்து பாபாவைத் தரையில் படுக்க வைத்தார்கள். பாபா அப்போது உணர்வோடு இருக்கவில்லை. மெல்ல அவர் முகத்தில் தண்ணீர் தெளித்தபோது அவர் உணர்வு நிலையை அடைந்தார். பாபா! ஏன் இப்படி உங்கள் கையையே துனிநெருப்பில் நுழைத்தீர்கள்? என்று அங்கு கூடிய பக்தர்கள் விம்மினார்கள். புன்முறுவலோடு பதில் சொல்லலானார் பாபா...