கோயிலுக்குள் செல்லும் பக்தர்களில் ஒருவர் விடாமல் உண்டியல் செலுத்த சென்று விடுவார்கள். தனது திருமணத்துக்கு குபேரனிடம் கடன் வாங்கிய பெருமாள், ""யார் யார் பாவம் செய்தார்களோ, அவர்களின் பாவக்கணக்குக்கு ஏற்ப கலியுகத்தில் அவர்களிடமிருந்து பணத்தை வசூல் செய்து கடனை அடைத்து விடுவேன்,என அவரிடம் வாக்கு கொடுத்துள்ளார். அதன்படி, அவர் நம்மிடமிருந்து வசூலை நடத்திக் கொண்டிருக்கிறார். "காவாளம் எனப்படும் மிகப்பெரிய பித்தளை அண்டா துணி சுற்றப்பட்டு ஒரு வண்டியில் வைத்து நமது பார்வைக்கு தெரியாமல் உள்ளே நிறுத்தப்பட்டிருக்கும். அது நிறைந்தவுடன் அந்த வண்டியை நகர்த்தி விட்டு, புதிய அண்டாவுடன் இன்னொரு வண்டி உள்ளே தள்ளப்படும். நிரம்பிய பானை பாதுகாப்புடன் உண்டியல் மண்டபத்துக்கு எடுத்துச் செல்லப் படும். பக்தர்களில் சிலர் உண்டியல் எண்ணும் இடத்துக்கு அனுமதிக்கப் படுவர். அவர்கள் கையில் சில்லரைக் காசு கூட கொண்டு செல்லக்கூடாது. ஒருவேளை தப்பித்தவறி, பெரும் தொகை, நகைகளுடன் உள்ளே சென்றுவிட்டால், அதுவும் பெருமாளுக்கு சொந்தமாகி விடும்.சில பக்தர்கள் தங்கள் நகைகளை உண்டியல் முன்னால் நின்று கழற்றிப் போடுவதாக நேர்ச்சை செய்துகொள்வர். இந்த நேர்ச்சையை "நின்றபடியே உருவிப்போடுதல் என்பர். தெலுங்கில் இதை "நிலுவு தோபிடி என்பார்கள். உண்டியல் மண்டபத்தை "பரகாமணி மண்டபம் என்பர்.