பதிவு செய்த நாள்
12
மார்
2014
06:03
திருப்பதியில் இருந்து பஸ்களில் திருமலைக்குச் சென்றால் போக வர கட்டணம் ரூ.48 ஆகிறது. இதுதவிர, ஏழு மலைகளைக் கடந்து, படிகளில் ஏறியே திருமலையை அடையலாம். இது மிகுந்த புண்ணியத்தை தரும். மலைப்பாதையில் அலிபிரி என்னும் அடிவாரத்தில் இருந்து திருமலைக்கு 11 கி.மீ., தூரம் உள்ளது. திருப்பதியில் இருந்து டவுன் பஸ்சில் அலிபிரிக்கு செல்லலாம். "அலிபிரி என்றால் "அடிப்படி என்று பொருள். அலிபிரியில் கம்பீரமாக இரு சிறகுகளை விரித்த நிலையில் பெருமாளை வழிபாடு செய்யும் நிலையில் கூப்பிய கைகளுடன் மிக உயரமான கருடாழ்வார் காட்சி தருகிறார்.மலைப்பாதை வழியாகத்தான் ஆழ்வார்களும், முனிவர்களும், யோகிகளும், மாமன்னர்களும் மலையேறி ஏழுமலையானைத் தரிசிக்க சென்றுள்ளனர். இதை உணர்ந்து மலையேறினாலே, மலைப்பாதையில் செல்வதற்கு சிரமமாகத் தெரியாது. இந்த மலையடிவாரத்தில் தேங்காய் உடைத்து வழிபாடுசெய்து தங்கள் பயணம் நல்லமுறையில் அமைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார்கள். சில பக்தர்கள் முதல் படியிலிருந்து கடைசி வரை எல்லாப்படிகளிலும், மஞ்சளும், குங்குமம் இட்டு "கோவிந்தா என முழங்கியபடியே செல்வர். சிலர் படிகளில் கற்பூரம் ஏற்றி படி வழிபாடு செய்கிறார்கள். மொத்தம் 3 ஆயிரத்து 600 படிகள் உள்ளன. 2ஆயிரத்து 500 படிகள் வரை படிகள் ஏறுவதற்கு சற்று சிரமமாக இருந்தாலும் காலிகோபுரம் என்னும் இடத்தை அடைந்தவுடன் நீளமான படிகள் சமதளத்தில் இருப்பதால் நடக்க எளிதாகி விடும் .
ஸ்ரீ பாத மண்டபம்: மலைப்பாதையில் நாம் முதலில் அடைவது ஸ்ரீபாத மண்டபம். தன் வாழ்நாளை ஸ்ரீமந்நாராயணனுக்கே அர்ப்பணித்த ராமானுஜர் திருப்பதியில் தங்கி இருந்த போது அடிவாரத்தில் ராமாயண சொற்பொழிவு நடத்துவது வழக்கம்.அவரது மாமனான திருமலைநம்பி, அடிவாரத்தில் இருந்து தண்ணீர் சுமந்து சென்று, மலையப்பசுவாமிக்கு பூஜை செய்து விட்டு கீழே இறங்கி வருவார்.ஒருமுறை இப்படி ராமாயணம் கேட்டுவிட்டு, உச்சிகால பூஜை நேரத்தை தவற விட்டு விட்டார். பெருமாளுக்கு கைங்கர்யம் செய்யாமல் ராமாயணம் கேட்டு நேரத்தை கழித்துவிட்டோமே என்று வருந்தினார். திருமலைநம்பிகளின் வருத்தத்தைப் போக்க வேங்கடவன் அடிவாரத்தில் அவர்முன் காட்சி கொடுத்தார். வெங்கடாசலபதி மலையடிவாரத்திலே நம்பிக்கு நின்று தரிசனம் கொடுத்த இடத்தில் இரண்டு திருப்பாதங்களை காணலாம். அதில் மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதுவே ஸ்ரீபாத மண்டபம். இன்று ராமானுஜர் ராமாயணம் சொன்ன இடம் அழகிய கோயிலாக காட்சி அளிக்கிறது. எளிமையான கோலத்தில் வேங்கடேசன் காட்சி தருகிறார். ஆண்டாள் சன்னதி ஒன்றும் இருக்கிறது. இங்கு பக்தர்களுக்கு பெருமாளின் பித்தளை பாதுகைகளை ஐந்து ரூபாய் டிக்கட் கட்டணத்தில் தருகிறார்கள். அவற்றைச் சுமந்துகொண்டு ஆண்டாள் சன்னதியைச் சுற்றி வர வேண்டும். பெருமாளை எளிய முறையில் வழிபாடு செய்ய அருள்செய்ய வேண்டி பாதுகைகளைச் சுமந்து ஆண்டாளைப் பிரார்த்தனை செய்கின்றனர். மலை யாத்திரையை இக்கோயி லிலிருந்து முறையாகத் தொடங்குகிறார்கள்.
தலையேறு குண்டு: பாத மண்டபத்தை அடுத்துள்ள பகுதி தலையேறு குண்டு பாறை. இப்பாறையில் ஆஞ்சநேயரின் திருவுருவத்தைப் பார்க்கலாம். இவரிடம் தலைபதித்து வணங்கினால், திருமலை யாத்திரை சென்று சேரும் வரையில் தலைவலி, கால்வலி, உடல்வலி போன்ற எந்த உபாதைகளும் இல்லாமல் சென்று வரலாம் என்று நம்பிக்கை. இதுபோல் தலையேறு குண்டு ஆஞ்சநேயர் உருவங்கள் மலைப்பாதையில் மூன்று இடங்களில் அமைந்துள்ளன. புதியவீடு கட்ட ஆசைப்படுபவர்கள் சிறு கற்களை அடுக்கி இங்கு வேண்டுகின்றனர்.
தசாவதார, ஆழ்வார் மண்டபங்கள்: மலைப் பாதை யில் வழி நெடுகிலும் தசாவதார மண்டபங்கள் உள்ளன. இவற்றில், திருமாலின் தசாவதாரங்களை சிலா ரூபத்தில் வடித்து வைத்துள்ளனர். மச்சம், கூர்மம், வராகம், வாமனம், நரசிம்மம், பரசுராமன், ராமன், பலராமன், கிருஷ்ணன் ஆகிய ஒன்பது அவதார மண்டபங்களைக் கடந்ததும், கல்கி அவதார மண்டபம் வருமோ என எதிர்பார்த்தால், ஹயக்ரீவர் மண்டபம் வருகிறது. கல்கி அவதாரம் இனிமேல் நிகழப்போகிறது என்பதால் இந்த மாற்று ஏற்பாடு. மேலும், ஹயக்ரீவர் கல்விக்குரிய தெய்வம் என்பதால் மாணவர்களின் நலன் கருதி இந்த மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அதன்பின் பன்னிரண்டு ஆழ்வார்களின் மண்டபங்கள் அமைந்துள்ளன. இந்த தசாவதார மண்டபங்களையும், ஆழ்வார் மண்டபங்களையும் முழுமையாகக் கடந்து முடிக்கும் போது நாம் திருமலையின் உச்சியில் இருப்போம். ஆழ்வார்களைப் பற்றிய குறிப்பும், அவர்கள் இயற்றிய நூல்கள் பற்றிய விபரமும் அந்தந்த மண்டபங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
குருவ மண்டபம்: தலையேறு குண்டுவைத் தொடர்ந்து சிதிலமடைந்த நிலையில் உள்ள மண்டபத்தை "குருவ மண்டபம் என்கின்றனர். குருவநம்பி என்னும் குயவர் குடிசையிட்டு இங்கு தங்கியிருந்தார். மலையப்பரின் மரச்சிலையை வடித்து அதன் பாதங்களில் தான் செய்த மண்மலர்களால் பெருமாளைப் பூஜித்து வந்தார். தொண்டைமான்சக்கரவர்த்தி மலைஉச்சியில் பெருமாளை தங்கமலர்களால் பூஜித்து வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். "தான் என்ற அகந்தையுடன் பொன் மலர்களால் வழிபாடு செய்த மன்னனுக்கு பாடம் புகட்ட பெருமாள் விரும்பினார். மன்னன் பூஜித்த மலர்கள் அனைத்தும் மறையச் செய்தார். குருவநம்பியின் மண்மலர்களை தன் பாதத்தில் கிடக்கும்படி செய்தார். பொன் மலர்களைக் காணாமல் மன்னன் தவித்தான். அன்றிரவு மன்னனின் கனவில் தோன்றிய ஏழுமலையான், குருவநம்பியின் உண்மையான பக்தியையும், மன்னனின் செருக்கினையும் உணரச் செய்தார். அடுத்தநாள் மன்னன் குருவநம்பியின் பாதங்களை வணங்கி, அவருக்கு ஒரு மண்டபத்தை ஏற்படுத்தி கொடுத்தான். இந்த மண்டபமே குருவ மண்டபம் எனப்படுகிறது.
காலி கோபுரம்: மலைப்பாதையில் மொத்தம் மூன்று கோபுரங்கள் அமைந்துள்ளன. அலிபிரியில் முதல் கோபுரம் அமைந்துள்ளது. 2ஆயிரத்து100 படிகளைக் கடந்தவுடன் குருவமண்படத்தை அடுத்து "காலிகோபுரம் உள்ளது. 17ம் நூற்றாண்டில் மட்லகுமார அனந்தராயன் என்னும் மன்னனே இந்த மலைப் பாதை கோபுரங்களை கட்டியவன். இக்காலி கோபுரத்தை அடைந்து விட்டாலே திருப்பதி மலையில் பாதி ஏறிவிட்டது போலாகி விடும். செங்குத்தாக இருக்கும் படிகள் காலி கோபுரத்துடன் முடிவடைகின்றன.இக்கோபுரத்தில் நாமம், சங்கு, சக்கரம் ஆகிய திருச்சின்னங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டுள்ளன. இரவு நேரத்தில் தொலைவிலிருந்து பார்த்தாலும் தெரியும் வகையில் இவ்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அடிவாரத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இக்கோபுரம் உள்ளது. இனி மலைப்பாதையில் சரிவான படிகளே பெரும்பாலும் இருப்பதால் நடப்பதற்கு மிகவும் எளிதாக இருக்கிறது. முற்காலத்தில் காலிகோபுரத்தில் மலையேறும் பக்தர்களுக்கு தண்ணீர்பந்தல் இருந்ததாகத் தெரிகிறது. தற்போது பெரிய கடைத்தெருவாக காட்சி தருகிறது. சகல பதார்த்தங்களும் கிடைக்கின்றன. இங்கு பக்தர்கள் சற்று இளைப்பாறி பயணத்தைத் தொடர் கின்றனர்.
தபோவன நரசிம்மர்: காலிகோபுரத்தை அடுத்து சற்று தொலைவில் நரசிம்மர் கோயிலைத் தரிசனம் செய்யலாம். நரசிம்மர் கோயில் அமைந்துள்ள இடம் தபோவனம் என்று அழைக்கப்படுகிறது. ரிஷுபமுனிவர் இத்தபோவனத்தில் தவம் செய்த போது நரசிம்மர் காட்சி தந்ததாக தல வரலாறு கூறுகிறது. யோகநரசிம்மர் சுயம்பு வடிவத்தில் நெடிய மூர்த்தியாக காட்சி தருகிறார். பிற்காலத்தில் இவ்விடத்தில் லட்சுமிநரசிம்மருக்கு கோயிலை எழுப்பியுள்ளனர். இத்தபோவனம் மரங்கள் சூழ்ந்து பசுமையாக காட்சி தருகிறது. தியான பயிற்சி செய்பவர் கள் இக் கோயிலின் முன்மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்து மனஅமைதி பெறுகிறார்கள்.
வரவேற்கும் வேங்கடாத்ரி: முழங்கால் முறிச்சானிலிருந்து சற்று தூரம் நடந்தால் வேங்கடாத்ரி மலை வருகிறது. இங்கு பரமனுக்கு பல்லாண்டு பாடிய பெரியாழ்வாரும், பாவை பாடிய கோதையும் காட்சி தருகின்றனர். இத்துடன் மலைப்பாதை நிறைவுபெற்று, சாலை வழியே வரும் பாதையைச் சந்திக்கிறோம். திருமலையை எட்டிவிட்டோம். சுப்ரபாத ஒலி தெருவெங்கும் முழங்குகிறது. படியேறி களைப்பை மறந்து திருமலை வேங்கடத்தானின் ஆனந்த நிலையத்தை காணும் ஆர்வம் எழுவதை நம்மால் உணரமுடிகிறது.
முழங்கால் முறிச்சான்: இயற்கை அழகு பச்சைப்பசேல் என்று எங்கும் நிறைந்திருக்கும் மலைப்பாதையில் சேஷாத்ரி மலையைக் கடக்கும்போது, "மோக்காலு மிட்டா என்னும் இடம் வருகிறது. இப்புனிதமலையின் மீது பாதம் பதித்து நடந்தால் பாவம் உண்டாகும் என்று எண்ணிய ராமானுஜர் முழங்கால் களாலேயே ஊர்ந்து மலையேறினார். அவ்வாறு ஏறும்போது ஓரிடத்தில் ராமானுஜரின் கால் எலும்பு முறிந்தது. அதனால் அந்த இடத்துக்கு "முழங்கால் முறிச்சான் என்ற பெயர் ஏற்பட்டது. தெலுங்கில் இதை "மோகாலு மிட்டா என்கிறார்கள். அவ்விடத்தில் ராமானுஜருக்கு கோயில் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அன்னமய்யா என்ற சிறுவன் ஏழுமலையானின் மீது ஈடுபாடு கொண்டு மலையேறி வந்தான். அவனுக்கு பசிதாகம் ஏற்பட்டு மயங்கி விழுந்தான். பத்மாவதி தாயார் அச்சிறுவன் முன்தோன்றி அமுதளித்தாள். அன்னையின் அருள்பெற்ற அன்னமாச்சார்யா நூறு பாடல்களைப் பாடி போற்றினார். பின்னாளில் பெருமாளின் மீது ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய அன்னமய்யாவின் அருள்வாழ்க்கை இம்முழங்கால் முறிச்சானில் தான் ஆரம்பமானது.
இசைக்குயிலுக்கு சிலை: திருப்பதி என்றதுமே சுப்ரபாதத்தை நம்மை அறியாமல் நம் வாய் முணுமுணுக்கும். மொழி தெரியாதவர்கள் கூட, இதை ரசிப்பர். அந்த ஈர்ப்பை தன் இனிய குரலால் நமக்கு வழங்கியவர் எம்.எஸ். சுப்புலட்சுமி. "கவுசல்ய சுப்ரஜா... என்று தொடங்கும் சுப்ரபாதத்தை அவரது இனிய குரலில் கேட்காதவர்களே இருக்கமுடியாது. இந்த இசையரசிக்கு மதிப்பளிக்கும் விதத்தில் திருப்பதி பஸ் ஸ்டாண்டிலிருந்து அலிபிரி செல்லும் வழியில் அவருக்கு சிலை அமைத்துள்ளனர்.
வராக சுவாமி கோயில்: வெங்கடாசலபதி கோயிலின் வடபுறத்தில் வராக சுவாமி கோயில் அமைந்துள்ளது. புராணங்களின்படி இதுவே ஆதி வராக க்ஷேத்ரம் என்று தெரியவருகிறது. பெருமாள் ஸ்ரீநிவாசனாக பூமிக்கு வந்தபோது ஆதி வராக சுவாமியிடம் அனுமதி பெற்றே திருமலையில் தங்கினார். பிரம்ம புராணத்தில் சொல்லப்படும் தகவலின்படி வெங்கடாசலபதி கோயிலுக்கு செல்வதற்கு முன் பக்தர்கள் ஆதி வராக சுவாமியை தரிசிக்க வேண்டும் என்பது விதி. அதுபோல அவருக்கே முதல் நைவேத்தியமும் படைக்க வேண்டும். அத்ரி சம்ஹிதை என்ற நூலில் சொல்லப்பட்டுள்ளபடி வராக அவதாரம் ஆதி வராகம், பிரளய வராகம், யஜ்ன வராகம் என மூன்று வடிவங்களில் பூஜிக்கப்படுகிறது.இவ்வகையில் இங்குள்ள வராக சுவாமி "ஆதி வராகர் எனப்படுகிறார். இவரது திருநாமம் ஆதிவராக மூர்த்தி என்பதாகும். இவரது கோயில் சுவாமி புஷ்கரணி தெப்பக்குளக் கரையில் உள்ளது.
சுவாமி புஷ்கரணி: திருப்பதியில் உள்ள தெப்பக்குளத்தை சுவாமி புஷ்கரணி என்பர். பார்ப்பதற்கு மகாவிஷ்ணு தங்கியுள்ள வைகுண்டம் போல காட்சியளிக்கும். கருடபகவான் இந்த குளத்தை வெங்கடா சலபதிக்காக அமைத்துள்ளார். பக்தர்கள் இந்த குளத்தில் நீராடலாம். இந்த தீர்த்தத்தில் உலகிலுள்ள மூன்று கோடி தீர்த்தங்கள் கலந்திருப்பதாக சொல்லப்படுகிறது. மார்கழி மாதத்தில் 12வது நாளில் "முக்கோட்டி துவாதசி இந்த குளக்கரையில் நடக்கும். அன்று பகவான் இந்த குளத்தில் நீராடுவதாக நம்பிக்கை. அந்த நாளில் கங்கை நதியும் இந்த தீர்த்தத்திற்கு வந்து நீராடி தன்னிடம் சேர்ந்துள்ள பாவங்களை கழுவுகிறது. இந்த குளத்தின் மேற்கு கரையில் வராக சுவாமி கோயிலும், தென்கரையில்வெங்கடாலசபதி கோயிலும் அமைந்துள்ளது. பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் இங்கு தெப்பத்திருவிழா நடக்கும். பிரம்மோற்ஸவத்தின் கடைசிநாளில் "சக்ர ஸ்நானம் நிகழ்ச்சி இந்த தீர்த்தத்தில் நடத்தப்படும். தை மாதத்தில் ராமகிருஷ்ண தீர்த்த திருவிழாவும், மாசி பவுர்ணமியில் குமாரதாரா தீர்த்த திருவிழாவும், பங்குனி பவுர்ணமியில் தும்புரு தீர்த்த திருவிழாவும், கார்த்திகை மாத க்ஷிராப்தி துவாதசியில் சக்ர தீர்த்த விழாவும் நடக்கிறது.
ஸ்ரீபேடி ஆஞ்சநேயர் கோயில்: திருப்பதி சன்னதி வீதியில் ஸ்ரீபேடி ஆஞ்சநேய சுவாமி கோயில் உள்ளது. ஒரு பெருமாள் கோயிலின் எதிரே கருடன் அல்லது ஆஞ்சநேயர் கோயில் தனித்து அமைந்திருந்தால் அது மிகவும் சிறப்பானதாக சொல்லப்படுகிறது. அவ்வகையில் வெங்கடாசலபதி கோயிலின் எதிரே இந்த கோயில் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தப்படும். ஆஞ்சநேயர் ஜெயந்தி அன்றும் விசேஷ பூஜை உண்டு. "பேடி என்றால் "விலங்கு என பொருள். அஞ்சனாதேவி திருமலையில் தவமிருந்து ஆஞ்சநேயரை பெற்றதாக சொல்வதுண்டு. வெங்கடாசலபதியின் அருளால் பிறந்த இந்த குழந்தை அவரை எந்த காலமும் பிரியக்கூடாது என அஞ்சனாதேவி நினைத்தாள். ஆனால் விளையாட்டு பிள்ளையான ஆஞ்சநேயரோ சூரியனை பிடிப்பதற்காக வானத்திற்கு பறந்து சென்று திரும்பினார். இதன்பின்னும் அவர் எங்காவது விளையாட செல்லக்கூடாது என்பதற்காக அஞ்சனா அவருக்கு விலங்கிட்டு வைத்தாள். அந்த நிலையிலேயே அவரை வெங்கடாசலபதி சன்னதி முன்னால் நிறுத்தி சுவாமியை எந்நேரமும் வணங்க வேண்டும் என கட்டளையிட்டாள். இந்த விலங்கை நம்மால் காண இயலாது. ஏனெனில் அஞ்சனாதேவி விண்வெளியையே கயிறாக திரித்து அவரது கைகளில் கட்டி வைத்தாள். விலங்கிடப்பட்ட ஆஞ்சநேயர் என்பதால் இவரை "பேடி ஆஞ்சநேயர் என்கிறார்கள்.இதுதவிர வராக சுவாமி கோயில் எதிரிலும் ஒரு ஆஞ்சநேயர் கோயில் இருக்கிறது.