எந்த ஒன்றையும் செய்யும்போது அதற்குரிய மனநிலை இருக்கப் பெறுவது இன்றியமையாதது. எந்தக் காரியத்தைச் செய்கிறோமோ அதற்குரிய மனநிலையை வரவழைத்துக் கொண்டு, அதன்பிறகு அந்தச் செயலில் ஈடுபடுவது சிறப்பான பலனை அளிக்கும். நமது கோயில்களில் பல பிராகாரங்கள் அமைத்திருப்பதன் காரணம் இதுவே. ஒவ்வொரு பிராகாரத்தில் சுற்றி வரும்போது மற்ற எண்ணங்களை எல்லாம் விட்டு, கடைசியாக கருவறையில் சென்று தெய்வத்தைத் தரிசிக்கும்போது, நம்மால் முழுமனத்துடன் தெய்வ சிந்தனையில் ஈடுபட முடிகிறது. அதுபோல் அனுபூதிக் கருவூலமான உபநிஷதங்களைப் படிக்கப் புகுமுன் நமது சிந்தனையை அவற்றுடன் இயைபுபடுத்த சாந்தி மந்திரங்கள் உதவுகின்றன.
ஆச்சாரியர்! சீடர் ஆகிய நம் இருவரையும் இறைவன் காப்பாராக! அறிவின் ஆற்றலை நாம் இருவரும் அனுபவிக்குமாறு ஊக்குவிப்பாராக! நாம் இருவரும் ஈடுபாடுமிக்க ஆற்றலுடன் உழைப்போமாக! கற்றது நமக்குப் பயனுள்ளதாக விளங்கட்டும்! எதற்காகவும் நாம் ஒருவரையொருவர் வெறுக்காமல் இருப்போமாக!
குறைகளும் தடைகளும் இல்லாமல் உபநிஷதக் கல்வி நிறைவேற இந்த மந்திரம் பிரார்த்திக்கிறது.
எனது அவயவங்களான வாக்கு, பிராணன், கண்கள், காதுகள், மற்றும் எல்லா புலன்களும் மிகுந்த ஆற்றலுடன் விளங்கட்டும். உபநிஷதங்கள் கூறுகின்ற இறைவனே எல்லாம். அந்த இறைவனை நான் மறுக்காதிருப்பேனாக. இறைவன் என்னை மறுக்காதிருப்பாராக. இறைவனிடமிருந்தும் மறுப்பு இல்லா- திருக்கட்டும். என்னிடமிருந்தும் மறுப்பு இல்லாதிருக்கட்டும், உபநிஷதங்களில் கூறப்பட்டுள்ள தர்மங்கள், ஆன்மாவை நாடுகின்ற என்னில் குடிகொள்ளட்டும்!
எதையும் சாதிப்பதற்கு உறுதியான உடலும் திடமான மனமும் வேண்டும். இரண்டையும் பிரார்த்திக்கிறது இந்த மந்திரம்.
மூன்று விதமான தடைகளிலிருந்து நாம் விடுபடுவதற்காக ஓம் சாந்தி: சாந்தி என்று மூன்று முறை சொல்லப்படுகிறது. மூன்று தடைகள் வருமாறு:
1. ஆத்யாத்மிகம்: நம்மால் வரும் தடை; உடல் நோய், மனப் பிரச்சினைகள் போன்றவை.
2. ஆதி பௌதிகம்: பிற உயிர்களால் வரும் தடை.
3. ஆதி தைவிகம்: இயற்கை சக்திகளால் வரும் தடை; மழை, இடி, தீ போன்றவற்றால் வருபபவை.
கேன உபநிஷதம் எல்லாம் யாரால்?
எல்லாம் யாரால்? இவை எல்லாம் யாரால்? உடல், மனம், பிராணன் போன்றவை செயல்படுவது யாரால் என்ற கேள்வியுடன் உபநிஷதம் ஆரம்பிக்கிறது.
1. ஏவப்பட்ட மனம் யாருடைய விருப்பத்தால் செல்கிறது? முக்கியப் பிராணனைச் செலுத்துவது யார்? யாருடைய சங்கல்பத்தால் வாக்கு பேசப்படுகிறது? கண்களையும் காதுகளையும் எந்த தேவன் செயல்படுத்துகிறான்?
மனம் என்ற ஒன்று இருப்பதை நாம் அறிவோம். நாம் அறிந்தவற்றுள் விரைவானது மனம். அதற்கு இந்த வேகத்தைக் கொடுத்தது யார்?
பிராணன். எங்கும் நிறைந்து உலகை இயக்குகின்ற ஆற்றலே பிராணன். அந்தப் பிராணனின் ஓர் அம்சம் நம்மிலும் செயல்படுகிறது. நமது உடல், அதன் இயக்கங்கள், மனம், அதன் செயல்பாடுகள் அனைத்தும் பிராணன் என்கின்ற ஆற்றலினாலேயே செயல்படுகின்றன. இந்தப் பிராணனை இயக்குவது யார்?
வாக்கு எதனால் ஏவப்பட்டு இயங்குகிறது?
கண், காது என்ற இரண்டு பெயர்களின் மூலம் அனைத்து புலன்களும் சுட்டிக்காட்டப்படுகின்றன. புலன்கள் யாரால் செயல்படுகின்றன?
உடம்பும் மனமும் புலன்களும் பிராணனும் எல்லாம் இயங்குவது யாரால் என்பது கேள்வி.
2. காதின் காதாக, மனத்தின் மனமாக, வாக்கின் வாக்காக, பிராணனின் பிராணனாக, கண்ணின் கண்ணாக இருப்பது ஆன்மா. உணர்வு விழிக்கப் பெற்றவன் இந்த உண்மையை உணர்ந்து, புலன் உலகிலிருந்து விலகி மரணமற்ற நிலையை அடைகிறான்.
முந்தின மந்திரத்தில் உடம்பும் மனமும் எல்லாம் யாரால் இயங்குகின்றன? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. ஆன்மா என்று இந்த மந்திரம் பதில் சொல்கிறது.
உடம்பு, மனம், ஆன்மா என்று பலவற்றின் தொகுதியால் ஆனவன் மனிதன். உடம்பின் செயல்பாடுகளோ, அது இயங்கும் முறையோ பொதுவாக நமக்குத் தெரியாது என்றாலும் உடம்பு ஒன்று இருப்பதை நாம் அறிவோம்.
உடம்பிற்குப் பின்னால் மனம் ஒன்று இருப்பதையும் அறிந்துகொள்ள முடியும். உடம்பு வெறும் கருவி மட்டுமே. அதனை இயக்கிக் கொண்டிருப்பது மனம். இந்த மனம் எங்கே இருக்கிறது, எதனால் ஆனது, எப்படி இயங்குகிறது என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. ஆனால் அது உடம்பை இயக்கிக் கொண்டிருப்பது தெரிகிறது. காது, கண் போன்ற புலன்கள் அதன் வாசல்கள் ஆகும். இந்த வாசல்களின் வழியாக மனம் புற உலகுடன் தொடர்பு கொள்கிறது, அனுபவங்களைப் பெறுகிறது.
மனம் சுதந்திரமானதா, அல்லது, மனத்திற்குப் பின்னால் ஆன்மா என்ற ஒன்று இருக்கிறது, அதுவே மனத்தையும் உடம்பையும் இயக்குகிறது என்று இந்த மந்திரம் பதில் சொல்கிறது.
புற உருவங்களைக் கண் பார்க்கிறது. கண்ணை மனம் பார்க்கிறது. மனத்தில் எழுகின்ற எண்ண அலைகளை ஆன்மா காண்கிறது. ஆன்மாவே காண்பவன். ஆன்மாவை யாரும் காண இயலாது என்கிறது த்ருக் த்ருச்ய விவேகம்.
எனவே மனத்தையோ அதன் செயல்பாடுகளையோ நாடிப் பயனில்லை என்பதை விழிப்புணர்வு பெற்றவன் அறிந்துகொள்கிறான்; ஆன்மாவை நாடுகிறான்.
ஆன்மாவை நாடுவதன் பலன் என்ன? மரணமற்ற நிலை.
(ஆன்மா (3-9)
உடலுக்கும் மனத்திற்கும் உள்ளே அழியாத உண்மைப் பொருள் இருக்கிறது. இந்தப் பொருளுக்குப் பிறப்பும் இல்லை; இறப்பும் இல்லை. தானாக நிற்கும் இது எங்கும் நிறைந்தது, ஏனெனில் இதற்கு உருவம் இல்லை என்று கூறுகிறார் சுவாமி விவேகானந்தர். நமது வாழ்க்கையை
3. அங்கே கண் செல்வதில்லை; வாக்கு மனமும் செல்வதில்லை. எனவே அது எத்தகையது என்பது எங்களுக்குத் தெரியாது. அதனை எப்படி பிறருக்குப் புரிய வைப்பது என்பதும் எங்களுக்குத் தெரியாது.
தொலைநோக்கியால் தூரத்திலுள்ள பொருட்களைப் பார்க்க முடியும்; ஒன்றைப் பார்க்க முடியாது. நுண்ணோக்கியால் அருகிலுள்ளதைப் பார்க்க முடியும்; தொலைவிலுள்ளதைப் பார்க்க முடியாது. துரத்தில் உள்ளவற்றைப் பார்ப்பதற்காக உருவாக்கப்பட்டது தொலை நோக்கி. அருகில் உள்ளவற்றைப் பெரிதாகக் காண்பதற்காக உருவாக்கப்பட்டது நுண்ணோக்கி. ஒன்றின் பணியை மற்றொன்று செய்ய இயலாது. அதுபோலவே புலன்கள் புற உலகை அனுபவிப்பதற்காக உள்ளவை; அவற்றால்
அகத்திலுள்ள எதையும் காணவோ அறியவோ இயலாது என்று கட உபநிஷதம் கூறுகிறது.
புலன்களால் அனுபவிக்க இயலாத ஒன்றை எப்படி புலன்களால் விளக்க முடியும்? எனவேதான், தர்ம ஆன்ம அனுபூதி பெற்றவராக இருந்தும் தம்மால் அதனை விளக்க இயலவில்லை என்று பணிவுடன் கூறுகிறார் உபநிஷத முனிவர்.
4. அந்த ஆன்மா அறிந்தவற்றிலிருந்து வேறு பட்டது; அறியாதவற்றைவிட மேலானது. எங்களுக்கு அதைப்பற்றி விளக்கிய முன்னோர்களிடமிருந்து நாங்கள் இவ்வாறு கேள்விப்பட்டிருக்கிறோம்.
உலகில் நாம் அறியாதவை எவ்வளவோ உள்ளன. உயிரினங்களிலும் நாம் அறிந்தது மிகமிகச் சொற்பமே. ஆயினும், உலகமும் உயிர்களும் நாம் அறிந்தவை. அதாவது, அவை இருப்பது நமக்குத் தெரியும். அவை ஆன்மா அல்ல. இனி, நாம் அறியாத உலகங்கள் எவ்வளவோ உள்ளன. இப்படி நாம் அறியாதவற்றை ஆன்மா என்று கூறலாமா? இல்லை ஏனெனில் அறியாதவற்றை ஒருநாள் அறிந்துவிட முடியும். எனவே அவையும் ஆன்மா அல்ல.
அறிந்தவையும் ஆன்மா அல்ல. அறியாதவையும் ஆன்மா அல்ல. இதன் பொருள் என்ன? ஆன்மா அறியப்பட முடியாதது. உலகப் பொருட்களைப்போல் ஆன்மாவை அறிய முடியாது. இந்தக் கருத்து 2: 1-3- இல் விளக்கப்படுகிறது.
6. எது மனத்தால் அறியப்பட முடியாதோ, எதனால் மனம் அறியப்படுகிறதோ அதுவே ஆன்மா என்று சான்றோர்கள் கூறுகிறார்கள். இங்கே வழிபடப்படு கின்ற பொருள் ஆன்மா அல்ல என்பதை அறிந்துகொள்.
9. எது மூச்சினால் முசுரப்படுவதில்லையோ, எத னால் மூச்சு முகர்கின்றதோ அதுவே ஆன்மா. இங்கே வழிபடப்படுகின்ற பொருள் ஆன்மா அல்ல என்பதை அறிந்துகொள்.
ஒளி இருப்பதால் பொருட்கள் விளக்கம் பெறுகின்றன. ஆனால் பொருட்களால் ஒளி விளக்கம் பெறுவதில்லை. அதுபோல் ஆன்மா இருப்பதால் அனைத்துச் செயல்களும் நடைபெறுகின்றன. ஆனால் செயல்களைச் செய்கின்ற கருவிகளால் ஆன்மாவை அறிய இயலாது.
இந்த 5 மந்திரங்களிலும் ஒரே வரி மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது. அதன்மூலம் அந்தக் கருத்தின் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுகிறது. நாம் இங்கே வழிபடுகின்ற பொருள் ஆன்மா அல்ல என்பதே அந்தக் கருத்து.
ஆன்மா என்பது எது? இறைவனே. எங்கும் நிறைந்த இறைவனே நம்மில் ஆன்மாவாக விளங்குகிறார். இறைவன், கடவுள், தெய்வம் என்றதும் நம் நினைவுக்கு வருபவை கோயிலும் தெய்வங்களுமே, சாதாரண மனிதனின் ஆன்மீகம் கோயிலையும் தெய்வ வழிபாட்டையும் சார்ந்தே உள்ளது.அவை ஆன்மா அல்ல, அதாவது இறைவன் அல்ல என்று இங்கே கூறப்படுகிறது.
கோயிலிலுள்ள விக்கிரகங்கள் கல்லினாலும் செம்பினாலும் ஆனவை. வீட்டிலுள்ள பூஜையறையில் நாம் வழிபடுகின்ற தெய்வங்கள் காகிதத்தாலும் மையாலும் ஆனவை. கல்லும் செம்பும் காகிதமும் மையும் கடவுள் அல்ல என்பது நம் ஒவ்வொருவருக்கும் தெரியும். அப்படியானால் ஏன் வழிபடுகிறோம்? இந்தக் கல்லும் செம்பும் நம்மில் இருக்கின்ற ஆன்மாவைக் காண்பதற்கான ஒரு படி என்பதால்.
வானில் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தைக் காண்பதற்கு படிப்படியான வழியைக் கையாள்கிறோம். முதலில் ஒரு மரம், மரத்தின் கிளை, கிளை வழியே தெரிகின்ற பிரகாசமான நட்சத்திரம், அதன் அருகில் நாம் பார்க்க வேண்டிய நட்சத்திரம் என்று படிப்படியாக் காணும்போது விரைவில் அதுபோலவே எங்கும் நிறைந்த இறைவனைச் சட்டென்று அகத்தில் காண வேண்டும் என்றால் அது அவ்வளவு சுலபம் அல்ல. எனவே முதலில் புறத்தில் ஒரு விக்கிரகத்தில், ஒரு படத்தில் அவரைக் காண முயற்சிக்கிறோம். ஆன்மாவாக நம்மில் புறத்தில் செய்கின்ற வழிபாடு என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும். புறத்தில் தேடி காண முடியாத இறைவனைக் கடைசியாக அகத்தில் தேடி அங்கே கண்டதாகக் கூறுகிறார் அப்பர் பெருமான்:
தேடிக் கண்டு கொண்டேன் திருமாலொடு நான்முகனும் தேடி தேடொணா தேவனை என்னுள்ளே தேடிக் கண்டு கொண்டேன்.
எனவே நாம் வழிபடுகின்ற விக்கிரகங்களும் படங்களும் உண்மை இறையனுபவத்திற்கான ஒரு படி மட்டுமே,
அவை அறுதி நிலை அல்ல என்பதை மனதில் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த மந்திரங்கள் அந்தக் கருத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றன.