பதிவு செய்த நாள்
26
ஏப்
2014
04:04
நாம் வழிபடுகின்ற பொருள் ஆன்மா அல்ல (1:5-9) என்ற கருத்து இங்கே தொடர்கிறது. ஒரு விக்கிரகத்தை வழிபடுவதுடன் நமது முயற்சி நின்றுவிடக் கூடாது, அவரை மேலும் அறிய வேண்டும்; நம்முள் தேட வேண்டும் என்ற கருத்து இந்த அத்தியாயத்தில் வலியுறுத்தப்படுகிறது.
அறிந்தது கொஞ்சமே:
யதி மன்யஸே ஸுவேதேதி தப்ரமேவாபி
நூனம் த்வம் வேத்த ப்ரஹ்மணோ ரூபம்
யதஸ்ய த்வம் யதஸ்ய தேவேஷ்வத நு
மீமாம்ஸ்யமேவ தே மன்யே விதிதம் (1)
ப்ரஹ்மணோ ரூபம்- ஆன்மாவை; ஸுவேத- நன்றாகத் தெரியும்; இதி- என்று; யதி மன்யஸே- நினைப்பாயானால்; நூனம்- நிச்சயமாக; த்வம்- நீ; வேத்த- அறிந்தது; தப்ரம் ஏவ அபி- மிகக் கொஞ்சமே; யத்- எது; அஸ்ய- அதனுடைய; தே- உனக்கு; மீமாம்ஸ்யம் ஏவ- அறிய வேண்டும்; விதிதம்- தெரியும்; மன்யே- நினைக்கிறேன்.
1. குரு: ஆன்மாவை நன்றாகத் தெரியும் என்று நீ
நினைப்பாயானால், நீ அறிந்தது நிச்சயமாக மிகக்
கொஞ்சமே. எனவே தெய்வங்களில் அதனை மேலும்
அறிய வேண்டும்.
சீடன்: நான் ஆன்மாவை அறிந்துள்ளதாக நினைக்கிறேன்.
அறிந்த மற்றும் அறியாத நிலைகளைக் கடந்து ஆன்மா (1:4). அத்தகைய ஒன்றை நான் அறிவேன் என்று எப்படி கூற முடியும்? முடியாது. அதேவேளையில் நான் அறிவேன் என்று சொல்வது முழுத் தவறும் ஆகாது. ஏனெனில் நாம் அறிந்தது ஆன்மாவில் அதாவது நம்மில் ஒரு பகுதியைத்தான். நம்மைப்பற்றி அறிகிறோம், முழுமையாக அறியவில்லை. எப்படி?
நம்மை உடம்பாக, மனமாக அறிகிறோம், ஆன்மாவாக அறியவில்லை. உடம்பை அறிகிறோம், மனத்தை அறிகிறோம்; அதாவது ஒரு பகுதியை அறிகிறோம். அதனால்தான் நீ அறிந்தது நிச்சயமாக மிகக் கொஞ்சமே என்று கூறப்பட்டது.
எனவே ஆன்மாவை முழுமையாக அறியுமாறு இந்த மந்திரம் கூறுகிறது. அதற்கு முதற்படியாக நாம் வழிபடும் தெய்வங்களில் இன்னும் ஆழ்ந்து தேட வேண்டும் என்று வழியும் இங்கே காட்டப்படுகிறது.
பொதுவாக உபநிஷதங்கள், குரு தமது சீடர்களுக்கு உபதேசிப்பதாக அமைந்தவை. கேன உபநிஷதமும் அந்த முறையைப் பின்பற்றுகிறது. இங்கே, இன்னும் ஆழ்ந்து தேட வேண்டும் என்று குரு கூறியபோது, தன் அரைகுறை அறிவை முழுமை என்று கருதிய சீடன் ஒருவன், தான் ஆன்மாவை அறிந்துள்ளதாகக் கூறுகிறான்.
அறிந்தும் அறியவில்லை: 2-3
ஆன்மாவைப்பற்றி நாம் அறிந்தது கொஞ்சமே. முழுமையாக அறிவதற்கு இன்னும் ஆழ்ந்து தேட வேண்டும் என்று முந்தின மந்திரம் கூறியது. அதனைப் புரிந்து கொள்ளாத சீடனுக்கு மேலும் விளக்குகிறார் குரு. உலகிலுள்ள பொருட்களை அறிவதுபோல் ஆன்மாவை அறிய முடியாது என்பதை ஒரு புதிர்போல் 2-3 மந்திரங்கள் கூறுகின்றன.
நாஹம் மன்யே ஸுவேதேதி நோ ந வேதேதி வேத ச
யோ நஸ்தத்வேத தத்வேத நோ ந வேதேதி வேத ச (2)
அஹம்- நான்; ஸுவேத- நன்றாக அறிவேன்; இதி- என்று; ந மன்யே- கருதவில்லை; ந வேத- தெரியாது; இதி ந- என்றும் நினைக்கவில்லை; வேத ச- தெரியும்; ந:- நம்மில்; ய:- யார்; தத்- அவரை; ந வேத- அறியவில்லை; ந அறிகிறோனோ; வேத ச- அறிகிறான்.
2. ஆன்மாவை எனக்கு நன்றாகத் தெரியும் என்று
கருதவில்லை; தெரியாது என்றும் நினைக்கவில்லை.
ஏனெனில் என்னை எனக்குத் தெரியும். ஆன்மாவைத்
தெரியாது. அதே வேளையில், தெரியாது என்று
சொல்லவும் முடியாது என்று நம்மில் யார்
நினைக்கிறானோ அவனே ஆன்மாவை அறிகிறான்.
யஸ்யாமதம் தஸ்ய மதம் மதம் யஸ்ய ந வேத ஸ:
அவிஜ்ஞாதம் விஜானதாம் விஜ்ஞாதமவிஜானதாம் (3)
யஸ்ய- யாருக்கு; அமதம்- தெரியாதோ; தஸ்ய- அவனுக்கு; மதம்- தெரியும்; யஸ்ய- யாருக்கு; மதம்- தெரியுமோ; ஸ: - அவனுக்கு; ந வேத- தெரியாது; விஜானதாம்- நன்றாக அறிந்தவர்கள்; அவிஜ்ஞாதம்- அறியவில்லை; அவிஜானதாம்- நன்றாக அறியாதவர்கள்; விஜ்ஞாதம்- அறிகிறார்கள்.
3. யாருக்குத் தெரியாதோ அவனுக்குத் தெரியும்.
யாருக்குத் தெரியுமோ அவனுக்குத் தெரியாது. நன்றாக
அறிந்தவர்கள் அறியவில்லை. நன்றாக அறியாதவர்கள்
அறிகிறார்கள்.
உலகின் பொருட்கள் எதையும் அறிவதற்கு நம்மிடம் நான்- உணர்வு அடிப்படையாக இருப்பது அவசியம். நான் (அறிபவன்)- அறிவு- அறியப்படும் பொருள் இந்த மூன்றும் சேரும் போதுதான் நாம் எதையும் அறிய முடியும். இந்த மூன்றும் மறைகின்ற இடத்தில் தோன்றுவதே ஆன்ம அறிவு அல்லஆ ஆன்ம ஞானம் அல்லது ஆன்ம அனுபூதி. நான் - உணர்வு அழிந்த பிறகு, அங்கே புதிதாகத் தோன்றுவதே ஆன்ம உணர்வு என்று விளக்குகிறார் ஸ்ரீரமண மஹரிஷி. நான்- உணர்வு அழிந்த பிறகு கிடைக்கின்ற இந்த அனுபூதி அனுபவத்திற்கு மட்டுமே உரியது; விளக்கத்திற்கு உரியது அல்ல.
எனவே, உலகப் பொருட்களைத் தெரிவதுபோல், அதாவது புறப் பொருட்களை மனத்தால் அறிவதுபோல், அதாவது புறப் பொருட்களை மனத்தால் அறிவதுபோல், ஆன்மாவைத் தெரியாதவன் உண்மையில் அதனைத் தெரிந்திருக்கிறான். உலகப் பொருட்களைத் தெரிவதுபோல் உண்மையில் அதனை அறியவில்லை.
ஆன்மாவை அறிதல் என்றால் என்ன?
ஆன்மாவை அறிதல் என்றால் ஒரு பொருளை அறிவதுபோல் அல்ல என்பதை முந்தின 2 மந்திரங்கள் விளக்கின. ஆன்மாவை அறிதல், ஆன்மாவை அடைதல்,
1. நான் ஒன்று தானத்து நான்தான் என்று ஒன்றது
தானாகத் தோன்றுமே.
ஆன்ம அனுபூதி என்றெல்லாம் சொல்வதன் பொருள் என்ன
என்பதை இந்த மந்திரம் விளக்குகிறது.
ப்ரதிபோதவிதிதம் மதமம்ருதத்வவம் ஹி விந்ததே
ஆத்மனா விந்ததே வீர்யம் வித்யயா விந்ததேம்ருதம் (4)
ப்ரதிபோத- உணர்வின் ஒவ்வொரு நிலையிலும்; விதிதம்- அறிபவன்; மதம்- கருத்து; அம்ருதத்வம்- மரணமிலாப் பெருநிலை; விந்ததே ஹி- நிச்சயமாக அடைகிறான்; ஆத்மனா- ஆன்மாவிலிருந்து; வீர்யம்- ஆற்றல்; விந்ததே- பெறப்படுகிறது.
4. உணர்வின் ஒவ்வொரு நிலையிலும் ஆன்மாவை
அறிபவனே உண்மையில் அறிகிறான் என்பது கருத்து.
அப்படி அறிந்தவன் நிச்சயமாக மரணமிலாப்
பெருநிலையை அடைகிறான். ஆன்மாவிலிருந்து ஆற்றல்
கிடைக்கிறது. ஞானத்தால் மரணமிலாப் பெருநிலை
அடையப்படுகிறது.
உடம்பு, மனம், ஆன்மா என்று பலவற்றால் அமைந்த தொகுதி மனிதன். இவற்றில் ஆன்மா மட்டுமே உணர்வுப் பொருள்; மற்ற அனைத்தும் உணர்வற்றவை. தீக்குள் இடப்பட்ட இரும்பு தீபோலவே ஜொலிக்கிறது. அந்த இரும்பின் ஒளியும் சூடும் உண்மையில் அதற்கு உரியவை அல்ல. தீயின் தொடர்பால் இரும்பு, தீபோல் தெரிகிறது. அதுபோலவே ஆன்மா என்ற உணர்வுப் பொருளின் தொடர்பால், மனம் போன்றவை உணர்வுப் பொருள்போல் தோன்றுகின்றன.
உணர்வின் ஒவ்வொரு நிலையிலும் ஆன்ம உணர்வு உணரப்பட வேண்டும் என்கிறது மந்திரம். அதாவது உடம்பின் ஒவ்வொரு செயல்பாட்டிலும், மனத்தின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் ஆன்ம உணர்வு வெளிப்படுவதை உணர வேண்டும். அவ்வாறு வாழ்க்கையின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் ஆன்ம உணர்வு வெளிப்படுவதை உணர்பவனே உண்மையில் ஆன்மாவை அறிகிறான்.
இந்த ஆன்ம உணர்வு ஆற்றலைத் தருகிறது. இது உண்மையான ஆற்றல். ஆற்றல், வல்லமை, சக்தி என்று பொதுவாக நாம் கருதுவது உண்மையில் ஆற்றல் அல்ல. நம்மைப் பலசாலியாக ஆக்கிக்கொள்வதற்காக நாம் செய்கின்ற ஒவ்வொரு முயற்சியும் பயம் காரணமாகச் செய்யப்படுபவை.
நம்மிடம் இருப்பதை இழந்துவிடுவோமோ என்ற பயம், எதிரி தாக்கிவிடுவானோ என்ற பயம், மரண பயம் என்று எத்தனையோ பயங்களிலிருந்து விடுபடுவதற்காக நாம் வலிமையை வளர்க்கிறோம். ஆனால் இந்த வலிமை வளரவளர நமது பாதுகாப்பின்மை உணர்வும் பயமும் அதே விகிதத்தில் வளர்கின்றன. பணக்காரன் தனது செல்வத்தைப் பாதுகாப்பதற்காகச் செய்கின்ற முயற்சிகள் வளரவளர அவனது பயமும் வளர்வது நாம் கண்கூடாகக் காண்கின்ற ஒன்று. எனவே இந்த ஆற்றல் உண்மையான ஆற்றல் அல்ல.
ஆன்ம அனுபூதியால் பெறுகின்ற ஆற்றல் உண்மையான ஆற்றல். ஆன்மாவை உணர்கின்ற ஒருவன் தன்னை அழிக்க உலகின் எந்த சக்தியாலும் இயலாது என்பதை உணர்கிறான். அவனை ஆயுதங்கள் வெட்டாது, தீ எரிக்காது, தண்ணீர் நனைக்காது, காற்று உலர்த்தாது. தான் எங்கும் நிறைந்தவன், என்றென்றும் இருப்பவன், நிலையானவன் என்பதை அவன் உணர்கிறான் என்றே நமது
1. நைனம் சிந்தந்தி சஸ்த்ராணி நைனம் தஹதி பாவக:
ந சைனம் க்லேதயந்த்யாபோ ந சோஷயதி மாருத:
அச்சேத்யோஸயம் அதாஹ்யோஸயம் அக்லேத்யோஸசோஷ்ய ஏவச
நித்ய: ஸர்வகத: ஸ்தாணு: அசலோஸயம் ஸனாதன:
சாஸ்திரங்களும் கூறுகின்றன. இந்த அறிவு அவனுக்கு எல்லையற்ற ஆற்றலைத் தருகிறது. தான் என்றென்றும் இருப்பவன், அழிவற்றவன் என்பதை உணர்கின்ற அவன் மரணமிலாப் பெருநிலையை அடைகிறான்.
உண்மையான நிறைவும் மாபெரும் இழப்பும்:
இஹ சேதவேதீதத ஸத்யமஸ்தி
ந சேதிஹாவேதீன்மஹதீ வினஷ்ட்டி:
பூதேஷு பூதேஷு விசித்ய தீரா:
ப்ரேத்யாஸ்மால்லோகாதம்ருதா பவந்தி (5)
இஹ - இங்கே; அவேதீத் சேத்- அறியப்படுமானால்; ஸத்யம்- உண்மையான நிறைவு; அஸ்தி- கிடைக்கிறது; இஹ- இங்கே; ந அவேதீத் சேத்- அறியப்படாவிட்டால்; மஹதீ- மாபெரும்; வினஷ்ட்டி:- இழப்பு; பூதேஷு பூதேஷு- எல்லா உயிர்களிலும்; விசித்ய- ஆன்மாவை உணர்ந்து; தீரா;- விழிப்புணர்வு பெற்றவர்கள்; அஸ்மாத்- இந்த; லோகாத்- உலகிலிருந்து; ப்ரேத்ய- விடுபட்டு; அம்ருதா:- மரணமற்றவர்களாக; பவந்தி- ஆகிறார்கள்.
5. இங்கேயே ஆன்மாவை அறிந்தால் வாழ்க்கை
யில் உண்மையான நிறைவு ஏற்படுகிறது; இல்லா
விட்டால் மாபெரும் இழப்பாகும். விழிப்புணர்வு
பெற்றவர்கள் எல்லா உயிர்களிலும் ஆன்மாவை
உணர்கிறார்கள். அத்தகையோர் இந்த உலகிலிருந்து
வீடுபட்டு மரணமற்றவர்களாக ஆகிறார்கள்.
உலகின் செல்வங்கள் அனைத்தும் இருந்தாலும் மனம் நிறைவு பெற்றுவிடும் என்பது கிடையாது. ஆன்ம அனுபூதி உண்மையான நிறைவைத் தரும். எப்படி? ஆன்ம உணர்வு பெற்றவன் எதையும் செய்ய வல்லவன் ஆகிறான். அவனால் முடியாதது இந்த உலகில் எதுவும் இல்லை. எனவே அவன் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை, எதையும் நாட வேண்டியதில்லை, எதையும் இழக்க வேண்டியதில்லை. இந்த உணர்வு அவனைத் தன்னில் நிலைபெற்றவன் ஆக்குகிறது. அவன் தன்னிலேயே இன்பம் காண்கிறான்; தனக்குள்ளேயே நிறைவுபெற்று வாழ்கிறான்.
மாறாக, இந்த உண்மையை உணராமல் வாழ்பவன் நிறைவை வெளியில் தேடுகிறான். தவறான இடத்தில் தேடுவதால் அவனுக்கு அது கிடைப்பதில்லை. அவன் உண்மையில் வாழ்க்கையை இழக்கிறான்.
ஆன்ம அனுபூதியின் மற்றொரு பரிமாணம் இது. ஆன்ம அனுபூதி பெற்றவன், தன்னில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும், உயிரினங்கள் அனைத்திலும் ஆன்மாவை உணர்கிறான். எங்கும் தன்னையே தன் ஆன்மாவையே, காண்பவன் எங்கே போவான்? எங்கே வருவான்? மரணம் என்பது அவனைப் பொறுத்தவரை பொருளற்றதாகிவிடுகிறது. அவன் மரணத்தை வென்றவன் ஆகிறான், மரணமிலாப் பெருநிலையை அடைகிறான்.
இதி கேனோபநிஷதி த்விதீய: கண்ட:
3. ஆன்மாவே ஆதாரம்!
தண்டவாளம் இன்றி ரயில் ஓட முடியாது, திரையின்றி திரைப்படம் பார்க்க முடியாது. அவ்வாறு நமது உடல்- மனச் சேர்க்கைக்குப் பின்னால் நமது வாழ்க்கைக்கு ஆதாரமாக ஆன்மா உள்ளது. ஆன்மாவின் காரணமாகத்தான் எல்லா இயக்கங்களும் நடைபெறுகின்றன என்பதை ஒரு கதை மூலம் இந்த அத்தியாயம் விளக்குகிறது.
ப்ரஹ்ம ஹ தேவேப்யோ விஜிக்யே தஸ்ய ஹ ப்ரஹ்மணோ விஜயே தேவா அமஹீயந்த த ஐக்ஷந்த அஸ்மாகமேவ அயம் விஜயோஸஸ்மாகமேவ அயம் மஹிமேதி (1)
ப்ரஹ்ம:- கடவுள்; தேவேப்ய:- தேவர்களுக்காக; விஜிக்யே- வெற்றி பெற்றார்; தஸ்ய ஹ ப்ரஹ்மண:- கடவுளின்; விஜயே- வெற்றியில்; தேவா:- தேவர்கள்; அமஹீயந்த- களித்தனர்; அயம்- இந்த; விஜய:- வெற்றி; அஸ்மாகம் ஏவ- எங்களுடையதே; மஹிமா- பெருமை; தே- அவர்கள்; ஐக்ஷந்த- எண்ணினார்கள்.
1. தேவர்களுக்காக உண்மையில் வெற்றி பெற்ற
வர் கடவுள். ஆனால் அந்த வெற்றியில் தேவர்கள் களித்தனர். இந்த வெற்றி எங்களுடையதே, இந்தப் பெருமை எங்களுடையதே என்று அவர்கள் எண்ணினார்கள்.
தத்தைஷாம் விஜஜ்ஞௌ தேப்யோ ஹ ப்ராதுர்பபூவ தன்ன வ்யஜானத கிமிதம் யக்ஷமிதி (2)
ஹ- பிறகு; ஏஷாம்- அவர்களின்; தத்- அந்த; விஜஜ்ஞௌ- அறிந்து; தேப்ய;- அவர்களிடம்; ப்ராதுர்ப்பபூவ - தோன்றினார்; தத்- அதனை; ந வ்யஜானத- அறியாமல்; இதம்- இந்த; யக்ஷம்- யட்சன்; கிம்- யார்; இதி- என்று.
2. தேவர்களின் அந்தத் தவறான் எண்ணத்தை அறிந்த
கடவுள் அவர்கள் முன் ஒரு யட்சனின் வடிவில்
தோன்றினார். அந்த யட்சன் யார் என்று தெரியாமல்
தேவர்கள் குழம்பினார்கள்.
தேஸக்னிமப்ருவன் ஜாதவேத ஏதத்விஜானீஹி கிமேதத் யக்ஷமிதி ததேதி
தே- தேவர்கள்; அக்னிம்- அக்கினிதேவனிடம்; அப்ருவன்- சொன்னார்கள்; ஜாதவேத- அக்கினி தேவனே; ஏதத்- இந்த; யக்ஷம்-யட்சன்; கிம்- யார்; ஏதத்- இதனை; விஜானீஹி- அறிவாயாக; ததா இதி- அப்படியே ஆகட்டும்.
3. தேவர்கள் அக்கினிதேவனை அழைத்து, அக்கனி
தேவனே! இந்த யட்சன் யார் என்பதை அறிந்து
வருவாயாக என்றனர். அவனும், அப்படியே ஆகட்டும்
என்று கூறி புறப்பட்டான்.
ததப்யத்ரவத் தமப்யவதத் கோஸஸீத்யக்னிர் வா அஹம்
அஸ்மீதி அப்ரவீத் ஜாதவேதா வா அஹமஸ்மீதி (4)
தத்- யட்சனிடம்; அப்யத்ரவத்- விரைந்தான்; தம்- அக்கினிதேவனிடம்; க: அஸி- நீ யார்; இதி- என்று; அப்யவதத்- கேட்டார்; அஹம்- நான்; அஸ்மி- அக்கினி; வா- அல்லது; ஜாதவேதா - ஜாதவேதன்; இதி- என்று; அப்ரவீத்- கூறினான்.
4. தேவர்கள் கூறியதைக் கேட்ட அக்கினிதேவன்
யட்சனிடம் விரைந்தான். அந்த யட்சன் அக்கினி
தேவனிடம், நீ யார்? என்று கேட்டார். நான் அக்கினி
அல்லது ஜாதவேதன் (அனைத்தையும் அறிபவன்)
என்று அக்கினி தேவன் பதிலளித்தான்.
தஸ்மிம்ஸ்த்வயி கிம் வீர்யமித்யபீதம் ஸர்வம் தஹேயம் யதிதம்
ப்ருதிவ்யாமிதி (5)
தஸ்மின் த்வயி- அத்தகைய உன்னிடம்; கிம் அபி- என்ன; வீர்யம்- சக்தி; ப்ருதிவ்யாம்- பூமியில்; யத் இதம்- என்னென்ன உள்ளனவோ; ஸர்வம்- அனைத்தையும்; தஹேயம்- எரிப்பேன்; இதி- என்று.
5. உன்னிடம் என்ன சக்தி உள்ளது? என்று யட்சன்
கேட்டார். அதற்கு அக்கினிதேவன், இந்தப் பூமியிலுள்ள
அனைத்தையும் என்னால் எரிக்க முடியும் என்று
பதிலளித்தான்.
தஸ்மை த்ருணம் நிததாவேதத் தஹேதி ததுபப்ரேயாய ஸர்வஜவேன, தனனெ சசாக தக்தும், ஸ தத ஏவ நிவவ்ருதே நைததசகம் விஜ்ஞாதும் யதேதத் யக்ஷமிதி
தஸ்மை- அவன் முன்னால்; த்ருணம்- புல்லை; நிததௌ- வைத்தார்; ஏதத்- இதனை; தஹ- எரி; இதி- என்றார்; தத்- அந்தப் புல்லை; ஸர்வஜவேன- மிகவும் விரைவாக; உபப்ரேயாய- அணுகினான்; தத்- அதனை; தக்தும்- எரிக்க; ந சசாக- முடியவில்லை; ஸ:- அவன்; நிவவ்ருதே- திரும்பினான்; யத் ஏதத்- இந்த- இந்த; யக்ஷம்- யட்சன்; விஜ்ஞாதும்- அறிய; ந அசகம்- முடியவில்லை; இதி- என்று.
6. அந்த யட்சன் அக்கினிதேவனின் முன்னால் ஒரு
புல்லை வைத்து, இதனை எரி என்றார். அக்கினி
தேவனும் மிகவும் விரைவாக அந்தப் புல்லை அணுகினான். ஆனால் அவனால் அதனை எரிக்க
முடியவில்லை. எனவே திரும்பிவிட்டான். பிறகு
தேவர்களிடம் சென்று, அந்த யட்சன் யார் என்பதை
என்னால் அறிய இயலவில்லை என்று தெரிவித்தான்.
அத வாயும் அப்ருவன் வாயவேதத் விஜானீஹி கிமேதத் யக்ஷமிதி ததேதி (7)
அத- பிறகு; வாயும்- வாயுதேவனிடம்; அப்ருவன்- கூறினர்; வாயோ-வாயுதேவனே; ஏதத்- இந்த; யக்ஷம்- யட்சன்; கிம்- யார்; இதி- என்று; விஜானீஹி- அறிவாயாக; ததா இதி- அப்படியே ஆகட்டும்.
7. பிறகு தேவர்கள் வாயுதேவனை அணுகி, வாயு
தேவனே! இந்த யட்சன் யார் என்பதை அறிந்து வா
என்று கூறினர். வாயுதேவனும், அப்படியே ஆகட்டும்
என்று கூறி புறப்பட்டான்.
ததப்யத்ரவத் தமப்யவதத் கோஸஸீதி வாயுர்வா அஹம் அஸ்மீதி அப்ரவீத் மாதரிச்வா வா அஹமஸ்மீதி (8)
தத்- யட்சனிடம்; அப்யத்ரவத்- விரைந்தான்; தம்- வாயு தேவனிடம்; க: அஸி- நீ யார்; இதி- என்று; அப்யவதத்- கேட்டார்; அஹம்- நான்; வாயு; அஸ்மி- காற்று; வா- அல்லது; மாதரிச்வா- மாதரிச்வன்; இதி - என்று; அப்ரவீத்- கூறினான்.
8. தேவர்கள் கூறியதைக் கேட்ட வாயுதேவன்
யட்சனிடம் விரைந்தான். அந்த யட்சன் வாயு
தேவனிடம், நீ யார்? என்று கேட்டார். நான் வாயு
அல்லது மாதரிச்வன் (வானவெளியில் சஞ்சரிப்பவன்) என்று வாயுதேவன் பதிலளித்தான்.
தஸ்மின்ஸ்த்வயி கிம் வீர்யமித்யபீதம் ஸர்வமாததீய யதிதம் ப்ருதிவ்யாமிதி (9)
தஸ்மின் த்வயி- அத்தகைய உன்னிடம்; கிம் அபி- என்ன; வீர்யம் - சக்தி; ப்ருதிவ்யாம்- பூமியில்; யத் இதம்- என்னென்ன உள்ளனவோ; ஸர்வம்- அனைத்தையும்; அததீய- தூக்குவேன்; இதி- என்று.
9. உன்னிடம் என்ன சக்தி உள்ளது? என்று யட்சன்
கேட்டார். அதற்கு வாயுதேவன், இந்தப் பூமியிலுள்ள
அனைத்தையும் என்னால் தூக்க முடியும் என்று பதிலளித்தான்.
தஸ்மை த்ருணம் நிததாவேததாதத்ஸ்வேதி ததுபப்ரேயாய ஸர்வஜவேன, தன்ன சசாகாதாதும், ஸ தத ஏவ நிவவ்ருதே நைததசகம் விஜ்ஞாதும் யதேதத் யக்ஷமிதி (10)
தஸ்மை- அவன் முன்னால்; த்ருணம்- புல்லை; நிததௌ- வைத்தார்; ஏதத்- இதனை; ஆதத்ஸ்வ- தூக்கு; இதி- என்றார்; தத்- அந்தப் புல்லை; ஸர்வஜவேன- மிகவும் விரைவாக; உபப்ரேயாய- அணுகினான்; தத்- அதனை; ஆதாதும்- தூக்க; ந சசாக- முடியவில்லை; ஸ:- அவன்; நிவவ்ருதே- திரும்பினான்; யத் ஏதத்- இந்த; யக்ஷம்- யட்சன்; விஜ்ஞாதும்- அறிய; ந அசகம்- முடியவில்லை; இதி- என்று.
10. அந்த யட்சன் வாயுதேவனின் முன்னால்
ஒரு புல்லை வைத்து, இதனைத் தூக்கு என்றார்.
வாயு தேவனும் மிகவும் விரைவாக அந்தப் புல்லை
அணுகினான். ஆனால் அவனால் அதனைத் தூக்க முடியவில்லை. எனவே திரும்பிவிட்டான். பிறகு தேவர்களிடம் சென்று, அந்த யட்சன் யார் என்பதை என்னால் அறிய இயலவில்லை என்று தெரிவித்தான்.
அதேந்த்ரம் அப்ருவன் மகவன்னேதத் விஜானீஹி கிமேதத் யக்ஷமிதி ததேதி ததப்யத்ரவத் தஸ்மாத் திரோததே (11)
அத- பிறகு; இந்த்ரம்- இந்திரனிடம்; அப்ருவன்- சொன்னார்கள்; மகவன்- இந்திரனே; ஏதத்- இந்த; யக்ஷம்- யட்சன்; கிம்- யார்; இதி- என்று; விஜானீஹி- அறிவாயாக; ததா இதி- அப்படியே ஆகட்டும்; தத் -யட்சனிடம்; அப்யத்ரவத்- விரைந்தான்; தஸ்மாத்- அங்கிருந்து; திரோததே- மறைந்தார்.
11. பிறகு தேவர்கள் இந்திரனை அணுகி, இந்திரனே!
இந்த யட்சன் யார் என்பதை அறிந்து வா என்று கூறினர். இந்திரனும், அப்படியே ஆகட்டும் என்று கூறி யட்சனை நோக்கி விரைந்தான். ஆனால் அதற்குள் அந்த யட்சன் அங்கிருந்து மறைந்தார்.
ஸ தஸ்மின்னேவாகாசே ஸ்த்ரியமாஜகாம பஹுசோபமானாம் உமாம் ஹைமவதீம் தாம் ஹோவாச கிமேதத் யக்ஷம் இதி (12)
ஸ:- இந்திரன்; தஸ்மின்- அந்த; ஆகாசே ஏவ- வானிலேயே; பஹுசோபமானாம்- மிகுந்த அழகுடன்; ஸ்த்ரியம்- பெண்; ஹைமவதீம்- பொன் ஆபரணங்கள் அணிந்த; உமாம்- உமா தேவி; ஆஜகாம- வந்தாள்; தாம்- அவளிடம்; ஏதத்- இந்த; யக்ஷம்- யட்சன்; கிம்- யார்; இதி- என்று; உவாச ஹ- கேட்டான்.
12. பொன் ஆபரணங்கள் அணிந்து மிகுந்த அழகுடன் பொலிந்து தோன்றிய உமா தேவியை அந்த வானிலேயே இந்திரன் கண்டான். அவன் அவளிடம்,
இந்த யட்சன் யார்? என்று கேட்டான்.
இதி கேனோபநிஷதி த்ருதீய: கண்ட: