பதிவு செய்த நாள்
29
அக்
2014
03:10
குழந்தை வேலன் - கூப்பிட்ட குரலுக்கு ஒடி வந்து சேவை செய்பவன். ஞானச் செல்வனை நயந்து அழைத்தால், நன்மைகள் வெள்ளமாய்ப் பெருகும். முருகா என்றதும், மனம் உருகாதார் எவர் உளர்? எல்லோரையும் எளிதில் ஈர்த்துவிடும் இயல்பைக் கொண்டவன் - முருகப் பெருமான். பிரம்மனையே நிஜச் சிறைக்குள் வைத்த இவன், ஞானியார்களை எல்லாம் தன் மனச் சிறையில் வைத்துக்கொண்டான். முருகப்பெருமானின் அருளுக்கும் ஆசிக்கும் பாத்திரமான அருந்தவ சீலர்கள் எண்ணற்றோர். இத்தகைய ஞானியர் தங்கள் கனவிலும் நனவிலும் முருகப்பெருமானைத் தரிசித்து, ஆன்மிக நதியில் முத்தெடுத்து மகிழ்ந்தார்கள். முருகப் பெருமான் அருள் பெற்ற சீலர்களுக்கு உதாரணம் சொல்லவேண்டுமானல் முத்தமிழுக்கும் இலக்கணம் சொன்ன அகத்தியரில் இருந்தே பட்டியலைத் துவங்கலாம். சுப்ரமண்ய புஜங்கம் பாடிய ஸ்ரீஆதி சங்கரர், சங்கப் புலவர் நக்கீரர், திருப்புகழ் தந்த அருணகிரிநாதர், குமரக் கோட்டம் கண்ட ஸ்ரீகச்சியப்ப சிவாச்சார்யர், திருத்தணியிலே அருள் பெற்ற முத்துசாமி தீட்சிதர், கௌமாரத்துக்குத் தனிப் புகழ் சேர்த்த வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் கந்தர்சஷ்டி கவசம் தந்தருளிய நல்லூர் தேவராய சுவாமிகள், பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் வள்ளிமலை சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்று பெயர்களை அடுக்கிக்கொண்டே ÷ பாகலாம்.
பாம்பன் சுவாமிகள் எனப்படும் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் முருகனோடு அதிகம் உறவாடியவர். அவன் அருளிலே கலந்தவர். அருணகிரிநாதருக்கு முத்தைத்தரு என்ற முதலடி எடுத்துக் கொடுத்து, முருகப் பெருமான் அவரை ஆட்கொண்டது போலவே, பாம்பன் சுவாமிகளுக்கு கங்கைச் சடையிற் பரித்து என்ற முதலடி எடுத்துக் கொடுத்துக் கவிஆக்கினார். மாபெரும் முருக பக்தராக பாம்பன் சுவாமிகள் இருந்தும், தன் கடைசி காலம் வரை அவர் பழநியம்பதி சென்று தண்டபானி தெய்வத்தைத் தரிசிக்கவில்லை. காரணம், பழநி முருகன் தன் சந்நிக்கு வருமாறு சுவாமிகளுக்கு உத்தரவிடவில்லை. சுவாமிகள் சொன்ன ஒரு பொய் காரணமாக அவருக்கு இந்தத் தண்டனையை வழங்கினான் பழநி பாலகன். அது1891- ஆம் ஆண்டு, ஆடி மாத வெள்ளிக்கிழமை, சுவாமிகளின் வீட்டுக்கு அவரது நண்பர் அங்கமுத்துப் பிள்ளை என்பார் வந்திருந்தார். அப்போது அவரிடம் சுவாமிகள், நாளை நான் பழநிக்குப் புறப்படுவதாக இருக்கிறேன் என்று சொன்னார். அதற்கு பிள்ளையவர்கள் பழநியில் இருந்து எப்போது திரும்புவீர்கள்? என்று கேட்டார். அது என் கையில் இல்லை என்றார் சுவாமிகள். ஏனோ பிள்ளையவர்கள் இப்போது செல்ல வேண்டாமே? என்று கேட்டுக்கொண்டார். சட்டென்று இதை மறுக்கும் முகமாக ,இல்லையில்லை. பழநிக்குச் செல்ல வேண்டும் என்று ஏற்கனவே திட்டமிட்டுவிட்டேன் என்கிறார் உறுதியாக. அப்படியானால் இது குமரக் கடவுளின் கட்டளையோ? என்று பிள்ளை எதிர்க் கேள்வி கேட்டார். ஆம் இது குமரக் கடவுளின் கட்டளைதான் என்றார் சுவாமிகள்.
அங்கமுத்துப் பிள்ளை பிறகு எதுவும் பேசவில்லை. சரி.... நான் புறப்படுகிறேன் என்று சொல்லிவிட்டு, சுவாமிகளின் இல்லத்தை விட்டுச் சென்றார். அன்றைய தினம் மாலை வேளையில் தன் இல்லத்தின் மேல்மாடியில் அமர்ந்து சில பதிகங்கள் பாடினார் சுவாமிகள். அதன் பின் அந்த அறையில் சட்டென்று எதோ ஒரு பேரொளி பிரகாசிக்க.... தலையைத் திருப்பிப் பார்த்தார் சுவாமிகள். குமரக் கடவுள் கடும் கோபமாகக் காட்சி தந்துகொண்டிருந்தான். சுவாமிகள் உள்ளமும் உடலும் நடுங்கின. பழநிக்கு நீ வருமாறு நான் கட்டளை இட்டேனா? ஏன் பொய் உரைத்தாய்? என்று கேட்டான். கடவுளே.... எந்த லாபம் கருதியும் இந்தப் பொய்யை நான் உரைக்கவில்லை. ஆன்ம லாபம் பெற வேண்டும் என்பதற்காகத்தான் ஆம் என்று சொன்னேன். குமரக் கடவுள் அதற்கு, ஆன்ம லாபம் என்னால் ஆகாதோ? இனி பழநிக்கு வர மாட்டேன் என்று என்னிடம் உறுதி கூறு என்றார்.
அப்படியே ஆகட்டும் இறைவா. என்னை மன்னித்தருளும் என்று வேண்டினார் சுவாமிகள் .
தான் சமாதி ஆகும் காலம் வரை அவ்வப்போது பழநிக்கு வரலாமா? என்று முருகப் பெருõனிடம் உத்தரவு கேட்டுக்கொண்டே இருந்தார் சுவாமிகள். ஆனால், கடைசி வரை அவருக்கு உத்தரவு கிடைக்கவில்லை. இதன் காரணமாக பழநியம்பதியை பாம்பன் சுவாமிகள் தரிசிக்கவே இல்லை. பழநிக்கு வந்து தரிசிப்பதற்கு உத்தரவு தராத முருகன் , காஞ்சியில் தன்னை தரிசிப்பதற்கு பாம்பன் சுவாமிகளை நேரிலியே வந்து அழைத்தான். பாம்பன் சுவாமிகள் எண்ணற்ற க்ஷேத்ரங்களைத் தரிசித்திருக்கிறார். ஒரு முறை இப்படிப் புறப்பட்டவர் மதுரை, திருச்சிராப்பள்ளி, திருண்ணாமலை, திருத்தனி போன்ற திருத்தலங்களை எல்லாம் தரிசித்து விட்டு காஞ்சிபுரத்தை அடைந்தார். அங்கே ஆடிசன்பேட்டையில் ஒரு சத்திரத்தில் பத்து நாட்கள் தங்கி இருந்து ஆலயங்களை தரிசிக்க விரும்பினார். காஞ்சியில் ஏராளமான கோட்டங்கள் உள்ளன. இதில் சிவனார் கோட்டம் என்பது ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில். காமக்கோட்டம் என்பது காமட்சியம்மன் கோயில். குமரக்கோட்டம் என்பது முருகன் கோயில். காஞ்சியில் உள்ள
அனைத்து ஆலயங்களையும் தரிசித்த பாம்பன் சுவாமிகள் ஒரு கட்டத்தில் ஊருக்குத் திரும்பத் தீர்மானித்தார். காரணம் கைச்செலவுக்கென அவர் கொண்டுவந்திருந்த பணம் அனைத்தும் செலவுவாகி விட்டிருந்ததுதான். எனவே, தன் கைப்பையை எடுத்துக்கொண்டு ஊருக்குப் புறப்படுவதற்காக வெளியே வந்தார். அப்போது இவருக்கு எதிரே முப்பதில் இருந்து முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க புதியவர் ஒருவர் தோன்றினார். செந்நிற மேனியர். வெண்ணிற ஆடை; தலையில் வெண்ணிற முண்டாசு. ஊருக்குப் புறப்பட்டுக் கெண்டிருந்த பாம்பன் சுவாமிகள் அருகே நெருங்கினார் புதியவர். தாங்கள் எந்த ஊர் என்று கேட்டார். அதற்கு சுவாமிகள், தென்னாடு என்று சொன்னார்.
புதியவரின் கேள்வி தொடர்ந்தது. காஞ்சிபுரத்துக்குத் தாங்கள் வந்தது ஏன்? தெய்வ தரிசனம் செய்வதற்காகத்தான் என்றார் சுவாமிகள். காஞ்சியில் உள்ள எல்லா திருக்கோயில்களையும் தரிசித்து விட்டீர்களா? ஆம்! எனக்குத் தெரிந்த வரையில் இங்குள்ள எல்லா திருக்கோயில்களையும் தரிசித்துவிட்டேன்! குமரக்கோட்டத்தை தரிசித்தீர்களா? - புதியவரின் கேள்வி. சுவாமிகளை நிமிர வைத்தது. குமரக்கோட்டமா? தரிசிக்கவில்லையே...... காஞ்சியில் அது எங்கு இருக்கிறது? இங்கே அருகிலேயே இருக்கிறது. வாருங்கள். என்னைப் பின்தொடருங்கள் என்று சொல்லிய புதியவர், முன்னே நடக்க..... சுவாமிகள் பின் தொடர்ந்தார். இதோ கொடிமரம்.... இதுதான் குமரக்கோட்டம் என்று சுவாமிகளுக்குக் காட்டிய புதியவர், ஒரு கணத்தில் பொசுக்கென்று ஆலயத்துள் மறைந்து போனார். சுவாமிகள் திடுக்கிட்டார். இங்குமங்கும் தேடினார். அப்படி ஒரு ஆசாமி அந்த ஆலயத்துக்குள் இல்லவே இல்லை. பிறகுதான் தெளிந்தார். தனக்குத் வழிகாட்டி இங்கே கூட்டி வந்தவர் குமரக்கோட்ட கடவுளே என்று! குமரக்கோட்ட பெருமானை வணங்கி, போற்றித் துதித்து, ஊருக்குப் புறப்பட்டார் சுவாமிகள். எத்தகைய ஒரு சந்தர்ப்பத்திலும் முருகப் பெருமான் இவரைக் கைவிட்டதில்லை என்பதற்கு உதாரணம் சொல்லும் பல சம்பவங்கள் பாம்பன் சுவாமிகளது வாழ்க்கையில் உண்டு. அதாவது, தன் அடியவர்கள் துன்புறுத்துவதைப் பார்த்துக் கொண்டிருக்க இறைவனுக்கு மனம் வராது. எனவேதான், இந்த அற்புதங்கள் நடக்கும்.
தான் சார்ந்திருக்கும் பகுதியில் ஒரு காட்டைக் குத்தøக்கு எடுத்திருந்தார் சுவாமிகள், விளைச்சலும் பிரமாதமாக இருந்தது. சுவாமிகளிடம் பகை கொண்டிருந்த ஒருவன், சுவாமிகளுக்கு உண்டான குத்தகைக் காட்டில் இருந்து எவரும் அறியா வண்ணம் மரங்களை வெட்டி வண்டிகளில் ஏற்றி, ராமநாதபுரத்துக்குக் கடத்திக் கொண்டிருந்தான். இதை அறிந்த சுவாமிகளின் ஆட்கள், அந்த வண்டிகளை மறித்து, மரக்கட்டைகளை மீட்டு, சுவாமிகளது இடத்துக்கே கொண்டு போய்ச் சேர்த்தனர். இது தொடர்பாகத் தொடரப்பட்ட கிரிமினல் வழக்கில் கில்லாடித் தனமாக சுவாமிகளின் பெயரையும் சோர்த்துவிட்டான் பகைவன். இது சுவாமிகளுக்குப் பாதகமாகிப் போனது, இதுகுறித்த விசாரணையின்போது சம்ந்தப்பட்ட அதிகாரிக்கும் வேண்டுமென்றே குற்றம் சுமத்தப்பட்ட சுவாமிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் முடிவில், உங்களை சிறையில் அடைத்துவிடுவேன் என்று மிரட்டினார் அந்த அதிகாரி. சுவாமிகள் மனம் கலங்கினார். இதை அடுத்து மாலை வேளையில் வீட்டுக்கு வந்த சுவாமிகள், பூஜையறைக்குள் சென்று, இறைவனிடம் கண்ணீர் மல்கப் பிரார்த்தித்தார். இறைவா.... எவருக்கும் எந்த அநியாயத்தையும் நான் செய்யவில்லை. அப்படி இருக்க, என்னை சிறையில் அடைப்பேன் என்கிறாரே என்று மருகினார்.
அன்றைய தினம் இரவு பாம்பன் சுவாமிகளின் கனவில் ஒருவர் தோன்றி, நவபாஷாணம் போய் கடலில் மூழ்கி இறைவனை வணங்கித் திரும்பு. வழக்கில் உனக்கு வெற்றி வரும் என்றார். மிகவும் மகிழ்ந்து, அடுத்து நாள் காலை நவபாஷாணம் சென்று மூழ்கினார். அவரது பீடைகள் ஒழிந்ததையும், தலைக்கணம் குறைந்ததையும் கண்டு மகிழ்ந்தார். கனவில் இறைவன் உத்தரவிட்டவாறு நீதிமன்றம் சென்றார். விசாரணை அதிகாரியும், சற்றும் எதிர்
பாராமல் , உம் மீது எந்தக் குற்றமும் இல்லை நீர் புறப்படலாம் என்று தீர்ப்பளித்தார். முதல் நாள் கடுமையாக நடந்து கொண்ட விசாரணை அதிகாரி, மறுநாள் இப்படி சாந்தமாக நடந்துகொண்டது பற்றி பலரும் அதிசயித்துப் பேசினர். வேலேந்திய அந்த வேலன், தனது ஆயுதமான வேலின் மகிமையைப் பலருக்கும் உணர்த்த, பாம்பன் சுவாமிகளையே ஒரு கருவியாகத் தேர்ந்தெடுத்து, ஒரு திருவிளையாடல் நிகழ்த்தினான். நிகழ்த்தப்பட்ட இடம் - சென்னை சென்டரல் எதிரே உள்ள அரசு பொது மருத்துவமனை.
1923-ஆம் வருடம் டிசம்பர் மாதம் 27-ஆம் தேதியன்று பகல் வேளையில் சென்னை தம்புச் செட்டித் தெருவின் வழியாக நடந்து கொண்டிருந்தார் பாம்பன் சுவாமிகள் . அப்போது யதேச்சையாக வந்த குதிரை வண்டி இவர் மீது பலமாக மோதியது. இதில், சுவாமிகளின் இடது கணுக்கால் முறிந்தது. ரத்தம் கசிய, சுவாமிகள் தரையில் விழுந்தார். அந்த நேரத்திலும் செவ்வேலைத் துதித்துக்கொண்டே மயங்கினார். அந்த வழியே சென்ற சுவாமிகளின் பக்தர்கள் பலர் இதைப் பார்த்துக் கலங்கிப் போய், சுவாமிகளைத் தூக்கிக் கொண்டு அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். சுவாமிகள் விரைவிலேயே நலம் பெற வேண்டி, அவரின் அடியவர்கள் தங்கள் இல்லத்தில் இருந்தப்படியே சண்முக கவச பாராயணத்தைத் தூவங்கினர். சுவாமிகளின் சீடரான சின்னசாமி ஜோதிடரும் தன் இல்லத்தில் பாராயணத்தை ஆரம்பித்தார். ஒரு நாள் பாராயணத்தின்போது சுவாமிகளின் முறித்த காலின் பகுதியை இரு வேல்கள் தாங்கி நின்று இணைப்பது போன்ற ஒர் அரிய காட்சியைத் தன் மனக் கண் முன் கண்டார் சின்னசாமி ஜோதிடர். இது ஏதோ ஒரு நல்ல அறிகுறிக்கான முன்னோட்டம்தான் என்று அவர் மனம் மகிழ்ந்தார். இத்தகைய அருட்காட்சி அவரது தினசரி பாராயணத்தின் போதும் தொடர்ந்தது.
ஆனால், மருத்துவமனையில் டாக்டர்களின் கருத்து வேறு விதமாக இருந்தது. உணவில் மிகுந்த பத்தியத்தைத் தாங்கள் மேற்கொண்ட காரணத்தால், முறிந்த எலும்புகள் கூடுவதற்கான வாய்ப்பு இனி இல்லை என்று தீர்மானமாகச் சொல்லி விட்டனர். இந்த செய்தி கேள்விப்பட்ட சுவாமிகளின் அடியவர்கள் ஏகத்துக் கும் கவலைப்படத் துவங்கினர். மருத்துவர்களின் தீர்ப்பு மால்மருகனின் தீர்ப்பு ஆகுமா? அவனது திருவிளையாடல் பின்னால்தான் ஆரம்பித்தது. பாம்பன் சுவாமிகள் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்ட பதினோராம் நாள் இரவு அந்த அற்புதக் காட்சி நடந்தது. சுவாமிகள் படுத்திருந்த அறையிலேயே இரு மயில்கள் தோன்றி, தம் நீண்ட தோகைகளை பிரமாண்டமாக விரித்து ஆனந்த நடனம் ஆடின. அதில் ஒரு மயில் பெரியது; மற்றது சிறியது. இரு மயில்களின் அற்புத ஆட்டத்தைக் கண்ட சுவாமிகள் மெய்சிலிர்த்தார். இந்த மயூரவாகன சேவையைக் கண்டு, மனம் குளிர்ந்து இறைவனை வணங்கினார். (இதுவே பின்னாளில் மயூரவாகன சேவை என்று மாபெரும் விழாவாக நடக்கிறது). மயில்களின் நடமாட்டம் மருந்துக்குக்கூட இல்லாத மருத்தவமனைப்பகுதியில் நடந்த இந்தச் செயலை, முருகனின் அற்புதம் என்றதான்
கூறவேண்டும்.
அடுத்த நாளில் இன்னும் ஒரு விந்தை நிகழ்ந்தது. தான் படுத்திருந்த இடத்தின் அருகே செவ்விதழ் கொண்ட சிறு மழலை ஒன்று படுத்தருப்பதை சுவாமிகள் கண்டார். இறை அம்சம் ததும்பிய அந்த மழலையைப் பார்த்த மறுகணம் முருகா... என்று மனமுருக தரிசித்தார் சுவாமிகள். ஒரு சில வினாடிகளுக்குப் பின் இந்த குழந்தையின் திருவடிவம் மறைந்து போனது. எத்தகைய துயர் வரினும், நான் உன்னுடன்தான் இருக்கிறேன் என்பதை சுவாமிகளுக்கு உணர்த்துவதற்காகத்தான் இந்த இரு நிகழ்வுகளும் நிகழ்ந்தன. இன்னும் ஒரு சில தினங்களுக்குள் உன் உபாதை நீங்கும். அதுவரை மருத்துவமனைய விட்டுச் செல்ல வேண்டாம் என்றொரு அசரீரி வாக்கு சுவாமிகள் சிந்தையில் அப்போது ஒலித்தது. ஆம்! மயில் உருக் கொண்டும் குழந்தை வடிவம் கொண்டும். அசரீரி வாக்கில் ஆசி புரிந்ததும் அந்த முருகப் பெருமானின் திருவிளையாடல் அல்லவோ! அடுத்த நாளே, எந்த விதமான மருத்துவ சிகிச்சையும் இல்லாமல், சுவாமிகளின் முறிந்த இடது கணுக்கால் எலும்புகள் ஒன்று கூடின. இறைவனது அருளாசி குறித்து மருத்துவர்கள் உட்பட அங்கு கூடி இருந்தோர் அனைவரும் பிரமித்துப் போனார்கள். எங்களையும் மீறி நடந்த செயல் இது என்று மருத்துவர்கள்
வியப்புடன் கருத்து தெரிவித்தனர்.
தன் இணையடியில் பாம்பன் சுவாமிகளை இணைத்துக் கொள்வதற்கு முருகப் பெருமான் தேர்ந்தெடுத்த தினம் - 30.5.1929 சுவாமிகளும் இதை அறிவார். சுக்கில ஆண்டுவைகாசி மாதம் அமரபட்சத்து சஷ்டியும் அவிட்டமும் கூடிய நாள். குருவாரமான வியாழக்கிழமை அன்று காலை சுமார் ஏழேகால் மணிக்கு சுவாசத்தை நிறுத்திக்கொண்டார் சுவாமிகள். தன் சம்பாத்தியத்தில் சுவாமிகள் திருவான்மியூரில் வாங்கிய இடத்தில் அவரது உடலை அடக்கினார்கள். சிவ பூஜை, வேத பாராயணம் எல்லாம் ஓலிக்க... அவரது திருவுடலை அடக்கம் செய்தனர் அவரது அடியார்கள். பாம்பன் சுவாமிகளின் சாமதி திருக்கோயில், திருவான்மியூரில் கலாக்ஷேத்ரா பள்ளி வளாகத்தை ஒட்டி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் இறங்கி கொண்டோ, அல்லது தியாகராஜா தியேட்டர் பேருந்து நிலையத்தில் இறங்கிக்கொண்டோ, பத்து நிமிடம் நடந்தால் சுவாமிகளின் திருக்கோயில் வரும் (போன்:044-2452 1866). சமாதியுள் திருமுகம் வடக்கு நோக்கி இருக்கிறது. இதற்கு சற்றுத் தள்ளி, முருகப் பெருமானின் சந்நிதி. ஒவ்வொரு வியாழன், பௌர்ணமி, அமாவாசை, சஷ்டி ஆகிய தினங்களில் இங்கு விமரிசையான வழிபாடு நடக்கிறது. பாம்பன் சுவாமிகள் எத்தனையோ அருளாளர்களைச் சந்தித்துள்ளார். கனவிலும் நனவிலும் முருகப் பெருமான் தரிசனம் பெற்றுள்ளார். எமுதி உள்ள பாடல்கள் தேனினும் இனியவை. இவரது அருளுக்குப் பாத்திரமான பக்தர்கள் இந்தியா மட்டுமில்லாமல் மலேஷியா, சிங்கபூர், பர்மா, இலங்கை போன்ற தேசங்களில் ஏராளமானோர் இருக்கின்றனர். சுவாமிகளின் குருபூஜை மற்றும் மயூரவாகன சேவை போன்ற விசேஷ நாட்களில் குடும்பத்தோடு வந்து தரிசித்து அருள் பெற்று ஆனந்திக்கின்றனர். பாம்பன் சுவாமிகளின் மலர் பாதம் தொழுது, அவரது அருளாசியை இறைஞ்சி நிற்போம்.