Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ஆறாம் திருமுறையில் பாடிய பாடல் ...
முதல் பக்கம் » ஆறாம் திருமறை
ஆறாம் திருமுறையில் பாடிய பாடல் (பகுதி-2) | தேவாரம்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

08 செப்
2011
04:09

52. திருவீழிமிழலை (அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோயில், திருவீழிமிழலை, திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

520. கண்ணவன்காண் கண்ணொளிசேர் காட்சி யான்காண்
கந்திருவம் பாட்டிசையிற் காட்டுகின்ற
பண்ணவன்காண் பண்ணவற்றின் திறலா னான்காண்
பழமாகிச் சுவையாகிப் பயக்கின் றான்காண்
மண்ணவன்காண் தீயவன்காண் நீரா னான்காண்
வந்தலைக்கும் மாருதன்காண் மழைமே கஞ்சேர்
விண்ணவன்காண் விண்ணவர்க்கு மேலா னான்காண்
விண்ணிழிதண் வீழி மிழலை யானே.

தெளிவுரை : சிவபெருமான் கண்ணாகவும், கண்ணின் ஒளியாகவும், காட்சியாகவும் விளங்குபவர்; இனிய இசையில் மிளிரும் பண்ணாகவும், அதன் திறனாகவும் திகழ்பவர்; பழமாகவும் அதன் சுவையாகவும் விளங்குபவர்; மண், நெருப்பு, நீர், காற்று, மழைமேகம் சேர் ஆகாயம் என மேவும் ஐம்பூதமாகவும் விளங்குபவர். அப்பெருமான், தேவர்களுக்குத் தலைவராகித் திருமாலால் தேவலோகத்திலிருந்து பூவுலகிற்குக் கொணர்ந்து நிறுவப் பெற்ற விமானத்தில் வீழிமிழலையின்கண் மேவியவர் ஆவார்.

521. ஆலைப் படுகரும்பின் சாறு போல
அண்ணிக்கும் அஞ்செழுத்தின் நாமத் தான்காண்
சீல முடையடியார் சிந்தை யான்காண்
திரிபுரமூன் றெரிபடுத்த சிலையி னான்காண்
பாலினொடு தயிநறுநெய் யாடி னான்காண்
பண்டரங்க வேடன்காண் பலிதேர் வான்காண்
வேலை விடமுண்ட மிடற்றி னான்காண்
விண்ணிழிதண் வீழி மிழலை யானே.

தெளிவுரை : சிவபெருமான், கரும்பின் சாறு போன்று இனிமை தந்து மகிழ்விக்கும் திருவைந்தெழுத்தாக விளங்குபவர்; ஒழுக்க சீலமும் ஆகாரமும் உடைய அடியவர்களின் சிந்தையில் உள்ளவர்; முப்புரங்களை எரித்த வில்லை ஏந்தியவர்; பஞ்ச கவ்வியத்தை விரும்பி பூசனை ஏற்பவர்; பண்டரங்கம் என்னும் திருக்கூத்து புரிபவர்; கபாலம் ஏந்திப் பிச்சையேற்பவர்; கடலில் தோன்றிய நஞ்சினை மிடற்றில் தேக்கியவர். அப்பெருமான் வீழிமிழலையில் மேவும் விண்ணிழி விமானத்தில் வீற்றிருப்பவர் ஆவார்.

522. தண்மையொடு வெம்மைதா னாயி னான்காண்
சக்கரம்புட் பாகற் கருள்செய் தான்காண்
கண்ணுமொரு மூன்றுடைய காபாலிகாண்
காமனுடல் வேவித்த கண்ணி னான்காண்
எண்ணில்சமண்தீர்த் தென்னையாட் கொண்டான்காண்
இருவர்க் கெரியா யருளி னான்காண்
விண்ணவர்கள் போற்ற இருக்கின் றான்காண்
விண்ணிழிதண் வீழி மிழலை யானே.

தெளிவுரை : சிவபெருமான், குளுமையும் வெம்மையும் ஆனவர்; திருமாலுக்குச் சக்கரப்படையை அளித்தவர்; முக்கண்ணுடையவர்; கபாலம் ஏந்தியவர்; மன்மதனை எரித்தவர்; சமண நெறியிலிருந்து என்னை மீட்டு ஆட்கொண்டவர்; திருமால் பிரமன் ஆகியோருக்கும், எரியும் நெருப்பு வண்ணமாக ஓங்கிக் காட்சி நல்கியவர்; தேவர்கள் ஏத்த விளங்குபவர். அவர் வீழி மிழலையுள் விண்ணிழி விமானத்தில் மேவியவர் ஆவார்.

523. காதிசைந்த சங்கக் குழையி னான்காண்
கனக மலையனைய காட்சி யான்காண்
மாதிசைந்த மாதவமுஞ் சோதித் தான்காண்
வல்லேன வெள்ளெயிற்றா பரணத் தான்காண்
ஆதியன்காண் அண்டத்துக் கப்பால் லான்காண்
ஐந்தலைமா நாகம்நாண் ஆக்கி னான்காண்
வேதியன்காண் வேதவிதி காட்டி னான்காண்
விண்ணிழிதண் வீழி மிழலை யானே.

தெளிவுரை : சிவபெருமான், காதில் சங்கினால் ஆகிய குழையணிந்தவர்; பொன் மலை போன்று விளங்குபவர்; உமாதேவியார் புரிந்த தவத்தை உவந்து சோதித்தவர்; ஏனத்தின் மருப்பினை ஆபரணமாக உடையவர்; ஆதி மூர்த்தியாகவும், அண்டங்களைக் கடந்தவராகவும் விளங்குபவர்; ஐந்தல நாகத்தை அரையில் கட்டியவர்; வேதத்தின் நாயகராகவும், அத்தகைய விதியை அருளியவராகவும் ஆனவர். அப்பெருமான் வீழிமிழலையுள் உள்ளவர் ஆவார்.

524. நெய்யினோடு பாலிளநீ ராடி னான்காண்
நித்தமண வாளனென நிற்கின் றான்காண்
கையின்மழு வாளொடுமா னேந்தி னான்காண்
காலனுயிர் காலாற் கழிவித் தான்காண்
செய்யதிரு மேனிவெண் ணீற்றி னான்காண்
செஞ்சடைமேல் வெண்மதியஞ் சேர்த்தினான் காண்
வெய்ய கனல்விடையாட் டாடி னான்காண்
விண்ணிழிதண் வீழி மிழலை யானே.

தெளிவுரை : சிவபெருமான் நெய், பால், இளநீர் ஆகியவற்றைப் பூசையாகக் கொள்பவர்; மணவாளத் திருக்கோலத்தில் எஞ்ஞான்றும் திகழ்பவர்; கையில் மழுப்படையுடையவர் மானும் ஏந்தியவர்; காலனின் உயிரைக் காலால் காய்ந்தவர்; சிவந்த திருமேனியில் வெண்ணீறு தரித்தவர்; சிவந்த சடையின்மேல் வெண்மையான சந்திரனைச் சூடியவர்; கையில் நெருப்பேந்தி ஆடுபவர்; அப்பெருமான், வீழிமிழலையுள் மேவியவர் ஆவார்.

525. கண்துஞ்சுங் கருநெடுமால் ஆழி வேண்டிக்
கண்ணிடத்து சூட்டக்கண் டருளு வான்காண்
வண்டுண்ணும் மதுக்கொன்றை வன்னி மத்தம்
வான்கங்கை சடைக்கரந்த மாதே வன்காண்
பண்தங்கு மொழிமடவாள் பாகத் தான்காண்
பரமன்காண் பரமேட்டி யாயி னான்காண்
வெண்டிங்கள் அரவொடுசெஞ் சடைவைத் தான்காண்
விண்ணிழிதண் வீழி மிழலை யானே.

தெளிவுரை : திருமால், சக்கரப்படை வேண்டிப் பூசிக்கும்போது, ஒரு மலர் குறையத் தன் கண்ணை இடந்து அருச்சிக்க அருள் நல்கிய சிவபெருமான், கொன்றைமலர், வன்னி, ஊமத்தம், கங்கை, சந்திரன், அரவம் ஆகியவற்றைச் சடையில் தரித்தவர்; உமைபாகர். பரமனாகவும், பரமேட்டியாகவும் திகழ்பவர். அப் பெருமான், வீழிமிழலையில் வீற்றியிருப்பவர் ஆவார்.

526. கற்பொலிதோள் சலந்தரனைப் பிளந்த ஆழி
கருமாலுக் கருள்செய்த கருணை யான்காண்
விற்பொலிதோள் விசயன்வலி தேய்வித் தான்காண்
வேடுவனாய்ப் போர்பொருது காட்டி னான்காண்
தற்பரமாந் தற்பரமாய் நிற்கின் றான்காண்
சதாசிவன்காண் தன்னொப்பா ரில்லா தான்காண்
வெற்பரையன் பாவை விருப்பு னான்காண்
விண்ணிழிதண் வீழி மிழலை யானே.

தெளிவுரை : சிவபெருமான், சலந்தாசூரனை அழித்த ஆழிப் படையைத் திருமாலுக்கு ஆயுதமாக அளித்து அருள் புரிந்தவர்; விசயனோடு வேடுவனாகத் தோன்றிப் போர் புரிந்தவர்; மாயை நீங்கிய சுயமாகிய பரம் பொருளானவர்; சதாசிவ மூர்த்தியாய் விளங்குபவர்; தனக்கு நிகராக யாரும் இல்லாத மேன்மையுடையவர்; மலை மகளை விரும்பித் திருமேனியில் பாகம் கொண்டவர். அப் பெருமான், வீழிமிழலையுள் வீற்றிருப்பவர் ஆவார்.

527. மெய்த்தவன்காண் மெய்த்தவத்தில் நிற்பார்க்கெல்லாம்
விருப்பிலா இருப்புமன வினையர்க் கென்றும்
பொய்த்தவன் காண்புத்தன் மறவா தோடி
யெறிசல்லி புதுமலர்க ளாக்கி னான்காண்
உய்த்தவன்காண் உயர்கதிக்கே உள்கினாரை
உலகனைத்தும் ஒளித்தளித்திட் டுய்யச் செய்யும்
வித்தகன்காண் வித்தகர்தாம் விரும்பி யேத்தும்
விண்ணிழிதண் வீழி மிழலை யானே.

தெளிவுரை : சிவபெருமான், மெய்த்தவமாகவும், மெய்த்தவத்தில் மேவாத கடின சித்தம் உடையவர்களுக்குத் தோன்றாதவராகவும் திகழ்பவர்; புத்த சமயத்தில் மேவிய சாக்கிய நாயனார் ஈசனை மறவாது நினைத்துக் கற்களை நறுமலராக மனத்தினால் கொண்டு ஏத்த, உயர்ந்த கதியை அருளிச் செய்தவர்; உலகினைத் தோற்றம் செய்தும், ஒளித்து மறைத்தும், உய்யுமாறு செய்தும் விளங்கும் வித்தகர். அப்பெருமான், விரும்பி ஏத்தப்பெறும் வீழிமிழலையுள் வீற்றிருப்பவர் ஆவார்.

528. சந்திரனைத் திருவடியால் தளர்வித் தான்காண்
தக்கனையும் முனிந்தெச்சன்தலை கொண்டான் காண்
இந்திரனைத் தோள்முரிவித் தருள்செய் தான்காண்
ஈசன்காண் நேசன்காண் நினைவோர்க் கெல்லாம்
மந்திரமும் மறைப்பொருளு மாயி னான்காண்
மாலொடயன் மேலொடுகீழ் அறியா வண்ணம்
வெந்தழலின் விரிசுடராய் ஓங்கி னான்காண்
விண்ணிழிதன் வீழி மிழலை யானே.

தெளிவுரை : சிவபெருமான், தக்கன் புரிந்த வேள்வியில் பங்கேற்ற சந்திரனைக் காலால் தேய்த்தவர்; தக்கனையும் எச்சனையும் தண்டித்தவர்; இந்திரனின் தோளை நெரித்துப் பின்னர் அருளியவர்; யாவர்க்கும் ஈசனாகவும், அன்பர்க்கு நேசனாகவும், நினைந்து ஏத்தும் அடியவர்களுக்கு மந்திரமும் மறைப்பொருளாகவும் ஆனவர்; மாலும் அயனும் காண்பதற்கு அரிய சோதிப் பொருளாக உயர்ந்தவர். அப்பெருமான், வீழி மிழலையில் விளங்குபவர் ஆவார்.

529. ஈங்கைப்பே ரீமவனத் திருக்கின் றான்காண்
எம்மான்காண் கைம்மாவினுரிபோர்த் தான்காண்
ஓங்குமலைக் கரையன்றன் பாவை யோடும்
ஒருருவாய் நின்றான்காண் ஓங்கா ரன்காண்
கோங்குமலர்க் கொன்றையந்தார்க் கண்ணியான்காண்
கொல்லேறு வெல்கொடி மேற் கூட்டினான்காண்
வேங்கைவரிப் புலித்தோல்மே லாடை யான்காண்
விண்ணிழிதண் வீழி மிழலை யானே.

தெளிவுரை : சிவபெருமான், சுடுகாட்டில் விளங்குபவர்; யானையின் தோலைப் போர்த்தவர்; உமாதேவியை உடனாகக் கொண்டு ஒரே வடிவம் ஆகி விளங்கும் ஓங்காரப் பொருளானவர்; கொன்றை மாலை சூடியவர்; இடபத்தைக் கொடியாக உடையவர்; புலித் தோலை ஆடையாக உடையவர். அப் பெருமான் வீழிமிழலையுள் மேவுபவர் ஆவார்.

திருச்சிற்றம்பலம்

53. திருவீழிமிழலை (அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோயில், திருவீழிமிழலை, திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

530. மானேறு கரமுடைய வரதர் போலும்
மால்வரைகால் வளைவில்லா வளைத்தார் போலும்
கானேறு கரிகதற வுரித்தார் போலுங்
கட்டங்கங் கொடிதுடிகைக் கொண்டார் போலும்
தேனேறு திருவிதழித் தாரார் போலுந்
திருவீழி மிழலையமர் செல்வர் போலும்
ஆனேற தேறும் அழகர் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.

தெளிவுரை : சிவபெருமான், மானைக் கரத்தில் ஏந்தி அருள் புரிபவர்; மேரு மலையை வில்லாக வளைத்தவர்; யானையின் தோலை உரித்தவர்; மழுப்படை, இடபக்கொடி, உடுக்கை ஆகியவற்றை உடையவர். கொன்றை மாலை சூடியவர்; திருவீழிமிழலையுள் வீற்றிருப்பவர். அப் பெருமான், இடபத்தை வாகனமாகக் கொண்ட அழகராகி அடியேனை ஆட்கொண்ட அடிகள் ஆவார்.

531. சமரம்மிகு சலந்தரன்போர் வேண்டி னானைச்
சக்கரத்தார் பிளப்பித்த சதுரர் போலும்
நமனையொரு காலகுறைத்த நாதர் போலும்
நாரணனை யிடப்பாகத் தடைத்தார் போலும்
குமரனையும் மகனாக வுடையார் போலுங்
குளிர்வீழி மிழலையார் குழகர் போலும்
அமரர்கள்பின் அமுதுணநஞ் சுண்டார் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.

தெளிவுரை : ஈசன், சலந்தராசூரனை சக்கரப் படையால் அழித்த சதுரர்; இயமனைக் காலால் அழித்தவர்; திருமாலைத் தன் இடது பாகத்தில் பொருந்தியவர் குமாரக்கடவுளைத் திருமகனாக உடையவர்; குளிர்ச்சி மிக்க திருவீழி மிழலையுள் விளங்குபவர். அப் பெருமான், தேவர்கள் பின்னர் அமுதத்தை உண்ணும் அருளைப் புரிபவராய், முன்னம் நஞ்சினை உட்கொண்டு அடியேனை ஆளாகக் கொண்ட அடிகள் ஆவார்.

532. நீறணிந்த திருமேனி நிமலர் போலும்
நேமிநெடு மாற்கருளிச் செய்தார் போலும்
ஏறணிந்த கொடியுடையெம் மிறைவர் போலும்
எயில்மூன்றும் எரிசரத்தா லெய்தார் போலும்
வேறணிந்த கோலமுடை வேடர் போலும்
வியன்வீழி மிழலையுறை விகிர்தர் போலும்
ஆறணிந்த சடாமகுடத் தழகர் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.

தெளிவுரை : ஈசன், திருவெண்ணீறு அணிந்த திருமேனியுடையவர்; நிமலர்; திருமாலுக்குச் சக்கராயுதத்தை அருளிச் செய்தவர்; இடபத்தைக் கொடியாகக் கொண்டவர்; மூன்று கோட்டைகளையும் அக்கினியை அம்பாக்கி எரித்துச் சாம்பலாக்கியவர்; பல வண்ணத் திருவேடம் கொள்பவர்; வீழிமிழலையுள் வீற்றிருப்பவர். அப் பெருமான், கங்கையைச் சடையில் தரித்த அழகராகி, அடியேனை ஆளாகக் கொண்ட அடிகள் ஆவார்.

533. கைவேழ முகத்தவனைப் படைத்தார் போலுங்
கயாசுரனை யவனாற்கொல் வித்தார் போலும்
செய்வேள்வித் தக்கனைமுன் சிதைத்தார் போலும்
திசைமுகன்றன் சிரமொன்று சிதைத்தார் போலும்
மெய்வேள்வி மூர்த்திதலை யறுத்தார் போலும்
வியன்வீழி மிழலையிடங் கொண்டார் போலும்
ஐவேள்வி ஆறங்க மானார் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.

தெளிவுரை : சிவபெருமான், யானை முகத்தோற்றப் பொலிவுடைய விநாயகரைப் படைத்துக் கயாமுகாசுரனை வதையுறச் செய்தவர்; தக்கனையும் அவன் செய்த வேள்வியையும் சிதைத்தவர்; பிரமனின் சிரங்களுள் ஒன்றை அறுத்தவர்; வீழிமிழலையுள் வீற்றிருப்பவர். அப்பெருமான் ஐந்து வேள்வியும் வேதத்தின் ஆறு அங்கமும் ஆகியவராய், அடியேனை ஆளாகக் கொண்ட அடிகள் ஆவார்.

534. துன்னத்தின் கோவணமொன் றுடையார் போலுந்
சுடர்மூன்றுஞ் சோதியுமாய்த் தூயார் போலும்
பொன்னொத்த திருமேனிப் புனிதர் போலும்
பூதகணம் புடைசூழ வருவார் போலும்
மின்னொத்த செஞ்சடைவெண் பிறையார் போலும்
வியன்வீழி மிழலைசேர் விமலர் போலும்
அன்னத்தோர் அயன்முடிசேர் அடிகள் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.

தெளிவுரை : ஈசன் வைத்து விளங்கும் கோவணத்தை உடையவர்; சூரியன், சந்திரன், அக்கினி என ஆகித் தூய்மையுடையவராகவும், பொன்னொத்த திருமேனியுடைய புனிதராகவும் விளங்குபவர்; பூத கணங்கள் புடைசூழ் விளங்குபவர்; மின்னலைப் போன்ற சிவந்த சடையுடையவர்; வீழி மிழலையுள் விளங்குபவர். அப்பரமன், அன்னத்தைக் கொடியாகக் கொண்ட பிரமனின் தலையைக் கபாலமாக ஏந்தியவராய் அடியேனை ஆட்கொண்ட அடிகள் ஆவார்.

535. மாலாலும் அறிவரிய வரதர் போலும்
மறவாதார் பிறப்பறுக்க வல்லார் போலும்
நாலாய மறைக்கிறைவ ரானார் போலும்
நாமவெழுத் தஞ்சாய நம்பர் போலும்
வேலார்கை வீரியைமுன் படைத்தார் போலும்
வியன்வீழி மிழலையார் விகிர்தர் போலும்
ஆலாலம் மிடற்றடக்கி அளித்தார் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.

தெளிவுரை : சிவபெருமான், திருமாலால் அறிவதற்கு அரியவர்; நினைந்து ஏத்தும் அடியவர்களுக்குப் பிறவாப் பேற்றினை அருள்பவர்; நான்கு மறைகளுக்கும் தலைவர்; திருவைந்தெழுத்தாக விளங்குபவர்; சூலப் படையைக் கையில் யேந்தி விளங்கும் காளியைப் படைத்தவர்; பெருமையுடைய வீழிமிழலையுள் மேவும் விகிர்தர். அப்பெருமான் ஆலகால விடத்தை மிடற்றில் அடக்கியவராய் அடியேனை ஆளாகக் கொண்ட அடிகள் ஆவார்.

536. பஞ்சடுத்த மெல்விரலாள் பங்கர் போலும்
பைந்நாகம் அரைக்கசைத்த பரமர் போலும்
மஞ்சடுத்த மணிநீல கண்டர் போலும்
வடகயிலை மலையுடைய மணாளர் போலுஞ்
செஞ்சடைக்கண் வெண்பிறை கொண்டணிந்தார் போலுந்
திருவீழி மிழலையமர் சிவனார் போலும்
அஞ்சடக்கும் அடியவர்கட் கணியர் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.

தெளிவுரை : சிவபெருமான், பஞ்சு போன்ற மென்மையான விரலுடைய உமா தேவியைப் பாகமாகக் கொண்டவர்; நாகத்தை அரையில் கட்டியவர்; மேகம் போன்று விளங்கும் நீலகண்டர்; பெருமையுடைய கயிலை மலையில் மேவும் மணாளர்; சிவந்த சடை முடியில் வெண்மையான சந்திரனைச் சூடியவர்; திருவீழி மிழலையில் வீற்றிருப்பவர். அப் பெருமான், ஐம்புலன்களை அடக்கிய அடியவர்களுக்கு அண்மையில் விளங்குபவராய் அடியேனை ஆளாகக் கொண்ட அடிகள் ஆவார்.

537. குண்டரொடு பிரித்தெனையாட் கொண்டார் போலும்
குடமூக்கி லிடமாக்கிக் கொண்டார் போலும்
புண்டரிகப் புதுமலரா தனத்தார் போலும்
புள்ளரசைக் கொன்றுயிர்பின் கொடுத்தார் போலும்
வெண்டலையிற் பலிகொண்ட விகிர்தர் போலும்
வியன் வீழி மிழலைநக ருடையார் போலும்
அண்டத்துப் புறத்தப்பா லானார் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.

தெளிவுரை : சிவபெருமான், சமண நெறியிலிருந்து என்னை ஆட்கொண்டவர்; குடமூக்கில் விளங்குபவர்; அடியவர்களின் இதயத் தாமரையில் விளங்குபவர்; கருடனை மாயச் செய்து, பின்னர் உயிர் பெறச் செய்தவர்; மண்டையோட்டினை ஏந்திப் பலியேற்றவர்; வீழி மிழலையுள் வீற்றிருப்பவர். அண்டத்துக்கு அப்பாலும் விளங்கும் அப் பெருமான் அடியேனை ஆளாகக் கொண்ட அடிகள் ஆவார்.

538. முத்தனைய முகிழ்முறுவ லுடையார் போலும்
மெய்பவளக் கொடியனைய சடையார் போலும்
எத்தனையும் பத்திசெய்வார்க் கினியார் போலும்
இருநான்கு மூர்த்திகளு மானார் போலும்
மித்திரவச் சிரவணற்கு விருப்பர் போலும்
வியன்வீழி மிழலையமர் விகிர்தர் போலும்
அத்தனொடும் அம்மையெனக் கானார் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.

தெளிவுரை : சிவபெருமான், முத்துப்போன்ற இனிய முறுவல் புரிபவர்; பவளக் கொடி போன்ற சடைமுடியுடையவர்; பக்தர்களுக்கு மிகவும் இனியவர்; அட்ட மூர்த்தியாகியவர்; தோழனாகிய குபேரன்பால் மிக விருப்பம் உடையவர்; வீழி மிழலையுள் விளங்கும் விகிர்தர். அம்மையப்பராக விளங்கும் அப்பெருமான் அடியேனை ஆளாகக் கொண்ட அடிகள் ஆவார்.

539. கரியுரிசெய் துமைவெருவக் கண்டார் போலுங்
கங்கையையுஞ் செஞ்சடைமேற் கரந்தார் போலும்
எரியதொரு கைத்தரித்த இறைவர் போலும்
ஏனத்தின் கூனெயிறு பூண்டார் போலும்
விரிகதிரோ ரிருவரைமுன் வெகுண்டார் போலும்
வியன்வீழி மிழலையமர் விமலர் போலும்
அரிபிரமர் துதிசெயநின் றளித்தார் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.

தெளிவுரை : சிவபெருமான், உமாதேவியார் அஞ்சுமாறு யானையை அடர்த்து, அதன் தோலை உரித்தவர்; கங்கையைச் சடையில் கரந்தவர்; தக்கன் புரிந்த வேள்வியில் பங்கேற்ற அக்கினியின் கரத்தைத் துண்டித்தவர்; ஏனத்தின் வளைந்த பல்லை அணியாகக் கொண்டவர்; சூரியனையும் சந்திரனையும் தண்டித்தவர்; வீழிமிழலையுள் விளங்குபவர். அரியும் அயனும் துதி செய்து ஏத்த நின்ற அப் பரமன், அடியேனை ஆளாகக் கொண்ட அடிகள் ஆவார்.

540. கயிலாய மலையெடுத்தான் கதறி வீழக்
கால்விரலாள் அடர்ந்தருளிச் செய்தார் போலும்
குயிலாரும் மென்மொழியாள் குளிர்ந்து நோக்கக்
கூத்தாட வல்ல குழகர் போலும்
வெயிலாய சோதிவிளக் கானார் போலும்
வியன்வீழி மிழலையமர் விகிர்தர் போலும்
அயிலாரும் மூவிலைவேற் படையார் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.

தெளிவுரை : கயிலை மலையை எடுத்த இராவணன் கதறி வீழுமாறு கால் விரலால் அடர்த்தியும், பின்னர் அருள் செய்தும் விளங்கும் சிவபெருமான், உமாதேவியார் குளிர்ந்து நோக்கத் திருக்கூத்துப் புரிபவர்; சூரியனாக ஒளிர்பவர்; வீழி மிழலையுள் ஒளிர்பவர். கூர்மையான சூலப்படையுடைய அப்பெருமான் அடியேனை ஆளாகக் கொண்ட அடிகள் ஆவார்.

திருச்சிற்றம்பலம்

54. திருப்புள்ளிருக்கு வேளூர் (அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில், வைத்தீசுவரன்கோயில், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

541. ஆண்டனை அடியேனை ஆளாக் கொண்டு
அடியோடு முடியயன்மா லறியா வண்ணம்
நீண்டானை நெடுங்களமா நகரான் தன்னை
நேமிவான் படையால்நீ ளுரவோன் ஆகங்
கீண்டானைக் கேதாரம் மேவி னானைக்
கேடிலியைக் கிளர்பொறிவா ளரவோ டென்பு
பூண்டானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.

தெளிவுரை : சிவபெருமான், என்னை ஆட்கொண்டவர்; அடியேனை அடிமையாகக் கொண்டவர்; தனது திருவடியோடு திருமுடியையும், மாலும் அயனும் அறியாதவாறு, அரியதொரு தீப் பிழம்பாய் நெடிது ஓங்கியவர்; திருநெடுங்களம் என்னும் திருத்தலத்தில் விளங்குபவர்; சலந்தாசூரனைச் சக்கரப் படையால் அழித்தவர்; திருக்கேதாரத்தில் மேவி விளங்குபவர்; அழிவில்லாதவர்; அரவத்தையும் எலும்பையும் ஆபரணமாகப் பூண்டவர்; புள்ளிருக்கு வேளூரில் வீற்றிருப்பவர். அப்பெருமானைப் போற்றி வணங்காது இத்துணைக் காலத்தையும் வீணாகக் கழித்தேனே !

542. சீர்த்தானைச் சிறந்தடியேன் சிந்தை யுள்ளே
திகழ்ந்தானைச் சிவன்தன்னைத் தேவதேவைக்
கூர்த்தானைக் கொடுநெடுவேற் கூற்றந் தன்னைக்
குரைகழலாற் குமைத்துமுனி கொண்ட அச்சம்
பேர்த்தானைப் பிறப்பிலியை இறப்பொன் றில்லாப்
பெம்மானைக் கைம்மாவி னுரிவை பேணிப்
போர்த்தானைப் புள்ளிருக்கும் வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.

தெளிவுரை : சிவபெருமான், சிறப்பின் மிக்கவர்; சிந்தையுள் உறைபவர்; இனிய அன்பானவர்; தேவர்களின் தலைவர்; காலனைச் சினந்து தாக்கி மார்க்கண்டேயரின் அச்சத்தைப் போக்கியவர்; பிறப்பு இறப்பு எனும் தன்மையற்றவர்; யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவர்; புள்ளிருக்கு வேளூரில் விளங்குபவர். அப் பரமனைப் போற்றித் துதியாது காலத்தை வீணாக்கினேனே.

543. பத்திமையாற் பணிந்தடியேன் றன்னைப் பன்னாள்
பாமாலை பாடப் பயில்வித் தானை
எத்தேவும் ஏத்தும் இறைவன் தன்னை
எம்மானை என்னுள்ளத் துள்ளே யூறும்
அத்தேனை அமுதத்தை ஆவின் பாலை
அண்ணிக்குந் தீங்கரும்பை அரனை ஆதிப்
புத்தேனைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.

தெளிவுரை : சிவபெருமான், பத்தியுடன் என்னைப் பல காலம் பாமாலைகளைப் பாடுமாறு பயில்வித்தவர்; எல்லாக் கடவுளாலும் ஏத்தப் பெறுபவர்; என்னுள்ளத்தில் ஊறி இனிமை தரும் தேனும் பாலும் அமுதமும் கரும்பின் சுவையும் ஆகுபவர்; ஆதி மூர்த்தியாய்ப் புள்ளிருக்கு வேளூரில் விளங்குபவர். அப்பெருமானை ஏத்திப் போற்றாது காலத்தை வீணாக்கினேனே !

544. இருளாய் வுள்ளத்தி னிருளை நீக்கி
யிடர்பாவங் கெடுத்தேழை யேனை யுய்யத்
தெருளாத சிந்தைதனைத் தெருட்டித் தன்போற்
சிவலோக நெறியறியச் சிந்தை தந்த
அருளானை ஆதிமா தவத்து ளானை
ஆறங்க நால்வேதத் தப்பால் நின்ற
பொருளானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.

தெளிவுரை : சிவபெருமான் , மன இருளை நீக்கிப் பாவத்தைக் கெடுத்துச் சிந்தையைத் தெளிவித்துச் சிவலோக நெறியை அறியச் செய்து, ஏழையேனை உய்யச் செய்தவர்; தவமாகவும், வேதமும் அங்கமும் கடந்த பொருளாகவும் விளங்கிப் புள்ளிருக்கும் வேளூரில் திகழ்பவர். அப் பெருமானை ஏத்திப் போற்றாது காலத்தை வீணாக்கினேனே !

545. மின்னுருவை விண்ணகத்தில் ஒன்றாய் மிக்கு
வீசுங்கால் தன்னகத்தில் இரண்டாய்ச் செந்தீத்
தன்னுருவின் மூன்றாய்த்தாழ் புனலின் நான்காய்த்
தரணிதலத் தஞ்சாகி யெஞ்சாத் தஞ்ச
மன்னுருவை வான்பவளக் கொழுந்தை முத்தை
வளரொளியை வயிரத்தை மாசொன் றில்லாப்
பொன்னுருவைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.

தெளிவுரை : ஈசன், மின்னல் போன்ற வடிவமாகி விண்ணில் மிகுந்து ஒலி என ஒன்றாகியவர்; காற்று என வீசுதலால் ஊறு, ஒலி என இரண்டாகியவர்; நெருப்பின் தன்மையில் உருவம், ஊறு, ஒலி என மூன்றாகியவர்; புனல் என்னும் பான்மையில் சுவை, உருவம், ஊறு, ஒலி என நான்காகியவர்; நிலம் என்னும் பாங்கில் நாற்றம், சுவை, உருவம், ஊறு, ஒலி என ஐந்தாகியவர்; பவளக் கொழுந்து போன்றவர்; முத்து, வயிரம், பொன் எனப் பெருமையுடன் திகழ்பவராகிப் புள்ளிருக்கு வேளூரில் வீற்றிருப்பவர். அப்பெருமானை ஏத்திப் போற்றாது காலத்தைப் போக்கினேனே.

546. அறையார்பொற் கழலார்ப்ப அணியார் தில்லை
அம்பலத்துள் நடமாடும் அழகன் தன்னைக்
கறையார்மூ விலைநெடுவேற் கடவுள் தன்னைக்
கடல்நாகைக் காரோணங் கருதி னானை
இறையானை என்னுள்ளத் துள்ளே விள்ளா
திருந்தாளை ஏழ்பொழிலுந் தாங்கி நின்ற
பொறையானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.

தெளிவுரை : ஈசன், பொற்கழல் ஒலிக்கத் தில்லையில் நடனம் புரிபவர்; சூலப்படையுடையவர்; நாகைக் காரோணத்தில் தாங்குபவர்; புள்ளிருக்கும் வேளூரில் வீற்றிருப்பவர். அப் பெருமானை ஏத்திப் போற்றாது, காலத்தைப் போக்கினேனே !

547.நெருப்பனைய திருமேனி வெண்ணீற் றானை
நீங்காதென் னுள்ளத்தி னுள்ளே நின்ற
விருப்பவனை வேதியனை வேத வித்தை
வெண்காடும் வியன்தருத்தி நகரும் மேவி
இருப்பவனை யிடைமருதோ டீங்கோய் நீங்கா
இறையவனை யெனையாளுங் கயிலை யென்னும்
பொருப்பவனைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே

தெளிவுரை : சிவபெருமான் நெருப்புப் போன்ற திருமேனியில் திருவெண்ணீறு தரித்தவர்; என்னுள்ளத்தில் நீங்காது விளங்குபவர்; வேதத்தின் வித்தாகியவர்; திருவெண்காடு, திருத்துருத்தி (குத்தாலம்), திருவிடைமருதூர், ஈங்கோய்மலை, கயிலைமலை ஆகிய தலங்களில் மேவியவர்; புள்ளிருக்கு வேளூரில் விளங்குபவர்; அப்பெருமானைப் போற்றி ஏத்தாது காலத்தைப் போக்கினேனே.

548. பேரா யிரம்பரவி வானோ ரேத்தும்
பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும்
வாராத செல்வம் வருவிப் பானை
மந்திரமுந் தந்திரமும் மருந்து மாகித்
தீராதநோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்
திரிபுரங்கள் தீயெழுத்திண் சிலைகைக் கொண்ட
பேரானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.

தெளிவுரை : சிவபெருமான், ஆயிரக் கணக்கான திருப்பெயர்களால் புகழ்ந்து ஏத்தப்படுபவர்; பிரியாது நினைந்து ஏத்தும் அடியவர்களுக்கு, வாராத செல்வமாகிய முத்திப் பேற்றை அளிப்பவர்; நோய்க்கு மணி மந்திர ஒளடதம் போன்று, மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகியவர்; தீராத நோயைத் தீர்த்தருள வல்லவர்; முப்புரங்களை எரித்துச் சாம்பலாக்கிய வில்லை யேந்தியவர்; புள்ளிருக்கு வேளூரில் வீற்றிருப்பவர். அப்பெருமானைப் போற்றி ஏத்தாது காலத்தைப் போக்கினேனே. இத் திருத்தலத்தின் சிறப்பாக விளங்கும் ஈசனின் திருவருட் செயலின் தன்மையானது மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகி என ஏத்தப் பெற்றது.

549. பண்ணியனைப் பைங்கொடியாள் பாகன் தன்னைப்
படர்சடைமேற் புனல்கரந்த படிறன் தன்னை
நண்ணியனை யென்னாக்கித் தன்னா னானை
நான்மறையின் நற்பொருளை நளிர்வெண் டிங்கட்
கண்ணியனைக் கடியநடை விடையொன் றேறுங்
காரணனை நாரணனைக் கமலத் தோங்கும்
புண்ணியனைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாத ஆற்றநாள் போக்கி னேனே.

தெளிவுரை : சிவபெருமான், பண் போன்ற இனிமையுடையவர்; உமைபாகர்; சடையில் கங்கையையேற்றவர்; நண்ணி என்னைத் தானாக்கிக் கொண்டவர்; வேதப் பொருளானவர்; திங்களைத் தரித்தவர்; இடப வாகனத்தை உடையவர்; மாலாகவும் அயனாகவும் விளங்குபவர்; புள்ளிருக்கு வேளூரில் வீற்றிருப்பவர். அப் பெருமானை ஏத்திப் போற்றாது காலத்தைப் போக்கினேனே.

550. இறுத்தானை இலங்கையரகோன் சிரங்கள் பத்தும்
எழுநரம்பின் இன்னிசைகேட் டின்புற் றானை
அறுத்தானை அடியார்தம் அருநோய் பாவம்
அலைகடலில் ஆலால் முண்டு கண்டங்
கறுத்தானைக் கண்ணழலாற் காமன் ஆகங்
காய்ந்தானைக் கனன்மழுவுங் கலையு மங்கை
பொறுத்தானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.

தெளிவுரை : இராவணனுடைய தலைகள் பத்தினையும் நெரியுமாறு ஊன்றிய சிவபெருமான், அவ் வரக்கனின் இனிய இசை கேட்டு மகிழ்ந்து, அருள் புரிந்தவர்; அடியவர்களின் வினை நோய் பாவம் என யாவும் அறுத்தவர்; கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு கண்டத்தில் கருமை கொண்டவர்; மன்மதனை நெற்றிக் கண்ணால் எரித்தவர். நெருப்பு, மழுப்படை, மான், கங்கை ஆகியவற்றைக் கொண்டுள்ளவர்; புள்ளிருக்கு வேளூரில் வீற்றிருப்பவர். அப்பெருமானை ஏத்திப் போற்றாது காலத்தைப் போக்கினேனே.

திருச்சிற்றம்பலம்

 55. திருக்கயிலாயம் (அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், கைலாயம், திபெத்)

திருச்சிற்றம்பலம்

551. வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி
ஓவாத சத்தத் தொலியே போற்றி
ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி
ஆறங்கம் நால்வேத மானாய் போற்றி
காற்றாகி யெங்குங் கலந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், விண்ணாகவும் மற்றும் நிலம், நீர், நெருப்பு, காற்று என நான்கு பூதங்களாகவும் விளங்குபவர்; உள்ளத்தின் ஊற்றாகத் திகழும் எண்ணத்தில் திகழ்பவர்; ஓயாது மேவும் ஒலியாகுபவர், ஆற்றும் திறனாகத் திகழ்பவர்; வேதமும் அங்கமும் ஆனவர்; காற்றாகிக் கலந்து மேவுபவர். கயிலையில் வீற்றிருப்பவர். தேவரீரைப் போற்றுதும்.

552. பிச்சாடல் பேயோ டுகந்தாய் போற்றி
பிறவி யறுக்கும் பிரானே போற்றி
வைச்சாடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி
மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி
பொய்ச்சார் புரமூன்று மெய்தாய் போற்றி
போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி
கச்சாக நாக மசைத்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

தெளிவுரை : ஈசனே ! தேவரீர், பேய்க் கூட்டத்துடன் ஆடல் புரிபவர்; பிறவி அறுக்கும் பெருமான் ஆவார்; உயிர்களைப் பிறப்புக்களில் வைத்துத் திருவிளையாடல் புரிபவர்; என் சிந்தையில் புகுந்தவர்; மாலையில் திரிந்த முப்புரங்களை எரித்தவர்; நாகத்தை அரையில் கட்டியவர்; கயிலை மலைக்கும் உரியவர். தேவரீரைப் போற்றுதும்.

553. மருவார் புரமூன்று மெய்தாய் போற்றி
மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி யென்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி யொளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி யோடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர் முப்புரம் எரித்தவர்; என் சிந்தையில் புகுந்தவர்; என்னைப் பிறப்புக்கொண்டு மேவுமாறு படைத்தவர்; உயிரைக் கண்ணுக்குப் புலனாகாதவாறு உடலுள் ஒளித்தவர்; செல்வமும் ஆற்றலும் ஆகியவர்; உலகத்தோரால் ஏத்தப் படுபவர்; மேகம் போன்றவர்; கயிலை மலைக்கு உரியவர். தேவரீரைப் போற்றுதும்.

554. வானத்தார் போற்றும் மருந்தே போற்றி
வந்தென்றன் சிந்தை புகுந்தாய் போற்றி
ஊனத்தை நீக்கும் உடலே போற்றி
ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
தேனத்தை வார்த்த தெளிவே போற்றி
தேவர்க்குந் தேவனாய் நின்றாய் போற்றி
கானத்தீ யாட லுகந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், தேவர்கள் போற்றும் அமுதமானவர்; என் சிந்தையில் புகுந்தவர்; குறை நீக்கும் பருப்பொருளானவர்; நெருப்பு வண்ணத்தில் ஓங்கி உயர்ந்தவர்; தேனின் சுவையானவர்; தேவர்களின் தேவராகியவர்; மயானத்தில் ஆடலை உகந்தவர்; கயிலை மலைக்கு உரியவர். தேவரீரைப் போற்றுதும்.

555. ஊராகி நின்ற உலகே போற்றி
ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
பேராகி யெங்கும் பரந்தாய் போற்றி
பெயராதென் சிந்தை புகுந்தாய் போற்றி
நீராவி யான நிழலே போற்றி
நேர்வா ரொருவரையு மில்லாய் போற்றி
காராகி நின்ற முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர் ஊராகவும் உலகமாகவும் விளங்குபவர்; அழலாய் ஓங்கி உயர்ந்தவர்; எல்லா இடங்களிலும் பரந்து விளங்குபவர்; என் சிந்தையில் புகுந்தவர்; நீருள் மேவும் தன்மையும், ஒளியும் ஆனவர்; ஒப்புமையற்றவர்; கார் முகிலாய் மேவுபவர்; கயிலை மலைக்கு உரியவர். தேவரீரைப் போற்றுதும்.

556. சில்லுருவாய்ச் சென்று திரண்டாய் போற்றி
தேவ ரறியாத தேவே போற்றி
புல்லுயிர்க்கும் பூட்சி புணர்த்தாய் போற்றி
போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி
பல்லுயிராய்ப் பார்தோறும் நின்றாய் போற்றி
பற்றி யுலகை விடாதாய் போற்றி
கல்லுயிராய் நின்ற கனலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், சிறிய தன்மையும் பெருந்திரட்சியும் ஆகியவர்; தேவர்களால் அறியப்படாத தேவர்; புல்லுக்கும் உயிர்வாழ்க்கை அருளிச் செய்தவர்; என் சிந்தையுள் நீங்காது கலந்து மேவுபவர்; பல உயிர்களாக மேவியவர்; உலகினைக் பற்றி இருந்து காத்து இயக்குபவர்; உலகினைப் பற்றி இருந்து காத்து இயக்குபவர்; கல்லுக்கும் உயிர்கொடுத்து மேவுபவர்; கயிலை மலைக்கு உரியவர். தேவரீரைப் போற்றுதும்.

557. பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி
பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்துஞ்சொல் லானாய் போற்றி
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனுந்தீ யானாய் போற்றி
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், பண்ணின் இசையாக இருப்பவர்; ஏத்தும் அன்பர்களின் பாவத்தைப் போக்குபவர்; எண்ணும் எழுத்தும் சொல்லும் ஆகி என் சிந்தையில் நீங்காது விளங்குபவர்; விண்ணும், மண்ணும் நெருப்பும் ஆனவர்; மேலோர்களுக்கும் மேலானவர்; கண்ணின் மணியாக விளங்குபவர்; கயிலை மலைக்கு உரியவர். தேவரீரைப் போற்றுதும்.

558. இமையா துயிரா திருந்தாய் போற்றி
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
உமைபாக மாகத் தணைத்தாய் போற்றி
ஊழியே ழான வொருவா போற்றி
அமையா வருநஞ்ச மார்ந்தாய் போற்றி
ஆதி புரணனாய் நின்றாய் போற்றி
கமையாகி நின்ற கனலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், இமைத்தலும் உயிர்த்தலும் இன்றித் தாமே இயங்குபவர்; என் சிந்தையில் திகழ்பவர்; உமைபாகர்; எழுகின்ற ஊழிகள் யாவும் ஆனவர்; கடலில் பொங்கியெழுந்த நஞ்சினை அருந்தியவர்; ஆதி புராணராகத் திகழ்பவர்; அருளாகி மேவும் கனலாகியவர்; கயிலை மலைக்கு உரியவர். தேவரீரைப் போற்றுதும்.

559. மூவாய் பிறவாய் இறவாய் போற்றி
முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி
தேவாதி தேவர்தொழுந் தேவே போற்றி
சென்றேறி யெங்கும் பரந்தாய் போற்றி
ஆவா அடியேனுக் கெல்லாம் போற்றி
அல்லல் நலிய அலந்தேன் போற்றி
காவாய் கனகத் திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், மூப்பு இல்லாதவர்; பிறப்பு இல்லாதவர்; இறப்பு இல்லாதவர்; யாவர்க்கும் முன்னவர்; தேவர்களின் தலைவர்; எங்கும் நிறைந்தவர்; அடியவனுக்கு எல்லாமாக விளங்குபவர்; என் அல்லலை நலியச் செய்தவர்; கனகத் திரளாகக் கனிந்து காத்தருள்பவர்; கயிலை மலைக்கு உரியவர். தேவரீரைப் போற்றுதும்.

560.நெடிய விசும்பொடு கண்ணே போற்றி
நீள அகல முடையாய் போற்றி
அடியும் முடியு மிகலிப் போற்றி
யங்கொன் றறியாமை நின்றாய் போற்றி
கொடியவன் கூற்றம் உதைத்தாய் போற்றி
கோயிலா என சிந்தை கொண்டாய் போற்றி
கடிய உருமொடு மின்னே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், ஆகாயம் ஆகியவர்; யாங்கணும் விரிந்தவர்; அடியும் முடியும் காண முடியாத தன்மையுடையவர்; தம் யாங்கு இருக்கின்றோம் என அறியா வண்ணம் நின்றவர்; கூற்றுவனை உதைத்தவர், என் சிந்தையைக் கோயிலாகக் கொண்டவர்; இடியும் மின்னலும் ஆகியவர்; கயிலை மலைக்கு உரியவர். தேவரீரைப் போற்றுதும்.

561. உண்ணா துறங்கா திருந்தாய் போற்றி
ஓதாதே வேத முணர்ந்தாய் போற்றி
எண்ணா இலங்கைக்கோன் தன்னைப் போற்றி
இறைவிரலால் வைத்துகந்த ஈசா போற்றி
பண்மா ரிசையின்சொற் கேட்டாய் போற்றி
பண்டேயென் சிந்தை புகுந்தாய் போற்றி
கண்ணா யுலகுக்கு நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், ஊணும், உறக்கமும் அற்றவர்; வேதத்தை ஓதாது உணர்ந்தவர்; இராவணனைத் திருவிரலால் ஊன்றி உகந்து இசை கேட்டு அருள் புரிந்த ஈசர்; என் சிந்தையில் புகுந்தவர்; உலகுக்குக் கண் போன்று ஒளிர்பவர்; கயிலை மலைக்கு உரியவர். தேவரீரைப் போற்றுதும்.

திருச்சிற்றம்பலம்

56. திருக்கயிலாயம் (அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், கைலாயம், திபெத்)

திருச்சிற்றம்பலம்

562. பொறையுடைய பூமிநீ ரானாய் போற்றி
பூதப் படையாள் புனிதா போற்றி
நிறையுடைய நெஞ்சி னிடையாய் போற்றி
நீங்கா தென் னுள்ளத் திருந்தாய் போற்றி
மறையுடைய வேதம் விரித்தாய் போற்றி
வானோர் வணங்கப் படுவாய் போற்றி
கறையுடைய கண்ட முடையாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர் பொறுமைக்கு நிலையாகும் பூமியுடன், நீரும் ஆனவர்; பூத கணங்களைப் படையாகக் கொண்டுள்ள புனிதர்; நிறைந்த தன்மையுடைய நெஞ்சுள் உறைபவர்; என்னுள்ளத்தில் நீங்காது இருப்பவர்; வேதம் விரித்தவர்; வானோரால் ஏத்தப்படுபவர்; நஞ்சினை உண்டு கறையுடைய கண்டத்தை உடையவர்; கயிலை மலைக்கும் உரியவர். தேவரீரைப் போற்றுதும்.

563. முன்பாகி நின்ற முதலே போற்றி
மூவாத மேனிமுக் கண்ணா போற்றி
அன்பாகி நின்றாக் கணியாய் போற்றி
ஆறேறு சென்னிச் சடையாய் போற்றி
என்பாக எங்கும் அணிந்தாய் போற்றி
யென்சிந்தை நீங்கா இறைவா போற்றி
கண்பாவி நின்ற கனலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், முதலில் தோன்ற முதற் பொருளானவர் மூப்படையாத திருமேனியும் முக்கண்ணும் உடையவர்; அன்புடையார்க்கு அண்மையில் விளங்குபவர்; கங்கை தரித்த சடையுடையவர்; எலும்பை ஆபரணமாக அணிந்தவர்; என் சிந்தையுள் நீங்காதவர்; கண்ணில் பரவி ஒளிரும் ஒளியானவர்; கயிலை மலைக்கு உரியவர். தேவரீரைப் போற்றுதும்.

564. மாலை யெழுந்த மதியே போற்றி
மன்னியென் சிந்தை யிருந்தாய் போற்றி
மேலை வினைகள் அறுப்பாய் போற்றி
மேலாடு திங்கள் முடியாய் போற்றி
ஆலைக் கரும்பின் தெளிவே போற்றி
அடியார்கட் காரமுத மானாய் போற்றி
காலை முளைத்த கதிரே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், மாலையில் தோன்றும் மதியானவர்; என் சிந்தையில் மேவுபவர்; உயிரைப் பற்றி மேவும் வினைகளை அறுப்பவர்; சந்திரனைச் சடையில் சூடியவர்; கரும்பின் தெளிந்த சுவையானவர்; அடியவர்களுக்கு அமுதமானவர்; காலை தோன்றும் கதிரவன் ஆனவர்; கயிலை மலைக்கு உரியவர்; தேவரீரைப் போற்றுதும்.

565. உடலின் வினைக ளறுப்பாய் போற்றி
ஒள்ளெரி வீசும் பிரானே போற்றி
படருஞ் சடைமேல் மதியாய் போற்றி
பல்கணக் கூத்தப் பிரானே போற்றி
சுடரின் திகழ்கின்ற சோதீ போற்றி
தோன்றியென் னுள்ளத் திருந்தாய் போற்றி
கடலில் ஒளியாய் முத்தே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், வினைகளைத் தீர்ப்பவர்; எரியும் நெருப்பை வீசி ஆடுபவர்; சடையில் சந்திரனைச் சூடியவர்; பலவண்ணக் கூத்துகளைப் புரிபவர்; சுடரில் திகழும் சோதியானவர்; என்னுள்ளத்தில் இருப்பவர்; கடலில் விளங்கி ஒளிரும் முத்து ஆனவர்; கயிலை மலைக்கு உரியவர். தேவரீரைப் போற்றுதும்.

566. மைசேர்ந்த கண்ட மிடற்றாய் போற்றி
மாலுக்கும் ஓராழி யீந்தாய் போற்றி
பொய்சேர்ந்த சிந்தை புகாதாய் போற்றி
போகாதென் னுள்ளத் திருந்தாய் போற்றி
மெய்சேரப் பால்வெண்ணீ றாடி போற்றி
மிக்கார்க ளேத்தும் விளக்கே போற்றி
கைசே ரனலேந்தி யாடீ போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், கரிய மிடற்றையுடையவர்; மாலுக்குச் சக்கரம் அருளியவர்; பொய்மை மேவும் சிந்தையில் புகாதவர்; என் உள்ளத்தில் விளங்குபவர்; திருமேனியில் பால் போன்ற திருவெண்ணீறு பூசியவர்; பெருஞ் சீலத்தவர்கள் ஏத்தும் பெருவிளக்கமானவர்; கையில் நெருப்பேந்தி ஆடுபவர்; கயிலை மலைக்கு உரியவர். தேவரீரைப் போற்றுதும்.

567. ஆறேறு சென்னி முடியாய் போற்றி
அடியார்கட் காரமுதாய் நின்றாய் போற்றி
நீறேறு மேவி யுடையாய் போற்றி
நீங்காதென் னுள்ளத் திருந்தாய் போற்றி
கூறேறு மங்கை மழுவா போற்றி
கொள்ளுங் கிழமையே ழானாய் போற்றி
காறேறு கண்ட மிடற்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், கங்கை தரித்த சடைமுடியுடையவர்; அடியவர்களுக்கு அமுதம் ஆனவர்; திருநீறு அணிந்த திருமேனியுடையவர்; என் உள்ளத்தில் விளங்குபவர்; திருமேனியின் ஒரு பாகத்தில் உமாதேவியை உடையவர்; மழுப்படை யேந்தியவர்; வாரத்தில் மேவும் ஏழு கிழமைகளும் ஆகியவர்; கரிய மிடற்றினையுடையவர்; கயிலை மலைக்கு உரியவர், தேவரீரைப் போற்றுதும்.

568. அண்டமே ழன்று கடந்தாய் போற்றி
ஆதி புராணனாய் நின்றாய் போற்றி
பண்டை வினைக ளறுப்பாய் போற்றி
பாரோவிண் ணேத்தப் படுவாய் போற்றி
தொண்டர் பரவு மிடத்தாய் போற்றி
தொழில்நோக்கி யாளுஞ் சுடரே போற்றி
கண்டங் கறுக்கவும் வல்லாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், ஏழு அண்டங்களையும் கடந்தவர்; ஆதி புராணனாய் விளங்குபவர்; தொல் வினை தீர்ப்பவர்; பூவுலகத்தினரும் தேவர்களும் ஏத்த விளங்குபவர்; தொண்டர் பரவும் இடத்தில் விளங்குபவர்; ஐந் தொழிலும் மேவும் அருஞ்சுடரானவர்; கரிய கண்டம் உடையவர்; கயிலை மலைக்கு உரியவர். தேவரீரைப் போற்றுதும்.

569. பெருகி யலைக்கின்ற ஆறே போற்றி
பேராநோய் பேர விடுப்பாய் போற்றி
உருகிநினை வார்தம் முள்ளாய் போற்றி
ஊனந் தவிர்க்கும் பிரானே போற்றி
அருகி மிளிர்கின்ற பொன்னே போற்றி
யாரு மிகழப் படாதாய் போற்றி
கருகிப் பொழிந்தோடு நீரே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், பெருகி ஓங்கும் நீராகிய கங்கை போன்றவர்; தீராத நோய் யாவையும் தீர்ப்பவர்; உருகும் பக்தர்களின் உள்ளத்தில் ஒளிர்பவர்; குறை தவிர்க்கும் கடவுள் ஆவார்; ஒளிர்ந்து மேவும் பொன் போன்றவர்; யாராலும் இகழப்படாதவர்; மேகம் பொழியும் மழையாகுபவர், கயிலை மலைக்கு உரியவர், தேவரீரைப் போற்றுதும்.

570. செய்யமலர் மேலான் கண்ணன் போற்றி
தேடி யுணராமை நின்றாய் போற்றி
பொய்யாநஞ் சுண்ட பொறையே போற்றி
பொருளாக வென்னையாட் கொண்டாய் போற்றி
 மெய்யாக ஆனஞ் சுகந்தாய் போற்றி
மிக்கார்க ளேத்துங் குணத்தாய் போற்றி
கையானை மெய்த்தோ லுரித்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், திருமாலும், நான்முகனும் தேடியும் காண்பதற்கு அரியவரானவர்; நஞ்சுண்டு பொறுத்தருள் புரிந்தவர்; என்னை ஒரு பொருட்டாகக் கருதி ஆட்கொண்டவர்; பசுவின் பஞ்ச கவ்வியத்தை உகந்து ஏற்பவர்; பெரியோர்களாகிய ஞானிகளால் ஏத்தப்படுபவர்; யானையின் தோலை உரித்தவர்; கயிலை மலைக்கு உரியவர். தேவரீரைப் போற்றுதும்

571. மேல்வைத்த வானோர் பெருமான் போற்றி
மேலாடு புரமூன்று மெய்தாய் போற்றி
சீலத்தான் தென்னிலங்கை மன்னன் போற்றி
சிலையெடுக்க வாயலற வைத்தாய் போற்றி
கோலத்தாற் குறைவில்லான் தன்னை யன்று
கொடிதாகக் காய்ந்த குழகா போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், வானவர்களின் தலைவர்; முப்புரம் எரித்தவர்; இராவணனுடைய தோள்கள் நெரியுமாறு, விரலால் ஊன்றியவர்; மன்மதனை எரித்தவர்; காலனை அழித்தவர்; கயிலை மலைக்கு உரியவர். தேவரீரைப் போற்றுதும்.

திருச்சிற்றம்பலம்

57. திருக்கயிலாயம் (அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், கைலாயம், திபெத்)

திருச்சிற்றம்பலம்

572. பாட்டான நல்ல தொடையாய் போற்றி
பரிசை யறியாமை நின்றாய் போற்றி
சூட்டான திங்கள் முடியாய் போற்றி
தூமாலை மத்தம அணிந்தாய் போற்றி
ஆட்டான தஞ்சும் அமர்ந்தாய் போற்றி
அடங்கார் புரமெரிய நக்காய் போற்றி
காட்டானை மெய்த்தோ லுரித்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், தோத்திரப் பாடல்களாக விளங்குபவர்; சந்திரனைச் சடையில் சூடியுள்ளவர்; தூய கொன்றை, ஊமத்தம் ஆகிய மாலைகளை அணிந்தவர்; பசுவின் பஞ்ச கவ்வியத்தை உகந்து ஆடுபவர்; புரங்கள் மூன்றும் எரியுமாறு நகை செய்தவர்; யானையின் தோலை உரித்தவர்; கயிலை மலைக்கு உரியவர். தேவரீரைப் போற்றுதும்.

573. அதிரா வினைகள் அறுப்பாய் போற்றி
ஆல நிழற்கீழ் அமர்ந்தாய் போற்றி
சதுரா சதுரக் குழையாய் போற்றி
சாம்பர்மெய் பூசுந் தலைவா போற்றி
எதிரா வுலகம் அமைப்பாய் போற்றி
யென்றும்மீ ளாவருள் செய்வாய் போற்றி
கதிரார் கதிருக்கோர் கண்ணே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், உயிர் வாழ்க்கையில் மேவும் நடுக்கத்தைக் கொடுக்கும் வினைகளை அறுப்பவர்; கல்லால நிழலில் மேவி அறம் உரைத்தருளியவர்; சதுரப்பாடு உடையவராகி ஆற்றல் மிகுந்து விளங்குபவர்; சிறப்புடைய குழையைக் காதில் அணிந்தவர்; சாம்பலைத் திருமேனியில் பூசியவர்; ஈடு இணையற்ற தன்மையால் எதிர்பாடில்லாத தன்மையற்ற முத்தியுலகத்தை வழங்குபவர்; எக் காலத்திலும் நிலைத்து மேவும் அருளைப் புரிபவர்; கதிரவனாகவும் கதிரவனுக்கு ஒளியாகவும் விளங்குபவர்; கயிலை மலைக்கு உரியவர். தேவரீரைப் போற்றுதும்.

574. செய்யாய் கரியாய் வெளியாய் போற்றி
செல்லாத செல்வ முடையாய் போற்றி
ஐயாய் பெரியாய் சிறியாய் போற்றி
ஆகாய வண்ண முடையாய் போற்றி
வெய்யாய தணியாய் அணியாய் போற்றி
வேளாத வேள்வி யுடையாய் போற்றி
கையார் தழலார் விடங்கா போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், சிவந்த திருமேனியுடையவர்; கரிய கண்டத்தை உடையவர்; வெண்மையான திருவெண்ணீற்றைத் தரித்தவர்; நிலைத்த செல்வம் உடையவர்; அழகும் பெருமையும் நுண்மையும் கொண்டவர்; ஆகாயத்தின் வண்ணம் உடையவர்; கனலாகவும், குளிர்ச்சியாகவும், அண்மையாகவும் திகழ்பவர்; பயன் கருதாத தன்மையில் மேவும் வேள்வியையுடையவர்; கையில் நெருப்பை ஏந்தி நடனம் புரிபவர்; கயிலை மலைக்கு உரியவர். தேவரீரைப் போற்றுதும்.

575. ஆட்சி யுலகை யுடையாய் போற்றி
 அடியார்க் கமுதெலாம் ஈவாய் போற்றி
சூட்சி சிறிது மிலாதாய் போற்றி
சூழ்ந்த கடல்நஞ்ச முண்டாய் போற்றி
மாட்சி பெரிது முடையாய் போற்றி
மன்னியென் சிந்தை மகிழ்ந்தாய் போற்றி
காட்சி பெரிது மரியாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், உலகின் சீரிய ஆட்சியை உடையவர்; அடியவர்களுக்கு இனிமை தரும் அமுதம் யாவும் தருபவர்; வஞ்சனை இல்லாதவர்; கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு உலகைக் காத்தவர்; மாட்சிமையுடையவர்; என் சிந்தையில் மேவி மகிழ்ந்து விளங்குபவர்; பிறரால் காண்பதற்கு அரியவர்; கயிலை மலைக்கு உரியவர். தேவரீரைப் போற்றுதும்.

576. முன்னியாய் நின்ற முதல்வா போற்றி
மூவாத மேனி யுடையாய் போற்றி
என்னியா யெந்தை பிரானே போற்றி
யேழி னிசையே யுகப்பாய் போற்றி
மன்னிய மங்கை மணாளா போற்றி
மந்திரமுந் தந்திரமு மானாய் போற்றி
கன்னியார் கங்கைத் தலைவா போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், முதற்பொருளாய் விளங்குபவராகி முற்பட்டு நின்று ஒளிரும் முதல்வர்; மூப்படையாத திருமேனியுடையவர்; என்னுடைய தாயும் தந்தையும் ஆனவர் ஏழிசையை உகந்து விளங்குபவர்; உமை மணவாளர்; மந்திரமும் தந்திரமும் ஆனவர்; கன்னித்தன்மையுடைய கங்கையின் தலைவர்; கயிலை மலைக்கு உரியவர். தேவரீரைப் போற்றுதும்.

577. உரியா யுலகினுக் கெல்லாம் போற்றி
உணர்வென்னும் ஊர்வ துடையாய் போற்றி
எரியாய் தெய்வச் சுடரே போற்றி
யேசுமா முண்டி யுடையாய் போற்றி
அரியா யமரர்கட் கெல்லாம் போற்றி
அறிவே யடக்க முடையாய் போற்றி
கரியானுக் காழியன் றீந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், உலகம் யாவற்றின் உரிமையும் உடையவர்; உயிரின்பால் பொருந்தி மேவுபவர்; எரியும் நெருப்பாகிய கதிரவனாய் விளங்குபவர்; இகழப்படும் முண்டம் எனப்படும் மண்டையோட்டை ஏந்தியவர்; தேவர்களால் காண்பதற்கு அரியவர்; அறிவாகவும், எல்லாப் பொருள்களிலும் உட்பொலிவும் நுண்மையாகவும் விளங்குபவர்; திருமாலுக்கு ஆழிப்படையளித்தவர்; கயிலை மலைக்கு உரியவர். தேவரீரைப் போற்றுதும்.

578. எண்மேலும் எண்ண முடையாய் போற்றி
யேற்றிய வேறுங் குணத்தாய் போற்றி
பண்மேலே பாவித் திருந்தாய் போற்றி
பண்ணொடியாழ் வீணை பயின்றாய் போற்றி
விண்மேலும் மேலும் நிமிர்ந்தாய் போற்றி
மேலார்கண் மேலார்கண் மேலாய் போற்றி
கண்மேலுங் கண்ணொன் றுடையாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், மனத்தில் தோன்றும் எண்ணங்களாய்த் திகழ்பவர்; இடப வாகனத்தினர்; பண்ணாகி விளங்குபவர்; யாழ், வீணை எனப் பயின்றவர்; விண்ணோர்க்குத் தீத்திரட்சியாய் உயர்ந்தவர்; மேலோர்களுக்கும் மேலோராகுபவர்; நெற்றியில் கண்ணுடையவர்; கயிலை மலைக்கு உரியவர் தேவரீரைப் போற்றுதும்.

579. முடியார் சடையின் மதியாய் போற்றி
முழுநீறு சண்ணித்த மூர்த்தீ போற்றி
துடியா ரிடையுமையாள் பங்கா போற்றி
சோதித்தார் காணாமை நின்றாய் போற்றி
அடியார் அடிமை அறிவாய் போற்றி
அமரர் பதியாள வைத்தாய் போற்றி
கடியார் புரமூன்று மெய்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், சடை முடியில் சந்திரனைச் சூடியவர்; திருநீறு பூசிய மூர்த்தியானவர்; உமாதேவியாரைத் திருமேனியில் ஒரு பாகமாகக் உடையவர்; சோதிக்கும் தன்மையில் நண்ணிய திருமால் நான்முகன் ஆகியோருக்குத் தோற்றம் பெறாது உயர்ந்து விளங்கியவர்; அடியவர்களின் அடிமைத்தனத்தின் பாங்கினை அறிபவர்; தேவர்களுக்கு விண்ணுலக வாழ்கை அளித்தவர்; மூன்று அசுரர்களுடைய கோட்டைகளை எரித்துச் சாம்பலாக்கியவர்; கயிலை மலைக்கு உரிமையானவர். தேவரீரைப் போற்றுதும்.

580. போற்றிசைத்துன் னடிபரவ நின்றாய் போற்றி
புண்ணியனே நண்ண லரியாய் போற்றி
ஏற்றிசைக்கும் வான்மே லிருந்தாய் போற்றி
எண்ணா யிரநூறு பெயராய் போற்றி
நாற்றிசைக்கும் விளக்காய நாதா போற்றி
நான்முகற்கும் மாற்கும் அரியாய் போற்றி
காற்றிசைக்குந் திசைக்கெல்லாம் வித்தே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், யாவரும் போற்றித் திருவடியை ஏத்திப் பரவுமாறு விளங்கியவர். புண்ணியராகவும், நண்ணுவதற்கு அரியவராகவும் மேவுபவர்; வானில் நிலவும் மேகம் ஆனவர்; எண்ணத்தில் மலர்ந்து தோன்றும் ஆயிரக்கணக்கான திருநாமங்களையுடையவர்; நான்கு திசைகளுக்கும் ஒளியாக மேவும் தலைவர்; நான்முகனுக்கும் திருமாலுக்கும் காட்சிக்கு அரியவர்; காற்று வீசும் எல்லா இடங்களுக்கும் ஆதார வித்தாகத் திகழ்பவர்; கயிலை மலைக்கு உரிமையானவர். தேவரீரைப் போற்றுதும்.

திருச்சிற்றம்பலம்

58. திருவலம்புரம் (அருள்மிகு வலம்புரநாதர் திருக்கோயில், மேலப்பெரும்பள்ளம், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

581. மண்ணளந்த மணிவண்ணார் தாமும் மற்றை
மறையவனும் வானவருஞ் சூழ நின்று
கண்மலிந்த திநெற்றி யுடையா ரொற்றைக்
கதநாகங் கையுடையார் காணீ ரன்றே
பண்மலிந்த மொழியவரும் யானு மெல்லாம்
பணிந்திறைஞ்சித் தம்முடைய பின்பின் செல்ல
மண்மலிந்த வயல்புடைசூழ்  மாடவீதி
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.

தெளிவுரை : திருமால், பிரமன், இந்திரன் ஆகியோர் சூழ நின்று ஏத்த நெற்றிக் கண்ணுடையவராய்க் கையில் நாகத்தைப் பற்றி விளங்கும் சிவபெருமான், பண்ணிசைத்துப் பாடிப் போற்றும் பெருமக்களால் ஏத்தப்படுபவர். யானும் அப்பெருமானை ஏத்தியவனாகிப் பின் தொடர்ந்து செல்லலுற்றேன். அவர், வயல் வளமும் மாடவீதியும் சூழ்ந்து மேவும் வலம்புரத்தில் புகுந்து வீற்றிருப்பவராயினர்.

582. சிலைநவின்ற தொருகணையாற் புரமூன்று றெய்த
தீவண்ணர் சிறந்திமையோர் இறைஞ்சி யேத்தக்
கொலைநவின்ற களியானை யுரிவை போர்த்துக்
கூத்தாடித் திரிதருமக் கூத்தர் நல்ல
கலைநவின்ற மறையவர்கள் காணக் காணக்
கடுவிடைமேற் பாரிடங்கள் சூழக் காதல்
மலைமகளுங் கங்கையுந் தாமு மெல்லாம்
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.

தெளிவுரை : முப்புரங்களை எரித்துச் சாம்பலாக்கிய தீவண்ணராகிய சிவபெருமான், தேவர்கள் ஏத்தி நிற்க, யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கூத்து ஆடுபவர். அவர், வேத விற்பன்னர்கள் ஏத்தி நிற்க இடபத்தில் ஏறிப் பூத கணங்கள் சூழ்ந்து மேவி, மலைமகளும் கங்கையும் உடன் திகழ வலம்புரத்தை அடைந்து விளங்கினர்.

583. தீக்கூருந் திருமேனி யொருபால் மற்றை
யொருபாலும் அரியுருவந் திகழ்ந்த செல்வர்
ஆக்கூரில் தான்தோன்றிப் புகுவார் போல
வருவினையேன் செல்வதுமே யப்பா லெங்கும்
நோக்கா ரொருவிடத்து நாலுந் தோலுந்
துதைந்திலங்குந் திருமேனி வெண்ணீ றாடி
வாக்கால் மறைவிரித்து மாயம் பேசி
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.

தெளிவுரை : சிவபெருமான், தனது தீவண்ணம் நிலவும் திருமேனியின் ஒரு பக்கத்தில் அரியின் உருவத்தைக் கொண்டவர்; ஆக்கூர் தான்தோன்றி மாடத்துள் மேவுவார்போலக் காட்டினர்; தோலாடை உடுத்தியவர்; முப்புரிநூல் அணிந்த திருமார்பினர்; திருவெண்ணீறு தரித்தவர்; வேதத்தை விரித்து ஓதியவர்; மாயச் சொற்களை உரைப்பவர்; அப் பெருமான், வலம்புரத்தை அடைந்து வீற்றிருப்பவர் ஆவார். இது அகத்துறையின் பாற்பட்டு ஓதுதலாயிற்று.

584. மூவாத மூக்கப்பாம் பரையிற் சாத்தி
மூவர் உருவாய முதல்வ ரிந்நாள்
கோவாத எரிகணையைச் சிலைமேற் கோத்த
குழகனார் குளிர்கொன்றை சூடி யிங்கே
கோவாரைக் கண்டடியேன் பின்பின் செல்லப்
புறக்கணித்துத் தம்முடைய பூதஞ் சூழ
வாவா வெனவுரைத்து மாயம் பேசி
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.

தெளிவுரை : இளநாகத்தை அரையிற் கட்டி மேவும் சிவபெருமான், மும்மூர்த்திகளின் வடிவானவர்; மேருமலையை வில்லாகக் கொண்டு அக்கினியை அம்பாகத் தொடுத்தவர்; கொன்றை மலர் சூடியவர்; அப்பரமனைக் கண்டு அடியேன் பின் செல்ல, அவர் வா ! வா ! என உரை பகர்ந்து, இனியன பேசிப் பூதகணங்கள் சூழ, வலம்புரத்தில் மேவி வீற்றிருப்பவரானார்.

585. அனலொருகை யதுவேந்தி யதளி னோடே
ஐந்தலைய மாநாகம் அரையிற் சாத்திப்
புனல் பொதிந்த சடைகற்றைப் பொன்போல் மேனிப்
புனிதனார் புரிந்தமரர் இறைஞ்சி யேத்தச்
சினவிடையை மேல்கொண்டு திருவா ரூருஞ்
சிரபுரமும் இடைமருதுஞ் சேர்வார் போல
மனமுருக வளைகழல மாயம் பேசி
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.

தெளிவுரை : கையில் அனலை ஏந்திப் புலித்தோல் ஆடையின் மேல் நாகத்தைக் கட்டிச் சடையில் கங்கை விளங்கப் பொன் போன்ற திருமேனியுடைய புனிதராகிய சிவபெருமான், தேவர்களெல்லாம் ஏத்த, இடபத்தின் மேல் விளங்குபவர். அவர், திருவாரூர், சிரபுரம், திருவிடைமருதூர் ஆகிய தலங்களை நோக்கிச் செல்வார்போல என் மனம் உருகுமாறு பேசி, வளையல்கள் கழன்று விழும் தன்மையில் இனிய மாயம் செய்து வலம்புரத்தை அடைந்து விளங்குபவராயினர்.

586. கறுத்ததொரு கண்டத்தர் காலன் வீழக்
காலினாற் காய்ந்துகந்த காபாலியார்
முறித்ததொரு தோலுடுத்து முண்டஞ் சாத்தி
முனிகணங்கள் புடைசூழ முற்றந் தோறுந்
தெளித்ததொரு வீணையராய்ச் செல்வார் தம்வாய்ச்
சிறுமுறுவல் வந்தெநது சிந்தை வெளவ
மறித்தொருகால் நோக்காதே மாயம் பேசி
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.

தெளிவுரை : சிவபெருமான், நீலகண்டம் உடையவர், காலனை உதைத்து அழித்தவர்; மண்டையோட்டினை மாலையாகக் கொண்டவர்; தோலை உடையாகக் கொண்டவர்; திருவெண்ணீறு பூசியவராகி முனிவர் குழாம் புடைசூழ கையில் வீணை யேந்தியவராகிச் சிறிய புன்முறுவல் காட்டி, என் சிந்தையைக் கவர்ந்தவர்; என்பால் மாயச் சொற்களை உரையாற்றி மயங்குமாறு செய்தவர். அவர் வலம்புரத்தில் புகுந்து வீற்றிருப்பவரானார்.

587. பட்டுடுத்துப் பவளம்போல் மேனி யெல்லாம்
பசுஞ்சாந்தங் கொண்டணிந்து பாதம் நோவ
இட்டெடுத்து நடமாடி யிங்கே வந்தார்க்
கெவ்வூசீர் எம்பெருமா னென்றே னாவி
விட்டிடுமா றதுசெய்து விரைந்து நோக்கி
வேறோர் பதிபுகப் போவார் போல
வட்டணைகள் படநடந்து மாயம் பேசி
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.

தெளிவுரை : பட்டினை உடுத்திப் பவளம்போல் மேவும் வண்ணத் திருமேனியில், சந்தனத்தைப் பூசித் திருப்பாதம் நோவத் திருநடனம் புரியும் சிவபெருமான் இங்கே எழுந்தருள, தேவரீர், எவ்வூரில் உள்ளவர் என்று வினவினேன். அவர் என் உயிரைக் கொள்ளை கொள்ளுமாறு ஆர்வமுடன் நோக்கி, வேறு பதிக்குச் செல்வார் போன்று உரை செய்து வலம்புரத்தில் புகுந்து ஆங்கே விளங்குபவர் ஆனார்.

588. பல்லார் பயில்பழனம் பாசூ ரென்று
பழனம் பதிபழைமை சொல்லி நின்றார்
நல்லார் நனிபள்ளி யின்று வைகி
நாளைப்போய் நள்ளாறு சேர்து மென்றார்
சொல்லா ரொருவிடமாத் தோள்கை வீசிச்
சுந்தரராய் வெந்தநீ றாடி யெங்கு
மல்லார் வயல்புடை சூழ் மாட வீதி
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே

தெளிவுரை : சிவபெருமான், தனது ஊரானது, பாசூர் எனவும், பழனம் எனவும் சொல்லி நின்றார். அவர், நனிபள்ளியில் இன்று வைகி நாளைத் திருநள்ளாறு சேர்வேன் என்றார். அவர் ஒரு இடமாகச் செல்லாதவராய்த் தோள்களை வீசி ஆடும் சுந்தரராகித் திருவெண்ணீறு பூசி, வயல் சூழ்ந்து மேவும் வலம்புரம் புகுந்து வீற்றிருப்பவர் ஆவார்.

589. பொங்கா டரவொன்று கையிற் கொண்டு
போர்வெண் மழுவேந்திப் போகா நிற்பர்
தங்கா ரொருவிடத்துந் தம்மே லார்வந்
தவிர்த்தருளார் தத்துவத்தே நின்றே  னென்பர்
எங்கே யிவர்செய்கை யொன்றான் றொவ்வா
என்கண்ணின் நின்றகலா வேடங் காட்டி
மங்குல் மதிதவழும் மாட வீதி
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.

தெளிவுரை : சிவபெருமான், அரவத்தைக் கையிற் பற்றி ஒளி திகழும் மழுப்படையேந்தியவராகிச் செல்லும் போது, ஒரு இடத்தில் பொருந்தித் தங்காது விளங்க, இவர் செய்கை யாவும் ஒன்றுக்கொன்று ஒவ்வாத தன்மையுடையதாயிற்று. அவர், திருவேடத்தின் பொலிவு காட்டி, வலம்புரத்தில் புகுந்து விளங்குபவர் ஆயினர்.

590. செங்கண்மால் சிலைபிடித்துச் சேனை யோடுஞ்
சேதுபந் தனஞ்செய்து சென்று புக்கும்
பொங்குபோர் பலசெய்து புகலால் வென்ற
போரரக்கன் நெடுமுடிகள் பொடியாய் வீழ
அங்கொருதன் திருவிரலால் இறையே யூன்றி
யடர்த்தவற்கே அருள்புரிந்த அடிக ளிந்நாள்
வங்கமலி கடல்புடைசூழ் மாட வீதி
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.

தெளிவுரை : திருமால், இராமாவதாரத்தில் வில்லேந்தியவராகி வானரச் சேனையோடு சேதுபந்தனம் செய்து பொருது இராவணனை வெற்றி கொண்டார். அவ்வரக்கனின் முடிகள் நெரியுமாறு திருவிரலால் சிறிது ஊன்றி அடர்த்தவர், சிவபெருமான். அவ்வடிகள் இந்நாள், வலம்புரத்தில் புகுந்து வீற்றிருப்பவர் ஆயினர்.

திருச்சிற்றம்பலம்

 

59. திருவெண்ணியூர் (அருள்மிகு வெண்ணிகரும்பேஸ்வரர் திருக்கோயில், கோயில்வெண்ணி,திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

591. தொண்டிலங்கும் அடியவர்க்கோர் நெறியி னாருந்
தூநீறு துதைந்திலங்கு மார்பி னாரும்
புண்டரிகத் தயனொடுமால் காணா வண்ணம்
பொங்குதழற் பிழம்பாய புராண னாரும்
வண்டமரும் மலர்க்கொன்றை மாலை யாரும்
வானவர்க்கா நஞ்சுண்ட மைந்த னாரும்
விண்டவர்தம் புரமூன்றும் எரி செய்தாரும்
வெண்ணியமர்ந்த துறைகின்ற விகிர்த னாரே.

தெளிவுரை : சிவபெருமான், தொண்டு புரியும் அடியவர்களுக்கு நன்னெறியாகுபவர்; தூய திருவெண்ணீறு திகழும் மார்பினர்; அயனும் மாலும் காணாதவாறு பேரழற்பிழம்பாய் ஓங்கியவர்; கொன்றை மாலை தரித்தவர்; தேவர்கள் உய்யும் தன்மையில் நஞ்சினை உட்கொண்டு அருள் புரிந்தவர்; அசுரர்களின் கோட்டைகள் மூன்றினையும் எரித்துச் சாம்பலாக்கியவர். அவர் சென்னியில் உறையும் விகிர்தர் ஆவார்.

592.நெருப்பனைய மேனிமேல் வெண்ணீற் றாரும்
நெற்றிமே லொற்றைக்கண் நிறைவித் தாரும்
பொருப்பரையன் மடப்பாவை யிடப்பா லாரும்
பூந்துருத்தி நகர்மேய புராண னாரும்
மருப்பனைய வெண்மதியக் கண்ணி யாரும்
வளைகுளமும் மறைக்காடும் மன்னி னாரும்
விருப்புடைய அடியவர்தம் முள்ளத் தாரும்
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.

தெளிவுரை : சிவபெருமான், நெருப்புப் போன்ற வண்ணம் கொண்ட திருமேனியில் திருவெண்ணீறு தரித்தவர்; நெற்றியில் கண்ணுடையவர்; உமாதேவியை இடப்பாகத்தில் கொண்டு விளங்குபவர்; பூந்துருத்தியில் மேய புராணனார்; யானையின் தந்தம் போன்று வளைந்து மேவும் வெண்மையான சந்திரனைச் சூடியுள்ளவர்; வளைகுளம், திருமறைக்காடு ஆகிய தலங்களில் விளங்குபவர்; திருத்தொண்டர்களின் உள்ளத்தில் வீற்றிருப்பவர். அவர் வெண்ணியில் உறையும் விகிர்தனார் ஆவார்.

593. கையுலாம் மூவியைவே லேந்தி னாருங்
கரிகாட்டில் எரியாடுங் கடவு ளாரும்
பையுலாம் நாகங்கொண் டாட்டு வாரும்
பரவுவார் பாவங்கள் பாற்று வாரும்
செய்யுலாங் கயல்பாய வயல்கள் சூழ்ந்த
மெய்யுலாம் வெண்ணீறு சண்ணித் தாரும்
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.

தெளிவுரை : சிவபெருமான், சூலத்தை ஏந்தியவர்; கையில் நெருப்பேந்தி மயானத்தில் நடனம் புரிபவர்; நாகத்தை ஆட்டுபவர்; திருப்புன்கூரில் மேவியவர். திருமேனியில் திருவெண்ணீறு தரித்தவர்; அவர் வெண்ணியில் உறையும் விகிர்தர் ஆவார்.

594. சடையேறு புனல்வைத்த சதுர னாருந்
தக்கன்றன் பெருவேள்வி தடைசெய் தாரும்
உடையேறு புரியதன்மேல் நாகங் கட்டி
யுண்பலிக்கென் றாரூரி னுழிதர் வாரும்
மடையேறிக் கயல்பாய வயல்கள் சூழ்ந்த
மயிலாடு துறையுறையும் மணாள னாரும்
விடையேறு வெல்கொடியெம் விமல னாரும்
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.

தெளிவுரை : சிவபெருமான், கங்கையைச் சடையில் வைத்த சதுரர்; தக்கன் செய்த வேள்வியைத் தகர்த்தவர்; புலித்தோலை உடையாகக் கொண்டு அதன்மேல் நாகத்தைக் கட்டியவர்; பலியேற்று ஊர் தோறும் திரிபவர்; மயிலாடுதுறையுள் மேவும் மணாளர்; இடபக் கொடியுடையவர். அவர் வெண்ணியில் உறையும் விகிர்தர் ஆவார்.

595. மண்ணிலங்கு நீரனல்கால் வானு மாகி
மற்றவற்றின் குணமெலா மாய்நின் றாரும்
பண்ணிலங்கு பாடலோ டாட லாரும்
பருப்பதமும் பாசூரும் மன்னி னாரும்
கண்ணிலங்கு நுதலாருங் கபால மேந்திக்
கடைதோறும் பலிகொள்ளுங் காட்சி யாரும்
விண்ணிலங்கு வெண்மதியக் கண்ணி யாரும்
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.

தெளிவுரை : சிவபெருமான், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் மற்றும் அவற்றின் குணமாக விளங்குபவர்; பண்ணுடன் ஏத்தும் இசை விளங்கும் பருப்பதம் பாசூர் ஆகிய தலங்களில் மேவியவர்; நெற்றியில் கண்ணுடையவர்; கையில் கபாலம் ஏந்தியவர்; தாருகவனத்து முனிவர்களின் இல்லந்தோறும் சென்று பலி கொள்பவர்; வெண்மையான சந்திரனைச் சூடியவர்; அப் பெருமான், வெண்ணியில் உறையும் விகிர்தர் ஆவார்.

596. வீடுதனை மெய்யடியார்க் கருள்செய் வாரும்
வேலைவிட முண்டிருண்ட கண்டத் தாரும்
கூடலர்தம் மூவெயிலும் எரிசெய் தாரும்
குரகைழ லாற் கூற்றுவனைக் குமைசெய் தாரும்
ஆடுமர வரைக்கசைத்தங் காடு வாரும்
ஆலமர நீழலிருந் தறஞ்சொன் னாரும்
வேடுவராய் மேல்விசயற் கருள்செய் தாரும்
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.

தெளிவுரை : சிவபெருமான், மெய்யடியவர்களுக்கு வீடுபேறு அருள்பவர்; நஞ்சுண்டு கருத்த கண்டம் உடையவர்; முப்புர அசுரர்களின் கோட்டைகளை எரித்தவர்; கூற்றுவனைக் காலால் உதைத்தவர்; நாகத்தை ஆட்டுபவர்; கல்லால மரத்தின் கீழ் இருந்து அறம் உரைத்தவர்; வேட்டுவத் திருக்கோலத்தில் சென்று அர்ச்சுனருக்கு அருள் செய்தவர். அப் பெருமான், வெண்ணியில் வீற்றிருக்கும் விகிர்தனார் ஆவார்.

597. மட்டிலங்கு கொன்றையந்தார் மாலை சூடி
மடவா ளவளோடு மானொன் றேந்திச்
சிட்டிலங்கு வேடத்த ராகி நாதஞ்
சில்பலிக்கென் றூரூர் திரிதர் வாருங்
கட்டிலங்கு பாசத்தார் வீச வந்த
காலன்றன் கால மறுப்பார் தாமும்
விட்டிலங்கு வெண்குழைசேர் காதி னாரும்
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.

தெளிவுரை : சிவபெருமான், கொன்றை மாலை சூடி விளங்குபவர்; உமாதேவியை ஒரு பாகங்கொண்டு மான் ஏந்தியவர்; சிட்டர் வேடத்தராகிப் பலியேற்றுத் திரிபவர்; பாசக் கயிற்றை வீசிய காலனை மாய்த்தவர், வெண் குழையக் காதில் அணிந்தவர். அப்பெருமான், வெண்ணியில் வீற்றிருக்கும் விகிர்தனார் ஆவார்.

598. செஞ்சடைக்கோர் வெண்டிங்கள் சூடி னாருந்
திருவால வாயுறையுஞ் செல்வ னாரும்
அஞ்சனக்கண் அரிவையொரு பாகத் தாரும்
ஆறங்கம் நால்வேத மாய்நின் றாரும்
மஞ்சடுத்த நீள்சோலை மாட வீதி
மதிலாரூர் புக்கங்கே மன்னி னாரும்
வெஞ்சினத்த வேழமது உரிசெய் தாரும்
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.

தெளிவுரை : சிவபெருமான், சடையில் சந்திரனைச் சூடியவர்; திருஆலவாயில் உறையும் செல்வர்; உமைபாகர்; ஆறு அங்கமும் நான்கு வேதமும் ஆனவர்; நீண்ட சோலையும் மாடவீதியும் கொண்ட ஆரூரில் உறைபவர்; யானையின் தோலை உரித்தவர். அப்பெருமான், வெண்ணியில் வீற்றிருக்கும் விகிர்தனார் ஆவார்.

599. வளங்கிளர்மா மதிசூடும் வேணி யாரும்
வானவர்க்கா நஞ்சுண்ட மைந்த னாருங்
களங்கொளவெண் சிந்தை யுள்ளே மன்னினாருங்
கச்சியே கம்பத்தெங் கடவு ளாரும்
உளங்குளிர அமுதூறி யண்ணிப் பாரும்
உத்தமரா யெத்திசையும் மன்னி னாரும்
விளங்கிளரும் வெண்மழுவொன் றேந்தி னாரும்
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.

தெளிவுரை : சிவபெருமான், வளரும் சந்திரனைச் சூடியவர்; நீலகண்டர்; என் சிந்தையுள் மேவுபவர்; திருக்கச்சியேகம்பத்தில் திகழ்பவர்; உள்ளத்தில் நிறையும் அமுதாகுபவர்; எல்லாத் திசைகளிலும் ஒளிர்பவர்; மழுப்படையுடையவர். அவர் வெண்ணியில் வீற்றிருக்கும் விகிர்தனார் ஆவார்.

600. பொன்னிலங்கு கொன்றையந்தார் மாலை சூடிப்
புகலூரும் பூவணமும் பொருந்தி னாருங்
கொன்னிலங்கு மூவிலைவே லேந்தி னாருங்
குளிரார்ந்த செஞ்சடையெங் குழக னாருந்
தென்னிலங்கை மன்னவர்கோன் சிரங்கள் பத்துந்
திருவிரலா லடர்த்தடனுக் கருள்செய் தாரும்
மின்னிலங்கு நுண்ணிடையாள் பாகத் தாரும்
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.

தெளிவுரை : சிவபெருமான், கொன்றை மாலை சூடியவர்; திருப்புகலூர், திருப்பூவணம் ஆகிய தலங்களில் மேவுபவர்; சூலம் ஏந்திச் செஞ்சடையில் கங்கை திகழ விளங்குபவர்; இராவணனுடைய தலைகளைத் திருவிரலால் ஊன்றி நெரித்தவர்; உமைபாகர். அப்பெருமான் வெண்ணியில் வீற்றிருக்கும் விகிர்தனார் ஆவார்.

திருச்சிற்றம்பலம்

60. திருக்கற்குடி (அருள்மிகு உஜ்ஜீவநாதர் திருக்கோயில், உய்யக்கொண்டான் மலை,திருச்சி மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

601. மூத்தவனை வானவர்க்கு மூவா மேனி
முதலவனைத் திருவரையின் மூக்கப் பாம்பொன்
றார்த்தவனை அக்கரவ மார மாக
அணிந்தவனைப் பணிந்தடியா ரடைந்த அன்போ
டேத்தவனை யிறுவரையில் தேனை ஏனோர்க்
கின்னமுத மளித்தவனை யிடரை யெல்லாங்
காத்தவனைக் கற்குடியில் விழுமி யானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், யாவற்கும் முந்தியவர்; மூப்பில்லாதவர், அரையில் பாம்பைக் கட்டியவர்; எலும்பு மாலையை ஆரமாகக் கொண்டவர்; பணிந்தேத்தும் அன்பர்களுக்கு மலைத்தேன் போன்று இனிமையானவர்; இடர் தீர்ப்பவர். அப் பெருமான் கற்குடியில் மேவும் கற்பகமாக விளங்க நான் கண்ணாரக் கண்டேன்.

602. செய்யானை வெளியரைக் கரியான் தன்னைத்
திசைமுகனைத் திசையெட்டுஞ் செறிந்தான் தன்னை
ஐயானை நொய்யானைச் சீரி யானை
அணியானைச் சேயானை ஆனஞ் சாடும்
மெய்யானைப் பொய்யாது மில்லான் தன்னை
விடையானைச் சடையானை வெறித்த மான்கொள்
கையானைக் கற்குடியில் விழுமி யானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், செம்மேனியில் வெண்ணீறு பூசிய நீலகண்டர்; நான்முகனாகவும், எண் திசையாகவும் மேவும் அழகர்; நுண்மையும், சிறப்பும் கொண்டு அண்மையானவராகவும் சேய்மையானவராகவும் திகழ்பவர்; பசுவின் பஞ்ச கவ்வியத்தை விரும்புபவர்; மெய்ம்மையுடையவர், பொய்மையற்றவர், விடையும், சடையும், மானும் கொண்டு கற்குடியில் வீற்றிருப்பவர். விழுமிய கற்பகம் போன்ற அப்பரமனைக் கண்ணாரக் கண்டேன்.

603. மண்ணதனில் ஐந்தைமா நீரில் நான்கை
வயங்கெரியில் மூன்றமைமா ருதத்தி ரண்டை
விண்ண தனிலொன்றை விரிகதிரைத்
தண்மதியைத் தாரகைகள் தம்மின் மிக்க
எண்ணதனில் எழுத்தைஏ ழிசையைக் காமன்
எழிலழிய எரியுமிழ்ந்த இமையா நெற்றிக்
கண்ணவனைக் கற்குடியில் விழுமி யானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், மண்ணில் திகழும் சுவை, ஒளி, ஊறு, ஓசை, மணம் என ஐந்தாகவும் நீரில் சுவை, ஒளி, ஊறு, ஓசை என நான்காகவும், நெருப்பில் ஒளி, ஊறு, ஓசை என மூன்றாகவும், காற்றில் ஊறு, ஓசை என இரண்டாகவும், ஆகாயத்தில் ஓசையாகவும் விளங்குபவர்; கதிரவன், தண்மதி, விண்மீன் என ஆகுபவர்; எண் எழுத்து ஏழிசையாகுபவர்; மன்மதனை எரித்தவர்; நெற்றிக் கண்ணுடையவர். அப் பெருமான் கற்குடியில் கற்பகமாய் விளங்கக் கண்ணாரக் கண்டேன்.

604. நற்றவனைப் புற்றரவ நாணி னானை
நாணாது நகுதலையூண் நயந்தான் தன்னை
முற்றவனை மூவாத மேனி யானை
முந்நீரின் நஞ்சமுகந் துண்டான் தன்னைப்
பற்றவனைப் பற்றார்தம் பதிகள் செற்ற
படையானை அடைவார்தம் பாவம் போக்கக்
கற்றவனைக் கற்குடியில் விழுமி யானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், நற்றவமானவர்; நாகத்தை வில்லின் நாணாகக் கொண்டவர்; கபாலம் ஏந்திப் பலியேற்றவர்; மூப்பில்லாதவர்; நஞ்சுண்டு நீல கண்டர் ஆனவர்; பற்றற்றவர்; ஈசனைப் பற்றாது, பகை கொண்ட மூன்று அசுரர்களின் கோட்டைகளை எரித்தவர்; தன்னைக் கதியாக அடைந்தவர்களின் பாவத்தைப் போக்குபவர். அப் பெருமான் கற்குடியில் விழுமிய பொருளாக விளங்குபவர். கற்பகம் போன்று திகழும் அவரைக் கண்ணாரக் கண்டேன்.

605. சங்கைதனைத் தவிர்த்தாண்ட தலைவன் தன்னைச்
சங்கரனைத் தழலுறுதான் மழுவாள் தாங்கும்
அங்கையனை அங்கமணி ஆகத் தானை
ஆகத்தோர் பாகத்தே அமர வைத்த
மங்கையனை மதியொடுமா கணமுந் தம்மின்
மருவவிரி சடைமுடிமேல் வைத்த வான்நீர்க்
கங்கையனைக் கற்குடியில் விழுமி யானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், எல்லா ஐயங்களையும் தீர்ப்பவர்; உயிர்களுக்கு இன்பம் செய்பவர்; தழல் வடிவம் ஆனவர்; மழுப்படை யேந்தியவர்; எலும்பு மாலை அணிந்தவர்; திருமேனியில் உமா தேவியைக் கொண்டுள்ளவர்; திங்களும் பாம்பும் சடையில் திகழுமாறு செய்து கங்கையைத் தரித்தவர். அப்பெருமான் கற்குடியில் விழுமிய பொருளாக விளங்கிக் கற்பகமாய்த் திகழ அடியேன் கண்ணாரக் கண்டேன்.

606. பெண்ணவனை ஆணவனைப் பேடா னானைப்
பிறப்பிலியை இறப்பிலியைப் பேரா வாணி
விண்ணவனை விண்ணவர்க்கு மேலா னானை
வேதியனை வேதத்தின் கீதம் பாடும்
பண்ணவனைப் பண்ணில்வரு பயனா னானைப்
பாரவனைப் பாரில்வாழ் உயிர்கட் கெல்லாங்
கண்ணவனைக் கற்குடியில் விழுமி யானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், பெண்ணாகவும், ஆணாகவும், அலியாகவும், பிறப்பும் இறப்பும் இல்லாதவராகவும் விளங்குபவர்; தேவர்க்கு மேலானவர்; வேதம் ஓதி விரிப்பவர்; பண்ணின் பயனாகுபவர்; உலகுயிர்க்குக் கண்ணாகுபவர். அப்பெருமான் விழுமிய பொருளாகக் கற்குடியில் மேவும் கற்பகமாய்த் திகழ நான் கண்ணாரக் கண்டேன்.

607. பண்டானைப் பரந்தைøனிக குவிந்தான் தன்னைப்
பாரானை விண்ணாயிவ் வுலக மெல்லாம்
உண்டானை உமிழ்ந்தானை உடையான் தன்னை
யொருவருந்தன் பெருமைதனை அறியவொண்ணா
விண்டானை விண்டார்தம் புரங்கள் மூன்றும்
வெவ்வழலில் வெந்துபொடி யாகிவீழக்
கண்டானைக் கற்குடியில் விழுமி யானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், தொன்மையாய் விளங்குபவர்; பரவி விளங்குபவர்; நுண்மையாய்த் திகழ்பவர்; பூவுலகமும் மேலுலகமும் ஆகியவர்; உலகமெல்லாம் காக்கும் தன்மையில் உண்டு உமிழ்ந்த திருமாலைத் தன் மேனியில் கூறுடையவர்; யாராலும் அறியப்படாத பெருமையுடையவர்; முப்புர அசுரர்புரங்களை எரித்தவர். அப் பெருமான், விழுமியராகக் கற்குடியில் மேவி விளங்கும் கற்பகமாகத் திகழ நான் கண்ணாரக் கண்டேன்.

608. வானவனை வானவர்க்கு மேலா னானை
வணங்குமடி யார்மனத்துள் மருவிப் புக்க
தேனவனைத் தேவர்தொழு கழலான் தன்னைச்
செய்குணங்கள் பலவாகி நின்ற வென்றிக்
கோனவனைக் கொல்லை விடை யேற்றி னானைக்
குழல்முழவம் இயம்பக்கூத் தாட வல்ல
கானவனைக் கற்குடியில் விழுமி யானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், தேவர்களின் தலைவர்; அடியவர்களின் மனத்தில் உறைபவர்; குணங்கள் பலவாகியவர்; இடவாகனர்; குழலும் முழவமும் இயம்பக் கூத்தாட வல்லவர். அப் பெருமான், விழுமியவராய்க் கற்குடியில் மேவும் கற்பகமாய் விளங்க, நான் கண்ணாரக் கண்டேன்.

609. கொலையானை யுரிபோர்த்த கொள்கை யானைக்
கோளரியைக் கூரம்பா வரைமேற் கோத்த
சிலையானைச் செம்மைதரு பொருளான் தன்னைத்
திரிபுரத்தோர் மூவர்க்குச் செம்மை செய்த
தலையானைத் தத்துவங்க ளானான் தன்னைத்
தையலோர் பங்கினைத்த தன்கை யேந்து
கலையானைக் கற்குடியில் விழுமி யானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், யானையின் தோலை உரித்தவர், திருமாலைக் கூரிய அம்பு ஆக்கி முப்புரத்தை எரித்தவர்; மூவரைக் காத்தவர்; செம்மை திகழும் பொருளானவர்; தத்துவங்கள் ஆகுபவர்; உமை பாகர்; தன் கையில் மான் ஏந்தியவர். அப் பெருமான் கற்குடியில் மேவும் விழுமியவராகிக் கற்பகமாய்த் திகழ, நான் கண்ணாரக் கண்டேன்.

610. பொழிலானைப் பொழிலாரும் புன்கூ ரானைப்
புறம்பயனை அறம்புரிந்த புகலூ ரானை
எழிலானை இடைமருதி னிடங்கொண் டானை
ஈங்கோய்நீங் காதுறையும் இறைவன் தன்னை
அழலாடு மேனியனை அன்று சென்றக்
குன்றெடுத்த அரக்கன்தோள் நெரிய ஊன்றுங்
கழலானைக் கற்குடியில் விழுமி யானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான் உலகம் யாவும் ஆகுபவர்; திருப்புன்கூர், புறம்பயம், திருப்புகலூர், இடைமருது ஈங்கோய்மலை ஆகியவற்றில் விளங்குபவர்; நெருப்பேந்தி ஆடுபவர்; இராவணனின் தோளை நெரித்தவர்; அப் பெருமான் விழுமிய கற்குடியில் கற்பகமாய் விளங்கக் கண்டு நான் தரிசித்தேன்.

திருச்சிற்றம்பலம்

61. திருக்கன்றாப்பூர் (அருள்மிகு நடுதறியப்பர் திருக்கோயில், கோயில் கண்ணாப்பூர்,திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

611. மாதினையோர் கூறுகந்தாய் மறைகொள் நாவா
மதிசூடி வானவர்கள் தங்கட் கெல்லாம்
நாதனே யென்றென்று பரவி நாளும்
நைஞ்சுருகி வஞ்சகமற் றன்பு கூர்ந்து
வாதனையால் முப்பொழுதும் பூநீர் கொண்டு
வைகல் மறவாது வாழ்த்தி யேந்திக்
காதன்மையால் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், உமைபாகர்; வேத நாவர்; மதிசூடீ; தேவர்களுக்கெல்லாம் நாயகர்; மனம் உருகிப் போற்றி நாள்தோறும் பூவும் நீரும் கொண்டு ஏத்தும் அடியவர் நெஞ்சுள் உறைபவர். தேவரீரைக் கன்றாப்பூரில் காணலாமே.

612. விடிவதுமே வெண்ணீற்றை மெய்யிற் பூசி
வெளுத்தமைந்த கீளொடுகோ வணமுந் தற்றுச்
செடியுடைய வல்வினைநோய் தீர்ப்பாய் என்றுஞ்
செலகதிக்கு வழிகாட்டுஞ் சிவனே யென்றுந்
துடியனைய இடைமடவாள் பங்கா வென்றுஞ்
சுடலைதனில் நடமாடுஞ் சோதீ யென்றுங்
கடிமலர்தூய்த் தொழுமடியா நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

தெளிவுரை : காலை விடிந்ததும் எழுந்து நீராடித் தூய்மையுடன் திருவெண்ணீறு தரித்துச் சிவபெருமானே ! தேவரீர் வினை நோயைத் தீர்ப்பீராக ! நற்கதி அருள்வீராக என ஏத்தி, உமைபாகனே ! சுடலையில் நடனமாடும் ஈசனே ! சோதியே ! எனப் போற்றி வழிபடும் அடியவர்கள் உள்ளத்தில், கன்றாப்பூரில் மேவும் நடுதறி நாதரைக் காணலாம்.

613. எவரேனுந் தாமாக விலாடத் திட்ட
திருநீறுஞ் சாதனமுங் கண்டா லுள்கி
உவராதே யவரவரைக் கண்ட போதே
உகந்தடிமைத் திறம்நினைத்தங் குவந்த நோக்கி
இவர்தேவர் அவர்தேவ ரென்று சொல்லி
இரண்டாட்டா தொழிந்தீசன் திறமே பேணிக்
கவராதே தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

தெளிவுரை : நெற்றியில் திருவெண்ணீறு தரித்து விளங்கும் சீலர்களைக் கண்டதும் உகந்து அவர்க்கு அடிமை பூண்டு ஈசனின் அருள் திறத்தைப் போற்றி, அவ் அடியவர்க்குத் தொண்டு செய்யும் அன்பர்களின் நெஞ்சினுள், கன்றாப்பூரில் மேவும் நடுதறி நாதரைக் காணலாம்.

614. இலங்காலஞ் சொல்லாநா ளென்று நெஞ்சத்
திடையாதே யாவர்க்கும் பிச்சை யிட்டு
விலங்காதே நெறிநின்றங் கறிவே மிக்கு
மெய்யன்பு புகப்பெய்து பொய்யை நீக்கித்
துலங்காமெய் வானவரைக் காத்து நஞ்சம்
உண்டபிரா னடியிணைக்கே சித்தம் வைத்துக்
கலங்காதே தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

தெளிவுரை : தம்மிடம் பொருள் இல்லாது வறுமை உற்றனம் என்னும் எண்ணத்தைக் கொள்ளாது சிவனடியார் யாவர்க்கும் அடிமைபூண்டு, அமுது ஈந்து, தேவர்களைக் காத்தருள நஞ்சருந்திய ஈசனின் இணையடிக்கே சித்தம் வைத்தவராகி ஏத்தும் அடியவர்களின் நெஞ்சினுள் கன்றாப்பூர் நடுதறி நாதரைக் காணலாம்.

615. விருத்தனே வேலைவிட முண்ட கண்டா
விரிசடைமேல் வெண்டிங்கள் விளங்கச் சூடும்
ஒருத்தனே உமைகணவா உலக மூர்த்தி
நுந்தாத வொண்சுடரே அடியார் தங்கள்
பொருத்தனே யென்றென்று பும்பி நாளும்
புலனைந்தும் அகத்தடக்கிப் புலம்பி நோக்கிக்
கருத்தினால் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், விருத்தர்; நீலகண்டர்; பிறைசூடும் ஒருவர்; உமைபாகர்; உலகநாதர்; நுந்தா ஒண்சுடர். தேவரீர், ஐம்புலன்களை அடக்கி மனம் கசிந்து போற்றும் அடியவர்களின் நெஞ்சுள் மேவுபவர். தேவரீரைக் கன்றாப்பூரில் காணலாம்.

616. பொசியினால் மிடைந்துபுழுப் பொதிந்த போர்வைப்
பொல்லாத புலாலுடம்பை நிலாசு மென்று
பசியினால் மீதூரப் பட்டே யீட்டிப்
பலர்க்குதவ லதுவொழிந்து பவள வாயார்
வசியினா லகப்பட்டு வீழா முன்னம்
வானவர்கோன் திருநாமம் அஞ்சுஞ் சொல்லிக்
கசிவினால் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

தெளிவுரை : புழுப் பொதிந்த போர்வை எனப்படும் இப்புலால் உடம்பானது அழியக் கூடியது என்று எண்ணியும், காம மயக்கத்தின் வயப்படாதவராகிச் சிவபெருமானின் திருவைந்தெழுத்தை ஓதி மனம் கசிந்து உருகியும் மேவும் அடியவர்களின் நெஞ்சினுள், கன்றாப்பூரில் வீற்றிருக்கும் நடுதறியப்பரைக் காணலாம்.

617. ஐயினால் மிடறடைப்புண் டாக்கை விட்டு
ஆவியார் போவதுமே அகத்தார் கூடி
மையினாற் கண்ணெழுதி மாலை சூட்டி
மயானத்தி லிடுவதண்முன் மதியஞ் சூடும்
ஐயனார்க் காளாகி அன்பு மிக்கு
அகங்குழைந்து மெய்யரும்பி அடிகள் பாதங்
கையினால் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

தெளிவுரை : உடல்கெட்டுத் தொண்டையில் கோழை சேர்ந்து யாக்கையை விட்டு உயிர் பிரிந்து சென்று மயானத்தில் இடுவதன்முன், பிறை சூடும் பரமனுக்கு ஆளாகி, அன்பினால் அகம் குழைந்து மெய் சிலிர்க்கத் திருவடியை ஏத்தும் அடியவர்களின் நெஞ்சினுள்ளே, கன்றாப்பூரில் மேவும் நடுதறியப்பரைக் காணலாம்.

618. திருதிமையால் ஐவரையுங் காவ லேவித்
திகையாதே சிவாயநம வென்னுஞ் சிந்தைச்
சுருதிதனைத் துயக்கறுத்துத் துன்ப வெள்ளக்
கடல்நீந்திக் கரையேறுங் கருத்தே மிக்குப்
பரிதிதனைப் பற்பறித்த பாவ நாசா
பரஞ்சுடரே யென்றென்று பரவி நாளுங்
கருதிமிக்க தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

தெளிவுரை : ஐம்புலன்களால் ஈர்க்கப்படாது துன்பத்தை வென்று, சிவாயநம என்னும் திருவைந்தெழுத்தைச் சிந்தித்துத் துன்பத்தை நீக்கி, ஈசனைக் கதிரவனின் பல்லிறுத்த பரமனே ! பாவநாசனே ! பரஞ்சுடரே ! என்று நாள்தோறும் பரவியேத்தும் அடியவர்களின் நெஞ்சினுள்ளே, கன்றாப்பூரில் விளங்கும் நடுதறி நாதரைக் காணலாம்.

619. குனிந்தசிலை யாற்புரமூன் றெரித்தாய் என்றுங்
கூற்றுதைத்த குரைகழற்சே வடியாய் என்றுந்
தனஞ்சயற்குப் பாசுபத மீந்தாய் என்றுந்
தசக்கிரிவன் மலையெடுக்க விரலால் ஊன்றி
முனிந்தவன்தன் சிரம்பத்துந் தாளுந் தோளும்
முரணழித்திட் டருள்கொடுத்த மூர்த்தீ யென்றுங்
கனிந்துமிகத் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

தெளிவுரை : சிவபெருமான், முப்புரங்களை எரித்தவர்; கூற்றுவனை உதைத்தவர்; அர்ச்சுனர்க்குப் பாசுபதம் அருளிச் செய்தவர்; இராவணனுடைய தலைகளை விரலால் ஊன்றி நெரித்தவர்; பின்னர் அருள் கொடுத்தவர். அப் பரமனை நெஞ்சில் கொண்டு தொழும் அடியவர்கள்பால் கன்றாப்பூரில் வீற்றிருக்கும் நடுதறிநாதரைக் காணலாம்.

திருச்சிற்றம்பலம்

62. திருவானைக்கா (அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில், திருவானைக்கா, திருச்சி மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

620. எத்தாயர் எத்தந்தை எச்சுற் றத்தார்
எம்மாடு சும்மாடாம் ஏவர் நல்லார்
செத்தால்வந் துதவுவார் ஒருவ ரில்லை
சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர்
சித்தாய் வேடத்தாய் நீடு பொன்னித்
திருவானைக் காவுடைய செல்வா என்றன்
அத்தாவுன் பொற்பாதம் அடையப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டடி யேன்என் செய்கேனே.

தெளிவுரை : ஈசனே ! இவ்வுலகில் தாயர், தந்தை, சுற்றத்தார், செல்வம் மற்றும் உள்ள அனைவரும் இருப்பினும் உயிரானது நீங்கினால், விறகில் தீமூட்டிச் செல்பவராவர். திருவேடம் பல கொண்டு திரு வானைக்காவில் மேவும் செல்வா ! என் அத்தனே ! தேவரீரின் பொற்பாதத்தை அடையப் பெற்றால் எனக்கு எத்தகைய துன்பமும் இல்லை. தாயர்  தாயர் ஐவர். அவர் பாராட்டும்தாய், ஊட்டும் தாய், முலைத்தாய், கைத்தாய், செவிலித்தாய் ஆவர். மற்றும், அரசன் தேவி, குருவின் தேவி, அண்ணன் தேவி, தேவியை ஈன்றாள், தன்னை ஈன்றாள் எனவும் ஆவர்.

621. ஊனாகி உயிராகி யதனுள் நின்ற
உணர்வாகிப் பிறவனைத்தும் நீயாய் நின்றாய்
நானேதும் அறியாமே யென்னுள் வந்து
நல்லவனுந் தீயனவுங் காட்டா நின்றாய்
தேனாருங் கொன்றையனே நின்றி யூராய்
திருவானைக் காவிலுறை சிவனே ஞானம்
ஆனாய்உன் பொற்பாதம் அடையப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டடி யேன்என் செய்கேனே.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர் ஊனாகி உயிராகி அதனுள் மேவும் உணர்வாகி மற்றும் பிறவியாகிய யாவும் ஆகியவர்; நான் அறியாத தன்மையில் என்னுள் மேவி விளங்கி நல்லதும் தீயதும் காட்டுபவரானீர்; கொன்றை மாலை தரித்த ஈசனே ! திருநின்றியூரில் விளங்கும் நாதனே ! திருவானைக்காவில் வீற்றிருக்கும் சிவனே ! ஞானமாகி மேவும் தேவரீருடைய பொற்பாதத்தைச் சரணாக அடையப்பெற்றால் உலகியல் துன்பமானது என்னை ஏதும் செய்யாது.

622. ஒப்பாயிவ் வுலகத்தோ டொட்டி வாழ்வான்
ஒன்றலாத் தவத்தாரோ டுடனே நின்று
துப்பாருங் குறையடிசில் துற்றி நற்றுன்
திறம்மறந்து திரிவேனைக் காத்து நீவந்
தெப்பாலும் நுண்ணுணர்வே யாக்கி யென்னை
ஆண்டவனே யெழிலானைக் காவா வானோர்
அப்பாவுன் பொற்பாதம் அடையப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டடி யேன்என் செய்கேனே.

தெளிவுரை : இவ்வுலகத்தில் மெய்த் தவத்தைப் பேணாது உண்டு வாழும் தன்மையுடையவர்களோடு ஒட்டி இருந்தும், திரிந்தும், காலத்தைக் கழித்த என்னைக் காத்து அருளிய சிவபெருமான், தன்னை உணருமாறு என்னைச் செய்தவர்; என்னை ஆட் கொண்டவர்; எழில் மிக்க ஆனைக்காவில் மேவியவர். அப் பரமனுடைய பொற் பாதத்தைச் சரணடைந்தால் துன்பம் ஏதும் இல்லை.

623. நினைத்தவர்கள் நெஞ்சுளாய் வஞ்சக் கள்வா
நிறைமதியஞ் சடைவைத்தாய் அடையாதுன்பால்
முனைத்தவர்கள் புரமூன்று மெரியச் செற்றாய்
முன்னானைத் தோல் போர்த்த முதல்வா வென்றுங்
கனைத்துவரும் எருதேறுங் காள கண்டா
கயிலாய மலையாநின் கழலே சேர்ந்தேன்.
அனைத்துலகும் பொற்பாதம் அடையப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டடி யேன்என் செய்கேனே.

தெளிவுரை : சிவபெருமானே ! பக்தியுடன் ஏத்தி வழிபடும் அன்பர்களின் நெஞ்சுள் விளங்கும் தேவரீர், சந்திரனைச் சடையில் சூடியவர்; பகைமை கொண்டு போர் செய்த அசுரர்களின் மூன்று கோட்டைகளை எரித்துச் சாம்பலாக்கியவர்; யானையின் தோலைப் போர்த்தவர்; இடபவாகனம் உடையவர்; நீலகண்டர்; கயிலாய மலைக்கு உரியவர்; அனைத்துலகும் ஆகி, ஆனைக்காவில் வீற்றிருப்பவர். தேவரீரின் இன்னருள் விளக்கமானது மேவி இருக்க, உலகியல் துன்பம் ஏதும் இல்லை.

624. இம்மாயப் பிறப்பென்னுங் கடலாந் துன்பத்
திடைச்சுழிப்பட் டிளைப்பேனை இளையா வண்ணங்
கைம்மான மனத்துதவிக் கருணை செய்து
காதலரு ளவைத்தாய் காண நில்லாய்
வெம்மான மதகரியி னுரிவை போர்த்த
வேதியனே தென்னானைக் காவுள்மேய
அம்மாநின் பொற்பாதம் அடையப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டடி யேன்என் செய்கேனே.

தெளிவுரை : நிலையற்றதாகிய மானிட வாழ்க்கை என்னும் துன்பக் கடலிடைச் சுழிப்பட்டு இளைத்து நலியாத வண்ணம் என் மனத்தில் புகுந்து கருணை புரியும் சிவபெருமானே ! தேவரீர் அடியேனை நினைத்து ஏத்தச் செய்தவர்; காண்பதற்கு அரியவர்; யானையின் தோலைப் போர்த்தவர்; வேத நாயகர்; ஆனைக்காவுள் விளங்குபவர். தேவரீருடைய பொற்பாதங்களை அடையப் பெற்றால் துன்பம் ஏதும் இல்லை.

625. உரையாரும் புகழானே யொற்றி யூராய்
கச்சியே கம்பனே காரோ ணத்தாய்
விரையாரும் மலர்தூவி வணங்கு வார்பால்
மிக்கானே அக்கரவம் ஆரம் பூண்டாய்
திரையாரும் புனற்பொன்னித் தீர்த்தம் மல்கு
திருவானைக் காவிலுறை தேனே வானோர்
அரையாவுன் பொற்பாதம் அடையப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டடி யேன்என் செய்கேனே.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், புகழுக்கு உரியவர்; ஒற்றியூரில் விளங்குபவர்; திருக்கச்சி ஏகம்பம் மேவியவர்; காரோணத்தில் விளங்குபவர்; நறுமலர் தூவி வணங்குபவர்பால் மிகுந்த அன்புடையவர்; எலும்பும் நாகமும் ஆபரணமாகக் கொண்டவர்; புனிதமாகிய காவிரித் தீர்த்தம் விளங்கும் திருவானைக்காவில் வீற்றிருக்கும் தேன் போன்றவர். வானோர்களின் தலைவராகிய தேவரீருடைய பொற்பாதத்தை அடையப் பெற்றால், துன்பம் ஏதும் இல்லை.

626. மையாரும் மணிமிடற்றாய் மாதோர் கூறாய்
மான்மறியும் மாமழுவும் அனலு மேந்துங்
கையானே காலனுடல் மாளச் செற்ற
கங்காளா முன்கோளும் விளைவு மானாய்
செய்யானே திருமேனி யரியாய் தேவர்
குலக்கொழுந்தே தொன்னானைக் காவுள் மேய
ஐயாவுன் பொற்பாதம் அடையப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டட யேன்என் செய்கேனே.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், கரிய கண்டம் உடையவர்; மாதொரு பாகர்; மானும், மழுவும் அனலும் ஏந்தியவர்; காலனை அழித்தவர்; எலும்பு மாலை அணிந்தவர்; முன் வினையும் அதன் பயனும் ஆகியவர்; சிவந்த திருமேனி வண்ணம் உடையவர்; யாவர்க்கும் அரியவர்; தேவர் குலத்தின் காவலர்; திருவானைக்காவில் மேவிய அழகர். தேவரீருடைய பொற்பாதத்தை அடையப் பெற்றால் துன்பம் ஏதும் இல்லை.

627. இலையாருஞ் சூலத்தாய் எண்டோ ளானே
எவ்விடத்தும் நீயல்லா தில்லை யென்று
தலையாரக் கும்பிடுவார் தன்மை யானே
தழல்மடுத்த மாமேருக் கையில் வைத்த
சிலையானே திருவானைக் காவுள் மேய
தீயாடீ சிறுநோயால் நலிவுண் டுள்ளம்
அலையாதே நின்னடியே அடையப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டடி யேன்என் செய்கேனே.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர் சூலப்படையுடையவர்; எட்டுத் தோள்களை உடையவர்; எல்லா இடங்களிலும் வியாபித்து மேவுபவர் என்று கும்பிட்டு யாவராலும் ஏத்தப்படுபவர்; மேரு மலையை வில்லாகக் கையில் ஏந்தி, முப்புரங்களை எரித்துச் சாம்பலாக்கியவர்; திருவானைக்காவுள் மேவி நெருப்பைக் கையில் ஏந்தி ஆடுபவர். வினைப் பயனால் நேரும் தடை கண்டு தளர்ச்சி யடையாது தேவரீருடைய திருவடியை அடையப் பெற்றால் உலகியல் துன்பமானது, என்னை எதுவும் செய்யாது.

628. விண்ணரும் புனல்பொதிசெஞ் சடையாய் வேத
நெறியானே யெறிகடலின் நஞ்ச முண்டாய்
எண்ணாரும் புகழானே உன்னை யெம்மான்
என்றென்றே நாவினில்எப் பொழுதும் உன்னிக்
கண்ணாரக்  கண்டிருக்கக் களித்தெப் போதுங்
கடிபொழில்சூழ் தென்னானைக் காவுள் மேய
அண்ணாநின் பொற்பாதம் அடையப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டடி யேன்என் செய்கேனே.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், செஞ்சடையில் கங்கையைத் தரித்தவர்; வேத நெறியாகுபவர்; நஞ்சுண்டு கரியதாகிய மிடற்றினர்; எண்ணற்ற புகழ் உடையவர்; பக்தியுடன் போற்றும் அடியவர்களின் உள்ளத்தில் விளங்குபவர்; அழகிய ஆனைக்காவுள் மேவியவர்; தேவரீருடைய பொன்னடிகளை அடையப் பெற்றால் துன்பம் ஏதும் இல்லை.

629. கொடியேயும் வெள்ளேற்றாய் கூளி பாடக்
குறட்பூதங் கூத்தாட நீயும் ஆடி
வடிவேயும் மங்கைதனை வைத்த மைந்தா
மதிலானைக் காவுளாய் மாகா ளத்தாய்
படியேயுங் கடலிலங்கைக் கோமான் தன்னைப்
பருமுடியுந் திரள்தோளும் அடர்த்து கந்த
அடியேவந் தடைந்தடிமை யாகப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டடி யேன்என் செய்கேனே.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர், இடபத்தைக் கொடியாகக் கொண்டவர்; கூளிகள் பாடவும் பூதங்கள் உடன் ஆடத் தேவரீரும் ஆடுபவர்; உமாதேவியை உடனாகக் கொண்டவர்; மாகாளம், திருவானைக்கா ஆகிய தலங்களில் விளங்குபவர்; இராவணனுடைய தோளும் முடியும் நெரித்து அடர்த்தவர்; தேவரீருக்கு அடிமையாக இருக்கப் பெற்றால் துன்பம் ஏதும் இல்லை.

திருச்சிற்றம்பலம்

63. திருவானைக்கா (அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில், திருவானைக்கா, திருச்சி மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

630. முன்னானைத் தோல்போர்த்த மூர்த்தி தன்னை
மூவாத சிந்தையே மனமே வாக்கே
தன்னானை யாப்பண்ணி யேறி னானைச்
சார்தற் கரியானை தாதை தன்னை
என்னானைக் கன்றினையென் ஈசன் தன்னை
யெறிநீர்த் திரையுகளும் காவிரிசூழ்
தென்னானைக் காவானைத் தேனைப் பாலைச்
செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

தெளிவுரை : சிவபெருமான், யானையின் தோலை போர்த்தி விளங்குபவர்; மூப்படையாதவராய் மேவுபவர்; மனம் வாக்கு காயமாகவும் விளங்குபவர். ஆன்மாவில் மேவிப் பொருந்தியவர்; சார்ந்து மேவுதற்கு அரியவர்; என் அன்பிற்குரியவர்; என் ஈசன்; காவிரி சூழ்ந்த ஆழகிய ஆனைக்காவில் இனிது விளங்கும் தேனும் பாலுமாகியவர்; நீர்த் திரட்சியாகிய அப்பெருமானைக் கண்டு மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினேன்.

631. மருந்தானை மந்திரிப்பார் மனத்து ளானை
வளர்மதியஞ் சடையானை மகிழ்ந்தென் உள்ளத்
திருந்தானை இறப்பிலியைப் பிறப்பி லானை
இமையவர்தம் பெருமானை யுமையா ளஞ்சக்
கருத்தான மதகளிற்றி னுரிபோர்த் தானைக்
கனமழுவாட் படையானைப் பலிகொண் டூரூர்
திரிந்தானைத் திருவானைக் காவு ளானைச்
செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

தெளிவுரை : சிவபெருமான், அமுதமாகத் திகழ்பவர்; திருவைந்தெழுத்தோதி ஏத்தும் மனத்தினர்க்குப் பிறவி நோயைத் தீர்த்தருளும் மருந்தாகியவர்; சந்திரனைச் சடை முடியில் தரித்தவர்; என் உள்ளத்தில் மகிழ்ந்து விளங்குபவர்; இறப்பும் பிறப்பும் இல்லாதவர்; தேவர்களின் தலைவர்; யானையின் தோலை உரித்தவர்; மழுப்படையை ஏந்தியவர்; ஊர்தோறும் திரிந்து பலியேற்றவர்; திருவானைக்காவுள் விளங்கும் செழுநீர்த்திரள் ஆகியவர். அப் பெருமானை ஏத்தி மகிழ்ந்தேன்.

632. முற்றாத வெண்டிங்கட் கண்ணி யானை
முந்நீர்நஞ் சுண்டிமையோர்க் கமுதம் நல்கும்
உற்றானைப் பல்லுயிர்க்குந் துணையா னானை
ஓங்காரத் துட்பொருளை உலக மெல்லாம்
பெற்றானைப் பின்னிறக்கஞ் செய்வான் தன்னைப்
பிரானென்று போற்றாதார் புரங்கள் மூன்றுஞ்
செற்றானைத் திருவானைக் காவு ளானைச்
செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

தெளிவுரை : சிவபெருமான், சந்திரனைச் சடை முடியில் சூடியவர்; கடலில் தோன்றிய நஞ்சினை உட்கொண்டு தேவர்களுக்கு அமுதம் நல்கியவர்; பல்வகைப்பட்ட உயிர்களுக்கும் துணையானவர்; ஓம் என்னும் பிரணவத்தின் உட்பொருளை உலகத்தில் விளங்கச் செய்பவர்; யாவற்றையும் தன்பால் ஒடுங்குமாறு செய்பவர்; வணங்கி ஏத்தாத முப்புர அசுரர்புரங்கள் மூன்றினையும் எரித்தவர். திருவானைக்காவுள் மேவும் அப்பெருமானை ஏத்தி மகிழ்ந்தேன்.

633. காராருங் கறைமிடற்றெம் பெருமாøன் தன்னைக்
காதில்வெண் குழையானைக் கழம்பூங் கொன்றைத்
தாரானைப் புலியதளி னாடை யானைத்
தானன்றி வேறொன்று மில்லா ஞானப்
பேரானை மணியார மார்பி னானைப்
பிஞ்ஞகனைத் தெய்வநான் மறைகள் பூண்ட
தேரானைத் திருவானைக் காவு ளானைச்
செழுநீர்த் திரனைச்சென் றாடி னேனே.

தெளிவுரை : சிவபெருமான், மேகம் போன்ற கரியமிடற்றை உடையவர்; காதில் வெண்குழை அணிந்தவர்; கொன்றை மாலை அணிந்தவர்; புலித்தோல் உடுத்தியவர்; யாவும் தானாகி விளங்குபவர்; ஞான வடிவாகியவர்; மணி மாலை தரித்தவர்; சடை முடியின் அலங்காரம் மிகுந்து விளங்குபவர்; நான்கு வேதங்களைத் தேராக உடையவர்; திருவானைக்காவுள் நீர்த் திரளாக விளங்குபவர்; அப்பெருமானைக் கண்டு மகிழ்ந்தேன்.

634. பொய்யேது மில்லாத மெய்யன் தன்னைப்
புண்ணியனை நண்ணாதார் புரம்நீ றாக
எய்தானைச் செய்தவத்தின் மிக்கான் தன்னை
ஏறமரும் பெருமானை யிடமான் ஏந்தும்
கையானைக் கங்காள வேடத் தானைக்
கட்டங்கக் கொடியானைக் கனல்போல் மேனிச்
செய்யானைத் திருவானைக் காவு ளானைச்
செழுநீர்த் திரனைச்சென் றாடி னேனே.

தெளிவுரை : சிவபெருமான், மெய்ப்பொருளானவர்; முப்புரங்களை எரித்தவர்; தவத்தினும் உயர்ந்தவர்; இடப வாகனர்; மான் ஏந்திய கையுடையவராகி எலும்பு மாலையும் மழுப்படையும் கொண்டவர்; நெருப்புப் போன்ற சிவந்த மேனியராகத் திருவானைக்காவில் விளங்குபவர். செழுமையான நீர்த் திரளாகிய அப்பெருமானைக் கண்டு மகிழ்ந்தேன்.

635. கலையானைப் பரசுதர பாணி யானைக்
கனவயிரத் திரளானை மணிமா ணிக்க
மலையானை யென்தலையி னுச்சி யானை
வார்தருபுன் சடையானை மயானம் மன்னும்
நிலையானை வரியரவு நாணாக் கோத்து
நினையாதார் புரமெரிய வளைத்த மேருச்
சிலையானைத் திருவானைக் காவு ளானைச்
செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

தெளிவுரை : சிவபெருமான், மான் மழு ஆகியவற்றை ஏந்தியவர்; வயிரத் திரளாகவும் மாணிக்கக் குன்றாகவும் உறுதியாய் நிலைத்து ஒளிர்பவர்; எனக்கு உச்சியாய் உயர்ந்து விளங்குபவர்; சடையில் கங்கை தரித்து மயானத்தில் மேவியும், முப்புரம் எரிப்பதற்காகிய மேருவாகிய வில்லுக்கு அரவத்தை நாணாகக் கொண்டும் திகழ்பவர். திருவானைக்காவில் செழுமையான நீர்த் திரளாய் மேவும் அப் பெருமானை அடைந்து மகிழ்ந்தேன்.

636. ஆதியனை யெறிமணியி னோசை யானை
அண்டத்தார்க் கறிவொண்ணா தப்பால் மிக்க
சோதியனைத் தூமறையின் பொருளான் தன்னைச்
கரும்பமரும் மலர்க்கொன்றை தொன்னூல் பூண்ட
வேதியனை அறமுரைத்த பட்டன் தன்னை
விளங்குமல ரயன்சிரங்கள் ஐந்தி லொன்றைச்
சேதியனைத் திருவானைக் காவு ளானைச்
செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

தெளிவுரை : சிவபெருமான், ஆதிமூர்த்தியாகவும், மணியின் ஓசையாகவும் விளங்குபவர்; தேவர்களால் அறியப்படாதவர்; வேதப் பொருளானவர்; கொன்றை மாலை அணிந்தவர்; முப்புரிநூல் அணிந்த திருமார்பினர்; சனகாதி முனிவர்களுக்கு அறம் உரைத்தவர்; பிரமனின் ஐந்து தலைகளுள் ஒன்றைக் கொய்தவர்; திருவானைக்காவுள் செழுநீர்த் திரளாக விளங்குபவர். அப்பெருமானை அடியேன் கண்டு மகிழ்ந்தேன்.

637. மகிழ்ந்தானைக் கச்சியே கம்பன் தன்னை
மறவாது கழல்நினைத்து வாழ்த்தி ஏத்திப்
புகழ்ந்தாரைப் பொன்னுலகம் ஆள்விப் பானைப்
பூதகணப் படையானைப் புறங்காட் டாடல்
உகந்தானைப் பிச்சையே யிச்சிப் பானை
ஒண்பவளத் திரளையென் னுள்ளத் துள்ளே
திகழ்ந்தானைத் திருவானைக் காவு ளானைச்
செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

தெளிவுரை : சிவபெருமான், திருக்கச்சியேகம்பத்தில் மகிழ்ந்து விளங்குபவர்; அன்புடன் ஏத்தி வழிபடும் பக்தர்களுக்குப் பொன்னுலகத்தை அளிப்பவர். பூத கணங்களைப் படையாகக் கொண்டவர்; மயானத்தில் நடம் புரிபவர்; விரும்பிப் பலியேற்பவர்; பவளத் திரள் போன்று மேவும் செம்மேனியர்; திருவானைக்காவுள் செழுநீர்த் திரளாக விளங்குபவர்; என்னுள்ளத்துள் மேவும் அப்பெருமானை நான் கண்டு மகிழ்ந்தேன்.

638. நசையானை நால்வேதத் தப்பா லானை
நல்குரவு தீப்பணிநோய் காப்பான் தன்னை
இசையானை யெண்ணிறந்த குணத்தான் தன்னை
இடைமருதும் ஈங்கோயும் நீங்கா தேற்றின்
மிசையானை விரிகடலும் மண்ணும் விண்ணும்
மிகுதீயும் புனலெறிகாற் றாகி யெட்டுத்
திசையானைக் திருவானைக் காவு ளானைச்
செழுநீர்த் திருளைச்சென் றாடி னேனே.

தெளிவுரை : சிவபெருமான், யாவராலும் விரும்பப்படுபவர்; நான்கு வேதங்களிலும் மேலானவர்; அடியவர்களுக்கு வறுமை, நோய் முதலான துன்பங்கள் அடையாதவாறு காப்பவர்; இசையாக விளங்குபவர்; எண்ணற்ற வண்ணங்கள் உடையவர்; திருவிடைமருதூர், ஈங்கோய்மலை ஆகிய தலங்களில் விளங்குபவர்; இடப வாகனத்தில் வீற்றிருப்பவர்; கடல், பூவுலகம், விண்ணுலகம், நெருப்பு, நீர், காற்று, எட்டுத் திசைகள் என ஆகித் திருவானைக்காவுள் செழுநீர்த் திரளாக விளங்குபவர். அப் பெருமானை நான் அடைந்து மகிழ்ந்தேன்.

639. பார்த்தானைக் காமனுடல் பொடியாய் வீழப்
பண்டயன்மால் இருவர்க்கும் அறியா வண்ணஞ்
சீர்த்தானைச் செந்தழல்போ லுருவி னானைத்
தேவர்கள்தம் பெருமானைத் திறமுன் னாதே
ஆர்த்தோடி மலையெடுத்த இலங்கை வேந்தன்
ஆண்மையெலாங் கொடுத்தவன்தன் இடரப்போதே
தீர்த்தானைத் திருவானைக் காவு ளானைச்
செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

தெளிவுரை : சிவபெருமான், மன்மதன் எரிந்து சாம்பலாகுமாறு நெற்றிக்கண்ணால் விழித்து நோக்கியவர்; அயனும் மாலும் அறியாதவாறு செந்தழலாய் ஓங்கி உயர்ந்தவர்; தேவர்களின் தலைவர்; உண்மையான பலத்தை உணராது, மலையெடுத்த இராவணனைத் திருவிரலால் ஊன்றி அடர்த்தவர்; பின்னர் அருள் புரிந்தவர். திருவானைக்காவுள் செழுநீர்த் திரளாக மேவும் அப் பெருமானைக் கண்டு மகிழ்ந்தேன்.

திருச்சிற்றம்பலம்

64. திருக்கச்சியேகம்பம் (அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம்)

திருச்சிற்றம்பலம்

640. கூற்றுவன்காண் கூற்றுவனைக் குமைத்த கோன்காண்
குவலயன்காண் குவலயத்தின் நீரா னான்காண்
காற்றவன்காண் கனலவன்காண் கலிக்கும் மின்காண்
கனபவளச் செம்மேனி கலந்த வெள்ளை
நீற்றவன்காண் நிலாவூருஞ் சென்னி யான்காண்
நிறையார்ந்த புனற்கங்கை நிமிர்ச டைமேல்
ஏற்றவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

தெளிவுரை : சிவபெருமான், உருத்திரனாகத் திகழ்பவர்; காலனை அழித்தவர்; உலகமாகவும் உலகில் திகழும் நீர், காற்று, நெருப்பு மற்றும் வானில் மேவும் இடியும் மின்னலும் ஆனவர்; பவளம் போன்ற செம்மேனியில் திருவெண்ணீறு பூசி விளங்குபவர்; சடையில் சந்திரனைச் சூடியவர்; கங்கையைத் தரித்தவர்; எழிலும் பொழிலும் விளங்கும் கச்சியில் மேவிய ஏகம்பர். அப்பெருமான் என் எண்ணத்தில் விளங்குபவராவர்.

641. பரந்தவன்காண் பல்லுயிர்க ளாகி யெங்கும்
பணிந்தெழுவார் பாவமும் வினையும் போகத்
துரந்தவன்காண் தூமலரங் கண்ணி யான்காண்
தோற்ற நிலையிறுதிப் பொருளாய் வந்த
மருந்தவன்காண் வையகங்கள் பொறைதீர்ப் பான்காண்
மலர்தூவி நினைந்தெழுவா ருள்ளம் நீங்கா
திருந்தவன்காண் எழிலஆரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

தெளிவுரை : சிவபெருமான், எல்லா இடங்களிலும் பரந்து விரிந்தவர்; எல்லா உயிர்களும் ஆனவர்; பணியும் அன்பர்களின் பாவத்தையும் வினையையும் போக்குபவர்; தூய மலர்களைத் தரித்தவர்; படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய தன்மைகளை அருளும் தலைவர்; உலகில் தோன்றும் பிறவி என்னும் சுமையை நீக்க உயிர்களுக்குப் பிறவாமையை அருள்பவர்; மலர் தூவி ஏத்தும் பக்தர்களின் உள்ளத்தில் நீங்காது இருப்பவர்; எழிலும் பொழிலும் திகழும் கச்சியில் மேவும் ஏகம்பர். அப் பெருமான் என் எண்ணத்தில் உள்ளவர் ஆவார்.

642. நீற்றவன்காண் நீராகித் தீயா னான்காண்
நிறைமழுவுந் தமருகமும் எரியுங் கையில்
தோற்றவன்காண் தோற்றக் கேடில்லா தான்காண்
துணையிலிகாண் துணையென்று தொழுவாருள்ளம்
போற்றவன்காண் புகழ்கள்தமைப் படைத்தான் றான்காண்
பெறியரவும் விரிசடைமேற் புனலுங் கங்கை
ஏற்றவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண் அவன்என் எண்ணத் தானே.

தெளிவுரை : சிவபெருமான், திருநீறு பூசி விளங்குபவர்; நீரும் நெருப்பும் ஆனவர்; மழு, உடுக்கை, நெருப்பு ஆகியவற்றைக் கையில் ஏந்தியுள்ளவர்; தோற்றம் கொண்டு விளங்கிக் காட்சி தருபவர்; அழிவில்லாதவர்; தனக்குத் துணை என்று யாரும் இன்றித் தாமே யாவற்றிலும் திகழும் ஆற்றல் உடையவர்; தொழுது ஏத்தும் அடியவர்களுக்குத் துணையாக மேவி அருள்பவர்; புகழின் மிக்கவர்; சடையில் பாம்பும், கங்கையும் கொண்டு விளங்குபவர்; எழிலும் பொழிலும் மேவும் கச்சியில் திகழும் ஏகம்பர். அப்பெருமான் என் எண்ணத்தில் மேவியவர் ஆவார்.

643. தாயவன்காண் உலகிற்குத் தன்னொப் பில்லாத்
தத்துவன்காண் மலைமங்கை பங்கா என்பார்
வாயவன்காண் வரும்பிறவி நோய்தீர்ப் பான்காண்
வானவர்க்குந் தானவர்க்கும் மண்ணுளோர்க்கும்
சேயவன்காண் நினைவார்க்குச் சித்த மாரத்
திருவடியே உள்கிநினைந் தெழுவா ருள்ளம்
ஏயவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

தெளிவுரை : சிவபெருமான், உலகின் தாயாகத் திகழ்பவர்; தனக்கு ஒப்புமை எதுவும் இல்லாத தனித் தன்மையுடையவர்; உமாதேவியாரைப் பாகமாகக் கொண்டவர்; பிறவியாகிய நோயைத் தீர்ப்பவர்; தேவர்கள், அசுரர்கள் மற்றும் பூவுலகத்தவர் என யாவர்க்கும் சேய்மையுடையவர்; சித்தத்தில் உவந்து ஒருநிலைப்பட்ட மனத்தினராகித் திருவடியை நினைந்து ஏத்தும் அடியவர்களிடம் பொருந்தி விளங்குபவர்; எழிலும் பொழிலும் உள்ள கச்சியில் விளங்கும் ஏகம்பர். அப் பெருமான் என் உள்ளத்தில் மேவியவர் ஆவார்.

644. அழித்தவன்காண் எயில்மூன்றும் அயில்வா யம்பால்
ஐயாறும் இடைமருதும் ஆள்வான் தான்காண்
பழித்தவன்காண் அடையாரை அடைவார் தங்கள்
பற்றவன்காண் புற்றரவ நாணி னான்காண்
சுழித்தவன்காண் முடிக்கங்கை அடியே போற்றுந்
தூயமா முனிவர்க்காப் பார்மேல் நிற்க
இழித்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

தெளிவுரை : சிவபெருமான், முப்புர அசுரர்களின் கோட்டைகளை அம்பால் எரித்து அழித்தவர்; திருவையாறு, திருவிடைமருதூர் ஆகிய தலங்களில் வீற்றிருப்பவர்; தன்னை ஏத்தாதவர்களுக்கு முன்னின்று தோன்றாதவர்; விழைந்து ஏத்தும் அடியவர்களுக்குப் பற்றாய் விளங்கி அருள் புரிபவர்; அரவத்தை இடையில் கட்டியவர்; சடையில் கங்கையை ஏற்றவர்; தூய்மை சான்ற முனிவர்களால் ஏத்தப்படுபவர்; எழிலும் பொழிலும் திகழும் கச்சியில் மேவும் ஏகம்பர். அப் பெருமான், என் எண்ணத்தில் மேவுபவர் ஆவார்.

645. அசைத்தவன்காண் நடமாடிப் பாடல் பேணி
அழல்வண்ணத் தில்அடியும் முடியுந் தேடப்
பசைந்தவன்காண் பேய்க்கணங்கள் பரவி யேத்தும்
பான்மையன்காண் பரவிநினைந் தெழுவார் தம்பால்
கசிந்தவன்காண் கிரியினுரி போர்த்தான் தான்காண்
கடலில்விடம் உண்டமரர்க் கமுத மீய
இசைந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

தெளிவுரை : சிவபெருமான், பாடலை இசைத்து நடனம் புரிபவர்; அடியும் முடியும் தேடிய மால் அயன் ஆகியோர் காணாதவாறு, அழல் வண்ணமாக நெடிது ஓங்கி உயர்ந்தவர்; பேய்க் கணங்களால் பரவியேத்தப் படுபவர்; நினைந்து ஏத்தும் அடியவர்கள்பால் அன்பு உடையவர்; யானையின் தோலை உரித்துப் போர்த்தவர்; கடலில் தோன்றிய விடத்தை உண்டு தேவர்களுக்கு அமுதம் வழங்கி அருள் புரிந்தவர், எழிலும் பொழிலும் திகழும் கச்சியில் விளங்கும் ஏகம்பர். என் எண்ணத்தில் மேவி விளங்குபவர் ஆவார்.

646. முடித்தவன்காண் வன்கூற்றைச் சீற்றத் தீயால்
வலியார்தம் புரமூன்றும் வேவச் சாபம்
பிடித்தவன்காண் பிஞ்ஞகனாம் வேடத் தான்காண்
பிணையல்வெறி கமழ்கொன்றை அரவு சென்னி
முடித்தவன்காண் மூவிலைநல் வேலி னான்காண்
முழங்கி உருமெனத்தோன்றும் மழையாய் மின்னி
இடித்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

தெளிவுரை : சிவபெருமான், கூற்றுவனை அழித்தவர்; முப்புரங்களை எரித்தவர்; சடைமுடி அலங்காரம் கொண்டவர்; கொன்றை மலரும், பாம்பும் சடையில் திகழ அணிந்தவர்; சூலப் படையுடையவர்; மேகத்தில் முழங்கும் இடி, மின்னல், மழை என ஆகியவர்; எழிலும் பொழிலும் மேவும் கச்சித் திருவேகம்பத்தில் வீற்றிருக்கும் ஏகம்பர். அப் பெருமான் என் எண்ணத்தில் மேவியவர் ஆவார்.

647. வருந்தவன்காண் மனமுருகி நினையா தார்க்கு
வஞ்சகன்காண் அஞ்செழுத்துநினைவார்க் கென்றும்
மருந்தவன்காண் வான்பிணிகள் தீரும் வண்ணம்
வானகமும் மண்ணகமும் மற்று மாகிப்
பரந்தவன்காண் படர்சடை யெட்டுடையான் தான்காண்
பங்கயத்தோன் தன்சிரத்தை யேந்தி யூரூர்
இரந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

தெளிவுரை : சிவபெருமான், தன்னை நினைந்து ஏத்தாதவர்கள் வருந்துவதற்குக் காரணமானவர்; திருவைந்தெழுத்தை நினைந்து ஏத்தும் அன்பர்களுக்கு அமுதம் போன்று இனிமை தந்து பிணி தீர்க்கும் மருந்தாகியவர்; வானுலகமும் மண்ணுலகமும் மற்றும் யாரும் ஆகி விரிந்தவர்; திசைக்கு ஒன்றாகப் பரந்து தலையைக் கபாலமாகக் கையில் ஏந்தியவர்; ஊர்தோறும் சென்று பலியேற்றவர்; எழிலும் பொழிலும் திகழும் திருக்கச்சித் திருவேகம்பத்தில் வீற்றிருப்பவர். அப் பெருமான் என் எண்ணத்தில் மேவியவர் ஆவார்.

648. வெம்மான உழுவையத ளுரிபோர்த் தான்காண்
வேதத்தின் பொருளான்காண் என்றி யம்பி
விம்மாநின் றழுவார்கட் களிப்பான் தான்காண்
விடையேறித் திரிவான்காண் நடஞ்செய் பூதத்
தம்மான்காண் அகலிடங்கள் தாங்கி னான்காண்
அற்புதன்காண் சொற்பதமுங் கடந்து நின்ற
எம்மான்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

தெளிவுரை : சிவபெருமான், புலித்தோலை உடுத்தியவர்; வேதத்தின் பொருளானவர்; பக்தி மேலிட்டுக் கசிந்து உருகியும் விம்மியும் அழுது ஏத்தும் அடியவர்களுக்குத் தன்னையே அளிப்பவர்; இடப வாகனத்தில் அமர்ந்து திரிபவர்; பூத கணங்களுடன் இயைந்து நடனம் புரிபவர்; மயானத்தில் விளங்குபவர்; அற்புதனாகவும் சொற்பதம் கடந்தும் நின்றவர்; எழிலும் பொழிலும் திகழும் திருக்கச்சித் திருவேகம்பத்தில் வீற்றிருப்பவர். அப் பெருமான் என் எண்ணத்தில் மேவுபவர் ஆவார்.

649. அறுத்தான்காண் அயன்சிரத்தை அமரர் வேண்ட
ஆழ்கடலின் நஞ்சுண்டங் கணிநீர்க் கங்கை
செறுத்தான்காண் தேவர்க்குந் தேவன் தான்காண்
திசையனைத்துந் தொழுதேத்தக் கலைமான் கையில்
பொறுத்தான்காண் புகலிடத்தை நலிய வந்து
பொருகயிலை எடுத்தவன்தன் முடிதோள் நாலஞ்
சிறுத்தான்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

தெளிவுரை : சிவபெருமான், பிரமனின் தலையை அறுத்தவர்; நஞ்சினை உண்டவர்; கங்கையைச் சடையில் கரந்தவர்; தேவ தேவர்; திசையனைத்தும் தொழுது ஏத்துமாறு மானைக் கரத்தில் ஏந்தியவர்; கயிலையை எடுத்த இராவணனுடைய முடியும் தோளும் நெரித்தவர்; எழிலும் பொழிலும் திகழும் கச்சித் திருவேகம்பத்தில் வீற்றிருப்பவர்; அப்பெருமான், என் எண்ணத்தில் மேவுபவர் ஆவார்.

திருச்சிற்றம்பலம்

65. திருக்கச்சியேகம்பம் (அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம்)

திருச்சிற்றம்பலம்

650. உரித்தவன்காண் உரக்களிற்றை உமையாள் ஒல்க
ஓங்காரத்தொருவன்காண் உணர்மெய்ஞ்ஞானம்
விரித்தவன்காண் விரித்தநால் வேதத் தான்காண்
வியனுலகிற் பல்லுயிரை விதியி னாலே
தெரித்தவன்காண் சில்லுருவாய்த் தோன்றி யெங்குந்
திரண்டவன்காண் திரிபுரத்தை வேவ வில்லால்
எரித்தவன்காண் எழிலாரும்  பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

தெளிவுரை : சிவபெருமான், யானையின் தோலை உரித்தவர்; ஓங்காரத்தில் ஒளிர்பவர்; மெய்ஞானத்தை விரித்து ஓதியவர்; நான்கு வேதமானவர்; உயிர்களானவை வினைப் பயனையொட்டி உலகில் பிறவியைக் கொள்ளுமாறு செய்பவர்; நுண்மையாக விளங்கி யாங்கணும் நிறைந்தவர்; திரிபுரங்களை எரித்தவர்; எழிலும் பொழிலும் திகழும் கச்சித் திருவேகம்பத்தில் வீற்றிருப்பவர். அப்பெருமான், என் எண்ணத்தில் விளங்குபவர் ஆவார்.

651. நேசன்காண் நேசர்க்கு நேசந் தன்பால்
இல்லாத நெஞ்சத்து நீசர் தம்மைக்
கூசன்காண் கூசாதார் நெஞ்சு தஞ்சே
குடிகொண்ட குழகன்காண் அழகார் கொன்றை
வாசன்காண் மலைமங்கை பங்கன் தான்காண்
வானவர்கள் எப்பொழுதும் வணங்கி யேத்தும்
ஈசன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

தெளிவுரை : சிவபெருமான், அன்பு கொண்டு நேசிப்பவர்களுக்கு நேசமானவர்; நேயம் அற்ற கீழ்த் தன்மையுடையவர்பால் அணுகாதவர்; நாணம் என்னும் தன் முனைப்பு ஆகிய உணர்வு அற்ற நெஞ்சினர் தம் உள்ளத்தில் விளங்கும் அன்பர்; அழகிய கொன்றை மலரைத் தரித்தவர்; உமை பாகர்; வானவர்கள் வணங்கி ஏத்தும் ஈசன்; எழிலும் பொழிலும் திகழும் கச்சியில் மேவும் ஏகம்பர். அப்பெருமான் என் எண்ணத்தில் மேவியவர் ஆவார்.

652. பொறையவன்காண் பூமியேழ் தாங்கி யோங்கும்
புண்ணியன்காண் நண்ணியபுண்டரி கப்போதிதன்
மறையவன்காண் மறையவனைப் பயந்தோன் தான்காண்
வார்சடைமா கணமணிந்து வளரும் பிள்ளைப்
பிறையவன்காண் பிறைதிகழும் எயிற்றுப் பேழ்வாய்ப்
பேயோடங் கிடுகாட்டில் எல்லி யாடும்
இறையவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

தெளிவுரை : சிவபெருமான், உலகினைத் தாங்கும் தன்மையுடையவர்; புண்ணியனாகவும் பிரமன் மற்றும் திருமாலாகவும் விளங்குபவர்; சடையில் பாம்பும், சந்திரனும் விளங்கத் தரித்தவர்; பேய் ஆடும் இடுகாட்டில் மேவும் இறைவன்; எழிலும் பொழிலும் திகழும் கச்சியில் வீற்றிருக்கும் ஏகம்பன் ஆவார். அவர் என் எண்ணத்தில் விளங்குபவர்.

653. பாரவன்காண் விசும்பவன்காண் பவ்வந் தான்காண்
பனிவரைகள் இரவினொடு பகலாய் நின்ற
சீரவன்காண் திசையவன்காண் திசைக ளெட்டுஞ்
செறிந்தவன்காண் சிறந்தடியார் சிந்தைசெய்யும்
பேரவன்காண் பேரா யிரங்க ளேத்தும்
பெரியவன்காண் அரியவன்காண் பெற்றம்ஊர்ந்த
ஏரவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

தெளிவுரை : சிவபெருமான், நிலமாகவும், ஆகாயமாகவும், கடலாகவும் மலைகளாகவும், இரவும் பகலும் நின்ற சீராகவும், எட்டுத் திசைகளாகவும், அடியவர்களின் சிந்தையில் திகழும் திருவைந்தெழுத்தாகவும் விளங்குபவர். ஆயிரக்கணக்கான நாமங்கள் உடைய பெரியோனாகவும், காணற்கு அரியவனாகவும், இடுப வாகனத்தில் அமர்ந்து விளங்குபவராகவும் திகழ்பவர்; எழிலும் பொழிலும் திகழும் கச்சியில் மேவும் ஏகம்பர். அப்பெருமான் என் எண்ணத்தில் விளங்குபவர்.

654. பெருந்தவத்தெம் பிஞ்ஞகன்காண் பிறைசூடிகாண்
பேதையேன் வாதையுறு பிணியைத் தீர்க்கும்
மருந்தவன்காண் மந்திரங்க ளாயி னான்காண்
வானவர்கள் தாம்வணங்கும் மாதே வன்காண்
அருந்தவத்தான் ஆயிழையாள் உமையாள் பாகம்
அமர்ந்தவன்காண் அமரர்கள்தாம் அருச்சித்தேத்த
இருந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

தெளிவுரை : சிவபெருமான், பெருந்தவத்தில் மேவும் பிஞ்ஞகர்; பிறைச் சந்திரனைச் சூடியுள்ளவர்; துன்பம் தரும் வினையாகிய பிணி தீர்க்கும் மருந்தாகியவர்; மந்திரங்கள் ஆனவர்; வானவர் போற்றும் மகாதேவர்; உமா தேவியாரைத் திருமேனியில் பாகம் கொண்டவர்; தேவர்களால் அருச்சித்து ஏத்தப்படுபவர். எழிலும் பொழிலும் மேவும் கச்சியில் விளங்கும் ஏகம்பர். அவர் என் எண்ணத்தில் உள்ளவர்.

655. ஆய்ந்தவன்காண் அருமறையோ டங்கம் ஆறும்
அணிந்தவன்காண் ஆடரவோ டென்பு மாமை
காய்ந்தவன்காண் கண்ணழலாற் காமன் ஆகங்
கனன்றெழுந்த காலனுடல் பொடியாய் வீழப்
பாய்ந்தவன்காண் பாண்டுபல சருகால் பந்தர்
பயின்றநூற் சிலந்திக்குப் பாராள் செல்வம்
ஈந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

தெளிவுரை : சிவபெருமான், நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் ஆய்ந்தவர்; அரவம், எலும்பு, ஆமைஓடு ஆகியவற்றை ஆபரணமாகப் பூண்டவர்; மன்மதனை எரித்தவர்; பலகாலம் சிவலிங்கத் திருமேனியில் நூல் பந்தல் அமைத்து ஏத்திய சிலந்திக்கு அருள் புரிந்து கோச்செங்கட்சோழ மன்னராக்கி உலகாளச் செய்தவர்; எழிலும் பொழிலும் மேவும் கச்சியில் மேவும் ஏகம்பர். அவர் என் எண்ணத்தில் விளங்குபவர்.

656. உமையவனை யொருபாகஞ் சேர்த்தி னான்காண்
உகந்தொலிநீர்க் கங்கைசடை யொழுக்கி னான்காண்
இமய வடகயிலைச் செல்வன் தான்காண்
இற்பலிக்குச் சென்றுழலும் நல்கூர்த் தான்காண்
சமயமவை யாறினுக்குந் தலைவன் தான்காண்
தத்துவன்காண் உத்தமன்காண் தானே யாய்
இமையவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

தெளிவுரை : சிவபெருமான், உமாதேவியை ஒரு பாகத்தில் பொருந்தியவர்; கங்கையைச் சடையில் திகழ வைத்துப் பகீரதச் சக்கரவர்த்தியின் தவத்திற்கு இரங்கிச் சிறிது ஒழுகி நிலத்தில் மேவுமாறு செய்தவர்; இமய மலையாகிய கயிலை மலையில் வீற்றிருக்கும் செல்வர்; ஏதும் அற்றவர்போல் பிட்சாடனராகத் தோற்றம் கொண்டு பலியேற்கச் சென்றவர்; ஆறு சமயங்களுக்கும் தலைவர்; தத்துவமாகத் திகழ்பவர்; உத்தமன் எனத் தானேயாகி விளங்குபவர்; எழிலும் பொழிலும் திகழும் கச்சியில் மேவும் ஏகம்பர். அவர் என் எண்ணத்தில் விளங்குபவர்.

657. தொண்டுபடு தொண்டர்துயர் தீர்ப்பான் தான்காண்
தூமலர்ச்சே வடியிணையெம் சோதி யான்காண்
உண்டுபடு விடங்கண்டத் தொடுக்கி னான்காண்
ஒலிகடலில் அமுதமரர்க் குதவி னான்காண்
வண்டுபடு மலர்க்கொன்றை மாலை யான்காண்
வாண்மதியாய் நாண்மீனு மாயி னான்காண்
எண்டிசையும் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

தெளிவுரை : சிவபெருமான், தொண்டு செய்யும் தொண்டர்களுடைய துயர்களைத் தீர்ப்பவர்; தூய மலர் போன்ற ஒளி மேவும் திருவடியுடையவர்; விடத்தைக் கண்டத்தில் தேக்கியவர்; தேவர்களுக்கு அமுதத்தை அருளிச் செய்தவர்; கொன்றை மாலை தரித்தவர். சந்திரனும் நட்சத்திரங்களும் ஆகியவர். எட்டுத் திசைகளிலும் எழிலும் பொழிலும் மேவும் கச்சியில் விளங்கும் ஏகம்பர். அவர் என் எண்ணத்தில் விளங்குபவர்.

658. முந்தைகாண் மூவரினும் முதலா னான்காண்
மூவிலைவேல் மூர்த்திகாண் முருக வேட்குத்
தந்தைகாண் தண்கடமா முகத்தி னாற்குத்
தாதைகாண் தாழ்ந்தடியே வணங்கு வார்க்குச்
சிந்தைகாண் சிந்தாத சித்தத் தார்க்குச்
சிவனவன்காண் செங்கண்மால் விடையொன் றேறும்
எந்தைகாண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

தெளிவுரை : சிவபெருமான், யாவர்க்கும் முதற் பொருளானவர்; மூவரில் முதன்மையானவர்; சூலப் படையுடையவர்; முருகப் பெருமானின் தந்தையானவர்; ஆனைமுகக் கடவுளின் தாதை; திருவடியை ஒருமித்து ஏத்தும் அன்பர்களின் உள்ளம் இனிக்க மேவும் சிவனாவார். பெருமை மிக்க இடபத்தை வாகனமாக உடையவர; எந்தையாவர்; எழிலும் பொழிலும் திகழும் கச்சியில் மேவும் ஏகம்பர். அவர், என் எண்ணத்தில் மேவுபவர்.

659. பொன்னிசையும் புரிசடையெம் புனிதன் தான்காண்
பூதகண நாதன்காண் புலித்தோ லாடை
தன்னிசைய வைத்தஎழி லரவி னான்காண்
சங்கவெண் குழைக்காதிற் சதுரன் தான்காண்
மின்னிசையும்வெள் ளெயிற்றோன் வெகுண்டு வெற்பை
யெடுக்க அடி யடர்ப்பமீண் டவன்றன் வாயில்
இனினிசைகேட் டிலங்கொளிவா ளீந்தோன் கச்சி
ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

தெளிவுரை : சிவபெருமான், பொன் போன்று விளங்கும் சடைமுடியுடைய புனிதர்; பூத கணங்களின் தலைவர்; புலித்தோலை உடுத்தியவர்; அரவத்தை தன் வயத்தில் ஆட்டி வைப்பவர்; காதில் வெண்மையான குழையணிந்த சதுரர்; வெகுண்டு எழுந்து மலையெடுத்த இராவணனை அடர்த்தவர்; அவன் இசை கேட்டு வாளை ஈந்தவர். கச்சியில் மேவும் ஏகம்பநாதராகிய அப் பெருமான், என் எண்ணத்தில் உள்ளவர்.

திருச்சிற்றம்பலம்

 66. திருநாகேச்சரம் (அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில், திருநாகேஸ்வரம்,தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

660. தாயவனை வானோர்க்கும் ஏனோ ருக்குந்
தலையவனை மலையவனை உலக மெல்லாம்
ஆயவனைச் சேயவனை அணியான் தன்னை
அழலவனை நிழலவனை அறிய வொண்ணா
மாயவனை மறையவனை மறையோர் தங்கள்
மந்திரனைத் தந்திரனை வளரா நின்ற
தீயவனைத் திருநாகேச சரத்து ளானைச்
சேராதார் நன்னெறிக்கண் சேரா தாரே.

தெளிவுரை : சிவபெருமான், யாவருக்கும் தாயாய் விளங்குபவர்; வானவர்களுக்கும் ஏனையோர்களுக்கும் தலைவர்; கயிலை மலையாக விளங்குபவர்; உலகமெல்லாம் ஆகியவர்;  சேய்மையிலும் அண்மையிலும் திகழ்பவர்; வெம்மையுடைய அழலாகவும் தண்மையுடைய நிழலாகவும் விளங்குபவர்; யாராலும் அறிய வொண்ணாத தன்மையுடையவர்; திருமால், நான்முகன், வேத மந்திரம், தந்திரம், வேள்வி என மேவுபவர். அவர் திருநாகேச்சரத்தில் உள்ளவர். அப்பெருமானைச் சேராதார் நன்னெறியாகிய முத்திப்பேற்றை அடையாதவராவர்.

661. உரித்தானை மதவேழந் தன்னை மின்னா
ரொளிமுடியெம் பெருமானை உமையோர் பாகந்
தரித்தானைத் தரியலர்தம் புரமெய் தானைத்
தன்னடைந்தார் தம்வினைநோய் பாவ மெல்லாம்
அரித்தானை ஆலதன்கீழ் இருந்து நால்வர்க்
கறம்பொருள்வீ டின்பமா றங்கம் வேதந்
தெளித்தானைத் திருநாகேச் சரத்து ளானைச்
சேராதார் நன்னெறிக்கண் சேரா தாரே.

தெளிவுரை : சிவபெருமான், யானையின் தோலை உரித்தவர்; மின்னலைப் போன்று ஒளிரும் சடையுடையவர்; உமாதேவியைப் பாகமாகக் கொண்டவர்; பகை கொண்ட அசுரர்களின் கோட்டை மூன்றினையும் எரித்தவர்; தன்னை வழிபடும் அடியவர்களின் வினையும் பாவமும் நீங்குமாறு செய்பவர்; கல்லால மரத்தின் கீழ் இருந்து நால்வர்க்கும் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் தன்மைகளையும், வேதம் ஆகமம் என்பனவும் விரித்து உணர்த்தியவர். அப்பெருமான், திருநாகேச்சரத்தில் வீற்றிருப்பவர். அவரைச் சேராதவர் நன்னெறியாகிய முத்திப் பேற்றை அடையாதவரே.

662. காரானை உரிபோர்த்த கடவுள் தன்னைக்
காதலித்து நினையாத கயவர் நெஞ்சில்
வாரானை மதிப்பவர்தம் மனத்து ளானை
மற்றொருவர் தன்னொப்பா ரொப்பி லாத
ஏரானை இமையவர்தம் பெருமான் தன்னை
இயல்பாகி உலகெலாம் நிறைந்து மிக்க
சீரானைத் திருநாகேச் சரத்து ளானைச்
சேராதார் நன்னெறிக்கண் சேரா தாரே,

தெளிவுரை : சிவபெருமான், யானையின் தோலைப் போர்த்தியவர்; பக்தி இல்லாதவர் நெஞ்சில் மேவாதவர்; ஏத்தி வழிபடும் அடியவர்களின் மனத்தில் விளங்குபவர்; தனக்கு இணையாக யாரும் இல்லாத சிறப்புடையவர்; தேவர்களின் தலைவர்; உலகெலாம் நிறைந்தவர். புகழின் மிக்க திருநாகேச்சரத்துள் மேவும் அப் பெருமானை வணங்காதவர் முத்தியாகிய நன்னெறியை அடையாதவராவர்.

663. தலையானை எவ்வுலகுந் தானா னானைத்
தன்னுருவம் யாவர்க்கும் அறிய வொண்ணா
நிலையானை நேசர்க்கு நேசன் தன்னை
நீள்வான முகடதனைத் தாங்கி நின்ற
மலையானை வரியரவு நாணாக் கோத்து
வல்லசுரர் புரமூன்றும் மடிய எய்த
சிலையானைத் திருநாகேச் சரத்து ளானைச்
சேராதார் நன்னெறிக்கண் சேரா தாரே.

தெளிவுரை : சிவபெருமான், எல்லா உலகமும் தானாக ஆனவர்; யாவற்றுக்கும் தலைமையானவர்; யாராலும் ஊனக் கண்ணால் காணமுடியாத திருவடிவம் ஆனவர்; நிலையான அன்புடைய பக்தர்களுக்கு அன்பராக விளங்குபவர்; கயிலை மலையை உடையவர்; மேருமலையை வில்லாகவும் அரவத்தை நாணாகவும் கொண்டு, முப்புரங்களை எரித்தவர். திருநாகேச்சரத்தில் மேவும் அப்பெருமானை ஏத்தாதவர் நன்னெறியாகிய முத்திப்பேற்றை அடையாதவராவர்.

664. மெய்யானைத் தன்பக்கல் விரும்பு வார்க்கு
விரும்பாத வரும்பாவி யவர்கட் கென்றும்
பொய்யானைப் புறங்காட்டி லாட லானைப்
பொன்பொலிந்த சடையானைப்பொடி கொள்பூதிப்
பையானைப் பையரவ மசைத்தான் தன்னைப்
பரந்தானைப் பவளாமால் வரைபோல் மேனிச்
செய்யானைத் திருநாகேச் சரத்து ளானைச்
சேராதார் நன்னெறிக்கண் சேரா தாரே.

தெளிவுரை : சிவபெருமான், தன்னை விரும்பும் பக்தியுடையவர்களுக்கு மெய்யானவர்; அவ்வாறு மெய்யன்பு இல்லாதவர்களுக்குத் தோற்றம் பெறாதவர்; மயானத்தில் ஆடல் புரிபவர்; பொன் போன்ற சடைமுடியுடையவர்; திருநீற்றிப் பையையுடையவர்; நாகத்தை அடைத்துக் கட்டியவர்; எங்கும் நிறைந்தவர்; பவளக் குன்று போன்ற சிவந்த திருமேனியுடையவர். அப்பெருமான், திருநாகேச்சரத்தில் விளங்க, அவரைச் சாராதவர் நன்னெறியாகிய முத்தி நெறியைச் சாராதவர் ஆவார்.

665. துறந்தானை அறம்புரியாத துரிசர் தம்மைத்
தோத்திரங்கள் பலசொல்லி வானோ ரேத்த
நிறைந்தானை நீர்நிலத்தீ வெளிகாற் றாகி
நிற்பனவும் நடப்பனவு மாயி னானை
மறந்தானைத் தன்னினையா வஞ்சர் தம்மை
அஞ்செழுத்தும் வாய்நவிலவல்லோர்க் கென்றுஞ்
சிறந்தானைத் திருநாகேச் சரத்து ளானைச்
சேராதார் நன்னெறிக்கண் சேரா தாரே.

தெளிவுரை : சிவபெருமான் அறநெறியில் மேவாதவர்களைப் பற்றாதவர்; தோத்திரங்களால் ஏத்தப்படும் பெருமையுடையவர்; நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், நிற்பன, நடப்பன என யாவும் ஆனவர்; ஏத்தாதவர்களைக் கருதாதவர்; திருவைந்தெழுத்தை ஓதி வழிபடும் அடியவர்களுக்கு எல்லாக் காலங்களிலும் சிறப்புடன் மேவி அருள் புரிபவர். திருநாகேச்சரத்தில் மேவும் அப்பெருமானை ஏத்தாதவர் நன்னெறியாகிய முத்திக்கு உரியவராகாதவர்.

666. மறையானை மால்விடையொன் றூர்தி யானை
மால்கடல்நஞ் சுண்டானை வானோர் தங்கள்
இறையானை யென்பிறவித் துயர்தீர்ப் பானை
இன்னமுதை மன்னியசீர் ஏகம் பத்தில்
உறைவானை ஒருவருமீங் கறியா வண்ணம்
என்னுள்ளத் துள்ளே யொளித்து வைத்த
சிறையானைத் திருநாகேச் சரத்து ளானைச்
சேராதார் நன்னெறிக்கண் சேரா தாரே.

தெளிவுரை : சிவபெருமான், வேதமாக உள்ளவர்; இடபத்தை வாகனமாக உடையவர்; கடலில் தோன்றிய நஞ்சினை உண்டவர்; தேவர்களின் தலைவர்; என் பிறவித் துயரைத் தீர்க்கும் இனிய அமுதமானவர்; பெருமையுடைய திருவேகம்பத்தில் உறைபவர்; யாரும் அறியாதவாறு என்னுள்ளத்தில் வீற்றிருந்து விளங்குபவர்; திருநாகேச்சுரத்தில் மேவும் அப் பெருமானை ஏத்தாதவர் நன்னெறியாகிய முத்திக்கு உரியவர் ஆகாதவரே.

667. எய்தானைப் புரமூன்றும் இமைக்கும் போதில்
இருவிசும்பில் வரும்புனலைத் திருவார் சென்னிப்
பெய்தானைப் பிறப்பிலியை அறத்தில் நில்லாப்
பிரமன்தன் சிரமொன்றைக் கரமொன்றினால்
கொய்தானைக் கூத்தாட வல்லான் தன்னைக்
குறியிலாக் கொடியேனை அடியே னாகச்
செய்தானைத் திருநாகேச் சரத்து ளானைச்
சேராதார் நன்னெறிக்கண் சேரா தாரே.

தெளிவுரை : சிவபெருமான், முப்புரங்களை இமைநேரத்தில் எரித்தவர்; கங்கையைச் சடையில் கரந்தவர்; பிறப்பில்லாதவர்; அறவழியில் மேவாத பிரமனின் ஐந்து தலைகளுள் ஒன்றைக் கொய்தவர்; திருக்கூத்து புரிபவர்; வேற்றாரோடு குறியில்லாது இருந்த என்னை அடியவனாகச் செய்தவர். திருநாகேச்சரத்தில் மேவும் அப்பெருமானை ஏத்தாதவர் நன்னெறியாகிய முத்திக்கு உரியவர் ஆகாதவரே.

668. அளியானை அண்ணிக்கும் ஆன்பால் தன்னை
வான்பயிரை அப்பயிரின் வாட்டந் தீர்க்குந்
துளியானை அயன்மாலுந் தேடிக் காணாச்
சுடரானைத் துரிசறத் தொண்டு பட்டார்க்
கெளியானை யாவர்க்கும் அரியான் தன்னை
இன்கரும்பின் தன்னுள்ளா லிருந்த தேறல்
தெளியானைத் திருநாகேச் சரத்து ளானைச்
சேராதார் நன்னெறிக்கண் சேரா தாரே.

தெளிவுரை : சிவபெருமான், அன்புடையவர்; பால் போன்ற சுவையுடையவர்; பயிரின் வாட்டம் தீர்க்கும் மழை போன்றவர்; பிரமனும் திருமாலும் காணாத சுடர் ஆனவர்; குற்றமற்ற தொண்டு புரியும் அன்பர்களுக்கு எளியவர்; யாவர்க்கும் அரியவர்; இனிய கரும்பின் சுவை போன்றவர். திருநாகேச்சரத்தில் மேவும் அப்பெருமானைச் சேராதவர் நன்னெறியாகிய முத்திக்குச் சேராதாரே.

669. சீர்த்தானை யுலகேழுஞ் சிறந்து போற்றச்
சிறந்தானை நிறைந்தோங்கு செல்வன் தன்னைப்
பார்த்தானை மதனவேள் பொடியாய் வீழப்
பனிமதியஞ் சடையானைப் புனிதன் தன்னை
ஆர்த்தோடி மலையெடுத்த அரக்கன் அங்ச
அருவிரலால் அடர்த்தானை அடைந்தோர் பாவந்
தீர்த்தானைத் திருநாகேச் சரத்து ளானைச்
சேராதார் நன்னெறிக்கண் சேரா தாரே.

தெளிவுரை : சிவபெருமான், உலகேழும் ஏத்தும் புகழுடையவர்; மன்மதனை எரித்தவர்; சடையில் சந்திரனைச் சூடிய புனிதர்; மலை எடுத்த இராவணனை விரலால் அடர்த்தவர்; தன்னை அடைந்தவரின் பாவத்தைத் தீர்ப்பவர். திருநாகேச்சரத்தில் மேவும் அப்பெருமானைச் சேராதவர் நன்னெறியாகிய முத்திக்கு உரியவராகாதவரே.

திருச்சிற்றம்பலம்

 67. திருக்கீழ்வேளூர் (அருள்மிகு கேடிலியப்பர் திருக்கோயில், கீழ்வேளூர்,திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

670. ஆளான அடியவர்கட் கன்பன் தன்னை
ஆனஞ்சும் ஆடியைநான் அபயம் புக்க
தாளானைத் தன்னொப்பா ரில்லா தானைச்
சந்தனமுங் குங்குமமுஞ் சாந்துந் தோய்ந்த
தோளானைத் தோளாத முத்தொப் பானைத்
தூவெளுத்த கோவணத்தை அரையி லார்த்த
கீளானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே.

தெளிவுரை : சிவபெருமான் தனக்கு ஆட்பட்ட அடியவர்களுக்கு அன்பனாக விளங்குபவர்; பசுவின் பஞ்சகவ்வியத்தால் பூசிக்கப்படுபவர்; நான் அபயமாகச் சார்ந்த திருவடியுடையவர்; தனக்க நிகராக யாரும் இல்லாதவர்; சந்தனம், குங்குமம், சாந்து ஆகிய நறுமணக் கலவைகளைத் தோளில் பூசி விளங்குபவர்; துளையிடப்படாத முத்து போன்ற வெண்மையும் உயர்வும் உடையவர்; தூய வெண்ணிறமான கோவணத்தை அரையில் கட்டியுள்ளவர்; கேடிலியப்பர் என்னும் திருநாமத்துடன் கீழ்வேளூரின் தலைவராக வீற்றிருந்து ஆள்பவர்; அப் பெருமானை நாடுபவர்கள். இப் பிறவியில் எத்தகைய கெடுதியும் இல்லாதவராகி இம்மையில் இனிய வாழ்க்கையும் மறுமையில் முத்திப் பேறும் வாய்க்கப் பெறுபவர்களாய்ப் பெருமை கொள்வார்கள்.

671. சொற்பாவும் பொருள்தெரிந்து தூய்மை நோக்கித்
தூங்காதார் மனத்திருளை வாங்கா தானை
நற்பான்மை அறியாத நாயி னேனை
நன்னெறிக்கே செலும்வண்ணம் நல்கி னானைப்
பற்பாவும் வாயாரப் பாடி யாடிப்
பணிந்தெழுந்து குறைந்தடைந்தார் பாவம்போக்க
கிற்பானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே.

தெளிவுரை : சொல்லின் பொருள் தெரிந்து பாடும் அன்பர்களின் மனத்தில் எழும் அஞ்ஞானத்தை நீக்கும் சிவபெருமான், அடியவனை நன்னெறியாகிய சைவநெறியில் ஒழுகச் செய்தவர்; பலவகைப்பட்ட தோத்திரப் பாடல்களைப் பாடியும் மனம் கசிந்து உருகியும், பணிந்தும் விளங்கும் அடியவர்களின் குறைகளைப் போக்குபவர். தீய வினைகளைத் தீர்ப்பவர். அப்பெருமான், கீழ்வேளூரில் வீற்றிருக்கும் தலைவராகிய கேடிலியப்பர் ஆவார். அவரை வணங்குபவர்கள் தீமைகளை யாவும் தீரப் பெற்றவர்கள் ஆவார்கள்.

672. அளைவாயில் அரவசைத்த அழகன் தன்னை
ஆதரிக்கும் அடியவர்கட் கன்பே யென்றும்
விளைவானை மெய்ஞ்ஞானப் பொருளா னானை
வித்தகனை எத்தனையும் பத்தர் பத்திக்
குளைவானை அல்லாதார்க் குளையா தானை
உலப்பிலியை உள்புக்கென் மனத்து மாசு
கிளைவானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே.

தெளிவுரை : சிவபெருமான், நாகத்தை அரையில் கட்டியவர்; ஏத்தும் அடியவர்களுக்கு அன்பர்; மெய்ஞ்ஞானப் பொருளானவர்; யாவும் அறிந்தவர்; மனமாரப் பக்தியுடன் மேவும் அடியவர்களுக்கு முன்னின்று அருள் புரிபவர்; அல்லாதவர்களின் நெஞ்சில் புகாதவர்; தெவிட்டாது இனிமை தருபவர்; என் மனத்துள் படியும் மாசினைக் களைபவர். அப்பெருமான் கீழ்வேளூரின் தலைவராகிய கேடிலியப்பர் ஆவார். அவரை அடைபவர்கள் எல்லாத் துன்பமும் நீங்கப் பெற்றவராவர்.

673. தாட்பாவு கமலமலர்த் தயங்கு வானைத்
தலையறுத்து மாவிரதந் தரித்தான் தன்னைக்
கோட்பாவு நாளெல்லா மானான் தன்னைக்
கெடுவினையேன் கொடுநரகக் குழியில் நின்றால்
மீட்பானை வித்துருவின் கொத்தொப் பானை
வேதியனை வேதத்தின் பொருள்கொள் வீணை
கேட்பானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே.

தெளிவுரை : சிவபெருமான், பிரமனின் தலையைக் கொய்தவர்; எலும்பு மாலை பூண்டவர்; சூரியன் (ஞாயிறு), சந்திரன் (திங்கள்), அங்காரகன் (செவ்வாய்), புதன், குரு (வியாழன்), சுக்கிரன் (வெள்ளி), சனி என்னும் கிரகங்களைக் கொண்ட கிழமைகள் ஆனவர்; வினையேனாகிய என்னை நரகக் குழியில் மேவாது மீட்டவர்; யாவற்றுக்கும் வித்தாகத் திகழ்பவர்; வேதப் பொருளாகியவர்; வீணையை இசைத்து மீட்டுபவர். அவர் கீழ்வேளூரின் தலைவராகிய கேடிலியப்பர் ஆவார். அப் பெருமானை ஏத்தி வணங்க, எல்லாத் துன்பமும் நீங்கப்பெறும். மாவிரதம்  ஆறு சமயங்களில் ஒன்று. இச்சமயத் திருக்கோலத்தை உணர்த்திற்று.

674. நல்லானை நரைவிடையொன் றூர்தி யானை
நால்வேதத் தாறங்கம் நணுக மாட்டாச்
சொல்லானைச் சுடர்மூன்று மானான் தன்னைத்
தொண்டாகிப் பணிவார்கட் கணியான் தன்னை
வில்லானை மெல்லியலோர் பங்கன் தன்னை
மெய்யராய் நினையாதார் வினைகள் தீர்க்க
கில்லானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே.

தெளிவுரை : சிவபெருமான், யாவர்க்கும் நல்லவர்; வெள்ளை இடபத்தை வாகனமாகக் கொண்டவர்; வேதங்களையும் அதன் அங்கங்களையும் கடந்து விளங்குபவர்; முச்சுடராகிய சூரியன், சந்திரன், அக்கினி ஆகியவர்; தொண்டர்களுக்கு அண்மையில் மேவி அருள் புரிபவர்; வில்லேந்தியவர்; உமைபாகர்; மெய்யன்பு இல்லாதவர்கள்பால் நாடாதவர். அவர் கீழ்வேளூரில் மேவும் தலைவராகிய கேடிலியப்பர் ஆவார். அப்பெருமானை ஏத்தத் துன்பம் யாவும் தீரும்.

675. கழித்தானைக் கங்கைமலர் வன்னி கொன்றை
தூமத்தம் வாளரவஞ் சூடி னானை
அழித்தானை அரணங்கள் மூன்றும் வேவ
ஆலால நஞ்சதனை உண்டான் தன்னை
விழித்தானைக் காமனுடல் பொடியாய் வீழ
மெல்லியலோர் பங்கனைமுன் வேன லானை
கிழித்தானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே.

தெளிவுரை : சிவபெருமான், சடை முடியின் மேல் கங்கை, வன்னி, கொன்றை, தூய ஊமத்தம், அரவம் என யாவும் தரித்தவர்; முப்புரங்களை அழித்தவர்; நஞ்சுண்டவர்; மன்மதனை எரித்தவர்; உமைபாகர்; யானையை உரித்தவர்; அவர் கீழ்வேளூரில் மேவும் தலைவராகிய கேடிலியப்பர் ஆவார். அப் பரமனை ஏத்தத் துன்பம் யாவும் தீரும்.

676. உளரொளியை உள்ளத்தி னுள்ளே நின்ற
ஓங்காரத்துட் பொருள்தான் ஆயி னானை
விளரொளியை விடுசுடர்கள் இரண்டும் ஒன்றும்
விண்ணொடுமண் ஆகாச மாயி னானை
வளரொளியை மரகதத்தி னுருவி னானை
வானவர்க ளெப்பொழுதும் வாழ்த்தி யேத்துங்
கிளரொளியைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே.

தெளிவுரை : சிவபெருமான், உள்ளத்தில் ஒளிரும் ஒளியானவர்; ஓங்காரப் பொருளானவர்; சூரியன், சந்திரன் அக்கினி என முச்சுடரும், விண்ணுலகமும், மண்ணுலகமும், ஆகாயமும் ஆகியவர்; வளரும் ஒளியாகவும் மரகத ஒளியின் வடிவாகவும், வானவர்கள் ஏத்தும் பேரொளியாகவும் விளங்குபவர். அவர் கீழ்வேளூரின் தலைவராகிய கேடிலியப்பர் ஆவார். அப்பெருமானை ஏத்தி வணங்குபவர்கள் எத்தகைய துன்பமும் இல்லாதவராவர்.

677. தடுத்தானைக் காலனைக் காலாற் பொன்றத்
தன்னடைந்த மாணிக்கன் றருள்செய் தானை
உடுத்தானைப் புலியதளோ டக்கும் பாம்பும்
உள்குவா ருள்ளத்தி னுள்ளான் தன்னை
மடுத்தானை அருநஞ்சும் மிடற்றுள் தங்க
வானவர்கள் கூடியஅத் தக்கன் வேள்வி
கெடுத்தானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே.

தெளிவுரை : சிவபெருமான், காலனைக் காலால் உதைத்து அழித்து மார்க்கண்டேயருக்கு அருள் புரிந்தவர்; புலித்தோல் உடுத்தியவர்; எலும்பும் பாம்பும் ஆபரணமாகப் பூண்டவர்; ஏத்தி வழிபடும் அடியவர் உள்ளத்தில் விளங்குபவர்; நஞ்சினை மிடற்றுள் தேக்கியவர்; தேவர்கள் எல்லாரும் சேரத் தக்கன் புரிந்த வேள்வியை அழித்தவர். அவர், கீழ்வேளூரின் தலைவராகிய கேடிலியப்பர் ஆவார். அப் பரமனைத் தொழுது ஏத்தத் துன்பம் யாவும் தீரும்.

678. மாண்டா ரெலும்பணிந்த வாழ்க்கை யானை
மயானத்திற் கூத்தனைவா ளரவோ டென்பு
பூண்டானைப் புறங்காட்டி லாட லானைப்
போகாதெனப் னுள்புகுந் திடங்கொண் டென்னை
ஆண்டானை அறிவரிய சிந்தை யானை
அசங்கையனை அமரர்கள்தஞ் சங்கை யெல்லாங்
கீண்டானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே.

தெளிவுரை : சிவபெருமான், மண்டையோட்டு மாலை தரித்தவர்; மயானத்தில் கூத்தாடுபவர்; எலும்பும் அரவமும் ஆபரணமாகப் பூண்டவர்; என்னுள்ளத்துள் விளங்குபவர்; என்னை ஆட்கொண்டு, சிந்தையில் திகழ்பவர்; ஐயப்பாடு இல்லாதவர்; தேவர்களின் ஐயத்தையும் அச்சத்தையும் போக்கியவர். அவர் கீழ்வேளூரின் தலைவராக மேவும் கேடிலியப்பர் ஆவார். அப் பெருமானை ஏத்தித் தொழுபவர்களின் துன்பம் யாவும் தீரும்.

679. முறிப்பான பேசிமலை யெடுத்தான் தானும்
முதுகிறமுன் கைந்நரம்பை யெடுத்துப் பாடப்
பறிப்பான்கைச் சிற்றரிவாள் நீட்டி னானைப்
பாவியேன் நெஞ்சகத்தே பாதப் போது
பொறித்தானைப் புரமூன்றும் எரிசெய் தானைப்
பொய்யர்களைப் பொய்செய்து போது போக்கிக்
கிறிப்பானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே.

தெளிவுரை : சிவபெருமான், மலையெடுத்த இராவணனின் தலைகளை நெரித்துப் பின்னர் அவனுடைய இசைக்கு இரங்கி அருள் புரிந்தவர்; என்னுடைய நெஞ்சுள் திருவடிமலரைப் பதித்தவர்; மூன்று புரங்களை எரித்தவர்; பொய்மை பேசும் வஞ்சகர்களைத் தண்டிப்பவர்; அவர் கீழ் வேளூரின் பெருமானை ஏத்தி வணங்குபவர்களின் துன்பம் யாவும் கெடும்.

திருச்சிற்றம்பலம்

 68. திருமுதுகுன்றம் (அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில், விருத்தாச்சலம், கடலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

680. கருமணியைக் கனகத்தின் குன்றொப் பானைக்
கருதுவார்க் காற்ற எளியான் தன்னைக்
குருமணியைக் கோளரவொன் றாட்டு வானைக்
கொல்வேங்கை யதளானைக் கோவணனை
அருமணியை அடைந்தவர்கட் கமுதொப் பானை
ஆனஞ்சும் ஆடியைநான் அபயம் புக்க
திருமணியைத் திருமுதுகுன் றுடையான் தன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், அடியவரின் கண்ணில் திகழும் கருமணியாய் விளங்குபவர்; பொன்மலை போன்றவர்; ஏத்தும் அன்புடையவர்களுக்கு எளிமையானவர்; குருவாக விளங்கி ஞானத்தைப் பொழிபவர்; நாகத்தை ஆட்டுபவர்; புலித்தோலை உடுத்தியவர் கோவண ஆடை கொண்டவர்; அரிய மணி போன்று ஒளிர்பவர்; அமுதம் போன்று இனிமையும் நன்மையும் தருபவர்; பசுவின் பஞ்ச கவ்வியத்தைப் பூசனையாகக் கொள்பவர்; நான் அபயம் அடைந்த செல்வர். திருமுதுகுன்றத்தில் மேவும் அப் பெருமானை அடியேன் அறியாது திகைத்திருந்தேனே.

681. காரொளிய கண்டத்தெங் கடவுள் தன்னைக்
காபாலி கட்டங்க மேந்தி னானைப்
பாரொளியை விண்ணொளியைப் பாதாளனைப்
பால்மதியஞ் சூடியோர் பண்பன் தன்னைப்
பேரொளியைப் பெண்பாகம் வைத்தான் தன்னைப்
பேணுவார் தம்வினையைப் பேணி வாங்குஞ்
சீரொளியைத் திருமுதுகுன் றுடையான் தன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், கரிய கண்டம் உடையவர்; காபாலியானவர்; மழுப்படையுடையவர்; பூவுலகமும் விண்ணுலகமும், பாதாள உலகமும் ஆனவர்; வெண்மையான சந்திரனைச் சூடியவர்; உமை பாகர்; பக்தர்களின் வினையைத் தீர்ப்பவர்; திருமுதுகுன்றத்தில் மேவியவர். அப் பெருமானைத் தீவினையேன் அறியாது திகைத்திருந்தேனே.

682. எத்திசையும் வானவர்கள் தொழநின் றானை
ஏறூர்ந்த பெம்மானை யெம்மா னென்று
பத்தனாய்ப் பணிந்தடியேன் தன்னைப் பன்னாள்
பாமாலை பாடப் பயில்வித் தானை
முத்தினை யென்மணியை மாணிக் கத்தை
முளைத்தெழுந்த செழும்பவளக் கொழுந்தொப்பானைச்
சித்தனையென் திருமுதுகுன் றுடையான் தன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், தேவர்களால் தொழப்படுபவர்; இடப வாகனத்தை உடையவர்; என்னைப் பக்தியுடன் பணிந்து பாமாலை சூடுமாறு பயில் வித்தவர்; முத்தும் நவமணியும் ஆனவர்; மாணிக்கமாகவும் பவளக் கொழுந்தாகவும் திருமுதுகுன்றத்தில் விளங்குபவர். அப்பெருமானைத் தீவினையேன் அறியாது திகைத்திருந்தேனே.

683. ஊன்கருவின் உள்நின்ற சோதி யானை
உத்தமனைப் பத்தர்மனம் குடிகொண் டானைக்
கான்திரிந்து காண்டீப மேந்தி னானைக்
கார்மேக மிடற்றானைக் கனலைக் காற்றைத்
தான்தெரிந்தங் கடியேனை யாளாக் கொண்டு
தன்னுடைய திருவடியென் தலைமேல் வைத்த
தீங்கரும்பைத் திருமுதுகுன் றுடையான் தன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், கருவினுள் மேவும் சோதியானவர்; பக்தர்களின் மனத்தில் உறையும் உத்தமர்; அருச்சுனனுக்காக வில்லேந்திக் கானகத்தில் வேடுவனாக வந்தவர்; கரிய கண்டம் உடையவர்; நெருப்பும் காற்றும் ஆனவர்; தெரிந்து ஆட்கொண்டு திருவடியை என் தலையின் மேல் சூட்டியவர்; இனிய கரும்பு போன்றவர்; திருமுதுகுன்றத்தில் திகழ்பவர். அப் பெருமானை அறியாது திகைத்திருந்தேனே.

684. தக்கனது பெருவேள்வி தகர்த்தா னாகித்
தாமரையான் நான்முகனுந் தானே யாகி
மிக்கதொரு தீவளிநீர் ஆகா சமாய்
மேலுலகுக் கப்பாலா யிப்பா லானை
அக்கினொடு முத்தினையு மணிந்து தொண்டர்க்
கங்கங்கே அறுசமய மாகி நின்ற
திக்கினையென் திருமுதுகுன் றுடையான் தன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், தக்கன் வேள்வியைத் தகர்த்தவர்; நான்முகனும், நெருப்பு, காற்று, நீர் ஆகாயம் மற்றும் எல்லா உலகமும் ஆனவர்; எலும்பும் முத்தும் ஆபரணமாகக் கொண்டவர்; ஆறு சமயங்களாகித் தொண்டர்களுக்கு அருள் செய்பவர்; திருமுதுகுன்றத்தை உடையவர். அப் பெருமானை அறியாது திகைத்திருந்தேனே.

685. புகழொளியைப் புரமெரித்த புனிதன் தன்னைப்
பொன்பொதிந்த மேனியனைப் புராணன் தன்னை
விழவொலியும் விண்ணொலியு மானான் தன்னை
வெண்காடு மேவிய விகிர்தன் தன்னைக்
கழலொலியுங் கைவளையும் ஆர்ப்ப ஆர்ப்பக்
கடைதோறு யிடுபிச்சைக் கென்று செல்லுந்
திகழொளியைத் திருமுதுகுன் றுடையான் தன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், முப்புரங்களை எரித்த புனிதர்; பொன்னார் திருமேனியுடைய புராணர்; விழாக்களின் ஒலியும் விண்ணில் மேவும் இடியொலியும் ஆனவர்; திருவெண்காட்டில் மேவிய விகிர்தர்; வீரக் கழல் ஒலிக்க, வாயில்தோறும் பிச்சையேற்கத் திரிபவர்; திருமுதுகுன்றத்தை உடையவர். அப்பெருமானை அறியா திகைத்திருந்தேனே.

686. போர்த்தானை யின்னுரிதோல் பொங்க பொங்கப்
புலியதளே உடையாகத் திரிவான் தன்னை
காத்தானை ஐம்புலனும் புரங்கள் மூன்றும்
காலனையுங் குரைகழலாற் காய்ந்தான் தன்னை
மாத்தாடிப் பத்தராய் வணங்குந் தொண்டர்
வல்வினையே ரறும்வண்ணம் மருந்து மாகித்
தீர்த்தானைத் திருமுதுகுன் றுடையான் தன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், யானையின் தோலைப் போர்த்தியவர்; புலித் தோலை உடுத்தியவர்; ஐம்புலன்களின் உணர்வினைத் தீய்த்தவர். முப்புரங்களை எரித்தவர்; காலனை அழித்தவர்; பக்தர்களின் கொடிய வினைகளைத் தீர்ப்பவர்; திருமுதுகுன்றத்தை உடையவர். அப் பெருமானை அறியாது திகைத்திருந்தேனே.

687. துறவாதே யாக்கை துறந்தான் தன்னைச்
சோதி முழுமுதலாய் நின்றான் தன்னைப்
பிறவாதே எவ்வுயிர்க்குந் தானே யாகிப்
பெண்ணிளோ டாணுருவாய் நின்றான் தன்னை
மறவாதே தன் திறமே வாழ்த்துந் தொண்டர்
மனத்தகத்தே அனவரதம் மன்னி நின்ற
திறவானைத் திருமுதுகுன் றுடையான் தன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், இயல்பினால் ஊன் இன்றி ஞான ஒளி வடிவாக விளங்குபவர்; மழு முதல் ஆனவர்; பிறப்பின் தன்மையின்றி எல்லா உயிரும் தானேயாகியவர்; பெண்ணும் ஆணுமாக விளங்குபவர்; பக்தியுடன் ஏத்தும் தொண்டர்தம் உள்ளத்தி எப்போதும் விளங்குபவர்; திருமுது குன்றத்தை உடையவர். அப் பெருமானை அறியாது திகைத்திருந்தேனே.

688. பொற்றூணைப் புலால்நாறு கபால மேந்திப்
புவலோக மெல்லா முழிதந் தானை
முற்றாத வெண்டிங்கட் கண்ணி யானை
முழுமுதலாய் மூவுலகும் முடிவொன் றில்லாக்
கற்றூணைக் காளத்தில் மலையான் தன்னைக்
கருதாதார் புரமூன்றும் எரியம் அம்பால்
செற்றானைத் திருமுதுகுன் றுடையான் தன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், கபாலம் ஏந்தியவர்; பொற்றூண் போன்று விளங்குபவர்; புவலோகத்தில் விளங்குபவர்; இளம்பிறை சூடியவர்; முழு முதலாகவும் உறுதியுள்ள கற்றூண் போன்றும் விளங்குபவர்; திருக்காளத்தியில் உறைபவர்; முப்புரங்களை எரித்தவர்; திருமுது குன்றத்தை உடையவர். அப் பெருமானை அடியேன் அறியாது திகைத்திருந்தேனே.

689. இகழ்ந்தானை இருபதுதோள் நெரிய வூன்றி
யெழுநரம்பி னிசைபாட இனிது கேட்டுப்
புகழ்ந்தானைப் பூந்துருத்தி மேயான் தன்னைப்
புண்ணியனை விண்ணவர்கள் நிதியந் தன்னை
மகிழ்ந்தானை மலைமகளோர் பாகம் வைத்து
வளர்மதியஞ் சடைவைத்து மாலோர் பாகந்
திகழ்ந்தானைத் திருமுதுகுன் றுடையான் தன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், இராவணனுடைய தோள்களை நெரியுமாறு ஊன்றியவர்; அவனுடைய இசைக்கு இரங்கி அருள் புரிந்தவர்; பூந்துருத்தியில் மேவியவர்; தேவர்களின் நிதியாகத் திகழும் புண்ணியர், உமையைத் திருமேனியில் பாகம் கொண்டு மகிழ்ந்தவர்; சந்திரனைச் சடையில் வைத்தவர்; திருமாலை ஒரு பாகமாகக் கொண்டு மேவும் சங்கர நாராயணர்; திருமுதுகுன்றத்தை உடையவர். அப் பெருமானை அறியாது திகைத் திருந்தேனே.

திருச்சிற்றம்பலம்

69. திருப்பள்ளியின் முக்கூடல் (அருள்மிகு திருநேத்திரநாதர் திருக்கோயில், திருப்பள்ளி முக்கூடல்,திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

690. ஆராத இன்னமுதை அம்மான் தன்னை
அயனொடுமா லறியாத ஆதி யானைத்
தாராரும் மலர்க்கொன்றைச் சடையான் தன்னைச்
சங்கரனைத் தன்னொப்பா ரில்லா தானை
நீரானைக் காற்றானைத் தீயா னானை
நீள்விசும்பாய் ஆழ்கடல்க ளேழுஞ் சூழ்ந்த
பாரானைப் பள்ளியின்முக் கூட லானைப்
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

தெளிவுரை : சிவபெருமான், இனிய அமுதானவர்; அயனும் மாலும் அறியாத ஆதிமூர்த்தி; கொன்றை மாலை தரித்த சடையுடையவர்; தனக்கு இணையாகச் சொல்லப்படும் தன்மையில் யாரும் இல்லாதவர்; உயிர்களுக்கு நன்மை செய்பவர்; நீர், காற்று, நெருப்பு, ஆகாயம், ஏழு கடல்கள் என யாவும் சூழ்ந்த நிலமாகியவர்; பள்ளியின் முக்கூடலில் விளங்குபவர் அப் பெருமானை ஏத்தாது பாழாய் உழன்றேனே.

691. விடையானை விண்ணவர்கள் எண்ணத் தானை
வேதியனை வெண்டிங்கள் சூடுஞ் சென்னிச்
சடையானைச் சாமம்போல் கண்டத் தானைத்
தத்துவனைத் தன்னொப்பா ரில்லா தானை
அடையாதார் மும்மதிலுந் தீயில் மூழ்க
அடுகணைகோத் தெய்தானை அயில்கொள் சூலப்
படையானைப் பள்ளியின்முக் கூட லானைக்
பயிலாதே பாயேநான் உழன்ற வாறே.

தெளிவுரை : சிவபெருமான், இடப வாகனர், தேவர்களால் ஏத்தப்படுபவர்; வேத நாயகர்; சந்திரனைச் சடையில் சூடியவர்; கரிய கண்டத்தையுடையவர்; தத்துவம் ஆனவர்; தனக்கு நிகர் இல்லாத ஒப்பற்றவர்; முப்புரங்களை எரித்தவர்; சூலப்படையுடையவர்; பள்ளியின் முக்கூடலில் வீற்றிருப்பவர். அப் பரமனை இதுநாள் வரை ஏத்தாது பாழாய் உழன்றேனே.

692. பூதியனைப் பொன்வரையே போல்வான் தன்னைப்
புரிசடைமேல் புனல்கரந்த புனிதன் தன்னை
வேதியனை வெண்காடு மேயான் தன்னை
வெள்ளேற்றின் மேலானை விண்ணோர்க் கெல்லாம்
ஆதியனை ஆதிரைநன் னாளான் தன்னை
அம்மானை மைம்மேவு கண்ணி யாளோர்
பாதியனைப் பள்ளியின்முக் கூட லானைப்
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

தெளிவுரை : சிவபெருமான், திருநீற்றுடன் விளங்குபவர்; பொன்மலை போன்றவர்; சடையில் கங்கையைக் கரந்த புனிதர்; வேத நாயகர்; திருவெண்காட்டில் மேவியவர்; இடபத்தில் வீற்றிருப்பவர்; தேவர்களின் தலைவர்; திருவாதிரை நாளுக்கு உரியவர்; மைம்மேவு  கண்ணியைப் பாகமாகக் கொண்டு பள்ளியின் முக்கூடலில் விளங்குபவர். அப்பெருமான ஏத்தாது பாழானேனே.

693. போர்த்தானை ஆனையின்தோல் புரங்கள் மூன்றும்
பொடியாக எய்தானைப் புனிதன் தன்னை
வார்த்தாங்கு வனமுலையாள் பாகன் தன்னை
மறிகடலுள் நஞ்சுண்டு வானோ ரச்சந்
தீர்த்தானைத் தென்றிசைக்கே காமன் செல்வச்
சிறிதளவில் அவனுடலம் பொடியா வாங்கே
பார்த்தானைப் பள்ளியின்முக் கூட லானைப்
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

தெளிவுரை : சிவபெருமான், யானையின் தோலை உரித்தவர்; முப்புரங்களை எரித்தவர்; உமைபாகர்; நஞ்சினை உண்டு தேவர்களின் அச்சத்தைத் தீர்த்தவர்; மன்மதனை எரித்தவர்; பள்ளியின் முக்கூடலில் உள்ளவர்; அப் பெருமானை ஏத்தாது காலத்தைப் போக்கி உழன்றேனே.

694. அடைந்தார்தம் பாவங்கள் அல்லல் நோய்கள்
அருவினைகள் நல்குரவு செல்வா வண்ணங்
கடிந்தானைக் கார்முகில்போற் கண்டத் தானைக்
கடுஞ்சினத்தோன் தன்னுடலை நேமி யாலே
தடிந்தானைத் தன்னொப் பாரில்லா தானைத்
தத்துவனை உத்தமனை நினைவார் நெஞ்சில்
படிந்தானைப் பள்ளியின்முக் கூட லானைப்
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

தெளிவுரை : சிவபெருமான், தன்னைச் சரணடைந்தவர்களைப் பாவங்கள், துயரங்கள், நோய்கள், புலன்கட்படாது மறைந்து நின்று உயிரைப் பற்றித் துன்புறுத்தும் வினைகள், வறுமை என எதுவும் சாராது காத்தருள்பவர்; மேகம் போன்ற கரிய கண்டம் உடையவர்; சலந்தராசூரனைச் சக்கரப் படைகொண்டு அழித்தவர்; தன்னொப்பிலாத் தனித் தன்மையுடையவர்; தத்துவமாய் விளங்குபவர்; உத்தமர்; நினைவோரின் உள்ளத்தில் படிந்து வாசம் புரிபவர்; பள்ளியின் முக்கூடல் நாதர். அப் பரமனை ஏத்தாது உழன்றனனே.

695. கரந்தானைச் செஞ்சடைமேல் கங்கை வெள்ளங்
கனலாடு திருமேனிக் கமலத் தோன்தன்
சிரந்தாங்கு கையானைத் தேவ தேவைத்
திகழொளியைத் தன்னடியே சிந்தை செய்வார்
வந்தாமைக் காப்பானை மண்ணாய் விண்ணாய்
மறிகடலாய் மால்விசும்பாய் மற்று மாகிப்
பரந்தானைப் பள்ளியின்முக் கூட லானைப்
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

தெளிவுரை : சிவபெருமான், கங்கையைச் சடையில் கரந்தவர்; பிரமனின் தலையைக் கொய்தவர்; தேவர்களின் தலைவர்; தன்னடியை ஏத்தும் பக்தர்கள் வருந்தாதவாறு காத்தருள்பவர்; மண்ணுலகமாகவும் விண்ணுலகமாகவும் கடலாகவும் ஆகாயமாகவும் முற்றும் எல்லாமாகவும் பரந்தவர்; பள்ளியின் முக்கூடல் நாதர். அப் பெருமானை ஏத்திப் போற்றுமாறு உழன்றனனே.

696. நதியாருஞ் சடையானை நல்லூ ரானை
நள்ளாற்றின் மேயானை நல்லத் தானை
மதுவாரும் பொழில்புடைசூழ் வாய்மூ ரானை
மறைக்காடு மேயானை ஆக்கூ ரானை
நிதியாளன் தோழனை நீடு ரானை
நெய்த்தான மேயானை ஆரூ ரென்னும்
பதியானைப் பள்ளியின்முக் கூட லானைப்
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

தெளிவுரை : சிவபெருமான், கங்கை மேவும் சடையுடையவர்; நல்லூரிலும் நள்ளாற்றிலும் மேவியவர்; திருநல்லம், திருவாய்மூர், திருமறைக்காடு, திருஆக்கூர், திருநீடூர், திருநெய்த்தானம், திருவாரூர், ஆகிய பதிகளில் விளங்குபவர்; குபேரனின் தோழர்; பள்ளியின் முக்கூடலில் மேவியவர்; அப்பெருமானை ஏத்தி வணங்காது உழன்றனனே.

697. நற்றவனை நான்மறைக ளாயி னானை
நல்லானை நணுகாதார் புரங்கள் மூன்றுஞ்
செற்றவனைச் செஞ்சடைமேல் திங்கள் சூடுந்
திருவாரூர்த் திருமூலட் டானம் மேய
கொற்றவனைக் கூரரவம் பூண்டான் தன்னைக்
குறைந்தடைந்து தன்திறமே கொண்டார்க் கென்றும்
பற்றவனைப் பள்ளியின்முக் கூட லானைப்
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

தெளிவுரை : சிவபெருமான், நற்றவம் ஆனவர்; நான்கு மறைகளானவர்; யாவர்க்கும் நல்லவர்; முப்புரங்களை எரித்தவர்; சடையில் சந்திரனைச் சூடியவர்; திருவாரூர் திருமூலட்டானத்தில் மேவியவர்; நாகத்தை ஆபரணமாக பூண்டவர்; தனது திருவடியை ஏத்தும் அடியவர்களைப் பற்றி நின்று அருள் புரிபவர்; பள்ளியின் முக்கூடலில் விளங்குபவர். அப்பெருமானை ஏத்தி வணங்காது வீணே உழன்றனனே.

698. ஊனவனை உடலவனை உயிரா னானை
உலகேழு மானானை உம்பர் கோவை
வானவனை மதிசூடும் வளவி யானை
மலைமகள்முன் வராகத்தின் பின்பே சென்ற
கானவனைக் கயிலாய மலையு ளானைக்
கலந்துருகி நைவார்தம் நெஞ்சி னுள்ளே
பானவனைப் பள்ளியின்முக் கூட லானைப்
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

தெளிவுரை : சிவபெருமான், ஊனாகவும், உடலாகவும், உயிராகவும், ஏழுலகும் ஆனவராகவும் தேவர் தலைவராகவும் விளங்குபவர்; சந்திரனைச் சூடியவர்; வளவி என்னும் தலத்தில் விளங்குபவர்; அருச்சுனனைக் கொல்ல வந்த பன்றியின் பின், உமாதேவியுடன் வேடுவக் கோலத்தில் காட்டில் சென்றவர்; கயிலை மலைக்கு உரியவர்; கசிந்துருகி ஏத்தும் அடியவர் தம் நெஞ்சில் இருந்து, பால் போன்று இனிமை தருபவர்; பள்ளியின் முக்கூடலில் மேவியவர். அப்பெருமானை ஏத்திப் போற்றாது உழன்றனனே.

699. தடுத்தானைத் தான்முனிந்து தன்தோள் கொட்டித்
தடவரையை இருபதுதோள் தலையி னாலும்
எடுத்தானைத் தாள்விரலால் மாள வூன்றி
எழுநரம்பின் இசைபாடல் இனிது கேட்டுக்
கொடுத்தானைப் போரோடுங் கூர்வாள் தன்னைக்
குரைகழலாற் கூற்றுவனை மாள அன்று
படுத்தானைப் பள்ளியின்முக் கூட லானைப்
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

தெளிவுரை : சிவபெருமான், மலையைப் பெயர்த்து எடுத்த இராவணனுடைய இருபது தோளும் நெரியுமாறு திருவிரலால் ஊன்றியவர்; அவனுடைய இசைப்பாடலைக் கேட்டு உகந்து அருள் செய்தவர்; கூற்றுவனை உதைத்தவர்; பள்ளியின் முக்கூடலில் மேவி விளங்குபவர். அப் பெருமானை ஏத்தி வணங்காது வீணே உழன்றனனே.

திருச்சிற்றம்பலம்

70. பொது -  ÷க்ஷத்திரக்கோவை

திருச்சிற்றம்பலம்

700. தில்லைச்சிற் றம்பலமுஞ் செம்பொன் பள்ளி
தேவன் குடிசிராப் பள்ளி தேங்கூர்
கொல்லிக் குளிரறைப்பள்ளி கோவல்
வீரட்டங் கோகரமங் கோடி காவும்
முல்லைப் பறவம் முருகன் பூண்டி
முழையூர் பழையாறை சத்தி முற்றங்
கல்லில் திகழ்சீரார் காளத்தியுங்
கயிலாய நாதனையே காண லாமே.

தெளிவுரை : தில்லைச் சிற்றம்பலம், செம்பொன் பள்ளி, திருந்துதேவன்குடி, திருச்சிராப்பள்ளி, திருக்கோவலூர் வீரட்டம், கோகரணம், திருக்கோடிக்கா, திருமுருகன்பூண்டி, முழையூர், பழையாறை, திருச்சத்தி முற்றம், திருக்காளத்தி ஆகிய திருத்தலங்களில் கயிலாயத்தில் மேவும் சிவபெருமானைக் காணலாம்.

701. ஆரூர்மூ லட்டானம் ஆனைக் காவும்
ஆக்கூரில் தான்தோன்றி மாடம் ஆவூர்
பேரூர் பிரமபுரம் பேரா வூரும்
பெருந்துறை காம்பீலி பிடவூர் பேணுங்
கூரார் குறுக்கைவீ ரட்டானமுங்
கோட்டூர் குடமூக்குக் கோழம் பமுங்
காரார் கழுக்குன்றுங் கானப் பேருங்
கயிலாய நாதனையே காண லாமே.

தெளிவுரை : திருவாரூர் மூலட்டானம், திருவானைக்கா, ஆக்கூர்த் தான்தோன்றி மாடம், ஆவூர்ப் பசுபதீச்சரம், பேரூர், பிரமபுரம், பேராவூர், பெருந்துறை, காம்பீலி, பிடவூர், திருக்குறுக்கை வீரட்டானம், கோட்டூர், குடமூக்கு (கும்பகோணம்), கோழம்பம், திருக்கழுக்குன்றம், கானப்பேர் ஆகிய தலங்களில் கயிலாய நாதனைக் காணலாம்.

702. இடைமரு தீங்கோ யிராமேச் சரம்
இன்னம்பர் ஏரிடவை ஏமப் பேறூர்
சடைமுடி சாலைக் குடிதக்களூர்
தலையாலங் காடு தலைச்சங் காடு
கொடுமுடி குற்றாலங் கொள்ளம் பூதூர்
கோத்திட்டை கோட்டாறு கோட்டுக் காடு
கடைமுடி கானூர் கடம்பந் துறை
கயிலாய நாதனையே காண லாமே.

தெளிவுரை : திருவிடைமருதூர், திருஈங்கோய் மலை, இராமேச்சரம், இன்னம்பர், இடவை, ஏமப்பேறூர், சடைமுடி, சாலைக்குடி, தக்களூர், தலையாலங்காடு, தலைச்சங்காடு, திருப்பாண்டிக் கொடுமுடி, திருக்குற்றாலம், கொள்ளம்பூதூர், கோத்திட்டை, கோட்டாறு, கேட்டுக்காடு, கடைமுடி, திருக்கானூர், கடம்பந்துறை ஆகிய தலங்களில் கயிலாயநாதனைக் காணலாம்.

703. எச்சி லிளமர் ஏம நல்லூர்
இலம்பையங் கோட்டூர் இறையான் சேரி
அச்சிறு பாக்க மளப்பூர் அம்பர்
ஆவடு தம்டுறை யழுந்தூர் ஆறை
கைச்சினங் கற்குடி கச்சூர் ஆலக்
கோயில் கரவீரங் காட்டுப் பள்ளி
கச்சிப் பலதளியும் ஏகம் பத்துங்
கயிலாய நாதனையே காண லாமே.

தெளிவுரை : எச்சிலிளமர், ஏமநல்லூர், இலம்பையங் கோட்டூர், இறையான்சேரி, அச்சிறுபாக்கம், அளப்பூர், அம்பர், திருவாவடுதுறை, திருஅழுந்தூர், ஆறை, கைச்சினம், கற்குடி, திருக்கச்சூர் ஆலக்கோயில், கரவீரம், திருக்காட்டுப்பள்ளி, கச்சியில் உள்ள (அனைத்துத்)திருக்கோயில்கள், திருவேகம்பம் ஆகிய தலங்களில் கயிலாய நாதனைக் காணலாம்.

704. கொடுங்கோளூர் அஞ்சைக் களஞ்செங் குன்றூர்
கொங்கணங் குன்றியூர் குரக்குக் காவும்
நெடுங்களம் நன்னிலம் நெல்லிக் காவு
நின்றியூர் நீடூர் நியம நல்லூர்
இடும்பா வனமெழுமூர் ஏழூர் தோழூர்
எறும்பியூர் ஏராரு மேம கூடங்
கடம்பை யிளங்கோயில் தன்னி னுள்ளுங்
கயிலாய நாதனையே காண லாமே.

தெளிவுரை : கொடுங்கோளூர், திருஅஞ்சைக்களம், கொடிமாடச் செங்குன்றூர்; கொங்கணம், குன்றியூர், திருக்குரக்குக்கா, நெடுங்களம், நன்னிலம், திருநெல்லிக்கா, நின்றியூர், நீடூர், நியமநல்லூர், இடும்பாவனம், எழுமூர், ஏழூர், தோழூர், எறும்பியூர், ஏமகூடம் கடம்பூர் ஆகிய தலங்களில் கயிலாய நாதனைக் காணலாம்.

705. மண்ணிப் படிக்கரை வாழ்கொளி புத்தூர்
வக்கரை மந்தாரம் வார ணாசி
வெண்ணி விளத்தொட்டி வேள்விக் குடி
விளமர் விராடபுரம் வேட்க ளத்தும்
பெண்ணை யருட்டுறைதண் பெண்ணா கடம்
பிரம்பில் பெரும்புலியூர் பெருவே ளூருங்
கண்ணைகளர் காறை கழிப்பாலையுங்
கயிலாய நாதனையே காண லாமே.

தெளிவுரை : பழமண்ணிப் படிக்கரை, திருவாழ்கொளிபுத்தூர், திருவக்கரை, மந்தரமலை, வாரணாசி, வெண்ணி, விளத்தொட்டி, வேள்விக்குடி, விளமர், விராடபுரம், திருவேட்களம், அருட்டுறை (திருவெண்ணை நல்லூர்க்கோயிலின் பெயர்), பெண்ணாகடம், பிரம்பில், பெரும்புலியூர், பெருவேளூர், கண்ணை, காறை, திருக்கழப்பாலை ஆகிய தலங்களில் கயிலாய நாதனைக் காணலாம்.

706. வீழி மிழலைவெண் காடு வேங்கூர்
வேதிகுடி விசய மங்கை வியலூர்
ஆழி யகத்தியான் பள்ளி யண்ணா
மலையாலங் காடும் அரதைப்பெரும்
பாழி பழனம்பனந் தாள்பா தாளம்
பராய்த்துறை பைஞ்ஞீலி பனங்காட் டூர்தண்
காழி கடல்நாகைக் காரோ ணத்துங்
கயிலாய நாதனையே காண லாமே.

தெளிவுரை : திருவீழிமிழலை, திருவெண்காடு, வேங்கூர், வேதிகுடி, விசயமங்கை, திருவியலூர், அகத்தியான்பள்ளி, திருவண்ணாமலை, திருவாலங்காடு, அரதைப் பெரும்பாழி, திருப்பனந்தாள், திருப்பழனம், பாதாளேச்சரம், திருப்பராய்த்துறை, திருப்பைஞ்ஞீலி, பனங்காட்டூர், சீகாழி, நாகைக்காரோணம் ஆகிய தலங்களில் கயிலாய நாதனைக் காணலாம்.

707. உஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர்
உருத்திர கோடி மறைக்காட் டுள்ளும்
மஞ்சார் பொதியின்மலை தஞ்சை வழுவூர்
வீரட்டம் மாதானங் கேதா ரத்தும்
வெஞ்சமாக் கூடல்மீ யச்சூர் வைகா
வேதீச்சுரம் விவீச்சுரம் வெற்றி யூரும்
கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சாக் கையுங்
கயிலாய நாதனையே காண லாமே.

தெளிவுரை : உஞ்சேனை மாகாளம், திருஊறல் (தக்கோலம்), திருவோத்தூர், உருத்திரகோடி, திருமறைக்காடு, பொதியின்மலை, தஞ்சை வழுவூர் வீரட்டம், மாதானம், திருக்கேதாரம், திருவெஞ்சமாக்கூடல், மீயச்சூர், திருவைகாவூர், வேதீச்சுரம், விவீச்சுரம், வெற்றியூர், கஞ்சனூர், கஞ்சாறு, பஞ்சாக்கை ஆகிய தலங்களில் கயிலாயநாதனைக் காணலாம்.

708. திண்டீச்சரஞ் சேய்ஞலூர் செம்பொன் பள்ளி
தேவூர் சிரபுரஞ்சிற் றேமம் சேறை
கொண்டீச்சரங் கூந்தலூர் கூழையூர் கூடல்
குருகாவூர் வெள்ளடை குமரி கொங்கு
அண்டர் தொழும் அதிகை வீரட்டானம்
ஐயா றசோகந்தி ஆமாத் தூருங்
கண்டியூர் வீரட்டங் கருகா வூருங்
கயிலாய நாதனையே காண லாமே.

தெளிவுரை : திண்டீச்சரம், சேய்ஞலூர், செம்பொன்பள்ளி, தேவூர், சிரபுரம், சிற்றேமம், திருச்சேறை, திருக்கொண்டீச்சரம், கூந்தலூர், கூழையூர், கூடல், குருகாவூர் வெள்ளடை, குமரி, கொங்கு, திருவதிகை வீரட்டானம், திருவையாறு, அசோகந்தி, திருஆமாத்தூர், திருக்கண்டியூர் வீரட்டம், திருக்கருகாவூர் ஆகிய தலங்களில் கயிலாய நாதனைக் காணலாம்.

709. நறையூரிற் சித்தீச் சரம்நள் ளாறு
நாரையூர் நாகேச்சரம் நல்லூர் நல்ல
துறையூர் சோற்றுத்துறை சூல மங்கை
தோணிபுரந் துருத்தி சோமேச்சரம்
உறையூர் கடலொற்றி யூரூற் றத்தூர்
ஓமாம் புலியூர்ஓர் ஏட கத்துங்
கறையூர் கருப்பறியல் கன்றாப் பூருங்
கயிலாய நாதனையே காண லாமே.

தெளிவுரை : திருநறையூர்ச் சித்தீச்சரம், திருநள்ளாறு, திருநாரையூர், திருநாகேச்சரம், திருநல்லூர், துறையூர், திருச்சோற்றுத்துறை, சூலமங்கை, தோணிபுரம், திருத்துருத்தி, சோமேச்சரம், உறையூர் (மூக்கீச்சரம்) திருவொற்றியூர், ஊற்றத்தூர், ஓமாம்புலியூர், திருஏடகம், கறையூர், கருப்பறியலூர், கன்றாப்பூர் ஆகிய தலங்களில் கயிலாயநாதனைக் காணலாம்.

710. புலிவலம் புத்தூர் புகலூர் புன்கூர்
புறம்பயம் பூவணம் பொய்கை நல்லூர்
வலிவலம் மாற்பேறு வாய்மூர் வைகல்
வலஞ்சுழி வாஞ்சியம் மருகல் வன்னி
நிலமலிநெய்த் தானத்தோ டெத்தானத்தும்
நிலவுபெருங் கோயில்பல கண்டால் தொண்டீர்
கலிவலிமிக் கோனைக்கால் விரலாற் செற்ற
கயிலாய நாதனையே காண லாமே.

தெளிவுரை : புலிவலம், திருப்புத்தூர், திருப்புகலூர், திருப்புன்கூர், திருப்புறம்பயம், திருப்பூவணம், பொய்கைநல்லூர், திருவலிவலம், திருமாற்பேறு, திருவாய்மூர், வைகல் மாடக்கோயில், திருவலஞ்சுழி, திருவாஞ்சியம், திருமருகல், திருநெய்த்தானம் மற்றும் எல்லாத் தானங்களும், பெருங்கோயில்களும் பல கால் விரலால் ஊன்றி அடர்த்த கயிலாயநாதனைக் காணலாம்.

திருச்சிற்றம்பலம்

 71. பொது - அடைவுத் திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

711. பொருப்பள்ளி வரைவில்லாப் புரமூன் றெய்து
புரந்தழியச் சலந்தரனைப் பிளந்தான பொறசக்
கரப்பள்ளி திருக்காட்டுப் பள்ளி கள்ளார்
கமழ்கொல்லி யறைப்பள்ளி கலவஞ் சாரற்
சிரப்பள்ளி சிவப்பள்ளி செம்பொன் பள்ளி
செழுநனி பள்ளிதவப் பள்ளி சீரார்
பரப்பள்ளி யென்றென்று பகர்வோ ரெல்லாம்
பரலோகத் தினிதாகப் பாலிப் பாரே.

தெளிவுரை : சிவபெருமான், மேருமலையை வில்லாகக் கொண்டு முப்புரங்களை எரித்தவர்; சலந்தராசூரனைச் சக்கரப் படையால் அழித்தவர். அவர் சக்கரப்பள்ளி, திருக்காட்டுப்பள்ளி, கொல்லியறைப்பள்ளி, மயில்கள் சாரும் சிராப்பள்ளி, சிவப்பள்ளி, செம்பொன்பள்ளி, நனிபள்ளி, தவப்பள்ளி, பரப்பள்ளி என மேவும் தலங்களில் இனிதாக வீற்றிருந்து அருள் பாலிப்பவர்.

712. காவிரியின் கரைக்கண்டி வீரட் டானங்
கடவூர்வீ ரட்டானங் காமருசீ ரதிகை
மேவியவீ ரட்டானம் வழுவைவீ ரட்டம்
வியன்பறியல் வீரட்டம் விடையூர்திக் கிடமாம்
கோவல்நகர் வீரட்டங் குறுக்கைவீ ரட்டங்
கோத்திட்டைக் குடிவீரட் டானமிவை கூறி
நாவில்நவின் றுரைப்பார்க்கு நணுகச் சென்றால்
நமன்தமருஞ் சிவன்தமரென் றகல்வர் நன்கே.

தெளிவுரை : காவிரிக் கரையில் மேவும் திருக்கண்டியூர் வீரட்டானம், திருக்கடவூர் வீரட்டானம், திருவதிகை வீரட்டானம், திருவழுவை வீரட்டானம், திருப்பறியலூர் வீரட்டானம், திருக்கோவலூர் வீரட்டானம், திருக்குறுக்கை வீரட்டானம், திருவிற்குடி வீரட்டம் என் அட்ட வீரட்டத் தலங்களைக் கூட நாவினால் உரைக்கும் அன்பர்களைச் சிவபெருமானுடைய தமர்கள் என்று எண்ணி நமன் தமர்கள் விலகிச் செல்வார்கள்.

713. நற்கொடிமேல் விடையுயர்ந்த நம்பன் செம்பங்
குடிநல்லக் குடிநளிநாட் டியத்தான்குடி
கற்குடிதென் களக்குடிசெங் காட்டங்குடி
கருந்திட்டைக் குடிகடையக் குடிகா ணுங்கால்
விற்குடிவேள் விக்குடிநல் வேட் டக்குடி
வேதிகுடி மாணிகுடி விடைவாய்க்குடி
புற்குடிமா குடிதேவன் குடிநீலக்குடி
புதுக்குடியும் போற்றஇடர் போகு மன்றே.

தெளிவுரை : இடபக்கொடியுடைய சிவபெருமான், செம்பங்குடி, நல்லக்குடி, நாட்டியத்தான்குடி, திருக்கற்குடி, தென்களக்குடி, திருச்செங்காட்டங்குடி, கருந்திட்டைக்குடி, கடையக்குடி, திருவிற்குடி, வேள்விக்குடி, வேட்டக்குடி, வேதிகுடி, மாணிகுடி, விடைவாய்க்குடி, புற்குடி, மாகுடி, தேவன்குடி, நீலக்குடி, புதுக்குடி என மேவும் திருத்தலங்களில் விளங்குபவர். அவரை ஏத்திப் போற்ற இடர் யாவும் விலகிப் போகும்.

714. பிறையூருஞ் சடைமுடியெம் பெருமான னாரூர்
பெரும்பற்றப் புலியூரும் பேரா வூரும்
நறையூரும் நல்லூரும் நல்லாற் றூரும்
நாலூருஞ் சேற்றூரும் நாரை யூரும்
உறையூரும் ஒத்தூரும் ஊற்றத் தூரும்
அளப்பூரோ மாம்புலியூ ரொற்றி யூரும்
துறையூருந் துவையூருந் தோழூர் தானுந்
துடையூருந் தொழஇடர்கள் தொடரா வன்றே.

தெளிவுரை : பிறைச்சந்திரனைச் சடைமுடியில் தரித்து மேவும் சிவபெருமான், திருவாரூர், பெரும்பற்றப் புலியூர், பேராவூர், நாறையூர், நல்லூர், நல்லாற்றூர், நாலூர்மயானம், சேற்றூர், திருநாரையூர், உறையூர் (மூக்கீச்சரம்), திருஓத்தூர், ஊற்றத்தூர், அனப்பூர், ஓமாம்புலியூர், திருஒற்றியூர், துறையூர், துவையூர், தோழூர், துடையூர், என்னும் தலங்களில் வீற்றிருப்பவர். அப் பெருமானை ஏத்த இடர்கள் யாவும் விலகும்.

715. பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்
பெருங்கேரில் எழுபதினோ டெட்டும் மற்றுங்
கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற் கோயில்
கருப்பறியற் பொருப்பனைய கொகுடிக் கோயில்
இருக்கோதி மறையவர்கள் வழிபட் டேத்தும்
இளங்கோயில் மணிக்கோயில் ஆலக் கோயில்
திருக்கோயில் சிவனுறையுங் கோயில் சூழ்ந்து
தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீரும் அன்றே.

தெளிவுரை : கங்கையைச் சடையில் தரித்த சிவபெருமான் விளங்கும் பெருங்கோயில்கள் எழுபத்தெட்டு. கரக்கோயில் ஞாழக் கோயில் கொகுடிக் கோயில், வேதியர்கள் வழிபட்டு ஏத்தும் இளங்கோயில் மணிக்கோயில், ஆலக்கோயில் என மேவும் திருக்கோயில்களில் சிவபெருமான் வீற்றிருப்பவர். அப்பரமன் உறையும் கோயில்களைச் சூழ்ந்து வணங்கிப் போற்றி தீவினைகள் யாவும் தீரும்.

716. மலையார்தம் மகளொடுமா தேவன் சேரும்
மறைக்காடு வண்பொழில்சூழ் தலைச்சங் காடு
தலையாலங் காடுதடங் கடல்சூ ழந்தண்
சாய்க்காடு தள்ளுபுனற் கொள்ளிக் காடு
பலர்பாடும் பழையனூ ராலங் காடு
பனங்காடு பாவையர்கள் பாவம் நீங்க
விலையாடும் வளைதிளைக்கக் குடையும் பொய்கை
வெண்காடும் அடையவினை வேறா மன்றே.

தெளிவுரை : மலைமகளை உடனாகக் கொண்ட சிவபெருமான், திருமறைக்காடு, பொழில் சூழ்ந்த தலைச்சங்காடு, தலையாலங்காடு, திருச்சாய்க்காடு, கொள்ளிக்காடு, பலர் பாடிப் போற்றும் பழையனூர் ஆலங்காடு, பனங்காடு, திருவெண்காடு என மேவி விளங்குபவர். ஆங்குச் சென்றணைந்து ஏத்த வினையானது விலகிச் செல்லும்.

717. கடுவாயர் தமைநீக்கி யென்னை யாட்கொள்
கண்ணுத லோன்நண்ணுமிடம் அண்ணல்வாயில்
நெடுவாயில் நிறைவயல்சூழ் நெய்தல் வாயில்
நிகழ்முல்லை வாயிலொடு ஞாழல் வாயில்
மடுவார்தென் மதுரைநக ரால வாயில்
மறிகடல்சூழ் புனவாயில் மாட நீடு
குடவாயில் குணவாயி லான வெல்லாம்
புகுவாரைக் கொடுவினைகள் கூடா வன்றே.

தெளிவுரை : சமணர்தம் பிடியிலிருந்து என்னை விடுவித்து ஆட்கொண்ட சிவபெருமான் நண்ணும் இடமாவது, அண்ணல்வாயில், நெடுவாயில், நெய்தல்வாயில், திருமுல்லைவாயில், ஞாழல் வாயில், தென் மதுரை ஆலவாயில், திருப்புனவாயில், குடவாயில், குணவாயில் என்பன. ஆங்குச் சென்றடைந்து ஏத்த தீயவினைகள் யாவும் விலகிச் செல்லும்.

718. நாடகமா டிடநந்தி கேச்சுரமா காளேச்
கரநாகேச் சுரநாக ளேச்சுரநன் காண
கோடீச்சுரங் கொண்டீச் சுரந்திண் டீச்சரங்
குக்குடேச் சுரமக்கீச் சுரங்கூ றுங்கால்
ஆட்கேச் சுரமகத்தீச் சுரமய னீச்சர
மத்தீச்சுரஞ் சித்தீச்சுர மந்தண் கானல்
ஈடுதிரை யிராமேச்சுர மென்றென் றேத்தி
யிறைவனுறை சுரம்பலவு மியம்பு வோமே.

தெளிவுரை : சிவபெருமான் வீற்றிருப்பது, நந்திகேச்சுரம், மாகாளேச்சுரம், நாகேச்சுரம், நாகளேச்சுரம், கோடீச்சுரம், கொண்டீச்சுரும், திண்டீச்சுரம், குக்குடேச்சுரம், அக்கீச்சுரம், ஆடகேச்சுரம், அகத்தீச்சுரம், அயனீச்சுரம், அத்தீச்சுரம், சித்தீச்சுரம், இராமேச்சுரம் என ஏத்தி ஈச்சுரம் பலவும் இயம்புவோமாக. இது ஈசன் மேவும் தலங்களை ஈச்சுரம் என ஏத்தும் சிறப்புத் தோன்ற ஓதப் பெறுவதாயிற்று.

719. கந்தமா தனங்கயிலை மலைகே தாரங்
காளத்தி கழுக்குன்றங் கண்ணா ரண்ணா
மந்தமாம் பொழிற்சாரல் வடபற்பதம்
மகேந்திரமா மலைநீலம் ஏம கூடம்
விந்தமா மலைவேதஞ் சையம் மிக்க
வியன்பொதியின் மலைமேரு உதயம் அத்தம்
இந்துசே கரனுறையும் மலைகள் மற்றும்
ஏத்துவோம் இடர்கெடநின் றேத்து வோமே.

தெளிவுரை : கந்தமாதனம், கயிலைமலை, திருக்கேதாரம், திருக்காளத்தி, திருக்கழுக்குன்றம், அண்ணாமலை, திருப்பருப்பதம், மகேந்திரம், இந்திர நீலபருப்பதம், ஏமகூடம், விந்தமாமலை, பொதியன்மலை, மேருஉதயம், சுத்தம் என மேவும் மலைகள் சந்திரனைச் சடை முடியில் தரித்து மேவும் சிவபெருமான் விளங்கும் இடமாகும். அவற்றை ஏத்தி இடரை நீக்குவோமாக.

720. நள்ளாறும் பறையாறுங் கோட்டாற் றோடு
நலந்திகழும் நாலாறுந் திருவை யாறுந்
தெள்ளாறும் வளைகுளமுந் தளிக்கு ளமுநல்
லிடைக்குளமுந் திருக்குளத்தோ டஞ்சைக் களம்
விள்ளாத நெடுங்களம்வேட் களம்நெல் லிக்கா
கோலக்கா ஆனைக்கா வியன்கோடிகா
கள்ளார்ந்த கொன்றையான் நின்ற ஆறுங்
குளம்களங்கா எனஅனைத்துங் கூறுவோமே.

தெளிவுரை : திருநள்ளாறு, பழையாறு, கோட்டாறு, நாலாறு, திருவையாறு, தெள்ளாறு, வளைகுளம், தளிக்குளம், நல்லிடைக்குளம், திருக்குளம், திருவஞ்சைக்களம், நெடுங்களம், திருவேட்களம், நெல்லிக்கா, திருக்கோலக்கா, திருவானைக்கா, திருக்கோடிக்கா ஆகியவாறு சிவபெருமான் மேவிய ஆறு, குளம், களம், கா என அனைத்தும் கூறி ஏத்துவோமாக.

721. கயிலாய மலையெடுத்தான் கரங்க ளோடு
சிரங்களுரம் நெரியக்கால் விரலாற் செற்றோன்
பயில்வாய பராய்த்துறைதென் பாலைத் துறை
பண்டெழுவர் தவத்துறைவெண் டுறைபைம் பொழிற்
குயிலாலந் துறைசோற்றுத் துறைபூந் துறை
பெருந்துறையுங் குரங்காடு துறையி னோடு
மயிலாடு துறைகடம்பந் துறைஆவடு
துறைமற்றுந் துறையனைத்தும் வணங்கு வோமே.

தெளிவுரை : கயிலை மலையை எடுத்த இராவணனுடைய சிரங்கள் நெரியுமாறு கால் விரலால் அடர்த்த சிவபெருமான் மேவும் திருப்பராய்த்துறை, தென்பாலைத்துறை, தவத்துறை, வெண்டுறை, ஆலந்துறை, சோற்றுத்துறை, பூந்துறை, பெருந்துறை, குரங்காடு துறை, மயிலாடுதுறை, கடம்பந்துறை, திருவாவடுதுறை, மற்றும் உள்ள துணையணைத்தும் வணங்குவோமாக. இத் திருப்பதிகமானது, பள்ளி, வீரட்டம், குடி, ஊர், கோயில், காடு, வாயில், ஈச்சரம், மலை, ஆறு, குளம், களம், கா, துறை என வரும் தலங்கள் பலவற்றை ஏத்தி ஓதப் பெற்றது.

திருச்சிற்றம்பலம்

 72. திருவலஞ்சுழி (அருள்மிகு திருவலஞ்சுழிநாதர் திருக்கோயில், திருவலஞ்சுழி, தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

722. அலையார் புனற்கங்கை நங்கை காண
அம்பலத்தில் அருநட்ட மாடி வேடந்
தொலையாத வென்றியார் நின்றி யூரும்
நெடுங்களமும் மேவி விடையை மேல்கொண்
டிலையார் படைகையி லேந்தி யெங்கும்
இமையவரும் உமையவளும் இறைஞ்சி யேத்த
மலையார் திரளருவிப் பொன்னி சூழ்ந்த
வலஞ்சுழியே புக்கிடமா மருவி னாரே.

தெளிவுரை : கங்கையைச் சடையில் தரித்த ஈசன் உமாதேவியார் காணும் தன்மையில் நடனம் புரிபவர். அப்பெருமான், நின்றியூரும் நெடுங்களமும் மேவி இடப வாகனத்தில் ஏறிச் சூலப்படையேந்தி விளங்குபவர். அவர், தேவர்களும் உமாதேவியாரும் ஏத்த வலஞ்சுழியில் மேவியவர் ஆவார். உமாதேவியார் ஈசனை வழிபட்ட திருத்தலச் சிறப்பானது இவண் ஓதப் பெற்றது. இத் திருப்பதிகத்தில் இத்திருப்பாட்டு ஒன்று மட்டும் கிடைக்கப் பெற்றுள்ளது. ஏனையவை கிடைத்தில.

திருச்சிற்றம்பலம்

 73. திருவலஞ்சுழியும் திருக்கொட்டையூர்க் கோடீச்சரமும்

(அருள்மிகு திருவலஞ்சுழிநாதர் திருக்கோயில், திருவலஞ்சுழி,தஞ்சாவூர் மாவட்டம்)
(அருள்மிகு கோடீஸ்வரர், கைலாசநாதர் திருக்கோயில், கொட்டையூர்,தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

723. கருமணிபோற் கண்டத் தழகந் கண்டாய்
கல்லால் நிழற்கீ ழிருந்தான் கண்டாய்
பருமணி மாநாகம் பூண்டான் கண்டாய்
பவளக்குன் றன்ன பரமன் கண்டாய்
வருமணிநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்
மாதேவன் கண்டாய் வரதன் கண்டாய்
குருமணிபோல் அழகமருங் கொட்டையூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் தானே.

தெளிவுரை : சிவபெருமான் நீலமணி போன்ற கண்டத்தை உடைய அழகர்; கல்லால நிழலின் கீழ் இருந்தவர்; நாகத்தை ஆபரணமாகப் பூண்டவர்; பவளக் குன்று போன்றவர்; காவிரி விளங்கும் வலஞ்சுழியில் மேவுபவர்; மகாதேவராக விளங்கி வரம் தருபவர். அவர், அழகிய கொட்டையூரில் விளங்கும் கோடீச்சரத்தில் வீற்றிருக்கும் தலைவர் ஆவார்.

724. கலைக்கன்று தங்கு கரத்தான் கண்டாய்
கலைபயில்வோர் ஞானக்கண் ஆனான் கண்டாய்
அலைக்கங்கை செஞ்சடைமேல் ஏற்றான் கண்டாய்
அண்ட கபாலத்தப் பாலான் கண்டாய்
மலைப்பண்டங் கொண்டு வருநீர்ப் பொன்னி
வலஞ்சுழியின் மேவிய மைந்தன் கண்டாய
குலைத்தெங்கஞ் சோலைசூழ் கொட்டையூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் தானே.

தெளிவுரை : சிவபெருமான், மானைக் கரத்தில் ஏந்தியவர்; கற்கும் பெற்றியுடையவர்களுக்கு ஞானமாய் விளங்குபவர்; கங்கையைச் சடையில் ஏற்றவர்; தலையோட்டைக் கையில் கொண்டவர்; காவிரியின் வளம் பெருக்கும் வலஞ்சுழியில் மேவியவர். அவர் கோடீச்சரத்தில் வீற்றிருக்கும் கோமான் ஆவார்.

725. செந்தா மரைப்போ தணிந்தான் கண்டாய்
சிவன்கண்டாய் தேவர் பெருமான் கண்டாய்
பந்தாடு மெல்விரலாள் பாகன் கண்டாய்
பாலோடு நெய்தயிர்தே னாடி கண்டாய்
மந்தாரம் உந்தி வருநீர்ப் பொன்னி
வலஞ்சுழியின் மன்னு மணாளன் கண்டாய்
கொந்தார் பொழில்புடைசூழ் கொட்டையூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் தானே.

தெளிவுரை : செந்தாமரை மாலையணிந்த சிவபெருமான், தேவர்தம் தலைவராவர்; உமைபாகர்; பசுவில் பஞ்சகவ்வியத்தால் பூசிக்கப்படுபவர்; காவிரியின் கரையில் விளங்கும் வலஞ்சுழியில் மேவும் மணாளர் ஆவார். அப் பெருமான் கொட்டையூரில் திகழும் கோடீச்சரத்தில் வீற்றிருக்கும் தலைவர் ஆவார்.

726. பொடியாடு மேனிப் புனிதன் கண்டாய்
புட்பாகற் காழி கொடுத்தான் கண்டாய்
இடியார் கடுமுழக்கே றூர்ந்தான் கண்டாய்
எண்டிசைக்கும் விளக்காகி நின்றான் கண்டாய்
மடலார் திரைபுரளுங் காவிரிவாய்
வலஞ்சுழியின் மேவிய மைந்தன் கண்டாய்
கொடியாடு நெடுமாடக் கொட்டையூரில்
கோடீச் சரத்துறையுங் கோமான் தானே.

தெளிவுரை : சிவபெருமான் திருநீறு, அணிந்த திருமேனியுடைய புனிதர்; திருமாலுக்குச் சக்கரப்படையை அருளியவர்; இடபத்தை வாகனமாகக் கொண்டவர்; எண் திசைக்கும் ஒளிவிளக்கானவர். அப்பெருமான், காவிரி நீர் பாயும் வலஞ்சுழியில் விளங்குபவர். அவர் கொட்டையூரில் கோடீச்சரத்தில் வீற்றிருக்கும் தலைவர் ஆவார்.

727. அக்கரவம் அரைக்கசைத்த அம்மான் கண்டாய்
அருமறைக ளாறங்க மானான் கண்டாய்
தக்கனது பெருவேள்வி தகர்த்தான் கண்டாய்
சதாசிவன்காண் சலநதரனைப் பிளந்தான் கண்டாய்
மைக்கொண்மயிற் றழைகொண்டு வருநீர்ப் பொன்னி
வலஞ்சுழியான் கண்டாய் மழுவன் கண்டாய்
கொக்கமரும் வயல்புடைசூழ் கொட்டையூரிற்
கோடீச சரத்துறையுங் கோமான் தானே.

தெளிவுரை : சிவபெருமான், எலும்பும் அரவமும் ஆபரணமாக உடையவர்; வேதமும் அங்கமும் ஆனவர்; தக்கன் செய்த வேள்வியைத் தகர்த்தவர்; சதாசிவ மூர்த்தியானவர்; சலந்தராசூரனை அழித்தவர். அப்பெருமான் காவிரிக் கரையில் மேவும் வலஞ்சுழியில் மழுப்படையுடையவராய் விளங்குபவர். அவர், கொட்டையூரில் திகழும் கோடீச்சரத்தில் உறையும் தலைவர் ஆவார்.

728. சண்டனைநல் லண்டர்தொழச் செய்தான் கண்டாய்
சதாசிவன் கண்டாய்சங் கரன்றான் கண்டாய்
தொண்டர்பலர் தொழுதேத்துங் கழலான் கண்டாய்
சுடரொளியாய்த் தொடர்வரிதாய் நின்றான் கண்டாய்
மண்டுபுனல் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்
மாமுனிவர் தம்முடைய மருந்து கண்டாய்
கொண்டல்தவழ் கொடிமாடக் கொட்டையூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் தானே.

தெளிவுரை : சிவபெருமான், சண்டேசரைத் தேவர்கள் எல்லாம் தொழுமாறு செய்தவர்; சதாசிவ மூர்த்தியாக தொழுது ஏத்தப் பேரொளியாய் நின்றவர். அப்பெருமான் பொன்னி வளம் பெருக்கும் வலஞ் சுழியில் மேவும் மாமருந்தாக விளங்குபவர். அவர், கொட்டையூரில் மேவும் கோடீச்சரத்தில் உறையும் கோமான் ஆவார்.

729.அணவரியான் கண்டாய் அமலன் கண்டா
அவிநாசி கண்டாயண் டத்தான் கண்டாய்
பணமணிமா நாக முடையான் கண்டாய்
பண்டரங்கன் கண்டாய் பகவன் கண்டாய்
மணல்வருநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்
மாதவற்கும் நான்முகற்கும் வரதன் கண்டாய்
குடைமுடைநல் லடியார்வாழ் கொட்டையூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் தானே.

தெளிவுரை : சிவபெருமான், காண்பதற்கு அரிய நிமலர்; அவிநாசியில் மேவியவர்; நாகாபரணம் கொண்டவர்; பண்டரங்கக் கூத்தாடுபவர்; பகவானாக விளங்கும் அப் பெருமான், வலஞ்சுழியில் மேவுபவர். அவர், மாலுக்கும் அயனுக்கும் வரம் நல்குபவராகக் கொட்டையூரில் திகழும் கோடீச்சரத்தில் மேவும் கோமான் ஆவார்.

730. வரைகமழும் மலர்க்கொன்றை தாரான் கண்டாய்
வேதங்கள் தொழநின்ற நாதன் கண்டாய்
அரையதனிற் புள்ளியத ளுடையான் கண்டாய்
அழலாடி கண்டாய அழகன் கண்டாய்
வருதிரைநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்
வஞ்சமனத் தவர்க்கரிய மைந்தன் கண்டாய்
குரவரமரும் பொழில்புடைசூழ் கொட்டையூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் தானே.

தெளிவுரை : சிவபெருமான், நறுமணம் கமழும் கொன்றை மாலை தரித்தவர்; வேதங்களால் தொழப் படுபவர்; அரையில் தோலாடை உடுத்தியவர்; நெருப்பைக் கையில் ஏந்தி ஆடுபவர்; அப்பெருமான் வலஞ்சுழியில் வீற்றிருப்பவர். அவர், வஞ்சகர்களுக்கு அரியவராகிப் பொழில் சூழ்ந்த கொட்டையூரில் விளங்கும் கோடீச்சரத்தில் உறையும் கோமான் ஆவார்.

731. தளங்கிளருந் தாமரையா தனத்தான் கண்டாய்
தசரதன்றன்மகன் அசைவுத விர்த்தான் கண்டாய்
இளம்பிறையும் முதிர்சடைமேல் வைத்தான் கண்டாய்
எட்டெட் டிருங்கலையு மானான் கண்டாய்
வளங்கிளர்நீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்
மாமுனிகள் தொழுதெழு பொற்கழலான் கண்டாய்
குளங்குளிர்செங் குவளைகிளர் கொட்டையூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் தானே.

தெளிவுரை : சிவபெருமான், தாமரையாகிய தானத்தில் விளங்குபவர்; இராமபிரான், இராவணனைக் கொன்ற பழி தீரும் தன்மையில் பூசித்து ஏத்த அருள் வழங்கியவர்; சடை முடியில் பிறைச் சந்திரனைச் சூடியவர்; அறுபத்தி நான்கு கலைகள் ஆனவர். அப்பெருமான் காவிரி நீர் பாயும் வலஞ்சுழியில் வீற்றிருப்பவர். அவர், முனிவர்கள் தொழுது ஏத்தும் திருப்பாதம் உடையவராகிக் கொட்டையூரில் மேவும் கோடீச்சரத்தில் விளங்கும் தலைவர் ஆவார்.

732. விண்டார் புரமூன் றெரித்தான் கண்டாய்
விலங்கலி வல்லரக்கனுட லடர்த்தான் கண்டாய்
தண்டா மரையானும் மாலுந் தேடத்
தழற்பிழம்பாய் நீண்ட கழலான் கண்டாய்
வண்டார்பூஞ் சோலைவலஞ் சுழியான் கண்டாய்
மாதேவன் கண்டாய் மறையோ டங்கங்
கொண்டாடு வேதியர்வாழ் கொட்டையூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் தானே.

தெளிவுரை : சிவபெருமான், பகைமை கொண்ட அசுரர்களின் மூன்று கோட்டைகளை எரித்தவர்; இராவணனுடைய உடலை அடர்த்தவர்; நான்முகனும் திருமாலும் தேட, அழற் பிழம்பாய் நீண்டு உயர்ந்தவர். அப்பெருமான் வலஞ்சுழியில் வீற்றிருப்பவர். அவர், மாதேவராக மறையும் அங்கமும் ஓதி வாழும் வேதியர்கள் வாழும் கொட்டையூரில் திகழும் கோடீச்சரத்தில் உறையும் தலைவர் ஆவார்.

திருச்சிற்றம்பலம்

74. திருநாரையூர் (அருள்மிகு சவுந்தர்யேஸ்வரர் திருக்கோயில், திருநாரையூர்,கடலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

733. சொல்லானைப் பொருளானைச் சுருதி யானைச்
சுடராழி நெடுமாலுக் கருள் செய்தானை
அல்லானைப் பகலானை அரியான் தன்னை
அடியார்கட் கெளியானை அரண்மூன் றெய்த
வில்லானைச் சரம்விசயற் கருள்செய் தானை
வெங்கதிரோன் மாமுனிவர் விரும்பி யேத்தும்
நல்லானைத் தீயாடு நம்பன் தன்னை
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், சொல்லாகவும் அதன் பொருளாகவும் வேத கீதமாகவும் உள்ளவர்; சுடராழியை நெடிய திருமாலுக்கு வழங்கியவர்; இரவாகவும் பகலாகவும் விளங்குபவர்; பிறரால் காணற்கு அரியவர்; அடியவர்களுக்கு எளிமையானவர்; மூன்று கோட்டைகளையும் எரித்த வில்லையுடையவர்; அருச்சுனருக்குப் பாசுபதம் என்னும் தொய்வப் படையை வழங்கியவர்; சூரியன் முதலானவரும் மாமுனிவர்களும் விரும்பி யேத்தும் நற்றன்மையுடையவர்; கையில் நெருப்பேந்தி ஆடும் நம்பர். அவரை நாரையூர் என்னும் நன்னகரில் கண்டேன்.

734. பஞ்சுண்ட மெல்லடியான் பங்கன் தன்னைப்
பாரொடுநீர் சுடர்படர்காற் றாயி னானை
மஞ்சுண்ட வானாகி வானந் தன்னில்
மதியாகி மதிசடைமேல் வைத்தான் தன்னை
நெஞ்சுண்டென் நினைவகி நின்றான் தன்னை
நெடுங்கடலைக் கடைந்தவர் போய்நீங்க வோங்கும்
நஞ்சுண்டு தேவர்களுக் கமுதீந் தானை
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான் உமாதேவியைத் திருமேனியில் தரித்துள்ளவர்; நிலர், நீர், நெருப்பு, காற்று என ஆனவர்; மேகம் திகழும் ஆகாயம் ஆனவர்; வானத்தில் மேவும் சந்திரனாகியவர்; சந்திரனைத் தன் சடைமுடியின் மேல் வைத்தவர்; என் நெஞ்சில் புகுந்து அதில் தோன்றும் நினைவுகளாகி நிற்பவர்; நெடுங்கடலைக் கடைந்தபோது நஞ்சானது வெளிப்பட, அதனைக் கண்டு எல்லாரும் அஞ்சி ஓடத் தான் உட்கொண்டு தேவர்களுக்கு அமுதம் தந்தவர். அப் பெருமானை, நாரையூர் என்னும் நன்னகரில் கண்டேன்.

735. மூவாதியாவர்க்கும் மூத்தான் தன்னை
முடியாதே முதல்நடுவு முடிவா னானைத்
தேவாதி தேவர்கட்குந் தேவன் தன்னை
திசைமுகன்றன் சிரமொன்று சிதைத்தான் தன்னை
ஆவாத அடலேறொன் றுடையான் தன்னை
அடியேற்கு நினைதோறும் அண்ணிக்கின்ற
நாவானைக் நாவினில்நல் லுரையா னானை
நாரையூர் நன்னகரிற் கண்டான் நானே.

தெளிவுரை : சிவபெருமான், எல்லாப் பொருளுக்கும் முன்னர் விளங்குபவராயினும் மூப்பின் தன்மை அடையாதவர்; எக்காலத்திலும் முடிவுற்ற ஒண்பொருளாக விளங்கி, யாவற்றுக்கும் முதல் நடுவு அந்தம் என ஆகியவர்; எல்லாத் தேவர்களுக்கும் இறைவன் ஆகியவர்; பிரமனின் ஐந்த சிரங்களில் ஒன்றைக் கொய்தவர்; இடபத்தை வாகனமாக உடையவர்; அடியேன் நினைக்கும்தோறும் உள்ளத்தில் மேவி விளங்குபவர்; என் நாவாகவும் நாவில் மலரும் நல்லுரையாகவும் விளங்குபவர். அப் பெருமானை நாரையூர் என்னும் நன்னகரில் கண்டேன்.

736. செம்பொன்னை நன்பவளந் திகழும் முத்தைச்
செழுமணியைத் தொழுமவர்தஞ் சித்தத் தானை
வம்பவிழும் மலர்க்கணைவேள் உலக்க நோக்கி
மகிழ்ந்தானை மதிற்கச்சி மன்னு கின்ற
கம்பனையெங் கயிலாய மலையான் தன்னைக்
கழுகினொடு காகுத்தன் கருதி யேத்தும்
நம்பனையெம் பெருமானை நாதன் தன்னை
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், செம்பொன்னாகவும், பவளமாகவும், முத்தாகவும், மாணிக்கமாகவும் விளங்குபவர்; தொழுது ஏத்தும் அன்பர்களின் சித்தத்தில் விளங்குபவர்; மன்மதனை எரித்துச் சாம்பலாக்கியவர்; மதில்களில் திருப்பாங்குடைய கச்சியில் விளங்கும் திருவேகம்பர்; கயிலாய மலைக்கு உரியவர். கழுகு, காகுத்தன் (இரமாமபிரான்) ஆகியோரால் ஏத்தி வழிபடப் பெற்றவர்; எனக்குப் பெருமானாகியவர்; யாவர்க்கும் நாதன் ஆகியவர். அப்பெருமான் திருநாரையூரில் வீற்றிருக்கக் கண்டேன்.

737. புரையுடைய கரியுரிவைப் போர்வை யானைப்
புரிசடைமேற் புனலடைந்த புனிதன் தன்னை
விரையுடைய வெள்ளெருக்கங் கண்ணி யானை
வெண்ணீறு செம்மேனி விரவி னானை
வரையுடைய மகள்தவஞ்செய் மணாளன் தன்னை
வருபிணிநோய் பிரிவிக்கும் மருந்து தன்னை
நரைவிடைநற் கொடியுடைய நாதன் தன்னை
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், யானையின் தோலை உரித்தவர் சடை முடியின் மேல் கங்கையைத் தரித்த புனிதர்; மணம் கமழும் எருக்கம் பூவைத் தரித்தவர்; சிவந்த திருமேனியில் வெண்ணீற்றைக் குழையப் பூசி விளங்குபவர்; மலைமகளாகிய பார்வதி தேவி தவம் செய்து பெற்ற மணாளர், பிறவியில் பிணிக்கப் பெற்று உறுகின்ற நோயைப் பரித்தெடுத்து முத்திப் பேற்றை அருளிச் செய்யும் கொடியாக உடையவர்; யாவர்க்கும் நாதனாகியவர். அவர் நாரையூர் என்னும் நன்னகரில் வீற்றிருக்க கண்டேன்.

738. பிறவாதும் இறவாதும் பெருகி னானைப்
பேய்பாட நடமாடும் பித்தன் தன்னை
மறவாத மனத்தகத்து மன்னி னானை
மலையானைக் கடலானை வனத்து ளானை
உறவானைப் பகையானை உயிரை னானை
உள்ளானைப் புறத்தானை ஓசை யானை
நறவாரும் பூங்கொன்றை சூடி னானை
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், பிறவியின் தன்மை யின்றியும் இறப்பின் வழிபட்டதாகும் தனது ஆற்றலின் இயல்பால் பெருகி ஓங்குபவர்; பேய்கள் பாட, நடனம் புரியும் பித்தவர்; மறவாத சிந்தையுடைய அன்பர்களிடம் பொருந்திச் சிறப்புடன் விளங்குபவர்; ஏத்தும் அடியவர்களின் உள்ளத்தில் உறவாகி நன்மை புரிந்தும் தீவினைகளுக்குப் பகையாகி, அவற்றை விலக்கியும் விளங்குபவர்; எல்லா உயிரும் ஆனவர்; எல்லாப் பொருள்களின் உள்ளும் புறமும் ஆகி எழுகின்ற ஓசை யாகவும் திகழ்பவர்; தேன் மணம் கமழும் கொன்றை மலரைச் சடைமுடியில் சூடியுள்ளவர். அப் பெருமானைத் திருநாரையூரில் நான் கண்டேன்.

739. தக்கனது வேள்விகெடச் சாடி னானைத்
தலைகலனாப் பலியேற்ற தலைவன் தன்னைக்
கொக்கரைசச் சரிவீணைப் பாணி யானைக்
கோணாகம் பூணாகக் கொண்டான் தன்னை
அக்கினொடும் என்பணிந்த அழகன் தன்னை
அறுமுகனோ பானைமுகற் கப்பன் தன்னை
நக்கனைவக் கரையானை நள்ளாற் றானை
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், தக்கன் புரிந்த வேள்வியை அழித்தவர்; கபாலம் ஏந்தி பலியேற்ற தலைவர்; கொக்கரை, சச்சரி, வீணை ஆகியவற்றை உடையவர்; நாகத்தை ஆபரணமாகக் கொண்டவர்; உருத்திராக்கமும் எலும்பும் அணிந்தவர்; ஆறுமுகனையும் ஆனைமுகனையும் புதல்வர்களாகப் பெற்றவர்; நக்கராக விளங்குபவர்; திருவக்கரை, திருநள்ளாறு ஆகிய தலங்களில் உள்ளவர். அவர், நாரையூரில் வீற்றிருக்கக் கண்டேன்.

740. அரிபிரமர் தொழுதேத்தும் அத்தன் தன்னை
அந்தகனுக் கந்தகனை அளக்க லாகா
எரிபுரியும் இலிங்கபுரா ணத்து ளானை
எண்ணாகிப் பண்ணா ரெழுத்தா னானைத்
திரிபுரஞ்செற் றொருமூவர்க் கருள்செய் தானைச்
சிலந்திக்கும் அரசளித்த செல்வன் தன்னை
நரிவிரவு காட்ட கத்தி லாட லானை
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், அரியும் பிரமனும் ஏத்த அன்புடையவராய் விளங்குபவர்; காலனை மாய்த்த காலனாக விளங்குபவர்; அளப்பதற்கு அரிய தீப்பிழம்பாக ஓங்கி இலிங்கமாகவும் அதன் சிறப்பாகவும் திகழ்பவர்; எண்ணத்தில் மேவியும் பண்ணின் ஓசையாகவும் ஆனவர்; முப்புரங்களை எரித்தபோது, ஆங்குப் பத்தியுடன் அர நாமத்தை ஓதிய மூன்று அசுரர்களாகிய விரத்தன், பரமயோகன், குணபரன் ஆகியோரை காத்தவர்; தன்னை வழிபட்ட சிலந்திக்கு அருள் செய்து மறு பிறவியில் கோச்செங்கட்சோழனாக்கியவர்; இடுகாட்டில் நடனம் புரிபவர். அப்பெருமான் நாரையூரில் வீற்றிருக்கக் கண்டேன்.

741. ஆலாலம் மிடற்றணியா அடக்கி னானை
ஆலதன்கீழ் அறம்நால்வர்க் கருள்செய் தானைப்
பாலாகித் தேனாகிப் பழமு மாகிப்
பைங்கரும்பா யங்கருந்துஞ் சுவையா னானை
மேலாய வேதியர்க்கு வேள்வி யாகி
வேள்வியினின் பயனாய விமலன் தன்னை
நாலாய மறைக்கிறைவ னாயி னானை
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், ஆலகால விடத்தை மிடற்றில் தேக்கி அணியெனக் கொண்டவர்; ஆல் நிழலில் மேவி அறம் உரைத்தவர்; அன்பர்களின் உள்ளத்தில் பாலும், தேனும், பழமும், கரும்பின் சாறும், அருந்தும் சுவையும் ஆகியவர்; மேன்மையான வேள்வியும் அதன் பயனும் ஆகியவர்; நான்கு வேதங்களுக்கும் நாயகன் ஆனவர்; அப் பெருமான், நாரையூரில் வீற்றிருக்கக் கண்டேன்.

742. மீளாத ஆளென்னை உடையான் தன்னை
வெளிசெய்த வழிபாடு மேவி னானை
மாளாமை மறையவனுக் குயிரும் வைத்து
வன்கூற்றி னுயிர்மாள உதைத்தான் தன்னைத்
தோளாண்மை கருதிவரை யெடுத்த தூர்த்தன்
தோள்வலியுந் தாள்வலியுந் தொலைவித் தாங்கே
நாளோடு வாள்கொடுத்த நம்பன் தன்னை
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், மீளவும் தீய நெறியின்பால் ஈர்த்துச் செல்லவொட்டாது அடிமை பூண்டு ஒழுகுமாறு என்னை ஆளாகக் கொண்டு அருள் புரிந்தவர்; தூய மனத்தோடு வழிபட்ட மார்க்கண்டேயருக்கு உயிர் தந்து, கூற்றுவனை அழித்தவர்; தோள் வலிமையால் கயிலையை எடுத்த இராவணனுடைய தோளை நெரித்து, அழித்தவர்; அவன் ஏத்தி வணங்க வாளும் வாழ்நாளும் அருளியவர். அப் பெருமான், நாரையூர் என்னும் நன்னகரில் வீற்றிருக்கக் கண்டேன்.

திருச்சிற்றம்பலம்

75. திருக்குடந்தைக் கீழ்க்கோட்டம் (அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில், கும்பகோணம்,தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

743. சொன்மலிந்த மறைநான்கா றங்க மாகிச்
சொற்பொருளுங் கடந்த சுடர்ச்சோதி போலும்
கன்மலிந்த கயிலைமலை வாணர் போலுங்
கடல்நஞ்ச முண்டிகுண்ட கண்டர் போலும்
மன்மலிந்த மணிவரைத்திண் தோளர் போலும்
மலையரையன் மடப்பாவை மணாளர் போலும்
கொன்மலிந்த மூவிலைவேற் குழகர் போலுங்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தொங் கூத்த னாரே.

தெளிவுரை : சிவபெருமான், சொற்களின் வளமை மேவும் நான்கு வேதங்களாகவும், அங்கம் ஆறாகவும் ஆனவர்; சொல்லின் பொருளைக் கடந்து சுடர் விடும் சோதியாகியவர்; கயிலையில் வீற்றிருப்பவர்; கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு கருத்த கண்டம் உடையவர். பெருமை மிக்க மாணிக்க மலை போன்ற தோள் உடையவர்; உமா தேவியின் மணாளர்; சூலப் படையுடையவர்; அப் பெருமான் குடந்தைக் கீழ்க் கோட்டத்தில் மேவும் கூத்தனார் ஆவார்.

744. கானல்இளங் கலிமறவ னாகிப் பார்த்தன்
கருத்தளவு செருத்தொகுதி கண்டார் போலும்
ஆனல்இளங் கடுவிடையொன் றேறி யண்டத்
தப்பாலும் பலிதிரியும் அழகர் போலும்
தேனலிளந் துவலைமலி தென்றல் முன்றிற்
செழும்பொழிற்பூம் பாளைவிரி தேறல் நாறுங்
கூனல்இளம் பிறைதடவு கொடிகொள் மாடக்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தொங் கூத்த னாரே.

தெளிவுரை : சிவபெருமான், அர்ச்சுனருக்காகச் காட்டில் வேட்டுவத் திருக்கோலம் தாங்கிப் போர் புரிந்தவர்; இடபத்தில் ஏறிச் சென்று பலியேற்பவர். அப்பெருமான் பொழில் திகழும் குடந்தைக் கீழ்க் கோட்டத்தில் மேவும் கூத்தனார் ஆவார்.

745. நீறலைத்த திருவுருவும் நெற்றிக் கண்ணும்
நிலாஅலைத்த பாம்பினொடு நிறைநீர்க் கங்கை
ஆறலைத்த சடைமுடியும் அம்பொன் தோளும்
அடியவர்க்குக் காட்டியருள் புரிவார் போலும்
ஏறலைத்த நிமிர்கொடியொன் றுடையார் போலும்
ஏழுலகுந் தொழுகழலெம் மீசர் போலும்
கூறலைத்த மலைமடந்தை கொழுநர் போலுங்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

தெளிவுரை : சிவபெருமான், திருநீறு தரித்த திருவடிவம் தாங்கியவர்; நெற்றியில் கண்ணுடையவர்; சந்திரனும், பாம்பும், கங்கையும் விளங்கும் சடையுடையவர்; பொன் போன்று ஒளிரும் தோள் உடையவர்; அடியவர்களுக்கு, விரும்பிக் காட்சி நல்குபவர்; இடபக் கொடி ஏந்தியவர்; ஏழுலகமும் தொழுது ஏத்துமாறு விளங்குபவர்; உமா தேவியைத் திருமேனியில் பாகம் கொண்டவர். அப் பெருமான், குடந்தைக் கீழ்க் கோட்டத்தில் மேவும் கூத்தனார் ஆவார்.

746. தக்கனத பெருவேள்வி தகர்த்தார் போலுஞ்
சந்திரனைக் கலைகவர்ந்து தரித்தார் போலுஞ்
செக்கரொளி பவளவொளி மின்னின் சோதி
செழுஞ்சுடர்த்தீ ஞாயிறெனச் செய்யர் போலும்
மிக்கதிறல் மறையவரால் விளங்கு வேள்வி
மிகுபுகைபோய் விண்பொழியக் கழநி யெல்லாங்
கொக்கினிய கனிசிதறித் தேறல் பாயுங்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

தெளிவுரை : சிவபெருமான், தக்கனது வேள்வியை அழித்தவர்; சந்திரனைத் தரித்தவர்; செம்பவளம், சூரியன், நெருப்பு, மின்னல், எனச் சொல்லும் தன்மையில் சிவந்த திருமேனியுடையவர். அப் பெருமான், மறையவர் வேதம் ஓதி வேள்வி புரிய அப்புகை மேகமாக விளங்கிப் பொழிய, கழனிகள் விளங்கும் குடந்தைக் கீழ்க் கோட்டத்தில் மேவும் கூத்தனார் ஆவார்.

747. கால்வலி தொலைத்தகழற் காலம் போலுங்
காமனெழில் அழல்விழுங்கக் கண்டார் போலும்
ஆலதனில் அறம்பால்வர்க் களித்தார் போலும்
ஆணொடுபெண் ணலியல்ல ரானார் போலும்
நிலவுரு வயிரநிரை பச்சை செம்பொன்
நெடும்பளிங்கென் றறிவரிய நிறத்தார் போலுங்
கோலமணி கொழித்திழியும் பொன்னி நன்னீர்க்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

தெளிவுரை : சிவபெருமான், காலனை உதைத்தவர்; மன்மதனை எரித்தவர்; ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து அறம் உரைத்தவர்; ஆண், பெண், அலி எனவாகவும் அலை அற்றவராகவும் ஆனவர்; நீலம், வயிரம், பச்சை, செம்பொன், பளிங்கு என அறிவதற்கு அரிய வண்ணம் உடையவர். அப்பெருமான் அழகிய மணிகள் திகழும் காவிரியின் நீர் வளம் மிக்க குடத்தைக் கீழ்க் கோட்டத்தில் மேவும் கூத்தர் ஆவார்.

748. முடிகொண்ட வளர்மதியும் மூன்றாய்த் தோன்றும்
முறைஞாயி றன்னமலர்க் கண்கள் மூன்றும்
அடிகொண்ட சிலம்பொலியும் அருளார் சோதி
அணிமுறுவற் செவ்வாயும் அழகாய்த் தோன்றத்
துடிகொண்ட இடைமடவாள் பாகங் கொண்டு
சுடர்ச்சோதிக்கடிச் செம்பொன் மலைபோலிந்நாள்
குடிகொண்டென் மனத்தகத்தே புகுந்தார் போலுங்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

தெளிவுரை : சிவபெருமான், சடையில் சந்திரனைச் சூடியவர்; மூன்று கண்களையுடையவர்; திருப்பாதத்தில் சிலம்பு அணிந்தவர்; உமை பாகர்; பொன் மலை போன்று விளங்குபவர். அப் பெருமான் என் மனத்தில் மேவியவராகிக் குடந்தைக் கீழ்க் கோட்டத்தில் விளங்கும் கூத்தனார் ஆவார்.

749. காரிலங்கு திருவுருவத் தவற்கும் மற்றைக்
கமல்த்திற் காரணற்குங் காட்சி யொண்ணாச்
சீரிலங்கு தழற்பிழம்பிற் சிவந்தார் போலுஞ்
சிலைவளிவத் தவுணர்புரஞ் சிதைத்தார் போலும்
பாரிலங்கு புனல்அனல்கால் பரமா காசம்
பரிதிமதி சுருதியுமாய்ப் பரந்தார் போலும்
கூரிலங்கு வேற்குமரன் தாதை போலுங்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

தெளிவுரை : மேகம் போன்ற வண்ணம் உடைய திருமாலும், தாமரையில் மேவும் நான்முகனும் காணாதவாறு நெருப்புப் பிழம்பாய் உயர்ந்து ஓங்கிய சிவபெருமான், முப்புரம் எரித்தவர்; நிலம், நீர் நெருப்பு, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், வேதம் எனப் பரவி விளங்குபவர். குமரக் கடவுளின் தாதை அவர் குடந்தைக் கீழ்க் கோட்டத்தில் மேவும் கூத்தனார் ஆவார்.

750. பூச்சூழ்ந்த பொழில்தழுவு புகலூ ருள்ளார்
புறம்பயத்தார் அறம்புரிபூந் துருத்தி புக்கு
மாச்சூழ்ந்த பழனத்தார் நெய்த்தா னத்தார்
மாதவத்து வளர்சோற்றுத் துறையார் நல்ல
தீச்சூழ்ந்த திகிரிதிரு மாலுக் கீந்து
திருவானைக் காவிலோர் சிலந்திக் கந்நாள்
கோச்சோழர் குலத்தரசு கொடுத்தார் போலும்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

தெளிவுரை : சிவபெருமான், திருப்புகலூர், திருப்புறம்பயம், திருப்பூந்துருத்தி, திருப்பழனம், திருநெய்த்தானம், திருச்சோற்றுத்துறை ஆகிய தலங்களில் விளங்குபவர்; திருமாலுக்குச் சக்கரப்படையருளியவர்; திருவானைக்காவில் சிலந்திக்கு அருள் செய்து கோச்செங்கட் சோழ நாயனாராக மிளிரச் செய்தவர். அப் பெருமான் குடந்தைக் கீழ்க்கோட்டத்தில் மேவும் கூத்தனார் ஆவார்.

751. பொங்கரவர் புலித்தோலர் புராணர் மார்பிற்
பொறிகிளர்வெண் பூணூல் புனிதர் போலும்
சங்கரவக் கடல்முகடு தட்ட விட்டுச்
சதுரநடம் ஆட்டுகந்த சைவர் போலும்
அங்கரவத் திருவடிக்காட் பிழைப்பத் தந்தை
அந்தணனை அறஎறிந்தார்க் கருளப் போதே
கொங்கரவச் சடைக்கொன்றை கொடுத்தார் போலும்
குடந்தைக்கீழ் கோட்டத்தெங் கூத்த னாரே.

தெளிவுரை : சிவபெருமான், அரவத்தை அணிந்தவர்; புலித்தோலை உடுத்தியவர்; முப்புரிநூல் அணிந்த திருமார்பு உடையவர்; களியோடு அரிய நடனம் புரிந்த வெற்றி கொண்டவர்; சிவபூசையைத் தடுத்த தந்தையின் காலைத் துணித்த சண்டேசருக்கு அருள் புரிந்த புராணர்; அவருக்குச் சடையில் திகழும் கொன்றை மாலையைச் சூட்டி அருள் புரிந்தவர். அப் பெருமான் குடந்தைக் கீழ்க் கோட்டத்தில் மேவும் கூத்தனார் ஆவார்.

752. ஏவியிடர்க் கடலிடைப்பட் டிளைக்கின் றேனை
யிப்பிறவி யறுத்தேற வாங்கி யாங்÷õ
கூவிஅம ருலகனைத்து முருவிப் போகக்
குறியிலறு குணத்தாண்டு கொண்டார் போலும்
தாவிமுதற் காவிரிநல் யமுனை கங்கை
சரசுவதிபொற் றாமரைபுட் காணி தெண்ணீர்க்
கோவியொடு குமரிவரு தீர்த்தஞ் சூழ்ந்த
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

தெளிவுரை : சிவபெருமான், வினையின் வலிமையால் ஆட்பட்டு நலிவுற்ற என் பிறவியை அறுத்து அருட்குணத்தால் ஆட்கொண்டவர். அப் பெருமான், காவிரி, யமுனை, கங்கை, சரஸ்வதி முதலான தீர்த்த மகிமையுடைய குடந்தையில் விளங்கும் கீழ்க் கோட்டத்தில் மேவும் தலைவர் ஆவார். இத் திருப்பாட்டில் குடந்தையில் திகழும் மகாமகக் குளத்தின் சிறப்பானது ஏத்தப் பெற்றது.

753. செறிகொண்ட சிந்தைதனுள் தெளிந்து தேறித்
தித்திக்குஞ் சிவபுவனத் தமுதம் போலும்
நெறிகொண்ட குழலியுமை பாக மாக
நிறைந்தமரர் கணம்வணங்க நின்றார் போலும்
மறிகொண்ட கரதலத்தெம் மைந்தர் போலும்
மதிலிலங்கைக் கோன்மலங்க வரைக்கீ ழிட்டுக்
குறிகொண்ட இனினிசைகேட் டுகந்தார் போலும்
குடந்தைககீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

தெளிவுரை : சிவலோகத்தில் திகழும் அமுதம் போன்ற உமாதேவியாரைப் பாகமாகக் கொண்ட சிவபெருமான், இராவணனை மலையின் கீழ் அடக்க, அவன் இசைக்கு உகந்து அருள் புரிந்தவர். அப்பெருமான், குடந்தைக் கீழ்க் கோட்டத்தில் மேவும் கூத்தனார் ஆவார்.

திருச்சிற்றம்பலம்

76. திருப்புத்தூர் (அருள்மிகு திருத்தளிநாதர் திருக்கோயில், திருப்புத்தூர்,சிவகங்கை மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

754. புரிந்தமரர் தொழுதேத்தும் புகழ்தக் கோன்காண்
போர்விடையின் பாகன்காண் புவன மேழும்
விரிந்துபல வுயிராகி விளங்கி னான்காண்
விரைக்கொன்றைக் கண்ணியன்காண் வேதம் நான்கும்
தெரிந்துமுதற் படைத்தோனைச் சிரங்கொண்டோன் காண்
தீர்த்தன்காண் திருமாலோர் பாகத்தான் காண்
திருந்துவயல் புடைதழுவு திருப்புத் தூரில்
திருத்தளியான் காண்அவனென் சிந்தை யானே.

தெளிவுரை : சிவபெருமான், தேவர்களால் தொழுது ஏத்தப் படுபவர்; இடப வாகனர்; உலகம் ஏழும் ஆகியவர்; எல்லா உயிரும் ஆனவர்; கொன்றை மாலை சூடியவர்; வேதம் ஓதும் பிரமனின் தலையைக் கொய்தவர்; திருமாலைப் பாகம் கொண்டு மேவுபவர்; அப் பெருமான் திருப்புத்தூரில் வீற்றிருக்கும் திருத்தளிநாதர். அவர் என் சிந்தையில் உள்ளவர்.

755. வாராரும் முலைமங்கை பாகத் தான்காண்
மாமறைக ளாயவன்காண் மண்ணும் விண்ணுங்
கூரார்வெந் தழலவனுங் காற்றும் நீருங்
குலவரையும் ஆயவன்காண் கொடுநஞ் சுண்ட
காராருங் கண்டன்காண் எண்டோ ளன்காண்
கயிலைமலைப் பொருப்பன்காண் விருப்போ டென்றுந்
தேராரும் நெடுவீதித் திருப்புத் தூரில்
திருத்தளியான் காண்அவனென் சிந்தை யானே.

தெளிவுரை : சிவபெருமான், உமைபாகர்; வேதங்கள் நான்கும் ஆனவர்; மண்ணுலகமும் விண்ணுலகமும், நெருப்பும், காற்றும், நீரும், மலையும் ஆனவர்; நஞ்சுண்டு கருத்த கண்டத்தை உடையவர்; எட்டுத் தோள்களையுடையவர்; கயிலை மலையில் விளங்குபவர்; திருப்புத்தூரில் மேவும் திருத்தளிநாதர். அவர் என் சிந்தையுள் மேவியவர் ஆவார்.

756. மின்காட்டுங் கொடிமருங்குல் உமையாட் கென்றும்
விருப்பவன்காண் பொருப்புவலிச் சிலைக்கை யோன்காண்
நன்பாட்டுப் புலவனாய்ச் சங்க மேறி
நற்கனகக் கிழிதருமிக் கருளினோன் காண்
பொன்காட்டக் கடிக்கொன்றை மருங்கே நின்ற
புனக்காந்தள் கைகாட்டக் கண்டு வண்டு
தொன்காட்டுஞ் செழும்புறவின் திருப்புத் தூரில்
திருத்தளியான் காண்அவனென் சிந்தை யானே.

தெளிவுரை : சிவபெருமான், மின்னல் போன்ற இடையுடைய உமா தேவியின்பால் பெரிதும் விருப்பம் உடையவர்; மேருவை வில்லாகக் கொண்டவர்; தமிழ்ச் சங்கத்தில் புலவராகச் சென்று வாதிட்டுத் தருமி என்னும் அந்தணருக்குப் பொற்கிழி அளித்தவர்; பொன் போன்ற கொன்றை மலரும், காந்தள் மலரும் திகழும் சோலை சூழ்ந்த திருப்புத்தூரில் மேவும் திருத்தளிநாதர். அவர் என் சிந்தையில் உள்ளவர்.

757. தேறு மலர்க்கமலத் தயனும் மாலும்
இந்திரனும் பணிந்தேத்த இருக்கின் றான்காண்
தோடேறு மலர்க்கடுக்கை வன்னி மத்தந்
துன்னியசெஞ் சடையான்காண் துகள்நீர் சங்கம்
மாடேறி முத்தீனுங் கானல் வேலி
மறைக்காட்டு மாமணிகாண் வளங்கொள் மேதி
சேடேறி மடுப்படியுந் திருப்புத் தூரில்
திருத்தளியான் காண்அவனென் சிந்தை யானே.

தெளிவுரை : திருமால், பிரமன், இந்திரன் ஆகியோர் பணிந்து ஏத்தும் சிவபெருமான், கொன்றை மலர், வன்னி, ஊமத்தம் ஆகியவற்றைச் செஞ்சடையில் வைத்தவர்; முத்துக்களை ஈனும் மறைக்காட்டில் விளங்கும் மாணிக்கமணியானவர்; திருப்புத்தூரில் மேவும் திருத்தளிநாதர். அவர் என் சிந்தையுள் விளங்குபவர்.

758. கருமருவு வல்வினைநோய் காற்றி னான்காண்
காமருபூங் கச்சியே கம்பத் தான்காண்
பெருமருவு பேருலகில் பிணிகள் தீர்க்கும்
பெரும்பற்றத் தண்புலியூர் மன்றாடிகாண்
தருமருவு கொடைத்தடக்கை யளகைக் கோன்றன்
சங்காதி ஆரூரில் தனியானைகாண்
திருமருவு பொழில் புடைசூழ் திருப்புத் தூரில்
திருத்தளியான் காண்அவனென் சிந்தை யானே.

தெளிவுரை : சிவபெருமான், பிறவி கொள்ளும் வல்வினையை நீக்கியவர்; திருக்கச்சியில் மேவும் ஏகம்பர்; பெரும்பற்றப்புலியூரில் திருக்கூத்து மேவி பிணி தீர்ப்பவர்; குபேரனின் தோழனாகத் திருவாரூரில் விளங்கும் களிறு போன்றவர்; திருப்புத்தூரில் மேவும் திருத்தளிநாதர். அவர் என் சிந்தையில் உள்ளவர்.

759. காம்பாடு தோளுமையாள் காண நட்டங்
கலந்தாடல் புரிந்தவன்காண் கையில் வெய்ய
பாம்பாடப் படுதலையிற் பலிகொள் வோன்காண்
பவளத்தின் பருவரைபோல் படிவத் தான்காண்
தாம்பாடு சினவிடையே பகடாக் கொண்ட
சங்கரன்காண் பொங்கரவக் கச்சை யோன்காண்
சேம்பாடு வயல்புடைசூழ் திருப்புத் தூரில்
திருத்தளியான் காண்அவனென் சிந்தை யானே.

தெளிவுரை : சிவபெருமான், உமாதேவியார் காணத் திருநடனம் புரிபவர்; பாம்பைக் கையில் பற்றி ஆட்டிக் கபாலம் ஏந்திப் பலியேற்பவர்; பவளக் குன்று போன்ற வடிவத்தையுடையவர்; இடபத்தை வாகனமாக உடையவர்; அரவத்தை இடையில் கட்டியவர்; வயல்கள் சூழ்ந்த திருப்புத்தூரில் மேவும் திருத்தளிநாதர். அவர் என் சிந்தையில் உள்ளவர்.

760. வெறிவிரவு மலர்க்கொன்றை விளங்கு திங்கள்
வன்னியொடு விரிசடைமேல் மிலைச்சி னான்காண்
பொறிவிரவு கதநாகம் அக்கி னோடு
பூண்டவன்காண் பொருபுலித்தோ லாடையான்காண்
அறிவரிய நுண்பொருள்க ளாயி னான்காண்
ஆயிரம்பே ருடையவன்காண் அந்தண் கானல்
செறிபொழில்சூழ் மணிமாடத் திருப்புத் தூரில்
திருத்தளியான் காண்அவனென் சிந்தை யானே.

தெளிவுரை : நறுமணம் கமழும் கொன்றை மலர், சந்திரன், வன்னி ஆகியவற்றைச் சடையில் சூடிய சிவபெருமான், எலும்பும் நாகமும் ஆபரணமாகப் பூண்டவர்; புலித்தோலை உடுத்தியவர்; நுண்பொருளாய் விளங்குபவர்; ஆயிரம் திருநாமங்களையுடையவர்; பொழில் சூழ்ந்த திருப்புத்தூரில் மேவும் திருத்துளிநாதர். அவர் என் சிந்தையில் உள்ளவர்.

761. புக்கடைந்த வேதியற்காக் கலற் காய்ந்த
புண்ணியன்காண் வெண்ணகைவெள வளையாளஞ்ச
மிக்கெதிர்ந்த கரிவெருவ உரித்த கோன்காண்
வெண்மதியைத் தலைசேர்த்த தண்மை யோன்காண்
அக்கரும்பு பெரும்புன்னை நெருங்கு சோலை
ஆரூருக் கதிபதிகாண் அந்தண் தென்றல்
திக்கணைந்து வருமருங்கின் திருப்புத் தூரில்
திருத்தளியான் காண்அவனென் சிந்தை யானே.

தெளிவுரை : சிவபெருமான், மார்க்கண்டேயரின் உயிரைக் காப்பதற்காகக் காலனை மாய்த்த புண்ணியர்; யானையின் தோலை உரித்தவர்; சந்திரனைச் சடையில் சூடியவர்; கரும்பும் புன்னையும் விளங்கும் திருவாரூரில் மேவியவர்; திருப்புத்தூரில் மேவும் திருத்தளிநாதர். அவர் என் சிந்தையில் உள்ளவர்.

762. பற்றவன்காண் ஏனோர்க்கும் வானோ ருக்கும்
பராபரன்காண் தக்கன்றந் வேள்வி செற்ற
கொற்றவன்காண் கொடுஞ்சினத்தை யடங்கச் செற்று
ஞானத்தை மேன்மிகுத்தல் கோளாக் கொண்ட
பெற்றியன்காண் பிறங்கருவிக் கழுக்குன் றத்தெம்
பிஞ்ஞகன்காண் பேரெழிலார் காம வேளைச்
செற்றவன்காண் சீர்மருவு திருப்புத் தூரில்
திருத்தளியான் காண்அவனென் சிந்தை யானே.

தெளிவுரை : சிவபெருமான், அனைவர்க்கும் பற்றும் துணையுமாக விளங்குபவர்; வானோர்க்கும் மற்றும் அனைவருக்கும் தலைவர்; தக்கன் செய்த வேள்வியை அழித்தவர்; அஞ்ஞானத்தையும் சினத்தையும் அகற்றி ஞானம் மிகுந்து தோன்ற விளங்கும் பெற்றியுடையவர்; திருக்கழுக்குன்றத்தில் மேவியவர்; மன்மதனை எரித்தவர்; சீர் மருவும் திருப்புத்தூரில் மேவும் திருத்தளிநாதர். அவர் என் சிந்தையில் உள்ளவர்.

763. உரம்மதித்த சலந்தரன்தன் ஆகங் கீண்ட
வோராழி படைத்தவன்காண் உலகு சூழும்
வரம்மதித்த கதிரவனைப் பற்கொண் டான்காண்
வானவர்கோன் புயம்நெரித்த வல்லா ளன்காண்
அரம்மதித்துச் செம்பொன்னி னாரம் பூணா
அணிந்தவன்காண் அலைகடல்சூழ் இலங்கை வேந்தன்
சிரம்நெரித்த சேவடிகாண் திருப்புத் தூரில்
திருத்தளியான் காண்அவனென் சிந்தை யானே.

தெளிவுரை : சிவபெருமான், வலிமையுடைய சலந்தராசூரனின் உடலைப் பிளந்த சக்கரப் படையைத் தோற்றுவித்தவர்; தக்கன் புரிந்த வேள்வியில் பங்கேற்ற சூரியனின் பற்களை உகுத்தவர்; இந்திரனின் தோளை நெரித்தவர்; நாகத்தை ஆபரணமாகவும் மாலையாகவும் கொண்டு விளங்குபவர்; இராவணனுடைய தலையை நெரித்தவர்; திருப்புத்தூரில் மேவும் திருத்தளிநாதர். அப்பெருமான், என் சிந்தையில் உள்ளவர்.

திருச்சிற்றம்பலம்

 77. திருவாய்மூர் (அருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

764. பாட அடியார் பரவக் கண்டேன்
பத்தர்கணங் கண்டேன் மொய்த்த பூதம்
ஆடல் முழவம் அதிரக் கண்டேன்
அங்கைஅனல் கண்டேன் கங்கை யாளைக்
கோட லரவார் சடையிற் கண்டேன்
கொக்கினிதழ் கண்டேன் கொன்றை கண்டேன்
வாடல் தலையொன்று கையிற் கண்டேன்
வாய்மூ ரடிகளைநான் கண்ட வாறே.

தெளிவுரை : திருவாய்மூர் அடிகளை நான் கண்டபோது, அடியவர்கள் எல்லாரும் ஏத்தி அப்பரமனை வணங்கக் கண்டேன்; பக்தர் கணங்களைக் கண்டேன்; பூதப்படைகளைக் கண்டேன்; திருநடனம் புரிய முழவமானது அதிரக்கண்டேன்; அழகிய கையில் நெருப்பைக் கண்டேன்; அரவும் கங்கையும் சடையில் விளங்கக் கண்டேன்; கொக்கின் இறகும் கொன்றை மலரும் கண்டேன்; கபாலத்தைக் கையில் கண்டேன்.

765. பாலின் மொழியாளோர் பாகங் கண்டேன்
பதினெண் கணமும் பயிலக் கண்டேன்
நீல நிறமுண்ட கண்டங் கண்டேன்
நெற்றி நுதல்கண்டேன் பெற்றங் கண்டேன்
காலைக் கதிர்செய் மதியங் கண்டேன்
கரந்தை திருமுடிமேல் தோன்றக் கண்டேன்
மாலைச் சடையும் முடியுங் கண்டேன்
வாய்மூ ரடிகளைநான் கண்ட வாறே.

தெளிவுரை : வாய்மூர் அடிகளை நான் கண்டபோது, பாலின் மொழியாள் பாகத்தில் மேவக் கண்டேன்; பதினெட்டு கணங்களைக் கண்டேன்; நீல வண்ணம் உடைய கண்டம் கண்டேன்; நெற்றி விழி கண்டேன்; இடபம் கண்டேன்; இளம் சந்திரனைக் கண்டேன்; திருமுடியில் கரந்தை விளங்கக் கண்டேன்; கொன்றை மாலை கண்டேன். பதினெண்கணங்களாவன : 1. தேவர், 2. அசுரர், 3. முனிவர், 4. கின்னரர், 5. கிம்புருடம், 6. கருடர், 7. இயக்கர், 8. இராக்கதர், 9. கந்தருவர், 10. சித்தர், 11. சாரணர், 12. வித்தியாதரர், 13. நாகர், 14. பூதர், 15. வேதாளகணம், 16. தாராகணம், 17. ஆகாசவாசிகள், 18. போகபூமியோர்.

766. மண்ணைத் திகழ நடம தாடும்
வரைசிலம் பார்க்கின்ற பாதங் கண்டேன்
விண்ணிற் றிகழும் முடியுங் கண்டேன்
வேடம் பலவாஞ் சரிதை கண்டேன்
நண்ணிப் பிரியா மழுவுங் கண்டேன்
நாலு மறையங்கம் ஓதக் கண்டேன்
வண்ணம் பொலிந்திலங்கு கோலங் கண்டேன்
வாய்மூ ரடிகளைநான் கண்ட வாறே.

தெளிவுரை : வாய்மூர் அடிகளை நான் கண்டபோது, மண்ணுலகம் திகழ நடனம் புரிகின்ற சிலம்பு ஒலிக்கும் திருப்பாதம் கண்டேன்; விண்ணில் திகழும் முடி கண்டேன்; பலவாகிய திருவேடங்கள் கண்டேன்; மழுப்படை கண்டேன்; நான்கு மறையும் அங்கமும் ஓதக் கண்டேன், வண்ணம் திகழ்ந்து பொலியும் அழகு கண்டேன்.

767. விளைத்த பெரும்பத்தி கூர நின்று
மெய்யடியார் தம்மை விரும்பக் கண்டேன்
இளைக்குங் கதநாக மேனி கண்டேன்
என்பின் கலந்திகழ்ந்து தோன்றக் கண்டேன்
திளைக்குந் திருமார்பில் நீறு கண்டேன்
சேணார் மதில்மூன்றும் பொன்ற அன்று
வளைத்த வரிசிலையுங் கையிற் கண்டேன்
வாய்மூ ரடிகளைநான் கண்ட வாறே.

தெளிவுரை : வாய்மூர் அடிகளை நான் கண்டபோது, மெய்யடியார்கள் பக்தியுடன் விரும்பி ஏத்தக் கண்டேன்; இளமையான நாகத்தைத் திருமேனியில் கண்டேன்; எலும்பாபரணம் திகழ்ந்து தோன்றக் கண்டேன்; திருமார்பில் திருநீறு கண்டேன்; மூன்று மதில்களையும் எரித்து அழித்த வில்லைக் கையில் கண்டேன்.

768. கான்றையும் போதகத்தி னுரிவை கண்டேன்
காலிற் கழல்கண்டேன் கரியின் தோல்கொண்
டூன்மறையப் போர்த்த வடிவுங் கண்டேன்
உள்க மனம்வைத்த உணர்வுங் கண்டேன்
நான்மறை யானோடு நெடிய மாலும்
நண்ணி வரக்கண்டேன் திண்ண மாக
மான்மறிதங் கையில் மருவக் கண்டேன்
வாய்மூ ரடிகளைநான் கண்ட வாறே.

தெளிவுரை : வாய்மூர் அடிகளை நான் கண்டபோது, யானையின் தோலைப் போர்த்து விளங்கக் கண்டேன்; காலில் கழல் கண்டேன்; கசிந்து உருகும் உணர்வு கண்டேன்; அயனும் மாலும் நண்ணி வரக் கண்டேன்; மான் கன்று கையில் விளங்கக் கண்டேன்.

769. அடியார் சிலம்பொலிக ளார்ப்பக் கண்டேன்
அவ்வவர்க்கே யீந்த கருணை கண்டேன்
முடியார் சடைமேல் அரவ மூழ்க
மூரிப் பிறைபோய் மறையக் கண்டேன்
கொடியா ரதன்மேல் இடபங் கண்டேன்
கோவணமுங் கீளுங் குலாவக் கண்டேன்
வடியாரும் மூவிலைவேல் கையிற் கண்டேன்
வாய்மூ ரடிகளைநான் கண்ட வாறே.

தெளிவுரை : வாய்மூர் அடிகளை நான் கண்டபோது, திருவடியில் சிலம்பு ஒலிக்கக் கண்டேன்; அடியவர்களுக்குக் கருணை புரியக் கண்டேன்; சடைமுடியில் விளங்கும் அரவத்தால் சந்திரன் போய் மறையக் கண்டேன்; இடபக்கொடி கண்டேன்; கோவண ஆடை விளங்கக் கண்டேன்; கையில் வடித்தெடுத்த சூலம் கண்டேன்.

770. குழையார் திருத்தோடு காதிற் கண்டேன்
கொக்கரையுஞ் சச்சரியுங் கொள்கை கண்டேன்
இழையார் புரிநூல் வலத்தே கண்டேன்
ஏழிசையாழ் வீணை முரலக் கண்டேன்
தழையார் சடைகண்டேன் தன்மை கண்டேன்
தக்கையொடு தாளங் கறங்கக் கண்டேன்
மழையார் திருமிடறும் மற்றுங் கண்டேன்
வாய்மூ ரடிகளைநான் கண்ட வாறே.

தெளிவுரை : வாய்மூர் அடிகளை நான் கண்டபோது குழையும் தோடும் காதில் கண்டேன்; கொக்கரையும் சச்சரியும் கண்டேன்; மார்பில் முப்புரி நூல் கண்டேன்; ஏழிசை இயம்பும் யாழும் வீணையும் ஒலிக்கக் கண்டேன்; தழைத்த சடை கண்டேன்; தக்கை தாளம் என் இவற்றைக் கண்டேன்; கரிய மிடறு கண்டேன்.

771. பொருந்தாத செய்கை பொலியக் கண்டேன்
போற்றிசைத்து விண்ணோர் புகழக் கண்டேன்
பரிந்தார்க் கருளும் பரிசுங் கண்டேன்
பாராய்ப் புனலாகி நிற்கை கண்டேன்
விருந்தாய்ப் பரந்த தொகுதி கண்டேன்
மெல்லியலும் விநாயகனும் தோன்றக் கண்டேன்
மருந்தாய்ப் பிணிதீர்க்கு மாறு கண்டேன்
வாய்மூ ரடிகளைநான் கண்ட வாறே.

தெளிவுரை : வாய்மூர் அடிகளை நான் கண்டபோது, உலகத்தின் மாந்தர்களுக்குப் புதுமையானதாக உள்ள செய்கைகள் அழகுடன் மிளிரக் கண்டேன்; தேவர்கள் போற்றி நின்று ஏத்தக் கண்டேன்; பரிந்து ஏத்தும் அன்பர்களுக்கு உரிய பரிசினை வழங்கக் கண்டேன்; விருந்தாய் மேவும் தன்மை கண்டேன்; உமாதேவியும் விநாயகரும் தோன்றக் கண்டேன்.

772. மெய்யன்ப ரானார்க் கருளுங் கண்டேன்
வேடுவனாய் நின்ற நிலையுங் கண்டேன்
கையம் பரணெரித்த காட்சி கண்டேன்
கங்கணமும் அங்கைக் கனலுங் கண்டேன்
ஐயம் பலவூர் திரியக் கண்டேன்
அன்றவன்றன் வேள்வி யழித்து கந்து
வையம் பரவ இருத்தல் கண்டேன்
வாய்மூ ரடிகளைநான் கண்ட வாறே.

தெளிவுரை : வாய்மூர் அடிகளை நான் கண்டபோது; மெய்யன்பர்களுக்கு அருள் நல்குதலைக் கண்டேன்; வேடுவத் திருக்கோலத்தில் இருந்த காட்சியைக் கண்டேன்; கையில் உள்ள அம்பானது கோட்டை மதில்களை எரித்த காட்சியைக் கண்டேன்; கையில் கங்கணமும் நெருப்பும் விளங்கக் கண்டேன்; ஐயம் ஏற்றுப் பல ஊர் திரியக் கண்டேன்; தக்கனின் வேள்வியானது அழிக்கப் பெற்றதைக் கண்டேன்.

773. கலங்க இருவர்க் கழலாய் நீண்ட
காரணமுங் கண்டேன் கருவாய் நின்று
பலங்கள் தரித்துகந்த பண்புங் கண்டேன்
பாடல் ஒலியெலாங் கூடக் கண்டேன்
இலங்கைத் தலைவன் சிரங்கள் பத்தும்
இறுத்தவனுக் கீந்த பெருமை கண்டேன்
வலங்கைத் தலத்துள் அனலுங் கண்டேன்
வாய்மூ ரடிகளைநான் கண்ட வாறே.

தெளிவுரை : வாய்மூர் அடிகளை நான் கண்டபோது, பிரமனும் திருமாலும் காணாதவாறு அழலுருவாய் நீண்டு உயர்ந்த காரணம் கண்டேன்; கருவாய் விளங்கி உயிர்களுக்குப் பிறப்புக்களை அளிக்கும் பண்பு கண்டேன். பாடல் ஒளியெலாம் கூடி விளங்கக் கண்டேன்; இராவணனுடைய பத்துத் தலைகளையும் நெரித்துப் பின் அருள் புரிந்த பெருமை கண்டேன். வலக்கையில் அனல்போல் ஒளிரும் மழுப்படையும் கண்டேன்.

திருச்சிற்றம்பலம்

78. திருவாலங்காடு (அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவாலங்காடு, திருவள்ளூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

774. ஒன்றா வுலகனைத்து மானார் தாமே
ஊழிதோ றூழி உயர்ந்தார் தாமே
நின்றாகி யெங்கும் நிமிர்ந்தார் தாமே
நீர்வளிதீ யாகாச மானார் தாமே
கொன்றாடுங் கூற்றை யுதைத்தார் தாமே
கோலப் பழனை உடையார் தாமே
சென்றாடு தீர்த்தங்க ளானார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

தெளிவுரை : சிவபெருமான், உலகம் யாவிலும் வியாபித்துத் தானேயாய் மேவி ஒப்பற்ற தன்மையாய் விளங்குபவர்; ஊழிக் காலத்திலும் நிலைத்து உயர்ந்து மேவுபவர்; எல்லா இடத்தும் நிலைப்பவர்; ஐம்பூதங்களாகிய நிலம் நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என விளங்குபவர்; உலகத்தில் உள்ள அனைத்தையும் கொன்றழிக்கும் ஆற்றலுடைய கூற்றுவனை உதைத்து அழித்தவர். அழகிய பழையனூரில் வீற்றிருப்பவர்; திருத் தலங்களில் பக்தர்கள் நீராடி மகிழும் தீர்த்தமாக விளங்குபவர். அப் பெருமான் திருவாலங்காட்டில் உறையும் செல்வர் ஆவார்.

775. மலைமகளைப் பாக மமர்ந்தார் தாமே
வானோர் வணங்கப் படுவார் தாமே
சலமகளைச் செஞ்சடைமேல் வைத்தார் தாமே
சரணென் றிருப்பார்கட் கன்பர் தாமே
பலபலவும் வேடங்க ளானார் தாமே
பழனை பதியா வுடையார் தாமே
சிலைமலையா மூவெயிலும் அட்டார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

தெளிவுரை : சிவபெருமான், உமைபாகர்; வானோரால் ஏத்தப்படுபவர்; கங்கையைச் சடையின் மேல் தரித்தவர்; சரணாகதியாக விளங்கும் அடியவர்களுக்கு அன்புடையவர்; பலவாகிய திருவேடப் பொலிவு உடையவர்; பழையனூரில் விளங்குபவர்; மேரு மலையை வில்லாகக் கொண்டு முப்புரங்களை எரித்துச் சாம்பலாக்கியவர். அவர், திருவாலங்காட்டில் விளங்கும் செல்வர் ஆவார்.

776. ஆவுற்ற ஐந்தும் உகந்தார் தாமே
அளவில் பெருமை யுடையார் தாமே
பூவுற்ற நாற்றமாய் நின்றார் தாமே
புனிதப் பொருளாகி நின்றார் தாமே
பாவுற்ற பாட லுகப்பார் தாமே
பழனை பதியா வுடையார் தாமே
தேவுற் றடிபரவ நின்றார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

தெளிவுரை : சிவபெருமான், பசுவின் பஞ்ச கவ்வியத்தினைப் பூசையாக உகந்து ஏற்பவர்; அளவில்லாத பெருமையடையவர்; பூவின் மணமாகவும், புனிதப் பொருளாகவும் திகழ்பவர்; பண்ணின் இசை மேவும் பாடலை உகப்பவர்; படியனூரைப் பதியாக உடையவர்; தேவர்கள் வணங்கி ஏத்த விளங்குபவர். அப்பெருமான், திருவாலங்காட்டில் மேவும் செல்வர் ஆவார்.

777. நாறுபூங் கொன்றை முடியார் தாமே
நான்மறையோ டாறங்கஞ் சொன்னார் தாமே
மாறிலா மேனி யுடையார் தாமே
மாமதியஞ் செஞ்சடைமேல் வைத்தார் தாமே
பாறினார் வெண்டலையி லுண்டார் தாமே
பழனை பதியா வுடையார் தாமே
தேறினார் சித்தத் திருந்தார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

தெளிவுரை : சிவபெருமான், நறுமணம் கமழும் கொன்றை மலரைச் சடையில் சூடியவர்; நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் விரித்து உரைத்தவர்; மாற்றம் கொள்ளாது இளமைப் பொலிவுடன் விளங்கும் திருமேனியுடையவர்; சந்திரனைச் சடையில் சூடியவர்; பிரமகபாலம் ஏந்திப் பலியேற்று உணவு கொண்டவர்; பழனூரைப் பதியாக உடையவர்; தெளிந்த சிவஞானிகளின் சித்தத்தில் விளங்குபவர். அப் பெருமான், திருவாலங்காட்டில் மேவும் செல்வர் ஆவார்.

778. அல்லும் பகலுமாய் நின்றார் தாமே
அந்தியுஞ் சந்தியு மானார் தாமே
சொல்லும் பொருளெலா மானார் தாமே
தோத்திரமுஞ் சாத்திரமு மானார் தாமே
பல்லுரைக்கும் பாவெலா மானார் தாமே
பழனை பதியா வுடையார் தாமே
செல்லும் நெறிகாட்ட வல்லார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

தெளிவுரை : சிவபெருமான், அன்பர்கள் வழிபடும் தன்மையில் பகலும் இரவும் ஆகிய சந்திப்பொழுதாகியவர்; இரவும் பகலும் ஆனவர்; சொல்லும் பொருளுமாகவும், தோத்திரமும் சாத்திரமுமாகவும் ஆனவர்; அருளிச் செயல்களை ஓதும் உரையாகவும் கீத இசையாகவும் விளங்குபவர்; பழையனூரைப் பதியாக உடையவர். செல்கதியாகிய முத்தி நெறியைக் காட்ட வல்லவர். அப்பெருமான், திருவாலங்காட்டில் மேவும் செல்வர் ஆவார்.

779. தொண்டாய்ப் பணிவார்க் கணியார் தாமே
தூநீ றணியுஞ் சுவண்டர் தாமே
தண்டா மரையானும் மாலுந் தேடத்
தழலுருவா யோங்கி நிமிர்ந்தார் தாமே
பண்டான இசைபாட நின்றார் தாமே
பழனை பதியா வுடையார் தாமே
திண்டோள்க ளெட்டு முடையார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

தெளிவுரை : சிவபெருமான், பணிந்தேத்தும் திருத்தொண்டர்களுக்கு நெருக்கமானவர்; தூய நீறணிந்த அழகர்; அயனும் மாலும் தேட நெருப்புப் பிழம்பாக ஓங்கி உயர்ந்தவர்; பண்ணின் இசைக்கு விரும்பும் தன்மையுடையவர்; பழையனூரைப் பதியாக உடையவர்; எட்டுத் தோள்களை உடையவர். அவர் திருவாலங்காட்டில் மேவும் செல்வர் ஆவார்.

780. மையாருங் கண்ட மிடற்றார் தாமே
மயானத்தி லாடல் மகிழ்ந்தார் தாமே
ஐயாறும் ஆரூரும் ஆனைக் காவும்
அம்பலமுங் கோயிலாக் கொண்டார் தாமே
பையா டரவ மசைத்தார் தாமே
பழனை பதியா வுடையார் தாமே
செய்யாள் வழிபட நின்றார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

தெளிவுரை : சிவபெருமான், கரிய கண்டம் உடையவர்; மயானத்தில் ஆடல் புரிபவர்; திருவையாறு, திருவாரூர், திருவானைக்கா, தில்லை அம்பலம் ஆகிய தலங்களில் மேவுபவர்; பாம்பைக் கையில் ஏந்தி ஆட்டுபவர்; பழையனூரைப் பதியாக உடையவர்; திருமகள் பூசித்து வழிபட விளங்கி அருள் புரிந்தவர். அப் பெருமான் திருவாலங்காட்டில் மேவும் செல்வர் ஆவார்.

781. விண்முழுதும் மண்முழுது மானார் தாமே
மிக்கோர்க ளேத்துங் குணத்தார் தாமே
கண்விழியாற் காமனையுங் காய்ந்தார் தாமே
காலங்க ளூழி கடந்தார் தாமே
பண்ணியலும் பாட லுகப்பார் தாமே
பழனை பதியா வுடையார் தாமே
திண்மழுவாள் ஏந்து கரத்தார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

தெளிவுரை : சிவபெருமான், விண்ணுலகமும் மண்ணுலகமும் ஆனவர்; ஞானிகளால் ஏத்தப்படுபவர்; மன்மதனை எரித்தவர்; ஊழிக் காலங்களைக் கடந்தவர்; பண்ணிசை விளங்கும் பாடலை உகப்பவர்; பழையனூரைப் பதியாகக் கொண்டவர்; உறுதியான மழுப்படை ஏந்தும் கரம் உடையவர். அவர் திருவாலங்காட்டில் மேவும் செல்வர் ஆவார்.

782. காரார் கடல்நஞ்சை யுண்டார் தாமே
கயிலை மலையை உடையார் தாமே
ஊரார் கம்ப முகந்தார் தாமே
ஒற்றியூர் பற்றி யிருந்தார் தாமே
பாரார் புகழப் படுவார் தாமே
பழனை பதியா வுடையார் தாமே
தீராத வல்வினைநோய் தீர்ப்பார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

தெளிவுரை : சிவபெருமான், கருமை வண்ணம் கொண்ட கடல் நஞ்சை உண்டவர்; கயிலை மலையை உடையவர்; தனது ஊர் எனத் திருக்கச்சியை உகந்து மேவிய ஏகம்பர்; திருவொற்றியூரில் உறைபவர்; உலகத்தினரால் புகழ்ந்து ஏத்தப்படுபவர்; பழையனூரைப் பதியாக உடையவர்; தீராத கொடிய வினையைத் தீர்ப்பவர். அவர், திருவாலங்காட்டில் மேவும் செல்வர் ஆவார்.

783. மாலைப் பிறைசென்னி வைத்தார் தாமே
வண்கயிலை மாமலையை வந்தி யாத
நீலக் கடல்சூ ழிலங்கைக் கோனை
நெரிய விரலா லடர்த்தார் தாமே
பாலொத்த மேனி நிறத்தார் தாமே
பழனை பதியா வுடையார் தாமே
சீலத்தா ரேத்துந் திறத்தார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

தெளிவுரை : சிவபெருமான், மாலையில் தோன்றும் பிறைச் சந்திரனைச் சடையில் தரித்தவர்; கயிலை மலையை வணங்கி ஏத்தாத இராவணனை விரலால் அடர்த்து நெரித்தவர்; பால் போன்ற திருநீற்று மேனியராகத் திகழ்பவர்; பழையனூரில் வீற்றிருப்பவர்; ஆசார சீலமுடைய அருளாளர்களால் பரவி ஏத்தப்படுபவர். அப் பெருமான், திருவாலங் காட்டில் உறையும் செல்வர் ஆவார்.

திருச்சிற்றம்பலம்

79. திருத்தலையாலங்காடு (அருள்மிகு நர்த்தனபுரீஸ்வரர் திருக்கோயில், திருத்தலையாலங்காடு, திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

784. தொண்டர்க்குத் தூநெறியாய் நின்றான் தன்னைச்
சூழ்நரகில் வீழாமே காப்பான் தன்னை
அண்டத்துக் கப்பாலைக் கப்பா லானை
ஆதிரைநா ளாதரித்த அம்மான் தன்னை
முண்டத்தின் முளைத்தெழுந்த தீயா னானை
மூவுருவத் தோருருவாய் முதலாய் நின்ற
தண்டத்திற் றலையாலங் காடன் தன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே.

தெளிவுரை : சிவபெருமான், தனது தொண்டர்களுக்கு நன்மை தரும் நெறியாக விளங்குபவர்; அவர்களை நரகிடை வீழாமே காப்பவர்; அண்டங்களைக் கடந்தவர்; திருவாதிரை நாளுக்கு உரியவர்; நெற்றியில் மேவிய கண்ணிலிருந்து எழும்பும் தீயாகியவர்; மும்மூர்த்திகளின் தலைவராகியவர்; தலையாலங்காட்டில் ஒளிர்பவர். அப் பெருமானைச் சார்ந்து மேவித் தொழுது ஏத்தாது காலத்தைப் போக்கி இருந்தேனே.

785. அக்கிருந்த அரையானை அம்மான் தன்னை
அவுணர்புர மொருநாடியில் எரிசெய் தானைக்
கொக்கிருந்த மகுடத்தெங் கூத்தன் தன்னைக்
குண்டலஞ்சேர் காதானைக் குழைவார் சிந்தை
புக்கிருந்து போகாத புனிதன் தன்னைப்
புண்ணியனை யெண்ண ருஞ்சீர்ப் போகமெல்லாந்
தக்கிருந்த தலையாலங் காடன் தன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே.

தெளிவுரை : சிவபெருமான், கங்குமணியை அரையில் கட்டியவர்; முப்புரம் எரித்தவர்; கொக்கிறகு சூடியவர்; நடனம் புரிபவர்; காதில் குண்டலம் அணிந்தவர்; அன்பிற் குழையும் பக்தர்களின் சிந்தையில் ஒளிர்பவர்; புண்ணியமாக விளங்குபவர். அப் பெருமான், தலையாலங்காட்டில் வீற்றிருக்க அவரைச் சார்ந்து தொழுது ஏத்தாது காலத்தைப் போக்கினேனே.

786. மெய்த்தவத்தை வேதத்தை வேத வித்தை
விளங்கிளமா மதிசூடும் விகிர்தன் தன்னை
எய்த்தவமே உழிதந்த ஏழை யேனை
யிடர்க்கடலில் வீழாமே யே வாங்கிப்
பொய்த்தவத்தா ரறியாத நெறிநின் றானைப்
புனல்கரந்திட் டுமையொடொரு பாகம் நின்ற
தத்துவனைத் தலையாலங் காடன் தன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே.

தெளிவுரை : ஈசன், வேதவித்தாகவும், வேதமாகவும், மெய்த் தவமாகவும் விளங்கிச் சந்திரனைச் சூடி மேவும் விகிர்தர். என்னை இடராகிய பிறவிக் கடலில் வீழாது காத்தவர்; பொய்த்தன்மையுடையோரால் அறியப்படாதவர்; கங்கையைச் சடையில் மறைத்து உமாதேவியாரைத் திருமேனியில் பாகமாகக் கொண்டவர். தலையாலங்காட்டில் மேவும் அப்பெருமானைச் சார்ந்திருந்து தொழுது ஏத்தாது காலத்தைப் போக்கினேனே.

787. சிவனாகித் திசைமுகனாய்த் திருமா லாகிச்
செழுஞ்சுடராய்த் தீயாகி நீரு மாகிப்
புவனாகிப் புவனங்க ளனைத்து மாகிப்
பொன்னாகி மணியாகி முத்து மாகிப்
பவனாகிப் பவளனங்க ளனைத்து மாகிப்
பசுவேறித் திரிவானோர் பவனாய் நின்ற
தவனாய தலையாலங் காடன் தன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே.

தெளிவுரை : சிவன், நான்முகன், திருமால், செழுஞ்சுடர்களாகிய சூரிய சந்திரர், அக்கினி, நீர், ஆகாயம், உலகங்கள் என அனைத்தும் ஆகிப் பொன், மணி, முத்து எனவாகிய ஈசன், எல்லா இடங்களிலும் வாசம் செய்பவராகி, இடப வாகனத்தில் திரிபவர். அவர் தலையாலங்காட்டில் வீற்றிருக்க, அவரைச் சார்ந்து தொழுது ஏத்தாது காலத்தைப் போக்கினேனே.

788. கங்கையெனுங் கடும்புனலைக் கரந்தான் தன்னைத்
காமருபூதம் பொழிற்கச்சிக் கம்பன் தன்னை
அங்கையினில் மான்மறியொன் றேந்தி னானை
ஐயாறு மேயானை ஆரூ ரானைப்
பங்கமிலா அடியார்க்குப் பரிந்தான் தன்னைப்
பரிதிநிய மத்தானைப் பாசூ ரானைச்
சங்கரனைத் தலையாலங் காடன் தன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே.

தெளிவுரை : சிவபெருமான், கங்கையைச் சடை முடியில் கரந்தவர்; விரும்பத்தக்க பூம்பொழில் திகழும் கச்சியில் மேவும் ஏகம்பர்; அழகிய கையில் மானை ஏந்தியவர்; திருவையாறு, திருவாரூர் ஆகிய பதிகளில் உறைபவர்; அடியவர்களுக்கு குறைவில்லாது அருள் புரிபவர்; பரிதி நியமம், திருப்பாசூர் ஆகிய தலங்களில் மேவும் சங்கரர். அப்பெருமான், தலையாலங் காட்டில் மேவ, அடியேன் சார்ந்து தொழுது ஏத்தாது காலத்தைப் போக்கினேனே !

789. விடம்திகழும் அரவரைமேல் வீக்கி னானை
விண்ணவர்க்கு மெண்ணரிய அளவி னானை
அடைந்தவரை அமருலகம் ஆள்விப் பானை
அம்பொன்னைக் கம்பமா களிறட் டானை
மடந்தையொரு பாகனை மகுடந் தன்மேல்
வார்புனலும் வாளரவும் மதியும் வைத்த
தடங்கடலைத் தலையாலங் காடன் தன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே.

தெளிவுரை : சிவபெருமான், அரவத்தை அரையில் கட்டியவர்; தேவர்களுக்கு அறிவரியவர்; தனது அடியவர்களுக்கு உயர்ந்த தேவர்கள் உலகத்தை ஆளுமாறு அருள் புரிபவர்; பொன் போன்ற பெருமையுடையவர்; யானையின் தோலை உரித்து அழித்தவர்; உமைபாகர்; கங்கை, சந்திரன், நாகம் ஆகியவற்றைச் சடையில் திகழ வைத்தவர்; விரிந்த கடல் போன்றவர். அப்பெருமான், தலையாலங்காட்டில் வீற்றிருக்க அடியேன் சார்ந்து தொழுது ஏத்தித் துதியாது காலத்தைப் போக்கினேனே !

790. விடையேறிக் கடைதோறும் பலிகொள் வானை
வீரட்டம் மேயானை வெண்ணீற் றானை
முடைநாறு முதுகாட்டி லாட லானை
முன்னானைப் பின்னானை யந்நா ளானை
உடையாடை யுரிதோலே உகந்தான் தன்னை
உமையிருந்த பாகத்து ளொருவன் தன்னைச்
சடையானைத் தலையாலங் காடன் தன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே.

தெளிவுரை : சிவபெருமான், இடப வாகனத்தில் ஏறி மனைதோறும் சென்று பலியேற்பவர்; அட்ட வீரட்டானங்களில் உறைபவர். திருவெண்ணீறு தரித்தவர்; மயானத்தில் ஆடுபவர்; இறந்தகாலம், பிற்காலம், நிகழ்காலம் என முக்காலமும் ஆனவர்; புலித்தோலை உடுத்தியவர்; உமைபாகர்; சடையழகுடையவர். அப் பெருமான் தலையாலங்காட்டில் வீற்றிருக்க அடியேன் சார்ந்து தொழுது ஏத்தாது காலத்தைப் போக்கினேனே !

791. கரும்பிருந்த கட்டிதனைக் கனியைத் தேனைக்
கன்றாப்பின் நடுதறியைக் காறை யானை
இரும்பமர்ந்த மூவிலைவேல் ஏந்தி னானை
யென்னானைத் தென்னானைக் காவான் தன்னைச்
சுரும்பமரும் மலர்க்கொன்றை சூடி னானைத்
தூயானைத் தாயாகி உலகுக் கெல்லாந்
தரும்பொருளைத் தலையாலங் காடன் தன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே.

தெளிவுரை : சிவபெருமான், கரும்பின் கட்டியாகவும், கனியாகவும், தேனாகவும், கன்றாப்பூரில் மேவும் நடுதறிநாதராகவும், காறை என்னும் தலத்தில் உள்ளவராகவும், சூலம் ஏந்தியும் திகழ்பவர்; என்னை உடையவர்; ஆனைக்காவில் விளங்குபவர்; கொன்றை சூடிய தூயராகவும், உலகுக்கெல்லாம் தாயாகவும் திகழ்பவர்; அப்பெருமான், தலையாலங்காட்டில் வீற்றிருக்க அடியேன் அவரைத் தொழுது ஏத்தாது, காலத்தைப் போக்கினனே !

792. பண்டளவு நரம்போசைப் பயனைப் பாலைப்
படுப்பனைக் கடுவெளியைக் கனலைக் காற்றைக்
கண்டளவிற் களிகூர்வார்க் கெளியான் தன்னைக்
காரணனை நாரணனைக் கமலத் தோனை
எம்மானைக் கைம்மாவி னுரிவை பேணுந்
தண்டரனைத் தலையாலங் காடன் தன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே.

தெளிவுரை : ஈசன், பண்ணிசையாகவும் இசையின் பயனாகவும் பாலின் பயனாகவும் விளங்குபவர்; ஆகாயம், நெருப்பு, காற்று என ஆகுபவர்; கண்டு மகிழும் அன்பர்க்கு எளியவர்; யாவற்றுக்கும் காரணமாகவும், மால் அயனாகவும் விளங்கி, என் இதயத் தாமரையாகிய நெஞ்சுள் நிற்பவர்; யானையின் தோலை உரித்தவர். அப் பெருமான் தலையாலங்காடு என்னும் தலத்தில் வீற்றிருக்க, அவரைச் சார்ந்து தொழுது ஏத்தாது காலத்தைப் போக்கினேனே !

793. கைத்தலங்க ளிருபதுடை அரக்கர் கோமான்
கயிலைமலை அதுதன்னைக் கருதா தோடி
முத்திலங்கு முடிதுளங்க வளைக ளெற்றி
முடுதுதலுந் திருவிரலொன் றவன்மேல் வைப்பப்
பத்திலங்கு வாயாலும் பாடல் கேட்டுப்
பரிந்தவனுக் கிராணவனென் றீந்த நாமத்
தத்துவனைத் தலையாலங் காடன் தன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே.

தெளிவுரை : சிவபெருமான், இருபது கரங்களையுடைய இராவணன் கயிலையை எடுக்கத் தனது திருவிரலால் ஊன்றி அடர்த்தவர்; அவன் இசை கேட்டுப் பரிந்து அருள் புரிந்தவர்; இராவணன் என்னும் பெயர் விளங்குமாறு செய்தவர்; அப் பெருமான் தலையாலங் காட்டில் வீற்றிருக்க அடியேன் சார்ந்து தொழுது ஏத்தாது நெடுங்காலம் போக்கினேனே.

திருச்சிற்றம்பலம்

80. திருமாற்பேறு (அருள்மிகு மணிகண்டீஸ்வரர் திருக்கோயில், திருமால்பூர், வேலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

794. பாரானை பாரினது பயனா னானைப்
படைப்பாகிப் பல்லுயிர்க்கும் பரிவோன் தன்னை
ஆராத இன்னமுதை அடியார் தங்கட்
கனைத்துலகு மானானை அமரர் கோனைக்
காராருங் கண்டனைக் கயிலை வேந்தைக்
கருதுவார் மனத்தானைக் காலாற் செற்ற
சீரானைச் செல்வனைத் திருமாற் பேற்றெஞ்
செம்பவளக் குன்றினைச் சென்றடைந்தேன்நானே.

தெளிவுரை : ஈசன், பூவுலகமானவர்; உலகில் விளங்கும் பயனாகியவர்; படைப்பும் தானேயாகி எல்லா உயிர்களையும் பரிவுடன் காப்பவர்; இனிய அமுதமாகி மகிழ்விப்பவர்; அடியவர்களுக்கு எல்லாமே தானேயாகியவர்; தேவர்களின் தலைவர்; கரிய கண்டத்தையுடையவர்; கயிலையின் அதிபதியாகியவர், தன்னைக் கருதுபவர்களின் மனத்துள் விளங்குபவர்; காலனை அழித்தவர்; எல்லாச் சிறப்பும் உடைய செல்வர். திருமாற்பேற்றில் பவளக் குன்றுபோல் மேவும் அப்பரமனை நான் அடைந்தேன். இது அடைவதற்கு அரியவராகிய ஈசன்பால் அடையப் புரியும் கருணையை எண்ணி உவந்து ஏத்துவதாயிற்று.

795. விளைக்கின்ற நீராகி வித்து மாகி
விண்ணொடுமண் ணாகி விளங்கு செம்பொன்
துளைக்கின்ற துளையாகிச் சோதி யாகித்
தூண்டரிய சுடராகித் துளக்கில் வான்மேல்
முளைக்கின்ற கதிர்மதியும் அரவு மொன்றி
முழங்கொளிநீர்க் கங்கையொடு மூவா தென்றுந்
திளைக்கின்ற சடையானைத் திருமாற் பேற்றெஞ்
செம்பவளக் குன்றினைச் சென்றடைந்தேன்நானே.

தெளிவுரை : சிவபெருமான், விளையும் வித்தாகவும் விளைவிக்கும் நீராகவும், விண்ணும் மண்ணுமாகவும், செம்பொற் சோதியாகவும் சுடராகவும், நடுக்கம் அற்ற கதிரவனாகவும் விளங்குபவர்; சந்திரனும், பாம்பும், கங்கையும் சடையில் தரித்தவர். திருமாற்பேற்றில் செம்பவளக்குன்றுபோல விளங்கும் அப்பரமனை நான் அடைந்தேன்.

796. மலைமகள்தங் கோனவனை மாநீர் முத்தை
மரகதத்தை மாமணியை மல்கு செல்வக்
கலைநிலவு கையானைக் கம்பன் தன்னைக்
காண்பினிய செழுஞ்சுடரைக் கனகக் குன்றை
விலைபெரிய வெண்ணீற்று மேனி யானை
மெய்யடியார் வேண்டுவதே வேண்டு வானைச்
சிலைநிலவு கரத்தானைத் திருமாற் பேற்றெஞ்
செம்பவளக் குன்றினைச் சென்றடைந்தேன் நானே.

தெளிவுரை : மலைமகள் தலைவனாகவும், நீராகவும் முத்து, மரகதம், மாணிக்கம் எனவாகவும், மானையேந்திய கையினராகவும் விளங்கும் சிவபெருமான், கச்சியில் மேவும் ஏகம்பர்; இனிய சுடர்; கனகக் குன்று; மதிப்பின் மிக்க திருவெண்ணீறு தரித்த மேனியுடையவர்; மெய்யடியார் வேண்டும் தன்மையில் உடன் மேவி வேண்டுபவராய்ப் பொருந்தி விளங்கி அருள் புரிபவர்; வில்லேந்திய கரத்தினர். திருமாற் பேற்றில் செம்பவளக் குன்றாக விளங்கும் அப் பெருமானை நான் சென்றடைந்தேன்.

797. உற்றானை யுடல்தனக்கோர் உயிரா னானை
ஓங்காரத் தொருவனையங் குமையோர் பாகம்
பெற்றானைப் பிஞ்ஞகனைப் பிறவா தானைப்
பெரியனவும் அரியனவும் எல்லாம் முன்னே
கற்றானைக் கற்பனவுந் தானே யாய
கச்சியே கம்பனைக் காலன் வீழச்
செற்றானைத் திகழொளியைத் திருமாற் பேற்றெஞ்
செம்பவளக் குன்றினைச் சென்றடைந்தேன்நானே.

தெளிவுரை : சிவபெருமான், உயிர்க்கு உற்ற உறவாகியவர்; உடலுக்கு உயிராகியவர்; ஓங்காரத்தில் ஒளிரும் ஒப்பற்றவர்; உமைபாகர்; பிஞ்ஞகர்; பிறப்பின் தன்மையைக் கடந்தவர்; பெரியானாகவும் யாவர்க்கும் அரியோனாகவும் விளங்குபவர்; கற்று அறியப்படும் பொருள் யாவும் தானேயாய்த் திகழ்பவர்; கச்சியில் மேவும் திருவேகம்பர்; காலனை வீழ்த்தியவர். திருமாற்பேற்றில் மேவும் பவளக் குன்று எனத் திகழும் அப்பரமனை நான் சென்றடைந்தேன்.

798. நீறாகி நீறுமிழும் நெருப்பு மாகி
நினைவாகி நினைவினிய மலையான் மங்கை
கூறாகிக் கூற்றாகிக் கோளு மாகிக்
குணமாகிக் குறையாத உவகைக் கண்ணீர்
ஆறாத ஆனந்தத் தடியார் செய்த
அனாசாரம் பொறுத்தருளி அவர்மே லென்றுஞ்
சீறாத பெருமானைத் திருமாற் பேற்றெஞ்
செம்பவளக் குன்றினைச் சென்றடைந்தேன்நானே.

தெளிவுரை : சிவபெருமான் எரிந்து விழுமியதாய் விஞ்சும் நீறு (சாம்பல்) ஆகியவர்; நீற்றை நல்கும் நெருப்பு ஆகியவர்; மனத்தில் தோன்றும் நினைவு ஆகியவர்; உமா தேவியாரைத் திருமேனியில் ஒரு கூறாக உடையவர்; உயிரைக் கூறுபடுத்தும் கூற்றுவன் ஆகியவர்; கோள்களாகியவர்; குறைவற்ற அடியவர்கள் பக்திப் பெருக்கினால் ஆனந்தக் கண்ணீர் உகுத்து மேவ, அத்தகையோர் செய்யும் அனாசாரமாகிய குறைகளைப் பொறுப்பவர்; அவர்களிடம் எக்காலத்திலும் சினவாத தன்மையுடையவர். திருமாற்பேற்றில் பவளக்குன்றென மேவும் அப் பெருமான் பால் நான் சென்ற அடைந்தேன்.

799. மருவினிய மறைப்பொருளை மறைக்காட் டானை
மறப்பிலியை மதியேந்தி சடையான் தன்னை
உருநிலவு மொண்சுடரை உம்ப ரானை
உரைப்பினிய தவத்தானை உலகின் வித்தைக்
கருநிலவு கண்டனைக் காளத்தியைக்
கருதுவார் மனத்தானைக்கல்வி தன்னைச்
செருநிலவு படையானைத் திருமாற் பேற்றெஞ்
செம்பவளக் குன்றினைச் சென்றடைந்தேன்நானே.

தெளிவுரை : சிவபெருமான், வேதப் பொருளானவர்; திருமறைக்காட்டில் விளங்குபவர்; யாவற்றையும் இயல்பாய் உணரும் தன்மையுடையவராகி மறப்பின்மை கொண்டவர்; சந்திரனைச் சடையில் சூடியவர்; ஒண் சுடராகிய சூரியனாய் விளங்குபவர்; தேவதேவர்; இனிய தவமானவர்; உலகின் வித்தானவர்; நீலகண்டத்தை உடையவர்; திருக்காளத்தியில் மேவுபவர்; தன்னை ஏத்தி வழிபடுபவர்களுடைய மனத்தில் திகழ்பவர்; உறுதிப் பொருளை நவிலும் ஞான நூலாய் விளங்குபவர்; சூலமும் மழுவும் படையாக உடையவர். திருமாற் பேற்றில் பவளக் குன்று என விளங்கும் அப் பெருமானை நான் அடைந்தேன்.

800. பிறப்பானைப் பிறவாத பெருமை யானைப்
பெரியானை அரியானைப் பெண்ஆண் ஆய
நிறத்தானை நின்மலனை நினையா தாரை
நினையானை நினைவோரை நினைவோன் தன்னை
அறத்தானை அறவோனை ஐயன் தன்னை
அண்ணல்தனை நண்ணரிய அமர ரேத்துந்
திறத்தானைத் திகழொளியைத் திருமாற் பேற்றெஞ்
செம்பவளக் குன்றினைச் சென்றடைந்தேன்நானே.

தெளிவுரை : சிவபெருமான், எல்லாப் பொருள்களுக்கும் தோற்றமாகத் திகழ்பவர்; பிறவாத பெருமையுடையவர்; பெரியேனாகவும், அரியோனாகவும், பெண்ணும் ஆணும் ஆகும் வண்ணமாகவும், நின்மலனாகவும், தன்னை நினைத்தவர்பால் பதியாதவராகவும், நினைந்து ஏத்தும் அடியவரை நினைபவராகவும் உள்ளவர்; அறத்தின் பெருநிலையாகவும் அறத்தின் வழி நிற்கும் நீதியாகவும், தலைவனாகவும், அழகனாகவும், தேவர்களால் ஏத்தி வணங்கப்பெறும் திகழொளியாகவும் விளங்குபவர். திருமாற் பேற்றில் மேவும் அப்பெருமான், பவளக்குன்று என மேவி விளங்க நான் அடைந்தனன்.

801. வானகத்தில் வளர்முகிலை மதியந் தன்னை
வணங்குவார் மனத்தானை வடிவார் பொன்னை
ஊனகத்தில் உறுதுணையை உலவா தானை
ஒற்றியூர் உத்தமனை ஊழிக் கன்றைக்
கானகத்துக் கருங்களிற்றைக் காளத் தியைக்
கருதுவார் கருத்தானைக் கருவை மூலத்
தேனகத்தி லின்சுவையைத் திருமாற் பேற்றெஞ்
செம்பவளக் குன்றினைச் சென்றடைந்தேன்நானே.

தெளிவுரை : சிவபெருமான், மேகமாவும், மதியாகவும் உள்ளவர்; தன்னை ஏத்தி வணங்குபவரின் மனத்தில் உள்ளவர்; உடலுக்கு உறுதுணையானவர்; திருவொற்றியூரில் விளங்குபவர்; உத்தமர்; ஊழிக் காலத்தில் நிலைபெற்று மேவுபவர்; பெருங்களிறு போன்ற வல்லமையுடையவர்; திருக்காளத்தியில் மேவுபவர்; பக்தர்களின் கருத்தில் உள்ளவர்; யாவற்றுக்கும் கருப் பொருளானவர்; தேனின் சுவையானவர். திருமாற் பேற்றில் மேவும் அப்பெருமான் செம்பவளக் குன்றுபோலத் திகழ நான் சென்றடைந்தேன்.

802. முற்றாத முழுமுதலை முளையை மொட்டை
முழுமலரின் மூர்த்தியை முனியா தென்றும்
பற்றாகிப் பல்லுயிர்க்கும் பரிவோன் தன்னைப்
பராபரனைப் பரஞ்சுடரைப் பரிவோர் நெஞ்சில்
உற்றானை உயர்கருப்புச் சிலையோன் நீறாய்
ஒள்ளழல்வாய் வேவவுறு நோக்கத் தானைச்
செற்றானைத் திரிபுரங்கள் திருமாற் பேற்றெஞ்
செம்பவளக் குன்றினைச் சென்றடைந்தேன்நானே.

தெளிவுரை : சிவபெருமான், இளமை திகழும் முழுமுதலானவர்; முளையாகவும், மொட்டாகவும், மலராகவும் விளங்குபவர்; எல்லா உயிர்க்கும் பற்றாகியும், பரிவாகியும் விளங்குபவர்; மன்மதனை எரித்தவர்; முப்புரங்களை எரித்தவர். திருமாற் பேற்றில் பவளக் குன்றென ஒளிரும் அப்பெருமானை நான் அடைந்தேன்.

803. விரித்தானை நான்மறையோ டங்க மாறும்
வெற்பெடுத்த இராவணனை விரலா லூன்றி
நெரித்தானை நின்மலனை யம்மான் தன்னை
நிலாநிலவு செஞ்சடைமேல் நிறைநீர்க் கங்கை
தரித்தானைச் சங்கரனைச் சம்பு தன்னைத்
தரியலர்கள் புரமூன்றுந் தழல்வாய் வேவச்
சிரித்தானைத் திகழொளியைத் திருமாற் பேற்றெஞ்
செம்பவளக் குன்றினைச் சென்றடைந்தேன்நானே.

தெளிவுரை : சிவபெருமான், வேதமும் அங்கமும் ஓதியவர்; வெற்பெடுத்த இராவணனை விரலால் ஊன்றி நெரித்தவர்; சந்திரனையும் கங்கையையும் சடையில் தரித்தவர்; சுயம்பானவர்; முப்புரங்களை முறுவல் கொண்டு எரித்துச் சாம்பலாக்கியவர். திருமாற்பேற்றில் பவளக்குன்றென விளங்கும் அப்பெருமானை நான் அடைந்தேனே.

திருச்சிற்றம்பலம்

81. திருக்கோடிகா (அருள்மிகு கோடீஸ்வரர் திருக்கோயில், திருக்கோடிக்காவல், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

804. கண்டலஞ்சேர் நெற்றியிளங் காளை கண்டாய்
கல்மதில்சூழ் கந்தமா தனத்தான் கண்டாய்
மண்டலஞ்சேர் மயக்கறுக்கும் மருந்து கண்டாய்
மதிற்கச்சி யேகம்பம் மேயான் கண்டாய்
விண்டலஞ்சேர் விளக்கொளியாய் நின்றான் கண்டாய்
மீயச்சூர் பிரியாத விகிர்தன் கண்டாய்
கொண்டலஞ்சேர் கண்டத்தெங் கூத்தன் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே.

தெளிவுரை : சிவபெருமான், நெற்றியில் கண்உடையவர்; இளங்காளை போன்றவர்; கந்தமாதனத்தில் உள்ளவர். மயல் தீர்க்கும் ஞான மருந்தானவர்; திருக்கச்சியில் மேவும் ஏகம்பர்; சூரியனாக விளங்குபவர்; மீயச்சூரில் விளங்குபவர்; மேகம் போன்ற கரிய கண்டம் உடைய கூத்தன். அவர் கோடிகாவில் உறையும் அழகர் ஆவார்.

805. வண்டாடு பூங்குழலாள் பாகன் கண்டாய்
மறைக்காட் டுறையு மணாளன் கண்டாய்
பண்டாடு பழவினைநோய் தீர்ப்பான் கண்டாய்
பரலோக நெறிகாட்டும் பரமன் கண்டாய்
செண்டாடி அவுணர்புரஞ் செற்றான் கண்டாய்
திருவாரூர்த் திருமூலட் டானன் கண்டாய்
கொண்டாடும் அடியவர்தம் மனத்தான் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே.

தெளிவுரை : சிவபெருமான் உமை பாகர்; மறைக்காட்டில் உறையும் மணாளர்; வினை தீர்த்துப் பரலோக நெறி காட்டும் பரமன்; முப்புரங்களை எரித்தவர்; திருவாரூர் திருமூலட்டானத்தில் விளங்குபவர்; பக்தர்களின் மனத்தில் மேவுபவர். அவர் கோடிகாவில் அமர்ந்துறையும் குழகர்.

806. அலையார்ந்த புனற்கங்கைச் சடையான் கண்டாய்
அடியார்கட் காரமுத மானான் கண்டாய்
மலையார்ந்த மடமங்கை பங்கன் கண்டாய்
வானோர்கள் முடிக்கணியாய் நின்றான் கண்டாய்
இலையார்ந்த திரிசூலப் படையான் கண்டாய்
ஏழுலகு மாய்நின்ற எந்தை கண்டாய்
கொலையார்ந்த குஞ்சரத்தோல் போர்த்தான் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே.

தெளிவுரை : சிவபெருமான், கங்கையைச் சடையில் தரித்தவர்; அடியவர்களுக்கு அமுதம் ஆனவர்;  உமைபாகர்; வானோர்களால் அணியென ஏத்தப்படுபவர்; ஏழுலகும் ஆகியவராய்ச் சூலப்படையேந்தியவர்; யானையின் தோலை உரித்துப் போர்த்தியவர். அவர் கோடிகாவில் மேவும் குழகர் ஆவார்.

807. மற்றாருந் தன்னொப்பா ரில்லான் கண்டாய்
மயிலாடு துறையிடமா மகிழ்ந்தான் கண்டாய்
புற்றா டரவணிந்த புனிதன் கண்டாய்
பூந்துருத்திப் பொய்யிலியாய் நின்றான் கண்டாய்
அற்றார்கட் கற்றானாய் நின்றான் கண்டாய்
ஐயா றகலாத ஐயன் கண்டாய்
குற்றாலத் தமர்ந்துறையுங் கூத்தன் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே.

தெளிவுரை : ஈசன், தன்னொப்பில்லாதவர்; மயிலாடுதுறையில் மேவியவர்; அரவத்தை ஆபரணமாக உடையவர்; பூந்துருத்தியில் மேவும் பொய்யிலியப்பர்; பற்றற்றவர்களுக்கு இல்லை என்னாது முன்னின்று அருள்பவர்; திருவையாறு, குற்றாலம் ஆகிய தலங்களில் விளங்குபவர். அவர் கோடிகாவில் மேவும் குழகர் ஆவார்.

808. வாராந்த வனமுலையாள் பங்கன் கண்டாய்
மாற்பேறு காப்பா மகிழந்தான் கண்டாய்
போரார்ந்த மால்விடையொன் றூர்வான் கண்டாய்
புகலூரை அகலாத புனிதன் கண்டாய்
நீரார்ந்த நிமிர்சடையொன் றுடையான் கண்டாய்
நினைப்பார்தம் வினைப்பாரம் இழிப்பான் கண்டாய்
கூரார்ந்த மூவிலைவேற் படையான் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே.

தெளிவுரை : சிவபெருமான், உமைபாகர்; திருமாற்பேற்றில் மகிழ்பவர்; இடப வாகனர்; திருப்புகலூரில் விளங்கும் புனிதர்; சடையில் கங்கையைத் தரித்தவர்; நினைந்தேத்தும் அடியவர்களின் வினையைத் தீர்ப்பவர்; சூலப் படையுடையவர். அவர் கோடிகாவில் மேவும் குழகர் ஆவார்.

809. கடிமலிந்த மலர்க்கொன்றைச் சடையான் கண்டாய்
கண்ணப்ப விண்ணப்புக் கொடுத்தான் கண்டாய்
படிமலிந்த பல்பிறவி யறுப்பான் கண்டாய்
பற்றற்றார் பற்றவனாய் நின்றான் கண்டாய்
அடிமலிந்த சிலம்பலம்பத் திரிவான் கண்டாய்
அமரர்கணந் தொழுதேத்தும் அம்மான் கண்டாய்
கொடிமலிந்த மதில்தில்லைக் கூத்தன் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே.

தெளிவுரை : சிவபெருமான், கொன்றை மலர் சூடிய சடையுடையவர்; கண்ணை இடந்து அப்பிய கண்ணப்ப நாயனாருக்கு உயர்ந்த இடத்தை அருளியவர்; உலகில் தோன்றும் பிறவித் தளையை அறுப்பவர்; உலகப் பற்றினை விட்டவர்களைப் பற்றி விளங்குபவர்; திருவடியில் மேவும் சிலம்பின் ஒலி ஆர்க்கத் திரிபவர்; தேவர்கள் தொழுது ஏத்தும் தலைவர்; தில்லையில் திருக்கூத்து புரிபவர். அவர் கோடிகாவில் மேவும் குழகர் ஆவார்.

810. உழையாடு கரதலமொன் றுடையான் கண்டாய்
ஒற்றியூ ரொற்றியா வுடையான் கண்டாய்
கழையாடு கழுக்குன்றம் அமர்ந்தான் கண்டாய்
காளத்திக் கற்பகமாய் நின்றான் கண்டாய்
இழையாடும் எண்புயத்த இறைவன் கண்டாய்
என்நெஞ்சத் துள்நீங்கா எம்மான் கண்டாய்
குழையாட நடமாடுங் கூத்தன் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே.

தெளிவுரை : ஈசன், கரத்தில் மானை ஏந்தியவர்; திருவொற்றியூர், திருக்கழுக்குன்றம், திருக்காளத்தி ஆகிய தலங்களில் மேவியவர்; மார்பில் முப்புரி நூல் திகழ எட்டுத் தோள்களுடன் விளங்குபவர்; என் நெஞ்சுள் நீங்காத தலைவர்; காதில் மேவும் குழையானது ஆடுமாறு திரு நடனம் புரிபவர். அவர் கோடிகா மேவும் குழகர் ஆவார்.

811. படமாடு பன்னகக்கச் சசைத்தான் கண்டாய்
பராய்த்துறையும் பாசூரும் மேயான் கண்டாய்
நடமாடி யேழுலகுந் திரிவான் கண்டாய்
நான்மறையின் பொருள்கண்டாய் நாதன் கண்டாய்
கடமாடு களிறுரித்த கண்டன் கண்டாய்
கயிலாயம் மேவி யிருந்தான் கண்டாய்
குடமாடி யிடமாகக் கொண்டான் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே.

தெளிவுரை : சிவபெருமான், நாகத்தை அரையில் கட்டியவர்; திருப்பராய்த்துறை, திருப்பாசூர் ஆகிய தலங்களில் மேவியவர்; ஏழுலகிலும் நடனம் ஆடித் திரிபவர்; நான்கு மறைகளின் பொருளாகவும் நாதராகவும் உள்ளவர்; யானையின் தோலை உரித்தவர்; கயிலையில் விளங்குபவர்; குடத்தை ஏந்தி ஒருவகைக் கூத்து ஆடிய  திருமாலைத் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டுள்ளவர்; அவர், கோடிக்காவில் மேவும் குழகர் ஆவார்.

திருச்சிற்றம்பலம்

82. திருச்சாயக்காடு (அருள்மிகு சாயாவனேஸ்வரர் திருக்கோயில், சாயாவனம், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

812. வானத் திளமதியும் பாம்புந் தம்மில்
வளர்சடைமேல் ஆதரிப்ப வைத்தார் போலும்
தேனைத் திளைத்துண்டு வண்டு பாடுந்
தில்லை நடமாடுந் தேவர் போலும்
ஞானத்தின் ஒண்சுடராய் நின்றார் போலும்
நன்மையுந் தீமையு மானார் போலும்
தேனொத் தடியார்க் கினியார் போலும்
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.

தெளிவுரை : சிவபெருமான், சந்திரனும் பாம்பும் சடைமுடியில் விளங்குமாறு வைத்தவர்; தில்லையில் நடனம் புரியும் தேவர்; ஞானச் சுடரானவர்; வினைகளுக்கேற்ப நன்மையும் தீமையும் உயிர்களுக்கு வகுப்பவர்; அடியவர் பெருமக்களுக்குத் தேன் போன்று இனிமையானவர். அவர், திருச்சாய்க்காட்டில் இனிது உறையும் செல்வர் ஆவார்.

813. விண்ணோர் பரவநஞ் சுண்டார் போலும்
வியன்துருத்தி வேள்விக் குடியார் போலும்
அண்ணா மலையுறையும் அண்ணல் போலும்
அதியரைய மங்கை யமர்ந்தார் போலும்
பண்ணார் களிவண்டு பாடி யாடும்
பராய்த்துறையுள் மேய பரமர் போலும்
திண்ணார் புகார்முத் தலைக்குந் தெண்ணீர்த்
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.

தெளிவுரை : தேவர்களின் வேண்டுகோளுக்கு இரங்கி நஞ்சினை உண்ட சிவபெருமான், திருத்துருத்தி, வேள்விக்குடி, திருவண்ணாமலை, அதியரைய மங்கை, திருப்பராய்த்துறை, காவிரிப்பூம் பட்டினத்துப் பல்லவனீச்சரம் (புகார்) ஆகிய தலங்களில் மேவியவர். அவர் திருச்சாய்க்காட்டில் இனிது உறையும் செல்வர் ஆவார்.

814. கானிரிய வேழ முரித்தார் போலும்
காவிரிப்பூம் பட்டினத் துள்ளார் போலும்
வானிரிய வருபுரமூன் றெரித்தார் போலும்
வடகயிலை மலையதுதம் மிருக்கை போலும்
ஊனிரியத் தலைகலனா வுடையார் போலும்
உயர்தோணி புரத்துறையும் ஒருவர் போலும்
தேனிரிய மீன்பாயுந் தெண்ணீர்ப் பொய்கைத்
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.

தெளிவுரை : சிவபெருமான், யானையின் தோலை உரித்தவர்; காவிரிப்பூம் பட்டினத்தில் உள்ளவர்; புரங்கள் மூன்றை எரித்தவர்; கபாலத்தை ஏந்தியவர்; கயிலை மலையில் வீற்றிருப்பவர்; திருத்தோணிபுரத்தில் விளங்குபவர்; அப் பெருமான், தெளிந்த பொய்கையுடைய திருச்சாய்க்காட்டில் இனிது மேவும் செல்வர் ஆவார்.

815. ஊனுற்ற வெண்டலைசேர் கையர் போலும்
ஊழி பலகண் டிருந்தார் போலும்
மானுற்ற கரதலமொன் றுடையார் போலும்
மறைக்காட்டுக் கோடி மகிழ்ந்தார் போலும்
கானுற்ற ஆட லமர்ந்தார் போலும்
காமனையுங் கண்ணழலாற் காய்ந்தார் போலும்
தேனுற்ற சோலை திகழ்ந்து தோன்றுந்
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.

தெளிவுரை : சிவபெருமான், கையில் கபாலம் ஏந்தியவர்; ஊழிகள் பல கண்டவர்; கையில் மான் ஏந்தி இருப்பவர்; திருமறைக்காடு, திருக்கோடி ஆகிய தலங்களில் மேவியவர்; மயானத்தில் ஆடல் புரிந்தவர்; மன்மதனை எரித்தவர். அப்பெருமான், சோலை திகழும் திருச்சாய்க்காட்டில் இனிது விளங்கும் செல்வர் ஆவார்.

816. கார்மல்கு கொன்றையுந் தாரார் போலும்
காலனையும் ஓருதையாற் கண்டார் போலும்
பார்மல்கி யேத்தப் படுவார் போலும்
பருப்பதத்தே பல்லூழி நின்றார் போலும்
ஊர்மல்கு பிச்சைக் குழன்றார் போலும்
ஓத்தூ ரொருநாளும் நீங்கார் போலும்
சீர்மல்கு பாட லுகந்தார் போலும்
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.

தெளிவுரை : சிவபெருமான், கொன்றை மாலை அணிந்தவர்; காலனை உதைத்தவர்; பூவுலகத்தவரால் ஏத்தப்படுபவர்; திருப்பருப்பதத்தில் மேவுபவர்; பலியேற்று உழன்றவர்; திருவோத்தூரில் எந்நாளும் விளங்குபவர்; அப்பெருமான், சிறப்பு மிக்க பாடலை உகந்தவராகி திருச்சாய்க் காட்டில் இனிது உறையும் செல்வர் ஆவார்.

817. மாவாய் பிளந்துகந்த மாலுஞ் செய்ய
மலரவனுந் தாமேயாய் நின்றார் போலும்
மூவாத மேனி முதல்வர் போலும்
முதுகுன்ற மூதூ ருடையார் போலும்
கோவாய முனிதன்மேல் வந்த கூற்றைக்
குரைகழலா லன்று குமைத்தார் போலும்
தேவாதி தேவர்க் கரியார் போலும்
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.

தெளிவுரை : ஈசன் திருமாலும், நான்முகனும் தானேயாகி விளங்குபவர்; மூப்படையாத திருமேனியுடையவர்; மார்க்கண்டேய முனிவரின் உயிரைக்கவர வந்த கூற்றுவனை உதைத்தவர்; தேவர்களுக்கெல்லாம் காண்பதற்கு அரியவர். அவர், திருச்சாய்க்காட்டில் இனிது விளங்கும் செல்வர் ஆவார்.

818. கடுவெளியோ டோரைந்து மானார் போலுங்
காரோணத் தென்று மிருப்பார் போலும்
இடிகுரல்வாய்ப் பூதப் படையார் போலும்
ஏகம்பம் மேவி யிருந்தார் போலும்
படியொருவ ரில்லாப் படியார் போலும்
பாண்டிக் கொடுமுடியுந் தம்மூர் போலும்
செடிபடுநோ யடியாரைத் தீர்ப்பார் போலும்
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.

தெளிவுரை : சிவபெருமான், ஆகாயம் முதலாக ஐம்பூதங்கள் ஆகியவர்; காரோணத்தில் எல்லாக் காலத்திலும் விளங்குபவர்; பூத கணங்களைப் படையாக உடையவர்; கச்சியில் மேவும் திருவேகம்பர்; தனக்கு இணையாக யாரும் இல்லாதவர்; பாண்டிக் கொடுமுடியை ஊராகக் கொண்டவர்; அடியவர்களின் நோயைத் தீர்ப்பவர். அப் பெருமான், திருச்சாய்க்காட்டில் இனிது விளங்கும் செல்வர் ஆவார்.

819. விலையிலா ஆரஞ்சேர் மார்பர் போலும்
வெண்ணீறு மெய்க்கணிந்த விகிர்தம் போலும்
மலையினார் மங்கை மணாளர் போலும்
மாற்பேறு காப்பாய் மகிழ்ந்தார் போலும்
தொலைவிலார் புரமூன்றுந் தொலைத்தார் போலும்
சோற்றுத் துறைதுருத்தி யுள்ளார் போலும்
சிலையினார் செங்க ணரவர் போலும்
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.

தெளிவுரை : சிவபெருமான், எலும்பு மாலையை மார்பில் அணிந்தவர்; வெண்ணீற்றைத் திருமேனியில் தரித்தவர்; உமாதேவியாரின் மணாளர்; திருமாற்பேற்றில் மகிழ்ந்து விளங்குபவர்; மூன்று அசுரர்களின் கோட்டைகளை எரித்தவர்; சோற்றுத்துறை, திருத்துருத்தி ஆகிய தலங்களில் திகழ்பவர். வில்லேந்தியவராகி நாகத்தைத் திருமேனியில் தவழ விட்டவர். அவர் திருச்சாய்க்காட்டில் இனிது உறையும் செல்வர் ஆவார்.

820. அல்லல் அடியார்க் கறுப்பார் போலும்
அமருலகம் தம்மடைந்தார்க் காட்சி போலும்
நல்லமும் நல்லூரும் மேயார் போலும்
நள்ளாறு நாளும் பிரியார் போலும்
முல்லை முகைநகையாள் பாகர் போலும்
முன்னமே தோன்றி முளைத்தார் போலும்
தில்லை நடமாடுந் தேவர் போலும்
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.

தெளிவுரை : சிவபெருமான், அடியவர்களுடைய அல்லலைத் தீர்ப்பவர்; அமரர் உலகத்திற்குரிய ஆட்சியை அளிப்பவர்; திருநல்லம், நல்லூர், திருநள்ளாறு ஆகிய தலங்களில் உள்ளவர். உமை பாகர்; முன் தோன்றிய பழம் பொருளானவர்; தில்லையில் நடனம் புரிபவர். அவர், திருச்சாய்க்காட்டில் மேவும் செல்வர் ஆவார்.

821. உறைப்புடைய இராவணன் பொன்மலையைக் கையால்
ஊக்கஞ்செய் தெடுத்தலுமே உமையா ளஞ்ச
நிறைப்பெருந்தோள் இருபதும்பொன் முடிகள் பத்தும்
நிலஞ்சேர விரல்வைத்த நிமலர் போலும்
பிறைப்பிளவு சடைக்கணிந்த பெம்மான் போலும்
பெண்ணா ணுருவாகி நின்றார் போலும்
சிறப்புடைய அடியார்கட் கினியார் போலும்
திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.

தெளிவுரை : ஈசன், கயிலையை எடுத்த இராவணனுடைய முடிகளை விரல்கொண்டு நெரித்தவர்; பிறைச் சந்திரனைச் சூடியவர்; பெண்ணும் ஆணும் ஆகிய அர்த்தநாரி; மெய்யன்பர்களுக்கு இனியவர். அவர், திருச்சாய்க்காட்டில் இனிது விளங்கும் செல்வர் ஆவார்.

திருச்சிற்றம்பலம்

83. திருப்பாசூர் (அருள்மிகு வாசீஸ்வரர் திருக்கோயில், திருப்பாசூர்,திருவள்ளூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

822. விண்ணாகி நிலனாகி விசும்பு மாகி
வேலைசூழ் ஞாலத்தார் விரும்பு கின்ற
எண்ணாகி எழுத்தாகி இயல்பு மாகி
ஏழுலகுந் தொழுதேத்திக் காண நின்ற
கண்ணாகி மணியாகிக் காட்சி யாகிக்
காதலித்தங் கடியார்கள் பரவ நின்ற
பண்ணாகி இன்னமுதாம் பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், விண்ணும், நிலனும், மேகமும், கடல்சூழ்ந்த உலகில் விளங்கும் மாந்தர் உள்ளத்தில் மேவும் எண்ணமும், சொல்லும், இயற்றும் செயலும் ஆகியவர்; கண்ணாகவும், ஒளியாகவும், காட்சியாகவும், அன்பின் மிக்க அடியவர்கள் பரவிப் பாடும் பண்ணாகவும், உள்ளவர். இனிய அமுதமாகத் திருப்பாசூரில் மேவும் அப்பரஞ்சுடரைக் கண்டு அடியேன் உய்ந்தேன்.

823. வேதமோர் நான்காய்ஆ றங்க மாகி
விரிகின்ற பொருட்கெல்லாம் வித்து மாகிக்
கூதலாய்ப் பொழிகின்ற மாரி யாகிக்
குவலயங்கள் முழுதுமாய்க் கொண்ட லாகிக்
காதலால் வானவர்கள் போற்றி யென்று
கடிமலர்கள் அவைதூவி ஏத்த நின்ற
பாதியோர் மாதினைப் பாசூர் மய
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், நான்கு வேதமாகவும், ஆறு அங்கமாகவும் விரிந்து பரவும் பொருள்களுக்கெல்லாம் வித்தாகவும் விளங்குபவர். மழையாகவும், மேகமாகவும், வானவர்கள் போற்றி மலர் தூவி ஏத்த நின்ற உமை பாகராகவும் திகழ்பவர். பாசூர் மேவும் பரஞ் சுடராகிய அப் பெருமானைக் கண்டு அடியேன் உய்ந்தேன்.

824. தடவரைகள் ஏழுமாய்க் காற்றாய்த் தீயாய்த்
தண்விசும்பாய்த் தண்விசும்பி னுச்சி யாகிக்
கடல்வலயஞ் சூழ்ந்ததொரு ஞலா மாகிக்
காண்கின்ற கதிரவனும் கதியு மாகிக்
குடமுழவச் சரிவழியே அனல்கை யேந்திக்
கூத்தாட வல்ல குழக னாகிப்
படவரவொன் றதுவாட்டிப் பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், ஏழுமலைகளாகவும், காற்றாகவும், நெருப்பாகவும், ஆகாயமாகவும், ஆகாயத்தின் உச்சியாகவும், கடலால் சூழப்பட்ட உலகமாகவும் காண்கின்ற சூரியனாகவும், உயிர்களின் கதியாகவும் விளங்குபவர்; குடமுழவு, சச்சரி ஆகிய வாத்தியங்கள் இயம்ப நெருப்பைக் கையில் ஏந்திக் கூத்து ஆடுபவர். அப்பெருமான், அரவத்தைக் கையில் பற்றி ஆட்டும் அழகராய்ப் பாசூரில் மேவும் பரஞ்சுடரென விளங்க அடியேன் கண்டு உய்ந்தேன்.

825. நீராருஞ் செஞ்சடைமேல் அரவங் கொன்றை
நிறைமதிய முடன்குடி நீதி யாலே
சீராரும் மறையோதி யுலக முய்யச்
செழுங்கடலைக் கடந்தகடல் நஞ்ச முண்ட
காராருங் கண்டனைக் கச்சி மேய
கண்ணுதலைக் கடலொற்றி கருதி னானைப்
பாரோரும் விண்ணோரும் பரசும் பாசூர்ப்
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், கங்கை தரித்த செஞ்சடையில் நாகமும் கொன்றையும் சந்திரனும் சூடிச் சிறப்புடைய வேதத்தை ஓதியும், உலகம் உய்யும் தன்மையில் கடலில் தோன்றி வெளிப்பட்ட நஞ்சினை உட்கொண்டு மேவிய நீல கண்டமும் கொண்டு விளங்குபவர்; திருக்கச்சியில் மேவும் கண்ணுதல்; ஒற்றியூரில் வீற்றிருப்பவர்; தேவர்களும், பூவுலகத்த வரும் ஏத்தி வணங்க மேவுபவர். அப் பெருமான் பாசூரில் மேவும் பரஞ்சுடர். அவரைக் கண்டு அடியேன் உய்ந்தேன்.

826. வேடனாய் விசயன்தன் வியப்பைக் காண்பான்
விற்பிடித்துக் கொம்புடைய ஏனத் தின்பின்
கூடினார் உமையவளுங் கோலங் கொள்ளக்
கொலைப்பகழி உடன் கோத்துக் கோரப்பூசல்
ஆடினார் பெருங்கூத்துக் காளி காண
அருமறையோ டாறங்கம் ஆய்ந்து கொண்டு
பாடினார் நால்வேதம் பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், வேடனின் திருக்கோலம் தாங்கி வில்லேந்தி, உமாதேவியாரும் அதற்கு ஒத்த திருக்கோலம் பூணப் பன்றியின் பின்னால் அம்பு ஏந்தி, விசயன் வியந்து போற்றுமாறு பூசல் விளைவித்தவர்; காளி தேவி காணுமாறு பெரிய நடனம் புரிந்தவர்; வேதமும் அங்கமும் ஆய்ந்து ஓதி விரித்தவர். பாசூர் மேவிய பரஞ்சுடராகிய அப் பெருமானைக் கண்டு அடியேன் உய்ந்தேன்.

827. புத்தியினாற் சிலந்தியுந்தன் வாயின் நூலால்
புதுப்பந்தர் அதுஇழைத்துச் சருகால் மேய்ந்த
சித்தியினால் அரசாண்டு சிறப்புச் செய்யச்
சிவகணத்துப் புகப்பெய்தார் திறலால் மிக்க
வித்தகத்தால் வெள்ளானை விள்ளா அன்பு
விரவியவா கண்டதற்கு வீடு காட்டிப்
பத்தர்களுக் கின்னமுதாம் பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.

தெளிவுரை : புத்தி பூர்வமாகச் சிவத் தொண்டு மேவும் பண்பால் வாயினால் பந்தர் அமைத்த சிலந்திக்கு அருள் செய்து, மறுமையில் கோச்செங்கட் சோழநாயனாராக விளங்கச் செய்த சிவபெருமான், ஆங்குப் பூசித்த வெள்ளானைக்கு அருள் செய்து முத்திப் பேறு அளித்தவர்; பக்தர்களுக்கு இனிய அமுதம் போன்றவர். பாசூர் மேவும் பரஞ்சுடராகிய அப்பரமனைக் கண்டு அடியேன் உய்ந்தேன்.

828. இணையொருவர் தாமல்லால் யாரு மில்லார்
இடைமருதோ டேகம்பத் தென்றும் நீங்கார்
அணைவரியார் யாவர்க்கும் ஆதி தேவர்
அருமந்த நன்மையெலாம் அடியார்க் கீவர்
தணல் முழுகு பொடியாடுஞ் செக்கர் மேனித்
தத்துவனைச் சாந்தகிலின் அளறு தோய்ந்த
பணைமுலையாள் பாகனையெம் பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.

தெளிவுரை : சிவபெருமான், தனக்கு இணையாக யாரும் இல்லாத தனிப் பெருமையுடையவர்; திருவிடைமருதூரிலும், திருக்கச்சியேகம்பத்திலும் விளங்குபவர்; யாவருக்கும் ஆதிதேவர்; காண்பதற்கு அரியவர்; அடியவர்களுக்கு எல்லா நன்மைகளையும் புரிபவர்; சிவந்த திருமேனியில் திருவெண்ணீறு பூசி விளங்குபவர்; நறுமணம் கமழும் சந்தனக் கலவையுடன் திகழும் உமா தேவியைத் திருமேனியில் பாகம் கொண்டவர். பாசூர் மேவிய அப்பரஞ்சுடரை அடியேன் கண்டு  உய்ந்தேன்.

829. அண்டவர்கள் கடல்கடைய அதனுள் தோன்றி
அதிர்த்தெழுந்த ஆலாலம் வேலை ஞாலம்
எண்டிசையுஞ் சுடுகின்ற வாற்றைக் கண்டு
இமைப்பளவி லுண்டிருண்ட கண்டர் தொண்டர்
வண்டுபடு மதுமலர்கள் தூவி நின்று
வானவர்கள் தானவர்கள் வணங்கி யேத்தும்
பண்டரங்க வேடனையெம் பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.

தெளிவுரை : யாவரும் அஞ்சும்படி தோன்றிய கடல் நஞ்சினை உண்டு, கரிய கண்டத்தைக் கொண்டவராகிய சிவபெருமான், தேவர்களும் அசுரர்களும் ஏத்த விளங்குபவர்; பண்டரங்கம் என்னும் கூத்து ஆடுபவர்; பாசூர் மேவும் அப் பரஞ்சுடரை அடியேன் கண்டு உய்ந்தேன்.

830. ஞாலத்தை யுண்டதிரு மாலும் மற்றை
நான்முகனும் அறியாத நெறியார் கையிற்
சூலத்தால் அந்தகனைச் சுருளக் கோத்துத்
தொல்லுலகிற் பல்லுயிரைக் கெல்லுங் கூற்றைக்
காலத்தா லுதைசெய்து காதல் செய்த
அந்தணனைக் கைக்கொண்ட செவ்வான் வண்ணர்
பாலொத்த வெண்ணீற்றார் பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.

தெளிவுரை : திருமாலும் நான்முகனும் அறியாதவாறு நெடிது தீப்பிழம்பாக ஓங்கிய ஈசன், சூலப்படையேந்தி அந்தகாசூரனை அழித்தவர்; பல உயிர்களைக கொல்லும் கூற்றுவனைக் காலால் உதைத்து, மார்க்கண்டேயரைக் காத்து அருளியவர்; பால் போன்ற திருவெண்ணீற்றைப் பூசிய திருமேனியுடையவர். பாசூரில் மேவும் அப் பரஞ்சுடரைக் கண்டு அடியேன் உய்ந்தேன்.

831. வேந்தன்நெடு முடியுடைய அரக்கர் கோமான்
மெல்லியலாள் உமைவெருவரிரைந் திட்டோடிச்
சாந்தமென நீறணிந்தான் கயிலை வெற்பைத்
தடக்கைகளா லெடுத்திடலுந் தாளா லூன்றி
ஏந்துதிரள் திண்டோளுந் தலைகள் பத்தும்
இறுத்தவன்தன் இசைகேட்டு இரக்கங் கொண்ட
பாந்தளணி சடைமுடியெம் பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.

தெளிவுரை : நெடிய முடியுடைய இராவணன் கயிலையை எடுத்தபோது திருவிரலால் ஊன்றி அடர்த்த சிவபெருமான், அவனுடைய இசையைக் கேட்டு இரங்கி அருள் புரிந்தவர். நாகத்தைச் சடையில் கொண்டவர். பாசூரில் மேவும் அப்பரஞ்சுடரைக் கண்டு அடியேன் உய்ந்தேன்.

திருச்சிற்றம்பலம்

84. திருச்செங்காட்டங்குடி (அருள்மிகு உத்திராபசுபதீஸ்வரர் திருக்கோயில், திருச்செங்காட்டங்குடி,  திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

832. பெருந்தகையைப் பெறற்கரிய மாணிக் கத்தைப்
பேணிநினைந் தெழுவார்தம் மனத்தே மன்னி
இருந்தமணி விளக்கதனை நின்ற பூமேல்
எழுந்தருளி யிருந்தானை எண்டோள் வீசி
அருந்திறல்மா நடமாடும் அம்மான் தன்னை
அங்கனகச் சுடர்க்குன்றை அன்றா லின்கீழ்த்
திருந்துமறைப் பொருள்நால்வர்க் கருள்செய் தானைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், பெருந்தகையாளர்; பெறுதற்கரிய மாணிக்கம் போன்றவர்; தன்னை நினைந்து ஏத்தும் அடியவர்களின் மனத்தில் மன்னி விளங்கும் மணி விளக்கு; பூவுலகில் எழுந்தருள்பவர்; எட்டுத் தோள்களை வீசி நடனம் புரிபவர்; பொன்னின் ஒளி விளங்கும் குன்றானவர்; ஆலின் கீழ் இருந்து அறப்பொருள் உண்மைகளை உரைத்தவர். அப் பெருமானைச் செங்காட்டங்குடியில் கண்டேன்.

833. துங்கநகத் தாலன்றித் தொலையா வென்றித்
தொகுதிறலவ் விரணியனை ஆகங் கீண்ட
அங்கனகத் திருமாலும் அயனுந் தேடும்
ஆலழலை அனங்கனுடல் பொடியாய் வீழ்ந்து
மங்கநகத் தான்வல்ல மருந்து தன்னை
வண்கயிலை மாமலைமேல் மன்னி நின்ற
செங்கனகத் திரள்தோளெஞ் செல்வன் தன்னைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

தெளிவுரை : இரணியனுடைய உடலை நகத்தால் கிழித்த அழித்த திருமாலும், பிரமனும் தேடியபோது பேரழல் ஆகிய சிவபெருமான், மன்மதனை எரித்துச் சாம்பலாக்கியவர்; கயிலை மாமலையில் மன்னி விளங்குபவர்; பொன் போன்ற திரட்சியான தோளுடைய செல்வர். அப் பெருமானைச் செங்காட்டங் குடியில் கண்டேன்.

834. உருகுமனத் தடியவர்கட் கூறுந் தேனை
உம்பர்மணி முடிக்கணியை உண்மை நின்ற
பெருகுநிலைக் குறியாளர் அறிவு தன்னைப்
பேணிய அந்தணர்க்கு மறைப்பொருளைப் பின்னும்
முருகுவிரி நறுமலர்மேல் அயற்கும் மாற்கும்
முழுதலை மெய்த்தவத்தோர் துணையை வாய்த்த
திருகுகுழல் உமைநங்கை பங்கன் தன்னைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், மனம் கசிந்து உருகி ஏத்தும் அடியவர்களுக்குத் தேன் போன்று இனிமையானவர்; தேவர்களின் மணி முடியாகிய ஆட்சியை அணியுடன் திகழச் செய்பவர்; நிலைத்த தன்மையால் விளங்கும் மெய்த்தன்மையானவர்; அந்தணர்களுக்கு வேதப் பொருளாகியவர்; மாலுக்கும் அயனுக்கும் முழுமுதலானவர்; மெய்த் தவத்தின் துணையானவர்; உமாதேவியாகிய குழலம்மையைப் பாகம் கொண்டவர். அப் பெருமானைச் செங்காட்டங்குடியில் கண்டேன்.

835. கந்தமலர்க் கொன்றையணி சடையான் தன்னைக்
கதிர்விடுமா மணிபிறங்கு கனகச் சோதிச்
சந்தமலர்த் தெரிவை யொரு பாகத்தானைச்
சராசரநற் றாயானை நாயேன் முன்னைப்
பந்தமறுத் தாளாக்கப் பணிகொண் டாங்கே
பன்னியநூல் தமிழ்மாலை பாடு வித்தென்
சிந்தைமயக் கறுத்ததிரு வருளினானைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், சடையில் கொன்றை மாலை தரித்தவர்; ஒளி திகழும் மாணிக்கமாகவும், பொன்னாகவும் திகழும் நறுமணங்கமழும் மலர் போன்ற உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவர்; அசையும் பொருளுக்கும் அசையாப் பொருளுக்கும் நற்றாய் போன்று திகழ்பவர்; அடியேனை அடிமை கொண்டு ஆளாகச் செய்து தமிழ் மாலைகளைப் பாடுவித்தவர்; சிந்தையில் தோன்றிய மயக்கினைப் போக்கி அருள் புரிந்தவர். அப் பெருமானைச் செங்காட்டங்குடியில் கண்டேன்.

836. நஞ்சடைந்த கண்டத்து நாதன் தன்னை
நளிர்மலர்ப்பூங் கணைவேளை நாச மாக
வெஞ்சினத்தீ விழித்ததொரு நயனத் தானை
வியன்கெடில வீரட்டம் மேவி னானை
மஞ்சடுத்த நீள்சோலை மாட வீதி
மதிலாரூர் இடங்கொண்ட மைந்தன் தன்னைச்
செஞ்சினத்த திரிசூலப் படையான் தன்னைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், நஞ்சினைக் கண்டத்தில் தேக்கியவர்; மன்மதனை நெற்றிக் கண்ணால் எரித்துச் சாம்பலாக்கியவர்; கெடிலநதிக் கரையில் மேவும் திருவதிகை வீரட்டானத்தில் விளங்குபவர்; திருவாரூரில் திகழ்பவர்; சூலப்படையுடையவர். அப் பெருமானைச் செங்காட்டங்குடியில் கண்டேன்.

837. கன்னியையங் கொருசடையிற் கரந்தான் தன்னைக்
கடவூரில் வீரட்டங் கருதி னானைப்
பொன்னிசூழ் ஐயாற்றெம் புனிதன் தன்னைப்
பூந்துருத்தி நெய்த்தானம் பொருந்தி னானைப்
பன்னியநான் மறைவிரிக்கும் பண்பன் தன்னைப்
பரிந்திமையோர் தொழுதேத்திப் பரனே யென்று
சென்னிமிசைக் கொண்டணிசே வடியி னானைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், கங்கையைச் சடையொன்றில் கரந்தவர்; திருக்கடவூர் வீரட்டானத்தில் விளங்குபவர்; திருவையாற்றில் மேவும் புனிதர்; பூந்துருத்தி, நெய்த்தானம் ஆகியவற்றில் பொருந்தி விளங்குபவர்; நான்கு மறைகளை விரித்தவர்; தேவர்களால் ஏத்தப்படுபவர். அப் பெருமானைச் செங்காட்டங்குடியில் கண்டேன்.

838. எத்திக்கு மாய்நின்ற இறைவன் தன்னை
ஏகம்பம் மேயானை யில்லாத் தெய்வம்
பொத்தித்தம் மயிர்பறிக்குஞ் சமணர் பொய்யிற்
புக்கழுந்தி வீழாமே போத வாங்கிப்
பத்திக்கே வழிகாட்டிப் பாவந் தீர்த்துப்
பண்டைவினைப் பயமா எல்லாம் போக்கித்
தித்தித்தென் மனத்துள்ளே ஊறுந் தேனைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், எல்லாத் திக்கும் ஆனவர்; திருக்கச்சி யேகம்பத்தில் திகழ்பவர்; இன்மை என்னும் தன்மையுடைய சமண நெறியில் புகுந்த என்னை, அதில் வீழாது காத்துப் பக்தி நெறி காட்டிப் பாவம் தீர்த்துப் பண்டை வினைப் பயனைப் போக்கி, என் மனத்துள் தித்திக்கும் தேன் என ஊறுபவர். அப் பெருமானைச் செங்காட்டங் குடியில் கண்டேன்.

839. கல்லாதார் மனத்தணுகாக் கடவுள் தன்னைக்
கற்றார்கள் உற்றோருங் காத லானைப்
பொல்லாத நெறியுகந்தார் புரங்கள் மூன்றும்
பொன்றிவிழ அன்றுபொரு சரந்தொட் டானை
நில்லாத நிணக்குரம்பைப் பிணக்கம் நீங்க
நிறைதவத்தை அடியேற்கு நிறைவித் தென்றுஞ்
செல்லாத செந்நெறிக்கே செல்விப் பானைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், இறையுணர்வு இல்லாதவர்களின் மனத்தில் அணுகாதவர்; ஞான நூல்களைக் கற்றவர்களும் பக்தி உணர்வால் திகழ்பவர்களும் மகிழுமாறு விளங்குபவர்; பொல்லாமையை உகந்து, அத்தன்மையில் திரிந்த முப்புர அசுரர்களின் கோட்டைகளை எரித்து அழித்தவர்; அழியக் கூடிய இவ்வுடம்பின் பிணக்கமானது நீங்கும் தன்மையில் தவச்சீலத்தை அடியேற்கு நிறைவித்தவர்; சென்ற பின் திரும்பிச் செல்லாத முத்தி யுலகத்திற்கு என்னைச் செல்லுமாறு புரிபவர். அப் பரமனைச் செங்காட்டங் குடியில் கண்டேன்.

840. அரியபெரும் பொருளாகி நின்றான் தன்னை
அலைகடலில் ஆலாலம் அமுது செய்த
கரியதொரு கண்டத்துச் செங்கண் ஏற்றுக்
கதிர்விடுமா மணிபிறங்கு காட்சி யானை
உரியபல தொழில் செய்யும் அடியார்தங்கட்
குலகமெலாம் முழுதளிக்கும் உலப்பி லானைத்
தெரிவையொரு பாகத்துச் சேர்த்தி னானைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், அரிய பெரும் பொருளானவர்; ஆலகால விடத்தை அமுதமெனச் செய்து உண்டு கண்டத்தில் கருமை கொண்டவர்; இடப வாகனர்; தமது தகுதிக்கேற்பத் திருத்தொண்டு செய்யும் அன்பர்களுக்கு, உலகம் யாவும் அளிக்கும் உலப்பிலா அன்புடையவர்; உமை பாகர்; அப் பெருமானைச் செங்காட்டங்குடியில் கண்டேன்.

841. பேரரவ மால்விடையொன் றூர்தி யானைப்
புறம்பயமும் புகலூரும் மன்னி னானை
நீரரவச் செஞ்சடைமேல் நிலாவெண் டிங்கள்
நீங்காமை வைத்தானை நிமலன் தன்னைப்
பேரரவப் புட்பகத்தே ருடைய வென்றிப்
பிறங்கொளிவாள் அரக்கன்முடி யிடியச் செற்ற
சீரரவக் கழலானைச் செல்வன் தன்னைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், இடபவாகனர்; புறம்பயம், திருப்புகலூர் ஆகிய தலங்களில் மேவியவர்; சடை முடியில் கங்கை, சந்திரன், பாம்பு ஆகியவற்றைத் தரித்தவர்; புஷ்பக விமானத்தையுடைய இராவணனுடைய முடிகளை நெரியச் செய்தவர்; ஒலிக்கும் வீரக்கழலை அணிந்தவர். அப் பெருமானைச் செங்காட்டங்குடியில் கண்டேன்.

திருச்சிற்றம்பலம்

85. திருமுண்டீச்சரம் (அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோயில், கிராமம், விழுப்புரம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

842. ஆர்த்தான்காண் அழல்நாகம் அரைக்கு நாணா
அடியவர்கட் கன்பன்காண் ஆனைத் தோலைப்
போர்த்தான்காண் புரிசடைமேல் புனலேற் றான்காண்
புறங்காட்டி லாடல் புரிந்தான் தான்காண்
காத்தான்காண் உலகேழுங் கலங்கா வண்ணங்
கனைகடல்வாய் நஞ்சதனைக் கண்டத் துள்ளே
சேர்த்தான்காண் திருமுண்டீச் சரத்து மேய
சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே.

தெளிவுரை : சிவபெருமான், நாகத்தை அரையில் ஆர்த்துக் கட்டி விளங்குபவர்; அடியவர்களுக்கு அன்பராகியவர்; யானையின் தோலைப் போர்த்துள்ளவர்; சடையின் மேல் கங்கை தரித்தவர்; உலகம் ஏழினையும் கலங்காது காத்தவர்; நஞ்சினைக் கண்டத்தில் தேக்கியவர்; திருமுண்டீச்சரத்தில் மேவும் சிவலோகநாதர். அப்பெருமான் என் சிந்தையில் உள்ளவர் ஆவார்.

843. கருத்தன்காண் கமலத்தோன் தலையி லொன்றைக்
காய்ந்தான்காண் பாய்ந்தநீர் பரந்த சென்னி
ஒருத்தன்காண் உமையவளோர் பாகத் தான்காண்
ஒருருவின் மூவுருவாய் ஒன்றாய் நின்ற
விருத்தன்காண் விண்ணவர்க்கும் மேலா னான்காண்
மெய்யடியா ருள்ளத்தே விரும்பி நின்ற
திருத்தன்காண் திருமுண்டீச் சரத்து மேய
சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே.

தெளிவுரை : சிவபெருமான், யாவற்றுக்கும் கருத்தாகியவர்; பிரமனின் ஒருதலையைக் கொய்தவர்; சென்னியில் கங்கையைத் தரித்தவர்; உமாதேவியைத் திரு மேனியில் பாகமாகக் கொண்டவர்; ஒப்பற்ற ஒருவராகவும், அயன், அரி, அரன், என்னும் மூன்று வடிவினராகவும் மேவும் பழைமையானவர்; தேவர்களுக்கும் மேலானவர்; மெய்யடியவர்களின் உள்ளத்தில் விரும்பி மேவுபவர்; துன்பங்களைத் தீர்த்தருள்பவர். திருமுண்டீச்சரத்தில் மேவும் சிவலோக நாதராகிய அவர் என் சிந்தையில் உள்ளவர் ஆவார்.

844. நம்பன்காண் நரைவிடையொன் றேறி னான்காண்
நாதன்காண் கீதத்தை நவிற்றி னான்காண்
இன்பன்காண் இமையாமுக் கண்ணி னான்காண்
ஏசற்று மனமுருகும் அடியார் தங்கட்
கன்பன்காண் ஆரழல தாடி னான்காண்
அவனிவனென்றி யாவர்க்கும் அறியவொண்ணாச்
செம்பொன்காண் திருமுண்டீச் சரத்து மேய
சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே.

தெளிவுரை : சிவபெருமான், வெள்ளை இடபத்தை வாகனமாக உடையவர்; வேதங்களை விரித்த நாதர்; உயிர்களுக்கு இன்பம் செய்பவர்; முக்கண்ணுடையவர்; மனம் உருகிப் போற்றும் அடியவர்களுக்கு அன்பர்; கையில் நெருப்பேந்தி ஆடியவர்; சேய்மையாகவும் அண்மையாவும் விளங்கி, யாவர்க்கும் அறியவொண்ணாது மேவுபவர். திருமுண்டீச்சரத்தில் மேவும் சிவலோகநாதராகிய அவர், என் சிந்தையுள் உள்ளவர் ஆவார்.

845. மூவன்காண் மூவர்க்கும் முதலா னான்காண்
முன்னுமாய்ப் பின்னுமாய் முடிவா னான்காண்
காவன்காண் உலகுக்கோர் கண்ணா னான்காண்
கங்காளன் காண்கயிலை மலையி னான்காண்
ஆவன்காண் ஆவகத்தஞ் சாடி னான்காண்
ஆரழலாய் அயற்கரிக்கு மறிய வொண்ணாத்
தேவன்காண் திருமுண்டீச் சரத்து மேய
சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே.

தெளிவுரை : சிவபெருமான், முன்னோனாய், மும்மூர்த்திகளுக்கு முதல்வராய் முக்காலமுமாய்க் காப்பவர்; உலகுக்குக் கண் போன்றவர்; எலும்பு மாலையுடையவர்; கயிலையில் விளங்குபவர்; யாவற்றையும் காப்பவர்; பசுவின் பஞ்ச கவ்வியத்தால் பூசிக்கப்படுபவர்; பிரமனும் திருமாலும் அறியாதவாறு நெருப்புப் பிழம்பானவர். திருமுண்டீச்சரத்தில் மேவும் சிவலோகநாதராகிய அப் பெருமான், என் சிந்தையில் உள்ளவர் ஆவார்.

846. கானவன்காண் கானவனாய்ப் பொருதான் றான்காண்
கனலாட வல்லான்காண் கையி லேந்தும்
மானவன்காண் மறைநான்கு மாயி னான்காண்
வல்லேறொன் றதுவேற வல்லான் றான்காண்
ஊனவன்காண் உலகத்துக் குயிரா னான்காண்
உரையவன்காண் உணர்வவன்காண் உணர்ந்தார்க் கென்றுந்
தேனவன்காண் திருமுண்டீச் சரத்து மேய
சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே.

தெளிவுரை :  சிவபெருமான், காட்டில் வாழும் வேடுவனாய்த் திருக்கோலம் கொண்டு, அருச்சுனனோடு போர் செய்தவர்; கையில் நெருப்பேந்தி ஆடுபவர்; நான்கு வேதங்களும் ஆனவர்; இடப வாகனர்; எல்லாப் பொருள்களாகவும், உலகின் உயிராகவும், உரையாகவும் உணர்வாகவும், உணர்ந்தவர்களுக்கு இனிய தேனாகவும், திகழ்பவர். திருமுண்டீச்சரத்தில் மேவும் சிவலோக நாதராகிய அப்பெருமான், என் சிந்தையில் உள்ளவர் ஆவார்.

847. உற்றவன்காண் உறவெல்லா மாவான் றான்காண்
ஒழிவறநின் றெங்கு முலப்பி லான்காண்
புற்றரவே யடையமாய்ப் பூணு மாகிப்
புறங்காட்டி லெரியாடல் புரிந்தான் றான்காண்
நற்றவன்காண் அடியடைந்த மாணிக் காக
நணுகியதோர் பெங்கூற்றைச் சேவ டியினால்
செற்றவன்காண் திருமுண்டீச் சரத்து மேய
சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே.

தெளிவுரை : சிவபெருமான், உயிர்களின் உறவாகவும், யாவும் உற்றவராகவும் எல்லா இடங்களிலும் உலப்பிலாது மேவும் ஒருவராகவும் விளங்குபவர்; அரவத்தைக் கச்சாகவும் ஆபரணமாகவும் கொண்டவர்; மயானத்தில் ஆடுபவர்; நற்றவமாகவும், மார்க்கண்டேயரைக் காக்கக் கூற்றுவனைச் செற்றவராகவும் மேயவர். திருமுண்டீச்சரத்தில் விளங்கும் சிவலோக நாதராகிய அப் பரமன், என் சிந்தையில் திகழ்பவராவார்.

848. உதைத்தவன்காண் உணராத தக்கன் வேள்வி
உருண்டோடத் தொடர்ந்தருக்கன் பல்லையெல் லாந்
தகர்த்தவன்காண் தக்கன்றன் தலையைச் செற்ற
தலைவன்காண் மலைமகளாம் உமையைச் சால
மதிப்பொழிந்த வல்லமரர் மாண்டார் வேள்வி
வந்தவியுண் டவரோடு மதனை யெல்லாஞ்
சிதைத்தவன்காண் திருமுண்டீச் சரத்து மேய
சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே.

தெளிவுரை : தக்கன் புரிந்த வேள்வியில் பங்கேற்ற தேவர்களையும் பிறரையும் உதைத்துச் சாடிய சிவபெருமான், சூரியனுடைய பல்லை உகுத்தவர்; தக்கனின் தலையை வீழ்த்தியவர்; உமாதேவியை மதியாத தன்மையில், அவ் வேள்வியின் அவிர்பாகத்தை நயந்த அனைவரையும் சிதைத்தவர். திருமுண்டீச்சரத்தில் மேவிய சிவலோக நாதராகிய அப்பெருமான், என் சிந்தையில் உள்ளவர் ஆவார்.

849. உரிந்தவுடை யார்துவரால் உடம்பை மூடி
உழிதருமவ் வூமரவர் உணரா வண்ணம்
பரிந்தவன்காண் பனிவரைமீப் பண்ட மெல்லாம்
பறித்துடனே நிரந்துவரு பாய்நீர்ப் பெண்ணை
நிரைந்துவரும் இருகரையுந் தடவா வோடி
நின்மலனை வலங்கொண்டு நீள நோக்கித்
திரிந்துலவு திருமுண்டீச் சரத்து மேய
சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே.

தெளிவுரை : சமணரும் புத்தரும் அன்மை உரைப்பாராயினும் சிவபெருமான், தனது அடியவர்களுக்குப் பரிவுடன் அருள் புரிபவர். அப் பெருமான், பெண்ணை ஆறானது ஈசனை வலங்கொண்டு செல்லும் தன்மையில் திருமுண்டீச்சரத்துள் சிவலோக நாதராக விளங்குபவர். அவர் என் சிந்தையில் உள்ளவர் ஆவார்.

850. அறுத்தவன்காண் அடியவர்கள் அல்ல லெல்லாம்
அரும்பொருளாய் நின்றவன்காண் அனங்க னாகம்
மறுத்தவன்காண் மலைதன்னை மதியா தோடி
மலைமகள்தன் மனம்நடுங்க வானோ ரஞ்சக்
கறுத்தவனாய்க் கயிலாய மெடுத்தோன் கையுங்
கதிர்முடியுங் கண்ணும் பிதுங்கி யோடச்
செறுத்தவன்காண் திருமுண்டீச் சரத்து மேய
சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே.

தெளிவுரை : சிவபெருமான், அடியவர்களின் துயரைத் தீர்ப்பவர்; மன்மதனை எரித்தவர்; கயிலையை எடுத்த இராவணனுடைய முடிகளை நெரித்தவர். திருமுண்டீச்சரத்தில் மேவிய சிவலோக நாதராகிய அப் பரமன் என் சிந்தையுள் விளங்குபவராவர்.

திருச்சிற்றம்பலம்

 86. திருஆலம்பொழில் (அருள்மிகு ஆத்மநாதேஸ்வரர் திருக்கோயில், திருவாலம் பொழில், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

851. கருவாகிக் கண்ணுதலாய் நின்றான் தன்னைக்
கமலத்தோன் தலையரிந்த காபாலியை
உருவார்ந்த மலைமகளோர் பாகத் தானை
உணர்வெலா மானானை ஓசை யாகி
வருவானை வலஞ்சுழியெம் பெருமான் தன்னை
மறைக்காடும் ஆவடுதண் டுறையும் மேய
திருவானைத் தென்பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.

தெளிவுரை : நெஞ்சமே ! சிவபெருமான், எல்லாப் பொருளுக்கும் கருவாகி விளங்குபவர்; நெற்றியில் கண்ணுடையவர்; பிரமனின் தலையைக் கொய்து கபாலமாக ஏந்தியவர்; உமைபாகர்; உணர்வாகவும் ஓசையாகவும் விளங்குபவர்; திருவலஞ்சுழி, திருமறைக்காடு, திருவாவடுதுறை ஆகிய தலங்களில் மேவும் திருவாலம் பொழிலில் வீற்றிருப்பவர். அவரைச் சிந்தனை செய்வாயாக.

852. உரித்தானைக் களிறதன்தோல் போர்வை யாக
வுடையானை யுடைபுலியி னதளே யாகத்
தரித்தானைச் சடையதன்மேற் கங்கை யங்கைத்
தழலுருவை விடமமுதா வுண்டி தெல்லாம்
பரித்தானைப் பவளமால் வரையன் னானைப்
பாம்பணையான் தனக்கன்றங் காழி நல்கிச்
சிரித்தானைத் தென்பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.

தெளிவுரை : நெஞ்சமே ! சிவபெருமான், யானையின் தோலை உரித்துப் போர்வையாகக் கொண்டவர்; புலித்தோலை உடுத்தியவர்; கங்கையைச் சடையில் தரித்தவர்; அழகிய கையில் நெருப்பேந்தியவர்; விடத்தை அமுதாக உட்கொண்டவர்; பவள மலை போன்றவர்; திருமாலுக்குச் சக்கரப்படை அருளி உகந்தவர். பரம்பைக் குடியில் விளங்கும் திருவாலம் பொழிலில் மேவும் அப்பரமனைச் சிந்தித்து ஏத்துவாயாக.

853. உருமூன்றாய் உணர்வின்கண் ஒன்றா னானை
ஓங்கார மெய்ப்பொருளை உடம்பி னுள்ளால்
கருவீன்ற வெங்களவை யறிவான் தன்னைக்
காலனைத்தன் கழலடியாற் காய்ந்து மாணிக்
கருளீன்ற ஆரமுதை அமரர் கோனை
யள்ளூறி யெம்பெருமான் என்பார்க் கென்றுந்
திருவீன்ற தென்பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.

தெளிவுரை : நெஞ்சமே ! சிவபெருமான், அயன் அரி அரன் என மும்மூர்த்தியாகவும், உணர்வின் கண் ஒன்றாகவும், ஓங்கார மெய்ப்  பொருளாகவும் விளங்குபவர்; கருப் பொருளாகவும், அதன் ஆக்கத்தை அறிபவராகவும் திகழ்பவர்; மார்க்கண்டேயருக்கு அருள் செய்யும் தன்மையில் காலனைக் காலால் உதைத்து அழித்தவர்; ஏத்து வணங்குபவர்களுக்குச் செல்வத்தைத் தருபவர். பரம்பைக் குடியில் மேவும் திருவாலம் பொழிலில் விளங்கும் அப் பெருமானைச் சிந்தித்து ஏத்துவாயாக.

854. பார்முழுதாய் விசும்பாகிப் பாதாளமாம்
பரம்பரனைச் சுரும்பமருங் குழலாள் பாகத்
தாரமுதாம் அணிதில்லைக் கூத்தன் தன்னை
வாட்போக்கி யம்மானை யெம்மா னென்று
வாரமதாம் அடியார்க்கு வார மாகி
வஞ்சனைசெய் வார்க்கென்றும் வஞ்ச னாகுஞ்
சீரரசைத் தென்பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.

தெளிவுரை : நெஞ்சமே ! சிவபெருமான், நிலவுலகம், ஆகாயம், பாதாளம் என விளங்கும் பரம் பொருள் ஆனவர்; உமை பாகர்; தில்லையில் நடம் புரிபவர்; வாட் போக்கியில் வீற்றிருப்பவர்; அன்புடைய அடியவர்களுக்கு அன்பர் ஆவர்; வஞ்சனையுடையவர்களுக்கு அத்தன்மையாகுபவர். தென் பரம்பைக் குடியில் மேவும் திருவாலம் பொழிலில் விளங்கும் அப் பெருமானைச் சிந்தித்து ஏத்துவாயாக.

855. வரையார்ந்த மடமங்கை பங்கன் தன்னை
வானவர்க்கும் வானவனை மணியை முத்தை
அரையார்ந்த புலித்தோல்மேல் அரவ மார்த்த
அம்மானைத் தம்மானை அடியார்க் கென்றும்
புரையார்ந்த கோவணத்தெம் புனிதன் தன்னைப்
பூந்துருத்தி மேயானைப் புகலூ ரானைத்
திரையார்ந்த தென்பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.

தெளிவுரை : நெஞ்சமே ! சிவபெருமான், உமைபாகர்; வானவர்க்கும் மேலான தலைவர்; மணியும் முத்தும் போன்று ஒளிர்பவர்; புலித்தோலை உடையாகக் கொண்டு அரவத்தை அரையிற்கட்டியவர்; தனது அடியவர்பால் அன்புடையவர்; கோவண ஆடையுடைய புனிதர்; பூந்துருத்தி, திருப்புகலூர் ஆகிய தலங்களில் விளங்குபவர். அப் பெருமான், தென் பரம்பைக் குடியில் மேவும் திரு ஆலம் பொழிலில் வீற்றிருப்பவர். அவரைச் சிந்தித்து ஏத்துவாயாக.

856. விரிந்தானைக் குவிந்தானை வேத வித்தை
வியன்பிறப்போ டிறப்பாகி நின்றான் தன்னை
அரிந்தானைச் சலந்தரன்றன் உடலம் வேறா
ஆழ்கடல்நஞ் சுண்டிமையோ ரெல்லா முய்யப்
பரிந்தானைப் பல்லசுரர் புரங்கள் மூன்றும்
பாழ்படுப்பான் சிலைமலைநாண் ஏற்றி யம்பு
தெரிந்தானைத் தென்பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.

தெளிவுரை : நெஞ்சமே ! சிவபெருமான், எல்லா இடங்களிலும் விரிந்து வியாபித்துள்ளவர்; நுண்மையாகி உள்ளுக்குள் மேவி ஒளிர்பவர்; உயிர்களின் பிறப்புக்கும் இறப்புக்கும் கர்த்தாவாகி விளங்குபவர்; சலந்தரனின் உடலைப் பிளந்து அழித்தவர்; நஞ்சினை உட்கொண்டு உலகம் யாவும் உய்யுமாறு கருணை புரிந்தவர்; அசுரர் கோட்டைகளை எரித்தவர்; அப் பெருமான், தென் பரம்பைக் குடியில் மேவிய திருஆலம் பொழிலில் விளங்குபவர். அவரைச் சிந்தித்து ஏத்துவாயாக.

857. பொல்லாத என்னழுக்கிற் புகுவா னென்னைப்
புறம்புறமே சோதித்த புனிதன் தன்னை
எல்லாருந் தன்னை யிகழ அந்நாள்
இடுபலியென் றகந்திரியும் எம்பி ரானைச்
சொல்லாதா ரவர்தம்மைச் சொல்லா தானைத்
தொடர்ந்துதன் பொன்னடியே பேணு வாரைச்
செல்லாத நெறிசெலுத்த வல்லான் தன்னைத்
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.

தெளிவுரை : நெஞ்சமே ! சிவபெருமான், புன்மையுடைய எனது உடலில் புகுந்து விளங்குபவர்; புறம்புறம் விளங்கும் புனிதர்; எல்லோரும் இகழும் தன்மையுடைய பலியை உகந்தவர்; பக்தர்களுக்கு அன்புடையவராகி, வெளிப்பட்டு அருள்பவர்; அன்பில்லாதவர்கள்பால் பொருந்தி விளக்கம் ஆகாதவர். அவர் திருவாலம்பொழிலில் விளங்குபவர். அப் பெருமானைச் சிந்தித்து ஏத்துவாயாக.

858. ஐந்தலைய நாகவணைக் கிடந்த மாலோ
டயந்தேடி நாடரிய அம்மான் தன்னைப்
பந்தணவு மெல்விரலாள் பாகத் தானைப்
பராய்த்துறையும் வெண்காடும் பயின்றான் தன்னைப்
பொந்துடைய வெண்டலையிற் பலிகொள் வானைப்
பூவணமும் புறம்பயமும் பொருந்தி னானைச்
சிந்தியவெந் தீவினைகள் தீர்ப்பான் தன்னைத்
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.

தெளிவுரை : நெஞ்சமே ! சிவபெருமான், திருமாலும் அயனும் நாடுவதற்கு அரியவராக உயர்ந்து ஓங்கியவர்; உமாதேவியைத் திருமேனியில் பாகமாகக் கொண்டவர்; திருப்பராய்த்துறை, திருவெண்காடு ஆகிய தலங்களில் உறைபவர்; கபாலம் ஏந்திப் பலியேற்பவர்; திருப்பூவணம், புறம்பயம் ஆகிய தலங்களில் விளங்குபவர்; எனது தீய வினைகளைத் தீர்ப்பவர். அப் பெருமான் திருவாலம் பொழிலில் வீற்றிருப்பவர். அவரை சிந்தித்து ஏத்துவாயாக.

859. கையிலுண் டுழல்வாருஞ் சாக்கியருங்
கல்லாத வன்மூடர்க் கல்லா தானைப்
பொய்யிலா தவர்க்கென்றும் பொய்யி லானைப்
பூண்நாகம் நாணாகப் பொருப்பு வில்லாக்
கையினார் அம்பெரிகால் ஈர்க்குக் கோலாக்
கடுந்தவத்தோர் நெடும்புரங்கள் கனல்வாய் வீழ்த்த
செய்யினார் தென்பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.

தெளிவுரை : நெஞ்சமே ! சிவபெருமான், சமணநெறியினர்க்கு அரியவர்; நாகத்தை ஆபரணமாகக் கொண்டவர்; மேருமலையை வில்லாக ஏந்தி நெருப்பையும், வாயுவையும் அம்பாகக் கொண்டு முப்புரத்தை எரித்தவர். பரம்பைக் குடியில் மேவும் ஆலம்பொழிலில் விளங்கும் அப்பெருமானைச் சிந்தித்து ஏத்துவாயாக.

திருச்சிற்றம்பலம்

87. திருச்சிவபுரம் (அருள்மிகு சிவகுருநாதர் திருக்கோயில், சிவபுரம், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

860. வானவன்காண் வானவர்க்கு மேலா னான்காண்
வடமொழியுந் தென்றமிழும் மறைகள் நான்கும்
ஆனவன்காண் ஆனைந்தும் ஆடி னான்காண்
ஐயன்காண் கையிலனல் ஏந்தி யாடும்
கானவன்காண் கானவனுக் கருள்செய் தான்காண்
கருதுவார் இதயத்துக் கமலத் தூறும்
தேனவன்காண் சென்றடையாச் செல்வன் றான்காண்
சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன்தானே.

தெளிவுரை : சிவபெருமான், அருள் வழங்கும் தேவனாகியவர்; தேவர்களுக்கும் மேலாகியவர்; வடமொழியும், தென் தமிழும், நான்கு வேதங்களும் ஆகியவர்; பசுவின் பஞ்ச கவ்வியத்தால் பூசிக்கப் படுபவர்; அழகான தலைவர்; கையில் நெருப்பேந்தி ஆடுபவர்; அருச்சுனனுக்கு அருள் செய்யும் பாங்கில் வேட்டுவத் திருக்கோலம் பூண்டவர்; கண்ணப்ப நாயனாருக்கு அருள் செய்தவர்; பக்தர்களின் இதயத் தாமரையில் தேனாக மேவி இனிமை தருபவர்; இயல்பான செல்வத்தை உடையவர். அச் சிவபெருமான், சிவ மந்திரமாக விளங்குபவர். அவர் சிவபுரத்தில் மேவும் எம் செல்வர் ஆவார்.

861. நக்கன்காண் நக்கரவம் அரையி லார்த்த
நாதன்காண் பூதகண மாட ஆடும்
சொக்கன்காண் கொக்கிறது சூடி னான்காண்
துடியிடையாள் துணைமுலைக்குச் சேர்வ தாகும்.
பொக்கன்காண் பொக்கணத்த வெண்ணீற்றான்காண்
புவனங்கள் மூன்றினுக்கும் பொருளாய் நின்ற
திக்கன்காண் செக்கரது திகழு மேனிச்
சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன்தானே.

தெளிவுரை : சிவபெருமான், உடையை நீத்தவர்; அரவத்தைக் கட்டியுள்ளவர்; பூதகணங்களுடன் சேர்ந்து நடனம் புரிபவர்; அழகு மிகுந்தவர்; கொக்கிறகைச் சூடியவர்; உமைபாகர்; திருவெண்ணீறு தரித்தவர்; மூவுலகுக்கும் பொருளானவர்; எல்லாத் திசைகளும் ஆனவர்; சிவந்த திருமேனியுடையவர்; அன்புடையவர்; சிவபுரத்தில் மேவும் அவர் எம் செல்வர் ஆவார்.

862. வம்பின்மலர்க் குழலுமையாள் மணவா ளன்காண்
மலரவன்மால் காண்பரிய மைந்தன் தான்காண்
கம்பமதக் கரிபிளிற வுரிசெய் தோன்காண்
கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டத் தான்காண்
அம்பர்நகர்ப் பெருங்கோயில் அமர்கின் றான்காண்
அயவந்தி யுள்ளான்காண் ஐயா றன்காண்
செம்பொனெனத் திகழ்கின்ற வுருவத் தான்காண்
சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன்தானே.

தெளிவுரை : சிவபெருமான், உமாதேவியின் மணவாளர்; பிரமனும், திருமாலும் காண்பதற்கு அரியவர்; யானையின் தோலை உரித்தவர்; கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு கண்டம் கருத்தவர்; அம்பர் பெருந்திருக்கோயில், அயவந்தி, திருவையாறு ஆகிய தலங்களில் விளங்குபவர்; செம்பொன் போன்ற வடிவம் உடையவர். அவர் சிவபுரத்தில் மேவும் செல்வர் ஆவார்.

863. பித்தன்காண் தக்கன்தன் வேள்வி யெல்லாம்
பீடழியச் சாடி யருள்கள் செய்த
முத்தன்காண் முத்தீயு மாயினான் காண்
முனிவர்க்கும் வானவர்க்கும் முதலாய் மிக்க
அத்தன்காண் புத்தூரில் அமர்ந்தான் தான்காண்
அரிசிற் பெருந்துறையே ஆட்சி கொண்ட
சித்தன்காண் சித்தீச் சரத்தான் தான்காண்
சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன்தானே.

தெளிவுரை : சிவபெருமான், அன்பர்கள்பால் பித்துடையவர்; தக்கன் செய்த வேள்வியை அழித்தவர்; முத்தி அருள்பவர்; மூன்று வகையான தீயாகியவர்; முனிவர்களுக்கும் தேவர்களுக்கும் முதற்பொருளானவர்; அரிசிற்கறைப்புத்தூர், பெருந்துறை, நறையூர்ச் சித்தீச்சரம் ஆகிய தலங்களில் விளங்குபவர். அவர் சிவபுரத்தில் மேவும் செல்வர் ஆவார்.

864. தூயவன்காண் நீறு துதைந்த மேனி
துளங்கும் பளிங்கனைய சோதி யான்காண்
தீயவன்காண் தீயவுணர் புரஞ்செற் றான்காண்
சிறுமான்கொள் செங்கையெம் பெருமான்தான்காண்
ஆயவன்காண் ஆரூரி லம்மான் தான்காண்
அடியார்கட் காரமுத மாயி னான்காண்
சேயவன்காண் சேமநெறி யாயி னான்காண்
சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன்தானே.

தெளிவுரை : சிவபெருமான், தூயவர்; திருநீறு, அணிந்த திருமேனியுடையவர்; பளிங்கு போன்ற சோதியானவர்; நெருப்பாய் விளங்குபவர்; தீய அசுரர்களின் கோட்டைகளை எரித்தவர்; மானைக் கரத்தில் ஏந்தியவர்; திருவாரூரில் மேவியவர்; அடியவர்களுக்கு அமுதம் ஆனவர்; மாற்றார்க்குத் தொலைவில் உள்ளவர்; பாதுகாப்பாகும் முத்தி நெறியானவர். அவர் சிவபுரத்தில் விளங்கும் செல்வர் ஆவார்.

865. பரவன்காண் பாரதனிற் பயிரா னான்காண்
பயிர்வளர்க்குந் துளியவன்காண் துளியில்நின்ற
நீரவன்காண் நீர்சடைமேல் நிகழ்வித் தான்காண்
நிலவேந்தர் பரிசாக நினைவுற் றோங்கும்
பேரவன்காண் பிறையெயிற்று வெள்ளைப் பன்றிப்
பிரியாது பலநாளும் வழிபட் டேத்தும்
சீரவன்காண் சீருடைய தேவர்க் கெல்லாஞ்
சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன்தானே.

தெளிவுரை : சிவபெருமான், நிலமாகவும், நிலத்தில் மேவும் பயிராகவும், பயிரை வளர்க்கும் மழையாகவும் மழையில் நின்ற நீராகவும் ஆகியவர். நீராகிய கங்கையைச் சடையில் தரித்தவர்; நிலத்தை ஆளும் அரசர்களால் ஏத்தப்படுபவர்; திருமால் வெள்ளைப் பன்றியாகி வழிபட்ட சிறப்பு உடையவர். தேவர்களால் ஏத்தப் படுபவர். அவர் சிவபுரத்தில் மேவும் செல்வர் ஆவார். இத் திருப்பாட்டில் திருமால் வெள்ளைப் பன்றியாகிப் பூசித்த தல வரலாற்றுக் குறிப்பு ஓதப் பெற்றது.

866. வெய்யவன்காண் வெய்யகன லேந்தி னான்காண்
வியன்கெடில வீரட்டம் மேவி னான்காண்
மெய்யவன்காண் பொய்யர்மனம் விரவா தான்காண்
வீணையோ டிசைந்துமிகு பாடல் மிக்க
கையவன்காண் கையில் முழு வேந்தி னான்காண்
காமனங்கம் பொடிவிழித்த கண்ணி னான்காண்
செய்யவன்காண் செய்யவளை மாலுக் கீந்த
சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன்தானே.

தெளிவுரை : சிவபெருமான், எரியும் நெருப்பேந்தியவர், கெடில நதி பாயும் திருவதிகை வீரட்டானத்தில் விளங்குபவர்; மெய்ம்மையுடையவர்களுக்கு அருளையும் பொய்மை யுடையவர்களுக்கு மருளும் சேர்ப்பவர்; வீணை வாசித்தவர்; மழுப்படை ஏந்தியவர்; மன் மதனை எரித்தவர்; சிவந்த திருமேனியுடையவர்; திருமகளைத் திருமாலுக்கு ஈந்தவர். அவர் சிவபுரத்தில் மேவும் செல்வர் ஆவார்.

867. கலையாரு நூலங்க மாயி னான்காண்
கலைபயிலுங் கருத்தன்காண் திருத்தமாகி
மலையாகி மறிடலேழ் சூழ்ந்து நின்ற
மண்ணாகி விண்ணாகி நின்றான் தான்காண்
தலையாய மலையெடுத்த  தகவி லோனைத்
தகர்ந்துவிழ வொருவிரலாற் சாதித் தாண்ட
சிலையாரும் மடமகளோர் கூறன் தான்காண்
சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன்தானே.

தெளிவுரை : சிவபெருமான், கற்கப்பெறும் வேதம் ஆகமம் அங்கம் என எல்லாச் சாத்திரங்களும் ஆகியவர்; கலைகளின் கருத்தாக விள்ஙகுபவர்; மலையும் கடலும் ஆகி, மண்ணாகி மண் விண்ணும் ஆகி விளங்குபவர்; மலையெடுத்த இராவணனைத் தகர்ந்து விழுமாறு ஒரு விரலால் ஊன்றி அடர்த்தவர்; உமாதேவியைத் திருமேனியில் ஒரு கூறாக உடையவர். அப் பெருமான் சிவபுரத்தில் மேவும் எம் செல்வராவார்.

திருச்சிற்றம்பலம்

88. திருஓமாம்புலியூர் (அருள்மிகு பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், ஓமாம்புலியூர்,கடலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

868. ஆராரும் மூவிலைவேல் அங்கை யானை
அலைகடல்நஞ் சயின்றானை அமர ரேத்தும்
ஏராரும் மதிபொதியுஞ் சடையி னானை
எழுபிறப்பும் எனையாளா வுடையான் தன்னை
ஊராரும் படநாகம் ஆட்டு வானை
உயர்புகழ்சேர் தரும்ஓமாம் புலியூர் மன்னுஞ்
சீராரும் வடதளியெஞ் செல்வன் தன்னைச்
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.

தெளிவுரை : சிவபெருமான், சூலத்தைக் கையில் ஏந்தியவர்; நஞ்சினை அருந்தி நீலகண்டர் ஆகியவர்; தேவர்கள் ஏத்தச் சந்திரனைச் சடையில் ஏற்றவர்; எல்லாப் பிறப்புக்களிலும் என்னை ஆளாகக் கொண்டுள்ளவர்; ஊர்ந்து செல்லும் நாகத்தைப் பற்றி ஆட்டுபவர். அப் பெருமான் உயர்ந்த புகழ் மன்னும் ஓமாம்புலியூரில் மேவும் சிறப்புடைய வடதளியில் திகழும் எம் செல்வன் ஆவார். அவரை ஏத்தாது திகைத்தவனாய்க் காலத்தைக் கழித்தேனே.

869. ஆதியான் அரிஅயனெனö றறிய வொண்ணா
அமரர்தொழுங் கழலானை யமலன்
சோதிமதி கலைதொலையத் தக்கன் எச்சன்
சுடர்இரவி அயிலெயிறு தொலைவித் தானை
ஓதிமிக அந்தணர்கள் எரிமூன்ற றோம்பும்
உயர்புகழார் தரும்ஓமாம் புலியூர் மன்னும்
தீதில்திரு வடதளியெஞ் செல்வன் தன்னைச்
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.

தெளிவுரை : ஆதிப்பொருளாகிய சிவபெருமான், அரிபிரமர் அறியவொண்ணாத தலைவர்; தேவர்களால் ஏத்தப்படுபவர்; சந்திரனைத் தேய்த்துத் தக்கனையும் எச்சனையும் அழித்துச் சூரியனின் பற்களை உகுத்து வீரம் விளைவித்தவர்; அந்தணர், வதம் ஓதி வேள்வி புரியும் ஓமாம்புலியூரில் விளங்கும் வடதளியில் அப்பரமன் வீற்றிருக்க அவரை ஏத்தித் தொழாது திகைத்தவனாய்க் காலத்தைக் கழித்தேனே.

870. வருமிக்க மதயானை யுரித்தான் தன்னை
வானவர்கோன் தோளனைத்தும் மடிவித் தானைத்
தருமிக்க குழலுமையாள் பாகன் தன்னைச்
சங்கரன்எம் பெருமானைத் தரணி தன்மேல்
உருமிக்க மணிமாடம் நிலாவு வீதி
உத்தமர்வாழ் தரும்ஓமாம் புலியூர் மன்னும்
திருமிக்க வடதளியெஞ் செல்வன் தன்னைச்
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.

தெளிவுரை : சிவபெருமான், மதம் பொருந்திய யானையின் தோலை உரித்தவர்; இந்திரனின் தோளை நெரித்தவர்; கற்பகத் தரு போன்ற உமை பாகர்; உயிர்களுக்கு நலன்களைச் செய்யும் எம் பெருமான் ஆவார். அப்பெருமான், மணிமாடங்கள் நிலவும் உத்தமர்கள் வாழ்கின்ற சிறப்பும் மேவிய ஓமாம் புலியூரில் விளங்கும் வடதளியில் வீற்றிருப்பவர். அவரை ஏத்தித் தொழாது திகைத்தவனாகிக் காலத்தைப் போக்கினேனே.

871. அன்றினவர் புரமூன்றும் பொடியாய் வேவ
அழல்விழித்த கண்ணானை அமரர் கோனை
வென்றிமிகு காலனுயிர் பொன்றி வீழ
விளங்குதிரு வடியெடுத்த விகிர்தன் தன்னை
ஒன்றியசீர் இருபிறப்பர் முத்தீ யோம்பும்
உயர்புகழ்நான் மறைஓமாம் புலியூர் நாளும்
தென்றல்மலி வடதளியெஞ் செல்வன் தன்னைச்
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.

தெளிவுரை : சிவபெருமான், பகைமை கொண்ட அசுரர்களின் மூன்று கோட்டைகளை எரித்தவர்; காலனின் உயிரைக் கவர்தம் பொருட்டுத் திருவடியை எடுத்தவர்; அப் பெருமான், அந்தணர்கள் மூன்று வகையான தீயை வளர்த்து வேள்வியைப் புரியும் ஓமாம் புலியூரில் பரமனை ஏத்தித் தொழாது திகைத்தவனாய்க் காலத்தைக் கழித்தேனே.

872. பாங்குடைய எழில்அங்கி யருச்சனைமுன் விரும்பப்
பரிந்தவனுக் கருள்செய்த பரமன் தன்னைப்
பாங்கிலா நரகதனைத் தொண்ட ரானார்
பாராத வகைபண்ண வல்லான் தன்னை
ஓங்குமதில் புடைதழுவும் எழில்ஓமாம் புலியூர்
உயர்புகழ் தணரேத்த வுலகர்க் கென்றும்
தீங்கில்திரு வடதளியெஞ் செல்வன் தன்னைச்
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.

தெளிவுரை : சிவபெருமான், அருச்சித்து ஏத்திய அக்கினிக்கு அருள் புரிந்தவர்; திருத்தொண்டர்கள், நரகில் வீழாதவாறு காத்தருள வல்லவர்; மதில் திகழும் ஓமாம்புலியூரில் உலகத்தோர்க்குத் தீங்கில்லாது அருள் வழங்கும் வடதளியில் வீற்றிருக்கும் செல்வர்; அப்பெருமானை ஏத்தித் தொழாது திகைத்தவனாய்க் காலத்தைக் கழித்தனனே.

873. அருந்தவத்தோர் தொழுதேத்தும் அம்மான் தன்னை
ஆராத இன்னமுதை அடியார் தம்மேல்
வருந்துயரந் தவிர்ப்பாதனை உமையாள் நங்கை
மணவாள நம்பியைஎந் மருந்த தன்னைப்
பொருந்துபுனல் தழுவுவயல் நிலவு நுங்கப்
பொழில்கெழுவு தரும்ஓமாம் புலியூர் நாளும்
திருந்துதிரு வடதளியெஞ் செல்வன் தன்னைச்
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.

தெளிவுரை : சிவபெருமான், தேவர்களால் ஏத்தப்படுபவர்; இனிய அமுதாகியவர்; அடியவர்களைத் துயரின்றிக் காப்பவர்; உமை மணவாளர்; எனக்க நல் மருந்தாகுபவர்; நீர்வளமும் வயல் வளமும், பொழில் வளமும் விளங்கும் ஓமாம்புலியூரில் மேவும் வடதளியில் வீற்றிருக்கும் எம் செல்வர். அப் பெருமானை ஏத்தித் தொழாது திகைத்தவனாய்க் காலத்தைப் போக்கினேனே.

874. மலையானை வருமலையொன் றுரிசெய் தானை
மறையானை மறையாலும் அறிய வொண்ணாக்
கலையானைக் கலையாருங் கையி னானைக்
கடிவாளை அடியார்கள் துயர மெல்லாம்
உலையாத அந்தணர்கள் வாழும் ஓமாம்
புலியூர்எம் உத்தமனைப் புரம்மூன் றெய்த
சிலையானை வடதளியெஞ் செல்வன் தன்னைச்
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.

தெளிவுரை : சிவபெருமான், கயிலை மலையில் விளங்குபவர்; யானையின் தோலை உரித்தவர்; வேதம் ஆகியவர்; வேதங்களாலும் அறிதற்கு அரிய கலை ஞானம் உடையவர்; கையில் மான் ஏந்தியவர்; அடியவர்களுடைய துன்பங்களைத் தீர்ப்பவர்; அந்தணர்கள் வாழும் ஓமாம்புலியூரில் விளங்கும் உத்தமர்; முப்புரங்களை எரித்த வில்லேந்தியவர். அவர் வடதளியில் மேவும் எம் செல்வர் ஆவார். அப் பெருமானை ஏத்தித் தொழாது திகைத்துக் காலத்தைப் போக்கினேனே.

875. சேர்ந்தோடு மணிக்கங்கை சூடி னானைச்
செழுமதியும் படஅரவும் உடன்வைத் தானைச்
சார்ந்தோர்கட் கினியானைத் தன்னொப் பில்லாத்
தழலுருவைத் தலைமகனைத் தகைநால் வேதம்
ஓர்ந்தோதிப் பயில்வார்வாழ் தருமோமாம் புலியூர்
உள்ளானைக் கள்ளாத அடியார் நெஞ்சிற்
சேர்ந்தானை வடதளியெஞ் செல்வன் தன்னைச்
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.

தெளிவுரை : சிவபெருமான், கங்கையைச் சூடியவர்; சந்திரனையும் நாகத்தையும் உடன் தரித்தவர்; பக்தர்களுக்கு இனியவர்; தன்னொப்பில்லாத அழலுருவானவர்; வேதங்களை ஓதி அந்தணர்கள் பயிலும் ஓமாம்புலியூரில் விளங்குபவர்; அடியவர் உள்ளத்தில் திகழ்பவர்; வடதளியில் மேவும் செல்வர். அப் பெருமானை ஏத்தித் தொழாது திகைத்தவனாய்க் காலத்தைப் போக்கினேனே.

876. வார்கெழுவு முலையுமையாள் வெருவ அன்று
மலையெடுத்த வாளரக்கன் தோளுந் தாளும்
ஏர்கெழுவு சிரம்பத்தும் இறுத்து மீண்டே
இன்னிசை கேட்டிருந்ததானை இமையோர் கோனைப்
பார்கெழுவு புகழ்மறையோர் பயிலும் மாடப்
பைம்பொழில்சேர் தரும்ஓமாம் புலியூர் மன்னும்
சீர்கெழுவு வடதளியெஞ் செல்வன் தன்னைச்
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.

தெளிவுரை : கயிலை மலையை எடுத்த இராவணனுடைய தோளும் தாளும், பத்துத்தலைகளும் நெரிய ஊன்றி மீண்டும் அவனுடைய இனிய இசையைக் கேட்டு அருள் புரிந்த சிவபெருமான், புகழ் மிக்க மறையவர்கள் விளங்கும் ஓமாம்புலியூரில் மேவும் வடதளியில் விளங்கும் செல்வன் ஆவார். அப் பெருமானை ஏத்தித் தொழாது திகைத்தவனாய்க் காலத்தைப் போக்கினேனே.

திருச்சிற்றம்பலம்

89. திரு இன்னம்பர் (அருள்மிகு எழுத்தறிநாதர் திருக்கோயில், இன்னம்பூர், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

877. அல்லிமலர் நாற்றத் துள்ளார் போலும்
அன்புடையார் சிந்தை அகலார் போலுஞ்
சொல்லின் அருமறைகள் தாமே போலுந்
தூநெறிக்க வழிகாட்டுந் தொழிலார் போலும்
வில்லிற் புரமூன் றெரித்தார் போலும்
வீங்கிருளும் நல்வெளியு மானார் போலும்
எல்லி நடமாட வல்லார் போலும்
இன்னம்பர்த் தான்தோன்றீ யீச னாரே.

தெளிவுரை : சிவபெருமான், அக இதழ்களையுடைய மலர்களின் நறுமணத்தில் உள்ளவர்; அன்புடைய பண்பாளர்களின் சிந்தையில் விளங்குபவர்; சொற்களில் அருமையுடைய வேதங்களாகியவர்; தூய நெறியைக் காட்டியருள்பவர்; வில்லேந்தி முப்புரங்களை எரித்தவர்; தோற்றம் பெறாத வெளியும் மேன்மையுடன் மேவும் பேரொளியுமாக விளங்குபவர்; மயானத்தில் இரவில் நடம் புரியவல்லவர். அவர் இன்னம்பரில் மேவும் தான்தோன்றீசர் ஆவர். இத்தலத்தில் மேவும் ஈசனின் திருப்பெயர் இவண் ஓதப் பெற்றது.

878. கோழிக் கொடியோன்தன் தாதை போலும்
கொம்பனாள் பாகங் குளிர்ந்தார் போலும்
ஊழி முதல்வரும் தாமே போலும்
உள்குவா ருள்ளத்தி னுள்ளார் போலும
ஆழித்தேர் வித்தகருந் தாமே போலும்
அடைந்தவர்கட் கன்பராய் நின்றார் போலும்
ஏழு பிறவிக்குந் தாமே போலும்
இன்னம்பர்த் தான்தோன்றீ யீச னாரே.

தெளிவுரை : சிவபெருமான், சேவற்கொடியேந்திய குமாரக கடவுளின் தந்தையாவர்; உமாதேவியைப் பாகத்தில் ஏற்று மகிழ்ந்தவர்; ஊழியின் முதல்வராக யாண்டும் நிலைத்திருப்பவர்; தன்னை நினைந்து ஏத்தும் அடியவரின் உள்ளத்தில் ஒளிர்பவர்; சுழல்கின்ற சூரிய சந்திரர்களாகிய சக்கரங்களில் ஊர்பவர்; அன்பர்கள் அடைகின்ற பிறவிகளில் தாமே துணையாகி விளங்குபவர். அப் பெருமான் இன்னம்பரில் மேவும் தான்தோன்றீசர் ஆவார்.

879. தொண்டர்கள் தம்தகவி னுள்ளார் போலும்
தூநெறிக்குந் தூநெறியாய் நின்றார் போலும்
பண்டிருவர் காணாப் படியார் போலும்
பத்தர்கள்தம் சித்தத் திருந்தார் போலும்
கண்டம் இறையே கறுத்தார் போலும்
காமனையுங் காலனையுங் காய்ந்தார் போலும்
இண்டைச் சடைசேர் முடியார் போலும்
இன்னம்பர்த் தான்தோன்றீ யீச னாரே.

தெளிவுரை : சிவபெருமான், திருத்தொண்டர்களின் உள்ளத்தில் உள்ளவர்; தூயநெறியானவர்; மாலயனால் காணப் பெறாதவர்க்கு அரியதோர் தீப் பிழம்பானவர்; பத்தர்களின் சித்தத்தில் இருப்பவர்; நீலகண்டத்தையுடையவர்; மன்மதனை எரித்தும் காலனை உதைத்தும் வீரச்செயலை நாட்டியவர்; சடையில் இண்டைமாலை தரித்தவர். அப் பெருமான் இன்னம்பரில் மேவும் தான்தோன்றீசர் ஆவார்.

880. வானத் திளந்திங்கட் கண்ணி தன்னை
வளர்சடைமேல் வைத்துகந்த மைந்தர் போலும்
ஊனொத்த வேலொன் றுடையார் போலும்
ஒளிநீறு பூசு மொருவர் போலும்
தானத்தின் முப்பொழுதுந் தாமே போலும்
தம்மிற் பிறர்பெரியா ரில்லார் போலும்
ஏனத் தெயிறிலங்கப் பூண்டார் போலும்
இன்னம்பர்த் தான்தோன்றீ யீச னாரே.

தெளிவுரை : சிவபெருமான், சடையில் இளமையான பிறைச்சந்திரனைச் சூடியவர்; சூலப்படையுடையவர்; திருநீறு பூசியவர்; யாவர்க்கும் படியளக்கும் இறைவன் ஆகியவர்; தனக்கு மேலாக யாரும் இல்லாதவர்; பன்றியின் கொம்பை ஆபரணமாகப் பூண்டவர். அப்பெருமான் இன்னம்பரில் மேவும் தான்தோன்றீசர் ஆவார்.

881. சூழுந் துயரம் அறுப்பார் போலும்
தோற்றம் இறுதியாய் நின்றார் போலும்
ஆழுங் கடல்நஞ்சை யுண்டார் போலும்
ஆடலுகந்த அழகர் போலும்
தாழ்வின் மனத்தேனை யாளாக் கொண்டு
தன்மை யளித்த தலைவர் போலும்
ஏழு பிறப்பு மறுப்பார் போலும்
இன்னம்பர்த் தான்தோன்றீ யீச னாரே.

தெளிவுரை : சிவபெருமான், அடியவர்களின் துயர்தீர்ப்பவர்; எல்லாப் பொருள்களுக்கும் தோற்றமும் இறுதியாகவும் நிற்பவர்; நஞ்சினை உட் கொண்டவர்; திருநடனம் புரிபவர்; அடியவனை ஆளாகக் கொண்டவர்; பிறப்பினை அறுப்பவர். அப் பெருமான் இன்னம்பரில் மேவும் தான்தோன்றீசர் ஆவார்.

882. பாதத் தணையுஞ் சிலம்பர் போலும்
பாரூர் விடையொன் றுடையார் போலும்
பூதப் படையாள் புனிதர் போலும்
பூம்புகலூர் மேய புராணர் போலும்
வேதப் பொருளாய் விளைவார் போலும்
வேடம் பரவித் திரியுந் தொண்டர்
ஏதப் படாவண்ணம் நின்றார் போலும்
இன்னம்பர்த் தான்தோன்றீ யீச னாரே.

தெளிவுரை : சிவபெருமான், பாதத்தில் சிலம்பு அணிந்தவர்; இடபத்தை வாகனமாக உடையவர்; பூத கணங்களைப் படையாகக் கொண்டவர்; பூம்புகலூரில் விளங்குபவர்; வேதத்தின் பொருளானவர்; திருவேடங்கள் பல உடையவராகி ஊர்தோறும் திரிபவராகிச் சிவாலயங்களைத் தரிசிக்கும் அன்பர்களுக்கு இடர் நேராதவாறு துணை நிற்பவர். அப்பெருமான் இன்னம்பரில் மேவும் தான்தோன்றீசர் ஆவார்.

883. பல்லார் தலையோட்டில் ஊணார் போலும்
பத்தர்கள்தம் சித்தத் திருந்தார் போலும்
கல்லாதார் காட்சிக் கரியார் போலும்
கற்றவர்கள் ஏதங் களைவார் போலும்
பொல்லாத பூதப் படையார் போலும்
பொருகடலும் ஏழ்மையுந் தாமே போலும்
எல்லாரு மேத்தத் தகுவார் போலும்
இன்னம்பர்த் தான்தோன்றீ யீச னாரே.

தெளிவுரை : சிவபெருமான், கபாலம் ஏந்திப் பலியேற்று உண்பவர்; பக்தர்களின் சித்தத்தில் விளங்குபவர்; பத்தி இல்லாதவர்கள்பால் நெருங்காதவர்; ஏத்தும் அடியவர்களின் குற்றங்களைக் களைபவர்; பூதகணங்களைப் படையாகக் கொண்டவர்; கடல்களும் மலைகளுமாய் விளங்குபவர்; எல்லோரும் ஏத்தும் பெருமான் ஆவார். அவர், இன்னம்பரில் மேவும் தான்தோன்றீசர் ஆவார்.

884. மட்டு மலியுஞ் சடையார் போலும்
மாதையோர் பாக முடையார் போலும்
கட்டம் பிணிகள் தவிர்ப்பார் போலும்
காலன்தன் வாழ்நாள் கழிப்பார் போலும்
நடமட் பயின்றாடும் நம்பர் போலும்
ஞாலமெரி நீர்வெளிகா லானார் போலும்
எட்டுத் திசைகளுந் தாமே போலும்
இன்னம்பர்த் தான்தோன்றீ யீச னாரே.

தெளிவுரை : தேன் துளிர்க்கும் கொன்றை முதலான மலர்களைச் சூடிய சடையுடைய சிவபெருமான் உமைபாகர்; துன்பம், பிணி ஆகியவற்றைத் தீர்ப்பவர்; காலனை அழித்தவர்; நடனம் புரிந்தவர்; ஐம்பூதங்கள் ஆனவர்; எட்டுத் திசைகளும் ஆனவர். அவர் இன்னம்பரில் மேவும் தான்தோன்றீசர் ஆவார்.

885. கருவுற்ற காலத்தே யென்னை ஆண்டு
கழற்போது தந்தளித்த கள்வர் போலும்
செருவிற் புரமூன்றும் அட்டார் போலும்
தேவர்க்குந் தேவராஞ் செல்வர் போலும்
மருவிப் பிரியாத மைந்தர் போலும்
மலரடிகள் நாடி வணங்க லுற்ற
இருவர்க் கொருவராய் நின்றார் போலும்
இன்னம்பர்த் தான்தோன்றீ யீச னாரே.

தெளிவுரை : சிவபெருமான், நான் கருவுற்ற காலத்திலிருந்து என்னை ஆட்கொண்டு அருளும் பெற்றிமையுடையவர்; முப்புரங்களைப் போர் செய்து எரித்து அழித்தவர்; தேவர்களுக்கெல்லாம் கடவுளாகியவர்; திருவடியை வணங்கியேத்திய நான்முகற்கும் திருமாலுக்கும் ஒப்பற்றவராய் நெடிது உயர்ந்தவர். அவர் இன்னம்பரில் மேவும் தான்தோன்றீசர் ஆவார்.

886. அலங்கற் சடைதாழ ஐய மேற்று
அரவம் அரையார்க்க வல்லார் போலும்
வலங்கை மழுவொண் றுடையார் போலும்
வான்தக்கன் வேள்வி சிதைத்தார் போலும்
விலங்கல் எடுத்துகந்த வெற்றி யானை
விறலழித்து மெய்ந்நரம்பால் கீதங் கேட்டன்
றிலங்கு சுடர்வாள் கொடுத்தார் போலும்
இன்னம்பர்த் தான்தோன்றீ யீச னாரே.

தெளிவுரை : சிவபெருமான், சடையை விரித்துப் பாம்பை அரையில் கட்டிப் பலியேற்றவர்; வலக்கையில் மழுப்படையுடையவர்; தக்கனின் வேள்வியைச் சிதைத்தவர்; மலையைப் பெயர்த்த இராவணனுடைய வீரத்தை அழித்தவர்; அவன் இசை பாடி ஏத்த அருள் புரிந்தவர். அப்பெருமான் இன்னம்பரில் மேவும் தான்தோன்றீசர் ஆவார்.

திருச்சிற்றம்பலம்

90. திருக்கஞ்சனூர் (அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், கஞ்சனூர், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

887. மூவிலைநற் சூலம்வலன் ஏந்தி னானை
மூன்றுசுடர்க் கண்ணானை மூர்த்தி தன்னை
நாவலனை நரைவிடையொன் றேறு வானை
நால்வேதம் ஆறங்க மாயி னானை
ஆவினிலைந் துகந்தானை அமரர் கோவை
அயந்திருமா லானானை அனலோன் போற்றுங்
காவலனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

தெளிவுரை : சிவபெருமான், சூலத்தை ஏந்தியவர்; மூன்று சுடர்களாகிய சூரியன், சந்திரன், அக்கினி என முக்கண்களை யுடையவர்; வேதமும் தமிழும் உரைத்த நாவலர்; வெள்ளை இடபத்தை வாகனமாக உடையவர்; நான்கு வேதங்களும், ஆறு அங்கங்களும் ஆனவர்; பசுவின் பஞ்ச கவ்வியத்தைப் பூசைப் பொருளாக ஏற்று மகிழ்பவர்; தேவர்களின் தலைவர்; அயனும் மாலும் ஆனவர்; அக்கினி தேவனால் ஏத்தி வழிபடப் பெற்றவர். அப் பெருமான் கஞ்சனூரின் தலைவராய் விளங்க, அக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு உய்ந்தேன்.

888. தலையேந்து கையானை யென்பார்த் தானைச்
சவந்தாங்கு தோளானைச் சாம்ப லானைக்
குலையேறு நறுங்கொன்றை முடிமேல் வைத்துக்
கோணாக மசைத்தானைக் குலமாங் கைலை
மலையானை மற்றொப்பா ரில்லா தானை
மதிகதிரும் வானவரும் மாலும் போற்றுங்
கலையானைக் கஞ்சனூ ராண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

தெளிவுரை : சிவபெருமான், கையில் கபாலம் ஏந்தியவர்; எலும்பு மாலையுடையவர்; எலும்புக் கூட்டினைத் தாங்குபவர்; சடை முடியில் கொன்றை மாலை சூடியவர்; நாகத்தை அரையில் கட்டியவர்; கயிலை மலைக்கும் உரியவர்; தனக்கு உவமையாக யாரும் இல்லாதவர்; சந்திரன், சூரியன், திருமால் மற்றும் தேவர்கள் ஏத்தும் தலைவர்; மானைக் கரத்தில் ஏந்தியுள்ளவர். கஞ்சனூரில் மேவும் அத்தலைவரை கண்டு உய்ந்தேன்.

889. தொண்டர்குழாம் தொழுதேத்த அருள்செய் வானைச்
சுடர்மழுவாட் படையானைச் சுழிவான் கங்கைத்
தெண்டிரைகள் பொருதிழிசெஞ் சடையி னானைச்
செக்கர்வா னொளியானைச் சேரா தெண்ணிப்
பண்டமரர் கொண்டுகந்த வேள்வி யெல்லாம்
பாழ்படுத்துத் தலையறுத்துப் பற்கண் கொண்ட
கண்டகனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

தெளிவுரை : சிவபெருமான், தொழுது ஏத்தும் தொண்டர்களுக்கு அருள் செய்பவர்; மழுப்படையுடையவர்; கங்கையைச் சடையில் தரித்தவர்; சிவந்த திருமேனியுடையவர்; தக்கன் செய்த வேள்வியைத் தகர்த்துத் தக்கனையும் எச்சனையும் அழித்துச் சூரியனுடைய பல்லை உகுத்துப் பகனுடைய கண்ணைப் பறித்தவர். அப் பெருமான், கஞ்சனூரில் மேவும் தலைவர். அவரைக் கண்டு உய்ந்தேன்.

890. விண்ணவனை மேருவில்லா வுடையான் தன்னை
மெய்யாகிப் பொய்யாகி விதியா னானைப்
பெண்ணவனை ஆணவனைப் பித்தன்தன்னைப்
பிணமிடுகா டுடையானைப் பெருந்தக் கோனை
எண்ணவனை எண்டிசையுங் கீழும் மேலும்
இருவிசும்பும் இருநிலமும் மாகித் தோன்றுங்
கண்ணவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

தெளிவுரை : சிவபெருமான், யாவர்க்கும் மேலானவர்; மேருவை வில்லாக உடையவர்; அருளுடையவர்களுக்கு மெய்ம்மையுடையவராகவும் அது அற்றவர்களுக்கு அற்றவராகவும், யாவர்க்கும் அவரவர் விதியாகவும் ஆனவர்; பெண்ணாகவும் ஆணாகவும் விளங்குபவர்; அடியவர்பால் பித்து உடையவர்; மயானத்தில் இருப்பவர்; பெருந்தகுதிக்கு உரியபெருமானாகவும், எட்டுத் திசைகளாகவும், கீழும், மேலும் ஆகவும் நிலமாகவும் வானாகவும் விளங்குபவர். கஞ்சனூரில் மேவும் அப்பரமனைக் கண்டு உய்ந்தேன்.

891. உருத்திரனை உமாபதியை உலகா ளானை
உத்தமனை நித்திலத்தை ஒருவன் தன்னைப்
பருப்பதத்தைப் பஞ்சவடி மார்பி னானைப்
பகலிரவாய் நீர்வெளியாய்ப் பரந்து நின்ற
நெருப்பதனை நித்திலத்தின் தொத்தொப் பானை
நீறணிந்த மேனியராய் நினைவார் சிந்தைக்
கருத்தவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

தெளிவுரை : சிவபெருமான் துன்பத்தைத் தீர்க்கும் உருத்திரனாகவும், உமாபதியாகவும், உலகாகவும், உத்தமனாகவும், முத்தாகவும் மேவி விளங்கும் ஒப்பற்றவர்; மலையாக விளங்குபவர்; முப்புரி நூல் மார்பினர்; பகலும் இரவும் ஆகிய காலங்கள் ஆகியவர்; நீர், நெருப்பு, ஆகாயம் என விரிந்து மேவியவர். முத்துக்குவியலாகும் ஒண் சோதியானவர்; திருநீறணிந்த திருமேனியுடையவர்; நினைந்து ஏத்தும் அன்பர்களின் கருத்தாகுபவர். கஞ்சனூரில் மேவும் அப்பரமனை நான் கண்ணாரக்கண்டு உய்ந்தேன்.

892. ஏடேறு மலர்க்கொன்றை யரவு தும்பை
இளமதியம் எருக்குவா னிழிந்த கங்கை
சேடெறிந்த சடையானைத் தேவர் கோவைச்
செம்பொன்மால் வரையானைச் சேர்ந்தார்சிந்தைக்
கேடிலியைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
கிறிபேசி மடவார்பெய் வளைகள் கொள்ளுங்
காடவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

தெளிவுரை : சிவபெருமான், கொன்றைமலர், பாம்பு, தும்பை, பிறைச்சந்திரன், எருக்கு, கங்கை ஆகியவற்றை சடையில் தரித்தவர்; பொன்மலை போன்றவர்; கீழ்வேளூரில் மேவும் கேடிலியப்பர்; மடவார்தம் வளையல்களைக் கொள்பவர்; கஞ்சனூரில் மேவிய அத்தலைவரைக் கண்ணாரக் கண்டு உய்ந்தேன்.

893. நாரணனும் நான்முகனும் அறியா தானை
நால்வேதத் துருவானை நம்பி தன்னைப்
பாரிடங்கள் பணிசெய்யப் பலிகொண் டுண்ணும்
பால்வணனைத் தீவணனைப் பகலா னானை
வார்பொதியும் முலையாளோர் கூறன் தன்னை
மானிடங்கை யுடையானை மலிவார் கண்டங்
கார்பொதியுங் கஞ்சனூ ராண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

தெளிவுரை : சிவபெருமான், நாரணனும் நான்முகனும் அறியாதவாறு நெடிது நெருப்புப் பிழம்பாக ஓங்கியவர்; நான்கு வேதங்களின் வடிவானவர்; பூதங்கள் பணி செய்து விளங்கப் பலியேற்று உண்பவர்; பால் போன்ற திருநீறு அணிந்தவர்; நெருப்புப் போன்ற சுடர்மிகும் சிவந்த திருமேனியுடையவர்; சூரியனாகத் திகழ்பவர்; உமாதேவியைப் பாகமாக உடையவர்; இடது கையில் மானை ஏந்தியவர்; கரிய கண்டத்தை யுடையவர்; கஞ்சனூரில் மேவும் தலைவர். அப் பெருமானைக் கண்ணாரக் கண்டு உய்ந்தேன்.

894. வானவனை வலிவலமும் மறைக்காட் டானை
மதிசூடும் பெருமானை மறையோன் தன்னை
ஏனவனை இமவான்றன் பேதை யோடும்
இனிதிருந்த பெருமானை ஏத்து வார்க்குத்
தேனவனைத் தித்திக்கும் பெருமான் தன்னைத்
தீதிலா மறையோனைத் தேவர் போற்றுங்
கானவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

தெளிவுரை : சிவபெருமான், யாவர்க்கும் மேலானவர்; திருவலிவலம், திருமறைக்காடு ஆகிய தலங்களில் மேவியவர; பிறைசூடிய மறையோனாகவும் மற்றும் ஏனைய தன்மையராகவும் விளங்குபவர்; உமாதேவியாரோடு இனிது வீற்றிருப்பவர்; ஏத்திப் போற்றும் அன்பர்களுக்குத் தேன் போன்றவர்; தேவர்கள் போற்றும் தன்மையில் காட்டில் அருச்சுனனுக்கு அருளும் திருக்குறிப்பில் வேடுவனாகத் திகழ்ந்தவர். கஞ்சனூரில் மேவும் அத்தலைவரைக் கண்டு உய்ந்தேன்.

895. நெருப்புருவத் திரமேனி வெண்ணீற் றானை
நினைப்பார்தம் நெஞ்சானை நிறைவா னானைத்
தருக்கழிய முயலகன்மேல் தாள்வைத் தானைச்
சலந்தரனைத் தடிந்தோனைத் தக்கோர் சிந்தை
விருப்பவனை விதியானை வெண்ணீற் றானை
விளங்கொளியாய் மெய்யாகி மிக்கோர் போற்றுங்
கருத்தவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

தெளிவுரை : சிவபெருமான் நெருப்புப் போன்ற சிவந்த திருமேனியில் வெண்ணீறு தரித்தவர்; நினைவோரின் நெஞ்சில் நிறைபவர்; முயலகன் மேல் தாள் வைத்து நடனம் புரிபவர்; சலந்தராசூரனை அழித்தவர்; ஞானிகளின் சிந்தையில் விளங்குபவர்; யாவற்றுக்கும் விதியானவர்; திருவெண்ணீறாகத் திகழ்பவர்; ஒளியாகியவர்; தேவர்கள் போற்றும் கருத்தாகியவர். கஞ்சனூரில் மேவும் அக்கோவைக் கண்ணாரக் கண்டு உய்ந்தேன்.

896. மடலாழித் தாமரைஆ யிரத்தி லொன்று
மலர்க்கணிடந் திடுதலுமே மலிவான் கோலச்
சுடராழி நெடுமாலுக் கருள்செய் தானைத்
தும்பியுரி போர்த்தானைத் தோழன் விட்ட
அடலாழித் தேருடைய இலங்கைக் கோனை
அருவரைக்கீழ் அடர்த்தானை அருளார் கருணைக்
கடலாணைக் கஞ்சனூ ராண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

தெளிவுரை : திருமாலுக்கு ஆழியை அருள் செய்த சிவபெருமான், யானையின் தோலைப் போர்த்தியுள்ளவர்; தனது தோழனாகிய குபேரனின் விமானத்தைக் கவர்ந்த இராவணனை மலையின்கீழ் அடர்த்துப் பின்னர் அருள் செய்தவர். கஞ்சனூரில் ஓங்கும் அத்தலைவரைக் கண்டு உய்ந்தேன்.

திருச்சிற்றம்பலம்

91. திருஎறும்பியூர் (அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில், திருவெறும்பூர், திருச்சி மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

897. பன்னியசேந் தமிழறியேன் கவியேன் மாட்டேன்
எண்ணேடு பண்ணிறைந்த கலைக ளாய்
தன்னையுந்தன் திறத்தறியாப் பொறியி லேனைத்
தன்திறமும் அறிவித்து நெறியுங் காட்டி
அன்னையையும் அத்தனையும் போல அன்பாய்
அடைந் தேனைத் தொடர்ந்தென்னை யாளாக் கொண்ட
தென்எறும்பியூர் மலைமேல் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான் பெருமைமிக்க செந்தமிழின் திறம் அறியாதவனாகிய எனக்கு அருள் திறத்தை அறிவித்து அதன் நெறியைக் காட்டியவர்; அன்பாய் விளங்கி அன்னையும் தந்தையும் ஆகி ஆதரித்து அருள் செய்து ஆளாகக் கொண்டவர்; எறும்பியூரில் மேவும் மாணிக்கநாதர். நான் அப் பெருமானை அடையப் பெற்றேன் !

898. பளிங்கின்நிழ லுட்பதித்த சோதி யானைப்
பசுபதியைப் பாசுபத வேடத் தானை
விளித்தெழுந்த சலந்தரனை வீட்டி னானை
வேதியனை விண்ணவனை மேவி வையம்
அளந்தவனை நான்முகனை அல்லல் தீர்க்கும்
அருமருந்தை ஆமா றறிந்தென் உள்ளந்
தெளிந்தெறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், பளிங்கு போன்று ஒளிரும் சோதியானவர்; உயிர்க்கெலாம் தலைவர்; பாசுபத வேடத்தினர்; சலந்தராசூரனை அழித்தவர்; வேதங்களின் தலைவர்; யாவர்க்கும் மேலானவர்; உலகளந்த திருமாலாக விளங்குபவர்; படைக்கும் நான்முகனாகியவர்; அல்லல் தீர்க்கும் அருமருந்தாகியவர்; என்னை ஆட்கொள்ளும் தன்மையில் உள்ளம் தெளியச் செய்தவர்; எறும்பியூர் மலைமேல் விளங்கும் மாணிக்கநாதர். செழுஞ்சுடராகிய அப்பெருமானை நான் அடையப் பெற்றேன்.

899. கருவையென்றன் மனத்திருந்த கருத்தை ஞானக்
கடுஞ்சுடரைப் படித்துகிடந் தமரர் ஏத்தும்
உருவையண்டத் தொருமுதலை யோத வேலி
யுலகினிறை தொழிலிறுதி நடுவாய் நின்ற
மருவைவென்ற குழல்மடவாள் பாகம் வைத்த
மயானத்து மாசிலா மணியை வாசத்
திருவெறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

தெளிவுரை :  சிவபெருமான், கருப்பொருளாகவும், மனத்தில் மேவும் கருத்தாகவும், ஞானச் சுடராகவும், அமரர் ஏத்தும் உருவாகவும் விளங்குபவர்; உலகின் முதல் இறுதி நடு என முழுவதும் ஆகித் திகழ்பவர்; உமைபாகர்; மயானத்தில் ஒளிரும் மாசிலாமணியானவர்; எறும்பியூர் மலைமேல் விளங்கும் மாணிக்கநாதர். செழுஞ்சுடராகிய அப்பெருமானை நான் அடையப் பெற்றேன்.

900. பகழிபொழில் தடலரக்கர் புரங்கள் மூன்றும்
பாழ்படுத்த பரஞ்சுடரைப் பரிந்து தன்னைப்
புகழுமன்பர்க் கின்பமரும் அமுதைத் தேனைப்
புண்ணியனைப் புவனியது முழுதும் போத
உமிழும் அம்பொற் குன்றத்தை முத்தின் தூணை
உமையவள்தம் பெருமானை இமையே ரேத்தும்
திகழெறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், முப்புர அசுரர்களை அக்கினிக் கணை தொடுத்து அழித்தவர்; புகழ்ந்து ஏத்தும் அன்பர்களுக்கு இனிமைதரும் அமுதம் ஆனவர்; புண்ணியனாக விளங்குபவர்; பொன் மலையாகவும், முத்துத் தூணாகவும், உமாதேவியின் தலைவராகவும், ஏத்தும் எறும்பியூர் மலைமேல் மேவும் மாணிக்கநாதராகவும் விளங்குபவர். அச் செழுஞ் சுடரை நான் அடையப் பெற்றேன்.

901. பாரிடங்க ளுடன்பாடப் பயின்று நட்டம்
பயில்வானை அயில்வாய சூல மேந்தி
நேரிடும்போர் மிகவல்ல நிமலன் தன்னை
நின்மலனை அம்மலர்கொண் டயனும் மாலும்
பாரிடந்தும் மேலுயர்ந்துங் காணா வண்ணம்
பரந்தானை நிமிர்ந்துமுனி கணங்க ளேத்துஞ்
சீரெறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், பூதங்களுடன் மேவி நடனம் புரிபவர்; சூலப்படையுடையவர்; அயனும் மாலும் ஏத்தக் காணாவண்ணம் நிமிர்ந்து ஓங்கியவர்; முனிவர் கணங்கள் ஏத்தும் எறும்பியூர் மலைமேல் திகழும் மாணிக்கநாதர். அச் செழுஞ்சுடரை நான் அடையப் பெற்றேன்.

902. கார்முகிலாய்ப் பொழிவானைப் பொழிந்த முன்னீர்
கரப்பானைக் கடியநடை விடையொன் றேறி
ஊர்பலவுந் திரிவானை ஊர தாக
ஒற்றியூ ருடையனாய் முற்றும் ஆண்டு
பேரெழுத்தொன் றுடையானைப் பிரம னோடு
மாலவனும் இந்திரன்மந் திரத்தா லேத்துஞ்
சீரெறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், மேகம் போன்றவர்; மழையாய் விளங்குபவர்; பொழிந்த நீரைக் கதிரவனாய் ஒளிர்ந்து கவர்பவர்; இடபத்தில் ஏறிப் பல ஊர்களிலும் திரிபவர்; திருவொற்றியூரில் விளங்குபவர்; பேரெழுத்தாகிய பிரணவமாகத் திகழ்பவர்; பிரமன், திருமால், இந்திரன் ஆகியோர் ஏத்தும் எறும்பியூர் மலைமேல் மேவும் மாணிக்கநாதர். அச்செழுஞ் சுடரை நான் அடையப் பெற்றேன். திருமால் பிரமன் முதலானோர் வழிபட்ட திருத்தலச் சிறப்பானது இத் திருப்பாட்டில் உணர்த்தப் பெற்றதைக் காண்க.

903. நீணிலவும் அந்தீயும் நீரும் மற்றை
நெறியிலங்கு மிருகாலும் ஆகா சம்மும்
வாணிலவு தாரகையும் மண்ணும் விண்ணும்
மன்னுயிரும் என்னுயிருந் தானாய் செம்பொன்
ஆணியென்று மஞ்சனமா மலையே யென்றும்
அம்பவளத் திரளென்றும் அறிந்தோ ரேத்துஞ்
சேணெறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், நிலவும், நெருப்பும், நீரும், காற்றும், ஆகாயமும், விண்மீன்களும், மண்ணுலகமும், விண்ணுலகமும், மன்னுயிரும், என்னுயிரும் ஆகியவர்; பொன்மலையாகவும், நீல மலையாகவும், பவளத்திரள் எனவும் ஏத்த எறும்பியூரில் மேவும் மாணிக்கநாதர். அஞ்செழுஞ்சுடரை நான் அடையப் பெற்றேன்.

904. அறந்தெறியா ஊத்தைவாய் அறிவில் சிந்தை
யாரம்பக் குண்டரோ டயர்த்து நாளும்
மறந்துமரன் திருவடிகள் நினைய மாட்டா
மதியிலியேன் வாழ்வெலாம் வாளா மண்மேற்
பிறந்தநாள் நாளல்ல வாளா ஈசன்
பேர்பிதற்றிச் சீரடிமைத் திறத்து ளன்பு
செறிந்தெறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

தெளிவுரை : அறத்தின் நற்றன்மையை உணராது வெற்றுச் சொற்களைச் கூறிச் சிவபெருமானுடைய திருவடியை ஏத்தாத சமண்நெறியில் வாழ்க்கையைக்  கழித்தநாள் மெய்யான நாள் ஆகாது. ஈசனின் திருவைந்தெழுத்தை ஓதி அடிமைத்திறத்தில் அன்பு மேலிட்டுச் செறிந்த அன்புடன் எறும்பியூர் மலை மேல் மேவும் மாணிக்கத்தைச் சென்றடையப் பெற்றேன். அதுவே நற்பயனைத் தந்தது என்பது குறிப்பு.

905. அறிவிலங்கு மனத்தானை அறிவார்க் கன்றி
அறியாதார் தந்திறத்தொன் றறியா தானைப்
பொறியிலங்கு வாளரவம் புனைந்து பூண்ட
புண்ணியனைப் பொருதிரைவாய் நஞ்ச முண்ட
குறியிலங்கு மிடற்றானை மடற்றேன் கொன்றைச்
சடையானை மடைதோறுங் கமல மென்பூச்
செறியெறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், தன்னை அறியும் அன்பர்களின் மனத்தில் உள்ளவர்; அவ்வாறு அறிபவர்களுக்கு அன்றி, அறியாதார் மனத்தில் மேவாதவர்; அரவத்தை மாலையாகவும் ஆபரணமாகவும் உடைய புண்ணியன்; கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு மிடற்றில் தேக்கியவர்; தேன் துளிர்க்கும் கொன்றை மலரைச் சடையில் தரித்தவர்; மடையில் தாமரை மலர் விளங்கும் சிறப்புடைய எறும்பியூரில் மலை மேல் விளங்கும் மாணிக்கம் ஆனவர். அச் செழுஞ்சுடரைச் சென்று நான் அடைய யாவும் பெற்றேன். ஈசனின் இன்னருளைப் பெற்ற தன்மையானது யாவும் பெற்றேன் என்பதாயிற்று.

906. அருந்தவத்தின் பெருவலியா லறிவ தின்றி
அடலரக்கன் தடவரையை யெடுத்தான் திண்டோள்
முரிந்துநெரிந் தழிந்துபா தாள முற்று
முன்கைநரம் பினையெடுத்துக் கீதம் பாட
இருந்தவனை யேழுலகு மாக்கி னானை
யெம்மானைக் கைம்மாவி னுரிவை போர்த்த
திருந்தெறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

தெளிவுரை : அரிய தவத்தில் மேம்பட்டவனாகிக் கயிலை மலையை எடுத்த இராவணனுடைய தோள் முரிந்து நெரியுமாறு செய்த சிவபெருமான், அவ்வரக்கனின் இனிய இசை கேட்டு அருள் புரிந்தவர். அவர். யானையின் தோலை உரித்துப் போர்வையாகக் கொண்டவர். அப் பெருமான், எறும்பியூர் மலைமேல் மேவும் மாணிக்கமாகிய செழுஞ்சுடர் ஆவார். அவரைச் சென்று அடையப் பெற்றேன்.

திருச்சிற்றம்பலம்

92. திருக்கழுக்குன்றம் (அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில், திருக்கழுகுன்றம், காஞ்சிபுரம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

907. மூவிலைவேற் கையானை மூர்த்தி தன்னை
முதுபிணக்கா டுடையானை முதலா னானை
ஆவினிலைந் துகந்தானை அமரர் கோனை
ஆலால முண்டுகந்த ஐயன் தன்னைப்
பூவினின்மேல் நான்முகனும் மாலும் போற்றப்
புணர்வரிய பெருமானைப் புனிதன் தன்னைப்
காவலனைக் கழுக்குன்றம் அமர்ந்தான் தன்னைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், கையில் சூலம் ஏந்தியவர்; மயானத்தில் ஆடுபவர்; யாவற்றுக்கும் முதலானவர்; பசுவின் பஞ்ச கவ்வியத்தால் பூசிக்க உகந்து ஏற்பவர்; தேவர்களின் நாயகர்; ஆலகால விடத்தை உண்டு உகந்த தலைவர்; நான்முகனும் திருமாலும் போற்றவும் காணற்கு அரிய பெருமானாகியவர்; புனிதனாக விளங்குபவர்; யாவற்றையும் காத்தருளும் தெய்வமாகத் திகழ்பவர். அப்பெருமான், கழுக்குன்றத்தில் அமர்ந்து விளங்குபவர். கற்பகமாகிய அப்பெருமானை நான் கண்ணாரக் கண்டேன்.

908. பல்லாடு தலைசடைமே லுடையான் தன்னைப்
பாய்புலித்தோ லுடையானைப் பகவன் தன்னைச்
சொல்லோடு பொருளனைத்து மானான் தன்னைச்
சுடருருவில் என்பறாக் கோலத் தானை
அல்லாத காலனைமுன் னடர்த்தான் தன்னை
ஆலின்கீழ் இருந்தானை அமுதா னானைக்
கல்லாடை புனைந்தருளுங் காபாலியைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

தெளிவுரை : சிவபெருமான், வெண்டலையைச் (மண்டையோடு) சடைமேல் கொண்டு விளங்குபவர்; புலித்தோலை உடுத்தியவர்; சொல்லும் அதற்குரிய  பொருள் விளக்கமும் ஆகியவர்; சுடர் மயமாகத் திகழ்பவராகி, எலும்பு மாலை அணிந்தவர்; முறைமையற்ற செயலைப் புரிந்த காலனை அடர்ந்தவர்; ஆல் நிழலில் மேவி அறம் உரைத்தவர்; அமுதம் போன்று அன்புடையார்க்கு ஆகுபவர்; காவியணிந்த காபாலி யானவர். அப் பெருமான், கற்பகம் போன்று விளங்கக் கண்ணாரக் கண்டேன்.

திருச்சிற்றம்பலம்

93. பொது - பலவகைத் திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

909. நேர்தொருத்தி யொருபாகத் தடங்கக் கண்டு
நிலைதளர ஆயிரமா முகத்தி னோடு
பாய்ந்தொருத்தி படர்சடைமேற் பயிலக் கண்டு
படஅரவும் பனிமதியும் வைத்த செல்வவ்
தாந்திருத்தித் தம்மனத்தை யொருக்காத் தொண்டர்
தனித் தொருதண் டூன்றிமெய் தளவா முன்னம்
பூந்துருத்தி பூந்துருத்தி யென்பீ ராகில்
பொல்லாப் புலால் துருத்தி போக்க லாமே.

தெளிவுரை : சிவபெருமான், உமாதேவியைத் திருமேனியின் ஒரு பாகத்தில் கொண்டுள்ளவர்; கங்கையைச் சடைமுடியில் வைத்தவர்; அரவத்தையும் சந்திரனையும் உடன்வைத்தவர். தொண்டர்கள் தமது மனத்தை ஒருமைப்படுத்தி, மூப்படைந்து தண்டு ஊன்றி, மெய் தளர்ந்து நலியாத முன்னம், பூந்துருத்தி ! பூந்துருத்தி ! என ஏத்துவாராக. அவ்வாறு ஏத்த, புலால் தன்மையுடைய இவ்வுடலைப் போக்கிப் பிறவாத் தன்மையை அடையலாம்.

910. ஐத்தானத் தகமிடறு சுற்றி யாங்கே
யகத்தடைந்தால் யாதொன்று மிடுவா ரில்லை
மைத்தானக் கண்மடவார் தங்க ளோடு
மாயமனை வாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர்
பைத்தானத் தொண்மதியும் பாம்பும் நீரும்
படர்சடைமேல் வைத்துகந்த பண்பன் மேய
நெய்த்தானம் நெய்த்தான மென்பீ ராகில்
நிலாவாப் புலால்தானம் நீக்க லாமே.

தெளிவுரை :  மடவாரோடு விளங்கி மாய வாழ்க்கையில் மகிழ்பவர்களே ! கோழையானது பெருகி மிடற்றில் அடைத்தால் உதவுவார் யாரும் இல்லை. சந்திரனும் பாம்பும் கங்கையும் மடையின் மேல் வைத்த பண்பாளராகிய ஈசன் மேவும் பதியாகிய நெய்த்தானம் என்பீராகில் இப்பிறப்பின் துன்பத்தை நீக்கிப் பிறவாமையை அடையலாம்.

911. பொய்யாறா வாறே புனைந்து பேசிப்
புலர்ந்தெழுந்த காலைப் பொருளே தேடிக்
கையாறாக் கரண முடையோ மென்று
களித்த மனத்தராய்க் கருதி வாழ்வீர்
நெய்யாறா ஆடிய நீல கண்டர்
நிமிர்புன் சடைநெற்றிக் கண்ணர் மேய
ஐயாறே ஐயாறே யென்பீ ராகில்
அல்லல்தீர்ந் தமருலகம் ஆள லாமே.

தெளிவுரை : நிலைத்தன்மையில்லாததும் அழியக்கூடியதும் ஆகியவற்றைப் பேசி அதில் மகிழ்ந்து நிலையற்ற பொருள்களைத் தேடி உலகியலில் களித்தவராக உள்ளவர்களே ! நெய் முதலான பஞ்ச கவ்வியத்தைப் பூசனையாக ஏற்ற உகக்கும் நீலகண்டப் பெருமான், சடைமுடியுடையவர்; நெற்றியில் கண்ணுடையவர். அப் பெருமான் மேவும் தலமாகிய ஐயாறு என்று உரைப்பீராகில் அல்லல் யாவும் தீர்ந்து தேவர் உலகை ஆளலாம்.

912. இழவொன்று தாமொருவர்க் கிட்டொன் றீயார்
ஈன்றெடுத்த தாய்தந்தை பெண்டீர் மக்கள்
கழனங்கோ வையாதல் கண்டுந் தேறார்
களித்த மனத்தராய்க் கருதி வாழ்வீர்
அழனம்மை நீக்குவிக்கும் அரைய னாக்கும்
அமருலகம் ஆள்விக்கும் அம்மான் மேய
பழனம் பழனமே யென்பீ ராகில்
பயின்றெழுந்த பழவினைநோய் பாற்ற லாமே.

தெளிவுரை : தம் கையில் உள்ள பொருள் குறைவு படும் என்னும் கருத்தில் ஒருவருக்கும் உதவி செய்யாது, தாய், தந்தை, பெண்டிர், மக்கள் என்னும் தளைப்பட்டும் உணராது களித்த மனத்தினராக வாழ்பவர்களே ! சிவபெருமான், நம்மைத் துன்பத்திலிருந்து விடுவிப்பவர்; தேவர் உலகத்தை ஆளச் செய்பவர். அவர் மேவும் பழனம் என்னும் தலத்தை ஏத்தி உரைப்பீராக. உமது வினை நோய் யாவும் கெடும்.

913. ஊற்றுத் துறையொன்ப துள்நின் றோரீர்
ஒக்க அடைக்கும்போ துணர மாட்டீர்
மாற்றுத் துறைவழி கொண்டோடா முன்னம்
மாய மனைவாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர்
வேற்றுத் தொழில்பூண்டார் புரங்கள் மூன்றும்
வெவ்வழல்வாய் வீழ்விக்கும் வேந்தன் மேய
சோற்றுத்துறை சோற்றுத்துறை யென்பீ ராகில்
துயர்நீங்கித் தூநெறிக்கட் சேர லாமே.

தெளிவுரை : மாயும் தன்மையுடைய மனை வாழ்க்கையை நிலை பேறு உடையதாகக் கருதி மகிழ்ந்து வாழ்பவர்களே ! ஒன்பது துளைகளையுடைய இவ்வுடலின் தன்மையை நினைக்காதவரானீர் ! எல்லாத் துவாரங்களும் அடைப்பட்டு இறுதிக் காலம் நெருங்கும்போõது உணரமாட்டீர். உயிரனாது நீங்கிச் செல்லும் முன்னர், முப்புரங்களை எரித்துச் சாம்பலாக்கிய ஈசன் மேவும் சோற்றுத்துறையைச் சிவபஞ்சாட்சரம் போன்று உரைப்பீரானால், துயர் யாவும் நீங்கித் தூய நெறியில் சேரலாம்.

914. கலஞ்சுழிக்குங் கருங்கட்லசூழ் வையந் தன்னிற்
கள்ளக் கடலி லழுந்தி வாளா
நலஞ்சுழியா எழுநெஞ்சே இன்பம் வேண்டில்
நம்பன்றன் அடியிணைக்கே நவில்வா யாகில்
அலஞ்சுழிக்கு மன்னாகந் தன்னான் மேய
அருமறையோ டாறங்க மானானர் கோயில்
வலஞ்சுழியே வலஞ்சுழியே என்பீ ராகில்
வல்வினைகள் தீர்ந்துவா னாள லாமே.

தெளிவுரை : கடல் சூழ்ந்த இவ்வுலகத்தில், பிறவியாகிய மாயக் கடலில் அழுந்தி நலத்தை எல்லாம் அழித்துத் துன்பம் அடையும் நெஞ்சே ! உனக்கு இன்பம் நிகழ வேண்டுமானால் ஈசனின் திருவடியை ஏத்தி உரைப்பாயாக. ஆதிசேடன் வழிபட்ட பெருமையுடையதும் வேதமும் அதன் அங்கமும் ஆகிய சிவபெருமான் மேவும் கோயிலாவதும் வலஞ்சுழியே என உரைத்து ஏத்துவாயாக. கொடிய வினை யாவும் தீர்ந்து மறுமையில் வானுலகின் ஆட்சியைப் பெறலாம்.

915. தண்டிகுண் டோதரன்பிங் கிருடி
சார்ந்த புகழ்நந்தி சங்கு கன்னன்
பண்டை யுலகம் படைத்தான் தானும்
பாரை யளந்தான்பல் லாண்டி சைப்பத்
திண்டி வயிற்றுச் சிறுகட் பூதஞ்
சிலபாடச் செங்கண் விடையொன் றூர்வான்
கண்டியூர் கண்டியூர் என்பீ ராகிற்
கடுகநும் வல்வினையைக் கழற்ற லாமே.

தெளிவுரை : தண்டி, குண்டோதரன், சங்கு கன்னன் ஆகிய சிவகணத்தினரும், பிருங்கி என்னும் முனிவரும் நந்திதேவரும், உலகத்தைப் படைத்த பிரமனும், உலகினை அளந்த திருமாலும், பல்லாண்டு இசைத்துப் போற்றவும் சிறிய கண்களையுடைய பூத கணங்கள் பாடிப் போற்றவும் விளங்குபவர் சிவபெருமான். அப் பெருமான் இடப வாகனத்தில் வீற்றிருக்கின்ற கண்டியூர் என்னும் தலத்தை ஏத்தி ஓதுவீராக. உமது கொடிய வினை யாவும் தீரும்.

916. விடமூக்கப் பாம்பேபோற் சிந்தி நெஞ்சே
வெள்ளேற்றான் தன்தமரைக் கண்ட போது
வடமூக்க மாமுனிவர் போலச் சென்று
மாதவத்தார் மனத்துள்ளார் மழுவாட் செல்வர்
படமூக்கப் பாம்பணையிற் பள்ளி யானும்
பங்கயத்து மேலயனும் பரவிக் காணாக்
குடமூக்கே குடமூக்கே யென்பீ ராகிற்
கொடுவினைகள் தீர்ந்தரனைக் குறுக லாமே.

தெளிவுரை : நெஞ்சமே ! வெள்ளை இடபத்தையுடைய ஈசனின் இனிய திருவடியைக் கண்டதும் விடத்தை நீக்கிய பாம்பு அசையாது நின்று விளங்குதல் போன்ற, அசைவற்ற தன்மையில் சிந்தித்திருப்பாயாக. மாலும் அயனும் காணாதவராய், ஆல் நிழலில் வீற்றிருந்து அறம் உரைத்த செல்வராகிய ஈசன் விளங்கும் தலமாகிய குடமூக்கினை ஏத்தி ஓதி உரைப்பாயாக. உமது கொடிய வினை யாவும் தீர்ந்து அரனின் திருப்பாதத்தை அணுகலாம்.

917. தண்காட்டச் சந்தனமுந் தவள நீறும்
தழையணுகுங் குறுங்கொன்றை மாலை சூடிக்
கண்காட்டாக் கருவரைபோ லனைய காஞ்சிக்
கார்மயிலஞ் சாயலார் கலந்து காண
எண்காட்டாக் காடங் கிடமா நின்று
எரிவீசி யிரவாடும் இறைவர் மேய
வெண்காடே வெண்காடே என்பீ ராகில்
வீடாத வல்வினைநோய் வீட்ட லாமே.

தெளிவுரை : சிவபெருமான், குளிர்ச்சியான சந்தனமும், வெண்ணீறும் தரித்தவர்; கொன்றை மாலை சூடியவர்; மயில் போன்ற சாயலை உடைய உமாதேவியாரை உடனாகக் கொண்டவர்; கையில் நெருப்பேந்தி இரவில் நடனம் புரிவர். அப்பெருமான் வீற்றிருக்கும் திருவெண்காட்டை நினைந்து உரைப்பீராக. எல்லா வினையும் கெட்டழியும்.

918. தந்தையார் தாயா ருடன் பிறந்தார்
தாரமார் புத்திரரார் தாந்தா மாரே
வந்தவா றெங்ஙனே போமா றேதோ
மாயமா மிதற்கேதும் மகிழ வேண்டா
சிந்தையீ ருமக்கென்று சொல்லக் கேண்மின்
திகழ்மதியும் வாளரவும் திளைக்குஞ் சென்னி
எந்தையார் திருநாமம் நமச்சி வாய
என்றெழுவார்க் கிருவிசும்பி லிருக்க லாமே.

தெளிவுரை : தந்தை, தாய், உடன் பிறந்தவர், தாரம், புத்திரர், தான் என விளங்குபவர் வந்த விதம் யாது ? போகும் வழி யாதோ ! எனவே, நிலையற்றதாகிய இத்தன்மையில் மகிழ வேண்டாம். நெஞ்சமே ! உனக்கு ஒன்று சொல்கின்றேன். சந்திரனையும் அரவத்தையும் சடையில் தரித்த எந்தை ஈசனின் திருநாமம் நமச்சிவாய என்னும் திருவைந்தெழுத்தாகும். அதனை உரைத்து ஏத்துக. பெருமைக்குரிய வீடு பேற்றை அடையலாம்.

திருச்சிற்றம்பலம்

94. பொது - நின்றதிருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

919. இருநிலனாய்த் தீயாகி நீருமாகி
இயமான னாயெறியுங் காற்று மாகி
அருநிலைய திங்களாய் ஞாய றாகி
ஆகாச மாயட்ட மூர்த்தி யாகிப்
பெருநலமுங் குற்றமும் பெண்ணும் ஆணும்
பிறருருவுந் தம்முருவுந் தாமே யாகி
நெருநலையாய் இன்றாகி நாளை யாகி
நிமிர்புன் சடையடிகள் நின்ற வாறே.

தெளிவுரை : சிவபெருமான், பூமியாகவும், நெருப்பாகவும், நீராகவும், இயமானன், காற்று எனவும், சந்திரன், சூரியனாகவும், ஆகாசமாகவும் விளங்கும் அட்ட மூர்த்தியானவர். நலனுக்குரிய பெருமையும் துன்பத்திற்குரிய சிறுமையாகிய குற்றமும் தனது ஆற்றலால் விளைவிப்பவர். பெண், ஆண், அலி எனவும் இயல்பான ஒளி உருவமும் தாமேயாகுபவர். நேற்று இன்று நாளை என்னும் மூன்று காலமும் ஆகியவர். அவர் சடைமுடியுடைய அடிகளாய் யாங்கணும் நின்றவராவர்.

920. மண்ணாகி விண்ணாகி மலையு மாகி
வயிரமுமாய் மாணிக்கந் தானே யாகிக்
கண்ணாகிக் கண்ணுக்கோர் மணியு மாகிக்
கலையாகிக் கலைஞானந் தானே யாகிப்
பெண்ணாகிப் பெண்ணுக்கோ ராணு மாகிப்
பிரளயத்துக் காப்பாலோ ராண்ட மாகி
எண்ணாகி யெண்ணுக்கோ ரெழுத்து மாகி
யெழுஞ்சுடரா யெம்மடிகள் நின்ற வாறே.

தெளிவுரை : சிவபெருமான், மண்ணுலகமும், விண்ணுலகமும் ஆனவர்; மலையாகத் திகழ்பவர்; வயிரம் மாணிக்கம் என விளங்குபவர்; காணும் கண்ணாகவும், கண்ணில் விளங்கும் கருமணியாகவும் விளங்குபவர்; எல்லா வடிவமைப்பும் உடைய கலைப் பொருளாகவும், கலைக்குரிய ஞானமாகவும் விளங்குபவர்; பெண்ணாகவும், அத்தகைய போக சக்திக்குரிய உயிர்ப்புத் துணையாகிய ஆணாகவும் மேவியவர்; பிரளயத்துக்கும் அப்பால் விளங்கும் அண்டமாக விளங்குபவர்; எண்ணும் எழுத்தும் ஆகி, எழுகின்ற சுடர்களாகியவர். எம் அடிகளாகிய அவர் யாவுமாய் நின்று விளங்குபவராவார்.

921. கல்லாகிக் களறாகிக் கானு மாகிக்
காவிரியாய்க் கால்ஆறாய்க் கழியு மாகிப்
புல்லாகிப் புதலாகிப் பூடு மாகிப்
புரமாகிப் புரமூன்றுங் கெடுத்தா னாகிச்
சொல்லாகிச் சொல்லுக்கோர் பொருளு மாகிச்
சுலாவாகிச் கலாவுக்கோர் சூழ லாகி
நெல்லாகி நிலனாகி நீரு மாகி
நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்ற வாறே.

தெளிவுரை : சிவபெருமான், கல்லும், களறும், கானும் ஆகியவர்; காவிரியும், கால்வாயும், கழியும் ஆகியவர்; புல், புதர், செடியாகியவர்; புரங்களின் தோற்றங்களாகியவர். புரங்கள் மூன்றையும் எரித்தவர்; சொல்லாகவும் அதன் பொருளாகவும் ஆகியவர்; போக்கும் வரவும் ஆகிய அசைவாகியவர்; நெல்லாகவும் விளையும் நிலமாகவும் வளர்க்கும் நீராகவும் ஆகியவர். அவர் நெடுஞ்சுடராய் ஓங்கி யாவுமாய் நின்ற அடிகள் ஆவார்.

922. காற்றாகிக் கார்முகிலாய்க் காலம் மூன்றாய்க்
கனவாகி நனவாகிக் கங்கு லாகிக்
கூற்றாகிக் கூற்றுதைத்த கொல்களிறு மாகிக்
குரைகடலாய்க் குரைகடற்கோர் கோமானுமாய்
நீற்றானாய் நீறேற்ற மேனி யாகி
நீள்விசும்பாய் நீள்விசும்பி னுச்சி யாகி
ஏற்றானு மேறூர்ந்த செல்வ னாகி
யெழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே.

தெளிவுரை : சிவபெருமான், காற்றாகி கார்மேகமாகி முக்காலமும் ஆகியவர்; கனவும் நனவும் ஆகி இரவும் ஆனவர்; கூற்றும், கூற்றுவனை அழித்த ஆற்றலும், கடலும், கடலின் தலைவனும் ஆகியவர்; நீறணிந்த அழகும் திருமேனியும் ஆனவர்; ஆகாயமாகவும் அதன் எல்லையாகவும் ஆனவர்; ஏற்றில் ஏறும் இறைவனாகவும் ஏற்றுக்கு உரியவராகவும் விளங்குபவர். எழுகின்ற சுடராய் மேவும் எம் அடிகளாகிய அவர், யாவுமாய் நின்று விளங்குபவராவர்.

923. தீயாகி நீராகித் திண்மை யாகித்
திசையாகி அத்திசைக் கோர்தெய்வ மாகித்
தாயாகித் தந்தையாய்ச் சார்வு மாகித்
தாரகையும் ஞாயிறுந்தண் மதியு மாகிக்
காயாகிப் பழமாகிப் பழத்தில் நின்ற
இரதங்கள் நுகர்வானுந் தானே யாகி
நீயாகி நானாகி நேர்மை யாகி
நெடுஞ்சுடராய நிமிர்ந்தடிகள் நின்ற வாறே.

தெளிவுரை : சிவபெருமான், நெருப்பும் நீறுமாகித் திண்மை, திசை திசைக்கோர் தெய்வமாகி விளங்குபவர்; தாயாகவும் தந்தையாகவும் மற்றும் சார்வும் ஆகியவர்; விண்மீன், சூரியன், சந்திரன், காய், பழம், பழத்தின் சுவை என ஆகியவர். இவற்றை நுகர்பவன் தானேயாகி முன்னிலையும் படர்க்கை எனச் செல்லும் யாவும் ஆகி, நேர்மையாகி, நெடுஞ் சுடர் ஆகி நிமிர்ந்த எம் அடிகள், யாவுமாய் நின்றவராவார்.

924. அங்கமா யாதியாய் வேத மாகி
அருமறையோ டைம்பூதந் தானே யாகிப்
பங்கமாய்ப் பலசொல்லுந் தானே யாகிப்
பால்மதியோ டாதியாய்ப் பான்மை யாகிக்
கங்கையாய்க் காவிரியாய்க் கன்னி யாகிக்
கடலாகி மலையாகிக் கழியு மாகி
எங்குமாய் ஏறூர்ந்த செல்வ னாகி
எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே.

தெளிவுரை : சிவபெருமான், ஆதியாய், வேதமாய் அதன் அங்கமாய் ஐம்பூதமாய், எல்லாச் சொல்லும் ஆகிச் சந்திரனாய் அதன் இயல்பாய், கங்கையும் காவிரியும் ஆகியவர்; கன்னியாய்க் கடலாகி, மலையாகிக் கழியுமாகி, எங்குமாய் இடப வாகனராகி விளங்குபவர். அவர் எழுசுடராய் ஓங்கிய அடிகளாகி யாங்கும் நின்றவராவார். கடல், கங்கை, காவிரி, மலை முதலான யாவற்றுக்கும் அதன் அதிதேவதையைச் சுட்டுதலாம்.

925. மாதா பிதாவாகி மக்க ளாகி
மறிகடலும் மால்விசும்புத் தானே யாகிக்
கோதா விரியாய்க் குமரி யாகிக்
கோல்புலித்தோ லாடைக் குழக னாகிப்
போதாய மலர்கொண்டு போற்றி நின்று
புனைவார் பிறப்பறுக்கும் புனித னாகி
யாதானு மெனநினைந்தார்க் கெளிதே யாகி
அழல் வண்ண வண்ணர்தாம் நின்ற வாறே.

தெளிவுரை : ஈசன், மாதா, பிதா, மக்கள், கடல், ஆகாயம், கோதாவிரி, குமரி எனவாகியவர்; புலித்தோலை உடுத்தியவர்; மலர்தூவி ஏத்துபவர்களுக்குப் பிறப்பினை அறுக்கும் புனிதர்; அடியவர்கள் நினைத்தவாறு நிற்பவர். அவர் அழல், வண்ணனாய் நின்றவராவார்.

926. ஆவாகி ஆவினில் ஐந்து மாகி
அறிவாகி அழலாகி அவியு மாகி
நாவாகி நாவுக்கோர் உரையு மாகி
நாதனாய் வேதத்தி னுள்ளோ னாகிப்
பூவாகிப் பூவுக்கோர் நாற்ற மாகிப்
புக்குளால் வாசமாய் நின்றா னாகித்
தேவாகித் தேவர் முதலு மாகிச்
செழுஞ்சுடராய்ச் சென்றடிகள் நின்ற வாறே.

தெளிவுரை : சிவபெருமான், பசுவாகிப் பஞ்ச கவ்வியமாகி, அறிவாகி, அழலாகி, அவியாகி, நாவும் உரையும் ஆகி, நாதனாகி, வேதத்தின் பொருளாகி, பூவும் அதன் மணமும் ஆகித் தேவதையாகவும் விளங்குபவர். செழுஞ்சுடராகிய அவ்வடிகள் யாவுமாய் நின்றவராவார். கடல், கங்கை, காவிரி, மலை முதலான யாவற்றுக்கும் அதன் அதிதேவதையைச் சுட்டுதலாம்.

925. மாதா பிதாவாகி மக்க ளாகி
மறிகடலும் மால்விசும்புந் தானே யாகிக்
கோதா விரியாய்க் குமரி யாகிக்
கோல்புலித்தோ லாடைக் குழக னாகிப்
போதாய மலர்கொண்டு போற்றி நின்று
புனைவார் பிறப்பறுக்கும் புனித னாகி
யாதானு மெனநினைந்தார்க் கெளிதே யாகி
அழல் வண்ண வண்ணர்தாம் நின்ற வாறே.

தெளிவுரை : ஈசன், மாதா, பிதா, மக்கள், கடல், ஆகாயம், கோதாவிரி, குமரி எனவாகியவர்; புலித்தோலை உடுத்தியவர்; மலர்தூவி ஏத்துபவர்களுக்கு பிறப்பினை அறுக்கும் புனிதர்; அடியவர்கள் நினைத்தவாறு நிற்பவர். அவர் அழல், வண்ணனாய் நின்றவராவார்.

926. ஆவாகி ஆவினில் ஐந்து மாகி
அறிவாகி அழலாகி அவியு மாகி
நாவாகி நாவுக்கோர் உரையு மாகி
நாதனாய் வேதத்தி னுள்ளோ னாகிப்
பூவாகிப் பூவுக்கோர் நாற்ற மாகிப்
புக்குளால் வாசமாய் நின்றா னாகித்
தேவாகித் தேவர் முதலு மாகிச்
செழுஞ்சுடராய்ச் சென்றடிகள் நின்ற வாறே.

தெளிவுரை : சிவபெருமான், பசுவாகிப் பஞ்ச கவ்வியமாகி, அறிவாகி, அழலாகி, அவியாகி, நாவும் உரையும் ஆகி, நாதனாகி, வேதத்தின் பொருளாகி, பூவும் அதன் மனமும் ஆகித் தேவதையாகவும் விளங்குபவர். செழுஞ்சுடராகிய அவ்வடிகள் யாவுமாய் நின்றவராவார்.

927. நீராகி நீளகலந் தானே யாகி
நிழலாகி நீள்விசும்பி னுச்சி யாகிப்
பேராகிப் பேருக்கோர் பெருமை யாகிப்
பெருமதில்கள் மூன்றினையு மெய்தா னாகி
ஆரேனுந் தன்னடைந்தோர் தம்மை யெல்லாம்
ஆட்கொள்ள வல்லவெம் மீச னார்தாம்
பாராகிப் பண்ணாகிப் பாட லாகிப்
பரஞ்சுடராய்ச் சென்றடிகள் நின்ற வாறே.

தெளிவுரை : சிவபெருமான், நீர், நீள அகலம் ஆகிய அளவீடு, நிழல், விசும்பு, பேர், பெருமை என ஆகியவர்; முப்புரம் எரித்தவர், தன்னை அடைந்தவர்களை ஆட்கொள்பவர்; உலகமாகவும், பண்ணாகவும், பாடலாகவும் ஆனவர். பரஞ்சுடராய் மேவும் அவ் வடிகள் யாங்கணும் நின்றவராவார்.

928. மாலாகி நான்முகனாய் மாபூதமாய்
மருக்கமாய் அருக்கமாய் மகிழ்வு மாகிப்
பாலாகி யெண்டிசைக்கும் எல்லை யாகிப்
பரப்பாகிப் பரலோகந் தானே யாகிப்
பூலோக புவலோக சுவலோகமாய்ப்
பூதங்கமாய்ப் புராணன் தானே யாகி
ஏலா தனவெல்லாம் ஏல்விப் பானாய்
எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே.

தெளிவுரை : சிவபெருமான், திருமால், நான்முகன், பூதங்களாகவும் அதன் தத்துவங்களாகவும், மகிழ்வும் ஆகியவர்; எண் திசைக்கும் எல்லையாகி நிலமாகவும், பரலோகமாகவும் பூலோகம், புவலோகம், சுவலோகம், பூத கணங்கள், ஆகவும் விளங்குபவர்; புராணனாகிய தொன்மையுடையவர். அவர், இயலாததையும் இயல்விக்கும் எழுசுடராய் மேவிய அடிகளாகி யாங்கணும் நின்று விளங்குபவர் ஆவார்.

திருச்சிற்றம்பலம்

95. பொது - தனித் திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

929. அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ
அன்புடைய மாமனும் மாமி யும்நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும்நீ
ஒருகுலமும் சுற்றமும் ஓரூ ரும்நீ
துய்ப்பனவும் உய்ப்பனவுந் தோற்று வாய்நீ
துணையாயென் நெஞ்சத் துறப்பிப் பாய்நீ
இப்பொன்நீ இம்மணிநீ இம்முத்துநீ
இறைவன்நீ ஏறூர்ந்த செல்வன் நீயே.

தெளிவுரை : ஈசனே ! தேவரீர் தந்தையும் தாயும் தலைவரும் ஆனவர்; அன்புடைய மாமனும் மாமியும் நீவிரே; ஒப்புமையாக மேவும் வாழ்க்கைத் துணையும், விளங்கும் பொருள்களும் ஆனவர்; குலம், சுற்றம், ஊர், யான் துய்ப்பனவும், என்னிடம் உய்த்துள்ளனவும் ஆக்குபவர் நீவிர்; என் நெஞ்சில் துணையாக விளங்குபவர்; பொன்னும் மணியும் முத்தும் ஆகியவர்; இடப வாகனத்தில் ஊர்ந்து செல்லும் தேவரீர், நீவிரே ஆவார்.

930. வெம்பவரு கிற்பதன்று கூற்றம் நம்மேல்
வெய்ய வினைப்பகையும் பைய நையும்
எம்பரிவுந் தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம்
எங்கெழிலென் ஞாயி றெளியோ மல்லோம்
அம்பவளச் செஞ்சடைமேல் ஆறு சூடி
அனலாடி ஆன்அஞ்சும் ஆட்டு கந்த
செம்பவள வண்ணர்செஞ் குன்ற வண்ணர்
செவ்வான வண்ணரென் சிந்தை யாரே.

தெளிவுரை : கூற்றமும் தீவினையும் என்பால் நைந்தது, துன்பம் யாவும் தீர்ந்தோம்; சூரியன் எங்கு எழுந்தால் என்ன ! என்னும் தன்மையில் பற்று யாவும் தீர்ந்த தன்மையில், சடையில் கங்கை யேந்திக் கையில் நெருப்பேந்திப் பஞ்ச கவ்வியத்தைப் பூசையேற்கும் பவளவண்ணர் என் சிந்தனையில் உள்ளவராவார்.

931. ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே
அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே
ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே
உருகு வித்தால் ஆரொருவர் உருகா தாரே
பாட்டுவித்தால் ஆரொருவா பாடா தாரே
பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே
காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே
காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே.

தெளிவுரை : ஈசன் ஒருவரை ஆட்டுவித்தால் ஆடாதவர் இல்லை; அடக்கினால் அடங்காதவர் இல்லை; பக்தியின் சீலம் இன்றி ஓட்டுவித்தால் அதை யாரால் மாற்ற முடியும். உள்ளிருந்து உருகுமாறு செய்பவரும் அப்பரமன் ஆவர். பாடச் செய்வதும் பணியச் செய்வதும் ஈசனே. அப்பெருமான், ஒன்றைக் காட்டினால் அன்றி யாரும் எதனையும் காண முடியாது. இது ஈசன் உள்ளிருந்து யாவும் புரிதலை ஓதுதலாயிற்று.

932. நற்பதத்தார் நற்பதமே ஞான மூர்த்தீ
நலஞ்சுடரே நால்வேதத் தப்பால் நின்ற
சொற்பதத்தார் சொற்பதமுங் கடந்து நின்ற
சொலற்கரிய சூழலாய் இவுன் தன்மை
நிற்பதொத்து நிலையிலா நெஞ்சந் தன்னுள்
நிலாவாத புலாலுடம்பே புகுந்து நின்ற
கற்பகமே யானுன்னை விடுவே னல்லேன்
கனகமா மணிநிறத்தெங் கடவு ளானே.

தெளிவுரை : ஈசன, வீடு பேற்றுக்கு உரியவராகித் திருவடி மலர் மேவும் ஞானமூர்த்தியாகியவர்; சுடர் ஆகவும், மறைகளைக் கடந்தவராகவும், சொற்களைக் கடந்தவராகவும் விளங்குபவர். நெஞ்சுள் நின்று, நிலையற்ற புலால் உடம்பின் உள்ளும் மேவியவர். கற்பகமாகி அப்பரமன், நான் தொடர்ந்து ஏத்தும் கடவுளாவார்.

933. திருக்கோயி லில்லாத திருவி லூரும்
திருவெண்ணீ றணியாத திருவி லூரும்
பருக்கோடிப் பத்திமையாற் பாடா வூரும்
பாங்கினொடு பலதளிக ளில்லா வூரும்
விருப்போடு வெண்சங்கம் ஊதா வூரும்
விதானமும் வெண்கொடியு மில்லா வூரும்
அருப்போது மலர்பறித்திட் டுண்ணா வூரும்
அலை யெல்லாம் ஊரல்ல அடவி காடே.

தெளிவுரை : நெஞ்சே ! ஊர்தோறும் திருக்கோயில் இருக்க வேண்டும்; அனைவரும் திருவெண்ணீறு அணிந்த பக்தியுடன் பாட வேண்டும்; பேரூரன் பல கோயில்கள் செழிக்க வேண்டும்; கோயில்களில் முறைப்படி வெற்றிச் சங்கு ஊத வேண்டும்; முறைப்படி வெற்றிச் சங்கு ஊத வேண்டும்; விதானமும் கொடியும் விளங்க வேண்டும்; பக்தர்கள் மலர்தூவி ஏத்தி அதன் பயனைக் கொள்ள வேண்டும். இத்தன்மை இல்லையேல், அது ஊர் எனக் கொள்ளுவதற்கு உரியதன்று; பெரும் காடாகும்.

934. திருநாமம் அஞ்செழுத்தும் செப்பா ராகில்
தீவண்ணர் திறமொருகால் பேசா ராகில்
ஒருகாலுந் திருக்கோயில் சூழா ராகில்
உண்பதன்முன் மலர்பறித்திட் டுண்ணா ராகில்
அருநோய்கள் கெடவெண்ணீ றணியா ராகில்
அறியற்றார் பிறந்தரா றேதோ வென்னில்
பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்துஞ் செத்துப்
பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின் றாரே

தெளிவுரை : நெஞ்சே ! ஈசனின் திருநாமமாகிய திருவைந்தெழுத்தை ஓத வேண்டும்; தீ வண்ணராகிய அப்பெருமானுடைய அருளிச் செயலைப் பேசி மகிழ வேண்டும்; திருக்கோயில் சென்று தரிசித்தல் வேண்டும்; மலர் பறித்துத் திருக்கோயில்களுக்குச் சென்று ஏத்தி அருச்சித்தல் வேண்டும்; வினையாகிய நோய்கள் கெடும் தன்மையில் திருவெண்ணீறு அணியவேண்டும். இவ்வாறு அன்புடன் ஏத்தாதவர்கள் பிறவி கொண்டது ஏன் என்றால், பிறவி என்னும் நோய் பெருக, இறப்பும், பிறப்பும் உடைய தொழிலைச் செய்யும் தன்மையுடையதன்றி வேறு இல்லை என்பதாம்.

935. நின்னாவார் பிறரின்றி நீயே யானாய்
நினைப்பார்கள் மனத்துக்கோர் வித்து மானாய்
மன்னனாய் மன்னவர்க்கோ ரமுத மானாய்
மறைநான்கு மானாய்ஆ றங்க மானாய்
பொன்னானாய் மணியானாய் போக மானாய்
பூமிமேல் புகழ்தக்க பொருளே உன்னை
என்னானாய் என்னானாய் என்னி னல்லால்
ஏழையேன் என்சொல்லி யேத்து கேனே

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர் யாவும் ஆனவர்; நினைந்து ஏத்தும் மனத்தின் வித்தாகுபவர்; தலைமையாக விளங்குபவர்; ஆளும் தன்மையின் அமுதமானவர்; நான்கு வேதமும் அதன் ஆறு அங்கங்களும் ஆனவர்; பொன்னும், மணியும், போகமும் ஆனவர்; பூவுலகத்தில் புகழத் தக்கதாக மேவும் பொருளாக உடையவர். பெருமானே ! தேவரீர் எவ்வாறெல்லாம் ஆகி விளங்குகின்றீர் என மகிழ்வதன்றி, ஏழையேன் வேறு எத்தகைய சொற்களால் ஏத்துவேன் !

936. அத்தாவுன் அடியேனை அன்ப லார்த்தாய்
அருள்நோக்கில் தீர்த்தநீ ராட்டிக் கொண்டாய்
எத்தனையும் அரியைநீ எளியை யானாய்
எனையாண்டு கொண்டிரங்கி யேன்று கொண்டாய்
பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன்
பிழைத்தனகள் அத்தனையும் பொறுத்தா யன்றே
இத்தனையும் எம்பரமோ ஐய ஐயோ
எம்பெருமான் திருக்கருணை யிருந்த வாறே.

தெளிவுரை : சிவபெருமானே ! தேவரீர் அடியேனை அன்பால் ஈர்த்துக் கட்டியவர்; திருவருள் நோக்கம் புரிந்து என்னைத் தூய்மை செய்து ஆட்கொண்டவர்; யாவருக்கும் அரிய பொருளாகிய தேவரீர், எளிமையாக மேவி என் உள்ளத்தில் ஒளிர்பவர்; என்பால் இரக்கம் கொண்டு ஏற்றுக் கொண்டவர்; பொருளற்ற செயலை மேவிய பித்தனாகவும், அறிவற்ற செயலை மேவிய பேதையேனாகவும், வன்மையாய் மேவும் பேயனாகவும் இருந்த அடியேன் செய்த பிழைகள் யாவற்றையும் மன்னித்தவர். இத்தனையும் செய்தவர் என் பரம்பொருளாகிய தேவரீரே அல்லவா ! உமது திருக்கருணையின் பெருமைதான் யாதோ !

937. குலம்பொல்லேன் குணம்பொல்லேன் குறியும் பொல்லேன்
குற்றமே பெரிதுடையேன் கோல மாய
நலம்பொல்லேன் நான்பொல்லேன் ஞானி யல்லேன்
நல்லாரோ டிசைந்திலேன் ஞானி யல்லேன்
விலங்கல்லேன் விலங்கல்லா தொழிந்தேன் அல்லேன்
வெறுப்பனவும் மிகப்பெரிதும் பேச வல்லேன்
இலம்பொல்லேன் இரப்பதே ஈய மாட்டேன்
என்செய்வேன் தோன்றினேன் ஏழையேனே.

தெளிவுரை : ஈசனே ! தீவினையால் மேவி மூவாசையால் உந்தப்பட்டு மும்மலத்தால் பந்தப்பட்டு மேவும் புன்மையுடைய மனித குலத்தை யுடையேனாகி, நற்குணமும் குறியும் அற்றவனாய்க் குற்றமே பெரிதும் உடையவனானேன்; பயனை விளைவிக்கும் நலனை உடையவன் அல்லேன்; ஞானி அல்லேன்; நற்பாங்கு உடையவர்களுடன் கூடி இசைந்திலேன்; விலங்கின் தன்மையுடையவனாயின், அதற்குரிய சிறப்பினை மேவிலேன்; விலங்கிடை மேவும் தீய செயல்களையும் மேவாது இருந்திலேன்; பிறர் வெறுக்கும் பாங்கில் பேசுதலை உடையேன்; இல்லத்தின் சிறப்பினை உடையேன் அல்÷ன்; யாசித்துச் சேர்க்கும் பொருட்பற்று உடையோனாகிப் பிறர்க்கு ஈயாதவனானேன். நான் ஏன் இப் பிறவியைக் கொண்டேன் ! அந்தோ !

938. சங்கநிதி பதுமநிதி யிரண்டுந் தந்து
தரணியொடு வானாளத் தருவ ரேனும்
மங்குவார் அவர்செல்வம் மதிப்போ மல்லோம்
மாதேவர்க் கேகாந்த ரல்லா ராகில்
அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோயராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்
கங்கைவார் சடக்கரந்தார்க் கன்ப ராகில்
அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவு ளாரே.

தெளிவுரை : எத்தகைய தன்மையிலும் குறையாத வகையால் எடுக்க எடுக்க நிறைந்து வளரும் குபேரனிடம் உள்ள சங்க நிதி பதும நிதி ஆகிய இரண்டினைத் தந்து பூவுலகத்தையும் வானுலகத்தையும் ஆட்சி பெறும் பேற்றையும் ஒருவர் தருவாராயினும் அவர் மங்கியழியும் தன்மையுடையவராதலால் அவற்றை யாம் ஒரு பொருளாக மதிக்க மாட்டோம். ஒருவர் ஈசனிடம் அன்பர் ஆகில், அவர் உடற் பிணியுடன் திரிவராயினும் அவரை நாம் வணங்கி மகிழ்வோம். இத் திருப்பாட்டு ஈசனின் அடியவர்களையன்றி ஏனையோரைப் பேணாமையை உணர்த்துவதாயிற்று.

திருச்சிற்றம்பலம்

96. பொது - திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

939. ஆமயந்தீர்த் தடியேனை யாளாக் கொண்டார்
அதிகைவீ ரட்டானம் ஆட்சி கொண்டார்
தாமரøயோன் சிரமரிந்து கையிற் கொண்டார்
தலையதனிற் பலிகொண்டார்நிறைவாம் தன்மை
வாமனனார் மாகாயத் துதிரங் கொண்டார்
மானிடங்கொண் டார்வலங்கை மழுவாள் கொண்டார்
காமனையும் உடல்கொண்டார் கண்ணால் நோக்கிக்
கண்ணப்பர் பணியுங்கொள் கபாலி யாரே.

தெளிவுரை : சிவபெருமான், என் பிறவி நோயைத் தீர்த்து ஆட்கொண்டவர்; திருவதிகை வீரட்டானத்தில் வீற்றிருப்பவர்; பிரமனின் தலையைக் கொய்து கபாலமாக ஏந்திப் பலியேற்றவர்; திருமாலின் பேருடலைக் கொண்டவர்; மானை இடக்கையிலும் மழுப்படையை வலக்கையிலும் கொண்டவர்; மன்மதனை எரித்துச் சாம்பலாக்கியவர். அப் பெருமான், அன்பின் வடிவினராகிய கண்ணப்ப நாயனார் ஆற்றி பூசை முதலான திருத்தொண்டினை ஏற்ற கபாலியார் ஆவார்.

940. முப்புரிநூல் வரைமார்பின் முயங்கக் கொண்டார்
முதுகேழல் முளைமருப்புங் கொண்டார் பூணாச்
செப்புருவ முலைமலையாள் பாகங் கொண்டார்
செம்மேனி வெண்ணீறு திகழக் கொண்டார்
துப்புரவார் சுரிசங்கின் தோடு கொண்டார்
சுடர்முடிசூழ்ந் தடியமரர் தொழவுங் கொண்டார்
அப்பலிகொண் டாயிழையார் அன்புங் கொண்டார்
அடியேனை ஆளுடைய அடிக ளாரே.

தெளிவுரை : சிவபெருமான், திருமார்பில் முப்புரி நூல் திகழ விளங்குபவர்; பன்றியில் கொம்பை ஆபரணமாகக் கொண்டவர்; உமா தேவியைத் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவர்; சிவந்த திருமேனியில் வெண்மை திகழும் திருநீறு திகழ்ந்து ஒளிருமாறு பூசி விளங்குபவர்; சங்கினால் ஆகிய தோடு என்னும் அணியைக் காதில் அணிந்தவர்; ஒளிவிடும் கிரீடங்களை முடியில் கொண்டு விளங்கும் தேவர்கள் திருவடியை ஏத்தித் தொழ விளங்குபவர்; தாருகவனத்தில் மேவிய மங்கையர் அளித்த பலியை உகந்து ஏற்றவர். அப் பெருமான், அடியேனை ஆளாகக் கொண்ட அடிகள் ஆவார்.

941. முடிகொண்டார் முளையிளவெண் டிங்க ளோடு
மூசுமிள நாகமுட னாகக் கொண்டார்
அடிகொண்டார் சிலம்பலம்பு கழலு மார்ப்ப
அடங்காத முயலகனை அடிக்கீழ்க் கொண்டார்
வடிகொண்டார்ந் திலங்குமழு வலங்கைக் கொண்டார்
மாலையிடப் பாகத்தே மருவக் கொண்டார்
துடிகொண்டார் கங்காளந் தோள்மேற் கொண்டார்
சூலைதீர்த் தடியேனை யாட்கொண் டாரே.

தெளிவுரை : சிவபெருமான் சடைமுடியுடையவர்; இளம்பிறைச் சந்திரனையும், நாகத்தையும் தரித்தவர்; திருப்பாதத்தில் சிலம்பும், கழலும் அணிந்து விளங்குபவர்; அடங்காத முயலகனை அடக்கித் திருவடியின் கீழ்க் கொண்டு விளங்குபவர்; அழகிய வடிவுடன் திகழும் மழுப்படையை வலக்கையில் ஏந்தியுள்ளவர்; திருமாலை இடப்பாகத்தில் திகழுமாறு கொண்டு விளங்குபவர்; உடுக்கையைக் கையில் ஏந்தியவர்; எலும்பினைத் தோளின் மேல் கொண்டவர். அப் பெருமான் சூலை நோயைத் தீர்த்து என்னை ஆட்கொண்டவர் ஆவார்.

942. பொக்கணமும் புலித்தோலும் புயத்திற் கொண்டார்
பூதப் படைகள்புடை சூழக் கொண்டார்
அக்கினொடு படஅரவம் அரைமேற் கொண்டார்
அனைத்துலகும் படைத்தவையும் அடங்கக் கொண்டார்
கொக்கிறகுங் கூவிளமுங் கொண்டை கொண்டார்
கொடியானை யடலாழிக் கிரையாக் கொண்டார்
செக்கர்நிறத் திருமேனி திகழக் கொண்டார்
செடியேனை யாட்கொண்ட சிவனார் தாமே.

தெளிவுரை : சிவபெருமான், விபூதிப் பையைக் கொண்டுள்ளவர்; புலித்தோலை உடையவர்; பூத கணங்களைப் படையாகக் கொண்டுள்ளவர்; பாசி மணியும் பாம்பும் அரையில் கட்டியுள்ளவர்; எல்லா மணியும் பாம்பும் அரையில் கட்டியுள்ளவர்; எல்லா உலகங்களையும் படைத்துத் தன்பால் ஒடுங்கி அடங்கவும் செய்பவர்; கொக்கின் இறகையும், வில்வத்தையும் சடை முடியில் சூடி விளங்குபவர்; கொடியவனாகிய சலந்தராசூரனைச் சக்கரப் படையால் அழித்தவர்; சிவந்த திருமேனியுடையவர். அப் பெருமான், அடியவனை ஆட்கொண்ட சிவனார் ஆவார்.

943. அந்தகனை அயிற்சூலத் தழுத்திக் கொண்டார்
அருமறையைத் தேர்க்கு திரையாக்கிக் கொண்டார்
சுந்தரனைத் துணைக்கவரி வீசக் கொண்டார்
சுடுகாடு நடமாடு மிடமாக் கொண்டார்
மந்தரம்நற் பொருசிலையா வளைத்துக் கொண்டார்
மாகாளன் வாசல்காப் பாகக் கொண்டார்
தந்திரந் திரத்தரா யருளிக் கொண்டார்
சமண்தீர்த்தென் றன்னையாட் கொண்டார் தாமே.

தெளிவுரை : சிவபெருமான், அந்தகாசூரனைக் கூர்மையான சூலத்தால் அழித்தவர்; அருமையுடைய வேதங்களைத் தேர் செலுத்தும் குதிரைகளாகக் கொண்டவர்; ஆலால சுந்தரரைக் கவரி வீசுமாறு கொண்டவர்; சுடுகாட்டை நடனம் புரியும் இடமாகக் கொண்டவர்; மேரு மலையை வில்லாகக் கொண்டவர்; மாகளரைத் துவாரபாலகராகக் கொண்டவர்; வேதத்தின் பாங்கினை ஐவகை வேள்வி முதலாகிய தந்திரங்களாகவும், சிவ வழிபாடு மேவும் திருவைந்தெழுத்து முதலான மந்திரங்களாகவும் அருளிச் செய்து விளங்குபவர். அப்பெருமான், சமணத்தில் மேவிய என்னை மீட்டு ஆண்டு கொண்டவராவார்.

944. பாரிடங்கள் பலகருவி பயிலக் கொண்டார்
பவள நிறங்கொண்டார் பிளங்குங் கொண்டார்
நீரடங்கு சடைமுடிமேல் நிலாவுங் கொண்டார்
நீலநிறங் கோலநிறை மிடற்றிற் கொண்டார்
வாரடங்கு வனமுலையார் மைய லாகி
வந்திட்ட பலிகொண்டார் வளையுங் கொண்டார்
ஊரடங்க வொற்றிநகர் பற்றிக் கொண்டார்
உடலுறுநோய் தீர்த்தென்னையாட் கொண் டாரே.

தெளிவுரை : ஈசன், பூத கணங்கள் பலவகையான வாத்தியக் கருவிகளைப் பயிலச் செய்பவர்; பவளம் போன்ற சிவந்த திருமேனியுடையவர்; பளிங்கு போன்ற ஒளி திகழும் திருவெண்ணீறு பூசி விளங்குபவர்; கங்கை தரித்த சடை முடியில் சந்திரனைச் சூடியுள்ளவர்; அழகிய நீலகண்டத்தை உடையவர்; தாருக வனத்தில் மேவிய மகளிர் அளித்த பொருள்களைப் பலியாகக் கொண்டவர்; திருவொற்றியூரில் மேவி வீற்றிருப்பவர். அப் பெருமான் என் உடலில் சூலை நோயைத் தீர்த்து ஆட்கொண்டவராவார்.

945. அணிதில்லை அம்பலமா டரங்காக் கொண்டார்
ஆலால வருநஞ்சம் அமுதாக் கொண்டார்
கணிவளர்தார்ப் பொன்னிதழிக் கமழ்தார் கொண்டார்
காதலார் கோடிகலந் திருக்கை கொண்டார்
மணிபணத்த அரவந்தோள் வளையாக் கொண்டார்
மால்விடைமேல் நெடுவீதி போதக் கண்டார்
துணிபுலித்தோ லினையாடை யுடையாக் கொண்டார்
சூலங்கைக் கொண்டார் தொண்டெனைக் கொண்டாரே.

தெளிவுரை : சிவபெருமான், அழகிய தில்லை அம்பலத்தை ஆடுகின்ற அரங்காகக் கொண்டவர்; ஆல கால விடத்தை அமுதம் என உட்கொண்டு அருளியவர்; பொன் போன்ற இதழ்களையுடைய கொன்றை மாலை தரித்தவர்; அன்புடையவராகித் திருக்கோடி என்னும் தலத்தில் வீற்றிருப்பவர். மாணிக்கத்தை உடைய அரவத்தைத் தோள்வளையாகக் கொண்டவர்; பெருமையுடைய இடபத்தின் மேல் ஏறித் திருவீதியில் உலா வருபவர். அப் பெருமான் சூலப்படையைக் கையில் ஏந்தியவராகி என்னைத் தொண்டன் ஆக்கிக் கொண்டவர் ஆவார்.

946. படமூக்கப் பாம்பணையா னோடு வானோன்
பங்கயனென்றங்கவரைப் படைத்துக்கொண்டார்
குடமூக்கிற் கீழ்க்கோட்டங் கோயில் கொண்டார்
கூற்றுதைத்தோர்வேதியனை உய்யக் கொண்டார்
நெடுமூக்கிற் கரியினுரி மூடிக் கொண்டார்
நினையாத பாவிகளை நீங்கக் கொண்டார்
இடமாக்கி யிடைமருதுங் கொண்டார் பண்டே
யென்னைஇந்நாள் ஆட்கெட இறைவர்தாமே.

தெளிவுரை : சிவபெருமான், திருமாலையும் பிரமன் முதலானோரையும் படைத்துக் கொண்டார்; குடமூக்கு (கும்பேசம்), குடந்தைக் கீழ்க்கோட்டம் (நாகேசம்) ஆகிய திருத்தலங்களில் வீற்றிருப்பவர்; கூற்றுவனை உதைத்து அழித்து, மார்க்கண்டேயரைக் காத்தவர்; யானையின் தோலை உரித்துப் போர்வையாக்கிக் கொண்டவர்; தன்னைப் பக்தியுடன் ஏத்தாதவர்களாகிப் பாவத்தின்பாற் செல்வோரின் மனத்தில் அணுகாதவர்; திருவிடைமருதூரை இடமாகக் கொண்டவர். என்னை ஆட்கொண்டவர். அவ் விறைவர் ஆவார்.

947. எச்சன்நினைத் தலைகொண்டார் பகன்கண் கொண்டார்
இரவிகளி லொருவன்பல் லிறுத்துக் கொண்டார்
மெச்சன்வியத் திரன்தலையும் வேறாக் கொண்டார்
விறலங்கி கரங்கொண்டார் வேள்வி காத்த
உச்சநமன் தாளறுத்தார் சந்திரனை யுதைத்தார்
உணர்விலாத் தக்கன்றன் வேள்வி யெல்லாம்
அச்சமெழ அழித்துக்கொண் டருளுஞ் செய்தார்
அடியேனை யாட்கொண்ட அமலர் தாமே.

தெளிவுரை : சிவபெருமான், எச்சன் என்று வழங்கப்பெறும் வேள்வித் தேவனின் தலையை வீழ்த்தியவர்; பன்னிரு சூரியர்களில் பகன் என்பவனுடைய கண்ணைப் பறித்தவர்; மற்றொருவனுடைய பல்லை உகுத்தவர்; தக்கனின் தலையை அறுத்தவர்; அக்கினியின் கரத்தை வெட்டியவர்; இயமனுடைய காலைத் துண்டித்தவர்; சந்திரனை உதைத்தவர்; தக்கன் செய்த வேள்வியினை அழித்துப் பின்னர் அருளும் செய்தவர். அப் பெருமான், அடியேனை ஆட்கொண்ட அமலர் ஆவார்.

948. சடையொன்றிற் கங்கையையுந் தரித்துக் கொண்டார்
சாமத்தின் இசைவீணை தடவிக் கொண்டார்
உடையொன்றிற் புள்ளியுழைத் தோலுங் கொண்டார்
உள்குவார் உள்ளத்தை ஒருக்கிக் கொண்டார்
கடைமுன்றிற் பலிகொண்டார் கனலுங் கொண்டார்
காபால வேடங் கருதிக் கொண்டார்
விடைவென்றிக் கெடியதனில் மேவக் கொண்டார்
வெந்துயரந் தீர்த்தென்னை யாட்கொண் டாரே.

தெளிவுரை : சிவபெருமான், தனது சடைகளில் ஒன்றில் கங்கையைக் கொண்டு விளங்குபவர்; சாம வேதத்தை இசையுடன் வீணை மீட்டி ஓதுபவர்; மான் தோலை ஆடையாகக் கொண்டவர்; மனம் கசிந்து உருகி ஏத்தும் அடியவர்களின் உள்ளத்தைத் தன்பால் ஒருமித்துக் கொள்பவர்; இல்லங்களின் வாயில் தோறும் சென்று பலியேற்றவர்; கையில் நெருப்பேந்தியவர்; காபாலி வேடம் கொள்பவர்; இடபக்கொடியேந்தியுள்ளவர். அப் பெருமான், கொடிய துயரம் யாவும் தீர்த்து என்னை ஆட்கொண்டவராவார்.

949. குராமலரோ டராமதியஞ் சடைமேற் கொண்டார்
குடமுழநந் தீசனைவா சகனாக் கொண்டார்
சிராமலைதஞ் சேரவிடமாத் திருந்தக் கொண்டார்
தென்றல் நெடுந்தேரோனைப் பொன்றக் கொண்டார்
பராபரனென் பதுதமது பேராக் கொண்டார்
பருப்பதங் கைக்கொண்டார் பயங்கள் பண்ணி
இராவணனென் றவனைப்பேர் இயம்பக் கொண்டார்
இடருறு நோய் தீர்த்தென்னை யாட்கொண் டாரே.

தெளிவுரை : சிவபெருமான், சடைமுடியில்மேல், குராமலர், அரவம், சந்திரன் ஆகியவற்றைத் தரித்தவர்; நந்தி தேவரைக் குடமுழாவை வாசிப்பராகக் கொண்டவர்; சிராப்பள்ளியைத் தனது இடமாகக் கொண்டவர்; தென்றலைத் தேராக உடைய மன்மதனை எரித்தவர்; பரஞானம் உடைமையும் அபரஞானம் உடைமையும் ஆகிப் பராபரனாகத் திகழ்பவர். மேரு மலையை வில்லாக ஏந்திக் கையில் கொண்டவர்; இராவணனை அடர்த்து அவன் அழுது ஏத்தி தன்மையில் அப்பெயரை அவனுக்கு நிலைக்குமாறு அருள் புரிந்தவர்.(இராவணன்  அழுதவன்). அப் பெருமான் இடர் தரும் நோயைத் தீர்த்து என்னை ஆட்கொண்டவராவார்.

திருச்சிற்றம்பலம்

97. பொது - திருவினாத் திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

950. அண்டங் கடந்த சுவடு முண்டோ
அனலங்கை யேந்திய ஆட லுண்டோ
பண்டை யெழுவர் படியு முண்டோ
பாரிடங்கள் பலசூழப் போந்த துண்டோ
கண்ட மிறையே கறுத்த துண்டோ
கண்ணின்மேற் கண்ணொன் றுடைய துண்டோ
தொண்டர்கள் சூழத் தொடர்ச்சி யுண்டோ
சொல்லீரெம் பிரானாரைக் கண்ட வாறே

தெளிவுரை : எமது பிரானாகிய சிவபெருமானைக் கண்ணுற்ற தன்மையில், அண்டங்களைக் கடந்த கால் சுவடு உண்டோ ! அனல் ஏந்திய கையுடன் ஆடல் செய்ததுண்டோ ! ஏழு முனிவர்களும் கண்டது உண்டோ ! பூத கணங்கள் சூழ்ந்து விளங்குவது உண்டோ ! நீலகண்டம் உண்டோ ! நெற்றியில் கண்ணுண்டோ ! தொண்டர்கள் சூழ்ந்து விளங்குதல் உண்டோ ! இத் தன்மையானது பொருந்தி இருப்பது ஈசனுக்கு உரிய அடையாளம் எனச் சுட்டப் பெறுதலாயிற்று

ஏழு முனிவர்கள் : அத்திரி, ஆங்கீரசன், கௌதமன், சமதக்கினி, பரத்துவாசன், வசிட்டன், விசுவாமித்திரன்.

951. எரிகின்ற இளஞாயி றன்ன மேனி
யிலங்கிழையோர் பாலுண்டோ வெற்றேறுண்டோ
விரிகின்ற பொறியரவத் தழலு முண்டோ
வேழத்தி னுரியுண்டோ வெண்ணூ லுண்டோ
வரிநின்ற பொறியரவச் சடையு முண்டோ
அச்சடைமேல் இளமதியம் வைத்த துண்டோ
சொரிகின்ற புனலுண்டோ சூலம் உண்டோ
சொல்லீரெம் பிரானாரைக் கண்ட வாறே.

தெளிவுரை : எம் பெருமானாகிய ஈசனைக் கண்ணுற்ற தன்மையில், சூரியன் போன்று ஒளிரும் திருமேனியில் உமாதேவியார் உண்டோ ! வெள்ளை இடப வாகனம் உண்டோ ! நாகாபரணமும் நெருப்பும் உண்டோ ! யானையின் தோல் உண்டோ ! முப்புரிநூல் உண்டோ ! சடையில் நாகம் தரித்ததுண்டோ ! அதன் மேல் பிறைச்சந்திரன் உண்டோ ! கங்கை உண்டோ ! சூலம் உண்டோ ! அவ்வாறு உள்ளது ஈசனின் அடையாளம் ஆகும் என்பது குறிப்பு.

952. நிலாமாலை செஞ்சடைமேல் வைத்த துண்டோ
நெற்றிமேற் கண்ணுண்டோ நீறு சாந்தோ
புலால்நாறு வெள்ளெலும்பு பூண்ட துண்டோ
பூதந்தற் சூழ்ந்தனவோ போரே றுண்டோ
கலாமாலை வேற்கண்ணாள் பாகத் துண்டோ
கார்க்கொன்றை மாலை கலந்த துண்டோ
சுலாமாலை யாடரவந் தோள்மே லுண்டோ
சொல்லீரெம் பிரானாரைக் கண்ட வாறே.

தெளிவுரை : எம் பிரானாகிய ஈசனைக் கண்ணுற்ற தன்மையில் செஞ்சடையின் மேல் சந்திரனை வைத்ததுண்டோ ! நெற்றியில் கண்ணுண்டோ ! திருநீறு, சந்தனம், எலும்பு மாலை, பூண்டதுண்டோ ! பூத கணங்கள் சூழ்ந்ததுண்டோ ! அருகில் இடபம் உண்டோ ! உமாதேவியார் பாகத்தில் திகழ்வதுண்டோ ! கொன்றை மாலை தரித்ததுண்டோ ! நாகமானது தோளின் மேல் விளங்கியது உண்டோ ! இவை அப்பெருமானின் அடையாளங்கள் என்பது குறிப்பு.

953. பண்ணார்ந்த வீணை பயின்ற துண்டோ
பாரிடங்கள் பலசூழப் போந்த துண்டோ
உண்ணா வருநஞ்ச முண்ட துண்டோ
ஊழித்தீ யன்ன ஒளிதா னுண்டோ
கண்ணார் கழல்காலற் செற்ற துண்டோ
காமனையுங் கண்ணழலாற் காய்ந்த துண்டோ
எண்ணார் திரிபுரங்க ளெய்த துண்டோ
எவ்வகையெம் பிரனாரைக் கண்ட வாறே.

தெளிவுரை : எம்பிரானாகிய ஈசனைக் கண்டு மேவிய தன்மையில், அவர் பண்ணின் மேவும் வீணை பயின்ற துண்டோ ! பூத கணங்கள் பல சூழ்ந்ததுண்டோ ! உண்ணப் பெறாத நஞ்சை உண்டதுண்டோ ! ஊழித்தீ போன்ற ஒளி வண்ணம் உண்டோ ! காலால் காலனை வீழ்த்தியது உண்டோ ! மன்மதனை நெற்றிக் கண்ணால் எரித்தது உண்டோ ! முப்புரக் கோட்டைகளை அம்பு கொண்டு எய்து, எரித்ததுண்டோ ! இவை யாவும் ஈசனுக்கு உரிய அடையாளங்கள் என்பது குறிப்பு.

954. நீறுடைய திருமேனி பாக முண்டோ
நெற்றிமே லொன்றைக் கண் முற்று முண்டோ
கூறுடைய கொடுமழுவாள் கையி லுண்டோ
கொல்புலித்தோ லுடையுண்டோ கொண்ட வேடம்
ஆறுடைய சடையுண்டோ அரவ முண்டோ
அதனருகே பிறையுண்டோ அளவி லாத
ஏறுடைய கொடியுண்டோ இலய முண்டோ
எவ்வகையெம் பிரானாரைக் கண்ட வாறே.

தெளிவுரை : எம்பெருமானாகிய ஈசனைக் கண்டு மேவிய தன்மையில் அவருடைய திருமேனியின் பாகத்தில் திருநீறு உண்டோ ! நெற்றியில் ஒற்றைக் கண் உண்டோ ! கையில் மழுப்படை உண்டோ ! புலித்தோலாடை யுண்டோ ! கங்கை தரித்த சடையுண்டோ ! அரவமும் அதன் அருகே பிறைச் சந்திரனும் உண்டோ ! இடபக் கொடி யுண்டோ ! திருக்கூத்து உண்டோ ! இவை யாவும் ஈசனின் திரு அடையாளங்கள் என்பது குறிப்பு.

955. பட்டமுந் தோடுமோர் பாகங் கண்டேன்
பார்திகழப் பலிதிரிந்து போதக் கண்டேன்
கொட்டிநின் றிலயங்க ளாடக் கண்டேன்
குழைகாதிற் பிறைசென்னி யிலங்கக் கண்டேன்
கட்டங்கக் கொடிதிண்டோள் ஆடக் கண்டேன்
களமழுவாள் வலங்கையில் இலங்கக் கண்டேன்
சிட்டனைத் திருவால வாயிற் கண்டேன்
தேவனைக் கனவில்நான் கண்ட வாறே.

தெளிவுரை : சிவபெருமானைக் கனவில் கண்டு மகிழ்ந்த தன்மையில் அவர், நெற்றிப் பட்டமும் தோடும் கொண்டு விளங்கக் கண்டேன்; பலிக்குத் திரிந்து செல்லக் கண்டேன்; கொடு கொட்டி இயம்ப இலயத்துடன் ஆடக் கண்டேன்; காதில் குழையும் சென்னியில் பிறைச் சந்திரனும் கண்டேன்; கட்டங்கக் கொடி (மழுக்கொடி) கண்டேன்; திண்மையான தோள்களை வீசியாடக் கண்டேன்; மழுப்படையானது வலக் கையில் விளங்கக் கண்டேன். அப்பரமன் திருவாலவாயில் வீற்றிருக்கக் கண்டேன்.

956. அலைத்தோடு புனற்கங்கை சடையிற் கண்டேன்
அலர்கொன்றைத் தாரணிந்த வாறு கண்டேன்
பலிக்கோடுத் திரிவார்கைப் பாம்பு கண்டேன்
பழனம் புகுவாரைப் பகலே கண்டேன்
கலிக்கச்சி மேற்றளியே யிருக்கக் கண்டேன்
கறைமிடறுங் கண்டேன் கனலுங் கண்டேன்
வலித்துடுத்த மான்தோல் அரையிற் கண்டேன்
மறைவல்ல மாதவனைக் கண்ட வாறே.

தெளிவுரை : நற்றவத்தின் தலைவரும் வேதங்களின் முதல்வனும் ஆகிய ஈசனைக் காணும் தன்மையில் அப்பெருமானுடைய தோடு கண்டேன்; சடையில் கங்கையைக் கண்டேன்; கொன்றை மாலை சூடிடக் கண்டேன்; பலியேற்பதற்காகத் திரியும் தன்மையில் கையில் பாம்பு கண்டேன்; திருப்பழனம், கச்சித் திருமேற்றளி ஆகிய தலங்களில் வீற்றிருந்து விளங்கக் கண்டேன்; கறை படிந்த மிடறும் கண்டேன்; கையில் நெருப்பைக் கண்டேன்; அரையில் மான்தோல் உடை கண்டேன். இவை யாவும் ஈசனின் அடையாளங்கள் என்பது குறிப்பு.

957. நீறேறு திருமேனி நிகழக் கண்டேன்
நீள்சடைமேல் நிறைகங்கை யேறக் கண்டேன்
கூறேறு கொடுமழுவாள் கொள்ளக் கண்டேன்
கொடுகொட்டி கையலகு கையிற் கண்டேன்
ஆறேறு சென்னியணி மதியுங் கண்டேன்
அடியார்கட் காரமுத மாகக் கண்டேன்
ஏறேறி யிந்நெறியே போதக் கண்டேன்
இவ்வகையெம் பெருமானைக் கண்டவாறே.

தெளிவுரை : சிவபெருமானுடைய திருமேனியில் திருநீறு திகழக் கண்டேன்; சடைமுடி மேல் கங்கை நிலவக் கண்டேன்; மழுப்படையைக் கண்டேன்; கொடுகொட்டி என்னும் வாத்தியத்தைக் கைத்தலத்தில் கண்டேன்; சென்னியில் சந்திரனைக் கண்டேன். அப்பெருமான், அடியவர்களுக்கு அமுதமாக விளங்கக் கண்டேன். அவர், இடபத்தில் ஏறியமர்ந்து இந்நெறியே வந்து காட்சி நல்கக் கண்டேன். நான் ஈசனைக் கண்ட தன்மையானது இத்தகைய பாங்கானதாகும்.

958. விரையுண்ட வெண்ணீறு தூனு முண்டு
வெண்டலைகை யுண்டொருகை வீணை யுண்டு
கரையுண்டு சூடும் பிறையொன் றுண்டு
சூலமுந் தண்டுஞ் சுமந்த துண்டு
அரையுண்ட கோவண ஆலட யுண்டு
வலிக்கோலுந் தோலு மழகா வுண்டு
இரையுண் டறியாத பாம்பு முண்டு
இமையோர் பெருமா னிலாத தென்னே.

தெளிவுரை : சிவபெருமானுக்கு, நறுமணம் கமழும் திருவெண்ணீறு உண்டு; கையில் கபாலம் உண்டு; வீணை உண்டு; பிறைச் சந்திரன் உண்டு; சூலமும் தண்டும் உண்டு; அரையில் கோவண ஆடையுண்டு; வலிமைமிக்க புலித்தோலும் உண்டு; இரையை உண்டறியாத பாம்பும் உண்டு, இத்தனையும் உளள ஈசன் தேவர்களின் தலைவன் ஆவார். அப் பெருமானுக்கு இல்லாத பொருள்தான் யாது உள்ளது ?

959. மைப்படிந்த கண்ணாளுந் தானுங் கச்சி
மயானத்தான் வார்சடையான் என்னி னல்லான்
ஒப்புடைய னல்லன் ஒருவ னல்லன்
ஓரூர னல்லன்ஓ ருவம னில்லி
அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும்
அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்
இப்படியன் இந்நிறத்தன் இவ்வணத்தன்
இவனிறைவன் என்றெழுதிக் காட்டொ ணாதே

தெளிவுரை : சிவபெருமான், உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்குபவர்; திருக்கச்சி மயானத்தில் உள்ளவர்; நீண்ட சடையுடையவர்; ஒப்புமை கூறி உவகை காணும் தன்மையில் எவரும் இல்லாதவராகி, உயர்ந்து மேவுபவர்; ஒன்று என இல்லாது, பலவாக விரிந்து யாங்கணும் வியாபித்துள்ளவர்; ஒரு ஊருக்கு மட்டும் உரியவர் அல்லர்; ஒரு வடிவம் மட்டும் உடையவர் அல்லர். அப் பெருமானுடைய வடிவத்தையும் வண்ணத்தையும் அவனருளால் காண்பதல்லால், இவ்வண்ணமும் வடிவும் உடையவர் என உரைப்பதற்கு அரியவர். இவ்விறைவனை எழுதிக் காட்ட முடியாது. கச்சி மயானம் திருவேகம்பத்தின் ஒரு பகுதி வைப்புத்தலம்.

960. பொன்னொத்த மேனிமேற் பொடியுங் கண்டேன்
புலித்தோ லுடைகண்டேன் புணரத் தன்மேல்
மின்னொத்த நுண்ணிடையாள் பாகங் கண்டேன்
மிளிர்வதொரு பாம்பு அரைமேற் கண்டேன்
அன்னத்தே ரூர்ந்த அரக்கன் தன்னை
அலற அடர்த்திட்ட அடியுங் கண்டேன்
சின்ன மலர்க்கொன்றைக் கண்ணி கண்டேன்
சிவனைநான் சிந்தையுட் கண்ட வாறே.

தெளிவுரை : ஈசனின் பொன் போன்ற மேனியின் மீது திருநீறு கண்டேன்; புலித்தோலுடை கண்டேன்; திருமேனியின் பாகத்தில் உமா தேவியைக் கண்டேன்; பாம்பினை அரையில் கட்டியிருக்கக் கண்டேன்; புட்பகவிமானத்தில் வந்த இராவணனை விரலால் அடர்த்த திருவடியைக் கண்டேன்; கொன்றை மலரைச் சூடிய இருக்கக் கண்டேன். அச் சிவபெருமானை, நான் சிந்தையுள் மேவக் கண்டேன்.

திருச்சிற்றம்பலம்

98. பொது - மறுமாற்றத் திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

961. நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான்
சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே.

தெளிவுரை : நாம் யாருக்கும் குடிமகனாக இருந்து அடிமையாவதில்லை; இயமனுக்கும் அஞ்ச மாட்டோம்; பாவங்களால் சூழப்படுவதில்லாமையால் நாகத்துன்பமும் எமக்கு இல்லை; பிற துன்பம் ஏதும் இல்லை; மகிழ்ச்சியுடன் இருப்போம்; பிணியற்றிருப்போம்; யாருக்கும் பணிய மாட்டோம்; எந்நாளும் இன்பமேயன்றித் துன்பம் இல்லை. யாருக்கும் ஆட்படாதவராகிய சங்கரன், சங்கினால் ஆகிய குழையணிந்தவர். அத்தலைவருக்கு நாம் ஆளாகினோம். அப்பெருமானுடைய திருவடியை அடைந்தோம். ஆகையால் நாம் யாருக்கும் கட்டுப்பட்டவர் அல்லர் என்பது குறிப்பு.

962. அகலிடமே இடமாக ஊர்கள் தோறும்
அட்டுண்பார் இட்டுண்பார் விலக்கார் ஐயம்
புகலிடமாம் அம்பலங்கள் பூமி தேவி
யுடன்கிடந்தாற் புரட்டாள்பொய் யன்று மெய்யே
இகலுடைய விடையுடையான் ஏன்று கொண்டேன்
இனியேதுங் குறைவிலோம் இடர்கள் தீர்ந்தோம்
துகிலுடுத்துப் பொன்பூண்டு திரிவார் சொல்லும்
சொற்கேட்கக் கடவோமோ துரிசற் றோமே.

தெளிவுரை : அகன்ற உலகில் உள்ள ஊர்கள் தோறும் சிவனடியார்களுக்கு உணவு இட்டு இல்லறத்தில் உள்ளவர்கள் வாழ்வார்கள். எனவே உணவு கொள்வதற்கு  இன்னல் இல்லை. பூவுலகில் பொது இடங்கள் உள்ளன. பூமியில் கிடந்து உறங்கும் தன்மையில் எத்தகைய இடையூறும் இல்லை. இடப வாகனத்தை உடைய ஈசன். அடியவர்களை ஏற்றுக் கொண்டவர். எமக்கு எத்தகைய குறையும் இல்லை; இடர்கள் தீர்ந்தோம்; சிறந்த ஆடையை உடுத்திப் பொன்னாபரணங்களைப் பூண்டு திரியும் தன்மையுடையவர்களின் சொற்களைக் கேட்க மாட்டோம் யாம் குற்றம் அற்றவரானோம்.

963. வாராண்ட கொங்கையர்சேர் மனையிற் சேரோம்
மாதேவா மாதேவா என்று வாழ்த்தி
நீராண்ட புரோதாயம் ஆடப் பெற்றோம்
நீறணியுங் கோலமே நிகழப் பெற்றோம்
காராண்ட மழைபோலக் கண்ணீர் சோரக்
கன்மனமே நன்மனமாய்க் கரையப் பெற்றோம்
பாராண்டு பகடேறி வருவார் சொல்லும்
பணிகேட்கக் கடவோமோ பற்றற் றோமே.

தெளிவுரை : மனை வாழ்க்கையில் மேவுதலை நீங்கினோம்; காலையில் புனித நீராடி மாதேவா என்று ஈசனை வாழ்த்துதலானோம். திருவெண்ணீறு அணியும் திருக்கோலத்தைப் பெற்றோம்; மேகத்திலிருந்து பொழியும் மழை போன்று கண்ணீர் சோரக்கல் மனமானது நல் மனமாக நைந்துருகப் பத்தியுடன் ஆண்டு, யானையின் மீது இவர்ந்து வரும் அரசர்களின் சொற்களைக் கேட்க மாட்டோம். யாம் பற்றற்றவரானோம்.

964. உறவாவார் உருத்திரபல் கணத்தி னோர்கள்
உடுப்பனகோ வணத்தோடுதீ ளுளவா மன்றே
செறுவாருஞ் செறமாட்டார் தீமை தானும்
நன்மையாய்ச் சிறப்பதே பிறப்பிற் செல்லோம்
நறவார்பொன் னிதழிநறுந் தாரோன் சீரார்
நமச்சிவா யச்சொல்ல வல்லோம் நாவால்
சுறவாருங் கொடியானைப் பொடியாக் கண்ட
சுடர்நயனச் சோதியையே தொடர்வுற் றோமே.

தெளிவுரை : சிவனடியார்கள் உருத்திரகணத்தவர்கள் உறவாகித் திகழக் கோவண ஆடை உடுத்தியவர்கள். பகைவர்களால் தாக்கப்படாதவர்கள்; பிறர் செய்யும் தீமையும் நன்மையாய் விளங்கும்; பிறப்பற்றவர்கள் நறுமணம் கமழும் கொன்றை மாலை அணிந்த சிவபெருமானின் சிறப்புடைய திருநாமமாகிய நமச்சிவாய என்று சொல்ல வல்லவர்கள் அவர்கள். மீனக் கொடியுடைய மன்மதனை எரித்துச் சம்பலாக்கிய நெற்றிக் கண்ணுடைய ஈசனையே தொடர்ந்தவராவார்கள். எனவே, அத்தகைய சிவனடியார்கள் எவருக்கும் அஞ்ச வேண்டியதில்லை என்பது குறிப்பு.

965. என்றும்நாம் யாவர்க்கும் இடைவோ மல்லோம்
இருநிலத்தில் எமக்கெதிரா வாரு மில்லை
சென்றுநாம் சிறுதெய்வம் சேர்வோ மல்லோம்
சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்
ஒன்றினாற் குறையுடையோ மல்லோ மன்றே
உறுபிணியார் செறலொழிந்திட் டோடிப் போனார்
பொன்றினார் தலைமாலை யணிந்த சென்னிப்
புண்ணியனை நண்ணியபுண் ணியத்து ளோமே.

தெளிவுரை : நாம், எக்காலத்திலும் யாருக்கும் இடையிட்டுத் துன்பம் செய்வதில்லை; இவ்வுலகத்தில் எமக்கு எதிராக உள்ளவரும் இல்லை. சிறு தெய்வங்களைச் சார மாட்டோம். சிவ பெருமானுடைய திருவடியே சேரப் பெற்றோம். எத் தன்மையிலும் குறையில்லாதவரானோம். பிணியுள்ளவர் எல்லோரும் விலகிச் செல்லத் தலை மாலையணிந்த புண்ணியனாக மேவும் ஈசனை நண்ணிப் புண்ணியர்களானோம்.

966. மூவுருவின் முதலுருவாய் இருநான் கான
மூர்த்தியே யென்றுமுப் பத்து மூவர்
தேவர்களும் மிக்கோருஞ் சிறந்து வாழ்த்தும்
செம்பவளத்ச திருமேனிச் சிவனே யென்னும்
நாவுடையார் நமையாள வுடையா ரன்றே
நாவலந்தீ வகத்தினுக்கு நாத ரான
காவலரே யேவி விடுத்தா ரேனுங்
கடவமல்லோம் கடுமையொடு களவற் றோமே.

தெளிவுரை : சிவபெருமான், மும்மூர்த்திகளாகிய பிரமன், விஷ்ணு, ருத்திரன் ஆகியவர்களின் தலைவர் ஆகியவர்; அட்டமூர்த்தியாய் விளங்குபவர்; முப்பத்து மூன்று வகையான தேவர்களுக்கும் அவர்களினும் மேலானவர்களுக்கும் தலைவராக விளங்குபவர். அப்பெருமானைச் செம்பவளத் திருமேனியுடைய சிவனே என்று ஏத்தும் திருத்தொண்டர்களே எம்மை ஆளும் தன்மை உடையவர்கள். இச்சிறு பகுதிக்கு மன்னனாகிய பல்லவனே அன்றிப் பெருநிலமாகிய நாவலந் தீவுக்குத் தலைவர் எனக் கூறி வந்து ஒருவர் ஏவினாலும் நாம் ஏற்க மாட்டோம். எம்மிடம் கடுமையும் களவும் இல்லை.

967. நிற்பனவும் நடப்பனவும் நிலனும் நீரும்
நெருப்பினொடு காற்றாகி நெடுவா னாகி
அற்பமொடு பெருமையுமாய் அருமை யாகி
அன்புடையார்க் கெளிமையதாய் அளக்கிலாகாத்
தற்பரமாய்ச் சதாசிவமாய்த் தானும் யானும்
ஆகின்ற தன்மையனை நன்மை யோடும்
பொற்புடைய பேசக் கடவோம் பேயர்
பேசுவன பேசுதுமே பிழையற் றோமே.

தெளிவுரை : சிவபெருமான், நிலைத்து மேவும் அசையாப் பொருளாகவும், அசையும் பொருளாகவும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐம் பூதங்களாகவும், மிக நுண்ணியதான அணுப்போன்றும், பெரிய பொருளாகவும், அருமையுடன் ஏத்தப் பெறும் மதிப்பு மிக்க பொருளாகவும் விளங்குபவர்; அன்பு கொண்டு ஏத்துபவர்களுக்கு எளிமையானவர்; அளவிட்டுக் காண முடியாத தற்பரமாகவும் சதாசிவ மூர்த்தியாகவும் விளங்குபவர். அப்பெருமான் யானும் ஆகிய தன்மையுடையவர். நாம் நன்மையும் பொற்பும் உடைய சொற்களைப் பேசும் இயல்பினர். மனம் கலங்கியவராகிப் பேய்க் குணம் உடையவர்கள் எது வேண்டினும் பேசிக் கொள்ளட்டும். நாங்கள் பிழையற்றவர்கள்.

968. ஈசனையெவ் வுலகினுக்கும் இறைவன் தன்னை
இமையவர்தம் பெருமானை எரியாய் மிக்க
தேசனைச் செம்மேனி வெண்ணீற் றானைச்
சிலம்பரையன் பொற்பாவை நலஞ்செய் கின்ற
நேசனை நித்தலும் நினையப் பெற்றோம்
நின்றுண்பார் எம்மை நினையச் சொன்ன
வாசக மெல்லாம் மறந்தோ மன்றே
வந்தீரார் மன்னவனா வான்றா னாரே.

தெளிவுரை : சிவபெருமான், எல்லோருக்கும் ஈசன், எல்லா உலகங்களுக்கும் இறைவன்; தேவர்களின் கடவுள்; நெருப்பு போன்று ஒளிரும்  சிவந்த திருமேனியில் திருவெண்ணீற்றைக் குழையப் பூசி விளங்குபவர்; மலையரசனின் திருமகளாகிய உமா தேவியாருக்கு நலம் செய்யும் நேசனாகுபவர். அப் பெருமானை நாம் நித்தமும் நினைத்து ஏத்திப் பெறுகின்ற பேறுகள் யாவும் பெற்றோம். சமணர்கள் எமக்குச் சொல்லிய வாசகங்களை நீக்கினோம். எம்மிடம் வந்த நீங்களெல்லாம் யார் ? உங்கள் மன்னவன்தான் யாவன் ? நாங்கள் யாருக்கும் ஆட்பட்டோம் என்பது குறிப்பு.

969. சடையுடையான் சங்கக் குழையோர் காதன்
சாம்பலும் பாம்பும் அணிந்த மேனி
விடையுடையவன் வேங்கை அதள்மேலாடை
வெள்ளிபோற் புள்ளியுழை மான்தோல் சார்ந்த
உடையுடையான் நம்மை யுடையான் கண்டீர்
உம்மோடு மற்ற முளராய் நின்ற
பøயுடையான் பணிகேட்கும் பணியோ மல்லோம்
பாசமற வீசும் படியோம் நாமே.

தெளிவுரை : ஈசன், சடைமுடியுடையவர்; காதில் சங்குக் குழை அணிந்தவர்; சாம்பலைப் பூசியுள்ளவர்; பாம்பைத் திருமேனியில் ஆபரணமாகப் பூண்டவர்; இடபத்தை வாகனமாக உடையவர்; புலித்தோலை உடுத்தியவர்; மான்தோலை மேலாடையாகக் கொண்டவர்; எம்மை அடிமையாக உடையவர்; உங்களோடும் மற்றும் உள்ளபடை வீரர்களையும் உடைய மன்னனின் பணியைக் கேட்டுப் பணிய மாட்டோம். நாம் எல்லாப் பற்றினையும் நீத்தவர்கள் ஆயினோம்.

970. நாவார நம்பனையே பாடப் பெற்றோம்
நாணற்றார் நள்ளாமே விள்ளப் பெற்றோம்
ஆவாஎன் றெமையாள்வான் அமரர் நாதன்
அயனொடுமாற் கறிவரிய அனலாய் நீண்ட
தேவாதி தேவன் சிவனென் சிந்தை
சேர்ந்திருந்தான் தென்திசைக்கோன் தானேந்து
கோவாடிக் குற்றேவல் செய்கென் றாலும்
குணமாகக் கொள்ளோம்எண் குணத்துளோமே.

தெளிவுரை : யாம், நாவார ஈசனைப் பாடிப் போற்றி, நாணமில்லாதவர்கள் எம்மை அணுகாதவாறு விளங்கினோம். வா என்று எம்மை அழைத்து ஆள்வது தேவர்களின் தலைவராகிய சிவபெருமானே ஆவார். அப்பெருமான், பிரமனும் திருமாலும் காண்பதற்கு அரியவராகி, நெருப்புப் பிழம்பாகி ஓங்கியவர்; தேவாதி தேவர்; என் சிந்தையில் விளங்குபவர்; தென் திசைக்குத் தலைவனாகிய இயமன் தானே வந்து எம்மைக் குற்றேவல் செய்யுமாறு பணித்தாலும் அதனை ஒரு பொருட்டாகக் கொள்ள மாட்டோம். ஈசனுக்குரிய எண் குணங்களும் எம்மால் அமையப் பெற்றன.

திருச்சிற்றம்பலம்

99. திருப்புகலூர் (அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்புகலூர், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

971. எண்ணுகேன் என்செல்லி எண்ணு கேனோ
எம்பெருமான் திருவடியே எண்ணி னல்லால்
கண்ணிலேன் மற்றோர் களைகண் இல்லேன்
கழலடியே கைதொழுது காணின் அல்லால்
ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்
ஒக்க அடைக்கும்போ துணர மாட்டேன்
புண்ணியா உன்னடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணியனே.

தெளிவுரை : பூம்புகலூரில் மேவிய புண்ணியனே ! தேவரீரை எண்ணி மேவுகின்றேன் ! யான், எப்பொருளின் மீது பற்றுக் கொண்டு விண்ணப்பிக்கப் போகின்றேன் ! தேவரீரையன்றி வேறு பற்றுக்கோடு இல்லை; திருவடியைக் கைதொழுது தரிசிப்பதன்றி வேறு ஒன்றிலும் பற்றில்லை. இவ்வுடம்பில் ஒன்பது வாசல்களை வைத்துள்ளீர். இவை யாவும் ஒன்று சேர்ந்து அடைக்கும்போது நான் உணர மாட்டேன். தேவரீருடைய திருவடிக்கே வருகின்றேன். இவண் புண்ணியா என்பது புண்ணியத்தின் வடிவினன் எனவும் புண்ணியனே என்பது புண்ணியத்தின் சிறப்பினை ஏத்தும் தன்மையில் அவ்வறத்தின் தலைவனாகவும் கொண்டு ஏத்தப் பெற்றது.

972. அங்கமே பூண்டாய் அனலாடினாய்
ஆதிரையாய் ஆல்நிழலாய் ஆனே றூர்ந்தாய்
பங்கமொன் றில்லாத படர்சடையினாய்
பாம்பொடு திங்கள் பகைதீர்த் தாண்டாய்
சங்கையொன் றின்றியே தேவர் வேண்டச்
சமுத்திரத்தின் நஞ்சுண்டு சாவா மூவாச்
சிங்கமே உன்னடிக்கே போது கின்றேன்
திருப்புகலூர் மேவிய தேவ தேவே.

தெளிவுரை : திருப்புகலூரில் மேவிய தேவனே ! தேவரீர், எலும்பினை ஆபரணமாகப் பூண்டவர்; கையில் நெருப்பேந்தி ஆடியவர்; ஆதிரை நாளுக்கு உரியவர்; கல்லால மரத்தின் நிழலில் வீற்றிருந்து அறம் உரைத்தவர்; இடபத்தை வாகனமாக உடையவர்; படர்ந்து விரிந்த சடையுடையவர்; பாம்பும் சந்திரனும் தமது இயல்பால் பகைமை கொண்டு விளங்கினாலும் அதனை மாற்றிச் சடைமுடியில் விளங்குமாறு தரித்தவர்; தேவர்கள் வேண்டுகோளுக்கு இரங்கி நஞ்சினை உண்டு, சாதல் இன்றியும், மூப்பு இன்றியும், விளங்கும் சிங்கம் போன்ற ஆளுமையும் வலிவும் உடையவர். தேவரீருடைய திருவடிக்கே யான் வருகின்றேன். அடியேனை ஏற்று அருள்வீராக என்பது குறிப்பு.

973. பையரவக் கச்சையாய் பால்வெண் ணீற்றாய்
பளிக்குக் குழையினாய் பண்ணா ரின்சொல்
மைவிரவு கண்ணானைப் பாகங் கொண்டாய்
மான்மறிகை ஏந்தினாய் வஞ்சக் கள்வர்
ஐவரையும் என்மேல் தரவறுத்தாய்
அவர்வேண்டுங் காரியமிங் காவ தில்லை
பொய்யுரையா துன்னடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணியனே.

தெளிவுரை : பூம்புகலூர் மேவிய புண்ணியனே ! தேவரீர், பாம்பை அரையில் கட்டியவர்; பால் போன்ற திருவெண்ணீற்றைத் தரித்தவர்; காதில் பளிங்கு போன்ற வெண்குழையை அணிந்தவர்; பண்ணின் இசை போன்ற இனிய மொழி பேசும் உமா தேவியைத் திருமேனியில் பாகம் கொண்டவர்; மான் கன்றினைக் கையில் ஏந்தியவர்; வஞ்சம் உடைய கள்வராகிய ஐம்புலன்கள் என்னைப் பற்றாதவாறு, காத்தவர். அவ்வைம்புலன்களால் எனக்கு ஆக வேண்டிய செயலும் ஏதும் இல்லை. ஈசனே ! அடியேன் தேவரீருடைய திருவடிக்கே போதுகின்றேன். ஏற்று அருள்வீராக.

974. தெருளாதார் மூவெயிலுந் தீயில் வேவச்
சிலைவளைத்துச் செங்கணையாற் செற்ற தேவே
மருளாதார் தம்மனத்தில் வாட்டந் தீர்ப்பாய்
மருந்தாய்ப் பிணிதீர்ப்பாய் வானோர்க் காணா
அருளாகி ஆதியாய் வேத மாகி
அலர்மேலான் நீர்மேலான் ஆய்ந்துங் காணாப்
பொருளாவாய் உன்னடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணியனே.

தெளிவுரை : பூம்புகலூரில் மேவும் புண்ணியனே ! சிவவழிபாட்டினை மேவாது தெளிவற்றவராகிய அசுரர்களின் மூன்று கோட்டைகளையும் எரித்துச் சாம்பலாக்கிய பெருமானே ! தேவரீர், திரிபுரத்தவர்கள் போல் மருட்சியடையாது, நினைந்து ஏத்தும் அடியவர்களுடைய துன்பத்தை தீர்ப்பவர்; மருந்தாகிப் பிணி தீர்ப்பவர்; வானவர்களுக்கு அருள் புரிபவர்; ஆதியாகியும், வேதமாகியும், பிரமனும் திருமாலும் காண்பதற்கு அரிய சோதிப் பொருளாகியும் விளங்குபவர். யாவற்றுக்கும் பொருளானவர். தேவரீருடைய திருவடிக்கே போதுகின்றேன், ஏற்று அருள்வீராக.

975. நீரேறு செஞ்சடைமேல் நிலா வெண்டிங்கள்
நீங்காமை வைத்துகந்த நீதி யானே
பாரேறு படுதுலையிற் பலிகொள் வானே
பண்டனங்கற் காய்ந்தானே பாவ நாசா
காரேறு முகிலனைய கண்டத் தானே
கருங்கைக் களிற்றுரிவை கதறப் போர்த்த
போரேறே உன்னடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணியனே.

தெளிவுரை : பூம்புகலூரில் மேவிய புண்ணியனே ! தேவரீர் சடை முடியில் கங்கையைத் தரித்தவர்; சந்திரனைச் சூடியவர்; மண்டை யோட்டைப் பிச்சைப் பாத்திரமாகக் கையில் ஏந்திப் பலியேற்றவர்; மன்மதனை நெற்றிக் கண்ணால் எரித்தவர்; அடியவர்களின் பாவங்களைப் போக்கி நரகத்தில் வீழாது காக்கும் அருளாளர்; மேகம் போன்று விளங்கும் கரிய கண்டத்தை உடையவர்; யானையின் தோலை உரித்துப் போர்வையாகக் கொண்டவர். வீரம் மிக்க ஏறு போன்றவர். தேவரீருடைய திருவடிக்கே போதுகின்றேன். ஏற்றருள்வீராக.

976. விரிசடையாய் வேதியனே வேத கீதா
விரிபொழில்சூழ் வெண்காட்டாய் மீயச் சூராய்
திரிபுரங்கள் எரிசெய்த தேவ தேவே
திருவாரூர்த் திருமூலட் டானம் மேயாய்
மருவினியார் மனத்துளாய் மாகா ளத்தாய்
வலஞ்சுழியாய் மாமறைக்காட் டெந்தாயென்றும்
புரிசடையாய் உன்னடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணியனே.

தெளிவுரை : பூம்புகலூரில் மேவிய புண்ணியனே ! விரிந்த சடையுடைய வேதியனே ! வேத கீதமாக விளங்கும் ஈசனே ! பொழில் சூழ்ந்த திருவெண்காடு, மீயச்சூர், திருவாரூர்த் திருமூலட்டானம், மாகாளம், திருவலஞ்சுழி, திருமறைக்காடு ஆகிய தலங்களில் மேவும் நாதனே ! முப்புரங்களை எரித்த தேவனே ! மருவி ஏத்தும் இனியவர் தம் மனத்துள் வீற்றிருக்கும் பெருமானே ! தேவரீருடைய திருவடிக்கே போது கின்றேன் ஏற்று அருள்வீராக.

977. தேவார்ந்த தேவனைத் தேவ ரெல்லாந்
திருவடிமேல் அலரிட்டுத் தேடி நின்று
நாவார்ந்த மறைபாடி நட்டம் ஆடி
நான்முகனும் இந்திரனும் மாலும் போற்றக்
காவார்ந்த பொழிற்சோலைக் கானப் பேராய்
கழுக்குன்றத் துச்சியாய் கடவு ளேநின்
பூவார்ந்த பொன்னடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணியனே.

தெளிவுரை : பூம்புகலூரில் மேவும் புண்ணியனே ! தேவாதி தேவனே ! தேவர்கள் எல்லாம் மலர்தூவிப் போற்றித் திருவடிக் கமலத்தை ஏத்தவும், வேதங்களை ஓதவும், நடனம் புரியும் பெருமானே ! நான்முகனும் இந்திரனும் திருமாலும் போற்றும் தலைவனே ! மேவும் ஈசனே ! தேவரீருடைய பொன்னடிக்கே போதுகின்றேன். ஏற்றருள்வீராக.

978. நெய்யாடி நின்மலனே நீல கண்டா
நிறைவுடையாய் மறைவல்லாய் நீதி யானே
மையாடு கண்மடவாள் பாகத் தானே
மான்தோல் உடையா மகிழ்ந்து நின்றாய்
கொய்யாடு கூவிளங் கொன்றை மாலை
கொண்டடியேன் நானிட்டுக் கூறி நின்று
பொய்யாத சேவடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணியனே.

தெளிவுரை : பூம்புகலூரில் மேவும் புண்ணியனே ! நெய் முதலாகிய பஞ்ச கவ்வியத்தைப் பூசைப் பொருளாக உவந்து ஏற்கும் நாதனே ! நீலகண்டப் பெருமானே ! எல்லாம் நிறைந்து மேவும் ஈசனே ! வேதங்களின் நாதனே ! உமைபாகனே ! மான் தோலை உடையாகக் கொண்டு மகிழ்ந்து மேவும் தலைவனே ! வில்வமாலையும் கொன்றை மாலையும் கொண்டு தேவரீருக்குச் சாத்திப் பொய்மையில்லாத சேவடிக்கே அடியேன் போதுகின்றேன். ஏற்று அருள்வீராக.

979. துன்னஞ்சேர் கோவணத்தாய் தூய நூற்றாய
துதைத்திலங்கு வெண்மழுவாள் கையி லேந்தித்
தன்னைணயுந் தண்மதியும் பாம்பும் நீரூஞ்
சடைமுடிமேல் வைத்துகந்த தன்மை யானே
அன்ன நடைமடவாள் பாகத் தானே
யக்காரம் பூண்டானே ஆதி யானே
பொன்னங் கழலடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணியனே.

தெளிவுரை : பூம்புகலூரில் மேவிய புண்ணியனே ! தேவரீர், தைத்து மேவும் கோவண ஆடையுடையவர்; தூய திருவெண்ணீறு தரித்தவர்; கையில் ஒளி திகழும் மழுப்படையுடையவர்; சடை முடியில் குளிர்ந்த சந்திரனும், பாம்பும் கங்கையும் கொண்டு விளங்குபவர்; அன்னம் போன்ற நடையுடைய உமாதேவியாரைத் திருமேனியில் பாகம் கொண்டு திகழ்பவர்; எலும்பு மாலையை ஆபரணமாக உடையவர்; ஆதிப் பொருளானவர். தேவரீருடைய பொன்னால் ஆகிய கழலை அணிந்த திருவடிக்கே போதுகின்றேன். ஏற்று அருள்வீராக.

980. ஒருவனையும் அல்லா துணரா துள்ளம்
உணர்ச்சித் தடுமாற்றத் துள்ளே நின்ற
இருவரையும் மூவரையும் என்மேல் ஏவி
இல்லாத தரவறுத்தாய்க் கில்லேன் ஏலக்
கருவரைசூழ் கானல் இலங்கை வேந்தன்
கடுந்தேர்மீ தோடாமைக் காலாற் செற்ற
பொருவரையாய் உன்னடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணியனே.

தெளிவுரை : பூம்புகலூரில் மேவிய புண்ணியனே ! ஒப்பற்ற ஒருவனாகிய தேவரீரை யன்றி, என்னுள்ளமானது வேறொன்றை உணராது. உணர்வுகளைத் தடுமாறச் செய்யும் நல்வினை தீவினை ஆகிய இரண்டும், மற்றும் மும்மலங்களின் பந்தமும், என்னை நலியாதவாறு காத்து அருள் புரிந்தவர். எனக்கு மீண்டும் கருவுக்குள் புகும் தன்மை இல்லை. இராவணனைக் காலாற் செற்ற கயிலை நாதனே ! உன்னடிக்கே போதுகின்றேன். அடியவனை ஏற்று அருள்வீராக. இத் திருப்பாட்டில் இறுதியாகக் கயிலை நாதனை நெஞ்சிருத்தி ஏத்திய சிறப்பினை ஓர்க.

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச் செய்த தேவாரம் ஆறாம் திருமுறை முற்றிற்று.

 
மேலும் ஆறாம் திருமறை »
temple news
திருநாவுக்கரசர் பாடிய 4,5,6 திருமுறைகளில் மொத்தம் 3064 பாடல்கள் உள்ளது. இதில் ஆறாம் திருமுறையில் 980 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar