Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news முதல் மூவரில் ஒருவர் சுந்தரர் | ... ஏழாம் திருமுறையில் பாடிய பாடல் (பகுதி-2) | தேவாரம் ஏழாம் திருமுறையில் பாடிய பாடல் ...
முதல் பக்கம் » ஏழாம் திருமறை
ஏழாம் திருமுறையில் பாடிய பாடல் (பகுதி-1) | தேவாரம்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

09 செப்
2011
04:09

சுந்தரர் பாடிய 7ம் திருமுறையில் மொத்தம் 1026 பாடல்களும் அதன் தெளிவுரையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. திருவெண்ணெய்நல்லூர் (அருள்மிகு கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில், வெண்ணெய்நல்லூர், விழுப்புரம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1. பித்தா பிறை சூடீ பெரு
மானேயரு ளாளா
எத்தால்மற வாதேநினைக்
கின்றேன்மனத் துன்னை
வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூர்அருள் துறையுள்
அத்தாஉனக்(கு) ஆளாய்இனி
அல்லேன்என லாமே.

தெளிவுரை : பித்தனே! பிறையைக் கண்ணியாகச் சூடியவனே! பெருமை உடையவனே! பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய் நல்லூரிலுள்ள அருள்துறை என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் தலைவனே! எனது நெஞ்சத்துள் உன்னை நீங்காமல் வைத்தருளினாய். அதனால் உன்னை மறவாமல் நினைந்து முன்பே உனக்கு அடியவனாகி விட்டேன். இப்போது உனக்கு அடியவன் அல்லேன் என எதிர்வழக்காடியது பொருந்துமோ?

2. நாயேன்பல நாளும் நினைப்
பின்றிமனத் துன்னைப்
பேயாய்த்திரிந் தெய்த்தேன்பெற
லாகா அருள் பெற்றேன்
வேயார்பெண்ணைத் தென்பால் வெண்ணெய்
நல்லூர் அருள் துறையுள்
ஆயா உனக்(கு) ஆளாய் இனி
அல்லேன் எனல் ஆமே.

தெளிவுரை : மூங்கில்கள் நிறைந்து வரும் பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய் நல்லூரின் கண்ணதாகிய அருள்துறையில் எழுந்தருளியிருக்கும் தலைவனே. நாய்போலும் கீழ்மையுடையேனாகிய யான் எனது இளமைப் பருவத்தில் மனத்தால் நினைக்காமல் பேய்போல் அலைந்து இளைத்தேன். ஆயினும் இப்போது பெறுதற்குரிய உனது திருவருளைப் பெற்றேன். முன்பே நான் உனக்கு அடியவன். இப்போது அடியவன் அல்லேன் என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ?

3. மன்னேமற வாதேநினைக்
கின்றேன்மனத் துன்னைப்
பொன்னேமணி தானேவயி
ரம்மேபொரு துந்தி
மின்னார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூர்அருள் துறையுள்
அன்னேஉனக் காளாய்இனி
அல்லேன்எனல் ஆமே.

தெளிவுரை : தலைவனே! கரையை மோதி பொன்னும் மணியும் வயிரமும் ஆகிய இவற்றைத் தள்ளிக் கொண்டு, ஒளி மிகுந்து வருகின்ற பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரிலுள்ள அருள்துறைக்கோயிலில் எழுந்தருளியுள்ள தாய் போன்றவனே, நான் முன்பே உனக்கு அடியவன். இப்போது அடியவன் அல்லேன் என்று எதிர் வழக்காடியது பொருந்துமோ? இனி உன்னை எப்போதும் மறவேன்.

4. முடியேன்இனிப் பிறவேன்பெறின்
மூவேன்பெற்றம் ஊர்தீ
கொடியேன்பல பொய்யேஉரைப்
பேனைக்குறிக் கொள்நீ
செடியார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூர்அருள் துறையுள்
அடிகேள்உனக் காளாய்இனி
அல்லேன்எனல் ஆமே

தெளிவுரை : இடபத்தை ஊர்பவனே, ஒளி நிறைந்த பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரிலுள்ள அருள் துறைக் கோயிலில் எழுந்தருளியுள்ள தலைவனே! நான் உனக்கு முன்பே அடியவன். இப்போது அடியவன் அல்லேன் என எதிர்வழக்குப் பேசுவது பொருந்துமோ? அப் பொருந்தாமையை அகற்றி என்னை நீ தெளிவித்து அருளினமையால் இனி நான் இறக்கவும், மீளப் பிறக்கவும், இவ்வுலகில் வாழப் பெறின் மூப்படைந்து வருந்தலும் ஆற்றேன். நன்னெறியை விட்டு, பொய் பேசுவேனாகிய என்னை நீ வெறுத்து ஒதுக்காமல் ஏற்றருள்வாயாக.

5. பாதம்பணி வார்கள்பெறும்
பண்டம்அது பணியாய்
ஆதன்பொருள் ஆனேன் அறி
வில்லேன்அரு ளாளா
தாதார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூர் அருள் துறையுள்
ஆதீஉனக் காளாய்இனி
அல்லேன்எனல் ஆமே.

தெளிவுரை : அருளாளனே ! பூக்களின் மகரந்தம் நிறைந்த பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரிலுள்ள அருள்துறைக் கோயிலில் எழுந்தருளியுள்ள முதல்வனே ! முன்பே நான் உனக்கு அடியவன். இப்போது அடியவன் அல்லேன் என எதிர்வழக்குப் பேசுவது பொருந்தாது. அப்பொருந்தாச் செய்கையைச் செய்தமையால் அறிவில்லாதவன் ஆனேன். அதனால் அறிவில்லாதவன் என்னும் சொல்லுக்குப் பொருளாயினேன். ஆயினும் என்னை இகழாமல் ஏற்றருள்வாயாக.

6. தண்ணார்மதி சூடீதழல்
போலும்திரு மேனீ
எண்ணார்புரம் மூன்றும்எரி
உண்ணநகை செய்தாய்
மண்ணார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூர் அருள் துறையுள்
அண்ணாவுனக் காளாய்இனி
அல்லேன்எனல் ஆமே.

தெளிவுரை : குளிர்ந்த சந்திரனைச் சூடியவனே! நெருப்புப் போலும் செம்மை நிறம் உடையவனே! பகைவர் அரண்கள் மூன்றையும் தீ உண்ணும்படி சிரித்தல் செய்தவனே ! நீராடுவோரது பாவத்தைக் கழுவுகின்ற பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரிலுள்ள அருள்துறையில் கோயில் கொண்டுள்ள தலைவனே ! நான் முன்னமே உனக்கு அடிமைப்பட்டவன். இப்போது அடியவன் அல்லேன் என எதிர்வழக்காடுதல் தகுமா?

7. ஊனாய்உயிர் ஆனாய்உடல்
ஆனாய்உல கானாய்
வானாய்நிலன் ஆனாய்கடல்
ஆனாய்மலை ஆனாய்
தேனார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூர் அருள் துறையுள்
ஆனாய்உனக்(கு) ஆளாய்இனி
அல்லேன்எனல் ஆமே.

தெளிவுரை : பூக்களின் தேன்நிறைந்த பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரில் கோயில் கொண்டிருக்கும் இறைவனே ! நீ உடலில் இருந்து கொண்டு பொருள்களை உணர்ந்து வருகின்ற உயிர்களாகியும், அவைகள் தங்கியிருக்கும் உடல்களாகியும், வானாகியும், நிலமாகியும், கடலாகியும், மலையாகியும் நிற்கின்றாய். இப்பெற்றியனாகிய உனக்கு நான் முன்பே அடிமையாக இருப்பவன். இப்போது அடியவன் அல்லேன் என எதிர் வழக்குப் பேசுவது பொருந்துமோ?

8. ஏற்றார்புரம் மூன்றும்எரி
உண்ணச்சிலை தொட்டாய்
தேற்றாதன சொல்லித்திரி
வேனோசெக்கர் வானீர்
ஏற்றாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூர்அருள் துறையுள்
ஆனாய்உனக்(கு) ஆளாய்இனி
அல்லேன்எனல் ஆமே.

தெளிவுரை : பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரிலுள்ள அருள்துறையில் எழுந்தருளியிருக்கின்றவனே. நீ உனக்குப் பகையாய் எதிர்த்தவர்களது அரண்கள் மூன்றையும் தீ உண்ணும் படி போர் செய்து அழித்தாய். சிவந்த சடையிடத்து ஆகாய கங்கையைத் தாங்கினாய். அப்பெருமைகளை அறியாமல் வீணே உழல்வேனோ? முன்பே நான் உனக்கு அடிமை. அதற்கு மாறாக இப்போது அடியவன் அல்லேன் என எதிர்வழக்குப் பேசியது தகுமோ?

9. மழுவாள்வலன் ஏந்தீமறை
ஓதீமங்கை பங்கா
தொழுவார் அவர் துயர் ஆயின
தீர்த்தல்உன தொழிலே
செழுவார் பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூர் அருள் துறையுள்
அழகாஉனக்(கு) ஆளாய்இனி
அல்லேன்எனல் ஆமே.

தெளிவுரை : மழுப்படையை வலப்பக்கத்தில் ஏந்தியவனே, வேதத்தை ஓதுபவனே, உமாதேவியை ஒரு பாகத்தில் உடையவனே, செழுமையான பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூர் அருள்துறையில் கோயில் கொண்டுள்ள அழகனே! உன்னை வணங்குவாரது துன்பங்களைப் போக்குபவனே! அதனால் என்னை வலிந்து ஆட்கொள்ள வந்தாய். நான் முன்பே உனது அடிமை. இப்போது அடியவன் அல்லேன் என எதிர்த்துப் பேசுவது தகுமோ?

10. காரூர்புனல் எய்திக்கரை
கல்லித்திரைக் கையால்
பாரூபுகழ் எய்தித்திகழ்
பன்மாமணி உந்திச்
சீரூர்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூர் அருள் துறையுள்
ஆரூரன்எம் பெருமாற்காள்
அல்லேன்எனல் ஆமே.

தெளிவுரை : மேகம்போல் திரண்டுவரும் நீர்பெருக்கைப் பொருந்தி, அலைகளாகிய கைகளால் கரையைக் குத்தி, நில முழுதும் பரவிய புகழைப் பெற்று, சிறந்த மணிகளைக் கொழிக்கும் அழகிய பெண்ணையாற்றின் தென்பால் அமைந்த திருவெண்ணெய்நல்லூர் அருள்துறையில் கோயில் கொண்டிருக்கும் எம்பெருமானுக்கு ஆரூரன் அடியன் அல்லேன் என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ?

திருச்சிற்றம்பலம்

2. திருப்பரங்குன்றம் (அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில், திருப்பரங்குன்றம், மதுரை மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

11. கோத்திட்டையும் கோவலும் கோயில்கொண்டீர்
உமைக்கொண்டுழல் கின்றதோர் கொல்லைச் சில்லைச்
சேத்திட்டுக்குத் தித்தெரு லேதிரியும்
சில்பூதமும் நீரும் திசைதிசையன
சோத்திட்டுவிண் ணோர்பலரும் தொழநும் அரைக்
கோவணத் தோடொரு தோல்புடைசூழ்ந்து
ஆர்த்திட்டதும் பாம்புகைக் கொண்டதும் பாம்பு
அடிகேள்உமக்கு ஆட்செய அஞ்சுதுமே.

தெளிவுரை : இறைவரே ! நீர் பெரிய மலையையும் சுரத்தையும் (பாலை) கோயிலாகக் கொண்டுள்ளீர். உம்மைச் சுமந்து கொண்டு திரிகின்றதாகிய முல்லை நிலத்து இளைய ஓர் எருது, மண்மேடுகளைத் தன் கொம்பால் குத்தித் தெருவில் துள்ளித் திரியும். சில பூதங்களும் அவற்றின் உரப்பல் முதலிய செயல்களும் உம்மைச் சூழ்ந்த பல திசைகளிலும் உள்ளன. தேவர் பலரும். சோத்தம் எனச் சொல்லி வணங்குமாறு நீர் அரையில் கோவணத்தோடு, ஒரு தோலைச் சுற்றி, அதன்மேற் கச்சாகக் கட்டியுள்ளதும் பாம்பு; கையிற் பிடித்திருப்பதும் பாம்பு. அதனால் அடியேங்கள் உம்மை அணுகி நின்று உமக்குப் பணி செய்ய அஞ்சுவோம்.

12. முண்டம்தரித் தீர்முது காடுறைவீர்
முழுநீறுமெய் பூசுதிர் மூக்கப்பாம்பைக்
கண்டத்திலும் தோளிலும் கட்டிவைத்தீர்
கடலைக்கடைந் திட்டதோர் நஞ்சைஉண்டீர்
பிண்டம்சுமந் தும்மொடும் கூடமாட்டோம்
பெரியாரொடு நட்பிணி தென்றிருத்தும்
அண்டம்கடந் தப்புறத் தும்இருந்தீர்
அடிகேள்உமக்கு ஆட்செய அஞ்சுதுமே.

தெளிவுரை : இறைவரே ! அடியோகங்கள் பெரியாரொடு நட்டல் இன்பம் தருவது என்று கருதியிருப்பேமே. ஆயினும், நீர் தலை மாலையை அணிந்துள்ளீர். மயானத்தில் வாழ்வீர். அங்குள்ள சாம்பலை உடல் முழுவதும் பூசிக் கொள்வீர். கொடிய பாம்பைக் கழுத்திலும் தோளிலும் கட்டி வைத்திருக்கின்றீர். தேவர்கள் கடலைக் கடைந்து கொணர்ந்து ஊட்டிய பெருவிடத்தை எளிதாக உண்டீர். இவ் அண்டத்தைக் கடந்து அதற்குமேல் உண்ண அண்டத்துக்கும் அப்பால் இருப்பீர். அதனால் ஊனினது திரட்சியாகிய இவ்வுடம்பைச் சுமந்து கொண்டு உம்மோடு தொடர்பு கொள்ள வல்லேம் அல்லேம்; ஆதலின் உம்மை அணுகி நின்று உமக்குப் பணி செய்ய அஞ்சுவோம்.

13. மூடாய முயலகன் மூக்கப்பாம்பு
முடைநாறிய வெண்டலை மொய்த்தபல்பேய்
பாடாலரு பூதங்கள் பாய்புலித்தோல்
பரிகொன்றறி யாதன பாரிடங்கள்
தோடார்மலர்க் கொன்றையும் துன்னெருக்கும்
துணைமாமணி நாகம் அரைக்கசைத்தொன்று
ஆடாதன வேசெய்தீர் எம்பெருமான்
அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே.

தெளிவுரை : இறைவரே ! உம்மிடத்து உள்ளவை அறியாமையுடைய முயலகன், கொடிய பாம்பு, முடைநாற்றம் வீசும் வெண்டலை, நெருங்கிய பல பேய்கள், பாட்டுப் பாடித் திரிகின்ற பூதங்கள், பாய்கின்ற புலியின் தோல், நன்மை தீமை அறியாத பாரிடங்கள் என்னும் இவையே. உமக்கு மாலை இதழ் நிறைந்த கொன்றை மலரும் எருக்கம் பூவுமாம். இவற்றோடு அரையில் பெரிய மணியையுடைய பாம்பைக் கட்டிக்கொண்டு, எங்கட்குப் பொருந்தாத செயல்களையே மேற்கொண்டீர். அதனால், அடியேங்கள் உம்மை அணுகி உமக்குப் பணி செய்ய அஞ்சுவோம்.

14. மஞ்சுண்ட மாலைமதி சூடுசென்னி
மலையான்மடந் தைமண வாளநம்பி,
பஞ்சுண்ட அல்குல்பணை ணென்முலையா
ளொடுநீரும் ஒன்றாய்இருத் தல்ஒழியீர்
நஞ்சுண்டு தேவர்க்குஅமு தம்கொடுத்த
நலம்ஒன்றறி யோம்உங்கை நாகம்அதற்கு
அஞ்சுண்டுப டம்அது போகவிடீர்
அடிகேள்உமக்கு ஆட்செய அஞ்சுதுமே.

தெளிவுரை : இறைவரே ! மேகம் சூழ்ந்த மாலைப் பொழுதில் தோன்றும் பிறையைச் சூடிய முடியையுடைய மலை மகளாகிய நங்கைக்கு மணவாளனாகிய நீ, துகில்சூழ்ந்த புறத்தினையும் பெருத்த மார்புகளையும் உடைய அவளும் நீரும் ஒன்றாய் இருத்தலை ஒரு ஞான்றாயினும் ஒழிகின்றிலீர். அதனாலும் நீர் நஞ்சினை உண்டு தேவர்கட்கு அமுதம் தந்த நற்செயலை நாங்கள் சிறிதும் அறிந்திலோம். உமது கையில் உள்ள பாம்பிற்கோ படங்கள் ஐந்து உள்ளன. அப்பாம்பினை ஒருபொழுதும் அப்பாற் போக விடுவதில்லை. அதனைத்தான் நாங்கள் காண்கின்றோம். அதனாலும் நாங்கள் உம்மை அணுகி உமக்குப் பணி செய்ய அஞ்சுவோம்.

15. பொல்லாப்புறங் காட்டகத்து ஆட்டொழியீர்
புலால்வாயன பேயொடு பூச்சொழியீர்
எல்லாம்அறி வீர்இது வேஅறியீர்
என்றிரங்குவேன் எல்லியும் நண்பகலும்
கல்லால்நிழற் கீழ்ஒரு நாட்கண்டதும்
கடம்பூர்க்கூரக் கோயிலின் முன்கண்டதும்
அல்லால்விரகு ஒன்றிலம் எம்பெருமான்
அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே.

தெளிவுரை : எம்பெருமானே ! நீர் பொல்லா மயானத்தில் ஆடுதலைத் தவிரீர், அங்குப் புலால் வாயோடு திரிவனவாகிய பேய்களோடு ஆரவாரித்தலை ஒழியீர்; எல்லாவற்றையும் அறிகின்ற நீர் இதுமட்டில் அறிகின்றிலிரே என்று உம் அடியவனாகிய யான் இரவும் பகலும் வருந்துவேன். முன் ஒருநாள் கல்லால நிழலில் ஆசிரியராகக் கண்டதும் மற்றொரு நாள் கடம்பூர்க் கூரக்கோயிலில் இலிங்கமூர்த்தியாகக் கண்டதும் தவிர மற்ற எந்தக் காலத்தும் மயானத்தின் இழிவை நீர் அறிந்து நீங்கியதை யாம் சிறிதும் கண்டதில்லை. அதனால் யாங்கள் உம்மை அணுகி உமக்குப் பணி செய்ய அஞ்சுவோம்.

16. தென்னாத் தெனாத்தெத் தெனாஎன்று பாடிச்
சில்பூதமும்நீ ரும்திசை திசையன
பன்னாள் மறைபா டுதிர்பா சூர்உளீர்
படம்பக் கம்கொட்டும் திருவொற்றி யூரீர்
பண்ணார் மொழியா ளைஓர் பங்குடையீர்
படுகாட் டகத்தென் றும்நீர் பற்றொழியீர்
அண்ணா மலையேன் என்றீர் ஆரூருளீர்
அடிகேள் உமக்குஆட்செய அஞ்சுதுமே.

தெளிவுரை : இறைவரே, வாயில் வந்தபடி பாடுகின்ற சில பூதங்களும், அவற்றின் செயல்களும் உம்மைச் சூழ்ந்த பல திசைகளிலும் உள்ளன. ஆயினும், நீர் பலவாகிய நான்கு வகைப்பட்ட வேதங்களைப் பாடுவீர். திருப்பாசூரில் இருக்கின்றீர். எனினும் படம்பக்கம் என்னும் பறையைக் கொட்டும் தலமாகிய திருவொற்றியூரீராய்த் தோன்றுகின்றீர். பண்போலும் மொழியினையுடைய உமையை ஒரு பாகத்தில் நீங்காது கொண்டு, குடி வாழ்க்கையீராய்க் காணப்படுகின்றீர். ஆயினும், புறங்காட்டிடத்தில் பற்று நீங்கமாட்டீர். அண்ணா மலை இடத்தேன் என்றீர். ஆயினும் ஆரூரில் இருக்கின்றீர். அதனால், உம்மை ஒருதலையாகத் துணிதல் கூடாமையால் நாங்கள் ஆட்பட்டுப் பணி செய்ய அஞ்சுகின்றோம்.

17. சிங்கத் துரிமூ டுதிர்தே வர்கணம்
தொழநிற் றீர்பெற்றம் உகந்துஏறிடுதில்
பங்கம் பலபே சிடப்பா டும்தொண்டர்
தமைப்பற் றிக்கொண்டாண்டு விடவும் கில்லீர்
கங்கைச் சடையீர் உம்கருத் தறியோம்
கண்ணும்மூன் றுடையீர் கண்ணேயா யிருந்தால்
அங்கத் துறுநோய் களைந்தா ளகில்லீர்
அடிகேள் உமக்குஆட் செயஅஞ் சுதுமே.

தெளிவுரை : கங்கையைச் சடையில் உடையவரே ! இறைவரே ! நீர் வேட்டுவர் போலச் சிங்கத்தின் தோலைப் போர்த்துக் கொள்வீர். ஆயினும் தேவர் கூட்டம் வணங்க நிற்பீர். யானை முதலியன இன்றி எருதை விரும்பி ஊர்வீர்; ஆயினும், தொண்டர்களை வலிந்து ஈர்த்து அடிமை கொண்டு அவர்களை விடவும் மாட்டீர்; அதனால், உம் கருத்தினை நாங்கள் அறியகில்லோம். கண்ளோ மூன்றுடையீர். ஆயினும் நாங்கள் உம் எதிர்நின்று அகலாது இருக்கின்றோம் என்றால், நீர் எங்கள் உடம்பில் பொருந்தியுள்ள நோயைத் தீர்த்துப் பணிகொள்ள மாட்டீர். ஆகலின் நாங்கள் உமக்கு ஆட்பட்டு பணி செய்ய அஞ்சுவோம்.

18. பிணிவண் ணத்தவல் வினைதீர்த் தருளீர்
பெருங்காட் டகத்தில் பெரும்பே யும்நீரும்
துணிவண் ணத்தின்மே லும்ஓர் தோல்உடுத்துச்
சுற்றும்நா கத்தராய்ச் சுண்ணநீ றுபூசி
மணிவண் ணத்தின்மே லும்ஓர்வண் ணத்தராய்
மற்றுமற் றும்பல் பலவண் ணத்தராய்
அணிவண் ணத்தராய் நிற்றம்எம் பெருமான்
அடிகேள்உமக்கு ஆட்செய அஞ்சுதுமே.

தெளிவுரை : இறைவரே! நீர் பிணிக்கும் இயல்பினையுடைய எங்கள் வலிய வினையை நீக்கி அருள் செய்யவில்லை. அன்றியும் பெரிய காட்டில் பெரிய பேயும் நீருமாய்த் துணிந்து நிற்கின்ற தன்மையின் மேலும், தோல் ஒன்றை உடுத்து, அதன் மேல் சுற்றிய பாம்பை உடையவராய், சாம்பலை நறுமணப் பொடியாகப் பூசிக்கொண்டு, நீலமணி போலும் நிறத்தின் மேலும் மற்றொரு நிறத்தை யுடையவராய், அதன் மேலும் பற்பல நிறத்தை உடையவராய், எல்லாவற்றாலும் அழகிய வடிவத்தை உடையவராய் நிற்றலால் நாங்கள் உமக்கு ஆட்பட்டுப் பணிசெய்ய அஞ்சுகின்றோம்.

19. கோளா ளியகுஞ் சரங்கோள் இழைத்தீர்
மலையின் தலைஅல்லது கோயில் கொள்ளீர்
வேளா ளியகா மனைவெந் தழிய
விழித்தீர் அதுவன் றியும்வேய் புரையும்
தோளாள் உமைநங் கைஓர்பங் குடையீர்
உடுகூ றையும்சோ றும்தந் தாளகில்லீர்
ஆளா ளியவே கிற்றீர்எம் பெருமான்
அடிகேள்உமக்காட்செய அஞ்சுதுமே.

தெளிவுரை : இறைவரே ! நீர் கொலைத் தொழிலை மேற்கொண்ட யானையைக் கொல்லுதல் செய்தீர். மலை உச்சியில் அல்லது கோயில் கொள்ள மாட்டீர். வேட்கையை விளைக்கும் அம்பினை ஏவிய காமனை வெந்தழியுமாறு அழித்தீர். அதற்கு மாறாயும் மூங்கில் போலும் தோள்களை யுடையவளாகிய உமை என்னும் நங்கையை ஒரு பாகத்தில் உடையீர்; நும் அடியவர்க்கு உடுக்கின்ற கூறையையும், உண்கின்ற சோற்றையும் கொடுத்து ஆள மாட்டீர். அடியவரை அடிமை கொள்ளுதல் மட்டுமே வல்லீர்; அதனால் அடியேங்கள் உமக்கு ஆட்பட்டுப் பணி செய்ய அஞ்சுவோம்.

20. பாரொடு விண்ணும் பகலும் ஆகிப்
பனிமால் வரைஆ கிப்பர வைஆகி
நீரோடு தீயும் நெடுங்காற் றுமாகி
நெடுவெள் ளிடையாகி நிலனு மாகித்
தேரோட வரைஎடுத்த அரக்கன் சிரம்பத்து
இறுத்தீர் உமசெய்கை எல்லாம்
ஆரோ டுங்கூடா அடிகேள் இதுஎன்
அடியேன் உமக்காட்செய அஞ்சுதுமே.

தெளிவுரை : இறைவரே ! மண்ணுலகமும் விண்ணுலகமும் ஆகியும் மலை ஆகியும் கடல் ஆகியும் எவ்விடத்தும் இயங்குகின்ற காற்றும் ஆகியும் எல்லை யற்ற வெளிஆகியும் நிலம் ஆகியும் இவ்வாறு எல்லாப் பொருளும் ஆகி நின்றீர்; இனி, தனது ஊர்தி தடையின்றி ஓடுதற் பொருட்டு நுமது மலையைப் பெயர்த்த அரக்கனது தலைகள் பத்தினையும் நெரித்தீர். உம்முடைய இச்செய்கைகள் எல்லாம் யார் செய்கையோடும் ஒவ்வா. இஃது என் ! இவற்றால் அடியோங்கள் உமக்குப் பணி செய்ய அஞ்சுவோம்.

21. அடிகேள் உமக்குஆட் செயஅஞ் சுதும்என்று
அமரர் பெருமா னைஆரூ ரன்அஞ்சி
முடியால் உலகாண்ட மூவேந்தர் முன்னே
மொழிந்தா றும்ஓர்நான் கும்ஓர் ஒன்றினையும்
படியா இவைகற் றுவல்ல அடியார்
பரங்குன் றம்மேய பரமன் அடிக்கே
குடியா கிவானோர்க்கும் ஓர்கோவும் ஆகிக்
குலவேந் தராய்விண் முழுதாள் பவரே

தெளிவுரை : தேவர் பெருமானாகிய சிவபெருமானிடத்தில் அச்சங் கொண்டு, நம்பி ஆரூரன், முடியோடு நின்று, உலகத்தை ஆள்கின்ற மூவேந்தர் முன்னிலையில், அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதும் என்று சொல்லிப் பாடிய இப்பதினொரு பாடல்களையும், இவையே தமக்கு நெறியாகும்படி ஓதி உணரவல்ல அடியார்கள் திருப்பரங்குன்றத்தை விரும்பி எழுந்தருளியுள்ள அப்பரமனது திருவடி நீழலில் வாழ்கின்றவராய் அரசர் குடியில் தோன்றிய அரசரோடு ஒருங்கு ஒத்து மண் முழுதும் ஆண்டு, பின் தேவர்க்கும் ஒப்பற்ற அரசராகி விண் முழுதும் ஆள்பவரே ஆவர்.

திருச்சிற்றம்பலம்

3. திருநெல்வாயில் அரத்துறை (அருள்மிகு தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில், திருவட்டத்துறை, கடலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

22. கல்லாய்அகி லும்கதிர் மாமணியும்
கலந்துந்தி வரும்நில வின்கரைமேல்
நெல்வாயில் அரத்துறை நீடுறையும்
நிலவெண்மதி சூடிய நின்மலனே
நல்வா யில்செய்தார் நடந்தார் உடுத்தார்
நரைத்தார் இறந்தார்என்று நானிலத்தில்
சொல்லாய்க் கழிகின், றதறிந் தடியேன்
தொடர்ந்தேன் உய்யப்போ வதோர்சூ ழல்சொல்லே.

தெளிவுரை : மலையிடத்துள்ள அகில்களையும், ஒளியையுடைய மாணிக்கங்களையும் ஒன்று கூட்டித் தள்ளிக் கொண்டு வருகின்ற நிலா நதியின் கரைமேல் உள்ள திருநெல்வாயில் அரத்துறையின்கண் என்றும் எழுந்தருளியிருக்கும் நிலவினையுடைய வெண்மையான பிறையைச் சூடிய மாசற்றவனே. உலகியலில் நின்றோர் அனைவரும் நல்ல துணையாகிய இல்லாளை மணந்தார்; இல்லற நெறியில் ஒழுகினார்; நன்றாக உண்டார்; உடுத்தார்; மூப்படைந்தார்; இறந்தார் என்று உலகத்தில் சொல்லப்படும் சொல்லை உடையவராய் நீங்குவதன்றி நில்லாமையை அறிந்து உன்னை அடைந்தேன்; ஆதலின் அடியேன் அச் சொல்லிலிருந்து பிழைத்துப் போவதற்குரிய ஒரு வழியினைச் சொல்லியருள்.

23. கறிமாமிளகும் மிகுவன் மரமும்
மிகவுந்திவரும் நிலவின் கரைமேல்
நெறிவார்குழலார் அவர்காண நடஞ்செய்
நெல்வாயில் அரத்துறை நின்மலனே
வறிதேநிலை யாதஇம் மண்ணுலகில்
நரனாக வகுத்தனை நானிலையேன்
பொறிவாயில் இவ்ஐந் தினையும் அவியப்
பொருதுன் அடியேபுகும் சூழல்சொல்லே.

தெளிவுரை : கறிக்கப்படுகின்ற மிளகையுடைய கொடியையும் மிக்க வலிய மரங்களையும் மிகுதியாக அடித்துக் கொண்டு வருகின்ற நிவா நதியின் கரைமேல் உள்ள நெறித்த நீண்ட கூந்தலையுடைய மகளிர்தாம் பிறர் அனைவரும் விரும்பிக் காணத்தக்க நடனத்தைப் புரிகின்ற திருநெல்வாயில் அரத்துறையின்கண் எழுந்தருளியிருக்கும் மாசற்றவனே, உயிர்கள் பலவும் பயன் ஏதும் இன்றிப் பிறந்து இறக்கும் இம் மண்ணுலகத்தில் அடியேனை மகனாகப் படைத்தாய். ஆதலின் நான் இறவாது இரேன். அதனால் பொறி எனப்படுகின்ற அவாவின் வாயில்களாகிய இவ்ஐந்தினையும் அடங்குமாறு வென்று உன் திருவடிக் கண்ணே புகுதற்குரிய ஒரு வழியினைச் சொல்லி யருள்வாயாக.

24. புற்றாடரவம் அரைஆர்த்து உகந்தாய்
புனிதாபொரு வெள்விடை ஊர்தியினாய்
எற்றே ஒருகண் இலன்நின்னை யல்லால்
நெல்வாயில் அரத் துறைநின் மலனே
மற்றேல்ஒரு பற்றிலன் எம்பெருமான்
வண்டார் குழலாள் மங்கைபங்கினனே
அற்றார் பிறவிக் கடல்நீந்தி யேறி
அடியேன் உய்யப் போவதோர் சூழல்சொல்லே.

தெளிவுரை : புற்றின்கண் வாழ்கின்ற ஆடுகின்ற பாம்பை விரும்பி அரையின்கண் கட்டியவனே, தூய்மையானவனே, போர் செய்கின்ற வெண்மையான இடப ஊர்தியை உடையவனே, எம்பெருமானே, வண்டுகள் ஒலிக்கின்ற கூந்தலையுடைய உமையம்மையை ஒரு பாகத்தில் உடையவனே, திருநெல்வாயில் அரத்துறையின்கண் எழுந்தருளியிருக்கும் மாசற்றவனே. அடியேன் ஒரு கண் இல்லாதவனாய் இருக்கின்றேன். இஃது எத்தன்மைத்து என்பேன். மற்றும் வினவின் உன்னையன்றி வேறொரு பற்றுக்கோடு இல்லேன். ஆதலின் அடியேன் இறப்புப் பொருந்திய பிறவிக் கடலைக் கடந்து கரையேறிப் பிழைத்துப் போதற்குரிய ஒரு வழியினைச் சொல்லியருள்.

25. கோடுயர் கோங்கலர் வேங்கைஅலர்
மிகவுந்தி வருந்நிவ வின்கரைமேல்
நீடுயர்சோலை நெல்வாயில் அரத்துறை
நின்மலனே நினைவார் மனத்தாய்
ஓடுபுனற்கரை யாம்இளமை
உறங்கி விழித்தால் ஒக்கும்பிறவி
வாடிஇருந்து வருந்தல் செய்யாது
அடியேன் உய்யப் போவதோர் சூழல்சொல்லே

தெளிவுரை : கிளைகள் உயர்ந்த கோங்க மரத்தின் மலர்களையும் வேங்கை மரத்தின் மலர்களையும் மிகுதியாகத் தள்ளிக்கொண்டு வருகின்ற நிவா நதியின் கரைமேல் உள்ள நெடியனவாக ஓங்கிய சோலைகளையுடைய திருநெல்வாயில் அரத்துறையில் கோயில் கொண்டுள்ள மாசற்றவனே. உன்னை நினைக்கின்ற வரது நெஞ்சத்தில் வாழ்பவனே. இப்பிறப்பு உறங்கிய பின் விழித்தாற்போல்வது. இதன்கண் உள்ள இளமையேபா ஓடுகின்ற நீரின் கரையை ஒக்கும். ஆதலின் என் செய்வது என்று மெலிவுற்று நின்று வருந்தாமல் அடியேன் இப்பிறவியிலிருந்து பிழைத்துப் போதற்குரிய ஒரு வழியினைச் சொல்லியருள்.

26. உலவும்முகி லில்தலை கல்பொழிய
உயர்வேயொடு இழிநிலவின் கரைமேல்
நிலவும்மயி லாரவர் தாம்பயிலும்
நெல்வாயில் அரத்துறை நின்மலனே
புலன்ஐந்தும் மயங்கி அகங்குழையப்
பொருவேலோர் நமன்தமர் தாம்நலிய
அலமந்து மயங்கி அயர்வதன்முன்
அடியேன் உய்யப் போவதோர் சூழல்சொல்லே

தெளிவுரை : உலாவுகின்ற மேகங்களினின்றும் மலையின் மேல் மழைபொழிய, அந்நீர் உயர்ந்த மூங்கில்களோடு இறங்கி வருகின்ற நிவாநதியின் கரைமேல் உள்ள விளங்குகின்ற மயில்போலும் மகளிர் ஆடல்பாடல்களைப் புரிகின்ற திருநெல்வாயில் அரத்துறையில் கோயில் கொண்டுள்ள மாசற்றவனே, ஐந்து புலன்களும் தத்தமக்கு உரிய பொறிகளோடு எதிர்ப்படாமல் மாறும்படியும், மனம் மெலியும்படியும் போர் செய்கின்ற முத்தலை வேலை (சூலத்தை) உடைய கூற்றுவனது ஏவலர் வந்து வருத்த, பற்றுக்கோடின்றி, உணர்வு தடுமாறி நின்று இளைப்பதற்கு முன் அடியேன் இறப்பினின்றும் பிழைத்துப் போவதற்குரிய ஒரு வழியைச் சொல்லியருள்வாயாக!

27. ஏலம் இலவங் கம்எழிற் கனகம்
மிகவுந்தி வருந் நிவலின் கரைமேல்
நீலம்மலர்ப் பொய்கையில் அன்னம்மலி
நெல்வாயில் அரத்துறை யாய்ஒருநெல்
வாலூன்ற வருந்தும் உடம்பிதனை
மகிழாதழகா அலந்தேன் இனியான்
ஆலந்நிழலில் அமர்ந்தாய் அமரா
அடியேன் உய்யப் போவதோர் சூழல்சொல்லே

தெளிவுரை : ஏலம் இலவங்கம் மரங்களையும் அழகிய பொன்னையும் மிகுதியாகத் தள்ளிக்கொண்டு வருகின்ற நிவா நதியின் கரைமேல் உள்ள நீலோற்பவத்தின் அழகிய மலரையுடைய பொய்கையில் அன்னங்கள் நிறைந்திருக்கும் திருநெல்வாயில் அரத்துறையில் கோயில் கொண்டிருப்பவனே, அழகனே, ஆல நிழலில் அமர்ந்தவனே, என்றும் இறவாது இருப்பவனே, ஒரு நெல்லின் முனை ஊன்றினும் பொறுக்காமல் வருந்துவதாகிய இவ்வுடம்பை யான் நிலைபெற்றது என்று கருதி மகிழாமல் உறுதியை நாடி உழன்றேன். அடியேன் இதிலிருந்தும் பிழைத்துப் போதற்குரிய ஒருவழியைச் சொல்வாயாக!

28. சிகரம் முகத்தில் திரளார் அகிலும்
மிகஉந்தி வருந்நிவவின் கரைமேல்
நிகரில் மயிலாரவர் தாம்பயிலும்
நெல்வாயில் அரத்துறை நின்மலனே
மகரக் குழையாய் மணக் கோலமதே
பிணக்கோல மதாம்பிறவி இதுதான்
அகரம் முதலின் எழுத்தாகி நின்றாய்
அடியேன் உய்யப் போவதோர் சூழல்சொல்லே

தெளிவுரை : மலைச் சிகரத்திலிருந்து திரளாய் நிறைந்த அகில்களையும் பிறவற்றையும் மிகுதியாகத் தள்ளிக் கொண்டு வருகின்ற நிவா நதியின் கரைமேல் உள்ள ஒப்பற்ற மயில்போல் சிறந்த மகளிர் ஆடல்பாடல்களைப் புரிகின்ற திருநெல்வாயில் அரத்துறையில் எழுந்தருளியுள்ள தூயோனே. காதில் மகர குண்டலத்தை அணிந்தவனே. எழுத்துக்களுக்கு எல்லாம் அகரமாகிய முதல் எழுத்துப் போன்று முதற் பொருளாகி நிற்பவனே, இவ்வுடம்புதான். மணக் கோலந்தான் கடிதிற் பிணக்கோலமாய் மாறுகின்ற நிலையாமையை உடையது. ஆதலின் அடியேன் இதிலிருந்து பிழைத்துப் போதற்குரிய ஒருவழியைச் சொல்வாயாக!

29. திண்தேர் நெடுவீதி இலங்கையர்கோன்
திரள்தோள் இருபஃதும் நெரித்தருளி
ஞெண்டாடு நெடுவயல் சூழ்புறவின்
நெல்வாயில் அரத்துறை நின்மலனே
பண்டேமிக நான்செய்த பாக்கியத்தால்
பரஞ்சோதி நின்நாமம் பயிலப்பெற்றேன்
அண்டா அமரர்க்கு அமரர் பெருமான்
அடியேன் உய்யப் போவதோர் சூழல்சொல்லே

தெளிவுரை : திண்ணிய தேர்கள் ஓடுகின்ற தெருக்களையுடைய இலங்கை மன்னனாகிய இராவணனது திரண்ட தோள்கள் இருபதையும் முதலில் நெரித்துப் பிறகு அவனுக்கு அருள்பண்ணி, நண்டுகள் நடமாடுகின்ற நீண்ட வயல் சூழ்ந்த முல்லை நிலத்தையுடைய திருநெல்வாயில் அரத்துறையில் கோயில் கொண்டிருக்கும் மாசில்லாதவனே, மேலான ஒளி வடிவினனே, தேவனே, தேவர்க்குத் தேவராய் உள்ளார்க்குத் தலைவனே, முன்வினைப் பயனால் உனது பெயரைப் பலகாலும் சொல்லும் பேற்றினைப் பெற்றேன். இனி அடியேன் இவ்வுலகிலிருந்து உய்வதற்கு ஒரு வழியைக் கூறுவாயாக !

30. மாணா உருவாகிஓர் மண்அளந்தான்
மலர்மேலவன் நேடியும் காண்பரியாய்
நீணீள்முடி வானவர் வந்திறைஞ்சும்
நெல்வாயில் அரத்துறை நின்மலனே
வாணார்நுத லார்வலைப் பட்டடியேன்
பலவின்கனி வீந்தது போல்வதன்முன்
ஆணோடு பெண்ணாம் உருவாகி நின்றாய்
அடியேன் உய்யப் போவதோர் சூழல்சொல்லே

தெளிவுரை : பிரமசாரியாக உருவம் எடுத்து உலகத்தை அளந்த திருமாலும், மலரின்கண் இருக்கும் பிரமனும் தேடியும் காண்பதற்கு அரியவனே, நீண்ட முடியினையுடைய தேவர்கள் வந்து வணங்குகின்ற திருநெல்வாயில் அரத்துறையில் எழுந்தருளியுள்ள தூயவனே ! ஆணும் பெண்ணுமாகிய உருவத்தைக் கொண்டுள்ளவனே, அடியேன் மாதர்களின் வலையிற்பட்டு, பலாப் பழத்தில் வீழ்ந்த ஈயைப்போல அழிவதற்கு முன் அவர் மையலினின்றும் உய்வதற்குரிய ஒரு வழியைக் கூறுவாயாக!

31. நீரூறும் நெடுவயல் சூழ்புறவின்
நெல்வாயில் அரத்துறை நின்மலனைத்
தேரூர்நெடு வீதிநன் மாடமலி
தென்னாவலர் கோன்அடித் தொண்டன்அணி
ஆரூரன் உரைத்தன நற்றமிழின்
மிகுமானல்ஓர் பத்திவை கற்றுவல்லார்
காரூர்களி வண்டறை யானைமன்னர்
ஆவராகிஓர் விண்முழுது ஆள்பவரே

தெளிவுரை : நீர் பாய்கின்ற நீண்ட வயல்கள் சூழ்ந்த முல்லை நிலத்தையுடைய திருநெல்வாயில் அரத்துறையில் கோயில் கொண்டிருக்கும் மாசற்றவனாகிய இறைவனை. தேர்ஓடும் நீண்ட தெருக்களில் நல்ல மாடமாளிகைகள் நிறைந்த தென்னாட்டில் உள்ள திருநாவலூரில் உள்ளவர்க்குத் தலைவனும், சிவபெருமானுக்கு அடித்தொண்டனும் ஆகிய அழகிய ஆரூரன் பாடிய நல்ல தமிழ் மொழியினால் ஆகிய உயர்ந்த பாமாலையின்கண் உள்ள பத்துப் பாடல்களாகிய இவற்றைக் கற்று உணர வல்லவர். கருவண்டுகள் ஒலிக்க வருகின்ற யானையையுடைய மன்னர்களாகி மண்ணுலகம் முழுதும் ஆண்டு, பின் தேவர்க்குத் தலைவராய் ஒப்பற்ற விண்ணுலகம் முழுவதும் ஆள்பவர் ஆவர். யானையின் மதநீரை உண்ணவரும் வண்டுகள் என இயைக்க.

திருச்சிற்றம்பலம்

4. திரு அஞ்சைக்களம் (அருள்மிகு மகாதேவர் திருக்கோயில், திருவஞ்சிக்குளம், திருச்சூர், கேரளா மாநிலம்)

திருச்சிற்றம்பலம்

32. தலைக்குத்தலை மாலை அணிந்ததென்னே
சடைமேற் கங்கை வெள்ளம் தரித்ததென்னே
அலைக்கும்புலித் தோல்கொண்டு அசைத்ததென்னே
அதன்மேற்கத நாகக்கச்சு ஆர்த்ததென்னே
மலைக்குநிகர் ஒப்பன வன்திரைகள்
வலித்தெற்றி முழங்கி வலம்புரிகொண்டு
அலைக்கும்கடல் அங்கரை மேல்மகோதை
அணியார்பொழில் அஞ்சைச் களத்தப்பனே

தெளிவுரை : மலைக்கு நிகராகிய தன்மையால் தம்மில் ஒப்பனவாகிய வலிய அலைகள் வலம்புரிச் சங்குகளைப்பற்றி ஈர்த்து வந்து எறிந்து முழங்கி மோதுகின்ற கடலினது அழகிய கரையின் கண்ணதாகிய மகோதை என்னும் நகரத்தின்கண் உள்ள அழகு நிறைந்த சோலைகளையுடைய திருவஞ்சைக்களம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தந்தையே, நீ தலைக்கு அணிகலமாகத் தலைமாலையை அணிந்தது ஏன்? சடையின் மேல் கங்கை என்னும் ஆற்றைத் தாங்கியது ஏன்? கொல்லும் தன்மையுடைய புலியினது தோலை உரித்தெடுத்து அரையில் உடுத்தது ஏன்? அவ்வுடையின்மேல் சினத்தையுடைய பாம்பைக் கச்சாகக் கட்டியது ஏன்?

33. பிடித்தாட்டிஓர் நாகத்தைப் பூண்டதென்னே
பிறங்குஞ்சடை மேற்பிறை சூடிற்றென்னே
பொடித்தான்கொண்டு மெய்ம்முற்றும் பூசிற்றென்னே
புகர்ஏறுகந்து ஏறல் புரிந்தென்னே
மடித்தோட்டந்து வன்றிரை எற்றியிட
வளர்சங்கம் அங்காந்து முத்தம் சொரிய
அடித்தார் கடலங்கரை மேல்மகோதை
அணியார் பொழில் அஞ்சைக் களத்தப்பனே

தெளிவுரை : வலிய அலைகள் தம் வடிவத்தைச் சுருளாகச் செய்து ஓடிவந்து மோதுதலினால் கருவளர்கின்ற சங்குகள் வாய்திறந்து முத்துக்களை ஈன, இங்ஙனம் அலைத்து முழங்குகின்ற கடலினது அழகிய கரையின் கண்ணதாகிய மகோதை என்னும் நகரிலுள்ள அழகு நிறைந்த சோலைகளையுடைய திரு அஞ்சைக்களம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் தந்தையே, நீ விரும்பத்தகாத பாம்பைப் பிடித்து ஆட்டுதலையும் பூணாகப் பூணுதலையும் மேற்கொண்டது ஏன்? விளங்குகின்ற சடையின்கண் பிறையைச் சூடியது ஏன்? சாம்பலை எடுத்து உடம்பு முழுவதும் பூசிக்கொண்டது ஏன்? இழிந்த எருதினையே ஊர்தியாகக் கொள்ள விரும்பியது ஏன்?

34. சிந்தித்துஎழு வார்க்குநெல் லிக்கனியே
சிறியார்பெரியார் மனத்தேறல் உற்றால்
முந்தித்தொழு வார்இற வார்பிறவார்
முனிகள்முனி யேஅமரர்க் கமரா
சந்தித்தட மால்வரை போல்திரைகள்
தணியாதிட றுங்கடலங் கரைமேல்
அந்தித்தலைச் செக்கர்வா னேஒத்தியால்
அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே

தெளிவுரை : மூங்கில்கள் நிறைந்த பெரிய மலைகள் போன்ற அலைகள் இடைவிடாது மோதுகின்ற கடலினது அழகிய கரையில் அழகு நிறைந்த சோலைகளையுடைய திருஅஞ்சைக்களம் என்னும் திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கின்ற தந்தையே. உன்னை நினைந்து துயில் உணர்வார்க்கு நெல்லிகக்கனி போன்றவனே, முனிவர்கட்கு எல்லாம் முனிவனே, தேவர்கட்கு எல்லாம் தேவனே, உன்னை உள்ளம் தெளியப்பெற்றால் சிறியாரும் பெரியாராவர். விரைந்து வந்து உன்னை வணங்குபவர் இறத்தலும் பிறத்தலும் இலராவர். அவரது உள்ளத்தைப் பிணித்தற்கு நீ மாலைக் காலத்தில் தோன்றும் செவ்வானம் போலும் அழகிய திருமேனியைப் பெற்றிருக்கிறாய்!

35. இழைக்கும்எழுத் துக்குயி ரேஒத்தியால்
இலையேஒத்தி யால்உன்னை யேஒத்தி யால்
குழைக்கும் பயிர்க் கோர்புய லேஒத்தியால்
அடியார்தமக் கோர்குடி யேஒத்தியால்
மழைக்குந்நிகர் ஒப்பன வன்திரைகள்
வலித்தெற்றி முழங்கி வலம்புரி கொண்டு
அழைக்கும்கட லங்கரை மேல்மகோதை
அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே

தெளிவுரை : மேகத்தைப்போன்ற வலிய அலைகள் பல பொருள்களை ஈர்த்து வந்து மோதி முழங்கி, வலம்புரிச் சங்கின் இனிய ஓசையால் யாவரையும் தன்பால் ஈர்க்கின்ற கடலினது அழகிய கரையிலுள்ள மகோதை என்னும் தலத்திலுள்ள, அழகுநிறைந்த சோலைகளையுடைய திருஅஞ்சைக்களம் என்னும் கோயிலில் எழுந்தருளியுள்ள தந்தையே, நீ உலகத்தை இயக்குதலில் மெய்யெழுத்துக்களை எழுப்பும் உயிரெழுத்துப் போல் நின்றாய். இல்லாதது போன்றும் இருக்கின்றது போன்றும் காணப்படுகின்றாய். பயிர்க்கு மேகம் போல் உயிர்க்கு நீ உதவுகின்றாய்; அடியாரோடு இணைந்து வாழ்கின்றாய். ஆதலால் அடியேனுக்கு அருளல் வேண்டும் என்பதாம்.

36. வீடின்பயனென் பிறப்பின் பயனென்
விடையேறுவதென் மதயானை நிற்கக்
கூடும்மலை மங்கை ஒருத்தியுடன்
சடைமேற்கங்கை யாளைநீ சூடிற்றென்னே
பாடும் புலவர்க்கருளும் பொருளென்
நிதியம்பல செய்த கலச்செலவில்
ஆடுங்கடலங் கரைமேல் மகோதை
அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே

தெளிவுரை : பொன் மணி முதலிய செல்வங்களைத் தந்த மரக்கலங்களினது செலவினையுடைய மூழ்குதற்குரிய கடலினது கரையிலுள்ள மகோதை என்னும் நகரில் சோலைகள் நிறைந்த திருவஞ்சைக்களத்தில்  கோயில் கொண்டிருக்கும் தந்தையே, நீ வீடு பிறப்பு என்னும் இரண்டனுள் ஒன்றோடு அமையாது மறுதலைப் பொருள்களாகிய அவ்விரண்டினையும் அமைத்ததன் பயன்யாது? மதத்தையுடைய யானை இருக்க எருதினை ஊர்வது ஏன்? திருமேனியில் நீங்காது பொருந்தியுள்ள மலைமகளாகிய ஒருத்தியோடு கங்கை என்பவளையும் சடையில் வைத்தது ஏன்? உன்னைப் பாடுகின்ற புலவர்க்கு நீ அளிக்கும் பரிசில் யாது?

37. இரவத்திடு காட்டெரி யாடிற்றென்னே
இறந்தார்தலை யிற்பலி கோடல்என்னே
பரவித்தொழு வார்பெறு பண்டம்என்னே
பரமாபர மேட்டி பணித்தருளாய்
உரவத்தொடு சங்கமொடு இப்பிமுத்தம்
கொணர்ந்தெற்றி முழங்கி வலம்புரிகொண்டு
அரவக் கடலங்கரை மேல்மகோதை
அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே

தெளிவுரை : யாவர்க்கும் மேலானவனே! மேலிடத்தில் உள்ளவனே ! வலிமையோடு சங்கு, சிப்பி, முத்து என்பவற்றைக் கொணர்ந்து வீசி, வலம்புரிச் சங்கை மேலே கொண்டு முழங்கி ஆரவாரம் செய்கின்ற கடலினது அழகிய கரையில் மகோதை என்னும் நகரின்கண் சோலைகள் நிறைந்த திருவஞ்சைக் களத்தில் கோயில் கொண்டிருக்கும் தந்தையே, நீ இராப்பொழுதில் புறங்காட்டில் ஏரியில் நின்று ஆடியது ஏன்? இறந்தவரது தலையில் பிச்சையேற்றல் ஏன்? உன்னைப் போற்றி வணங்குவோர் பெறும் பொருள் யாது? சொல்வாயாக.

38. ஆக்கும்அழி வும்ஐய நீஎன்பன்நான்
சொல்லுவார்சொற் பொருளவை நீஎன்பன்நான்
நாக்கும்செவி யுங்கண்ணும் நீஎன்பன்நான்
நலனேஇனி நான்உனை நன்குணர்ந்தேன்
நோக்கும்நிதி யம்பல எத்தனையும்
கலத்திற்புதுப் பெய்துகொண் டேறநுந்தி
ஆர்க்குங்கட லங்கரை மேல்மகோதை
அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே

தெளிவுரை : எப்பொருட்கும் தலைவனே ! இன்பம் தருபவனே ! விரும்புகின்ற நுகர்ச்சிப் பொருள்கள் அவைத்தையும் மிகுதியாக மரக்கலங்களில் ஏற்றி, நடுவண் செல்லச் செலுத்தி, ஆரவாரிக்கின்ற கடலினது அழகிய கரையின் கண்ணதாகிய மகோதை என்னும் நகரில் சோலைகள் சூழ்ந்த திருவஞ்சைக் களத்தில் கோயில் கொண்டிருக்கும் எந்தையே! அடியேன் இப்போது உன்னை நன்குணர்ந்தேன். ஆதலின் எப்பொருளின் ஆக்கத்திற்கும் அழிவிற்கும் காரணன் நீயே ! என்றும், அவற்றிற்குப் பிற காரணங்களைச் சொல்வாரது சொற்பொருள்களும் நீயே என்றும், புலன் உணர்வுக்குக் காரணமான நாக்கு, செவி, கண் போன்றனவும் நீயே என்றும் துணிந்து சொல்வேன்.

39. வெறுத்தேன்மனை வாழ்க்கையை விட்டொழித்தேன்
விளங்கும்குழைக் காதுடை வேதியனே
இறுத்தாய்இலங் கைக்கிறை யாயவனைத்
தலைபத்தொடு தோள்பல அற்றுவிழக்
கறுத்தாய்கடல் நஞ்சமு துண்டுகண்டம்
கடுகப்பிர மன்தலை ஐந்திலும்ஒன்று
அறுத்தாய்கட லங்கரை மேல்மகோதை
அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே

தெளிவுரை : ஒளிமிக்க குழையணிந்த காதினையுடைய அந்தணாள! கடற்கரையிலுள்ள மகோதை என்னும் நகரில் அழகிய சோலைகள் நிறைந்த திருவஞ்சைக் களத்தில் கோயில் கொண்டுள்ள எந்தையே! நீ, இலங்கை வேந்தனாகிய இராவணனை அவனது பத்துத் தலைகளோடு பல தோள்களும் அற்று விழுவன போல் நெரித்தாய். பாற்கடலில் தோன்றிய நஞ்சினை அமுதமாகக் கொண்டு கண்டம் கறுப்பாயினாய். பிரமன் தலைகள் ஐந்தனுள் ஒன்றை விரைவில் அறுத்துவிட்டாய். அடியேன் எனது மனை வாழ்க்கையை மனத்தாலும் வெறுத்தேன். உடம்பாலும் துறந்து விட்டேன்.

40. பிடிக்குக்களி றேஒத்தி யால்எம்பிரான்
பிரமற்கும் பிரான்மற்றை மாற்கும் பிரான்
நொடிக்கும்மள விற்புரம் மூன்றெரியச்
சிலைதொட்டவ னேஉனை நான்மறவேன்
வடிக்கின்றன போற்சில வன்திரைகள்
வலித்தெற்றி முழங்கி வலம்புரிகொண்டு
அடிக்குங்கட லங்கரை மேல்மகோதை
அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே

தெளிவுரை : திரிபுரங்கள் ஒருநொடியில் எரிந்தொழியுமாறு வில்லை வளைத்தவனே, முத்துக்கள் முதலியவற்றை வடித்தெடுத்துச் சேர்ப்பனபோல வலிய அலைகள் ஈர்த்து வந்து வீசி, வலம்புரிச் சங்கினால் கரையில் உள்ளவர்களைத் தாக்குகின்ற கடலினது கரையில் அமைந்துள்ள மகோதை என்னும் நகரின்கண் சோலைகள் சூழ்ந்த திருவஞ்சைக்களத்தில் கோயில் கொண்டுள்ள எந்தையே, நீ பெண்யானைக்கு ஆண் யானை போல உயிர்கட்குத் துணைவனாய் உள்ளாய். என்போலும் மக்கட்கும் பிரமன் திருமால் முதலிய தேவர்கட்கும் தலைவனாய் உள்ளாய். இவற்றையெல்லாம் உணர்ந்து அடியேன் உன்னை மறத்தல் ஒழிந்தேன். (மறவேன் என்றபடி).

41. எந்தம்அடி கள்இமை யோர்பெருமான்
எனக்கென்றும் அளிக்கும் மணிமிடற்றன்
அந்தண்கட லங்கரை மேல்மகோதை
அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனை
மந்தம்முழ வுங்குழ லும்இயம்பும்
வளர்நாவலர் கோன்நம்பி யூரன்சொன்ன
சந்தம்மிகு தண்டமிழ் மாலைகள் கொண்டு
அடிவீழவல் லார்தடு மாற்றிலரே

தெளிவுரை : என்போலும் அடியவர்கட்கு முதல்வனும். தேவர்கட்குத் தலைவனும். எனக்கு எஞ்ஞான்றும் அருள்பண்ணும் சிவனும் ஆகிய அழகிய குளிர்ந்த கரையில் உள்ள மகோதை என்னும் நகரில் திருவஞ்சைக்களத்தில் கோயில் கொண்டுள்ள எந்தையே! மத்தளமும் வேய்ங்குழலும் மந்தம் என்னும் அளவாக இயம்பப்படுகின்ற நலமிக்க திருநாவலூரில் உள்ளார்க்குத் தலைமகனாகிய நம்பியாரூரன் போற்றிய இசைநலம் மிக்க தமிழ்ச் சொற்கள் என்னும் மலர்களால் இயன்ற இம்மலைகளை வாயிலாகக் கொண்டு அப்பெருமானது திருவடிகளில் பணிய வல்லவர் நிலையாமை நீங்கப்பெற்று நிலை பெற்றிருப்பர். (இசைக்கருவி ஒலிகளில் மந்தம் மெலிவும், மத்திமம் சமமும், உச்சம் வலியுமாகும்)

திருச்சிற்றம்பலம்

5. திருஓண காந்தன் தளி (அருள்மிகு ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில், ஓணகாந்தன்தளி,காஞ்சிபுரம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

42. நெய்யும் பாலும் தயிருங் கொண்டு
நித்தல் பூசனை செய்ய லுற்றார்
கையில் ஒன்றும் காணம் இல்லைக்
கடில டிதொழுது உய்யின் அல்லால்
ஐவர் கொண்டிங்கு ஆட்ட ஆடி
ஆழ்கு ழிப்பட்டு அழுந்து வேனுக்கு
உய்யு மாறொன்று அருளிச் செய்வீர்
ஓண காந்தன் தளியு ளீரே.

தெளிவுரை : திருஓண காந்தன் தளி என்னும் கோயிலில் உள்ள பெருமானே! நெய் பால் தயிர் முதலியவற்றால் உம்மை நாள்தோறும் வழிபடுவராது கையில் காசு ஒன்றும் காணப்படுவதில்லை. அவ்வாறே உமது கழலணிந்த பாதத்தைக் கும்பிட்டு ஏதேனும் பெற்றாலன்றி, இவ்வுலகத்தில் புலன்களாகிய ஐவர் தண்டலாளர் ஐந்து பக்கம் பற்றி ஈர்த்துச் சுழற்றச் சுழன்று அச்சுழற்சியாலாகிய துன்பம் என்னும் ஆழ்ந்த குழியில் அகப்பட்டு ஏறமாட்டாது அழுந்திப் போவேனாகிய அடியேனுக்குக் கரையேறும் வழியொன்றினைச் சொல்லுக. இது பழிப்பது போலப் புகழும் பதிகம்.

43. திங்கள் தங்கு சடைக்கண் மேலோர்
திசைக்கண் வந்து புரள வீசும்
கங்கை யாளேல் வாய்தி றவ்வாள்
கணப திய்யேல் வயிறு தாரி
அங்கை வேலோன் குமரன் பிள்ளை
தேவி யார்கொல் தட்டி யாளார்
உங்க ளுக்காட் செய்ய மாட்டோம்
ஓண காந்தன் தளியு ளீரே.

தெளிவுரை : திரு ஓண காந்தன் தளியில் கோயில் கொண்டுள்ள பெருமானே! பிறை தங்கியுள்ள சடையின்மேல் அலைகள் வீசுகின்ற கங்கையென்னும் தேவியோ எனில் உமது பக்கத்தில் எப்போதும் உள்ள உமா தேவியார்க்கு அஞ்சி வாய் திறத்தலேயில்லை. உம் மூத்த மகனாகிய வினாயகனோ வயிறு ஒன்றையே முதன்மையாக உள்ளான். இளைய மகனாகிய வேல் ஏந்திய முருகனோ விளையாட்டுப்பிள்ளை. தேவியாராகிய உமையம்மையோ உம்மை ஒழிந்து அடியவரை ஆளுவார் அல்லர். ஆதலின் உம் குடிக்கு யாங்கள் அடிமை செய்ய மாட்டோம்.

44. பெற்ற போழ்தும் பெறாத போழ்தும்
பேணி உம்கழல் ஏத்து வார்கள்
மற்றோர் பற்றிலர் என்றி ரங்கி
மதியு டையவர் செய்கை செய்வீர்
அற்ற போழ்தும் அலந்த போழ்தும்
ஆவற் காலத்து அடிகேள் உம்மை
ஒற்றி வைத்து இங்கு உண்ண லாமோ
ஓண காந்தன் தணியு ளீரே.

தெளிவுரை: தலைவரே ! திருஓண காந்தன் தளியில் எழுந்தருளியுள்ள பெருமானே! உம்மால் யாதானும் ஒன்றை அடையினும் அடையாது ஒழியினும் அதனால் வேறுபாடு இல்லாமல் எப்போதும் ஒரு பெற்றியே உம் திருவடியைப் பற்றி நின்று துதிக்கும் அடியவர் நம்மையன்றி வேறொரு துணையும் இல்லாதவர் என்று நினைத்து அறிவுடையவர்க்கு உரிய செய்கை ஒன்றும் நீர் செய்வதில்லை. அதனால் உம் அடியவர் தங்கள் கையிற் பொருள் இல்லா தொழிந்த காலத்தும், அது காரணமாக வழியொன்றும் காணாமல் அலைந்த காலத்தும் உம்மைப் பிறர்க்கு ஒற்றியாக வைத்துப் பிழைத்தல்தான் செயற்பாலதோ? (சொல்வீர்).

45. வல்ல தெல்லாம் சொல்லி உம்மை
வாழ்த்தி னாலும் வாய்தி றந்தொன்று
இல்லை என்னீர் உண்டும் என்னீர்
எம்மை ஆள்வான் இருப்ப தென்னீர்
பல்லை உக்க படுத லையிற்
பகல்எ லாம்போய்ப் பலிதி ரிந்திங்கு
ஒல்லை வாழ்க்கை ஒழிய மாட்டீர்
ஓண காந்தன் தளியு ளீரே.

தெளிவுரை : ஓண காந்தன் தளி என்னும் கோயிலில் எழுந்தருளியுள்ள பெருமானே! எமக்குத் தெரிந்த கருத்துக்கள் பலவும் சொல்லி உம்மை யாம் வாழ்த்தியபோதும், நீர் வாய் திறந்து எமக்கு ஈய யாதேனும் ஒரு பொருளை இல்லையென்றும் சொல்ல மாட்டீர்; உண்டு என்றும் சொல்லமாட்டீர். நீர் எம்மை பணி கொள்ள இருத்தல் எவ்வாறு? நாள்தோறும் சென்று, பல் நீங்கிய இறந்தவரது தலையில் இவ்வுலகில் பிச்சை ஏற்கத் திரிந்தும் இல்வாழ்க்கையை விரைவில் விட்டொழிய மாட்டீர்.

46. கூடிக் கூடித் தொண்டர் தங்கள்
கொண்ட பாணி குறைப டாமே
ஆடிப் பாடி அழுது நெக்கங்கு
அன்பு டையவர்க்கு இன்பம் ஓரீர்
தேடித் தேடித் திரிந்தெய்த் தாலும்
சித்தம் என்பால் வைக்க மாட்டீர்
ஓடிப் போகீர் பற்றுந் தாரீர்
ஓண காந்தன் தளியு ளீரே.

தெளிவுரை : திருஓண காந்தன் தளியில் கோயில் கொண்டிருக்கும் பெருமானே. நீர், தம்மிற் பலகாலும் கூடி, அடியவர்க்கு உரிய பொருந்திய தாளத்தோடு பொருந்திய பாட்டுக்களைக் குற்றமில்லாமல் பாடியும், ஆடியும் மனம் நெகிழ்ந்து அழுதும் மற்றும் அவ்வாற்றால் அன்புடையவராய் இருப்பவர்க்கு நன்மை செய்யும் வழியை நினைக்கவில்லை. உம்மைக் காண வந்து பலவிடத்திலும் தேடித் தேடித் திரிந்தாலும், என்னிடத்தில் இரக்கம் வைத்துக் காட்சியளிக்க மாட்டீர். கோயிலை விட்டுப் போகவும் மாட்டீர். கோயிலில் வந்து பாடுகின்ற எனக்குப் பற்றுக் கோடும் தரமாட்டீர். (என் செய்வேன்)

47. வாரி ருங்குழல் வாள்நெ டுங்கண்
மலைம கள்மது விம்மு கொன்றைத்
தாரி ருந்தட மார்பு நீங்காத்
தைய லாள்உலகு உய்ய வைத்த
காரி ரும்பொழில் கச்சி மூதூர்க்
காமக் கோட்டம்உண் டாக நீர்போய்
ஊரி டும்பிச்சை கொள்வ தென்னே
ஓண காந்தன் தளியு ளீரே.

தெளிவுரை : ஓண காந்தன் தளியில் கோயில் கொண்டிருக்கும் பெருமானே, தேன் ததும்பிய கொன்றை மாலையையுடைய உமது பெரிய அகன்ற மார்பிலிருந்து நீங்காத நீண்ட கரிய கூந்தலையும் வாள்போலும் நெடிய கண்களையும் உடைய மலை மகளாகிய தேவி உலகமெல்லாம் துன்பமின்றி வாழ்தற் பொருட்டு வைத்துள்ள சிறந்த அறச்சாலையாகிய மேகம் தவழும் பெரிய சோலையையுடைய கச்சி என்னும் பழைய ஊரின்கண் உள்ள திருக்காமக் கோட்டம் இருக்க, நீர் சென்று ஊரவர் இடும் பிச்சையை ஏற்பது ஏன்?

காமக்கோட்டம் உண்டாக என்றது முப்பத்திரண்டு அறமும் வளர்த்து அம்பிகை உறைவதை நினைத்தபடி.

48. பொய்ம்மை யாலே போது போக்கிப்
புறத்தும் இல்லை அகத்தும் இல்லை
மெய்ம்மை சொல்லி ஆள மாட்டீர்
மேலை நாள்ஒன்று இடவும் கில்லீர்
எம்மைப் பெற்றால் ஏதும் வேண்டீர்
ஏதும் தாரீர் ஏதும் ஓதீர்
உம்மை என்றே எம்பெரு மான்
ஓண காந்தன் தளியு ளீரே.

தெளிவுரை : ஓணகாந்தன் தளியில் கோயில் கொண்டிருக்கும் பெருமானே ! நீர் பொய் சொல்லியே காலங் கழித்து, திருக்கோயிலின் புறத்தும் காணப்படீர்; அகத்தும் காணப்படீர். ஆகவே, நீர் நும் அடியாரை மெய்சொல்லி ஆளமாட்டீர் போலும் ! இனி பின்வரும் நாட்களிலும் ஒன்றும் தரமாட்டீர். ஏனெனில், எம்மை ஆளாகப் பெறுமளவும் விடாது வழக்காடுதல் அல்லது, பெற்றுவிட்டால் பின்பு எம்பால் ஒரு பணியையும் விரும்புகின்றிலீர். எப்படிப் பார்த்தாலும் நீர் எமக்கு யாதும் கொடுப்பவராயோ சொல்கின்றவராயோ தோன்றவில்லை. இந்நிலையில் நீர் எமக்குத் தலைவராய் இருத்தல் இப்பிறப்பு வந்தபின் அன்று; முற்பிறப்பு தொட்டேயாம்.

49. வலையம் வைத்த கூற்ற மீவான்
வந்து நின்ற வார்த்தை கேட்டுச்
சிலைஅ மைத்த சிந்தை யாலே
திருவடீ தொழுது உய்யின் அல்லால்
கலைஅ மைத்த காமச் செற்றக்
குரோத லோப மதவ ரூடை
உலைஅ மைத்திங்கு ஒன்ற மாட்டேன்
ஓண காந்தன் தளியு ளீரே.

தெளிவுரை : ஓண காந்தன் தளியில் கோயில் கொண்டிருக்கும் பெருமானே ! பாசத்தைக் கையில் கொண்டுள்ள கூற்றுவன் வந்து, வானத்தில் நின்ற செய்தியைக் கேட்டு, அடியேன் நீர் கற்போல அமைத்துத் தந்த அம் மனத்தைக் கொண்டே உமது திருவடியைத் தொழுது அக்கூற்றுவனிடமிருந்து தப்பிக்க நினைக்கின்றேனேயன்றி, விதி அமைத்துத் தந்த ஐம்பொறிகளாகிய ஐந்து உலைக்களக் கூட்டத்தைப் பொருளாக உள்ளத்து அமைத்து, காமம், மாற்சரியம், குரோதம், உலோபம், மதம் என்பவரிடைப் பொருந்தி வாழ நினைக்கின்றிலேன்.

50. வார மாகித் திருவ டிக்குப்
பணிசெய் தொண்டர் பெறுவ தென்னே
ஆரம் பாம்பு வாழ்வது ஆரூர்
ஒற்றி யூரேல் உம்ம தன்று
தார மாகக் கங்கை யாளைச்
சடையில் வைத்த அடிகேள் உந்தம்
ஊரும் காடும் உடையும் தோலே
ஓண காந்தன் தளியு ளீரே.

தெளிவுரை : ஓண காந்தன் தளியில் கோயில் கொண்டிருக்கும் ஐயனே. கங்கை என்பவளைத் தாரமாகக் கொண்டு, இடமின்றிச் சடையில் வைத்துள்ள அடிகளே, நீர் மார்பில் அணியும் ஆரமாவது பாம்பு; வாழும் ஊர் உமக்கு உரிமை இல்லாதது ஒற்றியூர் உளதே எனில் ஒற்றி எனவே அஃது உம்முடையது அன்றாயிற்று. உமக்கு இல்லமாவது சுடுகாடு; உமது உடையாவது தோல்; இங்ஙனமாதலின் உம்மிடத்து அன்புடையவராய் உம் திருவடிக்குத் தொண்டு செய்யும் அடியவர் உம்மிடத்தினின்றும் பெறுவது எதனை?

51. ஓவ ணம்மேல் எருதொன்று ஏறும்
ஓண காந்தன் தளியு ளார்தாம்
ஆவ ணஞ்செய்து ஆளுங் கொண்ட
வரைது கில்லொடு பட்டு வீக்கிக்
கோவ ணம்மேற் கொண்ட வேடம்
கோவை யாகஆ ரூரன் சொன்ன
பாவ ணத்தமிழ் பத்தும் வல்லார்க்குப்
பறையும் தாம்செய்த பாவந் தானே.

தெளிவுரை : நீக்கப்படும் தன்மையை ஏற்றுள்ள ஒற்றை எருதை ஊர்தியாகக் கொள்ளும் திருஓண காந்தன் தளியில் உள்ள இறைவர் நம்பியாரூரனை, தாமே பத்திரம் எழுதிக் கொண்டு வந்து ஆட்கொண்ட எல்லைக்கண், துகிலும் பட்டும் உடுத்திருந்து, பின்பு அவர் ஆணை வழியே அவரை அவன் அணுகிப் பாடுதலாகிய தொண்டினைச் செய்யும் எல்லைக்கண் கோவண மட்டிலே உடையவராய் நின்ற திருக்கோலத்தின் தன்மைகள் பலவும் நிரல்படத் தோன்றுமாறு, அமைத்து அவன் பாடிய பா வடிவாகிய இத்தமிழ்ச் செய்யுட்கள் பத்தினையும் பொருளுணர்ந்து அன்பு மீதூரப் பண்ணோடு நன்கு பாட வல்லார்க்கு அவர் செய்த பாவம் விரைந்து நீங்கும்.

திருச்சிற்றம்பலம்

6. திருவெண்காடு (அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவெண்காடு,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

52. படங்கொள் நாகம் சென்னி சேர்த்திப்
பாய்பு லித்தோல் அரையில் வீக்கி
அடங்க லார்ஊர் எரியச் சீறி
அன்று மூவர்க்கு அருள்பு ரிந்தீர்
மடங்க லானைச் செற்று கந்தீர்
மனைகள் தோறும் தலைகை யேந்தி
விடந்க ராகித் திரிவ தென்னே
வேலை சூழ்வெண் காட னீரே.

தெளிவுரை : இத் திருப்பதிகம், சிவபெருமானைத் தனது பெருமைக்கு ஏலாதன போலத் தோன்றும் கோலங்களை உடைமைக்குக் காரணம் வினவு முகத்தால், அவை உலக நலத்தின் பொருட்டுக் கொண்டனவாதல் தோன்ற அருளிச் செய்தது.

கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே ! நீர் படத்தையுடைய பாம்பைத் தலையில் வைத்து, பாய்கின்ற புலியின் தோலை அரையிற்கட்டி பகைவரது திரிபுரங்கள் எரிந்து ஒழியுமாறு வெகுண்டு, அந்நாளில் அவ்வூரில் உள்ள மூவர்க்கு அருள் பண்ணினீர். கூற்றுவனை முன்னர்க் கொன்று, உயிர்ப்பித்து அவனை மகிழ்ந்து ஏற்றுக்கொண்டீர். இன்ன பெருமைகளையுடையீராய் இருந்தும், தலை ஓட்டினைக் கையில் ஏந்திக் கொண்டு, பேரழகுடைய உருவத்துடன் மனைகள் தோறும் பிச்சைக்குத் திரிவது ஏன்?

53. இழித்து கந்தீர் முன்னை வேடம்
இமைய வர்க்கும் உரைகள் பேணாது
ஒழித்து கந்தீர் நீர்முன் கொண்ட
உயர்த வத்தை அமரர் வேண்ட
அழிக்க வந்த காம வேளை
அவனு டைய தாதை காண
விழித்து கந்த வெற்றி யென்னே
வேலை சூழ்வெண் காட னீரே.

தெளிவுரை : கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே! நீர் அரி பிரமர்க்கும் அவரது முன்னை உடம்புகளை நீக்கி, அவற்றை விரும்பித் தோள்மேற் கொண்டீர்; என்றும் இறவாதபடி காப்பவன் என்னும் புகழை விரும்பாமல்; எல்லாப் பொருட்களையும் அழித்தொழித்து அதன் பின்னர் அவைகளை மீளத் தோன்றச் செய்தலை விரும்பினீர். அங்ஙனமாக. நீர் முன்பு மேற்கொண்ட மேலான தவத்தினை, தேவர் வேண்டிக் கொண்டமையால் அழித்தற்கு வந்த மன்மதனை அவனுடைய தந்தையாகிய திருமால் ஒன்றும் செய்யமாட்டாது பார்த்துக் கொண்டிருக்க. நெற்றிக் கண்ணால் எரித்துப் பின் உயிர்ப்பித்த வெற்றியை விரும்பியது ஏன்?

54. படைகள் ஏந்திப் பாரி டம்மும்
பாதம் போற்ற மாதும் நீரும்
இடையோர் கோவ ணத்த ராகி
உண்மை சொல்லீர் உம்மை யன்றே
சடைகள் தாழக் கரணம் இட்டுத்
தன்மை பேசி இல்ப லிக்கு
விடையது ஏறித் திரிவ தென்னே
வேலை சூழ்வெண் காடனீரே.

தெளிவுரை : கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே ! நீர் பூத கணங்கள் பலவகையான படைகளை ஏந்திக்கொண்டு உம் திருவடிகளை வணங்கித் துதிக்க, உம் தேவியுடனே, உடையைக் கோவண உடையாக உடுத்துக்கொண்டு சடைகள் நீண்டு அசையக் கூத்தாடிக் களித்துப் பின்னர், இல்வாழ்க்கை யுடையாரைப் பெருமையாகச் சொல்லி, அவர்தம் இல்லங்களில் பிச்சைக்குத் திரிதல் ஏன்? உமது உண்மை நிலையைச் சொல்லியருளீர்.

55. பண்ணு வீராய்ப் பாட்டும் ஆனீர்
பத்தர் சித்தம் பரவிக் கொண்டீர்
கண்ணு ளீராய்க் கருத்தில் உம்மைக்
கருது வார்கள் காணும் வண்ணம்
மண்ணு ளீராய் மதியம் வைத்தீர்
வான நாடர் மருவி ஏத்த
விண்ணு ளீராய் நிற்ப தென்னே
வேலை சூழ்வெண் காட னீரே.

தெளிவுரை : இசையில் உள்ளவராய் பாட்டும் ஆகியிருக்கின்றீர். பக்தர் மனத்தில் பரவியிருந்து அதனைக் கொண்டீர். மனத்தில் உம்மை தியானிக்கிறவர்கள் வெளியிலும் காணும்படி பூமியிலே சந்திரனைச் சூடியவராய் எழுந்தருளி, கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய பெருமானே ! கயிலாயத்தவர் நெருங்கித் துதிக்கும் வண்ணம் பர உலகத்திலும் உள்ளவராயிருப்பது என்ன ஆச்சரியம் !

56. குடம்எ டுத்து நீரும் பூவும்
கொண்டு தொண்டர் ஏவல்செய்ய
நடம்எ டுத்தொன் றாடிப் பாடி
நல்கு வீர்நீர் புல்கும் வண்ணம்
வடம்எ டுத்த கொங்கை மாதோர்
பாக மாக வார்க டல்வாய்
விடம்பி டற்றில் வைத்த தென்னே
வேலை சூழ்வெண் காட னீரே.

தெளிவுரை : கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே! அடியார்கள் குடத்தைச் சுமந்து நீரையும் பூவையும் ஈட்டிக்கொண்டு வந்து உமக்குப் பணி செய்ய, நீர், உம்மை என்றும் பிரியாது உடனிருத்தற் பொருட்டு மணிவடம் அணிந்த தனங்களையுடைய மங்கை ஒரு பாகத்தில் இருக்க, நடனத்தை மேற்கொண்டு ஆடலும் பாடலும் நன்கு இயைய ஆடியும் பாடியும் அவர்கட்கு இன்பம் தருவீர். அவ்வாறு இருந்தும் நீண்ட கடலில் தோன்றிய நஞ்சினைக் கண்டத்தில் வைத்தது ஏன்?

57. மாறு பட்ட வனத்த கத்தின்
மருவ வந்த வன்க ளிற்றைப்
பீறி இட்ட மாகப் போர்த்தீர்
பெய்ப விக்கென்று இல்லந் தோறும்
கூறு பட்ட கொடியும் நீரும்
குலாவி ஏற்றை அடர ஏறி
வேறு பட்டுத் திரிவ தென்னே
வேலை சூழ்வெண் காட னீரே.

தெளிவுரை : கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே ! நீர் உம்மோடு மாறுபட்டு நின்ற, காட்டில் வாழப் பிறந்த வலிய களிற்றை உரித்து, அதன் தோலை, விருப்பம் உண்டாகப் போர்த்தீர். அன்ன வீரத்தை உடையீராயும் உமக்கு ஒரு கூறாகப் பொருந்திய மங்கையும் நீரும் எருதையே ஊர்தியாகச் செறிய ஊர்தலும் பிறர் இடுகின்ற பிச்சைக்கென்று இல்லந்தோறும் திரிதலும் செய்து நுமது பெருமையினின்றும் வேறுபட்டு ஒழுகுதல் ஏன்?

58. காத லாலே கருதுந் தொண்டர்
கார ணத்த ராகி நின்றே
பூதம் பாடப் புரிந்து நட்டம்
புவனி யேந்த ஆட வல்லீர்
நீதி யாக ஏழி லோசை
நித்த ராகிச் சித்தர் சூழ
வேத மோதித் திரிவ தென்னே
வேலை சூழ்வெண் காட னீரே.

தெளிவுரை : கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே! நீர் உம்மை நினைக்கின்ற அடியார் நிமித்தமாக நின்று, பூதங்கள் பாட, உலகம் உயர்த்துக் கூறுமாறு நடனத்தை விரும்பி ஆடவல்லீர். அவ்வாறவாகவும், உலகியல் விளங்குதற் பொருட்டு, யோகியர் சூழ, ஏழிசையின்வழி நிலைத்து நின்று, வேதத்தை ஓதித் திரிதல் ஏன்?

59. குரவு கொன்றை மதியம் மத்தம்
கொங்கை மாதர் கங்கை நாகம்
விரவு கின்ற சடையு டையீர்
விருத்த ரானீர் கருத்தில் உம்மைப்
பரவும் என்மேல் பழிகள் போக்கீர்
பாக மாய் மங்கை அஞ்சி
வெருவ வேழம் செற்ற தென்னே
வேலை சூழ்வெண் காட னீரே.

தெளிவுரை : கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே ! நீர், குராமலர், கொன்றைமலர், ஊமத்த மலர், பிறை, தனங்களையுடைய நங்கையாகிய கங்கை, பாம்பு ஆகிய எல்லாம் தலை மயங்கிக் கிடக்கின்ற சடையினையுடையீர், யாவர்க்கும் மூத்தீர், அங்ஙனமாயினும் எஞ்ஞான்றும் உம்மையே கருத்தில் வைத்துப் பாடுகின்ற என்மேல் உள்ள பாவத்தைப் போக்கீர். ஆதலோடு, உமது பாகத்தில் உள்ள மங்கை மிகவும் அச்சங் கொள்ளுமாறு யானையை உரித்துப் போர்த்தது ஏன்?

60. மாடங் காட்டும் கச்சி யுள்ளீர்
நிச்ச யத்தால் நினைப்பு ளார்பால்
பாடுங் காட்டில் ஆடல் உள்ளீர்
பரவும் வண்ணம் எங்ங னேதான்
நாடுங் காட்டில் அயனும் மாலும்
நணுகா வண்ணம் அனலும் ஆய
வேடங் காட்டித் திரிவ தென்னே
வேலை சூழ்வெண் காட னீரே.

தெளிவுரை : கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே! நீர், உம்மைத் தெளிந்த உள்ளத்துடன் நினைப்பவர் முன்னே, மாளிகைகளையுடைய கச்சியம் பதியில் எழுந்தருளியுள்ளீர். என்றாலும், பேய்கள் ஆடும் காட்டில் ஆடலை உடையீர். அதுவன்றியும் அயனும் மாலும் தமது தலைமையை ஆய்ந்து காணுதற்குக் கொண்ட சான்றிடத்து அவர்கள் உம்மை அணுகாதவாறு தீப்பிழம்பாய் நின்ற வடிவத்தையே எங்கும் காட்டித் திரிவது ஏன்? உம்மை யாங்கள் வழிபடுவது எவ்வாறு?

61. விரித்த வேதம் ஓத வல்லீர்
வேலை சூழ்வெண் காடு மேய
விருத்த னாய வேதன் தன்னை
விரிபொ ழில்திரு நாவ லூரன்
அருத்தி யால்ஆ ரூரன் தொண்டன்
அடியன் கேட்ட மாலை பத்தும்
தெரித்த வண்ணம் மொழிய வல்லார்
செம்மை யாளர் வானு ளாரே.

தெளிவுரை : விரிவாகச் செய்யப்பட்டுள்ள வேதங்களை ஓதவல்லவர் வாழ்கின்ற, கடல் சூழ்ந்த திருவெண்காட்டில் எழுந்தருளியுள்ள, யாவர்க்கும் மூத்தோனாகிய அந்தணனை, அவனுக்குத் தொண்டனும், அவன் அடியார்க்கு அடியனும் அகன்ற சோலையையுடைய திருநாவலூரனும் ஆகிய நம்பியாரூரன் விருப்பத்தோடு சிலவற்றை வினவிச் செய்த, தமிழ்ச் சொற்களால் ஆகிய மாலை பத்தினையும் அவன் தெரிந்து சொன்ன குறிப்பில் நின்று பாட வல்லவர், குற்றம் நீங்கிய உணர்வினையுடையராய் சிவலோகத்தில் இருப்பவராவர்.

திருச்சிற்றம்பலம்

7. திருஎதிர்கொள்பாடி (அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோயில், மேலத்திருமணஞ்சேரி,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

62. மத்த யானை யேறி மன்னர்
சூழவரு வீர்காள்
செத்த போதில் ஆரும் இல்லை
சிந்தையுள் வைம்மின்கள்
வைத்த உள்ளம் மாற்ற வேண்டா
வம்மின் மனத்தீரே
அத்தர் கோயில் எதிர்கொள் பாடி
என்பதுஅடை வோமே.

தெளிவுரை : இத்திருப்பதிகம், உலகத்தினது நிலையாமையையும் துன்ப நிலையினையும் நெஞ்சிற்கு அறிவுறுத்தி, இறைவனை அடைய அழைத்து அருளிச் செய்தது.

மதங்கொண்ட யானைமீது ஏறி, சிற்றரசர் சூழ பவனி வருகின்றவர்களே, நீவிர் இறக்கும்போதில் உமக்கு இவர்களில் ஒருவரும் இல்லாது ஒழிகின்றனர். மனத்தில் வையுங்கள், விருப்பம் உடையவர்களே, உள்ளத்தை மாற்ற வேண்டாம். வாருங்கள். நம் தந்தையாரின் திருக்கோயிலாகிய திருஎதிர் கொள்பாடி என்பதைப் போய் அடைவோம்.

63. தோற்றம் உண்டேல் மரணம் உண்டு
துயரமனை வாழ்க்கை
மாற்றம் உண்டேல் வஞ்சம் உண்டு
நெஞ்சமனத் தீரே
நீற்றர் ஏற்றர் நீல கண்டர்
நிறைபுனல்நீள் சடைமேல்
ஏற்றர் கோயில் எதிர்கொள் பாடி
என்பது அடை வோமே.

தெளிவுரை : நினைத்தல் தன்மையுடைய நெஞ்சீரே! யாவர்க்கும் பிறப்பு உளதாயின், இறப்பும் ஒரு தலையாக உண்டு; அவற்றிற்கு இடையே உள்ள இல் வாழ்க்கையும் துன்பம் தருவதே. அவ்வாழ்க்கையின் பொருட்டுச் சொல்லப்படும் சொல் உளதாயின், அதன்கண் பெரும்பாலும் வாசனை உளதாவதேயாம். அதனால் அவைகளின் நீங்குதற்பொருட்டு, வெண்ணீற்றை அணிந்தவரும் இடப வாகனத்தையுடையவரும், மிக்க நீரை நீண்ட சடையில் தாங்கியவரும் ஆகிய இறைவரது திருக்கோயிலை, திரு எதிர் கொள்பாடி எனப்படுவதாகிய ஊரிடத்துச் சென்று அடைவோம்; வாரீர்.

64. செடிகொள் ஆக்கை சென்று சென்று
தேய்ந்தொல்லை வீழாமுன்
வடிகொள் கண்ணார் வஞ்ச னையுட்
பட்டுமயங் காதே
கொடிகொள் ஏற்ற வெள்ளை நீற்றர்
கோவண ஆடையுடை
அடிகள் கோயில் எதிர்கொள் பாடி
என்பது அடை வோமே.

தெளிவுரை : நெஞ்சீரே ! துன்பத்தைக் கொண்ட உடம்பானது உலகியலில் உழன்று உழன்று மெலிந்து, விரைய வீழ்ந்தொழியாத முன்னே, மாவடுவின் வடிவைக் கொண்ட கண்களையுடைய மாதரது மயக்கத்திற்பட்டு, மயங்காமல் தம் கொடி தன்னிடத்துப் பொருந்தக்கொண்ட இடபத்தை உடையவரும் வெண்மையான நீற்றை அணிந்தவரும், கோவணமாக உடுத்த ஆடையை உடைய தலைவரும் ஆகிய இறைவரது திருக்கோயிலை திரு எதிர் கொள்பாடி எனப்படுவதாகிய ஊரிடத்துச் சென்று அடைவோம் வாரீர் !

65. வாழ்வர் கண்டீர் தம்முள் ஐவர்
வஞ்சமனத் தீரே
யாவ ராலும் இகழப் பட்டிங்கு
அல்லலில்வீ ழாதே
மூவ ராயும் இருவ ராயும்
முதல்வன் அவ னேயாம்
தேவர் கோயில் எதிர்கொள் பாடி
என்பது அடை வோமே.

தெளிவுரை : வஞ்சனையுயையுடைய நெஞ்சீரே ! நமக்கு உட்பட்டவராகிய ஐவர் பகைவர் வாழ்வர். அதனால், அவரது தீமையால் யாவராலும் இகழப்படும் நிலையை எய்தித் துன்பத்தில் வீழாமல், தாமே மும்மூர்த்திகளையும், தமது ஆணை வழியால் மாலும் அயுனுமாயும், எவ்வாற்றானும் உலகிற்கு அவரே முதல்வராகும். முழு முதல்வராகிய இறைவரது திருக்கோயிலை திருஎதிர்கொள்பாடி எனப்படுவதாகிய ஊரிடத்துச் சென்று அடைவோம்; வாரீர்

66. அரித்து நம்மேல் ஐவர் வந்திங்கு
ஆறலைப்பான் பொருட்டால்
சிரித்த பரிவாய் வெண்டலை போய்ஊர்ப்
புறச்சே ராமுன்
வரிக்கொ டுத்திவ் வாள்அ ரக்கர்
வஞ்சமதில் மூன்றும்
எரித்த வில்லி எதிர்கொள் பாடி
என்பதுஅடை வோமே.

தெளிவுரை : நெஞ்சீரே ! ஐவர் ஆறலை கள்வர் நம்மேல் வந்து துன்புறுத்தி நன்னெறியின் இடையே அலைத்தலால், வாழ்நாள் வீண்நாளாய்க் கழிய மகிழ்ச்சியால் சிரித்த பல்லினை உடையவாய், வெண்டலையாய்ப் போய் ஊர்ப்புறத்திற் சேராத முன்பே, அழகினைக் கொண்ட படப்புள்ளிகளையுடைய பாம்பை அணிந்த, கொடிய அசுரரது பகைமை தங்கிய மதில்கள் மூன்றினையும் எரித்த வில்லையுடைய பெருமானது திருக்கோயிலை திருஎதிர் கொள்பாடி எனப்படுவதாகிய ஊரிடத்துச் சென்று அடைவோம்; வாரீர்.

67. பொய்யர் கண்டீர் வாழ்க்கை யாவர்
பொத்தடைப்பான் பொருட்டால்
மையல் கொண்டீர் எம்மோடு ஆடி
நீரும்மனத் தீரே
நைய வேண்டா இம்மை யேத்த
அம்மைநமக்கு அருளும்
ஐயர் கோயில் எதிர்கொள் பாடி
என்பது அடை வோமே.

தெளிவுரை : நெஞ்சீரே ! நம் இல்வாழ்க்கையை ஆளுதலையுடைய சுற்றத்தார். நம்மீது நிலையற்ற அன்புடையவரே; அதனை நினையாது அவர்கள் குறையை முடித்தற் பொருட்டு நீரும் எம்மோடு கூடித் திரிந்து, மயக்கத்தையுடையீர் ஆயினீர்; இனி அவ்வாற்றால் துன்புறுதல் வேண்டா; இப்பிறப்பில் நாம் வழிபட்டிருக்க, வருகின்ற பிறப்பில் வந்து நமக்கு அருள் பண்ணும் நம் பெருமானது திருக்கோயிலை, திரு எதிர்கொள்பாடி எனப்படுவதாகிய ஊரிடத்துச் சென்று அடைவோம்; வாரீர்.

68. கூசல் நீக்கிக் குற்றம் நீக்கிச்
செற்றமனம் நீக்கி
வாசம் மல்கு குழலி னார்கள்
வஞ்சமனை வாழ்க்கை
ஆசை நீக்கி அன்பு சேர்த்தி
என்பணிந்துஏறு ஏறும்
ஈசர் கோயில் எதிர்கொள் பாடி
என்பது அடை வோமே.

தெளிவுரை : நெஞ்சே ! கும்பிட்டுக் கூத்தாடக் கூசுதலை ஒழித்து, காமம் வெகுளி முதலிய குற்றங்களை அகற்றி, யாரிடத்தும் பகை கொள்ளுதலைத் தவிர்த்து, மணம் நிறைந்த கூந்தலையுடைய மகளிரது வஞ்சனையையுடைய மனை வாழ்க்கையில் உள்ள ஆசையைத் துறந்து, எலும்பை அணிதலலோடு விடையை ஊரும் இறைவரது திருக்கோயிலை அவரிடத்து அன்பு வைத்து, திரு எதிர்கொள்பாடி எனப்படுவதாகிய ஊரிடத்துச் சென்று அடைவோம்; அதுவே செயற்பாலது வா.

69. இன்பம் உண்டேல் துன்பம்  உண்டு
ஏழைமனை வாழ்க்கை
முன்பு சொன்ன் மோழை மையான்
முட்டை மனத்தீரே
அன்பர் அல்லால் அணிகொள் கொன்றை
அடிகள்அடி சேரார்
என்பர் கோயில் எதிர்கொள் பாடி
என்பது அடை வோமே.

தெளிவுரை : பொறியொன்றும் இல்லாத முட்டைபோலும் நெஞ்சீரே ! அறியாமையால் வரும் மனை வாழ்க்கையில் இன்பம் உள்ளதுபோலவே துன்பமும் உளதாதல் கண்கூடு.  அழகிய கொன்றை மாலையை அணிந்த இறைவரது திருவடிகளை அவற்றிற்கு அன்பராய் உள்ளவர் அல்லார் அடையமாட்டார் என்று அறிந்தோர் கூறுவர். இவற்றை முன்பு உமக்குச் சொன்னால் நீர் உரையமாட்டாமையின் அறியாமையாய் முடியும். ஆதலால் சொன்னோம் இல்லை. திருஎதிர்கொள்பாடி எனப்படுவதாகிய ஊரிடத்துச் சென்று அடைவோம்; வாரீர்.

70. தந்தை யாரும் தவ்வை யாரும்
எட்டனைச்சார் வாகார்
வந்து நம்மோடு உள்அ ளாவி
வானநெறி காட்டும்
சிந்தை யீரே நெஞ்சி னீரே
திகழ்மதியம் சூடும்
எந்தை கோயில் எதிர்கொள் பாடி
என்பது அடை வோமே.

தெளிவுரை: நெஞ்சீரே, தந்தையாரும் தமக்கையாரும் நமக்கு எள்ளளவும் துணையாக மாட்டார்; ஆதலின் நீர் எம்பால் வந்து உள்ளாய்க் கலந்து உசாவி, எமக்கு வீட்டு நெறியைக் காட்டும் நினைவுடையீராயின், விளங்குகின்ற திங்களைச் சூடும் நம் தந்தை கோயிலை திருஎதிர்கொள்பாடி எனப்படுவதாகிய ஊரிடத்துச் சென்று அடைவோம்; வாரீர்.

71. குருதி சோர ஆனை யின்தோல்
கொண்டகுழற் சடையன்
மருது கீறி ஊடு போன
மாலயனும் அறியாச்
சுருதி யார்க்கும் சொல்ல ஒண்ணாச்
சோதிளம் ஆதியான்
கருது கோயில் எதிர்கொள் பாடி
என்பது அடை வோமே.

தெளிவுரை : நெஞ்சீரே, யானையின் தோலை உதிரம் ஒழுகப் போர்த்த குழல்போலும் சடையை உடையவனும் இரு மருத மரங்களை முறித்து அவற்றின் இடையே தவழ்ந்த மாயோனும் பிரமனும் காணாத வேதத்தை உணர்ந்தோர்க்கும் சொல்ல ஒண்ணாத ஒளி வடிவினனும், எங்கள்  முதல்வனும் ஆகிய சிவபிரான் தன் இடமாக விரும்புகின்ற திருக்கோயிலை, திரு எதிர்கொள்பாடி எனப்படுவதாகிய ஊரிடத்துச் சென்று அடைவோம்; அதுவே செயற்பாலது வாரீர்.

72. முத்து நீற்றுப் பவள மேனிச்
செஞ்சடையான் உறையும்
பத்தர் பந்தத்து எதிர்கொள் பாடிப்
பரமனையே பணியச்
சித்தம் வைத்த தொண்டர் தொண்டர்
சடையனவன் சிறுவன்
பத்தன் ஊரன் பாடல் வல்லார்
பாதம்பணி வாரே.

தெளிவுரை : முத்துப்போலும் வெள்ளிய நீற்றையும் பவளம் போலும் செய்ய திருமேனியையும், சிவந்த சடையையும் உடைய இறைவன் வாழும் அடியவர் மனம் பிணப்பு உண்ணுதலையுடைய திரு எதிர்கொள்பாடியில் உள்ள பெருமானை வணங்கவே விரும்பின, சிவனடியானும் சிவனடியார்க்கு அடியானும் சடையன் என்பானுக்கு மகனும் ஆகிய நம்பி ஆரூரனது இப்பாடல்களை நன்கு பாடவல்லவர், அப் பெருமானது திருவடியை அடைந்து வணங்கியிருப்பர்.

திருச்சிற்றம்பலம்

8. திருவாரூர் (அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர்)

திருச்சிற்றம்பலம்

73. இறைகளோடு இசைந்த இன்பம்
இன்பத்தோடு இசைந்த வாழ்வு
பறைகிழித்து அனைய போர்வை
பற்றியான் நோக்கி னேற்குத்
திறைகொணர்ந்து ஈண்டித் தேவர்
செம்பொனும் மணியும் தூவி
அறைகழல் இறைஞ்சும் ஆரூர்
அப்பனே அஞ்சி னேனே.

தெளிவுரை : தேவர்கள் கூடி நல்ல பொன்னையும் மணியையும் காணிக்கையாகக் கொண்டு வந்து செலுத்துகின்ற ஒலிக்கின்ற வீரக்கழலையணிந்த திருவடிகளில் வணங்குதற்கு இடனான திருவாரூர்ப் பெருமானே, பறையைக் கிழித்தாற்போன்ற போர்வையையுடைய உடம்பைப் பிடித்து நான் பார்த்தபோது இறைவராகிய உம்மோடு பொருந்திய பேரின்பமும் அந்த இன்பத்தோடு பொருந்திய வாழ்க்கையும் அஞ்சுகிறேன்.

74. ஊன்மிசை உதிரக் குப்பை
ஒருபொருள் இலாத மாயம்
மான்மறித்து அனைய நோக்கின்
மடந்தைமார் மதிக்கும் இந்த
மானுடப் பிறவி வாழ்வு
வாழ்வதோர் வாழ்வு வேண்டேன்
ஆனல்வெள் ளேற்ற ஆரூர்
அப்பனே அஞ்சி னேனே.

தெளிவுரை : வெள்ளிய நல்ல ஆனேற்றையுடையவனே. திருவாரூரில் உள்ள தந்தையே. இறைச்சியை உள்ளடக்கி ஓடுகின்ற குருதிக்குப் பையாய் உள்ள  இவ்வுடம்பு. பொருள் தன்மையாகிய உண்மையை உடைத்தல்லாத பொய்ப்பொருள்; ஆதலின் அத்தன்மையை அறியாத மான் மருண்டாற் போலும் பார்வையையுடைய பெண்டிரே, மதிக்கின்ற இந்த மானிடப் பிறவி வாழ்வினை இன்புற்று வாழ்வ்தொரு வாழ்வாக விரும்புகின்றிலேன். அத்துன்ப நிலைக்கு அஞ்சுதலை உடையன் ஆயினேன்.

75. அறுபதும் பத்தும் எட்டும்
ஆறினோடு அஞ்சும் நான்கும்
துறுபறித்து அனைய நோக்கிச்
சொல்லிற்றுஒன் றாகச் சொல்லார்
நறுமலர்ப் பூவும் நீரும்
நாள்தொறும் வணங்கு வாருக்கு
அறிவினைக் கொடுக்கும் ஆரூர்
அப்பனே அஞ்சி னேனே.

தெளிவுரை : மணம் கமழும் பூவும் நீருங்கொண்டு உன்னை நாள்தோறும் வழிபடுவார்க்கு மெய்யயுணர்வைத் தருகின்ற திருவாரூரில் உள்ள தந்தையே, பூதங்கள் ஐந்தும் ஞானேந்திரியம் கன்மேந்திரியம் என்னும் இந்திரியங்கள் பத்தும் தன் மாத்திரை ஐந்து அந்தக்கரணம் என்று என்னும் நுண்ணுடம்புகள் எட்டும், தாத்துவிகங்கள் அறுபதும், காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன் என்னும் வித்தியா தத்துவங்களாகிய ஆறும், சுத்தவித்தை, ஈசுரம், சாதாக்கியம், சத்தி என்னும் ஆகிய எல்லாம் புதராக, வேறாகக் கண்டு சொல்லின் அவற்றை அறிவுடைய தம்மியல்பாக ஒருவருங் கூறார். ஆதலின், தம்மையானாகவே மயங்கும் வண்ணம் என் இயல்பை மறைத்து நிற்கின்ற அவற்றிற்கு அடியேன் அஞ்சுதல் உடையன் ஆயினேன். தொண்ணூற்றாறு தத்துவம் எனவும் பொருள் கொள்வர்.

76. சொல்லிடில் எல்லை யில்லை
சுவையிலாப் பேதை வாழ்வு
நல்லதோர் கூரை புக்கு
நலமிக அறிந்தேன் அல்லேன்
மல்லிகை மாட நீடு
மருங்கொடு நெருங்கி யெங்கும்
அல்லிவண்டு இயங்கும் ஆரூர்
அப்பனே அஞ்சி னேனே.

தெளிவுரை : மேல் மாடங்கள் உயர்ந்துள்ள இடங்களில் எல்லாம் வண்டுகள் மல்லகை மலரின் அக இதழில் வீழ்ந்து கிண்டுகின்ற திருவாரூரில் உள்ள தந்தையே! யான் ஓட்டைக் குடில்களுள் ஒடுங்கியிருந்து வாழ்ந்த பேதைக்கு உரித்தாகிய துன்பமே நிறைந்த வாழ்க்கைகளைச் சொல்லப் புகின், அவற்றிற்கு ஓர் எல்லை இல்லை. அங்ஙனமாகவும் நல்லதொரு புக்கிலுள் குடி புகுந்து இன்பம் மிக வாழும் நெறியினை அறிந்திலேன். அதனால் அஞ்சுதல் உடையன் ஆயினேன்.

77.  நரம்பினோடு எலும்பு கட்டி
நசையினோடு இசைஒன்று இல்லாக்
குரம்பைவாய்க் குடியி ருந்து
குலத்தினால் வாழ மாட்டேன்
விரும்பியே கமழும் புன்னை
மாதவித் தொகுதி யென்றும்
அரும்புவாய் மலரும் ஆரூர்
அப்பனே அஞ்சி னேனே.

தெளிவுரை : புன்னையும் மாதவியுமாகிய அவற்றையுடைய சோலைக்கண் யாவரும் விரும்புவாறு மணங் கமழ்கின்ற பேரரும்புகள் எந்நாளும் வாய் மலர்கின்ற திருவாரூரில் உள்ள தந்தையே, அடியேன் எலும்புகளை நரம்பிற் கட்டிய விருப்பத்தோடு சிறிதும் இசைவில்லாத (அருவருப்பைத் தருவதான) குடிசைக்கண் குடியிருத்தலால், நன்மாளிகையில் வாழும் உயர்ந்தார் நடுவுள்ளிருந்து வாழ இயலாதவனாய் உள்ளேன். அதனால் அஞ்சுதல் உடையன் ஆயினேன்.

78. மணமென மகிழ்வர் முன்னே
மக்கள்தாய் தந்தை சுற்றம்
பிணமெனச் சுடுவர் பேர்த்தே
பிறவியை வேண்டேன் நாயேன்
பணையிடைச் சோலை தோறும்
பைம்பொழில் விளாகத்து எங்கள்
அணைவினைக் கொடுக்கும் ஆரூர்
அப்பனே அஞ்சி னேனே.

தெளிவுரை : வயல்களின் நடுவேயுள்ள சோலைகளில் எல்லாம் பசிய இளமரக்காக்களையுடைய விளையாடும் இடங்களில், மக்கட்குத் தங்கும் இடங்களைத் தருகின்ற திருவாவூரில் உள்ள தந்தையே ! உலகில் தாய் தந்தை சுற்றத்தார் என்போர் முன்பு (இளமையில்) தம் மக்கட்குத் திருமணம் நிகழா நின்றது என மகிழ்வார்கள். பின்பு அவர்தாமே அவர்களை பிணம் என்று சொல்லி ஊரினின்றும் அகற்றிப் புறங்காட்டிற் கொண்டுபோய் எரிப்படுத்து நீங்குவர். ஆதலின் இத்தன்மைத்தாகிய பிறவியை அடியேன் விரும்புகின்றிலேன்; அதன்கண் வீழ்தற்கு அஞ்சுதல் உடையன் ஆயினேன்.

79. தாழ்வெனும் தன்மை விட்டுத்
தனத்தையே மனத்தில் வைத்து
வாழ்வதே கருதித் தொண்டர்
மறுமைக்குஒன்று ஈய கில்லார்
ஆழ்குழிப் பட்ட போது
அலக்கணில் ஒருவர்க்கு ஆவர்
யாழ்முயன்று இருக்கும் ஆரூர்
அப்பனே அஞ்சி னேனே.

தெளிவுரை : மக்கள் யாழ் இசைத்து இன்புற்றிருக்கின்ற திருவாரூரில் உள்ள தந்தையே, உலகத்தார் பொருள் ஒன்றனையே பெரிதாக மனத்துட் கொண்டு அதனால் பெருமையுடன் வாழ்வதையே விரும்பி, பணிவு என்னும் பெருந் தன்மையை விட்டு, மறுமை நலத்தின் பொருட்டு வறியார்க்கு ஒன்று ஈதலை இலராகியே வாழ்வர். துன்பத்துள் அகப்பட்டவர்க்கு அப்போது உதவியாய் நில்லாமல் துன்பமின்றி இன்புற்றிருக்கின்ற மற்றொருவருக்கு உதவியாவர். அவரது தன்மையைக் கண்டு அவரோடு கூடி வாழ்வதற்கு அஞ்சுதல் உடையன் ஆயினேன்.

80. உதிரநீர் இறைச்சிக் குப்பை
எடுத்தது மலக்கு கைம்மேல்
வருவதோர் மாயக் கூரை
வாழ்வதோர் வாழ்வு வேண்டேன்
கரியமால் அயனும் தேடிக்
கழலிணைக் காண மாட்டா
அரியனாய் நின்ற ஆரூர்
அப்பனே அஞ்சி னேனே.

தெளிவுரை : கருமை நிறத்தையுடைய திருமாலும் பிரமனும் தேடித் திருவடியைக் காணமாட்டாத அருமையையுடையோனாய் நின்ற திருவாரூரில் உள்ள தந்தையே, குருதியாகிய நீராற் பிசைந்த இறைச்சியாகிய மண் குவியலைக் கொண்டு எடுத்ததாகிய மலக் குகையின் மேல் காணப்படுவதாகிய விரையக் கெடும் தோலாகிய கூரையினுள்ளே வாழ்வதாகிய இழிந்த வாழ்க்கையை அடியேன் விரும்கின்றிலேன். அதனது தீமைகள் பலவும் அறிந்து அதற்கு அஞ்சுதல் உடையன் ஆயினேன்.

81. பொய்த்தன்மைத் தாய மாயப்
போர்வையை மெய்யென்று எண்ணும்
வித்தகத் தாய வாழ்வு
வேண்டிநான் விரும்ப கில்லேன்
முத்தினைத் தொழுது நாளும்
முடிகளால் வணங்கு வாருக்கு
அத்தன்மைத் தாகும் ஆரூர்
அப்பனே அஞ்சி னேனே.

தெளிவுரை : முத்துப்போல அரிதிற் கிடைக்கும் நின்னை நாள்தோறும் தொழுது, தலையால் வணங்கும் அன்பர்கட்கு அத்தன்மையதாகிய சிறந்த பொருளாய் நின்று பெரும் பயனைத் தருகின்ற திருவாரூரில் உள்ள தந்தையே, நிலையாத தன்மையையுடைய உடம்பை நிலையுடையதாகக் கருதும் சதுரப்பாட்டினையுடையதாகிய இவ்வுலக வாழ்க்கையை அடியேன் இன்றியமையாததாக நினைத்து விரும்ம் தன்மையில்லேன்; அதற்கு அஞ்சுதல் உடையன் ஆயினேன்.

82. தஞ்சொலால் அருள்ப யக்கும்
தமியனேன் தடமு லைக்கண்
அஞ்சொலார் பயிலும் ஆரூர்
அப்பனை ஊரன் ஆஞ்சிச்
செஞ்சொலால் நயந்த பாடல்
சிந்தியா ஏத்த வல்லார்
நஞ்சுலாம் கண்டத்து எங்கள்
நாதனை நணுகு வாரே.

தெளிவுரை : பற்றுக்கோடு ஆதற்குப் பொருந்தாத மகளிர் பொருட்டு மனம் உடைகின்ற தமியேனாகிய நம்பியாரூரன், அவரது பெருத்த தனங்களின் இன்பத்தில் அச்சந் தோன்றப் பெற்றவனாய், அழகிய சொற்களையுடைய மகளிர் ஆடல் பாடல்களைப் பயிலுகின்ற திருவாரூரிலுள்ள தந்தையைச் செவ்விய சொற்களால் வேண்டிப் பாடிய இப் பாடல்களை எண்ணிப் பாடவல்லவர், நஞ்சை அணிகலமாகத் தாங்கிய கண்டத்தையுடைய எங்கள் பெருமானை அடைவார்கள்.

திருச்சிற்றம்லம்

9. திரு அரிசிற் கரைப்புத்தூர் (அருள்மிகு படிக்காசுநாதர் திருக்கோயில், அழகாபுத்தூர், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

83. மலைக்கும்மகள் அஞ்ச மதகரியை
உரித்தீர்எரித் தீர்வரு முப்புரங்கள்
சிலைக்குங்கொலைச் சேவுகந்து ஏறுஒழியீர்
சில்பலிக்கில்கள் தோறும் செலவுஒழியீர்
கலைக்கொம்பும் கரிமருப் பும்இடறிக்
கலவம்மயில் பீரியும் கார்அகிலும்
அலைக்கும்புனல் சேர்அரி சில்தென்கரை
அழகார்திருப் புத்தூர் அழகனீரே.

தெளிவுரை : இத்திருப்பதிகம் இறைவனது பொருள் சேர்ந்த புகழைப் பலவாற்றானும் எடுத்தோதியருளியது. இஃது இத்திருமுறையுள் ஐந்தாம் திருப்பதிகமாயிருந்து, பிற்காலத்துப் பிறழக் கோக்கப்பட்டது போலும்.

மான்களின் கொம்புகளையும் யானையின் தந்தங்களையும் எடுத்தெறிந்து, தோகையையுடைய மயிலினது இறகுகளையும் கரிய அகிற் கட்டைகளையும் அலையப் பண்ணுகின்ற நீர் பொருந்திய அரிசிலாற்றின் தென்கரையிலுள்ள அழகு நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியுள்ள அழகரே ! நீர் இமய மலைக்கு மகளாகிய உம்தேவி அச்சங்கொள்ளும்படி மதம் பொருந்திய யானையை உரித்தீர்; முழங்குகின்ற கொல்லுந் தொழிலையுடைய காளையை விரும்பி ஏறுதலை விடமாட்டீர் ! சிலவகையான பிச்சைக்கு இல்லங்கள் தோறும் செல்லுதலையும் நீங்கமாட்டீர்.

84. அருமல ரோன்சிரம் ஒன்றறுத்தீர்
செறுத்தீர்அழற் சூலத்தில் அந்தகனைத்
திருமகள் கோனெடு மால்பலநாள்
சிறப்பாகிய பூசனை செய்பொழுதில்
ஒருமலர் ஆயிரத் திற்குறைவா
நிறைவாகவோர் கண்மலர் சூட்டலுமே
பொருவிரல் ஆழி புரிந்தளித்தீர்
பொழிலார்திருப் புத்தூர்ப் புனிதநீரே.

தெளிவுரை : சோலைகள் நிறைந்த திருப்புத்தூரில் கோயில் கொண்டிருக்கின்ற புனிதரே, நீர் அரிதாகிய தாமரை மலரின்கண் இருக்கும் பிரமதேவனது தலையொன்றை அறுத்தீர். நெருப்பை வீசும் சூலத்தினால் அந்தகாசுரனை அழித்தீர். திருமகட்குத் தலைவனாகிய நீண்ட வடிவினைக் கொண்ட திருமால் உமக்குப் பலநாள் சிறப்பாய் உள்ள வழிபாட்டினைச் செய்து வரும் நாட்களில், ஒருநாள் அவன் சாத்துகின்ற ஆயிரம் தாமரை மலர்களுள் ஒன்று குறைவாகி மறைய அது நிறைவாகும்படி தனது கண்ணாகிய மலரைப் பறித்துச் சாத்த மகிழ்ந்து, போரின்கண் வெற்றியைத் தருகின்ற சக்கரப்படையை அருளினீர்.

85. தரிக்குந்தரை நீர்தழல் காற்றந்தரம்
சந்திரன்சவி தாஇய மானன்ஆனீர்
சரிக்கும்பலிக் குத்தலை அங்கையேந்தித்
தையலார்பெய்யக் கொள்வது தக்கதன்றால்
முரிக்கும்தளிர்ச் சந்தனத் தோடுவேயும்
முழங்கும்திரைக் கைகளால் வாரிமோதி
அரிக்கும்புனல் சேர்அரி சிற்றென்கரை
அழகார்திருப் புத்தூர் அழகனீரே.

தெளிவுரை : கிள்ளி அணியத்தக்க தளிர்களையுடைய சந்தன மரத்தையும், மூங்கிலையும் ஒலிக்கின்ற அலைகளாகிய கைகளால் வாரிக்கொண்டு வந்து, கரையை மோதி அதனை ஒழித்து ஓடுகின்ற அரிசி லாற்றின் தென்கரையிலுள்ள அழகு நிறைந்த திருப்புத்தூரிலுள்ள அழகரே ! நீர் எல்லாவற்றையும் தாங்குகின்ற நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம், சந்திரன், சூரியன், ஆன்மா ஆகிய எல்லாப் பொருள்களும் ஆனீர். ஆதலின் ஒன்றும் இல்லாதார் திரிந்து எடுக்கின்ற பிச்சையின் பொருட்டுத் தலைஓட்டினை அங்கையில் ஏந்திச் சென்று, பெண்டிர் சில பொருள்களை இட, அவற்றை ஏற்பது உமக்குத் தகுவதன்று.

86. கொடியுடை மும்மதில் வெந்தழியக்
குன்றம்வில்லா நாணியிற் கோலொன்றினால்
இடிபடி எய்தெரித் தீர் இமைக்கும்
அளவில் உமக்கு ஆர்எதிர் எம்பெருமான்
கடுபடி பூங்கணை யான்கருப்புச்
சிலைக்காமனை வேவக் கடைக்கண்ணினால்
பொடிபட நோக்கியது என்னை கொல்லோ
பொழிலார்திருப் புத்தூர்ப் புனிதனீரே.

தெளிவுரை : எம்பெருமானே ! சோலைகள் நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியுள்ள புனிதரே ! நீர் கொடிகளையுடைய மூன்று அரண்கள் வெந்து அழியும்படி மலை வளைந்து வில்லாகுமாறு கட்டிய நாணியில் தொடுத்த ஓர் அம்பினால் ஓசை உண்டாக எய்து, இமைக்கும் அளவில் எரித்தீர்: ஆதலின் உமக்கு நிகராவார் யாவர்? ஒருவரும் இல்லை. அங்ஙனமாக மணம்பொருந்திய மலர்களை அம்பாகவும், கரும்பை வில்லாகவும் கொண்ட காமவேளை வெந்து சாம்பராய் அழிய கடைக்கண்ணால் சிவந்து நோக்கியது என் கருதியோ?

87. வணங்கித்தொழு வாரவர் மால்பிரமன்
மற்றும்வானவர் தானவர் மாமுனிவர்
உணங்கல்தலை யில்பலி கொண்டலென்னே
உலகங்கள்எல் லாம்உடையீர் உரையீர்
இணங்கிக்கயல் சேல்இள வாளைபாய
இனக் கெண்டைதுள் ளக்கண் டிருந்தஅன்னம்
அணங்கிக் குணங் கொள்ளரி சில்தென்கரை
அழகார்திருப் புத்தூர்  அழகனீரே.

தெளிவுரை : கயலும் சேலும் இளைய வாளையுமாகிய மீன்கள், ஒன்றோடு ஒன்று பொருந்தி மேல் எழுந்து பாயவும், கூட்டமாகிய கெண்டை மீன்கள் துள்ளவும் அவற்றைக் கண்டு முன்பு வாளாயிருந்த அன்னப் பறவைகள் அவைகளைத் துன்புறுத்தி, தம் இயல்பினை மேற்கொள்கின்ற (உண்கின்ற) அரிசில் ஆற்றின் தென் கரையிலுள்ள அழகு நிறைந்த திருப்புத்தூரில் கோயில் கொண்டிருக்கின்ற அழகரே ! உலகம் எல்லாவற்றையும் உடையவரே ! உம்மை அடிபணிந்து, கை கூப்பித் தொழுகின்ற அடியவராவார், திருமாலும் பிரமனும் மற்றைய தேவரும், அசுரரும் பெரிய முனிவரும் ஆவர். அங்ஙனமாக, நீர் உலர்ந்த தலையோட்டில் பிச்சை ஏற்பது என்னோ? சொல்வீராக.

88. அகத்தடி மைசெய்யும் அந்தணன்தான்
அரிசிற்புனல் கொண்டுவந் தாட்டுகின்றான்
மிகத்தளர் வெய்திக் குடத்தையும்நும்
முடிமேல்விழுந் திட்டு நடுங்குதலும்
வகுத்தவ னுக்குநித் தற்படியும்
வரும்என்றொரு காசினை நின்றதன்றிப்
புகழ்த்துணை கைப்புகச் செய்துகந்தீர்
பொழிலார்திருப் புத்தூர்ப் புனிதனீரே.

தெளிவுரை : சோலைகள் சூழ்ந்த திருப்புத்தூரிலுள்ள புனிதரே ! நீர் உமக்கு அகத்தொண்டு செய்யும் அந்தணர் ஒருவர் தம் நியமப்படி ஒருநாள் அரிசிலாற்றின் நீரைக் கொணர்ந்து உமக்கு அபிஷேகம் செய்கின்றவர், பசியினால் வருந்தி நீர்க்குடத்தையும் உமது முடியின்மேல் போட்டுவிட்டு, அதற்காக நடுங்க, நீர் அவரது கனவில் தோன்றி, நீ அறியாமல் செய்த பிழைக்காக வருந்த வேண்டா, இந்தப் பஞ்சம் நீங்கும்; நாள்தோறும் உனக்குப் படிச்செலவுக்கு ஒரு காசும் கிடைக்கும் என்று அருளிச் செய்து அவ்வாறே கிடைக்குமாறும் செய்தீர்.

89. பழிக்கும்பெருந் தக்கன்எச் சம்அழியப்
பகலோன்முத லாப்பல தேவரையும்
தெழித்திட்டவர் அங்கம் சிதைத்தருளும்
செய்கைஎன்னைகொ லோமைகொள் செம்மிடற்றீர்
விழிக்கும்தழைப் பீலியொடு ஏலமுந்தி
விளங்கும்மணி முத்தொடு பொன்வரன்றி
அழிக்கும்புனல் சேர்அரி சில்தென்கரை
அழகார்திருப் புத்தூர் அழகனீரே.

தெளிவுரை : நீலகண்டத்தை உடையவரே! மயில் தோகையோடு ஏலக்காய் மரங்களையும் முத்து பொன் முதலியவற்றையும் வாரிக்கொண்டு கரைகளை மோதிக்கொண்டு செல்லும் நீர்ப் பெருக்கினையுடைய அரிசில் ஆற்றின் தென் கரையிலுள்ள அழகுடைய திருப்புத்தூரில் கோயில் கொண்டிருக்கும் அழகரே ! நீர் உம்மை இகழ்ந்த தக்கனது வேள்வி அழியும்படி சூரியன் முதலாக நின்ற தேவர் பலரையும் அவர்கள் நடுங்கும்படி அதட்டி. அவர்களது உறுப்புகளில் ஒவ்வொன்றைச் சிதைத்தது ஏன்?

90. பறைக்கண்ணெடும் பேய்க்கணம் பாடல்செய்யக்
குறட்பாரிடங் கள்பறை தாம்முழக்கப்
பிறைக்கொள் சடை தாழப் பெயர்ந்து நட்டம்
பெருங்காடுஅரங் காகநின்று ஆடல்என்னே
கறைக்கொள்மணி கண்டமும் திண்தோள்களும்
கரங்கள்சிரம் தன்னிலும் கச்சுமாகப்
பொறிக்கொள்அர வம்புனைந் தீர்பலவும்
பொழிலார்திருப் புத்தூர்ப் புனிதனீரே.

தெளிவுரை : நீலகண்டத்தில் கண்ட சரமாகவும் திண்ணிய தோள்களில் வாகுவலயமாகவும், முன் கைகளிற் கங்கணமாகவும் தலையில் தலைச்சூட்டாகவும் அரையில் கச்சாகவும் புள்ளிகளைக் கொண்ட பாம்புகள் பலவற்றையும் அணிந்தவரே ! சோலைகள் சூழ்ந்த திருப்புத்தூரில் கோயில் கொண்டிருக்கும் புனிதரே ! நீர், பறைபோலும் பெரிய கண்களையுடைய பேய்க்கூட்டம் பாடவும், குறுகிய பூதங்கள் பறைகளை முழக்கவும் பிறை சூடிய சடை கீழே தாழ்ந்து அலைய, காலங்கடந்த காடே அரங்கமாக நின்று அடிபெயர்ந்து நடனமாடுதல் ஏன்?

91. மழைக்கண்மட வாளையொர் பாகம்வைத்தீர்
வளர்புன்சடைக் கங்கையை வைத்துகந்தீர்
முழைக்கொள்அர வோடுஎன் பணிகலனா
முழுநீறுமெய் பூசுதல் என்னைகொலோ
கழைக்கொள்கரும் புங்கத லிக்கனியும்
கமுகின்பழுக் காயும் கவர்ந்துகொண்டிட்டு
அழைக்கும்புனல் சேர்அரி சில்தென்கரை
அழகார்திருப் புத்தூர் அழகனீரே.

தெளிவுரை : கரும்புகளையும் வாழைப் பழங்களையும் பாக்குக் குலைகளையும் வாரிக்கொண்டு வரும் நீர்ப் பெருக்கினையுடைய அரிசிலாற்றின் தென் கரையிலுள்ள அழகிய திருப்புத்தூரில் கோயில் கொண்டிருக்கும் புனிதரே! கரிய கண்களையுடைய உமாதேவியை ஒரு பங்கில் வைத்தீர். சிவந்த சடையின் மேல் கங்கையை விரும்பி வைத்தீர். அப்படியிருக்க செல்வ வாழ்க்கை வாழ நினையாமல் புற்றினை இடமாகக் கொள்ளும் பாம்பும் எலும்பும் அணிகலன்களாக, மேனி முழுவதும் சாம்பலைப் பூசிக் கொள்ளுதல் ஏன்?

92. கடிக்கும்மர வால்மலை யால்அமரர்
கடலைக்கடை யல்எழு காளகூடம்
ஒடிக்கும்உல கங்களை யென்றதனை
உமக்கேஅமு தாகவுண்டீர் உமிழீர்
இடிக்கும்மழை வீழ்ந்துஇழுத் திட்டருவி
இருபாலுமோடி இரைக்கும் திரைக்கை
அடிக்கும் புனல் சேரரி சில்தென்கரை
அழகார்திருப் புத்தூர் அழகனீரே.

தெளிவுரை : இடிக்கின்ற மேகத்தைக் கீழே தள்ளி இழுத்துக் கொண்டு, முன்பு அருவியாய் ஓடி, பின்பு ஒலிக்கின்ற அலைகளாகிய கைகளால் இருபக்கத்துக் கரைகளையும் மோதும் நீர்ப் பெருக்கினையுடைய அரிசில் ஆற்றின் தென்கரையிலுள்ள அழகிய திருப்புத்தூரில் கோயில் கொண்டுள்ள அழகரே! நீர் கடிக்கும் பாம்பாகிய கயிற்றைக் கொண்டு மலையாகிய மத்தினால் தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது உண்டாகிய பெருநஞ்சு எல்லா உலகத்தையும் அழித்துவிடும் என்று இரங்கி, அதனையே உமக்கு உரிய பங்காகிய அமுதமாக ஏற்று உண்டீர். பின்பு இதுவரை அதை உமிழவும் இல்லை.

93. காரூர் மழைபெய்து பொழிஅருவிக்
கழையோடுஅகில் உந்திட்டு இருகரையும்
போரூர்புனல் சேர்அரிசில் தென்கரைப்
பொழிலார்திருப் புத்தூர்ப் புனிதர்தம்மை
ஆரூரன் அருந்தமிழ் ஐந்தினொடு ஐந்து
அழகால்உரைப் பார்களும் கேட்பவரும்
சீரூர்தரு தேவர் கணங்களொடும்
இணங்கிச்சிவ லோகமது எய்துவரே.

தெளிவுரை  : மேகங்கள் மிக்க மழையைப் பெய்ய, அதனால் பெருகிய வெள்ளம் மூங்கிலையும் அகிற் கட்டைகளையும் தள்ளிக் கொண்டு இருகரைகளையும் மோதும் அரிசிலாற்றின் தென்கரையிலுள்ள சோலைகள் சூழ்ந்த திருப்புத்தூர் புனிதரை, நம்பியாரூரனது அரிய தமிழ்ப் பாடல்கள் பத்தினாலும், மொழிக்குற்றம், இசைக்குற்றம் இன்றித் துதிப்பவர்களும், அத்துதியைக் கேட்பவர்களும் சிறப்புமிக்க தேவர் கூட்டத்துள் கூடிவாழ்ந்து பின் சிவலோகத்தை அடைவார்கள்.

திருச்சிற்றம்பலம்

10. திருக்கச்சி அனேகதங்காவதம் (அருள்மிகு கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்)

திருச்சிற்றம்பலம்

94. தேனெய் புரிந்துழல் செஞ்சடை எம்பெரு
மானதி டந்திகழ் ஐங்கணையக்
கோனை எரித்தெரி யாடி இடம்குல
வான திடங்குறை யாமறையா
மானை இடத்ததொர் கையன் இடம்மத
மாறு படப்பொழி யும்மலைபோல்
ஆனை யுரித்த பிரான திடங்கலிக்
கச்சி அநேகதங் காவதமே.

தெளிவுரை : தேனாகிய நெய்யை விரும்பி உழல்கின்ற சிவந்த சடையையுடைய எம்பெருமானும், அழகு விளங்கும் ஐங்கணையை உடைய அத் தலைவனாகிய மன்மதனை எரித்தவனும், தீயில் நின்று ஆடுபவனும் மேலானவனும் மிக்க புள்ளிகள் பொருந்திய மானை இடப்பக்கத்திலுள்ள ஒரு கையில் தாங்கினவனும், மும்மதங்களும் ஒன்றினொன்று முற்பட்டுப் பாய்கின்ற மலைபோலும் யானையை உரித்த பெரியோனும் ஆகிய இறைவன் விரும்பி உறையும் இடம், ஆரவாரத்தையுடைய கச்சிமாநகர்க்கண் உள்ள திரு அநேகதங்காவதம் என்னும் திருக்கோவிலே.

95. கூறு நடைக்குழி கட்பகு வாயன
பேயுகந் தாடநின்று ஓரியிட
வேறு படக்குட கத்திலை யம்பல
வாணனின் றாடல் விரும்புமிடம்
ஏறு விடைக்கொடி எம்பெரு மான்இமை
யோர்பெரு மான்உமை யாள்கணவன்
ஆறு சடைக்குடை அப்பன் இடங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே.

தெளிவுரை : மேலைத் தில்லை அம்பலவாணன், துறு நடையையும் குழிந்த கண்களையும், பிளந்த வாயினையும் உடைய பேய்கள் உடன் விரும்பியாடவும், நரிகள் நின்று ஊளையிடவும் சிறப்புண்டாக நின்று ஆடுதலை விரும்புவதும், உயர்ந்த இடபக் கொடியையுடைய எம்பெருமானும் தேவர் தலைவனும், உமாதேவிக்குக் கணவனும், சடையில் கங்கையையுடைய தந்தையும் ஆகிய அவ் இறைவனுக்கு உரித்தாகிய இடம், ஆரவாரத்தையுடைய கச்சி மாநகரில் உள்ள திரு அநேகதங்காவதம் என்னும் திருக்கோயிலே.

96. கொடிகள் இடைக்குயில் கூவும் இடம்மயில்
ஆலும் இடம்மழு வாளுடைய
கடிகொள் புனற்சடை கொண்டநுதற் கறைக்
கண்டன் இடம்பிறைத் துண்டமுடிச்
செடிகொள் வினைப்பகை தீரும் இடம்திரு
வாகும் இடம்திரு மார்பகலத்து
அடிக ளிடம்அழல் வண்ணன் இடம்கலிக்
கச்சி அனேகதங் காவதமே.

தெளிவுரை : துன்பத்தைக் கொண்ட வினையாகிய பகை நீங்கியதும், நன்மை வளர்வதும் மழுப்படையையுடைய விளக்கத்தைக் கொண்ட நீரைச் சடையில் ஏற்ற, பிறைத் துண்டமாகிய கண்ணியை அணிந்த நெற்றியையுடைய நீலகண்டனும் அழகிய மார்பிடத் தனவாகிய பல ஆபரணங்களையுடைய தலைவனும், நெருப்புப்போலும் நிறத்தை யுடையவனும் ஆகிய இறைவனுக்கு உரிய இடம் யாதெனில், அது கொடிபோலும் மகளிர் பாடல்களுக்கு இடையே, குயில்கள் கூவுவதும், அவர் ஆடல்களுக்கு இடையே மயில்கள் ஆடுவதும் ஆகிய ஆரவாரத்தையுடைய கச்சிமாநகர்க்கண் உள்ள திரு அநேகதங்காவதம் என்னும் திருக்கோயிலே.

97. கொங்கு நுழைத்தன வண்டறை கொன்றையும்
கங்கையும் திங்களும் சூடுசடை
மங்குல் நுழைமலை மங்கையை நங்கையைப்
பங்கினில் தங்க உவந்தருள்செய்
சங்கு குழைச்செவி கொண்டரு வித்திரள்
பாயவி யாத்தழல் போலுடைத்தம்
அங்கை மழுத்திகழ் கையன் இடங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே.

தெளிவுரை : தேனால் நுழைவிக்கப்பட்ட வண்டுகள் ஒலிக்கின்ற கொன்றை மாலையையும் கங்கையையும் பிறையையும் அணிந்த சடையினையுடைய மேகங்கள் தவழும் மலையில் வளர்ந்த மங்கையும் சிவந்த தேவியுமாகிய உமையை ஒரு பாகத்தில் பொருந்தியிருக்குமாறு மகிழ்ந்து வைத்து, உயிர்கட்கு அருள் புரிகின்ற சங்கக் குழையை அணிந்த காதினின்றும் வெள்ளொளிக் கற்றையாகிய அருவித்திரள் பாய, அவற்றாலும் அவியாத நெருப்புத்திரள் போலத் தோன்றும் அகங்கையின் மழுவானது இடையறாது ஒளிவீசுகின்ற தன்மையையுடைய இறைவனது இடம், ஆரவாரமுள்ள கச்சியிலுள்ள திரு அநேகதங்காவதம் என்னும் திருக்கோயிலாகும்.

98. பைத்த படத்தலை ஆடர வம்பயில்
கின்ற இடம்பயில்ப் புகுவார்
சித்தம் ஒருநெறி வைத்த இடந்திகழ்
கின்ற இடந்திரு வானடிக்கே
வைத்த மனத்தவர் பத்தர் மனங்கொள
வைத்த இடம்மழு வாளுடைய
அத்தன் இடம்அழுல் வண்ணன் இடங்கலிக்
கச்சி அநேகதங் காவதமே.

தெளிவுரை : ஆதிசேடனது பையின் தன்மையைப் பெற்ற படத்தையுடைய தலையின்கண் நீங்காதிருக்கின்ற இடமாகிய நிலவுலகத்தில் வாழப் புகுவோர், தமது உள்ளத்தை ஒரு நெறியின்கண்ணே வைத்தபொழுது அவர்க்கு உயர்ந்து விளங்குவதும் திருவாளனாகிய சிவபெருமானது திருவடியில் பிறழாது வைத்த மனத்தை உடையவராகிய அடியார்தம் மனம் விரும்பிக் கொள்ளுமாறு அதனுள் இருத்தப்பட்டதும் மழுப்படையையுடைய தலைவனும் நெருப்புப் போன்ற நிறமுடையவனுமாகிய அப்பெருமானுக்கு உரித்தாயதும் ஆகிய இடம் ஆரவாரமிக்க கச்சிமாநகரிலுள்ள திரு அநேகதங்காவதம் என்னும் திருக்கோயிலே.

99. தண்ட முடைத்தரு மன்தமர் என்தம
ரைச்செயும் வன்துயர் தீர்க்கும்இடம்
பிண்ட முடைப்பிற வித்தலை நின்று
நினைப்பவர் ஆக்கையை நீக்குமிடம்
கண்ட முடைக்கரு நஞ்சை நுகர்ந்த
பிரானது இடங்கடல் ஏழுகடந்து
அண்டம் உடைப்பெரு மானது இடங்கலிக்
கச்சி அநேகதங் காவதமே.

தெளிவுரை : தண்டித்தலையுடைய யமதருமன் தூதர், என் சுற்றத்தவராகிய தொண்டருக்குச் செய்யும் கொடிய துன்பங்களைத் தீர்த்து வைக்கும் இடமும், கருவிலிருந்து வரும் பிறப்பினின்றும் நீங்க நினைப்பவருடைய இக் கரும பந்தங்களைப் போக்கும் இடமும் திருக் கழுத்திலே தங்கிய கருமையான விஷத்தை உண்ட தலைவரது இடமும், ஏழு கடலையும் கடந்து அண்டங்களையெல்லாம் உடைய பெருமானது இடமும் ஓசை பொருந்திய திருக்கச்சி அநேகதங்காவதம் என்னும் தலமேயாம்.

100. கட்டு மயக்கம் அறுத்தவர் கைதொழுது
ஏத்தும் இடம்கதி ரோன்ஒளியால்
விட்ட இடம்விடை யூர்தி இடங்குயில்
பேடைதன் சேவலோடு ஆடுமிடம்
மட்கு மயங்கி அவிழ்ந்த மலர்ஒரு
மாதவி யோடு மணம்புணரும்
அட்ட புயங்கம் பிரானது இடம்கலிக்
கச்சி அனேகதங் காவதமே.

தெளிவுரை : பாசப்பிணிப்பால் ஏற்படும் திரிபுணர்வை நீக்கியவர், கைகுவித்துக் கும்பிட்டுத் துதிப்பதும் இடப வாகனத்தையுடையவனும் அட்டமா நாகங்களையும் அணிந்தவனுமாகிய இறைவனுக்கு உரித்தாயதுமான இடம். பகலவனது ஒளியினின்று நீங்கியதும் குயிற்பேடை தனது சேவலோடு கூடி விளையாடுவதும் ஆகிய சோலையில் ஒப்பற்ற மாதவியில் தேன் ததும்பி மலர்ந்த மலர் மணத்தைப் பொருந்துகின்ற ஆரவாரமிக்க கச்சியிலுள்ள திரு அனேகதங் காவதம் என்னும் திருக்கோயிலே.

101. புல்லி இடந்தொழுது உய்தும்எ னாதவர்
தம்புர மூன்றும் பொடிப்படுத்த
வில்லி இடம்விர வாதுஉயிர் உண்ணும்வெங்
காலனைக் கால்கொடு வீந்தவியக்
கொல்லி இடம்குளிர் மாதவி மவ்வல்
குராவகு ளங்குருக் கத்திபுன்னை
அல்லி யிடைப்பெடை வண்டுறங் குங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே.

தெளிவுரை : முன்பு வணங்கியவனைக் கடைசிவரை தொழுது உய்வோம் என்று நினையாமல், புத்தனது பொய்யுரையால் மயங்கிய அசுரரது அரண்கள் மூன்றினையும் சாம்பலாக்கிய வில்லையுடையவனும் யாவரிடத்தும் கண்ணோடாமல் உயிரை வெளவும் கொடிய காலனை அழிந்தொழியும்படி காலால் கொன்றவனும் ஆகிய இறைவனுக்கு உரித்தாய இடம் குளிர்ந்த வன மல்லிகை, முல்லை, குரா, மகிழ், குருக்கத்தி, புன்னை இவற்றின் மலர்களது அக இதழில் பெண் வண்டுகள் உறங்குகின்ற ஆரவாரத்தையுடைய கச்சி மாநகரிகண் உள்ள திரு அனேகதங்காவதம் என்னும் திருக்கோயிலே.

102. சங்கை யவர்புணர் தற்கரி யான்தன
வேனகை யாள்வி ராமிகுசீர்
மங்கை யவன்மகி ழச்சுடு காட்டிடை
நட்டநின் றாடிய சங்கரன்எம்
அங்கையி னில்அனல் ஏந்துமவன்கனல்
சேரொளி அன்னதோர் பேரலகத்
தங்கையவன் உறைகின்ற இடங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே.

தெளிவுரை : ஐயப்பாடு உடையவர் அடைவதற்கு அரியவனும் முல்லையரும்புபோலும் நகையினையுடையவளாகிய என்றும் பிரிவில்லாத மிக்க புகழையுடைய உமாதேவி மகிழும்படி சுடுகாட்டில் நின்று நடனமாடுகின்ற சங்கரனும் எம் அங்கைப் பொருளாய் உள்ளவனும், நெருப்பை ஏத்துபவனும், நெருப்பிற் பொருந்தியுள்ள ஒளிபோலும் ஒளியையுடைய பெரிய மழுப்படையை ஏந்திய அங்கையையுடையவனும் ஆகிய இறைவன் நீங்காது உறைகின்ற இடம். ஆரவாரமிக்க கச்சிப்பெருநகரில் திரு அநேகதங்காவதம் என்னும் திருக்கோயிலே.

103. வீடு பெறப்பல ஊழிகள் நின்று
நினைக்கும் இடம்வினை தீருமிடம்
பீடு பெறப்பெரி யோரது இடங்கொண்டு
மேவினர் தங்களைக் காக்கும்இடம்
பாடும் இடத்துஅடி யான்புகழ் ஊரன்
உரைத்தஇம் மாலைகள் பத்தும்வல்லார்
கூடும் இடம்சிவ லோகன் இடம்கலிக்
கச்சி அனேகதங் காவதமே.

தெளிவுரை : முத்தி பெறுதற்காகப் பல்லூழிக் காலமாயினும் இவ்வுடம்போடு நின்று இறைவனை நினைத்தற்குரிய இடமும், அதனால் வினை நீங்கப்பெறும் இடமும் பெருமையை அடைதற்குரிய வழியைப் பெரியோரது அடிக்கீழ் நின்று பெற்று, அவ்வழியாலே விரும்பி வந்தவர்களைக் பிறவிக் கடலில் வீழாதவாறு காக்கும் இடமும் ஆகிய ஒலிமிக்க காஞ்சிமாநகரிலுள்ள திரு அனேகதங்காவதம் என்னும் தலத்தைப் பாடப் புகும்போது சிவபெருமானுக்கு அடியவனாகிய புகழையுடைய நம்பியாரூரன் பாடிய இச் சொல் மாலைகள் பத்தினையும் நன்கு பாடவல்லார் அடையும் இடம் சிவபெருமானது இடமேயாகும்.

திருச்சிற்றம்பலம்

11. திருப்பூவணம் (அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில், திருப்புவனம், சிவகங்கை மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

104. திருவுடை யார்திரு மால்அய னாலும்
உருவுடை யார்உமை யாளைஓர் பாகம்
பரிவுடை யார்அடை வார்வினை தீர்க்கும்
புரிவுடை யார்உறை பூவணம் ஈதோ!

தெளிவுரை : இத்திருப்பதிகம் இறைவர் எழுந்தருளியுள்ள திருப்பூவணம் என்னும் தலம் இதுதானோ! என அடியவர்களை வினவி அருளியது.

திருமால், பிரமன் ஆகிய காரணக் கடவுளரிலும் மேலான செல்வத்தை யுடையவரும், தமது திருமேனியில் உமையம்மையை ஒரு பாகமாக உடையவரும், அன்புடையவராய்த் தம்மை அடைவாரது வினைகளைத் தீர்க்கும் விரும்பம் உடையவரும் ஆகிய இறைவர் எழுந்தருளியுள்ள திருப்பூவணம் என்னும் தலம் இதுதானோ!

105. எண்ணி இருந்தும் கிடந்தும் நடந்தும்
அண்ணல்எ னாநினை வார்வினை தீர்ப்பார்
பண்ணிசை யார்மொழி யார்பலர் பாடப்
புண்ணிய னார்உறை பூவணம் ஈதோ !

தெளிவுரை : திருவடிகளையே தியானித்துக் கொண்டிருந்தும் படுத்தும் நடந்தும் அளவிடற்கரிய பெருமையுடையவர் என்று அவரை நினைப்பவருடைய வினைகளைத் தீர்க்கும் பரிசுத்தராகிய பெருமான், பண்ணோடு கூடிய கீதம் பொருந்திய இனிய சொற்களையுடைய ஆடற்பெண்கள் பலர் துதிபாட, இனிதாக எழுந்தருளியுள்ள திருப்பூவணம் இதுவோ!

106. தெள்ளிய பேய்பல பூதம் அவற்றொடு
நள்ளிருள் நாட்டமது ஆடல் நவின்றோர்
புள்ளுவ ராகும் அவர்க்கவர் தாமும்
புள்ளுவ னார்உறை  பூவணம் ஈதோ !

தெளிவுரை : தெளிவையுடைய பல பேய் பூதங்களுடன், செறிந்த இருளில் நடனத்தைப் புரிகின்றவரும் வஞ்சகராக இருக்கின்றவர்க்குத் தாமும் வஞ்சகராவோரும் ஆகிய இறைவர் எழுந்தருளியுள்ள திருப்பூவணம் என்னும் திருத்தலம் இதுதானோ!

107. நிலனுடை மான்மறி கையது தெய்வக்
கனலுடை மாமழு ஏந்தியோர் கையில்
அனலுடை யார்அழ கார்தரு சென்னிப்
புனலுடை யார்உறை  பூவணம் ஈதோ !

தெளிவுரை : நிலத்தில் வாழும் மான் கன்று கையிடத்ததாக, தெய்வத் தீயாம் தன்மையையுடைய பெரிய மழுவை ஒரு கையிற் பிடித்து, அதனோடே மற்றொரு கையில் நெருப்பையுடையவரும் ஆகிய இறைவர் எழுந்தருளியுள்ள திருப்பூவணம் என்னும் திருத்தலம் இதுதானோ!

108. நடையுடை நல்லெருது ஏறுவர் நல்லார்
கடைகடை தோறிடு மின்பலி என்பார்
துடியிடை நன்மட வாளொடு மார்பில்
பொடியணி வார்உறை  பூவணம் ஈதோ !

தெளிவுரை : பெருமித நடையையுடைய நல்ல ஆனேற்றின் மீது ஏறுபவரும், மகளிரது வாயில்தோறும் சென்று பிச்சை இடுமின் என்று இரப்பவரும், உடுக்கை போலும் இடையினையுடைய தேவியின் அழகிய மேனியின் பொலிவோடு, சாம்பலைப் பூசிக்கொள்பவரும் ஆகிய இறைவர் எழுந்தருளியுள்ள, திருப்பூவணம் என்னும் திருத்தலம் இதுதானோ!

109. மின்னனை யாள்திரு மேனி விளங்கவோர்
தன்னமர் பாகம தாகிய சங்கரன்
முன்நினை யார்புரம் மூன்றெரி ஊட்டிய
பொன்னனை யான்உறை  பூவணம் ஈதோ !

தெளிவுரை : மின்னல் போலும் மாதராள் திருமேனி தனது திருமேனியின் ஒரு பாகத்தில் விளங்க விரும்பி வைத்த சங்கரன் என்னும் பெயரையுடையவனும், தன்னை நினையாதவரது அரண்களை முன்பு தீக்கு இரையாக்கிய பொன்போலும் நிறத்தையுடையவனும் ஆகிய இறைவன் கோயில் கொண்டுள்ள திருப்பூவணம் என்னும் திருத்தலம் இதுதானோ!

110. மிக்கிறை யேயவன் துன்மதி யாலிட
நக்கிறை யேவிர லால்இற ஊன்றி
நெக்கிறை யேநினை வார்தனி நெஞ்சம்
புக்குறை வான்உறை  பூவணம் ஈதோ !

தெளிவுரை : தனது தலைமையை எல்லை கடந்து மதித்தவனாகிய இராவணனது தீய எண்ணங்காரணமாக, வெகுளி நகை செய்து, தனது இடமாகிய கயிலையை, அவன் நெரியுமாறு விரலால் சிறிதே ஊன்றி, தன்னையே உருகி நினைவாரது ஒப்பற்ற நெஞ்சில் குடிபுகுந்து, ஒரு ஞான்றும் நீங்காது உறையும் இறைவன் எழுந்தருளியுள்ள, திருப்பூவணம் என்னும் திருத்தலம் இதுதானோ!

111. சீரின் மிகப்பொலி யுந்திருப் பூவணம்
ஆர இருப்பிட மாவுறை வான்தனை
ஊரன் உரைத்தசொல் மாலைகள் பத்தினை
பாரில் உரைப்பவர் பாவம் அறுப்பரே.

தெளிவுரை : அழகினால் மிகப் பொலிகின்ற திருப்பூவணம் என்னும் திருத்தலத்தில் விருப்பம் மிக இடமாகக் கொண்டு எழுந்தருளியிருக்கும் இறைவனை நம்பியாரூரன் பாடிய இச்சொல் மாலைகள் பத்தினையும் இந்நிலவுலகில் பாடுபவர் தம் பாவத்தை அறுப்பவராவர்.

திருச்சிற்றம்பலம்

12. திருநாட்டுத் தொகை

திருச்சிற்றம்பலம்

112. வீழக் காலனைக் கால்கொடு
பாய்ந்த விலங்கலான்
கூழை ஏறுகந் தான்இடங்
கொண்டது கோவலுள்
தாழை யூர்தகட் டூர்தக்க
ளூர்தரு மாபுரம்
வாழை காய்க்கும் வளர்மரு
கன்னாட்டு மருகலே

தெளிவுரை : இஃது இறைவன் எழுந்தருளியுள்ள தலங்களைத் தொகுத்து அருளிச் செய்தது, தலங்கள் அமைந்துள்ள நாட்டை விதந்து கூறியுள்ளனமயின் இப்பெயர் பெற்றது.

கூற்றுவனை, அவன் உயிரற்று விழுமாறு காலால் உதைத்த கயிலாயநாதனும், நடை நிரம்பாத எருதினை ஏறுதலை விரும்பியவனுமாகிய இறைவன் தனக்கு இடமாகக் கொண்ட ஊர்: திருக்கோவலூர், தாழையூர், தகட்டூர், தக்களூர், தருமபுரம், வாழைகள் காய்க்கின்ற செல்வம் வளர்கின்ற மருகல் நாட்டில் உள்ள மருகல் என்பவை.

113. அண்டத்து அண்டத்தின் அப்புறத்து
ஆடும் அமுதன் ஊர்
தண்டந் தோட்டந்தண் டங்குறை
தண்டலை ஆலங்காடு
கண்டல் முண்டல்கள் சூழ்கழிப்
பாலை கடற்கரை
கொண்டல் நாட்டுக்கொண் டல்குறுக்
கைநாட்டுக் குறுக்கையே.

தெளிவுரை : இவ்வண்டத்திற்கு அப்பால் உள்ள அண்டங்களுக்கும் அப்பால் நின்று நடனம் ஆடுகின்ற அமுதமாய் உள்ள இறைவனது தலங்கள், தண்டந்தோட்டம், தண்டங்குறை, தண்டலை, ஆலங்காடு, கடல் முள்ளியும் தாழையும் சூழ்ந்த கழிப்பாலை, கடற்கரை, கொண்டல் நாட்டிலுள்ள கொண்டல், குறுக்கை நாட்டிலுள்ள குறுக்கை என்பவை.

114. மூல னூர்முத லாயக்
கண்ணன் முதல்வன்ஊர்
நால னூர்நரை ஏறுகந்
தேறிய நம்பன்ஊர்
கோல நீற்றன்குற் றாலங்
குரங்கணில் முட்டமும்
வேல னூர்வெற்றி யூர்வெண்ணிக்
கூற்றத்து வெண்ணியே.

தெளிவுரை : அழகிய திருநீற்றை யணிந்த, வெள்விடையை விரும்பியேறின முக்கண் முதல்வனது தலங்கள் மூலனூர், முதல்வனூர், நாலனூர், குற்றாலம், குரங்கணில் முட்டம், வேலனூர், வெற்றியூர், வெண்ணிக் கூற்றத்திலுள்ள வெண்ணி என்பவை.

115. தேங்கூ ருந்திருச் சிற்றம்
பலமும் சிராப்பள்ளி
பாங்கூர் எங்கள் பிரானுறை
யும்கடம் பந்துறை
பூங்கூ ரும்பர மன்பரஞ்
சோதி பயிலும் ஊர்
நாங்கூர் நாட்டுநாங் கூர்நறை
யூர்நாட்டு நறையூரே.

தெளிவுரை : எமக்குத் துணையாய் வரும் தலைவனும் எப்பொருட்கும் மேலானவனும் எல்லா ஒளிகட்கும் மேலான ஒளியாய் உள்ளவனும் ஆகிய இறைவன் நீங்காது வாழும் அழகு மிகுந்த ஊர்கள், தேங்கூர். சிற்றம்பலம், சிராப்பள்ளி, அழகு மிக்க கடம்பத்துறை, நாங்கூர் நாட்டிலுள்ள நாங்கூர். நறையூர் நாட்டிலுள்ள நறையூர் என்பவை.

116. குழலை வென்ற மொழிமட
வாளைஓர் கூறனாம்
மழலை யேற்று மணாளன்
இடம்தட மால்வரைக்
கிழவன் கீழை வழிபழை
யாறு கிழையமும்
மிழலை நாட்டு மிழலைவெண்
ணிநாட்டு மிழலையே.

தெளிவுரை : குழலிசையை வென்ற மொழியினையுடைய உமாதேவியை ஒரு பங்கில் உடையவனாகிய இளமையான இடபத்தையுடைய அழகனும், பெரிய கயிலாய மலைக்கு உரியவனும் ஆகிய இறைவனது தலங்கள், கீழைவழி, பழையாறு, கிழையம், மிழலை நாட்டிலுள்ள மிழலை, வெண்ணி நாட்டிலுள்ள மிழலை என்பவை.

மிழலை நாட்டு மிழலை வீழி மிழலை. வெண்ணி நாட்டு மிழலை வைப்புத் தலமாதல் வேண்டும். கீழைவழி முதலிய மூன்றும் வைப்புத் தலங்கள்.

117. தென்னூர் கைம்மைத் திருச்சுழி
யல்திருக் கானப்பேர்
பன்னூர் புக்குறை யும்பர
மற்குஇடம் பாய்நலம்
என்னூர் எங்கள் பிரான்உ
றையும் திருத் தேவனூர்
பொன்னூர் நாட்டுப்பொன் னூர்புரி
சைநாட்டுப் புரிசையே.

தெளிவுரை : சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற தலங்களிலே எழுந்தருளியிருக்கும் சிவபெருமானுக்கு இடமாய், பரவிய புகழையுடையன எவ்வூர்கள் எனின் அவை எங்கள் பெருமான் எருந்தருளியுள்ள, தென்னூர், ஒழுக்கம் நிறைந்த சுழியல், கானப்பேர், தேவனூர், பொன்னூர் நாட்டிலுள்ள பொன்னூர் புரிசை நாட்டிலுள்ள புரிசை என்பவை.

தென்னூர், தேவனூர், பொன்னூர், புரிசை இவை வைப்புத் தலங்கள்.

118. ஈழ நாட்டுமா தோட்டந்தென்
னாட்டுஇரா மேச்சுரம்
சோழ நாட்டுத் துருத்திநெய்த்
தானம் திருமலை
ஆழி யூரன நாட்டுக்கெல்
லாம்அணி யாகிய
கீழை யில்அர னார்கிடம்
கிள்ளி குடியதே

தெளிவுரை : சிவபெருமானாருக்கு உரிய தலங்கள் ஈழநாட்டில் உள்ள மாதோட்டம், தென்னாட்டில் உள்ள இராமேச்சுரம், சோழ நாட்டிலுள்ள துருத்தி, நெய்த்தானம், திருமலை, கடல் சூழ்ந்த நிலவுலகிற்கெல்லாம் அணியாய் விளங்கும் கீழையில் கிள்ளிக்குடி என்பவை.

மாதோட்டமாவது அந்நகரின் கண் உள்ள கேதீச்சரம், திருமலை, கீழையில், கிள்ளிக்குடி இவை வைப்புத் தலங்கள்.

119. நாளும் நன்னிலம் தென்பனை
யூர்வட கஞ்சனூர்
நீள நீள்சடை யான்நெல்லிக்
காவு நெடுங்களம்
காள கண்டன் உறையும்
கடைமுடி கண்டியூர்
வேளா நாட்டுவே ளூர்விளத்
தூர்நாட்டு விளத்தூரே.

தெளிவுரை : நன்னிலம், பனையூர், கஞ்சனூர், நெல்லிக்கா, நெடுங்களம், கடைமுடி, கண்டியூர், வேளா நாட்டில் உள்ள வேளூர், விளத்தூர் நாட்டிலுள்ள விளத்தூர் என்பவைகளில், மிக மீண்ட சடையையுடையவனும் நஞ்சணிந்த கண்டத்தையுடையவனுமாகிய இறைவன் எந்நாளும் எழுந்தருளியிருப்பன்.

வேளூவும், விளத்தூரும் வைப்புத் தலங்கள்.

120. தழலும் மேனியன் தையலொர்
பாகம் அமர்ந்தவன்
தொழலும் தொல்வினை தீர்க்கின்ற
சோதிசோற் றுத்துறை
கழலுங் கோவை யுடையவன்
காதலிக் கும்இடம்
பழனம் பாம்பணி பாம்புரந்
தஞ்சைதஞ் சாக்கையே.

தெளிவுரை : தழல் போல ஒளிவிடும் திருமேனியையுடையவனும், மங்கையை ஒரு பங்கில் விரும்பி வைத்துள்ளவனும் தன்னைத் தொழுதவுடன் தொழுதவரது பழவினையை அறுக்கின்ற ஒளியாய் உள்ளவனும், கழல் அணிந்த மணிவடத்தை உடையவனும் ஆகிய இறைவன் விரும்புகின்ற தலங்கள், சோற்றுத்துறை, பழனம், பாம்பணி, பாம்புரம், தஞ்சை, தஞ்சாக்கை என்பவை. பாம்பணி, தஞ்சை, தஞ்சாக்கை இவை வைப்புத் தலங்கள்.

121. மைகொள் கண்டன்எண் தோளன்முக்
கண்ணன் வலஞ்சுழி
பைகொள் வாளர வாட்டித்
திரியும் பரமனூர்
செய்யில் வாளைகள், பாய்ந்துஉக
ளும்திருப் புன்கூர்நன்று
ஐயன் மேய பொழில்அணி
ஆவடு துறையதே.

தெளிவுரை : நீல கண்டத்தையும் எட்டுத் தோள்களையும் மூன்று கண்களையும் உடையவனும் படத்தைக் கொண்ட கொடிய பாம்பை ஆட்டித் திரியும் மேலவனுமாகிய இறைவனது தலங்கள்; வலஞ்சுழி, வயல்களில் வாளை மீன்கள் மேலெழுந்து பாய்ந்து பிறழ்கின்ற திருப்புன்கூர், அவன் மிக விரும்பிய சோலைகளையுடைய அழகிய ஆவடுதுறை என்பவை.

122. பேணி நாடத னில்திரி
யும்பெரு மான்தனை
ஆணை யாஅடி யார்கள்
தொழப்படும் ஆதியை
நாணி ஊரன் வனப்பகை
யப்பன்வன் தொண்டன்சொல்
பாணி யால்இவை ஏத்துவார்
சேர்பர லோகமே.

தெளிவுரை : நாடுகளில் எல்லாம் விரும்பித் திரியும் பெருமானும், அடியார்கள் தமக்குத் தலைவனாக அறிந்து தொழப்படுகின்ற முதல்வனும் ஆகிய இறைவனை நாணுடையவளாகிய வனப்பகை என்பவளுக்குத் தந்தையும், இறைவன் முன் வன்மை பேசிப் பின் அவனுக்குத் தொண்டன் ஆகியவனும் õகிய நம்பியாரூரன் பாடிய இப்பாடல்களைத் தாளத்தோடு பாடித் துதிப்பவர் அடையும் இடம் சிவலோகமேயாம்.

திருச்சிற்றம்பலம்

13. திருத்துறையூர் (அருள்மிகு சிஷ்டகுருநாதேஸ்வரர் திருக்கோயில், திருத்தளூர், கடலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

123. மலையார் அருவித் திரள்மா மணிஉந்திக்
குலையாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்
கலையார் அல்குற்கன் னியர்ஆடும் துறையூர்த்
தலைவா உனைவேண் டிக்கொள்வேன் தவநெறியே.

தெளிவுரை : இத்திருப்பதிகம், இறைவனைத் தவனெறி தந்தருளுமாறு வேண்டி அருளிச் செய்தது.

மலையிலிருந்து வரும் அருவி பெரிய மணிகளைத் தள்ளிக் கொணர்ந்து கரையில் மோதும் பெண்ணையாற்றின் வட கரையின்கண் நல்ல ஆடையையணிந்த கன்னிப் பெண்கள் மூழ்கி விளையாடும் ஒரு துறையைச் சார்ந்த ஊராகிய திருத்துறையூரில் கோயில் கொண்டுள்ள இறைவனே! உன்பால் அடியேன் தவநெறியையே வேண்டிக் கொள்வேன். வேறொன்றையும் வேண்டேன்.

124. மத்தம் மதயானை யின்வெண் மருப்புந்தி
முத்தங் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்
பத்தர் பயின்றேத்திப் பரவும் துறையூர்
அத்தா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.

தெளிவுரை : மதயானைகளின் கொம்புகளைத் தள்ளிக் கொண்டு வந்து அவற்றில் முத்துக்களைக் கரையில் எறிவதாகிய ஒப்பற்ற பெண்ணை யாற்றின் வட கரையிலுள்ள அடியவர்கள் பலகாலும் வந்து ஏத்தி வழிபடுகின்ற திருத்துறையூரில் எழுந்தருளியுள்ள எந்தையே, உன்பால் அடியேன் தவநெறியையே வேண்டிக் கொள்வேன். வேறொன்றையும் வேண்டேன்.

125. கத்தங் கமழ்கார் அகில்சந் தனம்உந்திச்
செந்தண் புனல்வந் திழிபெண்ணை வடபால்
மந்தி பலமா நடமாடும் துறையூர்
எந்தாய் உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.

தெளிவுரை : நறுமணம் கமழ்கின்ற கரிய அகில் மரங்களையும் சந்தன மரங்களையும் தள்ளிக்கொண்டு சிவந்த குளிர்ந்த நீர் இடையறாது வந்து பாய்கின்ற பெண்ணை யாற்றின் வடகரையிலுள்ள பெண் குரங்குகள் பல வகையான நடனங்கள் ஆடுகின்ற திருத்துறையூரில் கோயில் கொண்டுள்ள எந்தையே, உன்பால் அடியேன் தவநெறியையே வேண்டிக் கொள்வேன். வேறொன்றையும் வேண்டேன்.

126. அரும்பார்ந் தனமல் லிகைசண் பகஞ்சாடிச்
கரும்பாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்
கரும்பார் மொழிக்கன் னியர்ஆடும் துறையூர்
விரும்பா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.

தெளிவுரை : அரும்புகள் நிறைந்த மல்லிகை, சண்பகம் என்னும் மரங்களை முரித்து, அவற்றில் உள்ள வண்டுகளைக் கொணர்ந்து கரையில் மோதுவதாகிய பெண்ணையாற்றின் வடகரையில் எழுந்தருளியுள்ள என் விருப்பத்திற்கு உரியவனே! உன்பால் அடியேன் தவநெறியையே வேண்டிக் கொள்வேன். வேறொன்றையும் வேண்டேன்.

127. பாடார்ந் தனமாவும் பலாக்க ளும்சாடி
நாடார வந்தெற்றி யோர்பெண்ணை வடபால்
மாடார்ந் தனமா ளிகைசூழுந் துறையூர்
வேடா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.

தெளிவுரை : பக்கங்களில் நிறைந்துள்ள மாமரங்களையும் பலா மரங்களையும் முரித்துக் கொணர்ந்து நாடெங்கும் நிறையும்படி வீசுவதாகிய ஒப்பற்ற பெண்ணை யாற்றின் வடகரைக்கண் உள்ள, செல்வம் நிறைந்த மாளிகைகள் சூழ்ந்த துறையூரில் கோயில் கொண்டுள்ள பல அருட்கோலங்கள் யுடையவனே, உன்பால் அடியேன் தவநெறியையே வேண்டிக் கொள்வேன். வேறொன்றையும் வேண்டேன்.

128. மட்டார் மலர்க்கொன் றையும்வன்னி யுஞ்சாடி
மொட்டாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்
கொட்டாட் டொடுபாட் டொலிஓவாத் துறையூர்ச்
சிட்டா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.

தெளிவுரை : தேன் நிறைந்த மலர்களையுடைய கொன்றைமரம் வன்னிமரம் இவைகளை முரித்து, அரும்புகளோடு நிரம்பக் கொணர்ந்து வீசுவதாகிய பெண்ணை யாற்றின் வடகரையில் வாச்சிய முழக்கமும் ஆடலும் பாடலும் நீங்காது கொண்டு விளங்குகின்ற திருத்துறையூரில் கோயில் கொண்டுள்ள மேலானவனே! உன்பால் அடியேன் தவநெறியையே வேண்டிக் கொள்வேன். வேறொன்றையும் வேண்டேன்.

129. மாதார் மயிற்பீ லியும்வெண் ணுரை உந்தித்
தாதாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்
போதார்ந் தனபொய்கை கள்சூழுந் துறையூர்
நாதா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.

தெளிவுரை : அழகு நிறைந்த மயிற்பீலியையும் வெள்ளிய நுரைகளையும் தள்ளி பல மலர்களை மகரந்தங்களோடு நிரம்பக் கொணர்ந்து எறிவதாகிய ஒப்பற்ற பெண்ணையாற்றின் வடகரைக்கண் மலர்கள் நிறைந்தனவாகிய பொய்கைகள் சூழ்ந்து விளங்கும் திருத்துறையூரில் எழுந்தருளியுள்ள தலைவனே ! உன்பால் அடியேன் தவநெறியையே வேண்டிக் கொள்வேன். வேறொன்றையும் வேண்டேன்.

130. கொய்யா மலர்க்கோங் கொடுவேங்கை யுஞ்சாடிச்
செய்யாரக் கொணர்ந்தேற்றி யோர்பெண்ணை வடபால்
மையார் தடங்கண் ணியர்ஆடும் துறையூர்,
ஐயா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.

தெளிவுரை : கொய்தல் பொருந்திய மலர்களையுடைய கோங்க மரம், வேங்கை மரம் இவைகளை முரித்துக் கொணர்ந்து, வயல் நிறைய வீசுவதாகிய வடகரைக்கண், மை பொருந்திய கண்களையுடைய மகளிர் மூழ்கியாடும் ஒரு துறையில் உள்ள திருத்துறையில் உள்ள தலைவனே, உன்னிடம் அடியேன் தவநெறியையே வேண்டிக் கொள்வேன். வேறொன்றையும் வேண்டேன்.

131. விண்ணார்ந் தனமேகங் கள்நின்று பொழிய
மண்ணாரக் கொணர்ந்தெற்றி ஓர்பெண்ணை வடபால்
பண்ணார் பொழிப்பா வையர்ஆடும் துறையூர்
அண்ணா உனைவேண் டிக்கொள்வேன் தவநெறியே.

தெளிவுரை : வானத்தில் மேகங்கள் நிலைத்து நின்று பெய்வதனால் மலையில் உள்ள பொருள்களை வாரிக் கொணர்ந்து நிலம் நிறைய நிரப்புவதாகிய பெண்ணையாற்றின் வடகரையில் மகளிர் மூழ்கியாடும் ஒரு துறைக்கண் உள்ள திருத்துறையூரில் கோயில் கொண்டுள்ள தலைவனே ! உன்பால் அடியேன் தவநெறியையே வேண்டிக் கொள்வேன். வேறொன்றையும் வேண்டேன்.

132. மாவாய் பிளந்தானும் மலர்மிசை யானும்
ஆவா அவர்தேடித் திரிந்தல மந்தார்
பூவார்ந் தனபொய் கைகள்சூழும் துறையூரித்
தேவா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.

தெளிவுரை : பூக்கள் நிறைந்த பொய்கைகள் சூழந்துள்ள திருத்துறையூரில் எழுந்தருளியுள்ள பெருமானே ! கேசி என்னும் அசுரன் கொண்ட வஞ்சனை உருவமாகிய குதிரையின் வாயைக் கிழித்த திருமாலும் மலர் மிசையோனாகிய பிரமனும் ஆகிய அவ்விருவரும் உன்னை வழிபட்டுத் தவநெறியை வேண்டிக் கொள்ளாமல், அந்தோ ! உன் அளவினை ஆராய்ந்து தேடி அலைந்தனர். ஆயினும் உன்பால் அடியேன் தவநெறியையே வேண்டிக் கொள்வேன். வேறொன்றையும் வேண்டேன்.

133. செய்யார் கமலம் மலர்நாவ லூர்மன்னன்
கையால் தொழுதேத்தப் படுந்துறை யூர்மேல்
பொய்யாத் தமிழ்ஊரன் உரைத்தன வல்லார்
மெய்யே பெறுவார்கள் தவநெறி தானே.

தெளிவுரை : வயல்கள் நிறையத் தாமரை மலரும் திருநாவலூருக்குத் தலைவனும் மெய்மையே கூறும் தமிழ்ப் பாடலைப் பாடுபவனும் ஆகிய நம்பியாரூரன், யாவராலும் கையால் கும்பிட்டுத் துதிக்கப்படும் திருத்துறையூரில் உள்ள இறைவன்மீது பாடிய இப்பாடல்களை நன்கு பாடவல்லார் தவநெறியைத் தப்பாது பெறுவர்.

திருச்சிற்றம்பலம்

14. திருப்பாச்சிலாச்சிராமம் (அருள்மிகு மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில், திருவாசி,திருச்சி மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

134. வைத்தனன் தனக்கே தலையும்என் நாவும்
நெஞ்சமும் வஞ்சம்ஒன்று இன்றி
உய்த்தனன் தனக்கே திருவடிக்கு அடிமை
உரைத்தக்கால் உவமனே ஒக்கும்
பைத்தபாம்பு ஆர்த்தோர் கோவணத் தோடு
பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்
பித்தரே ஒத்தோர் நச்சில ராகில்
இவரலாது இல்லையோ பிரானார்.

தெளிவுரை : பெருமான் என் தலையையும் நாவையும் மனத்தையும் திரிகரணங்களையும் தமக்கே பணி செய்யும் பொருட்டுத் தந்துள்ளார். அவைகளை நானும் வஞ்சகம் சிறிதும் இல்லாமல் சிவபெருமான் பணிக்கே செலுத்தினேன். அவ்வாறு அவருக்கே நான் திருவடிகளில் அடிமை செய்பவன் என்று இப்போது சொல்லுமிடத்து, அதுவெறும் உபசார வார்த்தையாகவே முடியும். படத்தையுடைய பாம்பை அரை நாணாகக் கட்டிக்கொண்டு, ஒரு கோவணத்துடனே பித்தர் கோலங்கொண்டு திருப்பாச்சிலாச்சிரமத்தில் எழுந்தருளியுள்ள எம் முதல்வர், உண்மைப் பித்தரைப் போலவே ஆகி என்மீது ஒரு சிறிது பற்றும் இல்லாதவராய் நடிப்பின் இவரையன்றி வேறு தலைவர் எவரும் இல்லையோ?

135. அன்னையே என்னேன் அத்தனே என்னேன்
அடிகளே அமையும்என்று இருந்தேன்
என்னையும் ஒருவன் உளன்என்று கருதி
இறைஇறை திருவருள் காட்டாய்
அன்னமாம் பொய்கை சூழ்தரு பாச்சி
லாச்சிரா மத்துறை அடிகள்
பின்னையே அடியார்க்கு அருள்செய்வ தாகில்
இவரலாது இல்லையோ பிரானார்.

தெளிவுரை : அடியேன் என்னைப் பெற்ற தாயைத் துணையென்று நினைந்திலேன். தந்தையைத் துணையென்று நினைந்திலேன். என்னை ஆண்ட தலைவனே சாலும் என்று நினைத்தேன். இவ்வாறு ஒருவன் உளன் என்று தம் சீரடியாரை நினைத்தற்கிடையில் அன்னங்கள் மிகுந்து வாழும் பொய்கை சூழ்ந்த திருப்பாச்சிலாச் சிராமத்தில் எழுந்தருளியுள்ள இறைவர் என்னையும் சிறிது திருவுள்ளத்தடைத்து, சிறிது திருவருளைப் புலப்படுத்திலர். இவர் தம் அடியவர்க்கு மறுமை நலம் ஒன்றையே அளித்தல் அல்லது இம்மை நலத்தை அருளுவது இல்லையாயினும் இம்மையில் அடியேனைப் புரக்கும் தலைவர் இவர் அன்றி வேறொருவர் இல்லை. என் செய்கோ !

136. உற்றபோது அல்லால் உறுதியை உணரேன்
உள்ளமே அமையும்என்று இருந்தேன்
செற்றவர் புரமூன்று எரிஎழச் செற்ற
செஞ்சடை நஞ்சடை கண்டர்
அற்றவர்க்கு அருள்செய் பாச்சிலாச் சிராமத்து
அடிகள்தாம் யாதுசொன் னாலும்
பெற்றபோது உகந்து பெறாவிடில் இகழில்
இவரலாது இல்லையோ பிரானார்.

தெளிவுரை : ஒரு பொருளினால் நன்மையோ தீமையோ வந்த காலத்தில் அதற்குமுன்பு அதன் இயல்பை ஓர்ந்துணரும் சிறப்பு யான் பெற்றிலேன். அதனால் என் பொதுமை உணர்வே சாலும். நீர் தேவர் பொருட்டு முப்புரத்தை எரித்ததும் நஞ்சை யுண்டதும் சடை முதலிய தவக் கோலத்தைப் பூண்டதும் நோக்குங்கால் நீர் களைகண் இல்லாமல் அலமந்தவர்க்கு அருள் பண்ணுபவர் என்பதை அறிந்தேன். திருப்பாச்சிலாச்சிராமத்தில் எழுந்தருளியுள்ள இறைவரே ! யான் யாது சொல்லி இரந்தாலும் அடியேனைப் புரக்கும் தலைவர் நீயே யாவீர்.

137. நாச்சில பேசி நமர்பிறர் என்று
நன்றுதீது என்கிலர் மற்றோர்
பூச்சிலை நெஞ்சே பொன்விளை கழனிப்
புள்ளினம் சிலம்புமாம் பொய்கைப்
பாச்சிலாச் சிராமத்து அடிகள் என்றிவர்தாம்
பலரையும் ஆட்கொள்வர் பரிந்தோர்
பேச்சிலர் ஒன்றைத் தரவில ராகில்
இவரலாது இல்லையோ பிரானார்.

தெளிவுரை : நிலவளம், நீர்வளம் மிக்க திருப்பாச்சிலாச்சிராமத்தில் எழுந்தருளியிருக்கும் இவர்தாம் இவரைப் புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும் பொருட்படுத்துவதாய் இல்லை. ஆயினும் பலரையும் தமக்கு அடிமையாக ஆளாக்கிக் கொள்வர். அவர்களைப் பற்றிப் பிறகு கவனிப்பதும் இலர். எனினும் என்னைப் புரக்கும் தலைவர் இவரையன்றி வேறொருவர் இல்லை. என் செய்வேன்!

138. வரிந்தவெஞ் சிலையால் அந்தரத்து எயிலை
வாட்டிய வகையின ரேனும்
புரிந்தஅந் நாளே புகழ்தக்க அடிமை
போகுநாள் வீழுநாள் ஆகிப்
பரிந்தவர்க்கு அருள்செய் பாச்சிலாச் சிராமத்து
அடிகள்தாம் யாதுசொன் னாலும்
பிரிந்திறைப் போதில் பேர்வதே ஆகில்
இவரலாது இல்லையோ பிரானார்.

தெளிவுரை : கட்டப்பட்ட வெவ்விய வில்லால் வானத்தில் இயங்கும் அரண்களை அழித்த வன் கண்மையை உடையவராயினும் அன்பு செய்பவருக்கு அருள் செய்பவராகிய திருப்பாச்சிலாச் சிராமத்தில் எழுந்தருளியிருக்கின்ற இறைவர் என்னளவில் வாது சொல்லி இரந்தாலும் அடியேனைப் புரக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை. என் செய்வேன்.

139. செடித்தவம் செய்வார் சென்றுழிச் செல்லேன்
தீவினை செற்றிடும் என்று
அடித்தவம் அல்லால் ஆரையும் அறியேன்
ஆவதும் அறிவர்எம் அடிகள்
படைத்தலைச் சூலம் பற்றிய கையர்
பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்
பிடித்தவெண் ணீறே பூசுவ தானால்
இவரலாது இல்லையோ பிரானார்.

தெளிவுரை : யான் நன்றல்லாத தவத்தைச் செய்வார் சென்ற வழியையும் மிதியேன். தமது திருவடித் தொண்டினையே மறவாது செய்து வருகிறேன். இதை எம்பெருமானாராகிய இவரும் அறிவர். அங்ஙன மிருக்க என்னைப் புரத்தற்கு சூலத்தை யேந்திய கையினராகிய திருப்பாச்சிலாச் சிராமத்தில் எழுந்தருளியிருக்கும் எம் இறையாகிய இவரது நிலைமை சாம்பலைப் பூசுவதே யாயினும். அடியேனைப் புரக்கும் தலைவர் இவரன்றி வேறு ஒருவர் இல்லை. என் செய்வேன்? நன்றல்லாத தவமாவது வினையையே முதலாக நினைத்து ஒழுகும் ஒழுக்கம்.

140. கையது கபாலம் காடுறை வாழ்க்கை
கட்டங்கம் ஏந்திய கையர்
மெய்யது புரிநூல் மிளிரும்புன் சடைமேல்
வெண்திங்கள் சூடிய விகிர்தர்
பையரவு அல்குல் பாவையர் ஆடும்
பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்
மெய்யரே ஒத்தோர் பொய்செய்வ தாகில்
இவரலாது இல்லையோ பிரானார்.

தெளிவுரை : கையில் தலை ஓட்டையும், காட்டு வாழ்க்கையையும் மழுவேந்திய கையையும், மார்பில் முப்புரிநூலையும் உடைய, சடையின் மேல் பிறையைச் சூடிய விகிர்தரும் மகளிர் ஆடலைப் புரியும் திருப்பாச்சிலாச் சிராமத்தில் கோயில் கொண்டிருக்கும் எம் கடவுளும் ஆகிய இவரது தன்மை முதலில் ஆட்கொண்டு, பிறகு பிறழ்ந்தாலும் அடியேனைப் புரக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை. என் செய்வேன்?

141. நிணம்படும் உடலை நிலைமையென்று ஓரேன்
நெஞ்சமே தஞ்சமென்று இருந்தேன்
கணம்படிந்து ஏத்திக் கங்குலும் பகலும்
கருத்தினால் கைதொழுது எழுவேன்
பணம்படும் அரவம் பற்றிய கையர்
பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்
பிணம்படு காட்டில் ஆடுவ தாகில்
இவரலாது இல்லையோ பிரானார்.

தெளிவுரை : அடியேன் இவ்வுடம்பை நிலைத்த தன்மையுடையது என்று நினையாமல் நெஞ்சம் இறைவனுக்கு உரியது என்றே துணிந்தேன். அல்லும் பகலும் அடியார் கூட்டத்தோடு சென்று அன்போடு வணங்குவேன். இப்படியிருக்கக் கையில் பாம்பையுடைய திருப்பாச்சிலாராமத்தில் எழுந்தருளியுள்ள எம் கடவுளரது தன்மை. சுடுகாட்டில் ஆடுவதாயினும் அடியேனைக் காக்கும் தலைவர் இவரன்றி வேறு ஒருவர் இல்லை. என் செய்வேன்!

142. குழைத்துவந்து ஓடிக் கூடுதி நெஞ்சே
குற்றேவல் நாள்தொறும் செய்வான்
இழைத்தநாள் கடவார் அன்பில ரேனும்
எம்பெரு மான்என்றுஎப் போதும்
அழைத்தவர்க்கு அருள்செய் பாச்சிலாச் சிராமத்து
அடிகள்தாம் யாதுசொன் னாலும்
பிழைத்தது பொறுத்தொன்று ஈகில ராகில்
இவரலாது இல்லையோ பிரானார்.

தெளிவுரை : நெஞ்சே ! நீ அன்பால் மனமுவந்து நாள் தோறும் குற்றேவல் செய்கின்றாய். எனினும் இயல்பில் அன்பில்லாத சிலர் சிவனே, சிவனே என்று கூப்பிடுவாராயின் அவருக்கு அருள் செய்பவராகிய திருப்பாச்சிலாச்சிராமத்தில் இருக்கின்ற பெருமானார். நீ யாது சொல்லி வேண்டினும் உன் பிழையைப் பொறுத்து உனக்கு ஒன்றையும் ஈகின்றிலர். என்றாலும் உன்னைக் காக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை. நீ என்ன செய்வாயோ!

143. துணிப்படும் உடையும் சுண்ணவெண் ணீறும்
தோற்றமும் சிந்தித்துக் காணில்
மணிப்படு கண்டனை வாயினாற் கூறி
மனத்தினால் தொண்டனேன் நினைவேன்
பணிப்படும் அரவம் பற்றிய கையர்
பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்
பிணிப்பட ஆண்டு பணிப்பில ராகில்
இவரலாது இல்லையோ பிரானார்.

தெளிவுரை : துண்டமாகிய உடையும், பூசிய வெண்ணீறும் உடைய இவரது பெருமையை உணர்ந்து, அவற்றைக் கண்டால் நீலகண்டப் பெருமானையே கண்டதாகவே மனத்தால் நினைத்து , வாயால் துதிப்பேன். பாம்பைக் கையில் உடையவராகிய திருப்பாச்சிலாச்சிராமத்தில் எழுந்தருளியுள்ள தெய்வமாகிய இவர், என்னை ஆட்கொண்டு ஒன்றையும் ஈயாராயினும் அடியேனைப் புரக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை. என் செய்வேன் !

144. ஒருமையே அல்லேன் எழுமையும் அடியேன்
அடியவர்க்கு அடியனும் ஆனேன்
உரிமையால் உரியேன் உள்ளமும் உருகும்
ஒண்மலர்ச் சேவடி காட்டாய்
அருமையாம் புகழார்க்கு அருள்செய்யும் பாச்சி
லாச்சிரா மத்தெம் அடிகள்
பெருமைகள் பேசிச் சிறுமைகள் செய்யில்
இவரலாது இல்லையோ பிரானார்.

தெளிவுரை : புகழுடையார்க்கு அருள் செய்பவராகிய திருப்பாச்சிலாச்சிராமத்தில் கோயில் கொண்டிருக்கிற எம் தெய்வமாகிய இவர்க்கு, யான் ஒரு பிறப்பில் மாத்திரம் அடியேன் அல்லேன். என்னை விற்கவும் ஒற்றி வைக்கவுமான எல்லா உரிமைகளுமாக இவர்க்கு நான் உரியவன் ஆயினேன். இவருடைய திருவடிகளே எனக்கு உறுதுணையாவதாக. இவர் முன்பு என்னைப் புகழ்ந்து இப்போது கைவிட்டாராயினும் அடியேனைப் புரக்கும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை. என் செய்வேன் !

145. ஏசின அல்ல இகழ்ந்தன அல்ல
எம்பெரு மான்என்றுஎப் போதும்
பாயின புகழான் பாச்சிலாச் சிராமத்து
அடிகளை அடிதொழப் பன்னாள்
வாயினாற் கூறி மனத்தினால் நினைவான்
வளவயல் நாவல் ஆரூரன்
பேசின பேச்சைப் பொறுக்கில ராகில்
இவரலாது இல்லையோ பிரானார்.

தெளிவுரை : பரவிய புகழை உடையவனும் திருப்பாச்சிலாச் சிராமத்தில் எழுந்தருளியிருக்கிற இறைவரை அடைந்து திருவடிகளை அடைய வழிபடுபவனுமாகிய, திருநாவலூரில் தோன்றிய நம்பியாரூரன் இவரைப் பேசிய பேச்சுகள் உண்மையில் ஏசினவும் அல்ல; இகழ்ந்தனவும் அல்ல. ஆதலின் இவர் அவைகளைப் பொறுத்துக் கொள்ளுதல் வேண்டும். அடியேனுக்கு இவரன்றி வேறு தலைவர் எவரும் இல்லை. என் செய்வேன் !

திருச்சிற்றம்பலம்

15. திருநாட்டியத்தான்குடி (அருள்மிகு ரத்தினபுரீஸ்வரர் திருக்கோயில், திருநாட்டியத்தான்குடி,திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

146. பூணாண் ஆவதோர் அரவங்கண்டு அஞ்சேன்
புறங்காட்டு ஆடல்கண்டு இகழேன்
பேணீர் ஆகிலும் பெருமையை உணர்வேன்
பிறவேன் ஆகிலும் மறவேன்
காணீர் ஆகிலும் காண்பன்என் மனத்தால்
கருதீர் ஆகிலும் கருதி
நானே லும்அடி பாடுதல் ஒழியேன்
நாட்டியத் தான்குடி நம்பீ.

தெளிவுரை : திருநாட்டியத்தான் குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியே, உனக்கு அணிகலமும் அரை நாணும் ஆகிய பாம்பாதல் கண்டு அஞ்சேன். நீ புறங்காட்டில் ஆடுதலைக் கண்டு இகழேன். நீ எனது சிறுமையை யுணர்ந்து என்னை விரும்பாவிடினும் நான் உனது பெருமையை உணர்ந்து உன்னை விரும்புவேன். இப்பிறவி நீங்கினும் உன்னை மறவேன். நீ என்னைப் புறக்கணித்தாலும் நான் உன்னைக் நான் உன்னைக் கண்ணாரக் காண்பேன். நீ எனக்கு அருள் செய்யாவிடினும் நான் உன்னைப் பாடுதலை விடமாட்டேன். இஃது என் அன்பிருந்தவாறு.

147. கச்சேர் பாம்பொன்று கட்டிநின்று இடுகாட்டு
எல்லியில் ஆடலைக் கவர்வன்
துச்சேன் என்மனம் புகுந்திருக் கின்றமை
சொல்லாய் திப்பிய மூர்த்தி
வைச்சே இடர்களைக் களைந்திட வல்ல
மணியே மாணிக்க வண்ணா
நச்சேன் ஒருவரை நான்உமை அல்லால்
நாட்டியத் தான்குடி நம்பீ.

தெளிவுரை : தெய்வத் திருமேனி உடையவனே ! துன்பங்களைச் செய்யவும் தீர்க்கவும் வல்லவனே ! மாணிக்கம் போன்ற நிறமுடையவனே! திருநாட்டியத் தான் குடியிலுள்ள நம்பியே! நான் உன்னையன்றி வேறு ஒருவரையும் விரும்பேன். பாம்பைக் கச்சாகக் கட்டிக்கொண்டு இடுகாட்டில் இரவில் ஆடுகின்ற உன் கோலத்தை என் மனத்தில் இருத்துவேன். இழிந்த என் மனத்தில் நீ குடிகொண்டிருக்கும் காரணத்தைக் கூறுவாய்.

148. அஞ்சா தேஉமக்கு ஆட்செய வல்லேன்
யாதினுக்கு ஆசைப் படுகேன்
பஞ்சேர் மெல்லடி மாமலை மங்கை
பங்கா என்பர மேட்டி
மஞ்சேர் வெண்மதி செஞ்சடை வைத்த
மணியே மாணிக்க வண்ணா
நஞ்சேர் கண்டா வெண்டலை ஏந்தீ
நாட்டியத் தான்குடி நம்பீ.

தெளிவுரை : மெல்லிய பாதங்களையுடைய மலை மகளாகிய உமையை ஒரு பாகத்தில் உடையவனே! எங்கள் பெருமானே! வெள்ளிய திங்களைச் செவ்விய சடையின்கண் உடையவனே. மாணிக்கம் போன்ற நிறமுடையவனே! நீலகண்டனே! தலை ஓட்டை ஏந்தியவனே. திருநாட்டியத்தான் குடியில் கோயில் கொண்டிருக்கும் நம்பியே. அஞ்சாமலே நான் உனக்குத் தொண்டு செய்வேன். நான் ஒன்றுக்கும் ஆசைப்படேன். என் அன்பிருந்தவாறு இது.

149. கல்லேன் அல்லேன் நின்புகழ் அடிமை
கல்லா தேபல கற்றேன்
நில்லேன் அல்லேன் நின்வழி நின்றார்
தம்முடை நீதியை நினைய
வல்லேன் அல்லேன் பொன்னடி பரவ
மாட்டேன் மறுமையை நினைய
நல்லேன் அல்லேன் நான்உமக்கு அல்லால்
நாட்டியத் தான்குடி நம்பீ.

தெளிவுரை : திருநாட்டியத்தான் குடியில் கோயில் கொண்டிருக்கும் நம்பியே ! நான் உன் புகழை அறிவேன். நீ உள் இருந்து உணர்த்த யாவற்றையும் கற்றேன். அதற்குத்தக நிற்கின்றேன். அவ்வாறு நின்றவர்களின் வரலாறுகளை அறிவேன். உனது பொன் போன்ற திருவடிகளைப் பரவுவேன். மறுமையின்பத்தைக் கருதேன். நான் உன் ஒருவனுக்கு மட்டுமே உறவினன். இதுவே என் அன்பிருந்தவாறு.

150. மட்டார் பூங்குழல் மலைமகள் கணவனைக்
கருதா தார்தமைக் கருதேன்
ஒட்டீ ராகிலும் ஓட்டுவன் அடியேன்
உம்அடி அடைந்தவர்க்கு அடிமை
பட்டே னாகிலும் பாடுதல் ஒழியேன்
பாடியும் நாடியும் அறிய
நட்டேன் ஆதலால் நான்மறக் கில்லேன்
நாட்டியத் தான்குடி நம்பீ.

தெளிவுரை : திருநாட்டியத்தான் குடியில் எழுந்தருளியிருக்கும் நம்பியே! மலைமகளுக்குக் கணவனாகிய உன்னை நினையாதவரை நான் நினையேன். நீ என்னை விட்டு விலகிச் சென்றாலும் நான் உனக்கு அடியனாய் உன்னுடன்தான் இருப்பேன். நான் உன் அடியார்க்கு அடியேன். உன்னைப் பாடிக் கொண்டேயிருப்பேன். உன்னோடு நட்பு கொண்டு, நான் உன்னை மறக்கமாட்டேன். என் அன்பு இருந்தவாறு இது.

151. படப்பாற் றன்மையில் நான்பட்ட தெல்லாம்
படுத்தாய் என்றல்லல் பறையேன்
குடப்பாச் சில்துறை கோக்குளிர் வானே
கோனே கூற்றுதைத் தானே
மடப்பால் தயிரொடு நெய்மகிழ்ந் தாடும்
மறையோதீ மங்கை பங்கா
நடப்பீ ராகிலும் நடப்பன்உம் அடிக்கே
நாட்டியத் தான்குடி நம்பீ.

தெளிவுரை : மேற்கிலுள்ள திருப்பாச்சிலாச் சிராமத்தில் கோயில் கொண்டிருக்கும் நீரைப் பொழிகின்ற குளிரணந்த மேகம் போன்றவனே ! யாவர்க்கும் தலைவனே. இயமனை உதைத்தவனே! அடியவர் அகங்களில் பால், தயிர், நெய் இவைகளை மகிழ்ச்சியோடு ஆடுகின்ற வேதத்தை ஓதுபவனே! உமையை ஒருபாகத்தில் உடையவனே! திருநாட்டியத் தான்குடியில் எழுந்தருளியிருக்கும் நம்பியே! ஊழினது தன்மையால் நான் பட்ட துன்பங்களை எல்லாம் நீ படுத்தினாய் என்று சொல்லி நான் முறையிட்டேன். நீ என்னை விட்டு நீங்குவாய் ஆயினும். நான் உன் திருவடியைப் பெறுதற்கே முயல்வேன். இஃது என் அருபிருந்தவாறு.

152. ஐவாய் அரவினை மதியுடன் வைத்த
அழகா அமரர்கள் தலைவா
எய்வான் வைத்ததோர் இலக்கினை அணைதர
நினைந்தேன் உள்ளம்உள் அளவும்
உய்வான் எண்ணிவந்து உம்அடி அடைந்தேன்
உகவீ ராகிலும் உகப்பன்
நைவான் அன்றுமக்கு ஆட்பட்டது அடியேன்
நாட்டியத் தான்குடி நம்பீ.

தெளிவுரை : ஐந்து வாய்களையுடைய கொடிய பாம்பைச் சந்திரனுடனே திருமுடியில் வைத்துள்ள அழகனே! தேவர்கள் தலைவனே ! எய்வதற்கு வைத்துள்ள ஒரு குறியை அடைவதற்கு நினைத்தேன். என் உள்ளத்தால் முடியுமளவும் கடைத்தேறக் கருதி வந்து உம்முடைய திருவடிகளை அடைந்தேன். நீர் என்னை விரும்பீராகிலும் நான் உம்மை விரும்பி வருவேன். மனக்கசிவால் அன்றோ உமக்கு அடியேன் ஆளானது! திருநாட்டியத்தான் குடியில் எழுந்தருளிய நம் பெருமானே.

153. கலியேன் மானுட வாழ்க்கைஒன் றாகக்
கருதிடில் கண்கணீர் பில்கும்
பலிதேர்ந்து உண்பதோர் பண்புகண்டு இகழேன்
பசுவே ஏறிலும் பழியேன்
வலியே யாகிலும் வணங்குதல் ஒழியேன்
மாட்டேன் மறுமையை நினையேன்
நலியேன் ஒருவரை நானுமை அல்லால்
நாட்டியத் தான்குடி நம்பீ.

தெளிவுரை : திருநாட்டியத்தான்குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியே ! யான் இம்மானுட வாழ்க்கையை ஒரு பொருளாக நினைத்துச் செருக்கேன். இதன் நிலையாமையை நினைத்தால் கண்களில் நீர் பெருகும். ஆதலின் பிச்சை எடுத்து உண்ணும் உனது இயல்பைக் கண்டு அது பற்றி உன்னை இகழேன். நீ எருதையே ஏறினாலும் அதுபற்றி உன்னைப் பழியேன். உன்னை வணங்குதலைத் தவிரேன். மறுமை இன்பத்தையும் நினைக்கமாட்டேன். உன்னையன்றி வேறொருவரை நீங்காமல் நின்று யாசிக்கமாட்டேன். இஃது என் அன்பிருந்தவாறு.

154. குண்டா டிச்சமண் சாக்கியப் பேய்கள்
கொண்டார் ஆகிலும் கொள்ளக்
கண்டா லும்கரு தேன்எருது ஏறும்
கண்ணா நின்னலது அறியேன்
தொண்டா டித்தொழு வார்தொழக் கண்டு
தொழுதேன் என்வினை போக
நண்டா டும்வயல் தண்டலை வேலி
நாட்டியத் தான்குடி நம்பீ.

தெளிவுரை : எருதினை ஏறுகின்ற எனக்குக் கண்போலச் சிறந்தவனே! நண்டுகள் விளையாடும் வயல்களையும் சோலை வேலியையும் உடைய திருநாட்டியத்தான் குடியிலுள்ள நம்பியே! சமணரும், சாக்கியரும் மூர்க்கமாய்த் தாங்கள் பிடித்தது சாதித்தார் என்பது கேள்வியால் அறியப்பட்டாலும் அதை நான் ஒரு பொருளாக நினையேன். உன்னையன்றி வேறு கடவுளை நான் அறியேன். அடியார்கள் தொழுவதைக் கண்டு நான் தொழத் தொடங்கினேன். இஃது என் அன்பிருந்தவாறு.

155. கூடா மன்னரைக் கூட்டத்து வென்ற
கொடிறன் கோட்புலி சென்னி
நாடார் தொல்புகழ் நாட்டியத் தான்குடி
நம்பியை நாளும் மறவாச்
சேடார் பூங்குழற் சிங்கடி யப்பன்
திருவா ரூரன் உரைத்த
பாடீ ராகிலும் பாடுமின் தொண்டீர்
பாடநும் பாவம்பற்று அறுமே.

தெளிவுரை : கோட்புலி நாயனார்க்கு இடமாகியதும் சோழ நாட்டில் உள்ளதும் பழைமையான புகழை உடையதுமான திருநாட்டியத்தான் குடியில் கோயில் கொண்டுள்ள நம்பியை ஒரு நாளும் மறவாத சிங்கடி என்பவளுக்குத் தந்தையாகிய திருவுடைய நம்பியாரூரன் பாடிய பாடல்களைப் பாடுங்கள். பாடின் உங்கள் பாவங்கள் யாவும் பற்றாது ஒழியும்.

திருச்சிற்றம்பலம்

16. திருக்கலயநல்லூர் (அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், சாக்கோட்டை,தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

156. குரும்பைமுலை மலர்க்குழலி கொண்டதவம் கண்டு
குறிப்பினொடும் சென்றவள்தன் குணத்தினைநன்கறிந்து
விரும்புவரங் கொடுத்தவளை வேட்டருளிச் செய்த
விண்ணவர்கோன் கண்ணுதலோன் மேவிய ஊர் வினவில்
அரும்பருகே சுரும்பருவ அறுபதம்பண் பாட
அணிமயில்கள் நடமாடும் அணிபொழில் சூழ் அயலின்
கரும்பருகே கருங்குவளை கண்வளருங் கழனிக்
கமலங்கள் முகமலரும் கலயநல்லூர் காணே.

தெளிவுரை : உமையம்மை தவம் மேற்கொண்டிருத்தலை அறிந்து, அவளை மணக்கும் குறிப்போடு அங்குச் சென்று, அவளது அன்பினை ஆய்ந்தறிந்து, அவள் விரும்பிய வரத்தைக் கொடுத்து, அவளை மணம் செய்தருளிய தேவர் தலைவனும் நெற்றிக் கண்ணையுடையவனும் ஆகிய இறைவனது ஊர்யாது? என்று வினவின் மயில்கள் நடனமாடுகின்ற சோலைகளும் தாமரைகள் மலரும் வயல்களும் நிறைந்த திருக்கலய நல்லூரே.

157. செருமேவு சலந்தரனைப் பிளந்தசுடர் ஆழி
செல்கண் மலர் பங்கயமாச் சிறந்தானுக்கு அருளி
இருள்மேவும் அந்தகன்மேல் திரிசூலம் பாய்ச்சி
இந்திரனைத் தோள்முரித்த இறையவன் ஊர் வினவில்
பெருமேதை மறையொலியும் பேரிமுழவு ஒலியும்
பிள்ளையினம் துள்ளிவிளை யாட்டொலியும் பெருகக்
கருமேதி புனல்மண்டக் கயல்மண்டக் கமலம்
களிவண்டின் கணம் இரியும் கலய நல்லூர் காணே.

தெளிவுரை : (கண்மலர் தாமரையாகத் தோன்றிச் சிறக்கும் திருமாலுக்கு). சலந்தராசுரனைஅழித்த சக்கரத்தைத் அளித்து அந்தகாசுரன் மேல் கூர்மையான சூலத்தைப் பாய்ச்சி அழித்து, இந்திரனைத் தோள் முரித்த கடவுளது ஊர்யாது? என்று வினவின் வேத ஓசையும் வாத்தியங்களின் ஓசையும் சிறுவர்களின் விளையாட்டு டொலியும் நீர்வளமும் நிலவளமும் மிக்க திருக்கலய நல்லூரே. அறிக.

158. இண்டைமலர் கொண்டுமணல் இலிங்கமது இயற்றி
இனத்தாவின் பாலாட்ட இடறியதா தையைத்தாள்
துண்டமிடு சண்டியடி அண்டர்தொழுது ஏத்தத்
தொடர்ந்தவனைப் பணிகொண்ட விடங்கனது ஊர் வினவில்
மண்டபமும் கோபுரமும் மாளிகை சூளிகையும்
மறை ஒலியும் விழவொலியும் மறுகு நிறைவு எய்திக்
கண்டவர்கள் மனங்கவரும் புண்டரிகப் பொய்கைக்
காரிகையார் குழைந்தாடும் கலயநல்லூர் காணே.

தெளிவுரை : இண்டை மாலையும் விடுபூவும் திரட்டிக் கொண்டு சென்று மண்ணியாற்றில் மணல் இலிங்கத்தை அமைத்து, கூட்டமான பசுக்களின் பாலைக் கொணர்ந்து சொரிய, அதனைக் கண்டு வெகுண்டு, காலால் இடறிய தாதையைத் தாளை வெட்டிய சண்டேசுர நாயனாரது திருவடிகளைத் தேவர்களும் வணங்கும்படி அவரை ஆட்கொண்ட அழகனது ஊர்யாது? என்று வினவின் பல்லாற்றானும் சிறந்து விளங்குகின்ற திருக்கலய நல்லூரே. அறிக.

159. மலைமடந்தை விளையாடி வளையாடு கரத்தான்
மகிழ்ந்தவள்கண் புதைத்தலுமே வல்லிருளாய் எல்லா
உலகுடன்றான் மூடஇருள் ஓடும்வகை நெற்றி
ஒற்றைக்கண் படைந்துகந்த உத்தமனூர் வினவில்
அலை அடைந்த புனல்பெருகி யானைமருப்பு இடறி
அகிலொடுசந்து உந்திவரும் அரிசிலின்தென் கரைமேல்
கலையடைந்து கலிகடிஅந் தணர்ஓமப் புகையால்
கண முகில்போன்று அணி கிளருங் கலய நல்லூர் காணே.

தெளிவுரை : மலைமகள் விளையாட்டாக இறைவனது கண்களை மூடினமையால் உலகங்களை இருள் மூடிக் கொண்டது. அவ் இருள் நீங்க நெற்றியிடத்து ஒரு கண்ணைத் தோற்றுவித்து அருளிய அந்த மேலானவனது ஊர் யாது என்று வினவின், யானைத்தந்தம் மற்றும் அகில், சந்தனம் முதலிய மரங்களை இழுத்துக்கொண்டு வருகின்ற அரிசிலாற்றின் தென்கரையிலுள்ள திருக்கலய நல்லூரேயாகும். அங்கு அந்தணர் செய்யும் வேள்வியில் எழும் புளக மேகம் போல் காட்சியளிக்கும். (கலியை வாராமல் தடுக்க எரியோம்பினர் என்க.)

160. நிற்பானும் கமலத்தில் இருப்பானும் முதலா
நிறைந்தமரர் குறைந்திரப்ப நினைந்தருளி யவர்க்காய்
வெற்பார்வில் அரவுநாண் எரிஅம்பால் விரலார்
புரமூன்றும் எரிவித்த விகிர்தனூர் வினவில்
சொற்பால பொருட்பால சுருதி ஒரு நான்கும்
தோத்திரமும் பலசொல்லித் துதித்திறைதன் திறத்தே
கற்பாரும் கேட்பாரும் ஆய்எங்கும் நன்கார்
கலைபயில் அந்தணர் வாழுங் கலயநல்லூர் காணே.

தெளிவுரை : திருமாலும் பிரமனும் தேவர் பலரும் வந்து தம் குறைகளைக் கூற, அவர்பொருட்டு மலையாகிய வில்லும் பாம்பாகிய நாணும், தீயாகிய அம்புங் கொண்டு முப்புரங்களையும் எரித்தவனது ஊர் யாது என்று வினவின் வேதங்கள் நான்கையும் தோத்திரங்கள் பலவற்றையும் சொல்லித் துதிக்கும் அந்தணர்கள் வாழ்கின்ற திருக்கலய நல்லூரே.

161. பெற்றிணை ஒன்று அறியாத தக்கனது வேள்விப்
பெருந்தேவர் சிரந்தோள்பல் கரங்கள்பீடு அழியச்
செற்றுமதிக் கலைசிதையத் திருவிரலால் தேய்வித்துத்
அருள்பெருகு சிவபெருமான் சேர்தரும் ஊர் வினவில்
தெற்றுகொடி முல்லையொடு மல்லிகைசெண் பகமும்
திரைபொருது வருபுனல்சேர் அரிசிலின்தென் கரைமேல்
கற்றினம்நல் கரும்பின்முளை கறிகற்கக் கறவை
கமழ்கழுநீர் கவர்கழனிக் கலய நல்லூர் காணே.

தெளிவுரை : அறியாமை மிகுந்த தக்கனது வேள்வியில் கலந்து கொண்ட தேவர்களின் தலை, தோள், பல், கை, கண் என்னும் உறுப்புகளை அழித்துப் பிறகு அவர்களுக்குக் கருணை காட்டிய சிவபெருமான் சேர்ந்திருக்கும் ஊர் யாது என்று வினவின் அரிசிலாற்றின் தென் கரையில் உள்ளதும் நிலவளம் நீர்வளம் மிக்கதுமான திருக்கலய நல்லூரே என அறிக.

162. இலங்கையர் கோன் சிரம்பத்தோடு இருபதுதிண் தோளும்
இற்றலற ஒற்றைவிரல் வெற்பதன்மேல் ஊன்றி
நிலங்கிளர்நீர் நெருப்போடு காற்று ஆகாசம் ஆகி
நிற்பனவும் நடப்பனவாம் நின்மலன் ஊர் வினவில்
பலங்கள்பல திரைஉந்திப் பருமணிபொன் கொழித்துப்
பாதிரிசந்து அகிலினொடு கேதகையும் பருகிக்
கலங்குபுனல் அலம்பிவரும் அரிசிலின்தென் கரைமேல்
கயல்உகளும் வயல்புடைசூழ் கலய நல்லூர் காணே.

தெளிவுரை : இராவணன் தனது பத்துத் தலைகளும், இருபது தோள்களும் சிதைந்து அரற்றுமாறு ஒரு விரலைக் கயிலை மலையின் மேல் ஊன்றி, ஐம்பூதங்களாயும் அசையும் பொருள் அசையாப் பொருளாகியும் நிற்கின்ற தூயோனுடைய ஊர் எது? என்று வினவினால் தனது அலைகளால் பழங்கள், மாணிக்கங்கள், பொன் ஆகியவற்றையும் பல வகை மரங்களையும் ஆரவாரத்துடன் தள்ளிக் கொண்டு வருகின்ற அரிசிலாற்றின் தென்கரையில் உள்ள வயல்கள் சூழ்ந்த திருக்கலய நல்லூராகும்.

163. மாலயனும் காண்பரிய மால்எரியாய் நிமிர்ந்தோன்
வன்னிமதி சென்னிமிசை வைத்தவன் மொய்த் தெழுந்த
வேலைவிடம் உண்டமணி கண்டன்விடை ஊரும்
விமலன்உமை யவளோடு மேவியஊர் வினவில்
சோலைமலி குயில்கூவக் கோலமயில் ஆலச்
சுரும்பொடுவண் டிசைமுரலப் பசுங்களிசொல் துதிக்கக்
காலையிலும் மாலையிலும் கடவுள்அடி பணிந்து
கசிந்தமனத் தவர்பயிலும் கலயநல்லூர் காணே.

தெளிவுரை : திருமாலும் பிரமனும் அடி முடி தேடி அறியாத படி நெருப்பு உருவமாய் உயர்ந்து நின்றவனும், வன்னியும், பிறையும், சடையில் சூடியவனும், கடலில் தோன்றிய விடத்தை உண்டு நீலகண்டத்தை உடையவனும் இடபவாகனத்தை ஊர்பவனும் ஆகிய இறைவன் உமையோடு விரும்பியிருக்கின்ற ஊர் யாது என்று வினவினால் சோலைகள் சூழ்ந்ததும், காலை மாலை துதிசெய்கின்ற அடியார்கள் நிறைந்ததுமான திருக்கலய நல்லூரேயாம்.

164. பொரும்பலம துடையசுரன் தாரகனைப் பொருது
பொன்றுவித்த பொருளினைமுன் படைத்து கந்த புனிதன்
கரும்புவிலின் மலர்வாளிக் காமன் உடல் வேவக்
கனல் விழித்த கண்ணுதலோன் கருதும் ஊர் வினவில்
இரும்புனல்வெண் திரைபெருகி ஏலம் இல வங்கம்
இருகரையும் பொருதலைக்கும் அரிசிலின்தென் கரைமேல்
கரும்புனைவெண் முத்தரும்பிப் பொன்மலர்ந்து பவளக்
கவின்காட்டும் கடிபொழில் சூழ் கலயநல்லூர் காணே.

தெளிவுரை : தாரகாசுரனைப் போர் செய்து அழித்த முதல்வனாகிய முருகனை முன்பு படைத்து, அவனைத் தன் மகனாக ஏற்றுக் கொண்ட தூயவனும், கரும்பு வில்லையும், மலர் அம்புகளையும் உடைய மன்மதன் உடம்பு வெந்து அழியுமாறு செய்த நெற்றிக் கண்ணை உடையவனும் ஆகிய சிவபெருமானது ஊர் யாது என வினவின் பெருவெள்ளத்தோடு வந்து கரைகளில் மோதுகின்ற அரிசிலாற்றின் தென்கரையில் புன்னை மரங்களை யுடைய நறுமணச் சோலைகள் சூழ்ந்த திருக்கலய நல்லூராகும்.

165. தண் கமலம் பொய்கை புடை சூழ்ந்தழகார் தலத்தில்
தடங்கொள்பெருங் கோயில்தனில் தக்கவகை யாலே
வண்கமலத் தயன்முன்னாள் வழிபாடு செய்ய
மகிழ்ந்தருளி இருந்தபரன் மருவிய ஊர் வினவில்
வெண்கவரி கரும்பீலி வேங்கையொடு கோங்கின்
விரைமலரும் விரவுபுனல் அரிசிலின்தென் கரைமேல்
கண்கமுகின் பூம்பாளை மதுவாசங் கலந்த
கமழ்தென்றல் புகுந்துலவு கலயநல்லூர் காணே.

தெளிவுரை : திருக்குளத்தையுடைய இப்பெருங் கோயிலின் கண் முறைப்படி பிரமதேவன் முற்காலத்தில் வழிபாடு செய்ய, அதற்கு மகிழ்ச்சி யுற்றிருந்த சிவபெருமான் எழுந்தருளியுள்ள ஊர் யாது? என்று வினவின் பல வளங்களையும் கொழித்துக் கொண்டு வருகின்ற அரிசிலாற்றின் தென்கரையில் மணம் வீசும் தென்றல் காற்றுப் புகுந்து உலாவுகின்ற திருக்கலய நல்லூரேயாம்.

166. தண்புனலும் வெண்மதியும் தாங்கியசெஞ் சடையன்
தாமரையோன் தலைகலனாக் காமரமுன் பாடி
உண்பலிகொண்டு உழல்பரமன் உறையூர் ஊர் நின்ற நீர்
ஒழுகுபுனல் அரிசிலின்தென் கலயநல்லூர் அதனை
நண்புடைய நன்சடையன் இசைஞானி சிறுவன்
நாவலர்கோன் ஆரூரன் நாவின் நயந்து உரைசெய்
பண்பயிலும் பத்தும்இவை பத்திசெய்து பாட
வல்லவர்கள் அல்லலொடு பாவம்இலர் தாமே.

தெளிவுரை : குளிர்ந்த நீரையும் வெள்ளிய திங்களையும் தாங்கிய சடையை உடையவனும் பிரமதேவனது தலைஓட்டைப் பாத்திரமாக ஏந்தி, முன்னதாக இசையைப் பாடிக் கொண்டு உண்ணுகின்ற பிச்சைப் பொருளை ஏற்றுத் திரிகின்ற மேன்மையை உடையவனும் ஆகிய சிவபெருமான் கோயில் கொண்டுள்ள திருக்கலய நல்லூரை, நல்லோராகிய சடையன் இசைஞானி என்பவர்களுக்கு மகனும் திருநாவலூருக்குத் தலைவனும் ஆகிய நம்பியாரூரன் விரும்பிப் பாடிய இந்த இசைப்பாடல்கள் பத்தையும் அத்தவப் பெருமானிடத்து அன்பு செய்து நாள்தோறும் பாட வல்லவர்கள் துன்பமும் பாவமும் இலராவர்.

திருச்சிற்றம்பலம்

17. திருநாவலூர் (அருள்மிகு பக்தஜனேஸ்வரர் திருக்கோயில், திருநாவலூர், விழுப்புரம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

167. கோவலன் நான்முகன் வானர்
கோனும் குற்றேவல் செய்ய
மேவலர் முப்புரம் தீயெழு
வித்த வன்ஓர் அம்பினால்
ஏவல னார்வெண்ணெய் நல்லூரில்
வைத்தனை ஆளுங் கொண்ட
நாவல னார்க்கிடம் ஆவது
நந்திரு நாவ லூரே.

தெளிவுரை : ஓர் அம்பினால் பகைவரது திரிபுரத்தில் தீ எழுமாறு செய்தவரும் அதனால் அம்பு எய்தலில் வல்லவர் எனப்புகழ் பெற்றவரும், என்னைத் திருவெண்ணெய் நல்லூரில் கொண்டு போய் நிறுத்தி அடிமை கொண்ட இறைவற்கு திருமால், பிரமன், இந்திரன் என்னும் இவரும் வந்து சிறிய பணிவிடைகளைச் செய்யுமாறு இடமாய் இருப்பது நமது திருநாவலூரேயாகும்.

168. தன்மை யினால்அடி யேனைத்தாம்
ஆட்கொண்ட நாட்சபைமுன்
வன்மைகள் பேசிட வன்தொண்டன்
என்பதோர் வாழ்வுதந்தார்
புன்மைகள் பேசவும் பொன்னைத்தந்து
என்னைப் போகம்புணர்ந்த
நன்மையி னார்க்கிடம் ஆனது
நம்திரு நாவலூரே.

தெளிவுரை : பேரருள் உடைமையால் என் பிழையைத் திருவுளம்கொள்ளாமல், வேண்டும் என்றே என்னை ஆட்கொள்ள வந்த அந்நாளில், பலர் கூடியிருந்த சபையில் என் பேதைமையால் நான் கூறிய வசைச் சொற்களை மகிழ்ந்தேற்று, எனக்கு வன் தொண்டன் என்ற பதவியைத் தந்தவரும், பின்னரும் நான் பாடிய வசைப்பாடல்களைக் கேட்டு மகிழ்ந்து எனக்கு வேண்டுமளவு பொன்னைக் கொடுத்து, போகத்தை எய்துவித்த நன்றிச் செயலை உடையவரும் ஆகிய இறைவர்க்கு இடமாய் இருப்பது நமது திருநாவலூரேயாகும்.

169. வேகங்கொண்டு ஓடிய வெள்விடை
ஏறியோர் மெல்லியலை
ஆகங்கொண் டார்வெண்ணெய் நல்லூரில்
வைத்தெனை ஆளுங்கொண்டார்
போகங்கொண் டார்கடற் கோடியின்
மோடியைப் பூண்பதாக
நாகங்கொண் டார்க்கிடம் ஆவது
நந்திரு நாவலூரே

தெளிவுரை : விரைந்து செல்லும் வெள்ளை எருதை ஊர்பவரும் உமையம்மையை ஆகத்தில் கொண்டவரும் என்னைத் திருவெண்ணெய் நல்லூரில் அடிமை கொண்டவரும் கொற்றவையைக் கூடி இன்பம் கொண்டவரும் பாம்பை அணிகலமாகக் கொண்டவரும் ஆகிய இறைவர்க்கு இடமாய் இருப்பது நமது திருநாவலூரேயாகும்.

170. அஞ்சும் கொண்டு ஆடுவர் ஆவினிற்
கேவினை ஆட்சி கொண்டார்
தஞ்சம்கொண் டார்அடிச் சண்டியைத்
தாமென வைத்துகந்தார்
நெஞ்சம்கொண் டார்வெண்ணெய் நல்லூரில்
வைத்தெனை ஆளுங்கொண்டு
நஞ்சம்கொண் டார்க்கிடம் ஆவது
நந்திரு நாவலூரே.

தெளிவுரை : பஞ்ச கவ்வியத்தில் ஆடுதல் செய்பவரும் உயிர்களை அடிமைகளாக உடையவரும் சண்டேசுரநாயனாரை அடைக்கலப் பொருளாகக் கொண்டு அவரைத் தம்மோடு ஒப்ப வைத்து மகிழ்ந்தவரும் என்னைத் திருவெண்ணெய் நல்லூரில் அடிமையாகக் கொண்டு என் நெஞ்சை ஆட்கொண்டவருமாகிய இறைவற்கு இடமாய் இருப்பது நமது திருநாவலூரேயாகும்.

171. உம்பரார் கோனைத்திண் தோள்முரித்
தார்உரித்தார் களிற்றைச்
செம்பொனார் தீவண்ணர் தூவண்ண
நீற்றர்ஓர் ஆவணத்தால்
எம்பிரா னார்வெண்ணெய் நல்லூரில்
வைத்தெனை ஆளுங்கொண்ட
நம்பிரா னார்க்கிடம் ஆவது
நந்திரு நாவலூரே

தெளிவுரை : இந்திரனைத் தோள்முரித்தவரும், யானையை உரித்தவரும் செம்பொன்னையும் நெருப்பையும் போன்ற நிறத்தையுடையவரும் வெண்ணீற்றை யணிந்தவரும் என்போன்ற அடியவர்கட்குத் தலைவரும், திருவெண்ணெய் நல்லூரில் ஓர் ஆவணத்தைக் காட்டி என்னை அடிமை கொண்டவரும் நம் அனைவர்க்கும் தலைவருமாகிய இறைவருக்கு இடமாயிருப்பது நமது திருநாவலூரேயாகும்.

172. கோட்டங்கொண் டார்குட மூக்கிலும்
கோவலும் கோத்திட்டையும்
வேட்டங்கொண் டார்வெண்ணெய் நல்லூரில்
வைத்தெனை ஆளுங்கொண்டார்
ஆட்டங்கொண் டார்தில்லைச் சிற்றம்
பலத்தே அருக்கனை முன்
நாட்டங்கொண் டார்க்கிடம் ஆவது
நந்திரு நாவலூரே

தெளிவுரை : கும்பகோணம், திருக்கோவலூர், திருப்பரங்குன்றம் ஆகிய தலங்களைக் கோயிலாகக் கொண்டவரும், வேட உருவங்கொண்டு வேட்டையை மேற்கொண்டவரும் என்னைத் திருவெண்ணெய் நல்லூரில் அடிமை கொண்டவரும், தில்லையில் நடனத்தை மேற்கொண்டவரும் சூரியனைக் கண் பறித்தவரும் ஆகிய இறைவர்க்கு இடமாய் இருப்பது நமது திரு நாவலூரேயாகும்.

173. தாயவ ளாய்த்தந்தை ஆகிச்
சாதல் பிறத்தலின்றிப்
போயக லாமைத்தன் பொன்னடிக்
கென்னைப் பொருந்தவைத்த
வேயவ னார்வெண்ணெய் நல்லூரில்
வைத்தெனை ஆளுங்கொண்ட
நாயக னார்க்கிடம் ஆவது
நந்திரு நாவலூரே

தெளிவுரை : எனக்குத் தாயாகி, தந்தையும் ஆகிச் சாதலும் பிறத்தலும் இல்லாமல் நான் விலகிப் போகாதபடி தனது அழகிய திருவடியில் என்னைப் பொருந்தச் செய்தவரும், மூங்கிலில் இருப்பவரும் திருவெண்ணெய் நல்லூரில் என்னை அடிமை கொண்ட வருமான தலைவர்க்கு உகந்த இடமாக இருப்பது நமது திருநாவலூரே.

174. வாயாடி மாமறை ஓதிஓர்
வேதியன் ஆகிவந்து
தீயாடி யார்சினக் கேழலின்
பின்சென்றோர் வேடுவனாய்
வேயாடி யார்வெண்ணெய் நல்லூரில்
வைத்தெனை ஆளுங்கொண்ட
நாயாடி யார்க்கிடம் ஆவது
நந்திரு நாவலூரே.

தெளிவுரை : தீயில் நின்று ஆடுபவரும், சினம் பொருந்திய ஒரு பன்றியின் பின் வேடுவராய்ச் சென்று வில் தொழிலைப் புரிந்தவரும், பெருமை பொருந்திய வேதத்தை ஓதிக் கொண்டு வேதிய வடிவில் வந்து சொல்லாடி என்னைத் திருவெண்ணெய் நல்லூரில் அடிமை கொண்டவரும் ஆகிய இறைவருக்கு இடமாயிருப்பது நமது திருநாவலூரே யாகும்.

175. படமாடு பாம்பணை யானுக்கும்
பாவை நல் லாள்தனக்கும்
வடமாடு மால்விடை ஏற்றுக்கும்
பாகனாய் வந்தொருநாள்
இடமாடி யார்வெண்ணெய் நல்லூரில்
வைத்தெனை ஆளுங்கொண்ட
நடமாடி யார்க்கிடம் ஆனது
நந்திரு நாவலூரே.

தெளிவுரை : பாம்பு படுக்கையையுடைய திருமாலுக்கும் உமாதேவிக்கும் ஆனேற்றுக்கும் பாகன் எனப்படும் தன்மையராய், ஒரு நாள் என்னிடம் வந்து திருவெண்ணெய் நல்லூரில் நிறுத்தி என்னை அடிமையாய்க் கொண்டவரும், நடனமாடும் பெருமானுமாகிய இறைவற்கு இடமாயிருப்பது நமது திருநாவலூராகும்.

176. பிடுக்குண்டென் றோடிஓர் வெற்பெடுத்
தான்வலியை நெரித்தார்
அடக்கங்கொண் டாவணங் காட்டி நல்
வெண்ணெயூர் ஆளுங் கொண்டார்
தடுக்கஒண் ணாததோர் வேழத்தி
னைஉரித் திட்டுமையை
நடுக்கங்கண் டார்க்கிடம், ஆவது
நந்திரு நாவலூரே.

தெளிவுரை : தனக்கு வலிமையுண்டு என்ற இறுமாப்புடன் தமது கயிலை மலையைப் பெயர்த்தவனாகிய இராவணனது வலிமையை நெரித்து அழித்தவரும், மூல ஆவணத்தை மறைவாக வைத்திருந்து அதனை நடுவு நிலையாளர் உள்ள திருவெண்ணெய்நல்லூரில் காட்டி என்னை அடிமை கொண்டவரும், வலிமையுள்ள யானையை உரித்து உமையையும் நடுங்கச் செய்தவருமாகிய இறைவற்கு இடமாயிருப்பது நமது திருநாவலூரேயாகும்.

177. நாதனுக் கூர்நமக் கூர்நர
சிங்க முனையரையன்
ஆதரித்து ஈசனுக்கு ஆட்செயும்
ஊர்அணி நாவலூரென்று
ஓதநற் றக்கவன் தொண்டன்
ஆரூரன் உரைத்ததமிழ்
காதலித் தும்கற்றும் கேட்பவர்
தம்வினைக் கட்டறுமே.

தெளிவுரை : முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானுக்குரிய ஊரும், தமக்குரிய ஊரும், நரசிங்கமுனையரையன் அப்பெருமானுக்கு விரும்பித் தொண்டு செய்யும் ஊரும் அழகிய திருநாவலூரே என்று அனைவரும் உணர்ந்து பாடுமாறு, நல்ல தகுதியை உடையவனும் வன்தொண்டன் என்னும் பெயரைப் பெற்றவனுமாகிய நம்பியாரூரன் பாடிய இத்தமிழ்ப் பாடலை விரும்பியும், கற்றும் கேட்பவரது வினைகள் வலியற்று ஒழியும்.

திருச்சிற்றம்பலம்

18. மூப்பதும் இல்லை

திருச்சிற்றம்பலம்

178. மூப்பதும் இல்லை பிறப்பதும்
இல்லை இறப்பதில்லை
சேர்ப்பது காட்டகத் தூரினு
மாகச்சிந் திக்கின் அல்லால்
காப்பது வேள்விக் குடிதண்
துருத்திஎங் கோண் அரைமேல்
ஆர்ப்பது நாகம் அறிந்தோமேல்
நாம் இவர்க்கு ஆட்படோமே.

தெளிவுரை : ஆராயுங்கால் எங்கள் தலைவர், பிறத்தலும் இல்லை. பின்பு வளர்ந்து முதுமை அடைவதும் இல்லை. முடிவில் இறப்பதும் இல்லை. உறைவிடம் காட்டிடத்துள்ளது. அதுவன்றி, ஊர்களுள் தமக்கு உரித்தாகக் காப்பது திருவேள்விக்குடியும், தண்ணிய திருத்துருத்தியும், அன்றியும் அரையில் இறுகக் காட்டுவது பாம்பு. இவற்றை முன்பே அறிந்தோமாயின் இவர்க்கு நாம் ஆட்படாதே யிருப்போம். இவற்றை அறிந்தோமாயின் இவர்க்கு நாம் ஆட்படாது ஒழிவேமோ!

179. கட்டக்காட் டில்நடம் ஆடுவர்
யாவர்க்கும் காட்சியொண்ணார்
சுட்டவெண் ணீறணிந்து ஆடுவர்
பாடுவர் தூயநெய்யால்
வட்டக்குண் டத்தில் எரிவளர்த்து
ஓம்பி மறைபயில்வார்
அட்டக்கொண்டு உண்பது அறிந்தோமேல்
நாம்இவர்க்கு ஆட்படோமே.

தெளிவுரை : எங்கள் தலைவர் இடரைத் தரும் காட்டில் நடனம் ஆடுவார். யாராலும் காண்பதற்கு அரியவர், வெண்ணீறு அணிந்து மகிழ்ச்சியாக ஆடல் பாடல்களைச் செய்வார், வேதம் பயிலும் அந்தணர்கள் யாக குண்டத்தில் தூயநெய்யினால் எரிவளர்த்துப் போற்றி, அதில் பாகம் செய்த பொருள்களை ஏற்று உண்பார், இவற்றையெல்லாம் நாம் அறிந்தால் இவர்க்கு ஆட்படோமே!

180. பேருமோர் ஆயிரம் பேருடை
யார்பெண்ணொடு ஆணும்அல்லர்
ஊருமது ஒற்றியூர் மற்றையூர்
பெற்றவர் நாம் அறியோம்
காருங் கருங்கடல் நஞ்சமுது
உண்டுகண்டம் கறுத்தார்க்கு
ஆரம்பாம்பு ஆவது அறிந்தோமேல்
நாம் இவர்க்கு ஆட்படோமே.

தெளிவுரை : எங்கள் தலைவர் ஆயிரம் பெயர் உடையவர். இவர் பெண்ணும் அல்லர்; ஆணும் அல்லர்; இவர்க்கு ஊரும் ஒற்றியூரே. அதுவன்றி வேறோர் ஊரை உடையராதலை நாம் அறியோம். கடலில் எழுந்த நஞ்சை உணவாக உண்டு கண்டம் கறுப்பாயினார். இவர்க்கு ஆரமாவது பாம்பே, இவற்றை யெல்லாம் அறிந்தோமாகில் நாம் இவர்க்கு ஆட்படோமே!

181. ஏனக்கொம் பும்இள ஆமையும்
பூண்டுஅங்கோர் ஏறும் ஏறிக்
கானக் காட் டில்தொண்டர் கண்டன
சொல்லியும் காமுறவே
மானைத் தோல்ஒன்றை உடுத்துப்
புலித்தோல் பியற்கும்இட்டு
யானைத்தோல் போர்ப்பது அறிந்தோமேல்
நாம் இவர்க்கு ஆட்படோமே.

தெளிவுரை : எங்கள் தலைவர் பன்றியின் கொம்பையும், இளமையான ஆமையின் ஓட்டையும் அணிந்து, ஒற்றை எருதின்மேல் ஏறுபவராய், தம்மை அடியார்கள் காட்டில் கண்ட கோலங்களை யெல்லாம் விவரமாகச் சொல்லிய பின்பும், விருப்பம் உண்டாக மான் தோலை அரையில் உடுத்து, தோளில் புலித்தோலை இட்டு, உடம்பின்மேல் யானைத் தோலைப் போர்த்துக் கொள்பவர். இவற்றை யெல்லாம் அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே.

182. ஊட்டிக் கொண்டு உண்பதோர் ஊணிலர்
ஊரிடு பிச்சை அல்லால்
பூட்டிக்கொண்டு ஏற்றினை ஏறுவர்
ஏறியோர் பூதம் தம்பால்
பாட்டிக் கொண்டு உண்பவர் பாழி
தொறும்பல பாம்புபற்றி
ஆட்டிக்கொண்டு உண்பது அறிதோமேல்
நாம் இவர்க்கு ஆட்படோமே.

தெளிவுரை : சுவையாக உண்பதற்கு. ஊரார் இடுகின்ற பிச்சையையன்றி வேறு உணவைப் பெற்றிலர். ஒற்றை எருதைக் கயிற்றிற் கட்டி வைத்துக் கொண்டு அதன் மேல் ஏறிச் செல்வர். சிறிய பூதங்கள் பாடுவதைக் கேட்டு இன்பம் கொள்வர். புற்றுகள்தோறும் சென்று பல பாம்புகளைப் பிடித்து ஆட்டிப் பிழைப்பர். இவற்றையெல்லாம் அறிந்தோமானால் நாம் இவர்க்கு ஆட்படோமே.

183. குறவனார் தம்மகள் தம்மக
னார் மண வாட்டி கொல்லை
மறவனா ராய் அங்கோர் பன்றிப்பின்
போவது மாயங் கண்டீர்
இறைவனார் ஆதியார் சோதிய
ராய் அங்கோர் சோர்வுபடா
அறவனார் ஆவது அறிந்தோமேல்
நாம் இவர்க்கு ஆட்படோமே.

தெளிவுரை : எங்கள் தலைவருடைய புதல்வருக்கு மனைவி, ஒரு குறவர் மகள். இவரும் கொல்லும் தொழிலையுடைய வேடுவராய் முன்பு ஒரு பன்றியின் பின் சென்றார். இவை மாயமாம். இவர் இப் பெற்றியரான இறைவரும், முனைவரும், ஒளி வடிவினரும், அறவரும் ஆவதை அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே!

184. பித்தரை ஒத்தொரு பெற்றியர்
நற்றவை என்னைப் பெற்ற
முற்றவை தம்மனை தந்தைக்கும்
தவ்வைக்கும் தம்பிரானார்
செத்தவர் தந்தலை யிற்பலி
கொள்வதே செல்வமாகில்
அத்தவம் ஆவது அறிந்தோமேல்
நாம் இவர்க்கு ஆட்படோமே.

தெளிவுரை : என்னைப் பெற்ற நற்றாயும், வயது முதிர்ந்த அவள் தாயும் இவ்விருவர்க்கும் அன்னை, தந்தை, தமக்கை என்பவரும் ஆகிய எல்லோர்க்கும் இறைவராய் உள்ள இவர் பித்தரைப் போன்ற ஒரு தன்மை உடையவராய் இருக்கின்றார். அன்றியும் இறந்தவர் தலையோட்டில் பிச்சை ஏற்பதே செல்வமாக உடையவராதலை அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்டோமே!

185. உம்பரான் ஊழியான் ஆழியான்
ஓங்கி மலர் உறைவான்
தம்பரம் அல்லவர் சிந்திப்
பவர்தடு மாற்றறுப்பார்
எம்பரம் அல்லவர் என்நெஞ்சத்
துள்ளும் இருப்பதாகில்
அம்பரம் ஆவது அறிந்தோமேல்
நாம் இவர்க்கு ஆட்படோமே.

தெளிவுரை : இந்திரன், உருத்திரன், மால், அயன் என்னும் இவர்கள் அளவில் உள்ளரல்லர் என்றும், தம்மை நினைப்பவரது மனக்கவலையைப் போக்குவர் எம்மள வல்லவர் என்றும் சொல்லப்படுகின்ற இவர், என் மனத்திலும் இருத்தல் உடையவராய் வேறு வெளியாதலை அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே!

186. இந்திர னுக்கும் இராவண
னுக்கும் அருள் புரிந்தார்
மந்திரம் ஓதுவர் மாமறை
பாடுவர் மான்மறியர்
சிந்துரக் கண்ணனும் நான்முக
னும்உட னாய்த்தனியே
அந்தரம் செல்வது அறிந்தோமேல்
நாம் இவர்க்கு ஆட்படோமே.

தெளிவுரை : எங்கள் தலைவர் தேவர் கோமானாகிய இந்திரனுக்கும், அரக்கர் கோமானாகிய இராவணனுக்கும் அருள் புரிந்தார். அந்தணர்க்குரிய மந்திரம் ஓதுதல் மறைபாடுதல் என்பவற்றையும் வேடர்க்குரிய மான்கன்றைப் பிடித்தலையும் உடையர். மால், அயன் என்னும் இருவரும் உடனாயிருப்ப, அவரோடு நிற்றலே யன்றி, தாம் மட்டும் தனியே உயர்ந்தும் செல்வர். இவற்றை யெல்லாம் அறிந்தோமானால் நாம் இவர்க்கு ஆட்படோமே!

187. கூடலர் மன்னன் குலநாவ
லூர்க்கோன் நலத்தமிழைப்
பாடவல் லபர மன்அடி
யார்க்கடி மைவழுவா
நாடவல் லதொண்டன் ஆரூரன்
ஆட்படு மாறுசொல்லிப்
பாடவல் லார்பர லோகத்து
இருப்பது பண்டமன்றே.

தெளிவுரை : பகைவர்க்கு அரசனும், மேன்மை பொருந்திய திருநாவலூர்க்குத் தலைவனும், நன்மையையுடைய தமிழைப் பாடவல்ல சிவனடியார்க்கு அடிமை வழுவாது செய்யம் ஆற்றால் அப்பெருமானை அடைய எண்ணுகின்றவனும் ஆகிய நம்பியாரூரன் தன் தலைவனுக்கு ஆட்படுதல் இவ்வாறெனச் சொல்லி இப் பதிகத்தைப் பாடவல்லவர் மேலான உலகத்தில் சென்று தங்குதல் பொருளன்று. (மிக எளிதாம்.)

திருச்சிற்றம்பலம்

19. திருநின்றியூர் (அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில், திருநின்றியூர், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

188. அற்றவ னார்அடி யார்தமக்கு
ஆயிழை பங்கினராம்
பற்றவ னார்எம் பராபரர்
என்று பலர்விரும்பும்
கொற்றவ னார்குறு காதவர்
ஊர்நெரு வெஞ்சரத்தால்
செற்றவ னார்க்கிடம் ஆவது
நம்திரு நின்றியூரே.

தெளிவுரை : தம் அடியவர்க்கு அருள் செய்வதையே செயலாகக் கொண்டவரும், பெண்ணொரு பாகத்தராக உடையவரும், எம் இறைவர் என்று பலராலும் விரும்பப்படுகின்ற தலைவரும், பகைவருடைய ஊரினைப் பெரிய கொடிய அம்பினால் அழித்தவரும் ஆகிய இறைவருக்கு இடமாய் நிற்பது நமது திருநின்றியூரே.

189. வாசத்தி னார்மலர்க் கொன்றையுள்
ளார்வடி வார்ந்தநீறு
பூசத்தி னார்புக லிந்நகர்
போற்றும்எம் புண்ணியத்தார்
நேசத்தி னால்என்னை ஆண்டுகொண்
டார்நெடு மாகடல்சூழ்
தேசத்தி னார்க்கிடம் ஆவது
நந்திரு நின்றியூரே.

தெளிவுரை : மணம் நிறைந்த கொன்றை மாலையை அணிந்தவரும், அழகிய திருநீற்றைப் பூசுதலை உடைய வரும், சீகாழிப் பதியை உறைவிடமாகக் கொண்டு பாதுகாக்கின்ற புண்ணிய வடிவினரும், அருள் காரணமாக என்னை ஆளாகவும் கொண்டவரும், இப்பெரிய கடல் சூழ்ந்த உலகத்தை உடையவரும் ஆகிய இறைவருக்கு இடமாய் நிற்பது நமது திருநின்றியூரே.

190. அங்கையின் மூவிலை வேலர்
அமரர் அடிபரவச்
சங்கையை நீங்க அருளித்
தடங்கடல் நஞ்சம் உண்டார்
மங்கையொர் பாகர் மகிழ்ந்த
இடம்வள மல்குபுனல்
செங்கயல் பாயும் வயல்பொலி
யும்திரு நின்றியூரே.

தெளிவுரை : அகங்கையில் மூவிலை வேலை உடையவரும், தேவர்கள் தம் திருவடிகளைத் துதிக்க அவர்களுடைய மனக் கலக்கம் நீங்குமாறு பெரிய கடலினின்று எழுந்த நஞ்சை உண்டவருமான இறைவர் உமாதேவியை ஒரு பாகத்தில் மகிழ்ச்சியுடன் வைத்து எழுந்தருளி யிருக்கிற இடம், நீர்வளம் நிலவளம் மிக்க திருநின்றியூரே.

191. ஆறுகந் தார் அங்கம் நான்மறை
யார் எங்கும் ஆகிஅடல்
ஏறுகந் தார் இசை ஏழுகந்
தார்முடிக் கங்கை தன்னை
வேறுகந் தார்விரி நூல்உகந்
தார்பரி சாந்த மதா
நீறுகந் தார்உறை யும் இட
மாம் திரு நின்றியூரே.

தெளிவுரை : வேதத்தின் ஆறு அங்கங்களை விரும்பிச் செய்தவரும், நான்கு வேதங்களையும் உடையவரும். எவ்விடத்தும் நிறைந்து நின்று, வெல்லுதலை யுடைய எருதை விரும்பி ஏறுபவரும், ஏழிசைகளையும் விரும்பிக் கேட்பவரும், கங்கா தேவியை விரும்பித் தலையில் மறைத்து வைத்திருப்பவரும், முப்புரி நூலை அணிபவரும், திருநீற்றைப் பூசிக் கொள்பவருமாகிய இறைவர் எழுந்தருளியிருக்கின்ற இடம் திருநின்றியூரே.

192. வஞ்சங்கொண் டார்மனம் சேரகில்
லார்நறு நெய்தயிர்பால்
அஞ்சங்கொண் டாடிய வேட்கையி
னால் அதி கைப் பதியே
தஞ்சங் கொண் டார்தமக் கென்றும்
இருக்கை சரண் அடைந்தார்
நெஞ்சங் கொண் டார்க்கிடம் ஆவது
நந்திரு நின்றியூரே.

தெளிவுரை : வஞ்சனையாளரது மனத்தில் சேராதவரும். நறுநெய், தயிர், பால் முதலிய ஆன் அஞ்சினில் முழுகுகின்ற பெருவிருப்புடையவரும், திருவதிகைப் பதியைத் தமக்கு என்றும் நிலையானதாகக் கொண்டவரும், தம்மை அடைக்கலமாகக் கொண்டவரது உள்ளத்தைக் கொள்ளை கொண்டவருமாகிய இறைவர்க்கு இடமாய் நிற்பது நமது திருநின்றியூரே.

193. ஆர்த்தவர் ஆடர வம்அரை
மேற்புலி ஈர்உரிவை
போர்த்தவர் ஆனையின் தோல்உடல்
வெம்புலால் கையகலப்
பார்த்தவர் இன்னுயிர் பார்படைத்
தான் சிரம் அஞ்சில் ஒன்றைச்
சேர்த்தவ ருக்குறை யும்இடம்
ஆம்திரு நின்றியூரே.

தெளிவுரை : அரையில் புலியினது பசுத்தோலையும். ஆடுகின்ற பாம்பையும் கட்டியவரும், உடம்பில் யானையின் தோலைப் போர்த்தவரும், அவற்றால் தம்மிடத்துத் தீய புலால் நாற்றம் வீசாதவாறு செய்து கொண்டவரும், படைக்கும் தொழிலையுடைய பிரம தேவனது ஐந்து தலைகளுள் ஒன்றைத் தம் கையில் வைத்துக் கொண்டவருமாகிய இறைவரது இருப்பிடம் திருநின்றியூரேயாகும்.

194. தலையிடை யார்பலி சென்றகந்
தோறும் திரிந்தசெல்வர்
மலையுடை யாள்ஒரு பாகம் வைத்
தார்கற் றுதைந்தநன்னீர்
அலையுடை யார்சடை எட்டும்
சுழல அருநடஞ்செய்
நிலையுடை யார்உறை யும்இட
மாம்திரு நின்றியூரே.

தெளிவுரை : தலை யோட்டைக் கையிலேந்தி பிச்சைக்குச் சென்று இல்லங்கள் தோறும் திரிகின்ற செல்வரும், உமையை ஒரு பாகத்தில் உடையவரும், மலையிலிருந்து வீழும் நல்ல நீரைச் சடையில் தாங்கி அரிய நடனத்தைச் செய்கின்றவருமாகிய இறைவர் கோயில் கொண்டிருக்கின்ற இடம் திருநின்றியூராகும்.

195. எட்டுகந் தார்திசை ஏழுகந்
தார்எழுத் தாறும் அன்பர்
இட்டுகந் தார்மலர்ப் பூசைஇச்
சிக்கும் இறைவர்முன்னாள்
பட்டுகும் பாரிடைக் காலனைக்
காய்ந்து பலியிரந்தூண்
சிட்டுகந் தார்க்கிடம் ஆவது
நந்திரு நின்றியூரே.

தெளிவுரை : திசைகள் எட்டையும், இசைகள் ஏழையும், அன்பர்கள் விரும்பிச் செய்யும் ஆறுகால பூசையையும் ஏற்று முன்பு கூற்றுவனை வெகுண்டமையோடு, பிச்சையேற்றுண்ணும் ஒழுக்கத்தையுடைய இறைவர்க்கு இடமாய் இருப்பது நமது திருநின்றியூரே.

196. காலமும் ஞாயிறும் ஆகிநின்
றார்கழல் பேணவல்லார்
சீலமும் செய்கையும் கண்டுகப்
பார்அடி போற்றிசைப்ப
மாலொடு நான்முகன் இந்திரன்
மந்திரத் தால்வணங்க
நீல நஞ் சுண்டவ ருக்கிட
மாந்திரு நின்றியூரே.

தெளிவுரை : காலமும், அதனைப் பகுக்கின்ற கதிரவனும் ஆகி நிற்பவரும், அடியார்களது நோன்பையும் செயல்களையும் கண்டு அவர்களை விரும்புகின்றவரும் நீலகண்டருமாகிய இறைவர்க்கு திருமால் பிரமன் இந்திரன் முதலியோர் மந்திரம் சொல்லி வணங்கவும் திருநின்றியூரே இடமாய் நிற்கும்.

197. வாயார் மனத்தால் நினைக்கும்
அவருக்கு அருந்தவத்தில்
தூயார் சுடுபொடி ஆடிய
மேனியர் வானில் என்றும்
மேயார் விடைஉகந் தேறிய
வித்தகர் பேர்ந்தவர்க்குச்
சேயார் அடியார்க்கு அணியவர்
ஊர்திரு நின்றியூரே.

தெளிவுரை : மனத்தால் இடைவிடாது நினைப்பவருக்கு உண்மைப் பொருளாகின்றவரும். அரிய தவக் கோலத்தையுடைய தூயவரும், வெந்த சாம்பலில் மூழ்கிய திருமேனியை உடையவரும், என்றும் பரவெளியில் இருப்பவரும், இடபத்தை விரும்பி ஏறுபவரும், தம்மை விரும்பாதவர்களை விட்டு விலகியிருப்பவருமாகிய இறைவரது ஊர் திருநின்றியூரே.

198. சேரும் புகழ்த்தொண்டர் செய்கை
அறாத்திரு நின்றியூரில்
சீரும் சிவகதி யாயிருந்
தானைத் திருநாவல் ஆ
ரூரன் உரைத்த உறுதமிழ்
பத்தும்வல் லார் வினைபோய்ப்
பாரும் விசும்பும் தொழப்பரே
மன்னடி கூடுவரே.

தெளிவுரை : அடியார்களது தொண்டு நீங்காது இருக்கின்ற திருநின்றியூரில் சிறந்த வீடு பேறாய் எழுந்தருளியிருக்கின்ற இறைவனைத் திருநாவலூர் நம்பியாரூரன் பாடிய பொருத்தமான தமிழ்ப் பாடல்கள் பத்தினையும் பாட வல்லவர், வினை நீங்கப் பெற்று மண்ணுலகத்தாரும் விண்ணகத்தாரும் வணங்கும்படி சிவபெருமானது திருவடியை அடைவார்கள்.

திருச்சிற்றம்பலம்

20. திருக்கோளிலி (அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

199. நீள நினைந்தடி யேன் உமை
நித்தலும் கைதொழுவேன்
வாளன கண்மடலாள் அவள்
வாடி வருந்தாமே
கோளிலி எம்பெருமான் குண்டை
யூர்ச்சில நெல்லுப் பெற்றேன்
ஆளிலை எம்பெருமான் அவை
அட்டித் தரப்பணியே.

தெளிவுரை : உமது அடியவனாகிய நான் உம்மை நெடுக நினைத்துத் தினந்தோறும் விடாமல் முறையாகத் தொழுவேன், ஆடவர் நெஞ்சை அறுத்தலின் வாள் போலும் கண்களை யுடையவளாகிய அப் பரவை பசியால் வாடி வருந்தா வண்ணம் திருக்கோளிலியில் எழுந்தருளிய எம்பெருமானே! குண்டையூரில் உமது அருளால் சிறிது நெல்லைப் பெற்றுள்ளேன். அதனைத் திருவாரூரில் கொண்டு சேர்க்க ஆள் இல்லை. எம்பெருமானே, அதனைக் கொண்டு போய்ச் சேர்க்கக் கட்டளையிட்டு அருளுவீராக. உமை  ஓர் அசையாய் கூன் பயின்று வருதல் இசைத் தமிழிற்கு இயல்பே. இனி வரும் பாடல்களிலும் இது தொடர்கிறது.

200. வண்டம ருள்குழலாள் உமை
நங்கையோர் பங்குடையாய்
விண்டவர் தம்புரமூன் றெரி
செய்தஎம் வேதியனே
தெண்திரை நீர்வயல்சூழ் திருக்
கோளிலி எம்பெருமான்
அண்டம தாயவனே அவை
அட்டித் தரப்பணியே.

தெளிவுரை : வண்டுகள் விரும்பும் கூந்தலையுடையவளாகிய உமை என்னும் நங்கையை ஒரு பாகத்தில் உடையவனே, பகைமை கொண்டவர்களது முப்புரத்தை எரித்த எங்கள் அந்தணனே! தெளிந்த அலைகளையுடைய நீரையுடைய வயல்கள் சூழ்ந்த திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே ! உலகெலாம் ஆகியவனே. அடியேன் சில நெற்களைக் குண்டையூரில் பெற்றேன். அவைகளை என் இல்லத்தில் சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை. ஆதலின், அவைகளை அங்குச் சேர்ப்பித்து உதவ, நீ எவர்க்கேனும் கட்டளையிட்டருள்க !

201. பாதியோர் பெண்ணைவைத்தாய் பட
ருஞ்சடைக் கங்கைவைத்தாய்
மாதர் நல் லார்வருத்தம் அது
நீயும் அறிதியன்றே
கோதில் பொழில் புடைசூழ் குண்டை
யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்
ஆதியே அற்புதனே அவை
அட்டித் தரப்பணியே.

தெளிவுரை : திருக்கோளிலியில் கோயில் கொண்டிருக்கும் எம்பெருமானே ! எல்லோர்க்கும் முன்னவனே. யாவர்க்கும் மருட்கையைத் தரத்தக்க செயல்களைச் செய்ய வல்லவனே ! உன் திருமேனியில் உமையை ஒரு பாகத்தில் வைத்தாய். சடையில் கங்கையை வைத்தாய். நீ மாதர்களின் வருத்தத்தை அறிவாய். அதனால் உன்னை வேண்டுகிறேன். அடியேன் சில நெல் மூட்டைகளைக் குண்டையூரில் பெற்றேன். அவைகளை என் இல்லத்தில் கொண்டு சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை. அவைகளை அங்குச் சேர்ப்பித்து உதவ நீ யாருக்காவது கட்டளையிட்டருள் வாயாக!

202. சொல்லுவ தன் உனைநான் தொண்டை
வாய்உமை நங்கையைநீ
புல்கி இடத்தில் வைத்தாய்க் கொரு
பூசல்செய் தார் உளரோ
கொல்லை வளம் புறவிற் குண்டை
யூர்ச்சில நெல்லும் பெற்றேன்
அல்லல் களைந்தடியேற்கு அவை
அட்டித் தரப்பணியே.

தெளிவுரை : திருக்கோளிலியில் கோயில் கொண்டிருக்கும் எம்பெருமானே ! நான் உனக்குச் சொல்லவேண்டுவது என்ன இருக்கிறது? முதலில் உமையை மணந்து இடப்பாகத்தில் வைத்தாய். உன்னை யாரும் தூற்றவில்லை. ஆதலால், என் இல்வாழ்க்கைக்கு வேண்டியதைச் செய்தாலும் யாரும் தூற்றமாட்டார்கள்  எனக்குச் சில நெற்களைக் குண்டையூரில் பெற்றேன். அதை என் இல்லத்திற்கு எடுத்துச் செல்ல ஆள் கிடைக்கவில்லை. அவற்றை அங்குச் சேர்த்து உதவ யார்க்கேனும் கட்டளையிடுவீராக.

203. முல்லை முறுவல்உமை ஒரு
பங்குடை முக்கணனே
பல்லுயிர் வெண்தலையிற் பலி
கொண்டுழல் பாசுபதா
கொல்லை வளம் புறவில் திருக்
கோளிலி எம்பெருமான்
அல்லல் களைந்தடியற்கு அவை
அட்டித் தரப்பணியே.

தெளிவுரை : உமையை ஒரு பாகத்தில் உடைய முக்கட் கடவுளே ! மண்டை யோட்டில் பிச்சை யேற்றுத் திரிகின்ற பாசுபத வேடத்தை யுடையவனே! கொல்லைவளமுள்ள திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே! அடியேன் சில நெற்களைக் குண்டையூரில் பெற்றேன். அவைகளை என் இல்லத்தில் கொண்டு சேர்ப்பிக்க ஆள் இல்லை. ஆகவே அடியேனது அத்துன்பத்தை நீக்கி, அவற்றை அங்குச் சேர்ப்பித்து உதவ வேண்டுகிறேன்.

204. குரவம ருங்குழலாள் உமை
நங்கைஓர் பங்குடையாய்
பரவை பசிவருத்தம் அது
நீயும் அறிதியன்றே
குரவம ரும் பொழில்சூழ் குண்டை
யூர்ச்சில நெல்லுப் பெற்றேன்
அரவம் அசைத்தவனே அவை
அட்டித் தரப்பணியே.

தெளிவுரை : குராமலர் பொருந்தியுள்ள கூந்தலையுடைய உமையை ஒரு பாகத்தில் உடையவனே ! பாம்பைக் கட்டியுள்ளவனே ! திருக்கோளிலி பெருமானே ! எல்லாவற்றையும் நீயே அறிபவன் ஆகலின், பரவையின் பசித்துன்பத்தையும் அறிவாய் அன்றோ? அவள் பொருட்டு அடியேன் சில நெற்களை நிலவளம் நீர்வளம் மிக்க குண்டையூரில் பெற்றேன். அவைகளை அவள்பால் சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை. அவற்றை அங்குச் சேர்ப்பித்து உதவ நீ யாருக்காகிலும் கட்டளையிடுவீராக.

205. எம்பெரு மான் நினையே நினைந்து
ஏத்துவன் எப்பொழுதும்
வம்பம ருங்குழலாள் ஒரு
பாகம் அமர்ந்தவனே
செம்பொனின் மாளிகைசூழ் திருக்
கோளிலி எம்பெருமான்
அன்பது வாயடியேற்கு அவை
அட்டித் தரப்பணியே.

தெளிவுரை : மணம் பொருந்திய கூந்தலையுடைய உமையவளை ஒரு பாகத்தில் விரும்பி வைத்துள்ளவனே ! செம்பொன் மாளிகைகள் நிறைந்த திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே ! அடியேன் சில நெற்களைக் குண்டையூரில் பெற்றேன். அவைகளை என் இல்லத்திற் சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை. உன்னையே நம்பியிருப்பவன் நான். அவற்றை அங்குச் சேர்த்து உதவ நீ ஆவன செய்வாயாக.

206. அரக்கன் முடிகரங்கள் அடர்த்
திட்டஎம் ஆதிப்பிரான்
பரக்கும் அரவல்குலாள் பர
வையவள் வாடுகின்றாள்
குரக்கினங் கள்குதிகொள் குண்டை
யூர்ச்சில நெல்லுப் பெற்றேன்
இரக்கம தாய் அடியேற்கு அவை
அட்டித் தரப்பணியே.

தெளிவுரை : இராவணனது தலைகளையும் கைகளையும் நெரித்திட்ட எங்கள் முதற்கடவுளே! திருக்கோளிலியில் கோயில் கொண்டிருக்கும் பெருமானே! என் இல்லாள் பரவை தன் வாழ்க்கையை நடத்த முடியாமல் வருந்துகின்றாள். அவள் பொருட்டு அடியேன் சில நெற்களைக் குண்டையூரில் பெற்றேன். அவைகளை அவள்பால் சேர்ப்பிக்க எனக்கு ஆள் வசதியில்லை. நீ இரக்கமுடையாய். அடியேன் பொருட்டு அவற்றை அங்குச் சேர்த்து உதவ வேண்டுகிறேன்.

207. பண்டைய மால்பிரமன் பறந்
தும்இடந் தும் அயர்ந்தும்
கண்டிலராம் அவர்கள் கழல்
காண்பரி தாய பிரான்
தெண்டிரை நீர்வயல்சூழ் திருக்
கோளிலி எம்பெருமான்
அண்டம துஆயவனே அவை
அட்டித் தரப்பணியே.

தெளிவுரை : முற்காலத்தில் உன் அளவைக் காணப்புகுந்த திருமால் ஏனமாய் மண்ணைத் தோண்டியும், பிரமன் அன்னமாய் விண்ணில் பறந்தும் அதனைக் காணாதவர்களாக ஆயினர். நீர்வளம் நிலவளம் மிக்க திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கும் பெருமானே. எல்லா உலகமும் ஆனவனே. அடியேன் சில நெற்களைக் குண்டையூரில் பெற்றேன். அவைகளை என் இல்லத்தில் சேர்க்க எனக்கு ஆள் இல்லை. அவைகளை அங்குக் கொண்டு சேர்க்க உதவுவீர்களாக.

208. கொல்லை வளம்புறவில் திருக்
கோளிலி மேயவனை
நல்லவர் தாம்பரவும் திரு
நாவல வூரன்அவன்
நெல்லிட ஆட்கள் வேண்டி நினைந்து
ஏத்திய பத்தும் வல்லார்
அல்லல் களைந்துலகின் அண்டர்
வானுலகு ஆள்பவரே.

தெளிவுரை : கொல்லையினது வளங்களையுடைய முல்லை நிலத்தையுடைய திருக்கோளிலியில் விரும்பியிருக்கின்ற பெருமானை நல்லவர்கள் துதிக்கின்ற திருநாவலூரான், தனக்கு நெல் எடுக்க ஆட்களைத் தருமாறு வேண்டிப் பாடிய இப்பத்துப் பாடல்களையும் பாட வல்லவர், இம்மையில் தங்கட்கு உள்ள இடர்களை நீக்கி, அம்மையிலும் தேவர்கட்கு மேலாய மேல் உலகத்தை ஆள்வார்கள்.

திருச்சிற்றம்பலம்

21. திருக்கச்சி மேற்றளி (அருள்மிகு திருமேற்றளிநாதர் திருக்கோயில், திருக்கச்சிமேற்றளி,  காஞ்சிபுரம்)

திருச்சிற்றம்பலம்

209. நொந்தா ஒண் சுடரே
நுனையே நினைந்திருந்தேன்
வந்தாய் போயறியாய்
மனமே புகுந்து நின்ற
சிந்தாய் எந்தை பிரான்
திருமேற் றளிஉறையும்
எந்தாய் உன்னை அல்லால்
இனி ஏத்த மாட்டேனே.

தெளிவுரை : இத்திருப்பதிகம் இறைவரைத் திருக்கச்சி மேற்றளியில் தரிசித்த ஞான்று மீதூர்ந்த அன்பின் பெருக்கால், அடியேன் உம்மையன்றிப் பிறரைப் புகழகில்லேன் என அருளிச் செய்தது.

அணையாத ஒளி பொருந்திய விளக்குப் போல்பவனே ! என் தந்தைக்கும் பெருமானே ! கச்சித் திருமேற்றளியில் எழுந்தருளியிருக்கின்ற என் தந்தையே. உன்னையே நினைத்திருந்த என் உள்ளத்தில் புகுந்து நின்ற சிந்தனைப் பொருளே. என் உள்ளத்தில் புகுந்த நீ பின் நீங்கியறியாய். ஆதலின், இனி அடியேன் உன்னையன்றிப் பிறரைப் புகழ மாட்டேன்.

210. ஆட்டான் பட்டமையால்
அடியார்க்குத் தொண்டுபட்டுக்
கேட்டேன் கேட்பதெல்லாம்
பிறவாமை கேட்டொழிந்தேன்
சேட்டார் மாளிகைசூழ்
திருமேற் றளி யுறையும்
மாட்டே உன்னை யல்லால்
மகிழ்ந்தேத்த மாட்டேனே.

தெளிவுரை : உனக்கு அடிமை ஆனமையால் அதன் பயனாய் உன் அடியார்கட்கும் அடிமைப்பட்டு, அடியார்களது தொண்டிற்காகவே பல பொருள்களையும் கேட்டேன். எனக்காக யான் உன்னை வேண்டிக் கேட்பது பிறவாமை ஒன்று மாத்திரமே என்னும்படியானேன். அழகு மிக்க மாளிகைகள் சூழப்பெற்ற திருமேற்றளியில் வாழும் என் செல்வமே, உன்னை யல்லாமல் வேறொன்றில் மகிழ்ச்சியடைந்து பிறரைப் புகழ மாட்டேன்.

211. மோறாந்து ஓர் ஒருகால்
நினையாது இருந்தாலும்
வேறாவந்து என்னுள்ளம்
புகவல்ல மெய்ப்பொருளே
சேறார் தண்கழனித்
திருமேற் றளியுறையும்
ஏறே உன்னையல்லால்
இனி ஏத்த மாட்டேனே.

தெளிவுரை : அடியேன் ஓர் ஒருகால் மயக்கம் உற்று உன்னை நினையாதிருப்பினும் நீ தானே வந்து என் உள்ளத்தில் புகுந்து நினைப்பிக்க வல்ல உண்மைப் பொருளானவனே. சேறு நிறைந்த குளிர்ந்த கழனிகளையுடைய கச்சித் திருமேற்றளியில் எழுந்தருளியிருக்கின்ற ஆண்சிங்கம் போல்பவனே. இனி, அடியேன் உன்னையன்றிப் பிறரைப் புகழ மாட்டேன்.

212. உற்றார் சுற்றமெனும்
அதுவிட்டு நுன்அடைந்தேன்
எற்றால் என்குறைஎன்
இடரைத் துறந்தொழிந்தேன்
செற்றாய் மும்மதிலும்
திருமேற் றளியுறையும்
பற்றே நுன்னை அல்லால்
பணிந்தேத்த மாட்டேனே.

தெளிவுரை : மூன்று மதில்களையும் அழித்தவனே, கச்சித் திருமேற்றளியில் உள்ள துணையானவனே. அடியேன் என்னோடு சுற்றத்தார் பலர் உளர் என்றும் நினைத்து அவர்கள் தொடர்பிலே பட்டு உய்ந்து போக முடியாமல் நிற்கின்ற அந்நிலையைத் துறந்து உன்னையே புகலிடமாக அடைந்தேன். அதனால், இப்போது எனக்கு எந்தக் குறையும் இல்லை. என் துன்பங்களை நீக்கிவிட்டேன். ஆதலால் இனி உன்னையன்றிப் பிறரைப் புகழ மாட்டேன்.

213. எம்மான் எம்மனையென்று
அவரிட்டு இறந்தொழிந்தார்
மெய்ம்மால் ஆயினதீர்த்து
அருள்செய்யும் மெய்ப்பொருளே
கைம்மா ஈருரியாய்
கனமேற் றளியுறையும்
பெம்மான் உன்னையல்லால்
பெரிதேத்த மாட்டேனே.

தெளிவுரை : உடம்பால் வருகின்ற மயக்கத்தை யெல்லாம் நீக்கி மெய்யுணர்வைத் தருகின்ற மெய்ப்பொருளே. யானையை உரித்த தோலை உடையவனே. கச்சித் திருமேற்றளியில் உள்ள பெரியோனே. என் தந்தையும் தாயும் என்னை இங்குத் தனியே விட்டு இறந்து போனார்கள். ஆகவே இனி உன்னை யன்றிப் பிறரை நான் பெரிய பொருளாக நினைத்துப் புகழ மாட்டேன்.

214. நானேல் உன்னடியே
நினைந்தேன் நினைதலுமே
ஊனேர் இவ்வுடலம்
புகுந்தாய்என் ஒண்சுடரே
தேனே இன்னமுதே
திருமேற் றளியுறையும்
கோனே உன்னை யல்லால்
குளிர்ந்தேத்த மாட்டேனே.

தெளிவுரை : எனது விளக்குப் போன்றவனே ! தேன் போன்றவனே ! இனிய அமுதம் போன்றவனே ! கச்சித் திருமேற்றளியில் உள்ள தலைவனே ! நான் உன் திருவடியை அடைய நினைத்தேன். அங்ஙனம் நினைத்த உடன் நீ என் உடலில் புகுந்து விட்டாய். ஆதலின். இத்தகைய பேரருளாளன் ஆகிய உன்னை யல்லது பிறரை அடியேன் புகழ மாட்டேன்.

215. கையார் வெஞ்சிலை நாண்
அதன்மேற் சரங்கோத்தே
எய்தாய் மும்மதிலும்
எரிஉண்ண எம்பெருமான்
செய்தாய் பைங்கமலத்
திருமேற் றளியுறையும்
ஐயா உன்னையல்லால்
அறிந்தேத்த மாட்டேனே.

தெளிவுரை : எம்பெருமானே ! வயலில் பசிய தாமரைகள் வளர்ந்துள்ள கச்சித் திருமேற்றளியில் உள்ள தலைவனே ! நீ உன் கையிலுள்ள கொடிய வில்லினது நாணின் மேல் அம்பைத் தொடுத்து மூன்று மதில்களையும் தீயுண்ணும்படி எரித்தாய். ஆதலின் உன்னை யன்றிப் பிறரைத் தேவராக எண்ணிப் புகழ மாட்டேன்.

216. விரையார் கொன்றையினாய்
விமலாஇனி உன்னை யல்லால்
உரையேன் ஆவதனால்
உடலில் உயிர் உள்ளளவும்
திரையள் தண்கழனித்
திருமேற் றளியுறையும்
அரையா உன்னையல்லால்
அறிந்தேத்த மாட்டேனே.

தெளிவுரை : நறுமணமுள்ள கொன்றை மாலையை அணிந்தவனே, தூயவனே ! நீர்வள மிக்க கழனிகளையுடைய கச்சித் திருமேற்றளியில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனே ! அடியேன் என் உடலில் உயிர் உள்ள வரையிலும் இனி உன்னையன்றிப் பிறரை, தேவர் என்று என் நாவினாற் சொல்லவும் மாட்டேன். உன்னையன்றிப் பிறரை உயர்ந்தவராக மதித்துப் புகழவும் மாட்டேன். இது திண்ணம்.

217. நிலையாய் நின்னடியே
நினைந்தேன் நினைதலுமே
தலைவா நின்னினையப்
பணித்தாய் சலமொழிந்தேன்
சிலையார் மாமதில் சூழ்
திருமேற் றளியுறையும்
மலையே உன்னையல்லால்
மகிழ்ந்தேத்த மாட்டேனே.

தெளிவுரை : சந்திர காந்தக் கற்கள் நிறைந்த பெரிய மதில் சூழ்ந்த கச்சித் திருமேற்றளியில் உள்ள மலை போன்றவனே. தலைவனே. அடியேன் உனது திருவடியையே நிலைத்த பொருளாக உணர்ந்தேன். அவ்வாறு உணர்ந்த அளவில் அவ்வாறே மாறாமல் என்றும் உன்னையே உணர்ந்து நிற்குமாறு எனக்கு உன் திருவருளைச் செய்தாய். அதனால் அடியேன் என் துன்பமெல்லாம் ஒழிந்தவன் ஆயினேன். ஆகவே இனி அடியேன் உன்னையன்றிப் பிறரை மனம் மகிழ்ந்து புகழ மாட்டேன்.

218. பாரூர் பல்லவனூர்
மதிற்காஞ்சி மாநகர்வாய்ச்
சீரூரும் புறவில்
திருமேற் றளிசிவனை
ஆரூ ரன்னடியான்
அடித்தொண்டன்ஆ ரூரன் சொன்ன
சீரூர் பாடல் வல்லார்
சிவலோகம் சேர்வாரே.

தெளிவுரை : நிலம் முழுவதும் ஆணை செல்கின்ற பல்லவனது அரசிருக்கை ஊராகிய மதிலையுடைய காஞ்சி மாநகரின்கண் சிறப்புப் பொருந்திய இடத்தில் விளங்கும் திருமேற்றளியிலுள்ள சிவபெருமானை, திருவாரூர்ப் பெருமானுக்கு அடியவனான அணுக்கத் தொண்டனாம் நம்பியாரூரன் பாடிய தாள அறுதி பொருந்திய இப் பாடல்களைப் பாட வல்லவர், சிவலோகத்தை அடைவார்கள்.

திருச்சிற்றம்பலம்

22. திருப்பழமண்ணிப் படிக்கரை (அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில், இலுப்பைபட்டு,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

219. முன்னவன் எங்கள் பிரான் முதல்
காண்பரி தாயபிரான்
சென்னியில் எங்கள்பிரான் திரு
நீல மிடற்றெம்பிரான்
மன்னிய எங்கள்பிரான் மறை
நான்குங்கல் லால் நிழற்கீழ்ப்
பன்னிய எங்கள்பிரான் பழ
மண்ணிப் படிக்கரையே.

தெளிவுரை : இத் திருப்பதிகம் இறைவரது பெருமையைப் பல்லாற்றானும் எடுத்துக் கூறி, அவர் எழுந்தருளியிருக்கும் இடமாகிய தலத்தைச் சிறப்பித்து அருளிச் செய்தது.

எல்லார்க்கும் முன்னே உள்ளவனும். தனக்கு முன்னுள்ள பொருள் இல்லாதவனும், யாவரினும் தலையாயவனும், அழகிய நீலகண்டத்தை உடையவனும் , என்றும் அழியாது நிலைபெற்றிருப்பவனும், நான்கு வேதங்களையும் கல்லால மர நிழலிலிருந்து சொல்லியவனுமாய், எங்கள் தலைவனுமாய் உள்ள இறைவன் எழுந்தருளியிருப்பது, திருப்பழ மண்ணிப் படிக்கரை என்னும் தலமே.

220. அண்டக பாலஞ்சென்னி அடி
மேல்அலர் இட்டுநல்ல
தொண்டங் கடிபரவித் தொழு
தேத்திநின் றாடும் இடம்
வெண்டிங்கள் வெண்மழுவன் விரை
யார்கதிர் மூவிலைய
பண்டங்கள் மேயவிடம் பழ
மண்ணிப் படிக்கரையே.

தெளிவுரை : திரண்ட தலையை அணிந்த முடியினையுடைய சிவபெருமானது திருவடிகளில் நல்ல அடியார்கள் மலர்களை இட்டு அவ்வடிகளை வணங்கி, முன்னிலையாகவும் படர்க்கையாகவும் துதித்து ஆடுகின்றதும், வெண்மையான பிறையை அணிந்தவனும் வெள்ளிய மழுவை ஏந்தியவனும் பகைவர்மேல் விரைதல் பொருந்திய ஒளியையுடைய மூவிலை வேலை (சூலத்தை) உடைய பண்டரங்கம் என்னும் கூத்தினை உடையவனும் ஆகிய அப்பெருமான், விரும்பி எழுந்தருளியிருக்கின்றதும் ஆகிய இடம் திருப்பழ மண்ணிப் படிக்கரை என்னும் தலமே.

221. ஆடுமின் அன்புடையீர் அடிக்கு
ஆட்பட்ட தூளிகொண்டு
சூடுமின் தொண்டருள்ளீர் உம
ரோடுஎமர் சூழவந்து
வாடும்இவ் வாழ்க்கைதன்னை வருந்
தாமல் திருந்தச்சென்று
பாடுமின் பத்தருள்ளீர் பழ
மண்ணிப் படிக்கரையே.

தெளிவுரை : பெருமானுடைய திருவடிகளில் அன்புடையவர்களே ! அத் திருவடிகளுக்கு ஆளான தொண்டருடைய பாத தூளியில் முழுகுங்கள். தொண்டராக உள்ளவர்களே ! உம்மைச் சார்ந்தவரோடு எம்மைச் சார்ந்தவரும் சூழ கோயிலுக்கு வந்து பெருமானுடைய திருவடிகளைத் தலையில் சூடிக் கொள்ளுங்கள். தலையால் வணங்குங்கள். உலக வாழ்க்கையிற் பற்றை வாடச் செய்யுங்கள். அவ் வாழ்க்கையில் உழன்று வருந்தாதபடி திருந்திய நிலையை அடையும் பொருட்டு, பக்தராய் உள்ளவர்களே ! திருப்பழ மண்ணிப் படிக்கரைக்குப் போய் பெருமானைப் பாடுங்கள்.

222. அடுதலை யேபுரிந்தான் அவை
அந்தர மூவெயிலும்
கெடுதலை யேபுரிந்தான் கிள
ருஞ்சிலை நாணியிற்கோல்
நடுதலை யேபுரிந்தான் நரி
கான்றிட்ட எச்சில்வெள்ளைப்
படுதலை யேபுரிந்தான் பழ
மண்ணிப் படிக்கரையே.

தெளிவுரை : உலகத் தொகுதியை அழித்தலை விரும்பினவனும் வானத்தில் திரிந்த மூன்று மதில்கள் கெட்டொழிதலை விரும்பி, வில் நாணியில் அம்பைப் பூட்டுதலை விரும்பினவனும், நரி உமிழ்ந்த எச்சிலாகிய, வெண்மையான அழிந்த தலையை விரும்பியவனும் ஆகிய இறைவன் எழுந்தருளியிருக்கும் இடம், திருப்பழ மண்ணிப் படிக்கரை என்னும் தலமே.

223. உங்கைக ளாற்கூப்பி உகந்
தேத்தித் தொழுமின்தொண்டீர்
மங்கையொர், கூறுடையான் வா
னோர்முத லாய பிரான்
அங்கையில் வெண்மழுவன் அலை
யார்கதிர் மூவிலைய
பங்கைய பாதனிடம் பழ
மண்ணிப் படிக்கரையே.

தெளிவுரை : தொண்டர்களே ! உமையை ஒரு கூற்றில் உடையவனும், தேவர்களுக்கு முதற்பொருளாய தலைவனும், அகங்கையில் வெள்ளிய மழுவை உடையவனும், கொல்லுதல் பொருந்திய ஒளியுடைய முத்தலை வேலை (சூலத்தை) ஏந்திய தாமரை மலர் போலும் பாதங்களையுடையவனும் ஆகிய இறைவனது இடமாகிய திருப்பழ மண்ணிப் படிக்கரையை விரும்பித் துதித்து, உங்கள் கைகளால் கூப்பித் தொழுங்கள்.

224. செடிபடத் தீவிளைத்தான் சிலை
யார்மதிற் செம்புனஞ்சேர்
கொடிபடு மூரிவெள்ளை எரு
தேற்றையும் ஏறக்கொண்டான்
கடியவன் காலன்தன்னை கறுத்
தான்கழற் செம்பவளப்
படியவன் பாசுபதன் பழ
மண்ணிப் படிக்கரையே.

தெளிவுரை : கற்கோட்டைகளில் தீயை எழுவித்தவனும், புனங்களில் மேயும் வலிய எருதை ஊர்தியாகக் கொண்டவனும், பாதத்தால் கொடிய காலனைக் காய்ந்தவனும், செவ்விய பவளம் போன்ற திருமேனியை உடையவனும், பாசுபத வேடத்தானும் ஆகிய இறைவன் எழுந்தருளியிருப்பது, திருப்பழ மண்ணிப் படிக்கரை என்னும் தலமே.

225. கடுத்தவன் தேர்கொண்டோடிக் கயி
லாயநன் மாமலையை
எடுத்தவன் ஈரைந்துவாய் அரக்
கன்முடி பத்தலற
விடுத்தவன் கைநரம்பால் வேத
கீதங்கள் பாடலுறப்
படுத்தவன் பால்வெண்ணீற்றன் பழ
மண்ணிப் படிக்கரையே.

தெளிவுரை : இராவணன் தேரைச் செலுத்திச் சென்ற போது அதைத் தடுத்த பெரிய மலையாகிய கைலாய மலையை எடுக்க முயன்றான். அவனது பத்து வாய்களும் பத்துத் தலைகளில் பொருந்தி அலறும்படி செய்தவனும், பின்பு அவன் கைநரம்பாகிய வீணையால் வேதத்தோடு கூடிய இசைகளைப் பாட அவனை நலத்திற் பொருந்தச் செய்தவனும், பால் போன்ற வெண்மையான திருநீற்றை அணிந்தவனும் ஆகிய இறைவன் எழுந்தருளியிருப்பது திருப்பழ மண்ணிப் படிக்கரை என்றும் தலமே.

226. திரிவன மும்மதிலும் எரித்
தான் இமை யோர்பெருமான்
அரியவன் அட்டபுட்பம் அவை
கொண்டடி போற்றி நல்ல
கரியவன் நான்முகனும் அடி
யும்முடி காண்பரிய
பரியவன் பாசுபதன் பழ
மண்ணிப் படிக்கரையே.

தெளிவுரை : இடம் பெயர்ந்து திரிவனவாகிய மதில்களை எரித்தவனும், தேவர்கட்குத் தலைவனும், அடைதற்கு அன்புடைய திருமாலும் பிரமனும் அஷ்ட புஷ்பங்களால் திருவடியில் அருச்சித்தும் அடியும் முடியும் காண மாட்டாத அளவிறந்தவனும், பாசுபத வேடத்தை உடையவனும் ஆகிய இறைவன் எழுந்தருளியிருப்பது திருப்பழ மண்ணிப் படிக்கரை என்னும் தலமே. அஷ்ட புஷ்பங்கள் வருமாறு: புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியாவர்த்தனம், பாதிரி, குவளை, அலரி, செந்தாமரை என்பன.

227. வெற்றரைக் கற்றமணும் விரை
யாதுவிண் டாலும் உண்ணும்
துற்றரைத் துற்றறுப்பான் துன்ன
ஆடைத் தொழிலுடையீர்
பெற்றரைப் பித்தரென்று கரு
தேன்மின் படிக்கரையுள்
பற்றரைப் பற்றிநின்று பழி
பாவங்கள் தீர்மின்களே.

தெளிவுரை : மிகுந்த புற்றுக்களை அறுத்தற் பொருட்டு உடை இல்லாத அரையினை உடையராதலைக் கற்ற சமணர் வேடத்தில் மனம் விரையாது நீங்கி, கீளொடு பிணைத்தலையுடைய கோவண ஆடையை அணிந்த தொண்டர்களே! நஞ்சை உண்ணும் உணவுடையவரும் எருதாகிய ஊர்தியை உடையவருமாகிய சிவ பெருமானாரை அது போல்வனவற்றை நோக்கிப் பித்தரென்று இகழ்ச்சியாக நினையாதீர்கள்; திருப் பழமண்ணிப் படிக்கரையுள் கோயில் கொண்டிருக்கும் அவரையே துணையாகப் பற்றி நின்று, பழிபாவங்களிலிருந்து நீங்குங்கள்.

228. பல்லுயிர் வாழுந்தெண்ணீர்ப் பழ
மண்ணிப் படிக்கரையை
அல்லியந் தாமரைத்தார் ஆ
ரூரன் உரைத்ததமிழ்
சொல்லுதல் கேட்டல்வல்லார் அவர்க்
குந்தமர்க் குங்கிளைக்கும்
எல்லியும் நண்பகலும் இடர்
கூருதல் இல்லையன்றே.

தெளிவுரை : பல உயிர்கள் வாழ்கின்ற தெளிந்த நீரையுடைய திருப்பழ மண்ணிப் படிக்கரை என்னும் தலத்தை அக இதழ்களை யுடைய தாமரை மாலையை அணிந்த நம்பியாரூரன் புகழ்ந்து சொன்ன இத்தமிழ்ப் பாடலை இரவிலும், நல்ல பகலிலும் சொல்லுதலும் கேட்டலும் வல்லரா நின்ற அத் தன்மையார்க்கும் அவரைச் சார்ந்து உற்றார்க்கும் அவ்வுற்றாரைப் பற்றி வரும் சுற்றத்தார்க்கும் துன்பம் மிகுதல் இல்லை. தாமரை மலர்மாலை அந்தணர்க்கு உரியது. மண்ணியாறு  வற்றாத யாறு என்பதாம்.

திருச்சிற்றம்பலம்

23. திருக்கழிப்பாலை (அருள்மிகு பால்வண்ணநாதர் திருக்கோயில், திருக்கழிப்பாலை, கடலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

229. செடியேன் தீவினையில்
தடுமாறக் கண்டாலும்
அடியான் ஆவஎனா
தொழிதல் தகவாமே
முடிமேல் மாமதியும்
அரவும் உடன்துயிலும்
வடிவே தாம் உடையார்
மகிழுங்கழிப் பாலையதே.

தெளிவுரை : இத் திருப்பதிகம் இறைவரைப் பல்வகையாலும் புகழ்ந்து அருளிச் செய்தது.

ஆ ! ஆ ! திருமுடியின்மேல் பெருமை பொருந்திய பிறையும் பாம்பும் பகையின்றி ஒருங்கு கூடித் துயில்கின்ற வடிவத்தை உடையவர். குணம் இல்லாதவனாகிய யான் தீவனையில் கிடந்து தடுமாறுவதை நேரே பார்த்தாலும் அந்தோ ! இவன் நம் அடியவன் என்று இரங்காமல் தாம் மகிழ்ந்து எழுந்தருளியுள்ள திருக்கழிப்பாலையில் வாளா இருத்தல் தகுதியோ !

230. எங்கே னும் இருந்துன்
அடியேன் உனை நினைந்தால்
அங்கே வந்தென்னொடும்
உடனாகி நின்றருளி
இங்கே என்வினையை
அறுத்திட் டெனையாளும்
கங்கா நாயகனே
கழிப்பாலை மேயோனே.

தெளிவுரை : உன் அடியவனாகிய நான் எந்த இடத்திலேனும் இருந்து கொண்டு உன்னை நினைத்தால், உடனே அவ்விடத்துக்கு வந்து என்னோடு கூடத் துணையாகி நின்று அருள் செய்து, இவ்வுலகத்தில் என்னுடைய கருமத் தொடர்பை வேரறுத்து என்னை ஆட்கொள்ளுகிற கங்கையின் தலைவனே ! திருக்கழிப் பாலையில் எழுந்தருளியவனே.

231. ஒறுத்தாய் நின்னருளில்
அடியேன் பிழைத்தனகள்
பொறுத்தாய் எத்தனையும்
நாயேனைப் பொருட்படுத்துச்
செறுத்தாய் வேலைவிடம்
மறியாமல் உண்டு கண்டம்
கறுத்தாய் தண் கழனிக்
கழிப்பாலை மேயானே.

தெளிவுரை : குளிர்ந்த கழனிகளையுடைய திருக்கழிப் பாலையில் விரும்பி எழுந்தருளியிருப்பவனே. உனது கருணையினால் ஒரு பிழைக்காக முன்பு என்னை ஒறுத்தாய். அதன் பின்னர் நான் செய்த பிழைகளைப் பொறுத்துக் கொண்டாய். தேவர்கள் இறவாது இருத்தற் பொருட்டுக் கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு கண்டத்தில் நிறுத்தினாய். அதனால் அவ்விடம் கரிதாயினாய். இவை உன் அருட் செயல்கள்.

232. சுரும்பார் விண்டமலர்
அவைதூவித் தூங்கு கண்ணீர்
அரும்பா நிற்குமனத்து
அடியாரொடும் அன்பு செய்வன்
விரும்பேன் உன்னையல்லால்
ஒருதெய்வம் என்மனத்தால்
கரும்பா ருங்கழனிக்
கழிப்பாலை மேயானே.

தெளிவுரை : கரும்புகள் நிறைந்த கழனிகளை யுடைய திருக்கழிப்பாலையில் விரும்பி எழுந்தருளியிருப்பவனே, வண்டுகள் ஒலிக்கின்ற மலரும் மலர்களைத் தூவி வழிபடும் அடியார்களோடு கூடி அடியேன் உனக்கு அன்பு செய்வேன். உன்னையன்றி வேறொரு தெய்வத்தை என் மனத்தாலும் விரும்பேன்.

233. ஒழிப்பாம் என்வினையை
உகப்பாய் முனிந்தருளித்
தெழிப்பாய் மோதுலிப்பாய்
விலை ஆ வணம் உடையாய்
கழிப்பால் கண்டு அடங்கச்
சுழியேந்து மாமறுகில்
கழப்பா ரைமருவும்
கனல்ஏந்து கையானே.

தெளிவுரை : திருக்கழிப்பாலையில் கோயில் கொண்டிருக்கின்ற தீயேந்திய கையினையுடையவனே. நீ என்னை உரியவனாக்கிக் கொண்ட விலை பத்திரத்தை உடையை ஆகலின் என்னை விரும்பி ஏற்று அளவளாவுவாய் பின் என் விளையை நீக்கி என்னை இன்புறச் செய்வாய். அன்றி என்னை இகழ்ந்து தண்டிக்கவும் செய்வாய். உன்னை இவ்வாறு செய்க என்று கட்டளை யிடுபவர் யார்?

234. ஆர்த்தாய் ஆடரவை
அரையார் புலியதன்மேல்
போர்த்தாய் ஆனையின்தோல்
உரிவை புலால் நாறக்
காத்தாய் தொண்டு செய்வார்
வினைகள் அவை போகப்
பார்த்தாய் நுற்கிடமாம்
பழியில் கழிப் பாலையதே.

தெளிவுரை : அரையில் பொருந்திய புலித்தோலின் மேல் ஆடுகின்ற பாம்பைக் கட்டியவனே. யானையின் தோலைப் புலால் நாற்றம் வீசும்படி போர்த்துக் கொண்டவனே. உனக்குத் தொண்டு செய்வாரது வினைகள் நீங்கும்படி திருக்கண் நோக்கம் வைத்து அவர்களைக் காத்தருளியவனே, உனக்கு இடமாவது புகழை யுடைய திருக்கழிப்பாலையே.

235. பருத்தாள் வன்பகட்டைப்
படமாகமுன் பற்றி அதன்
உரித்தாய் ஆனையின் தோல்
உலகந்தொழும் உத்தமனே
எரித்தாய் முப்புரமும்
இமையோர்கள் இடர்கடியும்
கருத்தா தண்கழனிக்
கழிப்பாலை மேயானே.

தெளிவுரை : உலகமெல்லாம் வணங்குகின்ற மேலானவனே ! தேவர்களது துன்பத்தை நீக்கியருள்கின்ற தலைவனே. குளிர்ந்த வயல்களையுடைய திருக்கழிப்பாலையில் விரும்பி கோயில் கொண்டிருப்பவனே. நீ முன்பு யானையின் தோலைப் போர்வையாக விரும்பி பருத்த கால்களையுடைய வலிய யானையைப் பிடித்து அதன் தோலை உரித்தாய்; முப்புரங்களையும் எரித்தாய், இவை உனது வீரச் செயல்கள்.

236. படைத்தாய் ஞால மெலாம்
படர்புன்சடை எம்பரமா
உடைத்தாய் வேள்வி தனை
உமையாளை யோர் கூறுடையாய்
அடர்த்தாய் வல்லரக்கன்
தலைபத்தொடு தோள் நெரியக்
கடற்சா ருங்கழனிக்
கழிப்பாலை மேயானே.

தெளிவுரை : விரிந்த புல்லிய சடையை யுடைய எங்கள் இறைவனே, உமையம்மையை ஒரு பாகத்தில் உடையவனே ! கடலைச் சார்ந்த வயல்களையுடைய திருக்கழிப்பாலையில் விரும்பி கோயில் கொண்டுள்ள பெருமானே. நீ எல்லா உலகங்களையும் படைத்தாய். தட்சனது வேள்வியை அழித்தாய். வலிய அரக்கனாகிய இராவணனது பத்துத் தலைகளோடு இருபது தோள்களும் நெரியும்படி நெருக்கினாய். இவை உன் வல்லமைகள்.

237. பொய்யா நாவதனால்
புகழ்வார்கள் மனத்தினுள்ளே
மெய்யே நின்றெரியும்
விளக்கே ஒத்த தேவர்பிரான்
செய்யா னுங்கரிய
நிறத்தானும் தெரிவரியான்
மையார் கண்ணியொடு
மகிழ்வான்கழிப் பாலையதே.

தெளிவுரை : பொய் கூறுதல் இல்லாத நாவினால் புகழ்கின்றவர்களது மனத்தில் அணையாது எரியும் விளக்கே போல விளங்கி நிற்கின்ற பெரிய தேவனும், செம்மை நிறமுடைய பிரமனும், கருமை நிறமுடைய திருமாலும் அறிதற்கு அரியவனும் ஆகிய சிவபெருமான் திருக்கழிப்பாலையை விரும்பி மைபொருந்திய கண்களை யுடைய உமாதேவியோடும் எழுந்தருளியிருப்பான்.

238. பழிசே ரில்புகழான்
பரமன் பரமேட்டி
கழியார் செல்வமல்கும்
கழிப்பாலை மேயானைத்
தொழுவான் நாவலர் கோன்
ஆரூரன் உரைத்த தமிழ்
வழுவா மாலைவல்லார்
வானோர் உல காள்பவரே.

தெளிவுரை : பழி பொருந்தாத புகழையுடையவனும் யாவர்க்கும் மேலானவனும் மேலிடத்தில் உள்ளவனும் ஆகிய கழியின்கண் பொருந்திய செல்வங்கள் பெருகுகின்ற திருக்கழிப்பாலையில் விரும்பி எழுந்தருளியிருக்கின்ற சிவபெருமானை, அவனையே தொழுபவனாகிய திருநாவலூரார்க்குத் தலைவனாம் நம்பியாரூரன் பாடிய இத்தமிழ்ப் பாடல்களைத் தவறு உண்டாகதபடி பாடவல்லவர்கள். தேவர் உலகத்தை ஆள்பவர் ஆவர். கழிக்கண் உள்ள செல்வங்கள் சங்கு முத்து முதலியன.

திருச்சிற்றம்பலம்

24. திருமழபாடி (அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில், திருமழபாடி,அரியலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

239. பொன்னார் மேனியனே
புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல்
மிளிர் கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே
மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால்
இனியாரை நினைக்கேனே.

தெளிவுரை : பொன்னை யொத்த திருமேனியுடையவனே! புலியின் உரித்த தோலை அரையிலே உடுத்து, மின்னல் போன்ற ஒளி பிரகாசிக்கும் கொன்றைப் பூவைச் சூடியவனே. நிலையான அரசே. பெரிய இரத்தினமே. திருமழபாடியில் எழுந்தருளிய விலையில்லா மாணிக்கமே. உலகமாதா வடிவானவனே. உன்னையன்றி வேறு யாரை நான் நினைப்பேன்?

ஒருவரையும் நினையேன் என்பது குறிப்பெச்சம்.

240. கீளார் கோவணமும்
திருநீறுமெய் பூசி உன்றன்
தாளே வந்தைடைந்தேன்
தலைவாஎனை ஏன்றுகொள்நீ
வாளார் கண்ணிபங்கா
மழபாடியுள் மாணிக்கமே
ஆளாய் நின்னையல்லால்
இனியாரை நினைக்கேனே.

தெளிவுரை : கோவணத்தை உடுத்து, திருநீற்றைத் திருமேனியில் பூசியவனே, யாவர்க்கும் தலைவனே. உமாதேவியை ஒரு பங்கில் உடையவனே. திருமழபாடியில் திகழும் மாணிக்கம் போல்பவனே, அடியேன் உன் திருவடியையே புகலிடமாக வந்தடைந்தேன், இனி உன்னையல்லது வேறு யாரை எனக்கு உறவாக நினைப்பேன்? என்னை நீ ஏற்றுக்கொள்.

241. எம்மான் எம் அனையென்று
எனக்கு எள்தனைச் சார்வாகார்
இம்மா யப்பிறவி
பிறந்தே இறந்து எய்த்தொழிந்தேன்
மைம்மாம் பூம்பொழில்சூழ்
மழபாடியுள் மாணிக்கமே
அம்மான் நின்னையல்லால்
இனியாரை நினைக்கேனே.

தெளிவுரை : மேகம் தவழும் அழகிய மாஞ்சோலை சூழ்ந்த திருமழபாடியில் திகழும் மாணிக்கம் போல்பவனே. எங்கள் தலைவனே. என் தந்தை என் தாய் என்று இவர்கள் எனக்கு எள்ளளவும் துணையாகமாட்டார். அவர்களைத் துணையாக நினைத்ததுத்தான் இந்த நிலையில்லாத பிறவியை எடுத்துப் பின் பிறந்து இளைத்துப் போனேன். ஆதலின், இப்போது உன்னை யல்லது வேறு யாரை நினைப்பேன்? பிறவியது இழிபினை உணர்த்திற்று.

242. பண்டே நின்னடியேன்
அடியாரடி யார்கட்கு எல்லாம்
தொண்டே பூண்டொழிந்தேன்
தொடராமைத் துரிசறுத்தேன்
வண்டார் பூம்பொழில் சூழ்
மழபாடியுள் மாணிக்கமே
அண்டா நின்னை யல்லால்
இனியாரை நினைக்கேனே.

தெளிவுரை : வண்டுகள் ஆரவாரிக்கின்ற பூஞ்சோலைகள் சூழ்ந்த திருமழபாடியில் திகழும் மாணிக்கம் போல்பவனே. வானுலகில் வாழ்பவனே. உனக்கு அடியவனாகிய யான் அப்பொழுதே உன் அடியார்  அவர்க்கு அடியராயினார் ஆகிய எல்லார்க்கும் தொண்டு செய்தலை மேற்கொண்டு விட்டேன். உன்னோடாயினும் உன் அடியாரோடு ஆயினும் தொடர்பு கொள்ளாத குற்றம் என்பால் இல்லாதவாறு அதனைக் களைந்து ஒழிந்தேன். ஆதலின், இனி யான் உன்னையன்றி வேறுயாரை நினைப்பேன்? பண்டு என்றது தம்மை ஆட்கொண்ட காலத்தை.

243. கண்ணாய் ஏழுலகும்
கருத்தாய அருத்தமுமாய்ப்
பண்ணார் இன்தமிழாய்ப்
பரமாய பரஞ்சுடரே
மண்ணார் பூம்பொழில்சூழ்
மழபாடியுள் மாணிக்கமே
அண்ணா நின்னையல்லால்
இனியாரை நினைக்கேனே.

தெளிவுரை : ஏழு உலகங்களிலும் உள்ள உயிர்களுக்கு எல்லாம் கண்ணாகி, அவ்வுயிர்கள் குறியாகக் கொள்ளுதற்குரிய மெய்ப்பொருளுமாகி, இசை நிறைந்த இனிய தமிழ் மொழியுமாகி எவற்றுக்கும் மேலாகிய பேரின்ப ஒளியும் திருமழபாடியுள் உள்ள மாணிக்கமே. எட்டாதவனே. உன்னையன்றி இனி வேறு யாரை நினைப்பேன்?

244. நாளார் வந்தணுகி
நலியாமுனம் நின்றனக்கே
ஆளா வந்தடைந்தேன்
அடியேனையும் ஏன்றுகொள் நீ
மாளா நாளருளும்
மழபாடியுள் மாணிக்கமே
ஆளா நின்னையல்லால்
இனியாரை நினைக்கேனே.

தெளிவுரை : அடியவர்கட்கு நீண்ட வாழ்நாளைத் தருகின்ற, திருமழபாடியில் திகழ்கின்ற மாணிக்கம் போல்பவனே ! உனக்கு நான் ஆளாயினபின், உன்னை யல்லாது வேறு யாரை நினைப்பேன்? எனக்கு இறுதி நாள் வந்து நெருங்கித் துன்புறுத்துவதற்கு முன்பே உனக்கு நான் ஆளாதற் பொருட்டு வந்து உன்னை அடைந்தேன். ஆதலின், அடியேனையும் உனக்கு உரியவனாக நீ ஏற்றுக் கொண்டருள்வாயாக.

245. சந்தா ருங்குழையாய்
சடைமேற்பிறை தாங்கிநல்ல
வெந்தார் வெண்பொடியாய்
விடையேறிய வித்தகனே
மைந்தார் சோலைகள்சூழ்
மழபாடியுள் மாணிக்கமே
எந்தாய் நின்னையல்லால்
இனியாரை நினைக்கேனே.

தெளிவுரை : குழையை அணிந்தவனே. சடையில் பிறையைத் தாங்கியுள்ளவனே. வெண்மையான திருநீற்றை அணிந்தவனே. ஆனேற்றை ஊர்தியாகக் கொண்ட வித்தகனே, அழகிய சோலைகள் நிறைந்த திருமழபாடியுள் திகழும் மாணிக்கம் போல்பவனே, என் தந்தையே, நான் உன்னையல்லது வேறு யாரை நினைப்பேன்.

246. வெய்ய விரிசுடரோன்
மிகுதேவர் கணங்களெல்லாம்
செய்ய மலர்கள் இட
மிகு செம்மையுள் நின்றவனே
மையார் பூம்பொழில் சூழ்
மழபாடியுள் மாணிக்கமே
ஐயா நின்னை யல்லால்
இனியாரை நினைக்கேனே.

தெளிவுரை : சூரியன் முதலாக மிகுந்த தேவர் கூட்டங்கள் எல்லாம் நல்ல மலர்களை இட்டு வழிபட, அவர்கட்கு மிகவும் நேர்நின்று அருள் செய்கின்றவனே, இருள் நிறைந்த அழகிய சோலைகள் சூழ்ந்த திருமழபாடியுள் திகழ்கின்ற மாணிக்கம் போன்றவனே. என் தலைவனே. அடியேன் இப்போது உன்னை யல்லது வேறு யாரை நினைப்பேன்?

247. நெறியே நின்மலனே
நெடுமால் அயன் போற்றிசெய்யும்
குறியே நீர்மையனே
கொடியேரிடை யாள்தலைவா
மறிசேர் அங்கையனே
மழபாடியுள் மாணிக்கமே
அறிவே நின்னை யல்லால்
இனியாரை நினைக்கேனே.

தெளிவுரை : உயிர்களுக்கு நன்னெறியாய் நிற்பவனே. மலத்தால் பற்றப்படாதவனே, நீண்ட திருமாலும் பிரமனும் வணங்குகின்ற  தியானப்பொருளே, நற்பண்பு உடையவனே, கொடி போலும் இடையினை யுடைய உமாதேவிக்குக் கணவனே. மான் கன்று பொருந்திய அகங்கையை யுடையவனே. திருமழபாடியுள் திகழும் மாணிக்கம் போல்பவனே, அறிவு வடிவானவனே, அடியேன் இப்போது உன்னை யல்லது வேறு யாரை நினைப்பேன்?

248. ஏரார் முப்புரமும்
எரியச்சிலை தொட்டவனை
வாரார் கொங்கையுடன்
மழபாடியுள் மேயவனைச்
சீரார் நாவலர்கோன்
ஆரூரன் உரைத்ததமிழ்
பாரோர் ஏத்தவல்லார்
பரலோகத்து இருப்பாரே.

தெளிவுரை : அழகு பொருந்திய மூன்று புரங்களும் எரிந்து ஒழியுமாறு வில்லை வளைத்தவனும், கச்சணிந்த மார்பை உடையவளாகிய உமாதேவியுடன் திரு மழபாடியுள் விரும்பி வீற்றிருப்பவனும் ஆகிய சிவ பெருமானை, புகழ் நிறைந்த திருநாவலூரில் உள்ளார்க்குத் தலைவனாகிய நம்பியாரூரன் பாடிய இத் தமிழ்ப் பாடல்களைப் பாட வல்லவர்களாகிய மக்கள், சிவலோகத்தில் இனிது வீற்றிருப்பார்கள்.

திருச்சிற்றம்பலம்

25. திருமுதுகுன்றம் (அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில், விருத்தாச்சலம், கடலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

249. பொன்செய்த மேனியினீர்
புலித்தோலை அரைக்கசைத்தீர்
முன்செய்த மூவெயிலும்
எரித்தீர்முது குன்றமர்ந்தீர்
மின்செய்த நுண்ணிடை
பரவையிவள் தன்முகப்பே
என்செய்த வாறடிகேள்
அடியேன்இட் டளங்கெடவே.

தெளிவுரை : பொன்போலும் திருமேனியை உடையவரே, புலியின் தோலை அரையில் உடுத்தியவரே, நன்கு செய்யப்பட்ட மூன்று மதில்களையும் முன்பு எரித்தவரே, திருமுதுகுன்றத்தில் விரும்பி இருப்பவரே. அடிகளே. மின்னல் போலும் நுண்ணிய இடையை உடையவளும் பரவை என்னும் பெயரினளுமாகிய இவள் முன்னே அடியெனது துன்பங் கெடுதற்கு நீவிர் என் செய்தவாறு.

250. உம்பரும் வானவரும்
உடனேநிற்க வேஎனக்குச்
செம்பொனைத் தந்தருளித்
திகழும்முது குன்றமர்ந்தீர்
வம்பம ருங்குழலாள்
பரவைஇவள் வாடுகின்றாள்
எம்பெரு மான் அருளீர்
அடியேன்இட் டளங்கெடவே.

தெளிவுரை : எம்பெருமானே, நீர் முன்பு வானத்திலுள்ள தேவர்களும் அவர்களுக்கு மேல் உள்ள அயன் மால் என்பவர்களும் கண்டு நிற்க, எனக்குச் செம்பொன்னைக் கொடுத்து விளங்குகின்ற திருமுதுகுன்றத்தில் எனக்குத் துணையாய் இருந்தீர். இப்பொழுது மணம் பொருந்திய கூந்தலை உடையவளும் பரவை என்னும் பெயருடைவளுமாகிய இவள் பொருள் முட்டுப் பாட்டினால் மெலிகின்றாள். அதுபற்றிய அடியேனது துன்பம் கெடுமாறு அருள் செய்தல் வேண்டும்.

251. பத்தா பத்தர்களுக்கு
அருள்செய்யும் பரம்பரனே
முத்தா முக்கணனே
முதுகுன்றம் அமர்ந்தவனே
மைத்தா ருந்தடங்கண்
பரவைஇவள் வாடாமே
அத்தா தந்தருள்வாய்
அடியேன்இட் டளங்கெடவே.

தெளிவுரை : எப்பொருட்கும் பற்றுக் கோடானவனே, அடியார்களுக்கு அருள்பண்ணுகின்ற மேலானவனே, இயல்பாகவே பாசத்தின் நீங்கினவனே, மூன்று கண்களையுடையவனே, திருமுது குன்றத்தில் விரும்பியிருப்பவனே, என் அப்பனே, மைதீட்டிய அழகிய பெரிய கண்களையுடைய பரவை என்னும் பெயருடைய இவள், பொருள் முட்டுப் பாட்டினால் துன்புறாவண்ணம் அடியேனது வருத்தம் கெட, செம்பொன்னைத் தந்தருள்வீராக.

252. மங்கையொர் கூறமர்ந்தீர்
மறைநான்கும் விரித்துகந்தீர்
திங்கள் சடைக்கணிந்தீர்
திகழும்முது குன்றமர்ந்தீர்
கொங்கைநல் லாள்பரவை
குணம்கொண்டிருந் தாள்முகப்பே
அங்கே னேயருளாய்
அடியேன்இட் டளங்கெடவே.

தெளிவுரை : உமையை ஒரு பாகத்தில் விரும்பி வைத்தவரே, நான்கு வேதங்களையும் விரித்து அருளிச் செய்து அவைகளை அறநூலாக விரும்பியவரே, சடையில் சந்திரனை அணிந்தவரே, திருமுது குன்றத்தில் விரும்பி இருப்பவரே, கண்ணோட்டம் உடையவரே, என் அன்பிற்குரிய பரவை முன்னே அடியேனது துன்பம் கெடுமாறு அருள் புரிவீராக. அம் கண் என்றது கண்ணோட்டத்தைக் குறிக்கிறது.

253. மையா ரும்மிடற்றாய்
மருவார்புரம் மூன்றெரித்த
செய்யார் மேனியனே
திகழும்முது குன்றமர்ந்தாய்
பையா ரும்அரவேர்
அல்குலாள்இவள் வாடுகின்றாள்
ஐயா தந்தருள்வாய்
அடியேன்இட் டளங்கெடவே.

தெளிவுரை : நீலகண்டனே, திரிபுரங்களை எரித்தவனே, செம்மேனியனே, விருத்தாசலத்தில் விரும்பி வாழ்பவனே, என் தலைவனே, பரவையாகிய இவள் பொருளின்றி வருந்துகிறார். ஆதலின் அதுபற்றிய அடியேனது துன்பங் கெடுமாறு செம்பொன்னைத் தந்தருள வேண்டுகிறேன்.

254. நெடியான் நான்முகனும்
இரவியொடும் இந்திரனும்
முடியால் வந்திறைஞ்ச
முதுகுன்றம் அமர்ந்தவனே
படியா ரும்இயலாள்
பரவைஇவள் தன்முகப்பே
அடிகேள் தந்தருளீர்
அடியேன்இட் டளங்கெடவே.

தெளிவுரை : திருமாலும் பிரமனும் சூரியனும் இந்திரனும் வந்து தலையால் வணங்கும்படி விருத்தாசலத்தில் விரும்பி இருப்பவனே. தலைவனே, பெண்மைப் பண்புகள் நிறைந்த இயல்பினை உடையவளும் பரவை என்னும் பெயரினளுமாகிய இவள் முன்னே அடியேனது துன்பம் கெடுமாறு செம்பொன்னைக் கொடுத்தருள்வீராக.

255. கொந்தண வும்பொழில்சூழ்
குளிர்மாமதில் மாளிகைமேல்
வந்தண வும்மதிசேர்
சடைமாமுது குன்றுடையாய்
பந்தண வும்விரலாள்
பரவைஇவள் தன்முகப்பே
அந்தண னேயருளாய்
அடியேன்இட் டளங்கெடவே.

தெளிவுரை : பூங்கொத்துக்கள் பொருந்திய சோலைகள் சூழ்ந்த குளிர்ந்த பெரிய மதில்கள் மேலும், மாளிகைகள் மேலும் வந்து தவழ்கின்ற சந்திரன் பொருந்திய சடையினையுடைய பெரிய திருமுது குன்றத்தை யுடையவனே. அந்தணனே, பந்து பொருந்திய விரலை உடையவளும் பரவை என்னும் பெயரினை உடையவளுமாகிய இவள் முன்னே எனது துன்பம் கெடுமாறு அருள் செய்வாய்.

256. பரசா ருங்கரவா
பதினெண்கண முஞ்சூழ
முரசார் வந்ததிர
முதுகுன்றம் அமர்ந்தவனே
விரைசே ருங்குழலாள்
பரவைஇவள் தன்முகப்பே
அரசே தந்தருளாய்
அடியேன்இட் டளங்கெடவே.

தெளிவுரை : மழுப்பொருந்திய கையை உடையவனே. பதினெண்கணங்களும் புடைசூழவும் முரசு அணுக வந்து முழங்கவும் திருமுது குன்றத்தில் விரும்பி இருப்பவனே. எல்லா உலகிற்கு அரசனே. நறுமணம் பொருந்திய கூந்தலை யுடையவளும் பரவை என்னும் பெயரினளும் ஆகிய இவள் முன்னே அடியேனது துன்பம் கெடுமாறு செம்பொன்னைத் தந்தருள வேண்டும்.

257. ஏத்தாது இருந்தறியேன்
இமையோர்தனி நாயகனே
மூத்தாய் உலகுக்கெல்லாம்
முதுகுன்றம் அமர்ந்தவனே
பூத்தா ருங்குழலாள்
பரவைஇவள் தன்முகப்பே
கூத்தா தந்தருளாய்
கொடியேன்இட் டளங்கெடவே.

தெளிவுரை : தேவர்களுக்கெல்லாம் தனியான தலைவனே. எல்லா உலகத்துக்கும் முந்தியவனே. திருமுது குன்றத்தில் விரும்பி எழுந்தருளியவனே, அம்பலக் கூத்தனே. இதுவரை நான் உன்னை ஒரு பொழுதும் துதியாமல் இருந்தறியேன். இதனை நீ அறிவாய். இப்பரவையின் கண் முன்னே கொடியவனாகிய எனது துன்பம் தீரும் வண்ணம் பொருளைத் தந்தருள்வாயாக.

258. பிறையா ருஞ்சடைஎம்
பெருமான்அரு ளாய்என்று
முறையால் வந்தமரர்
வணங்கும்முது குன்றர்தம்மை
மறையார் தங்குரிசில்
வயல்நாவல்ஆ ரூரன்சொன்ன
இறையார் பாடல்வல்லார்க்கு
எளிதாம்சிவ லோகமதே.

தெளிவுரை : தேவர்கள் பலரும் தம் வரிசைக்கேற்ப முறையாக வந்து வணங்கும் திருமுதுகுன்றரை, அந்தணர் தலைவனும் வயல்களை யுடைய திருநாவலூரினனும் ஆகிய நம்பியாரூரன் பிறை பொருந்திய சடையினையுடைய எம்பெருமானே அருள் புரியாய் என்று வேண்டிப் பாடிய இறைவனது திருவருள் நிறைந்த இப் பாடல்களை நன்கு பாட வல்லார்க்குச் சிவலோகம் எளிய பொருளாய்விடும்.

திருச்சிற்றம்பலம்

26. திருக்காளத்தி (அருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயில், காளஹஸ்தி,கர்நூல் மாவட்டம், ஆந்திரா மாநிலம்)

திருச்சிற்றம்பலம்

259. செண்டா டும்விடையாய்
சிவனேஎன் செழுஞ்சுடரே
வண்டா ருள்குழலாள்
உமைபாகம் மகிழ்ந்தவனே
கண்டார் காதலிக்கும்
கணநாதன்எங் காளத்தியாய்
அண்டா உன்னை அல்லால்
அறிந்தேத்த மாட்டேனே.

தெளிவுரை : விரைந்து நடக்கும் இடப வாகனத்தை உடையவனே, சிவபெருமானே, செழுமையான ஒளி வடிவினனே, வண்டுகள் சூழும் கூந்தலையுடைய உமையம்மையை ஒரு பாகத்தில் கொண்டவனே. உன்னைக் கண்டவர் நீங்காது பேரன்பு செய்யப்படுபவனே. பூதக் கூட்டத்திற்கு அரசனே, திருக்காளத்தியில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே, பரவெளியில் விளங்குபவனே. அடியேன் உன்னை யல்லது பிறரைக் கடவுளராக அறிந்து போற்றுதல் இலன்.

ஆதலின் அடியேனுக்கு அருள் பண்ணுதல் வேண்டும் என்பது குறிப்பெச்சம்.

260. இமையோர் நாயகனே
இறைவாஎன் இடர்த்துணையே
கமையார் கருணையினாய்
கருமாமுகில் போல்மிடற்றாய்
உமையோர் கூறுடையாய்
உருவேதிருக் காளத்தியுள்
அமைவே உன்னையல்லால்
அறிந்தேத்த மாட்டேனே.

தெளிவுரை : தேவர்கட்குத் தலைவனே. கடவுளே, என் துன்பங்களை விலக்குதற்குத் துணையாய் நின்று உதவுபவனே, பொறுமை நிறைந்த அருளை யுடையவனே, நீலகண்டனே, உமையம்மையை உன் வடிவில் ஒரு கூறாகக் கொண்டவனே, திருக்களாத்தியில் உள்ளவனே, அடியேன் உன்னையன்றிப் பிறரைக் கடவுளாக அறிந்து போற்றுதல் இலன், ஆதலின் எனக்கு அருள் செய்தல் வேண்டும்.

261. படையார் வெண்மழுவா
பகலோன்பல் உகுத்தவனே
விடையார் வேதியனே
விளங்குங்குழைக் காதுடையாய்
கடையார் மாளிகைசூழ்
கணநாதன்எங் காளத்தியாய்
உடையாய் உன்னையல்லால்
உகந்தேத்த மாட்டேனே.

தெளிவுரை : படைக்கலமாக மழுவை உடையவனே! சூரியனது பல்லை உதிர்த்தவனே, இடபத்தில் பொருந்தும் அந்தணனே, ஒளி விடுகின்ற குழையை யணிந்த காதினை உடையவனே, அழகிய வாயில்கள் பொருந்திய மாளிகைகள் நிறைந்த திருக்காளத்தியில் எழுந்தருளி யிருப்பவனே, பூதகணங்களுக்கு நாயகனே, என்னை ஆட்கொண்டவனே, அடியேன் உன்னையல்லாது பிறரைப் போற்ற மாட்டேன், ஆதலின் எனக்கு அருள் செய்வாயாக. சூரியன் பல் உடைபட்டது தட்ச யாகத்தின் போது.

262. மறிசேர் கையினனே
மதமாவுரி போர்த்தவனே
குறியே என்னுடைய
குருவேஉன்குற் றேவல்செய்வேன்
நெறியே நின்றடியார்
நினைக்குந்திருக் காளத்தியுள்
அறிவே உன்னையல்லால்
அறிந்தேத்த மாட்டேனே.

தெளிவுரை : கையில் மான் கன்றை ஏந்தியவனே, மதம் பொருந்திய யானையின் தோலைப் போர்த்தவனே. யாவர்க்கும் குறியாக உள்ளவனே. என் ஆசிரியனே, அடியவர்கள் நன்னெறிக்கண் நின்று நினைக்கின்ற திருக்காளத்தியுள் கோயில் கொண்டுள்ள அறிவு மயமானவனே. அடியேன் உன்னையன்றி வேறு எவரையும் கடவுளாகக் கொள்ளவில்லை. உனக்கே நான் தொண்டு செய்வேன். எனக்கு அருள் புரிவாயாக.

263. செஞ்சேல் அன்னகண்ணார்
திறத்தேகிடந்து உற்றலறி
நஞ்சேன் நான்அடியேன்
நலம்ஒன்றறி யாமையினால்
துஞ்சேன் நான்ஒருகால்
தொழுதேன்திருக் காளத்தியாய்
அஞ்சாது  உன்னையல்லால்
அறிந்தேத்த மாட்டேனே.

தெளிவுரை : திருக்காளத்திப் பெருமானே. உன் அடியவனாகிய நான் நன்னெறியில் நில்லாத காரணத்தால் அழகிய கண்களையுடைய மாதர் கூற்றில் கிடந்து மிகக் கதறி வருந்தினேன். இடையிடையே, உன்னை வணங்கினேன். உன்னை யன்றி வேறு எவரையும் நான் துதிக்கவில்லை. ஆதலின் எனக்கு நீ அருள் செய்தல் வேண்டும்.

264. பொய்யவன் நாயடியேன்
புகவேநெறி ஒன்றறியேன்
செய்யவ னாகிவந்திங்கு
இடர்ஆனவை தீர்த்தவனே
மெய்யவ னேதிருவே
விளங்குந்திருக் காளத்திஎன்
ஐயநுன் றன்னையல்லால்
அறிந்தேத்த மாட்டேனே.

தெளிவுரை : பொய்யை உடையவனும் நாய்போலும் அடியவனும் நன்னெறியில் புகுதற்கு வழி ஒன்றும் அறியாதவனும் ஆகிய எனது துன்பங்களை யெல்லாம் நீக்கி ஆட்கொண்ட பெருமானே, உண்மை வடிவினனே, பேரின்பமானவனே, புகழுடைய திருக்காளத்தியில் கோயில் கொண்டிருப்பவனே, என் தலைவனே, நான் உன்னையன்றி வேறு தெய்வங்களைத் தொழுதல் இலன். ஆதலின் எனக்கு அருள் செய்வீராக.

265. கடியேன் காதன்மையால்
கழற்போதறி யாதஎன்னுள்
குடியாக் கோயில்கொண்ட
குளிர்வார்சடை எம்குழகா
முடியால் வானவர்கள்
முயங்குந்திருக் காளத்தியாய்
அடியேன்  உன்னையல்லால்
அறியேன்மற் றொருவரையே.

தெளிவுரை : வன்கண்மை யுடையவனும், அன்போடு உன் திருவடித் தாமரைகளை உணராதவனும் ஆகிய என் நெஞ்சம் உனக்கு உறைவிடம் ஆமாறு அதனைக் கோயிலாகக் கொண்டு எழுந்தருளியிருக்கின்ற குளிர்ந்த நீண்ட சடையை உடைய எங்கள் அழகனே, தேவர்கள் தம் தலையினால் திருவடியைச் சேர்கின்ற திருகாளத்தியப்பனே. அடியேன் உன்னையன்றி வேறு எவரையும் கடவுளராகக் கொண்டிலன். ஆதலின் எனக்கு அருள் செய்தல் வேண்டும்.

266. நீறார் மேனியனே
நிமலாநினை அன்றிமற்றுக்
கூறேன் ஆவதனால்
கொழுந்தேஎன் குணக்கடலே
பாறார் வெண்தலையிற்
பலிகொண்டுழல் காளத்தியாய்
ஏறே உன்னையல்லால்
இனிஏத்த மாட்டேனே.

தெளிவுரை : நீறு பொருந்திய திருமேனியை உடையவனே, மலம் அற்றவனே, உன்னையன்றி வேறு தெய்வத்தை என் நாவினால் பேசமாட்டேன். பக்திக் கொடியின் கொழுந்தே. குணக்கடலே. ஊன் இருப்பதாக மயங்கிய பருந்துகள் சூழ்ந்த வெண்மையான பிரம கபாலத்தில் பிச்சை ஏற்றுத் திரிகின்ற திருக்காளத்தி நாதனே. ஆண் சிங்கமே, உன்னையன்றி வேறு ஒருவரை இனிமையாகத் துதிக்கமாட்டேன்.

267. தளிர்போல் மெல்லடியாள்
தனிஆகத்து அமர்ந்தருளி
எளிவாய் வந்தென்உள்ளம்
புகுதவல்ல எம்பெருமான்
களியார் வண்டறையும்
திருக்காளத்தி உள்ளிருந்த
ஒளியே உன்னையல்லால்
இனிஒன்றும் உணரேனே.

தெளிவுரை : தளிர்போலும் மெல்லிய பாதங்களையுடைய உமாதேவியைத் திருமேனியில் விரும்பி வைத்தருளி எளிமை உண்டாக என் உள்ளத்தில் புகவல்ல எம்பெருமானே. வண்டுகள் ஒலிக்கின்ற திருக்காளத்தியிலுள்ள அறிவு வடிவானவனே. அடியேன் உன்னையன்றி வேறொரு பொருளை உணர்தல் இலன். ஆதலின் எனக்கு அருள் பாலிப்பாயாக.

268. காரூ ரும்பொழில்சூழ்
கணநாதன்எங் காளத்தியுள்
ஆரா இன்னமுதை
அணிநாவலூ ரன் சொன்ன
சீரூர் செந்தமிழ்கள்
செப்புவார்வினை யாயினபோய்ப்
பேரா விண்ணுலகம்
பெறுவார்பிழைப் பொன்றிலரே.

தெளிவுரை : மேகம் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருக்காளத்தியுள் கோயில் கொண்டிருக்கும் பெருமானை, எங்கள் அமுதம் போல்வானை, அழகிய திருநாவலூரில் தோன்றிய நம்பியாரூரன் பாடிய புகழ்மிக்க இச் செந்தமிழ்ப் பாடல்களைச் சொல்லுகின்றவர்கள் வினையாய் உள்ளன யாவும் நீங்கப் பெற்று சிவலோகத்தை அடைவார்கள், குற்றம் யாதும் இலராவர்.

திருச்சிற்றம்பலம்

27. திருக்கற்குடி (அருள்மிகு உஜ்ஜீவநாதர் திருக்கோயில், உய்யக்கொண்டான் மலை,திருச்சி மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

269. விடையா ருங்கொடியாய்
வெறியார்மலர்க் கொன்றையினாய்
படையார் வெண்மழுவா
பரமாய பரம்பரனே
கடியார் பூம்பொழில்சூழ்
திருக்கற்குடி மன்னிநின்ற
அடிகேள் எம்பெருமான்
அடியேனையும் அஞ்சலென்னே.

தெளிவுரை : இத்திருப்பதிகம் இறைவரைப் பலபடியாக ஏத்தி, அவர்பால் அபயம் வேண்டி அருளிச்செய்தது, பயம் உலகியலால் தோன்றிற்று என்க.

இடபம் எழுதப் பெற்ற கொடியை உடையவனே, நறுமணம் பொருந்திய கொன்றை மாலையை அணிந்தவனே, படைக்கலமாகப் பொருந்திய கூரிய மழுவை ஏந்தியவனே. மேலார்க்கும் மேலானவனே, மணம் நிறைந்த பூஞ்சோலைகள் சூழ்ந்த திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கும் தலைவனே. எங்கள் கடவுளே, அடியேனையும் அஞ்சாதே என்று சொல்லி உய்யக் கொண்டருள் வாயாக.

270. மறையோர் வானவரும்
தொழுதேத்தி வணங்கநின்ற
இறைவா எம்பெருமான்
எனக்குஇன்னமுது ஆயவனே
கறையார் சோலைகள்சூழ்
திருக்கற்குடி மன்னிநின்ற
அறவா அங்கணனே
அடியேனையும் அஞ்சலென்னே.

தெளிவுரை : அந்தணரும் அமரரும் கைகூப்பித் தொழுது அடிபணிய நிற்கும் இறைவனே, எம் பெருமானே, எனக்கு இனிய அமுதமாய் உள்ளவனே, இருள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருக்கற்குடியில் நிலையாக உள்ள அற வடிவினனே. அழகிய கண்களையுடையவனே. அடியேனையும் அஞ்சாதே எனச் சொல்லி உய்யக் கொண்டருள்க ! கண்ணுக்கு அழகாவது மிக்க கருணை.

271. சிலையால் முப்புரங்கள்
பொடியாகச் சிதைத்தவனே
மலைமேல் மாமருந்தே
மடமாதுஇடங் கொண்டவனே
கலைசேர் கையினனே
திருக்கற்குடி மன்னிநின்ற
அலைசேர் செஞ்சடையாய்
அடியேனையும் அஞ்சல்என்னே.

தெளிவுரை : வில்லால், திரிபுரங்கள் சாம்பலாகும்படி அழித்தவனே, மலைமேல் உள்ள அரிய மருந்து போல்பவனே. இளமை பொருந்திய உமையை இடப் பாகத்திற் கொண்டவனே. மான் பொருந்திய கையை உடையவனே. திருக்கற்குடியில் நிலை பெற்றிருக்கின்ற, நீர் பொருந்திய சிவந்த சடையை உடையவனே, அடியேனையும் அஞ்சாதே என்று சொல்லி உய்யக் கொண்டருள்க.

இத்தலத்தில் இறைவன் மலையில்மேல் கோயில் கொண்டுள்ளார்.

272. செய்யார் மேனியனே
திருநீல மிடற்றினனே
மையார் கண்ணிபங்கா
மதயானை உரித்தவனே
கையார் சூலத்தினாய்
திருக்கற்குடி மன்னிநின்ற
ஐயா எம்பெருமான்
அடியேனையும் அஞ்சலென்னே.

தெளிவுரை : செந்நிற மேனியனே, நீல கண்டனே, உமையை இடப்பாகத்தில் கொண்டவனே, மதயானையை உரித்தவனே. கையில் சூலத்தை ஏந்தியவனே, திருக்கற்குடியில் நிலைபெற்றிருக்கின்ற தலைவனே எங்கள் தலைவனே, அடியேனையும் அஞ்சாதே என்று சொல்லி உய்யக் கொண்டருளுக.

273. சந்தார் வெண்குழையாய்
சரிகோவண ஆடையனே
பந்தா ரும்விரலாள்
ஒருபாகம் அமர்ந்தவனே
கந்தார் சோலைகள்சூழ்
திருக்கற்குடி மன்னிநின்ற
எந்தாய் எம்பெருமான்
அடியேனையும் ஏன்றுகொள்ளே.

தெளிவுரை : அழகு நிறைந்த வெள்ளிய குழையை அணிந்தவனே. சரிந்த கோவணமாக உடுக்கப்பட்ட ஆடையை உடையவனே. பந்தின்கண் பொருந்திய விரல்களையுடைய உமையை ஒரு பாகத்தில் விரும்பிக் கொண்டவனே, மணமிக்க சோலைகள் சூழ்ந்த திருக்கற் குடியில் நிலைபெற்றிருக்கின்ற என் தந்தையே. எங்கள் கடவுளே. அடியேனையும் ஏற்று உய்யக் கொண்டருளுக ! குழை சங்கினாலாயது; எனவே வெளிதாயிற்று, கோவணம்  துகிலின் மிகுதியாலும் மென்மையாலும் சரிதல் உளதாயிற்று.

274. அரையார் கீளோடு
கோவணமும் அரைக்கசைத்து
விரையார் கொன்றையுடன்
விளங்கும்பிறை மேலுடையாய்
கரையா ரும்வயல்சூழ்
திருக்கற்குடி மன்னிநின்ற
அரையா எம்பெருமான்
அடியேனையும் அஞ்சலென்னே.

தெளிவுரை : அரை வெறுவிதாகாமல் நிரம்புதற்குரிய கீளையும் கோவணத்தையும் அரையின்கண் கட்டி, நறுமணம் பொருந்திய கொன்றை மாலையோடு ஒளியுள்ள பிறையையும் சடையிடத்து உடையவனே. நீர் நிறைந்த எங்கள் தலைவனே, அடியேனையும் அஞ்சாதே என்று சொல்லி உய்யக் கொண்டருளே !

275. பாரார் விண்ணவரும்
பரவிப்பணிந்து ஏத்தநின்ற
சீரார் மேனியனே
திகழ்நீல மிடற்றினனே
காரார் பூம்பொழில்சூழ்
திருக்கற்குடி மன்னிநின்ற
ஆரா இன்னமுதே
அடியேனையும் அஞ்சலென்னே.

தெளிவுரை : மண்ணுலகத்தவரும் விண்ணுலகத்தவரும் பணிந்து முன்னிலையாகப் பரவவும் படர்க்கையாகப் புகழவும் நிற்கின்ற அழகு பொருந்திய உருவமுடையவனே, நீல கண்டனே, மேகங்கள் தவழும் பூஞ்சோலைகள் சூழ்ந்த திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற தெவிட்டாத அமுதமாய் இருப்பவனே, அடியேனையும் அஞ்சாதே என்று சொல்லி ஈடேற்றுவாயாக.

276. நிலனே நீர்வளிதீ
நெடுவானகம் ஆகிநின்ற
புலனே புண்டரிகத்து
அயன்மாலவன் போற்றிசெய்யும்
கனலே கற்பகமே
திருக்கற்குடி மன்னிநின்ற
அனல்சேர் கையினனே
அடியேனையும் அஞ்சல்என்னே.

தெளிவுரை : நிலமே, நீரே, தீயே, காற்றே, நீண்ட வானமே என்னும் ஐந்துமாகி நிற்கும் பெரும் பொருளாய் உள்ளவனே. தாமரை மலரில் உள்ள பிரமன் மாயோன் இருவரும் போற்றி நின்ற நெருப்பாகிய தோற்றத்தைக் கொண்டவனே, கற்பகத்தருவே, திருக்கற்குடியில் நிலைபெற்றிருக்கும் பெருமானே, கையில் தீயை உடையவனே, அடியேனையும் அஞ்சாதே என்று சொல்லி காப்பாற்றுவாயாக. இத்தலத்து இறைவருக்கு கற்பகநாதர் என்ற பெயரும் உண்டு.

277. வருங்கா லன்உயிரை
மடியத்திரு மெல்விரலால்
பெரும்பா லன்தனக்காய்ப்
பிரிவித்த பெருந்தகையே
கரும்பா ரும்வயல்சூழ்
திருக்கற்குடி மன்னிநின்ற
விரும்பா எம்பெருமான்
அடியேனையும் வேண்டுதியே.

தெளிவுரை : மார்க்கண்டேயனுக்குச் சார்பாகி அவன்மேல் வந்த கூற்றுவன் மடியும்படி அவனது உயிரை உன் கால் விரல்களால் பிரியும்படி செய்த பெருந்தகையே, கரும்புகள் நிறைந்த வயல்கள் சூழ்ந்த திருக்கற்குடியில் நிலை பெற்றுள்ள விருப்பமுடையவனே. எம்பெருமானே, அடியேனையும் நின் அருட்குரிய ஒருவனாக ஏற்றுக் கொள்.

278. அலையார் தண்புனல்சூழ்ந்து
அழகாகி விழவுஅமரும்
கலையார் மாதவர்சேர்
திருக்கற்குடிக் கற்பகத்தைச்
சிலையார் வாள்நுதலாள்
நல்லசிங்கடி யப்பன்உரை
விலையார் மாலைவல்லார்
வியன்மூவுக்கு ஆள்பவரே.

தெளிவுரை : அலை நிறைந்த தண்ணிய நீரால் சூழப்பட்டு அழகுடையதாகி, விழாக்கள் நீங்காதிருக்கின்ற கலை ஞானங்கள் நிறைந்த பெரிய தவத்தோர் சேர்கின்ற திருக்கற்குடியில். நிலை பெற்றிருக்கின்ற கற்பகம் போல்பவனை விற்போலும் ஒளி பொருந்திய வெற்றியையுடைய நல்ல சிங்கடி என்பாளுக்குத் தந்தையாகிய நம்பியாரூரன் பாடிய விலைமிகுந்த இத் தமிழ்ப்பா மாலையைப் பாட வல்லவர்கள் அகன்ற மூவுலகத்தையும் ஆளத்தக்கவரே.

திருச்சிற்றம்பலம்

28. திருக்கடவூர் வீரட்டம் (அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், திருக்கடையூர், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

279. பொடியார் மேனியனே
புரிநூல் ஒரு பாற்பொருந்த
வடியார் மூவிலைவேல்
வளர்கங்கையின் மங்கையொடும்
கடியார் கொன்றையனே
கடவூர்தனுள் வீரட்டத்தெம்
அடிகேள் என்அமுதே
எனக்குஆர் துணை நீயலதே.

தெளிவுரை : இத்திருப்பதிகம், சிவபிரானைத் திருக்கடவூர் வீரட்டானத்தில் கண்டபொழுது காலனைக் காய்ந்து பாலனைக் காத்த இப்பெருமானை யன்றி நமக்குத் துணையாவார் யாவர் என்றெழுந்த உணர்வினால் அருளிச் செய்தது.

திருவெண்ணீறு நிறைந்த திருமேனியை உடையவனே, புரியாகிய நூல் ஒரு பால், மாதினோடும் மற்றொருபால் பொருந்தி விளங்க, கூர்மை பொருந்திய முத்தலை வேல் நீங்காதிருக்கின்ற அகங்கையினையுடைய நறுமணம் உள்ள கொன்றை மாலையைத் தரித்தவனே, திருக்கடவூரில் வீரட்டம் என்னும் கோயிலில் உள்ள எங்கள் தலைவனே, என்னுடைய அமுதம் போல்பவனே, எனக்கு நீ அல்லாமல் வேறு யார் துணை?

280. பிறையா ருஞ்சடையாய்
பிரமன்தலை யிற்பலிகொள்
மறையார் வானவனே
மறையின்பொருள் ஆனவனே
கறையா ரும்மிடற்றாய்
கடவூர்தனுள் வீரட்டத்தெம்
இறைவா என்அமுதே
எனக்கார்துணை நீயலதே.

தெளிவுரை : பிறையைச் சடையில் தரித்தவனே, பிரமன் தலையைக் கையில் ஏந்தி அதில் பிச்சையை ஏற்கின்ற, வேதத்தை ஓதுகின்ற தேவனே, வேதத்தின் பொருளாய் உள்ளவனே, நீலகண்டனே, திருக்கடவூரினுள் வீரட்டம் என்னும் கோயிலில் உள்ள எங்கள் இறைவனே, என்னுடைய அமுதம் போல்பவனே, எனக்கு நீ யல்லாமல் வேறு துணை யார்?

281. அன்றா லின்நிழற்கீழ்
அறம்நால்வர்க்கு அருள்புரிந்து
கொன்றாய் காலன்உயிர்
கொடுத்தாய்மறை யோனுக்குமான்
கன்றா ருங்கரவா
கடவூர்திரு வீரட்டத்துள்
என்தா தைப்பெருமான்
எனக்கார்துணை நீயலதே.

தெளிவுரை : கையில் மான் கன்றை உடையவனே, திருக்கடவூர்த் திருவீரட்டத்துள் இருக்கின்ற என் தந்தையே, நீ அன்று ஆல் நிழலின்கண் இருந்து நால்வர் முனிவர்கட்கு அருள்பண்ணி, காலன் உயிரைக் கொன்றவன் செயலையும் செய்தாய், அந்தணச் சிறுவனுக்கு முடிவில்லாத வாழ்நாளைக் கொடுத்தாய். இன்ன தன்மையை யுடைய நீ யல்லாமல் எனக்கு வேறு யார் துணை?

282. போரா ருங்கரியின்
உரிபோத்துப்பொன் மேனியின்மேல்
வாரா ரும்முலையாள்
ஒருபாகம் மகிழ்ந்தவனே
காரா ரும்மிடற்றாய்
கடவூர்தனுள் வீரட்டானத்து
ஆரா என்அமுதே
எனக்குஆர்துணை நீயலதே.

தெளிவுரை : போர்ததொழில் பொருந்திய யானையின் தோலைப் பொன்போலும் மேனிமேல் போர்த்துக் கொண்டும், அம் மேனியின் ஒரு பாகத்தில் உமையை மகிழ்ந்து வைத்தும் உள்ளவனே, கருமை பொருந்திய கண்டத்தை உடையாய், திருக்கடவூருள் வீரட்டானம் என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தெவிட்டாத என்னுடைய அமுதம் போல்பவனே, எனக்கு நீ அல்லாமல் துணை வேறு யார்?

283. மையார் கண்டத்தினாய்
மதமாவுரி போர்த்தவனே
பொய்யாது என்உயிருள்
புகுந்தாய்இன்னம் போய்தறியாய்
கையார் ஆடரவா
கடவூர்தனுள் வீரட்டத்தெம்
ஐயா என்அமுதே
எனக்கார்துணை நீயலதே.

தெளிவுரை : விடம் தங்கியதனால் கருநிறம் பொருந்திய திருக்கழுத்தை யுடையவனே, மதயானையின் தோல் உடுத்தியவனே, நீ உண்மையாகவே என் உயிருக்குள் புகுந்தாய். என்னோடு கலந்தாய், அங்கு இன்னும் வந்தறிய மாட்டாய், கையில் ஆடுகின்ற பாம்பை உடையவனே, திருக்கடவூரில் வீரட்டான ஆலயத்தில் எழுந்தருளிய எம்முடைய தலைவனே, எனக்கு அமுதம் ஆனவனே, உன்னை யல்லாமல் எனக்கு வேறு யார் துணை யாவார்கள்?

284. மண்ணீர் தீவெளிகால்
வருபூதங்கள் ஆகிமற்றும்
பெண்ணோடு ஆணலியாய்ப்
பிறவாஉரு ஆனவனே
கண்ணா ரும்மணியே
கடவூர்தனுள் வீரட்டத்தெம்
அண்ணா என்அமுதே
எனக்கார்துணை நீயலதே.

தெளிவுரை : நிலம், நீர், தீ, காற்று, வானம் என்று சொல்ல வருகின்ற பூதங்களாகியும் அப்பூதங்களால் ஆகிய பெண், ஆண், அலி என்னும் உடம்புகளோடு காணப்படும் உயிர்களாகியும், அவற்றில் வேறற நின்று நீ உருவங்கொள்ளுமிடத்து யாதொரு பிறப்பினும் படாத திருமேனியைக் கொண்டு நிற்பவனே, கண்ணில் பொருந்தியுள்ள மணி போல்பவனே, திருக்கடவூரில் வீரட்டானம் என்னும் கோயிலில் உள்ள எங்கள் தலைவனே, என் அமுதம் போல்பவனே, எனக்கு நீ யன்றி வேறு துணை யார்?

285. எரியார் புன்சடைமேல்
இளநாகம் அணிந்தவனே
நரியா ருஞ்சுடலை
நகுவெண்டலை கொண்டவனே
கரியார் ஈர்உரியாய்
கடவூர்தனுள் வீரட்டத்துஎம்
அரியார் என்அமுதே
எனக்கார்துணை நீயலதே.

தெளிவுரை : தீப்போலப் பொருந்தியுள்ள புல்லிய சடையின் மேல் இளமையான பாம்பை அணிந்தவனே, நரிகள் வாழும் சுடலைக்கண் உள்ள சிரிக்கும் வெண்தலையைக் கையில் ஏந்தியவனே, யானையின் உரிக்கப்பட்ட தோலைப் போர்த்தவனே, திருக்கடவூர் வீரட்டானத்துள் உள்ள எங்கள் அரிய பொருளே! என் அமுதமே ! எனக்கு நீ அல்லாமல் வேறு துணை யார்?

286. வேறா உன்னடியேன்
விளங்குங்குழைக் காதுடையாய்
தேறேன் உன்னையல்லால்
சிவனேஎன் செழுஞ்சுடரே
காறார் வெண்மருப்பா
கடவூர்த்திரு வீரட்டத்துள்
ஆறார் செஞ்சடையாய்
எனக்கார்துணை நீயலதே.

தெளிவுரை : ஒளியுள்ள குழையணிந்த காதை உடையவனே, சிவனே, என்னுடைய செம்மையான விளக்கே, காறையாகப் பொருந்திய வெள்ளிய தந்தத்தை உடையவனே, திருக்கடவூரிலுள்ள வீரட்டானம் என்னும் கோயிலில் உள்ள நீர் பொருந்திய சடையை உடையவனே  உன் அடியவனாகிய நான் உன்னை யல்லது வேறு கடவுளரை நினையேன். ஆதலின் எனக்கு நீ யல்லாமல் வேறு யார் துணை?

287. அயனோடு அன்றுஅரியும்
அடியும்முடி காண்பரிய
பயனே எம்பரனே
பரமாய பரஞ்சுடரே
கயமா ருஞ்சடையாய்
கடவூர்த்திரு வீரட்டத்துள்
அயனே என்அமுதே
எனக்கார்துணை நீயலதே.

தெளிவுரை : முன்பொரு சமயம் பிரமனும் திருமாலும் முறையே முடியும் அடியும் தேடிப் போய்க் காணுதல் இயலாது நின்ற பொருளே. எங்கள் தெய்வமே, மேலான ஒளிக்கும் மேலான ஒளியாய் உள்ளவனே. மிக்க நீர் பொருந்திய சடையை உடையாய். திருக்கடவூரிலுள்ள திரு வீரட்டானம் என்னும் கோயிலில் உள்ள பிறப்பில்லாதவனே, என் அமுதம் போன்றவனே. எனக்கு நீ அல்லாமல் வேறு துணை யார்?

288. காரா ரும்பொழில்சூழ்
கடவூர்த்திரு வீரட்டத்துள்
ஏரா ரும்இறையைத்
துணையாஎழில் நாவலர்கோன்
ஆரூ ரன்அடியான்
அடித்தொண்டன் உரைத்ததமிழ்
பாரோர் ஏத்தவல்லார்
பரலோகத்து இருப்பாரே.

தெளிவுரை : மேகங்கள் தவழ்கின்ற சோலைகள் சூழ்ந்த திருக்கடவூரிலுள்ள திரு வீரட்டானத்தில் கோயில் கொண்டுள்ள இறைவனையே துணையாகச் சிறப்பித்து, அழகிய திருநாவலூரில் தோன்றியவனும் திருவாரூர்ப் பெருமானுக்கு அடிமையும் அப்பெருமான் அடிநீழலை நீங்காது தொண்டு செய்பவனும் ஆகிய நம்பியாரூரன் பாடிய இத்தமிழ்ப் பாடல்களை, நிலவுலகில் உள்ளவர் பாடவல்லவராயின் சிவலோகத்தில் இருத்தல் திண்ணம்.

திருச்சிற்றம்பலம்

29. திருக்குருகாவூர் வெள்ளடை (அருள்மிகு வெள்ளடைநாதர் திருக்கோயில், திருக்குருகாவூர்,நாகப்பட்டினம் மாவட்டம்)

289. இத்தனை யாமாற்றை
அறிந்திலேன் எம்பெருமான்
பித்தரே என்றும்மைப்
பேசுவார் பிறரெல்லாம்
முத்தினை மணிதன்னை
மாணிக்கம் முளைத்தெழுந்த
வித்தனே குருகாவூர்
வெள்ளடை நீயன்றே.

தெளிவுரை : எங்கள் பெருமானே, திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, உனது திருவருட் செயல் இத்துணையதாயின காரணத்தை யான் அறிந்திலேன். உன் இயல்பினை அறியாதவரெல்லாம் உன்னை, பித்தன் என்று இகழ்ந்து பேசுவர். இஃது அவ்வாறாக நீ முத்தையும் மாணிக்கத்தையும் பிற மணிகளையும் தோற்றவித்த வித்தாய் வெளிப்பட்டவன் அன்றோ! வெள்ளடை என்றது கோயிலின் பெயர். பித்தரே என்றும்மை என்பது அறியாதார் திரித்தோதிய பாடம்.

290. ஆவியைப் போகாமே
தவிர்த்தென்னை ஆட்கொண்டாய்
வாவியிற் கயல்பாயக்
குளத்திடை மடைதோறும்
காவியும் குவளையும்
கமலம்செங் கழுநீரும்
மேவிய குருகாவூர்
வெள்ளடை நீயன்றே.

தெளிவுரை : நீர் நிலைகளில் கயல்மீன்கள் துள்ள, குளத்திலும் நீர்மடைகளிலும் கருங்குவளையும் செங்குவளையும் தாமரையும் செங்கழுநீரும் ஆகிய மலர்கள் நிறைந்திருக்கும் திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் கோயில் கொண்டிருப்பவனே, நீ யன்றோ என்னை உயிரைப் போகாமல் நிறுத்தி ஆட்கொண்டு அருளினாய்.

291. பாடுவார் பசிதீர்ப்பாய்
பரவுவார் பிணிகளைவாய்
ஓடுநன் கலனாக
உண்பலிக்கு உழல்வானே
காடுநின் இடமாகக்
கடுஇருள் நடமாடும்
வேடனே குருகாவூர்
வெள்ளடை நீயன்றே.

தெளிவுரை : தலை ஓடே சிறந்த உண்கலமாயிருக்க, உண்ணு கின்ற பிச்சை ஏற்பதற்குத் திரிபவனே, காடே சிறந்த அரங்காய் இருக்க. செறிந்த இருளில் நடனமாடுகின்ற கோலத்தை உடையவனே, திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் விரும்பியிருக்கின்றவனே, நீ உன்னை இசைப் பாடலால் பாடுகின்றவரும், பிறவற்றால் துதிக்கின்றவரும் ஆகிய அடியார்களது பசியைத் தீர்த்து நோயைப் பற்றறுப்பாய் அன்றோ?

292. வெப்பொடு பிணியெல்லாம்
தவிர்த்தென்னை ஆட்கொண்டாய்
ஒப்புடை ஒளிநீலம்
ஓங்கிய மலர்ப்பொய்கை
அப்படி அழகாய
அணிநடை மடஅன்னம்
மெய்ப்படு குருகாவூர்
வெள்ளடை நீயன்றே.

தெளிவுரை : ஒளியுள்ள ஒரே மாதிரியான கருங்குவளை மலர்கள் சிறந்து விளங்குகின்ற பொய்கைகளில் மிகவும் அழகாய்த் தோன்றுகின்ற இள அன்னங்கள் நிலை பெற்று விளங்குகின்ற திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, நீ யன்றோ என்னை வெப்பு நோயோடு பிற நோய்களையும் நீக்கிக் காப்பாற்றினாய்.

நாயனார்க்குப் பிணி தீர்த்தமையாவது வலிந்து ஆட்கொண்டமையால் நோய் அணுகாத திருமேனியராய் ஆயினமையாம்.

293. வரும்பழி வாராமே
தவிர்த்தென்னை ஆட்கொண்டாய்
கரும்புடை மலர்க்கொன்றைச்
சுண்ணவெண் ணீற்றானே
அரும்புடை மலர்ப்பொய்கை
அல்லியும் மல்லிகையும்
விரும்பிய குருகாவூர்
வெள்ளடை நீயன்றே.

தெளிவுரை : வண்டுகளையுடைய கொன்றை மலர் மாலையையும் பொடியாகிய வெள்ளிய திருநீற்றையும் உடையவனே, பொய்கையில் உள்ள ஆம்பல் மலர்களையும் பூங்காவில் உள்ள மல்லிகை மலர்களையும் மிகுதியாகவுடைய திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளி யிருப்பவனே, நீ யன்றோ எனக்கு வருதற்குரிய பழி வாராமல் தடுத்து என்னை ஆட்கொண்டாய்.

294. பண்ணிடைத் தமிழ்ஒப்பாய்
பழத்தினில் சுவையொப்பாய்
கண்ணிடை மணியொப்பாய்
கடுஇருள் சுடரொப்பாய்
மண்ணிடை அடியார்கள்
மனத்திடர் வாராமே
விண்ணிடைக்  குருகாவூர்
வெள்ளடை நீயன்றே.

தெளிவுரை : எம் பெருமானே, நீ இசையில் பொருந்திய தமிழை யொத்து இனிமையாய் இருக்கின்றாய். பழத்தில் உள்ள சுவையைப் போன்றிருக்கின்றாய். அஞ்ஞானமாகிய கொடிய இருட்டுக்கு அதனைப் போக்க வல்ல ஞான சூரியன் போலுள்ளாய். இப்பூமியில் அடியார் மனத்தில் துன்பங்கள் வாராதபடி காத்துக் கொண்டு ஆகாயத்தை அளாவிய திருக்குருகாவூரில் வெள்ளடை என்ற ஆலயத்திலும் எழுந்தருளியிருப்பது நீயே யன்றோ ?

295. போந்தனை தரியாமே
நமன்தமர் புகுந்தென்னை
நோந்தனை செய்தாலும்
நுன்னலது அறியேன்நான்
சாந்தனை வருமேலும்
தவிர்த்தென்னை ஆட்கொண்ட
வேந்தனே  குருகாவூர்
வெள்ளடை நீயன்றே.

தெளிவுரை : இறக்கும் நிலை வருங்காலத்தை நீக்கி என்னை ஆட்கொண்ட தலைவனே ! திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே. எனது துன்பத்தைச் சிறிதும் பொறுக்காமல் போந்தவன் நீ யன்றோ? ஆதலின் காலனுக்கு ஏவலராய் உள்ளார் வந்து எனக்கு யான் துன்புறும் செயல்களைச் செய்தாலும், யான் உன்னையன்றி வேறொருவரையும் துணையாக அறிய மாட்டேன்.

296. மலக்கில்நின் அடியார்கள்
மனத்திடை மால்தீர்ப்பாய்
சலச்சலம் மிடுக்குடைய
தருமனார் தமர்என்னைக்
கலக்குவான் வந்தாலும்
கடுந்துயர் வாராமே
விலக்குவாய்  குருகாவூர்
வெள்ளடை நீயன்றே.

தெளிவுரை : அலைவில்லாத உள்ளத்தினையுடைய உன் அடியார்களது மனத்தில் உள்ள மயக்கத்தினைப் பற்றறக் களைபவனே, திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே. துன்பத்தைத் தருகின்ற வெகுளியையும் மிடுக்கினையும் உடைய இயமனது தூதுவர் என்னை அச்சுறுத்த வந்தாலும், அவர்களால் வரும் மிக்க துயரத்தையும் வாராமல் விலக்குவோன் நீ யன்றோ ?

297. படுவிப்பாய் உனக்கேஆள்
பலரையும் பணியாமே
தொடுவிப்பாய் துகிலொடுபொன்
தோலுடுத்து உழல்வானே
கெடுவிப்பாய் அல்லாதார்
கேடிலாப் பொன்அடிக்கே
விடுவிப்பாய்  குருகாவூர்
வெள்ளடை நீயன்றே.

தெளிவுரை : திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் வீற்றிருப்பவனே, நல்லோரைப் பிறரை வணங்கித் துன்புறாதவாறு உனக்கே ஆட்படச் செய்பவனும், நீ தோலை உடுத்து எலும்பை அணியினும் அவர்களுக்கு நல்லாடைகளை உடுப்பித்துப் பொன்னணிகளை அணிவிப்பவனும், முடிவில் அவர்களை அழிவில்லாத உனது பொன் போலும் செவ்விய திருவடிக்கண்ணே புகுவிப்பவனும் நல்லோர் அல்லாதாரைக் கெடுவிப்பவனும் நீயே யன்றோ? அடியாரைப்பொன் தொடுவிப்பாய் என்றதனால் அவன் எலும்பணி தலைக் கூறுதலும் கருத்தாயிற்று.

298. வளங்கனி பொழில்மல்கு
வயல்அணிந்து அழகாய
விளங்கொளி  குருகாவூர்
வெள்ளடை உறைவானை
இளங்கிளை ஆரூரன்
வனப்பகை யவள்அப்பன்
உளங்குளிர் தமிழ்மாலை
பத்தர்கட்கு உரையாமே.

தெளிவுரை : வளமிக்க சோலைகளையும் நீர் நிறைந்த வயல்களையும் உடைய திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலை இருப்பிடமாகக் கொண்ட இறைவனை, சிங்கடிக்குத் தங்கையாகிய வனப்பகை என்பவளுக்குத் தந்தையான நம்பியாரூரன் மனமகிழ்ந்து பாடிய இத் தமிழ்மாலை அவன் அடியார்கட்கு அவனைத் துதித்தற்கு உதவும் புகழ் மாலையாய் விளங்கும்.

திருச்சிற்றம்பலம்

30. திருக்கருப்பறியலூர் (அருள்மிகு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயில், தலைஞாயிறு,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

299. சிம்மாந்து சிம்புளித்துச் சிந்தையினில்
வைத்துகந்து திறம்பா வண்ணம்
கைம்மாவின் உரிவைபோர்த்து உமைவெருவக்
கண்டானைக் கருப்ப றியலூர்க்
கொய்ம்மாவின் மலர்ச்சோலைக் குயில்பாட
மயில்ஆடுங் கொகுடிக் கோயில்
எம்மானை மனத்தினால் நினைந்தபோது
அவர்நமக்கு இனிய வாறே.

தெளிவுரை : யானைத் தோலைப் போர்த்து நின்றபோது உமையவள் அஞ்ச, அதனைக் கண்டு நின்றவனும். திருக்கருப்பறியலூரில் உள்ள தளிர்த்த மாமரங்களில் இருந்து குயில்கள் பாட, கீழே மயில்கள் ஆடுகின்ற சோலைகளையுடைய கொகுடிக் கோயில் அமர்ந்துள்ள எம்பெருமானுமாகிய இறைவனை நாம் உடலை நேரே நிறுத்திக் கண்களைச் சிறிது மூடி உள்ளத்தில் அன்புடன் நிலை பெயராது இருத்தி, இவ்வாறு மனத்தினால் தியானத்தால் அவன் நமக்கு இனியனாகின்றான். இறைவனைத் தியானிக்கும் விதம் சொல்லப்படுகிறது. கொகுடி என்பது முல்லைக் கொடியுள் ஒரு வகை. இக்கோயில் மரத்தினால் ஆயது என்பர்.

300. நீற்றாரும் மேனியராய் நினைவார்தம்
உள்ளத்தே நிறைந்து தோன்றும்
காற்றானைத் தீயானைக் கதிரானை
மதியானைக் கருப்ப றியலூர்க்
கூற்றானைக் கூற்றுதைத்துக் கோல்வளையாள்
அவளோடும் கொகுடிக் கோயில்
ஏற்றானை மனத்தினால் நினைந்தபோது
அவர்நமக்கு இனிய வாறே.

தெளிவுரை : திருநீற்றால் நிறைந்த திருமேனியுடையவராய் தம்மை இடைவிடாது நினைக்கும் அடியவர் மனத்துள் இன்ப மயமாய் நிறைந்து தோன்றுபவரும், காற்று, தீ, சூரியன், சந்திரன் முதலியனவாக இருப்பவரும், தொண்டனுக்காக யமனை உதைத்து, திருக்கருப்பறியலூரில் உள்ள கொகுடிக் கோயில் என்னும் ஆலயத்தில் அழகிய வளைகளை யணிந்த உமாதேவியை ஒரு பாகத்து உடையவரும், இடப வாகனத்தை உடைய வருமான எம்பெருமானை மனத்தினால் பக்தியோடு நினைக்கும்போது அவர் நமக்கு எல்லா வகையாலும் இனியவராயிருக்கும் தன்மை என்ன வியப்பு !

301. முட்டாமே நாள்தோறும் நீர்மூழ்கிப்
பூப்பறித்து மூன்று போதும்
கட்டார்ந்த இண்டைகொண்டு அடிச்சேர்த்தும்
அந்தணர்தம் கருப்ப றியலூர்க்
கொட்டாட்டுப் பாட்டாகி நின்றானைக்
குழகனைக் கொகுடிக் கோயில்
எட்டான மூர்த்தியை நினைந்தபோது
அவர்நமக்கு இனிய வாறே.

தெளிவுரை : நாள்தோறும் காலை, நண்பகல், மாலை என்னும் மூன்று பொழுதுகளிலும் தப்பாமல் நீரின்கண் மூழ்கிப் பூக்களைப் பறித்து, அவைகளை, இண்டை மாலையாகக் கட்டிக்கொண்டு மனத்தைத் தனது திருவடிக்கண் சேர்க்கின்ற அந்தணர்களது திருக்கருப்பறியலூரிலுள்ள கொகுடிக் கோயிலில் முழவம் முதலியவற்றின் கொட்டும் அவற்றிற்கேற்ற கூத்தும். பாட்டும் ஆகியவற்றை விரும்பி இருக்கின்ற மனத்தினால் நினைந்தநோது அவன் நமக்கு இனியன் ஆகின்ற தன்மை சொல்லுதற்கரியது.

302. விருந்தாய சொல்மாலை கொண்டேத்தி
வினைபோக வேலி தோறும்
கருந்தாள வாழைமேல் செங்கனிகள்
தேன்சொரியும் கருப்ப றியலூர்க்
குருந்தாய முள்எயிற்றுக் கோல்வளையாள்
அவளோடும் கொகுடிக் கோயில்
இருந்தானை மனத்தினால் நினைந்தபோது
அவர்நமக்கு இனிய வாறே.

தெளிவுரை : கல்விமான்களான அடியார்கள் புதிய பல சொல் மாலைகளைக் கொண்டு புகழ்ந்து வினை நீங்கப் பெறுமாறு வேலிகள் தோறும் பசிய அடியையுடைய செவ்வாழைகளின்மேல் செவ்விய பழங்கள் சாற்றைக் சொரிகின்ற திருக்கருப்பறியலூரிலுள்ள கொகுடிக் கோயிலில், இளையவாகிய கூரிய பற்களையும் வரிசையான வளைகளையும் உடைய உமாதேவியோடும் கோயில் கொண்டிருக்கின்ற பெருமானை நாம் மனத்தினால் நினைந்த போது, அவன் நமக்கு இனியனாகின்ற தன்மை சொல்லுதற்கு அரியது.

303. பொடியேறு திருமேனிப் பெருமானைப்
பொங்கரவக் கச்சை யானைக்
கடிநாறும் பூம்பொய்கைக் கயல்வாளை
குதிகொள்ளும் கருப்ப றியலூர்க்
கொடியேறி வண்டினமும் தண்தேனும்
பண்செய்யும் கொகுடிக் கோயில்
அடியேறு கழலானை நினைந்தபோது
அவர்நமக்கு இனிய வாறே.

தெளிவுரை : நீறு மிகுந்திருக்கின்ற திருமேனியையுடைய பெருமானும், சீற்றம் மிக்க பாம்பை அரைக்கச்சையாக உடையவனும், நறுமிண பூக்க பூப்பொய்கைகளில் கயல்மீனும் வாளை மீனும் குதிகொள்கின்ற திருக்கருப்பறியலூரில் உள்ள கொடிப் பூக்களில் வண்டு என்றும் தேன் என்றும் சொல்லப்படுகின்ற அவற்றது கூட்டங்கள் மொய்த்து இசைபாடுகின்ற கொகுடிக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனும் திருவடிகளில் கழலை அணிந்திருப்பவனுமாகிய இறைவனை நாம் மனத்தினால் நினைந்த போது, அவன் நமக்கு இனியனாகின்ற தன்மை சொல்லுதற்கரியது.

304. பொய்யாத வாய்மையால் பொடிபூசிப்
போற்றிசைத்துப் பூசை செய்து
கையினால் எரிஓம்பி மறைவளர்க்கும்
அந்தணர்தம் கருப்ப றியலூர்க்
கொய்யுலாம் மலர்ச்சோலைக் குயில்கூவ
மயில்ஆலும் கொகுடிக் கோயில்
ஐயனைஎன் மனத்தினால் நினைந்தபோது
அவர்நமக்கு இனிய வாறே.

தெளிவுரை : மறந்தும் பொய் கூறாத உள்ளத்தோடு திருநீற்றை யணிந்து போற்றி எனச் சொல்லிப் பலவகை வழிபாடுகளையும் செய்து தங்கள் கையால் தீயை வளர்த்து வேத ஒழுக்கத்தைக் கைக் கொண்டுள்ள அந்தணர்களது திருக்கருப்பறியலூரிலுள்ள பூஞ்சோலைகளில் குயில்கள் கூவ, அவற்றோடு மயில்கள் ஆடுகின்ற கொகுடிக் கோயிலில் விரும்பியிருக்கும் இறைவனை யான் நினைந்தபோது அவன் நமக்கு இனியனாகின்றான்.

305. செடிகொள்நோய் உள்ளளவும் தீவினையும்
தீர்ந்தொழியச் சிந்தை செய்ம்மின்
கடிகொள்பூந் தடமண்டிக் கருமேதி
கண்படுக்கும் கருப்ப றியலூர்க்
கொடிகொள்பூ நுண்இடையாள் கோல்வளையாள்
அவளோடும் கொகுடிக் கோயில்
அடிகளைஎன் மனத்தினால் நினைந்தபோது
அவர்நமக்கு இனிய வாறே.

தெளிவுரை : நறுமண மிக்க பூக்களையுடைய பொய்கையின் கரைகளில் கரிய எருமைகள் மிக்கு உறங்குகின்ற திருக்கருப்பறியலூரிலுள்ள கொகுடிக் கோயிலில் உமையம்மையுடன் வீற்றிருக்கின்ற இறைவனை என் மனத்தினால் நினைத்த போது, அவன் நமக்கு இனியனாகின்ற தன்மை சொல்லுதற்கு அரிது. ஆதலின், துன்பந் தருவனவாய் உள்ள நோய்களும் தீவினைகளும் ஒரு தலையாக நீங்குதற் பொருட்டு அவனை நினையுங்கள்.

306. பறையாத வல்வினைகள் பறைந்தொழியப்
பன்னாளும் பாடி ஆடிக்
கறைஆர்ந்த கண்டத்தன் எண்தோளன்
முக்கண்ணன் கருப்ப றியலூர்க்
குறையாத மறைநாவர் குற்றேவல்
ஒழியாத கொகுடிக் கோயில்
உறைவானை மனத்தினால் நினைந்தபோது
அவர்நமக்கு இனிய வாறே.

தெளிவுரை : கருமை நிறம் பொருந்திய கண்டத்தையும் எட்டுத் தோள்களையும், மூன்று கண்களையும் உடையவனும் திருக்கருப்பறியலூரில் உள்ள குறைவுபடாத வேதம் ஓதுகின்ற அந்தணர்கள் தம் சிறு பணிவிடைகளை நீங்காது செய்கின்ற கொகுடிக் கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவனை, நாம் தேயாத வலிய வினைகள் நீங்குமாறு பல நாளும் பாடியும், ஆடியும் மனத்தினால் நினைந்தபோது அவன் நமக்கு இனியனாகின்ற தன்மை சொல்லுதற்கரியது.

307. சங்கேத்து கையானும் தாமரையின்
மேலானும் தன்மை காணாக்
கங்கார்ந்த வார்சடைகள் உடையானை
விடையானைக் கருப்ப றியலூர்க்
கொங்கார்ந்த பொழிற்சோலை சூழ்கனிகள்
பலவுதிர்க்குங் கொகுடிக் கோயில்
எங்கோனை மனத்தினால் நினைந்தபோது
அவர்நமக்கு இனிய வாறே.

தெளிவுரை : திருமாலும் பிரமனும் காண இயலாத, கங்கை பொருந்திய நீண்ட சடைகளை யுடையவனும் இடபத்தை ஊர்பவனும் திருக்கருப்பறியலூரில் உள்ள சோலைகள் சுற்றிலும் கனிகள் பலவற்றை உதிர்க்கின்ற கொகுடிக் கோயிலில் நிலை பெற்றிருக்கின்ற எங்கள் தலைவனுமாகிய இறைவனை, நாம் மனத்தினால் நினைத்த போது அவன் நமக்கு இனியனாகின்ற தன்மை சொல்லுதற்கு அரியது.

308. பண்டாழின் இசைமுரலப் பன்னாளும்
பாவித்துப் பாடி ஆடிக்
கண்டார்தங் கண்குளிருங் களிக்கமுகம்
பூஞ்சோலைக் கருப்ப றியலூர்க்
குண்டாடும் சமணரும் சாக்கியரும்
புறங்கூறும் கொகுடிக் கோயில்
எண்தோள் எம்பெருமானை  நினைந்தபோது
அவர்நமக்கு இனிய வாறே.

தெளிவுரை : கமுகம் சோலைகளையும் பூஞ்சோலைகளையும் உடைய திருக்கருப்பறியலூரில் உள்ள கொகுடிக் கோயிலில் இருக்கின்ற, சமணராலும் புத்தராலும் புறங்கூறப்படுகின்ற எட்டுத் தோள்களையுடைய எம் பெருமானை, நாம் பல நாட்களும் உள்ளத்திற் கருதி, பண் பொருந்துதற்கு அடிநிலையாகிய இனிய சுருதியை, பல இசைப்பாடல்களைப் பாடியும் ஆடியும் மனத்தினால் நினைந்த போது அவன் நமக்கு இனியனாகின்ற தன்மை சொல்லுதற்கரியது. கீழ்மைத் தொழில்கள்வைதிகரை இகழ்தல். பகைத்தல் முதலியன.

309. கலைமலிந்த தென்புலவர் கற்றோர்தம்
இடர்தீர்க்கும் கருப்ப றியலூர்க்
குலைமலிந்த கோள்தெங்கு மட்டொழுகும்
பூஞ்சோலைக் கொகுடிக் கோயில்
இலைமலிந்த மழுவானை மனத்தினால்
அன்புசெய்து இன்பம் எய்தி
மலைமலிந்த தோள்ஊரன் வனப்பகைஅப்
பன்உரைத்த வண்த மிழ்களே.

தெளிவுரை : திருக்கருப்பறியலூரில் உள்ள குலைகள் நிறைந்த வலிய தென்னை மரங்களையும் தேன் ஒழுகுகின்ற பூஞ்சோலைகளையும் உடைய கொகுடிக் கோயிலில் எழுந்தருளியிருக்கிற இறைத்தன்மை மிகுந்த மழுப்படையையுடைய இறைவனை வனப்பகை என்பவளுக்குத் தந்தையாகிய வலிய தோள்களையுடைய நம்பியாரூரன் அன்பினால் இன்பமுற்றுப் பாடிய வளப்பமான இத்தமிழ்ப் பாமாலையே தன்னைக் கற்றவர்களாகிய கல்வி மிக்க தமிழ்ப் புலவர்களது துன்பத்தினைக் களையும்.

திருச்சிற்றம்பலம்

31. திரு இடையாறு (அருள்மிகு மருந்தீசர் திருக்கோயில், டி. இடையாறு,விழுப்புரம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

310. முந்தை யூர்முது குன்றம்
குரங்கணில் முட்டம்
சிந்தை யூர்நன்று சென்றடை
வான்திரு வாரூர்
பந்தை யூர்பழை யாறு
பழனம்பைஞ் ஞீலி
எந்தையூர் எய்த மானிடை
யாறிடை மருதே.

தெளிவுரை : அடியார்களது உள்ளமாகிய ஊரையே விரும்பிச் சென்று அடைபவனும், எம் தந்தையும், யாவராலும் அடையப்படும் பெருமானும் ஆகிய இறைவனது ஊர்கள் பழைய ஊராகிய முதுகுன்றம். குரங்கணில் முட்டம். ஆரூர். மகளிரது பந்துகள் உலாவுகின்ற பழையாறு, பழனம், பைஞ்ஞீலி இடையாறு, இடைமருது என்னும் இவைகளே.

311. சுற்றுமூர் சுழியல்
திருச்சோ புரந்தொண்டர்
ஒற்றுமூர் ஒற்றியூர்
திருவூறல் ஒழியாப்
பெற்றம் ஏறிபெண்
பாதியிடம் பெண்ணைத்தெண்ணீர்
எற்றும்ஊர் எய்தமான்
இடையாறு இடைமருதே.

தெளிவுரை : இடபத்தை ஒழியாது ஏறுகின்றவனும், உமாதேவியை இடப்பாகத்தில் உடையவனும் யாவராலும் அடையப்படும் பெருமானும் ஆகிய இறைவனது ஊர்கள் அடியார்கள் சென்று சூழும் ஊராகிய சுழியல், சோபுரம், அவர்கள் ஆராய்கின்ற ஒற்றியூர் ஊறல், பெண்ணையாற்றின் தெளிவாகிய நீர் மோதுகின்ற இடையாறு, இடைமருது என்னும் இவைகளே.

பெற்றம் ஏறி, பெண்பாதி என்பன பெயர்கள் என்பாருள் உளர்.

312. கடங்களூர் திருக்காரிக்
கரைகயி லாயம்
விடங்களூர் திருவெண்ணி
அண்ணா மலைவெய்ய
படங்களூர் கின்றபாம்
பரையான் பரஞ்சோதி
இடங்கொளூர் எய்தமான்
இடையாறு இடைமருதே.

தெளிவுரை : கொடிய பாடங்களோடு ஊர்ந்து செல்லும் பாம்புகளை அரையில் உடையவனும், மேலான ஒளியாய் உள்ளவனும், யாவராலும் அடையப் படுவனுமாகிய இறைவன் தனக்கு இடமாகக் கொள்ளுகின்ற ஊர்கள் செய்கடன்கள் நிரம்ப நிகழ்கின்ற காரிகரை, கயிலாயம், நீரும் தேனும் மிக்குப் பாய்கின்ற வெண்ணி, அண்ணாமலை, இடையாறு, இடைமருது என்னும் இவைகளே. கடங்களூர், விடங்களூர் என்பன வைப்புத் தலங்கள் என்பாரும் உளர்.

313. கச்சையூர் காவங் கழுக்குன்றம் காரோணம்
பிச்சையூர் திரிவான் கடவூர் வடபேறூர்
கச்சியூர் கச்சி, சிக் கல்நெய்த்தா னம்மிழலை
இச்சையூர் எய்தமான் இடையாறு இடைமருதே.

தெளிவுரை : பிச்சைக்கு ஊர்தோறும் திரிபவனும், யாவராலும் அடையப்படும் பெருமானும் ஆகிய இறைவன் விரும்புதல் செய்கின்ற ஊர்கள், கச்சையூர், பலகாக்கள், அழகிய கழுக்குன்றம், காரோணம், கடவூர், வடபேறூர், கச்சணிந்தவளாகிய காமக்கோட்டி அம்மையது ஊரெனப்படுகின்ற காஞ்சி, சிக்கல், நெய்த்தானம், வீழிமிழலை, இடையாறு, இடைமருது என்னும் இவைகளே. காரோணம் என்னும் பெயருடைய கோவில்கள் குடந்தை, நாகை முதலிய சில இடங்களில் உள்ளன.

314. நிறையனூர் நின்றியூர்
கொடுங்குன்றம் அமர்ந்த
பிறையனூர் பெருமூர்
பெரும்பற்றப் புலியூர்
மறையனூர் மறைக்காடு
வலஞ்சுழி வாய்த்த
இறையனூர் எய்தமான்
இடையாறு இடைமருதே.

தெளிவுரை : எங்கும் நிறைந்தவனும், விரும்பிச் சூடிய பிறையை உடையவனும், வேதத்தை ஓதுபவனும், வலஞ்சுழியில் பொருந்தியுள்ள கடவுளும், யாவராலும் அடையப்படும் பெருமானும் ஆகிய இறைவனது ஊர்கள் நின்றியூர், கொடுங்குன்றம், பெருமூர். பெரும்பற்றப்புலியூர், மறைக்காடு, இடையாறு, பிறையனூர், மறையனூர், இறைவனூர் என்பவற்றை வைப்புத் தலங்களாகக் கொள்வாரும் உளர்.

315. திங்களூர் திருவா
திரையான் பட்டினமூர்
நங்களூர் நறையூர்
நனிநா லிசைநாலூர்
தங்களூர் தமிழான்
என்றுபா விக்கவல்ல
எங்களூர் எய்தமான்
இடையாறு இடைமருதே.

தெளிவுரை : யாவராலும் அடையப்படும் பெருமானாகிய இறைவனுக்கு உரியதாய் உள்ள ஊர்கள் திங்களூர், திருவாதிரையான்பட்டினம் என்னும் ஊர். நறையூர், மிகவும் பரவிய புகழையுடைய நாலூர், இடையாறு, இடைமருது என்னும் இவைகளே. நங்களூர், தங்களூர், எங்களூர் என்பவை வைப்புத் தலங்கள் என்றும் பொருள் கொள்ளலாம்.

316. கருக்கநஞ் சமுதுண்ட
கல்லாலன் கொல்ஏற்றன்
தருக்கருக் கனைச்செற்
றுகந்தான்தன் முடிமேல்
எருக்கநாண் மலரிண்டை
யும்மத்த முஞ்சூடி
இருக்குமூர் எய்தமான்
இடையாறு இடைமருதே.

தெளிவுரை : வெப்பமுள்ள நஞ்சை உண்டவனும், கல்லால மர நிழலில் இருப்பவனும், கொல்லும் இடபத்தை ஏறுபவனும், செருக்குற்ற சூரியனை ஒறுத்துப் பின் அருள் செய்தவனும், தனது முடியின்மேல் அன்று மலர்ந்த எருக்கம் பூவினாலாகிய இண்டை மாலையையும் ஊமத்தம் பூவையும் சூடியவனும், யாவராலும் அடையப்படும் பெருமானும் ஆகிய இறைவன் வீற்றிருக்கும் ஊர்கள் இடையாறு, இடைமருது என்னும் இவைகளே.

317. தேசனூர் வினைதேய
நின்றான் திருவாக்கூர்
பாசனூர் பரமேட்டி
பவித்திர பாவ
நாசனூர் நனிபள்ளி
நள்ளாற்றை அமர்ந்த
ஈசனூர் எய்தமான்
இடையாறு இடைமருதே.

தெளிவுரை : ஒளி வடிவினனும், தீவினைகள் குறைய நிற்பவனும், திருவருளாகிய தொடர்பினை உடையவனும், மேலிடத்தில் இருப்பவனும் தூயவனும் பாவத்தைப் போக்குபவனும், நள்ளாறு என்னும் தலத்தை விரும்பியிருக்கின்ற முதல்வனும், யாவராலும் அடையப்படும் பெருமானும் ஆகிய இறைவனது ஊர்கள் ஆக்கூர், நனிப்பள்ளி, இடையாறு, இடைமருது என்னும் இவைகளே.

நான்கு அடிகளிலும் உள்ள முதல் சீர்களைத் தேசனூர், பாசனூர், நாசனூர், ஈசனூர் என வைப்புத் தலங்களாகவும் கொள்ளலாம்.

318. பேறனூர் பிறைச்சென்
னியினான் பெருவேளூர்
தேறனூர் திருமா
மகள்கோன் திருமாலோர்
கூறனூர் குரங்காடு
துறைதிருக் கோவல்
ஏறனூர் எய்தமான்
இடையாறு இடைமருதே.

தெளிவுரை : எல்லா உயிர்கட்கும் பேறாகின்றவனும் பிறையை யணிந்த சடையை யுடையவனும், தெளியப்படுபவனும், திருமகளுக்குத் தலைவனாகிய திருமாலை ஒரு பாகத்தில் உடையவனும், இடபத்தை உடையவனும், யாவராலும் அடையப்படும் பெருமானும் ஆகிய இறைவனது ஊர்கள் பெருவேளூர், குரங்காடுதுறை, கோவலூர், இடையாறு, இடைமருது என்னும் இவைகளே. பேறனூர், தேறனூர், கூறனூர், ஏறனூர் என்பனவற்றை வைப்புத் தலங்கள் என்றும் கொள்ளலாம்.

319. ஊறிவா யினநாடிய
வன்தொண் டன்ஊரன்
தேறுவார் சிந்தை
தேறுமிடம் செங்கண் வெள்ளேறு
ஏறுவார் எய்தமான்
இடையாறு இடைமருதைக்
கூறுவார் வினைஎவ்
விடமெய் குளிர்வாரே.

தெளிவுரை : சிவந்த கண்களையுடைய வெள்ளிய விடையை ஏறுகின்றவரும், யாவராலும் அடையப்படும் பெருமானுமாய் உள்ள இறைவரது இடையாற்றையும் இடை மருதையும், வன்தொண்டனாகிய நம்பியாரூரன் சுவை ஊறும் வாயினையுடையவனாய் தெளியத் தருவாரது உள்ளங்கள் தெளிவதற்கு வாயிலாய் உள்ள தலங்களோடு நினைந்து பாடிய இப்பாடல்களைச் சொல்லுகின்றவர்கள் வினைத் துன்பம் நீங்க உடல் குளிர்வார்கள்.

திருச்சிற்றம்பலம்

32. திருக்கோடிக் குழகர் (அருள்மிகு கோடிக்குழகர் திருக்கோயில், கோடியக்காடு, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

320. கடிதாய்க் கடற்காற்று
வந்தெற்றக் கரைமேல்
குடிதான் அயலேஇருந்
தாற்குற்றம் ஆமோ
கொடியேன் கண்கள்
கண்டனகோ டிக்குழகீர்
அடிகேள் உமக்கார்
துணையாக இருந்தீரே.

தெளிவுரை : கோடிக்குழகரே, அடிகளே, கடற் காற்றுக் கடிதாய் வந்து வீச, இக் கடற்கரையின்மேல் உமக்கு யார் துணையாய் இருக்க இருக்கின்றீர்? நீர் இங்குத் தனித்து இருத்தலையே கொடியேனது கண்கள் கண்டன. குடிதான் வேறோர் இடத்தில் இருந்தால் யாதேனும் குற்றம் உண்டாகுமோ? சொல்வீர்.

321. முன்றான் கடல்நஞ்சம்
உண்ட அதனாலோ
பின்றான் பரவைக்கு
உபகாரம் செய்தாயோ
குன்றாப் பொழில்சூழ்
தருகோடிக் குழகா
என்தான் தனியே
இருந்தாய் எம்பிரானே.

தெளிவுரை : குறையாத சோலைகள் சூழ்ந்த கோடிக் கரையில் உள்ள அழகனே, எம்பெருமானே. முன்பு கடலில் தோன்றிய நஞ்சினை உண்ட அதனால், மீட்டும் அவ்வாறு தோன்றின் அதனை உண்டற் பொருட்டோ? அல்லது கடல் தனியே இருத்தல் கருதி அதற்குத் துணையாய் இருத்தல் பொருட்டோ? எக் காரணத்தால் இங்கு நீ தனியே இருக்கின்றாய்? சொல்.

322. மத்தம் மலிசூழ்
மறைக்காடு அதன்தென்பால்
பத்தர் பலர்பாட
இருந்த பரமா
கொத்தார் பொழில்சூழ்
தருகோடிக் குழகா
எத்தால் தனியே
இருந்தாய் எம்பிரானே.

தெளிவுரை : களிப்புடையவர் நிறையச் சூழ்ந்த திருமறைக்காட்டிற்குத் தென்பால், அடியார்கள் பலர் பாடித் துதிக்க எழுந்தருளியிருக்கும் பரமனே, பூங்கொத்துக்கள் பொருந்திய சோலைகள் சூழ்ந்த கோடிக்கரையின்கண் உள்ள அழகனே. எம்பெருமானே, எக் காரணத்தால் நீ இங்குத் தனியே இருக்கின்றாய்? சொல்.

323. காடேல் மிகவாலிது
காரிகை அஞ்சக்
கூடிப் பொந்தில்
ஆந்தைகள்கூ கைகுழறல்
வேடித் தொண்டர்
சாலவும் தீயர்சழக்கர்
கோடிக் குழகா
இடங்கோயில் கொண்டாயே.

தெளிவுரை : கோடிக்கரைக்கண் உள்ள அழகனே, இங்குள்ள காடோ மிகப்பெரியது: எப்பொழுதும் உன் தேவி அச்சங்கொள்ளுமாறு மரப் பொந்தில் உள்ள ஆந்தைகளும் கூகைகளும் பலகூடிக் கூக்குரல் இடுதல் இடையறாது. வேட்டைத் தொழில் செய்து இங்கு வாழ்பவர் மிகவும் கொடியவர். வஞ்சனை உடையவர் இவ்விடத்தில் உறைவிடத்தைக் கொண்டாயே; இஃது ஏன்?

324. மையார் தடங்கண்ணி
பங்காகங் கையாளும்
மெய்ஆகத் திருந்தனள்
வேறிடம் இல்லை
கையார் வளைக்காடு
காளோடும் உடனாய்க்
கொய்யார் பொழிற்கோடி
யேகோயில் கொண்டாயே.

தெளிவுரை : மை பொருந்திய கண்களையுடைய இறைவியின் பாகத்தை உடையவனே! கங்கை என்பவளும் உனது அழிவில்லாத திருமேனியில் இருக்கின்றாளேயன்றி அவளுக்கு வேறு இடம் இல்லை. இங்ஙனமாகக் கையில் நிறைந்த வளைகளையுடைய காடுகளோடும் கூடி, சோலைகள் நிறைந்த கோடிக்கரையை உறைவிடமாகக் கொண்டாய்; இஃது எவ்வாறு?

325. அரவேர் அல்குலாளை
ஓர்பாகம் அமர்ந்து
மரவங் கமழ்மா
மறைக்காடு அதன்தென்பால்
குரவப் பொழில்சூழ்
தருகோடிக் குழகா
இரவே துணையாய்
இருந்தாய் எம்பிரானே.

தெளிவுரை : குங்கும மரத்தின் பூக்கள் மணம் வீசுகின்ற பெருமை பொருந்திய திருமறைக்காட்டிற்குத் தென்பால் குராமரச் சோலை சூழ்ந்த கோடிக்கரைக்கண் உள்ள அழகனே ! எம்பெருமானே ! உமையை ஒரு பாகத்தில் விரும்பி வைத்து, இங்கு இராக்காலமே துணையாக இருக்கின்றாய். இஃது ஏன்?

326. பறையுங் குழலும்
ஒலிபாடல் இயம்ப
அறையும் கழலார்க்க
நின்றாடும் அமுதே
குறையாப் பொழில்சூழ்
தருகோடிக் குழகர்
இறைவா தனியே
இருந்தாய் எம்பிரானே.

தெளிவுரை : பறையும் குழலும் ஒலிக்கின்ற பாடலும் முழங்க, ஒலிக்கின்ற கழல் ஆரவாரிக்கும்படி அம்பலத்தில் தோன்றி நின்று ஆடுகின்ற அமுதம் போல்பவனே, குறைதல் இல்லாத சோலைகள் சூழ்ந்த கோடிக்கரையில் உள்ள அழகனே, இறைவனே. எம் பெருமானே, நீ ஏன் இங்குத் தனியாய் இருக்கின்றாய்?

327. ஒற்றியூர் என்ற
ஊனத்தினால் அதுதானோ
அற்றப் படஆ
ரூரதுஎன்று அகன்றாயோ
முற்றா மதிசூடிய
கோடிக் குழகா
எற்றால் தனியே
இருந்தாய் எம்பிரானே.

தெளிவுரை : முற்றாத சந்திரனைச் சூடியுள்ள கோடிக்கரையில் உள்ள அழகனே, எம்பெருமானே, ஒற்றி என்ற குறையினால் ஒற்றியூரையும் ஆருடையது என்ற காரணத்தினால் ஆரூரையும் அறுதியாக நீங்கி விட்டாயோ? எதனால் இங்குத் தனியே வந்து இருக்கின்றாய்?

328. நெடியானொடு நான்முக
னும்அறி ஒண்ணாப்
படியான்பலி கொள்ளும்
இடங்குடி இல்லை
கொடியார்பலர் வேடர்கள்
வாழுங் கரைமேல்
அடிகேள்என்ப தாயிடம்
கோயில்கொண் டாயே.

தெளிவுரை : திருமாலும் பிரமனும் அறிய இயலாத தன்மையை உடையவனே. தலைவனே. நீ பிறரது வழிபாட்டினை ஏற்க நினைக்குமிடத்து அதனைச் செய்வதற்கு இங்கு நற்குடி ஒன்றேனும் இல்லை. அதற்கு மாறாகக் கொடிய வேடர்கள் பலர் வாழ்கின்றனர். இத் தன்மையதான இக்கடற்கரைமேல் விருப்பம் உடையையாய் இவ்விடத்தை உறைவிடமாகக் கொண்டாயே: இஃது ஏன்?

329. பாரூர்மலி சூழ்மறைக்
காடதன் தென்பால்
ஏரார்பொழில் சூழ்தரு
கோடிக் குழகை
ஆரூரன் உரைத்தன
பத்திவை வல்லார்
சீரூர்சிவ லோகத்து
இருப்பவர் தாமே.

தெளிவுரை : உலகில் உள்ள ஊர்களில் மகிழ்ச்சி பொருந்துதற்குக் காரணமான திருமறைக்காட்டின் தென்பால், அழகு நிறைந்த சோலைகள் சூழ்ந்த கோடிக்கரைக்கண் உள்ள அழகனை, நம்பியாரூரன் பாடியவையாகிய இப்பத்துப் பாடல்களையும் நன்கு பாட வல்லவர், சிறப்புப் பொருந்திய சிவலோகத்தில் இருப்பவர்களே யாவர்.

குழகனைக் குழகு என்றார்.

திருச்சிற்றம்பலம்

33. நமக்கு அடிகளாகிய அடிகள்

திருச்சிற்றம்பலம்

330. பாறுதாங்கிய காடரோபடு
தலையரோமலைப் பாவையோர்
கூறுதாங்கிய குழகரோகுழைக்
காதரோகுறுங் கோட்டிள
ஏறுத்தாங்கிய கொடியரோசுடு
பொடியரோஇலங் கும்பிறை
ஆறுதாங்கிய சடையரோநமக்கு
அடிகளாகிய அடிகளே.

தெளிவுரை : இத் திருப்பதிகம், திருவாரூர்ப் பெருமானைப் பணிவதால் உண்டான பேரின்பம் பெரிதும் சிறந்தோங்கினமையால் அவரது இயல்புகளை அடியார்களை வினவுமுகத்தால் பாராட்டி அருளிச் செய்தது என்பது சேக்கிழாராலேயே குறிப்பிடப்பட்டது. துணிந்து திட்பம் எய்திய பொருளை அங்ஙனம் திட்பம் எய்தாதது போல வினாவுதல், நுகர்தல் வேட்கையாலேதாம். திருநாவுக்கரசு நாயனாரும், இவ்வாறு தமது திருத்தாண்டகங்களுள் அருளிச் செய்தமை அறிக.

331. இட்டிதாகவந்து உரைமினோ நுமக்கு
இசையுமாநினைந்து ஏத்துவீர்
கட்டிவாழ்வது நாகமோசடை
மேலும்நாறு கரந்தையோ
பட்டிஏறுகந்து ஏறுஅரோபடு
வெண்டலைப்பலி கொண்டுவந்து
அட்டிஆளவும் கிற்பரோநமக்கு
அடிகளாகிய அடிகளே.

தெளிவுரை : இறைவரை உமக்கு ஏற்றவற்றால் நினைந்து துதிக்கின்றவர்களே, அருகில் வந்து சொல்லுமின், நம் தலைவர் கழுத்து, கை, அரை முதலிய இடங்களில் கட்டிக்கொண்டு வாழ்வது பாம்போ? சடைமேல் அணிவதும் மணம் வீசுகின்ற கரந்தையோ? அவர் தொழுவில் கட்டப்படும் எருதையே விரும்பி ஏறுகின்றவரோ? தம் அடியார்களை அழிந்த வெண்தலையில் பிச்சை ஏற்றுக்கொண்டு வந்து இட்டும் பணிகொள்ள வல்லரோ?

332. ஒன்றினீர்கள்வந்து உரைமினோநுமக்கு
இசையுமாநினைந்து ஏத்துவீர்
குன்றிபோல்வதோர் உருவரோகுறிப்பு
ஆகிநீறுகொண்டு அணிவரோ
இன்றியேஇலர் ஆவரோஅன்றி
உடையராய்இலர் ஆவரோ
அன்றியேமிக அறவரோநமக்கு
அடிகளாகிய அடிகளே.

தெளிவுரை : இறைவரை உமக்கு ஏற்ற வகையில் நினைந்து துதிக்கின்றவர்களே, நீங்கள் ஒன்றுபட்டு வந்து சொல்லுங்கள். நம் தலைவர் குன்றிமணி போலும் நிறம் உடையவரோ? நீற்றையே குறிக்கோளாகக் கொண்டு அணிவரோ? யாதொன்றும் இலராய் இரத்தல் தொழிலைச் செய்வரோ? மற்று எல்லாம் உடையராய் இருந்தும் இரத்தல் தொழிலைச் செய்வரோ? இவையன்றித் துறவறத்தை மிக உடையரோ?

333. தேனைஆடுமுக் கண்ணரோமிகச்
செய்யரோவெள்ளை நீற்றரோ
பானெய்ஆடலும் பயில்வரோதமைப்
பற்றினார்கட்கு நல்லரோ
மானைமேவிய கண்ணினான்மலை
மங்கைநங்கையை அஞ்சவோர்
ஆனையீர்உரி போர்ப்பரோ நமக்கு
அடிகளாகிய அடிகளே.

தெளிவுரை : தொண்டர்களே ! நம் தலைவர் மூன்று கண்களை உடையவரோ? மிகச் சிவந்த நிறம் உடையவரோ? திருநீற்றை அணிந்தவரோ? பால், நெய், தேன் இவைகளை ஆடுதலையும் பலகால் செய்வரோ? தம்மையே துணையாகப் பற்றி நிற்பவர்க்கு நல்லவரோ? மானை நிகர்த்த கண்களையுடையவளாகிய மகளிருள் சிறந்த மலை மங்கையை அஞ்சுவித்தற் பொருட்டு ஓர் ஆனையை உரித்த தோலைப் போர்த்துக் கொண்டிருப்பதோ? சொல்லுங்கள்.

334. கோணல்மாமதி சூடரோகொடு
கொட்டிகாலர் கழலரோ
வீணைதானவர் கருவியோவிடை
ஏறுவேத முதல்வரோ
நாணதாகஓர் நாகங்கொண்டரைக்
கார்ப்பரோநலம் ஆர்தர
ஆணையாகநம் அடிகளோநமக்கு
அடிகளாகிய அடிகளே.

தெளிவுரை : தொணடர்களே ! நமக்குத் தலைவராய் உள்ளவர் வளைந்த பிறைச்சந்திரனை தலையில் சூடுபவரோ? கொடுகொட்டி என்னும் கூத்தை ஆடுபவரோ? காலில் ஒரு கழலை அணிபவரோ? அவரது இசைக்கருவி வீணையோ? அவர் ஏறுவது விடையோ? அவர் வேதத்திற்குத் தலைவரோ? அரைஞாண் கயிறாகப் பாம்பு ஒன்றைப் பிடித்து அரையில் கட்டுவரோ? நம்மேல் ஆணையாக நமக்கு நன்மை நிரம்புமாறு நம்மை ஆளுவரோ? சொல்வீராக.

335. வந்துசொல்லுமின் மூடனேனுக்கு
வல்லவா நினைந்து ஏத்துவீர்
வந்தசாயினை அறிவரோதம்மை
வாழ்த்தினார்கட்கு நல்லரோ
புந்தியால்உரை கொள்வரோஅன்றிப்
பொய்யில்மெய்யுரைத்து ஆள்வரோ
அன்றியேமிக அறவரோநமக்கு
அடிகளாகிய அடிகளே.

தெளிவுரை : பெருமானை வல்லபடி தியானித்துக் துதிக்கும் அன்பர்களே ! பெருமான் தம் அடியவர்க்கு நேரும் தளர்ச்சியை அறிவாரோ? தம்மைத் துதிப்பவர்க்கு நல்லவராய் அருள் புரிவாரோ? தமது திருவுள்ளத்தில் எமது புன் மொழிகளை ஏற்றுக் கொள்வாரோ? அது அன்றியும் எம்மை ஆட்கொள்ளும் வகையில் பொய்படாத மெய் சொல்லி தவறாமல் ஆட்கொள்வாரோ? இவையொன்றும் செய்யாமல் நமக்குத் தலைவராகிய பெருமான் கருமப் பயன்படி ஆகுக என்றிருக்கும் தரும வடிவினரோ? நீங்கள் வந்து ஒன்றும் அறியாத மூடனாகிய எனக்குச் சொல்லுங்கள்.

336. மெய்யென்சொல்லுமின் நமரங்காள்உமக்கு
இசையுமாநினைந்து ஏத்துவீர்
கையிற்சூலமது உடையரோகரி
காடரோகறைக் கண்டரோ
வெய்யபாம்பரை ஆர்ப்பரோவிடை
ஏறரோகடை தோறும்சென்று
ஐயங்கொள்ளும்அவ் அடிகளோ நமக்கு
அடிகளாகிய அடிகளே.

தெளிவுரை : இறைவரை உமக்கு ஏற்குமாற்றால் நினைந்து துதிக்கும் நம்மவர்களே ! நீவிர் அறிந்த உண்மைகள் யாவை? அவற்றைச் சொல்லுமின். நம் தலைவர் கையில் சூலம் உடையவரோ? கரிந்த காட்டில் வாழ்பவரோ? கருமையான கண்டத்தை உடையவரோ? கொடிய பாம்பை அரையிற் கட்டுபவரோ? விடையை ஏறுதல் வழக்கமோ? இல்லத்து வாயில்தோறும் சென்று பிச்சை ஏற்கின்ற பற்றில்லாத துறவியோ?

337. நீடுவாழ்பதி உடையரோஅயன்
நெடியமாலுக்கும் நெடியரோ
பாடுவாரையும் உடையரோதமைப்
பற்றினார்கட்கு நல்லரோ
காடுதான் அரங் காகவேகைகள்
எட்டினோடுஇல யம்பட
ஆடுவார்எனப் படுவரோநமக்கு
அடிகளாகிய அடிகளே.

தெளிவுரை : தொண்டர்களே, நம் தலைவர் எஞ்ஞான்றும் ஒரு தன்மையால் வாழ்வதற்குரிய உலகத்தை உடையவரோ? பிரமன், திருமால் என்னும் இவர்களுக்கும் பெரியவரோ? தம்மைப் புகழ்ந்துபாடும் புரக்கப்படுவாரையும் உடையவரோ? துணையாக வந்தவர்களுக்கு நலம் செய்வாரோ? காடே அரங்காக எட்டுக் கைகளினாலும் குறிப்புணர்த்தி தாளத்தோடு பொருந்த ஆடுவாரோ? சொல்லுங்கள்.

338. நமண நந்தியும் கருமவீரனும்
தருமசேனனும் என்றிவர்
குமண மாமலைக் குன்றுபோல்நின்று
தங்கள்கூறைஒன்று இன்றியே
ஞமணஞாஞண ஞாணஞோணமென்று
ஓதியாரையும் நாணிலா
அமணராற்பழிப்பு உடையரோநமக்கு
அடிகளாகிய அடிகளே.

தெளிவுரை : அடியார்களே ! நம் தலைவர் குமணனது பெரிய மலையிலுள்ள சிறிய குன்றுகள் போலத் தம்மிடத்தில் உடையொன்றும் இல்லாமல் நின்று கொண்டு, ஞமணம், ஞாஞணம், ஞாணம், ஞோணம் என்று சில மந்திரங்ளைச் சொல்லிக்கொண்டு ஒருவரையும் நாணுதல் இல்லாத, நமணநந்தி, கரும வீரன், தருமசேனன் என்ற இன்னோரன்ன பெயர்களையுடைய சமணர்களால் பழிக்கப்படுதலை உடையவரோ? சொல்லுங்கள்.

339. படிசெய்நீர்மையில் பத்தர்காள்பணிந்து
ஏத்தினேன்பணி யீர்அருள்
வடிவிலான்திரு நாவலூரன்
வனப்பகையப்பன் வன்தொண்டன்
செடியனாகிலும் தீயனாகிலும்
தம்மையேமனம் சிந்திக்கும்
அடியனூரனை ஆள்வரோநமக்கு
அடிகளாகிய அடிகளே.

தெளிவுரை : அடியார்களே ! அடியவர் செயல்களைப் படியெடுக்கும் தன்மையில் திருத்தம் இல்லாதவனும். திருநாவலூரில் தோன்றியவனும், வனப்பகைக்குத் தந்தையும் ஆகிய வன்தொண்டனேன் உங்களை வணங்கித் துதித்தேன். கீழோனாயினும் கொடியோனாயினும் தம்மையே எப்போதும் மனத்தில் நினைக்கின்ற அடியேனாகிய நம்பியாரூரனை நம் தலைவர் கைவிடாமல் ஆட்கொள்வாரோ? அவரது திருவருள் இருந்தவாற்றைப் பணித்தருளுங்கள்.

திருச்சிற்றம்பலம்

34. திருப்புகலூர் (அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்புகலூர், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

340. தம்மையேபுகழ்ந்து இச்சைபேசினும்
சார்வினும்தொண்டர் தருகிலாப்
பொய்ம்மையாளரைப் பாடாதேஎந்தை
புகலூர்பாடுமின் புலவீர்காள்
இம்மையேதரும் சோறுங்கூறையும்
ஏத்தலாம்இடர் கெடலுமாம்
அம்மையேசிவ லோகம்ஆள்வதற்கு
யாதும்ஐயுற வில்லையே.

தெளிவுரை : தம்மையே புகழ்ந்து இச்சகமாகப் பேசினாலும் தம்மை அடுத்திருந்தாலும் தொண்டருக்குச் சிறிதும் தரமாட்டாத பொய்மையுடைய மானுடரைப் பாடாமல் என் அப்பன் எழுந்தருளிய திருப்புகலூரைப் பணிந்து பாடுங்கள், புலவர்களே, அவ்வாறு பாடினால் இம்மையில் வேண்டுவனவாகிய நல்ல உணவும் சிறந்த உடையும் அவன் தருவான். இவ்வகையால் இறைவனைத் துதித்தலும் ஆகும். அதனால் துன்பங்களையெல்லாம் போக்கிக் கொள்ளலும் ஆகும். மறுமையில் சிவலோகத்தை நம்முடையதாக ஆளுவதற்கும் ஐயமில்லை.

341. மிடுக்கிலாதானை வீமனேவிறல்
விசயனேவில்லுக்கு இவனென்று
கொடுக்கிலாதானைப் பாரியேஎன்று
கூறினும்கொடுப் பார்இலை
பொடிக்கொள்மேனியெம் புண்ணியன்புக
லூரைப்பாடுமின் புலவீர்காள்
அடுக்குமேல்அமர் உலகம்ஆள்வதற்கு
யாதுமையுற வில்லையே.

தெளிவுரை : புலவர்களே. வலியும் வீரமும் இல்லாதவனை, இவன் மல்லுக்கு வீமனே போல்வான் என்றும் வில்லுக்கு வெற்றியையுடைய அருச்சுனனே போல்வான் என்றும் கொடுத்தற்குணம் இல்லாதவனை. இவன் கொடைக்குப் பாரியே போல்வான் என்றும் இல்லது கூறிப்பாடினும் நீவிர் வேண்டுவதை நுமக்குக் கொடுப்பார் இவ்வுலகில் ஒருவரும் இல்லை. ஆதலின் திருநீறு பூசிய சிவபிரானது திருப்புகலூரைப் பாடுமின்; பாடினால் அமரரது உலகத்தை ஆளுதல் உளதாம். இதற்கு ஐயுறவு இல்லை.

342. காணியேற்பெரிது உடையனேகற்று
நல்லனேசுற்றம் நற்கிளை
பேணியேவிருந்து ஓம்புமேஎன்று
பேசினும்கொடுப் பார்இலை
பூணிபூண்டுழப் புட்சிலம்புந்தண்
புகலூர்பாடுமின் புலவீர்காள்
ஆணியாய்அமர் உலகம்ஆள்வதற்கு
யாதும்ஐயுறவு இல்லையே.

தெளிவுரை : புலவர்களே ! நிலம் சிறிதும் இல்லாதவனை காணியோ பெரிதுடையன் என்றும், கல்வியில்லாத பேதையை, கற்று நலம் பெற்றவன் என்றும், ஒருவரோடு உரையாடாதவனை, நண்பரையும் நல்ல சுற்றத்தாரையும் பேணுதல் உடையவன் என்றும், தானே தமியனாய் உண்டு களித்திருப்பவனை விருந்தினரை நன்கு உபசரிப்பவன் என்றும் பொய் சொல்லிப் பாடினாலும் உமக்கு வேண்டியதைக் கொடுப்பவர் இவ்வுலகில் ஒருவரும் இல்லை. ஆதலின் வயல்கள் சூழ்ந்த திருப்புகலூரைப் பாடுமின். பாடினால் அமரர் உலகமாகிய தேர்க்கு அச்சாணியாய் நின்று அதனை ஆளலாம். இதற்கு ஐயுறவு இல்லை.

343. நரைகள் போந்துமெய் தளர்ந்துமூத்துடல்
நடுங்கிநிற்கும்இக் கிழவனை
வரைகள்போல்திரள் தோளனேஎன்று
வாழ்த்தினும்கொடுப் பார்இலை
புரைவெள்ளேறுடைப் புண்ணியன்புக
லூரைப்பாடுமின் புலவீர்காள்
அரையனாய்அமர் உலகம்ஆள்வதற்கு
யாதும்ஐயுற வில்லையே.

தெளிவுரை : மெய்ம்முழுதும் நரைகள் வரப்பெற்று, மூப்படைந்து உடல் நடுங்கி, கால் தளர்ந்துள்ள கிழவனை, திரண்ட தோள்களையுடைய காளையே, என்று பொய்யாகப் புகழ்ந்து பாடினும் உமக்கு வேண்டியதைக் கொடுப்பார் எவரும் இல்லை. ஆதலால் வெண்மையான இடபத்தையுடைய சிவ பெருமானது திருப்புகலூரைப் பாடுங்கள். பாடினால் அமரர் உலகத்திற்குத் தலைவனாய் அதனை ஆளலாம். இதற்குச் சந்தேகம் இல்லை.

344. வஞ்சநெஞ்சனை மாசழக்கனைப்
பாவியைவழக் கில்லியைப்
பஞ்சதுட்டனைச் சாதுவேயென்று
பாடினும்கொடுப் பார்இலை
பொன்செய் செஞ்சடைப் புண்ணியன்புக
லூரைப் பாடுமின் புலவீர்காள்
நெஞ்சில் நோயறுத் துஞ்சுபோவதற்கு
யாதும்ஐயுறவு இல்லையே.

தெளிவுரை : புலவர்களே ! வஞ்சகனும் பெரும் பொய்யனும் பாவியும். நீதியில்லாதவனும் பஞ்சமா பாதகனும் ஆகியவனை. சான்றோனே என்று உயர்த்திப் பாடினும் உமக்கு வேண்டியதைக் கொடுப்பவர் எவரும் இல்லை. ஆதலின் புண்ணியனாகிய சிவபெருமானது திருப்புகலூரைப் பாடுங்கள். பாடினால் துன்பங்கள் அறுபட்டு, பிழைத்துப் போதல் உளது என்பதற்குச் சந்தேகமே இல்லை.

345. நலம்இலாதானை நல்லனேஎன்று
நரைத்தமாந்தரை இளையனே
குலம் இலாதானைக் குலவனேஎன்று
கூறினும்கொடுப் பார்இலை
புலமெலாம்வெறி கமழும்பூம்புக
லூரைப்பாடுமின் புலவீர்காள்
அலமராதவர் உலகம்ஆள்வதற்கு
யாதும்ஐயுறவு இல்லையே.

தெளிவுரை : புலவர்களே, அழகில்லாதவனை, அழகனே என்றும், கிழவனை, குமரனே என்றும் இழிகுலத்தவனை, உயர்குலத்தவனே என்றும் மாறிச் சொல்லிப் பாடினும், உங்களுக்குத் தேவையானதைக் கொடுப்பவர் இவ்வுலகில் யாரும் இல்லை. ஆதலால் வயல்களில் தாமரையின் மணங்கமழும் திருப்புகலூரைப் பாடுமின். பாடினால் அலைவின்றி அமரர் உலகத்தை ஆளலாம். அதற்கு ஐயம் இல்லை.

346. நோயனைத்தடந் தோலினேஎன்று
நொய்யமாந்தரை விழுமிய
தாயன்றோடில வோர்க்கெலாம்என்று
சாற்றினும்கொடுப் பார்இலை
போயுழன்றுகண் குழியாதேஎந்தை
புகலூர்பாடுமின் புலவீர்காள்
ஆயம்இன்றிப்போய் அண்டம் ஆளுதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே.

தெளிவுரை : தொழுநோயாளனைப் பெரிய தோள்களையுடைய மல்லனே என்றும், ஒன்றும் ஈயாத சிறுமைக் குணம் உடையவனை, தாய்போல்பவன் என்றும் உங்களுக்கு வரும் இகழ்ச்சியைக் கருதாமல் பாடினாலும் உங்களுக்குத் தேவையானதைக் கொடுப்பவர் இங்கு யாரும் இல்லை. ஆதலால் உலகவரிடம் சென்று அலையாமல் எம் தந்தையாகிய சிவபெருமானது திருப்புகலூரைப் பாடுங்கள். பாடினால் வருத்தமின்றிச் சென்று வானுலகை ஆளலாம். இது நிச்சயம்.

347. எள்விழுந்திடம் பார்க்கும் ஆகிலும்
ஈக்கும்ஈகிலன் ஆகிலும்
வள்ளலேஎங்கள் மைந்தனேஎன்று
வாழ்த்தினும்கொடுப் பார்இலை
புள்ளெலாம்சென்று சேரும்பூம்புக
லூரைப்பாடுமின் புலவீர்காள்
அல்லற்பட்டழுந் தாதுபோவதற்கு
யாதும்ஐயுறவு இல்லையே.

தெளிவுரை : புலவர்களே ! எள்விழுந்த இடத்தைத் தேடுபவனாகவும் ஈக்கும் ஈயாத லோபியாகவும் உள்ளவனை அள்ளி வீசும் வள்ளலே. எங்கட்கு வலிமையாய் இருப்பவனே என்று வாழ்த்தினாலும் உங்களுக்குத் தேவையானதைக் கொடுப்பவர் இங்கு எவரும் இல்லை. ஆதலின் பறவைகள் வந்து சேர்கின்ற அழகிய புகலூரைப் பாடுங்கள். பாடினால் இவ்வுலகத்துன்பங்களிலிருந்து விடுபடலாம் என்பதற்குச் சந்தேகம் இல்லை.

348. கற்றிலாதானைக் கற்றுநல்லனே
காமதேவனை ஒக்குமே
முற்றிலாதானை முற்றனேஎன்று
மொழியினும்கொடுப் பார்இலை
பொத்தில்ஆந்தைகள் பாட்டறாப்புக
லூரைப்பாடுமின் புலவீர்காள்
அத்தனாய்அமர் உலகம்ஆள்வதற்கு
யாதும்ஐயுறவு இல்லையே.

தெளிவுரை : புலவர்களே ! ஒன்றும் கற்றறியாதவனை மிகவும் கற்றவன் என்றும், அழகில்லாதவனை அழகிய காமதேவனைப் போன்றவனே என்றும், ஆண்டும் அறிவும் முதிராதவனை அவற்றால் முதிர்ந்தவனே என்று புகழ்ந்து பாடினும் நீவிர் வேண்டுவதை எவரும் கொடுப்பவர் இல்லை. ஆதலின் மரப்பொந்துகளில் ஆந்தைகள் ஒலிசெய்கின்ற திருப்புகலூரைப் பாடுமின். அவ்வாறு பாடினால் அமரர் உலகிற்குத் தலைவராய் அதனை ஆளுதல் உளதாம் என்பதற்கு யாதொரு ஐயமும் இல்லை.

மரங்களின் செறிவால் பகல் இரவு போலாயிற்று; ஆந்தைகள் குரல் கொடுக்கலாயின என்பதாம்.

349. தையலாருக்கோர் காமனேஎன்றும்
காலநல்வழக் குடையனே
கையுலாவிய வேலனேஎன்று
கழறினும்கொடுப் பார்இலை
பொய்கைவாவியின் மேதிவாய்புக
லூரைப்பாடுமின் புலவீர்காள்
ஐயனாய்அமர் உலகம்ஆள்வதற்கு
யாதும்ஐயுறவு இல்லையே.

தெளிவுரை : புலவர்களே ! அருவருக்கத்தக்க தோற்றமுடையவனை மகளிர் உள்ளத்திற்குக் காமன் போலத் தோன்றுபவனே, ஆடவரில் சிறந்த தோற்றத்தை உடையவனே, முருகனுக்கு வேறாய மற்றொரு முருகனே என்று உறுதியாகச் சொல்லிப் பாடினும் நீவிர் வேண்டுவதை நுமக்குக் கொடுப்பார் இவ்வுலகில் ஒருவரும் இலர். ஆதலின் பெரிய பொய்கைகளிலும் சிறிய குளங்களிலும் எருமைகள் விழுந்து உழக்குகின்ற திருப்புகலூரைப் பாடுமின். பாடினால் அமரர் உலகிற்குத் தலைவராய் அதனை ஆளலாம். இதற்கு ஐயுறவு இல்லை.

350. செறுவினிற்செழுங் கமலம்ஓங்குதென்
புகலூர்மேவிய செல்வனை
நறவம்பூம்பொழில் நாவலூரன்
வனப்பகையப்பன் சடையன்தன்
சிறுவன்வன்தொண்டன் ஊரன்பாடிய
பாடல்பத்தினை வல்லவர்
அறவனார்அடி சென்றுசேர்வதற்கு
யாதும்ஐயுறவு இல்லையே.

தெளிவுரை : வயல்களில் செந்தாமரைகள் செழிக்கின்ற அழகிய திருப்புகலூரில் விரும்பி எழுந்தருளியுள்ள செல்வனாகிய சிவபெருமானைத் திருநாவலூரனும் வனப்பகைக்குத் தந்தையும், சடையனார்க்கு மகனும் வன் தொண்டனும் ஆகிய நம்பியாரூரன் பாடிய இந்தப் பத்துப்பாடல்களைப் பாடவல்லவர்கள் அறவடிவினனாகிய அப்பெருமானது அரிய திருவடிகளில் சென்று சேர்வர் என்பதற்கு சந்தேகம் எதுவும் இல்லை.

திருச்சிற்றம்பலம்

35. திருப்புறம்பயம் (அருள்மிகு சாட்சிநாதேஸ்வரர் திருக்கோயில், திருப்பிறம்பியம், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

351. அங்கம்ஓதிஓர் ஆறைமேற்றளி
நின்றும்போந்துவந்து இன்னம்பர்த்
தங்கினோமையும் இன்னதென்றிலர்
ஈசனார்எழு நெஞ்சமே
கங்குல்ஏமங்கள் கொண்டுதேவர்கள்
ஏத்திவானவர் தாந்தொழும்
பொங்குமால்விடை ஏறிசெல்வப்
புறம்பயந்தொழப் போதுமே.

தெளிவுரை : இத்திருப்பதிகம் இறைவர் எழுந்தருளியுள்ள தலங்கள் பலவற்றையும் சென்று வணங்கவேண்டும் என்னும் குறிப்பினால் அருளிச் செய்தது.

மனமே ! ஆறு அங்கங்களையும் ஓதியவராகிய அந்தணர்களது திருஆறைமேற்றளியினின்றும் புறப்பட்டு வந்து திருஇன்னம்பரில் பலநாள் தங்கியும் நம்மை இங்குள்ள தலைவர் இனி நாம் செய்யத் தக்கது இன்னது என்று தெரிவிக்கவில்லை. ஆதலால் வானவர்கள் காத்து நின்று ஏத்தித் தொழுகின்ற விடையேறும் பெருமானது செல்வம் நிறைந்த திரும்புறம்பயத்தை வணங்கச் செல்வோம். புறப்படு.

352. பதியும்சுற்றமும் பெற்றமக்களும்
பண்டையாரலர் பெண்டிரும்
நிதியில்இம்மனை வாழும்வாழ்க்கையும்
நினைப்பொழிமட நெஞ்சமே
மதியம்சேர்சடைக் கங்கையாளிடம்
மகிழும்மல்லிகை செண்பகம்
புதியபூமலர்ந்து எல்லிநாறும்
புறம்பயந்தொழப் போதுமே.

தெளிவுரை : நாம் வாழும் ஊரும், ஊரில் உள்ளாரும், சுற்றத்தாரும், நாம் மணந்து கொள்ளும் பெண்டிரும் அவர்கள் பெற்ற குழந்தைகளும் நமக்குப் பழமையான தொடர்பு உடையவர் அல்லர். ஆதலால் அறியாமை மிக்க மனமே, செல்வத்தோடு மனையில் இருந்து வாழும் இத்தகைய வாழ்க்கையையும் நினைத்தலை விட்டொழி. சடையிலுள்ள கங்கையும் மகிழும் படியான மல்லிகை, செண்பகம் முதலிய புதிய மலர்கள் பூக்கின்ற பூஞ்சோலைகளையுடைய திருப்புறம்பயம் என்னும் தலத்தைத் தொழப் போவோம். கங்கையாளனிடம் என்றும் பாடம்.

353. புறந்திரைந்து நரம்பெழுந்து
நரைத்துநீயுரை யால்தளர்ந்து
அறம்புரிந்து நினைப்பதுஆண்மை
அரிதுகாண்இஃது அறிதியேல்
திறம்பியாதுஎழு நெஞ்சமேசிறு
காலைநாமுறு வாணியம்
புறம்பயத்துறை பூதநாதன்
புறம்பயந்தொழப் போதுமே.

தெளிவுரை : மனமே ! தோல் சுருங்கி, நரம்புகள் வெளித் தோன்றி, வாய் குழறும் நிலை வந்த பின்பு அறத்தைச் செய்ய நினைப்பது பயனற்றது. இதனை நீ அறிவையாயின் நாம் இளமையிலேயே செய்திருக்கக் கூடிய வாணிபம் இதுவேயாம். பூதங்களுக்குத் தலைவனாகிய இறைவனது திருப்புறம்பயத்தை வணங்கச் செல்வோம். உடனே புறப்படு.

354. குற்றொருவரைக் கூறைகொண்டு
கொலைகள்சூழ்ந்த களவெலாம்
செற்றொருவரைச் செய்ததீமைகள்
இம்மையேவரும் திண்ணமே
மற்றொருவரைப் பற்றிலேன்மற
வாதெழுமட நெஞ்சமே
புற்றரவுடைப் பெற்றம்ஏறி
புறம்பயந்தொழப் போதுமே.

தெளிவுரை : அறியாமையுடைய மனமே ! பொருளைப் பறித்தல் வேண்டி அஃது உடைய ஒருவரைக் கருவியால் குத்தி, அவர் உடையைப் பறித்து, மேலும் கொலைச் செயல்களைச் செய்யத் துணிந்த பாவங்களும் நல்லவரைப் பகைத்து அவர்க்குத் தீங்கிழைத்த பாவங்களும் மறுமைவரை காத்திராமல் இப்போதே வந்து வருத்தும். இது திண்ணம். ஆதலால், உன்னையே துணையாகப் பற்றினேன்; பாம்பணியும் இடப வாகனனது திருப்புறம்பயத்தை வணங்கச் செல்வோம். அவனை நினைந்து புறப்படு.

குத்துதல் கையாலும்,  குற்றுதல் கருவியாலும் நிகழ்வன. எச்செயலுக்கும் மனமே காரணம்.

355. கள்ளிநீசெய்த தீமைஉள்ளன
பாவமும்பறை யும்படி
தெள்ளிதாஎழு நெஞ்சமே செங்கண்
சேவுடைச்சிவ லோகன்ஊர்
துள்ளிவெள்ளிள வாளைபாய்வயல்
தோன்றுதாமரைப் பூக்கள்மேல்
புள்ளிநள்ளிகள் பள்ளிகொள்ளும்
புறம்பயம்தொழப் போதுமே.

தெளிவுரை : மனமே ! நீ செய்த பாவம் நீங்கும்படி இடபத்தையுடைய சிவலோகனது ஊராகிய வாளை மீன்கள் துள்ளிப் பாய்கின்ற வயல்களில் மலர்கின்ற தாமரைப் பூக்களின்மேல் புள்ளிகளையுடைய நண்டுகள் பள்ளி கொள்கின்ற திருப்புறம்பயத்தை வணங்கப் புறப்படு.

356. படையெலாம்பக டாரஆளிலும்
பௌவஞ்சூழ்ந்துஅர சாளிலும்
கடையெலாம் பிணைத் தேரைவால்கவ
லாதெழுமட நெஞ்சமே
மடையெலாங்கழு நீர்மலர்ந்து
மருங்கெலாம்கரும்பு ஆடத்தேன்
புடையெலாம்மணம் நாறுசோலைப்
புறம்பயந்தொழப் போதுமே.

தெளிவுரை : மட நெஞ்சமே ! யானைகள் நிறைந்த பல படைகளை ஏவல்கொண்டு வெற்றி பெறினும் அவ்வெற்றியால் கடல் சூழ்ந்த நிலம் முழுவதையும் ஆளினும் கடைசியில் இந்தப் பதவியெல்லாம் பெண் தேரையின் வால் தேய்வது போலத் தேய்ந்துவிடும். ஆதலால் நீர்வளம் நிலவளம் மிக்க திருப்புறம்பயத்தை வணங்கச் செல்வோம். எந்தக் கவலையும் இன்றி உடனே புறப்படு.

357. முன்னைச் செய்வினை இம்மையில்வந்து
மூடும்ஆதலின் முன்னமே
என்னைநீ தியக் காதுஎழுமட
நெஞ்சமேஎந்தை தந்தையூர்
அன்னச்சேவலோடு ஊடிப்பேடைகள்
கூடிச்சேரும் அணிபொழில்
புன்னைக்கன்னி கழிக்கண்நாறும்
புறம்பயந்தொழப் போதுமே.

தெளிவுரை : அறியாமையுடைய மனமே ! ஒருவர் முற்பிறப்பிற் செய்த வினை. இப்பிறவியில் வந்து அவரைச் சூழ்ந்துகொள்ளும் என்பது உண்மையாதலின், அங்ஙனம் வந்து சூழ்வதற்கு முன்பே எமக்கும் பிறர்க்கும் தந்தையாகிய சிவபெருமானது ஊராகிய அன்னப்பெடைகள் அவற்றின் சேவல்களோடு முதலில் ஊடல் கொண்டு, பிறகு கூடலைச் செய்து வாழ்கின்ற அழகிய சோலைகளில் உள்ள புன்னை மரங்கள் கழிக்கரையில் நின்று மணம் வீசுகின்ற திருப்புறம்பயத்தை வணங்கச் செல்வோம். உடனே புறப்படு.

358. மலமெலாம்அறும் இம்மையேமறு
மைக்கும்வல்வினை சார்கிலா
சலமெலாம்ஒழி நெஞ்சமேஎங்கள்
சங்கரன்வந்து தங்கும்ஊர்
கலமெலாங்கடல் மண்டுகாவிரி
நங்கைஆடிய கங்கைநீர்
புலமெலாம்மண்டிப் பொன்விளைக்கும்
புறம்பயம்தொழப் போதுமே.

தெளிவுரை : மனமே, இப்பிறவியில்தான் மலங்கள் யாவும் அறும், மறுபிறவிக்கு வாயிலாக வலிய வினைகள் வந்து அடையமாட்டா. ஆதலின் நீ துன்பத்தை விட்டொழி. எங்கள் சங்கரன் வந்து தங்கியிருக்கும் ஊராகிய காவிரியாகிய நங்கை முழுக ஓடுகின்ற கடலிற் காணப்படுவது போல நாவாய்கள் மிகுந்து காணப்படுகின்ற கங்கை நதியின் நீர்போலும் நீர் வயல்களில் பாய்ந்து செந்நெற்களை விளைவிக்கின்ற திருப்புறம் பயத்தை வணங்கச் செல்வோம்.

359. பண்டரீயன செய்ததீமையும்
பாவமும்பறை யும்படி
கண்டரீயன கேட்டியேற்கவ
லாதுஎழுமட நெஞ்சமே
தொண்டரீயன பாடித்துள்ளிநின்று
ஆடிவானவர் தாந்தொழும்
புண்டரீக மலரும்பொய்கைப்
புறம்பயந்தொழப் போதுமே.

தெளிவுரை : அறியாமை நிறைந்த மனமே ! முற்பிறப்பில் நீக்குதற்கு அரியனவாகச் செய்த தீய செயல்களின் பழக்கமும் அச்செயல்களால் வந்த பாவமும் விரைய நீங்கும்படி நான் கண்ட அரிய வழிகளை நீ கேட்டு நடப்பதாயின் தேவர்கள் பாடியும் ஆடியும் தொழுகின்ற, பொய்கைகளையுடைய திருப்புறம்பயத்தை வணங்கச் செல்வோம்; கவலைப்படாமல் புறப்படு.

360. துஞ்சியும்பிறந் தும்சிறந்தும்
துயக்கறாத மயக்கிவை
அஞ்சிஊரன் திருப்புறம்பயத்து
அப்பனைத்தமிழ்ச் சீரினால்
நெஞ்சினாலே புறம்பயந்தொழு
துய்த்தும்என்று நினைத்தன
வஞ்சியாதுரை செய்யவல்லவர்
வல்லவானுலகு ஆள்வரே.

தெளிவுரை : இறந்தும், பின்பு பிறந்தும், அதன்பின் வளர்ந்தும் சுழலுதல் நீங்காத மயக்கத் தொழிலாகிய இவைகளுக்கு அஞ்சி நம்பியாரூரன், திருப்புறம் பயத்தை வணங்கி உய்வோம் என்று நெஞ்சினால் நினைத்து அங்குள்ள தன் தந்தையைத் தமிழ்ச் சீர்களால் பாடிய இப்பாடல்களைக் கரவில்லாது பாடவல்லவர்கள் அவைகளை நீக்கவல்ல வானுலகத்தை ஆள்வார்கள்.

திருச்சிற்றம்பலம்

36. திருப்பைஞ்ஞீலி (அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில், திருப்பைஞ்ஞீலி, திருச்சி மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

361. காருலாவிய நஞ்சைஉண்டிருள்
கண்டவெண்தலை யோடுகொண்டு
ஊரெலாம்திரிந்து என்செய்வீர்பலி
ஓரிடத்திலே கொள்ளும்நீர்
பாரெலாம்பணிந்து உம்மையேபர
விப்பணியும்பைஞ் ஞீலியீர்
ஆரமாவது நாகமோசொலும்
ஆரணீய விடங்கரே.

தெளிவுரை : கருநிறமுள்ள நஞ்சினை உண்டமையால் இருண்ட கண்டத்தினையுடையவரே, உலகமே உம்மை வணங்கித் துதிக்கும் பெருமையுள்ள திருப்பைஞ்ஞீலி இறைவரே, காட்டில் வாழும் அழகரை, நீர் வெண்ணிற முள்ள தலையோட்டைக் கையில் கொண்டு ஊரெல்லாம் திரிந்து என்ன பெறப் போகின்றீர்? நீர் இந்த ஓரிடத்திலேயே உமக்குத் தேவையான பிச்சையைப் பெற்றுக்கொள்வீர். நிற்க, உமக்கு முத்துவடமாவது பாம்புதானோ? சொல்வீர்.

362. சிலைத்துநோக்கும்வெள் ளேறுசெந்தழல்
வாயபாம்பது மூசெனும்
பலிக்குநீர்வரும் போதுநுங்கையிற்
பாம்புவேண்டா பிரானிரே
மலைத்தசந் தொடு வேங்கைகோங்கமும்
மன்னுகாரகில் சண்பகம்
அலைக்கும்பைம்புனல் சூழ்பைஞ்ஞீலியில்
ஆரணீய விடங்கரே.

தெளிவுரை : இறைவரே, மலையில் பிறந்த சந்தனம், வேங்கை, கொங்கு, அகில், சண்பகம் முதலிய மரங்களை அலைத்துக்கொண்டு வரும் தண்ணிய நீர் சூழ்ந்த திருப்பைஞ்ஞீலியில் கோயில் கொண்டிருக்கின்ற காட்டில் வாழும் அழகரே, உமது வெள்விடை முழக்கமிட்டுச் சினந்து பார்க்கின்றது. நஞ்சுடைய பாம்பு மூசு என்னும் ஓசை உண்டாகச் சீறுகின்றது. ஆதலின் நீர் பிச்சைக்கு வரும்போது கையில் பாம்பைக் கொண்டு வர வேண்டா.

363. தூயவர்கண்ணும் வாயும்மேனியும்
துன்னஆடை கடலையில்
பேயோடுஆடலைத் தவிரும்நீரொரு
பித்தரோஎம் பிரானிரே
பாயும்நீர்கிடங் கார்கமலமும்
பைந்தண்மாதவி புன்னையும்
ஆயபைம்பொழில் சூழ்பைஞ்ஞீலியில்
ஆரணீய விடங்கரே.

தெளிவுரை : எம்பெருமானே ! அகழியில் நிறைந்துள்ள தாமரைகளும் அதன் கரையில் மாதவியும் புன்னையும் பொருந்திய சோலைகள் சூழ்ந்த திருப்பைஞ்ஞீலியில் இருக்கும் காட்டில் வாழும் அழகரே, நீர் கண்ணும், வாயும், மேனியும் அழகுடையவாராய் இருக்கின்றீர். ஆயினும், தைத்த கோவணத்தை உடுத்து, சுடலையில் பேயோடு ஆடுவதை விடமாட்டீர்; நீர் ஒரு பித்தரோ? அவற்றை விட்டொழியும்.

364. செந்தமிழ்த்திறம் வல்லிரோசெங்கண்
அரவம்முன்கையில் ஆடவே
வந்துநிற்கும்இது என்கொலோபலி
மாற்றமாட்டோம் இடகிலோம்
பைந்தண்மாமலர் உந்துசோலைகள்
கந்தம்நாறுபைஞ் ஞீலியர்
அந்திவானமும் மேனியோசொலும்
ஆரணீய விடங்கரே.

தெளிவுரை : சோலைகள் நறுமணத்தை வீசுகின்ற திருப்பைஞ்ஞீலியில் கோயில் கொண்டிருக்கின்ற காட்டில் வாழும் அழகரே. நீர் மகளிர் மனத்தைக் கவர்வதற்கு முத்தமிழிலும் வல்லீரோ. நும் மேனியும் அந்தி வானம் போல்வதோ? அவை நிற்க, உமது முன் கையில் பாம்பு நின்று படம் எடுத்து ஆடும்படி வந்து நிற்பது ஏன்? இதனால் நாங்கள் கொண்டு வந்த பிச்சையை இடுவதா, இடாமல் போவதா? தெரியவில்லை.

365. நீறுநும்திரு மேனிநித்திலம்
நீனெடுங்கண்ணி னாளொடும்
கூறுராய்வந்து நிற்றிரால் கொணர்ந்து
இடுகிலோம்பலி நடமினோ
பாறுவெண்தலை கையில் ஏந்திப்பைஞ்
ஞீலியேன்என்றீர் அடிகள்நீர்
ஆறுதாங்கிய சடையிரோசொலும்
ஆரணீய விடங்கரே.

தெளிவுரை : தலைவரே ! காட்டில் வாழும் அழகரே ! நீர் அழிந்த வெண்மையான தலையோட்டைக் கையில் ஏந்திக் கொண்டு, யான் இந்த திருப்பைஞ்ஞீலியில் உள்ளேன். சிறிது பிச்சை இடுமின் என்றீர். உமது திருமேனியில் உள்ள திருநீறு முத்துப்போல வெள் ஒளியை வீசுகிறது. ஆயினும் பெண் ஒருத்தியோடும் கூடிய பாதி உருவத்தை உடையராய் வந்து நிற்கின்றீர். அதன் மேலும் நீர் கங்கையைச் சுமந்த சடையை உடையவரோ? சொல்வீர். இதனால் உமக்கு நாங்கள் பிச்சையைக் கொண்டு வந்தும் இடாமல் இருக்கிறோம். நடவீர்.

366. குரவம்நாறிய குழலினார்வளை
கொள்வதேதொழில் ஆகிநீர்
இரவும் இம்மனை அறிதிரேஇங்கே
நடந்துபோகவும் வல்லிரே
பரவிநாடொறும் பாடுவார்வினை
பற்றறுக்கும்பைஞ் ஞீலியீர்
அரவும் ஆட்டவும் வல்லிரோசொலும்
ஆரணீய விடங்கரே.

தெளிவுரை : நாள்தோறும் பாடிப் பரவுவாரது வினைகளைப் பற்றறச் செய்யும் திருப்பைஞ்ஞீலி இறைவரே ! காட்டில் வாழும் அழகரே ! நீர் மகளிரது வளைகளைக் கவர்ந்து கொள்வதே தொழிலாய் இங்குள்ள இல்லங்களை இரவிலும் வந்து அறிகின்றீர். அதனால் நள்ளிரவில் இங்கு நின்றும் நடந்து போகவும் வல்லிரோ? அதுவன்றிப் பாம்பு ஆட்டவும் வல்லீரோ ? சொல்லீர்.

367. ஏடுலாமலர்க் கொன்றை சூடுதிர்
என்பெலாம்அணிந்து என்செய்வீர்
காடுநும்பதி ஓடுகையது
காதல்செய்பவர் பெறுவதென்
பாடல்வண்டிசை ஆலுஞ்சோலைபைஞ்
ஞீலியேன்என்று நிற்றிரால்
ஆடல்பாடலும் வல்லிரோசொலும்
ஆரணீய விடங்கரே.

தெளிவுரை : காட்டில் வாழும் அழகரே, நீர். நான் சோலைகளையுடைய திருப்பைஞ்ஞீலியில் உள்ளேன். சிறிது பிச்சையிடுமின் என்று சொல்லி வந்து நிற்கின்றீர். நீர் கொன்றை மலர் மாலையைச் சூடுகின்றீர். அதன்றியும் எலும்புகளையெல்லாம் அணிந்து என்ன பெறப் போகின்றீர்? அதுவன்றி நும் ஊரோ காடு. நும் கையில் இருப்பதோ ஓடு. இவ்வாறாயின் உம்மைக் காதலிப்பவர் பெறும் பொருள் யாது? இந் நிலையில் நீர் ஆடல் பாடல்களிலும் வல்லீரோ? சொல்லீர்.

368. மத்தமாமலர் கொன்றைவன்னியும்
கங்கையாளொடு திங்களும்
மொய்த்தவெண்டலை கொக்கிறகோடு
வெள்ளெருக்கமுன் சடையதாம்
பத்தர்சித்தர்கள் பாடிஆடும்பைஞ்
ஞீலியேன்என்று நிற்றிரால்
அத்தியீர்உரி போர்த்திரோசொலும்
ஆரணீய விடங்கரே.

தெளிவுரை : காட்டில் வாழும் அழகரே, நீர் யான் அடியார்களும் சித்தர்களும் பக்தி மிகுதியால் திருப்பாடல்களைப் பாடிக் கொண்டு ஆடுகின்ற திருப்பைஞ்ஞீலியில் உள்ளேன். சிறிது பிச்சை இடுமின் என்று சொல்லி வந்து நிற்கின்றீர். ஊமத்தை, கொன்றை என்னும் இவற்றின் சிறந்த மலர்களும் வன்னியின் இலையும் கங்கையும் பிறையும் அவற்றோடு நெருங்கிய வெண்டலையும், கொக்கு இறகும் வெள்ளெருக்கும் உம் சடையில் உள்ளன. அவைகளேயன்றி யானையை உரித்த தோலையும் மேனிமேல் போர்த்துக் கொள்வீரோ? சொல்லீர்.

369. தக்கைதண்ணுமை தாளம்வீணை
தகுணிச்சங்கிணை சல்லரி
கொக்கரைகுட முழவினோடிசை
கூடிப்பாடிநின்று ஆடுவீர்
பக்கமேகுயில் பாடுஞ்சோலைப்பைஞ்
ஞீலியேன்என்று நிற்றிரால்
அக்கும் ஆமையும் பூண்டிரோசொலும்
ஆரணீய விடங்கரே.

தெளிவுரை : காட்டில் வாழும் அழகரே, நீர், யான் எப் பக்கங்களிலும் குயில்கள் பாடுகின்ற திருப்பைஞ்ஞீலியில் உள்ளேன். சிறிது பிச்சை இடுமின் என்று சொல்லி வந்து நிற்கின்றீர். நீர், தக்கை, தண்ணுமை, தாளம், வீணை, தகுணிச்சம், கிணை, சல்லரி, சங்கு, குடமுழா என்னும் இவற்றோடு கூடி, பல இசைகளைப் பாடிக் கொண்டு முன்வந்து நின்று ஆடுவீர். ஆயினும், அதற்கேற்ப நல்ல அணிகளை அணியாமல் எலும்பையும் ஆமை ஓட்டையும் அணிந்து கொண்டீரோ? சொல்லீர். இதில் கூறப்பட்டுள்ள தக்கை முதலிய ஒன்பதும் வாச்சிய வகைகள்.

370. கையொர் பாம்புஅரை ஆர்த்தொர்பாம்பு
கழுத்தோர்பாம்பவை பின்புதாழ்
மெய்யெலாம்பொடிக் கொண்டுபூசுதிர்
வேதம்ஓதுதிர் கீதமும்
பையவேவிடம் காகநின்றுபைஞ்
ஞீலியேன்என்றீர் அடிகள்நீர்
ஐயம்ஏற்கும்இது என்கொலோசொலும்
ஆரணீய விடங்கரே.

தெளிவுரை : தலைவரே ! காட்டில் வாழும் அழகரே, உமக்குக் கையில் ஒரு பாம்பு. அரையில் கட்டிய ஒரு பாம்பு: கழுத்தில் ஒரு பாம்பு. அவை ஊர்கின்ற மேனி முழுவதும் நீற்றினால் பூசியுள்ளீர். அதனோடு வேதம் ஓதுகின்றீர். இவற்றோடு இசையும் உம்மிடத்தில் மெல்ல அழகியதாய்த் தோன்றி யான் திருப்பைஞ்ஞீலியில் உள்ளேன். சிறிது பிச்சை இடுமின் என்கிறீர். பிச்சையெடுக்கும் இக்கோலம் எத்தன்மையதோ? சொல்வீர். பிச்சையெடுப்பவருக்குப் பாம்பு எதற்கு? என்றபடி.

371. அன்னம்சேர்வயல் சூழ்பைஞ்ஞீலியில்
ஆரணீய விடங்கரை
மின்னும்நுண்ணிடை மங்கைமார்பலர்
வேண்டிக்காதல் மொழிந்தசொல்
மன்னுதொல்புகழ் நாவலூரன்வன்
தொண்டன்வாய்மொழி பாடல்பத்து
உன்னிஇன்னிசை பாடுவாள்உமை
கேள்வன்சேவடி சேர்வரே.

தெளிவுரை : அன்னங்கள் தங்குகின்ற வயல்கள் சூழ்ந்த திருப்பைஞ்ஞீலியில் எழுந்தருளியுள்ள காட்டில் வாழும் அழகராகிய இறைவரை, தோன்றி மறைகின்ற நுண்ணிய இடையையுடைய மங்கையர் பலர் காதலித்து அக்காதலை வெளிப்படுத்திய சொற்களையுடைய திருநாவலூரில் தோன்றிய வன்தொண்டனது வாய்மொழியான இப் பாடல்கள் பத்தையும் மனத்தில் கொண்டு இனிய இசையால் பாடுபவர். உமாபதியாகிய சிவபெருமானது செவ்விய திருவடியை அடைவர்.

திருச்சிற்றம்பலம்

37. திருவாரூர் (அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர்)

திருச்சிற்றம்பலம்

372. குருகுபா யக்கொழுங்
கரும்புகள் நெரிந்தசாறு
அருகுபா யும்வயல்
அந்தண்ஆ ரூரரைப்
பருகுமா றும்பணிந்து
ஏத்துமா றும்நினைந்து
உருகுமா றும்இவை
உணர்த்த வல்லீர்களே.

தெளிவுரை : பறவைகளே ! நீங்கள் பறந்து உலாவுவதனால் செழுமையான கரும்புகள் நெரிந்து பெருகிய சாறு பாய்கின்ற வயல்களையுடைய திருவாரூர் இறைவரை யான் உள்ளத்தால் திளைக்கின்றவாறும் திசை நோக்கி வணங்கித் துதிக்கின்றவாறும் நினைந்து நெஞ்சு உருகுகின்றவாறும் ஆகிய இவைகளை என் பொருட்டு அவர்க்குத் தெரிவிக்க வல்லீர்களோ?

373. பறக்கும்எம் கிள்ளைகாள்
பாடும்எம் பூவைகாள்
அறக்கண்என் னத்தகும்
அடிகள்ஆ ரூரரை
மறக்ககில் லாமையும்
வளைகள் நில்லாமையும்
உறக்கம்இல் லாமையும்
உணர்த்தவல் லீர்களே.

தெளிவுரை : எதிரில் பறக்கின்ற எம்முடைய கிளிகளே, இனிமையாகப் பாடுகின்ற எம்முடைய நாகணவாய்ப் புட்களே, தருமத்தின்கண் என்று சொல்லத்தக்க நம் சுவாமியாகிய திருவாரூர்ப் பெருமானை நான் மறக்க முடியாமையும், அது காரணமாக உடல் மெலிவதனால் என் கையில் வளைகள் நில்லாமல் கழன்றுபோகும் தன்மையையும், எப்போதும் எனக்குத் தூக்கம் இல்லாமையையும் நீங்கள் அப்பெருமானுக்கு அறிவிக்கக் கூடுமோ? அவ்வாறாயின், தயை செய்து அறிவிப்பீர்களாக.

374. சூழும்ஓ டிச்சுழன்று
உழலும்வெள் நாரைகாள்
ஆளும்அம் பொற்கழல்
அடிகள்ஆ ரூரர்க்கு
வாழுமா றும்வளை
கழலுமா றும்மெனக்கு
ஊழுமா றும்இவை
உணர்த்தவல் லீர்களே.

தெளிவுரை : சுற்றிலும் ஓடிச் சுழன்று திரியும் வெண்மையான நாரைகளே, அடியவர்களை ஆளுகின்ற அழகிய பொன்போலும் திருவடிகளையுடைய தலைவராகிய திருவாரூர் இறைவருக்கு, யான் இவ்வுடம்பின் நீங்காமல் வாழுமாறும் என் வளைகள் கழலுமாறும் மாறாத முறையும் என்னிடத்து மாறி நிகழுமாறும் ஆகிய இவைகளை என் பொருட்டுத் தெரிவிக்க வல்லீர்களோ?

375. சக்ரவா ளத்துஇளம்
பேடைகாள் சேவல்காள்
அக்ரமங் கள்செய்யும்
அடிகள்ஆ ரூரர்க்கு
வக்ரம்இல் லாமையும்
வளைகள் நில்லாமையும்
உக்ரம்இல் லாமையும்
உணர்த்தவல் லீர்களே.

தெளிவுரை : சக்கிரவாகம் என்னும் இனத்து இளைய பேடைகளே, சேவல்களே, முறையல்லாதவற்றைச் செய்கின்ற தலைவராகிய திருவாரூர் இறைவருக்கு, யான் மனம் மாறுபடாமையும் எனது வளைகள் நில்லாமல் கழலுதலையும் அவர்மீது புலவி தோன்றாமையையும் என்பொருட்டுத் தெரிவிக்க வல்லீர்களோ?

376. இலைகொள்சோ லைத்தலை
இருக்கும்வெள் நாரைகாள்
அலைகொள்சூ லப்படை
அடிகள்ஆ ரூரர்க்குக்
கலைகள்சோர் கின்றதும்
கனவளை கழன்றதும்
முலைகள்பீர் கொண்டதும்
மொழியவல் லீர்களே.

தெளிவுரை : சோலையில் இருக்கின்ற நாரைகளே. அழித்தல் தொழிலைக் கொண்ட சூலப்படையையுடைய தலைவராகிய திருவாரூர் இறைவருக்கு எனது உடை நெகிழ்கின்றதையும் உயர்ந்த வளைகள் கழன்றதையும் கொங்கைகள் பசலை அடைந்ததையும் என் பொருட்டுச் சொல்ல வல்லீர்களோ?

377. வண்டுகாள் கொண்டல்காள்
வார்மணல் குருகுகாள்
அண்டவா ணர்தொழும்
அடிகள்ஆ ரூரரைக்
கண்டவா றுங்காமத்
தீக்கனன்று எரிந்துமெய்
உண்டவா றும்இவை
உணர்த்தவல் லீர்களே.

தெளிவுரை : வண்டுகளே, மேகங்களே, நுண்ணிய மணல் மேல் இருக்கின்ற குருகுகளே, வானத்தில் வாழ்வோராகிய தேவர்கள் வணங்குகின்ற தலைவராகிய திருவாரூர் இறைவரை ஒருநாள் யான் கண்டவாறும், அன்று முதல் காமத்தீ கனன்று எரிந்து என் உடம்பை உண்டுவிட்டவாறும் ஆகிய இவைகளை என் பொருட்டு அவருக்குத் தெரிவிக்க வல்லீரோ?

378. தேனலங் கொண்டதேன்
வண்டுகாள் கொண்டல்காள்
ஆனலங் கொண்டஎம்
அடிகள்ஆ ரூரர்க்குப்
பானலங் கொண்டஎம்
பணைமுலை பயந்துபொன்
ஊனலம் கொண்டதும்
உணர்த்தவல் லீர்களே.

தெளிவுரை : தேனினது இன்பத்தை நுகர்ந்த தேன்களே, வண்டுகளே, மேகங்களே, பசுவினது பயனாகிய பால் முதலியவற்றை உவந்துகொண்ட என் தலைவராகிய திருவாரூர் இறைவருக்கு எனது மார்பகங்கள் பசப்பெய்தி, பொன்போலும் பசலை என் மேனியின் அழகையெல்லாம் கொள்ளை கொண்டமையை என் பொருட்டுத் தெரிவிக்க வல்லீர்ளோ?

379. சுற்றுமுற் றுஞ்சுழன்று
உழலும்வெள் நாரைகாள்
அற்றமுற் றப்பகர்ந்து
அடிகள்ஆ ரூரர்க்குப்
பற்றுமற்று இன்மையும்
பாடுமற்று இன்மையும்
உற்றுமற்று இன்மையும்
உணர்த்தவல் லீர்களே.

தெளிவுரை : சுற்றியுள்ள இடம் முழுவதும் சுழன்று திரியும் வெள்ளிய நாரைகளே ! யாவர்க்கும் தலைவராகிய திருவாரூர் இறைவருக்கு எனது துன்பத்தை முடியச் சொல்லி, எனக்கு வேறு பற்றுக்கோடு இல்லாமையும், யான் பலராலும் அலர் தூற்றப்படுதலையும், எனக்கு உறவாவார் வேறு இல்லாமையும் என் பொருட்டுத் தெரிவிக்க வல்லீர்களோ.

380. குரவம்நா றக்குயில்
வண்டினம் பாடநின்று
அரவம்ஆ டும்பொழில்
அந்தண்ஆ ரூரரைப்
பரவிநா டும்மதும்
பாடிநா டும்மதும்
உருகிநா டும்மதும்
உணர்த்தவல் லீர்களே.

தெளிவுரை : குராமரங்கள் தமது மலர்மணத்தை வீச, குயில்களும், வண்டுக் கூட்டமும் பாட, பாம்புகள் படமெடுத்து நின்று ஆடுகின்ற சோலைகளையுடைய அழகிய குளிர்ந்த திருவாரூர் பெருமானை நான் தொழுது தேடுகின்ற வகையையும், துதித்துத் தேடுகின்ற வகையையும் நெஞ்சுருகித் தேடுகின்ற வகையையும் என் பொருட்டு அவருக்குத் தெரிவிக்க வல்லீர்களோ?

381. கூடும்அன் னப்பெடை
காள்குயில் வண்டுகாள்
ஆடும்அம் பொற்கழல்
அடிகள்ஆ ரூரரைப்
பாடுமா றும்பணிந்து
ஏத்துமா றுங்கூடி
ஊடுமா றும்இவை
உணர்த்தவல் லீர்களே.

தெளிவுரை : நும் சேவலோடு கூடுகின்ற அன்னப் பெடைகளே, குயில்களே, வண்டுகளே, நடனம் ஆடுகின்ற அழகிய பொன்போலும் திருவடிகளையுடைய திருவாரூர் பெருமானை அடையப் பெற்ற பின்பு யான் அவரைப் பாடும் முறையையும், பணிந்து புகழ்வதையும், அவரோடு கூடுதலையும் ஊடுதலையும் அவருக்கு என் பொருட்டுத் தெரிவிக்க வல்லீர்களோ?

382. நித்தமா கநினைந்து
உள்ளம்ஏத் தித்தொழும்
அத்தன்அம் பொற்கழல்
அடிகள்ஆ ரூரரைச்
சித்தம்வைத் தபுகழ்ச்
சிங்கடி யப்பன்மெய்ப்
பத்தனூ ரன்சொன்ன
பாடுமின் பத்தரே.

தெளிவுரை : அடியவராய் உள்ளவர்களே ! மெய்யுணர்ந்தோர் உள்ளத்தால் நிலையாக நினைந்து, வாயால் துதித்து, கையால் தொழுகின்ற தந்தையாரும் தலைவருமாகிய திருவாரூர் பெருமானை அவரையே எப்போதும் சித்தத்தில் வைத்ததனால் வந்த புகழை உடையவனும், சிங்கடிக்குத் தந்தையும் உண்மையான திருத்தொண்டனுமாகிய நம்பியாரூரன் பாடிய இப் பாடல்களைப் பாடுமின், பாடினால் அவன் எய்திய பயனை நீவிரும் எய்துவீர் என்பதாம்.

திருச்சிற்றம்பலம்

38. திருவதிகைத் திருவீரட்டானம் (அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், திருவதிகை,கடலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

383. தம்மானை அறியாத சாதியார் உளரே
சடைமேற்கொள் பிறையானை விடைமேற்கொள் விகிர்தன்
கைம்மாவின் உரியானைக் கரிகாட்டில் ஆடல்
உடையானை விடையானைக் கறைகொண்ட கண்டத்து
எம்மான்தன் அடிக்கொண்டென் முடிமேல்வைத் திடும்என்னும்
ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன்
எம்மானை எறிகெடில வடவீரட் டானத்து
உறைவானை இறைபோதும் இகழ்வன்போல் யானே.

தெளிவுரை : உலகில் தம் தலைவனை உருவம் அறியாதவர் உளரோ? இல்லை. அப்படியிருக்க நீலகண்டனாகிய அப்பெருமான் தனது திருவடியை என் தலைமேல் வைத்துவிடுவது என்று விரும்பி, சடைமேல் பிறையை உடையவனும், விடை ஏறுபவனும், யானைத் தோலைப் போர்ப்பவனும் கரிந்த காட்டில் ஆடுபவனும் எம் தலைவனும் ஆகிய, கெடில நதியின் வடகரையிலுள்ள திருவீரட்டானத்தில் விரும்பியிருக்கின்ற பெருமானை, அவன் அதனைச் செய்வதையும் யான் அறியாமல் இகழ்வேன் ஆயினேன் போலும். என்னே என் அறியாமை ! இனி அவ்வாறு நேராது போலும்.

384. முன்னேயெம் பெருமானை மறந்தேன்கொல் மறவாது
ஒழிந்தேன்கொல் மறவாத சிந்தையால் வாழ்வேன்
பொன்னேநன் மணியேவெண் முத்தேசெம் பவளக்
குன்றமே ஈசனென்று உன்னையே புகழ்வேன்
அன்னேஎன் அத்தாஎன்று அமரரால் அமரப்
படுவானை அதிகைமா நகருள்வாழ் பவனை
என்னேஎன் எறிகெடில வடவீரட் டானத்து
உறைவானை இறைபோதும் இகழ்வன்போல் யானே.

தெளிவுரை : எம்பெருமான் என்னை ஆட்கொள்வதற்கு முன்னே அவனை யான் மறந்து இழந்ததென்? மறவாது இருந்து பெற்றதென்? ஆட்கொண்ட பின்பு மறவாத மனத்தோடு இருக்கின்றேன். அது அன்றியும் பொன்னே, மாணிக்கமே. முத்தே, பவளமலையே, முதல்வனே என்று அவனை நினைத்துப் பாடுவேன். தேவர்களால் தாயே தந்தையே என்று விரும்பி வழிபடப்படுபவனும் திருவதிகையில் வாழ்பவனும் திருவீரட்டானத்தில் கோயில் கொண்டிருப்பவனுமாகிய என் இறைவனை, அவன் தனது திருவடியைத் தலைமீது சூட்ட வந்தபோது யான் அறியாமல் இகழலானேன். என்னே என் அறியாமை இனி அவ்வாறு நேராது போலும்.

திருவதிகை, தலத்தின்பெயர்: வீரட்டானம். கோயிலின் பெயர்.

385. விரும்பினேற்கு எனதுள்ளம் விடகிலா  விதியே
விண்ணவர்தம் பெருமானே மண்ணவர்நின்றேத்தும்
கரும்பேஎன் கட்டிஎன்று உள்ளத்தால் உள்கிக்
காதல்சேர் மாதராள் கங்கையாள் நங்கை
வரும்புனலும் சடைக்கணிந்து வளராத பிறையும்
வரிஅரவும் உடன்துயில வைத்தருளும் எந்தை
இரும்புனல்வந்து எறிகெடில வடவீரட் டானத்து
உறைவானை இறைபோதும் இகழ்வன்போல் யானே.

தெளிவுரை : உமையவள் உடம்பில் ஒருகூறாய் இருத்தலின், கங்கையாளாகிய நங்கை உருமாறி வந்த நீரையும் சடையில் அணிந்து, அதனோடு இளம்பிறையையும் பாம்பையும் ஒன்றாய் உறங்கும்படி வைத்தருளிய எம் தந்தையாகிய, கெடில நதியின் வடகரையிலுள்ள திருவீரட்டானத்தில் விரும்பியிருக்கின்ற இறைவனை, விண்ணவர்க்குத் தலைவனே, மண்ணுலகத்தவர் துதிக்கும் கரும்பே, என் கட்டியே என்று மனத்தால் நினைந்து விரும்பிய எனக்கு, வினை என்னை விட்டு நீங்காமையினால், அவன் தனது திருவடியை என் தலைமேல் சூட்ட வந்தபோது, யான் அறியாமல் அவனை இகழ்ந்தேன் போலும். என்னே என் அறியாமை இருந்தவாறு. இனி அவ்வாறு நடைபெறாது போலும். சந்திரனைப் பாம்பு கிரகணத்தின்போது விழுங்குவதால் பகையென்பர் சிலர்.

386. நாற்றானத்து ஒருவனை நானாய பரனை
நள்ளாற்று நம்பியை வெள்ளாற்று விதியைக்
காற்றானைத் தீயானைக் கடலானை மலையின்
தலையானைக் கடுங்கலுழிக் கங்கைநீர் வெள்ள
ஆற்றானைப் பிறையானை அம்மானை எம்மான்
தம்மானை யாவர்க்கும் அறிவரிய செங்கண்
ஏற்றானை எறிகெடில வடவீரட் டானத்து
உறைவானை இறைபோதும் இகழ்வன்போல் யானே.

தெளிவுரை : மும்மூர்த்திகட்கு மேலே உள்ள ஒப்பற்றவனும், என்னில் வேறறக் கலந்து நிற்கும் முதல்வனும், திருநள்ளாற்றில் உள்ளவனும், வெள்ளாற்றில் அறநெறியாக இருப்பவனும், காற்று, தீ. கடல் என்னும் பொருள்களாய் உள்ளவனும், கயிலாயத்தின் உச்சியில் இருப்பவனும், கங்கை நீரைத் தாங்கியவனும், பிறையைச் சூடியவனும், பெரியோனும் என் தந்தைக்கும் தலைவனும், யாவராலும் அறிதற்கு அரிய இடப வாகனனும், கெடில நதியின் வடகரைக்கண் உள்ள திருவீரட்டானத்தில் கோயில் கொண்டிருககிறவனுமாகிய இறைவனை, அவன் தன் திருவடியை என் தலைமேல் சூட்ட முற்பட்டபோது நான் அறியாமையால் இகழலானேன். என்னே என் அறியாமை. இனி அவ்வாறு நேராமல் பார்த்துக் கொள்வேன்.

387. சேந்தர்தாய் மலைமங்கை திருநிறமும் பரிவும்
உடையானை அதிகைமா நகருள்வாழ் பவனைக்
கூந்தல்தாழ் புனல்மங்கை குயில்அன்ன மொழியாள்
சடையிடையில் கயலினங்கள் குதிகொள்ளக் குலாவி
வாய்ந்தநீர் வரவுந்தி மராமரங்கள் வணக்கி
மறிகடலை இடங்கொள்வான் மலையாரம் வாரி
ஏந்துநீர் எறிகெடில வடவீரட் டானத்து
உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே.

தெளிவுரை : முருகப்பெருமான் அவரது தாயாகிய உமாதேவி ஆகிய இருவரது நிறத்தையும் அன்பையும் கொண்டுள்ளவனும் திருவதிகையில் வாழ்கின்றவனும் கங்கையைச் சடையில் கொண்ட நீர் பெருகி வர, அதனால் அலைகள் மராமரங்களை முறித்துத் தள்ளிக் கொண்டு மலையிலிருந்து சந்தன மரங்களை வாரிக் கொணர்ந்து வீசுகின்ற கெடில நதியின் வட கரையிலுள்ள திருவீரட்டானத்தில் விரும்பியிருக்கின்ற இறைவனை, அவன் தனது திருவடியை என் தலைமேல் வைத்தபோது யான் அறியாமல் இகழ்ந்தேன். என்னே என் மடமை இருந்தவாறு. இனி அவ்வாறு நேராது.

388. மைம்மான மணிநீல கண்டத்தெம் பெருமான்
வல்லேனக் கொம்பணிந்த மாதவனை வானோர்
தம்மானைத் தலைமகனைத் தண்மதியம் பாம்பும்
தடுமாறும் சடையானைத் தாழ்வரைக்கை வென்ற
வெம்மான மதகரியின் உரியானை வேத
விதியானை வெண்ணீறு சண்ணித்த மேனி
எம்மானை எறிகெடில வடவீரட் டானத்து
உறைவானை இறைபோதும் இகழ்வன்போல் யானே.

தெளிவுரை : நீலகண்டனும் பன்றியின் கொம்பை அணிந்த தவக்கோலத்தை உடையவனும். தேவர்கள் தலைவனும் யாவர்க்கும் தலைவனும் சந்திரனும் பாம்பும் தங்கியுள்ள சடையை உடையவனும், தாழ்வரைக்கண் திரியும் துதிக்கையையுடைய யானையின் தோலை உடையவனும், வேதத்தின் நெறி முறைகளாய் உள்ளவனும் திருநீறு பூசிய எம் தலைவனும், கெடில நதியின் வடபால் உள்ள திருவீரட்டானத்திலுள்ள இறைவனை, அவன் தனது திருவடியை என் தலைமேல் சூட்ட வந்தபோது என் அறியாமையால் இகழ்ந்தேன். என்னே என் மடமை ! இனிமேல்  அவ்வாறு நேராது.

389. வெய்தாய வினைக்கடலில் தடுமாறும் உயிர்க்கு
மிகஇரங்கி அருள்புரிந்து வீடுபேறு ஆக்கம்
பெய்தானைப் பிஞ்ஞகனை மைஞ்ஞவிலும் கண்டத்து
எண்தோள்எம் பெருமானைப் பெண்பாகம் ஒருபால்
செய்தானைச் செக்கர்வான் ஒளியானைத் தீவாய்
அரவாடு சடையானைத் திரிபுரங்கள் வேவ
எய்தானை எறிகெடில வடவீரட் டானத்து
உறைவானை இறைபோதும் இகழ்வன்போல் யானே.

தெளிவுரை : கொடியதாகிய வினைக்கடலில் தடுமாறுகின்ற உயிர்களுக்கு, கருணையினால் மிகவும் இரங்கி அருள் செய்து, முத்தி பெறுதலாகிய பெருஞ் செல்வத்தைத் தருபவனும் தீமையை அழிப்பவனும், கருநிறம் பொருந்திய கழுத்தையும் எட்டுத் திருக்கரங்களையும் உடைய என் தலைவனும் இடப் பாகத்தில் உமையைக் கொண்டவனும் செவ்வானம் போல திருமேனி உடையவனும் பாம்பு ஆடப்பெற்ற சடையை யுடையவனும் தன் புன்னகையால் திரிபுரங்களை அழித்தவனும் கெடில நதியின் வடபாலுள்ள திருவதிகை வீரட்டானத்தில் உள்ளவனுமான எம்பெருமானை ஒரு கணப்பொழுதும் நான் மறந்து அலட்சியம் செய்வேனோ?

390. பொன்னானை மயிலூர்தி முருகவேள் தாதை
பொடியாடு திருமேனி நெடுமாறன் முடிமேல்
தென்னானைக் குடபாலின் வடபாலின் குணபால்
சேராத சிந்தையான் செக்கர்வான் அந்தி
அன்னானை அமரர்கள்தம் பெருமானைக் கருமான்
உரியானை அதிகைமா நகருள்வாழ் பவனை
என்னானை எறிகெடில வடவீரட் டானத்து
உறைவானை இறைபோதும் இகழ்வன்போல் யானே.

தெளிவுரை : விநாயகனுக்கும் முருகனுக்கும் தந்தையும், திருநீறு பூசிய திருமேனியையும் நெடுமாறனது முடியின் மேல் நின்ற தென்னாட்டவனும் அந்திச் செவ்வானம் போன்ற நிறத்தை உடையவனும், தேவர்களுக்குத் தலைவனும், யானைத் தோலைப் போர்த்தவனும் திருவதிகையில் வாழ்பவனும் எனக்கு உரியவனும் கெடில நதியின் வடபாலுள்ள திருவீரட்டானத்தில் உள்ளவனும் ஆகிய இறைவனை இனி ஒருகாலும் இகழமாட்டேன்.

391. திருந்தாத வாள்அவுணர் புரமூன்றும் வேவச்
சிலைவளைவித்து ஒருகணையால் தொழில்பூண்ட சிவனைக்
கருந்தாள மதகளிற்றின் உரியானைப் பெரிய
கண்மூன்றும் உடையானைக் கருதாத அரக்கன்
பெருந்தோள்கள் நாலைந்தும் ஈரைந்து முடியும்
உடையானைப் பேயுருவ மூன்றும்உற மலைமேல்
இருந்தானை எறிகெடில வடவீரட் டானத்து
உறைவானை இறைபோதும் இகழ்வன்போல் யானே.

தெளிவுரை : திரிபுரங்களை அழித்த சிவபெருமானும். யானையின் தோலைப் போர்த்தவனும், மூன்று கண்களை உடையவனும், இராவணனது அச்சந்தரும் உருவத்தை ஊன்றிய கயிலாய மலையின்மேல் நீங்காமல் இருப்பவனும், திருவீரட்டானத்தில் இருப்பவனுமாகிய இறைவனை, இனி ஒருகாலும் நான் இகழேன்.

392. என்பினையே கலனாக அணிந்தானை எங்கள்
எருதேறும் பெருமானை இசைஞானி சிறுவன்
வன்பனைய வளர்பொழில்சூழ் வயல்நாவ லூர்க்கோன்
வன்தொண்டன் ஆரூரன் மதியாது சொன்ன
அன்பனை யாவர்க்கும் அறிவரிய அத்தர்
பெருமானை அதிகைமா நகருள்வாழ் பவனை
என்பொன்னை எறிகெடில வடவீரட் டானத்து
உறைவானை இறைபோதும் இகழ்வன்போல் யானே.

தெளிவுரை : எலும்பையே அணிகலன்களாக அணிபவனும், விடையை ஏறுகின்ற எங்கள் பெருமானும், இசை ஞானிக்கு மகனும், திருநாவலூர்க்குத் தலைவனும் வன்தொண்டனுமான நம்பியாரூரனாகிய என்னால் மதியாது சில சொல்லப்பட்ட அன்புருவினனும் தேவர் பெருமானும் திருவதிகையில் வாழ்பவனும் எனக்குரிய பொன் போன்றவனும் கெடில நதியில் வடபாலுள்ள திருவீரட்டானத்தில் இருப்பவனுமாகிய இறைவனை இனி எப்போதும் இகழமாட்டேன்.

திருச்சிற்றம்பலம்

39. திருத்தொண்டர் தொகை

திருச்சிற்றம்பலம்

393. தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க்கு அடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
இளையான்தன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்
விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற்கு அடியேன்
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக்கு அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.

தெளிவுரை : (தொகையடியார்களுள் முதன்மையாக வைத்து எண்ணப்படுவோர் தில்லைவாழ் அந்தணர்!)

சிதம்பரத்தில் வாழ்கின்ற அந்தணர்களுடைய அடியார்க்கும் நான் அடியேன். திருநீலகண்டர் என்னும் பெயருடைய குயவனார்க்கும் நான் அடியேன். உள்ளதை இல்லை என்று மறைத்துக் கூறாத இயற்பகைக்கும் நான் அடியேன். இளையான் குடிமாறர் என்னும் நாயனாரின் அடியார்க்கும் நான் அடியேன். இளையான்குடி என்பது ஊர்ப்பெயர். வெற்றிகாணும் விதத்தில் மிக்க வன்மை பெற்றவரும் மெய்த்திரு வேடமே மெய்ப்பொருள் என்ற உணர்வுடையவருமான அவர்க்கு நான் அடியேன். சோலைகள் சூழ்ந்த செங்குன்றூரில் வாழ்ந்த விறல்மிண்டற்கு நான் அடியேன். வணிகர்க்குரிய முல்லை மாலையணிந்த அமர்நீதிக்கு நான் அடியேன். நம்பியாரூரனாகிய யான் திருவாரூரின் பெருமானுக்கு எப்போதும் அடிமையே.

திருத்தொண்டர் தொகை என்ற இப்பதிகம் நம்பியாண்டார் நம்பியருளிய திருவந்தாதிக்கும் சேக்கிழார் சுவாமி அருளிய பெரிய புராணத்துக்கும் மூலம்.

394. இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர்க்கு அடியேன்
ஏனாதி நாதன்தன் அடியார்க்கும் அடியேன்
கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பற்கு அடியேன்
கடவூரிற் கலையன்தன் அடியார்க்கும் அடியேன்
மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன்
எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்
அலைமலிந்த புனல்மங்கை ஆனாயர்க்கு அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.

தெளிவுரை : கூர்மையான மழுப்படையேந்திய எறிபத்தற்கு நான் அடியேன். ஏனாதிநாதர் என்பவருடைய அடியார்களுக்கும் நான் அடியேன். நூல்களில் பெரிதும் காணப்படுகின்ற புகழ் பெற்ற சீர்நம்பியாகிய கண்ணப்பர்க்கு நான் அடியேன். திருக்கடவூர் கலையன் தன் அடியார்க்கும் நான் அடியேன். பெருமையும் வலிமையும் மிக்க மானக்கஞ்சாறனுக்கும் தொண்டினை முட்டாது செய்த வாட்டாய நாயனாரின் அடியார்களுக்கும் நான் அடியேன். நீர்வளமிக்க மங்கை என்னும் ஊரினராகிய ஆனாயற்கு நான் அடியேன். நம்பியாரூரனாகிய யான் திருவாரூரின் பெருமானுக்கு எப்போதும் அடிமையே.

395. மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்
முருகனுக்கும் உருத்திரபசுபதிக்கும் அடியேன்
செம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன்
திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்
மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க
வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த
அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக்கு அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.

தெளிவுரை : விபூதி, உருத்திராட்சம், சடை என்னும் மூன்றும் கொண்டு உலகாண்ட மூர்த்தி நாயனார்க்கும் நான் அடியேன். முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் நான் அடியேன். பிறழாது நின்ற உள்ளத்தோடு சென்ற நந்தனார்க்கும் அடியேன். திருக்குறிப்புத் தொண்டர் தம் அடியார்க்கும் அடியேன். சிவலிங்க பூசையைத் தடுத்த தனது தந்தையின் தாளை வெட்டிய சண்டீச நாயனார்க்கு அடியேன். நம்பியாரூரனாகிய யான் திருவாரூர் பெருமானுக்கு எப்போதும் அடிமையே.

396. திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட
திருநாவுக்கு அரையன்தன் அடியார்க்கும் அடியேன்
பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கும் அடியேன்
பெருமிழலைக் குறும்பர்க்கும் பேயார்க்கும் அடியேன்
ஒருநம்பி ஆப்பூதி அடியார்க்கும் அடியேன்
ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கற்கு அடியேன்
அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.

தெளிவுரை : இன்பம் நிலைத்து நிற்றலாகிய செம்மையே உண்மைச் செம்மையாம் எனக்கொண்ட திருநாவுக்கரசருடைய அடியார்க்கும் அடியேன். நம்பிகளுள் சிறந்தவரும் அமைச்சராய் இருந்தும் அடியவர்க்கு அடிமை செய்தவரும் சைவப் பயிருக்கு உளவாய் இருந்த களையைக் களைந்தவருமாகிய குலச்சிறை நாயனாருடைய அடியார்க்கும் அடியேன். பெரு மிழலைக் குறும்பர்க்கும் , காரைக்கால் அம்மையார்க்கும் அடியேன். ஒப்பற்ற நம்பியும் இறைவனது திருவருளை ஆசிரியராலே அடைந்தவருமாகிய அப்பூதி அடியார்க்கும் அடியேன். நீர்வளமிக்க சாத்தமங்கை ஊரினராகிய நீலநக்கருக்கு அடியேன். அரிய செயலைச் செய்த நம்பியாகிய அதாவது நீரால் திருவிளக்கை ஒருநாள் ஒரு பொழுதன்றி எந்நாளும் எப்பொழுதும் இட்டவராகிய நமி நந்தி அடியார்க்கும் அடியேன். நம்பியாரூரனாகிய யான் திருவாரூர் பெருமானுக்கு எப்போதும் அடிமையே.

397. வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும்
மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்
ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்
நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்
நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கற்கும் அடியேன்
அம்பரான் சோமாசி  மாறனுக்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.

தெளிவுரை : நறுமணத்தை விட்டுப் போகாத வரிகளையுடைய வண்டுகள் நிறைந்த கொன்றை மலர் சூடிய சிவபெருமானைத் தவிர மற்றவரை வணங்காத திருஞான சம்பந்தன் அடியார்க்கும் அடியேன். ஏயர்கோன் கலிக்காம நாயனாõரின் அடியார்க்கும் அடியேன். ஆகமத்தைத் தமிழிற் செய்த திருமூல நாயனாருடைய அடியாருக்கும் அடியேன். பிறவியில் கண்ணில்லாதவராய் இருந்து சமணர் முன்னே சிவபெருமானது திருவருளாற் கண்பெற்று விளங்கிய தண்டிக்கும், மூர்க்கருக்கும் அடியேன். அம்பர் என்னும் ஊரினராகிய சோமாசி மாறனுக்கும் அடியேன். நம்பி ஆரூரனாகிய யான் திருவாரூர் பெருமானுக்கு எப்போதும் அடிமையே.

398. வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே
மறவாது கல்எறிந்த சாக்கியர்க்கும் அடியேன்
சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்
செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டற்கு அடியேன்
கார்கொண்ட கொடைகழறிற் றறிவார்க்கும் அடியேன்
கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்
ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.

தெளிவுரை : உமாதேவியை இடப்பாகத்தில் கொண்ட சிவபெருமானது பாதங்களை மறவாமல் கல்லால் பூசை செய்த சாக்கிய நாயனார்க்கும் சிறப்புவிக்கும் அடியேன். திருச்செங்காட்டாங்குடியில் வாழ்ந்த சிறுத்தொண்டருக்கும் அடியேன். மேகம்போல் தானம் செய்யக்கூடிய கழறிற்றறிவார் என்ற சேரமான் பெருமாள் நாயனார்க்கும் அடியேன். சீர்காழியில் மறையவர் குலத்தில் தோன்றிய கணநாதர்க்கும் அடியேன். களந்தை என்னும் பதியில் குறுநில மன்னராக இருந்த கூற்றுவ நாயனார்க்கும் அடியேன். நம்பி ஆரூரனாகிய யான் திருவாரூர் பெருமானுக்கு எப்போதும் அடிமையே.

399. பொய்யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்
பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழற்கு அடியேன்
மெய்யடியன் நரசிங்க முனையரையற்கு அடியேன்
விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்திற்கு அடியேன்
கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்
கழற்சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன்
ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.

தெளிவுரை : பொய்யடிமை இல்லாத புலவர்கள் தொகையடியார்களுள் இரண்டாமவர். இவர்களுக்கும் யான் அடியேன். கருவூரில் அடியார் ஒருவருக்காக உயிர்த் தியாகம் செய்த புகழ்ச் சோழர்க்கு அடியேன். மெய்யடியாராகிய நரசிங்க முனையரையற்கு அடியேன். நாகப்பட்டினத்தில் செம்படவர் குலத்தில் பிறந்த அதிபத்தர்க்கு அடியேன். வணிகர் குலத்தில் தோன்றியவரும் அடியவர்க்குத் தொண்டு செய்ய மறுத்த தன் மனைவியின் கையை வெட்டியவருமான கலிக்கம்பருக்கும், சேணியர் குலத்தில் பிறந்த கலியனுக்கும், வரிஞ்சையூரில் இருந்த வேளாளர் சத்தி நாயனாருக்கும் யான் அடியேன். காஞ்சிபுரத்திலிருந்த பல்லவ மன்னன் ஐயடிகள் காடவர்கோனுக்கும் அடியேன். நம்பி ஆரூரனாகிய நான் திருவாரூர் பெருமானுக்கு என்றும் அடிமையே.

400. கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண் டிருந்த
கணம்புல்ல நம்பிக்கும் காரிக்கும் அடியேன்
நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற
நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்
துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றும் சோதித்
தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்
அறைக்கொண்ட வேல்நம்பி முனை யடுவார்க்கு அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.

தெளிவுரை : சிவபெருமானிடம் நீங்காத பக்தி பூண்டிருந்த கணம் புல்ல நாயனாருக்கும், காரி நாயனார்க்கும் அடியேன். பாண்டிய மன்னனாகிய நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன். திருமயிலாப்பூரில் வேளாளர் மரபைச் சேர்ந்த வாயிலார் நாயனாரின் அடியார்க்கும் அடியேன். பகைவர்களை வெற்றி கொள்பவரும் சிவனடியாருமான முனையடுவார்க்கும் அடியேன். நம்பி ஆரூரனாகிய யான் திருவாரூர் பெருமானுக்கு எப்போதும் அடிமை.

401. கடல்சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான்
காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்
மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்கும் தஞ்சை
மன்னவனாம் செருத்துணைதன் அடியார்க்கும் அடியேன்
புடைசூழ்ந்த புலியதன்மேல் அரவாட ஆடி
பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன்
அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.

தெளிவுரை : பல்லவர் குலத்தவரான கழற்சிங்கனுடைய அடியார்க்கும் அடியேன். கொடும்பாளூர் குறுநில மன்னரான இடங்கழிக்கும் தஞ்சை நகரில் வேளாண் குடியில் பிறந்த செருத்துணை நாயனாரின் அடியார்க்கும் அடியேன். பரமசிவனிடம் மிகுந்த பக்தி கொண்ட புகழ்த்துணையாருக்கும் அடியேன். நாட்டியத்தான்குடி என்ற ஊரில் வேளாளர் மரபில் பிறந்த சிவனடியார் கோட்புலிக்கும் அடியேன். நம்பி ஆரூரனாகிய யான் திருவாரூர் பெருமானுக்கு என்றும் அடியேன்.

402. பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்
பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்
முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன்
முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்
அப்பாலும் அடிசார்ந்தார் அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.

தெளிவுரை : தொகையடியார் மொத்தம் ஒன்பதின்மர். அவர்களுள் முதலாமவராகிய தில்லைவாழ் அந்தணரை 393ஆம் பாடலிலும் இரண்டாமவராகிய பொய்யடிமை இல்லாத புலவர்களை 399ஆம் பாடலிலும் குறித்தார். எஞ்சியுள்ள ஏழு பிரிவினரைப் பற்றி இப்பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

403. மன்னியசீர் மறைநாவன் நின்றவர்ப் பூசல்
வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்
தென்னவனாய் உலகாண்ட செங்கணார்க்கு அடியேன்
திருநீல கண்டத்துப் பாணனார்க்கு அடியேன்
என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்
இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன்
அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட்டு உவப்பார்
ஆரூரில் அம்மானுக்கு அன்பர்ஆ வாரே.

தெளிவுரை : திருநின்ற ஊரில் (தின்னனூரில்) பிறந்த அந்தணர் பூசலார் நாயனார்க்கும் பாண்டிய நாட்டு அரசியாகிய மங்கையர்க்கரசிக்கும் நேச நாயனார்க்கும் அடியேன். யானைகள் ஏறாவண்ணம் மாடக் கோயில்களைக் கட்டிய கோச் செங்கட் சோழர்க்கும் அடியேன். பாணர் குலத்தில் பிறந்த திருநீலகண்ட யாழ்ப்பாணர்க்கும் அடியேன். சுந்தரருடைய தந்தையாராகிய சடையனார்க்கும், தாயாராகிய இசை ஞானியார்க்கும் அடியேன்.

அத்தகைய நம்பியாரூரன் திருவாரூர் பெருமானுக்கு என்றும் அடிமை.

திருச்சிற்றம்பலம்

40. திருக்கானாட்டு முள்ளூர் (அருள்மிகு பதஞ்சலீஸ்வரர் திருக்கோயில், கானாட்டம்புலியூர்,கடலூர்)

திருச்சிற்றம்பலம்

404. வள்வாய மதிமிளிரும் வளர்சடையி னானை
மறையவனை வாழ்மொழியை வானவர்தங் கோனைப்
புள்வாயைக் கீண்டுலகம் விழுங்கிஉமிழ்ந் தானைப்
பொன்னிறத்தின் முப்புரிநூல் நான்முகத்தினானை
முள்வாய மடல்தழுவி முடத்தாழை ஈன்று
மொட்டலர்ந்து விரைநாறும் முருகுவிரி பொழிசூழ்
கள்வர்ய கருங்குவளை கண்வளரும் கழனிக்
கானாட்டு முள்ளூரில் கண்டுதொழு தேனே.

தெளிவுரை : பிறையைச் சடையில் உடையவனும், வேதம். வாயாற் சொல்லப்படும் பிற சொற்கள். இந்திரன், திருமால், பிரமன் என்னும் பொருள்களாய் உள்ளவனும் ஆகிய இறைவனை அடியேன் தாழையினது மணம் வீசுகின்ற தேன் நிறைந்த சோலைகள் சூழ்ந்த, கருங்குவளை மலர்கள் கண்ணுறங்குவதுபோலக் காணப்படுகின்ற வயல்களையுடைய திருக்கானாட்டு முள்ளூரில் கண்டு வணங்கப் பெற்றேன். இஃது என் தவப்பயன் இருந்தவாறு, கொக்கு உருவாய் வந்த அசுரனைக் கொன்றது கிருஷ்ணாவதாரத்தில்.

405. ஒருமேக முகிலாகி ஒத்துலகம் தானாய்
ஊர்வனவும் நிற்பனவும் ஊழிகளும் தானாய்ப்
பொருமேவு கடலாகிப் பூதங்கள் ஐந்தாய்ப்
புனைந்தவனைப் புண்ணியனைப் புரிசடையினானைத்
திருமேவு செல்வத்தார் தீமூன்றும் வளர்த்த
திருத்தக்க அந்தணர்கள் ஓதுநகர் எங்கும்
கருமேதி செந்தாம ரைமேயுங் கழனிக்
கானாட்டு முள்ளூரில் கண்டுதொழு தேனே.

தெளிவுரை : உலகிற்கு ஒரு பெருந்துணையாய் உள்ள மேகமாகியும், உலகங்கள் பலவும் தானேயாகியும் அவற்றில் உள்ள ஊர்வனவும் நிற்பனவுமாகிய உயிர்களும் அவற்றின் தோற்ற ஒடுக்கங்கட்குக் காரணமாகிய ஊழிக்காலங்களும் தானேயாகியும், கடல்களாகியும் ஐம்பூதங்களாகியும், அவற்றைப் படைத்து நிற்பவனும் அறவடிவினனும் புரிந்த சடையையுடையவனும் ஆகிய இறைவனை அடியேன். செல்வ மாளிகைகளும் முத்தீயையும் வளர்க்கின்ற அந்தணர்களது மாளிகைகளும் உள்ள இடங்களில் எல்லாம், கரிய எருமைகள் செந்தாமரை மலர்களை மேய்கின்ற வயல்களையுடைய திருக்கானாட்டு முள்ளூரில் கண்டு வணங்கப் பெற்றேன். என்னே என் தவப்பயன் !

406. இரும்புயர்ந்த மூவிலைய சூலத்தி னானை
இறைவனை மறையவனை எண்குணத்தி னானைக்
கரும்புயர்ந்த கொன்றையொடு தூமதியம் சூடும்
சடையானை விடையானைச் சோதியெனும் சுடரை
அரும்புயர்ந்த அரவிந்தத்து அணிமலர்கள் ஏறி
அன்னங்கள் விளையாடும் அகன்துறையின் அருகே
கரும்புயர்ந்து பெருஞ்செந்நெல் நெருங்கிவிளை கழனிக்
கானாட்டு முள்ளூரில் கண்டுதொழு தேனே.

தெளிவுரை : சூலத்தை உடையவனும், இறைவனும் வேதத்தை ஓதுபவனும், எட்டுக் குணங்களை உடையவனும் கொன்றை மாலையோடு சந்திரனைச் சூடிய சடையை உடையவனும் இடபத்தை ஏறுபவனும் சுயஞ்சோதி என்னும் ஒளியானவனும் ஆகிய இறைவனை அடியேன் அன்னங்கள் தாமரை மலரின் மீது விளையாடுகின்ற, கரும்புகள், நெற்பயிர்கள் செறிந்து விளைகின்ற வயல்களையுடைய திருக்கானாட்டு முள்ளூரில் கண்டு வணங்கப் பெற்றேன். என் தவப்பயன் இருந்தவாறு என்னே ! எண் குணங்களாவன: தன் வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல். இயல்பாகவே பாசங்களின் நீங்குதல். பொருள் உடைமை. முடிவில் ஆற்றல் உடைமை. வரம்பு இல் இன்பம் உடைமை என்பன. இவ்வாறு சைவ ஆகமத்துக் கூறப்பட்டது.
 
407. பூளைபுனை கொன்றையோடு புரிசடையி னானைப்
புனலாகி, அனலாகிப் பூதங்கள் ஐந்தாய்
நாளை இன்று நெருநலாய் ஆகாயம் ஆகி
ஞாயிறாய் மதியமாம் நின்றஎம் பரனைப்
பாளைபடு பைங்கமுகின் சூழல்இளந் தெங்கின்
படுமதஞ்செய் கொழுந்தேறல் வாய்மடுத்துப்பருகிக்
காளைவண்டு பாடமயில் ஆலும்வளர் சோலைக்
கானாட்டு முள்ளூரில் கண்டுதொழு தேனே.

தெளிவுரை : பூளைப்பூவையும் அழகிய கொன்றை மாலையையும் புரித்த சடையின்கண் உடையவனும் நீராகியும் நெருப்பாகியும் ஐம்பூதாங்களாகியும் நாளை, இன்று, நேற்று என்னும் நாட்களாகியும், பரவெளியாகியும் சூரியனாகியும் சந்திரனாகியும் இருக்கின்ற எங்கள் இறைவனை, அடியேன் நீர்வளம் நிலவளமிக்க திருக்கானாட்டு முள்ளூரில் கண்டு வணங்கப் பெற்றேன். என்னே என் தவப்பயன் இருந்தவாறு! பூளைப்பூவையும் சிவபிரான் அணிதல், இத் திருப்பாடலாற் பெறப்படுகின்றது.

408. செருக்குவாய்ப் பைங்கண்வெள் அரவுஅரையி னானைத்
தேவர்கள்சூ ளாமணியைச் செங்கண் விடையானை
முருக்குவாய் மலர்ஒக்கும் திருமேனி யானை
முன்னிலையாய் முழுதுலகம் ஆயபெரு மானை
இருக்குவாய் அந்தணர்கள் எழுபிறப்புள் எங்கும்
வேள்வியிருந்து இருநிதியம் வழங்குநகர் எங்கும்
கருக்குவாய்ப் பெண்ணையொடு தெங்கமலி சோலைக்
கானாட்டு முள்ளூரில் கண்டுதொழு தேனே.

தெளிவுரை : வெண்ணிறப் பாம்பை அரையிற் கட்டியவனும். தேவர்கள் முடியிலுள்ள மணி போன்றவனும் இடப வாகனத்தை உடையவனும் முருக்க மலர் போன்ற செந்நிறமுடையவனும், எல்லாவற்றிற்கும் சாட்சியாய் உள்ளவனும் உலக முழுவதும் தானேயாய் நிறைந்தவனும் ஆகிய இறைவனை, அடியேன். எழுவகைப் பிறப்பையுடைய உயிர்கள் உள்ள இடங்களில் எல்லாம் வேதத்தை ஓதுகின்ற அந்தணர்கள் வேள்வி செய்வதால் அவர்களுக்கு மிகுந்த செல்வத்தை வழங்குகின்ற மாளிகையின் பக்கங்களில் பனை மரங்களும் தென்னை மரங்களும் நிறைந்த சோலைகளையுடைய திருக்காட்டு முள்ளூரில் கண்டு வணங்கினேன்.

409. விடைஅரவக் கொடிஏந்தும் விண்ணவர்தம் கோனை
வெள்ளத்து மாலவனும் வேதமுத லானும்
அடியிணையும் திருமுடியும் காணஅரிதாய
சங்கரனைத் தத்துவனைத் தையல்மட வார்கள்
உடைஅவிழக் குழல்அவிழக் கோதைகுடைந் தாடக்
குங்குமங்கள் உந்திவரு கொள்ளிடத்தின் கரைமேல்
கடைகள்விடு வார்குவளை களைவாருங் கழனிக்
கானாட்டு முள்ளூரில் கண்டுதொழு தேனே.

தெளிவுரை : விடைக்கொடியை ஏந்திய தேவர்பெருமானும் நீரில் துயில்கின்ற திருமாலும். வேதத் தலைவனாகிய பிரமனும் அடியையும் முடியையும் காண்டல் அரிதாகிய சங்கரன் என்னும் காரணப் பெயரையுடையவனும் மெய்ப்பொருளானவனும் ஆகிய இறைவனை. அடியேன் இளைய பெண்கள் தங்கள் உடை அவிழவும் கூந்தல் அவிழவும் மூழ்கி விளையாடுதலால் கிடைத்த குங்குமச் சேற்றைத் தள்ளிக்கொண்டு வருகின்ற கொள்ளிடத்தின் கரைமேலுள்ள கடையர்கள் குவளையைக் களையாக எடுத்தெறியும் திருக் கானாட்டு முள்ளூரில் கண்டு வணங்கப் பெற்றேன்.

410. அருமணியை முத்தினை ஆன்ஆஞ்சும் ஆடும்
அமரர்கள்தம் பெருமானை அருமறையின் பொருளைத்
திருமணியைத் தீங்கரும்பின் ஊறலிருந் தேனைத்
தெரிவரிய மாமணியைத் திகழ்தருசெம் பொன்னைக்
குருமணிகள் கொழித்திழிந்து சுழித்திழியும் திரைவாய்க்
கோல்வளையார் குடைந்தாடும் கொள்ளிடத்தின் கரைமேல்
கருமணிகள் போல்நீலம் மலர்கின்ற கழனிக்
கானாட்டு முள்ளூரில் கண்டுதொழு தேனே.

தெளிவுரை : அரிய மாணிக்கமும் முத்தும் ஆனவனும் பசுவினிடத்திருந்து பெறப்படும் பஞ்ச கவ்ய அபிஷேகத்தைக் கொண்டருளும் தேவர் தலைவனும் அரிய வேதத்தின் பொருள் ஆனவனும் தொண்டர்க்குப் பெருஞ் செல்வமானவனும் இனிய கருப்பஞ்சாறும் சிறந்த தேனும் போல மனத்திற்கு இனியவனும் காணுதற்கரிய பெரிய இரத்தினமும், பொன்னும் போன்றவனுமான எம்பெருமானை, மலையினின்றும் ஒளி பொருந்திய மணிகளைக் கொழித்துக்கொண்டு வரும் நீரில் பெண்கள் முழுகி நீராடுகின்ற கொள்ளிடத்தின் தென்கரையிலுள்ள நீலோற்பல பூக்கள் மலர்கின்ற வயல்களையுடைய திருக்கானாட்டு முள்ளூரில் கண்டு வணங்கப் பெற்றேன்.

411. இசைதழுவு வெண்ணூலும் மேவுதிரு மார்பின்
ஈசன்தன் எண்தோள்கள் வீசிஎரி ஆடக்
குறைதழவு திருக்காதில் கோளரவம் அசைத்துக்
கோவணம்கொள் குழகனைக் குளிர்சடையி ளானைத்
தழைதழுவு தண்ணிறத்த செந்நெல் அதன் அயலே
தடந்தரள மென்கரும்பின் தாழ்கிடங்கின் அருகே
கழைதழுவித் தேன்தொடுக்கும் கழனிசூழ் பழனக்
கானாட்டு முள்ளூரில் கண்டுதொழு தேனே.

தெளிவுரை : பாம்பாகிய அணிகலமும் அதனோடு சேர்ந்த வெண்மையான முப்புரி நூலும் பொருந்திய அழகிய மார்பையுடைய கடவுளும், தனது எட்டுத் தோள்களையும் வீசி நடனம் ஆடுதற் பொருட்டு, குழைபொருந்திய காதில் பாம்பையும் இட்டு, உடையைக் கோவணமாக உடுத்த அழகனும் கங்கை நீரால் குளிர்ந்த சடையை உடையவனும் ஆகிய இறைவனை, அடியேன் செந்நெற் பயிரின் பக்கத்தில் வண்டுகள் கரும்பில் தேன் கூட்டை அமைக்கின்ற வயல்கள் சூழ்ந்த திருக்கானாட்டு முள்ளூரில் கண்டு வணங்கப்பெற்றேன்.

412. குனிவினிய கதிர்மதியம் சூடுசடை யானைக்
குண்டலஞ்சேர் காதவனை வண்டினங்கள் பாடப்
பனிஉதிரும் சடையானைப் பால்வெண்ணீற் றானைப்
பலஉருவும் தன்உருவே ஆயபெரு மானைத்
துனிவினிய தூயமொழித் தொண்டைவாய் நல்லார்
தூநீலங் கண்வளரும் சூழ்கிடங்கின் அருகே
கனிவினிய கதலிவனம் தழுவுபொழிற் சோலைக்
கானாட்டு முள்ளூரில் கண்டுதொழு தேனே.

தெளிவுரை : வளைந்த இனிய ஒளியையுடைய சந்திரனைச் சூடியதும், குண்டலம் பொருந்திய காதையும் வண்டுகள் நிறைந்த சடையையும் உடையவனும் வெண்ணீற்றை அணிந்தவனும் எல்லா உருவங்களும் தன் உருவாக நிற்கின்ற பெருமானும் ஆகிய இறைவனை, அடியேன் அழகிய பெண்கள் நீலோற்பலங்கள் கண் வளர்கின்ற நிறைந்த கிடங்கின் அருகில் உள்ள வாழைத்தோட்டங்களையுடைய திருக்கானாட்டு முள்ளூரில் கண்டு வணங்கப் பெற்றேன்.

413. தேவியம்பொன் மலைக்கோமான் தன்பாலை ஆகத்
தனதுருவம் ஒருபாகம் சேர்த்துவித்த பெருமான்
மேவியவெந் நரகத்தில் அழுந்தாமை நமக்கு
மெய்ந்நெறியைத் தான்காட்டும் வேதமுத லானைத்
தூவிவாய் நாரையொடு குருகுபாய்ந்து ஆர்ப்பத்
துறைக்கெண்டை மிளிர்ந்து கயல் அள்ளிவிளை யாடக்
காவிவாய் வண்டுபல பண்செய்யுங் கழனிக்
கானாட்டு முள்ளூரில் கண்டுதொழு தேனே.

தெளிவுரை : உமாதேவி தனக்கு மனைவியாய் வாய்க்க, அவளைத் தனது இடப்பாகத்தில் சேர்த்து வைத்த பெருமானும் பாவிகள் நரகத்தில் விழாதபடி நமக்கு மெய்ந் நெறியைக் காட்டுகின்ற வேத முதல்வனாகிய இறைவனை நாரைகளும் குருகுகளும் பறந்து ஒலிக்க, நீர்த்துறைகளில் கெண்டை பிறழ பிற மீன்கள் துள்ளி விளையாட வண்டுகள் இசை பாடுகின்ற வயல்களையுடைய திருக்கானாட்டு முள்ளூரில் கண்டு வணங்கப் பெற்றேன்.

114. திரையினார் கடல்சூழ்ந்த தென்னிலங்கைக் கோனைச்
செற்றவனைச் செஞ்சடைமேல் வெண்மதியி னானைக்
கரையினார் புனல்தழுவு கொள்ளிடத்தின் கரைமேல்
கானாட்டு முள்ளூரில் கண்டுகழல் தொழுது
உரையினார் மதயானை நாவல்ஆ ரூரன்
உரிமையால் உரைசெய்த ஒண்தமிழ்கள் வல்லார்
வரையினார் வகைஞாலம் ஆண்டவர்க்கும் தாம்போய்
வானவர்க்குந் தலைவராய் நிற்பவர் தாமே.

தெளிவுரை : மதம் பொருந்திய யானையை யுடைய திருநாவலூரில் தோன்றிய நம்பியாரூரன் தென்னிலங்கைக்கு அரசனாகிய இராவணனது செருக்கை அடக்கியவனும், சடையில் சந்திரனை அணிந்தவனும் ஆகிய இறைவனை, கொள்ளிடை நதியின் கரைமேல் உள்ள திருக்கானாட்டு முள்ளூரில் கண்டு அடி வணங்கி, வணங்கப்பெற்ற அவ்வுரிமையினால் பாடிய இவ் ஒளி பொருந்திய தமிழ்ப்பாடல்களைப் பாட வல்லவர்கள், நிலவுலகத்தை ஆளுகின்ற அரசர்கட்கும் தலைவராய், பின்பு சென்று வானுலகத்தார்க்கும் தலைவராய் நெடிது வாழ்வர்.

திருச்சிற்றம்பலம்

41. திருக்கச்சூர் ஆலக்கோயில் (அருள்மிகு கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர், திருக்கோயில், திருக்கச்சூர்,காஞ்சிபுரம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

415. முதுவாய் ஓரி கதற முதுகாட்டு
எரிகொண் டாடல் முயல்வானே
மதுவார் கொன்றைப் புதுவீ சூடும்
மலையான் மகள்தன் மணவாளா
கதுவாய்த் தலையில் பலிநீ கொள்ளக்
கண்டால் அடியார் கவலாரே
அதுவே ஆமாறு இதுவோ கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.

தெளிவுரை : நரிகள் கூப்பிடச் சுடுகாட்டில் தீயை ஏந்தி ஆடுதலைச் செய்பவனே. கொன்றை பூவைச் சூடுகின்ற உமாபதியே ! திருக்கச்சூரிலுள்ள ஆலக்கோயிலில் வீற்றிருக்கும் பெருமானே, நீ சென்று ஓட்டில் பிச்சை ஏற்றலைக் கண்டால் உன் அடியவர் கவலை கொள்ளாரோ? இஃது உன் கருணை இருந்த வாறேயோ !

416. கச்சேர் அரவொன்று அரையில் அசைத்துக்
கழலும் சிலம்பும் கலிக்கல் பலிக்கென்று
துச்சம் போதா ஊரூர் திரியக்
கண்டால் அடியார் உருகாரே
இச்சை அறியோம் எங்கள் பெருமான்
ஏழேழ் பிறப்பும் எனையாள்வாய்
அச்சம் இல்லாக் கச்சூர் வடபால்
ஆலக்கோயில் அம்மானே.

தெளிவுரை : எங்கள் பெருமானே, இருவகை ஏழ் பிறப்புக்களிலும் என்னை ஆளாகக் கொண்டு ஆள்பவனே. திருக்கச்சூரின் வட பகுதியில் உள்ள ஆலக் கோயிலில் இருக்கின்ற அச்சம் இல்லாத பெருமானே. நீ பாம்பு ஒன்றைக் கச்சாகக் கட்டி, கழலும் சிலம்பும் காலில் இருந்து ஒலிக்க பிச்சைக்கென்று பகல் உச்சி வேளையில் ஊர்தோறும் திரிதலைக் கண்டால் உன் அடியார் மனம் உருகமாட்டார்களோ? உன் விருப்பம் யாது என்பதை யாம் அறிய மாட்டோம். கழல் வலக்காலிலும் சிலம்பு இடக் காலிலும் உள்ளன என்க. இருவகை ஏழ் பிறப்புக்களாவன; வினைப்பயன் தொடரும் ஏழ்பிறப்பும். தாவரம் முதல் தேவர் ஈறாக உள்ள ஏழ்பிறப்புமாம். ஆலக் கோயில் ஆலநிழலில் எனினுமாம்.

417. சாலக் கோயில் உளநின் கோயில்
அலைஎன் தலைமேல் கொண்டாடி
மாலைத் தீர்ந்தேன் வினையும் துரந்தேன்
வானோர் அறியா நெறியானே
கோலக் கோயில் குறையாக் கோயில்
குளிர்பூங் கச்சூர் வடபாலை
ஆலக் கோயில் கல்லால் நிழற்கீழ்
அறங்கட் டுரைத்த அம்மானே.

தெளிவுரை : தேவரும் அறிய முடியாத நிலையை உடையவனே, குளிர்ந்த அழகிய திருக்கச்சூர் வடபால் ஆலக் கோயிலில் இருக்கின்ற கல்லால் நிழற்கீழ் பெருமானே, உனது கோயிலாகப் பல கோயில்கள் இம்மண்ணில் உள்ளன. அவற்றை யெல்லாம் என் தலைமேல் வைத்துப் புகழ்ந்து மயக்கமும் தீர்ந்தேன். வினையையும் ஓட்டினேன். இங்குள்ள கோயிலைப் புகழ்ந்து நீ இரந்து சோறிடப் பெற்றேன்.

418. விடையும் கொடியும் சடையும் உடையாய்
மின்னேர் உருவத்து ஒளியானே
கடையும் புடைசூழ் மணிமண் டபமும்
கன்னி மாடம் கலந்தெங்கும்
புடையும் பொழிலும் புனலும் தழுவிப்
பூமேல் திருமா மகள்புல்லி
அடையும் கழனிப் பழனக் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.

தெளிவுரை : இடப வாகனத்தையும் இடபக் கொடியையும் சடை முடியையும் உடையவனே, திருமேனியினது மின்னல் போலும் ஒளியை உடையவனே. எங்கும் அழகிய வாயில்களையும் நிறைந்த மணி மண்டபங்களையும் அழிவில்லாத மாடங்களையும் கொண்டு, சோலைகளையும் நீர் நிலைகளையும் பெற்று விளங்குதலால் திருமகள் நீங்காமல் உறைகின்ற வயல்களையுடைய திருக்கச்சூரில் உள்ள ஆலக்கோயிலில் இருக்கின்ற பெருமானே, உன் கருணை இருந்தவாறு என்னே !

419. மேலை விதியே வினையின் பயனே
விரவார் புரமூன்று எரிசெய்தாய்
காலை எழுந்து தொழுவார் தங்கள்
கவலை களைவாய் கறைகண்டா
மாலை மதியே மலைமேல் மருந்தே
மறவேன் அடியேன் வயல்சூழ்ந்த
ஆலைக் கழனிப் பழனக் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.

தெளிவுரை : மேம்பட்டதாகிய அறநெறியாயும் அதன் பயனாயும் உள்ளவனனே, பகைவரது திரிபுரங்களை எரித்தவனே, காலையில் எழுந்து உன்னை வணங்குவாரது மனக் கவலையை அடியோடு நீக்குபவனே, நீல கண்டனே, மாலையில் தோன்றும் சந்திரன் போல்பவனே, மாலையிலுள்ள மருந்துபோல்பவனே, வயல்கள் நிறைந்த கரும்பாலையையுடைய இடங்களைக் கொண்ட பண்ணையையுடைய திருக்கச்சூரில் உள்ள ஆலக்கோயிலில் உள்ள பெருமானே, அடியேன் உன்னை மறவேன்.

420. பிறவாய் இறவாய் பேணாய் மூவாய்
பெற்றம் ஏறிப் பேய்சூழ்தல்
துறவாய் மறவாய் சுடுகாடு என்றும்
இடமாக் கொண்டு நடமாடி
ஒறுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக்
கண்டால் அடியார் உரு காரே
அறவே ஒழியாய் கச்சூர் வடபால்
ஆலக் கோயில் அம்மானே.

தெளிவுரை : பிறவாதவனே, இறவாதவனே, யாதொன்றையும் விரும்பாதவனே, மூப்படையாதவனே, இடபத்தை ஏறிப் பேயாற் சூழப்படுதலை விடாதவனே, மறதி இல்லாதவனே, என்றும் சுடுகாட்டையே இடமாகக் கொண்டு நடனம் ஆடுபவனே, திருக்கச்சூரில் வடபால் உள்ள ஆலக் கோயிலில் உள்ள பெருமானே, நீ மூளியான கபாலத்தில் பிச்சை ஏற்றலைக் கண்டால் உன் அடியவர் மனம் வருந்தாரோ? இதனை அறவே ஒழி.

421. பொய்யே உன்னைப் புகழ்வார் புகழ்ந்தால்
அதுவும் பொருளாக் கொள்வானே
மெய்யே எங்கள் பெருமான் உன்னை
நினைவார் அவரை நினைகண்டாய்
மையார் தடங்கண் மடந்தை பங்கா
கங்கார் மதியம் சடைவைத்த
ஐயா செய்யாய் வெளியாய் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.

தெளிவுரை : உமாபதியே ! கங்கையையும் ஆத்திப் பூவையும் சந்திரனையும் சடையில் வைத்துள்ள தலைவனே, செம்மை நிறம் உடையவனே ! வெண்மை நிறம் உடையவனே ! திருக்கச்சூர் ஆலக்கோயிலில் உள்ள பெருமானே, உன்னைப் புகழ்கின்றவர்கள் பொய்யாகவே கொண்டு அருள் செய்பவனே, எங்கள் பெருமானாகிய உன்னை மெய்யாகவே நினைக்கின்ற அடியவரை நீ நினை.

422. ஊனைப் பெருக்கி உன்னை நினையாது
ஒழிந்தேன் செடியேன் உணர்வில்லேன்
கானக் கொன்றை கமழ மலரும்
கடிநா றுடையாய் கச்சூராய்
மானைப் புரையும் மடமென் னோக்கி
மடவாள் அஞ்ச மறைத்திட்ட
ஆனைத் தோலாய் ஞானக் கண்ணாய்
ஆலக் கோயில் அம்மானே.

தெளிவுரை : காட்டில் உள்ள கொன்றை மலரின் புதுமணம் வீசுதலை உடையவனே, உமையவள் அஞ்சும்படி போர்த்துள்ள யானைத் தோலை உடையவனே, உயிர்களுக்கு ஞானக் கண்ணாய் உள்ளவனே, திருக்கச்சூர் ஆலக்கோயிலில் உள்ள பெருமானே, கீழ்மையுடையவனும் அறிவில்லாதவனுமாகிய யான் உடம்பை வளர்க்கும் செயலில் ஈடுபட்டு உன்னை நினையாது விட்டேன்.

423. காதல் செய்து களித்துப் பிதற்றிக்
கடிமா மலரிட்டுனை ஏத்தி
ஆதல் செய்யும் அடியார் இருக்க
ஐயங் கொள்வது அழகிதே
ஓதக் கண்டேன் உன்னை மறவேன்
உமையாள் கணவா எனையாள்வாய்
ஆதற் பழனக் கழனிக் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.

தெளிவுரை : பக்தி செய்து ஆனந்த வெறி மேலிட்டுப் பிதற்றி, மணமுள்ள சிறந்த பூக்களால் உன்னை அருச்சித்துத் துதித்து உனக்கு வேண்டியவற்றைச் செய்யும் அடியார் பலர் இருக்க, நீ என் பொருட்டுப் பிச்சை எடுப்பது அழகாமோ? சோறு இரந்து வருவதாகச் சொன்ன அச்சொல்லைக் கேட்ட பின் இனி உன்னை எப்பொழுதும் மறக்கமாட்டேன். உமாதேவியின் தலைவனே, என்னை ஆட்கொள்பவனே ! நல்ல விளைச்சலையுடைய கொல்லைகளும் வயல்களும் பொருந்திய திருக்கச்சூர் ஆலக் கோயிலில் உள்ள பெருமானே.

424. அன்னம் மன்னும் வயல்சூழ் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானை
உன்ன முன்னும் மனத்துஆ ரூரன்
ஆரூ ரன்பேர் முடிவைத்த
மன்னு புலவன் வயல்நா வலர்கோன்
செஞ்சொல் நாவன் வன்தொண்டன்
பன்னு தமிழ்நூல் மாலை வல்லார்
அவர்எந் தலைமேல் பயில்வாரே.

தெளிவுரை : அன்னங்கள் நிலைத்து வாழும் வயல்கள் சூழ்ந்த திருக்கச்சூர் ஆலக் கோயிலில் உள்ள பெருமானை அவனது கருணையை நினைக்கின்ற மனத்தினால் ஆரூரன் என்று திருவாரூர் இறைவனது பெயரைத் தலையில் வைத்துள்ள மிக்க புலமையுடையவனும், செவ்விய சொல்லால் அமைந்த பாடல்களையும் பாடவல்ல நாவன்மையுடையவனும், வயல்களையுடைய திருநாவலூர்க்குத் தலைவனும் வன்தொண்டனுமாகிய நம்பியாரூரன் பாடிய தமிழ் இலக்கணம் அமைந்த இப் பாமாலையைப் பாட வல்லவர். என் தலைமேல் எப்போதும் இருத்தற்கு உரியர் ஆவர்.

திருச்சிற்றம்பலம்

42. திருவெஞ்சமாக் கூடல் (அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில், வெஞ்சமாங்கூடலூர்,கரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

425. எறிக்கும் கதிர்வேய் உதிர்முத்தமொடு ஏலம்
இலவங்கம் தக்கோலம் இஞ்சி
செறிக்கும் புனலுட் பெய்து கொண்டு மண்டித்
திளைத்து எற்றுசிற்றாறு அதன்கீழ்க்கரைமேல்
முறிக்கும்தழைமா முடப்புன்னைநாழல் குருக்
கத்திகள்மேல் குயில்கூவலறா
வெறிக்கும் கலைமா வெஞ்சமாக் கூடல்
விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே.

தெளிவுரை : மூங்கிலினின்றும் உதிர்ந்த ஒளிவீசும் முத்துக்களோடு ஏலம், இலவங்கம், தக்கோலம், இஞ்சி என்பவைகளை எவ்விடங்களிலும் நிரப்புகின்ற நீருள் இட்டுக் கொண்டு கரையை நெருங்கிப் பொருந்தி மோதுகின்ற சிற்றாற்றின் கீழ்க்கரைமேல் உள்ள தளிர்த்த தழைகளையுடைய மாமரம், வளைந்த புன்னை மரம், குங்குமமரம். குருக்கத்திப் பந்தர் என்னும் இவைகளின்மேல் இருந்து குயில்கள் கூவும். அஞ்சுகின்ற கலைமானையுடைய திருவெஞ்சமாக் கூடலில் இருக்கின்ற வேறுபட்ட இயல்பையுடையவனே ! அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள்.

426. குளங்கள் பலவும் குழியும்நிறையக்
குடமா மணிசந்தனமும் அகிலும்
துளங்கும் புனலுள் பெய்துகொண்டுமண்டித்
திளைத்துஎற்று சிற்றாறு அதன் கீழ்க்கரைமேல்
வளங்கொள் மதில்மா ளிகைகோ புரமும்
மணிமண்டபமும் இவைமஞ்சு தன்னுள்
விளங்கும் மதிதோய் வெஞ்சமாக் கூடல்
விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே.

தெளிவுரை : பல குளங்களும் குழிகளும் நிறையும்படி மேற்குத் திசையில் உள்ள சிறந்த மணிகளையும் சந்தனம் அகில் முதலிய மரங்களையும் தள்ளிக் கொண்டு கரையை மோதுகின்ற சிற்றாற்றின் கீழ்க் கரைமேல் உள்ள மதிலும், மாளிகையும் கோபுரமும் மணி மண்டபமும் ஆகிய இவை உயர்ந்து உள்ள திருவெஞ்சமாக் கூடலில் உள்ள வேறுபட்ட இயல்பை உடையவனே ! அடியேனையும் உன் சீர் அடியாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள்.

427. வரைமான் அனையார் மயிற்சாயல் நல்லார்
வடிவேற்கண் நல்லார்பலர் வந்திறைஞ்சத்
திரையார் புனலுள் பெய்துகொண்டு மண்டித்
திளைத்தெற்று சிற்றாறு அதன்கீழ்க் கரைமேல்
நிரையார் கமுகும் நெடுந்தாள் தெங்கும்
குறுந்தாள்பலவும் விரவிக் குளிரும்
விரையார் பொழில்சூழ் வெஞ்சமாக் கூடல்
விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.

தெளிவுரை : மலையில் உள்ள மான் போல்பவரும், மயில் போலும் சாயலை உடையவரும் கூரிய வேல் போலும் கண்களை உடையவரும் ஆகிய மகளிர் பலர் வந்து வழிபட. அவர்கள் தனக்கு அளித்த பொருளை அலை நிறைந்த நீரில் இட்டுக் கொண்டு கரையை மோதுகின்ற சிற்றாற்றின் கீழ்க்கரைமேல் உள்ள கமுகமரங்களும், தென்னை மரங்களும், பலா மரங்களும் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருவெஞ்சமாக் கூடலில் கோயில் கொண்டுள்ள வேறுபட்ட இயல்பினை உடையவனே, அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக ஏற்றுக் கொள்.

428. பண்ணேர் மொழியாளைஓர் பங்குடையாய்
படுகாட்டகத்தென் றும்ஓர் பற்றொழியாய்
தண்ணார் அகிலும் நலசா மரையும்
அலைத்தெற்று சிற்றாறு அதன்கீழ்க்கரைமேல்
மண்ணார் முழவும் குழலும் இயம்ப
மடவார் நடமாடும் மணியரங்கில்
விண்ணார் மதிதோய வெஞ்சமாக் கூடல்
விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.

தெளிவுரை : உமாதேவியை இடப்பாகத்தில் கொண்டவனே. சுடுகாட்டின் மேலுள்ள பற்றினை என்றும் நீங்காதவனே. அகிலையும் கவரியையும் அலைத்துக் கொண்டு வந்து, கரையை மோதுகின்ற சிற்றாற்றின் கீழ்க்கரைமேலுள்ள மத்தளமும் குழலும் ஒலிக்க மாதர்கள் நடனம் ஆடுகின்ற அழகிய அரங்கின்மேல் சந்திரன் தவழ்கின்ற திருவெஞ்சமாக் கூடலில் விரும்பியிருக்கின்ற பெருமானே. அடியேனையும் உன் சீர் அடியாருள் ஒருவனாக ஏற்றுக்கொள்.

429. துணைவெண் குழையும் சுருள்வெண் தோடும்
தூங்கும் காதில் துளங்கும் படியாய்
களையே கமழும் மலர்க்கொன் றையினாய்
கலந்தார்க்கு அருள்செய்திடுங் கற்பகமே
பிளைவெண் பிறையாய் பிறங்கும் சடையாய்
பிறவாதவனே பெறுதற்கு அரியாய்
வெளைமால் விடையாய் வெஞ்சமாக் கூடல்
விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.

தெளிவுரை : துளைக்கப்பட்ட வெள்ளிய குழையும். சுருண்ட வெள்ளிய தோடும் காதுகளில் உடையவனே. தேன் மணம் வீசுகின்ற கொன்றை மலரைச் சூடியவனே. அடைந்தவர்க்கு அருள் செய்கின்ற கற்பகமே. இளைய வெள்ளிய பிறையைச் சூடியவனே. சடை முடியை உடையவனே. பிறத்தலைச் செய்யாதவனே. கிடைத்தற்கு அரியவனே. வெண்மையான பெரிய விடையை உடையவனே. திருவெஞ்சமாக் கூடலில் விரும்பி இருப்பவனே. அடியேனையும் உன் சீர் அடியாருள் ஒருவனாக வைத்துக்கொள்.

430. தொழுவார்க்கு எளியாய் துயர்தீர நின்றாய்
சுரும்பார் மலர்கொன்றை துன்றும் சடையாய்
உழுவார்க்கரிய விடையேறி ஒன்னார்
புரந்தீஎழ ஓடுவித்தாய் அழகார்
முழவார் ஒலிபாட லொடுஆடல் அறா
முதுகாடு அரங்கா நடமாட வல்லாய்
விழவார் மறுகில் வெஞ்சமாக் கூடல்
விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.

தெளிவுரை : உன்னைத் தொழுகின்றவர்க்கு எளிதில் கிடைக்கும் பொருளாய் உள்ளவனே. அவர்களது துன்பந்தீர அவர்கட்கு என்றும் துணையாய் நின்றவனே. கொன்றை சூடிய சடையை யுடையவனே. உழுவார்க்கு உதவாத விடையை ஏறுபவனே. திரிபுரங்களை எரியூட்டியவனே. பேய்களின் ஓசையாகிய மத்தள ஒலியும் பாட்டும் குதிப்பும் நீங்காத சுடுகாடே அரங்காக நடனமாடவல்லவனே. விழாக்கள் நீங்காத தெருக்களையுடைய திருவெஞ்சமாக் கூடலில் விரும்பியிருக்கின்ற பெருமானே. அடியேனையும் உன் சீர் அடியாருள் ஒருவனாக விரும்பி ஏற்றுக் கொள். விடை ஒற்றையாகலான், உழுவார்க்கு உதவாதாயிற்று. முதுகாடாதலின் முழவு முதலியன பேயின் முழக்கமே என்க.

431. கடமா களியானை உரித்தவனே
கரிகாடு இடமா அனல்வீசி நின்று
நடமாட வல்லாய் நரையேறு உகந்தாய்
நல்லாய் நறுங்கொன்றை நயந்தவனே
படம்ஆயிரமாம் பருத்துத்திப் பைங்கண்
பருவாய் எயிற்றோடு அழலே உமிழும்
விடவார் அரவா வெஞ்சமாக் கூடல்
விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.

தெளிவுரை : பெரிய மதயானையை உரித்தவனே ! சுடுகாடே இடமாக நெருப்பை வீசி நின்று நடனமாட வல்லவனே. வெண்மையான இடபத்தை விரும்பியவனே. நல்லோனை கொன்றை மலரை அணிபவனே. புள்ளிகளையுடைய ஆயிரம் படங்கள் பொருந்திய பசிய கண்களும் பிளந்த வாயில் பற்களோடு நெருப்பை உமிழ்கின்ற நஞ்சையுடைய பாம்பை அணிந்தவனே. திருவெஞ்சமாக் கூடலில் கோயில்கொண்டுள்ள பெருமானே. அடியேனையும் உன் சீர் அடியாருள் ஒருவனாக வைத்துக் கொள்வாயாக.

432. காடும் மலையும் நாடும் இடறிக்
கதிர்மாமணி சந்தனமும் அகிலும்
சேடன் உறையும் இடந்தான் விரும்பித்
திளைத்தெற்று சிற்றாறு அதன்கீழ்க் கரைமேல்
பாடல் முழவும் குழலும் இயம்பப்
பணைத்தோளியர் பாடலொடு ஆடல்அறா
வேடர் விரும்பும் வெஞ்சமாக் கூடல்
விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.

தெளிவுரை : சிறந்த மணிகளையும் சந்தனத்தையும் அகிலையும் முல்லை குறிஞ்சி மருதம் என்னும் நிலங்களில் சிதறி சேடன் என்னும் அரவரசன் வாழ்கின்ற பாதலத்தை அடைய விரும்பி நிலத்தை அகழ்ந்து, கரையை மோதுகின்ற சிற்றாற்றின் கீழ்க்கரை மேல் உள்ள மத்தளமும் குழலும் ஒலிக்க மாதர்கள் பாடுதலோடு கூத்தர் ஆடும் திருவெஞ் சமாக் கூடலில் இருக்கும் பெருமானே ! அடியேனையும் உன் சீர் அடியாருள் ஒருவனாக விரும்பி ஏற்றுக்கொள்.

433. கொங்கார் மலர்க்கொன்றை யந்தாரவனே
கொடுகொட்டி யொர்வீணை உடையவனே
பொங்காடு அரவும் புனலும் சடைமேல்
பொதியும் புனிதா புனஞ்சூழ்ந்து அழகார்
துங்கார் புனலுள் பெய்துகொண்டு மண்டித்
திளைத்தெற்று சிற்றாறு அதன்கீழ்க்கரைமேல்
வெங்கார் வயல்சூழ் வெஞ்சமாக் கூடல்
விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.

தெளிவுரை : கொன்றை மலர் மாலையை அணிந்தவனே ! கொடு கட்டியையும் வீணையொன்றையும் உடையவனே, பாம்பும் தண்ணீரும் சடையில் கொண்டுள்ள தூயவனே, நீருள் காடுபடுபொருள்களைத் தள்ளிக் கொண்டு கரையில் மோதுகின்ற சிற்றாற்றின் கீழ்க்கரைமேல் உள்ள வயல்கள் சூழ்ந்த திருவெஞ்சமாக் கூடலில் எழுந்தருளியிருக்கின்ற விகிர்தா ! அடியேனையும் உன்சீர் அடியாருள் ஒருவனாக ஏற்றுக்கொள். கொடுகொட்டி என்பது பறைக்கும் ஆடலுக்கும் பெயர்.

434. வஞ்சிநுண் இடையார் மயிற்சாயல் அன்னார்
வடிவேற்கண் நல்லார் பலர்வந்து இறைஞ்சும்
வெஞ்சமாக் கூடல் விகிர்தா அடியேனையும்
வேண்டுதியே என்றுதான் விரும்பி
வஞ்சியாது அளிக்கும் வயல்நாவ லர்கோன்
வனப்பகை யப்பன் வன்தொண்டன் சொன்ன
செஞ்சொல் தமிழ்மாலைகள் பத்தும் வல்லார்
சிவலோகத் திருப்பது திண்ணமன்றே.

தெளிவுரை : வஞ்சிக்கொடி போலும் நுண்ணிய இடையை உடையவரும் மயில்போலும் சாயலை உடையவரும் வேல்போலும் கண்களை உடையவரும் ஆகிய மகளிர் பலர் வந்து வணங்குகின்ற திருவெஞ்சமாக் கூடலில் உள்ள விகிர்தா ! அடியேனையும் உன் சீர் அடியாருள் ஒருவனாகச் சேர்த்துக் கொள் என்று திருநாவலூரில் உள்ளாருக்குத் தலைவனும், வனப்பகைக்குத் தந்தையும் ஆகிய வன்தொண்டன் விரும்பிப் பாடிய இத்தமிழ் மாலைகள் பத்தையும் பாடவல்லவர் சிவலோகத்தில் வீற்றிருத்தல் திண்ணம்.

திருச்சிற்றம்பலம்

43. திருமுதுகுன்றம் (அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில், விருத்தாச்சலம், கடலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

435. நஞ்சியிடைஇன்று நாளைஎன்று
உம்மை நச்சுவார்
துஞ்சியிட்டாற் பின்னைச்
செய்வதென் அடிகேள் சொலீர்
பஞ்சியிடப் புட்டில்
கீறுமோபணி யீர்அருள்
முஞ்சியிடை சங்கம்ஆர்க்கும்
சீர்முது குன்றரே.

தெளிவுரை : இத் திருப்பதிகம் இறைவரிடத்துத் தமக்குள்ள உரிமையால் அடியவர்கட்கு நீர் இப்போதே அருள் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அருளிச் செய்தது.

முஞ்சிப் புல்லின் புதல்மேல் சங்கு தங்கி ஒலிக்கின்ற புகழையுடைய திருமுது குன்றத்தில் எழுந்தருளியிருப்பவரே, எங்கள் தலைவரே, உம்மை நெஞ்சுருகி விரும்புகின்ற அடியவர். நீர் அருள் செய்யும் காலம் இன்று வாய்க்கும்: நாளை வாய்க்கும் என்று எண்ணிக் கொண்டேயிருந்து இறந்துவிட்டால் அதன் பின்பு நீர் அவர்களுக்குச் செய்வதென்ன இருக்கின்றது ? பஞ்சியை அடைப்பதனால் குடுக்கை உடைந்துவிடுமோ? விரைந்து அருள்புரிவீர்.

436. ஏரிக்கனகக் கமல மலர்அன்ன சேவடி
ஊரித்தனையும் திரிந்தக் காலவை நோங்கொலோ
வாரிக்கட் சென்று வளைக்கல்பட்டு வருந்திப்போய்
மூரிக்களிறு முழக்க றாமுது குன்றரே.

தெளிவுரை : பெரிய களிற்றியானை வெள்ளத்தில் சென்று அதனால் வளைத்துக் கொள்ளப்பட்டு மீளமாட்டாமல் வருந்திப் பின் அரிதில் மீண்டு பிளிறுதல் நீங்காத திருமுது குன்றத்தில் எழுந்தருளியிருப்பவரே. உமது அழகு பொருந்திய பொற்றாமரை போலும் செவ்விய இத்திருவடிகள் இத்தனை ஊர்களிலும் திரிந்தால் அவை வருந்துமோ? வருந்தாவோ?

437. தொண்டர்கள்பாட விண்ணோர்கள் ஏத்த உழிதர்வீர்
பண்டகந் தோறும் பலிக்குச் செல்வதும் பான்மையே
கண்டகர் வாளிகள் வில்லிகள் புறங்காக் குஞ்சீர்
மொண்டகை வேள்வி முழக்க றாமுது குன்றரே.

தெளிவுரை : கைவாள் ஏந்தியவர், பெருவாள் ஏந்தியவர். வில் ஏந்தியவர் ஆகிய பலரும் புறந்து நின்ற காக்கின்ற புகழையுடைய நெய் முதலியவற்றை முகந்து சொரிகின்ற, கைகளால் வளர்க்கப்படுகின்ற வேள்விகளின் முழக்கம் நீங்காத திருமுது குன்றத்தில் கோயில் கொண்டிருப்பவரே. நீர் அடியவர்கள் பாடவும். தேவர்கள் துதிக்கவும் தலைவராய்த் திரிவீர்; ஆதலின் பழமையான இல்லங்கள் தோறும் பிச்சைக்குச் செல்வது தகுதியோ? வாளிகள் வில்லிகள் புறத்து நின்று காத்தல் கொடியவர்கள் வேள்வியை அழித்தல் செய்யாதபடி என்க.

438. இளைப்பறி யீர்இம்மை ஏத்துவார்க்கு அம்மை செய்வதென்
விளைப்பறி யாதவெங் காலனை உயிர்வீட்டினீர்
அளைப்பரி யாஅரவு அல்குலாளொடு கங்கைசேர்
முளைப்பிறைச் சென்னிச் சடைமுடிமுது குன்றரே.

தெளிவுரை : தன் செயல் விளைப்பது அறியாது வந்த கொடிய இயமனை உயிர் போக்கியவரே; புற்றினின்றும் நீங்காத பாம்பின் படம் போலும் அல்குலையுடைய உமையோடு கங்கையும் பொருந்திய, இளம் பிறையை யுடைய சடை முடியை யுடைய திருமுதுகுன்றத்தில் உள்ளவரே, இப்பிறப்பில் உம்மைப் போற்றுகின்றவர்களது தளர்ச்சியை நினைக்கமாட்டீர். வரும் பிறப்பில் நீர் அவர்கட்குச் செய்வது என்ன இருக்கின்றது? இப்போதே அருள் செய்தல் வேண்டும் என்பதாம்.

439. ஆடி அசைந்துஅடி யாரும்நீரும் அகந்தோறும்
பாடிப் படைத்த பொருள்எலாம் உமையாளுக்கோ
மாடமதிலணி கோபுரமணி மண்டபம்
மூடி முகில்தவழ் சோலைசூழ் முதுகுன்றரே.

தெளிவுரை : மாடங்கள்மேலும் மதில்மேலும் அழகிய கோபுரங்கள்மேலும், மணி மண்டபங்கள்மேலும், மேகங்கள் மூடிக்கொண்டு தவழ்கின்ற சோலை சூழ்ந்த திருமுதுகுன்றத்தில் கோயில் கொண்டிருப்பவரே. அடியாரும் நீருமாகச் சென்று, இல்லந்தோறும் ஆடியும் பாடியும் வருந்திச் சேர்த்த பொருள்கள் எல்லாம் உம்தேவிக்கு மட்டும் தான் உரியனவோ? எம்போல்வார்க்குச் சிறிதும் உரியது இல்லையோ?

440. இழைவளர் நுண்ணிடை மங்கை யோடிடு காட்டிடைக்
குழைவலர் காதுகள் மோத நின்று குனிப்பதே
மழைவள ரும்நெடும் கோட்டிடை மதயானைகள்
முழைவளர் ஆளி முழக்க றாமுது குன்றரே.

தெளிவுரை : மேகங்கள் மிகுந்த நீண்ட சிகரங்களிடையே மதத்தை யுடைய யானைகளும் குகைகளில் வளர்கின்ற யாளிகளும் முழங்குதல் நீங்காத திருமுது குன்றத்தில் பொருந்தியிருப்பவரே ! நீர் நூல் தங்கியுள்ளது போலும் நுட்பமான இடையையுடைய மங்கையோடு இடுகாட்டின்கண் குழை பொருந்திய காதுகள் பக்கங்கள் போதும்படி முற்பட்டு நின்று நடன மாடுவதோ?

441. சென்றி லிடைச்செடி நாய்குரைக்கச் சேடிச்சிகள்
மன்றி லிடைப்பலி தேரப் போவது வாழ்க்கையே
குன்றி லிடைக்களிறு ஆளிகொள்ளக் குறத்திகள்
முன்றி லிடைப்பிடி கன்றிடும்முது குன்றரே.

தெளிவுரை : குன்றில் களிற்றி யானையைச் சிங்கம் உண்டு விட, அதன் பின் யானையையும் கன்றையும் குறத்திகள் தங்கள் குடிலின்முன் கட்டிவைத்துக் காக்கின்ற திருமுதுகுன்றத்தில் இருப்பவரே. நீர் பல இல்லங்களிலும் சென்று அங்குள்ள இழிந்த நாய்கள் குரைக்க. சேடிகள் தெருவில் வந்து இடுகின்ற அந்தப் பிச்சையை வாங்கச் செல்வது மேற்கொள்ளத்தக்க வாழ்க்கையோ?

442. அந்தி திரிந்தடி யாரும் நீரும் அகந்தோறும்
சந்திகள் தோறும் பலிக்குச் செல்வது தக்கதே
மந்தி கடுவனுக்கு உண்பழம் நாடி மலைப்புறம்
முந்தி அடிதொழ நின்ற சீர்முது குன்றரே.

தெளிவுரை : பெண் குரங்கிற்கும் ஆண் குரங்கிற்கும் உண்ணுதற்குரிய பழங்களை அவைகள் தேடிக் கொண்டு மலைப்புறங்களில் முற்பட்டுச் செற்றபோது, அவைகள் கண்டு, அன்பு கொண்டு வணங்குமாறு காட்சி தருகின்ற புகழையுடைய திருமுதுகுன்றத்து  இறைவரே. நீரும் அடியார்களுமாக இல்லந்தோறும் அந்தியிலும் சந்தியிலும் பிச்சைக்குச் சென்று திரிவது தக்கதோ?

443. செட்டிநின் காதலி ஊர்கள் தோறும் அறஞ்செய
அட்டுமின் சில்பலிக் கென்று அகங்கடை நிற்பதே
பட்டிவெள் ளேறு உகந்தேறு வீர்பரி சென்கொலோ
முட்டுஅடி தொழநின்ற சீர்முது குன்றரே.

தெளிவுரை : யாவரும் எதிர்வந்து அடிவணங்க நிற்கின்ற புகழையுடைய திருமுது குன்றத்து இறைவரே, அளவறிந்து வாழ்பவளாகிய உம் மனைவி ஊர்கள் தோறும் அறம் வளர்க்க நீர் இல்லங்களின் வாயில் தோறும் சென்று இடுமின் என்று இரந்து சிலவாகிய பிச்சைக்கு நிற்றல் பொருந்துமோ? கட்டுக்குள் நில்லாத வெண்மையான எருது ஒன்றை விரும்பி ஏறுபவராகிய உமது தன்மைதான் என்னோ?

444. எத்திசையும் திரிந்து ஏற்றக் கால்பிறர் என்சொலார்
பத்தியி னால்இடு வார்இடைப் பலிகொள்மினோ
எத்திசை யும்திரை ஏறமோதிக் கரைகள்மேல்
முத்தி முத்தாறு வலம்செயும் முதுகுன்றரே.

தெளிவுரை : எல்லாப் பக்கங்களிலும் அவை புரண்டு செல்லும்படி இரு கரைகளின் மேலும் மோதுகின்ற முத்தியைத் தருகின்ற மணிமுத்தாறு வலம் வந்து செல்கின்ற திருமுது குன்றத்து பெருமானே. ஒன்றையும் விட்டு விடாமல் எல்லா இடங்களிலும் திரிந்து பிச்சை ஏற்றால், பிறர் என்ன சொல்ல மாட்டார்கள்? ஆகையால் அன்போடு இடுகின்றவர் இல்லத்தில் மட்டும் சென்று பிச்சை வாங்குமின்.

445. முத்தி முத்தாறு வலஞ்செயும் முதுகுன்றரைப்
பித்தன் ஒப்பான்அடித் தொண்டனூரன் பிதற்றிவை
தத்துவ ஞானிகள் ஆயினார் தடுமாற்றிலார்
எத்தவத் தோர்களும் ஏத்துவார்க்கு இடர்இல்லையே.

தெளிவுரை : முத்தியைத் தருகின்ற முத்தாறு வலமாகச் சூழ்ந்து ஓடுகின்ற திருமுது குன்றத்து இறைவரை, அவர் திருவடிக்குத் தொண்டனாய் உள்ள பித்துக் கொண்டவன் போன்ற நம்பியாரூரன் பிதற்றிய இப்பாடல்களை, தத்துவ ஞானிகளாயினும் பிறழாத உள்ளத்தையுடைய அன்பர்களாயினும் எத்தகைய தவத்தில் நிற்பவராயினும் பாடுகின்றவர்களுக்குத் துன்பம் இல்லையாகும்.

திருச்சிற்றம்பலம்

44. முடிப்பது கங்கை

திருச்சிற்றம்பலம்

446. முடிப்பது கங்கையும் திங்களும்
செற்றது மூவெயில்
நொடிப்பது மாத்திரை நீறெ
ழக்கணை நூறினீர்
கடிப்பதும் ஏறுமென் றஞ்சு
வன்திருக் கைகளால்
பிடிப்பது பாம்பன்றி இல்லை
யோஎம் பிரானுக்கே.

தெளிவுரை : இத்திருப்பதிகம் தொடக்கத்தால் பெயர் பெற்றது. பொதுவாக அருளிச் செய்யப்பட்டதாயினும் திருவஞ்சைக் களத்துப் பெருமான் திருமுன்பில் அருளிச் செய்தது என்பதனை இதன் வரலாற்றால் உணர்க. இது சிவபிரானது தன்மையை ஆராயும் முறையில் அருவிச் செய்தது.

எம்பெருமான் தலையில் சூடுவது கங்கையையும் சந்திரனையும் . அழித்தது மூன்று மதில்களை அவற்றைக் கைநொடிக்கும் அளவில் சாம்பலாய்த் தோன்றுமாறு அம்பினால் அழித்தார். தனது வலிய திருக்கைகளால் பிடிப்பது பாம்பு. அது கடித்தவுடன், நஞ்சு தலைக்கேறும் என்று யான் எப்போதும் அஞ்சுவேன். இதைத் விர எம்பெருமானுக்கு வேறு பொருள்கள் இல்லையோ? முதல் பாட்டின் முதல் இரண்டு சீர்களே இப் பதிகத்தின் பெயராயிற்று.

447. தூறன்றி ஆடரங்கு இல்லை யோசுட லைப்பொடி
நீறன்றி சாந்தமற் றில்லை யோஇம வான்மகள்
கூறன்றிக் கூறுவ தில்லை யோகொல்லைச் சில்லைவெள்
ஏறன்றி ஏறுவ தில்லை யோஎம் பிரானுக்கே.

தெளிவுரை : எம்பெருமானுக்கு ஆடுகின்ற அரங்கு காடன்றி வேறு இல்லையோ? சாத்து, சுடலைப் பொடியாகிய சாம்பலன்றி வேறு இல்லையோ? தனது திருமேனியில் ஒரு கூறாய் நிற்பது உமையின் கூறன்றி வேறு இல்லையோ? ஏறுவது முல்லை நிலத்தில் உள்ள சிறுமையுடைய வெள்ளை எருதன்றி வேறு இல்லையோ? பெண்ணொரு கூறு என்பது பெருமை தாராமையின் வேறு கூறு இல்லையோ என்றார்.

448. தட்டெனும் தட்டெனும் தொண்டர் காள்தடு மாற்றத்தை
ஒட்டெனும் ஒட்டெனும் மாநி லத்துயிர் கோறலைச்
சிட்டன் திரிபுரஞ் சுட்ட தேவர்கள் தேவனை
வெட்டெனப் பேசன்மின் தொண்டர் காள்எம் பிரானையே.

தெளிவுரை : மன அலைவையும் எல்லாப் பொருட்கும் நிலைக்களமாகிய பெரிய நிலத்தின்கண் உள்ள உயிர்களைக் கொல்லுதலையும் நன்னெறிக்குத் தடையென்று உணர்ந்த அடியவர்களே. மேலானவனும் திரிபுரத்தை எரித்த தேவதேவனும் ஆகிய எம்பெருமானை வெறுத்துப் பேசன்மின். பேசின், கெடுவீர் என்பது குறிப்பெச்சம்.

449. நரிதலை கவ்வநின்று ஓரிகூப்பிட நள்ளிருள்
எரிதலைப் பேய்புடை சூழ ஆரிருள் காட்டிடைச்
சிரிதலை மாலை சடைக்கு அணிந்த எம்செல்வனைப்
பிரிதலைப் பேசன்மின் தொண்டர் காள்எம் பிரானையே.

தெளிவுரை : அடியார்களே ! நரிகள் இறந்தோரது தலைகளைக் கவ்வி இழுக்க, ஓரிகள் கூக்குரலிட, செறிந்த இருட்காலத்தில், நெருப்பு எரிகின்ற இடத்தில் பேய்கள் புடை சூழ்ந்திருக்க, அரிய இருளையுடைய காட்டில் சிரிப்பது போலும் தலைமாலையைச் சடையில் அணிந்த எம் செல்வனாகிய எம்பெருமானை விட்டு நீங்குதற்குரிய சொற்களைப் பேசாதீர்கள், இவ்வாறு சொல்லி இகழன்மின் இவையே அவனது உண்மை நிலையன்று.

450. வேயன தோளி மலைம களைவி ரும்பிய
மாயமில் மாமலை நாடன் ஆகிய மாண்பனை
ஆயன சொல்லிநின் றார்கள் அல்லல் அறுக்கிலும்
பேயனே பித்தனே என்ப ரால்எம் பிரானையே.

தெளிவுரை : மூங்கிலைப் போன்ற தோள்களையுடைய உமாதேவியை விரும்பிகின்ற எம்பெருமானை, தம்மால் இயன்றவைகளைச் சொல்லிப் புகழ்ந்து நின்றவரது துன்பங்களைக் களைதலைக் கண்டும், அவனைச் சிலர், அவன் பேயோடு ஆடுபவன்; பித்துக் கொண்டவன் என்று இகழ்வர். எம்பெருமான் அவர் அவ்வாறு இகழுமாறு இருத்தல் ஏன்?

451. இறைவனென்று எம்பெரு மானை வானவர் ஏத்தப்போய்த்
துறையொன் றித்தூ மலரிட்டு அடியிணை போற்றுவார்
மறையன்றிப் பாடுவ தில்லை யோமல்கு வானிளம்
பிறையின்றிச் சூடுவ தில்லை யோம்எம் பிரானுக்கே.

தெளிவுரை : தேவர்,  எம்பெருமானை இறைவன் என்றறிந்து துதிக்கச் சென்று நன்னெறியில் பொருந்தி, தூய மலர்களைச் சொரிந்து அவன் திருவடிகளைப் போற்றுவர். அப்படியிருக்க அவனுக்குப் பாடும் பாட்டு மறைகள் அன்றி வேறு ஒன்றும் இல்லையோ ! சூடும் கண்ணி வானத்திற் செல்லும் இளம்பிறையன்றி, வேறு ஒன்றும் இல்லையோ !

452. தாருந்தண் கொன்றையும் கூவிளம்தனி மத்தமும்
ஆரும் அளவறி யாத ஆதியும் அந்தமும்
ஊரும் ஒன்றில்லை உலகெ லாம்உகப் பார்தொழப்
பேருமோ ராயிரம் என்ப ரால்எம் பிரானுக்கே.

தெளிவுரை : எம்பெருமானுக்கு மாலையும் தண்ணிய கொன்றைப்பூ, கூவிளையிலை, மிகத்தாழ்ந்த ஊமத்தம் பூ என்பன. அளவும். யாராலும் அறியப்படாத முதலும் முடிவும். அன்பு செய்பவர் சென்று தொழுவதற்கு ஊரும் ஒன்றாய் இல்லை; உலகம் முழுவதுமாம். சொல்வதற்குப் பேரும் ஒன்றல்ல. ஓர் ஆயிரம் என்று சொல்லி யாவரும் நகைப்பர். அவன் இவ்வாறு இருத்தல் ஏன்?

453. அரியோடு பூமிசை யானும் ஆதியும் அறிகிலார்
வரிதரு பாம்பொடு வன்னி திங்களும் மத்தமும்
புரிதரு புன்சடை வைத்த என்புனி தற்கினி
எரிஅன்றி அங்கைக்கொன்று இல்லை யோஎம் பிரானுக்கே.

தெளிவுரை : கீற்றுக்களை யுடைய பாம்போடு வன்னி, ஊமத்தை, பிறை என்பவைகளை புரித்த புல்லிய சடையில் வைத்துள்ள என் புனிதனாகிய எம் பெருமானை, திருமாலும், பூ மேல் இருப்பவனாகிய பிரமனும் அடியும் முடியும் அறிய மாட்டார். பிறர் ஆர் அறிவார். அங்கையில் ஏந்துவதற்கு நெருப்பன்றி அவனுக்கு வேறு இல்லையோ !

454. கரிய மனச்சமண் காடி யாடு கழுக்களால்
எரிய வசவுணும் தன்மை யோஇம வான்மகள்
பெரிய மனந்தடு மாறவேண் டிப்பெம் மான்மதக்
கரியின் உரியல்ல தில்லை யோஎம் பிரானுக்கே.

தெளிவுரை : எம்பெருமானுக்கு, சமணர்களால் மனம் எரிந்து இகழப்படுதல்தான் இயல்போ ! மலையரையான் மகளாகிய தன் தேவியின் பெருமை பொருந்திய மனம் கலங்கவேண்டி, அவன், மதத்தையுடைய யானையினின்றும் உரித்த தோல் அல்லது போர்வை வேறு இல்லையோ !

455. காய்சின மால்விடை மாணிக்கத்து எம்கறைக் கண்டத்து
ஈச னைஊரன் எட்டோடு இரண்டு விரும்பிய
ஆயின சீர்ப்பகை ஞானியப் பன்அடித் தொண்டர்தான்
ஏசின பேசுமின் தொண்டர் காள்எம் பிரானையே.

தெளிவுரை : அடியார்களே ! காய்கின்ற சினத்தையுடைய பெரிய விடையை ஏறுகின்ற எங்கள் மாணிக்கம் போல்பவனும். கறுப்புநிற கண்டனுமாகிய இறைவனை அவன் அடித்தொண்டனும் மிக்க புகழையுடைய வனப்பகைக்கு ஞானத்தந்தையும் ஆகிய நம்பியாரூரன் விரும்பிப் பாடியனவும் ஆகிய இப் பத்துப் பாடல்களால் எம்பெருமானைப் பாடுமின். எட்டோடு இரண்டு  பத்துப் பாடல்கள்.

திருச்சிற்றம்பலம்

45. திருவாமாத்தூர் (அருள்மிகு அபிராமேஸ்வரர் திருக்கோயில், திருவாமத்தூர்,விழுப்புரம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

456. காண்டனன் காண்டனன் காரிகை யாள்தன் கருத்தனாய்
ஆண்டனன் ஆண்டனன் ஆமாத் தூர்எம் அடிகட்காட்
பூண்டனன் பூண்டனன் பொய்யன்று சொல்லுவன் கேண்மின்காள்
மீண்டனன் மீண்டனன் வேதவித்து அல்லா தவர்கட்கே.

தெளிவுரை : இத் திருப்பதிகம், நாயனார் இறைவர்பால் தமக்குள்ள அன்பின் மிகுதியைப் புலப்படுத்தும் வகையில் அருளிச்செய்தது.

அடியேன் திருஆமாத்தூரில் எழுந்தருளியுள்ள எம் தலைவனே உமையம்மைக்குக் கணவனாகக் கண்டேன். அவனுக்கு அடிமை பூண்டேன். அடிமையைப் பலகாலும் செய்தேன். இவை பொய்யல்ல. இன்னும் சொல்லுவேன். கேண்மின். வேத நெறியைப் போற்றுவார் அல்லாதவர்களை நீங்கினேன்.

457. பாடுவன் பாடுவன் பார்ப்பதி தன்னடி பற்றிநான்
தேடுவன் தேடுவன் திண்ணெனப் பற்றிச் செறிதர
ஆடுவன் ஆடுவன் ஆமாத் தூர்எம் அடிகளைக்
கூடுவன் கூடுவன் குற்றமது அற்றேன் குறிப்பொடே.

தெளிவுரை : யான், இவ்வுலகிற்குத் தலைவனாகிய திரு ஆமாத்தூரில் கோயில் கொண்டுள்ள எம் இறைவனை, அவனது திருவடியைக் கருதிப் பாடுவேன். உறுதியாகப் பற்றி அணைத்தற்குத் தேடுவேன். தேடிக் கண்டு என் கருத்தின் வண்ணம் குற்றம் நீங்கிக் கூடுவேன். கூடிய களிப்பினால் ஆடுவேன். பார்ப்பதி என்பதே சரியான பாடம். பார்வதியன்று.

458. காய்த்தவன் காய்ந்தவன் கண்அழ
லால் அன்று காமனைப்
பாய்ந்தவன் பாய்ந்தவன் பாதத்தி
னால்அன்று கூற்றத்தை
ஆய்ந்தவன் ஆய்ந்தவன் ஆமாத்
தூர்எம் அடிகளார்
ஏய்ந்தவன் ஏய்ந்தவன் எம்பி
ராட்டியைப் பாகமே.

தெளிவுரை : திரு ஆமாத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற எம் தலைவன் அன்று காமனைத் தன் நெற்றிக் கண்ணில் உள்ள நெருப்பால் எரித்தவன். அன்று கூற்றுவன் மேற்காலாற் பாய்ந்து அவனை அழித்தவன். எல்லாவற்றையும் நன்குணர்ந்தவன். எம்பெருமாட்டியை ஒரு பாகத்தில் ஆரப்பொருந்தியவன்.

459. ஓர்ந்தனன் ஓர்ந்தனன் உள்ளத்துள்
ளேநின்ற ஒண்பொருள்
சேர்ந்தனன் சேர்ந்தனன் சென்று
திருவொற்றி யூர்புக்குச்
சார்ந்தனன் சார்ந்தனன் சங்கிலி
மென்தோள் தடமுலை
ஆர்ந்தனன் ஆர்ந்தனன் ஆமாத்
தூர்ஐயன் அருளதே.

தெளிவுரை : யான், என் உள்ளத்துள்ளே நிலைபெற்றுள்ள ஒளியுடைய பொருளை ஆராய்ந்தறிந்தேன். அவ்அறிவின் வழியே சென்று அதனைத் தலைப்பட்டேன். இனி வெளியே திருவொற்றியூரில் புகுந்து, சங்கிலி என்பாளது மெல்லிய தோளையும், பெரிய தனங்களையும் பொருந்தினேன். இவ் இருவாற்றானும் இருவகை இன்பத்தையும் நிரம்ப நுகர்ந்தேன். இது திரு ஆமாத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனது திருவருள்.

460. வென்றவன் வென்றவன் வேள்வியில்
விண்ணவர் தங்களைச்
சென்றவன் சென்றவன் சில்பலிக்கு
என்று தெருவிடை
நின்றவன் நின்றவன் நீதி
நிறைந்தவர் தங்கள்பால்
அன்றவன் அன்றவன் செய்யருள்
ஆமாத்தூர் ஐயனே.

தெளிவுரை : திரு ஆமாத்தூரில் விரும்பி யிருக்கின்ற இறைவன் தக்கன் வேள்வியில் எல்லாத் தேவர்களையும் வென்றவன். சிலவாகிய பிச்சைக்கென்று தெருவிற் சென்றவன். நீதியிற் சிறிதும் குறையாதவரிடத்தில் நிலை பெற்று நின்றவன். தன்னை அடைந்தார்க்கு அருள் செய்கின்றவன்.

461. காண்டவன் காண்டவன் காண்டற்கு
அரிய கடவுளாய்
நீண்டவன் நீண்டவன் நாரணன்
நான்முகன் நேடவே
ஆண்டவன் ஆண்டவன் ஆமாத்
தூரையும் எனையும்ஆட்
பூண்டவன் பூண்டவன் மார்பிற்
புரிநூல் புரளவே.

தெளிவுரை : திரு ஆமாத்தூரில் விரும்பியிருக்கின்ற இறைவன் தன் அடியவர்களுக்கு எளிதில் காணப்பட்டவன். திருமாலும் பிரமனும் தேட அவர்களால் காணுதற்கரிய கடவுளாய் நீண்டவன், ஆமாத் தூரையும் ஆண்டவன், என்னையும் ஆளாக வைத்து ஆண்டவன். மார்பில் முப்புரி நூலைப் புரளப் பூண்டவன்.

462. எண்ணவன் எண்ணவன் ஏழுல
கத்துயிர் தங்கட்குக்
கண்ணவன் கண்ணவன் காண்டும்என்
பாரவர் தங்கட்குப்
பெண்ணவன் பெண்ணவன் மேனியோர்
பாகமாம் பிஞ்ஞகன்
அண்ணவன் அண்ணவன் ஆமாத்
தூர்எம் அடிகளே.

தெளிவுரை : திரு ஆமாத்தூரில் கோயில் கொண்டிருக்கும் எம் தலைவன் ஏழ் உலகத்திலும் உள்ள உயிர்களுக்குக் கருத்தாய் உள்ளவன். தன்னைக் காண்போம் என்று அன்பால் முயல்கின்றவர்களுக்குக் கண்ணாய் உள்ளவன். திருமேனி ஒருபாகம் பெண்ணாகியவன். பொருந்திய தலைக் கோலத்தை உடையவன். அடையத்தக்கவன்.

463. பொன்னவன் பொன்னவன் பொன்னைத்தந்து
என்னைப் போகவிடா
மின்னவன் மின்னவன் வேதத்தின்
உட்பொரு ளாகிய
அன்னவன் அன்னவன் ஆமாத்தூர்
ஐயனை ஆர்வத்தால்
என்னவன் என்னவன் என்மனத்து
இன்புற்று இருப்பனே.

தெளிவுரை : சகல ஐஸ்வரியங்களும் உடையவனும். பொன்னைத் தந்து என்னைப் போகவிடாத மின்னல் போலப் பேரொளி யுடையவனும், வேதத்தின் உள்ளடங்கிய பொருளாகிய அத்தன்மை யுடையவனும் ஆன திரு ஆமாத்தூரில் உள்ள அழகனை அன்பினால் நான் எனக்கு உரியவன் எனக்கு உரியவன் என்று எண்ணி என் மனத்தில் எப்போதும் இன்பம் அடைந்திருப்பேன். அழகர் என்பது திரு ஆமாத்தூர்ப்பிரானது திருநாமம்.

464. தேடுவன் தேடுவன் செம்மலர்ப்
பாதங்கள் நாடொறும்
நாடுவன் நாடுவன் நாபிக்கு
மேலோயோர் நால்விரல்
மாடுவன் மாடுவன் வன்கை
பிடித்து மகிழ்ந்துளே
ஆடுவன் ஆடுவன் ஆமாத்
தூர்எம் அடிகளே.

தெளிவுரை : யான், திரு ஆமாத்தூரில் எழுந்தருளியுள்ள எம் தலைவனது திருவடிகளை நாள்தோறும் தேடுவேன். அவனை உந்திக்கு மேல் நால்விரல் அளவில் உள்ள இருதயத்தில் நினைப்பேன். வெளியில் சென்றால் வலிய கையால் பிடித்து மகிழ்ந்து உள்ளே சேர்ப்பேன். அவனுக்கு ஏற்புடையன ஆகும்படி கூத்துக்களை ஆடுவேன்.

465. உற்றனன் உற்றவர் தம்மை
ஒழிந்துஉள்ளத்து உள்பொருள்
பற்றினன் பற்றினன் பங்கயச்
சேவடிக் கேசெல்ல
அற்றனன் அற்றனன் ஆமாத்தூர்
மேயான் அடியார்கட்காள்
பெற்றனன் பெற்றனன் பெயர்த்தும்
பெயர்த்தும் பிறவாமைக்கே.

தெளிவுரை : யான் மீண்டும் மீண்டும் பிறவாமைப் பொருட்டு, உற்றாரை நீங்கி, உள்ளத்தில் உள்ள பொருளை அடைந்தேன். திருவாமாத்தூரில் உள்ள இறைவனது தாமரை மலர் போலும் செவ்விய திருவடியிடத்துச்செல்ல அவற்றைத் துணையாகப் பற்றினேன். அதனால் துன்பங்கள் நீங்கப் பெற்றேன். அதன்பின் அவன் அடியவர்க்கு அடியனாகும் பேற்றையும் பெற்றேன்.

466. ஐயனை அத்தனை ஆளுடை
ஆமாத்தூர் அண்ணலை
மெய்யனை மெய்யர்க்கு மெய்ப்பொரு
ளான விமலனை
மையனை மையணி கண்டனை
வன்தொண்டன் ஊரன்சொல்
பொய்யொன்றும் இன்றிப் புலம்புவார்
பொற்கழல் சேர்வரே.

தெளிவுரை : யாவர்க்கும் தலைவனும் தந்தையும் என்றும் உள்ளவனும் மெய்ம்மையான உள்ளம் உடையவர்க்கு அனுபவப் பொருளாய் விளங்குகின்ற தூயவனும் திருவருள் மேகமானவனும் மைபோலும் அழகிய கண்டத்தை உடையவனும் ஆகிய திரு ஆமாத்தூரை ஆளுகின்ற இறைவனை வன்தொண்டனாகிய நம்பியாரூரன் பாடிய பாடல்களை வஞ்சனை சிறிதும் இன்றிப் பாடுகின்றவர் அப்பெருமானது பொன் போலும் திருவடிகளை அடைவர்.

திருச்சிற்றம்பலம்

46. திருநாகைக் காரோணம் (அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்)

திருச்சிற்றம்பலம்

467. பத்தூர்புக்கு இரந்துண்டு பலபதிகம் பாடிப்
பாவையரைக் கிறிபேசிப் படிறாடித் திரிவீர்
செத்தார்தம் எலும்பணிந்து சேவேறித் திரிவீர்
செல்வத்தை மறைத்து வைத்தீர் எனக்கொருநாள் இரங்கீர்
முத்தாரம் இலங்கிமிளிர் மணிவயிரக் கோவை
அவைபூணத் தந்தருளி மெய்க்கினிதா நாறும்
கத்தூரி கமழ்சாந்து பணித்தருள வேண்டும்
கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.

தெளிவுரை : இத் திருப்பதிகம், இறைவர் தம் அடியவர்க்கு இம்மையே அருள்புரிபவர் ஆதலின், இம்மைக்கு வேண்டுவன பலவற்றையும் அவர்பால் வற்புறுத்தி வேண்டி அருளிச் செய்தது.

கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி இருப்பவரே, நீர் பலவூர்களில் சென்று பல பாடல்களைப் பாடி இரந்து உண்பீர். அங்ஙனம் யாசிக்குங்கால் பிச்சை இட வருகின்ற இளம் பெண்களோடு பொய்யான சொற்களைப் பேசிக் கரவுகொண்டு திரிவீர். இறந்தவரது எறும்புகளை மேலே அணிந்து கொண்டு, எருதின் மேல் ஏறித்திரிவீர், என் பொருட்டு ஒரு நாளும் மனம் இரங்காமல் ஒன்றும் இல்லை என்று சொல்வீர். இது நல்லதல்ல. இப்போது யான் அணிந்து கொள்வதற்கு முத்தாரமும், மாணிக்க மாலை, வயிரமாலைகளும் தந்து உடம்பில் பூசிக்கொள்வதற்கு மணம் வீசுகின்ற கஸ்தூரியையும், சந்தனத்தையும் அளித்தருள்வீராக. நாகை  நாகப்பட்டினம். காயாரோகணம்  கோயிலின் பெயர். காரோணம் என மருவியது. இங்குள்ள இறைவன் தன் அடியாராகிய முனிவரைத் தன் உடலோடு ஆரோகணித்துக் கொண்டமையால் காயாரோகணர் எனப் பெயர் பெற்றார்.

468. வேம்பினொடு தீங்கரும்பு விரவிஎனைத் தீற்றி
விருத்திநான் உமைவேண்டத் துருத்திபுக்குஅங்கு இருந்தீர்
பாம்பினொடு படர்சடைகள் அவைகாட்டி வெருட்டிப்
பகட்டநான் ஒட்டுவனோ பலகாலும் உழன்றேன்
சேம்பினொடு செங்கழுநீர் தண்கிடங்கில் திகழும்
திருவாரூர் புக்கிருந்த தீவண்ணர் நீரே
காம்பினொடு நேத்திரங்கள் பணித்தருள வேண்டும்
கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.

தெளிவுரை : கடற்கரையில் உள்ள திருநாகைக் காரோணத்தில் கோயில் கொண்டிருப்பவரே ! நீர் என்னை. கைப்புடைய வேம்பையும் இனிப்புள்ள கரும்பையும் கலந்து உண்பித்து, நான் உம்மை எதிர் பார்த்துக் கொண்டிருக்க நீர் என்முன் நில்லாமல் திருத்துருத்தியில் புகுந்து, அங்கு இருந்துவிட்டீர். இப்போது உம்மைக் கண்டேன். நீர் பாம்பையும் விரிந்த சடையையும் காட்டி என்னை வெருட்ட வேண்டாம். நான் உம்மை அறிவேன். நீர் திருவாரூரில் குடிபுகுந்துள்ளீர். எனக்குக் காம்பு, நேத்திரம் என்ற பட்டாடை வகைகளை அளிக்க வேண்டும்.

469. பூண்பதோர் இளஆமை பொருவிடையொன்று ஏறிப்
பொல்லாத வேடங்கொண்டு எல்லாரும் காணப்
பாண்பேசிப் படுதலையிற் பலிகொள்கை தவிரீர்
பாம்பினொடு படர்சடைமேல் பதிவைத்த பண்பீர்
வீண்பேசி மடவார்கை வெள்வகைகள் கொண்டால்
வெற்பரையன் மடப்பாவை பொறுக்குமோ சொல்லீர்
காண்பினிய மணிமாடம் நிறைந்தநெடு வீதிக்
கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.

தெளிவுரை : விரிந்த சடையின் மேல் பாம்பையும் சந்திரனையும் வைத்த பெருமை உடையவரே. மணிமாடங்கள் நிறைந்த நீண்ட தெருக்களை யுடைய கடற்கரையில் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி யிருப்பவரே ! நீர் அணிந்துள்ள இளைய ஆமை ஓட்டோடு, எருது ஒன்றை ஏறி எவரும் விரும்பாத வேடத்தோடு இசைபாடி மண்டை ஓட்டில் பிச்சை எடுப்பதை விடமாட்டீர். பிச்சை எடுக்கும் போது, பிச்சையிட வரும் மகளிரிடம் வம்பு பேசி அவர்களுடைய வளையல்களைக் கவர்வீராயின் உம்தேவி மனம் பொறுப்பாளோ? சொல்லீர். பாம்பும் மதியும் தம்முள் பகை கொண்டவை என்பர். சான்றாகக் சந்திர கிரகணத்தைக் காட்டுவர்.

470. விட்டதோர் சடைதாழ வீணைவிடங் காக
வீதிவிடை ஏறுவீர் வீண்அடிமை உகந்தீர்
துட்டரா யினபேய்கள் சூழநடம் ஆடிச்
சுந்தரராய்த் தூமதியஞ் சூடுவது சுவண்டே
வட்டவார் குழல்மடவார் தம்மை மயல் செய்தல்
மாதவமோ மாதிமையோ வாட்டம்எலாந் தீரக்
கட்டிஎமக்கு ஈவதுதான் எப்போது சொல்லீர்
கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.

தெளிவுரை : கடற்கரையிலுள்ள திருநாகைக் காரோணத்தில் மேவி இருப்பவரே, நீர் தேவையில்லாமல் அடிமைகளை வைத்துக் கொண்டீர். மற்றும் அவிழ்த்துவிட்ட சடைகள் கீழே விழ, வீணை விளங்க தெருவில் விடையை ஏறிச் செல்வீர். பேய்கள் நடனமாட பிறையைச் சூடுவது அழகோ? மகளிரை மயக்குவதுதான் உமக்குப் பெரிய தவமோ? அல்லது பெருமையோ? இவை ஒருபுறம் இருக்க, எங்களுக்குப் பொற்கட்டியை எப்போது கொடுப்பீர்? சொல்லுக.

கொடிய பேய்கள் சூழ இருக்கின்ற உமக்குத் தூமதியம் தகாது என்பதாம்.

471. மிண்டாடித் திரிதந்து வெறுப்பனவே செய்து
வினைக்கேடு பலபேசி வேண்டியவா திரிவீர்
தொண்டாடித் திரிவேனைத் தொழும்புதலைக் கேற்றும்
சுந்தரனே கந்தமுதல் அடைஆ பரணம்
பண்டாரத் தேஎனக்குப் பணித்தருள வேண்டும்
பண்டுதான் பிரமாணம் ஒன்றுண்டே நும்மைக்
கண்டார்க்குங் காண்பரிதாய்க் கனலாகி நிமிர்ந்தீர்
கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.

தெளிவுரை : அழகரே, திருநாகையில் பொருந்தியிருப்பவரே. நீர். உமக்குத் தொண்டு செய்து திரிகின்ற என்னை அடிமையாக ஏற்றுக் கொண்டும், அருள் பண்ணாமல் வன்கண்மை கொண்டு திரிந்தும். வெறுக்கத்தக்க செயல்களைச் செய்தும். தவறானவற்றைச் சொல்லியும் உன் விருப்பப்படி திரிவீர். உன்னை நான் எப்படிக் காண்பது? உன்னை யாரேனும் கண்டதாகச் சாட்சியுண்டா? காண முயன்றவர்க்கும் அரிதாகும்படி நீண்டு உயர்ந்தாய். ஆகவே உமது இயல்புகளை விடுத்து உமது கருவூலத்திலிருந்து நறுமணம், ஆடை, ஆபரணம் முதலியவற்றை எனக்குத் தருவாயாக.

472. இலவஇதழ் வாய்உமையோடு எருதேறிப் பூதம்
இசைபாட இடுபிச்சைக்கு எச்சுஉச்சம் போது
பலஅகம்புக்கு உழிதர்வீர் பட்டோடு சாந்தம்
பணித்தருளாது இருக்கின்ற பரிசென்ன படிறோ
உலவுதிரைக் கடல்நஞ்சை அன்றமரர் வேண்ட
உண்டருளிச் செய்தது உமக்கு இருக்கஒண்ணா திடவே
கலவமயில் இயலவர்கள் நடமாடும் செல்வக்
கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.

தெளிவுரை : மயில்போலும் சாயலையுடைய மகளிர் நடனமாடுகின்ற செல்வச் சிறப்புடைய கடற்கரை நகரமாகிய நாகைக் காரோணத்தில் விரும்பியிருக்கின்ற பெருமானே ! நீர் உமையாளோடு எருதின் மேல் ஏறிக்கொண்டு, பூதங்கள் இசை பாட, பலரும் இடுகின்ற பிச்சைக்கு, உச்சிப் போதில் பல வீடுகளில் புகுந்து திரிவீர். எனினும், அன்று தேவர்கள் வேண்ட நஞ்சினை உண்டு அவர்களுக்கு அருள் செய்தீர். இப்போது எனக்குப் பட்டும் சாத்தும் தராமல் இருப்பதன் தன்மை என்ன வஞ்சமோ ! பிச்சை எடுப்பீர் போலக் காட்டுதல் நாடகமேயன்றிப் பிறிதில்லை. இலவ இதழ் வாய்க்கு உவமை.

473. தூசுடைய அகல்அல்குல் தூமொழியாள் ஊடல்
தொலையாத காலத்தோர் சொற்பாடாய் வந்து
தேசுடைய இலங்கையர்கோன் வரைஎடுக்க அடர்த்துத்
திப்பியகீ தம்பாடத் தேரொடுவாள் கொடுத்தீர்
நேசமுடை அடியவர்கள் வருந்தாமை அருந்த
நிறைமறையோர் உறைவீழி மிழலைதனில் நித்தல்
காசருளிச் செய்தீர்இன்று எனக்கருள வேண்டும்
கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.

தெளிவுரை : கடற்கரை நகரமாகிய திருநாகைக் காரோணத்தில் மேவியிருக்கும் பிரானே, உம் தேவி உம்மிடம் கொண்ட ஊடலை நீர் தீர்க்க முயன்றும் அது தீராதிருந்த காலத்தில், சொல்லி வைத்தது போல, இலங்கை மன்னனாகிய இராவணன் வந்து உமது மலையைப் பெயர்க்க, அவனை முதலில் தண்டித்து, அவன் சிறந்த இசையைப் பாட, அவனுக்குத் தேரும், வாளும் கொடுத்தீர். அதுவன்றி பஞ்சகாலத்தில் ஞான சம்பந்தருடனும் அப்பருடனும் வந்த சிவனடியார்கள் பசியின்றி உணவருந்தி இருக்குமாறு மறையவர் நிறைந்த திருவீழிமிழலையில் நாள்தோறும் அன்று படிக்காசு அருளினீர். அதுபோல இன்று எனக்கு அருள் செய்ய வேண்டும்.

474. மாற்றமேல் ஒன்றுரையீர் வாளாநீர் இருந்தீர்
வாழ்விப்பன் எனஆண்டீர் வழியடியேன் உமக்கு
ஆற்றஏல் திருவுடையீர் நல்கூர்ந்தீர் அல்லீர்
அணியாரூர் புகப்பெய்த அருநிதியம் அதனில்
தோற்றமிகு முக்கூற்றில் ஒருகூறு வேண்டும்
தாரீரேல் ஒருபொழுதும் அடியெடுக்கல் ஒட்டேன்
காற்றனைய கடும்பரிமா ஏறுவது வேண்டும்
கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.

தெளிவுரை : கடற்கரையிலுள்ள காரோணத்தில் வீற்றிருக்கின்ற பெருமானே. யான் உமக்கு வழிவழியாக அடியேன். அதன்றியும் நீர் வலிந்து என்னை வாழ்விப்பேன் என்று சொல்லி அடிமை கொண்டீர். மிக்க செல்வம் உடையீர் வறியவரும் அல்லர். அப்படியிருந்தும் மவுனம் சாதிப்பது ஏன்? திருவாரூரில் நீர் சேர்த்து வைத்துள்ள செல்வத்தில் எனக்கு வேண்டிய மூன்றில் ஒரு பாகத்தைத் தரவேண்டும். அதனோடு ஏறிச் செல்வதற்கு விரைந்து செல்லும் குதிரை வேண்டும். இவற்றை நீர் தராவிடில் வெளியே செல்லாதவாறு உம் திருவடிகளைப் பிடித்துக் கொள்வேன். முக்கூற்றில் ஒரு கூறு என்பது, இறைவனுக்கு ஒரு கூறு; இறைவிக்கு ஒரு கூறு, அடியவர்க்கு ஒரு கூறு போலும்.

475. மண்ணுலகும் விண்ணுலகும் உம்மதே ஆட்சி
மலையரையன் பொற்பாவை சிறுவனையும் தேறேன்
எண்ணிலிஉண் பெருவயிறன் கணபதிஒன்று அறியான்
எம்பெருமான் இதுதகவோ இயம்பியருள் செய்யீர்
திண்ணெனஎன் உடல்விருத்தி தாரீரே ஆகில்
திருமேனி வருந்தவே வலைக்கின்றேன் நாளைக்
கண்ணறையன் கொடும்பாடன் என்றுரைக்க வேண்டா
கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.

தெளிவுரை : கடற்கரையிலுள்ள திருநாகைக் காரோணத்தில் மேவியிருக்கும் இறைவரே ! மண்ணுலகிலும் விண்ணுலகிலும் உம்முடைய ஆட்சியே நடைபெறுகிறது. ஆகையால் உம்மை நம்ப மாட்டேன். உமா தேவியையும் முருகனையும் நம்ப மாட்டேன். பெருவயிறனாகிய கணபதியையும் நம்பமாட்டேன். உம் குடி இவ்வாறு இருத்தல் நல்லதோ? எனக்கு வேண்டியதைத் தராவிட்டால் உம்மைக் கட்டிப் பிடித்துக் கொள்வேன். பிறகு இவன் கண்ணோட்டம் சிறிதும் இல்லாதவன், கொடுமையுடையவன் என்று என்னை வெறுக்க வேண்டா.

476. மறிஏறு கரதலத்தீர் மாதிமையேல் உடையீர்
மாநிதியம் தருவன்என்று வல்லீராய் ஆண்டீர்
கிறிபேசிக் கீழ்வேளூர் புக்கிருந்தீர் அடிகேள்
கிறியும்மாற் படுவேனோ திருவாணை உண்டேல்
பொறிவிரவு நற்புகர்கொள் பொற்சுரிகை மேலோர்
பொற்பூவும் பட்டிகையும் புரிந்தருள வேண்டும்
கறிவிரவு நெய்சோறு முப்போதும் வேண்டும்
கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.

தெளிவுரை : கையில் மான் கன்றை உடையவரே ! தலைவரே, திருநாகைக் காரோணத்தில் விரும்பியிருப்பவரே ! நீர் மிக்க பெருமையுடையவர். மிக்க பொருளைத் தருவேன் என்று சொல்லி என்னை ஆட்கொண்டீர். ஆனால் இப்போது ஒன்றும் இல்லாதவர் போல் வஞ்சனைகள் பேசி, திருக்கீழ் வேளூரில் போய்த் தங்கியிருக்கின்றீர். இதை நான் முன்பே அறிந்திருந்தால் இவ்வாறு ஏமாந்திருப்பேனோ? பொன்னாலாகிய உடைவாளும், தலையில் அணியும் பொற்றாமரைப் பூவும், பட்டுக் கச்சும் எனக்குத் தரவேண்டும். அன்றியும் மூன்று பொழுதிலும் கறியும் சோறும் நெய்யும் வேண்டும்.

477. பண்மயத்த மொழிபரவை சங்கிலிக்கும் எனக்கும்
பற்றாய பெருமானே மற்றாரை உடையேன்
உண்மயத்த உமக்கடியேன் குறைதீர்க்க வேண்டும்
ஒளிமுத்தம் பூணாரம் ஒண்பட்டும் பூவும்
கண்மயத்த கத்தூரி கமழ்சாந்தும் வேண்டும்
கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீர்என்று
அண்மயத்தால் அணிநாவல் ஆரூரன் சொன்ன
அருந்தமிழ்கள் இவைவல்லார் அமர்உலகாள் பவரே.

தெளிவுரை : அழகிய திருநாவலூரில் தோன்றிய நம்பியாரூரன் திருநாகைக் காரோணத்துப் பெருமானை அடுத்து நின்ற தன்மையால் அவரை, திருநாகையில் கோயில் கொண்டிருப்பவரே, பரவை, சங்கிலி என்னும் இருவருக்கும் எனக்கும் சார்பாய் உள்ள பெருமானே ! யான் உம்மையன்றி வேறு யாரைச் சார்பாக உடையேன்? அடியேனாகிய என் குறையை நீக்கியருளல் வேண்டும். முத்துமாலையும், பட்டாடையும், பூவும் கத்தூரி மணம் கமழ்கின்ற சந்தனமும் வேண்டும் என்று வேண்டிப் பாடிய இந்தத் தமிழ்ப் பாடல்களைப் பாட வல்லவர்கள், அமரர் உலகத்தை ஆள்வார்கள்.

திருச்சிற்றம்பலம்

47. ஊர்த் தொகை

திருச்சிற்றம்பலம்

478. காட்டூர்க் கடலே கடம்பூர்
மலையே கானப் பேரூராய்
கோட்டூர்க் கொழுந்தே அழுந்தூர்
அரசே கொழுநற் கொல்லேறே
பாட்டூர் பலரும் பரவப்
படுவாய் பனங்காட்டு ஊரானே
மாட்டூர் அறவா மறவாது
உன்னைப் பாடப் பணிவாயே.

தெளிவுரை : இத்திருப்பதிகம் இறைவர் எழுந்தருளியுள்ள பல தலங்களையும் நினைந்து அருளிச் செய்யப்பட்டது. ஊர்த் தொகை  தலங்களது தொகுதியையுடைய பதிகம்.

காட்டூர் முதலிய தலங்களில் எழுந்தருளியிருக்கின்ற கடலும், மலையும், தளிரும், கொல்லும் தன்மையுடைய சிங்க ஏறும் போன்றவனே. பாட்டினை மிக வுணர்ந்தவர் பலராலும் அப்பாட்டுக்களால் பரவப்படுபவனே. எருதை ஊர்கின்ற அறமுதல்வனே ! அடியேன் உன்னை என்றும் மறவாமல் பாடுமாறு அருள்புரிவாய், இதன்கண் கடம்பூர், கானப்பேர், கோட்டூர், அழுந்தூர், பனல்காட்டூர் என்னும் தலங்கள் எடுத்து ஓதப்பட்டன. கடல்  அளவின்மை பற்றியது. மலை  அசைவின்மை பற்றியது. கொல் ஏறு  ஆண்மை பற்றியது.

479. கொங்கிற் குறும்பிற் குரக்குத்
தளியாய் குழகா குற்றாலா
மங்குல் திரிவாய் வானோர்
தலைவா வாய்மூர் மணவாளா
சங்கக் குழையார் செவியா
அழகா அவியா அனல்ஏந்திக்
கங்குல் புறங்காட்டு ஆடி
அடியார் கவலை களையாயே.

தெளிவுரை : கொங்கு நாட்டில் பாலை நிலத்தில் உள்ள குரக்குத்தளி முதலிய தலங்களில் எழுந்தருளியிருப்பவனே, மூப்பு அடையாதவனே, வானத்தில் திரிபவனே, தேவர்க்குத் தலைவனே. மணவாளக் கோலம் உடையவனே, சங்குக்குழை பொருந்திய காதினை உடையவனே, அழகனே, எஞ்ஞான்றும் அவியாமல் எரிகின்ற நெருப்பைக் கையில் ஏந்திக் கொண்டு இரவில் சுடுகாட்டில் ஆடுகின்றவனே, உன் அடியாரது மனக்கவலையைப் போக்கியருள்வாய்.

480. நிறைக்காட் டானே நெஞ்சத்
தானே நின்றி யூரானே
மிறைக்காட் டானே புனல்சேர்
சடையாய் அனல்சேர் கையானே
மறைக்காட் டானே திருமாந்
துறையாய் மாகோ ணத்தானே
இறைக்காட் டானே எங்கட்கு
உன்னை எம்மான் தம்மானே.

தெளிவுரை : நின்றியூர் முதலிய தலங்களில் எழுந்தருளியிருப்பவனே, நெறிபிறழாத சான்றோனே, அடியவர்கள் நெஞ்சில் பொருந்தியருப்பவனே, அவர்கட்குச் சிறிதும் துன்பத்தைக் காட்டாதவனே, நீர் பொருந்திய சடையானே, கையில் நெருப்பை உடையவனே, எம் தந்தைக்குத் தந்தையே, எங்கட்கு உன்னைச் சிறிது நேரம் கூடக் காட்டாதவனே.

இதனுள் நின்றியூர், மறைக்காடு, மாந்துறை, மாகோணம் என்னும் தலங்கள் எடுத்து ஓதப்பட்டன. மாகோணம்  திரிகோணமலை.

481. ஆரூர் அத்தா ஐயாற்று
அமுதா அளப்பூர் அம்மானே
காரூர் பொழில்கள் புடைசூழ்
புறவிற் கருகா வூரானே
பேரூர் உறைவாய் பட்டிப்
பெருமான் பிறவா நெறியானே
பாரூர் பலரும் பரவப்
படுவாய் பாசூர் அம்மானே.

தெளிவுரை : ஆரூர் முதலிய தலங்களில் எழுந்தருளியிருக்கும் பெருமானே, அமுதம் போன்றவனே, பிறவாத நெறியை உடையவனே, நீயே இவ்வுலகில் நிறைந்துள்ள பலராலும் பரவப்படுபவன், ஆதலின் உன்னையே பரவுவேன் என்பதாம். இதனுள் ஆருர், கருகாவூர், பட்டீச்சுரம், பாசூர் என்னும் தலங்கள் எடுத்து ஓதப்பட்டன.

482. மருகல் உறைவாய் மாகா
ளத்தாய் மதியம் சடையானே
அருகற் பிணிநின் அடியார்
மேல அகல அருளாயே
கருகற் குரலாய் வெண்ணிக்
கரும்பே கானூர்க் கட்டியே
பருகப் பணியாய் அடியார்க்கு
உன்னைப் பவளம் படியானே.

தெளிவுரை : மருகல் முதலிய தலங்களில் எழுந்தருளியிருப்பவனே ! சந்திரனைச் சடையில் அணிந்தவனே. கருகிய கண்டத்தை உடையவனே ! கரும்பு போன்றவனே, வெல்லக் கட்டி போன்றவனே, பவளம் போன்ற நிறத்தை உடையவனே, அடியார்களுக்கு வரும் நோய்கள் விலகிச் செல்லவும். உன்னையடைந்து இன்புறவும் அவர்களுக்கு அருள்புரிவாயாக.

இதனுள் மருகல், வெண்ணி, கானூர் என்னும் தலங்கள் எடுத்து ஓதப்பட்டன.

483. தாங்கூர் பிணிநின் அடியார்
மேல அகல அருளாயே
வேங்கூர் உறைவாய் விளமர்
நகராய் விடையார் கொடியானே
நாங்கூர் உறைவாய் தேங்கூர்
நகராய் நல்லூர் நம்பானே
பாங்கூர் பலிதேர் பரனே
பரமா பழனப் பதியானே.

தெளிவுரை : வேங்கூர் முதலிய தலங்களில் எழுந்தருளியிருப்பவனே, இடபக் கொடியை உடையவனே, சிவபெருமானே, பக்கங்களில் உள்ள ஊர்களிற் சென்று பிச்சை எடுப்பவனே. மேலோனே; உன் அடியார் மேலுள்ள நோய்கள் விலக அருள்புரிவாய். இதனுள் விளமர், நல்லூர், பழனம் என்றும் தலங்கள் எடுத்து ஓதப்பட்டன.

484. தேனைக் காவல் கொண்டு
விண்ட கொன்றைச் செழுந்தாராய்
வானைக் காவல் கொண்டு
நின்றார் அறியா நெறியானே
ஆனைக் காவில் அரனே
பரனே அண்ணா மலையானே
ஊனைக் காவல் கைவிட்டு
உன்னை உகப்பார் உணர்வாரே.

தெளிவுரை : ஆனைக்கா, அண்ணாமலை என்னும் தலங்களில் எழுந்தருளியிப்பவனே ! தேனைப் பாது காத்தலை மேற்கொண்டு மலர்ந்த கொன்றைப் பூவினால் ஆகிய மாலையை அணிந்தவனே, தேவர்களால் அறியப்படாத நிலையை உடையவனே. அழித்தல் தொழிலைக் கொண்டவனே ! மேலானவனே. உடலோம்புதலை விட்டு உன்னை விரும்பித் தொழுபவர்களே உன்னை உணர்வார்கள். இதனுள் திருவானைக்காவல், திருவண்ணாமலை என்னும் தலங்கள் எடுத்து ஓதப்பட்டன.

485. துருத்திச் சுடரே நெய்த்தா
னத்தாய் சொல்லாய் கல்லாலா
பருத்தி நியமத் துறைவாய்
வெயிலாய்ப் பலவாய்க் காற்றானாய்
திருத்தித் திருத்தி வந்தென்
சிந்தை இடங்கொள் கயிலாயா
அருத்தித்து உன்னை அடைந்தார்
வினைகள் அகல அருளாயே.

தெளிவுரை : துருத்தி முதலிய தலங்களில் விரும்பியிருப்பவனே ! ஒளிமயமானவனே. சொல்லில் உள்ளவனே. கல்லால மரநிழலில் உள்ளவனே. வெயிலாகியும் காற்றாகியும் மற்றும் பலவாகியும் இருப்பவனே . என் மனத்தைத் திருந்தச் செய்து அதனை இடமாகக் கொண்டவனே. உன்னை வணங்கியவர்களது வினைகள் நீங்க அவர்களுக்கு அருள் செய்வாயாக.

இதனுள் துருத்தி, நெய்த்தானம், பருதி நியமம், கயிலாயம் என்னும் தலங்கள் எடுத்து ஓதப்பட்டன.

486. புலியூர்ச் சிற்றம் பலத்தாய்
புகலூர்ப் போதா மூதூரா
பொலிசேர் புரமூன்று எரியச்
செற்ற புரிபுன் சடையானே
வலிசேர் அரக்கன் தடக்கை
ஐஞ்ஞான்கு அடர்த்த மதிசூடி
கலிசேர் புறவிற் கடவூர்
ஆளி காண அருளாயே.

தெளிவுரை : புலியூர்ச் சிற்றம்பலம் முதலிய தலங்களில் கோயில் கொண்டிருப்பவனே, ஞான உருவினனே, பழைமையான சிவலோகத்தை யுடையவனே, பொலிவு பொருந்திய மூன்று ஊர்கள் எரிந்து அழியுமாறு செய்த, புல்லிய சடையை உடையவனே, இராவணனது பெரிய இருபது கைகளையும் நெரித்த, பிறையைச் சூடியவனே. உன்னைக் காண அருள் செய்வாய்.

487. கைம்மா உரிவை அம்மான்
காக்கும் பலவூர் கருத்துன்னி
மைம்மாந் தடங்கண் மதுரம்
அன்ன மொழியாள் மடச்சிங்கடி
தம்மான் ஊரன் சடையன்
சிறுவன் அடியன் தமிழ்மாலை
செம்மாந் திருந்து திருவாய்
திறப்பார் சிவலோகத் தாரே.

தெளிவுரை : மை தீட்டிய, மாவடுப்போலும், பெரிய கண்களையும் இனிய அழகிய சொல்லையும் இளமையையும் உடைய சிங்கடிக்குத் தந்தையும், சடையனாருக்கு மகனும், யானைத் தோலையுடைய பெருமானுக்கு அடியனும் ஆகிய நம்பி ஆரூரனது இத்தமிழ் மாலையை இறைவனது பல தலங்களையும் நினைத்து, கவலையற்றிருந்து, பாடுவோர் சிவலோகத்தை அடைவர்.

திருச்சிற்றம்பலம்

48. திருப்பாண்டிக் கொடுமுடி (அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில், கொடுமுடி, ஈரோடு மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

488. மற்றுப் பற்றெனக் கின்றி நின்திருப்
பாத மேமனம் பாவித்தேன்
பெற்ற லும்பிறந் தேன்இ னிப்பிற
வாத தன்மைவந் தெய்தினேன்
கற்ற வர்தொழு தேத்தும் சீர்க்கறை
யூரில் பாண்டிக் கொடுமுடி
நற்ற வாஉனை நான்ம றக்கினும்
சொல்லும் நாநமச்சி வாயவே.

தெளிவுரை : எனக்கு வேறு பற்று ஒன்றும் இல்லாமையின் உம் திருவடிகளையே என் மனத்துள் எப்போதும் தியானிக்கிறேன். பெற்றபோதே பிறந்தவனானேன், இனிப் பிறக்காத தன்மையும் கைக்கூடப் பெற்றேன். அறிந்தவர் வணங்கித் துதிக்கும் பெருமையை யுடைய கறையூரைச் சார்ந்த திருப்பாண்டிக் கொடு முடியில் நன்மையை நாடுபவரே. உம்மை நான் மறந்தாலும் நமச்சிவாய என்னும் உமது ஐந்தெழுத்தை என் நாக்கு எப்போதும் மறவாமல் சொல்லும்.

489. இட்ட னும்மடி ஏத்து வார்இகழ்ந்து
இட்ட நாள்மறந் திட்டநாள்
கெட்ட நாள்இவை என்ற லாற்கரு
தேன்கி ளர்புனற் காவிரி
வட்ட வாசிகை கொண்ட டிதொழுது
ஏத்து பாண்டிக் கொடுமுடி
நட்ட வாஉனை நான் மறக்கினும்
சொல்லும் நாநமச்சி வாயவே.

தெளிவுரை : நிறைந்த நீர்ப் பெருக்கினையுடைய காவிரியாறு, வளைவாக மேலால் விளங்க இடப்படும் மாலையைக் கொணர்ந்து உன் திருவடியை வணங்கித் துதிக்கின்ற திருப்பாண்டிக் கொடுமுடி என்னும் கோயிலில் விரும்பியிருக்கின்ற தோழமை கொண்டவனே ! உன் விருப்பத்தைப் பெற்ற யான், உன்னை வணங்குகின்ற அடியவர்களால், இவன் நிலையில்லாத மனத்தை உடையவன் என்று இகழப்பட்ட நாட்களும், நான் உன்னை மறந்துவிட்ட நாட்களும் ஆகிய இவைகளை அடியேன் கெட்ட நாட்களாகக் கருதுவதன்றி வேறாகக் கருத மாட்டேன். ஆதலின் நான் உன்னை மறந்தாலும் என் நா உனது திருப்பெயராகிய நமச்சிவாய என்பதை இடையறாது சொல்லும். வாசிகை  மாலை. (வெள்ளத்தில் வரும் மலர்களும் மணிகளும்) இது தற்குறிப்பேற்றம்.

490. ஓவு நாள்உணர் வழியும் நாள்உயிர்
போகும் நாள்உயர் பாடைமேல்
காவும் நாள்இவை என்ற லாற்கரு
தேன்கி ளர்புனற் காவிரிப்
பாவு தண்புனல் வந்தி ழிபரஞ்
சோதிபாண்டிக் கொடுமுடி
நாவ லாஉனை நான்ம றக்கினும்
சொல்லும் நாநமச்சி வாயவே.

தெளிவுரை : மேலான ஒளியாய் உள்ளவனே. காவிரியாற்றின் பரந்த வெள்ளம் வந்து பாய்கின்ற திருப்பாண்டிக் கொடுமுடி என்னும் கோயிலில் மேவியிருக்கின்ற நாவன்மையுடையவனே, அடியேன் உன்னை நினையாது ஒழிந்த நாட்களை, என் உணர்வு அழிந்த நாட்களும் உயிர் போன நாட்களும், உயரத் தோன்றும் பாடையின் மேல் வைத்துச் சுமக்கப்படும் நாட்களும் என்னும் இவைகளாகக் கருதுதல் அன்றி, வேறு நல்ல நாட்களாகக் கருதமாட்டேன். ஆதலின் உன்னை நான் மறந்தாலும் என் நா உனது திருப்பெயராகிய நமச்சிவாய என்பதை இடைவிடாமல் சொல்லும்.

491. எல்லை யில்புகழ் எம்பி ரான்எந்தை
தம்பி ரான்என்பொன் மாமணி
கல்லை உந்தி வளம்பொ ழிந்திழி
காவி ரியதன் வாய்க்கரை
நல்ல வர்தொழுது ஏத்தும் சீர்க்கறை
யூரில் பாண்டிக் கொடுமுடி
வல்ல வாவுனை நான்ம றக்கினும்
சொல்லும் நாநமச்சி வாயவே.

தெளிவுரை : எல்லையற்ற புகழுடையோய், என் தந்தைக்கும் தலைவனே, என் பொன் போன்றவனே, என் மணி போன்றவனே. செல்வத்தைச் சொரிந்து பாய்கின்ற காவிரியாற்றினது கரையில் உள்ள கறையூரில் திருப்பாண்டிக் கொடுமுடி என்னும் கோயிலில் இருக்கின்ற பெருமானே. உன்னை நான் மறந்தாலும் உனது திருப்பெயராகிய நமச்சிவாய என்பதனை. என் நா, இடைவிடாமல் சொல்லும்.

492. அஞ்சி னார்க்கரண் ஆதி என்றடி
யேனும் நான்மிக அஞ்சினேன்
அஞ்சல் என்றடித் தொண்ட னேற்கருள்
நல்கி னாய்க்கழி கின்றதென்
பஞ்சின் மெல்லடிப் பாவை மார்குடைந்து
ஆடு பாண்டிக் கொடுமுடி
நஞ்ச ணிகண்ட நான்ம றக்கினும்
சொல்லும் நாநமச்சி வாயவே.

தெளிவுரை : மகளிர் காவிரித் துறையில் மூழ்கி விளையாடுகின்ற திருப்பாண்டிக் கொடுமுடி என்னும் கோயிலில் காட்சி தருகின்ற நீலகண்டனே, நீ அச்சமுற்று வந்து அடைந்தவர்க்குப் பாதுகாவலாய் இருப்பாய் என்று அறிந்து, அடியேனாகிய யானும் உன்னை வந்து அடைந்தேன். அதனை அறிந்து, நீ அஞ்சேல் என்று சொல்லி எனக்குத் திருவருள் புரிந்தாய். அதனால் நீ இழந்தது ஒன்றுமில்லை. இத்தகைய பெருமையும் முதன்மையும் உடைய உன்னை நான் மறந்தாலும், என் நா உனது திருப்பெயராகிய நமச்சிவாய என்பதை இடைவிடாமல் சொல்லும்.

493. ஏடு வான்இளந் திங்கள் சூடினை
என்பின் கொல்புலி தோலின்மேல்
ஆடு பாம்பது அரைக்க சைத்த
அழக னேஅந்தண் காவிரிப்
பாடு தண்புனல் வந்தி ழிபரஞ்
சோதி பாண்டிக் கொடுமுடிச்
சேட னேஉனை நான்ம றக்கினும்
சொல்லும் நாநமச்சி வாயவே.

தெளிவுரை : கொல்லுகின்ற புலியினது தோலின்மேல், ஆடுகின்ற பாம்பை அரையில் கட்டியுள்ள அழகனே. காவிரியாற்றினது நீர் வந்து பாய்கின்ற திருப்பாண்டிக் கொடுமுடி என்னும் கோயிலில் இருந்து அருள் பாலிக்கின்ற ஒளிமயமானவனே, பெருமை உடையோய். நீ வானத்தில் தோன்றுகிற பூவிதழ் போன்ற இளந்திங்களை முடியிற் சூடினாய். வேறு சான்று எதற்கு ? அதனால் நான் உன்னை மறந்தாலும் என் நா உனது திருப்பெயராகிய நமச்சிவாய என்பதை, இடைவிடாமல் சொல்லும்.

சேடன் என்றதற்கு யாவும் ஒடுங்கியபின் எஞ்சியிருப்பவன் என்றும் பொருள் கூறவர். புலித்தோல் ஆடையும் பாம்புக் கச்சும் உனது ஆற்றலை உணர்த்தும் குறிப்பு. அபயம் என்று வந்தவரை நீ ஆதரிப்பவன் என்பதற்கு,பிறைச் சந்திரனைச் சூடியிருப்பதே சான்று.

494. விரும்பி நின்மலர்ப் பாத மேநினைந்
தேன்வி னைகளும் விண்டனன்
நெருங்கி வண்பொழில் சூழ்ந்தெ ழில்பெற
நின்ற காவிரிக் கோட்டிடைக்
குரும்பை மென்முலைக் கோதை மார்குடைந்து
ஆடு பாண்டிக் கொடுமுடி
விரும்ப னேஉனை நான்ம றக்கினும்
சொல்லும் நாநமச்சி வாயவே.

தெளிவுரை : தென்னங் குரும்பை போலும் மெல்லிய கொங்கைகளையுடைய கன்னியர் மூழ்கி விளையாடுகின்ற காவிரியாற்றினது கரையில் உள்ள திருப்பாண்டிக் கொடுமுடி என்னும் கோயிலில் இருந்து அருள் பாலிக்கின்ற பெருமானே, அடியேன் உனது திருவடிகளையே விரும்பி நினைந்தேன். அதனால் நீங்குதற்கரிய வினைகளும் நீங்கின. இனி நான் உன்னை மறந்தாலும் என் நா உனது திருப்பெயராகிய நமச்சிவாய என்பதையே இடைவிடாமல் சொல்லும். நம்பன் என்பதை விரும்பன் என்றருளினார். விண்டன  நீங்கின. விண்டனன்  நீங்கப்பெற்றேன்.

495. செம்போ னேர்சடை யாய்தி ரிபுரம்
தீயெ ழச்சிலை கோலினாய்
வம்பு லாங்குழ லாளைப் பாகம்
அமர்ந்து காவிரிக் கோட்டிடைக்
கொம்பின் மேற்குயில் கூவ மாமயில்
ஆடு பாண்டிக் கொடுமுடி
நம்ப னேஉனை நான்ம றக்கினும்
சொல்லும் நாநமச்சி வாயவே.

தெளிவுரை : செம்பொன் போன்ற சடையை யுடையவனே, திரிபுரத்தில் தீ எழும்படி வில்லை வளைத்தவனே, இறைவியை ஒரு பாகத்தில் விரும்பி வைத்து காவிரியின் கரையிலுள்ள சோலைகள் நிறைந்த, திருப்பாண்டிக் கொடுமுடி என்னும் கோயிலில் அமர்ந்து அருள்பாலிக்கின்ற நம்பனே. உன்னை நான் மறந்தாலும் என் நா, உன் திருப்பெயராகிய, நமச்சிவாய என்பதையே இடையறாமல் சொல்லும்.

496. சாரணன் தந்தை என்பிரான் எந்தை
தம்பிரான் என்பொன் மாமணியென்று
பேரெ ணாயிர கோடி தேவர்
பிதற்றி நின்று பிரிகிலார்
நார ணன்பிர மன்தொ ழுங்கறை
யூரில் பாண்டிக் கொடுமுடிக்
கார ணாஉனை நான்ம றக்கினும்
சொல்லும் நாநமச்சி வாயவே.

தெளிவுரை : திருமாலும் பிரமனும் வணங்குகின்ற கறையூரில் உள்ள திருப்பாண்டிக் கொடுமுடி என்னும் கோயிலில் இருந்து அருள் பாலிக்கின்ற முதல்வனே ! அளவற்ற தேவர் எமக்குப் புகலிடமானவன், எம் தந்தை, எம் தலைவன், எம் தந்தைக்கும் தலைவன்; எங்கள் பொன். எங்கள் மணி என்று உன் பல பெயர்களையும் சொல்லி உன்னைப் பிரியாமல் இருப்பர். அத்தகைய உன்னை நான் மறந்தாலும் என் நா, உன் திருப்பெயராகிய நமச்சிவாய என்பதைச் சொல்லிக்கொண்டே இருக்கும். முதலடியில் ஒரு சீர் மிகுந்துவந்தது அடி மயக்கம்.

497. கோணி யபிறை சூடி யைக்கறை
யூரில் பாண்டிக் கொடுமுடி
பேணி யபெரு மானைப் பிஞ்ஞகப்
பித்த னைப்பிறப் பில்லையைப்
பாணு லாவரி வண்ட றைகொன்றைத்
தார னைப்படப் பாம்பரை
நாண னைத்தொண்டன் ஊரன் சொல்இவை
சொல்லு வார்க்கில்லைத் துன்பமே.

தெளிவுரை : வளைந்த பிறையைச் சூடியவனும், தலைக் கோலம் உடையவனும், பேரருள் உடையவனும், பிறப்பில்லாதவனும், பாம்பாகிய அரைநாணை உடையவனும், கறையூரில் உள்ள திருப்பாண்டிக் கொடுமுடி என்னும் கோயிலில் வீற்றிருக்கின்ற பெருமானை, அவன் தொண்டனாகிய நம்பியாரூரன் பாடிய இப்பாடல்களைப் பாடுபவர்க்குத் துன்பம் இல்லை. பண், பாண் என நீண்டது.

திருச்சிற்றம்பலம்.

 
மேலும் ஏழாம் திருமறை »
temple news
பன்னிரு திருமுறைகளில் 7ம் திருமுறை சுந்தரரால் பாடப்பட்ட தேவாரம் ஆகும். 63 நாயன்மார்களில் முதல் மூவரில் ... மேலும்
 
temple news
49. திருமுருகன் பூண்டி (அருள்மிகு திருமுருகநாதர் திருக்கோயில், திருமுருகன்பூண்டி,கோயம்புத்தூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar