பதிவு செய்த நாள்
15
செப்
2011
02:09
இரண்டாம் காண்டம்
6. வம்பறா வரிவண்டுச் சருக்கம்
34. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம்
சைவ சமயம் தழைக்க தோன்றிய சிவனடியார்களில் முக்கியமானவர் திருஞானசம்பந்தர். இவர் 7ம் நூற்றாண்டைச் சார்ந்தவர். இவரை முருகப்பெருமானின் அம்சம் என்பார்கள். இவர் சீர்காழி என்னும் திருத்தலத்தில் சிவபாதவிருதயருக்கும், பகவதியாருக்கும் மகனாக தோன்றியவர். ஒரு முறை சிவபாதவிருதயர் மூன்று வயதான சம்பந்தரை சீர்காழி தோணியப்பர் கோயில் குளக்கரையில் உட்கார வைத்து விட்டு நீராடச்சென்றார். அப்போது சம்பந்தர் பசியின் காரணமாக அழுதார். தெய்வக்குழந்தையான இவரது அழும் குரலைக்கேட்ட சிவன், பார்வதியிடம் குழந்தையின் அழுகையை நிறுத்த ஞானப்பால் ஊட்டுவாயாக என்று அருளினார். அன்னை பராசக்தி குழந்தையின் அருகே வந்தாள். வாரி அணைத்து முத்தமிட்டு மகிழ்ந்தாள். மடி மீது அமர்த்திக் கொண்டாள். தமது திருமுலைப் பாலினைப் பொற்கிண்ணத்தில் ஏந்தினாள். அவரது கண் மலரிலே வழியும் நீரைத் துடைத்தாள். சிவஞான அமுதத்தைக் கலந்த பொற்கிண்ணத்தை அவரது கைகளிலே அளித்து பாலமுதத்தினை உண்பாயாக என மொழிந்தாள்.குழந்தையின் கையைப் பிடித்தவாறு பார்வதி தேவியார் பாலைப் பருகச் செய்தார்கள். குழந்தை அழுவதை நிறுத்தி ஆனந்தக் கண்ணீர் பூண்டது. திருத்தோணியப்பராலும் உமாதேவியாராலும் ஆட்கொள்ளப்பெற்ற குழந்தை ஆளுடைப் பிள்ளையார் என்னும் திருநாமம் பெற்றது.அமரர்க்கும் அருந்தவசியர்க்கும் அறிவதற்கு அரிய பொருளாகிய ஒப்பற்றச் சிவஞானச் செல்வத்தைச் சம்பந்தம் செய்ததனாலே சிவஞான சம்பந்தர் என்னும் திருநாமமும் பெற்றார். அப்பொழுதே சம்பந்தர் உவமையில்லாத கலைஞானத்தைப் பெற்று விளங்கும் பெருமகனானார். அன்றிலிருந்து ஞானசம்பந்தர் தமது ஒப்பற்ற ஞானத் திருமொழியினால் எல்லையில்லா வேதங்கட்கு மூலமாகிய ஓங்காரத்தோடு சேர்ந்த எழுத்தால் இன்பம் பெருகப் பாடத் தொடங்கினார்.
1899. வேதநெறி தழைத் தோங்க மிகுசைவத் துறைவிளங்கப்
பூதபரம்ப ரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத
சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர்
பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்.
தெளிவுரை : இவ்வுலகத்தில் வேத நெறிகள் தழைத்து ஓங்கவும், மேன்மையுடைய சைவத்துறைகள் நிலைபெற்று விளங்கவும், பூதங்களின் பரம்பரையான சைவ அடியார்கள் கூட்டம் தழைத்து விளங்கவும், தூய்மையான திருவாய் மலர்ந்து அழுதவரான குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த சீகாழிப் பதியில் தோன்றியருளிய திருஞானசம்பந்தரின் திருவடித் தாமரைகளைத் தலைமீது கொண்டு அவற்றின் துணையால் அப்பெருமான் செய்த திருத்தொண்டின் இயல்புகளை எடுத்துச் சொல்வோம்.
1900. சென்னிவளர் மதியணிந்த சிலம்பணிசே வடியார்தம்
மன்னியசை வத்துறையின் வழிவந்த குடிவளவர்
பொன்னிவளந் தருநாடு பொலிவெய்த நிலவியதால்
கன்னிமதில் மருங்குமுகில் நெருங்குகழு மலமூதூர்.
தெளிவுரை : வளர்கின்ற தன்மை கொண்ட பிறைச் சந்திரனைத் தலையில் சூடியசிலம்பைச் சூடிய சிவ பெருமானின் நிலைபெற்ற சைவத்துறையில் வழிவழியாய் வந்த குடியான சோழரின் காவிரியாறு வளம் செய்கின்ற நாடு பொலிவு பெறும்படி நிலைபெற்றுள்ளது, அழியாத மதிலின் பக்கத்தில் மேகங்கள் வந்து தங்கும் திருக்கழுமலம் என்ற சீகாழி என்ற பழைய பதியாகும்.
1901. அப்பதிதான் அந்தணர்தம் கிடைகள்அரு மறைமுறையே
செப்பும்ஒலி வளர்பூகச் செழுஞ்சோலை புறஞ்சூழ
ஒப்பில்நகர் ஓங்குதலால் உகக்கடைநாள் அன்றியே
எப்பொழுதுங் கடல்மேலே மிதப்பதென இசைந்துளதால்.
தெளிவுரை : அந்தணச் சிறுவர் அரிய மறைகளை ஓதுகின்ற ஒலியுடன் வளர்கின்ற பாக்கு மரங்களின் செழுமையான சோலைகள் புறத்தில் சூழ ஒப்பில்லாமல் ஓங்குதலால் அந்தக் கழுமலம் என்ற நகரமானது ஊழிக்காலத்தில் மிதப்பது மட்டுமே அல்லாது எந்தக் காலத்திலும் கடலில் மிதப்பதாகும் என்ற தோற்றத்தைப் பொருந்தியுள்ளதாகும்.
1902. அரிஅயனே முதல்அமரர் அடங்கஎழும் வெள்ளங்கள்
விரிசுடர்மா மணிப்பதணம் மீதெறிந்த திரைவரைகள்
புரிசைமுதல் புறஞ்சூழ்வ பொங்கோதம் கடைநாளில்
விரிஅரவ மந்தரஞ்சூழ் வடம்போல வயங்குமால்.
தெளிவுரை : திருமாலும் நான்முகனும் முதலிய தேவர்கள் அடங்குமாறு மேலே எழும் பல நீர்ப்பெருக்குகள் விரிந்த கதிர்களையுடைய பெரிய மணிகள் அழுத்திய மேடைகளிள் மீது வீசிய அலைகளால் உண்டான கீற்றுகள் புறமதிலின் பக்கத்தில் வரிசையாய் அமைந்திருப்பவை பொங்கும் பாற் கடலைக் கடைந்த காலத்தில் மந்தர மலையை வரிவரியாய்ச் சுற்றிய வாசுகி என்ற பாம்பான வடத்தைப் போல் விளங்குன.
1903. வளம்பயிலும் புறம்பணைப்பால் வாசப்பா சடைமிடைந்த
தளம்பொலியும் புனற்செந்தா மரைச்செவ்வித் தடமலரால்
களம்பயில்நீர்க் கடன்மலர்வ தொருபரிதி யெனக்கருதி
இளம்பரிதி பலமலர்ந்தாற் போல்பஉள இலஞ்சிபல.
தெளிவுரை : கரிய நீர் நிறைந்த கடலில் மலர்கின்ற ஒரு கதிரவன் என எண்ணி, வளம் மிக்க மணம் கொண்ட மருத நிலத்தின் புறத்தே மணம் கமழும் பசிய இலைகளிடையே நெருங்கிய இதழ்களுடன் விளங்கும் நீர்ப் பூவான செந்தாமரை மலர்கள் மலர்ந்ததால் இளஞாயிறு பல தோன்றினாற் போன்ற தோற்றம் கொண்டனவான பல நல்ல நீர்நிலைகள் அங்கு எங்கும் விளங்கின.
1904. உளங்கொள்மறை வேதியர்தம் ஓமதூ மத்திரவும்
கிளர்ந்ததிரு நீற்றொளியில் கெழுமியநண் பகலுமலர்ந்
தளந்தறியாப் பல்லூழி யாற்றுதலால் அகலிடத்து
விளங்கியஅம் மூதூர்க்கு வேறிரவும் பகலும்மிகை.
தெளிவுரை : மனத்தில் கொண்ட வேதநெறி ஒழுக்கத்தையுடைய மறையவர் செய்யும் ஓமப் புகைகளின் படலங்களான இரவும், கிளர்ச்சி பெற்ற விபூதியின் ஒளியால் பொருந்திய நண்பகலுமாய் எக்காலத்தும் மிக்கு விளங்கி, எல்லை அளந்தறியப்படாத பல வழிகளிலும் செல்வதால், அகன்ற உலகத்தில் விளங்கிய அந்தப் பழைய ஊருக்கு வேறு இரவும் பகலும் வேண்டப்படாத மிகையாகும்.
1905. பரந்தவிளை வயற்செய்ய பங்கயமாம் பொங்கெரியில்
வரம்பில்வளர் தேமாவின் கனிகிழிந்த மதுநறுநெய்
நிரந்தரம்நீள் இலைக்கடையால் ஒழுகுதலால் நெடிதவ்வூர்
மரங்களும்ஆ குதிவேட்கும் தகையவென மணந்துளதால்.
தெளிவுரை : பரந்த விளைவுடன் கூடிய வயல்களில் தோன்றிய சிவந்த தாமரை மலர் என்ற பொங்கிய தீயில், அவ்வயல் வரப்பில் வளர்ந்த தேமா மரத்தின் பழம் பிளந்ததால் வெளிப்படும் சாறான நறு நெய்யானது , உரிய மக்களே அன்றி, மரங்களும் வேள்வியைச் செய்யும் இயல்புடையன என்னும்படி அந்த வூர் விளங்கியது.
1906. வேலையழற் கதிர்படிந்த வியன்கங்குல் வெண்மதியம்
சோலைதொறும் நுழைந்துபுறப் படும்பொழுது துதைந்தமலர்ப்
பாலணைந்து மதுத்தோய்ந்து தாதளைந்து பயின்றந்தி
மாலையெழுஞ் செவ்வொளிய மதியம்போல் வதியுமால்.
தெளிவுரை : கதிரவன் கடலில் மறைந்த பின்பு உண்டாகும் இரவில் தோன்றிய விளங்கும் வெண்மையான சந்திரன், சோலைகள் தோறும் புகுந்து வெளிப்பட்டுத் தோன்றும் போது, நெருங்கிய மரங்களின் பக்கத்தில் சேர்ந்து அவற்றின் தேனில் தோய்ந்தும் மகரந்தங்களை அளாவியும் இங்ஙனம் நெடுநேரம் பயின்றதால் மாலையில் தோன்றும் சிவந்த ஒளியையுடைய சந்திரனைப் போல் தோன்றி விளங்கும்.
1907. காமர்திருப் பதியதன்கண் வேதியர்போற் கடிகமழும்
தாமரையும் புல்லிதழும் தயங்கியநூ லுந்தாங்கித்
தூமருநுண் துகளணிந்து துளிவருகண் ணீர்ததும்பித்
தேமருமென் சுரும்பிசையால் செழுஞ்சாமம் பாடுமால்.
தெளிவுரை : அழகிய அந்த நகரத்தில் மணம் கமழும் தாமரையும், அந்தணர்களைப் போல், புற இதழ்களையும் நூலையும் தாங்கிக்கொண்டு தூய்மையுடைய நுண்மையான துகள்களை அணிந்து, துளித்து வருகின்ற நீர் ததும்பித் தேன் பொருந்த வரும் வண்டின் இசையால் இனிய சாம வேத கீதத்தைப் பாடும்.
1908. புனைவார்பொற் குழையசையப் பூந்தானை பின்போக்கி
வினைவாய்ந்த தழல்வேதி மெழுக்குறவெண் சுதையொழுக்கும்
கனைவான முகிற்கூந்தல் கதிர்செய்வட மீன்கற்பின்
மனைவாழ்க்கைக் குலமகளிர் வளம்பொலிவ மாடங்கள்.
தெளிவுரை : அணிகின்ற நீண்ட பொன்னால் ஆன குழைகள் காதில் அசைய, அழகிய பட்டுடையின் தானையினைப் பின் பக்கமாய்ச் செருகித் தமக்குரிய தொழில்களையுடைய தீ உண்டாக்கும் வேதிகையுடைய மெழுக்குப் பொருந்தச் செய்து வெண்மை நிறமுடைய கோலம் இடுகின்ற, ஒலியினைப் பொருந்திய வானத்தில் எழும் மேகம் போன்ற கூந்தலையுடைய, ஒளியுடைய அருந்ததியின் கற்பு வாய்க்கப் பெற்ற இல்வாழ்க்கைத் துணையாய் விளங்கும் குலமகளிர் நிரம்பிய வளங்களால் மாளிகைகள் விளக்கம் கொண்டு விளங்கின.
1909. வேள்விபுரி சடங்கதனை விளையாட்டுப் பண்ணைதொறும்
பூழியுற வகுத்தமைத்துப் பொன்புனைகிண் கிணியொலிப்ப
ஆழிமணிச் சிறுதேரூர்ந்து அவ்விரதப் பொடியாடும்
வாழிவளர் மறைச்சிறார் நெருங்கியுள மணிமறுகு.
தெளிவுரை : வேள்விகளில் பெரியோர் செய்யும் சடங்குகளைத் தாம் விளையாடும் இடங்களில் எல்லாம் மண்ணின் புழுதி பொருந்த அமைத்து, பொன்னால் ஆன கிண்கிணிகள் ஒலிக்கச் சக்கரம் பூட்டிய அழகிய சிறு தேர்களை ஊர்ந்து, அந்தத் தேர் ஊர்தலால் கிளம்பிய மண் தூசி படிய விளையாடும் சிறுவர் நெருங்கியுள்ளன தெருக்கள்.
1910. விடுசுடர்நீள் மணிமறுகின் வெண்சுதைமா ளிகைமேகம்
தொடுகுடுமி நாசிதொறும் தொடுத்தகொடி சூழ்கங்குல்
உடுஎனும்நாண் மலர்அலர உறுபகலிற் பலநிறத்தால்
நெடுவிசும்பு தளிர்ப்பதென நெருங்கியுள மருங்கெல்லாம்.
தெளிவுரை : சுடர் விடுகின்ற நீண்ட மணிகள் பதித்த தெருக்களின் வெண்ணிறச் சுண்ணச் சாந்தால் ஆன மாளிகைகள், மேக மண்டலத்தைத் தொடும்படி நீண்ட நாசிகள் தோறும் கட்டிய கொடிகளால் இருள் பரவியுள்ள இரவில் விண்மீன்கள் என்னும் புதிய பூக்கள் பூப்பதற்குப் பொருந்திய பகற்பொழுதில் தளிர்ப்பதைப் போன்று பக்கங்களில் எல்லாம் நெருங்கியுள்ளன.
1911. மடையெங்கும் மணிக்குப்பை வயலெங்கும் கயல்வெள்ளம்
புடையெங்கும் மலர்ப்பிறங்கல் புறமெங்கும் மகப்பொலிவு
கிடையெங்கும் கலைச்சூழல் கிளர்வெங்கும் முரலளிகள்
இடையெங்கும் முனிவர்குழாம் எயிலெங்கும் பயிலெழிலி.
தெளிவுரை : அந்தப் பதியின் நீர்மடைகளில் எங்கும் மணிகளின் குவியல்கள் உள்ளன. வயல்களில் எங்கும் நீர் வெள்ளத்துடன் கயல் மீன்களின் கூட்டம் உள்ளன. அங்குள்ள வயல்களின் பக்கங்களில் பூக்குவியல்கள் உள்ளன. அவற்றின் வெளியில் எங்கும் வேள்விகளின் பொலிவுகள் நிரம்பியுள்ளன. கிளர்ச்சியுடைய சோலைகளில் எங்கும் ஒலிக்கும் வண்டுகளின் கூட்டங்கள் உள்ளன. மதில்களில் எங்கும் தவழ்கின்ற மேகங்கள் உள்ளன.
1912. பிரமபுரம் வேணுபுரம் புகலிபெரு வெங்குருநீர்ப்
பொருவில்திருத் தோணிபுரம் பூந்தராய் சிரபுரமுன்
வருபுறவஞ் சண்பைநகர் வளர்காழி கொச்சைவயம்
பரவுதிருக் கழுமலமாம் பன்னிரண்டு திருப்பெயர்த்தால்.
தெளிவுரை : அந்தப் பதியானது பிரமபுரம், வேணுபுரம் புகலி, பெரிய வெங்குருகு, நீரினுள் ஒப்பில்லாது விளங்கும் திருத் தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், முன் வரும் புறவம், சண்பை நகர், வளரும் காழி, கொச்சைவயம், போற்றுகின்ற திருக்கழுமலம் என்னும் பன்னிரண்டு திருப் பெயர்களைக் கொண்டதாகும்,
1913. அப்பதியின் அந்தணர்தங் குடிமுதல்வர் ஆசில்மறை
கைப்படுத்த சீலத்துக் கவுணியர்கோத் திரம்விளங்கச்
செப்புநெறி வழிவந்தார் சிவபாத விருதயர்என்று
இப்புவிவா ழத்தவஞ்செய் இயல்பினார் உளரானார்.
தெளிவுரை : அந்தப் பதியில் அந்தணர்களின் குடியில் வந்த முதன்மை உடையவரும், குற்றம் நீக்கும் வேதங்களில் கூறிய வண்ணம் ஒழுகும் ஒழுக்கத்தை உடையவரும் கவுணியர் கோத்திரம் மேன்மை அடையும்படி செப்பும் கோத்திரத்தின் உட்பிரிவு வழியிலே தோன்றியவரும் சிவபாத இருதயர் என்று இந்த உலகம் வாழும் பொருட்டுத் தவம் செய்யும் இயல்பை யுடையவருமாய் ஒருவர் வாழ்ந்து வந்தார்.
1914. மற்றவர்தந் திருமனையார் வாய்ந்தமறை மரபின்வரு
பெற்றியினார் எவ்வுலகும் பெறற்கரிய பெருமையினார்
பொற்புடைய பகவதியார் எனப்போற்றும் பெயருடையார்
கற்புமேம் படுசிறப்பால் கணவனார் கருத்தமைந்தார்.
தெளிவுரை : அவருடைய மனைவியார் வாய்ப்புடைய அந்தணர் மரபில் வந்தவர், எல்லாவுலகமும் பெறுவதற்கு அரிய பெருமையை யுடையவர். அழகுடைய பகவதியார் என்று போற்றப்படுகின்ற பெயரையுடையவர். கற்பால் மேன்மையுறும் சிறப்புப் பற்றித் தம் கணவரின் கருத்துக்கு ஏற்ப அமைந்து ஒழுகுபவர்.
1915. மரபிரண்டும் சைவநெறி வழிவந்த கேண்மையினார்
அரவணிந்த சடைமுடியார் அடியலால் அறியாது
பரவுதிரு நீற்றன்பு பாலிக்குந் தன்மையராய்
விரவுமறை மனைவாழ்க்கை வியப்பெய்த மேவுநாள்.
தெளிவுரை : தாய்வழி தந்தைவழி என்ற இரண்டு மரபும் வைதிக சைவ நெறிவந்த உரிமையுடைய அந்த இருவரும் பாம்பை அணிந்த சடையை யுடைய சிவபெருமானின் திருவடிகளை அன்றி மற்றொன்றையும் பொருள் என்று உணராமல், துதிக்கத் தக்க திருநீற்றின் அன்பிலே பாதுகாக்கும் தன்மை யுடையவராய், வேத விதிப்படி வரும் மனை வாழ்க்கைத் திறத்தில் எல்லாரும் வியப்படையும்படி வாழ்ந்து வரும் நாள்களில்,
1916. மேதினிமேற் சமண்கையர் சாக்கியர்தம் பொய்ம்மிகுத்தே
ஆதியரு மறைவழக்கம் அருகிஅர னடியார்பால்
பூதிசா தனவிளக்கம் போற்றல்பெறா தொழியக்கண்
டேதமில்சீர்ச் சிவபாத இருதயர்தாம் இடருழந்தார்.
தெளிவுரை : உலகத்தில் கீழ் மக்களான சமணர் பௌத்தர் என்ற இவர்களின் பொய்ச் சமயங்கள் மிகுதியாக வளர்ந்து அதனால் பழைய அரிய மறைவழக்கங்கள் சுருங்கி, அடியார்களிடத்தில் திருநீற்றுச் சாதனத்தின் விளக்கமானது போற்றப் பெறாது மறையக்கண்டு குற்றம் இல்லாத சிறப்புடைய சிவபாத இருதயர் பெரிதும் வருத்தம் அடைந்தார்.
1917. மனையறத்தில் இன்பமுறு மகப்பெறுவான் விரும்புவார்
அனையநிலை தலைநின்றே ஆடியசே வடிக்கமலம்
நினைவுறமுன் பரசமயம் நிராகரித்து நீறாக்கும்
புனைமணிப்பூண் காதலனைப் பெறப்போற்றுந் தவம்புரிந்தார்.
தெளிவுரை : இல்வாழ்க்கையில் இன்பம் அளிக்கும் மகவைப் பெறும் விருப்பத்தைக் கொள்பவர் அந்த நிலையில் சிறந்து நின்று, சிவபெருமானின் சூடும் திருவடிக் கமலங்களை நினைத்து முன்னர்ப் பர சமயங்களின் தீமையைப் போக்கித், திருநீற்றின் விளக்கத்தை மிகுதிப்படுத்தும் அழகிய அணிகளை அணியும் திருமகனைப் பெறும் பொருட்டுத் தவத்தைச் செய்தார்.
1918. பெருத்தெழும்அன் பாற்பெரிய நாச்சியா ருடன்புகலித்
திருத்தோணி வீற்றிருந்தார் சேவடிக்கீழ் வழிபட்டுக்
கருத்துமுடிந் திடப்பரவும் காதலியார் மணிவயிற்றில்
உருத்தெரிய வரும்பெரும்பேறுலகுய்ய உளதாக.
தெளிவுரை : பெருகி எழும் அன்பால் பெரிய நாயகி அம்மையாருடன் புகலியில் திருத்தோணியில் வீற்றிருந்தவரான தோணியப்பரின் சேவடிகளின் கீழ் வணங்கிக் கணவரின் கருத்து முற்றுப் பெறும்படி பரவும் பகவதியாரின் மணி வயிற்றிடத்தில் உருவம் தெரிய வரும் கருப்பமான பெரும் பிள்ளைப் பேறு உலகம் உய்ய உள்ளதாயிற்று. அவ்வாறு ஆகிட,
1919. ஆளுடையா ளுடன்தோணி அமர்ந்தபிரான் அருள்போற்றி
மூளுமகிழ்ச் சியில்தங்கள் முதன்மறைநூல் முறைச்சடங்கு
நாளுடைய ஈரைந்து திங்களினும் நலஞ்சிறப்பக்
கேளிருடன் செயல்புரிந்து பெரிதின்பங் கிளர்வுறுநாள்.
தெளிவுரை : ஆளும் தன்மையுடைய பெரியநாயகியுடன் தோணியப்பரின் திருவருளையும் துதித்து, கருக்கொண்ட காரணத்தினால் மனத்தில் விதித்த முறைப்படி செய்யும் சடங்குகளை யெல்லாம் நாள் எண்ணிக்கையுடைய பத்து மாதங்களிலும் நன்மை உண்டாகுமாறு உறவினர் கூடிச் செய்து பெரிய இன்பம் உண்டாகும் அத்தகைய நாட்களில்,
1920. அருக்கன்முதற் கோளனைத்தும் அழகியஉச் சங்களிலே
பெருக்கவலி யுடன்நிற்கப் பேணியநல் லோரையெழத்
திருக்கிளரும் ஆதிரைநாள் திசைவிளங்கப் பரசமயத்
தருக்கொழியச் சைவமுதல் வைதிகமுந் தழைத்தோங்க.
தெளிவுரை : சூரியன் முதலான கோள்கள் எல்லாம் அவ்வவற்றுக்குரிய நியமமமான அழகிய உச்சவிடங்களில் பெருக்கவும், வலிமையுடன் நிற்கவும், சோதிட நூலார் விரும்பும் வேளை வரவும், செம்மை மிக்க திருவாதிரை நாள் திசை விளக்கம் அடையவும், மற்றச் சமயங்களின் தருக்கிய நிலை ஒழியவும், முதன்மையான சைவத்துறையும் வைதிகத் துறையும், தழைத்து ஓங்கவும்,
1921. தொண்டர்மனங் களிசிறப்பத் தூயதிரு நீற்றுநெறி
எண்டிசையுந் தனிநடப்ப ஏழுலகுங் களிதூங்க
அண்டர்குலம் அதிசயிப்ப அந்தணர்ஆ குதிபெருக
வண்டமிழ்செய் தவம்நிரம்ப மாதவத்தோர் செயல்வாய்ப்ப.
தெளிவுரை : தொண்டர்களின் உள்ளம் களிப்புடையவும் தூய திருநீற்றின் நெறியானது எட்டுத்திசைகளிலும் ஒப்பில்லாத படி நடக்கவும், ஏழ் உலகங்களில் உள்ள உயிர்கள் எல்லாம் மகிழ்ச்சியில் திளைக்கவும், தேவர்கள் குலங்கள் அதிசயத்துடன் நோக்கவும், அந்தணர்களின் வேள்விகள் பெருகவும், பெரிய தவத்தைச் செய்பவர்களின் செயல் முற்றுப் பெறவும்,
1922. திசையனைத்தின் பெருமையெலாம் தென்றிசையே வென்றேற
மிசையுலகும் பிறவுலகும் மேதினியே தனிவெல்ல
அசைவில்செழுந் தமிழ்வழக்கே அயல்வழக்கின் துறைவெல்ல
இசைமுழுதும் மெய்யறிவும் இடங்கொள்ளும் நிலைபெருக.
தெளிவுரை : எட்டுத்திசைகளின் பெருமைகள் எல்லாவற்றையும் தென்திசையின் பெருமையே வெற்றி கொண்டு மேன்மை அடையவும், மேல் உலகமும் மற்ற உலகமும் என்பனவற்றை இம்மண்ணுலகமே சிறப்படைந்து வெல்லவும், அசைதல் இல்லாத செழுந்தமிழே மற்ற மொழித் துறைகளின் வழக்குகளை வெல்லவும், இசையறிவும் மெய்யறிவும் பொருந்தும் நிலை பெருகவும்,
1923. தாளுடைய படைப்பென்னுந் தொழில்தன்மை தலைமைபெற
நாளுடைய நிகழ்காலம் எதிர்கால நவைநீங்க
வாளுடைய மணிவீதி வளர்காழிப் பதிவாழ
ஆளுடைய திருத்தோணி அமர்ந்தபிரான் அருள்பெருக.
தெளிவுரை : முயற்சியுடைய மக்கள் படைப்பு என்ற நான்முகனின் படைப்புத் தொழில் குணமானது தலைமைத் தன்மை பெறவும், காலக் கூறுபாட்டில் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் வருகின்ற குற்றங்கள் நீங்கவும், நம்மை ஆள்கின்ற திருத்தோணியில் எழுந்தருளும் சிவபெருமான் அருளானது பெருகவும்,
1924. அவம்பெருக்கும் புல்லறிவின் அமண்முதலாம் பரசமயப்
பவம்பெருக்கும் புரைநெறிகள் பாழ்படநல் லூழிதொறும்
தவம்பெருக்குஞ் சண்பையிலே தாவில்சரா சரங்கள்எலாம்
சிவம்பெருக்கும் பிள்ளையார் திருஅவதா ரஞ்செய்தார்.
தெளிவுரை : தீயநெறியைப் பெருகச் செய்கின்ற புல்லறிவை யுடைய சமணசமயம் முதலிய பிற சமயங்களான பிறவியைப் பெருக்கும் குற்றம் பொருந்திய நெறிகள் பாழ்படவும், நல்ல ஊழிக்காலந்தோறும் தான் அழியாமல் மிதந்து நின்று தவநெறியைப் பெருகச் செய்கின்ற சண்பை என்ற நகரில், குற்றம் அற்ற சரம், அசரம் என்ற உயிர்களில் எல்லாம் சிவத்தன்மை (நன்மை) பெருகச் செய்யும் ஆளுடைய பிள்ளையாரான ஞானசம்பந்தர் அவதாரம் செய்தருளினார்.
1925. அப்பொழுது பொற்புறு திருக்கழு மலத்தோர்
எப்பெயரி னோரும்அயல் எய்தும்இடை யின்றி
மெய்ப்படு மயிர்ப்புளகம் மேவியறி யாமே
ஒப்பில்களி கூர்வதொர் உவப்புற உரைப்பார்.
தெளிவுரை : அச்சமயத்தில் அழகான அக்கழுமல நகரத்தில் இருப்பவர்கள் யாவரும் பக்கங்களில் பொருந்தும் வேறு இடம் இன்றி, உடம்பில் கூடும் மயிர்ப்புளகம் பொருந்தித் தம்மை அறியாமலே ஒப்பில்லாத மகிழ்ச்சி மிகுவதான ஓர் உவகை தோன்றக் கூறலானார்.
1926. சிவனருள் எனப்பெருகு சித்தமகிழ் தன்மை
இவண்இது நமக்குவர எய்தியதென் என்பார்
கவுணியர் குலத்திலொரு காதலன் உதித்தான்
அவன்வரு நிமித்தம்இது என்றதி சயித்தார்.
தெளிவுரை : சிவபெருமானது திருவருளைப் போல் பெருகும் மனம் மகிழ்கின்ற தன்மை இங்கு இவ்வாறு நமக்கு வருவதற்குக் காரணம் யாது? என வினவுவார், கவுணியர் கோத்திரத்தில் ஒரு மகன் தோன்றினான். அங்ஙனம் அவன் அவதரித்ததன் நன்னிமித்தம் இதுவாகும் என்று மனம் தெளிந்து அதிசியத்தார்.
1927. பூமுகை அவிழ்ந்துமணம் மேவுபொழில் எங்கும்
தேமருவு தாதொடு துதைந்ததிசை யெல்லாம்
தூமருவு சோதிவிரி யத்துகள் அடக்கி
மாமலய மாருதமும் வந்தசையு மன்றே.
தெளிவுரை : பூக்கள் மொட்டு அலர்வதால் மணம் பொருந்திய சோலைகள் எங்கும் தேன் பொருந்திய மகரந்தம் பரவுவதால் நெருங்கிய திசைகளில் எல்லாம், தூய்மை யுடைய ஒளி விரியுமாறு அத்துகளை அடக்கி, பெருமையுடைய பொதிய மலையினின்றும் வருகின்ற தென்றல் காற்றும் அப்போதே வந்து மென்மையாக வீசும்.
1928. மேலையிமை யோர்களும் விருப்பொடு கரப்பில்
சோலைமலர் போலமலர் மாமழை சொரிந்தே
ஞாலமிசை வந்துவளர் காழிநகர் மேவும்
சீலமறை யோர்களுடன் ஓமவினை செய்தார்.
தெளிவுரை : விண் உலகத்தில் உள்ள தேவர்களும் விருப்பத்துடன் ஒழிவில்லாது பூஞ்சோலைகள் பூக்களைச் சொரிவதைப் போல் மலர் மழையைப் பொழிந்த நிலவுலகத்தில் வந்து வளரும் சீகாழித் தலத்தில் பொருந்திய ஒழுக்கமுடைய அந்தணருடன் கூடி வேள்விச் செயல்களைச் செய்தனர்.
1929. பூதகண நாதர்புவி வாழஅருள் செய்த
நாதனரு ளின்பெருமை கண்டுநலம் உய்ப்பார்
ஓதுமறை யோர்பிறி துரைத்திடினும் ஓவா
வேதமொழி யால்ஒளி விளங்கியெழு மெங்கும்.
தெளிவுரை : பூதகணங்களுக்குத் தலைவரான சிவகணங்கள் உலகம் செய்யும் பொருட்டு ஞானசம்பந்தரை அவதரிக்கச் செய்யச் சிவபெருமானின் திருவருளின் பெருமையைக் கண்டு ஞானசம்பந்தரைப் பேணுதல் முதலியவற்றைச் செய்தனர். வேதம் ஓதுபவர் மற்ற சொற்களைச் சொல்வாராயினும் இடைவிடாத வேத மந்திரங்களால் வருகின்ற ஒலியாகவே எங்கும் விளங்கும்.
1930. பயன்தருவ பஃறருவும் வல்லிகளும் மல்கித்
தயங்குபுன லுந்தெளிவு தண்மையுடன் நண்ணும்
வயங்கொளி விசும்புமலி னங்கழியு மாறா
நயம்புரிவ புள்ளொலிகள் நல்லதிசை யெல்லாம்.
தெளிவுரை : எல்லாத் திக்குகளிலும் பலவகையான மரங்களும் கொடிகளும் பெருகித் தம்தம் பயன்களைத் தரலாயின. கலக்கமுடைய நீரும் தெளிவுடனும் குளிர்ச்சியுடனும் விளங்கின. விளங்கும் ஒளிகளையுடைய வானமும் களங்கம் நீங்கின. மாறுபாடற்ற நன்மையையே பறவைகள் ஒலி செய்வன ஆயின. இங்ஙனம் எல்லாம் நன்மையனவாய் விளங்கின.
1931. அங்கண்விழ விற்பெருகு சண்பையகல் மூதூர்ச்
சங்கபட கங்கருவி தாரைமுத லான
எங்கணும் இயற்றுபவர் இன்றியும் இயம்பும்
மங்கல முழக்கொலி மலிந்தமறு கெல்லாம்.
தெளிவுரை : அழகிய இடங்கள் தோறும் இவ்வாறான விழாவின் மங்கலங்களால் பெருகும் சீகாழி என்ற பழைய ஊரில் உள்ள சங்குகள், ஒருகண் பறை, வேறு நரம்புக் கருவிகள், தாரை, சின்னம் முதலான இசைக்கருவிகள் எங்கும் இயக்குபவர் இல்லாமலேயும் ஒலிக்கின்ற தெருக்களில் எல்லாம் மங்கலமான பேரொலி நிறைந்தன.
1932. இரும்புவனம் இத்தகைமை எய்தஅவர் தம்மைத்
தருங்குல மறைத்தலைவர் தம்பவன முன்றில்
பெருங்களி வியப்பொடு பிரான்அருளி னாலே
அருந்திரு மகப்பெற வணைந்தஅணி செய்வார்.
தெளிவுரை : இந்தப் பெரிய உலகமானது இத்தகைய தன்மையை அடைய, அந்த ஞானசம்பந்தரைப் பெற்ற அந்தணரின் தலைவரான சிவபாத இருதயர் தம் இல்லத்தின் முன் பக்கத்தில் பெருங்களிப்பும் வியப்பும், பொருந்த இறைவர் அருளால் அரிய அழகிய மகனைப் பெறப் பொருந்திய அணிகளைச் செய்பவராய்,
1933. காதல்புரி சிந்தைமகி ழக்களி சிறப்பார்
மீதணியும் நெய்யணி விழாவொடு திளைப்பார்
சூதநிகழ் மங்கல வினைத்துழனி பொங்கச்
சாதக முறைப்பல சடங்குவினை செய்வார்.
தெளிவுரை : விருப்பம் செய்கின்ற தம் மனமகிழ்தல் காரணமாய்க் களிப்படைவார், மேலே பூசப்படுகின்ற நெய் யாட்டு விழாச் செய்து மகிழ்ச்சி அடைவார். அவர்தம் அவதாரம் காரணமாய்ச் செய்யும் மங்கலச் செயல்களின் ஆரவாரம் பெருகச் சாதகருமம் முதலான பல சடங்குச் செயல்களையும், செய்வார்.
1934. மாமறை விழுக்குல மடந்தையர்கள் தம்மில்
தாமுறு மகிழ்ச்சியொடு சாயல்மயி லென்னத்
தூமணி விளக்கொடு சுடர்க்குழைகள் மின்னக்
காமர்திரு மாளிகை கவின்பொலிவு செய்வார்.
தெளிவுரை : சிறந்த அந்தணர் குல மங்கையர்கள் கலந்து பெரு மகிழ்ச்சியுடன், சாயலையுடைய மயிலைப் போல தூய அழகுடைய விளக்குகளுடனே ஒளியுடைய குழை முதலிய அணிகள் மின்ன அழகான தம் மாளிகையை அழகு பெறச் செய்வார்.
1935. சுண்ணமொடு தண்மலர் துதைந்ததுகள் வீசி
உண்ணிறை விருப்பினுடன் ஓகையுரை செய்வார்
வெண்முளைய பாலிகைகள் வேதிதொறும் வைப்பார்
புண்ணிய நறும்புனல்கொள் பொற்குடம் நிரைப்பார்.
தெளிவுரை : சுண்ணப் பொடிகளுடன் குளிர்ந்த மலர்த் தாதுக்களை வீசி உள்ளத்தில் நிறைந்த விருப்பத்துடன் அவரது அவதாரச் செய்தியை மகிழ்வுடன் எங்கும் உரைப்பார். வெண்மையான முறைகளுடன் கூடிய முளைப்பாலிகைகளை மேடை தோறும் வைப்பார்கள். மணமுடைய புண்ணியப் புதுநீர் கொண்ட புதுக் குடங்களை வரிசையாய் வைப்பார்கள்.
1936. செம்பொன்முத லானபல தானவினை செய்வார்
நம்பர்அடி யார்அமுது செய்யநலம் உய்ப்பார்
வம்பலர் நறுந்தொடையல் வண்டொடு தொடுப்பார்
நிம்பமுத லானகடி நீடுவினை செய்வார்.
தெளிவுரை : செம்பொன் முதலியவற்றைத் தானம் செய்வார்கள். சிவனடியார்கள் அமுது செய்தற்கு உரிய நலங்கள் பலவற்றை நாடிச் செய்வார்கள். புதிதாய்மலர்ந்த மணமலர் மாலைகளை அவற்றில் மொய்க்கும் வண்டுகளுடன் சேர்த்துக் கட்டுவார்கள். வேம்பு செருகுதல் முதலான காப்புத் தொழிலைச் செய்வார்கள்.
1937. ஐயவி யுடன்பல அமைத்தபுகை யாலும்
நெய்யகில் நறுங்குறை நிறைத்தபுகை யாலும்
வெய்யதழல் ஆகுதி விழுப்புகையி னாலும்
தெய்வமணம் நாறவரு செய்தொழில் விளைப்பார்.
தெளிவுரை : வெண்கடுகு முதலானவற்றைச் சேர்த்து அமைத்த புகையினாலும் நெய்யுடன் நல்ல மணமுடைய அகில் துண்டுகளால் உண்டாக்கப்பட்ட புகையாலும் விருப்பம் அளிக்கும் வேள்வித்தீயின் சிறந்த புகையாலும் கடவுள் தன்மை கமழ்கின்ற செயலைச் செய்வார்கள்.
1938. ஆயபல செய்தொழில்கள் அன்றுமுதல் விண்ணோர்
நாயகன் அருட்பெருமை கூறுநலம் எய்தத்
தூயதிரு மாமறை தொடர்ந்தநடை நூலின்
மேயவிதி ஐயிரு தினத்தினும் விளைத்தார்.
தெளிவுரை : அத்தகைய பற்பல செயல்களை யெல்லாம் தேவரின் தலைவரான சிவபெருமான் திருவருளின் பெருமை மிகுமாறு நன்மை பொருந்துமாறு தூய்மை வேதங்களிலும் அவற்றுடன் தொடர்புடைய கற்ப சூத்திரம் முதலிய ஒழுக்க நூல்களிலும் பொருந்திய விதி முறைப்படி அவதாரம் உண்டான நாள் தொட்டுப் பத்து நாட்களிலும் விளைவிப்பார்கள்.
1939. நாமகர ணத்தழகு நாள்பெற நிறுத்திச்
சேமவுத யப்பரிதி யில்திகழ் பிரானைத்
தாமரை மிசைத்தனி முதற்குழவி யென்னத்
தூமணி நிரைத்தணிசெய் தொட்டில்அமர் வித்தார்.
தெளிவுரை : பெயர் சூட்டும் அழகிய சடங்கினை அவதார நாளுக்குப் பொருந்தும்படி செய்வித்து, ஆளுடைய பிள்ளையார் எனப் பெயர் சூட்டிச் சேமம் செய்யத் தோன்றும் இளஞாயிற்றைப் போல் விளங்கும் ஞானசம்பந்தப் பெருமானைத் தாமரையில் எழுந்தருளியிருக்கும் தனி முதலான குழந்தையைப் போலத் தூய மணிகள் வரிசையாய் அழுத்தி அழகு செய்யப்பட்ட தொட்டிலில் இட்டனர்.
1940. பெருமலை பயந்தகொடி பேணுமுலை யின்பால்
அருமறை குழைத்தமுது செய்தருளு வாரைத்
தரும் இறைவி யார்பரமர் தாள்பரவும் அன்பே
திருமுலை சுரந்தமுது செய்தருளு வித்தார்.
தெளிவுரை : பெரிய இமயமலை மன்னன் பெற்ற கொடி போன்ற பார்வதி யம்மையாரின் பேணும் திருக்கொங்கையில் உள்ளதான இனிய பாலுடன் அரிய சிவஞானத்தைக் குழைத்து அமுது செய்தருளவுள்ள அக்குழந்தையாரைப் பெற்ற அந்தணர் குல மாதரான பகவதியார் சிவபெருமானின் திருவடிகளைப் போற்றும் அன்பே தம் திருக் கொங்கையிலே பாலாய்ச் சுரக்க அதனைத் திருவமுது செய்தருளப் பால் உண்பித்தார்.
1941. ஆறுலவு செய்யசடை ஐயர்அரு ளாலே
பேறுலகி னுக்கென வரும்பெரி யவர்க்கு
வேறுபல காப்புமிகை என்றவை விரும்பார்
நீறுதிரு நெற்றியில் நிறுத்திநிறை வித்தார்.
தெளிவுரை : கங்கையாறு தங்கப் பெற்ற சடையையுடைய சிவ பெருமான் திருவருளால், உலகத்துக்கு அதைக் காக்கின்ற பேறாவார் இவர் எனத் தோன்றிய பெரியவரான பிள்ளைக்கு, மற்றும் பல காப்புகள் மிகையாகும் என அவை எவற்றையும் விரும்பாதவராய்த் திருநீற்றை அவரின் நெற்றியில் பூசிக் காப்புச் சடங்கை நிறைவு செய்தார்.
1942. தாயர்திரு மடித்தலத்தும் தயங்குமணித் தவிசினிலும்
தூயசுடர்த் தொட்டிலினும் தூங்குமலர்ச் சயனத்தும்
சேயபொருள் திருமறையும் தீந்தமிழும் சிறக்கவரு
நாயகனைத் தாலாட்டு நலம்பலபா ராட்டினார்.
தெளிவுரை : சிறந்த பொருளையுடைய தேவர்களும் இனிய தமிழும் சிறப்புப் பெற வந்து தோன்றிய தலைவரான அப்பிள்ளையாரை, நல்தாயார் முதலியவர் தம் மடியிலும், விளங்கும் மணிகளையுடைய பீடங்களிலும் தூய ஒளியுடைய தொட்டிலிலும் உறங்குவதற்கேற்ற மலர்ப் பள்ளியிலும் தாலாட்டுதலால் அவர் அவதரித்த பல நலங்களையும் எடுத்துப் பாராட்டிப் பாடினர்.
1943. வருமுறைமைப் பருவத்தின்வளர்புகலிப் பிள்ளையார்
அருமறைகள் தலையெடுப்ப ஆண்டதிரு முடியெடுத்துப்
பெருமழுவர் தொண்டல்லால் பிறிதிசையோம் என்பார்போல்
திருமுகமண் டலமசையச் செங்கீரை யாடினார்.
தெளிவுரை : முதன்மையால் வருகின்ற பருவந்தோறும் உரியபடி வளர்ச்சி பெறும் பிள்ளையார் அரிய வேதங்கள் தலையெடுக்குமாறு தலைமுடியை மேல் எடுத்தும், பெரு மழுவைக் கையில் ஏந்திய சிவபெருமானுடைய திருத் தொண்டே அல்லால் வேறொன்றையும்யாம் கைக் கொள்ளோம் ! எனக் காட்டுவார் போல் திருமுக மண்டலம் அசையச் செங்கீரை யாடியருளினார்.
1944. நாமறியோம் பரசமயம் உலகிலெதிர் நாடாது
போமகல என்றங்கை தட்டுவதும் புனிதன்பால்
காமருதா ளம்பெறுதற் கொத்துவதுங் காட்டுவபோல்
தாமரைச்செங் கைகளினால் சப்பாணி கொட்டினார்.
தெளிவுரை : யாம் சைவசமயம் அன்றிப் பிற சமயங்களை அறியோம் ! எனவே, புறச் சமயத்தவரே ! இவ்வுலகத்தில் எதிர்ப்பட நாடாது அகன்று செல்லுங்கள் என்று அங்கைகளைக் கொட்டுவதையும் சிவபெருமானிடத்து விருப்பம் அளிக்கின்ற தாளத்தைப் பெறுவதற்காகக் கைகளை ஒத்துவதையும் காட்டுவன போல் தாமரை போன்ற சிவந்த கைகளால் அப்பிள்ளையார் சப்பாணி கொட்டினார்.
1945. விதிதவறு படும்வேற்றுச் சமயங்க ளிடைவிழுந்து
கதிதவழ இருவிசும்பு நிறைந்தகடி வார்கங்கை
நதிதவழுஞ் சடைமுடியார் ஞானம்அளித் திடவுரியார்
மதிதவழ்மா ளிகைமுன்றில் மருங்குதவழ்ந் தருளினார்.
தெளிவுரை : இறைவனின் வேதவிதியினின்று மாறுபட்ட புறச் சமயங்கள் விழுந்து நிலைகுலையுமாறு பெரிய வானத்தில் நிறைந்த அளவாக்கப்பட்டுப் போந்த பெரிய கங்கையாறு பொருந்திய சடையையுடைய சிவபெருமான் ஞானம் தந்தருளுதற்குரிய அப்பிள்ளையார் சந்திரன் தவழும் மாளிகையின் முன் பக்கத்தில் தவழ்ந்தருள் செய்தார்.
1946. சூழவரும் பெருஞ்சுற்றத் தோகையரும் தாதியரும்
காழியர்தஞ் சீராட்டே கவுணியர்கற் பகமேஎன்
றேழிசையும் பலகலையும் எவ்வுலகும் தனித்தனியே
வாழவரும் அவர்தம்மை வருகவரு கெனவழைப்ப.
தெளிவுரை : தம்மைச் சூழ்கின்ற அந்தண மங்கையரும் தோழியரும் சீகாழி என்ற பதியினர் எல்லாருக்கும் சிறப்புச் செய்யும் செல்வமே ! கவுணிய குலத்தவரின் கற்பகம் போன்றவரே ! எனச்சொல்லி, ஏழிசையும், வேதம் முதலான பல கலைகளும், எல்லா வுயிர்களும், தனித்தனியே வாழுமாறு வந்து தோன்றிய அந்தப் பிள்ளையாரை வருக வருக என்று அழைக்க.
1947. திருநகையால் அழைத்தவர்தம் செழுமுகங்கள் மலர்வித்தும்
வருமகிழ்வு தலைசிறப்ப மற்றவர்மேற் செலவுகைத்தும்
உருகிமனங் கரைந்தலைய உடன்அணைந்து தழுவியும்முன்
பெருகியஇன் புறஅளித்தார் பெரும்புகலிப் பிள்ளையார்.
தெளிவுரை : அங்ஙனம் அழைத்தவரின் செழுமையான முகங்களைத் தம் திரு நகைப்பினால் மலரச் செய்தும், அதனால் உண்டாகும் மகிழ்ச்சி மேலும் மேலும் பெருகுமாறு அவர்களின் மேனி மீது பொருந்து மாறு உந்தியும், உள்ளம் உருகிக் கரைந்து நிலை கொள்ளாது இளகும்படி உடன் அணைந்து தழுவியும், பெருக்கெடுக்கும் இன்பம் பொருந்துமாறு அளித்தருளினர், சீகாழியில் அவதரித்த அப்பிள்ளையார்.
1948. வளர்பருவ முறையாண்டு வருவதன்முன் மலர்வரிவண்
டுளர்கருமென் சுருட்குஞ்சி உடனலையச் செந்நின்று
கிளர்ஒலிகிண் கிணியெடுப்பக் கீழ்மைநெறிச் சமயங்கள்
தளர்நடையிட் டறத்தாமும் தளர்நடையிட் டருளினார்.
தெளிவுரை : மேல் உரைத்தவண்ணம் வளரும் பருவங்களின் முறையிலே ஓராண்டு நிறைவதற்குள் பூக்களில் வரிவண்டுகள் ஒலிக்கும் கருமையான மெல்லிய சுருண்ட தலை மயிருடன் அசையச் செம்மையால் நேர் நின்று விளங்கும் ஒலியைக் கிண்கிணிகள் ஒலிக்கக் கீழ் நெறிகளைக் காட்டுகின்ற சமயங்கள் தள்ளாடி நீங்கும்படி தாமும் தளர் நடை பயின்றருளினார்.
1949. தாதியர்தங் கைப்பற்றித் தளர்நடையின் அசைவொழிந்து
சோதியணி மணிச்சதங்கை தொடுத்தவடம் புடைசூழ்ந்த
பாதமலர் நிலம்பொருந்தப் பருவமுறை ஆண்டொன்றின்
மீதணைய நடந்தருளி விளையாடத் தொடங்கினார்.
தெளிவுரை : வளர்ப்புத்தாயரின் கைகளைப் பற்றி நடத்தலால் தளர் நடையின் அசைவு நீங்கி ஒளியும் அழகும் கொண்ட மணிகள் இழைத்த சதங்கைகள் கட்டிய வடம் பக்கத்தே சுற்றிய திருவடிமலர்கள் நிலத்திற் பொருந்தும்படி பருவமுறையில் ஓராண்டு நிறைந்து மேற் செல்ல, பிள்ளையார் நடந்து சென்றருளவும் விளையாடவும் தொடங்கினார்.
1950. சிறுமணித்தேர் தொடர்ந்துருட்டிச் செழுமணற்சிற் றில்கள்இழைக்கும்
நறுநுதற்பே தையர்மருங்கு நடந்தோடி அடர்ந்தழித்தும்
குறுவியர்ப்புத் துளியரும்பக் கொழும்பொடியா டியகோல
மறுகிடைப்பே ரொளிபரப்ப வந்துவளர்ந் தருளினார்.
தெளிவுரை : அழகிய சிறு தேரைப் பற்றித் தொடர்ந்து உருட்டிச் செல்ல, செழிய மணலால் சிற்றில் கட்டி விளையாடும் நல்ல நெற்றியுடைய பேதைப் பெண்களிடத்தில் நடந்தும் ஓடியும் சிறிய வியர்வைத் துளிகள் திருமேனி மேல் அரும்ப, அதனுடன் திருநீற்றை அணிந்து விளங்கிய திருக்கோலம் அந்த வீதியில் ஒளிபரப்ப. வந்து இவ்வாறாக அவர் வளர்ந்து வந்தார். அந்நாளில்,
1951. மங்கையோ டுடனாகி வளர்தோணி வீற்றிருந்த
திங்கள்சேர் சடையார்தம் திருவருட்குச் செய்தவத்தின்
அங்குரம்போல் வளர்ந்தருளி அருமறையோ டுலகுய்ய
எங்கள்பிரான் ஈராண்டின் மேல்ஓராண் டெய்துதலும்.
தெளிவுரை : பெரிய நாயகியாருடன் இருந்து, வளரும் சீகாழியில், வீற்றிருந்தருளும் மதி சேர்ந்த சடையுடைய சிவ பெருமானின் திருவருளான பயனுக்கு, செய்யும் தவத்தின் மூலம் உள்ள முளையைப் போன்று வளர்ந்து, அரிய மறைகளால் உலகம் உய்யுமாறு எம்பெருமானான பிள்ளையார்க்கு இரண்டாண்டின் மேல் ஓராண்டு நிறை வெய்தவும்,
1952. நாவாண்ட பலகலையும் நாமகளும் நலஞ்சிறப்பப்
பூவாண்ட திருமகளும் புண்ணியமும் பொலிவெய்தச்
சேவாண்ட கொடியவர்தம் சிரபுரத்துச் சிறுவருக்கு
மூவாண்டில் உலகுய்ய நிகழ்ந்ததனை மொழிகின்றேன்.
தெளிவுரை : நாவால் ஓதுவதற்குரிய வேதம் முதலிய பல கலைகளும், தாமரை மலரில் வாழும் திருமகளும் சிவ புண்ணியமும் பொலிவு பொருந்தவும், காளையைக் கொடியாகக் கொண்ட சிவபெருமான் எழுந்தருளிய சீகாழியில் தோன்றியருளிய பிள்ளையாருக்கு மூன்றாண்டுப் பருவத்தில் உலகமானது உய்ய நிகழ்ந்த அருட்செயலை இனிச் சொல்லத் தொடங்குகின்றேன்.
1953. பண்டுதிரு வடிமறவாப் பான்மையோர் தமைப்பரமர்
மண்டுதவ மறைக்குலத்தோர் வழிபாட்டின் அளித்தருளத்
தொண்டின்நிலை தரவருவார் தொடர்ந்தபிரி வுணர்வொருகால்
கொண்டெழலும் வெருக்கொண்டாற் போல்அழுவார் குறிப்பயலாய்.
தெளிவுரை : முன் காலத்தில் திருவடியை மறவாத பான்மை உடையவரை, மிக்க தவம் இயற்றிய சிவ பாத இருதயருக்குத் தந்தருளினாராக, திருத்தொண்டின் நிலையை உலகத்துக்கு அருள்வதற்கெனத் தோன்றிய அப்பிள்ளையார், சிவனையே தொடர்ந்து கொண்ட நிலை நீங்காது பிரிந்து போந்த பிரிவுணர்வு ஒரு கால் மனத்தில் கொண்டு, அந்த நினைவானது உண்டானவுடனே, அச்சம் கொண்ட வரைப்போல் அயலான ஒரு குறிப்புடன் அழுவார்.
1954. மேதகைய இந்நாளில் வேறொருநாள் வேதவிதி
நீதிமுறைச் சடங்குநெறி முடிப்பதற்கு நீராடத்
தாதையார் போம்பொழுது தம்பெருமான் அருள்கூடச்
சோதிமணி மனைமுன்றில் தொடர்ந்தழுது பின்சென்றார்.
தெளிவுரை : மேன்மையுடைய இத்தகைய நாட்களில் ஒரு நாள் வேதங்களில் சொல்லப்பட்ட நியதியில் முறையில் செய்யும் சடங்கு நெறியை முடிப்பதற்காக, முதலில் நீராடும் பொருட்டாகத், தந்தை சிவ பாத இருதயர் புறப்படும் போது, தம் பெருமானின் அருள் கூடப்பெறுவதால், திருமனையின் ஒளியும் அழகும் உடைய முன்றிலில் பிள்ளையார் தாமும் தந்தையாரைத் தொடர்ந்து அழுதபடி பின்னால் சென்றார்.
1955. பின்சென்ற பிள்ளையார் தமைநோக்கிப் பெருந்தவத்தோர்
முன்செல்கை தனையொழிந்து முனிவார்போல் விலக்குதலும்
மின்செய்பொலங் கிண்கிணிக்கால் கொட்டியவர் மீளாமை
உன்செய்கை இதுவாகில் போதுஎன்றுஅங் குடன்சென்றார்.
தெளிவுரை : தம் பின்னால் தொடர்ந்து வந்த பிள்ளையாரைத் தந்தையாரான சிவபாத இருதயர் பார்த்து, தாம் மேலே செல்வதை நிறுத்தி, சினம் கொண்டவர் போல் காட்டிப் பின்னால் வருவதை விலக்கவும், ஒளி விளங்கும் பொன்னால் ஆன சிறு கிண்கிணி அணிந்த திருவடிகளைப் பூமியில் உதைந்து அந்த ஆளுடைய பிள்ளையார் நிற்க, உன் செயல் இதுவானால், வருக எனக்கூறி அவருடனே சென்றார்.
1956. கடையுகத்தில் தனிவெள்ளம் பலவிரிக்குங் கருப்பம்போல்
இடையறாப் பெருந்தீர்த்தம் எவற்றினுக்கும் பிறப்பிடமாய்
விடையுயர்த்தார் திருத்தோணிப் பற்றுவிடா மேன்மையதாம்
தடமதனில் துறையணைந்தார் தருமத்தின் தலைநின்றார்.
தெளிவுரை : அறநெறியில் சிறந்த சிவபாத இருதயர் ஊழியின் முடிவில் தோன்றும் பெரு வெள்ளங்கள் பலவற்றையும் தன்னிடத்திலிருந்து விரியுமாறு தோற்றுவிக்கும் கருப்பம் போல் இடையறாது நிற்கும் பெரிய நீர்நிலைகள் எல்லாவற்றுக்கும் பிறப்பிடமாய்க், காளைக் கொடியை உயர்த்திய சிவபெருமான் எழுந்தருளிய திருத்தோணியின் தொடர்ச்சியை நீங்ஙாத மேலான நீர்நிலையின் துறையை அடைந்தார்.
1957. பிள்ளையார் தமைக்கரையில் வைத்துத்தாம் பிரிவஞ்சித்
தெள்ளுநீர்ப் புகமாட்டார் தேவியொடுந் திருத்தோணி
வள்ளலார் இருந்தாரை எதிர்வணங்கி மணிவாவி
உள்ளிழிந்து புனல்புக்கார் உலகுய்ய மகப்பெற்றார்.
தெளிவுரை : உலகம் உய்ய மகப்பெற்ற சிவபாத இருதயர் ஞானசம்பந்தப் பிள்ளையாரைத் தீர்த்தக்கரையில் இருக்கச் செய்து, தாம் பிரிவதை அஞ்சித் தெளியும் நீரில் நீராடமாட்டாதவராகி, பெரியநாயகி அம்மையாரோடும் திருத்தோணியில் வள்ளலாராகி எழுந்தருளியிருந்த பெருமானை எதிரில் வணங்கிய பின்பு, அழகிய வாவியுள் மூழ்கினார்.
1958. நீராடித் தருப்பித்து நியமங்கள் பலசெய்வார்
சீராடும் திருமகனார் காண்பதன்முன் செய்ததற்பின்
ஆராத விருப்பினால் அகமருடம் படியநீர்
பேராது மூழ்கினார் பெருங்காவல் பெற்றாராய்.
தெளிவுரை : நீரில் ஆடித் தருப்பணம் செய்து பின் வேத நியமங்கள் பலவற்றையும் செய்பவரான சிவபாத இருதயர் பலரும் பாராட்டவுள்ள மகனார் தம்மைத் தேடிக்காண்பதற்கு முன்னம் அவை யெல்லாம் செய்து முடிந்தார். பின், தம் மகனார்க்குத் தம்மைவிடப் பெரிய காவல் பெற்றாராகி அடங்காத விருப்பத்தால் அதன் பின் அகமருடண ஸ்நானம் செய்யும் பொருட்டுத் தாம் நின்ற இடத்தினின்றும் அடி பெயர்க்காமல் நீருள் முழுகினார்.
1959. மறைமுனிவர் மூழ்குதலும் மற்றவர்தம் மைக்காணா
திறைதறியார் எனும்நிலைமை தலைக்கீடா ஈசர்கழல்
முறைபுரிந்த முன்னுணர்வு மூளஅழத் தொடங்கினார்
நிறைபுனல்வா விக்கரையில் நின்றருளும் பிள்ளையார்.
தெளிவுரை : மறை முனிவரான சிவபாத இருதயர் நீருள் முழுகவும், அவரைதக் கண் எதிரே காணாமையால் சிறிது போதும் தரித்திருக்க மாட்டார் என்ற காரணத்தைக் காட்டிச் சிவபெருமானின் திருவடிகளை முறையாய் மறவாமல் இடைவிடாமல் எண்ணியிருந்த முன் நினைவு மூண்டதனால், நிறைந்த நீரையுடைய பொய்கைக் கரையில் நின்றிருந்த பிள்ளையார் அழத் தொடங்கினார்.
1960. கண்மலர்கள் நீர்ததும்பக் கைம்மலர்க ளாற்பிசைந்து
வண்ணமலர்ச் செங்கனிவாய் மணியதரம் புடைதுடிப்ப
எண்ணில்மறை ஒலிபெருக எவ்வுயிரும் குதூகலிப்பப்
புண்ணியக்கன் றனையவர்தாம் பொருமிஅழு தருளினார்.
தெளிவுரை : கண்கள் என்ற மலர்களிலிருந்து நீர் வெளிப்படக் கைம் மலர்களால் அவற்றைப் பிசைந்து அழகிய தாமரை மலரையும் சிவந்த கொவ்வைக் கனியும் போன்ற திருவாயின் அழகிய உதடுகள் பெயர்ந்து துடிக்க, எண்ணில்லாத மறைகளின் ஒலி பெருகவும், எல்லாவுயிர்களும் களிப்படையவும், புண்ணியக் கன்றைப் போன்ற பிள்ளையார் பொருமிப் பொருமி அழலானார்.
1961. மெய்ம்மேற்கண் துளிபனிப்ப வேறெங்கும் பார்த்தழுவார்
தம்மேலைச் சார்புணர்ந்தோ சாரும்பிள் ளைமைதானோ
செம்மேனி வெண்ணீற்றார் திருத்தோணிச் சிகரம்பார்த்து
அம்மேஅப் பாஎன்றென்று அழைத்தருளி அழுதருள.
தெளிவுரை : தம் திருமேனியின் மீது கண்ணீர்த் துளிகள் வீழ வேறு எல்லா விடங்களிலும் சுற்றிப் பார்த்து அழும் நிலையில் நின்ற பிள்ளையார், தம் மேலை நிலைமைச் சார்பை உணர்ந்த காரணமாகவோ, அல்லது அப்போது பொருந்திய பிள்ளைச் சார்பாலோ, அறியோம், செம் மேனியில் வெண்ணீற்றையுடைய சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருத்தோணிச் சிகரம் பார்த்து, அம்மே ! அப்பா ! என்று அழுத வண்ணம் அழைத்தாராக !
1962. அந்நிலையில் திருத்தோணி வீற்றிருந்தார் அருள்நோக்கால்
முன்நிலைமைத் திருத்தொண்டு முன்னியவர்க் கருள்புரிவான்
பொன்மலைவல் லியுந்தாமும் பொருவிடைமே லெழுந்தருளிச்
சென்னியிளம் பிறைதிகழச் செழும்பொய்கை மருங்கணைந்தார்.
தெளிவுரை : அப்போது திருத்தோணியில் வீற்றிருக்கும் சிவ பெருமான் அருள் நோக்கம் செய்தலால் முன்னை நிலைமைத் திருத்தொண்டு நினைந்த அவருக்கு அருள் செய்யும் பொருட்டாக, பொன்மலை வல்லியான பெரிய நாயகி அம்மையாரும் தாமும் போர் விடையின் மேல் ஏறி எழுந்தருளித், தலையில் சூடிய இளம்பிறை விளங்கித் தோன்றச் செழுமையான அந்தப் பொய்கையின் பக்கத்தில் சேர்ந்தருளிச் செய்தார்.
1963. திருமறைநூல் வேதியர்க்கும் தேவியர்க்கும் தாங்கொடுத்த
பெருகுவரம் நினைந்தோதான் தம்பெருமைக் கழல்பேணும்
ஒருநெறியில் வருஞானங் கொடுப்பதனுக் குடனிருந்த
அருமறையா ளுடையவளை அளித்தருள அருள்செய்வார்.
தெளிவுரை : வேதநூல்களில் வல்ல அந்தணரான சிவபாத இருதயருக்கும் அவருடைய மனைவியரான பகவதி யாருக்கும் தாம் தந்தருளிய பெருகிய வரத்தை நிறைவு செய்ய எண்ணியதனால் போலும், தம் பெருமையுடைய திருவடிகளையே போற்றுகின்ற நெறிகளில் நிற்க வரும் சிவ ஞானத்தைக் கொடுப்பதற்காகத் தம்முடன் இருந்த அரிய வேதங்களைத் தம் வடிவமாகக் கொண்டு ஆள்கின்ற ஞான முதல்வியரான பெரிய நாயகி அம்மையாரை அதனை அளித்தருளுமாறு அருள் செய்வாராகி,
1964. அழுகின்ற பிள்ளையார் தமைநோக்கி அருட்கருணை
எழுகின்ற திருவுள்ளத் திறையவர்தாம் எவ்வுலகும்
தொழுகின்ற மலைக்கொடியைப் பார்த்தருளித் துணைமுலைகள்
பொழிகின்ற பாலடிசில் பொன்வள்ளத் தூட்டென்ன.
தெளிவுரை : அழும் பிள்ளையாரைப் பார்த்து, அருளும் கருணையும் எழும் உள்ளம் கொண்டவராய்ச் சிவபெருமான், எல்லாவுலகங்களும் தொழுகின்ற பர்வதனின் மகளான கொடி போன்ற பெரிய நாயகி அம்மையாரைப் பார்த்தருளி, இரண்டு திருமுலைகளும் பொழியும் பாலைப் பொற்கிண்ணத்தில் இப்பிள்ளைக்கு ஊட்டுக ! என்று இயம்பினார்.
1965. ஆரணமும் உலகேழும் ஈன்றருளி அனைத்தினுக்கும்
காரணமாய் வளம்பெருகு கருணைதிரு வடிவான
சீரணங்கு சிவபெருமான் அருளுதலும் சென்றணைந்து
வாரிணங்கு திருமுலைப்பால் வள்ளத்துக் கறந்தருளி.
தெளிவுரை : மேற் சொன்னவண்ணம் சிவபெருமான் கூறிய, அளவும், வேதங்களையும் ஏழுலங்களையும் பெற்றருளி எல்லாப் பொருளுக்கும் மூல காரணமாய் உள்ளவரும் வளம் பெருகும் கருணையே தம் வடிவமாய்க் கொண்டவருமான சிறப்புடைய பெரிய நாயகி அம்மையார், பிள்ளையார் அருகில் போய்க் கச்சுடைய தம் திருமுலைப்பாலைப் பொற்கிண்ணத்தில் சுறந்தருளி,
1966. எண்ணரிய சிவஞானத் தின்னமுதம் குழைத்தருளி
உண்ணடிசில் எனவூட்ட உமையம்மை எதிர்நோக்கும்
கண்மலர்நீர் துடைத்தருளிக் கையிற்பொற் கிண்ணமளித்
தண்ணலைஅங் கழுகைதீர்த் தங்கணனார் அருள்புரிந்தார்.
தெளிவுரை : பெரிய நாயகி அம்மையார் நினைத்தற்கரிய சிவ ஞானமான இனிய அமுதத்தைப் பாலுடனே குழைத்தருளித், தம்மை எதிர் நோக்கிய பிள்ளையாரின் கண்ணீரைத் துடைத்தருளிப் பாலமுதத்தை உண்பாயாக ! என்று உண்ணச் செய்ய, பெருமையுடைய பிள்ளையாரை இங்கு அழுகை தீர்த்துச் சிவபெருமான் அருள் செய்தார்.
1967. யாவருக்குந் தந்தைதாய் எனுமிவர்இப் படியளித்தார்
ஆவதனா லாளுடைய பிள்ளையா ராய்அகில
தேவருக்கும் முனிவருக்குந் தெரிவரிய பொருளாகும்
தாவில்தனிச் சிவஞான சம்பந்த ராயினார்.
தெளிவுரை : எல்லாருக்கும் தந்தை தாய் என்னும் அம்மையப்பர் வெளிப்பட்டுத் தாமே அளித்தார் ஆதலால், ஆளுடைய பிள்ளையார் என்னும் திருப்பெயரை உடையவராய் எல்லாத் தேவர் முனிவர்க்கும் தெளிந்து அறிய இயலாத மெய்ப்பொருளாகிய எக்காலத்தும் கெடுதல் இல்லாத ஒப்பில்லாத சிவத்தை உணரும் சம்பந்தம் உடையவர் என்ற காரணத்தால் திருஞான சம்பந்தர் என்ற திருப்பெயரை உடையவர் ஆனார்.
1968. சிவனடியே சிந்திக்குந் திருப்பெருகு சிவஞானம்
பவமதனை யறமாற்றும் பாங்கினில்ஓங் கியஞானம்
உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞ்ஞானம்
தவமுதல்வர் சம்பந்தர் தாம்உணர்ந்தார் அந்நிலையில்.
தெளிவுரை : சிவபெருமான் திருவடிகளையே நினைத்தலான செம்மை பெருகச் செய்யும் சிவஞானமான ஒப்பில்லாத கலைஞானத்தையும் பிறப்பையும் இறப்பையும் மீண்டும் வாராமல் தடுக்கும் குணத்துடன் கூடிய ஞானமான உணர்வரிய மெய்ஞ்ஞானத்தையும் தவ முதல்வரான திருஞானசம்பந்தர் அந்நிலையில் உணர்ந்தார்.
1969. எப்பொருளும் ஆக்குவான் ஈசநே எனுமுணர்வும்
அப்பொருள்தான் ஆளுடையார் அடியார்கள் எனுமறிவும்
இப்படியா லிதுவன்றித் தம்மிசைவு கொண்டியலும்
துப்புரவில் லார்துணிவு துகளாகச் சூழந்தெழுந்தார்.
தெளிவுரை : எல்லாப் பொருளையும் இயக்குபவன் ஈசனே என்னும் உணர்வும், அந்தப் பொருளாவது அவ்வாறு ஆளுடையாரும் அவருடைய அடியார்களும் ஆவர் என்ற அறிவும் இங்ஙனம் இன்றித் தம் தம் அறிவுக்கு ஏற்றவாறு எண்ணி இயல்கின்ற தூய்மை அற்றவரின் துணிவுகளை எல்லாம் தூளாகுமாறு எண்ணி எழுந்தார்.
1970. சீர்மறையோர் சிவபாத இருதயரும் சிறுபொழுதில்
நீர்மருவித் தாஞ்செய்யும் நியமங்கள் முடித்தேறிப்
பேருணர்விற் பொலிகின்ற பிள்ளையார் தமைநோக்கி
யார்அளித்த பாலடிசில் உண்டதுநீ எனவெகுளா.
தெளிவுரை : சிறப்புடைய சிவபாத இருதயரும் சிறிது நேரத்தில் நீருள் பொருந்தித் தாம் செய்யும் நியமங்களை யெல்லாம் முடித்துக் கொண்டு, கரையில் ஏறிப் பேருணர்வில் விளங்கும் தம் மகனாரைப் பார்த்து, நீ யார் தந்த பாலை உண்டாய்? எனச் சினந்து,
1971. எச்சில்மயங் கிடவுனக்கீ திட்டாரைக் காட்டென்று
கைச்சிறியது ஒருமாறு கொண்டோச்சக் காலெடுத்தே
அச்சிறிய பெருந்தகையார் ஆனந்தக் கண்துளிபெய்
துச்சியின் மேல் எடுத்தருளும் ஒருதிருக்கை விரற்சுட்டி.
தெளிவுரை : எச்சில் உண்டாக உனக்கு இதை அளித்த வரை எனக்குக் காட்டு எனச்சிவபாத இருதயர் உரைத்துச் சிறிய ஒரு கோலைக் கையில் எடுத்து அடிப்பவரைப் போல் ஓங்கிட, அந்தச் சிறுபெருந்தகையரான பிள்ளையார், ஒரு காலை எடுத்துநின்று, கண்களிலிருந்து ஆனந்தக்கண்ணீரைச் சொரித்து உச்சிமேல் தூக்கிய திருக்கையின் ஒரு விரலால் சுட்டிக் காட்டி,
1972. விண்ணிறைந்த பெருகொளியால் விளங்குமழ விடைமேலே
பண்ணிறைந்த அருமறைகள் பணிந்தேத்தப் பாவையுடன்
எண்ணிறைந்த கருணையினால் நின்றாரை எதிர்காட்டி
உண்ணிறைந்து பொழிந்தெழுந்த உயர்ஞானத் திருமொழியால்.
தெளிவுரை : வானத்தில் நிறைந்த பெருகும் ஞான ஒளியால் விளங்கும் காளையின் மீது பண்ணால் நிறைந்த அரிய வேதங்கள் வணங்கித் துதிக்க உமாதேவியாருடன் எண்ணிறந்த அருளால் நின்ற திருத்தோணி புரத்தாரை எதிரே காட்டி, உள்ளே நிறைந்து தேக்கி மேல் எழுந்து பொழிந்த சிவஞானத் திருவாக்கினால்,
1973. எல்லையிலா மறைமுதல்மெய் யுடன்எடுத்த எழுதுமறை
மல்லல்நெடுந் தமிழாலிம் மாநிலத்தோர்க் குரைசிறப்பப்
பல்லுயிருங் களிகூரத் தம்பாடல் பரமர்பால்
செல்லுமுறை பெறுவதற்குத் திருச்செவியைச் சிறப்பித்து.
தெளிவுரை : எல்லையற்ற வேதங்களின் முதல் எழுத்தை மெய்யுடனே தொடங்கி எழுதும் முறையை வளம் வாய்ந்த நெடுந்தமிழால், இந்தப் பெரிய உலகத்தில் உள்ளவர்க்கு உரைசிறந்து பயன் அளிக்கப், பல உயிர்களும் இன்பம் அடைய, தம் திருப்பாடல் இறைவரிடம் செல்கின்ற வகையைப் பெறும் பொருட்டாய்த் திருச் செவியைச் சிறப்பித்து,
1974. செம்மைபெற எடுத்ததிருத் தோடுடைய செவியன்எனும்
மெய்ம்மைமொழித் திருப்பதிகம் பிரமபுரம் மேவினார்
தம்மையடை யாளங்களுடன்சாற்றித் தாதையார்க்
கெம்மையிது செய்தபிரான் இவனன்றே எனவிசைத்தார்.
தெளிவுரை : செம்மைப் பொருந்தும்படித் தொடங்கிய தோடுடைய செவியன் என்ற மெய்ம் மொழியான திருப்பதிகத்தைத் திருப்பிரமபுரத்தில் எழுந்தருளிய சிவ பெருமானை அடையாளங்களுடன் சொல்லி, எம்மை இது செய்தவன் இந்த இறைவன் அன்றே என்று தந்தை யாருக்குக் கூறியருளினார்.
1975. மண்ணுலகில் வாழ்வார்கள் பிழைத்தாலும் வந்தடையின்
கண்ணுதலான் பெருங்கருணை கைக்கொள்ளும் எனக்காட்ட
எண்ணமிலா வல்லரக்கன் எடுத்துமுறிந் திசைபாட
அண்ணலவற் கருள்புரிந்த ஆக்கப்பா டருள்செய்தார்.
தெளிவுரை : இம்மண் உலகத்தில் வாழும் உயிர்கள் பிழையைச் செய்தாலும் அவை தம்மை வந்து அடைந்தால் நெற்றிக் கண்ணையுடைய சிவபெருமான் பெருங்கருணையினால் அவற்றைக் கைகொடுத்து ஆள்வார் என்பதைக் காட்ட, நல்லுணர்வு இல்லாதவனான வன்கண்மையுடைய அரக்கனான இராவணன் திருக்கயிலை மலையை எடுத்து உடல் முரிவுபட்டுப் பின் இசையைப் பாடவே, பெருமையுடைய இறைவர் அவனுக்கும் அருள் செய்த ஆக்கப்பாடுகளை அந்தத் திருப்பதிகத்துள் வைத்துப் பாடினார்.
1976. தொழுவார்க்கே அருளுவது சிவபெருமான் எனத்தொழார்
வழுவான மனத்தாலே மாலாய மாலயனும்
இழிவாகுங் கருவிலங்கும் பறவையுமாய் எய்தாமை
விழுவார்கள் அஞ்செழுத்தும் துதித்துய்ந்த படிவிரித்தார்.
தெளிவுரை : வணங்குபவர்க்கே அருளுவார் இறைவர் என்பதைத் தெரிந்துகொண்டு, தொழாதவராகித் தவறு செய்த மனத்தால் மயக்கம் கொண்ட திருமாலும் நான் முகனும் இழிந்த பன்றியும் அன்னப்பறவையுமாகக் கீழும் மேலும் போய்க் காணமாட்டாமல் விழுவார்கள் திருவைந்தெழுத்தைத் துதித்து உய்தி பெற்ற இயல்பை மேலே விரிவாய் எடுத்து உரைத்தார்.
1977. வேதகா ரணராய வெண்பிறைசேர் செய்யசடை
நாதன்நெறி அறிந்துய்யார் தம்மிலே நலங்கொள்ளும்
போதமிலாச் சமண்கையர் புத்தர்வழி பழியாக்கும்
ஏதமே யெனமொழிந்தார் எங்கள்பிரான் சம்பந்தர்.
தெளிவுரை : வேதங்களின் காரணமான வெண்மையான பிறைச்சந்திரனை யணிந்த சிவந்த சடையையுடைய சிவ பெருமானின் நெறியை அடைந்து உய்தி பெறாதவரான புறச் சமயத்தாருள் நன்மையில்லாத சமணர்களும் புத்தர்களும் ஆன இவர்களின் நெறிகள் பழியை விளைக்கும் கேடுகளே ஆகும் என்று எம்பெருமான் ஞானசம்பந்தர் மொழிந்தருளினார்.
1978. திருப்பதிகம் நிறைவித்துத் திருக்கடைக்காப் புச்சாத்தி
இருக்குமொழிப் பிள்ளையார் எதிர்தொழுது நின்றருள
அருட்கருணைத் திருவாள னார்அருள்கண் டமரரெலாம்
பெருக்கவிசும் பினிலார்த்துப் பிரசமலர் மழைபொழிந்தார்.
தெளிவுரை : திருப்பதிகத்தை நிறைவாகப் பாடித் திருக்கடைக் காப்பையும் சாத்தியருளி, வேத மொழியையுடைய பிள்ளையார் எதிரில் தொழுது நின்றார். நிற்க, அருட் கருணையுடைய சிவபெருமானின் நிறைந்த அருளைக் கண்டு தேவர்கள் பெருகிய வானத்தில் ஆரவாரித்துத் தேனைச் சொரியும் தெய்வ மலர்களே மழையாய்ப் பெய்தனர்.
1979. வந்தெழும்மங் கலமான வானதுந் துபிமுழக்கும்
கந்தருவர் கின்னரர்கள் கானவொலிக் கடல்முழக்கும்
இந்திரனே முதல்தேவர் எடுத்தேத்தும் இசைமுழக்கும்
அந்தமில்பல் கணநாதர் அரஎனுமோ சையின்அடங்க.
தெளிவுரை : அழிவற்ற பல பூதகண நாதர்கள் முழக்கும் அரகர என்ற ஓசையுடன் அடங்குமாறு, மங்கலமான வான துந்துபி ஒலியும், கந்தருவர், கின்னரர் முதலான தேவ இனத்தார் பாட்டு ஒலியின் கடல் போன்ற ஒலியும், இந்திரன் முதலிய தேவர்கள் எடுத்துத் துதிக்கும் இசையின் ஒலியும் என்ற இத்தகைய ஒலிகளின் தொகுதி இங்கு வந்து ஒலிப்பதாகும்.
1980. மறைகள் கிளர்ந்தொலி வளர முழங்கிட வானோர்தம்
நிறைமுடி உந்திய நிறைமணி சிந்திட நீள்வானத்
துறையென வந்துல கடைய நிறைந்திட ஓவாமெய்ப்
பொறைபெரு குந்தவ முனிவர் எனுங்கடல் புடைசூழ.
தெளிவுரை : வேதங்கள் எழுந்து ஒலி வளர முழங்கவும், தேவர்களின் நிறைந்த முடிகள் ஒன்றுடன் ஒன்று மோதி மணிகள் சிதறலாலே, அவை நீண்ட வானத்தினின்றும் விழும் பனிநீர்த் துளிகள் போல் வந்து உலகத்தில் எங்கும் நிறையவும், இடையறாத மெய்ம்மையும் சாந்தமும் பெருகும் தவமுனிவர் என்ற கடல் பக்கங்களிலும் சூழவும்,
1981. அணைவுற வந்தெழும் அறிவு தொடங்கின அடியார்பால்
இணையில் பவங்கிளர் கடல்கள் இகந்திட இருதாளின்
புணையருள் அங்கணர் பொருவிடை தங்கிய புணர்பாகத்
துணையொ டணைந்தனர் சுருதி தொடர்ந்த பெருந்தோணி.
தெளிவுரை : தம்மை வந்து அடையுமாறு எழுகின்ற பரிபக்குவம் உற்ற உணர்ச்சியுடைய அடியாரிடத்தினின்றும் ஒப்பில்லாத வலிமையுடைய பிறவி பெருகும் கடல்கள் நீங்குமாறு தம் இரு திருவடிகளான இனிய புணையை அருளும் கருணையுடைய திருத்தோணியப்பர், போர் செய்யும் காளையின் மேல் தம்முடன் தங்கிய துணைவியாருடனே வேதங்கள் தொடர்ந்த பெருந்திருத் தோணியில் அமர்ந்தருளினார்.
1982. அண்ணல் அணைந்தமை கண்டு தொடர்ந்தெழும் அன்பாலே
மண்மிசை நின்ற மறைச்சிறு போதகம் அன்னாரும்
கண்வழி சென்ற கருத்து விடாது கலந்தேகப்
புண்ணியர் நண்ணிய பூமலி கோயிலின் உட்புக்கார்.
தெளிவுரை : சிவபெருமான் கோயில்கள் எழுந்தருளப் பெற்றதைப் பார்த்து, அப்பெருமானைத் தொடர்ந்து எழும் அன்பினால், கண்களின் வழியே போன கருத்து விடாது கலந்ததால், பொய்கைக் கரையில் நிலத்தில் நின்றருளிய வேதச்சிறு யானை போன்ற பிள்ளையாரும் புண்ணியரான சிவபெருமான் சேர்ந்த அழகிய திருத்தோணி கோயிலுக்குள் போய்ப் புகுந்தார்.
1983. ஈறில் பெருந்தவம் முன்செய்து தாதை யெனப்பெற்றார்
மாறு விழுந்த மலர்க்கை குவித்து மகிழ்ந்தாடி
வேறு விளைந்த வெருட்சி வியப்பு விருப்போடும்
கூறும் அருந்தமி ழின்பொருளான குறிப்போர்வார்.
தெளிவுரை : இறுதியில்லாத தவத்தைச் செய்து இவருடைய தந்தை என்று சொல்லும் நிலைபெற்ற சிவபாத இருதயர் அடிக்க ஓங்கிய சிறுகோலைக் கீழே நழுவவிட்டு மலர்க் கைகளைக் கூப்பிக்கொண்டு மகிழ்ந்து ஆனந்தக் கூத்தாடி, வேறாக உண்டான வெருட்சி, விருப்பு, வெறுப்பு என்ற இவற்றுடன் கூடியவராய்த் தம் பிள்ளையார் எடுத்துச் சொல்லும் அருந்தமிழின் பொருளான குறிப்பை உணர்வாராகி,
1984. தாணு வினைத்தனி கண்டு தொடர்ந்தவர் தம்மைப்போல்
காணுதல் பெற்றில ரேனும் நிகழ்ந்தன கண்டுள்ளார்
தோணி புரத்திறை தன்னரு ளாதல் துணிந்தார்வம்
பேணு மனத்தொடு முன்புகுகாதலர் பின்சென்றார்.
தெளிவுரை : சிவபெருமானைத் தனியே கண்டு அவரைத் தொடர்ந்தவரான பிள்ளையாரைப் போல் தாம் அவ்விறைவரைக் காணாராயினும், நிகழ்ந்தனவான அடையாளக் குறிகளையும் திருப்பதிகத் தமிழ் பாடிச் சுட்டிக்காட்டிய தையும் கண்டவராதலால், இது தோணிபுர இறைவரின் திருவருள் என்பதை உணர்ந்து கொண்டு ஆசை பெருகிய மனத்துடன் முன்னால் போய்ப் புகும் மகனைத் தொடர்ந்து சென்றார்.
1985. அப்பொழுது அங்கண் அணைந்தது கண்டவர் அல்லாதார்
முப்புரி நூன்மறை யோர்கள் உரோம முகிழ்ப்பெய்தி
இப்படி யொப்பதொர் அற்புதம் எங்குள தென்றென்றே
துப்புறழ் வேணியர் கோயிலின் வாயில் புறஞ்சூழ.
தெளிவுரை : அச்சமயத்தில் அங்கு நிகழ்ந்தனவற்றைக் கண்டவர்களும் காணாமல் கேட்டவர்களும் பூணூல் அணிந்த வேதியர்களும், இத்தகைய அற்புத நிகழ்ச்சி வேறு எங்கு உள்ளது? எனக் கூறிப் பவளம் போன்ற சிவந்த சடையை யுடைய சிவபெருமான் வீற்றிருக்கும் திருத் தோணிக் கோயிலின் திருவாயில் புறத்தில் வந்து சூழ்ந்து கொள்ள,
1986. பொங்கொளி மால்விடை மீது புகுந்தணி பொற்றோணி
தங்கி இருந்த பெருந்திரு வாழ்வு தலைப்பட்டே
இங்கெனை யாளுடை யானுமை யோடும் இருந்தான்என்
றங்கெதிர் நின்று புகன்றனர் ஞானத் தமுதுண்டார்.
தெளிவுரை : ஞான அமுதை உண்ட பிள்ளையார் பொங்கும் ஒளியுடைய காளையூர்தியில் வந்து அழகிய பொன் பொருந்திய தோணியில் எழுந்தருளிய பெருந்திரு வாழ்வைப் போய்க் கூடி, என்னை ஆளுடைய பெருமான் உமையம்மையாருடன் இங்கு எழுந்தருளியிருந்தான் என்னும் கருத்துக் கொண்ட திருப்பதிகத்தை அங்கே திரு முன்புநின்று கூறித் துதித்தார்.
1987. இன்னிசை ஏழும் இசைந்த செழுந்தமிழ் ஈசற்கே
சொன்முறை பாடு தொழும்பருள் பெற்ற தொடக்கோடும்
பன்மறை வேதியர் காண விருப்பொடு பால்நாறும்
பொன்மணி வாயினர் கோயிலின் நின்று புறப்பட்டார்.
தெளிவுரை : அன்புடன் ஞான அமுதத்தின் மணம் கமழும் திருவாயையுடைய திருஞானசம்பந்தர், மறைகளை ஓதும் வேதியர் பலரும் காண இனிய ஏழிசைகளும் பொருந்திய செழுந்தமிழ்த் திருப்பதிகங்களைச் சொன்முறையாகச் சிவ பெருமானுக்கே பாடுகின்ற திருத்தொண்டரான அடிமைத் திறத்தையும் அருளையும் பெற்ற பிணைப்புடனே கோயிலினின்று புறப்பட்டார்.
1988. பேணிய அற்புத நீடருள் பெற்ற பிரான்முன்னே
நீணிலை யில்திகழ் கோபுர வாயிலின் நேரெய்தி
வாணில வில்திகழ் வேணியர் தொண்டர்கள் வாழ்வெய்துந்
தோணி புரத்தவர் தாமெதிர் கொண்டு துதிக்கின்றார்.
தெளிவுரை : விரும்பிய அற்புதமான நீண்ட திருவருளைப் பெற்ற ஞானப்பிள்ளையாரின் முன்பு, ஒளிபொருந்திய சந்திரனைவிடச் சிறந்து விளங்குகின்ற சடையை யுடைய சிவபெருமானின் தொண்டர்களும், வாழ்வடையும் திருத்தோணிபுரத்தில் உள்ளவர்களும், நீண்ட நிலைகளுடன் விளங்குகின்ற கோயிலின் வாயிலை அடைந்து தாம் கூடி எதிர் கொண்டு பின்வருமாறு துதிக்கத் தொடங்கினர்.
1989. காழியர் தவமே கவுணியர் தனமே கலைஞானத்
தாழிய கடலே அதனிடை யமுதே அடியார்முன்
வாழிய வந்திம் மண்மிசை வானோர் தனிநாதன்
ஏழிசை மொழியாள் தன்திரு வருள்பெற் றனையென்பார்.
தெளிவுரை : சீகாழியில் உள்ளவரின் தவப்பயனாய் உள்ளவரே ! கவுணியரின் செல்வமே ! கலைஞானம் நிறைந்த ஆழ்ந்த கடல் போன்றவரே ! அக்கடலின் அமுதம் போன்றவரே! அடியார் கண்டு வாழும் பொருட்டு இம்மண் உலகத்தின்மீது அவதரித்து வந்து வானவரின் ஒப்பற்ற தலைவரான சிவபெருமானும் ஏழிசை மொழியுடைய உமையாளும் என்ற இவருடைய திருவருளையும் ஒருங்கே பெற்றீர் ! எனச் சிலர் உரைப்பார்.
1990. மறைவளர் திருவே வைதிக நிலையே வளர்ஞானப்
பொறையணி முகிலே புகலியர் புகலே பொருபொன்னித்
துறைபெறு மணியே சுருதியின் ஒளியே வெளியேவந்
திறையவன் உமையா ளுடன்அருள் தரஎய் தினையென்பார்.
தெளிவுரை : மறையை வளர்க்கும் செல்வமே ! வைதிக நெறியின் நிலையான பொருளே ! வளர்கின்ற ஞானம் என்ற கருத்தாங்கிய முகிலே ! புகலி என்ற நகரத்தவரின் புகலிடமே ! அலைமோதும் காவிரித் துறையில் பெறத்தக்க மணியே ! சுருதிகளில் விளங்கும் ஒளியே ! சிவபெருமான் உமையம்மையாருடன் வெளிப்பட்டு வந்து அருள் தரப் பெற்றீர் ! என்பார் சிலர்.
1991. புண்ணிய முதலே புனைமணி அரைஞா ணொடுபோதும்
கண்ணிறை கதிரே கலைவளர் மதியே கவின்மேவும்
பண்ணியல் கதியே பருவம தொருமூ வருடத்தே
எண்ணிய பொருளாய் நின்றவர் அருள்பெற் றனையென்பார்.
தெளிவுரை : புண்ணியங்களின் முதலே ! மணி புனைந்த அரைஞாணுடன் போந்து காட்சியளிக்கும் கண் நிறைந்த கதிரே ! கலைகள் வளரும் சந்திரனே ! அழகு பொருந்தும் பண்களுக்கு இயலும் கதியே ! பருவம் மூன்றாண்டில், தியானங்களுக்கெல்லாம் பொருளாய் நின்ற சிவபெருமானின் திருவருளைப் பெற்றீர் ! என்பர் சிலர்.
1992. என்றினைய பலகூறி இருக்குமொழி அந்தணரும் ஏனை யோரும்
நின்றுதுதி செய்தவர்தாள் நீள்முடிக்கண் மேல்ஏந்தி நிரந்த போது
சென்றணைந்த தாதையார் சிவபாத இருதயர்தாம் தெய்வ ஞானக்
கன்றினைமுன் புக்கெடுத்துப் பியலின்மேற் கொண்டுகளி கூர்ந்து செல்ல.
தெளிவுரை : என்று இத்தகையவற்றைச் சொல்லி, வேத மொழிகளையுடைய அந்தணர்களும் மற்ற அடியார்களும் நின்று துதித்து அப்பிள்ளையாரின் திருவடிகளைத் தம் முடியில் அணிந்து வரிசை பெற நின்றபோது, தாமே முன் சென்று சேர்ந்து, தந்தையாரான சிவபாத இருதயர், தெய்வத் தன்மையுடைய சிவஞானக் குழந்தையான பிள்ளையாரை முன் சென்று எடுத்துத் தோளில் சுமந்து பெருமகிழ்வுடனே (சென்றார்.) செல்ல,
1993. மாமறையோர் குழாத்தினுடன் மல்குதிருத் தொண்டர்குழாம் மருங்கு சூழ்ந்து தாமறுவை உத்தரியந் தனிவிசும்பில் எறிந்தார்க்குந் தன்மை யாலே
பூமறுகு சிவானந்தப் பெருக்காறு போத அதன்மீது பொங்கும்
காமர்நுரைக் குமிழியெழுந் திழிவனபோல் விளங்குபெருங் காட்சித் தாக.
தெளிவுரை : சிறந்த வேதியர் கூட்டத்துடன் பெருகிய அடியார் கூட்டம் பக்கத்தில் சூழ்ந்து, தம் உடையின் மேல் உள்ள ஆடைகளையும் உத்தரியங்களையும் வானத்தில் வீசி ஆரவாரம் செய்கின்ற தன்மையினால், சீகாழியின் அழகிய தெரு, சிவானந்தமான வெள்ளம் பெருக்கெடுத்த ஆறுசெல்ல, அதன் மேல் பொங்கும் நுரைக்குமிழிகள் மேலே காட்சியுடையதாக விளங்கியது. விளங்க,
1994. நீடுதிருக் கழுமலத்து நிலத்தேவர் மாளிகைமேல் நெருங்கி அங்கண்
மாடுநிறை மடவார்கள் மங்கலமாம் மொழிகளால் வாழ்த்தி வாசத்
தோடுமலி நறுமலருஞ் சுண்ணமும்வெண் பொரியினொடுந் தூவி நிற்பார்
கோடுபயில் குலவரைமேல் மின்குலங்கள் புடைபெயருங் கொள்கைத் தாக.
தெளிவுரை : நீடும் சீகாழியில் அந்தணர்களின் மாளிகை மேல் நெருக்கி அவ்விடத்தில், பக்கத்தில் நிறைந்து மறையோரின் மங்கையர் உயர்ந்த உச்சியையுடைய பெரிய மலைகளின் மேல் மின்னல் கூட்டம் புடைபெயர்ந்து போகின்ற காட்சியைக் கொண்டதைப் போல, மங்கலமான பெருஞ் சொற்களால் வாழ்த்தியும் மணமுடைய இதழ்களையுடைய புதிய குளிர்ந்த பூக்களையும் சுண்ணப் பொடிகளையும் வெண்ணெல் பொரியுடனே தூவி நிற்பாராயினர்.
1995. மங்கலதூரியந்துவைப்பார் மறைச்சாமம் பாடுவார் மருங்கு வேதிப்
பொங்குமணி விளக்கெடுத்துப் பூரணகும் பமும்நிரைப்பார் போற்றி செய்வார்
அங்கவர்கள் மனத்தெழுந்த அதிசயமும் பெருவிருப்பும் அன்பும் பொங்கத்
தங்குதிரு மலிவீதிச் சண்பைநகர் வலஞ்செய்து சாருங் காலை.
தெளிவுரை : மற்றும் சிலர் மங்கல வாத்தியங்களை இசைப்பார். சிலர் கானங்களைப் பாடுவார். சிலர் பக்கங்களில் திண்ணைகளில் பொங்கும் அழகிய விளக்குகளை ஏந்திப் பூரணக் கலசங்களையும் வரிசையாய் வைப்பார். இங்ஙனம் அவர்கள் மனத்தில் எழுந்த அதிசயமும் பெரு விருப்பும் அன்பும் பெருகும்படி தங்கிய வீதியின்வழியே சண்பை நகரை வலமாக வரும்போது,
1996. தந்திருமா ளிகையின்கண் எழுந்தருளிப் புகும்பொழுது சங்க நாதம்
அந்தரதுந் துபிமுதலா அளவில்பெரு கொலிதழைப்ப அணைந்து புக்கார்
சுந்தரப்பொற் றோணிமிசை இருந்தபிரான் உடன்அமர்ந்த துணைவி யாகும்
பைந்தொடியாள் திருமுலையின் பாலறா மதுரமொழிப் பவள வாயார்.
தெளிவுரை : அழகிய பொன் பூண்ட திருத்தோணியின் மேல் இருந்த இறைவருடன் கூடிய துணைவியரான பெரிய நாயகி அம்மையாருடன் திருமுலைப்பால் மணம் மாறாத இனிய மொழியையுடைய பவளம் போன்ற வாயையுடைய பிள்ளையார் தம் திருமாளிகைக்கு எழுந்தருளிப் புகும் போது சங்கு ஒலியும், தேவ துந்துபி முதலான அளவில்லாத பெருகிய ஒலி மிக, உள்ளே புகலானார்.
1997. தூமணிமா ளிகையின்கண் அமர்ந்தருளி அன்றிரவு தொல்லை நாத
மாமறைகள் திரண்டபெருந் திருத்தோணி மன்னிவீற் றிருந்தார் செய்ய
காமருசே வடிக்கமலங் கருத்திலுற இடையறாக் காதல் கொண்டு
நாமநெடுங் கதிர்உதிப்ப நண்ணினார் திருத்தோணி நம்பர் கோயில்.
தெளிவுரை : தூய்மையான அழகிய திருமாளிகையில் அமர்ந்திருந்து, திருஞானம் அருளப் பெற்ற அன்றைய இரவில், பழைமையான நாத உருவான பெரு வேதங்கள் திரண்டு உருவெடுத்தாற் போன்ற திருத்தோணியில் நிலை பெற்று வீற்றிருந்த சிவபெருமானின் திருவடித் தாமரைகள் தம் கருத்தில் பொருந்தியதால், இடையறாத காதல் கொண்டவராகிப் பெரிய ஞாயிறு தோன்றும் முன் நேரத்திலே திருத்தோணியப்பரின் திருக்கோயிலைப் போய் அடைந்தார்.
1998. காதலுடன் அணைந்துதிருக் கழுமலத்துக் கலந்துவீற் றிருந்த தங்கள்
தாதையா ரையும்வெளியே தாங்கரிய மெய்ஞ்ஞானந் தம்பால் வந்து
போதமுலை சுரந்தளித்த புண்ணியத்தா யாரையும்முன் வணங்கிப் போற்றி
மேதகைய அருள்பெற்றுத் திருக்கோலக் காஇறைஞ்ச விருப்பிற் சென்றார்.
தெளிவுரை : மிக்க அன்புடன் சேர்ந்து திருக்கழுமலம் என்ற அத்திருத்தலத்திலே உடன் எழுந்தருளியிருந்த தம் தந்தையாரையும் தம்மிடம் வெளிப்பட்டு வந்த யாவராலும் தாங்குவதற்கரிய மெய்ஞ்ஞானத்தை ஞானப்பால் ஆக்கித் திருமுலை சுரந்து தமக்கு அளித்து ஊட்டிய புண்ணிய வடிவுடைய திருத்தாயாரையும் முன் வணங்கிப் போற்றி மேன்மையான அருளைப் பெற்றுத் திருக்கோலக்கா என்ற தலத்தை வணங்கும் பொருட்டு விருப்புடன் சென்றார்.
1999. பெருக்குஓலிட் டலைபிறங்கும் காவிரிநீர் பிரசமலர் தரளம் சிந்த
வரிக்கோல வண்டாட மாதரார் குடைந்தாடும் மணிநீர் வாவித்
திருக்கோலக் காவெய்தித் தேவர்பிரான் கோயில்வலஞ் செய்து முன்னின்
றிருக்கோலிட் டறிவரிய திருப்பாதம் ஏத்துவதற் கெடுத்துக் கொள்வார்.
தெளிவுரை : நீர்பெருக்கம் இரைச்சல் இட்டு அலைகள் பொருந்திய காவிரியாறு நன்னீருடன் தேன் உடைய மலர்களையும் முத்துக்களையும் சொரிய, மலர்களைச் சூழ்ந்து கொண்டு வரிவண்டுகள் மொய்க்க, மங்கையர் குடைந்து நீராடுகின்ற நீரையுடைய வாவிகள் பொருந்திய திருக்கோலக்கா என்ற பதியை அடைந்து, தேவர்களின் தலைவரான இறைவரின் திருக்கோயிலை வலமாக வந்து திருமுன் நின்று வேதங்கள் முறையிட்டும் அறிவதற்கு அரிய இறைவரின் திருவடிகளைத் துதிப்பதற்குத் தொடங்கியவராய்,
2000. மெய்ந்நிறைந்த செம்பொருளாம் வேதத்தின் விழுப்பொருளை வேணிமீது
பைந்நிறைந்த அரவுடனே பசுங்குழவித் திங்கள்பரித் தருளு வானை
மைந்நிறைந்த மிடற்றானை மடையில்வா ளைகள்பாய என்னும் வாக்கால்
கைந்நிறைந்த ஒத்துஅறுத்துக் கலைப்பதிகம் கவுணியர்கோன் பாடுங் காலை.
தெளிவுரை : மெய்மை நிறைந்த செம்பொருள் எனப்படுகின்ற வேதங்களில் கூறப்படும் பொருளாய் உள்ளவரை, சடையின் மேல் பையுடைய பாம்புடன் பசுமையான பிறைச் சந்திரனைத் தாங்குபவரை, நஞ்சுடைய திருமிடற்றை யுடையவரை மடையில் வாளைகள் பாய என்ற திருப்பதிகத்தின் வாக்கினால், திருக்கரங்களால் அமைந்த காலவரையறையினைச் செய்யும் தாள ஒத்துச் செய்து, கலைகள் நிரம்பிய திருப்பதிகத்தைக் கவுணியர் பெருமானான சம்பந்தர் பாடிய போது,
2001. கையதனால் ஒத்தறுத்துப் பாடுதலும் கண்டருளிக் கருணை கூர்ந்த
செய்யசடை வானவர்தம் அஞ்செழுத்தும் எழுதியநற் செம்பொற் றாளம்
ஐயரவர் திருவருளால் எடுத்தபா டலுக்கிசைந்த அளவால் ஒத்த
வையமெலாம் உய்யவரு மறைச்சிறுவர் கைத்தலத்து வந்த தன்றே.
தெளிவுரை : அங்ஙனம் சம்பந்தர் பெருமான் திருக்கைகளால் தாள ஒத்து அறுதியிட்டுப் பாடவும் (இறைவர்) கண்டு அருள் செய்து, கருணை கூர்ந்த தேவர் பெருமானின் திருவைந்தெழுத்து எழுதியுள்ள செம்பொன் தாளங்கள், இறைவரின் அருளால் எடுத்த அத்திருப்பதிகத்திற்குப் பொருந்திய அளவுபட, உலகம் முழுவதும் உய்ய வரும் மறைச் சிறுவரான பிள்ளையாரின் திருக்கைகளில் அப்போதே வந்து சேர்ந்தன.
2002. காழிவரும் பெருந்தகையார் கையில்வருந் திருத்தாளக் கருவி கண்டு
வாழியதந் திருமுடிமேற் கொண்டருளி மனங்களிப்ப மதுர வாயில்
ஏழிசையுந் தழைத்தோங்க இன்னிசைவண் தமிழ்ப்பதிகம் எய்தப் பாடித்
தாழுமணிக் குழையார்முன் தக்கதிருக் கடைக்காப்புச் சாத்தி நின்றார்.
தெளிவுரை : சீகாழியில் வந்து தோன்றிய பெருந்தகையரான ஆளுடைய பிள்ளையார் தம்திருக்கையில் வந்த தாளக் கருவியைப் பார்த்து, வாழ்வடையுமாறு அதனைத் தம் திருமுடிமீது வைத்து மனம் மகிழ, இனிமை மிக்க திருவாக்கால் ஏழிசைகளும் தழைத்து ஓங்க, இனிய இசை பொருந்திய தமிழ்ப் பதிகத்தைப் பொருத்தமாகப்பாடி, விரும்பி ஏற்றருளிய குழை அணிந்த சிவபெருமானின் திரு முன்னர் தக்க திருக்கடைக் காப்புச் சாத்தி நின்றார்.
2003. உம்பருல கதிசயிப்ப ஓங்கியநா தத்தளவின் உண்மை நோக்கித்
தும்புருநா ரதர்முதலாம் சுருதியிசைத் துறையுள்ளோர் துதித்து மண்மேல்
வம்பலர்மா மழைபொழிந்தார் மறைவாழ வந்தருளும் மதலை யாரும்
தம்பெருமான் அருள்போற்றி மீண்டருளிச் சண்பைநகர் சாரச் செல்வார்.
தெளிவுரை : தேவர் உலகமும் கொள்ள, ஓங்கிய அந்தத் தாளத்தில் நாத அளவு உண்மையினை நோக்கித் தும்புரு நாரதர் முதலான சுருதி பயில்கின்ற இசைத்துறை வல்லவர் யாவரும் துதித்துத் தேன் உடைய பூமழை பொழிந்தனர். வேதங்கள் வாழத் தோன்றியருளிய மகனாரும் தம் இறைவரின் அருளைப் போற்றி அங்கு நின்று விடை பெற்றுச் சீகாழிப் பதியை அடைவாராய்,
2004. செங்கமல மலர்க்கரத்துத் திருத்தாளத் துடன்நடந்து செல்லும் போது
தங்கள்குலத் தாதையார் தரியாது தோளின்மேல் தரித்துக் கொள்ள
அங்கவர்தந் தோளி ன்மிசை எழுந்தருளி அணைந்தார்சூழ்ந் தமர ரேத்தும்
திங்களணி மணிமாடத் திருத்தோணி புரத்தோணிச் சிகரக் கோயில்.
தெளிவுரை : செந்தாமரை மலர் போன்ற திருக்கைகளில் பொன் தாளத்துடன் நடந்து போகும் சமயத்தில், தம் குலத் தந்தையார் அவர் நடந்து வருதலைப் பொறுத்துக் கொள்ளதவராய் அவரைத் தம் தோள்மீது தரித்துக் கொள்ள, அதனால் அவருடைய தோள்மீது அமர்ந்தபடி, சுற்றிச் சூழ்ந்து தேவர்கள் போற்றுகின்ற திருத்தோணிபுரம் என்ற அத்தலத்தில் திருத்தோணி என்ற திங்கள் தங்கும் அழகிய மாடச் சிகரக் கோயிலை வந்து அடைந்தார்.
2005. திருப்பெருகு பெருங்கோயில் சூழவலங் கொண்டருளித் திருமுன் நின்றே
அருட்பெருகு திருப்பதிகம் எட்டொருகட்டளையாக்கி அவற்று ளொன்று
விருப்புறுபொற் றிருத்தோணி வீற்றிருந்தார் தமைப்பாட மேவுகாதல்
பொருத்தமுற அருள்பெற்றுப் போற்றியெடுத் தருளினார் பூவார் கொன்றை.
தெளிவுரை : அருட் செல்வம் பெருகும் அந்தப் பெருங் கோயிலை வலமாகச் சுற்றி வந்து, இறைவரின் திருமுன் நின்று, அருள் பெருகும் திருப்பதிகத்தைத் தக்க ராகப் பண்ணில் பின்காலத்தில் வகுத்தபடி கட்டளைகளுள் எட்டுப் பதிகங்கள் கொண்டதாகிய கட்டளைகளுள் ஒன்றில் தோணியப்பரைப் பாட வேண்டும் என்ற விருப்புக்கு ஏற்ப அருள் பெற்றுப் பூவார் கொன்றை எனத் தொடங்கிப் பாடினார்.
2006. எடுத்ததிருப் பதிகத்தின் இசைதிருத்தா ளத்தினால் இசைய வொத்தி
அடுத்தநடை பெறப்பாடி ஆர்வமுற வணங்கிப்போந் தலைநீர்ப் பொன்னி
மடுத்தவயற் பூந்தரா யவர்வாழ மழவிளங்கோ லத்துக் காட்சி
கொடுத்தருளி வைகினார் குறைவிலா நிறைஞானக் கொண்ட லார்தாம்.
தெளிவுரை : மேல் கூறிய வண்ணம் தொடங்கிய அந்தப் பதிகத்தின் இசையமமைதியைத் திருவருளால் பெற்ற அத்தாளத்தால் பொருந்துமாறு தாளவரையறை செய்து, முன் பாடிய அத்திருப்பதிகத்தினை அடுத்து அதைப் போன்றே நிகழும்படி பாடியருளி, பேரன்பு பொருந்த வணங்கப் போய்க் குறைவில்லாத நிறைவான ஞானமழை கருக்கொண்ட மேகத்தைப் போன்ற சம்பந்தர் அலைகளையுடைய நீர் பெருகும் காவிரி பாயும் வயல்கள் சூழ்ந்த சீகாழிப் பதியில் உள்ளவர் வாழ்வு அடையுமாறு இளங்குழவியான திருக்கோலத்தின் தோற்றம் தந்து இருந்தருளிச் செய்தார்.
2007. அந்நிலையில் ஆளுடைய பிள்ளையார் தமைமுன்னம் அளித்த தாயார்
முன்னுதிக்க முயன்றதவத் திருநன்னி பள்ளிமுதன் மறையோர் எல்லாம்
மன்னுபெரு மகிழ்ச்சியுடன் மங்கலதூரியந்துவைப்ப மறைகள் ஓதிக்
கன்னிமதிற் சண்பைநகர் வந்தணைந்து கவுணியர்கோன் கழலில் தாழ்ந்தார்.
தெளிவுரை : அவ்வாறு இருக்கும் நாளில், சம்பந்தரைப் பெற்றெடுத்த தாயான பகவதியார் முதலில் தன்னிடத்தில் வந்து தோன்ற, முயன்ற தவம் உடைய திருநனிபள்ளியில் உள்ள முதன்மையுடைய மறையவர் எல்லாரும் நிலைத்த மகிழ்ச்சியுடன் மங்கல வாத்திய ஒலியுடன் வேதங்களை ஓதிக்கொண்டு அழியாத மதில் சூழ்ந்த சீகாழி என்ற நகருக்கு வந்து சேர்ந்து கவுணியர் பெருமானின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினர்.
2008. மங்கலமாம் மெய்ஞ்ஞானம் மண்களிப்பப் பெற்றபெரு வார்த்தை யாலே
எங்கணும்நீள் பதிமருங்கில் இருபிறப்பாளரும்அல்லா ஏனை யோரும்
பொங்குதிருத் தொண்டர்களும் அதிசயித்துக் குழாங்கொண்டு புகலி யார்தம்
சிங்கஇள வேற்றின்பால் வந்தணைந்து கழல்பணியுஞ் சிறப்பின் மிக்கார்.
தெளிவுரை : மங்கலம் செய்யும் சிவமெய்ஞ் ஞானத்தை உலகம் மகிழப் பெற்ற, பெரு வார்த்தை கேட்டலால் நீண்ட அத்திருத்தலத்தின் பக்கத்தில் எங்கணும் உள்ள இருபிறப்பாளர்களும் அவரல்லாத மற்றவரும் பெருகும் தொண்டர்களும் வியப்புக் கொண்டு கூட்டமாகக் கூடிச் சீகாழியில் உள்ளவரின் இளஞ்சிங்கமான பிள்ளையாரிடத்து வந்து சேர்ந்து அவருடைய திருவடிகளில் வணங்கும் சிறப்பில் மிக்கவர் ஆனார்கள்.
2009. வந்ததிருத் தொண்டர்கட்கும் மல்குசெழு மறையவர்க்கும் மற்று ளோர்க்கும்
சிந்தைமகிழ் வுறமலர்ந்து திருவமுது முதலான சிறப்பின் செய்கை
தந்தம்அள வினில்விரும்புந் தகைமையினால் கடனாற்றுஞ் சண்பை மூதூர்
எந்தைபிரான் சிவலோகம் எனவிளங்கி எவ்வுலகும் ஏத்து நாளில்.
தெளிவுரை : அங்ஙனம் வந்து கூடிய திருத்தொண்டர்களுக்கும் அந்தணர்களுக்கும் மற்றவர்க்கும் மனமகிழ்ந்து முகம் மலர்ந்து உண்பித்தல் முதலான சிறப்புடைய செயல்களைத் தம் தம் அளவில் விரும்பும் தன்மையினால் தத்தம் கடமையாய்ச் செய்யும் அந்தச் சீகாழிப் பதி, எம் இறைவரின் சிவலோகமே என விளக்கம் பெற்று எல்லா வுலகமும் துதித்தது. அந்நாளில்,
2010. செழுந்தரளப் பொன்னிசூழ் திருநன்னி பள்ளியுள்ளோர் தொழுது திங்கள்
கொழுந்தணியுஞ் சடையாரை யெங்கள்பதி யினிற்கும்பிட் டருள அங்கே
எழுந்தருள வேண்டும்என இசைந்தருளித் தோணிவீற் றிருந்தார் பாதம்
தொழுந்தகைமை யாலிறைஞ்சி அருள்பெற்றுப் பிறபதியும் தொழமுன் செல்வார்.
தெளிவுரை : செழுமையான முத்துகளைத் தரும் காவிரியாறு சூழ்ந்த நனிபள்ளியில் உள்ளவர் சம்பந்தரை வணங்கிப் பிறைச் சந்திரனை அணியும் சடையையுடைய சிவபெருமானை எங்கள் தலத்திலே, கும்பிடும் பொருட்டுத் தாங்கள் எழுந்தருள வேண்டும் என வேண்டிக் கொண்டனர். அதற்குச் சம்பந்தர் சம்மதித்துத் திருத்தோணியில் வீற்றிருக்கும் சிவபெருமானின் திருவடிகளை வணங்கும் முறைப்படி வணங்கி, விடை பெற்று, நனிபள்ளியே அல்லாது மற்றத் தலங்களுக்கும், தொழுவதற்கு எண்ணிச் செல்வார் ஆனார்.
2011. தாதவிழ்செந் தாமரையின் அகவிதழ்போல் சீறடிகள் தரையின்மீது
போதுவதும் பிறரொருவர் பொறுப்பதுவும் பொறாஅன்பு புரிந்த சிந்தை
மாதவஞ்செய் தாதையார் வந்தெடுத்துத் தோளின்மேல் வைத்துக் கொள்ள
நாதர்கழல் தம்முடிமேற் கொண்டகருத் துடன்போந்தார் ஞான முண்டார்.
தெளிவுரை : ஞானப் பாலமுது உண்ட சம்பந்தர் இதழ்கள் மலரும் செந்தாமரை மலரின் உள்ளிதழ்கள் போன்ற சிறிய திருவடிகள் தரையில் பொருந்த நடந்து செல்வதையும், மற்றவர் எவரும் தாங்கப் பொறுக்காத அன்புகொண்ட மனமுடைய மாதவம் செய்த தந்தை சிவபாத இருதயர், வந்து எடுத்துத் தம் தோளின்மீது சுமந்து கொண்டு செல்லத் தாம் சிவபெருமானின் திருவடிகளைத் தம் முடிமீது கொண்ட உள்ளத்தவராய்ச் (சம்பந்தர்) செல்லலானார்.
2012. தேனலருங் கொன்றையினார் திருநன்னி பள்ளியினைச் சாரச் செல்வார்
வானணையும் மலர்ச்சோலை தோன்றுவதெப் பதியென்ன மகிழ்ச்சி யெய்திப்
பானல்வயல் திருநன்னி பள்ளியெனத் தாதையார் பணிப்பக் கேட்டு
ஞானபோ னகர்தொழுது நற்றமிழ்ச்சொல் தொடைமாலை நவில லுற்றார்.
தெளிவுரை : தேன் சிந்தும் கொன்றை மலரை அணிந்த சிவ பெருமான் வீற்றிருக்கும் திருநனிபள்ளியைச் சேரச் செல்பவரான ஞானப்பாலமுது உண்ட பிள்ளையார், வானம் அளாவும் மலர்ச் சோலைகளுடன் தோன்றும் இது எப்பதி? என்று வினவ, மகிழ்ச்சி அடைந்து, தந்தையார் சிவ பாத இருதயர், குவளை மலர்கள் நிறைந்த வயல்களையுடைய திருநனிபள்ளியாகும் எனக் கூறினார். அதைக் கேட்டுப் பிள்ளையார் நன்மை தரும் தமிழ்ப் பாமாலையான திருப்பதிகத்தைச் சொல்லத் தொடங்கினார்.
2013. காரைகள் கூகை முல்லை எனநிகழ் கலைசேர் வாய்மைச்
சீரியற் பதிகம் பாடித் திருக்கடைக் காப்புத் தன்னில்
நாரியோர் பாகர் வைகும் நனிபள்ளி உள்கு வார்தம்
பேரிடர் கெடுதற் காணை நமதெனும் பெருமை வைத்தார்.
தெளிவுரை : காரைகள் கூகை முல்லை எனத் தொடங்கிச் செல்லும் கலைசேரும் வாய்மை விளங்கும் சிறப்புக் கொண்ட இயற்பதிகம் பாடித் திருக்கடைக் காப்பில், உமையம்மையாரை ஒரு பக்கத்தில் கொண்ட சிவபெருமான் நிலையாய் எழுந்தருளியுள்ள திருநனிபள்ளியை நினைப்பவர்களின் பெரிய இடர்கள் யாவும் கெடுவதற்கு நம் ஆணையாகும் என்ற பெருமையினைப் பொறித்து வைத்தார்.
2014. ஆதியார் கோயில் வாயில்அணைந்துபுக் கன்பு கூர
நீதியாற் பணிந்து போற்றி நீடிய அருள்முன் பெற்றுப்
போதுவார் தம்மைச் சூழ்ந்து பூசுரர் குழாங்கள் போற்றும்
காதல்கண் டங்க மர்ந்தார் கவுணியர் தலைவ னார்தாம்.
தெளிவுரை : பழைமையுடைய நனிபள்ளி சிவபெருமானின் கோயில் வாயிலை அடைந்து உள்ளே சென்று, அன்புமிக நியதியால் வணங்கித் துதித்துப் பேரருளைப் பெற்று, வெளியே செல்பவரான கவுணியர் தலைவரான பிள்ளையார், தம்மைச் சூழ்ந்து கொண்டு அந்தணர் கூட்டம் போற்றுகின்ற அன்பைக் கண்டு அங்கே விரும்பி எழுந்தருளியிருந்தார்.
2015. அம்பிகை அளித்த ஞானம் அகிலமும் உய்ய வுண்ட
நம்பெருந் தகையார் தம்மை எதிர்கொண்டு நண்ண வேண்டி
உம்பரும் வணங்கு மெய்ம்மை உயர்தவத் தொண்ட ரோடு
தம்பெரு விருப்பால் வந்தார் தலைசைஅந் தணர்க ளெல்லாம்.
தெளிவுரை : பார்வதி அம்மையார் தந்த ஞானப்பால் அமுதத்தை உலகம் எலாம் உய்யும்படி உண்ட நம் பெருந்தகையான பிள்ளையாரும் எதிர்கொண்டு அடையுமாறு, தேவர்களும் வணங்கும் மெய்ம்மையுடைய தவத்தில் சிறந்த தொண்டருடனே திருத்தலைச்சங்காட்டில் வாழும் அந்தணர்கள் அனைவரும் தம் பெரிய விருப்பத்தால் வந்தார்கள்.
2016. காவணம் எங்கும் இட்டுக் கமுகொடு கதலி நாட்டிப்
பூவணத் தாமந் தூக்கிப் பூரண கும்ப மேந்தி
ஆவண வீதி எல்லாம் அலங்கரித் தண்ண லாரை
மாவண மலர்மென் சோலை வளம்பதி கொண்டு புக்கார்.
தெளிவுரை : அந்த அந்தணர் முதலியவர் எங்கும் பந்தல் இட்டுக் கமுகு மரங்களையும் வாழை மரங்களையும் நிறுத்தியும், மலர் மாலைகளைத் தொங்கவிட்டும், பூரண கும்பங்கள் எடுத்து, அங்காடித் தெருக்களை எல்லாம் அலங்காரம் செய்தும், பெருமையுடைய சம்பந்தரை, வண்டுகள் மொய்க்கும் மலர்கள் நிறைந்த மென்சோலைகள் சூழ்ந்த வளமான தம் பதிக்குள் அழைத்துப் போயினர்.
2017. திருமறை யோர்கள் சூழ்ந்து சிந்தையின் மகிழ்ச்சி பொங்கப்
பெருமறை ஓசை மல்கப் பெருந்திருக் கோயில் எய்தி
அருமறைப் பொருளா னாரைப் பணிந்தணி நற்சங் கத்தில்
தருமுறை நெறியக் கோயில் சார்ந்தமை அருளிச் செய்தார்.
தெளிவுரை : அந்தணர்கள் சூழ்ந்து தம் தம் உள்ளத்தில் மகிழ்ச்சி மிக, சம்பந்தர் பெரிய திருமாடக் கோயிலை அடைந்து அரிய வேதத்தின் பொருளாய் உள்ளவரை வணங்கி, அழகிய வலம்புரிச் சங்கின் வடிவில் அமைக்கப்பட்ட அக்கோயிலின் அவ்விறைவர் விரும்பி வீற்றிருக்கும் தன்மை பற்றித் திருப்பதிகத்தைப் பாடினார்.
2018. கறையணி கண்டர் கோயில் காதலால் பணிந்து பாடி
மறையவர் போற்ற வந்து திருவலம் புரத்து மன்னும்
இறைவரைத் தொழுது பாடும் கொடியுடை ஏத்திப் போந்து
நிறைபுனல் திருச்சாய்க் காடு தொழுதற்கு நினைந்து செல்வார்.
தெளிவுரை : நஞ்சின் கருமை கொண்ட கழுத்தையுடைய சிவபெருமானது கோயிலைக் காதலால் பணிந்து திருப்பதிகம் பாடிப் பின் அந்தணர்கள் தம்மைச் சூழ்ந்து துதிக்க வெளியே வந்து, திருவலம்புரம் என்ற தலத்தில் சிவபெருமானைத் தொழுது பாடும் கொடியுடை மும்மதில் எனத் தொடங்கும் திருப்பதிகத்தால் துதித்து வெளியே வந்து, நிறைந்த நீரையுடைய திருச்சாய்க்காடு என்ற தலத்தைத் தொழுவதற்கு நினைந்து செல்பவராய்,
2019. பன்னகப் பூணி னாரைப் பல்லவ னீச்ச ரத்துச்
சென்னியால் வணங்கி ஏத்தித் திருந்திசைப் பதிகம் பாடிப்
பொன்னிசூழ் புகாரில்நீடு புனிதர்தம் திருச்சாய்க் காட்டு
மன்னுசீர்த்தொண்ட ரெல்லாம் மகிழ்ந்தெதிர் கொள்ளப் புக்கார்.
தெளிவுரை : பாம்புகளை அணியாய்ப் பூண்ட சிவபெருமானைத் திருப்பல்லவன் ஈச்சரத்தில் தலையினால் வணங்கித் துதித்துத் திருந்தும் இசையையுடைய திருப்பதிகத்தைப் பாடி காவிரியாறு சூழும் புகார் நகரத்தின் நீடு புனிதரான இறைவர் வீற்றிருக்கும் திருச்சாய்க் காட்டில் நிலையான சிறப்புடைய திருத்தொண்டர்கள் எல்லாம் மகிழ்வுடன் எதிர்கொள்ளப் புகுந்தனர்.
2020. வானள வுயர்ந்த வாயில் உள்வலங் கொண்டு புக்குத்
தேனலர் கொன்றை யார்தம் திருமுன்பு சென்று தாழ்ந்து
மானிடந் திரித்தார் தம்மைப் போற்றுவார் மண்பு கார்என்
றூனெலாம் உருக ஏத்தி உச்சிமேற் குவித்தார் செங்கை.
தெளிவுரை : பிள்ளையார் அக்கோயிலை வலமாக வந்து வானை அளாவ உயர்ந்த திருவாயிலுள் புகுந்து தேன் சொரிய மலர்கின்ற கொன்றை மலர் மாலை அணிந்த சிவ பெருமானின் திருமுன் போய்த் தாழ்ந்து, இடக்கையில் மானைக் கொண்ட சிவபெருமானைப் போற்றுபவராய் மண் புகார் என்ற பதிகத்தைத் தொடங்கி, ஊன் எல்லாம் உருகும்படி ஏத்தித் தமது சிவந்த திருக்கைகளை உச்சி மீது கொண்டு கூப்பி வணங்கினர்.
2021. சீரினில் திகழ்ந்த பாடல் திருக்கடைக் காப்புப் போற்றிப்
பாரினில் பொலிந்த தொண்டர் போற்றிடப் பயில்வார் பின்னும்
ஏரிசைப் பதிகம் பாடி ஏத்திப்போந் திறைவர் வெண்கா
டாருமெய்க் காத லோடும் பணிவதற் கணைந்தா ரன்றே.
தெளிவுரை : சிறப்புடன் விளங்கும் பாடலால் திருக்கடைக் காப்புச் செய்து வணங்கி, உலகில் விளங்கிய திருத்தொண்டர் போற்ற அங்கு இருந்த பிள்ளையார், மேலும் அழகும் இசையும் கொண்ட பதிகத்தைப் பாடித் துதித்துச் சென்று இறைவர் எழுந்தருளிய திருவெண் காட்டினை நிறைந்த மெய்யன்புடன் பணிய அப்போதே புறப்பட்டார்.
2022. பொன்னிதழ்க் கொன்றை வன்னி புனலிள மதியம்நீடு
சென்னியர் திருவெண் காட்டுத் திருத்தொண்டர் எதிரே சென்றங்
கின்னதன் மையர்க ளானார் எனவொணா மகிழ்ச்சி பொங்க
மன்னுசீர்ச் சண்பை யாளும் மன்னரைக் கொண்டு புக்கார்.
தெளிவுரை : பொன் போன்ற இதழ்களையுடைய கொன்றை மலரும், வன்னியும், கங்கையும், பிறைச் சந்திரனும் என்ற இவற்றை அணிந்துள்ள தலையையுடைய சிவபெருமானின் திருவெண்காடு என்ற ஊரில் உள்ள தொண்டர்கள் எதிரே வந்து, இன்ன தன்மையுடையவர் ஆனார் என்று கூற இயலாதபடி மேலும் மேலும் மகிழ்ச்சி பெருக, நிலையான சிறப்புடைய சீகாழியில் வந்து உலகை ஆள்கின்ற தலைவரான பிள்ளையாரை வரவேற்று அழைத்துக் கொண்டு அந்நகரத்துள் புகுந்தனர்.
2023. முத்தமிழ் விரகர் தாமும் முதல்வர்கோ புரத்து முன்னர்ச்
சித்தநீ டுவகை யோடும் சென்றுதாழ்ந் தெழுந்து புக்குப்
பத்தராம் அடியார் சூழப் பரமர்கோ யிலைச்சூழ் வந்து
நித்தனார் தம்முன் பெய்தி நிலமுறத் தொழுது வீழ்ந்தார்.
தெளிவுரை : முத்தமிழ் வல்லவரான பிள்ளையார் சிவபெருமானின் திருக் கோபுரத்தை, முன்பு உள்ளத்தில் பெருகிய மகிழ்ச்சியுடனே போய்த் தாழ்ந்து வணங்கி எழுந்து உள் சென்று, பக்தர்களான தொண்டர்கள் சூழ, இறைவரின் திருக்கோயிலை வலம் வந்து, நித்தனாரான இறைவரின் திருமுன்பு போய் நிலம் பொருந்தத் தொழுது விழுந்தார்.
2024. மெய்ப்பொரு ளாயி னாரை வெண்காடு மேவி னாரைச்
செப்பரும் பதிக மாலை கண்காட்டு நுதன்முன் சேர்த்தி
முப்புரம் செற்றார் பாதம் சேரும்முக் குளமும் பாடி
ஒப்பரும் ஞானம் உண்டார் உளமகிழந் தேத்தி வாழ்ந்தார்.
தெளிவுரை : மெய்ப் பொருளாரான திருவெண்காட்டில் வீற்றிருக்கும் இறைவரைச் சொல்வதற்குரிய திருப்பதிகமான கண்காட்டு நுதலானும் எனத் தொடங்கும் பதிகத்தை மாலையாய்ச் சேர்த்தித் திரிபுரங்களை எரித்த இறைவரது திருவடிகளைச் சேரும் மூன்று குளங்களையும் அந்தப் பதிகத்துடன் அமைத்துப்பாடி, ஒப்பில்லா ஞானப்பாலமுது உண்ட பிள்ளையார் மனம் மகிழ்ந்து துதித்து இருந்தார்.
2025. அருமையாற் புறம்பு போந்து வணங்கிஅங் கமரும் நாளில்
திருமுல்லை வாயில் எய்திச் செழுந்தமிழ் மாலை சாத்தி
மருவிய பதிகள் மற்றும் வணங்குவார் மறையோர் ஏத்தத்
தருமலி புகலி வந்து ஞானசம் பந்தர் சார்ந்தார்.
தெளிவுரை : அரிதாய் அக்கோயிலினின்று வெளியே வந்து வணங்கிச் சென்று அத்தலத்தில் அவர் எழுந்தருளியிருந்தார். அந்நாளில், தென் திருமுல்லை வாயிலைச் சென்று சேர்ந்து செந்தமிழ் மாலையான திருப்பதிகத்தைப் பாடிப் பொருந்திய மற்றத் தலங்களையும் வணங்குவாராய், அந்தணர் போற்ற வந்து, ஞானசம்பந்தர் அருட்செல்வம் மிக்க சீகாழியை அடைந்தார்.
2026. தோணிவீற் றிருந்தார் தம்மைத் தொழுதுமுன் நின்று தூய
ஆணியாம் பதிகம் பாடி அருட்பெரு வாழ்வு கூரச்
சேணுயர் மாட மோங்குந் திருப்பதி அதனிற் செய்ய
வேணியார் தம்மை நாளும் போற்றிய விருப்பின் மிக்கார்.
தெளிவுரை : திருத்தோணியில் வீற்றிருக்கும் சிவபெருமானை வணங்கித் திருமுன்பு நின்று தூய்மையுடைய உரையாணியான திருப்பதிகம் பாடி அருட்பெரு வாழ்வு பெருக, வானத்தில் உயரும் மாளிகைகள் ஓங்கும் அந்தப் பதியில் சிவந்த சடையை யுடைய சிவபெருமானை நாளும் போற்றிய விருப்பம் மிக்கவராயினார்.
2027. வைகுமந் நாளிற் கீழ்பால் மயேந்திரப் பள்ளி வாசம்
செய்பொழில் குருகா வூரும் திருமுல்லை வாயில் உள்ளிட்
டெய்திய பதிக ளெல்லாம் இன்புற இறைஞ்சி ஏத்தித்
தையலாள் பாகர் தம்மைப் பாடினார் தமிழ்ச்சொல் மாலை.
தெளிவுரை : முன் சொன்னபடி வாழ்ந்து வந்த அந்நாட்களில் கிழக்குத் திசையில் உள்ள திருமயேந்திரப்பள்ளியும் மணம் கமழ்கின்ற சோலை சூழ்ந்த திருக்குருகாவூரும் திருமுல்லை வாயில் உள்ளிட்டு முன்பு போய் வணங்கிய தலங்கள் பலவற்றையும் இன்பம் உண்டாகத் துதித்து உமையம்மையை ஒரு பாகத்தில் கொண்ட சிவபெருமான் மீது தமிழ்ச் சொல் மாலைகளைப் பாடினார்.
2028. அவ்வகை மருங்கு சூழ்ந்த பதிகளில் அரனார் பொற்றாள்
மெய்வகை ஞானம் உண்ட வேதியர் விரவிப் போற்றி
உய்வகை மண்ணு ளோருக்கு உதவிய பதிகம் பாடி
எவ்வகை யோரும் ஏத்த இறைவரை ஏத்து நாளில்.
தெளிவுரை : அங்ஙனமே சுற்றியுள்ள திருத்தலங்களில் போய் இறைவரின் பொற் பாதங்களை மெய்ஞ்ஞானப் பாலமுது உண்ட பிள்ளையார் போற்றி, இந்நிலவுலகத்தில் உள்ளவருக்கு உய்யும் வகை உதவும் பொருட்டுத் திருப்பதிகங்களைப் பாடி எல்லாவகையோடும் போற்றும்படி சிவ பெருமானை வணங்கியிருக்கின்ற நாட்களில்,
2029. திருநீல கண்டத்துப் பெரும்பாணர் தெள்ளமுதின்
வருநீர்மை இசைப்பாட்டு மதங்கசூ ளாமணியார்
ஒருநீர்மையுடன் உடைய பிள்ளையார் கழல்வணங்கத்
தருநீர்மை யாழ்கொண்டு சண்பையிலே வந்தணைந்தார்.
தெளிவுரை : திருநீலகண்டத்து யாழ்ப்பாண நாயனாரும் தெளிவான அமுதம் போன்ற இயல்புடைய இசைப்பாடலையுடைய மதங்க சூளாமணியாரும் ஒன்றுபட்ட அன்பின் திறத்தால் ஞான சம்பந்தரின் திருவடிகளை வணங்குவதற்கு இசை இன்பம் அளிக்கும் யாழினைக் கொண்டு சீகாழிப்பதிக்கு வந்து சேர்ந்தனர்.
2030. பெரும்பாணர் வரவறிந்து பிள்ளையார் எதிர்கொள்ளச்
சுரும்பார்செங் கமலமலர்த் துணைப்பாதந் தொழுதெழுந்து
விரும்பார்வத் தொடும்ஏத்தி மெய்ம்மொழிக ளால்துதித்து
வரும்பான்மை தருவாழ்வு வந்தெய்த மகிழ்சிறந்தார்.
தெளிவுரை : திருநீலகண்ட யாழ்ப்பாணரும் அவருடைய மனைவியார் மதங்க சூளாமணியாரும் வருதலை அறிந்து ஞானசம்பந்தப் பிள்ளையார் எதிர் கொண்டு வரவேற்க, வண்டுகள் பொருந்திய செந்தாமரை மலர் போன்ற அவருடைய இரு திருவடிகளையும் வணங்கி எழுந்து, விரும்பும் ஆர்வத்தோடும் ஏந்தி மெய்ம் மொழிகளால் துதித்து வரும் பான்மையால் தரப்பட்ட வாழ்வு வந்து பொருந்த, அவ்விருவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
2031. அளவிலா மகிழ்ச்சியினார் தமைநோக்கி ஐயர்நீர்
உளமகிழ இங்கணைந்த உறுதியுடை யோமென்றே
இளநிலா நகைமுகிழ்ப்ப இசைத்தவரை உடன்கொண்டு
களநிலவு நஞ்சணிந்தார் பாலணையுங் கவுணியனார்.
தெளிவுரை : அளவற்ற மகிழ்ச்சி உடைய அந்த இருவரையும் நோக்கி, ஐயரே ! தாங்கள் மனம் மகிழ இங்குச் சேர்ந்ததனால் ஆன உறுதிப் பொருளைப் பெற்றவர் ஆனோம் என்று இளநிலா ஒளிவீசும் புன்னகையுடன் கூறி, அவர்களையும் தம்முடனே கொண்டு, கருமை நிலவும் நஞ்சுடைய கண்டரான சிவ பெருமானிடம் சேரும் கவுணியரான பிள்ளையார்,
2032. கோயிலினிற் புறமுன்றிற் கொடுபுக்குக் கும்பிடுவித்
தேயுமிசை யாழ்உங்கள் இறைவருக்கிங் கியற்றும்என
ஆயபுகழ்ப் பிள்ளையார் அருள்பெற்ற அதற்கிறைஞ்சி
மேயதொடைத் தந்திரியாழ் வீக்கிஇசை விரிக்கின்றார்.
தெளிவுரை : கோயிலின் வெளியே உள்ள திருமுற்றத்தில் கொண்டு புகுந்து வணங்கச் செய்து, பொருந்திய இசையையும் யாழையும் உம் இறைவர்க்கு இங்கிருந்து இயக்குங்கள் என்று கூறியருளினார். அவர்கள் புகழ் பொருந்திய பிள்ளையாரின் திருவருளைப் பெற்றதால் வணங்கிப் பொருந்திய தொடை நரம்புகளை வீக்கி இசையை வாசிப்பவராகி.
2033. தானநிலைக் கோல்வடித்துப் படிமுறைமைத் தகுதியினால்
ஆனஇசை ஆராய்வுற்றங்கணர்தம் பாணியினை
மானமுறைப் பாடினியா ருடன்பாடி வாசிக்க
ஞானபோ னகர்மகிழ்ந்தார் நான்மறையோர் அதிசயத்தார்.
தெளிவுரை : சுரத்தானங்கள் உரிய இடங்களில் உண்டாக்கும் படி கருவியினால் அமைத்து, நரம்புபடியும் முறைமையின் தகுதியால் ஆன ஆரோகண அவரோகண வகையில் இசையைத் தெரிந்து இறைவரின் திருப்பாட்டினை அளவுபடும் முறையில் பாடினவரான மதங்க சூளாமணியுடன் ஒன்றிப் பாடி வாசிக்கக் கேட்டு ஞானப்பால் உண்டவரான சம்பந்தர் மகிழ்ச்சியடைந்தார். நான்மறையவர்கள் வியப்புக் கொண்டனர்.
2034. யாழிலெழும் ஓசையுடன் இருவர்மிடற் றிசையொன்றி
வாழிதிருத் தோணியுளார் மருங்கணையும் மாட்சியினைத்
தாழுமிரு சிறைப்பறவை படிந்ததனி விசும்பிடைநின்
றேழிசை நூற் கந்தருவர் விஞ்சையரும் எடுத்திசைத்தார்.
தெளிவுரை : யாழினின்று எழும் ஓசையோடு இருவர் மிடற்றின் இசையும் ஒன்றிக் கூடி, வாழும் திருத்தோணியில் உள்ளாரிடம் அணையும் பெருமையை, தாழ்ந்து வரும் கின்னர மிதுனங்களான இரு பறவைகள் வந்து படிந்த தனி விசும்பில் நின்று ஏழிசை நூலில் வல்ல கந்தருவர், வித்தியாதரர் என்பவர்களும் பாராட்டினர்.
2035. எண்ணருஞ்சீர்த் திருத்தோணி எம்பெருமான் கழல்பரவிப்
பண்ணமையா ழிசைகூடப் பெரும்பாணர் பாடியபின்
கண்ணுதலார் அருளினால் காழியர்கோன் கொடுபோந்து
நண்ணிஉறை யிடஞ்சமைத்து நல்விருந்து சிறந்தளிப்ப.
தெளிவுரை : நினைத்தற்கு அரிய சிறப்புடைய திருத்தோணியில் வீற்றிருக்கும் இறைவனின் திருவடிகளைத் துதித்துப் பண் பொருந்திய யாழும் மிடற்று இசையும் பொருந்துமாறு திருநீலகண்டப் பெரும்பாணர் பாடி முடித்தார். பின்பு, நெற்றிக் கண்ணையுடைய இறைவரின் அருளால் சீகாழித் தலைவரான ஞானசம்பந்தர் அழைத்துக் கொண்டு சென்று அவர்கள் தங்கியிருப்பதற்குத் தனியிடம் அமைத்து நல்ல விருந்தையும் சிறப்பாய் அளிக்க,
2036. பிள்ளையார் அருள்பெற்ற பெரும்பாணர் பிறையணிந்த
வெள்ளநீர்ச் சடையாரை அவர்மொழிந்த மெய்ப்பதிகம்
உள்ளபடி கேட்டலுமே யுருகுபெரு மகிழ்ச்சியராய்த்
தெள்ளமிர்தம் அருந்தினர்போற் சிந்தைகளிப் புறத்தொழுதார்.
தெளிவுரை : ஞானசம்பந்தரின் அருளைப் பெற்ற பெரும் பாணர் பிறைச் சந்திரனை அணிந்த கங்கையாறு தங்கிய சடையுடையவரை அவர் பாடிய மெய்ப்பதிகங்களை உள்ளவாறு அடியார்கள் சொல்லக் கேட்டவுடனே மனமுருகும் பெரு மகிழ்வு உடையவராய்த் தெளிந்த அமுதத்தை உண்டவர் போல உள்ளம் களிப்புக் கொள்ள வணங்கினர்.
2037. காழியார் தவப்பயனாம் கவுணியர்தம் தோன்றலார்
ஆழிவிட முண்டவர்தம் அடிபோற்றும் பதிகஇசை
யாழின்முறை மையின்இட்டே எவ்வுயிரு மகிழ்வித்தார்
ஏழிசையும் பணிகொண்ட நீலகண்ட யாழ்ப்பாணர்.
தெளிவுரை : சீகாழிப் பதியினர் செய்த தவப்பயனாய் உள்ள கவுணியர் குலத்தில் தோன்றிய சம்பந்தர் கடலில் தோன்றிய நஞ்சை உண்ட இறைவரின் திருவடிகளைப் போற்றும் திருப்பதிகங்களின் இசையை, ஏழிசையை ஏவல் கொண்ட திருநீலகண்ட யாழ்ப்பாணர், யாழ் முறைமையால் வாசித்து எல்லா வுயிர்களையும் மகிழ்வித்தார்.
2038. சிறியமறைக் களிறளித்த திருப்பதிக இசையாழின்
நெறியிலிடும் பெரும்பாணர் பின்னுநீர் அருள்செய்யும்
அறிவரிய திருப்பதிக இசையாழில் இட்டடியேன்
பிறிவின்றிச் சேவிக்கப் பெறவேண்டும் எனத்தொழுதார்.
தெளிவுரை : சிறிய வேதக்களிறான ஞான சம்பந்தர் அருளிய திருப்பதிக இசையினை யாழிசையின் நெறியில் வாசித்த பெரும்பாணர், மேலும் அவரைப் பார்த்துத், தாங்கள் ஆணையிட்டருளிய அறிவதற்கு அரிய பெருமையுடைய திருப்பதிகங்களது இசையை யாழில் வாசித்து அடியேன் தங்களைப் பிரியாமல் வணங்கி உடன் இருக்கும் பேறு பெற வேண்டும் என்று வேண்டி வணங்கினார்.
2039. மற்றதற்குப் பிள்ளையார் மனமகிழ்வுற் றிசைந்தருளப்
பெற்றவர்தாம் தம்பிரான் அருளிதுவே யெனப்பேணிச்
சொற்றமிழ்மா லையின்இசைகள் சுருதியாழ் முறைதொடுத்தே
அற்றைநாட் போலென்றும் அகலாநண் புடன்அமர்ந்தார்.
தெளிவுரை : அங்ஙனம் வேண்டிக் கொண்ட அதற்கு ஞான சம்பந்தர் உள்ளம் மகிழ்ந்து இசைந்தருள, அத்தகைய பேற்றைப் பெற்றுக் கொண்ட பாணனார், இது தம் பெருமானின் அருளே யாகும் என்று விருப்பத்துடன் பேணி, பிள்ளைப் பெருமானின் திருப்பதிகங்களான தமிழ் மாலைகளைச் சுருதியுடைய யாழிசையின் முறையில் வைத்து வாசித்துக் கொண்டே, அந்த நாள் போன்றே என்றும் பிரியாதவராய் உடன் இருந்து வந்தனர்.
2040. சிரபுரத்தில் அமர்ந்தருளுந் திருஞான சம்பந்தர்
பரவுதிருத் தில்லைநடம் பயில்வாரைப் பணிந்தேத்த
விரவியெழும் பெருங்காதல் வெள்ளத்தை உள்ளத்தில்
தரஇசையுங் குறிப்பறியத் தவமுனிவர்க்கு அருள்செய்தார்.
தெளிவுரை : சிரபுரம் என்ற சீகாழியில் இருக்கின்ற திருஞான சம்பந்தர் யாவரும் வணங்கித் துதிக்கும் திருத் தில்லைப் பொன்னம்பலத்தில் நடனம் ஆடும் இறைவரைப் பணிந்து துதிக்கப் பொருந்தி எழும் விருப்பமான பெரு வெள்ளத்தைத் தன் உள்ளத்தில் கொள்ள இசையும் அருட் குறிப்பு நிகழ்ந்ததாக அதைத் தவ முனிவரான தந்தை சிவபாத இருதயர்க்குக் கூறினார்.
2041. பிள்ளையார் அருள்செய்யப் பெருந்தவத்தாற் பெற்றெடுத்த
வள்ளலார் தாமும்உடன் செல்வதற்கு மனங்களிப்ப
வெள்ளிமால் வரையென்னத் திருத்தோணி வீற்றிருந்த
புள்ளிமா னுரியாரைத் தொழுதருளாற் புறப்பட்டார்.
தெளிவுரை : மேல் சொன்னவண்ணம், சம்பந்தப் பெருமான் அருள் செய்ய, பெருந்தவத்தால் பெற்றெடுத்த பிள்ளையாரைத் தமக்கு மகனாகப் பெற்ற வள்ளலாரான சிவபாத இருதயர், தாமும் அவருடன் செல்ல மன மகிழ்ச்சியுடன் இசைந்தார். பெரிய வெள்ளி மலையில் இருப்பது போல் திருத்தோணியில் வீற்றிருந்தருளிய புள்ளிமான் தோலையுடைய இறைவரை வணங்கி அருள் விடைபெற்றுச் சீகாழியி னின்றும் புறப்பட்டார்.
2042. தாவில்யாழ்ப் பாணரொடும் தாதையார் தம்மோடும்
மேவியசீ ரடியார்கள் புடைவரவெங் குருவேந்தர்
பூவின்மே லயன்போற்றும் புகலியினைக் கடந்துபோய்த்
தேவர்கள்தம் பெருந்தேவர் திருத்தில்லை வழிச்செல்வார்.
தெளிவுரை : குற்றம் இல்லாத யாழ்ப் பாணரோடும் தந்தை சிவபாத இருதயருடனும் பொருந்திய சிறப்புடைய அடியார்கள் பக்கத்தில் சூழ்ந்து வர மண்ணுலகத்தில் வந்து நான்முகன் பூசித்து வழிபடும் சீகாழிப் பதியைக் கடந்து தேவர்களுக்கெல்லாம் பெருந்தேவரான கூத்தப் பெருமானின் திருத்தில்லையை நோக்கிச் செல்லும் வழியில் போவார் ஆனார்.
2043. நள்ளி ருட்கண்நின் றாடுவார் உறைபதி நடுவுகண் டனபோற்றி
முள்ளு டைப்புற வெள்ளிதழ்க் கேதகை முகிழ்விரி மணஞ்சூழப்
புள்ளு டைத்தடம் பழனமும் படுகரும் புடைகழிந் திடப்போந்து
கொள்ளி டத்திரு நதிக்கரை அணைந்தனர் கவுணியர் குலதீபர்.
தெளிவுரை : நள்ளிருளில் நின்று ஆடுகின்ற இறைவர் எழுந்தருளிய பதிகள் நடுவில் கண்டவற்றை வழிபட்டு, இடையில் முட்களுடன் கூடிய புற இதழ்களைக் கொண்ட தாழைகளின் மொட்டுகள் மலர்கின்றதால் மணம் கமழ்கின்ற நீர்ப்பறவைகளையுடைய இடம் அகன்ற வயல்களும் பள்ள நிலங்களும் பக்கங்களில் கடந்திடச் சென்று, கவுணியர் குல விளக்கான ஞானசம்பந்தர் கொள்ளிட ஆற்றின் தென்கரையை அடைந்தார்.
2044. வண்டி ரைத்தெழு செழுமலர்ப் பிறங்கலும் மணியும் ஆரமும்உந்தித்
தண்ட லைப்பல வளத்தொடும் வருபுனல் தாழ்ந்துசே வடிதாழத்
தெண்டி ரைக்கடற்பவளமும் பணிலமும் செழுமணித் திரள்முத்தும்
கொண்டு இரட்டிவந்து ஓதமங்கு எதிர்கொளக் கொள்ளிடங் கடந்தேறி.
தெளிவுரை : வண்டுகள் ஒலித்து எழுகின்ற செழுமையான மலர்களின் கூட்டத்தையும் மணிகளையும் சந்தனக் கட்டைகளையும் வாரிக் கொண்டு, சோலைகளின் வளங்கள் பலவற்றுடன் வருகின்ற ஆற்றின் நீர் தாழ்ந்த தம் அடிகளை வணங்கவும், தெளிவான அலைகளையுடைய கடலினின்று பவளங்கள், சங்குகள் ஆகியவற்றையும், மற்ற மணிகளையும் திரண்ட முத்துக்களையும் வாரிக் கொண்டு வீசி வரும் கடலின் சுழிநீர் எதிர் கொள்ளவும், கொள்ளிடத் திருநதியினைக் கடந்து வடகரையின் மேல் ஏறி,
2045. பல்கு தொண்டர்தங் குழாத்தொடும் உடன்வரும் பயில்மறை யவர்சூழச்
செல்க திப்பயன் காண்பவர் போல்களி சிந்தைகூர் தரக்கண்டு
மல்கு தேவரே முதலனைத் துயிர்களும் வணங்கவேண் டினவெல்லாம்
நல்கு தில்லைசூழ் திருவெல்லை பணிந்தனர் ஞானஆ ரமுதுண்டார்.
தெளிவுரை : நிறைந்த அடியார் திருக்கூட்டத்துடன் பயிலும் அந்தணர் சூழ்ந்து வர, செல்லும் கதியின் பயனைக் காண்பவரைப் போல் உள்ளத்தில் மிக்க மகிழ்ச்சி கொண்டு பெருகிய தேவர் முதலான எல்லாவுயிர்களும் வணங்க, அவரவர் வேண்டிய வரங்களை யெல்லாம் தரும் தில்லையைச் சூழ்ந்த திருவெல்லையினை ஞானமான நிறைந்த அமுது உண்ட பிள்ளையார் நிலத்தில் விழுந்து வணங்கினார்.
2046. செங்கண் ஏற்றவர் தில்லையே நோக்கிஇத் திருந்துல கினிற்கெல்லாம்
மங்க லந்தரு மழவிளம் போதகம் வரும்இரு மருங்கெங்கும்
தங்கு புள்ளொலி வாழ்த்துரை எடுத்துமுன் தாமரை மதுவாசப்
பொங்கு செம்முகை கரங்குவித் தலர்முகங் காட்டின புனற்பொய்கை.
தெளிவுரை : இந்தத் திருந்திய உலகுக்கெல்லாம் மங்கலம் தரும் இளமையுடைய யானைக் கன்றான ஞானசம்பந்தர் வரும் இரண்டு பக்கங்களில் எங்கும் தங்கும் பறவைகளின் ஒலியான வாழ்த்துரை எடுத்து முன்பு, தாமரை மலர்களின் செம்முகையான கை குவித்து நீர்ப்பொய்கைகள் மலர்ந்த முகத்தைக் காட்டி வரவேற்றன.
2047. கலவ மென்மயில் இனங்களித் தழைத்திடக் கடிமணக் குளிர்கால்வந்
துலவி முன்பணிந் தெதிர்கொளச் கிளர்ந்தெழுந் துடன்வருஞ் சுரும்பார்ப்ப
இலகு செந்தளிர் ஒளிநிறந் திகழ்தர இருகுழை புடையாட
மலர்மு கம்பொலிந் தசையமென் கொம்பர்நின் றாடுவ மலர்ச்சோலை.
தெளிவுரை : மலர்ச் சோலைகளில், தோகைகளையுடைய மென்மையான மயில் இனங்கள் அழைக்கவும், புதிய மணமுடைய குளிர்ந்த தென்றல் காற்று வந்து எதிர் கொண்டு வரவேற்கவும், பெயர்ந்து எழுந்து உடன் வரும் வண்டுகள் ஆரவாரம் செய்யவும், விளங்கும் செந்தளிர்கள் ஒளியுடைய நிறம் விளங்கவும், இருகுழைகள் பக்கங்களிலே ஆடவும், மலர்கள் முகம் பொலிந்து அசையவும், மென்மையான கொம்புகள் நின்று ஆடின.
2048. இழைத்த டங்கொங்கை இமயமா மலைக்கொடி இன்னமு தெனஞானம்
குழைத்த ளித்திட அமுதுசெய் தருளிய குருளையார் வரக்கண்டு
மழைத்த மந்தமா ருதத்தினால் நறுமலர் வண்ணநுண் துகள்தூவித்
தழைத்த பொங்கெழில் முகஞ்செய்து வணங்கின தடம்பணை வயற்சாலி.
தெளிவுரை : இடம் அகன்ற வயல்களில் உள்ள நெற்பயிர்கள், அணிகள் அணிந்த கொங்கைகளையுடைய இமயமலையில் தோன்றிய கொடிபோன்ற பார்வதியம்மையார் இனிய அமுதச் சிவஞானத்தைக் குழைத்து அளிக்க, அதையுண்டருளிய ஞானசம்பந்தர் வரக்கண்டு, குளிர்ந்த மென்மையான காற்றினால் மணம் கமழும் மலர்களின் அழகிய நுண்ணிய பூந்தாதுக்களான சுண்ணத்தைத் தூவித் தழைத்த எழில் முகம் செய்து வணங்கின.
2049. ஞாலம் உய்ந்திட ஞானமுண் டவர்எழுந் தருளும்அந் நலங்கண்டு
சேல லம்புதண் புனல்தடம் படிந்தணை சீதமா ருதம்வீசச்
சால வும்பல கண்பெறும் பயன்பெறுந் தன்மையிற் களிகூர்வ
போல சைந்திரு புடைமிடைந் தாடின புறம்பணை நறும்பூகம்.
தெளிவுரை : வயல்களின் பக்கங்களில் உள்ள மணம் கமழும் பாக்கு மரங்கள், உலகம் உய்யும் பொருட்டாக ஞான அமுதையுண்டவர் எழுந்தருளும் அந்நலத்தைக் கண்டு, சேல் மீன்கள் அலம்பும் குளிர்ந்த நீரையுடைய பொய் கைகளில் படிந்து அணைகின்ற குளிர்ந்த காற்று வீச, மிகப் பல கண்கள் பெற்ற பயன் பெறும் தன்மையினால் மகிழ்ச்சி அடைவன போல், இரண்டு பக்கங்களிலும் அசைந்து நெருங்கி ஆடின.
2050. பவந்த விர்ப்பவர் தில்லைசூழ் எல்லையில் மறையவர் பயில்வேள்விச்
சிவந்த ரும்பய னுடையஆகுதிகளின் செழும்புகைப் பரப்பாலே
தவந்த ழைப்பவந் தருளிய பிள்ளையார் தாமணை வுறமுன்னே
நிவந்த நீலநுண் துகில்விதானித்தது போன்றது நெடுவானம்.
தெளிவுரை : தவமானது தழைக்கத் தோன்றியருளிய ஞானசம்பந்தப் பெருமான் வந்து சேர அவரை உபசரிக்கும் பொருட்டு, முன்னே, பிறவியை ஒழித்தருளுபவரான கூத்தரின் திருத்தில்லை நகரத்தைச் சூழ்ந்த எல்லையிலே, வேதியர் பயிலும் வேள்வியில் சிவத்தன்மையை விளைக்கும் பயன் கொண்ட ஆகுதிகளினின்றும் எழுகின்ற செழும் புகையினது பரப்பினால், பெரிய வானம் உயர்ந்த நீல நிறமான நுட்பமான துகிலை மேற் கட்டியாய்க் கட்டியதைப் போல் விளங்கியது.
2051. கரும்பு செந்நெல்பைங் கமுகொடு கலந்துயர் கழனியம் பணைநீங்கி
அரும்பு மென்மலர் தளிர்பல மூலமென் றனைத்தின் ஆகரமான
மருங்கில் நந்தன வனம்பணிந் தணைந்தனர் மாடமா ளிகையோங்கி
நெருங்கு தில்லைசூழ் நெடுமதில் தென்திரு வாயில் நேரணித்தாக.
தெளிவுரை : கரும்பு செந்நெல் என்பவை பசுமையான பாக்குகளுடன் கலந்து உயர்தற்கு இடமான வயல்களைக் கொண்ட மருதநிலத்தைக் கடந்து, அரும்புகளும் மென்மையான தளிர்களும் பழங்களும் வேர்களும் என்றிவை முதலான எல்லாவற்றுக்கும் குறிப்பிடமான பக்கத்தில் உள்ள சோலைகளை வணங்கி, மாடமாளிகைகள் ஓங்கி நெருங்கும் தில்லையைச் சூழ்ந்த பெரிய மதிலின் தெற்குத் திசை வாயிலின் நேராய் அருகில் ஞான சம்பந்தர் வந்து சேர்ந்தார்.
2052. பொங்கு கொங்கையிற் கறந்தமெய்ஞ் ஞானமாம் போனகம் பொற்குன்ற
மங்கை செங்கையா லூட்டவுண் டருளிய மதலையார் வந்தார்என்
றங்கண்வாழ் பெருந்திருத் தில்லை அந்தண ரன்பர்களுடன் ஈண்டி
எங்கும்மங்கல அணிமிக அலங்கரித் தெதிர் கொள அணைவார்கள்.
தெளிவுரை : பால் பெருகிய திருமுலையில் கலந்த மெய்ஞ் ஞானம் என்ற பாலமுதத்தைப் பொன்மலையின் மங்கையரான உமையம்மையார் தம் கையினால் எடுத்து ஊட்ட அதனை உண்டருளிய பிள்ளையார் வந்தார் என்று அங்கு வாழ்கின்ற தில்லை வாழ் அந்தணர்கள் அடியார்களுடனே கூடி வந்து நிறைந்து, எங்கும் அலங்கரித்துப் பிள்ளையாரை வரவேற்க அணைவாராய்,
2053. வேத நாதமும் மங்கல முழக்கமும் விசும்பிடை நிறைந்தோங்கச்
சீத வாசநீர் நிறைகுடந் தீபங்கள் திசையெலாம் நிறைந்தாரச்
சோதி மாமணி வாயிலின் புறஞ்சென்று சோபன வாக்கமுஞ் சொல்லிக்
கோதி லாதவர் ஞானசம் பந்தரை எதிர்கொண்டு கொடுபுக்கார்.
தெளிவுரை : வேதங்களின் ஒலியும் மங்கல முழக்கமும் வானத்தில் நிறைந்து ஒலிக்கவும், குளிர்ச்சியும் மணமும் உடைய நீர் நிரம்பிய குடங்களும் தீபங்களில் எல்லாம் நிறைந்து பொருந்தவும், ஒளி பொருந்திய பெரிய மணிகளை யுடைய திருவாயிலின் வெளியே நின்று, சோபனம் ஆகுக என்ற நல்ல மொழிகளையும் வாழ்த்துகளையும் சொல்லித் தீது நீங்கப் பெற்று வாழ்ந்தவர்களாகி, ஞானசம்பந்தரை எதிர் கொண்டு வரவேற்று அழைத்துக் கொண்டு உள்ளே சென்றனர்.
2054. செல்வம் மல்கிய தில்லைமூ தூரினில் தென்றிசைத் திருவாயில்
எல்லை நீங்கியுள் புகுந்திரு மருங்குநின் றெடுக்கும்ஏத் தொலிசூழ
மல்லல் ஆவண மறுகிடைக் கழிந்துபோய் மறையவர் நிறைவாழ்க்கைத்
தொல்லை மாளிகை நிறைத்திரு வீதியைத் தொழுதணைந் தனர்தூயோர்.
தெளிவுரை : செல்வம் நிரம்பிய தில்லை மூதூரில் தெற்குத் திக்கு வாயிலில் வழி எல்லை நீங்கி, உள்ளே புகுந்து, இரண்டு பக்கங்களிலும் எடுத்துப் போற்றும் ஒலி சூழ, வளமையுடைய அங்காடித் தெருவினைக் கடந்து போய், அந்தணர்களின் நிறைவுடைய வாழ்க்கை வாழும் பழைமையான திருமாளிகைகள் வரிசை பெறும் திருவீதியைத் தொழுது, பிள்ளையாரான தூயவர் நகரத்துள் சென்றார்.
2055. மலர்ந்த பேரொளி குளிர்தரச் சிவமணங் கமழ்ந்துவான் துகள்மாறிச்
சிலம்ப லம்புசே வடியவர் பயில்வுறுஞ் செம்மையால் திருத்தொண்டு
கலந்த அன்பர்தஞ் சிந்தையில் திகழ்திரு வீதிகண் களிசெய்யப்
புலங்கொள் மைந்தனார் எழுநிலைக் கோபுரம் பணிந்தெழுந் தனர்போற்றி.
தெளிவுரை : உலகமெல்லாம் மலர்ந்த பேரொளி குளிர்ச்சியினை, செய்யச் சிவ மணம் கமழ்ந்து வீசி வானத்தின் குற்றங்கள் நீங்கப் பெற்று, சிலம்பு ஒலி செய்யும் சேவடியை யுடைய கூத்தப் பெருமான் பொருந்தியுள்ள தன்மையினால், திருத்தொண்டில் சென்று பட்டுக் கலந்த அடியாரின் உள்ளம் போல் விளங்கும் அந்த வீதியானது, கண்களை மகிழும்படி செய்ய, இவ்வுலகம் பயன் கொள்வதற்குரிய ஞானசம்பந்தப் பிள்ளையார் எழுநிலைக் கோபுரத்தைத் துதித்துப் பணிந்து எழுந்தார்.
2056. நீடு நீள்நிலைக் கோபுரத் துள்புக்கு நிலவிய திருமுன்றில்
மாடு செம்பொனின் மாளிகை வலங்கொண்டு வானுற வளர்திங்கள்
சூடு கின்றபே ரம்பலம் தொழுதுபோந் தருமறை தொடர்ந்தேத்த
ஆடு கின்றவர் முன்புற அணைந்தனர் அணிகிளர் மணிவாயில்.
தெளிவுரை : நீண்டு உயர்ந்த நிலைகளைக் கொண்ட தெற்குக் கோபுரத்துள் புகுந்து, நிலைபெற்றதிரு முற்றத்தின் பக்கத்தில் செம்பொன் மாளிகைப் பத்தியை வலமாக வந்து, வானளாவ வளரும் சந்திரனைச் சூடும்படி உயர்ந்த பேரம் பலத்தை வணங்கி மேலும் போய், அரிய வேதங்கள் தொடர்ந்து துதிக்கத் திருக்கூத்து ஆடுகின்ற கூத்தப்பெருமானின் திருமுன்பு சேர்வதற்கு அழகு மிகும் மணிகளையுடைய திருவணுக்கன் திருவாயிலை ஞானசம்பந்தர் அடைந்தார்.
2057. நந்தி யெம்பிரான் முதற்கண நாதர்கள் நலங்கொள்பன் முறைகூட
அந்த மில்லவர் அணுகிமுன்தொழுதிரு அணுக்கனாந் திருவாயில்
சிந்தை யார்வமும் பெருகிடச் சென்னியிற் சிறியசெங் கையேற
உய்ந்து வாழ்திரு நயனங்கள் களிகொள்ள உருகுமன் பொடுபுக்கார்.
தெளிவுரை : நந்தி தேவரான தம் பெருமானைத் தலைவராகக் கொண்ட சிவகணநாதர், நன்மை மிக்க பல வரிசைகளாகக் கூடி நிற்க, எண்ணிறந்த அடியார்கள் முனிவர்கள் தேவர்கள் முதலியவர் அவ்வரிசைகளின் பின் நின்று தொழுகின்ற திருவணுக்கன் வாயிலில், உள்ளத்தில் ஆர்வம் பெருகவும், தலை மீது சிறிய சிவந்த கைகள் ஏறிக் குவியவும், கண்கள் மகிழ்ச்சி பொருந்தவும், மனம் உருகும் அன்புடனே உள்ளே புகுந்தார் காழிப் பிள்ளையார்.
2058. அண்ண லார்தமக் களித்தமெய்ஞ் ஞானமே யானஅம் பலமுந்தம்
உண்ணி றைந்தஞா னத்தெழும் ஆனந்த வொருபெருந் திருக்கூத்தும்
கண்ணில் முன்புறக் கண்டுகும் பிட்டெழுங் களிப்பொடுங் கடற்காழிப்
புண்ணி யக்கொழுந் தனையவர் போற்றுவார் புனிதரா டியபொற்பு.
தெளிவுரை : பெருமையுடைய இறைவர் தமக்குத் தந்த மெஞ்ஞானமேயான திருவம்பலத்தையும், தமதுள்ளே நிறைந்த அந்தச் சிவஞானத்துள் எழுகின்ற சிவானந்தமான ஒப்பில்லாத பெருமையுடைய திருக் கூத்தையும் கண்களின் முன் வெளிப்படக் கண்டு வணங்கியதால் உண்டான பெரு மகிழ்வுடன், கடல் சூழ்ந்த சீகாழியில் தோன்றிய சிவ புண்ணியக் கொழுந்து போன்ற பிள்ளையார் தூயவரான இறைவரின் திருக்கூத்து இயற்றும் அழகைப் போற்றுபவராய்,
2059. உணர்வின் நேர்பெற வருஞ்சிவ போகத்தை ஒழிவின்றி உருவின்கண்
அணையும் ஐம்பொறி அளவினும் எளிவர அருளினை எனப்போற்றி
இணையில் வண்பெருங் கருணையே ஏத்திமுன் எடுத்தசொற் பதிகத்திற்
புணரு மின்னிசை பாடினர் ஆடினர் பொழிந்தனர் விழிமாரி.
தெளிவுரை : உள் உணர்வுக்குள் பெறும்படி வருகின்ற சிவ போகத்தை நீக்கமின்றி வெளி உருவிடம் புலப்படுகின்ற ஐம்பொறிகளின் அளவிலும் எளிதில் வருமாறு அருள் செய்தீர் எனத் துதித்து, ஒப்பில்லாத கருணையைத் துதித்து முன்னே தொடங்கிய சொற் பதிகத்தில் பொருந்தும் இனிய இசையுடன் பாடுபவராய், ஆனந்தக் கூத்தாடுபவராய்க் கண்களினின்றும் ஆனந்தக் கண்ணீர் பொழிந்தவராய்,
2060. ஊழி முதல்வர்க்குரிமைத் தொழிற்சிறப்பால்
வாழிதிருத் தில்லைவாழ் அந்தணரை முன்வைத்தே
ஏழிசையும் ஓங்க எடுத்தார் எமையாளும்
காழியர்தங் காவலனார் கற்றாங் கெரியோம்பி.
தெளிவுரை : ஊழிகளின் முதல்வரான கூத்தப் பெருமானுக்குரிய தொழில் இயற்றும் சிறப்பால் தில்லையில் வாழும் அந்தணரை முதலில் வைத்து ஏழிசையும் பொருந்தி விளங்கக் கற்றாங்கு எரியோம்பி என்ற தொடக்கம் உடைய திருப்பதிகத்தை எம்மை ஆளும் சீகாழிக் காவலர் தொடங்கியவராய்,
2061. பண்ணார் பதிகத் திருக்கடைக்காப் புப்பரவி
உண்ணாடும் என்பும் உயிருங் கரைந்துருக்கும்
விண்ணா யகன்கூத்து வெட்டவெளி யேதிளைத்துக்
கண்ணா ரமுதுண்டார் காலம் பெறஅழுதார்.
தெளிவுரை : உரிய காலத்தில் ஞானம் உண்டாக அழுது அழைத்தவரான பிள்ளையார், பண் நிரம்பிய திருப்பதிகத்தின் கடைக் காப்பு நிறைவித்துப் போற்றி, உடலுள் ஆதரவாய் அறியப்படும் எலும்பும் உயிரும் கரையுமாறு உருக்குகின்ற இறைவரின் அருட்கூத்தை வெட்ட வெளியில் அனுபவித்துக் கண்கள் நிறைந்த அமுதை உட்கொண்டார்.
2062. முன்மால் அயன்அறியா மூர்த்தியார் முன்னின்று
சொன்மாலை யாற்காலம் எல்லாந் துதித்திறைஞ்சிப்
பன்மா மறைவெள்ளம் சூழ்ந்து பரவுகின்ற
பொன்மாளிகையைவலங் கொண்டு புறம்போந்தார்.
தெளிவுரை : முன் காலத்தில் திருமாலும் நான்முகனும் அறியாத இறைவரின் திருமுன் நின்று, சொல் மாலையான திருப்பதிகங்களால் எல்லாக் காலங்களிலும் அறிந்து வணங்கி அளவில்லாத பெருமறைகளின் வெள்ளங்கள் சூழ்ந்து வணங்குகின்ற செம்பொன் மாளிகையான பொன்னம்பலத்தை வலமாக வந்து புறத்தே போந்தார்.
2063. செல்வத் திருமுன்றில் தாழ்ந்தெழுந்து தேவர்குழாம்
மல்குந் திருவாயில் வந்திறைஞ்சி மாதவங்கள்
நல்குந் திருவீதி நான்குந் தொழுதங்கண்
அல்குந் திறம்அஞ்சு வார்சண்பை ஆண்டகையார்.
தெளிவுரை : செல்வம் பொருந்திய திருமுன்றிலில் கீழே விழுந்து வணங்கி எழுந்து, வானவர் கூட்டம் நிறைந்திருக்கும் திருவாயிலில் வந்து வணங்கி, மாதவங்களைத் தரும் நான்கு வீதிகளையும் வணங்கி, அவ்விடத்தில் தங்கும் தன்மைக்கும் பிள்ளையார் அஞ்சுபவராய்,
2064. செய்ய சடையார் திருவேட் களஞ்சென்று
கைதொழுது சொற்பதிகம் பாடிக் கழுமலக்கோன்
வைகி அருளுமிடம் அங்காக மன்றாடும்
ஐயன் திருக்கூத்துக்கும்பிட் டணைவுறுநாள்.
தெளிவுரை : ஞானசம்பந்தர் சிவந்த சடையையுடைய சிவ பெருமானின் திருவேட்களத்துக்குச் சென்று கையால் தொழுது சொல்பதிகத்தைப் பாடி, தங்கி எழுந்தருளியிருக்கும் இடம் அவ்விடமாய் எண்ணி, அம்பலத்தில் கூத்தாடும் ஐயரின் நடனத்தைக் கும்பிட்டு அணைந்திருக்கும் நாளில்,
2065. கைம்மான் மறியார் கழிப்பாலை யுள்ளணைந்து
மெய்ம்மாலைச் சொற்பதிகம் பாடிவிரைக் கொன்றைச்
செம்மாலை வேணித் திருவுச்சி மேவியுறை
அம்மானைக் கும்பிட்டருந்தமிழும் பாடினார்.
தெளிவுரை : தம் திருக்கையில் மான் கன்றை ஏந்திய சிவ பெருமான் எழுந்தருளிய திருக்கழிப்பாலை யுள் சேர்ந்து, மெய்மை பொருந்திய சொற் பதிகத்தைப் பாடி, மணமுடைய கொன்றை மலரால் அமைந்த அழகான மாலை சூடிய சடையையுடைய திருவுச்சி என்னும் பதியில் எழுந்தருளி இறைவரைக் கும்பிட்டு அரிய தமிழ்ப் பதிகத்தையும் பாடினார் காழிப் பிள்ளையார்.
2066. பாடும் பதிகஇசை யாழ்ப்பாண ரும்பயிற்றி
நாடுஞ் சிறப்பெய்த நாளும்நடம் போற்றுவார்
நீடுந் திருத்தில்லை அந்தணர்கள் நீள்மன்றுள்
ஆடுங் கழற்கணுக்க ராம்பே றதிசயிப்பார்.
தெளிவுரை : பாடப்பட்ட பதிகத்தின் இசையினைத் திரு நீலகண்ட யாழ்ப்பாணரும் யாழில் வாசித்து நாடும் சிறப்பைக் பெற்றார். நாளும் தில்லையில் சென்று இறைவரின் திருக்கூத்தைப் போற்றும் பிள்ளையார், தில்லை வாழ் அந்தணர்கள் நீளும் திருவம்பலத்தில் ஆடும் திருவடிகளுக்கு அணுக்கத் தொண்டர்களாக இருக்கும் பேற்றைப் பார்த்து வியப்புக் கொண்டார்.
2067. ஆங்கவர்தஞ் சீலத்தளவின் மையும்நினைந்தே
ஓங்கியெழுங் காதல் ஒழியாத உள்ளத்தார்
தேங்கமழுஞ் சோலைத் திருவேட் களங்கடந்து
பூங்கிடங்கு சூழ்புலியூர்ப் புக்கணையும் போழ்தின்கண்.
தெளிவுரை : அதனுடன் அங்கு வாழும் அந்தணர்கள் தம் ஒழுக்கத்தில் அளவில்லாத சிறப்புடன் நிற்கும் நிலையையும் எண்ணி, மேல் கிளர்ந்து எழும் ஆசை நீங்காத மனத்துடன், ஒருநாள் மணம் வீசும் சோலை சூழ்ந்த திருவேட்களத்தைக் கடந்து, மலர்கள் நிரம்பிய அகழி சூழ்ந்த திருப்புலியூரினுள் புகுந்து சேர்கின்ற போழ்தில்,
2068. அண்டத் திறைவர் அருளால் அணிதில்லை
முண்டத் திருநீற்று மூவா யிரவர்களும்
தொண்டத் தகைமைக் கணநாத ராய்தோன்றக்
கண்டஅப் பரிசுபெரும் பாணர்க்கும் காட்டினார்.
தெளிவுரை : எல்லா வுலகங்களுக்கும் இறைவரான கூத்தப் பெருமான் திருவருளால் அழகிய தில்லையில் வாழ்கின்ற, நெற்றியில் திருநீற்றை அணிந்த அந்தணர் மூவாயிரவரும் திருத்தொண்டின் தன்மையுடைய சிவகண நாதர்களாய்த் தோன்றக் கண்டு, அதனை ஞானசம்பந்தர், திருநீலகண்ட யாழ்ப்பாணருக்குக் காட்டினார்.
2069. செல்வம் பிரிவறியாத் தில்லைவாழ் அந்தணரும்
எல்லையில்சீர்ச் சண்பை இளவே றெழுந்தருளி
ஒல்லை இறைஞ்சாமுன் தாமும் உடனிறைஞ்சி
மல்லல் அணிவீதி மருங்கணைய வந்தார்கள்.
தெளிவுரை : அருட்செல்வம் நீங்கப் பெறாத தில்லைவாழ் அந்தணரும், அளவற்ற சிறப்புடைய சீகாழியில் அவதரித்த இளஞ்சிங்க ஏற்றைப் போன்ற ஞானசம்பந்தர் எழுந்தருளி வந்து விரைந்து தம்மை வணங்குவதற்கு முன்பே, தாமும் உடனே வணங்கிச் செழிப்பும் அழகும் கொண்ட வீதியில் அவர் பக்கத்தில் வந்தனர்.
2070. பொங்கி யெழுங்காதல் புலனாகப் பூசுரர்தம்
சிங்கம் அனையார் திருமுடியின் மேற்குவித்த
பங்கயத்தின் செவ்வி பழித்து வனப்போங்கும்
செங்கை யொடுஞ்சென்று திருவாயி லுட்புக்கார்.
தெளிவுரை : மேலும் மேலும் பெருகி எழும் மிக்க ஆசையானது வெளித் தோன்றுமாறு அந்தணர்களின் சிங்கம் போன்ற ஆளுடைய பிள்ளையார், தலைமீது கூப்பிய தாமரை மலரின் அழகையும் வென்று அழகாலே ஓங்கும் கையுடனே சென்று திருவாயிலுள் புகுந்தார்.
2071. ஒன்றிய சிந்தை உருக உயர்மேருக்
குன்றனைய பேரம் பலமருங்கு கும்பிட்டு
மன்றுள் நிறைந்தாடும் மாணிக்கக் கூத்தர்எதிர்
சென்றணைந்து தாழ்ந்தார் திருக்களிற் றுப்படிக்கீழ்.
தெளிவுரை : இறைவரிடம் ஒன்றுபட்ட சிந்தை உருக, உயர்ந்த மேரு மலையைப் போன்ற பேரம்பலத்துள் நிறைந்து அருட் கூத்து ஆடுகின்ற மாணிக்கக் கூத்தரின் திருமுன்பு திருக்களிற்றுப் படியின் கீழே நின்று தாழ்ந்து எழுந்தார்.
2072. ஆடி னாய்நறு நெய்யொடு பால்தயிர் என்றெடுத் தார்வத்தால்
பாடி னார்பின்னும் அப்பதி கத்தினிற் பரவிய பாட்டொன்றில்
நீடு வாழ்தில்லை நான்மறை யோர்தமைக் கண்டஅந் நிலையெல்லாம்
கூடு மாறுகோத்து அவர்தொழு தேத்துசிற் றம்பலம் எனக்கூறி.
தெளிவுரை : ஞான சம்பந்தர் ஆடினாய் நறுநெய்யொடு பால் தயிர் என்று தொடங்கி மிகுந்த ஆசையுடன் பாடினார். மேலும் அந்தப் பதிகத்தில் துதித்தவற்றுள் ஒரு திருப்பாட்டில் தில்லை வாழ் அந்தணர்களை, அன்று தாம் கணநாதராய்க் கண்ட அந்நிலைகள் எல்லாம் பொருந்தும் படி கோத்து அத்தகைய தன்மையுடையவர் தொழுது வணங்கும் திருச்சிற்றம்பலமாகும் என்று எடுத்துக் கூறி,
2073. இன்ன தன்மையில் இன்னிசைப் பதிகமும் திருக்கடைக் காப்பேற்றி
மன்னும் ஆனந்த வெள்ளத்தில் திளைத்தெதிர் வந்துமுன் நின்றாடும்
பின்னு வார்சடைக் கூத்தர்பேரருள்பெறப் பிரியாத விடைபெற்றுப்
பொன்னின் அம்பலஞ் சூழ்ந்துதாழ்ந் தெழுந்துபோந் தணைந்தனர் புறமுன்றில்.
தெளிவுரை : இவ்வாறான தன்மையில் இனிய இசை பொருந்திய பதிகத்தைத் திருக்கடைக் காப்புச் சொல்லி நிறைவாக்கித் துதித்து, நிலைபெற்ற ஆனந்த வெள்ளத்துள் முழுகித் திளைத்து எதிரில் வந்து நின்றாடும் பின்னிய சடையையுடைய கூத்தரின் திருவருளைப் பெறும்படி பிரியா விடைபெற்றுப் பொன்னம்பலத்தை வலம் வந்து, வெளி முற்றத்தை அடைந்தார்.
2074. அப்பு றத்திடை வணங்கிஅங் கருளுடன் அணிமணித் திருவாயில்
பொற்பு றத்தொழு தெழுந்துடன் போதரப் போற்றிய புகழ்ப்பாணர்
நற்ப தந்தொழு தடியனேன் பதிமுதல்நதி நிவாக் கரை மேய
ஒப்பில் தானங்கள் பணிந்திட வேண்டும்என் றுரைசெய அதுநேர்வார்.
தெளிவுரை : அந்த முற்றத்தைப் புறத்தில் வணங்கி அங்குத் திருவருள் பெற்று அழகிய மணிகள் பதித்த திருவாயிலில் தொழுது வணங்கி எழுந்தார். அப்போது, தம்முடன் வரப்பெறும் பேற்றைப் பெற்ற புகழையுடைய திருநீல கண்ட யாழ்ப்பாணர் தம் திருவடிகளை வணங்கி நின்று, அடியேனின் பதியான திருவெருக்கத்தம்புலியூர் முதலாக நிவா நதியின் கரையில் உள்ள ஒப்பில்லாத திருத்தலங்களைச் சென்று வணங்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். பிள்ளையார் அதற்கு உடன் பட்டவராய்,
2075. பொங்கு தெண்திரைப் புனிதநீர் நிவாக்கரைக் குடதிசை மிசைப்போந்து
தங்கு தந்தையா ருடன்பரிசனங்களும் தவமுனி வருஞ்செல்லச்
செங்கை யாழ்திரு நீலகண் டப்பெரும் பாணனா ருடன்சேர
மங்கை யார்புகழ் மதங்கசூளாமணி யார்உடன் வரவந்தார்.
தெளிவுரை : பொங்கும் தெளிந்த அலைகளையுடைய புனித நீர் நிரம்பிய நிவா நதிக்கரையின் வழியே மேற்குத்திக்கில் போய், தம்முடன் வந்து தங்கிய தந்தையரான சிவபாத இருதயருடனே பரிவாரங்களும் தவமுனிவர்களும் உடன் வரச், செவ்விய கையில் யாழையுடைய திருநீலகண்ட யாழ்ப் பாணருடன் ஒன்றாக அவருடைய மனைவியாரான மதங்கசூளாமணியாரும் உடன் வரச் சென்றருளினார்.
2076. இருந்த டங்களும் பழனமும் கடந்துபோய் எருக்கத்தம் புலியூரின்
மருங்கு சென்றுற நீலகண் டப்பெரும் பாணனார் வணங்கிக்கார்
நெருங்கு சோலைசூழ் இப்பதி அடியனேன் பதியென நெடிதின்புற்
றருங்க லைச்சிறு மழஇளங்களிறனார் அங்கணைந் தருள்செய்வார்.
தெளிவுரை : பெரிய நீர் நிலைகளும் வயல்களும் ஆகியவற்றைக் கடந்து சென்று திருவெருக்கத்தம்புலியூரின் பக்கத்தில் சென்று சேர, திருநீலகண்ட யாழ்ப்பாணர் எதிர் வந்து வணங்கி நின்று மேகங்கள் நெருங்கிய பூஞ்சோலைகளால் சூழப்பட்ட இந்தத்தலம் அடியேனின் தலமாகும் என்று வேண்டிக் கொள்ள, மிகவும் மகிழ்ச்சி யடைந்து அரிய வேதம் முதலிய கலைகள் யாவும் விளங்குவதற்கு இடமான சிறிய இளைய யானைக் கன்றைப் போன்ற பிள்ளையார் அத்தலத்தில் அணைந்து அருள் செய்பவராய்.
2077. ஐயர் நீரவ தரித்திட இப்பதி அளவில்மா தவமுன்பு
செய்த வாறெனச் சிறப்புரைத்தருளிஅச் செழும்பதி இடங்கொண்ட
மைகொள் கண்டர்தங் கோயிலினுட்புக்கு வலங்கொண்டு வணங்கிப்பார்
உய்ய வந்தவர் செழுந்தமிழ்ப்பதிகம்அங் கிசையுடன் உரைசெய்தார்.
தெளிவுரை : ஐயரே ! தாங்கள் இங்கு அவதரித்திடப் பெறுவதற்கு இத்தலமானது அளவற்ற பெருந்தவத்தைச் செய்திருந்தது எனச் சிறப்பித்துக் கூறி, அந்தச் செழிப்புடைய திருத்தலத்தில் இடம் கொண்டு எழுந்தருளியிருக்கும் திருநீலகண்டரான இறைவரின் திருக்கோயிலுள் போய் வணங்கி உலகம் உய்யும் படியாய்த் தோன்றிய பிள்ளையார் செழுந்தமிழ்ப் பதிகத்தைக் கட்டளையிட்டு அருள் செய்தார்.
2078. அங்கு நின்றெழுந் தருளிமற் றவருடன் அம்பொன்மா மலைவல்லி
பங்கர் தாமினி துறையுநற் பதிபல பரிவொடும் பணிந்தேத்தித்
துங்க வண்டமிழ்த் தொடைமலர் பாடிப்போய்த் தொல்லைவெங் குருவேந்தர்
செங்க ணேற்றவர் திருமுது குன்றினைத் தொழுதுசென் றணைகின்றார்.
தெளிவுரை : அந்தப் பதியினின்று புறப்பட்டு மேலே சென்று அழகிய பொன்மலையில் தோன்றியருளிய உமையம்மையை ஒரு பாகத்தில் கொண்ட சிவபெருமான் இனி தாய் உறைகின்ற தலங்கள் பலவற்றுக்கும் சென்று பணிந்து ஏத்தி, உயர்ந்த வண்டமிழ்ப் பாமலைகள் பாடிச் சென்று பழைமையான சீகாழித் தலைவரான பிள்ளையார் சிவந்த கண்களையுடைய காளையை ஊர்தியாகக் கொண்ட சிவபெருமானின் திருமுது குன்றத்தை வணங்கிச் சென்று அணைபவராய்.
2079. மொய்கொள் மாமணி கொழித்துமுத் தாறுசூழ் முதுகுன்றை அடைவோம்என்று
எய்து சொன்மலர் மாலைவண் பதிகத்தை இசையொடும் புனைந்தேத்திச்
செய்த வத்திரு முனிவருந் தேவருந் திசையெலாம் நெருங்கப்புக்
கையர் சேவடி பணியுமப் பொருப்பினில் ஆதர வுடன்சென்றார்.
தெளிவுரை : மிக்க பெருமணிகளைக் கொழித்துக் கொண்டு திருமணிமுத்தாறு சூழும் திருமுது குன்றத்தைச் சென்றடைவோம் என்று பொருந்தும் சொல்மலர் மாலைப் பதிகத்தை இசையுடன் பாடித்துதித்து, சிறந்த தவத்தையுடைய முனிவரும் தேவரும் திக்குகள் எல்லாம் நெருங்கப் புகுந்து, இறைவரின் சேவடிகளை வணங்குகின்ற அந்தப் பழமலையினிடத்து மிக்க அன்புடன் சென்றடைந்தார்.
2080. வான நாயகர் திருமுது குன்றினை வழிபட வலங்கொள்வார்
தூந றுந்தமிழ்ச் சொல்லிருக் குக்குறட் டுணைமலர் மொழிந்தேத்தி
ஞான போனகர் நம்பர்தங் கோயிலை நண்ணியங் குள்புக்குத்
தேன லம்புதண் கொன்றையார் சேவடி திளைத்தஅன் பொடுதாழ்ந்தார்.
தெளிவுரை : தேவதேவரான சிவபெருமானின் திருமுது குன்றத்தை வழிபடும் பொருட்டு, அதை வலமாய் வருகின்றவர், தூய நல்ல தமிழ்ச் சொற்களால் திருவிருக்குக் குறட் பதிகமாகிய துணை மலர்களை மொழிந்து துதித்து, சிவபெருமானின் கோயிலை அடைந்து, ஆங்கு உள்ளே புகுந்து, தேன் சிந்தும் குளிர்ந்த கொன்றை மலர்மாலை யணிந்த சிவபெருமானின் அடிகளில், ஞான அமுதத்தை உண்ட பிள்ளையார், மிகுந்த அன்புடனே தாழ்ந்து வணங்கினார்.
2081. தாழ்ந்தெ ழுந்துமுன் முரசதிர்ந் தெழும்எனுந் தண்டமிழ்த் தொடைசாத்தி
வாழ்ந்து போந்தங்கண் வளம்பதி அதனிடை வைகுவார் மணிவெற்புச்
சூழ்ந்த தண்புனல் சுலவுமுத் தாற்றொடு தொடுத்தசொல் தொடைமாலை
வீழ்ந்த காதலாற் பலமுறை விளம்பியே மேவினார் சிலநாள்கள்.
தெளிவுரை : பிள்ளையார், வணங்கி எழுந்து முரசதிர்ந் தெழுதரு என்ற குளிர் தமிழ் மாலை பாடி, இன்புற்று வெளியே வந்து, அந்த வளம் கொண்ட தலத்தில் தங்கியிருந்தார். அவர் மணிகளையுடைய அந்தத் திருமுது குன்றத்தைச் சூழ்ந்த குளிர்ந்த நீருடைய முத்தாற்றினுடனே சேர்த்து இயற்றிய திருப்பதிக மாலையை, விரும்பிய அன்புடனே பலமுறையும் கூறி, அங்குச் சில நாட்கள் தங்கியிருந்தார்.
2082. ஆங்கு நாதரைப் பணிந்துபெண் ணாகடம் அணைந்தரு மறையோசை
ஓங்கு தூங்கானை மாடத்துள் அமர்கின்ற வொருதனிப் பரஞ்சோதிப்
பாங்க ணைந்துமுன் வலங்கொண்டு பணிவுற்றுப் பரவுசொல் தமிழ்மாலை
தீங்கு நீங்குவீர் தொழுமின்கள் எனும்இசைப் பதிகமும் தெரிவித்தார்.
தெளிவுரை : அங்கு வீற்றிருக்கும் தலைவரை வணங்கி விடை பெற்றுப் போய்த் திருப்பெண்ணாகடம் என்ற பதியை அடைந்து, அரிய வேதங்களின் ஓசை ஓங்கும் திருத்தூங்கானை மாடம் என்ற அந்தத் தலக் கோயிலுள் விரும்பி வீற்றிருக்கின்ற ஒன்றான ஒப்பற்ற பாஞ்சோதியான இறைவர் பக்கம் சேர்ந்து, வலம் வந்து, திருமுன்பு பணிந்து எழுந்து, போற்றும் சொல் தமிழ் மாலையான, தீங்கினின்றும் நீங்கும் கருத்துடையீர்களே ! இங்குத் தொழுமின்கள் என்ற கருத்துடைய இசைப் பதிகத்தையும் பாடியருளினார்.
2083. கருவ ரைப்பிற் புகாதவர் கைதொழும்
ஒருவ ரைத்தொழு துள்ள முவந்துபோய்ப்
பெருவ ரத்தினிற் பெற்றவர் தம்முடன்
திருவ ரத்துறை சேர்தும்என் றேகுவார்.
தெளிவுரை : பிறவியினது எல்லைக்கு உட்படாத (பிறவி இல்லாத) அடியவர்கள் கை தொழுகின்ற சுடர்க் கொழுந்தீசரை வணங்கி மனம் மகிழ்ந்து விடைபெற்றுக் கொண்டு போய், தோணியப்பரிடம் தவம் கிடந்து பெற்ற வரத்தால் தம்மை ஈன்ற தந்தையாருடன் திருவரத் துறையைச் சேர்வோம் எனப் போவாராய்,
2084. முந்தை நாள்கள் ஒரோவொரு கால்முது
தந்தை யார்பியல் மேலிருப் பார்தவிர்ந்
தந்த ணாளர் அவரரு கேசெலச்
சிந்தை செய்விருப் போடுமுன் சென்றனர்.
தெளிவுரை : முன் நாட்களில் செல்லும் போது முதுமைப் பருவம் உடைய தந்தையாரின் தோள் மீது ஒவ்வொரு சமயம் எழுந்தருளிச் சென்ற அப்பிள்ளையார், இப்போது அதை விடுத்து அந்தணர்களும் அத்தந்தையாரும் அருகே வர, மனத்திற் கொண்ட பெருவிருப்போடு முன்னால் சென்றார்.
2085. ஆதி யார்தம் அரத்துறை நோக் கியே
காத லால்அணை வார்கடி தேகிடத்
தாதை யாரும் பரிவுறச் சம்பந்தர்
பாத தாமரை நொந்தன பைப்பய.
தெளிவுரை : பழைமையுடையவரான சிவபெருமானின் திருவரத்துறையினை நோக்கி மிக்க விருப்புடன் அணைபவராய் விரைவாய்ப் போகவும், தந்தையாரும் வருந்த, ஞான சம்பந்தரின் பாத தாமரைகளும் சிறிது நொந்தன.
2086. மறைய னைத்தும் ஒருவடி வாமென
நிறைம திப்பிள்ளை நீள்நிலஞ் சேர்ந்தெனத்
துறைய லைக்கங்கை சூடும் அரத்துறை
இறைவ ரைத்தொழு வான்விரைந் தேகினார்.
தெளிவுரை : வேதங்கள் யாவும் ஒருவடிவம் கொண்டாற் போல் நிறையும் பிறைச்சந்திரன் சென்று நீண்ட மண்ணுலகத்தில் வந்து சேர்ந்தாற் போல் போய் நீர்த்துறைகளில் அலைகளை வீசும் கங்கை சூடும் திருவரத் துறையில் வீற்றிருக்கும் இறைவரைத் தொழுவதற்காக விரைவாய்ப் போயினர்.
2087. பாச மற்றில ராயினும் பார்மிசை
ஆசை சங்கரற் காயின தன்மையால்
தேசு மிக்க திருவுரு வானவர்
ஈச னைத்தொழு தேதொழு தேகினார்.
தெளிவுரை : பாசம் சிறிதும் இல்லாதவராக இருந்தும் உலகத்தில் இறைவனிடத்து ஆசை கொண்ட தன்மையால், சில ஒளிமிக்க திருவுருவான பிள்ளையார் சிவபெருமானை வணங்கிச் சென்றார்.
2088. இந்த மாநிலத் தின்இருள் நீங்கிட
வந்த வைதிக மாமணி யானவர்
சிந்தை ஆரமு தாகிய செஞ்சடைத்
தந்தை யார்கழல் தாழ்ந்தெழுந்து ஏகினார்.
தெளிவுரை : இந்தப் பெரிய உலகத்தில் இருள் நீங்கத் தோன்றிய வேதியர் குல மணியான சம்பந்தர், மனத்தில் ஊறும் அமுதமான சிவந்த சடையையுடைய தந்தையாம் சிவபெருமானின் திருவடிகளைத் தாழ்ந்து வணங்கி எழுந்து போனார்.
2089. மாறன் பாடி யெனும்பதி வந்துற
ஆறு செல்வருத் தத்தின் அசைவினால்
வேறு செல்பவர் வெய்துறப் பிள்ளையார்
ஏறு மஞ்செழுத் தோதிஅங் கெய்திட.
தெளிவுரை : மாறன்பாடி என்ற ஊரில் வந்து சேர, வழி நடந்து செல்லும் வருத்தத்தால் உண்டான சோர்வால் தம்மைச் சுற்றிலும் வரும் பரிவாரங்கள் முதலியவர் இளைப்படைய, பிள்ளையார் சிறந்த ஐந்தெழுத்தை உச்சரித்தபடி அங்குச் சேர,
2090. உய்ய வந்தசம் பந்த ருடன்வந்தார்க்
கெய்து வெம்மை இளைப்பஞ்சி னான்போலக்
கைக ளாயிரம் வாங்கிக் கரந்துபோய்
வெய்ய வன்சென்று மேல்கடல் வீழ்ந்தனன்.
தெளிவுரை : உலகம் உய்வதற்காக வந்த ஞானசம்பந்தருடன் வந்தவர்க்கு வழி நடந்து வந்த தன் வெம்மையினால் உண்டான இளைப்பைப் பார்த்து அச்சம் கொண்டவனைப் போலத் தன் அளவற்ற கைகளையும் உள்ளே இழுத்துக் கொண்டு மறைந்து போய்க் கதிரவன் மேலைக் கடலில் விழுந்தான்.
2091. அற்றை நாள்இர வப்பதி யின்னிடைச்
சுற்று நீடிய தொண்டர்கள் போற்றிடப்
பெற்ற மூர்ந்த பிரான்கழல் பேணுவார்
வெற்றி மாதவத் தோருடன் மேவினார்.
தெளிவுரை : அன்றைய இரவில் அந்தப் பதியில் தம்மைச் சூழ்ந்த திருத்தொண்டர்கள் போற்றக் காளையூர்தியுடைய சிவபெருமானின் திருவடிகளையே போற்றுபவரான பிள்ளையார் வெற்றியுடைய மாதவத்தவருடன் அங்குத் தங்கியிருந்தனர்.
2092. இந்நி லைக்கண் எழில்வளர் பூந்தராய்
மன்ன னார்தம் வழிவருத் தத்தினை
அன்ன மாடுந் துறைநீர் அரத்துறைச்
சென்னி யாற்றர் திருவுளஞ் செய்தனர்.
தெளிவுரை : இந்நிலையில் அழகு மிக்க சீகாழித் தலைவரின் வழி வருத்தத்ததை, அன்னப் பறவைகள் பொருந்திய நீர்த்துறைகளையுடைய திருவரத்துறையில் எழுந்தருளிய தலையில் கங்கையாற்றை யுடைய இறைவர் தம் திருவுள்ளத்தில் கொண்டார். (வருத்தத்தைப் போக்கக் கருதினார்.)
2093. ஏறுதற்குச் சிவிகை இடக்குடை
கூறி ஊதக் குலவுபொற் சின்னங்கள்
மாறில் முத்தின் படியினால் மன்னிய
நீறு வந்த நிமலர் அருளுவார்.
தெளிவுரை : பிள்ளையார் ஏறிச் செல்வதற்குப் பல்லக்கும், மேலே கவித்துக் கொள்வதற்குக் குடையும், மெய்க்கீர்த்தி முதலியவற்றை எடுத்துக்கூறி ஊதுவதற்கு விளக்கம் கொண்ட அழகிய சின்னங்களும் என்னும் இவை ஒப்பில்லாத முத்துக்கள் பதியவைத்த சிறப்புடன், திருநீற்றை விரும்பும் அரத்துறை இறைவர் அருள்வாராய்,
2094. நீடு வாழ்பதி யாகும்நெல் வாயிலின்
மாட மாமனை தோறும் மறையோர்க்குக்
கூடு கங்குற் கனவிற் குலமறை
தேடு சேவடி தோன்றமுன் சென்றுபின்.
தெளிவுரை : நீண்ட வாழ்வுடைய தலமான திருநெல்வாயிலிய மாளிகைகளைக் கொண்ட பெரிய இல்லங்கள் தோறும் வேதியர்களுக்கு அன்றிரவு கனவில், பெருமையுடைய வேதங்கள் தேடும் செவ்விய திருவடிகள் தோன்றுமாறு அவர் முன் போய்,
2095. ஞான சம்பந்தன் நம்பால் அணைகின்றான்
மான முத்தின் சிவிகை மணிக்குடை
ஆன சின்னம்நம் பாற்கொண் டருங்கலைக்
கோன வன்பா லணைந்து கொடும்என.
தெளிவுரை : ஞானசம்பந்தர் நம்மிடம் வருகிறான். அரிய கலைகளுக் கெல்லாம் தலைவனான அவனிடம் நீங்கள் பெரிய முத்துச் சிவிகையையும் அழகிய குடையையுமான சின்னங்களை நம்மிடம் பெற்றுக் கொண்டு போய்க் கொடுங்கள் என்று இறைவர் (கனவில்) உரைத்தருள,
2096. அந்த ணாளர் உரைத்தஅப் போழ்தினில்
வந்து கூடி மகிழ்ந்தற் புதமுறுஞ்
சிந்தை யோடும் செழுநீர் அரத்துறை
இந்து சேகரர் கோயில்வந் தெய்தினர்.
தெளிவுரை : இறைவர் உரைத்த அப்போது, அந்தணர்கள் வந்து ஒன்றாகக் கூடித் தாம் கண்ட கனவைச் சொல்லி மகிழ்ந்து அற்புதமான சிந்தையுடன் செழிய நீர் பொருந்திய திருவரத் துறையில் எழுந்தருளிய பிறைசூடிய சடை கொண்ட பெம்மானின் கோயிலின் வாயிலில் வந்து கூடினர்.
2097. ஆங்கு மற்ற அருளடி யாருடன்
ஓங்கு கோயிலுள் ளார்க்கும்உண் டாயிட
ஈங்கி தென்ன அதிசயம் என்பவர்
தாங்கள் அம்மறை யோர்கள்முன் சாற்றினார்.
தெளிவுரை : அங்கு முன் சொன்ன வண்ணம் இறைவர் அருள், அந்த அடியாருடன் ஓங்கு கோயிலுள் உள்ளவர்களுக்கும் உண்டாகியது. உண்டாகவே, இங்கு இது பேரதிசயமாக உள்ளதே ! என்று கூறும் அவர்கள், வந்து கூடிய அம்மறையவர்களுக்குத் தாங்கள் முதலில் கூறினர்.
2098. சால மிக்க வியப்புறு தன்மையின்
பால ராதலும் பள்ளி யெழுச்சியின்
காலம் எய்திடக் காதல் வழிப்படுஞ்
சீலம் மிக்கார் திருக்காப்பு நீக்கினார்.
தெளிவுரை : மிகப் பெரிய வியப்பை அடையும், அச்சமயத்தில் திருப்பள்ளி எழுச்சிக்குரிய காலம் வந்தது. வரவும், அன்பு வழிப்படும் ஒழுக்கம் உடைய அவர்கள் கோயிலின் கதவைத் திறந்தனர்.
2099. திங்கள் நீர்மைச் செழுந்திரள் முத்தினால்
துங்க வெண்குடை தூய சிவிகையும்
பொங்க வூதும் பொருவருஞ் சின்னமும்
அங்கண் நாதர் அருளினாற் கண்டனர்.
தெளிவுரை : சந்திரன் போன்ற இயல்புடைய செழுமையான முத்துக்கள் இழைத்த பெரிய வெண்குடையும், தூய பல்லக்கும், பொங்குமாறு ஊதும் ஒப்பில்லாத சின்னங்களும் ஆகிய இவற்றை அங்கு இறைவரின் திருவருளால் அவர்கள் பார்த்தனர்.
2100. கண்ட பின்னவர் கைதலை மேற்குவித்
தெண்டி சைக்கும் விளக்கிவை யாம்எனத்
தொண்ட ரோடும் மறையவர் சூழ்ந்தெழுந்
தண்டர் நாடும் அறிவுற ஆர்த்தனர்.
தெளிவுரை : அங்ஙனம் அவற்றை அவர்கள் கண்ட பின்பு, தம் கைகளைத் தலைமீது குவித்து, இவை எட்டுத் திக்குகளுக்கும் விளக்காகும் எனக் கூறித் தொண்டர்களுடன் சூழ்ந்து வணங்கி எழுந்து தேவர் உலகமும், அறியும்படி ஆரவாரம் செய்தனர்.
2101. சங்கு துந்துபி தாரைபே ரிம்முதல்
பொங்கு பல்லிய நாதம் பொலிந்தெழ
அங்க ணன்அரு ளால்அவை கொண்டுடன்
பொங்கு காதல் எதிர்கொளப் போதுவார்.
தெளிவுரை : சங்கு, துந்துபி, தாரை, பேரி முதலியவாய்ப் பொங்கி எழும் வாத்தியங்களின் ஓசை பொலிவு பெற்று எழுமாறு செய்து, இறைவரின் திருவருளால் அந்தப் பல்லக்கு, குடை, சின்னங்கள் என்ற இவற்றை உடன் கொண்டு பொங்கி எழுகின்ற ஆசை எதிர் கொள்ளப் போவராய்,
2102. மாசில் வாய்மைநெல் வாயில் மறையவர்
ஆசில் சீர்ச்சண்பை ஆண்டகை யார்க்கெதிர்
தேசு டைச்சிவி கைமுத லாயின
ஈசர் இன்னரு ளால்தாங்கி ஏகினார்.
தெளிவுரை : குற்றம் இல்லாத வாய்மையுடைய திருநெல் வாயில் அந்தணர்கள் குற்றமற்ற சிறப்பையுடைய சீகாழியில் தோன்றிய பிள்ளையார்க்கு ஒளியுடைய சிவிகை முதலியவற்றை இறைவரின் திருவருளால் தாங்கிச் சென்றனர்.
2103. இத்த லைஇவர் இன்னணம் ஏகினார்
அத்த லைச்சண்பை நாதர்க்கும் அவ்விரா
முத்த நற்சிவி கைமுத லாயின
உய்த்த ளிக்கும் படிமுன் உணர்த்துவார்.
தெளிவுரை : இங்கு அந்தணர் இவ்வாறு சென்றனர். அங்குச் சீகாழித் தலைவரான பிள்ளையாருக்கும் அன்றைய இரவே நல்லமுத்துக்கள் பதித்து வைத்த பல்லக்கு முதலானவற்றை ஏற்றுக் கொண்டு செல்லும்படி முன் உணர்த்துவாராய்,
2104. அள்ளல் நீர்வயல் சூழும் அரத்துறை
வள்ள லார்நாம் மகிழ்ந்தளிக் கும்மவை
கொள்ள லாகும்கொண் டுய்த்தல் செய் வாய்என
உள்ள வாறருள் செய்ய வுணர்ந்தபின்.
தெளிவுரை : சேற்றையுடைய நீர் வளம் வாய்ந்த வயல்கள் சூழ்ந்த திருவரத்துறையில் எழுந்தருளிய வள்ளலான சிவ பெருமான், நாம் மகிழ்ந்தளிக்கும் இந்தச் சிவிகை முதலானவை ஏற்றுக் கொள்ளத் தக்கவையாகும். ஆதலால் அவற்றை ஏற்றுக் கொண்டு உரியவாறு செலுத்தவாயாக ! என்று அருளிச் செய்ய, அதை அறிந்து உறக்கம் நீங்கிய பின்பு,
2105. சண்பை யாளியார் தாங்கண்ட மெய்யருள்
பண்பு தந்தையார் தம்முடன் பாங்கமர்
தொண்ட ருக்கருள் செய்து தொழாமுனம்
விண்பு லப்பட வீங்கிருள் நீங்கலும்.
தெளிவுரை : சண்பை என்ற சீகாழித் தலைவரான சம்பந்தர் தாம் கனவில் கண்ட மெய்யருளின் தன்மையைத் தந்தையார்க்கும் பக்கத்தில் அமர்ந்திருந்த தொண்டர்களுக்கும் கூறியருளி, திருவருளைத் தொழுவதற்கு முன்னம், முன்பு மூடிய இருள், வானம் வெளிப்பட்டுத் தோன்றுமாறு நீங்கவே,
2106. மாலை யாமம் புலர்வுறும் வைகறை
வேலை செய்வினை முற்றிவெண் ணீறணி
கோல மேனிய ராய்க்கைம் மலர்குவித்
தேல அஞ்செழுத் தோதி எழுந்தனர்.
தெளிவுரை : பின் இரவு யாமமும் முடிந்து பொழுது புலருதற்கு முன்னம் விடியற் காலையில், செய்யத்தக்க கடன்களை முடித்து, வெண்மையான திருநீற்றினை அணிந்த சிவக் கோலமான அழகிய திருமேனியராகிக் கைம்மலர்களைத் தலை மேல் குவித்துப், பொருந்துமாறு திருவைந்தெழுத்தை ஓதி எழுந்தருளியிருந்தார்.
2107. போத ஞானப் புகலிப் புனிதரைச்
சீத முத்தின் சிவிகைமே லேற்றிடக்
காதல் செய்பவன் போலக் கருங்கடல்
மீது தேரின்வந் தெய்தினன் வெய்யவன்.
தெளிவுரை : போத ஞானம் பெற்ற தூயவரான சீகாழித் தலைவரைக் குளிர்ந்த முத்துக்களையுடைய சிவிகையில் ஏற்றிக் கும்பிட மிக்க அன்பு கொண்டவன் போல, சூரியன் கரிய கடல் மீது தன் தேர்மீது ஏறி வந்தனன்.
2108. ஆய போழ்தின் அரவெனும் ஆர்ப்புடன்
தூய முத்தின் சிவிகை சுடர்க்குடை
மேய சின்னங்கள் கொண்டுமெய் யன்பரோ
டேய அந்தணர் தாமெதிர் தோன்றினார்.
தெளிவுரை : அச்சமயத்தில் அரகர என்ற முழக்கத்துடன் தூய முத்தினால் ஆன சின்னங்களையும் ஒளியுடைய குடையையும் பொருந்திய சின்னங்களையும் தாங்கிக் கொண்டு மெய்யன்பர்களுடனே பொருந்திய அந்தணர்களும், அங்ஙனம் எழுந்த பிள்ளையாருக்கு எதிரே, வந்து தோன்றினர்.
2109. வந்து தோன்றிய அந்தணர் மாதவர்
கந்த வார்பொழில் காழிநன் னாடர்முன்
அந்த மில்சீர் அரத்துறை ஆதியார்
தந்த பேரருள் தாங்குவீர் என்றனர்.
தெளிவுரை : எதிரில் தோன்றிய அந்தணர்களும் மெய்யன்பர்களும் மணம் மிக்க பொழில்களையுடைய சீகாழித் தலைவரான சம்பந்தர் திருமுன்பு நின்று, அழிவற்ற சிறப்பையுடைய திருவரத்துறை இறைவர் அளித்தருளிய பேரருள் வடிவான இப்பொருள்களே ஏற்றுக் கொள்ளுங்கள் என வேண்டினார்.
2110. என்று தங்களுக் கீச ரருள்செய்த
தொன்றும் அங்கொழி யாமை உரைத்துமுன்
நின்று போற்றித் தொழுதிட நேர்ந்தது
மன்று ளார்அருள் என்று வணங்கினார்.
தெளிவுரை : என இங்ஙனம் தங்களுக்குத் திருவரத்துறை ஈசர் உரைத்தவற்றுள் ஒன்றையும் விடாமல் எடுத்துக் கூறி, பிள்ளையாரின் முன்நின்று போற்றித் துதித்தனர்; இவ்வாறு நிகழ்ந்த செயல் திருவெம்பலத்தில் ஆடும் கூத்தரின் திருவருளேயாகும் எனப் பிள்ளையார் தொழுதார்.
2111. மெய்ம்மை போற்றி விடாத விருப்பினால்
தம்மை யுன்னும் பரிசுதந் தாள்பவர்
செம்மை நித்தில யானச் சிறப்பருள்
எம்மை யாளுவப் பானின் றளித்ததே.
தெளிவுரை : கள்ளமின்றி உள்ளவாறு போற்றிப் பற்று விடாத விருப்பத்தால் தம்மை நினைத்திருக்கும் தன்மையைக் கொடுத்து ஆள்கின்ற இறைவர், செம்மையான முத்துச் சிவிகையின் சிறப்பை அளித்தல், எம்மைத் தம் அடியவராக உவந்து ஆட்கொள்ளும் பொருட்டாய் இன்று அளித்தபேறுதான் என்னே ?
2112. எந்தை ஈசன் எனஎடுத்து இவ்வருள்
வந்த வாறுமற்று இவ்வண மோஎன்று
சிந்தை செய்யும் திருப்பதி கத்துஇசை
புந்தி யாரப் புகன்றெதிர் போற்றுவார்.
தெளிவுரை : எந்தை ஈசன் எனத் தொடங்கிச் சிவபெருமானின் திருவருள் வந்த வழிதான் இப்படியோ ! என்று சிந்தை செய்யும் திருப்பதிகத்து இசையைப் புத்தி நிறைந்து கொள்ளப் புகன்று, எதிரே நின்று, போற்றுவாராய்,
2113. பொடிய ணிந்த புராணன் அரத்துறை
அடிகள் தம்மரு ளேயிது வாமெனப்
படியி லாதசொல் மாலைகள் பாடியே
நெடிது போற்றிப் பதிகம் நிரப்பினார்.
தெளிவுரை : திருநீற்றை அணிந்த பழையவரான திருவரத்துறை இறைவரின் திருவருளே இதுவாகும் என, ஒப்பற்ற சொல் மாலைகளைப் பாடி நீள வணங்கித் திருப்பதிகத்தை நிறைவு செய்தார்.
2114. சோதி முத்தின் சிவிகைசூழ் வந்துபார்
மீது தாழ்ந்துவெண் ணீற்றொளி போற்றிநின்
றாதி யார்அரு ளாதலின் அஞ்செழுத்
தோதி யேறினார் உய்ய வுலகெலாம்.
தெளிவுரை : ஒளி பொருந்திய முத்துச் சிவிகையினைச் சூழ்ந்து, வலமாக வந்து நில மேல் விழுந்து வணங்கி, அதன் வெண்ணீற்று ஒளியைத் துதித்து நின்று, அது இறைவரின் அருள் ஆதலால் திருவைந்தெழுத்தை ஓதி, பிள்ளையார் உலகம் எல்லாம் உய்யும்படி அதில் ஏறியருளினார்.
2115. தொண்டர் ஆர்த்தனர் சுருதிகள் ஆர்த்தன தொல்லை
அண்டர் ஆர்த்தனர் அகிலமும் ஆர்ப்புடன் எய்தக்
கொண்டல் ஆர்த்தன முழவமும் ஆர்த்தன குழுமி
வண்ட றாப்பொலி மலர்மழை ஆர்த்தது வானம்.
தெளிவுரை : அடியவர் ஆரவாரம் செய்தனர். வேதங்கள் முழங்கின. பழைமையுடைய தேவர்கள் ஆரவாரம் செய்தனர். மேகங்கள் உலகம் ஆர்த்தெழுமாறு முழங்கின. முழவு வாத்தியங்கள் ஒலித்தன. கூட்டமாய்ச் சேர்ந்து, வண்டுகள் நீங்காத அழகிய மலர் மழையை வானம் ஆர்த்துப் பெய்தது.
2116. வளையும் ஆர்த்தன வயிர்களும் ஆர்த்தன மறையின்
கிளையும் ஆர்த்தன திளைஞரும் ஆர்த்தனர் கெழுவும்
களைகண் ஆர்த்ததொர் கருணையின் ஆர்கவின் முத்தின்
விளையு மாக்கதிர் வெண்குடை ஆர்த்தது மிசையே.
தெளிவுரை : சங்குகள் ஒலித்தன. கொம்புகள் ஒலித்தன. வேதச் சாகைகள் ஒலித்தன. உறவினர் ஆரவாரம் செய்தனர். ஆன்மாக்களுடன் கூடியுள்ள உயிர்க்கு உயிரான இறைவரின் கருணையினால் பிணிக்கப்பட்ட முத்துக்களினின்றும் வீசும் பெருங் கதிர்களுடன் வெண்குடை மேலே கவிக்கப்பட்டு ஆரவாரித்தது.
2117. பல்கு வெண்கதிர்ப் பத்திசேர் நித்திலச் சிவிகைப்
புல்கு நீற்றொளி யுடன்பொலி புகலிகா வலனார்
அல்கு வெள்வளை அலைத்தெழு மணிநிரைத் தரங்கம்
மல்கு பாற்கடல் வளர்மதி உதித்தென வந்தார்.
தெளிவுரை : பெருகும் வெண்கதிர்களின் ஒழுங்குடைய முத்துச் சிவிகையின்மீது திருநீற்று ஒளியுடன் விளங்கும் சீகாழித் தலைவர் தங்கும் வெண்மையான சங்குகளை வாரி எழுகின்ற அழகிய வரிசையான அலைகள் நிறைந்த பாற் கடலில் வளரும் சந்திரன் தோன்றினாற் போல எழுந்தருளி வந்தார்.
2118. நீடுதொண்டர்கள் மறையவர் ஏனையோர் நெருங்கி
மாடு கொண்டெழு மகிழ்ச்சியின் மலர்க்கைமேல் குவித்தே
ஆடு கின்றனர் அயர்ந்தனர் அளவில் ஆனந்தம்
கூடு கின்றகண் பொழிபுனல் வெள்ளத்தில் குளித்தார்.
தெளிவுரை : மிக்க தொண்டர்களும் அந்தணர்களும் மற்றவர்களும் நெருங்கி வந்து தங்கள் உள்ளத்தின் பக்க மிடம் கொண்டு எழுகின்ற மகிழ்ச்சியினால் மலர்க் கைகளை மேலே குவித்துப் பரவசமாய் ஆடினர். அளவற்ற ஆனந்தம் சேர்கின்ற கண்களினின்று பொழியும் கண்ணீர் வெள்ளத்தில் குளித்தனர்.
2119. செய்ய பொன்புனை வெண்தரளத்தணி சிறக்கச்
சைவ மாமறைத் தலைவர்பால் பெறுந்தனிக் காளம்
வையம் ஏழுடன் மறைகளும் நிறைதவத் தோரும்
உய்ய ஞானசம் பந்தன்வந் தான்என ஊத.
தெளிவுரை : சிவந்த பொன்னால் ஆன வெண் முத்துகளை அழகு சிறக்குமாறு உள்ள, சைவத்துக்கும் வேதங்களில் கூறப்பட்ட வைதிகத்துக்கும் தலைவரான சிவபெருமானிடத்தில் பெறும் ஒப்பில்லாத எக்காளம் என்ற சின்னம், உலகம் ஏழும் வேதங்களும் நிறைந்த தவத்தை யுடையவர்களும் உய்யுமாறு திருஞான சம்பந்தர் வந்தார் என்று கூறி ஊதினர்.
2120. சுற்று மாமறைச் சுருதியின் பெருகொலி நடுவே
தெற்றி னார்புர மெரித்தவர் தருதிருச் சின்னம்
முற்று மானவன் ஞானமே முலைசுரந் தூட்டப்
பெற்ற பாலறா வாயன்வந் தான்எனப் பிடிக்க.
தெளிவுரை : சுற்றி ஒலிக்கும் பெரு வேதச் சுருதிகளின் பெரு முழக்கத்தினிடையே, பகைவரின் முப்புரங்களை எரித்த இறைவர் அளித்தருளிய திருச்சின்னம், ஞானமே முழுதுமாகிய மேனியைக் கொண்ட பெரிய நாயகி அம்மையார் தமது ஞானத் திருமுலை சுரந்து ஞான அமுது ஊட்டப் பெற்ற பாலறாவாயர் வந்தார் எனக் கூறி ஊதினர்.
2121. புணர்ந்த மெய்த்தவக் குழாத்தொடும் போதுவார் முன்னே
இணைந்த நித்திலத் திலங்கொளி நலங்கிளர் தாரை
அணைந்த மாமறை முதற்கலை அகிலமும் ஓதா
துணர்ந்த முத்தமிழ் விரகன்வந் தானென ஊத.
தெளிவுரை : கூடிய மெய்த்தவ முனிவர் குழுவுடன் செல்கின்றவர் முன்பு, இணைந்த முத்துக்களின் விளங்கும் ஒளிப்பெருமை சூழ்ந்து கிளர்தற்கு இடமான தாரை என்ற சின்னம், பெரிய வேதங்களும் அவற்றின் வழித்தாய் வரும் எல்லாச் சாகைகளும் ஒதாமல் உணர்ந்தவரான முத்தமிழ் விரகர் வந்தார் எனக் கூறி ஊதினர். இங்ஙனமாக,
2122. தெருளும் மெய்க்கலை விளங்கவும் பாருளோர் சிந்தை
இருளும் நீங்கவும் எழுதுசொன் மறையளிப் பவர்தாம்
பொருளும் ஞானமும் போகமும் போற்றியென் பாருக்
கருளும் அங்கணர் திருவரத் துறையைவந் தணைந்தார்.
தெளிவுரை : தெளிவைத் தரும் உண்மைக் கலைகள் விளங்கும்படியும், அதனுடன் உலகத்தில் உள்ளவரின் சிந்தையில் தங்கிய இருளும் நீங்கும்படியும், எழுதும் சொல் மறையை அளிப்பவரான ஆளுடையபிள்ளையார், போற்றி என்று துதிப்பவர்க்குப் பொருளையும் ஞானத்தையும் இன்பத்தையும் அளிக்கும் சிவபெருமானின் திருவரத் துறையை வந்து அடைந்தார்.
2123. வந்து கோபுர மணிநெடு வாயில்சேய்த் தாகச்
சந்த நித்திலச் சிவிகைநின்றிழிந்துதாழ்ந் தெழுந்து
சிந்தை ஆர்வமும் மகிழ்ச்சியும் பொங்கிமுன் செல்ல
அந்தி நாண்மதி அணிந்தவர் கோயிலுள் அடைந்தார்.
தெளிவுரை : அந்தத் தவத்தில் வந்து, கோபுர வாயில் தொலைவிலே தோன்றிய அளவில், அழகிய முத்துச் சிவிகையினின்றும் கீழே இறங்கி நிலத்தில் விழுந்து, தூல லிங்கமான அக்கோபுரத்தை வணங்கி எழுந்து, உள்ளத்தில் எழுந்த ஆசையும் மகிழ்ச்சியும் மேலும் மேலும் பொங்கித் தமக்கு முன்னால் போக, மாலைக் காலத்தில் தோன்றும் பிறைச் சந்திரனைச் சூடிய திருவரத்துறை இறைவரின் திருக் கோயிலுக்குள் புகுந்தார்.
2124. மன்னுகோயிலை வலங்கொண்டு திருமுன்பு வந்து
சென்னி யிற்கரங் குவித்துவீழ்ந் தன்பொடு திளைப்பார்
என்னை யும்பொரு ளாகஇன்னருள்புரிந் தருளும்
பொன்ன டித்தலத் தாமரை போற்றி என் றெழுந்தார்.
தெளிவுரை : பொருந்திய அக்கோயிலை வலம்வந்து, திருமுன்பு வந்து, தலை மீது கைகளைக் குவித்து, நிலத்தில் விழுந்து, அன்பில் திளைப்பவராய், என்னையும் ஒரு பொருளாகக் கொண்டு இனிய அருளைச் செய்யும் பொன்னடித் தலங்களான தாமரைகளுக்கு வணக்கம் ! என்று எழுந்து துதித்தார்.
2125. சூடி னார்கர கமலங்கள் சொரிந்திழி கண்ணீர்
ஆடி னார்திரு மேனியில்அரத்துறை விரும்பி
நீடி னார்திரு அருட்பெருங்கருணையே நிகழப்
பாடி னார்திருப் பதிகம்ஏழிசையொடும் பயில.
தெளிவுரை : கைம்மலர்களைத் தலைமேல் சூடிக்கொண்டார். பெருகி வழிகின்ற கண்ணீர்த் தாரையினால் திருமேனி நனைய ஆடினார்; திருவரத்துறையை விரும்பிப் பழைமையாய் வீற்றிருந்தருளும் இறைவரின் கருணை நிகழுமாறு ஏழிசையுடன் பொருந்தத் திருப்பதிகம் பாடினார்.
2126. இசைவி ளங்கிட இயல்பினில் பாடிநின் றேத்தி
மிசைவி ளங்குநீர் வேணியார் அருளினால் மீண்டு
திசைவி ளங்கிடத் திருவருள் பெற்றவர் சிலநாள்
அசைவில் சீர்த்தொண்டர் தம்முடன் அப்பதி அமர்ந்தார்.
தெளிவுரை : ஏழ் இசையும் விளங்கும்படி இயல்பில் திருப்பதிகத்தைப் பாடி நிறைவாக்கி நின்று துதித்து, மேலே கங்கை நீர் விளங்குவதற்கு இடமான சடையை யுடைய சிவ பெருமானின் திருவருள் பெற்று, அங்கு நின்று மீண்டும் எழுந்தருளி, எல்லாத் திக்குகளில் உள்ளவரும் சிவஞானம் பெற்றுய்யும்படி திருவருள் பெற்றவரான சம்பந்தர், சில நாட்கள் அத்தலத்தில் அசைவற்ற சிறப்புடைய தொண்டர்களுடன் விரும்பி எழுந்தருளி இருந்தார்.
2127. தேவர் தம்பிரான் திருவரத் துறையினில் இறைஞ்சி
மேவு நாள்களில் விமலனார் நெல்வெண்ணெய் முதலாத்
தாவில் அன்பர்கள் தம்முடன் தொழுதுபின் சண்பைக்
காவ லார்அருள் பெற்றுடன் கலந்துமீண் டணைந்தார்.
தெளிவுரை : தேவரின் தலைவரான சிவபெருமானின் திருவரத் துறையில் உள்ள அந்த இறைவரை வணங்கி அங்கிருந்த நாட்களில், சிவபெருமானின் திருவெண்ணெய் முதலான தலங்களைக் குற்றம் அற்ற அன்பர்களுடனே தொழுது, பின் சீகாழித்தலைவரான பிள்ளையார் இறைவரின் திருவருளைப் பெற்று, உடன் கலந்திருந்து, மீண்டும் திருவரத் துறையில் வந்து சேர்ந்தார்.
2128. விளங்கு வேணுபு ரத்திருத் தோணிவீற் றிருந்த
களங்கொள் கண்டர்தங்காதலி யாருடன்கூட
உளங்கொ ளப்புகுந் துணர்வினில் வெளிப்பட உருகி
வளங்கொள் பூம்புனற் புகலிமேற் செலமனம் வைத்தார்.
தெளிவுரை : பிள்ளையார், வணங்கும்வேணுபுரமான சீகாழியில் திருத்தோணிக் கோயிலில் வீற்றிருந்த திருநீலகண்டரான இறைவர் தம் தேவியராகிய பெரிய நாயகி அம்மையாருடன் கூடத் தம் உள்ளத்தே இடம் கொள்ள நிறைந்து உள் புகுந்து உணர்வில் வெளிப்படக் கண்டு, உள்ளம் உருகி வளம் உடைய அழகிய நீர் பொருந்திய சீகாழிக்குச் செல்ல உள்ளம் கொண்டார்.
2129. அண்ண லார்திரு வரத்துறை அடிகளை வணங்கி
நண்ணு பேரரு ளால்விடை கொண்டுபோய் நடங்கொண்
டுண்ணி றைந்தபூங் கழலினை உச்சிமேற் கொண்டே
வெண்ணி லாமலர் நித்திலச் சிவிகைமேற் கொண்டார்.
தெளிவுரை : பெருமையுடைய திருவரத்துறை இறைவரை வணங்கிப் பொருந்திய அவரது பெருந்திருவருளினால் விடைபெற்றுக் கொண்டு சென்று, ஆனந்தக் கூத்தியற்றி உள்ளே நிறைந்த அழகிய திருவடிகளைத் தலைமீது கொண்ட வண்ணம் வெண்மையான நிலவு ஒளி வீசும் முத்துச் சிவிகையின் மீது ஏறினார்.
2130. சிவிகை முத்தினிற் பெருகொளி திசையெலாம் விளக்கக்
கவிகை வெண்மதிக் குளிரொளி கதிர்செய்வான் கலப்பக்
குவிகை மேற்கொண்டு மறையவர் குணலையிட் டாடப்
புவிகைம் மாறின்றிப் போற்றவந் தருளினார் போந்தார்.
தெளிவுரை : சிவிகையில் பதிக்கப் பெற்ற முத்தினின்று பெருகும் ஒளி எல்லாத் திசைகளையும் விளக்கவும், மேலே கவித்த முத்துக் குடையின் வெண்மையான மதி போன்ற ஒளி சூரியனது ஒளி பரவுகின்ற வானத்தில் கலக்கவும், குவித்த கைகளை மேலே கொண்டு அந்தணர்கள் ஆனந்த மேலீட்டால் குணலைக் கூத்து இட்டு மேலே ஆடவும், உலகத்தை எந்தக் கைம்மாறும் இல்லாமல் காக்கும் பொருட்டாக வந்தவதரித்த பிள்ளையார் வந்தார்.
2131. மறைமு ழங்கின தழங்கின வண்தமிழ் வயிரின்
குறைந ரன்றன முரன்றன வளைக்குலங் காளம்
முறையி யம்பின இயம்பல ஒலித்தன முரசப்
பொறை கறங்கின பிறங்கின போற்றிசை அரவம்.
தெளிவுரை : வேதங்கள் ஒலித்தன; வளமையுடைய தமிழ் மறைகள் ஒலித்தன; கொம்புகளின் குறைகள் ஒலித்தன; சங்கின் கூட்டங்கள் ஒலித்தன; எக்காளங்கள் முறையான மெய்க்கீர்த்திகளைக் கூறி ஒலித்தன; மற்றும் பலவகை வாத்தியங்கள் ஒலித்தன; முரசுகளான பெரிய இயங்கள் ஒலித்தன; அடியவர் துதிக்கும் ஒலி இவற்றின் மேலாய் ஒலித்தன.
2132. உடைய பிள்ளையார் வருமெல்லை யுள்ளஅப் பதியோர்
புடையி ரண்டினுங் கொடியொடு பூந்துகில் விதானம்
நடைசெய் காவணம் தோரணம் பூகநற் கதலி
மிடையு மாலைகள் நிறைகுடம் விளக்கொடு நிரைத்தார்.
தெளிவுரை : ஆளுடைய பிள்ளையார் வரும் இடங்களில் உள்ள ஊரவர்கள், இரண்டு பக்கங்களிலும், கொடியுடன் அழகிய துகில்களையும் நடைக் காவணங்களையும் தோரணங்கள் பாக்கு வாழை நெருங்கிய மாலைகள் என்ற இவற்றால் செய்யும் அலங்காரங்களையும் விளக்குடன் நீர் நிறை குடங்களையும் வரிசைப்பட வைத்தனர்.
2133. அனைய செய்கையால் எதிர்கொளும் பதிகளா னவற்றின்
வினைத ரும்பவந் தீர்ப்பவர் கோயில்கள் மேவிப்
புனையும் வண்டமிழ் மொழிந்தடி பணிந்துபோந் தணைந்தார்
பனைநெ டுங்கைமா வுரித்தவர் மகிழ்பெரும் பழுவூர்.
தெளிவுரை : அத்தகைய செய்கைகளால் தம்மை எதிர் கொண்ட தலங்களில், வினை காரணமாக வரும் பிறவிகளை விலக்கியருளும் இறைவரின் திருக்கோயில்களில் போய்ப் புனையும் வளமை கொண்ட தமிழ்ப் பதிகங்களைப் பாடி, இறைவரது அடிகளை வணங்கிச் சென்று, பனை போன்ற நீண்ட கையையுடைய யானையை உரித்த சிவபெருமான் வீற்றிருக்கும் திருப்பழுவூர் என்ற தலத்தைப் பிள்ளையார் அடைந்தார்.
2134. அங்கணைந் திளம்பிறை அணிந்த சென்னியார்
பொங்கெழிற் கோபுரந் தொழுது புக்கபின்
துங்கநீள் விமானத்தைச் சூழ்ந்து வந்துமுன்
பங்கயச் சேவடி பணிந்து பாடுவார்.
தெளிவுரை : அங்கே சேர்ந்து, பிறைச் சந்திரனைச் சூடிய தலையையுடைய இறைவரின் பெருகும் அழகுடைய திருக்கோபுரத்தை வணங்கிக், கோயிலுள் புகுந்து, பின்பு, பெரிய விமானத்தைச் சூழ்ந்து வலம் வந்து, திருமுன்பு போய்த், தாமரை போன்ற திருவடிகளைத் தொழுது பாடுபவராய்,
2135. மண்ணினிற் பொலிகுல மலையர் தாந்தொழு
தெண்ணில்சீர்ப் பணிகள்செய் தேத்துந் தன்மையில்
நண்ணிய வகைசிறப் பித்து நாதரைப்
பண்ணினில் திகழ்திருப் பதிகம் பாடினார்.
தெளிவுரை : இம்மண் உலகில் சிறந்து விளங்கும் அந்தணர் குலத்தில் வந்த மலையாளர் தொழுது எண்ணற்ற சிறந்த பணிகள் செய்து துதிக்கும் தன்மையில் பொருந்தியுள்ள வகைகளைச் சிறப்பித்து இறைவரைப் பண் இசையால் விளங்கும் திருப்பதிகம் பாடினார்.
2136. பாவின திசைவழி பாடி அங்ககன்
றியாவருந் தொழுதுட னேத்த எய்தினார்
மூவுல குய்யநஞ் சுண்ட மூர்த்தியார்
மேவிய பெருந்திரு விசய மங்கையில்.
தெளிவுரை : திருப்பதிகத்தை இசை வழியே பாடி, அங்கு நின்றும் சென்று, எல்லாரும் உடன் கூடித் துதிக்குமாறு, மூன்று உலகங்களும் உய்ய நஞ்சை உண்டருளிய இறைவர் விரும்பி எழுந்தருளியுள்ள பெருந் திருவிசய மங்கை என்ற தலத்தில் போய்,
2137. அந்தணர் விசயமங் கையினில் அங்கணர்
தந்தனி ஆலயஞ் சூழ்ந்து தாழ்ந்துமுன்
வந்தனை செய்துகோ தனத்தை மன்னிய
செந்தமிழ் மாலையிற் சிறப்பித் தேத்தினார்.
தெளிவுரை : மறையவர் வாழ்கின்ற விசய மங்கை என்ற தலத்தில் சிவபெருமானின் ஒப்பற்ற திருக்கோயிலை வலம் வந்து முன்னால் வணங்கி நின்று, அங்குப் பசுக் களும் காமதேனுவும் வழிபட்ட செயலை நிலைபெறச் செந்தமிழ்ப் பதிகத்தில் சிறப்பித்து எடுத்துத் துதித்தனர்.
2138. விசயமங் கையினிடம் அகன்று மெய்யர்தாள்
அசைவில்வை காவினில் அணைந்து பாடிப்போந்
திசைவளர் ஞானசம் பந்தர் எய்தினார்
திசையுடை ஆடையர் திருப்பு றம்பயம்.
தெளிவுரை : பின்பு விசய மங்கை என்ற பதியினின்று நீங்கிச் சென்று, அசைவில்லாத வைகா என்ற தலத்தை அடைந்தார். அங்குச் சத்தே சொரூபமாய் உடைய இறைவரின் திருவடிகளைப் பாடிச் சென்று, தமிழ் இசையை வளர்க்கின்ற சம்பந்தர், திக்குகளையே ஆடையாய்க் கொண்ட இறைவரின் திருப்புறம்பயம் என்ற பதியை அடைந்தார்.
2139. புறம்பயத் திறைவரை வணங்கிப் போற்றிசெய்
திறம்புரி நீர்மையிற் பதிகச் செந்தமிழ்
நிறம்பயி லிசையுடன் பாடி நீடிய
அறந்தரு கொள்கையார் அமர்ந்து மேவினார்.
தெளிவுரை : திருப்புறம்பயத்தில் எழுந்தருளிய சிவபெருமானை வணங்கித் துதிக்கும் திறம் புரிகின்ற தன்மையில் வரும் பதிகமான செந்தமிழை வண்ணம் மிகும் இசையுடன் பாடி, நீடும் அறத்தை உதவும் கொள்கையினரான பிள்ளையார் அங்கு விருப்புடன் தங்கியிருந்தார்.
2140. அத்திருப் பதிபணிந் தகன்று போய்அனல்
கைத்தலத் தவர்பதி பிறவுங் கைதொழு
முத்தமிழ் விரகராம் முதல்வர் நண்ணினார்
செய்த்தலைப் பணிலமுத்து ஈனுஞ் சேய்ஞலூர்.
தெளிவுரை : அந்தத் திருப்புறம்பயம் என்ற தலத்தைப் பணிந்து சென்று தீயை ஏந்திய கையையுடைய இறைவரின் திருப்பதிகள் பலவற்றையும் வணங்கும் முத்தமிழ் வல்லரான பிள்ளையார், வயல்களில் சங்குகள் முத்துக்களை ஈனுவதற்கு இடமான திருச்சேய்ஞலூர் வந்தடைந்தார்.
2141. திருமலி புகலிமன் சேரச் சேய்ஞலூர்
அருமறை யவர்பதி அலங்க ரித்துமுன்
பெருமறை யொடுமுழ வொலிபி றங்கவே
வருமுறை எதிர்கொள வந்து முந்தினார்.
தெளிவுரை : செல்வம் மிக்க சீகாழித்தலத் தலைவர் இங்ஙனம் வர, சேய்ஞலூரில் வாழ்கின்ற அந்தணர்களும் தம் பதியை அலங்காரம் செய்து, முன்பாக வேத முழக்கத்துடன், மங்கல முழவுகளின் ஒலியும் விளங்க வரும் முறைமையின்படி பிள்ளையாரை எதிர் கொள்ளும் பொருட்டாய் வந்தனர்.
2142. ஞானசம் பந்தரும் நாய னார்சடைத்
தூநறுந் தொடையல்முன் சூட்டும் பிள்ளையார்
பான்மையில் வரும்பதி என்று நித்தில
யானமுன் இழிந்தெதிர் இறைஞ்சி எய்தினார்.
தெளிவுரை : திருஞான சம்பந்தப் பெருமானும், இறைவர் தம் சடையில் சாத்திய தூய நறிய கொன்றை மலர் மாலையை முன்னர்ச் சூட்டும் சண்டீசர், பான்மையினால் வந்து தோன்றிய தலம் இது என்று மனத்துள் எண்ணி, முத்துப் பல்லக்கினின்று இழிந்து, எதிர் வணங்கி வந்து சேர்ந்தார்.
2143. மாமறை யாளர்வண் புகலிப் பிள்ளையார்
தாம்எழுந் தருளிடத் தங்கள் பிள்ளையார்
காமரும் பதியில்வந் தருளக் கண்டன
ராமகிழ் வுடன்பணிந் தாடி ஆர்த்தனர்.
தெளிவுரை : பெருமையுடைய அந்தணர்கள், வண்மையுடைய சீகாழிப் பிள்ளையார் அங்ஙனம் எழுந்தருளி வர, தங்களின் சண்டீசப் பிள்ளையாரே அழகிய பதியில் அன்று மீண்டும் எழுந்தருளி வரக் கண்டது போன்ற மகிழ்வுடன் வணங்கியும் ஆடியும் ஆரவாரம் செய்தனர்.
2144. களித்தனர் புண்ணியக் கரக வாசநீர்
தெளித்தனர் பொரிகளும் மலருஞ் சிந்தினர்
துளித்தனர் கண்மழை சுருதி யாயிரம்
அளித்தவர் கோயிலுள் அவர்முன் பெய்தினார்.
தெளிவுரை : அவ்வூரார் இங்ஙனம் மகிழ்ச்சியடைந்து கமண்டலத்தில் உள்ள மணம் கொண்ட நீரைத் தெளித்தனர். பொரிகளையும் மலர்களையும் சொரிந்தனர். ஆனந்தக் கண்ணீர் சிந்தினர். அளவற்ற வேதங்களை அளித்த சிவபெருமானது திருக்கோயிலில் புகுந்து அப்பிள்ளையாரின் முன்னர்ச் சென்றனர்.
2145. வெங்குரு வேந்தரும் விளங்கு கோயிலைப்
பொங்கிய விருப்பினால் புடைவ லங்கொடு
செங்கைகள் சென்னிமேற் குவித்துச் சென்றுபுக்
கங்கணர் முன்புற அணைந்து தாழ்ந்தனர்.
தெளிவுரை : வெங்குரு என்ற சீகாழித் தலைவரான பிள்ளையாரும், விளங்கும் கோயிலை மிக்க விருப்பத்துடன் சுற்றி வலமாய் வந்து, சிவந்த கைகளைத் தலை மேல் குவித்து, உள்ளே புகுந்து, இறைவரின் திருமுன்பு சேர்ந்து வணங்கினார்.
2146. வேதியர் சேய்ஞலூர் விமலர் தங்கழல்
காதலிற் பணிந்தவர் கருணை போற்றுவார்
தாதைதாள் தடிந்தசண் டீசப் பிள்ளையார்
பாதகப் பயன்பெறும் பரிசு பாடினார்.
தெளிவுரை : அந்தணர் வாழ்வதற்கு இடமான சேய்ஞலூரில் வந்தருளிய விமலரின் திருவடிகளை வணங்கி அப்பெருமானின் அருள் திறத்தைத் துதிப்பவரான பிள்ளையார், தம் தந்தையின் காலை வெட்டிய சண்டீசப் பிள்ளையார், பாதகச் செயலான அதற்குப் பயனாய் இறைவரின் மகனார் ஆன தன்மையைப் போற்றிப் பாடினார்.
2147. இன்னிசை வண்டமிழ் பாடி ஏத்தியே
நன்னெடும் பதியுளோர் நயக்க வைகிய
பின்னர்வெண் பிறையணி வேணிப் பிஞ்ஞகர்
மன்னிய திருப்பனந் தாள்வ ணங்கினார்.
தெளிவுரை : இனிய இசையுடன் கூடிய வண்டமிழ்ப் பதிகம் பாடித் துதித்து நல்ல பழைமையுடைய அந்தத் தலத்தில் உள்ளவர் விரும்பியதால் அங்குத் தங்கியிருந்தார். பின்பு வெண்மையான பிறையைச் சூடிய சடையப்பர் நிலை பெற்றுள்ள திருப்பனந்தாள் சென்று தொழுதார்.
2148. ஆங்கணி சொல்மலர் மாலை சாத்திஅப்
பாங்குபந் தணைநலூர் பணிந்து பாடிப்போய்த்
தீங்குதீர் மாமறைச் செம்மை அந்தணர்
ஓங்கும்ஓ மாம்புலி யூர்வந் துற்றனர்.
தெளிவுரை : அந்தத் திருப்பனந்தாளில் அழகிய சொல் மலர்களால் ஆன பதிக மாலையைச் சாத்தினார். பின்பு, அவ்வூர்க்குப் பக்கத்தில் உள்ள திருப் பந்தணை நல்லூரைப் பணிந்து துதித்து, மேலே போய்த், தீமையைத் தீர்க்கும் பெருமறை பயிலும் வேதியர் விளங்கி உயர்வதற்கு இடமான திரு ஓமாம் புலியூரினில் வந்து சேர்ந்தார் சீகாழித் தலைவர்.
2149. மற்றநற் பதிவட தளியின் மேவிய
அற்புதர் அடிபணிந் தலர்ந்த செந்தமிழ்ச்
சொற்றொடை பாடிஅங் ககன்று சூழ்மதில்
பொற்பதி வாழ்கொளி புத்தூர் புக்கனர்.
தெளிவுரை : அந்த ஓமாம்புலியூரில் வடதளிக் கோயிலில் எழுந்தருளிய அற்புதரான சிவபெருமானின் திருவடிகளை வணங்கினார்; விளங்கும் செந்தமிழால் ஆன பதிகத்தைப் பாடினார்; அங்கிருந்து புறப்பட்டுச் சென்று சூழ்ந்த மதிலையுடைய அழகிய பதியான திருவாழ்கொளிப் புத்தூரில் வந்து புகுந்தார்.
2150. சீர்வளர் கோயிலை அணைந்து தேமலர்க்
கார்வளர் கண்டர்தாள் பணிந்து காண்பவர்
பார்புகழ் பதிகங்கள் பாடி நீடுவார்
வார்புகழ்க் கடம்பையும் வணங்கி வாழ்ந்தனர்.
தெளிவுரை : சிறப்பு ஓங்கும் கோயிலை அடைந்து தேன் பொருந்திய கருங்குவளை மலர் போன்ற கரிய நிறம் வளர்வதற்கு இடமான கழுத்தையுடைய இறைவரின் திருவடிகளை வணங்கிக் காண்பவராய் உலகம் புகழும் திருப்பதிகங்களைப் பாடியருளிய பிள்ளையார் நிறைந்த புகழைக் கொண்ட திருக்கடம்பூரையும் வணங்கினார்.
2151. நம்பரை நலந்திகழ் நாரை யூரினில்
கும்பிடும் விருப்பொடு குறுகிக் கூடிய
வம்பலர் செந்தமிழ் மாலை பாடிநின்
றெம்பிரான் கவுணியர் தலைவர் ஏத்தினார்.
தெளிவுரை : இறைவரை நன்மை விளங்கும் திருநாரையூரில் கும்பிடும் விருப்புடன் சென்று சேர்ந்து, தொகை யாகச் சேர்ந்த சிவமணம் மிகுந்த மாலைகளான திருப்பதிகங்களைப் பாடிநின்று எம் தலைவரான கவுணியர் குலத்தவர் வணங்கினார்.
2152. அப்பதி பணிந்தருந் தமிழ்பு னைந்துதம்
மெய்ப்படு விருப்பொடு மேவு நாள்அரன்
பொற்பதி பலவுமுன் பணிந்து போந்தனர்
பைப்பணி யவர்கருப் பறிய லூரினில்.
தெளிவுரை : அந்தத் தலத்தை வணங்கி அரிய தமிழான பதிகத்தைப் பாடித் தம் உண்மை கொண்ட விருப்புடன் அங்கு இருந்தார். அந்நாட்களில் இறைவரின் அழகிய பதிகள் பலவற்றையும் சென்று பணிந்து, பையையுடைய பாம்பைச் சூடிய இறைவர் வீற்றிருக்கும் திருக்கருப்பறியலூர் வந்து சேர்ந்தார்.
2153. பரமர்தந் திருக்கருப் பறிய லூரினைச்
சிரபுரச் சிறுவர்கை தொழுது செந்தமிழ்
உரையிசை பாடிஅம் மருங்கி னுள்ளவாம்
சுரர்தொழும் பதிகளுந் தொழுது பாடினார்.
தெளிவுரை : சீகாழியில் தோன்றிய பிள்ளையார் சிவபெருமானின் திருக்கருப்பறியலூரை வணங்கிச் செந்தமிழ்ப் பதிகத்தைப் பாடி அங்குப் பக்கத்தில் உள்ள தேவர் வணங்குகின்ற பிற தலங்களையும் வணங்கிப் பாடினார்.
2154. மண்ணுலகு செய்ததவப் பயனா யுள்ள
வள்ளலார் அப்பதிகள் வணங்கி ஏகி
எண்ணில்முர சிரங்கியெழப் பணிலம் ஆர்ப்ப
இலங்கியகா ளம்சின்னம் எங்கும்ஊதக்
கண்வளர்மென் கரும்புமிடை கதிர்செஞ் சாலி
கதலிகமு குடன்ஓங்குங் கழனி நாட்டுத்
தெண்ணிலவு சூடியதம் பெருமான் வைகுந்
திருப்பிரம புரஞ்சாரச் செல்லும் போது.
தெளிவுரை : இம்மண் உலகம் செய்த தவப்பயனால் அவதரித்த வள்ளலாரான பிள்ளையார் அந்தத் தலங்கள் பலவற்றையும் வணங்கி, அப்பால் சென்று, அளவற்ற முரசுகள் எழுந்து ஒலிக்கவும், சங்குகள் ஒலிக்கவும், விளங்கும் எக்காளங்களும் சின்னங்களும் எங்கும் இயம்பவும், கணுக்கள் வளரும் மென்மையான கரும்புகளும் நெருங்கிய கதிர்களையுடைய செந்நெல்லும், வாழைகளும், கமுகுகளும் ஒருங்கே ஓங்கும் வயல்கள் பொருந்திய சோழ நாட்டில், தெளிந்த பிறையைச் சூடிய தம் இறைவர் எழுந்தருளியுள்ள திருப் பிரமபுரம் என்ற சீகாழியைச் சாரச் செல்லும் போது,
2155. பிள்ளையார் எழுந்தருளக் கேட்ட செல்வப்
பிரமபுரத் தருமறையோர் பெருகு காதல்
உள்ளமகிழ் சிறந்தோங்கத் தோணி மேவும்
உமைபாகர் கழல்வணங்கி உவகை கூர
வெள்ளமறை ஒலிபெருகு மறுகு தோறும்
மிடைமகர தோரணங்கள் கதலி பூகம்
தெள்ளுபுனல் நிறைகுடங்கள் தீப தூபம்
செழுங்கொடிகள் நிறைத்தெதிர்கொள் சிறப்பிற் செல்வார்.
தெளிவுரை : பிள்ளையார் தம் பதிக்கு வருகின்றார் என்பதைக் கேட்ட செல்வம் பொருந்திய பிரமபுரத்தில் வாழ்கின்ற அந்தணர்கள் பெருங்காதலால் தம் உள்ளங்களில் மகிழ்ச்சி பெருகி எழுதலால் திருத்தோணியில் எழுந்தருளிய பெரிய நாயகியாரை ஒரு பாகத்தில் கொண்ட இறைவரின் திருவடிகளை வணங்கி, மகிழ்ச்சி மிக, பல வேதங்களின் ஒலி பெருகும் திரு வீதிகளில் எல்லாம் நெருங்கிய மகர தோரணங்கள், வாழை, பாக்கு, தெளிந்த நீர் உடைய குடங்கள், விளக்குகள், தூபம், செழுங்கொடிகள் என்னும் இவற்றை வரிசையாய் அமைத்து வரவேற்கும் சிறப்புகளை மிகுதியாய்ச் செய்து,
2156. ஆரணங்கள் மதுரவொலி எழுந்து பொங்க
அரசிலையுந் தருப்பையும்பெய் தணிந்த வாசப்
பூரணகும் பங்கள்நிறை கரகம்ஏந்திப்
புதுமலரும் நறுந்துகளும் பொரியுந் தூவி
வாரணங்கு முலைஉமையாள் குழைத்த செம்பொன்
வள்ளத்தில் அமுதுண்ட வள்ள லாரைச்
சீரணங்கு மணிமுத்தின் சிவிகை மீது
செழுந்தரளக் குடைநிழற் கீழ்ச்சென்று கண்டார்.
தெளிவுரை : அவ்வூரார் வேதங்களின் இனிய ஒலி எழுந்து பெருக, அரச இலையும் தருப்பையும் இட்டு அலங்காரம் செய்த மணமுடைய பூரண கும்பங்களையும் நிறைந்த கரகங்களையும் தாங்கி, புதிய மலர்களையும் மணச் சுண்ணத்தையும் பொரியையும் தூவிக் கச்சுப் பொருந்திய கொங்கைகளையுடைய உமையம்மையார் தந்த செம்பொன் கிண்ணத்தில் சிவஞானத்துடன் குழைந்த பால் அமுதத்தை உண்ட வள்ளலான பிள்ளையாரைச் சிறந்த முத்துச் சிவிகையின் மீது செழுமையான முத்துக் குடையின் கீழ்க் கண்டனர்.
2157. கண்டபொழு தேகைகள் தலைமேற் கொண்டு
கண்களிப்ப மனங்களிப்பக் காதல் பொங்கித்
தொண்டர்களும் மறையவரும் சென்று சூழ்ந்து
சொல்லிறந்த மகிழ்ச்சியினால் துதித்த ஓசை
எண்திசையும் நிறைவித்தார் ஆடை வீசி
இருவிசும்பின் வெளிதூர்த்தார் ஏறு சீர்த்தி
வண்டமிழ்நா யகரும்இழிந் தெதிரே சென்று
வணங்கியவ ருடன்கூடி மகிழ்ந்து புக்கார்.
தெளிவுரை : பார்த்தவுடனே தலைகள் மீது கைகளைக் குவித்துக் கண்கள் களிப்படையவும் உள்ளம் மகிழவும் காதல் பெருகித் தொண்டர்களும் அந்தணர்களும் சென்று பிள்ளையாரைச் சூழ்ந்து சொல்லைக் கடந்த மகிழ்ச்சியால் துதித்த ஓசை எட்டுத் திக்குகளிலும் நிறையுமாறு செய்தார். தம் ஆடைகளை வீசி வானத்தைத் தூர்த்தனர். மேலும் மேலும் பெருகும் புகழையுடைய ஆளுடைய தமிழ்த்தலைவரான பிள்ளையாரும் சிவிகையினின்றும் கீழே இறங்கி அவர்கள் எதிரே போய் வணங்கி அவர்களுடன் கூடி மகிழ்ந்து நகரத்துள் புகுந்தார்.
2158. திங்களணி மணிமாடம் மிடைந்தவீதி
சென்றணைந்து தெய்வமறைக் கற்பின் மாதர்
மங்கலவாழ்த் திசையிரண்டு மருங்கும் மல்க
வானவர்நா யகர்கோயில் மருங்கு சார்ந்து
துங்கநிலைக் கோபுரத்தை இறைஞ்சிப் புக்குச்
சூழ்ந்துதிருத் தோணிமிசை மேவி னார்கள்
தங்கள்திரு முன்புதாழ்ந் தெழுந்து நின்று
தமிழ்வேதம் பாடினார் தாளம் பெற்றார்.
தெளிவுரை : சந்திரனைத் தாங்குமாறு உயர்ந்த அழகிய மாளிகைகள் நிறைந்த தெருவில் போய் அணைந்து, கடவுள் தன்மை கொண்ட மறைவழி வந்த கற்புடைய மங்கையர் முழக்கும் மங்கல வாழ்த்து இரு பக்கங்களிலும் நிறைய, இறைவரது பெரிய நிலைகளையுடைய கோபுரத்தை வணங்கிக், கோயிலுள் புகுந்து, வலம் வந்து, திருத்தாளம் பெற்றவரான பிள்ளையார், திருத்தோணியில் எழுந்தருளிய இறைவரின் திருமுன்பு வீழ்ந்து வணங்கி எழுந்து தமிழ் வேதமான பதிகத்தைப் பாடினார்.
2159. பரவுதிருப் பதிகஇசை பாடி நீடும்
பரங்கருணைத் திருவருளின் பரிசு போற்றி
விரவுமலர்க் கண்பனிப்பக் கைகள் கூப்பி
வீழ்ந்தெழுந்து புறம்போந்து வேத வாய்மைச்
சிரபுரத்துப் பிள்ளையார் செல்லும் போது
திருநீல கண்டயாழ்ப் பாணர் பின்னே
வரஅவரை வளம்பெருகு மனையிற் போக
அருள்செய்து தந்திருமா ளிகையின் வந்தார்.
தெளிவுரை : போற்றும் இசை பொருந்திய திருப்பதிகத்தைப் பாடிப் பெருங்கருணை செய்த திருவருளின் தன்மையைத் துதித்து, பொருந்திய மலர் போன்ற கண்கள் இன்ப நீரைச் சிந்தக் கைகளைத் தலைமேல், குவித்து, வீழ்ந்து வணங்கி வெளியே வந்து, வேத வாய்மை விளங்கும் சீகாழிப் பிள்ளையார் சென்றார். அப்போது திருநீலகண்ட யாழ்ப்பாணர் தம் பின்னே வர, அவரை வளம் பெருகும் அவரது இல்லத்துக்குப் போகும்படி செய்து தம் மாளிகையின் அருகில் வந்தார்.
2160. மறையவர்கள் அடிபோற்றத் தந்தை யாரும்
மருங்கணைய மாளிகையில்அணையும் போதில்
நிறைகுடமும் மணிவிளக்கும் முதலா யுள்ள
நீதிமறைக் குலமகளிர் நெருங்கி யேந்த
இறைவர்திரு நீற்றுக்காப் பேந்தி முன்சென்
றீன்றதா யார்சாத்தி இறைஞ்சி ஏத்த
முறைமையவர்க் கருள்செய்து மடத்தில் புக்கார்
முதல்வர்பால் மணிமுத்தின் சிவிகை பெற்றார்.
தெளிவுரை : வேதியர்கள் தம் அடிகளை வணங்கத் தந்தையாரும் தம் பக்கத்தில் அணையத் தம் திருமாளிகையை அடையும் போது, நீதி மறைக்குல மடந்தையர் நிறை குடத்தையும் அழகிய விளக்குகளையும் ஏந்தி நிற்க, (அவரைப் பெற்ற) தாயார் சிவபெருமானின் திருநீற்றுக் காப்பினை ஏந்தி முன்னேவந்து சாத்திப் பணிந்து பாராட்ட, முறைமைப்படி அவரவர்க்கு அருள் செய்து, முதல்வரிடம் மணி முத்துச் சிவிகை பெற்றவரான பிள்ளையார் திருமடத்துள் புகுந்தார்.
2161. செல்வநெடு மாளிகையில் அமர்ந்து நாளுந்
திருத்தோணி மிசையாரைச் சென்று தாழ்ந்து
மல்குதிருப் பதிகங்கள் பலவும் பாடி
மனமகிழ்ந்து போற்றிசைத்து வைகு நாளில்
ஒல்லைமுறை உபநயனப் பருவ மெய்த
உலகிறந்த சிவஞானம் உணரப் பெற்றார்
தொல்லைமறை விதிச்சடங்கு மறையோர் செய்யத்
தோலொடுநூல் தாங்கினார் சுரர்கள் போற்ற.
தெளிவுரை : செல்வம் பெருகும் நீண்டதம் திருமாளிகையில் இருந்து ஒவ்வொரு நாளும் திருத்தோணியில் எழுந்தருளியவரைப் போய்ப் பணிந்து பொருந்திய பதிகங்கள் பலவற்றையும் பாடி மன மகிழ்ச்சியுடன் போற்றி வந்தார். அந்நாட்களில், விரைவாக முறைப்படி சேரும் உபநயனப் பருவம் வந்து சேர, உலகம் கடந்த சிவஞானத்தை அறியப் பெற்ற பிள்ளையார் தொன்று தொட்டுவரும் வேத விதிகளின்படி உபநயனத்துக்குரிய சடங்குகளை அந்தணர்கள் செய்தனர். தேவர்கள் போற்றும்படி பிள்ளையார் தோலுடனே நூலையும் தாங்கிக் கொண்டார்.
2162. ஒருபிறப்பும் எய்தாமை உடையார் தம்மை
உலகியல்பின் உபநயன முறைமை யாகும்
இருபிறப்பின் நிலைமையினைச் சடங்கு காட்டி
எய்துவிக்கும் மறைமுனிவ ரெதிரே நின்று
வருதிறத்தின் மறைநான்குந் தந்தோம் என்று
மந்திரங்கள் மொழிந்தவர்க்கு மதுர வாக்கால்
பொருவிறப்ப ஓதினார் புகலி வந்த
புண்ணியனார் எண்ணிறந்த புனித வேதம்.
தெளிவுரை : எந்த ஒரு பிறவியிலும் வாராத இயல்புடைய பிள்ளையாரை உலகில் மற்றவர் இயல்பில் அவரை வைத்து, உபநயன முறையான இருபிறப்பின் நிலையைச் சடங்குகளால் காட்டிப் பெறச் செய்கின்ற அந்தணர்கள், எதிரில் நின்று வழி வழி வரும் தன்மையில் நான்கு வேதங்களையும் தந்தோம் என்று உரிய மந்திரங்களைச் சொல்லும் அவர்களுக்குத் தம் இனிய வாக்கினால், சீகாழியில் அவதரித்த புண்ணியமே வடிவான பிள்ளையார், ஒப்பற்ற நிலையில் எண்ணற்ற புனித வேதங்களையும் ஓதினார்.
2163. சுருதியா யிரம்ஓதி அங்க மான
தொல்கலைகள் எடுத்தியம்புந் தோன்ற லாரைப்
பரிதிஆ யிரகோடி விரிந்தால் என்னப்
பரஞ்சோதி அருள்பெற்ற பான்மை மேன்மை
கருதிஆ தரவோடும் வியப்புற் றேத்துங்
கலைமறையோர் கவுணியனார் தம்மைக் கண்முன்
வருதியா னப்பொருள்என் றிறைஞ்சித் தாமுன்
வல்லமறை கேட்டையந் தீர்ந்து வாழ்ந்தார்.
தெளிவுரை : பல வேதங்களையும் முன் சொன்னவாறு கூறி ஓதியதுடன் அவற்றின் அங்கமான பழைய கலைகளையும் எடுத்துக் கூறிய பெருமை வாய்ந்த பிள்ளையாரை, ஆயிரங்கோடிக் கதிரவர்கள் ஒருங்கே கூடி வந்து விரிந்தன போலப் பரஞ்சோதியினது திருவருளைப் பெற்ற பான்மையின் மேன்மையை எண்ணி, அன்பும் வியப்பும் கொண்டு துதிக்கும் அந்த அந்தணர்கள், கவுணியர் பெருமானான பிள்ளையாரைத் தங்கள் கண்முன் வெளிப்பட்டு வரும் தியானப் பொருளே ஆவார் என்று எண்ணி வணங்கித் தாங்கள் முன்னே கொண்ட மறைகளில் ஏற்பட்ட தமக்குள்ள ஐயங்களைக் கேட்டுத் தெளிந்தனர்.
2164. மந்திரங்க ளானவெலாம் அருளிச் செய்து
மற்றவற்றின் வைதிகநூற் சடங்கின் வந்த
சிந்தைமயக் குறும்ஐயந் தெளிய எல்லாஞ்
செழுமறையோர்க் கருளியவர் தெருளும் ஆற்றால்
முந்தைமுதன் மந்திரங்கள் எல்லாந் தோன்றும்
முதலாகும் முதல்வனார் எழுத்தஞ் சென்பார்
அந்தியினுள் மந்திரம் அஞ்செழுத்து மேயென்
றஞ்செழுத்தின் திருப்பதிகம் அருளிச் செய்தார்.
தெளிவுரை : பிள்ளையார் வேத மந்திரங்கள் எல்லாவற்றையும் சொல்லியருளிப் பின், இவற்றுள் வேதத்தில் விதித்த வேள்விச் சடங்குகளில் வந்த அவர்களின் சிந்தையில் கூடிய ஐயங்களை எல்லாம் தெளியுமாறு அந்த அந்தணர்களுக்கு எடுத்துக் கூறினார். அதனுடன், அவர்களின் மனம் தெளியும்படியாய்ப் பழைய முதன்மை பெற்ற எல்லா மந்திரங்களும் தோன்றுதற்குக் காரணம் சிவபெருமானின் திருவைந்தெழுத்தேயாகும் என உபதேசிப்பவராய், அந்தியில் ஓதும் மந்திரமாவது திருவைந்தெழுத்துமேயாகும் என வரும் திருப்பஞ்சாட்சரத் திருப்பதிகத்தை அருள் செய்தார்.
2165. அத்தகைமை பிள்ளையார் அருளிச் செய்ய
அந்தணர்கள் அருள்தலைமேற் கொண்டு தாழ்ந்து
சித்தமகிழ் வொடுசிறப்பத் தாமும் தெய்வத்
திருத்தோணி அமர்ந்தாரைச் சென்று தாழ்ந்து
மெய்த்தஇசைப் பதிகங்கள் கொண்டு போற்றி
விரைமலர்த்தாள் மனங்கொண்டு மீண்டுபோந்து
பத்தருடன் இனிதமரும் பண்பு கூடப்
பரமர்தாள் பணிந்தேத்திப் பயிலும் நாளில்.
தெளிவுரை : அவ்வாறான பதிகத்தைப் பிள்ளையார் பாடியருளவே, அம்மறையவர்கள் அந்த அருளிப் பாட்டினைச் சிரமேல் தாங்கி வணங்கி மனம் மகிழ்ந்தனர். பிள்ளையார் தாமும் தெய்வத் திருத்தோணியில் எழுந்தருளிய இறைவரைச் சென்று பணிந்து உண்மையுடைய இசையுடன் கூடிய திருப்பதிகங்களால் துதித்து அவரது மணம் கமழும் மலர் போன்ற திருவடிகளை உள்ளத்தில் வைத்து மீண்டு வெளியே வந்து அடியார்களுடன் இனிதாய் அமரும் தன்மை கூடுமாறு இறைவரின் திருவடிகளைப் பணிந்து போற்றி இருந்து வந்தார். அந்நாளில்,
2166. பந்தணை மெல்விர லாளும் பரமரும் பாய்விடை மீது
வந்துபொன் வள்ளத் தளித்த வரம்பில்ஞா னத்தமு துண்ட
செந்தமிழ் ஞானசம் பந்தர் திறங்கேட்டி றைஞ்சுதற் காக
அந்தணர் பூந்தராய் தன்னில் அணைந்தனர் நாவுக் கரையர்.
தெளிவுரை : பந்தைப் பழகிய மென்மையான விரலையுடைய உமையம்மையாரும் இறைவரும் காளையூர்தியின் மீது எழுந்தருளி வெளிப்பட்டு வந்து பொற்கிண்ணத்தில் அளித்த எல்லையில்லாத ஞானப் பாலையுண்ட செந் தமிழ்த்தலைவரான திருஞான சம்பந்தரது திறங்களைக் கேட்டு, அவரை வணங்குவதற்காக, அந்தணர்கள் சிறப்புடன் இருக்கும் சீகாழிப் பதியில் திருநாவுக்கரசு நாயனார் வந்தார்.
2167. வாக்கின் பெருவிறல் மன்னர் வந்தணைந் தாரெனக் கேட்டுப்
பூக்கமழ் வாசத் தடஞ்சூழ் புகலிப் பெருந்தகை யாரும்
ஆக்கிய நல்வினைப் பேறென் றன்பர் குழாத்தொடும் எய்தி
ஏற்கும் பெருவிருப் போடும் எதிர்கொள எய்தும் பொழுதில்.
தெளிவுரை : பேராற்றலை யுடைய சொல்மன்னர் வந்துள்ளார் என்பதைக் கேட்டு நீர்ப் பூக்கள் மணம் கமழும் பொய்கைகள் சூழ்ந்த சீகாழியில் வந்தருளிய பெருந்தகையினரான பிள்ளையாரும் இது முன் நல்வினையினால் வந்த பேறாகும் என்று மனத்துள் கொண்டு, அன்பர் கூட்டத்துடன் கூடி, அவரை வரவேற்கும் பெருவிருப்பத்துடனே எதிர்கொண்டு வரவேற்கச் சென்றபோது,
2168. சிந்தை இடையறா அன்பும் திருமேனி தன்னில் அசைவும்
கந்தை மிகையாம் கருத்தும் கையுழ வாரப் படையும்
வந்திழி கண்ணீர் மழையும் வடிவிற் பொலிதிரு நீறும்
அந்தமி லாத்திரு வேடத் தரசும் எதிர்வந் தணைய.
தெளிவுரை : உள்ளத்தில் இடையறாது பெருகும் அன்பும், திருமேனியில் அசைவும், கந்தையும் மிகையாகும் என்ற கருத்தும், கையில் உழவாரப் படையும், வெளிப்பட்டுப் பெருகி வழிகின்ற கண்ணீர் மழையும், திருமேனியில் விளங்கும் திருநீறுமாய், அந்தம் இல்லாத திருவேடத்தையுடைய திருநாவுக்கரசரும் எதிரே வந்தார்.
2169. கண்ட கவுணியக் கன்றும் கருத்திற் பரவுமெய்க் காதல்
தொண்டர் திருவேடம் நேரே தோன்றிய தென்று தொழுதே
அண்டரும் போற்ற அணைந்தங் கரசும் எதிர்வந் திறைஞ்ச
மண்டிய ஆர்வம் பெருக மதுர மொழியருள் செய்தார்.
தெளிவுரை : அங்ஙனம் அவர் வருதலைப் பார்த்த ஞான சம்பந்தரும் உள்ளத்தில், பரவும் உண்மையன்பின் பெருக்குக் கிடமான தொண்டர் திருவேடம் நேரே வந்து தோன்றியது எனக் கொண்டு தொழுத படியே, தேவர்களும் துதிக்கும்படி அங்குச் சேர, அப்போது நாவுக்கரசரும் எதிரே வந்து வணங்கக் கூர்ந்த ஆசை பெருக, அவருக்கு இனிய மொழிகளைக் கூறியருளினார்.
2170. பேரிசை நாவுக் கரசைப் பிள்ளையார் கொண்டுடன் போந்து
போர்விடை யார்திருத் தோணிப்பொற்கோயி லுள்புகும் போதில்
ஆர்வம் பெருக அணையும் அவருடன் கும்பிட் டருளால்
சீர்வளர் தொண்ட ரைக்கொண்டு திருமா ளிகையினில் சேர்ந்தார்.
தெளிவுரை : மிக்க புகழையுடைய நாவுக்கரசைப் பிள்ளையார் உடன் வரவேற்றுக் கொண்டு சென்று காளையூர்தியையுடைய இறைவரின் திருத்தோணி என்ற அழகிய கோயிலுள் புகும்போது ஆர்வம் மிகுந்ததால் அணையும் அவருடனே கூடி, இறைவரை வணங்கித், திருவருளால், சிறப்பு மிகச் செய்யும் திருத்தொண்டரான அரசைத் தம்முடன் அழைத்துக் கொண்டு தம் திருமாளிகைக்குச் சென்றார்.
2171. அணையுந் திருந்தொண்டர் தம்மோ டாண்ட அரசுக்கும் அன்பால்
இணையில் திருவமு தாக்கி இயல்பால் அமுதுசெய் வித்துப்
புணரும் பெருகன்பு நண்பும் பொங்கிய காதலில் கும்பிட்
டுணருஞ்சொல் மாலைகள் சாத்தி உடன்மகிழ் வெய்தி உறைந்தார்.
தெளிவுரை : சேரும் திருத்தொண்டர்களுடன் ஆளுடைய அரசுக்கும் ஒப்பில்லாத உணவை ஏற்ற இயல்பால் ஆக்குவித்து உண்ணச் செய்தருளிப், பொருந்தியதால் பெருகிய அன்பும் நட்பும் மேலும் அதிகரித்த காதலால் வணங்கிச் சிவபெருமானை உணர்ச்சியிற் கண்டு சொல்லும் திருப்பதிகங்களைப் பாடி மகிழ்ந்து பொருந்தி உடன் இருந்தனர்.
2172. அந்நாள் சிலநாள்கள் செல்ல அருள்திரு நாவுக் கரசர்
மின்னார் சடையண்ணல் எங்கும் மேவிடங் கும்பிட வேண்டிப்
பொன்மார்பின் முந்நூல் புனைந்த புகலிப் பிரானிசை வோடும்
பின்னாக வெய்த விறைஞ்சிப் பிரியாத நண்பொடும் போந்தார்.
தெளிவுரை : அங்ஙனமான நாட்கள் சில சென்றன; செல்ல, திருவருள் பெற்ற திருநாவுக்கரசர் மின்னல் போல் ஒளிவிடும் சடையுடைய இறைவர் வீற்றிருக்கும் தலங்கள் எங்கும் பொருந்திக் கும்பிட விரும்பி அழகிய மார்பில் முப்புரிநூல் அணிந்த சீகாழிச் செம்மலான பிள்ளையாரின் சம்மதத் துடன் பின்னர் வந்து கூடும்படி நினைத்த வண்ணம் வணங்கிப் பிரிய இயலாத நட்புரிமையுடன் சென்றார்.
2173. வாக்கின் தனிமன்னர் ஏக மாறாத் திருவுளத் தோடும்
பூக்கமழ் பண்ணைகள் சூழ்ந்த புகலியில் மீண்டும் புகுந்து
தேக்கிய மாமறை வெள்ளத் திருத்தோணி வீற்றிருந் தாரைத்
தூக்கின் தமிழ்மாலை பாடித் தொழுதங் குறைகின்ற நாளில்.
தெளிவுரை : ஒப்பில்லாத திருநாவுக்கரசர் செல்ல, மாறுபாடில்லாத திருவுள்ளத்துடன் மலர்கள் மணம் கமழும் வயல்கள் சூழ்ந்த சீகாழிப் பதியுள் பிள்ளையார் மீண்டு வந்து புகுந்து, நிறைந்த பெரிய வேதங்களின் மிகுதியின் வடிவாய்த் திருத்தோணியில் வீற்றிருக்கின்ற தோணியப்பரைத் தூக்குடைய இனிய தமிழ் மாலைகளைப் பாடி வணங்கிக் கொண்டு அங்கு இருந்து வரும் நாட்களில்,
2174. செந்தமிழ் மாலை விகற்பச் செய்யுட்க ளான்மொழி மாற்றும்
வந்தசொற் சீர்மா லைமாற்று வழிமொழி எல்லா மடக்குச்
சந்த இயமகம் ஏகபாதம் தமிழிருக்குக் குறள் சாத்தி
எந்தைக் கெழுகூற் றிருக்கை ஈரடி ஈரடி வைப்பு.
தெளிவுரை : விகற்பச் செய்யுட்களாலான செந்தமிழ் மாலைகளைத் திருமொழி மாற்று என்ற பதிகமும், சொல்சீர் மாற்றி வந்த திருமாலை மாற்றுப் பதிகமும், வழிமொழி திருவிராகப் பதிகமும், எல்லா அடிகளிலும் எல்லாச்சீர்களும் மடங்கி வருகின்ற இயமகமாகிய திரு ஏகபாதப் பதிகமும், தமிழ் சிறந்த இருக்குக் குறள் என்ற பதிகமும், ஆகிய இவற்றைப் பாடிச் சாத்தியதுடன், எம் தந்தைக்கு அருளிய ஏழு கூற்றிருக்கையும், ஈரடி என்ற திருப்பதிகமும் ஈரடிமேல் வைப்பு என்ற திருப்பதிகமும்,
2175. நாலடி மேல்வைப்பு மேன்மைநடையின் முடுகும் இராகம்
சால்பினிற் சக்கரம் ஆதி விகற்பங்கள் சாற்றும் பதிக
மூலஇலக்கிய மாக எல்லாப் பொருள் களும் முற்ற
ஞாலத் துயர்காழி யாரைப் பாடினார் ஞானசம் பந்தர்.
தெளிவுரை : நாவடிமேல் வைப்பு என்ற திருப்பதிகமும் மேன்மையுடைய முடுகும் நடையில் அமைந்த திருவிராகம் என்ற பதிகங்களும், சார்பு கொண்ட திருச் சக்கரமாற்று முதலான திருப்பதிகங்களும் இவை மூல இலக்கியமாக உலகத்துக்கு வழிகாட்டி யிருக்குமாறு எல்லாப் பொருள்கோள்களும் நிரம்பியிருக்கக் காணுமாறு உலகத்தில் உயரும் சீகாழி இறைவரைத் திருஞான சம்பந்தர் பாடியருளினார்.
2176. இன்னிசை பாடின எல்லாம் யாழ்ப்பெரும் பாணனார் தாமும்
மன்னும் இசைவடி வானமதங்கசூ ளாமணி யாரும்
பன்னிய ஏழிசை பற்றிப் பாடப் பதிகங்கள் பாடிப்
பொன்னின் திருத்தா ளம்பெற்றார் புகலியிற் போற்றி யிருந்தார்.
தெளிவுரை : இனிய இசையில் முன் கூறியவாறு பாடிய எல்லாப் பதிகங்களையும் பெரும் யாழ்ப்பாணரும், பொருந்திய இசை ஓர் உருவு எடுத்தாற் போன்ற மதங்கசூளாமணியாரும், போற்றப்படும் ஏழிசைகளைப் பற்றிப் பாடத், திருப்பதிகங்களைப் பாடி இறைவரைத் துதித்துக் கொண்டு பொன் தாளம் பெற்ற பிள்ளையார் சீகாழியில் தங்கியிருந்தனர்.
2177. அங்கண் அமர்கின்ற நாளில் அருந்தமிழ்நா டெத்தி னுள்ளும்
திங்கட் சடையண்ண லார்தம்திருப்பதி யாவையுங் கும்பிட்
டெங்குந் தமிழ்மா லைபாடிஏத்திஇங் கெய்துவன் என்று
தங்குலத் தாதையா ரோடுந் தவமுனி வர்க்கருள் செய்தார்.
தெளிவுரை : அத்தலத்தில் விருப்பத்துடன் எழுந்தருளியிருக்கும் நாள்களில், அரிய தமிழ் நாட்டிலும் மற்றுமுள்ள நாடுகளிலும் திங்களை அணிந்த சடையையுடைய சிவ பெருமான் எழுந்தருளியிருக்கும் திருத்தலங்கள் எல்லாவற்றையும் போய்க் கும்பிட்டு எங்கும் தமிழ் மாலைத் திருப் பதிகங்களைப் பாடித் துதித்து இங்கு வந்து சேர்வேன் எனத் தம் பெருமை யுடைய தந்தையார் சிவபாத இருதயருக்கும் தவ முனிவர்களுக்கும் கூறினார்.
2178. பெருகு விருப்புடன் நோக்கிப் பெற்ற குலத்தாதை யாரும்
அருமையால் உம்மைப் பயந்த அதனாற் பிரிந்துறை வாற்றேன்
இருமைக்கும் இன்ப மளிக்கும் யாகமும் யான்செய வேண்டும்
ஒருமையால் இன்னஞ் சிலநாள் உடன்எய் துவேன்என் றுரைத்தார்.
தெளிவுரை : மேலும் மேலும் பெருகும் விருப்பத்தோடும் பிள்ளையாரைப் பார்த்து, அவரை ஈன்ற சிவபாத இருதயர், அரிய தவம் செய்து அதன் பயனாக உம்மை ஈன்றெடுத்தேன். ஆதலால் உம்மைப் பிரிந்து இங்கிருப்பதைச் சகிக்கமாட்டேன். இம்மைக்கும் மறுமைக்கும் இன்பம் தரும் சிவ வேள்வியையும் யான் செய்தல் வேண்டும். ஆதலால் இன்னும் சில நாட்கள் உம்முடன் இருப்பேன் ! எனக் கூறினார்.
2179. ஆண்டகை யாரும் இசைந்தங் கம்பொற் றிருத்தோணி மேவும்
நீண்ட சடையார் அடிக்கீழ்ப் பணிவுற்று நீடருள் பெற்றே
ஈண்டு புகழ்த்தாதை யார்பின் எய்திட யாழ்ப்பாண ரோடும்
காண்தகு காழி தொழுது காதலி னால்புறம் போந்தார்.
தெளிவுரை : ஆண்தகையாளரான சம்பந்தரும் அதற்குச் சம்மதம் தெரிவித்து, அங்கு அழகிய பொன்னார்ந்த திருத்தோணியில் எழுந்தருளிய நீண்ட சடையுடைய இறைவரின் திருவடிக் கீழ் விழுந்து வணங்கி நீடிய திருவருளைப் பெற்றுக்கொண்டு மிகுந்த புகழையுடைய தந்தையார் பின்தொடர்ந்து வர, திருநீலகண்ட யாழ்ப்பாணர் தம்முடனே வரக் காணத்தக்க சீகாழிப் பதியை வணங்கி நீங்காத பத்தியுடன் புறம் போந்தார்.
2180. அத்திரு மூதூரின் உள்ளார் அமர்ந்துடன் போதுவார் போத
மெய்த்தவர் அந்தணர் நீங்கா விடைகொண்டு மீள்வார்கள் மீள
முத்தின் சிவிகைமேல் கொண்டு மொய்யொளித் தாமம் நிரைத்த
நித்தில வெண்குடை மீது நிறைமதி போல நிழற்ற.
தெளிவுரை : அந்தப் பழைய ஊரில் உள்ளவர்களுள் உண்மைத் தவத்தவர்கள் உடன் வருவாராய்ப் பின் தொடர்ந்து செல்லவும், அந்தணர்கள் பிரியா விடை பெற்றுப் பதியில் மீண்டு செல்பவர்கள் மீளவும், முத்துச் சிவிகையின் மேல் பிள்ளையார் எழுந்தருளி, மொய்த்துக் கூடிய முத்து மாலைகளை வரிசையாய்க் கட்டிய வெண்மையான முத்துக் குடையானது மேலே முழுச் சந்திரன் போல் கவிந்து நிழலைச் செய்யவும்.
2181. சின்னந் தனிக்காளந் தாரை சிரபுரத் தாண்டகை வந்தார்
என்னுந் தகைமை விளங்கஏற்ற திருப்பெயர் சாற்ற
முன்எம் மருங்கும் நிரந்த முரசுடைப் பல்லிய மார்ப்ப
மன்னுந் திருத்தொண்ட ரானார் வந்தெதிர் கொண்டு வணங்க.
தெளிவுரை : முத்துச் சின்னமும், ஒப்பில்லாத முத்துக் காளமும், முத்தால் ஆன தாரையும், சீகாழியில் தோன்றிய ஆளுடைய பிள்ளையார் வந்தருளினார் என்னும் தன்மையை உலகுக்கு விளங்கும்படி ஏற்றவாறு அவருடைய பற்பல பெயர்களையும் எடுத்துச் சொல்லி ஊதிப் பிடிக்கவும், திருமுன்பு எல்லாப் பக்கங்களிலும் வரிசையாய் முரசுகளும் மற்றும் பல இயங்களும் முழங்கவும், நிலை பெற்ற திருத்தொண்டர்கள் வந்து எதிர் கொண்டு வணங்கவும்,
2182. சங்க நாதங்கள் ஒலிப்பத் தழங்குபொற் கோடு முழங்க
மங்கல வாழ்த்துரை எங்கும் மல்க மறைமுன் இயம்பத்
திங்களும் பாம்பும் அணிந்தார் திருப்பதி எங்கும்முன் சென்று
பொங்கிய காதலிற் போற்றப் புகலிக் கவுணியர் போந்தார்.
தெளிவுரை : சங்கின் ஒலி முழங்கவும், விளங்கும் அழகிய கொம்புகள் ஒலிக்கவும், மங்கலமான வாழ்த்துரை எங்கும் பெருகவும், முன்னே வேதங்கள் முழங்கவும், பிறைச் சந்திரனையும் பாம்பையும் அணிந்த இறைவரின் திருத்தலங்கள் எங்கும் உள்ளவற்றில் போய் மேலும் மேலும் பெருகும் விருப்பத்துடன் துதிக்கச் சீகாழிக் கவுணிய குலத்தோன்றல் சென்றார்.
2183. திருமறைச் சண்பைய ராளிசிவனார் திருக்கண்ணார் கோயில்
பெருவிருப் பாலணைந் தேத்திப் பிஞ்ஞகர் கோயில் பிறவும்
உருகிய அன்பால் இறைஞ்சிஉயர்தமிழ் மாலை கொண் டேத்தி
வருபுனற் பொன்னி வடபால் குடதிசை நோக்கி வருவார்.
தெளிவுரை : சீகாழி அந்தணரின் தலைவரான ஆளுடைய பிள்ளையார் இறைவர் எழுந்தருளியுள்ள திருக்கண்ணார் கோயில் என்னும் பதியைப் பெருகும் விருப்பத்துடன் அணைந்து, திருப்பதிகம் பாடித் துதித்து, இறைவரின் பதிகள் பிறவற்றையும் உருகும் அன்புடன் போய் வணங்கி, உயரும் தமிழ் மாலைகளாகிய தேவாரத் திருப்பதிகங்களைப் பாடித் துதித்து, வரும் நீரையுடைய காவிரியின் வடகரையின் வழியாய் மேற்குத் திக்கு நோக்கி வருபவராய்,
2184. போற்றிய காதல் பெருகப் புள்ளிருக் குந்திரு வேளூர்
நாற்றடந் தோளுடை மூன்றுநயனப்பிரான் கோயில் நண்ணி
ஏற்றஅன் பெய்தவ ணங்கி இருவர்புள் வேந்தர் இறைஞ்சி
ஆற்றிய பூசனை சாற்றி அஞ்சொற் பதிக மணிந்தார்.
தெளிவுரை : போற்றும் விருப்பம் மேல்மேல் அதிகரிக்கத் திருப்புள்ளிருக்கு வேளூரில் நான்கு பெருந்தோள்களையுடைய முக்கண் பெருமான் வீற்றிருக்கும் கோயிலை அடைந்து, தக்க பேரன்பு பொருந்த வணங்கி, பறவையரசர்களான சம்பாதி சடாயு என்பவர்கள் வணங்கிச் செய்த வழிபாட்டின் பெருமையைப் பாராட்டிப் போற்றி அழகான சொற்களால் அமைந்த திருப்பதிகத்தை இறைவர்க்கு அணிந்தார்.
2185. நீடு திருநின்றி யூரின் நிமலர்தம் நீள்கழல் ஏத்திக்
கூடிய காதலில் போற்றிக் கும்பிட்டு வண்டமிழ் கூறி
நாடுசீர் நீடூர் வணங்கி நம்பர்திருப் புன்கூர் நண்ணி
ஆடிய பாதம் இறைஞ்சி அருந்தமிழ் பாடிஅ மர்ந்தார்.
தெளிவுரை : நிலைபெறும் திருநின்றவூரில் இறைவரின் நீண்ட திருவடிகளைத் துதித்து, மிக்க பக்தியுடன் வணங்கிக் கும்பிட்டு, வன்மையான திருப்பதிகத்தைப் பாடியருளி, நாளும் சிறப்புடைய திருநீற்றை வணங்கி, இறைவரின் திருப்புன்கூரை அடைந்து அருட்கூத்து இயற்றும் திருவடிகளை வணங்கி, அருந்தமிழ்ப் பதிகம் பாடி ஆங்கே விருப்பத்துடன் தங்கியிருந்தார்.
2186. அங்குநின் றேகிஅப் பாங்கில் அரனார் மகிழ்கோயி லான
எங்கணுஞ் சென்று பணிந்தே ஏத்தி இமவான் மடந்தை
பங்கர் உறைபழ மண்ணிப் படிக்கரைக் கோயில் வணங்கித்
தங்கு தமிழ்மாலை சாத்தித் திருக்குறுக் கைப்பதி சார்ந்தார்.
தெளிவுரை : அந்தத் திருப்புன்கூரினின்றும் பிள்ளையார் புறப்பட்டுச் சென்று, அப்பக்கங்களில் இறைவர் வீற்றிருக்கும் கோயில்களில் எல்லாம் போய்ப் பணிந்து துதித்து, உமையம்மையாரின் பங்கரான சிவபெருமான் வீற்றிருக்கும் திருப்பழமண்ணிப் படிக்கரைக் கோயிலை வணங்கி, நிலைக்கும் தமிழ் மாலை பாடித், திருக்குறுக்கைப் பதியை அடைந்தார்.
2187. திருக்குறுக் கைப்பதி மன்னித் திருவீரட் டானத் தமர்ந்த
பொருப்புவில் லாளரை ஏத்திப் போந்தன்னி யூர்சென்று போற்றிப்
பருக்கை வரையுரித் தார்தம் பந்தணை நல்லூர் பணிந்து
விருப்புடன் பாடல் இசைத்தார் வேதம் தமிழால் விரித்தார்.
தெளிவுரை : திருக்குறுக்கை என்ற தலத்தில் பொருந்தி அங்குள்ள திருவீரட்டானக் கோயிலில் விரும்பி எழுந்தருளிய மேருமலையை வில்லாய்க் கொண்ட இறைவரைத் துதித்துப் புறப்பட்டுச் சென்று திரு அன்னியூர் என்ற தலத்தை வழிபட்டு, பெரிய கையையுடைய மலை போன்ற யானையை உரித்த சிவபெருமானின் திருப்பந்தணை நல்லூரைப் பணிந்து வேதங்களைத் தமிழால் விரித்துச் சொன்ன பிள்ளையார் தமிழ்ப் பாமாலைகளைப் பாடினார்.
2188. அப்பதி போற்றி அகல்வார் அரனார் திருமணஞ்சேரி
செப்பருஞ் சீர்த்தொண்ட ரோடும் சென்று தொழுதிசை பாடி
எப்பொரு ளுந்தரும் ஈசர் எதிர்கொள்பா டிப்பதி எய்தி
ஒப்பில் பதிகங்கள் பாடி ஓங்குவேள் விக்குடி யுற்றார்.
தெளிவுரை : அந்தத் தலத்தைப் போற்றி மேலே செல்பவராய், இறைவரின் திருமணஞ்சேரியைச் சொல்வதற்கரிய திருத்தொண்டர்களுடனே போய் வழிபட்டு, திருப்பதிகத்தைப் பாடி, எல்லாப் பொருள்களையும் தரும் இறைவரின் திருஎதிர்கொள்பாடி என்ற பதியை அடைந்து, ஒப்பில்லாத திருப்பதிகங்களைப் பாடி உயர்ந்த வேள்விக் குடியை அடைந்தார்.
2189. செழுந்திரு வேள்விக் குடியில் திகழ்மண வாளநற் கோலம்
பொழிந்த புனற்பொன்னி மேவும்புனிதத் துருத்தி இரவில்
தழும்பிய தன்மையும் கூடத் தண்டமிழ் மாலையிற் பாடிக்
கொழுந்துவெண் திங்கள் அணிந்தார் கோடி காவிற்சென் றடைந்தார்.
தெளிவுரை : வளமுடைய திருவேள்விக் குடியில் வீற்றிருக்கும் மணவாளத் தோற்றமானது பொய்யாமல் வருகின்ற நீர் வளம் கொண்ட தூய திருத்துருத்தியில் பகலில் காணக் காட்டி, இரவிலே இவ்வேள்விக் குடியில் எழுந்தருளிய தன்மையையும் சேர்த்து, அறிவுறுத்திக் குளிர்ந்த தமிழ் மாலை பாடி, முளைக்கும் கொழுந்தைப் போன்ற வெண்மையான பிறைச் சந்திரனைச் சூடிய இறைவரின் திருக்கோடிக்கா என்ற தலத்தைப் போய் அடைந்தார்.
2190. திருக்கோடி காவில் அமர்ந்த தேவர் சிகாமணி தன்னை
எருக்கோ டிதழியும் பாம்பும் இசைந்தணிந் தானைவெள் ளேனப்
பருக்கோடு அணிந்த பிரானைப்பணிந்துசொல் மாலைகள் பாடிக்
கருக்கோடி நீப்பார்கள் சேரும் கஞ்சனூர் கைதொழச் சென்றார்.
தெளிவுரை : திருக்கோடிக்கா என்ற திருப்பதியில் அமர்ந்த தேவர்களின் தலைவரான இறைவரை எருக்கு மலருடனே கொன்றை மலரையும் அணிந்தவரை, வெள்ளைப் பன்றியான திருமாலின் பருத்த கொம்பைப் பூண்ட பெருமானைப் பணிந்து சொல்மாலையான திருப்பதி கத்தைப் பாடிப் பிறவித் தன்மையை நீப்பவர்கள் அடைவதற்கு இடமான திருக்கஞ்சனூரை வணங்குவதற்குப் போனார்.
2191. கஞ்சனூ ராண்டதங் கோவைக் கண்ணுற் றிறைஞ்சிமுன் போந்து
மஞ்சணை மாமதில் சூழும் மாந்துறை வந்து வணங்கி
அஞ்சொல் தமிழ்மாலை சாத்தி அங்ககன் றன்பர்முன் னாகச்
செஞ்சடை வேதியர் மன்னும் திருமங் கலக்குடி சேர்ந்தார்.
தெளிவுரை : திருக்கஞ்சனூரில் ஆட்சி செய்கின்ற தம் இறைவரைக் கண்டு கும்பிட்டு மேலே போய் மேகம் தவழ்கின்ற மதில் சூழ்ந்த திருமாந்துறை என்ற தலத்தில் போய் வணங்கிச் சொல் மாலை பாடி, அங்கிருந்து புறப்பட்டு அன்பர்கள் எதிர்கொள்ளச் சிவந்த சடையையுடைய அந்தணரான சிவபெருமான் நிலையாக வீற்றிருக்கின்ற திருமங்கலக் குடியை அடைந்தார்.
2192. வெங்கண் விடைமேல் வருவார் வியலூர் அடிகளைப் போற்றித்
தங்கிய இன்னிசை கூடுந் தமிழ்ப்பதி கத்தொடை சாத்தி
அங்க ணமர்வார்தம் முன்னே அருள்வே டங்காட்டத் தொழுது
செங்கண்மா லுக்கரி யார்தந் திருந்துதே வன்குடி சேர்ந்தார்.
தெளிவுரை : கொடிய கண்ணையுடைய காளை மீது எழுந்தருளும் திருவியலூர் இறைவரை வணங்கித், தங்கிய இனிய இசையுடைய தமிழ்மாலை பாடி, அந்தத் தலத்தில் விரும்பி எழுந்தருளியுள்ள இறைவர், தம் முன்பு அருள் திருவேடம் நேரே காட்டத் தொழுது, திருமாலுக்கு அரியவரான இறைவரின் திருந்து தேவன்குடியைப் போய் அடைந்தார்.
2193. திருந்துதே வன்குடி மன்னும்சிவபெரு மான்கோயில் எய்திப்
பொருந்திய காதலிற் புக்குப்போற்றி வணங்கிப் புரிவார்
மருந்தொடு மந்திர மாகிமற்றும் இவர்வேட மாம்என்
றருந்தமிழ் மாலை புனைந்தார் அளவில்ஞா னத்தமு துண்டார்.
தெளிவுரை : திருந்து தேவன் குடி என்ற தலத்தில் நிலையாய் வீற்றிருக்கும் இறைவனின் கோயிலை அடைந்து, பொருந்திய காதலால் புகுந்து துதித்து வணங்கி நினைவாராகி, இவரது வேடம் மருந்தும் மந்திரமும் ஆகும் என்று அளவில்லாத ஞானப்பாலை யுண்டவராதலால் பிள்ளையார் அரிய தமிழ் மாலையைப் புனைந்தார்.
2194. மொய்திகழ் சோலையம் மூதூர் முன்னகன் றந்நெறி செல்வார்
செய்தரு சாலிக ரும்பு தெங்குபைம் பூகத்தி டைபோய்
மைதிகழ் கண்டர்தங் கோயில் மருங்குள்ள எல்லாம் வணங்கி
எய்தினர் ஞானசம் பந்தர் இன்னம்பர் ஈசர்தம் கோயில்.
தெளிவுரை : அரும்புகள் விளங்கும் சோலை சூழ்ந்த அந்த முதுமையுடைய ஊரினின்றுநீங்கி அவ்வழியில் செல்பவராகி, வயல்களில் விளையும் நெல்லும் கரும்பும் தென்னையும் பசிய கமுகும் என்ற இவற்றிடையே போய், நஞ்சு விளங்கும் கழுத்தையுடைய இறைவரின் கோயில்களுள் அப்பக்கங்களில் உள்ளவற்றை யெல்லாம் வணங்கிக் கொண்டு திருஇன்னம்பர் இறைவரின் கோயிலைத் திருஞானசம்பந்தர் அடைந்தார்.
2195. இன்னம்பர் மன்னும்பி ரானைஇறைஞ்சி இடைமடக் கான
பன்னுந்த மிழ்த்தொடை மாலைப் பாடல்பு னைந்து பரவிப்
பொன்னங்க ழலிணை போற்றிப் புறம்போந்த ணைந்து புகுந்தார்
மன்னுந்த டங்கரைப் பொன்னி வடகுரங் காடு துறையில்.
தெளிவுரை : திரு இன்னம்பரில் நிலைபெற்று வீற்றிருக்கும் இறைவனை வணங்கி இடைமடக்கான யாப்பால் அமைந்த திருமுக்கால் என்ற இறைவரின் புகழைப் பரவும் திருப்பதிகத் தமிழ்ப்பாடல் மாலைகளைச் சாத்தி வணங்கி, இறைவரின் பொன்னடிகளைப் போற்றிப் புறப்பட்டுச் சென்று, நிலைபெற்ற பெரிய கரையையுடைய காவிரியின் வடகரையில் உள்ள வடகுரங்காடு துறையில் வந்து அணைந்தார்.
2196. வடகுரங் காடு துறையில் வாலியார் தாம்வழி பட்ட
அடைவுந் திருப்பதி கத்தில் அறியச் சிறப்பித் தருளிப்
புடைகொண் டிறைஞ்சினர் போந்து புறத்துள்ள தானங்கள் போற்றி
படைகொண்ட மூவிலை வேலார் பழனத் திருப்பதி சார்ந்தார்.
தெளிவுரை : வடகுரங்காடு துறையில் வந்து வாலி வழிபட்டுச் சரணமான வரலாற்றைத் திருப்பதிகத்தில் உலகம் அறியும்படிச் சிறப்பித்துப் பாடித் திருக்கோயிலை வலம் வந்து வணங்கிப் புறப்பட்டு, அதன் பக்கங்களில் உள்ள திருத்தலங்களை யெல்லாம் வணங்கிய வண்ணம் மூவிலைச் சூலத்தைப் படையாய்க் கைக் கொண்ட இறைவர் எழுந்தருளிய திருப்பழனமான திருத்தலத்தைச் சென்றடைந்தார்.
2197. பழனத்து மேவிய முக்கண் பரமேட்டி யார்பயில் கோயில்
உடைபுக் கிறைஞ்சிநின் றேத்தி உருகிய சிந்தைய ராகி
விழைசொற் பதிகம் விளம்பி விருப்புடன் மேவி யகல்வார்
அழனக்க பங்கய வாவி ஐயாறு சென்றடை கின்றார்.
தெளிவுரை : திருப்பழனத்தில் வீற்றிருக்கும் மூன்று கண்களையுடைய சிவபெருமான் திருக்கோயிலுள் புகுந்து நின்று துதித்து, உருகிய உள்ளத்தையுடையவராகி, விருப்பத்தை அளிக்கும் தமிழ்ச் சொல் பதிகத்தைப்பாடி விருப்பத்துடன் அங்குத் தங்கியிருந்து, பின் அங்கிருந்து நீங்குபவராய்த் தீயைப் பழித்த தாமரை மலர்ந்த நீர்நிலைகளையுடைய திருவையாற்றை அடைபவராய்.
2198. மாடநிரை மணிவீதித் திருவையாற் றினில்வாழு மல்கு தொண்டர்
நாடுய்யப் புகலிவரு ஞானபோ னகர்வந்து நண்ணி னாரென்
றாடலொடு பாடலறா அணிமூதூர் அடையஅலங் காரஞ் செய்து
நீடுமனக் களிப்பினொடும் எதிர்கொள்ள நித்திலயா னத்து நீங்கி.
தெளிவுரை : மாளிகைகளின் வரிசைகளையுடைய திருவையாற்றில் வாழ்கின்ற அடியார்கள், உலகம் உய்யும் பொருட்டுச் சீகாழியில் தோன்றி ஞானமுது உண்ட பிள்ளையார் வந்தார் என்று மனத்தில் எண்ணி, ஆடலுடனே பாடல் நீங்காது நிறைந்த அழகிய அந்தப் பழவூரை முழுதும் அலங்காரம் செய்து, பெருகிய உள்ள மகிழ்வுடன் வரவேற்கும்போது, பிள்ளையார் முத்துச் சிவிகையினின்று இறங்கி வந்து,
2199. வந்தணைந்து திருத்தொண்டர் மருங்குவர மானேந்து கையர் தம்பால்
நந்திதிரு வருள்பெற்ற நன்னகரைமுன்னிறைஞ்சி நண்ணும் போதில்
ஐந்துபுலன் நிலைகலங்கும்இடத்தஞ்சல் என்பார்தம் ஐயா றென்று
புந்திநிறை செந்தமிழின் சந்தஇசை போற்றிசைத்தார் புகலி வேந்தர்.
தெளிவுரை : வந்து கூடிய தொண்டர்கள் தம் பக்கத்தில் சூழ்ந்து வர, மானை ஏந்திய கையையுடைய இறைவரிடத்தில் நந்தியம் பெருமான் அருளைப் பெற்ற அந்தத் தலத்தினை வணங்கி, முன் காலத்தில் அஞ்சாதே என்று அபயம் உரைத்த இறைவரது திருவையாறு இதுவாகும் என்ற எண்ணத்துடன், மனம் நிறைந்து எழுந்த செந்தமிழினது சந்த இசைப்பதிகத்தால் வணங்கித் துதித்தார் சீகாழித் தலைவர்.
2200. மணிவீதி இடங்கடந்து மாலயனுக் கரியபிரான் மன்னுங் கோயில்
அணிநீடு கோபுரத்தை அணைந்திறைஞ்சி உள்ளெய்தி அளவில் காதல்
தணியாத கருத்தினொடும் தம்பெருமான் கோயில்வலங் கொண்டு தாழ்ந்து
பணிசூடும் அவர்முன்பு பணிந்துவீழ்ந் தெழுந்தன்பாற் பரவு கின்றார்.
தெளிவுரை : அழகிய தெருக்களின் இடத்தைக் கடந்து போய்த் திருமாலுக்கும் நான்முகனுக்கும் அறிதற்கு அரிய சிவபெருமான் நிலையாய் வீற்றிருக்கும் கோயிலின் அழகு நிலைத்த கோபுரத்தைச் சார்ந்து பணிந்து கோயிலுள் சேர்ந்து அளவில்லாத ஆசையானது பெருகித் தணியாத மனத்துடன் இறைவரின் திருக்கோயிலை வலமாய் வந்து பாம்பை அணிந்த அப்பெருமானின் திருமுன்பு வணங்கி நிலமுற விழுந்து எழுந்து அன்பால் துதிப்பவராய்,
2201. கோடல்கோங் கங்குளிர்கூ விளம்என்னுந்திருப்பதிகக் குலவு மாலை
நீடுபெருந் திருக்கூத்து நிறைந்ததிரு வுள்ளத்து நிலைமை தோன்ற
ஆடுமா றதுவல்லான் ஐயாற்றெம் ஐயனே என்று நின்று
பாடினார் ஆடினார் பண்பினொடும் கண்பொழிநீர் பரந்து பாய.
தெளிவுரை : கோடல் கோங்கம் குளிர் கூவிளம் என்று தொடங்கும் திருப்பதிகமான சிறந்த சொல்மாலையை, நீடிய பெருந் திருக்கூத்தின் சிறப்பு நிறைவான தம் உள்ளத்தின் நிலைமை தோன்றும்படி ஆடுமாறு வல்லான் எம் ஐயாற்றெம் ஐயனே என்ற கருத்தை முடிபாகக் கொண்ட பதிகத்தைப் பாடி, அன்புப் பண்புடனே விழிகளிலிருந்து ஆனந்தக் கண்ணீர் இடைவிடாமல் பரந்து பாய்ந்திடப் பாடினார்; ஆடினார்.
2202. பலமுறையும் பணிந்தெழுந்து புறம்போந்து பரவுதிருத் தொண்ட ரோடு
நிலவுதிருப் பதியதன் கண்நிகழுநாள் நிகரிலா நெடுநீர்க் கங்கை
அலையுமதி முடியார்தம் பெரும்புலியூர் முதலான அணைந்து போற்றிக்
குலவுதமிழ்த் தொடைபுனைந்து மீண்டணைந்து பெருகார்வங் கூரு நாளில்.
தெளிவுரை : பல முறையும் வணங்கி எழுந்து வெளியே வந்து வணங்கும் திருத்தொண்டருடன் நிலைபெற்ற அந்தத் தலத்தில் தங்கியிருந்தார். அந்நாட்களில் ஒப்பில்லாத நெடிய நீரையுடைய கங்கை அலைதற்கு இடமான முடியில் பிறைச்சந்திரனைச் சூடிய இறைவரது பெரும்புலியூர் முதலான பதிகளில் போய் அணைந்து துதித்துத் தமிழ் மாலைகளைப் பாடி மீண்டும் திருவையாற்றை அடைந்து, பெருகும் ஆசை மிகு அங்கு இருந்து வரும் நாளில்,
2203. குடதிசைமேற் போவதற்குக் கும்பிட்டங் கருள்பெற்றுக் குறிப்பி னோடும்
படருநெறி மேலணைவார் பரமர்திரு நெய்த்தானப் பதியில் நண்ணி
அடையுமனம் உறவணங்கி அருந்தமிழ்மா லைகள்பாடி அங்கு நின்றும்
புடைவளர்மென் கரும்பினொடு பூகமிடை மழபாடி போற்றச் சென்றார்.
தெளிவுரை : மேற்குத் திக்கில் செல்வதற்கு விடைபெறக் கும்பிட்டுத் திருவருளைப் பெற்று அங்ஙனம் பெற்ற அக்குறிப்பின் வழியே செல்கின்ற மேலை வழியில் அணைபவராய், இறைவரின் திருநெய்த்தானம் என்ற தலத்தில் போய் அடையும் மனம் பொருந்த வணங்கி அரிய தமிழ் மாலைகளைப் பாடி, அங்கிருந்து பக்கங்களில் வளரும் கரும்புடன் பாக்கு நெருங்கியுள்ள திருமழபாடியை வணங்கச் செல்லலானார்.
2204. செங்கைமான் மறியார்தந் திருமழபா டிப்புறத்துச் சேரச் செல்வார்
அங்கையார் அழலென்னுந் திருப்பதிகம் எடுத்தருளி அணைந்த போழ்தில்
மங்கைவாழ் பாகத்தார் மழபாடி தலையினால் வணங்கு வார்கள்
பொங்குமா தவமுடையார் எனத்தொழுது போற்றிசைத்தே கோயில் புக்கார்.
தெளிவுரை : சிவந்த கையில் மான் கன்றை ஏந்திய சிவ பெருமானின் திருமழபாடியின் வெளிப் பக்கத்தைச் சேரச் செல்பவரான சம்பந்தர் அங்கையாரழல் எனத்தொடங்கும் திருப்பதிகத்தைத் தொடங்கி நெருங்கிய போது, உமையம்மையார் வாழ்கின்ற ஒரு பாகத்தையடைய இறைவர் வீற்றிருக்கும் திருமழபாடியை வணங்குபவர்கள் மேன்மேலும் பெருகும் தவம் பெற்றவர்கள் எனப் பாடித் துதித்துத் தொழுதவண்ணமே கோயிலுள் புகுந்தார்.
2205. மழபாடி வயிரமணித் தூணமர்ந்து மகிழ்கோயில் வலங்கொண் டெய்திச்
செழுவாச மலர்க்கமலச் சேவடிக்கீழ்ச்சென்றுதாழ்ந் தெழுந்து நின்று
தொழுதாடிப் பாடிநறுஞ் சொல்மாலைத் தொடையணிந்து துதித்துப் போந்தே
ஒழியாத நேசமுடன் உடையவரைக் கும்பிட்டங் குறைந்தார் சின்னாள்.
தெளிவுரை : அத்திருமழபாடி என்ற தலத்தில் அழகிய வயிரத்தூண் நாதர் விரும்பி மகிழ்ந்தருளும் கோயிலை வலமாய்ச் சுற்றி வந்து சேர்ந்து, செழுமையான மணம் பொருந்திய தாமரை மலர் போன்ற திருவடிக் கீழே விழுந்து வணங்கி எழுந்து நின்று, தொழுதும் ஆடியும் பாடியும் நல்ல சொல்மாலைத் தொடை பாடித் துதித்தும் வெளியே வந்து இடையறாத அன்புடன் தம் தலைவரான இறைவரைக் கும்பிட்டு அந்தத் தலத்தில் சில நாட்கள் தங்கியிருந்தார் ஞானசம்பந்தர்.
2206. அதன்மருங்கு கடந்தருளால் திருக்கானூர் பணிந்தேத்தி ஆன்ற சைவ
முதன்மறையோர் அன்பிலா லந்துறையின் முன்னவனைத் தொழுது போற்றிப்
பதநிறைசெந் தமிழ்பாடிச் சடைமுடியார் பலபதியும் பணிந்து பாடி
மதகரட வரையுரித்தார் வடகரைமாந் துறையணைந்தார் மணிநூல் மார்பர்.
தெளிவுரை : அந்த மழபாடியின் பக்கத்தைக் கடந்து போய்த் திருக்கானூரைப் பணிந்து போற்றி, நெருங்கி நிறைந்த ஆதிசைவரின் திரு அன்பிலாலந்துறையில் இறைவரை வணங்கிப் போற்றிப் பதங்கள் நிறைந்த செந்தமிழ்ப் பதிகத்தைப் பாடிச் சிவபெருமானின் பல பதிகளையும் வணங்கிப் பாடல் பாடி, மதமான அருவி பாயும் மலை போன்ற யானையை உரித்த இறைவரின் வடகரை மாந்துறையை அழகிய நூல் அணிந்த மார்பையுடைய சம்பந்தர் போய் அடைந்தார்.
2207. சென்றுதிரு மாந்துறையில் திகழ்ந்துறையும் திருநதிவாழ் சென்னி யார்தம்
முன்றில்பணிந் தணிநெடுமா ளிகைவலஞ்செய் துள்புக்கு முன்பு தாழ்ந்து
துன்றுகதிர்ப் பரிதிமதி மருத்துக்கள் தொழுதுவழி பாடு செய்ய
நின்றநிலை சிறப்பித்து நிறைதமிழின் சொல்மாலை நிகழப் பாடி.
தெளிவுரை : போய்த் திருமாந்துறையில் விளங்க வீற்றிருக்கின்ற, கங்கையாறு தங்கப் பெற்று வாழ்வு அடைந்த சடையையுடைய இறைவரின் திருமுற்றத்தைப் வணங்கி, அழகிய நீண்ட திருமாளிகையை வலமாய் வந்து, உள்ளே சென்று, திரு முன்பு விழுந்து பணிந்து, நெருக்கமான கதிர்களையுடைய ஞாயிறும், சந்திரனும், தேவ மருத்துவர்களும் தொழுது வழிபட இறைவர் எழுந்தருளிய நிலையைப் பாராட்டி, நிறைவான செந்தமிழின் சொல் மாலையை நிலவி நிற்கும் படியாகப் பாடி,
2208. அங்கணகன் றம்மருங்கில் அங்கணர்தம் பதிபிறவும் அணைந்து போற்றிச்
செங்கமலப் பொதியவிழச் சேல்பாயும் வயல்மதுவால் சேறு மாறாப்
பொங்கொலிநீர் மழநாட்டுப் பொன்னிவட கரைமிசைப் போய்ப் புகலி வேந்தர்
நங்கள்பிரான் திருப்பாச்சி லாச்சிரா மம்பணிய நண்ணும் போதில்.
தெளிவுரை : அந்த இடத்தினின்றும் நீங்கிப் போய்ப் பக்கத்தில் உள்ள சிவபெருமானின் மற்றத் தலங்களையும் வணங்கினார்; செந்தாமரை மலர்களின் கட்டு அவிழச் சேல்மீன் பாயத் தேன் பொழிவதால் சேறு உலராத வயல்களையுடைய, பொங்கும் ஒலி நீரையுடைய மழ நாட்டிலே, காவிரியின் வடகரை வழியாகப் போய்ச் சீகாழித் தலைவர் நம் இறைவரின் திருப்பாச்சிலாச் சிராமத்தைத் தொழுவதற்குச் சேரும் பொழுதில்,
2209. அந்நகரிற் கொல்லிமழ வன்பயந்த அரும்பெறல்ஆர் அமுத மென்சொல்
கன்னிஇள மடப்பிணையாங் காமருகோ மளக்கொழுந்தின் கதிர்செய் மேனி
மன்னுபெரும் பிணியாகும் முயலகன்வந் தணைவுறமெய் வருத்த மெய்தித்
தன்னுடைய பெருஞ்சுற்றம் புலம்பெய்தத் தானும்மனந் தளர்வு கொள்வான்.
தெளிவுரை : அந்நகரத்தில் கொல்லி மழவன் தான் பெற்றெடுத்த அரிய அமுதம் போன்ற மென்மையான சொல்லையுடைய கன்னியான இளமான் போன்ற அழகான இளங்கொழுந்தினுடைய ஒளி பொருந்திய பெரு மேனியிலே முயலகன் வந்து சார்ந்ததால் உடல் வருந்த, தனது உறவினர் வருந்தத் தானும் உள்ளத் தளர்ச்சி அடைந்தவனாய்,
2210. மற்றுவே றொருபரிசால் தவிராமை மறிவளரும் கையார் பாதம்
பற்றியே வருங்குலத்துப் பான்மையினான் ஆதலினாற் பரிவு தீரப்
பொற்றொடியைக் கொடுவந்து போர்க்கோலச் சேவகராய்ப் புரங்கள் மூன்றும்
செற்றவர்தங் கோயிலினுள் கொடுபுகுந்து திருமுன்பே இட்டு வைத்தான்.
தெளிவுரை : அதை வேறொரு வழியால் நீக்க மாட்டாமையால் மான் கன்று உடைய கையைக் கொண்ட சிவபெருமானின் திருவடி பற்றியே வழி வரும் மரபில் வந்த தன்மை கொண்டவனாதலால், துன்பம் நீங்கும் பொருட்டுப் பொன்வளையல் அணிந்த அந்தப் பெண்ணை அழைத்து வந்து, போர்க் கோலம் கொண்ட வீரராய்த் திரிபுரங்களையும் எரித்த இறைவரின் திருக் கோயிலில், அவரது திருமுன்பு இட்டு வைத்தான்.
2211. அவ்வளவில் ஆளுடைய பிள்ளையார்எழுந்தருளி அணுக வெய்தச்
செவ்வியமெய்ஞ்ஞானமுணர் திருஞான சம்பந்தன் வந்தான் என்றே
எவ்வுலகுந் துயர்நீங்கப் பணிமாறுந் தனிக்காளத் தெழுந்த வோசை
வெவ்வுயிர்க்கும் அவன்கேளா மெல்லியலை விட்டெதிரே விரைந்து செல்வான்.
தெளிவுரை : அப்போது ஆளுடைய பிள்ளையார் அந்தத் தலத்துக்கு எழுந்தருளி அதன் அருகில் சேர்ந்தார். சேர, செம்மை தரும் மெய்ஞ்ஞானத்தை உணர்ந்த திருஞான சம்பந்தர் வந்தார் என எல்லா வுலகங்களும் துன்பம் நீங்குமாறு ஒலிக்கின்ற திருக்காளம் முதலான வாத்தியங்களினின்று எழுந்த ஓசையினைத் துன்பத்தால் பெரு மூச்சு விட்டுக் கொண்டிருக்கும் அந்தக் கொல்லி மழவன் கேட்டான். கேட்டு, மென்மையான இயலையுடைய அந்தப் பெண்ணை அங்கே விட்டுப் பிள்ளையாரை எதிர் கொண்டு விரைந்து போவானாய்.
2212. மாநகரம் அலங்கரிமின் மகரதோ ரணம்நாட்டும் மணிநீர் வாசத்
தூநறும்பூ ரணகும்பம் சோதிமணி விளக்கினொடு தூபம் ஏந்தும்
ஏனையணி பிறவுமெலாம் எழில்பெருக இயற்றும்என ஏவித் தானும்
வானவர்நா யகர்மகனார் வருமுன்பு தொழுதணைந்தான் மழவர் கோமான்.
தெளிவுரை : பெரிய இந்த நகரத்தை அலங்கரியுங்கள் ! மகர தோரணங்களைக் கட்டுங்கள் ! மணிகளை இட்ட மணநீர் நிறைந்த நிறை குடங்களையும் ஒளியுடைய அழகிய விளக்குகளுடன் தூபங்களையும் ஏந்துங்கள் ! இன்னும் மற்ற அணிகளையெல்லாம் பெருகச் செய்யுங்கள் ! என ஆணையிட்டு, அக்கொல்லி மழவன் தானும் தேவ தேவரான சிவபெருமானின் மகனார் திருமுன்பு தொழுதபடியே சேர்ந்தான்.
2213. பிள்ளையார் எழுந்தருளப் பெற்றேனென் றானந்தம் பெருகு காதல்
வெள்ளநீர் கண்பொழியத் திருமுத்தின் சிவிகை யின்முன் வீழ்ந்தபோது
வள்ளலார் எழுகவென மலர்வித்த திருவாக்கால் மலர்க்கை சென்னி
கொள்ளமகிழ்ந் துடன்சென்று குலப்பதியின் மணிவீதி கொண்டு புக்கான்.
தெளிவுரை : அந்தக் கொல்லி மழவன் பிள்ளையார் எழுந்தருளும் பேறு பெற்றேன் ! என எண்ணி, மேலும் மேலும் பெருகும் அன்பினால் வெள்ளமாய்க் கண்கள் நீரைப் பொழிய முத்துச்சிவிகையின் முன்பு வீழ்ந்தான். அப்போது வள்ளலாரான பிள்ளையார் எழுக என்ற திருவாக்கால் மலர்வித்தமையால், அவன் மலர்க்கைகளைத் தலைமேல் குவித்துக் கொண்டு எழுந்து அவருடனே போய்ப் பழமையான அந்தப் பதியின் திருவீதி வழியே அழைத்துக் கொண்டு வந்து நகரத்துக்குள் புகுந்தான்.
2214. மங்கலதூ ரியம்முழங்கு மணிவீதி கடந்துமதிச் சடையார் கோயிற்
பொங்குசுடர்க் கோபுரத்துக் கணித்தாகப் புனைமுத்தின் சிவிகை நின்றும்
அங்கண்இழிந் தருளுமுறை இழிந்தருளி அணிவாயில் பணிந்து புக்குத்
தங்கள்பிரான் கோயில்வலங் கொண்டுதிரு முன்வணங்கச் சாருங் காலை.
தெளிவுரை : மங்கல ஒலியான வாத்தியங்கள் ஒலிக்கின்ற அந்தத் தெருவினைக் கடந்து சென்று, பிறைச்சந்திரனை அணிந்த சடையையுடைய இறைவரின் திருக் கோயிலின் பொங்கும் ஒளிவீசும் கோயுரத்துக்கு அருகில் அழகிய வாயிலை வணங்கி உள்ளே புகுந்து தம் இறைவரின் கோயிலை வலம் வந்து திருமுன்பு வணங்கச் சேரும்போது,
2215. கன்னியிளங் கொடியுணர்வு கழிந்துநிலன் சேர்ந்ததனைக் கண்டு நோக்கி
என்இதுவென் றருள்செய்ய மழவன்தான் எதிர்இறைஞ்சி அடியேன் பெற்ற
பொன்இவளை முயலகனாம் பொருவிலரும் பிணிபொருந்தப் புனிதர் கோயில்
முன்னணையக் கொணர்வித்தேன் இதுபுகுந்த படியென்று மொழிந்து நின்றான்.
தெளிவுரை : (பிள்ளையார்) கன்னியான இளங்கொடி போன்ற ஒரு பெண் உணர்வின்றி நிலத்தில் கிடப்பதைப் பார்த்து இது என்ன? எனக் கேட்டார். அதற்குக் கொல்லி மழவன் அவர் எதிரே வணங்கி அடியேன் பெற்ற பொன் போன்ற இந்தப் பெண்ணை ஒப்பில்லாத தீர்ப்பதற்கு அரிய முயலகன் என்ற நோய் பற்றியதால் இறைவரின் திருக்கோயிலின் முன் சேருமாறு கொணர்ந்து இப்படிக் கிடத்தியுள்ளேன் ! இதுவே நிகழ்ந்தது ! எனக் கூறி நின்றான்.
2216. அணிகிளர் தாரவன் சொன்னமாற்றம் அருளொடுங் கேட்டுஅந் நிலையின்நின்றே
பணிவளர் செஞ்சடைப் பாச்சின்மேய பரம்பொரு ளாயினா ரைப்பணிந்து
மணிவளர் கண்டரோ மங்கையைவாட மயல்செய்வ தோஇவர் மாண்பதென்று
தணிவில் பிணிதவிர்க் கும்பதிகத் தண்டமிழ் பாடினார் சண்பைநாதர்.
தெளிவுரை : சீகாழிப் பதித் தலைவரான பிள்ளையார் அக் கொல்லி மழவன் உரைத்ததை அருளுடன் கேட்டு, கேட்ட அந்நிலையிலே நின்றபடி பாம்பு வளர்வதற்கு இடமான சிவந்த சடையையுடைய திருப்பாச்சிலில் பொருந்தியுள்ள பரம் பொருளான இறைவரை வணங்கி, மணிவளர் கண்டரோ, மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பு எனத் தொடங்கித் தீர்ப்பதற்கு அரிய அந்நோயைத் தீர்க்கும் திருப்பதிகமான குளிர்ந்த தமிழைப் பாடியருளினார்.
2217. பன்னு தமிழ்மறை யாம்பதிகம் பாடித் திருக்கடைக் காப்புச்சாத்தி
மன்னுங் கவுணியர் போற்றிநிற்க மழவன் பயந்த மழலைமென்சொல்
கன்னி யுறுபிணி விட்டுநீங்கக் கதுமெனப் பார்மிசை நின்றெழுந்து
பொன்னின் கொடியென ஒல்கிவந்து பொருவலித் தாதை புடையணைந்தாள்.
தெளிவுரை : புகழ்ந்து பேசப்படுகின்ற தமிழ் மறையான திருப்பதிகத்தைப் பாடி முடித்துத் திருக்கடைக் காப்பும் பாடிமுடித்து, நிலைபெற்ற கவுணியர் தலைவரான சம்பந்தர் துதித்து நின்றார். அப்போது மழவன் பெற்ற மழலையான மென்மையான சொல்லையுடைய அந்தக் கன்னி தன்னைப் பற்றிய நோய் நீங்கியதால், மிக விரைவாக நிலத்தினின்றும் எழுந்து பொற்கொடிபோல் ஒதுங்கி நடந்து வந்து, போர் வன்மை கொண்ட தந்தையின் பக்கத்தில் நின்றாள்.
2218. வன்பிணி நீங்கு மகளைக்கண்ட மழவன் பெருகு மகிழ்ச்சிபொங்கத்
தன்தனிப் பாவையும் தானுங்கூடச் சண்பையர் காவலர் தாளில்வீழ
நின்ற அருமறைப் பிள்ளையாரும் நீரணி வேணி நிமலர்பாதம்
ஒன்றிய சிந்தை யுடன்பணிந்தார் உம்பர்பிரான் திருத் தொண்டர்ஆர்த்தார்.
தெளிவுரை : வன்மையுடைய முயலகன் என்ற நோய் நீங்கிய மகளைக் கண்ட மழவன் பெருகும் மகிழ்ச்சியானது மிக, தன்னையுடைய ஒப்பில்லாத மகளும் தானும் சீகாழித் தலைவரான பிள்ளையாரின் காலில் விழுந்து வணங்கினார். அங்கு நின்ற பிள்ளையாரும் கங்கை நீரைத் தரித்த சடையுடைய குற்றமற்ற இறைவரின் திருவடிகளை ஒன்றுபட்ட உள்ளத்துடன் பணிந்தார்; தேவதேவரான இறைவரின் அடியார்கள் ஆரவாரம் செய்தனர்.
2219. நீடு திருவாச் சிராமம்மன்னும் நேரிழை பாகத்தர் தாள்வணங்கிக்
கூடும் அருளுடன் அங்கமர்ந்து கும்பிடும் கொள்கைமேற் கொண்டுபோந்தே
ஆடல் பயின்றார் பதிபிறவும் அணைந்து பணிந்தடி போற்றியேகிச்
சேடர்கள் வாழுந் திருப்பைஞ்ஞீலிச் சிவபெருமானை இறைஞ்சச் சென்றார்.
தெளிவுரை : நீடும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் நிலையாய் எழுந்தருளிய உமையம்மையை ஒரு பாகத்தில் உடைய இறைவரின் திருவடிகளை வணங்கிக் கூடும் அருளுடனே அங்கு விரும்பித் தங்கியிருந்தும், மேலும் வணங்கும் உள்ளக் குறிப்பினை மேற் கொண்டு சென்று, ஆடலில் மகிழ்வுடைய இறைவரின் தலங்கள் பிறவற்றையும் சேர்ந்து வணங்கித் திருவடிகளைத் துதித்து, மேலும் போய், அறிவால் சிறந்தவர் உறைகின்ற திருப்பைஞ்ஞீலிச் சிவ பெருமானை வணங்குவதற்காகச் சென்றார்.
2220. பண்பயில் வண்டினம் பாடுஞ்சோலைப்பைஞ்ஞீலி வாணர் கழல்பணிந்து
மண்பர வுந்தமிழ் மாலைபாடி வைகி வணங்கி மகிழ்ந்து போந்து
திண்பெருந் தெய்வக் கயிலையில்வாழ் சிவனார் பதிபல சென்றிறைஞ்சிச்
சண்பை வளந்தரு நாடர்வந்து தடந்திரு ஈங்கோய் மலையைச்சார்ந்தார்.
தெளிவுரை : பண்களைப் பயிலும் வண்டினங்கள் பாடுவதற்கு இடமான சோலைகள் சூழ்ந்த திருப்பைஞ்ஞீலியின் இறைவரது திருவடிகளை வணங்கி, உலகத்தவர் துதிக்கும் தமிழ் மாலையான திருப்பதிகத்தைப் பாடி அந்தத் தலத்தில் தங்கி வணங்கி மகிழ்ந்து, மேலே சென்று, திண்ணிய பெரிய தெய்வத் தன்மை வாய்ந்த திருக்கயிலாய மலையில் வாழ்கின்ற சிவபெருமானின் பதிகள் பலவற்றையும் போய் வணங்கி, வளம் தருகின்ற சீகாழிப் பதிக்குத் தலைவரான பிள்ளையார் வந்து திருவீங்கோய் மலையைச் சார்ந்தார்.
2221. செங்கட் குறவரைத் தேவர்போற்றுந் திகழ்திரு ஈங்கோய் மலையின்மேவுங்
கங்கைச் சடையார் கழல்பணிந்து கலந்த இசைப்பதி கம்புனைந்து
பொங்கர்ப் பொழில்சூழ் மலையும்மற்றும் புறத்துள்ள தானங்க ளெல்லாம்போற்றிக்
கொங்கிற் குடபுலஞ் சென்றணைந்தார் கோதின் மெய்ஞ் ஞானக் கொழுந்தனையார்.
தெளிவுரை : ஆளுடைய பிள்ளையார், சிவந்த கண்களையுடைய குறவரைத் தேவர்கள் வந்து வணங்குவதற்கு இடமான திருவீங்கோய் மலையில் வீற்றிருக்கும் கங்கையைச் சடையில் கொண்ட சிவபெருமானைப் பணிந்தார் ! இசையுடன் பொருந்திய திருப்பதிகத்தைப் பாடி மிக்க சோலை சூழ்ந்த மலையும் மற்றும் அயலில் உள்ள இடங்கள் எல்லாவற்றையும் வணங்கினார்; கொங்கு நாட்டின் மேல்பகுதியில். குற்றம் இல்லாத மெய்ஞ்ஞானக் கொழுந்தைப் போன்ற ஆளுடைய பிள்ளையார் போய்ச் சேர்ந்தார்.
2222. அண்டர்பிரான் ஆலயங்கள் அம்மருங்குள் ளனபணிந்து
தெண்டிரைநீர்த் தடம்பொன்னித் தென்கரையாங் கொங்கினிடை
வண்டலையும் புனற்சடையார் மகிழ்விடங்கள் தொழுதணைந்தார்
கொண்டல்பயில் நெடும்புரிசைக் கொடிமாடச் செங்குன்றூர்.
தெளிவுரை : தேவர்களின் தலைவரான சிவபெருமான் திருக் கோயில்கள் அந்தப் பக்கங்களில் உள்ளவற்றை யெல்லாம் வணங்கிச் சென்று, தெளிவான அலைகளையுடைய நீர் கொண்ட காவிரியில் தெற்குக் கரையில் உள்ள கொங்கு நாட்டில் வண்டுகள் அலைவதற்கு இடமான நீரையுடைய சடையார் மகிழ்ந்து வீற்றிருக்கும் தலங்களை வணங்கி, மேகம் வந்து பொருந்தும் நீண்ட மதிலையுடைய திருக்கொடி மாடச் செங்குன்றினைப் பிள்ளையார் போய் அடைந்தார்.
2223. அந்நகரில் வாழ்வாரும் அடியவரும் மனமகிழ்ந்து
பன்னெடுந்தோ ரணமுதலாப் பயிலணிகள் பலஅமைத்து
முன்னுறவந் தெதிர்கொண்டு பணிந்தேத்தி மொய்கரங்கள்
சென்னியுறக் கொண்டணைந்தார் சினவிடையார் செழுங்கோயில்.
தெளிவுரை : அந்த நகரத்தில் வாழ்பவர்களும் சிவனடியார்களும் மகிழ்ந்து பல நீண்ட தோரணங்கள் முதலானவற்றை அலங்கரித்து, முன்னால் வந்து எதிர் கொண்டு வணங்கி ஏத்தி, கூடிய கைகள் தலைமீது பொருந்த ஏற்றி, சினமுடைய காளையூர்தியினரான இறைவர் எழுந்தருளிய கோயிலில் பிள்ளையாரை அழைத்துக் கொண்டு போயினர்.
2224. தம்பெருமான் கோயிலினுள் எழுந்தருளித் தமிழ்விரகர்
நம்பரவர் திருமுன்பு தாழ்ந்தெழுந்து நலஞ்சிறக்க
இம்பரும்உம் பருமேத்த இன்னிசைவண் டமிழ்பாடிக்
கும்பிடும்ஆ தரவுடன்அக் கோநகரில் இனிதமர்ந்தார்.
தெளிவுரை : தமிழில் வல்ல பிள்ளையார், தம் இறைவர் கோயிலுள் அவரது திருமுன்பு தாழ்ந்து வணங்கி நன்மை பெறும்படி இம்மண்ணுலகத்தவரும் விண்ணுலகத்தவரும் போற்ற இனிய இசையுடைய வன்மையான தமிழ்ப் பதிகத்தைப் பாடினார். மேலும் குறிப்பிட வேண்டும் என்ற ஆசையால் அந்த நகரத்தில் இனிதாய்த் தங்கியிருந்தார்.
2225. அப்பாலைக் குடபுலத்தில் ஆறணிந்தார்அமர்கோயில்
எப்பாலுஞ் சென்றேத்தித் திருநணா வினைஇறைஞ்சிப்
பைப்பாந்தள் புனைந்தவரைப் பரவிப்பண் டமர்கின்ற
வைப்பான செங்குன்றூர் வந்தணைந்து வைகினார்.
தெளிவுரை : பிள்ளையார், அந்தப் பகுதியில் மேற்குத் திக்கில், கங்கையைத் தரித்த இறைவர் விரும்பி எழுந்தருளிய கோயில்களை எல்லா இடங்களிலும் போய் வணங்கி, திருநணா என்ற பவாநித் திருத்தலத்தை வணங்கிப் பாம்பை அணிந்த இறைவரை வணங்கி, முன்னே தாம் தங்குதற்கு விரும்பிக் கொண்டுள்ள தலமான கொடி மாடச் செங்குன்றூரில் தங்கியிருந்தார்.
2226. ஆங்குடைய பிள்ளையார் அமர்ந்துறையும் நாளின்கண்
தூங்குதுளி முகிற்குலங்கள் சுரந்துபெய லொழிகாலை
வீங்கொலிநீர் வைப்பெல்லாம் வெயில்பெறா விருப்புவரப்
பாங்கர்வரை யுங்குளிரும் பனிப்பருவ மெய்தியதால்.
தெளிவுரை : அந்தத் தலத்தில் ஆளுடைய பிள்ளையார் விரும்பித் தங்கியிருந்த நாட்களில், பெய்யும் துளிகளையுடைய மேகக்கூட்டங்கள் மழை பொய்த்த போது, பெருகிய ஒலியுடைய நீரால் சூழப்பட்ட உலகத்தில் எல்லாரும் வெயில் பெறாததனால் அந்த விருப்பம் மேலிடப் பக்கத்தில் உள்ள மலைகளும் குளிர்ச்சி அடையத் தக்க முன் பனிப் பருவம் வந்து சேர்ந்தது.
2227. அளிக்குலங்கள் சுளித்தகல அரவிந்தம் முகம்புலரப்
பளிக்குமணி மரகதவல் லியிற்கோத்த பான்மையெனத்
துளித்தலைமெல் லறுகுபனி தொடுத்தசையச் சூழ்பனியால்
குளிர்க்குடைந்து வெண்படாம் போர்த்தனைய குன்றுகளும்.
தெளிவுரை : வண்டின் கூட்டங்கள் வெறுப்புக் கொண்டு நீங்கிச் செல்ல, தாமரைகள் முகம் கருக, பளிங்கு மணியை மரகத மணியில் கோத்தது போல், மெல்லிய அறுகம் புல்லின் நுனியில் பனித் துளிகளைக் கோத்து அசைய, சூழ்ந்த பனியினால் நேர்ந்த குளிருக்கு ஆற்றாமல் உடைந்து குன்றுகளும் வெண்மையான போர்வை போர்த்ததுபோல் விளங்கின.
2228. மொய்பனிகூர் குளிர்வாடை முழுதுலவும் பொழுதேயாய்க்
கொய்தளிர்மென் சோலைகளும் குலைந்தசையக் குளிர்க்கொதுங்கி
வெய்யவனும் கரநிமிர்க்க மாட்டான்போல் விசும்பினிடை
ஐதுவெயில் விரிப்பதுவும் அடங்குவது மாகுமால்.
தெளிவுரை : மிக்க பனி செறிந்த குளிரையுடைய வாடைக் காற்று முழுதும் வீசும் காலமானதால், பறிக்கப்படும் தளிர்கள் தழைத்த மெல்லிய சோலைகளும் குளிர்ச்சி கொண்டு அலைய, குளிரால் ஒருபக்கம் ஒதுங்கிக் கொண்டு சுடும் கதிரையுடைய சூரியனும் தன் கதிர்களை நிமிர்ந்து விரிக்க மாட்டாதவனைப் போல் சிறிது வெயில் விரிப்பதும் சிறிது ஒடுக்குவதுமான நிலை உள்ளதாம்.
2229. நீடியஅப்பதிகளெலாம் நிரைமாடத் திறைகள்தொறும்
பேடையுடன் பவளக்கால் புறவொடுங்கப் பித்திகையின்
தோடலர்மென் குழன்மடவார் துணைக்கலச மென்முலையுள்
ஆடவர்தம் பணைத்தோளும் மணிமார்பும் அடங்குவன.
தெளிவுரை : பழைமையால் நீடிய அந்தத் தலங்களில் எங்கும் வரிசையாக உள்ள மாடங்களின் வீட்டு இறப்புகள் தோறும் தம் பெட்டைகளுடன் பவளம் போன்ற கால்களையுடைய புறாக்கள் ஒடுங்கியிருக்கும்; சிறு சண்பக மலரின் இதழ்கள் விரிவதற்கு இடமான மென்மையான கூந்தலையுடைய தம் பெண்களின் இணைக் கலசம் போன்ற கொங்கைகளினுள் ஆடவர்களின் பருத்த தோள்களும் அழகிய மார்புகளும் அடங்குவனவாம்.
2230. அரிசனமும் குங்குமமும் அரைத்தமைப்பார் அயலெல்லாம்
பரியஅகிற் குறைபிளந்து புகைப்பார்கள் பாங்கெல்லாம்
எரியுமிழ்பேழ் வாய்த்தோணி இரும்பீர்ப்பார் இடையெல்லாம்
விரிமலர்மென் புறவணிந்த மீப்புலத்து வைப்பெல்லாம்.
தெளிவுரை : விரியும் மென்மையான மலர்களையுடைய குறிஞ்சிப் புறவுகளில் எங்கும், பக்கங்களிலும் மஞ்சளும் குங்குமமும் சேர அரைத்து வைப்பர்; பக்க இடங்கள் எங்கும் பெரிய அகில் துண்டுகளைப் பிளந்து புகை எழுப்புவர்; இடை இடங்களில் தீயை உமிழ்கின்ற பெரிய வாயை உடைய தோணி வடிவில் அமைந்த இரும்புச் சட்டியைக் குளிர் காய்வதன் பொருட்டுத் தம் அருகில் இழுத்துக் கொள்வர்.
2231. அந்நாளில் கொடிமாடச் செங்குன்றூர் அமர்ந்திருந்த
மெய்ஞ்ஞானப் பிள்ளையா ருடன்மேவும் பரிசனங்கள்
பன்னாளும் அந்நாட்டில் பயின்றதனால் பனித்தகுளிர்
முன்னான பிணிவந்து மூள்வதுபோல் முடுகுதலும்.
தெளிவுரை : அந்நாட்களில் கொடிமாடச் செங்குன்றூர் என்ற தலத்தில் தங்கியிருந்த பிள்ளையாருடன் உள்ள பரிவாரங்கள் பல நாட்கள் அங்குத் தங்கியிருந்ததால், நடுக்கம் கொள்வதற்குக் காரணமான குளிர் முன்னே காணும் மலைச்சுரம் வந்து மேல் அடர்வதைப் போல் வருத்தவே.
2232. அந்நிலைமை ஆளுடைய பிள்ளையார்க் கவர்களெலாம்
முன்னறிவித் திறைஞ்சுதலும் முதல்வனார் அருள்தொழுதே
இந்நிலத்தின் இயல்பெனினும் நமக்கெய்தப் பெறாஎன்று
சென்னிமதி யணிந்தாரைத் திருப்பதிகம் பாடுவார்.
தெளிவுரை : அந்த நிலைமையை அந்தப் பரிவாரங்கள் எல்லாம் பிள்ளையாரின் திருமுன்பு போந்து அவரிடம் கூறி வேண்டிக் கொள்ளவும், இறைவரின் திருவருளைத் தொழுது, இந்த நாட்டின் இயல்பே இது; ஆயினும் இதன் கொடுமைகள் நமக்கு வந்து சேர மாட்டா என்ற கருத்துடன், சென்னியில் சந்திரனை அணிந்த இறைவரைத் திருப்பதிகம் பாடுபவராய்.
2233. அவ்வினைக் கிவ்வினை என்றெடுத் தையர்அமுதுசெய்த
வெவ்விடம் முன்தடுத் தெம்மிடர் நீக்கிய வெற்றியினால்
எவ்விடத்தும்அடி யார்இடர் காப்பது கண்டமென்றே
செய்வினை தீண்டா திருநீல கண்டம் எனச்செப்பினார்.
தெளிவுரை : அவ்வினைக்கு இவ்வினை என்று தொடங்கி, இறைவர் உண்ட கொடிய நஞ்சைத் தடுத்து எம் துன்பங்களை யெல்லாம் வாராமல் காத்தது அவரது திருநீல கண்டமே ஆகும் என்ற கருத்தினை வைத்துச் செய்வினை எம்மைத் தீண்டப் பெறா ! என்று திருநீலகண்டத்திடம் ஆணை என அருளினார்.
2234. ஆய குறிப்பினில் ஆணை நிகழ அருளிச்செய்து
தூய பதிகத் திருக்கடைக் காப்புத் தொடுத்தணிய
மேயஅப் பொற்பதி வாழ்பவர்க் கேயன்றி மேவும்அந்நாள்
தீய பனிப்பிணி அந்நாடு அடங்கவும் தீர்ந்ததன்றே.
தெளிவுரை : அத்தகைய அருட் குறிப்புடன் திரு ஆணை நிகழும்படி செய்து, தூய திருப்பதிகத்திற்குத் திருக்கடைக் காப்பும் தொடுத்து அணிந்தருளவே, பொருந்திய அந்தத் தலத்தில் வாழ்பவர்க்கு மட்டுமின்றி அந்நாளில் அந்த நாடு முழுமையும், அப்போதே தூய பனிச்சுரமானது நீங்கியது.
2235. அப்பதி யின்கண் அமர்ந்து சிலநாளில் அங்ககன்று
துப்புறழ் வேணியர் தானம் பலவும் தொழுதருளி
முப்புரி நூலுடன் தோலணி மார்பர் முனிவரொடும்
செப்பருஞ் சீர்த்திருப் பாண்டிக் கொடுமுடி சென்றணைந்தார்.
தெளிவுரை : மான் தோலுடன் கூடிய முப்புரி நூல் அணிந்த மார்பையுடைய பிள்ளையார் அந்த நகரத்தில் விரும்பித் தங்கியிருந்து பின் சில நாட்களில் அங்கிருந்து நீங்கிச் சென்று, பவளம் போன்ற சிவந்த சடையையுடைய இறைவர் இடங்கள் பலவற்றையும் வணங்கி, சொல்வதற்கு அரிய சிறப்பையுடைய திருப்பாண்டிக் கொடுமுடியை முனிவருடன் போய் அடைந்தார்.
2236. பருவம் அறாப்பொன்னிப் பாண்டிக் கொடுமுடி யார்தம்பாதம்
மருவி வணங்கி வளத்தமிழ் மாலை மகிழ்ந்துசாத்தி
விரிசுடர் மாளிகை வெஞ்சமாக் கூடல் விடையவர்தம்
பொருவில்தா னம்பலபோற்றிக் குணதிசைப் போதுகின்றார்.
தெளிவுரை : பருவம் தவறாத நீரையுடைய காவிரிக் கரையில் உள்ள திருப்பாண்டிக் கொடுமுடியில் இறைவர் திருவடிகளை வணங்கி வளம் உடைய தமிழ்ப் பதிகத்தைப் பாடிச் சாத்தி, ஒளி வீசும் மாடங்களையுடைய வெஞ்ச மாக்கடல் முதலாகச் சிவபெருமானின் ஒப்பற்ற இடங்கள் பலவற்றையும் வணங்கித் துதித்து, கிழக்குத் திக்கில் செல்பவராய்,
2237. செல்வக் கருவூர்த் திருவா னிலைக்கோயில் சென்றிறைஞ்சி
நல்லிசை வண்தமிழ்ச் சொற்றொடை பாடிஅந் நாடகன்று
மல்கிய மாணிக்க வெற்பு முதலா வணங்கிவந்து
பல்கு திரைப்பொன்னித் தென்கரைத் தானம் பலபணிவார்.
தெளிவுரை : செல்வம் பொருந்திய கருவூரில் திருவானிலை என்ற கோயிலில் சென்று வணங்கி, நல்ல இசையுடன் கூடிய வளமான தமிழ்ச் சொல் தொடையான திருப்பதிகத்தைப் பாடி, கொங்கு நாடான அதைவிட்டு அகன்று, பொருந்திய மாணிக்க மலை என்ற திருவாட் போக்கியினை முதலில் வணங்கி, மேலே சென்று பெருகும் அலைகளையுடைய காவிரியின் தென்கரைப் பதிகள் பலவற்றையும் வணங்குபவராய்,
2238. பன்னெடுங் குன்றும் படர்நெடுங் கானும் பலபதியும்
அந்நிலைத் தானங்க ளாயின எல்லாம் அமர்ந்திறைஞ்சி
மன்னு புகலியில் வைதிக வாய்மை மறையவனார்
பொன்னியல் வேணிப் புனிதர் பராய்த்துறை யுட்புகுந்தார்.
தெளிவுரை : பல பெரிய குன்றுகளிலும் பரந்த பெரிய காடுகளிலும் பல பதிகளிலும் அங்கங்கும் இறைவர் நிலையாய் வீற்றிருக்கும் தானங்களான கோயில்களை எல்லாம் விருப்புடன் சென்று வணங்கி, நிலை பெற்ற சீகாழியில் தோன்றிய வேதவுண்மையை நிலை நாட்டும் மறையவரான பிள்ளையார், பொன் போன்ற சடையை யுடைய தூயவரான சிவபெருமான் வீற்றிருக்கும் திருப்பராய்த்துறை என்ற தலத்துள் புகுந்தார்.
2239. நீடும் பராய்த்துறை நெற்றித் தனிக்கண்ணர் கோயில்நண்ணிக்
கூடுங் கருத்தொடு கும்பிட்டுக் கோதில் தமிழ்ச்சொல்மாலை
பாடுங் கவுணியர் கண்பனி மாரி பரந்திழியச்
சூடுங் கரதலத் தஞ்சலி கோலித் தொழுது நின்றார்.
தெளிவுரை : நீடும் திருப்பராய்த் துறை என்ற தலத்தில் வீற்றிருக்கும் நெற்றிக் கண்ணையுடைய இறைவரின் திருக் கோயிலை அடைந்து, ஒன்று பட்ட உள்ளத்துடன் வணங்கிக் குற்றம் இல்லாத தமிழ் மாலையைப் பாடுகின்ற கவுணியக் குலத்தலைவரான பிள்ளையார், கண்களினின்றும் நீர்மழை சொரியக் கைகளைத் தலை மீது அஞ்சலியாய்க் கூப்பித் தொழுது நின்றார்.
2240. தொழுது புறம்பணைந் தங்குநின் றேகிச் சுரர்பணிவுற்
றெழுதிரு வாலந் துறைதிருச் செந்துறை யேமுதலா
வழுவில் கோயில்கள் சென்று வணங்கி மகிழ்ந்தணைவார்
செழுமலர்ச் சோலைத் திருக்கற் குடிமலை சேரவந்தார்.
தெளிவுரை : வணங்கி வெளியே வந்து, அத்தலத்தினின்றும் நீங்கித் தேவர்கள் வணங்கி வந்து எழுகின்ற திருவாலத் துறை முதலான குற்றம் அற்ற பல கோயில்களையும் வணங்கி மகிழ்வுடன் அணைபவரான சம்பந்தர், செழுமையுடையமலர்ச் சோலைகளையுடைய திருக்கற்குடி மலையைச் சேரச் சென்றார்.
2241. கற்குடி மாமலை மேலெழுந்த கனகக் கொழுந்தினைக் கால்வளையப்
பொற்றிரள் மேருச் சிலைவளைத்த போர்விடை யாளியைப் போற்றிசைத்து
நற்றமிழ் மாலை புனைந்தருளி ஞானசம் பந்தர் புலங்கள்ஐ ந்தும்
செற்றவர் மூக்கீச் சரம்பணிந்து திருச்சிராப் பள்ளிச் சிலம்பணைந்தார்.
தெளிவுரை : பெரிய திருக்கற்குடி மலையின் மீது வீற்றிருக்கும் பொற்கொழுந்தைப் போன்ற பொன் மேரு மலையை வளைத்த, காளையூர்தியுடையவரைத் துதித்து, நல்ல தமிழ் மாலை சூட்டி, சம்பந்தர், ஐந்து புலன்களையும் அழித்தவரின் திருமூக்கீச் சரத்தினைப் பணிந்து போய்த் திருச்சிராப்பள்ளி மலையை அடைந்தார்.
2242. செம்மணி வாரி அருவிதூங்கும் சிராப்பள்ளி மேய செழுஞ்சுடரைக்
கைம்மலை ஈருரி போர்வை சாத்தும் கண்ணுத லாரைக் கழல்பணிந்து
மெய்ம்மகிழ் வெய்தி உளங்குளிர விளங்கிய சொற்றமிழ் மாலைவேய்ந்து
மைம்மலர் கண்டர்தம் ஆனைக்காவை வணங்கும் விருப்பொடு வந்தணைந்தார்.
தெளிவுரை : செந்நிறமான மணிகளை வாரிக் கொண்டு அருவி பாய்வதற்கும் இடமான திருச்சிராப்பள்ளி மலையின் மேல் வீற்றிருக்கும் யானையின் தோலை உரித்து அதைப் போர்த்திக் கொண்ட நெற்றிக் கண்ணையுடைய இறைவரின் திருவடிகளில் வணங்கி, உண்மையான மகிழ்ச்சியை அடைந்து, மனம் குளிர்ந்து விளங்கிய சொல் தமிழ் மாலையைப் புனைந்து கருமை விளங்கும் கழுத்தினையுடைய இறைவரின் திருவானைக்கா என்ற தலத்தை வணங்கும் விருப்புடனே பிள்ளையார் வந்தார்.
2243. விண்ணவர் போற்றிசெய் ஆனைக்காவில் வெண்ணாவல் மேவிய மெய்ப்பொருளை
நண்ணி யிறைஞ்சிமுன் வீழ்ந்தெழுந்து நாற்கோட்டு நாகம் பணிந்ததுவும்
அண்ணல்கோச் செங்க ணரசன்செய்த அடிமையும் அஞ்சொல் தொடையில்வைத்துப்
பண்ணுறு செந்தமிழ் மாலைபாடிப் பரவிநின் றேத்தினர் பான்மையினால்.
தெளிவுரை : அவர், தேவர்கள் வணங்கும் திருவானைக்கா என்னும் தலத்தில் வெண்ணாவல் மரத்தின் கீழ் மெய்ப் பொருளான இறைவரை அடைந்து வணங்கி எழுந்து, நான்கு கொம்புகளையுடைய வெள்ளை யானை பணிந்த இயல்பையும், பெருமையுடைய கோச்செங்கண் சோழ அரசர் செய்த அடிமைத் திறத்தையும், அழகிய சொற்றொடையில் வைத்துப் பண் பொருந்திய செந்தமிழ் மாலையான திருப்பதிகத்தைப் பாடி, துதித்து நின்ற பான்மையினால் போற்றினார்.
2244. நாரணன் நான்முகன் காணாவுண்மை வெண்ணாவல் உண்மை மயேந்திரமும்
சீரணி நீடு திருக்கயிலை செல்வத் திருவாரூர் மேயபண்பும்
ஆரணத் துட்பொரு ளாயினாரை ஆனைக்கா வின்கட் புகழ்ந்துபாடி
ஏரணியும் பொழில் சூழ்ந்தசண்பை ஏந்தலார் எல்லையில் இன்பமுற்றார்.
தெளிவுரை : திருமாலும் நான்முகனும் காணாக உண்மையுடையவரும் வெண்ணாவலிலும் மயேந்திரத்திலும் சிறப்புடைய திருக்கயிலையிலும் செல்வத் திருவாரூரிலும் எழுந்தருளிய பண்புடையவருமான வேதங்களின் உட்பொருளாய் உள்ள இறைவரைத் திருவானைக்கா என்ற பதியில் பாடி அழகு பொருந்திய சோலைகள் சூழ்ந்த சீகாழித் தலைவரான பிள்ளையார் இன்பத்தை அடைந்தனர்.
2245. கைதொழு தேத்திப் புறத்தணைந்து காமர் பதியதன் கட்சிலநாள்
வைகி வணங்கி மகிழ்ந்தணைவார் மன்னுந் தவத்துறை வானவர்தாள்
எய்தி இறைஞ்சி எழுந்துநின்றே இன்தமிழ் மாலைகொண் டேத்திப்போந்து
வைதிக மாமணி அம்மருங்கு மற்றுள்ள தானம் வழுத்திச் செல்வார்.
தெளிவுரை : திருவானைக்காவில் வீற்றிருக்கும் இறைவனைக் கையால் தொழுது துதித்து வெளியே வந்து, அழகிய அந்தப் பதியில் சில நாட்கள் தங்கி வணங்கி மகிழ்ந்து மேல் செல்பவராய், நிலை பெற்ற தவத்துறை (லால்குடி)யில் உள்ள இறைவரின் திருவடிகளை நிலத்தில் விழுந்து வணங்கி எழுந்து நின்று இனிய தமிழ் மாலை பாடித் துதித்துச் சென்று வைதிக நெறியின் மணி போன்ற அப்பிள்ளையார் அந்தப் பக்கத்தில் மற்றும் உள்ள தலங்களை வணங்கிச் செல்லலானார்.
2246. ஏறுயர்த் தார்திருப் பாற்றுறையும்எறும்பியூர் மாமலை யேமுதலா
வேறுபதி கள்பல வும்போற்றி விரவுந் திருத்தொண்டர் வந்துசூழ
ஈறில்புகழ்ச் சண்பை ஆளியார்தாம் எண்திசை யோரும் தொழுதிறைஞ்ச
நீறணிசெம் பவளப் பொருப்பில் நெடுங்கள மாநகர் சென்றுசேர்ந்தார்.
தெளிவுரை : காளைக் கொடியை உடைய இறைவரின் திருப்பாற்றுறையும் திருவெறும்பியூர் மாமலையும் முதலான பிற தலங்களை வணங்கிப் பொருந்தும் தொண்டர் வந்து தம்மைப் பக்கத்தில் சூழ்ந்து கொள்ள, முடிவில்லாத புகழையுடைய சீகாழித் தலைவர் எண் திசையில் உள்ளவர்களும் தொழுது வணங்கத், திருநீற்றை அணிந்த செம்பவள மலை போன்ற சிவபெருமானின் திருநெடுங்கள மாநகரத்தைப் போய் அடைந்தார்.
2247. நெடுங்களத் தாதியை அன்பால்நின்பால் நெஞ்சம் செலாவகை நேர்விலக்கும்
இடும்பைகள் தீர்த்தருள் செய்வாய்என்னும் இன்னிசை மாலைகொண் டேத்தியேகி
அடும்பணிச் செஞ்சடை யார்பதிகள் அணைந்து பணிந்து நியமம்போற்றிக்
கடுங்கை வரையுரித் தார்மகிழ்ந்த காட்டுப்பள் ளிப்பதி கைதொழுவார்.
தெளிவுரை : திருநெடுங்களத்தில் வீற்றிருக்கின்ற ஆதிப்பரம் பொருளான, இறைவனை அன்பால் உம்மிடம் உள்ளம் செல்லாதபடி நேர்மையினின்றும் விலக்கும் இடும்பைகளை யெல்லாம் தீர்த்து அருள் செய்வீராக ! என வேண்டிக் கொள்ளும் குறிப்பைக் கொண்ட இன்னிசைத் திருப்திகமான மாலையினால் துதித்து மேல் சென்று, கொல்லும் இயல்புடைய பாம்பைச் சூடிய சிவந்த சடையினரான சிவ பெருமான் தலங்களை வணங்கித் திருநியமத்தைத் துதித்து, வன்மையான துதிக்கையையுடைய யானையை உரித்த இறைவர் மகிழ்வுடன் வீற்றிருக்கும் திருகாட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தைக் கை தொழுவாராய்,
2248. சென்று திகழ்திருக் காட்டுப்பள்ளிச் செஞ்சடை நம்பர்தங் கோயில்எய்தி
முன்றில் வலங்கொண் டிறைஞ்சிவீழ்ந்து மொய்கழற் சேவடி கைதொழுவார்
கன்றணை ஆவின் கருத்துவாய்ப்பக் கண்ணுத லாரைமுன் போற்றிசெய்து
மன்றுள்நின் றாடல் மனத்துள்வைப்பார் வாருமன் னும்முலை பாடிவாழ்ந்தார்.
தெளிவுரை : சென்று விளங்கும் திருக்காட்டுப் பள்ளியில் வீற்றிருக்கும் செஞ்சடையுடைய சிவபெருமானின் கோயிலை அடைந்து திரு முன்றிலை வலமாய் வந்து வணங்கி வீழ்ந்து எழுந்து, கழலை அணிந்த அடிகளை வணங்குவாராய்க் கன்றைச் சேர்ந்த பசுவின் கருத்தை யுடைய அன்பு உள்ளத்தில் பொருந்த, நெற்றிக் கண்ணையுடைய இறைவரைத் திருமுன்பு நின்று வணங்கித் திருவம் பலத்துள் இருந்து அருட்கூத்தைத் தம் உள்ளத்தில் கொண்டு வாருமன்னு முலை எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடி வாழ்வு பெற்றார்.
2249. அங்கப் பதிநின் றெழுந்தருளி அணிதிரு வாலம் பொழில்வணங்கிப்
பொங்கு புனற்பொன்னிப் பூந்துருத்திப் பொய்யிலி யாரைப் பணிந்துபோற்றி
எங்கும் நிகழ்திருத் தொண்டர்குழாம் எதிர்கொள்ள எப்பதி யும்தொழுது
செங்கயல் பாய்வயல் ஓடைசூழ்ந்த திருக்கண்டி யூர்தொழச் சென்றணைந்தார்.
தெளிவுரை : பிள்ளையார், அங்கே அந்தப் பதியினின்று புறப்பட்டுச் சென்று அழகான திருஆலம் பொழிலினை வணங்கிப் பொங்கும் நீர்வளம் வாய்ந்த காவிரி நடுவில் உள்ள திருப்பூந்துருத்தி என்ற பதியுள் வீற்றிருக்கும் பொய்யிலியப்பரைப் பணிந்து துதித்து, எங்கும் உள்ள திருத்தொண்டர் கூட்டம் வந்து எதிர்கொண்டு வரவேற்று அழைத்துச் செல்ல, எல்லாவூர்களையும் வணங்கிப் போய்ச் செங்கயல்கள் பாய்வதற்கு இடமான வயல்களும் ஓடைகளும் சூழ்ந்த திருக்கண்டியூரை வணங்குவதற்குப் போய்ச் சேர்ந்தார்.
2250. கண்டியூர் வீரட்டர் கோயிவெய்திக் கலந்தடி யாருடன் காதல்பொங்கக்
கொண்ட விருப்புடன் தாழ்ந்திறைஞ்சிக் குலவு மகிழ்ச்சியின் கொள்கையினால்
தொண்டர் குழாத்தினை நோக்கிநின்று தொடுத்த இசைத்தமிழ் மாலைதன்னில்
அண்டர் பிரான்தன் அருளின்வண்ணம் அடியார் பெருமையிற் கேட்டருளி.
தெளிவுரை : திருக்கண்டியூரில் வீரட்டானரின் கோயிலை அவர் அடைந்து, கூடிய அடியாருடன் அன்பு மேலிட விருப்பத்துடன் கீழே விழுந்து வணங்கி, சேர்ந்த மகிழ்ச்சியினால் திருத்தொண்டர் குழாத்தினைப் பார்த்து நின்று, தாம் பாடிய இசைத் தமிழ் மாலையான திருப்பதிகத்தில் சிவபெருமானின் திருவருள் வண்ணங்கள் பலவற்றையும் அடியார் பெருமையில் வெளிப்படுத்தும் வகையால் வினவியருளி,
2251. வினவி எடுத்த திருப்பதிகம் மேவு திருக்கடைக் காப்புத்தன்னில்
அனைய நினைவரி யோன்செயலை அடியாரைக் கேட்டு மகிழ்ந்ததன்மை
புனைவுறு பாடலில் போற்றிசெய்து போந்து புகலிக் கவுணியனார்
துனைபுனற் பொன்னித் திரைவலங்கொள் சோற்றுத் துறைதொழச் சென்றடைவார்.
தெளிவுரை :அங்ஙனம் வினவினேன் எனத் தொடங்கிய திருப்பதிகத்தில் பொருந்திய கடைக் காப்பினில், நினைத்தற்கரிய சிவபெருமானின் அருட்செயலின் திறங்களை, அடியாரைக் கேட்டு மகிழ்ந்த இயல்பைக் கூறிய பாடலால் துதித்து, அப்பால் சென்று, சீகாழியில் கவுணியர் குலத்தில் வந்த அவர், விரைவாய்ச் செல்லும் நீரையுடைய காவிரியின் அலைகள் வலம் கொண்டு போகின்ற திருச்சோற்றுத் துறையினைத் தொழச் செல்பவராய்,
2252. அப்பர்சோற் றுத்துறை சென்றடை வோம்என்
றொப்பில் வண்டமிழ் மாலை ஒருமையால்
செப்பி யேசென்று சேர்ந்தனர் சேர்விலார்
முப்புரம் செற்ற முன்னவர் கோயில்முன்.
தெளிவுரை : அப்பரின் திருச் சோற்றுத் துறையைச் சென்று அடைவோம் என்று முடியும் கருத்துடையதாய், ஒப்பில்லாத வன்மையுடை தமிழ் மாலையை உள்ளத்தின் ஒருமைப்பாட்டுடன் பாடிச் சென்று பகைவரின் திரிபுரங்களை எரித்த முதல்வரின் கோயில் முன்பு பிள்ளையார் சேர்ந்தார்.
2253. தொல்லை நீள்திருச் சோற்றுத் துறையுறை
செல்வர் கோயில் வலங்கொண்டு தேவர்கள்
அல்லல் தீர்க்கநஞ் சுண்ட பிரானடி
எல்லை யில்அன்பு கூர இறைஞ்சினார்.
தெளிவுரை : பழைமையுடைய நீண்ட திருச் சோற்றுத் துறையுள் எழுந்தருளிய அருட் செல்வரான சிவபெருமானின் கோயிலை வலம் வந்து வணங்கித், தேவர்களின் துன்பங்களைத் தீர்க்கும் பொருட்டு நஞ்சினை உண்ட பெருமானின் திருவடிகளை அளவற்ற அன்பு பெருக வணங்கினார்.
2254. இறைஞ்சி ஏத்தி எழுந்துநின் றின்னிசை
நிறைந்த செந்தமிழ் பாடி நிலாவிஅங்
குறைந்து வந்தடி யாருட னெய்தினார்
சிறந்த சீர்த்திரு வேதி குடியினில்.
தெளிவுரை : வணங்கித் துதித்து எழுந்து நின்று இனிய பண்ணிசை நிறைந்த செந்தமிழ்ப் பதிகம் பாடிப் பொருந்தி, அந்தப் பதியிலே தங்கி, அடியாருடன் கூடிச் சிறந்த சீர்களைக் கொண்ட திருவேதிகுடியில் வந்து சேர்ந்தார்.
2255. வேத வேதியர் வேதி குடியினில்
நாதர் கோயில் அணைந்து நலந்திகழ்
பாத பங்கயம் போற்றிப் பணிந்தெழுந்
தோதி னார்தமிழ் வேதத்தின் ஓங்கிசை.
தெளிவுரை : மறைகளை ஓதும் மறையவர் வாழும் திருவேதி குடியில், முதல்வரின் கோயிலை அடைந்து, நன்மை விளங்கும் திருவடியான தாமரைகளை வணங்கி எழுந்து நின்று, தமிழால் வேதங்களிலும் ஓங்கும் இசையையுடைய திருப்பதிகத்தைப் பாடினார்.
2256. எழுது மாமறை யாம்பதி கத்திசை
முழுதும் பாடி முதல்வரைப் போற்றிமுன்
தொழுது போந்துவந் தெய்தினார் சோலைசூழ்
பழுதில் சீர்த்திரு வெண்ணிப் பதியினில்.
தெளிவுரை : எழுதுகின்ற பெருமறையான இசையுடைய திருப்பதிகத்தை முழுதும் பாடி இறைவரை வணங்கி, மேலே சென்று, பூஞ்சோலைகளால் சூழப்பட்ட குற்றம் அற்ற சிறப்பையுடைய திருவெண்ணி என்னும் திருப்பதியை அடைந்தார்.
2257. வெண்ணி மேய விடையவர் கோயிலை
நண்ணி நாடிய காதலில் நாள்மதிக்
கண்ணி யார்தங் கழலிணை போற்றியே
பண்ணில் நீடும் பதிகமும் பாடினார்.
தெளிவுரை : திருவெண்ணிப் பதியில் பொருந்திய இடபத்தினையுடைய இறைவரின் திருக்கோயிலை அடைந்து உள்ளம் பொருந்திய அன்பால் புதிய பிறையைக் கண்ணியாய் அணிந்த இறைவரின் திருவடியைப் போற்றிப் பண்ணால் மிக்க திருப்பதிகத்தைப் பாடினார்.
2258. பாடி நின்று பரவிப் பணிந்துபோய்
ஆடும் அங்கணர் கோயில்அங் குள்ளன
மாடு சென்று வணங்கி மகிழ்ந்தனர்
நீடு சண்பை நிறைபுகழ் வேதியர்.
தெளிவுரை : பதிகம் பாடி நின்று துதித்து வணங்கி மேல் சென்று அருள் ஆடலை நிகழ்த்தும் இறைவர் வீற்றிருக்கும் அப்பக்கத்தில் உள்ளனவாகிய கோயில்களைச் சென்று வணங்கி, சீகாழியில் தோன்றிய நிறைந்த புகழையுடைய வேதியரான பிள்ளையார் மகிழ்ச்சி அடைந்தார்.
2259. மொய்தருஞ் சோலைசூழ் முளரிமுள் ளடவிபோய்
மெய்தரும் பரிவிலான் வேள்வியைப் பாழ்படச்
செய்தசங் கரர்திருச் சக்கரப் பள்ளிமுன்
பெய்தவந் தருளினார் இயலிசைத் தலைவனார்.
தெளிவுரை : நெருங்கிய சோலைகள் சூழ்ந்த தாமரைத் தண்டுகளின் முட்காடு என்னப்படுகின்ற பொய்கைகள் மிக்க மருத நிலத்தில் சென்று, உண்மை நிலையினைச் செய்யும் அன்பு இல்லாத தக்கனின் வேள்வியை அழியச் சங்காரம் செய்த சிவபெருமான் வீற்றிருக்கும் திருச்சக்கரப் பள்ளி என்ற தலத்தின் முன்பு பொருந்த வந்து, இயல் இசை வல்ல பிள்ளையார் சேர்ந்தார்.
2260. சக்கரப் பள்ளியார் தந்தனிக் கோயிலுள்
புக்கருத் தியினுடன் புனைமலர்த் தாள்பணிந்
தக்கரைப் பரமர்பால் அன்புறும் பரிவுகூர்
மிக்கசொல் தமிழினால் வேதமும் பாடினார்.
தெளிவுரை : திருச்சக்கரப் பள்ளியில் வீற்றிருக்கும் இறைவரின் கோயிலுக்குள்ளே புகுந்து விருப்பத்துடன் புனைந்த மலர் மாலை போன்ற திருவடிகளை வணங்கி, எலும்பு மாலையைச் சூடிய அரையை உடைய இறைவரிடத்து அன்பு பொருந்தும் பரிவு மிகுவிக்கும் ஆற்றல் மிக்க சொற்களாலான தமிழால் நான்கு வேதப் பொருள்களையும் கொண்ட திருப்பதிகத்தையும் பாடி,
2261. தலைவர்தம் சக்கரப் பள்ளிதன் னிடையகன்
றலைபுனற் பணைகளின் அருகுபோய் அருமறைப்
புலனுறும் சிந்தையார் புள்ளமங் கைப்பதி
குலவும் ஆலந்துறைக் கோயிலைக் குறுகினார்.
தெளிவுரை : அரிய வேதத்தின் உள்பொருளான ஞானத்தைத் தம் அறிவில் நிரம்பப் பெற்ற பிள்ளையார், சிவபெருமானின் திருச்சக்கரப் பள்ளியினிடத்தை நீங்கி அலையும் நீர் பரந்த வயல்களின் பக்கமாகச் சென்று, திருப்புள்ள மங்கை என்ற திருப்பதியில் விளங்கும் திருவாலந்துறை எனப் பெயர் பெறும் கோயிலை அடைந்தார்.
2262. மன்னும்அக் கோயில்சேர் மான்மறிக் கையர்தம்
பொன்னடித் தலம்உறப் புரிவொடுந் தொழுதெழுந்
தின்னிசைத் தமிழ்புனைந் திறைவர்சே லூருடன்
பன்னுபா லைத்துறைப் பதிபணிந் தேகினார்.
தெளிவுரை : நிலை பெற்ற அந்தக் கோயிலில் எழுந்தருளிய மான்கன்றை ஏந்திய கையுடைய இறைவரின் பொற்பாதங்களைப் பொருந்திய அன்புடன் தொழுது, எழுந்து இனிய இசையையுடைய தமிழ்ப் பதிகத்தைப்பாடி இறைவர் வீற்றிருக்கின்ற திருச்சேலூர் துதித்துச் சொல்லப் பெறும் திருப்பாலைத்துறை என்ற பதியையும் வணங்கினார்.
2263. காவின்மேல் முகிலெழுங் கமழ்நறும் புறவுபோய்
வாவிநீ டலவன்வாழ் பெடையுடன் மலர்நறும்
பூவின்மேல் விழைவுறும் புகலியார் தலைவனார்
சேவின்மேல் அண்ணலார் திருநலூர் நண்ணினார்.
தெளிவுரை : பொய்கையில் பொருந்திய ஆண் நண்டுகள் தம்முடன் வாழும் பெண் நண்டுகளுடன் மலரும் நல்ல மணமுடைய தாமரை மலரின் மேல் விரும்பி அமர்தற்கு இருப்பிடமான சீகாழித் தலைவரான பிள்ளையார் சோலைகளின் மேலே மேகங்கள் எழுகின்ற மணம் கமழும் நல்ல முல்லை நிலத்தின் வழியிலே போய்க் காளையூர்தியின் மேல் எழுந்தருளும் இறைவரின் திருநல்லூர் அடைந்தார்.
2264. மன்றலங் கழனிசூழ் திருநலூர் மறைவலோர்
துன்றுமங் கலவினைத் துழனியால் எதிர்கொளப்
பொன்தயங் கொளிமணிச் சிவிகையிற் பொலிவுறச்
சென்றணைந் தருளினார் சிரபுரச் செம்மலார்.
தெளிவுரை : பிள்ளையார், மணம் கமழும் அழகிய வயல்கள் சூழ்ந்த திருநல்லூர் வாழும் மறையில் வல்ல மறையவர்கள் நெருங்கிய மங்கலச் செயல்களின் நிறைவுடனே வரவேற்கப் பொன் ஒளி விளங்கும் ஒளியுடைய முத்துச் சிவிகையின் மீது அழகு விளங்கச் சென்று அடைந்தார்.
2265. நித்திலச் சிவிகைமேல் நின்றிழிந் தருளியே
மொய்த்தஅந் தணர்குழாம் முன்செலப் பின்செலும்
பத்தரும் பரிசனங் களுமுடன் பரவவே
அத்தர்தங் கோபுரந் தொழுதணைந் தருளினார்.
தெளிவுரை : முத்துப் பல்லக்கினின்றும் இழிந்து, கூட்டமான அந்தணர் குழுவினர் முன்னே செல்ல, பின்னே செல்கின்ற அடியவரும் பரிவாரங்களும் தம்முடன் கூடித் துதித்து வர, இறைவரின் கோபுரத்தை வணங்கிக் கோயிலுக்குள் புகுந்தார்.
2266. வெள்ளிமால் வரையைநேர் விரிசுடர்க் கோயிலைப்
பிள்ளையார் வலம்வரும் பொழுதினில் பெருகுசீர்
வெள்ளஆ னந்தமெய் பொழியமே லேறிநீர்
துள்ளுவார் சடையரைத் தொழுதுமுன் பரவுவார்.
தெளிவுரை : பிள்ளையார், மலையைப் போல விளங்கும் ஒளியையுடைய அக்கோயிலை வலம் வரும்போது ஆனந்தக் கண்ணீர் வழிந்து திருமேனி எங்கும் பொழிய, அம்மாடக் கோயிலின் மேல் ஏறிப் போய்க், கங்கை நீர் துள்ளுதல் பொருந்திய சடையையுடைய இறைவரை வணங்கித் திருமுன்பு நின்று துதிப்பவராய்,
2267. பரவுசொற் பதிகமுன் பாடினார் பரிவுதான்
வரவயர்த் துருகுநேர் மனனுடன் புறம்அணைந்
தரவுடைச் சடையர்பே ரருள்பெறும் பெருமையால்
விரவும்அப் பதியமர்ந் தருளியே மேவினார்.
தெளிவுரை : துதிக்கும் சொல்லால் ஆன பதிகத்தினைப் பாடியவராய் மிக்க அன்பு மேலிட்டதால் தம்மையும் மறந்து உருகும் நேர்மை பெற்ற உள்ளத்துடன் கோயில் புரத்தை அடைந்து பாம்புகளைப் பூண்ட சடையை யுடைய இறைவரின் திருவருளைப் பெறும் பெருமையால் இறைவர் வீற்றிருக்கும் அந்தத் தலத்தில் விரும்பி வீற்றிருந்தார்.
2268. அன்ன தன்மையில் அப்பதியினில் அமர்ந் தருளி
மின்னு செஞ்சடை விமலர்தாள் விருப்பொடு வணங்கிப்
பன்னும் இன்னிசைப் பதிகமும் பலமுறை பாடி
நன்னெ டுங்குல நான்மறை யவர்தொழ நயந்தார்.
தெளிவுரை : அவ்வாறு அந்தப் பதியில் தங்கி மின் போன்ற சடையுடைய இறைவரின் திருவடிகளை விருப்புடன் வணங்கிப் புகழ்ந்து சொல்லும் இனிய இசையுடன் கூடிய பதிகம் பல முறையும் பாடி, நல்ல நீண்ட மறையவர் வணங்கி நிற்க அங்குத் தங்கியிருந்தார்.
2269. நீடும் அப்பதி நீங்குவார் நிகழ்திரு நல்லூர்
ஆடுவார் திரு அருள்பெற அகன்றுபோந் தங்கண்
மாடு முள்ளன வணங்கியே பரவிவந் தணைந்தார்
தேடும் மால்அயற் கரியவர் திருக்கரு காவூர்.
தெளிவுரை : நிலை பெறும் அந்தப் பதியினின்று நீங்குபவரான பிள்ளையார், விளங்கும் அந்தத் திருநல்லூரில் எழுந்தருளிய கூத்தாடும் இறைவரின் திருவருளைப் பெற்றதால் அதை விட்டுப் புறப்பட்டுச் சென்று, அவ்விடத்தும் பக்கத்திலும் உள்ள திருப்பதிகளை வணங்கிய வண்ணம் தம்மைத் தேடிய திருமாலுக்கும் நான்முகனுக்கும் அரியவரான இறைவரின் திருக்கருகாவூரில் வந்து சேர்ந்தார்.
2270. வந்து பந்தர்மா தவிமணங் கமழ்கரு காவூர்ச்
சந்த மாமறை தந்தவர் கழலிணை தாழ்ந்தே
அந்த மில்லவர் வண்ணம்ஆர் அழல்வண்ணம் என்று
சிந்தை இன்புறப் பாடினார் செழுந்தமிழ்ப் பதிகம்.
தெளிவுரை : சேர்ந்து பந்தலில் படர்ந்து ஏறிய முல்லைகள் மணம் கமழ்கின்ற திருக்கருகாவூரில் எழுந்தருளிய இசை யமைதியுடைய பெருமறைகளைத் தந்த இறைவரின் திருவடிகளை வணங்கி, என்றும் அழியாமல் நித்தரான சிவ பெருமானின் வண்ணம் தீயின் வண்ணமாகும் என்ற கருத்தும் முடிபும் உடையதாய்ச் செந்தமிழ்ப் பதிகத்தை உள்ளம் இன்பம் அடையப் பாடினார்.
2271. பதிக இன்னிசை பாடிப்போய்ப் பிறபதி பலவும்
நதிய ணிந்தவர் கோயில்கள் நண்ணியே வணங்கி
மதுர முத்தமிழ் வாசகர் அணைந்தனர் மன்றுள்
அதிர்சி லம்படி யார்மகிழ் அவளிவ ணல்லூர்.
தெளிவுரை : பதிக இனிய இசையைப் பாடிச் சென்று பல பிற தலங்களிலும் கங்கையாற்றை அணிந்தவர் கோயில்களை அடைந்து வணங்கி, பொன்னம்பலத்தில் கூத்தாடுகின்ற ஒலிக்கும் சிலம்பினையுடைய இறைவர் மகிழ்ந்து வீற்றிருக்கின்ற திரு அவளிவணல்லூரை இனிய முத்தமிழும் பொருந்திய வாக்கையுடைய பிள்ளையார் அணைந்தார்.
2272. மன்னும் அப்பதி வானவர் போற்றவும் மகிழ்ந்த
தன்மை யார்பயில் கோயிலுள் தம்பரி சுடையார்
என்னும் நாமமும் நிகழ்ந்திட ஏத்திமுன் இறைஞ்சிப்
பன்னு சீர்ப்பதி பலவும்அப் பாற்சென்று பணிவார்.
தெளிவுரை : நிலைபெற்ற அத்தலத்தில் தேவர்களும் துதிக்க மகிழ்ந்து எழுந்தருளும் இயல்பு கொண்ட இறைவரின் கோயிலுக்குள் புகுந்து தம்பரிசு உடையார் என்ற பெயரும் வெளிப்பட வைத்து, துதித்துத் திருமுன்பு வணங்கிச் சொல்லும் சிறப்புடைய பிற பதிகள் பலவற்றிலும் சென்று வணங்குபவராய்.
2273. பழுதில் சீர்த்திருப் பரிதிநன் னியமமும் பணிந்தங்
கெழுது மாமறை யாம்பதி கத்திசை போற்றி
முழுது மானவர் கோயில்கள் வணங்கியே முறைமை
வழுவில் சீர்திருப் பூவனூர் வணங்கிவந் தணைந்து.
தெளிவுரை : குற்றங்களைப் போக்கிடும் சிறப்புக் கொண்ட திருப்பரிதி நியமத்தை வழிபட்டு, அங்கே எழுதும் மறையான திருப்பதிகத்தைப் பாடித் துதித்து எல்லாமாய் இருக்கும் சிவபெருமானின் திருக்கோயிலை வணங்கி முறைமையினின்றும் தவறாத சிறப்புடைய திருப்பூவனூரை வந்து சேர்ந்து, திருப்பரிதி நியமத்தில் பாடியது விண் கொண்ட என்ற தொடக்கம் உடைய பதிகம்.
2274. பொங்கு காதலிற் போற்றிஅங் கருளுடன் போந்து
பங்க யத்தடம் பணைப்பதி பலவுமுன் பணிந்தே
எங்கும் அன்பர்கள் ஏத்தொலி எடுக்கவந் தணைந்தார்
அங்க ணர்க்கிட மாகிய பழம்பதி ஆவூர்.
தெளிவுரை : வளரும் விருப்ப மிகுதியினால் துதித்து அந்த இடத்தினின்றும் நீங்கிப் போய், தாமரைகளையுடைய பெரிய வயல்கள் சூழ்ந்த பதிகள் பலவும் துதித்து, ஒலி பெருக வாழ்த்தி வந்து சிவபெருமான் அமரும் பழைய பதியான திருஆவூரினை அடைந்தார்.
2275. பணியும் அப்பதிப் பசுபதீச் சரத்தினி திருந்த
மணியை உள்புக்கு வழிபடும் விருப்பினால் வணங்கித்
தணிவில் காதலில் தண்டமிழ் மாலைகள் சாத்தி
அணிவி ளங்கிய திருநலூர் மீண்டும்வந் தணைந்தார்.
தெளிவுரை : சேர்ந்து விளங்கும் அந்தத் தலத்தில் பசுபதீச்சரக் கோயிலில் இனிதாக வீற்றிருந்த மணியான இறைவரைக் கோயிலுள் புகுந்து வழிபடும் விருப்பத்தினால் வணங்கிக் குறைவில்லாத அன்புடன் குளிர்ந்த தமிழ் மாலைகள் பாடிச் சாத்தி, அழகுடைய திருநல்லூரினை மீண்டும் வந்தடைந்தார்.
2276. மறை விளங்கும்அப் பதியினில் மணிகண்டர் பொற்றாள்
நிறையும் அன்பொடு வணங்கியே நிகழ்பவர் நிலவும்
பிறைய ணிந்தவர் அருள்பெறப் பிரசமென் மலர்வண்
டறைந றும்பொழில் திருவலஞ் சுழியில்வந் தணைந்தார்.
தெளிவுரை : வேதங்கள் விளங்குவதற்கு இடமான அந்தப்பதியில் மணிகண்டரான இறைவரின் பொன்னடிகளை நிறைவான அன்புடன் வணங்கிக் கொண்டு ஆளுடைய பிள்ளையார், பிறை சூடிய இறைவரின் நிலையான திருவருளைப் பெற்று உலகம் உய்வு பெறத் தேன் பொருந்திய பூக்களில் வண்டுகள் ஒலிக்கின்ற மணம் வீசும் சோலைகள் சூழ்ந்த திருவலஞ்சுழியில் வந்து சேர்ந்தார்.
2277. மதிபு னைந்தவர் வலஞ்சுழி மருவுமா தவத்து
முதிரும் அன்பர்கள் முத்தமிழ் விரகர்த முன்வந்
தெதிர்கொள் போழ்தினில் இழிந்தவர் எதிர்செல மதியைக்
கதிர்செய் வெண்முகிற் குழாம்புடை சூழ்ந்தெனக் கலந்தார்.
தெளிவுரை : பிறைச் சந்திரனைச்சூடிய இறைவர் திருவலஞ் சுழியில் வாழ்கின்ற பெருந்தவத்தின் முயற்சியுடைய அன்பர்கள் ஒன்றுகூடி முத்தமிழ் வல்லவரான பிள்ளையாரின் முன்வந்து எதிர்கொண்டு வரவேற்கும் போது, மதியை ஒளியுடைய வெண்மேகங்கள் சுற்றிச் சூழ்ந்தது போல் கூடினர்.
2278. கலந்த அன்பர்கள் தொழுதெழக் கவுணியர் தலைவர்
அலர்ந்த செங்கம லக்கரம் குவித்துடன் அணைவார்
வலஞ்சு ழிப்பெரு மான்மகிழ்கோயில்வந் தெய்திப்
பொலங்கொள் நீள்சுடர்க் கோபுரம் இறைஞ்சியுட் புகுந்தார்.
தெளிவுரை : வந்து கூடிய அன்பர்கள் கீழ் விழுந்து தொழுது எழுந்து நிற்கக் கவுணியர் தலைவரான பிள்ளையார், அன்று பூத்த செந்தாமரை போன்ற கைகளைக் கூப்பி அணைபவராய், திருவலஞ்சுழி இறைவர் மகிழ்ந்து எழுந்தருளிய கோயிலைப் போய்ச் சேர்ந்து பொன்னையுடைய நீண்ட சுடர் விட்டு விளங்கும் கோபுரத்தை வணங்கி உள்ளே புகுந்தார்.
2279. மருவலார்புரம் முனிந்தவர் திருமுன்றில் வலங்கொண்
டுருகும் அன்புடன்உச்சிமேல் அஞ்சலி யினராய்த்
திருவ லஞ்சுழி யுடையவர் சேவடித் தலத்தில்
பெருகும்ஆதர வுடன்பணிந் தெழுந்தனர் பெரியோர்.
தெளிவுரை : பகைவரின் மூன்று புரங்களை எரித்த இறைவரின் திருமுற்றத்தை வலமாகச் சுற்றி வந்து, உள்ளம் உருகிய அன்புடனே, தலையின் மேல் கைகுவித்து அஞ்சலி செய்பவராய்த், திருவலஞ்சுழி இறைவரின் திருவடிகளில் பெருகும் அன்புடனே பெரியவரான சம்பந்தர் பணிந்து எழுந்தார்.
2280. ஞானபோனகர் நம்பர்முன் தொழுதெழு விருப்பால்
ஆனகாதலில் அங்கணரவர்தமை வினவும்
ஊனமில்இசை யுடன்விளங் கியதிருப் பதிகம்
பானலார்மணி கண்டரைப் பாடினார் பரவி.
தெளிவுரை : ஞானப்பாலையுண்ட பிள்ளையார் சிவபெருமானின் திருமுன்பு தொழுது எழும் விருப்பத்தினால் விளைந்த ஆசையினால் இறைவரை முன்னிலைப் படுத்தி, வினவுகின்ற கருத்தையுடைய, குற்றம் அற்ற இசைவுடனே விளங்கும் திருப்பதிகத்தை, குவளை மலர் போன்ற கண்டத்தையுடைய இறைவரைப் பாடித் துதித்தார்.
2281. புலங்கொள் இன்தமிழ் போற்றினர் புறத்தினில் அணைந்தே
இலங்கு நீர்ப்பொன்னி சூழ்திருப் பதியினி லிருந்து
நலங்கொள் காதலின் நாதர்தாள் நாள்தொறும் பரவி
வலஞ்சு ழிப்பெருமான் தொண்டர்தம் முடன் மகிழ்ந்தார்.
தெளிவுரை : ஞான உபதேசமாய் நன் மக்கள் உள்ளத்தில் கொள்ளும் இனிய, இசையைத் துதித்தவராய்க் கோயிலின் வெளியே வந்து சேர்ந்து, விளங்கும் நீரையுடைய காவிரி சூழ்ந்த அந்தப் பதியில் தங்கியிருந்து, நன்மை பொருந்திய அன்பினால் இறைவரின் திருவடிகளை நாள் தோறும் வணங்கித் திருவலஞ்சுழிப் பெருமானின் தொண்டர்களுடனே கூடி மகிழ்வுடன் இருந்து வந்தார்.
2282. மகிழ்ந்த தன்தலை வாழும்அந் நாளிடை வானில்
திகழ்ந்த ஞாயிறு துணைப்புணர் ஓரையுட் சேர்ந்து
நிகழ்ந்த தன்மையில் நிலவும்ஏழ் கடல்நீர்மை குன்ற
வெகுண்டு வெங்கதிர்பரப்பலின் முதிர்ந்தது வேனில்.
தெளிவுரை : மகிழ்வுடன் அந்தப் பதியில் அவர் வாழ்ந்து வருகின்ற நாட்களில் வானத்தில் விளங்கிய கதிரவன், மிதுன ஓரையுள் சேர்ந்ததால் பொருந்தும் ஏழ்கடலும் தன் நீர்மை குறையுமாறு சினத்துடன் வெம்மையான கதிர்களைப் பரப்புதலால் முது வேனிற் பருவம் வந்தது.
2283. தண்பு னற்குறிர் கால்நறுஞ் சந்தனத் தேய்வை
பண்பு நீடிய வாசமென் மலர்பொதி பனிநீர்
நண்பு டைத்துணை நகைமணி முத்தணி நாளும்
உண்ப மாதுரி யச்சுவை உலகுளோர் விரும்ப.
தெளிவுரை : குளிர்ச்சியுடைய நீர்ச் சேர்க்கையினால் குளிர்ந்து வீசும் காற்றையும், மணம் உடைய சந்தனத்தையும், நன்மை பொருந்திய மணமுடைய பூக்களுள் பொதிந்த பனிநீரையும், வாழ்க்கைத் துணைவியான மனைவியையும், ஒளிவீசும் மணிகளாகிய முத்து மாலைகளையும், உண்ணக் கூடிய இன் சுவைப் பண்டங்களையும் உலகத்தவர் விரும்புமாறு வேனிற் காலம் முதிர்ந்தது.
2284. அறல்மலியுங் கான்யாற்றின் நீர்நசையால் அணையுமான்
பெறலரிய புனலென்று பேய்த்தேரின் பின்தொடரும்
உறையுணவு கொள்ளும்புள் தேம்பஅயல் இரைதேரும்
பறவைசிறை விரித்தொடுங்கப் பனிப்புறத்து வதியுமால்.
தெளிவுரை : கரிய மணல் மிக்க காட்டாற்று நீர் பெறும் விருப்பத்தால் சேர்ந்த மான் கூட்டம் (அங்கே நீரைப் பெறாததால்) பெறுவதற்கு அரிய நீர் என்று தோற்றம் காரணமாக மயங்கிக் கானல்நீரின் பின்னால் தொடர்ந்து செல்லும்; மழைத்துளிகளை உணவாகக் கொள்ளும் சாதகப் பறவை உணவு பெறாது வருந்தி வேறு உணவைத் தேடித் திரியும்; பறவைகள் சிறகுகளை விரித்துக் கொண்டு வெம்மை பொறுக்க இயலாது தாம் ஒடுங்குவதற்குத் தக்க குளிர்ந்த இடங்களில் தங்கும்.
2285. நீணிலைமா ளிகைமேலும் நிலாமுன்றின் மருங்கினிலும்
வாணிழனற் சோலையிலும் மலர்வாவிக் கரைமாடும்
பூணிலவு முத்தணிந்த பூங்குழலார் முலைத்தடத்தும்
காணும்மகிழ்ச் சியின்மலர்ந்து மாந்தர்கலந் துறைவரால்.
தெளிவுரை : நீண்ட நிலைகளையுடைய மாளிகைகளின் மீதும், நிலா முற்றங்களின் பக்கங்களிலும், ஒளியுடைய நிழலைப் பரப்பும் சோலையிலும், மலர்ப் பொய்கைகளின் பக்கங்களிலும், முத்துக்களைக் கொண்ட பூங்குழலை யுடைய மாதர்களின் கொங்கைத் தடங்களிலும், மக்கள் மகிழ்ந்துறைவர்.
2286. மயிலொடுங்க வண்டாட மலர்க்கமல முகைவிரியக்
குயிலொடுங்காச் சோலையின்மெல் தளிர்கோதிக் கூவியெழத்
துயிலொடுங்கா உயிரனைத்தும் துயில்பயிலச் சுடர்வானில்
வெயிலொடுங்கா வெம்மைதரும் வேனில்விரி தருநாளில்.
தெளிவுரை : மயில் பறவைகள் ஒடுங்கவும், வண்டுகள் ஆடவும், தாமரை அரும்புகள் மலரவும், ஒடுங்காத சோலைகளின் மெல்லிய தளிரைக் கோதிக் குயில் கூவி எழவும், துயில் கொள்ளாத உயிர்கள் எல்லாம் துயில் கொள்ளவும், வானத்தில் விளங்கும் சுடரான சூரியன் தன் வெம்மையான கதிர்கள் ஒடுங்காமல் வெம்மை தருகின்ற முதுவேனில் விரியும் நாளில்,
2287. சண்பைவரும் பிள்ளையார் சடாமகுடர் வலஞ்சுழியை
எண்பெருகத் தொழுதேத்திப் பழையாறை எய்துதற்கு
நண்புடைய அடியார்கள் உடன்போத நடந்தருளி
விண்பொருநீள் மதிளாறை மேற்றளிசென் றெய்தினார்.
தெளிவுரை : சீகாழிப் பதியில் அவதரித்த ஆளுடைய பிள்ளையார், சடையை மகுடமாகக் கொண்ட சிவபெருமானின் திருவலஞ்சுழி என்ற அந்தப் பதியினை எண்ணம் பெருகும்படித் துதித்துப் பழையாறை என்ற பதியைச் சார்வதற்காக, நட்புடைய அடியவர்களுடன் போவதை விரும்பி, நடந்து சென்று, வான் அளாவி நீண்டுயர்ந்த மதிலையுடைய திருப்பழையாறை மேற்றளியை அடைந்தார்.
2288. திருவாறை மேற்றளியில் திகழ்ந்திருந்த செந்தீயின்
உருவாளன் அடிவணங்கி உருகியஅன் பொடுபோற்றி
மருவாரும் குழல்மலையாள் வழிபாடு செய்யஅருள்
தருவார்தந் திருச்சத்தி முற்றத்தின் புறஞ்சார்ந்தார்.
தெளிவுரை : பிள்ளையார், பழையாறை மேற்றளியில் வீற்றிருக்கும் செந்தீ வண்ணரான இறைவரின் திருவடிகளை உருகிய அன்புடனே வணங்கித் துதித்து மணம் பொருந்திய கூந்தலையுடைய மலையரசன் மகள் வழிபட அருள் செய்த இறைவரின் திருச்சத்தி முற்றம் என்ற பதியின் வெளிப்பக்கத்தைச் சேர்ந்தார்.
2289. திருச்சத்தி முற்றத்தில் சென்றெய்தித் திருமலையாள்
அருச்சித்த சேவடிகள் ஆர்வமுறப் பணிந்தேத்திக்
கருச்சுற்றில் அடையாமல் கைதருவார் கழல்பாடி
விருப்புற்றுத் திருப்பட்டீச் சரம்பணிய மேவுங்கால்.
தெளிவுரை : திருச்சத்தி முற்றத்தில் போயடைந்து திருமலை வல்லியார் அருச்சனை செய்து வழிபட்ட அழகிய திருவடிகளை ஆர்வத்துடனே வணங்கிப் பிறவிச் சுழலில் அகப்படாமல் கைதந்து ஈடேற்றுபவரான இறைவரின் திருவடிகளைப் பாடி, விருப்புக் கொண்டு திருப்பட்டீச் சரத்தை வணங்கச் சென்ற போழ்து,
2290. வெம்மைதரு வேனிலிடை வெயில்வெப்பந் தணிப்பதற்கு
மும்மைநிலைத் தமிழ்விரகர் முடிமீதே சிவபூதம்
தம்மைஅறி யாதபடி தண்தரளப் பந்தரெடுத்
தெம்மைவிடுத் தருள்புரிந்தார் பட்டீசர் என்றியம்ப.
தெளிவுரை : வெப்பத்தை மிகுதியாய் அளிக்கும் முதுவேனில் வெயிலின் வெம்மையைத் தணித்து ஆற்றும் பொருட்டாய், முத்தமிழ் வல்லுநரான சம்பந்தரின் திருமுடியின் மீது, தம்மை அறியாத வகையால் சிவபூதம் முத்துப் பந்தரை எடுத்துப் பிடித்துப், பட்டீசர் எங்களை இதனுடன் சென்று தருமாறு உரைத்தருளினார் எனக் கூற,
2291. அவ்வுரையும் மணிமுத்தின் பந்தரும்ஆ காயமெழச்
செவ்விய மெய்ஞ் ஞானமுணர் சிரபுரத்துப் பிள்ளையார்
இவ்வினைதான் ஈசர்திரு வருளாகில் இசைவதென
மெய்விரவு புளகமுடன் மேதினியின் மிசைத்தாழ்ந்தார்.
தெளிவுரை : அந்தச் சொற்களும் அழகிய முத்துப் பந்தரும் வானத்தில் எழுந்தனவாக, செம்மையான சிவஞானத்தை உணர்ந்த ஆளுடைய பிள்ளையார் இச் செயல்தான் இறைவரின் திருவருளால் நமக்கு இசைவதாக ! என்று உள்ளத்தில் எண்ணி, மேனியில் மயிர்ப்புளகம் உண்டாக நிலத்தில் விழுந்து வணங்கினார்.
2292. அதுபொழுதே அணிமுத்தின் பந்தரினை அருள்சிறக்கக்
கதிரொளிய மணிக்காம்பு பரிசனங்கள் கைக்கொண்டார்
மதுரமொழி மறைத்தலைவர் மருங்கிமையோர் பொழிவாசப்
புதுமலரால் அப்பந்தர் பூம்பந்த ரும்போலும்.
தெளிவுரை : அப்போதே பரிவாரங்கள் அழகிய முத்துப் பந்தரைத் திருவருள் சிறக்க ஒளிவீசும் அழகிய காம்புகளைக் கையில் பிடித்தன. இனிய மொழியையுடைய தமிழ் மறைத் தலைவரான பிள்ளையாரின் பக்கத்தில் தேவர்கள் பொழிந்த மணமுடைய தெய்வப் பூக்களால் அந்த முத்துப் பந்தர், பூம்பந்தர் போலவும் விளங்கியது.
2293. தொண்டர்குழாம் ஆர்ப்பெடுப்பச் சுருதிகளின் பெருந்துழனி
எண்திசையும் நிறைந்தோங்க எழுந்தருளும் பிள்ளையார்
வெண்தரளப் பந்தர் நிழல் மீதணையத் திருமன்றில்
அண்டர்பிரான் எடுத்ததிரு வடிநீழல் எனஅமர்ந்தார்.
தெளிவுரை : தொண்டர் கூட்டமானது ஆரவாரம் செய்யவும், மறைகளில் பேரொலி எட்டுத் திக்குகளிலும் நிறைந்து ஓங்கி எழவும், எழுந்தருளி வருகின்ற பிள்ளையார், வெண்மையான முத்துப் பந்தரின் நிழலானது தம் முடியின் மீது நிழல் பரப்பிப் பொருந்தப் பெறுவதால், பொன்னம் பலத்தில் கூத்தப் பிரானின் தூக்கிய திருவடி நிழலில் அமர்ந்திருத்தலைப் போல் அமர்ந்திருந்தார்.
2294. பாரின்மிசை அன்பருடன் வருகின்றார் பன்னகத்தின்
ஆரம்அணிந் தவர்தந்த அருட்கருணைத் திறம்போற்றி
ஈரமனங் களிதழைப்ப எதிர்கொள்ள முகமலர்ந்து
சேரவரும் தொண்டருடன் திருப்பட்டீச் சரம்அணைந்தார்.
தெளிவுரை : நிலத்தின் மீது தொண்டர்களுடன் வருகின்ற பிள்ளையார், பாம்புகளான மாலையைச் சூடிய இறைவர் அளித்த கருணைத் திறத்தைப் போற்றிய வண்ணமே அன்பு நிறைந்த உள்ளம் களிப்புக் கொள்ள எதிர் கொள்ளும் பொருட்டு முகமலர்ந்து திருப்பட்டீச்சரத்தை வந்து சேர்ந்தார்.
2295. சென்றணைந்து திருவாயில் புறத்திறைஞ்சி உள்புக்கு
வென்றிவிடை யவர்கோயில் வலங்கொண்டு வெண்கோட்டுப்
பன்றிகிளைத் தறியாத பாததா மரைகண்டு
முன்தொழுது விழுந்தெழுந்து மொழிமாலை போற்றிசைத்தார்.
தெளிவுரை : சென்று சேர்ந்து வாயிலின் வெளியில் வணங்கி, உள்ளே புகுந்து, வெற்றி பொருந்திய காளையை உடைய சிவபெருமானின் திருக் கோயிலை வலமாய் வந்து, வெள்ளைக் கொம்புடைய பன்றி உருவெடுத்த திருமால் நிலத்தைத் தோண்டியும் காண இயலாத திருவடித் தாமரைகளைக் கண்டு, திருமுன்பு வணங்கி நிலத்தில் விழுந்து எழுந்து சொல் மாலையால் துதித்தார்.
2296. அருள்வெள்ளத் திறம்பரவி அளப்பரிய ஆனந்தப்
பெருவெள்ளத் திடைமூழ்கிப் பேராத பெருங்காதல்
திருவுள்ளப் பரிவுடனே செம்பொன்மலை வல்லியார்
தருவள்ளத் தமுதுண்ட சம்பந்தர் புறத்தணைந்தார்.
தெளிவுரை : திருக்கருணைப் பெருக்கின் திறத்தைத் துதித்து, அதனால் அளவிடற்கரிய ஆனந்த வெள்ளத்தில் திளைத்து, மாறாத பெருங்காதல் கொண்ட உள்ளத்தைப் பரிவுடன் செம்பொன் மலையரசனின் மகளான உமையம்மையார் பொன் கிண்ணத்தில் தந்தருளிய ஞான அமுது உண்டு அருளிய பிள்ளையார் கோயில் புறத்தை அடைந்தார்.
2297. அப்பதியில் அமர்கின்ற ஆளுடைய பிள்ளையார்
செப்பருஞ்சீர்த் திருவாறை வடதளியில் சென்றிறைஞ்சி
ஒப்பரிய தமிழ்பாடி உடனமரும் தொண்டருடன்
எப்பொருளு மாய்நின்றார் இரும்பூளை எய்தினார்.
தெளிவுரை : அந்தப் பதியில் விரும்பி எழுந்தருளிய ஆளுடைய பிள்ளையார் இயம்புதற்கரிய சிறப்புக் கொண்ட பழையாறை வடதளியில் சென்று வணங்கி, ஒப்பில்லா தமிழ்ப்பதிகத்தைப் பாடித் தாம் உடனாய் விரும்பிய தொண்டர்களுடனே எல்லாப் பொருள்களுமாய் நின்ற சிவபெருமானின் திருவிரும்பூளையினை அறடைந்தார்.
2298. தேவர்பிரா னமர்ந்ததிரு இரும்பூளை சென்றெய்தக்
காவணநீள் தோரணங்கள் நாட்டியுடன் களிசிறப்பப்
பூவணமா லைகள்நாற்றிப் பூரணபொற் குடநிரைத்தங்கு
யாவர்களும் போற்றிசைப்பத் திருத்தொண்டர் எதிர்கெண்டார்.
தெளிவுரை : பிள்ளையார், தேவர்களின் தலைவரான சிவ பெருமான் விரும்பி வீற்றிருக்கும் திருவிரும்பூளையினைப் போயடைய பந்தல்களைத் தோரணங்களுடன் நிறுத்திக் கூடிய பெரு மகிழ்ச்சிகளால் அமைந்த அழகிய பெரிய மாலைகளைத் தொங்கவிட்டு நின்ற பொன் கும்பங்களை வரிசை பெற அமைத்து அனைவரும் துதிக்கத் தொண்டர்கள் அங்கு எதிர் கொண்டனர்.
2299. வண்டமிழின் மொழிவிரகர் மணிமுத்தின் சிவிகையினைத்
தொண்டர்குழாத் தெதிர்இழிந்தங் கவர்தொழத்தா முந்தொழுதே
அண்டர்பிரான் கோயிலினை அணைந்திறைஞ்சி முன்நின்று
பண்டரும்இன் னிசைப்பதிகம் பரம்பொருளைப் பாடுவார்.
தெளிவுரை : வளம் வாய்ந்த தேவாரத் தமிழின் இனிய மொழித் தலைவரான பிள்ளையார் அழகான முத்துச் சிவிகையினின்றும் தம்மை எதிர்கொண்டு வரவேற்ற தொண்டர் கூட்டத்தின் எதிரே இறங்கி, அவர்கள் தம்மை வணங்கும்போதே தாமும் அவர்களை வணங்கி, தேவர் தலைவரின் கோயிலை அடைந்து வணங்கி, திருமுன் நின்று பண்களை வெளிப்படுத்தும் இனிய இசையுடைய திருப் பதிகத்தால் பரம்பொருளான இறைவரைப் பாடுவாராய்.
2300. நிகரிலா மேருவரை அணுவாக நீண்டானை
நுகர்கின்ற தொண்டர்தமக் கமுதாகி நொய்யானைத்
தகவொன்ற அடியார்கள் தமைவினவித் தமிழ்விரகர்
பகர்கின்ற அருமறையின் பொருள்விரியப் பாடினார்.
தெளிவுரை : ஒப்பில்லாத பெரிய மேருமலையும் ஓர் அணு ஆகுமாறு நீண்ட பெருமை உடையவராகியும் தன்னையே அனுபவிக்கின்ற தொண்டர்களுக்கு அமுதமாய் நொய்யவராகியும் நிற்கும் அந்தப் பரம் பொருளைத் தகுதி பொருந்த அடியாரை வினவும் தன்மையில், தமிழ் வல்லுநரான பிள்ளையார் சொல்லப்படுகின்ற அரிய வேதங்களின் உட் பொருள்கள் விரியுமாறு பாடினார்.
2301. பாடும் அரதைப்பெரும்பாழியே முதலாகச்
சேடர்பயில் திருச்சேறை திருநாலூர் குடவாயில்
நாடியசீர் நறையூர்தென் திருப்புத்தூர் நயந்திறைஞ்சி
நீடுதமிழ்த் தொடைபுனைந்தந் நெடுநகரில் இனிதமர்ந்தார்.
தெளிவுரை : பிள்ளையார், பாடப் பெறுகின்ற அரதைப் பெரும்பாழி முதலாக அறிவுடையவர் பொருந்தியுள்ள திருச்சேறையும் திருக்குட வாயிலும் நாடிய சிறப்புடைய திருநறையூரும் தென் திருப்புத்தூரும் என்ற இப்பதிகளை விருப்பத்துடன் வழிபட்டு நீண்ட தமிழ் மாலைகளைப் பாடி அப்பெரிய நகரத்தில் இனிதே தங்கியிருந்தார்.
2302. அங்கண்இனி தமருநாள் அடல்வெள்ளே னத்துருவாய்ச்
செங்கண்நெடு மால்பணியும் சிவபுரத்துச் சென்றடைந்து
கங்கைசடைக் கரந்தவர்தங் கழல்வணங்கிக் காதலினால்
பொங்குமிசைத் திருப்பதிகம் முன்நின்று போற்றிசைத்தார்.
தெளிவுரை : அந்த அரிசில் கரைப் புத்தூரில் பிள்ளை நாயனார் தங்கியிருந்த போது வன்மையுடைய வெண்மையான பன்றி வடிவைக் கொண்ட, சிவந்த கண்ணையுடைய திருமால் வணங்கும் சிவபுரத்திலே போய்க், கங்கையைச் சடையில் அடக்கிய இறைவரின் திருவடிகளை வணங்கி மிக்க விருப்பத்தால் இசை பெருகும் திருப்பதிகங்களைத் திருமுன்பு நின்று பாடினார்.
2303. போற்றிசைத்துப் புனிதரருள் பெற்றுப்போந்து எவ்வுயிரும்
தோற்றுவித்த அயன்போற்றுந் தோணிபுரத் தந்தணனார்
ஏற்றுமிசை ஏற்றுகந்த இறைவர்தமை ஏத்துதற்கு
நாற்றிசையோர் பரவுதிருக் குடமூக்கு நண்ணினார்.
தெளிவுரை : மேலே கூறியபடி போற்றி இறைவரின் திருவருளைப் பெற்று எல்லாவுயிர்களையும் பிறவியில் புகுத்தும் நான்முகன் வணங்கும் திருத்தோணிபுரத்தில் தோன்றிய பிள்ளையார், காளையின் மீது வருதலை விரும்பிய இறைவரைத் துதிப்பதற்காக நான்கு திசையில் உள்ளவரும் வணங்கும் திருக்குடமூக்கை அடைந்தார்,
2304. தேமருவு மலர்ச்சோலைத் திருக்குடமூக் கினிற்செல்வ
மாமறையோர் பூந்தராய் வள்ளலார் வந்தருளத்
தூமறையின் ஒலிபெருகத் தூரியமங் கலமுழங்கக்
கோமுறைமை எதிர்கொண்டு தம்பதியில் கொடுபுக்கார்.
தெளிவுரை : சீகாழியில் தோன்றிய சம்பந்தப் பெருமான் வரவும், தேன் பொருந்திய மலர்கள் நிறைந்த திருக்குட மூக்கினில் வாழ்கின்ற செல்வப் பெரு மறையோர் தூய மறையின் ஒலி பெருகவும், மங்கல வாத்தியங்கள் ஒலிக்கவும், மன்னரை எதிர் கொள்ளும் முறையில், எதிர் கொண்டு தம் பதியினிடத்து அழைத்துச் சென்றனர்.
2305. திருஞான சம்பந்தர் திருக்குடமூக் கினைச்சேர
வருவார்தம் பெருமானை வண்டமிழின் திருப்பதிகம்
உருகாநின் றுளமகிழக் குடமூக்கை உகந்திருந்த
பெருமான்எம் இறையென்று பெருகிசையால் பரவினார்.
தெளிவுரை : திருக்குடமூக்கினைச் சேர வருபவரான திருஞான சம்பந்தர் தம் இறைவரை வண்மையுடைய தமிழ்ப் பதிகத்தால் உள்ளம் உருகி மகிழ திருக்குட மூக்கை உவந்து விரும்பி வீற்றிருந்த பெருமான் எம் இறைவர் என்று பெருகிய இசையால் பாடினார்.
2306. வந்தணைந்து திருக்கீழ்க்கோட் டத்திருந்த வான்பொருளைச்
சிந்தைமகிழ் வுறவணங்கித் திருத்தொண்ட ருடன்செல்வார்
அந்தணர்கள் புடைசூழ்ந்து போற்றிசைப்ப அவரோடும்
கந்தமலர்ப் பொழில்சூழ்ந்த காரோணஞ் சென்றடைந்தார்.
தெளிவுரை : மேலே கண்ட வண்ணம் துதித்து வந்து திருக் கீழ்க் கோட்டத்தில் வீற்றிருந்த இறைவரை மனம் மகிழ வணங்கித் தொண்டர் கூட்டத்துடன் செல்பவரான சம்பந்தர், அந்தணர்கள் சுற்றிலும் சூழ்ந்து துதிக்க, அவரோடும் கூடி, மணம் பொருந்திய பூஞ்சோலைகள் சூழ்ந்த திருக்காரோணத்தைப் போய் அடைந்தார்.
2307. பூமருவும் கங்கைமுதல் புனிதமாம் பெருந்தீர்த்தம்
மாமகந்தான் ஆடுதற்கு வந்துவழி படுங்கோயில்
தூமருவு மலர்க்கையால் தொழுதுவலங் கொண்டணைந்து
காமர்கெட நுதல்விழித்தார் கழல்பணிந்து கண்களித்தார்.
தெளிவுரை : மலர்கள் பொருந்திய கங்கை முதலான தூய தீர்த்தங்கள் மாமகத்தில் ஆடும் பொருட்டாக வந்து வழிபடுகின்ற பெருமையுடைய அக்கோயிலைத் தூய்மையான மலர் போன்ற கைகளால் தொழுது வலமாய் வந்து, மன்மதனை நெற்றிக் கண்ணால் எரித்த இறைவரின் திருவடிகளை வணங்கிக் கண்களிப்புக் கொண்டார்.
2308. கண்ணாரும் அருமணியைக் காரோணத் தாரமுதை
நண்ணாதார் புரமெரித்த நான்மறையின் பொருளானைப்
பண்ணார்ந்த திருப்பதிகம் பணிந்தேத்திப் பிறபதியும்
எண்ணார்ந்த சீரடியா ருடன்பணிவுற் றெழுந்தருளி.
தெளிவுரை : பிள்ளையார், கண்ணில் பொருந்திய அரிய மணி போன்றவரும், திருக்குடந்தைக் காரோணத்தில் எழுந்தருளிய அமுதம் போன்றவரும், பகைவரின் மூன்று புரங்களை எரித்த நான்மறைகளின் பொருளாக விளங்குபவருமான இறைவனை வணங்கிப் பண் பொருந்திய திருப்பதிகத்தைப் பாடிப் பணிந்து துதித்து, பிற தலங்களையும் போய் வணங்க எண்ணி, எண் நிறைந்த அடியார்களுடன் பணிந்து அங்கிருந்து மேலே சென்றார்.
2309. திருநாகேச் சரத்தமர்ந்த செங்கனகத் தனிக்குன்றைக்
கருநாகத் துரிபுனைந்த கண்ணுதலைச் சென்றிறைஞ்சி
அருஞானச் செந்தமிழின் திருப்பதிகம் அருள்செய்து
பெருஞான சம்பந்தர் பெருகார்வத் தின்புற்றார்.
தெளிவுரை : திருஞான சம்பந்தர், திருநாகேச்சரத்தில் வீற்றிருக்கும் செம்பொன் மலை போன்ற கரிய யானையின் தோலைப் போர்த்துக் கொண்ட பெருமானை வணங்கி, அரிய ஞானம் விளங்கும் செந்தமிழின் இனிய திருப்பதிகத்தைப் பாடி அருள் செய்து பெருகும் அன்பு மிகுவதால் இன்பம் அடைந்திருந்தார்.
2310. மாநாகம் அருச்சித்த மலர்க்கமலத் தாள்வணங்கி
நாணாநாளும் பரவுவார் பிணிதீர்க்கும் நலம்போற்றிப்
பானாறும் மணிவாயர் பரமர்திரு விடைமருதில்
பூநாறும் புனற்பொன்னித் தடங்கரைபோய்ப் புகுகின்றார்.
தெளிவுரை : ஆதிசேடன் வழிபட்ட தாமரை போன்ற அடிகளை வணங்கி, நாள்தோறும் வணங்குபவர்களின் பிணிகளைப் போக்கும் நன்மையினைத் துதித்து, ஞானப்பாலமுதின் மணம் கமழும் திருவாயினையுடைய பிள்ளையார், மலர்கள் மலர்ந்து மணம் வீசும் காவிரியின் வடகரை வழியாகச் சென்று இறைவரின் திருவிடை மருதூரில் புகுகின்றவர்,
2311. ஓங்குதிருப் பதிகம்ஓ டேகலன்என் றெடுத்தருளித்
தாங்கரிய பெருமகிழ்ச்சி தலைசிறக்குந் தன்மையினால்
ஈங்கெனையா ளுடையபிரான் இடைமரு தீதோஎன்று
பாங்குடைய இன்னிசையால் பாடிஎழுந் தருளினார்.
தெளிவுரை : உயர்ந்த திருப்பதிகத்தை ஓடேகலன் எனத் தொடங்கித் தாங்குதற்கரிய மகிழ்ச்சி மேன் மேலும் பெருகுவதால், இங்கு என்னை ஆளுடைய இறைவர் வீற்றிருக்கும் திருவிடை மருது இதுதானோ ? என்ற கருத்துடன் நல்ல இயல்புடைய இசை பொருந்தப் பாடி அந்தப் பதியினுள் புகுந்தார்.
2312. அடியவர்கள் எதிர்கொள்ள எழுந்தருளி அங்கணைந்து
முடிவில்பரம் பொருளானார் முதற்கோயில் முன்னிறைஞ்சிப்
படியில்வலங் கொண்டுதிரு முன்பெய்திப் பார்மீது
நெடிதுபணிந் தெழுந்தன்பு நிறைகண்ணீர் நிரந்திழிய.
தெளிவுரை : அந்தத் திருவிடை மருதூரில் உள்ள அடியவர் எதிர் கொள்ளப் போய் அந்தத் திருப்பதியினுள் சேர்ந்து முடிவில்லாத பரம்பொருளான இறைவரின் பெருங் கோயிலை முன்னே வணங்கி, நிலத்தின் மீது நடந்து வலமாகச் சுற்றி வந்து, திருமுன்பு அடைந்து, தரையில் விழுந்து அன்பு நிறைவதால் பொழியும் கண்ணீர் இடையறாது வழிய,
2313. பரவுறுசெந் தமிழ்ப்பதிகம் பாடிஅமர்ந் தப்பதியில்
விரவுவார் திருப்பதிகம் பலபாடி வெண்மதியோ
டரவுசடைக் கணிந்தவர்தம் தாள்போற்றி ஆர்வத்தால்
உரவுதிருத் தொண்டருடன் பணிந்தேத்தி உறையுநாள்.
தெளிவுரை : இறைவரைத் துதிக்கின்ற பதிகம் பாடி விருப்பத்துடன் அந்தப் பதியில் தங்கியிருக்கும் சம்பந்தர் மேலும் பல பதிகங்களையும் பாடி, வெண்மையான பிறைச் சந்திரனுடன் பாம்பையும் சடையில் அணிந்த பெருமானின் திருவடிகளைப் போற்றி அன்பு மிகுதியால் அங்குத் தங்கியிருந்த காலத்தில்,
2314. மருங்குளநற் பதிகள்பல பணிந்துமா நதிக்கரைபோய்க்
குரங்காடு துறையணைந்து குழகனார் குரைகழல்கள்
பெருங்காத லால்பணிந்து பேணியஇன் னிசைபெருக
அருங்கலைநூல் திருப்பதிகம் அருள்செய்து பரவினார்.
தெளிவுரை : பக்கத்தில் உள்ள பல பதிகளையும் வணங்கிக் காவிரிப் பெருங்கரை வழியே போய்த், திருக்குரங்காடு துறையினைச் சேர்ந்து, இறைவரின் ஒலிக்கும் கழல் பூண்ட திருவடிகளைப் பெருங்காதலால் வணங்கி, விரும்பிய இனிய இசை பெருகவுள்ள அரிய கலை நூல்களின் பொருள்களை விரிக்கும் திருப்பதிகத்தைப்பாடி வணங்கினார்.
2315. அம்ம லர்த்தடம் பதிபணிந் தகன்றுபோந் தருகு
மைம்ம லர்க்களத் திறைவர்தங் கோயில்கள் வணங்கி
நம்ம லத்துயர் தீர்க்கவந் தருளிய ஞானச்
செம்ம லார்திரு ஆவடு துறையினைச் சேர்ந்தார்.
தெளிவுரை : தாமரை மலர்கள் நிறைந்த தடங்களைக் கொண்ட அந்தத் தலத்தை வணங்கிப் பின் அதை நீங்கிப் போய்ப், பக்கத்தில் திருநீலகண்டமுடைய இறைவரின் கோயில்களை வணங்கி, நம் பாசத் துன்பங்களை நீக்குவதற்கென்றே அவதரித்த ஞானச்செம்மல் சம்பந்தர் திருவாவடு துறையைச் சேர்ந்தார்.
2316. மூவ ருக்கறி வரும்பொரு ளாகிய மூலத்
தேவர் தந்திரு வாவடு துறைத்திருத் தொண்டர்
பூவ லம்புதண் பொருபுனல் தடம்பணைப் புகலிக்
காவ லர்க்கெதிர் கொள்ளும்ஆ தரவுடன் கலந்தார்.
தெளிவுரை : அயன் முதலான மூவர்க்கும் அறிவதற்கு அரிய மூலத் தேவரான சிவபெருமானின் திருவாவடுதுறையிலே வாழ்கின்ற தொண்டர்கள், மலர்கள் வாரிக் கொண்டு பொங்கிவரும் குளிர்ந்த அலையையுடைய நீர் நிரம்பிய பொய்கைகளையும் வயல்களையும் உடைய சீகாழித் தலைவரான பிள்ளையாரை எதிர்கொள்ளுமாறு, மிக்குப் பெருகும் அன்புடனே வந்து சேர்ந்தனர்.
2317. வந்த ணைந்தவர் தொழாமுனம் மலர்புகழ்ச் சண்பை
அந்த ணர்க்கெலாம் அருமறைப் பொருளென வந்தார்
சந்த நித்திலச் சிவிகைநின் றிழிந்தெதிர் தாழ்ந்தே
சிந்தை இன்புற இறைவர்தங் கோயில்முன் சென்றார்.
தெளிவுரை : அங்ஙனம் வந்த தொண்டர்கள் தம்மை வணங்குவதற்கு முன்னம் விரியும் புகழையுடைய சீகாழி அந்தணர்களுக்கெல்லாம் அரிய மறையின் பொருளாக உள்ளவர் இவர் என்று தியானப் பொருளாகக் கொள்ளும்படி தோன்றிய பிள்ளையார், அழகான முத்துச் சிவிகையினின்றும் இறங்கி அவர்களின் எதிரில் வணங்கிப் பின் மனம் இன்பம் அடைய இறைவரின் திருக்கோயில் முன் சென்றார்.
2318. நீடு கோபுரம் இறைஞ்சியுள் புகுந்துநீள் நிலையான்
மாடு சூழ்திரு மாளிகை வலங்கொண்டு வணங்கி
ஆடும் ஆதியை ஆவடு துறையுள்ஆர் அமுதை
நாடு காதலில் பணிந்தெழுந் தருந்தமிழ் நவின்றார்.
தெளிவுரை : பிள்ளையார், நீண்ட கோபுரத்தை வணங்கி உள்ளே போய் நீண்ட வரிசையாகப் பக்கத்தில் சுற்றிலும் உள்ள மாளிகையை வலமாக வந்து வணங்கி, அருட்பெருங் கூத்தாடுகின்ற ஆதிமூர்த்தியும் திருவாவடுதுறையும் எழுந்தருளியுள்ள நிறைந்த அமுதம் போன்றவருமான இறைவரை நாடும் பேரன்பினால் வணங்கி எழுந்து அரிய தமிழால் திருப்பதிகத்தைப் பாடினார்.
2319. அன்பு நீடிய அருவிகண் பொழியும்ஆர் வத்தால்
முன்பு போற்றியே புறம்பணை முத்தமிழ் விரகர்
துன்பு போமனத் திருத்தொண்டர் தம்முடன் தொழுதே
இன்பம் மேவிஅப் பதியினில் இனிதமர்ந் திருந்தார்.
தெளிவுரை : அன்பால் பெருகிய கண்ணீர் அருவி போல் பொழிகின்ற ஆர்வத்தால் திருமுன்பு துதித்துப் பின்பு வெளியே வந்த பிள்ளையார், துன்பம் இல்லாத உள்ளம் கொண்ட தொண்டர்களுடன் தொழுது இன்பம் பொருந்தி அந்தத் தலத்தில் இனியதாய் விரும்பி வீற்றிருந்தார்.
2320. மேவி அங்குறை நாளினில் வேள்வி செய்வதனுக்
காவ தாகிய காலம்வந் தணைவுற அணைந்து
தாவில் சண்பையர் தலைவர்க்குத் தாதையார் தாமும்
போவ தற்கரும் பொருள்பெற எதிர்நின்று புகன்றார்.
தெளிவுரை : விரும்பி, அந்தத் தலத்தில் தங்கியிருக்கும் காலத்தில், வேள்வி செய்வதற்குரிய காலம் வந்து சேர, குற்றம் இல்லாத சீகாழியின் தலைவரான பிள்ளையாரிடம் வந்த தந்தையான சிவபாத இருதயரும் விடை பெற்றுச் சீகாழிக்குச் செல்லும் பொருட்டு வேள்விக்குரிய அப்பொருளைப் பெறுதல் வேண்டும் என்று எதிரில் நின்று கூறினார்.
2321. தந்தை யார்மொழி கேட்டலும் புகலியார் தலைவர்
முந்தை நாளிலே மொழிந்தமை நினைந்தருள் முன்னி
அந்த மில்பொரு ளாவன ஆவடு துறையுள்
எந்தை யார்அடித் தலங்கள் அன்றோஎன எழுந்தார்.
தெளிவுரை : தம் தந்தையாரின் சொல்லைக் கேட்டதும் சீகாழித் தலைவரான பிள்ளையார், முன் நாளில் கூறியதை நினைவு கூர்ந்து, திருவருளை எண்ணி, அந்தம் இல்லாத பொருளாய் உள்ளவை எம் இறைவரின் திருவடிகளே அல்லவோ? என்று மனத்துள் எண்ணி எழுந்தார்.
2322. சென்று தேவர்தம் பிரான்மகிழ்கோயில்முன் பெய்தி
நின்று போற்றுவார் நீள்நிதி வேண்டினார்க் கீவ
தொன்றும் மற்றிலேன் உன்னடி அல்லதொன் றறியேன்
என்று பேரருள் வினவிய செந்தமிழ் எடுத்தார்.
தெளிவுரை : பிள்ளையார், தேவரின் தேவரான இறைவர் மகிழும் கோயிலில் சென்று, திருமுன்பு நின்று வணங்குபவராகி, பெருஞ்செல்வம் வேண்டியவர்க்கு (தந்தையார்க்கு) ஈவதற்கு என்னிடம் ஒரு பொருளும் இல்லை. பொருளாகும் உன் திருவடியன்றி வேறொன்றும் அறியேன்? என்று இறைவரின் பேரருளை வினவிய கருத்துடைய செந்தமிழ்ப் பதிகத்தைத் தொடர்ந்து பாடலானார்.
2323. எடுத்த வண்டமிழ்ப் பதிகநா லடியின்மே லிருசீர்
தொடுத்த வைப்பொடு தொடர்ந்தஇன் னிசையினால் துதிப்பார்
மடுத்த காதலில் வள்ளலார் அடியிணை வழுத்தி
அடுத்த சிந்தையால் ஆதரித் தஞ்சலி அளித்தார்.
தெளிவுரை : தொடங்கி வளம் கொண்ட தமிழ்ப்பதிகத்தை நான்கடியின் மேலும் இரண்டு சீர்கள் தொடுத்த மேல் வைப்பாய்த் தொடர்பு பெற அமைத்த இனிய இசையினால் வணங்குபவராய். நிறையக் கொண்ட காதலால், வள்ளலாரான இறைவரின் திருவடிகளைத் துதித்துப் பொருந்திய சிந்தையால் அன்புமிக்குக் கைகள் கூப்பித் தொழுதார்.
2324. நச்சி இன்தமிழ் பாடிய ஞானசம் பந்தர்
இச்சை யேபுரிந் தருளிய இறைவர்இன் னருளால்
அச்சி றப்பருள் பூதமுன் விரைந்தகல் பீடத்து
உச்சி வைத்தது பசும்பொன்ஆ யிரக்கிழி யொன்று.
தெளிவுரை : விரும்பி இனிய தமிழ் பாடிய ஞானசம்பந்தரின் விருப்பப்படியே முன்பு அருள்செய்த திருவருளால் அந்தச் சிறப்பை அருளும் சிவபூதம் விரைவில் வந்து, இடம் அகன்ற பலிபீடத்தின் உச்சிமேல், ஆயிரம் பசும்பொன் கொண்ட முடிப்பு ஒன்றை வைத்தது.
2325. வைத்த பூதம்அங் கணைந்துமுன் நின்றுநல் வாக்கால்
உய்த்த இக்கிழி பொன்னுல வாக்கிழி உமக்கு
நித்த னாரருள் செய்ததென் றுரைக்கநேர் தொழுதே
அத்த னார்திரு வருள்நினைந் தவனிமேற் பணிந்தார்.
தெளிவுரை : அங்ஙனம் வைத்த அந்தப் பூதம் அங்குப் பிள்ளையார் முன் நின்று நல்ல வாக்கினால் பிள்ளையாரை நோக்கி, வைத்த இம் முடிப்பு பொன்னைக் கொண்டதாகும். இங்கு எடுக்க எடுக்கக் குறையாத செல்வம். இறைவர் உமக்கு அருள் செய்தது இது ! என்று உரைத்தது. உரைக்க, பிள்ளையார் இறைவரை நேராகத் தொழுது அத்தனாரின் திருவருளினை நினைந்து நிலத்தில் விழுந்து வணங்கினார்.
2326. பணிந்தெ ழுந்துகை தொழுதுமுன் பனிமலர்ப் பீடத்
தணைந்த ஆடகக் கிழிதலைக் கொண்டரு மறைகள்
துணிந்த வான்பொருள் தரும்பொருள் தூயவாய் மையினால்
தணிந்த சிந்தைஅத் தந்தையார்க் களித்துரை செய்வார்.
தெளிவுரை : வணங்கி எழுந்து கைக்கூப்பித் தொழுது முன்னால் பலிபீடத்தில் வைக்கப்பட்ட பொன் முடிப்பை எடுத்துத் தலைமீது கொண்டு, அரிய மறைகளால் துணிய நின்ற பெரும் பொருளான இறைவர் அளித்த அந்தப் பொருளைத் தூய வாய்மையால் தணிந்த மனமுடைய தந்தையாருக்குத் தந்து சொல்லலானார்.
2327. ஆதிமாமறை விதியினால் ஆறுசூழ் வேணி
நாத னாரைமுன் னாகவே புரியுநல் வேள்வி
தீது நீங்கநீர் செய்யவும் திருக்கழு மலத்து
வேத வேதியர் அனைவரும் செய்யவும் மிகுமால்.
தெளிவுரை : பழைய பெரியமறைகளில் விதித்த முறைமைப் படி கங்கையை முடித்த சடையையுடைய முழுமுதற் பொருளான சிவபெருமானையே முதலாக உட்கொண்டு செய்கின்ற நல்ல சிவ வேள்வியைத் தீமை நீங்கி இன்பம் அடையும் பொருட்டு நீவிர் செய்திடவும் சீகாழியில் உள்ள வேதியர் எல்லாமும் செய்திடவும் குறைவில்லாமல் மிகும்.
2328. என்று கூறிஅங் கவர்தமை விடுத்தபின் அவரும்
நன்றும் இன்புறு மனத்தொடும் புகலிமேல் நண்ண
வென்றி ஞானசம் பந்தரும் விருப்பொடு வணங்கி
மன்றல் ஆவடு துறையினில் மகிழ்ந்தினி திருந்தார்.
தெளிவுரை : என்று இங்ஙனம் பிள்ளையார் சொல்லி, அங்குத் தம் தந்தையாரை அனுப்பிய பின்பு, அந்தச் சிவபாத இருதயரும் பெரிதும் இன்பம் பெற்றுச் சீகாழியை நோக்கிச் சென்றார். செல்ல, வெற்றியுடைய திருஞான சம்பந்தரும் விருப்புடனே வணங்கி மணம் மிகுந்த திருவாவடுதுறையில் மகிழ்வுடன் இனிதாய் அமைந்திருந்தார்.
2329. அண்ண லார்திரு வாவடு துறையமர்ந் தாரை
உண்ணி லாவிய காதலி னால்பணிந் துறைந்து
மண்ணெ லாம்உய வந்தவர் போந்துவார் சடைமேல்
தெண்ணி லாஅணி வார்திருக் கோழம்பஞ் சேர்ந்தார்.
தெளிவுரை : திருவாவடுதுறையில் விரும்பி வீற்றிருந்த இறைவரை உள்ளத்தினுள் நிறைந்த காதலால் வணங்கி அங்குத் தங்கு, உலகம் எல்லாம் உய்யும் பொருட்டுத் தோன்றிய பிள்ளையார் போய் நீண்ட சடையில் தெளிந்த பிறைச் சந்திரனைச் சூடுபவரின் திருக்கோழம்பத்தினைச் சேர்ந்தார்.
2330. கொன்றை வார்சடை முடியரைக் கோழம்பத் திறைஞ்சி
என்றும் நீடிய இன்னிசைப் பதிகம் முன் இயம்பி
மன்று ளார்மகிழ் வைகல்மா டக்கோயில் மருங்கு
சென்று சார்ந்தனர் திருவளர் சிரபுரச் செல்வர்.
தெளிவுரை : கொன்றைமலர் மாலையைச் சூடிய நீண்ட சடையை உடைய இறைவரைத் திருக்கோழ்பலத்தில் வணங்கி என்றும் அழியாது நீடித்திருக்கும் இன்னிசை யுடைய திருப்பதிகத்தைத் திருமுன்பு நின்று பாடி, பொன்னம்பலம் உடைய இறைவர் மகிழ்ந்து வீற்றிருக்கும் திருவைகல் மாடக் கோயிலின், பக்கத்தில் முத்திச் செல்வம் வளர்வதற்கு இடமான சீகாழித் தலைவர் போய் அடைந்தார்.
2331. வைகல் நீடுமா டக்கோயில் மன்னிய மருந்தைக்
கைகள் அஞ்சலி கொண்டுதாழ்ந் தெழுந்துகண் ணருவி
செய்ய இன்னிசைச் செந்தமிழ் மாலைகள் மொழிந்து
நையும் உள்ளத்த ராய்த்திர நல்லத்தில் நண்ணி.
தெளிவுரை : வைகலில் நீண்ட மாடக் கோயிலில், பொருந்திய பெருமருந்தான இறைவரைக் கைகளைக் கூப்பி விழுந்து வணங்கி எழுந்து கண்ணினின்றும் நீர் அருவியாய்ச் சொரிய இனிய இசையையுடைய செந்தமிழ் மாலைகளால் துதித்து உருகி வருந்தும் மனத்தை உடையவராகித் திருநல்லம் என்ற தலத்தை அடைந்து,
2332. நிலவு மாளிகைத் திருநல்லம் நீடுமா மணியை
இலகு சேவடி இறைஞ்சிஇன் தமிழ்கொடு துதித்துப்
பலவும் ஈசர்தந் திருப்பதி பணிந்துசெல் பவர்தாம்
அலைபு னல்திரு வழுந்தூர்மா டக்கோயில் அடைந்தார்.
தெளிவுரை : நிலைத்த மாளிகைகளைக் கொண்ட திருநல்லம் எழுந்தருளிய இறைவரின் விளங்கும் திருவடிகளை வணங்கி இனிய தமிழ் மாலை பாடி, இறைவரது திருப்பதிகங்கள் பலவும் வணங்கிச் செல்லும் பிள்ளையார் அலைகளையுடைய நீர் சூழ்ந்த திரு அழுந்தூர் மாடக் கோயிலைப் போயடைந்தார்.
2333. மன்னு மாமடம் மகிழ்ந்தவான் பொருளினை வணங்கிப்
பன்னு பாடலில் பதிகஇன் னிசைகொடு பரவிப்
பொன்னி மாநதிக் கரையினில் மீண்டும்போந் தணைந்து
சொன்ன வாறறி வார்தமைத் துருத்தியில் தொழுதார்.
தெளிவுரை : நிலையான மாடம் என்று திருப்பாட்டினுள் குறிக்கப் பெற்ற கோயிலில் மகிழ்ந்து வீற்றிருக்கின்ற பெரும் பொருளான இறைவரைத் துதித்து ஏத்தும் திருப்பதிகத்தைப் பண்ணுடன் பாடி வணங்கி, காவிரிக் கரையில் மீளவும் வந்து சேர்ந்து சொன்னாவறு அறிவாரைத் திருத்துருத்தியில் பிள்ளையார் வணங்கினார்.
2334. திரைத்த டம்புனல் பொன்னிசூழ் திருத்துருத் தியினில்
வரைத்த லைப்பசும் பொன்எனும் வண்டமிழ்ப் பதிகம்
உரைத்து மெய்யுறப் பணிந்துபோந் துலவும்அந் நதியின்
கரைக்கண் மூவலூர்க் கண்ணுத லார்கழல் பணிந்தார்.
தெளிவுரை : அலைகளையுடைய காவிரி நீர் சூழ்ந்த திருத் துருத்தியில் வரைத்தலைப் பசும் பொன் எனத் தொடங்கும் வளமையுடைய திருப் பதிகத்தைப் பாடி, உடல் நிலம் பொருந்தப் பணிந்து சென்று, உலவுகின்ற அந்தக் காவிரி ஆற்றின் கரையில் திருமூவலூரில் இறைவரை வணங்கினார்.
2335. மூவ லூருறை முதல்வரைப் பரவிய மொழியால்
மேவு காதலில் ஏத்தியே விருப்பொடும் போந்து
பூவ லம்புதண் புனற்பணைப் புகலியர் தலைவர்
வாவி சூழ்திரு மயிலாடு துறையினில் வந்தார்.
தெளிவுரை : மூவலூரில் வீற்றிருக்கும் இறைவரைத் துதிக்கின்ற சொற்களாலே பொருந்திய ஆசையுடன் போற்றி நின்று, விருப்புடன் போய் மலர்களை அலம்பி வரும் குளிர் நீரையுடைய வயல்கள் சூழ்ந்த சீகாழியில் வாழ்பவரின் தலைவரான சம்பந்தர் பொய்கைகள் சூழ்ந்த மயிலாடு துறைக்கு வந்தார்.
2336. மல்கு தண்டலை மயிலாடு துறையினில் மருவும்
செல்வ வேதியர் தொண்டரோ டெதிர்கொளச் சென்று
கொல்லை மான்மறிக் கையரைக் கோயில்புக் கிறைஞ்சி
எல்லை இல்லதோர் இன்பம்முன் பெருகிட எழுந்தார்.
தெளிவுரை : மிக்க பூஞ்சோலைகள் சூழ்ந்த மயிலாடு துறையில் திருவுடை அந்தணர்கள் தொண்டர்களுடன் கூடி எதிர் கொண்டு வரவேற்கப் புகுந்து, கொல்லையில் வாழும் மான்கன்றைக் கையில் உடையவரைக் கோயிலுள் புகுந்து வணங்கி, அளவில்லாத ஒப்பற்ற மகிழ்ச்சி முன்னே பெருக அதை மேற்கொண்டு எழுந்தார்.
2337. உள்ளம் இன்புற உணர்வுறும் பரிவுகொண் டுருகி
வெள்ளந் தாங்கிய சடையரை விளங்குசொற் பதிகத்
தெள்ளும் இன்னிசைத் திளைப்பொடும் புறத்தணைந் தருளி
வள்ள லார்மற்ற வளம்பதி மருவுதல் மகிழ்ந்தார்.
தெளிவுரை : வள்ளன்மையுடைய பிள்ளையார் உள்ளமானது இன்பம் அடைய அவ்வுணர்ச்சியுடன் கூடிய அன்பு மிகுதியால் உருகி, கங்கை வெள்ளத்தையுடைய சடையினரான இறைவரை விளங்கும் சொல் பதிகமான தெளிந்த இனிய இசையுடன் கூடிய திளைப்புடன் வெளியே வந்து அந்த வளமுடைய பதியில் மகிழ்ந்து இருந்தார்.
2338. அத்தி ருப்பதி யகன்றுபோய் அணிகிளர் சூலக்
கைத்த லப்படை வீரர்செம் பொன்பள்ளி கருதி
மெய்த்த காதலில் விளநகர் விடையவர் பாதம்
பத்தர் தம்முடன் பணிந்திசைப் பதிகம்முன் பகர்ந்தார்.
தெளிவுரை : அந்தத் தலத்தினின்றும் நீங்கிச் சென்று அழகு விளங்கும் சூலப்படையைக் கையில் கொண்ட வீரரான இறைவரின் திருச்செம்பொன் பள்ளியை எண்ணிச் சென்று பணிந்து, மெய்த்த இயல்புடைய பெரு விருப்பால் திருவிளநகரில் எழுந்தருளிய விடையையுடைய இறைவரின் திருவடிகளை அடியார்களுடனே கூடிப் பணிந்து இசையுடைய திருப்பதிகத்தினைத் திருமுன்பு பாடினார்.
2339. பாடும் அப்பதி பணிந்துபோய்ப் பறியலூர் மேவும்
தோடு லாமலர் இதழியும் தும்பையும் அடம்பும்
காடு கொண்டசெஞ் சடைமுடிக் கடவுளர் கருது
நீடு வீரட்டம் பணிந்தனர் நிறைமறை வேந்தர்.
தெளிவுரை : நிறைவான வேதத்தலைவரான பிள்ளையார் முன் சொன்னபடி திருப்பதிகம் பாடிய திருவிளநகர் என்ற அப்பதியை வணங்கிச் சென்று, திருப்பறியலூர் வீற்றிருக்கும் இதழ்களையுடைய கொன்றையும் தும்பையும் அடம்ப மலரும் அணிந்த சிவந்த சடையை யுடைய சிவ பெருமான் விரும்பி வீற்றிருக்கும் திருவீரட்டானத்தை அடைந்து வணங்கினார்.
2340. பரமர் தந்திருப் பறியலூர்வீரட்டம் பரவி
விரவு காதலின் வேலையின் கரையினை மேவி
அரவ ணிந்தவர் பதிபல அணைந்துமுன் வணங்கிச்
சிரபு ரத்தவர் திருத்தொண்டர் எதிர்கொளச் செல்வார்.
தெளிவுரை : சிவபெருமானின் திருப்பறியலூர் வீரட்டத்தைப் பணிந்து, பொருந்திய அன்பால் அங்கு நின்றும் கடலின் கரையை அடைந்து பாம்பை அணிந்த இறைவரின் பல தலங்களையும் சேர்ந்து வணங்கிச் சீகாழித் தலைவரான பிள்ளையார் அங்கங்கும் தொண்டர் வந்து வரவேற்கச் செல்பவராய்.
2341. அடியவர்கள் களிசிறப்பத் திருவேட்டக் குடிபணிந்தங் கலைவாய்ப் போகிக்
கடிகமழும் மலர்ப்பழனக் கழனிநாட் டகன்பதிகள் கலந்து நீங்கிக்
கொடிமதில்சூழ் தருமபுரம் குறுகினார்குண்டர்சாக் கியர்தங் கொள்கை
படியறியப் பழுதென்றே மொழிந்துய்யும் நெறிகாட்டும் பவள வாயர்.
தெளிவுரை : தொண்டர்கள் மிகவும் மகிழ்ச்சி அடையத்திரு வேட்டக்குடியைச் சென்று வணங்கி, மணம் கமழும் பூக்களையுடைய வயல்கள் நிறைந்த சோழநாட்டின் பெரும் பதிகளை அடைந்து உள்ளம் பொருந்த வணங்கி, அவற்றை நீங்கிச் சமண சாக்கியர்களின் கொள்கைகள் குற்றம் உள்ளவை என உலகம் அறிய எடுத்துக் காட்டி, உய்யும் நெறியைக் காட்டும் பவள வாயையுடைய பிள்ளையார் கொடிகள் கட்டப்பட்ட தருமபுரத்தை அடைந்தார்.
2342. தருமபுரம் பெரும்பாணர் திருத்தாயர்பிறப்பிடமாம் அதனாற் சார
வருமவர்தஞ் சுற்றத்தார் வந்தெதிர்கொண் டடிவணங்கி வாழ்த்தக் கண்டு
பெருமையுடைப் பெரும்பாணர் அவர்க்குரைப்பார் பிள்ளையா ரருளிச் செய்த
அருமையுடைப் பதிகந்தாம் யாழினால் பயிற்றும்பே றருளிச் செய்தார்.
தெளிவுரை : அந்தத் தருமபுரம் திருநீல கண்டயாழ்ப் பாண நாயனாரின் தாயாரது பிறப்பிடம் ஆதலால், அப்பதியைச் சாரவரும் அவருடைய சுற்றத்தார் வந்து எதிர்கொண்டு அவரது அடியை வணங்கி வாழ்த்தினர். வாழ்த்த, அதைப் பார்த்துப் பெருமையுடைய திருநீலகண்ட யாழ்ப்பாணர் அவர்களுக்குத் தம் நிகழ்ச்சியை எடுத்துக் கூறுவாராய். ஆளுடைய பிள்ளையார் அருளிய அரிய திருப்பதிகங்களைத் தாம் யாழில் இட்டுப் பயிற்றப் பெறும் பேற்றைப் பெற்றார்.
2343. கிளைஞரும்மற் றதுகேட்டுக் கெழுவுதிருப்
பதிகத்திற் கிளர்ந்த ஓசை
அளவுபெறக் கருவியில்நீர் அமைத்தியற்றும்
அதனாலே அகில மெல்லாம்
வளரஇசை நிகழ்வதென விளம்புதலும்
வளம்புகலி மன்னர் பாதம்
உளம் நடுங்கிப் பணிந்துதிரு நீலகண்டப்
பெரும்பாணர் உணர்த்து கின்றார்.
தெளிவுரை : உறவினரும் அதைக் கேட்டு, கூடிய திருப்பதிகத்தில் பொதிந்த ஓசையானது அளவு பெறும்படி யாழான இசைக்கருவியில் நீவிர் பொருந்தும்படி வைத்து வாசிப்பதனால் உலகம் எல்லாம் அந்த இசை வளரும்படி நிகழ்கின்றது எனக் கூறியதுமே, திருநீலகண்ட யாழ்ப்பாணர், உள்ளம் நடுக்கம் கொண்டு வளமுடைய சீகாழித் தலைவரான பிள்ளையாரின் திருவடிகளில் விழுந்து வணங்கிச் சொல்லலானார்.
2344. அலகில்திருப் பதிகஇசை அளவுபடா
வகைஇவர்கள் அன்றி யேயும்
உலகிலுளோ ருந்தெரிந்தங் குண்மையினை
அறிந்துய்ய உணர்த்தும் பண்பால்
பலர்புகழுந் திருப்பதிகம் பாடியரு
ளப்பெற்றால் பண்பு நீடி
இலகுமிசை யாழின்கண் அடங்காமை
யான்காட்டப் பெறுவ னென்றார்.
தெளிவுரை : அளவுக்கு உட்படாத திருப்பதிக இசை, கருவியில் அளவுபடாத வகையை இவர்களே அல்லலாமல், உலகில் உள்ளவரும் அறிந்து அந்த வுண்மையை உணர்ந்து உய்யுமாறு உணர்த்தும் தன்மையினால், பல திறத்தவரும் புகழும் ஒரு திருப்பதிகத்தைப் பாடியருளுகின்ற பேறு பெறுவேனானால், பண்பினால் நீண்டு விளங்கும் அந்த இசையானது யாழில் அடங்காத நிலையை நான் அவர்க்கு எடுத்துக் காட்டப் பெறுவேன் என்று பிள்ளையாரிடம் சொன்னார்.
2345. வேதநெறி வளர்ப்பவரும் விடையவர்முன்
தொழுதுதிருப் பதிகத் துண்மை
பூதலத்தோர் கண்டத்துங் கலத்தினிலும்
நிலத்தநூல் புகன்ற வேத
நாதவிசை முயற்சிகளால் அடங்காத
வகைகாட்ட நாட்டு கின்றார்
மாதர்மடப் பிடிபாடி வணங்கினார்
வானவரும் வணங்கி ஏத்த.
தெளிவுரை : வேத நெறியை வளர்ப்பவரான பிள்ளையாரும் காளையை ஊர்தியாகக் கொண்ட இறைவர் திருமுன்பு நின்று திருப்பதிகத்தின் உண்மைத் திறமானது, உலகத்தவரின் கண்டப்பாட்டிலும் (வாய்ப்பாட்டிலும்) கருவியிலும் உலகில் வேதங்களில் இசை நூல்களாய் வகுத்த நாத வகைகளின் முயற்சியினால் அடங்காத வகையினை அறியக் காட்டுமாறு நிலைநாட்டுபவராய்த் தேவர்களும் வணங்கிப் போற்றும்படி மாதர் மடப்பிடி எனத் தொடங்கும் திருப்பதிகத்தை வணங்கிப் பாடினார்.
2346. வண்புகலி வேதியனார் மாதர்மடப்
பிடியெடுத்து வனப்பிற் பாடிப்
பண்பயிலுந் திருக்கடைக்காப் புச்சாத்த
அணைந்துபெரும் பாண னார்தாம்
நண்புடையாழ்க் கருவியினில் முன்புபோல்
கைக்கொண்டு நடத்தப் புக்கார்க்
கெண்பெருகும் அப்பதிகத் திசைநரம்பில்
இடஅடங்கிற் றில்லை யன்றே.
தெளிவுரை : வளமான சீகாழியில் தோன்றிய பிள்ளையார் மாதர் மடப்பிடி எனத் தொடங்கி அழகு பொருந்தப் பாடிப் பண் பயில்கின்ற திருக்கடைக் காப்புத் சாத்தி முடித்தார். முடிக்கத், திருநீலகண்ட யாழ்ப்பாணர் அங்குச் சேர்ந்து யாழ்க்கருவியில் அமைத்து முன் போல் அந்தப் பதிகத்தின் இசையினை இசைக்கப் புகுந்த அவர்க்கு, எண்ணில் பெருகும் அப்பதிகத்தின் இசை, யாழ் நரம்பில் வைத்து வாசிக்க அடங்காமல் போயிற்று.
2347. அப்பொழுது திருநீல கண்டஇசைப்
பெரும்பாணர் அதனை விட்டு
மெய்ப்பயமும் பரிவுமுறப் பிள்ளையார்
கழலிணைவீழ்ந் தெழுந்து நோக்கி
இப்பெரியோர் அருள்செய்த திருப்பதிகத்
திசையாழி லேற்பன் என்னச்
செப்பியதிக் கருவியைநான் தொடுதலின்அன்
றோஎன்று தெளிந்து செய்வார்.
தெளிவுரை : அப்போது திருநீலகண்ட யாழ்ப்பாணர் யாழ் வாசிப்பதைக் கைவிட்டு உடலில் நடுக்கமும் உள்ளத்தில் வருத்தமும் பொருந்தப், பிள்ளையாரின் திருவடிகளில் விழுந்து வணங்கி எழுந்து நின்று, அவரைப் பார்த்து, இந்தப் பெரியவர் அருளிச் செய்த திருப்பதிகத்தின் இசையை யாழில் இசைப்பேன் என்று மேற்கொள்ளச் செய்தது இந்த யாழ்க்கருவியை நான் தொடுவதால் உண்டானதன்றோ ! என்று உள்ளத்தில் தெளிந்து அதற்கேற்ற செயல் செய்வாராய்.
2348. வீக்குநரம் புடையாழி னால்விளைந்த
திதுவென்றங் கதனைப் போக்க
ஓக்குதலும் தடுத்தருளி ஐயரே
உற்றஇசை யளவி னால்நீர்
ஆக்கியஇக் கருவியினைத் தாருமென
வாங்கிக்கொண் டவனி செய்த
பாக்கியத்தின் மெய்வடிவாம் பாலறா
வாயர்பணித் தருளு கின்றார்.
தெளிவுரை : முறுக்கிக் கட்டப்பட்ட நரம்பையுடைய யாழால் இக்குற்றம் உண்டானது ! எனக் கூறி, அதனை முரிப்பதற்குக் திருநீலகண்டயாழ்ப்பாணர் முயன்றபோது உலகம் செய்த பாக்கியத்தின் மெய் வடிவமாய் உள்ள பிள்ளையார் பாணரின் அச்செயலைத் தடுத்து, ஐயரே ! பொருந்திய இசை நூலில் விதித்த அளவுப்படி நீவிர் இயற்றும் இந்த யாழ்க் கருவியைத் தாரும். என்று பணித்து அதனைத் தம் கையில் பெற்றுக்கொண்டு மேலும் ஆணையிடுபவராய்,
2349. ஐயர்நீர் யாழ்இதனை முரிக்கும தென்
ஆளுடையா ளுடனே கூடச்
செய்யசடை யார்அளித்த திருவருளின்
பெருமையெலாம் தெரிய நம்பால்
எய்தியஇக் கருவியினில் அளவுபடு
மோநந்தம் இயல்புக் கேற்ப
வையகத்தோர் அறிவுறஇக் கருவிஅள
வையின்இயற்றல் வழக்கே என்றார்.
தெளிவுரை : ஐயரே ! இந்த யாழை முரிப்பது ஏன்? ஆளுடைய பிராட்டியுடன் கூடிச் சிவந்த சடையையுடைய சிவபெருமான் அளித்த திருவருளின் பெருமையெல்லாம் தெரிவதற்கு நம்மிடத்தில் பொருந்திய இந்தக் கருவியின் அளவில் அடங்குமோ? நம் இயல்புக்குத் தக்கவாறு இந்த உலகத்தவர் அறியும்படியாக இந்தக் கருவியின் அளவுக்குள் அமையும் நிலையில் இயற்றுவதே வழக்கமாகும் என்று அருளி,
2350. சிந்தையால் அளவுபடா இசைப்பெருமை
செயலளவில் எய்து மோநீர்
இந்தயா ழினைக்கொண்டே இறைவர்திருப்
பதிகஇசை இதனில் எய்த
வந்தவா றேபாடி வாசிப்பீர்
எனக்கொடுப்பப் புகலி மன்னர்
தந்தயா ழினைத்தொழுது கைக்கொண்டு
பெரும்பாணர் தலைமேற் கொண்டார்.
தெளிவுரை : உள்ளத்தினால் அளவுபடுத்தப் படாத இசையின் பெருமை செயலுள் பொருந்தச் செய்ய வருமோ? இந்த யாழைக் கருவியாய்க் கொண்டு இறைவர் திருப்பதிகத்தை இதனுள் பொருந்த வந்த அந்த அளவில் பாடி இசைப்பீராக ! எனப் பாணனாரின் கையில் கொடுக்க, சீகாழிப் பிள்ளையார் அங்ஙனம் பணித்துக் கொடுத்தயாழை அவரைத் தொழுது கையில் பெற்றுக் கொண்டு திருநீலகண்ட யாழ்ப்பாணர் அதனைத் தலைமீது வைத்து ஏற்றுக் கொண்டார்.
2351. அணைவுறும்அக் கிளைஞருடன் பெரும்பாணர்
ஆளுடைய பிள்ளை யார்தம்
துணைமலர்ச்சே வடிபணிந்து துதித்தருளத்
தோணிபுரத் தோன்ற லாரும்
இணையில் பெருஞ் சிறப்பருளித் தொண்டருடன்
அப்பதியில் இனிது மேவிப்
பணைநெடுங்கை மதயானை உரித்தவர்தம்
பதிபிறவும் பணியச் செல்வார்.
தெளிவுரை : சேர்ந்த சுற்றத்தாருடன் பெரும் பாணர், ஆளுடைய பிள்ளையாரின் இரண்டு மலர் போன்ற திருவடிகளையும் வணங்கித் துதித்திடச் சீகாழியில் தோன்றிய தலைவரும் ஒப்பில்லாத பெருஞ்சிறப்புகளை அவர்களுக்கு அளித்துத் தொண்டர்களுடனே அந்தப்பதியில் இனிதாய் அமர்ந்திருந்தார். பின் அவர் பெரிய நீண்ட துதிக்கையையுடைய யானையை உரித்த இறைவரின் பிற பதிகளையும் வணங்கச் செல்பவராய்.
2352. பங்கயப்பா சடைத்தடஞ்சூழ் பழனநாட்
டகன்பதிகள் பலவும் நண்ணி
மங்கையொரு பாகத்தார் மகிழ்கோயில்
எனைப்பலவும் வணங்கிப் போற்றித்
தங்கிசையாழ்ப் பெரும்பாண ருடன்மறையோர்
தலைவனார் சென்று சார்ந்தார்
செங்கைமான் மழுவேந்துஞ் சினவிடையார்
அமர்ந்தருளுந் திருநள் ளாறு.
தெளிவுரை : இலைகள் பொருந்திய தாமரைப் பொய்கைகள் சூழ்ந்த வயல்களையுடைய சோழ நாட்டின் பெரிய பதிகள் பலவற்றையும் அடைந்து, உமையம்மையாரை ஒரு பாகத்தில் கொண்ட இறைவர் மகிழ்ந்து வீற்றிருக்கும் தலங்கள் பலவற்றையும் வணங்கித் துதித்து, சிவந்த கைகளில் மானையும் மழுவையும் ஏந்தும் சினமுடைய விடையினரான இறைவர் விரும்பி எழுந்தருளியிருக்கும் திரு நள்ளாற்றினை இசை பொருந்திய பாணருடனே அந்தணர் தலைவரான பிள்ளையார் போய் அடைந்தார்.
2353. நள்ளாற்றில் எழுந்தருள நம்பர்திருத்
தொண்டர்குழாம் நயந்து சென்று
கொள்ளாற்றி லெதிர்கொண்டு குலவியுடன்
சூழ்ந்தணையக் குறுகிக் கங்கைத்
தெள்ளாற்று வேணியர்தந் திருவளர்கோ
புரமிறைஞ்சிச் செல்வக் கோயில்
உள்ளாற்ற வலங்கொண்டு திருமுன்பு
தாழ்ந்தெழுந்தார் உணர்வின் மிக்கார்.
தெளிவுரை : திருநள்ளாற்றில் வீற்றிருக்கும் இறைவரின் தொண்டர் கூட்டமானது விரும்பிச் சென்று எதிர் கொண்டு வரவேற்கும் முறையில் எதிர் கொண்டு மகிழ்வுடன் சூழ்ந்து வரச் சென்று அடைந்து, தெளிவான கங்கையாற்றைச் சூடிய சடையுடைய இறைவரின் செல்வம் வளரும் கோபுரத்தை வணங்கி அருள் செல்வம் மிக்க கோயிலுள்ளே மிகுதியாய் வலம் வந்து ஞானவுணர்வுடைய பிள்ளைப் பெருமான், திருமுன்பு வணங்கி எழுந்தார்.
2354. உருகியஅன் புறுகாதல் உள்ளுருகி
நனைஈரம் பெற்றாற் போல
மருவுதிரு மேனியெலாம் முகிழ்த்தெழுந்த
மயிர்ப்புளகம் வளர்க்கு நீராய்
அருவிசொரி திருநயனத் தானந்த
வெள்ளம்இழிந் தலைய நின்று
பொருவில்பதி கம்போக மார்த்தபூண்
முலையாள்என் றெடுத்துப் போற்றி.
தெளிவுரை : உருகுதற்கு காரணமான அன்பு முதிர்ந்த பெரு விருப்பத்துடன் மனம் உருக, அதனால் பெருகும் ஈரத்தைப் பெற்றது போல், பொருந்திய திருமேனி முழுதும் எழுந்த மயிர்ப் புளகத்தை வளர்க்கும் நீர் போல அருவி போன்று வழிகின்ற ஆனந்தக் கண்ணீர் வெள்ளம் பெருகி அலைய நின்று, ஒப்பில்லாத பதிகத்தைப் போக மார்த்த பூண் முலையாள் என்று தொடங்கித் துதித்தார்.
2355. யாணரம்பில் ஆரஇயல் இசைகூடப்
பாடியே எண்ணில் கற்பச்
சேண்அளவு படவோங்குந் திருக்கடைக்காப்
புச்சாத்திச் செங்கண்நாகப்
பூண்அகலத் தவர்பாதம் போற்றிசைத்துப்
புறத்தணைந்து புவன மேத்தும்
பாணனார் யாழிலிடப் பாலறா
வாயர்அருள் பணித்த போது.
தெளிவுரை : யாழ் நரம்பில் பொருந்த இயல் தமிழும் இசைத் தமிழும் கூடும்படி பாடி அளவற்ற கற்பகாலங்கள் விண்ணுக்கு அப்பாலும் நிலைபெறுமாறு ஓங்கும் திருக்கடைக் காப்புச் சாத்தியருளி, சிவந்த கண்ணையுடைய பாம்பணியுடைய மார்பரான இறைவரின் திருவடிகளைத் துதி செய்து, புறமுற்றத்தை அடைந்து பாலறாவாயரான ஞானசம்பந்தர் உலகம் துதிக்கும் பெரும் பாணனாரை யாழில் இயற்றும்படி ஆணையிட்டருளினார்.
2356. பிள்ளையார் திருத்தாளங் கொடுபாடப்
பின்புபெரும் பாண னார்தாம்
தெள்ளமுத இன்னிசையின் தேம்பொழிதந்
திரியாழைச் சிறக்க வீக்கிக்
கொள்ளஇடும் பொழுதின்கண் குவலயத்தோர்
களிகூரக் குலவு சண்பை
வள்ளலார் திருவுள்ளம் மகிழ்ந்துதிருத்
தொண்டருடன் மருவுங் காலை.
தெளிவுரை : ஞானப் பிள்ளையார் திருத்தாளத்தைக் கொண்டு அளவு ஒத்து அறுத்து அப்பதிகத்தைப் பாட, அதைப்பின் தொடர்ந்து பெரும் பாணனாரும் தெள்ளிய அமுதமான இனிய இசைத் தேன் பொழியும் நரம்புகளையுடைய யாழைப் பண் அமைதி மிகுமாறு செய்து, பதிக இசையை அமைத்துப் பாடும் போது, உலகத்தவர் யாவரும் மகிழ்ச்சியடைய, விளங்கும் சீகாழிப் பெருவள்ளலாரான பிள்ளையார் திருவுள்ளம் கொண்டு மகிழ்ந்து தொண்டர்களுடனே அங்குத் தங்கியிருந்தார்.
2357. மன்னுதிரு நள்ளாற்று மருந்தைவணங்
கிப்போந்து வாச நன்னீர்ப்
பொன்னிவளந் தருநாட்டுப் புறம்பணைசூழ்
திருப்பதிகள் பலவும் போற்றிச்
செந்நெல்வயற் செங்கமல முகமலருந்
திருச்சாத்த மங்கை மூதூர்
தன்னிலெழுந் தருளினார் சைவசிகா
மணியார்மெய்த் தவத்தோர் சூழ.
தெளிவுரை : பின், நிலையான திருநள்ளாற்றில்வீற்றிருக்கும் மருந்தான இறைவரை வணங்கி, விடை பெற்றுச் சென்று, மணமுடைய நல்ல நீர் பொருந்திய காவிரியாறானது பல வளங்களையும் தருகின்ற சோழ நாட்டின் புறப்பணை சூழ்ந்த பல தலங்களையும் வணங்கி வழிபட்டு, மெய் அடியார்கள் சூழச் சைவ சிகாமணியாரான பிள்ளையார், செந்நெல் வயல்களிலே செந்தாமரை மலர்கள் மாதர் முகம் போன்று பூப்பதற்கு இடமான திருச்சாத்த மங்கை என்ற பழம்பதியை நெருங்கினார்.
2358. நிறைசெல்வத் திருச்சாத்த மங்கையினில்
நீலநக்கர் தாமுஞ் சைவ
மறையவனார் எழுந்தருளும் படிகேட்டு
வாழ்ந்துவழி விளக்கி யெங்குந்
துறைமலிதோ ரணங்கதலி கமுகுநிறை
குடந்தூப தீப மாக்கி
முறைமையில்வந் தெதிர்கொள்ள உடன்அணைந்து
முதல்வனார் கோயில் சார்ந்தார்.
தெளிவுரை : நிறைந்த செல்வத்தையுடைய சாத்த மங்கையில் வாழ்கின்ற திருநீல நக்க நாயனாரும் சைவ அந்தணரான பிள்ளையார் எழுந்தருளும் நல்ல செய்தியைக் கேட்டுப் பெருவாழ்வு அடைந்தவராய் வழி எல்லாம் விளக்கம் செய்து எங்கும் இடையிடையே நெருங்கிய தோரணங்களையும் வாழை பாக்கு மரங்களையும் அங்கங்கே நிறைகுடம் தூப தீபம் முதலானவற்றையும் அமைத்து வரவேற்க வேண்டிய முறைப்படி வந்து எதிர் கொள்ள, ஞானசம்பந்தர் இறைவரது கோயிலை அடைந்தார்.
2359. அயவந்தி அமர்ந்தருளும் அங்கணர்தங்
கோயில்மருங் கணைந்து வானோர்
உயவந்தித் தெழுமுன்றில் புடைவலங்கொண்
டுட்புக்கா றொழுகுஞ் செக்கர்
மயவந்தி மதிச்சடையார் முன்தாழ்ந்து
மாதவம் இவ்வைய மெல்லாம்
செயவந்த அந்தணனார் செங்கைமேல்
குவித்தெழுந்து திருமுன் னின்றார்.
தெளிவுரை : அயவந்தி என்னும் அந்தக் கோயிலில் விரும்பி வீற்றிருக்கும் இறைவரின் திருக்கோயிலின் பக்கத்னதச் சார்ந்து தேவர்கள் உய்யும் பொருட்டு வந்தனைகள் செய்து திருமூன்றிலின் பக்கமாக வந்து உள்ளே புகுந்து கங்கையாறு ஒழுகுவதற்கு இடமான சிவப்பு மயமான அந்தி மாலையில் தோன்றும் மதியினைச் சூடிய சடையையுடைய சிவபெருமானின் முன் தாழ்ந்து வணங்கி, இந்தப் பூவுலகம் முழுதும் பெருந்தவம் செய்ததன் பயனாய், இங்கு வந்து தோன்றிய அந்தணரான சம்பந்தர் தம் செங் கையினைத் தலை மீது குவித்து வணங்கி எழுந்து நின்றார்.
2360. போற்றிசைக்கும் பாடலினால் பொங்கியெழும்
ஆதரவு பொழிந்து விம்ம
ஏற்றின் மிசை இருப்பவர்தம் எதிர்நின்று
துதித்துப்போந் தெல்லை இல்லா
நீற்றுநெறி மறையவனார் நீலநக்கர்
மனையிலெழுந் தருளி அன்பால்
ஆற்றும்விருந் தவர்அமைப்ப அன்பருடன்
இன்புற்றங் கமுது செய்தார்.
தெளிவுரை : காளையூர்தியின் மீது வீற்றிருக்கும் இறையவர் திருமுன்பு நின்று போற்றிச் செய்கின்ற பாடல்களால் மேன் மேலும் பொங்கி எழும் அன்பு பெருகிக் கண்ணீர் விட்டு விம்மத் துதி செய்து வெளியே வந்து, அளவுட் படாத திருநீற்று நெறியான சைவ நெறியை விளக்கும் அந்தணரான பிள்ளையார் திருநீல நக்க நாயனாரின் இல்லத்தில் தங்கியிருந்து அன்பால் செய்யப்படுகின்ற விருந்து இயல்புக் குரியவற்றை அவர் அமைக்க, அன்பர்களோடு இன்பம் பொருந்தி உண்டருளினார்.
2361. நீடுதிருநீலநக்கர் நெடுமனையில்
விருந்தமுது செய்து நீர்மைப்
பாடும்யாழ்ப் பெரும்பாண ருந்தங்க
அங்கிரவு பள்ளி மேவி
ஆடுமவர் அயவந்தி பணிவதனுக்கு
அன்பருடன் அணைந்து சென்று
நாடியநண் புடைநீல நக்கடிக
ளுடன்நாதர் கழலில்தாழ்ந்து.
தெளிவுரை : நீடும் திருநீலநக்க நாயனாரின் பெரிய இல்லத்தில் விழுந்து அமுது உண்டு நல்ல நீர்மையுடன் பாடும் திருநீலகண்ட யாழ்ப்பாணரும் உடன் தங்க, அங்குப் பள்ளியமர்ந்து ஆடும் இறைவரின் அயவந்தியினைப் பணிவதற்கு அன்பர்களுடனே சேர்ந்து சென்று நாடிய நட்பையுடைய நீலநக்கநாயனாருடன் இறைவனது திருவடிகளில் விழுந்து வணங்கினார்.
2362. கோதிலா ஆரமுதைக் கோமளக்கொம்
புடன்கூடக் கும்பிட் டேத்தி
ஆதியாம் மறைப்பொருளால் அருந்தமிழின்
திருப்பதிகம் அருளிச் செய்வார்
நீதியால் நிகழ்கின்ற நீலநக்கர்
தம்பெருஞ்சீர் நிகழ வைத்துப்
பூதிசா தனர்பரவும் புனிதஇயல்
இசைப்பதிகம் போற்றி செய்தார்.
தெளிவுரை : குற்றம் அற்ற அரிய அமிழ்தத்தைப் போன்ற இறைவரை அழகிய இளம் கொம்பைப் போன்ற அம்மையாருடன் வணங்கி ஏத்தி, பழைய மறைகளின் பொருள் பற்றி அரிய தமிழின் திருப்பதிகம் பாடுவாராகி வேதாகம விதிப்படி ஒழுகும் திருநீல நக்கரின் பெருஞ்சிறப்புகள் விளங்க வைத்துத் திருநீற்று நெறித் தொண்டர்கள் போற்றும் தூய இயல் இசை உடைய பதிகத்தை அருளிச் செய்தார்.
2363. பரவியகா தலிற்பணிந்து பாலறா
வாயர்புறத் தணைந்து பண்பு
விரவியநண் புடையடிகள் விருப்புறுகா
தலில்தங்கி மேவும் நாளில்
அரவணிந்தார் பதிபிறவும் பணியஎழும்
ஆதரவா லணைந்து செல்வார்
உரவுமனக் கருத்தொன்றாம் உள்ளம்உடை
யவர்க்குவிடை உவந்து நல்கி.
தெளிவுரை : பாலறா வாயரான திருஞான சம்பந்தர் போற்றிய அன்பு மிகுதியால் கோயிலின் வெளியே வந்து, அன்புடன் பொருந்திய நட்புக் கொண்ட திருநீலநக்க அடிகளின் விருப்புடைய ஆசையினால் அங்குத் தங்கியிருந்த நாட்களில், பாம்பை அணிந்த இறைவரது மற்றப் பதிகளையும் வணங்க எழுந்த அன்பினால், அங்கங்கும் செல்வாராய் அறிவால் உள்ளத்தில் எழும் கருத்து ஒன்றேயான மனத்தைடைய திருநீல நக்கரிடம் மகிழ்ச்சியுடன் விடைபெற்றுப் புறப்பட்டார்.
2364. மற்றவர்தம் பெருங்கேண்மை மகிழ்ந்து கொண்டு
மாலயனுக் கரியபிரான் மருவு தானம்
பற்பலவும் சென்றுபணிந் தேத்திப் பாடிப்
பரமர்திருத் தொண்டர்குழாம் பாங்கின் எய்தக்
கற்றவர்வாழ் கடல்நாகைக் காரோ ணத்துக்
கண்ணுதலைக் கைதொழுது கலந்த ஓசைச்
சொற்றமிழ்மா லைகள் பாடிச் சிலநாள் வைகித்
தொழுதகன்றார் தோணிபுரத் தோன்ற லார்தாம்.
தெளிவுரை : பிள்ளையார், அந் நீலநக்கரின் பெரு நட்பை மகிழ்ந்து மனத்துள் தாம் வைத்துக் கொண்டு, நான்முகன் திருமால் என்பவர்க்கும் அரிய சிவபெருமானின் பதிகள் பலவும் போய் வணங்கித் துதித்துப் பாடி, இறைவரின் கற்றவர் வாழும் திருநாகைக் கரோணம் என்ற பதியில் வீற்றிருக்கும் இறைவரை வணங்கி இசையுடன் கூடிய சொல் நிறைந்த தமிழ் மாலைகளைப் பாடிச் சில நாட்கள் அங்குத் தங்கி வணங்கி விடை பெற்று நீங்கினார்.
2365. கழிக்கானல் மருங்கணையுங் கடல்நாகை யதுநீங்கிக் கங்கை யாற்றுச்
சுழிக்கானல் வேணியர்தம் பதிபலவும் பரவிப்போய்த் தோகை மார்தம்
விழிக்காவி மலர்பழனக் கீழ்வேளூர் விமலர்கழல் வணங்கி ஏத்தி
மொழிக்காதல் தமிழ்மாலை புனைந்தருளி அங்ககன்றார் மூதூர் நின்றும்.
தெளிவுரை : உப்பங்கழி சூழ்ந்த சோலைகளின் பக்கங்களில் உள்ள நாகப் பட்டினத்தை நீங்கிச் சென்று, கங்கையாற்றின் சுழிகளில் ஒலித்தல் பொருந்திய சடையையுடைய இறைவரின் பதிகள் பலவும் வணங்கிச் சென்று, மயில் போன்ற நீலோற்பல மலர்கள் மலர்வதற்கு இடமான வயல்கள் சூழ்ந்த திருக்கீழ் வேளூரில் வீற்றிருக்கும் இறைவரின் திருவடிகளை வணங்கித் துதித்து , அன்பு மிகுதியால் தமிழ்ப் பதிகங்களான மாலைகளைப் பாடி அந்தப் பழைய பதியினின்று புறப்பட்டார்.
2366. அருகணையுந் திருப்பதிகள் ஆனவெலாம் அங்கணரைப் பணிந்து போற்றிப்
பெருகியஞா னம்பெற்ற பிள்ளையார்எழுந்தருளும் பெருமை கேட்டுத்
திருமருவு செங்காட்டங் குடிநின்றும் சிறுத்தொண்டர் ஓடிச் சென்றங்
குருகுமனங் களிசிறப்ப எதிர்கொண்டு தம்பதியுட் கொண்டு புக்கார்.
தெளிவுரை : பெருகிய ஞானத்தையுடைய பிள்ளையார் அங்குப் பக்கங்களில் எல்லாம் இறைவரை வணங்கிப் போற்றி எழுந்தருளி வருகின்ற செய்தியைச் செவியேற்றுச் செல்வம் பொருந்திய திருச்செங்காட்டங்குடி என்ற பதியினின்றும், சிறுத்தொண்ட நாயனார், அங்குச் சென்று, அன்பால் உருகும் மனம் மகிழ்ச்சி மிக, எதிர்கொண்டு வரவேற்றுத் தம் பதியுள் அழைத்துக் கொண்டு போனார்.
2367. சிறுத்தொண்ட ருடன் கூடச் செங்காட்டங் குடியிலெழுந் தருளிச் சீர்த்தி
நிறுத்தெண்திக் கிலும்நிலவுந் தொண்டரவர் நண்பமர்ந்து நீல கண்டம்
பொறுத்தண்டர் உயக்கொண்டார் கணபதீச் சரத்தின்கட் போக மெல்லாம்
வெறுத்துண்டிப் பிச்சைநுகர் மெய்த்தொண்ட ருடன்அணைந்தார் வேதகீதர்.
தெளிவுரை : சிறுத் தொண்ட நாயனாருடன் கூடத் திருச் செங்காட்டங் குடியில் எழுந்தருளிப் போய், தம் சிறப்பை எட்டுத் திக்குகளிலும் நிறுத்தி நிலை பெறும் தொண்டரான அவருடைய நட்பை விரும்பி, எல்லாப் போகங்களையும் வெறுத்துத் துறந்து பிச்சை ஏற்ற உண்டியை அனுபவிக்கும் மெய்த் தொண்டர்களுடனே சேர்ந்து, நீலகண்டத்தைத் தாம் தாங்கித் தேவர்களை உய்யுமாறு கொண்ட இறைவரின் கணபதீச்சரம் என்ற கோயிலில் வேதப் பொருளை இசைப் பாடல்களாகப் பாடும் சம்பந்தர் போய் அடைந்தார்.
2368. அங்கணைந்து கோயில்வலங் கொண்டருளி அரவணிந்தார் அடிக்கீழ் வீழ்ந்து
செங்கண்அரு விகள்பொழியத் திருமுன்பு பணிந்தெழுந்து செங்கை கூப்பித்
தங்கள்பெருந் தகையாரைச் சிறுத்தொண்டர் தொழவிருந்த தன்மை போற்றிப்
பொங்கியெழும் இசைபாடிப் போற்றிசைத்தங் கொருபரிசு புறம்பு போந்தார்.
தெளிவுரை : பிள்ளையார் அங்குக் கோயிலைச் சேர்ந்து, அதனைவலமாக வந்து, பாம்பை யணிந்த இறைவரின் திருவடிகளில் விழுந்து வணங்கிக் கண்களிலிருந்து கண் நீர் அருவி இழிய, திருமுன்பு பணிந்து எழுந்து, சிவந்த கைகளைக் குவித்து வணங்கித், தம்மை ஆண்ட இறைவரைச் சிறுத்தொண்டநாயனார் தொழுமாறு வீற்றிருந்த தன்மையைப் பற்றி, மேலும் மேலும் பொங்கி எழுகின்ற பதிகத்தைப் பாடிப் பரவி, அங்கிருந்து ஒருவாறாக அரிதாய் நீங்கி வெளியே வந்தார்.
2369. போந்துமா மாத்திரர்தம் போரேற்றில் திருமனையிற் புகுந்து சிந்தை
வாய்ந்தமா தவரவர்தா மகிழ்ந்தருள அமர்ந்தருளி மதில்கள் மூன்றும்
காய்ந்தமால் விடையார்தங் கணபதீச் சரம்பரவு காதல் கூர
ஏந்துநூ லணிமார்பர் இன்புற்றங் கன்பருடன் இருந்த நாளில்.
தெளிவுரை : பிள்ளையார், கோயிலைவிட்டு வெளியே வந்து, மாமாத்திரர் மரபில் அவதரித்த போர் ஏறு போன்ற சிறுத்தொண்ட நாயனாரின் இல்லத்தில் புகுந்து, மாதவம் வாய்ந்த அவர் மனத்தில் மகிழ்ச்சியுடைய, விரும்பி அங்குத் தங்கியிருந்தார். பின் திரிபுரங்களையும் எரித்த, திருமாலைக் காளையாகக் கொண்ட இறைவரின் கணபதீச்சரத்தைத் துதிக்கும் அன்பு மேலும் மேலும் அதிகரிக்கப் பூணூலை அணிந்த அழகிய மார்பினையுடைய சம்பந்தர் இன்பம் அடைந்து அங்கு அன்பர்களுடன் தங்கியிருந்தார். அந்நாள்களில்,
2370. திருமருகல் நகரின்கண் எழுந்தருளித் திங்களுடன் செங்கட் பாம்பு
மருவுநெடுஞ் சடைமவுலி மாணிக்க வண்ணர்கழல் வணங்கிப் போற்றி
உருகியஅன் புறுகாத லுள்ளலைப்பத் தெள்ளுமிசை யுடனே கூடப்
பெருகுதமிழ்த் தொடைசார்த்தி அங்கிருந்தார் பெரும்புகலிப் பிள்ளை யார்தாம்.
தெளிவுரை : திருமருகல் என்ற நகரத்தில் எழுந்தருளி பிறைச் சந்தினுடன் சிவந்த கண்களையுடைய பாம்பு தங்குவதற்கு இடமான நீண்ட சடையுடைய மாணிக்க வண்ண நாதரின் திருவடிகளை வணங்கித் துதித்து, உருகிய அன்பு பெருகிய ஆசையானது உள்ளத்தில் பொருந்தி அலைக்க, தெளிந்த இசையுடன் பொருந்தப் பெருகும் தமிழ் மாலையைச் சாத்தி அந்தப் பதியில் சீகாழித் தலைவர் தங்கியிருந்தார்.
2371. அந்நாளில் ஒருவணிகன் பதிக னாகி
அணைவானோர் கன்னியையும் உடனே கொண்டு
பொன்னார்மே ருச்சிலையார் கோயில் மாடு
புறத்திலொரு மடத்திரவு துயிலும் போது
மின்னார்வெள் ளெயிற்றரவு கவ்வுதலும் கிளர்ந்த
விடவேகங் கடிதுதலை மீக்கொண் டேறத்
தன்னாவி நீங்குமவன் தன்மை கண்டு
சாயல்இளங் கன்னிநிலை தளர்ந்து சோர்வாள்.
தெளிவுரை : அக் காலத்தில் வாணிகன் ஒருவன் வழிச் செல்பவனாய்த் தன்னுடன் ஒருகன்னிப் பெண்ணையும் அழைத்துக் கொண்டு செல்பவன், பொன்மலையான மேருவை வில்லாய் உடைய சிவபெருமானின் கோயிலின் பக்கத்தில் உள்ள ஒரு மடத்தில் இரவில் தங்கியுறங்கினான். அப்போது ஒளி பொருந்திய பற்களையுடைய பாம்பு அவனைத் தீண்டியதால், நஞ்கின் வேகமானது விரைவாய்த் தலையில் ஏறிடத் தன் உயிர் நீங்கும் அவனுடைய நிலைமையைப் பார்த்து அவனுடன் வந்த மென்மையான சாயலைக் கொண்ட இளங்கன்னி நிலை கலங்கித் தளர்ந்து சோர்பவளாய்,
2372. வாளரவு தீண்டவும்தான் தீண்ட கில்லாள்
மறுமாற்றம் மற்றொருவர் கொடுப்பா ரின்றி
ஆளரியே றனையானை அணுக வீழ்ந்தே
அசைந்தமலர்க் கொடிபோல்வாள் அரற்றும் போது
கோளுருமும் புள்ளரசும் அனையார் எல்லாக்
கொள்கையினா லுந்தீர்க்கக் குறையா தாக
நீள்இரவு புலர்காலை மாலை வாச
நெறிகுழலாள் நெடிதயர்ந்து புலம்பு கின்றாள்.
தெளிவுரை : கொடிய பாம்பானது அவனைக் கடிக்கவும், அவனை மெய் தொட்டுத் தீண்டும் உரிமை பெறாத (மணமாகாத) அப் பெண், தனக்கு விடையருளிப்பார் எவரும் இல்லாமல், ஆண் சிங்கம் போன்ற அந்த வணிகனை நெருங்கிப் பக்கத்தில் விழுந்து அசைந்து வீழ்ந்த மலர்க் கொம்பைப் போல்வளான அவள் புலம்பும்போது, வலிய இடியையும் பறவை மன்னனான கருடனையும் போன்ற மந்திர வாதிகள் எல்லா வகைக் கொள்கை மூலமாகவும் தீர்க்க முயன்றனர். முயலவும், அந்த நஞ்சு தீர்க்கப்படாது நின்றது, நீண்ட அந்த இரவில் விடியற் காலம் வரையிலும் மணமுடைய மாலை சூடிய நெறிந்த கூந்தலையுடைய அப்பெண் பெரிதும் தளர்ந்து புலம்பலானாள்.
2373. அன்னையையும் அத்தனையும் பிரிந்து நின்னை
அடைவாக உடன்போந்தேன் அரவால் வீடி
என்னையுயிர் விட்டகன்றாய் யான்என் செய்கேன்
இவ்விடுக்கண் தீர்க்கின்றார் யாரும் இல்லை
மன்னியசீர் வணிகர்குல மணியே யானும்
வாழேன்என் றென்றயர்வாள் மதியினாலே
சென்னியிளம் பிறையணிவார் கோயில் வாயில்
திசைநோக்கித் தொழுதழுதாள் செயலொன் றில்லாள்.
தெளிவுரை : அன்னையையும் தந்தையையும் பிரிந்து உன்னையே சார்வாய் அடைந்து உன்னுடனே வந்தேன். பாம்பு தீண்டப் பெற்று உயிர் நீங்க என்னை விட்டு அகன்றாய் ! நான் என்ன செய்வேன்? இந்தத் துன்பத்தைத் தீர்ப்பவர் எவரும் இல்லை ! நிலையான சிறப்பையுடைய வணிகர் குல மணியே ! நானும் இனிமேல் வாழமாட்டேன் ! என்று வருந்தும் அப்பெண், தன் அறிவால், தலையில் இளம்பிறையை அணிந்த இறைவரின் திருக்கோயில் வாயில் திசையை நோக்கி, கைகூப்பித் தொழுபவளாய், வேறு செயல் ஒன்றும் இல்லாதவளாய்,
2374. அடியாராம் இமையவர்தங் கூட்டம் உய்ய
அலைகடல்வாய் நஞ்சுண்ட அமுதே செங்கண்
நெடியானும் நான்முகனுங் காணாக் கோல
நீலவிட அரவணிந்த நிமலாவெந்து
பொடியான காமன்உயிர் இரதி வேண்டப்
புரிந்தளித்த புண்ணியனே பொங்கர் வாசக்
கடியாரும் மலர்ச்சோலை மருங்கு சூழும்
கவின்மருகற் பெருமானே காவாய் என்றும்.
தெளிவுரை : அடியாரான தேவர்களின் கூட்டம் முழுதும் உய்யும் பொருட்டாய்ப் பாற் கடலில் தோன்றிய நஞ்சை யுண்டருளிய அமுதமே ! சிவந்த கண்களையுடைய நீண்ட திருமாலும் நான்கு முகங்களையுடைய நான்முகனும் காணாத கோலம் உடைய நீலநிற நச்சுப் பாம்புகளை அணியாய் அணிந்த விமலனே ! வெந்து சாம்பாலாய் விட்ட காமனின் உயிரை அவன் மனைவியான இரதியின் வேண்டுதலுக்கு இணங்க மீண்டும் அளித்த புண்ணியனே ! பூக்களின் மணம் மிக்க சோலைகள் பக்கங்களில் எங்கும் சூழ்ந்துள்ள அழகுடைய திருமருகலில் வீற்றிருக்கும் இறைவரே ! காப்பீராக ! என்று அவள் கூறினாள். மேலும்,
2375. வந்தடைந்த சிறுமறையோன் உயிர்மேற் சீறி
வருங்காலன் பெருங்கால வலயம் போலும்
செந்தறுகண் வெள்ளெயிற்றுக் கரிய கோலம்
சிதைந்துருள வுதைத்தருளுஞ் செய்ய தாளா
இந்தவிடக் கொடுவேகம் நீங்கு மாறும்
யான்இடுக்கட் குழிநின்றும்ஏறு மாறும்
அந்திமதிக் குழவிவளர் செய்ய வேணி
அணிமருகற் பெருமானே அருளாய் என்றும்.
தெளிவுரை : உன்னிடம் வந்தடைந்த சிறு மறையவனான மார்க்கண்டேயரின் உயிர்மீது சினந்து வந்த இயமனின் பெரிய நஞ்சின் சூழ்வு போன்ற சிவந்த கருங் கண்ணையும் வெண்மையான பற்களையும் கொண்ட கரிய கோலம் சிதைந்து உருளுமாறு உøத்தருளிய சிவந்த திருவடியை யுடையவரே ! இந்த நஞ்சின் கொடிய வேகம் நீங்கிப் போகும் படியும் நான் துன்பமான குழியினின்று மேல் ஏறும்படியும் பிறைச் சந்திரன் வளர்வதற்கு இடமான சிவந்த சடையை உடைய அழகிய மருகலில் வீற்றுள்ள பெருமானே ! அருள் செய்வீராக ! என்றாள், மேலும்,
2376. இத்தன்மை சிவனருளே சிந்தித் தேங்கும்
இளங்கொடிபோல் நுடங்கும்இடை ஏழை ஏத்தும்
அத்தன்மை ஓசையெழுந் தெங்கள் சண்பை
ஆண்டகையார் கும்பிடவந் தணைகின்றார்தம்
மெய்த்தன்மை விளங்குதிருச் செவியிற் சார
மேவுதலும் திருவுள்ளக் கருணை மேன்மேல்
வைத்தன்ன மெனஅயர்வாள் மாடுநீடு
மாதவத்தோர் சூழஎழுந் தருளி வந்தார்.
தெளிவுரை : இங்ஙனம் சிவபெருமானின் அருளையே எண்ணிய வண்ணமாய் வருந்தும் இளங் கொடியைப் போன்ற துவளும் இடை கொண்ட ஏழையான அம்மங்கை துதிக்கின்ற அந்தத் தன்மையானது, எழுந்து எம் இறைவரான சீகாழி ஆண்டகையார் இறைவரைக் கும்பிடும் பொருட்டு வந்து சேர்கின்றவரின் மெய்த்தன்மையுடைய செவிகளில் சேரப் போய்ப் பொருந்தவும், திருவுள்ளத்தில் கருணை மிகக் கொண்டு, அன்னப் பறவை போன்று வருந்துகின்றவள் பக்கத்தில், அடியார்கள், சூழ்ந்துவர எழுந்தருளி வந்தார்.
2377. சிரபுரத்து மறையவனார் சென்று நின்று
சிவபெருமான்அருள்போற்றிச் சிந்தை நைந்து
பரவுறுவாள் தனைநோக்கிப் பயப்ப டேல்நீ
பருவுரலும் நும்பரிசும்பகர்வாய் என்னக்
கரமலர்க ளுச்சியின்மேற் குவித்துக் கொண்டு
கண்ணருவி சொரிந்திழியக் காழி வேதப்
புரவலனார் சேவடிக்கீழ் வீழ்ந்து தாங்கள்
போந்ததுவும் புகுந்ததுவும் புகல லுற்றாள்.
தெளிவுரை : சீகாழியில் தோன்றிய அந்தணரான பிள்ளையார் அப் பெண்ணின் பக்கத்தில் சென்று, சிவபெருமானின் அருளையே எண்ணித் துன்பம் அடையும் அப்பெண்ணை நோக்கி, நீ அஞ்ச வேண்டா ! உன் துன்பத்தையும் உங்கள் தன்மைகளையும் கூறுவாயாக ! என்று வினவினார். கையாகிய மலர்களைத் தலைமீது குவித்து வணங்கிக் கண்களினின்று நீர் அருவி சொரிந்து வழியச் சீகாழியில் வந்த அந்தணரின் சேவடியில் விழுந்து வணங்கித் தாங்கள் அங்கு வந்த வரலாற்றையும் அத்துன்பம் நிகழ்ந்ததையும் சொல்லலானாள்.
2378. வளம்பொழில்சூழ் வைப்பூர்க்கோன் தாமன் எந்தை
மருமகன்மற் றிவன்அவற்கு மகளிர்நல்ல
இளம்பிடியார் ஓரெழுவர் இவரில் மூத்தாள்
இவனுக்கென் றுரைசெய்தே ஏதி லானுக்
குளம்பெருகத் தனம்பெற்றுக் கொடுத்த பின்னும்
ஓரொருவ ராகஎனை யொழிய ஈந்தான்
தளர்ந்தழியும் இவனுக்காத் தகவு செய்தங்
கவரைமறைத்து இவன் தனையே சார்ந்து போந்தேன்.
தெளிவுரை : வளம் உடைய சோலை சூழ்ந்த வைப்பூரின் தலைவனான தாமன் என் தந்தையாவான். இவன் அவனுடைய மருமகன். என் தந்தையான அவனுக்கு இளம் பிடி போன்ற ஏழு பெண் மக்கள், அந்தப் ஏழு பெண்களில் மூத்தவளை இவனுக்கு மணம் செய்வதென்று சொல்லி இவனிடமிருந்து நிறையப் பணம் பெற்றுக் கொண்டு, இவனுக்கு மணம் செய்து தாராது, அயலானுக்கு மணம் செய்து தந்து அதன் பின்னரும் ஒவ்வொருவராய் என்னைத் தவிர மற்ற பெண்கள் அறுவரையும் அங்ஙனமே மணம் செய்து தந்து விட்டான். மனம் தளர்ந்து வருந்தும் இவனுக்காக அன்பு பூண்டு அங்கு அவர்களை விட்டு நீங்கி இவனையே சார்பாகக் கொண்டு நான் வந்தேன்.
2379. மற்றிவனும் வாளரவு தீண்ட மாண்டான்
மறிகடலில் கலங்கவிழ்த்தார் போல நின்றேன்
சுற்றத்தா ரெனவந்து தோன்றி யென்பால்
துயரமெலாம் நீங்கஅருள் செய்தீர் என்னக்
கற்றவர்கள் தொழுதேத்துங் காழி வேந்தர்
கருணையினாற் காரிகையாள் தனக்கு நல்கப்
பற்றியவாள் அரவுவிடம் தீரு மாறு
பணைமருகற் பெருமானைப் பாட லுற்றார்.
தெளிவுரை : என்னுடன் வந்த இவனும் ஒளியுடைய பாம்பு தீண்டப் பெற்று இறந்தான். மடிந்து விழும் அலைகளையுடைய கடலின் நடுவில் கப்பல் கவிழ்ந்தது போல் நின்றேன். என் உறவினர் போல் தோன்றி என்னிடம் உற்ற துன்பங்கள் எல்லாம் நீங்குமாறு அருள்செய்வீர் ! எனக் கூறினாள். கற்றவர் வணங்கித் துதிக்கும் சீகாழித் தலைவரான பிள்ளையார் அருள் மிக்கதனால் அந்தப் பெண்ணுக்கு நல்குமாறு தீண்டிய பாம்பின் நஞ்சு தீருமாறு வயல்கள் சூழ்ந்த திருமருகல் இறைவரைப் பாடலானார்.
2380. சடையானை எவ்வுயிர்க்குந் தாயா னானைச்
சங்கரனைச் சசிகண்ட மவுலி யானை
விடையானை வேதியனை வெண்ணீற் றானை
விரவாதார் புரமூன்றும் எரியச் செற்ற
படையானைப் பங்கயத்து மேவி னானும்
பாம்பணையில் துயின்றானும் பரவுங் கோலம்
உடையானை உடையானே தகுமோ இந்த
ஒள்ளிழையாள் உண்மெலிவுஎன் றெடுத்துப் பாட.
தெளிவுரை : சடையை உடையவரை, எல்லாவுயிர்களுக்கும் தாயானவரை, சங்கரரை, பிறைச் சந்திரன் தங்கும் முடியுடையவரை, காளையூர்தியுடையவரை, வேதியரை, திருவெண்ணீற்றை உடையவரை, தாமரையில் வீற்றிருக்கும் நான்முகனும் பாம்பணையில் துயிலும் திருமாலும் துதிக்கின்ற கோலமுடையவரை உடையவரே ! இந்த ஒளி பொருந்திய அணிகளை அணிந்த பெண்ணின் உள்ளம் மெலிவதான துன்பம் உனக்குத் தகுதியாமோ ? என்று தொடங்கிப் பாடினார்.
2381. பொங்குவிடந் தீர்ந்தெழுந்து நின்றான் சூழ்ந்த
பொருவில்திருத் தொண்டர்குழாம் பொலிய ஆர்ப்ப
அங்கையினை யுச்சியின்மேற் குவித்துக் கொண்டங்
கருட்காழிப் பிள்ளையார் அடியில் வீழ்ந்த
நங்கையவள் தனைநயந்த நம்பி யோடு
நானிலத்தில் இன்புற்று வாழும் வண்ணம்
மங்குல்தவழ் சோலைமலிபுகலி வேந்தர்
மணம்புணரும் பெருவாழ்வு வகுத்து விட்டார்.
தெளிவுரை : அவ்வளவில், வணிகன் நஞ்சு நீங்கப் பெற்று எழுந்து நின்றான். சூழ இருந்த ஒப்பில்லாத தொண்டரின் கூட்டம் மிகுந்த ஆரவாரம் செய்தது. கைகளை உச்சி மீது குவித்துக்கொண்டு அங்கு அருளுடைய சீகாழிப் பிள்ளையாரின் திருவடிகளில் விழ்ந்தவர்களான, நங்கையான அப்பெண்ணை அன்பு செய்த நம்பியான அந்த வணிகனோடும் இவ்வுலகத்தில் இன்பம் பொருந்தி வாழுமாறு மேகம் தவழும் சோலை மிகச் சூழ்ந்த சீகாழித் தலைவர் மணம் புணர்கின்ற பெருவாழ்வைச் செய்து வகுத்து விட்டார்.
2382. மற்றவர்க்கு விடைகொடுத்தங் கமரு நாளில்
மருகல்நக ரினில்வந்து வலிய பாசம்
செற்றபுகழ்ச் சிறுத்தொண்டர் வேண்ட மீண்டும்
செங்காட்டங் குடியிலெழுந் தருள வேண்டிப்
பற்றியெழுங் காதல்மிக மேன்மேற் சென்று
பரமனார் திறத்துன்னிப் பாங்க ரெங்கும்
சுற்றும் அருந் தவரோடும் கோயி லெய்திச்
சுடர்மழுஆண் டவர்பாதந் தொழுவான் புக்கார்.
தெளிவுரை : அந்த வணிகனுக்கும் அப்பெண்ணுக்கும் விடை தந்து, சீகாழித் தலைவர், திருமருகலில் தங்கியிருந்தார். அந்நாளில் வலிய மலத்திண்மையிணை அழித்த புகழுடைய சிறுத்தொண்ட நாயனார் திருமருகல் நகரில் வந்து வேண்டிக்கொள்ள, மீண்டும் பிள்ளையார் திருச்செங்காட்டங் குடியில் எழுந்தருளுவதற்காக, மேலும் மேலும் தொடர்ந்து எழுகின்ற இறைவரின் திருவருளைப் பெற எண்ணி எப்பக்கத்திலும் சூழ்ந்த அடியார் கூட்டத்தோடும் திருக்கோயிலை அடைந்து ஒளியுடைய மழுப்படையையுடைய இறைவரின் திருவடிகளைத் தொழுவதன் பொருட்டு உள்ளே புகுந்தார்.
2383. புக்கிறைஞ்சி எதிர்நின்று போற்று கின்றார்
பொங்குதிரை நதிப்புனலும் பிறையுஞ் சேர்ந்த
செக்கர்முடிச் சடைமவுலி வெண்ணீற் றார்தம்
திருமேனி ஒருபாகம் பசுமை யாக
மைக்குலவு கண்டத்தார் மருகற் கோயில்
மன்னுநிலை மனங்கொண்டு வணங்கு வார்முன்
கைக்கனலார் கணபதீச் சரத்தின் மேவும்
காட்சிகொடுத் தருளுவான் காட்டக் கண்டார்.
தெளிவுரை : கோயிலுக்குள் புகுந்து வணங்கித் துதிக்கின்ற பிள்ளையார், பொங்கும் அலைகளையுடைய நீர் நிறைந்த கங்கையும் பிறைச் சந்திரனும் கூடிய சிவந்த சடையான கிரீடம் உடைய திருவெண்ணீற்றையுடைய இறைவரின் திருமேனி ஒரு பாகம் பசுமையாக, நஞ்சு விளங்கும் கழுத்தையுடைய இறைவர் திருமருகல் கோயிலில் பொருந்தியிருந்த நிலைமையினை உள்ளத்தில் எண்ணிக் கொண்டு வணங்குபவரான அவர் முன்பு, கையில் தீயையுடைய இறைவர் கணபதீச்சரத்தில் பொருந்திய காட்சியை இங்குத் தந்தருளும் பொருட்டுக் காட்டியருளக் கண்டார்.
2384. மருகல் அமர்ந்து நிறைந்த கோலர் மல்குசெங் காட்டங் குடியின் மன்னிப்
பெருகு கணபதி ஈச்ச ரத்தார் பீடுடைக் கோலமே யாகித் தோன்ற
உருகிய காதலும் மீது பொங்க உலகர்முன் கொள்ளும் உணர்வு நீட
அருவிகண் வார்வுறப் பாட லுற்றார் அங்கமும் வேதமும் என்றெ டுத்து.
தெளிவுரை : திருமருகலில் விரும்பி நிறைந்த கோலமானது பொருந்திய திருச்செங்காட்டங்குடியில் நிலைபெற்றுக் கணபதீச்சரத்தாரின் பெருமையுடைய கோலமேயாகித் தோன்ற, உள்ளம் உருகுவதால் உள்ளதான காதல் மேலும் மேலும் பொங்கவும், உலகத்தார்க்கு அறிவுறுத்தும் கருணை உணர்வு நீடவும், கண்களிலிருந்து ஆனந்தக்கண்ணீர் அருவிபோல வடிய, அங்கமும் வேதமும் என்று தொடங்கிப் பாடுபவராய்.
2385. கண்டெதிர் போற்றி வினவிப் பாடிக் கணபதி ஈச்சரங் காத லித்த
அண்டர் பிரானை வணங்கி வைகும் அப்பதி யிற்சில நாள்கள் போற்றித்
தொண்ட ருடனருள் பெற்று மற்றத் தொல்லைத் திருப்பதி யெல்லை நீங்கிப்
புண்டரி கத்தடஞ் சூழ் பழனப் பூம்புக லூர்தொழப் போது கின்றார்.
தெளிவுரை : அங்ஙனமே தோன்றப் பார்த்து, நேரே போற்றி அருள் வினவிய கருத்துபடப் பாடிக் கணபதீச் சரத்தை விரும்பி எழுந்தருளிய தேவ தேவரைச் சென்று வணங்கி அத்திருப்பதியில் சில நாட்கள் தங்கித் துதித்துத், தொண்டர்களுடன் விடைபெற்று அந்தப் பழைய பதியை நீங்கித் தாமரைப் பொய்கைகள் சூழ்ந்த வயல்களையுடைய பூம்புகலூரினைப் போய் வணங்குவதற்காக,
2386. சீரின் மலிந்த சிறப்பின் மேவும் சிறுத்தொண்டர் நண்புடன் செல்ல நல்ல
வேரி நறுந்தொங் கல்மற் றவரும் விடையரு ளப்பெற்று மீண்ட பின்பு
நீரின் மலிந்த சடையர் மேவி நிகழும் பதிகள் பலப ணிந்து
பாரின் மலிந்து நிறைந்த செல்வம் பயில்புக லூர்நகர்ப் பாங்க ணைந்தார்.
தெளிவுரை : சீரால் பெருகிய சிறப்புடைய சிறுத்தொண்டர் நட்புடனே தம்மோடு வர, நல்ல தேன் பொருந்திய மணமுடைய மாலையைச் சூடிய அந்நாயனாரும் விடை கொடுக்கப் பெற்றுத் தம் நகருக்குத் திரும்பிய பின்பு, கங்கை பொருந்திய சடையையுடைய இறைவர் எழுந்தருளியிருக்கும் பல பதிகளையும் பணிந்து போய்ப் பிள்ளையார், உலகில் பெருகி நிறைந்த செல்வம் மிக்க புகலூர்த் திரு நகரின் பக்கத்தில் சென்று சேர்ந்தார்.
2387. திருப்புக லூர்த்திருத் தொண்ட ரோடும் செம்மை முருகனார் மெய்ம்ம கிழ்ந்த
விருப்பொடு சென்றெதிர் கொள்ள வந்து வேத முதல்வர்தங் கோயி லெய்திப்
பொருப்புறழ் கோபுரத் துட்பு குந்து பூமலி முன்றில் புடைவ லம்கொண்
டொருப்படு சிந்தையொ டுள்ள ணைந்தார் ஓதாது ஞானமெ லாமு ணர்ந்தார்.
தெளிவுரை : திருப்புகலூரில் வாழ்கின்ற தொண்டர்களுடன் கூடிச் செம்மையால் மிக்க முருக நாயனார் மெய்ம்மை மிக்க விருப்பத்துடனும் நகரின் வெளியே வந்து தம்மை எதிர் கொண்டு வரவேற்க, நகரத்தின் உள்ளே வந்து, ஓதாமல் வேதங்களையெல்லாம் உணர்ந்த ஞானசம்பந்தர். வேதங்களையுணர்ந்த முதல்வரான சிவபெருமானின் கோயிலை அடைந்து, மலை போன்ற கோபுரத்துள் புகுந்து, அழகிய திருமுன்றிலின் பக்கத்தில் வலமாக வந்து, ஒன்றுபட்ட உள்ளத்துடன் கோயிலுக்குள் புகுந்தார்.
2388. புக்கெதிர் தாழ்ந்து விழுந்தெ ழுந்து பூம்புக லூர்மன்னு புண்ணி யரை
நெக்குரு குஞ்சிந்தை அன்பு பொங்க நிறைமலர்க் கண்ணீ ரருவி செய்ய
மிக்க தமிழ்த்தொடை மாலை சாத்தி மேவிய ஏழிசை பாடிப் போந்து
திக்கு நிறைசீர் முருகர் முன்பு செல்ல அவர்மடஞ் சென்று புக்கார்.
தெளிவுரை : கோயிலுக்குள் புகுந்து இறைவரின் திரு முன்பு வணங்கி, நிலத்தில் விழுந்து எழுந்து பூம்புகலூரில் நிலைத்து எழுந்தருளிய புண்ணியரான சிவபெருமானை நெகிழ்ந்து உருகும் உள்ளத்தில் அன்பானது பெருக, மலர்க் கண்களில் நிறைந்த நீர் அருவிபோல வடிய மிக்க தமிழ்த் திருப்பதிகத்தைப் பொருந்திய ஏழிசையுடன் பாடி வெளியே வந்து எல்லாத்திக்குகளிலும் நிறையும் சிறப்புடைய முருக நாயனார் முன்னே அழைத்துச் செல்ல, அவரது திருமடத்தில் சம்பந்தர் சென்று சேர்ந்தார்.
2389. ஆங்கவர் போற்றுஞ் சிறப்பின் மேவி அப்பதி தன்னில்அமரு நாளில்
வாங்கு மலைச்சிலை யார்ம கிழ்ந்த வர்த்தமா னீச்சரந் தான்வ ணங்கி
ஓங்கிய அன்பின் முருக னார்தம் உயர்திருத் தொண்டு சிறப்பித் தோங்கும்
பாங்குடை வண்டமிழ் பாடி நாளும் பரமர்தம் பாதம் பணிந்தி ருந்தார்.
தெளிவுரை : அந்த மடத்தில் பிள்ளையார் அவர் வழிபட்டு உபசரிக்கின்ற சிறப்பைப் பெற்றுத் தங்கியிருந்தார். அந்நாள்களில், வளைத்த மலையான வில்லையுடைய இறைவர் மகிழ்ந்து எழுந்தருளுகின்ற வர்த்த மானீச்சரத்தை வணங்கி, பெருகிய அன்பினால் முருகநாயனார் அங்குச் செய்கின்ற உயர்ந்த தொண்டைச் சிறப்பித்துப்பாராட்டி, ஓங்கிய பண்பையுடைய வளமான தமிழ்ப் பதிகத்தைப் பாடிச் சிவபெருமான் திருவடிகளை வணங்கி இருந்து வந்தார்.
2390. மற்றத் திருப்பதி வைகு நாளில் வாக்கின் பெருவிறல் மன்ன னார்தாம்
புற்றிடங் கொண்டாரை வந்தி றைஞ்சிப் பொன்மதில் ஆரூர் புகழ்ந்து போற்றிச்
சிற்றிடைப் பொற்றொடிப் பங்கர் தங்கும் திருப்புக லூர்தொழச் சிந்தை செய்து
கொற்றவ னாரருள் பெற்ற தொண்டர் குழாத்துடன் அவ்வூர் குறுக வந்தார்.
தெளிவுரை : அந்தப் பதியில் பிள்ளைப் பெருமான் தங்கியிருந்த நாள்களில், திருநாவுக்கரசர் வந்து புற்றிடம்கொண்ட இறைவரை வணங்கி அழகிய மதில்களையுடைய திருவாரூரைப் புகழ்ந்து போற்றி, சிறிய இடையையும் பொன்னால் ஆன தொடியையும் உடைய பார்வதியம்மையாரை ஒரு பாகத்தில் கொண்ட இறைவர் வீற்றிருக்கின்ற திருப்புகலூரைச் சென்று வணங்க உள்ளம் கொண்டு, இறைவரின் திருவருள் பெற்ற தொண்டர் கூட்டத்துடன் அவ்வூரை அடைய வந்தார்.
2391. நாவுக் கரசர் எழுந்த ருளும் நல்லதிரு வார்த்தை கேட்ட போதே
சேவில் திகழ்ந்தவர் மைந்த ரான திருஞான சம்பந்தர் சிந்தை அன்பு
மேவுற்ற காதல் மிகப் பெருக விரைந்தெதிர் கொள்ளமெய் யன்ப ரோடும்
பூவிற் பொலிபொய்கை சூழ்புக லூர்ப் புறம்பணை எல்லை கடந்து போந்தார்.
தெளிவுரை : திருநாவுக்கரசர் அந்தப் பதிக்கு வருகின்றார் என்ற நல்ல திருவார்த்தையைக் கேட்ட போதே, காளையூர்தியையுடைய சிவபெருமானின் மகனாரான திருஞான சம்பந்தர், தம் உள்ளத்தில் அன்பு பொங்கியதால் ஆசை மிகுதியாக விரைவாய் எதிர் கொள்ளும் பொருட்டு மெய்யன்பர்களுடனே மலர்களால் பொலிகின்ற வாவிகள் சூழ்ந்த திருப்புகலூரின் புறம்பணையின் எல்லையைக் கடந்து சென்றார்.
2392. அங்கணர் ஆரூர் வணங்கிப் போந்த அரசும் எதிர்வந் தணைய வாசப்
பொங்கு புனல்தண் புகலி வந்த பூசுரர் சிங்கமும் பொற்பி னெய்தித்
தங்களின் அன்பின் முறைமை யாலே தாழ்ந்து வணங்கித் தனித்த னியே
மங்கல மாகிய நல்வ ரவின் வாய்மை வினவி மகிழும் போது.
தெளிவுரை : சிவபெருமானின் திருவாரூரை வணங்கி வந்த திருநாவுக்கரசரும் எதிரில் வந்து சேர, மணம் கமழும் நீரையுடைய சீகாழியில் அவதரித்த அந்தணர்களின் தலைவரான திருஞானசம்பந்தரும் அணிதிகழக் கூடிய, ஒருவருக்கொருவர் தன் அன்பின் முறைமையால் எதிர் கொண்டு தாழ்ந்து வணங்கி, அவரவர் தனித்தனி மங்கலம்பொருந்திய நல்வரவின் மெய்ம்மையான நிகழ்ச்சிகளைக் கேட்டு மகிழ்ந்த போது,
2393. மெய்த்திரு ஞானசம் பந்தர் வாக்கின் வேந்தரை நோக்கி விருப்பினாலே
அப்பரை இங்கணை யப்பெ றும்பே ரருளுடை யோம்யாம் அந்தணாரூர்
எப்பரி சால்தொழு துய்ந்த தென்று வினவிட ஈறில் பெருந்த வத்தோர்
செப்பிய வண்டமிழ் மாலை யாலே திருவா திரைநிகழ் செல்வஞ் சொன்னார்.
தெளிவுரை : மெய்ம்மையின் வடிவான திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசரை நோக்கி, விருப்பினால் திருநாவுக்கரசரான தங்களை இங்கு வந்து அணையப் பெறுவதான பேரருளை யாம் பெற்றோம். அழகிய குளிர்ச்சியையுடைய திருவாரூரினை எவ்வாறு வணங்கியருளினீர் ? என்று வினவியருள, எல்லையில்லாத பெருந்தவத்தையுடைய திருநாவுக்கரசர் அதற்கு விடையாகக் கூறியருளி வளமான தமிழ் மாலைத் திருப்பதிகத்தினால் திருவாரூரில் திருவாதிரைத் திருவிழா நிகழும் செல்வத்தை எடுத்துக் கூறினார்.
2394. அரசரு ளிச்செய்த வாய்மை கேட்ட அப்பொழு தேஅருள் ஞான முண்ட
சிரபுர வேந்தருஞ் சிந்தை யின்கண் தென்திரு வாரூர் வணங்கு தற்கு
விரவிய காதலிற் சென்று போற்றி மீண்டும்வந் தும்முடன் மேவு வன்என்
றுரவு கடற்கல் மிதப்பின் வந்தார்க் குரைத்துடன் பாடுகொண் டொல்லை போந்தார்.
தெளிவுரை : திருநாவுக்கரசரும் திருப்பதிகத்தால் விடை கூறியதைக் கேட்ட அப்போதே, அவ்விடத்தில் திருவருளால் ஞானஅமுது உண்டருளிய சீகாழித் தலைவரான பிள்ளையாரும், தென் திருவாரூரை அடைந்து வணங்குவதற்கு மனத்தில் உண்டான காதலால், அங்குச் சென்று துதித்து மீண்டும் வந்து உம்மை அடைந்து என்று வலிய கடலைக் கல்லான மிதவையால் கடந்துவந்த அரசுகளுக்குச் சொல்லி. அவரது உடன் பாட்டைப் பெற்று விரைந்து போனார்.
2395. சொற்பெரு வேந்தருந் தோணி மூதூர்த் தோன்றல்பின் காதல் தொடரத் தாமும்
பொற்புக லூர்தொழச் சென்ற ணைந்தார் புகலிப் பிரானும் புரிந்த சிந்தை
விற்குடி வீரட்டஞ் சென்று மேவி விடையவர் பாதம் பணிந்து போற்றிப்
பற்பல ஆயிரந் தொண்ட ரோடும் பாடல னான்மறை பாடிப் போந்தார்.
தெளிவுரை : திருநாவுக்கரசரும் சீகாழிப் பதியில் தோன்றிய பெருந்தகையரான சம்பந்தரின் பின்னால் தம் காதல் தொடர்ந்து செல்லத் திருப்புகலூரில் தொழுவதற்குப் போய்ச் சேர்ந்தார். சீகாழித் தலைவரான பிள்ளையாரும் இடைவிடாது நினைவுடைய மனத்துடன் திருவிற்குடி வீரட்டானத்தை அடைந்து காளையூர் தியையுடைய சிவபெருமானின் திருவடிகளை வணங்கினார். பின்பு, பலப்பல ஆயிரம் தொண்டர்களுடனே பாடலனான் மறை எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடியபடி திருவாரூரை நோக்கிச் சென்றார்.
2396. துணரிணர்ச் சோலையுஞ் சாலி வேலித்துறைநீர்ப் பழனமுஞ் சூழ்க ரும்பின்
மணமலி கானமும் ஞானம் உண்டார்மருங்குற நோக்கி மகிழ்ந் தருளி
அணைபவர் அள்ளற் கழனி ஆரூர்அடைவோம் எனமொழிந் தன்பு பொங்கப்
புணரிசைச் செந்தமிழ் கொண்டு போற்றிப்பொன்மதி லாரூர்ப் புறத்த ணைந்தார்.
தெளிவுரை : மலர்க் கொத்துக்களையுடைய சோலைகளையும் நெல்லை வேலியைப் போல் கொண்ட நீர்த்துறை களையுடைய வயல்களையும், மணம் பொருந்திய கரும்புக் காடுகளையும், ஞானமுண்ட பிள்ளையார், பக்கங்கள் எங்கும் கண்டு மகிழ்ந்து, அணைபவராய் அள்ளகன் கழனியாரூர் அடைவோமே எனக் கூறி, அன்பு மேன் மேல் பொங்க இசையுடன் கூடிய செந்தமிழ்ப் பதிகத்தால் போற்றி அழகிய மதிலையுடைய திருவாரூரின் பக்கத்தை அடைந்தார்.
2397. வானுயர் செங்கதிர் மண்டலத்து மருங்கணை யுங்கொடி மன்னும்ஆரூர்
தானொரு பொன்னுல கென்னத் தோன்றும் தயங்கொளி முன்கண்டு சண்பை வந்த
பானிற நீற்றர் பருக்கை யானைப் பதிகத் தமிழிசை பாடி ஆடித்
தேனொடு வண்டு முரலுஞ் சோலைத் திருப்பதி மற்றதன் எல்லை சேர்ந்தார்.
தெளிவுரை : வானத்தே உயரத்தில் செல்கின்ற சிவந்த கதிர்களையுடைய ஞாயிற்று மண்டிலத்தின் பக்கத்தில் அணையும் நீண்ட கொடிகள் பொருந்திய திருவாரூர் நகர் ஒரு பொன் உலகம் போல் தோன்றி விளங்கும் ஒளியினை முன்னே கண்டு சீகாழியில் தோன்றிய பால் போன்ற வெண்மையான நிறம் உடைய திருநீற்றினை அணிந்த சம்பந்தர் படுக்கை யானை எனத் தொடங்கும் திருப்பதிகத் தமிழ் இசையினைப் பாடிச் சென்று தேனுடன் வண்டுகள் ஒலிக்கின்ற சோலைகள் சூழ்ந்த அந்தப் பதியின் எல்லையை அடைந்தார்.
2398. பொங்கிய சிந்தை விருப்பின் வெள்ளம் பொழிந்து புவிமேற் பொலிவ தென்ன
எங்குங் குளிரொளி வீசு முத்தின் இலங்கு சிவிகை இழிந்த ருளிச்
செங்கை நிறைமலர் கொண்டு தூவித் திருவிருக் குக்குறள் பாடி ஏத்தித்
தங்கள் பிரான்அர சாளும் ஆரூர் தனைப்பணி வுற்றார் தமிழ் விரகர்.
தெளிவுரை : உள்ளத்தினின்றும் பெருகிய பெருங் காதலால் வெள்ளம் சொரிந்து நிலவுலகத்தின் மீது விளங்குவதைப் போன்று எல்லாப்பக்கமும் குளிர்ந்த ஒளியை வீசும் முத்துப் பல்லக்கினின்றும் இறங்கித்தமிழ் வல்லுநரான பிள்ளையார், சிவந்த திருக்கையில் நிறைய மலர்களைத் தூவி வழிபட்டுத் திருவிருக்குக் குறட் பதிகத்தைப் பாடி வணங்கித் தம் பெருமான் ஆட்சி செய்கின்ற திருவாரூர் நகரைப் பணிந்தார்.
2399. படியில் ஞானமுண் டருளிய பிள்ளையைப் பணிதற்
கடியர் சென்றெதிர் கொளஎழுந் தருளும்அஞ் ஞான்று
வடிகொள் சூலத்தர் மன்னிய பொன்மதில் ஆரூர்க்
கடிகொள் பேரணிப் பொலிவையார் முடிவுறக் காண்பார்.
தெளிவுரை : ஒப்பில்லாத ஞான அமுதத்தை உண்ட சம்பந்தரைப் பணிவதற்காக அடியார்கள் போய் எதிர்கொள்ள வரும் அந்நாளில், வடித்தலைக் கொண்ட சூலத்தையுடைய இறைவர் நிலையாய் எழுந்தருளிய பொன் மதிலைக் கொண்ட திருவாரூரின் ஒளியுடைய பேரலங்காரத்தின் அழகை முழுதுமாகக் காணவல்லவர் யார்? ஒருவரும் இலர்.
2400. நான மான்மத நளிர்பெருஞ் சேற்றிடை நறும்பொன்தி
தூந றுந்துகள் சொரிதலிற் சுடரொளிப் படலை
ஆன வீதிகள் அடிவலித் தவைகரைந் தலைய
வான மாரியிற் பொழிந்தது மலர்மது மாரி.
தெளிவுரை : புனுகும் கத்தூரியும் கலந்த குளிர்ந்த பெருஞ் சேற்றில் உயர்ந்த பொன்னைப் போன்ற தூய குணமுடைய சுண்ணப் பொடிகளைத் தூவுவதலால், ஒளியுடைய படலை அணி செய்யப்பட்ட தெருக்கள் அடி வழுக்குமாறு, அந்தச் சேறும் துகளும் கரைந்து போக, வானத்தினின்று விழும் மழைபோல் பூக்களிலிருந்து தேன்மாரி பொழிந்தது.
2401. ஆடல் நீடுவ துகிற்கொடிகொடிகள் அணிகுழற்
தோடு சூழ்வன சுரும்பொடு தமனியத் தசும்பு
காடு கொண்டன கதலிதோ ரணநிரைக் கமுகு
மாட மாளிகை மண்டபங் களின்மருங் கெல்லாம்.
தெளிவுரை : மாடங்கள் மாளிகைகள் மண்டயங்கள் என்னும் இவற்றின் பக்கங்களில் எல்லாம் துணிக் கொடிகளும் அழகான கூந்தலையுடைய கொடி போன்ற பெண்களும் ஆடலில் நீடுவன. வண்டுகளும் பொன் குடங்களும் மலர் இதழ்கள் சூழ்வன, வாழைகளும் தோரணங்களும் வரிசையான பாக்குகளும் காட்டைப் போன்ற காட்சியுடன் விளங்குவன.
2402. மாலை சூழ்புறங் கடைகளின் மணிநிரை விளக்கின்
கோல நீள்சுடர் ஒளியுடன் கோத்திடை தூக்கும்
நீல மாமணி நிழல்பொர நிறம்புகர் படுக்கும்
பால வாயின பவளவே திகைமலர்ப் பந்தர்.
தெளிவுரை : அத்தகைய பக்கங்களைச் சூழ்ந்த பிற வாயில்களில் மாலைப் போதில் மணிகளையுடைய வரிசையாய்த் தொங்க விடப்பட்ட விளக்குகளில் அழகிய நீண்ட சுடர் ஒளியுடன் தொடர்புபடுமாறு கோவை செய்து இடையிடையே தொங்கவிட்ட பெரிய நீலமணிகளின் நிழலானது கூடி அலைத்தலால் பவள நிறமுடைய திண்ணைகளின் மேல் உள்ள பூம்பந்தல்களின் செந்நிறம் புகர் நிறத்தை யுடையனவாய் ஆயின.
2403. தழைம லர்த்தடஞ் சாலைகள்தெற்றிகள் சதுக்கம்
குழைமு கத்தவர் ஆடரங் கிமையவர் குழாமும்
விழைசி றப்பின வியலிடம் யாவையு மிடைந்து
மழைமு ழக்கென இயம்பின மங்கல இயங்கள்.
தெளிவுரை : தழைத்த பூம்பொய்கைகளும், சாலைகளும், தெற்றிகளும், சதுக்கங்களும், காதணிகளை அணிந்த பெண்கள் ஆடும் அரங்குகளும், தேவர் கூட்டமும் விரும்பும் சிறப்புடைய அகன்ற இடங்களும் ஆகிய எவ்விடங்களிலும் நெருங்கி மழை ஒலிபோல மங்கல இயங்கள் இயம்பின.
2404. விரவு பேரணி வேறுவேறின்னன விளங்கும்
பிரச மென்மலர்ச் சோலைசூழ் பெருந்திரு வாரூர்
அரச ளிப்பவர் அருளினால் அடியவர் குழுவும்
புரிச னங்களும் புறத்தணைந் தெதிர்கொளும் பொழுது.
தெளிவுரை : மேல் கூறப்பட்டவாறு பொருந்திய வெவ்வேறு வகைப்பட்ட இத்தகைய பேரலங்காரமுடன் விளங்கும் தேனையுடைய மென்மையான மலர்கள் நிறைந்த பூஞ் சோலைகள் சூழ்ந்த பெருமையைக் கொண்ட திருவாரூரில், அரசாளும் தியாகராசப் பெருமான் திருவருளால் அடியார் கூட்டமும் மற்ற மக்களும் நகரத்தின் வெளியே வந்து அணைந்து பிள்ளையாரை எதிர் கொள்கின்ற போது,
2405. வந்தி றைஞ்சு மெய்த் தொண்டர்தங் குழாத்தெதிர் வணங்கிச்
சந்த முத்தமிழ் விரகராம் சண்பையர் தலைவர்
அந்த மாயுல காதியாம் பதிகமங் கெடுத்தே
எந்தை தானெனை ஏன்றுகொ ளுங்கொல்என் றிசைத்தார்.
தெளிவுரை : தம் எதிரே வணங்கும் மெய்த் தொண்டர் கூட்டத்தின் முன்னம் தாமும் எதிர் வணங்கி, சந்தமுடைய முத்தமிழ் வல்லுநரான சீகாழித் தலைவர், அந்தமாயுல காதியாம் எனத் தொடங்குகின்ற திருப்பதிகத்தை அங்குத் தொடங்கி, எம் பெருமான்தான் என்னை ஏற்றுக் கொள்வாரோ? என்ற கருத்துடன் பாடி முடித்தார்.
2406. ஆன அத்திருப் பதிகம்முன் பாடிவந் தணையும்
ஞான வித்தகர் மெய்த்தவர் சூழஅந் நகரார்
தூந றுஞ்சுண்ண மலர்பொரி தூஉய்த்தொழு தேத்த
வான நாயகர் கோயில்வா யிலின்மருங் கணைந்தார்.
தெளிவுரை : அத்தகைய திருப்பதிகத்தைப் பாடி வந்து சேர்கின்ற ஞானவித்தகரான பிள்ளையார் மெய்யடியார்கள் தம்மைச் சூழ்ந்து வரவும் அந்தத் திருவாரூர் நகர மக்கள் தூய்மையான மணமுடைய சுண்ணப் பொடியையும், மலர்களையும், பொரியினையும் தூவித் தொழுது வணங்கவும். (இவ்வாறு நகரத் தெருக்களைக் கடந்து போய்) தேவர் தலைவரான சிவபெருமான் கோயிலின் வாயிலை அடைந்தார்.
2407. மன்னு தோரண வாயில்முன் வணங்கியுள் புகுவார்
தன்னுள் எவ்வகைப் பெருமையும் தாங்கிய தகைத்தாம்
பன்னெ டுஞ்சுடர்ப் படலையின் பரப்பினைப் பார்த்துச்
சென்னி தாழ்ந்துதே வாசிரி யன்தொழு தெழுந்தார்.
தெளிவுரை : தோரணங்கள் நிலைபெற அமைக்கப்பட்டு விளங்கும் வாயிலின் முன்பு வணங்கிக் கோயிலுக்குள் புகுந்தவரான பிள்ளையார், தமக்குள் எல்லா வகையான பெருமையும் கொண்ட தன்மையுடைய பல நீண்ட ஒளி வரிசையின் பரப்பினைக் கண்டு, தலை வணங்கித் தேவாசிரிய மண்டபத்தை வணங்கினார்.
2408. மாடு சூழ்திரு மாளிகைவலங்கொண்டு வணங்கிக்
கூடு காதலிற் கோபுரம் பணிந்துகை குவித்துத்
தேடு மாலயற் கரியராய்ச் செழுமணிப் புற்றில்
நீடு வார்முன்பு நிலமுறப் பலமுறை பணிந்தார்.
தெளிவுரை : பக்கத்தில் சுற்றிலும் சூழ்ந்த திருமாளிகையை வலங் கொண்டு வந்து வணங்கிக், கூடும் அன்பு மிகுதியால் கோபுரத்தைப் பணிந்து கைகூப்பித் தொழுது, தம்மைத்தேடிய திருமாலுக்கும், நான்முகனுக்கும் அறிவதற்கு அரிய செழுமையான மணிப்புற்றுள் இடம் கொண்டு நீடி எழுந்தருளியுள்ள இறைவரைப் பல முறையும் நிலத்தில் விழுந்து வணங்கினார்.
2409. பணிந்து வீழ்ந்தனர் பதைத்தனர் பரவிய புளகம்
அணிந்த மேனியோ டாடினர் பாடினர் அறிவில்
துணிந்த மெய்ப்பொரு ளானவர் தமைக்கண்டு துதிப்பார்
தணிந்த சிந்தையின் விரைந்தெழு வேட்கையில் தாழ்ந்தார்.
தெளிவுரை : ஞானசம்பந்தர் பணிந்து விழுந்தார்; பதைத்தார்; உடல் முழுதும் மயிர்ப் புளகம் பரவிய நிலையில் ஆடினார்; பாடினார்; தம் அறிவினுள்ளே துணிந்து கண்டு கொண்டிருந்த மெய்ப்பரம்பொருளான சிவபெருமானை வெளியேயும் பார்த்துத் துதிப்பவராய்த் தம் தணிந்த உள்ளத்துள் விரைந்து எழும் விருப்புடன் வணங்கினார்.
2410. செஞ்சொல் வண்தமிழ்த் திருப்பதிகத்திசை யெடுத்து
நஞ்சு போனகம் ஆக்கிய நம்பர்முன் பாடி
மஞ்சு சூழ்திரு மாளிகை வாயிலின் புறம்போந்
தஞ்செ ழுத்தின்மெய் யுணர்ந்தவர் திருமடத் தணைந்தார்.
தெளிவுரை : செஞ்சொல்லாலான வண்தமிழ்ப் பதிகத்தைத் தொடங்கி, நஞ்சை அமுதமாய் இறைவர் திருமுன்பு பாடி முடித்து, மேகங்கள் சூழ்கின்ற மாளிகையின் வாயில் பக்கத்தை அடைந்து திருவைந்தெழுத்தின் மெய்ப் பொருளை யுணர்ந்தவரான பிள்ளையார் திருமடத்தைச் சேர்ந்தார்.
2411. அங்க ணைந்தமர்ந் தருளுவார் அரனெறி அமர்ந்த
செங்க ணேற்றவர் சேவடி வணங்கிமுன் திளைத்துப்
பொங்கு பேரொளிப் புற்றிடங் கொண்டவர் புனிதப்
பங்க யப்பதந் தொழுதுகா லந்தொறும் பணிந்தார்.
தெளிவுரை : அத்திரு மடத்தில் தங்கியிருந்த பிள்ளையார் திருவரனெறி என்ற கோயிலில் விரும்பி எழுந்தருளியுள்ள சிவந்த கண்ணையுடைய காளை வாகனான இறைவரின் சேவடிகளை வணங்கித் திளைத்துப் பெருகும் பேரொளியுடைய புற்றிடம் கொண்ட பெருமானின் தூய்மையான தாமரை போன்ற திருவடிகளைக் காலந்தோறும் தொழுது வந்தார்.
2412. புற்றி டங்கொளும் புனிதரைப் போற்றிசை பெருகப்
பற்றும் அன்பொடு பணிந்திசைப் பதிகங்கள் பாடி
நற்ற வத்திருத் தொண்டர்க ளொடுநலஞ் சிறப்ப
மற்ற வண்பதி தன்னிடை வைகுமந் நாளில்.
தெளிவுரை : புற்றில் கோயில் கொண்டருளும் தூயவரான இறைவரைப் பணிந்து துதிக்கும் இசைபெருகுமாறு பற்றும் அன்புடனே வணங்கி இனிய இசையால் திருப்பதிகங்களைப் பாடி, நல்ல தவத்தினை மேற் கொண்ட தொண்டர்களுடன் நன்மை சிறந்து ஓங்குமாறு அந்த வளம் உடைய ஊரில் தங்கியிருக்கும் நாளில்,
2413. மல்லல் நீடிய வலிவலங் கோளிலி முதலாத்
தொல்லை நான்மறை முதல்வர்தம் பதிபல தொழுதே
எல்லை யில்திருப் பதிகங்க ளாற்பணிந் தேத்தி
அல்லல் தீர்ப்பவர் மீண்டும் ஆரூர்தொழ அணைந்தார்.
தெளிவுரை : உலகில் துன்பம் தீர்க்க வந்த பிள்ளையார் செழிப்பால் சிறந்த திருவலிவலம், திருக்கோளிலி முதலாய் உள்ளனவான நான்மறைகளின் முதல்வரான இறைவரின் திருப்பதிகள் பலவற்றையும் தொழுது, அளவில்லாத திருப்பதிகங்களைப் பாடி, திரும்பவும் திருவாரூரில் தொழுவதன் பொருட்டாய் வந்தார்.
2414. ஊறு காதலில் ஒளிவளர் புற்றிடங் கொண்ட
ஆறு லாவிய சடைமுடி ஐயரைப் பணிந்து
நீறு வாழ்வென நிகழ்திருத் தொண்டர்க ளோடும்
ஈறி லாத்திரு ஞானசம் பந்தர்அங் கிருந்தார்.
தெளிவுரை : மிகுகின்ற அன்பால், ஒளிவீசும் புற்றில் வீற்றிருக்கும் கங்கை உலாவுதற்கு இடமான சடையையுடைய ஐயரான இறைவரை வணங்கித் திருநீறே தம் வாழ்வாகும் என்னும் திருத்தொண்டர்களுடனே இறுதியில்லாத சிவ ஞானமுடைய ஞானசம்பந்தர் அங்கு எழுந்தருளினார்.
2415. அங்கு நன்மையில் வைகும்அந் நாள்சில அகல
நங்கள் தந்திரு நாவினுக் கரசரை நயந்து
பொங்கு சீர்ப்புக லூர்தொழ அருளினாற் போவார்
தங்கும் அப்பதிப் புறம்பணை சார்ந்தருள் செய்வார்.
தெளிவுரை : அந்தத் திருவாரூரில் அவ்வாறு நன்மையில் தங்கிய அந்நாள்கள் சில கழிந்தன. கழிய, தம் திருநாவுக்கரசரை விரும்பி, பொங்கும் சிறப்பைக் கொண்ட திருப்புகலூரினை வணங்குவதற்கு விடை பெற்றுக் கொண்டு செல்பவராய்த் தங்கிய அத்திருவாரூரில் பதியின் புறம் பணையைச் சேர்ந்து அருள் செய்பவராய்,
2416. புவனவா ரூரினிற் புறம்புபோந் ததனையே நோக்கிநின்றே
அவமிலா நெஞ்சமே அஞ்சல்நீ உய்யுமா றறிதிஅன்றே
சிவனதா ரூர்தொழாய் நீமற வாதென்று செங்கைகூப்பிப்
பவனமாய்ச் சோடையாய் எனுந்திருப் பதிகமுன் பாடினாரே.
தெளிவுரை : மண் உலகத்தில் சிறந்த திருவாரூரின் நகர்ப் புறத்தில் மருத நிலத்தில் போய்ச் சேர்ந்து, அந்த நகரத்தையே நோக்கி நின்றவண்ணம், பயனில்லாது கழிந்து போகாத மனமே ! நீ அஞ்சாதே ! உய்யும் வகையினை அறிவாய் அல்லையோ ! சிவபெருமானின் திருவாரூரை நீ மறக்காது தொழுவாயாக ! எனச் சொல்லிச் சிவந்த கையைத் தலைமீது குவித்துக் கொண்டு பவனமாய்ச் சோடையாய் எனத் தொடங்கும் பதிகத்தை முன்னே பாடியருளினார்.
2417. காழியார் வாழவந் தருள்செயும் கவுணியப் பிள்ளை யார்தாம்
ஆழியான் அறியொணா அண்ணல் ஆரூர்பணிந் தரிது செல்வார்
பாழிமால் யானையின் உரிபுனைந் தார்பனை யூர்ப ணிந்து
வாழிமா மறையிசைப் பதிகமும் பாடிஅப் பதியில் வைகி.
தெளிவுரை : சீகாழி வாழ்வதன் பொருட்டாய்த் தோன்றிய கவுணியர், திருமாலும் அறிய முடியாத இறைவரின் திருவாரூரினைப் பணிந்து மேற் செல்பவராய் வலிமையும் மத மயக்கமும் உடைய யானையின் தோலைப் போர்த்த சிவபெருமானின் திருப்பனையூரைப் பணிந்து, வாழ்வுடைய பெரிய மறைகளின் பொருளையும் இசையினையுமுடைய திருப்பதிகத்தையும் பாடி அந்தப் பதியில் தங்கியிருந்து.
2418. அங்குநின் றரிதெழுந் தருளுவார் அகிலகா ரணரும் ஆனார்
தங்குநற் பதிகளும் பிறபணிந் தருளிவண் தமிழ்பு னைந்தே
எங்குமெய்த் தவர்குழா மெதிர்கொளத் தொழுதெழுந் தருளி வந்தார்
பொங்குதண் பாசடைப் பங்கயப் புனல்வயற் புகலூர் சார.
தெளிவுரை : அந்தப் பதியினின்று அரிதாய்ப் புறப்பட்டுச் செல்வாராய், உலகம் எல்லாவற்றிற்கும் காரணர் ஆன சிவபெருமான் எழுந்தருளும் நன்மையுடைய பிற பல பதிகளையும் வணங்கித் திருப்பதிகம் பாடி, எவ்விடத்தும் உண்மைத் தவமுடைய அடியார்கள் தம்மை எதிர்கொள்ளத் தொழுது பொங்கும் குளிர்ச்சியான இலைகளையுடைய தாமரைத் தடங்கள் சூழ்ந்த திருப்புகலூரை அடையச் சென்றனர்.
2419. நாவினுக் கரசரும் நம்பிசீர் முருகரும் மற்று நாமச்
சேவுகைத் தவர்திருத் தொண்டரா னவர்கள்முன் சென்று சீதப்
பூவினிற் பொலிபுனற் புகலியார் போதகத் தெதிர்ப ணிந்தே
மேவமற் றவருடன் கூடவே விமலர்கோ யிலைஅ டைந்தார்.
தெளிவுரை : திருநாவுக்கரசரும் ஆடவருள் சிறந்த முருக நாயனாரும், மற்றும், காளைக் கொடியையுடைய உயர்ந்த சிவபெருமானின் திருத்தொண்டர்களும் எதிர் கொண்டு முன்பு போய்க் குளிர்ந்த பூக்களால் பொலிவு பெற்ற நீர்வளம் கொண்ட சீகாழித் தலைவரின் ஆனைக் கன்றின் திரு முன்பு பணிந்து சேர, அவர்களுடன் சம்பந்தர் சென்று இறைவரின் திருக்கோயிலைச் சேர்ந்தார்.
2420. தேவர்தந் தலைவனார் கோயில்புக் கனைவரும் சீர்நிலத் துறவ ணங்கிப்
பாவருந் தமிழிசைப் பதிகமும் பாடிமுன் பரவுவார் புறம்ப ணைந்தே
தாவில்சீர் முருகனார் திருமனைக் கெய்திஅத் தனிமுதல் தொண்டர் தாமே
யாவையுங் குறைவறுத் திடஅமர்ந் தருளுவார் இனிதின்அங் குறையு நாளில்.
தெளிவுரை : தேவர்தம் தலைவரின் கோயிலுள் புகுந்து எல்லாரும் நிலத்தில் பொருந்த விழுந்து வணங்கி, பாக்களின் பாகுபாட்டுக்கு இணங்கத் தமிழிசை பொருந்திய திருப்பதிகத்தைப் பாடித் திருமுன்பு நின்று துதிப்பவரான சம்பந்தர் வெளியில் வந்து, குற்றமற்ற சிறப்பையுடைய முருக நாயனாரின் இல்லத்தில் சேர்ந்து, அந்த ஒப்பில்லாத முதன்மை கொண்ட திருத்தொண்டரே திருவமுது உறையுள் முதலான எல்லாவற்றையும் குறைவில்லாது அமைக்க அங்கு விரும்பித் தங்கியிருந்தார். அவ்வாறு தங்கியிருக்கும் நாளில்,
2421. நீலநக் கடிகளும் நிகழ்சிறுத் தொண்டரும் உடன்அணைந் தெய்து நீர்மைச்
சீலமெய்த் தவர்களுங் கூடவே கும்பிடுங் செய்கைநேர் நின்று வாய்மைச்
சாலமிக் குயர்திருத் தொண்டின்உண் மைத்திறந் தன்னையே தெளிய நாடிக்
காலமுய்த் தவர்களோ டளவளா விக்கலந் தருளினார் காழி நாடர்.
தெளிவுரை : செய்தியைக் கேட்டு வந்த நீலநக்கநாயனாரும் புகழுடைய சிறுத் தொண்ட நாயனாரும் கூடிப் பொருந்திய நீர்மையுடைய சீலமுடைய மற்ற மெய்த்தவர்களான தொண்டர்களும், தம்முடன் இறைவரை வழிபடும் செய்கையில் ஒருப்பட்டு நின்று, வாய்மையில் மிகவும் உயர்வுடைய திருத்தொண்டின் உண்மைத் திறங்களையே தெளிவாக நாடிச் சீகாழித் தலைவரான பிள்ளையார் அவர்களுடன் கூடிக் கலந்து காலம் போக்கி உரையாடி
2422. கும்பிடுங் கொள்கையிற் குறிகலந் திசையெனும்பதிகமுன் னான பாடல்
தம்பெருந் தலைமையால் நிலைமைசால் பதியதன்பெருமைசால் புறவி ளம்பி
உம்பரும் பரவுதற் குரியசொற் பிள்ளையார் உள்ளமெய்க் காதல் கூர
நம்பர்தம் பதிகளா யினஎனைப் பலவும்முன் நண்ணியே தொழந யந்தார்.
தெளிவுரை : கும்பிடும் கொள்கையின் குறிப்பை உள்ளடக்கி, குறி கலந்திசை எனத் தொடங்கும் திருப்பதிகத்தைத் தம் பெருந்தலைமைப் பாட்டினால் நன்னிலைமை நிறைந்த அந்தப் பதியின் பெருமையை எடுத்துக் கூறி, தேவர்களும் போற்றுவதற்குரிய சொல்லையுடைய பிள்ளையார் உள்ளத்தில் உண்மை அன்பு பெருகியதால் இறைவரின் பதிகளான பிறவற்றையும் போய்ப் பொருந்தி வணங்க விருப்பம் கொண்டார்.
2423. புள்ள லம்புதண் புனற்புக லூருறை புனிதனார் அருள்பெற்றுப்
பிள்ளை யாருடன் நாவினுக் கரசரும் பிறபதி தொழச்செல்வார்
வள்ள லார்சிறுத் தொண்டரும் நீலநக் கரும்வளம் பதிக்கேக
உள்ளம் அன்புறு முருகர்அங்கு ஒழியவும் உடன்பட இசைவித்தார்.
தெளிவுரை : நீர்ப்பறவைகள் ஒலிப்பதற்கு இடமான குளிர்ந்த நீர்நிலை சூழ்ந்த திருப்புகலூரில் எழுந்தருளிய புனித இறைவரின் அருளைப் பெற்றுப் பிள்ளையாருடன் திருநாவுக்கரசரும் இறைவரின் மற்றப் பதிகளையும் தொழும் பொருட்டாய்ச் செல்பவராய், வள்ளலான சிறுத் தொண்ட நாயனாரும் திருநீலநக்க நாயனாரும் தம் வளம் பொருந்திய பதிகளுக்குச் செல்லவும், உள்ளத்தில் அன்பு கொண்ட முருக நாயனார் அங்கே தங்கியிருக்கவும், அவர்கள் உடன் தாமும் இசைந்தார்.
2424. கண்ண கன்புக லூரினைத் தொழுதுபோம் பொழுதினிற் கடற்காழி
அண்ண லார்திரு நாவினுக் கரசர்தம் அருகுவிட் டகலாதே
வண்ண நித்திலச் சிவிகையும் பின்வர வழிக்கொள உறுங்காலை
எண்ணில் சீர்த்திரு நாவினுக் கரசரும் மற்றவர்க் கிசைக்கின்றார்.
தெளிவுரை : இடம் அகன்ற திருப்புகலுரைத் தொழுது மேலே செல்கின்ற போதில், கடற்கரையில் உள்ள சீகாழிப் பதியில் தோன்றிய பிள்ளையார் திருநாவுக்கரசரின் பக்கத்தை விட்டு நீங்காது அழகிய முத்துச் சிவிகையும் பின்னே பரவும், வழியில் போகத் தொடங்கியபோது, ஞானியரின் எண்ணத்தில் நிற்கும் சிறப்புடைய திருநாவுக்கரசரும் சம்பந்தருக்கு எடுத்துக் கூறுபவராய்.
2425. நாயனார்உமக் களித்தருள் செய்தஇந் நலங்கிளர் ஒளிமுத்தின்
தூய யானத்தின் மிசை யெழுந் தருளுவீர் என்றலும் சுடர்த்திங்கள்
மேய வேணியார் அருளும்இவ் வாறெனில் விரும்புதொண் டர்களோடும்
போய தெங்குநீர் அங்குயான் பின்வரப் போவதென் றருள்செய்தார்.
தெளிவுரை : நம் இறைவன் உமக்கு அருள் செய்த இந்த நன்மை பொருந்திய அழகிய ஒளியுடைய தூய முத்துச் சிவிகையின் மீது ஏறி வருவீராக ! எனக் கூறினார். ஒளியுடைய பிறைச்சந்திரன் பொருந்திய சடையையுடைய இறைவரின் திருவருளும் இவ்வாறே பொருந்துவதாயின், விரும்பும் தொண்டர்களுடனே நீவிர் முன் செல்வது எந்தப் பதியோ, அங்கு யான் பின் தொடர்ந்து வரும்படியாகப் போவது என விடையளித்தார்.
2426. என்று பிள்ளையார் மொழிந்தருள் செய்திட இருந்தவத் திறையோரும்
நன்று நீரருள் செய்ததே செய்வன்என் றருள்செய்து நயப்புற்ற
அன்றை நாள்முத லுடன்செலு நாளெலாம் அவ்வியல் பினிற்செல்வார்
சென்று முன்னுறத் திருஅம்பர் அணைந்தனர் செய்தவக் குழாத்தோடும்.
தெளிவுரை : என்று சம்பந்தர் உரைத்திடவும், பெரிய தவ வேந்தரான திருநாவுக்கரசரும் நல்லது ! நீவிர் அருளிய படியே செய்வேன்? என்று அருள் செய்து, விரும்பிய அந்நாள் முதற்கொண்டு பிள்ளையாருடன் போகும் எல்லா நாட்களிலும், அந்த இயல்பில் செல்பராய்ச் செய்தவக் கூட்டமான தொண்டர்களோடும் முன் செல்லத் திருவம்பர் என்ற நகரை அடைந்தார்.
2427. சண்பை மன்னருந் தம்பிரான் அருள்வழி நிற்பது தலைச்செல்வார்
பண்பு மேம்படு பனிக்கதிர் நித்திலச் சிவிகையிற் பணிந்தேறி
வண்பெ ரும்புக லூரினைக் கடந்துபோய் வரும்பரி சனத்தோடும்
திண்பெ ருந்தவர் அணைந்ததெங் கென்றுபோய்த் திருஅம்பர் நகர்புக்கார்.
தெளிவுரை : சீகாழிப் பதியில் தோன்றிய பிள்ளையாரும் தம் இறைவன் அருள் வழியே ஒழுகுவதை மேற்கொண்டு போவாராய்ச் சிவப் பண்பினால் மேம்படும் குளிர்ந்த கதிர்களையுடைய முத்துச் சிவிகையில் அமர்ந்து வன்மையும் பெருமையும் கொண்ட திருப்புகலூரைக் கடந்து போய்த் திண்ணிய பெருமையுடைய தவ முனிவரான அரசு எங்குச் சென்றனர் எனக் கேட்டுக் கொண்டு போய் அவர் சேர்ந்த திருவம்பர் நகரத்தை அடைந்து புகுந்தார்.
2428. அம்பர் மாநகர் அணைந்துமா காளத்தில் அண்ணலார் அமர்கின்ற
செம்பொன் மாமதிற் கோயிலை வலங்கொண்டு திருமுன்பு பணிந்தேத்தி
வம்பு லாம்மலர் தூவிமுன் பரவியே வண்டமிழ் இசைமாலை
உம்பர் வாழநஞ் சுண்டவர் தமைப்பணிந் துருகும்அன் பொடுதாழ்ந்தார்.
தெளிவுரை : திருவம்பர் என்ற பதியை அடைந்து மாகாளத்தில் (கோயிலில்) இறைவர் விரும்பி எழுந்தருளிய செம் பொன்னால் ஆன பெரு மதிலையுடைய கோயிலை வலம் வந்து, இறைவரின் திருமுன்பு தாழ்ந்து வணங்கித் துதித்து, மணமுடைய மலர்களைத் தூவியும் விதிப்படி வழிபட்டும், வண்மையுடைய தமிழிசை மாலை பாடித் துதித்துத், தேவர் வாழும் பொருட்டு நஞ்சையுண்ட இறைவரை வணங்கி, உள்ளம் உருகிய அன்பினால் நிலத்தில் விழுந்து வணங்கினார்.
2429. தாழ்ந்து நாவினுக் கரசுடன் தம்பிரான் கோயில்முன் புறமெய்திச்
சூழ்ந்த தொண்டரோ டப்பதி அமர்பவர் சுரநதி முடிமீது
வீழ்ந்த வேணியர் தமைப்பெறுங் காலங்கள் விருப்பினாற் கும்பிட்டு
வாழ்ந்தி ருந்தனர் காழியார் வாழவந் தருளிய மறைவேந்தர்.
தெளிவுரை : சீகாழியினர் வாழ்வு அடையுமாறு அவதரித்த மறைத் தலைவரான பிள்ளையார் வணங்கிப்பின் திருநாவுக் கரசு நாயனாருடன் திருக் கோயிலின் வெளியேவந்து, தம்மைச் சூழ்ந்த தொண்டருடனே அந்தத் தலத்தில் விரும்பித் தங்குபவராய், கங்கை தங்கிய சடையுடைய சிவ பெருமானைப் பெருங்காலங்கள் தோறும் விருப்பத்துடன் கும்பிட்டுப் பெருவாழ்வு அடைந்திருந்தார்.
2430. பொருவி லாதசொற் புல்குபொன் னிறமுதற் பதிகங்க ளாற்போற்றித்
திருவினார்ந்தகோச் செங்கணான் அந்நகர்ச் செய்தகோ யிலைச் சேர்ந்து
மருவு வாய்மைவண் டமிழ்மலர் மாலைஅவ் வளவனைச் சிறப்பித்துப்
பெருகு காதலிற் பணிந்துமுன் பரவினார் பேணிய உணர்வோடும்.
தெளிவுரை : ஒப்பற்ற சொற்களையுடைய புல்கு பொன் நிறம் என்ற தொடக்கம் கொண்ட பதிகம் முதலான பல பதிகங்களினால் துதித்து, சைவ மெய்த்திருவால் நிறைவுடைய கோச்செங்கட் சோழர், அந்தத் திரு அம்பர் நகரத்தில் செய்த மாடக் கோயிலை அடைந்து வாய்மையுடைய வண்மையான தமிழ் மாலையில் அந்தச் சோழரைச் சிறப்பாகக் கூறிப் பெருகும் ஆசையினால் பணிந்து பேணிக் கொண்ட உணர்வுடன் திருமுன்பு நின்று துதித்தார்.
2431. இன்ன வாறுசொல் மாலைக ளால்துதித் திறைஞ்சிஅங் கமர்நாளில்
கன்னி மாமதில் திருக்கட வூர்தொழக் காதல்செய் தருளிப் போய்
மன்னு கோயில்கள் பிறபதி வணங்கியே வாக்கின்மன் னவரோடும்
அந்நெ டும்பதி அணைவுறக் கலயரோ டடியவர் எதிர்கொண்டார்.
தெளிவுரை : இங்ஙனம் சொல் மாலைகளினால் துதித்துப் பணிந்து அங்கு எழுந்தருளியிருக்கும் நாட்களில், பகைவரால் அழிக்கப்படாத பெருமதில் சூழ்ந்த திருக்கடவூரினைத் தொழுதுவதற்கு மிகவும் விருப்பம் கொண்டு சென்று, வழியில் பிற பகுதிகளில் உள்ள கோயில்களில் இறைவரை வணங்கிய வண்ணம், திருநாவுக்கரசருடனே அந்தப் பெரும் பதியான திருக்கடவூரை அடையும் போது, குங்குலியக் கலய நாயனாருடன் அடியார்கள் வந்து வரவேற்றனர்.
2432. மற்றவ் வண்பதி அணைந்துவீ ரட்டத்து மழவிடை யார்கோயில்
சுற்று மாளிகை வலங்கொண்டு காலனை உதைத்துருட் டியசெய்ய
பொற்சி லம்பணி தாமரை வணங்கிமுன் போற்றிஉய்ந் தெதிர்நின்று
பற்ற றுப்பவர் சடையுடை யானெனும் பதிகஇன் னிசைபாடி.
தெளிவுரை : முன் சொல்லப்பட்ட அந்த வளம் பொருந்திய பதியைச் சேர்ந்து இளமையுடைய காளையுடைய இறைவரின் வீரட்டத் திருக்கோயிலின் சுற்று மாளிகையை வலமாகச் சுற்றி வந்து இயமனை உதைத்து உருட்டிய செம்பொன் சிலம் பணிந்த திருவடித் தாமரைகளைத் தொழுது துதித்து உயர்ந்து திருமுன்பு நின்று, பற்றுகளை அறுப்பவராய்ச் சடையுடையான் எனத் தொடங்கும் இனிய இசையுடைய திருப்பதிகம் பாடி,
2433. பரவி ஏத்திஅங் கரிதினிற் போந்துபார் பரவுசீர் அரசோடு
விரவு நண்புடைக் குங்குலி யப்பெருங் கலயர் தம் மனைமேவிக்
கரையில் காதல்மற் றவர்அமைத் தருளிய விருந்தினி தமர்ந்தங்குச்
சிரபு ரத்தவர் திருமயா னமும்பணிந் திருந்தனர் சிறப்பெய்தி.
தெளிவுரை : வணங்கித் துதித்து அங்கிருந்து அரிதாக வெளியே வந்து, உலகம் போற்றும் சிறப்புடைய திருநாவுக்கரசருடனே, பொருந்திய நட்புடைய குங்குலியக் கலய நாயனாரின் இல்லத்தில் எழுந்தருளி எல்லையில்லாத அன்பினால் அவர் அமைத்தளித்த விருந்தை இனிதாய் உண்டு, பிள்ளையார் அங்குத் திருக்கடவூர் திருமயானத்தையும் பணிந்து சிறப்பு எய்தித் தங்கியிருந்தார்.
2434. சிறப்பு டைத்திருப் பதியத னிடைச்சில நாளமர்ந் தருளோடும்
விறற்பெ ருங்கரி யுரித்தவர் கோயில்கள் விருப்பொடுந் தொழச் செல்வார்
மறைப்பெ ருந்திருக் கலயரும் உடன்பட வணங்கிய மகிழ்வோடும்
அறப்பெ ரும்பயன் அனையஅத் தொண்டரோ டணைந்தனர் திருவாக்கூர்.
தெளிவுரை : பிள்ளையார், சிறந்த திருப்பதியில் சில நாட்கள் விரும்பித் தங்கி வலிய பெரிய பானையை உரித்த சிவபெருமான் எழுந்தருளிய பிற கோயில்களையும் தொழுவதற்கு அருள் பெற்றுச் செல்பராய் வேதங்களைப் பயின்ற பெரிய சைவ மெய் வடிவுடைய குங்குலியக் கலய நாயனாரும் உடன்பட, வணங்கும் பொருட்டுக் கொண்ட பெருமகிழ்வுடன் அறத்தின் பெரும் பயன் போன்ற அந்தத் தொண்டருடன் திருவாக்கூரினைச் சென்றடைந்தார்.
2435. தக்க அந்தணர் மேவும்அப் பதியினிற் தான்தோன்றி மாடத்துச்
செக்கர் வார்சடை அண்ணலைப் பணிந்திசைச் செந்தமிழ்த் தொடைபாடி
மிக்க கோயில்கள் பிறவுடன் தொழுதுபோய் மீயச்சூர் பணிந்தேத்திப்
பக்கம் பாரிடம் பரவநின் றாடுவார் பாம்புர நகர்சேர்ந்தார்.
தெளிவுரை : தகுந்த அந்தணர் வாழ்கின்ற அந்தத் தலத்தில் தான் தோன்றி மாடக் கோயிலில் சிவந்த நீண்ட சடையையுடைய இறைவரைப் பணிந்து, இசையையுடைய செந்தமிழ்ப் பதிக மாலையைப் பாடிப் பெருமை பொருந்திய மற்றக் கோயில்களையும் உடனே தொழுது சென்று, திரு மீயச்சூரினையும் வணங்கி, பூத கணங்கள் பக்கங்களில் சூழ்ந்து துதிக்க நின்று ஆடும் இறைவரின் திருப் பாம்புர நகரத்தை அடைந்தார்.
2436. பாம்பு ரத்துறை பரமரைப் பணிந்துநற் பதிகஇன் னிசைபாடி
வாம்பு னற்சடை முடியினார் மகிழ்விடம் மற்றும்உள் ளனபோற்றிக்
காம்பி னில்திகழ் கரும்பொடு செந்நெலின் கழனியம் பணைநீங்கித்
தேம்பொ ழில்திரு வீழிநன் மிழலையின் மருங்குறச் செல்கின்றார்.
தெளிவுரை : பிள்ளையார், திருப்பாம்புரத்தில் வீற்றிருக்கும் இறைவரை வணங்கி நல்ல இனிய இசை பொருந்திய திருப்பதிகத்தைப் பாடியருளி, தாவும் அலையுடைய கங்கையாற்றைச் சூடிய முடியுடைய இறைவர் மகிழ்ந்து எழுந்தருளியுள்ள மற்றப் பதிகளைத் துதித்து, மூங்கில் போல் விளங்கும் கரும்பும் செந்நெல்லும் விளைந்த வயல் இடங்களைக் கடந்து தேனையுடைய சோலைகள் சூழ்ந்த திருவீழி மிழலையின் பக்கத்தில் செல்கின்றவராகி,
2437. அப்பொழுதின் ஆண்ட அரசை எதிர்கொண்ட
மெய்ப்பெருமை அந்தணர்கள் வெங்குருவாழ் வேந்தனார்
பிற்படவந் தெய்தும் பெரும்பேறு கேட்டுவப்பார்
எப்பரிசி னால்வந் தணைந்தங் கெதிர்கொண்டார்.
தெளிவுரை : அவ்வாறு பிள்ளையார் போகும் போது முன் வந்து திருநாவுக்கரசரை எதிர் கொண்ட உண்மைத் தன்மையின் மிக்க பெருமையுடைய அந்தணர்கள், சீகாழித் தலைவர் (பிள்ளையார்) பின்னர் வந்து சேர இருக்கும் செய்தியைக் கேட்டு மகிழ்ந்து, எல்லா வகையாலும் ஒருங்கு கூடிவந்து அங்கு எதிர் கொண்டவராய்.
2438. நிறைகுடந்தூ பந்தீபம் நீடநிரைத் தேந்தி
நறைமலர்ப்பொற் சுண்ணம் நறும்பொரியுந் தூவி
மறையொலிபோய் வானளப்ப மாமுரசம் ஆர்ப்ப
இறைவர்திரு மைந்தர்தமை எதிர்கொள்வர வேற்றார்.
தெளிவுரை : நிறைகுடம் தூபம் என்ற இவற்றைத் தொடர்ந்து வரிசை பெற ஏந்திய வண்ணம், தேன் பொருந்திய புதிய மலர்களையும் பொன் சுண்ணத்தையும் மணமுடைய பொரிகளையும் தூவி மறையின் ஒலி மிகுந்து வானத்தில் நிறையவும், பெரிய முரசுகள் ஒலிக்கவும், இவ்வாறாக இறைவரின் மகனாரான பிள்ளையாரை எதிர் கொள்ளும் வகையால் வரவேற்றனர்.
2439. வந்துதிரு வீழி மிழலை மறைவல்ல
அந்தணர்கள் போற்றிசைப்பத் தாமும் மணிமுத்தின்
சந்தமணிச் சிவிகைநின் றிழிந்து தாழ்ந்தருளி
உய்ந்த மறையோ ருடன்அணைந்தங் குள்புகுவார்.
தெளிவுரை : திரவீழிமிழலை என்ற பதியில் உள்ள மறைகளில் வல்ல அந்தணர்கள் வந்து துதிக்கப் பிள்ளையார், தாமும் மணிகளுள் சிறந்த முத்துக்களால் ஆன புகழத்தக்க அழகிய பல்லக்கினின்றும் இறங்கி வணங்கித், தம் வருகையால் உய்வு பெற்ற அந்தணர்களுடனே சேர்ந்து அந்த நகரத்துள் புகுபவராய்.
2440. அப்போ தரையார் விரிகோ வணவாடை
ஒப்போ தரும்பதிகத் தோங்கும் இசைபாடி
மெய்ப்போதப் போதமர்ந்தார் தங்கோயில் மேவினார்
கைப்போது சென்னியின்மேற் கொண்டு கவுணியனார்.
தெளிவுரை : சம்பந்தர், அப்போது அரையார் விரிகோவண ஆடை எனத் தொடங்கும் ஒப்புக் கூற இயலாத திருப்பதிகத்தில் ஓங்கும் இசையைப் பாடியருளிக் கைம்மலர் களைத் தலை மீது குவித்துக் கொண்டு உண்மை ஞானத்தால் பூசிக்கும் தத்துவம் முப்பத்தாறாலும் அமைந்த இதய புண்டரீகத்தில் விரும்பி வீற்றிருக்கும் இறைவரின் திருக் கோயிலுள் சென்றார்.
2441. நாவின் தனிமன்னர் தாமும் உடன்நண்ண
மேவிய விண்ணிழிந்த கோயில் வலங்கொள்வார்
பூவியலும் உந்தியான் போற்றப் புவிக்கிழிந்த
தேவியலு மெய்கண்டு சிந்தைவியப் பெய்தினார்.
தெளிவுரை : நாவால் ஒப்பற்ற அரசரான திருநாவுக்கரசர் தம்முடன் பொருந்தியிருக்க, நான்முகன் தோன்றிய கொப்பூழ்த் தாமரையையுடைய திருமால் வணங்கி வழிபடும் பொருட்டு விண்ணுலகத்தினின்றும் இம்மண் உலகத்தில் இறங்கிய விராட்புருடனின் மெய்யின் உருவமான அந்த விமானத்தைக் கண்டு உள்ளத்தில் வியப்பை அடைந்தார் ஆளுடைய பிள்ளையார்.
2442. வலங்கொண்டு புக்கெதிரேவந்து வரநதியின்
சலங்கொண்ட வேணித் தனிமுதலைத் தாழ்ந்து
நிலங்கொண்ட மேனியராய் நீடுபெருங் காதல்
புலங்கொண்ட சிந்தையினால் பொங்கியிசை மீப்பொழிந்தார்.
தெளிவுரை : அப்பிள்ளையார், வலமாக வந்து கோயிலுக்குள்ளே புகுந்து, திருமுன்பு சென்று வான கங்கை நீர் தங்கிய சடையையுடைய ஒப்பில்லாத முழுமுதலான இறைவரைத் திருமேனி முழுதும் நிலத்திலே பொருந்த விழுந்து வணங்கிப், பெருகிய அன்பு வெள்ளமானது உள்ள இடம் முழுதும் கொண்டு நிறைந்ததால் அது வழிவதைப் போன்று இசையாய் மேலே பொழிவார் ஆனார்.
2443. போற்றிச் சடையார்புனலுடையான் என்றெடுத்துச்
சாற்றிப் பதிகத்தமிழ்மாலைச் சந்தவிசை
ஆற்ற மிகப்பாடி ஆனந்த வெள்ளத்தில்
நீற்றழகர் சேவடிக்கீழ் நின்றலைந்து நீடினார்.
தெளிவுரை : அவர் துதித்துச் சடையார் புனலுடையான் எனத் தொடங்கிப் பெருமானின் புகழ்களை எடுத்துச் சொல்லிப் பதிகமான தமிழ்மாலையைப் பாடி, நீற்று அழகரான இறைவரின் திருவடிகளின் கீழ் ஆனந்த வெள்ளத்தினுள் நின்று அதன் கரை காண மாட்டாது அலைந்து நீடியிருந்தார்.
2444. நீடியபே ரன்புருகி உள்ளலைப்ப நேர்நின்று
பாடியெதி ராடிப் பரவிப் பணிந்தெழுந்தே
ஆடிய சேவடிகள் ஆர்வமுற உட்கொண்டு
மாடுயர் கோயில் புறத்தரிது வந்தணைந்தார்.
தெளிவுரை : நீடிய பேரன்பு உருகுதலால் மனத்துள் எல்லாம் அலையச் செய்யத் திருமுன்பு நேர்நின்று பாடியும் எதிரிலே ஆனந்தக் கூத்தாடியும் துதித்தும் பணிந்தும் எழுந்து அருட்பெருங் கூத்து ஆடிய திருவடிகளை அன்பு பொருந்த மனத்துள் வைத்தவராய் உயர்ந்த திருக்கோயிலின் வெளியே பக்கத்தில் அரிதாய் வந்து சம்பந்தரும் நாவுக்கரசரும் சேர்ந்தனர்.
2445. வந்தணைந்து வாழ்ந்து மதிற்புறத்தோர் மாமடத்துச்
செந்தமிழ்சொல் வேந்தரும் செய்தவரும் சேர்ந்தருளச்
சந்தமணிக் கோபுரத்துச் சார்ந்தவட பாற்சண்பை
அந்தணர்சூ ளாமணியார் அங்கோர் மடத்தமர்ந்தார்.
தெளிவுரை : அங்ஙனம் வந்து சேர்ந்து வாழ்வைப் பெற்றுத் திருமதில் புறத்தில் உள்ள ஒரு பெருமடத்தில் செந்தமிழ்ச் சொல் அரசரான திருநாவுக்கரசரும் தவத்தையுடைய திருத்தொண்டர்களும் சேர்ந்திருப்ப, சீகாழியில் தோன்றிய அந்தணர் பெருமானான சம்பந்தர் அழகிய மணிகளையுடைய கோபுரத்தைச் சார்ந்த வடபகுதியில் அங்கு ஒரு திருமடத்தில் விரும்பி எழுந்தருளினார்.
2446. அங்கண் அமர்வார் அரனார் அடியிணைக்கீழ்த்
தங்கிய காதலினாற் காலங்கள் தப்பாமே
பொங்குபுகழ் வாகீச ருங்கூடப் போற்றிசைத்தே
எங்கும் இடர்தீர்ப்பார் இன்புற் றுறைகின்றார்.
தெளிவுரை : சம்பந்தர் அங்கு விரும்பி எழுந்தருளுவாராகிச் சிவபெருமான் திருவடிகளின் கீழ்ப் பொருந்திக் கிடந்த பெருவிருப்பத்தினால் வழிபாட்டுக்குரிய காலம் தவறாமல், பொங்கும் புகழையுடைய திருநாவுக்கரசரும் கூடிச் சென்று வழிபட்டுத் துதித்து எங்கும் துன்பம் தீர்ப்பவராய் இன்பமுடன் விரும்பித் தங்கியிருந்தனர்.
2447. ஓங்குபுனற் பேணு பெருந்துறையும் உள்ளிட்ட
பாங்கார் திலதைப் பதிமுற்ற மும்பணிந்து
வீங்கொலிநீர்வீழி மிழலையினில் மீண்டும் அணைந்
தாங்கினிது கும்பிட் டமர்ந்துறையும் அந்நாளில்.
தெளிவுரை : பெருகும் நீர் வளம் கொண்ட திருப்பேணு பெருந்துறையையும் அதனை உள்ளிட்ட தாய்ப் பக்கத்தே உள்ள திலதைப் பதிமதிமுத்தத்தினையும் போய் வணங்கிப்பெருகும் ஒலியுடைய நீர் சூழ்ந்த திருவீழி மிழலையினில் மீண்டும் எழுந்தருளி அங்கு இனிதாய் வணங்கி விருப்புடனே இருந்து வந்தனர். அத்தகைய நாட்களில்,
2448. சேணுயர் மாடப் புகலி யுள்ளார் திருஞான சம்பந்தப் பிள்ளை யாரைக்
காணும் விருப்பிற் பெருகு மாசை கைம்மிகு காதல் கரை யிகப்பப்
பூணும் மனத்தொடு தோணி மேவும் பொருவிடை யார்மலர்ப் பாதம் போற்றி
வேணு புரத்தை யகன்று போந்து வீழி மிழலையில் வந்த ணைந்தார்.
தெளிவுரை : வானத்தில் உயர்ந்த மாடங்களை உடைய சீகாழியில் வாழ்கின்ற மறையவர்கள் திருஞான சம்பந்தப் பிள்ளையாரைப் போய்க் காண வேண்டும் என்ற விருப்பத்தால் பெருகும் ஆசை உள்ளம் பற்றி அதிகரித்தலால் உள்ள பெரு விருப்பம் எல்லையில்லாது செல்லப் பூண்டு கொண்ட மனத்துடனே, திருத்தோணியில் வீற்றிருக்கும் இறைவரின் மலரடிகளை வணங்கி விடை பெற்றுச் சீகாழியை நீங்கிப் போய்த் திருவீழி மிழலையை அடைந்தார்.
2449. ஊழி முடிவில் உயர்ந்த வெள்ளத் தோங்கிய காழி உயர் பதியில்
வாழி மறையவர் தாங்க ளெல்லாம் வந்து மருங்கணைந் தார்கள் என்ன
வீழி மிழலையின் வேதி யர்கள் கேட்டுமெய்ஞ் ஞானமுண் டாரை முன்னா
ஏழிசை சூழ்மறை எய்த வோதி எதிர்கொள் முறைமையிற் கொண்டு புக்கார்.
தெளிவுரை : ஊழிக் காலத்தில் பெருகும் நீர் வெள்ளத்தில் ஆழாமல் மிதந்த சீகாழியில் வாழ்வையுடைய அந்தணர்கள் எல்லாம் வந்து தம் பதியின் பக்கத்தில் சேர்ந்தனர் எனத் திருவீழி மிழலையில் வாழும் மறையோர்கள் செவியேற்று, மெய்ஞ்ஞான அமுது உண்ட பிள்ளையாரை எண்ணி மனத்துள் கொண்டு, ஏழிசை சூழும் மறைகளில் வல்ல அந்தச் சீகாழி மறையவர் பால் சேர்ந்து, முறைப்படி எதிர் கொண்டு வரவேற்று, அவர்களை அழைத்துக் கொண்டு நகரத்துள் புகுந்தனர்.
2450. சண்பைத் திருமறை யோர்கள் எல்லாம் தம்பிரா னாரைப் பணிந்து போந்து
நண்பிற் பெருகிய காதல் கூர்ந்து ஞானசம் பந்தர் மடத்தில் எய்திப்
பண்பிற் பெருகுங் கழும லத்தார் பிள்ளையார் பாதம் பணிந்து பூண்டே
எண்பெற்ற தோணி புரத்தில் எம்மோ டெழுந்தரு ளப்பெற வேண்டும் என்றார்.
தெளிவுரை : சீகாழியினைச் சேர்ந்த மறையவர்கள் எல்லாம் கோயிலுள் சென்று தம் இறைவரை வணங்கிச் சென்று நட்பால் பெருகிய பெரு விருப்பம் மிக்கு ஞான சம்பந்தரின் திருமடத்தைச் சேர்ந்தனர். நற்பண்பினால் பெருகும் சீகாழியர்க்கு உரிமையுடைய சம்பந்தரின் திருவடிகளை வணங்கித் தலைமீது கொண்டு மேன்மையுடைய திருத் தோணிபுரத்தில் எங்களுடனே எழுந்தருளும் பேறு யாங்கள் பெற வேண்டும் என வேண்டிக் கொண்டனர்.
2451. என்றவர் விண்ணப்பஞ் செய்த போதில் ஈறில் சிவஞானப் பிள்ளை யாரும்
நன்றிது சாலவுந் தோணி மேவும் நாதர் கழலிணை நாம் இறைஞ்ச
இன்று கழித்து மிழலை மேவும் இறைவர் அருள்பெற்றுப் போவ தென்றே
அன்று புகலி அரும றையோர்க் கருள்செய் தவர்க்கு முகமளித்தார்.
தெளிவுரை : என அவர்கள் இங்ஙனம் வேண்டிக் கொண்ட போது, எல்லையில்லாத சிவஞானம் பெற்ற சம்பந்தரும் மிகவும் நல்லது ! ஆனால் திருத்தோணியில் எழுந்தருளிய இறைவரின் திருவடிகளை நாம் வணங்குவதற்கு இன்று கழிந்து நாளைச் திருவீழிமிழலை இறைவரின் அருளைப் பெற்று நாம் போகலாம் ! எனக் கூறி அன்று அவர் சீகாழி மறையவர்களுக்கு அரள் செய்தார்.
2452. மேற்பட்ட அந்தணர் சண்பை மேவும்வேதியர்க் காய விருந்த ளிப்பப்
பாற்பட்ட சிந்தைய ராய்ம கிழ்ந்து பரம்பொரு ளானார் தமைப் பரவும்
சீர்ப்பட்ட எ ல்லை யினிது செல்லத் திருத்தோணி மேவிய செல்வர் தாமே
கார்ப்பட்ட வண்கைக் கவுணி யர்க்குக் கனவிடை முன்னின் றருள்செய் கின்றார்.
தெளிவுரை : மேன்மையுடைய திருவீழி மிழலை அந்தணர்கள், சீகாழியினின்று வந்த அந்தணர்களுக்கு விருந்தை அளிக்க, அவர்கள் அன்பு கொண்ட உள்ளம் உடையவராகி, மகிழ்ந்து இறைவரை வழிபட்டுத் துதிக்கும் சீர் பொருந்திய கால எல்லை இனிதாய்க் கழியத் திருத்தோணியில் வீற்றிருக்கும் இறைவர், தாமே மேகம் போன்ற வண்மையுடைய கவுணியர்க்கு (சம்பந்தருக்கு) கனவில் தோன்றியருள் செய்வாராய்.
2453. தோணியில் நாம்அங் கிருந்த வண்ணம்தூமறை வீழிமிழலை தன்னுள்
சேணுயர் விண்ணின் றிழிந்த இந்தச் சீர்கொள் விமானத்துக் காட்டு கின்றோம்
பேணும் படியால் அறிதி என்று பெயர்ந்தருள் செய்யப் பெருந்த வங்கள்
வேணு புரத்தவர் செய்ய வந்தார் விரவும் புளகத் தொடும் உணர்ந்தார்.
தெளிவுரை : அச்சீகாழியில் தோணியில் நாம் இருந்த காட்சியை இங்குத் தூய வேத வடிவாகிய திருவீழி மிழலையுள் விண்ணினின்றும் இழிந்த இந்தச் சிறப்புடைய விமானத்திடம் காணும்படி காட்டுகின்றோம். கண்டு வழிபடும் வகையினால் அறிவாயாக ! என்று கூறி மறைந்து போக, சீகாழிப் பதியினர் முன்னம் செய்த தவத்தால் வந்து தோன்றிய பிள்ளையார் தம் உடலில் தோன்றிய புளகமுடன் துயிலுணர்ந்து எழுந்தார்.
2454. அறிவுற்ற சிந்தைய ராய்எ ழுந்தே அதிசயித் துச்சிமேல் அங்கை கூப்பி
வெறியுற்ற கொன்றையி னார்ம கிழ்ந்த விண்ணிழி கோயிலிற் சென்று புக்கு
மறியுற்ற கையரைத் தோணி மேல்முன் வணங்கும் படியங்குக் கண்டு வாழ்ந்து
குறியிற் பெருகுந் திருப்ப திகம் குலவிய கொள்கையிற் பாடு கின்றார்.
தெளிவுரை : விழிப்புக் கொண்ட சிந்தையுடையவராய் எழுந்து அதிசயம் அடைந்து, தலையின் மேலே அழகிய கைகளைக் கூப்பித் தொழுது, மணம் பொருந்திய கொன்றை மலரைச் சூடிய இறைவர் மகிழ்ந்து எழுந்தருளும் விண் இழி விமானம் உடைய கோயிலுக்குள் புகுந்து, மான் ஏந்திய கையையுடைய இறைவரைத் திருத்தோணியின் மேல் முன் வணங்கும் அந்த வண்ணமே அங்குக் கண்டு வாழ்வடைந்து அக்குறிநிலையின் பெருமை காட்டும் திருப்பதிகத்தைப் பொருந்திய கொள்கையால் பாடுபவராய்,
2455. மைம்மரு பூங்குழல் என்றெ டுத்து மாறில் பெருந் திருத்தோணி தன்மேற்
கொம்மை முலையினாள் கூட நீடு கோலங் குலாவும் மிழலை தன்னில்
செம்மை தருவிண் ணிழிந்த கோயில் திகழ்ந்த படிஇது என்கொல் என்று
மெய்ம்மை விளங்குந் திருப்ப திகம் பாடி மகிழ்ந்தனர் வேத வாயர்.
தெளிவுரை : கைம்மரு பூங்குழல் எனத் தொடங்கி ஒப்பில்லாத பெருந்திருத்தோணி மீது இளங் கொள்கையையுடைய பெரிய நாயகி அம்மையாருடன் கூட நீடும் திருக்கோலம், விளக்கம் உடைய திருவீழி மிழலையில் செம்மை தருகின்ற விண்ணிழி விமானத்தில் விளங்க இருந்த வண்ணம் இது என் ! என வினவும் பொருளுடன், உண்மை விளங்கும் திருப்பதிகத்தை வேத வாயினரான சம்பந்தர் பாடியருளினார்.
2456. செஞ்சொல் மலர்ந்த திருப்ப திகம் பாடித் திருக்கடைக் காப்புச் சாத்தி
அஞ்சலி கூப்பி விழுந்தெ ழுவார் ஆனந்த வெள்ளம் அலைப்பப் போந்து
மஞ்சிவர் சோலைப்புகலி மேவும் மாமறை யோர்தமை நோக்கி வாய்மை
நெஞ்சில் நிறைந்த குறிப்பில் வந்த நீர்மைத் திறத்தை அருள்செய் கின்றார்.
தெளிவுரை : செஞ்சொற்கள் பொருந்திய திருப்பதிகத்தைப் பாடிக் கடைக்காப்பும் பாடி முடித்துக் கைகளை அஞ்சலியாய்க் கூப்பி, நிலத்தில் விழுந்து எழுபவரான பிள்ளையார், மிக்க ஆனந்தம் பரவித் தம்மை அலைப்ப வெளியே வந்து, மேகங்கள் தவழும் சோலைகள் சூழ்ந்த சீகாழியின்றும் வந்த மறையவர்களை நோக்கி, உண்மை வடிவாய்த் தம் உள்ளத்தில் நிறைந்த திருவருள் குறிப்பால் உணர்த்தப் பெற்ற அருள் இயல்பை அருளிச் செய்பவராய்,
2457. பிரம புரத்தி லமர்ந்த முக்கட் பெரிய பிரான்பெரு மாட்டி யோடும்
விரவிய தானங்கள் எங்குஞ் சென்று விரும்பிய கோயில் பணிந்து போற்றி
வருவது மேற்கொண்ட காதல் கண்டங் கமர்ந்த வகையிங் களித்த தென்று
தெரிய வுரைத்தருள் செய்து நீங்கள் சிரபுர மாநகர் செல்லும் என்றார்.
தெளிவுரை : சீகாழியில் வீற்றிருக்கின்ற மூன்று கண்களையுடைய பெரியபிரான் தம் பெருமாட்டியுடன் பொருந்திய இடங்கள் எங்கெங்கும் சென்று அங்கங்கும் விரும்பி மேற்கொண்ட கோலங்களைப் பணிந்து துதித்து வருதலை நாம் கொண்ட ஆசையை, அப்பெருமான் தாம் அறிந்து கொண்டு அங்குத் திருத்தோணியில் வீற்றிருந்த வகையினை இங்குக் காணுமாறு அளித்தார் என்று அறியுமாறு கூறி, நீங்கள் சீகாழிக்குச் செல்லுங்கள் என்றரைத்தார்.
2458. என்று கவுணியப் பிள்ளை யார்தாம் இயம்பப் பணிந்தருள் ஏற்றுக் கொண்டே
ஒன்றிய காதலின் உள்ளம் அங்கண் ஒழிய ஒருவா றகன்று போந்து
மன்றுள் நடம்புரிந் தார்ம கிழ்ந்த தானம் பலவும் வணங்கிச் சென்று
நின்ற புகழ்த்தோணி நீடு வாரைப் பணியும் நியதிய ராய் உறைந்தார்.
தெளிவுரை : என்று கவுணியர் குலத் தோன்றலான பிள்ளையார் சொல்ல, வணங்கி, அவர் உரைத்த கட்டளையை ஏற்றுக்கொண்டு, பொருந்திய பெருவிருப்பத்தால் தங்கள் மனம் நிற்க, நீங்காத இயல்பிலே ஒருவாறாக அரிதின் நீங்கிச் சென்று, அம்பலக் கூத்தர் மகிழ்ந்து அருளிய பதிகள் பலவற்றையும் வணங்கிச் சென்று, நிலையான புகழை யுடைய தோணிமேல் வீற்றிருக்கும் இறைவரைப் பணியும் நியதியுடையராய் விளங்கினார்.
2459. சிரபுரத் தந்தணர் சென்ற பின்னைத் திருவீழி மேவிய செல்வர் பாதம்
பரவுதல் செய்து பணிந்து நாளும் பண்பின் வழாத்திருத் தொண்டர் சூழ
உரவுத் தமிழ்த்தொடை மாலை சாத்தி ஓங்கிய நாவுக் கரச ரோடும்
விரவிப் பெருகிய நண்பு கூர மேவி இனிதங் குறையும் நாளில்.
தெளிவுரை : சீகாழி அந்தணர் விடை பெற்றுச் சென்ற பின்பு திருவீழி மிழலையில் மேவிய இறைவரின் திருவடிகளை வணங்கி எந்நாளும் அடிமைப் பண்பினின்றும் நீங்காமல் ஒழுகும் திருத்தொண்டர் சூழ்ந்து இருக்க, சிறந்த தமிழால் தொடுக்கப்பட்ட திருப்பதிகத்தைச் சாத்தி, அன்பு மிக்க திருநாவுக்கரசருடன் கூடிப் பெருகிய நட்டு மிக்கு ஓங்க, பொருந்திய இனிதாய் அந்தப் பதியில் தங்கியிருந்தனர். அந்நாளில்,
2460. மண்ணின் மிசை வான்பொய்த்து நதிகள் தப்பி
மன்னுயிர்கள் கண்சாம்பி உணவு மாறி
விண்ணவர்க்குஞ் சிறப்பில்வரும் பூசை யாற்றா
மிக்கபெரும் பசியுலகில் விரவக் கண்டு
பண்ணமரும் மொழியுமையாள் முலையின் ஞானப்
பாலறா வாயருடன் அரசும் பார்மேல்
கண்ணுதலான் திருநீற்றுச் சார்வி னோர்க்கும்
கவலைவரு மோஎன்று கருத்திற் கொண்டார்.
தெளிவுரை : இந்த மண் உலகில் மழை மறுத்து அதனால் ஆறுகளில் பருவ வெள்ளம் பாயாமல் தவறி, அது காரணமாய் உலகத்து உயிர்கள் வருந்தி உணவின்றி நின்றமையால், தேவர்களும் சிறப்புக்களிலே வருகின்ற பூசைகள் செய்யப்படாமல் மிக்க பெரும் பசியின் கொடுமை உலகில் பொருந்திய நிலையைக் கண்டு, பண் பொருந்திய சொல்லையுடைய உமையம்மையாரின் கொங்கையின் பால் நீங்காத வாயினரான பிள்ளையாருடன் திருநாவுக்கரசரும், உலகில் நெற்றிக் கண்ணரான திருநீற்றுச் சார்புடைய தொண்டர்களுக்கும் கவலை வருமா? என்று தம் உள்ளங்களில் எண்ணினர்.