பதிவு செய்த நாள்
15
செப்
2011
03:09
8. பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம்
46. பொய்யடிமையில்லாத புலவர் புராணம்
பொய்யடிமை இல்லாத புலவர்கள், தமிழின் ஐந்து இலக்கணங்களையும் கற்றவர்கள். அவர்கள் இறைவரின் திருவடிகளுக்கு ஆளானவர்கள். அவர்கள் கடைச் சங்கத்தை அணிசெய்த கபிலர் முதலியவர் ஆவர்; இறைவனைப் பாடிச் சிவகதி அடைந்தவர்கள்.
3939. செய்யுள்நிகழ் சொல்தெளிவும் செவ்வியநூல் பலநோக்கும்
மெய்யுணர்வின் பயனிதுவே எனத்துணிந்து விளங்கியொளிர்
மையணியுங் கண்டத்தார் மலரடிக்கே ஆளானார்
பொய்யடிமை யில்லாத புலவர்எனப் புகழ்மிக்கார்.
தெளிவுரை : செய்யுள் சொற்களின் தெளிவும் செம்மை தரும் பயன் உடைய நூல்கள் பலவற்றை நோக்குதலையும் மெய்ம்மை உணர்கின்ற உணர்ச்சியின் பயனாவது இதுவேயாகும் எனத் துணிந்து, விளங்கி ஒளிவீசும் நஞ்சினை அணிந்த கழுத்தையுடைய இறைவரின் மலர் போன்ற திருவடிக்கு ஆளானவர்களே பொய்யடிமை இல்லாத புலவர் என்ற புகழால் மிக்கவர்கள்.
3940. பொற்பமைந்த அரவாரும் புரிசடையார் தமையல்லால்
சொற்பதங்கள் வாய்திறவாத் தொண்டுநெறி தலைநின்ற
பெற்றியினில் மெய்யடிமை யுடையாராம் பெரும்புலவர்
மற்றவர் தம்பெருமையார் அறிந்துரைக்க வல்லார்கள்.
தெளிவுரை : இவர்கள் அழகிய பாம்புகளை அணிந்த புரி சடையையுடைய இறைவரையே அல்லாமல் மற்றவரைப் பற்றிச் சொற் பொருள்களைச் சொல்லாத இயல்பில் திருத்தொண்டின் நெறியில் முதன்மை பெற்ற பண்பினால் மெய்யடிமை யுடையவராகும் பெரும் புலவர்களே ஆவார்கள். இவர்களின் பெருமையை அறிந்து உரைக்க வல்லவர் யார்? எவரும் இவர் !
3941. ஆங்கவர்தம் அடியிணைகள் தலைமேற்கொண் டவனியெலாம்
தாங்கியவெண் குடைவளவர் குலஞ்செய்த தவம்அனையார்
ஓங்கிவளர் திருத்தொண்டின் உண்மையுணர் செயல்புரிந்த
பூங்கழலார் புகழ்ச்சோழர் திருத்தொண்டு புகல்கின்றாம்.
தெளிவுரை : அத்தன்மை கொண்ட பொய் அடிமை இல்லாத புலவர்களின் திருவடிகளை எம் தலையின் மேல் சூட்டிக் கொண்டு வணங்கி, நிலவுலகம் முழுமையும் தாங்கி அரசளித்த வெண் கொற்றக் குடையையுடைய சோழரின் மரபு செய்த தவப்பயனைப் போன்றவரும், மேலோங்கி வளர்கின்ற தொண்டின் உண்மைத் தன்மையினை உணர்ந்த செயலைச் செய்த கழலை அணிந்த வெற்றியை யுடையவரும் ஆகிய புகழ்ச் சோழ நாயனாரது திருத் தொண்டைச் சொல்லப் புகுகின்றோம்.
பொய்யடிமை இல்லாத புலவர் புராணம் முற்றுப் பெற்றது.
47. புகழ்ச்சோழ நாயனார் புராணம்
சோழ நாட்டு உறையூரில் புகழ்ச்சோழ நாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் மற்ற மன்னர் பணி கேட்க, சைவம் தழைக்க, ஆட்சி நடத்தினார். சிவாலயங்களில் பூசை, விழா என்பவை தவறாமல் நடைபெறச் செய்தார், சிவனடியார் வேண்டுவனவற்றை அளித்தார். அவர் கொங்கு நாட்டவரும் குடக நாட்டவரும் அளிக்கும் திறைப் பொருள்களைப் பெற்றுக் கொள்ளக் கருவூர்க்கு வந்திருந்தார். மன்னர்கள் தந்த திறைப் பொருளைப் பெற்றுக் கொண்டார். பின் நமக்குத் திறை தராத மன்னர் எவரேனும் உள்ளாரோ? என்று புகழ்ச் சோழர் வினவினார். அமைச்சர் நமக்குத் திறைப் பொருளைத் தராத ஒருவன் உள்ளான். அவன் அதிகன். அவன் மலையரணில் மறைந்துள்ளான் ! என்றார். நீங்கள் படை தொடுத்துச் சென்று அம்மலை யரணை அழியுங்கள் என்று கூறினார் மன்னர்.
அங்ஙனமே படை தொடுக்கப்பட்டது. சோழர் படைகளும் அதிகனின் படைகளும் எதிர்த்துத் தாக்கின. யானைகளும் குதிரைகளும் காலாட் படைகளும் அழிந்தன. சோழர் படைகள் மலையரணை அழித்தன. இங்ஙனம் அழிக்கப்பட்ட நாட்டுப் பொருள்களையும் வீரரின் தலைக் குவியல்களையும் தம்மன்னர்க்குக் காணிக்கையாய்க் கொணர்ந்தனர். அத்தலைகளுள் ஒன்றில் ஒரு சிறிய சடையைக் கண்டார். அதனால் அவரது உள்ளம் நடுங்கியது. சிவனடியார் ஒருவரது தலை என்று அவர் எண்ணினார். மாபெரும் பழி தமக்கு வந்து விட்டதாகக் கருதினார். அதனைப் போக்கத் தீயை வளர்க்கும்படி அமைச்சர்க்கு ஆணையிட்டார். தம் மகனுக்கு முடி சூட்டுமாறு கூறினார். அவர் சிவக்கோலம் பூண்டு கொண்டார். தாம் பார்த்த சடைத் தலையைப் பொன் தட்டில் ஏந்தி இறைவர் திருநாமத்தை ஓதித் தீயைவலமாய் வந்து, கண்ணீர் பெருக்கித் தீயில் பாய்ந்தார். இறைவரின் திருவடி நிழலை அடைந்தார்.
3942. குலகிரியின் கொடுமுடிமேல் கொடிவேங்கைக் குறியெழுதி
நிலவுதரு மதிக்குடைக்கீழ் நெடுநிலங்காத் தினிதளிக்கும்
மலர்புகழ்வண் தமிழ்ச்சோழர் வளநாட்டு மாமூதூர்
உலகில்வளர் அணிக்கெல்லாம் உள்ளுறையூ ராம்உறையூர்.
தெளிவுரை : இமயமலையின் உச்சியின் மேல் தம் வேங்கைப் புலிக் கொடியின் குறியைப் பொறித்து, வெண்மையான ஒளி வீசுகின்ற முழுமதி போன்ற வெண் கொற்றக் குடை பெருக அரசை அளிக்கும் புகழையும் வன்மையையும் உடைய தமிழ் மன்னரான சோழர்களால் ஆளப்பட்ட வளநாட்டில், உலகில் வளர்ந்து ஓங்கும் அழகுகளுக்கெல்லாம் உள்ளுறை இதுவேயாகும் எனக் கூறத்தக்க உறையூர் என்பது பெரும் பழைய ஊராகும்.
3943. அளவில்பெரும் புகழ்நகரம் அதனில்அணி மணிவிளக்கும்
இளவெயிலின் சுடர்ப்படலை இரவொழிய எறிப்பனவாய்க்
கிளரொளிசேர் நெடுவானப் பேர்யாற்றுக் கொடிகெழுவும்
வளரொளிமா ளிகைநிரைகள் மருங்குடைய மறுகெல்லாம்.
தெளிவுரை : எல்லையில்லாத பெரும்புகழையுடைய அந் நகரத்தில் அழகிய மணிகளால் விளக்கம் பெறும் இளவெயில் போன்ற சுடர்களின் தொகுதி இரவுப்பொழுதை இல்லாமல் செய்யுமாறு ஒளி வீசுவனவாக, விளங்கும் ஒளியுடைய நீண்ட வானத்தில் உள்ள பெரிய கங்கை யாற்றிலே கொடிகள் போன்று விளங்கும் ஒளியுடைய மாளிகை வரிசைகள் வீதிகளில் எல்லாம் உடையன.
3944. நாகதலத் தும்பிலத்தும் நானிலத்தும் நலஞ்சிறந்த
போகமனைத் தினுக்குறுப்பாம் பொருவிறந்த வளத்தினவாய்
மாகம்நிறைந் திடமலிந்த வரம்பில்பல பொருள்பிறங்கும்
ஆகரமொத் துளஅளவில் ஆவணவீ திகளெல்லாம்.
தெளிவுரை : மேல் உலகமான விண் உலகத்திலும் கீழ் உலகமான பாதலத்திலும், மண் உலகத்திலும், நன்மையால் சிறந்த போகங்கள் அனைத்துக்கும் உறுப்பான ஒப்பற்ற வளங்களையுடையவனவாய் வானம் அளாவக் குவிந்த எல்லையற்ற பலவகைப்பட்ட பொருள் யாவும் கூடி விளங்கும் உறைவிடத்தைப் போல் அளவில்லாத கடை வீதிகள் எல்லாம் விளங்கின.
3945. பார்நனைய மதம்பொழிந்து பனிவிசும்பு கொளமுழங்கும்
போர்முகவெங் கறையடியும் புடையினம்என் றடையவரும்
சோர்மழையின் விடுமதத்துச் சுடரும்நெடு மின்னோடைக்
கார்முகிலும் பலதெரியா களிற்றுநிரைக் களமெல்லாம்.
தெளிவுரை : தரை நனையும்படி மதநீரைப் பொழிந்து குளிர்ந்த வானம் இடம் கொள்ளும்படி முழங்குகின்ற போர்த் தொழில் வாய்ந்த கொடிய யானைகளும், அவை தம் பக்கத்தில் உள்ள இனம் என்று வந்து கூடும், பொழியும் மழையான மதத்தையும் மின்னலான பட்டத்தையும் உடைய கரிய மேகங்களும் யானைகள் வரிசை பெறக் கட்டும் யானைக் கூடங்களில் எங்கும் பலவாய் வேறு பிரித்தறியப் படாது விளங்கின.
3946. படுமணியும் பரிச்செருக்கும் ஒலிகிளரப் பயில்புரவி
நெடுநிரைமுன் புல்லுண்வாய் நீர்த்தரங்க நுரைநிவப்ப
விடுசுடர்மெய் யுறையடுக்கல் முகில்படிய விளங்குதலால்
தொடுகடல்கள் அனையபல துரங்கசா லைகளெல்லாம்.
தெளிவுரை : ஒலிக்கும் மணிகளும் குதிரைகளின் கனைப்பும் மிகவும் ஒலிக்க, விளக்கமுடைய குதிரைகளின் நீண்ட வரிசையில் புல்லை உண்ணும் அவற்றின் வாய் நீரில் வரும் நுரை அலை விளிம்பில் உள்ள நுரைபோல் விளங்கவும், சுடர்விடும் கவசங்கள் மலைமேல் மேகம் போல் படியவும் விளங்குதலால். பற்பல குதிரைச் சாலைகள் எல்லாம் தோண்டப்பட்ட கடல்களைப் போல் உள்ளன.
3947. துளைக்கைஅயிரா வதக்களிறும் துரங்கஅர சுந்திருவும்
விளைத்தஅமு துந்தருவும் விழுமணியுங் கொடுபோத
உளைத்தகடல் இவற்றொன்று பெறவேண்டி உம்பரூர்
வளைத்ததுபோன் றுஉளதங்கண் மதில்சூழ்ந்த மலர்க்கிடங்கு.
தெளிவுரை : துளையைக் கொண்ட துதிக்கையை யுடைய ஐராவதம் என்னும் யானையும், உச்சைச் சிரவம் என்ற குதிரையும், இலக்குமியும், கடைந்த அமுதமும், கற்பகத்தருவும், சிந்தாமணியும் என்ற இவற்றை எல்லாம் தேவர்கள் எடுத்துக் கொண்டு போனமையால் வருந்திய பாற்கடலானது, இவற்றுள் ஒன்றையேனும் மீளப் பெறுவதை விரும்பித் தேவரின் உலகத்தை வளைத்தது போல் அங்கு மதிலைச் சூழ்ந்த மலர்கள் நிறைந்த அகழிகள் விளங்கின.
3948. காரேறுங் கோபுரங்கள் கதிரேறும் மலர்ச்சோலை
தேரேறும் மணிவீதி திசையேறும் வசையிலணி
வாரேறு முலைமடவார் மருங்கேறு மலர்க்கணைஒண்
பாரேறும் புகழ்உறந்தைப் பதியின்வளம் பகர்வரிதால்.
தெளிவுரை : மேகங்கள் பொருந்துகின்ற கோபுரங்களையும், சூரிய சந்திர இரு கதிர்களும் ஏறும் மலர்கள் நிறைந்த பூஞ்சோலைகளையும், தேர்கள் உலவுகின்ற அழகான வீதிகளையும், எல்லாத் திக்குகளிலும் புகழ் பரந்து செல்கின்ற வசையற்ற அழகுகளையும் உடைமையால், கச்சு அணிந்த கொங்கைகளையுடைய பெண்களிடை ஏறும் மலர் அம்புகளின் செயல் பொருந்திய உலகம் முழுவதும் பரவுகின்ற புகழ் கொண்ட உறையூர் என்ற நகரத்தில் வளமையைச் சொல்வது அரிதாகும்.
3949. அந்நகரில் பாரளிக்கும் அடலரச ராகின்றார்
மன்னுதிருத் தில்லைநகர் மணிவீதி யணிவிளக்கும்
சென்னிநீ டநபாயன் திருக்குலத்து வழிமுதலோர்
பொன்னிநதிப் புரவலனார் புகழ்ச்சோழர் எனப்பொலிவார்.
தெளிவுரை : அந்நகரைத் தலை நகராய்க் கொண்டு உலகத்தைக் காவல் செய்யும் வன்மையுடைய அரசர் ஆனவர், நிலைபெற்ற திருத்தில்லையம்பதியில் அழகிய வீதிகளில் அழகு விளங்கும் பணிகள் செய்யும் சோழரான நீடு விளங்கும் அனபாயச் சோழரின் திருக்குலத்தின் மரபு வழியிலே முதல்வராய் விளங்குபவர்; பொன்னியாறு வளம் செய்யும் சோழ நாட்டைக் காக்கும் மன்னரான புகழ்ச் சோழர் என்னும் பெயராலே சிறந்து விளங்குபவர்.
3950. ஒருகுடைக்கீழ் மண்மகளை உரிமையினில் மணம்புணர்ந்து
பருவரைத்தோள் வென்றியினால் பார்மன்னர் பணிகேட்ப
திருமலர்த்தும் பேருலகும் செங்கோலின் முறைநிற்ப
அருமறைச்சை வந்தழைப்ப அரசளிக்கும் அந்நாளில்.
தெளிவுரை : ஒரு குடையின் கீழ் குளிர் தூங்கும்படி பூமி தேவியைத் தமக்கே உரிமையாய் மணந்து, பருத்த மலை போன்ற தம் தோள் வெற்றியினால் உலகத்தின் பகை மன்னர் தம் ஏவலின் வழிநின்று நடக்கச் செல்வத்தால் செழிப்புப் பொருந்தும் பெரிய உலகம் முழுவதும் தம் செங்கோல் ஆணைப்படி ஒழுகவும், அரிய வைதிக சமயம் தழைத் தோங்கவும் அரசு செய்து வந்தார். அந்நாளில்,
3951. பிறைவளரும் செஞ்சடையார் பேணுசிவா லயமெல்லாம்
நிறைபெரும்பூ சனைவிளங்க நீடுதிருத் தொண்டர்தமைக்
குறையிரந்து வேண்டுவன குறிப்பின்வழி கொடுத்தருளி
முறைபுரிந்து திருநீற்று முதல்நெறியே பாலிப்பார்.
தெளிவுரை : பிறைச்சந்திரன் வளர்வதற்கு இடமான சிவந்த சடையையுடைய சிவபெருமான் விரும்பி வீற்றிருக்கும் சிவன் கோயில்கள் எல்லாவற்றிலும் நிறைவான பெரும் பூசைகள் விளங்கச் செய்து, நீடும் தொண்டர்களைக் குறையிரந்து அடுத்து உபசரித்து அவர்களுக்கு வேண்டியவற்றைக் குறிப்பு அறிந்து தந்து, ஆட்சி செய்து, முதன்மை பெற்ற திருநீற்று நெறியையே பாதுகாக்கலானார்.
3952. அங்கண்இனி துறையுநாள் அரசிறைஞ்ச வீற்றிருந்து
கொங்கரொடு குடபுலத்துக் கோமன்னர் திறைகொணரத்
தங்கள் குல மரபின்முதல் தனிநகராங் கருவூரின்
மங்கலநா ளரசுரிமைச் சுற்றமுடன் வந்தணைந்தார்.
தெளிவுரை : அங்கு இனிமையுடன் இருக்கும் நாளில், மன்னர்கள் அடிவணங்க அரசு வீற்றிருந்து கொங்கு நாட்டவரும் மேற்குத் திக்கில் முதல்வர்களான சிற்றரசர்களும் திறை கொணர்ந்து செலுத்தும் பொருட்டுத் தம் குலத்துக்குரிய ஒப்பில்லாத பெருநகரமான கருவூரிலே மங்கல நாளில் அரசுரிமைச் சுற்றமான அமைச்சர்கள் முதலானவருடன் வந்து அணைந்தார்.
3953. வந்துமணி மதிற்கருவூர் மருங்கணைவார் வானவர்சூழ்
இந்திரன்வந் தமரர்புரி எய்துவான் எனஎய்திச்
சிந்தைகளி கூர்ந்தரனார் மகிழ்திருவா னிலைக்கோயில்
முந்துறவந் தணைந்திறைஞ்சி மொய்யொளிமா ளிகைபுகுந்தார்.
தெளிவுரை : வந்து அழகான மதிலையுடைய கருவூரின் பக்கத்தே சேர்ந்த புகழ்ச் சோழர், வானவர் சூழ இந்திரன் வந்து அமராபதியைச் சேர்வதைப் போல் சேர்ந்து, உள்ளம் மிகவும் களித்துச் சிவபெருமான் மகிழ்வுடன் வீற்றிருக்கும் திருவானிலைத் திருக்கோயிலை முன்னாக வணங்கி மொய்த்து விளங்கும் ஒளியுடைய மாளிகையுள் புகுந்தார்.
3954. மாளிகைமுன் அத்தாணி மண்டபத்தில் மணிபுனைபொன்
கோளரிஆ சனத்திருந்து குடபுலமன் னவர்கொணர்ந்த
ஓளிநெடுங் களிற்றின்அணி உலப்பில்பரி துலைக்கனகம்
நீளிடைவில் விலகுமணி முதனிறையுந் திறைகண்டார்.
தெளிவுரை : அரண்மனையின் முன் அரசிருக்கை மண்டபத்தில் மணிகளால் இயற்றப்பட்ட பொன் அரியணையில் மீது வீற்றிருந்து, மேற்குத் திக்கு நாடுகளின் மன்னர் கொண்டு வந்து செலுத்திய வரிசையாய் நிறுத்தப்பட்ட பெரிய யானைக் கூட்டமும், அளவற்ற குதிரை அணிகளும், எடை நிறைவுடைய பொன் குவியலும், நெடுத் தொலைவில் ஒளி வீசும் மணிகளும் என்னும் இவை முதலான பொருள்கள் நிறைந்த திறைப் பொருள்களைப் பார்த்தருளினார்.
3955. திறைகொணர்ந்த அரசர்க்குச் செயலுரிமைத் தொழிலருளி
முறைபுரியுந் தனித்திகிரி முறைநில்லா முரண்அரசர்
உறையரணம் உளவாகில் தெரிந்துரைப்பீர் எனவுணர்வு
நிறைமதிநீ டமைச்சர்க்கு மொழிந்தயுளி நிகழுநாள்.
தெளிவுரை : திறையைக் கொணர்ந்த மன்னர்க்கு அவ்வவரும் தத்தம் அரசுகளைச் செலுத்தும் உரிமைத் தொழில் நிகழ்த்தி வரும்படி ஆணையிட்டருளி, நம் அரசாங்க முறை செலுத்தும் தனியாட்சியின் வழியில் அடங்கி நிற்காது மாறுபட்டவர் ஒதுங்கி நிற்கும் காவல் இடங்கள் உள்ளன என்றால் அவற்றை அறிந்து சொல்வீராக ! என்று அரசியல் உணர்வுடைய மதியால் நீடிய அமைச்சர்க்குக் கட்டளையிட்டு இங்ஙனம் நிகழும் நாளில்,
3956. சென்றுசிவ காமியார் கொணர்திருப்பள் ளித்தாமம்
அன்றுசித றுங்களிற்றை அறஎறித்து பாகரையுங்
கொன்றஎறி பத்தர்எதிர் என்னையுங்கொன் றருளுமென
வென்றிவடி வாள்கொடுத்துத் திருத்தொண்டில் மிகச்சிறந்தார்.
தெளிவுரை : சிவகாமி ஆண்டார் என்ற அடியவர் சென்று கொணர்ந்த திருப்பள்ளித் தாமத்தை அன்று அவர் கையில் பறித்துச் சிதறிய பட்டத்து யானையைக் கொன்று வீழ்த்திப் பாகர்களையும் கொன்ற எறிபத்தர் எதிரே யானை செய்த இச்செயலுக்கு இவற்றால் போதாது; என்னையும் இதனால் கொன்றளுரும் என்று இரந்து வெற்றியுடைய தம் வடிவாளை நீட்டித் தொண்டின் திறத்திலே மிகச்சிறந்து விளங்கினார்.
3957. விளங்குதிரு மதிக்குடைக்கீழ் வீற்றிருந்து பாரளிக்கும்
துளங்கொளிநீண் முடியார்க்குத் தொன்முறைமை நெறியமைச்சர்
அளந்ததிறை முறைகொணரா அரசனுளன் ஒருவனென
உளங்கொள்ளும் வகையுரைப்பவுறுவியப்பால் முறுவலிப்பார்.
தெளிவுரை : விளங்கும் சந்திரன் போன்ற குடையின் கீழ் வீற்றிருந்து உலகத்தைக் காவல் செய்யும் விளங்கும் ஒளியுடைய முறையையுடைய அவ்வரசர்க்குப் பழைய முறைப்படி நீதி நெறி விளக்கும் அமைச்சர்கள் தங்களின் கட்டளைப்படி அளவுபடுத்திய திறைப் பொருளை முறைப்படி கொணர்ந்து செலுத்தாத மன்னன் ஒருவன் உள்ளான் ! என்று அவர் அறிய உரைத்தனர். மன்னர் மிக்க வியப்புடன் புன்முறுவல் கொண்டு,
3958. ஆங்கவன்யார் என்றருள அதிகன்அவன் அணித்தாக
ஓங்கெயில்சூழ் மலையரணத் துள்ளுறைவான் எனவுரைப்ப
ஈங்குநுமக் கெதிர்நிற்கும் அரணுளதோ படையெழுந்தப்
பாங்கரணந் துகளாகப் பற்றறுப்பீர் எனப்பகர்ந்தார்
தெளிவுரை : அத்தகைய மன்னன் யார்? என்று வினவினர். அவன் அதிகன் என்பவன், ஓங்கும் மதில் சூழ்ந்த மலை அரணத்தின் உள்ளே இருப்பவன் என்று அமைச்சர்கள் சொல்ல, இங்கு உங்களுக்கு எதிராக நிலைத்து நிற்கும் அரணும் உள்ளதோ? படை தொடுத்துச் சென்று அந்தப் பான்மையுடைய அரணைத் தூளாக்கி அவனது நாட்டுக் காவலை அழிப்பீராக ! என்றார்.
3959. அடல்வளவர்ஆணையினால் அமைச்சர்களும் புறம்போந்து
கடலனைய நெடும்படையைக் கைவகுத்து மேற்செல்வார்
படர்வனமும் நெடுங்கிரியும் பயிலரணும் பொடியாக
மிடலுடைநாற் கருவியுற வெஞ்சமரம் மிகவிளைத்தார்.
தெளிவுரை : வன்மையுடைய சோழரின் ஆணைப்படி அமைச்சர்களும் வெளியே வந்து கடலைப் போன்ற பெரிய படைகளை அணிவகுத்து மேலே போர்க்குச் செல்பவர்களாய்ப் படர்ந்து நெருங்கிய காடுகளும் உயர்ந்த மலைகளும் பொருந்திய அரணங்களும் பொடியாகுமாறு வலிய நாற்பெரும் படைகளும் பொருந்த கொடிய போரை மிகவும் செய்தனர்.
3960. வளவனார் பெருஞ்சேனை வஞ்சிமலர் மிலைந்தேற்ப
அளவில்அர ணக்குறும்பில் அதிகர்கோன் அடற்படையும்
உளநிறைவெஞ் சினந்திருகி யுயர்காஞ்சி மலைந்தேற்ப
கிளர்கடல்கள் இரண்டென்ன இருபடையுங் கிடைத்தனவால்.
தெளிவுரை : சோழரின் பெரும்படைகள் வஞ்சி மலர் மாலை சூடிப் போருக்குச் செல்ல, அளவில்லாத அரண்களையுடைய குறுநில மன்னனான அதிகனுடைய வலிய படையும் உள்ளம் நிறைந்த கொடிய சினத்தால் திருகப்பட்டு உயர்ந்த காஞ்சிப் பூச்சூடிப் போருக்கு வர, ஒலிக்கும் பெருங் கடல்கள் இரண்டும் தம்முள் கிளர்ந்து எழுந்தது போல் இருதிறப் படைகளும் கிட்டின.
3961. கயமொடு கயம்எதிர் குத்தின
அயமுடன் அயமுனை முட்டின
வயவரும் வயவரும் உற்றனர்
வியனமர் வியலிட மிக்கதே.
தெளிவுரை : யானைகளுடன் யானைகள் எதிர்த்துக் குத்தின. குதிரைகளுடன் குதிரைகள் எதிர்த்து முட்டின. வீரரும் வீரரும் எதிர்த்தனர். இங்ஙனம் போர்க்களத்தில் போர் மிக்கது.
3962. மலையொடு மலைகள் மலைந்தென
அலைமத அருவி கொழிப்பொடு
சிலையினர் விசையின் மிசைத்தெறு
கொலைமத கரிகொலை யுற்றவே.
தெளிவுரை : மலைகளுடனே மலைகள் எதிர்த்தாற் போல் அலைபோல் பாயும் மதமான அருவி நீர் ஆரவாரத்துடனே மேல் ஏறிய வில் வீரர்கள் செலுத்தும் வேகத்தைவிட மிக்கு அழிவு செய்யும் தன்மையுடைய கொலை செய்யும் யானைகளும் கொலையுண்டன.
3963. சூறை மாருதம் ஒத்தெதிர்
ஏறு பாய்பரி வித்தகர்
வேறு வேறு தலைப்பெய்து
சீறி யாவி செகுத்தனர்.
தெளிவுரை : சூறாவளியான காற்றைப்போல் எதிர் எதிராக ஏறுதலைக் கொண்டு பாய்கின்ற குதிரை வீரர்கள் வெவ்வேறாய் எதிர்த்துச் சினந்து ஒருவரை ஒருவர் கொன்றார்கள்.
3964. மண்டு போரின் மலைப்பவர்
துண்ட மாயிட வுற்றுஎதிர்
கண்ட ராவி கழித்தனர்
உண்ட சோறு கழிக்கவே.
தெளிவுரை : மிகுந்த போரில் எதிர்த்துப் போரைச் செய்பவர் துண்டாகுமாறு பொருந்தி எதிர்த்துத் துண்டம் செய்வர், தாம் எதிர் வீரர்களைக் கொல்ல, உண்ட சோற்றுக்கடனைக் கழிக்கப் போரில் போரிட்டுத் தாமும் பகைவர் செயலால் உயிர் விட்டனர்.
3965. வீடி னாருட லிற்பொழி
நீடு வார்குரு திப்புனல்
ஓடும் யாறென வொத்தது
கோடு போல்வ பிணக்குவை.
தெளிவுரை : வெட்டித் துண்டாக்கப்பட்டு இறந்தவரின் உடலினின்றும் பெருகும் இரத்தம் ஆற்றைப் போல் ஓடியது. இறந்த வீரர்களின் பிணக்குவியல் மலை போல் குவிந்தன.
3966. வானி லாவு கருங்கொடி
மேனி லாவு பருந்தினம்
ஏனை நீள்கழு கின்குலம்
ஆன வூணொ டெழுந்தவே.
தெளிவுரை : வானத்தில் பறக்கின்ற கரிய காக்கைகளும் அவற்றின் மேல் திரியும் பருந்தின் கூட்டமும், மற்றும் நீண்ட கழுகுகளின் வகைகளும் பெரிய உணவான மாமிசத் துண்டங்களுடன் மேல் எழுந்தன.
3967. வரிவிற் கதைசக் கரமுற் கரம்வாள்
சுரிகைப் படைசத் திகழுக் கடைவேல்
எரிமுத் தலைகப் பணம்எல் பயில்கோல்
முரிவுற் றனதுற் றனமொய்க் களமே.
தெளிவுரை : போர்க்களத்தில் கட்டப்பட்ட வில், கதை, சக்கரம், முற்கரம், வாள், சுரிகைப்படை, சத்தி, கழுக்கடை, வேல். எரித்தலை, கப்பணம், ஒளி மிக்க அம்பு என்னும் இவை ஒன்றுடன் ஒன்று தாக்கி முரிவுற்றன.
3968. வடிவேல் அதிகன் படைமா ளவரைக்
கடிசூ ழரணக் கணவாய் நிரவிக்
கொடிமா மரில்நீ டுகுறும் பொறையூர்
முடிநே ரியனார் படைமுற் றியதே.
தெளிவுரை : தீட்டிய வேலை ஏந்திய அதிகனின் படைகள் மடியவும், முடிசூடிய மன்னரான புகழ்ச் சோழரின் படைகள் மலைக்காவல் சூழ்ந்த அரணத்துடன் கணவாய்களையும் இடித்துச் சமதரையாக்கிக் கொடிகளையுடைய மதிலையுடைய குறிஞ்சி நிலத்து ஊரை வளைத்துக் கொண்டன.
3969. முற்றும் பொருசே னைமுனைத் தலையில்
கல்திண் புரிசைப் பதிகட் டழியப்
பற்றுந் துறைநொச் சிபரிந் துடையச்
சுற்றும் படைவீ ரர்துணித் தனரே.
தெளிவுரை : முற்றுகை செய்த புகழ்ச் சோழரின் படை செய்யும் போரின் முன்னே மலையான திண்மையுடைய மதில் சூழ்ந்த ஊரானது காவல் அழிவு அடையவே பற்றாக உடைய நொச்சித் துறையான மதில் காவலானது சிதைவு பட்டு உடைந்து அழியுமாறு அதனைச் சுற்றிய படை வீரர்கள் துண்டித்தனர்.
3970. மாறுற் றவிறற் படைவாள் அதிகன்
ஊறுற் றபெரும் படைநூ ழில்படப்
பாறுற் றஎயிற் பதிபற் றறவிட்டு
ஏறுற் றனன்ஓ டியிருஞ் சுரமே.
தெளிவுரை : பகை கொண்ட வலிய படையையுடைய வாள் ஏந்திய அதிகன் அழிந்து பட்ட பெரும் படைகள் குவியல் குவியலாய் ஆக்கப்பட்டதால், சிதறுண்ட மதில்களையுடைய தன் ஊரைப் பற்றியிருப்பதை விட்டுப் பெரிய காட்டுள் ஓடிப் போய் ஒளிந்து கொண்டான்.
3971. அதிகன் படைபோர் பொருதற் றதலைப்
பொதியின் குவையெண் ணிலபோ யினபின்
நிதியின் குவைமங் கையர்நீள் பரிமா
எதிருங் கரிபற் றினர்எண் ணிலரே.
தெளிவுரை : அதிகளின் படையிலே போர் செய்தலில் வெட்டுப்பட்ட வீரர்களின் தலைக் குவியல்களின் கூட்டம் எண்ணற்றவை அனுப்பப்பட்ட பின்பு, நிதிக் குவியல்களும் பெண்களும் பெரிய குதிரைகளும் போரில் சீறி எதிர்க்கும் யானைகளுமாகிய இவற்றை அளவற்ற படைவீரர்கள் கைக் கொண்டனர்.
3972. அரண்முற் றியெறிந் தஅமைச் சர்கள் தாம்
இரணத் தொழில்விட் டெயில்சூழ் கருவூர்
முரணுற் றசிறப் பொடுமுன் னினர்நீள்
தரணித் தலைவன் கழல்சார் வுறவே.
தெளிவுரை : அரணைமுற்றுகையிட்டு அழித்த அமைச்சர்கள் அந்தப் போர்த் தொழிலை விட்டு நீங்கி, பூமியின் பெருந் தலைவரான புகழ்ச் சோழரின் கழலைச் சேரும் பொருட்டுப் பகைவென்று கொண்ட சிறப்புடனே மதில் சூழ்ந்த கருவூர்ப் பதியை அடைந்தனர்.
3973. மன்னுங் கருவூர் நகர்வா யிலின்வாய்
முன்வந் தகருந் தலைமொய்க் குவைதான்
மின்னுஞ் சுடர்மா முடிவேல் வளவன்
தன்முன் புகொணர்ந் தனர்தா னையுளோர்.
தெளிவுரை : நிலைத்த கருவூர் நகரத்தின் வாயில் முன்னே கொணரப்பட்ட கருந்தலைகள் மிக்க குவியலைப் படையில் தொழில் செய்பவர் விளங்கும் ஒளியையுடைய பெருமுடி சூடிய வேல் ஏந்திய புகழ்ச் சோழரின் முன் கொணர்ந்தனர்.
3974. மண்ணுக் குயிராம் எனுமன் னவனார்
எண்ணிற் பெருகுந் தலையா வையினும்
நண்ணிக் கொணருந் தலையொன் றில்நடுக்
கண்ணுற் றதொர்புன் சடைகண் டனரே.
தெளிவுரை : மண் உலகத்துக்கு உயிர் போன்றவர் எனக் கூறத்தக்க அம்மன்னர் எண்ணால் பெருகிய அத்தலைகள் எல்லாவற்றுள்ளும், காணும் பொருட்டுச் சென்று கொண்டு வரும் தலைகள் நடுவில் ஒன்றிலே, கருதப்படுகின்ற ஒரு சிறிய சடையைக் கண்டார்.
3975. கண்டபொழு தேநடுங்கி மனங்கலங்கிக் கைதொழுது
கொண்டபெரும் பயத்துடன் குறித்தெதிர்சென் றதுகொணர்ந்த
திண்டிறலோன் கைத்தலையிற் சடைதெரியப் பார்த்தருளிப்
புண்டரிகத் திருக்கண்ணீர் பொழிந்திழியப் புரவலனார்.
தெளிவுரை : கண்டபோதே உடல் நடுக்கம் கொண்டு, உள்ளம் கலங்கிக். கைகூப்பித் தொழுது தம்மை மேற்கொண்டு எழுந்த பெரும் பயத்துடனே, அதுவே குறிப்பாக எதிரே சென்று, அதைத் தம்மிடம் எடுத்துக் கொணர்ந்த திண்மையுடைய வலிய வீரன் கைக்கொண்ட அத்தலையில் சடையானது நன்கு விளங்கித் தெரியப் பார்த்து, மன்னரான புகழ்ச் சோழர் தாமரை போன்ற தம் கண்களினின்றும் கண்ணீர் பெருகி வழிய நின்று,
3976. முரசுடைத்திண் படைகொடுபோய் முதலமைச்சர் முனைமுருக்கி
உரைசிறக்கும் புகழ்வென்றி ஒன்றொழிய வொன்றாமல்
திரைசரித்த கடலுலகில் திருநீற்றி நெறிபுரந்தியான்
அரசளித்த படிசால அழகிதென அழிந்தயர்வார்.
தெளிவுரை : முரசுகளையுடைய வன்மையான படைகளைக் கொண்டு சென்று முதன்மை பெற்ற அமைச்சர்கள் போரில் பகைவரை அழித்துப் பிறரால் உயர்வாகப் பேசப்படுகின்ற புகழ் கொண்ட வெற்றி பெற்றது தவிர, நன்மை பொருந்தாமல் அலைதவழும் கடலால் சூழப்பட்ட உலகத்தில் திருநீற்று நெறியை நான் பாதுகாத்து அரசு செய்தது நன்றாக உள்ளது ! என்று சொல்லி.
3977. தார்தாங்கிக் கடன்முடித்த சடைதாங்குந் திருமுடியார்
நீர்தாங்குஞ் சடைப்பெருமான் நெறிதாங்கண் டவரானார்
சீர்தாங்கும் இவர்வேணிச் சிரந்தாங்கி வரக்கண்டும்
பார் தாங்க இருந்தேனோ பழிதாங்கு வேன்என்றார்.
தெளிவுரை : போரில் உரிய மாலையைச் சூடி மன்னருக்கு உரிய கடமையைச் செய்து முடித்த சடையையுடைய இவர், கங்கையைச் சூடிய சடையையுடைய சிவபெருமானின் திருநெறியில் நின்றவர். சிறப்புடைய இவரது சடையைத் தாங்கி வரப் பார்த்தும் இப்பூமியைத் தாங்க இருந்தேனோ ! பழியையே தாங்குவேன் ஆனேன் ! என்று உரைத்தார்.
3978. என்றருளிச் செய்தருளி இதற்கிசையும் படிதுணிவார்
நின்றநெறி யமைச்சர்க்கு நீள்நிலங்காத் தரசளித்து
மன்றில்நடம் புரிவார்தம் வழித்தொண்டின் வழிநிற்ப
வென்றிமுடி என்குமரன் தனைப்புனைவீர் எனவிதித்தார்.
தெளிவுரை : முன் சொன்ன வண்ணம் கூறியருளி, இதற்குத் தீர்வாகப் பொருந்தும் செயலைத் துணிந்தவராய்த் தம் ஆணை வழியிலும் நூல்நெறிவழியிலும் நின்ற அமைச்சர்க்கு, நீண்ட நிலவுலகத்தைக் காவல் செய்து, அம்பலத்துள் கூத்தை இயற்றும் இறைவரின் வழியே வரும் தொண்டின் வழி வழி நிற்கும்படி வெற்றி பொருந்தும் முடியினை என் மகனுக்குச் சூட்டுங்கள், என ஆணையிட்டார்.
3979. அம்மாற்றங் கேட்டழியும் அமைச்சரையும் இடரகற்றிக்
கைம்மாற்றுஞ் செயல்தாமே கடனாற்றுங் கருத்துடையார்
செம்மார்க்கந் தலைநின்று செந்தீமுன் வளர்ப்பித்துப்
பொய்ம்மாற்றுந் திருநீற்றுப் புனைகோலத் தினிற்பொலிந்தார்.
தெளிவுரை : அந்தச் சொல்லைக் கேட்டு மனம் கலங்கும் அமைச்சர்களையும் தக்கவற்றைக் கூறி தேற்றி, அவர்களின் துன்பத்தை நீக்கி, பழியை மாற்றும் செயலைத் தாமே வகுத்துச் செய்யும் கருத்தை உடையவராகிச் சிவனது நெறியிலே நிலைபெற்றுச் செந்தீயை மூட்டி வளர்க்கச் செய்து, பொய்ந்நெறியை மாற்றவல்ல திருநீற்றினைப் புனைந்த கோலத்தில் சிறந்து விளங்கினார்.
3980. கண்டசடைச் சிரத்தினையோர் கனகமணிக் கலத்தேந்திக்
கொண்டுதிரு முடிதாங்கிக் குலவும்எரி வலங்கொள்வார்
அண்டர்பிரான் திருநாமத் தஞ்செழுத்து மெடுத்தோதி
மண்டுதழற் பிழம்பினிடை மகிழ்ந்தருளி யுள்புக்கார்.
தெளிவுரை : தாம் பார்த்த அந்தச் சடைத்தலையினை மணிகள் பதிக்கப்பட்ட பொற்கலத்தில் ஏந்திக் கொண்டு திருமுடியில் தாங்கி ஒளிரும் தீயை வலம் வருவாராகி, வானவர் தலைவரான சிவபெருமானின் திருப்பெயரான திருவைந்தெழுத்தையும் ஓதிக்கொண்டு, செறிந்து எழுகின்ற தீப்பிழம்பினுள் மகிழ்ச்சி கொண்டு உள்ளே புகுந்தருளினார்.
3981. புக்கபொழு தலர்மாரி புவிநிறையப் பொழிந்திழிய
மிக்கபெரு மங்கலதூ ரியம்விசும்பில் முழக்கெடுப்பச்
செக்கர்நெடுஞ் சடைமுடியார் சிலம்பலம்பு சேவடியின்
அக்கருணைத் திருநிழற்கீழ் ஆராமை யமர்ந்திருந்தார்.
தெளிவுரை : இங்ஙனம் புகழ்ச் சோழர் தீயுள் புகுந்த போது, தெய்வப் பூமழை மண்ணுலகம் முழுவதும் நிறையப் பொழிந்தது. மிக்க பெரிய மங்கல வாத்தியங்கள் வானத்தில் முழங்கின. அந்திச் செவ்வானம் போன்ற நீண்ட சடையினையுடைய சிவ பெருமானின் அந்தப் பெருங்கருணையான திருவடி நிழலில் நீங்காத நிலையில் அவர் அமர்ந்திருந்தார்.
3982. முரசங்கொள் கடற்றானை மூவேந்தர் தங்களின்முன்
பிரசங்கொள் நறுந்தொடையல் புகழ்ச்சோழர் பெருமையினைப்
பரசுங்குற் றேவலினால் அவர்பாதம் பணிந்தேத்தி
நரசிங்க முனையர்திறம் நாமறிந்த படியுரைப்பாம்.
தெளிவுரை : வெற்றி முரசங்கள் ஒலிக்கின்ற கடல் போன்ற படையையுடைய முடி மன்னர்கள் மூவருள்ளும் முதன்மையான தேன் பொருந்திய மணம் கொண்ட மாலை சூடிய புகழ்ச் சோழரின் பெருமையைப் போற்றும் குற்றேவல் செய்யும் வகையால், அவர்திருவடிகளை வணங்கித்துதித்து, அத்துணையாலே, நரசிங்க முனையரைய நாயனாரின் அடிமைப் பண்பை யாம் அறிந்த வகையினாலே இனி உரைப்போம்.
புகழ்ச் சோழ நாயனார் புராணம் முற்றிற்று.
48. நரசிங்கமுனையரைய நாயனார் புராணம்
திருமுனைப்பாடி நாட்டில் குறுநில மன்னர் நரசிங்க முனையரையர் என்பவர் தோன்றினார். அவர் அறநெறி பிறழாது ஆட்சி செய்தவர். சிவனடியார்க்குத் தொண்டு செய்வதையே பெரும் பேறாக எண்ணியவர். அவர் திருவாதிரை நாளில் அடியார்களை உபசரிப்பதில் பெரு நாட்டம் உடையவர்.
ஒருகால் திருவாதிரை நாளில் அடியார்க்குப் பொன்னை அளிக்கும் போது காமக்குறியுடன் கூடிய ஒருவர் சைவக் கோலத்துடன் வந்தார். அவரை அங்கிருந்த அடியார்கள் வெறுத்து ஒதுக்கினர். அதைக் கண்ட நரசிங்க முனையர் பெருந்துன்பம் கொண்டார். அதனால் அவர் அந்த அடியார் முன் சென்று பாராட்டி உபசாரம் செய்தார். சிவனடியார் உலக ஒழுக்கம் அற்றவராயினும் அவரை இகழ்பவர் நரகத்தை அடைவர் என்பதை உணர்த்த அந்த அடியார்க்கு மற்றவர்க்கு அளித்ததை விட இரண்டு மடங்கு பொன்னை அளித்தார். இத்தகைய தொண்டைச் செய்த அவர் இறுதியில் வீடுபேற்றைப் பெற்றார்.
3983. கோடாத நெறிவிளங்கும் குடிமரபின் அரசளித்து
மாடாக மணிகண்டர் திருநீறே மனங்கொள்வார்
தேடாத பெருவளத்தில் சிறந்ததிரு முனைப்பாடி
நாடாளும் காவலனார் நரசிங்க முனையரையர்.
தெளிவுரை : செங்கோல் நீதியினின்றும் தவறாத நெறியில் விளங்கும் குறுநில மன்னர் மரபில் வந்து ஆண்டு, பெருஞ் செல்வமாகத் திருநீலகண்டரின் திருநீற்றையே மனத்தில் கொள்பவர், தேடிப் பெற வேண்டாது இயல்பில் பெருவளங்களில் சிறந்த திருமுனைப்பாடி நாட்டை ஆளும் மன்னர் நரசிங்க முனையரையர் என்ற பெயர் கொண்டவர் ஆவார்.
3984. இம்முனையர் பெருந்தகையார் இருந்தரசு புரந்துபோய்த்
தெம்முனைகள் பலகடந்து தீங்குநெறிப் பாங்ககல
மும்முனைநீள் இலைச்சூல முதற்படையார் தொண்டுபுரி
அம்முனைவர் அடியடைவே அரும்பெரும்பேறு எனஅடைவார்.
தெளிவுரை : இந்த முனையர் மரபின் பெருந்தகையினரான மன்னர், தம் நகரத்தில் இருந்து அரசளித்துப் பகைவரின் போர்கள் பலவற்றையும் வென்று தீமையான நெறிகளின் செயல்கள் யாவும் நீங்க மூன்று தலைகளையுடைய நீண்ட இலைவடிவான சூலமான முதன்மை பெற்ற படையை யுடைய இறைவரின் தொண்டைச் செய்கின்ற அந்த முதல்வர்களாகும் அடியவர்களின் திருவடிகளை அடைவதே அரும் பெரும் பேறு என அடைவாராய்.
3985. சினவிடையார் கோயில்தொறும் திருச்செல்வம் பெருக்குநெறி
அனவிடையார் உயிர்துறக்க வருமெனினும் அவைகாத்து
மனவிடையா மைத்தொடையல் அணிமார்பர் வழித்தொண்டு
கனவிடையா கிலும்வழுவாக் கடனாற்றிச் செல்கின்றார்.
தெளிவுரை : சினமுடைய காளையை யுடைய இறைவரின் கோயில்கள் தோறும் திருச்செல்வங்களைப் பெருகச் செய்யும் நெறியில் அரிய உயிரைவிடவந்தாலும் அந்நெறிகளைக் காவல் செய்து, பாசிமணி வடங்களிடையே ஆமைவோட்டை அணிந்த மார்பையுடைய இறைவரின் வழித் தொண்டைக் கனவிலும் தவறாது கடமை மேற்கொண்டு செய்து வருபவராய் விளங்கினார்.
3986. ஆறணிந்த சடைமுடியார்க் காதிரைநாள் ஒறும்என்றும்
வேறுநிறை வழிபாடு விளங்கியபூ சனைமேவி
நீறணியும் தொண்டர்அணைந் தார்க்கெல்லாம் நிகழ்பசும்பொன்
நூறுகுறை யாமல்அளித் தின்னமுதும் நுகர்விப்பார்.
தெளிவுரை : கங்கையாற்றை அணிந்த சடையுடைய முடியினரான இறைவர்க்குத் திருவாதிரை நாள்தோறும் நித்தியமாக வேறாக நிறைந்த வழிபாடு விளங்கிய பூசையைச் செய்து, திருநீறு அணிந்த தொண்டராய் அன்று வந்து சேர்ந்தவர்க்கெல்லாம் குறையாமல் நூறு பசும் பொன்னைத் தந்து இனிய திருவமுதும் ஊட்டுவாராகி விளங்கினார்.
3987. ஆனசெயல் முறைபுரிவார் ஒருதிருவா திரைநாளில்
மேன்மைநெறித் தொண்டர்க்கு விளங்கியபொன் னிடும்பொழுதில்
மானநிலை யழிதன்மை வருங்காமக் குறிமலர்ந்த
ஊனநிகழ் மேனியராய் ஒருவர்நீ றணிந்தணைந்தார்.
தெளிவுரை : அத்தகைய செயலை மேற்கொண்டு முறையாய்ச் செய்பவரான நாயனார் திருவாதிரை நாளில், மேன்மை பொருந்திய சைவ நெறி அடியார்களுக்குப் பொன்னைக் கொடுக்கும் போது, மான நிலை அழியும் தன்மையுடைய காமக்குறிகள் தெரியும் குற்றம் பொருந்திய மேனியுடையவராய் ஒருவர் திருநீற்றை அணிந்து வந்து சேர்ந்தார்.
3988. மற்றவர்தம் வடிவிருந்த படிகண்டு மருங்குள்ளார்
உற்றகஇழ்ச் சியராகி ஒதுங்குவார் தமைக்கண்டு
கொற்றவனார் எதிர்சென்று கைகுவித்துக் கொடுபோந்தப்
பெற்றியினார் தமைமிகவுங் கொண்டாடிப் பேணுவார்.
தெளிவுரை : அவ்வாறு வந்தவரின் இருந்த நிலையைப் பார்த்துப் பக்கத்தில் இருந்தவர்கள் இகழ்ச்சியோடும் அவரை அணுகாது அருவருத்து ஒதுங்கினர். அதைக் கண்டு, அரசர் அவர் எதிரே போய்க் கைகுவித்து வணங்கி அழைத்துக் கொண்டு வந்து அத்தன்மையுடைய அவரை மிகவும் பாராட்டி உபசரிக்கலானார்.
3989. சீலமில ரேயெனினும் திருநீறு சேர்ந்தாரை
ஞாலம்இகழ்ந் தருநரகம் நண்ணாமல் எண்ணுவார்
பாலணைந்தார் தமக்களித்த படியிரட்டிப் பொன்கொடுத்து
மேலவரைத் தொழுதினிய மொழிவிளம்பி விடைகொடுத்தார்.
தெளிவுரை : உலகியல் நெறியான ஒழுக்கம் இல்லாதவாரானாலும் திருநீற்றைச் சார்ந்த அடியவரை உலகத்தவர் இகழ்ந்து அதனால் கொடிய நரகத்தை அடையாமல் உய்ய வேண்டும் எனச் சிந்திப்பவராய், அங்கு வந்தவர்க்களுக்குக் கொடுத்ததைவிட இரண்டு மடங்காக இரு நூறு பொன்னைத் தந்து இன்சொற்களைக் கூறி உபசரித்து விடை தந்து அனுப்பினார்.
3990. இவ்வகையே திருத்தொண்டின் அருமைநெறி எந்நாளும்
செவ்வியஅன் பினல்ஆற்றித் திருந்தியசிந் தையராகிப்
பைவளர்வாள் அரவணிந்தார் பாதமலர் நிழல்சேர்ந்து
மெய்வகைய வழியன்பின் மீளாத நிலைபெற்றார்.
தெளிவுரை : இங்ஙனம் திருத்தொண்டின் அரிய நெறியை எந்நாளும் செம்மையான அன்பால் செயலாற்றியிருந்து திருத்தமான சிந்தனை யுடையவராய் இருந்து, நச்சுப்பை வளரும் கொடிய பாம்பை அணிந்த இறைவரின் திருவடி நிழலை அடைந்து உண்மையான வழியில் வரும் அன்பினால் மீளா நிலையாம் வீடுபேற்றை அந்நாயனார் அடைந்தார்.
3991. விடநாகம் அணிந்தபிரான் மெய்த்தொண்டு விளைந்தநிலை
உடனாகும் நரசிங்க முனையர்பிரான் கழலேத்தித்
தடநாக மதஞ்சொரியத் தனஞ்சொரியுங் கலஞ்சேரும்
கடல்நாகை அதிபத்தர் கடல்நாகைக் கவினுரைப்பாம்.
தெளிவுரை : நஞ்சையுடைய பாம்பை அணிந்த சிவபெருமானின் மெய்த்தன்மையுடைய தொண்டு வழுவாது விளைந்த நிலையில் உடனாக நிகழ்ந்த வாழ்வுடைய நரசிங்க முனையரையரின் கழல்களை வணங்கிப், பெரிய யானைகள் மதநீரைச் சொரியச் செல்வங்களைப் பொழியும் மரக்கலங்கள் சேரும் கடல் துறைமுகப்பட்டினமான நாகை நகர் வாழ் அதிபத்த நாயனாரின் நியமமான தொண்டின் இயல்பைச் சொல்லப் புகுகின்றோம்.
நரசிங்க முனையரைய நாயனார் புராணம் முற்றிற்று.
49. அதிபத்த நாயனார் புராணம்
சோழ நாட்டில் உள்ள நாகப்பட்டினத்தின் கடற்கரை ஓரத்தில் உள்ள நுளைப்பாடியில் பரதவர் குலத்தில் அதிபத்தர் என்பவர் தோன்றினார். அவர் பரவர்க்குத் தலைவர். மற்றவர் அவர்க்கு மீன் குவியல்களை அளிப்பர். அவர் அவற்றுள் சிறந்த ஒருமீனை இது சிவபெருமானுக்கு என்று கடலில் விட்டு விடுவார். ஒருநாளில் ஒரு மீனே வந்தால் அதையும் இறைவர்க்கே விட்டுவிடுவார். பல நாட்கள் ஒரு மீனே கிடைத்தது. தயங்காமல் அதைக் கடலில் விட்டார். எனவே பசியால் அவரது திருமேனி தளர்ந்தது.
ஒருநாள் பொன்னாலும் மணியாலும் ஆன மீன் ஒன்று வலையில் அகப்பட்டது. அதை வலைஞர் அதிபத்தரிடம் அளித்தனர். அதைக் கண்டு களிப்படைந்த அவர் இஃது இறைவர்க்கே ஆகும் என அதையும் கடலில் விடுத்தார். இத்தகைய தொண்டினால் இறுதியில் அவர் சிவனடியைச் சேர்ந்தார்.
3992. மன்னி நீடிய செங்கதி ரவன்வழி மரபில்
தொன்மை யாம்முதற் சோழர்தந் திருக்குலத் துரிமைப்
பொன்னி நாடெனுங் கற்பகப் பூங்கொடி மலர்போல்
நன்மை சான்றது நாகைப்பட் டினத்திரு நகரம்.
தெளிவுரை : நிலைபெற்று நீடி வருகின்ற கதிரவன் வழியில் வந்த மரபான பழமையுடைய முதன்மை பெற்ற சோழர்களின் குலத்திற்கு உரிமையுடைய காவிரிநாடு என்னும் கற்பகப் பூங்கொடியில் மலர்ந்த மலரைப் போன்று நாகப்பட்டினம் என்ற நகரம் நன்மையினால் மேன்மை உடையதாகும்.
3993. தாம நித்திலக் கோவைகள் சரிந்திடச் சரிந்த
தேம லர்க்குழல் மாதர்பந் தாடுதெற் றிகள்சூழ்
காமர் பொற்சுடர் மாளிகைக் கருங்கடல் முகந்த
மாமு கிற்குலம் மலையென ஏறுவ மருங்கு.
தெளிவுரை : முத்து மாலைகளின் கோவை சரியத் தேன் பொருந்திய மலர்களைச் சூடிய சரிந்த கூந்தலையுடைய மங்கையர்கள் பந்தாடும் மேடைகளைக் கொண்ட விரும்பத் தக்க பொன் ஒளி மின்னும் மாளிகையான இவை மலை என்று மயங்கிக் கரிய கடல் நீரை உட்கொண்ட கரிய மேகக் கூட்டங்கள் பக்கத்தே மேல் ஏறும்.
3994. பெருமை யில்செறி பேரொலி பிறங்கலின் நிறைந்து
திரும கட்குவாழ் சேர்விட மாதலின் யாவும்
தருத லில்கடல் தன்னினும் பெரிதெனத் திரைபோல்
கரிப ரித்தொகை மணிதுகில் சொரிவதாங் கலத்தால்.
தெளிவுரை : பெருமையால் மிக்க பெரியஓசை நிறைததாலும் நிறைந்த இலக்குமி வாழும் உறைவிடாமாதலாலும், வேண்டும் பொருள்களை எல்லாம் அளித்தாலும், கடலை விடப் பெரியது என்று சொல்லுமாறு விளங்கி, அலைபோல் யானைகள், குதிரைத் தொகைகள், மணிகள், ஆடைகள் என்ற இவை முதலியன பொருள்களை மரக்கலங்களில் அந்த நகரம் கொணர்ந்து சொரியும்.
3995. நீடு தொல்புகழ் நிலம்பதி னெட்டினும் நிறைந்த
பீடு தங்கிய பலபொருள் மாந்தர்கள் பெருகிக்
கோடி நீள்தனக் குடியுடன் குவலயங் காணும்
ஆடி மண்டலம் போல்வதவ் வணிகிளர் மூதூர்.
தெளிவுரை : பெரும் புகழையுடைய பதினெட்டு நிலங்களுள்ளும் நிறைந்த பெருமையுடைய பல பொருள்களைக் கொண்ட மக்களும் சேர்ந்து பெருகி வாழ்வதாலும் கோடியளவினும் பெருகிய செல்வக்குடி மக்களுடன் விளங்குவதாலும் அந்த அழகுடைய பழைய நகரம், இவ்வுலகம் முழுவதும் தனக்குள் பிரதி பிம்பமாய் அடங்கக் காணப்படுகின்ற கண்ணாடி மண்டலம் போன்றதாகும்.
3996. அந்நெ டுந்திரு நகர்மருங் கலைகடல் விளிம்பில்
பன்னெ டுந்திரை நுரைதவழ் பாங்கரின் ஞாங்கர்
மன்னு தொன்மையின் வலைவளத் துணவினில் மலிந்த
தன்மை வாழ்குடி மிடைந்தது தடநுளைப் பாடி.
தெளிவுரை : அந்தப் பெரிய நகரத்தின் பக்கத்தில் அலைகளையுடைய கடல் விளிம்பில் பல நீண்ட அலைகளின் நுரை வந்து தவழ்வதற்கு இடமான பக்கங்களை அடுத்து நிலையான பழைமையான வலைவீசி மீன் பிடிக்கும் தொழிலால் பெறும் வளமையுடைய மீன் உணவு பெருகிய இயல்பினால் வாழ்வு பெற்ற பரதவர் குடிகள் நெருங்கியுள்ளது பரதவர் சேரி.
3997. புயல ளப்பில வெனவலை புறம்பணை குரம்பை
அயல ளப்பன மீன்விலைப் பசும்பொனி னடுக்கல்
வியல ளக்கரில் விடுந்திமில் வாழ்நர்கள் கொணர்ந்த
கயல ளப்பன பரத்தியர் கருநெடுங் கண்கள்.
தெளிவுரை : மேகங்களைப் பரப்பியதைப் போல் வலைகள் வெளியே உலர வைக்கப்பட்ட சிறிய குடிகளின் பக்கத்தில் மீன் விலைக்குக் கொள்வோர் கொணர்ந்த பசும் பொன்னின் குவியல்கள் அளவிடப்படுவன பரந்த கடலில் செலுத்தும்மீன் படகுகளின் தொழிலால் வாழும் பரதவர் கொணர்ந்த கயல் மீன்களை (அக்கயல் மீன்களை அவரிடம் பெற்றுக் கொள்ளும்) பரத்தியரின் கருமையான நீண்ட கண்கள் அவை இவ்வளவு விலை பெறும் என்பதைக் காட்சியால் அளந்து விடுவன.
3998. உணங்கல் மீன்கவர் வுறுநசைக் குருகுடன் அணைந்த
கணங்கொள் ஓதிமங் கருஞ்சினைப் புன்னையங் கானல்
அணங்கு நுண்ணிடை நுளைச்சியர் அணிநடைக் கழிந்து
மணங்கொள் கொம்பரின் மருங்குநின்று இழியல மருளும்.
தெளிவுரை : உலர்தலையுடைய மீன்களைக் கவர்கின்ற ஆசையுடைய பறவைகளுடன் கூட வந்த கூட்டமான அன்னப் பறவைகள், நுட்பமான இடையை யுடைய நுளைச்சியரின் அழகிய நடைக்குத் தோற்றுக் கரிய கொம்புகளையுடைய புன்னைக் காட்டில் மணமுடைய அப்புன்னைக் கொம்புகளில் பக்கத்தினின்று இறங்காமல் மருண்டிருக்கும்.
3999. வலைநெ டுந்தொடர் வடம்புடை வலிப்பவர் ஒலியும்
விலைப கர்ந்துமீன் குவைகொடுப் பவர்விளி ஒலியும்
தலைசி றந்தவெள் வளைசொரி பவர்தழங் கொலியும்
அலைநெ டுங்கடல் அதிரொலிக் கெதிரொலி யனைய.
தெளிவுரை : வலைஞரின் நீண்ட தொடர்புகளையுடைய வடங்களை இழுத்துச் செல்பவரின் ஒலியும், விலையை எடுத்துக் கூறி மீன் குவியலைக் கொடுப்பவர் வாங்குவோரை அழைக்கின்ற ஒலியும், மிகச் சிறந்த வெண்மையான சங்குகளைக் கொண்டு குவிப்பவர்களின் மிகுந்த ஒலியும், அலைகளையுடைய பெரிய கடலின் ஒலிக்கு எதிர் ஒலி போன்று விளங்குவன.
4000. அனைய தாகிய அந்நுளைப் பாடியில் அமர்ந்து
மனைவ ளம்பொலி நுளையர்தங் குலத்தினில் வந்தார்
புனையி ளம்பிறை முடியவர் அடித்தொண்டு புரியும்
வினைவி ளங்கிய அதிபத்தர் எனநிகழ் மேலோர்.
தெளிவுரை : அத்தகைய இயல்புடைய அந்த நுளைப் பாடியில் வாழ்ந்து இல்வாழ்வின் வளங்களால் விளங்கும் நுளையர் குலத்தில் தோன்றியவர், இளம் பிறைச் சந்திரனைச் சூடிய முடியையுடைய இறைவரின் அடித் தொண்டு செய்யும் செயலில் விளங்கி அதிபத்தர் என்று பெயர் பெற்ற மேன்மையை உடையவர்.
4001. ஆங்கு அன்பர்தாம் நுளையர்தந் தலைவராய் அவர்கள்
ஏங்கு தெண்டிரைக் கடலிடைப் பலபட இயக்கிப்
பாங்கு சூழ்வலை வளைத்துமீன் படுத்துமுன் குவிக்கும்
ஓங்கு பல்குவை யுலப்பில வுடையராய் உயர்வார்.
தெளிவுரை : அந்த அதிபத்தர் என்னும் நாயனார் நுளையரின் தலைவராகி அவர்கள் ஒலிக்கின்ற தெளிந்த அலையையுடைய கடலில் பலவாறு தொழில் செய்து, பக்கங்களில் சூழும் வலைகளை வளைத்து வீசி மீன்களைப் பிடித்துக் கொண்டு வந்து முன் குவிக்கும் உயர்ந்த பலவகை மீன் குவைகள் அளவற்றவை உடையவராய் உயர்ந்தவராய் விளங்கினார்.
4002. முட்டில் மீன்கொலைத் தொழில்வளத் தவர்வலை முகந்து
பட்ட மீன்களில் ஒருதலை மீன்படுந் தோறும்
நட்ட மாடிய நம்பருக் கெனநளிர் முந்நீர்
விட்டு வந்தனர் விடாதஅன் புடன்என்றும் விருப்பால்.
தெளிவுரை : குறையாத மீன்களைப் பிடித்து அக்கொலைத் தொழிலின் வளத்தையுடைய நுளையர். வலைகளினால் வாரி எடுப்பதால் அகப்பட்ட மீன்களில், ஒரு தலைமையான மீன் படுந்தோறும், இஃது ஐந்து தொழில் அருட்கூத்தாடுகின்ற ஐயருக்காகுக ! என்று, இடையறாத அன்பினால், விருப்புடன், குளிர்ந்த கடலிடத்தில் நாடோறும் விட்டு வந்தார்.
4003. வாகு சேர்வலை நாள்ஒன்றில் மீனொன்று வரினும்
ஏக நாயகர் தங்கழற் கெனவிடும் இயல்பால்
ஆகு நாள்களில் அனேகநாள் அடுத்தொரு மீனே
மேக நீர்படி வேலையில் படவிட்டு வந்தார்.
தெளிவுரை : ஒழுங்கான வலையில் ஒரு நாளில், ஒரு மீனே வரினும், முழு முதல்வரான இறைவரின் திருவடிக்கு என்று விடுகின்ற இயல்பாகிய நாள்களில், பல நாட்கள் தொடர்ந்து ஒரு மீனே மேகம் படியும் கடலில் கிடைக்க அதனை, அவர், இறைவருக்காக ! என்றே கடலில் விட்டு வந்தார்.
4004. மீன்வி லைப்பெரு குணவினில் மிகுபெருஞ் செல்வம்
தான்ம றுத்தலின் உணவின்றி அருங்கிளை சாம்பும்
பான்மை பற்றியும் வருந்திலர் பட்டமீன் ஒன்று
மான்ம றிக்கரத் தவர்கழற் கெனவிட்டு மகிழ்ந்தார்.
தெளிவுரை : மீனை விற்பதனால் பெரும் உணவுப் பண்டங்களால் மிக்க பெருஞ்செல்வம் இவ்வாறு சுருங்கியதால், தம் அரிய உறவினர் உணவில்லாமல் பசியால் வருந்தும் தன்மை பற்றியும் அவர் வருந்தவில்லை. வலையில் அகப்பட்ட ஒரு மீனையும் மான்கன்றைக் கையில் ஏந்திய இறைவரின் திருவடிக்கு என விட்டு மகிழ்ந்தார்.
4005. சால நாள்கள்இப் படிவரத் தாம்உண வயர்த்துக்
கோல மேனியுந் தளரவுந் தந்தொழில் குறையாச்
சீல மேதலை நின்றவர் தந்திறந் தெரிந்தே
ஆல முண்டவர் தொண்டர்அன் பெனும்அமு துண்பார்.
தெளிவுரை : பல நாட்கள் இவ்வாறு நிகழ்ந்தது. நிகழ, தாம் உணவு மறந்து வாடித் தம் அழகிய திருமேனியும் தளர்ச்சியுடைய, தம் தொண்டினின்றும் குறைவுபடாத அந்த ஒழுக்கத்தில் சலியாமல் ஒழுகியவரின் இயல்பை அறிந்து நஞ்சையுண்ட இறைவர் இத்தொண்டரின் அன்பு என்கின்ற அமுதத்தை உண்பாராய்.
4006. ஆன நாள்ஒன்றில் அவ்வொரு மீனுமங் கொழித்துத்
தூநி றப்பசுங் கனகநற் சுடர்நவ மணியால்
மீனு றுப்புற அமைத்துல கடங்கலும் விலையாம்
பான்மை அற்புதப் படியதொன் றிடுவலைப் படுத்தார்.
தெளிவுரை : முன் சொன்ன வண்ணம் ஆன நாள் ஒன்றில், அந்த ஒரு மீனும் அங்கு வலையில் அகப்படாது போகச் செய்து, தூய நிறமுடைய பசும் பொன்னாலும் ஒளியுடைய மணிகளாலும் மீன் உறுப்புகள் பொருந்தும்படி அமைத்து, உலகங்களை எல்லாம் விலை மதிக்கப்படும் தன்மையில் அற்புதத் தன்மை கொண்ட ஒரு மீன், வீசிய வலையில் அகப்படுமாறு இறைவர் செய்தனர்.
4007. வாங்கு நீள்வலை அலைகடற்கரையில்வந் தேற
ஓங்கு செஞ்சுடர் உதித்தென வுலகெலாம் வியப்பத்
தாங்கு பேரொளி தழைத்திடக் காண்டலும் எடுத்துப்
பாங்கு நின்றவர் மீன்ஒன்று படுத்தனம் என்றார்.
தெளிவுரை : மீனை இழுத்த நீண்ட வலையானது கடற் கரையில் வந்து ஏற, அதில் அகப்பட்ட மீன் கதிரவன் தோன்றியதைப் போல் உலகம் எல்லாம் அதிசயிக்கும்படி அமைந்த பெரிய ஒளி வீசிக் காணப்படவும், அதனை எடுத்து அருகே நின்ற பரதவர்கள் மீன் ஒன்றைப் பிடித்தோம் என்று கூறினார்.
4008. என்று மற்றுளோர் இயம்பவும் ஏறுசீர்த் தொண்டர்
பொன் திரட்சுடர் நவமணி பொலிந்தமீ னுறுப்பால்
ஒன்று மற்றிது என்னையா ளுடையவர்க் காகும்
சென்று பொற்கழல் சேர்கெனத் திரையொடுந் திரித்தார்.
தெளிவுரை : என்று மேற்கண்ட வண்ணம் பரதவர் உரைக்கவும், அதைக் கேட்ட மிகுகின்ற சிறப்பையுடைய தொண்டரான அதிபத்தர் பொன்னும் தொகுதியான கதிரையுடைய நவமணிகளும் விளங்கும் மீன் உறுப்புகளினால் பொருந்தும் வேறான இது என்னை ஆட்கொள்கின்ற இறைவருக்கே ஆகும் ! அவரது பொற்கழலை இது சேர்வதாகும் ! என்று கடல் அலையில் எடுத்து வீசினார்.
4009. அகில லோகமும் பொருள்முதற் றாம்எனும் அளவில்
புகலு மப்பெரும் பற்றினைப் புரையற எறிந்த
இகலில் மெய்த்திருத் தொண்டர்முன் இறைவர்தாம் விடைமேல்
முகில்வி சும்பிடை யணைந்தனர் பொழிந்தனர் முகைப்பூ.
தெளிவுரை : எல்லா வுலகங்களும் பொருளையே முதலாக வுடையது என்று கூறும் அந்தப் பெரிய வலிய பொன்னாசை என்னும் பெரும்பற்றைக் குற்றம் இல்லாது நீங்கிய ஒப்பில்லாத மெய்த்தொண்டர் முன்னே இறைவர், காளையூர்தியின் மேல், மேகம் தவழும் வானத்தில் எழுந்தருளினார். அப்போது தேவர்கள் கற்பகப் பூமழை சொரிந்தனர்.
4010. பஞ்ச நாதமும் எழுந்தன அதிபத்தர் பணிந்தே
அஞ்ச லிக்கரம் சிரமிசை யணைத்துநின் றவரை
நஞ்சு வாண்மணி மிடற்றவர் சிவலோகம் நண்ணித்
தஞ்சி றப்புடை அடியர்பாங் குறத்தலை யளித்தார்.
தெளிவுரை : அப்போது ஐந்து வகைப்பட்ட தேவ வாத்தியங்களும் எழுந்து ஒலித்தன. நிலமுற விழுந்து வணங்கி எழுந்து குவித்த கைகளைத் தலைமேல் கொண்டு நின்ற அதிபத்தரைச் சிவலோகத்தைச் சேர்ந்து அழகிய சிறப்புடைய அடியார்களுடன் இருக்கும்படி நஞ்சுண்ட ஒளியையுடைய கழுத்தையுடைய இறைவர் அருள் செய்தார்.
4011. தம்ம றம்புரி மரபினில் தகும்பெருந் தொண்டு
மெய்ம்மை யேபுரி அதிபத்தர் விளங்குதாள் வணங்கி
மும்மை யாகிய புவனங்கள் முறைமையிற் போற்றும்
செம்மை நீதியார் கலிக்கம்பர் திருத்தொண்டு பகர்வாம்.
தெளிவுரை : கொலைத் தொழில் செய்யும் தம் மரபுக்கு ஏற்றபடி நின்றவாறே தகுதியான பெரிய தொண்டை உண்மையில் தவறாத அதிபத்த நாயனாரின் விளக்கம் செய்யும் திருவடியை வணங்கி, அதன் துணையால் உலகம் மூன்றும் முறையாகப்போற்றுகின்ற செம்மையுடைய நீதியையுடைய கலிக்கம்ப நாயனாரின் தொண்டைப் புகழ்வோம்.
அதிபத்த நாயனார் புராணம் முற்றிற்று.
50. கலிக்கம்ப நாயனார் புராணம்
நடு நாட்டில் உள்ள பெண்ணாகரத்தில் வணிகர் குலத்தில் கலிக்கம்பர் என்பவர் தோன்றினார். அவர் சிவ பெருமானுக்குத் தொண்டு செய்பவர். சிவலிங்கத்தை வழிபடினும் சிவனடியார்களை வழிபடாது போயின் அவ்வழிபாடு சற்றும் பயன்படாது எனச் சிவாகமம் கூறும் ஆதலால் அவர் சிவனடியாரை உபசரித்து வழிபட்டு வந்தார்.
ஒருநாள் கலிக்கம்பர் இல்லத்துக்கு அடியார்கள் சென்றனர். அவருடைய மனைவியார் நீர் வார்க்க அடியார்களின் அடிகளை நாயனார் விளக்கினார். அவர்களுள் ஓர்அடியார் முன்பு அந்நாயனார் இல்லத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர் ஆதலால், அந்த அம்மையார் அவரது அடிகளை விளக்க நீர் வார்க்கவில்லை. இதைத் தம் கணவருக்கு அந்த அம்மையார் உரைத்தார். அவருக்கு மிக்க சினம் உண்டாகியது. ஒருவாளை எடுத்து மனைவியின் கையை வெட்டினார். பின் தாமே அவர்தம் அடியை நீர் வார்த்து விளக்கினார். இத்தகைய தொண்டு செய்த அவர் இறுதியில் இறைவரின் திருவடிகளை அடைந்தார்.
4012. உரிமை யொழுக்கந் தலைநின்ற
வுயர்தொல் மரபின் நீடுமனைத்
தரும நெறியால் வாழ்குடிகள்
தழைத்து வளருந் தன்மையதாய்
வரும்மஞ் சுறையும் மலர்ச்சோலை
மருங்கு சூழ்ந்த வளம்புறவில்
பெருமை யுலகு பெறவிளங்கும்
மேல்பால் பெண்ணா கடமூதூர்.
தெளிவுரை : தமக்குஉரிமையான நல்லொழுக்கத்தில் சிறந்த உயர்ந்த பழைமையான மரபில் நிலைபெறுகின்ற இல்லற நெறியில் வாழ்கின்ற குடிகள் தழைத் தோங்கும் இயல்புடையதாகி, வானில் வரும் மேகங்கள் தங்குவதற்கு இடமான பூஞ்சோலைகள் பக்கங்களில் சூழ்ந்த வளமுடைய புறம்பணைகளுடன் உலகம் பெருமை பொருந்த விளங்குவது மேற்குத் திக்கில் உள்ள பெண்ணாகடம் என்னும் பழைய ஊர்.
4013. மற்றப் பதியின் இடைவாழும்
வணிகர் குலத்து வந்துதித்தார்
கற்றைச் சடையார் கழற்காத
லுடனே வளர்ந்த கருத்துடையார்
அற்றைக் கன்று தூங்கானை
மாடத்து அமர்ந்தார் அடித்தொண்டு
பற்றிப் பணிசெய் கலிக்கம்பர்
என்பார் மற்றோர் பற்றில்லார்.
தெளிவுரை : அந்தப் பதியில் வாழ்வு பெறுகின்ற வாணிகர் குலத்தில் வந்து தோன்றியவர், கற்றையான சடையுடைய சிவபெருமானின் திருவடிகளில் கொண்ட பெருவிருப்பம் தம் உடலில் வளர்ச்சியுடனே வளர்கின்ற கருத்தை உடையவர். அவர் அந்தப் பதியில் திருத்தூங்கானை மாடத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானின் திருவடித் தொண்டு பற்றிப் பணி செய்யும் கலிக்கம்பர் எனக் கூறப்படுபவர் அவர் சிவப்பற்று அன்றி வேறொருபற்றும் இல்லாதவர்.
4014. ஆன அன்பர் தாம்என்றும்
அரனார் அன்பர்க் கமுதுசெய
மேன்மை விளங்கு போனகமும்
விரும்பு கறிநெய் தயிர்தீம்பால்
தேனின் இனிய கனிகட்டி
திருந்த அமுது செய்வித்தே
ஏனை நிதியம் வேண்டுவன
எல்லாம் இன்ப முறவளிப்பார்.
தெளிவுரை : அத்தகைய அன்பர், என்றும் சிவனுடைய அன்பர்களுக்கு அமுது செய்வதற்குரிய மேலான தன்மை விளங்கும் திருவமுதுடன் விரும்பும் கறி வகைகளும் நெய்யும் தயிரும் இனிய கட்டியாகக் காய்ச்சிய பாலும் தேனைவிட இனிய பழங்களும் கரும்புக் கட்டியும் என்னும் இவை முதலானவற்றைப் படைத்துத் திருந்தியவாறு அவர்களை உண்ணும் படியாய்ச் செய்வித்தே மேலும் வேண்டிய பிற நிதியங்கள் எல்லாவற்றையும் இன்பம் பொருந்த அளிப்பவராய்.
4015. அன்ன வகையால் திருத்தொண்டு
புரியும் நாளில் அங்கொருநாள்
மன்னு மனையில் அமுதுசெய
வந்த தொண்டர் தமையெல்லாம்
தொன்மை முறையே அமுதுசெயத்
தொடங்கு விப்பார் அவர்தம்மை
முன்னர் அழைத்துத் திருவடிகள்
எல்லாம் விளக்க முயல்கின்றார்.
தெளிவுரை : அத்தகைய வகையினால் தொண்டு செய்து வருகின்ற நாள்களிலே ஒரு நாளில், நிலைபெற்ற தம் திருமனையில் அமுது செய்ய வந்த தொண்டர்களை எல்லாம் பழைய முறையிலே செய்யத் தொடங்குவிப்பாராகி, அவர்களை முன் அழைத்து அவர்களின் திருவடிகளை எல்லாம் விளக்க இந்நாயனார் முயல,
4016. திருந்து மனையார் மனையெல்லாம்
திகழ விளக்கிப் போனகமும்
பொருந்து சுவையில் கறியமுதும்
புனிதத் தண்ணீ ருடன்மற்றும்
அருந்தும் இயல்பில் உள்ளனவும்
அமைத்துக் கரக நீரளிக்க
விரும்பு கணவர் பெருந்தவர்தாள்
எல்லாம் விளக்கும் பொழுதின்கண்.
தெளிவுரை : மனைவியார் அந்த இல்லம் முழுதும் விளக்கம் பெற விளக்கித் திருவமுதும் பொருந்தும் அவைகளில் கறிய முதும் தூய்மையான நீரும் என்னும் இவற்றுடனே உண்கின்ற தன்மையில் உள்ளவான பிற பொருள்களையும் செம்மைபெற அமைத்துக், கரகத்தில் நீரை வார்க்க, விரும்பும் கணவர் இந்தத் துறவியரின் திருவடிகளை யெல்லாம் விளக்கி வரும் போது,
4017. முன்பு தமக்குத் தொழில்செய்யும்
தமராய் ஏவல் முனிந்துபோய்
என்பும் அரவும் அணிந்தபிரான்
அடியா ராகி அங்கெய்தும்
அன்ப ருடனே திருவேடந்
தாங்கி யணைந்தா ரொருவர்தாம்
பின்பு வந்து தோன்றஅவர்
பாதம் விளக்கும் பெருந்தகையார்.
தெளிவுரை : முன் நாட்களில் தமக்குத் தொண்டு செய்யும் சுற்றமாக இருந்து, பின் ஏவற்பணியை வெறுத்துச் சென்று, எலும்பையும் பாம்பையும் அணிந்த பெருமானின் அடியாராகி, அங்கு, வந்த அடியார்களுடனே சேர்ந்து வந்தவரான ஒருவர் பின்பு வந்து தோன்ற அவர் அடிகளை விளங்கும் பெருந்தகையாரான கலிக்கம்பர்.
4018. கையால் அவர்தம் அடிபிடிக்கக்
காதல் மனையார் முன்பேவல்
செய்யா தகன்ற தமர்போலும்
என்று தேரும் பொழுதுமலர்
மொய்யார் வாசக் கரகநீர்
வார்க்க முட்ட முதல்தொண்டர்
மையார் கூந்தல் மனையாரைப்
பார்த்து மனத்துட் கருதுவார்.
தெளிவுரை : கைகளால் அவரின் அடிகளைப் பிடிக்க, முன்பு நம் ஏவலைச் செய்யாது விட்டுச் சென்ற சுற்றம் இவர் போலும் ! என்று அன்பு மனைவியார் நினைக்கும்போது, மலர்கின்ற மலர்களையுடைய, கரகநீரை வார்க்கக் காலம் தாழ்க்கவே, முதன்மை பெற்ற திருத்தொண்டரான அவர் கரிய கூந்தலையுடைய மனைவியைப் பார்த்துத் தம் மனத்தில் எண்ணலானார்.
4019. வெறித்த கொன்றை முடியார்தம்
அடியார் இவர்முன் மேவுநிலை
குறித்து வெள்கி நீர்வாரா
தொழிந்தாள் என்று மனங்கொண்டு
மறித்து நோக்கார் வடிவாளை
வாங்கிக் கரகம் வாங்கிக்கை
தறித்துக் கரக நீரெடுத்துத்
தாமே அவர்தாள் விளக்கினார்.
தெளிவுரை : மணம் கமழும் கொன்றை மலரை அணிந்த முடியுடைய இறைவரின் அடியாரான இவர் மேவும் நிலையைக் குறித்துத் திருவடியை விளக்க நீரை வார்க்காது விட்டார் என்று மனத்தில் எண்ணி, மீண்டும் பார்க்காமல் கூர்மையான வாளை உருவி, அவர் கையில் பொருந்திய கரகத்தையும் பெற்றுக் கொண்டு, அவரது கையை வெட்டித் துண்டாக்கி, கரகத்தை எடுத்து நீர் வார்த்துத் தாமே அவருடைய கால்களை விளக்கினார்.
4020. விளக்கி அமுது செய்வதற்கு
வேண்டு வனதா மேசெய்து
துளக்கில் சிந்தை யுடன்தொண்டர்
தம்மை அமுது செய்வித்தார்
அளப்பில் பெருமை யவர்பின்னு
மடுத்த தொண்டின் வழிநின்று
களத்தி னஞ்ச மணிந்தவர்தாள்
நிழற்கீ ழடியா ருடன்கலந்தார்.
தெளிவுரை : அங்ஙனம் விளக்கிய பின்பு அவர் உணவு உண்பதற்கு வேண்டிய மற்றச் செயல்களை எல்லாம் தாமே செய்து, அசைவற்ற மன நிலையுடன் அத்தொண்டரை அமுது செய்வித்தார். அளவில்லாத பெருமையுடைய அவர் பின்பும் அடுத்த திருத்தொண்டின் வழியில் வருவது ஒழுகிக் கழுத்தில் நஞ்சையுடைய இறைவரின் திருவடி நிழற்கீழே அடியாருடன் கலந்து மீளா நெறியில் அமர்ந்தார்.
4021. ஓத மலிநீர் விடமுண்டார் அடியார் வேடம் என்றுணரா
மாத ரார்கை தடிந்தகலிக் கம்பர் மலர்ச்சே வடிவணங்கிப்
பூத நாதர் திருத்தொண்டு புரிந்து புவனங் களிற்பொலிந்த
காதல் அன்பர் கலிநீதி யார்தம் பெருமை கட்டுரைப்பாம்.
தெளிவுரை : குளிர்ந்த நிறைவான நீர் பொருந்திய கடலில் எழுந்த நஞ்சையுண்ட இறைவரின் அடியாரது திருக்கோலம் இஃது என்று உணராத மனைவியாரின் கையை வெட்டிய கலிக்கம்ப நாயனாரின் மலர் போன்ற அடிகளை வணங்கி, பூதங்களுக்குத் தலைவரான சிவபெருமானின் திருத்தொண்டு செய்து எல்லா உலகங்களிலும் விளங்கும் பெரு விருப்பம் உடைய அன்பரான கலிய நாயனாரின் பெருமையை உரைப்போம்.
கலிக்கம்ப நாயனார் புராணம் முற்றிற்று.
51. கலிய நாயனார் புராணம்
தொண்டை நாட்டைச் சேர்ந்த திருவொற்றியூரில் செக்காடும் மரபினர் குலத்தில் சக்கரப் பாடியில் கலிய நாயனார் தோன்றினார். அவர் சிவபெருமான் கோயிலில் விளக்குப் பணி செய்து வந்தார். நீண்ட காலம் இத்தகைய தொண்டைச் செய்து வந்தார்.
இறைவர் அருளால் அவர்க்குச் செல்வ வளம் குன்றியது, அப்போதும் தம் பணியை அவர் கைவிடவில்லை. சிலநாட்களுக்குப் பின் மற்றவர் அவர்க்கு எண்ணெய் தரவில்லை. பின் செக்காடி கூலியைப் பெற்று எண்ணெய் பெற்று விளக்குப் பணியைத் தொடர்ந்தார். சில நாள் சென்றபின் செக்காடும் தொழிலும் அவர்க்குக் கிடைக்கவில்லை. வீட்டை விற்று விளக்கேற்றினார். பின் மனைவியை விற்க முயன்றார். முடியவில்லை.
ஒருநாள் விளக்கேற்ற வழிஒன்றும் இல்லாது போயிற்று. தாம் வழக்கமாக விளக்கு ஏற்றும் படம் பக்க நாதர் கோயிலுக்குப் போனார். வரிசையாய் அகல் விளக்குகளை வைத்தார். என் குருதியைக் கொண்டு விளக்கேற்றுவேன் என்று வாளால் உடலை அறுக்கத் தொடங்கினார். அப்போது இறைவரின் திருக் கை அவரைப் பற்றியது. இறைவர் காட்சி தந்து, அவர் சிவலோகத்தில் விளக்கேற்ற இறைவர் அருள் செய்தார்.
4022. பேருலகில் ஓங்குபுகழ்ப் பெருந்தொண்டை நன்னாட்டு
நீருலவுஞ் சடைக்கற்றை நிருத்தர்திருப் பதியாகும்
காருலவு மலர்ச்சோலைக் கன்னிமதில் புடைசூழ்ந்து
தேருலவு நெடுவீதி சிறந்ததிரு வொற்றியூர்.
தெளிவுரை : பெரிய இந்த வுலகத்தில் புகழினால் ஓங்கிய பெருமை கொண்ட தொண்டை நாட்டில் கங்கையாறு பொருந்திய சடைக் கற்றையை யுடைய கூத்தப் பெருமான் எழுந்தருளியுள்ள பதி, மேகங்கள் தவழ்வனவாகி மலர்கள் நிறைந்த சோலை சூழ்ந்த மதில் பக்கம் எல்லாம், சூழ்ந்து தேர் உலவுவதற்கு இடமான நீண்ட வீதிகளையுடைய திருவொற்றியூர் என்ற பதியாகும்.
4023. பீடுகெழு பெருந்தெருவும் புத்தருடன் பீலிஅமண்
வேடமுடை யவர்பொருள்போல் ஆகாச வெளிமறைக்கும்
ஆடிகொடி மணிநெடுமா ளிகைநிரைகள் அலைகமுகின்
காடனைய கடல்படப்பை யெனவிளங்குங் கவின்காட்டும்.
தெளிவுரை : பெருமையுடைய பெரிய வீதிகளும் பௌத்தர்களுடனே மயிற்பீலியுடைய சமணக் கோலத்தவர்களும் கூறும் பொருள்போல வான வெளியை இல்லை என்று சொல்லும்படி மறைக்கும் ஆடும் கொடிகளை யுடைய அழகிய பெரிய மாளிகைகளின் வரிசைகள் அசை கின்ற கமுகஞ்சோலைகளைப் போல் விளங்கின. நகரத்தை அடுத்த கடலாது பயிர்களையுடைய தோட்டம் போல் விளங்கும் அழகைக்காட்டும்.
4024. பன்னுதிருப் பதிகஇசைப் பாட்டுஓவா மண்டபங்கள்
அன்னநடை மடவார்கள் ஆட்டு ஓவா அணியரங்கு
பன்முறைதூ ரியமுழங்கும் விழவுஓவா பயில்வீதி
செந்நெல்லடி சிற்பிறங்கல் உணவுஓவா திருமடங்கள்.
தெளிவுரை : யாவராலும் பல முறையும் ஓதப்படும் பதிகங்களின் இசைப் பாட்டுக்களை மண்டபங்கள் நீங்காமல் உடையனவாய் விளங்கின. மக்கள் பழகும் வீதிகள் பல, முறையாக ஒலிக்கும் இயங்களின் ஒலியுடன் கூடிய விழாக்களை உடையனவாய்த் தோன்றின. திருமடங்கள் செந்நெல் அரிசியால் சமைக்கப்பட்டு மலைபோல் குவியல் ஆக்கிய உணவுப் பெருக்கத்தினை நீங்காமல் உடையனவாய் விளங்கின.
4025. கெழுமலர்மா தவிபுன்னை கிளைஞாழல் தளையவிழும்
கொழுமுகைய சண்பகங்கள் குளிர்செருந்தி வளர்கைதை
முழுமணமே முந்நீரும் கமழமலர் முருகுயிர்க்கும்
செழுநிலவின் துகளனைய மணற்பரப்புந் திருப்பரப்பு.
தெளிவுரை : நிறைந்த மலர்களையுடைய மாதவியும், புன்னையும், கிளைத்து வளரும் குங்கும மரங்களும் இதழ்கள் அலர்கின்ற செழுமையான முகைகளை யுடைய சண்பக மரங்களும், குளிர்ந்த செருந்தியும், தாழையும் என்னும் இம்மரங்கள் கடல்நீரும் மணக்கத் தத்தம் மலர்களின் மணத்தைத் தரும். செழுமையான நிலவின் கதிர் தூளாக ஆனதைப் போல மணற் பரப்பின் பரந்த பரப்பு விளங்கும்.
4026. எயிலணையும் முகில்முழக்கும் எறிதிரைவே லையின்முழக்கும்
பயில்தருபல் லியமுழக்கும் முறைதெரியாப் பதியதனுள்
வெயில்அணிபல் மணிமுதலாம் விழுப்பொருளா வனவிளக்கும்
தயிலவினைத் தொழின்மரபில் சக்கரப்பா டித்தெருவு.
தெளிவுரை : மதில்களைச் சேர்கின்ற மேகங்களின் ஒலியும், வீசும் அலைகளையுடைய கடலின் ஒலியும், பயிலப்படும் பல வாத்தியங்களின் ஓசையும் என்ற இவை கூடிப் பிரித்து அறிய இயலாதவாறு ஒலிக்கின்ற அந்த நகரத்தில் எண்ணெய் ஆட்டும் செக்குத் தொழிலையுடைய மரபினர் வாழ்கின்ற சக்கரபாடித் தெரு என்பது, ஒளிவீசும் பலவகை மணிகள் முதலான தூய்மையான பொருள்கள் விளக்கும் தன்மையுடையது.
4027. அக்குலத்தின் செய்தவத்தால் அவனிமிசை அவதரித்தார்
மிக்கபெருஞ் செல்வத்து மீக்கூர விளங்கினார்
தக்கபுகழ்க் கலியனார் எனும்நாமந் தலைநின்றார்
முக்கண்இறை வர்க்குஉரிமைத் திருத்தொண்டின் நெறிமுயல்வார்.
தெளிவுரை : அந்தக் குலமானது முன் செய்த தவத்தினால் உலகத்தில் தோன்றினார். மிக்க பெரிய சைவத்தில் மேலோங்க விளங்கினார். அவர் தகுதியான கலியனார் என்னும் பெயர் கொண்டு சிறந்து நின்றார். மூன்று திருவிழிகளையுடைய சிவபெருமானுக்கு உரிமையான திருத்தொண்டு நெறியில் ஒழுகி வரலானார்.
4028. எல்லையில்பல் கோடிதனத் திறைவராய் இப்படித்தாம்
செல்வநெறிப் பயனறிந்து திருவொற்றி யூரமர்ந்த
கொல்லைமழ விடையார்தம் கோயிலின்உள் ளும்புறம்பும்
அல்லும்நெடும் பகலுமிடும் திருவிளக்கின் அணிவிளைத்தார்.
தெளிவுரை : அவர் அளவில்லாத பல கோடி செல்வத்துக்குத் தலைவராகி இத்தன்மையான செல்வம் வந்த வழியின் பயனை அறிந்து திருவொற்றியூரில் விரும்பி வீற்றிருக்கின்ற இளங்காளையை யுடைய இறைவரின் கோயிலின் உள்ளேயும் வெளியேயும் இரவிலும் பெரிய பகற்போதிலும் இடும் திருவிளக்குப் பணியினை மேற்கொண்டார்.
4029. எண்ணில்திரு விளக்குநெடு நாளெல்லாம் எரித்துவரப்
புண்ணியமெய்த் தொண்டர்செயல் புலப்படுப்பார் அருளாலே
உண்ணிறையும் பெருஞ்செல்வம் உயர்த்தும்வினைச் செயல்ஓவி
மண்ணிலவர் இருவினைபோல் மாண்டதுமாட் சிமைத்தாக.
தெளிவுரை : எண்ணற்ற திருவிளக்குகள் நீண்ட நாட்கள் முழுமையும் எரித்து வரவே, சிவ புண்ணியத்தின் உறைப்புடைய அம்மெய்த் தொண்டரின் செயலை உலகமறியுமாறு செய்பவரான இறைவரின் திருவருளினால், உள்ளே நிறைந்து மீக்கூர்ந்த பெரிய செல்வமானது, மேலும் பெருக நிகழும் தொழில் செய்வது ஒழியவே, உலகில் அவரது இருவினைகளும் மாண்டன போல் செல்வம் மாட்சிமை அடையுமாறு நீங்கியது.
4030. திருமலிசெல் வத்துழனி தேய்ந்தழிந்த பின்னையுந்தம்
பெருமைநிலைத் திருப்பணியில் பேராத பேராளர்
வருமரபில் உள்ளோர்பால் எண்ணெய்மா றிக்கொணர்ந்து
தருமியல்பில் கூலியினால் தமதுதிருப் பணிசெய்வார்.
தெளிவுரை : திரு நிறைந்த தம் செல்வம் பெருக்கம் தேய்ந்து அழிந்த பின்பும், தம் பெருமைத் தன்மையின் நிலைத்த தொண்டினின்றும் மாறுபடாத தன்மையுடைய அவர், தாம் வரும் அந்த மரபில் செல்வம் உள்ளவரிடத்தில் எண்ணெய் பெற்று வந்து விற்றுத் தந்து, அதன் இயல்பால், அவர் அளிக்கும் கூலியைக் கொண்டு தம் திருத் தொண்டைச் செய்து வந்தார்.
4031. வளமுடையார் பால்எண்ணெய் கொடுபோய்மா றிக்கூலி
கொளமுயலும் செய்கையும்மற் றவர்கொடா மையின்மாறத்
தளருமனம் உடையவர்தாம் சக்கரஎந் திரம்புரியும்
களனில்வரும் பணிசெய்து பெறுங்கூலி காதலித்தார்.
தெளிவுரை : செல்வ வளம் உடையவரிடத்தில் எண்ணெய் பெற்று விற்றுத் தந்து, அதனால் பெறும் கூலியைக் கொள்ள முயலும் அச் செய்கையும், அவர்கள் எண்ணெய் கொடாமையினால் இல்லையாகியது. அதனால் தாம் ஆற்றும் பணிக்குத் தடை வருதலால், தளரும் மனம் உடைய அந்நாயனார் தாம் செக்கு ஆடும் இடத்தில் வரும் பணியைச் செய்து, அதனால் பெறும் கூலியைப் பெற விரும்பியவராய்.
4032. செக்குநிறை எள்ளாட்டிப் பதமறிந்து திலதயிலம்
பக்கமெழ மிகவுழந்தும் பாண்டில்வரும் எருதுய்த்தும்
தக்கதொழிற் பெறுங்கூலி தாங்கொண்டு தாழாமை
மிக்கதிரு விளக்கிட்டார் விழுத்தொண்டு விளக்கிட்டார்.
தெளிவுரை : செக்கு நிறையும் அளவுப்படி எள் இட்டு ஆட்டிப் பதம் தெரிந்து எள்ளினின்றும் எண்ணெய் பக்கங்களில் எழுவதைக் கண்டு மிகவும் வருந்தி உழைத்தும், செக்கை வட்டமாச் சுற்றி வரும் எருதுகளைச் செலுத்தியும், தக்கவாறு செய்யும் தொழிலால் பெறும் கூலியைத் தாம் கொண்டு தவறாமல் மிக்க விளக்குகளை எரித்தார்; அதனால் தூய திருத் தொண்டின் திறம் இது என உலகில் விளக்கினார்.
4033. அப்பணியால் வரும்பேறும் அவ்விளைஞர் பலருளராய்
எப்பரிசுங் கிடையாத வகைமுட்ட இடருழந்தே
ஒப்பில்மனை விற்றெரிக்கும் உறுபொருளும் மாண்டதற்பின்
செப்பருஞ்சீர் மனையாரை விற்பதற்குத் தேடுவார்.
தெளிவுரை : அந்தத் தொழிலால் கிடைக்கும் கூலியும் அத்தொழில் செய்வோர் பலர் உள்ளதால் எவ்வகையாலும் கிடைக்காதவாறு தட்டுப்பட்டது. அதனால் மிகவும் துன்பப்பட்டு, ஒப்பில்லாத பெருமையுடைய தம் வீட்டை விற்று எரிக்கும் அப்பொருளும் தீர்ந்தது; தீர்ந்தபின் சொல்வதற்கரிய சிறப்பையுடைய தம் மனைவியாரை விற்றுப் பொருள் பெற்றுப் பணி செய்ய வழி தேடுபவராய்.
4034. மனமகிழ்ந்து மனைவியார் தமைக்கொண்டு வளநகரில்
தனமளிப்பார் தமையெங்கும் கிடையாமல் தளர்வெய்திச்
சினவிடையார் திருக்கோயில் திருவிளக்குப் பணிமுட்டக்
கனவினும்முன் பறியாதார் கையறவால் எய்தினார்.
தெளிவுரை : உள்ளத்து மகிழ்ச்சியுடன் மனைவியாரைக் கொண்டு, வளம் வாய்ந்த அந்த நகரத்தில் பொருள்கொடுப்பவர் எங்கும் கிடைக்காததால் தளர்ச்சியடைந்து, சினமுடைய காளையை யுடைய இறைவரின் கோயிலில் திருவிளக்கு இடும்பணி முட்டுதலை இதன் முன்பு கனவிலும் அறியாத நாயனார், வேறு செயலற்ற தன்மையினால் கோயிலில் வந்து சேர்ந்தார்.
4035. பணிகொள்ளும் படம்பக்க நாயகர்தங் கோயிலினுள்
அணிகொள்ளுந் திருவிளக்குப் பணிமாறும் அமையத்தில்
மணிவண்ணச் சுடர்விளக்கு மாளில்யான் மாள்வனெனத்
துணிவுள்ளங் கொளநினைந்தவ் வினைமுடிக்கத் தொடங்குவார்.
தெளிவுரை : தம்மை ஆட்கொண்டு தம் பணியை ஏற்கும் படம் பக்க நாதரின் கோயிலுள் அழகு நிறையும் விளக்குத் திருப்பணி செய்ய நின்ற அச்சமயத்தில் மணிபோன்ற சுடர்களையுடைய விளக்கு எரிக்கப் படாமல் நின்றுவிடுமாயின் நான் மாண்டு விடுவதே செய்யத்தக்கது என்ற துணிவை மனம் கொள்ளும்படி எண்ணி, அச்செயலை முடிக்கத் தொடங்குவாராகி,
4036. திருவிளக்குத் திரியிட்டங்கு அகல்பரப்பிச் செயல்நிரம்ப
ஒருவியஎண் ணெய்க்குஈடா உடல்உதிரங் கொடுநிறைக்கக்
கருவியினால் மிடறரிய அக்கையைக் கண்ணுதலார்
பெருகுதிருக் கருணையுடன் நேர்வந்து பிடித்தருளி.
தெளிவுரை : திருவிளக்குகளுக்கு எல்லாம் திரியை இட்டு அங்கு அகல்களை முறையாகப் பரப்பி, அச்செயல் நிரம்புமாறு கிட்டாது ஒழிந்த எண்ணெய்க்கு ஈடாய்த் தம் உடலில் நிறைந்த இரத்தத்தைக் கொண்டு நிறைக்கும்படி கருவி கொண்டு தம் கழுத்தை (அரிந்தார்) அரியவே, அங்ஙனம் அவர் அரிகின்ற கையை, நெற்றிக் கண்களையுடைய இறைவர் பெருகும் கருணையுடனே நேராய் வெளிப்பட்டு வந்து அச்செயல் செய்யவிடாமல் பற்றி.
4037. மற்றவர்தம் முன்னாக மழவிடைமேல் எழுந்தருள
உற்றவூ றதுநீங்கி ஒளிவிளங்க வுச்சியின்மேல்
பற்றியஞ் சலியினராய் நின்றவரைப் பரமர்தாம்
பொற்புடைய சிவபுரியில் பொலிந்திருக்க அருள்புரிந்தார்.
தெளிவுரை : அவர்க்கு முன்பாக இளமையுடைய காளையூர்தியின் மேல் எழுந்தருள, அரிதலால், உண்டான அந்தப் புண் வீங்கி, ஒளி பெற்று விளங்கியது. உச்சியின் மேல் பொருந்திய கைகளை அஞ்சலியாய்க் குவித்து நின்ற அக்கலிய நாயனார்க்குச் சிவபெருமான் அழகிய சிவலோகத்தில் விளங்க வீற்றிருக்கும்படி அருள் செய்தார்.
4038. தேவர்பிரான் திருவிளக்குச் செயல்முட்ட மிடறரிந்து
மேவரிய வினைமுடித்தார் கழல்வணங்கி வியனுலகில்
யாவரெனாது அரனடியார் தமையிகழ்ந்து பேசினரை
நாவரியுஞ் சத்தியார் திருத்தொண்டின் நலமுரைப்பாம்.
தெளிவுரை : வானவரின் தலைவரான சிவபெருமான் கோயிலில் எரிக்கும் திருவிளக்குப் பணி முட்டுப்பட்டதால் தம் கழுத்தை அரிந்து பொருந்துவதற்குரிய வினையைச் செய்து முடித்த கலிய நாயனார் திருவடிகளை வணங்கி அவற்றின் துணையால், பரந்த வுலகத்தில் யாரே யாயினும் சிவனடியார் தம்மை இகழ்ந்து பேசியவரை, நாக்கை அரியும் சத்தியார் என்னும் நாயனாரின் தொண்டின் நன்மையான வரலாற்றை உரைப்போம்.
கலிய நாயனார் புராணம் முற்றிற்று.
52. சத்தி நாயனார் புராணம்
சோழ நாட்டின் உள்ள வரிஞ்சையூரில் வேளாளர் குலத்தில் சக்தி நாயனார் என்பவர் தோன்றினார். அவர் சிவனடியார்களை இகழ்ந்து பேசுபவர்கள் நாவைத் தண்டாயத்தால் இடுக்கிக்கத்தியால் அறுக்கும் பணியை மேற்கொண்டிருந்தார். அப்பணியை நெடுங்காலம் செய்து இறைவரின் அடியை அடைந்தார்.
4039. களமர் கட்ட கமலம் பொழிந்ததேன்
குளநி றைப்பது கோலொன்றில் எண்திசை
அளவும் ஆணைச் சயத்தம்பம் நாட்டிய
வளவர் காவிரி நாட்டு வரிஞ்சையூர்.
தெளிவுரை : உழவர்கள் களை எனக் களைந்து எடுத்த தாமரை மலர்கள் சொரிந்த தேனானது குளத்தை நிறைக்க உள்ளது. ஒரே செங்கோல் வலிமையினால் எட்டுத் திக்குகளிலும் தம் வெற்றித் தூண்களை நாட்டி அரசு செய்யும் சோழ மன்னரின் காவிரியாறு பாயும் நாட்டில் உள்ளது வரிஞ்சையூர் என்பதாகும்.
4040. வரிஞ்சை யூரினில் வாய்மைவே ளாண்குலம்
பெருஞ்சி றப்புப் பெறப்பிறப்பு எய்தினார்
விரிஞ்சன் மால்முதல் விண்ணவர் எண்ணவும்
அருஞ்சி லம்பணி சேவடிக் காட்செய்வார்.
தெளிவுரை : வரிஞ்சையூரில் வாய்மைப் பண்பையுடைய வேளாளர் குலமானது பெரிய சிறப்பை அடையுமாறு அதனுள் வந்து தோன்றினார். நான்முகன் முதலான தேவர்களும் நினைப்பதற்கும் அரிய சிலம்பை அணிந்த சிவ பெருமானின் திருவடிக்கு ஆட்செய்பவராய்,
4041. அத்த ராகிய வங்கணர் அன்பரை
இத்த லத்தில் இகழ்ந்தியம் பும்முரை
வைத்த நாவை வலித்தரி சத்தியால்
சத்தி யார்எனும் நாமந் தரித்துளார்.
தெளிவுரை : தலைவரான சிவபெருமானின் அடியவரை இந்த உலகத்தில் இகழ்ந்து பேசும் சொல்லையுடைய நாவை வலிந்து அரியும் சக்தி வாய்ந்தவர் சத்தியார் என்ற பெயரைக் கொண்டவர், அவர்.
4042. தீங்கு சொற்ற திருவிலர் நாவினை
வாங்க வாங்குதண் டாயத்தி னால்வலித்
தாங்க யிற்கத்தி யால்அரிந் தன்புடன்
ஓங்கு சீர்த்திருத் தொண்டின் உயர்ந்தனர்.
தெளிவுரை : சிவனடியாரைத் தீங்கு சொல்லி இகழ்ந்த திரு இல்லாரின் நாவைத் துண்டித்தலுக்கு வளைந்த தண்டாயம் என்ற கருவியால் இழுத்து அங்கேயே கூர்மையான கத்தியால் அரிந்து அன்புடன் ஓங்கும் சிறப்புடைய தொண்டில் உயர்வுடையவராய் விளங்கினார்.
4043. அன்ன தாகிய ஆண்மைத் திருப்பணி
மன்னு பேரு லகத்தில் வலியுடன்
பன்னெ டும்பெரு நாள்பரி வால்செய்து
சென்னி யாற்றினர் செந்நெறி யாற்றினர்.
தெளிவுரை : அத்தகைய ஆண்மையுடைய திருத்தொண்டின் நிலைபெற்ற பெரிய உலகத்தில் வலிமையுடன் பன்னெடுங்காலம் அன்புடன் செய்து வந்து, தலையில் கங்கை யாற்றைச் சூடிய இறைனரின் செம்மை நெறித் தொண்டினைச் செய்து வந்தார்.
4044. ஐய மின்றி யரிய திருப்பணி
மெய்யி னாற்செய்த வீரத் திருத்தொண்டர்
வைய்யம் உய்ய மணிமன்று ளாடுவார்
செய்ய பாதத் திருநிழல் சேர்ந்தனர்.
தெளிவுரை : ஐயம் இல்லாமல் அரியதான தொண்டை மெய்யினால் செய்த வீரத் தன்மையுடைய தொண்டரான சத்தியார், உலகம் உய்யும் பொருட்டு அழகிய அம்பலத்தில் ஆடுபவரின் செம்மை தரும் பாதநிழலைச் சேர்ந்தார்.
4045. நாய னார்தொண் டரைநலங் கூறலார்
சாய நாவரி சத்தியார் தாள்பணிந்து
ஆய மாதவத் தையடி கள்ளெனும்
தூய காடவர் தந்திறஞ் சொல்லுவாம்.
தெளிவுரை : சிவபெருமானின் தொண்டர்களை நன்மை சொல்லாதவர் வீழ, அவர்களின் நாவை அரியும் சத்தி நாயனாரின் திருவடிகளை வணங்கி, அவற்றின் துணையாய், சிவநெறியான தவத்தையுடைய ஐயடிகள் என்னும் தூய காடவரின் அடிமைத் திறத்தைச் சொல்வோம்.
சத்தி நாயனார் புராணம் முற்றிற்று.
53. ஐயடிகள் காடவர் கோன் நாயனார் புராணம்
தொண்டை நாட்டின் காஞ்சியில் பல்லவர் குலத்தில் ஐயடிகள் காடவர் கோன் தோன்றினார். அவர் மற்ற நாடுகளையும் தன்னகப்படுத்தி அங்கெல்லாம் சைவம் தழைக்கச் செய்தார். அவர் தென்மொழி வடமொழி அமுதை உண்டவர். அவர் உலக வாழ்வில் வெறுப்புக் கொண்டு தம் மைந்தருக்கு முடி சூட்டி வைத்துவிட்டுச் சிவ பெருமான் வீற்றிருக்கும் ஒவ்வொரு தலத்துக்கும் போய் வெண்பாப் பாடி வந்தார். இறுதியில் அழியாப் பேரின்பத்தை அவர் பெற்றார்.
4046. வையம்நிகழ் பல்லவர்தம் குலமரபின் வழித்தோன்றி
வெய்யகலி யும்பகையும் மிகையொழியும் வகையடக்கிச்
செய்யசடை யார்சைவத் திருநெறியால் அரசளிப்பார்
ஐயடிகள் நீதியால் அடிப்படுத்துஞ் செங்கோலார்.
தெளிவுரை : உலகில் சிறந்து விளங்குகின்ற பல்லவரின் மரபிலே முறைமையாய்த் தோன்றிக் கொடிய வறுமையும் பகையும் அவற்றால் வரும் துன்பங்களும் நீங்கும்படி, சிவந்த சடையினை உடைய இறையவரின் சைவ நெறியின் வழியே நின்று ஆட்சி செய்பவராகி ஐயடிகள் காடவர் கோன் என்னும் மன்னர் அரச நீதி முறையிலே உலகம் எல்லாம் தம் அடியின் கீழ்த் தங்கும்படி, செய்கின்ற செங்கோல் ஆணையை உடையவராக விளங்கினார்.
4047. திருமலியும் புகழ்விளங்கச் சேணிலத்தில் எவ்வுயிரும்
பெருமையுடன் இனிதுஅமரப் பிறபுலங்கள் அடிப்படுத்துத்
தருமநெறி தழைத்தோங்கத் தாரணிமேற் சைவமுடன்
அருமறையின் துறைவிளங்க அரசளிக்கும் அந்நாளில்.
தெளிவுரை : அவர், செல்வம் மிகும் புகழ் விளங்கவும், விரிந்த இவ்வுலகத்தில் எல்லா வுயிர்களும் பெருமையுடன் இனிதாக வாழவும், நீதி முறை தழைத்திடவும், உலகில் சைவ நெறியுடனே அரிய வேத நெறியும் விளங்கவும், பகைவர் புலங்களை ஒடுக்கித் தம் கீழ்ப்படும்படி செய்து, ஆட்சி செய்து வந்தார். அந்நாளில்.
4048. மன்னவரும் பணிசெய்ய வடநூல்தென் தமிழ்முதலாம்
பன்னுகலை பணிசெய்யப் பார்அளிப்பார் அரசாட்சி
இன்னல்என இகழ்ந்ததனை எழிற்குமரன் மேல்இழிச்சி
நன்மைநெறித் திருத்தொண்டு நயந்தளிப்பார் ஆயினார்.
தெளிவுரை : பிற மன்னரும் ஏவல் செய்து ஒழுக, வடமொழியும் தென் தமிழ் மொழியும் இவை முதலாகச் சொல்லப்படுகின்ற கலைகள் தம் வயப்பட்டு நிற்கவும், உலகக் காவல் செய்பவரான அவர், உலகம் காக்கும் அரசாட்சி துன்பம் செய்வதாகும் என்று இகழ்ந்து நீத்து, அதை அழகிய தம் மகன் மேலதாக வைத்து முடிசூட்டி நல்ல சிவ நெறியிலே நின்று, திருத்தொண்டினைச் செய்ய விரும்பினார்.
4049. தொண்டுரிமை புரக்கின்றார் சூழ்வேலை யுலகின்கண்
அண்டர்பிரான் அமர்ந்தருளும் ஆலயங்க ளானவெலாம்
கண்டிறைஞ்சித் திருத்தொண்டின் கடனேற்ற பணிசெய்தே
வண்தமிழின் மொழிவெண்பா ஓர்ஒன்றா வழுத்துவார்.
தெளிவுரை : திருத் தொண்டின் உரிமைச் செயல்களை வழுவாமல் காத்து வரும் அந்நாயனார் கடல் சூழ்ந்த இவ்வுலகத்தில் தேவர் பெருமானான இறைவர் விரும்பி எழுந்தருளிய கோயில்கள் எல்லாவற்றையும் போய்க் கண்டு வணங்கி திருத்தொண்டுக்கேற்ற கடமையான பணி விடைகள் எல்லாவற்றையும் செய்து ஒவ்வொரு பதியிலும் வளமையுடைய தமிழின் வெண்பா ஒவ்வொன்றால் துதிப்பாராய்,
4050. பெருத்தெழுகா தலில்வணங்கிப் பெரும்பற்றத் தண்புலியூர்த்
திருச்சிற்றம் பலத்தாடல் புரிந்தருளுஞ் செய்யசடை
நிருத்தனார் திருக்கூத்து நேர்ந்திறைஞ்சி நெடுந்தகையார்
விருப்பினுடன் செந்தமிழின் வெண்பாமென் மலர்புனைந்தார்.
தெளிவுரை : பெருகி எழுகின்ற பக்தியால் வணங்கிக் குளிர்ந்த பெரும்பற்றப் புலியூரில் சிற்றம்பலத்தில் ஆடல் இயற்றும் சிவந்த சடையை யுடைய கூத்தப் பெருமானின் கூத்தை நேர்பட்டு வணங்கிப் பெருந்தன்மையுடையவர் விருப்புடன் செந்தமிழ் இனிய வெண்பாவாகிய மென்மையான மலர்மாலையைப் பாடினார்.
4051. அவ்வகையால் அருள்பெற்றங்கு அமர்ந்துசில நாள்வைகி
இவ்வுலகில் தம்பெருமான் கோயில்களெல் லாம்எய்திச்
செவ்வியஅன் பொடுபணிந்து திருப்பணிஏற் றனசெய்தே
எவ்வுலகும் புகழ்ந்தேத்தும் இன்தமிழ்வெண் பாமொழிந்தார்.
தெளிவுரை : அவ்வகையில் அருளைப் பெற்று அந்தப் பதியில் அமர்ந்து, சில நாட்கள் தங்கி, இவ்வுலகத்தில் தம் பெருமானார் வீற்றிருக்கும் கோயில்கள் எல்லாவற்றிலும் போய் அடைந்து, செம்மையான அன்பினால் வணங்கி ஏற்றனவான திருப்பணிகளைச் செய்து எல்லா உலகங்களும் புகழ்ந்து ஏத்தும் இனிய தமிழ் வெண்பாக்களைப் பாடித் துதித்தார்.
4052. இந்நெறியால் அரனடியார் இன்பமுற இசைந்தபணி
பன்னெடுநாள் ஆற்றியபின் பரமர்திரு வடிநிழற்கீழ்
மன்னுசிவ லோகத்து வழியன்பர் மருங்கணைந்தார்
கன்னிமதில் சூழ்காஞ்சிக் காடவர் ஐடிகளார்.
தெளிவுரை : வெல்லப்படாத மதிலையுடைய காஞ்சி நகரில் அரசியற்றிய ஐயடிகள் காடவர் கோன் இந்த நெறியினால் சிவனடியார்கள் இன்பம் அடையத் தமக்கு இயைந்த தொண்டுகளைப் பல நீண்ட காலமாகச் செய்திருந்த பின்னர், இறைவரின் திருவடியின் கீழ் சிவன் உலகத்தில் வழிவழி நிற்கின்ற அன்பர்களுடனே சேர்ந்தார்.
4053. பையரவ மணியாரம் அணிந்தார்க்குப் பாவணிந்த
ஐயடிகள் காடவனார் அடியிணைத்தா மரைவணங்கிக்
கையணிமான் மழுவுடையார் கழல்பணிசிந் தனையுடைய
செய்தவத்துக் கணம்புல்லர் திருத்தொண்டு விரித்துரைப்பாம்.
தெளிவுரை : நச்சுப் பையையுடைய பாம்பை மணிமேகலையாய் அணிந்த இறைவர்க்கு வெண்பா பாடிச் சாத்திய ஐயடிகள் காடவர் கோன் நாயனாரின் திருவடிகளை வணங்கி, அவற்றின் துணையால், கையில் அணிகொண்ட மழுவையுடைய, இறைவரின் திருவடியைப் பணியும் சிந்தனையுடைய, செய்தவம் உடைய கணம் புல்ல நாயனாரின் திருத்தொண்டினை விரித்துச் சொல்வோம்.
சுந்தரமூர்த்தி நாயனார் துதி
4054. உளத்திலொரு துளக்கம் இலோம் உலகுய்ய இருண்ட திருக்
களத்து முது குன்றர்தரு கனகம் ஆற்றினிலிட்டு
வளத்தின் மலிந்தேழ் உலகும் வணங்குபெருந் திருவாரூர்க்
குளத்தில்எடுத் தார்வினையின் குழிவாய்நின்று எனையெடுத்தார்.
தெளிவுரை : உலகம் உய்யும் பொருட்டு நஞ்சு உண்டதால் கருமையுடைய கழுத்தையுடைய திருமுதுகுன்றவாணர் அளித்த பொன்னைத் திருமணிமுத்தாற்றில் இட்டுப்பின், வளத்தினால் மிக்கு ஏழ் உலகங்களும் வணங்கும் பெரிய திருவாரூர்க் கமலாலயக் குளத்தில் எடுத்தவரான நம்பியாரூரர் வினையான பெருங்குழி வாயினின்று என்னை வெளியே எடுத்தார். ஆதலால், உள்ளத்தில் யாம் சிறிதும் நடுக்கம் இல்லேம் !
ஐயடிகள் காடவர் கோன் நாயனார் புராணம் முற்றிற்று.
பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம் முற்றிற்று.
9. கறைக்கண்டன் சருக்கம்
54. கணம்புல்ல நாயனார் புராணம்
வடவெள்ளாற்றுக்குத் தென் கரையில் உள்ளது இருக்கு வேளூர். அந்தவூரில் கணம் புல்ல நாயனார் தோன்றினார். அவர் சிவனடியை மறவாதவர், அவர் செல்வத்தின் பயன் விளக்கேற்றுவது என எண்ணினார். தினமும் கோயிலில் விளக்கேற்றி வந்தார்.
வறுமை வந்தது அவருக்கு ! அதனால் அவர் தளரவில்லை ! வீட்டில் உள்ள பொருள்களை விற்று விளக்கேற்றினார். பின் விற்பதற்கு ஒரு பொருளும் இல்லாமல் போயிற்று. கணம் என்ற ஒருவகைப் புல்லை அறுத்து வந்து விற்று விளக்கேற்றி வந்தார். பின் அதை எவரும் வாங்க வில்லை. எனவே, அப் புல்லையே விளக்கேற்றினார். அது விரைவில் எரிந்து விட்டது. அதனால் அவர் தம் தலை மயிரையே விளக்காய் ஏற்றினார். அவரது தொண்டை ஏற்று இறைவர் வீடுபேற்றை அளித்தார்.
4055. திருக்கிளர்சீர் மாடங்கள் திருந்துபெருங் குடிநெருங்கிப்
பெருக்குவட வெள்ளாற்றுத் தென்கரைப்பால் பிறங்குபொழில்
வருக்கைநெடுஞ் சுளைபொழிதேன் மடுநிறைத்து வயல்விளைக்கும்
இருக்குவே ளூரென்ப திவ்வுலகில் விளங்குபதி.
தெளிவுரை : செல்வம் பெருகும் சிறப்பையுடைய மாடங்களில் எங்கும் திருத்தமுடைய பெருங்குடிகள் நெருங்கி, வளம் வாய்ந்த வட வெள்ளாற்றின் தெற்குக் கரையில் விளக்கமுடைய சோலைகளில் உள்ள பலாக் கனிகளினின்றும் வடிந்த தேன் நீர்மடுவினை நிறைத்தலால், வயல்களை விளையச் செய்யும் இருக்கு வேளூர் என்ற பெயரைக் கொண்ட பதி இவ்வுலகத்தில் விளங்கும் பதியாகும்.
4056. அப்பதியில் குடிமுதல்வர்க் கதிபராய் அளவிறந்த
எப்பொருளும் முடிவறியா எய்துபெருஞ் செல்வத்தார்
ஒப்பில்பெருங் குணத்தினால் உலகின்மேற் படவெழுந்தார்
மெய்ப்பொருளா வனஈசர் கழல்என்னும் விருப்புடையார்.
தெளிவுரை : அந்த நாளில் வாழும் குடித்தலைவர்க்கெல்லாம் தலைவராய், அளவில்லாத எல்லாப் பொருளும் இவ்வளவு என்று எல்லை காண இயலாதபடி பொருந்திய பெருஞ் செல்வத்தை உடையவர்; ஒப்பில்லாத பெருங் குணத்தில் உலகத்தில் மேன்மையுடன் வாழ்ந்தார். அவர் உண்மைப் பொருளாவன இறைவரின் திருவடிகளே ஆகும் என்னும் பேரன்பை உடையவர். அவர் பெயர், கணம்புல்ல நாயனார் என்பதாகும்.
4057. தாவாத பெருஞ்செல்வம் தலைநின்ற பயன்இதுவென்
றோவாத ஓளிவிளக்குச் சிவன்கோயில் உள்ளெரித்து
நாவாரப் பரவுவார் நல்குரவு வந்தெய்தத்
தேவாதி தேவர்பிரான் திருத்தில்லை சென்றடைந்தார்.
தெளிவுரை : கெடாத பெருஞ் செல்வத்தால் பெறும் சிறந்த பயன் இதுவே ! என்று இடைவிடாத ஒளிதரும் விளக்குகளைச் சிவபெருமான் கோயிலுக்குள் ஏற்றி எரித்து, நாவாரத் துதிப்பவரான இந்நாயனார், வறுமை வந்து அடையவே, அந்த வறுமையுடன் இங்கு இருத்தல் தகாது என்று எண்ணித் தேவர்களுக்கெல்லாம் தலைவரான சிவபெருமான் வீற்றிருக்கின்ற தில்லையைப் போய்ச் சேர்ந்தார்.
4058. தில்லைநகர் மணிமன்றுள் ஆடுகின்ற சேவடிகள்
அல்கியஅன் புடன்இறைஞ்சி அமர்கின்றார் புரமெரித்த
வில்லியார் திருப்புலீச் சரத்தின்கண் விளக்கெரிக்க
இல்லிடையுள் ளனமாறி எரித்துவரும் அந்நாளில்.
தெளிவுரை : தில்லையம்பதியில் அழகிய அம்பலத்தில் ஆடும் சேவடிகளிடத்தில் பொருந்திய அன்புடன் வணங்கி, அங்கு விரும்பியிருப்பவரான நாயனார், மூன்று புரங்களையும் எரித்த வில்லை ஏந்திய இறைவரின் திருப்புலீச்சரம் என்னும் கோயிலில் விளக்கு எரிக்கும் பணி செய்வதற்குத் தம் இல்லத்தில் உள்ள பொருள்களை விற்று எரித்து வந்தார். அந்நாளில்,
4059. ஆயசெயல் மாண்டதற்பின் அயலவர்பால் இரப்பஞ்சிக்
காயமுயற் சியில்அரிந்த கணம்புல்லுக் கொடுவந்து
மேய விலைக் குக்கொடுத்து விலைப்பொருளால் நெய்மாறித்
தூயதிரு விளக்கெரித்தார் துளக்கறுமெய்த் தொண்டனார்.
தெளிவுரை : அங்ஙனம் அந்தச் செய்கையும் செய்து முடித்த பின்பு, மற்றவரிடம் இரத்தல் தொழிலைச் செய்ய அஞ்சி, தம் உடலின் முயற்சியால் கணம் புல்லை அரிந்து எடுத்துக் கொண்டுவந்து கிடைத்த வில்லை விற்று, அதனால் கிடைத்த பொருளால் நெய் வாங்கி அசைவற்ற மெய்மையான தொண்டைச் செய்பவரான நாயனார் தூய விளக்கை ஏற்றி எரித்தார்.
4060. இவ்வகையால் திருந்துவிளக் கெரித்துவர அங்கொருநாள்
மெய்வருந்தி அரிந்தெடுத்துக் கொடுவந்து விற்கும்புல்
எவ்விடத்தும் விலைபோகாது ஒழியவும்அப் பணியொழியார்
அவ்வரிபுல் லினைமாட்டி அணிவிளக்கா யிடஎரிப்பார்.
தெளிவுரை : இவ்வாறு அந்நாயனார் விளக்கை எரித்து வர, அங்கு ஒருநாளில், உடல்வருத்தி அரிந்து எடுத்துக்கொண்டு வந்து விற்கின்ற புல் எங்கும் விலையாகாமல் போகக் கண்டு, விளக்குப் பணியைக் கைவிடாதவராய், அரிந்த அப்புல்லையே தீக்கொளுத்தி அழகிய விளக்கை எரிப்பவர் ஆனார்.
4061. முன்புதிரு விளக்கெரிக்கும் முறையாமங் குறையாமல்
மென்புல்லும் விளக்கெரிக்கப் போதாமை மெய்யான
அன்புபுரி வார்அடுத்த விளக்குத்தந் திருமுடியை
என்புருக மடுத்தெரித்தார் இருவினையின் தொடக்கெரித்தார்.
தெளிவுரை : இறைவரின் திருமுன்பு விளக்கு எரிக்கும் முறைப்படி உள்ள யாமம் என்னும் கால அளவில் குறையாமல் விளக்கை எரிப்பதற்கு அந்தப் புல் போதாமையால், மெய்ம்மை அன்பினால் திருத்தொண்டு செய்பவரான அந்நாயனார் அடுத்த விளக்குக்காகத் தம் திருமுடியினையே எலும்பும் கரைந்து உருகுமாறு தீயை மூட்டி எரித்தார். அதனால் இரு வினைகளான தொடக்கை எரிப்பவர் ஆனார்.
4062. தங்கள்பிரான் திருவுள்ளம் செய்துதலைத் திருவிளக்குப்
பொங்கியஅன் புடன்எரித்த பொருவில்திருத் தொண்டருக்கு
மங்கலமாம் பெருங்கருணை வைத்தருளச் சிவலோகத்
தெங்கள்பிரான் கணம்புல்லர் இனிதிறைஞ்சி அமர்ந்திருந்தார்.
தெளிவுரை : இப்பணியைத் தம் இறைவர் திருவுள்ளம் கொண்டு தலைத் திருவிளக்கை மிக்க அன்புடன் எரித்த ஒப்பில்லாத தொண்டர்க்கு மங்கலமான பெருங்கருணையினை வைத்தருளச், சிவலோகத்தில் எங்கள் பெருமானாரான கணம் புல்ல நாயனார் சேர்ந்து இனிதாக வணங்கி வீற்றிருந்தார்.
4063. மூரியார் கலியுலகில் முடியிட்ட திருவிளக்குப்
பேரியா றணிந்தாருக் கெரித்தார்தங் கழல்பேணி
வேரியார் மலர்ச்சோலை விளங்குதிருக் கடவூரில்
காரியார் தாஞ்செய்த திருத்தொண்டு கட்டுரைப்பாம்.
தெளிவுரை : வன்மையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் முடியையே திருமுன்பு இட்ட விளக்காகக் கங்கையான பெரிய ஆற்றை அணிந்த சிவனுக்கு எரித்த நாயனாரின் திருவடிகளைத் துதித்துத் தேன் பொருந்திய மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்து விளங்கும் திருக்கடவூரில் தோன்றியருளிய காரிநாயனார் செய்த திருத்தொண்டைச் சொல்வோம்.
கணம் புல்ல நாயனார் புராணம் முற்றிற்று.
55. காரி நாயனார் புராணம்
திருக்கடவூரில் காரி நாயனார் தோன்றினார். அவர் புலமை நலம் வாய்ந்தவர். காரிக் கோவை என்ற நூலை இயற்றினார். மூவேந்தர் அதற்குப் பெரும் பொருள் அளித்தனர். அவர் அதனைக் கொண்டு சிவ பெருமானுக்குக் கோவில் கட்டினார். அடியார்க்கு அப்பொருளை அளித்தார். யாவரையும் இன் சொல் கூறி மகிழ்ந்தார். எனவே அவர் சிவலோகத்தை அடைந்தார்.
4064. மறையாளர் திருக்கடவூர் வந்துதித்து வண்தமிழின்
துறையான பயன்தெரிந்து சொல்விளங்கிப் பொருள்மறையக்
குறையாத தமிழ்க்கோவை தம்பெயரால் குலவும்வகை
முறையாலே தொகுத்தமைத்து மூவேந்தர் பால்பயில்வார்.
தெளிவுரை : வேதியர் மிக்கு வாழ்கின்ற திருக்கடவூரில் வந்து தோன்றி வளமையுடைய தமிழின் இனிய துறைகளில் ஆய பயனைத் தெரிந்து சொல்விளங்கி உட்கிடையான பொருளானது மறையுமாறு குறைவற்ற தமிழ்க் கோவையைத் தம் பெயரால் விளங்குமாறு முறைப்படத் தொகுத்து இயற்றி அத் தமிழ் மூவேந்தரிடத்தும் போய் நண்பராகி.
4065. அங்கவர்தாம் மகிழும்வகை அடுத்தவுரை நயமாக்கிக்
கொங்கலர்தார் மன்னவர்பால் பெற்றநிதிக் குவைகொண்டு
வெங்கண்அரா வொடுகிடந்து விளங்கும்இளம் பிறைச்சென்னிச்
சங்கரனார் இனிதமரும் தானங்கள் பலசமைத்தார்.
தெளிவுரை : அங்கு அந்த மூவேந்தர் மனம் மகிழுமாறு பொருளுக்கு ஏற்ற சொற்களை நயம் பெறச் செய்து மணம் பரவுகின்ற பூமாலை சூடிய மன்னரிடம் பெற்ற செல்வக் குவியலைக் கொண்டு, கொடிய கண்ணையுடைய பாம்புடனே கிடந்து விளங்கும் பிறைச்சந்திரனை அணிந்த தலையையுடைய சிவபெருமான் இனிதாய் வீற்றிருக்கும் கோயில்கள் பலவற்றை அமைத்தனர்.
4066. யாவர்க்கும் மனமுவக்கும் இன்பமொழிப் பயனியம்பித்
தேவர்க்கு முதல்தேவர் சீரடியார் எல்லார்க்கும்
மேவுற்ற இருநிதியம் மிகஅளித்து விடையவர்தம்
காவுற்ற திருக்கயிலை மறவாத கருத்தினராய்.
தெளிவுரை : எல்லாருக்கும் மனம் மகிழும்படியான இன்பம் தரும் சொல்பயன்களையே கூறித் தேவர்களுக்கெல்லாம் தேவரான சிவபெருமானின் சிறப்புடைய அடியார்கள் எல்லார்க்கும் பொருந்திய பெரும் பொருள்களை மிகவும் அளித்துக் காளையூர்தியையுடைய இறைவரின் சோலைகளையுடைய கயிலாயத்தை எப்போதும் மறவாத எண்ணமுடையவராகி.
4067. ஏய்ந்தகடல் சூழுலகில் எங்குந்தம் இசைநிறுத்தி
ஆய்ந்தவுணர்வு இடையறா அன்பினராய் அணிகங்கை
தோய்ந்தநெடுஞ் சடையார்தம் அருள்பெற்ற தொடர்பினால்
வாய்ந்தமனம் போல்உடம்பும் வடகயிலை மலைசேர்ந்தார்.
தெளிவுரை : பொருந்திய கடல் சூழ்ந்த உலகத்தில் எல்லா இடங்களிலும் தம் புகழினை நிலை நிறுத்தி ஆராய்ந்து தெளிந்த உணர்விலே இடையறாத அன்பு உடையவராய் இருந்து, அழகிய கங்கையாறு பொருந்திய நீண்ட சடையை யுடைய இறைவரின் அருளைப் பெற்ற தொடர்பினால் பொருந்திய மனத்தால் சேர்ந்தது போலவே உடலாலும் வடகயிலை மலையைச் சேர்ந்தார்.
4068. வேரியார் மலர்க்கொன்றை வேணியார் அடிபேணும்
காரியார் கழல்வணங்கி அவரளித்த கருணையினால்
வாரியார் மதயானை வழுதியர்தம் மதிமரபில்
சீரியார் நெடுமாறர் திருத்தொண்டு செப்புவாம்.
தெளிவுரை : தேனையுடைய மலர்க்கொன்றையை அணிந்த சடையையுடைய இறைவரின் திருவடியைப் பேணும் காரி நாயனாரின் அடிகளை வணங்கிக், கடல்போல் நிறைந்து வழியும் மதம் பொருந்திய யானைப் படையையுடைய பாண்டியர்களுக்குரிய சந்திர வமிசத்திலே தோன்றிய நின்றசீர் நெடுமாற நாயனாரின் திருத்தொண்டினைக் கூறுவோம்.
காரி நாயனாரின் புராணம் முற்றிற்று.
56. நின்றசீர்நெடுமாற நாயனார் புராணம்
நின்றசீர் நெடுமாறர் திருஞானசம்பந்தரால் சமண சமயத்தினின்றும் சைவ சமயத்துக்குக் கொண்டு வரப்பட்டவர். அவர் வடமன்னரை வென்றார். இறைவரிடம் பக்தி பூண்டு ஒழுகினார். தம் இறையன்பால் இறையடி சேர்ந்தார்.
4069. தடுமாறும் நெறியதனைத் தவம்என்று தம்முடலை
அடுமாறு செய்தொழுகும் அமண்வலையில் அகப்பட்டு
விடுமாறு தமிழ்விரகர் வினைமாறுங் கழலடைந்த
நெடுமாற னார்பெருமை உலகேழும் நிகழ்ந்ததால்.
தெளிவுரை : தடுமாற்றத்தை உண்டாக்கும் குற்றமுடைய நெறியையே தவம் என்று கொண்டு தம் உடம்பை வருத்தும் செயல்களைச் செய்து தீ நெறி ஒழுகும் சமணரின் சூழ்ச்சிக்குள் அகப்பட்டு, அவ்வலையினின்றும் விடும்படி, தமிழ் வல்லுநரான திருஞானசம்பந்தரின் வினைமாற்றிப் பிறவி அறுக்கும் திருவடிகளை அடைந்த நெடுமாறனாரின் பெருமை ஏழ் உலகங்களிலும் நிறைந்து விளங்குவதாம்,
4070. அந்நாளில் ஆளுடைய பிள்ளையார் அருளாலே
தென்னாடு சிவம்பெருகச் செங்கோலுய்த்து அறம்அளித்துச்
சொல்நாம நெறிபோற்றிச் சுரர்நகர்க்கோன் தனைக்கொண்ட
பொன்னார மணிமார்பில் புரவலனார் பொலிகின்றார்.
தெளிவுரை : அந்தக் காலத்தில் ஆளுடைய பிள்ளையாரின் திருவருளால் பாண்டிய நாட்டின் சைவத்திறம் பெருக, செங்கோல் ஆட்சி செய்து அறநெறி வழுவாது காத்தும், எடுத்துச் சொல்லப்படுகின்ற சிவநாமமான திருவைந் தெழுத்தின் நெறியான சைவ நெறியைக் காத்தும், இந்திரனிடத்துக் கொண்ட பொன்மாலை சூடிய அந்தப் பாண்டியர் விளங்குபவாராகி.
4071. ஆயஅர சளிப்பார்பால் அமர்வேண்டி வந்தேற்ற
சேயபுலத் தெவ்வரெதிர் நெல்வேலிச் செருக்களத்துப்
பாயபடைக் கடல்முடுகும் பரிமாவின் பெருவெள்ளம்
காயுமதக் களிற்றினிரை பரப்பியமர் கடக்கின்றார்.
தெளிவுரை : அத்தகைய முறையில் அரசு செய்பவரிடத்தில் போரினை வேண்டி வந்து எதிர்த்த வடபுலத்துப் பகைவர்க்கு எதிரே திருநெல்வேலிப் போர்க்களத்தில் பரந்த படைக்கடலையும், வேகமாகச் செல்லும் குதிரைகளின் மிகுதியான வெள்ளத்தையும் சினந்து அழிக்கும் மதயானைகளின் வரிசையையும் பரப்பிப் போரை வென்று கடப்பவராய்,
4072. எடுத்துடன்ற முனைஞாட்பின் இருபடையிற் பொருபடைஞர்
படுத்தநெடுங் கரித்துணியும் பாய்மாவின் அறுகுறையும்
அடுத்தமர்செய் வயவர்கருந் தலைமலையும் அலைசெந்நீர்
மடுத்தகடல் மீளவுந்தாம் வடிவேல்வாங் கிடப்பெருக.
தெளிவுரை : படைதொடுத்துப் போரிட்ட போர்க்களத்தில் இரண்டு பக்கத்துப் படை வீரர்களும் வீழ்த்திய பெரிய யானைகளின் உடல் துண்டங்களும், குதிரைகளின் உடல் துண்டங்களும், எதிர்த்துப் போர் செய்யும் படை வீரர்களின் கரிய தலையும் என்ற இவற்றினின்றும் வரும் குருதியின் பெருக்குக் கலக்கப் பெற்ற கடலானது முன் காலத்தில் உக்கிர குமார பாண்டியர் கடல் வற்ற வேல் வாங்கியதைப் போல் மீண்டும் இவர் வேல் வாங்கும்படி பெருகியது.
4073. வயப்பரியின் களிப்பொலியும் மறவர்படைக் கலஒலியும்
கயப்பொருப்பின் முழக்கொலியும் கலந்தெழுபல் லியஒலியும்
வியக்குமுகக் கடைநாளின் மேகமுழக் கெனமீளச்
சயத்தொடர்வல் லியுமின்று தாம்விடுக்கும் படிதயங்க.
தெளிவுரை : வெற்றி பெற்ற குதிரைகளின் களிப்பால் உண்டாகும் ஒலியும், வீரர் ஆயுதங்களின் ஒலியும், யானைகளான மலைகளின் பிளிற்று ஒலியும், பலரும் கூடி எழுந்து ஒலிக்கும் பல இடங்களின் ஒலியும், அதிசயிக்கும் ஊழியின் முடிவு காலத்தில் பெருகும் மேகங்களின் ஒலியோ எனச் சிந்தித்து முன்பு உக்கிரகுமாரர் விட்டது போல் வீரத் தொடர்பை யுடைய விலங்கையும் திரும்பவும் இன்று தாம் விலக்கும்படி ஒலிக்க,
4074. தீயுமிழும் படைவழங்கும் செருக்களத்து முருக்குமுடல்
தோயுநெடுங் குருதிமடுக் குளித்துநிணந் துய்த்தாடிப்
போயபரு வம்பணிகொள் பூதங்க ளேயன்றிப்
பேயும்அரும் பணிசெய்ய உணவளித்த தெனப்பிறங்க.
தெளிவுரை : தீயை உமிழும் படைகளை வீசியும் எறிந்தும் போர் செய்யும் களத்தில் வெட்டுப்பட்ட உடல்கள் தோய்ந்து கிடக்கும் குருதி நிறைந்த மடுவில் குளித்து நிணங்களை உண்டு கூத்தாடி முன் நாளில் ஏவல் கொண்ட பூதங்களே அல்லாது பேயும் அரிய பணி செய்யும்படி அவற்றுக்கு உணவு அளித்ததாகும் எனக் கூறும்படி விளங்க,
4075. இனையகடுஞ் சமர்விளைய இகலுழந்த பறந்தலையில்
பனைநெடுங்கை மதயானைப் பஞ்சவனார் படைக்குடைந்து
முனையழிந்த வடபுலத்து முதன்மன்னர் படைசரியப்
புனையுநறுந் தொடைவாகை பூழியர்வேம் புடன்புனைந்து.
தெளிவுரை : இத்தகைய கொடிய போர் மூளும்படி பொருத போர்க்களத்தில் பனைபோல் நீண்ட துதிக்கையையுடைய மதயானையையுடைய பாண்டியரின் படைகளுக்குத் தோற்றுப் போரில் அழித்த முதன்மையுடைய வடநாட்டு அரசரின் படைகள் சிதைந்து ஓடிப் போக, வெற்றித் துறையில் அணியும் மணமுடைய வாகை மாலையைப் பாண்டியர்க்குரிய வேம்பு மாலையுடனே அணிந்து.
4076. வளவர்பிரான் திருமகளார் மங்கையருக் கரசியார்
களபமணி முலைதிளைக்குந் தடமார்பிற் கவுரியனார்
இளஅரவெண் பிறையணிந்தார்க் கேற்றதிருத் தொண்டெல்லாம்
அளவில்புகழ் பெறவிளக்கி அருள்பெருக அரசளித்தார்.
தெளிவுரை : சோழ மன்னரின் மகளாரான மங்கையர்க்கரசி அம்மையாரின் கலவைச் சாந்து அணிந்த கொங்கைகள் மூழ்கப் பெற்ற அகன்ற மார்பையுடைய பாண்டியரான நின்ற சீர் நெடுமாறனார், இளையபாம்பையும் வெண்மையான பிறையையும் சூடிய பெருமானுக்கு, ஏற்ற திருத் தொண்டுகளை எல்லாம் அளவில்லாத புகழ் பெறுமாறு செய்து சிவனருள் பெருகுமாறு ஆட்சி செய்தார்.
4077. திரைசெய்கட லுலகின்கண் திருநீற்றின் நெறிவிளங்க
உரைசெய்பெரும் புகழ்விளக்கி ஓங்குநெடு மாறனார்
அரசுரிமை நெடுங்காலம் அளித்திறைவர் அருளாலே
பரசுபெருஞ் சிவலோகத் தின்புற்றுப் பணிந்திருந்தார்.
தெளிவுரை : அலைகளையுடைய கடல் சூழ்ந்த உலகில் திருநீற்று நெறியான சிவநெறி விளக்கம் பெறும்படி எடுத்துச் சொல்லப்படுகின்ற பெரிய புகழை விளங்க வைத்ததால், மேன்மையுடைய நின்றசீர் நெடுமாறனார் நீண்ட காலம் ஆட்சி செய்திருந்து, சிவபெருமானின் திருவருளால், எல்லாராலும் துதிக்கப்படுகின்ற பெருமையுடைய சிவலோகத்தைச் சேர்ந்து இன்பம் பொருந்திப் பணிந்து அமர்ந்திருந்தார்.
4078. பொன்மதில்சூழ் புகலிகா வலர்அடிக்கீழ்ப் புனிதராம்
தென்மதுரை மாறனார் செங்கமலக் கழல்வணங்கிப்
பன்மணிகள் திரையோதம் பரப்புநெடுங் கடற்பரப்பைத்
தொன்மயிலை வாயிலார் திருத்தொண்டின் நிலைதொழுவாம்.
தெளிவுரை : பொன் மதில் சூழ்ந்த சீகாழித் தலைவரான திருஞானசம்பந்தரின் திருவடிச் சார்பால் தூயவரான தென் மதுரையில் ஆண்ட நெடுமாறனாரின் தாமரை மலர் போன்ற அடிகளை வணங்கி, பல மணிகளையும் அலைகளால் நீர் விளிம்பில் பரப்பும் நீளமான கடற்கரையிலே உள்ள பழைமையான மயிலாபுரியில் வாழ்ந்த வாயிலார் நாயனாரின் திருத் தொண்டின் இயல்பைத் தொழுது துதித்துச் சொல்வோம்.
நின்றசீர் நெடுமாற நாயனார் புராணம் முற்றிற்று.
57. வாயிலார் நாயனார் புராணம்
தொண்டை நாட்டின் தலங்களில் ஒன்று மயிலாப்பூர். அத்தலத்தில் தோன்றியவர், வாயிலார். அவர் தம் உள்ளத்தைக் கோயிலாக்கி, அதில் இறைவரை எழுந்தருளுவித்து, ஞான விளக்கு ஏற்றி, தியான மலர் இட்டு, அன்பு அமுதைப் படைத்துப் பூசனை செய்து வந்தார். இதனால் அவர் இறைவர் அடியைச் சேர்ந்தார்.
4079. சொல்வி ளங்குசீர்த் தொண்டைநன் னாட்டிடை
மல்லல் நீடிய வாய்மை வளம்பதி
பல்பெ ருங்குடி நீடு பரம்பரைச்
செல்வம் மல்கு திருமயி லாபுரி.
தெளிவுரை : நூல்களில் எடுத்துக் கூறப்படும் புகழ்ச் சொற்கள் விளங்கும் சிறப்புடைய தொண்டை நல்ல நாட்டிலே வளமை மிக்க வாய்மையால் சிறந்த வளமுடைய பதி, பல பெருங்குடிகளும் நீடும் வழிவழி தொடர்ந்து பெரும் செல்வம் நிறைந்த மயிலாபுரியாகும்.
4080. நீடு வேலைதன் பால்நிதி வைத்திடத்
தேடும் அப்பெருஞ் சேமவைப் பாமென
ஆடு பூங்கொடி மாளிகை யப்பதி
மாடு தள்ளு மரக்கலச் செப்பினால்.
தெளிவுரை : பெருங்கடல், தன்னிடம் உள்ள மணி முதலான நிதிகளைத் தேடிவைப் பதற்குரிய பண்டாரம் இதுவாகும் என்று கூறும்படி, ஆடும் கொடிகளையுடைய அந்த நகரத்தின் பக்கங்களில் எல்லாம் மரக்கலங்களாகிய சிமிழினால் தள்ளும்,
4081. கலஞ்சொ ரிந்த கரிக்கருங் கன்றும்முத்
தலம்பு முந்நீர் படிந்தணை மேகமும்
நலங்கொள் மேதிநன் னாகுந் தெரிக்கொணா
சிலம்பு தெண்டிரைக் கானலின் சேணெலாம்.
தெளிவுரை : ஒலிக்கும் தெளிந்த அலைகளையுடைய கடற்கரைக் கானலில் பரவிய நிலம் முற்றும், வேற்று நாடுகளிலிருந்து கொணர்ந்த மரக்கலங்கள் இறக்கிய யானைக் கன்றுகளும், முத்துக்களைக் கொழித்து ஒதுக்கும் கடலில் படிந்து சேர்கின்ற மேகங்களும் செழிப்பான எருமைக்கன்றுகளும் நிற ஒப்புமையினால் வெவ்வேறாகப் பிரித்து அறியக் கூடாவாம்,
4082. தவள மாளிகைச் சாலை மருங்கிறைத்
துவள்ப தாகை நுழைந்துஅணை தூமதி
பவள வாய்மட வார்முகம் பார்த்தஞ்சி
உவள கஞ்சேர்ந் தொதுங்குவ தொக்குமால்.
தெளிவுரை : வெண்மையான நிறமுடைய மாளிகைகளையுடைய சாலைகளின் பக்கங்களில் இறப்புகளில் அசையும் கொடிகளின் வரிசையுள் நுழைந்து சேர்கின்ற தூய்மையான வெண்மையான மதி, பவளம் போன்ற வாயையுடைய பெண்களின் முகங்களைப் பார்த்து அஞ்சி மறைவிடத்தைச் சேர்ந்து ஒதுங்குவது போல் விளங்கும்.
4083. வீதியெங்கும் விழாவணி காளையர்
தூதுஇ யங்குஞ் சுரும்பணி தோகையர்
ஓதி யெங்கும் ஒழியா அணிநிதி
பூதி யெங்கும் புனைமணி மாடங்கள்.
தெளிவுரை : தெருக்கள் எங்கும் திருவிழாக்களின் அலங்காரங்கள். காளையரின் தூதாக இயங்குவன போல் உள்ள வண்டுகள் பெண்களின் கூந்தல்களில் எங்கும் விளங்கும். சுண்ணச் சாந்து பூசி அலங்காரம் செய்யப்பட்ட மாடங்களில் எங்கும் அழகிய நிதிகளும் துணிகளும் நீங்காமல் இருக்கும்.
4084. மன்னு சீர்மயி லைத்திரு மாநகர்த்
தொன்மை நீடிய சூத்திரத் தொல்குலம்
நன்மை சான்ற நலம்பெறத் தோன்றினார்
தன்மை வாயிலார் என்னுந் தபோதனர்.
தெளிவுரை : நிலைபெற்ற சிறப்பைக் கொண்ட மயிலாபுரி என்னும் பெரு நகரத்தில் பழைமையால் நீண்ட சூத்திரர் என்னும் வேளாளரின் பழங்குலமானது நன்மைகள் எல்லாவற்றுள்ளும் சிறந்து நன்மை அடையுமாறு, உயர் தன்மையுடைய வாயிலார் என்னும் பெயரையுடைய தவப் பேற்றினர் வந்து தோன்றினார்.
4085. வாயி லாரென நீடிய மாக்குடித்
தூய மாமர பின்முதல் தோன்றியே
நாய னார்திருத் தொண்டில் நயப்புறு
மேய காதல் விருப்பின் விளங்குவார்.
தெளிவுரை : அவர், வாயிலார் என்னும் பழைமையான பெருங்குடியில் தூய்மையான பெரு மரபில் முதல்வராகத் தோன்றித் தலைவரான சிவபெருமானின் தொண்டில் அன்புடைய பெருவிருப்புடன் விளங்கலானார்.
4086. மறவாமை யால்அமைத்த மனக்கோயில் உள்ளிருத்தி
உறவாதி தனையுணரும் ஒளிவிளக்குச் சுடரேற்றி
இறவாத ஆனந்தம் எனுந்திருமஞ் சனமாட்டி
அறவாணர்க் கன்பென்னும் அமுதமைத்துஅர்ச் சனைசெய்வார்.
தெளிவுரை : இறைவரை, மறவாமையான கருவியால் அமைந்த மனமான கோயிலுள் எழுந்தருளத் செய்து நிலை பெறுமாறு இருத்தி, பொருந்தும்படி அப்பெருமானை உணரும் ஞானம் என்கின்ற ஒளிவீசும் சுடர் விளக்கை ஏற்றி, அழிவற்ற பேரானந்தமான நீரினால் திருமஞ்சனமாட்டி அறவாணர்க்கு அன்பு என்னும் அமுதை அமைத்துப் பூசிப்பவரானார்.
4087. அகமலர்ந்த அர்ச்சனையில் அண்ணலார் தமைநாளும்
நிகழவரும் அன்பினால் நிறைவழிபா டொழியாமே
திகழநெடு நாட்செய்து சிவபெருமான் அடிநிழற்கீழ்ப்
புகலமைத்துத் தொழுதிருந்தார் புண்ணியமெய்த் தொண்டனார்.
தெளிவுரை : உள்ளத்துள் விளங்கிய பூசையில் சிவபெருமானை நாள்தோறும் நிகழ வருகின்ற அன்பால் நிறையும் வழிபாட்டை இடையறாது விளங்குமாறு நெடு நாட்கள் செய்து சிவபெருமானின் திருவடிகளைக் கீழ்ப் புகலாக அடைந்து புண்ணிய மெய்த் தொண்டரான வாயிலார் அமர்ந்திருந்தார்.
4088. நீராருஞ் சடையாரை நீடுமன ஆலயத்துள்
ஆராத அன்பினால் அருச்சனைசெய் தடியவர்பால்
பேராத நெறிபெற்ற பெருந்தகையார் தமைப்போற்றிச்
சீராருந் திருநீடூர் முனையடுவார் திறம்உரைப்பாம்.
தெளிவுரை : கங்கை நீர் நிறைந்த சடையையுடைய சிவ பெருமானைத் தம் நீடும் மனக் கோயிலில் நிறுவி மிகுந்த அன்புடன் பூசித்து, அடியவர்களுடன் இருந்து நீங்காத வீட்டு நெறியினைப் பற்ற பெருந்தகையாரான வாயிலார் நாயனாரைத் துதித்து, அந்தத் துணையினால், சிறப்புடைய திருநீடுரில்வாழ்ந்த முனையடுவார் நாயனாரின் இயல்பைக் கூறுவோம்.
வாயிலார் நாயனார் புராணம் முற்றிற்று.
58. முனையடுவார் நாயனார் புராணம்
சோழ நாட்டுத் திருநீடூரில் சிவனடியாரிடத்து அன்புடைய ஒருவர் பிறந்தார். அவர் போர் செய்து பகைவரை வென்று பொருள் பெற்றுச் சிவனடியார்க்கு அளித்து வந்தார். அதனால் அவர்க்கு முனையடுவார் நாயனார் என்ற பெயர் உண்டாயிற்று. அரிய இத்தொண்டைச் செய்த அவர் வீடு பேற்றைப் பெற்றார்.
4089. மாறு கடிந்து மண்காத்த வளவர் பொன்னித் திருநாட்டு
நாறு விரைப்பூஞ் சோலைகளில் நனைவாய் திறந்து பொழிசெழுந்தேன்
ஆறு பெறுகி வெள்ளமிடு மள்ளல் வயலின் மள்ளருழும்
சேறு நறுவா சங்கமழுஞ் செல்வ நீடூர் திருநீடூர்.
தெளிவுரை : பகையை வென்று உலகைக் காக்கும் சோழ மன்னரின் காவிரியாறு பாய்கின்ற நாட்டில், கமழும் மணமுடைய சோலைகளின் மலர் அரும்புகள் விரிந்து வடியும் தேனும், ஆற்றின் வழியே பெருக்கெடுத்து ஓடி அவ்வெள்ளத்தால் சேறான வயலுள் உழவர்கள் உழுகின்ற சேறும் மணம் வீசுகின்ற செல்வம் நீடியுள்ள ஊர் நீடூர் ஆகும்.
4090. விளங்கும் வண்மைத் திருநீடூர் வேளாண் தலைமைக் குடிமுதல்வர்
களங்கொள் மிடற்றுக் கண்ணுதலார் கழலிற் செறிந்த காதல்மிகும்
உளங்கொள் திருத்தொண் டுரிமையினில் உள்ளார் நள்ளார் முனையெறிந்த
வளங்கொ டிறைவர் அடியார்க்கு மாறா தளிக்கும் வாய்மையார்.
தெளிவுரை : விளக்கம் உடைய வள்ளன்மை கொண்ட வேளாளர் மரபில் தலைமையான குடியில் முதல்வராய் நஞ்சையுடைய கழுத்தையுடைய நெற்றிக் கண்ணரான சிவ பெருமானின் திருவடியில் செறிந்த பெருவிருப்பம் மிகவும் மனத்துள் கொண்ட திருத்தொண்டுரிமை பூண்டவராய் நட்பில்லாதவரைப் போரில் வென்றதால் வரும் வளங்களான ஊதியத்தைக் கொண்டு இறைவரின் அடியார்க்கு மாறாமல் அளிக்கும் வாய்மை யுடையவராய் விளங்கினார்.
4091. மாற்றார்க்கு அமரில் அழிந்துள்ளோர் வந்து தம்பால் மாநிதியம்
ஆற்றும் பரிசு பேசினால் அதனை நடுவு நிலைவைத்துக்
கூற்றும் ஒதுங்கும் ஆள்வினையால் கூலி யேற்றுச் சென்றெறிந்து
போற்றும் வென்றி கொண்டிசைந்த பொன்னுங் கொண்டு மன்னுவார்.
தெளிவுரை : போரில் பகைவர்க்குத் தோற்றவர் வந்து பெருஞ்செல்வம் தந்து தமது துணையைக் கொள்ளுமாறு பேசின், அதனை நடுநிலையில்நின்று அறநெறியை ஆராய்ந்து இயமனும் அஞ்சி ஒதுங்கும் போர் முயற்சியால் கூலியை ஏற்றுப் போரை வென்று, யாவரும் போற்றும் வெற்றியைப் பெற்று இசைந்த கூலியான பொன்னைக் கொண்டு வாழ்வாரானார்.
4092. இன்ன வகையால் பெற்றநிதி எல்லாம் ஈச னடியார்கள்
சொன்ன சொன்ன படிநிரம்பக் கொடுத்துத் தூய போனகமும்
கன்னல் நறுநெய் கறிதயிர்பால் கனியுள் ளுறுத்த கலந்தளித்து
மன்னும் அன்பின் நெறிபிறழா வழித்தொண் டாற்றி வைகினார்
தெளிவுரை : இங்ஙனம் செல்வம் எல்லாவற்றையும் சிவனடியார்கள் சொன்னபடியே கொடுத்துத் தூய சர்க்கரை, நறுமண நெய், கறி, தயிர், பால், கனி, என்ற இவை எல்லாவற்றையும் கலந்து திருவமுது அளித்து நிலைபெறும் அன்பின் நெறியில் பிறழாத வழித்தொண்டைச் செய்து வந்தார்.
4093. மற்றிந் நிலைமை பன்னெடுநாள் வையம் நிகழச் செய்துவழி
உற்ற அன்பின் செந்நெறியால் உமையாள் கணவன் திருவருளால்
பெற்ற சிவலோ கத்தமர்ந்து பிரியா வுரிமை மருவினார்
முற்ற வுழந்த முனையடுவார் என்னு நாமம் முன்னுடையார்.
தெளிவுரை : இத்தகைய நிலைமையில் அவர் திருத்தொண்டைப்பல காலம் செய்து வழிவழி வந்த அன்பால் ஆன நல்ல நெறியால் உமை பாகரின் திருவளால் அடைந்த சிவ லோகத்தில் அமர்ந்து மீளாத உரிமையை அடைந்தார். வெற்றி பொருந்தப் போரைச் செய்த காரணத்தால் முனையடுவார் என்ற திருப்பெயரை உடையவர் ஆனார்.
4094. யாவர் எனினும் இகலெறிந்தே ஈசனடியார் தமக்கின்பம்
மேவ அளிக்கும் முனையடுவார் விரைப்பூங் கமலக் கழல்வணங்கித்
தேவர் பெருமான் சைவநெறி விளங்கச் செங்கோல் முறைபுரியும்
காவல் பூண்ட கழற்சிங்கர் தொண்டின் நிலைமை கட்டுரைப்பாம்.
தெளிவுரை : எதிர்ப்பவர் எவரேயாயினும் போரில் வெற்றி கொண்ட அச்செல்வங்களை இறைவன் அடியார்க்கு அளித்த முனையடுவார் நாயனாரின் மணம் பொருந்திய தாமரை போன்ற திருவடிகளை வணங்கி, தேவர் தலைவரான சிவபெருமான் சைவ நெறி விளங்கச் செங்கோல் முறை செய்யும் காவல் பூண்ட கழற்சிங்க நாயனார் தொண்டின் நிலைமையைச் சொல்வோம்.
சுந்தரமூர்த்தி நாயனார் துதி
4095. செறிவுண் டென்று திருத்தொண்டிற் சிந்தை செல்லும் பயனுக்கும்
குறியுண் டொன்றா கிலுங்குறையொன் றில்லோம் நிறையுங் கருணையினால்
வெறியுண் சோலைத் திருமுருகன் பூண்டி வேடர் வழிபறிக்கப்
பறியுண் டவர் எம் பழவினைவேர் பறிப்பார் என்னும் பற்றாலே.
தெளிவுரை : நிறைந்த அருட் பெருக்கினால் மணமுடைய சோலை சூழ்ந்த திருமுகன் பூண்டியின் வழியிலே வேடுவரால் கவரப்பட்ட நம்பியாரூரர் எம் பழவினை மூலத்தை அடியுடன் பறித்து விடுவர் என்ற ஆதரவினால் செறிதல் உளதாகும் என்று திருத்தொண்டின் உள்ளம் சென்ற பயனுக்கும் ஒரு குறியுண்டு. அதுவன்றி ஒன்றாலும் குறைவு இல்லோம்.
முனையடுவார் நாயனார் புராணம் முற்றிற்று.
கறைக்கண்டன் சருக்கம் முற்றிற்று.
10. கடல் சூழ்ந்த சருக்கம்
59. கழற்சிங்க நாயனார் புராணம்
காடவர் குலத்தில் தோன்றியவர் கழற் சிங்கர். அவர் இறைவர் அருளால் வட நாட்டவரை வென்றார். சைவம் தழைக்குமாறு செய்தார்.
தலந்தோறும் சென்று இறைவரை வணங்கும் அவர் தம் மனைவியுடன் திருவாரூரை அடைந்தார். இறைவரை வணங்கினார். அப்போது அவருடைய மனைவியார் மலர் மாலை தொடுக்கும் மண்டபத்தின் மலரையே எடுத்து மோந்து விட்டார் என எண்ணிச் செருத்துணை நாயனார் என்பவர் அவளது மூக்கை அரிந்தார். அப்போது அவள் புலம்பினாள். அதைப் பார்த்த கழற்சிங்க நாயனார் சற்றும் அஞ்சாது இச்செயலைச் செய்தவர் யார்? என வினவினார். செருத்துணை நாயனார் இவர் இறைவர்க்குரிய மலரை மோந்தார். ஆதலால் நானே இவரது மூக்கை அரிந்தேன் என்றார். அப்போது கழற்சிங்கர் மலரை எடுத்த கையை அன்றோ முன்னால் துணிக்க வேண்டும்? என்று கூறி மனைவியின் கையைத் துண்டித்தார். இத்தகைய அருந்தொண்டைச் செய்த அவர் நெடுங்காலம் ஆண்டு இறையடியை அடைந்தார்.
4096. படிமிசை நிகழ்ந்த தொல்லைப் பல்லவர் குலத்து வந்தார்
கடிமதில் மூன்றும் செற்ற கங்கைவார் சடையார் செய்ய
அடிமலர் அன்றி வேறொன் றறிவினில் குறியா நீர்மைக்
கொடிநெடுந் தானை மன்னர் கோக்கழற் சிங்கர் என்பார்.
தெளிவுரை : உலகத்தில் விளங்கிய பழமையான பல்லவரின் குலத்தில் உதித்தவர், காவல்பொருந்திய மதில்களையுடைய மூன்று நகரங்களையும் எரித்த கங்கை பொருந்திய நீண்ட சடையுடைய சிவபெருமானின் செம்மையான திருவடிகளையே அல்லாது வேறொன்றையும் தம் அறிவில் பொருளாகக் குறியாத இயல்புடைய மன்னரான கோக்கழற் சிங்கர் எனப்படுவர்.
4097. காடவர் குரிசி லாராம் கழற்பெருஞ் சிங்க னார்தாம்
ஆடக மேரு வில்லார் அருளினால் அமரில் சென்று
கூடலர் முனைகள் சாய வடபுலங் கவர்ந்து கொண்டு
நாடற நெறியில் வைக நன்னெறி வளர்க்கும் நாளில்.
தெளிவுரை : காடவர் குலத்துப் பெரியவரான கழற்சிங்கர் பொன்னால் ஆன மேருமலையை வில்லாக உடைய இறைவரின் திருவருளால் போரில் சென்று, பகைவர் போரில் அழிய, வடபுலத்து நாடுகளைக் கைக் கொண்டு, நாடானது நீதிநெறியிலே தங்குமாறு, நன்னெறியை வளர்த்து ஆட்சி செய்கின்ற காலத்தில்.
4098. குவலயத் தரனார் மேவும் கோயில்கள் பலவும் சென்று
தவலரும் அன்பில் தாழ்ந்து தக்கமெய்த் தொண்டு செய்வார்
சிவபுரி என்ன மன்னும் தென்திரு வாருர் எய்திப்
பவமறுத் தாட்கொள் வார்தங் கோயிலுள் பணியப் புக்கார்.
தெளிவுரை : இவ்வுலகத்தில் சிவபெருமான் பொருந்தி விளங்கும் கோயில்கள் பலவும் சென்று பிறழாத அன்பினால் வணங்கி உண்மையான தொண்டுகளை அவர் செய்வாராய் சிவநகர் என்னும்படி நிலை பெற்ற தென் திருவாரூரை அடைந்து பிறவியை அறுத்து அடிமை கொள்ளும் இறைவரின் கோயிலுக்குள் புகுந்தார்.
4099. அரசியல் ஆயத் தோடும் அங்கணர் கோயி லுள்ளால்
முரசுடைத் தானை மன்னர் முதல்வரை வணங்கும் போதில்
விரைசெறி மலர்மென் கூந்தல் உரிமைமெல் லியலார் தம்முள்
உரைசிறந் துயர்ந்த பட்டத் தொருதனித் தேவி மேவி.
தெளிவுரை : முரசங்களையுடைய படை மன்னர் ஐவகைக் குழுக்கள் சூழ இறைவரின் கோயிலுக்குள் போய், முதல்வரான புற்றிடம் கொண்டவரை வணங்கும் போது மணம் மிக்க மலர்களை அணிந்த மென்மையான கூந்தலையுடைய உரிமைத் தேவியர்களுள் புகழால் சிறந்து உயர்ந்த பட்டத்துத் தேவி வந்து,
4100. கோயிலை வலங்கொண்டு அங்கண் குலவிய பெருமை யெல்லாம்
சாயல்மா மயிலே போல்வாள் தனித்தனி கண்டு வந்து
தூயமென் பள்ளித் தாமம் தொடுக்குமண் டபத்தின் பாங்கர்
மேயதோர் புதுப்பூ அங்கு விழுந்ததொன் றெடுத்து மோந்தாள்.
தெளிவுரை : சாயலால் மயிலைப் போன்ற அத்தேவியார் கோயிலை வலமாக வந்து, அங்குள்ள பெருமைகளை எல்லாம் தனித்தனியே பார்த்து வந்து, தூய மென்மையான பள்ளித் தாமம் தொடுக்கும் மண்டபத்தின் பக்கத்தில் பொருந்தியதோர் புதிய பூ ஒன்று அங்கு விழுந்ததை எடுத்து மோந்தாள்.
4101. புதுமலர் மோந்த போதில் செருத்துணைப் புனிதத் தொண்டர்
இதுமலர் திருமுற் றத்துள் எடுத்துமோந் தனளாம் என்று
கதுமென ஓடிச் சென்று கருவிகைக் கொண்டு பற்றி
மதுமலர்த் திருவொப் பாள்தன் மூக்கினைப் பிடித்து வார்ந்தார்.
தெளிவுரை : அங்ஙனம் அத்தேவியார் புதிய மலரை மோந்த போதில் செருத்துணையார் என்னும் தூய தொண்டனார், இந்த மலரைப் பூமண்டபத் திருமுற்றத்துள் எடுத்து மோந்தனள் ஆவாள் என்று எண்ணித் துணிந்து தேன் பொருந்திய தாமரையில் வீற்றிருக்கும் இலக்குமி போன்ற அவளது மூக்கைப் பிடித்து அரிந்தார்.
4102. வார்ந்திழி குருதி சோர மலர்க்கருங் குழலும் சோரச்
சோர்ந்துவீழ்ந் தரற்றுந் தோகை மயிலெனத் துளங்கி மண்ணில்
சேர்ந்தயர்ந் துரிமைத் தேவி புலம்பிடச் செம்பொன் புற்றுள்
ஆர்ந்தபே ரொளியைக் கும்பிட்டு அரசரும் அணையவந்தார்.
தெளிவுரை : அங்ஙனம் அரிந்ததால் குருதி வழியவும் மலர் சூடிய கூந்தல் அவிழ்ந்து அலையவும் சோர்வடைந்து விழுந்து அரற்றும் தோகையையுடைய மயில்போல் நடுங்கித் தரை மீது சோர்ந்து அயர்ந்து பட்டத்துத் தேவியார் புலம்ப, செம் பொன்னால் இயன்ற புற்றிடமாக நிறைந்த பேரொளி யாகிய பெருமானை வணங்கி அரசரும் அங்கு வந்தார்.
4103. வந்தணை வுற்ற மன்னர் மலர்ந்தகற் பகத்தின் வாசப்
பைந்தளிர்ப் பூங்கொம் பொன்று பார்மிசை வீழ்ந்த தென்ன
நொந்தழிந் தரற்று வாளை நோக்கிஇவ் வண்டத் துள்ளோர்
இந்தவெவ் வினையஞ் சாதே யார்செய்தார் என்னும் எல்லை.
தெளிவுரை : வந்து சேர்ந்த மன்னர் மலர்கள் மலரப் பெற்ற கற்பகத்தின் மணமுடைய பசிய தளிர்களையுடைய பூங்கொம்பு ஒன்று நிலத்தின் மீது விழுந்தது போல வருந்தி அழிந்து அரற்றுவாளான தேவியைப் பார்த்து, இந்தப் பூவுலகத்தில் உள்ளவர்களுள் இக்கொடிய செயலை அச்சம் இல்லாது செய்தவர் யார்? என வினவினார்.
4104. அந்நிலை யணைய வந்து செருத்துணை யாராம் அன்பர்
முன்னுறு நிலைமை யங்குப் புகுந்தது மொழிந்த போது
மன்னரும் அவரை நோக்கி மற்றிதற் குற்ற தண்டம்
தன்னைஅவ் வடைவே யன்றோ தடிந்திடத் தகுவ தென்று.
தெளிவுரை : அந்நிலையில் பக்கத்தில் வந்த செருத்துணை யாரான அன்பர் அதற்கு முன்னர் நிகழ்ந்த நிலைமையை அங்கு நிகழ்ந்தவாறே சொல்ல, அப்போது மன்னரும் அச் செருத்துணையாரைப் பார்த்து. இச்செயல்களுக்குப் பொருந்திய தண்டனையை அக்குற்றங்கள் புகுந்த அடைவுப்படியன்றோ தண்டிக்கத் தக்கது ! என்று சொல்லி,
4105. கட்டிய வுடைவாள் தன்னை உருவிஅக் கமழ்வா சப்பூத்
தொட்டு முன்னெடுத்த கையாம் முற்படத் துணிப்ப தென்று
பட்டமும் அணிந்து காதல் பயில்பெருந் தேவி யான
மட்டவிழ் குழலாள் செங்கை வளையொடுந் துணித்தா ரன்றே.
தெளிவுரை : தம் இடையில் கட்டிய உடைவாளை உருவி அந்த மணம் கமழும் பூவைத் தொட்டு முன்பு எடுத்த கைதான் முதலில் துண்டிக்கப்படுவது தகுதி என்று கூறி, தன் அரசுரிமைப் பட்டமும் பூண்டு தம் காதலையும் பூண்டு பயிலும் பெருந்தேவியான மணம் கமழும் கூந்தலையுடைய அவளது கையை, அணிந்த வளையலுடன் அப்போதே துண்டித்தார்,
4106. ஒருதனித் தேவி செங்கை உடைவாளால் துணித்த போது
பெருகிய தொண்டர் ஆர்ப்பின் பிறங்கொலி புவிமேற் பொங்க
இருவிசும் படைய ஓங்கும் இமையவர் ஆர்ப்பும் விம்மி
மருவிய தெய்வ வாச மலர்மழை பொழிந்த தன்றே.
தெளிவுரை : தம் ஒப்பற்ற தனித் தேவியின் செங்கையை மன்னர் உடைவாளால் வெட்டியபோது, பெருகிய தொண்டர்களின் அர என்று எழும்பிய ஒலியானது நிலவுலகின் மேலே பொங்க, வானம் முழுவதும் எழும் தேவர் முழக்கத்துடன் கூடிப் பெருகிப் பொருந்திய தெய்வ மணமுடைய கற்பகப் பூமழையும் அப்போது பெய்தது.
4107. அரியஅத் திருத்தொண் டாற்றும் அரசனார் அளவில் காலம்
மருவிய வுரிமை தாங்கி மாலயற் கரியார் மன்னும்
திருவருட் சிறப்பி னாலே செய்யசே வடியி னீழல்
பெருகிய வுரிமை யாகும் பேரருள் எய்தி னாரே.
தெளிவுரை : அரிய அந்தத் தொண்டைச் செய்த மன்னர் பொருந்திய அளவில்லாத காலம் தம் உரிமையான அரசாட்சியையும் திருத்தொண்டையும் தாங்கியிருந்து, திருமாலுக்கும் நான்முகனுக்கும் அரியவரான இறைவரின் நிலைபெற்ற திருவருட் சிறப்பால் செம்மை தரும் சிவந்த திருவடி நிழலில் பெருகிய உரிமையான திருவருள் நிறைவுள் பொருந்தப் பெற்றார்.
4108. வையகம் நிகழக் காதல் மாதேவி தனது செய்ய
கையினைத் தடிந்த சிங்கர் கழலிணை தொழுது போற்றி
எய்திய பெருமை அன்பர் இடங்கழி யார்என் றேத்தும்
மெய்யரு ளுடைய தொண்டர் செய்வினை விளம்ப லுற்றாம்.
தெளிவுரை : உலகம் விளங்கத் தம் காதலுடைய பட்டத்தரசியின் கையினைத் தடிந்த சிங்கரின் திருவடிகளைத் தொழுது துதித்துப் பொருந்திய பெருமையையுடைய அன்பரான இடங்கழியார் என்று வணங்கப்படும் மெய்யருளுடைய திருத்தொண்டர் செய்த திருத்தொண்டைச் சொல்லலானோம்.
கழற்சிங்க நாயனார் புராணம் முற்றிற்று.
60. இடங்கழி நாயனார் புராணம்
கொடும்பாளூரில் தோன்றியவர் இடங்கழி நாயனார். அவர் சோழர் குலத்தவர்; அவர் சைவநெறியும் வைதிக நெறியும் தழைக்க ஆட்சி செய்தார்.
அவர் ஒரு சிவனடியார். அடியார்க்கு அமுது அளிக்கும் பணியை அவர் மேற் கொண்டிருந்தார். அவரிடம் இருந்த பொருள் எல்லாம் செலவாயின. ஆதலால் இடங்கழி நாயனாரின் நெற்களஞ்சியத்தில் இருந்த நெல்லை எடுத்தார். அதைக்கண்ட காவலர் அவரை இடங்கழி நாயனாரின் முன் கொண்டு நிறுத்தினார். அந்த அன்பர் தாம் சிவனடியார்க்கு அமுது அளிக்க நெல்லை எடுத்தாய் உரைத்தார். அதைக் கேட்ட மன்னர் உள்ளம் உருகினார். இவர் அல்லரோ எனக்குக் கருவூலம் ! என எண்ணினார். அரசாங்கப் பொருள்கள் எல்லாவற்றையும் அடியார்கள் கொள்ளை கொள்ளும்படி பறையறைவிக்கச் சொன்னார். இங்ஙனம் சைவம் தழைக்க ஆண்ட அவர் இறைவர் அடியைச் சேர்ந்தார்.
4109. எழுந்திரைமா கடலாடை இருநிலமாம் மகள்மார்பில்
அழுந்துபட எழுதும்இலைத் தொழில்தொய்யில் அணியினவாம்
செழுந்தளிரின் புடைமறைந்த பெடைகளிப்பத் தேமாவின்
கொழுந்துணர்கோ திக்கொண்டு குயில்நாடுங் கோனாடு.
தெளிவுரை : செழுமையான தளிர்களின் பக்கத்தில் மறைந்த பெடை மகிழும் தேமாவின் தளிர்களைக் கோதியபடி குயில்கள் நாடுகின்ற கோனாடு மேன்மேல் எழுந்து வரும் அலைகளை யுடைய பெருங்கடலை ஆடையாக உடைய பெரிய நிலமான மகளின் மார்பில் அழுந்தும்படி எழுதும் இலைகள்போல் சித்திரிக்கப்பட்ட தொய்யிலின் அணியைக் கொண்டுள்ளது.
4110. முருகுறுசெங் கமலமது மலர்துதைந்த மொய்யளிகள்
பருகுறுதெண் திரைவாவிப் பயில்பெடையோடு இரையருந்தி
வருகுறுதண்து ளிவாடை மறையமா தவிச்சூழல்
குருகுறங்குங் கோனாட்டுக் கொடிநகரங் கொடும்பாளூர்.
தெளிவுரை : மணம் வீசும் செந்தாமரை மலரின் தேனை மொய்த்த வண்டுகள் பருகுவதற்கு இடமான தெளிந்த அலைகளை யுடைய நீர் நிலையில், பொருந்திய பெண் பறவையுடன் இறையை அருந்தி, மோதி வரும் குளிர்ந்த வாடைக்காக மறைந்து வாழும்படி குருக்கத்திச் சோலையில் குருகுப் பறவைகள் உறங்குகின்ற கோனாட்டின் தலை நகரம் கொடும்பாளூர் ஆகும்.
4111. அந் நகரத் தினில்இருக்கு வேளிர்குலத் தரசளித்து
மன்னியபொன் னம்பலத்து மணிமுகட்டில் பாக்கொங்கில்
பன்னுதுலைப் பசும்பொன்னால் பயில்பிழம்பாம் மிசையணிந்த
பொன்னெடுந்தோள் ஆதித்தன் புகழ்மரபிற் குடிமுதலோர்.
தெளிவுரை : அந்தக் கொடும்பாளூர் நகரத்தில் இருக்கு வேளிர் குலத்திலே தோன்றி, ஆட்சி செய்து நிலைபெற்ற பொன்னம்பலத்தின் அழகிய உச்சியில் ஒளியுடைய கொங்கு நாட்டின் புகழுடைய எடையேறப் பெற்ற பசும் பொன்னினால் விளங்கும் ஒளியுருவின் மேல் வேய்ந்து அணிந்த பொன்னணிகள் அணிந்த தோளையுடைய ஆதித்த சோழனின் புகழ் தங்கிய மரபில் குடி முதல்வராய்.
4112. இடங்கழியார் எனவுலகில் ஏறுபெரு நாமத்தார்
அடங்கலர்முப் புரமெரித்தார் அடித்தொண்டின் நெறியன்றி
முடங்குநெறி கனவினிலும் உன்னாதார் எந்நாளும்
தொடர்ந்தபெருங் காதலினால் தொண்டர்வேண் டியசெய்வார்.
தெளிவுரை : இடங்கழியார் என்று உலகத்தில் புகழ் பெற்ற பெரிய பெயரை உடையவர்; பகைவரின் முப்புரங்களையும் எரித்த இறைவரின் திருவடித் தொண்டின் நெறியையே அன்றி ஏனை முடக்கம் பொருந்திய அயல் நெறிகளைக் கனவிலும் நினைக்காதவர்; எக்காலத்திலும் தொடர்ந்த மிக்க காதலால் தொண்டர் வேண்டிய பணிகள் செய்பவராய்( விளங்கினார்.)
4113. சைவநெறி வைதிகத்தின் தருமநெறி யொடுந்தழைப்ப
மைவளருந் திருமிடற்றார் மன்னியகோ யில்களெங்கும்
மெய்வழிபாட்டு அர்ச்சனைகள் விதிவழிமேன் மேல்விளங்க
மொய்வளர்வண் புகழ்பெருக முறைபுரியும் அந்நாளில்.
தெளிவுரை : சைவ நெறியானது வைதிக நெறியுடன் தழைக்க, நஞ்சுண்ட திருமிடற்றையுடைய இறைவர் நிலைபெற வீற்றிருக்கும் கோயில்களின் எங்கும் உண்மை வழிபாடாக அருச்சனைகள் சிவாகம விதிவழியே மேலும் மேலும் விளங்க, கூடி வளர்கின்ற வளமையுடைய புகழ் பெருக அரசு செலுத்தினார். அங்ஙனம் அரசு செலுத்துகின்ற அந்நாளில்,
4114. சங்கரன்தன்அடி யாருக்கு அமுதளிக்கும் தவமுடையார்
அங்கொருவர் அடியவருக்கு அமுதொருநாள் ஆக்கவுடன்
எங்குமொரு செயல்காணாது எய்தியசெய் தொழின்முட்டப்
பொங்கியெழும் பெருவிருப்பாற் புரியும்வினை தெரியாது.
தெளிவுரை : அங்குச் சிவபெருமானின் அடியவர்க்கு அமுது அளிக்கும் தவமுடைய ஒருவர், ஒருநாள் அடியவருக்குத் திருவமுது ஆக்குதற்குரிய பண்டங்கள் பெற, எங்கும் ஒரு செயல் காணாமையால் தாம் செய்து வரும் தொழில் முட்டுப்பட மேன்மேலும் பொங்கி எழும் மிக்க விருப்பத்தினால் தாம் செய்யும் செயல் தெரியாமல்,
4115. அரசரவர் பண்டாரத் தந்நாட்டின் நெற்கூட்டில்
நிரைசெறிந்த புரிபலவா நிலைக்கொட்ட காரத்தில்
புரைசெறிநள் ளிருளின்கண் புக்குமுகந்து எடுப்பவரை
முரசெறிகா வலர்கண்டு பிடித்தரசன் முன்கொணர்ந்தார்.
தெளிவுரை : இடங்கழியாரின் களஞ்சியத்தில், அந்நாட்டின் நெற்கூடுகளின் வரிசை நிறைந்து மதில் காவல் பலவுள்ள நிலைக் கொட்டகாரத்தில், எங்கும் மிகுந்து இருள் நிறைந்த நள்ளிரவில் புகுந்து, நெல்லை முகந்து எடுக்க, அவரை நாழிகைப்படி இரவு முழுதும் காவல் முரசினை அறையும் காவலர்கள் பார்த்து அவரைப்பற்றி அரசர்முன் கொண்டு சென்றனர்.
4116. மெய்த்தவரைக் கண்டிருக்கும் வேல்மன்னர் வினவுதலும்
அத்தன்அடி யாரையான் அமுதுசெய்விப் பதுமுட்ட
இத்தகைமை செய்தேனென்று இயம்புதலு மிகவிரங்கிப்
பத்தரைவிட்டு இவரன்றோ பண்டாரம் எனக்கென்பார்.
தெளிவுரை : காவலர் பிடித்து வந்த அடியவரை அரச கொலு வீற்றிருக்கும் வேல் ஏந்திய மன்னர் கண்டு வினவவும் சிவனடியார்களை யான் அமுது செய்விக்கும் தொழில் முட்டுப்பட்டதால் இவ்வாறு செய்தேன் என்று அவர் உரைத்தார். உரைக்கவும் அதற்கு மிகவும் இரங்கி அவரைக் காவலினின்று விடுவித்து இவரல்லரோ எனக்குக் களஞ்சியமாவார் ! என்று உரைப்பவராய்,
4117. நிறையழிந்த வுள்ளத்தால் நெற்பண்டா ரமும்அன்றிக்
குறைவில்நிதிப் பண்டார மானவெலாங் கொள்ளைமுகந்
திறைவனடி யார்கவர்ந்துகொள்கவென எம்மருங்கும்
பறையறையப் பண்ணுவித்தார் படைத்தநிதிப் பயன்கொள்வார்.
தெளிவுரை : நிலையழிந்த உள்ளத்தால் நெற்களஞ்சியம் மட்டுமே அல்லாமல் குறைவில்லாத செல்வங்களின் பொக்கிசமான எல்லாவற்றையும் கொள்ளையாய் முகந்து இறைவன் அடியார்கள் கவர்ந்து கொள்க என்று, தாம் பெற்ற நிதிகளால் ஆன பயனைக் கொள்பவரான இடங்கழியார் எல்லாப் பக்கங்களிலும் பறையறையுமாறு செய்தார்.
4118. எண்ணில்பெரும் பண்டாரம் ஈசனடி யார்கொள்ள
உண்ணிறைந்த அன்பினால் உறுகொள்ளை மிகவூட்டித்
தண்ணளியால் நெடுங்காலந் திருநீற்றின் நெறிதழைப்ப
மண்ணில்அருள் புரிந்திறைவர் மலரடியின் நிழல்சேர்ந்தார்.
தெளிவுரை : அளவில்லாத பெரிய சேம நிதிகளை எல்லாம் இறைவனின் அடியார்கள் எடுத்துக் கொள்ளும்படி உள்ளத்தின் உள்ளே நிறைந்த அன்பினால் உற்ற கொள்ளையைச் செய்வித்துக் குளிர்ந்த கருணையினால் நெடுங்காலம் திருநீற்றின் நெறி தழைக்கும்படி உலகில் அருள் புரிந்து, சிவ பெருமானின் திருவடி நீழலை அடைந்தார்.
4119. மைதழையும் மணிமிடற்றார் வழித்தொண்டின் வழிபாட்டில்
எய்துபெருஞ் சிறப்புடைய இடங்கழியார் கழல்வணங்கி
மெய்தருவார் நெறியன்றி வேறொன்றும் மேலறியாச்
செய்தவராம் செருத்துணையார் திருத்தொண்டின் செயல் மொழிவாம்.
தெளிவுரை : நஞ்சு வளர்வதற்கு இடமான அழகிய கண்டத்தையுடைய சிவபெருமானின் வழிவழி வரும் தொண்டின் வழிபாட்டால் பொருந்திய பெருஞ்சிறப்பையுடைய இடங்கழி நாயனாரின் திருவடிகளை வணங்கிச் சத்தாம் தன்மை தருபவரான சிவபெருமானின் நெறியையன்றிப் பிறிதொன்றையும் மேலானது என அறியாத செருத்துணையாரின் செயலைச் சொல்வோம்.
இடங்கழி நாயனார் புராணம் முற்றிற்று.
61. செருத்துணை நாயனார் புராணம்
சோழநாட்டின் மருகல் நாட்டில் உள்ள தஞ்சையில் வேளாளர் குடியில் செருத்துணை நாயனார் தோன்றினார். அவர் திருவாரூரில் இறைவரை வழிபட்டு வந்தார். அங்ஙனம் இருக்கும் நாளில் கழற்சிங்கரின் மனைவியார் மலர் மாலை கட்டும் மண்டபத்தில் உள்ள மலரை எடுத்து மோந்தார். அவர் மலர் மண்டபத்தில் உள்ள மலரை எடுத்து மோந்தார் என எண்ணிக் கத்தியினால் அவளது மூக்கை அரிந்தார். இத்தகைய பக்தியுடைய அவர் இறைவர் அடியைச் சேர்ந்தார் எனக் கூறவும் வேண்டுமோ?
4120. உள்ளும் புறம்பும் குலமரபின் ஒழுக்கம் வழுவா ஒருமைநெறி
கொள்ளும் இயல்பிற் குடிமுதலோர் மலிந்த செல்வக் குலப்பதியாம்
தெள்ளுந் திரைகள் மதகுதொறும் சேலும் கயலும் செழுமணியும்
தள்ளும் பொன்னி நீர்நாட்டு மருகல் நாட்டுத் தஞ்சாவூர்.
தெளிவுரை : தெளிவான அலைகள் மதகுகள் தோறும் சேல் மீன்களையும் கயல் மீன்களையும் செழுமையான மணிகளையும் கொழிக்கின்ற காவிரி பாயும் நீர் நாடு என்ற சோழ நாட்டில், மருகல் நாட்டில் உள்ள தஞ்சாவூர் என்பது அகமும் புறமும் குலமரபில் வரும் ஒழுக்கத்தினின்று தவறாத நெறியைக் கொள்ளும் பண்புடைய பழங்குடி முதல் மக்கள் நிறைந்த செல்வம் உடைய பெருமையுடைய பதியாகும்.
4121. சீரின் விளங்கும் அப்பதியில் திருந்து வேளாண் குடிமுதல்வர்
நீரின் மலிந்த செய்யசடை நீற்றர் கூற்றின் நெஞ்சிடித்த
வேரி மலர்ந்த பூங்கழல்சூழ் மெய்யன் புடைய சைவரெனப்
பாரில் நிகழ்ந்த செருத்துணையார் பரவுந் தொண்டின் நெறிநின்றார்.
தெளிவுரை : சிறப்புடன் விளங்கும் அந் நகரத்தில் திருந்தும் வேளாளர் குடியின் முதல்வர் கங்கை அணிந்த சிவந்த சடையையும் திருநீற்றையும் உடைய இறைவரின், கூற்றுவனை மார்பிலே உதைத்த தேன் பொருந்திய மலர்போன்ற திருவடிகளையே நினைக்கின்ற உண்மை அன்புடைய சைவர் என்று உலகில் விளங்கிய செருத்துணையார் என்பவர், போற்றும் திருத் தொண்டின் நெறியில் நின்று ஒழுகி வந்தார்.
4122. ஆன அன்பர் திருவாரூர் ஆழித் தேர்வித் தகர்கோயில்
ஞான முனிவர் இமையவர்கள் நெருங்கு நலஞ்சேர் முன்றிலினுள்
மான நிலவு திருப்பணிகள் செய்து காலங் களின்வணங்கிக்
கூனல் இளவெண் பிறைமுடியார் தொண்டு பொலியக் குலவுநாள்.
தெளிவுரை : இத்தகைய அன்பர் திருவாரூரில் ஆழித்தேர் வல்லுநரான இறைவரின் கோயிலுள் ஞான முனிவரும் தேவரும் நெருங்கியிருக்கின்ற நன்மை பொருந்திய முன்றினிலுள்ளே, பெருமையுடைய திருப்பணிகளைச் செய்து, உரிய காலங்களில் வழிபட்டு வணங்கி, வளைந்த இளம் பிறையைச் சூடிய சடையுடைய சிவபெருமானின் திருத் தொண்டு விளங்கச் செய்து வந்த நாளில்.
4123. உலகு நிகழ்ந்த பல்லவர்கோச் சிங்கர் உரிமைப் பெருந்தேவி
நிலவு திருப்பூ மண்டபத்து மருங்கு நீங்கிக் கிடந்ததொரு
மலரை யெடுத்து மோந்ததற்கு வந்து பொறாமை வழித்தொண்டர்
இலகு சுடர்வாய்க் கருவியெடுத் தெழுந்த வேகத் தாலெய்தி.
தெளிவுரை : உலகில் ஆட்சி செய்யும் பல்லவ மன்னரான கோச்சிங்கரின் பட்டத்து அரசியான பெருந்தேவி, விளங்கும் பூமண்டபத்தின் பக்கத்தில் விலகிக் கிடந்த ஒரு பூவை எடுத்து மோந்து விட்டதற்காக, உள்ளம் பொறுக்க மாட்டாது, சிவனெறி வரும் தொண்டராதலால், விளங்கும் ஒளி பொருந்திய கூரிய வாயுடைய கருவியை (வாளை) எடுத்து வேகத்துடன் வந்து சேர்ந்து,
4124. கடிது முட்டி மற்றவள்தன் கருமென் கூந்தல் பிடித்தீர்த்துப்
படியில் வீழ்த்தி மணிமூக்கைப் பற்றிப் பரமர் செய்யசடை
முடியில் ஏறுந் திருப்பூமண் டபத்து மலர்மோந் திடும்மூக்கைத்
தடிவ னென்று கருவியினால் அரிந்தார் தலைமைத் தனித்தொண்டர்.
தெளிவுரை : விரைந்து வந்து அவளது கரிய மென்மையான கூந்தலைப் பிடித்து இழுத்து நிலத்தில் வீழ்த்தி, அழகிய மூக்கைப் பிடித்து இறைவரின் சிவந்த சடை முடியின் மேல் அணியும் பூ மண்டபத்துள் மலரை எடுத்து மோந்த குற்றம் செய்த மூக்கைத் தண்டிப்பேன் ! என்று கருவியால் சிறப்புக் கொண்ட ஒப்பில்லாத தொண்டர் அரிந்தார்.
4125. அடுத்த திருத்தொண் டுலகறியச் செய்த அடலே றனையவர்தாம்
தொடுத்த தாம மலரிதழி முடியார் அடிமைத் தொண்டுகடல்
உடுத்த உலகின் நிகழச்செய் துய்யச் செய்ய பொன்மன்றுள்
எடுத்த பாத நிழலடைந்தே இறவா வின்பம் எய்தினார்.
தெளிவுரை : தமக்குத் திருவருளால் அடுத்ததான திருத் தொண்டை உலகம் அறியும்படி செய்த வன்மையுடைய ஆண் சிங்கம் போன்ற செருத்துணையார், தொடுக்கப்பட்ட மாலை போன்ற கொன்றை மலரைச் சூடிய முடியை யுடைய இறைவரின் அடிமைத் தொண்டினைக் கடல் சூழ்ந்த உலகத்தில் விளங்கும்படி செய்து, உயிர்கள் உய்யும் படி பொன்னம் பலத்தில் எடுத்த திருவடியின் நிழலை அடைந்து இறவாத இன்பத்தை எய்தினார்.
4126. செங்கண் விடையார் திருமுன்றில் விழுந்த திருப்பள் ளித்தாமம்
அங்கண் எடுத்து மோந்ததற்கு அரசன் உரிமைப் பெருந்தேவி
துங்க மணிமூக் கரிந்தசெருத் துணையார் தூய கழல்இறைஞ்சி
எங்கும் நிகழ்ந்த புகழ்த்துணையார் உரிமை அடிமை யெடுத்துரைப்பாம்.
தெளிவுரை : சிவந்த கண்ணையுடைய காளையூர்தியை யுடைய இறைவரின் திருமுற்றத்தில் விழுந்த பள்ளித் தாமத்துக்குரிய மலரை அங்கு எடுத்து மோந்ததற்காக, மன்னரின் பட்டத்துக்குரிமையுடைய பெருந்தேவியாரின் பெருமை யுடைய அழகிய மூக்கை அரிந்த செருத்துணையாரின் தூய அடிகளை வணங்கி, எங்கும் விளங்கும் புகழ்த்துணையாரின் உரிமையான அடிமைத் திறத்தின் இயல்பை இயம்புவோம்.
செருத்துணை நாயனார் புராணம் முற்றும்.
62. புகழ்த்துணை நாயனார் புராணம்
புகழ்த்துணை நாயனார் செருவிலிபுத்தூரில் ஆதி சைவர் குலத்தில் உதித்தார். அவர் சைவாகம விதிப்படி இறைவனை வழிபட்டு வந்தார். அக்காலத்தில் பஞ்சம் வந்தது. பசி அவரை வருத்தியது. ஆயினும் அவர் செய்த அருச்சனையை நிறுத்தவில்லை. ஒருநாள் அவ்வாறு பூசை செய்யுங்கால் மிக்க பசியால் சோர்ந்து விழுந்தார். இறைவர் அருளால் அவருக்கு உறக்கம் உண்டாயிற்று. அவரது கனவில், இறைவர் பஞ்சம் நீங்கும் வரை உமக்கு இங்குக் காசு வைப்போம், என்று அருள் செய்தார். அத்தகைய காசினைப் பெற்ற அவர் பூசையைச் செய்து பின் இறையடியை அடைந்தார்.
4127. செருவிலிபுத் தூர்மன்னும் சிவமறையோர் திருக்குலத்தார்
அருவரைவில் ஆளிதனக்கு அகத்தடிமை யாம்அதனுக்கு
ஒருவர்தமை நிகரில்லார் உலகத்துப் பரந்தோங்கிப்
பொருவரிய புகழ்நீடு புகழ்த்துணையார் எனும்பெயரார்.
தெளிவுரை : செருவிலி புத்தூர் என்ற பதியில் நிலை பெற்று வாழும் சிவ வேதியர் குலத்தில் தோன்றியவர், அரிய மலை வில்லாளியான சிவபெருமானின் அகம்படிமைத் தொண்டு பூண்டு ஒழுகும் அத்தன்மையில் தமக்கு ஒப்பாக ஒருவரும் இல்லாதவரான உலகத்தில் பரவி ஓங்கும் ஒப்பில்லாத புகழ் நீடிய புகழ்த்துணையார் என்னும் பெயரை உடையவர்.
4128. தங்கோனைத் தவத்தாலே தத்துவத்தின் வழிபடுநாள்
பொங்கோத ஞாலத்து வற்கடமாய்ப் பசிபுரிந்தும்
எங்கோமான் தனைவிடுவேன் அல்லேன்என் றுஇராப்பகலும்
கொங்கார்பன் மலர்கொண்டு குளிர்புனல்கொண்டு அருச்சிப்பார்.
தெளிவுரை : தம் இறைவரைத் தவத்தால் தத்துவத்தின் நெறியினால் வழிபட்டு வரும் நாளில், பொங்கும் கடல் சூழ்ந்த வுலகத்தில் பஞ்சம் வந்து உணவில்லாமல் பசி மிக்கிருந்தும், எம் இறைவனை நான் விடுவேன் அல்லேன் ! என்று இரவும் பகலுமாக மணம் கமழும் பல மலர்களைக் கொண்டும் குளிர்நீரைக் கொண்டும் பூசிப்பாராகி.
4129. மாலயனுக் கரியானை மஞ்சனமாட் டும்பொழுது
சாலவுறு பசிப்பிணியால் வருந்திநிலை தளர்வெய்திக்
கோலநிறை புனல்தாங்கு குடந்தாங்க மாட்டாமை
ஆலமணி கண்டத்தார் முடிமீது வீழ்த்தயர்வார்.
தெளிவுரை : திருமாலுக்கும் நான்முகனுக்கும் தேடுவதற் கரிய பெருமானை நீராட்டும் போது மிகவும் பொருந்திய பசியினால் வருந்தி நிலை தளர்ந்து அழகிய நிறைந்த நீரை யுடைய குடத்தைத் தாங்க மாட்டாமல், நஞ்சு அணிந்த கழுத்தை உடைய சிவபெருமானின் முடிமீது வீழ்த்தித் தளர்வாராகி,
4130. சங்கரன்றன் அருளாலோர் துயில்வந்து தமையடைய
அங்கணனுங் கனவின்கண் அருள்புரிவான் அருந்துணவு
மங்கியநாட் கழிவளவும் வைப்பதுநித் தமும்மொருகா
சிங்குனக்கு நாமென்ன இடர்நீங்கி யெழுந்திருந்தார்.
தெளிவுரை : சிவபெருமானின் திருவருளால் உறக்கம் வந்து தம்மைச் சேர, இறைவரும் கனவு நிலையில் அவருக்கு அருள் செய்ய உண்ணும் உணவு குறைந்த காலம் (பஞ்சம்) தீருமளவும் இங்கு உனக்கு நாம் நாள்தோறும் ஒரு காசு வைப்போம் ! என்று கூறியருளினார். நாயனார் துன்பம் நீங்கித் துயில் உணர்ந்து எழுந்தார்.
4131. பெற்றம்உகந் தேறுவார் பீடத்தின் கீழ்ஒருகாசு
அற்றம்அடங் கிடஅளிப்ப அன்பரும்மற் றதுகைக் கொண்டு
உற்றபெரும் பசியதனால் உணங்கும்உடம் புடன் உவந்து
முற்றுணர்வு தலைநிரம்ப முகமலர்ந்து களி கூர்ந்தார்.
தெளிவுரை : காளை யூர்தியில் எழுந்தருளும் சிவபெருமான் பீடத்தின் கீழே துன்பம் நீங்க ஒரு பொற்காசை இட்டு அளித்திட, அன்பரும் அதைக் கைக்கொண்டு, பொருந்திய பசியினால் வாட்டம் கொண்ட உடலுடன், கூடிய அளவு மகிழ்ந்து, பேருணர்வுடன் கூடி நிரம்ப முகமலர்ச்சி அடைந்து மகிழ்ந்தார்.
4132. அந்நாள்போல் எந்நாளும் அளித்தகா சதுகொண்டே
இன்னாத பசிப்பிணிவந் திறுத்தநாள் நீங்கியபின்
மின்னார்செஞ் சடையார்க்கு மெய்யடிமைத் தொழில்செய்து
பொன்னாட்டில் அமரர்தொழப் புனிதர்அடி நிழற்சேர்ந்தார்.
தெளிவுரை : அந்த நாளைப் போலவே, பின் எல்லா நாளிலும், இறைவர் நாள்தோறும் தந்த காசினைக்கொண்டு துன்பமுடைய பசி வந்து சங்கடம் உண்டாக்கிய வற்கடம் நீங்கிய பின்பு ஒளியுடைய இறைவரின் மெய்யடிமைத் தொழிலான அகப்படித் தொண்டைச்செய்து இருந்து தேவர் உலகில் உள்ள வானவர் தொழும்படி சிவபெருமானின் திருவடிகளைச் சேர்ந்தார்.
4133. பந்தணையும் மெல்விரலாள் பாகத்தர் திருப்பாதம்
வந்தணையும் மனத்துணையார் புகழ்த்துணையார் கழல்வாழ்த்திச்
சந்தணியும் மணிப்புயத்துத் தனிவீர ராந்தலைவர்
கொந்தணையும் மலர்அலங்கல் கோட்புலியார் செயல்உரைப்பாம்.
தெளிவுரை : பந்தைச் சேரும் மென்மையான விரல்களையுடைய உமையம்மையாரின் பாகத்தை உடைய இறைவரின் திருவடிகள் வந்து சேர்கின்ற மனத்துணை பெற்றவரான புகழ்த்துணையாரின் திருவடிகளை வாழ்த்திச் சந்தனக் கலவை அணிந்த அழகிய தோள்களையுடைய ஒப்பில்லாதவரும் தலைவருமான மணம் கமழும் மாலை சூடிய கோட்புலியாரின் செயலை உரைப்போம்.
புகழ்த்துணை நாயனார் புராணம் முற்றும்
63. கோட்புலி நாயனார் புராணம்
சோழநாட்டில் உள்ள நாட்டியத்தான் குடியில் கோட்புலி நாயனார் என்பவர் தோன்றினார். அவர் மன்னனிடத்தில் படைத்தலைமை கொண்டார். அத் தொழிலால் தமக்குக் கிடைக்கும் பொருளால் நெல் வாங்கிக் கோயிலின் திருவமுதுக்கு அளிப்பார்.
ஒருமுறை அவர் போருக்குச் செல்ல வேண்டியிருந்தது. கோயிலுக்கு அளிக்க வேண்டிய நெல்லைக் கூட்டில் வைத்து விட்டுச் சென்றார். உறவினர் அதை எடுத்துச் செலவழிக்கக் கூடாது என்றும் கூறிச் சென்றார்.
பஞ்சம் வந்தது. அதனால் உறவினர் அந்நெல்லை எடுத்துக் கொண்டனர். போருக்குச் சென்ற கோட்புலியார் திரும்பினார். உறவினர் செய்த பாதகத்தை அறிந்தார். தம் உறவினரான தந்தை, தாய், மனைவி முதலிய அனைவரையும் கொன்றார். அப்போது அங்கிருந்த குழந்தையைக் காவலான் சுட்டி இதனைக் கொல்ல வேண்டா. இது நெல்லை உண்ணவில்லை என்றான். இது நெல்லை யுண்ணவில்லை. ஆயினும் நெல்லை உண்டவரின் பாலை யுண்டது என்று கூறி அதனையும் கொன்றார். இறைவர் அவர்க்குக் காட்சி தந்து தம்முடன் அழைத்துச் சென்றார்.
4134. நலம்பெருகுஞ் சோணாட்டு நாட்டியத்தான் குடிவேளாண்
குலம்பெருக வந்துதித்தார் கோட்புலியார் எனும்பெயரார்
தலம்பெருகும் புகழ்வளவர் தந்திரியா ராய்வேற்றுப்
புலம்பெருகத் துயர்விளைப்பப் போர்விளைத்துப் புகழ்விளைப்பார்.
தெளிவுரை : நன்மை பெருகும் சோழ நாட்டில் திருநாட்டியத்தான் குடியில் வேளாளர் குலம் புகழால் மிகும்படி வந்து அக்குலத்தில் தோன்றியவர் கோட்புலியார் என்னும் பெயரையுடையவர். அவர் உலகில் பெருகும் ஆட்சியுடைய புகழையுடைய சோழ மன்னரின் படைத்தலைவராய்ப் பகை மன்னரின் நாட்டவர்க்கு மிக்க துன்பம் உண்டாகுமாறு போரிட்டுப் புகழ் விளைப்பாராய்,
4135. மன்னவன்பால் பெறுஞ்சிறப்பின் வளமெல்லாம் மதிஅணியும்
பிஞ்ஞகர்தங் கோயில்தொறுந் திருவமுதின் படிபெருகச்
செந்நெல்மலைக் குவடாகச் செய்துவருந் திருப்பணியே
பன்னெடுநாள் செய்தொழுகும் பாங்குபுரிந்து ஓங்குநாள்.
தெளிவுரை : மன்னனிடம் அத்தொழிலால் பெறும் சிறந்த செல்வங்களை யெல்லாம் பிறைச்சந்திரனைச் சூடிய இறைவரின் கோயில் தோறும் திருவமுதுக்குரிய படித்தரம் பெருகுவதற்காகச் செந்நெல்லை மலைச் சிகரம் போல் குவித்துச் செய்துவரும் தொண்டையே பலகாலங்கள் செய்து வருகின்ற பணிசிறந்து விளங்கும் நாளில்,
4136. வேந்தன் ஏவலிற்பகைஞர் வெம்முனைமேற் செல்கின்றார்
பாந்தள்பூண் எனஅணிந்தார் தமக்கமுது படியாக
ஏந்தலார் தாம்எய்தும் அளவும்வேண் டும்செந்நெல்
வாய்ந்தகூடு அவைகட்டி வழிக்கொள்வார் மொழிகின்றார்.
தெளிவுரை : மன்னனின் ஏவலால் பகைவர்களின் கொடிய போர் மேல் செல்பவரான அந்நாயனார் பாம்பையே அணியாய் அணிந்து கொண்டுள்ள இறைவர்க்குத் திருஅமுதுக்குரிய படியாகப் பெருமையுடைய அவர் வரும்வரையில் வேண்டிய அளவு செந்நெல் பொருந்திய நெல் கூடுதலைக் கட்டிப் பயணம் செல்பவர் சொல்லத் தொடங்கி,
4137. தந்தமர்கள் ஆயினார் தமக்கெல்லாந் தனித்தனியே
எந்தையார்க் கமுதுபடிக்கு ஏற்றியநெல் இவையழிக்கச்
சிந்தையால் தாம்நினைவார் திருவிரையாக் கலியென்று
வந்தனையால் உரைத்தகன்றார் மன்னவன்மாற் றார்முனைமேல்.
தெளிவுரை : தம் சுற்றத்தவர் எல்லாருக்கும் தனித்தனியே எம் இறைவர்க்கு அமுது படிக்காகச் சேர்ந்துள்ள இந்த நெற் கூடுகளைத் தாம் அழிக்குமாறு உள்ளத்தாலும் நினைப்பாராயின், திருவிரையாக்கலியின் மேல் ஆணை நிகழ்வதாகுக ! என்று கூறினார்.
4138. மற்றவர்தாம் போயினபின் சிலநாளில் வற்காலம்
உற்றலும்அச் சுற்றத்தார் உணவின்றி இறப்பதனில்
பெற்றமுயர்த் தவர்அமுது படிகொண்டா கிலும்பிழைத்துக்
குற்றமறப் பின்கொடுப்போம் எனக்கூடு குலைத்தழிந்தார்.
தெளிவுரை : எனக் கூறி அவர் சென்ற பின்பு சில நாட்களில் பஞ்சகாலம் வரவும், முன் கூறியவாறு அறிவுறுத்தப்பட்ட அச்சுற்றத்தார்கள், உணவில்லாது சாவதைவிட, காளைக் கொடியையுடைய இறைவரின் அமுதுக்குரிய படியான நெல்லை எடுத்துக் கொண்டேனும் உயிர் பிழைத்துக் குற்றம் இல்லாது பின்னால் திரும்பக் கொடுத்து விடலாம் ! என்று எண்ணித் துணிந்து, நெற்கூடுகளை அழித்தனர்.
4139. மன்னவன்தன் தெம்முனையில் வினைவாய்த்து மற்றவன்பால்
நன்னிதியின் குவைபெற்ற நாட்டியத்தான் குடித்தலைவர்
அந்நகரில் தமர்செய்த பிழையறிந்த தறியாமே
துன்னினார் சுற்றமெலாம் துணிப்பனெனுந் துணிவினராய்.
தெளிவுரை : மன்னரின் போர் முனையில் வெற்றி பெற்றுத் திரும்பி அந்த அரசனிடமே நிதியின் குவியலைப் பெற்ற நாட்டியத்தான் குடித்தலைவரான கோட்புலியார், அந்த நகரத்தில் தம் சுற்றத்தார் செய்த பிழையை அறிந்து, எம் சுற்றத்தார் எல்லாரையும் துணிப்பேன் என்று துணிவு கொண்டு, தாம் அங்ஙனம் துணிவு கொண்டதை அவர்கள் அறியாதபடி வந்து சேர்ந்தார்.
4140. எதிர்கொண்ட தமர்க்கெல்லாம் இனியமொழி பலமொழிந்து
மதிதங்கு சுடர்மணிமா ளிகையின்கண் வந்தணைந்து
பதிகொண்ட சுற்றத்தார்க் கெல்லாம்பைந் துகில்நிதியம்
அதிகந்தந் தளிப்பதனுக் கழைமின்கள் என்றுரைத்தார்.
தெளிவுரை : தம்மை எதிர்கொண்டு வரவேற்ற சுற்றத்தார் எல்லாருக்கும் இனிய சொற்களைச் சொல்லி, சந்திரன் தங்கும் ஒளியும் அழகும் உடைய தம் மாளிகையை அடைந்து அந்த நகரத்தில் உள்ள சுற்றத்தார்க்கு எல்லாம் பசுமையான துகிலும் நல்ல நிதியமும் கொடுப்பதற்கு அழையுங்கள் ! எனச் சொல்லி,
4141. எல்லோரும் புகுந்ததற்பின் இருநிதியம் அளிப்பார்போல்
நல்லார்தம் பேரோன்முன் கடைகாக்க நாதன்தன்
வல்லாணை மறுத்தமுது படியழித்த மறக்கிளையைக்
கொல்லாதே விடுவேனோ எனக்கனன்று கொலைபுரிவார்.
தெளிவுரை : உறவினர் எல்லாரும் வந்து சேர்ந்தபின்பு பெருநிதியம் தருபவர் போல் காட்டி, நல்லவரான கோட்புலியார், தம் பெயரினையுடைய காவலன், முன் வாயிலைக் காவலாக நின்று காக்க, இறைவரின் வலிய ஆணையையும் மறுத்துத் திருவமுதுக்காக இருந்த நெல்லை அழித்து உண்ட பாவம் செய்த உறவினரை யெல்லாம் கொல்லாமல் விடுவேனோ ! என்று சினம் கொண்டு கொலை செய்வாராகி,
4142. தந்தையார் தாயார்மற் றுடன்பிறந்தார் தாரங்கள்
பந்தமார் சுற்றத்தார் பதியடியார் மதியணியும்
எந்தையார் திருப்படிமற்று உண்ணவிசைந் தார்களையும்
சிந்தவாள் கொடுதுணித்தார் தீவினையின்பயன் துணிப்பார்.
தெளிவுரை : தந்தையார், தாயார், உடன்பிறந்தவர், மனைவியர், பந்தம் உடையசுற்றத்தார், அவ்வூர் அடிமைகள் என்ற இவர்கள் எல்லாரையும், எம் தந்தையான இறைவரின் திருவமுதுக்குரியபடி நெல்லை இன்னும் உண்பதற்கு எண்ணி இசைந்து இருந்தவரையும், தீவினையின் பயனை அழிப்பவரான நாயனார், உடல் அழியும்படி வாளைக் கொண்டு துண்டாய் வெட்டினார்.
4143. பின்னங்குப் பிழைத்ததொரு பிள்ளையைத்தம் பெயரோன்அவ்
அன்னந்துய்த் திலதுகுடிக் கொருபுதல்வ னருளுமென
இந்நெல்லுண் டாள்முலைப்பால் உண்டதுஎன எடுத்தெறிந்து
மின்னல்ல வடிவாளால் இருதுணியாய் விழவேற்றார்.
தெளிவுரை : அதன் பின் அங்கு அவரது வாளுக்குத் தப்பி உயிர் பிழைத்திருந்த ஒரு குழந்தையைக் காட்டி, இஃது அந்தச் சோற்றை உண்ணவில்லை ! அன்றியும் ஒரு குடிக்கு ஒரு புதல்வனாகும், ஆதலால் இதனை வெட்டாமல் அருள வேண்டும் ! எனச் சொல்ல, இக்குழந்தை அச்சோற்றை உண்ணவில்லை யாயினும் அந்நெல்லை உண்டவனின் கொங்கைப் பாலையுண்டது, என்று நாயனார் சொல்லி, எடுத்து மேலே வீசி எறிந்து மின்னும் நல்ல கூரிய வாளால் இரண்டு துண்டாகி விழுமாறு துணித்தார்.
4144. அந்நிலையே சிவபெருமான் அன்பர்எதிர் வெளியேநின்று
உன்னுடைய கைவாளால் உறுபாசம் அறுத்தகிளை
பொன்னுலகின் மேலுலகம் புக்கணையப் புகழோய்நீ
இந்நிலைநம் முடன்அணைகஎன் றுஏவியெழுந் தருளினார்.
தெளிவுரை : அந்நிலையில் அப்போதே சிவபெருமான் அந்த அடியார் எதிரில் வெளிப்பட்டு நின்று, உன் கையில் ஏந்திய வாளால் துண்டமாகித் தண்டிக்கப்பட்டதால், இங்குத் தம்மைப்பற்றிய பாசத்தை அறுத்துத் தூயவரான உன் சுற்றத்தார், தேவர் உலகத்திலும் மேலான உலகங்களிலும் புகுந்து, பின் வந்து, முறையாய் நம் உலகத்தைச் சார, நீ இந்நிலையிலேயே இப்போதே எம்முடன் அணைவாயாக ! என ஆணையிட்டு, அந்த அன்பரை உடன் கொண்டார்.
4145. அத்தனாய் அன்னையாய் ஆருயிராய் அமிர்தாகி
முத்தனாம் முதல்வன்தாள் அடைந்துகிளை முதல்தடிந்த
கொத்தலர் தார்க் கோட்புலியார் அடிவணங்கிக் கூட்டத்தில்
பத்தராய்ப் பணிவார்தம் பரிசினையாம் பகருவாம்.
தெளிவுரை : தந்தையும், தாயும், ஆருயிரும், அமிர்தமும் ஆகிய முத்தனான இறைவரின் திருவடிகளை உட் கொண்டதால், சுற்றத்தாரின் பாசத்தை வேர் அறத்தடிந்த கொத்தான மலர்களைக் கொண்ட மாலையை யுடைய கோட்புலி நாயனாரின் திருவடியை வணங்கிக் கூட்டத்தவரான அடியார்களுள் பத்தராய்ப் பணிபவரின் இயல்பை இனி இயம்புவோம்.
சுந்தரமூர்த்தி நாயனார் துதி
4146. மேவரிய பெருந்தவம் யான் முன்பு விளைத் தன வென்னோ
யாவது மோர் பெருளல்லா என் மனத்து மன்றியே
நாவலர் காவலர் பெருகு நதி கிழிய வழி நடந்த
சேவடிப் போது எப்போது செனனியினுள் மலர்ந்தனவால்.
தெளிவுரை : ஒன்றுக்கும் பொருளாகாத எளியேனின் உள்ளத்தில் மட்டுமின்றிப் பெருக்கெடுத்த காவிரியாறு இடையீடுபட்டுக் கீறிக் காட்டிய வழியில் கடந்தருளிய திருநாவலூர்த் தலைவரின் சேவடி மலர்கள் எப்போதும் என் தலையின் மேலும் மலர்ந்தன. இப்பேறு பெறுவதற்குப் பொருந்துதற்கரிய பெருந்தவம் நான் முன்னே செய்தது என்னோ?
கோட்புலி நாயனார் புராணம் முற்றும்.
11. பத்தராய்ப் பணிவார் புராணம்
64. பத்தராய்ப் பணிவார் புராணம்
பத்தராய்ப் பணிவார் என்பவர்கள் அடியார் எவராய் இருப்பினும் அவரைக் கண்டால் மகிழ்பவர்கள் ! இன்சொல் கூறுபவர்கள்; அவர்களையும் இறைவனாக வழிபடுபவர்கள்; சிவகதையை விருப்புடன் கேட்பவர்கள்; திருநீறு அணிபவர்கள்.
4147. ஈசருக்கே அன்பானார் யாவரையுந் தாங்கண்டால்
கூசிமிகக் குதுகுதுத்துக் கொண்டாடி மனமகிழ்வுற்
றாசையினால் ஆவின்பின் கன்றணைந்தாற் போலணைந்து
பேசுவன பணிந்தமொழி இனியனவே பேசுவார்.
தெளிவுரை : இறைவருக்கு அன்பு செலுத்துபவர் எவரையும் தாம் கண்டால் கூசி (அஞ்சி) மிகவும் உள்ளத்தில் விருப்பம் கொண்டு மகிழ்ந்து, ஆசையால், தாய்ப் பசுவின் பின்பு கன்று சேர்வதைப் போல் சேர்ந்து அவர்களிடம் பேசுபவை எல்லாம் இனிய சொல்லாகவே பேசுவர்.
4148. தாவரிய அன்பினால் சம்புவினை எவ்விடத்தும்
யாவர்களும் அர்ச்சிக்கும் படிகண்டால் இனிதுவந்து
பாவனையால் நோக்கினால் பலர்காணப் பயன்பெறுவார்
மேவரிய அன்பினால் மேலவர்க்கும் மேலானார்.
தெளிவுரை : கேடில்லாத அன்பால் சிவபெருமானை எங்கும் எவராயினும் வழிபடும் தன்மையைக் கண்டால், இனிதாய் மகிழ்ந்து, அதனால், அவர்களின் சத்தான பாவனையினாலும் அருள் நோக்கத்தினாலும் பலரும் காணும்படி பயனைப் பெறுவர். பொருந்துவதற்கு அரிய அன்பின் திறத்தால் மேம்பாடு உடையவர்க் கெல்லாம் மேம்பாடு உடையவராய் விளங்குவர்.
4149. அங்கணனை அடியாரை ஆராத காதலினால்
பொங்கிவரும் உவகையுடன் தாம்விரும்பிப் பூசிப்பார்
பங்கயமா மலர்மேலான் பாம்பணையான் என்றிவர்கள்
தங்களுக்கும் சார்வரிய சரண்சாருந் தவமுடையார்.
தெளிவுரை : இறைவரையும் அடியாரையும் நிறைவுறாத பெரு விருப்பத்தினால் மேன் மேலும் பொங்கி வரும் மகிழ்ச்சியுடன் விரும்பிப் பூசிப்பர். தாமரை மலரின் மேல் இருக்கும் நான்முகனும் பாம்பணை மீது இருக்கும் திருமாலும் என்ற இவர்களுக்கும் சார்வதற்கரிய திருவடிகளைச் சாரும் தவத்தை உடையவர்கள்.
4150. யாதானும் இவ்வுடம்பால் செய்வினைகள் ஏறுயர்த்தார்
பாதார விந்தத்தின் பாலாக எனும்பரிவால்
காதார்வெண் குழையவர்க்காம் பணிசெய்வார் கருக்குழியில்
போதார்கள் அவர்புகழ்க்குப் புவனமெலாம் போதாவால்.
தெளிவுரை : இந்த உடலால் செய்யும் செயல்கள் எவையாயினும் அவை எல்லாம் காளைக் கொடியை உயர்த்திய பெருமானின் திருவடித் தாமரைகளின் பக்கத்தில் சேரும் தகுதி உடையன ஆகுக! என்று அன்பினால் செவியில் வெண்மையான குழையை அணிந்த சிவபெருமானுக்குரிய பணிகளைச் செய்பவர்கள் மீண்டும் பிறவியில் செல்ல மாட்டார்கள்; அவர்களின் புகழுக்கு இவ்வுலகம் எல்லாம் நிகராகமாட்டா!
4151. சங்கரனைச் சார்ந்தகதை தான்கேட்குந் தன்மையராய்
அங்கணனை மிகவிரும்பி அயலறியா அன்பினால்
கங்கைநதி மதியிதழி காதலிக்குந் திருமுடியார்
செங்கமல மலர்ப்பாதஞ் சேர்வதனுக் குரியார்கள்.
தெளிவுரை : சிவபெருமானைச் சார்பாக உடைய கதைகளையே கேட்கும் தன்மை உடையவர்கள் ஆகி, இறைவரை விரும்பி மற்றவர் அறியா நிலையில் செய்யும் அன்புத்திறத்தினால், கங்கையாற்றையும் பிறைச் சந்திரனையும் கொன்றை மலரையும் விரும்பி அணியும் முடியை யுடைய இறைவரின் செந்தாமரை மலர் போன்ற திருவடிகளைச் சேர்வதற்கு உரியவர் ஆவர்.
4152. ஈசனையே பணிந்துருகி இன்பமிகக் களிப்பெய்திப்
பேசினவாய் தழுதழுப்பக் கண்ணீரின் பெருந்தாரை
மாசிலா நீறழித்தங் கருவிதர மயிர்சிலிர்ப்பக்
கூசியே யுடல்கம்பித்திடுவார்மெய்க் குணமிக்கார்.
தெளிவுரை : சிவபெருமானையே வணங்கி உள்ளம் உருகி, அதனால் உள்ளூற வரும் இன்பம் மிகுதலால் மகிழ்ச்சி அடைந்து சொல் குழறி, மார்பின் மேல் பூசிய திருநீற்றைக் கண்ணீர்ப் பெருந்தாரையானது அழித்து அருவி போல் வழியவும், மயிர்ப் புளகம் உண்டாகவும், கூசி, மெய்க்குணம் மிக்க பத்தர்கள் உடல் நடுங்குவர்.
4153. நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும்
மென்றாலும் துயின்றாலும் விழித்தாலும் இமைத்தாலும்
மன்றாடும் மலர்ப்பாதம் ஒருகாலும் மறவாமை
குன்றாத வுணர்வுடையார் தொண்டராம் குணமிக்கார்.
தெளிவுரை : நின்றாலும் அமர்ந்திருத்தாலும், படுத்திருந்தாலும், நடந்தாலும், உண்டாலும் உறங்கினாலும், இமைத்தாலும், திரு அம்பலத்தில் ஆடும் மலர் போன்ற அடிகளை வணங்கி ஒருபோதும் மறக்காததால் குறைவில்லாத உணர்வை உடையவர்கள், திருத்தொண்டர்கள் எனப்படும் குணத்தால் சிறந்தவர்கள்.
4154. சங்கரனுக் காளான தவங்காட்டித் தாமதனால்
பங்கமறப் பயன்துய்ப்பார் படிவிளக்கும் பெருமையினார்
அங்கணனைத் திருவாரூர் ஆள்வானை அடிவணங்கிப்
பொங்கிஎழுஞ் சித்தமுடன் பத்தராய்ப் போற்றுவார்.
தெளிவுரை : இறைவருக்கு ஆளாகிய தவத்தை மேற்கொண்டு உலகு விளக்கித் தாம் அதனால் குற்றம் நீங்கப் பயனைப் பெறுவர்; உலகை விளங்கச் செய்யும் பெருமையை உடையவர்; அங்கணரான சிவபெருமானைத் திருவாரூரர் ஆளும் இறைவரைத் திருவடிகளில் வணங்கி மேலும் மேலும் எழும் சித்தத்துடனே பத்தராய்ப் போற்றுவர்.
பத்தராய்ப் பணிவார் புராணம் முற்றும்.
65. பரமனையே பாடுவார் புராணம்
பரமனைப் பாடுபவர், தமிழ் மொழி வட மொழி என்ற எம்மொழி தெரியுமோ, அம்மொழியில் இறைவரைப் பாடுபவர்.
4155. புரமூன்றும் செற்றானைப் பூணாகம் அணிந்தானை
உரனில்வரும் ஒருபொருளை உலகனைத்தும் ஆனானைக்
கரணங்கள் காணாமல் கண்ணார்ந்து நின்றானைப்
பரமனையே பாடுவார் தம்பெருமை பாடுவாம்.
தெளிவுரை : அசுரர்களின் மூன்று புரங்களையும் எரித்தவரும் அணியாய்ப் பாம்புகளை அணிந்தவரும், ஞானம் முதிர்ந்த இடத்து வெளிப்படும் ஒப்பற்ற பொருளானவரும், அனைத்து உலகங்களையும் தம் மாயையால் உள்ளனவாய் ஆக்கியவரும், கருவி கரணங்களால் காணப்பாடாதவர் ஆயினும் அவற்றுள் நிலைத்து நின்று காட்டுபவருமான பரமனையே பாடுபவரின் பெருமைகளைப் பாடுவோம்.
4156. தென்றமிழும் வடகலையும் தேசிகமும் பேசுவன
மன்றினிடை நடம்புரியும் வள்ளலையே பொருளாக
ஒன்றியமெய் யுணர்வோடும் உள்ளுருகிப் பாடுவார்
பன்றியுடன் புட்காணாப் பரமனையே பாடுவார்.
தெளிவுரை : தென் தமிழும் வடமொழியும் பிற நாட்டு மொழிகளும் யாதொன்று அடுத்ததாகக் கைவரினும் அம்பலத்தில் கூத்து இயற்றும் வள்ளலான கூத்தப் பெருமானையே அவற்றுள் பேசப்படும் உயர்ந்த குறிக்கோளாக ஒன்றாய்ப் பொருந்திய மனவுணர்வுடன் உள்ளம் உருகிப் பாடுபவர்களே, பன்றியான திருமாலுடன் அன்னப்பறவையான நான்முகனும் அறிய இயலாத அப் பரமனையே பாடுவார் எனப்படுபவர் ஆவார்.
பரமனையே பாடுவார் புராணம் முற்றும்.
66. சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் புராணம்
நான்முகன் முதலான தேவர் ஐவர் வீற்றிருக்கும் தாமரைகளைக் கடந்து சிவஞான ஒளி வீசும் நாதாந்தத்தில் சித்தத்தை நிறுத்துவதால் சித்தத்தைச் சிவனிடம் நிறுத்தியவர்.
4157. காரணபங் கயம்ஐந்தின் கடவுளர்தம் பதங்கடந்து
பூரணமெய்ப் பரஞ்சோதி பொலிந்திலங்கு நாதாந்தத்
தாரணையால் சிவத்தடைந்த சித்தத்தார் தனிமன்றுள்
ஆரணகா ரணக்கூத்தர் அடித்தொண்டின் வழியடைந்தார்.
தெளிவுரை : நான்முகன் முதலான காரணக் கடவுளர் ஐவர்க்கும் உரிய ஐந்து தாமரைகளுடன் இருக்கும் தானங்களைக் கடந்து மேல் சென்று, அப்பால் நிறைவுடையதாய், உள் பொருளாய், சுயப் பேரொளியாய், உள்ள சிவ ஞான ஒளி வீசி விளங்கும் நாதாந்தத்தில் உள்ளத்தைச் செலுத்துதலால், சிவனிடத்தில் நிறுத்திய சித்தத்தை உடைமையால் சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் என்பவர், ஒப்பில்லாத அம்பலத்துள் விளங்கும் வேத காரணரான கூத்தரின் திருவடித் தொண்டின் வழியில் நின்று அவரை அடைந்தவர் எனப்படுவர் ஆவர்.
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் புராணம் முற்றும்.
67. திருவாரூர்ப் பிறந்தார் புராணம்
திருவாரூரில் தோன்றியவர் எல்லாரும் சிவகணங்கள். அவர்கள் சிவகணநாதர்கள் என்று இறைவனே நமிநந்தியடியார்க்குக் கூறினார். அவ்வாறே நமிநந்தி அவர்களை நேரிலும் கண்டார்.
4158. அருவாகி உருவாகி அனைத்துமாய் நின்றபிரான்
மருவாரும் குழலுமையாள் மணவாளன் மகிழ்ந்தருளும்
திருவாரூர்ப் பிறந்தார்கள் திருத்தொண்டு தெரிந்துரைக்க
ஒருவாயால் சிறியேனால் உரைக்கலாந் தகைமையதோ.
தெளிவுரை : அருவமாகியும் உருவமாகியும் எல்லாப் பொருள்களுமாகியும் விளங்கிய பெருமானும், மணம் நிறைந்த கூந்தலையுடைய உமையம்மையாரின் கணவருமான இறைவர் மகிழ்ந்து வீற்றிருக்கும் திருவாரூரில் பிறந்தவர்களின் தொண்டைச் சிறியேனால் ஒரு சொல்லினால் தெரிந்து உணரும்படி உரைப்பது இயலும் தன்மையது ஆகுமோ? ஆகாது !
4159. திருக்கயிலை வீற்றிருந்தசிவபெருமான் திருக்கணத்தார்
பெருக்கியசீர்த் திருவாரூர்ப் பிறந்தார்கள் ஆதலினால்
தருக்கியஐம் பொறியடக்கி மற்றவர்தந் தாள் வணங்கி
ஒருக்கியநெஞ் சுடையவர்க்கே அணித்தாகும் உயர்நெறியே.
தெளிவுரை : மிக்க சிறப்பை யுடைய திருவாரூர்ப் பிறந்தவர் திருக்கயிலையில் வீற்றிருக்கும் சிவபெருமானின் கணங்களே ஆவார். எனவே, செருக்குடன் எழும் ஐம்பொறிகளையும் அடக்கி, அவர்களின் திருவடிகளை வணங்கி, ஒன்றித்த உள்ளம் உடையவர்க்கே உயர்நெறியானது அருகில் உள்ளதாகும்.
திருவாரூர்ப் பிறந்தார் புராணம் முற்றும்.
68. முப்போதும்திருமேனி தீண்டுவார் புராணம்
இறைவர் திருமேனியைத் தீண்டி மூன்று பொழுதிலும் பூசனை செய்யும் இயல்புடையார் முப்போதும் திருமேனி தீண்டுபவர் ஆவர்.
4160. எப்போதும் இனியபிரான் இன்னருளால் அதிகரித்து
மெய்ப்போத நெறிவந்த விதிமுறைமை வழுவாமே
அப்போதைக் கப்போதும் ஆர்வமிகும் அன்பினராய்
முப்போதும் அர்ச்சிப்பார் முதற்சைவ ராமுனிவர்.
தெளிவுரை : எப்போதும் உயிர்களுக்கு இனியவரான சிவ பெருமானின் இனிய திருவருளினால் பெருகி, உண்மையான சிவாகம ஞான நெறிப்படி வந்த விதியின் முறைமை தவறாமல், அவ்வக் காலந்தோறும் ஆசைமிகும் அன்புடையவராகி முக்காலத்தும் பூசிப்பவர் ஆதி சைவரான முனிவர்கள்.
4161. தெரிந்துணரின் முப்போதும் செல்காலம் நிகழ்காலம்
வருங்கால மானவற்றின் வழிவழியே திருத்தொண்டின்
விரும்பிஅர்ச் சனைகள்சிவ வேதியர்க்கே யுரியனஅப்
பெருந்தகையார் குலப்பெருமை யாம்புகழும் பெற்றியதோ.
தெளிவுரை : ஆராய்ந்து உணர்ந்தால் மூன்று காலங்களிலும் இறப்பு நிகழ்வு எதிர்வு என்று மூன்றாய்ப் பகுக்கப்படும் எக்காலத்திலும், வழி வழியாய்ச் சிவனது அகம்படித் தொண்டில் விரும்பிய வழிபாட்டு அருச்சனைகள் சிவமறை யோர்களுக்கு உரியன ஆகும். அந்தப் பெருந்தகையாளரின் குலத்தின் பெருமை எம்மால் புகழப்படும் தன்மையுள் அடங்குமோ? அடங்காது !
4162. நாரணற்கும் நான்முகற்கும் அறிய வொண்ணா
நாதனைஎம் பெருமானை ஞான மான
ஆரணத்தின் உட்பொருள்கள் அனைத்தும் மாகும்
அண்ணலைஎண் ணியகாலம் மூன்றும் அன்பின்
காரணத்தால் அர்ச்சிக்கும் மறையோர் தங்கள்
கமலமலர்க் கழல்வணங்கிக் கசிந்து சிந்தைப்
பூரணத்தான் முழுநீறுபூசி வாழும்
புனிதர்செயல் அறிந்தவா புகல லுற்றேன்.
தெளிவுரை : திருமாலுக்கும் நான்முகனுக்கும் அறிய ஒண்ணாத இறைவரை, எம் பெருமானை, ஞானமயமான வேதங்களின் உட்கிடையான பொருள்கள் எல்லாம் ஆகும் பெருமையுடைய பிரானை, மூன்று சந்தியா காலங்களிலும் அன்பு காரணமாக வழிபடும் சிவ மறையோரின் தாமரை போன்ற திருவடிகளை வணங்கி, உள்ளம் கசிந்த நிறைவுடைமையால், முழுதும் நீற்றைப் பூசி வாழும் தூயவரின் செயலை அறிந்தவாறு சொல்லப் புகுவேன்.
முப்போதும்திருமேனி தீண்டுவார் புராணம் முற்றும்.
69. முழுநீறு பூசிய முனிவர் புராணம்
தம் குல ஒழுக்கத்தில் முதன்மையுடையவராய்த், தத்துவங்களை உணர்ந்தவராய், நீதி நெறியில் நிற்பவராய், திருநீற்றைப் புதிய பாத்திரத்தில் வைத்து உடல் முழுவதும் பூசிக்கொள்பவராய் உள்ளவர் முழுநீறு பூசிய முனிவர் ஆவர்.
4163. ஆதார மாயனைத்தும் ஆகிநின்ற
அங்கணன் எம்பெருமான் நீர் அணிந்த வேணிக்
காதார்வெண் திருக்குழையான் அருளிச் செய்த
கற்பம்அநு கற்பம்உப கற்பந்தானாம்
ஆகாதென் றங்குரைத்த அகற்பம் நீக்கி
ஆமென்று முன்மொழிந்த மூன்று பேதம்
மோகாதி குற்றங்கள் அறுக்கும் நீற்றை
மொழிவதுநம் இருவினைகள் கழிவதாக.
தெளிவுரை : எல்லாவற்றுக்கும் ஆதாரமாயும், எல்லாப் பொருள்களும் ஆகியும் நின்ற அங்கணனும் எம் பெருமானும் கங்கையை அணிந்த சடையையும் காதில் பொருந்திய குழையையும் உடையவருமான சிவபெருமான் உரைத்தருளியவற்றுள் கைக்கொள்ளத் தகாதது என்று உரைத்துள்ள அகற்பம் என்று வகையுட்பட்டதை நீக்கிக் கற்பமும் அநுகற்பமும உபகற்பமும் என்னும் இவை கொள்ளத்தக்கவையாகும் என முன் சொன்ன மூன்று வகைப்பட்ட காமம் முதலிய குற்றங்களை நீக்கும் திருநீற்றை நம் இரு வினைகளின் கழிவு நேர்வதற்காகச் சொல்வோம்.
4164. அம்பலத்தே உலகுய்ய ஆடும் அண்ணல்
உவந்தாடும் அஞ்சினையும் அளித்த ஆக்கள்
இம்பர்மிசை அநாமயமாய் இருந்த போதில்
ஈன்றணிய கோமயமந் திரத்தினால் ஏற்று
உம்பர் தொழ எழுஞ்சிவமந்திரஓ மத்தால்
உற்பவித்த சிவாங்கிதனில் உணர்வுக்கெட்டா
எம்பெருமான் கழல்நினைத்தங் கிட்ட தூநீ
றிது கற்பம்என்றெடுத்திங் கேத்த லாகும்.
தெளிவுரை : உலகம் உய்யும்படி திருவம்பலத்தில் கூத்து இயற்றுகின்ற கூத்தப் பெருமான் திருவுள்ளம் மகிழ்ந்து திருமஞ்சனம் செய்தருளும் பால் முதலிய ஐந்தையும் தரும் பசுக் கூட்டங்கள், இந்த வுலகத்தில் நோய் இல்லாதிருந்தபோது, கன்றை ஈன்று அணிமையான பசுஞ்சாணத்தைச் சத்தியோசாத மந்திரத்தால் ஏற்று, தேவர் வணங்கும்படி மேல் ஓங்கி எழுகின்ற சிவ மந்திரங்களால் உண்டாக்கப்பட்ட சிவாக்கினியில் உணர்வுக்கு எட்டாத எம் சிவபெருமானின் திருவடியை நினைத்து இட்டு எடுத்து தூய திருநீறாகிய இது கற்பம் என்று கூறப்படும்.
4165. ஆரணியத் துலர்ந்தகோ மயத்தைக் கைக்கொண்
டழகுற நுண்பொடியாக்கி ஆவின் சுத்த
நீரணிவித் தத்திரமந் திரத்தினாலே
நிசயமுறப் பிடித்தோம நெருப்பில் இட்டுச்
சீரணியும் படிவெந்து கொண்ட செல்வத்
திருநீறாம் அநுகற்பம் தில்லை மன்றுள்
வாரணியும் முலையுமையாள் காண ஆடும்
மாணிக்கக் கூத்தர் மொழி வாய்மை யாலே.
தெளிவுரை : தில்லை அம்பலத்தில் கச்சு அணிந்த கொங்கை களையுடைய உமாதேவியார் காணக் கூத்து இயற்றுகின்ற மாணிக்கக் கூத்தப்பெருமான் அருளிய சிவாகம விதிப்படி, காட்டில் உலர்ந்த பசுஞ்சாணத்தைக் கொணர்ந்து சிறக்க நுண்மையான பொடியாய் ஆக்கி, பசுவினது தூய கோசலத்தை விட்டுப் பிசைந்து அத்திர மந்திரத்தால் உருண்டையாகப் பிடித்து ஒமத்தீயில் இட்டுச் சிறப்புற வெந்தபின் கைக்கொண்ட செல்வத் திருநீறு அநுகற்பம் எனப்படும்.
4166. அடவிபடும் அங்கியினால் வெந்த நீறும்
ஆனிலைகள் அனல் தொடக்க வெந்த நீறும்
இடவகைகள் எரிகொளுவ வெந்த நீறும்
இட்டிகைகள் சுட்டஎரி பட்ட நீறும்
உடனன்றி வெவ்றேயே ஆவின் நீரால்
உரைதிகழு மந்திரங் கொண்டு உண்டையாக்கி
மடமதனில் பொலிந்திருந்த சிவாங்கி தன்னால்
வெந்ததுமற்று உபகற்பம் மரபின் ஆகும்.
தெளிவுரை : பசுக்கள் மேயும் காடுகள் மரங்களின் உராய்வினால் உண்டான தீயால் வெந்த நீறும், பசுக்கள் தங்கும் இடங்கள் தீப்பற்ற கொள்ள வெந்த நீறும், இத்தகைய பல இடங்கள் தீப்பற்ற வெந்த நீறும், செங்கற்களைச் சுட்ட தீயினால் உண்டாகிய நீறும் என்ற இவற்றை ஒன்று சேர்க்காது தனித்தனியே சிவாகமங்களில் கூறிய மந்திரங்களினால் பசுவின் கோமயத்தினால் பிசைந்து உருண்டையாய்ச் செய்து, திருமடங்களில் விளங்கும் சிவாக்கினியால் விதித்த படி நீறாக ஆக்கப்பட்டது. உபகற்பம் என்று சொல்லப்படும்.
4167. இந்தவகையால் அமைத்த நீறுகொண்டே
இருதிறமுஞ் சுத்திவரத் தெறித்த பின்னர்
அந்தமிலா அரன்அங்கி ஆறுமெய்ம்மை
அறிவித்த குருநன்மை அல்லாப் பூமி
முந்த எதிர்அணியாதே அணியும்போது
முழுவது மெய்ப்புண்டரஞ் சந்திரனிற்பாதி
நந்திஎரி தீபநிகழ் வட்டமாக
நாதரடியர் அணிவர் நன்மையாலே.
தெளிவுரை : இங்ஙனம் அமைத்து எடுத்த திருநீற்றினைக் கொண்டு அகம் புறம் என்னும் இரண்டிடத்தும் சுத்தி வருமாறு பாவித்து, ஒரு சிறிது நிருதி மூலையிலே தென் மேற்கில் உரிய மந்திரத்தால் தெறித்த பின்பு, அழிவில்லாத சிவன் சன்னதியும், தீயும், ஆறும், உண்மை நெறியை உபதேசித்த குருவும், வழிநடையும், நன்மை சாராத பூமியும் ஆகிய இடங்களில் முன் அணியாது, விதிப்படி அணிகின்ற காலத்தில் உடல் முழுதும் பூசுதல், திரிபுண்டரம், பிறை வடிவம், ஓங்கி எரிகின்ற விளக்குச் சுடரான முக்கோணம், விளங்கும் வட்டம் என்னும் இவ்வடிவிலே, சிவனடியார்கள் நன்மையால் அணிவர்.
4168. சாதியினில் தலையான தரும சீலர்
தத்துவத்தின் நெறியுணர்ந்தோர் தங்கள் கொள்கை
நீதியினில் பிழையாது நெறியில் நிற்போர்
நித்தநிய மத்துநிகழ்அங்கி தன்னில்
பூதியினைப் புதியபா சனத்துக் கொண்டு
புலியதளின் உடையானைப் போற்றி நீற்றை
ஆதிவரும் மும்மலமும் அறுத்த வாய்மை
அருமுனிவர் முழுவதும்மெய் யணிவா ரன்றே.
தெளிவுரை : சாதியின் ஒழுக்கத்தில் தலைமையான அற ஒழுக்கத்தை உடையவர்களும், தத்துவ நெறியை உணர்ந்தவர்களும், தம் கொள்கை நீதியின் நெறியினின்று தவறாது நிற்பவர்களும் ஆகித் தொன்று தொட்டு வரும் மும்மலங்களையும் அறுத்த வாய்மையுடைய அரிய முனிவர், நியமம் தவறாமல் செய்யும் நித்தியாக்கினியில் விளைந்து எடுத்த திருநீற்றைப் புதிய பாத்திரத்தில் வைத்துக் கொண்டு, புலித் தோலையுடுத்த இறைவரை வணங்கி அத்திருநீற்றை மேனி முழுவதும் பூசுவர். இவர்களே முழுநீறு பூசிய முனிவர் எனப்படுவார்.
முழுநீறு பூசிய முனிவர் புராணம் முற்றும்.
70. அப்பாலும் அடிச் சார்ந்தார் புராணம்
சேரசோழ பாண்டியரின் தண்டமிழ் நாட்டுக்கு அப்பாற்பட்ட நாடுகளில் இறையடி சேர்ந்தவர்கள். திருத் தொண்டத் தொகையில் பாடப்பட்ட அடியார்களுக்கு முன்னாலும் பின்னாலும் உள்ள அடியார்களும் அப்பாலும் அடிச்சார்ந்தார்கள் ஆவார்கள்.
4169. மூவேந்தர் தமிழ்வழங்கும் நாட்டுக்கு அப்பால்
முதல்வனார் அடிச்சார்ந்த முறைமை யோரும்
நாவேய்ந்த திருத்தொண்டத் தொகையில் கூறும்
நற்றொண்டர் காலத்து முன்னும் பின்னும்
பூவேய்ந்த நெடுஞ்சடைமேல் அடம்பு தும்பை
புதியமதி நதியிதழி பொருந்த வைத்த
சேவேந்து வெல்கொடியான் அடிச்சார்ந் தாரும்
செப்பியஅப் பாலும்அடிச் சார்ந்தார் தாமே.
தெளிவுரை : மூவேந்தரின் தமிழ் வழங்கும் நாடுகளுக்கு அப்பால் சிவபெருமானின் அடியைச் சார்ந்த முறைமை யுடையவரும் நம்பியாரூரரின் தெய்விக நாவில் பொருந்திய திருத்தொண்டத் தொகையிலே துதிக்கப்பட்ட தொண்டர்களான தனியடியாரின் காலத்துக்கு முன்னும் அதன் பின்னும், மலர்கள் பொருந்திய நீண்ட சடையின் மேல் அரும்பு மலரும் தும்பை மலரும் கங்கையும் கொன்றையும் பொருந்தச் சூடிய காளையைப் பொறித்த கொடியை யுடைய சிவபெருமானின் அடியைச் சார்ந்தவர்களும், சொல்லப்பட்ட அப்பாலும் அடிச்சார்ந்தார் எனக் கூறப்பெற்றவர் ஆவார்.
சுந்தரமூர்த்தி நாயனார் துதி
4170. செற்றார்தம் புரம்எரித்த சிலையார் செல்வத்
திருமுருகன் பூண்டியினில் செல்லும் போதில்
சுற்றாரும் சிலை வேடர் கவர்ந்து கொண்ட
தொகு நிதியின் பரப்பெல்லாம் சுமந்து கொண்டு
முற்றாத முலைஉமையாள் பாகன் பூத
முதற் கணமேயுடன் செல்ல முடியாப் பேறு
பெற்றார்தங் கழல்பரவ அடியேன் முன்னைப்
பிறவியினிற் செய்ததவம் பெரிய வாமே.
தெளிவுரை : பகைவரின் மூன்று புரங்களையும் எரித்த மலை வில்லை ஏந்திய சிவபெருமானின் செல்வம் நிறைந்த திருமுருகன் பூண்டியின் வழியிலே செல்லும்போது, சுற்றி நிறைந்த வில் வேடர்கள் பறித்துக் கொண்டமிக்க நிதியின் சுமைகளை எல்லாம் என்றும் இளங் கொங்கை நாயகியாரான உமையொரு பாகரின் முதன்மையுடைய பூத கணங்கள் தாமே சுமந்து கொண்டு உடன்வருமாறு அளவற்ற பெரும் பேற்றைப் பெற்ற நம்பியாரூரரின் திருவடிகளைத் துதிக்க அடியேன் முன்னைப் பிறவியில் செய்த தவங்கள் மிகப்பலவாகும்.
அப்பாலும் அடிச்சாந்தார் புராணம் முற்றும்.
பத்தராய்ப் பணிவார் சருக்கம் முற்றும்.
12. மன்னிய சீர்ச் சருக்கம்
71. பூசலார் நாயனார் புராணம்
தொண்டை நாட்டின் திருநின்றவூரில் பூசலார் நாயனார் தோன்றினார். அவர் சிவபெருமானுக்குக் கோயில் கட்ட எண்ணினார். பொருள் கிடைக்கவில்லை. இதற்கு என்ன செய்வேன் என்று கலங்கினார். பின் தம் மனக்கற்பனையினாலேயே ஆலயம் எடுக்கத் துணிந்து, மனத்தினாலேயே பொருள்களையும் சிற்பியரையும் தேடிக் கொண்டார். நல்ல நாளில் அடிக்கல் நாட்டினார். அரிதில் முயன்று இரவு பகலாகக் கோயிலைக் கட்டி முடித்துக் குடமுழுக்குச் செய்வதற்கான நாளை எதிர்பார்த்தபடி இருந்தார். அக்காலத்தில் காஞ்சியை ஆண்ட பல்லவ மன்னன் இராசசிம்மன் கற்கோயில் ஒன்றைக் கட்டி முடித்து அதற்குக் குடமுழுக்கு நாளைக் குறித்தான். அந்நாள் பூசலார் குறித்த நாளே! அதனால் மன்னன் கனவில் தோன்றி என் அன்பன் பூசலன்பன் கோயிலைக் கட்டியுள்ளான். அதற்கு நாளையே குடமுழுக்கு. ஆதலால் நீ குறித்த நாளை நாளைய மறுநாளும் வைத்துக் கொள்க! என்று இறைவர் உரைத்தார். அதைக் கேட்ட மன்னன் பூசலார் கட்டிய கோயிலைக் காணத் திருநின்றவூருக்குச் சென்றான். அங்கு பூசலார் கட்டிய கோயில் எங்குள்ளது? என வினவினான். அத்தகைய கோயில் கட்டப்படவில்லை என்பதை அங்குள்ளவர் கூறினர். மன்னன் பூசலாரை அழைத்து வருமாறு கூறினான். இறைவர் தமக்குக் கூறியதைப் பூசலார்க்கு மன்னன் கூறினான். அவர் என்னிடம் பொருள் இல்லை! ஆதலால் என் மனத்திலேயே கோயில் கட்டினேன் என்று உரைத்தார். மன்னன் வியப்படைந்தான். மனக்கோயில் கட்டிய பூசலார் இறைவரின் அருள் நிழலை எய்தினார்.
4171. அன்றினார் புரம் எரித்தார்க் காலயம் எடுக்க எண்ணி
ஒன்றுமங் குதவா தாக உணர்வினால் எடுக்கும் தன்மை
நன்றென மனத்தி னாலே நல்லஆ லயந்தான் செய்த
நின்றவூர்ப் பூசலார்தம் நினை வினை யுரைக்க லுற்றாம்.
தெளிவுரை : பகைவரின் திரிபுரங்களை எரித்த சிவபெருமானுக்கு ஒரு கோயில் அமைக்க நினைத்து, அதற்கு வேண்டும் நிதி ஒரு சிறிதும் அங்குக் கிடைக்காமல் போக, நினைப்பினால் அமைத்தலே நல்ல பணியாகும் என்று எண்ணி மனத்தில் நல்ல கோயிலை அமைத்த திருநின்றவூரில் தோன்றிய பூசலாரின் நினைப்பினாலான வரலாற்றை விளம்புவோம்.
4172. உலகினில் ஒழுக்கம் என்றும் உயர்பெருந் தொண்டை நாட்டு
நலமிகு சிறப்பின் மிக்க நான்மறை விளங்கும் மூதூர்
குலமுதற் சீலமென்றுங் குறை விலா மறையோர் கொள்கை
நிலவிய செல்வம் மல்கி நிகழ்திரு நின்ற வூராம்.
தெளிவுரை : இம்மண்ணுலகத்திலே நல்லொழுக்கம் எக் காலத்திலும் உயர்ந்து விளங்கும் பெருமையுடைய தொண்டை நாட்டில் நன்மை மிக்க சிறப்புக் கொண்ட நான்கு மறைகளும் விளங்குவதற்கு இடமான பழைய ஊர், குலத்திற்கு முதன்மையான ஒழுக்கம் எந்நாளும் குறைவற்ற மறையவர் தம் கொள்கையின் நிலை நின்ற செல்வம் பொருந்திய திருநின்றவூராகும்.
4173. அருமறை மரபு வாழ அப்பதி வந்து சிந்தை
தரும்உணர் வான வெல்லாந் தம்பிரான் கழல்மேற் சார
வருநெறி மாறா அன்பு வளர்ந்து எழ வாய்மைப்
பொருள்பெறு வேத நீதிக் கலையுணர் பொலிவின் மிக்கார்.
தெளிவுரை : அரிய வைதிக மரபு வாழ அந்தப் பதியிலே தோன்றிச் சித்தத்தில் வரும் உணர்வுகள் எல்லாம் சிவபெருமான் திருவடியில் சேரும்படி வரும் வழியினின்றும் தவறாத அன்பு வளர்ந்தோங்கத் தாமும் வளர்ந்து உண்மைப் பொருளை அடைவதற்கு ஏதுவான வேத நீதிக் கலைகளை உணரும் விளக்கத்தின் மிக்கார்.
4174. அடுப்பது சிவன்பால் அன்பர்க் காம்பணி செய்தல் என்றே
கொடுப்பதெவ் வகையுந் தேடி அவர்கொளக் கொடுத்துக் கங்கை
மடுப்பொதி வேணி ஐயர் மகிழ்ந்துறை வதற்கோர் கோயில்
எடுப்பது மனத்துக் கொண்டார் இருநிதி இன்மை யெண்ணார்.
தெளிவுரை : சிவபெருமானுக்கும் அவருடைய அன்பர்க்கும் தமக்காகும் பணிகளைச் செய்தலே தக்கது என்று துணிந்து கொடுப்பதற்காக எவ்வகையாலும் பொருளைத் தேடி அடியார்கள் கொள்ளும்படி தந்து, கோயில் அமைப்பதற்குப் பெருந்திரளான செல்வம் தம்மிடம் இல்லாமை எண்ணாதவராகி, கங்கை நீர் தங்கிய சடையுடைய இறைவர் மகிழ்ந்து எழுந்தருளியிருப்பதற்கு ஒரு கோயிலைக்கட்டும் செயலை உள்ளத்தில் கொண்டார்.
4175. மனத்தினால் கருதி எங்கும் மாநிதி வருந்தித் தேடி
எனைத்துமோர் பொருட்பே றின்றி என்செய்கேன் என்று நைவார்
நினைப்பினால் எடுக்க நேர்ந்து நிகழ்வுறு நிதிய மெல்லாம்
தினைத்துணை முதலாத் தேடிச் சிந்தையால் திரட்டிக் கொண்டார்.
தெளிவுரை : பொருளைத் தேடிப் பெறும் இடங்களை உள்ளத்தால் நினைத்து எங்கும் பெருஞ் செல்வத்தை வருந்தித் தேடியும் எவ்வகையாலும் ஒரு சிறிதும் பொருளைப் பெறும் நிலை கிட்டப் பெறாது இனி என்ன செய்வேன் என்று வருந்தி, நினைவால் கோயில் எடுக்க எண்ணித் துணிந்து, செயல் நிகழ்வதற்குரிய செல்வங்களை யெல்லாம் உள்ளத்தால் சேர்த்துக் கொண்டனர்.
4176. சாதனத் தோடு தச்சர் தம்மையும் மனத்தால் தேடி
நாதனுக் கால யஞ்செய் நலம்பெறும் நன்னாள் கொண்டே
ஆதரித்து ஆக மத்தால் அடிநிலை பாரித் தன்பால்
காதலில் கங்குற் போதுங் கண்படா தெடுக்க லுற்றார்.
தெளிவுரை : கோயிலைக் கட்டுவதற்குரிய சாதனங்களுடன் தச்சர்களையும் மனத்தில் தேடிக்கொண்டு இறைவர்க்குக் கோயில் எடுப்பதற்குரிய நன்மை பெறும் நல்ல நாளும் வேலையும் குறிக்கொண்டு, விரும்பி, ஆகமத்தின் படி, அடி நிலை (அத்திவாரம்) எடுத்து, அன்பின் நிறைவினால் ஆசை மிகுந்து, இரவிலும் பகலிலும் உறங்காது கோயில் எடுக்கலானார்.
4177. அடிமுதல் உபான மாதி யாகிய படைக ளெல்லாம்
வடிவுறுந் தொழில்கள் முற்ற மனத்தினால் வகுத்து மான
முடிவுறு சிகரந் தானும் முன்னிய முழத்திற் கொண்டு
நெடிதுநாள் கூடக் கோயில் நிரம்பிட நினைவால் செய்தார்.
தெளிவுரை : அடிநிலை வரி முதல் உபான வரி முதலாக வரும் எல்லாவற்றையும் ஓவிய வேலைப்பாடுகள் திருந்த மனத்தால் அமைத்து, விமானத்தின் முடிவில் அமையும் சிகரமும் விதிக்கப்பட்ட முடி அளவில் கொண்டு, நீண்ட நாட்கள் செல்லக் கோயில் நிறைவுபட நினைவால் செய்வார்.
4178. தூபியும் நட்டு மிக்க சுதையும்நல் வினையுஞ் செய்து
கூவலும் அமைத்து மாடு கோயில்சூழ் மதிலும் போக்கி
வாவியுந் தொட்டு மற்றும் வேண்டுவ வகுத்து மன்னும்
தாபனம் சிவனுக் கேற்க விதித்தநாள் சாரும் நாளில்.
தெளிவுரை : தூபியையும் பொருத்தி, சுண்ணச் சாந்து பூசி, மேல் சிற்ப அலங்கார வகைகளையும் செய்து, தீர்த்தக் கிணறும் அமைத்துப் பக்கத்திலும் கோயில் சுற்றிலும் மதில்களை எடுத்து, தடாகமும் தோண்டியமைத்து, மேலும் வேண்டுவனவற்றையும் வகைப்பட செய்து, நிலைபெற்ற தாவரத்தைச் சிவபெருமானுக்குப் பொருந்துமாறு நிறுத்திய நாள் நெருங்கும்போது,
4179. காடவர் கோமான் கச்சிக் கற்றளி எடுத்து முற்ற
மாடெலாஞ் சிவனுக் காகப் பெருஞ்செல்வம் வகுத்தல் செய்வான்
நாடமால் அறியா தாரைத் தாபிக்கும் அந்நாள் முன்னால்
ஏடலர் கொன்றை வேய்ந்தார் இரவிடைக் கனவில் எய்தி.
தெளிவுரை : காடவர் பெருமானான பல்லவ மன்னன் காஞ்சி நகரத்தில் கற்கோயில் எடுத்து முழுதும் பக்கம் எல்லாம் சிவனுக்காகப் பெருஞ் செல்வங்களை நியமிப்பவன், திருமாலும் தேடற்கு அரியவரான இறைவரைத் தாபிக்க நியமித்த அந்நாளுக்கு முந்தைய நாளிலே, இதழ்கள் விரிகின்ற கொன்றை மலர்களைச் சூடிய இறைவர் இரவில் அவனது கனவில் தோன்றி,
4180. நின்றவூர்ப் பூசல் அன்பன் நெடிதுநாள் நினைந்து செய்த
நன்றுநீ டால யத்து நாளைநாம் புகுவோம் நீயிங்கு
ஒன்றிய செயலை நாளை ஒழிந்துபின் கொள்வாய் என்று
கொன்றைவார் சடையார் தொண்டர் கோயில் கொண்டருளப் போந்தார்.
தெளிவுரை : திருநின்றவூரில் உள்ள பூசல் என்ற அன்பன் நீண்ட நாட்களாக எண்ணி எண்ணிச் செய்த நன்மையால் நீடும் கோயிலில் நாம் புகுவோம். எனவே, இங்குக் கோயிலில் பொருந்திய செய்கையை நாளைக் கழித்து வைத்துக் கொள்ளுக என்று கூறிக் கொன்றை சூடிய நீண்ட சடையுடைய இறைவர் தொண்டரின் கோயிலைக் கண்டருள எழுந்தருளினார்.
4181. தொண்டரை விளக்கத் தூயோன் அருள்செயத் துயிலை நீங்கித்
திண்டிறல் மன்னன் அந்தத் திருப்பணி செய்தார் தம்மைக்
கண்டுதான் வணங்க வேண்டும் என்றெழுங் காத லோடும்
தண்டலைச் சூழல் சூழ்ந்த நின்றவூர் வந்து சார்ந்தான்.
தெளிவுரை : தொண்டரான பூசலாரை இந்த உலகத்தவர் அறியச் செய்யும் பொருட்டுத் தூய சிவ பெருமான் இங்கனம் கூறியருளச் செய்தார். செய்ய, உறக்கத்தை விட்டுத், திண்ணிய ஆற்றலையுடைய அந்த மன்னன், அந்தத் திருப்பணி செய்தவரைக் கண்டு நான் வணங்க வேண்டும் ! என்று மேன் மேலும் எழுகின்ற பெருவிருப்பத்தோடும் சோலைகளின் சூழலையுடைய திருநின்றவூரை அடைந்தான்.
4182. அப்பதி யணைந்து பூசல் அன்பரிங் கமைத்த கோயில்
எப்புடை யதுஎன் றுஅங்கண் எய்தினார் தம்மைக் கேட்கச்
செப்பிய பூசல் கோயில் செய்ததொன் றில்லை யென்றார்
மெய்ப்பெரு மறையோர் எல்லாம் வருகஎன் றுரைத்தான் வேந்தன்.
தெளிவுரை : மன்னன் அந்த திருநின்றவூரை அடைந்து, பூசலார் என்ற அடியார் கட்டிய கோயிட் எந்தப் பக்கத்தில் உள்ளது? என்று அங்கு இருந்தவர்களைக் கேட்க, நீங்கள் கூறிய பூசலார் கோயில் ஏதும் கட்டியது இல்லை ! என்று உரைத்தனர். அது கேட்டு, உண்மை நெறிநிற்கும் அந்தணர் எல்லாம் வருக ! என்று ஆணையிட்டான்.
4183. பூசுர ரெல்லாம் வந்து புரவலன் தன்னைக் காண
மாசிலாப் பூச லார்தாம் ஆரென மறையோ ரெல்லாம்
ஆசில்வே தியன்இவ் வூரான் என்றவ ரழைக்க வொட்டா
தீசனார் அன்பர் தம்பால் எய்தினான் வெய்ய வேலான்.
தெளிவுரை : அந்தப் பதியில் இருந்த அந்தணர் எல்லாம் வந்து பல்லவ மன்னனைக் காண, குற்றம் இல்லாத பூசலார் என்பவர் யார்? என்று மன்னன் வினவினான். மறையவர் எல்லாம் அவர் குற்றமற்ற அந்தணர் ! இந்த ஊரினர் ! என்று கூறினர். அங்ஙனம் சொன்ன அவர்களைப் பூசலாரை அழைத்து வருமாறு அனுப்பாது தாமே இறைவரின் அன்பரான பூசலாரிடத்தில் கொடிய வேலையுடைய மன்னன் போய் அடைந்தான்.
4184. தொண்டரைச் சென்று கண்ட மன்னவன் தொழுது நீர்இங்கு
எண்திசை யோரும் ஏத்த எடுத்தஆ லயந்தான் யாதிங்கு
அண்டர்நா யகரைத் தாபித் தருளும்நாள் இன்றென்று உம்மைக்
கண்டடி பணிய வந்தேன் கண்ணுதல் அருள்பெற் றென்றான்.
தெளிவுரை : போய், அந்தத் தொண்டரைக் கண்ட மன்னன் அவரை வணங்கி தாங்கள் இவ்விடத்து எல்லாரும் போற்றுமாறு எடுத்த கோயில் எது? இங்குத் தேவர் பெருமானான சிவபெருமானை அக்கோயிலில் தாபித்தருளும் நாள் இன்று எனத் தெரிந்து கண்ணுதற் பெருமானின் திருவருளால் தெரிந்ததால், உங்களைக் கண்டு திருவடி வணங்குவதற்கு வந்தோம். எனக் கூறினார்.
4185. மன்னவன் உரைப்பக் கேட்ட அன்பர்தாம் மருண்டு நோக்கி
என்னையோர் பொருளாக் கொண்டே எம்பிரான் அருள்செய் தாரேல்
முன்வரு நிதியி லாமை மனத்தினால் முயன்று கோயில்
இன்னதாம் என்று சிந்தித் தெடுத்தவா றெடுத்துச் சொன்னார்.
தெளிவுரை : இங்ஙனம் பல்லவ மன்னன் சொல்ல அதைக் கேட்ட பூசலார் என்ற நாயனாரும் மருட்சியடைந்து அவரைப் பார்த்து, என்னையும் ஒரு பொருளாகக் கொண்டு எம் பெருமான் அருளிச் செய்தாரானால் முன்னர்ப் பெறும் நிதி கிடையாமையால் உள்ளத்தினால் முயன்று நினைந்து நினைந்து செய்த கோயில் இதுவாகும் என்று சிந்தனையில் செயலாகவே செய்த கோயிலைத்தாம் விளங்க எடுத்துச் சொன்னார்.
4186. அரசனும் அதனைக் கேட்டங் கதிசய மெய்தி என்னே
புரையறு சிந்தை யன்பர் பெருமையென் றவரைப் போற்றி
விரைசெறி மாலை தாழ நிலமிசை வீழ்ந்து தாழ்ந்து
முரசெறி தானை யோடு மீண்டுதன் மூதூர் புக்கான்.
தெளிவுரை : மன்னனும் பூசலார் கூறியதைக் கேட்டு மிக்க வியப்பை அடைந்து குற்றமில்லாத அன்பரின் பெருமை இருந்தவாறு என்னே ! என்று அவரைப் போற்றி, வணங்கி, மணமாலை கீழே படியும்படி நிலத்தில் விழுந்து தொழுது, முரசுகள் ஒலிக்கும் படைகளுடன் திரும்பித் தன் பழைய ஊரை அடைந்தான்.
4187. அன்பரும் அமைத்த சிந்தை ஆலயத் தரனார் தம்மை
நன்பெரும் பொழுது சாரத் தாபித்து நலத்தி னோடும்
பின்புபூ சனைக ளெல்லாம் பெருமையிற் பலநாள் பேணிப்
பொன்புனை மன்று ளாடும் பொற்கழல் நீழல் புக்கார்.
தெளிவுரை : அன்பரான பூசலாரும் தம் உள்ளத்தில் அமைந்த ஆலயத்தில் சிவபெருமானை நல்லபெரும் பொழுது வரத்தாபித்து, நன்மையோடு அதன்பின்பு செய்ய வேண்டிய பூசைகளை எல்லாம் பல நாட்கள் விரும்பிச் செய்து வாழ்ந்து பொன்னால் ஆன அம்பலத்தில் ஆடும் பொன்னடியின் நிழலைச் சேர்ந்தார்.
4188. நீண்டசெஞ் சடையி னார்க்கு நினைப்பினாற் கோயி லாக்கிப்
பூண்டஅன்பு இடைய றாத பூசலார் பொற்றாள் போற்றி
ஆண்டகை வளவர் கோமான் உலகுய்ய அளித்த செல்வப்
பாண்டிமா தேவி யார்தம் பாதங்கள் பரவ லுற்றேன்.
தெளிவுரை : மிக நீண்ட சடையையுடைய இறைவருக்கு நினைவிலேயே கோயில் அமைத்து மேற்கொண்ட அன்பு இடையறாது செய்த பூசலாரின் பொன்னடிகளைத் துதித்து, ஆண்மை மிக்க சோழர் பெருமான் உலகம் உய்யத் திரு உயிர்த்த செல்வப் பாண்டி மாதேவியாரான மங்கையர்க்கரசி அம்மையாரின் திருவடிகளைத் துதிக்கப் புகுகின்றேன்.
பூசலார் நாயனார் புராணம் முற்றிற்று.
72. மங்கையர்க்கரசி அம்மையார் புராணம்
மங்கையர்க்கரசியார் நின்ற சீர் நெடுமாறனின் மனைவி. பாண்டிய நாட்டில் சைவப் பயிர் சமணக் கோடையினால் வாடியிருந்தது. அப்பயிர் தழைக்கச் சம்பந்தரால் அருள் மழை செய்யும்படி செய்தார். தம் கணவருடன் சிவகதியை அடைந்தார்.
4189. மங்கையர்க்குத் தனியரசி எங்கள் தெய்வம்
வளவர்திருக் குலக்கொழுந்து வளைக்கை மானி
செங்கமலத் திருமடந்தை கன்னி நாடாள்
தென்னர்குலப் பழிதீர்த்த தெய்வப் பாவை
எங்கள்பிரான் சண்பையர்கோன் அருளி னாலே
இருந்தமிழ்நாடு உற்றஇடர் நீக்கித் தங்கள்
பொங்கொளிவெண் திருநீறு பரப்பி னாரைப்
போற்றுவார் கழலெம்மாற் போற்ற லாமே.
தெளிவுரை : மங்கையர்க்கு எல்லாம் ஒப்பில்லாத அரசியும், எம் தெய்வமும் சோழரின் சூலக்கொழுந்தைப் போன்றவரும், வளையலை அணிந்த மானியாரும், செந்தாமரை மலரில் வீற்றிருக்கின்ற இலக்குமியைப் போன்றவரும், பாண்டிய நாட்டை ஆளும் பாண்டியரின் குலத்துக்கு உண்டான பழியைப் போக்கிய தெய்வத் தன்மையுடைய பாவை போல்பவரும் ஆகிய, பெரிய தமிழ் நாட்டுக்கு வந்த இடரை எங்களுடைய பெருமானான சீகாழித் தலைவரின் அருளால் போக்கித் தமது பொங்கும் ஒளியைத் தரும் திருநீற்றைப் பரவச் செய்தவரைப் போற்று பவரின் திருவடி எம்மால் போற்றப் பெறுவதாகும்.
4190. பூசுரர்சூ ளாமணியாம் புகலி வேந்தர்
போனகஞா னம்பொழிந்த புனித வாக்கால்
தேசுடைய பாடல்பெறும் தவத்தி னாரைச்
செப்புவதியாம் என்னறிந்து தென்னர் கோமான்
மாசில்புகழ் நெடுமாறன் தனக்குச் சைவ
வழித்துணையாய் நெடுங்காலம் மன்னிப் பின்னை
ஆசில்நெறி யவரோடுங் கூட ஈசர்
அடிநிழற்கீழ் அமர்ந்திருக்க அருளும் பெற்றார்.
தெளிவுரை : அந்தணர் தலைவரான சீகாழி வேந்தரின் சிவ ஞானமுண்டு பொழிந்த தூய வாக்கினால் ஞான ஒளியுடைய பாடலால் பாராட்டப் பெறுவதற்கு உரிய பெரிய முன்னைத் தவமுடைய அம்மையாரின் பெருமையை நாம் என்ன என்று அறிந்து போற்ற வல்லோம்? பாண்டி மன்னரான குற்றம் நீங்கிய புகழை யுடைய நின்றசீர் நெடுமாறனாருக்குச் சைவத்திறத்தின் வழித் துணையாகி நீண்ட காலம் நிலை பெற்றிருந்து பின்னர்க் குற்றமற்ற சிவநெறியிலே அவரொடும் கூட இறைவரது திருவடியின் கீழே நிலை பெற்றிருக்கும் திருவருளையும் பெற்றார்.
4191. வருநாளென் றும்பிழையாத் தெய்வப் பொன்னி
வளம்பெருக்க வளவர்குலம் பெருக்கும் தங்கள்
திருநாடு போற்செழியர் தென்னாடு விளக்கும்
சீர்விளக்கின் செய்யசீ றடிகள் போற்றி
ஒருநாளுந் தன்செயலில் வழுவாது அன்பர்க்கு
உடைகீளுங்கோவணமும் நெய்து நல்கும்
பெருநாமச் சாலியர்தங் குலத்தில் வந்த
பெருந்தகையார் நேசர்திறம் பேச லுற்றாம்.
தெளிவுரை : நீர்ப் பெருக்கு வரும் நாள் ஒருகாலத்திலும் பொய்க்காமல் வரும் தெய்வத் தன்மை வாய்ந்த காவிரியாறு வளம் பெருக்கச் சோழர் மரபு பெருக்கும் தங்களின் சோழநாட்டைப் போலவே, பாண்டியரின் நாட்டையும் விளங்கச் செய்த சிறப்புடைய விளக்கான மங்கையர்க்கரசியாரின் சிவந்த சிறிய திருவடிகளைத் துதித்து, ஒருநாளிலும் தம் செயலில் பிழையாது சிவனடியார்களுக்கு உடையும் கீளும் கோவணமும் நெய்து கொடுக்கும் பெரும் புகழ் பொருந்திய சாலியரின் குலத்தில் தோன்றிய பெருந்தகையாளரான நேசநாயனாரின் இயல்பைப் பேசத் தொடங்குகிறோம்.
மங்கையர்க்கரசி அம்மையார் புராணம் முற்றிற்று.
73. நேச நாயனார் புராணம்
காம்பிலி என்ற நகரத்தில் சாலியக் குலத்தலைவர் நேச நாயனார். அவர் தம் மனச் செய்கையைச் சிவபெருமானின் திருவடிக்கு ஆக்கியவர்; வாக்கின் செய்கையைத் திருவைந்தெழுத்துக்கு ஆக்கியவர்; கைச் செய்கையைச் சிவனடியார்க்கு ஆக்கியவர். ஆடை, கீள், கோவணம் என்பனவற்றை அடியார்க்கு அளித்து அவர்களை வழிபட்டு வந்தார். அவ்வகையான தொண்டினால் இறையடியைச் சேர்ந்தார்.
4192. சீர்வளர் சிறப்பின் மிக்க செயல்முறை ஒழுக்கம் குன்றா
நார்வளர் சிந்தை வாய்மை நன்மையார் மன்னி வாழும்
பார்வளர் புகழின் மிக்க பழம்பதி மதிதோய் நெற்றிக்
கார்வளர் சிகர மாடக் காம்பீலி என்ப தாகும்.
தெளிவுரை : கீர்த்திகளை வளர்க்கும் தன்மையுடைய சிறப்பு மிக்க செயல் முறைமையால் ஒழுக்கம் குறையாத அன்பு மிக்க சிந்தையும் வாய்மையும் நன்மையும் மிக்கவர் நிலை பெற்று வாழ்வதற்கு இடமான உலகத்தில், உயர்ந்த புகழால் மிக்க பழையபதியாவது, பிறைச்சந்திரன் தவழ்கின்ற உச்சியையும் மேகங்கள் தோயும் உச்சியையும் கொண்ட மாடங்கள் மிக்க காம்பீலி என்ற ஊராகும்.
4193. அந்நக ரதனில் வாழ்வார் அறுவையர் குலத்து வந்தார்
மன்னிய தொழிலில் தங்கள் மரபின் மேம்பாடு பெற்றார்
பன்னாகா பரணற் கன்பர் பணிதலைக் கொண்டு பாதம்
சென்னியிற் கொண்டு போற்றுந் தேசினார் நேசர் என்பார்.
தெளிவுரை : அந்த நகரத்தில் வாழ்பவர் அறுவையர் என்ற சாலியர் குலத்தில் தோன்றியவர். நிலைபெற்ற சீவனத் தொழிலில் தம் மரபில் மேன்மை அடைந்தவர். பாம்பை அணியாய் அணிந்த சிவபெருமானுக்கு அடியார்களாய் உள்ளவர்களின் பணியினைத் தலையாக மேற்கொண்டு அவர்களின் திருவடிகளைத் தலையில் சூடிப் பணிந்து துதிக்கும் இயல்பு உடையவர். நேசர் என்று அவர் அழைக்கப்படுவார்.
4194. ஆங்கவர் மனத்தின் செய்கை யரனடிப் போதுக் காக்கி
ஓங்கிய வாக்கின் செய்கை யுயர்ந்தஅஞ் செழுத்துக் காக்கித்
தாங்குகைத் தொழிலின் செய்கை தம்பிரான் அடியார்க் காகப்
பாங்குடை யுடையுங் கீளும் பழுதில்கோ வணமும் நெய்வார்.
தெளிவுரை : அந்நிலையில் அவர் தம் உள்ளத்தில் தொழிலைச் சிவபெருமானின் திருவடிக் கமலத்துக்கு ஆக்கி, மேலும் மேலும் ஓங்கிய வாக்கின் தொழிலை உயர்வுடைய ஐந்து எழுத்துக்காக ஆக்கி, மேற்கொண்ட கைத் தொழில் செயலை யெல்லாம் தம் இறைவரின் அடியவர்களுக்காக ஆக்கி, நல்ல பான்மையுடைய உடையும் கீளும் பழுது இல்லாது கோவணமும் ஆகிய இவற்றைச் செய்வாராகி,
4195. உடையொடு நல்ல கீளும் ஒப்பில்கோ வணமும் நெய்து
விடையவர் அடியார் வந்து வேண்டுமா றீயு மாற்றால்
இடையறா தளித்து நாளும் அவர்கழல் இறைஞ்சி ஏத்தி
அடைவுறு நலத்த ராகி அரனடி நீழல் சேர்ந்தார்.
தெளிவுரை : உடையுடன் நல்ல கீளையும் ஒப்பில்லாத கோவணத்தையும் செய்து, காளையை யூர்தியாய் உடையவரின் அடியார் வந்து வேண்டியவாறே கொடுக்கும் முறைப்படி இடையறாது தந்து, ஒவ்வொரு நாளும் அவர்களின் திருவடிகளைப் போற்றி அடையும் நன்மையைப் பெற்றவராகிச் சிவ பெருமானின் அடிநிழலைச் சேர்ந்தார்.
4196. கற்றை வேணி முடியார்தங் கழல்சேர் வதற்குக் கலந்தவினை
செற்ற நேசர் கழல்வணங்கிச் சிறப்பால் முன்னைப் பிறப்புணர்ந்து
பெற்றம் உயர்த்தார்க் காலயங்கள் பெருக அமைத்து மண்ணாண்ட
கொற்ற வேந்தர் கோச்செங்கட்சோழர் பெருமை கூறுவாம்.
தெளிவுரை : கற்றையான சடையை முடியாக வுடைய இறைவரின் திருவடிகளைச் சேர்வதற்காக முன் தம்மைச் சேர்ந்திருந்த வினைச்சார்புகளை அறுத்த நேச நாயனாரின் திருவடிகளை வணங்கித் தம் முதிர்வாகிய சிறப்பால் தம் முன்னைப் பிறப்பை யுணர்ந்து, அவ்வுணர்ச்சியுடன் வந்து தோன்றிக், காளைக் கொடியை உயர்த்திய இறைவர்க்கு ஆலயங்கள் பலவற்றை எடுத்து, மண்ணுலகம் காவல் மேற் கொண்ட ஆட்சியைச் செய்து, வெற்றி பொருந்திய மன்னரான கோச் செங்கண் சோழரின் பெருமையைச் சொல்லத் தொடங்குவோம்.
நேச நாயனாரின் புராணம் முற்றிற்று.
74. கோச்செங்கட்சோழ நாயனார் புராணம்
வளம்மிக்கச் சோழநாட்டிலே எழிலோடு காணப்படுவது திருவானைக்காவல் என்னும் தெய்வத்தலம். இங்குள்ள காவிரியாற்றின் கரையிலே சந்தரதீர்த்தம் என்னும் பெயருடைய பொய்கை ஒன்று அமைந்திருந்தது. அப்பொய்கை கரையில் உள்ள குளிர்ச்சோலையில் வெள்ளை நாவல் மரத்தின் கீழே சிவலிங்கம் ஒன்று இருந்தது. தவமிக்க ஒரு வெள்ளை யானை நாள்தோறும் தனது துதிக்கையால் நீரும், மலரும் எடுத்துவந்து சிவலிங்கத்தை வழிபட்டு வந்தது. இக்காரணம் பற்றியே அப்பகுதிக்குத் திருவானைக்காவல் என்ற பெயர் வழங்கலாயிற்று. அங்குள்ள நாவல் மரத்தின் மீதிருந்த அறிவுடைய சிலந்தி ஒன்று சிவலிங்கத்தின் மீது சூரிய வெப்பம் படாமலும், சருகுகள் உதிர்ந்து விழாதவாறும் ஞானத்தோடு நூற்பந்தல் அமைத்தது. வழக்கம்போல் சிவலிங்கத்தை வழிபட வரும் வெள்ளை யானை சிலந்தி வலையைக் கண்டு எம்பெருமானுக்குத் தூய்மையற்ற குற்றமான செயலை சிலந்தி புரிந்துவிட்டதே எனச் சினந்து கொண்டு நூற்பந்தலைச் சிதைத்துப் பின்னர் சிவலிங்கத்தை வழிபட்டுச் சென்றது. வெள்ளை யானையின் இச்செயலைக் கண்டு வருத்தமுற்ற சிலந்தி, யானை சென்றதும் மீண்டும் முன்போல் நூற்பந்தலிட்டது. இவ்வண்ணம் சிலந்தி வலை பின்னுவதும் யானை அதனைச் சிதைப்பதுமான செயல்கள் தொடர்ந்து நடந்த வண்ணமாகவே இருந்தன. ஒருநாள் சிலந்திக்கு கோபம் வந்தது. தான் கட்டும் வலையை அழித்திடும் யானையைக் கொல்ல வேண்டும் என்று முடிவு கட்டியது. வழக்கம்போல் சிவபெருமானை வழிபட வந்த சிலந்தி யானையின் துதிக்கையால் புகுந்து கடித்தது. சிலந்தியின் செயலால் சினங்கொண்ட யானை துதிக்கையை ஓங்கி வேகமாக நிலத்தில் அடித்தது. சிலந்தி இறந்தது. அதே சமயத்தில் யானையும் சிலந்தி விடம் தாங்காமல் நிலத்தில் வீழ்ந்து மடிந்தது. வெள்ளை யானை எம்பெருமான் அருளால் சிவகணநாதராய் ஆயிற்று.
சோழ அரசரான சுபவேதர் கமலாவதியாருடன் சோழவளநாட்டை அரசு புரிந்து வந்தான். திருமணமாகி நெடுநாட்களாகியும் மக்கட் பேறு இல்லாமல் மன்னன் மனைவியாருடன் தில்லையை அடைந்து அம்பலவாணரது திருவடியை வழிபட்டு பெருத்தவமிருந்தார்! கூத்தப்பெருமான் திருவருள் புரிந்ததற்கு ஏற்ப சிலந்தி வந்து கமலவதியின் மணிவயிற்றில் கருவடைந்தது. மணிவயிற்றில் கரு வளர்ந்து குழந்தை அவதரிக்கும் தருணம் நெருங்கியது. அப்பொழுது சோதிட வல்லுனர்கள் இக்குழந்தை இன்னும் ஒரு நாழிகை கழித்துப் பிறக்குமேயானால் மூவுலகத்தையும் ஆளக் கூடிய ஆற்றலைப் பெறக்கூடிய குழந்தையாக இருக்கும் என்றார்கள். சோதிடர் மொழிந்தது கேட்டு அம்மையார், ஒரு நாழிகை தாமதித்துத் தமக்குக் குழந்தை பிறக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தம்மைத் தலைகீழாகக் கட்டித் தொங்க விடுமாறு கட்டளையிட்டார். அவ்வண்ணமே அரசியாரைக் கட்டினர். சோதிடர் சொல்லிய நல்லவேளை நெருங்கியதும் அரசியார் ஆணைப்படி கட்டவிழ்த்தார்கள். அரசியாரும் அழகிய ஆண் மகவைப் பெற்றெடுத்தாள். அரசியார் தலைகீழாக தொங்கியதால் சற்று நேரம் குழந்தையின் கண்கள் சிவந்திருந்தன. அரசியார் அன்பு மேலிட அக்குழந்தையை உச்சிமோந்து என் செல்வக்கோச் செங்கணான் என்று வாஞ்சையோடு கொஞ்சினாள். ஆனால் அரசியார்க்கு, அக்குழந்தையைப் பாலூட்டி, சீராட்டி வளர்க்கும் பாக்கியம் இல்லாமற் போனது. குழந்தை பிறந்த சற்று நேரத்திற்கெல்லாம் அரசியார் ஆவி பிரிந்தது. சுபதேவர் தமது மகனை வளர்த்து வில் வித்தையில் வல்லவனாக்கி வேதாகமங்களிலும் மேம்பட்டவனாக்கினார். உரிய பருவத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்த அவனை ஆளாக்கினார். சுபதேவர் மகனுக்கு முடிசூட்டிவிட்டு காடு புகுந்து அருந்தவம் புரிந்து எம்பெருமானின் திருவடி நீழலை அடைந்தார். கோச்செங்கட் சோழர் இறைவன் அருளாள் முற்பிறப்பை உணர்ந்து அரனார் மீது ஆராக்காதல் பூண்டு ஆலயம் எழுப்பத் தம்மை முழுக்க முழுக்க அர்ப்பணித்துக் கொண்டார். திருவானைக்காவலில் ஆலயம் ஒன்று கட்டி யானை நுழையாதபடி சிறு வாயில் அமைத்தார். மற்றும் சோழ நாட்டில் ஆங்காங்கே அழகிய அம்பலங்கள் அநேகம் கட்டி முடித்தார். இவர் எம்பெருமானுக்கு எழுபது கோவில்களும், திருமாலுக்கு மூன்று கோவில்களும் எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இறுதியில் கோச்செங்கட் சோழர் தில்லையில் தங்கி தியாகேசப் பெருமானை முக்காலமும் முறையோடு வழிபட்டுத் தில்லையம்பலத்து ஆடுகின்ற கூத்தபிரானது பாத கமலங்களில் வைகி இன்பமெய்தினார்.
4197. துலையிற் புறவின் நிறையளித்த சோழர் உரிமைச் சோணாட்டில்
அலையில் தரளம் அகிலொடுசந் தணிநீர்ப் பொன்னி மணிகொழிக்கும்
குலையில் பெருகுஞ் சந்திரதீர்த் தத்தின் மருங்கு குளிர்சோலை
நிலையில் பெருகுந் தருமிடைந்த நெடுந்தண் கானம் ஒன்றுளதால்.
தெளிவுரை : துலையின் தட்டில் வைத்துப் புறாவின் எடைக்குச் சமமாகத் தன் உடலின் தசையை அறுத்து வைத்து நிறுத்தித் தந்த சிபிச்சக்கரவர்த்தி மரபில் வரும் சோழர்களுக்கு உரிமையாய் உள்ள சோழநாட்டில் அலைகளால் முத்துக்களையும் அகிலுடன் சந்தனத்தையும் கொண்டுவரும் அழகான நீரையுடைய காவிரியாற்றின் மணிகளை ஒதுக்கும் கரையில் பெருகும் சந்திர தீர்த்தத்தின் பக்கத்தில் குளிர்ச்சியையுடைய சோலைகளில் நிலையாக வளர்கின்ற மரங்கள் நெருங்கிய நீண்ட குளிர்ந்த கானம் ஒன்று உள்ளது.
4198. அப்பூங் கானில் வெண்ணாவல் அதன்கீழ் முன்னாள் அரிதேடும்
மெய்ப்பூங் கழலார் வெளிப்படலும் மிக்க தவத்தோர் வெள்ளானை
கைப்பூம் புனலு முகந்தாட்டிக் கமழ்பூங் கொத்தும் அணிந்திறைஞ்சி
மைப்பூங் குவளைக் களத்தாரை நாளும் வழிபட் டொழுகுமால்.
தெளிவுரை : அந்தப் பூங்காவில் வெண் நாவல் மரத்தின் அடியில், முன்காலத்தில் திருமால் தேடிய உண்மை வடிவான மலர் போன்ற திருவடியையுடைய இறைவர் வெளிப்பட்டருள, மிக்க தவத்தையுடைய ஒரு வெண்மையான யானை கையால் அழகிய நீரை மொண்டு திருமஞ்சனம் ஆட்டி, மணமுடைய மலர்க் கொத்துக்களையும் இறைவரின் திருமேனியில் அணிந்து வழிபட்டுக் கரிய குவளை போன்ற கழுத்தையுடைய இறைவரை நாள் தோறும் வழிபட்டு வந்தது.
4199. ஆன செயலால் திருவானைக் காவென்று அதற்குப் பெயராக
ஞான முடைய ஒருசிலந்தி நம்பர் செம்பொன் திருமுடிமேல்
கானல் விரவும் சருகுஉதிரா வண்ணங் கலந்த வாய்நூலால்
மேல்நல் திருமேற் கட்டியென விரிந்து செறியப் புரிந்துளதால்.
தெளிவுரை : முன் சொன்ன அத்தகைய செயலால் அந்தத் தலத்துக்குத் திருவானைக்கா என்று பெயர் வழங்கிற்று. ஞானமுடைய சிலந்தி ஒன்று அந்த இறைவரின் செம்பொன் போன்ற திருமுடியின் மீது கதிரவன் வெம்மையும் சருகும் படாதபடி தன்னுள் கலந்த வாய் நூலினால் முடிமேல் கட்டும் நல்ல மேற்கட்டி போல விரிவுடையதாய் நெருங்கச் செய்தது.
4200. நன்றும் இழைத்த சிலம்பிவலைப் பரப்பை நாதன் அடிவணங்கச்
சென்ற யானை அநுசிதம்என் றதனைச் சிதைக்கச் சிலம்பிதான்
இன்று களிற்றின் கரஞ்சுலவிற் றென்று மீள இழைத்துஅதனை
அன்று கழித்த பிற்றைநாள் அடல்வெள் ளானை அழித்ததால்.
தெளிவுரை : சிலந்தி நன்றாகக் கட்டிய வாய் நூல் வலையின் பரப்பை இறைவர் திருவடியை வணங்கிச் சென்ற யானை, இது சிறந்ததன்று என்று அழிக்க, இன்று யானையின் கை சுழன்றதால் அந்த வலை அழிந்தது ! என்று எண்ணிச் சிலந்தி மீண்டும் அந்த வலையைச் செய்தது. அதனை மறுநாள் வலிமையுடைய யானை திரும்பவும் அழித்தது.
4201. எம்பி ரான்தன் மேனியின்மேல் சருகு விழாமை யானவருந்தி
உம்பர் இழைத்த நூல்வலயம் அழிப்ப தேஎன்று உருத்தெழுந்து
வெம்பிச் சிலம்பி துதிக்கையினில் புக்குக் கடிப்ப வேகத்தால்
கும்ப யானை கைநிலத்தின் மோதிக் குலைந்து வீழ்ந்ததால்.
தெளிவுரை : எம் பெருமான் திருமேனியின் மீது இலைச் சருகுகள் விழாது இருப்பதற்காக நான் வருந்தி மேற்கட்டியாய் அமைத்த என் நூல் வலையை இந்த யானை அழிப்பதா? என்று, மிகவும் சினந்து எழுந்து உள்ளம் புழுங்கி யானையின் துதிக்கையினுள்ளே புகுந்து கடிக்க, அதன் குடைச்சலினால் அந்த யானை கையைத் தரையில் அடித்து மோதி நிலை குலைந்து விழுந்து இறந்தது.
4202. தரையிற் புடைப்பக் கைப்புக்க சிலம்பி தானும் உயிர்நீங்க
மறையிற் பொருளுந் தருமாற்றான் மதயா னைக்கும் வரங்கொடுத்து
முறையில் சிலம்பி தனைச்சோழர் குலத்து வந்து முன்னுதித்து
நிறையிற் புவனங் காத்தளிக்க அருள்செய் தருள நிலத்தின்கண்.
தெளிவுரை : அந்த யானை தன் கையை நிலத்தில் மோத அந்தக் கையினுள் புகுந்து சிலந்தியும் உயிர் நீங்க, வேதங்களின் பொருளாவார் அருள் அளிக்கும் முறையின்படி மதமுடைய அந்த யானைக்கும் ஏற்றவரத்தை அளித்து, முறைப்படி சிலந்தியைச் சோழர் குலத்தில் முன்வந்து பிறந்து நிறுத்தும் முறைப்படி உலகம் காவல் செய்து அரசு செய்யுமாறு அருளவும், இவ்வுலகத்தில்,
4203. தொன்மைதரு சோழர்குலத் தரசனாம் சுபதேவன்
தன்னுடைய பெருந்தேவி கமலவதி யுடன்சார்ந்து
மன்னுபுகழ்த் திருத்தில்லை மன்றாடு மலர்ப்பாதம்
சென்னியுறப் பணிந்தேத்தித் திருப்படிக்கீழ் வழிபடுநாள்.
தெளிவுரை : பழைமையாய் வரும் சோழர் குலத்தில் தோன்றிய மன்னனான சுப தேவன் தன் மனைவி கமலவதி யுடனே சேர்ந்து நிலைபெற்ற புகழையுடைய தில்லை அம்பலத்தில் திருக்கூத்து இயற்றுகின்ற தாமரை மலர் போன்ற திருவடிகளைத் தலையார வணங்கித் துதித்துத் திருப்படியின் கீழ் நின்று வழிபட்டு வரும் நாளில்,
4204. மக்கட்பே றின்மையினால் மாதேவி வரம்வேண்டச்
செக்கர்நெடுஞ் சடைக்கூத்தர் திருவுள்ளஞ் செய்தலினால்
மிக்கதிருப் பணிசெய்த சிலம்பிகுல வேந்துமகிழ்
அக்கமல வதிவயிற்றின் அணிமகவாய் வந்தடைய.
தெளிவுரை : மக்கட்பேறு இல்லாமையால் அரச மாதேவி வரத்தை வேண்டச் செவ்வானம் போன்ற நீண்ட சடையுடைய சிவபெருமான் அதற்கு இரங்கித் திருவுள்ளம் பற்றியதால், மிக்க பணியைச் செய்த சிலந்தியானது குலவேந்தன் மகிழும் தேவியான கமலவதியின் திருவயிற்றில் அழகிய குழந்தையாய் வந்து அடைய,
4205. கழையார் தோளி கமலவதி தன்பால் கருப்ப நாள்நிரம்பி
விழையார் மகவு பெறஅடுத்த வேலை யதனில் காலம்உணர்
பழையார் ஒருநா ழிகைகழித்துப் பிறக்கு மேல்இப் பசுங்குழவி
உழையார் புவனம் ஒருமூன்றும் அளிக்கும் என்ன ஒள்ளிழையார்.
தெளிவுரை : மூங்கிலைப் போன்ற தோளையுடைய கமலவதியின் இடத்தில் கருப்பம் முற்றும் நாள் நிரம்பி விருப்பம் அளிக்கும் குழந்தையைப் பெறுவதற்குரிய நேரத்தில், கால நிலைமை அறிந்த சோதிடர்கள் ஒரு நாழிகை கழித்துக் குழந்தை பிறக்குமானால் இக்குழந்தை இடம் அகன்ற மூவுலகங்களையும் ஆட்சி செய்யும், என்று கூறினர். அதனால் ஒளி விளங்கும் அணியை அரசமாதேவி,
4206. கழையார் தோளி கமலவதி தன்பால் கருப்ப நாள்நிரம்பி
விழையார் மகவு பெறஅடுத்த வேலை யதனில் காலம்உணர்
பழையார் ஒருநா ழிகைகழித்துப் பிறக்கு மேல்இப் பசுங்குழவி
உழையார் புவனம் ஒருமூன்றும் அளிக்கும் என்ன ஒள்ளிழையார்.
தெளிவுரை : இப்போது பிறக்காமல் ஒரு நாழிகை கழித்து என் பிள்ளை பிறக்கும்படி என் கால்களைப் பொருந்தக் கட்டி உயரத் தூக்குங்கள் எனக் கூற, பொருந்திய அந்தச் செய்கை நிறைவு பெற்று, சோதிடர் சொல்லிய அந்தக் கால எல்லை சேர, கட்டு அவிழ்த்து விடுவிக்க, இறவாதுள்ள அத்தேவி அரியமணிபோன்ற குழந்தையைப் பெற்றுக் கையில் எடுத்து, இவன் என் செல்லக் கோச் செங்கண்ணனோ ! எனப் பாராட்டினாள்.
4207. தேவி புதல்வன் பெற்றிறக்கச் செங்கோல் சோழன் சுபதேவன்
ஆவி அனைய அரும்புதல்வன் தன்னை வளர்த்தங் கணிமகுடம்
மேவும் உரிமை முடிகவித்துத் தானும் விரும்பு பெருந்தவத்தின்
தாவில் நெறியைச் சென்றடைந்து தலைவர் சிவலோ கஞ்சார்ந்தான்.
தெளிவுரை : தன் மனைவியான கமலவதி மகனைப் பெற்றெடுத்தவுடனே இறந்து விட, செங்கோல் சோழனான சுபதேவன் தன் உயிர் போன்ற அம்மகனை வளர்த்து, உரிய வயதில் அணி செய்யப்பட்ட முடியைப் பொருந்திய உரிமைப்படி, தலையில் சூட்டி, அரசப் பட்டம் தந்து, தானும் விரும்பும் பெரிய தவம் செய்கின்ற குற்றம் இல்லாத நெறியைச் சென்று அடைந்து இருந்து, பின்பு இறைவரின் சிவலோகத்தை எய்தினான்.
4208. கோதை வேலார் கோச்செங்கட் சோழர் தாம்இக் குவலயத்தில்
ஆதி மூர்த்தி அருளால்முன் அறிந்து பிறந்து மண்ணாள்வார்
பூத நாதன் தான்மகிழ்ந்து பொருந்தும் பெருந்தண் சிவாலயங்கள்
காத லோடும் பலவெடுக்குந் தொண்டு புரியுங் கடன்பூண்டார்.
தெளிவுரை : மாலை அணிந்த வேலையுடைய கோச் செங்கண் சோழன் இந்த மண்ணுலகத்தில் ஆதிநாயகரான சிவபெருமான் திருவருளால் தம் முன்னைப் பிறப்பின் நிலையை உணர்ந்த நினைவுடன் பிறந்து, அரசாள்பவராய்ப் பூதநாயகரான இறைவர் தாம் மகிழ்ச்சி கொண்டு பொருந்தி வீற்றிருக்கும் பெரிய குளிர்ந்த கோயில்கள் பலவற்றிலும் பெரு விருப்பத்துடன் திருத் தொண்டைச் செய்யும் கடமையை மேற் கொண்டார்.
4209. ஆனைக் காவில் தாம்முன்னம் அருள்பெற் றதனை யறிந்தங்கு
மானைத் தரித்த திருக்கரத்தார் மகிழுங் கோயில் செய்கின்றார்
ஞானச் சார்வாம் வெண்ணாவலுடனே கூட நலஞ்சிறக்கப்
பானற் களத்துத் தம்பெருமான் அமருங் கோயிற் பணிசமைத்தார்.
தெளிவுரை : திருவானைக்காவில் தாம் முன்பிறப்பு நிலையில் திருவருள் பெற்ற அவ்வரலாற்றை அறிந்தவர் ஆதலால் அந்தத் தலத்தில் மானை ஏந்திய கைகளையுடைய இறைவர் மகிழும் கோயிலைச் செய்கின்றவராகி, மெய்ஞ்ஞானத்தின் சார்புடைய வெண் நாவல் மரத்துடன் பொருந்த, நன்மை சிறந்தோங்க, நீல மலர் போன்ற கழுத்தையுடைய தம் இறைவர் வீற்றிருக்கும் கோயில் பணியைச் செய்து அமைத்தார்.
4210. மந்திரிகள் தமைஏவி வள்ளல்கொடை அநபாயன்
முந்தைவருங் குலமுதலோ ராயமுதற் செங்கணார்
அந்தமில்சீர்ச் சோணாட்டில் அகல்நாடு தொறுமணியார்
சந்திரசே கரன்அமருந் தானங்கள் பலசமைத்தார்.
தெளிவுரை : கொடை வள்ளலான அநபாயச் சக்கரவர்த்தியின் முன்னோராக வரும் குல முதல்வரான முதன்மையுடைய கோச் செங்கண்ணனார், தம் உரிய அமைச்சர்களை ஏவி அனுப்பி, சிறப்பையுடைய சோழ நாட்டின் அகன்ற பதிகள் தோறும் சந்திர சேகரரான சிவ பெருமான் விரும்பி எழுந்தருளியுள்ள அழகு நிறைந்த மாடக் கோயில்கள் பலவற்றையும் கட்டினார்.
4211. அக்கோயில் தொறுஞ்சிவனுக் கமுதுபடி முதலான
மிக்கபெருஞ் செல்வங்கள் விருப்பினால் மிகஅமைத்துத்
திக்கனைத்துந் தனிச்செங்கோல் முறைநிறுத்தித் தேர்வேந்தர்
முக்கண்முதல் நடமாடும் முதல்தில்லை முன்னினார்.
தெளிவுரை : அந்தக் கோயில்கள் தோறும் இறைவருக்குத் திருவமுதுக்குரிய படித்தரம் முதலான மிக்க செல்வங்களைத் தம் விருப்பத்தினால் மிகவும் அமைத்து, எல்லாத் திக்குகளிலும் ஒப்பில்லாத தம் செங்கோல் ஆணை முறையைச் செலுத்தி நிறுத்தித் தேர்ப் படையை உடைய செங்கண்ணார் மூன்று கண்ணுடைய இறைவர் திருக்கூத்து இயற்றுகின்ற முதன்மையுடைய திருத்தில்லையை முற்படப்போய் அடைந்தார்.
4212. திருவார்ந்த செம்பொன்னின் அம்பலத்தே நடஞ்செய்யும்
பெருமானை அடிவணங்கிப் பேரன்பு தலைசிறப்ப
உருகாநின் றுளங்களிப்பத் தொழுதேத்தி உறையும் நாள்
வருவாய்மை மறையவர்க்கு மாளிகைகள் பலசமைத்தார்.
தெளிவுரை : சைவ மெய்த்திருவே மிக்க செம்பொன் அம்பலத்தில் கூத்து இயற்றும் இறைவரின் திருவடியை வணங்கிப் பேரன்பு மேல் மேல் ஓங்க, உள்ளம் உருகி, மகிழ்ச்சியடைய வணங்கித் துதித்து, அங்குத் தங்கியிருந்தார். அந்நாளில், வாய்மை ஒழுக்கத்தில் வருகின்ற தில்லைவாழ் அந்தணர்களுக்கு உறையுளான திருமாளி கைகள் பலவற்றையும் எடுக்கச் செய்தார்.
4213. தேவர்பிரான் திருத்தொண்டில் கோச்செங்கட் செம்பியர்கோன்
பூவலயம் பொதுநீக்கி யாண்டருளிப் புவனியின்மேல்
ஏவியநல் தொண்டுபுரிந் திமையவர்கள் அடிபோற்ற
மேவினார் திருத்தில்லை வேந்தர்திரு வடிநிழற்கீழ்.
தெளிவுரை : தேவரின் தலைவரான சிவபெருமானின் திருத் தொண்டினால் கோச்செங்கண் சோழராகத் தோன்றிய செங்கண்ணர் உலகம் மற்றவர்க்கும் பொது என்னாது தமக்கே சிறப்பாக உரியது என்று கூறும்படி தனியாட்சி செய்து, இவ்வுலகில் சிவபெருமான் அருள் செய்து செலுத்தியபடி சிவத் தொண்டுகளைச் செய்து, தேவர்கள் வணங்கும்படி தில்லைக் கூத்தரின் திருவடி நிழற் கீழ்ச் சேர்ந்தார்.
4214. தேவர்பிரான் திருத்தொண்டில் கோச்செங்கட் செம்பியர்கோன்
பூவலயம் பொதுநீக்கி யாண்டருளிப் புவனியின்மேல்
ஏவியநல் தொண்டுபுரிந் திமையவர்கள் அடிபோற்ற
மேவினார் திருத்தில்லை வேந்தர்திரு வடிநிழற்கீழ்.
தெளிவுரை : கரிய நீல மலரைப் போன்ற கழுத்தையுடைய இறைவரின் செம்மை தரும் திருவடி நிழல் சேர வரும் இயல்புடைய கோச்செங்கண் சோழரின் மலர் போன்ற அடிகளை வாழ்த்தி, நீர்மையுடைய இசை பொருந்திய யாழினது தலைவராய் உலகம் போற்றும் திருநீல கண்ட யாழ்ப்பாணரின் திறத்தை இனிச் சொல்லத் தொடங்குகின்றோம்.
கோச்செங்கண் சோழ நாயனார் புராணம் முற்றும்.
75. திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் புராணம்
சோழவள நாட்டிலே அமைந்துள்ள எருக்கத்தம் புலியூர் என்னும் நகரில் பாணர் மரபில் பிறந்தவர் நீலகண்ட யாழ்ப்பாணர். இவரது மனைவி மதங்க சூளாமணி. இசையே உருவெடுத்த பாணரும், அவரது வாழ்க்கைத் துணைவியாரும், நீலகண்டேசுவரர் புகழை யாழில் இனிமையுடன் உள்ளம் உருக இசைத்து எல்லையில்லா இன்பம் எய்தினர். இவர்கள் சிவத்தலங்கள் தோறும் சென்று யாழ் இசைத்து எம்பெருமான் அருள் பெற்று பின் மதுரையம்பதிக்குச் சென்றனர். பாணர் தம் மனைவியோடு திரு ஆலவாய் அண்ணலாரது ஆலயத்தின் புறத்தே நின்று எம்பெருமானின் புகழை யாழில் சுருதிகூட்டி பண்ணமைத்துப் பாடிக் கொண்டிருந்தார். பாணரின் யாழிலே உள்ளம் உருகிய சோமசுந்தரக் கடவுள் தமது பக்தனைக் காக்க திருவுள்ளம் கொண்டு மதுரையம்பதி சிவத்தொண்டர்கள் கனவில் எழுந்தருளினார். யாழ்ப்பாணரையும், அவரது மனைவியாரையும் கோவிலுள் அழைத்து வந்து தரிசனம் செய்வதற்கு ஆணையிட்டார். அவ்வாறே பாணர் கனவிலும் எழுந்தருளினார். பாணரே ! உம்மை, எம்மிடம் அழைத்து வந்து தரிசனம் செய்து வைக்க ஆவன செய்துள்ளோம் என்று அருள்வாக்கு சொல்லி மறைந்தார். மறுநாள் வழக்கம்போல் திருநீலகண்ட யாழ்ப்பாணர் மனைவியாருடன் கோயிலின் புறத்தே அமர்ந்து யாழ் இசைத்து தம்மை மறைந்த நிலையில் பாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது தொண்டர்கள் அவர்களைக் கண்டு வணங்கி எம்பெருமானின் ஆணையைக்கூறி அவர்களை அகத்து எழுந்தருளுமாறு பணிவோடு கேட்டுக் கொண்டனர்.
அவர்களும் தொண்டர்களின் வேண்டுகோளுக்கிணங்கி கோயிலுக்குள் சென்று மண்டபத்தில் அமர்ந்தனர். பக்தி வெள்ளத்தில் மூழ்கிய அன்பர் இருவரும் தரை ஈரமாக இருப்பதனை கூட பொருட்படுத்தாமல், ஈரத்தரையில் அமர்ந்து மெய்மறந்து யாழை மீட்டி பாடத் தொடங்கினர். இவருடைய இன்ப இசையில் மயங்கிய மதுரையம்பதி ஈசன் தரையின் குளிர்ச்சி பட்டு யாழின் சுருதி கெட்டுவிடுமே என்று திருவுள்ளம் பற்றினார். அசரீரி வாயிலாக பெருமான் நிலத்திலிருந்து பாடினால் ஈரத்தால் யாழ் கெட்டுவிடும். எனவே அவர்கட்கு அமர்ந்து பாடப் பலகை ஒன்று இடுங்கள் என்று திருவாய் மலர்ந்து அருளினார். அப்பொழுது அத்தொண்டர்கள் அவர்களுக்கு அழகிய பீடம் ஒன்றை எடுத்து வந்து அதன் மீது அமர்ந்து பாடுமாறு செய்தனர். பீடத்தில் அமர்ந்த யாழ்பாணரும், மதங்கசூளாமணியும் அழகிய இனிய தெய்வ சக்திமிக்கப் பக்திப் பாடல்கள் பலவற்றைப் பாடி அனைவரையும் மெய்மறக்கச் செய்தனர். அதன் பிறகு இருவரும் மதுரையம்பதியில் நெடுநாள் தங்கியிருந்து தங்கள் யாத்திரையைத் தொடர்ந்தனர். அடுத்துள்ள பல சிவத்தலங்களையும் தரிசித்தவாறு திருவாரூரை அடைந்தனர்.
திருவாரூர் தியாகேசப்பெருமானும், பிராட்டியாரும் பாணர் இசையில் மயங்கினர். அன்றிரவு ஈசன் திருவாரூர் மெய்யன்பர்கள் கனவிலே எழுந்தருளி,எமது அன்பன் பாணனுக்கு திருக்கோயிலுள் வேறு வாயில் அமைத்து அதன் வழியாகக் கோயிலுக்குள் அழைத்து வந்து இசை பாடத் துணைபுரிவீர்களாக என்று கட்டளையிட்டருளினார். மறுநாள் தொண்டர்கள் திருநீலகண்ட யாழ்ப்பாணர் எழுந்தருளும் பொருட்டு வடதிசையில் வாயில் ஒன்று நிர்மாணித்தனர். அதன் வழியாக அவரையும், அவரது மனைவியாரையும் எம்பெருமான் திருமுன் எழுந்தருளச் செய்தனர். யாழ்ப்பாணர் வீதிவிடங்கப் பெருமானைக் கண்குளிரக் கண்டு மகிழ்ந்து பக்திப் பாடல்கள் பாடினார். சில நாட்களில் அங்கிருந்து புறப்பட்டார். சிவத்தலங்கள் பலவற்றைத் தரிசித்துக் கொண்டே, சீர்காழியை வந்தடைந்து சம்பந்தரை வணங்கினார். பாணரின் யாழிசையில் எல்லையில்லா இன்பம் எய்திய திருஞான சம்பந்தப் பெருமான் அவரையும், அவர் தம் மனைவியாரையும் தம்முடனேயே இருந்து தேவாரப் பதிகங்களை யாழில் இட்டு இசைத்து பாடும் வண்ணம் அருள்புரிந்தார்.இறுதியில் திருபெருமணநல்லூரில் ஞானசம்பந்தர் திருமணத்தில் தோன்றிய சிவஜோதியில், பாணரும், அவர்தம் மனைவியாரும் கலந்து சிவபதவியை அடைந்தனர்.
4215. எருக்கத்தம் புலியூர் மன்னி வாழ்பவர் இறைவன் தன்சீர்
திருத்தகும் யாழி லிட்டுப் பரவுவார் செழுஞ்சோ ணாட்டில்
விருப்புறு தானம் எல்லாம் பணிந்துபோய் விளங்கு கூடல்
பருப்பதச் சிலையார் மன்னும் ஆலவாய் பணியச் சென்றார்.
தெளிவுரை : திருநீல கண்ட யாழ்ப்பாணர் திருஎருக்கத்தம் புலியூரில் நிலை பெற்று வாழ்பவர். அவர் சிவபெருமானின் சீர்களைச் சிறப்புடைய தக்க யாழில் அமைத்துப் போற்றுபவர். செழிப்புடைய சோழ நாட்டில் உள்ள பதிகளில் வணங்கிச் சென்று திருநான் மாடக்கூடல் என்னும் மதுரையில் மலை வில் ஏந்திய சிவபெருமான் நிலை பெற எழுந்தருளியுள்ள திருஆல வாயிலைப் பணியச் சென்றார்.
4216. ஆலவாய் அமர்ந்தார் கோயில் வாயிலை அடைந்து நின்று
பாலையீ ரேழு கோத்த பண்ணினிற் கருவி வீக்கிக்
காலம் ஆதரித்த பண்ணில் கைபல முறையும் ஆராய்ந்
தேலவார் குழலாள் பாகர் பாணிகள் யாழில் இட்டார்.
தெளிவுரை : திருவால வாயில் விரும்பி வீற்றிருக்கும் இறைவரின் திருக் கோயிலினது வாயிலை அடைந்து, அங்கு நின்று பாலையாய் நின்ற பதினான்கு வகையின் நிறுவிய உரிய பண் பெறும்படி கருவியின் நரம்புகளை முறுக்கிப் பண்கள் பலவற்றுள்ளும் அந்தக் காலத்துக்கு இசைந்த பண்ணிலே வர நரம்புகளை விரலின் தொழிலால் பலமுறையும் சோதித்துப் பண்ணின் அமைதி யாழ்க்கருவியில் வரப் பெற்ற பின்னர் மணம் கமழும் நீண்ட கூந்தலையுடைய உமையம்மையாரை ஒரு பாகத்தில் கொண்ட இறைவரின் இசைப் பாடல்களை யாழில் இசைத்தார்.
4217. மற்றவர் கருவிப் பாடல் மதுரைநீ டால வாயில்
கொற்றவன் திருவுள் ளத்துக் கொண்டுதன் தொண்டர்க் கெல்லாம்
அற்றைநாள் கனவில் ஏவ அருட்பெரும் பாண னாரைத்
தெற்றினார் புரங்கள் செற்றார் திருமுன்பு கொண்டு புக்கார்.
தெளிவுரை : அப்பாணனாரின் யாழ்க்கருவியில் இடப்பட்ட பாடலை மதுரையில் திருவால வாயில் வீற்றிருக்கின்ற சௌந்தர பாண்டியரான மன்னர் தம் திருவுள்ளத்தில் கொண்டருளி, தம் தொண்டர்களுக்கெல்லாம் அன்றைய கனவிலே தோன்றி ஏவியபடி, அந்த அடியார்கள் மறுநாள் சிவனருளைப் பெற்ற பெரும்பாணனாரைப் பகைவரின் திரிபுரங்களை எரித்த இறைவரின் திருமுன்பு கொண்டு புகுந்தனர்.
4218. அன்பர்கள் கொண்டு புக்க பொழுதினில் அரிவை பாகன்
தன்பெரும் பணியாம் என்று தமக்குமெய் யுணர்த லாலே
மன்பெரும் பாண னாரும் மாமறை பாட வல்லார்
முன்பிருந் தியாழிற் கூடல் முதல்வரைப் பாடு கின்றார்.
தெளிவுரை : அடியார்கள் அழைத்துக் கொண்டு கோயிலில் புகுந்தபோது; இது தையல் பாகரான இறைவரின் பெரிய ஆணையே யாகும் ! என்று தமக்கும் உணர்வினுள்ளே உண்மை புலப்படப் பெற்றதால், நிலை பெற்ற பெரும் பாணரும் பெரிய வேதங்களைப் பாட வல்லாரான சோம சுந்தரப் பெருமானது திருமுன்பு இருந்து கொண்டு, அந்த ஆலவாய்ப் பெருமானைப் பாடுபவராய்.
4219. திரிபுரம் எரித்த வாறும் தேர்மிசை நின்ற வாறும்
கரியினை யுரித்த வாறும் காமனைக் காய்ந்த வாறும்
அரிஅயற் கரிய வாறும் அடியவர்க் கெளிய வாறும்
பரிவினாற் பாடக் கேட்டுப் பரமனார் அருளி னாலே.
தெளிவுரை : மூன்று புரங்களையும் எரித்த பண்பையும், அதன் பொருட்டுத் தேரின்மீது நின்ற தன்மையையும் யானையை உரித்த வரலாற்றினையும், காமனைக் காய்ந்த தன்மையையும், திருமாலுக்கும் நான்முகனுக்கும் அறிவதற்கு அரியவரான வரலாற்றையும், அடியார்க்கு எளியவராயின தன்மையையும் அன்பினால் பாடக் கேட்டு, இறைவரின் திருவருளினால்,
4220. அந்தரத் தெழுந்த ஓசை அன்பினிற் பாணர் பாடும்
சந்தயாழ் தரையிற் சீதந் தாக்கில்வீக் கழியும் என்று
சுந்தரப் பலகை முன்நீர் இடுமெனத் தொண்ட ரிட்டார்
செந்தமிழ்ப் பாண னாருந் திருவருள் பெற்றுச் சேர்ந்தார்.
தெளிவுரை : வானத்தில் எழுந்த ஓசையானது அன்பினால் பாணர் பாடும் சந்தத்தையுடைய யாழானது தரையில் உள்ள குளிர்ச்சி தாக்கினால் நரம்புகளின் இறுக்கம் சிதையுமாதலால், அழகிய பலகையை முன்னால் நீங்கள் இடுங்கள் ! என்று கூறிற்று. கூற அடியார்கள் அவ்வாறே, பலகையை இட்டனர். செந்தமிழ்ப் பாணரும் திருவருளைப் பெற்று அதனில் அமர்ந்து இருந்தனர்.
4221. தமனியப் பலகை ஏறித் தந்திரிக் கருவி வாசித்
துமையொரு பாகர் வண்மை உலகெலாம் அறிய ஏத்தி
இமையவர் போற்ற ஏகி எண்ணில்தா னங்கள் கும்பிட்
டமரர்நா டாளாது ஆரூர் ஆண்டவர் ஆரூர் சேர்ந்தார்.
தெளிவுரை : பொற்பலகையின் மீது ஏறி யாழை இசைத்து உமையொரு பாகரான இறைவரின் வள்ளன்மையை உலகம் எல்லாம் அறியும்படி ஏத்திப் போற்றுமாறும், தேவர்களும் ஏத்த, அங்கு நின்றும் சென்று, அளவில்லாத பதிகளை வணங்கிச்சென்று, தேவர் உலகின் ஆட்சியை விட்டு வந்து திருவாரூரை ஆட்சி செய்கின்ற தியாகப் பெருமான் வீற்றிருக்கும் திருவாரூரை அடைந்தார்.
4222. கோயில் வாயில் முன்னடைந்துகூற்றன் செற்ற பெருந்திறலும்
தாயின் நல்ல பெருங்கருணை அடியார்க் களிக்குந் தண்ணளியும்
ஏயுங் கருவி யில்தொடுத்தங் கிட்டுப் பாடக் கேட்டுஅங்கண்
வாயில் வேறு வடதிசையில் வகுப்பப் புகுந்து வணங்கினார்.
தெளிவுரை : கோயிலின் வாயில் முன் நின்று இயமனை உதைத்து உருட்டிய பெரிய உண்மையையும் தாயினும் மிக்க பெருங்கருணையினை அடியார்களுக்கு அளிக்கும் குளிர்ந்த பேரருள் திறத்தையும் பொருந்திய யாழிலே அமைத்துப் பொருத்திப் பாட, இறைவர் அதைக் கேட்டருளி, அங்கு வடக்குத் திக்கில் பாணனாருக்கு என்று வேறு வாயிலை வகுத்தருள, அதன் வழியே உள்ளே புகுந்தார்.
4223. மூலத் தானத் தெழுந்தருளி இருந்த முதல்வன் தனைவணங்கிச்
சாலக் காலம் அங்கிருந்து தம்பி ரான்தன் திருவருளால்
சீலத் தார்கள் பிரியாத திருவா ரூரி னின்றும்போய்
ஆலத் தார்ந்த கண்டத்தார் அமருந் தானம் பலவணங்கி.
தெளிவுரை : திருமூலத் தானத்தில் விளங்க வீற்றிருக்கும் இறைவரை வணங்கி, மிக்க காலம் அங்கு இருந்து, இறைவரின் திருவருள் விடைபெற்றுச், சிவ அடியவர்கள் நீங்காது வாழ்கின்ற திருவாரூரினின்றும் சென்று, நஞ்சுடைய கழுத்தை யுடைய இறைவர் விரும்பி வீற்றிருக்கும் பல பதிகளையும் வணங்கி,
4224. ஆழி சூழுந் திருத்தோணி யமர்ந்த அம்மான் அருளாலே
யாழின் மொழியாள் உமைஞானம் ஊட்ட உண்ட எம்பெருமான்
காழி நாடன் கவுணியர்கோன் கமல பாதம் வணங்குதற்கு
வாழி மறையோர் புகலியினில் வந்தார் சந்த இசைப்பாணர்.
தெளிவுரை : கடலால் சூழப்பட்ட திருத்தோணியில் விரும்பி எழுந்தருளிய இறைவரின் திருவருளினால் யாழிசையினும் இனிய மொழியினரான உமையம்மையார் ஞானப் பாலை ஊட்ட உண்டருளிய எம்பெருமானும் சீகாழி நாடு உடையவரும் கவுணியர் தலைவருமான ஆளுடைய பிள்ளையாரின் தாமரை போன்ற திருவடிகளை வணங்கும் பொருட்டு வாழ்வுடைய அந்தணர்களின் தலமான சீகாழிப் பதியில் சந்தமுடைய யாழ்ப்பாணர் வந்தார்.
4225. ஞானம் உண்டார் கேட்டருளி நல்ல இசையாழ்ப் பெரும்பாணர்க்
கான படியால் சிறப்பருளி அமரு நாளில் அவர்பாடும்
மேன்மைப் பதிகத் திசையாழில் இடப்பெற் றுடனே மேவியபின்
பானற் களத்தார் பெருமணத்தில் உடனே பரமர் தாளடைந்தார்.
தெளிவுரை : யாழ்ப்பாணர் சீகாழிக்கு வந்ததைச் சிவஞானம் உண்ட திருஞானசம்பந்தர் கேட்டருளி, நல்ல இசையை யுடைய யாழ்ப்பாணருக்கு ஏற்றபடி சிறப்புச் செய்து விரும்பி உறையும் நாளில், அவர் பாடுகின்ற மேன்மையுடைய திருப்பதிகத்து இசையை யாழில் இட்டு வாசிக்கும் பேறுபெற்று அவருடனே கூடத் தங்கியபின், நீல மலர் போலும் கழுத்தினையுடைய இறைவரின் திருநல்லூர்ப் பெருமணத்தில், அவருடனே, இறைவரின் திருவடிகளை அடைந்தார்.
4226. வரும்பான் மையினில் பெரும்பாணர் மலர்த்தாள் வணங்கி வயற்சாலிக்
கரும்பார் கழனித் திருநாவ லூரில் சைவக் கலைமறையோர்
அரும்பா நின்ற வணிநிலவும் பணியும் அணிந்தா ரருள்பெற்ற
சுரும்பார் தொங்கல் சடையனார் பெருமை சொல்ல லுறுகின்றாம்.
தெளிவுரை : பான்மை பற்றி வரும் திருநீலகண்ட பாணரின் மலர் போன்ற திருவடிகளை வணங்கி நெல்லும் கரும்பும் நிறைந்த கழனிகளையுடைய திருநாவலூரில் வந்த சிவாகம நியதியுடைய சிவ வேதியரும் முளைக்கும் அழகிய பிறையையும், பாம்பையும் சூடிய சிவபெருமானின் திருவருளைப் பெற்றவரும் ஆகிய வண்டுகள் மொய்க்கும் மலர் மாலையுடைய சடையனாரது பெருமையைச் சொல்லப் புகுகின்றோம்.
திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் புராணம் முற்றும்.
76. சடைய நாயனார் புராணம்
திருநாவலூரில் ஆதிசைவ அந்தணர் குலத்தில் சடையனார் தோன்றினார். அவர் சுந்தரரை மகனாகப் பெற்ற மாண்பினை உடையவர்.
4227. தம்பி ரானைத் தோழமைகொண் டருளித் தமது தடம்புயஞ்சேர்
கொம்ப னார்பால் ஒருதூது செல்ல யேவிக் கொண்டருளும்
எம்பி ரானைச் சேரமான் பெருமாள் இணையில் துணைவராம்
நம்பி யாரூ ரரைப்பயந்தார் ஞாலம் எல்லாம் குடிவாழ.
தெளிவுரை : தம் தலைவரான இறைவரையே தமக்குத் தோழராகக் கொண்டு, எம் இறைவனான அவரையே தம் பெரிய தோள்களைத் தழுவும் பூங்கொம்பர் போன்ற பரவை அம்மையாரிடத்துத் தூதாகச் செல்லும்படி அனுப்பிய எம்பெருமானை, சேரமான் பெருமாள் நாயனாரின் ஒப்பற்ற துணைவரான நம்பியாரூரை, உலகத்தில் எல்லாவுயிர்களும் வாழ்வடையும் பொருட்டுச் சடையனார் பெற்றார்.
சடைய நாயனார் புராணம் முற்றும்.
77. இசைஞானி அம்மையார் புராணம்
சடைய நாயனாரின் மனைவியார் இசைஞானியார், இவர் சுந்தரமூர்த்தியாரின் தாயார்.
4228. ஒழியாப் பெருமைச் சடையனார் உரிமைச் செல்வத் திருமனையார்
அழியாப் புரங்கள் எய்தழித்தார் ஆண்ட நம்பி தனைப்பயந்தார்
இழியாக் குலத்தின் இசைஞானிப் பிராட்டி யாரை என்சிறுபுன்
மொழியால் புகழ முடியுமோ முடியா தெவர்க்கும் முடியாதால்.
தெளிவுரை : குறைவற்ற பெருமையுடைய சடையனாரின் செல்வம் பொருந்திய மனைவியாரும், வேறு எவ்விதத்தாலும் அழியாத வலிமையுடைய முப்புரங்களை அழித்த சிவபெருமான் ஆண்டருளிய நம்பியாரூரரைப் பெற்றவருமாகிய இழிவில்லாத உயர்வுடைய குலமான சிவவேதியரின் குலத்தில் வந்த இசைஞானிப் பிராட்டியாரை என் புல்லிய சொற்களால் புகழ முடியுமா? எனக்கு முடியாமையே அன்றி வேறு எவருக்கும் முடியாது.
இசைஞானி அம்மையார் புராணம் முற்றும்.
மன்னிய சீர்ச் சருக்கம் முற்றும்.
13. வெள்ளானைச் சருக்கம் (கயிலைக்குச் செல்லுதல்)
சுந்தரமூர்த்தி நாயனார் துதி
திருவாரூர் தங்கியிருந்த சுந்தரர் சேரமானைக் காணவேண்டும் என்று எண்ணினார். சோழநாட்டில் உள்ள பதிகள் பலவற்றையும் வணங்கியபடி மேற்கு கொங்கு நாட்டில் உள்ள திருப்புக்கொளியூரை அடைந்தார். அந்நதணர் வாழும் தெருவில் இரு எதிர் எதிர் வீடுகளில், ஒன்றில் அழுகை ஒலியும், மற்றொன்றில் மங்கல ஒலியும் எழுந்தன. அவற்றின் காரணம் யாது? என்று அங்கிருந்த மறையவரைச் சுந்தரர் வினவினார். ஐந்து வயதுடைய இரு சிறுவர் நீர்நிலையில் குளிக்கச் சென்றனர். அவருள் ஒருவனை முதலை விழுங்கியது. எனவே அம்மகன் வீட்டில் அழுகை ஒலி; உயிர் தப்பிய சிறுவனுக்கு பூணூல் அணியும் விழா. எனவே மங்கல ஒலி என்று அந்தணர் உரைத்தனர். பின் மகனை இழந்த பெற்றோர் சுந்தரர் அங்கு வந்ததை அறிந்து தம் துன்பத்தை மறைத்துக் கொண்டு வந்து வணங்கினர். அவர் இவர்கள் தம் மகனை இழந்த வருத்தத்தை மறைத்து என்னை வணங்க வந்தனர். ஆதலால் இவர்கள் மகனை எழுப்பித் தந்தபின் அவிநாசி இறைவனை வணங்குவேன்! என்று எண்ணினார். பின், மகனை விழுங்கிய மடு எங்கே? எனக் கேட்டறிந்து அங்கே சென்றார். உரைப்பார் உரை என்ற தொடக்கம் உடைய பதிகத்தைப் பாடினார். மகனை முன்னம் விழுங்கிய முதலையானது கரையில் அம்மகனை உமிழ்ந்தது. வேதம் ஒலித்தது. பின் அம்மகனுக்கு பூணூல் அணி விழாவும் நடைபெற்றது. முதலையுடன் பாலனை மீட்டுத் தந்தார் என்ற செய்தியும், அவர் தம்மைக் காண வருகின்றார் என்ற செய்தியும் சேரமானுக்கு எட்டின. என் ஐயன் வந்தார்! என்னை ஆளும் இவைன் வந்தார்! ஆரூர்ச் சைவன் வந்தார்! எனக்கு நண்பன் வந்தார்! என்று பறையறையும்படி, சேரமான் பெருமான் ஆணையிட்டார். அவரது ஆணையினால் அந்நகரம் அணி செய்யப்பட்டது.
சேரமான், சுந்தரரை எதிர்கொண்டு தொழுது வரவேற்றார். சுந்தரரும் அவரைத் தொழுதார். இருவரும் உரையாடி மகிழ்ந்தனர். இருவரும் வஞ்சி நகரத்தை அடைந்தனர். அந்த நாட்டின் உள்ள தலங்கள் பலவற்றையும் அவ்விருவரும் சென்று வணங்கினர். ஒருநாள் சுந்தரர் தனியாய்த் திருவஞ்சைக்களம் என்ற கோயிலுக்குச் சென்றார். தம் இல்லற வாழ்வை விலக்கிட வேண்டும் என்ற பொருள்படத் தலைக்குத் தலைமாலை என்ற பதிகத்தைப் பாடினார். இறைவர், சுந்தரர் இவ்வுலகத்தில் இருக்க வேண்டும் என்று நியமித்த நாட்கள் முடிந்தன. ஆதலால் அவர் தம் கயிலையை அடைய அருள் செய்யலானார். தேவர்களை நோக்கிச் சுந்தரரை வெள்ளை யானை மீது ஏற்றி இங்குக் கொணர்க என்று சிவபெருமான் ஆணையை அவர்க்கு உரைத்து வெள்ளை யானை மீது அவரை அமரச் செய்து அழைத்துச் சென்றனர். சுந்தரர் கயிலைக்குச் செல்கிறார் என்பதைச் சேரமான் பெருமாள் உணர்ந்தார். அவர் தாம் ஒரு குதிரை மீது ஏறி அதன் காதில் மந்திரத்தை ஓதினார். அது விரைந்து சுந்தரர் ஏறிச்சென்ற யானையை வலமாக வந்து முன்னால் சென்றது. சுந்தரர் கயிலை மலையின் தெற்கு வாயிலில் வந்து தான் எனை முன் படைத்தான் என்ற பதிகத்தைப் பாடினார். சேரர் இறைவர் அருளால் தடைப்பட்டு அங்கே நின்றார். சுந்தரர் தடையற்று இறைவரின் முன் சென்றார். ஆரூரா! வா! என்றார் சிவபெருமான். தம்மை அவர் தடுத்தாட்கொண்ட திறத்தை அவர் எண்ணி மகிழ்ந்தார். எம் இறைவ! சேரமான் வந்துள்ளார் என்று அறிவித்தார். அவரை இங்கு அழைத்து வருக! என்றார் இறைவர். சேரமானை இறைவரின் திருமுன்பு அழைத்துச் சென்றனர்.
நாம் அழைக்காமல் நீ இங்கு ஏன் வந்தாய்? என்று சிவபெருமான் சேரமானை நோக்கி வினவினார். யான் சுந்தரரைத் தொழுதவண்ணம் வந்தேன். உன் கருணை வெள்ளம் என்னை இங்குக் கொணர்ந்து சேர்த்தது. என் விண்ணப்பம் ஒன்றுள்ளது. யான் பாடிய ஞான உலாவைக் கேட்டருளல் என்றார். பாடுக! என்றார். இறைவர் நீயும் நம் சுந்தரருடன் கணநாதனாக இங்கு இருப்பீராக! என்று அருள் செய்தார். வன்றொண்டர் பழையபடி ஆலால சுந்தர் ஆனார். சேரர் பெருமான் கணநாதராய் விளங்கினார். பரவையார், சங்கிலியார் என்னும் இருவரும் பழையபடி கமலினி அநிந்திதையராய்க் கயிலையில் உமையம்மையாரின் ஏவல் மங்கையராய் இருக்கலாயினர். ஆலால சுந்தரர் அருளிய தேவாரப் பதிகங்கள் வருணனுக்கு அருளப்பட்டன. அவன் திருவஞ்சைக் களத்தில் கொண்டு சேர்த்தான். சேரமான் பாடிய ஞானவுலாவைக் கயிலாயத்தில் கேட்ட மாசாத்தனார் திருப்பிடவூரில் வேதியர்க்கு அருளி உலகத்தில் வழங்கி வரும்படி செய்தார்.
4229. மூல மான திருத்தொண்டத் தொகைக்கு முதல்வ ராய்இந்த
ஞாலம் உய்ய எழுந்தருளும் நம்பி தம்பி ரான்தோழர்
காலை மலர்ச்செங் கமலக்கண் கழறிற் றறிவா ருடன்கூட
ஆல முணடார் திருக்கயிலை அணைந்தது அறிந்த படியுரைப்பாம்.
தெளிவுரை : திருத்தொண்டரின் வரலாற்றைக் கூறும் இந்நூலுக்கு மூல நூலான திருத்தொண்டத் தொகை அருளிச் செய்வதற்கு உரிமையுடைய முதல்வராக இந்த நிலவுலகம் உய்யும் பொருட்டு இங்கு எழுந்தருளி வந்த நம்பியாரூரரான தம்பிரான் தோழன், காலையில் மலரும் தன்மை கொண்ட செந்தாமரை மலர்போன்ற கண்களையுடைய கழறிற்றறிவார் நாயனாருடன் கூட நஞ்சை உண்ட இறைவரின் திருக்கயிலை மலையில் சேர்ந்த வரலாற்றை அறிந்த வகையில் சொல்வோம்.
4230. படியில் நீடும் பத்திமுதல் அன்பு நீரில் பணைத்தோங்கி
வடிவு நம்பி யாரூரர் செம்பொன் மேனி வனப்பாகக்
கடிய வெய்ய இருவினையின் களைகட் டெழுந்து கதிர்பரப்பி
முடிவி லாத சிவபோகம் முதிர்ந்து முறுகி விளைந்ததால்.
தெளிவுரை : இவ்வுலகத்தில் நீடிய பக்தி முதலானது, அன்பான நீரினால் பரந்து மேல் எழுந்து, நம்பியாரூரரின் செம்பொன் போன்ற வனப்புடைய மேனியே தம் வடிவாகக் கடிய கொடிய இருவினைகள் என்னும் களையைக் கடிந்து, அகற்றி, மேல் ஓங்கி எழுந்து, ஞானக் கதிர்களான கதிர்களைப் பரப்பி, அழிவற்ற சிவபோகம் என்னும் பலம் முதிர்ச்சி பெற்று மிகவும் விளைந்தது.
4231. ஆரம் உரகம் அணிந்தபிரான் அன்பர் அணுக்க வன்தொண்டர்
ஈர மதுவார் மலர்ச்சோலை எழிலா ரூரில் இருக்குநாள்
சேரர் பெருமாள் தனைநினைந்து தெய்வப் பெருமான் கழல்வணங்கிச்
சாரல் மலைநா டணைவதற்குத் தவிரா விருப்பி னுடன்போந்தார்.
தெளிவுரை : மாலையாய்ப் பாம்பை அணிந்த சிவபெருமானின் அன்பரான அணுக்கம் உடைய வன்தொண்டர், குளிர்ந்த தேன் பொருந்திய மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த அழகிய திருவாரூரில் இருக்கும் நாட்களில், சேரமான் பெருமாள் நாயனாரை நினைந்து, தெய்வப் பெருமாளான தியாகராயரை வணங்கி அருள் விடைபெற்றுச், சாரல்களையுடைய மலை நாட்டை அணைவதற்குத் தடுக்கலாகாத பெருவிருப்புடனே சென்றார்.
4232. நன்னீர்ப் பொன்னித் திருநாட்டு நாதர் மகிழுந் திருப்பதிகள்
முன்னி இறைஞ்சி அகன்றுபோய் முல்லைப் படப்பைக் கொல்லைமான்
துன்னி உகைக்குங் குடக்கொங்கில் அணைந்து தூய மதிவான்நீர்
சென்னி மிசைவைத் தவர்செல்வத் திருப்புக் கொளியூர் சென்றடைந்தார்.
தெளிவுரை : நல்ல நீர் பொருந்திய காவிரி நாடான சோழ நாட்டில் இறைவர் மகிழ்ந்தருளும் தலங்களை நினைத்தும் வணங்கியும் நீங்கிப் போய், முல்லை நிலச் சார்புடைய புறவங்களில் தோட்டங்களில் மான்கள் துள்ளி விளையாடுவதற்கு இடமான மேல் கொங்கு நாட்டை அடைந்து, தூய பிறையையும் கங்கையையும் தலையில் அணிந்த இறைவரின் செல்வம் நிறைந்த திருப்புக் கொளியூரைப் போய் அடைந்தார்.
4233. மறையோர் வாழும் அப்பதியின் மாட வீதி மருங்கணைவார்
நிறையுஞ் செல்வத் தெதிர்மனைகள் இரண்டில் நிகழ்மங் கலஇயங்கள்
அறையும் ஒலியொன் றினில்ஒன்றில் அழுகை ஒலிவந் தெழுதலும் ஆங்கு
உறையும் மறையோர் களைஇரண்டும் உடனே நிகழ்வ தென்னென்றார்.
தெளிவுரை : அந்தத் தலத்தில் வேதியர் வாழும் மாட வீதியின் பக்கத்தில் செல்பவரான நம்பியாரூரர், நிறையும் செல்வத்துடன் எதிர் எதிராய் அமைந்த இரண்டு இல்லங்களில், ஓர் இல்லத்தில் நிகழும் மங்கலத் தொழில்களுக்கான இயங்களின் ஒலியும், மற்றொன்றில் அழுகை ஒலியும் வந்து எழவும், அவற்றைக் கேட்டு, அங்குள்ள அந்தணர்களைப் பார்த்து மாறுபட்ட இந்த இரண்டு ஒலிகளும் ஒரே காலத்தில் நிகழ்வதற்குக் காரணம் யாது என வினவினார்.
4234. அந்த ணாளர் வணங்கிஅரும் புதல்வர் இருவர் ஐயாண்டு
வந்த பிராயத் தினர்குளித்த மடுவில் முதலை ஒருமகவை
முந்த விழுங்கப் பிழைத்தவனை முந்நூல் அணியுங் கலியாணம்
இந்த மனைமற் றந்தமனை இழந்தார் அழுகை யென்றுரைத்தார்.
தெளிவுரை : அந்த அந்தணர்கள் நம்பியாரூரரை வணங்கி அரிய மைந்தர் இருவர் ஐந்து வயது உடையவர்கள் குளித்த நீர் நிலையில் ஒரு பிள்ளையை முதலை முன் விழுங்கி விடத் தப்பிப் பிழைத்த பிள்ளைக்குப் பூணூல் அணியும் மங்கலமான உபநயனம் நிகழ்வது இந்த இல்லத்தில் ! மற்றொரு பிள்ளையை இழந்தவரின் அழுகை நிகழ்வது அந்த இல்லத்தில் ! என்று விடை கூறினர்.
4235. இத்தன் மையினைக் கேட்டருளி இரங்குந் திருவுள் ளத்தினராம்
மொய்த்த முகைத்தார் வன்தொண்டர் தம்மை முன்னே கண்டிறைஞ்ச
வைத்த சிந்தை மறையோனும் மனைவி தானும் மகவிழந்த
சித்த சோகந் தெரியாமே வந்து திருத்தாள் இறைஞ்சினார்.
தெளிவுரை : இந்தத் தன்மையைக் கேட்டு இரக்கம் கொண்ட திருவுள்ளத்தைக் கொண்ட பூக்கள் நிறைந்த மாலையைச் சூடிய சுந்தரரைப் பார்த்து வணங்க வேண்டும் என்றுமனம் கொண்டிருந்த அந்த வேதியரும் அவருடைய மனைவியும், தம் மகவை இழந்த உள்ள வருத்தத்தை அறியாராய் வந்து அவருடைய அடிகளை வணங்கினர்.
4236. துன்பம் அகல முகமலர்ந்து தொழுவார் தம்மை முகநோக்கி
இன்ப மைந்தன் தனையிழந்தீர் நீரோ என்ன எதிர்வணங்கி
முன்பு புகுந்து போனதது முன்னே வணங்க முயல்கின்றோம்
அன்பு பழுதா காமல்எழுந் தருளப் பெற்றோம் எனத்தொழுதார்.
தெளிவுரை : மகனை இழந்த சோகமான துன்பம் நீங்க முகம் மலர்ந்து தொழுபவரான அந்தணனையும் அவனுடைய மனைவியையும் சுந்தரர் எதிர்நோக்கி, இன்ப மகனை இழந்தவர் நீங்களோ? என்று வினவினார். அந்நிகழ்ச்சி முற்காலத்தில் நிகழ்ந்து கழிந்தது ! முன்னமேயே தங்களைக் கண்டு வணங்க முயல்கின்றோம் ! எங்களின் அன்பு வீண் போகாது. தாங்கள் இங்கு எழுந்தருளும் பேற்றைப் பெற்றோம் ! என்று உரைத்தனர்.
4237. மைந்தன் தன்னை இழந்ததுயர் மறந்து நான்வந் தணைந்ததற்கே
சிந்கை மகிழ்ந்தார் மறையோனும் மனைவி தானுஞ் சிறுவனையான்
அந்த முதலை வாய்நின்றும் அழைத்துக் கொடுத்தே அவிநாசி
எந்தை பெருமான் கழல்பணிவேன் என்றார் சென்றார் இடர்களைவார்.
தெளிவுரை : மைந்தனை இழந்த துக்கத்தையும் மறந்து நான் வந்ததன் பொருட்டே அந்தணனும் அவனுடைய மனைவியும் மனம் மகிழ்ந்தனர். அச்சிறுவனை விழுங்கிய அந்த முதலையின் வாயினின்றும் அழைத்துக் கொடுத்த பின்பு தான், நான் அவிநாசியாகிய எம்பெருமானின் திருவடிகளை வணங்குவேன் ! என்று தம்மிடம் அன்பால் சென்றவரின் துன்பத்தை நீக்குபவரான நம்பியாரூரர் இவ்வாறு உரைத்தார்.
4238. இவ்வா றருளிச் செய்தருளி இவர்கள் புதல்வன் தனைக்கொடிய
வெவ்வாய் முதலை விழுங்கும்மடு எங்கே என்று வினவிக்கேட்டு
அவ்வாழ் பொய்கைக் கரையில் எழுந் தருளி அவனை அன்றுகவர்
வைவாள் எயிற்று முதலைகொடு வருதற் கெடுத்தார் திருப்பதிகம்.
தெளிவுரை : இங்ஙனம் சுந்தரர் உரைத்து இவர்களின் புதல்வனைக் கொடிய கூர்மையான வாயுடைய முதலை விழுங்கிய நீர்நிலை எங்கே உள்ளது? என்று கேட்டு அறிந்து, அந்த ஆழமான பொய்கையின் கரையில் சென்றருளி, அம்மைந்தனை அன்று முன்நாளில் விழுங்கிய கூரிய வாள் போன்ற பற்களையுடைய முதலை மீளக் கொண்டு வருவதற்குத் திருப்பதிகம் பாடிடலானார்.
4239. உரைப்பார் உரையென் றெடுத்ததிருப் பாட்டு முடியா முன்உயர்ந்த
வரைப்பான் மையின்நீள் தடம்புயத்து மறலி மைந்தன் உயிர்கொணர்ந்து
திரைப்பாய் புனலின் முதலைவயிற் றுடலிற் சென்ற ஆண்டுகளும்
தரைப்பால் வளர்ந்த தெனநிரம்ப முதலை வாயில் தருவித்தான்.
தெளிவுரை : பாடும் அப்பதிகத்தின் உரைப்பார் உரை எனத் தொடங்கிய திருப்பாட்டு முடிவதற்கு முன்பே, உயர்ந்த மலையின் தன்மைபோல் நீண்ட பெரிய தோள்களையுடைய கூற்றும் மகனின் உயிரைக் கொண்டு வந்து அலைகளையுடைய நீரில் முதலையின் வயிற்றில், நிலத்தில் இருந்து வளர்ந்தது போல் கழிந்த இரண்டு ஆண்டு (வளர்ச்சியும்) உடலில் நிரம்ப, முதலையின் வாயில் வரச் செய்தான்.
4240. பெருவாய் முதலை கரையின்கண் கொடுவந் துமிழ்ந்த பிள்ளைதனை
உருகா நின்ற தாய்ஓடி எடுத்துக் கொடுவந் துஉயிரளித்த
திருவா ளன்தன் சேவடிக்கீழ்ச் சீல மறையோ னொடுவீழ்ந்தாள்
மருவார் தருவின் மலர்மாரி பொழிந்தார் விசும்பில் வானோர்கள்.
தெளிவுரை : பெரிய வாயினின்றும் முதலை கரையில் கொணர்ந்து உமிழ்ந்த அந்த மைந்தனை, அன்பு மேலீட்டால் உள்ளம் உருகிய தாய் ஓடிப்போய், எடுத்துக் கொண்டு வந்து உயிரைத் திரும்பத் தந்த நம்பியாரூரரின் சேவடியின் கீழே சைவஒழுக்கம் மிக்க மறையவனுடனும் விழுந்து வணங்கினான். தேவர்கள் வானத்தில் தேவதாருவின் மலர்களைச் சொரிந்தனர்.
4241. மண்ணில் உள்ளார் அதிசயித்தார் மறையோர் எல்லாம் உத்தரியம்
விண்ணில் ஏற விட்டார்த்தார் வேத நாதம் மிக்கெழுந்தது
அண்ண லாரும் அவிநாசி அரனார் தம்மை அருமறையோன்
கண்ணின் மணியாம் புதல்வனையுங் கொண்டு பணிந்தார் காசினிமேல்.
தெளிவுரை : மண் உலகத்தில் உள்ளவர் அதைக் கண்டு வியப்புக் கொண்டனர். அந்தணர் அனைவரும் தம் உத்தீரயங்களை வானத்தில் வீசி எறிந்து ஆரவாரம் செய்தனர். வேத ஒலி மிக்கு எழுந்தது ! நம்பியாரூரரும் அவிநாசி சிவ பெருமானை அரிய அந்தணரின் கண்மணி போன்ற மகனையும் அழைத்துக் கொண்டு போய்ப் பணிந்தார்.
4242. பரவும் பெருமைத் திருப்பதிகம் பாடிப் பணிந்து போந் தன்பு
விரவு மறையோன் காதலனை வெண்ணூல் பூட்டி அண்ணலார்
முரசம் இயம்பக் கலியாணம் முடித்து முடிச்சே ரலர்தம்பால்
குரவ மலர்பூந் தண்சோலை குலவு மலைநாடு அணைகின்றார்.
தெளிவுரை : துதிக்கும் தன்மையுடைய திருப்பதிகத்தைப் பாடித் திருக்கடைக் காப்புச் சாத்தி வணங்கி, வெளியே வந்து பெருமையுடைய சுந்தரர், தம்மிடம் அன்புடைய வேதியரின் மகனைப் பூணூல் அணிவித்து, முரசுகள் ஒலிக்க உயநயன மங்கலம் முடித்து, முடிமன்னரான சேரனாரிடத்துச் சேர்வதற்கு நல்ல மணம் கொண்ட மலர்கள் நிறைந்த குளிர்ந்த சோலைகள் மிக்க மலை நாட்டை நோக்கிச் செல்லலானார்.
4243. சென்ற சென்ற குடபுலத்துச் சிவனார் அடியார் பதிகள் தொறும்
நன்று மகிழ்வுற்று இன்புற்று நலஞ்சேர் தலமுங் கானகமும்
துன்று மணிநீர்க் கான்யாறும் துறுகற் சுரமுங் கடந்தருளிக்
குன்ற வளநாட் டகம்புகுந்தார் குலவும் அடியேன் அகம்புகுந்தார்.
தெளிவுரை : அடியேனின் உள்ளத்தில் குடிபுகுந்தவரான நம்பியாரூரர், மேற்குத் திக்கில் உள்ள நாட்டில் போய் அங்கங்குச் சிவபெருமான் அடியவர் உள்ள பதிகள் தோறும் மிகவும் மகிழ்ந்து இன்பம் அடைந்து, நன்மையுடைய தலங்களையும், நிரம்பிய மணிகளையுடைய நீர் பொருந்திய காட்டாறுகளையும், துறுகல் சுரங்களையும் கடந்து சென்று வளமுடைய மலை நாட்டுக்குள் புகுந்தார்.
4244. முன்னாள் முதலை வாய்ப்புக்க மைந்தன் முன்போல் வரமீட்டுத்
தென்னா ரூரர் எழுந்தருளா நின்றார் என்று சேரர்பிராற்கு
அந்நாட் டரனார் அடியார்கள் முன்னே ஓடி அறிவிப்பப்
பொன்னார் கிழியும் மணிப்பூணும் காசுந் தூசும் பொழிந்தளித்தார்.
தெளிவுரை : முன் நாளில் முதலையால் விழுங்கப்பட்ட மைந்தனை முன்போல் உயிர்பெற்று வர மீட்டுத் தந்த என் ஆரூரர் வருகின்றார் என்று அறிந்து, அந்த நாட்டில் உள்ள சிவனடியார்கள் ஓடிச்சென்று சேரமான் பெருமாளுக்கு அறிவிக்கவே, அங்ஙனம் அறிவித்தவர்களுக் கெல்லாம், சேரமான், பொற்கிழியும் மணிப் பூண்களும் துணியும் மழை போல் மிகுதியாய்த் தந்தார்.
4245. செய்வ தொன்றும் அறியாது சிந்தை மகிழ்ந்து களிகூர்ந்துஎன்
ஐயன் அணைந்தான் எனையாளும் அண்ணல் அணைந்தான் ஆரூரில்
சைவன் அணைந்தான் என் துணையாம் தலைவன் அணைந்தான் தரணியெலாம்
உய்ய அணைந்தான் அணைந்தான் என்று ஓகை முரசம் சாற்றுவித்தார்.
தெளிவுரை : செய்வது இன்னது என்று ஒன்றும் தோன்றாமல் உள்ளத்தில் மிக்க மகிழ்ச்சி மேலிட்டு, என் ஐயனான நம்பியாரூரர் வந்தணைந்தார் ! என்னை ஆட்கொள்ளும் பெருமையுடையவர் வந்து அணைந்தார். திருவாரூரில் மகிழ்ந்தருளும் சைவப் பெருமகனார் வந்து அணைந்தார். என் துணைவரான தலைவர் வந்து சேர்ந்தார். உலகம் எல்லாம் உய்யும் பொருட்டு இவ்வுலகில் தோன்றிய நம்பி வந்து அணைந்தார் எனப் பலவாறு எடுத்துச் சொல்லி, உவகை முரசத்தை எங்கும் அறையுமாறு செய்வித்தார்.
4246. பெருகும் மதிநூல் அமைச்சர்களை அழைத்துப் பெரியோ ரெழுந்தருளப்
பொருவில் நகரம் அலங்கரித்துப் பண்ணிப் பயணம் புறப்படுவித்
தருவி மதமால் யானையினை அணைந்து மிசைகொண் டரசர்பெருந்
தெருவு கழிய எதிர்வந்தார் சேரர் குலம்உய்ந் திடவந்தார்.
தெளிவுரை : பெருகும் மதிநூல் வல்ல அமைச்சர்களை வரவழைத்து, பெரியவரான நம்பியாரூரர் எழுந்தருளுவதற்காக அந்த நகரத்தை அலங்கரித்துப் பயணம் புறப்படச் செய்து, அருவிபோல் பாயும் மதத்தையுடைய யானைமீது சேரலனார் அமர்ந்து, மன்னர்களின் பெருந்தெரு கழிந்திட, எதிர்கொள்ளும் பொருட்டு வந்தார்.
4247. மலைநாட் டெல்லை யுட்புகுத வந்த வன்தொண் டரைவரையில்
சிலைநாட் டியவெல் கொடித்தானைச் சேரர் பெருமான் எதிர்சென்று
தலைநாட் கமலப் போதனைய சரணம் பணியத் தாவில்பல
கலைநாட் டமுத ஆரூரர் தாமுந் தொழுது கலந்தனரால்.
தெளிவுரை : மலைநாட்டு எல்லைக்குள் புகும்படி வந்த சுந்தரரை, மேருமலையின் உச்சியில் தம் விற்கொடியைப் பொறித்த வெற்றிக் கொடியையும் படைகளையும் உடைய சேரமான் எதிர்கொண்டு சென்று அன்று மலர்ந்த தாமரை மலர் போன்ற அடிகளை வணங்க, குற்றம் அற்ற அமுதமயமான பல கலைகளை நாட்டும் சுந்தரரும் எதிர் தொழுது கூடினார்.
4248. சிந்தை மகிழும் சேரலனார் திருவா ரூரர் எனும்இவர்கள்
தந்தம் அணிமே னிகள்வேறாம் எனினும் ஒன்றாந் தன்மையராய்
முந்த எழுங்கா தலின்தொழுது முயங்கி உதியர் முதல்வேந்தர்
எந்தை பெருமான் திருவாரூர்ச் செல்வம் வினவி யின்புற்றார்.
தெளிவுரை : உள்ளம் மகிழும் சேரமான் பெருமாளும் திருவாரூர் நம்பியும் என்னும் இருவரின் அழகிய மேனிகள் வேறாக இருந்தும், ஒன்றே ஆகும் தன்மை உடையவராய் முற்பட்டு எழுகின்ற பெருவிருப்பத்தினால், தொழுது தழுவிக் கொண்ட பின்பு, சேரர் குலத்து வந்த முதன்மை பெற்ற மன்னரான சேரமான் பெருமான் எம்பெருமானின் திருவாரூரரின் சிறப்பான நன்மைகளைக் கேட்டு இன்பம் எய்தினார்.
4249. ஒருவர் ஒருவ ரிற்கலந்து குறைபா டின்றி உயர் காதல்
இருவர் நண்பின் செயல்கண்ட இரண்டு திறத்து மாந்தர்களும்
பெருகு மகிழ்ச்சி கலந்தார்த்தார் பெருமான் தமிழின் பெருமாளை
வருகை வரையின் மிசைஏற்றித் தாம்,பின் மதிவெண் குடைகவித்தார்.
தெளிவுரை : ஒருவர் ஒருவருக்குள்ளே உள்ளம் கலந்து எவ்வகையான குறைவும் இல்லாமல் உயர்வான பெருவிருப்பம் உடைய இருவரின் நட்புச் செயலைக் கண்ட இரு பக்கத்தில் உள்ள மக்களும், பெருமகிழ்ச்சி அடைந்து ஆரவாரம் செய்தனர். சேரமான் பெருமாள் நம்பியைத் தாம் ஏறி வந்த யானையின் மீது ஏற்றித் தாம் அவர் பின்னே அமர்ந்து முழுமதி போன்ற வெண் கொற்றக் குடையைப் பிடித்தார்.
4250. உதியர் பெருமாள் பெருஞ்சேனை ஓதங் கிளர்ந்த தெனஆர்ப்பக்
கதிர்வெண் திருநீற் றன்பர்குழாம் கங்கை கிளர்ந்த தென ஆர்ப்ப
எதிர்வந் திறைஞ்சும் அமைச்சர்குழாம் ஏறும் இவுளித் துகளார்ப்ப
மதிதங் கியமஞ் சணியிஞ்சி வஞ்சி மணிவா யிலையணைந்தார்.
தெளிவுரை : சேரரின் பெரும்படை கடல் கிளர்ந்ததைப் போல் ஆரவாரிக்க, ஒளி வீசும் வெண்மையான திருநீற்றை அணிந்த அன்பர் கூட்டம் கங்கையாறு முழுகி எழுந்ததைப் போல் ஆரவாரம் செய்ய, எதிரே வணங்கும் அமைச்சர் கூட்டங்கள் ஏறிவரும் குதிரைகளின் காலிலிருந்து எழும் மண் தூசி எங்கும் எழுந்து பரவ, சந்திரன் தவழும் மேகங்கள் படியும் மதில்களையுடைய வஞ்சி நகரத்தின் அழகான வாயிலை அவ்விருவரும் அடைந்தனர்.
4251. ஆரண மொழிகன் முழங்கிட ஆடினர் குணலைகள் அந்தணர்
வாரண மதமழை சிந்தின வாசிகள் கிளரொலி பொங்கின
பூரண கலசம் மலிந்தன பூமழை மகளிர் பொழிந்திடும்
தோரண மறுகு புகுந்தது தோழர்கள் நடவிய குஞ்சரம்.
தெளிவுரை : மறை மொழிகளைச் சொல்லும் ஒலி முழங்க, மறையவர் குணலைக் கூத்தாடினர்; யானைகள் மழை போல மதநீரைச் சொரிந்தன; குதிரைகள் விளங்கும் ஒளிகள் வீசின; நிறை குடங்கள் எங்கும் மலர்ந்திருந்தன; மங்கலப் பெண்கள் பொழியும் பூ மழை பொழிகின்ற தோரணம் நிறைந்த தெருவில் தோழர்கள் ஊர்ந்து வந்த யானை புகுந்தது !
4252. அரிவையர் தெருவில் நடம்பயில் அணிகிளர் தளிரடி தங்கிய
பரிபுர வொலிகள் கிளர்ந்தன பணைமுர சொலிகள் பரந்தன
சுரிவளை நிரைகள் முரன்றன துணைவர்கள் இருவரும் வந்தணி
விரிதரு பவன நெடுங்கடை விறன்மத கரியி னிழிந்தனர்.
தெளிவுரை : வீதியில் ஆடற் பெண்கள் நடம் பயில்கின்ற அணிகள் ஒலிக்கும் தளிர் போன்ற பாதங்களில் பொருந்திய சிலம்புகளின் ஒலிகள் மேல் எழுந்து ஓங்கின. பெரிய முரசுகளின் ஒலிகள் பரந்தன. சுழியுடைய சங்குக் கூட்டங்கள் வரிசையாக ஒலித்தன. நண்பர்கள் இருவரும் வந்து அழகு விரிந்த அரண்மனையின் நீண்ட வாயிலில் தாம் செலுத்தி வந்த வலிமை மிக்க யானையினின்றும் இறங்கினர்.
4253. தூநறு மலர்தர ளம்பொரி தூவிமுன் இருபுடை யின்கணும்
நான்மறை முனிவர்கள் மங்கல நாமநன் மொழிகள் விளம்பிட
மேனிறை நிழல்செய வெண்குடை வீசிய கவரி மருங்குற
வானவர் தலைவரும் நண்பரும் மாளிகை நடுவு புகுந்தனர்.
தெளிவுரை : தூய்மையான மலர்களையும் முத்துக்களையும் பொரியையும் தூவி முன்னே இரண்டு பக்கங்களிலும் நான் மறைகளில் வல்ல முனிவர்கள் மங்கலமுடைய நல்ல சொற்களைச் சொல்ல, மேலே வெண் கொற்றக் குடை நிறைந்த நிழல் பரப்ப, வெண் சாமரைகள் பக்கங்களில் வீசப்பட, சேரமானும் நம்பியாரூரரும் அரண்மனையின் நடுவே புகுந்தனர்.
4254. அரியணை யதனில் விளங்கிட அடன்மழ விடையென நம்பியை
வரிமலர் அமளி அமர்ந்திட மலையர்கள் தலைவர் பணிந்தபின்
உரிமைநல் வினைகள் புரிந்தன உரைமுடி விலவென முன்செய்து
பரிசனம் மனமகி ழும்படி பலபட மணிநிதி சிந்தினர்.
தெளிவுரை : நம்பியாரூரரை அரியணையில் வண்டுகள் மொய்த்த மலர்கள் பரப்பிய பூந்தவிசில் காளை போல விளக்கம் பொருந்த வீற்றிருக்கும்படி மலை நாட்டவருக்கு மன்னரான சேரர் வணங்கி வேண்டிக் கொண்டபின்பு, விரும்பியனவான நல்ல பூசைகளைச் சொல் அளவில் அடங்காதன என்னுமாறு முன்னே செய்து, பரிவாரத் தினர் மகிழும்படி பலவாறாக மணிகளை வாரித் தந்தார்.
4255. இன்ன தன்மையில் உதியர்கள் தலைவர்தாம் இடர்கெட முனைப்பாடி
மன்னர் தம்முடன் மகிழ்ந்தினி துறையுநாள் மலைநெடு நாட்டெங்கும்
பன்ன கம்புனை பரமர்தந் திருப்பதி பலவுடன் பணிந்தேத்திப்
பொன்னெ டுந்தட மூதெயில் மகோதையிற் புகுந்தனர் வன்தொண்டர்.
தெளிவுரை : இவ்வாறான தன்மையில் சேரர்க்குத் தலைவரான கழறிற்றறிவார் துன்பம் நீங்கும்படி திருமுனைப்பாடி நாட்டின் மன்னரான நம்பியாரூரருடன் மகிழ்வுடன் இனிமையாய்க் கூடியிருக்கும் நாளில், வன்தொண்டர், நீண்ட மலை நாட்டில் எங்கும் உள்ள பதிகள் பலவற்றையும் சேரமானுடனே சென்று பணிந்து துதித்துப் பொன்னால் ஆன நீண்ட பெரிய மதில் சூழ்ந்த மகோதை என்ற நகரினுள் வந்து புகுந்தார்.
4256. ஆய செய்கையின் நாள்பல கழிந்தபின் அரசர்கள் முதற்சேரர்
தூய மஞ்சனத் தொழிலினில் தொடங்கிடத் துணைவராம் வன்தொண்டர்
பாய கங்கைசூழ் நெடுஞ்சடைப் பரமரைப் பண்டுதாம் பிரிந்தெய்தும்
சேய நன்னெறி குறுகிடக் குறுகினார் திருவஞ்சைக் களந்தன்னில்.
தெளிவுரை : இத்தகைய செய்கையால் பல நாட்கள் கழிந்த பின்பு, ஒருநாள், முடியுடைய வேந்தருள் முதலில் வைத்து எண்ணப்படுகின்ற சேரர் தூய திருமஞ்சனம் செய்தருளும் தொழிலில் தொடங்கிட, அவருடைய தோழரான வன்தொண்டர், பரந்த கங்கையைச் சூழ்ந்து முடித்த நீண்ட சடையுடைய சிவபெருமானை முன்னை நிலையில் தாம் பிரிந்து போந்து இந்த வுலகத்தில், வந்த தூரமான நல்ல நெறியானது முடியும் எல்லை வரத், திருவஞ்சைக் களத்தை அடைந்தார்.
4257. கரிய கண்டர்தங் கோயிலை வலங்கொண்டு காதலால் பெருகன்பு
புரியும் உள்ளத்தர் உள்ளணைந் திறைவர்தம் பூங்கழல் இணைபோற்றி
அரிய செய்கையில் அவனியில் வீழ்ந்தெழுந்து அலைப்புறு மனைவாழ்க்கை
சரிய வேதலைக் குத்தலை மாலையென் றெடுத்தனர் தமிழ்மாலை.
தெளிவுரை : கருமையான கழுத்தையுடைய சிவபெருமானின் கோயிலை வலமாக வந்து, பெருவிருப்பம் மிக்கு ஓங்குதலால், பெருகிய அன்பு நிலையே சிந்தனை முழுதும் இடங்கொள்ளப் பெற்ற சுந்தரர், உள்ளே சேர்ந்து, சிவபெருமானின் பூப்போன்ற திருவடிகள் இரண்டையும் துதித்து, அரிய செயலால் நிலத்தில் விழுந்து எழுந்து, அலைத்தல் பொருந்திய இவ்வுலக இல்லற வாழ்க்கை தம்மை விட்டு நீங்கவே தலைக்குத் தலை மாலை என்று, தமிழ் மாலையாம் திருப்பதிகத்தைப் பாடத் தொடங்கினார்.
4258. எடுத்த அத்திருப் பதிகத்தின் உட்குறிப்பு இவ்வுல கினிற்பாசம்
அடுத்த வாழ்க்கையை அறுத்திட வேண்டுமென்று அன்பர்அன் பினில்பாடக்
கடுத்த தும்பிய கண்டர்தங் கயிலையிற் கணத்தவ ருடன்கூடத்
தடுத்த செய்கைதான் முடிந்திடத் தங்கழற் சார்புதந் தளிக்கின்றார்.
தெளிவுரை : அவ்வாறு பாடத் தொடங்கிய பதிகத்தின் உட்குறிப்பு இந்த உலகத்தில் பாசத் தொடர்புள்ள வாழ்க்கையை அறுத்திட வேண்டும் என்று கொண்டு அன்பரான சுந்தரர் அன்புடன் பாட, நஞ்சு மிக்கு விளங்கும் கழுத்தை யுடைய சிவபெருமான் தம் திருக்கயிலையில் சிவகணத்தவர் கூட, இருக்கும்படி முன்பு தடுத்து உலகத்தில் தோன்றும்படி ஆணையிட்ட செய்கையின் அளவு முடிந்திடத் தம் திருவடிச் சார்பினைத் தந்தருள்பவராய்.
4259. மன்ற லந்தரு மிடைந்தபூங் கயிலையில் மலைவல்லி யுடன்கூட
வென்றி வெள்விடைப் பாகர்தாம் வீற்றிருந் தருளிய பொழுதின்கண்
ஒன்று சிந்தைநம் மூரனை உம்பர்வெள் ளானையின் உடனேற்றிச்
சென்று கொண்டிங்கு வாரும்என்றயன்முதற் றேவர்கட் கருள்செய்தார்.
தெளிவுரை : மணமுடைய அழகிய மரங்கள் நெருங்கிய திருக் கயிலாயத்தில் உமையம்மையாருடன் கூட, வெற்றியுடைய வெண்மையான காளையூர்தியினர் எழுந்தருளி யிருந்த போது, நம்முடன் ஒன்றுபட்ட சிந்தனையுடைய நம் நம்பியாரூரரைத் தேவரின் வெள்ளை யானையுடன் சென்று அதன்மீது ஏற்றிக் கொண்டு இங்கு வாருங்கள் என்று நான் முகன் முதலான தேவர்களுக்கு ஆணை யிட்டருளினார்.
4260. வான நாடர்கள் அரிஅயன் முதலினோர் வணங்கிமுன் விடைகொண்டு
தூந லந்திகழ் சோதிவெள் ளானையுங் கொண்டுவன் தொண்டர்க்குத்
தேன லம்புதண் சோலைசூழ் மகோதையில் திருவஞ்கைக் களஞ்சேரக்
கால்நி லங்கொள வலங்கொண்டு மேவினார் கடிமதில் திருவாயில்.
தெளிவுரை : அத்தகைய அருளாணையைக் கேட்ட தேவர்களும். திருமால் நான்முகன் முதலியவர்களும் இறைவரை முன் வணங்கி விடை பெற்று, சுந்தரருக்காகத் தூய நன்மை விளங்கும் ஒளியுடைய வெள்ளை யானையையும் உடன் கொண்டு தேன் சிந்தும் சோலைகள் சூழ்ந்த மகோதை நகரத்தில் திருவஞ்சைக் களத்தைச் சேர அணையும் போது, கால் நிலத்தில் பொருந்த, வலமாக வந்து காவலையுடைய மதில் திருவாயிலை அணுகினர்.
4261. தேவர் தங்குழாம் நெருங்கிய வாய்தனில் திருநாவ லூரர்தம்
காவல் மன்னரும் புறப்பட எதிர்கொண்டு கயிலைவீற் றிருக்கின்ற
பூவ லம்புதண் புனற்சடை முடியவர் அருளிப்பா டெனப்போற்றி
ஏவல் என்றபின் செய்வதொன்று இலாதவர் பணிந்தெழுந் தெதிரேற்றார்.
தெளிவுரை : இங்ஙனம் தேவர் கூட்டங்கள் வந்து நெருங்கிய வாயிலின் வழியே, திருநாவலூர் மன்னவரான நம்பி ஆரூரரும் தம் வழிபாடு நிறைவேறிய பின்பு வெளியே வர, எதிர் கொண்டு திருக்கயிலையில் வீற்றிருக்கின்ற கொன்றை யணிந்த சிவபெருமானின் ஆணையாகும் என்று கூறித் துதித்து, இஃது அவருடைய ஏவல் ! என்று கூறியபின், வேறு செயல் ஒன்றும் இல்லாதவராய் வணங்கி எழுந்து எதிராக வந்த அந்த ஆணைக்கு உடன் பட்டார்.
4262. ஏற்ற தொண்டரை அண்டர்வெள் ளானையின் எதிர்வலங் கொண்டேற்ற
நாற்ற டங்கடல் முழுக்கென ஐவகை நாதமீ தொழுந்தார்ப்பப்
போற்றி வானவர் பூமழை பொழிந்திடப் போதுவார் உயிரெல்லாம்
சாற்று மாற்றங்கள் உணர்பெருந் துணைவரை மனத்தினிற் கொடுசார்ந்தார்.
தெளிவுரை : இறைவரின் ஆணையை ஏற்றுக்கொண்ட தொண்டரான நம்பியாரூரரை எதிர் வலம் செய்து வணங்கித் தாம் கொணர்ந்த வெள்ளை யானையின் மீது ஏற்ற, நான்கு திக்குகளிலும் உள்ள பெரிய கடல்களின் ஒலியைப் போன்று ஐந்து வகைத் துந்துபிகளும் எழுந்து ஒலிக்க, வணங்கித் தேவர்கள் பூமழை பொழிய, செல்பவரான நம்பியாரூரர் எல்லா வுயிர்களும் கழறிய சொற்களை அறிபவரான தம் பெருந்தோழரான சேரமான் பெருமான் நாயனாரைத் தம் உள்ளத்துள் எண்ணிய வண்ணமே சேர்ந்தார்.
4263. சேரர் தம்பிரான் தம்பிரான் தோழர்தஞ் செயலறிந் தப்போதே
சார நின்றதோர் பரியினை மிசைக்கொண்டு திருவஞ்சைக் களஞ்சார்வார்
வீர வெண்களிறு உகைத்துவிண் மேற்செலும் மெய்த்தொண்டர் தமைக்கண்டார்
பாரில் நின்றிலர் சென்றதம் மனத்தொடு பரியும்முன் செலவிட்டார்.
தெளிவுரை : சேரமான் பெருமாள், தம்பிரான் தோழரான சுந்தரரின் செயலை அறிந்து கொண்டு அப்போதே, சாரநின்றதான ஒரு குதிரையின் மேற்கொண்டு திருவஞ்சைக் களத்தைச் சார்வாராக, வீரமுடைய வெள்ளை யானையைச் செலுத்தி வானத்தின் மீது செல்லும் உண்மைத் தொண்டரான சுந்தரரைக் கண்டார். நிலத்தில் நிற்றலாற்றாதவராய்த் தமக்கு முன் விரைவாய்ப் போன தம் உள்ளத்துடன் குதிரையும் முன்னால் செல்லும்படி செலுத்தினார்.
4264. விட்ட வெம்பரிச் செவியினில் புவிமுதல் வேந்தர்தாம் விதியாலே
இட்ட மாஞ்சிவ மந்திரம் ஓதலின் இருவிசும் பெழப் பாய்ந்து
மட்ட லர்ந்தபைந் தெரியல்வன் தொண்டர்மேல் கொண்டமா தங்கத்தை
முட்ட எய்திமுன் வலங்கொண்டு சென்றது மற்றதன் முன்னாக.
தெளிவுரை : அவ்வாறு செலுத்தப்பட்ட விருப்பமுடைய குதிரையின் காதில் நில மன்னருள் முதன்மை பெற்ற மன்னரான சேரர் விதிப்படி இட்டமாம் சிவ மந்திரத்தை ஓதினார். ஆதலால், பெரிய வானத்தில் எழும்பப் பாய்ந்து சென்று, மணம் பொருந்த மலர்ந்த மலர்களையுடைய பசுமையான மாலையணிந்த வன்றொண்டர் மேல் கொண்ட வெள்ளை யானையை அணுகச் சென்று சேர்ந்து முதலில் வலமாய் வந்து பின் அந்த யானையின் முன் சென்றது.
4265. உதியர் மன்னவர் தம்பெரும் சேனையின் உடன்சென்ற படைவீரர்
கதிகொள் வாசியிற் செல்பவர் தம்மைத்தங் கட்புலப் படுமெல்லை
எதிர்வி சும்பில் கண்டுபின் கண்டிலர் ஆதலின் எல்லாரும்
முதிரும் அன்பினில் உருகிய சுரிகையான் முறைமுறை உடல்வீழ்த்தார்.
தெளிவுரை : சேரமான் பெருமாள் நாயனாரின் பெரும் படையுடனே போன படைவீரர்கள் மிக்க வேகத்தில் வானின் மீது செல்கின்ற தம் மன்னரைத் தம் கண்ணிற்குப் புலப்படுகின்ற எல்லை அளவும் வானத்தில் கண்டு, அதன் பின் காணாதவர் ஆயினர். ஆதலால் எல்லாரும் அவரிடம் வைத்த மிக்க அன்பினாலே உருவிய தம் உடை வாளினாலே முறை முறையாய்த் தம் உடலை வீழ்த்தினர்.
4266. வீர யாக்கையை மேல்கொண்டு சென்றுபோய் வில்லவர் பெருமானைச்
சார முன்சென்று சேவகம் ஏற்றனர் தனித்தொண்டர் மேல்கொண்ட
வாரு மும்மதத் தருவிவெள் ளானைக்கு வயப்பரி முன்வைத்துச்
சேரர் வீரருஞ் சென்றனர் மன்றவர் திருமலைத் திசைநோக்கி.
தெளிவுரை : அவ்வீரர்கள் நுண்ணிய தம் வீர உடலை மேற்கொண்டு சென்று சேரர் பெருமானைச் சார முன்னே போய் அவரது பணியை ஏற்றனர். ஒப்பில்லாத பெருந் தொண்டரான சுந்தரர் மேல் கொண்ட மும்மதம் அருவியாய்ப் பாய்கின்ற வெள்ளை யானைக்குக் கொற்றக் குதிரை முன்னே செல்ல, சேவகர்களின் வீரர் தலைவரான சேரமானும் அம்பல வாணரின் கயிலைத் திருமலையின் திக்கை நோக்கிச் சென்றனர்.
4267. யானை மேல்கொண்டு செல்கின்ற பொழுதினில் இமையவர் குழாமென்னும்
தானை முன்செலத் தானெனை முன்படைத் தான்எனும் தமிழ்மாலை
மான வன்தொண்டர் பாடிமுன் அணைந்தனர் மதிநதி பொதிவேணித்
தேன லம்புதண் கொன்றையார் திருமலைத் தென்திசைத் திருவாயில்.
தெளிவுரை : வெள்ளை யானையின் மீது ஏறிச் செல்கின்ற போது, வானவர் கூட்டம் என்னும் படை முன்னே செல்லத் தான் எனை முன் படைத்தான் எனத் தொடங்கும் தமிழ்மாலையைச் சுந்தரர் பாடித் தேன் சிந்தும் குளிர்ந்த கொன்றை மலர் சூடிய இறைவரின் திருமலையின் தெற்குத் திக்கு வாயிலின் முன் போய்ச் சேர்ந்தனர்.
4268. மாசில் வெண்மைசேர் பேரொளி உலகெலாம் மலர்ந்திட வளர்மெய்ம்மை
ஆசி லன்பர்தம் சிந்தைபோல் விளங்கிய அணிகிளர் மணிவாயில்
தேசு தங்கிய யானையும் புரவியும் இழிந்துசே ணிடைச்செல்வார்
ஈசர் வௌள்ளிமா மலைத்தடம் பலகடந் தெய்தினர் மணிவாயில்.
தெளிவுரை : குற்றம் இல்லாத வெண்ணிறத்துடன் கூடிய திருநீறு போன்ற பேரொளி உலகம் எல்லாம் விரிய, வளரும் மெய்ம்மையான குற்றம் அற்ற அன்பரின் உள்ளம் போல் விளங்கிய அழகு மிக்க மலையின் அந்த வாயிலின் ஒளியினையுடைய யானையினின்றும் குதிரையினின்றும் முறையே இருவரும் இறங்கி, நெடுந்தொலைவு செல்பவராகி இறைவரின் பெரிய வெண்மையான மலையின் இடங்கள் பலவற்றையும் கடந்து அழகிய மணிவாயிலில் வந்து அடைந்தனர்.
4269. அங்கண் எய்திய திருவணுக் கன்திரு வாயிலின் அடற்சேரர்
தங்கள் காவலர் தடையுண்டு நின்றனர் தம்பிரா னருளாலே
பொங்கு மாமதம் பொழிந்தவெள் ளானையின் உம்பர்போற் றிடப்போந்த
நங்கள் நாவலூர்க் காவலர் நண்ணினார் அண்ணலார் திருமுன்பு.
தெளிவுரை : அங்குச் சேர்பவரான, திருஅணுக்கன் திருவாயிலில், சேரமான் பெருமாள் உள்ளே செல்லாமல் தடுக்கப்பட்டு நின்றனர். பொங்கும் கரிய மதநீர் பொழிந்த வெள்ளை யானையின் மேல் இறைவரின் திருவருளால் வானவர் சூழ்ந்து போற்ற வந்த நம் பெருமானான நாவலூர்த் தலைவரான சுந்தரர் இறைவரின் திருமுன்பு சேர்ந்தார்.
4270. சென்று கண்ணுதல் திருமுன்பு தாழ்ந்துவீழ்ந் தெழுந்துசே ணிடைவிட்ட
கன்று கோவினைக் கண்டணைந் ததுவெனக் காதலின் விரைந்தெய்தி
நின்று போற்றிய தனிப்பெருந் தொண்டரை நேரிழை வலப்பாகத்
தொன்றும் மேனியர் ஊரனே வந்தனை என்றனர் உலகுய்ய.
தெளிவுரை : உள்ளே போய் இறைவரின் திருமுன்பு தொழுது விழுந்து வணங்கிப் பின் எழுந்து, நீண்ட காலம் நீளிடை விட்ட ஆன் கன்று தன் தாய்ப் பசுவைக் கண்டு ஆர்வம் பொருந்த அணைவதைப் போல் விரைவாகச் சென்று, நேர் நின்று துதித்த ஒப்பில்லாத பெரிய அத்திருத் தொண்டரான நம்பியாரூரரைப் பார்த்து உமையம்மை பொருந்திய பாகரான சிவபெருமான், நம்பி ஆரூர ! உலகு உய்ய வந்தனையோ ! என்று வினவினர்.
4271. அடிய னேன்பிழை பொறுத்தெனை யாண்டுகொண் டத்தொடக் கினைநீக்கி
முடிவி லாநெறி தருபெருங் கருணைஎன் தரத்ததோ எனமுன்னர்ப்
படியும் நெஞ்சொடு பன்முறை பணிந்தெழும் பரம்பரை யானந்த
வடிவு நின்றது போன்றுஇன்ப வெள்ளத்து மலர்ந்தனர் வன்தொண்டர்.
தெளிவுரை : அடியேன் செய்த பிழையைப் பொறுத்து என்னை ஆட்கொண்டு, பிழையால் போந்த அந்தத் தொடர்பை நீக்கி, முடிவில் மீளாத நெறியான திருவடிப் பேற்றைத் தரும் தங்களது பெருங்கருணையானது என் சிறிய தகுதிக்குத் தக்கதோ? எனத் துதித்துத் திருமுன்பு, படியும் உள்ளத்துடன் பலமுறையும் பணிந்து எழுகின்ற தொடர்ச்சியாய் வரும் ஆனந்தமே ஒரு வடிவெடுத்து நின்றதுபோல் இன்ப வெள்ளத்தில் ஆழ்ந்து வன்றொண்டர் பெருமான் திளைத்தார்.
4272. நின்ற வன்தொண்டர் நீரணி வேணியர் நிறைமலர்க் கழல்சாரச்
சென்று சேரலன் திருமணி வாயிலின் புறத்தினன் எனச்செப்பக்
குன்ற வில்லியார் பெரியதே வரைச்சென்று கொணர்கென அவரெய்தி
வென்றி வானவர்க் கருளிப்பாடு எனஅவர் கழல்தொழ விரைந்தெய்தி.
தெளிவுரை : அங்ஙனம் நம்பியாரூரர் கங்கையை அணிந்த சடையினரான இறைவரின் நிறைந்த மலர் போன்ற திருவடிகளின் அருகே போய்ச் சேரமான் பெருமாள் தங்கள் கோயிலின் மணியால் ஆன திருவணுக்கன் வாயில் புறத்தில் உள்ளான் ! என்று உரைத்தார். மேருமலையை வில்லாக உடைய சிவபெருமான் நந்திதேவரை நோக்கி, அவரைச் சென்று அழைத்து வருக ! என்று ஆணையிட்டார். அவர் போய் ஞானவெற்றி பொருந்திய சேரர்க்கு உள்ளே வர ஆணை ! என்று தெரிவித்தவுடனே, அவர் இறைவரின் திருவடியை வணங்குவதற்கு விரைந்து சார்ந்து.
4273. மங்கை பாகர்தந் திருமுன்பு சேய்த்தாக வந்தித்து மகிழ்வெய்திப்
பொங்கும் அன்பினில் சேரலர் போற்றிடப் புதுமதி அலைகின்ற
கங்கை வார்கடைக் கயிலைநா யகர்திரு முறுவலின் கதிர்காட்டி
இங்கு நாம்அழை யாமைநீ எய்திய தென்னென அருள்செய்தார்.
தெளிவுரை : உமையம்மையாரை ஒரு பாகத்தில் கொண்ட சிவபெருமானின் திருமுன்பு சென்று, தொலைவில் நின்று, தொழுது மகிழ்ந்து மேன்மேல் அதிகரிக்கின்ற அன்பினால் துதிக்க, பிறைச் சந்திரனை அணிந்த கங்கை சூடிய நீண்ட சடையையுடைய இறைவர் திருப் புன்முறுவலையுடைய இனிய ஒளியைக் காட்டி, நாம் அழைக்காமல் நீ இங்கு வந்த காரணம் யாது? என்றார்.
4274. அரசர் அஞ்சலி கூப்பிநின்று அடியனேன் ஆரூரர் கழல்போற்றிப்
புரசை யானைமுன் சேவித்து வந்தனன் பொழியுநின் கருணைத்தெண்
திரைசெய் வெள்ளமுன் கொடுவந்து புகுதலின் திருமுன்பு வரப்பெற்றேன்
விரைசெய் கொன்றைசேர் வேணியாய் இனியொரு விண்ணப்பம் உளதென்று.
தெளிவுரை : சேரமான் தலைமீது கைகளைக் கூப்பி நின்று அடியேன் நம்பியாரூரரின் திருவடிகளைப் போற்றிக் கொண்டு அவர் அருளால் ஏறிவந்த புரசை யானையின் முன்னே அவரை வணங்கியபடி வந்தேன். தங்களில் மிக்குப் பொழியும் அருளான தெள்ளிய அலையையுடைய பெரு வெள்ளமானது அடியேனை உந்திக்கொண்டு வந்து இங்குப் புகுத்தியதால் தங்கள் திருமுன்பு வந்தடையும் பேற்றைப் பெற்றேன். மணமுடைய கொன்றை மலர் மாலையை அணிந்த சடையையுடைய பெருமானே ! மேலும் ஒரு விண்ணப்பம் உள்ளது ! எனச் சொல்லி.
4275. பெருகு வேதமும் முனிவரும் துதிப்பரும் பெருமையாய் உனைஅன்பால்
திருவு லாப்புறம் பாடினேன் திருச்செவி சாத்திடப் பெறவேண்டும்
மருவு பாசத்தை அகன்றிட வன்றொண்டர் கூட்டம்வைத் தாய்என்ன
அருளும் ஈசருஞ் சொல்லுக என்றனர் அன்பருங் கேட்பித்தார்.
தெளிவுரை : பெருகும் வேதங்களும் முனிவரும் துதிப்பதற்கரிய பெருமையுடையவரே ! அன்பினால் தங்களைத் திருவுலாப் புறப்பாட்டைப் பாடினேன் அதை அருள் செய்து திருச்செவி சாத்திக் கேட்டல் வேண்டும். பொருந்திய பாசத்தினின்று நீங்கிட வன்றொண்டரின் கூட்டத்தைச் சார வைத்தவரே ! என்று வேண்டிக் கொள்ள, அருளே செய்யும் பெருமானும் கூறுக என்றார். அடியாரான சேரமானும் உலாவைப் பாடி அவர் கேட்கும்படி செய்தார்.
4276. சேரர் காவலர் பரிவுடன் கேட்பித்த திருவுலாப் புறங்கொண்டு
நாரி பாகரும் நலம்மிகு திருவருள் நயப்புடன் அருள்செய்வார்
ஊர னாகிய ஆலால சுந்தரன் உடனமர்ந் திருவீரும்
சார நங்கண நாதராம் தலைமையில் தங்கும் என் றருள்செய்தார்.
தெளிவுரை : சேரமான் அன்புடன் பாடிக் கேட்குமாறு செய்த திருவுலாப் பாட்டை ஏற்றுத் திருவுள்ளம் கொண்டு, அம்மை பாகரான இறைவரும், நன்மை மிக்க திருவருளின் விருப்பத்துடன் அருளிச் செய்வாராய், நம்பி ஆரூரரான ஆலால சுந்தரனுடனே கூடி விரும்பியிருந்து, நீங்கள் இருவரும் சார, நம் கணங்களுக்குத் தலைமை ஏற்று இங்குத் தங்குவீராக ! என்று அருள் செய்தார்.
4277. அன்ன தன்மையில் இருவரும் பணிந்தெழுந் தருள்தலை மேற்கொண்டு
மன்னும் வன்தொண்டர் ஆலால சுந்தர ராகித்தாம் வழுவாத
முன்னை நல்வினைத் தொழில்தலை நின்றனர் முதற்சேரர் பெருமானும்
நன்மை சேர்கண நாதராய் அவர்செயும் நயப்புறு தொழில்பூண்டார்.
தெளிவுரை : அன்ன தன்மையில் அந்த இருவரும் பணிந்து எழுந்து இறைவரின் திருவருளைத் தலைமேற் கொண்டு ஏற்று, நிலைபெற்ற சுந்தரர் பெருமான் ஆலால சுந்தரராகித் தாம் தவறாது இயற்றிய முன்னை நல்வினையின் தொழிலில் நிலை நின்றார். முதன்மையுடைய சேரமானும் தலைமை யுடைய சிவகண நாதராகி அவர்கள் செய்யும் விருப்பம் மிக்க திருத்தொண்டை மேற்கொண்டார்.
4278. தலத்து வந்துமுன் னுதயஞ்செய் பரவையார் சங்கிலி யாரென்னும்
நலத்தின் மிக்கவர் வல்வினைத் தொடக்கற நாயகி யருளாலே
அலத்த மெல்லடிக் கமலினி யாருடன் அனிந்திதை யாராகி
மலைத்த னிப்பெரு மான்மகள் கோயிலில் தந்தொழில் வழிநின்றார்.
தெளிவுரை : இந்த வுலகத்தில் வந்து முன் தோன்றிய பரவையார், சங்கிலியார் என்ற பெயர் கொண்ட இருவரும் வலிய வினைப் பாசம் நீங்க உமையம்மையாரின் திருவருளினால் முன்னை நிலையில், மென்மையான அடியுடைய கமலினியாருடன் அனிந்திதையார் என்ற பெயருடைய தோழியர் ஆகி மலைமகளான பார்வதி அம்மையாரின் கோயிலிலே, தாங்கள் முன்பு செய்து வந்த திருத்தொண்டின் வழியே நிலைபெற்றனர்.
4279. வாழி மாதவர் ஆலால சுந்தரர் வழியிடை அருள்செய்த
ஏழிசைத் திருப் பதிகம்இவ் வுலகினில் ஏற்றிட எறிமுந்நீர்
ஆழி வேந்தனாம் வருணனுக்கு அளித்திட அவனும்அவ் வருள்சூடி
ஊழி யில்தனி யொருவர்தம் திருவஞ்கைக் களத்தில்உய்த் துணர்வித்தான்.
தெளிவுரை : வாழ்வு தரும் மாதவரான ஆலால சுந்தரர் திருக்கயிலையை நோக்கி வரும் வழியில் பாடிய ஏழிசைப் பதிகத்தை இவ்வுலகத்தில் யாவரும் உய்யும் பொருட்டுப் பரவச் செய்ய அலை எறியும் கடலின் மன்னனான வருணனுக்குத் தந்து அவர் ஏவியிட, அந்த வருணனும் அந்த அருளைச் சிர மேற்கொண்டு ஊழியிலும் அழியாத ஒருவரான சிவபெருமானின் திருவஞ்சைக் களத்தில் சேர்த்து உணர்வித்தான்.
4280. சேரர் காவலர் விண்ணப்பம் செய்யஅத் திருவுலாப் புறம்அன்று
சாரல் வெள்ளியங் கயிலையில் கேட்டமா சாத்தனார் தரித்துஇந்தப்
பாரில் வேதியர் திருப்பிட வூர்தனில் வெளிப்படப் பகர்ந்தெங்கும்
நார வேலைசூழ உலகினில் விளங்கிட நாட்டினர் நலத்தாலே.
தெளிவுரை : சேரமான் பெருமாள் பாடிய அந்தத் திருவுலாப் புறப்பாட்டை விண்ணப்பித்த அன்று சாரல்களையுடைய வெள்ளியங் கயிலையில் உடனிருந்து வேட்ட மாசாத்தனார் அதனை இந்த நிலவுலகத்தில் வேதியர் வாழ்கின்ற திருப்பிடவூரில் சென்றருளி வெளிப்படச் சொல்லி, நீர் மிகுதியையுடைய கடல் சூழ்ந்த இந்நிலவுலகினில் எங்கும் நன்மையால் விளங்க நிலைநாட்டினார்.
4281. என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட
மன்று ளார்அடி யாரவர் வான்புகழ்
நின்றது எங்கும் நிலவி உலகெலாம்.
தெளிவுரை : இடையீடு இல்லாமல் இன்பம் வளர்தற்கு ஏதுவான சாதனங்களுடன் ஏகமாகிய சிவ பரம்பொருளை விரும்பி, உயிர் சிவன் அடிக்கீழ் செம்மை பெறும்படி சிற்றம்பலவரின் தொண்டரின் சிறந்த புகழ் வரலாறானது உலகங்கள் எல்லாவற்றினுள்ளும் விளக்கமுற்று எங்கும் நிலை பெற்றது.
வெள்ளானைச் சருக்கம் முற்றுப் பெற்றது.
பெரிய புராணம் முற்றுப் பெற்றது.
திருச்சிற்றம்பலம்