Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் » காந்தி மகான்
காந்தி மகான்....
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

01 அக்
2011
02:10

இது நம் நாடு என்று ஏழை எளியோர்கள் நினைக்ககூடிய இந்தியாவிற்காக நான் பாடுபடுவேன்.அந்த இந்தியாவில் எளியோருக்கு உரிமை இருக்கும். உயர்ந்தவர் தாழ்ந்தவர் வேறுபாடு நீங்கியிருக்கும். அனைத்துப்பிரிவினரின் முழுமையான சகவாழ்வு இருக்கும். தீண்டாமை சாபம் ஒழிந்திருக்கும். மதுப்பழக்கம் ஒழிந்திருக்கும். ஆண்களுக்கு நிகராக பெண்களும் உரிமைகள் பெற்றிருப்பர். மற்ற உலகத்தினரோடு நாம் அமைதியான வாழ்க்கையை பெற்றிருப்போம். இதுதான் நான் காணும் கனவு இந்தியா.

-மகாத்மா காந்தி

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி (அக்டோபர் 2, 1869 - ஜனவரி 30, 1948), மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.

இவரது பிறந்த நாள் இந்தியாவில் காந்தி ஜெயந்தி என்று கொண்டாடப்படுகிறது.

மோகன்தாஸ் காந்தி 2 அக்டோபர் 1869 அன்று இந்திய நாட்டின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பிறந்தார். இவரது தாய் மொழி குஜராத்தி. தந்தையார் பெயர் கரம்சந்த் காந்தி, தாயார் புத்லிபாய். காந்தி தனது 13ஆம் வயதில் தம் வயதேயான கஸ்தூரிபாயை மணந்தார். பின்னாளில் இருவரும் நான்கு ஆண் மகன்களைப் பெற்றெடுத்தனர்: ஹரிலால் (1888), மணிலால் (1892), ராம்தாஸ் (1897), தேவ்தாஸ் (1900). தனது 16வது வயதில் காந்தி தன் தந்தையை இழந்தார்.

பள்ளிப்படிப்பில் ஒரு சுமாரான மாணவனாகவே காணப்பட்டார் காந்தி. தனது 18ஆம் வயதில் பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு பாரிஸ்டர் எனப்படும் வழக்குரைஞர் படிப்பிற்காக காந்தி இங்கிலாந்து சென்றார். தன் படிப்பை வெற்றிகரமாக முடித்து தாயகம் திரும்பிய காந்தி பம்பாயில் சிறிது காலம் வழக்குரைஞராக பணியாற்றினார். இது வெற்றிகரமாக அமையாததால் தன் அண்ணன் இருப்பிடமான ராஜ்கோட்டிற்கு சென்ற காந்தி, அங்கேயுள்ள நீதிமன்றத்தில் வழக்காட வருபவர்களின் படிமங்களை நிரப்பும் எளிய பணியில் ஈடுபட்டார். ஆனால் அங்கிருந்த ஆங்கிலேய அதிகாரியிடம் ஏற்பட்ட சிறிய தகராறால் இவ்வேலையும் பறிபோனது. இச்சமயத்தில் தென்னாப்பிரிக்காவில் தன் தகுதிக்கேற்ற வேலை ஒன்று காலியிருப்பதாக அறிந்த காந்தி 1893 ஏப்ரல் மாதம் அப்துல்லாஹ் அன் கோ எனும் இந்திய நிறுவனம் ஒன்றின் உதவியுடன் உடனே அங்கு பயணமானார்.

தென்னாப்பிரிக்காவில்

இச்சமயம் தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர் ஆட்சியில் நிறவெறியும் இனப்பாகுபாடும் மிகுந்து இருந்தது. இதுவரை அரசியல் ஈடுபாடில்லாது தன்னையும் தன் குடும்பத்தையும் மட்டுமே கவனித்து வந்த இளைஞராயிருந்தார் காந்தி. தென்னாப்பிரிக்காவில் அவருக்கேற்பட்ட அனுபவங்கள், பின்னாளில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக உருவாக்க உதவியது. அங்குள்ள நாட்டல் மாகாணத்தின் டர்பன்  நகரில் உள்ள நீதிமன்றத்தில் ஒருநாள் இந்திய வழக்கப்படி தலைப்பாகை அணிந்து வழக்காடச்சென்ற காந்தியிடம் அத்தலைப்பாகையை விலக்குமாறு நீதிமன்றத்தின் நீதிபதி உத்தரவிட்டார். காந்தியோ இவ்வுத்தரவை அவமதிக்கும் பொருட்டு நீதிமன்றத்தை விட்டு உடனே வெளியேறினார். பிறகொரு நாள் பிரிட்டோரியா செல்வதற்காக தகுந்த பயணச்சீட்டுடன் தொடருந்தில் முதல் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்த காந்தி, அவர் ஒரு வெள்ளையர் இல்லை என்ற காரணத்திற்காக, ஆங்கிலேய அதிகாரி ஒருவரால் தொடருந்து நிலையத்தில் பெட்டியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். வெள்ளையர் அல்லாத ஒரே காரணத்தால் இது போன்று பல இன்னல்களை காந்தி அனுபவித்தார். இதன் மூலம் தென்னாப்பிரிக்காவின் கறுப்பின மக்களும் அங்கே குடியேறிய இந்தியர்களும் படும் இன்னல்களை காந்தி நன்குணர்ந்தார்.

தென்னாப்பிரிக்காவில் காந்தி (1906)

தனது ஒப்பந்தக்காலம் முடிவடைந்து இந்தியா திரும்ப காந்தி தயாரானபோது, அங்குள்ள இந்தியரின் வாக்குரிமையைப் பறிக்கும் தீர்மானத்தை நாட்டல் சட்டப்பேரவை இயற்ற இருப்பதாக செய்தித்தாளில் படித்தறிந்தார். இதை எதிர்க்குமாறு காந்தி அவரது இந்திய நண்பர்களிடம் அறிவுறுத்தினார். அவர்களோ, தங்களிடம் இதற்குத் தேவையான சட்ட அறிவு இல்லையெனக் கூறி, காந்தியின் உதவியை நாடினர். காந்தியும் அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி, தன் தாயகம் திரும்பும் முடிவை மாற்றிக்கொண்டு இத்தீர்மானத்தை எதிர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இதில் அவர் வெற்றி பெறாவிட்டாலும் அங்குள்ள இந்தியர்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பிறகு 1894ம் ஆண்டு நாட்டல் இந்திய காங்கிரஸ் என்ற பெயரில் கட்சி தொடங்கி அதற்கு அவரே பொறுப்பாளரானார். இதன் மூலம் நாட்டல் மாகாணத்திலிருந்த இந்தியர் அனைவரையும் ஒன்று திரட்டி, அவர்களை தங்கள் உரிமைக்காக குரலெழுப்ப ஊக்கப்படுத்தினார். 1906ஆம் ஆண்டு ஜோகார்னஸ்பேக் நகரில் நடந்த ஒரு போராட்டத்தில் முதன்முறையாக சத்தியாகிரகம் எனப்படும் அறவழிப்போராட்டத்தை பயன்படுத்தினார். அகிம்சை, ஒத்துழையாமை, கொடுக்கப்படும் தண்டனையை ஏற்றல், ஆகிய கொள்கைகள் இவ்வறவழிப் போராட்டத்தின் பண்புகளாகும். இந்த காலகட்டத்தில் காந்தியும் அவருடன் சேர்ந்து போராடியோரும் பலமுறை சிறை சென்றனர். தொடக்கத்தில் ஆங்கில அரசாங்கம் இவர்களை எளிதாக அடக்கியது போல் தோன்றியது. பின்னர் பொதுமக்களும் ஆங்கில அரசாங்கமும் இவர்களின் உண்மையான மற்றும் நேர்மையான வாதங்களை புரிந்துகொண்டு இவர்களுடைய கோரிக்கைகளை ஏற்கும் நிலை ஏற்பட்டது. இவ்வாறு தனது அறவழிப் போராட்டத்தின் மூலம் தென்னாப்பிரிக்க வாழ் இந்தியரின் சமூக நிலையை மேம்படுத்தும் முயற்சியில் வெற்றி கண்ட காந்தி தாயகம் திரும்பினார்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில்

தென்னாப்பிரிக்காவில் காந்தி தலைமையேற்று நடத்திய போராட்டங்களைப் பற்றி இந்திய மக்கள் அறிந்திருந்தனர். காந்திக்கு, கோபாலகிருஷ்ண கோகலே, ரவீந்திரநாத் தாகூர் போன்றோருடன் நட்பு ஏற்பட்டது. காந்தி இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து ஆங்கிலேயர்க்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் முழு வீச்சில் ஈடுபட்டார். 1921ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார் தலைமையேற்றவுடன் காங்கிரசில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தி இயக்கத்திற்கு புத்துயிர் ஊட்டினார் சத்தியாகிரக வழிமுறைகளையும் சுதேசி போன்ற கொள்கைகளையும் வலியுறுத்தி காங்கிரஸ் இயக்கத்தை இந்தியாவின் மாபெரும் விடுதலை இயக்கமாக்கினார்.

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை (மார்ச் 1930)

பிப்ரவரி 1930ல் ஆங்கிலேய அரசு, இந்தியாவில் இந்தியர்களால் தயாரிக்கப்படும் உப்புக்கு வரி விதித்தது. மேலும், இந்தியாவில் இந்தியரால் தயாரிக்கப்படும் உப்பை பிரிட்டிஷ் அரசாங்கத்தை தவிர வேறு யாரும் விற்கக் கூடாது என்ற சட்டத்தையும் இயற்றியது. இதை விலக்கிக் கொள்ளுமாறு காந்தி பிரிட்டிஷாரிடம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப் பட்டது. சத்தியாகிரக முறையில் இதை எதிர்க்க முடிவெடுத்த காந்தி மார்ச் 2, 1930 அன்று 78 சத்தியாகிரகிகளுடன் அகமதாபாத்திலிருந்து குஜராத் கடலோரத்தில் இருந்த தண்டி நோக்கி 240 மைல் நடைப் பயணத்தை துவக்கினார். 23 நாட்கள் நடைப் பயணத்திறகுப் பிறகு, தன் சகாக்களுடன் தண்டி கடற்கரை வந்து சேர்ந்த காந்தி, அங்கிருந்த கடல் நீரை காய்ச்சி உப்பு தயாரித்து பிரிட்டிஷ் சட்டத்திற்கு எதிராக பகிரங்கமாக பொதுமக்களுக்கு விநியோகித்தார். மேலும் இந்தியாவில் கடலோரத்தில் இருந்த அனைத்து இந்தியர்களையும் இது போல் உப்பு தயாரித்து பயன்படுத்தச் சொன்னார். இந்தியாவின் பல இடங்களில் இது போல் நடந்தது, காந்தி உட்பட பல்லாயிரக் கணக்கான இந்தியர்கள் சிறையிலடைக்கப் பட்டனர். வேறு வழியில்லாமல் பிரிட்டிஷ் அரசாங்கம் காந்தியுடன் பேச்சு வார்த்தை நடத்தி இறுதியில் வரியை நீக்கிக் கொண்டது. உப்பு சத்தியாக்கிரகம் என்று அழைக்கப்படும் இந்நிகழ்வு இந்திய விடுதலைப் போராட்ட சரித்திரத்தில் ஒரு திருப்புமுனையாக கருதப்படுகிறது. 1942ல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்திலும் காந்தி பெரும் பங்கு வகித்தார். இது போன்ற பல போராட்டங்களின் முடிவில் 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் இந்தியா சுதந்திர நாடாக மலர்ந்தது ஆனால் காந்தியோ, சுதந்திர கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளாமல், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையை நினைத்து மனம் வருந்தி துக்கம் அனுசரித்தார்.

மரணம்: 1948ஆம் வருடம் ஜனவரி 30ஆம் நாள் காந்தி நாதுராம் கோட்ஸே என்பவனால் புது தில்லியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கொள்கைகள்: பகவத் கீதை, சமண சமய கொள்கைகள், லியோ டால்ஸ்டாயின் எழுத்துக்கள் போன்றவற்றால் ஈர்க்கப்பட்ட காந்தி, சத்தியம், அகிம்சை ஆகிய கொள்கைகளை தன் வாழ்நாள் முழுவதும் விடாமல் கடைபிடித்தார். அசைவ உணவுகளை தவிர்க்கும் வைணவ குடும்பத்தில் பிறந்த காந்தி, சிறு வயதில் புலால் உணவை சிறிது உண்டாலும், பின்னர் சைவ உணவையே, குறிப்பாக பழங்கள், கடலை, ஆட்டுப்பால் போன்றவற்றையே உண்டு வாழ்ந்தார். சைவ உணவே அசைவ உணவை விட மனித உடலுக்கு ஆரோக்கியமானது என்று தன் சோதனைகள் மூலம் அறிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். 1902 ஆம் ஆண்டுக்குப் பிறகு, பிரம்மச்சரிய விரத்தையும் கடைபிடித்தார். வாரத்திற்கு ஒருநாள் மௌன விரதம் மேற்கொண்டார். தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பியவுடன், மேல்நாட்டு உடை அணிவதைத் தவிர்த்து இந்திய உடைகளையே அணியத் தொடங்கினார். உள்நாட்டில் தயாரிக்கப்படும் காதி உடையையே இந்திய மக்கள் உடுத்தவேண்டும் என்று அறிவுறுத்தினார்.

வேறுபாடுகள்: காந்தி, தாழ்த்த பட்டவர்களும் கோயிலுக்கு செல்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என போராட்டங்கள் எழுந்த பொழுது , அனைவரும் இந்து மதத்தின் அறத்தை பேண வேண்டும் என சொன்னார் என அம்பேத்கர் எழுதி உள்ளார். திருநெல்வேலி சைவ சித்தாந்த குரு குல பள்ளியில், குமுகத்தில் உயர்ந்த வகுப்பினர்க்கென என தனி விடுதியும், மற்றவர்க்கு தனி விடுதி என கடைபிடிக்கப்பட்டதை, இந்து மத அறத்தின் படி சரி என வாதிட்டார். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளே, பெரியாரை பேராய கட்சியிலிருந்து வெளியேற முடிவெடுக்க தள்ளியது. இதனை ஒட்டி, பெங்களூரில் தந்தை பெரியாருக்கும், காந்தி பேச்சு வார்த்தைகள் நடைபெற்றது. இக் கலந்தாய்விலும், காந்தி இந்து மத அறத்தின் தேவையை வலியுறுத்தியதால் பெரியார் பேராய கட்சிலிருந்து வெளியேற முடிவெடுத்தார்.

சுயசரிதை: காந்தி, குஜராத்தி மொழியில் எழுதிய சுயசரிதை, சத்திய சோதனை என்ற பெயரில் தமிழ் மொழியிலும் (மொழி பெயர்த்தவர் ரா.வேங்கடராஜுலு) ஆன் ஆட்டோபையோகிராபி, தி ஸ்டோரி ஆஃப் மை எக்ஸ்பிரிமெண்ட் வித் ட்ரூத் என்ற பெயரில் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. தன் வாழ்வு முழுவதும் ஓர் ஆய்வாளனின் ஆய்வுப் பயணம் போல எனக்குறிப்பிட்டிருக்கும் காந்தி தன் வாழ்க்கையை ஒரு திறந்த புத்தகம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். தன் வாழ்வின் மறக்க இயலாத சமூகத்திற்கு ஞாபகப்படுத்த வேண்டிய பகுதிகளைக் குறிப்பிட்டு அவை யாவும் சத்தியத்திற்கு ஏற்பட்ட சோதனையாகக் கருதி நூ‌லுக்கு இத்தலைப்பை அவர் வழங்கியுள்ளார்.

தன் சுயசரிதையைத் தான் எழுத வேண்டும் என்பதாக காந்தியின் நண்பர்கள் கூறிய யோசனையின் விளைவாக பம்பாய் கலவரத்திற்கு முன்னால் தொடங்கிய இந்த எழுத்துப் பணி எ‌ராவ்டாவில் சிறைவாசத்திருந்த போதில் நிறைவு பெற்றது. இம்முயற்சியில் இறங்க நீங்கள் எப்படித் துணிந்தீர்கள்- , சுயசரிதை எழுதுவது என்பது மேற்கத்திய நாட்டினர்க்கே உரிய பழக்கம். கிழக்கத்திய நாடுகளில் மேற்கத்திய நாட்டு வழக்கப்பட்டவர்களைத் தவிர வேறு யாருமே சுய சரிதை எழுதியிருப்பதாகத் தெரியவில்லை. அப்படியேயாயினும் நீங்கள் என்னதான் எழுதுவீர்கள்கள் என்னும் நண்பர் ஒருவரின் கேள்விக்கு காந்தி இவ்வாறு கருத்து வழங்கினார். இ‌து இந்த நூ‌ல் தோன்றுவதற்கான காரணமாக அமைந்துள்ளது. சுயசரிதை எழுதுவது என்பதல்ல என் நோக்கம். நான் நடத்தி வந்திருக்கும் சத்திய சோதனைகள் பலவற்றின் கதைகளைச் சொல்லவே விரும்புகிறேன். என் வாழ்க்கையிலும் இந்தச் சோதனைகளைத் தவிர வேறு எதுவுமே இல்லை. ஆகையால் இக்கதை ஒரு சுயசரிதையாகவே அமையும் என்பது உண்மை என்று குறிப்பிட்டிருக்கிறார்.

காந்தி தனது சுயசரிதையைத் தனது தாய்மொழியான குஜராத்தி மொழியிலேயே எழுதினார். பின்னர் அது உலகின் பலமொழிகளிலும் மொழிபெயர்க்கப் பெற்று உலகப் புகழ்பெற்ற புத்தகங்களின் வரிசையில் முன்நிற்கும் தகுதி பெற்றது. முன்னுரையின் முடிவில் காந்தி 26, நவம்பர் 1925 என்னும் தேதியிட்டு சபர்மதி ஆசிரமம் என்னும் இடத்தையும் குறித்துக் கையொப்பம் இட்டுள்ளார். நிறைவாக அவர், அனுபவங்களும் சோதனைகளுமே என்னை நிலைபெற்றிருக்கச் செய்து எனக்கு ஆனந்தத்தையும் அளிக்கின்றன. ஆனால் நான் இன்னும் கடக்க வேண்டிய மிகக் கஷ்டமான பாதை என் முன்னால் இருக்கிறது என்பதை அறிவேன். என்னை நான் அணுவிற்கும் அணுவாக்கிக் கொண்டு விட வேண்டும். தன்னுடன் உயிர் வாழ்வன எல்லாவற்றிற்கும் தன்னைக் கடையனாகத் தானே விரும்பி ஒரு மனிதன் வைத்துக் கொண்டு விடாத வரையில் அவனுக்கு விமோசனமே கிடையாது. அடக்கத்தின் மிகத் தொலைவான எல்லையே அகிம்சையாகும். மனம், வாக்கு, காரியங்களில் அகிம்சை விரதத்தை எனக்கு அருளுமாறு சத்தியமேயான கடவுளைப் பிரார்த்திக்கிறேன். அந்தப் பிரார்த்தனையில் என்னுடன் கலந்து கொள்ளுமாறு வாசகரைக் கேட்டுக் கொண்டு விடைபெற்றுக் கொள்கிறேன் என்று தனது சத்தியசோதனையை நிறைவு செய்திருக்கிறார்.

மகாத்மா பட்டம் குறித்து...

உலகம் காந்தியின் பிறப்பை அவதாரம் என்று போற்றிய வேளையில் தனது சுயசரிதையின் முன்னுரையில் காந்தி அதைக்குறித்து இவ்வாறு விளக்குகிறார். நான் செய்திருக்கும் சோதனைகள், இந்தியாவுக்கு மாத்திரமல்ல, ஓரளவுக்கு நாகரிக உலகத்திற்கும் இப்பொழுது ‌தெரிந்தே இருக்கின்றன. என்னளவில் அவற்றை நான் முக்கியமாகக் கருதவில்லை. அவை எனக்குத் தேடித் தந்திருக்கும் மகாத்மா பட்டத்தையும் நான் மதிக்கவில்லை. அப்பட்டம் எனக்கு எப்பொழுதும் மனவேதனையையே தந்திருக்கிறது. அப்பட்டத்தினால் நான் எந்தச் சமயத்திலும் ஒரு கண நேரமாவது பரவசம் அடைந்ததாக எனக்கு நினைவு இல்லை என்று கருத்துத் தெரிவித்துள்ளார். சத்திய சோதனை குறித்து நான் விரும்புவதும் இந்த முப்பது ஆண்டுகளாக நான் பாடுபட்டு வந்திருப்பதும், ஏங்கியதும் என்னை நானே அறிய வேண்டும் என்பதற்கும், கடவுளை நேருக்கு நேராகக் காணவேண்டும் என்பதற்கும் மோட்சத்தை அடைய வேண்டும் என்பதற்குமே. இந்த லட்சியத்தை அடைய வேண்டும் என்பதற்காகவே நான் வாழ்கிறேன். ஆனால் ஒருவருக்குச் சாத்தியமாவது எல்லோருக்குமே சாத்தியமாகும் என்பதை நெடுகிலும் நம்பி வந்திருக்கிறேனாகையால் என்னுடைய சோதனைகளை ஒளிவுமறைவாகச் செய்யாமல் பகிரங்கமாகவே செய்து வந்திருக்கிறேன். இதனால் அவற்றின் ஆன்மிக மதிப்பு எந்த வகையிலும் குறைந்து விட்டதாக நான் கருதவில்லை என்று தான் எழுதிய நோக்கத்தை இவ்வாறு பதிவு செய்கிறார். மேலும் ஒரு விஞ்ஞானி தம் ஆராய்ச்சிகளை எவ்வளவோ கணக்காகவும் முன் யோசனையின் பேரிலும் நுட்பமாகவும் நடத்துகிறார். ஆனால் அதன் பலனாகத் தாம் கண்ட முடிந்த முடிவுகள் என்று அவர் கொள்ளுவதில்லை. அத்தகைய விஞ்ஞானியின் நிலைதான் என்நிலையும். என்னை நானே ஆழ்ந்து சோதித்து வந்திருக்கிறேன். என்றும் குறிப்பிட்டுக் காட்டுகிறார். நான் எழுதப் போகும் இந்த அத்தியாயங்களுக்கு நான் செய்த சத்திய சோதனையின் கதை என்று தலைப்புக் கொடுத்திருக்கிறேன். அகிம்சை, பிரம்மச்சரியம், முதலிய ஒழுக்க நெறிகளைப் பற்றிய சோதனைகளும் இவற்றில் அடங்கியிருக்கும் என்று வரையறுத்துக் காட்டுகிறார்.

காந்தியின் சத்திய ஈடுபாடு

கடவுள் என்றால் சத்தியம் மாத்திரமே எனக் கருதி நான் வழிபடுகிறேன். அவருடைய தரிசனம் எனக்கு இன்னும் கிட்டவில்லை. ஆயினும் அவரைத் தேடிக்கொண்டே இருக்கிறேன். இம்முயற்சியில் வெற்றி பெறுவதற்காக, எனக்கு இனியதான எதையுமே தர்க்கஞ்செய்துவிடத் தயாராயிருக்கிறேன். என் உயிரையே இதற்காகத் தியாகஞ் செய்து விட வேண்டியிருந்தாலும் அதைக் கொடுக்கவும் நான் தயாராக இருப்பேன் என்றே நம்புகிறேன் என்று உறுதி கூறுகிறார் காந்தி. சத்தியமே எனக்கு வழிகாட்டும் ஒளியாகவும் பாதுகாக்கும் கேடயமாகவும் மார்புக் கவசமாகவும் இருந்தாக வேண்டும். இந்தச் சத்தியவழி நேரானதாகவும் குறுகலானதாகவும் கத்தி முனையைப் போல் கூர்மையானதாகவும் இருந்தபோதிலும் இதுவே எனக்கு மிகச் சீக்கிரத்தில் செல்லக்கூடிய, மிக எளிதான வழியாக இருந்து வந்திருக்கிறது என்று தான் கடந்து வந்த பாதையை நினைவு கூர்கிறார். சத்தியத்தை நாடிச் செல்பவர் தூ‌சிக்கும் தூ‌சியாகப் பணிவு கொள்ள வேண்டும். உலகம் தூ‌சியைக் காலின்கீழ் வைத்து நசுக்குகிறது. ஆனால், சத்தியத்தை நாடுகிறவரோ, அத்தூ‌சியும் தம்மை நசுக்கும் அளவுக்குத் தம்மை பணிவுள்ளவராக்கிக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிடும் காந்தியின் பணிவுடைமை குறித்த கருத்து, திருவள்ளுவரின், பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது என்னும் குறட்பாக்களோடு பொருந்திச் செல்வதைக் காண முடிகிறது. சத்திய சோதனை நூ‌லின் உள்ளடக்கம் சத்தியசோதனை நூ‌ல் ஐந்து பாகங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar