திருப்பதிக்கு அருகில் தரிகொண்டா கிராமத்தில் காணல கிருஷ்ணா -மங்கமாம்பா தம்பதியருக்கு 1730 ல் பிறந்தவள் வெங்கமாம்பா. திருப்பதி ஏழுமலையானின் பெருமைகளைக் கேட்டே வளர்ந்த அவள், அவருக்கே மானஸீகமாக மாலையிட்டிருந்தாள். ஆனால், அவள் மறுத்தும் வேறொருவருக்கு அவளை மணமுடித்தார்கள். முதலிரவு அன்று வெங்கமாம்பா மணமகன் பார்வைக்கு அவனது குலதெய்வம் சவுடேஸ்வரியாகத் தோன்றினாள். அவளை வணங்கி வெளியேறிய அவன் சில மாதங்களிலேயே இறைவனடி சேர்ந்தான். வெங்கமாம்பா பூஜை, பஜனை என்று காலம் கழித்தாள். மகளை மதனப்பள்ளி வித்வான் சுப்பிரமணிய சாஸ்திரிகளிடம் கொண்டு விட்டார் தந்தை. முறையாக வேதம், யோகாப்பியாசம் கற்று மந்திரோபதேசத்தையும் பெற்றாள் வெங்கமாம்பா. தரிகொண்டா நரசிம்மர் மேல் சதகம் இயற்றினாள். ஆயினும், மக்ளின் எதிர்காலம், உற்றார், உறவினர் விமர்சனம் எல்லாமாக சேர்ந்து தந்தையை காலனடி சேர்த்தது. வெங்கமாம்பா யாத்ரீகர்களோடு சேர்ந்து திருமலையை அடைந்தாள்.
திருப்பதியில், ஆத்மாராம்தாஸ் அவளுக்கு இருப்பிடம் கொடுத்து உபசரித்தார். அங்கு துளசிச் செடிகள் வளர்த்து நித்தமும் துளசி மாலை கட்டி திருவேங்கடவனுக்குச் சூட்டி வழிபட்டாள். இது ஒரு பட்டருக்குப் பிடிக்கவில்லை. பருவப்பெண் ஏன் கைங்கர்யம் என்று அலைகிறாய்? இதனால் எங்களுக்கு அவப்பெயர் வரும் என்று எச்சரித்தார். ஆனால், வெங்கமாம்பா அதைப் பொருட்படுத்தவில்லை. ஒருநாள் தொலைவில் அவள் வரும்போதே கண்டு விட்ட பட்டர், அவள் மாலை சாத்த முடியாதபடி கருவறையைச் சாத்தி விட்டார். வெங்கமாம்பா திரும்பிச் சென்றாள். ஆனால், மறுநாள் காலை கதவைத் திறந்த அர்ச்சகர் வெங்கமாம்பா மாலை சாத்தி ஹாரத்தி காட்டிக் கொண்டிருந்ததைக் கண்டு ஆடிப்போனார். இச் செய்தி ஊரெங்கும் பரவ, அருள்வாக்குக் கேட்டு வெங்கமாம்பாவைச் சுற்றி எப்போதும் மக்கள் கூட்டம். இதனால் வெங்கமாம்பா ஒரு மலைக்குகையைக் கண்டுபிடித்து ஜாகையை மாற்றிக் கொண்டாள். அதற்கும் கோயில் உட்பிராகாரத்துக்கும் இணைப்பாக ஒரு சுரங்கப்பாதை இருப்பதைக் கண்டு இது இறைவனருள் என மெய்சிலிர்த்தாள்.
அந்த வழியே சென்று பெருமாளுக்குத் திருமஞ்சனம் செய்து, மாலை அணிவித்து, பழங்களை நிவேதித்து கற்பூரம் காட்டுவாள். வெங்கமாம்பா இறைவனோடு கலந்து மறைந்து விட்டதாக எண்ணிய அன்பர்கள் அவளுக்குச் சமாதி கட்டி வழிபட்டனர். அவளிடம் வெறுப்பு காண்பித்த பட்டர், வெங்கமாம்பா சாகவில்லை. இந்த எண்பது வயதிலும் பூமாலைத் தொண்டு புரிகிறாள். நான் முன் இரவு சூட்டிய பூமாலைக்கு பதில் துளசி மாலை இருக்கிறதே என்று தலைமை பட்டாச்சாரியாரிடம் தெரிவித்தார். உண்மையை அறிய ஒருநாள் பட்டர் கருவறையில் மறைந்திருந்தார். வெங்கமாம்பா வந்து மாலை சூட்டி, ஹாரத்திக் காண்பித்ததைப் பார்த்து மயங்கி விழுந்தார். அதன்பின் ஸ்ரீனிவாசரே அவள் இருப்பிடம் தேடிப் போனார். கால் வலிக்குமே பதினைந்து காததூரம் நடந்திருக்கிறீர்களே என்று கால்களைப் பிடித்து விடுவாள் பக்தை. 1817ம் ஆண்டு பரமபதமடைந்தாள் வெங்கமாம்பா. இன்றைக்கும் அவள் பெயரால் வெங்கமாம்பா ஹாரத்தி காண்பிக்கப்படுகிறது.