பதிவு செய்த நாள்
11
நவ
2011
05:11
ஆறாவது மணிமேகலை தனக்கு மணிமேகலா தெய்வம் சக்கரவாளக் கோட்டம் உரைத்து அவளை மணிபல்லவத்துக் கொண்டுபோன பாட்டு
அஃதாவது-அரசன் மகன் சென்ற பின்னர் அங்குப் பதியகத் துறையுமோர் பைந்தொடியாகி வந்த மணிமேகலா தெய்வம் நீயிர் எற்றிற்கு இங்கு நிற்கின்றீர் என வினவ, சுதமதி மன்னன் மகன் நிலைமை கூறுதலும் அது கேட்ட தெய்வம் நீங்கள் வந்த வழியே சென்றால் மன்னன் மகன் மணிமேகலையைப் பற்றிக் கொள்வான் ஆதலால் இட் பொழிலின் மேற்றிசை மதிலிலமைந்த சிறிய வழியே சென்று, சக்கரவாளக் கோட்டத்தேயுள்ள துறவோர் இருக்கைக்குச் செல்லுமின், என அதுகேட்ட சுதமதி சுடுகாட்டுக் கோட்டம் என்பதனை நீ சக்கரவாளக் கோட்டம் என்கின்றினை அதற்குக் காரணம் என்? என வினவ அத் தெய்வம் அதன் வரலாற்றை விரிவாகக் கூறக் கேட்டிருந்த சுதமதி, உறங்கி விட்டாள். அப்பால் அத் தெய்வம் மணிமேகலையை மயக்கி எடுத்து வான் வழியே சென்று மணிபல்லவத்தீவிலே துயில்வித்தவாறே இட்டுச் சென்ற செய்தியைக் கூறுஞ்செய்யுள் என்றவாறு.
இதன்கண் சக்கரவாளக் கோட்டத்து வரலாறு கூறு மாற்றால், தமிழ்ச்சான்றோருடைய புறப்பொருளின்பாற்படும் காஞ்சித்திணைப் பொருள் பயில்வோருளத்தே நன்கு பதியுமாறு சாத்தனார் மிகவும் திறம்பட வகுத்தோதுகின்றார். அப்பாலும் ஒரு பார்ப்பனச் சிறுவன் அச் சக்கரவாளக் கோட்டத்துட் புகுந்து அஞ்சி இல்லம் புகுந்து உயிர் துறந்தமையும், அவன் தாய் கோதமையெனபாள் குழந்தையின் பிணத்தை எடுத்துக் கொண்டு சென்று சம்பாதி கோயிலின் முன்னின்று முறையிடுதலும், சம்பாபதி அவட்கு வெளிப்பட்டுக் கூறுதலும் அத் தெய்வத்தின் அறிவுரைகளும் செயலும் கற்போருளத்தே.
பாங்கருஞ் சிறப்பின் பல்லாற் றானும்
நில்லா வுலகம் புல்லிய நெறித்தே
என ஆசிரியர் தொல்காப்பியனார் ஓதிய காஞ்சித் திணைப் பொருளுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் தோன்றுமாறு இக்காதை திகழ்கின்றது. இது துறவு நூலாகலின் நிலையாமை யுணர்ச்சி கைவந்தர்லொழிய மெய்யுணர்வு பெறுதல் சாலாமையின் அவ் வுணர்ச்சியைத் தோற்றுவிக்கும் இக் காதை இந் நூலுக்கு இன்றியமையாச் சிறப்புடையதுமாகும்.
அந்தி மாலை நீங்கிய பின்னர்
வந்து தோன்றிய மலர் கதிர் மண்டிலம்
சான்றோர் தம் கண் எய்திய குற்றம்
தோன்றுவழி விளங்கும் தோற்றம் போல
மாசி அறு விசும்பின் மறு நிறம் கிளர
ஆசு அற விளங்கிய அம் தீம் தண்கதிர்
வெள்ளி வெண் குடத்துப் பால் சொரிவது போல்
கள் அவிழ் பூம் பொழில் இடைஇடைச் சொரிய
உருவு கொண்ட மின்னே போல
திருவில் இட்டுத் திகழ்தரு மேனியள் 06-010
ஆதி முதல்வன் அற ஆழி ஆள்வோன்
பாத பீடிகை பணிந்தனள் ஏத்தி
பதிஅகத்து உறையும் ஓர் பைந்தொடி ஆகி
சுதமதி நல்லாள் மதி முகம் நோக்கி
ஈங்கு நின்றீர் என் உற்றீர்? என
ஆங்கு அவள் ஆங்கு அவன் கூறியது உரைத்தலும்
அரசு இளங் குமரன் ஆய் இழை தன் மேல்
தணியா நோக்கம் தவிர்ந்திலனாகி
அறத்தோர் வனம் என்று அகன்றனன் ஆயினும்
புறத்தோர் வீதியில் பொருந்துதல் ஒழியான் 06-020
பெருந் தெரு ஒழித்து இப்பெரு வனம் சூழ்ந்த
திருந்து எயில் குடபால் சிறு புழை போகி
மிக்க மாதவர் விரும்பினர் உறையும்
சக்கரவாளக் கோட்டம் புக்கால்
கங்குல் கழியினும் கடு நவை எய்தாது
அங்கு நீர் போம் என்று அருந் தெய்வம் உரைப்ப
வஞ்ச விஞ்சையன் மாருதவேகனும்
அம் செஞ் சாயல் நீயும் அல்லது
நெடு நகர் மருங்கின் உள்ளோர் எல்லாம்
சுடுகாட்டுக் கோட்டம் என்று அலது உரையார் 06-030
சக்கரவாளக் கோட்டம் அஃது என
மிக்கோய்! கூறிய உரைப் பொருள் அறியேன்
ஈங்கு இதன் காரணம் என்னையோ? என
ஆங்கு அதன் காரணம் அறியக் கூறுவன்
மாதவி மகளொடு வல் இருள் வரினும்
நீ கேள் என்றே நேர் இழை கூறும் இந்
நாமப் பேர் ஊர் தன்னொடு தோன்றிய
ஈமப் புறங்காடு ஈங்கு இதன் அயலது
ஊரா நல் தேர் ஓவியப் படுத்துத்
தேவர் புகுதரூஉம் செழுங் கொடி வாயிலும் 06-040
நெல்லும் கரும்பும் நீரும் சோலையும்
நல்வழி எழுதிய நலம் கிளர் வாயிலும்
வெள்ளி வெண் சுதை இழுகிய மாடத்து
உள் உரு எழுதா வெள்ளிடை வாயிலும்
மடித்த செவ் வாய் கடுத்த நோக்கின்
தொடுத்த பாசத்துப் பிடித்த சூலத்து
நெடு நிலை மண்ணீடு நின்ற வாயிலும்
நால் பெரு வாயிலும் பாற்பட்டு ஓங்கிய
காப்பு உடை இஞ்சிக் கடி வழங்கு ஆர் இடை
உலையா உள்ளமோடு உயிர்க் கடன் இறுத்தோர் 06-050
தலை தூங்கு நெடு மரம் தாழ்ந்து புறம் சுற்றி
பீடிகை ஓங்கிய பெரும் பலி முன்றில்
காடு அமர் செல்வி கழி பெருங் கோட்டமும்
அருந் தவர்க்கு ஆயினும் அரசர்க்கு ஆயினும்
ஒருங்கு உடன் மாய்ந்த பெண்டிர்க்கு ஆயினும்
நால் வேறு வருணப் பால் வேறு காட்டி
இறந்தோர் மருங்கில் சிறந்தோர் செய்த
குறியவும் நெடியவும் குன்று கண்டன்ன
சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டமும்
அருந் திறல் கடவுள் திருந்து பலிக் கந்தமும் 06-060
நிறைக் கல் தெற்றியும் மிறைக் களச் சந்தியும்
தண்டும் மண்டையும் பிடித்துக் காவலர்
உண்டு கண் படுக்கும் உறையுள் குடிகையும்
தூமக் கொடியும் சுடர்த் தோரணங்களும்
ஈமப் பந்தரும் யாங்கணும் பரந்து
சுடுவோர் இடுவோர் தொடு குழிப் படுப்போர்
தாழ் வயின் அடைப்போர் தாழியில் கவிப்போர்
இரவும் பகலும் இளிவுடன் தரியாது
வருவோர் பெயர்வோர் மாறாச் சும்மையும்
எஞ்சியோர் மருங்கின் ஈமம் சாற்றி 06-070
நெஞ்சு நடுக்குறூஉம் நெய்தல் ஓசையும்
துறவோர் இறந்த தொழு விளிப் பூசலும்
பிறவோர் இறந்த அழு விளிப் பூசலும்
நீள் முக நரியின் தீ விளிக் கூவும்
சாவோர்ப் பயிரும் கூகையின் குரலும்
புலவு ஊண் பொருந்திய குராலின் குரலும்
ஊண் தலை துற்றிய ஆண்டலைக் குரலும்
நல் நீர்ப் புணரி நளி கடல் ஓதையின்
இன்னா இசை ஒலி என்றும் நின்று அறாது
தான்றியும் ஒடுவையும் உழிஞ்சிலும் ஓங்கி 06-080
கான்றையும் சூரையும் கள்ளியும் அடர்ந்து
காய் பசிக் கடும் பேய் கணம் கொண்டு ஈண்டும்
மால் அமர் பெருஞ்சினை வாகை மன்றமும்
வெண் நிணம் தடியொடு மாந்தி மகிழ் சிறந்து
புள் இறைகூரும் வெள்ளில் மன்றமும்
சுடலை நோன்பிகள் ஒடியா உள்ளமொடு
மடைதீ உறுக்கும் வன்னி மன்றமும்
விரத யாக்கையர் உடை தலை தொகுத்து ஆங்கு
இருந் தொடர்ப் படுக்கும் இரத்தி மன்றமும்
பிணம் தின் மாக்கள் நிணம் படு குழிசியில் 06-090
விருந்தாட்டு அயரும் வெள்ளிடை மன்றமும்
அழல் பெய் குழிசியும் புழல் பெய் மண்டையும்
வெள்ளில் பாடையும் உள்ளீட்டு அறுவையும்
பரிந்த மாலையும் உடைந்த கும்பமும்
நெல்லும் பொரியும் சில் பலி அரிசியும்
யாங்கணும் பரந்த ஓங்கு இரும் பறந்தலை
தவத் துறை மாக்கள் மிகப் பெருஞ் செல்வர்
ஈற்று இளம் பெண்டிர் ஆற்றாப் பாலகர்
முதியோர் என்னான் இளையோர் என்னான்
கொடுந்தொழிலாளன் கொன்றனன் குவிப்ப இவ் 06-100
அழல் வாய்ச் சுடலை தின்னக் கண்டும்
கழி பெருஞ் செல்வக் கள்ளாட்டு அயர்ந்து
மிக்க நல் அறம் விரும்பாது வாழும்
மக்களின் சிறந்த மடவோர் உண்டோ?
ஆங்கு அது தன்னை ஓர் அருங் கடி நகர் என
சார்ங்கலன் என்போன் தனி வழிச் சென்றோன்
என்பும் தடியும் உதிரமும் யாக்கை என்று
அன்புறு மாக்கட்கு அறியச் சாற்றி
வழுவொடு கிடந்த புழு ஊன் பிண்டத்து
அலத்தகம் ஊட்டிய அடி நரி வாய்க் கொண்டு 06-110
உலப்பு இல் இன்பமோடு உளைக்கும் ஓதையும்
கலைப் புற அல்குல் கழுகு குடைந்து உண்டு
நிலைத்தலை நெடு விளி எடுக்கும் ஓதையும்
கடகம் செறித்த கையைத் தீநாய்
உடையக் கவ்வி ஒடுங்கா ஓதையும்
சாந்தம் தோய்ந்த ஏந்து இள வன முலை
காய்ந்த பசி எருவை கவர்ந்து ஊண் ஓதையும்
பண்பு கொள் யாக்கையின் வெண்பலி அரங்கத்து
மண் கணை முழவம் ஆக ஆங்கு ஓர்
கருந் தலை வாங்கி கை அகத்து ஏந்தி 06-120
இரும் பேர் உவகையின் எழுந்து ஓர் பேய் மகள்
புயலோ குழலோ கயலோ கண்ணோ
குமிழோ மூக்கோ இதழோ கவிரோ
பல்லோ முத்தோ என்னாது இரங்காது
கண் தொட்டு உண்டு கவை அடி பெயர்த்து
தண்டாக் களிப்பின் ஆடும் கூத்துக்
கண்டனன் வெரீஇ கடு நவை எய்தி
விண்டு ஓர் திசையின் விளித்தனன் பெயர்ந்து ஈங்கு
எம் அனை! காணாய்! ஈமச் சுடலையின்
வெம் முது பேய்க்கு என் உயிர் கொடுத்தேன் என 06-130
தம் அனை தன் முன் வீழ்ந்து மெய் வைத்தலும்
பார்ப்பான் தன்னொடு கண் இழந்து இருந்த இத்
தீத்தொழிலாட்டியேன் சிறுவன் தன்னை
யாரும் இல் தமியேன் என்பது நோக்காது
ஆர் உயிர் உண்டது அணங்கோ? பேயோ?
துறையும் மன்றமும் தொல் வலி மரனும்
உறையுளும் கோட்டமும் காப்பாய்! காவாய்
தகவு இலைகொல்லோ சம்பாபதி! என
மகன் மெய் யாக்கையை மார்பு உறத் தழீஇ
ஈமப் புறங்காட்டு எயில் புற வாயிலில் 06-140
கோதமை என்பாள் கொடுந் துயர் சாற்ற
கடி வழங்கு வாயிலில் கடுந் துயர் எய்தி
இடை இருள் யாமத்து என்னை ஈங்கு அழைத்தனை
என் உற்றனையோ? எனக்கு உரை என்றே
பொன்னின் பொலிந்த நிறத்தாள் தோன்ற
ஆரும்இலாட்டியேன் அறியாப் பாலகன்
ஈமப் புறங்காட்டு எய்தினோன் தன்னை
அணங்கோ பேயோ ஆர் உயிர் உண்டது
உறங்குவான் போலக் கிடந்தனன் காண் என
அணங்கும் பேயும் ஆர் உயிர் உண்ணா 06-150
பிணங்கு நூல் மார்பன் பேது கந்தாக
ஊழ்வினை வந்து இவன் உயிர் உண்டு கழிந்தது
மா பெருந் துன்பம் நீ ஒழிவாய் என்றலும்
என் உயிர் கொண்டு இவன் உயிர் தந்தருளில் என்
கண் இல் கணவனை இவன் காத்து ஓம்பிடும்
இவன் உயிர் தந்து என் உயிர் வாங்கு என்றலும்
முது மூதாட்டி இரங்கினள் மொழிவோள்
ஐயம் உண்டோ ஆர் உயிர் போனால்
செய்வினை மருங்கின் சென்று பிறப்பு எய்துதல்?
ஆங்கு அது கொணர்ந்து நின் ஆர் இடர் நீக்குதல் 06-160
ஈங்கு எனக்கு ஆவது ஒன்று அன்று நீ இரங்கல்
கொலை அறம் ஆம் எனும் தொழில் மாக்கள்
அவலப் படிற்று உரை ஆங்கு அது மடவாய்
உலக மன்னவர்க்கு உயிர்க்கு உயிர் ஈவோர்
இலரோ இந்த ஈமப் புறங்காட்டு
அரசர்க்கு அமைந்தன ஆயிரம் கோட்டம்!
நிரயக் கொடு மொழி நீ ஒழிக என்றலும்
தேவர் தருவர் வரம் என்று ஒரு முறை
நான்மறை அந்தணர் நல் நூல் உரைக்கும்
மா பெருந் தெய்வம்! நீ அருளாவிடின் 06-170
யானோ காவேன் என் உயிர் ஈங்கு என
ஊழி முதல்வன் உயிர் தரின் அல்லது
ஆழித் தாழி அகவரைத் திரிவோர்
தாம் தரின் யானும் தருகுவன் மடவாய்!
ஈங்கு என் ஆற்றலும் காண்பாய் என்றே
நால் வகை மரபின் அரூபப் பிரமரும்
நால் நால் வகையில் உரூபப் பிரமரும்
இரு வகைச் சுடரும் இரு மூவகையின்
பெரு வனப்பு எய்திய தெய்வத கணங்களும்
பல் வகை அசுரரும் படு துயர் உறூஉம் 06-180
எண் வகை நரகரும் இரு விசும்பு இயங்கும்
பல் மீன் ஈட்டமும் நாளும் கோளும்
தன் அகத்து அடக்கிய சக்கரவாளத்து
வரம் தரற்கு உரியோர் தமை முன் நிறுத்தி
அரந்தை கெடும் இவள் அருந் துயர் இது எனச்
சம்பாபதி தான் உரைத்த அம் முறையே
எங்கு வாழ் தேவரும் உரைப்பக் கேட்டே
கோதமை உற்ற கொடுந் துயர் நீங்கி
ஈமச் சுடலையில் மகனை இட்டு இறந்த பின்
சம்பாபதி தன் ஆற்றல் தோன்ற 06-190
எங்கு வாழ் தேவரும் கூடிய இடம் தனில்
சூழ் கடல் வளைஇய ஆழி அம் குன்றத்து
நடுவு நின்ற மேருக் குன்றமும்
புடையின் நின்ற எழு வகைக் குன்றமும்
நால் வகை மரபின் மா பெருந் தீவும்
ஓர் ஈர் ஆயிரம் சிற்றிடைத் தீவும்
பிறவும் ஆங்கு அதன் இடவகை உரியன
பெறு முறை மரபின் அறிவு வரக் காட்டி
ஆங்கு வாழ் உயிர்களும் அவ் உயிர் இடங்களும்
பாங்குற மண்ணீட்டில் பண்புற வகுத்து 06-200
மிக்க மயனால் இழைக்கப்பட்ட
சக்கரவாளக் கோட்டம் ஈங்கு இது காண்
இடு பிணக் கோட்டத்து எயில் புறம் ஆதலின்
சுடுகாட்டுக் கோட்டம் என்று அலது உரையார்
இதன் வரவு இது என்று இருந் தெய்வம் உரைக்க
மதன் இல் நெஞ்சமொடு வான் துயர் எய்தி
பிறந்தோர் வாழ்க்கை சிறந்தோள் உரைப்ப
இறந்து இருள் கூர்ந்த இடை இருள் யாமத்துத்
தூங்கு துயில் எய்திய சுதமதி ஒழியப்
பூங்கொடி தன்னைப் பொருந்தித் தழீஇ 06-210
அந்தரம் ஆறா ஆறு ஐந்து யோசனைத்
தென் திசை மருங்கில் சென்று திரை உடுத்த
மணிபல்லவத்திடை மணிமேகலா தெய்வம்
அணி இழை தன்னை வைத்து அகன்றது தான் என் 06-214
உரை
திங்கள் மண்டிலத்தின் தோற்றம்
1-8: அந்தி...........சொரிய
(இதன் பொருள்) அந்தி மாலை நீங்கிய பின்னர்-அவ்வாறு வந்திறுத்த அந்திமாலைப் பொழுது போன பின்பு; வந்து தோன்றிய மலர் கதிர் மண்டிலம்-குணகடலினின்று மெழுந்து வானத்தே தனது ஒளியாலே விரிந்து தோன்றிய திங்கள் மண்டிலமானது; சான்றோர் தங்கண் எய்திய குற்றம் தோன்றுவழி விளங்கும் தோற்றம் போல-நற்பண்புகளால் நிறைந்த உயர்குடிப்பிறந்தார் மாட்டுளதாகும் குற்றம் தான் சிறிதேயாயினும் அது பிறரால் காணப்படும்பொழுது பெரிதாக விளங்கித் தொன்றுமாறு போலே; மாசுஅறு விசும்பின் மறுநிறம் கிளர-குற்றமற்ற வானிடத்தே தன் மறுவானும் ஒளியானும் விளங்கித் தோன்றா நிற்ப; ஆசு அற விளங்கிய அம் தீம் தண் கதிர் வெள்ளி வெள்குடத்துப் பால் சொரிவது போல்-குற்றமில்லாமல் விளங்கிய அதனுடைய அழகிய இனிய குளிர்ந்த நிலாக்கதிர்கள் வெள்ளியாலியன்ற தூய வெண்மையான குடத்தினின்றும் பால் பொழியுமாறு போலே; கள் அவிழ் பூம்பொழில் இடை இடைச் சொரிய தேன் துளிக்கின்ற உவவனம் என்னும் அம் மலர்ப்பூம்பொழிலகத்தே இடையிடையே பொழியா நிற்ப என்க.
(விளக்கம்) வந்து தோன்றிய என்றது வானத்திலே உயர்ந்து வந்து தோன்றிய என்பதுபட நின்றது. மலர்கதிர்: வினைத்தொகை. சான்றோர் தங்கண் எய்திய குற்றம்போல........மறுநிறம் கிளர என்னுமிதனோடு;
குடிப்பிறந்தார் கண்விளங்குங் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போ லுயர்ந்து (957)
எனவரும் திருக்குறளையும் நினைவு கூர்க.
மாசு அறு விசும்பின் என்புழி மாசு என்றது முகில் மழை முதலியவற்றை மறுவானும் நிறத்தானும் கிளர என்க. இனி மறுவானது அதன் மார்பிலே மட்டும் விளங்க, அதன் கதிர்கள் பூம்பொழிலினும் வந்து இடை இடையே சொரிய எனக்கோடலுமாம். நிறம்-ஈண்டு மார்பு. கள்தேன். பொழில்-உவவனம்.
மணிமேகலா தெய்வம் சுதமதியையும் மணிமேகலையையும் அணுகி வினாதல்
9-15: உருவு.......உற்றீரென
(இதன் பொருள்) உருவு கொண்ட மின்னே போலத் திருவில் இட்டுத் திகழ்தரு மேனியள்-பெண்ணுருக் கொண்டதொரு மின்னல் போன்ற மணிமேகலா தெய்வம் இந்திரவில் போன்று பல்வேறு நிறங்களையும் வானிடத்தே பரப்பி விளங்குகின்ற திருமேனியுடையவளாய்; ஆதி முதல்வன் அற ஆழி ஆள்வோன் பாத பீடிகை பணிந்தனள் ஏத்தி-எண்ணில் புத்தர்கட்கும் முற்படத் தோன்றிய முதல்வனும் உலகினைத் தனது அறமாகிய சக்கரத்தையுருட்டி அருளாட்சி செய்பவனும் ஆகிய புத்தபெருமானுடைய பாதபங்கயம் கிடந்த பீடிகையை வலஞ்செய்து வணங்கி வாழ்த்தியவள் பின்னர்; பதியகத்து உறையும் ஓர் பைந்தொடியாகி-அப் பூம்புகார் நகரத்தே வாழ்வாள் ஒருத்தியின் வடிவத்தை மேற்கொண்டு; சுதமதி நல்லாள் மதிமுகம் நோக்கி ஈங்கு நின்றீர் என்உற்றீர் என-ஐந்து விற்கிடைத் தொலைவில் அங்குநின்ற சுதமதி என்னும் அறப்பண்பு மிக்கவளது திங்கள் போன்ற திருமுகத்தை நோக்கி நீவிரிருவீரும் இப்பொழுது இவ்விடத்திலே தமியராய் நிற்கின்றீர், இவ்வாறு நிற்றற்குக் காரணமான இடுக்கண் ஏதெனும் எய்தினிரோ இயம்புக! என்று வினவ என்க.
(விளக்கம்) உருவு கொண்டமின்னே போல என்றாரேனும் மின் ஒரு பெண்ணுருவு கொண்டாற் போல என்பது கருத்தாகக் கொள்க. திருவில்-இந்திரவில். இந்திரவில் போன்று பல்வேறு ஒளிகளையும் பரவவிட்டு என்க ஆதிமுதல்வன் என்றது-கௌதம புத்தரை. உலகத்தே அறத்தைச் சான்றோர் உள்ளத்தே புகுத்தி அருளாட்சி செய்தலின், அறவாழி ஆள்வோன் என்றார்.
அழி என்றது ஆணையை. அதனை ஆழியாகக் கூறுவது மரபு. இந்திரவில் இன்னவாறு தோன்றும் எனப் புலப்படாமையினால் அங்ஙனம் தோன்றுகின்ற தெய்வங்கட்குவமை யாயிற்று என்பாருமுளர். அவ் விளக்கம் போலி என்னை? அஃது எவ்வாறு தோன்றுகின்றது என்பது யாவர்க்கும் இனிது விளக்குதலின். பாத பீடிகை என்றது. பளிக்கறையினகத்தே மயனால் இயற்றப்பட்ட பீடிகையை. பணிந்தனள்-பணிந்து. பைந்தொடி, என்றது பெண் என்னுந் துணையாய் நின்றது. மதிமுகம்: உவம உருபு கொக்கது. மகளிர் நிற்கத்தகாத இடத்தினும் பொழுதினும் நிற்கின்றீர் என்பாள் ஈங்கு நின்றீர் என்றாள். அதற்கொரு காரணம் இருத்தல் வேண்டும், அது தெரிந்திலது என்பாள் போல வினவியபடியாம். பதியகத்து உறையு மோர் பைந்தொடியாகி வந்தமைக் கிணங்க வினவியவாறு. என்-என்ன இடுக்கண். சுதமதியோடு மணிமேகலையையும் உளப்படுத்திப் பன்மையால் வினவினள்.
மணிமேகலா தெய்வம் அம் மகளிர்க்குக் கூறுதல்
16-26: ஆங்கவள்..........உரைப்ப
(இதன் பொருள்) ஆங்கு அவள் ஆங்கு அவன் கூறியது உரைத்தலும்-அங்ஙனம் வினவியபொழுது அச்சுதமதி நல்லாள் அத் தெய்வத்திற்கு முன்பு அவ்விடத்தே அவ்வரசிளங்குமரன் கூறியதனை எடுத்துக் கூறாநிற்ப; அரசு இளங்குமரன் ஆயிழை தன் மேல் தணியா நோக்கம் தவிர்ந்திலன் ஆகி-அது கேட்ட அம்மணிமேகலா தெய்வம் அம் மகளிரை நோக்கி அன்புடையீர்! அவ்வரசன் மகனாகிய இளமையுடைய உதயகுமரன், நீ கூறியவாறு இம் மணிமேகலையின்பால் தணியாத் காம நோக்கம் தவிராதவனாயிருந்தும் ; அறத்தோர் வனம் என்று அகன்றனன் ஆயினும்-இழுக்கொடு புணரா விழுக்குடிப் பிறப்புடையோன் ஆதலின் இவ் வுவவனம் பகவனதாணையிற் பன்மரம் பூக்கும் இயல்புடையதாய் அச் சமயத் துறவோர்க்கே உரிய தெய்வத் தன்மையுடைய தாகலின் இதனூடே இவளைக் கைப்பற்றுதல் பழியாம் என்பது கருதி இப்பொழுது இவ்விடத்தினின்று நீங்கினன் ஆயினும்; புறத்தோர் வீதியில் பொருந்துதல் ஒழியான்-துறவோரல்லாத ஏனையோர் வாழுகின்ற வீதியினிடத்தே நீயிர் செல்லுங்கால் அவன் இவளைக் கைப்பற்றுதலின்றிப் போகான்காண்!; பெருந்தெருவொழித்துப் பெருவனம் சூழ்ந்த திருந்து எயில் குடபால் சிறுபுழை போகி-ஆதலால் நீயிர் நுமது பள்ளிக்குச் செல்லும் பொழுது நீவிர்வந்த அந்தப் பெரிய தெருவழியே செல்லுதலைக் தவிர்த்துப் பெரிய இந்த உவவவனத்தைச் சூழ்ந்துள்ள அழகிய மதிலிடத்தே மேற்றிசையிலுள்ள சிறியதொரு புழைக்கடைவாயில் வழியே சென்று; மிக்க மாதவர் விரும்பினர் உறையும் சக்கரவாளக் கோட்டம் புக்கால்-மிகுந்த பெரிய தவத்தையுடைய துறவோர் விரும்பித் தங்குஞ் சிறப்புடைய சக்கரவாளக்கோட்டத்துள் புகுந்து விட்டால்; கங்குல் கழியினும்-அதனூடேயே இவ்விரவுப் பொழுது முழுவதும் கழிந்தாலும்; கடுநவை எய்தாது அங்கு நீர்போம் என்று அருந்தெய்வம் உரைப்ப-கடிய துன்பம் ஒன்றும் நுமக்குண்டாக மாட்டாது ஆதலாலே அவ்வழியே சென்று அச் சக்கரவாளக் கோட்டத்திறகே நீவிரிருவீரும் போவீராக என்று காண்டற்கரிய அத் தெய்வம் கட்டுரைப்ப; என்க.
(விளக்கம்) ஆங்கு இரண்டனுள் முன்னது காலத்தையும் பின்னது இடத்தையும் சுட்டியவாறு. அவள்: சுதமதி. அவன்: உதயகுமரன். தணியாத காமநோக்கம்-பெயரெச்சத்தின் ஈறு கெட்டது. அறத்தோர் என்றது துறவோரை. அவன் உயிர்குடிக் பிறப்பினன் ஆகலின் ஈண்டு இவளைக்கைப்பற்றுதல் பழியென்றுட் கொண்டு அகன்றனன் என்றவாறு பெருந்தெருவில் இவளைக் கைப்பற்றுதல் அவனுக்குப் பழியாகாமையின் அவன் இவள் வரவு பார்த்து அங்குத் தேற்றமாக இருப்பான்; ஐயமில்லை, ஆதலின் அவ்வழியே செல்லற்க என்று தெரிந்தோதிய படியாம். புழைபுழைக்கடைவழி. பெருவனம் என்றது உவவனத்தை. சக்கரவாளக் கோட்டத்தே கடுநவை எய்தாமைக்கு ஏதுக்கூறுவாள், மிக்க மாதவர் விரும்பி யுறையும் சக்கரவாளக் கோட்டம் என்றாள்.
காண்டற்கரிய தெய்வம் இங்ஙனம் எளிவந்துரைப்ப என்பார், அருந்தெய்வம் உரைப்ப என்றார்.
சுதமதி மணிமேகலா தெய்வத்தை வினாதல்
27-36: வஞ்ச.....கூறும்
(இதன் பொருள்) வஞ்ச விஞ்சையான் மாருத வேகனும் அம் செஞ்சாயல் நீயும் அல்லது-அது கேட்ட சுதமதி அத் தெய்வத்தை நோக்கி அன்புடையோய்! வஞ்ச நெஞ்சமுடைய மாருதவேகன் என்னும் விச்சாதரனும் அழகிய செவ்விய மென்மையுடைய நங்கையே நீயும் அல்லது; நெடு நகர் மருங்கின் உள்ளோர் எல்லாம் நெடிய இப் பூம்புகார் நகரத்தில் வாழுகின்ற மாந்தர் எல்லாருமே நின்னாற் கூறப்பட்ட கோட்டத்தை; சுடுகாட்டுக் கோட்டம் என்றலது உரையார்-சுடுகாட்டுக் கோட்டம் என்று குறிப்பிட்டுக் கூறுவதேயன்றிப் பிறிதொரு பெயரானும் கூறுதலிலர்; மிக்கோய் அது சக்கரவாளக் கோட்டம் எனக் கூறிய உரைப் பொருள் அறியேன்-அறிவான் மிக்க நீதானும் அதனைச் சக்கரவாளக் கோட்டம் என்றே கூறிய சொல்லின் பொருளை யான் சிறிதும் தெரிகிலேன்; ஈங்கு சொல்லின் பொருளை யான் சிறிதும் தெரிகிலேன்; ஈங்கு இதன் காரணம் என்னையோ என-இங்கு நீ இவ்வாறு இதற்குப் பெயர் கூறுதற்கியன்ற காரணந் தான் யாதோ? என்று வினவாநிற்ப; ஆங்கு அதன் காரணம் அறியக் கூறுவன்-அது கேட்ட அத் தெய்வம் நல்லாய் நன்றுவினவினை அவ்வாறு அதனைக் கூறுவதற்குரிய காரணம் நீ நன்கு அறிந்து கொள்ளுமாறு விளக்கமாகக் கூறுவேன்; நீ மாதவி மகளோடு வல் இருள் வரினும் கேள்- நீ தானும் இம் மாதவி மகளோடு பொறுமையுடனிருந்து நள்ளிரவு வந்துறினும் கேட்டறிந்து கொள்ளக்கடவை, கேட்பாயாக என்று; நேரிழை கூறும்-முற்பட வலியுறுத்துப் பின்னர் நேரிய அணிகலன்களையுடைய அம் மணிமேகலா தெய்வம் கூறாநிற்கும் என்க.
****
(விளக்கம்) தன்னைக் கண்ணோட்டஞ் சிறிதுமின்றிக் கைவிட்டுப் போனமையாலே விஞ்சையான் என்னாது வஞ்சவிஞ்சையன் என்றான். நெடுநகர் என்றது- பூம்புகார் நகரத்தை. வஞ்ச விஞ்சையான் கூற்றுப் பொய்யாதலும் கூடும் என்றிருந்தவன் இவளும் அங்ஙனம் கூறுதலின் ஒரு காரணம் உவதாதல் வேண்டும் என்னும் ஊகத்தால் வினவுகின்றாளாகலின் மிக்கோய் கூறிய உரைப்பொருள் என்றாள். வஞ்சவிஞ்சையனே அன்றி மிக்கோயும் கூறுகின்றனை ஆதலின் அது பொருள் உரையே ஆதல் வேண்டும் அஃதறிகிலேன் என்றவாறு.
இனி, அத் தெய்வந்தானும் அஃதறிந்து கொள்ள வேண்டிய தொன்றே ஆதலால் கூறுவன் கேள் என்கின்றது. மணிமேகலையும் உணரற்பாலது அச் செய்தி என்பது தோன்ற மாதவி மகளோடு வல்லிருள் வரினும் கேள் என்றாள். என்னை? அவட்குக் துறவின் செல்லும் ஏது நிகழ்ச்சி எதிர்துண்மையின் அதற்கின்றியமையாத நிலையாமை யுணர்ச்சியைத் தோற்றுவிக்கும் செய்தியாகலின்; வல்லிருள்-என்றது ஆகு பெயராய் இரவு என்னும் துணை. இச் செய்தியைக் கேட்டல் அவட்கு ஆக்கமாம் ஆதலின் என்க. நிலையாமை யுணர்ச்சியைத் மெய்யுணர்வார்க்கு இன்றியமையாத தென்பதனை:
அவற்றுள் நிலையாமையாவது- தோற்ற முடையன யாவும் நிலையுதலிலவாந்தன்மை. மயங்கிய வழிப் பேய்த்தேரிற் புனல்போலத் தோன்றி, மெய்யுணர்ந்த வழிக் கயிற்றில் அரவுபோலக் கெடுதலிற் பொய்யென்பாரும், நிலைவேறுபட்டு வருதலால் கணந்தோறும் பிறந்திறக்கு மென்பாரும் ஒருவாற்றான் வேறுபடுதலும் ஒருவாற்றான் வேறுபடாமையும் உடைமையின் நிலையாமையும் நிலையுதலும் ஒருங்கேயுடைய வென்பாருமெனப் பொருட்பெற்றி, கூறுவார் பலதிறத்தராவார்; எல்லார்க்கும் அவற்றது நிலையாமையும் உடம்பாடாகலின் ஈண்டு அதனையே கூறுகின்றார். இஃதுணர்ந்துழியல்லது பொருள்களின்மேல் பற்று விடாதாகலின், இது முன் வைக்கப்பட்டது எனவரும் பரிமேலழகர் பொன் மொழிகள் ஈண்டு நினைவிற் கொள்ளற் பாலனவாம்(குறள் அதி-34-முன்னுரை).
(34-இந்நாமப் பேரூர் என்பது முதலாக; 205-இதன் வரவு இது என்னுமளவும் மணிமேகலா தெய்வத்தின் கூற்றாய் ஒரு தொடர்)
சக்கரவாளக்கோட்ட வண்ணனை
36-49: இந்நாம...... இஞ்சி
(இதன் பொருள்) இந்நாமப் பேரூர் தன்னொடு தோன்றிய ஈமப் புறங்காடு ஈங்கு- பகைவர்க்கு அச்சம் விளைவிக்கும் பெரிய தலை நகரமாகிய இந்நகரம் தோன்றிய காலத்தே அதனோடு தோன்றிய முதுமையுடைய ஈமவிறகுகளையுடைய சுடுகாடு இவ்வுவவனத்தின்; அயலாது- பக்கத்திலே உளதாம்; ஊரா நல்தேர் ஓவியப் படுத்துத் தேவர் புகுதரூஉம் செழுங்கொடி வாயிலும்-அது தானும் வலவன ஏவா வானவூர்தியின் ஓவியம் வரையப்பட்டுத் தேவர்கள் மட்டும் உள்ளே புகுதற்கமைந்த வளவிய கொடியுயர்த்தப்பட்ட வாயினும்; நெல்லும் கரும்பும் நீரும் சோலையும் நல்வழி எழுதிய நலம்கிளர் வாயிலும்- நெற்பயிரும் கரும்பும் நீர்நிலைகளும் சோலையும் உடைய நல்ல நெறியும் வரைந்து ஓவியப்படுத்தப்பட்ட அழகுமிகும் வாயிலும்; வெள்ளி வெள்சுதை இழுகிய மாடத்து உள்உருவு எழுதா வெள் இடை வாயிலும்- மிகவும் வெண்மையான சுண்ணச்சாந்து தீற்றிய மாடத்தையும் அதனுள் ஓவியம் ஒன்றும் வரையாமல் வெற்றிடமாக விடப்பட்டிருக்கின்ற வாயிலும்; மடித்த செவ்வாய்க் கடுத்த நோக்கின் தொடுத்த பாசத்துப் பிடித்த சூலத்து-உதடுகளை மடித்துள்ள சிவந்த வாயையும் கடிய வெகுளியையுடைய நோக்கத்தையும் நரகன் ஒருவனைக் கட்டிய கயிற்றையும், அவனை எறிதற்கு ஓக்கிய சூலப்படையையும் உடையதாய்க் கட்டிவிடப்பட்ட; நெடுநிலை மண்ணீடுநின்ற வாயிலும்-நேராக உயர்ந்து நிற்கின்ற நிலையினையுடைய பூதப்படிமம் நிற்கின்ற வாயிலும் ஆகிய; நால்பெருவாயிலும் பால்பட்டு ஓங்கிய காப்பு உடை இஞ்சி- நான்கு பெருவாயில்கள் நான்கு பக்கங்களினும் அமைக்கப்பட்டு நாற்புறமும் சூழ்ந்து உயர்ந்த காவலையுடைய மதிலையும் என்க.
(விளக்கம்) நாமம்-அச்சம். ஊராநற்றேர்-வலவனேவா வானவூர்தி. தேவர் புகுதரூஉம் செழுங்கொடிவாயிலும் என்றது, தேவராதற்குரிய நல்வினை செய்தார் நுண்ணுடம்போடு கூடிய உயிரைத் தங்களுலகிற்கு அழைத்துச் செல்லுதற்கு அச் சக்கரக் கோட்டத்தில் வந்து புகுவாராதலின் அவர்க்கெனவே சிறப்பாக வகுக்கப்பட்டு அச்சிறப்புக்கு அறிகுறியாக வானவர் ஊர்தியாகிய வலவனேவா வானவர் ஊர்தியின் ஓவியம் வரையப்பட்டும் அதற்கேயுரிய கொழுங்கொடி உயர்த்தப்பட்டும் திகழும் வாயிலும் என்றவாறு.
இனி இதனைப் பாட்டிடைவைத்த குறிப்பினாலே ஏனைய மூன்று வாயிலின் சிறப்புகளையும் இப் புலவர் பெருமான் இதனைப் பயில்பவர்களே குறிப்பாக வுணர்ந்து கொள்ளுமாறு புனைந்திருக்கும் பேரழகு நம்மைப் பேரின்பத்திலே திளைப்பிக்கின்றது. அக் குறிப்புப் பொருளை இனி ஈண்டு ஆராய்ந்தெடுத்துக் காட்டுவாம்.
உயிரினங்கள் தத்தம் வினையின் பயனாக மூன்றுலகங்களினும் சென்று பிறக்கும் என்பதும், பற்றற்ற உயிர் பேராவியற்கையாகிய பேரின்ப வாழ்வைப் பெறும் என்பதும், உலகாயத சமயத்தார்க் கல்லது ஏனைய சமயத்தார்க்கும் பெரும்பாலும் ஒப்பமுடிந்த கொள்கையாம். பேராவியற்கை என்னும் இந் நிலையே வீடு எனவும் முத்தி எனவும் கூறுவர் பௌத்தர். இந் நிலையையே நிருவாணம் என்று கூறுவர். ஆகவே இம்மையே நல்வினை செய்த உயிர்கள் தேவர்களால் வரவேற்கப்பட்டு அச் சக்கரவாளக் கோட்டத்தினின்றும் புறப்படும் வாயிலை மட்டும் விளக்கினர். இனி, நல்வினையும் தீவினையும் விரவச் செய்த வுயிர்கள் மீண்டும் இன்பமும் துன்பமும் விரவிய நுகர்ச்சியையுடைய மக்கள் பிறப்பையே எய்தும் ஆகலின் அவ்வுயிர் புறப்படுதற்கும் அவற்றிற்குரிய கடன்கள் செய்தற்குரிய மக்கள் புகுதருதற்கும் உரிய வாயில் என்பதற்குரிய அடையாளங்களாகவே இவ் வுலக வாழ்விற்கின்றியமையாத பொருள்களாகிய நெல்லும் கரும்பும் நீரும் சோலையும் நல்வழி மருங்கே பொறிக்கப்பட்டது ஒரு வாயில் எனவும் இனித் தீவினை செய்தவுயிர்கள் காலதூதர்களாலே பாசத்தால் பிணிக்கப்பட்டு நரகிலிடப்பட்டு வதைக்கப்படும் என்பதற்கறிகுறியாகவும் அவ்வினத்துப் பேயும் பூதமும் புகுதருதற்கும் அத்தீய வுயிர்கள் புறப்படுதற்கும் உரிய வாயிலது என்றறிவுறுத்தற்கு
மடித்த செவ்வாய்க் கடுத்த நோக்கின் தொடுத்த பாசத்துப் பிடித்த சூலத்து
நெடுநிலை மண்ணீடு
ஒருவாயிலின்கண் சிற்பியரால் கட்டி நிறுத்தப்பட்டது எனவும், இனி, மெய்யுணர்வு சிறந்து அவாவறுத்த தூயவுயிர்கள் பேராவியற்கை பெறுதற்கு இவ்வுலகிற்கு ஈண்டு வாராநெறிச் செல்வன புறப்பட்டுப் போதற்கியன்ற வாயில் என்பதற்கு அறிகுறியாகவே ஒரு வாயில்
வெள்ளி வெண்சுதை இழுகிய மாடத்து
உள்ளுரு எழுதா வெள்ளிடை வாயில்
மயனால் அமைக்கப்பட்டது. என்னை? வீடெய்துவோர் உளம் இவ் வுலகப் பொருள்களில் யாதொன்றனிடத்தும் பற்றில்லாமல் முழுத்தூய்மை பெற்று வறிதிருக்குமாதலின், அவ்வுயிர் போகும் அவ் வாயில் தூய்மைக்கே அறிகுறியாகிய வெள்ளி வெண்சுதை தீற்றி ஓவியப் பொருள் ஏதும் வரையப்படாமல் வெள்ளிடையாக (வெற்றிடமாக) விடப்படல் வேண்டிற்று. இவையெல்லாம் யாம் நுண்ணுணர்வாற் காணுங்கால் அக் காட்சி பேரின்பம் பயத்தலும் உணர்ந்து கொள்க.
இவ்வாறு நான்கு வாயிலும் நால் வேறு வகை பட்டனவாகப் புலவர் பெருமான் ஓதுதற்குக் காரணம் இருத்தல் வேண்டும் என்னும் கருத்தாலே ஆராய்ந்து கூறும் பொரும் இவை.
மண்ணீடு-சுடுமண் கொண்டு செய்து சுதை தீற்றிய படிவம்(உருவம்). இத் தொழில் செய்வோரை மண்ணீட்டாளர் என்று அறிவுறுத்துவர் ஆசிரியர் இளங்கோவடிகளார்(சிலப். 5-30). மண் மாண்புனை பாவை என்பர் வள்ளுவனார். அதற்குப் பரிமேலழகர் சுதையான் மாட்சிமைப்படப் புனைந்த பாவை என்றுரை வகுப்பர்(407-குறள்). வாயிலும் வாயிலும் வாயிலும் ஆகிய நாற் பெருவாயிலும் என இயையும். இஞ்சி-மதில்
இதுவுமது
49-53: கடி....கோட்டமும்
(இதன் பொருள்) கடி வழங்கும் ஆர்இடை-அம் மதிலக வரைப் பினூடே மக்கள் வழங்குதலரிய நிலப்பரப்பிலே; உலையா உள்ளமோடு உயிர்க்கடன் இறுத்தோர் தலைதூங்கு நெடுமரம் தாழ்ந்து புறம் சுற்றி-உறுதியிற்றளராத நெஞ்சத்தோடே நின்று தம் தலைமயிரால் மரக்கிளையில் நன்கு முடியிட்ட பின்னர்த் தாமே தம் கழுத்தை யரிந்து தாம் தமது பராவுக்கடனாகிய உயிரைக் கொடுத்த வீரமறவருடைய தலைகள் தூங்காநின்ற நெடிய மரங்களின் கிளைகள் தாழ்ந்து பக்கமெல்லாம் சூழப்பெற்று; பீடிகை ஓங்கிய முன்றில் காடு அமர்செவ்வி கழிபெருங் கோட்டமும் சுடுகாட்டை விரும்பியறையும் இறைவியாகிய கொற்றவை எழுந்தருளியிருக்கின்ற மிகவும் பெரிய திருக்கோவிலும் என்க.
(விளக்கம்) உயிர்க்கடன் இறுத்தோர்-தம் தலையைத் தாமே அரிந்து தமதின்னுயிரை இறைவிக்குப் பலியாக வழங்குபவர். இங்ஙனம், உயிர்க் கடன் இறுத்தலை அவிப்பலி என்று தமிழருடைய பொருளியல் நூல் கூறும். அவி-ஆவி. ஆவிப்பலி கொடுக்கும் மறவரே மறத்திற்குத் தலைவரம்பாவார் என்ப. இங்ஙனம் அவிப்பலி கொடுத்தலை.
ஆர்த்துக் களங்கொண்டோர் ஆரம ரழுவத்துச்
சூர்த்துக் கடைசிவந்த சுடுநோக்குக் கருந்தலை
வெற்றி வேந்தன் கொற்றங் கொள்கென
நற்பலி பீடிகை நலங்கொள வைத்தாங்கு
உயிர்ப்பலி யுண்ணும் உருமுக்குரன் முழக்கத்து
மயிர்க்கண் முரசொடு வான்பலி யூட்டி
எனவரும் சிலப்பதிகாரத்தானும்(5:83-8), அங்ஙனம் உயிர்க் கடனிறுக்குங் காலத்தே அம் மறவருடைய உலையா உள்ளத்தினியல்பை,
மோடி முன்றலையை வைப்பரே
முடிகுலைந்த குஞ்சியை முடிப்பரே
ஆடிநின்று குருதிப்புதுத் திலதமும்
அம்மு கத்தினி லமைப்பரே
எனவரும் (சிலப்-5:76-88: அடியார்க்-உரைமேற்கோள்) தாழிசையானும்,
அடிக்கழுத்தின் நெடுஞ்சிரத்தை அரிவராலோ
அரிந்தசிரம் அணங்கின்கைக் கொடுப்பராலோ
கொடுத்தசிரம் கொற்றவையைப் பரவுமாலோ
குறையுடலம் கும்பிட்டு நிற்குமாலோ
எனவரும் கலிங்கத்துப் பரணியானும்(கோயில்-15) அறிக.
இனி உயிர்கடனிறுப்போர் சிலர் தமது சிகையை மரக்கிளையில் முடிந்துவிட்டுப் பின் கழுத்தை அரிதலால் தலைதூங்கு நெடுமரம் என்றார், இதனை
வீங்குதலை நெடுங்கழையின் மிசைதோறும்
திசைதோறும் விழித்து நின்று
தூங்குதலை சிரிப்பனகண் டுறங்குதலை
மறந்திருக்குஞ் சுழல்கட் சூர்ப்பேய்
என்பதனாலறிக.(கலிங்க- கோயில்-21)
பெரும்பலி என்றார் அவிப்பலி யாதலின். பீடிகை- பலிபீடம். காடமர் செல்வி-கொற்றவை.
இதுவுமது
54-65: அருந்தவர்......பரந்து
(இதன் பொருள்) அருந் தவத்தார்க்கு ஆயினும் அரசற்கு ஆயினும் ஒருங்கு உடன்மாய்ந்த பெண்டிர்க்காயினும்-அரிய தவவொழுக்கந் தாங்கிய துறவோர்க் காதல், அரசருக்கு ஆதல் தங்கணவர் மாய்ந்தக்கால் அவரோடு ஒருங்கே தம்முயிரையும் மாய்த்துக் கொண்ட கற்புடைய மகளிர்க்காதல்; நால்வேறு வருணப் பால் வேறுகாட்டி-அந்தணரும் அரசரும் வணிகரும் வேளாளரும் ஆகிய பகுதிகளையுடைய மாந்தர்களுக்கு அப் பகுதிகளுக்குரிய மரபுகளையும் வேறு வேறு தெரியும்படி அவற்றிற்குரிய அடையாளங்களோடு காட்டி; இறந்தோர் மருங்கில் சிறந்தோர் செய்த-இறந்துபட்டவர் திறத்திலே அவரவர்க்குச் சிறந்த கேளிராயோர் எடுத்த; குறியவும் நெடியவும் குன்று கண்டன்ன சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டமும்-குறியனவாகவும் நெடியனவாகவும் அமைந்த மலைக்கூட்டத்தைக் கண்டாற் போன்ற காட்சியையுடைய செங்கலாலியற்றப்பட்ட உயர்ந்த நிலையினையுடைய கோயில்களும்; அருந் திறல் கடவுள் திருந்து பலிக்கந்தமும்-தடுத்தற்கரிய பேராற்றல் பொருந்திய கடவுளர்க்குத் திருத்தமுடைய பலிகளையிடுதற்பொருட் டமைக்கப்பட்ட பல வேறுவகையான தூண்களும்; நிறைக் கல் தெற்றியும்-வீரமறவர்க்கு நிறுத்தப்பட்ட கல்களையுடைய மேடைகளும்; மிறைக்களச் சந்தியும்-குற்றம்புரியும் கொடியாரைக் கொலை செய்தொறுத்தற்கியன்ற கொலைக்களமாகிய சந்தியும்; தண்டும் மண்டையும் பிடித்துக் காவலர் உண்டுகண் படுக்கும் உறையுள் குடிகையும்-தடியும் மட்கலமும் கையிற்கொண்டு அச் சக்கரவாளக் கோட்டத்தைக் காவல் செய்கின்ற காவலர்கள் உணவுண்டு உறங்குதற்கியன்ற இடமாகிய குடில்களும்; தூமக்கொடியும்-எரிகின்ற ஈமத்தினின்று தோரணங்களும்-ஈமத்தில் எரிகின்ற தீப்பிழம்புகளாகிய தோரணங்களும்; ஈமப்பந்தரும் யாங்கணும் பரந்து-ஈமநெருப்பு மழையாலவியாமைப் பொருட்டு இடப்பட்டுள்ள சாரப்பந்தர்களும் ஆகிய இவையெல்லாம் எங்கும் பரந்து காணப்பட்டு; என்க.
(விளக்கம்) அருந்தவர்க்கும் அரசர்க்கும் கற்புடை மகளிர்க்கும் இடுகாட்டில் கோவில் எடுக்கும் வழக்கம் உண்மை அறிக. அந்தணர் முதலிய வருணம் நாள்கிற்கும் வேறு வேறு அடையாளம் உண்மையின் கோயில்களினும் அவ்வடையாளமிட்டு இவர் இனையர் இன்ன வகுப்பினர் என யாவரும் அறியும்படி காட்டி என்பது கருத்து. சிறந்தோர்-இறுதிக்கடன் செய்தற்குச் சிறப்புரிமையுடையோர் எனினுமாம்.
பொருளுடைமைக்கும் இறந்தோர் தகுதிக்கும் ஏற்பக குறியவும் நெடிவுமாக எடுக்கப்பட்டவை என்க.
சுடுமண்- செங்கல். கந்தம்-தூண். நிறைக்கல்-வீரமறவர்க்கு நினைவுச்சின்னமாக நிறுத்தப்பட்ட கல். இறுத்தல்-இறை என்றானாற் போன்று, நிறுத்தல்- நிறை என்றாயிற்று. தெற்றி-மேடை. மிறை-குற்றம். களம் என்றமையால் இது கொலையால் கொடியாரை வேந்தொறுக்கும் கொலைக்களம் என்பது பெற்றாம். இக் களம் பல கோத் தொழிலாளரும் கூறுமிடகலின் சந்தி எனப்பட்டது. இதற்குப் பிற ரெல்லாம் சிறப்பில்லாவுரை கூறிப்போந்தார்.
உறையுளாகிய குடிகை, குடில் என்பன தூய தமிழ்ச் சொற்களே. கடி-வீடு. கை, இல் என்னும் சிறுமைப் பொருட்பின்னொட்டு சேர்ந்து குடிகை, குடில் என ஆயிற்று. கொடி-ஒழுங்கு, கொடி என்றதற்கிணங்க நூலாசிரியர் தோரணமும் பந்தரும் என்ற நயமுணர்க.
சக்கரவாளக் கோட்டத்தெழும் ஓசைவகைகள்
66:79: சுடுவோர்..... நின்றறாது
(இதன் பொருள்) சுடுவோர் இடுவோர் தொடுகுழிப்படுப்போர் தாழ்வயின் அடைப்போர் தாழியின் கவிப்போர்-அச் சக்கரவாளக்கோட்டத்து மக்கட்பிணத்தை ஈமத்தேற்றிச் சுடுபவரும் அவற்றைக் கொணர்ந்து ஒருபுறத்தே வாளாது போகடுவோரும் தோண்டப்பட்ட குழியிலிட்டுப் புதைப்பவரும் தாழ்ந்த பள்ளங்களிலே அடைத்து வைப்பவரும் மண்ணாற்செய்த தாழீயிலிட்டுக் கவிழ்ப்பவருமாய்; இரவும் பகலும் இளிவுடன் தரியாது வருவோர் பெயர்வோர் மாறாச்சும்மையும்-இரவும் பகலுமாகிய இருபொழுதினும் வாலாமையுடன் இருத்தல் பொறாமல் வருபவரும் கடன்முடித்துப் போவாரும் எழுப்புகின்ற இடையறாத ஆரவாரமும்; எஞ்சியோர் மருங்கின் ஈமம் சாற்றி-இறவாதிருந்தோர்க்கெல்லாம் நுங்கட்கும் இவ்வாறு செய்யும் ஈமச்சடங்குண்டு என்பதனை அறிவுறுத்துக் கேட்டோர்; நெஞ்சு நடுக்குறூஉம் நெய்தல் ஓசையும்-நெஞ்சத்தை அச்சத்தால் நடுங்கப்பண்ணுகின்ற நெய்தற்பறை முழக்கமும்; துறவோர் இறந்த தொழுவிளிப் பூசலும்-துறவுபூண்டவர் இறந்தமையாலே ஏனையோர் அவரைத் தொழுது வாழ்த்தும் வாழ்த்தொலியும்; பிறவோர் இறந்த அழுவிளிப் பூசலும்-துறவாத மாந்தர் இறந்தமையால் அவர் சுற்றத்தார் அழுதலாலே எழுகின்ற அழுகை ஒலியும்; நீள்முக நரியின் தீவிளிக்கூவும்- நீண்ட முகத்தையுடைய நரிகள் ஊளையிடுகின்ற கேள்விக்கின்னாததாகிய கூக்குரலும்; சாவோர்ப் பயிரும் கூகையின் குரலும்- சாகக்கிடக்கின்றவரை விரைந்து சாகும்படி கூப்பிடுகின்ற கூகையின் குழறல் ஒலியும்; புலஊண்பொருந்திய குராலின் குரலும்-ஊன் உண்ணுதலிலே பொருந்திய கோடான் குரல்களும்; ஊண்தலை துற்றிய ஆண்டலைக் குரலும்-உணவாக மாந்தர் தலைமூளையை உண்ட ஆண்டலைப்புள் மகிழ்ந்தெடுத்த குரலோசையும்; இன்னா இசையொலி ஆகிய இன்னாமதருகின்ற இசைகளின் கூட்டமாகிய பேரொலியானது; நல்நீர் புணரி நளிகடல் ஓதையின்-நல்ல நீரையுடைய ஆறுகள் புக்குப் புணர்தலையுடைய செறிந்த கடலினது முழக்கம் போன்று; என்றும் நின்று அறாது-எப்பொழுதும் நிலைபெற்று நிற்ப தல்லது ஒருபொழுதும் ஒழியமாட்டாது என்றாள் என்க.
(விளக்கம்) பிணங்களைச் சுடுவோரும் இடுவோரும் குழிப்படுப்போரும் அடைப்போரும் கவிப்போருமாய்ப் பல்வேறுவகையாக இறுதிக் கடன்கள் செய்ய, இரவும் பகலுமாகிய இருபொழுதும் வருவோரும் செல்வோரும் செய்யும் ஆரவாரமும் நெய்தற்பறை முழக்கம் ஓசையும் தொழும் பூசலும் அழும் பூசலும் நரி கூகை குரால் ஆண்டலைப்புள்ளும் ஆகிய இவை செய்யும் ஆரவாரமும் ஆகிய எல்லாம் இன்னா இசையாய் ஒன்றாகிக் கடலோதை போல் எப்பொழுதும் ஒலிக்க.
இடுவோர்-வாளாது போகட்டுச் செல்வோர். மக்கட் பிணமும் நரிமுதலிய பிறவுயிர்கட்கு உணவாதலின் அவற்றைச் சுடுதல் முதலியன செய்யாமற் போகட்டுப் போவதும் சிறந்த அறமாம் என்று கருதும் கோட்பாடுடையோரும் அக்காலத்திருந்தனர் என்பது இதனால் அறியப்படும். தாழ்வயின் அடைத்தலாவது பள்ளத்திலிட்டுப் பிணத்தைப் பல விடங்கட்கும் இழுத்தேகாமல் அவ்விடத்திலேயே தின்றுவிடும்படி வழியை அடைத்து விடுதலாம். தாழி- மட்பாண்டம். இதனை முதுமக் கட்டாழி என்ப. கீழே ஒரு தாழியிலிட்டு மற்றொரு தாழியாற் கவிப்பது என்க. இளிவு-வாலாமை தரியாது என்றது-காலந்தாழ்த்தாமல் என்றவாறு. சும்மை-ஆரவாரம். எஞ்சியோர் மருங்கின் ஈமஞ்சாற்றுதலாவது சாப்பறை முழக்கம். சாவுண்டென்பதனை மறந்துவாழ்வோர்க்கு நுமக்கும் சாவுண்டென்பதனை அறிவுறுத்தல். இதனை
மணங்கொண்டீண் டுண்டுண்டுண் டென்னும் உணர்வினாற் சாற்றுமே டொண்டொண்டொண்ணென்னும் பறை எனவரும் நாலடியானும்(25) உணர்க.
கூகை குழறுதலை இறக்கும் காலம் அணித்தாக வந்துற்றோரை அறிந்துவிரைவில் இறந்து பட்டு ஈமப்புறங்காட்டிற்கு வருமாறு அழைப்பதாகக் கருதுமொரு கோட்பாடு பற்றிச் சாவோர்ப் பயிரும் கூகையின் குரலும் என்றார். இல்லத்திற் கணுக்கமாகக் கூகையிருந்து குழறினால் இற்றை நாளும் அஞ்சி அதனை ஓட்டுவாரும், அணுமையில் யாரேனும் ஈண்டுச் சாவார் உளர் என்பாரும் உளர். தலையூண்துற்றிய ஆண்டலை என மாறுக. ஈண்டு ஊண் என்றது மூளையாகிய உணவை. துற்றுதல்- தின்னல். நன்னீராகிய யாறுகள் சென்று புணர்தலையுடைய நளிகடல் என்க. ஓதை-முழக்கம்.
சக்கரவாளக் கோட்டத்துள்ள மரங்களும் மன்றமும்
(இதன் பொருள்) தான்றியும் ஒடுவையும் உழிஞ்சிலும் ஓங்கி கான்றையும் சூரையும் கள்ளியும் அடர்ந்து-தான்றியும் ஒடுவையும் உழிஞ்சிலும் ஆகிய மரங்கள் வளரப் பெற்றுக் கான்றையும் சூரையும் கள்ளியுமாகிய செடிகள் செறியப்பெற்று; காய் பசிக் கடும் பேய் கணம் கொண்டு ஈண்டும் மாமலர் பெருஞ்சினை வாகை மன்றமும்-உடம்பு வற்றுதற்குக் காரணமான பதியையுடைய கடிய பேய் கூட்டமாகக் கூடியிருக்கின்ற முகில் தவழ்கின்ற பெரிய கிளைகளோடு கூடிய வாகை மரம் நிற்றலாலே வாகை மன்றம் என்று கூறப்படுகின்ற மன்றமும்; புள்வெள்நிணம் தடியோடு மாந்தி மகிழ் சிறந்து இறைகூறும் வெள்ளில்மன்றமும்- பல்வேறு பறவைகளும் மக்கள் யாக்கையின் வெள்ளிய நிணத்தையும் தசையையும் நிரம்பத் தின்றமையாலே மகிழ்ச்சி மிகப்பெற்று நெடும்பொழுது தங்குதற்கிடமான விளாமரம் நிற்றலாலே வெள்ளில்மன்றம் எனப்படும் மன்றமும்; சுடலை நோன்பிகள் ஒடியா உள்ளமொடு மடை தீ உறுக்கும் வன்னி மன்றமும்-சுடலையிலேயே சாந்துணையுமிருந்து இறந்துபடுவது என்னும் நோன்பினை மேற்கொண்டு அந்நோன்பினை தளராத உள்ளத்தோடிருந்து தாம் பெற்ற வாய்க்கரிசியாலே சோறு சமைத்தற்கு மண்டையிலிட்டுத் தீயின் மேல் ஏற்றும் இடமாகிய வன்னிமறம் நிற்கும் மன்றமும்; விரத மாக்கையர் உடைதலை தொகுத்து ஆங்கு இருந்தொடர்பபடுக்கும் இரத்தி மன்றமும்-விரதங்காக்கும் யாக்கையினையுடையோர் உடைத்த தலைகளைத் தொகுத்துப் பெரிய மாலையாகத் தொடுக்குமிடமாகிய இலந்தை மரம் நிற்கும் மன்றமும்; பிணம்தின் மாக்கள் நிணம்படு குழிசியில் விருந்தாட்டு அயரும் வெள்ளிடை மன்றமும்-பிணத்தைத் தின்று வாழும் இயல்புடைய மாக்கள் கொண்டாடும் வெற்றிடமாகிய மன்றமும் ஆகிய இவ்விடங்களிலெல்லாம் என்க.
(விளக்கம்) தான்றி முதலிய மூன்றும் மரங்கள் என்றும், கான்றை முதலிய மூன்றும் செடிகள் என்றும் கொள்வாருமுளர். காய்பசி: வினைத்தொகை எனினுமாம். காய்தற்குக் காரணமான பசியுமாம்; காய்தல்-வற்றுதல்; நெடும்பசியால் அறவுலர்ந்து நெற்றாய் அற்றேம் என்பது பேய் முறைப்பாடு (கலிங்கத்து) பேய்ப் பிறப்பிற் பெரும் பசியே எஞ்ஞான்றும் அலைக்கும் என்னும் கோட்பாடு பற்றி; காய்பசிக் கடும்பேய் என்று விதந்தார். மால்-முகில். மால்-என்பதற்கு மயக்கம் எனவே பொருள் கொண்டு மயக்கமே உருக்கொண்டு எஞ்ஞான்றும் அமர்பந்திருத்தற்கிடமான பெருஞ்சினை எனலுமாம். பேய்கள் இருந்து மயக்குறுத்துதல் பற்றி அங்ஙனம் கூறினர். என்க.
மன்றம்-உயிரினங் கூடும் இடம். பெரும்பாலும் மன்றங்களில் யாதானும் மரம் நிற்பதுண்டு. ஈண்டு வாகை மரம் நிற்கும் மன்றம் வாகை மன்றம் எனவும், வெள்ளில் நின்ற மன்றம் வெள்ளில் மன்றம் எனவும், வன்னி மரம் நின்ற மன்றம் வன்னி மன்றம் எனவும், இரத்தி மரம் நின்ற மன்றம் இரத்தி மன்றம் எனவும் கூறப்படுகின்றன. மரமொன்றும் நில்லாத மன்றத்தை வெள்ளிடை மன்றம் என்றனர். சிலப்பதிகாரத்தினும் நகரத்துள்ளே அமைந்த மன்றம் பல கூறப்பட்டன, அவற்றுள்ளும்
உள்ளுநர்ப பனிக்கும் வெள்ளிடை மன்றம்
என ஒரு மன்றம் கூறப்படுதலறிக(5-17)
இனி, ஈமப்புறங்காட்டிலிருந்து நோன்பு செய்வாரும் உளர் என்பதனை, நீலகேசியில்,
இறைவி கோட்டத்து ளீரிரு திங்கள தகவை
உறையு ளாகவவ் வுறையருங் கேட்டகத் துறைவான்
பொறையும் ஆற்றலும் பூமியு மேருவு மனையான்
சிறைசெய் சிந்தைய னந்தமில் பொருள்களைத் தெரிந்தான்
ஆகிய முனிச்சந்திர பட்டாரகன் எனும் பெயர் முனிவன் பலாலயம் என்னும் சுடுக்காட்டினூடிருந்தே நோன்பு செய்தான் எனக் கூறப் பட்டிருத்தலாலுணர்க. இத்தகையோரும் சுடலை நோன்பிகள் ஆகுவர். இனி இவரைக் காபாலிக சமயத்துறவோர் என்பாரும் உளர்(நீலகேசி-33).
சுடலை நோன்பிகள் தம் வயிற்றுத் தீத்தணித்தற்கு அங்குக் கிடைக்கும் வாய்க்கரிசியை மண்ணுலியன்ற மண்டையில் உலை நீர் பெய்து சோறு சமைத்தற்கு அம் மண்டையை ஈமத்தீயில் வைப்பர் என்று கொள்க. அவருறையுமிடம் வன்னி மன்றம் என்று கொள்க. விரத யாக்கையர் என்றது மாவிரத சமயத் துறவோரை. இவர் மாந்தர் தலை யோட்டினை மாலையாகக் கோத்து அணிவாராதலின் உடைதலை தொகுத்து இரத்தி மன்றத்தே தொடர்ப்படுத்துவர் என்க. மாவிரதமாவது... சாத்திரத்திற் கூறும் முறையே தீக்கை பெற்று எலும்பு மாலை யணிதல முதலிய சரியைகளின் வழுவாதொழுகினவர் முத்தராவார் என்பது மாதவச் சிவஞான யோகியாரின் மணிமொழி.(சிவஞானபாடியம். அவையடக்கம்) பிணந்தின் மாக்கள் நிணம்படு குழிசியில் விருந்தாட்டயரும் வெள்ளிடை மன்றமும் என் புழிக் கூறப்படும் மாக்களும் ஒரு வகைச் சமயத் துறவோர் என்று கோடலுமாம். என்னை? காபால சமயத்துறவோர் நாடோறும் மனிதர் தலையோட்டில் ஐயமேற்றுண்பவர் எனச் சிவஞான முனிவர் கூறுதலானும் (சிவ-அவையடக்) மெய்ஞ்ஞான விளக்கத்தில் இவரைக் காளாமுக மதத்தினர் என்று கூறி இவர் கபால பாத்திர போசனம் சவ பஸ்மதாரணம் சவமாம் சபத்துவம் தண்டதாரணம்: சுராகும்பத் தாபன பூசை முதலியன உடையவர்(மெய்ஞ். மதவிளக்) எனக் கூறப் படுதலால், இவரையே ஈண்டு வெள்ளிடை மன்றத்து நிணம்படு குழிசியில் விருந்தாட்டயரும் பிணந்தின் மாக்கள் என்று சாத்தனார் குறிப்பிடுகின்றனர் எனல் மிகையன்று.
அவ்வீம்ப்புறங்காட்டிற் காணப்படும் பொருள்கள்
92-96: அழற்பெய்...... பறந்தலை
(இதன் பொருள்) அழல் பெய் குழிசியும் புழல் பெய் மண்டையும் புழல் என்னும் தின்பண்டத்தைப் பெய்து கொணரும் மட்பாண்டமும்;
வெள்ளில் பாடையும்- வெள்ளிலாகிய பாடையும்; உள்ளீட்டு அறுவையும்- பிணத்தை அகத்தே இட்டு மூடிக்கொணர்ந்த கோடிச் சீலையும்; பரிந்த மாலையும்- பாடை பிணம் இவற்றிற் கணியப்பட்டு அறுத்தெறியப்பட்ட மலர் மாலைகளும்; உடைந்த கும்பமும்-உடைக்கப்பட்ட குடங்களின் ஓடுகளும்; நெல்லும் பொரியும் சில் பலி அரிசியும்-சிதறிய நெல்லும் பொரிகளும் ஆவிக்குப் பலிப் பொருளாகப் பிணத்தின் வாயிலிடும் சில அரிசிகளும்; யாங்கணும் பரந்த ஓங்கு இரும் பறந்தலை-எவ்விடத்தும் பரந்து கிடக்கின்ற உயர்ந்த பெரிய அப் பாழிடமாகிய சுடு காடுதானும்; என்க.
(விளக்கம்) அழல்- பிணஞ்சுடக் கொணரும் நெருப்பு. குழிசி- பானை. வெள்ளில்-பாடை; வெள்ளிலாகிய பாடை என்க. பிணமாகிய உள்ளீட்டை உடைய அறுவை என்க. பாடையின் உள்ளே விரித்த அறுவையுமாம். அறுவை-துகில். நெல்சிந்தும் வழக்கமும் பலி அரிசியிடுதலும் இக்காலத்தும் உண்டு. ஆவிக்குப் பலியாகப் பிணத்திலிடும் அரிசையைச் சில்பலியரிசி என்றார். என்னை? ஒரு பிடியளவாகச் சிலரே இடுதலின் சிலவாகிய பலியரிசி என்றார். இக்காலத்தே வாய்க்கரிசி என்பது மது.
இனி ஈண்டுக் கூறப்படும் இவ் வருணனைகளோடு
ஆங்கமாநக ரணைந்தது பலாலைய மென்னும்
பேங்கொள் பேரதவ் வூரது பிணம்படு பெருங்காடு
ஏங்கு கம்பலை யிரவினும் பகலினு மிகலி
யோங்கு நீர்வையத் தோசையிற் போயதொன் றுளதே
எனவும்,
விண்டு நீண்டன வேய்களும் வாகையும் விரவி
இண்டு மீங்கையு மிருள்பட மிடைந்தவற் றிடையே
குண்டு கண்ணின பேய்களும் கூகையும் குழறிக்
கண்ட மாந்தர்தம் மனங்களைக் கலமலக் குறுக்கும்
எனவும்
ஈமத் தூமமு மெரியினு மிருளொடு விளக்கா
வூமைக் கூகையு மோரியு முறழுறழ் கதிக்கும்
யாமத் தீண்டிவந் தாண்டலை மாண்பில வழைக்கும்
தீமைக் கேயிட னாயதோர் செம்மலை யுடைத்தே
எனவும்,
வெள்ளின் மாலையும் விரிந்தவெண் டலைகளுங் கரிந்த
கொள்ளி மாலையுங் கொடிபடு கூறையு மகலும்
பள்ளி மாறிய பாடையு மெல்லும்புமே பரந்து
கள்ளி யாரிடைக் கலந்ததோர் தோற்றமுங் கடிதே
எனவும்,
காக்கை யார்ப்பன கழுதுதங் கிளையொடு கதறித்
தூக்க ளீர்ப்பன தொடர்ந்தபல் பிணங்களுந் தூங்கச்
சேக்கை கொள்வன செஞ்செவி யெருவையு மருவி
யாக்கை கொண்டவர்க் கணைதலுக் கரிதது பெரிதும்
எனவும்,
கோளி யாலமும் கோழரை மரங்களுங் குழுமித்
தூளி யார்த்தெழு சுடலையும் உடலமுந் துவன்றி
மீளி யாக்கைய தாக்கியுண் பேய்க்கண மிகைசூழ்
கூளி தாய்க்கென வாக்கிய கோட்டமொன் றுளதே
எனவும் வரும், நீலகேசிச் செய்யுள்கள் ஒப்பு நோக்கற்பாலன. (தருமவுரை: 27,28,29,30,31,32.)
மணிமேகலா தெய்வம் மக்களின் அறியாமைக் கிரங்குதல்
97-104: தவத்துறை....... உண்டோ
(இதன் பொருள்) (நங்கையீர்! ஈதொன்று கேண்மின்!;) தவத்துறை மாக்கள் மிகப் பெருஞ்செல்வர் ஈற்றிளம் பெண்டிர் ஆற்றாப் பாலகர் முதியோர் என்னான் இளையோர் என்னான்-இவர் உயர்ந்த தவநெறியிலே ஒழுகுகின்ற பெரியோர் இவர் மிகப் பெரிய செல்வமுடையோர் இவர் அணிமைக் காலத்தே மகவீன்ற இளம் பருவமுடைய மகளிர், இவர் துன்பம் பொறுக்கமாட்டாத இளங்குழவிகள், இவர் ஆண்டான் முதிர்ந்த சான்றோர், இவர் ஆண்டிளைய காளையர் என்று சிறிதும் எண்ணிப் பார்த்து இரங்காதவனாய்; கொடுந் தொழிலாளன் கொன்றனன் குவிப்ப-கொடிய கொலை செய்யுந் தொழிலையே மேற் கொண்டிருக்கின்ற கூற்றுவன் நாள்தோறும் மன்னுயிர்களைக் கொன்று குவியாநிற்ப; இவ்வழல்வாய்ச் சுடலை தின்னக் கண்டும்- இந்த நெருப்பையே வாயாகக் கொண்ட ஈமப்புறங்காடு கொன்று போகட்ட உடல்களைத் தின்று தீர்ப்பதனைக் கண்கூடாகக் கண்டு வைத்தும்; கழிபெருஞ் செல்வக் கள்ளாட்டயர்ந்து- மிகப் பெரிய செல்வமாகிய கள்ளை யுண்டு களித்து விளையாடி; மிக்க நல் அறம் விரும்பாது வாழும்- மிகச் சிறந்த நல்ல அறங்களைச் செய்தற்கு விரும்பாமல் உயிர் வாழுகின்ற; மக்களில் சிறந்த மடவோர் உண்டோ- மாந்தரினுங் காட்டில் பெரிய மடமையுடையோர் பிறர் உளரோ? கூறுமின்! என்றாள் என்க.
(விளக்கம்) துறவின்கட்புகுதற் கியன்ற ஏது நிகழ்ச்சி எதிர்ந்துள்ள மணிமேகலைக்கும் அந்நெறிக்கட் பயிலும் சுதமதிக்கும் ஒரு சேர யாக்கை நிலையாமை செல்வம் நிலையாமை இளமை நிலையாமை என்னும் மூவகை நிலையாமைகளும் உள்ளத்தின்கண் நன்கு பதியுமாறு முதன் முதலாக மணிமேகலா தெய்வம் சக்கரவாளக் கோட்ட வரலாறு கூறுதலைத் தலைக்கீடாகக் கொண்டு கேட்போர்க்கு அவ் வுணர்ச்சி தலைதூக்குமாறு தனது தெய்வ மொழியாலே செவியறிவுறுத்துகின்றது என்பதனை இதனைப் பயில்வோர் நன்குணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
ஈண்டு யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை, இளமை நிலையாமை ஆகிய மூன்று நிலையாமை போதரத் துறவோர் இறந்து படுதலையும் மிகப் பெருஞ்செல்வர் இறந்து படுதலையும் இளம் பெண்டிர் இறந்துபடுதலையும் பாலகர் இறந்துபடுதலையும் நிரல்பட வோதுதல் உணர்க. ஈங்குக் கூறப்படுவோருள் துறவோரிறந்து பாடுறுதல், தவத்தாலும் யாக்கையை அழியாதபடி செய்தல் சாலாது என்பதுணர்த்தற் பொருட்டாம். இனிச் செல்வ நிலையாமையும் இரு வகைப்படும். அவையாவன செல்வத்தை யீட்டிய செல்வர் இறத்தலும் அவருளராகச் செல்வமே அவரைக் கைவிட்டழிந்து போதலுமாம். சிறப்பு நோக்கிச் செல்வம் நிற்கச் செல்வரே இறந்துபடுதல் கூறியவாறு. இளமை நிலையாமை தோன்ற இளம் பெண்டிர் எனப்பட்டது. இன்பம் நுகர்தற்கியன்ற பருவம் வந்துறு முன்னரும் யாக்கை அழிதலுண்மையின் ஆற்றாப் பாலகர் அழிவையும் உடன் கூறிற்று. ஈற்றிளம் பெண்டிர் என்றமையால் பீட்பிதுக்கியும் கூற்றம் கொல்லுதலும் போந்தமை யுணர்க. மெய்யுணர்வார்க்கு நிலையாமையுணர்ச்சி இன்றியமையாமையை முன்னும் கூறினாம்.
கொடுந் தொழிலாளன்- கூற்றுவன். கொன்றனன்- கொன்று. அழலாகிய வாய். சுடலை-சுடுகாடு. கண்டும் என்றது காட்சியளவையால் கண்கூடாகத் தாமே ஐயந்திரிபறக் கண்டு வைத்தும் என்பதுபட நின்றது.
செல்வம் செருக்கைத் தோற்றுவித்தலின் கள்ளாகக் குறிப்புவமம் செய்யப்பட்டது. அறம் ஒன்றே செல்வத்துப் பயனாகவும் பிறந்தோர்க்கு ஆக்கமாகவும், பொன்றுங்காற் பொன்றாத் துணையாகவும் மீண்டும் பிறப்புற்று வாழ்நாள் வழியிடைக்கும் கல்லாகவும் அமையும் மாபெருஞ் சிறப்புடையது என்பது தோன்ற மிக்க நல்லறம் என்றும் அத்தகைய பேற்றினை அறியத்தகும் பிறப்பு மக்கட் பிறப்பே என்பது தோன்றவும் மக்களிற் சிறந்த மடவோர் உண்டோ? என்றும் ஓதியவாறாம். ஓகாரம் வினா. அதன் எதிர்மறையாகிய இல்லை என்னும் பொருளை வற்புறுத்தி நின்றது.
இனி, மணிமேகலை நெஞ்சம் காமத்தால் நெகிழ்ந்து புதுவோன் பின்றைப் போயதனை அங்ஙனம் போகாமைப் பொருட்டுத் தானிற்கின்ற துறவறத்தை உறுதியாகக் கடைப்பிடித்திடுக என்று ஈண்டு வற்புறுத்துவதே அத் தெய்வத்தின் கருத்தாகலின் ஈண்டு அறம் என்பது துறவின் மேனின்றது அது தோன்றவே அறம் என வாளாது கூறாமல் மிக்க அறம் என்று அத்தெய்வம் விதந்து கூறிற்று.
யாக்கையின் இழிதகைமை
105-115: ஆங்கது....ஓதையும்
(இதன் பொருள்) ஆங்கு அது தன்னை-அவ்வாறிருக்கின்ற அச் சக்கரவாளக் கோட்டத்தை; ஓர் அருங்கடி நகர் என-ஓர் அரிய காவலமைந்த நகரம் என்று கருதி அதனூடே புகுந்து; தனிவழிச் சென்றோன் சார்ங்கலன் என்போன்-இரவிலே தமியனாய்ச் சென்றவனாகிய சார்ங்கலன் என்னும் ஒரு பார்ப்பனச் சிறுவன் அவ்விடத்தே; யாக்கை என்புந் தடியும் உதிரமும் என்று அன்பு உறும் மாக்கட்கு அறியச் சாற்றி- மாக்களே உடம்பென்று நும்மால் பேணப்படும் பொருள் வறிய எழும்பும் தசையும் குருதியுமாகிய அருவருக்கத் தகுந்த இவ்விழிதகைப் பொருள்களின் கூட்டமேயன்றிப் பிறிதொரு பெருந்தகைமையும் உடையதன்று காண்! என்று அதன்பால் பெரிதும் அன்பு கொள்ளுகின்ற அறிவிலிகளுக்குத் தன்னையே சான்றாக்கி நன்கு அறிவுறும்படி; வழுவொடு கிடந்த புழுவூண் பிண்டத்து- நிணத்தோடு கிடந்த புழுக்கள் நெளிகின்ற அழுகிய ஊனோடு கூடிய பிணத்தினது; அலத்தகம் ஊட்டிய அடி நரி வாய்க்கொண்டு உலப்பில் இன்பமொடு உளைக்கும் ஓதையும்- பண்டு செம்பஞ்சுக் குழம்பூட்டி அழகு செய்யப்பட்டிருந்த அடிகளை நரிகள் தம் வாயாற் கொண்டு அழியாத இன்பதோடு ஊளையிடாநின்ற ஒலியையும்; கழுகு கலைப்புற அல்குல் குடைந்து உண்டு நிலத்திலை நெடுவிளி எடுக்கும் ஓதையும்- கழுகு மேகலையென்னும் அணிகலனாலே பண்டு புறத்தே அழகு செய்யப்பட்ட அல்குலை அலகினாலே குடைந்து குடைந்து வயிறு நிரம்பத் தின்றமையாலே பெரிதும் மகிழ்ந்து நிலத்தின்மேனின்று நீளிதாகக் கூவுகின்ற ஒலியும்; கடகம் செறிந்த கையைத் தீ நாய் உடையக் கல்வி ஒடுங்கா ஓதையும்- பண்டு கங்கணம் செறிந்து கிடந்த கையைச் சுடுகாட்டு நாய் என்புமுறிய வாயாற் கவ்வித் தின்று ஒழியாமல் குரைக்கின்ற ஒலியும்; என்க.
(விளக்கம்) ஈண்டுக் கூறப்படும் பிணம் பெண்பிணம் என்பது கூறாமலே விளங்கும். கேட்போர் மகளிராதலின் தம்முடம்பிலேயே அருவருப்புத் தோன்றுதற் பொருட்டு அத் தெய்வம் பெண்ணுடம்பையே விதந்தெடுத்துக் கூறியபடியாம். பின்னும் இவ் விளக்கம் கொள்க.
தடி- தசை. வழு-உடம்பிலுள்ள நிணம். அலத்தகம்- செம்பஞ்சுக் குழம்பு. உளைக்கும்- ஊளையிடும். நிலைத்தலை என்ற பாடத்திற்கு நிமிர்த்திய தலை என்க. கலை-மேகலை. கடகம்-கங்கணம். தீநாய்-சுடு காட்டிலேயே வாழும் நாய். இதனை ஒரு சாதி நாய் என்பாருமுளர். என்புடையக் கவ்வி என்க.
இனி இப் பகுதியோடு
குடருங் கொழுவுங் குருதியு மென்பும்
தொடரும் நரம்பொடு தோலும்-இடையிடையே
வைத்த தடியும் வழும்புமாம் மற்றிவற்றுள்
எத்திறத்தா ளீர்ங்கோதை யாள் (46)
எனவரும் நாலடி வெண்பா ஒப்புநோக்கற்பாலது.
இதுவுமது
116-127: சாந்தம்....எய்தி
(இதன் பொருள்) சாந்தம் தோய்ந்த ஏந்து இளமுலை காய்ந்த பசி எருவை கவர்ந்து ஊண் ஓதையும்- சந்தனம் நீவப்பெற்ற அணந்த இளமுலையின் ஊனை மிகவும் வருந்திய பசியோடு வந்த பெருங்கழுகு அலகினாலே கவர்ந்து தின்று மகிழ்ந்து கூவும் ஒலியும்; பண்பு கொள் யாக்கையின் வெள்பலி யரங்கத்து-பல்வேறு பண்புகளைக் கொண்டுடிருந்த மக்கள் உடம்பைச் சுட்டமையாலேயுண்டான வெண்ணிறமான் சாம்பற் குவியலாலியன்ற மேடை மேலே: ஓர் பேய் மகள் ஆங்கு ஓர் கருந்தலை வாங்கி-ஒரு பெண் பேயானது ஆங்குக் கூந்தலாலே கறுப்பாகக் கிடந்த தலையைத் திருகித் தன்; கையகத்து- கையிடத்திலே; மண்கணை முழவம் ஆக ஏந்தி- மண் பூசப்பெற்ற தண்ணுமையாக ஏந்திக் கொண்டு; இரும்பேர் உவகையின் எழுந்து- மிகவும் பெரிய மகிழ்ச்சியோடு எழுந்து நின்று அத் தலையின்கண் அமைந்த உறுப்புக்களைத் தனித்தனி நோக்கிக் காமுகர்; புயலோ குழலோ கயலோ கண்ணோ குமிழோ மூக்கோ இதழோ கவிரோ பல்லோ முத்தோ என்னாது இரங்காது-இது முகிலோ அல்லது கூந்தல் தானோ? இவை கயல் மீனகளோ அல்லது கண்கள் தாமோ? இது குமிழ் மலரோ அல்லது மூக்குத்தானோ? இவை அதரங்களோ அல்லது முருக்கமலரிதழ்களேயோ? இவை பற்களோ அல்லது முத்துக் கோவையோ? என்று அவற்றைச் சிறிதும் பாராட்டாமலும் அவற்றின் பால் இரக்கங் கொள்ளாமலும்; கண்தொட்டு உண்டு அத் தலையிலமைந்த கண்களை அகழ்ந்தெடுத்துத் தின்றவாறே; கவை அடிபெயர்த்து- தனது கவைத்த விரல்களையுடைய அடிகளைப் பெயர்த்து; தண்டாக் களிப்பின் ஆடும்- தணியாத மகிழ்ச்சியோடே ஆடா நின்ற கூத்தினை; கண்டனன் வெரீஇ கடுநவை எய்தி அச்சத்தாலே பெருந் துன்பமெய்தி என்க.
(விளக்கம்) சார்ங்கலன் என்போன், ஓதைபல கேட்டுச் சென்றவன் பேய்மகள் ஆடும் கூத்துக்கண்டு நவை எய்தி என்க. கடுநவை எய்தி என்பதற்குப் பேயாற் பிடிக்கப்பட்டு என்று கூறுவாருமுளர். அவ்வுரை போலி என்னை? அணங்கும் பேயும் பிடிப்பதுமில்லை உயிருண்பதுமில்லை என்று சாதிப்பதே இந்நூலாசிரியரின் மேற்கோளாதலின் பேயாற் பிடியுண்டதாகவும் பேய் உயிருண்டதாகவும் கருதுவதற்குக் காரணம், பேதமையேயன்றி அந் நிகழ்ச்சியெல்லாம் ஊழ்வினையின் நிகழ்ச்சிகளே என்று காட்டுவதற்கே நூலாசிரியர் இச் சார்ங்கலன் கதையே ஈண்டுப் படைத்துள்ளார் ஆதலின் என்க.
எருவை-கழுகில் ஒருவகை. பண்புகொள் யாக்கை என்றது இகழ்ச்சி எனினுமாம். வெண்பலி யரங்கம் என்றது சாம்பலாலியன்ற மேட்டினை. மண்பூசப் பெற்ற திரண்ட முழவம் என்க. உவகை- சிறந்த ஊண் கிடைத்தமை பற்றி யுண்டாயது. காமுகர் கூந்தல் முதலியவற்றைப் புயல் முதலியனவாகக் குறிப்புவமஞ் செய்து பாராட்டுதலை நலம் பாராட்டுதல் என்ப. இப் பேய் அங்ஙனம் பாராட்டிற்றில்லை: பரிவு கொள்ளவுமில்லை என்பாள் புயலோ.... என்னாது இரங்காது என்றாள். தொட்டு- அகழ்ந்து. தண்டா- தணியாத.
சார்ங்கலன் செயல்
128-131: விண்டோர்.....வைத்தலும்
(இதன் பொருள்) விண்டு ஓர்திசையின் விளித்தனன் பெயர்ந்து-அவ்விடத்தினின்றும் நீங்கி மெய்மறந்து தான்சென்ற திசையை நோக்கி அம்மையே என்று கூவியவனாய் விரைந்து தன்னில் முன்றிலை எய்தி ஆங்கெதிர்வந்த அன்னையை நோக்கி. எம்மனை ஈங்கு காணாய் ஈமச் சுடலையின்- என் அன்னையே ஈங்கு என்னை நோக்குதி ஈமம் எரிகின்ற சுடுகாட்டின்கண்; வெம் முதுபேய்க்கு என் உயிர் கொடுத்தேன் என- வெவ்விய முதுமையுடைய தொரு பேய்க்கு யான் என் உயிரைக் கொடுத்தொழிந்தேன்! என்று பிதற்றிய வண்ணம்; தம்மனை தன்முன் வீழ்ந்து மெய்வைத்தலும்- தன் தாயின் முன்னிலையிலேயே வீழ்ந்து உயிர்நீத்தலும்; என்க.
(விளக்கம்) விண்டு- நீங்கி. ஓர் திசை என்றது தான் சென்று கொண்டிருந்த அத் திசையில் என்றவாறு. விளத்தனன் என்றது அம்மையே! என்று தன் அன்னையே அழைத்து அலறியவனாய் என்றவாறு. பெயர்ந்து- ஓடி. எம்மனை- எம்மன்னை; மரூஉவழக்கு தம்மனை என்பதும் அது: வெம்முது பேய்க்கு என்னுயிர் கொடுத்தேன் என்றது இவ்வாறு சொல்லிப் பிதற்றி என்றவாறு. மெய்வைத்தலும் என்றது வீழ்ந்து இறத்தலும் என்றவாறு.
சார்ங்கலன் தாய் கோதமை செயல்
132-138: பார்ப்பான் ....பதியென
(இதன் பொருள்) பார்ப்பான் தன்னொடு கண் இழந்து இருந்த இத் தீத்தொழிலாட்டி- தன் கணவனாகிய பார்ப்பனனோடு தானும் கண்ணிழந்திருந்த இந்தப் பார்ப்பனிதானும் காவற்றெய்வமாகிய சம்பாபதியை உள்ளத்தால் நோக்கி; சம்பாபதி- சம்பாபதி யென்னுந் தெய்வமே! கேள்!; என் சிறுவனை- அளியேனாகிய என் ஒரு மகனாகிய இச் சிறுவனை; யாருமில் தமியேன் என்பது நோக்காது- களைகணாவார் யாரும் இல்லாதேன் என்பதனை எண்ணியிரங்காமல்; ஆர் உயிர் உண்டது அணங்கோ பேயோ- அரிய உயிரையுண்டது தெய்வமேயோ அல்லது அவன் கூறியவாறு முதுபேய்தானோ? அறிகிலேன்; துறையும் மன்றமும் தொல்வலிமரனும் உறையுளும் கோட்டமும் காப்பாய்- நீர்த்துறைகளிடத்தும் மன்றங்களிடத்தும் பழைமையான வலிமையுடைய மரங்களிடத்தும் மக்கள் வதியும் பிறவிடங்களினும் கோயில்களிடத்தும் மக்களுக்குத் தெய்வத்தானால் பேய்களினானாதல் தீங்கொன்றும் நிகழாவண்ணம் காக்கும் பேரருள் உடையாய்; காவாய்- எளியேமாகிய எம்மைக் காவாது கைவிட்டனை; தகவு இலை கொல்லோ- எம்மாட்டு அத்தகைய அருள் உடையாய் அல்லையோ! என்று அரற்றி; என்க.
(விளக்கம்) பார்ப்பான் என்றது- பார்ப்பனனாகிய என் கணவன் என்பதுபட நின்றது. பார்ப்பானொடு கண்ணிழந்திருந்த தீத் தொழிலாட்டி என்றமையால் தானும் கண்ணிழந்தமை குறித்தாள். இவ்வாற்றால் தீத் தொழிலாட்டி என்றது தீவினையாட்டி என்னும் பொருளுடைய தெனினுமாம். சிறுவன் என்றாள் அவனும் இரங்கற் குரியான் என்பது தோற்றுவித்தற்கு. யாருமில் தமியேன் என்பதுமது. அணங்கு- தீண்டி வருத்தும் தெய்வம். துறை- நீராடுதுறை. துறை முதலியன அணங்கானும் பேயானும் தீங்குறுத்தப் படுமிடம். தகவு என்றது மன்னுயிர்புரக்கும் பேரருளுடைமையை. எல்லார்க்கும் அருள் செய்யும் அருளுடையாய்க்கு எம்பால் அஃதொழிந்ததோ என்றரற்றியபடியாம்.
இனி, இக் காதையில் சக்கரவாளக் கோட்டத்தின் வரலாறு கூறுதல் தலைக்கீடாக 34. இந் நாமறப் பேரூர் தோன்றிய ஈமப்புறங்காடு என்பது தொடங்கி 131. வீழ்ந்து மெய் வைத்தலும் என்பதீறாக, பிறப்பாகிய துன்பம் எய்துதற்குக் காரணமான, காம வெகுளி மயக்கங்கள் என்னும் முக்குற்றமும் விளைதற்குக் காரணமான பிறப்பினை உண்டாக்கும் பற்றினை அறுத்தற்கு இன்றியமையாத ஐவகைப் பாவனை யுள்ளும் தலைசிறந்த (துன்பியல்) அசுப பாவனை மணிமேகலைக்குக் கைவருதற் பொருட்டு இவ்வுடம்பு,
அநித்தம் துக்கம் அநான்மா அசுசி
என்னும் நான்கு மெய்யுணர்ச்சிகளையும் மிகவும் நுண்ணிதாகச் செவியறிவுறுத்திய அருமையை உணர்க. இவ்வுண்மை அறியப்படாவிடின் இதனைப் பயில்வோர் இக் காதையின் சிறப்பைச் சிறிதும் உணராராவர் என்க. மேலே கூறப்பட்ட ஐவகைப் பாவனைகளும் 30. பவத்திற மறுகெனப் பாவை நோற்ற காதையில் நன்கு விளக்கப்படும்.
கோதமை சம்பாபதியிடம் முறையிடுதல்
139-149: மகன்மெய்....காணென
(இதன் பொருள்) கோதமை என்பாள் மகன் மெய் யாக்கையை மார்பு உறத் தழீஇ-இவ்வாறு அரற்றிய கோதமை என்னும் அப் பார்ப்பினி செய்தமை கேண்மின்! அவள்தான் தன் மகனுடைய உயிரற்ற மெய்யாகிய அவ்வுடம்பினைத் தன் கைகளாலே எடுத்துத் தன்மார்புபோடு நன்கு பொருந்துமாறு தழுவிச் சுமந்து கொடுபோய்; ஈமப் புறங்காட்டு எயில் புற வாயிலின் கொடுந்துயர் சாற்ற- அச்சுடுகாட்டுக் கோட்டத்தின் மதிலினது வாயிற்புறத்திலே கிடத்திநின்று சம்பாபதியை மனத்தானினைந்து வாயால் அழைத்துத் தானெய்திய கொடிய அத் துன்பத்தைக் கூறி முறை வேண்டாநிற்ப; பொன்னின் பொலிந்த நிறத்தாள்- பொன் போன்ற நிறமுடையவளாகச் சம்பாபதி என்னும் அத் தெய்வந்தானும் அவளுடைய அகக்கண் முன்னர் வந்து; கடி வழங்கு வாயிலின் கடுந்துயர் எய்தி இடை இருள் யாமத்து என்னை ஈங்கு அழைத்தனை என் உற்றனையோ எனக்கு உரை என்று தோன்ற-நங்காய்! பேய்கள் திரிகின்ற இவ் வாயிலிடத்தே கொடிய துன்பமெய்தி நள்ளிரவில் இவ்விருள்மிக்க யாமத்திலே என்னை இங்கு வருமாறு அழைக்கும் நீ தான் எத்தகைய இன்னல் எய்தினையோ அதனை எனக்கு இயம்புக என்று பரிவுரை கூறத் தோன்றாநிற்ப ஆரும் இல்லாட்டி என் அறியாப் பாலகன் ஈமப்புறங் காட்டு எய்தினோன் தன்னை-பாதுகாவல் செய்தற்குரியார் யாருமில்லாத அளியேனாகிய என் ஒருமகனாகிய விரகறியாத சிறுவன் நீயே எழுந்தருளியிருக்கின்ற இச் சுடுகாட்டின்கண் வந்தடனை ஆருயிர் உண்டது அணங்கோ பேயோ-அரிய உயிரைக் குடித்ததுநின் ஆட்சியிலடங்கிய அணங்கேயோ பேயோயான் அறிகின்றிலேன்; உறங்குவான் போலக் கிடந்தனன்காண் என-உதோ துயில்பவனைப் போன்று கிடக்கின்றனன் நீயே கண்டருளுதி என்று கூற; என்க.
(விளக்கம்) மெய்யாகிய யாக்கை: இரு பெயரொட்டு. கொடுந்துயர்- மகனை இழந்த பொறுக்கொணாத் துன்பம். சாற்ற- கூறிமுறை வேண்ட என்க. புறக்கண் குருடாகலின் அகக்கண் முன்னே உருவத்தோடு தோன்ற என்க. என்னுற்றனையோ எனக்குரை என்றது பரிவுரை. பொன்னிற் பொலிந்த நிறத்தாள் தோன்ற என்றமையால் அத் தெய்வம் அவள் அகக் கண்ணால் காண்டற்கியன்ற அருளுருவம் கொண்டு தோன்ற என்க. இக் காட்சி கனாக்காட்சி போல்வதாம் என்றுணர்க.
கணவனும் கண்ணிலன் யானும் கண்ணிலேன் எம்மைத் தாங்குங்கேளிரும் இலேன் எமக்குதவியாயிருந்த இச் சிறுவனைக் கொன்றது உன் அருளாட்சிக்கண் நிகழத் தகாததொரு கொடுமை; இங்ஙனம் நிகழவும் நீ வாளா திருந்தது என்னையோ? என்று முறையிட்ட படியாம்.
சம்பாபதி மறுமொழிழும் கோதமை வேண்டுகோளும்
150-153: அணங்கும்.... என்றலும்
(இதன் பொருள்) அணங்கும் பேயும் ஆர் உயிர் உண்ணா-அது கேட்ட அத் தெய்வம் அவள் வினாவிற்கு மறுமொழியாக, பார்ப்பனியே ஈதொன்றுகேள்! நீ நினைக்கின்றபடி அணங்காதல் பேயாதல் அரிய உயிரை உண்ண மாட்டா; பிணங்கு நூல் மார்பன் பேது கந்து ஆக ஊழ்வினை வந்து இவன் உயிர் உண்டு கழிந்தது- முறுக்குண்ட பூணூலணிந்த இச் சிறுவனுடைய பேதமையையே பற்றுக்கோடாகக் கொண்டு இவன் முற்பிறப்பிலே செய்த தீவினையாகிய இவனது ஊழே இவன் உயிரைக் கவர்ந்து கொண்டு போயிற்றுக்காண்! இஃதியற்கை என்றுணர்ந்து கொள்வாயாக!; மாபெருந்துன்பம் நீ ஒழிவாய் என்றலும்- நின் பேதமை காரணமாக நீ எய்துகின்ற இம் மாபெருந்துன்பத்தைக் களைந்து அமைதிகொள்வாயாக என்று தேற்றுரை கூறாநிற்ப என்க.
(விளக்கம்) அணங்கு-பிறவுயிரைத் தீண்டி வருத்தும் தெய்வம். உயிர் அணங்கு முதலியவற்றால் உண்ணப்படும் உணவுப் பொருளன்று ஆதலால் அதனை அவை உண்ணும் என்று கருதுவதே அறியாமை என்று விளக்கியபடியாம். இனி தீதும் நின்றும் பிறர்தர வாரா அவை முன்பு செய்த பழவினைப் பயனாகத் தாமே வருவன. உன் மகன் இறந்தமைக்கும் அவன் பழவினையே காரணம் என்றுணர்ந்து துன்பந்தவிர் என்று ஆறுதல் கூறியபடியாம்.
இதுவுமது
154-163: என்னுயிர்...மடவாய்
(இதன் பொருள்) என் உயிர் கொண்டு இவனுயிர் தந்து அருளின் இவன்கண் இல் என் கணவனைக் காத்து ஓம்பிடும்-அதுகேட்ட அவ்வன்புமிக்க தாயாகிய கோதமை அத் தெய்வத்தை நோக்கி எல்லாம்வல்ல தெய்வம் நீ அதலாலே இவன் ஊழ்வினை வேண்டுவது ஓர் உயிரேயாகலின் என்னுயிரைக் கைக்கொண்டு இச்சிறுவன் உயிரைமீட்டுத் தந்தருள்வாயாயின் அளியேனுடைய கண்ணில்லாத கணவனை இச்சிறுவன் பேணிக்காப்பாற்றுவனாகலின்; இவன் உயிர்தந்து என் உயிர்வாங்கு என்றலும்-இச்சிறுவன் உயிரை மீட்டுத்தந்து அதற்கீடாகக் கண்ணற்றவளாகிய என் உயிரைக் கவர்ந்து கொண்டருள்க! என்று வேண்டாநிற்ப; முது மூதாட்டி இரங்கினள் மொழிவோள்-அவ் வேண்டுகோள் கேட்ட அம் மிகப் பழைய தெய்வமாகிய சம்பாபதிதானும் அவள் பொருட்டுப் பெரிதும் பரிவு கொண்டு அவட்குக் கூறுபவள்; மடவாய்- மடப்பமிக்க பார்ப்பன மகளே கேள்!; ஆருயிர் போனால் செய்வினை மருங்கின் சென்று பிறப்பெய்துதல் ஐயம் உண்டோ- ஓருடலின்கண்ணிருந்து- வாழும் உயிர் இறந்துபோனக்கால் அவ்வுயிர் மீண்டும் அப் பழவினைசார்பாகவே போய் மற்றுமொரு பிறப்பின் எய்தும் என்னும் திறவோர் காட்சியில் உனக்கு ஐயமும் உண்டேயோ? ஐயுறாதே கொள், அஃது அங்ஙனமே சென்று மீண்டும் பிறப்பெய்தா நிற்கும் என்பது தேற்றமேகாண்; ஆங்கு அது கொணர்ந்து நின் ஆர் இடர் நீக்குதல்- அவ்வாறாகிய நின்மகன் உயிரை மீட்டுக்கொணர்ந்து இறந்துபட்ட இவ் வுடம் பிலே புகுத்தி நீ எய்திய ஆற்றுதற்கரிய துன்பத்தைக் களைதல்; ஈங்கு எனக்கும் ஆவது ஒன்று அன்று- ஈங்குக் காவற்றெய்வ மாயிருக்கின்ற எனக்கும் ஆற்றலாகும் ஓர் எளிய செயல் அன்று காண்!; நீ இரங்கல்- நீ இங்ஙனம் வருந்தாதே கொள்; ஆங்கது- நீ கூறுவது; கொலை அறம் ஆம் எனும்-ஓர் உயிரின துயர்களைதற்குப் பிறிதோர் உயிரைக் கொலை செய்தலும் அறம் ஆகும் என்று கூறுகின்ற; கொடுந்தொழில் மாக்கள் அவலப் படிற்று உரை- கொலைத்தொழில் செய்கின்ற மடவோர் கூறுகின்ற துன்பத்திற்குக் காரணமான வஞ்சகமொழியே காண்!; என்க.
(விளக்கம்) மன்பதையின் துயர்தீர்த்தற் பொருட்டு வேள்விக் களத்திலே உயிர்ப்பலி செய்கின்றவர் கொள்கையே ஓருயிர்க்கு ஈடாக மற்றோர் உயிரைப் பலி யிடுவதும் அறமாம் என்பது. அது தீவினையேயன்றி அறமாகாது அதனால் விளைவது மீண்டும் துன்பமேயன்றிப் பிறிதில்லை; ஊன் உண்ணுதற்கு விரும்பும் தீயோர் கூறும் வஞ்சக மொழியே அஃது; அதனைக் கைவிடுக என்று தேற்றியபடியாம். இங்ஙனம் கூறுவோர் இயல்பும் அவர்வினை இயல்பும் அவர் மொழியியல்பும் ஒருசேரத் தெரித்தோதுகின்ற அத் தெய்வம் கொலை அறம் ஆம் எனும் கொடுந்தொழின் மாக்கள் அவலப் படிற்றுரை ஆங்காது எனச் சொற்றிறம் தேர்ந்து கூறுதலறிக.
ஈங்கு எனக்கும் ஆவது ஒன்றன்று எனல் வேண்டிய சிறப்பும்மை செய்யுள் விகாரத்தாற் றொக்கது.
போன நின்மகன் உயிரும் புதுப்பிறப்பெய்தி வாழும். ஆதலால் நீ இரங்கல் என்று தேற்றியபடியாம். இரங்கல்- இரங்காதேகொள். அவலம்-துன்பம்; படிறு-வஞ்சம். ஆங்கது ஓருயிர்க்கு ஈடாக மற்றோருயிரைக் கொடுத்து மீட்கலாம் என்னும் நின்கோட்பாடு.
இதுவுமது
163-167: உலக.... என்றலும்
(இதன் பொருள்) ஆங்காது மடவாய் அவ்வுண்மை கேட்பாயாக! உலக மன்னர்க்கு உயிர்க்கு உயிர் ஈவோர் இலரோ-அன்புடையோய்! இந்நிலவுலகத்தை ஆளும் திருவுடைய மன்னர்கள் இறந்தபொழுது அவர் உயிர்க்கு ஈடாக உயிர் வழங்குவோர் இப் பேருலகில் இலர் என்றோ நினைதி!; எண்ணிறந்தோர் உயிர்வழங்க முன்வருபவர் உளர்காண்; இந்த ஈமப் புறங்காட்டு அரசர்க்கு அமைந்தன ஆயிரம் கோட்டம்- பார்ப்பன மகளே! இந்தச் சுடுகாட்டுக் கோட்டத்தினுள்ளேயே இறந்த அரசரைப் புதைத்து அதன்மேல் நினைவுக்குறியாக எடுக்கப்பட்ட கோயில்கள் ஆயிரத்திற்கு மேலும் இருக்கின்றனகாண்!; நிரயக் கொடு மொழி நீ ஒழி என்றலும்-ஆதலாலே, உயிர்க்குயிர் ஈவேன் என்னும் நிராயத்துன்பந்தரும் இம் மொழியைக் கூறாது விடுக என்று; கூறியருளுதலும் என்க.
(விளக்கம்) உலக மன்னவர் என்றது சோழ மன்னர்களை. இலரோ என்புழி ஓகாரம் எதிர்மறை. பலர் உயிரீவோர் உளராவர் என அதன் எதிர்மறைப் பொருளை வற்புறுத்து நின்றது. ஆயிரங் கோட்டம் என்றது மிகுதிக்கு ஓரெண் காட்டியவாறு. நிரயக் கொடுமொழி என்றது. இவனுயிர்க்கு என்னுயிர் கொள் என்றதனை.
கோதமை கூற்று
168-171: தேவர்......ஈங்கென
(இதன் பொருள்) தேவர் வரம் தருவர் என்று நால்மறை அந்தணர் நல்நூல் ஒரு முறை உரைக்கும்- தெய்வமே கேட்டருள் துன்புழந்து வருந்தினோர் வழிபாடு செய்து வேண்டினால் தெய்வங்கள் அத் துயர் தீர்க்கும் வரத்தை வழங்குவர் என்று நான்கு மறைகளாகிய அந்தணருடைய மெய்ந்நூல்கள் அவர்க்கு உய்திபெறும் ஒரு முறைமையினைக் கூறாநிற்கும்; மாபெருந் தெய்வம் நீ அருளாவிடின்-அத் தெய்வங்களுள்ளும் மிகப் பெரிய தெய்வமாகிய நீயே யான் கேட்ட இவ்வரத்தை வழங்கி அருளாதொழியின்; யான் ஈங்கு என் உயிர் காவேன் என-அளியேன் இவ்வுலகத்துப் பின்னும் வாழ்வுகந்து என் உயிரைப் பேணுவேனல்லேன் காண்! என்றாள் என்க.
(விளக்கம்) ஒரு முறை-துன்புற்றோர்க்குய்தி பயக்கும் ஒரு வழி நான்மறையாகிய நன்னூல் அந்தணர் நன்னூல் எனத் தனித்தனி இயையும். தெய்வங்களுள் வைத்துத் தலைசிறந்த தெய்வமாகிய நீயே என்பாள், மாபெருந் தெய்வம் நீ என்றாள், பிரிநிலை ஏகாரஞ் செய்யுள் விகாரத்தால் தொக்கது.
சம்பாபதியின் மறுமொழி
172-185: ஊழிமுத....இதுவென
(இதன் பொருள்) ஊழி முதல்வன் உயிர்தரின் அல்லது -ஊழி முடிவின் மீண்டும் உலகியற்றும் பெருங்கடவுளாகிய பிரமன் இறந்தொழிந்த உயிரைப் படைத்துத் தந்தால்(தருதல் கூடும் அவன்) அல்லது; ஆழித்தாழி அகவரைத் திரிவோர் தாம்தரின் யானும் தருகுவன்-சக்கரவாளமாகிய தாழியினூடே என்னைப் போன்று திரிகின்ற தேவர்கள் தாம் நீ வேண்டுமாறு நின் மகன் உயிரை மீட்டுத் தருவார் உளராயின் யானும் நின்மகன் உயிரை மீட்டுத் தருகுவேன் காண்!. மடவாய்- மடப்ப மிக்க பார்ப்பன மகளே நீயே; ஈங்கு என் ஆற்றலும் காண்பாய் என்று இப்பொழுதே என்னுடைய ஆற்றலையும் காணக்கடவாய் என்று கூறி; நால்வகை மரபின் அரூபப் பிரமரும் நால் நால் வகையின் உரூபப் பிரமரும்-நரல்வேறு முறைமையினையுடைய அரூபப் பிரமர்களும், பதினாறு வகைப்பட்ட உரூபப் பிரமரும்; இருவகைச் சுடரும்-ஞாயிறுந் திங்களுமாகிய இருவகைப்பட்ட ஒளிக்கடவுளரும்-இரு மூவகையின் பெருவனப்பு எய்திய தெய்வதகணங்களும்-ஆறு வகைப்பட்ட பேரழகுடைய தெய்வக் கூட்டங்களும்; பல்வகை அசுரரும்-பலவேறு வகைப்பட்ட அசுரர்களும் படுதுயர் உறூஉம் எண்வகை நரகரும்-பெருந்துன்பத்தை எய்தா நின்ற எட்டு வகைப்பட்ட நரகரும்; இருவிசும்பு இயங்கும் பல்மீன் ஈட்டமும்- பெரிய வானத்திலே இயங்கா நின்ற பலவாகிய மீன் கூட்டமும்; நாளும் கோளும் தன் அகத்து அடக்கிய- நாண்மீன்களும் கோள்களும் ஆகிய தேவ கணங்களையெல்லாம் தன்னுள்ளே அடக்கிக் கொண்டிருக்கின்ற; சக்கரவாளத்து- சக்கரவாளமாகிய இவ்வண்டத்தினுள்ளே உறைகின்ற; வரந்தரர்க்கு உரியோர் தமை முன் நிறுத்தி- மாந்தர்க்கு வரந்தருதற்கு உரிமையுடையோரை எல்லாம் சம்பாபதி தனது ஆற்றலாலே வரவழைத்து அக்கோதமையின் அகக்கண் முன்னர் நிறுத்தி வைத்து; இவள் அருந்துயர் இது- தேவர்களே கேண்மின்! இப் பார்ப்பனிக்கு இப்போது எய்தியிருக்கின்ற தீர்ததற்கரிய துயரம் இஃதேயாம்; அரந்தை கெடுமின் என-நும்மில் யாரேனும் இவளுடைய இத் துன்பத்தைப் போக்கியருளுமின் என்று வேண்டாநிற்ப என்க.
(விளக்கம்) ஊழி முதல்வன் என்றது இவ் வுலகம் அழிந்தொழிந்த ஊழியின் பின்னர் மீண்டும் உலகத்தைப் படைக்கின்ற பிரமதேவனை இவன் செந்தாமரை மலர்மேல் வீற்றிருப்பவன் என்பது பௌத்தர் கொள்கை. பிரமர் பலவகைப்பட்டுப் பலராதலின் இவனை ஊழி முதல்வன் என்றும். செம்மலர் முதியோன் என்றும் மகாப்பிரமா என்றும் விதந்தோதுவர். உலகப் படைப்பு அந்தம் ஆதி என்மனார் புலவர் எனச் சைவசித்தாந்தத்தே கூறப்படுமாறே இவரும் ஊழிக்குப் பின் உலகம் படைக்கும் முதல்வன் என்றே கூறுதல் உணர்க. ஆழித்தாழி- சக்கரவாளக் கோட்டமாகிய தாழிவடிவிற்றாகிய அண்டம் என்க.
திரியுந் தேவரில் யாரேனும் தருவார் உளராயின் யானுந் தருகுவன் என்றது, அவ் வரந்தருதற்கு எத் தேவராலும் இயலாது என்பதுபட நின்றது. எனக்குரிய ஆற்றல் எனக்குளது அதனைக் காட்டுவல் நீயே அதனையும் காண்க. நீ கேட்கும் வரந்தரும் ஆற்றல் ஊழி முதல்வற்கன்றிப் பிற தேவருக்கில்லை என்பதனைக் தெரிந்து விளக்கியபடியாம். தேவர்களை எல்லாம் ஒருங்கழைத்துக் காட்டுமாற்றால் சம்பாபதி தன் ஆற்றலை வெளிப்படுத்திக் காட்டியவாறாம்
நால்வகை மரபின் அரூபப் பிரமர்- நால்வகை உலகங்களின் வாழும் உருவமற்ற பிரமர்கள்; இவர்கள் ஐந்தாந்தியானத்தில் தேறியவர் என்பர். இவர் இருப்பிடம்(1) ஆகாசாநந்தியாயதன லோகம்; (2) விஞ்ஞானா நந்தியாயதன லோகம்; (3) ஆகிஞ்சந் யாயதன லோகம்; (4) நைவசம்ச்ஞானா சம்ச்ஞானாயதன லோகம் என்னும் நான்குமாம். இவை நான்கும் அரூபப்பிரம லோகங்கள் எனப்படும்.
பதினாறு வகை மரபின் உரூபப்பிரமர்: பதினாறு வகை உலகங்களில் உருவத்தோடு வாழும் பிரமர்கள் என்பர்; இவர்களில் முதலாந் தியானத்தில் தேறியவர் வாழுமுலகம்(1) பிரமகாயிக லோகம்; (2) பிரமபுரோகித லோகம். (3) மகாப்பிரம லோகம் (4) பரீத்தாப லோகம் என்னம் நான்குமாம்.
இரண்டாந்தியானத்தில் தேறியவர் வாழுமிடம் (1) அப்பிர மாணாபலோகம்; (2) ஆபாசுவர லோகம்; (3) பரீத்தசுப லோகம்; (4) அப்பிரமாணசுப லோகம் என்னும் நான்குமாம்.
மூன்றாந் தியானத்தில் தேறியவர் வாழுமிடம்-(1) சுபகிருஞ்ஞ லோகம்(2) பிருகத்பல லோகம்; (3) அசஞ்ஞாசத்துவ லோகம்; (4) அப்பிருக லோகம் என்னும் நான்குமாம்.
நான்காந்தியானத்தில் தேறியவர் வாழுமிடம்-(1) அதப லோகம்; (2) சுதரிச லோகம்; (3) சுதரிசி லோகம்; (4) அகநிட்டலோகம் என்னும் நான்குமாம். இவை தியானவகையால் நால் நான்கு வகைப் படுதலின் நானால்வகையின் உரூபப் பிரமரும் என்று தெரித்தோதினர்.
இனி அரூபப்பிரமரும் உரூபப்பிரமரும் ஆகிய இருவகைப் பிரமரும் வாழும் உலகம் இருபதனையும் நிட்காம லோகங்கள் என்றும் ஓதுப
இருவகைச் சுடரும் என்றது-ஞாயிற்றுத் தேவனையும் திங்கட்டே வனையுமாம்
பெருவனப் பெய்திய தெய்வதகணங்களும் என்றது இந்நிலவுலகத்தியே செய்த நல்வினையின் பயனாகிய இன்ப நுகர்ச்சி எய்துதற்கியன்ற ஆறுவகைப்பட்ட தேவலோகங்களினும் வாழும் தேவரினங்களை. இவர் இன்ப நுகர்தற்குரிய லோகம் என்பது தோன்ற பெருவனப் பெருவனப் பெய்திய தெய்வதகணம் என்றார்.
நல்வினையால் தேவராய்ப் பிறந்த இவர் வாழும் உலகங்கள் (1) மகாராசிக லோகம்; (2) திரயத்திரிஞ்ச லோகம்; (3) யாம லோகம்;(4) துடிதலோகம்; (5) நிருமாணரதி லோகம்; (6) பரநிருமித வய வருத்தி லோகம் என்னும் இந்த ஆறுலகங்களுமாம்.
மேலே கூறப்பட்ட இருபத்தாறுலகங்களும் நல்வினை செய்தோர்க் குரிய மேலுலகங்களாம்.
இனி, மக்கள் வாழும் இந்நிலவுலகம் ஒன்றுமே நடுவிலமைந்த உலகமாம். ஆகவே நல்வினை என்னும் இருவகை வினைகளும் விரவிய உயிர்கள் இதன்கட் பிறந்து இன்பம் துன்பம் என்னும் இருவகை நுகர்ச்சிகளையும் எய்தும் என்ப. இக் காரணத்தால் பௌத்தர்கள் வினைகளின் கூட்டத்தை வேதனைக் கந்தம் என்பர். வினைகள் இரண்டென்னாது மூன்று என்பர். இதனை,
இனிவே தனையா வனஇன்ப மொடு
துனிவே தருதுன் பமுமாம் இடையும்
நனிதா நலதீ வினையன் மையினாம்
பனிவே யிணைபன் னியதோண் மடவாய் (488)
எனவரும் நீலகேசிச் செய்யுளானும்; அதற்கு நுகர்ச்சிக் கந்தம்-இன்ப நுகர்ச்சியும் துன்பநுகர்ச்சியும். இவ்விரண்டும் விரவிய சமநுகர்ச்சியும் என மூவகைப்படும் என்று விளக்கிய விளக்கவுரையானும் உணர்க.
பல்வகை அசுரர் என்றார் அவர் தாமும் தாஞ்செய்த தீவினையின் பயனாக அவற்றின் வன்மை மென்மைகட் கேற்பப் பலவகைப்படுதலின். தீவினை மிகுதியால் எட்டுவகைப்பட்ட நரகப் புரைகளிலே இடப்பட்ட உயிர்களைப் பிரித்து எண்வகை நரகர் என்றார். இவ்வெண்வகை நரகப் பகுதிகளும் நரகலோகம் என்னும் ஓருலகத்தின் உட்பகுதிகளாம்.
அந்நரகங்கள்-(1) மகாநிரயம்; (2) இரௌரவம்; (3) காலசூத்திரம்; (4) சஞ்சீவனம்; (5) மகரவீசி; (6) தபனம்;(7) சம்பிரதாபனம்;(8) சங்கதம் என்னும் இவ் வெட்டுமாம்.
இனித் தீவினைப் பயனாகச் சென்று பிறப் பெய்தும் உலகங்களை இருள் உலகம் என்ப. அவை தாமும் நான்கு வகைப்படும். (1) நரகலோகம்; (2) திரியக் குலோகம்; (3) பிரேதலோகம்;(4) ஆசுரிக லோகம் என்னும் இந்த நான்குமாம்.
நிலவுலகத்தின் கீழுள்ள இவை நான்கும் கீழுலகம் எனத் தொகுத்தோதப்படும்.
இனி, நல்வினை தீவினை இரண்டும் விரவு வினையுமாகிய மூன்று வினைகளானும் உயிர்கள் எய்தும் இருள் உலகம் நான்கும் நிலவுலகம் ஒன்றும் ஒளி உலகம் ஆறுமாகிய பதினொருலகத்தையும் காமலோகங்கள் என்றும் தொகுத்தும் கூறுப.
மேலே கூறியவாற்றால் பௌத்த சமயத்தார் கூறுகின்ற காம லோகம் பதினொன்றும் நிட்காம லோகம் இருபதும் ஆகிய முப்பத்தோரு லோகங்களையும் அவற்றினியல்புகளையும் அறிக.
பன்மீனீட்டம் என்றது விசும்பில் எண்ணிறந்தனவாகக் காணப்படுகின்ற விண்மீன்களே. நாள் என்றது அசுவனி முதலிய இருபத்தேழு மீன்களையுமாம். கோள்களில் முன்னர்த் தேவரோடு கூட்டிய ஞாயிற்றையும் திங்களையும் தவிர்த்து எஞ்சிய ஏழு கோள்கையுமாம். மேலே கூறப்பட்ட முப்பத்தோருலகங்களையும் பன்மீன்களையும் கோள்களையும் நாள்களையும் தன்னகத்தே அடக்கியிருக்கும் ஓர் அண்டமே சக்கரவாளம் ஆம். இங்ஙனமே எண்ணிறந்த சக்கரவாளங்கள் உள என்பது பிடக நூலோர் துணிவாம் என்றுணர்க.
வரந்தருதற் குரியோர் என்றது இவற்றுள் மேலுலகத்தும் நிலவுலகத்தும் உறையும் தெய்வங்களை அரந்தை-துன்பம்.
தேவர் கூற்றும் கோதமையின் செயலும்
126-129: சம்பாபதி.... இறந்தபின்
(இதன் பொருள்) எங்கு வாழ் தேவரும்-எவ்வெவ்வுலகத்தும் வாழ்வோராய்ச் சம்பாபதியின் ஆணைக்கடங்கிச் சுடுகாட்டுக் கோட்டத்தே வந்து சேர்ந்த தேவரெல்லாம்; சம்பாபதி தான் உரைத்த அம்முறையே உரைப்பக் கேட்டு-அச் சம்பாபதி என்னும் ஆற்றல் சால் தெய்வம் உரைத்தவாறே ஊழி முதல்வன் உயிர்தரின் அல்லது ஆழித்தாழி அகவரைத் திரியும் யாந்தர வல்லேம் என்று கூற அது கேட்டு; கோதமை உற்ற கொடுந்துயர் நீங்கி- மெய்யுணர்ந்தமையாலே கோதமை என்னும் அப்பார்ப்பனிதானும் பேதமை காரணமாகப் பண்டு தான் எய்திய கொடிய துன்பத்தினின்று நீங்கி; மகனை ஈமச் சுடலையின் இட்டு இறந்தபின்- சார்ங்கலன் உடம்பினை ஈமவிறகின் எரிகின்ற தீயிலிட்டுத் தானும் இறந்த பின்னர் என்க.
(விளக்கம்) எல்லாத் தேவலோகங்களினும் வாழ்கின்ற எல்லாத் தேவரும் சம்பாபதி உரைத்தவாறே தமது ஆற்றாமையைக் கூற அது கேட்ட கோதமை துயர்துறந்து மகனுடம்பையும் தீயிலிட்டுத் தானும் தீயினுட்புக் கிறந்த பின்னர் என்றவாறு.
மயன் சக்கரவாளக் கோட்டம் சமைத்தல்
1090-202: சம்பாபதி.... இதுகாண்
(இதன் பொருள்) சம்பாபதி தன் ஆற்றல் தோன்ற- சம்பாபதி என்னும் அக்காவற்றெய்வத்தின் ஆற்றல் கோதமை முதலிய உலகமாந்தர்க்கெல்லாம் நன்கு விளங்கும் பொருட்டு; எங்கு வாழ் தேவரும் கூடிய இடந்தனில்-அத் தெய்வத்தின் ஆணை வழியே நிலவுலகமுதலாக மேலுள்ள இருபத் தேழுலகங்களினும் உறைகின்ற தேவரெல்லாம் ஒருங்குடன் வந்து கூடிய சிறப்பினையுடைய இந்தச் சுடுகாட்டுக் கோட்டத்திலே; சூழ்கடல் விளை இயஆழி அம்குன்றத்து நடுவு நின்ற மேருக்குன்றமும்- நாற்புறமும் சூழ்ந்த கடலையுடைய சக்கரவாளத்தினுள்ள மலைகளின் நடுவண் நிலை பெற்றுநின்ற மேருமலையும்; புடையின் நின்ற எழு வகைக் குன்றமும்-அதன் மருங்கிலே நிற்கின்ற ஏழுவகையான குலமலைகளும்; நால்வகை மரபின் மாபெருந்தீவும்-நான்கு வகைப்பட்ட மிகப் பெரிய நாவலந்தீவு முதலிய தீவுகளும்; ஓர் ஈர் ஆயிரம் சிறு இடைத்தீவும்-அப்பெருந்தீவுகளைச் சூழ்ந்துள்ள இரண்டாயிரம் சிறிய தீவுகளும்; பிறவும்-இவையல்லா தனவாகிய இடவகை காட்டுதற்குரியவற்றை அவ்வவற்றிற்குரிய இடத்தைப் பெறுமாறு; அறிவுவரக் காட்டி- காண்பவர்க்கு சக்கரவாளத்தின் இயல்புபற்றிய அறிவு பிறக்கும்படி இயற்றி; ஆங்கு வாழ் உயிர்களும் அவ்வுயிர் இடங்களும்-ஆங்கே வாழும் உயிர் வகைகளும், அவ்வுயிர்னங்கள் சிறப்புரிமை கொண்டுவாழு முலகங்களும்; பாங்கு உற மண்ணீட்டின் பண்பு உற வகுத்து-அழகுற மண்ணீடுகளிலே அவ்வவற்றின் இயல்பு பொருந்தும்படி வகுத்து; மிக்க பயனால் இழைக்கப்பட்ட சக்கரவாளக் கோட்டம் ஈங்கு இது காண்- தொழிற்றிறமிக்க மயனால் இயற்றப்பட்ட சக்கரவாளக் கோட்டமே இங்குள்ள இக் கோட்டம் என்றறிதி. இதுவே எம்மனோர் அப் பெயராற் கூறுதற்குரிய காரணம் என்று அத் தெய்வம் கூறா நிற்ப என்க.
(விளக்கம்) எங்குவாழ் தேவரும் சம்பாபதியின் கட்டளையின்படி ஓரிடத்தே வந்து கூடியதனால் அத் தெய்வத்தின் தலைமைத் தன்மையுடைய பேராற்றல் தோன்றிற்று என்பது கருத்து. நிகழ்தற்கரிய நிகழ்ச்சி ஒரு காலத்தே இவ்விடத்தே நிகழ்ந்தது என்று பிற்காலத்து மாந்தர் அறிந்து கொள்ளற் பொருட்டு மயன் என்னும் தெய்வச் சிற்பி சக்கரவாளத்தின் அமைப்பைச் சிற்பங்களாலே இவ்விடத்து அமைத்தனன் என்றவாறு.
கடல் வளைஇய-பெரும் புறக்கடல் சூழ்ந்துள்ள. ஆழியங் குன்றம்-சக்கரவாளத்துளடங்கிய மலைகள் என்க. அக் குன்றத்து நடுவே மேருமலையும்; அதன் பக்கங்களிலே ஏழுகுல மலைகளும், மாபெருந் தீவுகளும், இரண்டாயிரம் இடைத் தீவுகளும், இவையல்லாத இடைவகைகளும், ஆங்காங்கு வாழும் உயிர் வகைகளும், மயனால் அழகிய சிற்பப்படிமங்களாக இயற்றப்பட்டன என்க.
மண்ணீடு-சுதை (சிற்பப்படிமம்). பாங்கு-அழகு. பண்பு-இயல்பு.
மணிமேகலை நிலையாமையை நினைவு கூர்தல்
203-205: இடுபிண.......உரைக்க
(இதன் பொருள்) இடுபிணக் கோட்டத்து எயில்புறம் ஆதலின்- பிணங்களைக் கொணர்ந்து போகடுகின்ற கோட்டத்தோடு அக நகரத்தின் மதிலின் புறம்பாகிய இடமாதலாலே இதனை; சுடுகாட்டுக் கோட்டம் என்றலது உரையார்-இவ்வரலாறறியாத மாந்தர் சுடுகாட்டுக் கோட்டம் என்று கூறுதலல்லது சக்கரவாளக் கோட்டம் என்று கூறுதலிலர்; இது இதன் வரவு என்று இருந்தெய்வம் உரைப்ப-இதுவே இதன் வரலாறு ஆதனால் இதனைச் சக்கரவாளக் கோட்டம் என்று யான் கூறினேன் காண்! என்று அப் பெருந்தெய்வம் அறிவியாநிற்ப என்க.
(விளக்கம்) மக்கள் உள்ளத்தே இவ் வரலாறு பதிவது அரிதாகலின் அவர்கட்கு இவ்விடத்தே நிகழும் நிகழ்ச்சியால் பிணஞ்சுடுமிடம் என்பதே நன்கு புலப்படுதலான் அவர் சுடுகாட்டுக் கோட்டம் என்றல் இயல்பேகாண். வரலாறறிந்த எம்மனோர்க்கு இது, சக்கரவாளக் கோட்டம் என்றே தோன்றுதலின் அவ்வாறு யான் கூறினேன் என்று விடுத்தபடியாம்.
மணிமேகலா தெய்வம் மணிமேகலையை எடுத்து போதல்
204-214: மதனின்....தானென்
(இதன் பொருள்) சிறந்தோள்-அத்தெய்வங் கூறிய வரலாற்றைக் கேட்டிருந்த மகளிர் இருவருள் ஏது நிகழ்ச்சி எதிர்ந்துள்ளமையாலே அவ்வரலாற்று வழியாக அத் தெய்வம் அறிவுறுத்திய நிலையாமையுணர்ச்சியை ஏற்றுக் கோடற்குச் சிறந்த மாணவியாயிருந்த மணிமேகலையானவள்; வான் துயர் எய்தி- அவ் வுணர்ச்சி காரணமாக மிகப் பெரிய துன்பத்தை உடையவளாகி மதன் இல் நெஞ்சமொடு- செருக்கவிந்த தன்னெஞ்சத்திற்கு; பிறந்தோர் வாழ்க்கை உரைப்ப- பிறந்தவர் இவ்வுலகில் எய்தும் பெருகிய துன்பத்தையும் அதன் நிலையாமையையும் எடுத்துக் கூறா நிற்ப; இறந்து இருள் கூர்ந்து இடை இருள் யாமத்து-அற்றை நாளிரவிற் பொழுது ஒருபாதி கழிந்தமையாலே அவ் வுவவனத்தின் இயற்கையாகவே புக்கிருந்த நள்ளிரவாகிய இடையாமத்திலேயே; தூங்கு துயில் எய்திய சுதமதி ஒழிய- மிக்குத் தூங்குதலாகிய ஆழ்ந்த துயிலில் அழுந்தியிருந்த மகளிர் இருவருள் சுதமதியை அந்நிலையிலேயே இருக்கவிட்டு; பூங்கொடி தன்னைப் பொருந்தி தழீஇ அந்தரம் ஆறா-காமவல்லி போல் வாளாகிய மணிமேகலையை அணுகித் துயில் கலையாவண்ணம் தழுவி எழுத்துக் கொண்டு வான் வழியாகப் பறந்து போய் அவ்வுவவனத்தினின்றும்; ஆறு ஐந்து யோசனை தென் திசை மருங்கில் சென்று-முப்பது யோசனைத்தொலைவு தென் திசை நோக்கிச் சென்று; திரை உடுத்த மணிபல்லவத்து இடை- நாற்புறமும் கடல் அலைகளைப் பூண்டுள்ள மணிபல்லவம் என்னுந் தீவினிடத்தே; மணிமேகலா தெய்வம்-அந்த மணிமேகலா தெய்வம்; அணி இழை தன்னை வைத்து அகன்றது-மாதவி மாளாகிய மணிமேகலையை அவளது துயில் கலையாவண்ணம் வைத்து அவ்விடத்தினின்றும் நீங்கியது; என்பதாம்.
(விளக்கம்) மதன்-செருக்கு. சிறந்தோள்: மணிமேகலை. தெய்வத்தின் கூற்றின் பயனாகிய மெய்க் காட்சியை; அஃதாவது நிலையாமையை உணர்தற்குச் சிறந்திருந்த மணிமேகலை என்பது கருத்து. தூங்கு துயிலெய்திய இருவருள் சுதமதி யொழிய என அவாய் நிலைப்பற்றி ஒருசொல் பெய்துரைக்க. இங்ஙனம் உரையாக்கால் மணிமேகலை விழிப்பு நிலையினளாகவே தெய்வம் எடுத்துப் போயதாகி மேல் வருவனவற்றோடும் முரணும் என்க.
இனித் தெய்வம் மணிமேகலையை மயக்கி எடுத்துப் போயது எனின் அதற்குஞ் சொல்லின்மையால் யாம் கூறியவாறே கூறுதலே அமையும் என்க.
இனி, இக் காதையை,மண்டிலம் சொரியத் திகழ்தரு மேனியள் பீடிகை ஏத்தி நல்லாள் முகம் நோக்கி என் உற்றீர் என அவள் அவன் கூறிய துரைத்தலும் குமரன் நீங்கான் வீதியில் பொருந்துதல் ஒழியான் சிறுபுழை போகிக் கோட்டம் புக்கால், நவை எய்தாது அங்கு நீர் போமென்று அருந்தெய்வம் உரைப்ப மிக்கோய் சக்கரவாளக் கோட்டம் அஃதென்க கூறிய பொருள் அறியேன் என அதன் காரணம் கூறுவன் இருள் வரினும் நீ கேள் என்று கூறும்-கூறுபவள் இதன் வரவு இதுவென மயனால் இழைக்கப்பட்ட சக்கரவாளக் கோட்டம் இது காண் என சிறந்தோள் நெஞ்சமொடுரைப்ப, இடையாமத்துத் துயிலெய்திய (இருவருள்)சுதமதி ஒழியப் பூங்கொடி தன்னைத் தழீஇ அந்தரம் ஆறாச் சென்று மணிபல்லவத்திடை அத் தெய்வம் அணியிழையை வைத்து அகன்றது என இயைபு காண்க.
சக்கரவாளக் கோட்டமுரைத்த காதை முற்றிற்று.