Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news 1. பாரத நாடு 3. சுதந்திரம் 3. சுதந்திரம்
முதல் பக்கம் » தேசீய கீதங்கள்
2. தமிழ் நாடு
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 ஜன
2012
12:01

1. செந்தமிழ் நாடு

1. செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே-எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே-ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே  (செந்தமிழ்)

2. வேதம் நிறைந்த தமிழ்நாடு-உய்
வீரம் செறிந்த தமிழ்நாடு-நல்ல
காதல் புரியும் அரம்பையர்போல்-இளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு  (செந்தமிழ்)

3. காவிரி தென்பெண்ணை பாலாறு-தமிழ்
கண்டதோர் வையை பொருனைநதி-என
மேவி யாறு பலவோடத்-திரு
மேனி செழித்த தமிழ்நாடு.  (செந்தமிழ்)

4. முத்தமிழ் மாமுனி நீள்வரையே-நின்று
மொய்ம்புறக் காக்கும் தமிழ்நாடு-செல்வம்
எத்தனை யுண்டு புவிமீதே-அவை
யாவும் படைத்த தமிழ்நாடு.  (செந்தமிழ்)

5. நீலத் திரைக்கட லோரத்திலே-நின்று
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை-வட
மாலவன் குன்றம் இவற்றிடையே-புகழ்
மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு.  (செந்தமிழ்)

6. கல்வி சிறந்த தமிழ்நாடு-புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு-நல்ல
பல்வித மாயின சாத்திரத்தின்-மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு.  (செந்தமிழ்)

7. வள்ளுவன் தன்னை உலகினுக்கே-தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு-நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர்-மணி
யாரம் படைத்த தமிழ்நாடு.  (செந்தமிழ்)

8. சிங்களம் புட்பகம் சாவக-மாதிய
தீவு பலவினுஞ் சென்றேறி-அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும்-நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு.  (செந்தமிழ்)

9. விண்ணை யிடிக்கும் தலையிமயம்-எனும்
வெற்பை யடிக்கும் திறனுடையார்-சமர்
பண்ணிக் கலங்கத் திருள்கெடுத்தார்-தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு.  (செந்தமிழ்)

10. சீன மிசிரம் யவனரகம்-இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக்-கலை
ஞானம் படைத்தொழில் வாணிபமும்-மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு.  (செந்தமிழ்)

2. தமிழ்த் தாய்

(தன் மக்களைப் புதிய சாத்திரம் வேண்டுதல்
தாயுமானவர் ஆனந்தக்களிப்புச் சந்தம்)

ஆதிசிவன் பெற்று விட்டான்-என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே-நிறை
மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்.  1

மூன்று குலத்தமிழ் மன்னர்-என்னை
மூண்டநல் லன்பொடு நித்தம் வளர்த்தார்;
ஆன்ற மொழிகளி னுள்ளே-உயர்
ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன்.  2

கள்ளையும் தீயையும் சேர்த்து-நல்ல
காற்றையும் வான வெளியையும சேர்த்துத்
தெள்ளு தமிழ்ப்புல வோர்கள்-பல
தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார்.  3

சாத்திரங் கள்பல தந்தார்-இந்தத்
தாரணி யெங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன்
நேத்திரங் கெட்டவன் காலன்-தன்முன்
நேர்ந்த தனைத்தும் துடைத்து முடிப்பான்.  4

நன்றென்றுந் தீதென்றும் பாரான்-முன்பு
நாடும் பொருள்கள் அனைத்தையும் வாரிச்
சென்றிடுங் காட்டுவெள் ளம்போல்-வையச்
சேர்க்கை யனைத்தையும் கொன்று நடப்பான்.  5

கன்னிப் பருவத்தில் அந்நாள்-என்தன்
காதில் விழுந்த திசைமொழி யெல்லாம்
என்னென்ன வோபெய ருண்டு-பின்னர்
யாவும் அழிவுற் றிறந்தன கண்டீர்!  6

தந்தை அருள்வலி யாலும்-முன்பு
சான்ற புலவர் தவவலி யாலும்
இந்தக் கணமட்டும் காலன்-என்னை
ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சி யிருந்தான்.  7

இன்றொரு சொல்லினைக் கேட்டேன்-இனி
ஏதுசெய் வேன்?என தாருயிர் மக்காள்!
கொன்றிடல் போலொரு வார்த்தை-இங்கு
கூறத் தகாதவன் கூறினன் கண்டீர்!  8

புத்தம் புதிய கலைகள்-பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;
மெத்த வளருது மேற்கே-அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.  9

சொல்லவும் கூடுவ தில்லை-அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை;
மெல்லத் தமிழினிச் சாகும்-அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்  10

என்றந்தப் பேதை உரைத்தான்-ஆ!
இந்த வசையெனக் கெய்திட லாமோ?
சென்றிடு வீர் எட்டுத் திக்கும்-கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!  11

தந்தை அருள்வலி யாலும்-இன்று
சார்ந்த புலவர் தவவலி யாலும்
இந்தப் பெரும்பழி தீரும்-புகழ்
ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்.  12

3. தமிழ்

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்;
பாமர ராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,
நாமமது தமிழரெனக் கொண்டுஇங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்.  1

யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்
வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்,
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை;
உண்மை, வெறும் புகழ்ச்சி யில்லை;
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம்;ஒருசொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்!  2

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை;
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்;
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.  3

உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
வாக்கினிலே ஒளியுண்டாகும்;
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயின்,
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்;
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார்.   4

4. தமிழ்மொழி வாழ்த்து

தான தனத்தன தான தனத்தன தான தந்தா னே

1. வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழிய வே!

2. வான மளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழிய வே!

3. ஏழ்கடல் வைப்பினும் தன் மணம் வீசி
இசைகொண்டு வாழிய வே!

4. எங்கள் தமிழ்மொரி எங்கள் தமிழ்மொழி
என்றென்றும் வாழிய வே!

5. சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையகமே!

6. தொல்லை வினைதரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ்நா டே!

7. வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழி யே!

8. வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே!

5. தமிழச் சாதி

(இப்பாடல் சிதைவுற்ற கைப் பிரதி மூலமே சேகரிக்கப்பட்டுள்ளது. ஆரம்பமும் முடிவும் தெரியவில்லை. அவர் கொடுத்த தலைப்பு இருதøக் கொள்ளியினிடையே என்பதாம்.)

.....எனப்பல பேசி இறைஞ்சிடப் படுவதாய்,
நாட்பட நாட்பட நாற்றமும் சேறும்
பாசியும் புதைந்து பயன்நீர் இலதாய்
நோய் களமாகி அழிகெனும் நோக்கமோ?
விதியே, விதியே, தமிழச் சாதியை  5

என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ?
சார்வினுக் கெல்லாம் தகத்தக மாறித்
தன்மையும் தனது தருமமும் மாயாது
என்றுமோர் நிலையா யிருந்துநின் அருளால்
வாழ்ந்திடும் பொருளொடு வகுத்திடு வாயோ?  10

தோற்றமும் புறத்துத் தொழிலுமே காத்துமற்று
உள்ளுறு தருமமும் உண்மையும் மாறிச்
சிதைவுற் றழியும் பொருள்களில் சேர்ப்பையோ?
அழியாக் கடலோ? அணிமலர்த் தடமோ?
வானுறு மீனோ? மாளிகை விளக்கோ?  15

விதியே தமிழச் சாதியை,எவ்வகை
விதித்தாய் என்பதன் மெய்யெனக் குணர்த்துவாய்!
ஏனெனில்,
சிலப்பதி காரச் செய்யுளைக் கருதியும்,  20

திருக்குற ளுறுதியும் தெளிவும் பொருளின்
ஆழமும் விரியும் அழகும் கருதியும்,
எல்லையொன் றின்மை எனும்பொருள் அதனைக்
கம்பன் குறிகளாற் காட்டிட முயலும்
முயற்சியைக் கருதியும், முன்புநான் தமிழச்  25

சாதியை அமரத் தன்மை வாய்ந்ததுஎன்று
உறுதிகொண் டிருந்தேன். ஒருபதி னாயிரம்
சனிவாய்ப் பட்டும் தமிழச் சாதிதான்
உள்ளுடை வின்றி உழைத்திடு நெறிகளைக்
கண்டு எனது உள்ளம் கலங்கிடா திருத்தேன்.  30

ஆப்பிரிக் கத்துக் காப்பிரி நாட்டிலும்
தென்முனை யடுடத்த தீவுகள் பலவினும்
பூமிப் பந்தின் கீழ்ப்புறத் துள்ள
பற்பல தீவினும் பரவியிவ் வெளிய
தமிழச் சாதி, தடியுதை யுண்டும்,   35

காலுதை யுண்டும் கயிற்றடி யுண்டும்
வருந்திடுஞ் செய்தியும் மாய்ந்திடுஞ் செய்தியும்
பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது
செத்திடுஞ் செய்தியும் பசியாற் சாதலும்
பிணிகளாற் சாதலும் பெருந்தொலை யுள்ளதம்  40
நாட்டினைப் பிரிந்த நலிவினாற் சாதலும்
இஃதெலாம் கேட்டும் எனதுளம் அழிந்திலேன்;
தெய்வம் மறவார்;செயுங்கடன் பிழையார்;
ஏதுதான் செயினும், ஏதுதான் வருந்தினும்,
இறுதியில் பெருமையும் இன்பமும் பெறுவார்  45

என்பதென் னுளத்து வேரகழ்ந் திருத்தலால்,
எனினும்,
இப்பெரும் கொள்கை இதயமேற் கொண்டு
கலங்கிடா திருந்த ஏனைக்கலக் குறுத்தும்
செய்தியொன் றதனைத் தெளிவுறக் கேட்டாய்;  50

ஊனமற் றெவைதாம் உறினுமே பொறுத்து,
வானம் பொய்ககின் மடிந்திடும் உலகுபோல்,
தானமுந் தவமுந் தாழ்ந்திடல் பொறுத்து,
ஞானமும் பொய்கக நசிக்குமோர் சாதி,
சாத்திரங் கண்டாய் சாதியின் உயிர்த்தலம்;  55

சாத்திர மின்றேற் சாதி யில்லை.
பொய்மைச் சாத்திரம் புகுந்திடின் மக்கள்
பொய்மையாகிப் புழுவென மடிவர்;
நால்வகைக் குலத்தார் நண்ணுமோர் சாதியில்
அறிவுத் தலைமை யாற்றிடும் தலைவர்-  60

மற்றிவர் வகுப்பதே சாத்திர மாகும்-
இவர் தாம்.
உடலும் உள்ளமும் தம்வச மிலராய்
நெறிபிழைத் திகழ்வுறு நிலைமையில் வீழினும்
பெரிதிலை;பின்னும் மருந்திதற் குண்டு;  65

செய்கையுஞ் சீலமுங் குன்றிய பின்னரும்
உய்வகைக் குரிய வழிசில உளவாம்.
மற்றிவர்,
சாத்திரம்-(அதாவது,மதியிலே தழுவிய
கொள்கை, கருத்து, குளிர்ந்திடு நோக்கம்:-  70

ஈங்கிதில் கலக்க மெய்திடு மாயின்
மற்றதன் பின்னர் மருந்தொன்று இல்லை
இந்தநாள் எமது தமிழ்நாட் டிடையே
அறிவுத் தலைமை தமகெனக் கொண்டார்
தம்மிலே இருவகை தலைப்படக் கண்டேன்;  75

ஒரு சார்,
மேற்றிசை வாழும் வெண்ணிற மக்களின்
செய்கையும் நடையும் தீனியும் உடையும்
கொள்கையும் மதமும் குறிகளும், நம்முடை
யவற்றினுஞ் சிறந்தன; ஆதலின், அவற்றை  80

முழுதுமே தழுவி மூழ்கிடி னல்லால்,
தமிழச் சாதி தரணிமீ திராது,
பொய்ததழி வெய்தல் முடி பெனப் புகலும்.
நன்றடா!நன்று!நாமினி மேற்றிசை
வழியெலாந் தழுவி வாழ்குவம் எனிலோ.  85

ஏ எ!அஃதுமக் கிசையா தென்பர்;
உயிர்தரு மேற்றிசை நெறிகளை உவந்துநீர்
தழுவிடா வண்ணந் தடுத்திடும் பெருந்தடை
பல, அனைவ நீங்கும் பான்மைய வல்ல
என்றருள் புரிவர். இதன்பொருள்சீமை  90

மருந்துகள் கற்ற மருத்துவர் தமிழச்
சாதியின் நோய்க்குத் தலையசைத் தேகினர்
என்பதே யாகும்;இஃதொரு சார்பாம்
பின்னொரு சார்பினர் வைதிகப் பெயரொடு
நமதுமூ தாதையர்(நாற்பதிற் றாண்டின்  95

முன்னிருந் தவரோ முந்நூற்றாண்டிற்கு
அப்பால் வாழ்ந்தவர் கொல்லோ? ஆயிரம்
ஆண்டின் முன்னவரோ, ஐயா யிரமோ?
பவுத்தரேநாடெலாம் பல்கிய காலத்
தவரோ? புராண மாக்கிய காலமோ?  100

சைவரோ? வைணவ சமயத் தாரோ?
இந்திரன் தானே தனிமுதல்கடவுள்
என்றுநம் முன்னோர் ஏத்திய வைதிகக்
காலத் தவரோ? கருத்திலா தவர்தாம்
எமதும தாதைய தென்பதிங் கெவர்கொல்?)  105

நமதுமூ தாதையர் நயமறக் காட்டிய
ஒழுக்கமும் நடையும் கிரியையும் கொள்கையும்
ஆங்கவர் காட்டிய அவ்வப் படியே
தழுடின் வாழ்னவ தமிழர்க் குண்டு;
எனில், அது தழுவல் இயன்றிடா வண்ணம்  110

கலிதடை புரிவன், கலியின் வலியை
வெல்லலாகாதென விளம்புகின் றனரால்,
நாசங் கூறும்நாட்டு வைத்தியர்
இவராம், இங்கிவ் விருதலைக் கொள்ளியி
னிடையே நம்மவர் எப்படி உய்வர்?  115

விதியே! விதியே!தமிழச் சாதியை
என்செயக் கருதி யிருக்கின் றாயடா?

விதி

மேலேநீ கூறிய விநாசப் புலவரை
நம்மவர் இகழ்ந்து நன்மையும் அறிவும்
எத்திசைத் தெனினும் யாவரே காட்டினும்
மற்றவை தழுவி வாழ்வீராயின்
அச்சமொன்று இல்லை. ஆரிய நாட்டின்
அறிவும் பெருமையும்   120

6. வாழிய செந்தமிழ்

ஆசிரியப்பா

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
நன்மைவந் தெய்துக! தீதெலாம் நலிக!
அறம்வளர்ந் திடுக! மறம்மடி வுறுக!
ஆரிய நாட்டினர் ஆண்மையோ டியற்றும்
சீரிய முயற்சிகள் சிறந்துமிக் கோங்குக!
நந்தே யத்தினர் நாடொறும் உயர்க!
வந்தே மாதரம்!வந்தே மாதரம்!

 
மேலும் தேசீய கீதங்கள் »
temple news

1. பாரத நாடு ஜனவரி 21,2012

1. வந்தே மாதரம் தாயுமானவர் ஆனந்தக் களிப்பு மெட்டு( ராகம்-நாதநாமக்கிரியை தாளம்-ஆதி) பல்லவி வந்தே மாதரம் ... மேலும்
 
temple news

3. சுதந்திரம் ஜனவரி 21,2012

1. சுதந்திரப் பெருமை தில்லை எவளியிலே கலந்துவிட் டாலவர்திரும்பியும் வருவாரோ?"என்னும் வர்ணமெட்டு) 1. வீர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar