Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

தோத்திர பாடல்கள் பகுதி-2 தோத்திர பாடல்கள் பகுதி-2
முதல் பக்கம் » தெய்வப் பாடல்கள்
தோத்திர பாடல்கள் பகுதி-1
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 ஜன
2012
12:01

1. விநாயகர் நான்மணி மாலை

வெண்பா
1. (சக்தி பெறும்) பாவாணர் சாற்றுபொருள் யாதெனினம்
சித்திபெறச் செய்வாக்கு வல்லமைக்கா-அத்தனே!
(நின்)தனக்குக் காப்புரைப்பார்;நின்மீது செய்யும் நூல்
இன்றிதற்கும் காப்புநீ யே.

கலித்துறை

2. நீயே சரணம் நினதரு ளேசர ணஞ்சரணம்
நாயேன் பலபிழை செய்து களைத்துனை நாடிவந்தேன்;
வாயே திறவாத மெனத் திருந்துன் மலரடிக்குத்
தீயே நிகர்த்தொளி வீசுந் தமிழ்க்கவி செய்குவனே.

விருத்தம்

3. செய்யுந் தொழிலுன் தொழிலேகாண்
சீர்பெற் றிடநீ அருள்செய் வாய்.
வையந் தனையும் வெளியினையும்
வானத்தையும்முன் படைத்தவனே!
ஐயா!நான்மு கப்பிரமா!
யானை முகனே!வாணிதனைக்
கையா லணைத்துக் காப்பவனே!
கமலா சனத்துக் கற்பகமே!

அகவல்

4. கற்பக விநாயகக் கடவுளே,போற்றி!
சிற்பர மோனத் தேவன் வாழ்க!
வாரண முகத்தான் மலர்த்தாள் வெல்க!
ஆரண முகத்தான் அருட்பதம் வெல்க!
படைப்புக் கிறையவன், பண்ணவர் நாயகன்  5

இந்திர குரு,எனதுஇதயத் தொளிர்வான்
சந்திர மவுலித் தலைவன் மைந்தன்
கணபதி தாளைக் கருத்திடை வைப்போம்;
குணமதிற் பலவாம்;கூறக் கேளீர்!
உட்செவி திறக்கும்;அகக்கண் ஒளிதரும்;  10

அக்கினி தோன்றும்;ஆண்மை வலியுறும்;
திக்கெலாம் வென்று ஜெயக்கொடி நாட்டலாம்.
கட்செவி தன்னைக் கையிலே யெடுக்கலாம்
விடத்தையும் நோவையும் வெம்பகை யதனையும்
துக்கமென் றென்ணித் துயரிலா திங்கு  15

நிச்சலும் வாழ்ந்து நிலைபெற் றோங்கலாம்;
அச்சந் தீரும்,அமுதம் விளையும்;
வித்தை வளரும்;வேள்வி ஓங்கும்;
அமரத் தன்மை எய்தவும்
இங்கு நாம் பெறலாம்;இஃதுணர் வீரே.  20

வெண்பா

5. (உண)ர்வீர், உணர்வீர்,உலகத்தீர்!இங்குப்
(புண)ர்வீர்,அமரருறும் போக(ம்)-கண(ப)தியைப்
(போத வடிவாகப் போற்றிப் பணிந்திடுமின்!
காதலுடன் கஞ்சமலர்க் கால்).

கலித்துறை

6. காலைப் பிடித்தேன் கணபதி!நின்பதங் கண்ணி லொற்றி
நூலைப் பலபல வாகச் சமைத்து நொடிப்பொழு(தும்)
வேலைத் தவறு நிகழாது நல்ல விகைள் செய்துன்
கோலை மனமெனும் நாட்டின் நிறுத்தல் குறியெனக்கே.

விருத்தம்

7. எனக்கு வேண்டும் வரங்களை
இசைபேன் கேளாய் கணபதி!
மனத்திற் சலன மில்லாமல்,
மதியில் இருளே தோன்றாமல்,
நினைக்கும் பொழுது நின்மவுன
நிலைவந் திடநீ செயல்வேண்டும்.
கனகுஞ் செல்வம்,நூறுவயது:
இவையும் தரநீ கடவாயே. 20

அகவல்

8. கடமை யாவன; தன்னைக் கட்டுதல்
பிறர்துயர் தீர்த்தல்,பிறர் நலம் வேண்டுதல்
வீநாயக தேவனாய், வேலுடைக் குமரனாய்,
நாரா யணனாய், நதிச்சடை முடியனாய்
பிறநாட் டிருப்போர் பெயர்பல கூறி,  5

அல்லா!யெஹோவா!எனத்தொழு தன்புறும்
தேவருந் தானாய்,திருமகள்,பாரதி,
உமையெனுந் தேவியர் உகந்தவான் பொருளாய்,
உலகெலாங் காக்கும் ஒருவனைப் போற்றுதல், 10

இந்நான் கேயிப் பூமி லெவாக்கும்
கடமை யெனப்படும்;பயனிதில் நான்காம்;
அறம்;பொருள்,இன்பம்,வீடெனு முறையே,
தன்னை யாளுஞ் சமர்த்தெனக் கருள்வாய்,
மணக்குள விநாயகா!வான்மறைத் தலைவா!
தனைத்தான் ஆளுந் தன்மைநான் பெற்றிடில். 15

எல்லாப் பயன்களும் தாமே எய்தும்,
அசையா நெஞ்சம் அருள்வாய்; உயிரெலாம்
இன்புற் றிருக்க வேண்டிநி இருதாள்
பணிவதே தொழிலெனக் கொண்டு
கணபதி தேவா! வாழ்வேன் களித்தே.  20

வெண்பா

9. களியுற்று நின்று கடவுளே!இங்குப்
பழியற்று வாழ்ந்திடக்கண் பார்ப்பாய்-ஒளிபெற்றுக்
கல்வி பலதேர்ந்து கடமையெலாம் நன்காற்றித்
தொல்விக்கட் டெல்லாம் துறந்து.

கலித்துறை

10. துறந்தார் திறமை பெரிததி னும்பெரி தாகுமிங்குக்
குறைந்தா ரைக்காத் தெளியார்க் குணவீந்து குலமகளும்
அறந்தாங்கு மக்களும் நீடூழி வாழ்கென அண்ட மெலாம்
சிறந்தாளும் நாதனைப் போற்றிடுந் தொண்டர் செயுந்தவமே.

விருந்தம்

11. தவமே புரியும் வகைய றியேன்,
சலியா துறநெஞ் சறியாது,
சிவமே நாடிப் பொழுதனைத்துந்
தியங்கித் தியங்கி நிற்பேனை
நவமா மணிகள் புனைந்தமுடி
நாதா!கருணா லயனே!தத்
துவமா கியதோர் பிரணவமே!
அஞ்செல் என்று சொல்லதியே   5

அகவல்

12. சொல்லினுக் கரியனாய்ச் சூழ்ச்சிக் கரியனாய்ப்
பல்லுரு வாகிப் படர்ந்தவான் பொருளை,
உள்ளுயி ராகி உலகங் காக்கும்
சக்தியே தானாந் தனிச்சுடர்ப் பொருளை,
சக்தி குமாரனைச் சந்திர மவுலியைப்  5

பணிந்தவ னுருவிலே பாவனை நாட்டி,
ஓமெனும் பொருளை உளத்திலே நிறுத்தி,
சக்தியைக் காக்குந் தந்திரம் பயின்று
யார்க்கும் எளியனாய், யார்க்கும் வலியனாய்,
யார்க்கும் அன்பனாய்,யார்க்கும் இனியனாய்,  10

வாழ்ந்திடட விரும்பினேன்;மனமே!நீயதை
ஆழ்ந்து கருதிஆய்ந் தாய்ந்து பலமுறை
சூழ்ந்து, தெளிந்து, பின் சூழ்ந்தார்க் கெல்லாம்
கூறிக் கூறிக் குறைவறத் தேர்ந்து,
தேறித் தேறிநான் சித்திபெற் றிடவே.  15

நின்னா லியன்ற துணைபுரி வாயேல்,
பொன்னால் உனக்கொரு கோயில் புனைவேன்;
மனமே!எனைநீ வாழ்வித் திடுவாய்!
வீணே யுழலுதல் வேண்டா,
சக்தி குமாரன் சரண்புகழ் வாயே!  20

வெண்பா

13. புகழ்வோம் கணபதிநின் பொற்கழலை நாளும்
திகழ்வோம் பெருங்கீர்த்தி சேர்ந்தே-இகழ்வோமே
புல்லரக்கப் பாதகரின் பொய்யெலாம்;ஈங்கிதுகாண்
வல்லபைகோன் தந்த வரம்.

கலித்துறை

14. வரமே நமக்கிது கண்டீர் கவலையும் வஞ்சனையும்
கரவும் புலைமை விருப்பமும் ஐயமும காய்ந்தெறிந்து,
சிரமீது எங்கள் கணபதி தாள்மலர் சேர்த்தெமக்குத்
தரமேகொல் வானவர்எனறுளத் தேகளி சார்ந்ததுவே

விருத்தம்

15. சார்ந்து நிற்பாய் எனதுளமே,
சலமும் கரவும் சஞ்சலமும்
பேர்ந்து பரம சிவாநந்தப்
பேற்றை நாடி நாள்தோறும்
ஆர்ந்த வேதப் பொருள்காட்டும்
ஐயன்,சக்தி தலைப்பிள்ளை,
கூர்ந்த இடர்கள் போக்கிடுநங்
கோமான் பாதக் குளிர்நிழலே

அகவல்

16. நிழலினும் வெயிலினும் நேர்ந்தநற் றுணையாய்த்
தழலினும் புனலினும் அபாயந் தவிர்த்து
மண்ணினும் காற்றினும் பானினும் எனக்குப்
பகைமை யொன்றின்றிப் பயந்தவிர்த் தாள்வான், 5

மெளன வாயும் வரந்தரு கையும்,
உடையநம் பெருமான் உணர்விலே நிற்பான்,
ஓமெனும் நிலையில் ஒளியாத் திகழ்வான்,
வேத முனிவர் விரிவாப் புகழ்ந்த
பிருஹஸ் பதியும் பிரமனும் யாவும்  10

தானே யாகிய தனிமுதற் கடவுள்,
யானென தற்றார் ஞானமே தானாய்
ுக்தி நிலைக்க மலவித் தாவான்,
சத்தெனத் தத்தெனச் சதுர்மறை யாளர்
நித்தமும் போற்றும் நிர்மலக் கடவுள்,  15

ஏழையர்க் கெல்லாம் இரங்கும் பிள்ளை,
வாழும் பிள்ளை, மணக்குளப் பிள்ளை,
வெள்ளாடை தரித்த விட்டுணு வென்று
செப்பிய மந்திரத் தேவனை
முப்பொழு தேத்திப் பணிவது முறையே.  20

வெண்பா

17. முறையே நடப்பாய், முழுமூட நெஞ்சே!
இறையேனும் வாடாய் இனிமேல்-கறையுண்ட
கண்டன் மகன்வேத காரணன் சக்திமகன்
தொண்டருக் குண்டு துணை.

கலித்துறை

18. துணையே! எனதுயிருள்ளே யிருந்து கடர்விடுக்கும்
மணியே! எனதுயிர் மன்னவனே! என் றன் வாழ்வினுக்கோர்
அணியே! எனுள்ளத்தி லாரமு தே! என தற்புதமே!
இணையே துனக்குரைபேன், கடைவானில் எழுஞ்சுடரே!

விருத்தம்

19. சுடரே போற்றி! கணத்ததேவர்
துரையே போற்றி! எனக்கென்றும்
இடரே யின்றிக் காத்திடுவாய்,
எண்ணாயிரங்கால் முறையிட்டேன்!
படர்வான் வெளியிற் பலகோடி
கோடி கோடிப் பல்கோடி
இடறா தோடும் அண்டங்கள்
இசைத்தாய், வாழி இறையவனே!

அகவல்

20. இறைவி இறைவன் இரண்டும்ஒன் றாகித்
தாயாய்த் தந்தையாய், சக்தியும் சிவனுமாய்
உள்ளொளி யாகி உலகெலாந் திகழும்
பரம்பொரு ளேயோ! பரம்பொரு ளேயோ!
ஆதி மூலமே! அனைத்தையும் காக்கும்  5

தேவா தேவா! சிவனே! கண்ணா
வேலா! சாத்தா! விநாயகா! மாடா!
இருளா! சூரியா! இந்துவே! சக்தியே!
வாணீ! காளீ! மாமக ளேயோ!
ஆணாய்ப் பெண்ணாய் அலியாய், உள்ளது  10

யாதுமாய் விளங்கும் இயற்கை தெய்வமே!
வேதச் சுடரே, மெய்யாங் கடவுளே!
அபயம் அபயம் அபயம் நான் கேட்டேன்;
நோவு வேண்டேன், நூற் றாண்டு வேண்டினேன்,
அச்சம் வேண்டேன், அமைதி வேண்டினேன்;  15

உடைமை வேண்டேன், உன்துணை வேண்டினேன்;
வேண்டா தனைத்தையும் நீக்கி
வேண்டிய தனைத்தையும் அருள்வதுன் கடனே.

வெண்பா

21. கடமைதா னேது!கரிமுகனே! வையத்
திடம்நு யருள்செய்தாய், எங்கள்-உடைமைகளும்
இன்பங் களுமெல்லாம் ஈந்தாய்நீ யாங்களுனக்கு
என் புரிவோம் கைம்மா றியம்பு?

கலித்துறை

22. இயம்பு மொழிகள் புகழ்மறை யாகும்;எடுத்தவினை
பயன்படும்; தேவர் இருபோதும் வந்து பதந்தருவார்;
அயன்பதி முன்னோன் கணபதி சூரியன் ஆனைமுகன்
வியன்புகழ் பாடிப் பணிவார் தமக்குறும் மேன்மைகளே.

விருத்தம்

23. மேமைப் படுவாய் மனமே! கேள்
விண்ணின் இடிமுன் விழுந்தாலும்,
பான்மை தவறி நடுங்காதே,
பயத் தாலேதும் பயனில்லை;
யான்முன் னுரைத்தேன் கோடிமுறை,
இன்னுங் கோடி மறைசொல்வேன்,
ஆன்மா வான கணபதியின்
அருளுண்டு அச்சம் இல்லையே.

அகவல்

24. அச்ச மில்லை அமுங்குத லில்லை.
நடுங்குத லில்லை நாணுத லில்லை,
பாவ மில்லை பதுங்குத லில்லை
ஏது நேரினும் இடர்பட மாட்டோம்;
அண்டஞ் சிதறினால் அஞ்ச மாட்டோம்; 5

கடல்பொங்கி எழுந்தாற் கலங்கமாட்டோம்;
யார்க்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம்;
எங்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம்;
வான முண்டு, மாரி யுண்டு;
ஞாயிறும் காற்றும் நல்ல நீரும்   10

தீயும் மண்ணும் திங்களும் மீன்களும்
உடலும் அறிவும் உயிரும் உளவே;
தின்னப் பொருளும் சேர்ந்திடப் பெண்டும்,
கேட்கப் பாட்டும், காணநல் லுலகும்,
களிதுரை செய்யக் கணபதி பெயரும்  15

என்றுமிங் குளவாம்; சலித்திடாய்;ஏழை
நெஞ்சே!வாழி!நேர்மையுடன் வாழி!
வஞ்சகக் கவலைக் கிடங்கொடேல் மன்னோ!
தஞ்ச முண்டு கொன்னேன்
செஞ்சுடர்த் தேவன் சேவடி நமக்கே.  20

வெண்பா

25. நமக்குத் தொழில்கவிதை, நாட்டிற் குழைத்தல்
இமைக்பொழுதுஞ் சோராதிருத்தல்-உமைக்கினிய
மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்;
சிந்தையே! இன்மூன்றும் செய்.

கலித்துறை

26. செய்யுங் கவிதை பராசக்தி யாலே செயப்படுங்காண்,
வையத்தைக் காப்பவள் அன்னை சிவசக்தி வண்மையெலாம்
ஐயத்தி லுந்துரி தத்திலுஞ் சிந்தி யழிவதென்னே!
பையத் தொழில் புரி நெஞ்சே!கணாதிபன் பக்திகொண்டே.

விருத்தம்

27. பக்தி யுடையார் காரியத்திற்
பதறார் மிகுந்த பொறுமையுடன்
வித்து முளைக்குந் தன்மைபோல்
பெல்லச் செய்து பயனடைவார்
சக்தி தொழிலே அனைத்துமெனிற்
சார்ந்த நமக்குச் சஞ்சலமேன்?
வித்தைக் கிறவா!கணநாதா!
மேன்மைத் தொழிலிற் பணியெனையே.

அகவல்

28. எனைநீ காப்பாய், யாவுமாந் தெய்வமே!
பொறுத்தா ரன்றோ பூமி யாள்வார்?
யாவும்நீ யாயின் அனைத்தையும் பொறுத்தல்
செவ்விய நெறி, அதில் சிவநிலை பெறலாம்;
பொங்குதல் போக்கிப் பொறையெனக் கீவாய்;  5

மங்கள குணபதி;மணக்குளக் கணபதி!
நெஞ்சக் கமலத்து நிறைந்தருள் புரிவாய்;
அகல்விழி உமையாள் ஆசை மகனே!
நாட்டினைத் துயரின்றி நன்கமைத் திடுவதும்,
உளமெனும் நாட்டை ஒருபிழை யின்றி  10

ஆள்வதும்,பேரொளி ஞாயிறே யனைய
சுடர்தரு மதியொடு துயரின்றி வாழ்தலும்
நோக்கமாக் கொண்டு நின்பதம் நோக்கினேன்
காத்தருள் புரிக, கற்பக விநாயகா!  15

கோத்தருள் புரிந்த குறிப்பரும் பொருளே!
அஞ்குச பாசமும கொம்பும் தரித்தாய்
எங்குல தேவா போற்றி!
சங்கரன் மகனே! தாளிணை போற்றி!  20

வெண்பா

29. போற்றி! கலியாணி புதல்வனே! பாட்டினிலே
ஆற்ற லருளி அடியேனைத்-தேற்றமுடன்
வாணிபதம் போற்றுவித்து வாழ்விப்பாய்! வாணியருள்
வீணையொலி என்நாவில் விண்டு

கலித்துறை

30. விண்டுரை செங்குவள் கேளாய் புதுவை விநாயகரே!
தொண்டுள தன்னை பராசக்திக் கென்றுந் தொடர்ந்திடுவேன்;
பண்டைச் சிறுமைகள் போக்கி என்னாவிற் பழுத்தகவைத்
தெண்தமிழ்ப் பாடல் ஒருகோடி மேலிடச் செய்குவையே.

விருத்தம்

31. செய்யாள் இனியாள் ஸ்ரீதேவி
செந்தா மரையிற் சேர்ந்திருப்பாள்,
கையா ளெனநின் றடியேன்செய்
தொழில்கள் யாவும் கைகலந்து
செய்வாள்;புகழ்சேர் வாணியுமென்
னுன்ளே நின்று தீங்கவிதை
பெய்வாள்,சக்தி துணைபுரிவாள்;
பிள்ளாய்!நின்னைப் பேசிடிலே.

அகவல்

32. பேசாப் பொருளைப் பேசநான் துணிந்தேன்;
கேட்கா வரத்தைக் கேட்கநான் துணிந்தேன்;
மண்மீ துள்ள மக்கள், பறவைகள்,
விலங்குகள், பூச்சிகள்,புற்பூண்டு,மரங்கள்;
யாவுமென் வினையால் இடும்பை தீர்ந்தே,  5

இன்பமுற் றன்புடன் இணங்கி வாழ்ந்திடவே
செய்தல் வேண்டும், தேவ தேவா!
ஞானா காசத்து நடுவே நின்றுநான்
பூமண்ட லத்தில் அன்பும் பொறையும்
விளங்குக!துன்பமும்,மிடிமையம்,நோவும்.  10

சாவும் நீங்கிச் சார்ந்தபல் லுயிசெலாம்
இன்புற்று வாழ்கஎன்பேன்!இதனை நீ
திருச்செவி கொண்டு திருவுளம் இரங்கி,
அங்ஙனே யாகுக என்பாய்,ஐயனே!
இந்நாள், இப்பொழு தெனக்கிவ் வரத்தினை 15

அருள்வாய்;ஆதி மூலமே! அநந்த
சக்தி குமாரனே! சந்திர மவுலீ!
நித்தியப் பொருளே! சரணம்
சரணம் சரணம் சரணமிங் குனக்கே.

வெண்பா

33. உனக்கேஎன் ஆவியும் உள்ளமும் தந்தேன்;
மனக்கேதம் யாவினைம் மாற்றி-எனக்கேநீ,
நீண்டபுகழ் வாணாள் நிறைசெல்வம் பேரழகு
வேண்டுமட்டும் ஈவாய் விரைந்து. 33

கலித்துறை

34. விரைந்துன் திருவுள மென்மீ திரங்கிட வேண்டுமையா!
குரங்கை விடுத்துப் பகைவரின் தீவைக்கொழுத்தியவன்
அரங்கத் திலே திரு மாதுடன் பள்ளிகொண்டான்மருகா!
வரங்கள் பொழியும் முகிலே!என் னுள்ளத்து வாழ்பவனே!

விருத்தம்

35. வாழ்க புதுவை மணக்குடத்து
வள்ளல் பாத மணிமலரே!
ஆழ்க உள்ளம் சலனமிலாது!
அகண்ட வெளிக்கண் அன்பினையே
சூழ்க! துயர்கள் தொலைந்திடுக
தொலையா இன்பம் விளைந்திடுக!
வீழ்க கலியின் வலியெல்லாம்!
கிருத யுகந்தான் மேவுகவே.

அகவல்

36. மேவி மேவித் துயரில் வீழ்வாய்,
எத்தனை கூறியும் விடுதலைக் கிசையாய்;
பாவி நெஞ்சே! பார்மிசை நின்னை
இன்புறச் செய்வேன்;எதற்குமினி அஞ்சேல்;
ஐயன் பிள்ளை(யார்)அருளாள்ல உனக்குநான்  5

அபயமிங் களித்தேன்....நெஞ்(சே)
நினக்குநான் உரைத்தன நிலைநிறுத்தி(டவே)
தீயடைக் குதிப்பேன்,கடலுள் வீழ்வேன்,
வென்விட முண்பேன்;மேதினி யழிப்பேன்;
ஏதுஞ் செய்துனை இடரின் றிக் காப்பேன்;  10

மூட நெஞ்சே! முப்பது கோடி
முறையுனக் குரைத்தேன்,இன்னும் மொழிவேன்;
தலையிலிடி விழுந்தால் சஞ்சலப் படாதே;
ஏது நிகழினும்நமக்கென்? என்றிரு;
பராசக்தி யுளத்தின் படியுலகம் நிகழும்  15

நமக்கேன் பொறுப்பு? நான் என்றோர் தனிப்பொருள்
இல்லை;நானெனும் எண்ணமே வெறும்பொய்
என்றான் புத்தன்;இறைஞ்சுவோம் அவன்பதம்,
இனியெப் பொழுதும் உரைத்திடேன்,இதை நீ
மறவா திருப்பாய், மடமை நெஞ்சே!  20

கவலைப் படுதலே கருநரகு, அம்மா!
கவலையற் றிருத்தலே முக்தி;
சினொரு மகனிதை நினக்கருள் செய்கேவே!

வெண்பா

37. செய்கதவம்!செய்கதவம்!நெஞ்சே!தவம் செய்தால்,
எய்த விரும்பியதை எய்தலாம்;-வையகத்ல்
அன்பிற் சிறந்த தவமில்லை;அன்புடையார்
இன்புற்று வாழ்தல் இயல்பு.

கலித்துறை

38. இயல்பு தவறி விருப்பம் விளைதல் இயல்வதன்றாம்
செயலிங்கு சித்த விருப்பிப் பின்பற்றும்;சீர்மிகவே
பயிலு நல்லன்பை இயல்பெனக் கொள்ளுதிர்பாரிலுள்ளீர்!
முயலும் விகைள் செழிக்கும் விநாயகன் மொய்ம்பினிலே.

விருத்தம்

39. மொய்க்குங் கவலைப் பகைபோக்கி,
முன்னோன் ருளைத் துணையாக்கி,
எய்க்கும் நெஞ்சை வலியுறுத்தி,
உடலை இரும்புக் கிணையாக்கிப்
பொய்க்குங் கலியை நான்கொன்று
பூலோ கத்தார் கண்முன்னே,
மெய்க்குங் கிருத யுகத்தினையே
கொணர்வேன், தெய்வ விதியிஃதே

அகவல்

40. விதியே வாழி!விநாயகா வாழி!
பதியே வாழி! பரமா வாழி!
சிதைவினை நீக்கும் தெய்வமே, போற்றி!
புதுவினை காட்டும் புண்ணியா,போற்றி!
மதியினை வளர்க்கும் மன்னே,போற்றி! 5

இச்சையும் கிரியையும் ஞானமும் என்றாக்கும்
மூல சக்தியின் முதல்வா போற்றி!
பிறைமதி சூடிய பெருமான் வாழி!
நிறைவினைச் சேர்க்கம் நிர்மலன் வாழி!
காலம் மன்றையும் கடந்தான் வாழி! 10

சக்தி தேவி சரணம் வாழி!
வெற்றி வாழி! வீரம் வாழி!
பக்தி வாழி! பலபல காலமும்
உண்மை வாழி! ஊக்கம் வாழி!
நல்ல குணங்களே நம்மிடை யமரர் 15

பதங்களாம்,கண்டீர்!பாரிடை மக்களே!
கிருத யுகத்தினைக் கேடின்றி நிறுத்த
விரதம்நான் கொண்டனன்;வெற்றி
தருஞ்சுடர் விநாயகன் தாளிணை வாழியே!

2. முருகா! முருகா!

ராகம்-நாட்டைக்குறிஞ்சி)  தாளம்-ஆதி

பல்லவி
முருகா!-முருகா!-முருகா!

சரணங்கள்
1. வருவாய் மயில்மீ தினிலே
வடிவே லுடனே வருவாய்!
தருவாய் நலமும் தகவும் புகழும்
தவமும் திறமும் தனமும் கனமும் (முருகா)

2. அடியார் பலரிங் குளரே
அவரை விடுவித் தருள்வாய்!
முடியா மறையின் முடிவே!அசுரர்
முடிவே கருதும் வடிவே லவனே! (முருகா)

3. சுருதிப் பொருளே,வருக!
துணிவே,கனலே,வருக!
கருதிக் கருதிக் கவலைப் படுவார்
கவலைக் கடலைக் கடியும் வடிவேல். (முருகா)

4. அமரா வதிவாழ் வுறவே
அருள்வாய்!சரணம்,சரணம்
குமரா,பிணியா வையுமே சிதறக்
குமுறும் சுடர்வே லவனே,சரணம்! (முருகா)

5. அறிவா கியகோ யிலிலே
அருளா கியதாய் மடிமேல்
பொறிவே லுடனே வளர்வாய்!அடியார்
புதுவாழ் வுறவே புவிமீ தருள்வாய் (முருகா)

6. குருவே!பரமன் மகனே!
குகையில் வளருங் கனலே!
தருவாய் தொழிலும் பயனும் அமரர்
சமரா திபனே! சரணம்!சரணம்! (முருகா)

3. வேலன் பாட்டு

ராகம்-புன்னாகவராளி   தாளம்-திஸ்ர ஏகம்

வில்லினை யொத்த புருவம் வளைத்தனை;
வேலவா!-அங்கொர்
வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடி
யானது, வேலவா!
சொல்லினைத் தேனிற் குழைத்துரைப் பாள்சிறு
வள்ளியைக்-கண்டு
சொக்கி மரமென நின்றனை
தென்மலைக் காட்டிலே
கல்லினை யொத்த வலிய மனங்கொண்ட
பாதகன்-சிங்கன்
கண்ணிரண் டாயிரங் காக்கைக்
கிரையிட்ட வேலவா!
பல்லினைக் காட்டிவெண் முத்தைப் பழித்திடும்
வள்ளியை-ஒரு
பார்ப்பனக் கோலந் தரித்துக்
கரந்தொட்ட வேலவா!   1

வெள்ளலைக் கைகளைக் கொட்டி முழங்குங்
கடலினை-உடல்
வெம்பி மறுகிக் கருகிப்
புகைய வெருட்டினாய்.
கிள்ளை மொழிச்சிறு வள்ளி யெனும்பெயர்ச்
செல்வத்தை-என்றும்
கேடற்ற வாழ்வினை-இன்ப
விளக்கை மருவினாய்.
கொள்ளை கொண்டே அமராவதி வாழ்வு
குலைத்தவன்-பானு
கோபன் தலைபத்துக் கோடி
துணுக்குறக் கோபித்தாய்.
துள்ளிக் குலாவித் திரியுஞ் சிறுவன
மானைப்போல்-தினைத்
தோட்டத்திலேயொரு பெண்ணை
மணங்கொண்ட வேலவா!   2

ஆறு சுடர்முகங் கண்டுவிழிக்கின்ப
மாகுதே;-கையில்
அஞ்ச லெனுங்குறி கண்டு
மகிழ்ச்சியுண் டாகுதே,
நீறு படக்கொடும் பாவம் பிணிபசி
யாவையும்-இங்கு
நீக்கி அடியரை நித்தமுங்
காத்திடும் வேலவா!
கூறு படப்பல கோடி யவுணரின்
கூட்டத்தைக்-கண்டு
கொக்கரித் தண்டங் குலுங்க
நகைத்திடுஞ் சேவலாய்!
மாறு படப்பல வேறு வடிவொடு
தோன்றுவாள்-எங்கள்
வைரனிவ பெற்ற பெருங்கன
லே.வடி வேலவா!   3

4. கிளி விடு தூது

பல்லவி
சொல்ல வல்லாயோ?-கிளியே!
சொல்லநீ வல்லாயோ?-

அனுபல்லவி
வல்ல வேல்முரு கன்தனை-இங்கு
வந்து கலந்து மகிழ்ந்து குலாவென்று (சொல்ல)

சரணங்கள்
1. தில்லை யம்பலத்தே-நடனம்
செய்யும் அமரர்பிரான்-அவன்
செல்வத் திருமகனை இங்கு வந்து
சேர்ந்து கலந்து மகிழ்ந்திடு வாயென்று (சொல்ல)

2. அல்லிக் குளத்தருகே-ஒரு நாள்
அந்திப் பொழுதினிலே-அங்கோர்
முல்லைச் செடியதன்ப்ற்-செய்த வினை
முற்றும் மறந்திடக் கற்றதென் னேயென்று (சொல்ல)

3. பாலை வனத்திடைடே-தனைக் கைப்
பற்றி நடக்கையிலே-தன் கை
வேலின் மிசையாணை-வைத்துச் சொன்ன
விந்தை மொழிகளைச் சிந்தைசெய் வாயென்று (சொல்ல)

5. முருகன் பாட்டு

வீரத் திருவிழிப் பார்வையும்-வெற்றி
வேலும் மயிலும்என் முன்னின்றே-
எந்த நேரத் திலும்என்னைக் காக்குமே;-அன்னை
நீலி பராசக்தி தண்ணருட்-கரை
ஓரத்திலே புணை கூடுதே;-கந்தன்
ஊக்கத்தை என்னுளம் நாடுதே;-மலை
வாரத் திலேவிளை யாடுவான்-என்றும்
வானவர் துன்பத்தைச் சாடுவான்.  1

வேடர் கனியை விரும்பியே-தவ
வேடம் புனைந்து திரிகுவான்;-தமிழ்
நாடு பெரும்புகழ் சேரவே முனி
நாதனுக் கிம்மொழி கூறுவான்;-சுரர்
பாடு விடிந்து மகிழ்ந்திட-இருட்
பார மலைகளைச் சீறுவான்;-மறை
யேடு தரித்த முதல்வனும்-குரு
என்றிட மெய்ப்புகழ் ஏறுவான்.   2

தேவர் மகளை மணந்திடத்-தெற்குத்
தீவி லசுரனை மாய்த்திட்டான்;மக்கள்
யாவருக் குந்தலை யாயினான்;மறை
அர்த்த முணர்த்துநல் வாயினான்;தமிழ்ப்
பாவலர்க் கின்னருள் செய்குவான்;-இந்தப்
பாரிவ்ல அறமழை பெய்குவான்;-நெஞ்சின்
ஆவ லறிந்தருள் கூட்டுவான்;-நித்தம்
ஆண்மையும் வீரமும் ஊட்டுவான்.  3

தீவளர்த் தேபழ வேதியர்-நின்தன்
சேவகத் தின்புகழ் காட்டினார்;-ஒளி
மீவள ருஞ்செம்பொன் நாட்டினார்-நின்றன்
மேன்மையி னாலறம் நாட்டினார்!;-ஐய!
நீவள ருங்குரு வெற்பிலே-வந்து
நின்றுநின் சேவகம் பாடுவோம்-வரம்
ஈவள் பராசக்தி யன்னைதான்-உங்கள்
இன்னருளே யென்று நாடுவோம்-நின்றன்  4

6. எமக்கு வேலை

தோகைமேல் உலவுங் கந்தன்
சுடர்க்கரத் திருக்கும் வெற்றி
வாகையே சுமக்கும் வேலை
வணங்குவது எமக்கு வேலை.

7. வள்ளிப்பாட்டு -1

பல்லவி
எந்த நேரமும்நின் மையல் ஏறுதடீ!
குற வள்ளீ!சிறு வள்ளீ!

சரணங்கள்
(இந்த)நேரத்தி லேமலை வாரத்தி லேநதி
யோரத்தி லேயுனைக் கூடி-நின்றன்
வீரத் தமிழ்ச்சொல்லின் சாரத்தி லேமனம்
மிக்க மகிழ்ச்சிகொண் டாடி-குழல்
பாரத்தி லேஇத ழீரத்தி லேமுலை
யோரத்திலே அன்பு சூடி-நெஞ்சம்
ஆரத் தழுவி அமரநிலை பெற்று
அதன்பயனை யின்று காண்பேன். (எந்தநேரமும்)

வெள்ளை நிலாவிங்கு வானத்தை மூடி
விரிந்து பொழிவது கண்டாய்-ஒளிக்
கொள்ளை யிலேயுனைக் கூடி முயங்கிக்
குறிப்பினி லேயொன்று பட்டு-நின்தன்
பிள்ளைக் கிளிமென் குதலையி லேமனம்
பின்ன மறச்செல்ல விட்டு அடி
தெள்ளி ஞானப் பெருஞ்செல்வ மே!நினைச்
சேர விரும்பினன்,கண்டாய்! (எந்தநேரமும்)

வட்டங்க ளிட்டுக் குளமக லாத
மணிப்பெருந் தெப்பத்தைப் போலே-நினை
விட்டு விட்டுப்பல லீலைகள் செய்துநின்
மேனி தனைவிட லின்றி-அடி
எட்டுத் திசையும் ஒளிர்ந்திடுங் காலை
யிரவினைப் போன்ற முகத்தாய்! முத்தம்
இட்டுப் பலமுத்த மிட்டுப் பலமுத்தம்
இட்டுனைச் சேர்ந்திட வந்தேன். (எந்தநேரமும்)

8. வள்ளிப் பாட்டு-2

ராகம்-கரஹரப்பிரியை தாளம்-ஆதி

பல்லவி
உனையே மையல் கொண்டேன், வள்ளீ!
உவமையில் அரியாய்,உயிரினும் இனியாய்! (உனையே)

சரணங்கள்
எனை யாள்வாய், வள்ளீ!வள்ளீ!
இளமயி லே!என் இதயமலர் வாழ்வே!
கனியே!சுவையுறு தேனே!
கலவியி லேஅமு தனையாய்!-(கலவியிலே)
தனியே,ஞான விழியாய்!நிலவினில்
நினைமருவி, வள்ளீ!வள்ளீ!
நீயா கிடவே வந்தேன். (உனையே)

9. இறைவா!இறைவா!

ராகம்-தன்யாசி

பல்லவி
எத்தனை கோடி இன்பம் வைத்தாய்?-எங்கள்
இறைவா!இறைவா!இறைவா!  (ஓ-எத்தனை)

சரணங்கள்
சித்தினை அசித்தடன் இணைத்தாய்-அங்கு
சேரும் ஐம் பூதத்து வியனுல கமைத்தாய்.
அத்தனை யுலகமும் வர்ணக் களஞ்சிய
மாகப் பலபலநல் லழகுகள் சமைத்தாய். (ஓ-எத்தனை)

முக்தியென் றொருநிலை சமைத்தாய்-அங்கு
முழுதினையு முணரும் உணர் வ்மைத்தாய்
பக்தியென் றொருநிலை வகுத்தாய்-எங்கள்
பரமா!பரமா!பரமா! (ஓ-எத்தனை)

10. போற்றி அகவல்

போற்றி உலகொரு மூன்றையும் புணர்ப்பாய்!
மாற்றுவாய்,துடைப்பாய்,வளர்ப்பாய,காப்பாய்!
கனியிலே சுவையும் காற்றிலே இயக்கமும்
கலந்தாற் போலநீ அனைத்திலும் கலந்தாய்
உலகெலாந் தானாய் ஒளிர்வாய், போற்றி 5

அன்னை, போற்றி!அமுதமே போற்றி!
புதியதிற் புதுமையாய் முதியதில் முதுமையாய்,
உயிரிலே உயிராய் இறப்பிலும் உயிராய்,
உண்டெனும் பொருளில் உண்மையாய் என்னுளே
நானெனும் பொருளாய்,நானையே பெருக்கித் 10

தானென மாற்றுஞ் சாகாச் சுடராய்,
கவலைநோய் தீர்க்கும் மருந்தின் கடலாய்
பிணியிருள் கெடுக்கும் பேரொளி ஞாயிறாய்,
யானென தின்றி யிருக்குநல் யோகியர்
ஞானமா மகுட நடுத்திகழ் மணியாய் 15

செய்கையாய்,ஊக்கமாய,சித்தமாய்,அறிவாய்
நின்றிடுந் தாயே,நித்தமும் போற்றி!
இன்பங் கேட்டேன்,ஈவாய் போற்றி!
துன்பம் வேண்டேன், துடைப்பாய் போற்றி!
அமுதங் கேட்டேன்,அளிப்பாய் போற்றி! 20

சக்தி,போற்றி!தாயே,போற்றி!
முக்தி போற்றி! மோனமே போற்றி!
சாவினை வேண்டேன்,தவிர்ப்பாய் போற்றி!

11. சிவசக்தி

இயற்கையென் றுனைரைப்பார்-சிலர்
இணங்கும்ஐம் தங்கள் என்றிசைப்பார்:
செயற்கையின் சக்தியென்பார்-உயித்
தீயென்பார் அறிவென்பார் ஈசனென்பார்;
வியப்புறு தாய்நினக்கே-இங்கு
வேள்விசெய் திடுமெங்கள்ஓம்என்னும்
நயப்படு மதுவுண்டே?-சிவ
நாட்டியங் காட்டிநல் லருள்புரிவாய் 1

அன்புறு சோதியென்பார்-சிலர்
ஆரிருட் பாளின் றுனைப்புகழ்வார்:
இன்பமென் றுரைத்திடுவார்-சிலர்
எண்ணருந் துன்பமென் றுனைஇசைப்பார்;
புன்பலி கொண்டுவந்தோம்-அருள்
பூண்டெமைத் தேவர்தங் குலத்திடுவாய்
மின்படு சிவசக்தி எங்கள்
வீரைநின் திருவடி சரண்புகுந்தோம். 2

உண்மையில அமுதாவாய்;-புண்கள்
ஒழித்திடு வாய்களி, உதவிடுவாய்!
வண்மைகொள் உயிர்ச்சுடராய்-இங்கு
வளர்ந்திடு வாய்என்றும் மாய்வதிலாய்;
ஒண்மையும் ஊக்கமுந்தான்-என்றும்
ஊறிடுந் திருவருட் சுனையாவாய்;
அண்மையில் என்றும் நின்றே-எம்மை
ஆதரித் தருள்செய்யும் விரதமுற்றாய் 3

தெளிவுறும் அறிவினைநாம்-கொண்டுங
சேர்த்தனம்,நினக்கது சோமரசம்;
ஒளியுறும் உயிர்ச்செடியில்-இதை
ஓங்கிடு மதிவலி தனிற்பிழிந்தோம்;
களியுறக் குடித்திடுவாய்-நின்றன்
களிநடங் காண்பதற் குளங்கனிந்தோம்;
குளிர்சுவைப் பாட்டிசைத்தே-சுரர்
குலத்தினிற் சேர்ந்திடல் விரும்புகின்றோம் 4

அச்சமும் துயரும் என்றே-இரண்டு
அசுரர்வந் தெமையிங்கு சூழ்ந்துநின்றார்.
துச்சமிங் கிவர்படைகள்-பல
தொல்லைகள் கவலைகள் சாவுகளாம்;
இச்சையுற் றிவரடைந்தார்-எங்கள்
இன்னமு தைக்கவர்ந் தேகிடவே,
பிச்சையிங் கெமக்களித்தாய்-ஒரு
பெருநகர் உடலெனும் பெயரின தாம் 5

கோடி மண் டபந்திகழும்-திறற்
கோட்டையிங் கிதையவர் பொழுதனைத்தும்
நாடிநின் றிடர்புரிவார்-உயிர்
நதியினைத் தடுத்தெமை நலித்திடுவார்.
சாடுபல் குண்டுகளால்-ஒளி
சார்மதிக் கூடங்கள் தகர்த்திடுவார்;
பாடிநின் றுனைப்புகழ்வோம்-எங்கள்
பகைவரை அரித்தெமைக் காத்திடுவாய்! 6

நின்னருள் வேண்டுகின்றோம்-எங்கள்
நீதியுந் தர்மமும் நிலைப்பதற்கே
பொன்னவிர் கோயில்களும்-எங்கள்
பொற்புடை மாதரும் மதலையரும்
அன்னநல் லணிவயல்கள்-எங்கள்
ஆடுகள் மாடுகள் குதிரைகளும்,
இன்னவை காத்திடவே அன்னை
இணைமலர்த் திருவடி துணைபுகந்தோம். 7

எம்முயி ராசைகளும்-எங்கள்
இசைகளும் செயல்களும் துணிவுகளும்,
செம்மையுற் றிடஅருள்வாய் நின்தன்
சேவடி அடைக்கலம் புகுந்துவிட்டோம்
மும்மையின் உடைமைகளும்-திரு
முன்னரிட் டஞ்சலி செய்துநிற்போம்;
அம்மைநற் சிவசக்தி-எமை
அமரர்தம் நிலையினில் ஆக்கிடுவாய் 8

12. காணி நிலம் வேண்டும்

காணி நிலம் வேண்டும்-பராசக்தி
காணி நிலம் வேண்டும்;-அங்கு,
தூணில் அழகியதாய்-நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய்-அந்தக்
காணி நிலத்திடையே-ஓர் மாளிகை
கட்டித் தரவேணும்;-அங்கு,
கேணி யருகினிலே-தென்னைமரம்
கீற்று மிளநீரும்   1

பத்துப் பன்னிரண்டு-தென்னைமரம்
பக்கத்திலே வேணும்;-நல்ல
முத்துச் சுடர்போலே-நிலாவொளி
முன்புவர வேணும்?அங்கு
கத்துங் குயிலோசை-சற்றே வந்து
காதிற்பட வேணும்;-என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே-நன்றாயிளந்
தென்றல்வர வேணும்.  2

பாட்டுக் கலந்திடவே-அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும்;-எங்கள்
கூட்டுக் களியினிலே-கவிதைகள்
கொண்டுதர வேணும்;-அந்தக்
காட்டு வெளியினிலே,-அம்மா!நின்தன்
காவலுற வேணும்;என்தன்
பாட்டுத் திறத்தாலே-இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்.  3

13. நல்லதோர் வீணை

நல்லதோர் வீணைசெய்தே-அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி, சிவசக்தி;-எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
வல்லமை தாராயோ,-இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி,சிவசக்தி!-நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ? 1

விசையுறு பந்தினைப்போல்-உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,
நசையுறு மனங்கேட்டேன்-நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
தசையினைத் தீசுடினும்-சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன்;-இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ? 2

14. மஹாசக்திக்கு விண்ணப்பம்

மோகத்தைக் கொன்றுவிடு-அல்லா லென்தன்
மூச்சை நிறுத்திவிடு;
தேகத்தைச் சாய்த்துவிடு-அல்லா லதில்
சிந்தனை மாய்த்துவிடு;
யோகத் திருத்திவிடு-அல்லா லென்தன்
ஊனைச் சிதைத்துவிடு;
ஏகத் திருந்துலகம்-இங்குள்ளன
யாவையும் செய்பவளே!  1

பந்தத்தை நீக்கிவிடு-அல்லா லுயிர்ப்
பாரத்தைப் போக்கிவிடு;
சிந்தை தெளிவாக்கு-அல்லா லிரைச்
செத்த வுடலாக்கு;
இந்தப் பதர்களையே-நெல்லாமென
எண்ணி இருப்பேனோ?
எந்தப் பொருளிலுமே-உள்ளே நின்று
இயங்கி யிருப்பவளே.  2 

உள்ளம் குளிராதோ?-பொய்யாணவ
ஊனம் ஒழியாதோ?
கள்ளம் உருகாதோ?-அம்மா!பக்திக்
கண்ணீர் பெருகாதோ?
வெள் ளைக் கருணையிலே இந்நாய் சிறு
வேட்கை தவிராதோ?
விள்ளற் கரியவளே அனைத்திலும்
மேவி யிருப்பவளே!  3

15. அன்னையை வேண்டுதல்

எண்ணிய முடிதல் வேண்டும்,
நல்லவே எண்ணல் வேண்டும்;
திண்ணிய நெஞ்சம் வேண்டும்,
தெறிந்தநல் லறிவு வேண்டும்;
பண்ணிய பாவ மெல்லாம்
பரிதி முன் பனியே போல,
நண்ணிய நின்முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னாய்!  1

16. பூலோக குமாரி

பல்லவி
பூலோக குமாரி ஹே அம்ருத நாரி

அனுபல்லவி
ஆலோக ஸ்ருங்காரி, அம்ருத கலச குச பாரே,
கால பய குடாரி காம வாரி, கனக லதா ரூப கர்வ திமிராரே.

சரணம்
பாலே ரஸ ஜாலே,பகவதி ப்ரஸீத காலே,
நீல ரத்ன மய நேத்ர விசாலே, நித்ய யுவதி பதநீரஜ மாலே-
லீலா ஜ்வாலா நிர்மித வாணீ,நிரந்தரே நிகில லோகேசாநி
நிருபம ஸீந்தரி நித்ய கல்யாணி, நிஜம் மாம் குரு ஹே மன்மத ராணி.

17. மஹாசக்தி வெண்பா

தன்னை மறந்து சகல உலகினையும்
மன்ன நிதங்காக்கும் மஹாசக்தி-அன்னை
அவளே துணையென் றனவரதம் நெஞ்சம்
துவளா திருத்தல் சுகம்  1

நெஞ்சிற் கவலை நிதமும் பயிராக்கி,
அஞ்சி உயிர்வாழ்தல் அறியாமை;-தஞ்சமென்றே
வையமெலாங் காக்கும் மஹாசக்தி நல்லருளை
ஐயமறப் பற்றல் அறிவு  2

வையகத்துக் கில்லை,மனமே!நினக்குநலஞ்
செய்யக் கருதியிவை செப்புவேன்-பொய்யில்லை
எல்லாம் புரக்கும் இறைநமையுங் காக்குமென்ற
சொல்லால் அழியும் துயர்.  3

எண்ணிற் கடங்காமல் எங்கும் பரந்தனவாய்
விண்ணிற் சுடர்கின்ற மீனையெல்லாம் பண்ணிய
சக்தியே நம்மைச் சமைத்ததுகாண். நூறாண்டு
பக்தியுடன் வாழும் படிக்கு  4

18. ஓம் சக்தி

நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்
நிறைந்த சுடர்மணிப் பூண்,
பஞ்சுக்கு நேர்பல துன்பங்களாம்,இவள்
பார்வைக்கு நேர்பெருந்தீ
வஞ்சனை யின்றிப் பகையின்றிச் சூதின்றி
வையக மாந்தரெல் லாம்,
தஞ்சமென் றேயுரைப் பீர்அவள் பேர்,சக்தி
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.  1

நல்லதுந் தீயதுஞ் செய்திடும் சக்தி
நலத்தை நமக்கிழைப் பாள்;
அல்லது நீங்கும்என் றேயுலகேழும்
அறைந்திடு வாய் முர சே!
சொல்லத் தகுந்த பொருளன்று காண்!இங்கு
சொல்லு மவர்தமை யே,
அல்லல் கெடுத்தம ரர்க்கிணை யாக்கிடும்
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.  2
 
நம்புவ தேவழி யென்ற மறையதன்னை
நாமின்று நம்பிவிட் டோம்
கும்பிட்டெந்நேரமும்சக்தியென் றாலுனைக்
கும்பிடு வேன்,மன மே!
அம்புக்கு தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும்
அச்ச மில்லாத படி
உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும்பதம்
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.  3

பொன்னைப் பொழிந்திடு மின்னை வளர்த்திடு,
போற்றி உனக்கிசைத் தோம்;
அன்னை பராசக்தி என்றுரைத் தோம்;தளை
அத்தனை யுங்களைந் தோம்;
சொன்ன படிக்கு நடந்திடு வாய், மன
மே தொழில் வேறில்லை,காண்;
இன்னும தேயுரைப் போம்,சக்தி ஓம் சக்தி,
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.  4

வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொரு
ளாக விளங்கிடு வாய்!
தெள்ளு கலைத்தமிழ் வாணி! நினக்கொரு
விண்ணப்பஞ் செய்திடு வேன்;
எள்ளத் தனைப் பொழு தும்பய னின்றி
இராதென்றன் நாவினி லே
வெள்ள மெனப்பொழி வாய்சக்தி வேல், சக்தி
வேல், சக்தி வேல்,சக்தி வேல்!  5

19. பராசக்தி

கதைகள் சொல்லிக் கவிதை யெழுதென்பார்;
காவி யம்பல நீண்டன கட்டென்பார்;
விதவி தப்படு மக்களின் சித்திரம்
மேவி நாடகச் செய்யுளை மேவென்பார்;
இதய மோஎனிற் காலையும் மாலையும்
எந்த நேரமும் வாணியைக் கூவுங்கால்,
எதையும் வேடில தன்னை பராசக்தி
இன்ப மொன்றினைப் பாடுதல் அன்றியே. 1

நாட்டு மக்கள் பிணியும் வறுமையும்
நையப்பா டென்றொரு தெய்வங் கூறுமே;
கூட்டி மானுடச் சாதியை ஒன்றெனக்
கொண்டு வையம் முழுதும் பயனுறப்
பாட்டி லேயறங் காட்டெனு மோர் தெய்வம்;
பண்ணில் இன்பமுங் கற்பனை விந்தையும்
ஊட்டி எங்கும் உவகை பெருகிட
ஓங்கும் இன்கவி ஓதெனும் வேறொன்றே. 2

நாட்டு மக்கள் நலமுற்று வாழவும்
நானி லத்தவர் மேனிலை யெய்தவும்
பாட்டி லேதனி யின்பத்தை நாட்டவும்,
பண்ணி லேகளி கூட்டவும் வேண்டி நான்
மூட்டு மன்புக் கனலொடு வாணியை
முன்னுகின்ற பொழுதி லெலாங்குரல்
காட்டி அன்னை பராசகித ஏழையேன்
கவிதை யாவுந் தனக்கெனக் கேட்கின்றாள். 3

மழைபொ ழிந்திடும் வண்ணத்தைக் கண்டுநான்
வானி ருண்டு கரும்புயல் கூடியே
இழையு மின்னல் சரேலென்று பாயவும்,
ஈரவாடை இரைந்தொலி செய்யவும்
உழையெ லாம்இடை யின்றிவ் வானநீர்
ஊற்றுஞ் செய்தி உரைத்திட வேண்டுங்கால்
மழையுங் காற்றும் பராசக்தி செய்கைகாண்
வாழ்க தாய்! என்று பாடுமென் வாணியே. 4

சொல்லி னுக்கெளி தாகவும் நின்றிடாள்
சொல்லை வேறிடஞ் செல்ல வழிவிடாள்;
அல்லி னுக்குட் பெருஞ்சுடர் காண்பவர்
அன்னை சக்தியின் மேனி நலங்கண்டார்.
கல்லி னுக்குள் அறிவொளி காணுங்கால்,
கால வெள்ளத் திலேநிலை காணுங்கால்,
புல்லி னில்வயி ரப்படை காணுங்கால்
பூத லத்தில் பராசக்தி தோன்றுமே! 5

20. சக்திக் கூத்து

ராகம்-பியாக்

பல்லவி
தகத்தகத்தகத் தகதகவென் றாடோமோ?-சிவ
சக்திசக்தி சக்தியென்று பாடோமோ? (தகத்)

சரணங்கள்
1. அகத்தகத் தகத்தினிலே உள்நின்றாள்-அவள்
அம்மையம்மை எம்மைநாடு பொய்வென்றாள்
தகத்தக நமக் கருள் புரிவாள் தாளொன்றே
சரண மென்று வாழ்த்திடுவோம் நாமென்றே.  (தகத்)

2. புகப்புகப் புக வின்பமடா போதெல்லாம்
புறத்தினிலே தள்ளிடுவாய் சூதெல்லாம்
குகைக்கு ளங்கே யிருக்குதடா தீபோலே-அது
குழந்தைகயதன் தாயடிக்குகீழ் சேய்போலே    (தகத்)

3. மிகத்தகைப்படு களியினிலே மெய்சோர-உள
வீரம்வந்து சோர்வை வென்று மைதேர
சகத்தினி லுள்ள மனிதரெல்லாம் நன்றுநன்றென-நாம்
சதிருடனே தாளம் இசை இரண்டுமொன்றென    (தகத்)

4. இந்திரனா ருலகினிலே நல்லின்பம்
இருக்கு தென்பார் அதனை யிங்கே கொண்டெய்தி,
மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம்-நல்ல
மதமுறவே அமுதநிலை கண்டெய்தித்(தகத்)

21. சக்தி

துன்ப மிலாத நிலையே சக்தி,
தூக்க மிலாக்கண் விழிப்பே சக்தி;
அன்பு கனிந்த கனிவே சக்தி,
ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி;
இன்ப முதிர்ந்த முதிர்வே சக்தி,
எண்ணத் திருக்கும் எரியயே சக்தி,
முன்புநிற் கின்ற தொழிலே சக்தி,
முக்தி நிலையின் முடிவே சக்தி. 1

சோம்பர் கெடுக்கும் துணிவே சக்தி,
சொல்லில் விளங்கும் சுடரே சக்தி;
தீம்பழந் தன்னில் சுவையே சக்தி,
தெய்வத்தை எண்ணும் நினைவே சக்தி;
பாம்பை அடிக்கும் படையே சக்தி;
பாட்டினில் வந்த களியே சக்தி;
சாம்பரைப் பூசி மலைமிசை வாழும்
சங்கரன் அன்புத் தழலே சக்தி.  2
 
வாழ்வு பெருக்கும் மமதியே சக்தி,
மாநிலம் காக்கும் மதியே சக்தி;
தாழ்வு தடுக்குஞ் சதிரே சக்தி,
சஞ்சலம் நீக்குந் தவமே சக்தி,
வீழ்வு தடுக்கும் விறலே சக்தி,
விண்ணை யளக்கும் விரிவே சக்தி;
ஊழ்வினை நீக்கும் உயர்வே சக்தி,
உள்ளத் தொளிரும் விளக்கே சக்தி. 3

22. வையம் முழுதும்

கண்ணிகள்
வையம் முழுதும் படைத்தளிக் கின்ற
மஹாசக்தி தன்புகழ் வாழ்த்து கின்றோம்;
செய்யும் வினைகள் அனைத்திலும் வெற்றி
சேர்ந்திட நல்லருள் செய்க வென்றே! 1

பூதங்கள் ஐந்தில் இருந்தெங்குங் கண்ணிற்
புலப்படும் சக்தியைப் போற்று கின்றோம்;
வேதங்கள் சொன்ன படிக்கு மனிதரை
மேன்மையுறச் செய்தல் வேண்டு மென்றே! 2
 
வேகம் கவர்ச்சி முதலிய பல்வினை
மேவிடும் சக்தியை மேவு கின்றோம்;
ஏக நிலையில் இருக்கும் அமிர்தத்தை
யாங்கள் அறிந்திட வேண்டு மென்றே! 3

உயிரெனத் தோன்றி உணவுகொண் டேவளர்ந்
தோங்கிடும் சக்தியை ஓதுகின்றோம்;
பயிரினைக் காக்கும் மழையென எங்களைப்
பாலித்து நித்தம் வளர்க்க வென்றே. 4

சித்தத்தி லேநின்று சேர்வ துணரும்
சிவசக்தி தன்புகழ் செப்பு கின்றோம்;
இத்தரை மீதினில் இன்பங்கள் யாவும்
எமக்குத் தெரிந்திடல் வேண்டு மென்றே. 5

மாறுத லின்றிப் பராசக்தி தன்புகழ்
வையமிசை நித்தம் பாடு கின்றோம்;
நூறு வயது புகழுடன் வாழ்ந்துயர்
நோக்கங்கள் பெற்றிட வேண்டு மென்றே. 6

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி என்றுரை செய்தி டுவோம்;
ஓம் சக்தி என்பவர் உண்மை கண்டார்;சுடர்
ஒண்மைகொண்டார்,உயிர் வண்மை கொண்டார். 7

23. சக்தி விளக்கம்

ஆதிப் பரம்பொருளின் ஊக்கம்-அதை
அன்னை எனப்பணிதல் ஆக்கம்;
சூதில்லை காணுமிந்த நாட்டீர்!மற்றத்
தொல்லை மதங்கள் செய்யும் தூக்கம். 1

மூலப் பழம்பொருளின் நாட்டம்-இந்த
மூன்று புவியுமதன் ஆட்டம்;
காலப் பெருங்கள்ததின் மீதே-எங்கள்
காளி நடமுலகக் கூட்டம்  2
 
காலை இளவெயிலின் காட்சி-அவள்
கண்ணொளி காட்டுகின்ற மாட்சி;
நீல விசும்பினிடை இரவில்-சுடர்
நேமி யனைத்துமவள் ஆட்சி.  3
 
நாரண னென்று பழவேதம்-சொல்லும்
நாயகன் சக்திதிருப் பாதம்;
சேரத் தவம் புரிந்து பெறுவார்-இங்கு
செல்வம் அறிவு சிவபோதம்.  4

ஆதி சிவனுடைய சக்தி-எங்கள்
அன்னை யருள்பெறுதல் முக்தி;
மீதி உயிரிருக்கும் போதே-அதை
வெல்லல் சுகத்தினுக்கு யுக்தி.  5

பண்டை விதியுடைய தேவி-வெள்ளைப்
பாரதி யன்னையருள் மேவி,
கண்ட பொருள்விளக்கும் நூல்கள்-பல
கற்றலில் லாதவனோர் பாவி.  6

மூர்த்திகள் மூன்று பொருள் ஒன்று;-அந்த
மூலப் பொருள் ஒளியின் குன்று;
நேர்த்தி திகழும் அந்த ஒளியை-அந்த
நேரமும் போற்று சக்தி என்று.  7

24.சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம்

ராகம்-பூபாளம்     தாளம்-சதுஸ்ர ஏகம்

கையைச், சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சாதனைகள் யாவினையுங் கூடும்-கையைச்
சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சக்தியுற்றுக் கல்வினையுஞ் சாடும். 1

கண்ணைச்,சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சக்தி வழியினையது காணும்-கண்ணைச்
சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சத்தியமும் நல்லருளும் பூணும்.  2

செவி, சக்தி தனக்கே கருவி யாக்கு-சிவ
சக்திசொலும் மொழியது கேட்கும்-செவி
சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சக்தி திருப் பாடலினை வேட்கும். 3

வாய், சக்தி தனக்கே கருவி யாக்கு-சிவ
சக்தி புகழினையது முழங்கும்-வாய்
சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சக்திநெறி யாவினையும் வழங்கும். 4

சிவ, சக்திதனை நாசி நித்தம் முகரும்-அதைச்
சக்தி தனக்கே கருவி யாக்கு-சிவ
சக்திதிருச் சுவையினை நுகரும்-சிவ
சக்தி தனக்கே எமது நாக்கு.  5

மெய்யைச்,சக்தி தனக்கே கருவி யாக்கு-சிவ
சக்திதருந் திறனதி லேறும்-மெய்யைச்
சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சாதலற்ற வழியினைத் தேறும்  6
 
கண்டம், சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சத்தமும் நல்லமுதைப் பாடும்-கண்டம்
சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சக்தியுடன் என் றும்உற வாடும்.  7

தோள், சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
தாரணியும் மேலுலகுந் தாங்கும்-தோள்
சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சக்தி பெற்று மேருவென ஓங்கும். 8

நெஞ்சம், சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சக்தியுற நித்தம் விரிவாகும்-நெஞ்சம்
சக்தி தனக்கே கருவி யாக்கு-அதைத்
தாக்கவரும் வாளொதுங்கிப் போகும். 9
 
சிவ, சக்தி தனக்கே எமது வயிறு-அது
சாம்பரையும் நல்லவுண வாக்கும்-சிவ
சக்தி தனக்கே எமது வயிறு-அது
சக்திபெற உடலினைக் காக்கும்.  10

இடை, சக்தி தனக்கே கருவி யாக்கு-நல்ல
சக்தியுள்ள சந்ததிகள் தோன்றும்-இடை
சக்தி தனக்கே கருவி யாக்கு-நின்தன்
சாதிமுற்றும் நல்லறத்தில் ஊன்றும். 11

கால், சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சாடியெழு கடலையுந் தாவும்-கால்
சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சஞ்சலமில் லாமலெங்கும் மேவும். 12

மனம், சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சஞ்சலங்கள் தீர்ந்தொருமை கூடும்-மனம்
சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சாத்துவிகத் தன்மையினைச் சூடும். 13

மனம், சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சக்தியற்ற சிந்தனைகள் தீரும்-மனம்
சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சாரும் நல்ல உறுதியும் சீரும்.  14

மனம், சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சக்திசக்தி சக்தியென்று பேசும்-மனம்
சக்தி தனக்கே கருவி யாக்கு-அதில்
சார்ந்திருக்கும் நல்லுறவும் தேசும். 15

மனம், சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சக்தி நுட்பம் யாவினையும் நாடும்-மனம்
சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சக்திசக்தி யென்றுகுதித் தாடும்.  16
 
மனம், சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சக்தியினை எத்திசையும் சேர்க்கும்-மனம்
சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
தான் விரும்வில் மாமலையைக் பேர்க்கும் 17

மனம், சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சந்ததமும் சக்திதனைச் சூழும்-மனம்
சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சாவுபெறும் தீவினையும் ஊழும்.  18

மனம், சக்தி தனக்கே கருவி யாக்கு-எதைக்
தான் விரும்பு னாலும்வந்து சேரும்-மனம்
சக்தி தனக்கே உரிமை யாக்கு-உடல்
தன்னிலுயர் சக்திவந்து சேரும்.  19

மனம், சக்தி தனக்கே கருவி யாக்கு-இந்தத்
தாரணியில் நூ றுவய தாகும்-மனம்
சக்தி தனக்கே கருவி யாக்கு-உன்னைச்
சாரவந்த நோயழிந்து போகும்.  20

மனம், சக்தி தனக்கே கருவி யாக்கு-தோள்
சக்திபெற்று நல்ல தொழில் செய்யும்-மனம்
சக்தி தனக்கே கருவி யாக்கு-எங்கும்
சக்தியருள் மாரிவந்து பெய்யும்.  21

மனம், சக்தி தனக்கே கருவி யாக்கு-சிவ
சக்தி நடையாவும் நன்கு பழகும்-மனம்
சக்தி தனக்கே கருவி யாக்கு-முகம்
சார்ந்திருக்கும் நல்லருளும் அழகும். 22

மனம், சக்தி தனக்கே கருவி யாக்கு-உயர்
சாத்திரங்கள் யாவும் நன்கு தெரியும்-மனம்
சக்தி தனக்கே கருவி யாக்கு-நல்ல
சத்திய விளக்குநித்தம் எரியும்  23

சித்தம், சக்தி தனக்கே உரிமை யாக்கு-நல்ல
தாளவகை சந்தவகை காட்டும்-சித்தம்
சக்தி தனக்கே உரிமை யாக்கு-அதில்
சாரும்நல்ல வார்த்தைகளும் பாட்டும். 24

சித்தம், சக்தி தனக்கே உரிமை யாக்கு-அது
சக்தியையெல்லோர்க்குமுணர்வுறுத்தும்-சித்தம்
சக்தி தனக்கே உரிமை யாக்கு-அது
சக்திபுகழ் திக்கனைத்தும் நிறுத்தும். 25
 
சித்தம், சக்தி தனக்கே உரிமை யாக்கு-அது
சக்திசக்தி யென்று குழலூதும்-சித்தம்
சக்தி தனக்கே உரிமை யாக்கு-அதில்
சார்வதில்லை அச்சமுடன் சூதும். 26

சித்தம், சக்தி தனக்கே உரிமை யாக்கு-அது
சக்தியென்று வீணைதனில் பேசும்-சித்தம்
சக்தி தனக்கே உரிமை யாக்கு-அதில்
சக்திபரி மளமிங்கு வீசும்.  27

சித்தம், சக்தி தனக்கே உரிமை யாக்கு-அது
சக்தியென்று தாளமிட்டு முழக்கும்-சித்தம்
சக்தி தனக்கே உரிமை யாக்கு-அது
சஞ்சலங்கள் யாவினையும் அழிக்கும் 28

சித்தம், சக்தி தனக்கே உரிமை யாக்கு-அது
சக்திவந்து கோட்டைகட்டி வாழும்-சித்தம்
சக்தி தனக்கே உரிமை யாக்கு-அது
சக்தியருட் சித்திரத்தில் ஆழும்  29
 
மதி, சக்தி தனக்கே உடைமை யாக்கு-அது
சங்கடங்கள் யானையும் உடைக்கும்-மதி
சக்தி தனக்கே உடைமை யாக்கு-அங்கு
சத்தியமும் நல்லறமும் கிடைக்கும். 30

மதி, சக்தி தனக்கே உடைமை யாக்கு-அது
சாரவரும் தீமைகளை விலக்கும்-மதி
சக்தி தனக்கே உடைமை யாக்கு-அது
சஞ்சலப் பிசாசுகளைக் கலக்கும்.  31

மதி, சக்தி தனக்கே உடைமை யாக்கு-அது
சக்தி செய்யும் விந்தைகளைத் தேடும்-மதி
சக்தி தனக்கே உடைமை யாக்கு-அது
சக்தியுறை விடங்களை நாடும்.  32

மதி, சக்தி தனக்கே உடைமை யாக்கு-அது
தர்க்கமெனுங் காட்டிலச்சம் நீங்கும்-மதி
சக்தி தனக்கே உடைமை யாக்கு-அதில்
தள்ளி விடும் பொய்ந்நெறியும் நீங்கும். 33

மதி, சக்தி தனக்கே உடைமை யாக்கு-அதில்
சஞ்சலத்தின் தீயவிருள் விலகும்-மதி
சக்தி தனக்கே உடைமை யாக்கு-அது
சக்தியொளி நித்தமுநின் றிலகும். 34

மதி, சக்தி தனக்கே உடைமை யாக்கு-அதில்
சார்வதில்லை ஐயமெனும் பாம்பு-மதி
சக்தி தனக்கே உடைமை யாக்கு-அங்கு
தான் முளைக்கும் முக்திவிதைக் காம்பு. 35

மதி, சக்தி தனக்கே அடிமை யாக்கு-அது
தாரணியில் அன்பு நிலை நாட்டும்-மதி
சக்தி தனக்கே அடிமை யாக்கு-அது
சர்வசிவ சக்தியினைக் காட்டும்.  36

மதி, சக்தி தனக்கே அடிமை யாக்கு-அது
சக்திதிரு வருளினைச் சேர்க்கும்-மதி
சக்தி தனக்கே அடிமை யாக்கு-அது
தாமதப்பொய்த் தீமைகளைப் பேர்க்கும் 37

மதி, சக்தி தனக்கே அடிமை யாக்கு-அது
சத்தியத்தின் வெல்கொடியை நாட்டும்-மதி
சக்தி தனக்கே அடிமை யாக்கு-அது
தாக்கவரும பொய்ப்புலியை ஓட்டும். 38

மதி, சக்தி தனக்கே அடிமை யாக்கு-அது
சத்தியநல் லிரவியைக் காட்டும்-மதி
சக்தி தனக்கே அடிமை யாக்கு-அதில்
சாரவரும் புயல்களை வாட்டும்.  39

மதி, சக்தி தனக்கே அடிமை யாக்கு-அது
சக்திவிர தத்தையென்றும் பூணும்-மதி
சத்திவர தத்தை யென்றுங் காத்தால்-சிவ
சக்திதரும் இன்பமும்நல் லூணும். 40

மதி, சக்தி தனக்கே அடிமை யாக்கு-தெளி
தந்தமுதப் பொய்கையென ஒளிரும்-மதி
சக்தி தனக்கே அடிமை யாக்கு-அது
சந்ததமும் இன்பமுற மிளிரும்.  41

அகம், சக்தி தனக்கே உடைமை யாக்கு-அது
தன்னையொரு சக்தியென்று தேரும்-அகம்
சக்தி தனக்கே உடைமை யாக்கு-அது
தாமதமும் ஆணவமும் தீரும்.  42

அகம், சக்தி தனக்கே உடைமை யாக்கு-அது
தன்னையவள் கோயிலென் றுகாணும்-அகம்
சக்தி தனக்கே உடைமை யாக்கு-அது
தன்னை யெண்ணித் துன்பமுற நாணும். 43

அகம், சக்தி தனக்கே உடைமை யாக்கு-அது
சக்தியெனும் கடலிலோர் திவலை-அகம்
சக்தி தனக்கே உடைமை யாக்கு-சிவ
சக்தியுண்டு நமக்கில்லை கவலை. 44

அகம், சக்தி தனக்கே உடைமை யாக்கு-அதில்
சக்திசிவ நாதநித்தம் ஒலிக்கும்-அகம்
சக்தி தனக்கே உடைமை யாக்கு-அது
சக்திதிரு மேனியொளி ஜ்வலிக்கும். 45

சிவ, சக்தி என்றும் வாழி! என்று பாடு-சிவ
சக்தி சக்தி என்றுகுதித் தாடு-சிவ
சக்தி என்றும் வாழி! என்று பாடு-சிவ
சக்திசக்தி என்றுவிளை யாடு.  46

25. சக்தி திருப்புகழ்

சக்தி சக்தி சக்தீ சக்தீ சக்தீ சக்தீ என்றோது;
சக்தி சக்தி சக்தீ என்பார்-சாகார் என்றே நின்றோது;

சக்தி சக்தி என்றே வாழ்தல்-சால்பாம் நம்மைச் சார்ந்தீரே!
சக்தி சக்தி என்றீ ராகில்-சாகா உண்மை சேர்ந்தீரே!

சக்தி சக்தி என்றால் சக்தி-தானே சேரும் கண்டீரே!
சக்தி சக்தி என்றால் வெற்றி-தானே சேரும் கண்டீரே!

சக்தி சக்தி என்றே செய்தால்-தானே செய்கை நேராகும்;
சக்தி சக்தி என்றால் அஃது-தானே முக்தி வேராகும்.

சக்தி சக்தி சக்தீ சக்தீ சக்தீ என்றே ஆடாமோ?
சக்தி சக்தி சக்தீ யென்றே-தாளங் கொட்டிப் பாடாமோ?

சக்தி சக்தி என்றால் துன்பம்-தானே தீரும் கண்டீரே!
சக்தி சக்தி என்றால் இன்பம்-தானே சேரும் கண்டீரே!

சக்தி சக்தி என்றால் செல்வம்- தானே ஊறும் கண்டீரோ?
சக்தி சக்தி என்றால் கல்வி-தானே தேறும் கண்டீரோ?

சக்தி சக்தி சக்தீ சக்தீ-சக்தீ சக்தீ வாழீ நீ!
சக்தி சக்தி சக்தீ சக்தீ-சக்தீ சக்தீ வாழீ நீ!

சக்தி சக்தி வாழீ என்றால்-சம்பத் தெல்லாம் நேராகும்;
சக்தி சக்தி என்றால் சக்தி-தாசன் என்றே பேராகும்.

 
மேலும் தெய்வப் பாடல்கள் »
temple news
26. சிவசக்தி புகழ் ராகம்-தன்யாசி    தாளம்-சதுஸ்ர ஏகம் ஓம், சக்திசக்தி சக்தியென்று ... மேலும்
 
temple news
51. வேய்ங் குழல் ராகம்-ஹிந்துஸ்தான் தோடி தாளம்-ஏகதாளம் எங்கிருந்து வருகுவதோ?-ஒலியாவர் செய்குவ தோ?-அடி ... மேலும்
 
temple news
1. அச்சமில்லை பண்டாரப் பாட்டு அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையேஇச்சகத்து ளொரெலாம் எதிர்த்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar