Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news சுய சரிதை
முதல் பக்கம் » பல்வகைப் பாடல்கள்
வசன கவிதை
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 ஜன
2012
03:01

1. காட்சி

முதற்கிளை : இன்பம்

1. இவ்வுலகம் இனியது இதிலுள்ள வான் இனிமையுடைத்து;
காற்றும் இனிது. தீ இனிது. நீர் இனிது. நிலம் இனிது.
ஞாயிறு நன்று; திங்களும் நன்று. வானத்துச் சுடர்களெல்லாம்
மிக இனியன. மழை இனிது. மின்னல் இனிது. இடி இனிது.
கடல் இனிது, மலை இனிது காடுநன்று. ஆறுகள் இனியன.
உலோகமும், மரமும், செடியும், கொடியும், மலரும், காயும், கனியும் இனியன.
பறவைகள் இனியன. ஊர்வனவும் நல்லன. விலங்குகளெல்லாம் இனியவை, நீர் வாழ்வனவும் நல்லன. மனிதர் மிகவும் இனியர். ஆண் நன்று. பெண் இனிது. குழந்தை இன்பம். இளமை இனிது. முதுமை நன்று. உயிர் நன்று. சாதல் இனிது.

2. உடல் நன்று. புலன்கள் மிகவும் இனியன. உயிர் சுவையுடையது.
மனம் தேன். அறிவு தேன். உணர்வு அமுதம். உணர்வே அமுதம். உணர்வு தெய்வம்.

3. மனம் தெய்வம். சித்தம் தெய்வம். உயிர் தெய்வம்.
காடு, மலை, அருவி, ஆறு, கடல், நிலம், நீர், காற்று, தீ, வான், ஞாயிறு, திங்கள், வானத்துச் சுடர்கள் -எல்லாம் தெய்வங்கள்.
உலோகங்கள், மரங்கள், செடிகள், விலங்குகள், பறவைகள், ஊர்வன, நீந்துவன, மனிதர்-இவை அமுதங்கள்.

4. இவ்வுலகம் ஒன்று. ஆண், பெண், மனிதர், தேவர், பாம்பு, பறவை, காற்று, கடல், உயிர், இறப்பு-இவையனைத்தும் ஒன்றே.  ஞாயிறு, வீட்டுச்சுவர், ஈ, மலை யருவி, குழல், கோமேதகம், -இவ் வனைத்தும் ஒன்றே. இன்பம், துன்பம், பாட்டு, வண்ணான், குருவி, மின்னல், பருத்தி, இஃதெல்லாம் ஒன்று. மூடன், புலவன், இரும்பு, வெட்டுக்கிளி-இவை ஒரு பொருள். வேதம், கடல்மீன், புயற்காற்று, மல்லிகை மலர்-இவை ஒரு பொருளின் பல தோற்றம். உள்ள தெல்லாம் ஒரே பொருள்; ஒன்று. இந்த ஒன்றின் பெயர்தான்; தானே; தெய்வம், தான் அமுதம், இறவாதது.

5. எல்லா உயிரும் இன்பமெய்துக. எல்லா உடலும் நோய் தீர்க. எல்லா உணர்வும் ஒன்றாதலுணர்க. தான் வாழ்க. அமுதம் எப்போதும் இன்ப மாகுக.

6. தெய்வங்களை வாழ்த்துகின்றோம். தெய்வங்கள் இன்ப மெய்துக. அவை வாழ்க. அவை வெல்க. தெய்வங்களே!
என்றும் விளங்குவீர்; என்றும் இன்ப மெய்துவீர்; என்றும் வாழ்வீர்; என்றும் அருள் புரிவீர். எவற்றையும் காப்பீர். உமக்கு நன்று தெய்வங்களே!
எம்மை உண்பீர், எமக்கு உண வாவீர், உலகத்தை உண்பீர், உலகத்துக்கு உணவாவீர். உமக்கு நன்று. தெய்வங்களே!
காத்தல் இனிது, காக்கப் படுவதும் இனிது. அழித்தல் நன்று, அழிக்கப்படுதலும் நன்று. உண்பது நன்று, உண்ணப் படுதலும் நன்று.
சுவை நன்று, உயிர் நன்று, நன்று, நன்று,

7. உணர்வே நீ வாழ்க. நீ ஒன்று, நீ ஒளி. நீ ஒன்று, நீ பல. நீ நட்பு, நீ பகை. உள்ளதும், இல்லாததும் நீ. அறிவதும் அறியாததும் நீ.
நன்றும், தீதும் நீ, நீ அமுதம், நீ சுவை. நீ நன்று. நீ இன்பம்.

இரண்டாங் கிளை: புகழ்

ஞாயிறு

1. ஒளி தருவது யாது? தீராத இளமையுடையது யாது?
வெய்யவன் யாவன்? இன்பம் எவனுடையது? மழை எவன் தருகின்றான்? கண் எவனுடையது? உணி எவன் தருகின்றான்?
புகழ் எவன் தருகின்றான்? புகழ் எவனுக்குரியது? அறிவு எதுபோல் சுடரும்? அறிவுத் தெய்வத்தின் கோயில் எது? ஞாயிறு. அது நன்று.

2. நீ ஒளி , நீ சுடர், நீ விளக்கம், நீ காட்சி, மின்னல், இரத்தினம், கனல், தீக் கொழுந்து-இவையெல்லாம் நினது திகழ்ச்சி.
கண் நினது வீடு.
புகழ், வீரம்-இவை நினது லீலை. அறிவு நின் குறி. அறிவின் குறி நீ, நீ சுடுகின்றாய், வாழ்க. நீ காட்டுகின்றாய், வாழ்க.
உயிர் துருகின்றாய், உடல் தருகின்றாய், வளர்க்கின்றாய், மாய்க்கின்றாய், நீர் தருகின்றாய், காற்றை வீசுகின்றாய், வாழ்க.

3. வைகறையின் செம்மை இனிது. மலர்கள் போல நகைக்கும் உஷை வாழ்க!
உஷையை நாங்கள் தொழுகின்றோம். அவள் திரு. அவள்
விழிப்புத் தருகின்றாள். தெளிவு தருகின்றாள். உயி தருகின்றாள். ஊக்கந் தருகின்றாள். அழகு தருகின்றாள், கவிதை தருகின்றாள்,
அவள் வாழ்க. அவள் தேன் சித்த வண்டு அவளை விரும்புகின்றது. அவள்
அமுதம், அவள் இறப்பதில்லை. வலிமையுடன் கலக்கின்றாள். வலிமைதான் அழகுடன் கலக்கும், இனிமை மிகவும் பெரிது.
வட மேருவிலே பலவாகத் தொடர்ந்து தருவாள். வானடியைச் சூழ நகைத்துத் திரிவாள். அவளுடைய நகைப்புக்கள் வாழ்க.
தெற்கே நமக்கு ஒருத்தியாக வருகின்றாள், அன்பு மிகுதியால், ஒன்று பலவினும் இனி தன்றோ? வைகறை நன்று. அதனை வாழ்த்துகின்றோம்.

4. நீ சுடுகின்றாய். நீ வருத்தந் தருகின்றாய். நீ விடாய் தருகின்றாய். சோர்வு தருகின்றாய். பசி தருகின்றாய். இவை இனியன.
நீ கடல்நீரை வற்றடிக்கிறாய். இனியமழை தருகின்றாய். வான வெளியிலே விளக்கேற்றுகிறாய். இருளைத் தின்று விடுகின்றாய். நீ வாழ்க.

5. ஞாயிறே, இருளை என்ன செய்துவிட்டாய்? ஓட்டினாயா? கொன்றாயா? விழுங்கிவிட்டாயா? கட்டி முத்தமிட்டு நின் கதிர்களாகிய கைகளால் மறைத்துவிட்டாயா? இருள் நினக்குப் பகையா? இருள் நின் உணவுப் பொருளா? அது நின் காதலியா? இரவெல்லாம் நின்னைக் காணாத மயக்கத்தால் இருண்டிருந்ததா? நின்னைக் கண்டவுடன் நின்னொளி தானுங்கொண்டு நின்னைக் கலந்துவிட்டதா?நீங்கள் இருவரும் ஒருதாய் வயிற்றுக் குழந்தைகளா? முன்னும் பின்னுமாக வந்து உலகத்தைக் காக்கும்படி உங்கள் தாய் ஏவி யிருக்கிறாளா? உங்களுக்கு மரண மில்லையா? நீங்கள் அமுதமா? உங்களைப் புகழ்கின்றேன், ஞாயிறே, உன்னைப் புகழ்கின்றேன்.

6. ஒளியே, நீ யார்? ஞாயிற்றின் மகளா? அன்று, நீ ஞாயிற்றின் உயிர். அதன் தெய்வம்.
ஞாயிற்றினிடத்தே நின்னைத்தான் புகழ்கின்றோம். ஞாயிற்றின் வடிவம் உடல் நீ உயர் ஒளியே நீ எப்போது தோன்றியான்?
நின்னை யாவர் படைத்தனர்; ஒளியே நீ யார்? உனதியல்பு யாது?
நீ அறிவின் மகள் போலும். அறிவுதான் தூங்கிக்கிடக்கும். தெளிவு நீ போலும். அறிவின் உடல் போலும்.
ஒளியே நினக்கு வானவெளி எத்தனை நாட்வழக்கம்? உனக்கு அதனிடத்தே இவ்வகைப் பட்ட அன்பு யாது பற்றியது, அதனுடன் நீ எப்படி இரண்டறக் கலக்கிறாய்? உங்களையெல்லாம் படைத்வள் வித்தைக்காரி. அவள் மோஹினி. மாயக்காரி. அவளைத் தொழுகின்றோம். ஒளியே, வாழ்க!

7. ஞாயிறே! நின்னிடத்து ஒளி எங்ஙனம் நிற்கின்றது? நீ அதனை உமிழ்கின்றாயா? அது நின்னைத் தின்னுகிறதா?
அன்றி, ஒளி தவிர நீ வேறோன்றுமில்லையா?
விளக்குத்திரி காற்றாகிச் சுடர் தருகின்றது. காற்றுக்கும் சுடருக்கும் எவ்வகை உறவு? காற்றின் வடிவே திரியென்றறிவோம்.
ஒளியின் வடிவே காற்றுப் போலும். ஒளியே நீ இனிமை.

8. ஒளிக்கும் வெம்மைக்கும் எவ்வகை உறவு? வெம்மை யேற ஒளி தோன்றும். வெம்மையைத் தொழுகின்றோம்.
வெம்மை ஒளியின் தாய். ஒளியின் முன்னுருவம்.
வெம்மையே, நீ தீ. நீ தான் வீரத் தெய்வம். தீ தான் ஞாயிறு.
தீயின் இயல்பே ஒளி. தீ எரிக. அதனிடத்தே நெய் பொழிகின்றோம். தீ எரிக. அதனிடத்தே தசை பொழிகின்றோம்.
தீ எரிக அதனிடத்தே செந்நீர் பொழிகின்றோம் தீ எரிக. அதற்கு வேள்வி செய்கின்றோம். தீ எரிக.
அறத் தீ, அறிவுத் தீ, உயிர்த் தீ, விரதத் தீ, வேள்வித் தீ, சினத் தீ, பகைமைத் தீ, கொடுமைத் தீ-இவை யனைத்தையும் தொழுகின்றோம்.
இவற்றைக் காக்கின்றோம் இவற்றை ஆளுகின்றோம். தீயே நீ எமது உயிரின் தோழன். உன்னை வாழ்த்துகின்றோம்.
நின்னைப்போல, எமதுயிர் நூறாண்டு வெம்மையும்-சுடரும் தருக, தீயே நின்னைப்போல, எமதுள்ளம் சுடர்விடுக.
தீயே, நின்னைப்போல எமதறிவு கனலுக.
ஞாயிற்றினிடத்தே , தீயே, நின்னைத்தான் போற்றுகிறோம். ஞாயிற்றுத் தெய்வமே, நின்னைப் புகழ்கின்றோம், நினதொளி நன்று.
நின் செயல் நன்று. நீ நன்று.

9. வானவெளி என்னும் பெண்ணை ஒளியென்னும் தேவன்
மணந்திருக்கின்றான் அவர்களுடைய கூட்டம் இனிது. இதனைக் காற்றுத்தேவன் கண்டான். காற்று வலிமையுடையவன்.
இவன் வாவெளியைக் கலக்க விரும்பினான். ஒளியை விரும்புவதுபோல வானவெளி இவனை விரும்பவில்லை. இவள் தனது பெருமையை ஊதிப் பறையடிக்கின்றான்.
வெளியும் ஒளியும் இரண்டு உயிர்கள் கலப்பதுபோல் கலந்தன காற்றுத் தேவன் பொறாமை கொண்டான்.
அவன் அமைதியின்றி உழலுகிறான் அவன் சீறுகின்றான் புடைக்கின்றான். குமுறுகின்றான். ஓலமிடுகின்றான்.
சுழலுகின்றான். துடிக்கின்றான் ஓடுகின்றான். எழுகின்றான். நிலையின்றிக் கலங்குகிறான். வெளியும் ஒளியும் மோனத்திலே கலந்து நகை செய்கின்றன. காற்றுத் தேவன் வலிமையுடையவன். அவன் புகழ் பெரிது அப் புகர் நன்று. ஆனால் வானவெளியும் ஒளியும் அவனிலும் சிறந்தன.
அவை மோனத்தில் கலந்து நித்தம் இன்புறுவன. அவை
வெற்றியுடையன. ஞாயிறே, நீதான் ஒளித்தெய்வம். நின்னையே வெளிப் பெண் நன்கு காதல் செய்கிறாள். உங்கள் கூட்டம் மிக இனிது. நீவிர் வாழ்க.

10. ஞாயிறே, நின் முகத்தைப் பார்த்த பொருளெல்லாம் ஒளி பெறுகின்றது.
பூமி, சந்திரன், செவ்வாய், புதன், சனி, வெள்ளி, வியாழன், யுரேனஸ், நெப்த்யூன் முதலிய பல நூறு வீடுகள்-இவை எல்லாம் நின் கதிர்கள் பட்ட மாத்திரத்திலே ஒளியுற நகை செய்கின்றன.
தீப்பந்திலிருந்து பொறிகள் வீசுவது போல இவையெல்லாம் ஞாயிற்றிலிருந்து வெடித்து வெளிப்பட்டன வென்பர்.
இவற்றைக் காலம் என்னும் கள்வன் மருவினான். இவை ஒளி குன்றிப் போயின; ஒளி யிழந்தன வல்ல; குறைந்த ஒளி யுடையன.
ஒளியற்ற பொருள் சகத்திலே யில்லை. இருளென்பது குறைந்த ஒளி.
செவ்வாய், புதன் முதலிய பெண்கள் ஞாயிற்றை வட்டமிடுகின்றன. இவை தமது தந்தைமீது காதல் செலுத்துகின்றன. அவன் மந்திரத்திலே கட்டுண்டவரை கடவாது சுழல்கின்றன. அவனுடைய சக்தியெல்லையை என்றும் கடந்து செல்லமாட்டா.
அவன் எப்போதும் இவற்றை நோக்கி யிருக்கின்றான். அவனுடைய ஒளிய முகத்தில் உடல் முழுதும் நனையும் பொருட்டாகவே இவை உருளுகின்றன. அவனொளியை இவை மலரிலும், நீரிலும், காற்றிலும் பிடித்து வைத்துக்கொள்ளும்.
ஞாயிறு மிகச் சிறந்த தேவன். அவன் கைப்பட்ட இடமெல்லாம் உயிருண்டாகும். அவனையே மலர் விரும்புகின்றது.
இலைகள் அவனுடைய அழகிலே யோகமெய்தி யிருக்கின்றன. அவனை நீரும் நிலமும் காற்றும், உகந்து களியுறும்.
அவனை வான் கவ்விக்கொள்ளும். அவனுக்கு மற்றெல்லாத் தேவரும் பணி செய்வர். அவன் புகழைப் பாடுவோம். அவன் புகழ் இனிது.

11. புலவர்களே, அறிவுப் பொருள்களே, உயிர்களே, பூதங்களே, சத்திகளே, எல்லோரும் வருவீர். ஞாயிற்றைத் துதிப்போம், வாருங்கள்.
அவன் நமக்கெல்லாம் துணை. அவன் மழை தருகின்றான். மழை நன்று. மழைத் தெய்வத்தை வாழ்த்துகின்றோம்.
ஞாயிறு வித்தை காட்டுகின்றான். கடல் நீரைக் காற்றாக்கி மேலேகொண்டு போகிறான் அதனை மீளவும் நீராக்கும்படி காற்றை ஏவுகின்றான்.
மழை இனிமையுறப் பெய்கின்றது. மழை பாடுகின்றது. அது பலகோடி தந்திகளுடையதோர் இசைக்கருவி.
வானத்திலிருந்து அமுதவயிரக்கோல்கள் விழுகின்றன.
பூமிப்பெண் விடாய் தீர்கிறாள்; குளிர்ச்சி பெறுகின்றாள்; வெப்பத்தால் தண்மையும், தண்மையால் வெப்பமும் விளைகின்றன,
அனைத்தும் ஒன்றாதலால். வெப்பம் தவம். தண்மை யோகம். வெப்பம் ஆண். தண்மை பெண். வெப்பம் வலியது. தண்மை இனிது.
ஆணிலும் பெண் சிறந்ததன்றோ. நாம் வெம்மைத் தெய்வத்தைப் புகழ்கின்றோம். அது வாழ்க.

12. நாம் வெம்மையைப் புகழ்கின்றோம். வெம்மைத் தெய்வமே, ஞாயிறே, ஒளிக்குன்றே, அமுதமாகிய உயிரின் உலகமாகிய உடலிலே மீன்களாகத் தோன்றும் விழிகளின் நாயகமே!
பூமியாகிய பெண்ணின் தந்தையாகிய காதலே, வலிமையின் ஊற்றே, ஒளிமழையே, உயிர்க்கடலே!
சிவனென்னும் வேடன், சக்தியென்னும் குறத்தியை உலகமென்னும் புனங் காக்கச் சொல்லிவைத்து விட்டுப்போன விளக்கே!
கண்ணனென்னும் கள்வன் அறிவென்னும் தன்முகத்தை மூடிவைத்திருக்கும் ஒளியென்னும் திரையே, ஞாயிறே, நின்னைப் பரவுகின்றோம்,
மழையும் நின் மகள்; மண்ணும் நின் மகள்; காற்றும் கடலும் கனலும் நின் மக்கள்; வெளி நின் காதலி;இடியும் மின்னலும் நினது வேடிக்கை.
நீ தேவர்களுக்குத் தலைவன். நின்னைப் புகழ்கின்றோம்.
தேவர்களெல்லாம் ஒன்றே. காண்பன வெல்லாம் அவருடல். கருதுவன அவருயிர். அவர்களுடைய தாய் அமுதம். அமுதமே தெய்வம்.
அமுதமே மெய்யொளி. அஃது ஆத்மா. அதனைப் புகழ்கின்றோம். ஞாயிற்றின் புகழ் பேசுதல் நன்று.

13. மழை பெய்கிறது. காற்றடிக்கின்றது. இடி குமுறுகின்றது. மின்னல் வெட்டுகின்றது.
புலவர்களே, மின்னலைப் பாடுவோம் வாருங்கள். மின்னல் ஒளித்தெய்வத்தின் ஒரு லீலை. ஒளித்தெய்வத்தின் ஒரு தோற்றம்.
அதனை யவனர் வணங்கி ஒளி பெற்றனர். மின்னலைத் தொழுகின்றோம். அது நம்மறிவை ஒளியுறச் செய்க. மேகக் குழந்தைகள் மின்னற்பூச் சொரிகின்றன. மின்சக்தி இல்லாத இடமில்லை. எல்லாத் தெய்வங்களும் அங்ஙகமே. கருங்கல்லிலே, வெண்மணலிலே பச்சை இலையிலே செம்மலரிலே நீல மேகத்திலே, காற்றிலே, வரையிலே-எங்கும் மின்சக்தி உறங்கிக் கிடக்கின்றது அதனை போற்றுகின்றோம்.
நமது விழிகளிலே மின்னல் பிறந்திடுக. நமது நெஞ்சிலே மின்னல் விசிறிப் பாய்க நமது வலக்கையிலே மின்னல் தோன்றுக.
நமது பாட்டு மின்னலுடைத்தாகுக. நமது வாக்கு மின்போல் அடித்திடுக. மின் மெலியதைக் கொல்லும்; வலியதிலே வலிமை சேர்க்கும்.
அது நம் வலிமையை வளர்த்திடுக.
ஒளியை, மின்னலை, சுடரை, மணியை ஞாயிற்றை, திங்களை, வானத்து வீடுகளை, மீன்களை-ஒளியுடைய அனைத்தையும் வாழ்த்துகின்றோம்.
அனைத்தையும் வாழ்த்துகின்றோம். ஞாயிற்றை வாழ்த்துகின்றோம்.

2. சக்தி
 
1. சக்தி வெள்ளத்திலே ஞாயிறு ஓர் குமிழியாம். சக்திப் பொய்கையிலே ஞாயிறு ஒரு மலர் சக்தி அநந்தம். எல்லையற்றது.
முடிவற்றது; அசையாமையில் அசைவு காட்டுவது.
சக்தி அடிப்பது, துரத்துவது, கூட்டுவது, பிணைப்பது, கலப்பது, உதறுவது, புடைப்பது, வீசுவது, சுழற்றுவது, கட்டுவது, சிதறடிப்பது,
தூற்றுவது, ஊதிவிடுவது, நிறுத்துவது, ஓட்டுவது, ஒன்றாக்குவது, பலவாக்குவது,
சக்தி குளிர் செய்வது, அனல் தருவது, குதுகுதுப்புத் தருவது, குதூஹலந் தருவது. நோவு தீர்ப்பது, இயல்பு தருவது.
இயல்பு மாற்றுவது, சோர்வு தருவது, ஊக்கந் தருவது. எழுச்சி தருவது, கிளர்ச்சி தருவது, மலர்விப்பது, புளகஞ் செய்வது, கொல்வது,
உயிர் தருவது. சக்தி மகிழ்ச்சி தருவது, சினந் தருவது, வெறுப்புத் தருவது, உவப்புத் தருவது. பகைமை தருவது. காதல் மூட்டுவது. உறுதி தருவது.
அச்சந் தருவது, கொதிப்புத் தருவதுன. ஆற்றுவது. சக்தி முகர்வது, சுவைப்பது, தீண்டுவது, கேட்பது, காண்பது, சக்தி நினைப்பது,
ஆராய்வது, கணிப்பது, தீர்மானஞ்செய்வது. கனாக்காண்பது, கற்பனை புரிவது, தேடுவது சுழல்வது, பற்றிநிற்பது, எண்ணமிடுவது, பகுத்தறிவது.
சக்திமயக்கந் தருவது, தெளிவு தருவது, சக்தி உணர்வது. பிரமன் மகள், கண்ணன் தங்கை, சிவன் மனைவி, கண்ணன் மனைவி,
சிவன் மகள், பிரமன் தங்கை. பிரமனுக்கும் கண்ணனுக்கும் சிவனுக்கும் தாய்.
சக்தி முதற் பொருள். பொருளில்லாப் பொருளின் விளைவில்லா விளைவு.
சக்திக் கடலிலே ஞாயிறு ஓர் நுரை; சக்தி வீணையிலே ஞாயிறு ஒரு வீடு; ஒரு ஸ்வர ஸ்தானம்.
சக்திக் கூத்திலே ஒளி ஒரு தாளம். சக்தியின் கலைகளிலே ஒளி யொன்று. சக்தி வாழ்க.

2. காக்கை கத்துகிறது. ஞாயிறு வையக மாகிய கழனியில் வயிர வொளியாகிய நீர் பாய்ச்சுகிறது. அதனை மேகங்கள் வந்து மறைக்கின்றன.
அஃது மேகங்களை ஊடுருவிச்செல்லுகின்றது. மேகமாகிய சல்லடையில் ஒளியாகிய புலனை வடிகட்டும் போது, மண்டி கீழும், தெளிவு மேலுமாக நிற்கின்றன. கோழி கூவுகின்றது. எறும்பு ஊர்ந்து செல்கின்றது. ஈ பறக்கின்றது.
இளைஞன் சித்திரத்திலே கருத்துச் செலுத்துகிறான். இவையனைத்தும் மஹா சக்தியின் தொழில். அவள்நம்மைக் கர்ம யோகத்தில் நாட்டுக. நமக்குச் செய்கை இயல்பாகுக. ரசமுள்ள செய்கை, இன்பமுடைய செய்கை, வலிய செய்கை, சலிப்பில்லாத செய்கை, விளையும் செய்கை, பரவும் செய்கை, கூடிவரும் செய்கை, இறுதியற்ற செய்கை, நமக்கு மஹாசக்தி அருள் செய்க.
கவிதை, காவல், ஊட்டுதல், வளர்த்தல், மாசெடுத்தல், நலந்தருதல், ஒளிபெய்தல்-இச்செயல்கள் நமக்கு மஹாசக்தி அருள் புரிக.
அன்புநீர் பாய்ச்சி, அறவென்னும் ஏருழுது, சாத்திரங்களை போக்கி, வேதப்பயிர் செய்து, இன்பப் பயனறிந்து தின்பதற்கு மஹாசக்தியின் துணை வேண்டுகின்றோம். அதற்கு அவள் தருக.

3. இருள் வந்தது, ஆந்தைகள் மகிழ்ந்தன.
காட்டிலே காதலனை நாடிச் சென்ற ஒரு பெண் தனியே கலங்கிப் புலம்பினாள்.
ஒளி வந்ததது;காதலன் வந்தான். பெண் மகிழ்ந்தாள்.
நாம் அச்சங் கொண்டோம்; தாய் அதனை நீக்கி உறுதி தந்தாள். நாம் துயர் கொண்டோம். தாய் அதை மாற்றிக் களிப்புத் தந்தாள்.
குனிந்த தலையை நிமிர்த்தினாள்; சோர்ந்த விழியில் ஒளி
சேர்த்தாள்; கலங்கிய நெஞ்சிலே தெளிவு வைத்தாள்; இருண்ட மதியிலே ஒளி கொடுத்தாள். மஹா சக்தி வாழ்க

4. மண்ணிலே வேலி போடலாம். வானத்திலே வேலி போடலாமா? என்றான் ராம கிருஷ்ண முனி.
ஜடத்தைக் கட்டலாம். சக்தியைக் கட்டலாமா? உடலைக் கட்டலாம். உயிரைக் கட்டலாமா?
என்னிடத்தே சக்தி எனதுயிரிலும் உள்ளத்திலும் நிற்கின்றாள். சக்திக்கு அநந்தமான கோயில்கள் வேண்டும்.
தொடக்கமும் முடிவுமில்லாத காலத்திலே நிமிஷந்தோறும் அவளுக்குப் புதிய கோயில்கள் வேண்டும். இந்த அநந்தமான கோயில்களிலே ஒன்றுக்கு நான் என்று பெயர். இதனை ஓயாமல் புதுப்பித்துக்கொண்டிருந்தால் சக்தி இதில் இருப்பாள். இது பழமைப்பட்டுப் போனவுடன், இதை விட்டுவிடுவாள். இப்போது அவள் என்னுள்ளே நிறைந்திருக்கின்றாள்.
இப்போது எனதுயிரிலே வேகமும் நிறைவும் பொருந்தியிருக்கின்றன. இப்போது எனதுடலிலே சுகமும் வலிமையும் அமைந்திருக்கின்றன. இப்போது என்னுள்ளத்திலே தெளிவு நிலவிடுகின்றது. இது எனக்குப் போதும்.
சென்றது கருத மாட்டேன். நாளைச் சேர்வது நிக்கமாட்டேன். இப்போது என்னுள்ளே சக்தி கொலுவீற்றிருக்கின்றாள். அவள் நீடுழி வாழ்க.
அவளைப் போற்றுகின்றேன், புகழ்கின்றேன். வாய் ஓயாமல் வாழ்த்துகின்றேன்.

5. மண்ணிலே வேலி போடலாம். வானத்திலே வேலி போடலாமா? போடலாம். மண்ணிலும் வானந்தானே நிரம்பி யிருக்கின்றது?
மண்ணைக் கட்டினால அதிலுள்ள வானத்தைக் காட்டியதாகாதா?
உடலைக் கட்டு, உயிரைக் கட்டலாம். உயிரைக் கட்டு உள்ளத்தைக் கட்டலாம். உள்ளத்தைக் கட்டு. சக்தியை கட்டலாம்.
அநந்த சக்திக்கு கட்டுப்படுவதில் வருத்த மில்லை.
என் முன்னே பஞ்சுத் தலையணை கிடக்கிறது. அதற்கு ஒரு வடிவம். ஓரளவு, ஒரு நியமம் ஏற்பட்டிருக்கின்றது. இந்த நியமத்தை, அழியாதபடி, சக்தி பின்னே நின்று காத்துக்கொண்டிருக்கிறாள்.
மனித ஜாதி இருக்குமளவும் இதே தலையணை அழிவெய்தாதபடி காக்கலாம்.
அதனை அடிக்கடி புதுப்பித்தக்கொண்டிருந்தால், அந்த வடிவத்திலேசக்தி நீடித்து நிற்கும். புதுப்பிக்கா விட்டால் அவ்வடிவம்மாறும்.
அழுக்குத் தலையணை; ஒட்டைத் தலையணை, பழைய தலையணை- அதிலுள்ள பஞ்சை யெடுத்துப் புதிய மெத்தையிலே போடு.
மேலுறையைக் கந்தையென்று வெளியே எறி. அந்தவடிவம் அழிந்துவிட்டது.
வடிவத்தைக் காத்தால், சக்தியைக் காக்கலாம்; அதாவது சக்தியை, அவ்வடிவத்திலே காக்கலாம்; வடிவம் மாறினும் சக்தி மாறுவதில்லை.
எங்கும், எதனிலும், எப்போதும், எல்லாவிதத் தொழில்களும் காட்டுவது சக்தி, வடிவத்தைக்காப்பது நன்று, சக்தியின் பொருட்டாக.
சக்தியைப் போற்றுதல் நன்று. வடிவத்தைக் காக்குமாறு, ஆனால் வடிவத்தை மாத்திரம் போற்றுவார் சக்தியை இழந்து விடுவார்.

6. பாம்பு பிடாரன் குழலூதுகின்றான்.
இனிய இசை சோகமுடையது என்பது கேட்டுள்ளோம். ஆனால், இப் பிடாரன் ஒலிக்கும் இசை மிகவும் இனியதாயினும் சோக ரசந் தவிர்ந்தது.
இஃதோர் பண்டிதன் தர்க்கிப்பது போலிருக்கின்றது.
ஒரு நாவலன் பொருள் நிறைந்த சிறியசிறிய வாக்கியங்களை அடுக்கிக் கொண்டு போவது போலிக்கிறது.
இந்தப் பிடாரன் என்ன வாதாடுகிறான்?

தான தந்தத் தான தந்தத் தா-தனத்
தான தந்தன தான தந்தன தா-
தந்தனத்தன தந்தனத்தன தா
அவ்விதமானப் பல வகைகளில் மாற்றிச் சுருள் சுருளாக வாசித்துக் கொண்டு போகிறான். இதற்குப் பொருளென்ன?
ஒரு குழந்தை இதற்குப் பின்வருமாறு பொருள் சொல்லலாயிற்று:-
காளிக்குப் பூச்சூட்டினேன், அதைக் கழுதையென்று தின்ன வந்ததே.
பராசக்தியின் பொருட்டு இவ்வுடல் கட்டினேன். அதைப் பாவத்தால் விளைந்த நோய் தின்ன வந்தது.
பராசக்தியைச் சரணடைந்தேன். நோய் மறைந்துவிட்டது. பராசக்தி ஒளியேறி என் அகத்திலே விளங்கலாயினள். அவள் வாழ்க.

7. பாம்புப் பிடாரன் குழலூதுகின்றான். குழலிலே இசை பிறந்ததா? தொளையிலே பிறந்ததா? பாம்புப் பிடாரன் மூச்சிலே பிறந்ததா?
அவனுள்ளத்திலே பிறந்தது; குழலிலே வெளிப்பட்டது.
உள்ளம் தனியே ஒலிக்காது. குழல் தனியே இசை புரியாது. உள்ளம் குழலிலே ஒட்டாது. உள்ளம் மூச்சிலே ஒட்டும்.
மூச்சு குழலிலே ஒட்டும். குழல் பாடும். இஃது சக்தியின் லீலை.
அவள் உள்ளத்திலே பாடுகிறாள். அது குழலின் தொளையிலே கேட்கிறது.
பொருந்தாத பொருள்களைப் பொருத்தி வைத்து அதிலே இசை யுண்டாக்குதல்-சக்தி.
தொம்பப் பிள்ளைகள் பிச்சைக்குக் கத்துகின்றன. பிடாரன் குழலையும் தொம்பக் குழந்தைகளின் குரலையும் யார் சுருதி சேர்த்து விட்டது? சக்தி.
ஜாரிகை வேணும்; ஜரிகை? என்றொருவன் கத்திக்கொண்டு போகிறான். அதே சுருதியில். ஆ!பொருள் கண்டு கொண்டேன்.
பிடாரன் உயிரிலும், தொம்பக் குழந்தைகளின் உயிரிலும் ஜரிகைக்காரன் உயிரிலும் ஒரே சக்தி விளையாடுகின்றது.
கருவி பல. பாணன் ஒருவன். தோற்றம் பல. சக்தி ஒன்று அஃது வாழ்க.

8. பராசக்தியைப் பாடுகின்றோம். இவள் எப்படி உண்டாயினாள் அதுதான் தெரியவில்லை: இவள்தானேபிறந்த தாய் தான் என்ற பரம் பொருளினிடத்தே. இவள் எதிலிருந்து தோன்றினாள்? தான் என்ற பரம் பொருளிலிருந்து. எப்படித் தோன்றினாள்? தெரியாது.
படைப்பு நமது கண்ணுக்குத் தெரியாது; அறிவுக்கும் தெரியாது.
சாவு நமது கண்ணுக்குத் தெரியும்; அறிவுக்கும் தெரியாது.
வாழ்க்கை நமது கண்ணுக்குத் தெரியும்; அறிவுக்கும் தெரியும். வாழ்க்கையாவது சக்தியைப் போற்றுதல்; இதன் பயன் இன்பமெய்தல்.
உள்ளம் தெளிந்திருக்க; உயிர் வேகமும் சூடும் உடையதாக; உடல் அமைதியும் வலிமையும் பெற்றிருக்க,
மஹா சக்தியின் அருள் பெறுதலே வாழ்தல்; நாம் வாழ்கின்றோம். நம்மை வாழ்வுறச் செய்த மஹா சக்தியை மீட்டும் வாழ்த்துகின்றோம்.

3. காற்று
 
1. ஒரு வீட்டு மேடையிலே ஒரு பந்தல். ஓலைப் பந்தல், தென்னோலை.
குறுக்கும் நெடுக்கமாக ஏழெட்டு மூங்கிற் கழிகளைச் சாதாரணக் கயிற்றால் கட்டி மேலே தென்னங்கிடுகுகளை விரித்திருக்கிறது.
மூங்கிற் கழியிலே கொஞ்சம் மிச்சக் கயிறு தொங்குகிறது.
ஒரு சாண் கயிறு இந்தக் கயிறு. ஒரு நாள் சுகமாக ஊசலாடிக் கொண்டிருந்தது. பார்த்தால் துளிகூடக் கவலை இருப்பதாகத் தெரியவில்லை.
சில சமயங்களில் அசையாமல் உம் மென்றிருக்கும். கூப்பிட்டாற்கூட ஏனென்று கேட்காது.
இன்று அப்படியில்லை குஷால் வழியிலிருந்தது.
எனக்கும் இந்தக் கயிற்றுக்கும் ஸ்நேஹம். நாங்கள் அடிக்கடி வார்த்தை சொல்லிக் கொள்வதுண்டு.
கயிற்றினிடத்தில் பேசினால் அது மறுமொழி சொல்லுமா? பேசிப்பார், மறுமொழி கிடைக்கிறதா இல்லையா என்பதை?
ஆனால் அது சந்தோஷமாக இருக்கும் சமயம் பார்த்து வார்த்தை சொல்ல வேண்டும். இல்லா விட்டால், முகத்தைத் தூக்கிக் கொண்டு சும்மா இருந்துவிடும், பெண்களைப்போல.
எது எப்படியிருந்தாலும், இந்த வீட்டுக் கயிறு பேசும். அதில் சந்தேகமே யில்லை. ஒரு கயிறா சொன்னேன்? இரண்டு கயிறு உண்டு.
ஒன்று ஒரு சாண்; மற்றொன்று முக்கால் சாண்.
ஒன்று ஆண்; மற்றொன்று பெண்; கணவனும் மனைவியும் அவை யிரண்டும் ஒன்றையொன்று காமப்பார்வைகள் பார்த்துக் கொண்டும்,
புன்சிரிப்புச் சிரித்துக் கொண்டும், வேடிக்கைப் பேச்சுப் பேசிக்கொண்டும் ரசப் போக்கிலேயிருந்தன.
அத்தருணத்திலே நான் போய்ச் சேர்ந்தேன. ஆண் கயிற்றுக்குக் கந்தன் என்று பெயர். பெண் கயிற்றுக்குப் பெயர் வள்ளியம்மை
(மனிதர்களைப் போலவே துண்டுக் கயிறுகளுக்கும் பெயர் வைக்கலாம்)
கந்தன் வள்ளியம்மை மீது கையைப்போட வருகிறது. வள்ளியம்மை சிறிது பின் வாங்குகிறது. அந்த சந்தர்ப்பத்திலே நான் போய்ச் சேர்ந்தேன்.
என்ன, கந்தா, சௌக்கியம் தானா? ஒரு வேளை, நான் சந்தர்ப்பந் தவறி வந்துவிட்டேனோ, என்னவோ! போய், மற்றொரு முறை வரலாமா?
என்று கேட்டேன்.
அதற்குக் கந்தன்:- அட போடா வைதிக மனுஷன்! உன் முன்னே கூடி லஜ்ஜையா? என்னடி வள்ளி, நமது சல்லாபத்தை ஐயா பார்த்ததிலே உனக்குக் கோபமா? என்றது.
சரி. சரி, என்னிடத்தில் ஒன்றும் கேட்க வேண்டாம் என்றது வள்ளியம்மை.
அதற்குக் கந்தன், கடகட வென்று சிரித்துக் கைதட்டிக் குதித்து, நான் பக்கத்திலிருக்கும் போதே வள்ளியம்மைக் கட்டிக்கொண்டது.
வள்ளியம்மை கீச்சுக் கீச்சென்று கத்தலாயிற்று. ஆனால் மனதுக்குள்ளே வள்ளியம்மைக்கு சந்தோஷம். நாம் சுகப்படுவதைப் பிறர்
பார்ப்பதிலே நமக்கு சந்தோஷந்தானே?
இந்த வேடிக்கை பார்ப்பதிலே எனக்கும் மிகவும் திருப்திதான். உள்ளதைச் சொல்லி விடுவதிலே என்ன குற்றம்?
இளமையின் சல்லாபம் கண்ணுக்குப் பெரியதோர் இன்பமன்றோ?
வள்ளியம்மை அதிகக் கூச்சலிடவே, கந்தன் அதை விட்டும்விட்டது. சில க்ஷணங்களுக்குப் பின் மறுபடி போய்த் தழுவிக் கொண்டது.
மறுபடியும் கூச்சல், மறுபடியும் விடுதல்; மறுபடியும் தழுவல்; மறுபடியும் கூச்சல், இப்படியாக நடந்துகொண்டே வந்தது. என்ன, கந்தா, வந்தவனிடத்தில் ஒரு வார்த்தைகூடச் சொல்ல மாட்டேனென்கிறாய்? வேறொருசமயம் வருகிறேன். போகட்டுமா? என்றேன்.
அட போடா! வைதிகம்! வேடிக்கைதான பார்த்துக்கொண்டிருக்கிறாய். இன்னும் சிறிதுநேரம் நின்றுகொண்டிரு. இவளிடம் சில விவகாரங்கள் தீர்க்க வேண்டியிருக்கிறது. தீர்ந்தவுடன் நீயும் நானும் சில விஷயங்கள் பேசலாம். என்றிருக்கிறேன். போய்விடாதே, இரு என்றது.
நின்று மேன்மேலும் பார்த்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரம் கழிந்தவுடன், பெண்ணும் இன்ப மயக்கத்திலே நான் நிற்பதை மறந்து நாணத்தை விட்டுவிட்டது. உடனே பாட்டு, நேர்த்தியான துக்கடாக்கள். ஒரு வரிக்கு ஒரு வர்ணமெட்டு.

இரண்டேசங்கதி பின்பு மற்றொரு பாட்டு. கந்தன் பாடி முடிந்தவுடன், வள்ளி, இது முடிந்தவுடன், அது மாற்றி மாற்றிப் பாடி-கோலாஹலம்.
சற்றுநேரம் ஒன்றையொன்று தொடாமல் விலகி நின்று பாடிக் கொண்டேயிருக்கும். அப்போது வள்ளியம்மை தானாகவே போய்க் கந்தனைத் தீண்டும்.
அது தழுவிக் கொள்ளவரும். இது ஓடும். கோலாஹலம்! இங்ஙனம் நெடும்பொழுது சென்ற பின் வள்ளியம்மைக்குக் களியேறி விட்டது.
நான் பக்கத்து வீட்டிலே தாகத்துக்கு ஜலம் குடித்துவிட்டு வரப் போனேன்.

நான் போவதை அவ்விரண்டு கயிறுகளும் கவனிக்கவில்லை.
நான் திரும்பிவந்து பார்க்கும்போது வள்ளியம்மை தூங்கிக்கொண்டிருந்தது, கந்தன் என் வரவை எதிர்நோக்கியிருந்தது.
என்னைக் கண்டவுடன், எங்கடா போயிருந்தாய் வைதிகம்! சொல்லிக் கொள்ளாமல் போய் விட்டாயே என்றது.
அம்மா நல்ல நித்திரை போலிருக்கிறதே? என்று கேட்டேன்.
ஆஹா! அந்த க்ஷணத்திலே கயிற்றிலிருந்து வெடித்த வெளிப்பட்டு என் முன்னே நின்ற தேவனுடைய மகிமையை என்னென்று சொல்வேன்!
காற்றுத்தேவன் தோன்றினான். அவனுடல் விம்மி விசாலமாக இருக்குமென்று நினைத்திருந்தேன். வயிர ஊசிபோல் ஒளி வடிவமாக இருந்தது. நமஸ்தே வாயோ, த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி காற்றே, போற்றி, நீயே கண்கண்ட பிரமம்.
அவன் தோன்றிய பொழுதிலே வானமுழுதும் ப்ராண சக்தி நிரம்பிக் கனல்வீசிக் கொண்டிருந்தது.
ஆயிர முறை அஞ்சலி செய்து வணங்கினேன்.

காற்றுத் தேவன் சொல்வதாயினன்:- மகனே, ஏதடா கேட்டாய்? அந்தச் சிறிய கயிறு உறங்குகிறதா என்ற கேட்கிறாயா? இல்லை. அது செத்துப் போய்விட்டது, நான் ப்ராண சக்தி.
என்னுடனே உறவுகொண்ட உடல் இயங்கும். என்னுறவில்லாதது சவம். நான் ப்ராணன். என்னாலேதான் அச்சிறு கயிறு களைபெய்தியவுடனனே அதனை உறங்க-இறக்க-விட்டு விட்டேன்.
துயிலும் சாவுதான். சாவும் துயிலே. யான் விளங்குமிடத்தே அவ்விரண்டும் இல்லை. மாலையில் வந்து ஊதுவேன்.
அது மறுபடி பிழைத்துவிடும். நான் விழிக்கச் செய்கிறேன். அசையச் செய்கிறேன். நான் சக்தி குமாரன், என்னை வணங்கி வாழ்க. என்றான்.
நமஸ்தே வாயோ, த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி த்வமேவ ப்ரத்யக்ஷம் ஹ்ம வதிஷ்யாமி.

2. நடுக் கடல். தனிக் கப்பல். வானமே சினந்து வருவதுபோன்ற புயற்காற்று. அலைகள் சாரி வீசுகின்றன. நிர்த்தூளிப் படுகின்றன. அவை மோதி வெடிக்கின்றன. சூறை யாடுகின்றன. கப்பல் நிர்த்தனஞ் செய்கின்றது; மின் வேகத்தில் எற்றப்படுகின்றது; பாறையில் மோதிவிட்டது.
ஹதம்! இருநூறு உயிகள் அழிந்தன. அழியுமுன், அவை யுக முடிவின் அனுபவம் எங்ஙனமிருக்குமென்பதை அறிந்துகொண்டு போயின.
ஊழி முடிவும் இப்படியே தானிருக்கும். உலகம் ஓடுநீராகிவிடும்; தீ, நீர், சக்தி காற்றாகி விடுவாள்.
சிவன் வெறியிலே யிருப்பான். இவ்வுலகம் ஒன்றென்பது தோன்றும். அஃது சக்தி யென்பது தோன்றும். அவன் பின்னே சிவன் நிற்பது தோன்றும்.
காற்றே பந்தல் கயிறுகளை அசைக்கின்றான். அவற்றில் உயிர் பெய்கிறான். காற்றே நீரில் சூறாவளி காட்டி, வானத்தில் மின்னேற்றி, நீரை நெருப்பாக்கி, நெருப்பை நீராக்கி நீரைத் தூளாக்கித் தூளை நீராக்கிச் சண்ட மாருதம் செய்கின்றான்.
காற்றே யுகமுடிவு செய்கின்றான். காற்றே காக்கின்றான். அவன் நம்மைக் காத்திடுக. நமஸ்தே வாயோ, த்வமேவ ப்ரத்ணக்ஷம் ப்ரஹ்மாஸி.

3. காற்றுக்குள் காது நிலை. சிவனுடைய காதிலே காற்று நிற்கிறான். காற்றில்லாவிட்டால் சிவனுக்குக் காது கேட்காது. காற்றுக்குக் காதில்லை.
அவன் செவிடன்.
காதுடையவன் இப்படி இரைச்ச லிடுவானா? காதுடையவன் மேகங்களை ஒன்றோடொன்று மோதலிட்டு இடியிடிக்கச் சொல்லி வேடிக்கை பார்ப்பானா? காதுடையவன் கடலைக் கலக்கி விளையாடுவானா? காற்றை, ஒலியை வலிமையை வணங்குகின்றோம்.

4. பாலைவனம், மணல், மணல், மணல், பல யோஜனை தூரம் ஒரே மட்டமாக நான்கு திசையிலும் மணல்.
மாலை நேரம். அவ்வனத்தின் வழியே ஓட்டைகளின் மீதேறி ஒரு வியாபாரக் கூட்டத்தோர் போகிறார்கள்.
வாயு சண்டனாகி வந்துவிட்டான். பாலைவனத்து மணல்களெல்லாம் இடை வானத்திலே சுழல்கின்றன. ஒரு க்ஷணம் யம வாதனை, வியாபாரக் கூட்டம் முழுதும் மணலிலே அழிந்து போகிறது. வாயு கொடியோன். அவன் ருத்ரன். அவனுடைய ஓசை அச்சந் தருவது. அவனுடைய செயல்கள் கொடியன. காற்றை வாழ்த்துகின்றோம்.

5. வீமனும் அனுமானும் காற்றின் மக்கள் என்று புராணங்கள் கூறும். உயிருடையனவெல்லாம் காற்றின் மக்களே என்பது வேதம். உயிர்தான் காற்று. உயிர் பொருள். காற்று அதன் செய்கை. பூமித்தாய் உயிரோடிருக்கிறாள். அவளுடைய மூச்சே பூமியிலுள்ள காற்று. காற்றே உயிர்.
அவன் உயிர்களை அழிப்பவன். காற்றே உயிர். எனவே உயிர்கள அழிவதில்லை. சிற்றுயிர் பேருயிரோடு சேர்கிறது. மரண மில்லை. அகிலவுலகமும் உயிர் நிலையே. தோன்றுதல், வளர்தல், மாறுதல், மறைதல்-எல்லாம் உயிர்ச் செயல். உயிரை வாழ்த்துகின்றோம்.

6. காற்றே வா. மகரந்தத் தூளைச் சுமந்துகொண்டு, மனத்தை மயலுறுத்துகின்ற இனிய வாசனையுடன் வா. இலைகளின் மீதும்,
நீரலைகளின் மீதும் உராய்ந்து, மிகுந்த ப்ராண -ரசத்தை எங்களுக்குக் கொண்டு கொடு.
காற்றே, வா எமது உயிர்-நெருப்பை நீடித்து நின்ற நல்லொளி தருமாறு நன்றாக வீசு. சக்தி குறைந்துபோய், அதனை அவித்துவிடாதே.
பேய்போல வீசி, அதனை மடித்துவிடாதே. மெதுவாக, நல்ல லயத்துடன், நெடுங்காலம் நின்று வீசிக் கொண்டிரு உனக்குப் பாட்டுக்கள் பாடுகிறோம் உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம். உன்னை வழிபடுகின்றோம்.

7. சிற்றெறும்பைப் பார். எத்தனை சிறியது! அதற்குள்ளே கை, கால், வாய், வயிறு எல்லா அவயவங்களும் கணக்காக வைத்திருக்கிறது.
யார் வைத்தனர்? மஹா சக்தி. அந்த உறுப்புக்களெல்லாம் நேராகவே தொழில் செய்கின்றன. எறும்பு உண்ணுகின்றது. உறங்குகின்றது-மணம் செய்து கொள்கின்றது. குழந்தை பெறுகிறது. ஓடுகிறது, தேடுகிறது, போர் செய்கிறது, நாடு காக்கிறது. இதற்கெல்லாம் காற்றுத்தான் ஆதாரம்.
மஹா சக்தி காற்றைத் கொண்டுதான் உயிர் விளையாட்டு விளையாடுகின்றாள். காற்றைப் பாடுகிறோம் அஃது அறிவிலே துணிவாக நிற்பது; உள்ளத்திலே விருப்பு வெறுப்புகளாவது. உயிரிலே. உயிர் தானாக நிற்பது. வெளி யுலகத்திலே அதன் செய்கையை நாம் அறிவோம். நாம் அறிவதில்லை. காற்றுத் தேவன் வாழ்க.

8. மழைக் காலம். மாலை நேரம். குளிர்ந்த காற்று வருகிறது நோயாளி உடம்பை மூடிக்கொள்ளுகிறான். பயனில்லை.
காற்றுக்கு அஞ்சி உலகத்திலே இன்பத்துடன் வாழ முடியாது. பிராணன் காற்றாயின் அதற்கு அஞ்சி வாழ்வதுண்டோ? காற்று நம்மீது வீசுக.
அதுநம்மை நோயின்றிக் காத்திடுக. மலைக்காற்று நல்லது. வான் காற்று நன்று.
ஊர்க்காற்றை மனிதர் பகைவனாக்கிவிடுகின்றனர். அவர்கள் காற்றுத் தெய்வத்தை நேரே வழிபடுவதில்லை.
அதனால் காற்றுத்தேவன் சினமெய்தி அவர்களை அழிக்கின்றான். காற்றுத் தேவனை வணங்குவோம் அவன் வரும் வழியில் சேறு தங்கலாகாது. நாற்றம் இருக்கலாகாது. அழுகின பண்டங்கள் போடலாகாது புழுதி படிந்திருக்கலாகாது. எவ்விதமான அசுத்தமும் கூடாது. காற்று வருகின்றான்.
அவன் வரும் வழியை நன்றாகத் துடைத்து நல்ல நீர் தெளித்து வைத்திடுவோம். அவன் வரும் வழியிலே சோலைகளும், பூந்தோட்டங்களும் செய்து வைப்போம். அவன் வரும் வழியிலே கர்ப்பூரம் முதலிய நறும் பொருள்களைக் கொளுத்தி வைப்போம். அவன் நல்ல மருந்தாக வருக.
அவன் நமக்கு உயிராகி வருக; அமுதமாகி வருக. காற்றை வழிபடுகின்றோம். அவன் சக்தி குமாரன், மஹாராணியின் மைந்தன். அவனுக்கு நல்வரவு கூறுகின்றோம். அவன் வாழ்க.
காற்றே வா. மெதுவாக வா. ஜன்னல் கதவை அடித்து உடைத்து விடாதே. காகிதங்களை யெல்லாம் எடுத்து விசிறி எறியாதே. அலமாரிப் புத்தகங்களைக் கீழே தள்ளிவிடாதே பார்த்தாயா? இதோ, தள்ளிவிட்டாய், புஸ்தகத்தின் ஏடுகளைக் கிழித்துவிட்டாய். மறுபடி மழையைக் கொண்டுவந்து சேர்த்தாய். வலியிழந்தவற்றைத் தொல்லைப்படுத்தி வேடிக்கை பார்ப்பதிலே நீ மஹா சமர்த்தன்.
நொய்ந்த வீடு, நொய்ந்த கதவு, நொய்ந்த கூரை, நொய்ந்த மரம், நொய்ந்த உடல், நொய்ந்த உயிர், நொய்ந்த உள்ளம்-இவற்றைக் காற்றுத் தேவன் புடைத்து நொறுக்கிவிடுவான். சொன்னாலும் கேட்கமாட்டான். ஆதலால், மானிடரே வாருங்கள். வீடுகளைத் திண்மையுறக் கட்டுவோம். கதவுகளை வலிமையுறச் சேர்ப்போம். உடலை உறுதி கொள்ளப் பழகுவோம். உயிரை வலிமையுற நிறுத்துவோம். உள்ளத்தை உறுதி செய்வோம். இங்ஙனம் செய்தால், காற்று நமக்குத் தோழனாகிவிடுவான். காற்று மெலிய தீயை அவித்துவிடுவான். வலிய தீயை வளர்ப்பான். அவன் தோழமை நன்று. அவனை நித்தமும் வாழ்த்துகின்றோம்.

10. மழை பெய்கிறது. ஊர்முழுதும் ஈரமாகிவிட்டது. தமிழ் மக்கள், எருமைகளைப்போல எப்போதும் ஈரத்திலே நிற்கிறார்கள். ஈரத்திலே உட்காருகிறார்கள், ஈரத்திலேயே நடக்கிறார்கள். ஈரத்திலேயே படுக்கிறார்கள். ஈரத்திலேயே சமையல், ஈரத்திலேயே உணவு.
உலர்ந்த தமிழன் மருந்துக்குகூட அகப்படமாட்டான்.
ஓயாமல் குளிர்ந்த காற்று வீசுகிறது. தமிழ் மக்களிலே பலருக்கு ஜ்வரம் உண்டாகிறது. நாள்தோறும் சிலர் இறந்து போகிறார்கள். மிஞ்சியிருக்கும் மூடர்விதிவசம் என்கிறார்கள். ஆமாம், விதிவசந்தான், அறிவில்லாதவர்களுக்கு இன்பமில்லை என்பது ஈசனுடைய விதி.
சாஸ்த்திர மில்லாத தேசத்திலே நோய்கள் விளைவது விதி.
தமிழ் நாட்டிலே சாஸ்திரங்களில்லை. உண்மையான சாஸ்திரங்களை வளர்க்காமல், இருப்பனவற்றையும் மறந்துவிட்டுத் தமிழ் நாட்டுப் பார்ப்பார் பொய்க் கதைகளை மூடரிடங் காட்டி வயிறு பிழைத்து வருகிறார்கள். குளிர்ந்த காற்றையா விஷமென்று நினைக்கிறாய்? அது அமிழ்தம்;நீ ஈரமில்லாத வீடுகளில் நல்ல உடைகளுடன் குடியிருப்பாயானால், காற்று நன்று. அதனை வழிபடுகின்றோம்.

11. காற்றென்று சக்தியைக் கூறுகின்றோம். என்றுகிற சக்தி, புடைக்கிற சக்தி, மோதுகிற சக்தி, சுழற்றுவது, ஊதுவது, சக்தியின் பல வடிவங்களிலே காற்றும் ஒன்று. எல்லாத் தெய்வங்களும் சக்தியின் கலைகளேயாம். சக்தியின் கலைகளையே தெய்வங்களென்கிறோம். காற்று சக்தி குமாரன். அவனை வழிபடுகின்றோம்.

12. காக்கை பறந்து செல்லுகிறது. காற்றின் அலைகளின்மீது நீந்திக்கொண்டு போகிறது. அலைகள் போலிருந்து, மேலே காக்கை நீந்திச் செல்வதற்கு இடமாகும் பொருள் யாது? காற்று, அஃதன்று காற்று. அது காற்றின் இடம், வாயு நிலயம். கண்ணுக்குத் தெரியாதபடி அத்தனை நுட்பமாகிய பூதத்தூள்களே (காற்றடிக்கும்போது) நம்மீது வந்து மோதுகின்றன. அத்தூள்களைக் காற்றென்பது உலக வழக்கு. அவை வாயு வல்ல, வாயு ஏறிவரும் தேர் பனிக்கட்டியிலே சூடேறினால் நீராக மாறிவிடுகிறது. நீரிலே சூடேற்றினால் வாயு வாகி விடுகிறது. தங்கத்திலே சூடேற்றினால் திரவமாக உருகிவிடுகிறது. அத்திரவத்திலே சூடேற்றினால், வாயு வாகின்றது.
இங்ஙனமே, உலகத்துப் பொருள்களனைத்தையும் வாயுநிலைக்குக் கொண்டுவந்துவிடலாம். இந்தவாயுபௌதிகத் தூள்.
இதனை ஊர்ந்துவரும் சக்தியையே நாம் காற்றுத் தேவனென்று வணங்குகிறோம்.
காக்கை பறந்து செல்லும் வழி காற்றன்று. அந்த வழியை இயக்குபவன் காற்று. அதனை அவ்வழியிலே தூண்டிச் செல்பவன் காற்று.
அவனை வணங்குகின்றோம், உயிரைச் சரணடைகின்றோம்.

13. அசைகின்ற இலையிலே உயிர் நிற்கிறதா? ஆம். இரைகின்ற கடல்-நீர் உயிரால் அசைகின்றதா? ஆம்.
கூரையிலிருந்து போடும் கல் தரையிலே விழுகின்றது. அதன் சலனம் எதனால் நிகழ்வது? உயிருடைமையால். ஓடுகின்ற வாய்க்கால் எந்த நிலையில் உளது? உயிர் நிலையில். ஊமையாக இருந்த காற்றுஊதத் தொடங்கி விட்டதே! அதற்கு என்ன நேரிட்டிருக்கிறது? உயிர் நேரிட்டிருக்கிறது.
வண்டியை மாடு இழுத்துச்செல்கிறது. அங்கு மாட்டின் உயிர் வண்டியிலும் ஏறுகிறது. வண்டி செல்லும்போது உயிருடனேதான் செல்லுகிறது.
காற்றாடி? உயிருள்ளது. நீராவி-வண்டி உயிருள்ளது; பெரிய உயிர். யந்திரங்ளெல்லாம் உயிருடையன.
பூமிப்பந்து இடைவிடாமல் மிக்க விசையுடன் சுழல்கின்றது. அவள் தீராத உயிருடையவள், பூமித்தாய். எனவே அவள் திருமேனியிலுள்ள ஒவ்வொன்றும் உயிர் கொண்டதே யாம்.
அகில முழுதும் சுழலுகிறது. சந்திரன் சுழல்கின்றது. ஞாயிறு சுழல்கின்றது. கோடி கோடி கோடி கோடி யோஜனை தூரத்துக் கப்பாலும், அதற்கப்பாலும், அதற்கப்பாலும், சிதறிக் கிடக்கும் வானத்து மீன்களெல்லாம் ஓயாது சுழன்று கொண்டேதானிருக்கின்றன. எனவே, இவ்வையகம் உயிருடையது. வையகத்தின்உயிரையே காற்றென்கிறோம் அதனை முப்போதும் போற்றி வாழ்த்துதல் செய்கின்றோம்.

14. காற்றைப் புகழ நம்மால் முடியாது. அவன் புகழ் தீராது. அவனை ரிஷிகள் ப்ரத்யஷம் ப்ரஹ்ம என்று போற்றுகிறார்கள்.
ப்ராண வாயுவைத் தொழுகின்றோம். அவன்,
நம்மைக் காத்திடுக. அபாநனைத் தொழுகின்றோம். அவன்
நம்மைக் காத்திடுக. வ்யாநனைத் தொழுகின்றோம், அவன்
நம்மைக் காத்திடுக. உதாநனைத் தொழுகின்றோம், அவன்
நம்மைக் காத்திடுக. சமாநனைத் தொழுகின்றோம், அவன்
நம்மைக் காத்திடுக. காற்றின் செயல்களையெல்லாம்
பரவுகின்றோம். உயிரை, வணங்குகின்றோம். உயிர் வாழ்க.

15. உயிரே, நினது பெருமை யாருக்குத் தெரியும்? நீ கண் கண்ட தெய்வம். எல்லா விதிகளும் நின்னால் அமைவன.
எல்லா விதிகளும் நின்னால் அழிவன. உயிரே, நீ காற்று, நீ தீ, நீ நிலம், நீ நீர், நீ வானம். தோன்றும் பொருள்களின் தோற்ற நெறி நீ. மாறுவனவற்றை மாற்றுவிப்பது நின் தொழில். பறக்கின்ற பூச்சி. கொல்லுகின்ற புலி, ஊர்கின்ற புழு, இந்தப் பூமியிலுள்ள எண்ணற்ற உயிர்கள், எண்ணற்ற உலகங்களிலுள்ள எண்ணேயில்லாத உயிர்த் தொகைகள்-இவை யெல்லாம் நினது விளக்கம்.
மண்ணிலும், நீரிலும், காற்றிலும் நிரம்பிக் கிடக்கும் உயிர்களைக் கருதுகின்றோம். காற்றிலே ஒரு சதுர-அடி வரம்பில் லக்ஷக்கணக்கான சிறிய ஜந்துக்கள் நமது கண்ணுக்குத் தெரியாமல் வாழ்கின்றன.
ஒரு பெரிய ஜந்து; அதன் உடலுக்குள் பல சிறிய ஜந்துக்கள்; அவற்றுள் அவற்றிலுஞ் சிறிய பல ஜந்துக்கள்; அவற்றுள் இன்னுஞ் சிறியவை-இங்ஙனம் இவ்வையக முழுதிலும் உயிர்களைப் பொதிந்து வைத்திருக்கிறது.
மஹத்-அதனிலும் பெரியமஹத்-அதனிலும் பெரிது-அதனிலும் பெரிது.
அணு-அதனிலும் சிறிய அணு-அதனிலும் சிறிது-அதனிலும் சிறிது-இரு வழியிலும் முடிவில்லை.
இருபுறத்திலும் அநந்தம். புலவர்களே, காலையில் எழுந்தவுடன் உயிர்களையெல்லாம் போற்றுவோம். நமஸ்தே வாயோ, த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி.

4. கடல்
 
1. கடலே காற்றைப் பரப்புகின்றது. விரைந்து சுழலும் பூமிப்பந்தில் பள்ளங்களிலே தேங்கியிருக்கும் கடல் நீர் அந்தச் சுழற்சியிலே தலைகீழாகக் கவிழ்ந்து திசை வெளியில் ஏன் சிதறிப் போய்விடவில்லை?
பராசக்தியின் ஆணை. அவள் நமது தலைமீது கடல்வீழ்ந்து விடாதபடி ஆதரிக்கிறாள்.
அவள் திருநாமம் வாழ்க. கடல் பெரிய ஏரி; விசாலமான குளம்; பெருங் கிணறு; கிணறு நம் தலையிலே கவிழ்கிறதா?
அதுபற்றியே கடலும் கவிழவில்லை. பராசக்தியின் ஆணை.
அவள் மண்ணிலே ஆகர்ஷணத் திறமையை நிறுத்தினாள். அது பொருள்களை நிலைப்படுத்துகின்றது. மலை நமது தலைமேலே புரளவில்லை.
கடல் நமது தலைமேலே கவிழவில்லை. ஊர்கள் கலைந்து போகவில்லை. உலகம் எல்லா வகையிலும் இயல் பெறுகின்றது.
இஃதெல்லாம் அவளுடைய திருவருள். அவள் திருவருளை வாழ்த்துகின்றோம்.

2. வெம்மை மிகுந்த பிரதேசங்களிலிருந்து வெம்மை குன்றிய பிரதேசங்களுக்குக் காற்று ஓடிவருகின்றது. அங்ஙனம், ஓடி வரும்போது காற்று மேகங்களையும் ஓட்டிக் கொண்டு வருகிறது. இவ்வண்ணம் நமக்கு வரும் மழை கடற் பாரிசங்களிலிருந்தே வருகிறது.
காற்றே, உயிர்க் கடலிலிருந்து எங்களுக்கு நிறைய உயிர் மழை கொண்டுவா. உனக்குத் தூபதீபங்கள் ஏற்றிவைக்கிறோம். வருணா, இந்திரா, நீவிர் வாழ்க இப்போது நல்ல மழை பெய்யும்படி அருள் புரிய வேண்டும்.
எங்களுடைய புலங்களெல்லாம் காய்ந்து போய்விட்டன. சூட்டின் மிகுதியால் எங்கள் குழந்தைகளுக்கும் கன்று காலிகளுக்கும் நோய் வருகிறது.
அதனை மாற்றியருள வேண்டும்.
பகல் நேரங்களிலே அனல் பொறுக்க முடியவில்லை. மனம் ஹா ஹா வென்று பறக்கிறது.
பறவைகளெல்லாம் வாட்டமெய்தி நிழலுக்காகப் பொந்துகளில் மறைந்து கிடக்கின்றன. பல தினங்களாக, மாலைதோறும் மேகங்கள் வந்து கூடுகின்றன.
மேக மூட்டத்தால் காற்று நின்றுபோய், ஓரிலை கூட அசையாமல், புழுக்கம் கொடிதாக இருக்கிறது. சிறிது பொழுது கழிந்தவுடன் பெரிய காற்றுக்கள் வந்து மேகங்களை அடித்துத் துரத்திக்கொண்டு போகின்றன. இப்படிப் பல நாட்களாக ஏமாந்து போகிறோம்.
இந்திரா, வருணா, அர்யமா, பகா, மித்திரா, உங்கள் கருணையைப் பாடுகிறேன். எங்கள் தாபமெல்லாந் தீர்ந்து, உலகம் தழைக்குமாறு, இன்ப மழை பெய்தல் வேண்டும்.

5. ஜகத் சித்திரம் (சிறுநாடகம்) முதல் காட்சி
 
இடம்-மலையடி வாரத்தில் ஒரு காளி கோயில்
நேரம்-நடுப்பகல்
காக்கையரசன்-(கோயிலை எதிர்த்த தடாகத்தின் இடையிலிருந்த தெப்ப மண்டபத்தின் உச்சியில் ஏறி உட்காந்து கொண்டு சூர்யனை நோக்கிச் சொல்லுகிறான்)

எங்கோ வாழ்!
நீல மலைகள் நிரம்ப அழகியன. வானம் அழகியது. வான் வெளி இனிது. வான் வெளியை மருவிய நின் னொளி இனியவற்று ளெல்லாம் இனிது.
எங்கோ எங்கோ எனவும்;அன்றி கிலுகிலு கிலு கிலு எனவும் கீக்கீகீக்கீ என்றும், கேக்க கேக்ககேட்க கேட்க எனவும்;கெக்கெக்கே-குக்குக் குக்குக் குக்குக் குக்குக் குக்கூவே!என்றும், கீச், கீச் கீச், கீச்கிசு, கிசு, கிசு, கீச்என்றும்; ரங்க ரங்க-என்றும் பல்லாயிர வகையினில் இசைக்கும் குயில்களும், கிளிகளும், குலவு பல ஜாதிப்புட்களும் இனிய பூங்குரலுடையன.
எனினும், இத்தனை யின்பத்தினிடையே உயிர்க்குலத்தின் உளத்தே மாத்திரம் இன்ப முறவில்லை. இஃதென்னே!-காக்கா! காக்கா! எங்கோ வாழ்? இதைக் கேட்டு, மற்றப் பக்ஷிகளெல்லாம் கத்துகின்றன:-
ஆம், ஆம், ஆமாம், ஆமாம், ஆமாமடா! ஆமாமடா! ஆமாம். எங்கோவாழ். எங்கோ வாழ், நன்றாக உரைத்தாய்.
மனந்தான் சத்துரு. வேறு நமக்குப் பகையே கிடையாது. மனந்தான் நமக்குள்ளேயே உட்பகையா இருந்து கொண்டு நம்மை வேரறுக்கிறது.
அடுத்துக் கெடுக்கிறது.
மனந்தான் பகை. அதைக் கொத்துவோம் வாருங்கள். அதைக் கிழிப்போம் வாருங்கள். அதை வேட்டை யாடுவோம் வாருங்கள். 

இரண்டாம் காட்சி

வானுலகம்-இந்திர சபை
(தேவேந்திரன் கொலு வீற்றிருக்கிறான்)
தேவ சேவகன்:- தேவ தேவா!
இந்திரன்:-சொல்.
தேவ சேவகன்:- வெளியே நாரதர் வந்து காத்திருக்கிறார். தங்களைத் தரிசிக்க வேண்டுமென்று சொல்லுகிறார்.
இந்திரன்:- வருக

(நாரதர் பாடிக்கொண்டு வருகிறார்)
நாராயண, நாராயண, நாராயண, ஹரி, ஹரி,
நாராயண, நாராயண

இந்திரன்:-நாரதரே! நாராயணன் எங்கிருக்கிறான்?
நாரதர்:-நீ அவனைப் பார்த்தது கிடையாதோ?
இந்திரன்:-கிடையாது.
நாரதர்:-சர்வ பூதங்களிலும் இருக்கிறான்.
இந்திரன்:-நரகத்திலிருக்கிறானா?
நாரதர்:-ஆம்
இந்திரன்:-துன்பத்திலிருக்கிறானா?
நாரதர்:-ஆம்
இந்திரன்:-மரணத்திலிருக்கிறானா?
நாரதர்:-ஆம்
இந்திரன்:-உங்களுடைய சர்வ நாராயண சித்தாந்தத்தின் துணிவு யாது?
நாரதர்:-எல்லா வஸ்துக்களும், எல்லா லோகங்களும், எல்லா நிலைமைகளும், எல்லாத் தன்மைகளும், எல்லா சக்திகளும்,
எல்லா ரூபங்களும் எல்லாம் ஒன்றுக்கொன்று சமானம்.

இந்திரன்:-நீரும் கழுதையும் சமானந்தானா?
நாரதர்:-ஆம்.
இந்திரன்:-அமிருதபானமும் விஷபானமும் சமானமா?
நாரதர்:-ஆம்
இந்திரன்:-அசுரர்களும் தேவர்களும், சமானமா?
நாரதர்:-ஆம்.
இந்திரன்:-ஞானமும், அஞ்ஞானமும் சமானமா?
நாரதர்:-ஆம்
இந்திரன்:-சுகமும், துக்கமும் சமானமா?
நாரதர்:-ஆம்
இந்திரன்:-அதெப்படி?
நாரதர்:-சர்வம் விஷ்ணுமயம் ஜகத்-(பாடுகிறார்)நாராயண, நாராயண, நாராயண, நாராயண.

மூன்றாம் காட்சி

இடம்:- மண்ணுலகத்தில் ஒரு மலையடிவாரத்தில்-ஒரு காளி கோயிலுக்கெதிரே சோலையில்.
கிளி பாடுகிறது:- தைர்ய, தைர்ய, தைர்ய-தன்மனப் பகையைக் கொன்று தாமோ குணத்தை வென்று உள்ளக் கவலை யறுத்து ஊக்கந்த தோளிற் பொறுத்து மனதில் மகிழ்ச்சி கொண்டு மயக்க மெல்லாம் விண்டு சந்தோஷத்தைப் பூண்டு தைர்யா ஹுக்கும் ஹுக்கும்! ஹுக்கும் ஹுக்கும்!
ஆமடா, தோழா! ஆமாமடா எங்கோவா, எக்கோ வா! தைர்யா, தைர்யா, தைர்யா!

குயில்கள்:-சபாஷ்!சபாஷ்!சபாஷ்!
குருவிகள்:-டிர்ர்ர்ர்ர்ர்ர், டிர்ர்ர்ர்
நாகணவாய்:-ஜீவ, ஜீவ, ஜீவ, ஜீவ, ஜீவ, ஜீவ.
குருவிகள்:-சிவ, சிவ, சிவ, சிவ, சிவ, சிவா, சிவ, சிவா
காக்கை:-எங்கோ வாழ்!எங்கோ வாழ்!
கிளி:-கேளீர், தோழர்களே! இவ்வுலகத்தில் தற்கொலையைக் காட்டிலும் பெரிய குற்றம் வேறில்லை. தன்னைத்தான் மனத்தால் துன்புறுத்திக் கொள்வதைக் காட்டிலும் பெரிய பேதைமை வேறில்லை.
காக்கை:-அக்கா!அக்கா!காவு!காவு!
குருவி:-கொட்டடா!கொட்டடா!கொட்டடா!
கிளி:-ஹுக்குக்கூ!
கிளி:-காதலைக் காட்டிலும் பெரிய இன்பம் வேறில்லை.
அணிற் பிள்ளை:-ஹுக்கும், ஹுக்கும், ஹுக்கும், ஹுக்கும்
பசு மாடு:-வெயிலைப்போல் அழகான பதார்த்தம் வேறில்லை.
அணில்:-பசுவே, இந்த மிக அழகிய வெயிலில், என் கண்ணுக்குப் புலப்படும் வஸ்துக்களுக்குள்ளே உன் கண்ணைப்போல் அழகிய பொருள் பிறிதொன்றில்லை.
நாகணவாய்:-டுபுக்! பாட்டைக் காட்டிலும் ரசமான தொழில் வேறில்லை.
எருமை மாடு:-பக்ஷி ஜாதிகளுக்குள்ள சந்தோஷமும், ஜீவ ஆரவாரமும், ஆட்ட ஓட்டமும், இனிய குரலும் மிருக ஜாதியாருக்கும், மனுஷ்ய ஜாதியாருக்கும் இல்லையே?இதன்காரணம் யாது?
நாகணவாய்:-டுபுக்! வெயில், காற்று, ஒளி இவற்றின் தீண்டுதல் மிருக மனிதர்களைக் காட்டிலும் எங்களுக்கதிகம். எங்களுக்கு உடம்பு சிறிது. ஆதலால் தீனி சொற்பம்;அதைச் சிறிது சிறிதாக நெடுநேரம் தின்கிறோம். ஆதலால் எங்களுக்கு உணவின்பம் அதிகம். மிருக மனித ஜாதியார்களுக்குள் இருப்பதைக் காட்டிலும் எங்களுக்குள்ளே காதலின்பம் அதிகம். ஆதலால் நாங்கள் அதிக சந்தோஷமும், பாட்டும், நகைப்பும், கொஞ்ச மொழிகளுமாகக் காலங்கழிக்கிறோம். இருந்தாலும், கிளியரசு சொல்லியது போல காலனுக்குத் தூதனாகிய மனக்குறையென்னும் பேய், எங்கள் குலத்தையும் அழித்துவிடத்தான் செய்கிறது. அதற்கு நிவாரணம் தேடவேண்டும். கவலையைக் கொல்வோம், வாருங்கள், அதிருப்தியைக் கொத்துவோம், கொல்லுவோம்.
மற்றப் பக்ஷிகள்:-வாருங்கள், வாருங்கள், வாருங்கள், துயரத்தை அழிப்போம், கவலையைப் பழிப்போம். மகிழ்வோம், மகிழ்வோம், மகிழ்வோம்.

நான்காம் காட்சி

இடம்:-கடற்கரை.
நேரம்:-நள்ளிரா;முழுநிலாப் பொழுது.
இரண்டு பாம்புகள் ஒரு பாலத்தடியே இருட்புதரினின்றும் வெளிப்பட்டு நிலா வீசி ஒளிரும் மணம் மீது வருகின்றன.
ஆண் பாம்பு:- உன்னுடன் கூடி வாழ்வதில் எனக்கின்பமில்லை. உன்னால் எனது வாழ்நாள் விஷமயமாகிறது. உன்னாலேதான் என் மனம் எப்போதும் அனலில் பட்ட புழுவைப் போலே துடித்துக் கொண்டிருக்கிறது.
பெண் பாம்பு:- உன்னுடன் கூடி வாழ்வதில் எனக்கின்பமில்லை. உன்னால் எனது வாழ்நாள் நரகமாகிறது. உன்னால் என் மனம் தழலிற்பட்ட புழுவைப்போல் இடையறாது துடிக்கிறது.
ஆண் பாம்பு:-நான் உன்னைப் பகைக்கிறேன்.
பெண் பாம்பு:-நான் உன்னை விரோதிக்கிறேன்.
ஆண் பாம்பு:-நான் உன்னைக் கொல்லப் போகிறேன்.
பெண் பாம்பு:-நான் உன்னைக் கொல்லப் போகிறேன்.
ஒன்றையொன்று கடித்து இரண்டு பாம்புகளும் மடிகின்றன.

ஐந்தாம் காட்சி

கடற்கரை
தேவ தத்தன் என்ற மனித இளைஞன்:- நிலா இனியது;நீலவான் இனியது. தெண்டிரைக் கடலின் சீர், ஒலி இனிய;உலகம் நல்லது. கடவுள் ஒளிப்பொருள். அறிவு கடவுள். அதனிலை மோக்ஷம். விடுதலைப் பட்டேன். அசுரரை வென்றேன். நானே கடவுள். கடவுளே நான். காதலின்பத்தாற் கடவுள் நிலை பெற்றேன்.
 
6. விடுதலை

(சிறுநாடகம்) முதல் காட்சி
 
அங்கம்:           காட்சி

இடம்-வானுலகம்
காலம்-கலிமுடிவு.
பாத்திரங்கள்-இந்திரன், வாயு, அக்நி, ஒளி (சூரியன்), சோமன், இரட்டையர் (அசுவிநி தேவர்), மருத்துக்கள், வசுக்கள், த்வஷ்டா, விசுவே தேவர் முதலாயினோர்.

இந்திரன்:-உமக்கு நன்று, தோழரே.
மற்றவர்:-தோழா, உனக்கு நன்று.
இந்திரன்:-பிரம்மதேவன் நமக்கோர் பணியிட்டான்.
மற்றோர்:-யாங்ஙனம்?
இந்திரன்:-மண்ணுலகத்து மானுடன் தன்னைக் கட்டிய தளையெலாம் சிதறுக என்று
அக்நி :-வாழ்க தந்தை; மானுடர் வாழ்க.
மற்றோர்:-தந்தை வாழ்க, தனிமுதல் வாழ்க. உண்மை வாழ்க, உலக மோங்குக, தீது கெடுக, திறமை வளர்க.
ஒளி:-உண்மையும் அறிவும் இன்பமு மாகி பலவெனத் தோன்றிப் பலவினை செய்து பலபயன் உண்ணும் பரமநற் பொருளை உயிர்க்கெலாந்தந்தையை, உயிர்க்கெலாந் தாயை உயிர்க்கெலாந் தலைவனை, உயிர்க்கெலாந் துணைவனை உயிர்க்கெலாம் உயிரை, உயிர்க்கெலாம், உணர்வை அறிவிலே கண்டு போற்றி நெறியினில் அவன்பணி நேர்படச் செய்வோம்.
இந்திரன்:-நன்று தோழரே, அமிர்த முண்போம்.
மற்றோர்:-அமிழ்தம் நன்றே ஆம். அஃதுண்போம்.
(எல்லாரும் அமிர்தபானம் செய்கிறார்கள். )
இந்திரன்:-நித்தமும் வலிது
வாயு:-நித்தமும் புதிது
அக்நி:-தீரா விரைவு.
இரட்டையர்:-மாறா இன்பம்
மருத்துக்கள்:-என்றும் இளமை
ஒளி:-என்றுந் தெளிவு
அக்நி:-மண்ணுலகத்து மானிடர் வடிக்கும் சோமப் பாலுமிவ் வமிழ்தமும் ஓர்சுவை.

இந்திரன்:-மண்ணுலகத்து மக்களே, நீவிர் இன்பங் கேட்பீர். எண்ணிய மறப்பீர், செயல்பல செய்வீர், செய்கையில் இளைப்பீர், எண்ணள வதனால் ஏழுல கினையும் விழுங்குதல் வேண்டுவீர், மீளவும் மறப்பீர், தோழரென் றெம்மை நித்தமும் சார்ந்தீர், சோமப் பாலொடு சொல்லமு தூட்டுவீர், நும்மையே அணர் நோவுறச் செய்தார்? ஆஅஅ! மறவுக் குறும்பா, அரக்கா, விருத்திரா, ஒளியினை மறைத்திடும் வேடா, நமுசிப் புழுவே, வலனே, நலிசெயுந் துன்பமே, அச்சமே, இருளே, தொழும்பர்காள், பெயர்பல காட்டும் ஒருகொடும் பேயே, உருப்பல காட்டும் ஒருபுலைப் பாம்பே படைபல கொணர்ந்து மயக்கிடும் பாழே. ஏடா, வீழ்ந்தனை, யாவரும் வீழ்ந்தீர். அரக்கரே, மனித அறிவெனுங் கோயிலை விட்டுநீ, ரொழிந்தால் மேவிடும் பொன்னுகம் முந்தை நாள் தொடங்கி மானுடர் தமக்குச் சீர்தர நினைந்துநாம் செய்ததை யெல்லாம் மேகக் கரும்புலை விருத்திரன் கெடுத்தான். வலியிலார் தேவர்;வலியவர் அரக்கர். அறமே
நொய்யாது; மறமே வலியது மெய்யே செத்தை; பொய்யே குன்றம். இன்பமே சோர்வது;துன்பமே வெல்வது என்றோர் வார்த்தையும் பிறந்தது மண்மேல் மானுடர் திகைத்தார்;மந்திரத் தோழராம் விசவாமித்திரன், வசிட்டன், காசிபன் முதலியோர் செய்த முதல்நூல் மறைந்தது;பொய்ந்நூல் பெருகின, பூமியின் கண்ணே;வேதங் கெட்டு வெறுங்கதை மலிந்தது. போதச் சுடரைப் புகையிருள் சூழ்ந்தது. தவமெலாங் குறைந்து சதிபல வளர்ந்தன. எல்லாப் பொழுதினும் ஏழை மானுடர் இன்பங் கருதி இளைத்தனர், மடிந்தார்;கங்கைநுர் விரும்பிக் கானநீர் கண்டார்;அமுதம் வேண்டி விடத்தினை யுண்டார். ஏஎ!
வலியரே போலுமிவ் வஞ்சக அரக்கர்! விதியின் பணிதான் விரைக மதியின் வலிமையால் மானுடன் ஓங்குக.

ஒளி:-ஒருவனைக் கொண்டு சிறுமை நீக்கி நித்திய வாழ்விலே நிலைபெறச் செய்தால் மானுடச் சாதி முழுதுநல் வழிபடும்; மானுடச் சாதி ஒன்று; மனத்திலும் உயிரிலும் தொழிலிலும் ஒன்றேயாகும்.
தீ:-பரத கண்டத்தில் பாண்டிய நாட்டிலே விரதந் தவறிய வேதியர் குலத்தில் வசுபதி யென்றோர் இளைஞன் வாழ்கின்றான். தோளிலே மெலிந்தான், துயரிலே அமிழ்ந்தான் நாளும் வறுமை நாயொடு பொருவான், செய்வினை யறியான், தெய்வமுந் துணியான், ஐய வலையில் அகப்பட லாயினன் இவனைக் காண்போம், இவன்புவி காப்பான்.
காற்று:-உயிர்வளங் கொடுத்தேன்; உயிரால் வெல்க.
இந்திரன்:-மதிவலி கொடுத்தேன். வசுபதி வாழ்க.
சூரியன்:-அறிவிலே ஒளியை அமைத்தேன்;வாழ்க.
தேவர்:-மந்திரங் கூறுவோம். உண்மையே தெய்வம், கவலையற் றிருத்தலே வீடு. களியே அமிழ்தம். பயன்வருஞ் செய்கையே அறமாம். அச்சமே நரகம்;அதனைச் சுட்டு நல்லதை நம்பி நல்லதே செய்க. மகனே! வசுபதி மயக்கந் தெளிந்து, தவத்தொழில் செய்து தரணியைக் காப்பாய்!

காட்சி 2

பாண்டி நாட்டில் வேதபுரம், கடற்கரை;வசுபதி தனியே நிலவைப் பார்த்துக்கொண்டிருக்கிறான்.
வசுபதி பாடுகிறான்:-

நிலவுப் பாட்டு

1. வாராய் நிலவே வையத் திருவே,
வெள்ளைத் தீவில் விளையுங் கடலே,
வானப் பெண்ணின் மதமே, ஒளியே,
வாராய், நிலவே, வா.

2. மண்ணுக் குள்ளே அமுதைக் கூட்டிக்
கண்ணுக் குள்ளே களியைக் காட்டி
எண்ணுக் குள்ளே இன்பத் தெளிவாய்
வாராய், நிலவே வா.

3. இன்பம் வேண்டில் வானைக் காண்பீர்
வானொளி தன்னை மண்ணிற் காண்பீர்,
துன்பந் தானோர் பேதைமை யன்றே
வாராய், நிலவே, வா.

4. அச்சப் பேயைக் கொல்லும் படையாம்
வித்தைத் தேனில் விளையுங் களியாய்
வாராய், நிலவே, வா.

 
மேலும் பல்வகைப் பாடல்கள் »
temple news

நீதி ஜனவரி 21,2012

1. புதிய ஆத்திசூடி காப்பு-பரம்பொருள் வாழ்த்து ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்துமோனத் திருக்கும் முழுவெண் ... மேலும்
 
temple news
1. காலைப்பொழுது காலைப் பொழுதினிலே கண்விழித்து மேனிலை மேல்மேலைச் சுடர்வானை நோக்கி நின்றோம் ... மேலும்
 
temple news

சுய சரிதை ஜனவரி 21,2012

1. கனவு பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய்மெல்லப் போனதுவே.-பட்டினத்துப் பிள்ளை முன்னுரை வாழ்வு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar