Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

பாஞ்சாலி சபதம் - முதற்பாகம் பாஞ்சாலி சபதம் - முதற்பாகம்
முதல் பக்கம் » முப்பெரும் பாடல்கள்
கண்ணன் பாட்டு
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 ஜன
2012
03:01

1. கண்ணன் - என் தோழன்

(புன்னாகவராளி - திஸ்ரஜாதி ஏகதாளம்)
வத்ஸல ரசம்

1. பொன்னவிர் மேனிச் சுபத்திரை மாதைப்
புறங்கொண்டு போவ தற்கே - இனி
என்ன வழியென்று கேட்கில், உபாயம்
இருகணத் தேயுரைப் பான்; - அந்தக்
கன்னன் வில்லாளர் தலைவனைக் கொன்றிடக்
காணும் வழியொன் றில்லேன் - வந்திங்கு
உன்னை யடைந்தேன் என்னில் உபாயம்
ஒருகணத் தேயுரைப் பான்.

2. கானகத்தே சுற்று நாளிலு<ம் நெஞ்சிற்
கலக்க மிலாதுசெய் வான்; - பெருஞ்
சேனைத் தலைநின்று போர்செய்யும் போதினில்
தேர்நடத் திக்கொடுப் பான்; - என்றன்
ஊனை வருத்திடு நோய்வரும் போதினில்
உற்ற மருந்துசொல் வான்;- நெஞ்சம்
ஈனக் கவலைக ளெய்திடும் போதில்
இதஞ்சொல்லி மாற்றிடு வான்;

3. பிழைக்கும் வழிசொல்ல வேண்டுமென் றாலொரு
பேச்சினி லேசொல்லு வான்;
உழைக்கும் வழிவினை யாளும் வழிபயன்
உண்ணும் வழியுரைப் பான்;
அழைக்கும் பொழுதினிற் போக்குச் சொல்லாமல்
அரைநொடிக் குள்வரு வான்;
மழைக்குக் குடை, பசி நேரத் துணவென்றன்
வாழ்வினுக் கெங்கள்கண் ணன்;

4. கேட்டபொழுதில் பொருள் கொடுப்பான்; சொல்லுங்
கேலி பொறுத்திடு வான்; எனை
ஆட்டங்கள் காட்டியும் பாட்டுக்கள் பாடியும்
ஆறுதல் செய்திடு வான்; - என்றன்
நாட்டத்திற் கொண்ட குறிப்பினை இஃதென்று
நான்சொல்லும் முன்னுணர் வான்; அன்பர்
கூட்டத்தி லேயிந்தக் கண்ணனைப் போலன்பு
கொண்டவர் வேறுள ரோ?

5. உள்ளத்தி லேகரு வங்கொண்ட போதினில்
ஓங்கி யடித் திடுவான்; நெஞ்சில்
கள்ளத்தைக் கொண்டொரு வார்த்தைசொன் னாலங்கு
காறி யுமிழ்ந்திட வான்; சிறு
பள்ளத்தி லேநெடு நாள்ழு குங்கெட்ட
பாசியை யெற்றி விடும் - பெரு
வெள்ளத்தைப் போலருள் வார்த்தைகள் சொல்லி
மெலிவு தவிர்த்திடு வான்.

6. சின்னக் குழந்தைகள் போல்விளை யாடிச்
சிரித்துக் களித்திடு வான்; நல்ல
வன்ன மகளிர் வசப்பட வேபல
மாயங்கள் சூழ்ந்திடு வான்; அவன்
சொன்ன படி நடவாவிடி லோமிகத்
தொல்லை யிழைத்திடு வான்; கண்ணன்
தன்னை யிழந்து விடில், ஐயகோ! பின்
சகத்தினில் வாழ்வதி லேன்.

7. கோபத்தி லெயொரு சொல்லிற் சிரித்துக்
குலுங்கிடச் செய்திடு வான்; மனஸ்
தாபத்திலே யொன்று செய்து மகிழ்ச்சி
தழைத்திடச் செய்திடு வான்; பெரும்
ஆபத்தி னில்வந்து பக்கத்தி லேநின்று
அதனை விலக்கிடு வான்; சுடர்த்
தீபத்தி லேவிழும் பூச்சிகள் போல்வருந்
தீமைகள் கொன்றிடு வான்.

8. உண்மை தவறி நடப்பவர் தம்மை
உதைத்து நசுக்கிடுவான்; அருள்
வண்மையி னாலவன் மாத்திரம் பொய்கள்
மலைமலை யாவுரைப் பான்; நல்ல
பெண்மைக் குணமுடையான்; சில நேரத்தில்
பித்தர் குணமுடை யான்; மிகத்
தண்மைக் குணமுடை யான் சில நேரம்
தழலின் குணமுடை யான்.

9. கொல்லுங் கொலைக்கஞ்சி டாத மறவர்
குணமிகத் தானுடை யான்; கண்ணன்
சொல்லு மொழிகள் குழந்தைகள் போலொரு
சூதறி யாதுசொல் வான்; என்றும்
நல்லவ ருக்கொரு தீங்கு நண்ணாது
நயமுறக் காத்திடு வான்; கண்ணன்
அல்லவ ருக்கு விடத்தினில் நோயில்
அழலினி லுங்கொடி யான்.

10. காதல் விளைய மயக்கிடும் பாட்டினில்
கண்மகிழ் சித்திரத் தில் - பகை
மோதும் படைத்தொழில் யாவினு மேதிறம்
முற்றிய பண்டிதன் காண்; உயர்
வேத முணர்ந்த முனிவ ருணர்வினில்
மேவு பரம்பொருள் காண்; நல்ல
கீதை யுரைத்தெனை இன்புறச் செய்தவன்
கீர்த்திகள் வாழ்த்திடுவேன்.

2. கண்ணன் - என் தாய்
(நொண்டிச் சிந்து)

1. உண்ண உண்ணத் தெவிட்டாதே - அம்மை
உயிரெனும் முலையினில் உயர்வெனும் பால்;
வண்ணமுற வைத்தெனக் கே - என்றன்
வாயினிற்கொண் டூட்டுமோர் வண்மையுடையாள்,
கண்ணனெனும் பெயருரடையாள், என்னைக்
கட்டிநிறை வான் எனுந்தன் கையி லணைத்து
மண்ணெனுந்தன் மடியில் வைத்தே - பல
மாயமுறுங் கதைசொல்லி மனங்களிப் பாள்.

2. இன்பமெனச் சில கதைகள் - எனக்
கேற்றமென்றும் வெற்றி யென்றும் சில கதைகள்
துன்பமெனச் சில கதைகள் - கெட்ட
தோல்வியென்றும் வீழ்ச்சியென்றும் சில கதைகள்.
என்பருவம் என்றன் விருப்பம் - எனும்
இவற்றினுக் கிணங்கவென் னுளமறிந்தே
அன்பொடவள் சொல்லிவரு வாள்; அதில்
அற்புதமுண் டாய்ப்பர வசமடை வேன்.

3. விந்தைவிந்தை யாக எனக்கே - பல
விதவிதத் தோற்றங்கள் காட்டுவிப் பாள்;
சந்திரனென் றொரு பொம்மை - அதில்
தண்ணமுதம் போலஒளி பரந்தொழுகும்
மந்தை மந்தையா மேகம் - பல
வண்ணமுறும் பொம்மையது மழைபொழியும்
முந்தஒரு சூரியனுண்டு - அதன்
முகத்தொளி கூறுதற்கொர் மொழியிலை யே.

4. வானத்து மீன்க ளுண்டு - சிறு
மணிகளைப் போல்மின்னி நிறைந்திருக்கும்;
நானத்தைக் கணக்கிடவே - மனம்
நாடிமிக முயல்கினும் கூடுவதில்லை;
கானத்து மலைக ளுண்டு - எந்தக்
காலமுமொ ரிடம்விட்டு நகர்வதில்லை;
மோனத்தி லேயிருக்கும் - ஒரு
மொழியுரை யாதுவிளை யாடவருங் காண்.

5. நல்லநல்ல நதிகளுண்டு - அவை
நாடெங்கும் ஓடிவிளை யாடி வாருங்காண்;
மெல்ல மெல்லப் போயவை தாம் - விழும்
விரிகடற் பொம்மையது மிகப் பெரிதாம்;
எல்லையதிற் காணுவ தில்லை; அலை
எற்றிநுரை கக்கியொரு பாட்டிசைக்கும்;
ஒல்லெனுமப் பாட்டினிலே - அம்மை
ஓமெனும் பெயரென்றும் ஒலித்திடுங் காண்.

6. சோலைகள் காவினங்கள் - அங்குச்
சூழ்தரும் பலநிற மணிமலர்கள்
சாலவும் இனியனவாய் - அங்குத்
தருக்களில் தூங்கிடும் கனிவகைகள்
ஞாலமுற்றிலும் நிறைத் தே - மிக
நயந்தரு பொம்மைகள் எனக்கென வே;
கோலமுஞ் சுவையுமுற - அவள்
கோடிபல் கோடிகள் குவித்துவைத் தாள்.

7. தின்றிடப் பண்டங்களும் - செவி
தெவிட்டறக் கேட்கநற் பாட்டுக ளும்,
ஒன்றுறப் பழகுதற்கே - அறி
வுடையமெய்த் தோழரும் அவள்கொடுத் தாள்;
கொன்றிடு மெனஇனி தாய் - இன்பக்
கொடுநெருப் பாய், அனற் சுவையமு தாய்,
நன்றியல் காதலுக் கே -இந்த
நாரியர் தமையெனைச் சூழவைத் தாள்.

8. இறகுடைப் பறவைக ளும் - நிலந்
திரிந்திடும் விலங்குகள் ஊர்வன கள்
அறைகடல் நிறைந்திட வே -எண்ணில்
அமைத்திடற் கரியபல் வகைப்பட வே
சுறவுகள் மீன்வகை கள் - எனத்
தோழர்கள் பலருமிங் கெனக்களித் தாள்;
நிறைவுற இன்பம்வைத் தாள்; - அதை
நினைக்கவும் முழுதி<லுங் கூடுதில்லை.

9. சாத்திரம் கோடி வைத்தாள்; அவை
தம்மினும் உயர்ந்ததொர் ஞானம் வைத்தாள்;
மீத்திடும் பொழுதினி லே - நான்
வேடிக்கை யுறக்கண்டு நகைப்பதற் கே
கோத்தபொய் வேதங்க ளும் - மதக்
கொலைகளும் அரசர்தம் கூத்துக்க ளும்
மூத்தவர் பொய்ந்நடை யும் - இள
மூடர்தம் கவலையும் அவள்புனைந் தாள்;

10. வேண்டிய கொடுத்திடு வாள்; அவை
விரும்புமுன் கொடுத்திட விரைந்திடு வாள்;
ஆண்டருள் புரிந்திடு வாள்; அண்ணன்
அருச்சுனன் போலெனை ஆக்கிடு வாள்;
யாண்டுமெக் காலத்தி னும் -அவள்
இன்னருள் பாடுநற் றொழில்புரி வேன்
நீண்டதொர் புகழ்வாழ் வும் -பிற
நிகரறு பெருமையும் அவள் கொடுப்பாள்.

3. கண்ணன் - என் தந்தை

நொண்டிச் சிந்து
ப்ரதான ரஸம் - அற்புதம்

1. பூமிக் கெனைய னுப்பி னான்; அந்தப்
புதமண்ட லத்திலென் தம்பிக ளுண்டு;
நேமித்த நெறிப்படி யே - இந்த
நெடுவெளி யெங்கணும் நித்தம் உருண்டே
போமித் தரைகளி லெல்லாம் - மனம்
போலவிருந் தாளுபவர் எங்க ளினத்தார்.
சாமி இவற்றினுக் கெல்லாம் - எங்கள்
தந்தையவன் சரிதைகள் சிறி துரைப்பேன்.

2. செவ்வத்திற்கோர் குறையில்லை; எந்தை
சேமித்து வைத்த பொன்னுக் களவொன் றில்லை;
கல்வியில் மிகச் சிறந்தோன் - அவன்
கவிதையின் இனிமையொர் கணக்கி லில்லை;
பல்வகை மாண்பி னிடையே - கொஞ்சம்
பயித்தியம் அடிக்கடி தோன்றுவ துண்டு;
நல்வழி செல்லு பவரை - மனம்
நையும்வரை சோதலைசெய் நடத்தை யுண்டு.

3. நாவு துணிகுவ தில்லை - உண்மை
நாமத்தை வெளிப்பட உரைப்பதற்கே;
யாவருந் தெரிந்திடவே - எங்கள்
ஈசனென்றும் கண்ணனென்றும் சொல்லுவதுண்டு.
மூவகைப் பெயர் புனைந்தே - அவன்
முகமறி யாதவர் சண்டைகள் செய்வார்;
தேவர் குலத்தவன் என்றே - அவன்
செய்திதெரி யாதவர் சிலருரைப்பார்.

4. பிறந்தது மறக் குலத்தில்; அவன்
பேதமற வளர்ந்ததும் இடைக்குலத்தில்;
சிறந்தது பார்ப்பனருள்ளே; சில
செட்டிமக்க ளோடுமிகப் பழக்க முண்டு;
நிறந்தனிற் கருமை கொண்டான்; அவன்
நேயமுறக் களிப்பது பொன்னிறப் பெண்கள்!
துறந்த நடைக ளுடையான் - உங்கள்
சூனியப்பொய்ச் சாத்திரங்கள் கண்டு நகைப்பான்.

5. ஏழைகளைத் தோழமை கொள்வான்; செல்வம்
ஏறியார் தமைக்கண்டு சீறி விழுவான்;
தாழவருந் துன்ப மதிலும் - நெஞ்சத்
தளர்ச்சிகொள் ளாதவர்க்குச் செல்வ மளிப்பான்;
நாழிகைக்கொர் புத்தி யுடையான்; - ஒரு
நாளிலிருந்த படிமற்றோர் நாளினி லில்லை.
பாழிடத்தை நாடி யிருப்பான் - பல
பாட்டினிலும் கதையிலும் நேரமழிப் பான்.

6. இன்பத்தை இனிதென வும் - துன்பம்
இனிதில்லை யென்றுமவன் எண்ணுவ தில்லை;
அன்பு மிகவுடையான் - தெளிந்
தறிவினில் உயிர்க்குலம் ஏற்ற முறவே,
வன்புகள் பல புரிவான்; ஒரு
மந்திரியுண் டெந்தைக்கு விதியென்பவன்;
முன்பு விதித்த தனையே - பின்பு
முறைப்படி அறிந்துண்ண மூட்டி விடுவான்.

7. வேதங்கள் கோத்து வைத்தான் - அந்த
வேதங்கள் மனிதர்தம் மொழியி லில்லை;
வேதங்க ளென்று புவியோர் சொல்லும்
வெறுங்கதைத் திரளிலவ் வேதமில்லை;
வேதங்க ளென்றவற் றுள்ளே - அவன்
வேதத்திற் சிலசில கலந்ததுண்டு;
வேதங்க ளன்றி யொன்றில்லை - இந்த
மேதினி மாந்தர் சொலும் வார்த்தைக ளெல்லாம்.

8. நாலு குலங்கள் அமைத்தான்; அதை
நாசமுறப் புரிந்தனர் மூட மனிதர்,
சீலம் அறிவு தருமம் - இவை
சிறந்தவர் குலத்தினில் சிறந்தவராம்;
மேலவர் கீழவ ரென்றே - வெறும்
வேடத்திற் பிறப்பினில் விதிப்பன வாம்
போலிச் சுவடியை யெல்லாம் - இன்று
பொசுக்கிவிட்டாலெவர்க்கும் நன்மையுண்டென்பான்.

9. வயது முதிர்ந்து விடினும் - எந்தை
வாலிபக் களையென்றும் மாறுவதில்லை;
துயரில்லை; மூப்பு மில்லை - என்றும்
சோர்வில்லை; நோயொன்றும் தொடுவ தில்லை;
பயமில்லை, பரிவொன்றில்லை, எவர்
பக்கமும்நின் றெதிர்ப்பக்கம் வாட்டுவ தில்லை
நயமிகத் தெரிந்தவன் காண்; - தனி
நடுநின்று விதிச்செயல் கண்டு மகிழ்வான்.

10. துன்பத்தில் நொந்து வருவோர் - தம்மைத்
தூவென் றிகழ்ந்து சொல்லி வன்பு கனிவான்;
அன்பினைக் கைக்கொள் என்பான்; துன்பம்
அத்தனையும் அப்பொழுது தீர்ந்திடும் என்பான்;
என்புடை பட்ட பொழுதும் - நெஞ்சில்
ஏக்கமுறப் பொறுப்பவர் தம்மை உகப்பான்;
இன்பத்தை எண்ணு பவர்க்கே - என்றும்
இன்பமிகத் தருவதில் இன்ப முடையான்.

4. கண்ணன் - என் சேவகன்

கூலிமிகக் கேட்பார் கொடுத்ததெலாம் தாம் மறப்பார்
வேலைமிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்
ஏனடா நீ நேற்றைக் கிங்குவர வில்லை யென்றால்
பானையிலே தேளிருந்து பல்லால் கடித்த தென்பார்;
வீட்டிலே பெண்டாட்டி மேற்பூதம் வந்ததென்பார் 5

பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாளென்பார்
ஓயாமல் பொய்யுரைப்பார்; ஒன்றுரைக்க வேறுசெய்வார்
தாயாதி யோடு தனியிடத்தே பேசிடுவார்
உள்வீட்டுச் செய்தி யெல்லாம் ஊரம் பலத்துரைப்பார்
எள்வீட்டில் இல்லையென்றால் எங்கும் முரசறைவார்.     10

சேவகரால் பட்ட சிரமமிக வுண்டு கண்டீர்;
சேவகரில் லாவிடிலோ, செய்கை நடக்கவில்லை
இங்கிதனால் யானும் இடர்மிகுந்து வாடுகையில்
எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதி நான் என்றான்;
மாடு கன்றுமேய்த்திடுவேன், மக்களைநான் காத்திடுவேன்;   15

வீடு பெருக்கி விளக்கேற்றி வைத்திடுவேன்;
சொன்னபடி கேட்பேன்; துணிமணிகள் காத்திடுவேன்;
சின்னக் குழந்தைக்குச் சிங்காரப் பாட்டிசைத்தே
ஆட்டங்கள் காட்டி அழாதபடி பார்த்திடுவேன்;
காட்டுவழி யானாலும், கள்ளர்பய மானா<லும்; 20

இரவிற் பகலிலே எந்நேர மானா<லும்
சிரமத்தைப் பார்ப்பதில்லை, தேவரீர் தம்முடனே
சுற்றுவேன் தங்களுக்கோர் துன்பமுறா மற்காப்பேன்;
கற்ற வித்தை யேதுமில்லை; காட்டு மனிதன்; ஐயே!
ஆன பொழுதுங்கோலடி குத்துப்போர் மற்போர் 25

நானறிவேன்; சற்றும் நயவஞ் சனைபுரியேன்
என்று பலசொல்லி நின்றான். ஏதுபெயர்? சொல் என்றேன்
ஒன்றுமில்லை; கண்ணனென்பார் ஊரிலு<ள்ளோர் என்னை என்றான்.
கட்டுறுதி யுள்ளவுடல், கண்ணிலே நல்ல குணம்
ஒட்டுறவே நன்றா உரைத்திடுஞ்சொல் - ஈங்கிவற்றால்;     30

தக்கவனென் றுள்ளத்தே சார்ந்த மகிழ்ச்சியுடன்,
மிக்கவுரை பலசொல்லி விருதுபல சாற்றுகிறாய்
கூலியென்ன கேட்கின்றாய்? கூறு கென்றேன். ஐயனே!
தாலிகட்டும் பெண்டாட்டி சந்ததிக ளேதுமில்லை
நானோர் தனியாள்; நரைதிரை தோன்றா விடினும் 35

ஆன வயதிற் களவில்லை; தேவரீர்
ஆதரித்தாற் போதும் அடியேனை; நெஞ்சிலுள்ள
காதல் பெரிதெனக்குக் காசுபெரி தில்லை யென்றான்.
பண்டைக் காலத்துப் பயித்தியத்தில் ஒன்றெனவே
கண்டு மிகவும் களிப்புடனே நானவனை 40

ஆளாகக் கொண்டு விட்டேன் அன்று முதற்கொண்டு
நாளாக நாளாக, நம்மிடத்தே கண்ணனுக்குப்
பற்று மிகுந்துவரல் பார்க்கின்றேன்; கண்ணனால்
பெற்றுவரும் நன்மையெல்லாம் பேசி முடியாது
கண்ணை இமையிரண்டும் காப்பதுபோல், என்குடும்பம்    45

வண்ணமுறக் காக்கின்றான் வாய்முணுத்தல் கண்டறியேன்
வீதி பெருக்குகிறான்; வீடுசுத்த மாக்குகிறான்
தாதியர்செய் குற்றமெல்லாம் தட்டி யடக்குகிறான்
மக்களுக்கு வாத்தி, வளர்ப்புத்தாய், வைத்தியனாய்
ஒக்கநயங் காட்டுகிறான்; ஒன்றுங் குறைவின்றிப் 50

பண்டமெலாம் சேர்த்துவைத்துப் பால்வாங்கி மோர் வாங்கிப்
பெண்டுகளைத் தாய்போற் பிரியமுற ஆதரித்து
நண்பனாய், மந்திரியாய், நல்லா சிரியனுமாய்,
பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய்,
எங்கிருந்தோவந்தான், இடைச்சாதியென்று சொன்னான்.     55

இங்கிவனை யான்பெறவே என்னதவஞ் செய்துவிட்டேன்!
கண்ணன் என தகத்தே கால்வைத்த நாள்முதலாய்
எண்ணம் விசாரம் எதுவுமவன் பொறுப்பாய்ச்
செல்வம், இளமாண்பு, சீர், சிறப்பு, நற்கீர்த்தி,
கல்வி, அறிவு, கவிதை, சிவயோகம்,     60

தெளிவே வடிவாம் சிவஞானம், என்றும்
ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கிவரு கின்றனகாண்!
கண்ணனை நான் ஆட்கொண்டேன்! கண்கொண்டேன்! கண்கொண்டேன்!
கண்ணனெனை யாட் கொள்ளக் காரணமும் உள்ளனவே!

5. கண்ணன் - என் அரசன்

1. பகைமை முற்றி முதிர்ந்திடு மட்டிலும்
பார்த்திருப்ப தல்லா லொன்றுஞ் செய்திடான்;
நகைபுரிந்து பொறுத்துப் பொறுத்தையோ
நாட்கள் மாதங்கள் ஆண்டுகள் போக்குவான்.

2. கண்ணன் வென்று பகைமை யழிந்துநாம்
கண்ணிற் காண்ப தரிதெனத் தோன்றுமே;
எண்ணமிட் டெண்ண மிட்டுச் சலித்துநாம்
இழந்த நாள்கள் யுகமெனப் போகுமே.

3. படைகள் சேர்த்தல் பரிசனம் சேர்த்திடல்
பணமுண் டாக்கல் எதுவும் புரிந்திடான்;
இடையன், வீரமி லாதவன், அஞ்சினோன்
என்றவர் சொலும் ஏச்சிற்கு நாணிலான்.

4. கொல்லப் பூத மனுப்பிடு மாமனே
கோலு யர்த்துல காண்டு களித்திட
முல்லை மென்னகை மாதர்க்கும் பாட்டிற்கும்
மோக முற்றுப் பொழுதுகள் போக்குவான்.

5. வான நீர்க்கு வருந்தும் பயிரென
மாந்தர் மற்றிவண் போர்க்குத் தவிக்கவும்,
தானம் கீர்த்தனை தாளங்கள் கூத்துக்கள்
தனிமை வேய்ங்குழல் என்றிவை போற்றுவான்.

6. காலினைக் கையினால் பற்றிக்கொண்டு நாம்
கதியெமக் கொன்று காட்டுவை யென்றிட்டால்
நாலி லொன்று பலித்திடுங் காணென்பான்;
நாமச் சொல்லின் பொருளெங் குணர்வதே?

7. நாம வன்வலி நம்பியி ருக்கவும்,
நாண மின்றிப் பதுங்கி வளருவான்;
தீமை தன்னை விலக்கவுஞ் செய்குவான்;
சிறுமை கொண்டொழித் தோடவுஞ் செய்குவான்.

8. தந்தி ரங்கள் பயிலவுஞ் செய்குவான்;
சவுரி யங்கள் பழகவுஞ் செய்குவான்
மந்தி ரத்திற னும்பல காட்டுவான்;
வலிமை யின்றிச் சிறுமையில் வாழ்குவான்.

9. காலம் வந்துகை கூடுமப் போதிலோர்
கணத்தி லேடதி தாக விளங்குவான்;
ஆல கால விடத்தினைப் போலவே,
அகில முற்றும் அசைந்திடச் சீறுவான்.

10. வேரும் வேரடி மண்ணு மிலாமலே
வெந்து போகப் பகைமை பொசுக்குவான்;
பாரும் வானமும் ஆயிர மாண்டுகள்
பட்ட துன்பங்கள் கணத்திடை மாற்றுவான்.

11. சக்கரத்தை யெடுப்ப தொருகணம்;
தருமம் பாரில் தழைத்தல் மறுகணம்
இக்க ணத்தில் இடைக்கண மொன்றுண்டோ?
இதனுள் ளேபகை மாய்த்திட வல்லன்காண்!

12. கண்ண னெங்கள் அரசன் புகழினைக்
கவிதை கொண்டெந்தக் காலமும் போற்றுவேன்
திண்ணை வாயில் பெருக்கவந் தேனெனைத்
தேசம் போற்றத்தன் மந்திரி யாக்கினான்.

13. நித்தச் சோற்றினுக் கேவல் செயவந்தேன்
நிகரி லாப்பெருஞ் செல்வம் உதவினான்
வித்தை நன்குகல் லாதவன் என்னுள்ளே
வேத நுட்பம் விளங்கிடச் செய்திட்டான்.

14. கண்ண னெம்பெரு மானருள் வாழ்கவே!
கலிய ழிந்து புவித்தலம் வாழ்கவே!
அண்ண லின்னருள் நாடிய நாடுதான்
அவலம் நீங்கிப் புகழில் உயர்கவே!

6. கண்ணன் - என் சீடன்

ஆசிரியப்பா

யானே யாகி என்னலாற் பிறவாய்
யானும் அவையுமாய் இரண்டினும் வேறாய்
யாதோ பொருளாம் மாயக் கண்ணன்
என்னிலும் அறிவினிற் குறைந்தவன் போலவும்,
என்னைத் துணைக்கொண்டு, என்னுடை முயற்சியால்         5

என்னடை பழகலால் என்மொழி கேட்டலால்
மேம்பா டெய்த வேண்டினோன் போலவும்,
யான்சொலுங் கவிதை என்மதி யளவை
இவற்றினைப் பெருமை யிலங்கின வென்று
கருதுவான் போலவும், கண்ணக் கள்வன் 10

சீடனா வந்தெனைச் சேர்ந்தனன், தெய்வமே!
பேதையேன் அவ்வலைப் பின்னலில் வீழ்ந்து
பட்டன தொல்லை பலபெரும் பாரதம்;
உளத்தினை வென்றிடேன்; <உலகினை வெல்லவும்
தானகஞ் சுடாதேன் பிறர்தமைத் தானெனும் 15

சிறுமையி னகற்றிச் சிவத்திலே நிறுத்தவும்,
தன்னுளே தெளிவும் சலிப்பிலா மகிழ்ச்சியும்
உற்றிடேன்; இந்தச் சகத்திலே யுள்ள
மாந்தர்க் குற்ற துயரெலாம் மாற்றி
இன்பத் திருத்தவும் எண்ணிய பிழைக்கெனைத் 20

தண்டனை புரிந்திடத் தானுளங் கொண்டு,
மாயக் கண்ணன் வலிந்தெனைச் சார்ந்து,
புகழ்ச்சிகள் கூறியும், புலமையை வியந்தும்
பல்வகை யால்அகப் பற்றுறச் செய்தான்,
வெறும்வாய், மெல்லங் கிழவிக் கிஃதோர்  25

அவலாய் மூண்டது; யானுமங் கவனை
உயர்நிலைப் படுத்தலில் ஊக்கமிக் கவனாய்,
இன்னது செய்திடேல், இவரொடு பழகேல்,
இவ்வகை மொழிந்திடேல், இனையன விரும்பேல்,
இன்னது கற்றிடேல், இன்னநூல் கற்பாய், 30

இன்னவ ருறவுகொள், இன்னவை விரும்புவாய்
எனப்பல தருமம் எடுத்தெடுத் தோதி,
ஓய்விலா தவனோ டுயிர்விட லானேன்
கதையிலே கணவன் சொல்லினுக் கெல்லாம்
எதிர்செயும் மனைவிபோல், இவனும்நான் காட்டும் 35

நெறியினுக் கெல்லாம் நேரெதிர் நெறியே
நடப்பா னாயினன், நானிலத் தவர்தம்
மதிப்பையும் புகழுறு வாழ்வையும் புகழையும்
தெய்வமாக் கொண்ட சிறுமதி, யுடையேன்
கண்ணனாஞ் சீடன், யான் காட்டிய வழியெலாம் 40

விலகியே நடக்கும் விநோதமிங் கன்றியும்,
உலகினர் வெறுப்புறும் ஒழுக்கமத் தனையும்
தலையாக் கொண்டு சார்பெலாம் பழிச்சொலும்
இகழுமிக் கவனாய், என்மனம் வருந்த
நடந்திடல் கண்டேன்; நாட்பட நாட்படக் 45

கண்ணனும் தனது கழிபடு நடையில்
மிஞ்சுவா னாகி, வீதியிற் பெரியோர்
கிழவிய ரெல்லாம் கிறுக்கனென் றிவனை
இகழ்ச்சியோ டிரக்கமுற் றேளனம் புரியும்
நிலையும் வந்திட்டான். நெஞ்சிலே யெனக்குத் 50

தோன்றிய வருத்தஞ் சொல்லிடப் படாது
முத்தனாக் கிடநான் முயன்றதோர் இளைஞன்
பித்தனென் றுலகினர் பேசிய பேச்சென்
நெஞ்சினை அறுத்தது; நீதிகள் பலவும்
தந்திரம் பலவும் சாத்திரம் பலவும் 55

சொல்லிநான் கண்ணனைத் தொளைத்திட லாயினேன்
தேவ நிலையிலே சேர்த்திடா விடினும்,
மானுடந் தவறி மடிவுறா வண்ணம்,
கண்ணனை நானும் காத்திட விரும்பித்
தீயெனக் கொதித்துச் சினமொழி யுரைத்தும் 60

சிரித்துரை கூறியும், செள்ளென விழுந்தும்,
கேலிகள் பேசிக் கிளறியும், இன்னும்
எத்தனை வகையிலோ என்வழிக் கவனைக்
கொணர்ந்திட முயன்றேன்; கொள்பய னொன்றிலை
கண்ணன் பித்தனாய்க் காட்டா ளாகி, 65

எவ்வகைத் தொழிலிலும் எண்ணமற் றவனாய்,
எவ்வகைப் பயனிலுங் கருத்திழந் தவனாய்,
குரங்காய்க் கரடியாய்க் கொம்புடைப் பிசாசாய்
யாதோ பொருளாய், எங்ஙனோ நின்றான்
இதனால்,   70

அகந்தையும் மமதையும் ஆயிரம் புண்ணுற;
யான்கடுஞ் சினமுற்று எவ்வகை யானும்
கண்ணனை நேருறக் கண்டே தீர்ப்பேன்
எனப்பெருந் தாபம் எய்தினே னாகி,
எவ்வா றேனும் இவனையோர் தொழிலில் 75

ஓரிடந் தன்னில் ஒருவழி வலிய
நிறுத்துவோ மாயின் நேருற் றிடுவான்
என்றுளந் தெண்ணி இசைந்திடுஞ் சமயங்
காத்திருந் திட்டேன், ஒருநாள் கண்ணனைத்
தனியே எனது வீட்டினிற் கண்டு  80

மகனே, என்பால் வரம்பிலா நேசமும்
அன்பும்நீ யுடையை; அதனையான் நம்பி,
நின்னிட மொன்று கேட்பேன்; நீயது
செய்திடல் வேண்டும்; சேர்க்கையின் படியே
மாந்தர்தஞ் செயலெலாம் வகுப்புறல் கண்டாய். 85

சாத்திர நாட்டமும் தருக்கமும் கவிதையில்
மெய்ப்பொரு ளாய்வதில் மிஞ்சிய விழைவும்
கொண்டோர் தமையே அருகினிற் கொண்டு
பொருளினுக் கலையும் நேரம் போக
மிஞ்சிய பொழுதெலாம் அவருடன் மேவி 90

இருந்திட லாகுமேல் எனக்குநன் றுண்டாம்;
பொழுதெலாம் என்னுடன் போக்கிட விரும்பும்
அறிவுடை மகனிங் குனையலால் அறிந்திடேன்.
ஆதலால்,
என்பயன் கருதி, எனக்கொரு துணையாய் 95

என்னுடன் சிலநாள் இருந்திட நின்னை
வேண்டி நிற்கின்றேன், வேண்டுதல் மறுத்தே
என்னைநீ துன்பம் எய்துவித் திடாமே,
இவ்வுரைக் கிணங்குவாய் என்றேன், கண்ணனும்,
அங்ஙனே புரிவேன். ஆயின் நின் னிடத்தே 100

தொழிலிலாது யாங்ஙனம் சோம்பரில் இருப்பது?
காரிய மொன்று காட்டுவை யாயின்,
இருப்பேன் என்றான். இவனுடைய இயல்பையும்
திறனையுங் கருதி, என் செய்யுளை யெல்லாம்
நல்லதோர் பிரதியில் நாடொறும் எழுதிக் 105

கொடுந்திடுந் தொழிலினைக் கொள்ளுதி என்றேன்
நன்றெனக் கூறியோர் நாழிகை யிருந்தான்;
செல்வேன் என்றான்; சினத்தோடு நானும்
பழங்கதை யெழுதிய பகுதியொன் றினையவன்
கையினிற் கொடுத்துக் கவனுற இதனை 110

எழுதுக என்றேன்; இணங்குவான் போன்றதைக்
கையிலே கொண்டு கணப்பொழு திருந்தான்
செல்வேன் என்றான். சினந்தீ யாகிநான்
ஏதடா, சொன்ன சொல் அழிந்துரைக் கின்றாய்;
பித்தனென் றுன்னை உலகினர் சொல்வது 115

பிழையிலை போ<லும் என்றேன், அதற்கு
நாளைவந் திவ்வினை நடத்துவேன் என்றான்.
இத்தொழி லிங்கே இப்பொழு தெடுத்துச்
செய்கின் றனையா? செய்குவ தில்லையா?
ஓருரை சொல் என் றுறுமினேன். கண்ணனும் 120

இல்லை யென் றொருசொல் இமைக்குமுன் கூறினான்.
வெடுக்கெனச் சினத்தீ வெள்ளமாய்ப் பாய்ந்திடக்
கண்சிவந் திதழ்கள் துடித்திடக் கனன்றுநான்
சீச்சி, பேயே! சிறிதுபோழ் தேனும்
இனியென் முகத்தின் எதிர்நின் றிடாதே; 125

என்றுமிவ் வுலகில் என்னிடத் தினிநீ
போந்திடல் வேண்டா, போ, போ, போ என்று
இடியுறச் சொன்னேன். கண்ணனும் எழுந்து
செல்குவ னாயினன். விழிநீர் சேர்ந்திட
மகனே! போகுதி வாழ்கநீ; நின்னைத் 130

தேவர் காத்திடுக! நின்தனைச் செம்மை
செய்திடக் கருதி ஏதேதோ செய்தேன்,
தோற்றுவிட் டேனடா! சூழ்ச்சிகள் அழிந்தேன்.
மறித்தினி வாராய், செல்லுதி வாழி நீ!
எனத்துயர் நீங்கி அமைதியோ டிசைத்தேன். 135

சென்றனன் கண்ணன் திரும்பியோர் கணத்தே
எங்கிருந் தோநல் லெழுதுகோல் கொணர்ந்தான்;
காட்டிய பகுதியைக் கவினுற வரைந்தான்;
ஐயனே, நின்வழி யனைத்தையுங் கொள்ளுவேன்.
தொழில்பல புரிவேன். துன்பமிங் கென்றும். 140

இனிநினக் கென்னால், எய்திடா தெனப்பல
நல்லசொல் <லுரைத்து நகைத்தனன் மறைந்தான்
மறைந்ததோர் கண்ணன் மறுகணத் தென்றன்
நெஞ்சிலே தோன்றி நிகழ்த்துவா னாயினன்
மகனே, ஒன்றை யாக்குதல் மாற்றுதல் 145

அழித்திட லெல்லாம் நின்செய லன்றுகாண்;
தோற்றேன் எனநீ உரைத்திடும் பொழுதிலே
வென்றாய், உலகினில் வேண்டிய தொழிலெலாம்
ஆசையுந் தாபமும் அகற்றியே புரிந்து
வாழ்க நீ என்றான், வாழ்கமற் றவனே! 150

7. கண்ணன் - எனது சற்குரு

புன்னாகவராளி - திஸ்ர ஜாதி - ஏகதாளம்
ரசங்கள்: அற்புதம், பக்தி

1. சாத்திரங் கள்பல தேடினேன் - அங்குச்
சங்கையில் லாதன சங்கையாம் -பழங்
கோத்திரங்கள் சொல்லு மூடர்தம் - பொய்ம்மைக்
கூடையில் உண்மை கிடைக்குமோ? - நெஞ்சில்
மாத்திரம் எந்த வகையிலும் - சக
மாயம் உணர்ந்திடல் வேண்டுமே - என்னும்
ஆத்திரம்நின்ற திதனிடை - நித்தம்
ஆயிரந் தொல்லைகள் சூழ்ந்தன

2. நாடு முழுதிலுஞ் சுற்றிநான் - பல
நாள்கள் அலைந்திடும் போதினில், - நிறைந்
தோடும் யமுனைக் கரையிலே - தடி
ஊன்றிச் சென்றாரொர் கிழவனார்; - ஒளி
கூடுமுகமும், தெளிவுதான் - குடி
கொண்ட விழியும், சடைகளும் - வெள்ளைத்
தாடியும் கண்டு வணங்கியே - பல
சங்கதி பேசி வருகையில்

3. என்னுளத் தாசை யறிந்தவர் - மிக
இன்புற் றுரைத்திட லாயினர் - தம்பி
நின்னுளத் திற்குத் தகுந்தவன் - சுடர்
நித்திய மோனத் திருப்பவன், - உயர்
மன்னர் குலத்தில் பிறந்தவன் - வட
மாமது ரைப்பதி யாள்கின்றான் - கண்ணன்
தன்னைச் சரணென்று போவையேல் - அவன்
சத்தியங் கூறுவன் என்றனர்.

4. மாமது ரைப்பதி சென்றுநான் - அங்கு
வாழ்கின்ற கண்ணனைப் போற்றியே, - என்றன்
நாமமும் ஊரும் கருத்துமே - சொல்லி
நன்மை தருகென வேண்டினன்; - அவன்
காமனைப் போன்ற வடிவமும் - இளங்
காளையர் நட்பும் பழக்கமும் - கெட்ட
பூமியைக் காக்குந் தொழிலிலே - எந்தப்
போதுஞ் செலுத்திடுஞ் சிந்தையும்

5. ஆடலும் பாடலும் கண்டுநான் - முன்னர்
ஆற்றங் கரையினில் கண்டதோர் - முனி
வேடந் தரித்த கிழவரைக் - கொல்ல
வேண்டுமென் றுள்ளத்தில் எண்ணினேன் - சிறு
நாடு புரந்திடு மன்னவன் - கண்ணன்
நாளுங் கவலையில் மூழ்கினோன்; தவப்
பாடுபட் டோர்க்கும் விளங்கிடா - உண்மை
பார்த்திவன் எங்ஙனம் கூறுவான்?

6. என்று கருதி யிருந்திட்டேன் - பின்னர்
என்னைத் தனியிடங் கொண்டுபோய், - நினை
நன்று மருவுக! மைந்தனே! - பர
ஞான முரைத்திடக் கேட்பைநீ - நெஞ்சில்
ஒன்றுங் கவலையில் லாமே - சிந்தை
ஊன்ற நிறுத்திக் களிப்புற்றே - தன்னை
வென்று மறந்திடும் போழ்தினில் - அங்கு
விண்ணை யளக்கும் அறிவுதான்!

7. சந்திரன் சோதி யுடையதாம் - அது
சத்திய நித்திய வஸ்துவாம்; - அதைச்
சிந்திக்கும் போதினில் வந்துதான் - நினைச்
சேர்ந்து தழுவி அருள்செயும்; அதன்
மந்திரத் தாலிவ் வுலகெலாம் - வந்த
மாயக் களிப்பெருங் கூத்துக்காண் - இதைச்
சந்ததம் பொய்யென் றுரைத்திடும் - மடச்
சாத்திரம் பொய் யென்று தள்ளடா!

8. ஆதித் தனிப்பொரு ளாகுமோர் - கடல்
ஆருங் குமிழி உயிர்களாம் - அந்தச்
சோதி யறிவென்னும் ஞாயிறு - தன்னைச்
சூழ்ந்த கதிர்கள் உயிர்களாம்; இங்கு
மீதிப் பொருள்கள் எவையுமே - அதன்
மேனியில் தோன்றிடும் வண்ணங்கள்-வண்ண
நீதி யறிந்தின்பம் எய்தியே - ஒரு
நேர்மைத் தொழிலில் - இயங்குவார்;

9. சித்தத்தி லேசிவம் நாடுவார் - இங்குச்
சேர்ந்து களித்துல காளுவார்; நல்ல
மத்த மதவெங் களிறுபோல் - நடை
வாய்ந்திறு மாந்து திரிகுவார்; இங்கு
நித்தம் நிகழ்வ தனைத்துமே - எந்தை
நீண்ட திருவரு ளால்வரும் - இன்பம்
சுத்த சுகந்தனி யாநந்தம் - எனச்
சூழ்ந்து கவலைகள் தள்ளியே 

10. சோதி அறிவில் விளங்கவும் - உயர்
சூழ்ச்சி மதியில் விளங்கவும் - அற
நீதி முறைவழு வாமலே - எந்த
நேரமும் பூமித் தொழில்செய்து - கலை
ஓதிப் பொருளியல் கண்டுதாம் - பிறர்
உற்றிடுந் தொல்லைகள் மாற்றியே - இன்பம்
மோதி விழிக்கும் விழியினார் - பெண்மை
மோகத்தில், செல்வத்தில், கீர்த்தியில்,

11. ஆடுதல், பாடுதல், சித்திரம் - கவி
யாதி யினைய கலைகளில் - உள்ளம்
ஈடுபட் டென்றும் நடப்பவர் - பிறர்
ஈன நிலைகண்டு துள்ளுவார் - அவர்
நாடும் பொருள்கள் அனைத்தையும் - சில
நாளினில் எய்தப் பெருகுவார் - அவர்
காடு புதரில் வளரினும் - தெய்வக்
காவனம் என்றதைப் போற்றலாம்.

12. ஞானியர் தம்மியல் கூறினேன் - அந்த
ஞானம் விரைவினில் எய்துவாய் - எனத்
தேனி லினிய குரலிலே - கண்ணன்
செப்பவும் உண்மை நிலைகண்டேன் - பண்டை
ஈன மனிதக் கனவெலாம் - எங்ஙன்
ஏகி மறைந்தது கண்டிலேன்; அறி
வான தனிச்சுடர் நான்கண்டேன்! - அதன்
ஆட லுலகென நான் கண்டேன்!

8. கண்ணம்மா - என் குழந்தை

(பராசக்தியைக், குழந்தையாகக் கண்டு சொல்லிய பாட்டு)

(ராகம் - பைரவி) (தாளம் - ரூபகம்)

ஸ ஸ ஸ - ஸா ஸா-பபப
தநீத - பதப - பா
பபப - பதப - பமா - கரிஸா
ரிகம - ரிகரி - ஸா

என்ற ஸ்வர வரிசைகளை மாதிரியாக வைத்துக் கொண்டு மனோபாவப்படி மாற்றிப் பாடுக.

1. சின்னஞ் சிறு கிளியே, - கண்ணம்மா!
செல்வக் களஞ்சியமே!
என்னைக் கலி தீர்த்தே - உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்!

2. பிள்ளைக் கனியமுதே, - கண்ணம்மா
பேசும்பொற் சித்திரமே!
அள்ளி யணைத்திடவே - என் முன்னே
ஆடி வருந் தேனே!

3. ஓடி வருகையிலே - கண்ணம்மா
உள்ளங் குளிரு தடீ!
ஆடித்திரிதல் கண்டால் - உன்னைப்போய்
ஆவி தழுவு தடீ!

4. உச்சி தனை முகந்தால் - கருவம்
ஓங்கி வளரு தடீ!
மெச்சி யுனை யூரார் - புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடீ!

5. கன்னத்தில் முத்தமிட்டால் - உள்ளந்தான்
கள்வெறி கொள்ளு தடீ!
உன்னைத் தழுவிடிலோ - கண்ணம்மா
உன்மத்த மாகு தடீ!

6. சற்றுன் முகஞ் சிவந்தால் - மனது
சஞ்சல மாகு தடீ!
நெற்றி சுருங்கக் கண்டால் - எனக்கு
நெஞ்சம் பதைக்கு தடீ!

7. உன்கண்ணில் நீர்வழிந்தால் - என்நெஞ்சில்
உதிரங் கொட்டு தடீ!
என்கண்ணிற் பாவையன்றோ? -  கண்ணம்மா!
என்னுயிர் நின்ன தன்றோ?

8. சொல்லு மழலையிலே - கண்ணம்மா!
துன்பங்கள் தீர்த்திடு வாய்;
முல்லைச் சிரிப்பாலே - எனது
மூர்க்கந் தவிர்த்திடு வாய்.

9. இன்பக் கதைக ளெல்லாம் - உன்னைப்போல்
ஏடுகள் சொல்வ துண்டோ?
அன்பு தருவதிலே - உனைநேர்
ஆகுமொர் தெய்வ முண்டோ?

10. மார்பில் அணிவதற்கே - உன்னைப்போல்
வைர மணிக ளுண்டோ?
சீர்பெற்று வாழ்வதற்கே - உன்னைப்போல்
செல்வம் பிரிது முண்டோ?

9. கண்ணன் - என் விளையாட்டுப் பிள்ளை

கேதாரம் - கண்டஜாதி - ஏகதாளம்
ரசங்கள்: அற்புதம், சிருங்காரம்

தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன்
தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. (தீராத)

1. தின்னப் பழங்கொண்டு தருவான்; பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;
என்னப்பன் என்னையன் என்றால் அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான். (தீராத)

2. தேனொத்த பண்டங்கள் கொண்டு - என்ன
செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்;
மானொத்த பெண்ணடி என்பான் - சற்று
மனமகிழும் நேரத்தி லேகிள்ளி விடுவான். (தீராத)

3. அழகுள்ள மலர்கொண்டு வந்தே - என்னை
அழஅழச் செய்துபின், கண்ணை மூடிக்கொள்;
குழலிலே சூட்டுவேன் என்பான் - என்னைக்
குருடாக்கி மலரினைத் தோழிக்குவைப்பான். (தீராத)

4. பின்னலைப் பின்னின் றிழுப்பான் - தலை
பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்;
வன்னப் புதுச்சேலை தனிலே - புழுதி
வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான். (தீராத)

5. புள்ளாங் குழல்கொண்டு வருவான்; அமுது
பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்;
கள்ளால் மயங்குவது போலே - அதைக்
கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம். (தீராத)

6. அங்காந் திருக்கும்வாய் தனிலே - கண்ணன்
ஆறேழு கட்டெறும் பைப்போட்டு விடுவான்;
எங்காகிலும் பார்த்த துண்டோ ? - கண்ணன்
எங்களைச்செய்கின்ற வேடிக்கையொன்றோ? (தீராத)

7. விளையாட வாவென் றழைப்பான்; - வீட்டில்
வேலையென் றாலதைக் கேளா திழுப்பான்;
இளையாரொ டாடிக் குதிப்பான்; - எம்மை
இடையிற் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான். (தீராத)

8. அம்மைக்கு நல்லவன் கண்டீர்! - மூளி
அத்தைக்கு நல்லவன், தந்தைக்கு மஃதே.
எம்மைத் துயர்செய்யும் பெரியோர் - வீட்டில்
யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான். (தீராத)

9. கோளுக்கு மிகவுஞ் சமர்த்தன் - பொய்ம்மை
குத்திரம் பழிசொலச் கூசாச் சழக்கன்;
ஆளுக் கிசைந்தபடி பேசித் - தெருவில்
அத்தனை பெண்களையும் ஆகா தடிப்பான். (தீராத)

10. கண்ணன்-என் காதலன்
 
செஞ்சுருட்டி-திஸ்ர ஏக தாளம்
சிருங்கார ரசம்

தூண்டிற் புழுவினைப்போல்-வெளியே
சுடர் விளக்கினைப் போல்,
நீண்ட பொழுதாக -எனது
நெஞ்சத் துடித்த தடீ!

கூண்டுக் கிளியினைப் போல்-தனிமை
கொண்டு மிகவும் நொந்தேன்;
வேண்டும் பொருளை யெல்லாம்-மனது
வெறுத்து விட்ட தடீ!

பாயின் மிசை நானும்-தனியே
படுத் திருக்கையி லே,
வாயினில் வந்ததெல்லாம்-சகியே!
தாயினைக் கண்டாலும்-சகியே!
சலிப்பு வந்த தடீ!

வளர்த்துப் பேசிடு வீர்;
நோயினைப் போலஞ்சி னேன்;-சகியே!
நுங்க ளுறவையெல் லாம்.

உணவு செல்லவில்லை;-சகியே!
உறக்கங் கொள்ளவில்லை;
மணம் விரும்பவில்லை;-சகியே!
மலர் பிடிக்கவில்லை;

குண முறுதி யில்லை;-எதிலும்
குழப்பம் வந்த தடீ!
கணமும் உள்ளத்திலே-சுகமே
காணக் கிடைத்த தில்லை.

பாலுங் கசந்ததடீ!-சகியே!
படுக்கை நொந்த தடீ!
நாலு வயித்தியரும்-இனிமேல்
நம்புதற் கில்லை யென்றார்;
பாலந்துச் சோசியனும்-கிரகம்
படுத்து மென்று விட்டான்.

கனவு கண்டதிலே-ஒருநாள்
கண்ணுக்குத் தோன்றா மல்,
இனம் விளங்க வில்லை-எவனோ
என்னகந் தொட்டு விட்டான்,
வினவக் கண் விழித்தேன்;-சகியே!
மேனி மறைந்து விட்டான்;
மனதில மட்டிலுமே -புதிதோர்
மகிழ்ச்சி கண்ட தடீ!

உச்சி குளிர்ந்ததடீ;-சகியே!
உடம்பு நேராச்சு
மச்சிலும் வீடுமெல்லாம்-முன்னைப்போல்
மனத்துக் கொத்த தடீ!
இச்சை பிறந்ததடீ-எதிலும்
இன்பம் விளைந்த தடீ;
அச்ச மொழிந்த தடீ;-சகியே!
அழகு வந்த தடீ!

எண்ணும் பொழுதி லெல்லாம்-அவன்கை
இட்ட விடத்தினி லே
தண்ணென் றிருந்ததடீ!-புதிதோர்
சாந்தி பிறந்ததடீ!
எண்ணி யெண்ணிப் பார்த்தேன்;-அவன்தான்
யாரெனச் சிந்தை செய்தேன்;
கண்ணன் திருவுருவம் -அங்ஙனே
கண்ணின் முன் நின்ற தடீ!

11. கண்ணன் -என் காதலன்

உறக்கமும் விழிப்பும்.
நாத நாமக்கிரியை-ஆதி தாளம்
ரசங்கள் :பீபத்ஸம்.சிருங்காரம்

 நேரம் மிகுந்ததின்னும் நித்திரையின்றி-உங்கள்
நினைப்புத் தெரியவில்லை,கூத்தடிக்கிறீர்;
சோரன் உறங்கிவிழும் நள்ளி ரவிலே-என்ன
தூளி படுகுதடி,இவ்விடத்திலே?
ஊரை யெழுப்பிவிட நிச்சயங் கொண்டீர்-அன்னை
ஒருத்தியுண் டென்பதையும் மறந்து விட்டீர்;
சாரம் மிகுந்ததென்று வார்த்தை சொல்கிறீர்,-மிகச்
சலிப்புக் தருகுதடி சகிப் பெண்களே!

நானும் பலதினங்கள் பொறுத்திருந்தேன்,-இது
நாளுக்கு நாளதிக மாகிவிட் டதே;
கூன னொருவன் வந்ததிந் நாணி பின்னலைக்
கொண்டை மலர்சிதற நின்றிழுத்ததும்,
ஆனைமதம் பிடித்திவ் வஞ்சி யம்மையின்
அருகினி லோடஇவள் மூர்ச்சை யுற்றதும்
பானையில் வெண்ணெய் முற்றும் தின்றுவிட்டதால்
பாங்கி யுரோகிணிக்கு நோவு கண்டதும்.

பத்தினி யாளையொரு பண்ணை வெளியில்
பத்துச் சிறுவர் வந்து முத்தமிட்டதும்,
நத்தி மகளினுக்கோர் சோதிடன் வந்த
நாற்ப தரசர் தம்மை வாக்களித்ததும்
கொத்துக் கனல்விழியக் கோவினிப் பெண்ணைக்
கொங்கத்து மூளிகண்டு கொக்கரித்ததும்,
வித்தைப் பெயருடைய வீணியவளும்
மேற்குத்திசை மொழிகள் கற்று வந்ததும்.

எத்தனை பொய்களடி! என்ன கதைகள்!
என்னை உறக்கமின்றி இன்னல் செய்கிறீர்;
சத்தமிடுங் குழல்கள் வீணைக ளெல்லாம்
தாளங்க ளோடுகட்டி மூடிவைத் தங்கே;
மெத்த வெளிச்சமின்றி ஒற்றை விளக்கை
மேற்குச் சுவரருகில் வைத்ததன் பின்னர்
நித்திரை கொள்ளஎனைத் தனியில் விட்டே
நீங்களெல் லோருமுங்கள் வீடு செல்லுவீர்.
(பாங்கியர் போன பின்பு தனியிருந்து சொல்லுதல்)

கண்கள் உறங்கவொரு காரண முண்டோ,
கண்ணனை இன்றிரவு காண்பதன் முன்னே?
பெண்களெல் லோருமவர் வீடு சென்றிட்டார்;
பிரிய மிகுந்த கண்ணன் காத்திருக்கின்றான்.
வெண்கல வாணிகரின் வீதி முனையில்
வேலிப் புறத்திலெனைக் காணடி யென்றான்;
கண்கள் உறங்கலெனுங் காரிய முண்டோ,
கண்ணனைக் கையிரண்டுங் கட்ட லின்றியே?

12. கண்ணன்-என் காதலன் (காட்டிலே தேடுதல்)

ஹிந்துஸ்தானி தோடி-ஆதி தாளம்
ரசங்கள்-பயாநகம், அற்புதம்

திக்குத் தெரியாத காட்டில்-உனைத்
தேடித் தேடி இளைத்தேனே.

மிக்க நலமுடைய மரங்கள்,-பல
விந்தைச் சுவையுடைய கனிகள்,-எந்தப்
பக்கத்தையும் மறைக்கும் வரைகள்,-அங்கு
பாடி நகர்ந்து வரு நதிகள்,-ஒரு   (திக்குத்)

நெஞ்சிற் கனல்மணக்கும் பூக்கள்,-எங்கும்
நீளக் கிடக்குமலைக் கடல்கள்,-மதி
வஞ்சித் திடுமகழிச் சுனைகள்,-முட்கள்
மண்டித் துயர்கொடுக்கும் புதர்கள்,-ஒரு  (திக்குத்)

ஆசை பெறவிழிக்கும் மான்கள்-உள்ளம்
அஞ்சக் குரல் பழகும்,புலிகள்,-நல்ல
நேசக் கவிதைசொல்லும் பறவை,-அங்கு
நீண்டே படுத்திருக்கும் பாம்பு,-ஒரு  (திக்குத்)

தன்னிச்சை கொண்டலையும் சிங்கம்-அதன்
சத்தத் தினிற்கலங்கும் யானை-அதன்
முன்னின் றோடுமிள மான்கள்-இவை
முட்டா தயல்பதுங்குந் தவளை-ஒரு    (திக்குத்)

கால்கை சோர்ந்துவிழ லானேன்-இரு
கண்ணும் துயில்படர லானேன்-ஒரு
வேல்கைக் கொண்டுகொலை வேடன்-உள்ளம்
வெட்கங் கொண்டொழிய விழித்தான்-ஒரு    (திக்குத்)

பெண்ணே உனதழகைக் கண்டு -மனம்
பித்தங் கொள்ளு’ தென்று நகைத்தான்-அடி
கண்ணே,எனதிருகண் மணியே-உனைக்
கட்டித் தழுவமனங் கொண்டேன்.       (திக்குத்)

சோர்ந்தே படுத்திருக்க லாமோ?-நல்ல
துண்டக் கறிசமைத்துத் தின்போம்-சுவை
தேர்ந்தே கனிகள்கொண்டு வருவேன்-நல்ல
தேங்கள் ளுண்டினிது களிப்போம்.         (திக்குத்)

என்றே கொடியவிழி வேடன்-உயிர்
இற்றுப் போகவிழித் துரைத்தான்-தனி
நின்றே இருகரமுங் குவித்து-அந்த
நீசன் முன்னர்இவை சொல்வேன்;          (திக்குத்)

அண்ணா உனதடியில் வீழ்வேன்-எனை
அஞ்சக் கொடுமைசொல்ல வேண்டா-பிறன்
கண்ணாலஞ் செய்துவிட்ட பெண்ணை-உன்தன்
கண்ணாற் பார்த்திடவுந் தகுமோ?

“ஏடீ,சாத்திரங்கள் வேண்டேன்-நின
தின்பம் வேண்டுமடி,கனியே!-நின்தன்
மோடி கிறுக்குதடி தலையை,-நல்ல
மொந்தைப் பழையகள்ளைப் போல

காதா லிந்தவுரை கேட்டேன்-அட
கண்ணா’வென் றலறி வீழ்ந்தேன்-மிகப்
போதாக வில்லையிதற் குள்ளே-என்தன்
போதந் தெளியநினைக் கண்டேன்.

கண்ணா!வேடனெங்கு போனான்?-உனைக்
கண்டே யலறிவிழுந் தானோ?-மணி
வண்ணா! என தபயக் குரலில்-எனை
வாழ்விக்க வந்த அருள் வாழி!

13. கண்ணன்-என் காதலன் (பாங்கியைத் தூது விடுத்தல்)

தங்கப் பாட்டு மெட்டு
ரசங்கள்: சிரங்காரம்,ரௌத்ரம்

1. கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் (அடி தங்கமே தங்கம்)
கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்
எண்ண முரைத்துவிடில் தங்கமே தங்கம்-பின்னர்
ஏதெனிலுஞ் செய்வமடி தங்கமே தங்கம்.

2. கன்னிகை யாயிருந்து தங்கமே தங்கம்-நாங்கள்
காலங் கழிப்பமடி தங்கமே தங்கம்;
அன்னிய மன்னர் மக்கள் பூமியிலுண்டாம்-என்னும்
அதனையுஞ் சொல்லிடடி தங்கமே தங்கம்

3. சொன்ன மொழிதவறும் மன்னவ னுக்கே-எங்கும்
தோழமை யில்லையடி தங்கமே தங்கம்;
என்ன பிழைகளிங்கு கண்டிருக்கிறான்?-அவை
யாவும் தெளிவுபெறக் கேட்டு விடடீ

4. மையல் கொடுத்துவிட்டுத் தங்கமே தங்கம்-தலை
மறைந்து திரிபவர்க்கு மானமு முண்டோ?
பொய்யை யுருவமெனக் கொண்டவ னென்றே-கிழப்
பொன்னி யுரைத்ததுண்டு தங்கமே தங்கம்.

5. ஆற்றங் கரையதனில் முன்ன மொருநாள்-எனை
அழைத்துத் தனியிடத்தில் பேசிய தெல்லாம்
தூற்றி நகர்முரசு சாற்றுவ னென்றே
சொல்லி வருவையடி தங்கமே தங்கம்.

6. சோர மிழைத்திடையர் பெண்களுடனே-அவன்
சூழ்ச்சித் திறமை ப காட்டுவ தெல்லாம்
வீர மறக்குலத்து மாதரிடத்தே
வேண்டிய தில்லையென்று சொல்லி விடடீ!

7. பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால்-மிகப்
பீழை யிருக்குதடி தங்கமே தங்கம்;
பண்ணொன்று வேய்ங்குழலில் ஊதிவந்திட்டான்-அதைப்
பற்றி மறக்குதில்லை பஞ்சை யுள்ளமே

8. நேர முழுதிலுமப் பாவி தன்னையே-உள்ளம்
நினைத்து மறுகுதடி தங்கமே தங்கம்
தீர ஒருசொலின்று கேட்டு வந்திட்டால்-பின்பு
தெய்வ மிருக்குதடி தங்கமே தங்கம்.

14. கண்ணன்-என் காதலன்
 
(பிரிவாற்றாமை)
ராகம்-பிலஹரி

1. ஆசை முகமறந்து போச்சே-இதை
ஆரிடம் சொல்வேனடி தோழி?
நேச மறக்கவில்லை நெஞ்சம்-எனில்
நினைவு முகமறக்க லாமோ?

2. கண்ணில் தெரியுதொரு தோற்றம்-அதில்
கண்ண னழழுமுழு தில்லை;
நண்ணு முகவடிவு காணில்-அந்த
நல்ல மலர்ச்சிரிப்பைக் காணோம்

3. ஓய்வு மொழிதலுமில்லாமல்-அவன்
உறவை நினைத்திருக்கும் உள்ளம்
வாயு முரைப்பதுண்டு கண்டாய்-அந்த
மாயன் புகழினையெய் போதும்.

4. கண்ணன் புரிந்துவிட்ட பாவம்-உயிர்க்
கண்ண னுருமறக்க லாச்சு;
பெண்க ளினத்திலிது போல-ஒரு
பேதையை முன்புகண்ட துண்டோ?

5. தேனை மறந்திருக்கும் வண்டும்-ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும்-இந்த
வைய முழுதுமில்லை தோழி!

6. கண்ணன் முகமறந்து போனால்-இந்தக்
கண்க ளிருந்துபய னுண்டோ?
வண்ணப் படமுமில்லை கண்டாய்-இனி
வாழும் வழியென்னடி தோழி?

15. கண்ணன்-என் காந்தன்
 
வராளி-திஸ்ர ஏக தாளம்
சிருங்கார ரசம்

1. கனிகள் கொண்டுதரும்-கண்ணன்
கற்கண்டு போலினிதாய்;
பனிசெய் சந்தனமும்-பின்னும்
பல்வகை அத்தர்களும்,
குனியும் வாண்முகத்தான்-கண்ணன்
குலவி நெற்றியிலே
இனிய பொட்டிடவே-வண்ணம்
இயன்ற சவ்வாதும்.

2. கொண்டை முடிப்பதற்கே-மணங்
கூடு தயிலங்களும்,
வண்டு விழியினுக்கே-கண்ணன்
மையுங் கொண்டுதரும்;
தண்டைப் பதங்களுக்கே-செம்மை
சார்த்துசெம் பஞ்சுதரும்;
பெண்டிர் தமக்கெல்லாம்-கண்ணன்
பேசருந் தெய்வமடி!

3. குங்குமங் கொண்டுவரும்-கண்ணன்
குழைத்து மார்பெழுத;
சங்கையி லாதபணம்-தந்தே
தழுவி மையல் செய்யும்;
பங்கமொன் றில்லாமல்-முகம்
பார்த்திருந் தாற்போதும்;
மங்கள மாகுமடீ!-பின்னோர்
வருத்த மில்லையடீ!

16. கண்ணம்மா-என் காதலி (காட்சி வியப்பு)

செஞ்சுருட்டி-ஏகதாளம்
ரசங்கள்:சிருங்காரம்,அற்புதம்

1. சுட்டும் விழிச்சுடர் தான்,-கண்ணம்மா!
சூரிய சந்திர ரோ?
வட்டக் கரிய விழி,-கண்ணம்மா!
வானக் கருமை கொல்லோ?
பட்டுக் கருநீலப்-புடவை
பதித்த நல் வயிரம்
நட்ட நடு நிசியில்-தெரியும்
நக்ஷத் திரங்க ளடி!

2. சோலை மல ரொளியோ-உனது
சுந்தரப் புன்னகை தான்?
நீலக் கட லலையே-உனது
நெஞ்சி லலைக ளடி!
கோலக் குயி லோசை-உனது
குரலி னிமை யடீ!
வாலைக் குமரி யடீ,-கண்ணம்மா!
மருவக் காதல் கொண்டேன்.

3. சாத்திரம் பேசு கிறாய்,-கண்ணம்மா!
சாத்திர மேதுக் கடீ!
ஆத்திரங் கொண்டவர்க்கே,-கண்ணம்மா!
சாத்திர முண்டோ டீ!
மூத்தவர் சம்ம தியில்-வதுவை
முறைகள் பின்பு செய்வோம்;
காத்திருப் பேனோ டீ?-இது பார்.
கன்னத்து முத்த மொன்று!

17. கண்ணம்மா-என் காதலி
 
(பின்னே வந்து நின்று கண் மறைத்தல்)
நாதநாமக்கிரியை-ஆதிதாளம்
சிருங்கார ரசம்

மாலைப் பொழுதிலொரு மேடை மிசையே
வானையும் கடலையும் நோக்கி யிருந்தேன்;
மூலைக் கடலினையவ் வான வளையம்
முத்தமிட் டேதழுவி முகிழ்த்தல் கண்டேன்;
நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி,
நேரங் கழிவ திலும் நினைப்பின்றியே
சாலப் பலபலநற் பகற் கனவில்
தன்னை மறந்தலயந் தன்னில் இருந்தேன். 1

ஆங்கப் பொழுதிலென் பின்பு றத்திலே,
ஆள்வந்து நின்றெனது கண்ம றைக்கவே,
பாங்கினிற் கையிரண்டுந் தீண்டி யறிந்தேன்,
பட்டுடை வீசுகமழ் தன்னி லறிந்தேன்;
ஓங்கி வருமுவகை யூற்றி லறிந்தேன்;
ஒட்டு மிரண்டுளத்தின் தட்டி லறிந்தேன்;
வாங்கி விடடிகையை யேடி கண்ணம்மா!
மாய மெவரிடத்தில்?’என்று மொழிந்தேன். 2

சிரித்த ஒலியிலவள் கைவி லக்கியே.
திருமித் தழுவி“என்ன செய்தி சொல்என்றேன்;
“நெரித்த திரைக்கடலில் என்ன கண்டிட்டாய்?
நீல விசும்பினிடை என்ன கண்டிட்டாய்?
திரித்த நுரையினிடை என்ன கண்டிட்டாய்?
சின்னக் குமிழிகளில் என்ன கண்டிட்டாய்?
பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே.
பெற்ற நலங்கள் என்ன?பேசுதிஎன்றாள். 3

“நெரித்த திரைக்கடலில் நின்முகங் கண்டேன்;
நீல விசும்பினிடை நின்முகங் கண்டேன்;
திரித்த நுரையினிடை நின்முகங் கண்டேன்;
சின்னக் குமிழிகளில் நின்முகங் கண்டேன்;
பிரித்துப் பிரிந்துநிதம் மேகம் அளந்தே,
பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன் றில்லை;
சிரித்த ஒலியினில்ன் கைவி லக்கியே,
திருமித் தழுவியதில் நின்முகங் கண்டேன். 4

18. கண்ணம்மா-என் காதலி
 
(முகத்திரை களைதல்)
நாதநாமக்கிரியை -ஆதி தாளம்
சிருங்கார ரசம்

தில்லித் துருக்கர் செய்த வழக்கமடீ!-பெண்கள்
திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்;
வல்லி யிடையினையும் ஓங்கி முன்னிற்கும்-இந்த
மார்பையும் மூடுவது சாத்திரங் கண்டாய்;
வல்லி யிடையினையும் மார்பி ரண்டையும்-துணி
மறைத்தத னாலழகு மறைந்த தில்லை;
சொல்லித் தெரிவ திலலை,மன்மதக்கலை-முகச்
சோதி மறைத்துமொரு காதலிங் குண்டோ? 1

ஆரியர் முன்னெறிகள் மேன்மை யென்கிறாய்-பண்டை
ஆரியப் பெண்களுக்குத் திரைகள் உண்டோ
ஓரிரு முறைகண்டு பழகிய பின்-வெறும்
ஒப்புக்குக் காட்டுவதிந் நாண மென்னடீ?
யாரிருந் தென்னை யிங்கு தடுத்திடுவார்-வலு
வாக முகத்திரையை அகற்றி விட்டால்?
காரிய மில்லையடி வீண்ப சப்பிலே -கனி
கண்டவன் தோலுரிக்கக் காத்தி ருப்பேனோ? 2

19. கண்ணம்மா-என் காதலி
 
(நாணிக் கண் புதைத்தல்)
நாதநாமக்கிரியை-ஆதிதாளம்
சிருங்கார ரசம்

மன்னர் குலத்தினிடைப் பிறந்தவளை-இவன்
மருவ நிகழ்ந்ததென்று நாண முற்றதோ?
சின்னஞ் சிறுகுழந்தை யென்ற கருத்தோ?-இங்கு
செய்யத் தகாதசெய்கை செய்தவ ருண்டோ?
வன்ன முகத்திரையைக் களைந்தி டென்றேன்-நின்றன்
மதங்கண்டு துகிலினை வலிதுரிந்தேன்.
என்ன கருத்திலடி கண்புதைக்கிறாய்?-எநனக்
கெண்ணப் படுவதில்லை யேடி கண்ணம்மா! 1

கன்னி வயதிலுனைக் கண்ட தில்லையோ?-கன்னங்
கன்றிச் சிவக்க முத்த மிட்ட தில்லையோ!
அன்னிய மாகநம்மள் எண்ணுவ தில்லை-இரண்
டாவுயுமொன் றாகுமெனக் கொண்ட தில்லையோ?
பன்னிப் பலவுரைகள் சொல்லுவ தென்னே? துகில்
பறித்தவன் கைபறிக்கப் பயங்கொள்வனோ
என்னைப் புறமெனவுங் கருதுவதோ-கண்கள்
இரண்டினில் ஒன்றையொன்று கண்டு வெள்குமோ? 2

நாட்டினிற் பெண்களுக்கு நாயகர் சொல்லும்-சுவை
நைந்த பழங்கதைகள் நானுரைப்பதோ?
பாட்டுஞ் சுதியு மொன்று கலந்திடுங்கால்-தம்முள்
பன்னி உபசரணை பேசுவ துண்டோ?
நீட்டுங் கதிர்களொடு நிலவு வந்தே-விண்ணை
நின்று புகழ்ந்துவிட்டுப் பின்மருவுமோ?
மூட்டும் விறகினையச் சோதி கவ்வுங்கால்-அவை
முன்னுப சாரவகை மொழிந்திடுமோ? 3

சாத்திரக் காரரிடம் கேட்டு வந்திட்டேன்;-அவர்
சாத்திரஞ் சொல்லியதை நினக்குரைப்பேன்;
நேற்று முன்னாளில் வந்த உறவன் றடீ!-மிக
நெடும்பண்டைக் காலமுதல் சேர்ந்து வந்ததாம்.
போற்றுமி ராமனென முன்புதித்தனை,-அங்கு
பொன்மிதிலைக் கரசன் பூமடந்தை நான்;
ஊற்றமு தென்னவொரு வேய்ங்குழல் கொண்டோன்-கண்ணன்
உருவம் நினக்கமையப் பார்த்தன் அங்குநான். 4

முன்னை மிகப்பழமை இரணியனாம்-எந்தை
மூர்க்கந் தவிர்க்க வந்த நரசிங்கன் நீ;
பின்னையொர் புத்தனென நான் வளர்ந்திட்டேன்-ஒளிப்
பெண்மை அசோதரையென் றுன்னை யெய்தினேன்.
சொன்னவர் சாத்திரத்தில மிகவல்லர் காண்;-அவர்
சொல்லிற் பழுதிருக்கக் காரண மில்லை;
இன்னுங் கடைசிவரை ஒட்டிருக்குமாம்;-இதில்
ஏதுக்கு நாண முற்றுக் கண்புதைப்பதே? 5

20. கண்ணம்மா-என் காதலி
 
(குறிப்பிடம் தவறியது)
செஞ்சுருட்டி-ஆதிதாளம்
சிருங்கார ரசம்

தீர்த்தக் கரையினிலே-தெற்கு மூலையில்
செண்பகத் தோட்டத்திலே,
பார்த்திருந்தால் வருவேன்-வெண்ணிலாவிலே
பாங்கியோ டென்று சொன்னாய்
வார்த்தை தவறிவிட்டாய்-அடி கண்ணம்மா!
மார்பு துடிக்கு தடீ!
பார்த்த விடத்திலெல்லாம்-உன்னைப்போலவே
பாவை தெரியு தடி!  1

மேனி கொதிக்கு தடி!-தலை சுற்றியே
வேதனை செய்கு தடீ!
வானி லிடத்தை யெல்லாம்-இந்த வெண்ணிலா
வந்து தழுவுது பார்!
மோனத் திருக்குதடீ! இந்த வையகம்
மூழ்கித் துயிலினிலே,
நானொருவன் மட்டிலும்-பிரி வென்பதோர்
நரகத் துழலுவதோ?  2

கடுமை யுடைய தடீ!எந்த நேரமும்
காவலுன் மாளிகையில்;
அடிமை புகுந்த பின்னும்-எண்ணும்போது நான்
அங்கு வருதற் கில்லை;
கொடுமை பொறுக்க வில்லை-கட்டுங் காவலும்
கூடிக் கிடக்கு தங்கே;
நடுமை யரசி யவள்-எதற் காகவோ
நாணிக் குலைந்திடுவாள்.  3
 
கூடிப் பிரியாமலே ஓரி-ராவெலாம்
கொஞ்சிக் குலவி யங்கே
ஆடி விளை யாடியே,-உன்றன் மேனியை
ஆயிரங் கோடி முறை
நாடித் தழுவி மனக்-குறை தீர்ந்து நான்
நல்ல களி யெய்தியே
பாடிப் பரவசமாய்-நிற்கவே தவம்
பண்ணிய தில்லை யடி!  4

21. கண்ணம்மா-என் காதலி

யோகம்

பாயு மொளி நீ யெனக்கு,பார்க்கும் விழி நானுனக்கு,
தோயும் மது நீ யெனக்கு,தும்பியடி நானுனக்கு.
வாயுரைக்க வருகுதில்லை,வாழி நின்றன் மேன்மையெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே!கண்ணம்மா! 1

வீணையடி நீ யெனக்கு,மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீ யெனக்கு,புது வரிம் நானுனக்கு;
காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடீ
மாணுடைய பேர ரசே! வாழ்வு நிலையே!கண்ணம்மா! 2

வான மழை நீ யெனக்கு வண்ண மயில் நானுனக்கு;
பான மடி நீ யெனக்கு,பாண்டமடி நானுனக்கு;
ஞான வொளி வீசுதடி,நங்கை நின் றன் சோதிமுகம்,
ஊனமறு நல்லழகே!ஊறு சுவையே!கண்ணம்மா!  3

வெண்ணிலவு நீ யெனக்கு,மேவு கடல் நானுனக்கு;
பண்ணு சுதி நீ யெனக்கு,பாட்டினிமை நானுனக்கு;
எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமில்லை நின்சுவைக்கே;
கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே!கண்ணம்மா! 4

வீசு கமழ் நீ யெனக்கு,விரியுமலர் நானுனக்கு;
பேசுபொருள் நீ யெனக்கு,பேணுமொழி நானுனக்கு;
நேசமுள்ள வான்சுடரே! நின்னழகை யேதுரைப்பேன்?
ஆசை மதுவே!கனியே!அள்ளு சுவையே கண்ணம்மா! 5

காதலடி நீ யெனக்கு,காந்தமடி நானுனக்கு;
வேதமடி நீ யெனக்கு,வித்தையடி நானுனக்கு;
போதமுற்ற போதினிலே பொங்கி வருந் தீஞ்சுவையே!
நாதவடி வானவளே! நல்லஉயிரே கண்ணம்மா!  6

நல்லவுயிர் நீ யெனக்கு,நாடியடி நானுனக்கு;
செல்வமடி நீ யெனக்கு,சேமநிதி நானுனக்கு;
எல்லையற்ற பேரழகே!எங்கும் நிறை பொற்சுடரே!
முல்லைநிகர் புன்னகையாய்!மோதுமின்பமே!கண்ணம்மா! 7

தாரையடி நீ யெனக்கு,தண்மதியம் நானுனக்கு;
வீரமடி நீ யெனக்கு,வெற்றியடி நானுனக்கு;
தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஓருருவமாய்ச் சமைந்தாய்!உள்ளமுதமே!கண்ணம்மா! 8

22. கண்ணன்-என் ஆண்டான்

புன்னாகவராளி-திஸ்ர ஏகதாளம்
ரசகங்கள் : அற்புதம்,கருணை

தஞ்ச முலகினில் எங்கணு மின்றித்
தவித்துத் தடுமாறி
பஞ்சைப் பறையன் அடிமை புகுந்தேன்,
பார முனக் காண்டே!
ஆண்டே!-பாரமுனக் காண்டே!  1

துன்பமும் நோயும் மிடிமையுந் தீர்த்துச்
சுகமருளல் வேண்டும்;
அன்புடன் நின்புகழ் பாடிக்குறித்து நின்
ஆணை வழி நடப்பேன்;
ஆண்டே-ஆணைவழி நடப்பேன்.  2

சேரிமுழுதும் பறையடித் தேயருட்
சீர்த்திகள் பாடிடுவேன்?
பேரிகை கொட்டித் திசைக ளதிர நின்
பெயர் முழுக்கிடுவேன்;
ஆண்டே!-பெயர் முழக்கிடுவேன்.  3

பண்ணைப் பறையர்தங் கூட்டத்தி லேயிவன்
பாக்கிய மோங்கி விட்டான்;
கண்ணனடிமை யிவனெனுங் கீர்த்தியில்
காதலுற் றங்கு வந்தேன்;
ஆண்டே! காதலுற் றிங்கு வந்தேன்; 4

காடு கழனிகள் காத்திடுவன்,நின்றன்
காலிகள் மேய்த்திடுவேன்;
பாடுபடச் சொல்லிப் பார்த்ததன் பின்னரென்
பக்குவஞ் சொல்லாண்டே!
ஆண்டே!-பக்குவஞ் சொல்லாண்டே! 5

தோட்டங்கள் மொத்திச் செடி வளர்க்கச் சொல்லிச்
சோதனை போடாண்டே!
காட்டு மழைழக்குறி தப்பிச் சொன்னா லெனைக்
கட்டியடி யாண்டே!
ஆண்டே!-கட்டியடி யாண்டே!  6

பெண்டு குழந்தைகள் கஞ்சி குடித்துப்
பிழைத்திட வேண்டுமையே!
அண்டை யயலுக்கென் னாலுப காரங்கள்
ஆகிட வேண்டுமையே?
உபகாரங்கள்-ஆகிட வேண்டுமையே! 7

மானத்தைக் காக்கவோர் நாலு முழத்துணி
வாங்கித் தரவேணும்;
தானத்துகுச் சில வேட்டிகள் வாங்கித்
தரவுங் கடனாண்டே!
சில வேட்டி-தரவுங் கடனாண்டே! 8

ஒன்பது வாயிற் குடிலினைச் சுற்றி
யொரு சில பேய்கள் வந்தே
துன்பப் படுத்துது மந்திரஞ் செய்து
தொலைத்திட வேண்டுமையே!
பகையாவுந் -தொலைத்திட வேண்டுமையே! 9

பேயும் பிசாசுந் திருடரு மென்றன்
பெயரினைக் கேட்டளவில்,
வாயுங் கையுங்கட்டி அஞ்சி நடக்க
வழி செய்ய வேண்டுமையே!
தொல்லைதீரும்-வழிசெய்ய வேண்டுமையே! 10

23. கண்ணம்மா-எனது குல தெய்வம்
 
ராகம்-புன்னாக வராளி
பல்லவி

நின்னைச் சரணடைந்தேன்-கண்ணம்மா!
நின்னைச் சரணடைந்தேன்!

சரணங்கள்

பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று  (நின்)

மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்
குடிமை புகுந்தன,கொன்றவை போக்கென்று  (நின்)

தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவு பெறும்வணம்  (நின்)

துன்ப மினியில்லை.சோர்வில்லை,தோற்பில்லை,
அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட  (நின்)

நல்லதுதீயது நாமறியோம் அன்னை
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக!      (நின்)

 
மேலும் முப்பெரும் பாடல்கள் »
temple news
துரியோதனன் சூழ்ச்சிச் சருக்கம் 1. பிரம்ம ஸ்துதி நொண்டிச் சிந்து ஓ மெனப் பெரியோர் கள்-என்றும்ஓதுவ தாய் ... மேலும்
 
மூன்றாவது அடிமைச் சருக்கம் 39. பராசக்தி வணக்கம் ஆங்கொரு கல்லை வாயிலிற் படி என்றமைத்தனம் சிற்பி, மற் ... மேலும்
 
temple news
1. குயில் காலை யிளம்பரிதி வீசுங் கதிர்களிலேநீலக் கடலோர் நெருப்பெதிரே சேர்மணிபோல்மோகனமாஞ் சோதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar