பதிவு செய்த நாள்
30
ஜன
2012
05:01
(இருபத்தெட்டாவது தாயரோடு அறவணடிகளையுந் தேர்ந்து கச்சிமாநகர்க்கட் சென்ற பாட்டு.)
இதன்கண்: மணிமேகலை வஞ்சிநகரத்தே இருந்து அந்நகரத்தின்கண் சமயக்கணக்கர் உறையும் இடத்தே சென்று, அளவை வாதிமுதல் பூதவாதி ஈறாக உள்ள சமயக்கணக்கர்களைத் தனித்தனியே கண்டு அவ்வவர் சமயக் கருத்துகளையெல்லாம் வினவி நன்கு தெரிந்து கொண்ட பின்னர், மாதவியையும் சுதமதியையும் அறவணடிகளையும் காண விரும்பி அந்நகரத்தின் உள்ளே புகுந்து பல்வேறு காட்சிகளையும் கண்டு செல்பவள், அங்கொரு தவப்பள்ளியின்கண் தவம் செய்து கொண்டிருந்த தன் மூதாதையாகிய மாசாத்துவானைக் கண்டு தன் வரலாறுகளையும் கூறிப் பவுத்த தருமத்தை கேட்டற்கு விரும்பி அறவணடிகளைத் தேடிக்கொண்டு வந்தனையும், அம்மாசாத்துவானுக்கு அறிவித்த செய்தியும், மாசாத்துவான் தான் வஞ்சி நகரத்திலே தங்குதற்கு உரிய காரணத்தை மணிமேகலைக்கு அறிவித்துக் காஞ்சி நகரத்தில் மழையின்மையால் மன்னுயிர்கள் பசிப்பிணியால் வருந்தி மாய்கின்றன; நீ அந்நகரத்தை எய்தி அவ்வுயிர்கள் ஓம்புதல் வேண்டும் என்று வேண்டிக்கொண்ட செய்தியும், அவன் வேண்டுகோட் கிணங்கிய மணிமேகலை வஞ்சி நகரத்திலிருந்து வான் வழியாகக் காஞ்சி நகரம் புகுந்த செய்தியும், அந்நகரத்தில் புத்த பீடிகையின் மருங்கிருந்து அந்நகரத்தின்கண் பசிப்பிணியால் வருந்தும் மன்னுயிர்களை வரவழைத்து அவற்றிற்கு நல்லுணவளித்துக் காப்பாற்றிய செய்தியும், அந்நிகழ்ச்சியைக் கேட்டுத் தன்னைக் காண வந்த மாதவியையும் சுதமதியையும் அறவண வடிகளையும் கண்டு அன்பு பொங்க அவர் அடிகளில் வீழ்ந்து வணங்கி அவர்களுக்கு அமுதசுரபியில் சுரந்த அறுசுவை உண்டி நல்கி அளவிலாது மகிழ்ந்த செய்தியும் கூறப்படும்.
ஆங்கு தாயரோடு அறவணர்த் தேர்ந்து
வாங்கு வில் தானை வானவன் வஞ்சியின்
வேற்று மன்னரும் உழிஞை வெம் படையும்
போல் புறம் சுற்றிய புறக்குடி கடந்து
சுருங்கைத் தூம்பின் மனை வளர் தோகையர்
கருங் குழல் கழீஇய கலவை நீரும்
எந்திர வாவியில் இளைஞரும் மகளிரும்
தம் தமில் ஆடிய சாந்து கழி நீரும்
புவி காவலன் தன் புண்ணிய நல் நாள்
சிவிறியும் கொம்பும் சிதறு விரை நீரும் 28-010
மேலை மாதவர் பாதம் விளக்கும்
சீல உபாசகர் செங் கை நறு நீரும்
அறம் செய் மாக்கள் அகில் முதல் புகைத்து
நிறைந்த பந்தல் தசும்பு வார் நீரும்
உறுப்பு முரண் உறாமல் கந்த உத்தியினால்
செறித்து அரைப்போர் தம் செழு மனை நீரும்
என்று இந் நீரே எங்கும் பாய்தலின்
கன்றிய கராமும் இடங்கரும் மீன்களும்
ஒன்றிய புலவு ஒழி உடம்பின ஆகி
தாமரை குவளை கழுநீர் ஆம்பல் 28-020
பூமிசைப் பரந்து பொறி வண்டு ஆர்ப்ப
இந்திர தனு என இலங்கு அகழ் உடுத்து
வந்து எறி பொறிகள் வகை மாண்பு உடைய
கடி மதில் ஓங்கிய இடைநிலை வரைப்பில்
பசு மிளை பரந்து பல் தொழில் நிறைந்த
வெள்ளிக் குன்றம் உள் கிழிந்து அன்ன
நெடு நிலைதோறும் நிலாச் சுதை மலரும்
கொடி மிடை வாயில் குறுகினள் புக்கு
கடை காப்பு அமைந்த காவலாளர்
மிடைகொண்டு இயங்கும் வியன் மலி மறுகும் 28-030
பல் மீன் விலைஞர் வெள் உப்புப் பகருநர்
கள் நொடையாட்டியர் காழியர் கூவியர்
மைந் நிண விலைஞர் பாசவர் வாசவர்
என்னுநர் மறுகும் இருங் கோவேட்களும்
செம்பு செய்ஞ்ஞ்அரும் கஞ்சகாரரும்
பைம்பொன் செய்ஞ்ஞ்அரும் பொன் செய் கொல்லரும்
மரம் கொல் தச்சரும் மண்ணீட்டாளரும்
வரம் தர எழுதிய ஓவிய மாக்களும்
தோலின் துன்னரும் துன்ன வினைஞரும்
மாலைக்காரரும் காலக் கணிதரும் 28-040
நலம் தரு பண்ணும் திறனும் வாய்ப்ப
நிலம் கலம் கண்டம் நிகழக் காட்டும்
பாணர் என்று இவர் பல் வகை மறுகும்
விலங்கரம் பொரூஉம் வெள் வளை போழ்நரோடு
இலங்கு மணி வினைஞ்அர் இரீஇய மறுகும்
வேத்தியல் பொது இயல் என்று இவ் இரண்டின்
கூத்து இயல்பு அறிந்த கூத்தியர் மறுகும்
பால் வேறு ஆக எண் வகைப் பட்ட
கூலம் குவைஇய கூல மறுகும்
மாகதர் சூதர் வேதாளிகர் மறுகும் 28-050
போகம் புரக்கும் பொதுவர் பொலி மறுகும்
கண் நுழைகல்லா நுண் நூல் கைவினை
வண்ண அறுவையர் வளம் திகழ் மறுகும்
பொன் உரை காண்போர் நல் மனை மறுகும்
பல் மணி பகர்வோர் மன்னிய மறுகும்
மறையோர் அருந் தொழில் குறையா மறுகும்
அரைசு இயல் மறுகும் அமைச்சு இயல் மறுகும்
எனைப் பெருந் தொழில் செய் ஏனோர் மறுகும்
மன்றமும் பொதியிலும் சந்தியும் சதுக்கமும்
புதுக் கோள் யானையும் பொன் தார்ப் புரவியும் 28-060
கதிக்கு உற வடிப்போர் கவின் பெறு வீதியும்
சேண் ஓங்கு அருவி தாழ்ந்த செய்குன்றமும்
வேணவா மிகுக்கும் விரை மரக் காவும்
விண்ணவர் தங்கள் விசும்பு இடம் மறந்து
நண்ணுதற்கு ஒத்த நல் நீர் இடங்களும்
சாலையும் கூடமும் தமனியப் பொதியிலும்
கோலம் குயின்ற கொள்கை இடங்களும்
கண்டு மகிழ்வுற்று கொண்ட வேடமோடு
அந்தர சாரிகள் அமர்ந்து இனிது உறையும்
இந்திர விகாரம் என எழில் பெற்று 28-070
நவை அறு நாதன் நல் அறம் பகர்வோர்
உறையும் பள்ளி புக்கு இறை வளை நல்லாள்
கோவலன் தாதை மா தவம் புரிந்தோன்
பாதம் பணிந்து தன் பாத்திர தானமும்
தானப் பயத்தால் சாவக மன்னவன்
ஊனம் ஒன்று இன்றி உலகு ஆள் செல்வமும்
செல்வற் கொணர்ந்து அத் தீவகப் பீடிகை
ஒல்காது காட்ட பிறப்பினை உணர்ந்ததும்
உணர்ந்தோன் முன்னர் உயர் தெய்வம் தோன்றி
மனம் கவல் கெடுத்ததும் மா நகர் கடல் கொள 28-080
அறவண அடிகளும் தாயரும் ஆங்கு விட்டு
இறவாது இப் பதிப் புகுந்தது கேட்டதும்
சாவக மன்னன் தன் நாடு எய்த
தீவகம் விட்டு இத் திரு நகர் புகுந்ததும்
புக்க பின் அந்தப் பொய் உருவுடனே
தக்க சமயிகள் தம் திறம் கேட்டதும்
அவ்வவர் சமயத்து அறி பொருள் எல்லாம்
செவ்விது அன்மையின் சிந்தை வையாததும்
நாதன் நல் அறம் கேட்டலை விரும்பி
மாதவன் தேர்ந்து வந்த வண்ணமும் 28-090
சொல்லினள் ஆதலின் தூயோய்! நின்னை என்
நல்வினைப் பயன்கொல் நான் கண்டது? எனத்
தையல் கேள் நின் தாதையும் தாயும்
செய்த தீவினையின் செழு நகர் கேடுற
துன்புற விளிந்தமை கேட்டுச் சுகதன்
அன்பு கொள் அறத்திற்கு அருகனேன் ஆதலின்
மனைத்திறவாழ்க்கையை மாயம் என்று உணர்ந்து
தினைத்தனை ஆயினும் செல்வமும் யாக்கையும்
நிலையா என்றே நிலைபெற உணர்ந்தே
மலையா அறத்தின் மா தவம் புரிந்தேன் 28-100
புரிந்த யான் இப் பூங் கொடிப் பெயர்ப் படூஉம்
திருந்திய நல் நகர் சேர்ந்தது கேளாய்
குடக் கோச் சேரலன் குட்டுவர் பெருந்தகை
விடர்ச் சிலை பொறித்த வேந்தன் முன் நாள்
துப்பு அடு செவ் வாய்த் துடி இடையாரொடும்
இப் பொழில் புகுந்து ஆங்கு இருந்த எல்லையுள்
இலங்கா தீவத்துச் சமனொளி என்னும்
சிலம்பினை எய்தி வலம் கொண்டு மீளும்
தரும சாரணர் தங்கிய குணத்தோர்
கரு முகில் படலத்துக் ககனத்து இயங்குவோர் 28-110
அரைசற்கு ஏது அவ் வழி நிகழ்தலின்
புரையோர் தாமும் இப் பூம்பொழில் இழிந்து
கல் தலத்து இருந்துழி காவலன்விரும்பி
முன் தவம் உடைமையின் முனிகளை ஏத்திப்
பங்கயச் சேவடி விளக்கி பான்மையின்
அங்கு அவர்க்கு அறு சுவை நால் வகை அமிழ்தம்
பாத்திரத்து அளித்துப் பலபல சிறப்பொடு
வேத்தவையாரொடும் ஏத்தினன் இறைஞ்சலின்
பிறப்பின் துன்பமும் பிறவா இன்பமும்
அறத்தகை முதல்வன் அருளிய வாய்மை 28-120
இன்ப ஆர் அமுது இறைவன் செவிமுதல்
துன்பம் நீங்கச் சொரியும் அந் நாள்
நின் பெருந் தாதைக்கு ஒன்பது வழி முறை
முன்னோன் கோவலன் மன்னவன் தனக்கு
நீங்காக் காதல் பாங்கன் ஆதலின்
தாங்க நல் அறம் தானும் கேட்டு
முன்னோர் முறைமையின் படைத்ததை அன்றி
தன்னான் இயன்ற தனம் பல கோடி
எழு நாள் எல்லையுள் இரவலர்க்கு ஈத்து
தொழு தவம் புரிந்தோன் சுகதற்கு இயற்றிய 28-130
வான் ஓங்கு சிமையத்து வால் ஒளிச் சயித்தம்
ஈனோர்க்கு எல்லாம் இடர் கெட இயன்றது
கண்டு தொழுது ஏத்தும் காதலின் வந்து இத்
தண்டாக் காட்சித் தவத்தோர் அருளிக்
காவிரிப் பட்டினம் கடல் கொளும் என்ற அத்
தூ உரை கேட்டுத் துணிந்து இவண் இருந்தது
இன்னும் கேளாய் நல் நெறி மாதே!
தீவினை உருப்பச் சென்ற நின் தாதையும்
தேவரில் தோற்றி முன்செய் தவப் பயத்தால்
ஆங்கு அத் தீவினை இன்னும் துய்த்துப் 28-140
பூங்கொடி! முன்னவன் போதியில் நல் அறம்
தாங்கிய தவத்தால் தான் தவம் தாங்கிக்
காதலி தன்னொடு கபிலை அம் பதியில்
நாதன் நல் அறம் கேட்டு வீடு எய்தும் என்று
அற்புதக் கிளவி அறிந்தோர் கூறச்
சொல் பயன் உணர்ந்தேன் தோகை! யானும்
அந் நாள் ஆங்கு அவன் அற நெறி கேட்குவன்
நின்னது தன்மை அந் நெடு நிலைக் கந்தில் துன்னிய
துவதிகன் உரையின் துணிந்தனை அன்றோ?
தவ நெறி அறவணன் சாற்றக் கேட்டனன் 28-150
ஆங்கு அவன் தானும் நின் அறத்திற்கு ஏது
பூங்கொடி! கச்சி மா நகர் ஆதலின்
மற்று அம் மா நகர் மாதவன் பெயர் நாள்
பொன் தொடி தாயரும் அப் பதிப் படர்ந்தனர்
அன்னதை அன்றியும் அணி இழை! கேளாய்
பொன் எயில் காஞ்சி நாடு கவின் அழிந்து
மன் உயிர் மடிய மழை வளம் கரத்தலின்
அந் நகர் மாதவர்க்கு ஐயம் இடுவோர்
இன்மையின் இந் நகர் எய்தினர் காணாய்
ஆர் உயிர் மருந்தே! அந் நாட்டு அகவயின் 28-160
கார் எனத் தோன்றிக் காத்தல் நின் கடன் என
அருந் தவன் அருள ஆய் இழை வணங்கித்
திருந்திய பாத்திரம் செங் கையின் ஏந்திக்
கொடி மதில் மூதூர்க் குடக்கண் நின்று ஓங்கி
வட திசை மருங்கின் வானத்து இயங்கித்
தேவர் கோமான் காவல் மாநகர்
மண் மிசைக் கிடந்தென வளம் தலைமயங்கிய
பொன் நகர் வறிதாப் புல்லென்று ஆயது
கண்டு உளம் கசிந்த ஒண் தொடி நங்கை
பொன் கொடி மூதூர்ப் புரிசை வலம் கொண்டு 28-170
நடு நகர் எல்லை நண்ணினள் இழிந்து
தொடு கழல் கிள்ளி துணை இளங் கிள்ளி
செம் பொன் மாச் சினைத் திருமணிப் பாசடைப்
பைம் பூம் போதிப் பகவற்கு இயற்றிய
சேதியம் தொழுது தென்மேற்கு ஆக
தாது அணி பூம்பொழில் தான் சென்று எய்தலும்
வையம் காவலன் தன் பால் சென்று
கைதொழுது இறைஞ்சி கஞ்சுகன் உரைப்போன்
கோவலன் மடந்தை குணவதம் புரிந்தோள்
நாவல் அம் தீவில் தான் நனி மிக்கோள் 28-180
அங்கையின் ஏந்திய அமுதசுரபியொடு
தங்காது இப் பதித் தருமதவனத்தே
வந்து தோன்றினள் மா மழை போல் என
மந்திரச் சுற்றமொடு மன்னனும் விரும்பி
கந்திற்பாவை கட்டுரை எல்லாம்
வாய் ஆகின்று என வந்தித்து ஏத்தி
ஆய் வளை நல்லாள் தன்னுழைச் சென்று
செங்கோல் கோடியோ செய் தவம் பிழைத்தோ
கொங்கு அவிழ் குழலார் கற்புக் குறைபட்டோ
நலத்தகை நல்லாய்! நல் நாடு எல்லாம் 28-190
அலத்தல்காலை ஆகியது அறியேன்
மயங்குவேன் முன்னர் ஓர் மா தெய்வம் தோன்றி
உயங்காதொழி நின் உயர் தவத்தால் ஓர்
காரிகை தோன்றும் அவள் பெருங் கடிஞையின்
ஆருயிர் மருந்தால் அகல் நிலம் உய்யும்
ஆங்கு அவள் அருளால் அமரர் கோன் ஏவலின்
தாங்கா மாரியும் தான் நனி பொழியும்
அன்னாள் இந்த அகல் நகர் புகுந்த
பின் நாள் நிகழும் பேர் அறம் பலவால்
கார் வறம் கூரினும் நீர் வறம் கூராது 28-200
பார் அகம் விதியின் பண்டையோர் இழைத்த
கோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சியொடு
மா மணிபல்லவம் வந்தது ஈங்கு என
பொய்கையும் பொழிலும் புனைமின் என்று அறைந்து அத்
தெய்வதம் போய பின் செய்து யாம் அமைத்தது
இவ் இடம் என்றே அவ் இடம் காட்ட அத்
தீவகம் போன்ற காஅகம் பொருந்திக்
கண்டு உளம் சிறந்த காரிகை நல்லாள்
பண்டை எம் பிறப்பினைப் பான்மையின் காட்டிய
அங்கு அப் பீடிகை இது என அறவோன் 28-210
பங்கயப் பீடிகை பான்மையின் வகுத்து
தீவதிலகையும் திரு மணிமேகலா
மா பெருந் தெய்வமும் வந்தித்து ஏத்துதற்கு
ஒத்த கோயிலுள் அத்தகப் புனைந்து
விழவும் சிறப்பும் வேந்தன் இயற்ற
தொழுதகை மாதர் தொழுதனள் ஏத்திப்
பங்கயப் பீடிகை பசிப் பிணி மருந்து எனும்
அங்கையின் ஏந்திய அமுதசுரபியை
வைத்து நின்று எல்லா உயிரும் வருக என
பைத்து அரவு அல்குல் பாவை தன் கிளவியின் 28-220
மொய்த்த மூ அறு பாடை மாக்களில்
காணார் கேளார் கால் முடம் ஆனோர்
பேணா மாக்கள் பேசார் பிணித்தோர்
படிவ நோன்பியர் பசி நோய் உற்றோர்
மடி நல்கூர்ந்த மாக்கள் யாவரும்
பல் நூறாயிரம் விலங்கின் தொகுதியும்
மன் உயிர் அடங்கலும் வந்து ஒருங்கு ஈண்டி
அருந்தியோர்க்கு எல்லாம் ஆர் உயிர் மருந்து ஆய்
பெருந் தவர் கைப் பெய் பிச்சையின் பயனும்
நீரும் நிலமும் காலமும் கருவியும் 28-230
சீர் பெற வித்திய வித்தின் விளைவும்
பெருகியதென்ன பெரு வளம் சுரப்ப
வசித் தொழில் உதவி வளம் தந்தது என
பசிப் பிணி தீர்த்த பாவையை ஏத்திச்
செல்லும்காலை தாயர் தம்முடன்
அல்லவை கடிந்த அறவண அடிகளும்
மல்லல் மூதூர் மன் உயிர் முதல்வி
நல் அறச்சாலை நண்ணினர் சேறலும்
சென்று அவர் தம்மைத் திருவடி வணங்கி
நன்று என விரும்பி நல் அடி கழுவி 28-240
ஆசனத்து ஏற்றி அறு சுவை நால் வகைப்
போனகம் ஏந்தி பொழுதினில் கொண்டபின்
பாசிலைத் திரையலும் பளிதமும் படைத்து
வாய்வது ஆக என் மனப்பாட்டு அறம் என
மாயை விட்டு இறைஞ்சினள் மணிமேகலை என் 28-245
உரை
(இதன் கண் 1 முதல் 98 ஆம் அடிவரையில் மணிமேகலை நகரத்தில் புகுந்து செல்பவள் கண்டு செல்லும் காட்சிகளின் வண்ணனையாய் ஒரு தொடர்.)
மணிமேகலை வஞ்சியில் அகநகரத்துள்ளே புகுந்து செல்லுதல்
1-4 : ஆங்கு..................கடந்து
(இதன் பொருள்) ஆங்கு தாயரோடு அறவணர் தேர்ந்து-அவ்வஞ்சி மாநகரத்தின்கண் மணிமேகலை ஐவகைச் சமயமும் அறிந்த பின்னர் அப்பொழுதே தன்னையீன்ற தாயும் செவிலித்தாய் போல்பவளும் ஆகிய மாதவியும் சுதமதியும் ஆகிய தாயர் இருவரையும் அறவண அடிகளாரையும் காண்டற கெழுந்த தன் அவாக்காரணமாக, அவரைத் தேடிப் புறப்படுபவள்; வாங்குவில் தானை வானவன் வஞ்சியின் வேற்று மன்னரும் உழிஞை வெம்படையும் போல-வளைந்த வில்லேந்திய படைகளையுடைய சேர மன்னனுடைய வஞ்சி நகரத்தின்மேல் வந்த பகை மன்னர்களும் உழிஞைப்பூச் சூடிய வெவ்விய படைகளும் போல; புறம் சுற்றிய புறக்குடி கடந்து புறத்தே சூழ்ந்துள்ள புறக்குடி இருப்புகளைக் கடந்து போய் என்க.
(விளக்கம்) சுதமதியும் மாதவி போன்று மணிமேகலையின்பால் தாயன்பு மிக்கவள் ஆதலின் அவளையும் உளப்படுத்தித் தாயர் என்று பன்மையில் ஓதினர். உழிஞைப்படை-மதில் வளைக்கும் பகைமன்னர் படை. அவர் உழிஞைப்பூ சூடிவருதல் மரபு. புறக்குடி-புறநகர். இது நால்வகைப்பட்ட வீரரும் செறிந்திருக்கும் இடமாதலின் இங்ஙனம் உவமை எடுத்தோதினர்.
அகழியின் மாண்பு
5-22 : சுருங்கை............உடுத்து
(இதன் பொருள்) மனைவளர் தோகையர்-தமது அகநகரத்தின்கண் தமது மாடமனையுள்ளிருந்து மயில்தோகை போலும் கூந்தலையுடைய மகளிர் தமது; கருங்குழல் கழீஇய-கரிய கூந்தலைக் கழுவி விட்டமையால்; சுருங்கைத்தூம்பின் சுருங்கையாகிய துளை வழியே வந்து கலந்த நறுமணமுடைய; கலவை நீரும்-பல்வேறு மணங்கலந்த நன்னீரும், தந்தம் இல் எந்திரவாவியில் இளைஞரும் மகளிரும் ஆடிய சாந்துகழி நீரும்-தங்கள் தங்கள் இல்லத்தின் உள்ளே அமைத்த எந்திர வாவியின்கண் இளைய ஆடவரும் மகளிரும் ஒருங்கே நீராடியமையால் அவர் அணிந்த நறுமணச் சாந்துகள் கழிக்கப்பெற்ற மணநீரும்; புவிகாவலன் தன் புண்ணிய நல்நாள் சிவிறியும் கொம்பும் சிதறும் விரை நீரும்-உலகங் காவலனாகிய தம்மரசன் பிறத்தற்கியன்ற புண்ணியத்தையுடைய நல்ல நாளிலே அந்நகரமாந்தர் மகிழ்ச்சியால் ஒருவர்மேல் ஒருவர் சிவிறியும் கொம்பும் ஆகிய நீர் வீசும் கருவிகளால் சிதறிய நறுமணக் கலவை நீரும்; மேலை மாதவர் பாதம் விளக்கும் சீல உபாசகர் செங்கை நறுநீரும்-மக்கட் பிறப்பின் மேலெல்லையாகத் திகழும் பெரிய தவவொழுக்கமுடைய துறவோரின் திருவடிகளை விளக்குகின்ற தமக்குரிய நல்லொழுக்கத்தை மேற்கொண்ட இல்லறத்தோர் சிவந்த கைகளால் பெய்யும் நறிய நீரும்; அறம்செய் மாக்கள் அகில் முதல் புகைத்து நிறைந்த பந்தர் தசும்பு வார்நீரும்-அறம் செய்கின்ற மாந்தர் அகில் முதலிய மணப்புகை எடுத்து நீர்ச்சால்களில் நிறைத்துள்ள தண்ணீர்ப் பந்தல்களில் அச்சால்களினின்றும் ஒழுகும் நன்னீரும்; உறுப்பு முரண் உறாமல் கந்த உத்தியினால் செறித்து அரைப்போர் தம் செழுமனை நீரும்-உறுப்புகள் மாறுபடாமல் சேர்த்தற்கியனற் நறுமணப் பொருளைச் சேர்த்துச் சாத்தம்மியில் இட்டுச் சாந்தரைக்கின்ற தொழிலாளருடைய செழிப்புடைய இல்லத்தினின்றும் வருள் நீரும், என்று இந்நீரே எங்கும் பாய்தலின்-என்று இங்குக் கூறப்பட்ட இத்தகைய நறுமணம் கமழும் நீரே அந்நகரத்தினின்றும் எத்திசையினும் தன்னுள் வந்து பாய்தலாலே; கன்றிய கராமும் இடங்கரும் மீன்களும்-தன்னுள் வாழும் சினந்த முதலைகளும் இடங்கரு மீன்களும்; ஒன்றிய புலஒழி உடம்பினவாகி-தம் பிறப்போடு பொருந்திய தமக்கியல்பான புலால் நாற்றம் ஒழிந்து நறுமணமே கமழும் உடம்பை உடையனவாகா நிற்பவும்; தாமரை குவளை கழுநீர் ஆம்பல் பூமிசைப் பரந்து-தாமரையும் நீலமலரும் செங்கழுநீர் மலரும் ஆம்பல் மலரும் ஆகிய பன்னிற மலர்களும் தன் மேற்பரப்பெல்லாம் பரந்து விளங்கா நிற்பவும் பொறி வண்டு ஆர்ப்ப-பொன்னிறம் முதலிய பல்வேறு நிறத்தால் அமைந்த புள்ளிகளையுடைய வண்டுகள் எங்கும் முரன்று திரியா நிற்பவும் இவ்வாற்றால்; இந்திர தனு என இலங்கு அகழ உடுத்து-இந்திர வில் போன்று பல்வேறு நிறத்தோடு விளங்குகின்ற அகழியாகிய அழகிய ஆடையை உடுத்துக் கொண்டு என்க.
(விளக்கம்) சுருங்கைத் தூம்பு-அந்நகரத்திலே பெய்யும் மழை நீரும் இல்லங்களில் மாந்தர் பயன்படுத்தும் நீரும் வெளியேறுதற் பொருட்டு நிலத்தின் கீழ்க்கல்லாலும் சுண்ணத்தாலும் இயற்றப்பெற்ற நீரோடும் குழாய் வழிகள். இதனால் அக்காலத்தே நிலத்தின்கீழே நீர்க்குழாய்கள் அமைந்திருந்த நனி நாகரிகச் சிறப்புணர்க.
நீணிலம் வகுத்து நீர் நிரந்துவந் திழிதரச்
சேணிலத் தியற்றிய சித்திரச் சுருங்கைசேர்
கோணிலத்து வெய்யவாங் கொடுஞ்சுறத் தடங்கிடங்கு (சீவக-142)
எனச் சிந்தாமணியினும் வருதல் காண்க.
மனைவளர் தோகையர் என்றதனால் இல்லத்தின் உள்ளேயே நீராடிக் குழல் கழுவிய நீர் என்பது கொள்க. குழல்-கூந்தல். அது மயிர்ச்சந்தன மணமும் மலர் மணங்களும் விரவியிருத்தலின் கலவை நீர் என்றார். இனி மகளிர் கருங்குழல் கழுவிய மணக்கலவை நீருமாம். என்னை-
பத்துத் துவரினு மைந்து விரையினும்
முப்பத் திருவகை யோமா லிகையினும்
ஊறின நன்னீ ருரைத்தநெய் வாசம்
நாறிருங் கூந்த னலம்பெற வாட்டி (சிலப் 6 : 76-79)
என்பதனானும் அறிக. எந்திரவாவி வேண்டும்பொழுது நீர் பெருக்கவும் கழிக்கவும் பொறிகள் அமைக்கப்பட்ட செய் நீர்நிலை. இஃது இல்லத்தின் ஊடேயே அமைக்கப்படுவதாம். இவ்வாவியில் செழுங்குடிச் செல்வராகிய இளைஞரும் மகளிரும் தம் தம் இல்லத்தினூடேயே சேர்ந்து நீராடி மகிழ்வர் ஆதலின் தம் தம் இல் ஆடிய என்றார். இல்-மனை. இஃதுணராதார் தந்தமில் என்பதற்குப் பொருள் காண தொழிந்தார். புவி காவலன் புண்ணிய நன்னாள் என்றது மன்னன் பிறந்த நாளை. சிவிறி கொம்பு என்பன நீர் சிதறும் கருவிகளுள் சில. மாந்தருள் மாதவரே மேல் எல்லையின் வரம்பு ஆதலின் மேலை மாதவர் என்றார்; ஐகாரம் சாரியை. சீல உபாசகர்-பவுத்தருள் இல்லறத்தார். இவர் ஐந்து சீலங்களை மேற்கொண்டு ஒழுகுபவர். அவையாவன: கொல்லாமை பொய் சொல்லாமை களவின்மை காமமின்மை இரவாமை என்னும் இவ்வைந்து ஒழுக்கங்களுமாம். இவை இல்லறத்தார் மேற்கொள்ளற்பாலன ஆதலின் அவரை, சீல உபாசகர் என்றார். தசும்புதல்-கசிதலுமாம். உறுப்பு-புகையுறுப்பு. அவையாவன நேர்கட்டி செந்தேன் நிரியாசம் பச்சிலை ஆரம் அகில் உறுப்போடு ஆறு என்பன (சிலப்-5 : 14 உரைமேற்;) கந்த உத்தி என்பது, கலவை செய்தற்கியன்ற முறைகளைக் கூறுகின்ற நூற்பெயர் எனக்கோடலுமாம். எனவே, நூன் முறைப்படி செறித்து அரைப்போர் எனினுமாம். கராம், இடங்கர் என்பன முதலை வகை. கலவை நீரானும் மலரானும் பல்வேறு நிறத்தோடு கிடக்கும் அகழிக்கு வானவில் உவமையாயிற்று.
மதில் அரணும் மாடவாயிலும்
23-28 : வந்தெறி...........புக்கு
(இதன் பொருள்) வந்து எறி பொறிகள் வகை மாண்புடைய பகைவர் வந்துற்றபோது தாமே இயங்கி வந்து அவரைக் கொல்லுகின்ற பொறிகளின் வகையினால் சிறப்புடைய; கடிமதில் ஓங்கிய இடைநிலை வரைப்பின்-காவலையுடைய மதில் ஓங்கி நிற்கின்ற இடைநிலத்திலே; பசுமிளை பரந்து-பசுமையுடைய காவற்காடு பரந்து செறியப்பட்டு; பல்தொழில் நிறைந்த-பலவாகிய சிற்பத்தொழில் நிறைந்துள்ள; வெள்ளிக்குன்றம் உள் கிழிந்தன்ன-வெள்ளிமலையானது நடுவிடம் கிழிந்தாற் போலத் தோன்றுகின்ற; நெடுநிலை தோறும் நிலாச்சுதை மலரும்-நெடியநிலைகள் அமைத்த இடந்தோறும் நிலாப்போன்று சுண்ண ஒளி விரிதற்கிடனான; கொடியிடை வாயில் குறுகினள் புக்கு-வானத்தே உயர்த்திய கொடிகள் செறிந்த மாடவாயிலை எய்தி உள்ளே புகுந்து என்க.
(விளக்கம்) வந்து எறிதல் பகைவர் வந்தவுடன் தாமே இயங்கிவந்து அப்பகைவரைக் கொல்லும் பொறிகள் என்க. இப்பொறி வகைகளை
...................வளைவிற் பொறியும்
கருவிர லூகமுங் கல்லுமிழ் கவணும்
பரிவுறு வெந்நெயும் பாகடு குழிசியும்
காய்பொன் னுலையுங் கல்லிடு கூடையும்
தூண்டிலுந் தொடக்கு மாண்டலை யடுப்பும்
கவையுங் கழுவும் புதையும் புழையும்
ஐயவித் துலாமுங் கைபெய ரூசியும்
சென்றெறி சிரலும் பன்றியும் பணையும்
எழுவுஞ் சீப்பு முழுவிறற் கணையமும்
கோலுங் குந்தமும் வேலும் பிறவும் (சிலப் 14: 207-216)
எனப் பிறர் ஓதுமாற்றானு முணர்க.
இடைநிலை வரைப்பு-அகழிக்கும் மதிலுக்கும் இடைக் கிடந்த நிலப்பரப்பு. மிளை-காவற்காடு. தொழில் நிறைந்த நெடுநிலை எனவும், குன்றம் உள் கிழிந்தன்ன நெடுநிலை எனவும் தனித்தனி கூட்டுக.
மறுகுகள்
29-43 : கடை...............மறுகும்
(இதன் பொருள்) கடை காப்பு அமைந்த காவலாளர் மிடை கொண்டு இயங்கும் வியன்மலி மறுகும்-வாயில் காத்தற்கமைந்த காவல் மறவர் செறிந்து இயங்குகின்ற அகலம் மிக்க தெருவும்; பல்மீன் விலைஞர் வெள்உப்பு பகருநர் கள்நொடையாட்டியர் காழியர் கூவியர்-பல்வேறு மீன்களையும் விற்கின்ற பரதவரும் உப்பிவிற்கும் உமணரும் உமட்டியரும் கள்விற்கும் வலைச்சியரும் பிட்டுவாணிகரும் அப்பவாணிகரும்; மைந்நிண விலைஞர் பாசவர் வாசவர் என்னுகர் மறுகும்-ஆட்டிசைறச்சி விற்போரும் இலை அமுதிடுவோரும் பஞ்சவாசம் விற்போரும் என்று கூறப்படுபவராகிய சிறு வாணிகர் தெருவும்; இருங்கோ வேட்களும் செம்பு செய்ஞ்ஞரும் கஞ்சகாரரும் பைம்பொன் செய்ஞ்ஞரும் பொன் செய்கொல்லரும்-பெரிய மட்கலவாணிகராகிய குயவரும் செம்பு கொட்டிகளும் வெண்கலக் கன்னாரும் பசிய பொன்னால் அணிகலன் செய்வோரும் பொன் செய்கின்ற உருக்குத் தட்டாரும்; மரங்கொல் தச்சரும் மண்ணீட்டாளரும் வரந்தர எழுதிய ஓவியமாக்களும்-மரம் வெட்டித் தொழில் செய்யும் தச்சரும் சிற்பாசாரியரும் வழிபடுவார்க்கு வரந்தருகின்ற தெய்வத்தன்மை தோன்ற எழுதிய ஓவியங்களையுடைய சித்திரகாரிகளும்; தோலின் துன்னரும் துன்னவினைஞரும் மாலைக்காரரும் காலக் கணிதரும்-தோல் தைக்கும் செம்மாரும் ஆடை தைக்கும் தையற்காரரும் காலங்கணிக்கின்ற கணிவரும்; நலந்தரு பண்ணும் திறனும் வாய்ப்ப நிலம் கலம் கண்டம் நிகழக் காட்டும் பாணர் என்று இவர் பல்வகை மறுகும்-அழகு தருகின்ற பெரும் பண்ணும் சிறு பண்ணும் பொருந்த அவற்றை மூவகை இடமும் யாழும் மிடறும் ஆகிய இவற்றில் நிகழும்படி இசைத்துக் காட்டும் பாணரும் என்று இவரெல்லாம் வாழுகின்ற பலவகைப்பட்ட தெருக்களும் என்க.
(விளக்கம்) மிடை கொள்ளுதல்-செறிவு கொள்ளுதல். வியன்மலி அகலமிக்க. பாசவர்-கயிறு திரித்து விற்பார், பச்சிறைச்சி சூட்டிறைச்சி விற்பாருமாம். இலையமுது-வெற்றிலை. வாசம்-மணப்பொருள். வாசவர்-மணப்பொருள் விற்போர். அவை-தக்கோலம் தீம்புத் தகைசால் இலவங்கம், கப்பூரஞ் சாதியோடைந்து மாம். கோவேட்கள்-குயவர். இவர் வாணிகம் பெரிது என்பது தோன்ற இருங்கோ வேட்கள் என்றார். தட்டார் இருவகைப்படுவர். அவருள் பைம்பொன் செய்ஞ்ஞரும் என்றது பணித் தட்டாரை. பொன் செய் கொல்லர் என்றது, பொன்னை உருக்கி மாசகற்றும் உருக்குத் தட்டார் இரும்பு செய்கொல்லர் முதலியோரை. கொல் தச்சர்ர-கொஃறச்சர் என நிலைமொழி ஈற்று லகரம் ஆய்தமாகத் திரிந்தது. மண்ணீடு-சிற்பம். ஓவியத்தில் தெய்வப்பண்பு திகழ எழுதும் கலைத்திறம் தோன்ற வரந்தர எழுதிய ஓவிய மாக்கள் என்றார். தோலின் துன்னர் என்றது-செம்மாரை. இக்காலத்துச் சக்கிலியர் என்பர். இவரின் வேறுபடுத்துதற்குத் துன்ன வினைஞர் என்றார். இவர் ஆடை முதலியன தைக்கும் தையல்காரர். நலம்-அழகு, இன்பமுமாம். பண்-பாலை குறிஞ்சி மருதம் செவ்வழி என்னும் பெரும்பண். திறம்-அவற்றின் கிளைகள். நிலம்-பண் பிறக்கும் நிலைக்களம். அவை எழுத்தும் அசையும் சீரும் ஆம். இனி மந்தம் உச்சம் சமம் என்னும் மூன்று இடமுமாம். கலம்-யாழ். கண்டம்-மிடறு. ஈண்டுக் கூறப்பட்ட தொழிலாளர் தனித்தனித் தெருவில் வாழ்ந்தனர் என்பது தோன்ற என்று இவர் பல்வகை மறுகும் என்றார்.
இதுவுமது
44-53 : விலங்கரம்..............மறுகும்
(இதன் பொருள்) விலங்கரம் பொரூஉம் போழ்கரோடு இலங்குமணி வினைஞர் இரீஇய மறுகும்-வளைந்த வாளரம் கொண்டு அறுக்கும் வெள்ளிய சங்குகளைப் பிளப்பவரோடு விளங்குகின்ற முத்துக் கோக்கும் தொழிலாளர் தங்கிய தெருவும்; சீவத்தியல் பொதுவியல் என்று இவ்விரண்டின் கூத்து இயல்பு அறிந்த கூத்தியர் மறுகும்-வேத்தியலும் பொதுவியலும் என்று வகுத்துக் கூறப்படுகின்ற இவ்விரண்டு வகையினும் அமைந்த ஆடல்கலை இலக்கணமெல்லாம் அறிந்துள்ள ஆடல் மகளிர் வாழுகின்ற தெருவும், பால் வேறு ஆக எண் வகைப்பட்ட கூலங் குவைஇய கூலமறுகும்-பகுதி இரண்டாக எட்டு வகைப்பட்ட கூலங்களைக் குவித்துள்ள கூலக்கடைத் தெருவும்; மாகதர் சூதர் வேதாளிகர் மறுகும்-மரகதரும் சூதரும் வேதாளிகரும் குடியிருக்கின்ற தெருவும்; போகம் புரக்கும் பொதுவர் பொலி மறுகும்-காமவின்பத்தைப் பேணிப் பெருக்கும் பொது மகளிர் வாழுகின்ற அழகிய தெருவும்; கண் நுழைகல்லா நுண் நூல் கைவினை வண்ண அறுசுவையர் வளம் திகழ் மறுகும்-காண்போர் கண்ணொளி புகுதாத நுண்ணிய நூலால் நெய்யும் கைத்தொழிலையுடைய பல்வேறு வண்ணங்களை உடைய ஆடைநெய்யும் தொழிலாளர் வாழுகின்ற செல்வத்தால் திகழுகின்ற தெருவும் என்க.
(விளக்கம்) விலங்கு-வளைவு. அரம்-வாளரம். போழ்நர்-அறுத்துப் பிளப்போர் சங்கறுப்பாரோடு இயைத்துக் கூறுதலின் ஈண்டு இலங்கு. மணி என்றது முத்து என்பது பெற்றாம். கூத்து வேத்தியலும் பொதுவியலும் என இருவகைப்படும். வேத்தியலை அகக்கூத்தென்றும் பொதுவியலைப் புறக்கூத்தென்பாரும் பிற கூறுவாரும் உளர். கூத்தியர்-நாடகக் கணிகையர். கூலங்கள் இரண்டு பகுதியாக ஒவ்வொரு பகுதியினும் எட்டு எட்டு வகை உள்ளன ஆதலின்பால் வேறு ஆக எண் வகைப்பட்ட கூலாம் என்றார். அவை வருமாறு: நெல்லு புல்லு வரகு தினை சாமை இறுங்கு தோரையொடு கழைவிளை நெல்லே இவ்வெட்டும் ஒருபாற்படும் கூலங்கள். இனி எள்ளுக் கொள்ளுப் பயறுழுந்து அவரைகடலை துவரை மொச்சை என்றாங்கு உடன் இவை முதிரைக் கூலத்துணவே என்னும் இவ்வெட்டும் ஒருவகைக் கூலம் என்க. குவைஇய-குவித்த. மாகதர்-இருந்தேத்துவார். சூதர்-நின்றேத்துவார். வேதாளிகர்-பலவகைத் தாளத்திலாடுவார்; சூதர் வாழ்த்த மாகதர்நுவல வேதாளிகரொடு நாழிகை இசைப்ப எனவும் (மதுரைக்-670-671) மாகதப்புலவரும் வைதாளிகரும் சூதரும் எனவும் (சிலப். 26:74-5) பிற சான்றோரும் ஓதுதலுணர்க. போகம் புத்தலாவது காமயின்பத்தைப் போற்றிப் பெருக்கிக் காட்டுதல். பொதுவர்-பொதுமகளிர். நுழைகல்லா-நுழையாத. அறுவையர்-புடைவை விற்போர்; நெய்வோருமாம்.
இதுவுமது
54-65: பொன்னுரை................இடங்களும்
(இதன் பொருள்) பொன் உரை காண்போர் நன்மனை நறுகும்-பொன்னை உரைத்து அதன் மாற்றினை அறிந்து கூறுவோர் வாழுகின்ற அழகிய இல்லங்கள் அமைந்த தெருவும்; பல்மணி பகர்வோர் மன்னிய மறுகும்-பல்வேறு வகைப்பட்ட மாணிக்கம் முதலிய மணிகளை விற்கும் மணிவாணிகர் நிலைத்திருந்து வாழும் தெருவும்; மறையோர் அருந்தொழில் குறையா மறுகும்-வேதியர் தமக்குரிய ஓதலும் ஓதுவித்தலும் முதலிய அரிய தொழில் குறைபடாத தெருவும்; அரைசியல் மறுகும் அமைச்சியல் மறுகும்-அரசு ஆள்பவர் வாழுகின்ற தெருவும் அமைச்சியலோர் வாழுகின்ற தெருவும்; ஏனைப் பெருந்தொழில் செய் ஏனோர் மறுகும்-ஏனைய தானை நடத்துதல் முதலிய பெரிய தொழில்களைச் செய்கின்ற தானைத் தலைவர் முதலியோர் வாழுகின்ற தெருவும்; மன்றமும் பொதியிலும் சந்தியும் சதுக்கமும்-ஊர் மன்றங்களும் ஊரம்பலங்களும் முச்சந்தியும் நாற்சந்தியும்; புதுக்கோள் யானையும் பொற்றார் புரவியும் கதிக்கு உறவடிப்போர் கவின்பெறு வீதியும்-காட்டினின்றும் புதிதாகப் பிடித்துக் கொணர்ந்த யானைகளையும் பொன்னால் ஆகிய சதங்கை மாலை பூட்டிய குதிரைகளையும் அவ்வவற்றின் செலவிற்குப் பொருந்தப் பயிற்றும் யானைப்பாகரும் குதிரைப்பாகரும் வாழுகின்ற அழகுடைய வீதியும்; சேண் ஓங்கு அருவி தாழ்ந்த செய்குன்றமும்-மிக உயர்ந்து அருவி வீழ்கின்ற செய்குன்றங்களும்; வேணவாமிகுக்கும் விரைமரக்காவும்-தன்பால் புகுந்தவருடைய வேட்கையாகிய அவாவினை மிகுவிக்கும் இயல்புடைய நறுமண மலர்களை உடைய இளமரச் சோலைகளும்; விண்ணவர் தங்கள் விசும்பிடம் மறந்து நண்ணுதற்கு ஒத்த நல்நீர் இடங்களும்-தம்பால் வந்துற்ற தேவர்களும் தங்களுக்குரிய வானுலகத்தை மறந்து மீண்டும் வருவதற்குத் தகுந்த இன்பங்களை நல்கும் அழகிய நீர்நிலைகள் அமைந்த இடங்களும் என்க.
(விளக்கம்) பொன் உரை காண்டல்-பொன்னைக் கட்டளைக் கல்லின்கண் உரைத்து மாற்றறிதல். மணி-மாணிக்கம் முதலியன. மறையோர் தொழில்-ஓதல் ஓதுவித்தல் வேட்டம் வேட்பித்தல் ஈதல் ஏற்றல் என்னும் இவ்வறுவகைத் தொழிலுமாம். அரைசு-பெருநில மன்னரும் குறுநில மன்னரும்; ஏனை-எனை என முதல் குறுகியது; பெருந்தொழில் படைத்தொழில் முதலியன. மன்றம் பொதியில் என்பன ஊர்ப்பொது விடங்கள். இவ்விடங்களிலே ஊர் மக்கள் ஒருங்கு கூடியிருந்து வழக்காடுதல் அறங்கூறுதல் ஊர்ப்பொதுப் பணிகளை ஆராய்தல் முதலியன செய்வர். இவற்றுள் மன்றம் என்பது மரநிழலையுடைய வெளியென்றும் பொதியில் என்பது புதியவர் வந்து தங்கும் ஊர்ப்பொதுக் கட்டிடத்தை உடையது என்றும் கொள்க. பொதியிலில் அருட்குறியாகக் கல்தறிநட்டு அதனை வணங்குவதும் அக்கால வழக்கம்: இவற்றுள் தாதெரு மன்றம் என்னும் வழக்கானும், பாசிலை பொதுளியபோதி மன்றம் (சிலப்-23:79) என்பதனானும் மன்றம் என்பதன் இயல்பையும்,
கொண்டி மகளிர் உண்டுறை மூழ்கி
அந்தி மாட்டிய நந்தா விளக்கின்
மலரணி மெழுக்க மேறிப் பலர்தொழ
வம்பலர் சேக்கும் கந்துடைப் பொதியில் (பட்டினப்-244-249)
என்பதனான் பொதியிலின் இயல்பையும் உணர்க. இக்காரணத்தால் இவற்றைச் சான்றோர் மன்றமும் பொதியிலும் என இணைத்தே கூறுதல் காணலாம். (முருகு-224; மணிமே-20:30.) சந்தி-முச்சந்தி; ஐஞ்சந்தியுமாம். சதுக்கம். இந்நகர வண்ணனை பெரும்பாலும் சொல்லாலும் பொருளாலும் சிலப்பதிகாரத்தில் இந்திர விழா வெடுத்த காதையில் பூம்புகார் நகர வண்ணனையையே ஒத்திருத்தல் காண்க. கதிக்குற வடித்தல்-போர் முதலியவற்றில் யானையும் புரவியும் செல்லுதற்குப் பொருந்துமாறு இவற்றின் நடையைத் திருத்திப் பயிற்றுதல். செய்குன்றம்-செயற்கை மலை. வேணவா-வேட்கையால் உண்டாகிய அவா. விரை மரம்-மணமலர் தரும் மரம்.
இதுவுமது
66-68 : சாலை...................வேடமொடு
(இதன் பொருள்) சாலையும் கூடமும் தமனிய பொதியிலும்-அறக்கோட்டமும் பொன்னாலியன்ற அறங்கூறும் அவையமும்; கோலம் குயின்ற கொள்கை இடங்களும்-இன்னோரன்ன சிற்பம் முதலியவற்றால் அழகு செய்யப்பெற்ற கோட்பாடமைந்த இடங்களும் ஆகிய இவற்றையெல்லாம்; கொண்ட வேடமொடு கண்டு மகிழ்வுற்று-அம்மணிமேகலை தான் முன்னர் மேற்கொண்ட மாதவன் வடிவத்தோடே சென்று கண்டு பெரிதும் மகிழ்ந்து என்க.
(விளக்கம்) சாலை-அறக்கோட்டம். கூடம் என்றது கனகம், வெள்ளி முதலியவற்றாலியன்ற கூடங்களை.
கண்ணெலாங் கவர்வன கனக கூடமும்
வெண்ணிலாச் சொரிவன வெள்ளி வேயுளும்
தண்ணிலாத் தவழ்மணித் தலமுஞ் சார்ந்தரோ
மண்ணினா லியன்றில மதலை மாடமே (சூளாமணி : நகர-7)
எனவருதலுமறிக. தமனியப் பொதியில் என்றதனால் மேலோர் இருந்து அறங்கூறும் மன்றம் என்பது பெற்றாம். பொன்னம்பலம் என்னும் வழக்கும் உணர்க. கொண்டவேடம்-மாதவன் உருவம். மணிமேகலை தான் மேற்கொண்ட வேடமொடு கண்டு மகிழ்வுற்று என எழுவாய் பெய்தும் மாறிக் கூட்டியும் கொள்க.
மணிமேகலை மாசாத்துவான் மாதவம் புரிவோனைக் காண்டலும் தன் வரலாறு உணர்த்தலும்
69-74 : அந்தர................பணிந்து
(இதன் பொருள்) அந்தரசாரிகள் அமர்ந்து இனிது உறையும் இந்திர விகாரம் என எழில் பெற்று-புகாரிடத்தே வானத்து இயங்கும் ஆற்றல் பெற்ற பவுத்தத் துறவிகள் தங்கி இனிதாக வாழுகின்ற இந்திரன் மனத்தால் இயற்றப்பெற்ற இந்திரவிகாரம் என்னும் பெயருடைய அரங்குகள் போன்று அழகெய்தி அவ்வஞ்சிமா நகரத்தே அமைந்ததும்; நவைஅறு நாதன் நல்அறம் பகர்வோர் உறையும் பள்ளி-குற்றமற்ற தலைவனாகிய புத்தர் திருவாய் மலர்ந்தருளிய நன்மை தரும் அறவுரைகளைச் செவியறிவுறுத்தும் துறவோர் வதிவதுமாகிய ஒரு தவப்பள்ளியைக் கண்டு; இறைவனை நல்லாள் புக்கு-முன்கையில் வளையணிதற்கியன்ற இளமையை உடைய அம்மணிமேகலை நல்லாள் அதனுட் புகுந்து அப்பள்ளியின்கண்; கோவலன் தாவத மாதவம் புரிந்தோன் பாதம் பணிந்து-தன் தந்தையாகிய கோவலனை ஈன்ற தந்தையாகிய மாசாத்துவான் கோவலன் மறைவின் பின் துறவியாய் அங்கு வந்து பெரிய தவஒழுக்கம் பூண்டிருப்பவனைக் கண்குளிரக் கண்டு அவனுடைய திருவடிகளிலே வீழ்ந்து வணங்கி எழுந்து பின்னர் என்க.
(விளக்கம்) அந்தரசாரிகள்-தவவாற்றல் மிக்கு வானத்திலே இயங்கும் வன்மை பெற்ற துறவோர். இந்திர விகாரம் காவிரிப்பூம்பட்டினத்தில் புத்த சைத்தியத்தின்கண் அமைந்த ஏழு அரங்குகள். அவை வஞ்சியின்கண் பவுத்தத் துறவிகள் உறையும் பள்ளிக்கு உவமையாக எடுக்கப்பட்டன. இறைவனை நல்லாள் என்றது மணிமேகலையை. இங்ஙனம் கூறியது குறிப்பாக அவளது இளமையை விதத்தற் பொருட்டாம். கோவலன் தாதையாகிய மாசாத்துவான் துறவியாய் அங்கு வந்து தவம் புரிந்தோனைக் கண்டு வணங்கி என்பது கருத்து.
இதுவுமது
74-84 : தன்பாத்திர.........புகுந்ததும்
(இதன் பொருள்) தன் பாத்திர தானமும்-பின்னர்த் தன் மூதாதையாகிய அத்துறவிக்குத் தனது வரலாற்றைக் கூறுகின்ற மணிமேகலை தன் கையில் ஏந்தியுள்ள அமுதசுரபி என்னும் பிச்சைப் பாத்திரத்தினால் செய்யப்படும் அன்னதானத்தின் சிறப்பும்; தானப் பயத்தால் சாவக மன்னவன் ஊனம் ஒன்றி இன்றி-அந்த தானத்தைச் செய்த பயன் காரணமாக ஆபுத்திரன் சாவக நாட்டு மன்னவன் புண்ணியராசனாய்ப் பிழை ஒன்றும் நிகழா வண்ணம்; உலகு ஆள் செல்வமும்-உலகத்தை ஆளுகின்ற அரசச் செல்வம் பெற்ற சிறப்பும்; செல்வன் கொணர்ந்து அத்தீவகப் பீடிகை ஒல்காது காட்ட பிறப்பினை உணர்ந்ததும்-செல்வனாகிய அச்சாவக மன்னனை அழைத்து வந்து மணி பல்லவம் என்னும் தீவின்கண் அமைந்த புத்த பீடிகையைச் சோர்வின்றிக் காட்டுதலாலே அம்மன்னவன் தன் பழம் பிறப்பினை உணர்ந்த செய்தியும்; உணர்ந்தோன் முன்னர் உயர்தெய்வம் தோன்றி-பிறப்புணர்ந்த அப்புண்ணியராசன் முன் உயர்ந்த பண்பமைந்த தீவதிலகை என்னும் தெய்வம் எழுந்தருளி; மனங்கவல் கொடுத்ததும் மாநகர் கடல் கொள-அத்தெய்வம் மனக்கவலையைத் தீர்த்து ஆறுதல் அளித்ததும் பெரிய நகரமாகிய காவிரிப்பூம் பட்டினத்தைக் கடல் கொள்ளா நிற்ப அக்கடல்கோளால்; இறவாது அறவணவடிகளும் தாயரும் ஆங்குவிட்டு இப்பதிப்புகுந்தது கேட்டதும்-இறந்துபடாமல் அறவண அடிகளும் மாதவியும் சுதமதியும் ஆகிய தாயர் இருவரும் அப்பட்டினத்தைவிட்டு இவ்வஞ்சி மாநகரத்தின்கண் வந்து புகுந்த செய்தியை அத்தீவதிலகை என்னும் தெய்வம் கூறத்தான் கேட்டறிந்து கொண்ட செய்தியும்; சாவக மன்னன் தன் நாடு எய்த தீவகம்விட்டு இத்திருநகர்ப் புகுந்ததும்-சாவக மன்னனாகிய புண்ணியராசன் தனது நாட்டை அடையா நிற்பத் தான் அம்மணி பல்லவத் தீவைக் கைவிட்டு வேற்றுருக் கொண்டு இவ்வஞ்சியாகிய செல்வத்தலை நகரத்திலே புகுந்த செய்தியும் என்க.
(விளக்கம்) பாத்திரம்-அமுதசுரபி. தானப்பயம்-முற்பிறப்பிலே ஆபுத்திரனாக இருந்து இவ்வமுதசுரபியால் அன்னதானம் செய்த நல்வினைப்பயன் என்க. ஆபுத்திரன் சாவக மன்னவனாய்ப் பிறந்து என்க. செல்வன்:சாவக மன்னன். உணர்ந்தோன்: பெயர். கவல்-கவலை. மாநகர்-பூம்புகார். தாயார்-மாதவியும், சுதமதியும். இப்பதி-வஞ்சி நகரம். தீவகம்-மணிபல்லவம்.
இதுவுமது
84 - 92 : புக்கபின்................என
(இதன் பொருள்) புக்கபின் - இவ்வஞ்சி நகரத்தில் புகுந்த பின்னர்; அந்த பொய் உரு உடனே-யான் முன்னர்க் கந்திற் பாவை கூறியவாறு எடுத்துக் கொண்டிருந்த பொய்யாகிய அந்த மாதவன் வடிவத்தோடே; தக்க சமயிகள் தம் திறம் கேட்டதும்-சமயவாதிகள் உறைவிடம் சென்று வினவத்தகுந்த அளவைவாதி முதலிய சமயக்கணக்கர்களுடைய தத்துவங்களை வினவிக் கேட்டறிந்து கொண்ட செய்தியும்; அவ்வவர் சமயத்து அறிபொருள் எல்லாம்-அவ்வச்சமயக் கணக்கர் அவரவர் சமயம் சார்பாக அறிந்து கூறிய தத்துவம் எல்லாம்; செவ்விது அன்மையின் சிந்தை வையாததும்-தெளிவுடையன அல்லாமையால் அவற்றையெல்லாம் தான் தன்னெஞ்சத்தே கொள்ளாமல் கைவிட்டொழிந்த செய்தியும் பின்னர்; நாதன் நல்லறம் கேட்டலை விரும்பி-சிறந்த சமயத் தலைவனாகிய புத்தபெருமான் திருவாய் மலர்ந்தருளிய நன்மையுடைய அறங்களைக் கேட்டறிந்து கொள்ளுதலைப் பெரிதும் விரும்பி; மாதவன் தேர்ந்து வந்த வண்ணமும்-அவ்வறங் கூறுதலின்கண் சிறப்புமிக்க பெருந்துறவியாகிய அறவணவடிகளாரைத் தேடித் தான் அவ்விடத்திற்கு வந்த முறைமையினையும்; சொல்லினள் ஆதலின்-எடுத்து அம்மாசாத்துவானுக்கு அறிவித்தாள் ஆதலால் அது கேட்ட அம்மாதவனாகிய மாசாத்துவானும், வியத்தகும் இச்செய்திகளைக் கேட்டுப் பெரிதும் மகிழ்ந்தவனாய்; தூயோய் நின்னை நான் கண்டது என் நல்வினைப்பயன் கொல் என-அம்மணிமேகலையை நோக்கி நங்காய் இவ்வாறெல்லாம் சிறத்தற்குக் காரணமான மனத்தூய்மை உடையோயே! நின்னை யான் இங்ஙனம் எளிதில் கண்டதற்குக் காரணம் யான் செய்த நல்வினைப் பயனேயாம் என்று அவளைப் பாராட்டி என்க.
(விளக்கம்) முன்னரே கந்திற்பாவை தனக்கறிவித்திருந்த வேற்றுரு என்பது தோன்ற அந்தப் பொய்யுரு எனச் சேய்மைச் சுட்டால் சுட்டினள். செவ்விது: பன்மை ஒருமை மயக்கம். நாதன் என்றது சமயத் தலைவர்களுள் தலைசிறந்தவன் என்பதுபட நின்றது. அவன் : புத்தபெருமான். மாதவன் என்றது அறவணவடிகளை. அவர் அறங்கூறுதலில் வல்லவர் என்பதனை மறவண நீத்த மாசறு கேள்வி அறவணவடிகள் அடிமிசை வீழ்ந்து..........உரவோன் அருளினன் எனத் தன் தாயாகிய மாதவி கூற்றாகவும் கேட்டிருந்தனள் ஆதலின் அம்மாதவனைத் தேடி வந்த வண்ணமும் என்றாளாயிற்று. மணிமேகலை இத்தகைய பேறு பெறுதற்குக் காரணம் அவளது மனத்தூய்மையே ஆதலின் அக்கருத்துத் தோன்ற, தூயோய் என்று விளித்தான். நல்லோரைக் காண்பதுவும் நன்றே என்பது பற்றி அங்ஙனம் காண்டற்கும் முன்னை நல்வினையே காரணம் என்பான், நின்னைக் கண்டது என் நல்வினைப்பயன் என்றான் கொல்; அசைச் சொல்.
மாசாத்துவான் மணிமேகலைக்குத் தன் வரலாறு கூறுதல்
93-102 : தையல்...........கேளாய்
(இதன் பொருள்) தையல் கேள் நின் தாதையும் தாயும் செய்த தீவினையின் செழுநகர் கேடு உற துன்பு உற விளிந்தமை கேட்டு-தவம் செய்த தவமாகிய தையலே! யான் ஈங்கு வரும் காரணமும் கேட்பாயாக! நின்னுடைய அன்புத் தந்தையும் தாயும் ஆகிய கோவலனும் கண்ணகியும் முற்பிறப்பில் செய்த தீவினை காரணமாக வளமிக்க மதுரை மாநகரம் தீக்கிரையாகி அரசிழந்து கேடெய்தும்படியும் யாமும் தாமும் பெரிதும் துன்புறும்படியும் இறந்த செய்தியைக் கேட்டு ஆற்றேனாய் அவலமுற்று; சுகதன் அன்பு கொள் அறத்திற்கு அருகனேன் ஆதலின்-இவ் உலக நிலையாமை முதலிய மெய்யறிவு பெற்று அவ்வறிவு காரணமாகப் புத்தபெருமானுடைய அன்பினை முதலாகக் கொண்ட அருளறத்திற்குத் தகுதி உடையேன் ஆயினமையின்; மனைத்திற வாழ்க்கையை மாயம் என்று உணர்ந்து-இல்லின்கண் இருந்து செய்யும் வாழ்க்கையின் இன்பம் வறும் பொய் என்பதனை என் பட்டறிவினாலேயே அறிந்துகொண்டு; செல்வமும் யாக்கையும் தினைத்தனையாயினும் நிலையா என்றே நிலைபெற உணர்ந்தே-இம்மை வாழ்க்கைக்கு இன்றியமையாதன என்று கருதப்படுகின்ற செல்வமும் உடம்பும் உயிர் முகந்து கொண்டுவந்த வினை அளவில் நிற்பன அன்றி அவ்வினை ஒழிந்தால் ஒரு தினை அளவு பொழுதேனும் இவ்வுலகின்கண் நிலைத்திரா என்று நன்கு நெஞ்சத்தின்கண் உறுதியாக உணர்ந்து; மலையா அறத்தின் மாதவம் புரிந்தேன்-மாறுபாடில்லாத பவுத்த சமயங்கூறும் அறத்தை மேற்கொண்டு அந்நெறியில் பெரிய இத்தவத்தை மேற்கொண்டொழுகலானேன்; புரிந்த யான் இப்பூங்கொடி பெயர்ப் படூஉம் திருந்திய நல்நகர் சேர்ந்தது கேளாய்-அவ்வாறு ஒழுகிய யான் வஞ்சி என்னும் பூங்கொடியின் பெயரையுடைய அறத்தால் நன்கு திருந்திய அழகிய இந்த நகரத்தை எய்தற்குரிய காரணமும் இனிக் கூறுவேன் கேட்பாயாக என்றான் என்க.
(விளக்கம்) தையல்-அன்புடையோர் மகளிரை விளித்தற்கியன்தோரின் சொல். தன்னினும் கோவலன் கண்ணகி இருவரும் மணிமேகலைக்கு அன்புரிமை மிக்கார் என்பது தோன்ற மகனும் மருகியும் என்னாது நின் தாதையும் தாயும் என்றான். மாசாத்துவான் பேரருளாளன் ஆதலின் தனது துன்பத்திற்குக் காரணம் தன் மகனும் மருகியும் இறந்தமையினும் அவர் காரணமாகச் செழுநகர் கேடுற்றமை கேட்டதே முதன்மை உடைத்து என்பது தோன்றச் செழுநகர் கேடுற விளிந்தமை என்றான். இங்ஙனமே சிலப்பதிகாரத்தினும் மாசாத்துவானுடைய துறவறத்தைச் செங்குட்டுவனுக்கு அறிவிக்கின்ற மாடல் மறையோன் கூற்றாக-
மைந்தற் குற்றது மடந்தைக் குற்றதும்
செங்கோல் வேந்தற் குற்றதுங் கேட்டுக்
கோவலன் றதை கொடுந்துய ரெய்தி
மாபெருந்த தானமா வான்பொரு ளீத்தாங்
கிந்திர விகார மேழுடன் புக்காங்
கந்தர சாரிக ளாறைம் பதின்மர்
பிறந்த யாக்கைப் பிறப்பற முயன்று
துறந்தோர் தம்முன் துறவி யெய்தவும் (27:88-65)
எனவரும் பகுதி ஒப்புநோக்கி உவத்தற்பாலதாம். சுகதன்-புத்தன். யான் இயல்பாகவே அன்புகொள் அறத்திற்கு எனினுமாம். அருகன்-அணுக்கமானவன். தகுதி உடையோன் எனினுமாம். மலையா அறம்-மாறுபடாத அறம் என்றது அருளறத்தை. என்னை?
நல்லாற்றா னடி யருளாள்க பல்லாற்றாற்
றேரினு மஃதே துணை (குறள்-242)
எனவரும் பொய்யாமொழியும் காண்க.
இனி, முன்பின் மலையா மங்கல மொழி என அவ்வறம் போற்றப்படுதலும் உணர்க. (மணி-30: 261). கொடி-வஞ்சி. தான் வருதற்கு இதுவும் ஒரு காரணம் என்பது தோன்ற, திருந்திய நன்னகர் என்றான்.
இதுவுமது
103-113 : குடக்கோ..........இருந்துழி
(இதன் பொருள்) குடக்கோச் சேரலன் குட்டுவர் பெருந்தகை விடர்ச்சிலை பொறித்த வேந்தன்-முத்தமிழ் நாட்டினுள் வைத்து மேலை நாட்டு மன்னனும் சேரர்குடித் தோன்றலும் குட்டநாட்டார் கோவாகிய பெருந்தகையும் வடவரை வென்று வான்றோய் இமயத்தின்கண் தனது இலச்சினையாகிய வில்லினைப் பொறித்த வேந்தனும் ஆகிய இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்; முன்னாள் துப்பு அடு செவ்வாய் துடி இடையாரொடும் இப்பொழில் புகுந்து ஆங்கு இருந்த எல்லையுள்-முற்காலத்தே ஒருநாள் பவளம் போன்ற சிவந்த வாயையும் உடுக்கை போன்ற இடையினையும் உடைய இளமகளிரோடும் விளையாடுதற் பொருட்டு இந்தப் பூம்பொழிலிலே புகுந்து ஆடி ஆங்கோரிடத்தே இருந்த பொழுது; இலங்காதீவத்து சமனொளி என்னும் சிலம்பினை எய்தி வலங்கொண்டு மீளும் தரும சாரணர் தங்கிய குணத்தோர்-இலங்கை என்னும் தீவின்கண் புத்தபெருமான் திருவுரு அமைந்த சமனொளி என்னும் பெயரையுடைய மலையினை அடைந்து அதனை வலஞ் செய்து வணங்கி மீள்பவரும் தரும சாரணரும் நிலைபெற்ற அருட்பண்புடையோரும்; ககனத்து கருமுகில் படலத்து இயங்குவோர் புரையோர் தாமும்-வானத்தில் கரிய முகில் குழாத்தினூடே வடதிசை நோக்கிச் செல்பவருமாகிய மேன்மையுடைய அத்துறவோர் தாமும்; அரைசற்கு அவ்வழி ஏது நிகழ்தலின்-அச்சேரமன்னனுக்கு அப்பொழுது ஆகூழ் நிகழ்தலாலே, இப்பூம்பொழில் இழிந்து கல் தலத்து இருந்துழி-அம்மன்னவன் தங்கியிருந்த இந்தப் பூம்பொழிலின்கண் வானத்தினின்றும் இறங்கிவந்து ஒரு கற்பாறையின் மேல் அமர்ந்திருந்த பொழுது என்க.
(விளக்கம்) குடக்கோவும் சேரலனும் பெருந்தகையும் ஆகிய வேந்தன் என்க. இவனை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என வரலாற்று நூலோர் கூறுவர். இவன் வரலாறு பதிற்றுப்பத்தில் இரண்டாம் பத்தில் காணப்படும். இவனைச் சோழன் (குளமுற்றத்துத் துஞ்சிய) கிள்ளி வளவன் வென்றான் எனக் கூறுங்கால் மாறோக்கத்து நப்பசலையார் இச்சேரனை-
பொன்படு நெடுங்கோட் டிமையம் சூட்டியவேம விற்பொறி
மாண்வினை நெடுந்தேர் வானவன் (புறநா.39)
என, பெருமிதம் படப்பேசுவர்; இளங்கோ விடர்ச்சிலை பொறித்த விறலோன் என்று ஓதுவர். துப்பு-பவளம். சூடி-உடுக்கை. சமனொளி என்பது மலையின் பெயர். தரும சாரணர் என்பவர் யாண்டும் சென்று மக்களுக்குப் புத்தர் அறத்தை அறிவுறுத்தும் தொண்டு பூண்ட துறவோர் ஆவர். குணம் என்றது அருள் மேனின்றது. வலங்கொண்டு மீளும் சாரணர் வடதிசை நோக்கிக் ககனத் தியங்குவோர் என்க. புரையோர்-துறவோருள்ளும் உயர்ந்தோர் என்பதுபட நின்றது. அத்துறவோர் இப்பூம்பொழிலில் இறங்க வேண்டும் என விரும்பி இறங்கினாரிலர். அரசன் ஆகூழே அவரை இறங்கும்படி செய்தது என்பது கருத்து. கற்றலம்-கற்பாறையாகிய இடம்.
இதுவுமது
113-122 : காவலன்..........அந்நாள்
(இதன் பொருள்) காவலன் முன் தவம் உடைமையின் முனிகளே விரும்பி ஏத்தி பங்கயச் சேவடி விளக்கி-அத்துறவோர் வரவுணர்ந்த அச்சேரமன்னன்றானும் முற்பிறப்பிலே செய்த தவப்பயன் காரணமாக அம்முனிவர்களைப் பெரிதும் விரும்பிப் புகழ்ந்து வழிபாடு செய்து அம்முனிவருடைய தாமரை மலர் போன்ற சிவந்த அடிகளை நீரால் கழுவி; பான்மையின் அங்கு அவர்க்கு அறுசுவை நால்வகை அமிழ்தம் பாத்திரத்து அளித்து-சிறந்த பண்பினோடு அவ்விடத்தேயே அம்முனிவர்களுக்கு ஆறுவகைச் சுவையோடு கூடிய நால்வேறு வகைப்பட்ட உணவுகளையும் துறவோர்க்கு அளிக்கத் தகுந்த உண்கலத்திலே பெய்து கொடுத்து உண்பித்து; பல பல சிறப்பொடு வேந்து அவையாரொடும் ஏத்தினன் இறைஞ்சலில்-பின்னரும் அம்முனிவர்களுக்குப் பலப்பல சிறப்புகளையுஞ் செய்து அம்மன்னன் தன் அரசியல் சுற்றத்தாரோடும் கூடி வாழ்த்தி வணங்குதலாலே அம்முனிவர்களும்; இறைவன் செவி முதல்-அவ்வேந்தனுடைய செவியின்கண்; அறத்தகை முதல்வன் அருளிய-அறத்தின் திருவுருவமாகிய தமது சமய முதல்வன் புத்த பெருமான் திருவாய் மலர்ந்தருளிய; பிறப்பின் துன்பமும் பிறவா இன்பமும் வாய்மை இன்ப ஆர் அமுது-உயிர்களுக்குப் பிறப்பின்கண் எய்தும் துன்பத்தின் இயல்பும் அவை பிறவாமையுற்ற பொழுது எய்தும் இன்பத்தின் இயல்பும் இவற்றிற்குரிய காரண காரியங்களின் இயல்பும் ஆகிய மெய்க்காட்சிகள் என்னும் இன்பமேயான பெறுதற்கரிய அறவமுதத்தை; துன்பம் நீங்கச் சொரியும் அந்நாள்-அனாதி காலமாகத் தொடர்ந்து வருகின்ற அம்மன்னவனுடைய துன்பமெல்லாம் நீங்கிப்போம்படி அம்முனிவர்கள் சொற்பொழிவு செய்யும் அந்த நாளிலே என்க.
(விளக்கம்) காவலன்-இமயவரம்பன். முனிகள்-தரும சாரணர். பான்மை-பண்புடைமை. அறுசுவை நால்வகை அமிழ்தம்-கைப்பு, கார்ப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, தித்திப்பு என்னும் ஆறுசுவையும் பொருந்தச் சமைத்த உண்பனவும், தின்பனவும், நக்குனவனவும், பருகுவனவுமாகிய நால்வகை உணவு. பிறவா இன்பம்-பிறவாமையினால் எய்தும் வீட்டின்பம். அறத்தகை முதல்வன் என்றது புத்தனை. வாய்மை-நால்வகை உண்மைகள். அவையாவன:
துன்பம் தோற்றம் பற்றே காரணம்
இன்பம் வீடே பற்றிலி காரணம்
ஒன்றிய வுரையே வாய்மை நான் காவது (மணிமே, 30-186-188)
என்பன,
இறைவன்-அரசன்.
இதுவுமது
123-136 : நின்பெரு..............இருந்து
(இதன் பொருள்) நின்பெருந் தாதைக்கு ஒன்பது வழிமுறை முன்னோன் கோவலன்-உன்னுடைய பேரன்புசால் தந்தையாகிய கோவலனுக்கு ஒன்பது தலைமுறைக்கு முன்னம் நங்குலத்திலே கோவலன் என்பான் ஒருவன் வாழ்ந்திருந்தான், அவன்; மன்னவன் தனக்கு நீங்காக் காதல் பாங்கனாதலின்-அவ்வரசனுக்கு ஒருபொழுதும் ஒழியாத அன்புடைய தோழனாய் இருந்தமையால்; தாங்கா நல்அறம் தானும் கேட்டு-ஏற்றுக் கோடற்கரிய நன்மை மிக்க அவ்வறவுரைகளைத் தானும் ஆர்வத்துடன் கேட்டமையால் மெய்யுணர்வு பெற்று; முன்னோர் முறைமையில் படைத்ததை அன்றி தன்னான் இயன்ற பலகோடிதனம்-தன் முன்னோர்கள் அறநெறி நின்று ஈட்டி வைத்த பொருளை அல்லாமலும் தன்னால் ஈட்டப்பெற்ற பற்பல கோடியாகிய நிதியங்களையும்; எழுநாள் எல்லையுள் இரவலர்த்து ஈத்து-ஒரு கிழமை முடிவதற்குள் வறியவர்க்கு வாரி வழங்கி விட்டு; தொழுதவம் புரிந்தோன்-உலகம் தொழுவதற்குக் காரணமான தவத்தை மேற்கொண்டவன்; சுகதற்கு வான் ஓங்கு சிமையத்து இயற்றிய வால் ஒளி சயித்தம்-புத்தனுக்கு வானுற உயர்ந்த மலை உச்சியில் எடுத்த வெள்ளிய ஒளியையுடைய திருக்கோயில்; ஈனோர்க்கு எல்லாம் இடர்கெட இயன்றது-இவ்வுலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் துன்பம் தீரும்படி தெய்வத்தன்மை உடையதாகத் திகழ்கின்றதாதலின்; கண்டு தொழுது ஏத்துங் காதலின் வந்து-அதனைக் கண்ணாரக் கண்டு தொழுது ஏத்துங் காதலின் வந்து-அதனைக் கண்ணாரக் கண்டு தொழுது வாழ்த்த வேண்டும் என்றெழுந்த அன்பினாலே இந்நகரத்திற்கு வந்து மீண்டும் நம் மூதூருக்குச் செல்லக் கருதினேனாக அக்கருத்தினை அறிந்த; இத்தண்டாக் காட்சித் தவத்தோர் அருளி-இங்குறைகின்ற தடையில்லாத மெய்க்காட்சியையுடைய துறவோர்கள் என்பால் அருள் கூர்ந்து; காவிரிப்பட்டினம் கடல் கொளும் என்ற-நீ செல்லுதற்குக் கருதுகின்ற காவிரிப்பூம்பட்டினமானது கடலால் கொள்ளப்படும் என்றறிவுறுத்த; அத்தூ உரை கேட்டு துணிந்து இவண் இருந்தது-அம்முனிவருடைய வாய்மையேயாகிய அவ்வறிவுரையைக் கேட்டுத் தெளிந்தமையாலேயே யான் இந்நகரத்திலே இருப்பது என்றான் என்க.
(விளக்கம்) நமது மரபில் ஒன்பது தலைமுறைக்கு முன்னர் உன் தந்தை பெயருடன் ஒருவனிருந்தான்; அவன் அரசனுக்கு நண்பன். அரசன் அறம் கேட்குங்கால் தானுங் கேட்டு மெய்யுணர்வு பெற்று இரவலர்க்கு ஈத்துத் தவம் புரிந்தான். அவன் மலை உச்சியில் புத்தனுக்கு ஒரு கோயில் எடுத்திருந்தான். அக்கோயில் இவ்வுலகத்தார் இடர்தீர்ப்ப தொன்றாய் இருந்தது. அதனைத் தொழ ஈண்டு வந்தேன், மீளுங்கால் தவத்தோர் காவிரிப்பூம் பட்டினம் கடல் கோட்படும் என்றனர். அதனைத் தெளிந்தமையே யான் இங்கிருத்தற்குக் காரணம் என்றான் என்க.
பெருந்தாதை-அன்பினால் பெரிய தாதை என்க. தாங்காத என்னும் பெயரெச்சத்தீறு கெட்டது. முறைமை-அறநெறி. எழுநாள் எல்லை-என்பது ஓர் உலகவழக்கு. விரைந்து செய்தான் என்பது கருத்து. எழுநாள் எல்லையுள் என்னும் வழக்கு இப்பொழுதும் (ஒரு வாரத்திற்குள்) ஒரு கிழமைக்குள் என வழங்குதல் உணர்க. வால் ஒளிச் சயித்தம் என்றமையால் வெள்ளியாலியன்ற சயித்தம் எனக்கோடலுமாம். தண்டாக் காட்சி என்றது முக்காலமும் உணரும் மெய்க்காட்சியை. தூஉரை-மெய்யுரை.
இதுவுமது
137-147 : இன்னும்............கேட்குவன்
(இதன் பொருள்) நல்நெறி மாதே பூங்கொடி இன்னுங் கேளாய்-நல்லற நெறியிலே செல்லும் ஆற்றல் வாய்ந்த நங்கையே பூங்கொடி போலும் மெல்லியலோயே இன்னும் யான் கூறுவன் கேட்பாயாக; தீவினை உருப்ப சென்ற நின் தாதையும் முன்செய் தவப்பயத்தால் தேவரில் தோற்றி-முன்செய் தீவினை உருத்து வந்து தன்பயனை ஊட்டுதலாலே கொலை உண்டுபோன நின் தந்தையாகிய கோவலனும் முன் செய்த தவப்பயனால் போக பூமியில் தேவரில் ஒருவனாகத் தோன்றினானேனும் அப்பயன் முடிவுற்றபின்; ஆங்கு அத்தீவினை இன்னும் துய்த்து-அம்மதுரையிடத்தே ஊட்டிக் கழிந்த அத்தீவினையின் எச்சத்தை மீண்டும் இந்நிலவுலகத்தே பிறந்து துய்த்துக் கழித்த பின்னர்; முன் அவன் போதியின் நல்லறம் தாங்கிய தவத்தால்-முன்பு அக்கோவலன் மெய்யறிவினால் நல்ல அறங்களை மேற்கொண்டொழுகிய தவங்காரணமாக; தான் தவம் தாங்கி கபிலையம்பதியில் காதலி தன்னோடு நாதன் நல்லறம் கேட்டு வீடு எய்தும் என்று-தானே அத்தவத்தை மேற்கொண்டு கபிலை நகரத்தில் தன்னை ஒருபொழுதும் பிரியாத காதலியாகிய கண்ணகியோடு கூடிப் புத்தனுடைய நல்லறங்களைக் கேட்டு வீட்டுலகம் புகுவான் என்னும்; அற்புதக் கிளவி அறிந்தோர் கூற-அற்புதமான மொழியை அறியும் திறம் படைத்த துறவோர் கூறுதலாலே; தோகை சொல் பயன் உணர்ந்தேன்-மயில் போல்வாய் அவர் கூறிய சொல்லின் பயன் வாய்மையேயாம் என்று உணர்ந்துள்ளேன்; யானும் அந்நாள் ஆங்கு அவன் அறநெறி கேட்குவன்-யானும் முனிவர் கூறிய அந்தக் காலத்திலே அக்கபில நகரத்தில் அப்புத்தர் கூறும் அறங்கேட்டு வீடெய்துவேன் காண் என்றான் என்க.
(விளக்கம்) நன்னெறி மாதே என்றது அவளுடைய ஆற்றலைப் பாராட்டியபடியாம். தீவினை யுருப்பச் சென்ற நின்றதை என்றது இறந்துபோன நின் தாதை என்றவாறு. முற்செய் தவப்பயத்தால் தேவரிற்றேற்றி என மாறுக. ஆங்கு அத்தீவினை என்றது மதுரையில் உருத்துவந்து ஊட்டிய தீவினை யொழிய எஞ்சிய அத்தீவினையே இன்னும் நிலத்தில் பிறந்து துய்த்து என்க. பூங்கொடி: விளி, முன் அவன் என்று கண்ணழித்துக் கொள்க. இதனாற் கூறியது கோவலன் முன்னொரு பிறப்பில் புத்தன் போதியின் கீழ் இருந்து சொன்ன நல்லறம் கேட்டு அதனை மேற்கொண்டு ஒழுகிய தவப்பயன் காரணமாகத் தானே தவந்தாங்கி மீண்டும் இனியொரு பிறப்பில் காதலியோடு அக்கபில நகரத்தில் நாதன் நல்லறம் கேட்பன் என்றும் வீடெய்துவன் என்றும் அறிவுறுத்தபடியாம். புத்தர் காலந்தோறும் பிறந்து அறம் உரைத்தலுண்மையின் முன்னும் ஒரு புத்தன்பால் அறங்கேட்டவன் அதன் பயனாகப் பின்னும் இனித் தோன்றும் புத்தன்பால் அறங்கேட்டு வீடெய்துவன் என்பது கருத்தாகக் கொள்க. இவ்வுண்மையை-
இறந்த காலத் தெண்ணில் புத்தர்களுஞ்
சிறந்தருள் கூர்ந்து திருவாய் மொழிந்தது
ஈரறு பொருளி னீந்தநெறி (30:14-16)
என்பதனானு மறிக.
இனி இப்பகுதிக்கு இக்கருத்துணராது கூறும் உரை முன்பின் முரணிய போலியுரையாதல் உணர்க.
தவமுந் தவமுடையார்க் காகு மவமதனை
யஃதிலார் மேற்கொள் வது (குறள்-242)
என்பதுபற்றி முன் தாங்கிய தவத்தால் தான் தவம் தாங்கி என்றார். இனி, கபிலையம்பதியில் பிறந்த நாதனாகிய புத்தனுடைய அறத்தைக் கேட்டு வீடெய்தும் எனக் கோடலுமாம். அற்புதக் கிளவி பின் நிகழ்வனவற்றை அறிந்து கூறும் கிளவி என்க. தோகை: விளி.
இதுவுமது
148-154 : நின்னதி...........படர்ந்தனர்
(இதன் பொருள்) நின்னது தன்மை அ நெடுநிலை கந்தில் துன்னிய துவதிகன் உரையின் துணிந்தனை அன்றே-இனி நினக்கு நிகழவிருக்கும் எதிர்கால நிகழ்ச்சியின் தன்மையை நீதானும் சம்பாபதியின் கோட்டத்தில் நின்ற அந்த நெடிய நிலையினையுடைய தூணில் உறைகின்ற துவதிகன் என்னும் கடவுட் பாவை உனக்குரைத்தமையால் அறிந்துள்ளனை அல்லையோ? அங்ஙனம் அறிந்த செய்தியை எனக்கு; தவநெறி அறவணன் சாற்றக் கேட்டனன்-தவநெறி நின்றொழுகும் அறவணவடிகள் கூறக் கேட்டறிந்துளேன்; ஆங்கு அவன் தானும் நின் அறத்திற்கு ஏது பூங்கொடி கச்சிமா நகர் ஆதலின்-அவ்வறவண அடிகளார் நினது அறத்திற்கு ஏது நிகழ்ச்சிக்குரிய இடம் பூங்கோடி போல்வாய் அக்கச்ச மாநகரமே ஆதலின் அதனை முன்னரே உணர்ந்து; மற்று அம்மாநகர் மாதவன் பெயர்நாள் பொற்றொடி தாயரும் அப்பதிப் படர்ந்தனர்-அந்தக் கச்சிமா நகரத்திற்கு நின்பொருட்டுப் பெரிய தவத்தையுடைய அவ்வறவணவடிகளார் இந்நகரத்தினின்றும் அக்கச்சி மாநகரத்திற்கு சென்ற காலத்தில் நின்னுடைய தாயராகிய மாதவியும் சுதமதியும் அவரோடு அக்கச்சி மாநகரத்திற்குச் சென்றனர் என்றான் என்க.
(விளக்கம்) துவதிகன்-சம்பாபதியின் கோட்டத்துக் கந்திற் பாவை. கந்திற்பாவை நினக்கு வருவதுரைத்ததனை. அறவணன் சாற்ற யான் கேட்டேன் என்றவாறு. ஏது-ஏது நிகழ்ச்சி. அஃதாவது ஊழ்வினை உருத்து வந்து தன் பயனை ஊட்டும் நிகழ்ச்சி. நின் ஏது நிகழ்ச்சிக்கு இடமாகிய கச்சி நகரத்திற்கு அறவணன் நின் பொருட்டே சென்றனன் என்பது கருத்து. பொற்றொடி: விளி.
மாசாத்துவான் மணிமேகலையை வேண்டுதல்
155-162 : அன்னதை..........வணங்கி
(இதன் பொருள்) அன்னதை அன்றியும் அணி இழை கேளாய்-யான் உனக்குக் கூறிய அச்செய்தியை அல்லாமலும் யான் உனக்கு அறிவுறுத்த வேண்டிய செய்தியும் ஒன்றுளது, மகளிர்க்கெல்லாம் அணிகலன் போல்பவளே அதனையும் கூறுவேன் கேட்பாயாக, அஃதென்னையெனின்; பொன் எயில் காஞ்சி நாடு கவின் அழிந்து-பொன் மதில் சூழ்ந்த காஞ்சி மாநகரமும் அதனைச் சூழ்ந்த நாடும் அழகு கெட்டு; மன் உயிர் மடிய மழைவளம் காத்தலின்-அங்கு நிலைபெற்ற உயிர்கள் உணவின்றி இறந்தொழியும்படி மழையானது தான் செய்யும் வளத்தைச் செய்யாதொழிதலின்; அந்நகர் மாதவர்க்கு ஐயம் இடுவோர் இன்மையின் இந்நகர் எய்தினர் காணாய்-அம்மாநகரத்திலே துறவோர்க்கு உண்டி கொடுப்போர் இல்லாதொழிந்தமையின் அத்துறவோரெல்லாம் இடபொழுது இவ்வஞ்சி நகரத்தில் வந்து குழுமி இருக்கின்றனர் காண்; ஆருயிர் மருந்தே அ நாட்டு அகவயின் கார் எனத் தோன்றி காத்தல் நின்கடன் என-இவ்வாறு பசிப்பிணியுழந்து சாதலுறும் அரிய உயிரினங்களுக்கு அமிழ்தத்தைப் போன்ற நீ இப்பொழுது அந்தக் காஞ்சி நாட்டகத்தில் முகில் போலத் தோன்றி அவற்றின் பசிப்பிணி அகற்றிக் காப்பது நினக்குக் கடமைகாண் என்று; அருந்தவன் அருள ஆயிழை வணங்கி-செய்தற்கரிய தவத்தை மேற்கொண்டவனாகிய அம்மாசாத்துவான் திருவாய்மலர்ந்தருள அது கேட்ட மணிமேகலை அவ்வேண்டுகோட் கிணங்கி அவனுடைய திருவடிகளிலே வீழ்ந்து வணங்கி விடை கொண்டவளாய் என்க.
(விளக்கம்) அணி இழை-அணி இழை போல்வோய் என்க. மாதர் குலத்திற்கெல்லாம் அணிகலன் போல விளங்குதலின் இவ்வாறு விளித்தான். காஞ்சி நாடு-காஞ்சி நகரத்தைத் தலைநகராகக் கொண்டமைந்த நாடு-அஃதாவது தொண்டை நாடு. இவ்வேண்டுகோளால் அவனது அருட்பண்பு விளக்கமாம். இவன் இல்லறத்தினும் வருநிதி பிறர்க்கு ஆர்த்தும் இயல்புடையவனாய் இருந்தமை சிலப்பதிகாரத்தில் காணப்படும். துறவியான பின் இவன் அருள் எவ்வுயிர்மாட்டும் பரந்து பட்டுச் செல்லுதலை ஈண்டுணர்க. இவ்வாறு ஆக்கமுறுவது உயிர்க்கியல்பு. இதனை, அருளொடு புணர்ந்த அகற்சி என்பர் ஆசிரியர் தொல்காப்பியனார். மாதவர்க்கும் ஐயம் இடுவோர் எனல் வேண்டிய சிறப்பும்மை தொக்கதெனக் கொண்டு அந்நகரின் வறுமை மிகுதி உணர்த்தினர் எனக் கோடலுமாம். ஆருயிர் மருந்தே என்று விளித்தான் இச்செயற்கரிய செயல் செய்தற்குரிய ஆற்றலும் கருவியும் நின்பால் உள என்றுணர்த்துதற்கு. பவுத்தத் துறவிகளுக்கு இதுவே தலையாய கடன் என்பான் நின் கடன் என்றான். கைமாறு வேண்டா கடப்பாடு என்பவாகலின் அவ்வாறாகிய கார் எனத் தோன்றி என்றான். மழை கரந்தமையான் உண்டான இத்துன்பத்தைத் துடைத்தற்கு நின்னாலேயே இயலும் என்பான், கார் எனத் தோன்றி என்றான் எனினுமாம். இதனால் போந்தது, உலகு புரப்பதற்கு மாரி மட்டும் உளதன்று; நீயும் உளை எனப் புகழ்தல் என்க. ஆயிழை-அதற்குடன்பட்டு வணங்கி என்க.
மணிமேகலை வஞ்சி நகரத்தினின்றும் வானத்தியங்கிக் காஞ்சி மாநகரத்தை எய்துதல்
163-176 : திருந்திய...........எய்தலும்
(இதன் பொருள்) திருந்திய பாத்திரம் செங்கையின் ஏந்தி-அழகிய அமுதசுரபி என்னும் பாத்திரத்தை அன்னம் வழங்கிச் சிவந்துள்ள தன் கையில் ஏந்திக் கொண்டு; கொடி மதில் மூதூர் குடக்கண் நின்று ஓங்கி வடதிசை மருங்கின் வானத்து இயங்கி-வெற்றிக்கொடி உயர்த்தப்பட்ட மதிலையுடைய பழைய நகரமாகிய வஞ்சி நகரத்தின் மேற்றிசையில் நின்றும் வானின்கண் எழுந்து அந்நகரின் வடதிசைப் பக்கலிலே அவ்வானத்தின் வழியாக வலமாகச் சென்று; தேவர் கோமான் காவல் மாநகர் மண்மிசைக் கிடந்தென வளந்தலை மயங்கிய-தேவேந்திரனுடைய காவலமைந்த பெரிய நகரமாகிய அமராவதி நிலத்தின்கண் இழிந்து எல்லா வளங்களும் தன்பாலே பொருந்தும்படி பண்டு கிடந்த; பொன் நகர் வறிதா புல் என்று ஆயது கண்டு உளங்கசிந்த ஒள் தொடி நங்கை-அழகிய அக்காஞ்சி மாநகரம் மழைவளம் காத்தலின் பாழ்பட்டதாய்க் காட்சிக் கின்னததாய்ப் புற்கென்று மாறியதனைப் பார்த்து இரக்கத்தால் உள்ளம் உருகிய ஒளி உடைய பொன் வளையல் அணிதற்கியன்ற பெண்ணினத்தில் தலைசிறந்த அம்மணிமேகலை; பொன் கொடி மூதூர் புரிசை வலங்கொண்டு-அழகிய கொடியாடுகின்ற பழைய நகரமாகிய அத்தலைநகரத்தின் மதிலையும் வலம் செய்து; நடுநகர் எல்லை நண்ணினள் இழிந்து-அந்நகரத்தின் நடுவிடத்தின் நேராக எய்தி நிலத்தில் இறங்கி அவ்விடத்தினின்றும்; கழல்தொடு கிள்ளி துணை இளம் கிள்ளி-வீரக்கழல் கட்டிய சோழ மன்னனாகிய கிள்ளி என்பானுடைய தம்பி இளங்கிள்ளி என்பவன்; செம்பொன் மாசிலை திருமணி பாசடை பைம்பூம் போதி பகவற்கு இயற்றிய-சிவந்த பொன்மயமான பெரிய கிளைகளையும் அழகிய மரகதமணி போன்ற நிறமுடைய பசிய இலைகளையும் புதிய மலர்களையும் உடைய அரசமரத்தின் கீழிருந்து அறங்கூறிய புத்தபெருமானுக்கு எடுத்த; சேதியம் தொழுது தென்மேற்காக தாது அணி பூம்பொழில் தான் சென்று எய்தலும்-திருக்கோவிலையும் வலம் வந்து கைகூப்பித் தொழுது வணங்கி அக்கோயிலினின்றும் தென் மேற்றிசையில் சென்று ஆங்குள்ள பூந்துகள் உதிர்ந்து நிலத்தை அழகு செய்யும் பூம்பöõழிலின்கண் புகுந்து உறையா நிற்பவும்; என்க.
(விளக்கம்) பாத்திரம்-அமுதசுரபி. காஞ்சி நகரத்தில் பசியால் மடியும் மன்னுயிரை ஓம்புதற்கு அதுவே கருவியாகலின் அதனைத் திருந்திய பாத்திரம் என விதந்தார். அன்னம் வழங்கிச் சிவந்த கை என்க. மூதூர்-வஞ்சி நகரம். குடக்கண்-மேற்குப் பக்கம். நகரத்தின் மேற்குப் பக்கத்திலிருந்து வானத்தில் உயர்ந்து அக நகர்க்கு நேரே வான்வழி இயங்காமல் வடக்கே சென்று அந்நகரத்தை வலம் செய்து வான் வழியே இயங்கினள் என்றவாறு. என்னை? அவ்வஞ்சி, கற்புத்தெய்வத்தின் திருக்கோயிலையும் புத்த சைத்தியத்தையும் அறம் பகர்வோர் உறையும் பள்ளியையும் இன்னோரன்ன சிறந்த இடங்களைத் தன்பால் கொண்டிருத்தலான் அங்ஙனம் வலம் செய்து போதல் வேண்டிற்று என்க. தேவர்கோமான்..........பொன்னகர் என்னுந்துணையும் மணிமேகலை கூறாக அந்நகரம் மழைவளம் காத்தற்கு முன்பிருந்த நிலைமையை நூலாசிரியர் நம்மனோர்க்கு அறிவுறுத்தபடியாம். இதனோடு,
ஆயிரங் கண்ணோ னருங்கலச் செப்பு
வாய்திறந் தன்ன மதிலக வரைப்பின் (சிலப்-14: 68-69)
எனவும்,
அளந்து கடையறியா வளங்கெழு தாரமொடு
புத்தே ளுலகம் கவினிக் காண்வர
மிக்குப்புகழ் எய்திய பெரும்பெயர் மதுரை (மதுரை-கா : 697-69)
எனவும் பிற சான்றோர் கூற்றுகள் ஒப்புநோக்கற் பாலன. மாசாத்துவான் கூறியபடி அப்பொன்னகர் வறிதாப் புல்லென்றாயது கண்டு மணிமேகலை உளங் கசிந்தனள் என்க. அவளது அருளறத்தின் பெருமை அக்கசிவினால் அறியப்படும். அந்நகரமும் புத்த சைத்தியமும் பிறவும் தன்பாற் கொண்டுள்ளமையின் அதனையும் வலங்கொண்டு அகநகரம் புகுந்தனள் என்பது கருத்து. துணை-தம்பி. கிள்ளி-சோழமன்னன் ஒருவன். இளங்கிள்ளி அவன் தம்பி. செம்பொன்.......போதி எனவரும் இதனோடு-சுடர் மரகதப் பாசடைப் பசும்பொன் மாச்சினை விசும்பகம் புதைக்கும், போதி (வீர. யாப்பு-11, மேற்கொள்) எனவரும் செய்யுட்பகுதியை ஒப்புநோக்குக. போதிப் பகவன் என்றது புத்தனை. சேதியம்-சைத்தியம்; கோயில்.
மணிமேகலை வருகையைக் கஞ்சுகன் கூறக்கேட்ட இளங்கிள்ளி மகிழ்ந்து அவளைக் காண விழைதலும் கருதுதலும்
177-187 : வையம்..........சென்று
(இதன் பொருள்) கஞ்சுகன் வையங் காவலன் தன்பால் சென்று கைதொழுது இறைஞ்சி உரைப்போன்-மணிமேகலையின் வருகையை யுணர்ந்த கஞ்சுகமகன் ஒருவன் உலகங்காக்கும் மன்னவனாகிய இளங்கிள்ளியின்பால் விரைந்து சென்று கை குவித்துத் தொழுது தான் வந்த காரியம் கூறுபவன் வேந்தர் பெருமானே; கோவலன் மடந்தை குணவதம் புரிந்தோள் நாவலம் தீவில் தான் நனிமிக்கோள்-கோவலனுடைய மகளும் பவுத்தத் துறவோர் மேற்கோடற்குரிய அருளறமாகிய குண விரதத்தை மேற்கொண்டொழுகுபவளும் இந்த நாவலந்தீவின்கண் இதுகாறும் தோன்றிய மகளிருள் வைத்துத் தனக்குவமையாவார் யாருமில்லாத சிறப்புடையவளும் ஆகிய மணிமேகலை இப்பொழுது; மாமழை போல் அங்கையின் ஏந்திய அமுதசுரபியொடு தங்காது இப்பதி தரும தவ வனத்தே வந்து தோன்றினள் என-இவ்வற்கடக் காலத்தில் கரிய மழை முகில் வந்தாற் போலத் தனது அகங்கையில் ஏந்திய அமுதசுரபியென்னும் அத்தெய்வத்தன்மை பொருந்திய பாத்திரத்தோடு வேறெவ்விடத்தும் தங்கியிராமல் இக்காஞ்சிமாநகரத்தின் கண் அறங்கேட்கும் தவவனமாகிய பூம்பொழிலின்கண் தானே வந்து புகுவாளாயினள் என்று பெரிதும் மகிழ்ந்து அறிவிப்ப; மன்னனும் விரும்பி கந்திற்பாவை கட்டுரை எல்லாம் வாய் ஆகின்று என வந்தித்து ஏத்தி-அது கேட்ட வேந்தனும் அவள் வரவினை மிகவும் விரும்பி என் திறத்திலே கந்திற்பாவை கூறிய பொருள் பொதிந்த மொழியெல்லாம் வாய்மையாக நிகழ்கின்றன என்று அக்கந்திற்பாவையை வாழ்த்திப் புகழ்ந்து பாராட்டி; மந்திரச் சுற்றமொடு ஆய்வளை நல்லாள் தன் உழைச்சென்று-தன் அமைச்சராகிய அரசியல் சுற்றஞ்சூழ அம்மணிமேகலையைக் காணத் தானே அவள் இருக்கும் இடத்தே சென்று வாழ்த்திய பின்னர் என்க.
(விளக்கம்) வையங்காவலன் என்றது சோழன் இளங்கிள்ளியை. கஞ்சுகன்-மெய்ப்பை (சட்டை) இட்ட ஒருவகை அரசியல் பணியாளன்; தூதனுமாம். மடந்தை ஈண்டுப் பருவம் குறியாது மகள் என்னும் முறைப்பெயராய் நின்றது. குணவதம்-அருளுடைமை காரணமாக மேற்கொள்ளும் விரதங்கள். அவை கொல்லாமை, இன்னா செய்யாமை, ஊனுண்ணாமை முதலியன. வதம்-விரதம். நாவலந்தீவு-கன்னியாகுமரிக்கும் இமயமலைக்கும் இடையே கிடக்கும் நிலப்பரப்பு. நனிமிக்கோள்: ஒரு பொருள் பன்மொழி. அங்கை-அகங்கை (உள்ளங்கை). பலருக்கு உண்டி வழங்கும் அமுதசுரபியைத் தனக்கு மட்டும் பயன்படுத்திக் கொண்டு தனித்துத் தங்காமல் எனக்கோடலுமாம். பதி-நகரம். தருமதவ வனம்-அறங்கேட்டற்கும் தவம் புரிதற்கும் தகுந்த பொழில். வந்து தோன்றினள் என்றது, இப்பதி செய்த தவத்தால் தானே வந்து தோன்றினள் என்பதுபட நின்றது. மாமழை போல் என்றான் நம் பசிப் பிணிக்கு மருந்தாக வந்தாள் என்பதும் கைம்மாறு கருதாது வந்தாள் என்பதும் தோன்ற. மன்னனும் விரும்பி என்புழி கஞ்சுகனே அன்றித் தானும் விரும்பினான் என இறந்தது தழீஇ நிற்றலின் உம்மை-எச்ச உம்மை. கந்திற்பாவையை வந்தித் தேத்தி என்க. மணிமேகலையின் வரவினை யாம் பெரிதும் விரும்புகின்றேம் என்பதறிவித்தற்கு மந்திரச் சுற்றமொடு சென்றான் என்றவாறு. வாழ்த்திப் பின் என அறுத்துக் கூறிக்கொள்க.
மன்னவன் மணிமேகலைக்குப் புத்த பீடிகையின் வரலாறு கூறி அதனைக் காட்டுதல்
188-199 : செங்கோல்..........பலவால்
(இதன் பொருள்) நலத்தகை நல்லாய்-நன்மையான பெருந்தகைமையுடைய மாதர் திலகமே; செங்கோல் கோடியோ செய்தவம் பிழைத்தோ கொங்கு அவிழ் குழலார் கற்புக் குறைபட்டோ-எனது செங்கோல் யான் அறியாமலே வளைந்தொழிந்ததோ? அன்றி மாதவர் தாம் செய்யும் தவ ஒழுக்கம் பிழைபட்டொழிந்ததோ அன்றி நறுமணம் பரப்புகின்ற கூந்தலையுடைய குலமகளிரின் கற்பொழுக்கம் குறை பட்டொழிந்ததோ; அறியேன் நன்னாடு எல்லாம் அலத்தற்காலே ஆகியது அறியேன்-காரணம் அறிகின்றிலேன் பண்டு நன்னுடாய் இருந்த இத்தொண்டை நாடு முழுவதும் இப்பொழுது வறுமையால் மன்னுயிர் வருந்தும் வற்கடக் காலமுடையதாக மாறிவிட்டது, இவ்வல்லலே அகற்றுதற்கு வழியும் அறியேனாய்; மயங்குவேன் முன்னர் ஓர் மாதெய்வம் தோன்றி உறங்காது ஒழிநின் உயர்தவத்தால் ஓர் காரிகை தோன்றும்-நெஞ்சம் மயங்குகின்ற என் கண் முன்னே ஒரு சிறந்த தெய்வம் எளிவந்து தோன்றி அரசே இங்ஙனம் வருந்தாதொழி, முன்பு நீ செய்த உயர்ந்த தவப்பயனாக ஒரு தவமகள் இங்குத் தானே வந்தெய்துவாள்; அவள் பெரும் கடிஞையின் ஆருயிர் மருந்தால் அகல் நிலம் உய்யும்-அவள் அங்கையில் ஏந்திவரும் பெரிய பிச்சைப் பாத்திரத்தில் சுரக்கின்ற உணவினால் அகன்ற உனது நாட்டிலுள்ள உயிரினம் எல்லாம் உய்யுங்காண்! மேலும்; ஆங்கு அவள் அருளால் அமரர்கோன் ஏவலின் தாங்கா மாரியும் தான் நனிபொழியும்-அப்பொழுது அவள் ஆற்றுகின்ற அருளறத்தின் பயனாக அமரர் கோமானாகிய இந்திரன் ஏவுதலாலே நினது நாடு தாங்குதற்கியலாதபடி மழை தானும் மிகுதியாகப் பெய்வதாம்; அன்னாள் இந்த அகநகர் புகுந்த பின்னாள் நிகழும் பேர் அறம் பலவால்-அத்தவமகள் இக்காஞ்சி மாநகரத்தின் உள்ளே புகுந்த பின்னர் வருகின்ற நாள்களிலே நிகழவிருக்கின்ற பெரிய அறச்செயல்களும் மிகப்பலவாம் எனவும் என்க.
(விளக்கம்) கோல்நிலை திரிந்திடிற் கோள்நிலை திரியும்
கோள்நிலை திரிந்திடின் மாரிவறங் கூரும்
மாரிவறங் கூரின் மன்னுயி ரில்லை
மன்னுயி ரெல்லாம் மண்ணாள் வேந்தன்
தன்னுயி ரென்னும் தகுதியின் றாகும் (7:8-12)
என முன்னும் வந்தமை உணர்க. அறியேன் என்பதனை முன்னும் கூட்டுக. மயங்குதல்-திகைத்தல். அருளுடைமை பற்றி மாதெய்வம் என்றன்; உண்டி சுரத்தல் பற்றிப் பெருங்கடிஞை என்றவாறு. ஆருயிர் மருந்து-உணவு. அகனிலம்: அன்மொழித் தொகை; உயிர்கள் என்க. அமரர்கோன்-இந்திரன். அன்னாள்-அத்தவமகள்.
200-210 : கார்வறம்..............இதுவென
(இதன் பொருள்) கார்வறங் கூரினும் நீர்வறங் கூராது-அக்காலத்தே மழை பெய்யாதொழியினும் யாறு முதலியவற்றில் நீர்ப்பெருக்கு வற்றாது; பாரக விதியின் பண்டையோர் இழைத்த கோமுகி என்னும் கொழுநீர் இலஞ்சியோடு மாமணிபல்லவம் ஈங்கு வந்தது என-மேலும் அத்தெய்வம் எம்மை நோக்கி நீவிர் இந்நிலவுலகத்தில் அமைந்த சிற்பவிதியின்படி முன்னோர் இயற்றிய கோமுகி என்னும் மிக்க நீரினையுடைய பொய்கையோடே சிறந்த மணிபல்லவத்தீவே இந்நகரத்திற்கு வந்துள்ளது என்று வியக்கும்படி; பொய்கையும் பொழிலும் புனைமின் என்று அறைந்து அத்தெய்வதம் போயபின் மரம் செய்து அமைத்தது இ இடம் என்று அ இடம் காட்ட-பொய்கையும் பொழிலும் உண்டாக்குங்கள் என்று கூறிய அத்தெய்வம் மறைந்துபோன பின்னர் யாங்களும் அத்தெய்வம் கூறியவாறே உண்டாக்கி வைத்தது இவ்விடத்தே என்று கூறி அரசன் மணிமேகலையை அழைத்துப்போய் அவ்விடத்தைக் காட்டுதலாலே; அத்தீவகம் போன்ற காவகம் பொருந்தி கண்டு உளம் சிறந்த காரிகை நல்லாள்-அம்மணிபல்லவத்தீவின் கண் அமைந்த பொழிலையே ஒத்த அப்பூம்பொழிலின் ஊடே புகுந்து அங்கமைந்த பொய்கையையும் கண்டமையாலே உளம் மகிழ்ந்த அம்மணிமேகலை அரசனை நோக்கி அங்கு; பண்டை எம் பிறப்பினை பான்மையின் காட்டிய அப்பீடிகை இது என-அம் மணிபல்லவத்தின்கண் எம்முடைய பழம்பிறப்பினைப் பண்போடு காட்டிய அந்தப் புத்தபீடிகையின் தன்மை இத்தகையது என்று கூறுதலாலே என்க.
(விளக்கம்) கார்-முகில். பாரக விதி என்றது மணிபல்லவத்தில் கோமுகி முதலியன வானவர் விதியில் அமைக்கப்பட்டன ஆதலின் நீயிர் அங்ஙனம் செய்யமாட்டாமையின் பாரக விதியினாலே செய்திடுக என்றறிவித்தற்பொருட்டு. புனைமின் என்றது அரசனுக்குரிய அமைச்சர் முதலியோரையும் உளப்படுத்திக் கூறியபடியாம். அத்தீவகம்-அம்மணி பல்லவம். அங்கு பீடிகை இது-அம்மணிபல்லவத்தில் யான் கண்ட புத்தபீடிகையின் இலக்கணம் உடையது இது என்றவாறு. எனவே அவ்வாறு இங்கும் ஒரு பீடிகை செய்மின் எனக்குறிப்பினால் அறிவித்தவாறாயிற்று. அப்பீடிகையின் இலக்கணம் வருமாறு-
விரிந்திலங் கவிரொளி சிறந்துகதிர் பரப்பி
உரைபெறு மும்முழம் நிலமிசை ஓங்கித்
திசைதொறும் ஒன்பான் முழநில மகன்று
விதிமா ணாடியின் வட்டங் குயின்று
பதும சதுர மீமிசை விளங்கி
அறவோற் கமைந்த ஆசனம் (8:44-41)
என்பதாம்.
கிள்ளிவளவன் பீடிகையும் கோயிலும் சமைத்து விழவும் சிறப்பும் எடுத்தல்
210-216 : அறவோன்............ஏத்தி
(இதன் பொருள்) அறவோன் பங்கயப் பீடிகை பான்மையின் வகுத்து-அதுகேட்டு அறவாழி அந்தணனாகிய புத்தபெருமானுடைய செந்தாமரை மலர் போன்ற திருவடிச் சுவடுகளை உடைய பீடிகையை அவ்விலக்கண முறைமையின் இயற்றி; தீவதிலகையும் திருமணிமேகலா மாபெரும் தெய்வமும் வந்தித்து ஏத்துதற்கு ஒத்த கோயில்-மணிபல்லவத்தில் உறைகின்ற தீவதிலகை என்னும் தெய்வமும் திருமகளை ஒத்த மணிமேகலை என்னும் மிகவும் பெரிய தெய்வந்தானும் வணங்கித் தொழுது வாழ்த்துதற்குப் பொருந்திய திருக்கோயிலும்; உளத்தகப் புனைந்து விழவும் சிறப்பும் வேந்தன் இயற்ற-மணிமேகலை கருத்திற்கேற்ப இயற்றி ஆங்குப் புத்தபெருமானுக்கு நாள் விழாவும் சிறப்பு விழாவும் அவ்வேந்தன் நிகழ்த்துதலானே; தொழுதகை மாதர் தொழுதனள் ஏத்தி-மக்களும் தேவரும் முனிவரும் பிறரும் தொழத்தகுந்த பெருந்தகைப் பெண்ணாகிய மணிமேகலைதானும் வலம்வந்து அப்பீடிகையினிடத்தே கிடந்த புத்தருடைய திருவடித் தாமரைகளைக் கைகூப்பித் தொழுது வணங்கி வாழ்த்திய பின்னர் என்க.
(விளக்கம்) அறவோன்-புத்தன். பங்கயப் பீடிகை-பங்கயம் போன்ற திருவடிச் சுவடுகள் பதித்த பீடம். பான்மை-மணிமேகலை கூறிய இலக்கணம். இம்மணிமேகலையின் வேறுபடுத்துதற்கு முன்னும் பின்னும் அடை புணர்த்துத் திருமணிமேகலா மாபெரும் தெய்வம் எனல் வேண்டிற்று. மணிமேகலையின் உளந்தகப் புனைந்து என்க. விழவும் சிறப்பும்-நித்தல் விழவும் சிறப்பும் விழவும். மாதர்: மணிமேகலை.
மணிமேகலை உண்டி வழங்குதல்
217-227 : பங்கய.............ஈண்டி
(இதன் பொருள்) பங்கயப் பீடிகை அங்கையின் ஏந்திய பசிப்பிணி மருந்தெனும் அமுதசுரபியை வைத்து நின்று-தொடக்கத்தே புத்தருடைய திருவடித்தாமரைச் சுவடுகிடந்த அப்பீடிகையின் மேல் தன் அகங்கையின்கண் ஏந்தியிருந்த உயிர்களை வருத்தும் பசிப்பிணிக்கு மருந்தென்று போற்றப்படுகின்ற அமுதசுரபியை வைத்துப் பின்னர் அதன் பக்கலிலே நின்று; எல்லா உயிரும் வருக என-நாற்றிசையினும் வாழும் எல்லா உயிர்களும் உண்க வருக என்று அன்புடன் அழைக்கும்; பைத்து அரவு அல்குல் பாவை தன் கிளவியின்-அரவின் படம் போன்ற அல்குலை உடைய ஓவியப் பாவை போல்வாளாகிய அம்மணிமேகலையினுடைய அன்புமொழியைக் கேட்டு; மொய்த்த மூஅறு பாடை மாக்களின் காணார் கேளார் கால்முடம் ஆனோர் பேணாமாக்கள் பேசார் பிணித்தோர் படிவ நோன்பியர்-அவ்விடத்தே வந்து குழுமிய பதினெட்டு மொழிகள் வழங்கும் நாடுகளிலே பிறந்தமையால் வேறு வேறு மொழி பேசுகின்ற அம்மக்களும் அம்மக்கள் குழுவினுள் வைத்துக் குருடரும் செவிடரும் கால் முடமாயினோரும் பேணுவார் யாரும் இல்லாதவரும் வாய் பேசாத வூமரும் நோயால் பிணிக்கப்பட்டோரும் தவவேடமும் நோன்பு உடையோரும்; பசி நோய் உற்றோர் மடிநல் கூர்ந்த மாக்கள் யாவரும் பன்னூறு ஆயிரம் விலங்கின் தொகுதியும் மன் உயிர் அடங்கலும் வந்து ஒருங்கு ஈண்டி-ஆனைத் தீ என்னும் பசி நோயால் பற்றப்பட்டவரும் சோம்பலால் வறுமையுற்ற மாக்களும் ஆகிய எல்லா மக்களும் பல நூறாயிரம் வகைப்பட்ட விலங்குக் கூட்டமும் பிறவுமாகிய உடலொடு நிலைபெற்ற இயங்கியல் உயிர்கள் முழுவதும் அவ்விடத்தே வந்து ஒருங்கே கூடாநிற்ப என்க.
(விளக்கம்) பாவை : மணிமேகலை. மூஅறு பாடை-பதினெட்டு வகை மொழி. அவை நாவலந் தீவில் ஆரியம் முதலாக அருந்தமிழ் ஈறாக அமைந்த பதினெட்டு வகை மொழிகள். பாடை-(பாஷை மொழி. பேணுமாக்கள்-பேணத்தகுந்தவர் இல்லாத எளியோர். பிணித்தோர் மடிநல் கூர்ந்த என்பதற்கு மடியை உடை என்று கொண்டு மடிநல் கூர்ந்த மாக்கள்-உடையின்றித் துன்பம் எய்திய மக்கள் என்று உரை கூறி விளக்கத்தில் மடிமையால் வறுமையுறுவோரை அருளுவது மடிமையாகிய தீவினையை வளர்க்கும் செய்கையால் அறமாகா தொழிதலின் சோம்புதலால் வறுமையுற்ற மாக்கள் என்றால் பொருந்தாமை அறிக; என்று விளக்குவாரும் உளர். இவருடைய இவ்வுரையை நல்லுரை என்று விளக்குவாரும் உளர். இவருடைய இவ்வுரையை நல்லுரை என்று கொள்வார் தம்பால் வரும் வறுமையாளரை எல்லாம் நன்கு ஆராய்ந்துணர்ந்து அவர் வறுமை மடியால் வந்தது அன்று என்று நன்கு தெரிந்து கொண்ட பின்னரே ஏதேனும் ஒரு பிடி சோறிடுவதாயினும் இடுவாராக. இவ்வுரை போலி என்பது எமது கருத்து. மேலும் மணிமேகலை அமுதசுரபியில் உணவு சுரப்பதல்லது உடைகளும் தோன்றும் என்று கூறப்படாமையின் உடையின்றித் துன்பம் எய்திய மக்கள் வந்தமை என்பது பொருந்தாமை உணர்க. ஈண்டி-ஈண்ட.
இதுவுமது
228-235 : அருந்தி.............காலை
(இதன் பொருள்) அருந்தியோர்க்கு எல்லாம் ஆருயிர் மருந்தாய்-ஏற்று உண்டோர் எல்லாருக்கும் பெறுதற்கரிய உயிரைப் பிணி தீர்த்து வளர்க்கின்ற மருந்தாய்; பெருந்தவர் கைபெய் பிச்சையின் பயனும் நீரும் நிலமும் காலமும் கருவியும் சீர்பெற வித்திய வித்தின் விளைவும் பெருகியது என்ன-பெரிய தவ ஒழுக்கமுடையோர் கையின்கண் பெய்யப்பட்ட பிச்சையின் பயனும் நீர் நிலம் காலம் கருவி என்னும் இவை குறைவின்றிச் சீர்த்தவிடத்தே விதைக்கப்பட்ட வித்தினது விளைவும் பன்மடங்கு பெருகினாற் போல; வசி பெருவளம் சுரப்ப தொழில் உதவி வளம் தந்தது என-மழையானது உலகத்தில் மிக வளம் பெருகும்படி தனது பெய்தல் தொழிலைச் செய்து தனது வளமாகிய நீசை வழங்கினாற் போலவும் நாளுக்குநாள் மிகுதியாக உணவினை வழங்கி உயிர்களின்; பசிப்பிணி தீர்த்த பாவையை ஏத்திச் செல்லுங்காலே-பசியாகிய துன்பத்தைத் தீர்த்தவளாகிய அம்மணிமேகலையை அவ் உயிர்கள் கைதொழுது ஏத்தாநிற்ப இங்ஙனம் நிகழும் காலத்தே என்க.
(விளக்கம்) அமுதசுரபியில் சுரக்கின்ற உணவு உயிரின் சாவினைத் தடுக்கும் மருந்தா தலோடன்றிப் பெரியோர்க்கு ஈந்த தானத்தின் பயன் போலவும் நீர் முதலியவற்றால் சீர்த்த விடத்தே விதைத்த விளைவு போலவும் அவ்வுயிர்களுக்குப் பெரிதும் ஆக்கமும் தந்தது. அவை அறம் பொருள் இன்பம் வீடு என்பன என்க. பாவையை அவ்வுயிர்கள் ஏத்தி என்க. ஏத்தி என்னும் எச்சத்தை ஏத்த எனத் திருத்திக் கொள்க.
மணிமேகலை இருக்குமிடத்திற்கு அறவண அடிகளும் மாதவியும் சுதமதியும் வருதல்
235-239 : தாயர்...........வணங்கி
(இதன் பொருள்) தாயர் தம்முடன் அல்லவை கடிந்த அறவண அடிகளும்-மணிமேகலை நாணுதற்கு அவாவிய மாதவியும் சுதமதியும் ஆகிய தாயர் இருவரோடும் நல்லறம் அல்லாதவற்றையெல்லாம் துவரத் துடைத்த அறவண அடிகளாரும்; மல்லல் மூதூர் மன்னுயிர் முதல்வி நல்அறச்சாலை நண்ணினர் சேறலும்-வளம்மிக்க பழையதாகிய காஞ்சி மாநகரத்தின்கண் மணிமேகலை வரவினையும் செயலையும் கேள்வியுற்று உடம்போடு நிலைபெற்றுள்ள உயிர்களுக்கெல்லாம் அந்நிலைபேற்றிற்குக் காரணமாய் இருக்கின்ற அம்மணிமேகலையின் அருள் அறம் நிகழுகின்ற அக்கோட்டத்தை அணுகிச் செல்லா நிற்ப அவர் வரவு கண்ட அம்மணிமேகலை தானும்; சென்று அவர் தம்மைத் திருவடி வணங்கி-எதிரே சென்று வரவேற்று அவர்களுடைய அழகிய அடிகளிலே விழுந்து வணங்கி அழைத்து வந்து என்க.
(விளக்கம்) அல்லவை-அறமல்லாதவை. மணிமேகலை வருகையின் பின் அந்நாட்டில் மழைவளமும் உண்டாயது என்பது தோன்ற மல்லன் மூதூர் என்றார். நல்லறம் என்றது உண்டி வழங்குதலை. முதல்வி-காரணமானவள். நண்ணினர்: முற்றெச்சம். சேறல்-செல்லுதல். சென்று என்றது எதிர்சென்று என்றவாறு. அவர்-மூவரையும்.
மணிமேகலை அம்மூவருக்கும் உணவு முதலியன கொடுத்து மனமகிழ்ந்து வணங்கி உண்மை உருவம் கொள்ளல்
240-245 : நன்றென..........கலையென்
(இதன் பொருள்) நன்று என விரும்பி-தான் செய்த தவமும் நன்றேயாயிற்று என்று கருதி ஆர்வத்தோடு அவர்களுடைய; நல்லடி கழுவி ஆசனத்து ஏற்றி-நலந்தரும் திருவடிகளை நீரால் கழுவித் தவத்தோர்க்கியன்ற இருக்கைகளை ஈந்து அவற்றின் மேல் இருப்பித்து; பொழுதினில் அறுசுவை நால்வகை போனகம் ஏந்தி-உண்ணுதற்கேற்ற காலம் அறிந்து அம்மூவர்க்கும் தனது அமுதசுரபியிற் சுரந்த ஆறுவகைப்பட்ட சுவையை உடைய நான்கு வகையாக உண்ணுதற்கியன்ற உணவுகளையும் எடுத்து ஊட்டி; கொண்டபின் பாசிலைத் திரையலும் பளிதமும் படைத்து-அவர்கள் உட்கொண்ட பின்னர் அவர்களுக்கு வெற்றிலைச்சுருளும் பச்சைக் கருப்பூரமும் வழங்கி; மாயைவிட்டு மணிமேகலை என் மனப்பாட்டு அறம் வாய்வதாக என இறைஞ்சினள்-தான் மேற்கொண்டிருந்த மாதவன் உருவத்தைக் கைவிட்டுத் தன்னுருக்கொண்டு அம்மணிமேகலை மான் மேற்கொண்டுள்ள என் மனத்தின்கட்பட்ட அருளறம் வாய்த்திடுவதாக என்று கருதி அறவண அடிகளாரின் திருவடிகளிலே வீழ்ந்து வணங்கினள் என்பதாம்.
(விளக்கம்) யாம் செய்த தவம் நன்று என விரும்பி என்க. புத்த சமயத் துறவோர் அறுசுவை நால்வகைப் போனகமும் உண்டலும் பின்னர் வெற்றிலைத் திரையலும் பளிதமும் இல்லறத்தார் போன்றே நுகர்தலும் உடையர் என்பதனை இப்பகுதியால் உணரலாம். இவ்வாறு நுகர்வதனை ஆருகதர் இச்சமயத்தார் செய்யும் இழுக்குகளில் தலை சிறந்தன என்று கருதுவர். போனகம்-உணவு. பொழுது-உண்ணுதற்குரிய பொழுது. பாசிலைத் திரையல்-வெற்றிலைச் சுருள். பளிதம்-பச்சைக் கருப்பூரம். மனப்பாட்டறம்-நெஞ்சினுள்ளேயே தோன்றும் அருளறம். மாயை என்றது மணிமேகலை மேற்கொண்டிருந்த மாதவன் உருவத்தை. இக்காதையினால் இவ்வேற்றுருவத்தை மணிமேகலை சில பொழுது மேற்கொண்டும் சில பொழுது தன்னுருவத்தோடும் இருந்தமை உணரப்படும்.
இனி, இக்காதையினை மணிமேகலை, தேர்ந்து கடந்தவாயில் குறுகினள் புக்குக் கண்டு மகிழ்வுற்றுப் பள்ளிபுக்குப் பணிந்து சொல்லினளாதலின், அருந்தவன் நின்னைக் கண்டது என் நல்வினைப் பயன்கொல் என்று கூறி, காத்தல் நின் கடன் என அருள், ஆயிழை வணங்கி ஏந்தி ஓங்கி இயங்கி வலம் கொண்டு இழிந்து தொழுது சென்றெய்தலும், கஞ்சுகனுரைப்போன், வந்து தோன்றினள் என, மன்னனும் விரும்பி ஏத்திச் சென்று காட்ட நல்லாள் பொருந்தி வகுத்துப் புனைந்து ஏத்தி வைத்து, வருக என காணார் முதலியோரும் விலங்கின் தொகுதியும் மன்னுயிரடங்கலும் வந்து ஈண்டி ஏத்திச்செல்லுங்காலையில் தாயர் தம்முடன் அறவணவடிகளும் நண்ணினர் சேறலும் மணிமேகலை வணங்கி விரும்பிக் கழுவி ஏற்றி ஏந்திப் படைத்துவிட்டு இறைஞ்சினனென வினை முடிவு செய்க.
கச்சிமாநகர் புக்க காதை முற்றிற்று.