Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

16. கொலைக்களக் காதை 18. துன்ப மாலை
முதல் பக்கம் » சிலப்பதிகாரம்
17. ஆய்ச்சியர் குரவை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜன
2012
04:01

அஃதாவது - கண்ணகியை அடைக்கலம் பெற்ற மாதரி மனைக்கண் அம் மாதரியால் நன்கு பேணப்பட்டுக் கண்ணகியும் கோவலனும் அவ்விடைக்குல மடந்தையின் பூவலூட்டிய புனைமாண் பந்தர்க் காவற் சிற்றில் ஆகிய கடிமனையின்கண் இனிதிருந்து, மற்றை நாள் விடியற் காலத்தே கோவலன் கண்ணகியின் சீறடிச் சிலம்பில் ஒன்று கொண்டு அதனை விற்றற்கு மதுரைமா நகரின்கண் புகுவானாக; அற்றை நாள் விடியற் காலத்தே துயிலெழுந்த மாதரி தனது சேரியின்கண் தீ நிமித்தங்கள் பல நிகழ்ந்தமை கண்டு இச்சேரியின்கண் ஏதோ பெருந் தீங்கு நிகழ்தற்கு இவை அறிகுறியாம் என்றுட்கொண்டு, அத்தீங்கு நிகழாமைப் பொருட்டுத் தம் குலதெய்வமாகிய மாயோனை வாழ்த்தி ஏனைய ஆய்ச்சியருடன் குரவைக் கூத்தாடிய செய்தியைக் கூறும்பகுதி என்றவாறு; இது கூத்தாற் பெற்ற பெயர்.

கயலெழுதிய இமயநெற்றியின்
அயலெழுதிய புலியும்வில்லும்
நாவலந்தண் பொழின்மன்னர்
ஏவல்கேட்பப் பாரரசாண்ட
மாலை வெண்குடைப் பாண்டியன் கோயிலில்  5

காலை முரசங் கனைகுர லியம்புமாகலின்
நெய்ம்முறை நமக்கின் றாமென்று
ஐயைதன் மகளைக் கூஉய்க்
கடைகயிறு மத்துங் கொண்டு
இடைமுதுமகள் வந்துதோன்றுமன்;  10

உரைப்பாட்டு மடை

குடப்பால் உறையா குவியிமில் ஏற்றின்  1
மடக்கணீர் சோரும் வருவதொன் றுண்டு;

உறிநறு வெண்ணெய் உருகா உருகும்  2
மறிதெறித் தாடா வருவதொன் றுண்டு;

நான்முலை யாயம் நடுங்குபு நின்றிரங்கும்  3
மான்மணி வீழும் வருவதொன் றுண்டு;

கருப்பம்

குடத்துப்பா லுறையாமையும் குவியிமி லேற்றின் மடக்கண்ணீர் சோர்தலும் உறியில் வெண்ணெ யுருகாமையும் மறி முடங்கியாடாமையும் மான்மணி நிலத்தற்று வீழ்தலும் வருவதோர் துன்பமுண்டென மகளை நோக்கி மனமங்காதே மண்ணின் மாதர்க்கணியாகிய கண்ணகியுந் தான் காண ஆயர்பாடியில் எருமன்றத்து மாயவனுடன் தம்முன் ஆடிய வாலசரிதை நாடகங்களில் வேல் நெடுங்கண் பிஞ்ஞையோ டாடிய குரவை யாடுதும் யாமென்றாள் கறவை கன்று துயர் நீங்குகவெனவே;

கொளு

காரி கதனஞ்சான் பாய்ந்தானைக் காமுறுமிவ்  1
வேரி மலர்க் கோதையாள்;

கட்டு

நெற்றிச் செகிலை யடர்த்தாற் குரியவிப்  2
பொற்றொடி மாதராள் தோள்;

மல்லல் மழவிடை யூர்ந்தாற் குரியளிம்  3
முல்லையம் பூங்குழல் தான்;

நுண்பொறி வெள்ளை யடர்த்தாற்கே யாகுமிப்  4
பெண்கொடி மாதர்தன் தோள்;

பொற்பொறி வெள்ளை யடர்த்தார்க்கே யாகுமிந்  5
நற்கொடி மென்முலை தான்;

வென்றி மழவிடை யூர்ந்தாற் குரியளிக்  6
கொன்றையம் பூங்குழ லாள்;

தூநிற வெள்ளை அடர்த்தாற் குரியளிப்  7
பூவைப் புதுமல ராள்;

எடுத்துக் காட்டு

ஆங்கு,
தொழுவிடை ஏறு குறித்து வளர்த்தார்
எழுவரிளங் கோதை யார்
என்றுதன் மகளை நோக்கித்
தொன்றுபடு முறையால் நிறுத்தி
இடைமுது மகளிவர்க்குப்
படைத்துக்கோட் பெயரிடுவாள்
குடமுதல் இடமுறை யாக்குரல் துத்தம்
கைக்கிளை உழைஇளி விளரி தாரமென
விரிதரு பூங்குழல் வேண்டிய பெயரே;

மாயவன் என்றாள் குரலை விறல்வெள்ளை
ஆயவன் என்றாள் இளிதன்னை- ஆய்மகள்
பின்னையாம் என்றாளோர் துத்தத்தை மற்றையார்
முன்னையாம் என்றாள் முறை;

மாயவன் சீருளார் பிஞ்ஞையுந் தாரமும்
வால்வெள்ளை சீரார் உழையும் விளரியும்
கைக்கிளை பிஞ்ஞை இடத்தாள் வலத்துளாள்
முத்தைக்கு நல்விளரி தான்;

அவருள்,
வண்டுழாய் மாலையை மாயவன் மேலிட்டுத்
தண்டாக் குரவைதான் உள்படுவாள்-கொண்டசீர்
வையம் அளந்தான்றன் மார்பின் திருநோக்காப்
பெய்வளைக் கையாள்நம் பின்னைதா னாமென்றே
ஐயென்றா ளாயர் மகள்;

கூத்துள் படுதல்

அவர் தாம்,
செந்நிலை மண்டிலத்தாற் கற்கடகக் கைகோஒத்து
அந்நிலையே யாடற்சீ ராய்ந்துளார்- முன்னைக்
குரற்கொடி தன்கிளையை நோக்கிப் பரப்புற்ற
கொல்லைப் புனத்துக் குருந்தொசித்தாற் பாடுதும்
முல்லைத்தீம் பாணி யென்றாள்;
எனாக்,
குரன்மந்த மாக இளிசம னாக
வரன்முறையே துத்தம் வலியா உரனிலா
மந்தம் விளரி பிடிப்பாள் அவள்நட்பின்
பின்றையைப் பாட்டெடுப் பாள்;

பாட்டு

கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன்  1
இன்றுநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ;

பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன்  2
ஈங்குநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழீ;

கொல்லையஞ் சாரற் குருந்தொசித்த மாயவன்  3
எல்லைநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழீ;
தொழுனைத் துறைவனோ டாடிய பின்னை
அணிநிறம் பாடுகேம் யாம்;

இறுமென் சாயல் நுடங்க நுடங்கி  1
அறுவை யொளித்தான் வடிவென் கோயாம்
அறுவை யொளித்தான் அயர அயரும்
நறுமென் சாயல் முகமென் கோயாம்;

வஞ்சஞ் செய்தான் தொழுனைப் புனலுள்  2
நெஞ்சங் கவர்ந்தாள் நிறையென் கோயாம்
நெஞ்சங் கவர்ந்தாள் நிறையும் வளையும்
வஞ்சஞ் செய்தான் வடிவென் கோயாம்;

தையல் கலையும் வளையும் இழந்தே  3
கையி லொளித்தாள் முகமென் கோயாம்
கையி லொளித்தாள் முகங்கண் டழுங்கி
மைய லுழந்தான் வடிவென் கோயாம்;

ஒன்றன் பகுதி

கதிர்திகிரி யான்மறைத்த கடல்வண்ணன் இடத்துளாள் 1
மதிபுரையு நறுமேனித் தம்முனோன் வலத்துளாள்
பொதியவிழ் மலர்க்கூந்தற் பிஞ்ஞைசீர் புறங்காப்பார்
முதுமறைதேர் நாரதனார் முந்தைமுறை நரம்புளர்வார்;

மயிலெருத் துறழ்மேனி மாயவன் வலத்துளாள்  2
பயிலிதழ் மலர்மேனித் தம்முனோன் இடத்துளாள்
கயிலெருத்தம் கோட்டியநம் பின்னைசீர் புறங்காப்பார்
குயிலுவருள் நாரதனார் கொளைபுணர்சீர் நரம்புளர்வார்;

ஆடுநர்ப் புகழ்தல்

மாயவன்றம் முன்னினொடும் வரிவளைக்கைப் பின்னையொடும்
கோவலர்தஞ் சிறுமியர்கள் குழற்கோதை புறஞ்சோர
ஆய்வளைச்சீர்க் கடிபெயர்த்திட் டசொதையார் தொழுதேத்தத்
தாதெருமன் றத்தாடுங் குரவையோ தகவுடைத்தே;

எல்லாநாம்,
புள்ளூர் கடவுளைப் போற்றுதும் போற்றுதும்
உள்வரிப் பாணியொன் றுற்று;

உள்வரி வாழ்த்து

கோவா மலையாரம் கோத்த கடலாரம்  1
தேவர்கோன் பூணாரம் தென்னர்கோன் மார்பினவே
தேவர்கோன் பூணாரம் பூண்டான் செழுந்துவரைக்
கோகுல மேய்த்துக் குருந்தொசித்தா னென்பரால்;

பொன்னிமயக் கோட்டுப் புலிபொறித்து மண்ணாண்டான் 2
மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன்
மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன்
பொன்னன் திகிரிப் பொருபடையா னென்பரால்;

முந்நீரி னுள்புக்கு மூவாக் கடம்பெறிந்தான்  3
மன்னர்கோச் சேரன் வளவஞ்சி வாழ்வேந்தன்
மன்னர்கோச் சேரன் வளவஞ்சி வாழ்வேந்தன்
கன்னவில் தோளோச்சிக் கடல்கடைந்தா னென்பரால்;

முன்னிலைப் பரவல்

வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக்  1
கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே
கலக்கியகை அசோதையார் கடைகயிற்றாற் கட்டுண்கை
மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே;

அறுபொருள் இவனென்றே அமரர்கணந் தொழுதேத்த 2
உறுபசியொன் றின்றியே உலகடைய உண்டனையே
உண்டவாய் களவினான் உறிவெண்ணெ யுண்டவாய்
வண்டுழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே;

திரண்டமரர் தொழுதேத்தும் திருமால்நின் செங்கமல  3
இரண்டடியான் மூவுலகும் இருள்தீர நடந்தனையே
நடந்தஅடி பஞ்சவர்க்குத் தூதாக நடந்தஅடி
மடங்கலாய் மாறட்டாய் மாயமோ மருட்கைத்தே;

படர்க்கைப் பரவல்

மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்  1
தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவி என்ன செவியே
திருமால்சீர் கேளாத செவி என்ன செவியே;

பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம்  2
விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும் கையும் திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண்ணென்ண கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ண கண்ணே;

மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்  3
கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப்
படர்ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே
நாராயணா வென்னா நாவென்ன நாவே;

என்றியாம்,
கோத்த குரவையுள் ஏத்திய தெய்வநம்
ஆத்தலைப் பட்ட துயர்தீர்க்க வேத்தர்
மருள வைகல் வைகல் மாறட்டு
வெற்றி விளைப்பது மன்னோ கொற்றத்து
இடிப்படை வானவன் முடித்தலை யுடைத்த
தொடித்தோட் டென்னவன் கடிப்பிகு முரசே.

உரை

தோற்றுவாய்

1-10: கயலெழுதிய .............. தோன்றுமன்

(இதன்பொருள்.) இமய நெற்றியின் எழுதிய கயல் அயல் புலியும் வில்லும் எழுதிய - இமயமலையின் நெற்றியின்கண் தான் தன் வெற்றிக்கு அறிகுறியாகப் பொறித்த கயலுக்குப் பக்கத்தில் தம் வெற்றிக்கு அறிகுறியாகப் பொறிக்கப்பட்ட புலிப்பொறியையும் விற்பொறியையும் உடைய சோழனும் சேரனும் ஆகிய அரசர்களும்; நாவலந் தண் பொழில் மன்னர் ஏவல் கேட்ப - இந்த நாவலந் தீவின்கண் செங்கோல் செலுத்துகின்ற பிற பெருநில மன்னரும் குறுநில மன்னரும் ஆகிய எல்லா மன்னரும் தனது ஏவலைக் கேட்டு ஒழுகும்படி; பார் அரசு ஆண்ட மாலை ஏவல் வெண்குடைப் பாண்டியன் கோயிலின் - நில முழுவதும் அரசாட்சி செய்த முத்துமாலை பொருந்திய வெண்கொற்றக் குடையையுடைய பாண்டியனுடைய அரண்மனையின்கண்ணே; காலை முரசம் கனைகுரல் இயம்பும் ஆகலின் - பள்ளி எழுச்சி முரசு முழங்குகின்றது ஆதலாலே; நமக்கு இன்று நெய்ம்முறை ஆல் என்று - நமக்கு இற்றை நாள் அரண்மனைக்கு நெய்யளக்கும் முறை ஆகும் என நினைந்து; ஐயை தன் மகளைக் கூஉய் - ஐயை என்னும் பெயருடைய தன் மகளை அழைத்தவளாய்; இடை முதுமகள் கடை கயிறும் மத்துங்கொண்டு வந்து தோன்றுமன் -இடையர்குலத்துப் பிறந்த முதுமகளாகிய மாதரி தயிர்கடை தற்குக் கருவியாகிய கயிற்றையும் மத்தையும் கையில் எடுத்துக் கொண்டு தயிர்த்தாழி இருக்குமிடத்தே வந்து தோன்றுவாளாயினள் என்க.

(விளக்கம்) கயல், புலி, வில் என்னும் மூன்றும் நிரலே பாண்டியன், சோழன், சேரன் என்னும் மூன்று தமிழ்நாட்டு மன்னர்களின் பொறிகள்; பொறி எனினும் இலச்சினை எனினும் ஒக்கும். முத்திரை என்பதுமது. இது மதுரைக்காண்டமாதலின் பாண்டியனுடைய தலைமைத்தன்மை தோன்ற, கயலின் அயலெழுதிய புலியும் வில்லும் என்றார். புலி, சோழனுக்கும்; வில், சேரனுக்கும் ஆகுபெயர்கள். நாவலந்தண்பொழில் என்றது, இமய முதல் குமரி ஈறாகக் கிடந்த பெரு நிலப்பரப்பினை என்க. இந் நிலப்பரப்பின்கண் தமிழகத்தை ஆளுகின்ற பெருநில மன்னர்களாகிய சோழனும், சேரனும் பிற நாட்டை ஆளுகின்ற பெருநில மன்னர்களும் இவர்தம் ஆட்சியின் கீழ்ப்பட்ட எல்லாக் குறுமன்னர்களும் தன் ஏவல் கேட்கும்படி ஆண்ட பாண்டியன் என்க.

கோயில் - அரண்மனை. காலைமுரசம் - பள்ளி எழுச்சி முரசம். இயம்பும் - இயம்ப அதுகேட்டனள் ஆகலின் இடைமுதுமகள் வந்து தோன்றும் என்றவாறு. நமக்கு இன்று நெய்ம்முறை ஆம் என்றது இடைமுதுமகளின் உட்கோளை: மாதரி. அவள் ஐயை! ஐயை ! எனத் தன்மகளைக் கூவியவண்ணம் வந்து தோன்றும் என்க. வருபவள் கயிறும் மத்துங்கொண்டு வந்து தோன்றினள் என்றவாறு.

இது கூத்தாகலின் கூத்தின்கண் கூத்தர் தலைவன் முன்னுரை கூறுமாறு போலே அடிகளார் இங்ஙனம் கூறுகின்றனர் என்க.

உரைப்பாட்டு மடை

அஃதாவது - உரை போன்ற நடையமைந்த பாட்டினை இடையிலே மடுத்தது என்க.

1: குடப்பால் ........... உண்டு

(இதன்பொருள்.) குடப்பால் உறையா - நாம் பிரையிட்ட தாழிகளில் பாலும் தோயாதொழிந்தன; குவி இமில் ஏற்றின் மடக்கண் நீர் சேரரும் -அதுவேயுமன்றி நமது நிரையினிடத்தே திரண்ட முரிப்பையுடைய காளையின் அழகிய கண்களினின்றும் நீர் ஒழுகா நின்றது. ஆதலாலே; வருவது ஒன்று உண்டு - நமக்கு வரும் தீங்கு ஒன்று உளது போலும் என்றாள்; என்க.

(விளக்கம்) குடம் ஈண்டுத் தயிர்த்தாழி. உறைதல் - பால் தயிராதல். பிரை - பால் தயிராதற்பொருட்டு இடும் மோர்.

2: உறி ............ உண்டு

(இதன்பொருள்.) உறி நறு வெண்ணெய் உருகா - உறியின்கண் தாழியிலிட்ட வெண்ணெய்த் திரளைகள் அரண்மனைக்கு அளத்தற்கு உருக்குங்கால் நன்கு உருகா தொழிந்தன; மறிதெறித்து ஆடா உருகும் - அதுவேயுமன்றி ஆட்டுக்குட்டிகளும் துள்ளி விளையாடாமல் சோர்ந்து கிடக்கும்; வருவது ஒன்று உண்டு -ஆதலால் நமக்கு வரும் கேடொன்று உளது போலும்; என்றாள் என்க.

(விளக்கம்) அற்றைநாள் நெய்யளக்கும் முறை ஆதலின் அதற்கு உருக்கிய வெண்ணெய்த் திரளைகள் நன்கு உருகுகின்றில என்றவாறு. மறி - ஆட்டுக்குட்டி, ஆடா: முற்றெச்சம். உருகுதல் - (மறிக்கு) சோர்தல்.

3: நான்முலை ............ உண்டு

(இதன்பொருள்.) நால்முலை ஆயம் நடுங்குபு நின்று இரங்கும் -நான்கு முலைக்காம்புகளையுடைய ஆனினம் காரணமின்றியே உடல் நடுங்கி நின்று கதறும்; மால்மணி வீழும் - அதுவேயுமன்றி ஆக்களின் கழுத்திற் கட்டிய பெரிய மணிகள் தாமும் கட்டற்று வீழா நின்றன; வருவது ஒன்று உண்டு - ஆதலால் நமக்கு வந்துறும் கேடொன்று உளது போலும் என்க.

(விளக்கம்) முலை - ஈண்டுச் சுரை, (காம்புகள்). நடுங்குபு - நடுங்கி. இரங்கும் என்றது கதறும் என்பதுபட நின்றது, மால் - பெரிய.

கருப்பம்

அஃதாவது -இத் தீநிமித்தமெல்லாம் இனி வருங் கேட்டிற்கு கருக்கள் ஆம் என்றவாறு.

(விளக்கம்) கருவாவது - பின்விளைவிற்கு முதலாய் நிற்பது என்க.

1: குடத்துப்பால் ................ எனவே

(இதன்பொருள்.) குடத்துப்பால் உறையாமையும் - தயிர்த்தாழியின் கண் பிரையிட்ட பால் தயிராகத் தோயாமையானும்; குவி இமில் ஏற்றின் மடக்கண் நீர் சோர்தலும் - திரண்ட முரிப்பையுடைய ஆனேற்றின் அழகிய கண்ணினின்றும் நீர் சோர்தலானும்; உறியில் வெண்ணெய் உருகாமையும் - உறியில் தாழியிலிட்ட வெண்ணெய் நன்கு உருகாமையானும்; மறி முடங்கி ஆடாமையும் - ஆட்டுக்குட்டிகள் துள்ளியாடாமல் சோர்ந்து கிடத்தலானும்; மால்மணி அற்று நிலத்து வீழ்தலும் -ஆவின் கழுத்திற் கட்டிய மணி கயிறற்று நிலத்தின்கண் வீழ்தலானும்; வருவதோர் துன்பமுண்டென -இவை தீநிமித்த மாதலின் நமக்கு வரும் ஒரு துன்பமுண்டு போலும் என்று கூறிய மாதரி; மகளை நோக்கி மனம் மயங்காதே - தன்மகளாகிய ஐயை இது கேட்டு மயங்கி நின்றவளைப் பார்த்து என் அன்பே! இவற்றிற்கு நீ மனம் மயங்குதல் வேண்டா! இவற்றிற்குத் தீர்வும் உளது காண் அஃதியாதெனின்; மண்ணின் மாதர்க்கு அணி ஆகிய கண்ணகியும் தான் காண - இந்நிலவுலகத்தின்கண் பெண் பிறந்தோர்க்கெல்லாம் பேரணிகலனாக விளங்குகின்ற நங் கண்ணகிதானும் கண்டு மகிழும்படி; யாம் - இடைக்குல மகளிரேம் ஆகிய யாமெல்லாம் குழுமி நங்குல தெய்வமாகிய; மாயவன் ஆயர் பாடியில் எருமன்றத்துத் தம்முன் உடன் ஆடிய - கண்ணபெருமான் பண்டு ஆயர்பாடியில் தாதெருமன்றத்தில் தமையனாகிய பலதேவனோடு ஆடிய; வாலசரிதை நாடகங்களில் - இளம்பருவத்து வரலாற்று நாடகங்கள் பல உள அவற்றுள்; வேல் நெடுங்கண் பிஞ்ஞையோடு ஆடிய குரவை ஆடுதும் - வேல்போலும் நெடிய கண்ணையுடைய நப்பின்னையோடு ஆடிய குரவை நாடகத்தை ஆடுவோமாக! அஃது எற்றுக்கெனின்; கறனை கன்று துயர் நீங்குக என என்றாள் - இத் தீநிமித்தம் காரணமாக நம்முடைய கறவைகளும் கன்றுகளும் எய்தும் துன்பம் எய்தாதொழிக என்று அத் தெய்வத்தை வேண்டுதற் பொருட்டேயாம் என்று சொன்னாள்; என்க.

(விளக்கம்) குரவை நாடகமாவது - எழுவரேனும் ஒன்பதின்மரேனும் கைகோத்தாடுங் கூத்து.

கொளு

அஃதாவது - குரவைக் கூத்தின் இயல்பினைத் தன்னுட்கொண்ட பகுதி என்றவாறு.

1. காரி .............. கோதையாள்

(இதன்பொருள்.) காரி கதன் அஞ்சான் பாய்ந்தானை - இந்தக் கரிய நிறமமைந்த ஆனேற்றின் சினத்திற்கு அஞ்சாமல் அதன்மேற் பாய்ந்து அடக்கிய ஆயனை; இவ்வேரி மலர்க்கோதை யாள் காமுறும் -இந்தத் தேனிறைந்த மலர்மாலையை யுடையாள் விரும்புவாள்; என்க.

(விளக்கம்) காரி - கரிய நிறமுடையது. கதன் - போலி, சினம். அஞ்சான்; முற்றெச்சம். வேரி - வெட்டிவேருமாம்.

சுட்டு

அஃதாவது - இதுவும் கீழ்வருவனவும் மாதரி குரவை ஆடுதற்குரிய ஆயர்மகளிரைத் தனித்தனி சுட்டிக்காட்டிக் கூறுவன என்றவாறு.

2: நெற்றி ............ தோள்

(இதன்பொருள்.) நெற்றிச் செகிலை அடர்த்தாற்கு - இந்த நெற்றியின்கண் சிவந்த சுட்டியையுடைய ஆனேற்றை அடக்கிய ஆயனுக்கு; இப் பொன் தொடி மாதராள்தோள் உரிய - இந்தப் பொன் வளையலணிந்த ஆயமகளின் தோள்கள் உரியனவாம் என்க.

(விளக்கம்) நெற்றிச் செகில் - நெற்றியொழிந்த உறுப்பெல்லாம் சிவந்த ஏறு எனினுமாம்.

3: மல்லல் .............. பூங்குழல்தான்

(இதன்பொருள்.) மல்லல் மழ விடை ஊர்ந்தாற்கு - இந்த வளனும் இளமையும் உடைய ஏற்றினை அடக்கி அதன் முதுகில் ஏறிச் செலுத்திய ஆயனுக்கு; இம் முல்லை அம் பூங்குழல் தான் உரியள் - இந்த முல்லைப் பூவாகிய அழகிய மலர்மாலை வேய்ந்த கூந்தலையுடைய ஆய்ச்சி வாழ்க்கைத் துணைவி ஆதற்குரியவள் ஆவள்; என்க.

(விளக்கம்) மல்லல் - வளம். மழ -இளமை. பூங்குழல்: அன்மொழித்தொகை. தான் : அசைச்சொல்.

4: நுண்பொறி ......... தோள்

(இதன்பொருள்.) நுண் பொறி வெள்ளை அடர்த்தாற்கே - நுண்ணிய புள்ளிகளையுடைய வெள்ளை ஏற்றினைத் தழுவி அடக்கிய ஆயனுக்கே; இப் பெண்கொடி மாதர் தன் தோள் ஆகும் - இந்தப் பெண்ணாகிய பூங்கொடிபோலும் ஆய்ச்சியின் காதல்கெழுமிய தோள்கள் தழுவுதற்குரியன ஆகும்; என்க.

(விளக்கம்) வெள்ளை: ஆகுபெயர். ஏகாரம் பிரிநிலை. மாதர் - காதல்; அழகுமாம்.

5: பொற்பொறி ............. முலைதான்

(இதன்பொருள்.) பொன் பொறி வெள்ளை அடர்த்தாற்கே - அழகிய புள்ளிகளையுடைய இந்த வெள்ளேற்றினைத் தழுவி அடக்கிய ஆயனுக்கே; இந் நற்கொடி மென்முலை தான் ஆகும்-இந்த அழகிய பூங்கொடிபோலும் ஆயமகளின் மெல்லிய முலை தழுவுதற்குரியதாம்; என்க.

(விளக்கம்) பொன் - அழகு. நற்கொடி: அன்மொழித்தொகை. தான்: அசை.

6: வென்றி .......... பூங்குழலாள்

(இதன்பொருள்.) வென்றி மழவிடை ஊர்ந்தாற்கு - எப்பொழுதும் வெற்றியையேயுடைய இந்த இளைய ஏற்றினை வென்று அதன் முதுகிலமர்ந்து செலுத்திய ஆயனுக்கே; இக் கொன்றையம் பூங்குழலாள் உரியள் - இந்தக் கொன்றைப்பழம் போன்ற நிறத்தால் அழகுடைய மலரணிந்த கூந்தலையுடைய ஆயமகள் வாழ்க்கைத் துணைவி ஆதற்குரியவள் ஆவள்; என்க.

(விளக்கம்) முன்னும் பலர் தழுவ முயன்று தோற்றமை தோன்ற வென்றி மழவிடை என்றாள். கொன்றைப்பழம் கூந்தலுக்கு நிறத்தால் உவமை. கொன்றைப் பழக் குழற் கோதையர் என்பது வளையாபதி.

7: தூநிற ....... மலராள்

(இதன்பொருள்.) தூநிற வெள்ளை அடர்த்தாற்கு - இந்தத் தூய வெள்ளையேற்றினைத் தழுவி வென்ற ஆயனுக்கே; இப்புது பூவை மலராள் உரியள் - இந்தப் புதிய காயாம்பூ மலர் அணிந்த ஆயமகள் வாழ்க்கைத் துணைவியாக உரியவள் ஆவள்; என்க.

(விளக்கம்) தூநிற வெள்ளை என்றது பிறிது நிறம் சிறிதும் விரவாத வெள்ளை நிறத்தையுடைய காளை என்றவாறு. பூவை - காயா.

எடுத்துக்காட்டு

அஃதாவது இவ்வாறு ஒவ்வொரு மகளுக்கும் ஒவ்வொரு காளையைக் குறித்துக்காட்டி வளர்க்கப்பட்டவர் என்க. ஆங்கு - அப்படியே.

தொழுவிடை பெயரிடுவாள்

(இதன்பொருள்.) தொழு இடை ஏறு குறித்து வளர்த்தார் எழுவர் இளங்கோதையார் என்று - இங்ஙனம் தத்தம் தொழுவின் கண்ணே ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் ஆனேற்றினைக் குறிப்பிட்டு வளர்க்கப்பட்டவராகிய ஏழு இளமகளிராகிய கோதையணிந்த ஆயமகளிரைச் சுட்டிக் காட்டி; தன்மகளை நோக்கி - தன் மகளாகிய ஐயையை நோக்கி; தொன்றுபடு முறையான் நிறுத்தி இடைமுது மகள் இவர்க்குப் படைத்துக்கோள் பெயர் இடுவாள் - இம் மகளிரைப் பழைய இசை நரம்புகள் நிற்கும் முறைமைகளிலே நிறுத்தி இடையர் குலத்துப் பிறந்த முதியவளாகிய அம் மாதரி இவர்க்குப் படைத்துக்கோட் பெயரிடுவாளாயினாள்; என்க.

(விளக்கம்) தொன்று படுமுறை - தொன்றுதொட்டுக் கூத்த நூலில் கூறும் முறை. இடை முதுமகள்-மாதரி. இவர் என்றது ஏறு குறித்து வளர்க்கப்பட்ட ஆயமகளிர் எழுவர்க்கும் என்றவாறு. படைத்துக் கோட் -பெயர் புனைபெயர். அஃதாவது ஒருவர்க்குரிய இயற்பெயர் நிற்க, அவர்க்கு ஒரு காரணம்பற்றி அப்பொழுதைக்கு யாதானும் அக்காரணத்திற்குத் தொடர்புடையதாக ஒரு பெயர் வைத்துக் கொள்ளுதல்.

மாதரி ஆயமகளிர்க்குப் படைத்துக்கோள் பெயரிடுதல்

குடமுதல் ........ பெயரே

(இதன்பொருள்.) குடமுதல் இடமுறையா குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என மேற்றிசையில் குரல் நரம்பு முதலாக நிரலே குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என இடமுறையால் இவ்வேழு மகளிர்க்கும்; விரிதரு பூங்குழல் வேண்டிய பெயர் - மலர்ந்த மலரையுடைய கூந்தலையுடைய மாதரி என்பாள். இட்ட பெயர்களாம்; என்க.

(விளக்கம்) இவை கூத்தாடுங்கால் அவர்களை அழைத்தற்கு அவர்களுக்கிட்ட புனைபெயர்.

இனி, குரல் முதலிய ஏழிசைகளையும் கருவியாகக்கொண்டு பாடுகின்ற பாலைப்பண்கள், ஆயப்பாலை, சதுரப்பாலை, திரிகோணப்பாலை, வட்டப்பாலை என நான்கு வகைப்படும் எனவும், அவற்றுள் இங்கு ஏழு இசைகளையும் பெயராகக் கொண்டு எழுவரும் கைகோத்து வட்டமாக நின்று அவ்விசை நரம்புகள் நிற்கு முறைப்படி ஆடுங்கால் பாடும் பண்கள் அந்நான்கனுள் வைத்து வட்டப்பாலை யாமெனவுமுணர்க.

இவ் வட்டப்பாலை பற்றிய அடியார்க்குநல்லார் இவ்விடத்தே கூறும் விளக்கம் வருமாறு: வட்டமென்பது வகுக்குங்காலை, ஓரேழ் தொடுத்த மண்டல மாகும் சாணளவு கொண்ட தொருவட்டந் தன்மீது, பேணி யிருநாலு பெருந்திசைக் கோணத் திருகயிறு மேலோட்டி யொன்பாலை மூன்றும் வருமுறையே மண்டலத்தை வை என்பது சூத்திரம். என்னுதலிற்றோவெனின், வட்டப்பாலை, மண்டலம் வருமிடத்துச் சாணுக்குச் சாணாக ஒரு வட்டம் கீறிப் பெருந்திசைகளின் மேலே இரண்டு வரம்பு கீறி மண்டலம் செய்து பன்னிரண்டு கோணமாக வகுப்பது நுதலிற்று.

எதிரு மிராசி வலமிடமாக, எதிரா விடமீன மாக - முதிராத, ஈராறி ராசிகளை யிட்டடைவே நோக்கவே ஏரார்ந்த மண்டலமென்றெண் என்பது சூத்திரம். என்னுதலிற்றோ வெனின் - இட்ட பன்னிரண்டு கோணத்திற் பன்னிரண்டு ராசிகளை நிறுத்தினால் இவற்றுள் நரம்புடன் இயல்வன ஏழென்பது உணர்த்துதல் நுதலிற்று.

ஏத்து மிடப, மலவ னுடன்சீயம், கோற்றனுக் கும்பமொடு, மீளமிவை பார்த்துக், குரன்முதற் றார, மிறுவாய்க் கிடந்த, நிரலேழுஞ் செம்பாலை நேர் இவ்வேழும் இடபம் கற்கடகம் சிங்கம் துலாம் தனுகும்பம் மீனமென இவற்றுள் நிற்கும்.

துலைநிலைக் குரலுந் தனுநிலை துத்தமும் நிலைபெறு கும்பத்து நேர்கைக் கிளையும் மீனத் துழையும் விடை நிலத்திளியும், மானக் கடகத்து மன்னிய விளரியும், அரியிடைத் தாரமு மணைவுறக் கொளலே.

இனி, இந் நரம்புகளின் மாத்திரைகள் வருமாறு: குரல் துத்த நான்கு கிளைமூன் றிரண்டாம். குரையா வுழையிளி நான்கு - விரையா, விளரியெனின் மூன்றிரண்டு தாரமெனச் சொன்னார், களரிசேர் கண்ணுற் றவர் எனக் கொள்க.

இவற்றுள், தாரத்துள் உழை பிறக்கும்; உழையில் குரல் பிறக்கும்; குரலுள் இளிபிறக்கும்; இளியுள் துத்தம் பிறக்கும்; துத்தத்துள் விளரிபிறக்கும்; விளரியுட் கைக்கிளை பிறக்குமெனக் கொள்க. இவற்றுள் முதலில் தோன்றிய நரம்பு தாரம்; இவை விரிப்பிற் பெருகும்; வந்தவழிக் கண்டுகொள்க.

இனி, வட்டப்பாலையிலே நாலுபண்ணும் பிறக்கும்; தாரத்துழை தோன்றப் பாலையாழ் தண்குரல், ஒருமுழை தோன்றக் குறிஞ்சியாழ் நேரே இளிகுரலிற் றோன்ற மருதயாழ் துத்தம், இளியிற் பிறக்க நெய்தலியாழ் இவற்றுள் பாலையாழுள்ளே ஏழு பாலையிசை பிறக்கும். குரலிளியிற் பாகத்தை வாங்கியோ ரொன்று, வரையாது தாரத்துழைக்கும் - விரைவின்றி, ஏத்தும் விளரி கிளைக்கீக்க வேந்திழையாய், துத்தங் குரலாகுஞ் சொல்.

இந் நரம்பிற் பாலை பிறக்குமிடத்துக் குரலும் துத்தமும் இளியும் நான்கு மாத்திரை பெறும்; கைக்கிளையும் விளரியும் மூன்று மாத்திரை பெறும்; உழையும் தாரமும் இரண்டு மாத்திரை பெறும்; இவற்றுள் குரல் குரலாய் ஒத்து நின்றது செம்பாலை; இதனிலே குரலிற் பாகத்தையும் இளியிற் பாகத்தையும் வாங்கிக் கைக்கிளை உழை விளரி தாரத்திற்கு ஒரோ வொன்றைக் கொண்டு சேர்க்கத் துத்தம் குரலாய்ப் படுமலைப் பாலையாம்; இவ்வாறே திரிக்க இவ்வேழு பெரும்பாலைகளும் பிறக்கும்; பிறக்குங்கால் திரிந்த குரல் முதலாக ஏழும் பிறக்கும்.

அவை பிறக்குமாறு: குரல் குரலாயது, செம்பாலை; துத்தம் குரலாயது படுமலைப்பாலை, கைக்கிளை குரலாயது செவ்வழிப்பாலை; உழை குரலாயது அரும் பாலை; இளி குரலாயது கோடிப்பாலை; விளரி குரலாயது விளரிப்பாலை; தாரம் குரலாயது மேற்செம்பாலையென வலமுறையே ஏழுபாலையும் கண்டுகொள்க. இதனை வலமுறையென்றாம்; மேற்கே முகமாக இருந்து திரிதலான். கிழக்கே நோக்கியிருக்கின் இடமுறையாமெனக் கொள்க. இந்த விளக்கத்தால் வட்டப்பாலையின்கண் இராசிமண்டிலத்தின் இரண்டு முறையாக இசை நரம்புகள் நிறுத்தப்படும் என்று அறியப்படும், மேலும் இட முறைப்பாலைகள் இடப இராசியினின்றும் தொடங்கி, இடமுறையாக மீனம், கும்பம் என நிரலாகப் பாடப்படும் என்பதும் நேரிசைப் பாலைகள் மீனம் தொடங்கி வலமுறையாகப் பாடப்படும் என்பதும் உணரலாம். எதிருமிராசி வலமிடமாக என்பதன் கண் வலஇடபமாக எனத் திருத்திக் கொள்ளுதல் வேண்டும் என்று தெரிகிறது.

இனி, இளங்கோவடிகளார் குடமுதல் இடமுறை எனத் தெரிந்து ஓதியிருப்பவும், அடியார்க்குநல்லார் இங்குக் கூறும் விளக்கங்கள் வலமுறைப் பாலைகளுக்கே யாம் என்பது வலமுறையே ஏழுபாலையும் கண்டுகொள்க. இதனை வலமுறை என்றாம் மேற்கேமுகமாக இருந்து திரிதலான். கிழக்கே நோக்கியிருக்கின் இடமுறையாம் எனக் கொள்க எனவரும் அவர் விளக்கத்தால் உணரலாம். குடதிசை இடமுறை என அடிகளார் கூறியதனால், இங்குக் கிழக்கே முகமாக இருந்து திரியும் இடமுறைப் பாலைகளே கொள்ளவேண்டும். இவற்றின் இயல்புகளை யாம் அரங்கேற்று காதைக்கண்ணும், வேனிற் காதையினும் விளக்கமாகக் கூறியுள்ளாம். அவற்றை ஆண்டுக் காண்க. இங்கே எடுத்துக்காட்டப்பட்ட அடியார்க்குநல்லார் விளக்கத்தால் வலமுறைப் பாலைகளின் இயல்பு நன்குணரப்படும்.

மாயவன் என்றாள் .............. முறை

(இதன்பொருள்.) குரலை மாயவன் என்றாள் - குரல் நரம்பினை மாயவன் என்று கூறினாள்; இளி தன்னை விறல்வெள்ளை ஆயவன் என்றாள் -இளி நரம்பினை வென்றிமிக்க பலதேவன் என்றாள்; ஆய்மகள் பின்னையாம் என்றாள் ஓர்துத்தத்தை - மாதரி துத்த நரம்பினை நப்பின்னை என்று கூறினாள்; மற்றையார் முன்னையாம் என்றாள் முறை - ஏனை நரம்புகள் முன்னை முறைப்படியே ஏனை ஆயமகளிர் ஆவர் என்றாள்; என்க.

(விளக்கம்) முன்னை முறை ஆம் என மாறுக: முன்னை முறையாவது குரலுக்கு ஐந்தாவது இளியும், இளிக்கு ஐந்தாவது, துத்தமும் போல் ஐந்தாவதான முறை, ஆய்மகள் என்னும் எழுவாயை ஏனையவற்றோடும் கூட்டுக.

மாயவன்சீர் ......... விளரிதான்

(இதன்பொருள்.) மாயவன் சீருளார் பிஞ்ஞையும் தாரமும் - மாயவன் என்று கூறப்பட்ட குரல் என்பாளைச் சேரப் பின்னை என்று கூறப்பட்ட துத்தம் என்பாளும் தாரம் என்பாளும் நிரலே இடப்பக்கத்தும் வலப்பக்கத்தும் நின்றனர்; வால் வெள்ளை சீரார் உறையும் விளரியும் - பலதேவன் என்று கூறப்பட்ட இளி என்பாளைச் சேர உழை என்பாளும் விளரி என்பாளும் முறையே வலப்பக்கத்தும் இடப்பக்கத்தும் நின்றனர். கைக்கிளை பிஞ்ஞை யிடத்தாள் - கைக்கிளை என்பாள் பின்னை என்று கூறப்பட்ட துத்தம் என்பாளுக்கு இடப்பக்கத்தே நின்றாள்; நல் விளரிதான் முத்தைக்கு வலத்துளாள் - அழகிய விளரி என்பாள் தாரம் என்பவளுக்கு வலப்பக்கத்தே நின்றாள் என்க.

(விளக்கம்) இவ்வாற்றால் எழுவரும் வட்டமாக நின்றமை அறிக. பிஞ்ஞை என்றது துத்தத்தை. முத்தை முந்தை என்பதன் விகாரம். முந்தை - தாரம். தாரம் ஏழிசைகளுள் முதல் இசை ஆதலின் முந்தை என்றார்; அது முதல்வி என்பதுபட நின்றது.

அவருள் ......... ஆயர் மகள்

(இதன்பொருள்.) அவருள் இவ்வாறு வட்டமாக நிறுத்தப்பட்ட மகளிருள் வைத்து, மாயவன்மேல் வண்துழாய் மாலையை இட்டு - மாயவன் தோளின்மேல் துளபமாலையை அணிந்து; தண்டாக் குரவைதான் உள்படுவாள் - பண்டு வடமதுரைக்கண் கூத்து நூலிற்கு மாறுபடாத குரவைக் கூத்திற்கு உடம்பட்டு அம் மாயவனோடு ஆடுவாள்; கொண்ட சீர் வையம் அளந்தான் - புகழ் கொண்ட உலகளந்த திருமால்; தன் மார்பின் திருநோக்கா - தன்னுடைய திருமார்பின்கண் வீற்றிருக்கின்ற திருமகளை நோக்காமைக்குக் காரணமான பேரழகுடைய; பெய்  வளைக் கையாள் நம்பின்னைதான் ஆம் என்றே - பெய்த வளையலையுடைய கையை யுடையாளாகிய நப்பின்னைப் பிராட்டி ஒருத்தியேயல்லளோ என்று சொல்லி; ஆயர் மகள் ஐ என்றாள் - இடைக்குல முது மகளாகிய மாதரி இறையன்பு மேலீட்டால் பெரிதும் வியந்து நின்றாள்; என்க.

(விளக்கம்) நம்பின்னை - நம்தெய்வமாகிய பின்னைப்பிராட்டி என்க. இனி நப்பின்னை என்பதன் விகாரம் எனினுமாம். ஐ வியப்பாகும் என்பதனால் ஐ என்றாள் என்பது வியந்தாள் என்பதுபட நின்றது. இறைவன்பால் அன்பு மேலீட்டால் மாதரி அங்ஙனம் வியந்தாள் என்க.

கூத்துள் படுதல்

அஃதாவது - குரவைக் கூத்தாடத் தொடங்குதல்

அவர்தாம் .......... பாணி என்றாள்

(இதன்பொருள்.) அவர் தாம் - அங்ஙனம் புனைபெயர் கொண்ட ஆயர் மகளிர்தாம் அப்பொழுதே; செந்நிலை மண்டிலத்தால் கற்கடகக் கைகோஒத்து - சமநிலை வட்டமாக நின்று நண்டுக் கையை ஒருவரோடொருவர் கோத்து நின்று கூத்தாடுதற்கு; அந்நிலையே ஆடல் சீர் ஆய்ந்து உளார் - அங்ஙனம் நின்ற நிலையிலேயே ஆடுதற்கியன்ற தாள உறுப்பை ஆராய்ந்து கொண்டவராக; முன்னைக்குரல் கொடி அவ்வெழுவருள் முன்னின்ற குரல் என்னும் பெயருடைய பூங்கொடிபோல்பவள்; தன் கிளையை நோக்கி - தனது கிளையாகிய துத்தம் என்னும் பின்னைப் பிராட்டியைப் பார்த்து; பரப்பு உற்ற கொல்லைப் புனத்துக் குருந்தொசித்தான் - பரந்துகிடந்த கொல்லையின்கண் வஞ்சத்தாலே வந்துநின்ற குருந்த மரத்தை முறித்த மாயவனை; முல்லைத் தீம்பாணி பாடுதும் என்றாள் - முல்லை என்னும் இனிய பண்ணாலே இனி யாம் பாடிப் பரவுவோம் என்று கூறினள், என்க.

(விளக்கம்) செந்நிலை - செவ்விய நிலை; அதாவது சமநிலை. மண்டிலம் - வட்டம். கற்கடகக் கை - நண்டுருவம்பட விரல்களை மடக்கிய கை; அஃதாவது - நடுவிரலும் அணிவிரலும் முன்னே மடக்கி மற்றை இரண்டு விரலுங் கோத்தல். குருந்து - வஞ்சத்தால் கண்ணனைக் கொல்லக் கொல்லையில் வந்து குருந்தமரமாய் நின்றான் ஓர் அசுரன். முல்லைத்தீம் பாணி; என்றது முல்லைப்பண்ணை.

எனா ........... பாட்டெடுப்பாள்

(இதன்பொருள்.) எனா - என்று கூறிய பின்னர்; பாட்டெடுப்பாள் - முல்லைப்பண்ணைப் பாடத் தொடங்குபவள்; குரல் மந்தமாக இளி சமனாக - குரல் என்னும் நரம்பு மெலிவாகவும், இளி என்னும் நரம்பு சமமாகவும்; வரல் முறையே துத்தம் வலியா - வருகின்ற முறைப்படி துத்தநரம்பு வலிவாகவும்; விளரி உரனிலா மந்தம் பிடிப்பாள் அதற்கைந்தாவதாகிய விளரி நரம்பினை வலியை இல்லாத மெலிவாகப் பிடிக்கின்றவள்; அவள் நட்பின் பின்றையைப் பாட்டெடுப்பாள் - தன் நட்பு நரம்பாகிய துத்தம் என்பவளுக்குப் பற்றுப் பாடுகின்றாள்; என்க.

(விளக்கம்) இதன்கண் முல்லைப்பண்ணுக்கு நரம்பு அணியும் முறை கூறப்பட்டது. அஃதாவது - குரல் மெலிவினும் அதற்கு ஐந்தாவதாகிய இளி சமனிலும் அதற்கு ஐந்தாவதாகிய துத்தம் வலிவினும் நிற்ப, அதற்கு ஐந்தாவதாகிய விளரி மீண்டும் மெலிவில் நிற்பது முல்லைப் பண்ணின் நரப்படைவு என்க. நட்பு விளரிக்கு நட்பு அதற்கு நான்காவதாகிய துத்தம் என்க. பற்று - சுதி.

பாட்டு

அஃதாவது - அவர் பாடுகின்ற பாட்டுகள் வருமாறு என்றவாறு.

1: கன்று ............. தோழீ

(இதன்பொருள்.) தோழீ - தோழியே இனியாம்; கன்று குணிலா கனி உதிர்த்த மாயவன் இன்று நம் ஆனுள் வருமேல் - ஆன் கன்றினைக் குறுந்தடியாகக் கொண்டு விளவினது கனிகளை உதிர்த்தவனாகிய மாயவன் இற்றைநாள் நமக்கு இரங்கி நமது ஆனிரைக்குள் வருவான், அங்ஙனம் வந்தால்; அவன் வாயில்; கொன்றை அம் தீம் குழல் கேளாமோ - அம் மாயவனுடைய திருவாயின்கண் வைத்திசைக்கின்ற கொன்றையங் குழலோசையை யாம் கேட்போமல்லமோ! என்க.

(விளக்கம்) கன்று, மாயவனைக் காலால் எறிந்து கொல்லுதற்கு ஆனிரைக்குள் ஒரு கன்றின் வடிவாக வந்து நின்றான் ஓர் அசுரன். கனி - விளங்கனி. இவ் விளாமரமும் அங்ஙனமே வஞ்சத்தால் வந்து நின்ற அசுரன் என்ப. கேளாமோ என்னும் வினா கேட்போம் என அதன் உடன்பாட்டுப் பொருளை வற்புறுத்து நின்றது. மேல்வருவனவற்றிற்கும் இஃதொக்கும்.

2: பாம்பு ........ தோழீ

(இதன்பொருள்.) தோழீ; பாம்பு கயிறா கடல் கடைந்த மாயவன் - வாசுகி என்னும் பாம்பினையே கடை கயிறாகக் கொண்டு திருப்பாற் கடலைக் கடைந்து தேவர்களுக்கு அமிழ்தம் ஈந்த திருமால் ஈங்கு நம் ஆனுள் வருமேல் - இவ்விடத்தே நமக்கிரங்கி நம்முடைய ஆனிரைக்குள் வருகுவன், அங்ஙனம் வந்தால்; அவன் வாயில் ஆம்பலந் தீங்குழல் கேளாமோ - அவனுடைய திருவாயின்கண் வைத்திசைக்கின்ற ஆம்பற் குழலின் இன்னிசையை யாமும் ஒரு தலையாகக் கேட்பேங்காண்; என்க.

(விளக்கம்) பாம்பு -வாசுகி. கயிறு -கடைகயிறு. கயிறாக என்பதன் ஈறுகெட்டது. கடல் - திருப்பாற்கடல்.

3: கொல்லை ........... தோழீ

(இதன்பொருள்.) தோழீ; கொல்லை அம் சாரல் குருந்தொசித்த மாயவன் - புனமாகிய கொல்லையைச் சார்ந்த இடத்தின்கண் வஞ்சனையால் வந்துநின்ற குருந்த மரத்தினை முறித்தொழித்த கண்ணபெருமான் நம் வழிபாட்டிற்கிரங்கி; எல்லை நம் ஆனுள் வருமேல் - இப் பகற்பொழுதிலே இங்குள்ள நம் ஆனிரையுள் வருகுவன், அங்ஙனம் வந்தால்; அவன் வாயில் முல்லையந் தீங்குழல் கேளாமோ - அவனது திருவாயில் வைத்து ஊதுகின்ற முல்லைக் குழலினது இனிய இசையைக் கேட்பேம் அல்லமோ? என்க.

(விளக்கம்) இம் மூன்று தாழிசையினும் நிரலே கொன்றையந் தீங்குழல், ஆம்பலந் தீங்குழல், முல்லையந் தீங்குழல் எனவரும் குழல்களைப் பற்றி அடியார்க்குநல்லார் வகுத்துள்ள விளக்கவுரையின்கண் கீழ்க்காட்டப்படுவன அறியற்பாலனவாம். அவை வருமாறு:

கொன்றை ஆம்பல் முல்லையென்பன சில கருவி; இனி அவற்றைப் பண்ணென்று கூறுபவெனின், அங்ஙனம் கூறுவாரும் ஆம்பலும் முல்லையுமே பண்ணாதற்குப் பொருந்தக் கூறினல்லது கொன்றையென ஒரு பண் இல்லை ஆதலானும், கலியுள் முல்லைத்திணையின்கண் ஆறாம் பாட்டினுள், கழுவொடு சுடுபடை சுருக்கிய தோற்கண், இமிழிசை மண்டை யுறியொடு தூக்கி, ஒழுகிய கொன்றைத் தீங்குழன் முரற்சியர், வழூஉச் சொற்கோவலர் தந்த மினநிரை, பொழுதொடு தோன்றிய கார்நனை வியன்புலத்தார் (கலி. 106: 1-5) எனக் கருவி கூறினமையானும், அன்றைய பகற்கழிந் தாளின் றிராப்பகற் கன்றின் குரலுங் கறவை மணி கறங்கக், கொன்றைப் பழக்குழற் கோவல ராம்பலும், ஒன்றல் சுரும்பு நரம்பென வார்ப்பவும் என வளையாபதியுள்ளும் கருவி கூறிப் பண் கூறுதலானும், இவை ஒரு பொருண்மேல் முன்றடுக்கி வந்த ஒத்தாழிசை யாதலானும் இரண்டு பண்ணும் ஒன்று கருவியுமாகக் கூறின், செய்யுட்கும் பொருட்கும் வழூஉச் சேறலானும் அங்ஙனம் கூறுதல் அமையாதென்க.

கஞ்சத்தாற் குமுதவடிவாக அணைசுப்பண்ணிச் செறித்தலின் ஆம்பற்குழலாயிற் றெனவும் கொன்றைப் பழத்தைத் துருவித் துளைத்து ஊதலிற் கொன்றைக் குழலாயிற்று எனவும், முல்லைக்கொடியால் முப்புரியாகத் தெற்றிய வளையை வளைவாய்க்கட் செறித்து ஊதலின் முல்லை குழலாயிற் றெனவும் கொள்க என்பர் (அடியார்க்கு நல்லார்.)

இவற்றை ஆம்பன் முதலானவை சில கருவி; ஆம்பல் - பண்ணுமாம். மொழியாம்பல் வாயாம்பல் முத்தாம்பல் என்று சொல்லுவர் பண்ணுக்கு; என்பது அரும்பதவுரை.

நுதலிப் புகுதல்

தொழுனை ....... யாம்

(இதன்பொருள்.) தொழுனைத் துறைவனோடு ஆடிய பின்னை - யமுனைத்துறையையுடைய கண்ணபெருமானுடையவும் அவனோடு விளையாடிய நப்பின்னையினுடையவும் ஆகிய; அணி நிறம் யாம் பாடுகேம் - அழகையும் நிறத்தையும் இனி யாம் பாடுவேமாக, என்க.

(விளக்கம்) தொழுனை - யமுனை. அணியையும் நிறத்தையும் என்க. இக் குறள் வெண்பா இடைச்செருகல் என்பது அரும்பதஉரையாசிரியர் கருத்து. அவர் தொழுனைக் கணவனோடாடிய எனப்பாடங்கொண்டனர்.

1: இறுமென் ........ யாம்

(இதன்பொருள்.) இறும்என் சாயல் நுடங்க நுடங்கி - கண்டோர் இப்பொழுதே முறிந்தொழியும் என்று கூறுதற்குக் காரணமான மெல்லிய இடையானது நுடங்கும்படி அசைகின்றவளுடைய; அறுவை ஒளித்தான் வடிவு என்கோ யாம் - துகிலை மறைத்தவனாகிய கண்ணபெருமானுடைய அழகு என்று சொல்லுவோமா? யாம், அல்லது; அறுவை ஒளித்தான் அயர அயரும் - அங்ஙனம் துகிலை ஒளித்த அக் கண்ணபெருமான் மயங்கும்படி துகிலைக் காணாமல் மயங்குகின்ற; நறு மெல் சாயல் முகம் என்கோ யாம் - நறிய மெல்லிய சாயலையுடையாளது முகத்தின் அழகென்று சொல்லுவோமா? இவற்றுள் எது மிக்கதென யாம் அறிகின்றிலேம், என்க.

(விளக்கம்) மென்சாயல் - மெல்லிய சாயலையுடைய இடை நுடங்க என்க. நுடங்கி: பெயர். அறுவை - துகில். ஒளித்தான் - கண்ணன். என்கோ யாம்: ஒருமைப்பன்மை மயக்கம். மேல்வருவனவற்றிற்கும் இஃதொக்கும். நறுமென் சாயலையுடையாள் என்க.

2: வஞ்சம் .......யாம்

(இதன்பொருள்.) தொழுனை புனலுள் வஞ்சம் செய்தான் - யமுனை யாற்றில் நீராடுங்கால் வஞ்சித்துத் துகிலைக் கவர்ந்த கண்ண பெருமானுடைய; நெஞ்சம் கவர்ந்தாள் நிறை யென்கோ யாம் - உள்ளத்தைக் கவர்ந்து கொண்ட நப்பின்னைப் பிராட்டியாரது அழகென்று சொல்லுவோமா? அல்லது; நெஞ்சம் கவர்ந்தாள் நிறையும் வளையும் வஞ்சம் செய்தான் வடிவு என்கோ யாம்-தனது நெஞ்சங் கவர்ந்த அந் நப்பின்னையினது நெஞ்சத்துநிறையையும் கைவளையலையும் ஒருசேரக் கவர்ந்துகொண்ட கண்ண பெருமானுடைய அழகு என்று சொல்லுவோமா? இவற்றுள் எது மிக்கது என்று அறிகின்றிலேம்! யாம் என்க.

(விளக்கம்) வஞ்சஞ் செய்தான் - கண்ணன். நெஞ்சங் கவர்ந்தாள் நப்பின்னை. நிறையும் வளையும் வஞ்சஞ் செய்தான் என்க. நிறையுள் முன்னது, அழகு; பின்னது திண்மை.

3: தையல் .......... என்கோயாம்

(இதன்பொருள்.) கலையும் விளையும் இழந்தே - தனது துகிலையும் வளையலையும் இழந்தமையால்; கையில் ஒளித்தாள் தையல் முகம் என்கோ யாம் - நாணத்தால் தனது கையால் பொத்திக் கொள்ளப்பட்ட நப்பின்னையினது முகம் என்று சொல்லுவோமா? யாம் அல்லது; கையில் ஒளித்தாள் முகம் கண்டு - நாணத்தால் தனது கையால் முகத்தைப் பொத்திக் கொண்டவளுடைய அந்த முகத்தைக் கண்டு; அழுங்கி - இரங்கி; மையல் உழந்தான் -காமத்தால் மயங்கி அல்லலுற்ற அக்கண்ணபெருமானுடைய; வடிவு என்கோ யாம் - உருவம் என்று சொல்வோமா? யாம், இவற்றுள் அழகான் மிக்கது யாதென்றறிகிலேம், என்க.

(விளக்கம்) கையில் ஒளித்தாளாகிய தையல் என்க. கலை -துகில். கவர்ந்தமையால், கலையையும், காமமிகுதியால் வளையலையும் இழந்து நாணத்தால் முகத்தைக் கையால் ஒளித்தாள்என்க. முகம் மறைத்தமை பொறாது அழுங்கி மையல் உழந்தான் எனினுமாம்.

ஒன்றன் பகுதி

அஃதாவது - ஒற்றைத் தாளத்தின் கூறு என்றவாறு.

1: கதிர்திகிரி .......... நரம்புளர்வார்

(இதன்பொருள்.) கதிர் திகிரியால் மறைத்த கடல் வண்ணன் இடத்து உளாள் - ஞாயிற்று மண்டிலத்தைத் தனது ஆழியினாலே மறைத்த கடல் போலும் நீலநிறத்தையுடைய கண்ணபெருமானுடைய இடப்பக்கத்தே உள்ளவளும்; மதிபுரையும் நறுமேனித் தம்முனோன் வலத்துஉளாள் -திங்கள் மண்டிலத்தை ஒத்த நறிய வெள்ளை நிறத்தையுடைய அவன் தமையனாகிய பலதேவனுக்கு வலப்பக்கத்தே உள்ளவளும்; பொதி அவிழ் மலர்க்கூந்தல் - கட்டவிழ்ந்து மலர்கின்ற மாலையை அணிந்த கூந்தலையுடையவளும் ஆகிய; பிஞ்ஞை சீர்புறங்காப்பார் -நப்பின்னையினது தாள ஒற்றறுப்பைப் புறங்காக்கின்றவர்; முது மறைதேர் முந்தைமுறை உளர்வார் நாரதனார் - பழைய மறையினது பொருளை ஆராய்ந்துணர்ந்தவரும் குரல் நரம்பை முறையாக உருவி வாசிப்பவருமாகிய நாரதனார் ஆவர் என்பர் என்க.

(விளக்கம்) கண்ணன் கதிரைத் திகிரியால் மறைத்த செய்தியை மகாபாரதத்தில் காண்க. தம்முனோன் -தமையனாகிய பலதேவன். பிஞ்ஞை - நப்பின்னை. சீர் -தாள ஒற்றறுப்பு: முதுமறை - மறையின் உறுப்பாகிய சிக்கை என்பர் (அடியார்க்குநல்லார்). முதல் நரம்பு தார நரம்புமாம்.

2: மயிலெருத்து ................. நரம்புளர்வார்

(இதன்பொருள்.) மயில் எருத்து உறழ் மேனி மாயவன் வலத்துளாள் - மயிலினது புறக்கழுத்துப்போன்ற திருமேனியையுடைய கண்ணபெருமானின் வலப்பக்கத்தே உள்ளவளும்; பயில் இதழ் மலர் மேனித் தம்முனோன் இடத்துளாள் - மிகுந்த இதழ்களையுடைய மல்லிகை மலர் போன்ற வெண்ணிறத்தையுடைய அவன் தமையனாகிய பலதேவனுடைய இடப்பக்கத்தேயுள்ளவளும்; கயில் எருத்தம் கோட்டிய நம்பின்னை சீர்புறங்காப்பார் - புறக்கழுத்தாகிய பிடரை வளைத்துநின்ற நப்பின்னைப் பிராட்டியாரது தாளவறுதியைப் புறங்காக்கின்றவர்; குயிலுவருள் கொளைபுணர்சீர் நரம்பு உளர்வார் நாரதனார் - குயிலுவருள் வைத்துச் சிறந்தவராகியவரும், பண்ணோடு கூடிய தாளத்திற்கேற்பத் தமது யாழ்நரம்பினை உருவி வாசிப்பவருமாகிய நாரதனார் என்க.

(விளக்கம்) முன்னர்க் கடல்வண்ணன் இடத்துளான் தம்முனோன் வலத்துளாள் என ஓதி, இதன்கண் மாயவன் வலத்துளாள் தம்முனோன் இடத்துளாள் என மாறுபட ஓதுதல் உணர்க. இஃது என் சொல்லியவாறோவெனின் முன்பு கற்கடகக்கை கோத்து நிற்கும் மகளிரெல்லாம் உட்புறம் நோக்கி நின்று வட்டமாக ஆடினர். அங்ஙனம் ஆடுங்கால் குரல் என்னும் பெயருடையாளுக்கு இடப்பக்கத்தே பின்னையாகிய துத்தம் நிற்றலும் இளியாகிய பலதேவனுக்கு அவள்தான் வலப்பக்கத்தே நிற்றலும் உணர்க. மீண்டும் அம்மகளிர் எழுவரும் கோத்த கைவிடாமல் மாறி வெளிப்புறமாக நோக்கி நின்றாடினர். அங்ஙனம் ஆடுங்கால் துத்தம் குரலுக்கு வலப்பக்கத்திலும், இளிக்கு இடத்திலுமாக மாறி நிற்பாராதல் கூர்ந்துணர்க. இங்ஙனம் மாறி ஆடுதலைக் கூறாமலே கூறியவாறாம் என்க. இவ்வாற்றால் அடிகளார் வட்டப்பாலையின் வலமுறை இடமுறை இரண்டனையும் இக் குரவையுட் காட்டினர் என்க. பயில் இதழ் - மிக்க இதழ். மலர் - மல்லிகைமலர்; முல்லை எனினுமாம். கயில் -பிடர். குயிலுவர் - இசைக்கருவி வாசிப்பவர். குயிலுவருள் சிறந்த நாரதனர் என்க. கொளை ஒற்றறுப்பு என்பர் (அடியார்க்குநல்லார்.)

ஆடுநர்ப் புகழ்தல்

அஃதாவது - குரவைக் கூத்தைக் கண்டு இறையன்பு மீக்கூரப் பெற்ற இடைக்குல மடந்தை மாதரி கூத்தாடிய மகளிரைப் புகழ்ந்து பாராட்டியது என்றவாறு.

மாயவன்றம் ...... தகவுடைத்தே

(இதன்பொருள்.) மாயவன் தம் முன்னினொடும் வரிவளைக்கைப் பின்னையொடும் - கண்ணபெருமான் தமையனாகிய பலதேவனோடும் ஓவியம் பொறித்த வளையலை அணிந்த கையினையுடைய நப்பின்னைப் பிராட்டியோடும்; கோவலர் தம் சிறுமியர்கள் குழல் கோதை புறம் சோர -ஆயர் குலத்திற்பிறந்த இளமகளிர்கள் கூந்தலும் மலர் மாலையும் கட்டவிழ்ந்து புறத்தே வீழும்படி; ஆய்வளைச் சீர்க்கு ஆராய்ந்தணிந்த வளையல்களின் ஒலியாகிய தாளத்திற்கு ஒக்க; அடிபெயர்த்திட்டு - தம் திருவடிகளைப் பெயர்த்து மிதித்து; அசோதையார் தொழுது ஏத்த - அசோதைப் பிராட்டியார் அக்காட்சியைக் கடவுட் காட்சியாகக் கண்டு தம்மை மறந்து கைகளைத் தலைமேற் கூப்பித் தொழுது புகழும்படி; தாது எருமன்றத்து ஆடும் - பண்டு துவாரகையில் பூந்தாதுகளாகிய எருவையுடைய மன்றத்தின்கண் ஆடியருளிய; குரவை - குரவைக் கூத்தேயாம் இப்பொழுது நீங்கள் ஆடுகின்ற இக்கூத்து; ஓ தகவு உடைத்து - ஓ! ஓ!! ஓ!!! பெரிதும் இது பெருமை உடையது காண்மின்! என்றாள்; என்க.

(விளக்கம்) மாயவன் தம்முன்னினோடும் வரிவளைக்கைப் பின்னையொடும் குரவைக் கூத்தாடிய இச்செய்தியை,

மாமணி வண்ணனுந் தம்முனும் பிஞ்ஞையும்
ஆடிய குரவையிஃ தாமென நோக்கியும்  - மணி, 19 : 65-6.

எனவரும் மணிமேகலையினும் காண்க.

எல்லாநாம் ............ உற்று

(இதன்பொருள்.) நாம் எல்லாம் - தோழியே! இனி நாமெல்லாம்; உள்வரிப் பாணி ஒன்று உற்று - இக் குரவைக் கூத்தினுள் உள்வரியாகிய ஒரு பாட்டினால்; புள்ளூர் கடவுளைப் போற்றுதும் போற்றுதும் - கருடப் பறவையை ஊர்ந்து வருகின்ற செங்கண் நெடுமாலாகிய நமது கடவுளைப் பாடிப் பரவுவோம்! பாடிப் பரவுவோம்! என்றாள்; என்க.

(விளக்கம்) நாம் எல்லாம் என மாறுக; இனி, சொற்கிடந்தவாறே தோழி நாம் எனினுமாம். (எல்லா -தோழி) புள் - கருடப் பறவை. கடவுள் - திருமால். உள்வரிப்பாணி - பிறராகக் கோலம் புனைந்தாடுபவனாக இறைவனைப் பாடுகின்ற ஒருவகைப் பண்.

உள்வரி வாழ்த்து

அஃதாவது - கண்ணபெருமானே பாண்டியனும் சோழனும் சேரனுமாக உள்வரிக் கோலம்பூண்டு வந்து தமிழகத்தைச் செங்கோன்மை செலுத்தி மன்னுயிரை வாழ்வித்தான் என்பதுபட வாழ்த்தியது என்றவாறு. ஈண்டுத் திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேனே என்னும் எனவரும் ஆழ்வார் திருவாய் மொழியும் (34 ஆம் திருப்பதிகம் 8.) நினையத்தகும்.

1: கோவா ........... என்பரால்

(இதன்பொருள்.) கோவா மலையாரம் கோத்த கடலாரம் தேவர் கோன்பூணாரம் தென்னர்கோன மார்பினவே - கோக்கப்படாத பொதியின்மலை ஆரமாகிய சந்தனமும், கோக்கப்பட்ட கடல் ஆரமாகிய முத்துமாலையும் தேவேந்திரன் பகைத்து இட்ட பேரணிகலனாகிய மணிஆரமும் செந்தமிழ் நாட்டினுள் தென்னாட்டை ஆளுகின்ற பாண்டிய மன்னனுடைய மார்பிடத்தே கிடந்து திகழ்வனவாம்; தேவர்கோன் பூணாரம் பூண்டான் - தேவேந்திரனுடைய பூணார முதலிய முவ்வகை ஆரங்களையும் பூண்டு திகழும் அப் பாண்டிய மன்னன்றான் யாவனோ எனின்; செழுந்துவரை கோகுலம் மேய்த்து குருந்து ஒசித்தான் என்பரால் - வளமுடைய துவாரகையின்கண் ஆனிரைகளை மேய்த்துக் குருந்த மரத்தை முறித்தொழித்த கண்ணபெருமானே என்று முழுதுணர்ந்தோர் கூறுவர்; என்க.

(விளக்கம்) கோவா ஆரம் கோத்த கடலாரம் இரண்டும் வெளிப்படை. முன்னது சந்தனம்; பின்னது முத்து.

ஈண்டுத் தன் கடற்பிறந்த முத்தினாரமு, முனைதிறை கொடுக்குந் துப்பிற் றன்மலைத், தெறலரு மரபிற் கடவுட் பேணிக், குறவர் தந்த சந்தினாரமும் இருபே ராரமு மெழில்பெற வணியும், திருவீழ் மார்பிற் றென்னவன் எனவும் (அகநா. 13: 1-6) திண்கா ழார நீவிக் கதிர்விடும், ஒண்கா ழாரங் கவைஇய மார்பு எனவும் (மதுரைக். 715-6) பிறசான்றோர் ஓதுதலும் உணர்க. முத்து - கொற்கை முத்து. தேவர்கோன் பூணாரம் தென்னர்கோன் பூண்டமையைத் திருவிளையாடற் புராணத்தே காண்க.

2: பொன்னிமய ............... என்பரால்

(இதன்பொருள்.) பொன் இமயக் கோட்டுப் புலிபொறித்து மண் ஆண்டான் - பொன்னாகிய இமய மலையின் கொடுமுடியிலே தனது புலிப்பொறியைத் தனது வெற்றிக்கு அறிகுறியாகப் பொறித்து இந்நிலவுலகத்தை ஆட்சிசெய்தான்; மதில் புகார் வாழ்வேந்தன் மன்னன் வளவன் - மதில் சூழ்ந்த பூம்புகார் நகரின்கண் செங்கோன்மை செலுத்தி வாழ்கின்ற வேந்தனாகிய மன்னர் மன்னன் ஆகிய சோழன்; மதிற்புகார் வாழ்வேந்தன் மன்னன் வளவன் - அத்தகைய வெற்றியுடைய அச்சோழ மன்னன் யாவனோ வெனின்; பொன் அம் திகிரிப் பொருபடையான் என்பரால் - பொன்னாலியன்ற ஆழியாகிய போர்ப்படையையுடைய கண்ணபெருமானே என்று கூறுவர்; என்க.

(விளக்கம்) வளவன் - சோழன். புகார் காவிரிப்பூம்பட்டினம். திகிரிப்படையான் - கண்ணன்.

3: முந்நீரினுள் ............... என்பரால்

(இதன்பொருள்.) முந்நீரினுள் புக்கு மூவாக் கடம்பு எறிந்தான் கடலினுட் சென்று அங்கு மூவாமையையுடைய கடம்பினை வெட்டியவன்; வளவஞ்சி வாழ்வேந்தன் மன்னர் கோச்சேரன் - வளங்கெழுமிய வஞ்சிநகரத்திருந்து செங்கோண்மை செலுத்தி வாழ்கின்ற வேந்தனாகிய மன்னர்மன்னன் சேரன் என்பர்; வளவஞ்சி வாழ்வேந்தன் மன்னர் கோச்சேரன் -அச் சேரன்றான் யாவனோ? வெனின்; கல்நவில தோள் ஓச்சிக் கடல் கடைந்தான் என்பரால் - மலையை யொத்த தன் தோள்களைச் செலுத்தித் திருப்பாற்கடலைக் கடைந்த செங்கண் நெடுமால் என்றே சிறந்தோர் கூறுவர் என்க.

(விளக்கம்) முந்நீர் - மூன்று தன்மையையுடைய கடல். நீர் - நீர்மை. அத்தன்மையாவன உலகத்தைப் படைத்தலும், காத்தலும், அழித்தலும் ஆகிய மூன்றுமாம். வஞ்சி - சேரன் தலைநகரம். கடல் கடைந்தான்: திருமால் இவை மூன்றும் பூவைநிலை என்னும் ஒரு புறத்திணைத்துறை. இங்கு அடிகளார் இந்நிகழ்ச்சி பாண்டியனாட்டின் கண்ணதாதலால் பாண்டியனை முற்படக் கூறினர்.

முன்னிலைப் பரவல்

அஃதாவது - இறைவனை முன்னிலையாக வைத்து வாழ்த்துவது.

1: வடவரையை ........... மருட்கைத்தே

(இதன்பொருள்.) கடல்வண்ணன் - கடல்போன்ற நீலநிறமுடைய எம்மிறைவனே நீ; வடவரையை மத்து ஆக்கி வாசுகியை நாண் ஆக்கி பண்டு ஒருநாள் கடல்வயிறு கலக்கினையே - வடக்கின் கண்ணதாகிய மந்தரம் என்னும் ஒருமலையை மத்தாகக் கொண்டு வாசுகி என்னும் பெரும் பாம்பினை அம் மத்தினைச் சுற்றி வலிக்கும் கயிறாகக்கொண்டு முன் ஒருகாலத்தில் திருப்பாற் கடலைக் கடைந்தருளினை என்கின்றனர்; மலர்க் கமல உந்தியாய்-நான்முகனை ஈன்ற தாமரை மலரையுடைய திருக்கொப்பூழினை உடைய எம்பெருமானே நீ அவ்வாறு; கலக்கிய கை -கடல் வயிறு கலக்குதற்குக் காரணமான அத்தகைய நினது பெரிய கைகள் தாமே; யசோதையார் கடைகயிற்றால் கட்டுஉண் கை - யசோதையார் என்னும் இடைக்குல மடந்தையின் தயிர் கடையும் சிறிய கயிற்றினாலே கட்டுண்டிருந்த கை என்றும் கூறுப; மாயமோ - இஃது என்ன மாயமோ? மருட்கைத்து - இச்செய்தி எமக்குப் பெரிதும் வியப்புடைத்தாய் உளது; என்க.

(விளக்கம்) வடவரை ஈண்டு மந்தரம் என்னும் மலை. மத்து - தயிர் கடை கருவி. வாசுகி - நிலந்தாங்கும் நீள் அரவின் தம்பியாகிய ஓர் அரவு. நாண் - கடைகயிறு. கடல்வண்ணன்: அண்மைவிளி. கட்டுண்கை - கட்டுப்படுதல் எனினுமாம். மருட்கை - வியப்பு.

2: அறுபொருள் ............... மருட்கைத்தே

(இதன்பொருள்.) வண் துழாய் மாலையாய் - வளவிய துளப மாலையை அணிந்த திருமாலே நின்னை; அறுபொருள் இவன் என்றே அமரர் கணந் தொழுது ஏத்த - பொருளாகக் கண்ட பொருள் அனைத்திற்கும் முதற்பொருள் இத்திருமாலே யாவான் என ஐயமறத் தெளிந்து அமரர்கள் கூட்டமெல்லாம் கைகூப்பித் தொழா நிற்ப; உறுபசி ஒன்று இன்றியே - மிக்க பசிப்பிணி ஒரு சிறிதும் இல்லாமலேயே; உலகு அடைய உண்டனையே - உலகம் முழுவதும் உண்டாய் அல்லையோ; உண்ட வாய் களவினால் உறிவெண்ணெய் உண்ட வாய் - அங்ஙனம் உலகடைய உண்ட அம் மாபெருந் திருவாய்தானோ! எளிய ஆய்ச்சியர் மனையின்கண் களவுசெய்து அவர்தம் உறியின்கண் வைத்த வெண்ணெயையும் உண்ட வாய் என்று அறிஞர் கூறுவது; மாயமோ - என்ன மாயமோ அறிகிலேம்; மருட்கைத்து- இச்செயல் எமக்குப் பெரிதும் வியப்புடைத்தாய் இருந்தது; என்க.

(விளக்கம்) அறுபொருள் - முடிந்த பொருள் எனினுமாம். உண்ணற்கு இன்றியமையாத உறுபசி சிறிதும் இல்லாமலே உண்ணவியலாத பேருலகத்தை முழுவதுமே உண்டாய் என்கின்றனர். அத்தகைய பெருவாயனாகிய நீ ஆற்றவும் சிறிய வெண்ணெயையும் உண்டதெங்ஙனம் என்றவாறு.

3: திரண்டமரர் ......... மருட்கைத்தே

(இதன்பொருள்.) அமரர் திரண்டு தொழுது ஏத்தும் திருமால் - இறவாமையுடைய தேவரெல்லாம் ஒருங்கு குழுமிக் கைகுவித்து வணங்கி வாழ்த்துகின்ற திருமாலே; நின் செங்கமல இரண்டு அடியால் மூவுலகும் இருள்தீர நடந்தனையே - நின்னுடைய செந்தாமரை மலர்போன்ற இரண்டு திருவடிகளாலே மூன்று உலகங்களும் மயக்கந் தீரும்படி எஞ்சாமல் அளந்தனை யல்லையோ; நடந்த அடி - அவ்வாறு அளந்த அம் மாபெருந் திருவடிகள் தாமே; பஞ்சவர்க்குத் தூதாக நடந்த அடி - பின்பொரு காலத்தே பாண்டவருக்குத் தூது செல்லும்பொருட்டு எண்ணிறந்த முறை பெயர்த்திட்டு நடந்து வருந்திய அடிகள் என்பர்; மடங்கலாய் மாறு அட்டாய் - நரசிங்கமாகித் தூணினின்றும் புறப்பட்டுப் பகைவனாகிய இரணியனைக் கொன்றொழித்த இறைவனே! மாயமோ - என்ன மாயமோ; மருட்கைத்து - இச் செய்திதானும் எமக்குப் பெரிதும் வியப்புடையதாய் இருக்கின்றது; என்க.

(விளக்கம்) திருமால்: அண்மைவிளி. செங்கமல அடி, இரண்டடி, எனத் தனித்தனி கூட்டுக. இரண்டடியால் மூவுலகும் நடந்தனை என்பதன்கண் முரணணி தோன்றிச் செய்யுளின்பம் மிகுதலுணர்க. இருள் - மயக்கம். அஃதாவது  -நீயே முழுமுதல் என்பதனை அறியாத மயக்கம் என்றவாறு. நடந்தனை என்பது அளந்தனை என்பதுபட நின்றது. மூவுலகு - மேலும் கீழும் நடுவுமாகிய உலகங்கள். முன்றுலகையும் எஞ்சாது இரண்டே அடியால் அளந்த நீ மிகவும் சிறிய ஓரூரின்கண் பல்லாயிரம் முறை அவ்வடிகளைப் பெயர்த்திட்டு நடப்பது எங்ஙனம்! என்று வியந்தவாறு. மடங்கல் - சிங்கம்; ஈண்டு நரசிங்கம். மாறு - பகை; இரணியன் என்க.

படர்க்கைப் பரவல்

அஃதாவது இறைவனைப் படர்க்கையிடத்து வைத்து வாழ்த்துதல்.

1: மூவுலகு ............. செவியே

(இதன்பொருள்.) ஈரடியால் மூவுலகும் முறை நிரம்பாவகை முடியத் தாவிய சேவடி சேப்ப - மாவலி கூறியபடி நீ நிலத்தை அளக்குங்கால், நின்னுடைய இரண்டு அடிக்கும் முறையாக நிரம்பாதவண்ணம் மூன்றுலகங்களும் முடிந்து போம்படி பண்டு அளந்தருளிய நினது இயற்கையிலேயே சிவந்த திருவடிகள் பரல் உறுத்துதலாலே கொப்புளங் கொண்டு குருதியால் சிவக்கும்படி; தம்பியொடும் கான்போந்து - நின் தம்பியாகிய இலக்குவனோடும் ஈரேழாண்டுகள் காட்டகத்தினூடே திரிந்து; சோ அரணும் போர்மடிய - சோ என்னும் மதிலரணும் அதன் கண் உள்ள அரக்கரினமும் போர்க்களத்திலே அழிந்தொழியும்படி; தொல் இலங்கை கட்டு அழித்த சேவகன் - பழையதாகிய இலங்கையினது காவலை அழித்தொழித்தமையால், தம் அன்பருக்குத் தொண்டு செய்தவனாகிய இராமனுடைய; சீர் கேளாத செவி - புகழினைக் கேட்டிலாத செவிதானும்; என்ன செவியே- ஒரு செவியாகுமோ; திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே - அந்தத் திருமாலாகிய இறைவனுடைய திருப்புகழையும் கேட்டிலாத செவியும் ஒரு செவியாகுமோ; என்க.

(விளக்கம்) முறை - மாவலி வழங்கிய மூன்றடி நிலத்தையும் முழுமையாகக் கொள்கையாம். அந்த முறை நிரம்பாமல் இறைவன், அளக்குங்கால் இரண்டடிகளுக்கும் உலக முழுதுமே போதாதபடி அளந்த அடிகள் என்பார், முறை நிரம்பாவகை தாவிய சேவடி என்றார். சேவடி - இயல்பாகவே செந்தாமரை மலர்போலச் சிவந்த திருவடி என்க. சேப்ப - சிவப்ப. அஃதாவது நடந்து திரிதலால் கற்கள் உறுத்தப்பட்டுக் கொப்புளங்கொண்டு சிவக்கும்படி என்றவாறு. சோ - அம் மதிலின் பெயர். மடிய என்றது அரணும் அதனகத்தாரும் ஒருசேர அழிந்தொழிய என்றவாறு. சேவகன் - தொண்டன். இறைவன் இராமனாக நிலவுலகத்தே தோன்றிக் கான் போந்ததும் இலங்கை கட்டழித்ததும் எல்லாம் தன் அன்பராயினார்க்குச் செய்த தொண்டுகளே என்பது தோன்றச் சேவகன் என்றார். மீண்டும் அச்சேவகனுக்கு முதலாயுள்ள இறைவன் புகழும் ஒருதலையாகக் கேட்கப்படவேண்டும் என்பது தோன்ற, திருமால்சீர் கேளாச்செவி என்றார். என்ன செவி என்னும் வினா அத்தகைய செவி பயன்படாச் செவியே ஆகும் என்னும் கருத்தை வற்புறுத்தி நின்றது.

2: பெரியவனை ................ கண்ணே

(இதன்பொருள்.) பெரியவனை மாயவனைப் பேருலகம் எல்லாம் விரி கமல உந்தி உடை விண்ணவனை - கடவுளருள் வைத்து முழுமுதலாகிய பெரிய கடவுளாயவனை, நம்மனோர் சிறிதும் அறியவொண்ணாத மாயங்கள் பலவும் செய்யவல்லவனை, ஐம்பெரும் பூதங்களின் கூட்டங்களும் உயிரினங்களும் ஆகிய பெரிய உலகங்கள் எல்லாம் தோன்றி விரிதற்குக் காரணமான பொற்றாமரை பூத்த திருவுந்தித் தடத்தையுடைய விண்ணவனை; கண்ணும் திருவடியும் கையும் திருவாயும் செய்ய -தனது திருஉருவத்தின்கண் திருக்கண்களும் திருவடிகளும் திருக்கைத்தலங்களும் திருவாயும் சிவந்தனவாக ஏனைய உறுப்பெல்லாம்; கரியவனை - கரிய நிறமுடையவனாகிய நம் இறைவனுடைய திருஉருவத்தை; காணாத கண் என்ன கண்ணே - காணப்பெறாத கண்கள் என்ன கண்களோ; கண்ணிமைத்துக் காண்பார் தம் கண்ணென்ன கண்ணே - அவ்வாறு காணுமிடத்தும் ஆர்வமிகுதியால் கண்ணிமையால் காண்டலின்றிக் கண்களை இடை இடையே இமைத்துக் காண்பார் தம் கண்கள் தாம் என்ன கண்களோ; என்க.

(விளக்கம்) இப் பாட்டிலும் அடியும் கையும் செய்ய கரியவன் எனவரும் செய்யுளின்பமுணர்க. கண் பெற்றதனால் பெறும்பயன் அவன் திருவுருவம் காண்டல் மட்டுமே ஆதலான், அதுகாணப்பெறாத கண் கண்ணாக மாட்டா என்பது கருத்து.

3: மடந்தாழும் ............ நாவே

(இதன்பொருள்.) மடம் தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம் கடந்தானை - அறியாமை தங்கியிருத்தற்கு உறையுளாகிய நெஞ்சத்தையுடைய கஞ்சன் தன்னைக் கொல்லுதற்குச் செய்த பல்வேறு வஞ்சச் செயல்களுக்கும் தப்பி அவனைக் கொன்று வென்றவனும்; நாலதிசையும் போற்ற ஆரணம் படர்ந்து முழங்க - நான்கு திசைகளினும் முனிவர்களும் தேவர்களும் கண்டெய்துதற்கு வழிபாடு செய்யா நிற்பவும் மறைகள் தொடர்ந்து காண்டற்கு முயன்று மாட்டாமையால் முழங்கவும் காண்டற்கரியனாயிருந்தும்; பஞ்சவர்க்கு - தன்பால் அன்பு பூண்டொழுகிய பாண்டவர்க்கு எளியனாகி, அவர் பொருட்டு; நூற்றுவர்பால் - துரியோதனனை உள்ளிட்ட கவுரவரிடத்து; தூது நடந்தானை - தூதுவனாக நிலம்வேண்டி நடந்தருளியவனும் ஆகிய அக் கண்ணபெருமானை; ஏத்தாத நா என்ன நாவே - புகழாத நாக்குத்தான் நாக்கென்னப்படுமோ; நாராயணா என்னா நா என்ன நாவே - அவனுக்குரிய மறை மொழியாகிய நாராயணாயநம வென்னும் திருப்பெயரை இடையறாது கூறாத நாக்குத்தான் என்ன நாக்கோ; என்க.

(விளக்கம்) ஈண்டு, கோளில் பொறியிற் குணமிலவே யெண் குணத்தான், றாளை வணங்காத் தலை எனவரும் திருக்குறளை (9) யும் நோக்குக. மடம் - அறியாமை. கஞ்சன் என்பது செறலின்கண் பால் மயங்கிற்று. என்ன நா என்பது தனக்குரிய பயனைப்பெறாத வறிய நாவே ஆகும். சிறந்த நா ஆக மாட்டா என்பதுபட நின்றது.

குரவைக் கூத்தை முடித்தல்

என்றியாம் ........... முரசே

(இதன்பொருள்.) என்று யாம் கோத்த குரவையின் - என்று கூறி யாம் கைகோத்து ஆடிய இக் குரவைக் கூத்தின் வாயிலாக; ஏத்திய தெய்வம் - நம்மால் வாழ்த்தப்பட்ட நங் குலதெய்வமாகிய கண்ணபெருமான்; நம் ஆழ்த்தலைப்பட்ட துயர்தீர்க்க - நம்முடைய ஆனினங்களிடத்தே காணப்பட்ட இத்தீநிமித்தங்களால் எய்தும் துன்பத்தைத் தீர்த் தருளுக; கொற்றத்து இடிப்படை வானவன் முடித்தலை உடைத்த தொடித்தோள் தென்னவன் - இந்நிலவுலகத்துப் பகைவரை வென்று பெற்ற கொற்றத்தினோடே இடியாகிய படைக்கலத்தையுடைய வானவர் தலைவனாகிய இந்திரனுடைய தலையிலணிந்த முடியையும் உடைத்தமையால் உண்டான கொற்றத்தையும், தொடியையும் உடைய தோளையுடைய நம்மன்னனாகிய பாண்டியனது, கடிப்பு இகு முரசு - குணிலால் அறையப்படுகின்ற வெற்றி முரசமானது; வேத்தர் மருள - இந்நிலவுலகத்து மனன்ரெல்லாம் வியக்கும்படி; வைகல் வைகல் மாறு அட்டு வெற்றி விளைப்பது மன்னோ - நாள்தோறும் நாள்தோறும் பகைவரை வென்று வெற்றியை விளைப்பதாக என்று வாழ்த்தினார் என்க.

(விளக்கம்) கைகோத்த குரவை என்க. இதனை மாதரி கூற்றாகக் கொள்க. ஆத்தலைப்பட்ட தீநிமித்தத்தால் வரும் துயர் என்க. வேத்தர்: தொடையின்பங் கருதி வலிந்தது. மாறு -பகை. மன், ஓ: அசைகள். கொற்றத்தை வானவனுக் கேற்றினுமாம். முடித்தலை என்றாரேனும் தலைமுடி என மாறுக. பாண்டியன் வானவன் முடித்தலை உடைத்த செய்தியைத் திருவிளையாடற் புராணத்தே காண்க. வானவன் - இந்திரன். தொடி - வாகுவலையம். கடிப்பு -குணில். முரசு - வெற்றிமுரசு. முரசம் வெற்றியைச் சாற்றுவதனால் அதன் தொழிலாக முரசு வெற்றி விளைப்பது என்றார். விளைப்பது - ஈண்டு விளைப்பதாக என வியங்கோள் பொருட்டாக நின்றது. கோவலன் கொலையுண்ட அற்றைநாளிலே தான் இக்குரவைக் கூத்தும் நிகழ்ந்தது என்று கொள்க. அரும்பதவுரையாசிரியரும், காலைவாய்த் தழுவினாள் மாலைவாய்க் கண்டாள் என்கையால் குரவையாடியது கோவலனார் கொலையுண்ட அன்றே யென்க என்பர்.

பா - இது கூத்தநூல் இலக்கணம் பற்றி உரைப்பாட்டும் குரவைச் செய்யுளும் விரவி வந்த கொச்சக ஒருபோகு.

ஆய்ச்சியர் குரவை முற்றிற்று.

 
மேலும் சிலப்பதிகாரம் »
temple news
தமிழில் முதலில் தோன்றிய காப்பியம் சிலப்பதிகாரம் ஆகும். சிலப்பதிகாரத்தை இயற்றியவர் சேரன் ... மேலும்
 
temple news
1. மங்கல வாழ்த்துப் பாடல் (சிந்தியல் வெண்பாக்கள்) திங்களைப் போற்றுதும் திங்களைப் ... மேலும்
 
(நிலைமண்டில ஆசிரியப்பா) உரைசால் சிறப்பின் அரைசுவிழை திருவின்பரதர் மலிந்த பயம்கெழு மாநகர்முழங்குகடல் ... மேலும்
 
(நிலைமண்டில ஆசிரியப்பா) அஃதாவது - கண்ணகியும் கோவலனும் இல்லறம் நிகழ்த்தி வருங்காலத்தே புகார் நகரத்தே ... மேலும்
 
(நிலைமண்டில ஆசிரியப்பா) அஃதாவது - கோவலன் மாமலர் நெடுங்கண் மாதவிக்கு அவள் பரிசிலாகப் பெற்ற மாலைக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar