பதிவு செய்த நாள்
27
மார்
2012
04:03
சென்ற அத்தியாயத்தில் பிராண சக்தியின் மகிமைபற்றி கண்டோம். இங்கே அதன் செயல் பாடுகளைப்பற்றி காண்கிறோம்.
பிராணன் எவ்வாறு செயல்படுகிறது? 1-2
1. அத ஹைனம் கௌஸல்யச்சாச்வலாயன பப்ரச்ச
பகவன் குத ஏஷ ப்ராணோ ஜாயதே கதமாயாத்யஸ்மின் சரீரே?
ஆத்மானம் வா ப்ரவிபஜ்ய கதம் ப்ராதிஷ்ட்டதே? கேனோத்க்ரமதே?
கதம் பாஹ்யமபிதத்தே? கதமத்யாத்மமிதி
அத ச ஹ-பிறகு; ஆச்வலாயன-அச்வலரின் மகனான; கௌஸல்ய-கௌசல்யன்; பப்ரச்ச-கேட்டார்; பகவன்-தெய்வ முனிவரே; ஏஷ-இந்த; ப்ராண-பிராணன்; குத-எங்கிருந்து; ஜாயதே-பிறந்தது; கதம்-எப்படி; அஸ்மின்-இந்த; சரீரே-உடம்பில்; ஆயாதி-வருகிறது; ஆத்மானம்-தன்னை; ப்ரவிபஜ்ய-பகுத்துக்கொண்டு; கதம் வா-எப்படி; ப்ராதிஷ்ட்டதே-நிலைபெறுகிறது; கேன-எதனால்; உத்க்ரமதே-வெளியேறுகிறது. கதம்-எப்படி; பாஹ்யம்-புறவுலகை; அபிதத்தே-தாங்குகிறது; கதம்-எப்படி; அதயாத்மம்-அகவுலகை; இதி-என்று.
பொருள் : பிறகு அச்வலரின் மகனான கௌசல்யன் பிப்பலாத முனிவரிடம் கேட்டார்:
தெய்வத்திற்கு நிகரானவரே! இந்தப் பிராணன் எங்கிருந்து பிறந்தது? எப்படி இந்த உடம்பில் வருகிறது? தன்னைப் பகுத்துக்கொண்டு எப்படி உடம்பில் நிலைபெறுகிறது? எதனால் வெளியேறுகிறது? எப்படி புறவுலகைத் தாங்குகிறது? எப்படி அகவுலகைத் தாங்குகிறது?
2. தஸ்மை ஸ ஹோவாசாதிப்ரச்னான் ப்ருச்சஸி
ப்ரஹ்மிஷ்ட்டோஸீதி தஸ்மாத் தேஹம் ப்ரவீமி
தஸ்மை-அவரிடம்; ஸ-அவர்; உவாச ஹ-கூறினார்; அதிப்ரச்னான்-கடினமான கேள்விகளை; ப்ருச்சஸி-கேட்கிறாய்; ப்ரஹ்மிஷ்ட்ட-இறைநாட்டம் உடையவனாக; அஸி-இருக்கிறாய்; இதி-என்று; தஸ்மாத்-அதனால்; தே-உனக்கு; அஹம்-நான்; ப்ரவீமி-சொல்கிறேன்.
பொருள் : கடினமான கேள்விகளைக் கேட்கிறாய். ஆனாலும் நீ இறைநாட்டம் உடையவனாக இருப்பதால் நான் உனக்குப் பதில் சொல்கிறேன் என்று கவுசல்யனிடம் பிப்பலாத முனிவர் கூறினார்.
பிராணன் எங்கிருந்து தோன்றுகிறது?
3. ஆத்மன ஏஷ ப்ராணோ ஜாயதே
யதைஷா புருஷே சாயா ஏதஸ்மின் ஏததாததம்
மனோக்ருதேனாயாதி அஸ்மின் சரீரே
ஆத்மன-ஆன்மாவிலிருந்து; ஏஷ-இந்த; ப்ராண-பிராணன்; ஜாயதே-தோன்றுகிறது; யதா-எப்படி; ஏஷா-இந்த: புருஷே-மனிதனில்; சாயா-நிழல்; ஏதஸ்மின்-இதில்; ஏதத்-இது; ஆததம்-பரவியுள்ளது; மனோக்ருதேன-மனத்தின் செயல்பாடுகளால்; அஸ்மின்-இந்த; சரீரே-உடம்பில்; ஆயாதி-வருகிறது.
பொருள் : பிராணன் ஆன்மாவிலிருந்து தோன்றுகிறது. மனிதனும் அவனது நிழலும்போல் ஆன்மாவில் பிராணன் பரவியுள்ளது. மனத்தின் செயல்பாடுகளால் அது இந்த உடம்பில் வருகிறது.
பிராணனின் இறைவனிலிருந்து தோன்றியதாக 1:4-இல் கண்டோம். எங்கும் நிறைந்த இறைவனே நம்மில் ஆன்மாவாக இருக்கிறார். எனவே பிராணன் ஆன்மாவிலிருந்து தோன்றியது. ஆன்மாவிற்கும் பிராணனுக்கும் உள்ள தொடர்பு என்ன? மனிதனும் அவனது நிழலும்போல் என்கிறது மந்திரம், நிழல், மனிதனிலிருந்தே உண்டாகிறது. நிழலுக்கென்று ஒரு தனி இருப்பு கிடையாது. அதேவேளையில் மனிதனிலிருந்து நிழலைப் பிரிக்கவும் முடியாது. அவ்வாறு பிராணனும் ஆன்மாவிலிருந்து பிரிக்க முடியாதது. பிராணன் எப்படி இந்த உடம்பில் வருகிறது? ஆன்மாவிலிருந்து பிரிக்க முடியாததாக இருக்கின்ற பிராணனுக்கென்று ஒரு தனி வரவு கிடையாது. உடம்பில் ஆன்மா இருக்கிறது என்றால் பிராணனும் இருக்கிறது. எனவே இந்தக் கேள்வியின் பொருள் என்னவென்றால், பிராணன் எவ்வாறு இந்த உடம்பை உருவாக்குகிறது என்பதாகும்.
பிராணன் எவ்வாறு இந்த உடம்பை உருவாக்குகிறது?
மனத்தின் செயல்பாடுகளால், அதாவது, மனத்தின் ஆசைகள், எதிர்பார்ப்புகள், அனுபவங்கள் ஆகியவற்றின் தொகுதிகளுக்கு ஏற்ப பிராணன் உடம்பை உருவாக்கித் தருகிறது. அதுபோலவே, அந்த உடம்பைச் செயல்படுத்தவும் செய்கிறது. சுவாமி விவேகானந்தரின் விளக்கம் இதனைத் தெளிவுபடுத்துகிறது.
நாம் செய்யும் ஒவ்வொரு செயலும், நினைக்கும் ஒவ்வோர் எண்ணமும் நம் மனத்தில் ஒரு பதிவை உண்டாக்குகிறது. அதை சம்ஸ்கிருதத்தில் சம்ஸ்காரம் என்கிறார்கள்.... மரணத்திற்குப் பின், ஒரு மனிதன் போகும் இடத்திற்கு வழிகாட்டுவது, அவனது சம்ஸ்காரங்களின் கூட்டுப்பலனே. ஒருவன் இறக்கிறான். உடல் வீழ்ந்து பஞ்சபூதங்களுடன் கலந்துவிடுகிறது. அப்போது சம்ஸ்காரங்கள் அழிவதில்லை. அவை மனத்துடன் சேர்ந்திருக்கின்றன. மனம் மிக நுட்பமான பொருளால் ஆக்கப்பட்டிருப்பதால், அது அவ்வளவு விரைவில் அழிவதில்லை. ஏனென்றால் ஒரு பொருள் எவ்வளவு நுட்பமான பொருளால் ஆக்கப்பட்டிருக்கிறதோ அந்த அளவிற்கு அது நிலைத்ததாகவும் இருக்கிறது...
இந்த வேளையில் எனக்குத் தோன்றும் சிறந்த உதாரணம் சுழல்காற்றைப் பற்றியதுதான். பல திசைகளிலிருந்து வரும் பல காற்றோட்டங்கள் ஓரிடத்தில் சந்தித்து, ஒன்றுசேர்ந்து, சுழல ஆரம்பிக்கின்றன. அவ்வாறு சுழலும்போது காகிதம், வைக்கோல் போன்றவற்றைத் தங்களுக்குள் இழுத்துக்கொண்டு புழுதிப்புயலாக மாறுகின்றன. வேறோரிடத்தில் அவற்றை உதறிவிட்டு, வேறு பொருட்களை இழுத்துக் கொள்கின்றன. இவ்வாறே, தங்கள் வழியில் இருக்கும் பொருட்களைக்கொண்டு, பலவிதமான புழுதிப் படலங்களை உருவாக்கியவாறே செல்கின்றன.
அதைப் போலவே,சம்ஸ்கிருதத்தில் பிராணன் என்று சொல்லப்படும் சக்திகள் ஒன்றுசேர்ந்து ஜடப்பொருளிலிருந்து உடலையும் மனத்தையும் உருவாக்குகின்றன. பிறகு உடல் விழும்வரை சுழன்று செல்கின்றன. விழுந்ததும், மறுபடியும் வேறு பொருட்களிலிருந்து வேறு உடலையும் மனத்தையும் உருவாக்குகின்றன. இவ்வாறு தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது. ஜடப்பொருள் இல்லாமல் சக்தியால் பயணம் செய்ய முடியாது. எனவே உடல் வீழ்ந்தவுடன் மனமாகிய பொருள் எஞ்சி நிற்கிறது. பிராணன் சம்ஸ்கார வடிவில் மனத்தின்மீது செயல்படுகிறது. பிறகு பிராணன் வேறோரிடத்திற்குப் போய் புதிய பொருட்களிலிருந்து புதிய உடலை உருவாக்கிக்கொண்டு மறுபடியும் இதேபோல் செயல்படுகிறது. இப்படியே, தன்னுடைய சக்தி முழுவதும் செலவழியும்வரை, இடத்திற்கு இடம் மாறிக்கொண்டே இருக்கிறது. அதன்பிறகுதான் அது கீழே விழுகிறது. அதன் செயலும் முடிகிறது.
பிராணனின் செயல்பாடுகள் (4-10)
4. யதா ஸம்ராடேவ அதிக்ருதான் வினியுங்க்தே
ஏதான் க்ராமானேதான் க்ராமான் அதிதிஷ்ட்டஸ்வேதி
ஏவமேவைஷ ப்ராண இதரான் ப்ராணன் ப்ருதக்ப்ருதகேவ ஸன்னிதத்தே
யதா-எப்படி; ஸம்ராட் ஏவ-மன்னனே; அதிக்ருதான்-அலுவலர்களை; வினியுங்க்தே-நியமிக்கிறானோ; ஏதான்-இந்த; க்ராமான்-கிராமங்களை; அதிதிஷ்ட்டஸ்வ-ஆளுங்கள்; இதி ஏவம்-என்று கூறுவதுபோல்; ஏஷ; ஏவ-இந்தப் பிராணன்; இதரான்-மற்ற; ப்ராணான்-பிராணன்களை; ப்ருதக் ப்ருதக் ஏவ-தனித்தனியாக; ஸன்னிதத்தே-நியமிக்கிறது.
பொருள் : எப்படி ஒரு மன்னன் அலுவலர்களை நியமித்து, இந்த இந்தக் கிராமங்களை ஆளுங்கள் என்று கூறுகிறானோ, அப்படி பிராணன் மற்றப் பிராணன்களைத் தனித்தனியாக நியமிக்கிறது.
இறைவனிலிருந்து முதலில் வெளிப்பட்ட, எங்கும் நிறைந்த, அனைத்தையும் இயக்குகின்ற சக்தியே பிராணன். இது நம்மிலும் அனைத்து செயல்பாடுகளையும் நிகழ்த்துகிறது. நம்மில் அனைத்தையும் செய்கின்ற நிலையில் அது முக்கியப் பிராணன் என்று பெயர் பெறுகிறது. வெவ்வேறு செயல்களைச் செய்கின்ற நிலையில், அது வெவ்வேறு பெயர்களில் வழங்கப்படுகிறது. முக்கியப் பிராணன் மன்னனுக்கும் மற்றப் பிராணங்கள் மன்னன் நியமிக்கின்ற அலுவலர்களுக்கும் உவமையாகக் கூறப்பட்டுள்ளது. தொடரும் மந்திரம் மற்ற பிராணன்களைப் பற்றி கூறுகிறது.
அபானன், சமானன்
5. பாயூபஸ்தே பானம் சக்ஷú ச்ரோத்ரே முகநாஸிகாப்யாம்
ப்ராண ஸ்வயம் ப்ராதிஷ்ட்டதே மத்யே து ஸமான
ஏஷ ஹ்யேதத்துதமன்னம் ஸமம் நயதி தஸ்மாதேதா
ஸப்தார்ச்சி÷ஷா பவந்தி
பாயு உபஸ்தே-கழிவுகளை வெளியேற்றுவதில்; அபானம்-அபானன்; சக்ஷú; ச்ரோத்ரே-கண்களிலும் காதுகளிலும்; முக நாஸிகாப்யாம்-வாயிலும் மூக்கிலும் ப்ராண-பிராணன்; ஸ்வயம்-தானே; ப்ராதிஷ்ட்டதே-நிலைபெறுகிறது; மத்யே து-நடுவில்; ஸமான-சமானன்; ஏஷ:ஹி-இதுவே; ஏதத்-இந்த; ஹுதம்-அர்ப்பிக்கப்பட்ட; அன்னம்-உணவை; ஸமம்-சமமாக; நயதி-கொண்டு செல்கிறது; தஸ்மாத்-அதிலிருந்து; ஏதா-இந்த; ஸப்த அர்ச்சிஷ-ஏழு சுவாலைகள்; பவந்தி-உண்டாகின்றன.
பொருள் : அபானன் கழிவுகளை வெளியேற்றுகிறது. கண், காது, வாய், மூக்கு, ஆகிய புலன்களில் பிராணன் தானே நிலைபெறுகிறது. உடம்பின் நடுப்பகுதியில் சமானன் செயல்படுகிறது; அர்ப்பிக்கப்பட்ட உணவை அதுவே மற்ற இடங்களுக்குச் சமமாகக் கொண்டு செல்கிறது. பிராணனிலிருந்து ஏழு சுவாலைகள் உண்டாகின்றன.
பிராணன் தன்னை ஐந்தாகப் பகுத்துக்கொண்டு செயல்படுவதாக ஏற்கனவே(2:4) கண்டோம். இங்கே அதன் செயல்பாடுகள் கூறப்படுகின்றன. முக்கியச் செயல்பாடுகளான பார்த்தல், கேட்டல், பேசுதல், மூச்சு விடுதல் போன்ற முக்கிய வேலைகளைப் பிராணன், முக்கியப் பிராணன் என்ற நிலையில், தானே செய்கிறது. அபானன் என்ற நிலையில் கழிவு உறுப்புகளையும் இனப் பெறுக்க உறுப்புகளையும் இயக்குகிறது.
சமானன் வயிற்றில் செயல்படுகிறது. நாம் உண்ட பொருட்களைச் சம அளவில் உடம்பின் பல பகுதிகளுக்கு எடுத்துச் செல்கின்ற ஆற்றல் இதுவே. சம அளவில் என்றால், ஒவ்வொரு உறுப்புகளுக்கும் தேவையான அளவு உணவை அளிக்கிறது என்று பொருள்.
அர்ப்பிக்கப்பட்ட (ஹுதம்) என்ற வார்த்தை கருத்தில் கொள்ளத்தக்கது. உண்பதை ஒரு வேள்வியாகக் காண்கிறது இந்து மதம். உணவைச் செரிப்பதற்கான அக்கினி வயிற்றில் உள்ளது. இந்த அக்கினியில் உணவு என்ற ஆஹுதிப் பொருள் அர்ப்பிக்கப்படுகிறது. உண்பதை இவ்வாறு ஒரு வேள்வியாகச் செய்யுமாறு இந்து மதம் வற்புறுத்துகிறது.
2 கண்கள், 2 காதுகள், 2 நாசித் துவாரங்கள், வாய் ஆகியவை 7 சுவாலைகள். வயிற்றில் உள்ள அக்கினியிலிருந்து எழும்புகின்ற சுவாலைகள் இவை. இந்த உறுப்புகள் ஏழும் தாங்கள் இயங்குவதற்கான ஆற்றலை வயிற்றிலுள்ள அக்கினியிலிருந்து பெறுகின்றன என்று பொருள். உணவு என்ற ஆஹுதிப் பொருளை அர்ப்பிக்கா விட்டால் உடம்பின் உறுப்புகள் செயல்பட முடியாது என்பது இங்கே உணர்த்தப்படுகிறது.
வியானன்
6. ஹ்ருதி ஹ்யேஷ ஆத்மா
அத்ரைதத் ஏகசதம் நாடீனாம் தாஸாம் சதம் சதமேகைகஸ்யாம்
த்வாஸப்ததிர் த்வாஸப்ததி ப்ரதிசாகா நாடீ
ஸஹஸ்ராணி பவந்த்யாஸு வ்யானச்சரதி
ஏஷ-இந்த; ஆத்மா-ஆன்மா; ஹ்ருதி ஹி-இதயத்தில்; ஆத்ர-இங்கே; ஏதத்-இந்த; ஏகசதம்-நூற்றொன்று; நாடீனாம்-நாடிகள்; தாஸாம்-அவற்றுள்; ஏகைகஸ்யாம்-ஒவ்வொன்றிலும்; சதம் சதம்-நூறு; ப்ரதிசாகா நாடீஸஹஸ்ராணி-ஆயிரம் கிளை நாடிகளில்; த்வாஸப்ததி: த்வாஸப்ததி-எழுபத்திரண்டு; பவந்தி-உள்ளன; ஆஸு-இவற்றில்; வ்யான-வியானன்; சரதி-சஞ்சரிக்கிறது.
பொருள் : ஆன்மா இதயத்தில் உள்ளது. இதயத்திலிருந்து 101 நாடிகள் புறப்படுகின்றன. இவை ஒவ்வொன்றிற்கும் 100 கிளை நாடிகள் உள்ளன. ஒவ்வொரு கிளை நாடிக்கும் 72,000 கிளை நாடிகள் உள்ளன. இந்த நாடிகள் அனைத்தின் வழியாகவும் வியானன் சஞ்சரிக்கிறது.
இதயம் என்பது பிராணனின் இருப்பிடம். உணர்ச்சிகள் செயல்பாடுகள் என்று வாழ்க்கையின் அனைத்தும் இங்கிருந்தே கட்டுப்படுத்தப்படுகின்றன. விஞ்ஞானத்தைப் பொறுத்தவரை மூளை அனைத்துச் செயல்களின் மையமாக இருந்தாலும் நமது சாஸ்திரங்கள் இதயத்தையே மையமாகக் கொள்கின்றன. நான் என்று சொல்லும்போதும் சரி, ஆழ்ந்த மனக்கவலை, அளவற்ற சந்தோஷம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்போதும் சரி, இதயத்தில் கைவைத்தே நாம் பேசுவது இங்கு நினைவுகூரத் தக்கது. இந்த இதயம் நாம் அறிந்த பவுதீக இதயம் அல்ல. இது உணர்ச்சி இதயம்.
இந்த இதயத்திலிருந்து உடம்பு முழுவதுமாக ஆயிரக் கணக்கான நாடிகள் பரவியுள்ளன. இவற்றின்மூலமே கட்டளைகள் இடப்படுகின்றன, அனுபவங்கள் பெறப்படுகின்றன. இந்தப் பணியைச் செய்வது வியானன்.
உதானன்
7. அதைகயோர்த்வ உதான புண்யேன புண்யம் லோகம் நயதி
பாபேன பாபமுபாப்யாமேவ மனுஷ்ய லோகம்
அத-இப்போது; ஊர்த்வ-மேலே செல்கின்ற; ஏகயா-ஒன்றின்மூலம்; உதான-உதானன்; புண்யேன-புண்ணியத்தால்; புண்ய லோகம்-புண்ணிய உலகங்களுக்கு; பாபேன-பாவத்தால்; பாபம்-பாவ உலகங்களுக்கு; நயதி-கொண்டு செல்கிறது. உபாப்யாம்-இரண்டின் சேர்க்கையால்; மனுஷ்ய லோகம் ஏவ-மானிட உலகமே.
பொருள் : அந்த நாடிகளுள், மேலே செல்கின்ற ஒன்றின் வழியாக உதானன் மனிதனைக் கொண்டு செல்கிறது. புண்ணியம் செய்தவர்களைப் புண்ணிய உலகங்களுக்கும், பாவம் செய்தவர்களைப் பாவ உலகங்களுக்கும், இரண்டையும் செய்தவர்களை மானிட உலகத்திற்கும் கொண்டு செல்வது அதுவே.
உச்சிமுதல் உள்ளங்கால் வரை பரவியிருப்பது உதானன். மரணத்திற்குப் பிறகு மனிதனின் உயிரைக் கொண்டு செல்வது இந்தப் பிராணனே. வாழும் காலத்தில் நல்லது செய்து அதிகமாகப் புண்ணியம் சம்பாதித்த ஒருவனை, சொர்க்கம் போன்ற புண்ணியம் உலகங்களுக்குக் கொண்டு செல்கிறது. தீமைகள் செய்து அதிகமாகப் பாவம் சம்பாதித்தவனை நரகம் போன்ற பாவ உலகங்களுக்குக் கொண்டு செல்கிறது. புண்ணியமும் பாவமும் சமமாக உள்ள ஒருவனை மனித உலகிலேயே பிறக்குமாறு செய்கிறது.
சுருங்கச் சொல்வதானால், மரணத்திற்குப் பிறகு மனிதனின் பயணத்திற்கு உதவுகின்ற ஆற்றல் உதானன். இந்தக் கருத்து 9-இல் தொடர்கிறது.
அபானன், சமானன், வியானன்.
8. ஆதித்யோ ஹ வை பாஹ்ய ப்ராண உதயத்யேஷ ஹ்யேனம் சாக்ஷஷம் ப்ராணம் அனுக்ருஹ்ணான
ப்ருதிவ்யாம் யா தேவதா ஸைஷா புருஷஸ்ய அபானம்
அவஷ்டப்யாந்தரா யதாகாச ஸ ஸமானோ வாயுர்வ்யான
ஆதித்ய ஹ வை-சூரியனே; பாஹ்ய; ப்ராண-புறப் பிராணன்; ஏஷ ஹி-இவனே; ஏனம்-இந்த; சாக்ஷúஷம்-கண்களில்; ப்ராணம்-பிராணனாக; அனுக்ருஹ்ணான-அருள்கூர்ந்து; உதயதி-எழுகிறான்; ப்ருதிவ்யாம்-பூமியில்; யா-எந்த; தேவதா-தேவதை; ஸா-அது; ஏஷா-இந்த; புருஷஸ்ய-மனிதனின்; அபானம்-அபானன்; அவஷ்ட்டப்ய -கட்டுப்படுத்தி; அந்தரா-இடைவெளியில்; யத்-எது; ஆகாசமாக; ஸ-அது; ஸமான-ஸமானன்; வாயு-காற்று; வ்யான-வியானன்.
பொருள் : சூரியனே புறப் பிராணன். அவனே அருள்கூர்ந்து கண்களில் பிராணனாக நிலவுகிறான். பூமியில் உள்ள தேவதை மனிதனினுள்ள அபானனைக் கட்டுப்படுத்துகிறது. இடைவெளியிலுள்ள ஆகாசமே சமானன். காற்றே வியானன்.
எங்கும் நிறைந்த பிராணனே மனிதனிலும் செயல்பட்டு, அவனது உடல் மற்றும் மன இயக்கங்களைக் கட்டுப்படுத்துகிறது. பிராணனின் ஒவ்வொரு பிரிவும் இயற்கையில் ஒன்றையும், அதாவது புறப் பிரபஞ்சத்தில் ஒன்றையும் (2:1 விளக்கவுரையும் காண்க). மனிதன் தன்னிலுள்ள பிராணனைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பிரபஞ்சத்தைக் கட்டுப்படுத்தலாம் என்பதற்கு இதுவே நிரூபணமாகிறது. யோக நெறி இதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது. பிராணன் புறத்தில் சூரியனையும், மனிதனில் கண்ணையும் கட்டுப்படுத்துகிறது.
அபானன் பூமியை அதன் இடத்தில் நிலைநிறுத்துகிறது. பூமியை அதன் இடத்தில் நிலைநிறுத்துகின்ற சக்தி புவியீர்ப்பு விசை என்று விஞ்ஞானம் கூறுகிறது. புவியீர்ப்பு விசைதான் அன்று அபானன் என்று கூறப்பட்டிருக்கலாம். அபானனே மனித உடம்பையும் நிலைநிறுத்துகிறது; அதாவது உடம்பு கீழே விழுந்துவிடாமலும், மேலே கிளம்பி விடாமலும் கட்டுப்படுத்துகிறது. ஆகாயத்திற்கும் பூமிக்கும் இடையிலுள்ள வெளியே சமானன். அதுவே மனிதனிலுள்ள அக வெளியாகவும் உள்ளது.
காற்றாகவும் இருப்பது வியானன். இந்த வியானன் பிரபஞ்சத்திலும் மனிதனிலும் பரவியுள்ளது.
உதானன்: மரணவேளையில்: 9-10
மரணத்திற்குப் பிறகு மனிதனின் பயணத்திற்கு உதவுவது உதானன் என்று 3:7 இல் கண்டோம். இங்கே அந்தக் கருத்து தொடர்கிறது. மரணவேளையில் என்ன நடக்கிறது என்பதும் இந்த இரண்டு மந்திரங்களில் கூறப்படுகிறது.
9. தேஜோ ஹ வா உதானஸ்தஸ்மாத் உபசாந்ததேஜா:
புனர்பவம் இந்த்ரியைர் மனஸி ஸம்பத்யமானை
தேஜ: ஹ வை-நெருப்பை; உதான-உதானன்; தஸ்மாத்-எனவே; உபசாந்த தேஜா-நெருப்பு அணையப் பெற்றவன்; இந்த்ரியை-புலன்கள்; மனஸி-மனத்தில்; ஸம்பத்யமானை-ஒடுங்கப் பெற்று; புனர்பவம்-மீண்டும் பிறக்கிறான்.
பொருள் : நெருப்பே உதானன். நெருப்பு அணையப் பெற்றவனின் புலன்கள் மனத்தில் ஒடுங்குகின்றன. அவன் மீண்டும் பிறக்கிறான்.
புறத்தில் நெருப்பாக இருக்கின்ற உதானன் மனிதனில் சூடாக உள்ளது. உதானனாகிய சூடு உடம்பிலிருந்து விலகினால் அவன் இறந்துவிட்டான் என்பது பொருள். மரணத்திற்குப் பின்னர் உடல் குளிர்ந்துவிட்டது. உடல் விரைத்துவிட்டது என்று வழக்கத்திலும் சொல்லப்படுவதைக் காண்கிறோம். அவன் இறக்கிறான் என்பதே மீண்டும் பிறக்கிறான் என்று இங்கே கூறப்பட்டுள்ளது.
மரணத்தின் போது என்ன நடக்கிறது?
பேசும் சக்தி முதலில் விலகுகிறது; நாம் பார்க்கலாம், கேட்கலாம், ஆனால் பேச முடியாது. பிறகு ஒவ்வொரு புலனாக விடைபெறுகின்றன. அத்தனை புலன்களும் செயலிழந்த பின்னரும் மனம் விழித்திருக்கிறது. மனமும் விடை பெறும் போது நாம் உணர்வை இழக்கிறோம். அப்போதும் நாம் இறக்கவில்லை. ஏனெனில் உடம்பில் சூடு இருக்கும். அந்தச் சூடு விலகினால் அது மரணத்தின் அறிகுறி.
10. யச்சித்தஸ்தேனைஷ ப்ராணமாயாதி ப்ராணஸ்தேஜஸா யுக்த
ஸஹாத்மனா யதா ஸங்கல்பிதம் லோகம் நயதி
ய: சித்த-மனம்; தேன-அதனுடன்; ஏஷ-இவன்; ப்ராணம்-பிராணனை; ஆயாதி-அடைகிறான்; ப்ராண-பிராணன்; தேஜஸா யுக்த-உதானனுடன்; ஆத்மனா ஸஹ-அவனை; யதா-எப்படி; ஸங்கல்பிதம்-விரும்பிய; லோகம்-உலகிற்கு; நயதி-கொண்டு செல்கிறது.
பொருள் : இறுதிக்கணத்தில் மனத்தில் தோன்றிய எண்ணத்துடன் மனிதன் பிராணனை அடைகிறான். பிராணன் உதானனின் துணையுடன் அவனை அவன் விரும்பிய உலகிற்குக் கொண்டு செல்கிறது.
ஒருவனின் மரணவேளையில் முதலில் புலன்கள் செயலிழக்கின்றன. அவனது மனத்தில் எவ்வளவோ ஆசைகள் இருக்கலாம், ஆனால் புலன்கள் செயலற்று விட்டதால், அந்த ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள வழியில்லை. எனவே நிறைவேறாத ஆசைகள் எதிர்பார்ப்புகள் போன்றவற்றின் தொகுதியான அந்த மனத்துடன் அவன் பிராணனை அடைகிறான். மரணத்திற்குப் பிறகு மனிதனின் பயணத்திற்குத் துணை செய்வது உதானன் என்று கண்டோம். பிராணன், உதானனின் துணையுடன் அவனை அவன் விரும்பிய உலகிற்குக் கொண்டு செல்கிறது.
விரும்பிய உலகம் என்பது எது?
மரணவேளையின் இறுதிக்கணத்தில் தோன்றுகின்ற எண்ணமே அவன் செல்ல வேண்டிய இடத்தை நிர்ணயிக்கிறது. இறுதிக் காலத்தில் எந்தப் பொருளை நினைத்தவாறு ஒருவன் உடம்பை விடுகிறானோ, எப்போதும் அந்தப் பொருளையே நினைக்கின்ற அவன் அந்த பொருளையே அடைகிறான் (கீதை 8:6) என்கிறது கீதை. வாழ்நாளில் அதிகமாக நினைத்தது இறுதிக்கணத்தில் நினைவுக்கு வருகிறது. இறுதிக்கணத்தில் நினைவில் எழுந்த ஒன்று அடுத்த பிறவியை நிர்ணயிக்கிறது.
பிராணனை உணர்வதன் பலன் : 11-12
11. ய ஏவம் வித்வான் ப்ராணம் வேத
ந ஹாஸ்ய ப்ரஜா ஹீயதேம்ருதோ பவதி ததேஷ ச்லோக
ய-யார்; வித்வான்-சிறப்பாக அறிந்தவன்; ப்ராணம்-பிராணனை; ஏவம்-இவ்வாறு; வேத-உணர்கிறானோ; அஸ்ய-அவனது; ப்ரஜா-சந்ததிச் சங்கிலி; ந ஹ ஹீயதே-ஒருபோதும் அழிவதில்லை; அம்ருத-அழியாதது; பவதி-ஆகிறது; தத்-அதுபற்றி; ஏஷ-இந்த; ச்லோக-சுலோகம்.
பொருள் : பிராணனை இவ்வாறு சிறப்பாக உணர்ந்தவனின் சந்ததிச் சங்கிலி ஒருபோதும் அழிவதில்லை; அழியாமல் நிலைக்கிறது. அதுபற்றி கீழ்வரும் சுலோகமும் உள்ளது.
12. உத்பத்திமாயதிம் ஸ்தானம் விபுத்வம் சைவ பஞ்சதா
அத்யாத்மம் சைவ ப்ராணஸ்ய
விஜ்ஞாயாம்ருதமச்னுதே விஜ்ஞாயாம்ருதமச்னுத இதி
ப்ராணஸ்ய-பிராணனின்; உத்பத்திம்-தோற்றம்; ஆயதிம்-வருவது; ஸ்தானம்-இருப்பிடம்; பஞ்சதா ச-ஐந்து விதமான; விபுத்வம்-தலைமைச் செயல்கள்; ஏவ-மற்றும்; அத்யாத்மம்-தூல வெளிப்பாடு; விஜ்ஞாய-உணர்பவன்; அம்ருதம்-அழிவற்ற நிலையை; அச்னுதே-அடைகிறான்; இதி-என்று.
பொருள் : பிராணனின் தோற்றம், வரவு, இருப்பிடம், ஐந்து விதமான தலைமைச் செயல்கள், தூல வெளிப்பாடு ஆகியவற்றை உணர்பவன் அழிவற்ற நிலையை அடைகிறான், அழிவற்ற நிலையை அடைகிறான் என்று சொல்லப்பட்டுள்ளது.
பிராணன் ஆன்மாவிலிருந்து தோன்றுகிறது; ஆசைகளுக்கு ஏற்ப அது ஓர் உடம்பைத் தோற்றுவித்துக் கொள்கிறது (3). தன்னைப் பலவாகப் பிரித்துக்கொண்டு உடம்பின் பல்வேறு பகுதிகளில் நிலைநிறுத்திக் கொள்கிறது(5). ஒரு மன்னனைப் போல் புலன்களையும் மனத்தையும் இயக்குகிறது (4). உடம்பில் இவ்வாறு செயல்படுகின்ற அதே பிராணன்தான் தூல உலகில், அதாவது புற உலகில் சூரியனாகவும் மற்ற பிரபஞ்ச சக்திகளாகவும் செயல்படுகிறது. பிராணனைப் பற்றிய இந்த விஞ்ஞானத்தைப் புரிந்துகொண்டு அதனைச் செயல்படுத்தத் தெரிந்தவன் அழிவற்ற நிலையை அடைகிறான், அவனது சந்ததியும் ஓங்கி வளர்கிறது(11-12).
ஒருவன் ஒருவேளை பிராணனை முற்றிலுமாக அறிந்து அதைக் கட்டுப்படுத்திவிட்டால் உலகில் எந்தச் சக்திதான் அவனுடையது ஆகாது? அவன் சூரியனையும் நட்சத்திரக் கூட்டங்களையும் அவற்றின் இடத்திலிருந்து பெயர்த்துவிட முடியும். அணுவிலிருந்து மிகப்பெரிய சூரியர்கள்வரை இந்தப் பிரபஞ்சத்திலுள்ள அனைத்தையும் அவனால் அடக்கியாள முடியும். ஏனெனில் அவன் பிராணனைக் கட்டுப்படுத்துகிறான்.... அவனது ஆணைக்கு உட்படாத எதுவும் இயற்கையில் இருக்காது. தேவர்களாகட்டும், ஆவிகள் ஆகட்டும் அவன் அழைத்தால் வந்துவிடுவர். இயற்கையின் சக்திகள் அனைத்தும் அடிமைகள்போல் அவன் ஆணைக்குக் கீழ்ப்படியும்.... பிராணனை அறிந்தவன், பிரபஞ்சத்திலுள்ள மனம் மற்றும் பவுதீக சக்திகள் அனைத்தையும் அறிந்தவன் ஆகிறான். பிராணனை வசப்படுத்துபவன் தனது மனத்தையும் மற்ற மனங்களையும் அடக்கி ஆளும் திறமை பெறுகிறான். அதேபோன்று பிராணனை வசப்படுத்துபவன் தனது உடலையும் வேறு எல்லா உடல்களையும் அடக்கி ஆள்கிறான் என்கிறார் சுவாமி விவேகானந்தர். இத்தனை பெரிய ஒரு ஆற்றலை வசப்படுத்தியவன் என்பதால்தான் அத்தகையவன் அழிவற்ற நிலையை அடைவதாக மந்திரம் கூறுகிறது.
இதி ப்ரச்னோபநிஷதி த்ருதீய: ப்ரச்ன: