பதிவு செய்த நாள்
27
மார்
2012
04:03
அறிவு எனும் தீபம் சுடர்விட்டுப் பிரகாசிக்காவிட்டால் உலகம் முழுவதுமே காரிருளில் மூழ்கியிருக்கும் (இதமந்தம் தமஸ க்ருத்ஸ்னம் ஜாயதே புவனத்ரயம்
யதி சப்தாஹ்வயம் ஜ்யோதிராஸம்ஸாரம் ந தீப்யதே தண்டி காவ்யாதர்சம், 1.4) என்கிறார் மகாகவியாகிய தண்டி. உலக அறிவாக இருந்தாலும் சரி, இறையறிவாக இருந்தாலும் சரி, அறிவைத் தேடுவதும், தேடுபவனுக்குத் துணை செய்வதும் அதாவது கற்பதும் கற்பிப்பதும் புராதன பாரதத்தில் ஒரு தவமாகவே போற்றப்பட்டது.
( ஸ்வாத்யாய ப்ரவசனே ஏவேதி நாகோ மௌத்கல்ய
தத்தி தபஸ் தத்தி தப தைத்திரீய உபநிஷதம் 1:9)
அறிவைப் பெறுவதில் நாட்டம் உள்ளவர்கள், அறிவில் சிறந்த மேதையோ ஆன்ம ஞானியோ எங்காவது இருப்பதாகக் கேள்விப்பட்டால் எத்தனை சிரமங்களை மேற்கொண்டும், அவரை அணுகினர். அபூர்வமான சாஸ்திரங்களையோ புகழ்பெற்ற ஆசிரியரையோ தேடி நூற்றுக்கணக்கான மைல்தூரம் நடந்து செல்கின்றனர். வழியில் பிச்சையின்மூலம் கிடைப்பதுதான் சாப்பாடு. தங்கள் தலைமயிர் நரைத்து முதுமையின் குறைபாடுகள் ஏற்படும் வரையிலும், தங்கள் உடல் மற்றும் மன வலிமைகளை ஒன்றுபடுத்தி, தாங்கள் விரும்பியதைத் தொடர்ந்து கற்கின்றனர்.
அவ்வாறு 6 பேர் இறையறிவைத் தேடி, மேதையும் மகானுமாகிய பிப்பலாத முனிவரை அடைந்தார்கள். அவர்கள் குருவிடம பெற்ற பயிற்சியும் அவர்களது முதல் கேள்வியும் இந்த அத்தியாயத்தில் வருகின்றன.
அறிவைத் தேடிய ஆறு பேர்
1. ஓம் நம பரமாத்மனே ஹரி ஓம்
ஸுகேசா ச பாரத்வஜ சைப்யச்ச ஸத்யகாம
ஸெளர்யாயணீ ச கார்க்ய; கௌஸல்யச்ச ஆச்வலாயனோ
பார்கவோ வைதர்பி: கபந்தீ காத்யாயனஸ்தே ஹைதே ப்ரஹ்மபரா
ப்ரஹ்மநிஷ்ட்டா; பரம் ப்ரஹ்மான்வேஷமாணா ஏஷ ஹ வை
தத்ஸர்வம் வக்ஷ்யதீதி தே ஹ ஸமித்பாணயோ பகவந்தம் பிப்பலாதம் உபஸன்னா
பரமாத்மனே-பரம்பொருளுக்கு; நம-வணக்கம்; பாரத்வாஜ-பரத்வாஜரின் மகனான; ஸுகேசா-சுகேசன்; சைப்ய-சிபியின் மகனான; ஸத்யகாம-சத்தியகாமன்; ஸெளர்யாயணீ-சூரியனின் பேரனான; கார்க்ய-கார்க்கியன்; ஆச்வலாயன-அச்வலரின் மகனான; கௌஸல்ய-கௌசல்யன்; வைதர்பி-விதர்ப்ப நாட்டைச் சேர்ந்த; பார்கவ-பார்க்கவன்; காத்யாயன-காத்யரின் மகனான; கபந்தீ-கபந்தி; தே ஹ-அவர்கள்; ப்ரஹ்மபரா-இறைவனை நாடுபவர்கள்; ப்ரஹ்மநிஷ்ட்டா-இறையுணர்வில் நிலைபெற்றவர்கள்; பரம் ப்ரஹ்ம-கடவுளை; அன்வேஷமாணா-தேடி; தே-அவர்கள்; ஏஷ ஹ வை-இவரே; தத்-அது; ஸர்வம்-முற்றிலும்; வக்ஷ்யதி-சொல்வார்; இதி-என்று; ஸமித் பாணயோ-கைகளில் விறகுடன்; பகவந்தம்-தெய்வ முனிவரான; பிப்பலாதம்-பிப்பலாதரை உபஸன்னா-அணுகினர்.
பொருள் : ஓம் பரம்பொருளுக்கு வணக்கம். ஹரி ஓம். பரத்வாஜரின் மகனான சுகேசன், சிபியின் மகனான சத்தியகாமன், சூரியனின் பேரனான கார்க்கியன், அச்வலரின் மகனான கௌசல்யன், விதர்ப்ப நாட்டைச் சேர்ந்த பார்க்கவன், காத்யரின் மகனான கபந்தி ஆகியோர் இறைவனை நாடுபவர்கள்; இறையுணர்வில் நிலைபெற்றவர்கள். அவர்கள் கடவுளைத் தேடினார்கள். தெய்வ முனிவரான பிப்பலாதர் கடவுளைப்பற்றி முற்றிலும் விளக்கக்கூடியவர் என்று அறிந்ததும் கையில் விறகுடன் அவரை அணுகினர்.
கேள்விகள் செய்தல் வேதகாலத்தில் மிக முக்கியமான வழிபாடாகவும் வாழ்க்கைமுறையாகவும் இருந்தது. வேள்விகள் செய்வதற்கு விறகு அவசியம்; அதுவும் குறிப்பிட்ட மரத்திலுள்ள விறகு, குறிப்பிட்ட வகையில் இருத்தல் அவசியம். அத்தகைய விறகை குருவிற்கு அளிப்பது உயர்ந்த காணிக்கையாகக் கருதப்பட்டது. எனவே இந்த மாணவர்கள் 6 பேரும் விறகைக் கொண்டு சென்றனர்.
அறிவைப் பெற தவம் தேவை
எந்தக் கல்வியைப் பெறுவதற்கும், அதற்குரிய மனநிலை இருப்பது அவசியம். அப்போது மட்டுமே அந்தக் கல்வி பயனுடையதாக அமையும். மாணவனின் மனநிலையைச் சோதித்து அறிந்தபிறகு பாடத்தைப் போதிப்பது வெற்றிகரமான கல்விக்கு வழிவகுக்கும். பிப்பலாத முனிவர் இந்த வழிமுறையைப் பின்பற்றினார். மாணவர்கள் தம்மை அணுகியதும் உடனடியாக அவர் எதையும் போதிக்கவில்லை. அவர்களின் தகுதியைச் சோதிப்பதற்காகவும், தகுந்த மனநிலையை அவர்களிடம் உருவாக்குவதற்காகவும் ஓராண்டு காலம் அவர்களைத் தவ வாழ்வில் ஈடுபடுமாறு கூறினார்.
2. தான் ஹ ஸ ரிஷிருவாச-பூய ஏவ தபஸா ப்ரஹ்மசர்யேண ச்ரத்தயா ஸம்வத்ஸரம் ஸம்வத்ஸ்யத யதாகாமம் ப்ரச்னான் ப்ருச்சத யதி விஜ்ஞாஸ்யாம; ஸர்வம் ஹ வோ வக்ஷ்யாம இதி
ஸ:ரிஷி-அந்த முனிவர்; தான்-அவர்களிடம்; உவாச ஹ-கூறினார்; பூய ஏவ-இன்னும்; ஸம்வத்ஸரம்-வருடம்; ஸம்வத்ஸ்யத-உரிய முறையில் வாழுங்கள்; தபஸா-தவத்துடனும்; ப்ரஹ்மசர்யேண-பிரம்மச்சரியத்துடனும்; ச்ரத்தயா-செயல்பாட்டுடன் கூடிய நம்பிக்கையுடனும்; யதாகாமம்-விரும்புவதுபோல்; ப்ரச்னான்-கேள்விகளை; ப்ருச்சத-கேளுங்கள்; விஜ்ஞாஸ்யாம: யதி-எங்களுக்குத் தெரியுமானால்; ஹ-நிச்சயமாக; ஸர்வம்-அனைத்தையும்; தெரியுமானால்; வ-உங்களுக்கு; வக்ஷ்யாம-சொல்கிறோம்; இதி-என்று.
பொருள் : பிப்பலாத முனிவர் அவர்களிடம், உரிய முறையில், இங்கே இன்னும் ஒரு வருடம் வாழுங்கள். குறிப்பாக, தவத்துடனும் பிரம்மச்சரியத்துடனும் செயல்பாட்டுன்கூடிய நம்பிக்கையுடனும் வாழுங்கள், அதன்பிறகு நீங்கள் விரும்புவதுபோல் கேள்விகளைக் கேளுங்கள். எங்களுக்குத் தெரியுமானால் நிச்சயமாக அனைத்தையும் உங்களுக்குச் சொல்கிறோம் என்று கூறினார்.
இன்னும் (பூய ஏவ) உரிய முறையில் வாழுங்கள்(ஸம்வத்ஸ்யத) என்ற இரண்டு வார்த்தைகளையும் ஸ்ரீசங்கரர் அழகாக விளக்குகிறார்.
கபந்தி முதலான அந்த மாணவர்கள் ஏற்கனவே ஆன்மீக சாதனைகளைச் செய்து, தவ வாழ்க்கை வாழ்ந்து, மனத்தைப் பக்குவப்படுத்தியவர்கள்தான். ஆனால் இங்கே, அதாவது குருவுடன் ஒரு வருடம் தங்கி, அவரது துணையுடன் சாதனைகளைச் செய்யுமாறு பிப்பலாத முனிவர் கூறுகிறார். (யத்யபி யூயம் பூர்வ தபஸ்வின ஏவ ததாபி இஹ... ஸம்வத்ஸ்யத ஸம்யக் குரு சுச்ரூஷாபரா ஸந்தோ வத்ஸ்யத)
உரிய முறையில் என்றால் குருவிற்குச் சேவை செய்து என்கிறார் ஸ்ரீசங்கரர். குருவிற்குச் செய்யும் சேவையை நமது சாஸ்திரங்கள் மிகவும் போற்றுகின்றன. குருவிற்குத் தொண்டு செய்வதால் பணிவு பிறக்கிறது. பணிவு மிக்க மனதில் இறையருள் நிறைகிறது.
பிப்பலாத முனிவரை ஓர் உயர்நிலை ஆசிரியராக இங்கே நாம் காண்கிறோம்.
1. பணிவு: பல நாடுகளில் தமது பெயர் பரவுகின்ற அளவிற்கு மகனாக இருந்தும், பிப்பலாத முனிவர், எனக்குத் தெரியுமானால் பதில் சொல்கிறேன் என்கிறார். இது அவரது அறிவீனத்தைக் காட்டவில்லை, மாறாக அவரது பணிவை உணர்த்துகிறது (அனுத்ததத்வ ப்ரதர்சனார்த்தோ யதி சப்த ந அஜ்ஞான ஸம்சயார்த்த) என்று அழகாக விளக்குகிறார் ஸ்ரீசங்கரர்.
2. மாணவனின் தகுதியை ஆராய்தல்: உரியவனுக்கு உரியதைக் கொடுக்க வேண்டும். ஆன்மீகத்தைத் தேடி வந்த ஆறுபேரும் உண்மையில் அதற்குத் தகுதியானவர்கள்தானா என்பதை அறிந்துகொள்வதற்காக அவர்களை ஒரு வருடம் அங்கே தங்குமாறு கூறுகிறார் பிப்பலாதர். அந்த நாட்களில் தவத்தையும் பிரம்மச்சரியத்தையும் செயல்பாட்டுடன் கூடிய நம்பிக்கையுடன் கடைப்பிடிக்குமாறு கூறுகிறார்.
தவமும் பிரம்மச்சரியமும் இவற்றுக்கு அடிப்படையாக ஆழ்ந்த நம்பிக்கையும் உயர் வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். உண்மையான பிரம்மச்சரியமே ஒரு தவம்தான் என்கிறார் சுவாமி ரங்கநாதானந்தர்; பிரம்மச்சரியம் என்றால் புலக்கட்டுப்பாடு-எந்தப் புறக்காரணத்தாலும் திணிக்கப்பட்டதல்ல; சுயமாகவே ஏற்றுக்கொண்ட கட்டுப்பாடு. முக்கியமாக காமத்தைக் கட்டுப்படுத்துவது பிரம்மச்சரியம் ஆகும், பிரம்மச்சரியமே ஒரு தவம். சொல்லப்போனால், தவ வாழ்வின் மிக முக்கிய அடிப்படையே பிரம்மச்சரியம்தான். பிரம்மச்சரியத்தின் முக்கியத்துவத்தைக் கூறாத இந்திய சாஸ்திரமே இல்லை எனலாம் என்று எழுதுகிறார் அவர். சுவாமி விவேகானந்தர் மேலைநாடுகளுக்குச் சென்றதும், அவர் அங்கே பெற்ற மாபெரும் வெற்றியும், உலகின் சிந்தனைப் போக்கிலேயே அவர் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்ததும் வரலாற்று உண்மைகள். தமது வெற்றிகள் அனைத்திற்கும் காரணம் பிரம்மச்சரிய ஆற்றலே என்று குறிப்பிடுகிறார் அவர்.
சிகாகோவில் எனது முதல் சொற்பொழிவில் நான் எல்லோரையும் அமெரிக்க நாட்டின் சகோதரிகளே, சகோதரர்களே என்று அழைத்ததும், எல்லோரும் எழுந்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்ததும் உங்களுக்குத் தெரியும். ஆனால் அப்படி அவர்கள் பரவசப்பட்டதற்கு என்ன காரணம் தெரியுமா? ஏதோ அதிசய ஆற்றல் என்னிடம் இருப்பதாக நீங்கள் நினைக்கலாம். உண்மைதான் என்னிடம் அத்தகைய ஆற்றல் உள்ளது. அது இதுதான்-ஒருமுறைகூட காம எண்ணம் என்னுள் புக நான் அனுமதித்ததில்லை. என் மனம், எனது சிந்தனை, பொதுவாக மனிதன் அந்த வழியில் செலவழிக்கின்ற ஆற்றல்கள் அனைத்தையும் ஓர் உயர்ந்த போக்கில் போகுமாறு பயிற்சி அளித்தேன். அது யாராலும் தடுக்க முடியாத ஒரு மாபெரும் ஆற்றலாக உருவெடுத்தது.
அறிவு, ஆன்மீகம் என்ற எதுவானாலும் உயர்நிலைத் தேடல்கள் அனைத்திற்கும் தவமும், பிரம்மச்சரியமும், இவை இரண்டும் உயர்ந்த பலனை அளிக்கும் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கையும் அடிப்படையாக உள்ளன. எனவே அவற்றை ஒரு வருடம் கடைப்பிடிக்குமாறு உபதேசித்தார் பிப்பலாத முனிவர்.
உலகம் (3-16)
பிப்பலாத முனிவர் உபதேசித்ததுபோல் ஆறு மாணவர்களும் ஒரு வருடம் தவ வாழ்வில் ஈடுபட்டனர். அதன்பிறகு அவரை அணுகி முதல் கேள்வியைக் கேட்கின்றனர்.
ஆன்மீகத்தை நாடி ஆறு பேரும் புறப்பட்டிருந்தாலும் அவர்களின் பாதை படிப்படியாக அமைவதை இந்த உபநிஷதத்தில் காண்கிறோம். எதையும் விட்டுவிட்டோ, திடீரென்றோ தாவுகின்ற முயற்சி அவர்களிடம் காணப்படவில்லை. கண்ணுக்குத் தெரிகின்ற, நாம் வாழ்கின்ற உலகத்தைப் பற்றியதாக அவர்களது முதல் கேள்வி அமைந்துள்ளது.
எல்லாம் எங்கிருந்து வந்தன?
3. அத கபந்தீ காத்யாயன உபேத்ய பப்ரச்ச
பகவன் குதோ ஹ வா இமா ப்ரஜா ப்ரஜாயந்த இதி
அத-பிறகு; காத்யாயன: கபந்தீ-காத்யாயனரின் மகனான கபந்தி; உபேத்ய-அணுகி; பகவன்-தெய்வ முனிவரே; இமா-இந்த; ப்ரஜா-உயிரினங்கள்; குத: ஹவை-எங்கிருந்து; ப்ரஜாயந்தே-தோன்றின; இதி-என்று; பப்ரச்ச-கேட்டார்.
பொருள் : ஒரு வருடத் தவ வாழ்விற்கு பிறகு கபந்தி பிப்பலாத முனிவரை அணுகி அவரிடம், தெய்வ முனிவரே! இந்த உயிரினங்கள் எங்கிருந்து தோன்றின? என்று கேட்டார்.
அடிப்படை: ஜடப்பொருளும் பிராணனும்
4. தஸ்மை ஸ ஹோவாச-ப்ரஜாகாமோ வை ப்ரஜாபதி: ஸ தபோ தப்யத ஸ தபஸ்தப்த்வா ஸ மிதுனமுத்பாதயதே
ரயிம் ச ப்ராணம் சேதி ஏதௌ மே பஹுதா ப்ரஜா கரிஷ்யத இதி
தஸ்மை-அவரிடம்; ஸ-முனிவர்; உவாச ஹ-கூறினார்; ப்ரஜாபதி-படைப்புக் கடவுள்; ப்ரஜாகாம-உயிரினங்களைப் படைக்க விரும்பினார்; ஸ-அவர்; தப-தவத்தில்; அதப்யத-ஈடுபட்டார்; தப-தவத்தில்; அதப்த்வா-ஈடுபட்ட பிறகு; ஸ-அவர்; ரயிம் ச-ஆகாசத்தையும்; ப்ராணம் ச-பிராணனையும்; ஏதௌ-இவை இரண்டும்; மே-எனக்கு; பஹுதா-பல்வேறு; ப்ரஜா-உயிரினங்களை; கரிஷ்யதே-உற்பத்தி செய்யும்; இதி-என்று; மிதுனம்-ஜோடிகளை; உத்பாதயதே-படைத்தார்.
பொருள் : கபந்தியிடம் பிப்பலாத முனிவர் கூறினார்:
உயிரினங்களைப் படைக்க விரும்பிய படைப்புக் கடவுள் தவத்தில் ஈடுபட்டார், அதன்பிறகு ஆகாசத்தையும் பிராணனையும் படைத்தார். இவை இரண்டும் சேர்ந்து பல்வேறு உயிரினங்களை எனக்காக உற்பத்தி செய்யும் என்று உணர்ந்திருந்தார் அவர்.
சுவாமி விவேகானந்தரின் விளக்கத்தைக் காண்போம்
இந்தியத் தத்துவ ஞானிகளின் கொள்கைப்படி பிரபஞ்சம் இரண்டு பொருட்களால் ஆக்கப்பட்டுள்ளது. அவற்றுள் ஒன்று ஆகாசம். இது எங்கும் வியாபித்து அனைத்தையும் ஊடுருவியுள்ளது. உருவம் உள்ள அனைத்தும், சேர்க்கையால் விளைந்த அனைத்தும் ஆகாசத்திலிருந்தே வெளிப்பட்டுள்ளன. ஆகாசமே காற்றாகவும், திரவப் பொருட்களாகவும், திடப் பொருட்களாகவும் ஆகியுள்ளது. சூரியனாக, சந்திரனாக, பூமியாக, நட்சத்திரங்களாக, வால் நட்சத்திரங்களாக ஆகியுள்ளதும் ஆகாசமே. மனித உடல், பிராணி உடல், தாவரங்கள் அனைத்தும், நாம் காண்கின்ற, நாம் உணர்கின்ற அனைத்தும், இருப்பவை அனைத்துமாக இருப்பதும் ஆகாசமே...
எந்தச் சக்தியால் இந்த ஆகாசம் பிரபஞ்சமாகிறது? பிராண சக்தியினால்.... இந்த பிராணனிலிருந்தே நாம் ஆற்றல் என்று அழைக்கின்ற, நாம் சக்தி என்று அழைக்கின்ற அனைத்தும் வெளிப்படுகின்றன. புவியீர்ப்பாக, காந்த சக்தியாக வெளிப்படுவது பிராணனே. உடல் இயக்கங்களாக, நாடி ஓட்டங்களாக, எண்ணச் சக்தியாக வெளிப்படுவதும் பிராணனே. எண்ணம் முதல் மிகச் சாதாரண சக்திவரை எல்லாம் பிராணனின் வெளிப்பாடுகளே.
சுவாமிஜி ஜடப்பொருளை ஆகாசம் என்றும், ஆற்றலை பிராணன் என்றும் குறிப்பிடுகிறார்; இயக்கம், அதிர்வு, எண்ணம் என்று நாம் அறியும் சக்திகள் எல்லாம் பிராணனுடைய பல்வேறு நிலைகள். உருவம், தடை என்று நாம் அறியும் ஜடப்பொருள் எல்லாம் ஆகாசத்தின் வேறு நிலைகள்.
சூரியனே பிராணன் 5-8
5. ஆதித்யோ ஹ வை ப்ராணோ ரயிரேவ சந்த்ரமா ரயிர்வா ஏதத் ஸர்வம் யம்மூர்த்தம் சாமூர்த்தம் ச தஸ்மான்மூர்த்திரேவ ரயி
ஆதித்ய: ஹ வை-சூரியன்; ப்ராண-ஆற்றல்; சந்த்ரமா-சந்திரன்; ரயி: ஏவ-ஜடப்பொருளே; யத்-எது; மூர்த்தம் ச-தூலப் பொருட்கள்; அமூர்த்தம் ச-நுண் பொருட்கள்; ஏதத்-இந்த; ஸர்வம்-அனைத்தும்; ரயி: வை-ஜடப் பொருளே; தஸ்மாத்-எனவே; மூர்த்தி-பொருட்கள் ரயி: ஏவ-ஜடப்பொருளே.
பொருள் : சூரியன் ஆற்றல், சந்திரன் ஜடப்பொருள். தூலப் பொருட்களாகவும் நுண் பொருட்களாவும் இந்த உலகில் உள்ள அனைத்தும் ஜடப்பொருளே. எனவே பொருள் என்றால் அது ஜடப்பொருளே.
சூரியனும் சந்திரனும் இங்கே உதாரணமாகக் காட்டப்பட்டுள்ளன. சந்திரனுக்கென்று ஒளி கிடையாது. சூரியனின் ஒளியைப் பெற்று அது பிரதிபலிக்கிறது. சந்திரன் மட்டும் இருந்தால் ஒளியில்லை. அது வெறும் ஜடப்பொருளே. சூரியனாகிய ஆற்றல் அதில் புகும்போது சந்திரன் ஒளி வீசுகிறது அதாவது செயல்படுகிறது.
உலகிலுள்ள தூல மற்றும் நுண்பொருட்கள் அனைத்தும் ஜடப்பொருளே. அதில் பிராணன் செயல்படும்போது மட்டுமே செயல் நிகழ்கிறது. இவ்வாறு உலகம் அனைத்தும் ஆகாசம், பிராணன் என்ற அடிப்படைப் பொருட்களின் விளைவாக உள்ளது.
6. அதாதித்ய உதயன் யத் ப்ராசீம் திசம் ப்ரவிசதி தேன ப்ராச்யான் ப்ராணான் ரச்மிஷு ஸன்னிதத்தே
யத்தக்ஷிணாம் யத்ப்ரதீசீம் யதுதீசீம் யததே யதூர்த்வம் யதந்தரா திசோ யத்ஸர்வம் ப்ரகாசயதி தேன ஸர்வான் ப்ராணான் ரச்மிஷு ஸன்னிதத்தே
அத-இப்போது; ஆதித்ய-சூரியன்; உதயன்-உதித்து; யத்-எப்போது; ப்ராசீம் திசம்-கிழக்குத் திசையில்; ப்ரவிசதி-பரவுகிறது; தேன-அதனால்; ப்ராச்யான்-கிழக்கிலுள்ள; ப்ராணான்-பிராணன்களை; ரச்மிஷு-கதிர்களில்; ஸன்னிதத்தே-வழங்குகிறது; யத்-எப்போது; தக்ஷிணாம்-தெற்கில்; ப்ரதீசீம்-மேற்கில்; உதீசீம்-வடக்கில்; அத-கீழே; ஊர்த்தவம்-மேலே; அந்தராதிச-அந்தரப் பகுதிகளை; ஸர்வம்-அனைத்தையும்; ப்ரகாசயதி-ஒளிரச் செய்கிறது; தேன-அதனால்; ஸர்வான்-எல்லா; ப்ராணான்-பிராணன்களையும்; ரச்மிஷு-கதிர்களில்; ஸன்னிதத்தே-வழங்குகிறது.
பொருள் : சூரியன் உதித்து, ஒளி கிழக்குத் திசையில் பரவும்போது, அவன் தன் கதிர்களால் கிழக்கில் பிராணனை வழங்குகிறான். அதுபோலவே தெற்கு, மேற்கு, வடக்கு, கீழே, மேலே மற்றும் அந்தரப் பகுதிகள் என்று அனைத்துப் பகுதிகளிலும் ஒளி பரவும்போது, அந்தந்தப் பகுதிகளுக்கு, தன் கதிர்களால் பிராணனை வழங்குகிறான்.
ஓர் அழகிய காலைக் காட்சியை நம் கண்முன் கொண்டு வருகிறார் பிப்பலாத முனிவர். கிழக்கில் சூரியன் உதிக்கிறது. அதன் பொன்னிறக் கதிர்கள் திசைகள் தோறும் பரவுகின்றன. பரவுகின்ற திசையெல்லாம் பிராணனை வழங்குகிறான் கதிரவன்.
கதிரவன் பிராணனுக்குத் தலைவனாக, பிராணனை வழங்குபவனாகக் கொள்ளப்படுகிறான். பிராணன் என்றால் சக்தி, ஆற்றல். வாழ்க்கைக்கான ஆற்றலை அளிப்பவன் சூரியன். தூங்கிக் கிடக்கின்ற உயிரினங்கள் அவனது ஸ்பரிசத்தால் எப்படி எழுந்து புத்துணர்ச்சியுடன் செயல்படுகின்றன என்பது நமது அன்றாட அனுபவம். தாவரங்கள்கூட இதற்கு விதி விலக்கு அல்ல. எனவே இங்கு சூரியன் போற்றப்படுகிறான்.
7. ஸ ஏஷ வைச்வானரோ விச்வரூப: ப்ராணோ க்னிருதயதே
ததேதத் ரிசாப்யுக்தம்
ஸ-அவன்; ஏஷ-இந்த; வைச்வானர-வைசுவானரன்; விச்வரூப-விசுவரூபன்; ப்ராண-பிராணன்; அக்னி-நெருப்பு; உதயதே-உதிக்கிறான்; தத்-அது; ஏதத்-இவ்வாறு; ரிசா-ரிக்வேத மந்திரத்தில்; அப்யுக்தம்-கூறப்பட்டுள்ளது.
பொருள் : வைசுவானரனும் விசுவரூபனும் பிராண சக்தியும் ஆகிய சூரியன் இவ்வாறு ஒரு நெருப்புப் பிழம்புபோல் உதிக்கிறான். ரிக்வேத மந்திரத்திலும் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
வைசுவானரன்: வைசுவானரன் என்றால் அனைத்து உயிர்களின் தொகுதியாக உள்ளவன். அனைத்து உயிர்களும் இயங்குவதற்கான ஆற்றலை அளிப்பதால் சூரியன் அனைத்து உயிர்களின் வடிவாகப் போற்றப்படுகிறான்.
விசுவரூபன் : அனைத்து உருவங்களின் வடிவாக உள்ளவன். சூரிய ஒளி இருப்பதாலேயே உருவங்களைப் பார்க்க முடிகிறது. சூரியனின்றி எந்த உருவத்தையும் நம்மால் பார்க்க முடியாது. எனவே சூரியன் அனைத்து உருவங்களின் வடிவாகப் போற்றப்படுகிறான்.
பிராண சக்தி: ஜடப்பொருள், பிராணன் ஆகிய இரண்டையும் அடிப்படையாக உடையது படைப்பு. இங்கே பிராணனின் தூல வடிவாகச் சூரியன் போற்றப்படுகிறான். இவ்வாறு உலகிற்கே, உலக வாழ்க்கைக்கே ஆதாரமான சூரியன் ஒரு நெருப்புப் பிழம்புபோல் கிழக்கில் உதிப்பதாக உதயகால அழகை, அதன் உண்மைப்பொருள் விளக்கத்துடன் படம் பிடித்துக் காட்டுகிறார் முனிவர்.
ஆன்மீக உயர்வுக்கும் அறிவின் ஒளிக்கும் இணையாக உபநிஷத முனிவர்களிடம் நாம் காண்பது அவர்களின் பணிவு மற்றும் தங்கள் முன்னோர்களாகிய ரிஷிகளிடம் அவர்கள் கொண்டிருந்த பக்தி, உபநிஷத உண்மைகளை அறிந்தவர்களாக இருந்தும், அந்த உண்மைகளை உலகிற்குச் சொல்கின்ற பெருமையை முன்னோர்களுக்குக் கொடுக்கவே அவர்கள் விரும்பினர். பிப்பலாதரும் சூரியன் உலகிற்கே ஆதாரமானவன் என்று கூறிவிட்டு, அது தமது கண்டுபிடிப்பு அல்ல, ஏற்கனவே ரிக்வேதத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது என்று பெருமையை ரிக்வேத முனிவருக்கு அளிக்கிறார். ரிக்வேத பகுதி அடுத்த மந்திரமாக வருகிறது.
8. விச்வரூபம் ஹரிணம் ஜாதவேதஸம் பராயணம் ஜ்யோதிரேகம் தபந்தம்
ஸஹஸ்ர ரச்மி; சததா வர்த்தமான ப்ராண ப்ரஜானாமுதயத்யேஷ ஸூர்ய
விச்வரூபம்-அனைத்து உருவினன்; ஹரிணம்-கதிர்கள் நிறைந்தவன்; ஜாதவேதஸம்-அனைத்தும் அறிந்தவன்; பராயணம்-அனைத்து உயிர்களின் ஆதாரம்; ஏகம்-ஒன்றேயான; ஜ்யோதி-ஒளிப்பொருள்; தபந்தம்-வெப்பத்தைக் கொடுப்பவன்; ஸஹஸ்ர ரச்மி-ஆயிரம் கதிர்களுடன்; சததா வர்த்தமான-நூற்றுக்கணக்கான வழிகளில் செயல்படுகிறான்; ப்ரஜானாம்-உயிர்களின்; ப்ராண-பிராணன்; உதயதி-உதிக்கிறான்; ஏஷ-இந்த; ஸூர்ய-சூரியன்.
பொருள் : சூரியன் அனைத்து உருவினன், கதிர்கள் நிறைந்தவன், அனைத்தும் அறிந்தவன், அனைத்து உயிர்களின் ஆதாரம், ஒன்றேயான ஒளிப்பொருள், வெப்பத்தைக் கொடுப்பவன், உயிர்களின் பிராணனாகிய அந்தச் சூரியன், இதோ, ஆயிரம் கதிர்களுடன் உதிக்கிறான்; நூற்றுக்கணக்கான வழிகளில் செயல்படுகிறான்.
இரண்டு வழிகள்: 9-10
ஆகாசத்தையும் பிராணனையும் படைத்து, அவை மூலமாக உயிரினங்களைப் படைத்தார் கடவுள். மனிதனைப் படைத்த அவர் அவன் வாழ இரண்டு வழிகளை வகுத்தார்.
9. ஸம்வத்ஸரோ வை ப்ரஜாபதி தஸ்யாயனே தக்ஷிணம் சோத்தரம் ச
தத்யே ஹ வை ததிஷ்ட்டாபூர்த்தே க்ருதமித்யுபாஸதே தே சாந்த்ரமஸமேவ லோகமபிஜயந்தே த ஏவ புனராவர்த்தந்தே
தஸ்மாதேத ரிஷய ப்ரஜாகாமா தக்ஷிணம் ப்ரதிபத்யந்தே
ஏஷ ஹ வை ரயிர்ய பித்ருயாண
ஸம்வத்ஸர: வை-வருடமே; ப்ரஜாபதி-படைப்புக் கடவுள்; தஸ்யா-அவருக்கு தக்ஷிணம் ச-தட்சிணாயனம்; உத்தரம் ச-உத்தராயணம்; அயனே-இரண்டு பாதைகள்; தத்யே ஹ வை-இங்கு யார்; இஷ்ட்டா பூர்த்தே-யாகங்களும் நற்பணியும்; க்ருதம்-மேலானவை; இதி-என்று; உபாஸதே-செய்கிறார்களோ; தே-அவர்கள்; சாந்த்ரமஸம் லோகம் ஏவ-சந்திரலோகத்தையே; அபிஜயந்தே-அடைகிறார்கள்; தே ஏவ-அவர்கள்; புன-மீண்டும்; ஆவர்த்தந்தே-பிறக்கிறார்கள்; தஸ்மாத்-எனவே; ஏதே-இந்த; ரிஷய-சான்றோர்கள்; ப்ரஜாகாமா-சந்ததியை நாடுபவர்கள்; தக்ஷிணம்-தட்சிணாயனத்தை; ப்ரதிபத்யந்தே-அடைகிறார்கள்; ய-எது; பித்ருயாண-பித்ருயானமோ; ஏஷ ஹ வை-அதுவே; ரயி-ஜடப்பொருள்.
பொருள் : வருடமே பிரஜாபதி. அவருக்கு தட்சிணாயனம், உத்தராயணம் என்று இரண்டு பாதைகள் உள்ளன. யாகங்களும் நற்பணிகளுமே மேலானவை என்று கருதி அவற்றைச் செய்பவர்கள் சந்திர லோகத்தை அடைகிறார்கள். அவர்கள் மீண்டும் பிறக்கிறார்கள். எனவே சந்ததியை நாடுகின்ற சான்றோர்கள் தட்சிணாயனத்தின் வழியாகச் செல்கிறார்கள்.
10. அதோத்தரேண தபஸா ப்ரஹ்மசர்யேண ச்ரத்தயா வித்யயா ஆத்மானம் அன்விஷ்ய ஆதித்யம் அபிஜயந்தே
ஏதத் வை ப்ராணானாம் ஆயதனம் ஏதத் அம்ருதம் அபயம் ஏதத் பராயணம் ஏதஸ்மான்ன புனராவரத்தந்த இத்யேஷ நிரோத
ததேஷ ச்லோக
அத-மேலும்; தபஸா-தவத்தால்; ப்ரஹ்மசர்யேண-பிரம்மச்சரியத்தால்; ச்ரத்தயா-செயல்பாட்டுடன் கூடிய நம்பிக்கையால்; வித்யயா-தியானத்தால்; ஆத்மானம்-ஆன்மாவை; அன்விஷ்ய-தேடி; ஆதித்யம்-சூர்யப்பாதையை; அபிஜயந்தே-அடைகின்றனர்; ஏதத் வை-இதுவே; ப்ராணானாம்-ஆற்றல்களின்; ஆயதனம்-உறைவிடம்; அம்ருதம்-அழிவற்றது; அபயம்-பயமற்றது; பராயணம்-லட்சியம்; ஏதஸ்மாத்-இதிலிருந்து; புன: ந ஆவர்த்தந்தே-மீண்டும் பிறப்பதில்லை; ஏஷ-இது; நிரோத: இதி-அடைய முடியாதது; தத்-அதுபற்றி; ஏஷ-இந்த; ச்லோக-சுலோகம் உள்ளது.
பொருள் : ஆன்மாவைத் தேடுபவர்கள் தவம், பிரம்மச்சரியம், செயல்பாட்டுடன் கூடிய நம்பிக்கை, தியானம் ஆகியவற்றை மேற்கொள்கின்றனர். அவர்கள் சூரியப் பாதையை அடைகின்றனர். இந்தப் பாதை ஆற்றல்களின் உறைவிடம், அழிவற்றது, பயமற்றது. இந்தப் பாதையே லட்சியம். இந்தப் பாதை வழியாகச் செல்பவர்கள் மீண்டும் பிறப்பதில்லை. ஆன்மாவைத் தேடாதவர்கள் இந்தப் பாதையை அடைவதில்லை.
பிரஜாபதி படைப்புக் கடவுள். இங்கே படைப்பிற்கு உருவமாகச் சொல்லப்பட்டிருக்கிறார். வருடம் என்று குறிப்பிடப்படுவது காலம்(9). படைப்பு என்பது காலமே என்ற கருத்து இங்கே சுட்டிக்காட்டப்படுகிறது. அனைத்தும் காலத்தில் தோன்றி காலத்திலேயே மறைகின்றன. காலம் என்ற மாபெரும் எந்திரத்தின் ஆற்றல் மகத்தானது; தன் சுழற்சியில் எத்தனை எத்தனையோ மாற்றங்களை உருவாக்க வல்லது, அதாவது, வாழ்க்கை என்பதே காலத்திற்குள் அடங்கியுள்ளது. அதனால்தான், காலம் தன்னை ஏதோ சாதாரணமான, எந்தச் சக்தியும் இல்லாத ஒன்றுபோல் தன்னைக் காட்டிக்கொள்கிறது. ஆனால் உண்மையில் அது தான் ஒரு வாள்போல், ஒரு கணம்கூட இடையீடின்றி மனித வாழ்வை அறுத்துக்கொண்டிருக்கிறது (நாளென ஒன்றுபோல் காட்டி உயிர் ஈரும் வாளது உணர்வார்ப் பெறின் திருக்குறள், 34.4) என்ற வியந்து நிற்கிறார் தெய்வப் புலவர்.
கால வடிவான கடவுள், மனிதன் வாழ இரண்டு வழிகளை வகுத்தார். ஒன்று சாதாரண வழி, மற்றொன்று உயர் வழி.
இன்பத்தை நாடுபவர்கள் சாதாரண வழியில் செல்கிறார்கள். பல வழிகளில் இன்பத்தைத் தேடுகிறார்கள். யாகங்கள். நற்பணிகள் போன்றவைமூலம் புண்ணியம் தேடுகிறார்கள். சொர்க்கங்களுக்குச் செல்கிறார்கள், சுகபோகங்கள் ஒவ்வொன்றையும் அனுபவிக்கிறார்கள். கூடவே துக்கத்தையும் அனுபவிக்கிறார்கள். ஆனால் எதற்கும் முடிவு இருக்கத்தானே வேண்டும்! அவை முடிந்ததும் கீழே வருகிறார்கள், மனிதர்களாகப் பிறக்கிறார்கள், இன்னும் கீழான பிறவியை அடைகிறார்கள் என்று விளக்குகிறார் சுவாமி விவேகானந்தர். இது சாதாரண வழி, தட்சிணாயனம்.
உத்தராயணம் என்பது உயர்வழி. இனி பிறவிகள் வேண்டாம் என்று நினைப்பவர்கள் இந்த வழியைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அழிகின்ற உடலின்பங்களை விட்டு, தவம் போன்றவற்றைக் கடைப்பிடித்து, உடலுள் உறையும் ஆன்மாவைத் தேடுகிறார்கள்.
சூரியனும் காலமும் : 11-12
சூரியன் எவ்வாறு உலக வாழ்க்கையின் ஆதாரமாக இருக்கிறான் என்பதை இந்த மந்திரங்கள் கூறுகின்றன. சூரியனே பிராணன் (5). எனவே பிராண சக்தி வாழ்க்கையின் ஆதாரமாக இருப்பது சுட்டிக்காட்டப்படுகிறது.
11. பஞ்சபாதம் பிதரம் த்வாதசாக்ருதிம் திவ ஆஹு பரே அர்த்தே புரீஷிணம்
அதேமே உ பரே விசக்ஷணம் ஸப்தசக்ரே ஷடர ஆஹுரர்ப்பிதமிதி
பஞ்சபாதம்-ஐந்து பாதங்கள் உடையவன்; பிதரம்-தந்தை; த்வாதச ஆக்ருதிம்-பன்னிரண்டு உருவங்கள் உடையவன்; அர்த்தே பரே திவே-மேற்பகுதியிலிருந்து; புரீஷிணம்-மழை பொழிபவன். ஆஹு-சொலகிறார்கள்; அத-மேலும்; விசக்ஷணம்-அனைத்தும் அறிபவன்; ஸப்த சக்ரே-ஏழு சக்கரங்களுடன்; ஷடரே-ஆறு ஆரங்களுடன்; அர்ப்பிதம்-இருப்பவன்; இதி-என்று; அன்யே இமே பரே-வேறு சிலர்; ஆஹு-சொல்கிறார்கள்.
பொருள் : சூரியன் ஐந்து பாதங்கள் உடையவன், தந்தை, பன்னிரண்டு உருவங்கள் உடையவன், மேற்பகுதியிலிருந்து மழை பொழிபவன் என்று சிலர் கூறுகிறார்கள். அவன் அனைத்தும் அறிபவன், ஏழு சக்கரங்களுடனும் ஆறு ஆரங்களுடனும் கூடிய தேரில் இருப்பவன் என்று வேறு சிலர் கூறுகிறார்கள்.
ஐந்து பாதங்கள்: பாதங்கள் பருவங்களைக் குறிக்கின்றன. பருவங்கள் ஆறு. அவை சிசிரம்(பின்பனிக்காலம்) வசந்தம், கிரீஷ்மம்( கோடைக் காலம்), வர்ஷம் (மழைக் காலம்), சரத்(இலையுதிர் காலம்), ஹேமந்தம் அல்லது ஹிமம்(முன்பனிக்காலம்). இங்கே, முன்பனிக் காலமும் பின்பனிக் காலமும் ஒன்றாகக் கொள்ளப்பட்டு ஐந்து பருவங்கள் என்று கூறப்படுகிறது.
பருவங்கள் மாறுவதற்கு சூரியனே காரணமாக இருக்கிறான். எனவே ஐந்து பருவங்கள் உடையவனாக அவன் கருதப்படுகிறான்.
தந்தை: அனைத்து உயிர்களும் வளர்வதற்குச் சூரியனே காரணமாக இருக்கிறான். அதனால் தந்தை.
பன்னிரு உருவங்கள் உடையவன்: பன்னிரு உருவங்கள் என்றால் பன்னிரு மாதங்கள். மாதங்கள் சூரியனை மையமாகக்கொண்டே கணக்கிடப்படுகின்றன. எனவே சூரியன் பன்னிரு உருவங்கள் உடையவனாகக் கூறப்படுகிறான்.
ஏழு சக்கரங்கள்: சூரியன் சஞ்சரிக்கின்ற தேரில் ஏழு சக்கரங்கள் உள்ளன. ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் அவன் பயணிப்பதாகவும் கூறப்படுவதுண்டு. சூரிய ஒளியில் ஏழு நிறங்கள் இருப்பதை இது சுட்டிக்காட்டுவதாகவும் கொள்ளலாம்.
ஆறு ஆரங்கள்: ஆறு பருவங்கள்.
சூரியன் காலத்திற்குத் தலைவனாக, காலத்தை இயக்குபவனாக இருக்கிறான் என்பது இந்த மந்திரத்தின் பொருள் ஆகும். சூரியனைப் பிராணனுக்கு உருவகமாக 5-இல் கண்டோம். எனவே பிராண சக்தியே காலத்தையும், அதன்மூலம் வாழ்க்கையையும் இயக்குகிறது என்பது இந்த மந்திரத்திலிருந்து நாம் பெறும் கருத்தாகும்.
இதுபற்றி கீழ்வரும் சுலோகமும் உள்ளது (1.10) என்று கூறி பிப்பலாத முனிவர் இந்த மந்திரத்தை மேற்கோள் காட்டுகிறார். இந்த மந்திரம் ரிக்வேதம் 1:164.12-இல் வருகிறது.
12. மாஸோ வை ப்ரஜாபதிஸ்தஸ்ய க்ருஷ்ணபக்ஷ ஏவ ரயி சுக்ல ப்ராணஸ்தஸ்மாதேத ரிஷய இஷ்ட்டம் குர்வந்தீதர இதரஸ்மின்
மாஸ: வை-மாதமே; ப்ரஜாபதிம்-படைப்புக் கடவுள்; தஸ்ய-அவரது; க்ருஷ்ணபக்ஷ-தேய்பிறைக் காலம்; ரயி: ஏவ-ஜடப்பொருள்; சுக்ல-வளர்பிறை காலம்; ப்ராண-பிராணன்; தஸ்மாத்-எனவே; ஏத-இந்த; ரிஷய-முனிவர்கள்; சுக்லே-வளர்பிறையில்; இஷ்ட்டம்-யாகங்களை; குர்வந்தி-செய்கிறார்கள்; இதரே-மற்றவர்கள்; இதரஸ்மின்-மற்ற காலத்தில்.
பொருள் : மாதமே படைப்புக் கடவுள், அவரது தேய்பிறைக் காலம் ஜடப்பொருள்; வளர்பிறைக் காலம் பிராணன். எனவே முனிவர்கள் யாகங்களை வளர்பிறைக் காலத்தில் செய்கிறார்கள்; மற்றவர்கள் தேய்பிறைக் காலத்தில் செய்கிறார்கள்.
முப்பது நாட்கள் கொண்டது ஒரு மாதம். இதில் அமாவாசைக்கு மறுநாள் (பிரதமை) முதல் பவுர்ணமி வரை உள்ள 15 நாட்கள் வளர்பிறைக் காலம். பவுர்ணமிக்கு மறுநாள் முதல் அமாவாசை வரையுள்ள 15 நாட்கள் தேய்பிறைக் காலம்.
வளர்பிறைக் காலத்தைப் பிராணன் என்றும் தேய்பிறைக் காலத்தை ஜடம் என்றும் மந்திரம் கூறுகிறது. வளர்பிறைக்காலம் என்பது 10 இல் நாம் கண்ட உயர் வழி. தேய்பிறைக் காலம் என்பது 9-இல் கண்ட சாதாரண வழி. வளர்பிறைக் காலத்தில், அதாவது உயர்வழியை நாடி செய்யப்படுகின்ற யாகங்கள் ஆன்மீக பலனைத் தருகின்றன. தேய்பிறைக் காலத்தில், அதாவது சாதாரண வழியை நாடி செய்யப்படுபவை உலகியல் பலனைத் தருகின்றன.
இதன் பொருள் என்ன?
யாகங்களைச் சாதாரண வழிக்காகவும் செய்யலாம். உயர்வழிக்காகவும் செய்யலாம், பிள்ளைவரம், செல்வம் போன்றவற்றிற்காக யாகம் செய்தால் அது அந்தப் பலன்களைத் தரும். உலகியல் ஆசைகள் இல்லாமல், ஆன்மீக நோக்கங்களுக்காக யாகங்களைச் செய்யும்போது அவை ஆன்மீக முன்னேற்றத்தைத் தருகின்றன.
இல்லற நெறி : 13-16
உயர் வழியை நாடுபவர்கள் ஆன்ம அனுபூதி பெறுகிறார்கள். அப்படியானால், சாதாரண வழியைத் தேர்ந்தெடுத்து இல்லற வாழ்வில் ஈடுபடுபவர்கள் உலகியலிலே உழல வேண்டியதுதானா? இல்லை. அவர்களும் நெறியாள வாழ்க்கை வாழ்வதன்மூலம் ஆன்மீக முன்னேற்றம் காணலாம் என்பதை இந்த மந்திரங்கள் கூறுகின்றன.
13. அஹோராத்ரோ வை ப்ரஜாபதிஸ்யாஹரேவ ப்ராணோ ராத்ரிரேவ ரயி
ப்ராணம் வா ஏதே ப்ரஸ்கந்தந்தி யே திவா ரத்யா ஸம்யுஜ்யந்தே ப்ரஹ்மசர்யமேவ தத்யத்ராத்ரௌ ரத்யா ஸம்யுஜ்யந்தே
அஹோராத்ரோ: வை-பகலும் இரவும்; ப்ரஜாபதி-படைப்புக் கடவுள்; தஸ்ய-அவரது; அஹ ஏவ-பகலே; ப்ராண-பிராணன்; ராத்ரி: ஏவ-இரவே; ரயி-ஜடம்; யே-யார்; திவா-பகலில்; ரத்யா-உடலுறவில்; ஸம்யுஜ்யந்தே-ஈடுபடுகிறார்களோ; ஏதே-அவர்கள்; ப்ராணம்-பிராணனை; ப்ரஸ்கந்தந்தி வை-வீணாக்கவே செய்கிறார்கள்; யத் ராத்ரௌ-எப்போது இரவில்; ரத்யா-உடலுறவில்; ஸம்யுஜ்யந்தே-ஈடுபடுகிறார்களோ; தத்-அது; ப்ரஹ்மசர்யம் ஏவ-பிரம்மச்சரியமே.
பொருள் : பகலும் இரவுமே படைப்புக் கடவுள். இதில் பகலே பிராணன், இரவே ஜடம். யார் பகலில் உடலுறவில் ஈடுபடுகிறார்களோ அவர்கள் பிராணனை வீணாக்குகிறார்கள். இரவில் உடலுறவு கொள்வது பிரம்மச்சரியமே.
பிரம்மச்சரியமே என்று கூறியதை அப்படியே எடுத்துக் கொள்ளக் கூடாது என்று விளக்குகிறார் ஸ்ரீசங்கரர். பிரம்மச்சரியம் என்பது உடலுறவை முற்றிலுமாகத் தவிர்ப்பது ஆகும். ஒருவன் தன் மனைவியுடன் மட்டுமே, அதிலும் இரவில் மட்டுமே உறவுகொள்ள வேண்டும் என்பதை வற்புறுத்துவதற்காகக் கூறப்பட்ட புகழ்மொழியே இது என்கிறார் அவர். (யத் ராத்ரௌ ஸம்யுஜ்யந்தே ரத்யா ரிதௌ ப்ரஹ்மசர்யம் ஏவ தத் இதி ப்ரசஸ்தத்வாத் ராத்ரௌ பார்யாகமனம் கர்த்தவ்யம் இதி)
14. அன்னம் வை ப்ரஜாபதிஸ்ததோ ஹ வை தத்ரேதஸ் தஸ்மாதிமா ப்ரஜா ப்ரஜாயந்த இதி
அன்னம் வை-உணவே; ப்ரஜாபதி-படைப்புக் கடவுள்; தத: ஹ வை-அதிலிருந்தே; தத்-அந்த; ரேதஸ்-விந்து; தஸ்மாத்-அதிலிருந்து; இமா-இந்த ப்ரஜா-உயிரினங்கள்; ப்ரஜாயந்தே இதி-தோன்றுகின்றன.
பொருள் : உணவே படைப்புக் கடவுள். உணவிலிருந்தே விந்து உண்டாகிறது. அதிலிருந்தே உயிரினங்கள் தோன்றுகின்றன.
உண்ணும் உணவிலிருந்தே ரத்தம், தசை, எலும்பு என்று உடம்பிலுள்ள அனைத்தும் உற்பத்தியாகின்றன. அவ்வாறு ஆணின் உடம்பில் உருவாகின்ற ஒன்றே விந்து; இது பெண்ணிடம் வைக்கப்படும்போது உயிர் தோன்றுகிறது. இவ்வாறு உயிரினங்கள் அனைத்தின் தோற்றத்திற்கும் அடிப்படையாக இருப்பதால் உணவு படைப்புக் கடவுளாகப் போற்றப்படுகிறது.
15. தத் யே ஹ வை தத் ப்ரஜாபதிவ்ரதம் சரந்தி தே மிதுனமுத்பாதயந்தே
தேஷாமேவைஷ ப்ரஹ்மலோகோ யேஷாம் தபோ ப்ரஹ்மசர்யம் யேஷு ஸத்யம் ப்ரதிஷ்ட்டிதம்
தத்-இவ்வாறு; யே-யார்; தத்-அந்த; ப்ரஜாபதி வ்ரதம்-படைப்புக் கடவுள் உருவாக்கிய நியதியை; சரந்தி ஹ வை-கடைப்பிக்கிறார்களோ; தே-அவர்கள்; மிதுனம்-ஜோடியை; உத்பாதயந்தே-உருவாக்குகிறார்கள்; யேஷாம்-யாரிடம்; தப-தவம்; ஹ்மசர்யம்-பிரம்மச்சரியம்; யேஷு-யாரிடம்; ஸத்யம்-உண்மை; ப்ரதிஷ்ட்டிதம்-நிலைபெற்றுள்ளதோ; தேஷாம் ஏவ-அவர்களுக்கு மட்டுமே; ஏஷ-இந்த; ப்ரஹ்மலோக-இறையுலகம்.
பொருள் : படைப்புக் கடவுள் உருவாக்கிய நியதியை யார் கடைப்பிடிக்கிறார்களோ அவர்கள் ஜோடியை உருவாக்குகிறார்கள். யாரிடம் தவமும் பிரம்மச்சரியமும் உள்ளதோ, யாரிடம் உண்மை நிலைபெற்றுள்ளதோ அவர்களுக்கு மட்டுமே இறையுலகம் வாய்க்கிறது.
இல்லறத்தாரும் ஒழுக்க நெறியை அடிப்படையாகக் கொண்ட வாழ்வை வாழ வேண்டும் என்பதை 13-15 மந்திரங்கள் வற்புறுத்துகின்றன. இந்த உலகம் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பது படைப்புக் கடவுளின் திட்டம். அதற்கு இனப்பெருக்கம் அவசியம். சந்ததிச் சங்கிலியை வெட்டாதீர்கள் (ப்ரஜாதந்தும் மா வ்யவச்சேத்ஸீ தைத்திரீய உபநிஷதம், 1.11.1) என்று தைத்திரீய உபநிஷதம் ஆணையிடுகிறது. அதற்கு ஆணும் பெண்ணும் இணைய வேண்டியது அவசியம் ஆண்-பெண் உறவை இந்தக் கண்ணோட்டத்தில் மட்டுமே காண வேண்டும் என்பது உபநிஷதங்களின் உபதேசமாக உள்ளது. அதாவது, ஆணும் பெண்ணும் இணைவது என்பது இனப்பெருக்கத்திற்காக மட்டுமே, உலகம் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று படைப்புக் கடவுள் வகுத்த நியதியைக் கடைப்பிடிப்பதற்காக மட்டுமே, அதற்குமேல் வேறு எந்த முக்கியத்துவமும் அதற்கு இல்லை.
இவ்வாறு நியதிக்காக மட்டும் இணைய வேண்டும் என்பது இல்லறத்தாரிடம் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஜோடி என்று இந்த மந்திரம் குறிப்பிடுகின்ற ஆண், பெண் குழந்தைகளை உருவாக்கலாம். ஆனால் இதனால் இறை யுலகத்தைப் பெற முடியாது.
இல்லறத்தாரும் இறையுலகத்தைப் பெற வேண்டுமானால், ஆன்மீக உயர்வு பெற வேண்டுமானால் நெறியான வாழ்க்கை வாழ வேண்டும், தவம், பிரம்மச்சரியம், உண்மை போன்றவற்றைப் பின்பற்ற வேண்டும்.
எனவே இல்லறத்தாரும் இறையுலகத்தைப் பெறலாம், ஆன்ம முன்னேற்றம் காணலாம், அதற்கு நெறியான வாழ்வு அவசியம் என்பதை இந்த மந்திரம் வலியுறுத்துகிறது.
16. தேஷாமஸெள விரஜோ ப்ரஹ்மலோகோ ந யேஷு ஜிஹ்மமன்ருதம் ந மாயா சேதி
தேஷாம்-அவர்களுக்கே; விரஜ-புனிதமான; அஸெள-அந்த; ப்ரஹ்மலோக-இறையுலகம்; யேஷு-யாரிடம்; ஜிஹ்மம்-சூது; அன்ருதம்-பொய்; மாயா-வஞ்சனை; ந-இல்லை; ச இதி-இவ்வாறு.
பொருள் : ஒழுக்கநெறியுடன் கூடிய வாழ்க்கை வாழ்பவர்களுக்கே புனிதமான அந்த இறையுலகம் வாய்க்கிறது. சூதும் பொய்யும் வஞ்சனையும் நிறைந்தவர்களுக்கு அந்த உலகம் கிடையாது.
இவ்வாறு இந்தப் பகுதி நிறைவுறுகிறது.
இதி ப்ரச்னோபநிஷதி ப்ரதம ப்ரச்ன
இவ்வாறு பிரச்ன உபநிஷதத்தின் முதற்பகுதி நிறைவுறுகிறது.