ஜனவரி 11,2023
சபரிமலை : சபரிமலையில் ஜன. 14 மகரஜோதிக்கு முன்னோடியாக பிரசித்தி பெற்ற எருமேலி பேட்டை துள்ளல் இன்று நடக்கிறது. நாளை பந்தளத்தில் இருந்து திருவாபரணம் புறப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான மகரஜோதி விழா நெருங்கி வரும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடக்கிறது. ஜன.14 ல் ஜோதி தெரியும் இடங்கள் அனைத்தும் போலீசின்
பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு வருகிறது. இங்கு தடுப்பு வேலிகள் அமைப்பது, குடிநீர் வசதி செய்தல் போன்ற பணிகள் நடக்கிறது. ஜன. 13, 14 ல் இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் சபரிமலை, பம்பை, நிலக்கல் மற்றும் ஜோதி தெரியும் இடங்களில் குவிவர் என கணக்கிடப்பட்டுள்ளது. புல்மேடு விபத்து போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்கும் வகையில் கவனமாக பணிகள் செய்யப்பட்டு வருகிறது. புல்மேட்டில் அதிக எண்ணிக்கையில் மின்விளக்குகள் அமைக்கப்படுகிறது.
இன்று பேட்டை துள்ளல்: மகரஜோதிக்கு முன்னோடியாக எருமேலியில் இன்று அம்பலப்புழா மற்றும் ஆலங்காடு பக்தர்களின் நடன வழிபாடான பேட்டைதுள்ளல் நடக்கிறது.
மதியம் 12:30 மணிக்கு பின்னர் ஆகாயத்தில் வட்டமிடும் கருடனை பார்த்த பின்னர் அம்பலப்புழா பக்தர்கள் பேட்டை துள்ளல் தொடங்கி பந்தளம் பெரிய சாஸ்தா கோயிலில் நிறைவு செய்தர். மதியம் 3:00 மணிக்கு வானத்தில் ஒளிவிட்டு பிரகாசிக்கும் நட்சத்திரத்தை கண்ட பின்னர் ஆலங்காடு பக்தர்கள் பேட்டை துள்ளி பெரிய சாஸ்தா கோயிலுக்கு வருவர். பின்னர் இவர்கள் பெருவழிப்பாதை வழியாக பம்பை வருவர்.மகரஜோதி நாளில் ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரண பவனி நாளை மதியம் பந்தளத்தில் இருந்து புறப்படுகிறது. திருவாபரண பெட்டி, வெள்ளி பெட்டி, கொடி பெட்டி என மூன்று பெட்டிகள் தலையில் வைத்து கால்நடையாக கொண்டு வரப்படும். நாளை மதியம் பந்தளம் வலியகோயிக்கல், சாஸ்தா கோயிலில் உச்சபூஜை முடிந்து தீபாராதனை நடைபெற்றதும் பவனி புறப்படும். ஜன. 14 மாலையில் இந்த பவனி சபரிமலை வந்தடையும்.