சபரிமலையில் ஓர் இரவு



Warning: Undefined variable $cl_mp in /var/www/html/or-temple-st.dinamalar.com/public_html/sabarimala/detail.php on line 170

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் நடை ஒவ்வொரு மலையாள மாதப்பிறப்பின் போதும் திறக்கப்படுகிறது என்றாலும், கார்த்திகை, மார்கழி, தை மாதத்தில் மண்டல பூஜை, மகரவிளக்கு சீசனில் சுமார் ஒரு கோடி பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். இதில் பெரும்பாலான பக்தர்கள் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகாவை சேர்ந்தவர்கள். நாற்பது சதவீதத்தினர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். மலையில் இருக்கும் ஐயப்பனைக்காண, பம்பை வரையே வாகனங்களில் செல்ல முடியும். அங்கிருந்து 5 கி.மீ., மலைப்பாதையில் நடக்க வேண்டும். அதில் 3 கி.மீ., செங்குத்தான பாதை. வழியில் ஓய்வு எடுக்காமல் இருந்தால், ஒன்றரை மணி நேரத்தில் இந்த மலைப்பாதையை கடக்கலாம். நடக்க இயலாதவர்கள் ’டோலி’யில் செல்லலாம். நான்குபேர் உங்களை சுமந்து செல்வார்கள். சென்று வர இதற்கு கட்டணம் ரூ.5,500.

எப்படி செல்வது எளிது?: தமிழக பக்தர்கள் பம்பை செல்ல எளிதான வழிகள் நான்கு. 1.மதுரை, குமுளி, வண்டிபெரியாறு, எருமேலி. 2.செங்கோட்டை, புனலுார், பத்தனம் திட்டா. 3. நாகர்கோவில், திருவனந்தபுரம், பத்தனம் திட்டா. 4. கோவை, திருச்சூர், அங்கமாலி, கோட்டயம், பம்பை.சீசன் நேரத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து, பம்பைக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ரயிலில் செல்பவர்கள் செங்கன்னுார் வரையே செல்ல முடியும். அங்கிருந்து பம்பைக்கு இரண்டரை மணி நேர பயணம். தமிழகப்பகுதியில் தான் சாலைகள் மோசமாக உள்ளன. அடிக்கடி மழை பெய்தாலும், பம்பைக்கு செல்லும் கேரள சாலைகள் குண்டு, குழி இல்லாமல் இருப்பது ஆறுதல். சீசன் நேரத்தில் வாகனங்கள் பம்பை வர செல்ல அனுமதிக்கப்படுவது இல்லை. பம்பையில் இருந்து 22 கி.மீ., முன்னதாக, நிலக்கல் என்ற இடத்தில் வாகன நிறுத்த வசதி செய்யப்
பட்டுள்ளது.

அந்த ’ஒருவர்’: பாவம் போக்கும் புண்ணிய பம்பா நதியில் சில்லிடும் குளிரில் குளித்து விட்டு, பம்பா கணபதியை வணங்கி, சரண கோஷம் கூறிக்கொண்டே மலை ஏறும் போது உடலும், மனமும் புத்துணர்வு பெறுகிறது. ஐயப்ப சுவாமியை தரிசிக்கும் அனுபவம் அலாதியானது. எத்தனை சிரமங்கள், கஷ்டங்களை கடந்து வந்தாலும், ஐயப்ப விக்ரகத்தை பார்க்கும் போது அவை எல்லாம் மறந்து போய் மெய் சிலிர்க்கிறது. மனம் மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கிறது. பூக்களால் அலங்காரம் செய்யப்படாமல், தவக்கோலத்தில் ஐயப்பன் அமர்ந்திருக்கும் நிலையை பார்த்தால், நிஜமாகவே ’ஒருவர்’ இருப்பது போன்றே தோன்றும். அந்த ’ஒருவர்’ பின் நம் மனதில் குடியேறி விடுகிறார். நெய் அபிஷேக வேளையில் ஐயப்ப தரிசனம் எப்போதும் நெஞ்சில் நிறைந்திருக்கும். ஒருமுறை ஐயப்பன் முகம் காணும் பக்தர், மீண்டும் பார்க்க வேண்டும் என்று நினைக்க தோன்றும் வசீகரம் அந்த விக்ரகத்திற்கு உண்டு. இதுவே சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரிக்க காரணம்.இருமுடி கட்டுடன் வருபவர்கள் மட்டுமே பதினெட்டாம் படி வழி ஏற முடியும். மற்றவர்கள் பின் வாசல் வழி சென்று சுவாமி தரிசனம் செய்யலாம்.

சுற்றுச்சூழல் சீர்கேடு: சபரிமலையில் உயர்ந்தவர், தாழ்ந்தவர், ஜாதி, மத வேறுபாடுகள் இல்லை. கட்டண தரிசனம் இல்லை. எங்கும் ஒரே கோஷம் கேட்கிறது, அது...’சரணம் ஐயப்பா’. இந்த புனிதமான இடத்தின் புனிதத்தையும், தொன்மையையும் காக்க வேண்டும் என்றால், சுற்றுச்சூழல் மாசில் இருந்து சபரிமலை கோயிலையும், கோயில் குடி கொண்டுள்ள மலையையும் காக்க வேண்டும். சபரிமலையில் துாசிகளால் ஏற்படும் காற்று மாசு, பிளாஸ்டிக், பாலிதீன் குப்பைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு பெரும் சவாலாகி உள்ளது.

அண்மையில் டில்லியில் புகை மாசு சூழ்ந்தது போன்று சபரிமலை சன்னிதானத்திலும், பம்பையிலும் அடிக்கடி ஏற்படுவது உண்டு. பாதுகாப்பு பணியில் உள்ள போலீசார், காற்று மாசில் இருந்து பாதுகாக்க முகமூடி அணிந்து பணிபுரிகின்றனர். பருவநிலை மாற்றம் சபரிமலையை பாடாய்ப்படுத்துகிறது. சுள்ளென்ற வெயில், இரவில் கடுங்குளிர், மழை குறைவு என வித்தியாசமான காலநிலை நிலவுகிறது.வாகன புகையில் இருந்து பம்பை பகுதியை காக்கும் பொருட்டே கேரள அரசு, சீசன் நேரத்தில் இங்கு வாகன பார்க்கிங் அனுமதிப்பது இல்லை. சபரிமலை காட்டை சுற்றுச்சூழல் மாசில் இருந்து காப்பாற்றி, பிளாஸ்டிக், பாலிதீன் இல்லாத வனமாக மாற்றுவது தமிழக பக்தர்களின் கடமையும், பொறுப்பும் கூட. ஏனெனில் மேற்கு தொடர்ச்சி மலையின், பெரியாறு புலிகள் காப்பக பகுதியில் தான் சபரிமலை உள்ளது. பெரியாறு புலிகள் காப்பக பகுதியில் தான், மதுரை உட்பட தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு தண்ணீர் தரும், பெரியாறு அணை உள்ளது. இந்த மலையில் மழை பெய்தால் பெரியாறு அணைக்கு தண்ணீர் வரும்; வைகை அணைக்கும் தண்ணீர் கிடைக்கும். சபரிமலை விரிவாக்கம் காரணமாக காடுகள் அழிக்கப்பட்டால், மரங்கள் வெட்டப்பட்டால், பிளாஸ்டிக் மண்ணுக்குள் சென்றால், விலங்குகள் வாழிடங்கள் பாதிக்கப்பட்டால் மழை கிடைக்காது; காற்று மாசாகும்! இந்த நிலை எதிர்காலத்தில் ஏற்படாமல் இருக்க சபரிமலையின் சுற்றுச்சூழலை காக்க வேண்டும்.

பக்தர்கள் என்ன செய்ய வேண்டும்?:  நிலக்கல் முதல் பம்பை, சன்னிதானம் வரை பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ளது. பாலிதீன் பைகளை நீங்கள் கொண்டு சென்றால், பம்பையில் உள்ள பெடரல் வங்கி கவுன்டரில் கொடுத்து, இலவசமாக துணிப்பையை பெற வசதி உள்ளது. பம்பையில் இருந்து மலை ஏறும் போது, தண்ணீர் பாட்டில்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை. செல்லும் வழியில் இலவசமாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. பக்தர் அணிந்து வந்த ஆடைகளை பம்பை நதியில் வீசுகிறார்கள். அப்படி எந்த ஐதீகமும் இல்லை. ஷாம்பு, சோப்பு போட்டு குளிக்கிறார்கள். இதனால் நதி மாசடைகிறது. அப்படி குளிப்பவர்களை பார்த்தால் கேரள போலீஸ் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கும். சன்னிதானத்தில் என்ன தான் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், பக்தர்கள் பாலிதீன் கவரில் விபூதி, மஞ்சள், சூடம், பிளாஸ்டிக் பாட்டிலில் பன்னீர் போன்றவற்றை இருமுடிக்கட்டில் வைத்து கொண்டு வருகின்றனர். ஆனால் அதிக எண்ணிக்கையில் வருவதால், இவை எதையும் இங்கு பூஜைக்கு எடுத்துக்கொள்வது இல்லை. உடனே பக்தர்கள் அங்கேயே விபூதி, மஞ்சள், சூடத்தை பிரித்து கொட்டி விட்டு பாலிதீன் கவரையும் போட்டு விடுகின்றனர்.

பக்தர்கள் கொண்டு செல்லும் பன்னீரால் ஐயப்பனுக்கு அபிேஷகம் செய்யப்படுவது இல்லை. கோயிலில் தயாராகும் பன்னீரை மட்டுமே உபயோகிக்கின்றனர். பக்தர்கள் கொண்டு செல்லும் பன்னீர் பாட்டில் பெரும் சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. பொரி, அவல் போன்றவற்றையும் காகிதத்தில் மடித்து எடுத்து செல்வது நல்லது.

குவிகிறது குப்பை:  சன்னிதானத்தில் ஒருநாள் குவியும் குப்பை 25 டன். அதில் 18 டன் பிளாஸ்டிக் பொருட்கள். பம்பை, சன்னி தானத்தில் ஆயிரக்கணக்கான பேர் (பெரும்பாலானோர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்) துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள், ’80 சதவீதம் பிளாஸ்டிக் குப்பைகளை தான் அள்ளுகிறோம்’ என்கின்றனர் வருத்தத்துடன்!

சபரிமலைக்கு வரும் பக்தர்களில் 50 சதவீதம் பேர் வரை, இரவில் சன்னிதானத்தில் தங்குகின்றனர். இதனால் அங்கு தண்ணீர் தேவை அதிகமாகிறது. லட்சக்கணக்கான லிட்டர் கழிவு நீர் தேங்குகிறது. கட்டட விரிவாக்கம் தேவைப்படுகிறது. இதற்கு காட்டை தான் அழிக்க வேண்டி உள்ளது. பக்தர்கள் தாங்கள் கொண்டு வரும் பொருட்களையும், உணவுகளையும் ஆங்காங்கே கொட்டி டன் கணக்கில் குப்பையை குவிக்கிறார்கள். அதிகாலையில் தரிசனம், நெய் அபிேஷகம் செய்ய நெரிசலும் ஏற்படுகிறது. பொதுவாக காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை தரிசனம் செய்ய நெரிசல் இருக்காது. ஆனால் இரவில் பக்தர்கள் தங்குவதால் இரவு 7:00 முதல் காலை 7:00 வரை நெரிசல் அதிகமாகிறது. சுற்றுச்சூழல், காற்று மாசும் அந்த நேரம் அதிகபட்சத்தை தொடுகிறது. காடு சூழ்ந்த 55 ஏக்கரில் சன்னிதானம் பகுதி உள்ளது. அதற்குள் லட்சக்கணக்கான பக்தர்கள் ஓரிரவுதங்கினால் அந்த காடு தாங்காது. எனவே முடிந்த அளவு இரவில் தங்குவதை பக்தர்கள் தவிர்க்கலாம்.

ஆண்டுக்காண்டு பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ’சபரிமலையில், வயதுக்கு வந்த பெண்களை அனுமதிக்கலாமா’ போன்ற விவாதங்களை கேரளாவை ஆளும் கம்யூனிஸ்ட் அரசு துவக்கி உள்ளது. இப்போது இதை விட தலையாய பிரச்னை, சபரிமலையின் சுற்றுச்சூழலை காப்பது தான். அப்போது தான் கடவுள் குடியிருக்கும் இந்த காடு வாழும்! -ஜி.வி.ரமேஷ் குமார்.

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு ..!

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்