இக்கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி திங்கள் முதல் செவ்வாய் காப்புக்கட்டி இரண்டாவது செவ்வாய், புதன் கிழமை திருவிழா நடப்பது வழக்கம்.
தல சிறப்பு:
ஊட்டுச்சோறு வந்தவுடன் அம்மனுக்கு ஊர் மக்களின் சார்பாக கிராமத்தில் அபிஷேகம் செய்து பூஞ்சோலைக்கு புறப்படும் இக்காட்சியை ஊரணியின் உள்ளேயும், நான்கு புறங்களிலும் மக்கள் குழுமி நின்று அம்பிகை பூஞ்சோலை செல்வதை கண்டு களிக்க காண கண் கோடி வேண்டும்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு மந்தை முத்தாலம்மன் திருக்கோயில்
சிறுகுடி- 624 404,
திண்டுக்கல் மாவட்டம்
போன்:
-
பொது தகவல்:
பசுமை நிறம் கொண்ட மலைகளால் சூழப் பெற்று வாழை,மா, தென்னை நிறைந்து பயன் தரும் சோலைகளும் செறிந்து ஓங்கும் நிலவளம்,வான் மழை முறையாக பெய்யும் நீர் வளம் சேரப்பெற்று திகழும் இவ்வூரின் மையப்பகுதியில் ஸ்ரீமந்தை முத்தாலம்மன் திருக்கோவில் அமைந்து உள்ளது.
பிரார்த்தனை
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறியதும் அங்கப்பிரதட்சனம், பால் குடம், கரும்பு தொட்டில் போன்ற நேர்த்திக்கடன் செய்கின்றனர்.
தலபெருமை:
ஊட்டுச்சோறு வந்தவுடன் அம்மனுக்கு ஊர் மக்களின் சார்பாக கிராமத்தில் அபிஷேகம் செய்து பூஞ்சோலைக்கு புறப்படும் இக்காட்சியை ஊரணியின் உள்ளேயும், நான்கு புறங்களிலும் மக்கள் குழுமி நின்று அம்பிகை பூஞ்சோலை செல்வதை கண்டு களிக்க காண கண் கோடி வேண்டும். அம்மன் கிழக்கு கரையை அடைந்தவுடன் அனை வரையும் காப்பேன் என்று உறுதி கூறுவது போல் நான்கு திசையிலும் மூன்று முறை அருட்கண் பார்வை செலுத்தி பூஞ்சாலை நோக்கி புறப்படுவது கண்டு மக்கள் அனைவரும் சிரம் தாழ்த்தி கரம் கூப்பி வணங்கி மெய் சிலிர்க்க ஆனந்த கண்ணீர் மல்க பிரியா விடை பெறுவார்கள். அன்று இரவு நாடகம் நடைபெறுவதுடன் திருவிழா இனிது நிறைவேறும்.
சாத்தரை விழா: இங்கு நடக்கும் திரு விழாவை சாத்தரை என குறிப்பிடுவது வழக்கம். (சாறு+அறை) சாறு என்றால் விழா.அறை என்றால் அறிவித்தல். காப்புக்கட்டுக்கு அடுத்த நாள் புதன் கிழமை அம்மனுக்கு திரு உருவம் பிடிப்பதற்கு காரணக்காரர்கள் பிடி மண்ணை வேளாளரிடம் கொடுப்பார்கள். அம்மன் விரதமிருக்கும் சோமவாரம் தவிர மற்ற நாட்களில் கலை நிகழ்ச்சி நடைபெறும். திருவிழாவிற்கு முதல் நாள் கிராம தெய்வமான மலையலங்கார சுவாமி சின்னையளூர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜை செய்யப்படும். திருவிழா அன்று பொது மக்கள் முன்னிலையில் காரணக்காரர்கள் அம்பாள் கோயிலின் மண்டபம், ஈசானி மூலையில் அமைந்து இருக்கும் சூரிய நாராயணன் கல் தூணில் பால், சந்தனம், மஞ்சள், குங்குமம் அபிஷேகம் செய்து ஆராதனை செய்து காப்புக் கட்டி எல்லோரும் வழிபடுவர். நாதஸ்வர இசையுடன் குடை சுருட்டி, மகர தோரணம் முதலிய விருதுகளுடன் ஆடல் பாடல்களுடன் வாண வேடிக்கை சிறக்க, பார்க்கின்றவர்கள் கண்டு வியப்புறும் படி அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்பிகை எழுந்தருளச் செய்யப்படும். ஊர் தீபாராதனை வழிபாடு செய்யப்பட்டு நகரத்தார் பெண்கள் மாவிளக்கு எடுத்து வணங்குவர். முறைப் படி அனைத்து இன மக்களும் அம்மனுக்கு மாவிளக்கு ஆரத்தி எடுத்து வணங்குவர்.
தல வரலாறு:
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பாண்டிய நாட்டில் அரசாட்சி மேற்கொண்டு நீதி,நேர்மை நிலைக்கத் தெய்வ வழிபாடும் பக்தியும் கொண்டு வணங்கிய மாமன்னர் திருமலை நாயக்கரின் பிரதிநிதியாக இருந்து நத்தத்தை தலைநகராக்கி ஆட்சி செலுத்திய ஜமீன் சருகு துந்துமி லிங்கமநாயக்கரின் முயற்சியால் சிறுகுடியில் ஐயனார் மலையில் மணக்கோலத்தில் மலையலங்கார சுவாமியும் செம்பாயி அம்மனும் மற்றும் பரிவார தெய்வங் களையும் மண்ணினால் செய்து நில புலன்களை மானியம் கொடுத்து திருப் பணியை நிறை வேற்றினர்.